<<முந்திய பக்கம்

பிற நூல்கள்

I. இலக்கிய நூல்கள்

1. வெளியிடப்பட்டவை

1. பத்துப்பாட்டில் சொல்லோவியங்கள் – தொகுதி -1

இத் தொகுதியில் பத்துப்பாட்டின் ஆற்றுப்படை நூல்களான திருமுருகாற்றுப்படை, பொருநராற்றுப்படை, சிறுபாணாற்றுப்படை, பெரும்பாணாற்றுப்படை, மலைபடுகடாம் எனப்படும் கூத்தராற்றுப்படை ஆகிய ஐந்து நூல்களுக்கான விளக்கங்கள் எளிய நடையில் அமைந்துள்ளன. தமிழ் ஆர்வலர்கள் அனைவரும் படிக்கலாம். குறிப்பாக மேல்நிலைப்பள்ளி, கல்லூரி மாணவர்களுக்காக உருவாக்கப்பட்டது இந் நூல்.

ஒவ்வொரு நூலைப் பற்றிய உரைநடைச் சுருக்கமும், பாடலில் அமைந்துள்ள சில காட்சிகளின் சிறப்பும் இந்நூலில் கொடுக்கப்பட்டுள்ளன. ஆங்காங்கே படங்கள் மூலமும் விளக்கங்கள் கொடுக்கப்பட்டிருப்பது இந்நூலின் தனிச்சிறப்பு.

வெளியீடு : தமிழ் மரபு அறக்கட்டளை பதிப்பகம் - நவம்பர் 2023 - விலை ரூ.250.

2. பத்துப்பாட்டில் சொல்லோவியங்கள் – தொகுதி -2

இத் தொகுதியில், பத்துப்பாட்டில் ஆற்றுப்படை நூல்களைத் தவிர்த்த ஏனைய முல்லைப்பாட்டு, மதுரைக்காஞ்சி, நெடுநல்வாடை, குறிஞ்சிப்பாட்டு, பட்டினப்பாலை ஆகிய ஐந்து நூல்களுக்கான விளக்கங்கள் எளிய நடையில் அமைந்துள்ளன. பாடல்களின் உரைநடைச் சுருக்கமும், சில குறிப்பிட்ட காட்சிகளின் சிறப்புத்தன்மைகளும் இதில் கொடுக்கப்பட்டுள்ளன. இதுவும் மேல்நிலைப்பள்ளி, கல்லூரி மாணவர்களுக்காக உருவாக்கப்பட்டது எனினும் தமிழ் ஆர்வலர்கள் அனைவரும் விரும்பிப் படிக்கலாம். நூலின் பல இடங்களில் பொருத்தமான படங்களும் காட்சிகளை நன்கு விளக்கும் வகையில் அமைந்துள்ளன.

வெளியீடு : தமிழ் மரபு அறக்கட்டளை பதிப்பகம் - நவம்பர் 2023 - விலை ரூ.250

3. நக்கீரர் நடைப்பயணம் - நெடுநல்வாடை படவிளக்கவுரை

பத்துப்பாட்டு நூல்களுள் ஒன்றான நெடுநல்வாடை என்பது மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரர் என்பவரால் இயற்றப்பட்டது. இந்நூல் எவ்வாறு ஒரு பயணநூலாக அமைந்திருக்கிறது என்பதை விளக்கிக் கூறுகிறது இப் புத்தகம். ஒரு மலைச்சரிவில் கிடைபோட்டிருக்கும் மாட்டுக் கூட்டத்திலிருந்து தன் பயணத்தைத் தொடங்குகிற புலவர், வைகை ஆற்றங்கரையோரமாகவே நம்மை அழைத்துக்கொண்டுவருகிறார். அப்போது அவர் காட்டும் காட்சிகளின் அருமை வியந்து பாராட்டற்குரியது. பின்னர் மதுரை நகருக்குள் நம்மைக் கூட்டிச் செல்லும் புலவர் மதுரை நகர் இல்லங்களின் முன்னிரவுத் தோற்றங்களை நமக்கு விரிவாகக் காட்டுகிறார். இறுதியில் பாண்டியன் அரண்மனைக்கு நம்மை அழைத்துச் செல்கிறார். ஆடவர் குறுகா அந்தப்புரத்திற்குள் அவர் எவ்வாறு நம்மை அழைத்துச் செல்கிறார் என்பதுவும் பாடல் வரிகளின் மூலம் விளக்கப்பட்டுள்ளது. மொத்தத்தில் ஒருமெய்சிலிர்க்க வைக்கும் அனுபவம் படிப்போருக்குக் கிடைக்கும் வகையில் பாடல் வரிகள் ஆங்காங்கே படங்களுடன் விளக்கப்பட்டுள்ளன. இது ஒரு கட்டுரைத் தொடராக மின் தமிழ் கூகுள் குழுமத்தில் எழுதப்பட்டது.

வெளியீடு : தமிழ் மரபு அறக்கட்டளை பதிப்பகம் - ஜனவரி 2024 - விலை ரூ.180.

4. தீம்பால் - கதை வடிவில் குறுந்தொகை

குறுந்தொகையில் தெரிந்தெடுக்கப்பட்ட இருபது பாடல்கள் கதைகளின் மூலம் விளக்கப்பட்டுள்ளன. பாடல்களின் உட்கருத்தை நன்கு புரிந்துகொள்ளும்படியாகக் கதை நிகழ்ச்சிகளும், உரையாடல்களும் உருவாக்கப்பட்டுள்ளன.

வெளியீடு : யாழிசைப் பதிப்பகம் தஞ்சாவூர்-1 - நவம்பர் 2022 - விலை ரூ.130.

2. எழுதி முடித்தவை

1. அகநானூறு படவிளக்க உரை - தொகுதி - 1 ( பாடல்கள் 1 - 40)

அகநானூற்றில் முதல் நாற்பது பாடல்களுக்கான விரிவான உரை. இதில் பாடல் மூலம், சொற்பிரிப்பு மூலம், அடிநேர் உரை, பாடலின் சிறப்பியல்புகள், உவமை நயம், ஆசிரியர் சொல் திறம் ஆகியவை விரிவாக அலசி ஆராயப்பட்டு, தேவையான இடங்களில் படங்களுடன் விளக்கப்பட்டுள்ளன.

2. முல்லைப்பாட்டு - படவிளக்கவுரை - An Illustrated Commentary

முல்லைப்பாட்டு என்பது பத்துப்பாட்டு நூல்களுள் ஐந்தாவதாக அமைந்த மிகச் சிறிய பாடல் ஆகும். எனினும் முல்லைத்திணையைப் பற்றிய மிக அழகிய வருணனைகள் இதில் அடங்கியுள்ளன. தமிழ் நன்கு அறியாதோரும் மிக எளிதில் புரிந்துகொள்ளும்படி ஆங்கில விளக்கங்கள் இணையாகக் கொடுக்கப்பட்டுள்ளன.. மன்னனின் போர்ப்பாசறைக் காட்சிகளும், முல்லை நிலக் காட்சிகளும் மிகப் பொருத்தமான படங்களுடன் விளக்கப்பட்டிருப்பது இப் புத்தகத்தின் தனிச் சிறப்பு. இதுவும் ஒரு கட்டுரைத் தொடராக மின் தமிழ் கூகுள் குழுமத்தில் எழுதப்பட்டது.

3. சிறுபாணன் செல்வழி - சிறுபாணாற்றுப்படை படவிளக்கவுரை

பத்துப்பாட்டு நூல்களுள் ஒன்றான சிறுபாணாற்றுப்படை ஓய்மாநாட்டு நல்லியக்கோடனை இடைக்கழிநாட்டு நல்லூர் நத்தத்தனார் பாடும் வழியாக இயற்றப்பட்டது. இதுவும் ஒரு கட்டுரைத் தொடராக மின் தமிழ் கூகுள் குழுமத்தில் எழுதப்பட்டது. இதில் புலவர் வருணிக்கும் அவர் பயணம் செய்த பாதை ஊகித்தறியப்பட்டுள்ளது. பட விளக்கங்கள் இதன் தனிச் சிறப்பு.

4. பத்துப்பாட்டில் பத்துக்கட்டுரைகள்

பத்துப்பாட்டு நூல்களில் தெரிந்தெடுத்த பகுதிகளின் விளக்கமாக அமைந்த பத்து ஆய்வுக் கட்டுரைகள் இந்நூலில் அமைந்துள்ளன.

5. சங்கச் சொல்வளம்

இத் தலைப்பில் மின்தமிழ் கூகுள் குழுமத்தில் தொடர்ச்சியாக வெளிவந்த கட்டுரைகளின் தொகுப்பாக இந்நூல் அமையும். நகர்வுகள், அசைவுகள், அஞ்சுதல், உண்ணுதல், உணவுவகைகள் என்ற தலைப்பில் பல கட்டுரைகள் எழுதப்பட்டுள்ளன. நூலின் பல இடங்களில் பொருத்தமான படங்களும் செய்திகளை நன்கு விளக்கும் வகையில் அமைந்துள்ளன.

6. மல்லல் மூதூர் மதுரை

இந்நூல் பண்டைய மதுரையைப் பற்றிய அனைத்துத் தகவல்களையும் கொண்டுள்ளதாக எழுதப்பட்டுள்ளது. வரலாற்று ஆவணங்களில் மதுரை, கல்வெட்டுகளில் மதுரை, புராண இதிகாசங்களில் மதுரை, இலக்கியங்களில் மதுரை ஆகிய பலதலைப்புகளில் மதுரையின் வரலாறு ஆயப்பட்டுள்ளது. மதுரை நகரின் பண்டைய தோற்றமும், அதன் வளர்ச்சியும் விரிவாக ஆயப்பட்டுள்ளன. காலந்தோறும் மதுரை மக்களின் வாழ்க்கை முறையும் ஆயப்பட்டுள்ளது.

7. பத்துப்பாட்டு உவமைக் காட்சிகள்

பத்துப்பாட்டில் உள்ள பத்து நூல்களிலும் ஏறக்குறைய ஐநூறு உவமைகள் கையாளப்பட்டுள்ளன. இந்த ஐநூறு உவமைகளையும், அவற்றின் விளக்கங்களுடன் எடுத்துக்கூறுகிறது இந்நூல். ஒவ்வொரு உவமைக்கும் பல படங்கள் விளக்கங்களாகத் தரப்பட்டிருப்பது இந்நூலின் சிறப்பம்சம் ஆகும். சங்க இலக்கியங்களில் ஒன்றான பத்துப்பாட்டின் அழகைச் சுவைத்துப்பார்க்க இந்நூல் ஒரு தூண்டுகோலாக இருக்கும்.

8. புறம் காட்டும் நெறிகள்

புறநானூற்றில் வாழ்வுக்குத் தேவையான நன்னெறிகள் அடங்கிய பாடல்களை, கற்பனை நிகழ்வுகளோடு விளக்கும் கட்டுரைகளின் தொகுப்பு இது. ஆசிரியர் தனது முகநூலில் அவ்வப்போது எழுதிவந்த கட்டுரைகள் இதில் அமையும்.

இந்தப் புத்தகங்கள் எல்லாம் எழுதி முடிக்கப்பட்டு, தகுந்த பதிப்பாளருக்காகக் காத்திருக்கின்றன.


II. மற்ற நூல்கள்

1. கணிதவியல் பொதுக்கட்டுரைகள்.

2. Programming in C
3. A Practical Approach to Programming in C with Applications to Data Structures
4. A Hands-on Approach to Object Oriented Programming through C++