** கம்பராமாயணம்
*** அயோத்தியா காண்டம்
&2 அயோத்தியா காண்டம்
@0 கடவுள் வாழ்த்து
#1
வான்-நின்று இழிந்து வரம்பு இகந்த மா பூதத்தின் வைப்பு எங்கும்
ஊனும் உயிரும் உணர்வும் போல் உள்ளும் புறத்தும் உளன் என்ப
கூனும் சிறிய கோதாயும் கொடுமை இழைப்ப கோல் துறந்து
கானும் கடலும் கடந்து இமையோர் இடுக்கண் தீர்த்த கழல் வேந்தன்
@1 மந்திரப் படலம்
#1
மண்ணுறு முரசு இனம் மழையின் ஆர்ப்புற
பண்ணுறு படர் சினப் பரும யானையான்
கண்ணுறு கவரியின் கற்றை சுற்றுற
எண்ணுறு சூழ்ச்சியின் இருக்கை எய்தினான்
#2
புக்க பின் நிருபரும் பொரு_இல் சுற்றமும்
பக்கமும் பெயர்க எனப் பரிவின் நீக்கினான்
ஒக்க நின்று உலகு அளித்து யோகின் எய்திய
சக்கரத்தவன் எனத் தமியன் ஆயினான்
#3
சந்திரற்கு உவமை செய் தரள வெண்குடை
அந்தரத்து அளவும் நின்று அளிக்கும் ஆணையான்
இந்திரற்கு இமையவர் குருவை ஏய்ந்த தன்
மந்திரக் கிழவரை வருக என்று ஏவினான்
#4
பூ வரு பொலன் கழல் பொரு_இல் மன்னவன்
காவலின் ஆணைசெய் கடவுள் ஆம் எனத்
தேவரும் முனிவரும் உணரும் தேவர்கள்
மூவரின் நால்வர் ஆம் முனி வந்து எய்தினான்
#5
குலம் முதல் தொன்மையும் கலையின் குப்பையும்
பல முதல் கேள்வியும் பயனும் எய்தினார்
நலம் முதல் நலியினும் நடுவு நோக்குவார்
சலம் முதல் அறுத்து அரும் தருமம் தாங்கினார்
#6
உற்றது கொண்டு மேல் வந்து உறுபொருள் உணரும் கோளார்
மற்று அது வினையின் வந்தது ஆயினும் மாற்றல் ஆற்றும்
பெற்றியர் பிறப்பின் மேன்மை பெரியவர் அரிய நூலும்
கற்றவர் மானம் நோக்கின் கவரி_மா அனைய நீரார்
#7
காலமும் இடனும் ஏற்ற கருவியும் தெரிந்து கற்ற
நூல் உற நோக்கித் தெய்வம் நுனித்து அறம் குணித்த மேலோர்
சீலமும் புகழ்க்கு வேண்டும் செய்கையும் தெரிந்துகொண்டு
பால் வரும் உறுதி யாவும் தலைவற்குப் பயக்கும் நீரார்
#8
தம் உயிர்க்கு இறுதி எண்ணார் தலைமகன் வெகுண்ட போதும்
வெம்மையைத் தாங்கி நீதி விடாது நின்று உரைக்கும் வீரர்
செம்மையின் திறம்பல் செல்லாத் தோற்றத்தார் தெரியும் காலம்
மும்மையும் உணர வல்லார் ஒருமையே மொழியும் நீரார்
#9
நல்லவும் தீயவும் நாடி நாயகற்கு
எல்லை_இல் மருத்துவன் இயல்பின் எண்ணுவார்
ஒல்லை வந்து உறுவன உற்ற பெற்றியின்
தொல்லை நல்வினை என உதவும் சூழ்ச்சியார்
#10
அறுபதினாயிரர் எனினும் ஆண்தகைக்கு
உறுதியில் ஒன்று இவர்க்கு உணர்வு என்று உன்னலாம்
பெறல்_அரும் சூழ்ச்சியர் திருவின் பெட்பினர்
மறி திரைக் கடல் என வந்து சுற்றினார்
#11
முறைமையின் எய்தினர் முந்தி அந்தம்_இல்
அறிவனை வணங்கித் தம் அரசைக் கைதொழுது
இறையிடை வரன்முறை ஏறி ஏற்ற சொல்
துறை அறி பெருமையான் அருளும் சூடினார்
#12
அன்னவர் அருள் அமைந்து இருந்த ஆண்டையில்
மன்னனும் அவர் முகம் மரபின் நோக்கினான்
உன்னிய அரும்பெறல் உறுதி ஒன்று உளது
என் உணர்வு அனைய நீர் இனிது கேட்டிரால்
#13
வெய்யவன் குல முதல் வேந்தர் மேலவர்
செய்கையின் ஒரு முறை திறம்பல் இன்றியே
வையம் என் புயத்திடை நுங்கள் மாட்சியால்
ஐ_இரண்டாயிரத்து ஆறு தாங்கினேன்
#14
கன்னியர்க்கு அமைவரும் கற்பின் மா நிலம்
தன்னை இத்தகையதாய்த் தருமம் கைதர
மன் உயிர்க்கு உறுவதே செய்து வைகினேன்
என் உயிர்க்கு உறுவதும் செய்ய எண்ணினேன்
#15
விரும்பிய மூப்பு எனும் வீடு கண்ட யான்
இரும் பியல் அனந்தனும் இசைந்த யானையும்
பெரும் பெயர் கிரிகளும் பெயரத் தாங்கிய
அரும் பொறை இனிச் சிறிது ஆற்ற ஆற்றலேன்
#16
நம் குலக் குரவர்கள் நவையின் நீங்கினார்
தம் குலப் புதல்வரே தரணி தாங்கப் போய்
வெம் குல புலன் கெட வீடு நண்ணினார்
எங்கு உலப்புறுவர் என்று எண்ணி நோக்குகேன்
#17
வெள்ள நீர் உலகினில் விண்ணில் நாகரில்
தள்ள_அரும் பகை எலாம் தவிர்த்து நின்ற யான்
கள்ளரின் கரந்து உறை காமம் ஆதி ஆம்
உள் உறை பகைஞருக்கு ஒதுங்கி வாழ்வெனோ
#18
பஞ்சி மென் தளிர் அடிப் பாவை கோல்கொள
வெம் சினத்து அவுணர் தேர் பத்தும் வென்றுளேற்கு
எஞ்சல்_இல் மனம் எனும் இழுதை ஏறிய
அஞ்சு தேர் வெல்லும் ஈது அருமை ஆவதோ
#19
ஒட்டிய பகைஞர் வந்து உருத்த போரிடைப்
பட்டவர் அல்லரேல் பரம ஞானம் போய்த்
தெட்டவர் அல்லரேல் செல்வம் ஈண்டு என
விட்டவர் அல்லரேல் யாவர் வீடு உளார்
#20
இறப்பு எனும் மெய்ம்மையை இம்மை யாவர்க்கும்
மறப்பு எனும் அதனின் மேல் கேடு மற்று உண்டோ
துறப்பு எனும் தெப்பமே துணை செய்யாவிடின்
பிறப்பு எனும் பெரும் கடல் பிழைக்கல் ஆகுமோ
#21
அரும் சிறப்பு அமைவரும் துறவும் அவ்வழித்
தெரிஞ்சு உறவு என மிகும் தெளிவுமாய் வரும்
பெரும் சிறை உள எனின் பிறவி என்னும் இவ்
இரும் சிறை கடத்தலின் இனியது யாவதோ
#22
இனியது போலும் இவ் அரசை எண்ணுமோ
துனி வரு புலன் எனத் தொடர்ந்து தோற்கலா
நனி வரும் பெரும் பகை நவையின் நீங்கி அத்
தனி அரசாட்சியில் தாழும் உள்ளமே
#23
உம்மை யான் உடைமையின் உலகம் யாவையும்
செம்மையின் ஓம்பி நல் அறமும் செய்தனென்
இம்மையின் உதவி நல் இசை நடாய நீர்
அம்மையும் உதவுதற்கு அமைய வேண்டுமால்
#24
இழைத்த தொல் வினையையும் கடக்க எண்ணுதல்
தழைத்த பேரருள் உடைத் தவத்தின் ஆகுமேல்
குழைத்தது ஓர் அமுதினைக் கோடல் நீக்கி வேறு
அழைத்த தீ விடத்தினை அருந்தல் ஆகுமோ
#25
கச்சை அம் கடக் கரிக் கழுத்தின்-கண் உறப்
பிச்சமும் கவிகையும் பெய்யும் இன் நிழல்
நிச்சயம் அன்று எனின் நெடிது நாள் உண்ட
எச்சிலை நுகருவது இன்பம் ஆவதோ
#26
மைந்தரை இன்மையின் வரம்பு_இல் காலமும்
நொந்தனென் இராமன் என் நோவை நீக்குவான்
வந்தனன் இனியவன் வருந்த யான் பிழைத்து
உய்ந்தனென் போவது ஓர் உறுதி எண்ணினேன்
#27
இறந்திலன் செருக்களத்து இராமன் தாதைதான்
அறம் தலை நிரம்ப மூப்பு அடைந்த பின்னரும்
துறந்திலன் என்பது ஓர் சொல் உண்டான பின்
பிறந்திலன் என்பதில் பிறிது உண்டாகுமோ
#28
பெருமகன் என்-வயின் பிறக்க சீதை ஆம்
திருமகள் மணவினை தெரியக் கண்ட யான்
அரு மகன் நிறை குணத்து அவனி மாது எனும்
ஒரு மகள் மணமும் கண்டு உவப்ப உன்னினேன்
#29
நிவப்புறு நிலன் எனும் நிரம்பு நங்கையும்
சிவப்புறு மலர் மிசைச் சிறந்த செல்வியும்
உவப்புறு கணவனை உயிரின் எய்திய
தவப் பயன் தாழ்ப்பது தருமம் அன்று அரோ
#30
ஆதலால் இராமனுக்கு அரசை நல்கி இப்
பேதைமைத்தாய் வரும் பிறப்பை நீக்குறும்
மா தவம் தொடங்குவான் வனத்தை நண்ணுவேன்
யாது நும் கருத்து என இனைய கூறினான்
#31
திரண்ட தோளினன் இப்படிச் செப்பலும் சிந்தை
புரண்டு மீதிடப் பொங்கிய உவகையர் ஆங்கே
வெருண்டு மன்னவன் பிரிவு எனும் விதிர்ப்புறு நிலையால்
இரண்டு கன்றினுக்கு இரங்கும் ஓர் ஆ என இருந்தார்
#32
அன்னர் ஆயினும் அரசனுக்கு அது அலது உறுதி
பின்னர் இல் எனக் கருதியும் பெரு நில வரைப்பின்
மன்னும் மன் உயிர்க்கு இராமனில் சிறந்தவர் இல்லை
என்ன உன்னியும் விதியது வலியினும் இசைந்தார்
#33
இருந்த மந்திரக் கிழவர்-தம் எண்ணமும் மகன்-பால்
பரிந்த சிந்தை அ மன்னவன் கருதிய பயனும்
பொருந்து மன் உயிர்க்கு உறுதியும் பொதுவுற நோக்கி
தெரிந்து நான்மறைத் திசைமுகன் திருமகன் செப்பும்
#34
நிருப நின் குல மன்னவர் நேமி பண்டு உருட்டி
பெருமை எய்தினர் யாவரே இராமனைப் பெற்றார்
கருமமும் இது கற்று உணர்ந்தோய்க்கு இனிக் கடவ
தருமமும் இது தக்கதே உரைத்தனை தகவோய்
#35
புண்ணியம் தொடர் வேள்விகள் யாவையும் புரிந்த
அண்ணலே இனி அரும் தவம் இயற்றவும் அடுக்கும்
வண்ண மேகலை நில_மகள் மற்று உனைப் பிரிந்து
கண் இழந்திலள் எனச் செயும் நீ தந்த கழலோன்
#36
புறத்து நாம் ஒரு பொருள் இனிப் புகல்கின்றது எவனோ
அறத்தின் மூர்த்தி வந்து அவதரித்தான் என்பது அல்லால்
பிறத்து யாவையும் காத்து அவை பின் உறத் துடைக்கும்
திறத்து மூவரும் திருந்திடத் திருத்தும் அத் திறலோன்
#37
பொன் உயிர்த்த பூ_மடந்தையும் புவி எனும் திருவும்
இன் உயிர்த் துணை இவன் என நினைக்கின்ற இராமன்
தன் உயிர்க்கு என்கை புல்லிது தன் பயந்தெடுத்த
உன் உயிர்க்கு என நல்லன் மன் உயிர்க்கு எலாம் உரவோய்
#38
வாரம் என் இனிப் பகர்வது வைகலும் அனையான்
பேரினால் வரும் இடையூறு பெயர்கின்ற பயத்தால்
வீர நின் குல மைந்தனை வேதியர் முதலோர்
யாரும் யாம் செய்த நல் அறப் பயன் என இருப்பார்
#39
மண்ணினும் நல்லள் மலர்_மகள் கலை_மகள் கலை ஊர்
பெண்ணினும் நல்லள் பெரும் புகழ் சனகி ஆம் நல்லள்
கண்ணினும் நல்லன் கற்றவர் கற்றிலாதவரும்
உண்ணும் நீரினும் உயிரினும் அவனையே உவப்பார்
#40
மனிதர் வானவர் மற்றுளோர் அற்றம் காத்து அளிப்பார்
இனிய மன் உயிர்க்கு இராமனின் சிறந்தவர் இல்லை
அனையது ஆதலின் அரச நிற்கு உறு பொருள் அறியின்
புனித மா தவம் அல்லது ஒன்று இல் எனப் புகன்றான்
#41
மற்று அவன் சொன்ன வாசகம் கேட்டலும் மகனைப்
பெற்ற அன்றினும் பிஞ்ஞகன் பிடிக்கும் அப் பெரு வில்
இற்ற அன்றினும் எறி மழு_வாளவன் இழுக்கம்
உற்ற அன்றினும் பெரியதோர் உவகையன் ஆனான்
#42
அனையது ஆகிய உவகையன் கண்கள் நீர் அரும்ப
முனிவன் மா மலர் பாதங்கள் முறைமையின் இறைஞ்சி
இனிய சொல்லினை எம்பெருமான் அருள் அன்றோ
தனியன் நானிலம் தாங்கியது அவற்கு இது தகாதோ
#43
எந்தை நீ உவந்து இதம் சொல எம் குலத்து அரசர்
அந்தம்_இல் அரும் பெரும் புகழ் அவனியில் நிறுவி
முந்து வேள்வியும் முடித்து தம் இருவினை முடித்தார்
வந்தது அவ் அருள் எனக்கும் என்று உரைசெய்து மகிழ்ந்தான்
#44
பழுது_இல் மாதவன் பின் ஒன்றும் பணித்திலன் இருந்தான்
முழுதும் எண்ணுறும் மந்திரக் கிழவர் தம் முகத்தால்
எழுதி நீட்டிய இங்கிதம் இறை_மகற்கு ஏற்கத்
தொழுத கையினன் சுமந்திரன் முன் நின்று சொல்லும்
#45
உறத் தகும் அரசு இராமற்கு என்று உவக்கின்ற மனத்தைத்
துறத்தி நீ எனும் சொல் சுடும் நின் குலத் தொல்லோர்
மறத்தல் செய்கிலா தருமத்தை மறப்பதும் வழக்கு அன்று
அறத்தின் ஊங்கு இனிக் கொடிது எனல் ஆவது ஒன்று யாதோ
#46
புரசை மாக் கரி நிருபர்க்கும் புரத்து உறைவோர்க்கும்
உரைசெய் மந்திரக் கிழவர்க்கும் முனிவர்க்கும் உள்ளம்
முரசம் ஆர்ப்ப நின் முதல் மணிப் புதல்வனை முறையால்
அரசன் ஆக்கிப் பின் அப்புறத்து அடுத்தது புரிவாய்
#47
என்ற வாசகம் சுமந்திரன் இயம்பலும் இறைவன்
நன்று சொல்லினை நம்பியை நளி முடி சூட்டி
நின்று நின்றது செய்வது விரைவினில் நீயே
சென்று கொண்டு அணை திருமகள் கொழுநனை என்றான்
#48
அலங்கல் மன்னனை அடிதொழுது அவன் மனம்_அனையான்
விலங்கல் மாளிகை வீதியின் விரைவொடு சென்றான்
தலங்கள் யாவையும் பெற்றனன் தான் எனத் தளிர்ப்பான்
பொலன் கொள் தேரொடும் இராகவன் திருமனை புக்கான்
#49
பெண்ணின் இன் அமுது அன்னவள்-தன்னொடும் பிரியா
வண்ண வெம் சிலைக் குரிசிலும் மருங்கு இனிது இருப்ப
அண்ணல் ஆண்டு இருந்தான் அழகு அரு நறவு எனத் தன்
கண்ணும் உள்ளமும் வண்டு என களிப்புறக் கண்டான்
#50
கண்டு கைதொழுது ஐய இக் கடலிடைக் கிழவோன்
உண்டு ஒர் காரியம் வருக என உரைத்தனன் எனலும்
புண்டரீகக் கண் புரவலன் பொருக்கென எழுந்து ஓர்
கொண்டல் போல் அவன் கொடி நெடும் தேர் மிசைக் கொண்டான்
#51
முறையின் மொய்ம் முகில் என முரசு ஆர்த்திட மடவார்
இறை கழன்ற சங்கு ஆர்ந்திட இமையவர் எங்கள்
குறை முடிந்தது என்று ஆர்த்திடக் குஞ்சியைச் சூழ்ந்த
நறை அலங்கல் வண்டு ஆர்த்திடத் தேர் மிசை நடந்தான்
#52
பணை நிரந்தன பாட்டு ஒலி நிரந்தன அனங்கன்
கணை நிரந்தன நாண் ஒலி கறங்கின நிறைப் பேர்
அணை நிரந்தன அறிவு எனும் பெரும் புனல் அனையார்
பிணை நிரந்து எனப் பரந்தனர் நாணமும் பிரிந்தார்
#53
நீள் எழுத் தொடர் வாயிலில் குழையொடு நெகிழ்ந்த
ஆளகத்தினோடு அரமியத் தலத்தினும் அலர்ந்த
வாள் அரத்த வேல் வண்டொடு கொண்டைகள் மயங்க
சாளரத்தினும் பூத்தன தாமரை மலர்கள்
#54
மண்டலம் தரு மதி கெழு மழை முகில் அனைய
அண்டர்_நாயகன் வரை புரை அகலத்துள் அலங்கல்
தொண்டை வாய்ச்சியர் நிறையொடும் நாணொடும் தொடர்ந்த
கெண்டையும் உள கிளை பயில் வண்டொடும் கிடந்த
#55
சரிந்த பூ உள மழையொடு கலை உறத் தாழ்வ
பரிந்த பூ உள பனிக் கடை முத்து இனம் படைப்ப
எரிந்த பூ உள இள முலை இழை இடை நுழைய
விரிந்த பூ உள மீன் உடை வான்-நின்றும் வீழ்வ
#56
வள் உறை கழித்து ஒளிர்வன வாள் நிமிர் மதியம்
தள்ளுறச் சுமந்து எழுதரும் தமனியக் கொம்பில்
புள்ளி நுண் பனி பொடிப்பன பொன்னிடைப் பொதிந்த
எள் உடைப் பொரி விரவின உள சில இளநீர்
#57
ஆயது அவ்வழி நிகழ்தர ஆடவர் எல்லாம்
தாயை முன்னிய கன்று என நின்று உயிர் தளிர்ப்ப
தூய தம்பியும் தானும் அச் சுமந்திரன் தேர் மேல்
போய் அகம் குளிர் புரவலன் இருந்துழிப் புக்கான்
#58
மாதவன்-தனை வரன்முறை வணங்கி வாள் உழவன்
பாத பங்கயம் பணிந்தனன் பணிதலும் அனையான்
காதல் பொங்கிடக் கண் பனி உகுத்திடக் கனி வாய்ச்
சீதை_கொண்கனைத் திரு உறை மார்பகம் சேர்த்தான்
#59
நலம் கொள் மைந்தனைத் தழுவினன் என்பது என் நளி நீர்
நிலங்கள் தாங்குறு நிலையினை நிலையிட நினைந்தான்
விலங்கல் அன்ன திண் தோளையும் மெய்த் திரு இருக்கும்
அலங்கல் மார்பையும் தனது தோள் மார்பு கொண்டு அளந்தான்
#60
ஆண்டு தன் மருங்கு இரீஇ உவந்து அன்புற நோக்கி
பூண்ட போர் மழு உடையவன் பெரும் புகழ் குறுக
நீண்ட தோளினாய் நின் பயந்தெடுத்த யான் நின்னை
வேண்டி எய்திட விழைவது ஒன்று உளது என விளம்பும்
#61
ஐய சாலவும் அலசினென் அரும் பெரு மூப்பும்
மெய்யது ஆயது வியல் இடப் பெரும் பரம் விசித்த
தொய்யல் மா நிலச் சுமை உறு சிறை துறந்து இனி யான்
உய்யல் ஆவது ஓர் நெறி புக உதவிட வேண்டும்
#62
உரிமை மைந்தரைப் பெறுகின்றது உறு துயர் நீங்கி
இருமையும் பெறற்கு என்பது பெரியவர் இயற்கை
தருமம் அன்ன நின் தந்த யான் தளர்வது தகவோ
கருமம் என்-வயின் செய்யின் என் கட்டுரை கோடி
#63
மைந்த நம் குல மரபினில் வந்து அருள் வேந்தர்
தம்தம் மக்களே கடன்முறை நெடு நிலம் தாங்க
ஐந்தொடு ஆகிய முப்பகை மருங்கு அற அகற்றி
உய்ந்து போயினர் ஊழி-நின்று எண்ணினும் உலவார்
#64
முன்னை ஊழ்வினைப் பயத்தினும் முற்றிய வேள்விப்
பின்னை எய்திய நலத்தினும் அரிதினின் பெற்றேன்
இன்னம் யான் இந்த அரசியல் இடும்பையின் நின்றால்
நின்னை ஈன்றுள பயத்தினின் நிரம்புவது யாதோ
#65
ஒருத்தல் எட்டொடு திருத் தலை பன்மை சால் உரக
எருத்தம் மேல் படி புயம் அற சுமந்து இடர் உழக்கும்
வருத்தம் நீங்கி அவ் வரம்பு_அறு திருவினை மருவும்
அருத்தி உண்டு எனக்கு ஐய ஈது அருளிட வேண்டும்
#66
ஆளும் நல் நெறிக்கு அமைவரும் அமைதி இன்று ஆக
நாளும் நம் குல நாயகன் நறை விரி கமலத்
தாளின் நல்கிய கங்கையைத் தந்து தந்தையரை
மீள்வு_இலா_உலகு ஏற்றினான் ஒரு மகன் மேல்_நாள்
#67
மன்னர் வானவர்_அல்லர் மேல் வானவர்க்கு அரசாம்
பொன்னின் வார் கழல் புரந்தரன் போலியர்_அல்லர்
பின்னும் மா தவம் தொடங்கி நோன்பு இழைத்தவர்_அல்லர்
சொல் மறா மகப் பெற்றவரே துயர் துறந்தார்
#68
அனையது ஆதலின் அரும் துயர்ப் பெரும் பரம் அரசன்
வினையின் என்-வயின் வைத்தனன் எனக் கொளல் வேண்டா
புனையும் மா முடி புனைந்து இந்த நல் அறம் புரக்க
நினையல் வேண்டும் யான் நின்-வயின் பெறுவது ஈது என்றான்
#69
தாதை அப் பரிசு உரைசெயத் தாமரைக்கண்ணன்
காதல் உற்றிலன் இகழ்ந்திலன் கடன் இது என்று உணர்ந்தும்
யாது கொற்றவன் ஏவியது அது செயல் அன்றோ
நீதி எற்கு என நினைந்தும் அப் பணி தலைநின்றான்
#70
குருசில் சிந்தையை மனக்கொண்ட கொற்ற வெண்குடையான்
தருதி இவ் வரம் எனச் சொலி உயிருறத் தழுவிச்
சுருதி அன்ன தன் மந்திரச் சுற்றமும் சுற்ற
பொரு_இல் மேருவும் பொரு_அரும் கோயில் போய் புக்கான்
#71
நிவந்த அந்தணர் நெடுந்தகை மன்னவர் நகரத்து
உவந்த மைந்தர்கள் மடந்தையர் உழைஉழை தொடர
சுமந்திரன் தடம் தேர் மிசை சுந்தரத் திரள் தோள்
அமைந்த மைந்தனும் தன் நெடும் கோயில் சென்று அடைந்தான்
#72
வென்றி வேந்தரை வருக என உவணம் வீற்றிருந்த
பொன் திணிந்த தோட்டு அரும்பெறல் இலச்சினை போக்கி
நன்று சித்திர நளிர் முடி கவித்தற்கு நல்லோய்
சென்று வேண்டுவ வரன்முறை அமைக்க எனச் செப்ப
#73
உரிய மா தவன் ஒள்ளிது என்று உவந்தனன் விரைந்து ஓர்
பொரு_இல் தேர் மிசை அந்தணர் குழாத்தொடும் போக
நிருபர் கேள்-மின்கள் இராமற்கு நெறிமுறைமையினால்
திருவும் பூமியும் சிந்தையில் சிறந்தன என்றான்
#74
இறைவன் சொல் எனும் இன் நறவு அருந்தினர் யாரும்
முறையில் நின்றிலர் முந்துறு களியிடை மூழ்கி
நிறையும் நெஞ்சிடை உவகை போய் மயிர் வழி நிமிர
உறையும் விண்ணகம் உடலொடும் எய்தினர் ஒத்தார்
#75
ஒத்த சிந்தையர் உவகையின் ஒருவரின் ஒருவர்
தத்தமக்கு உற்ற அரசு எனத் தழைக்கின்ற மனத்தர்
முத்த வெண்குடை மன்னனை முறைமுறை தொழுதார்
அத்த நன்று என அன்பினோடு அறிவிப்பது ஆனார்
#76
மூ_எழு முறைமை எம் குலங்கள் முற்றுறப்
பூ எழு மழுவினால் பொருது போக்கிய
சேவகன் சேவகம் செகுத்த சேவகற்கு
ஆவ இவ் உலகம் இஃது அறன் என்றார் அரோ
#77
வேறு இலா மன்னரும் விரும்பி இன்னது
கூறினார் அது மனம் கொண்ட கொற்றவன்
ஊறின உவகையை ஒளிக்கும் சிந்தையான்
மாறும் ஓர் அளவை சால் வாய்மை கூறினான்
#78
மகன்-வயின் அன்பினால் மயங்கி யான் இது
புகல நீர் புகன்ற இப் பொம்மல் வாசகம்
உகவையின் மொழிந்ததோ உள்ளம் நோக்கியோ
தகவு என நினைந்ததோ தன்மை யாது என்றான்
#79
இவ்வகை உரைசெய இருந்த வேந்து அவை
செவ்வியோய் நின் திருமகற்குத் தேயத்தோர்
அவ்வவர்க்கு அவ்வவர்க்கு அமைந்தவாறு உறும்
எவ்வம்_இல் அன்பினை இனிது கேள் எனா
#80
தானமும் தருமமும் தகவும் தன்மை சேர்
ஞானமும் நல்லவர்ப் பேணும் நன்மையும்
மானவ எவையும் நின் மகற்கு வைகுமால்
ஈனம்_இல் செல்வம் வந்து இயைக என்னவே
#81
ஊருணி நிறையவும் உதவும் மாடு உயர்
பார் கெழு பயன் மரம் பழுத்து அற்று ஆகவும்
கார் மழை பொழியவும் கழனி பாய் நதி
வார் புனல் பெருகவும் மறுக்கின்றார்கள் யார்
#82
பனை அவாம் நெடும் கரப் பரும யானையாய்
நினை அவாம் தன்மையை நிமிர்ந்த மன் உயிர்க்கு
எனையவாறு அன்பினன் இராமன் ஈண்டு அவற்கு
அனையவாறு அன்பின அவையும் என்றனர்
#83
மொழிந்தது கேட்டலும் மொய்த்து நெஞ்சினை
பொழிந்த பேர் உவகையன் பொங்கு காதலன்
கழிந்தது என் இடர் எனக் களிக்கும் சிந்தையன்
வழிந்த கண்ணீரினன் மன்னன் கூறுவான்
#84
செம்மையின் தருமத்தின் செயலின் தீங்கின்-பால்
வெம்மையின் ஒழுக்கத்தின் மேன்மை மேவினீர்
என் மகன் என்பது என் நெறியின் ஈங்கு இவன்
நும் மகன் கையடை நோக்கும் ஈங்கு என்றான்
#85
அரசவை விடுத்த பின் ஆணை மன்னவன்
புரை தபு நாளொடு பொழுது நோக்குவான்
உரை தெரி கணிதரை ஒருங்கு கொண்டு ஒரு
வரை பொரு மண்டபம் மருங்கு போயினான்
@2 மந்தரை சூழ்ச்சிப் படலம்
#1
ஆண்டை அ நிலை ஆக அறிந்தவர்
பூண்ட காதலர் பூட்டு அவிழ் கொங்கையர்
நீண்ட கூந்தலர் நீள் கலை தாங்கலர்
ஈண்ட ஓடினர் இட்டு இடை உற்றிலர்
#2
ஆடுகின்றனர் பண் அடைவு இன்றியே
பாடுகின்றனர் பார்த்தவர்க்கே கரம்
சூடுகின்றனர் சொல்லுவது ஓர்கிலர்
மாடு சென்றனர் மங்கையர் நால்வரே
#3
கண்ட மாதரைக் காதலின் நோக்கினாள்
கொண்டல்_வண்ணனை நல்கிய கோசலை
உண்டு பேர் உவகை பொருள் அன்னது
தொண்டை வாயினிர் சொல்லு-மின் ஈண்டு என்றாள்
#4
மன் நெடும் கழல் வந்து வணங்கிட
பல் நெடும் பகல் பார் அளிப்பாய் என
நின் நெடும் புதல்வன்-தனை நேமியான்
தொல் நெடும் முடி சூட்டுகின்றான் என்றார்
#5
சிறக்கும் செல்வம் மகற்கு எனச் சிந்தையில்
பிறக்கும் பேர் உவகைக் கடல் பெட்பு அற
வறக்கும் மா வடவைக் கனல் ஆனதால்
துறக்கும் மன்னவன் என்னும் துணுக்கமே
#6
அன்னவளாயும் அரும்பெறல் ஆரமும்
நல் நிதிக் குவையும் நனி நல்கித் தன்
துன்னு காதல் சுமித்திரையோடும் போய்
மின்னு நேமியன் மேவு இடம் மேவினாள்
#7
மேவி மென் மலராள் நில_மாது எனும்
தேவிமாரொடும் தேவர்கள் யாவர்க்கும்
ஆவியும் அறிவும் முதல் ஆயவன்
வாவி மா மலர்ப் பாதம் வணங்கினாள்
#8
என்-வயின் தரும் மைந்தற்கு இனி அருள்
உன்-வயத்தது என்றாள் உலகு யாவையும்
மன் வயிற்றின் அடக்கிய மாயனைத்
தன் வயிற்றின் அடக்கும் தவத்தினாள்
#9
என்று இறைஞ்சி அவ் இந்திரை கேள்வனுக்கு
ஒன்றும் நான்மறை ஓதிய பூசனை
நன்று இழைத்து அவண் நல்ல தவர்க்கு எலாம்
கன்று உடைப் பசுவின் கடல் நல்கினாள்
#10
பொருந்து நாள் நாளை நின் புதல்வற்கு என்றனர்
திருந்தினார் அன்ன சொல் கேட்ட செய் கழல்
பெரும் திண் மால் யானையான் பிழைப்பு_இல் செய் தவம்
வருந்தினான் வருக என வசிட்டன் எய்தினான்
#11
நல் இயல் மங்கல நாளும் நாளை அவ்
வில் இயல் தோளவற்கு ஈண்டு வேண்டுவ
ஒல்லையின் இயற்றி நல் உறுதி வாய்மையும்
சொல்லுதி பெரிது எனத் தொழுது சொல்லினான்
#12
முனிவனும் உவகையும் தானும் முந்துவான்
மனு குல நாயகன் வாயில் முன்னினான்
அனையவன் வரவு கேட்டு அலங்கல் வீரனும்
இனிது எதிர்கொண்டு தன் இருக்கை எய்தினான்
#13
ஒல்கல்_இல் தவத்து உத்தமன் ஓது நூல்
மல்கு கேள்விய வள்ளலை நோக்கினான்
புல்கு காதல் புரவலன் போர்_வலாய்
நல்கும் நானிலம் நாளை நினக்கு என்றான்
#14
என்று பின்னும் இராமனை நோக்கி நான்
ஒன்று கூறுவது உண்டு உறுதிப் பொருள்
நன்று கேட்டு கடைப்பிடி நன்கு என
துன்று தாரவன் சொல்லுதல் மேயினான்
#15
கரிய மாலினும் கண்_நுதலானினும்
உரிய தாமரை மேல் உறைவானினும்
விரியும் பூதம் ஒர் ஐந்தினும் மெய்யினும்
பெரியர் அந்தணர் பேணுதி உள்ளத்தால்
#16
அந்தணாளர் முனியவும் ஆங்கு அவர்
சிந்தையால் அருள்செய்யவும் தேவருள்
நொந்துளாரையும் நோவு அகன்றாரையும்
மைந்த எண்ண வரம்பும் உண்டாம்-கொலோ
#17
அனையர் ஆதலின் ஐய அவ் வெய்ய தீ
வினையின் நீங்கிய மேலவர் தாள் இணை
புனையும் சென்னியையாய் புகழ்ந்து ஏத்துதி
இனிய கூறி நின்று ஏயின செய்தியால்
#18
ஆவதற்கும் அழிவதற்கும் அவர்
ஏவ நிற்கும் விதியும் என்றால் இனி
ஆவது எப் பொருள் இம்மையும் அம்மையும்
தேவரைப் பரவும் துணை சீர்த்ததே
#19
உருளும் நேமியும் ஒண் கவர் எஃகமும்
மருள்_இல் வாணியும் வல்லவர் மூவர்க்கும்
தெருளும் நல் அறமும் மனச் செம்மையும்
அருளும் நீத்த பின் ஆவது உண்டாகுமோ
#20
சூது முந்துறச் சொல்லிய மாத் துயர்
நீதி மைந்த நினைக்கு இலை ஆயினும்
ஏதம் என்பன யாவையும் எய்துதற்கு
ஓதும் மூலம் அவை என ஓர்தியே
#21
யாரொடும் பகை கொள்ளலன் என்ற பின்
போர் ஒடுங்கும் புகழ் ஒடுங்காது தன்
தார் ஒடுங்குல் செல்லாது அது தந்த பின்
வேரொடும் கெடல் வேண்டல் உண்டாகுமோ
#22
கோளும் ஐம்பொறியும் குறைய பொருள்
நாளும் கண்டு நடுவுறும் நோன்மையின்
ஆளும் அவ் அரசே அரசு அன்னது
வாளின் மேல் வரு மா தவம் மைந்தனே
#23
உமைக்கு நாதற்கும் ஓங்கு புள் ஊர்திக்கும்
இமைப்பு_இல் நாட்டம் ஓர் எட்டு உடையானுக்கும்
சமைத்த தோள் வலி தாங்கினர் ஆயினும்
அமைச்சர் சொல்_வழி ஆற்றுதல் ஆற்றலே
#24
என்பு தோல் உடையார்க்கும் இலார்க்கும் தம்
வன் பகைப் புலன் மாசற மாய்ப்பது என்
முன்பு பின்பு இன்றி மூ_உலகத்தினும்
அன்பின் அல்லது ஓர் ஆக்கம் உண்டாகுமோ
#25
வையம் மன் உயிர் ஆக அ மன் உயிர்
உய்யத் தாங்கும் உடல் அன்ன மன்னனுக்கு
ஐயம் இன்றி அறம் கடவாது அருள்
மெய்யில் நின்ற பின் வேள்வியும் வேண்டுமோ
#26
இனிய சொல்லினன் ஈகையன் எண்ணினன்
வினையன் தூயன் விழுமியன் வென்றியன்
நினையும் நீதி நெறி கடவான் எனில்
அனைய மன்னற்கு அழிவும் உண்டாம்-கொலோ
#27
சீலம் அல்லன நீக்கிச் செம்பொன் துலைத்
தாலம் அன்ன தனி நிலை தாங்கிய
ஞால மன்னற்கு நல்லவர் நோக்கிய
காலம் அல்லது கண்ணும் உண்டாகுமோ
#28
ஓர்வு_இல் நல்வினை ஊற்றத்தினார் உரை
பேர்வு_இல் தொல் விதி பெற்றுளது என்று அரோ
தீர்வு_இல் அன்பு செலுத்தலில் செவ்வியோர்
ஆர்வம் மன்னவர்க்கு ஆயுதம் ஆவதே
#29
தூமகேது புவிக்கு எனத் தோன்றிய
வாம மேகலை மங்கையரால் வரும்
காமம் இல்லை எனின் கடும் கேடு எனும்
நாமம் இல்லை நரகமும் இல்லையே
#30
ஏனை நீதி இனையவும் வையகப்
போனகற்கு விளம்பிப் புலன் கொளீஇ
ஆனவன்னொடும் ஆயிரம் மௌலியான்
தானம் நண்ணினன் தத்துவம் நண்ணினான்
#31
நண்ணி நாகணை வள்ளலை நான்மறைப்
புண்ணிய புனலாட்டிப் புலமையோர்
எண்ணும் நல்வினை முற்றுவித்து ஏற்றினான்
வெண் நிறத்த தருப்பை விரித்து அரோ
#32
ஏற்றிட ஆண்தகை இனிது இருந்துழி
நூல் தட மார்பனும் நொய்தின் எய்தப் போய்
ஆற்றல் சால் அரசனுக்கு அறிவித்தான் அவன்
சாற்றுக நகர் அணி சமைக்க என்றனன்
#33
ஏவின வள்ளுவர் இராமன் நாளையே
பூ_மகள் கொழுநனாய்ப் புனையும் மௌலி இக்
கோ நகர் அணிக எனக் கொட்டும் பேர்_இயம்
தேவரும் களிகொளத் திரிந்து சாற்றினார்
#34
கவி அமை கீர்த்தி அக் காளை நாளையே
புவி அமை மணி முடி புனையும் என்ற சொல்
செவி அமை நுகர்ச்சியது எனினும் தேவர்-தம்
அவி அமுது ஆனது அ நகர் உளார்க்கு எலாம்
#35
திணி சுடர் இரவியைத் திருத்துமாறு போல்
பணியிடைப் பள்ளியான் பரந்த மார்பிடை
மணியினை வேகடம் வகுக்குமாறு போல்
அணி நகர் அணிந்தனர் அருத்தி மாக்களே
#36
வெள்ளிய கரியன செய்ய வேறு உள
கொள்ளை வான் கொடி நிரைக் குழாங்கள் தோன்றுவ
கள் அவிழ் கோதையான் செல்வம் காணிய
புள் எலாம் திருநகர் புகுந்த போன்றவே
#37
மங்கையர் குறங்கு என வகுத்த வாழைகள்
அங்கு அவர் கழுத்து எனக் கமுகம் ஆர்ந்தன
தங்கு ஒளி முறுவலின் தாமம் நான்றன
கொங்கையின் நிரைந்தன கனகக் கும்பமே
#38
முதிர் ஒளி உயிர்த்தன முடுகிக் காலையில்
கதிரவன் வேறு ஒரு கவின் கொண்டான் என
மதி தொட நிவந்து உயர் மகரத் தோரணம்
புதியன அலர்ந்தன புதவ ராசியே
#39
துனி அறு செம்மணித் தூணின் நீல் நிறம்
வனிதை_ஓர்_கூறினன் வடிவு காட்டின
புனை துகில் உறை-தொறும் பொலிந்து தோன்றின
பனி பொதி கதிர் எனப் பவளத் தூண்களே
#40
முத்தினின் முழுநிலவு எறிப்ப மொய்ம் மணிப்
பத்தியின் இளவெயில் பரப்ப நீலத்தின்
தொத்து இனம் இருள் வரத் தூண்ட சோதிட
வித்தகர் விரித்த நாள் ஒத்த வீதியே
#41
ஆடல் மான் தேர்க் குழாம் அவனி காணிய
வீடு எனும் உலகின் வீழ் விமானம் போன்றன
ஓடை மா கட களிறு உதய மால் வரை
தேட_அரும் கதிரொடும் திரிவ போன்றவே
#42
வளம் கெழு திரு நகர் வைகும் வைகலும்
பளிங்கு உடை நெடும் சுவர் அடுத்த பத்தியில்
கிளர்ந்து எரி சுடர் மணி இருளைக் கீறலால்
வளர்ந்தில பிறந்தில செக்கர் வானமே
#43
பூ_மழை புனல் மழை புது மென் சுண்ணத்தின்
தூ மழை தரளத்தின் தோம்_இல் வெண் மழை
தாம் இழை நெரிதலின் தகர்ந்த பொன் மழை
மா மழை நிகர்த்தன மாட வீதியே
#44
காரொடு தொடர் மதக் களிறு சென்றன
வாரொடு தொடர் கழல் மைந்தர் ஆம் என
தாரொடு நடந்தன பிடிகள் தாழ் கலைத்
தேரொடு நடக்கும் அத் தெரிவைமாரினே
#45
ஏய்ந்து எழு செல்வமும் அழகும் இன்பமும்
தேய்ந்தில அனையது தெரிந்திலாமையால்
ஆய்ந்தனர் பெருகவும் அமரர் இம்பரில்
போந்தவர் போந்திலம் என்னும் புந்தியால்
#46
அ நகர் அணிவுறும் அமலை வானவர்
பொன்_நகர் இயல்பு எனப் பொலியும் ஏல்வையில்
இன்னல் செய் இராவணன் இழைத்த தீமை போல்
துன்ன_அரும் கொடு மனக் கூனி தோன்றினாள்
#47
தோன்றிய கூனியும் துடிக்கும் நெஞ்சினாள்
ஊன்றிய வெகுளியாள் உளைக்கும் உள்ளத்தாள்
கான்று எரி நயனத்தாள் கதிக்கும் சொல்லினாள்
மூன்று உலகினுக்கும் ஓர் இடுக்கண் மூட்டுவாள்
#48
தொண்டை வாய்க் கேகயன் தோகை கோயில் மேல்
மண்டினாள் வெகுளியின் மடித்த வாயினாள்
பண்டை நாள் இராகவன் பாணி வில் உமிழ்
உண்டை உண்டதனை தன் உள்ளத்து உள்ளுவாள்
#49
நால் கடல் படு மணி நளினம் பூத்தது ஓர்
பாற்கடல் படு திரைப் பவள வல்லியே
போல் கடைக்கண் அளி பொழியப் பொங்கு அணை
மேல் கிடந்தாள்-தனை விரைவின் எய்தினாள்
#50
எய்தி அக் கேகயன்_மடந்தை ஏடு அவிழ்
நொய்து அலர் தாமரை நோற்ற நோன்பினால்
செய்த பேர் உவமை சால் செம்பொன் சீறடி
கைகளின் தீண்டினள் காலக் கோள்_அனாள்
#51
தீண்டலும் உணர்ந்த அத் தெய்வக் கற்பினாள்
நீண்ட கண் அனந்தரும் நீங்குகிற்றிலள்
மூண்டு எழு பெரும் பழி முடிக்கும் வெவ் வினை
தூண்டிடக் கட்டுரை சொல்லல் மேயினாள்
#52
அணங்கு வாள் விட அரா அணுகும் எல்லையும்
குணம் கெடாது ஒளி விரி குளிர் வெண் திங்கள் போல்
பிணங்கு வான் பேரிடர் பிணிக்க நண்ணவும்
உணங்குவாய் அல்லை நீ உறங்குவாய் என்றாள்
#53
வெவ் விடம் அனையவள் விளம்ப வேல்_கணாள்
தெவ் அடு சிலைக் கை என் சிறுவர் செவ்வியர்
அவ்வவர் துறை-தொறும் அறம் திறம்பவர்
எவ் இடர் எனக்கு வந்து அடுப்பது ஈண்டு எனா
#54
பராவ_அரும் புதல்வரைப் பயக்க யாவரும்
உராவ_அரும் துயரை விட்டு உறுதி காண்பரால்
விராவ_அரும் புவிக்கு எலாம் வேதமே அன
இராமனைப் பயத்த எற்கு இடர் உண்டோ என்றாள்
#55
ஆழ்ந்த பேரன்பினாள் அனைய கூறலும்
சூழ்ந்த தீ வினை நிகர் கூனி சொல்லுவாள்
வீழ்ந்தது நின் நலம் திருவும் வீழ்ந்தது
வாழ்ந்தனள் கோசலை மதியினால் என்றாள்
#56
அன்ன சொல் அனையவள் உரைப்ப ஆய்_இழை
மன்னவர்_மன்னனேல் கணவன் மைந்தனேல்
பன்ன_அரும் பெரும் புகழ் பரதன் பார்-தனில்
என் இதன் மேல் அவட்கு எய்தும் வாழ்வு என்றாள்
#57
ஆடவர் நகையுற ஆண்மை மாசுறத்
தாடகை எனும் பெயர் தையலாள் பட
கோடிய வரி சிலை இராமன் கோமுடி
சூடுவன் நாளை வாழ்வு இது என சொல்லினாள்
#58
மாற்றம் அஃது உரைசெய மங்கை உள்ளமும்
ஆற்றல் சால் கோசலை அறிவும் ஒத்தவால்
வேற்றுமை உற்றிலள் வீரன் தாதை புக்கு
ஏற்று அவள் இருதயத்து இருக்கவே-கொலாம்
#59
ஆய பேரன்பு எனும் அளக்கர் ஆர்த்து எழத்
தேய்வு_இலா முக மதி விளங்கித் தேசுற
தூயவள் உவகை போய் மிகச் சுடர்க்கு எலாம்
நாயகம் அனையது ஓர் மாலை நல்கினாள்
#60
தெழித்தனள் உரப்பினள் சிறு கண் தீ உக
விழித்தனள் வைதனள் வெய்து_உயிர்த்தனள்
அழித்தனள் அழுதனள் அம் பொன் மாலையால்
குழித்தனள் நிலத்தை அக் கொடிய கூனியே
#61
வேதனைக் கூனி பின் வெகுண்டு நோக்கியே
பேதை நீ பித்தி நின் பிறந்த சேயொடும்
மா துயர் படுக நான் நெடிது உன் மாற்றவள்
தாதியர்க்கு ஆட்செயத் தரிக்கிலேன் என்றாள்
#62
சிவந்த வாய்ச் சீதையும் கரிய செம்மலும்
நிவந்த ஆசனத்து இனிது இருப்ப நின் மகன்
அவந்தனாய் வெறு நிலத்து இருக்கல் ஆன போது
உவந்தவாறு என் இதற்கு உறுதி யாது என்றாள்
#63
மறந்திலள் கோசலை உறுதி மைந்தனும்
சிறந்த நல் திருவினில் திருவும் எய்தினான்
இறந்திலன் இருந்தனன் என் செய்து ஆற்றுவான்
பிறந்திலன் பரதன் நீ பெற்றதால் என்றாள்
#64
சரதம் இப் புவி எலாம் தம்பியோடும் இவ்
வரதனே காக்குமேல் வரம்பு_இல் காலமும்
பரதனும் இளவலும் பதியின் நீங்கிப் போய்
விரத மா தவம் செய விடுதல் நன்று என்றாள்
#65
பண்ணுறு கட கரி பரதன் பார் மகள்
கண்ணுறு கவினராய் இனிது காத்த அம்
மண்ணுறு முரசு உடை மன்னர் மாலையில்
எண்ணுறப் பிறந்திலன் இறத்தல் நன்று என்றாள்
#66
பாக்கியம் புரிந்திலாப் பரதன்-தன்னைப் பண்டு
ஆக்கிய பொலம் கழல் அரசன் ஆணையால்
தேக்கு உயர் கல் அதர் கடிது சேணிடைப்
போக்கிய பொருள் எனக்கு இன்று போந்ததால்
#67
மந்தரை பின்னரும் வகைந்து கூறுவாள்
அந்தரம் தீர்ந்து உலகு அளிக்கும் நீரினால்
தந்தையும் கொடியன் நல் தாயும் தீயளால்
எந்தையே பரதனே என் செய்வாய் என்றாள்
#68
அரசர் இல் பிறந்து பின் அரசர் இல் வளர்ந்து
அரசர் இல் புகுந்து பேரரசி ஆன நீ
கரைசெயற்கு அரும் துயர்க் கடலில் வீழ்கின்றாய்
உரைசெயக் கேட்கிலை உணர்தியோ என்றாள்
#69
கல்வியும் இளமையும் கணக்கு_இல் ஆற்றலும்
வில் வினை உரிமையும் அழகும் வீரமும்
எல்லை_இல் குணங்களும் பரதற்கு எய்திய
புல்லிடை உகுத்த அமுது ஏயும் போல் என்றாள்
#70
வாய் கயப்புற மந்தரை வழங்கிய வெம் சொல்
காய் கனல்_தலை நெய் சொரிந்து எனக் கதம் கனற்ற
கேகயற்கு இறை திருமகள் கிளர் இள வரிகள்
தோய் கயல் கண்கள் சிவப்புற நோக்கினள் சொல்லும்
#71
வெயில் முறைக் குலக் கதிரவன் முதலிய மேலோர்
உயிர் முதல் பொருள் திறம்பினும் உரை திறம்பாதோர்
மயில் முறைக் குலத்து உரிமையை மனு முதல் மரபை
செயிர் உற புலைச் சிந்தையால் என் சொனாய் தீயோய்
#72
எனக்கு நல்லையும் அல்லை நீ என் மகன் பரதன்-தனக்கு
நல்லையும் அல்லை அத் தருமமே நோக்கின்
உனக்கு நல்லையும் அல்லை வந்து ஊழ்வினை தூண்ட
மனக்கு நல்லன சொல்லினை மதி_இலா மனத்தோய்
#73
பிறந்து இறந்து போய்ப் பெறுவதும் இழப்பதும் புகழே
நிறம் திறம்பினும் நியாயமே திறம்பினும் நெறியின்
திறம் திறம்பினும் செய் தவம் திறம்பினும் செயிர் தீர்
மறம் திறம்பினும் வரன்முறை திறம்புதல் வழக்கோ
#74
போதி என் எதிர்நின்று நின் புன் பொறி நாவைச்
சேதியாது இது பொறுத்தனன் புறம் சிலர் அறியின்
நீதி அல்லவும் நெறிமுறை அல்லவும் நினைந்தாய்
ஆதி ஆதலின் அறிவிலி அடங்குதி என்றாள்
#75
அஞ்சி மந்தரை அகன்றிலள் அ மொழி கேட்டும்
நஞ்சு தீர்க்கினும் தீர்கிலாது அது நலிந்து என்ன
தஞ்சமே உனக்கு உறு பொருள் உணர்த்துகை தவிரேன்
வஞ்சி போலி என்று அடி மிசை வீழ்ந்து உரை வழங்கும்
#76
மூத்தவற்கு உரித்து அரசு எனின் முறைமையின் உலகம்
காத்த மன்னனின் இளையன் அன்றோ கடல்_வண்ணன்
ஏத்து நீள் முடி புனைவதற்கு இசைந்தனன் என்றால்
மீத் தரும் செல்வம் பரதனை விலக்குமாறு எவனோ
#77
அறன் நிரம்பிய அருள் உடை அரும் தவர்க்கேனும்
பெறல்_அரும் திருப் பெற்ற பின் சிந்தனை பிறிது ஆம்
மறம் நினைந்து உமை வலிகிலர் ஆயினும் மனத்தால்
இறல் உறும்படி இயற்றுவர் இடையறா இன்னல்
#78
புரியும் தன் மகன் அரசு எனில் பூதலம் எல்லாம்
எரியும் சிந்தனை கோசலைக்கு உடைமையாம் என்றால்
பரியும் நின் குலப் புதல்வற்கும் நினக்கும் இப் பார் மேல்
உரியது என் அவள் உதவிய ஒரு பொருள் அல்லால்
#79
தூண்டும் இன்னலும் வறுமையும் தொடர்தரத் துயரால்
ஈண்டு வந்து உனை இரந்தவர்க்கு இருநிதி அவளை
வேண்டி ஈதியோ வெள்குதியோ விம்மல் நோயால்
மாண்டு போதியோ மறுத்தியோ எங்ஙனம் வாழ்தி
#80
சிந்தை என் செயத் திகைத்தனை இனிச் சில நாளில்
தம்தம் இன்மையும் எளிமையும் நிற்கொண்டு தவிர்க்க
உந்தை உன் ஐ உன் கிளைஞர் மற்ற உன் குலத்து உள்ளோர்
வந்து காண்பது உன் மாற்றவள் செல்வமோ மதியாய்
#81
காதல் உன் பெரும் கணவனை அஞ்சி அக் கனி வாய்
சீதை_தந்தை உன் தாதையைத் தெறுகிலன் இராமன்
மாதுலன் அவன் நுந்தைக்கு வாழ்வு இனி உண்டோ
பேதை உன் துணை யார் உளர் பழிபடப் பிறந்தார்
#82
மற்றும் நுந்தைக்கு வான் பகை பெரிது உள மறத்தார்
செற்ற போது இவர் சென்று உதவார் எனில் செருவில்
கொற்றம் என்பது ஒன்று எவ் வழி உண்டு அது கூறாய்
சுற்றமும் கெடச் சுடு துயர் கடல் விழத் துணிந்தாய்
#83
கெடுத்து ஒழிந்தனை உனக்கு அரும் புதல்வனைக் கிளர் நீர்
உடுத்த பாரகம் உடையவன் ஒரு மகற்கு எனவே
கொடுத்த பேரரசு அவன் குலக் கோமைந்தர்-தமக்கும்
அடுத்த தம்பிக்குமாம் பிறர்க்கும் ஆகுமோ என்றாள்
#84
தீய மந்தரை இவ் உரை செப்பலும் தேவி
தூய சிந்தையும் திரிந்தது சூழ்ச்சியின் இமையோர்
மாயையும் அவர் பெற்ற நல் வரம் உண்மையாலும்
ஆய அந்தணர் இயற்றிய அரும் தவத்தாலும்
#85
அரக்கர் பாவமும் அல்லவர் இயற்றிய அறமும்
துரக்க நல் அருள் துறந்தனள் தூ மொழி மட_மான்
இரக்கம் இன்மை அன்றோ இன்று இவ் உலகங்கள் இராமன்
பரக்கும் தொல் புகழ் அமுதினைப் பருகுகின்றதுவே
#86
அனைய தன்மையள் ஆகிய கேகயன் அன்னம்
வினை நிரம்பிய கூனியை விரும்பினள் நோக்கி
எனை உவந்தனை இனியை என் மகனுக்கும் அனையான்
புனையும் நீள் முடி பெறும்படி புகலுதி என்றாள்
#87
மாழை ஒண் கணி உரைசெய கேட்ட மந்தரை என்
தோழி வல்லள் என் துணை வல்லள் என்று அடி தொழுதாள்
தாழும் என் இனி என் உரை தலைநிற்பின் உலகம்
ஏழும்_ஏழும் உன் ஒரு மகற்கு ஆக்குவென் என்றாள்
#88
நாடி ஒன்று உனக்கு உரைசெய்வென் நளிர் மணி நகையாய்
தோடு இவர்ந்த தார்ச் சம்பரன் தொலைவுற்ற வேலை
ஆடல் வென்றியான் அருளிய வரம் அவை இரண்டும்
கோடி என்றனள் உள்ளமும் கோடிய கொடியாள்
#89
இரு வரத்தினில் ஒன்றினால் அரசு கொண்டு இராமன்
பெரு வனத்திடை ஏழ்_இரு பருவங்கள் பெயர்ந்து
திரிதரச் செய்தி ஒன்றினால் செழு நிலம் எல்லாம்
ஒருவழிப்படும் உன் மகற்கு உபாயம் ஈது என்றாள்
#90
உரைத்த கூனியை உவந்தனள் உயிருறத் தழுவி
நிரைத்த மா மணி ஆரமும் நிதியமும் நீட்டி
இரைத்த வேலை சூழ் உலகம் என் ஒரு மகற்கு ஈந்தாய்
தரைக்கு நாயகன் தாய் இனி நீ எனத் தணியா
#91
நன்று சொல்லினை நம்பியை நளிர் முடி சூட்டல்
துன்று கானத்தில் இராமனைத் துரத்தல் இவ் இரண்டும்
அன்றது ஆம் எனில் அரசன் முன் ஆருயிர் துறந்து
பொன்றி நீங்குதல் புரிவென் யான் போதி நீ என்றாள்
@3 கைகேயி சூழ்ச்சிவினை படலம்
#1
கூனி போன பின் குல மலர்க் குப்பை-நின்று இழிந்தாள்
சோனை வார் குழல் கற்றையில் சொருகிய மாலை
வான மா மழை நுழைதரு மதி பிதிர்ப்பாள் போல்
தேன் அவாவுறு வண்டு இனம் அலமரச் சிதைத்தாள்
#2
விளையும் தன் புகழ் வல்லியை வேரறுத்து என்ன
கிளை கொள் மேகலை சிந்தினள் கிண்கிணியோடும்
வளை துறந்தனள் மதியினில் மறு துடைப்பாள் போல்
அளக வாள் நுதல் அரும்பெறல் திலகமும் அழித்தாள்
#3
தா_இல் மா மணிக் கலம் மற்றும் தனித்தனி சிதறி
நாவி ஓதியை நானிலம் தைவரப் பரப்பி
காவி உண்ட கண் அஞ்சனம் கான்றிடக் கலுழா
பூ உதிர்ந்தது ஓர் கொம்பு எனப் புவி மிசை புரண்டாள்
#4
நவ்வி வீழ்ந்து என நாடக மயில் துயின்று என்ன
கவ்வை கூர்தரச் சனகி ஆம் கடி கமழ் கமலத்து
அவ்வை நீங்கும் என்று அயோத்தி வந்து அடைந்த அம் மடந்தை
தவ்வை ஆம் எனக் கிடந்தனள் கேகயன்_தனையை
#5
நாழிகை கங்குலின் நள் அடைந்த பின்றை
யாழ் இசை அஞ்சிய அம் சொல் ஏழை கோயில்
வாழிய என்று அயில் மன்னர் துன்ன வந்தான்
ஆழி நெடும் கை மடங்கல் ஆளி அன்னான்
#6
வாயிலில் மன்னர் வணங்கி நிற்ப வந்து ஆங்கு
ஏயின செய்யும் மடந்தைமாரொடு ஏகிப்
பாயல் துறந்த படைத் தடம் கண் மென் தோள்
ஆய்_இழை-தன்னை அடைந்த ஆழி மன்னன்
#7
அடைந்து அவண் நோக்கி அரந்தை என்-கொல் வந்து
தொடர்ந்து எனத் துயர்கொண்டு சோரும் நெஞ்சன்
மடந்தையை மானை எடுக்கும் ஆனையே போல்
தடம் கைகள் கொண்டு தழீஇ எடுக்கலுற்றான்
#8
நின்று தொடர்ந்த நெடும் கை-தம்மை நீக்கி
மின் துவள்கின்றது போல மண்ணில் வீழ்ந்தாள்
ஒன்றும் இயம்பலள் நீடு உயிர்க்கலுற்றாள்
மன்றல் அரும் தொடை மன்னன் ஆவி_அன்னாள்
#9
அன்னது கண்ட அலங்கல் மன்னன் அஞ்சி
என்னை நிகழ்ந்தது இவ் ஏழு ஞாலம் வாழ்வார்
உன்னை இகழ்ந்தவர் மாள்வர் உற்றது எல்லாம்
சொன்ன பின் என் செயல் காண்டி சொல்லிடு என்றான்
#10
வண்டு உளர் தாரவன் வாய்மை கேட்ட மங்கை
கொண்ட நெடும் கணின் ஆலி கொங்கை கோப்ப
உண்டு-கொலாம் அருள் என்-கண் உன்-கண் ஒக்கின்
பண்டைய இன்று பரிந்து அளித்தி என்றாள்
#11
கள் அவிழ் கோதை கருத்து உணராத மன்னன்
வெள்ள நெடும் சுடர் மின்னின் மின்ன நக்கான்
உள்ளம் உவந்தது செய்வன் ஒன்றும் உலோபேன்
வள்ளல் இராமன் உன் மைந்தன் ஆணை என்றான்
#12
ஆன்றவன் அவ் உரை கூற அன்னம் அன்னாள்
தோன்றிய பேர் அவலம் துடைத்தல் உண்டேல்
சான்று இமையோர் குலம் ஆக மன்ன நீ அன்று
ஏன்ற வரங்கள் இரண்டும் ஈதி என்றாள்
#13
வரம் கொள இத்துணை மன்னும் அல்லல் எய்தி
இரங்கிட வேண்டுவது இல்லை ஈவென் என்-பால்
பரம் கெட இப்பொழுதே பகர்ந்திடு என்றான்
உரம் கொள் மனத்தவள் வஞ்சம் ஓர்கிலாதான்
#14
ஏய வரங்கள் இரண்டின் ஒன்றினால் என்
சேய் அரசு ஆள்வது சீதை_கேள்வன் ஒன்றால்
போய் வனம் ஆள்வது எனப் புகன்று நின்றாள்
தீயவை யாவையினும் சிறந்த தீயாள்
#15
நாகம் எனும் கொடியாள் தன் நாவின் வந்த
சோக விடம் தொடரத் துணுக்கம் எய்தா
ஆகம் அடங்கலும் வெந்து அழிந்து அராவின்
வேகம் அடங்கிய வேழம் என்ன வீழ்ந்தான்
#16
பூதலம் உற்று அதனில் புரண்ட மன்னன்
மா துயரத்தினை யாவர் சொல்ல வல்லார்
வேதனை முற்றிட வெந்துவெந்து கொல்லன்
ஊதுலையில் கனல் என்ன வெய்து_உயிர்த்தான்
#17
உலர்ந்தது நா உயிர் ஓடலுற்றது உள்ளம்
புலர்ந்தது கண்கள் பொடித்த பொங்கு சோரி
சலம் தலைமிக்கது தக்கது என்-கொல் என்றுஎன்று
அலந்தலை உற்ற அரும் புலன்கள் ஐந்தும்
#18
மேவி நிலத்தில் இருக்கும் நிற்கும் வீழும்
ஓவியம் ஒப்ப உயிர்ப்பு அடங்கி ஓயும்
பாவியை உற்று எதிர் பற்றி எற்ற எண்ணும்
ஆவி பதைப்ப அலக்கண் எய்தி நின்றான்
#19
பெண் என உட்கும் பெரும் பழிக்கு நாணும்
உள் நிறை வெப்பொடு உயிர்த்துயிர்த்து உலாவும்
கண்ணிலன் ஒப்ப அயர்க்கும் வன் கை வேல் வெம்
புண் நுழைகிற்க உழைக்கும் ஆனை போல்வான்
#20
கம்ப நெடும் களி யானை அன்ன மன்னன்
வெம்பி விழுந்து எழும் விம்மல் கண்டு வெய்துற்று
உம்பர் நடுங்கினர் ஊழி பேர்வது ஒத்தது
அம்பு அன கண்ணவள் உள்ளம் அன்னதேயால்
#21
அஞ்சலள் ஐயனது அல்லல் கண்டும் உள்ளம்
நஞ்சிலள் நாண் இலள் என்ன நாணம் ஆமால்
வஞ்சனை பண்டு மடந்தை வேடம் என்றே
தஞ்சு என மாதரை உள்ளலார்கள் தக்கோர்
#22
இ நிலைநின்றவள்-தன்னை எய்த நோக்கி
நெய் நிலை வேலவன் நீ திசைத்தது உண்டோ
பொய் நிலையோர்கள் புணர்த்த வஞ்சம் உண்டோ
உன் நிலை சொல் எனது ஆணை உண்மை என்றான்
#23
திசைத்ததும் இல்லை எனக்கு வந்து தீயோர்
இசைத்ததும் இல்லை முன் ஈந்த இவ் வரங்கள்
குசைப் பரியோய் தரின் இன்று கொள்வேன் அன்றேல்
வசைத் திறன் நின்-வயின் நிற்க மாள்வென் என்றாள்
#24
இந்த நெடும் சொல் அவ் ஏழை கூறும் முன்னே
வெந்த கொடும் புணில் வேல் நுழைந்தது ஒப்ப
சிந்தை திரிந்து திகைத்து அயர்ந்து வீழ்ந்தான்
மைந்தன் அலாது உயிர் வேறு இலாத மன்னன்
#25
ஆ கொடியாய் எனும் ஆவி காலும் அந்தோ
ஓ கொடிதே அறம் என்னும் உண்மை ஒன்றும்
சாக எனா எழும் மெய் தளாடி வீழும்
மாகமும் நாகமும் மண்ணும் வென்ற வாளான்
#26
நாரியர் இல்லை இ ஞாலம் எங்கும் என்ன
கூரிய வாள் கொடு கொன்று நீக்கி யானும்
பூரியர் எண்ணிடை வீழ்வன் என்று பொங்கும்
வீரியர் வீரம் விழுங்கி நின்ற வேலான்
#27
கையொடு கைகள் புடைக்கும் வாய் கடிக்கும்
மெய்யுரை குற்றம் எனப் புழுங்கி விம்மும்
நெய் எரியுற்று என நெஞ்சு அழிந்து சோரும்
வையகம் முற்றும் நடந்த வாய்மை மன்னன்
#28
ஒறுப்பினும் அந்தரம் உண்மை ஒன்றும் ஓவா
மறுப்பினும் அந்தரம் என்று வாய்மை மன்னன்
பொறுப்பினும் இ நிலை போகிலாளை வாளால்
இறுப்பினும் ஆவது இரப்பது என்று எழுந்தான்
#29
கோல் மேற்கொண்டும் குற்றம் அகற்ற குறிக்கொண்டார்
போல் மேல் உற்றது உண்டு எனின் நன்று ஆம் பொறை என்னா
கால் மேல் வீழ்ந்தான் கந்து கொல் யானை கழல் மன்னர்
மேல் மேல் வந்து முந்தி வணங்கி மிடை தாளான்
#30
கொள்ளான் நின் சேய் இவ் அரசு அன்னான் கொண்டாலும்
நள்ளாது இந்த நானிலம் ஞாலம்-தனில் என்றும்
உள்ளார் எல்லாம் ஓத உவக்கும் புகழ் கொள்ளாய்
எள்ளா நிற்கும் வன் பழி கொண்டு என் பயன் என்றான்
#31
வானோர் கொள்ளார் மண்ணவர் உய்யார் இனி மற்று என்
ஏனோர் செய்கை யாரொடு நீ இவ் அரசு ஆள்வாய்
யானே சொல்ல கொள்ள இசைந்தான் முறையாலே
தானே நல்கும் உன் மகனுக்கும் தரை என்றான்
#32
கண்ணே வேண்டும் என்னினும் ஈயக் கடவேன் என்
உள் நேர் ஆவி வேண்டினும் இன்றே உனது அன்றோ
பெண்ணே வண்மை கேகயன்_மானே பெறுவாயேல்
மண்ணே கொள் நீ மற்றையது ஒன்றும் மற என்றான்
#33
வாய் தந்தேன் என்றேன் இனி யானோ அது மாற்றேன்
நோய் தந்து என்னை நோவன செய்து நுவலாதே
தாய் தந்து என்ன தன்னை இரந்தால் தழல் வெம் கண்
பேய் தந்தீயும் நீ இது தந்தால் பிழை ஆமோ
#34
இன்னே இன்னே பன்னி இரந்தான் இகல் வேந்தன்
தன் நேர் இல்லாத் தீயவள் உள்ளம் தடுமாறாள்
முன்னே தந்தாய் இவ் வரம் நல்காய் முனிவாயேல்
என்னே மன்னா யார் உளர் வாய்மைக்கு இனி என்றாள்
#35
அச் சொல் கேளா ஆவி புழுங்கா அயர்கின்றான்
பொய்ச் சொல் பேணா வாய்மொழி மன்னன் பொறை கூர
நச்சுத் தீயே பெண் உரு அன்றோ என நாணா
முச்சற்றார் போல் பின்னும் இரந்தே மொழிகின்றான்
#36
நின் மகன் ஆள்வான் நீ இனிது ஆள்வாய் நிலம் எல்லாம்
உன் வயம் ஆமே ஆளுதி தந்தேன் உரை குன்றேன்
என் மகன் என் கண் என் உயிர் எல்லா உயிர்கட்கும்
நன் மகன் இந்த நாடு இறவாமை நய என்றான்
#37
மெய்யே என்றன் வேரற நூறும் வினை நோக்கி
நையாநின்றேன் நாவும் உலர்ந்தேன் நளினம் போல்
கையான் இன்று என் கண் எதிர்நின்றும் கழிவானேல்
உய்யேன் நங்காய் உன் அபயம் என் உயிர் என்றான்
#38
இரந்தான் சொல்லும் இன் உரை கொள்ளாள் முனிவு எஞ்சாள்
மரம்தான் என்னும் நெஞ்சினள் நாணாள் வகை பாராள்
சரம் தாழ் வில்லாய் தந்த வரத்தைத் தவிர்க என்றல்
உரம்தான் அல்லால் நல் அறம் ஆமோ உரை என்றாள்
#39
கொடியாள் இன்ன கூறினள் கூறக் குல வேந்தன்
முடி சூடாமல் காத்தலும் மொய் கானிடை மெய்யே
நெடியான் நீங்க நீங்கும் என் ஆவி இனி என்னா
இடி ஏறுண்ட மால் வரை போல் மண்ணிடை வீழ்ந்தான்
#40
வீழ்ந்தான் வீழா வெம் துயரத்தின் கடல் வெள்ளத்து
ஆழ்ந்தான் ஆழா அக் கடலுக்கு ஓர் கரை காணான்
சூழ்ந்தாள் துன்பம் சொல் கொடியாள் சொல் கொடு நெஞ்சம்
போழ்ந்தாள் உள்ளப் புன்மையை நோக்கிப் புலர்கின்றான்
#41
ஒன்றா நின்ற ஆருயிரோடும் உயர் கேள்வர்
பொன்றா முன்னம் பொன்றினர் என்னும் புகழ் அல்லால்
இன்று ஓர்-காறும் எல் வளையார் தம் இறையோரைக்
கொன்றார் இல்லை கொல்லுதியோ நீ கொடியோளே
#42
ஏவம் பாராய் இல் முறை நோக்காய் அறம் எண்ணாய்
ஆ என்பாயோ அல்லை மனத்தால் அருள் கொன்றாய்
நா அம்பால் என் ஆருயிர் உண்டாய் இனி ஞாலம்
பாவம் பாராது இன் உயிர் கொள்ளப் படுகின்றாய்
#43
ஏண்-பால் ஓவா நாண் மடம் அச்சம் இவையே தம்
பூண்-பால் ஆகக் காண்பவர் நல்லார் புகழ் பேணி
நாண்-பால் ஓரா நங்கையர் தம்-பால் நணுகாரே
ஆண்பாலாரே பெண்பால் ஆரோடு அடைவு அம்மா
#44
மண் ஆள்கின்றார் ஆகி வலத்தால் மதியால் வைத்து
எண்ணாநின்றார் யாரையும் எல்லா இகலாலும்
விண்ணோர்-காறும் வென்ற எனக்கு என் மனை வாழும்
பெண்ணால் வந்தது அந்தரம் என்னப் பெறுவேனோ
#45
என்றுஎன்று உன்னும் பன்னி இரக்கும் இடர் தோயும்
ஒன்று ஒன்று ஒவ்வா இன்னல் உழக்கும் உயிர் உண்டோ
இன்று இன்று என்னும் வண்ணம் மயங்கும் இடையும் பொன்
குன்று ஒன்று ஒன்றோடு ஒன்றியது என்னக் குவி தோளான்
#46
ஆழிப் பொன் தேர் மன்னவன் இவ்வாறு அயர்வு எய்தி
பூழிப் பொன் தார் முற்றும் அடங்கப் புரள் போழ்தில்
ஊழின் பெற்றாய் என்று உரை இன்றேல் உயிர் மாய்வென்
பாழிப் பொன் தோள் மன்னவ என்றாள் பசையற்றாள்
#47
அரிந்தான் முன் ஓர் மன்னவன் அன்றே அரு மேனி
வரிந்து ஆர் வில்லாய் வாய்மை வளர்ப்பான் வரம் நல்கி
பரிந்தால் என் ஆம் என்றனள் பாயும் கனலே போல்
எரிந்து ஆறாதே இன் உயிர் உண்ணும் எரி_அன்னாள்
#48
வீழ்ந்தாளே இவ் வெய்யவள் என்னா மிடல் வேந்தன்
ஈந்தேன் ஈந்தேன் இவ் வரம் என் சேய் வனம் ஆள
மாய்ந்தே நான் போய் வான்_உலகு ஆள்வென் வசை வெள்ளம்
நீந்தாய் நீந்தாய் நின் மகனோடும் நெடிது என்றான்
#49
கூறா முன்னம் கூறுபடுக்கும் கொலை வாளின்
ஏறு ஆம் என்னும் வன் துயர் ஆகத்து இடை மூழ்கத்
தேறான் ஆகிச் செய்கை மறந்தான் செயல் முற்றி
ஊறாநின்ற சிந்தையினாளும் துயிலுற்றாள்
#50
சேண் உலாவிய நாள் எலாம் உயிர் ஒன்று போல்வன செய்து பின்
ஏண் உலாவிய தோளினான் இடர் எய்த ஒன்றும் இரங்கிலா
வாள் நிலா நகை மாதராள் செயல் கண்டு மைந்தர் முன் நிற்கவும்
நாணினாள் என ஏகினாள் நளிர் கங்குல் ஆகிய நங்கையே
#51
எண் தரும் கடை சென்ற யாமம் இயம்புகின்றன ஏழையால்
வண்டு தங்கிய தொங்கல் மார்பன் மயங்கி விம்மியவாறு எலாம்
கண்டு நெஞ்சு கலங்கி அம் சிறை ஆன காமர் துணைக் கரம்
கொண்டு தம் வயிறு எற்றிஎற்றி விளிப்ப போன்றன கோழியே
#52
தோய் கயத்தும் மரத்தும் மென் சிறை துள்ளி மீது எழு புள் எலாம்
தேய்கை ஒத்த மருங்குல் மாதர் சிலம்பின்-நின்று சிலம்புவ
கேகயத்து அரசன் பயந்த விடத்தை இன்னது ஒர் கேடு சூழ்
மா கயத்தியை உள் கொதித்து மனத்து வைவன போன்றவே
#53
சேமம் என்பன பற்றி அன்பு திருந்த இன் துயில் செய்த பின்
வாமம் மேகலை மங்கையோடு வனத்துள் யாரும் மறக்கிலா
நாமம் நம்பி நடக்கும் என்று நடுங்குகின்ற மனத்தவாய்
யாமும் இ மண் இறத்தும் என்பன போல் எழுந்தன யானையே
#54
சிரித்த பங்கயம் ஒத்த செம் கண் இராமனைத் திருமாலை அக்
கரிக் கரம் பொரு கைத்தலத்து உயர் காப்பு நாண் அணிதற்கு முன்
வரித்த தண் கதிர் முத்தது ஆகி இ மண் அனைத்தும் நிழற்ற மேல்
விரித்த பந்தர் பிரித்தது ஆம் என மீன் ஒளித்தது வானமே
#55
நாம வில் கை இராமனைத் தொழும் நாள் அடைந்த உமக்கு எலாம்
காமன் விற்கு உடை கங்குல் மாலை கழிந்தது என்பது கற்பியா
தாம் ஒலித்தன பேரி அவ் ஒலி சாரல் மாரி தழங்கலால்
மா மயில் குலம் என்ன முன்னம் மலர்ந்து எழுந்தனர் மாதரே
#56
இன மலர்க் குலம் வாய் விரித்து இள வாச மாருதம் வீச முன்
புனை துகில் கலை சோர நெஞ்சு புழுங்கினார் சில பூவைமார்
மனம் அனுக்கம் விட தனித்தனி வள்ளலைப் புணர் கள்ள வன்
கனவினுக்கு இடையூறு அடுக்க மயங்கினார் சில கன்னிமார்
#57
சாய் அடங்க நலம் கலந்து தயங்கு தன் குல நன்மையும்
போய் அடங்க நெடும் கொடும் பழி கொண்டு அரும் புகழ் சிந்தும் அத்
தீ அடங்கிய சிந்தையாள் செயல் கண்டு சீரிய நங்கைமார்
வாய் அடங்கின என்ன வந்து குவிந்த வண் குமுதங்களே
#58
மொய் அராகம் நிரம்ப ஆசை முருங்கு தீயின் முழங்க மேல்
வை அராவிய மாரன் வாளியும் வான் நிலா நெடு வாடையும்
மெய் அராவிட ஆவி சோர வெதும்பு மாதர்-தம் மென் செவி
பை அரா நுழைகின்ற போன்றன பண் கனிந்து எழு பாடலே
#59
ஆழியான் முடி சூடும் நாள் இடை ஆன பாவி இது ஓர் இரா
ஊழி ஆயினவாறு எனா உயர் போதின் மேல் உறை பேதையும்
ஏழு லோகமும் எண் தவம் செய்த கண்ணும் எங்கள் மனங்களும்
வாழும் நாள் இது என எழுந்தனர் மஞ்சு தோய் புய மஞ்சரே
#60
ஐ உறும் சுடர் மேனி யான் எழில் காண மூளும் அவாவினால்
கொய்யுறும் குல மா மலர்க் குவை-நின்று எழுந்தனர் கூர்மை கூர்
நெய் உறும் சுடர் வேல் நெடும் கண் முகிழ்த்து நெஞ்சில் நினைப்பொடும்
பொய் உறங்கும் மடந்தைமார் குழல் வண்டு பொம்மென விம்மவே
#61
ஆடகம் தரு பூண் முயங்கிட அஞ்சிஅஞ்சி அனந்தரால்
ஏடு அகம் பொதி தார் பொருந்திட யாமம் பேரி இசைத்தலால்
சேடகம் புனை கோதை மங்கையர் சிந்தையில் செறி திண்மையால்
ஊடல் கண்டவர் கூடல் கண்டிலர் நையும் மைந்தர்கள் உய்யவே
#62
தழை ஒலித்தன வண்டு ஒலித்தன தார் ஒலித்தன பேரி ஆம்
முழவு ஒலித்தன தேர் ஒலித்தன முத்து ஒலித்தன மல்கு பேர்
இழை ஒலித்தன புள் ஒலித்தன யாழ் ஒலித்தன எங்கணும்
மழை ஒலித்தன போல் கலித்த மனத்தின் முந்துறு வாசியே
#63
வையம் ஏழும் ஓர் ஏழும் ஆருயிரோடு கூட வழங்கும் அ
மெய்யன் வீரருள்_வீரன் மா மகன் மேல் விளைந்து எழு காதலால்
நையநைய நல் ஐம்புலன்கள் அவிந்து அடங்கி நடுங்குவான்
தெய்வ மேனி படைத்த சேய் ஒளி போல் மழுங்கின தீபமே
#64
வங்கியம் பல தேன் விளம்பின பாணி முந்துறு வாணியின்
பங்கி அம்பரம் எங்கும் விம்மின பம்பை பம்பின பல் வகைப்
பொங்கு இயம் பலவும் கறங்கின நூபுரங்கள் புலம்ப வெண்
சங்கு இயம்பின கொம்பு அலம்பின சாம கீதம் நிரம்பவே
#65
தூபம் முற்றிய கார் இருள் பகை துள்ளி ஓடிட உள் எழும்
தீபம் முற்றவும் விட்டு அகன்றன சேயது ஆருயிர் தேய வெம்
பாபம் முற்றிய பேதை செய்த பகைத் திறத்தினில் வெய்யவன்
கோபம் முற்றி மிகச் சிவந்தனன் ஒத்தனன் குணக் குன்றிலே
#66
மூவராய் முதல் ஆகி மூலம் அது ஆகி ஞாலமும் ஆகிய
தேவதேவர் பிடித்த போர் வில் ஒடித்த சேவகர் சேண் நிலம்
காவல் மா முடி சூடு பேரெழில் காணலாம் எனும் ஆசை கூர்
பாவைமார் முகம் என்ன முன்னம் மலர்ந்த பங்கய ராசியே
#67
இன்ன வேலையின் ஏழு வேலையும் ஒத்த போல இரைந்து எழுந்து
அன்ன மா நகர் மைந்தன் மா முடி சூடும் வைகல் இது ஆம் எனா
துன்னு காதல் துரப்ப வந்தவை சொல்லல் ஆம் வகை எம்மனோர்க்கு
உன்னல் ஆவன அல்ல என்னினும் உற்ற பெற்றி உணர்த்துவாம்
#68
குஞ்சரம் அனையார் சிந்தை கொள் இளையார்
பஞ்சினை அணிவார் பால் வளை தெரிவார்
அஞ்சனம் என வாள் அம்புகள் இடையே
நஞ்சினை இடுவார் நாள்_மலர் புனைவார்
#69
பொங்கிய உவகை வெள்ளம் பொழிதரக் கமலம் பூத்த
சங்கை_இல் முகத்தார் நம்பி தம்பியர் அனையர் ஆனார்
செங் கயல் நறவம் மாந்திக் களிப்பன சிவக்கும் கண்ணார்
குங்குமச் சுவடு நீங்காக் குவவுத் தோள் குமரர் எல்லாம்
#70
மாதர்கள் கற்பின் மிக்கார் கோசலை மனத்தை ஒத்தார்
வேதியர் வசிட்டன் ஒத்தார் வேறு உள மகளிர் எல்லாம்
சீதையை ஒத்தார் அன்னாள் திருவினை ஒத்தாள் அவ் ஊர்
சாதுகை மாந்தர் எல்லாம் தயரதன்-தன்னை ஒத்தார்
#71
இமிழ் திரைப் பரவை ஞாலம் எங்கணும் வறுமை கூர
உமிழ்வது ஒத்து உதவு காதல் உந்திட வந்தது அன்றே
குமிழ் முலைச் சீதை_கொண்கன் கோமுடி புனைதல் காண்பான்
அமிழ்து உணக் குழுமுகின்ற அமரரின் அரச வெள்ளம்
#72
பாகு இயல் பவளச் செவ் வாய் பணை முலை பரவை அல்குல்
தோகையர் குழாமும் மைந்தர் சும்மையும் துவன்றி எங்கும்
ஏகு-மின் ஏகும் என்றுஎன்று இடையிடை நிற்றல் அல்லால்
போகில மீளகில்லா பொன் நகர் வீதி எல்லாம்
#73
வேந்தரே பெரிது என்பாரும் வேதியர் பெரிது என்பாரும்
மாந்தரே பெரிது என்பாரும் மகளிரே பெரிது என்பாரும்
போந்ததே பெரிது என்பாரும் புகுவதே பெரிது என்பாரும்
தேர்ந்ததே தேரின் அல்லால் யாவரே தெரியக் கண்டார்
#74
குவளையின் எழிலும் வேலின் கொடுமையும் குழைத்துக் கூட்டித்
திவளும் அஞ்சனம் என்று ஏய்ந்த நஞ்சினைத் தெரியத் தீட்டி
தவள ஒண் மதியுள் வைத்த தன்மை சால் தடம் கண் நல்லார்
துவளும் நுண் இடையார் ஆடும் தோகை அம் குழாத்தின் தொக்கார்
#75
நலம் கிளர் பூமி என்னும் நங்கையை நறும் துழாயின்
அலங்கலான் புணரும் செல்வம் காண வந்து அடைந்திலாதார்
இலங்கையின் நிருதரே இவ் ஏழ் உலகத்து வாழும்
விலங்கலும் ஆசை நின்ற விடா மத விலங்கலேயால்
#76
சந்திரர் கோடி என்னத் தரள வெண் கவிகை ஓங்க
அந்தரத்து அன்னம் எல்லாம் ஆர்ந்து எனக் கவரி துன்ன
இந்திரற்கு உவமை சாலும் இரு நிலக் கிழவர் எல்லாம்
வந்தனர் மௌலி சூட்டும் மண்டபம் மரபின் புக்கார்
#77
முன் பயந்தெடுத்த காதல் புதல்வனை முறையினோடும்
இல் பயன் சிறப்பிப்பாரின் ஈண்டிய உவகை தூண்ட
அற்புதன் திருவைச் சேரும் அரு மணம் காணப் புக்கார்
நல் பயன் தவத்தின் உய்க்கும் நான்மறைக் கிழவர் எல்லாம்
#78
விண்ணவர் விசும்பு தூர்த்தார் விரி திரை உடுத்த கோல
மண்ணவர் திசைகள் தூர்த்தார் மங்கலம் இசைக்கும் சங்கம்
கண் அகல் முரசின் ஓதை கண்டவர் செவிகள் தூர்த்த
எண்_அரும் கனக_மாரி எழு திரை கடலும் தூர்த்த
#79
விளக்கு ஒளி மறைத்த மன்னர் மின் ஒளி மகுட கோடி
துளக்கு ஒளி விசும்பின் ஊரும் சுடரையும் மறைத்த சூழ்ந்த
அளக்கர் வெண் முத்த மூரல் முறுவலார் அணியின் சோதி
வளைக்கலாம் என்று அவ் வானோர் கண்ணையும் மறைத்த அன்றே
#80
ஆயது ஓர் அமைதியின்-கண் ஐயனை மகுடம் சூட்டற்கு
ஏயும் மங்கலங்கள் ஆன யாவையும் இயையக் கொண்டு
தூய நான்மறைகள் வேதபாரகர் சொல்ல தொல்லை
வாயில்கள் நெருக்கம் நீங்க மா தவக் கிழவன் வந்தான்
#81
கங்கையே முதல ஆக கன்னி ஈறு ஆய தீர்த்தம்
மங்கலப் புனலும் நாலு வாரியின் நீரும் பூரித்து
அங்கியின் வினையிற்கு ஏற்ற யாவையும் அமைத்து வீரச்
சிங்க ஆசனமும் வைத்துச் செய்வன பிறவும் செய்தான்
#82
கணிதநூல் உணர்ந்த மாந்தர் காலம் வந்து அடுத்தது என்ன
பிணி_அற நோற்று நின்ற பெரியவன் விரைவின் ஏகி
மணி முடி வேந்தன்-தன்னை வல்லையின் கொணர்தி என்ன
பணி தலைநின்ற காதல் சுமந்திரன் பரிவின் சென்றான்
#83
விண் தொட நிவந்த கோயில் வேந்தர்-தம் வேந்தன் தன்னைக்
கண்டிலன் வினவக் கேட்டான் கைகயள் கோயில் நண்ணித்
தொண்டை வாய் மடந்தைமாரின் சொல்ல மற்று அவரும் சொல்ல
பெண்டிரில் கூற்றம் அன்னாள் பிள்ளையைக் கொணர்க என்றாள்
#84
என்றனள் என்னக் கேட்டான் எழுந்த பேருவகை பொங்கப்
பொன் திணி மாட வீதி பொருக்கென நீங்கிப் புக்கான்
தன் திரு உள்ளத்துள்ளே தன்னையே நினையும் அந்தக்
குன்று இவர் தோளினானைத் தொழுது வாய் புதைத்துக் கூறும்
#85
கொற்றவர் முனிவர் மற்றும் குவலயத்துள்ளார் உன்னைப்
பெற்றவன்-தன்னைப் போலப் பெரும் பரிவு இயற்றி நின்றார்
சிற்றவை-தானும் ஆங்கே கொணர்க எனச் செப்பினாள் அப்
பொன் தட மகுடம் சூடப் போகுதி விரைவின் என்றான்
#86
ஐயனும் அச் சொல் கேளா ஆயிரம் மௌலி யானைக்
கைதொழுது அரச வெள்ளம் கடல் எனத் தொடர்ந்து சுற்றத்
தெய்வ கீதங்கள் பாடத் தேவரும் மகிழ்ந்து வாழ்த்தத்
தையலார் இரைத்து நோக்கத் தார் அணி தேரில் சென்றான்
#87
திரு மணி மகுடம் சூடச் சேவகன் செல்கின்றான் என்று
ஒருவரின் ஒருவர் முந்த காதலோடு உவகை உந்த
இரு கையும் இரைத்து மொய்த்தார் இன் உயிர் யார்க்கும் ஒன்றாய்
பொரு_அரு தேரில் செல்லப் புறத்திடைக் கண்டார் போல்வார்
#88
துண்ணெனும் சொல்லாள் சொல்ல சுடர் முடி துறந்து தூய
மண் எனும் திருவை நீங்கி வழிக்கொளா முன்னம் வள்ளல்
பண் எனும் சொல்லினார்-தம் தோள் எனும் பணைத்த வேயும்
கண் எனும் கால வேலும் மிடை நெடும் கானம் புக்கான்
#89
சுண்ணமும் மலரும் சாந்தும் கனகமும் தூவ வந்து
வண்ண மேகலையும் நாணும் வளைகளும் தூவுவாரும்
புண்ணுற அனங்கன் வாளி புழைத்த தம் புணர் மென் கொங்கை
கண் உறப் பொழிந்த காம வெம் புனல் கழுவுவாரும்
#90
அம்_கணன் அவனி காத்தற்கு ஆம் இவன் என்னல் ஆமோ
நம்-கண் அன்பிலன் என்று உள்ளம் தள்ளுற நடுங்கி நைவார்
செங் கணும் கரிய கோல மேனியும் தேரும் ஆகி
எங்கணும் தோன்றுகின்றான் எனைவரோ இராமன் என்பார்
#91
இனையராய் மகளிர் எல்லாம் இரைத்தனர் நிரைத்து மொய்த்தார்
முனைவரும் நகர மூதூர் முதிஞரும் இளைஞர்தாமும்
அனையவன் மேனி கண்டார் அன்பினுக்கு எல்லை காணார்
நினைவன மனத்தால் வாயால் நிகழ்ந்தது நிகழ்த்தலுற்றாம்
#92
உய்ந்தது இவ் உலகம் என்பார் ஊழி காண்கிற்பாய் என்பார்
மைந்த நீ கோடி எங்கள் வாழ்க்கை நாள் யாவும் என்பார்
ஐந்து அவித்து அரிதின் செய்த தவம் உனக்கு ஆக என்பார்
பைம் துழாய் தெரியலாய்க்கே நல்வினை பயக்க என்பார்
#93
உயர் அருள் ஒண் கண் ஒக்கும் தாமரை நிறத்தை ஒக்கும்
புயல் மொழி மேகம் என்ன புண்ணியம் செய்த என்பார்
செயல்_அரும் தவங்கள் செய்தி செம்மலைத் தந்த செல்வ
தயரதற்கு என்ன கைம்மாறு உடையம் யாம் தக்கது என்பார்
#94
வாரணம் அழைக்க வந்து கரா உயிர் மாற்றும் நேமி
நாரணன் ஒக்கும் இந்த நம்பி-தன் கருணை என்பார்
ஆரணம் அறிதல் தேற்றா ஐயனை அணுகி நோக்கிக்
காரணம் இன்றியேயும் கண்கள் நீர் கலுழ நிற்பார்
#95
நீல மா முகில்_அனான்-தன் நிறைவினோடு அறிவு நிற்க
சீலம் ஆர்க்கு உண்டு கெட்டேன் தேவரின் அடங்குவானோ
காலமாய்க் குணித்த நுண்மைக் கணக்கையும் கடந்து நின்ற
மூலமாய் முடிவு இலாத மூர்த்தி இ முன்பன் என்பார்
#96
ஆர்கலி அகழ்ந்தோர் கங்கை அவனியில் கொணர்ந்தோர் முந்தைப்
போர் கெழு புலவர்க்கு ஆகி அசுரரைப் பொருது வென்றோர்
பேர் கெழு சிறப்பின் வந்த பெரும் புகழ் நிற்பது ஐயன்
தார் கெழு திரள் தோள் தந்த புகழினை தழுவி என்பார்
#97
சந்தம் இவை தா_இல் மணி ஆரம் இவை யாவும்
சிந்துரமும் இங்கு இவை செறிந்த மத வேழப்
பந்திகள் வயப் பரி பசும்பொனின் வெறுக்கை
மைந்த வறியோர் கொள வழங்கு என நிரைப்பார்
#98
மின் பொருவு தேரின் மிசை வீரன் வரு போழ்தில்
தன் பொருவு_இல் கன்று தனி தாவி வரல் கண்டு ஆங்கு
அன்பு உருகு சிந்தையொடும் ஆ உருகுமா போல்
என்பு உருக நெஞ்சு உருகி யார் உருககில்லார்
#99
சத்திரம் நிழற்ற நிமிர் தானையொடு நானா
அத்திரம் நிழற்ற அருளோடு அவனி ஆள்வார்
புத்திரர் இனிப் பெறுதல் புல்லிது என நல்லோர்
சித்திரம் எனத் தனி திகைத்து உருகி நிற்பார்
#100
கார் மினொடு உலாயது என நூல் கஞலும் மார்பன்
தேர் மிசை நம் வாயில் கடிது ஏகுதல் செய்வானோ
கூர் கனக ராசியோடு கோடி மணியாலும்
தூர்-மின் நெடு வீதியினை என்று சொரிவாரும்
#101
தாய் கையில் வளர்ந்திலன் வளர்த்தது தவத்தால்
கேகயன்_மடந்தை கிளர் ஞாலம் இவன் ஆள
ஈகையில் உவந்த அவ் இயற்கை இது என்றால்
தோகை அவள் பேருவகை சொல்லல் அரிது என்பார்
#102
பாவமும் அரும் துயரும் வேர் பறியும் என்பார்
பூ_வலயம் இன்று தனி அன்று பொது என்பார்
தேவர் பகை உள்ளன இவ் வள்ளல் தெறும் என்பார்
ஏவல் செயும் மன்னர் தவம் யாவது-கொல் என்பார்
#103
ஆண்டு இனையராய் இனைய கூற அடல் வீரன்
தூண்டு புரவிப் பொரு_இல் சுந்தர மணித் தேர்
நீண்ட கொடி மாட நிரை வீதி நிறையப் போய்ப்
பூண்ட புகழ் மன்னன் உறை கோயில் புகலோடும்
#104
ஆங்கு வந்து அடைந்த அண்ணல் ஆசையின் கவரி வீச
பூங் குழல் மகளிர் உள்ளம் புதுக் களி ஆட நோக்கி
வீங்கு இரும் காதல் காட்டி விரி முகம் கமலப் பீடத்து
ஓங்கிய மகுடம் சூடி உவகை வீற்றிருப்பக் காணான்
#105
வேத்தவை முனிவரோடு விருப்பொடு களிக்கும் மெய்ம்மை
ஏத்தவை இசைக்கும் செம்பொன் மண்டபம் இனிதின் எய்தான்
ஒத்தவை உலகத்து எங்கும் உள்ளவை உணர்ந்தார் உள்ளம்
பூத்தவை வடிவை ஒப்பான் சிற்றவை கோயில் புக்கான்
#106
புக்கவன்-தன்னை நோக்கிப் புரவலர் முனிவர் யாரும்
தக்கதே நினைந்தான் தாதை தாமரைச் சரணம் சூடித்
திக்கினை நிமிர்த்த கோலச் செங்கதிர்ச்செல்வன் ஏய்ந்த
மிக்கு உயர் மகுடம் சூட்டச் சூடுதல் விழுமிது என்றார்
#107
ஆயன நிகழும் வேலை அண்ணலும் அயர்ந்து தேறாத்
தூயவன் இருந்த சூழல் துருவினன் வருதல் நோக்கி
நாயகன் உரையான் வாயால் நான் இது பகர்வென் என்னா
தாய் என நினைவான் முன்னே கூற்று எனத் தமியள் வந்தாள்
#108
வந்தவள்-தன்னைச் சென்னி மண் உற வணங்கி வாசச்
சிந்துரப் பவளச் செவ் வாய் செம் கையின் புதைத்து மற்றைச்
சுந்தரத் தடக் கை தானை மடக்குறத் துவண்டு நின்றான்
அந்தி வந்து அடைந்த தாயைக் கண்ட ஆன் கன்றின் அன்னான்
#109
நின்றவன்-தன்னை நோக்கி இரும்பினால் இயன்ற நெஞ்சின்
கொன்று உழல் கூற்றம் என்னும் பெயர் இன்றி கொடுமை பூண்டாள்
இன்று எனக்கு உணர்த்தல் ஆவது ஏயதே என்னின் ஆகும்
ஒன்று உனக்கு உந்தை மைந்த உரைப்பது ஓர் உரை உண்டு என்றாள்
#110
எந்தையே ஏவ நீரே உரைசெய இயைவது உண்டேல்
உய்ந்தனன் அடியேன் என்னின் பிறந்தவர் உளரோ வாழி
வந்தது என் தவத்தின் ஆய வரு பயன் மற்று ஒன்று உண்டோ
தந்தையும் தாயும் நீரே தலைநின்றேன் பணி-மின் என்றான்
#111
ஆழி சூழ் உலகம் எல்லாம் பரதனே ஆள நீ போய்த்
தாழ் இரும் சடைகள் தாங்கித் தாங்க_அரும் தவம் மேற்கொண்டு
பூழி வெம் கானம் நண்ணிப் புண்ணிய புனல்கள் ஆடி
ஏழ்_இரண்டு ஆண்டின் வா என்று இயம்பினன் அரசன் என்றாள்
#112
இப் பொழுது எம்மனோரால் இயம்புதற்கு எளிதோ யாரும்
செப்ப_அரும் குணத்து இராமன் திருமுகச் செவ்வி நோக்கின்
ஒப்பதே முன்பு பின்பு அவ் வாசகம் உணரக் கேட்ட
அப் பொழுது அலர்ந்த செந்தாமரையினை வென்றது அம்மா
#113
தெருள் உடை மனத்து மன்னன் ஏவலின் திறம்ப அஞ்சி
இருள் உடை உலகம் தாங்கும் இன்னலுக்கு இயைந்து நின்றான்
உருள் உடை சகடம் பூண் உடையவன் உய்த்த கார் ஏறு
அருள் உடை ஒருவன் நீக்க அப் பிணி அவிழ்ந்தது ஒத்தான்
#114
மன்னவன் பணி அன்று ஆகின் நும் பணி மறுப்பனோ என்
பின்னவன் பெற்ற செல்வம் அடியனேன் பெற்றது அன்றோ
என் இனி உறுதி அப்பால் இப் பணி தலை மேல் கொண்டேன்
மின் ஒளிர் கானம் இன்றே போகின்றேன் விடையும் கொண்டேன்
#115
என்று கொண்டு இனைய கூறி அடி இணை இறைஞ்சி மீட்டும்
தன் துணைத் தாதை பாதம் அத் திசை நோக்கித் தாழ்ந்து
பொன் திணி போதினாளும் பூமியும் புலம்பி நையக்
குன்றினும் உயர்ந்த தோளான் கோசலை கோயில் புக்கான்
@4 நகர் நீங்கு படலம்
#1
குழைக்கின்ற கவரி இன்றிக் கொற்ற வெண்குடையும் இன்றி
இழைக்கின்ற விதி முன் செல்லத் தருமம் பின் இரங்கி ஏக
மழைக் குன்றம் அனையான் மௌலி கவித்தனன் வரும் என்றுஎன்று
தழைக்கின்ற உள்ளத்து அன்னாள் முன் ஒரு தமியன் சென்றான்
#2
புனைந்திலன் மௌலி குஞ்சி மஞ்சனப் புனித நீரால்
நனைந்திலன் என்-கொல் என்னும் ஐயத்தால் நளினம் பாதம்
வனைந்த பொன் கழல் கால் வீரன் வணங்கலும் குழைந்து வாழ்த்தி
நினைந்தது என் இடையூறு உண்டோ நெடு முடி புனைதற்கு என்றாள்
#3
மங்கை அ மொழி கூறலும் மானவன்
செம் கை கூப்பி நின் காதல் திரு மகன்
பங்கம்_இல் குணத்து எம்பி பரதனே
துங்க மா முடி சூடுகின்றான் என்றான்
#4
முறைமை அன்று என்பது ஒன்று உண்டு மும்மையின்
நிறை குணத்தவன் நின்னினும் நல்லனால்
குறைவிலன் எனக் கூறினள் நால்வர்க்கும்
மறு_இல் அன்பினில் வேற்றுமை மாற்றினாள்
#5
என்று பின்னரும் மன்னன் ஏவியது
அன்று எனாமை மகனே உனக்கு அறன்
நன்று நும்பிக்கு நானிலம் நீ கொடுத்து
ஒன்றி வாழுதி ஊழி பல என்றாள்
#6
தாய் உரைத்த சொல் கேட்டு தழைக்கின்ற
தூய சிந்தை அத் தோம்_இல் குணத்தினான்
நாயகன் எனை நல் நெறி உய்ப்பதற்கு
ஏயது உண்டு ஓர் பணி என்று இயம்பினான்
#7
ஈண்டு உரைத்த பணி என்னை என்றவட்கு
ஆண்டு ஒர் ஏழினோடு ஏழ் அகல் கானிடை
மாண்ட மா தவத்தோருடன் வைகிப் பின்
மீண்டு நீ வரல் வேண்டும் என்றான் என்றான்
#8
ஆங்கு அவ் வாசகம் என்னும் அனல் குழை
தூங்கு தன் செவியில் தொடரா முனம்
ஏங்கினாள் இளைத்தாள் திகைத்தாள் மனம்
வீங்கினாள் விம்மினாள் விழுந்தாள் அரோ
#9
வஞ்சமோ மகனே உனை மா நிலம்
தஞ்சம் ஆக நீ தாங்கு என்ற வாசகம்
நஞ்சமோ இனி நான் உயிர் வாழ்வெனோ
அஞ்சும் அஞ்சும் என் ஆருயிர் அஞ்சுமால்
#10
கையைக் கையின் நெரிக்கும் தன் காதலன்
வைகும் ஆல் இலை அன்ன வயிற்றினைப்
பெய் வளை தளிரால் பிசையும் புகை
வெய்து_உயிர்க்கும் விழுங்கும் புழுங்குமால்
#11
நன்று மன்னன் கருணை எனா நகும்
நின்ற மைந்தனை நோக்கி நெடும் சுரத்து
என்று போவது எனா எழும் இன் உயிர்
பொன்றும் போது உற்றது உற்றனன் போலுமே
#12
அன்பு இழைத்த மனத்து அரசற்கு நீ
என் பிழைத்தனை என்று நின்று ஏங்குமால்
முன்பு இழைத்த வறுமையின் முற்றினோர்
பொன் பிழைக்கப் பொதிந்தனர் போலவே
#13
அறம் எனக்கு இலையோ என்னும் ஆவி நைந்து
இற அடுத்தது என் தெய்வதங்காள் என்னும்
பிற உரைப்பது என் கன்று பிரிந்துழிக்
கறவை ஒப்பக் கரைந்து கலங்கினாள்
#14
இத்திறத்தின் இடர் உறுவாள்-தனை
கைத்தலத்தின் எடுத்து அரும் கற்பினோய்
பொய்த் திறத்தினன் ஆக்குதியோ புகல்
மெய்த் திறத்து நம் வேந்தனை நீ என்றான்
#15
பொற்பு உறுத்தன மெய்ம்மை பொதிந்தன
சொற்புறுத்தற்கு உரியன சொல்லினான்
கற்பு உறுத்திய கற்புடையாள்-தனை
வற்புறுத்தி மனம்கொளத் தேற்றுவான்
#16
சிறந்த தம்பி திரு உற எந்தையை
மறந்தும் பொய்யிலன் ஆக்கி வனத்திடை
உறைந்து தீரும் உறுதி பெற்றேன் இதின்
பிறந்து யான் பெறும் பேறு என்பது யாவதோ
#17
விண்ணும் மண்ணும் இவ் வேலையும் மற்றும் வேறு
எண்ணும் பூதம் எலாம் அழிந்து ஏகினும்
அண்ணல் ஏவல் மறுக்க அடியனேற்கு
ஒண்ணுமோ இதற்கு உள் அழியேல் என்றான்
#18
ஆகின் ஐய அரசன்-தன் ஆணையால்
ஏகல் என்பது யானும் உரைக்கிலென்
சாகலா உயிர் தாங்க வல்லேனையும்
போகின் நின்னொடும் கொண்டனை போகு என்றாள்
#19
என்னை நீங்கி இடர்க் கடல் வைகுறும்
மன்னர்_மன்னனை வற்புறுத்தாது உடன்
துன்னும் கானம் தொடரத் துணிவதோ
அன்னையே அறம் பார்க்கிலை ஆம் என்றான்
#20
வரி வில் எம்பி இ மண் அரசாய் அவற்கு
உரிமை மா நிலம் உற்ற பின் கொற்றவன்
திருவின் நீங்கித் தவம்செயும் நாள் உடன்
அருமை நோன்புகள் ஆற்றுதி ஆம் அன்றே
#21
சித்தம் நீ திகைக்கின்றது என் தேவரும்
ஒத்த மா தவம் செய்து உயர்ந்தார் அன்றே
எத்தனைக்கு உள ஆண்டுகள் ஈண்டு அவை
பத்தும் நாலும் பகல் அலவோ என்றான்
#22
முன்னர் கோசிகன் என்னும் முனிவரன்-தன்
அருள்-தலை தாங்கிய விஞ்சையும்
பின்னர் எய்திய பேறும் பிழைத்தவோ
இன்னம் நன்று அவர் ஏயின செய்தலே
#23
மா தவர்க்கு வழிபாடு இழைத்து அரும்
போதம் முற்றிப் பொரு_அரு விஞ்சைகள்
ஏதம் அற்றன தாங்கி இமையவர்
காதல் பெற்று இ நகர் வரக் காண்டியால்
#24
மகர வேலை மண் தொட்ட வண்டு ஆடு தார்ச்
சகரர் தாதை பணி தலைநின்று தம்
புகர்_இல் யாக்கையின் இன் உயிர் போக்கிய
நிகர்_இல் மாப் புகழ் நின்றது அன்றோ எனா
#25
மான் மறிக் கரத்தான் மழு ஏந்துவான்
தான் மறுத்திலன் தாதை சொல் தாயையே
ஊன் அறக் குறைத்தான் உரவோன் அருள்
யான் மறுப்பது என்று எண்ணுவதோ என்றான்
#26
இத்திறத்த எனைப் பல வாசகம்
உய்த்து உரைத்த மகன் உரை உட்கொளா
எத்திறத்தும் இறக்கும் இ நாடு எனா
மெய்த் திறத்து விளங்கு_இழை உன்னுவாள்
#27
அவனி காவல் பரதனது ஆகுக
இவன் இ ஞாலம் இறந்து இரும் கானிடைத்
தவன் நிலா வகை காப்பென் தகவினால்
புவனி நாதன் தொழுது என்று போயினாள்
#28
போகின்றாளை தொழுது புரவலன்
ஆகம் மற்று அவள்-தன்னையும் ஆற்றி இச்
சோகம் தீர்ப்பவள் என்று சுமித்திரை
மேகம் தோய் தனிக் கோயிலை மேயினான்
#29
நடந்த கோசலை கேகய நாட்டு இறை
மடந்தை கோயிலை எய்தினள் மன்னவன்
கிடந்த பார் மிசை வீழ்ந்தனள் கெட்டு உயிர்
உடைந்த போழ்தின் உடல் விழுந்து என்னவே
#30
பிறியார் பிரிவு ஏது என்னும் பெரியோய் தகவோ என்னும்
நெறியோ அடியேன் நிலை நீ நினையா நினைவு ஏது என்னும்
வறியோர் தனமே என்னும் தமியேன் வலியே என்னும்
அறிவோ வினையோ என்னும் அரசே அரசே என்னும்
#31
இருள் அற்றிட உற்று ஒளிரும் இரவிக்கு எதிரும் திகிரி
உருளைத் தனி உய்த்து ஒரு கோல் நடையின் கடை காண் உலகம்
பொருள் அற்றிட முற்றுறும் அப் பகலில் புகுதற்கு என்றோ
அருளக் கருதுற்றது நீ அரசர்க்கு அரசே என்னும்
#32
திரை ஆர் கடல் சூழ் உலகின் தவமே திருவின் திருவே
நிரை ஆர் கலையின் கடலே நெறி ஆர் மறையின் நிலையே
கரையா அயர்வேன் எனை நீ கருணாலயனே என் என்று
உரையா இதுதான் அழகோ உலகு ஏழ் உடையாய் என்னும்
#33
மின் நின்று அனைய மேனி வெறிதாய் விட நின்றது போல்
உன்னும் தகைமைக்கு அடையா உறு நோய் உறுகின்று உணரான்
என் என்று உரையான் என்னே இதுதான் யாது என்று அறியேன்
மன்னன் தகைமை காண வாராய் மகனே என்னும்
#34
இவ்வாறு அழுவாள் இரியல் குரல் சென்று இசையா முன்னம்
ஒவ்வாது ஒவ்வாது என்னா ஒளிவாள் நிருபர் முனிவர்
அவ் ஆறு அறிவாய் என்ன வந்தான் முனிவன் அவனும்
வெவ் வாள் அரசன் நிலை கண்டு என் ஆம் விளைவு என்று உன்னா
#35
இறந்தான்_அல்லன் அரசன் இறவாது ஒழிவான்_அல்லன்
மறந்தான் உணர்வு என்று உன்னா வன் கேகயர்_கோன் மங்கை
துறந்தாள் துயரம்-தன்னைத் துறவாது ஒழிவாள் இவளே
பிறந்தார் பெயரும் தன்மை பிறரால் அறிதற்கு எளிதோ
#36
என்னா உன்னா முனிவன் இடரால் அழிவாள் துயரம்
சொன்னாள் ஆகாள் என முன் தொழு கேகயர்_கோன் மகளை
அன்னாய் உரையாய் அரசன் அயர்வான் நிலை என் என்ன
தன்னால் நிகழ்ந்த எல்லாம் தானே தெரியச் சொன்னாள்
#37
சொற்றாள் சொற்றா முன்னம் சுடர் வாள் அரசர்க்கு அரசை
பொன் தாமரை போல் கையால் பொடி சூழ் படி-நின்று எழுவிக்
கற்றாய் அயரேல் அவளே தரும் நின் காதற்கு அரசை
எற்றே செயல் இன்று ஒழி நீ என்றுஎன்று இரவாநின்றான்
#38
சீதப் பனி நீர் அளவித் திண் கால் உக்கம் மென் கால்
போதத்து அளவே தவழ்வித்து இன் சொல் புகலாநின்றான்
ஓதக் கடல் நஞ்சு அனையாள் உரை நஞ்சு ஒருவாறு அவியக்
காதல் புதல்வன் பெயரே புகல்வான் உயிரும் கண்டான்
#39
காணா ஐயா இனி நீ ஒழிவாய் கழி பேர் அவலம்
ஆண் நாயகனே இனி நாடு ஆள்வான் இடையூறு உளதோ
மாணா உரையாள் தானே தரும் மா மழையே அனையான்
பூணாது ஒழிவான் எனின் யாம் உளமோ பொன்றேல் என்றான்
#40
என்ற அ முனிவன்-தன்னை நினையா வினையேன் இனி யான்
பொன்றும் அளவில் அவனைப் புனை மா மகுடம் புனைவித்து
ஒன்றும் வனம் என்று உன்னா வண்ணம் செய்து என் உரையும்
குன்றும் பழி பூணாமல் காவாய் கோவே என்றான்
#41
முனியும் முனியும் செய்கைக் கொடியாள் முகமே முன்னி
இனி உன் புதல்வற்கு அரசும் ஏனையோர்க்கு இன் உயிரும்
மனுவின் வழி நின் கணவற்கு உயிரும் உதவி வசை தீர்
புனிதம் மருவும் புகழே புனைவாய் பொன்னே என்றான்
#42
மொய் மாண் வினை வேரற வென்று உயர்வான் மொழியா முன்னம்
விம்மா அழுவாள் அரசன் மெய்யின் திரிவான் என்னில்
இ மாண் உலகத்து உயிரோடு இனி வாழ்வு உகவேன் என் சொல்
பொய் மாணாமற்கு இன்றே பொன்றாது ஒழியேன் என்றாள்
#43
கொழுநன் துஞ்சும் எனவும் கொள்ளாது உலகம் எனவும்
பழி நின்று உயரும் எனவும் பாவம் உளது ஆம் எனவும்
ஒழிகின்றிலை அன்றியும் ஒன்று உணர்கின்றிலை யான் இனிமேல்
மொழிகின்றன என் என்னா முனியும் முறை அன்று என்பான்
#44
கண்ணோடாதே கணவன் உயிர் ஓடு இடர் காணாதே
புண்ணூடு ஓடும் கனலோ விடமோ என்னப் புகல்வாய்
பெண்ணோ தீயோ மாயாப் பேயோ கொடியாய் நீ இ
மண்ணோடு உன்னோடு என் ஆம் வசையோ வலிதே என்றான்
#45
வாயால் மன்னன் மகனை வனம் ஏகு என்னா முன்னம்
நீயோ சொன்னாய் அவனோ நிமிர் கானிடை வெம் நெறியில்
போயோ புகலோ தவிரான் புகழோடு உயிரைச் சுடு வெம்
தீயோய் நின் போல் தீயார் உளரோ செயல் என் என்றான்
#46
தா_இல் முனிவன் புகலத் தளராநின்ற மன்னன்
நாவில் நஞ்சம் உடைய நங்கை-தன்னை நோக்கிப்
பாவி நீயே வெம் கான் படர்வாய் என்று என் உயிரை
ஏவினாயோ அவனும் ஏகினானோ என்றான்
#47
கண்டேன் நெஞ்சம் கனிவாய்க் கனி வாய் விடம் நான் நெடு நாள்
உண்டேன் அதனால் நீ என் உயிரை முதலோடு உண்டாய்
பண்டே எரி முன் உன்னைப் பாவி தேவி ஆகக்
கொண்டேன் அல்லேன் வேறு ஓர் கூற்றம் தேடிக் கொண்டேன்
#48
விழிக்கும் கண் வேறு இல்லா வெம் கான் என் கான்முளையைச்
சுழிக்கும் வினையால் ஏகச் சூழ்வாய் என்னைப் போழ்வாய்
பழிக்கும் நாணாய் மாணாப் பாவி இனி என் பல உன்
கழுத்தின் நாண் உன் மகற்குக் காப்பின் நாண் ஆம் என்றான்
#49
இன்னே பலவும் பகர்வான் இரங்காதாளை நோக்கிச்
சொன்னேன் இன்றே இவள் என் தாரம் அல்லள் துறந்தேன்
மன்னே ஆவான் வரும் அப் பரதன்-தனையும் மகன் என்று
உன்னேன் முனிவா அவனும் ஆகான் உரிமைக்கு என்றான்
#50
என்னைக் கண்டும் ஏகா வண்ணம் இடையூறு உடையான்
உன்னைக் கண்டும் இலனோ என்றான் உயர் கோசலையைப்
பின்னைக் கண்தான் அனையான் பிரியக் கண்ட துயரம்
தன்னைக் கண்டே தவிர்வாள் தளர்வான் நிலையில் தளர்வாள்
#51
மாற்றாள் செயல் ஆம் என்றும் கணவன் வரம் ஈந்து உள்ளம்
ஆற்றாது அயர்ந்தான் என்றும் அறிந்தாள் அவளும் அவனைத்
தேற்றாநின்றாள் மகனைத் திரிவான் என்றாள் அரசன்
தோற்றான் மெய் என்று உலகம் சொல்லும் பழிக்கும் சோர்வாள்
#52
தள்ளா நிலை சால் மெய்ம்மை தழுவா வகைதான் எய்தின்
எள்ளா நிலை கூர் பெருமைக்கு இழிவு ஆம் என்றால் உரவோய்
விள்ளா நிலை சேர் அன்பால் மகன் மேல் மெலியின் உலகம்
கொள்ளாது அன்றோ என்றான் கணவன் குறையக் குறைவாள்
#53
போவாது ஒழியான் என்றாள் புதல்வன்-தன்னைக் கணவன்
சாவாது ஒழியான் என்றுஎன்று உள்ளம் தள்ளுற்று அயர்வாள்
காவாய் என்னாள் மகனைக் கணவன் புகழுக்கு அழிவாள்
ஆ ஆ உயர் கோசலை ஆம் அன்னம் என் உற்றனளே
#54
உணர்வான் அனையாள் உரையால் உயர்ந்தான் உரை சால் குமரன்
புணரான் நிலமே வனமே போவானே ஆம் என்னா
இணர் ஆர் தரு தார் அரசன் இடரால் அயர்வான் வினையேன்
துணைவா துணை வா என்றான் தோன்றால் தோன்றால் என்றான்
#55
கண்ணும் நீராய் உயிரும் ஒழுகக் கழியாநின்றேன்
எண்ணும் நீர் நான்மறையோர் எரி முன் நின் மேல் சொரிய
மண்ணும் நீராய் வந்த புனலை மகனே வினையேற்கு
உண்ணும் நீராய் உதவி உயர் கான் அடைவாய் என்றான்
#56
படை மாண் அரசைப் பல கால் மழுவாள்யதனால் எறிவான்
மிடை மா வலி தான் அனையான் வில்லால் அடுமா வல்லாய்
உடை மா மகுடம் புனை என்று உரையா உடனே கொடியேன்
சடை மா மகுடம் புனையத் தந்தேன் அந்தோ என்றான்
#57
கறுத்தாய் உருவம் மனமும் கண்ணும் கையும் செய்யாய்
பொறுத்தாய் பொறையே இறைவன் புரம் மூன்று எரித்த போர் வில்
இறுத்தாய் தமியேன் என்னாது என்னை இ மூப்பிடையே
வெறுத்தாய் இனி நான் வாழ்நாள் வேண்டேன் வேண்டேன் என்றான்
#58
பொன்னின் முன்னம் ஒளிரும் பொன்னே புகழின் புகழே
மின்னின் மின்னும் வரி வில் குமரா மெய்யின் மெய்யே
என்னின் முன்னம் வனம் நீ அடைதற்கு எளியேன் அல்லேன்
உன்னின் முன்னம் புகுவேன் உயர் வானகம் யான் என்றான்
#59
நெகுதற்கு ஒத்த நெஞ்சும் நேயத்தாலே ஆவி
உகுதற்கு ஒத்த உடலும் உடையேன் உன் போல் அல்லேன்
தகுதற்கு ஒத்த சனகன் தையல் கையைப் பற்றிப்
புகுதக் கண்ட கண்ணால் போகக் காணேன் என்றான்
#60
எற்றே பகர்வேன் இனி யான் என்னே உன்னின் பிரிய
வற்றே உலகம் எனினும் வானே வருந்தாது எனினும்
பொன் தேர் அரசே தமியேன் புகழே உயிரே உன்னை
பெற்றேன் அருமை அறிவேன் பிழையேன் பிழையேன் என்றான்
#61
அள்ளல் பள்ளம் புனல் சூழ் அகல் மா நிலமும் அரசும்
கொள்ளக் குறையா நிதியின் குவையும் முதலாம் எவையும்
கள்ளக் கைகேசிக்கே உதவி புகழ் கைக்கொண்ட
வள்ளல்தனம் என் உயிரை மாய்க்கும் மாய்க்கும் என்றான்
#62
ஒலி ஆர் கடல் சூழ் உலகத்து உயர் வானிடை நாகரினும்
பொலியாநின்றார் உன்னைப் போல்வார் உளரோ பொன்னே
வலி யார் உடையார் என்றான் மழுவாள் உடையான் வரவும்
சலியா நிலையாய் என்றால் தடுப்பார் உளரோ என்றான்
#63
கேட்டே இருந்தேன் எனினும் கிளர் வான் இன்றே அடைய
மாட்டேன் ஆகில் அன்றோ வன்கண் என்-கண் மைந்தா
காட்டே உறைவாய் நீ இக் கைகேசியையும் கண்டு இ
நாட்டே உறைவேன் என்றால் நன்று என் நன்மை என்றான்
#64
மெய் ஆர் தவமேசெய்து உன் மிடல் மார்பு அரிதின் பெற்ற
செய்யாள் என்னும் பொன்னும் நில_மாது என்னும் திருவும்
உய்யார் உய்யார் கெடுவேன் உன்னைப் பிரியின் வினையேன்
ஐயா கைகேசியை நேராகேனோ நான் என்றான்
#65
பூண் ஆர் அணியும் முடியும் பொன் ஆசனமும் குடையும்
சேண் ஆர் மார்பும் திருவும் தெரியக் காணக் கடவேன்
மாணா மர வற்கலையும் மானின் தோலும் வனைதல்
காணாது ஒழிந்தேன் என்றால் நன்று ஆய்த்து அன்றோ கருமம்
#66
ஒன்றோடொன்று ஒன்று ஒவ்வா உரைதந்து அரசன் உயிரும்
சென்றான் இன்றோடு என்னும் தன்மை எய்தித் தேய்ந்தான்
மென் தோல் மார்பின் முனிவன் வேந்தே அயரேல் அவனை
இன்று ஏகாத வண்ணம் தகைவென் உலகோடு என்னா
#67
முனிவன் சொல்லும் அளவில் முடியும்-கொல் என்று அரசன்
தனி நின்று உழல் தன் உயிரைச் சிறிதே தகைவான் இந்தப்
புனிதன் போனால் இவனால் போகாது ஒழிவான் என்னா
மனிதன் வடிவம் கொண்ட மனுவும் தன்னை மறந்தான்
#68
மறந்தான் நினைவும் உயிரும் மன்னன் என்ன மறுகா
இறந்தான்-கொல்லோ அரசன் என்னை இடருற்று அழிவாள்
துறந்தான் மகன் முன் எனையும் துறந்தாய் நீயும் துணைவா
அறம்தான் இதுவோ ஐயா அரசர்க்கு அரசே என்றாள்
#69
மெய்யின் மெய்யே உலகின் வேந்தர்க்கு எல்லாம் வேந்தே
உய்யும் வகை நின் உயிரை ஓம்பாது இங்ஙன் தேம்பின்
வையம் முழுதும் துயரால் மறுகும் முனிவனுடன் நம்
ஐயன் வரினும் வருமால் அயரேல் அரசே என்றாள்
#70
என்றுஎன்று அரசன் மெய்யும் இரு தாள் இணையும் முகனும்
தன்-தன் செய்ய கையால் தைவந்திடு கோசலையை
ஒன்றும் தெரியா மம்மர் உள்ளத்து அரசன் மெள்ள
வன் திண் சிலை நம் குரிசில் வருமேவருமே என்றான்
#71
வன் மாயக் கைகேசி வரத்தால் என்றன் உயிரை
முன் மாய்விப்பத் துணிந்தாள் அன்றேல் கூனி மொழியால்
தன் மா மகனும் தானும் தரணி பெறுமாறு அன்றி
என் மா மகனைக் கான் ஏகு என்றாள் என்னோ என்றான்
#72
பொன் ஆர் வலயத் தோளான் கானோ புகுதல் தவிரான்
என் ஆருயிரோ அகலாது ஒழியாது இது கோசலை கேள்
முன் நாள் ஒரு மா முனிவன் மொழியும் சாபம் உளது என்று
அ நாள் உற்றது எல்லாம் அவளுக்கு அரசன் அறைவான்
#73
வெய்ய கானத்திடையே வேட்டை வேட்கை மிகவே
ஐய சென்று கரியோடு அரிகள் துருவித் திரிவேன்
கையும் சிலையும் கணையும் கொடு கார் மிருகம் வரும் ஓர்
செய்ய நதியின் கரை-வாய் சென்றே மறைய நின்றேன்
#74
ஒரு மா முனிவன் மனையோடு ஒளி ஒன்றில ஆம் நயனம்
தரு மா மகனே துணையாய் தவமே புரி போழ்தினின்-வாய்
அரு மா மகனே புனல் கொண்டு அகல்வான் வருமாறு அறியேன்
பொரு மா கணை விட்டிடலும் புவி மீது அலறிப் புரள
#75
புக்குப் பெரு நீர் நுகரும் பொரு போதகம் என்று ஒலி மேல்
கைக்கண் கணை சென்றது அலால் கண்ணின் தெரியக் காணேன்
அக் கைக் கரியின் குரலே அன்று ஈது என்ன வெருவா
மக்கள் குரல் என்று அயர்வென் மனம் நொந்து அவண் வந்தனெனால்
#76
கையும் கடனும் நெகிழக் கணையோடு உருள்வோன் காணா
மெய்யும் தனுவும் மனனும் வெறிது ஏகிட மேல் வீழா
ஐய நீதான் யாவன் அந்தோ அருள்க என்று அயரப்
பொய் ஒன்று அறியா மைந்தன் கேள் நீ என்னப் புகல்வான்
#77
இரு கண்களும் இன்றிய தாய் தந்தைக்கும் ஈங்கு அவர்கள்
பருகும் புனல் கொண்டு அகல்வான் படர்ந்தேன் பழுது ஆயினதால்
இரு குன்று அனைய புயத்தாய் இபம் என்று உணராது எய்தாய்
உருகும் துயரம் தவிர் நீ ஊழின் செயல் ஈது என்றே
#78
உண் நீர் வேட்கை மிகவே உயங்கும் எந்தைக்கு ஒரு நீ
தண்ணீர் கொடு போய் அளித்து என் சாவும் உரைத்து உம் புதல்வன்
விண் மீது அடைவான் தொழுதான் எனவும் அவர்-பால் விளம்பு என்று
எண் நீர்மையினான் விண்ணோர் எதிர்கொண்டிட ஏகினனால்
#79
மைந்தன் வரவே நோக்கும் வளர் மா தவர்-பால் மகவோடு
அம் தண் புனல் கொண்டு அணுக ஐயா இதுபோது அளவாய்
வந்து இங்கு அணுகாய் என்னோ வந்தது என்றே நொந்தேம்
சந்தம் கமழும் தோளாய் தழுவிக்கொள வா எனவே
#80
ஐயா யான் ஓர் அரசன் அயோத்தி நகரத்து உள்ளேன்
மை ஆர் களபம் துருவி மறைந்தே வதிந்தேன் இருள்-வாய்
பொய்யா வாய்மைப் புதல்வன் புனல் மொண்டிடும் ஓதையின் மேல்
கை ஆர் கணை சென்றது அலால் கண்ணின் தெரியக் காணேன்
#81
வீட்டுண்டு அலறும் குரலால் வேழக் குரல் அன்று எனவே
ஓட்டந்து எதிரா நீ யார் என உற்ற எலாம் உரையா
வாட்டம் தரும் நெஞ்சினனாய் நின் தாள் வணங்கா வானோர்
ஈட்டம் எதிர் வந்திடவே இறந்து ஏகினன் விண்ணிடையே
#82
அறுத்தாய் கணையால் எனவே அடியேன்-தன்னை ஐயா
கறுத்தே அருளாய் யானோ கண்ணின் கண்டேன் அல்லேன்
மறுத் தான் இல்லான் வனம் மொண்டிடும் ஓதையின் எய்தது அலால்
பொறுத்தே அருள்வாய் என்னா இரு தாள் சென்னி புனைந்தேன்
#83
வீழ்ந்தார் அயர்ந்தார் புரண்டார் விழி போயிற்று இன்று என்றார்
ஆழ்ந்தார் துன்பக் கடலுள் ஐயா ஐயா என்றார்
போழ்ந்தாய் நெஞ்சை என்றார் பொன்_நாடு அதனில் போய் நீ
வாழ்ந்தே இருப்பத் தரியேம் வந்தேம் வந்தேம் இனியே
#84
என்றுஎன்று அயரும் தவரை இரு தாள் வணங்கி யானே
இன்று உம் புதல்வன் இனி நீர் ஏவும் பணி செய்திடுவேன்
ஒன்றும் தளர்வுற்று அயரீர் ஒழி-மின் இடர் என்றிடலும்
வண் திண் சிலையாய் கேண்மோ எனவே ஒரு சொல் வகுத்தான்
#85
கண்ணுள் மணி போல் மகவை இழந்தும் உயிர் காதலியா
உண்ண எண்ணி இருந்தால் உலகோர் என் என்று உரையார்
விண்ணின்-தலை சேருதும் யாம் எம் போல் விடலை பிரிய
பண்ணும் பரி மா உடையாய் அடைவாய் படர் வான் என்னா
#86
தாவாது ஒளிரும் குடையாய் தவறு இங்கு இது நின் சரணம்
காவாய் என்றாய் அதனால் கடிய சாபம் கருதேம்
ஏவா மகவைப் பிரிந்து இன்று எம் போல் இடர் உற்றனை நீ
போவாய் அகல்வான் என்னா பொன்_நாட்டிடை போயினரால்
#87
சிந்தை தளர்வுற்று அயர்தல் சிறிதும் இலெனாய் இன் சொல்
மைந்தன் உளன் என்றதனால் மகிழ்வோடு இவண் வந்தனெனால்
அந்த முனி சொற்றமையின் அண்ணல் வனம் ஏகுதலும்
எம்-தம் உயிர் வீகுதலும் இறையும் தவறா என்றான்
#88
உரைசெய் பெருமை உயர் தவத்தோர் ஓங்கல்
புரசை மதக் களிற்றான் பொற்கோயில் முன்னர்
முரசம் முழங்க முடி சூட்ட மொய்த்து ஆண்டு
அரசர் இனிது இருந்த நல் அவையின் ஆயினான்
#89
வந்த முனியை முகம் நோக்கி வாள் வேந்தர்
எந்தை புகுந்த இடையூறு உண்டாயதோ
அந்தம்_இல் சோகத்து அழுத குரல் தான் என்ன
சிந்தை தெளிந்தோய் தெரி எமக்கு ஈது என்று உரைத்தார்
#90
கொண்டாள் வரம் இரண்டு கேகயர்_கோன் கொம்பு அவட்குத்
தண்டாத செங்கோல் தயரதனும்தான் அளித்தான்
ஒண் தார் முகிலை வனம் போகு என்று ஒருப்படுத்தாள்
எண்தானும் வேறில்லை ஈது அடுத்தவாறு என்றான்
#91
வேந்தன் பணியினால் கைகேசி மெய்ப் புதல்வன்
பாந்தள் மிசைக் கிடந்த பார் அளிப்பான் ஆயினான்
ஏந்து தடம் தோள் இராமன் திரு மடந்தை
காந்தன் ஒரு முறை போய்க் காடு உறைவான் ஆயினான்
#92
வார் ஆர் முலையாரும் மற்றுள்ள மாந்தர்களும்
ஆராத காதல் அரசர்களும் அந்தணரும்
பேராத வாய்மைப் பெரியோன் உரை செவியில்
சாராத முன்னம் தயரதனைப் போல் வீழ்ந்தார்
#93
புண் உற்ற தீயின் புகை உற்று உயிர் பதைப்ப
மண் உற்று அயர்ந்து மறுகிற்று உடம்பு எல்லாம்
கண் உற்ற வாரி கடல் உற்றது அ நிலையே
விண் உற்றது எம் மருங்கும் விட்டு அழுத பேரோசை
#94
மாதர் அரும் கலமும் மங்கலமும் சிந்தித் தம்
கோதை புடைபெயர கூற்று அனைய கண் சிவப்ப
பாத மலர் சிவப்பத் தாம் பதைத்துப் பார் சேர்ந்தார்
ஊதை எறிய ஒசி பூம் கொடி ஒப்பார்
#95
ஆ ஆ அரசன் அருள் இலனே ஆம் என்பார்
காவா அறத்தை இனிக் கைவிடுவோம் யாம் என்பார்
தாவாத மன்னர் தலைத்தலை வீழ்ந்து ஏங்கினார்
மா வாதம் சாய்த்த மராமரமே போல்கின்றார்
#96
கிள்ளையொடு பூவை அழுத கிளர் மாடத்து
உள் உறையும் பூசை அழுத உரு அறியாப்
பிள்ளை அழுத பெரியோரை என் சொல்ல
வள்ளல் வனம் புகுவான் என்று உரைத்த மாற்றத்தால்
#97
சேதாம்பல் போது அனைய செம் கனி வாய் வெண் தளவப்
போது ஆம் பல் தோன்ற புணர் முலை மேல் பூம் தரளம்
மா தாம்பு அற்று என்ன மழைக் கண்ணீர் ஆலி உக
நா தாம் பற்றா மழலை நங்கைமார் ஏங்கினார்
#98
ஆவும் அழுத அதன் கன்று அழுத அன்று அலர்ந்த
பூவும் அழுத புனல் புள் அழுத கள் ஒழுகும்
காவும் அழுத களிறு அழுத கால் வயப் போர்
மாவும் அழுத அ மன்னவனை மானவே
#99
ஞானீயும் உய்கலான் என்னாதே நாயகனைக்
கான் ஈயும் என்று உரைத்த கைகேசியும் கொடிய
கூனீயும் அல்லால் கொடியார் பிறர் உளரோ
மேனீயும் இன்றி வெறு நீரே ஆயினார்
#100
தேறாது அறிவு அழிந்தார் எங்கு உலப்பார் தேர் ஓட
நீறு ஆகி சுண்ணம் நிறைந்த தெரு எல்லாம்
ஆறு ஆகி ஓடின கண்ணீர் அரு நெஞ்சம்
கூறு ஆகி ஓடாத இத்துணையே குற்றமே
#101
மண் செய்த பாவம் உளது என்பார் மா மலர் மேல்
பெண் செய்த பாவம் அதனின் பெரிது என்பார்
புண் செய்த நெஞ்சை விதி என்பார் பூதலத்தோர்
கண் செய்த பாவம் கடலின் பெரிது என்பார்
#102
ஆளான் பரதன் அரசு என்பார் ஐயன் இனி
மீளான் நமக்கு விதி கொடிதே காண் என்பார்
கோள் ஆகி வந்தவா கொற்ற முடிதான் என்பார்
மாளாத நம்மின் மனம் வலியார் ஆர் என்பார்
#103
ஆதி அரசன் அரும் கேகயன் மகள் மேல்
காதல் முதிர கருத்து அழிந்தான் ஆம் என்பார்
சீதை_மணவாளன்-தன்னோடும் தீக் கானம்
போதும் அது அன்றேல் புகுதும் எரி என்பார்
#104
கையால் நிலம் தடவிக் கண்ணீர் மெழுகுவார்
உய்யாள் பொன் கோசலை என்று ஓவாது வெய்து_உயிர்ப்பார்
ஐயா இளங்கோவே ஆற்றுதியோ நீ என்பார்
நெய் ஆர் அழல் உற்றது உற்றார் அ நீள் நகரார்
#105
தள்ளூறு வேறு இல்லை தன் மகற்குப் பார் கொள்வான்
எள்ளூறு தீக் கருமம் நேர்ந்தாள் இவள் என்னா
கள் ஊறு செவ் வாய்க் கணிகையரும் கைகேசி
உள் ஊறு காதல் இலள் போல் என்று உள் அழிந்தார்
#106
நின்று தவம் இயற்றித் தான் தீர நேர்ந்ததோ
அன்றி உலகத்துள் ஆருயிராய் வாழ்வாரைக்
கொன்று களையக் குறித்த பொருள் அதுவோ
நன்று வரம் கொடுத்த நாயகற்கு நன்று என்பார்
#107
பெற்றுடைய மண் அவளுக்கு ஈந்து பிறந்து உலகம்
முற்று உடைய கோவைப் பிரியாது மொய்த்து ஈண்டி
உற்று உறைதும் யாரும் உறையவே சில் நாளில்
புற்று உடைய காடு எல்லாம் நாடாகிப் போம் என்பார்
#108
என்னே நிருபன் இயற்கை இருந்தவா
தன் நேர் இலாத தலைமகற்குத் தாரணியை
முன்னே கொடுத்து முறை திறம்பத் தம்பிக்குப்
பின்னே கொடுத்தால் பிழையாதோ மெய் என்பார்
#109
கோதை வரி வில் குமரன் கொடுத்த நில
மாதை ஒருவர் புணர்வராம் வஞ்சித்த
பேதை சிறுவனைப் பின் பார்த்து நிற்குமே
சீதை பிரியினும் தீராத் திரு என்பார்
#110
உந்தாது நெய் வார்த்து உதவாது கால் எறிய
நந்தா விளக்கின் நடுங்குகின்ற நங்கைமார்
செந்தாமரைத் தடம் கண் செவ்வி அருள் நோக்கம்
அந்தோ பிரிதுமோ ஆ விதியே ஓ என்பார்
#111
கேட்டான் இளையோன் கிளர் ஞாலம் வரத்தினாலே
மீட்டாள் அளித்தாள் வனம் தம்முனை வெம்மை முற்றித்
தீட்டாத வேல் கண் சிறு தாய் என யாவராலும்
மூட்டாத காலக் கடைத் தீ என மூண்டு எழுந்தான்
#112
கண்ணின் கடைத் தீ உக நெற்றியில் கற்றை நாற
விண்ணில் சுடரும் கெட மெய்யினில் நீர் விரிப்ப
உள் நிற்கும் உயிர்ப்பு எனும் ஊதை பிறக்க நின்ற
அண்ணல் பெரியோன் தனது ஆதியின் மூர்த்தி ஒத்தான்
#113
சிங்கக் குருளைக்கு இடு தீம் சுவை ஊனை நாயின்
வெம் கண் சிறு குட்டனுக்கு ஊட்ட விரும்பினாளால்
நங்கைக்கு அறிவின் திறம் நன்று இது நன்று இது என்னா
கங்கைக்கு இறைவன் கடகக் கை புடைத்து நக்கான்
#114
சுற்று ஆர்ந்த கச்சில் சுரிகை புடை தோன்ற ஆர்த்து
வில் தாங்கி வாளிப் பெரும் புட்டில் புறத்து வீக்கிப்
பற்று ஆர்ந்த செம்பொன் கவசம் பனி மேரு ஆங்கு ஓர்
புற்று ஆம் என ஓங்கிய தோளொடு மார்பு போர்க்க
#115
அடியில் சுடர் பொன் கழல் ஆர்கலி நாண ஆர்ப்பப்
பொடியில் தடவும் சிலை நாண் பெரும் பூசல் ஓசை
இடியின் தொடரக் கடல் ஏழும் மடுத்து இ ஞால
முடிவில் குமுறும் மழை மும்மையின் மேல் முழங்க
#116
வானும் நிலனும் முதல் ஈறு_இல் வரம்பு_இல் பூதம்
மேல்-நின்று கீழ்-காறும் விரிந்தன வீழ்வ போலத்
தானும் தன தம்முனும் அல்லது மும்மை ஞாலத்து
ஊனும் உயிரும் உடையார்கள் உளைந்து ஒதுங்க
#117
புவிப் பாவை பரம் கெடப் போரில் வந்தோரை எல்லாம்
அவிப்பானும் அவித்தவர் ஆக்கையை அண்ட முற்றக்
குவிப்பானும் இன்றே எனக் கோவினைக் கொற்ற மௌலி
கவிப்பானும் நின்றேன் இது காக்குநர் கா-மின் என்றான்
#118
விண் நாட்டவர் மண்ணவர் விஞ்சையர் நாகர் மற்றும்
எண் நாட்டவர் யாவரும் நிற்க ஓர் மூவர் ஆகி
மண் நாட்டுநர் காக்குநர் நீக்குநர் வந்த போதும்
பெண் நாட்டம் ஒட்டேன் இனி பேருலகத்துள் என்னா
#119
காலைக் கதிரோன் நடு உற்றது ஓர் வெம்மை காட்டி
ஞாலத்தவர் கோமகன் அ நகரத்து நாப்பண்
மாலைச் சிகரத் தனி மந்தர மேரு முந்தை
வேலைத் திரிகின்றது போல் திரிகின்ற வேலை
#120
வேற்றுக் கொடியாள் விளைவித்த வினைக்கு விம்மி
தேற்றத் தெளியாது அயர் சிற்றவை-பால் இருந்தான்
ஆற்றல் துணைத் தம்பி-தன் வில்_புயல் அண்ட கோளம்
கீற்று ஒத்து உடைய படும் நாண் உரும்_ஏறு கேளா
#121
வீறு ஆக்கிய பொன் கலன் வில்லிட ஆரம் மின்ன
மாறாத் தனிச் சொல் துளி மாரி வழங்கி வந்தான்
கால் தாக்க நிமிர்ந்து புகைந்து கனன்று பொங்கும்
ஆறாக் கனல் ஆற்றும் ஓர் அஞ்சன மேகம் என்ன
#122
மின் ஒத்த சீற்ற கனல் விட்டு விளங்க நின்ற
பொன் ஒத்த மேனிப் புயல் ஒத்த தடக் கை யானை
என் அத்த என் நீ இறையேனும் முனிந்திலாதாய்ச்
சன்னத்தன் ஆகித் தனு ஏந்துதற்கு ஏது என்றான்
#123
மெய்யைச் சிதைவித்து நின் மேல் முறை நீத்த நெஞ்சம்
மையில் கரியாள் எதிர் நின்னை அ மௌலி சூட்டல்
செய்யக் கருதித் தடைசெய்குநர் தேவரேனும்
துய்யைச் சுடு வெம் கனலின் சுடுவான் துணிந்தேன்
#124
வலக் கார்முகம் என் கையது ஆக அவ் வானுளோரும்
விலக்கார் அவர் வந்து விலக்கினும் என் கை வாளிக்கு
இலக்கா எரிவித்து உலகு ஏழினொடு ஏழும் மன்னர்
குலக் காவலும் இன்று உனக்கு யான் தரக் கோடி என்றான்
#125
இளையான் இது கூற இராமன் இயைந்த நீதி
வளையா வரும் நல் நெறி நின் அறிவு ஆகும் அன்றே
உளையா அறம் வற்றிட ஊழ் வழுவுற்ற சீற்றம்
விளையாத நிலத்து உனக்கு எங்ஙன் விளைந்தது என்றான்
#126
நீண்டான் அது உரைத்தலும் நித்திலம் தோன்ற நக்கு
சேண்தான் தொடர் மாநிலம் நின்னது என்று உந்தை செப்பப்
பூண்டாய் பகையால் இழந்தே வனம் போதி என்றால்
யாண்டோ அடியேற்கு இனிச் சீற்றம் அடுப்பது என்றான்
#127
நின்-கண் பரிவு இல்லவர் நீள் வனத்து உன்னை நீக்கப்
புன்கண் பொறி யாக்கை பொறுத்து உயிர் போற்றுகேனோ
என் கட்புலம் முன் உனக்கு ஈந்துவைத்து இல்லை என்ற
வன்கண் புலம் தாங்கிய மன்னவன் காண்-கொல் என்றான்
#128
பின் குற்றம் மன்னும் பயக்கும் அரசு என்றல் பேணேன்
முன் கொற்ற மன்னன் முடி கொள்க எனக் கொள்ள மூண்டது
என் குற்றம் அன்றோ இகல் மன்னவன் குற்றம் யாதோ
மின் குற்று ஒளிரும் வெயில் தீக் கொடு அமைந்த வேலோய்
#129
நதியின் பிழை அன்று நறும் புனல் இன்மை அற்றே
பதியின் பிழை அன்று பயந்து நமைப் புரந்தாள்
மதியின் பிழை அன்று மகன் பிழை அன்று மைந்த
விதியின் பிழை நீ இதற்கு என்-கொல் வெகுண்டது என்றான்
#130
உதிக்கும் உலையுள் உறு தீ என ஊதை பொங்கக்
கொதிக்கும் மனம் எங்ஙனம் ஆற்றுவென் கோள் இழைத்தாள்
மதிக்கும் மதியாய் முதல் வானவர்க்கும் வலீஇது ஆம்
விதிக்கும் விதி ஆகும் என் வில் தொழில் காண்டி என்றான்
#131
ஆய்தந்து அவன் அவ் உரை கூறலும் ஐய நின்-தன்
வாய் தந்தன கூறுதியோ மறை தந்த நாவால்
நீ தந்தது அன்றே நெறியோர்-கண் நிலாதது ஈன்ற
தாய் தந்தை என்றால் அவர் மேல் சலிக்கின்றது என்னோ
#132
நல் தாதையும் நீ தனி நாயகன் நீ வயிற்றில்
பெற்றாயும் நீயே பிறர் இல்லை பிறர்க்கு நல்கக்
கற்றாய் இது காணுதி இன்று என கைம்மறித்தான்
முற்றா மதியம் மிலைந்தான் முனிந்தானை அன்னான்
#133
வரதன் பகர்வான் வரம் பெற்றவள்தான் இவ் வையம்
சரதம் உடையான் அவள் என் தனித் தாதை செப்பப்
பரதன் பெறுவான் இனி யான் படைக்கின்ற செல்வம்
விரதம் இதின் நல்லது வேறு இனி யாவது என்றான்
#134
ஆன்றான் பகர்வான் பினும் ஐய இவ் வைய மையல்
தோன்றா நெறி வாழ் துணைத் தம்முனை போர் தொலைத்தோ
சான்றோர் புகழும் தனித் தாதையை வாகை கொண்டோ
ஈன்றாளை வென்றோ இனி இக் கதம் தீர்வது என்றான்
#135
செல்லும் சொல் வல்லான் எதிர் தம்பியும் தெவ்வர் சொல்லும்
சொல்லும் சுமந்தேன் இரு தோள் எனச் சோம்பி ஓங்கும்
கல்லும் சுமந்தேன் கணைப் புட்டிலும் கட்டு அமைந்த
வில்லும் சுமக்கப் பிறந்தேன் வெகுண்டு என்னை என்றான்
#136
நன் சொற்கள் தந்து ஆண்டு எனை நாளும் வளர்த்த தாதை-தன்
சொல் கடந்து எற்கு அரசு ஆள்வது தக்கது அன்றால்
என் சொல் கடந்தால் உனக்கு யாது உளது ஈனம் என்றான்
தென்சொல் கடந்தான் வடசொல் கலைக்கு எல்லை தேர்ந்தான்
#137
சீற்றம் துறந்தான் எதிர்நின்று தெரிந்து செப்பும்
மாற்றம் துறந்தான் மறை நான்கு என வாங்கல் செல்லா
நால் தெண் திரை வேலையின் நம்பி-தன் ஆணையாலே
ஏற்றம் தொடங்காக் கடலின் தணிவு எய்தி நின்றான்
#138
அன்னான்-தனை ஐயனும் ஆதியொடு அந்தம் என்று
தன்னாலும் அளப்ப_அரும் தானும் தன் பாகம் நின்ற
பொன் மான் உரியானும் தழீஇ எனப் புல்லிப் பின்னை
சொல் மாண்பு உடை அன்னை சுமித்திரை கோயில் புக்கான்
#139
கண்டாள் மகனும் மகனும் தன கண்கள் போல்வார்
தண்டாவனம் செல்வதற்கே சமைந்தார்கள்-தம்மைப்
புண் தாங்கு நெஞ்சத்தனளாய்ப் படி மேல் புரண்டாள்
உண்டாய துன்பக் கடற்கு எல்லை உணர்ந்திலாதாள்
#140
சோர்வாளை ஓடித் தொழுது ஏந்தினன் துன்பம் என்னும்
ஈர் வாளை வாங்கி மனம் தேறுதற்கு ஏற்ற செய்வான்
போர் வாள் அரசர்க்கு இறை பொய்த்தனன் ஆக்ககில்லேன்
கார் வான் நெடும் கான் இறை கண்டு இவன் மீள்வென் என்றான்
#141
கான் புக்கிடினும் கடல் புக்கிடினும் கலி பேர்
வான் புக்கிடினும் எனக்கு அன்னவை மாண் அயோத்தி
யான் புக்கது ஒக்கும் எனை யார் நலிகிற்கும் ஈட்டார்
ஊன் புக்கு உயிர் புக்கு உணர் புக்கு உலையற்க என்றான்
#142
தாய் ஆற்றுகில்லாள்-தனை ஆற்றுகின்றார்கள்-தம்பால்
தீ ஆற்றுகின்றார் எனச் சிந்தையின்-நின்று செற்ற
நோய் ஆற்றுகில்லா உயிர் போல நுடங்கு இடையார்
மாயாப் பழியாள் தர வற்கலை ஏந்தி வந்தார்
#143
கார் வானம் ஒப்பான்-தனைக் காண்-தொறும் காண்-தொறும் போய்
நீராய் உகக் கண்ணினும் நெஞ்சு அழிகின்ற நீரார்
பேரா இடர்ப்பட்டு அயலார் உறு பீழை கண்டும்
தீரா மனத்தாள் தர வந்தன சீரம் என்றார்
#144
வாள் நித்தில வெண் நகையார் தர வள்ளல் தம்பி
யாணர்த் திருநாடு இழப்பித்தவர் ஈந்த எல்லாம்
பூணப் பிறந்தானும் நின்றான் அவை போர் விலோடும்
காணப் பிறந்தேனும் நின்றேன் அவை காட்டும் என்றான்
#145
அன்னான் அவர் தந்தன ஆதரத்தோடும் ஏந்தி
இன்னா இடர் தீர்ந்து உடன் ஏகு என எம்பிராட்டி
சொன்னால் அதுவே துணை ஆம் எனத் தூய நங்கை
பொன் ஆர் அடி மேல் பணிந்தான் அவளும் புகல்வாள்
#146
ஆகாதது அன்றால் உனக்கு அவ் வனம் இவ் அயோத்தி
மா காதல் இராமன் நம் மன்னவன் வையம் ஈந்தும்
போகா உயிர்த் தாயர் நம் பூம் குழல் சீதை என்றே
ஏகாய் இனி இவ்வயின் நிற்றலும் ஏதம் என்றாள்
#147
பின்னும் பகர்வாள் மகனே இவன் பின் செல் தம்பி
என்னும்படி அன்று அடியாரினில் ஏவல் செய்தி
மன்னும் நகர்க்கே இவன் வந்திடின் வா அது அன்றேல்
முன்னம் முடி என்றனள் வார் விழி சோர நின்றாள்
#148
இருவரும் தொழுதனர் இரண்டு கன்று ஒரீஇ
வெருவரும் ஆவினின் தாயும் விம்மினாள்
பொரு_அரும் குமரரும் போயினார் புறம்
திரு அரை துகில் ஒரீஇ சீரை சாத்தியே
#149
தான் புனை சீரையைத் தம்பி சாத்திட
தேன் புனை தெரியலான் செய்கை நோக்கினான்
வான் புனை இசையினாய் மறுக்கிலாது நீ
யான் புகல் இனையது ஓர் உறுதி கேள் எனா
#150
அன்னையர் அனைவரும் ஆழி வேந்தனும்
முன்னையர்_அல்லர் வெம் துயரின் மூழ்கினார்
என்னையும் பிரிந்தனர் இடர் உறா வகை
உன்னை நீ என்-பொருட்டு உதவுவாய் என்றான்
#151
ஆண்தகை அ மொழி பகர அன்பனும்
தூண் தகு திரள் புயம் துளங்கத் துண்ணெனா
மீண்டது ஓர் உயிர் இடை விம்ம விம்முவான்
ஈண்டு உனக்கு அடியனேன் பிழைத்தது யாது என்றான்
#152
நீர் உள எனின் உள மீனும் நீலமும்
பார் உள எனின் உள யாவும் பார்ப்புறின்
நார் உள தனு உளாய் நானும் சீதையும்
ஆர் உளர் எனின் உளம் அருளுவாய் என்றான்
#153
பைந்தொடி ஒருத்தி சொல் கொண்டு பார்_மகள்
நைந்து உயிர் நடுங்கவும் நடத்தி கான் எனா
உய்ந்தனன் இருந்தனன் உண்மை காவலன்
மைந்தன் என்று இனைய சொல் வழங்கினாய் எனா
#154
செய்து உடைச் செல்வமோ யாதும் தீர்ந்து எமைக்
கை துடைத்து ஏகவும் கடவையோ ஐய
நெய் துடைத்து அடையலர் நேய மாதர் கண்
மை துடைத்து உறை புகும் வயம் கொள் வேலினாய்
#155
உரைத்த பின் இராமன் ஒன்று உரைக்க நேர்ந்திலன்
வரைத் தடம் தோளினான் வதனம் நோக்கினான்
விரைத் தடம் தாமரைக் கண்ணை மிக்க நீர்
நிரைத்து இடையிடை விழ நெடிது நிற்கின்றான்
#156
அவ்வயின் அரசவை அகன்று நெஞ்சகத்து
எவ்வம்_இல் இரும் தவ முனிவன் எய்தினான்
செவ்விய குமரரும் சென்னி தாழ்ந்தனர்
கவ்வை அம் பெரும் கடல் முனியும் கால்வைத்தான்
#157
அன்னவர் முகத்தினோடு அகத்தை நோக்கினான்
பொன் அரைச் சீரையின் பொலிவு நோக்கினான்
என் இனி உணர்த்துவது எடுத்த துன்பத்தால்
தன்னையும் உணர்ந்திலன் உணரும் தன்மையான்
#158
வாழ்வினை நுதலிய மங்கலத்து நாள்
தாழ் வினை அது வரச் சீரை சாத்தினான்
சூழ் வினை நான்முகத்து ஒருவன் சூழினும்
ஊழ்வினை ஒருவரால் ஒழிக்கற்பாலதோ
#159
வெவ்வினையவள் தர விளைந்ததேயும் அன்று
இவ் வினை இவன்-வயின் எய்தற்பாற்றும் அன்று
எவ் வினை நிகழ்ந்ததோ ஏவர் எண்ணமோ
செவ்விதின் ஒருமுறை தெரியும் பின் என்றான்
#160
வில் தடம் தாமரைச் செம் கண் வீரனை
உற்று அடைந்து ஐய நீ ஒருவி ஓங்கிய
கல் தடம் காணுதி என்னின் கண் அகல்
மல் தடம் தானையான் வாழ்கிலான் என்றான்
#161
அன்னவன் பணி தலை ஏந்தி ஆற்றுதல்
என்னது கடன் அவன் இடரை நீக்குதல்
நின்னது கடன் இது நெறியும் என்றனன்
பன்னகப் பாயலின் பள்ளி நீங்கினான்
#162
வெவ் வரம்பை_இல் சுரம் விரவு என்றான் அலன்
தெவ்வர் அம்பு அனைய சொல் தீட்டினாள்-தனக்கு
அவ் அரம் பொருத வேல் அரசன் ஆய்கிலாது
இவ் வரம் தருவென் என்று ஏன்றது உண்டு என்றான்
#163
ஏன்றனன் எந்தை இவ் வரங்கள் ஏவினாள்
ஈன்றவள் யான் அது சென்னி ஏந்தினேன்
சான்று என நின்ற நீ தடுத்தியோ என்றான்
தோன்றிய நல் அறம் நிறுத்தத் தோன்றினான்
#164
என்ற பின் முனிவன் ஒன்று இயம்ப எண்ணிலன்
நின்றனன் நெடும் கணீர் நிலத்து நீர்த்து உக
குன்று அன தோளவன் தொழுது கொற்றவன்
பொன் திணி நெடு மதில் வாயில் போயினான்
#165
சுற்றிய சீரையன் தொடரும் தம்பியன்
முற்றிய உவகையன் முளரிப் போதினும்
குற்றம்_இல் முகத்தினன் கொள்கை கண்டவர்
உற்றதை ஒருவகை உணர்த்துவாம் அரோ
#166
ஐயனைக் காண்டலும் அணங்கு_அனார்கள்தாம்
மொய் இளம் தளிர்களால் முளரி மேல் விழும்
மையலின் மதுகரம் கடியுமாறு எனக்
கைகளின் மதர் நெடும் கண்கள் எற்றினார்
#167
தம்மையும் உணர்ந்திலர் தணப்பு_இல் அன்பினால்
அம்மையின் இருவினை அகற்றவோ அன்றேல்
விம்மிய பேருயிர் மீண்டிலாமை-கொல்
செம்மல்-தன் தாதையின் சிலவர் முந்தினார்
#168
விழுந்தனர் சிலர் சிலர் விம்மிவிம்மி மேல்
எழுந்தனர் சிலர் முகத்து இழி கண்ணீரிடை
அழுந்தினர் சிலர் பதைத்து அளக வல்லியின்
கொழுந்து எரியுற்று எனத் துயரம் கூர்கின்றார்
#169
கரும்பு அன மொழியினர் கண் பனிக்கிலர்
வரம்பு_அறு துயரினால் மயங்கியே-கொலாம்
இரும்பு அன மனத்தினர் என்ன நின்றனர்
பெரும் பொருள் இழந்தவர் போலும் பெற்றியார்
#170
நெக்கன உடல் உயிர் நிலையில் நின்றில
இக் கணம் இக் கணம் என்னும் தன்மையும்
புக்கன புறத்தன புண்ணின் கண் மலர்
உக்கன நீர் வறந்து உதிர_வாரியே
#171
இரு கையின் கரி நிகர் எண்ணிறந்தவர்
பெருகு ஐயில் பெயர்த்தனர் தலையைப் பேணலர்
ஒரு கையில் கொண்டனர் உருட்டுகின்றனர்
சுரிகையின் கண் மலர் சூன்று நீக்கினார்
#172
சிந்தின அணி மணி சிதறி வீழ்ந்தன
பைம் துணர் மாலையின் பரிந்த மேகலை
நந்தினர் நகை ஒளி விளக்கம் நங்கைமார்
சுந்தர வதனமும் மதிக்குத் தோற்றவே
#173
அறுபதினாயிரர் அரசன் தேவியர்
மறு_அறு கற்பினர் மழைக் கண்ணீரினர்
சிறுவனைத் தொடர்ந்தனர் திறந்த வாயினர்
எறி திரைக் கடல் என இரங்கி ஏங்கினார்
#174
கன்னி நல் மயில்களும் குயில் கணங்களும்
அன்னமும் சிறை இழந்து அவனி சேர்ந்தன
என்ன வீழ்ந்து உழந்தனர் இராமன் அல்லது
மன் உயிர்ப் புதல்வரை மற்றும் பெற்றிலார்
#175
கிளையினும் நரம்பினும் நிரம்பும் கேழன
அளவிறந்து உயிர்க்க விட்டு அரற்றும் தன்மையால்
தொளை படு குழலினோடு யாழ்க்குத் தோற்றன
இனையவர் அமுதினும் இனிய சொற்களே
#176
புகலிடம் கொடு வனம் போலும் என்று தம்
மகன்-வயின் இரங்குறும் மகளிர் வாய்களால்
அகல் மதில் நெடு மனை அரத்த ஆம்பல்கள்
பகலிடை மலர்ந்தது ஓர் பழனம் போன்றவே
#177
திடர் உடைக் குங்குமச் சேறும் சாந்தமும்
இடையிடை வண்டல் இட்டு ஆரம் ஈர்த்தன
மிடை முலைக் குவடு ஒரீஇ மேகலைத் தடம்
கடலிடைப் புகுந்த கண் கலுழி ஆறு அரோ
#178
தண்டலைக் கோசலத் தலைவன் மாதரைக்
கண்டனன் இரவியும் கமல வாள் முகம்
விண் தலத்து உறையும் நல் வேந்தற்கு ஆயினும்
உண்டு இடருற்ற போது என் உறாதன
#179
தாயரும் கிளைஞரும் சார்ந்துளார்களும்
சேயரும் அணியரும் சிறந்த மாதரும்
காய் எரி உற்றனர் அனைய கவ்வையர்
வாயிலும் முன்றிலும் மறைய மொய்த்தனர்
#180
இரைத்தனர் இரைத்து எழுந்து ஏங்கி எங்கணும்
திரைப் பெரும் கடல் எனத் தொடர்ந்து பின் செல
உரைப்பதை உணர்கிலன் ஒழிப்பது ஓர்கிலன்
வரைப் புயத்து அண்ணல் தன் மனையை நோக்கினான்
#181
நல் நெடு நளி முடி சூட நல் மணிப்
பொன் நெடும் தேரொடும் பவனி போனவன்
துன் நெடும் சீரையும் சுற்றி மீண்டும் அப்
பொன் நெடும் தெருவிடைப் போதல் மேயினான்
#182
அந்தணர் அரும் தவர் அவனி காவலர்
நந்தல்_இல் நகருளார் நாட்டுளார்கள் தம்
சிந்தை என் புகல்வது தேவர் உள்ளமும்
வெந்தனர் மேல் வரும் உறுதி வேண்டலர்
#183
அஞ்சன மேனி இவ் அழகற்கு எய்திய
வஞ்சனை கண்ட பின் வகிர்ந்து நீங்கலா
நெஞ்சினும் வலிது உயிர் நினைப்பது என் சில
நஞ்சினும் வலிய நம் நலம் என்றார் சிலர்
#184
மண் கொடு வரும் என வழி இருந்த யாம்
எண் கொடு சுடர் வனத்து எய்தல் காணவோ
பெண் கொடுவினை செயப்பெற்ற நாட்டினில்
கண் கொடு பிறத்தலும் கடை என்றார் சிலர்
#185
முழுவதே பிறந்து உலகு உடைய மொய்ம்பினோன்
உழுவை சேர் கானகத்து உறைவென் யான் என
எழுவதே எழுதல் கண்டு இருப்பதே இருந்து
அழுவதே அழகிது எம் அன்பு என்றார் சிலர்
#186
வலம் கடிந்து ஏழையர் ஆய மன்னரை
நலம் கடிந்து அறம் கெட நயத்தியோ எனா
குலம் கடிந்தான் வலி கொண்ட கொண்டலை
நிலம் கடிந்தாளொடு நிகர் என்றார் சிலர்
#187
திரு அரை சுற்றிய சீரை ஆடையன்
பொரு_அரும் துயரினன் தொடர்ந்து போகின்றான்
இருவரைப் பயந்தவள் ஈன்ற கான்முளை
ஒருவனோ இவற்கு இவ் ஊர் உறவு என்றார் சிலர்
#188
முழுக் கலின் வலிய நம் மூரி நெஞ்சினை
மழுக்களின் பிளத்தும் என்று ஓடுவார் வழி
ஒழுக்கிய கண்ணின் நீர் கலுழி ஊற்றிடை
இழுக்கலில் வழுக்கி வீழ்ந்து இடருற்றார் சிலர்
#189
பொன் அணி மணி அணி மெய்யின் போக்கினர்
மின் என மீன் என விளங்கும் மெய் விலைப்
பல் நிறத் துகிலினைப் பறித்து நீக்கியே
சின்ன நுண் துகிலினைச் செறிக்கின்றார் சிலர்
#190
நிறை மக உடையவர் நெறி செல் ஐம்பொறி
குறை மகக் குறையினும் கொடுப்பராம் உயிர்
முறை மகன் வனம் புக மொழியைக் காக்கின்ற
இறை_மகன் திரு மனம் இரும்பு என்றார் சிலர்
#191
வாங்கிய மருங்குலை வருத்தும் கொங்கையர்
பூம் கொடி ஒதுங்குவ போல் ஒதுங்கினர்
ஏங்கிய குரலினர் இணைந்த காந்தளின்
தாங்கிய செம் கை தம் தலையின் மேல் உளார்
#192
தலைக் குவட்டு அயல் மதி தவழும் மாளிகை
நிலைக் குவட்டு இடையிடை நின்ற நங்கைமார்
முலைக் குவட்டு இழி கணீர் ஆலி மொய்த்து உக
மலைக் குவட்டு அயர்வுறும் மயிலின் மாழ்கினார்
#193
மஞ்சு என அகில் புகை வழங்கும் மாளிகை
எஞ்சல்_இல் சாளரத்து இரங்கும் இன்_சொலார்
அஞ்சனக் கண்ணின் நீர் அருவி சோர்தர
பஞ்சரத்து இருந்து அழும் கிளியின் பன்னினார்
#194
நல் நெடும் கண்களின் நான்ற நீர்த் துளி
தன் நெடும் தாரைகள் தளத்தின் வீழ்தலால்
மன் நெடும் குமரன்-மாட்டு அழுங்கி மாடமும்
பொன் நெடும் கண் குழித்து அழுவ போன்றவே
#195
மக்களை மறந்தனர் மாதர் தாயரைப்
புக்கிடம் அறிந்திலர் புதல்வர் பூசலிட்டு
உக்கனர் உயங்கினர் உருகிச் சோர்ந்தனர்
துக்கம் நின்று அறிவினை சூறையாடவே
#196
காமரம் கனிந்து எனக் கனிந்த மென் மொழி
மா மடந்தையர் எலாம் மறுகு சேர்தலால்
தே மரு நறும் குழல் திருவின் நீங்கிய
தாமரை ஒத்தன தவள மாடமே
#197
மழைக் குலம் புரை குழல் விரிந்து மண் உற
குழைக் குல முகத்தியர் குழாங்கள் ஏங்கின
இழைக் குலம் சிதறிட ஏவுண்டு ஓய்வுறும்
உழைக் குலம் உழைப்பன ஒத்து ஓர் பால் எல்லாம்
#198
கொடி அடங்கின மனைக் குன்றம் கோ முரசு
இடி அடங்கின முழக்கு இழந்த பல்_இயம்
படி அடங்கலும் நிமிர் பசும் கண் மாரியால்
பொடி அடங்கின மதில் புறத்து வீதியே
#199
அட்டிலும் இழந்தன புகை அகில் புகை
நெட்டிலும் இழந்தன நிறைந்த பால் கிளி
வட்டிலும் இழந்தன மகளிர் வான் மணித்
தொட்டிலும் இழந்தன மகவும் சோரவே
#200
ஒளி துறந்தன முகம் உயிர் துறந்து என
துளி துறந்தன முகில் தொகையும் தூய மா
வளி துறந்தன மதம் துறந்த யானையும்
களி துறந்தன மலர்க் கள் உண் வண்டுமே
#201
நிழல் பிரிந்தன குடை நெடும் கண் ஏழையர்
குழல் பிரிந்தன மலர் குமரர் தாள் இணை
கழல் பிரிந்தன சினக் காமன் வாளியும்
அழல் பிரிந்தன துணை பிரிந்த அன்றிலே
#202
தார் ஒலி நீத்தன புரவி தண்ணுமை
வார் ஒலி நீத்தன மழையின் விம்முறும்
தேர் ஒலி நீத்தன தெருவும் தெண் திரை
நீர் ஒலி நீத்தன நீத்தம் போலுமே
#203
முழவு எழும் ஒலி இல முறையின் யாழ் நரம்பு
எழ எழும் ஒலி இல இமைப்பு_இல் கண்ணினர்
விழவு எழும் ஒலி இல வேறும் ஒன்று இல
அழ எழும் ஒலி அலது அரச வீதியே
#204
தெள் ஒலிச் சிலம்புகள் சிலம்பு போல் மனை
நள் ஒலித்தில நளிர் கலையும் அன்னவே
புள் ஒலித்தில புனல் பொழிலும் அன்னவே
கள் ஒலித்தில மலர் களிறும் அன்னவே
#205
செய்ம் மறந்தன புனல் சிவந்த வாய்ச்சியர்
கைம் மறந்தன பசும் குழவி காந்து எரி
நெய்ம் மறந்தன நெறி அறிஞர் யாவரும்
மெய்ம் மறந்தனர் ஒலி மறந்த வேதமே
#206
ஆடினர் அழுதனர் அமுத ஏழ் இசை
பாடினர் அழுதனர் பரிந்த கோதையர்
ஊடினர் அழுதனர் உயிரின் அன்பரைக்
கூடினர் அழுதனர் குழாம் குழாம் கொடே
#207
நீட்டில களிறு கை நீரின் வாய் புதல்
பூட்டில புரவிகள் புள்ளும் பார்ப்பினுக்கு
ஈட்டில இரை புனிற்று ஈன்ற கன்றையும்
ஊட்டில கறவை நைந்து உருகி சோர்ந்தவே
#208
மாந்தர்-தம் மொய்ம்பினின் மகளிர் கொங்கை ஆம்
ஏந்து இளநீர்களும் வறுமை எய்தின
சாந்து அயர் மகிழ்நர்-தம் முடியில் தையலார்
கூந்தலின் வறுமைய மலரின் கூலமே
#209
ஓடை நல் அணி முனிந்தன உயர் களிறு உச்சிச்
சூடை நல் அணி முனிந்தன தொடர் மனை கொடியின்
ஆடை நல் அணி முனிந்தன அம் பொன் செய் இஞ்சி
பேடை நல் அணி முனிந்தன மென் நடைப் புறவம்
#210
திக்கு நோக்கிய தீவினைப் பயன் எனச் சிந்தை
நெக்கு நோக்குவோர் நல்வினைப் பயன் என நேர்வோர்
பக்கம் நோக்கல் என் பருவரல் இன்பம் என்று இரண்டும்
ஒக்க நோக்கிய யோகரும் அரும் துயர் உழந்தார்
#211
ஓவு_இல் நல் உயிர் உயிர்ப்பினோடு உடல் பதைத்து உலைய
மேவு தொல் அழகு எழில் கெட விம்மல் நோய் விம்ம
தாவு_இல் ஐம்பொறி மறுகுறத் தயரதன் என்ன
ஆவி நீக்கின்றது ஒத்தது அவ் அயோத்தி மா நகரம்
#212
உயங்கி அ நகர் உலைவுற ஒருங்கு உழைச்சுற்றம்
மயங்கி ஏங்கினர் வயின்வயின் வரம்பிலர் தொடர
இயங்கு பல் உயிர்க்கு ஓர் உயிர் என நின்ற இராமன்
தயங்கு பூண் முலைச் சானகி இருந்துழிச் சார்ந்தான்
#213
அழுது தாயரோடு அரும் தவர் அந்தணர் அரசர்
புழுதி ஆடிய மெய்யினர் புடை வந்து பொரும
பழுது சீரையின் உடையினன் வரும்படி பாரா
எழுது பாவை அன்னாள் மன துணுக்கமொடு எழுந்தாள்
#214
எழுந்த நங்கையை மாமியர் தழுவினர் ஏங்கிப்
பொழிந்த உண்கண் நீர் புதுப் புனல் ஆட்டினர் புலம்ப
அழிந்த சிந்தையள் அன்னமும் இன்னது என்று அறியாள்
வழிந்த நீர் நெடும் கண்ணினள் வள்ளலை நோக்கி
#215
பொன்னை உற்ற பொலம் கழலோய் புகழ்
மன்னை உற்றது உண்டோ மற்று இவ் வன் துயர்
என்னை உற்றது இயம்பு என்று இறைஞ்சினாள்
மின்னை உற்ற நடுக்கத்து மேனியாள்
#216
பொரு_இல் எம்பி புவி புரப்பான் புகழ்
இருவர் ஆணையும் ஏந்தினென் இன்று போய்
கருவி மா மழைக் கல்_தடம் கண்டு நான்
வருவென் ஈண்டு வருந்தலை நீ என்றான்
#217
நாயகன் வனம் நண்ணலுற்றான் என்றும்
மேய மண் இழந்தான் என்றும் விம்மலள்
நீ வருந்தலை நீங்குவென் யான் என்ற
தீய வெம் சொல் செவி சுடத் தேம்புவாள்
#218
துறந்து போம் எனச் சொற்ற சொல் தேறுமோ
உறைந்த பாற்கடல் சேக்கை உடன் ஒரீஇ
அறம் திறம்பல் கண்டு ஐயன் அயோத்தியில்
பிறந்த பின்பும் பிரியலள் ஆயினாள்
#219
அன்ன தன்மையள் ஐயனும் அன்னையும்
சொன்ன செய்யத் துணிந்தது தூயதே
என்னை என்னை இருத்தி என்றான் எனா
உன்ன உன்ன உயிர் உமிழா நின்றாள்
#220
வல் அரக்கரின் மால் வரை போய் விழுந்து
அல் அரக்கின் உருக்கு அழல் காட்டு அதர்க்
கல் அரக்கும் கடுமைய அல்ல நின்
சில் அரக்குண்ட சேவடிப் போது என்றான்
#221
பரிவு இகந்த மனத்து ஒரு பற்று இலாது
ஒருவுகின்றனை ஊழி அருக்கனும்
எரியும் என்பது யாண்டையது ஈண்டு நின்
பிரிவினும் சுடுமோ பெரும் காடு என்றாள்
#222
அண்ணல் அன்ன சொல் கேட்டனன் அன்றியும்
உள் நிவந்த கருத்தும் உணர்ந்தனன்
கண்ணில் நீர்க் கடல் கைவிட நேர்கிலன்
எண்ணுகின்றனன் என் செயற்பாற்று எனா
#223
அனைய வேலை அக மனை எய்தினள்
புனையும் சீரம் துணிந்து புனைந்தனள்
நினையும் வள்ளல் பின் வந்து அயல் நின்றனள்
பனையின் நீள் கரம் பற்றிய கையினாள்
#224
ஏழை-தன் செயல் கண்டவர் யாவரும்
வீழும் மண்ணிடை வீழ்ந்தனர் வீந்திலர்
வாழும் நாள் உள என்ற பின் மாள்வரோ
ஊழி பேரினும் உய்குநர் உய்வரே
#225
தாயர் தவ்வையர் தன் துணைச் சேடியர்
ஆயம் மன்னிய அன்பினர் என்று இவர்
தீயில் மூழ்கினர் ஒத்தனர் செங்கணான்
தூய தையலை நோக்கினன் சொல்லுவான்
#226
முல்லையும் கடல் முத்தும் எதிர்ப்பினும்
வெல்லும் வெண் நகையாய் விளைவு உன்னுவாய்
அல்லை போத அமைந்தனை ஆதலின்
எல்லையற்ற இடர் தருவாய் என்றான்
#227
கொற்றவன் அது கூறலும் கோகிலம்
செற்றது அன்ன குதலையள் சீறுவாள்
உற்று நின்ற துயரம் இது ஒன்றுமே
என் துறந்த பின் இன்பம்-கொலாம் என்றாள்
#228
சீரை சுற்றித் திருமகள் பின் செல
மூரி வில் கை இளையவன் முன் செலக்
காரை ஒத்தவன் போம்படி கண்ட அவ்
ஊரை உற்றது உணர்த்தவும் ஒண்ணுமோ
#229
ஆரும் பின்னர் அழுது அவலித்திலர்
சோரும் சிந்தையர் யாவரும் சூழ்ந்தனர்
வீரன் முன் வனம் மேவுதும் யாம் எனாப்
போர் என்று ஒல்லொலி கைம்மிகப் போயினார்
#230
தாதை வாயில் குறுகினன் சார்தலும்
கோதை வில்லவன் தாயரைக் கும்பிடா
ஆதி மன்னனை ஆற்று-மின் நீர் என்றான்
மாதராரும் விழுந்து மயங்கினார்
#231
வாழ்த்தினார் தம் மகனை மருகியை
ஏத்தினார் இளையோனை வழுத்தினார்
காத்து நல்கு-மின் தெய்வதங்காள் என்றார்
நாத் தழும்ப அரற்றி நடுங்குவார்
#232
அன்ன தாயர் அரிதின் பிரிந்த பின்
முன்னர் நின்ற முனிவனைக் கைதொழா
தன்னது ஆருயிர்த் தம்பியும் தாமரைப்
பொன்னும் தானும் ஒர் தேர் மிசைப் போயினான்
@5 சுமந்திரன் மீட்சிப் படலம்
*******தைலம் ஆட்டு படலம்
#1
ஏவிய குரிசில் பின் யாவர் ஏகிலார்
மா இயல் தானை அ மன்னை நீங்கலாத்
தேவியர் ஒழிந்தனர் தெய்வ மா நகர்
ஓவியம் ஒழிந்தன உயிர் இலாமையால்
#2
கைகள் நீர் பரந்து கால் தொடரக் கண் உகும்
வெய்ய நீர் வெள்ளத்து மெள்ளச் சேறலால்
உய்ய ஏழ்_உலகும் ஒன்று ஆன நீர் உழல்
தெய்வ மீன் ஒத்தது அச் செம்பொன் தேர் அரோ
#3
மீன் பொலிதர வெயில் ஒதுங்க மேதியோடு
ஆன் புகக் கதிரவன் அத்தம் புக்கனன்
கான் புகக் காண்கிலேன் என்று கல்லிடை
தான் புக முடுகினன் என்னும் தன்மையான்
#4
பகுத்த வான் மதி கொடு பதுமத்து அண்ணலே
வகுத்த வாள்_நுதலியர் வதன ராசி போல்
உகுத்த கண்ணீரினின் ஒளியும் நீங்கிட
முகிழ்த்து அழகு இழந்தன முளரி ஈட்டமே
#5
அந்தியில் வெயில் ஒளி அழிய வானகம்
நந்தல்_இல் கேகயன் பயந்த நங்கை-தன்
மந்தரை உரை எனும் கடுவின் மட்கிய
சிந்தையின் இருண்டது செம்மை நீங்கியே
#6
பரந்து மீன் அரும்பிய பசலை வானகம்
அரந்தை_இல் முனிவரன் அறைந்த சாபத்தால்
நிரந்தரம் இமைப்பு இலா நெடும் கண் ஈண்டிய
புரந்தரன் உரு எனப் பொலிந்தது எங்குமே
#7
திரு நகர்க்கு ஓசனை இரண்டு சென்று ஒரு
விரை செறி சோலையை விரைவின் எய்தினான்
இரதம்-நின்று இழிந்து பின் இராமன் இன்புறும்
உரை செறி முனிவரோடு உறையும் காலையே
#8
வட்டம் ஓர் ஓசனை வளைவிற்றாய் நடு
எள்தனை இடவும் ஓர் இடம் இலா வகை
புள் தகு சோலையின் புறத்தைச் சூழ்ந்து தாம்
விட்டிலர் குரிசிலை வேந்தர் வேறுளோர்
#9
குயின்றன குல மணி நதியின் கூலத்தில்
பயின்று உயர் வாலுகப் பரப்பில் பைம் புலில்
வயின்-தொறும் வயின்-தொறும் வைகினர் ஒன்றும்
அயின்றிலர் துயின்றிலர் அழுது விம்மினார்
#10
வாவி விரி தாமரையின் மா மலரின் வாசக்
காவி விரி நாள்_மலர் முகிழ்த்து அனைய கண்ணார்
ஆவி விரி பால் நுரையின் ஆடை அணை ஆக
நாவி விரி கூழை இள நவ்வியர் துயின்றார்
#11
பெரும் பகல் வருந்தினர் பிறங்கு முலை தெங்கின்
குரும்பைகள் பொரும் செவிலி மங்கையர் குறங்கில்
அரும்பு அனைய கொங்கை அயில் அம்பு அனைய உண்கண்
கரும்பு அனைய செம் சொல் நவில் கன்னியர் துயின்றார்
#12
பூ அகம் நிறைந்த புளினத் திரள்கள்-தோறும்
மா வகிரின் உண்கணர் மடப் பிடியின் வைக
சேவகம் அமைந்த சிறு கண் கரிகள் என்ன
தூ அகல்_இல் குந்த மற மைந்தர்கள் துயின்றார்
#13
மாக மணி வேதிகையில் மாதவி செய் பந்தர்
கேகய நெடும் குலம் எனச் சிலர் கிடந்தார்
பூக வனமூடு படுகர்ப் புளின முன்றில்
தோகை இள அன்ன நிரையின் சிலர் துயின்றார்
#14
சம்பக நறும் பொழில்களில் தருண வஞ்சிக்
கொம்பு அழுது ஒசிந்தன எனச் சிலர் குழைந்தார்
வம்பு அளவு கொங்கையொடு வாலுகம் வளர்க்கும்
அம் பவள வல்லிகள் எனச் சிலர் அசைந்தார்
#15
தகவும் மிகு தவமும் இவை தழுவ உயர் கொழுநர்
முகமும் அவர் அருளும் நுகர்கிலர்கள் துயர் முடுக
அகவும் இள மயில்கள் உயிர் அலசியன அனையார்
மகவு முலை வருட இள மகளிர்கள் துயின்றார்
#16
குங்கும மலைக் குளிர் பனி குழுமி என்னத்
துங்க முலையில் துகள் உற சிலர் துயின்றார்
அங்கை அணையில் பொலிவு அழுங்க முகம் எல்லாம்
பங்கயம் முகிழ்த்தன எனச் சிலர் படிந்தார்
#17
ஏனையரும் இன்னணம் உறங்கினர் உறங்கா
மானவனும் மந்திரி சுமந்திரனை வா என்று
ஊனம்_இல் பெரும் குணம் ஒருங்கு உடைய உன்னால்
மேல் நிகழ்வது உண்டு அவ் உரை கேள் என விளம்பும்
#18
பூண்ட பேரன்பினாரைப் போக்குவது அரிது போக்காது
ஈண்டு-நின்று ஏகல் பொல்லாது எந்தை நீ இரதம் இன்னே
தூண்டினை மீள்வது ஆக்கின் சுவட்டை ஓர்ந்து என்னை அங்கே
மீண்டனன் என்ன மீள்வர் இது நின்னை வேண்டிற்று என்றான்
#19
செவ்விய குரிசில் கூறத் தேர்_வலான் செப்புவான் அவ்
வெவ்விய தாயின் தீய விதியினின் மேலன் போலாம்
இவ்வயின் நின்னை நீக்கி இன் உயிர் தீர்ந்தேன் அல்லேன்
அவ்வயின் அனைய காண்டற்கு அமைதலால் அளியன் என்றான்
#20
தேவியும் இளவலும் தொடரச் செல்வனைப்
பூ இயல் கானகம் புக உய்த்தேன் என்கோ
கோவினை உடன் கொடு குறுகினேன் என்கோ
யாவது கூறுகேன் இரும்பின் நெஞ்சினேன்
#21
தார் உடை மலரினும் ஒதுங்கத் தக்கிலா
வார் உடை முலையொடும் மதுகை மைந்தரைப்
பாரிடைச் செலுத்தினேன் பழைய நண்பினேன்
தேரிடை வந்தனன் தீதிலேன் என்கோ
#22
வன் புலக் கல் மன மதி_இல் வஞ்சனேன்
என்பு உலப்புற உடைந்து இரங்கும் மன்னன்-பால்
உன் புலக்கு உரிய சொல் உணர்த்தச் செல்கெனோ
தென்புலக் கோமகன் தூதின் செல்கெனோ
#23
நால் திசை மாந்தரும் நகர மாக்களும்
தேற்றினர் கொணர்வார் என் சிறுவன்-தன்னை என்று
ஆற்றின அரசனை ஐய வெய்ய என்
கூற்று உறழ் சொல்லினால் கொலைசெய்வேன்-கொலோ
#24
அங்கி மேல் வேள்வி செய்து அரிதின் பெற்ற நின்
சிங்க_ஏறு அகன்றது என்று உணர்த்தச் செல்கெனோ
எங்கள் கோமகற்கு இனி என்னின் கேகயன்
நங்கையே கடைமுறை நல்லள் போலுமால்
#25
முடிவுற இன்னை மொழிந்த பின்னரும்
அடி உறத் தழுவினன் அழுங்கு பேர் அரா
இடி உறத் துவளுவது என்னும் இன்னலன்
படி உறப் புரண்டனன் பலவும் பன்னினான்
#26
தடக் கையால் எடுத்து அவன் தழுவிக் கண்ண நீர்
துடைத்து வேறு இருத்தி மற்று இனைய சொல்லினான்
அடக்கும் ஐம்பொறியொடு கரணத்து அப்புறம்
கடக்கும் வால் உணர்வினுக்கு அணுகும் காட்சியான்
#27
பிறத்தல் ஒன்று உற்ற பின் பெறுவ யாவையும்
திறத்துளி உணர்வது ஓர் செம்மை உள்ளத்தாய்
புறத்துறு பெரும் பழி பொது இன்று எய்தலும்
அறத்தினை மறத்தியோ அவலம் உண்டு எனா
#28
முன்பு நின்று இசை நிறீஇ முடிவு முற்றிய
பின்பும் நின்று உறுதியைப் பயக்கும் பேரறம்
இன்பம் வந்து உறும் எனின் இனியதாய் இடைத்
துன்பம் வந்து உறும் எனின் துறங்கல் ஆகுமோ
#29
நிறப் பெரும் படைக்கலம் நிறத்தின் நேர் உற
மறப் பயன் விளைத்திடல் வன்மை அன்று அரோ
இறப்பினும் திரு எலாம் இழப்ப எய்தினும்
துறப்பிலர் அறம் எனல் சூரர் ஆவதே
#30
கான் புறம் சேறலில் அருமை காண்டலால்
வான் பிறங்கிய புகழ் மன்னர் தொல் குலம்
யான் பிறந்து அறத்தின்-நின்று இழுக்கிற்று என்னவோ
ஊன் திறந்து உயிர் குடித்து உழலும் வேலினாய்
#31
வினைக்கு அரு மெய்ம்மையன் வனத்துள் விட்டனன்
மனக்கு அரும் புதல்வனை என்றல் மன்னவன்
தனக்கு அரும் தவம் அது தலைக்கொண்டு ஏகுதல்
எனக்கு அரும் தவம் இதற்கு இரங்கல் எந்தை நீ
#32
முந்தினை முனிவனைக் குறுகி முற்றும் என்
வந்தனை முதலிய மாற்றம் கூறிப் பின்
எந்தையை அவனொடும் எய்தி ஆண்டு என
சிந்தனை உணர்த்துதி என்று செப்புவான்
#33
முனிவனை எம்பியை முறையில் நின்று அரும்
புனித வேதியர்க்கும் மேல் உறை புத்தேளிர்க்கும்
இனியன இழைத்தி என்று இயம்பி என் பிரி
தனிமையும் தீர்த்தி என்று உரைத்தி தன்மையால்
#34
வெவ்வியது அன்னையால் விளைந்தது ஈண்டு ஒரு
கவ்வை என்று இறையும் தன் கருத்தின் நோக்கலன்
எவ் அருள் என்-வயின் வைத்தது இன் சொலால்
அவ் அருள் அவன்-வயின் அருளுக என்றியால்
#35
வேண்டினென் இவ் வரம் என்று மேலவன்
ஈண்டு அருள் எம்பி-பால் நிறுவி ஏகினை
பூண்ட மா தவனொடும் கோயில் புக்கு எனது
ஆண்தகை வேந்தனை அவலம் ஆற்றிப் பின்
#36
ஏழ்_இரண்டு ஆண்டும் நீத்து ஈண்ட வந்து உனைத்
தாழ்குவென் திருவடி தப்பிலேன் எனச்
சூழி வெம் களிற்று இறை-தனக்குச் சோர்வு இலா
வாழி மா தவன் சொலால் மனம் தெருட்டுவாய்
#37
முறைமையால் என் பயந்தெடுத்த மூவர்க்கும்
குறைவு_இலா என் நெடு வணக்கம் கூறிப் பின்
இறை_மகன் துயர் துடைத்து இருத்தி மாடு என்றான்
மறைகளை மறைந்து போய் வனத்துள் வைகுவான்
#38
ஆள்வினை ஆணையின் திறம்பல் அன்று எனா
தாள்_முதல் வணங்கிய தனித் திண் தேர்_வலான்
ஊழ்வினை வசத்து உயிர் நிலை என்று உன்னுவான்
வாள் விழி சனகியை வணங்கி நோக்கினான்
#39
அன்னவள் கூறுவாள் அரசர்க்கு அத்தையர்க்கு
என்னுடை வணக்கம் முன் இயம்பி யானுடைப்
பொன் நிறப் பூவையும் கிளியும் போற்று-மின்
என்ன மற்று எங்கையர்க்கு இயம்புவாய் என்றாள்
#40
தேர்_வலான் அவ் உரை கேட்டுத் தீங்கு உறின்
யார் வலார் உயிர் துறப்பு எளிது அன்றே எனா
போர்_வலான் தடுக்கவும் பொருமி விம்மினான்
சோர்வு_இலாள் அறிகிலாத் துயர்க்குச் சோர்கின்றான்
#41
ஆறினன் போல் சிறிது அவலம் அவ்வழி
வேறு இலா அன்பினான் விடை தந்தீக எனா
ஏறு சேவகன் தொழுது இளைய மைந்தனைக்
கூறுவது யாது என இனைய கூறினான்
#42
உரைசெய்து எம் கோமகற்கு உறுதி ஆக்கிய
தரை கெழு திருவினைத் தவிர்த்து மற்று ஒரு
விரை செறி குழலி-மாட்டு அளித்த மெய்யனை
அரைசன் என்று இன்னம் ஒன்று அறையற்பாலதோ
#43
கானகம் பற்றி நல் புதல்வன் காய் உண
போனகம் பற்றிய பொய்_இல் மன்னற்கு இங்கு
ஊனகம் பற்றிய உயிர் கொடு இன்னும் போய்
வானகம் பற்றிலா வலிமை கூறு என்றான்
#44
மின்னுடன் பிறந்த வாள் பரத வேந்தற்கு என்
மன்னுடன் பிறந்திலென் மண் கொண்டு ஆள்கின்றான்
தன்னுடன் பிறந்திலென் தம்பி முன் அலென்
என்னுடன் பிறந்த யான் வலியன் என்றியால்
#45
ஆரியன் இளவலை நோக்கி ஐய நீ
சீரிய_அல்லன செப்பல் என்ற பின்
பாரிடை வணங்கினன் பரியும் நெஞ்சினன்
தேரிடை வித்தகன் சேறல் மேயினான்
#46
கூட்டினன் தேர் பொறி கூட்டிக் கோள் முறை
பூட்டினன் புரவி அப் புரவி போம் நெறி
காட்டினன் காட்டித் தன் கல்வி மாட்சியால்
ஓட்டினன் ஒருவரும் உணர்வுறாமலே
#47
தையல்-தன் கற்பும் தன் தகவும் தம்பியும்
மை_அறு கருணையும் உணர்வும் வாய்மையும்
செய்ய தன் வில்லுமே சேமமாகக் கொண்டு
ஐயனும் போயினான் அல்லின் நாப்பணே
@6 தயரதன் மோட்ச படலம்
#1
பொய் வினைக்கு உதவும் வாழ்க்கை அரக்கரைப் பொருந்தி அன்னார்
செய் வினைக்கு உதவும் நட்பால் செல்பவர் தடுப்பது ஏய்க்கும்
மை விளக்கியதே அன்ன வயங்கு இருள் துரக்க வானம்
கைவிளக்கு எடுத்தது என்ன வந்தது கடவுள் திங்கள்
#2
மருமத்துத் தன்னை ஊன்றும் மறக் கொடும் பாவம் தீர்க்கும்
உரும் ஒத்த சிலையினோரை ஒருப்படுத்து உதவி நின்ற
கருமத்தின் விளைவை எண்ணிக் களிப்பொடு காண வந்த
தருமத்தின் வதனம் என்னப் பொலிந்தது தனி வெண் திங்கள்
#3
காம்பு உயர் கானம் செல்லும் கரியவன் வறுமை நோக்கித்
தேம்பின குவிந்த போலும் செங்கழுநீரும் சேரைப்
பாம்பின தலைய ஆகிப் பரிந்தன குவிந்து சாய்ந்த
ஆம்பலும் என்ற போது நின்ற போது அலர்வது உண்டோ
#4
அஞ்சனக் குன்றம் அன்ன அழகனும் அழகன்-தன்னை
எஞ்சல்_இல் பொன் போர்த்து அன்ன இளவலும் இந்து என்பான்
வெம் சிலைப் புருவத்தாள்-தன் மெல் அடிக்கு ஏற்ப வெண் நூல்
பஞ்சிடைப் படுத்தால் அன்ன வெண்ணிலா பரப்பப் போனார்
#5
சிறுகு இடை வருந்த கொங்கை ஏந்திய செல்வம் என்னும்
நெறி இரும் கூந்தல் நங்கை சீறடி நீர்க் கொப்பூழின்
நறியன தொடர்ந்து சென்று நடந்தனள் நவையின் நீங்கும்
உறு வலி அன்பின் ஊங்கு ஒன்று உண்டு என நுவல்வது உண்டோ
#6
பரிதி வானவனும் கீழ்-பால் பரு வரை பற்றா முன்னம்
திருவின் நாயகனும் தென்-பால் யோசனை இரண்டு போனான்
அருவி பாய் கண்ணும் புண்ணாய் அழிகின்ற மனமும் தானும்
துரித மான் தேரில் போனான் செய்தது சொல்லலுற்றாம்
#7
கடிகை ஓர் இரண்டு மூன்றில் கடி மதில் அயோத்தி கண்டான்
அடி இணை தொழுதான் ஆதி முனிவனை அவனும் உற்றபடி
எலாம் கேட்டு நெஞ்சில் பருவரல் உழந்தான் முன்னே
முடிவு எலாம் உணர்ந்தான் அந்தோ முடிந்தனன் மன்னன் என்றான்
#8
நின்று உயர் பழியை அஞ்சி நேர்ந்திலன் தடுக்க வள்ளல்
ஒன்றும் நான் உரைத்தல் நோக்கான் தருமத்திற்கு உறுதி பார்ப்பான்
வென்றவர் உளரோ மேலை விதியினை என்று விம்மிப்
பொன் திணி மன்னன் கோயில் சுமந்திரனோடும் போனான்
#9
தேர் கொண்டு வள்ளல் வந்தான் என்று தம் சிந்தை உந்த
ஊர் கொண்ட திங்கள் என்ன மன்னனை உழையர் சுற்றிக்
கார் கொண்ட மேனியானைக் கண்டிலர் கண்ணில் வற்றா
நீர் கொண்ட நெடும் தேர்ப்பாகன் நிலை கண்டே திருவின் தீர்ந்தார்
#10
இரதம் வந்து உற்றது என்று ஆங்கு யாவரும் இயம்பலோடும்
வரதன் வந்துற்றான் என்ன மன்னனும் மயக்கம் தீர்ந்தான்
புரை தபு கமல நாட்டம் பொருக்கென விழித்து நோக்கி
விரத மா தவனைக் கண்டான் வீரன் வந்தனனோ என்றான்
#11
இல்லை என்று உரைக்கலாற்றான் ஏங்கினன் முனிவன் நின்றான்
வல்லவன் முகமே நம்பி வந்திலன் என்னும் மாற்றம்
சொல்லலும் அரசன் சோர்ந்தான் துயருறு முனிவன் நான் இவ்
அல்லல் காண்கில்லேன் என்னா ஆங்கு நின்று அகலப் போனான்
#12
நாயகன் பின்னும் தன் தேர்ப்பாகனை நோக்கி நம்பி
சேயனோ அணியனோ என்று உரைத்தலும் தேர்_வலானும்
வேய் உயர் கானம் தானும் தம்பியும் மிதிலைப் பொன்னும்
போயினன் என்றான் என்ற போழ்தத்தே ஆவி போனான்
#13
இந்திரன் முதல்வராய கடவுளர் யாரும் ஈண்டிச்
சந்திரன் அனையது ஆங்கு ஓர் மானத்தின் தலையில் தாங்கி
வந்தனன் எந்தை தந்தை என மனம் களித்து வள்ளல்
உந்தியான் உலகின் உம்பர் மீள்கிலா உலகத்து உய்த்தார்
#14
உயிர்ப்பு இலன் துடிப்பும் இல்லன் என்று உணர்ந்து உருவம் தீண்டி
அயிர்த்தனள் நோக்கி மன்னற்கு ஆருயிர் இன்மை தேறி
மயில் குலம் அனைய நங்கை கோசலை மறுகி வீழ்ந்தாள்
வெயில் சுடு கோடை-தன்னில் என்பு இலா உயிரின் வேவாள்
#15
இருந்த அந்தணனோடு எல்லாம் ஈன்றவன்-தன்னை ஈனப்
பெரும் தவம் செய்த நங்கை கணவனில் பிரிந்து தெய்வ
மருந்து இழந்தவரின் விம்மி மணி பிரி அரவின் மாழ்கி
அரும் துணை இழந்த அன்றில் பெடை என அரற்றலுற்றாள்
#16
தானே தானே தஞ்சம் இலாதான் தகைவு இல்லான்
போனான் போனான் எங்களை நீத்து இப்பொழுது என்னா
வான் நீர் சுண்டி மண் அற வற்றி மறுகுற்ற
மீனே என்ன மெய் தடுமாறி விழுகின்றாள்
#17
ஒன்றோ நல் நாட்டு உய்க்குவர் இ நாட்டு உயிர் காப்பார்
அன்றே மக்கள் பெற்று உயிர் வாழ்வார்க்கு அவம் உண்டே
இன்றே வந்து ஈண்டு அஞ்சல் எனாது எம் மகன் என்பான்
கொன்றான் அன்றே தந்தையை என்றாள் குலைகின்றாள்
#18
நோயும் இன்றி நோன் கதிர் வாள் வேல் இவை இன்றி
மாயும் தன்மை மக்களின் ஆக மற மன்னன்
காயும் புள்ளிக் கற்கடம் நாகம் கனி வாழை
வேயும் போன்றான் என்று மயங்கா விழுகின்றாள்
#19
வடித் தாழ் கூந்தல் கேகயன் மாதே மதியாலே
பிடித்தாய் வையம் பெற்றனை பேரா வரம் இன்னே
முடித்தாய் அன்றே மந்திரம் என்றாள் முகில்-வாய் மின்
துடித்தால் என்ன மன்னவன் மார்பில் துவள்கின்றாள்
#20
அரும் தேரானைச் சம்பரனைப் பண்டு அமர் வென்றாய்
இருந்தார் வானோர் உன் அருளாலே இனிது அன்னார்
விருந்து ஆகின்றாய் என்றனள் வேழத்து அரசு ஒன்றைப்
பிரிந்தே துன்பத்து ஆழ் பிடி என்னப் பிணியுற்றாள்
#21
வேள்விச் செல்வம் துய்த்தி-கொல் மெய்ம்மைத் துறை மேவும்
சூழ்வின் செல்வம் துய்த்தி-கொல் தோலா மனு நூலின்
வாழ்வுச் செல்வம் துய்த்தி-கொல்-மன் என்றனள் வானோர்
கேள்விச் செல்வம் துய்க்க வயிற்று ஓர் கிளை தந்தான்
#22
ஆழி வேந்தன் பெருந்தேவி அன்ன பன்னி அழுது அரற்ற
தோழி அன்ன சுமித்திரையும் துளங்கி ஏங்கி உயிர் சோர
ஊழி திரிவது எனக் கோயில் உலையும் வேலை மற்று ஒழிந்த
மாழை உண்கண் தேவியரும் மயிலின் குழாத்தின் வந்து இரைந்தார்
#23
துஞ்சினானைத் தம் உயிரின் துணையைக் கண்டார் துணுக்கத்தால்
நஞ்சு நுகர்ந்தார் என உடலம் நடுங்காநின்றார் என்றாலும்
அஞ்சி அழுங்கி விழுந்திலரால் அன்பின் தறுகண் பிறிது உண்டோ
வஞ்சம் இல்லா மனத்தானை வானில் தொடர்வான் மனம் வலித்தார்
#24
அளம் கொள் அளக்கர் இரும் பரப்பில் அண்டர் உலகில் அப்புறத்தில்
விளங்கும் மாதர் கற்பினார் இவரின் யாரோ என நின்றார்
களங்கம் நீத்த மதி முகத்தார் கான வெள்ளம் கால் கோப்பத்
துளங்கல் இல்லா தனிக் குன்றில் தொக்க மயிலின் சூழ்ந்து இருந்தார்
#25
கைத்த சொல்லால் உயிர் இழந்தும் புதல்வன் பிரிந்தும் கடை ஓட
மெய்த்த வேந்தன் திரு உடம்பைப் பிரியார் பற்றி விட்டிலரால்
பித்த மயக்கு ஆம் சுறவு எறியும் பிறவிப் பெரிய கடல் கடக்க
உய்த்து மீண்ட நாவாயில் தாமும் போவார் ஒக்கின்றார்
#26
மாதரார்கள் அறுபதினாயிரரும் உள்ளம் வலித்து இருப்ப
கோது_இல் குணத்துக் கோசலையும் இளைய மாதும் குழைந்து ஏங்கச்
சோதி மணித் தேர்ச் சுமந்திரன் சென்று அரசன் தன்மை சொல வந்த
வேத முனிவன் விதி செய்த வினையை நோக்கி விம்முவான்
#27
செய்யக் கடவ செயற்கு உரிய சிறுவர் ஈண்டையார்_அல்லர்
எய்தக் கடவ பொருள் எய்தாது இகவாது என்ன இயல்பு எண்ணா
மையல் கொடியான் மகன் ஈண்டு வந்தால் முடித்தும் மற்று என்னத்
தையல் கடல்-நின்று எடுத்து அவனைத் தயிலக் கடலின்-தலை உய்த்தான்
#28
தேவிமாரை இவற்கு உரிமை செய்யும் நாளில் செம் தீயின்
ஆவி நீத்திர் என நீக்கி அரிவைமார்கள் இருவரையும்
தா_இல் கோயில்-தலை இருத்தித் தண் தார்ப் பரதன் கொண்டு அணைக என்று
ஏவினான் மன்னவன் ஆணை எழுது முடங்கல் கொடுத்தோரை
#29
போனார் அவரும் கேகயர்_கோன் பொன் மா நகரம் புக எய்த
ஆனா அறிவின் அரும் தவனும் அறம் ஆர் பள்ளி அது சேர்ந்தான்
சேனாபதியின் சுமந்திரனைச் செயற்பாற்கு உரிய செய்க என்றான்
மேல் நாம் சொன்ன மாந்தர்க்கு விளைந்தது இனி நாம் விளம்புவாம்
#30
மீன் நீர் வேலை முரசு இயம்ப விண்ணோர் ஏத்த மண் இறைஞ்ச
தூ நீர் ஒளி வாள் புடை இலங்கச் சுடர் தேர் ஏறித் தோன்றினான்
வானே புக்கான் அரும் புதல்வன் மக்கள் அகன்றார் வருமளவும்
யானே காப்பென் இவ் உலகை என்பான் போல எறி கதிரோன்
#31
வருந்தா வண்ணம் வருந்தினார் மறந்தார் தம்மை வள்ளலும் ஆங்கு
இருந்தான் என்றே இருந்தார்கள் எல்லாம் எழுந்தார் அருள் இருக்கும்
பெரும் தாமரைக் கண் கரு_முகிலைப் பெயர்ந்தார் காணார் பேதுற்றார்
பொருந்தா நயனம் பொருந்தி நமைப் பொன்றச் சூழ்ந்த எனப் புரண்டார்
#32
எட்டுத் திசையும் ஓடுவான் எழுவார் விழுவார் இடர்க் கடலுள்
விட்டு நீத்தான் நமை என்பார் வெய்ய ஐயன் வினை என்பார்
ஒட்டிப் படர்ந்த தண்டகம் இவ் உலகத்து உளது அன்றோ உணர்வைச்
சுட்டுச் சோர்தல் பழுது அன்றோ தொடர்தும் தேரின் சுவடு என்பார்
#33
தேரின் சுவடு நோக்குவார் திரு மா நகரின் மிசைத் திரிய
ஊரும் திகிரிக் குறி கண்டார் உவந்தார் எல்லாம் உயிர் வந்தார்
ஆரும் அஞ்சல் ஐயன் போய் அயோத்தி அடைந்தான் என அசனிக்
காரும் கடலும் ஒருவழிக் கொண்டு ஆர்த்த என்னக் கடிது ஆர்த்தார்
#34
மான அரவின் வாய்த் தீய வளை வான் தொளை வாள் எயிற்றின் வழி
ஆன கடுவுக்கு அரு மருந்தா அருந்தும் அமுதம் பெற்று உய்ந்து
போன பொழுதில் புகுந்த உயிர் பொறுத்தார் ஒத்தார் பொரு_அரிய
வேனில் மதனை மதன் அழித்தான் மீண்டான் என்ன ஆண்டையோர்
#35
ஆறு செல்லச்செல்ல தேர் ஆழி கண்டார் அயற்பால
வேறு சென்ற நெறி காணார் விம்மாநின்ற உவகையராய்
மாறி உலகம் வகுத்த நாள் வரம்பு கடந்து மண் முழுதும்
ஏறி ஒடுங்கும் எறி கடல் போல் எயில் மா நகரம் எய்தினார்
#36
புக்கார் அரசன் பொன்_உலகம் போனான் என்னும் பொருள் கேட்டார்
உக்கார் நெஞ்சம் உயிர் உகுத்தார் உற்றது எம்மால் உரைப்ப அரிதால்
தக்கான் போனான் வனம் என்னும் தகையும் உணர்ந்தார் மிகை ஆவி
அக் காலத்தே அகலுமோ அவதி என்று ஒன்று உளதானால்
#37
மன்னற்கு அல்லார் வனம் போன மைந்தற்கு அல்லார் வாங்க_அரிய
இன்னல் சிறையின் இடைப்பட்டார் இருந்தார் நின்ற அரும் தவனும்
உன்னற்கு அரிய பழிக்கு அஞ்சி அன்றோ ஒழிந்தது யான் என்று
பன்னற்கு அரிய பல நெறியும் பகர்ந்து பதைப்பை நீக்கினான்
#38
வெள்ளத்திடை வாழ் வட_அனலை அஞ்சி வேலை கடவாத
பள்ளக் கடலின் முனி பணியால் பையுள் நகரம் வைகிட மேல்
வள்ளல் தாதை பணி என்னும் வானோர் தவத்தால் வயங்கு இருளின்
நள்ளில் போன வரி சிலைக் கை நம்பி செய்கை நடத்துவாம்
@7 கங்கைப் படலம்
#1
வெய்யோன் ஒளி தன் மேனியில் விரி சோதியின் மறைய
பொய்யோ எனும் இடையாளொடும் இளையானொடும் போனான்
மையோ மரகதமோ மறி கடலோ மழை முகிலோ
ஐயோ இவன் வடிவு என்பது ஓர் அழியா அழகுடையான்
#2
அளி அன்னது ஓர் அறல் துன்னிய குழலாள் கடல் அமிழ்தின்
தெளிவு அன்னது ஓர் மொழியாள் நிறை தவம் அன்னது ஓர் செயலாள்
வெளி அன்னது ஓர் இடையாளொடும் விடை அன்னது ஓர் நடையான்
களி அன்னமும் மட அன்னமும் நடம் ஆடுவ கண்டான்
#3
அஞ்சு அம்பையும் ஐயன் தனது அலகு அம்பையும் அளவா
நஞ்சங்களை வெல ஆகிய நயனங்களை உடையான்
துஞ்சும் களி வரி வண்டுகள் குழலின் படி சுழலும்
கஞ்சங்களை மஞ்சன் கழல் நகுகின்றது கண்டாள்
#4
மா கந்தமும் மகரந்தமும் அளகம் தரும் மதியின்
பாகம் தரும் நுதலாளொடு பவளம் தரும் இதழான்
மேகம் தனி வருகின்றது மின்னோடு என மிளிர் பூண்
நாகம் நனி வருகின்றது பிடியோடு என நடவா
#5
தொளை கட்டிய கிளை முட்டிய சுருதிச் சுவை அமுதின்
கிளை கட்டிய கருவிக் கிளர் இசையின் பசை நறவின்
விளை கட்டியின் மதுரித்து எழு கிளவிக் கிளி விழி போல்
களை கட்டவர் தளை விட்டு எறி குவளைத் தொகை கண்டான்
#6
அருப்பு ஏந்திய கலசத் துணை அமுது ஏந்திய மதமா
மருப்பு ஏந்திய எனல் ஆம் முலை மழை ஏந்திய குழலாள்
கருப்பு ஏந்திரம் முதலாயின கண்டாள் இடர் காணாள்
பொருப்பு ஏந்திய தோளானொடு விளையாடினள் போனாள்
#7
பல் நந்து உகு தரளம் தொகு படர் பந்திகள் படு நீர்
அன்னம் துயில் வதி தண்டலை அயல் நந்து உளை புளினம்
சின்னம் தரும் மலர் சிந்திய செறி நந்தனவனம் நல்
பொன் உந்திய நதி கண்டு உளம் மகிழ்தந்தனர் போனார்
#8
கால் பாய்வன முது மேதிகள் கதிர் மேய்வன கடைவாய்
பால் பாய்வன நறை பாய்வன மலர் வாய் அளி படர
சேல் பாய்வன கயல் பாய்வன செம் கால் மட அன்னம்
போல் பாய் புனல் மடவார் படி நெடு நாடு அவை போனார்
#9
பரிதி பற்றிய பல் கலன் முற்றினர்
மருத வைப்பின் வளம் கெழு நாடு ஒரீஇ
சுருதி கற்று உயர் தோமிலர் சுற்றுறும்
விரி திரைப் புனல் கங்கையை மேவினார்
#10
கங்கை என்னும் கடவுள் திரு நதி
தங்கி வைகும் தபோதனர் யாவரும்
எங்கள் செல்_கதி வந்தது என்று ஏமுறா
அம் கண் நாயகன் காண வந்து அண்மினார்
#11
பெண்ணின் நோக்கும் சுவையில் பிறர் பிறர்க்கு
எண்ணி நோக்கி இயம்ப அரும் இன்பத்தை
பண்ணின் நோக்கும் பரா அமுதை பசும்
கண்ணின் நோக்கினர் உள்ளம் களிக்கின்றார்
#12
எதிர்கொண்டு ஏத்தினர் இன் இசை பாடினர்
வெதிர் கொள் கோலினர் ஆடினர் வீரனை
கதிர் கொள் தாமரைக்கண்ணனைக் கண்ணினால்
மதுர வாரி அமுது என மாந்துவார்
#13
மனையின் நீங்கிய மக்களை வைகலும்
நினையும் நெஞ்சினர் கண்டிலர் நேடுவார்
அனையர் வந்துற ஆண்டு எதிர்ந்தார்கள் போல்
இனிய மா தவப் பள்ளிகொண்டு எய்தினார்
#14
பொழியும் கண்ணீர் புதுப் புனல் ஆட்டினர்
மொழியும் இன் சொலின் மொய் மலர் சூட்டினர்
அழிவு_இல் அன்பு எனும் ஆர் அமிழ்து ஊட்டினர்
வழியில் வந்த வருத்தத்தை வீட்டினர்
#15
காயும் கானில் கிழங்கும் கனிகளும்
தூய தேடிக் கொணர்ந்தனர் தோன்றல் நீ
ஆய கங்கை அரும் புனல் ஆடினை
தீயை ஓம்பினை செய் அமுது என்றனர்
#16
மங்கையர்க்கு விளக்கு அன்ன மானையும்
செம் கை பற்றினன் தேவரும் துன்பு அற
பங்கயத்து அயன் பண்டு தன் பாதத்தின்
அம் கையின் தரும் கங்கையின் ஆடினான்
#17
கன்னி நீக்க_அரும் கங்கையும் கைதொழாப்
பன்னி நீக்க_அரும் பாதகம் பாருளோர்
என்னின் நீக்குவர் யானும் இன்று என் தந்த
உன்னின் நீக்கினென் உய்ந்தனென் யான் என்றாள்
#18
வெங் கண் நாகக் கரத்தினன் வெண் நிறக்
கங்கை வார் சடைக் கற்றையன் கற்பு உடை
மங்கை காண நின்று ஆடுகின்றான் வகிர்த்
திங்கள் சூடிய செல்வனின் தோன்றினான்
#19
தள்ளும் நீர்ப் பெரும் கங்கைத் தரங்கத்தால்
வள்ளி நுண் இடை மா மலராளொடும்
வெள்ளி வெண் நிறப் பாற்கடல் மேலை_நாள்
பள்ளி நீங்கிய பான்மையின் தோன்றினான்
#20
வஞ்சி நாண இடைக்கு மட நடைக்கு
அஞ்சி அன்னம் ஒதுங்க அடி அன்ன
கஞ்சம் நீரில் ஒளிப்பக் கயல் உக
பஞ்சி மெல் அடிப் பாவையும் ஆடினாள்
#21
தேவதேவன் செறி சடைக் கற்றையுள்
கோவை மாலை எருக்கொடு கொன்றையின்
பூவு நாறலள் பூம் குழல் கற்றையின்
நாவி நாள்_மலர் கங்கையும் நாறினாள்
#22
நுரைக் கொழுந்து எழுந்து ஓங்கி நுடங்கலால்
நரைத்த கூந்தலின் நங்கை மந்தாகினி
உரைத்த சீதை தனிமையை உன்னுவாள்
திரைக் கை நீட்டிச் செவிலியின் ஆட்டினாள்
#23
மங்கை வார் குழல் கற்றை மழைக் குலம்
தங்கு நீரிடைத் தாழ்ந்து குழைப்பன
கங்கை யாற்றொடும் காளிந்தி-தன்னொடும்
பொங்கு நீர்ச் சுழி போவன போன்றதே
#24
சுழிபட்டு ஓங்கிய தூங்கு ஒலி ஆற்று தன்
விழியில் சேல் உகள் வால் நிற வெள்ளத்து
முழுகித் தோன்றுகின்றாள் முதல் பாற்கடல்
அழுவத்து அன்று எழுவாள் எனல் ஆயினாள்
#25
செய்ய தாமரை தாள் பண்டு தீண்டலால்
வெய்ய பாதகம் தீர்த்து விளங்குவாள்
ஐயன் மேனி எலாம் அளைந்தாள் இனி
வையம் மா நரகத்திடை வைகுமோ
#26
துறை நறும் புனல் ஆடிச் சுருதியோர்
உறையுள் எய்தி உணர்வுடையோர் உணர்
இறைவன் கைதொழுது ஏந்து எரி ஓம்பிப் பின்
அறிஞர் காதற்கு அமை விருந்து ஆயினான்
#27
வருந்தித் தான் தர வந்த அமுதையும்
அருந்தும் நீர் என்று அமரரை ஊட்டினான்
விருந்து மெல் அடகு உண்டு விளங்கினான்
திருந்தினார்-வயின் செய்தன தேயுமோ
@8 குகப் படலம்
#1
ஆய காலையின் ஆயிரம் அம்பிக்கு
நாயகன் போர் குகன் எனும் நாமத்தான்
தூய கங்கைத் துறை விடும் தொன்மையான்
காயும் வில்லினன் கல் திரள் தோளினான்
#2
துடியன் நாயினன் தோல் செருப்பு ஆர்த்த பேர்
அடியன் அல் செறிந்து அன்ன நிறத்தினான்
நெடிய தானை நெருங்கலின் நீர் முகில்
இடியினோடு எழுந்தால் அன்ன ஈட்டினான்
#3
கொம்பு துத்தரி கோடு அதிர் பேரிகை
பம்பை பம்பு படையினன் பல்லவத்து
அம்பன் அம்பிக்கு நாதன் அழி கவுள்
தும்பி ஈட்டம் புரை கிளை சுற்றத்தான்
#4
காழம் இட்ட குறங்கினன் கங்கையின்
ஆழம் இட்ட நெடுமையினான் அரை
தாழ விட்ட செம் தோலன் தயங்குறச்
சூழ விட்ட தொடு புலி வாலினான்
#5
பல் தொடுத்து அன்ன பல் சூழ் கவடியன்
கல் தொடுத்து அன்ன போலும் கழலினான்
அல் தொடுத்து அன்ன குஞ்சியன் ஆளியின்
நெல் தொடுத்து நெரிந்த புருவத்தான்
#6
பெண்ணை வன் செறும்பின் பிறங்கிச் செறி
வண்ண வன் மயிர் வார்ந்து உயர் முன் கையன்
கண் அகன் தட மார்பு எனும் கல்லினன்
எண்ணெய் உண்ட இருள் புரை மேனியான்
#7
கச்சொடு ஆர்த்த கறைக் கதிர் வாளினன்
நச்சு அராவின் நடுக்குறு நோக்கினன்
பிச்சராம் அன்ன பேச்சினன் இந்திரன்
வச்சிராயுதம் போலும் மருங்கினான்
#8
சிருங்கிபேரம் எனத் திரைக் கங்கையின்
மருங்கு தோன்றும் நகர் உறை வாழ்க்கையன்
ஒருங்கு தேனொடு மீன் உபகாரத்தன்
இருந்த வள்ளலைக் காண வந்து எய்தினான்
#9
சுற்றம் அப்புறம் நிற்கச் சுடு கணை
வில் துறந்து அரை வீக்கிய வாள் ஒழித்து
அற்றம் நீத்த மனத்தினன் அன்பினன்
நல் தவப் பள்ளி வாயிலை நண்ணினான்
#10
கூவா முன்னம் இளையோன் குறுகி நீ
ஆவான் யார் என அன்பின் இறைஞ்சினான்
தேவா நின் கழல் சேவிக்க வந்தனென்
நாவாய் வேட்டுவன் நாய் அடியேன் என்றான்
#11
நிற்றி ஈண்டு என்று புக்கு நெடியவன் தொழுது தம்பி
கொற்றவ நின்னைக் காணக் குறுகினன் நிமிர்ந்த கூட்டச்
சுற்றமும் தானும் உள்ளம் தூயவன் தாயின் நல்லான்
எற்று நீர் கங்கை நாவாய்க்கு இறை குகன் ஒருவன் என்றான்
#12
அண்ணலும் விரும்பி என்-பால் அழைத்தி நீ அவனை என்ன
பண்ணவன் வருக என்ன பரிவினன் விரைவில் புக்கான்
கண்ணனைக் கண்ணின் நோக்கிக் கனிந்தனன் இருண்ட குஞ்சி
மண் உறப் பணிந்து மேனி வளைத்து வாய் புதைத்து நின்றான்
#13
இருத்தி ஈண்டு என்னலோடும் இருந்திலன் எல்லை நீத்த
அருத்தியன் தேனும் மீனும் அமுதினுக்கு அமைவது ஆகத்
திருத்தினென் கொணர்ந்தேன் என்-கொல் திருவுளம் என்ன வீரன்
விருத்த மா தவரை நோக்கி முறுவலன் விளம்பலுற்றான்
#14
அரிய தாம் உவப்ப உள்ளத்து அன்பினால் அமைந்த காதல்
தெரிதரக் கொணர்ந்த என்றால் அமிழ்தினும் சீர்த்த அன்றே
பரிவினின் தழீஇய என்னின் பவித்திரம் எம்மனோர்க்கும்
உரியன இனிதின் நாமும் உண்டனெம் அன்றோ என்றான்
#15
சிங்க_ஏறு அனைய வீரன் பின்னரும் செப்புவான் யாம்
இங்கு உறைந்து எறி நீர்க் கங்கை ஏறுதும் நாளை யாணர்ப்
பொங்கும் நின் சுற்றத்தோடும் போய் உவந்து இனிது உன் ஊரில்
தங்கி நீ நாவாயோடும் சாருதி விடியல் என்றான்
#16
கார் குலாம் நிறத்தான் கூறக் காதலன் உணர்த்துவான் இப்
பார் குலாம் செல்வ நின்னை இங்ஙனம் பார்த்த கண்ணை
ஈர்கிலாக் கள்வனேன் யான் இன்னலின் இருக்கை நோக்கித்
தீர்கிலேன் ஆனது ஐய செய்குவென் அடிமை என்றான்
#17
கோதை வில் குரிசில் அன்னான் கூறிய கொள்கை கேட்டான்
சீதையை நோக்கித் தம்பி திருமுகம் நோக்கித் தீரா
காதலன் ஆகும் என்று கருணையின் மலர்ந்த கண்ணன்
யாதினும் இனிய நண்ப இருத்தி ஈண்டு எம்மொடு என்றான்
#18
திரு நகர் தீர்ந்த வண்ணம் மானவ தெரித்தி என்ன
பருவரல் தம்பி கூற பரிந்தவன் பையுள் எய்தி
இரு கண் நீர் அருவி சோரக் குகனும் ஆண்டு இருந்தான் என்னே
பெரு நிலக்கிழத்தி நோற்றும் பெற்றிலள் போலும் என்னா
#19
விரி இருள் பகையை ஓட்டித் திசைகளை வென்று மேல் நின்று
ஒரு தனித் திகிரி உந்தி உயர் புகழ் நிறுவி நாளும்
இரு நிலத்து எவர்க்கும் உள்ளத்து இருந்து அருள்புரிந்து வீந்த
செரு வலி வீரன் என்னச் செங்கதிர்ச்செல்வன் சென்றான்
#20
மாலை வாய் நியமம் செய்து மரபுளி இயற்றி வைகல்
வேலை வாய் அமுது அன்னாளும் வீரனும் விரித்த நாணல்
மாலை வாய்ப் பாரின் பாயல் வைகினர் வரி வில் ஏந்திக்
காலை வாய் அளவும் தம்பி இமைப்பிலன் காத்து நின்றான்
#21
தும்பியின் குழாத்தின் சுற்றும் சுற்றத்தன் தொடுத்த வில்லன்
வெம்பி வெந்து அழியாநின்ற நெஞ்சினன் விழித்த கண்ணன்
தம்பி நின்றானை நோக்கித் தலைமகன் தன்மை நோக்கி
அம்பியின் தலைவன் கண்ணீர் அருவி சோர் குன்றின் நின்றான்
#22
துறக்கமே முதல ஆய தூயன யாவையேனும்
மறக்குமா நினை-மின் அம்மா வரம்பு_இல தோற்றும் மாக்கள்
இறக்குமாறு இது என்பான் போல் முன்னை நாள் இறந்தான் பின் நாள்
பிறக்குமாறு இது என்பான் போல் பிறந்தனன் பிறவா வெய்யோன்
#23
செஞ்செவே சேற்றில் தோன்றும் தாமரை தேரில் தோன்றும்
வெம் சுடர்ச் செல்வன் மேனி நோக்கின விரிந்த வேறு ஓர்
அஞ்சன ஞாயிறு அன்ன ஐயனை நோக்கிச் செய்ய
வஞ்சி வாழ் வதனம் என்னும் தாமரை மலர்ந்தது அன்றே
#24
நாள் முதற்கு அமைந்த யாவும் நயந்தனன் இயற்றி நாமத்
தோள் முதற்கு அமைந்த வில்லான் மறையவர் தொடரப் போனான்
ஆள் முதற்கு அமைந்த கேண்மை அன்பனை நோக்கி ஐய
கோள் முதற்கு அமைந்த நாவாய் கொணருதி விரைவின் என்றான்
#25
ஏவிய மொழி கேளா இழி புனல் பொழி கண்ணான்
ஆவியும் உலைகின்றான் அடி இணை பிரிகல்லான்
காவியின் மலர் காயா கடல் மழை_அனையானை
தேவியொடு அடி தாழா சிந்தனை உரைசெய்வான்
#26
பொய் முறை இலரால் எம் புகலிடம் வனமேயால்
கொய் முறை உறு தாராய் குறைவிலெம் வலியேமால்
செய் முறை குற்றேவல் செய்குதும் அடியோமை
இ முறை உறவு என்னா இனிது இரு நெடிது எம் ஊர்
#27
தேன் உள தினை உண்டால் தேவரும் நுகர்தற்கு ஆம்
ஊன் உள துணை நாயேம் உயிர் உள விளையாட
கான் உள புனல் ஆடக் கங்கையும் உளது அன்றோ
நான் உளதனையும் நீ இனிது இரு நட எம்-பால்
#28
தோல் உள துகில் போலும் சுவை உள தொடர் மஞ்சம்
போல் உள பரண் வைகும் புரை உள கடிது ஓடும்
கால் உள சிலை பூணும் கை உள கலி வானின்
மேல் உள பொருளேனும் விரைவொடு கொணர்வேமால்
#29
ஐ_இருபத்தோடு ஐந்து ஆயிரர் உளர் ஆணை
செய்குநர் சிலை வேடர் தேவரின் வலியாரால்
உய்குதும் அடியேம் எம் குடிலிடை ஒரு நாள் நீ
வைகுதி எனின் மேல் ஓர் வாழ்வு இலை பிறிது என்றான்
#30
அண்ணலும் அது கேளா அகம் நிறை அருள் மிக்கான்
வெண் நிற நகைசெய்தான் வீர நின்னுழை யாம் அப்
புண்ணிய நதி ஆடிப் புனிதரை வழிபாடுற்று
எண்ணிய சில நாளில் குறுகுதும் இனிது என்றான்
#31
சிந்தனை உணர்கிற்பான் சென்றனன் விரைவோடும்
தந்தனன் நெடு நாவாய் தாமரை நயனத்தான்
அந்தணர்-தமை எல்லாம் அருளுதிர் விடை என்னா
இந்துவின் நுதலாளோடு இளவலொடு இனிது ஏறா
#32
விடு நனி கடிது என்றான் மெய் உயிர் அனையானும்
முடுகினன் நெடு நாவாய் முரி திரை நெடு நீர்-வாய்
கடிதினின் மட அன்னக் கதி அது செல நின்றார்
இடருற மறையோரும் எரி உறு மெழுகு ஆனார்
#33
பால் உடை மொழியாளும் பகலவன் அனையானும்
சேல் உடை நெடு நல் நீர் சிந்தினர் விளையாடத்
தோல் உடை நிமிர் கோலின் துழவிட எழு நாவாய்
கால் உடை நெடு ஞெண்டின் சென்றது கடிது அம்மா
#34
சாந்து அணி புளினத்தின் தட முலை உயர் கங்கை
காந்து இன மணி மின்ன கடி கமழ் கமலத்தின்
சேந்து ஒளி விரியும் தெண் திரை எனும் நிமிர் கையால்
ஏந்தினள் ஒரு தானே ஏற்றினள் இனிது அப்பால்
#35
அத் திசை உற்று ஐயன் அன்பனை முகம் நோக்கி
சித்திர கூடத்தின் செல் நெறி பகர் என்ன
பத்தியின் உயிர் ஈயும் பரிவினன் அடி தாழா
உத்தம அடி நாயேன் ஓதுவது உளது என்றான்
#36
நெறி இடு நெறி வல்லேன் நேடினென் வழுவாமல்
நறியன கனி காயும் நறவு இவை தர வல்லேன்
உறைவிடம் அமைவிப்பேன் ஒரு நொடி வரை உம்மைப்
பிறிகிலென் உடன் ஏகப் பெறுகுவென் எனின் நாயேன்
#37
தீயன வகை யாவும் திசைதிசை செல நூறி
தூயன உறை கானம் துருவினென் வர வல்லேன்
மேயின பொருள் நாடித் தருகுவென் வினை முற்றும்
ஏயின செய வல்லேன் இருளினும் நெறி செல்வேன்
#38
கல்லுவென் மலையேனும் கவலையின் முதல் யாவும்
செல்லுவென் நெறி தூரம் செறி புனல் தர வல்லேன்
வில் இனம் உளென் ஒன்றும் வெருவலென் ஒருபோதும்
மல்லினும் உயர் தோளாய் மலர் அடி பிரியேனால்
#39
திருவுளம் எனின் மற்று என் சேனையும் உடனே கொண்டு
ஒருவலென் ஒருபோதும் உறைகுவென் உளர் ஆனார்
மருவலர் எனின் முன்னே மாள்குவென் வசை இல்லேன்
பொரு_அரு மணி மார்பா போதுவென் உடன் என்றான்
#40
அன்னவன் உரை கேளா அமலனும் உரை நேர்வான்
என் உயிர் அனையாய் நீ இளவல் உன் இளையான் இ
நல்_நுதலவள் நின் கேள் நளிர் கடல் நிலம் எல்லாம்
உன்னுடையது நான் உன் தொழில் உரிமையின் உள்ளேன்
#41
துன்பு உளது எனின் அன்றோ சுகம் உளது அது அன்றிப்
பின்பு உளது இடை மன்னும் பிரிவு உளது என உன்னேல்
முன்பு உளெம் ஒரு நால்வேம் முடிவு உளது என உன்னா
அன்பு உள இனி நாம் ஓர் ஐவர்கள் உளர் ஆனோம்
#42
படர் உற உளன் உம்பி கான் உறை பகல் எல்லாம்
இடர் உறு பகை யா போய் யான் என உரியாய் நீ
சுடர் உறு வடிவேலாய் சொல் முறை கடவேன் யான்
வட திசை வரும் அ நாள் நின்னுழை வருகின்றேன்
#43
அங்கு உள கிளை காவற்கு அமைதியின் உளன் உம்பி
இங்கு உள கிளை காவற்கு யார் உளர் இசையாய் நீ
உன் கிளை எனது அன்றோ உறு துயர் உறல் ஆமோ
என் கிளை இது கா என் ஏவலின் இனிது என்றான்
#44
பணி மொழி கடவாதான் பருவரல் இகவாதான்
பிணி உடையவன் என்னும் பிரிவினன் விடைகொண்டான்
அணி இழை மயிலோடும் ஐயனும் இளையோனும்
திணி மரம் நிறை கானில் சேணுறு நெறி சென்றார்
@9 வனம் புகு படலம்
#1
பூரியர் புணர் மாதர் பொது மனம் என மன்னும்
ஈரமும் உளது இல் என்று அறிவு_அரும் இளவேனில்
ஆரியன் வரலோடும் அமுது அளவிய சீதக்
கார் உறு குறி மானக் காட்டியது அவண் எங்கும்
#2
வெயில் இளநிலவே போல் விரி கதிர் இடை வீச
பயில் மரம் நிழல் ஈனப் பனி புரை துளி வானப்
புயல் தர இள மென் கால் பூ அளவியது எய்த
மயில் இனம் நடம் ஆடும் வழி இனியன போனார்
#3
மன்றலின் மலி கோதாய் மயில் இயல் மட_மானே
இன் துயில் வதி கோபத்து இனம் விரிவன எங்கும்
கொன்றைகள் சொரி போதின் குப்பைகள் குல மாலைப்
பொன் திணி மணி பொலிவன பல காணாய்
#4
பாண் இள மிஞிறு ஆகப் படு மழை பணை ஆக
நாணின தொகு பீலி கோலின நடம் ஆடல்
பூணியல் நின சாயல் பொலிவது பல கண்ணின்
காணிய எனல் ஆகும் களி மயில் இவை காணாய்
#5
சேந்து ஒளி விரி செவ் வாய்ப் பைம் கிளி செறி கோலக்
காந்தளின் மலர் ஏறிப் பொலிவது கவின் ஆரும்
மாந்தளிர் நறு மேனி மங்கை நின் மணி முன்கை
ஏந்தின எனல் ஆகும் இயல்பின இவை காணாய்
#6
நெய் ஞிறை நெடு வேலின் நிறம் உறு திறம் முற்றிக்
கை ஞிறை நிமிர் கண்ணாய் கருதின இனம் என்றே
மெய் ஞிறை விரி சாயல் கண்டு நின் விழி கண்டு
மஞ்ஞையும் மட மானும் வருவன பல காணாய்
#7
பூ அலர் குரவோடும் புடை தவழ் பிடவு ஈனும்
மா அலர் சொரி சூழல் துயில் எழு மயில் ஒன்றின்
தூவியின் மணம் நாறத் துணை பிரி பெடை தான் அச்
சேவலொடு உற ஊடித் திரிவதன் இயல் காணாய்
#8
அருந்ததி அனையாளே அமுதினும் இனியாளே
செருந்தியின் மலர் தாங்கும் செறி இதழ் வன சோகம்
பொருந்தின களி வண்டின் பொலிவன பொன் ஊதும்
இருந்தையின் எழு நீ ஒத்து எழுவன இயல் காணாய்
#9
ஏந்து இள முலையாளே எழுத_அரு எழிலாளே
காந்தளின் முகை கண்ணின் கண்டு ஒரு களி மஞ்ஞை
பாந்தள் இது என உன்னிக் கவ்வியபடி பாரா
தேம் தளவுகள் செய்யும் சிறு குறுநகை காணாய்
#10
குன்று உறை வய மாவின் குருளையும் இருள் சிந்திப்
பின்றினது எனல் ஆகும் பிடி தரு சிறு மாவும்
அன்றில பிரிவு ஒல்லா அண்டர்-தம் மனை ஆவின்
கன்றொடு விளையாடும் களியன பல காணாய்
#11
அகில் புனை குழல் மாதே அணி இழை எனல் ஆகும்
நகு மலர் நிறை மாலைக் கொம்புகள் நதி-தோறும்
துகில் புரை திரை நீரில் தோய்வன துறை ஆடும்
முகிழ் இள முலையாரின் மூழ்குவ பல காணாய்
#12
முற்றுறு முகை கிண்டி முரல்கில சில தும்பி
வில் திரு நுதல் மாதே அம் மலர் விரி கோங்கின்
சுற்றுறு மலர் ஏறித் துயில்வன சுடர் மின்னும்
பொன் தகடு உறு நீலம் புரைவன பல காணாய்
#13
கூடிய நறை வாயில் கொண்டன விழி கொள்ளா
மூடிய களி மன்ன முடுகின நெறி காணா
ஆடிய சிறை மா வண்டு அந்தரின் இசை முன்னம்
பாடிய பெடை கண்ணா வருவன பல காணாய்
#14
கன்னியர் அணி கோலம் கற்று அறிகுநர் என்ன
பொன் அணி நிற வேங்கை கோங்குகள் புது மென் பூ
அன்ன மென் நடையாய் நின் அளக நல் நுதல் அப்பும்
சின்ன மென் மலர் மானச் சிந்துவ பல காணாய்
#15
மணம் கிளர் மலர் வாச மாருதம் வர வீச
கணம் கிளர்தரு சுண்ணம் கல் இடையன கானத்து
அணங்கினும் இனியாய் உன் அணி வட முலை முன்றில்
சுணங்கு இனம் அவை மானத் துறுவன அவை காணாய்
#16
அடி இணை பொறைகல்லா என்று-கொல் அதர் எங்கும்
இடையிடை மலர் சிந்தும் இன மரம் இவை காணாய்
கொடியினொடு இள வாசக் கொம்புகள் குயிலே உன்
துடி புரை இடை நாணித் துவள்வன அவை காணாய்
#17
வாள் புரை விழியாய் உன் மலர் அடி அணி மானத்
தாள் புரை தளிர் வைகும் தகை ஞிமிறு இவை காணாய்
கோள் புரை இருள் வாசக் குழல் புரை மழை காணாய்
தோள் புரை இள வேயின் தொகுதிகள் அவை காணாய்
#18
பூ நனை சினை துன்றிப் புள் இடையிடை பம்பி
நால் நிற நளிர் வல்லிக் கொடி நவை இல பல்கி
மான் இனம் மயில் மாலை குயில் இனம் வதி கானம்
தீ நிகர் தொழில் ஆடைத் திரை பொருவன பாராய்
#19
என்று நல் மடவாளோடு இனிதினின் விளையாடி
பொன் திணி திரள் தோளான் போயினன் நெறி போதும்
சென்றது குட-பால் அத் திரு மலை இது அன்றோ
என்றனன் வினை வென்றோர் மேவிடம் எனலோடும்
#20
அருத்தியின் அகம் விம்மும் அன்பினன் நெடு நாளில்
திருத்திய வினை முற்றிற்று இன்று எனல் தெரிகின்றான்
பரத்துவன் எனும் நாமப் பர முனி பவ நோயின்
மருத்துவன் அனையானை வரவு எதிர்கொள வந்தான்
#21
குடையினன் நிமிர் கோலன் குண்டிகையினன் மூரிச்
சடையினன் உரி மானின் சருமன் நல் மர நாரின்
உடையினன் மயிர் நாலும் உருவினன் நெறி பேணும்
நடையினன் மறை நாலும் நடம் நவில்தரு நாவான்
#22
செந் தழல் புரி செல்வன் திசைமுக_முனி செவ்வே
தந்தன உயிர் எல்லாம் தன் உயிர் என நல்கும்
அந்தணன் உலகு ஏழும் அமை எனின் அமரேசன்
உந்தியின் உதவாமே உதவிடு தொழில் வல்லான்
#23
அ முனி வரலோடும் அழகனும் அலர் தூவி
மும்முறை தொழுதான் அ முதல்வனும் எதிர் புல்லி
இ முறை உருவோ நான் காண்குவது என உள்ளம்
விம்மினன் இழி கண்ணீர் விழி வழி உக நின்றான்
#24
அகல் இடம் நெடிது ஆளும் அமைதியை அது தீரப்
புகலிடம் எமது ஆகும் புரையிடை இது நாளில்
தகவு இல தவ வேடம் தழுவினை வருவான் என்
இகல் அடு சிலை வீர இளையவனொடும் என்றான்
#25
உற்று உள பொருள் எல்லாம் உணர்வுற உரைசெய்தான்
நல் தவ முனி அந்தோ விதி தரு நவை என்பான்
இற்றது செயல் உண்டோ இனி என இடர் கொண்டான்
பெற்றிலள் தவம் அந்தோ பெரு நில_மகள் என்றான்
#26
துப்பு உறழ் துவர் வாயின் தூய் மொழி மயிலோடும்
அப்புறு கடல் ஞாலம் ஆளுதி கடிது என்னா
ஒப்பு_அறும் மகன் உன்னை உயர் வனம் உற ஏகு என்று
எப் பரிசு உயிர் உய்ந்தான் என் துணையவன் என்றான்
#27
அல்லலும் உள இன்பம் அணுகலும் உள அன்றோ
நல்லவும் உள செய்யும் நவைகளும் உள அந்தோ
இல்லை ஒர் பயன் நான் இன்று இடர் உறும் இதின் என்னா
புல்லினன் உடனே கொண்டு இனிது உறை புரை புக்கான்
#28
புக்கு உறைவிடம் நல்கி பூசனை முறை பேணித்
தக்கன கனி காயும் தந்து உரைதரும் அன்பால்
தொக்க நல் முறை கூறித் தூயவன் உயிர் போலும்
மக்களின் அருள் உற்றான் மைந்தரும் மகிழ்வுற்றார்
#29
வைகினர் இனிது அன்னார் அவ்வழி மறையோனும்
உய்குவெம் இவனோடு யாம் உடன் உறைதலின் என்பான்
செய்தனன் இனிது எல்லாம் செல்வனை முகம் முன்னா
கொய் குல மலர் மார்ப கூறுவது உளது என்றான்
#30
நிறையும் நீர் மலர் நெடும் கனி கிழங்கு காய் கிடந்து ஓர்
குறையும் அற்றன தூய்மையால் குலவியது எம்மோடு
உறையும் இவ் வழி உயர் தவம் ஒருங்குடன் முயல்வார்க்கு
இறையும் ஈது அலாது இனியது ஓர் இடம் அரிது இன்னும்
#31
கங்கையாளொடு கரியவள் நா_மகள் கலந்த
சங்கம் ஆதலின் பிரியலென் தாமரை வடித்த
செம் கண் நாயக அயனுக்கும் அரும்பெறல் தீர்த்தம்
எங்கள் போலியர் தரத்தது அன்று இருத்திர் ஈண்டு என்றான்
#32
பூண்ட மா தவன் அ மொழி விரும்பினன் புகல
நீண்டது அன்று இது நிறை புனல் நாட்டுக்கு நெடு நாள்
மாண்ட சிந்தைய இவ் வழி வைகுவென் என்றால்
ஈண்ட யாவரும் நெருங்குவர் என்றனன் இராமன்
#33
ஆவது உள்ளதே ஐய கேள் ஐ_இரண்டு அமைந்த
காவதப் பொழிற்கு அப்புறம் கழிந்த பின் காண்டி
மேவு காதலின் வைகுதிர் விண்ணினும் இனிதால்
தேவர் கைதொழும் சித்திரகூடம் என்று உளதே
#34
என்று காதலின் ஏயினன் அடி தொழுது ஏத்தி
கொன்றை வேய்ங்குழல் கோவலர் முல்லை அம் குடுமி
சென்று செங்கதிர்ச்செல்வனும் நடு உற சிறு மான்
கன்று நீர் நுகர் காளிந்தி எனும் நதி கண்டார்
#35
ஆறு கண்டனர் அகம் மகிழ்ந்து இறைஞ்சினர் அறிந்து
நீறு தோய் மணி மேனியர் நெடும் புனல் படிந்தார்
ஊறும் மென் கனி கிழங்கினோடு உண்டு நீர் உண்டார்
ஏறி ஏகுவது எங்ஙனம் என்றலும் இளையோன்
#36
வாங்கு வேய்ங்கழை துணித்தனன் மாணையின் கொடியால்
ஓங்கு தெப்பம் ஒன்று அமைத்து அதன் உம்பரின் உலம் போல்
வீங்கு தோள் அண்ணல் தேவியோடு இனிது வீற்றிருப்ப
நீங்கினான் அந்த நெடு நதி இரு கையால் நீந்தி
#37
ஆலை பாய் வயல் அயோத்தியர் ஆண்தகைக்கு இளையான்
மாலை மால் வரைத் தோள் எனும் மந்தரம் திரிய
காலை வேலையைக் கடந்தது கழிந்த நீர் கடிதின்
மேலை வேலையில் பாய்ந்தது மீண்ட நீர் வெள்ளம்
#38
அனையர் அப் புனல் ஏறினர் அக்கரை அணைந்தார்
புனையும் வற்கலை பொற்பினர் நெடு நெறி போனார்
சினையும் மூலமும் முகடும் வெந்து இரு நிலம் தீய்ந்து
நினையும் நெஞ்சமும் சுடுவது ஓர் நெடும் சுரம் நேர்ந்தார்
#39
நீங்கல் ஆற்றலள் சனகி என்று அண்ணலும் நினைந்தான்
ஓங்கு வெய்யவன் உடுபதி எனக் கதிர் உகுத்தான்
தாங்கு வெம் கடத்து உலவைகள் தழை கொண்டு தழைத்த
பாங்கு வெம் கனல் பங்கய வனங்களாய்ப் பரந்த
#40
வறுத்து வித்திய அனையன வல் அயில் பரல்கள்
பறித்து வீழ்த்திய மலர் எனக் குளிர்ந்தன பசைந்த
இறுத்து எறிந்தன வல்லிகள் இளம் தளிர் ஈன்ற
கறுத்த வாள் அரவு எயிற்றினூடு அமுது உகக் களித்த
#41
குழுமி மேகங்கள் குமுறின குளிர் துளி கொணர்ந்த
முழு வில் வேடரும் முனிவரின் முனிகிலர் உயிரை
தழுவி நின்றன பசி இல பகை இல தணிந்த
உழுவையின் முலை மான் இளம் கன்றுகள் உண்ட
#42
கல் அளைக் கிடந்து அகடு வெந்து அயர்கின்ற கதழ் பாம்பு
அல்லல் உற்றில அலை புனல் கிடந்தன அனைய
வல்லை உற்ற வேய் புற்றொடும் எரிவன மணி வாழ்
புல் எயிற்று இளம் கன்னியர் தோள் எனப் பொலிந்த
#43
படர்ந்து எழுந்த புல் பசு நிறக் கம்பளம் பரப்பிக்
கிடந்த போன்றன கேகயம் தோகைகள் கிளர
மடந்தைமார் என நாடகம் வயின்-தொறும் நவின்ற
தொடர்ந்து பாணரின் தூங்கு_இசை முரன்றன தும்பி
#44
காலம் இன்றியும் கனிந்தன கனி நெடும் கந்தம்
மூலம் இன்றியும் முகிழ்த்தன நிலன் உற முழுதும்
கோல மங்கையர் ஒத்தன கொம்பர்கள் இன்பச்
சீலம் அன்றியும் செய் தவம் வேறும் ஒன்று உளதோ
#45
எயினர் தங்கு இடம் இருடிகள் இருப்பிடம் ஏய்ந்த
வயின்வயின்-தொறும் மணி நிறக் கோபங்கள் மலர்ந்த
பயில் மரம்-தொறும் பரிந்தன பேடையைப் பயிலும்
குயில் இரங்கின குருந்து இனம் அரும்பின முருந்தம்
#46
பந்த ஞாட்புறு பாசறை பொருள்-வயின் பருவம்
தந்த கேள்வரை உயிர் உறத் தழுவினர் பிரிந்த
கந்த ஓதியர் சிந்தையின் கொதிப்பது அக் கழலோர்
வந்த போது அவர் மனம் எனக் குளிர்ந்தது அவ் வனமே
#47
வெளிறு நீங்கிய பாலையை மெல்லெனப் போனார்
குளிறும் வான் மதிக் குழவி தன் சூல் வயிற்று ஒளிப்பப்
பிளிறு மேகத்தைப் பிடி எனப் பெரும் பனைத் தடக் கைக்
களிறு நீட்டும் அச் சித்திரகூடத்தைக் கண்டார்
@10 சித்திரகூடப் படலம்
#1
நினையும் தேவர்க்கும் நமக்கும் ஒத்து ஒரு நெறி நின்ற
அனகன் அம் கணன் ஆயிரம் பெயர் உடை அமலன்
சனகன் மா மட_மயிற்கு அந்தச் சந்தனம் செறிந்த
கனக மால் வரை இயல்பு எலாம் தெரிவுறக் காட்டும்
#2
வாளும் வேலும் விட்டு அளாயின அனைய கண் மயிலே
தாளின் ஏலமும் தமாலமும் தொடர்தரு சாரல்
நீள மாலைய துயில்வன நீர் உண்ட கமம் சூல்
காள மேகமும் நாகமும் தெரிகில காணாய்
#3
குருதி வாள் எனச் செவ் அரி பரந்த கண் குயிலே
மருவி மால் வரை உம்பரில் குதிக்கின்ற வருடை
சுருதி போல் தெளி மரகதக் கொழும் சுடர் சுற்ற
பருதி_வானவன் பசும் பரி புரைவன பாராய்
#4
வடம் கொள் பூண் முலை மட_மயிலே மழை மதமா
அடங்கு பேழ் வயிற்று அரவு உரி அமை-தொறும் தொடக்கித்
தடங்கள்-தோறும் நின்று ஆடுவ தண்டலை அயோத்தி
நுடங்கு மாளிகைத் துகில் கொடி நிகர்ப்பன நோக்காய்
#5
உவரி-வாய் அன்றி பாற்கடல் உதவிய அமுதே
துவரின் நீள் மணி தடம்-தொறும் இடம்-தொறும் துவன்றி
கவரி பால் நிற வால் புடை பெயர்வன கடிதின்
பவள மால் வரை அருவியை பொருவிய பாராய்
#6
சலம் தலைக்கொண்ட சீயத்தால் தனி மதக் கத மா
உலந்து வீழ்தலின் சிந்தின உதிரத்தில் மடவார்
புலந்த காலை அற்று உக்கன குங்குமப் பொதியில்
கலந்த முத்து என வேழ முத்து இமைப்பன காணாய்
#7
நீண்ட மால் வரை மதி உற நெடு முடி நிவந்த
தூண்டு மா மணிச் சுடர் சடைக் கற்றையின் தோன்ற
மாண்ட வால் நிற அருவி அம் மழ விடைப்பாகன்
காண் தகும் சடைக் கங்கையை நிகர்ப்பன காணாய்
#8
தொட்ட வார் சுனை சுடர் ஒளி மணியொடும் தூவி
விட்ட சென்றன விடா மத மழை_அன வேழம்
வட்ட வேங்கையின் மலரொடும் ததைந்தன வயங்கும்
பட்டம் நெற்றியில் சுற்றிய போல்வன பாராய்
#9
இழைந்த நூல் இணை மணிக் குடம் சுமக்கின்றது என்னக்
குழைந்த நுண் இடைக் குவி இள வன முலைக் கொம்பே
தழைந்த சந்தனச் சோலை தன் செலவினைத் தடுப்ப
நுழைந்து போகின்ற மதி இறால் ஒப்ப நோக்காய்
#10
உருகு காதலின் தழை கொண்டு மழலை வண்டு ஓச்சி
முருகு நாறு செந்தேனினை முழை-நின்றும் வாங்கிப்
பெருகு சூல் இளம் பிடிக்கு ஒரு பிறை மருப்பு யானை
பருக வாயினில் கையின்-நின்று அளிப்பது பாராய்
#11
அளிக்கும் நாயகன் மாயை புக்கு அடங்கினன் எனினும்
களிப்பு_இல் இந்தியத்து யோகியைக் கரக்கிலன் அது போல்
ஒளித்து நின்றுளர் ஆயினும் உருத் தெரிகின்ற
பளிக்கு அறைச் சில பரிமுக மாக்களைப் பாராய்
#12
ஆடுகின்ற மா மயிலினும் அழகிய குயிலே
கூடுகின்றிலர் கொடிச்சியர் தம் மனம் கொதிப்ப
ஊடுகின்றனர் கொழுநரை உருகினர் நோக்கப்
பாடுகின்றன கின்னர மிதுனங்கள் பாராய்
#13
வில்லி வாங்கிய சிலை எனப் பொலி நுதல் விளக்கே
வல்லிதாம் கழை தாக்கலின் வழிந்து இழி பிரசம்
கொல்லி வாங்கிய குன்றவர் கொடி நெடும் கவலை
கல்லி வாங்கிய குழிகளை நிறைப்பன காணாய்
#14
ஒருவு_இல் பெண்மை என்று உரைக்கின்ற உடலினுக்கு உயிரே
மருவு காதலின் இனிது உடன் ஆடிய மந்தி
அருவி நீர் கொடு வீசத் தான் அப்புறத்து ஏறி
கருவி மா மழை உதிர்ப்பது ஓர் கடுவனைக் காணாய்
#15
வீறு பஞ்சினில் அமிழ்த நெய் மாட்டிய விளக்கே
சீறு வெம் கதிர் செறிந்தன பேர்கல திரியா
மாறு_இல் மண்டிலம் நிரம்பிய மாணிக்க மணிக் கல்
பாறை மற்று ஒரு பரிதியின் பொலிவது பாராய்
#16
சீலம் இன்னது என்று அருந்ததிக்கு அருளிய திருவே
நீல வண்டு இனம் படிந்து எழ வளைந்து உடன் நிமிர்வ
கோல வேங்கையின் கொம்பர்கள் பொன் மலர் தூவிக்
காலினில் தொழுது எழுவன நிகர்ப்பன காணாய்
#17
வில் கொள் வாள் நுதல் விளங்கு இழை இளம் தளிர்க் கொழுந்தே
எல் கொள் மால் வரை உம்பரின் இரும் புனம் காக்கும்
கொல் கொள் வேல்_கணார் குரீஇ இனத்து எறி குருவிந்தக்
கற்கள் வானிடை மீன் என வீழ்வன காணாய்
#18
வரி கொள் ஒண் சிலை வயவர்-தம் கணிச்சியின் மறித்த
பரிய கால் அகில் சுட நிமிர் பசும் புகைப் படலம்
அரிய வேதியர் ஆகுதிப் புகையொடும் அளவிக்
கரிய மால் வரைக் கொழுந்து எனப் படர்வன காணாய்
#19
நானம் நாள்_மலர் நறை அகில் நாவி தேன் நாறும்
சோனை வார் குழல் சுமை பொறாது இறும் இடைத் தோகாய்
வான யாற்று மீன் மலர்ந்தன எனப் புனல் வறந்த
கான யாறுகள் கதிர் மணி இமைப்பன காணாய்
#20
மஞ்சு அளாவிய மாணிக்கப் பாறையில் மறைவ
செஞ்செவே நெடு மரகதப் பாறையில் தெரிவ
விஞ்சை நாடியர் கொழுநரோடு ஊடிய விமலப்
பஞ்சு அளாவிய சீறடிச் சுவடிகள் பாராய்
#21
சுழித்த தண் புனல் சுழி புரை உந்தி அம் தோகாய்
கொழித்த மா மணி அருவியொடு இழிவன கோலம்
அழித்து மேவிய அரம்பையர் அறல் புரை கூந்தல்
கழித்து நீக்கிய கற்பக நறு மலர் காணாய்
#22
அறை கழல் சிலைக் குன்றவர் அகன் புனம் காவல்
பறை எடுத்து ஒரு கடுவன் நின்று அடிப்பது பாராய்
பிறையை எட்டினள் பிடித்து இதற்கு இது பிழை என்னா
கறை துடைக்குறு பேதை ஓர் கொடிச்சியைக் காணாய்
#23
அடுத்த பல் பகல் அன்பரின் பிரிந்தவர் என்பது
எடுத்து நம்-தமக்கு இயம்புவ எனக் கரிந்து இருண்ட
தொடுத்த மாதவிச் சூழலில் சூர்_அர_மகளிர்
படுத்து வைகிய பல்லவ சயனங்கள் பாராய்
#24
நினைந்த போதினும் அமிழ்து ஒக்கும் நேர்_இழை நிறை தேன்
வனைந்த வேங்கையில் கோங்கினில் வயின்-தொறும் தொடுத்துக்
குனிந்த ஊசலில் கொடிச்சியர் எடுத்த இன் குறிஞ்சி
கனிந்த பாடல் கேட்டு அசுணமா வருவன காணாய்
#25
இலவும் இந்திரகோபமும் புரை இதழ் இனியோய்
அலவும் நுண் துளி அருவி நீர் அரம்பையர் ஆட
கலவை சாந்து செம் குங்குமம் கற்பகம் கொடுத்த
பலவும் தோய்தலின் பரிமளம் கமழ்வன பாராய்
#26
செம்பொனால் செய்து குலிகம் இட்டு எழுதிய செப்பு ஓர்
கொம்பு தாங்கியது எனப் பொலி வன முலைக் கொடியே
அம் பொன் மால் வரை அலர் கதிர் உச்சி சென்று அணுகப்
பைம்பொன் மா முடி மிலைச்சியது ஒப்பது பாராய்
#27
மடந்தைமார்களுக்கு ஒரு திலதமே மணி நிறத் திணி கல்
தொடர்ந்த பாறையில் வேய் இனம் சொரி கதிர் முத்தம்
இடம்-தொறும் கிடந்து இமைப்பன எக்கு இளம் செக்கர்
படர்ந்த வானிடை தாரகை நிகர்ப்பன பாராய்
#28
குழுவு நுண் தொளைவேயினும் குறி நரம்பு எறிவுற்று
எழுவு தண் தமிழ் யாழினும் இனிய சொல் கிளியே
முழுவதும் மலர் விரிந்த தாள் முருக்கு இடை மிடைந்த
பழுவம் வெம் கனல் கதுவியது ஒப்பன பாராய்
#29
வளைகள் காந்தளில் பெய்தன அனைய கை மயிலே
தொளை கொள் தாழ் தடக் கை நெடும் துருத்தியில் தூக்கி
அளவு_இல் மூப்பினர் அரும் தவர்க்கு அருவி நீர் கொணர்ந்து
களப மால் கரி குண்டிகைச் சொரிவன காணாய்
#30
வடுவின் மா வகிர் இவை எனப் பொலிந்த கண் மயிலே
இடுகு கண்ணினர் இடர் உறு மூப்பினர் ஏக
நெடுகு கூனல் வால் நீட்டின உருகுறு நெஞ்சக்
கடுவன் மா தவர்க்கு அரு நெறி காட்டுவ காணாய்
#31
பாந்தள் தேர் இவை பழிபடப் பரந்த பேர் அல்குல்
ஏந்து நூல் அணி மார்பினர் ஆகுதிக்கு இயையக்
கூந்தல் மென் மயில் குறுகின நெடும் சிறை கோலி
காந்து குண்டத்தில் அடங்கு எரி எழுப்புவ காணாய்
#32
அலம்பு வார் குழலாய் மயில் பெண் அரும் கலமே
நலம் பெய் வேதியர் மார்பினுக்கு இயைவுற நாடி
சிலம்பி பஞ்சினில் சிக்கு_அறத் தெரிந்த நூல் தே மாம்
பலம் பெய் மந்திகள் உடன் வந்து கொடுப்பன பாராய்
#33
தெரிவைமார்க்கு ஒரு கட்டளை எனச் செய்த திருவே
பெரிய மாக்கனி பலாக் கனி பிறங்கிய வாழை
அரிய மாக் கனி கடுவன்கள் அன்புகொண்டு அளிப்ப
கரிய மா கிழங்கு அகழ்ந்தன கொணர்வன காணாய்
#34
ஐவனக் குரல் ஏனலின் கதிர் இறுங்கு அவரை
மெய் வணக்கு உறு வேய் இனம் ஈன்ற மெல் அரிசி
பொய் வணக்கிய மா தவர் புரை-தொறும் புகுந்து உன்
கை வணத்த வாய்க் கிள்ளை தந்து அளிப்பன காணாய்
#35
இடி கொள் வேழத்தை எயிற்றொடும் எடுத்து உடன் விழுங்கும்
கடிய மாசுணம் கற்று அறிந்தவர் என அடங்கிச்
சடை கொள் சென்னியர் தாழ்விலர் தாம் மிதித்து ஏறப்
படிகளாம் எனத் தாழ்வரை கிடப்பன பாராய்
#36
அசும்பு பாய் வரை அரும் தவம் முடித்தவர் துணைக் கண்
தசும்பு வேய்ந்தவர் ஒத்தவர் தமக்கு விண் தருவான்
விசும்பு தூர்ப்பன ஆம் என வெயில் உக விளங்கும்
பசும்பொன் மானங்கள் போவன வருவன பாராய்
#37
இனைய யாவையும் ஏந்து_இழைக்கு இயம்பினன் காட்டி
அனைய மால் வரை அரும் தவர் எதிர்வர வணங்கி
வினையின் நீங்கிய வேதியர் விருந்தினன் ஆனான்
மனையில் மெய் எனும் மா தவம் புரிந்தவன் மைந்தன்
#38
மா இயல் உதயம் ஆம் துளப வானவன்
மேவிய பகை இருள் அவுணர் வீந்து உக
கா இயல் குட வரை கால நேமி மேல்
ஏவிய திகிரி போல் இரவி ஏகினான்
#39
சக்கரத்தானவன் உடலில் தாக்குற
எக்கிய சோரியின் பரந்தது எங்கணும்
செக்கர் அத் தீயவன் வாயின் தீர்ந்து வேறு
உக்க வான் தனி எயிறு ஒத்தது இந்துவே
#40
ஆனனம் மகளிருக்கு அளித்த தாமரைப்
பூ நனி முகிழ்த்தன புலரி போன பின்
மீன் என விளங்கிய வெள்ளி ஆம்பல் வீ
வான் எனும் மணித் தடம் மலர்ந்த எங்குமே
#41
மந்தியும் கடுவனும் மரங்கள் நோக்கின
தந்தியும் பிடிகளும் தடங்கள் நோக்கின
நிந்தை_இல் சகுந்தங்கள் நீளம் நோக்கின
அந்தியை நோக்கினான் அறிவை நோக்கினான்
#42
மொய்யுறு நறு மலர் முகிழ்த்தவாம் சில
மை_அறு நறு மலர் மலர்ந்தவாம் சில
ஐயனோடு இளவற்கும் அமுது_அனாளுக்கும்
கைகளும் கண்களும் கமலம் போன்றவே
#43
மாலை வந்து அகன்ற பின் மருங்கிலாளொடும்
வேலை வந்து உறைவிடம் மேயது ஆம் எனக்
கோலை வந்து உமிழ் சிலைத் தம்பி கோலிய
சாலை வந்து எய்தினான் தவத்தின் எய்தினான்
#44
நெடும் கழைக் குறும் துணி நிறுவி மேல் நிரைத்து
ஒடுங்கல்_இல் நெடு முகடு ஒழுக்கி ஊழுற
இடுங்கல்_இல் கை விசித்து ஏற்றி எங்கணும்
முடங்கல்_இல் வரிச்சு மேல் விரிச்சு மூட்டியே
#45
தேக்கு அடைப் படலையின் செறிவு செய்து பின்
பூக் கிளர் நாணலின் புல்லு வேய்ந்து கீழ்த்
தூக்கிய வேய்களின் சுவரும் சுற்றுறப்
போக்கி மண் எறிந்து அவை புனலின் தீற்றியே
#46
வேறு இடம் இயற்றினன் மிதிலை நாடிக்கும்
கூறின நெறிமுறை குயிற்றிக் குங்குமச்
சேறு கொண்டு அழகுறத் திருத்தித் திண் சுவர்
ஆறு இடு மணியொடு தரளம் அப்பியே
#47
மயிலுடைப் பீலியின் விதானம் மேல் வகுத்து
அயிலுடைச் சுரிகையால் அருகு தூக்கு அறுத்து
எயில் இளம் கழைகளால் இயற்றி ஆறு இடு
செயலுடைப் புது மலர் பொற்பச் சிந்தியே
#48
இன்னணம் இளையவன் இழைத்த சாலையில்
பொன் நிறத் திருவொடும் குடிபுக்கான் அரோ
நல் நெடும் திசைமுகன் அகத்தும் நம்மனோர்க்கு
உன்ன_அரும் உயிருளும் ஒக்க வைகுவான்
#49
மாயம் நீங்கிய சிந்தனை மா மறை
தூய பாற்கடல் வைகுந்தம் சொல்லல் ஆம்
ஆய சாலை அரும்பெறல் அன்பினன்
நேய நெஞ்சின் விரும்பி நிரம்பினான்
#50
மேவு கானம் மிதிலையர் கோன் மகள்
பூவின் மெல்லிய பாதமும் போந்தன
தா_இல் எம்பி கை சாலை சமைத்தன
யாவை யாதும் இலார்க்கு இயையாதவே
#51
என்று சிந்தித்து இளையவன் பார்த்து இரு
குன்று போலக் குவவிய தோளினாய்
என்று கற்றனை நீ இது போல் என்றான்
துன்று தாமரைக் கண் பனி சோர்கின்றான்
#52
அடரும் செல்வம் அளித்தவன் ஆணையால்
படரும் நல் அறம் பாலித்து இரவியின்
சுடரும் மெய்ப் புகழ் சூடினென் என்பது என்
இடர் உனக்கு இழைத்தேன் நெடு நாள் என்றான்
#53
அந்த வாய்மொழி ஐயன் இயம்பலும்
நொந்த சிந்தை இளையவன் நோக்கினான்
எந்தை காண்டி இடரினுக்கு அங்குரம்
முந்து வந்து முளைத்தது அன்றோ என்றான்
#54
ஆக செய்தக்கது இல்லை அறத்தின்-நின்று
ஏகல் என்பது அரிது என்றும் எண்ணினான்
ஓகை கொண்டவன் உள் இடர் நோக்கினான்
சோக பங்கம் துடைப்பு அரிதால் எனா
#55
பின்னும் தம்பியை நோக்கிப் பெரியவன்
மன்னும் செல்வத்திற்கு உண்டு வரம்பு இதற்கு
என்ன கேடு உண்டு இவ் எல்லை_இல் இன்பத்தை
உன்னு மேல் வரும் ஊதியத்தோடு என்றான்
#56
தேற்றித் தம்பியைத் தேவரும் கைதொழ
நோற்று இருந்தனன் நோன்_சிலையோன் இப்பால்
ஆற்றல் மா தவன் ஆணையின் போனவர்
கூற்றின் உற்றது கூறலுற்றாம் அரோ
@11 பள்ளிபடைப் படலம்
#1
தூதர் வந்தனர் உந்தை சொல்லோடு எனக்
காதல் முந்திக் களிக்கின்ற சிந்தையான்
போதுக ஈங்கு எனப் புக்கு அவர் கைதொழத்
தீதிலன்-கொல் திரு முடியோன் என்றான்
#2
வலியன் என்று அவர் கூற மகிழ்ந்தனன்
இலை கொள் பூண் இளங்கோன் எம்பிரானொடும்
உலைவு_இல் செல்வத்தனோ என உண்டு எனத்
தலையின் ஏந்தினன் தாழ் தடக் கைகளே
#3
மற்றும் சுற்றத்துளார்க்கும் வரன்முறை
உற்ற தன்மை வினாவி உவந்த பின்
இற்றது ஆகும் எழுது_அரு மேனியாய்
கொற்றவன் தன் திருமுகம் கொள்க என்றார்
#4
என்று கூறலும் ஏத்தி இறைஞ்சினான்
பொன் திணிந்த பொரு_இல் தடக் கையால்
நின்று வாங்கி உருகிய நெஞ்சினான்
துன்று நாள்_மலர்ச் சென்னியில் சூடினான்
#5
சூடிச் சந்தனம் தோய்த்து உடை சுற்று மண்
மூடு தோட்டின் முடங்கல் நிமிர்ந்தனன்
ஈடு நோக்கி வந்து எய்திய தூதர்க்குக்
கோடி மேலும் நிதியம் கொடுத்தனன்
#6
வாள் நிலா நகை தோன்ற மயிர் புறம்
பூண வான் உயர் காதலின் பொங்கினான்
தாள் நிலாம் மலர் தூவினன் தம்முனைக்
காணலாம் எனும் ஆசை கடாவவே
#7
எழுக சேனை என்று ஏவினன் எய்தினன்
தொழுது கேகயர் கோமகன் சொல்லொடும்
தழுவு தேரிடைத் தம்பியொடு ஏறினான்
பொழுதும் நாளும் குறித்திலன் போயினான்
#8
யானை சுற்றின தேர் இரைத்து ஈண்டின
மான வேந்தர் குழுவினர் வாளுடைத்
தானை சூழ்ந்தன சங்கம் முரன்றன
மீன வேலையின் விம்மின பேரியே
#9
கொடி நெருங்கின தொங்கல் குழீஇயின
வடி நெடும் கண் மடந்தையர் ஊர் மடப்
பிடி துவன்றின பூண் ஒளி பேர்ந்தன
இடி துவன்றின மின் என எங்குமே
#10
பண்டி எங்கும் பரந்தன பல்_இயம்
கொண்டு இயம்பின கொண்டலின் கோதையில்
வண்டு இயம்பின வாளியின் வாவுறும்
செண்டு இயங்கு பரியும் செறிந்தவே
#11
துளைமுகத்தின் சுருதி விளம்பின
உளை முகத்தின உம்பரின் ஏகிட
விளை முகத்தன வேலையின் மீது செல்
வளை முகத்தன வாசியும் வந்தவே
#12
வில்லின் வேதியர் வாள் செறி வித்தகர்
மல்லின் வல்லர் சுரிகையின் வல்லவர்
கொல்லும் வேல் குந்தம் கற்று உயர் கொற்றவர்
தொல்லை வாரணப் பாகரும் சுற்றினார்
#13
எறி பகட்டு இனம் ஆடுகள் ஏற்றை மா
குறி கொள் கோழி சிவல் குறும்பூழ் நெடும்
பொறி மயிர்க் கவுதாரிகள் போற்றுறு
நெறியின் மாக்களும் முந்தி நெருங்கினார்
#14
நிறைந்த மாந்தர் நெருங்கினர் நெஞ்சினில்
பறந்து போதும்-கொல் என்று பதைக்கின்றார்
பிறந்து தேவர் உணர்ந்து பெயர்ந்து முன்
உறைந்து வான் உறுவார்களை ஒக்கின்றார்
#15
ஊன் அளைந்த உடற்கு உயிர் ஆம் எனத்
தான் அளைந்து தழுவின தண்ணுமை
தேன் அளைந்து செவி உற வார்த்து என
வான் அளைந்தது மாகதர் பாடலே
#16
ஊறு கொண்ட முரசு உமிழ் ஓதையை
வீறு கொண்டன வேதியர் வாழ்த்து ஒலி
ஏறு கொண்டு எழும் மல்லர் இடிப்பினை
மாறு கொண்டன வந்திகர் வாழ்த்து அரோ
#17
ஆறும் கானும் அகல் மலையும் கடந்து
ஏறி ஏழ் பகல் நீந்திப் பின் எந்திரத்து
ஊறு பாகு மடை உடைத்து ஒண் முளை
நாறு பாய் வயல் கோசலம் நண்ணினான்
#18
ஏர் துறந்த வயல் இள மைந்தர் தோள்
தார் துறந்தன தண் தலை நெல்லினும்
நீர் துறந்தன தாமரை நீத்து எனப்
பார் துறந்தனள் பங்கயச் செல்வியே
#19
பிதிர்ந்து சாறு பெரும் துறை மண்டிடச்
சிதர்ந்து சிந்தி அழிந்தன தேம் கனி
முதிர்ந்து கொய்யுநர் இன்மையின் மூக்கு அவிழ்ந்து
உதிர்ந்து உலர்ந்தன ஒண் மலர் ஈட்டமே
#20
ஏய்ந்த காலம் இது இதற்கு ஆம் என
ஆய்ந்து மள்ளர் அரிகுநர் இன்மையால்
பாய்ந்த சூதப் பசு நறும் தேறலால்
சாய்ந்து ஒசிந்து முளைத்தன சாலியே
#21
எள் குலா மலர் ஏசிய நாசியர்
புள் குலா வயல் பூசல் கடைசியர்
கட்கிலார் களை காதல் கொழுநரோடு
உள் கலாம் உடையாரின் உயங்கினார்
#22
ஓதுகின்றில கிள்ளையும் ஓதியர்
தூது சென்றில வந்தில தோழர்-பால்
மோதுகின்றில பேரி முழா விழா
போதுகின்றில பொன் அணி வீதியே
#23
பாடல் நீத்தன வண்டொடு பாண் குழாம்
ஆடல் நீத்த அரங்கொடு அகன் புனல்
சூடல் நீத்தன சூடிகை சூளிகை
மாடம் நீத்தன மங்கல வள்ளையே
#24
நகை இழந்தன வாள் முகம் நாறு அகில்
புகை இழந்தன மாளிகை பொங்கு அழல்
சிகை இழந்தன தீவிகை தே மலர்த்
தொகை இழந்தன தோகையர் ஓதியே
#25
அலர்ந்த பைம் கூழ் அகன் குளக் கீழன
மலர்ந்த வாயில் புனல் வழங்காமையால்
உலர்ந்த வன்கண் உலோபர் கடைத்தலைப்
புலர்ந்து நிற்கும் பரிசிலர் போலவே
#26
நாவின் நீத்து_அரு நல் வளம் துன்னிய
பூவின் நீத்து என நாடு பொலிவு ஒரீஇ
தேவி நீத்து அரும் சேண் நெறி சென்றிட
ஆவி நீத்த உடல் எனல் ஆயதே
#27
என்ற நாட்டினை நோக்கி இடர் உழந்து
ஒன்றும் உற்றது உணர்ந்திலன் உன்னுவான்
சென்று கேட்பது ஓர் தீங்கு உளது ஆம் எனா
நின்றுநின்று நெடிது உயிர்த்தான் அரோ
#28
மீண்டும் ஏகி அ மெய் எனும் நல் அணி
பூண்ட வேந்தன் திருமகன் புந்திதான்
தூண்டு தேரினும் முந்துறத் தூண்டுவான்
நீண்ட வாயில் நெடு நகர் நோக்கினான்
#29
அண்டம் முற்றும் திரிந்து அயர்ந்தாய் அமுது
உண்டு போதி என்று ஒண்கதிர்ச்செல்வனை
விண் தொடர்ந்து விலக்குவ போல்வன
கண்டிலன் கொடியின் நெடும் கானமே
#30
ஈட்டு நல் புகழ்க்கு ஈட்டிய யாவையும்
வேட்ட வேட்டவர் கொண்-மின் விரைந்து எனக்
கோட்டி மாக்களைக் கூவுவ போல்வன
கேட்டிலன் முரசின் கிளர் ஓதையே
#31
கள்ளை மா கவர் கண்ணியன் கண்டிலன்
பிள்ளை மா களிறும் பிடி ஈட்டமும்
வள்ளைமாக்கள் நிதியும் வயிரியர்
கொள்ளைமாக்களின் கொண்டனர் ஏகவே
#32
காவல் மன்னவன் கான்முளை கண்டிலன்
ஆவும் மாவும் அழி கவுள் வேழமும்
மேவு காதல் நிதியின் வெறுக்கையும்
பூவின் வானவர் கொண்டனர் போகவே
#33
சூழ் அமைந்த சுரும்பும் நரம்பும் தம்
ஏழ் அமைந்த இசை இசையாமையால்
மாழை உண்கண் மயில் எனும் சாயலார்
கூழை போன்ற பொருநர் குழாங்களே
#34
தேரும் மாவும் களிறும் சிவிகையும்
ஊரும் பண்டியும் ஊருநர் இன்மையால்
யாரும் இன்றி எழில் இல வீதிகள்
வாரி இன்றிய வாலுக ஆற்றினே
#35
அன்ன தன்மை அக_நகர் நோக்கினான்
பின்னை அப் பெரியோர்-தம் பெருந்தகை
மன்னன் வைகும் வள_நகர் போலும் ஈது
என்ன தன்மை இளையவனே என்றான்
#36
வேற்று அடங்கலர் ஊர் என மெல்லிதால்
சூல் தடம் கரும் கார் புரை தோற்றத்தான்
சேல் தடம் கண் திருவொடும் நீங்கிய
பால் தடம் கடல் ஒத்தது பார் என்றான்
#37
குரு மணிப் பூண் அரசிளம்_கோளரி
இரு கை கூப்பி இறைஞ்சினன் எய்தியது
ஒரு வகைத்து அன்று உறு துயர் ஊழி வாழ்
திரு நகர்த் திரு தீர்ந்தனள் ஆம் என்றான்
#38
அனைய வேலையில் அக் கடைத் தோரண
மனையின் நீள் நெடு மங்கல வீதிகள்
நினையும்-மாத்திரத்து ஏகிய நேமியான்
தனையனும் தந்தை சார்விடம் மேவினான்
#39
விருப்பின் எய்தினன் வெம் திறல் வேந்தனை
இருப்பு நல் இடம் எங்கணும் கண்டிலன்
அருப்பம் அன்று இது என்று ஐயுறவு எய்தினான்
பொருப்பு நாண உயர்ந்த புயத்தினான்
#40
ஆய காலையில் ஐயனைத் தந்த அத்
தூய தாயைத் தொழல் உறுவான்-தனைக்
கூயள் அன்னை குறுகுதிர் ஈண்டு என
வேய் கொள் தோளி ஒருத்தி விளம்பினாள்
#41
வந்து தாயை அடியில் வணங்கலும்
சிந்தை ஆரத் தழுவினள் தீதிலர்
எந்தை என்னையர் எங்கையர் என்றனள்
அந்தம்_இல் குணத்தானும் அது ஆம் என்றான்
#42
மூண்டு எழு காதலால் முளரித் தாள் தொழ
வேண்டினென் எய்தினென் உள்ளம் விம்முமால்
ஆண்தகை நெடு முடி அரசர்_கோமகன்
யாண்டையான் பணித்திர் என்று இரு கை கூப்பினான்
#43
ஆனவன் உரைசெய அழிவு_இல் சிந்தையாள்
தானவர் வலி தவ நிமிர்ந்த தானை அத்
தேன் அமர் தெரியலான் தேவர் கைதொழ
வானகம் எய்தினான் வருந்தல் நீ என்றாள்
#44
எறிந்தன கடிய சொல் செவியுள் எய்தலும்
நெறிந்து அலர் குஞ்சியான் நெடிது வீழ்ந்தனன்
அறிந்திலன் உயிர்த்திலன் அசனி ஏற்றினால்
மறிந்து உயர் மராமரம் மண் உற்று என்னவே
#45
வாய் ஒளி மழுங்கத் தன் மலர்ந்த தாமரை
ஆய் மலர் நயனங்கள் அருவி சோர்தரத்
தீ எரி செவியில் வைத்தனைய தீய சொல்
நீ அலது உரைசெய நினைப்பார்களோ என்றான்
#46
எழுந்தனன் ஏங்கினன் இரங்கிப் பின்னரும்
விழுந்தனன் விம்மினன் வெய்து_உயிர்த்தனன்
அழிந்தனன் அரற்றினன் அரற்றி இன்னன
மொழிந்தனன் பின்னரும் முருகன் செவ்வியான்
#47
அறம்-தனை வேரறுத்து அருளைக் கொன்றனை
சிறந்த நின் தண் அளித் திருவைத் தேசு அழித்து
இறந்தனை ஆம் எனின் இறைவ நீதியை
மறந்தனை உனக்கு இதின் மாசு மேல் உண்டோ
#48
சினக் குறும்பு எறிந்து எழு காமத் தீ அவித்து
இனக் குறும்பு யாவையும் எற்றி யாவர்க்கும்
மனக்கு உறு நெறி செலும் வள்ளியோய் மறந்து
உனக்கு உறு நெறி செலல் ஒழுக்கின்பாலதோ
#49
முதலவன் முதலிய முந்தையோர் பழம்
கதையையும் புதுக்கிய தலைவன் கண் உடை
நுதலவன் சிலை விலின் நோன்மை நூறிய
புதல்வனை எங்ஙனம் பிரிந்து போயினாய்
#50
செவ் வழி உருட்டிய திகிரி மன்னவ
எவ் வழி மருங்கினும் இரவலாளர்தாம்
இவ் வழி உலகின் இல் இன்மை நண்பினோர்
அவ்வழி உலகினும் உளர்-கொலோ ஐயா
#51
பல் பகல் நிழற்றும் நின் கவிகை பாய் நிழல்
நிற்பன பல் உயிர் உணங்க நீ நெடும்
கற்பக நறு நிழல் காதலித்தியோ
மல் பக மலர்ந்த தோள் மன்னர்_மன்னனே
#52
இம்பர் நின்று ஏகினை இருக்கும் சார்பு இழந்து
உம்பர் வந்து உன் கழல் ஒதுங்கினார்களோ
சம்பரன் அனைய அத் தானைத் தானவர்
அம்பரத்து இன்னமும் உளர்-கொலாம் ஐயா
#53
இயம் கெழு தானையர் இறுத்த மாத் திறை
உயங்கல்_இல் மறையவர்க்கு உதவி உம்பரின்
அயம் கெழு வேள்வியோடு அமரர்க்கு ஆக்கிய
வயங்கு எரி வளர்க்கலை வைக வல்லையோ
#54
ஏழ் உயர் மத களிற்று இறைவ ஏகினை
வாழிய கரியவன் வறியன் கை எனப்
பாழி அம் புயத்து நின் பணியின் நீங்கலா
ஆழியை இனி அவற்கு அளிக்க எண்ணியோ
#55
பற்று இலை தவத்தினின் பயந்த மைந்தற்கு
முற்று உலகு அளித்து அது முறையின் எய்திய
கொற்றவன் முடி மணக் கோலம் காணவும்
பெற்றிலை போலும் நின் பெரிய கண்களால்
#56
ஆற்றலன் இன்னன பன்னி ஆவலித்து
ஊற்று உறு கண்ணினன் உருகுவான்-தனைத்
தேற்றினன் ஒரு வகை சிறிது தேறிய
கூற்று உறழ் வரி சிலைக் குரிசில் கூறுவான்
#57
எந்தையும் யாயும் எம்பிரானும் எம் முனும்
அந்தம்_இல் பெரும் குணத்து இராமன் ஆதலால்
வந்தனை அவன் கழல் வைத்த போது அலால்
சிந்தை வெம் கொடும் துயர் தீர்கலாது என்றான்
#58
அவ் உரை கேட்டலும் அசனி_ஏறு என
வெவ் உரை வல்லவள் மீட்டும் கூறுவாள்
தெவ் அடு சிலையினாய் தேவி தம்பி என்று
இவ் இருவோரொடும் கானத்தான் என்றான்
#59
வனத்தினன் என்று அவள் இசைத்த மாற்றத்தை
நினைத்தனன் இருந்தனன் நெருப்பு உண்டான் என
வினைத் திறம் யாது இனி விளைப்பது இன்னமும்
எனைத்து உள கேட்பன துன்பம் யான் என்றான்
#60
ஏங்கினன் விம்மலோடு இருந்த ஏந்தல் அப்
பூங் கழல் காலவன் வனத்துப் போயது
தீங்கு இழைத்த அதனினோ தெய்வம் சீறியோ
ஓங்கிய விதியினோ யாதினோ எனா
#61
தீயன இராமனே செய்யுமேல் அவை
தாய் செயல் அல்லவோ தலத்துளோர்க்கு எலாம்
போயது தாதை விண் புக்க பின்னரோ
ஆயதன் முன்னரோ அருளுவீர் என்றான்
#62
குருக்களை இகழ்தலின் அன்று கூறிய
செருக்கினால் அன்று ஒரு தெய்வத்தாலும் அன்று
அருக்கனே அனைய அவ் அரசர் கோமகன்
இருக்கவே வனத்து அவன் ஏகினான் என்றாள்
#63
குற்றம் ஒன்று இல்லையேல் கொதித்து வேறு உளோர்
செற்றதும் இல்லையேல் தெய்வத்தால் அன்றேல்
பெற்றவன் இருக்கவே பிள்ளை கான் புக
உற்றது என் தெரிதர உரைசெய்வீர் என்றான்
#64
வாக்கினால் வரம் தரக் கொண்டு மைந்தனைப்
போக்கினேன் வனத்திடை போக்கிப் பார் உனக்கு
ஆக்கினேன் அவன் அது பொறுக்கலாமையால்
நீக்கினான் தன் உயிர் நேமி வேந்து என்றான்
#65
சூடின மலர்க் கரம் சொல்லின் முன் செவி
கூடின புருவங்கள் குனித்துக் கூத்து நின்று
ஆடின உயிர்ப்பினோடு அழல் கொழுந்துகள்
ஓடின உமிழ்ந்தன உதிரம் கண்களே
#66
துடித்தன கபோலங்கள் சுற்றும் தீச் சுடர்
பொடித்தன மயிர்த் தொளை புகையும் போர்த்தது
மடித்தது வாய் நெடு மழைக் கை மண் பக
அடித்தன ஒன்றொடு ஒன்று அசனி அஞ்சவே
#67
பாதங்கள் பெயர்-தொறும் பாரும் மேருவும்
போதம் கொள் நெடும் தனிப் பொரு_இல் கூம்பொடு
மாதங்கம் வரு கலம் மறுகிக் கால் பொர
ஓதம் கொள் கடலின்-நின்று உலைவ போன்றவே
#68
அஞ்சினர் வானவர் அவுணர் அச்சத்தால்
துஞ்சினர் எனைப் பலர் சொரி மதத் தொளை
எஞ்சின திசைக்கரி இரவி மீண்டனன்
வெம் சினக் கூற்றும் தன் விழி புதைத்தே
#69
கொடிய வெம் கோபத்தால் கொதித்த கோளரி
கடியவள் தாய் எனக் கருதுகின்றிலன்
நெடியவன் முனியும் என்று அஞ்சி நின்றனன்
இடி உரும் அனைய வெம் மொழி இயம்புவான்
#70
மாண்டனன் எந்தை என் தம்முன் மா தவம்
பூண்டனன் நின் கொடும் புணர்ப்பினால் என்றால்
கீண்டிலென் வாய் அது கேட்டும் நின்ற யான்
ஆண்டனெனே அன்றோ அரசை ஆசையால்
#71
நீ இனம் இருந்தனை யானும் நின்றனென்
ஏ எனும் மாத்திரத்து எற்றுகிற்றிலென்
ஆயவன் முனியும் என்று அஞ்சினேன் அலால்
தாய் எனும் பெயர் எனைத் தடுக்கற்பாலதோ
#72
மாளவும் உளன் ஒரு மன்னன் வன் சொலால்
மீளவும் உளன் ஒரு வீரன் மேய பார்
ஆளவும் உளன் ஒரு பரதன் ஆயினால்
கோள் இல அறநெறி குறை உண்டாகுமோ
#73
சுழியுடைத் தாய் சொலும் கொடிய சூழ்ச்சியால்
வழியுடைத்தாய் வரும் மரபை மாய்த்து ஒரு
பழி உடைத்து ஆக்கினன் பரதன் பண்டு எனும்
மொழி உடைத்து ஆக்கலின் முறைமை வேறு உண்டோ
#74
நோயீர் அல்லீர் நும் கணவன்-தன் உயிர் உண்டீர்
பேயீரே நீர் இன்னம் இருக்கப் பெறுவீரே
மாயீர் மாயா வன் பழி தந்தீர் முலை தந்தீர்
தாயீரே நீர் இன்னும் எனக்கு என் தருவீரே
#75
ஒன்றும் பொய்யா மன்னனை வாயால் உயிரோடும்
தின்றும் தீரா வன் பழி கொண்டீர் திரு எய்தி
என்றும் நீரே வாழ உவந்தீர் அவன் ஏகக்
கன்றும் தாயும் போல்வன கண்டும் கழியீரே
#76
இறந்தான் தந்தை ஈந்த வரத்துக்கு இழிவு என்னா
அறந்தான் ஈது என்று அன்னவன் மைந்தன் அரசு எல்லாம்
துறந்தான் தாயின் சூழ்ச்சியின் ஞாலம் அவனோடும்
பிறந்தான் ஆண்டான் என்னும் இது என்னால் பெறலாமே
#77
மாளும் என்றே தந்தையை உன்னான் வசை கொண்டாள்
கோளும் என்னாலே எனல் கொண்டான் அது அன்றேல்
மீளும் அன்றே என்னையும் மெய்யே உலகு எல்லாம்
ஆளும் என்றே போயினன் அன்றோ அரசு ஆள்வான்
#78
ஓதாநின்ற தொல் குல மன்னன் உணர்வு அப்பால்
யாதானும் தான் ஆக எனக்கே பணி செய்வான்
தீதா நின்ற சிந்தனை செய்தான் அவன் என்ன
போதாதோ என் தாய் இவள் கொண்ட பொருள் அம்மா
#79
உய்யாநின்றேன் இன்னமும் என்முன் உடன் வந்தான்
கை ஆர் கல்லைப் புல் அடகு உண்ண கலம் ஏந்தி
வெய்யோன் நான் இன் சாலியின் வெண் சோறு அமுது என்ன
நெய்யோடு உண்ண நின்றது நின்றார் நினையாரோ
#80
வில் ஆர் தோளான் மேவினன் வெம் கானகம் என்ன
நல்லான் அன்றே துஞ்சினன் நஞ்சே அனையாளைக்
கொல்லேன் மாயேன் வன் பழியாலே குறைவற்றேன்
அல்லேனோ யான் அன்புடையார் போல் அழுகின்றேன்
#81
பாரோர் கொள்ளார் யான் உயிர் பேணிப் பழி பூணேன்
தீராது ஒன்றால் நின் பழி ஊரில் திரு நில்லாள்
ஆரோடு எண்ணிற்று ஆர் உரைதந்தார் அறம் எல்லாம்
வேரோடும் கேடு ஆக முடித்து என் விளைவித்தாய்
#82
கொன்றேன் நான் என் தந்தையை மற்று உன் கொலை வாயால்
ஒன்றோ கானத்து அண்ணலே உய்த்தேன் உலகு ஆள்வான்
நின்றேன் என்றால் நின் பிழை உண்டோ பழி உண்டோ
என்றேனும்தான் என் பழி மாயும் இடம் உண்டோ
#83
கண்ணாலே என் செய் வினை இன்னும் சில காண்பார்
மண்ணோர் பாராது எள்ளுவர் வாளா பழி பூண்டாய்
உண்ணா நஞ்சம் கொல்கிலது என்னும் உரை உண்டு என்று
எண்ணாநின்றேன் அன்றி இரேன் என் உயிரோடே
#84
ஏன்று உன் பாவிக் கும்பி வயிற்றினிடை வைகித்
தோன்றும் தீராப் பாதகம் அற்று என் துயர் தீரச்
சான்றும் தானே நல் அறம் ஆகத் தகை ஞாலம்
மூன்றும் காண மா தவம் யானே முயல்கின்றேன்
#85
சிறந்தார் சொல்லும் நல் உரை சொன்னேன் செயல் எல்லாம்
மறந்தாய் செய்தாய் ஆகுதி மாயா உயிர்-தன்னைத்
துறந்தாய் ஆகின் தூயையும் ஆதி உலகத்தே
பிறந்தாய் ஆதி ஈது அலது இல்லை பிறிது என்றான்
#86
இன்னணம் இனையன இயம்பி யானும் இப்
பன்ன_அரும் கொடு மனப் பாவி பாடு இரேன்
துன்ன_அரும் துயர் கெடத் தூய கோசலை
பொன் அடி தொழுவென் என்று எழுந்து போயினான்
#87
ஆண்தகை கோசலை அருகர் எய்தினன்
மீண்டும் மண் கிழிதர வீழ்ந்து கேழ் கிளர்
காண் தகு தடக் கையின் கமலச் சீறடி
பூண்டனன் கிடந்தனன் புலம்பினான் அரோ
#88
எந்தை எவ் உலகு உளான் எம் முன் யாண்டையான்
வந்தது தமியென் இ மறுக்கம் காணவோ
சிந்தையின் உறு துயர் தீர்த்திரால் எனும்
அந்தரத்து அமரரும் அழுது சோரவே
#89
அடித்தலம் கண்டிலென் யான் என் ஐயனைப்
படித்தலம் காவலன் பெயரற்பாலனோ
பிடித்திலிர் போலும் நீர் பிழைத்திரால் எனும்
பொடித் தலம் தோள் உறப் புரண்டு சோர்கின்றான்
#90
கொடியவர் யாவரும் குலங்கள் வேரற
நொடிகுவென் யான் அது நுவல்வது எங்ஙனம்
கடியவள் வயிற்றினில் பிறந்த கள்வனேன்
முடிகுவென் அரும் துயர் முடிய என்னுமால்
#91
இரதம் ஒன்று ஊர்ந்து பார் இருளை நீக்கும் அவ்
வரதனில் ஒளி பெற மலர்ந்த தொல் குலம்
பரதன் என்று ஒரு பழி படைத்தது என்னுமால்
மரகத மலை என வளர்ந்த தோளினான்
#92
வாள் தொடு தானையான் வானில் வைகிட
காடு ஒரு தலைமகன் எய்தக் கண் இலா
நாடு ஒரு துயரிடை நைவதே எனும்
தாள் தொடு தடக் கை அத் தருமமே அனான்
#93
புலம்புறு குரிசில்-தன் புலர்வு நோக்கினாள்
குலம் பொறை கற்பு இவை சுமந்த கோசலை
நிலம் பொறை ஆற்றலன் நெஞ்சம் தூய்து எனா
சலம் பிறிது உற மனம் தளர்ந்து கூறுவாள்
#94
மை_அறு மனத்து ஒரு மாசுளான்_அலன்
செய்யனே என்பது தேறும் சிந்தையாள்
கைகயர் கோமகள் இழைத்த கைதவம்
ஐய நீ அறிந்திலை போலுமால் என்றாள்
#95
தாள் உறு குரிசில் அத் தாய் சொல் கேட்டலும்
கோள் உறு மடங்கலின் குமுறி விம்முவான்
நாள் உறு நல் அறம் நடுங்க நாவினால்
சூளுறு கட்டுரை சொல்லல் மேயினான்
#96
அறம் கெட முயன்றவன் அருள்_இல் நெஞ்சினன்
பிறன் கடை நின்றவன் பிறரைச் சீறினோன்
மறம் கொடு மன் உயிர் கொன்று வாழ்ந்தவன்
துறந்த மா தவர்க்கு அரும் துயரம் சூழ்ந்துளோன்
#97
குரவரை மகளிரை வாளின் கொன்றுளோன்
புரவலன்-தன்னொடும் அமரில் புக்கு உடன்
விரவலர் வெரிந்நிடை விழிக்க மீண்டுளோன்
இரவலர் அரு நிதி எறிந்து வௌவினோன்
#98
தழைத்த தண் துளவினோன் தலைவன் அல்லன் என்று
அழைத்தவன் அற நெறி அந்தணாளரில்
பிழைத்தவன் பிழைப்பு_இலா மறையைப் பேணலாது
இழைத்த வன் பொய் எனும் இழுதை நெஞ்சினோன்
#99
தாய் பசி உழந்து உயிர் தளரத் தான் தனி
பாய் பெரும் பாழ் வயிறு அளிக்கும் பாவியும்
நாயகன் பட நடந்தவனும் நண்ணும் அத்
தீ எரி நரகத்துக் கடிது செல்க யான்
#100
தாளினில் அடைந்தவர்-தம்மைத் தற்கு ஒரு
கோள் உற அஞ்சினன் கொடுத்த பேதையும்
நாளினும் அறம் மறந்தவனும் நண்ணுறும்
மீள_அரு நரகிடை கடிது வீழ்க யான்
#101
அந்தணர் உறையுளை அனலி ஊட்டினோன்
மைந்தரைக் கொன்றுளோன் வழக்கில் பொய்த்துளோன்
நிந்தனை தேவரை நிகழ்த்தினோன் புகும்
வெம் துயர் நரகத்து வீழ்க யானுமே
#102
கன்று உயிர் ஓய்ந்து உகக் கறந்து பால் உண்டோன்
மன்றிடைப் பிறர் பொருள் மறைத்து வவ்வினோன்
நன்றியை மறந்திடும் நயம்_இல் நாவினோன்
என்று இவர் உறு நரகு என்னது ஆகவே
#103
ஆறு தன்னுடன் வரும் அம் சொல் மாதரை
ஊறு கொண்டு அலைக்கத் தன் உயிர் கொண்டு ஓடினோன்
சோறு தன் அயலுளோர் பசிக்கத் துய்த்துளோன்
ஏறும் அக் கதியிடை யானும் ஏறவே
#104
எஃகு எறி செருமுகத்து ஏற்ற தெவ்வருக்கு
ஒஃகினன் உயிர் வளர்த்து உண்ணும் ஆசையான்
அஃகல்_இல் அற நெறி ஆக்கியோன் பொருள்
வெஃகிய மன்னன் வீழ் நரகின் வீழ்க யான்
#105
அழிவு_அரும் அரசியல் எய்தி ஆகும் என்று
இழி வரு சிறு தொழில் இயற்றி ஆண்டு தன்
வழி வரு தருமத்தை மறந்து மற்று ஒரு
பழி வரு நெறி படர் பதகன் ஆக யான்
#106
தஞ்சு என ஒதுங்கினர் தனது பார் உளோர்
எஞ்சல்_இல் மறுக்கினோடு இரியல்போயுற
வஞ்சி சென்று இறுத்தவன் வாகை மீக்கொள
அஞ்சின மன்னவன் ஆக யானுமே
#107
கன்னியை அழிசெயக் கருதினோன் குரு
பன்னியை நோக்கினோன் பருகினோன் நறை
பொன் இகழ் களவினில் பொருந்தினோன் எனும்
இன்னவர் உறு கதி என்னது ஆகவே
#108
ஊண் அல உண் வழி நாயின் உண்டவன்
ஆண் அலன் பெண் அலன் ஆர்-கொலாம் என
நாணலன் நரகம் உண்டு என்னும் நல் உரை
பேணலன் பிறர் பழி பிதற்றி ஆக யான்
#109
மறு_இல் தொல் குலங்களை மாசு இட்டு ஏற்றினோன்
சிறுவிலை எளியவர் உணவு சிந்தினோன்
நறியன அயலவர் நாவில் நீர் வர
உறு பதம் நுங்கிய ஒருவன் ஆக யான்
#110
வில்லினும் வாளினும் விரிந்த ஆண்_தொழில்
புல்லிடை உகுத்தனென் பொய்ம்மை யாக்கையைச்
சில் பகல் ஓம்புவான் செறுநர் சீறிய
இல்லிடை இடு பதம் ஏற்க என் கையால்
#111
ஏற்றவற்கு ஒரு பொருள் உள்ளது இன்று என்று
மாற்றலன் உதவலன் வரம்பு_இல் பல் பகல்
ஆற்றினன் உழற்றும் ஓர் ஆதன் எய்தும் அக்
கூற்று உறு நரகின் ஓர் கூறு கொள்க யான்
#112
பிணிக்கு உறு முடை உடல் பேணிப் பேணலார்த்
துணிக் குறு வயிர வாள் தடக் கை தூக்கிப் போய்
மணிக் குறுநகை இள மங்கைமார்கள் முன்
தணிக்குறு பகைஞரைத் தாழ்க என் தலை
#113
கரும்பு அலர் செந்நெல் அம் கழனிக் கான நாடு
அரும் பகை கவர்ந்து உண ஆவி பேணினென்
இரும்பு அலர் நெடும் தளை ஈர்த்த காலொடும்
விரும்பலர் முகத்து எதிர் விழித்து நிற்க யான்
#114
தூய வாசகம் சொன்ன தோன்றலைத்
தீய கானகம் திருவின் நீங்கி முன்
போயினான் வரக் கண்ட பொம்மலாள்
ஆய காதலால் அழுது புல்லினாள்
#115
முன்னை நும் குல முதலுளோர்கள்தாம்
நின்னை யாவரே நிகர்க்கும் நீர்மையார்
மன்னர்_மன்னவா என்று வாழ்த்தினாள்
உன்னஉன்ன நைந்து உருகி விம்முவாள்
#116
மறு_இல் மைந்தனே வள்ளல் உந்தையார்
இறுதி எய்தி நாள் ஏழ்_இரண்டின
சிறுவர் செய் கடன் செய்து தீர்த்தி என்று
உறுவல் மேயினாள் உரையின் மேயினாள்
#117
அன்னை ஏவினாள் அடி இறைஞ்சினான்
பொன்னின் வார் சடைப் புனிதனோடும் போய்
தன்னை நல்கி அத் தருமம் நல்கினான்
பன்னு தொல் அறப் படிவம் நோக்கினான்
#118
மண்ணின் மேல் விழுந்து அலறி மாழ்குவான்
அண்ணல் ஆழியான் அவனி காவலான்
எண்ணெய் உண்ட பொன் எழில் கொள் மேனியைக்
கண்ண நீரினால் கழுவி ஆட்டினான்
#119
பற்றி அவ்வயின் பரிவின் வாங்கினார்
சுற்றும் நான்மறைத் துறை செய் கேள்வியார்
கொற்ற மண்கணை குமுற மன்னனை
மற்று ஓர் பொன்னின் மா மானம் ஏற்றினர்
#120
கரைசெய் வேலை போல் நகரி கை எடுத்து
உரைசெய் பூசலிட்டு உயிர் துளங்குற
அரச வேலை சூழ்ந்து அழுது கைதொழ
புரசை யானையில் கொண்டு போயினார்
#121
சங்கு பேரியும் தழுவு சின்னமும்
எங்கும் எங்கும் நின்று இரங்கி ஏங்குவ
மங்குல் தோய் நகர் மகளிராம் எனப்
பொங்கு கண் புடைத்து அழுவ போன்றவே
#122
மாவும் யானையும் வயங்கு தேர்களும்
கோவும் நான்மறைக் குழுவும் முன் செலத்
தேவிமாரொடும் கொண்டு தெண் திரை
தாவு வார் புனல் சரயு எய்தினார்
#123
எய்தி நூலுளோர் மொழிந்த யாவையும்
செய்து தீக் கலம் திருத்திச் செல்வனை
வெய்தின் ஏற்றினார் வீர நுந்தை-பால்
பொய்_இல் மாக் கடன் கழித்தி போந்து என்றார்
#124
என்னும் வேலையில் எழுந்த வீரனை
அன்னை தீமையால் அரசன் நின்னையும்
துன்னு துன்பத்தால் துறந்து போயினான்
முன்னரே என முனிவன் கூறினான்
#125
துறந்து போயினான் நுந்தை தோன்றல் நீ
பிறந்து பேரறம் பிழைத்தது என்ற போது
இறந்து போயினான் இருந்தது ஆண்டு அது
மறந்து வேறு ஒரு மைந்தன் ஆம்-கொலாம்
#126
இடிக்-கண் வாள் அரா இடைவது ஆம் எனா
படிக்-கண் வீழ்ந்து அகம் பதைக்கும் நெஞ்சினான்
தடுக்கல் ஆகலாத் துயரம் தன் உளே
துடிக்க விம்மி நின்று அழுது சொல்லுவான்
#127
உரைசெய் மன்னர் மற்று என்னில் யாவரே
இரவி-தன் குலத்து எந்தை முந்தையோர்
பிரதப் பூசனைக்கு உரிய பேறு இலேன்
அரசு செய்யவோ ஆவது ஆயினேன்
#128
பூவில் நான்முகன் புதல்வன் ஆதி ஆம்
தா_இல் மன்னர் தம் தரும நீதியால்
தேவர் ஆயினார் சிறுவன் ஆகியே
ஆவ நான் பிறந்து அவத்தன் ஆனவா
#129
துன்னு தாள் வளம் சுமந்த தாழையில்
பன்னு வான் குலைப் பதடி ஆயினேன்
என்னை என்னையே ஈன்று காத்த என்
அன்னையார் எனக்கு அழகு செய்தவா
#130
என்று கூறி நொந்து இடரின் மூழ்கும் அத்
துன்று தாரவற்கு இளைய தோன்றலால்
அன்று நேர் கடன் அமைவது ஆக்கினான்
நின்று நான்மறை நெறி செய் நீர்மையான்
#131
இழையும் ஆரமும் இடையும் மின்னிட
குழையும் மா மலர்க் கொம்பு_அனார்கள்தாம்
தழை_இல் முண்டகம் தழுவிக் கானிடை
முழையில் மஞ்ஞை போல் எரியில் மூழ்கினார்
#132
அங்கி நீரினும் குளிர அம்புயத்
திங்கள் வாள் முகம் திரு விளங்குற
சங்கை தீர்ந்து தம் கணவர் பின் செலும்
நங்கைமார் புகும் உலகம் நண்ணினார்
#133
அனைய மா தவன் அரசர்_கோமகற்கு
இனைய தன்மையால் இயைவ செய்த பின்
மனையின் எய்தினான் மரபின் வாழ்வினை
வினையின் எய்தும் ஓர் பிணியின் வேலையான்
#134
ஐந்தும்_ஐந்தும் நாள் ஊழி ஆம் என
மைந்தன் வெம் துயர்க் கடலின் வைகினான்
தந்தை தன்-வயின் தருமம் யாவையும்
முந்து நூலுளோர் முறையின் முற்றினான்
@12 ஆறு செல் படலம்
#1
வரன்முறை தெரிந்து உணர் மறையின் மா தவத்து
அரு மறை முனிவனும் ஆண்டையான் என
விரைவின் வந்து ஈண்டினர் விரகின் எய்தினர்
பரதனை வணங்கினர் பரியும் நெஞ்சினர்
#2
மந்திரக் கிழவரும் நகர மாந்தரும்
தந்திரத் தலைவரும் தரணி பாலரும்
அந்தர முனிவரோடு அறிஞர் யாவரும்
சுந்தரக் குரிசிலை மரபின் சுற்றினார்
#3
சுற்றினர் இருந்துழி சுமந்திரப் பெயர்ப்
பொன் தடம் தேர்_வலான் புலமை உள்ளத்தான்
கொற்றவர்க்கு உறு பொருள் குறித்த கொள்கையான்
முற்று உணர் முனிவனை முகத்து நோக்கினான்
#4
நோக்கினால் சுமந்திரன் நுவலலுற்றதை
வாக்கினால் அன்றியே உணர்ந்த மா தவன்
காக்குதி உலகம் நின் கடன் அது ஆம் எனக்
கோக்குமரனுக்கு அது தெரியக் கூறுவான்
#5
வேதியர் அரும் தவர் விருத்தர் வேந்தர்கள்
ஆதியர் நின்-வயின் அடைந்த காரியம்
நீதியும் தருமமும் நிறுவ நீ இது
கோது_அறு குணத்தினாய் மனத்துக் கோடியால்
#6
தருமம் என்று ஒரு பொருள் தந்து நாட்டுதல்
அருமை என்பது பெரிது அறிதி ஐய நீ
இருமையும் தருவதற்கு இயைவது ஈண்டு இது
தெருள் மனத்தார் செயும் செயல் இது ஆகுமால்
#7
வள் உறு வயிர வாள் அரசு_இல் வையகம்
நள் உறு கதிர் இலா பகலும் நாளொடும்
தெள்ளுறு மதி இலா இரவும் தேர்தரின்
உள் உறை உயிர் இலா உடலும் ஒக்குமே
#8
தேவர்-தம் உலகினும் தீமை செய்து உழல்
மா வலி அவுணர்கள் வைகும் நாட்டினும்
ஏவெவை உலகம் என்று இசைக்கும் அன்னவை
காவல்செய் தலைவரை இன்மை கண்டிலம்
#9
முறை தெரிந்து ஒரு வகை முடிய நோக்குறின்
மறையவன் வகுத்தன மண்ணில் வானிடை
நிறை பெரும் தன்மையின் நிற்பச் செல்வன
இறைவரை இல்லன யாவும் காண்கிலம்
#10
பூத்த நாள்_மலர் அயன் முதல புண்ணியர்
ஏத்து வான் புகழினர் இன்று-காறும் கூக்
காத்தனர் பின் ஒரு களைகண் இன்மையால்
நீத்த நீர் உடை கல நீரது ஆகுமால்
#11
உந்தையோ இறந்தனன் உம் முன் நீத்தனன்
வந்ததும் அன்னை-தன் வரத்தில் மைந்த நீ
அந்தம்_இல் பேரரசு அளித்தி அன்னது
சிந்தனை எமக்கு என தெரிந்து கூறினான்
#12
தஞ்சம் இவ் உலகம் நீ தாங்குவாய் எனச்
செஞ்செவே முனிவரன் செப்பக் கேட்டலும்
நஞ்சினை நுகர் என நடுங்குவாரினும்
அஞ்சினன் அயர்ந்தனன் அருவிக் கண்ணினான்
#13
நடுங்கினன் நாத் தடுமாறி நாட்டமும்
இடுங்கினன் மகளிரின் இரங்கும் நெஞ்சினன்
ஒடுங்கிய உயிரினன் உணர்வு கைதர
தொடங்கினன் அரசவைக்கு உள்ளம் சொல்லுவான்
#14
மூன்று உலகினுக்கும் ஓர் முதல்வனாய் முதல்
தோன்றினன் இருக்க யான் மகுடம் சூடுதல்
சான்றவர் உரைசெயத் தருமம் ஆதலால்
ஈன்றவள் செய்கையில் இழுக்கு உண்டாகுமோ
#15
அடைவு_அரும் கொடுமை என் அன்னை செய்கையை
நடைவரும் தன்மை நீர் நன்று இது என்றிரேல்
இடை வரும் காலம் ஈண்டு இரண்டும் நீத்து இது
கடை வரும் தீ நெறிக் கலியின் ஆட்சியோ
#16
வேத்தவை இருந்த நீர் விமலன் உந்தியில்
பூத்தவன் முதலினர் புவியுள் தோன்றினார்
மூத்தவர் இருக்கவே முறைமையால் நிலம்
காத்தவர் உளர் எனின் காட்டிக் காண்டிரால்
#17
நல் நெறி என்னினும் நான் இ நானில
மன் உயிர் பொறை சுமந்து இருந்து வாழ்கிலேன்
அன்னவன்-தனைக் கொணர்ந்து அலங்கல் மா முடி
தொல் நெறிமுறைமையின் சூட்டிக் காண்டிரால்
#18
அன்று எனின் அவனொடும் அரிய கானிடை
நின்று இனிது இரும் தவம் நெறியின் ஆற்றுவென்
ஒன்று இனி உரைக்கின் என் உயிரை நீக்குவென்
என்றனன் என்ற போது இருந்த பேரவை
#19
ஆன்ற பேரரசனும் இருப்ப ஐயனும்
ஏன்றனன் மணி முடி ஏந்த ஏந்தல் நீ
வான் தொடர் திருவினை மறுத்தி மன் இளம்
தோன்றல்கள் யார் உளர் நின்னின் தோன்றினார்
#20
ஆழியை உருட்டியும் அறங்கள் போற்றியும்
வேள்வியை இயற்றியும் வளர்க்க வேண்டுமோ
ஏழினோடு ஏழ் எனும் உலகம் எஞ்சினும்
வாழிய நின் புகழ் என்று வாழ்த்தினார்
#21
குரிசிலும் தம்பியைக் கூவிக் கொண்டலின்
முரசு அறைந்து இ நகர் முறைமை வேந்தனைத்
தருதும் ஈண்டு என்பது சாற்றித் தானையை
விரைவினில் எழுக என விளம்புவாய் என்றான்
#22
நல்லவன் உரைசெய நம்பி கூறலும்
அல்லலின் அழுங்கிய அன்பின் மா நகர்
ஒல்லென இரைத்ததால் உயிர்_இல் யாக்கை அச்
சொல் எனும் அமிழ்தினால் துளிர்த்தது என்னவே
#23
அவித்த ஐம்புலத்தவர் ஆதியாய் உள
புவித்-தலை உயிர் எலாம் இராமன் பொன் முடி
கவிக்கும் என்று உரைக்கவே களித்ததால் அது
செவிப் புலம் நுகர்வது ஓர் தெய்வத் தேன்-கொலாம்
#24
படு முரசு அறைந்தனர் பரதன் தம்முனைக்
கொடி நகர்த் தரும் அவன் கொணரச் சேனையும்
முடுகுக என்ற சொல் மூரி மா நகர்
உடுபதி வேலையின் உதயம் போன்றதே
#25
எழுந்தது பெரும் படை ஏழு வேலையின்
மொழிந்த பேர் ஊழியின் முழங்கி முந்து எழ
அழிந்தது கேகயன்_மடந்தை ஆசை போய்க்
கழிந்தது துயர் நெடும் காதல் தூண்டவே
#26
பண்ணின புரவி தேர் பகடு பண்டியும்
மண்ணினை மறைத்தன மலிந்த மாக் கொடி
விண்ணினை மறைத்தன விரிந்த மாத் துகள்
கண்ணினை மறைத்தன கமலத்தோனையே
#27
ஈசன் இவ் உலகினை அழிக்கும் நாள் எழும்
ஓசையின் நிமிர்ந்துளது ஒல்லென் பேரொலி
காசையின் கரியவன் காண மூண்டு எழும்
ஆசையின் நிமிர்ந்தது அவ் அனிக ராசியே
#28
படியொடு திரு நகர் துறந்து பல் மரம்
செடியொடு தொடர் வனம் நோக்கிச் சீதை ஆம்
கொடியொடு நடந்த அக் கொண்டல் ஆம் எனப்
பிடியொடு நடந்தன பெரும் கை வேழமே
#29
சேற்று இள மரை மலர் சிதைந்தவாம் எனக்
கால் தளம் பொலிதரு கன்னிமாரொடும்
ஏற்று இளம் பிடிக் குலம் இகலி இன் நடை
தோற்று இள மகளிரைச் சுமப்ப போன்றவே
#30
வேதனை வெயில் கதிர் தணிக்க மென் மழைச்
சீத நீர் தொடு நெடும் கொடியும் சென்றன
கோதை வெம் சிலையவன் கோலம் காண்கிலா
மாதரின் நுடங்குவ வரம்பு_இல் கோடியே
#31
வெண் மதி மீச்செல மேகம் ஊர்ந்து என
அண்ணல் வெம் கதிரவன் அளவு_இல் மூர்த்தியாய்
மண்ணிடை இழிந்து ஒரு வழி கொண்டால் என
எண்ண_அரு மன்னவர் களிற்றின் ஏகினார்
#32
தேர் மிசைச் சென்றது ஓர் பரவை செம் முகக்
கார் மிசைச் சென்றது ஓர் உவரி கார்க் கடல்
ஏர் முகப் பரி மிசை ஏகிற்று எங்கணும்
பார் மிசைப் படர்ந்தது பதாதிப் பௌவமே
#33
தாரையும் சங்கமும் தாளம் கொம்பொடு
வார் மிசைப் பம்பையும் துடியும் மற்றவும்
பேரியும் இயம்பல சென்ற பேதைமைப்
பூரியர் குழாத்திடை அறிஞர் போலவே
#34
தா_அரு நாண் முதல் அணி அலால் தகை
மேவரு கலங்களை வெறுத்த மேனியர்
தேவரும் மருள்கொளத் தெரியும் காட்சியர்
பூ உதிர் கொம்பு என மகளிர் போயினார்
#35
அதிர் கடல் வையகம் அனைத்தும் காத்தவன்
விதி வரும் தனிக் குடை மீது இலாப் படை
பொதி பல கவிகை மீன் பூத்தது ஆகிலும்
கதிர் மதி நீங்கிய கங்குல் போன்றதே
#36
செல்லிய செலவினால் சிறிய திக்கு எனச்
சொல்லிய சேனையைச் சுமந்ததே எனில்
ஒல்லொலி வேலை நீர் உடுத்த பாரை ஓர்
மெல்லியல் என்றவர் மெலியரே-கொலாம்
#37
தங்கு தண் சாந்து அகில் கலவை சார்கில
குங்குமம் கொட்டில கோவை முத்து இல
பொங்கு இளம் கொங்கைகள் புதுமை வேறு இல
தெங்கு இளநீர் எனத் தெரிந்த காட்சிய
#38
இன் துணையவர் முலை எழுது சாந்தினும்
மன்றல் அம் தாரினும் மறைந்திலாமையால்
துன்று இளம் கொடி முதல் தூறு நீங்கிய
குன்று எனப் பொலிந்தன குவவுத் தோள்களே
#39
நறை அறு கோதையர் நாள் செய் கோலத்தின்
துறை அற அஞ்சனம் துறந்த நாட்டங்கள்
குறை அற நிகர்த்தன கொற்றம் முற்றுவான்
கறை அறக் கழுவிய கால வேலையே
#40
விரி மணி மேகலை விரவி ஆர்க்கில
தெரிவையர் அல்குல் தார் ஒலி இல் தேர் என
பரிபுரம் ஆர்க்கில பவளச் சீறடி
அரி இனம் ஆர்க்கிலாக் கமலம் என்னவே
#41
மல்கிய கேகயன்_மடந்தை வாசகம்
நல்கியது அரிவையர் நடுவிற்கே-கொலாம்
புல்கிய மணி வடம் பூண்கிலாமையால்
ஒல்கிய ஒரு வகைப் பொறை உயிர்த்தவே
#42
கோமகன் பிரிதலின் கோலம் நீத்துள
தாமரைச் செல்வியும் தவத்தை மேவினாள்
காமனும் அரும் துயர்க் கடலில் மூழ்கினான்
ஆம் என நிகழ்ந்தது அவ் அளவு_இல் சேனையே
#43
மண்ணையும் வானையும் வயங்கு திக்கையும்
உண்ணிய நிமிர் கடல் ஒக்கும் என்பது என்
கண்ணினும் மனத்தினும் கமலத்து அண்ணல்-தன்
எண்ணினும் நெடிது அவண் எழுந்த சேனையே
#44
அலை நெடும் புனல் அறக் குடித்தலால் அகம்
நிலைபெற நிலை நெறி நிறுத்தலால் நெடு
மலையினை மண் உற அழுத்தலால் தமிழ்த்
தலைவனை நிகர்த்தது அத் தயங்கு தானையே
#45
அறிஞரும் சிறியரும் ஆதி அந்தமா
செறி பெரும் தானையும் திருவும் நீங்கலால்
குறியவன் புனல் எலாம் வயிற்றில் கொண்ட நாள்
மறி கடல் ஒத்தது அவ் அயோத்தி மா நகர்
#46
பெரும் திரை நதிகளும் வயலும் பெட்புறு
மரங்களும் மலைகளும் மண்ணும் கண்ணுறத்
திருத்தல்_இல் அயோத்தி ஆம் தெய்வ மா நகர்
அரும் தெரு ஒத்தது அப் படை செல் ஆறு அரோ
#47
தார்கள்தாம் கோதைதாம் தாமம்தாம் தகை
ஏர்கள்தாம் கலவைதாம் கமழ்ந்தின்று என்பரால்
கார்கள்தாம் என மிகக் கடுத்த கைம்மலை
வார் கடாம் அல்லது அ மன்னன் சேனையே
#48
ஆள் உலாம் கடலினும் அகன்ற அக் கடல்
தோள் உலாம் குண்டலம் முதல தொல் அணி
கேள் உலாம் மின் ஒளி கிளர்ந்தது இல்லையால்
வாள் உலாம் நுதலியர் மருங்குல் அல்லதே
#49
மத்தளம் முதலிய வயங்கு பல்_இயம்
ஒத்தன சேறலின் உரை இலாமையின்
சித்திரச் சுவர் நெடும் சேனை தீட்டிய
பத்தியை நிகர்த்தது அப் படையின் ஈட்டமே
#50
ஏடு அறு கோதையர் விழியின் எய்த கோல்
ஊடு உற உரம் தொளைத்து உயிர் உணாவகை
ஆடவர்க்கு அரும் பெரும் கவசம் ஆயது
காடு உறை வாழ்க்கையைக் கண்ணன் நண்ணவே
#51
கனம் குழைக் கேகயன்_மகளின் கண்ணிய
சினம் கிடந்து எரிதலின் தீர்ந்தவே-கொலாம்
அனங்கன் ஐம் கொடும் கணை அடரும் ஆடவர்
மனம் கிடந்து உண்கில மகளிர் கொங்கையே
#52
இன்னணம் நெடும் படை ஏக ஏந்தலும்
தன்னுடைத் திரு அரைச் சீரை சாத்தினான்
பின் இளையவனொடும் பிறந்த துன்பொடும்
நல் நெடும் தேர் மிசை நடத்தல் மேயினான்
#53
தாயரும் அரும் தவத்தவரும் தந்தையின்
ஆய மந்திரியரும் அளவு_இல் சுற்றமும்
தூய அந்தணர்களும் தொடர்ந்து சூழ்வரப்
போயினன் திரு நகர்ப் புரிசை வாயிலே
#54
மந்தரைக் கூற்றமும் வழிச்செல்வாரொடும்
உந்தியே போதல் கண்டு இளவல் ஓடி ஆர்த்து
அந்தரத்து எற்றுவான் அழன்று பற்றலும்
சுந்தரத் தோளவன் விலக்கிச் சொல்லுவான்
#55
முன்னையர் முறை கெட முடித்த பாவியைச்
சின்னபின்னம் செய்து என் சினத்தைத் தீர்வெனேல்
என்னை இன்று என் ஐயன் துறக்கும் என்று அலால்
அன்னை என்று உணர்ந்திலென் ஐய நான் என்றான்
#56
மொய் பெரும் சேனையும் மூரி ஞாலமும்
கைகலந்து அயல் ஒரு கடலின் சுற்றிட
ஐயனும் தேவியும் இளைய ஆளியும்
வைகிய சோலையில் தானும் வைகினான்
#57
அல் அணை நெடும் கணீர் அருவி ஆடினன்
கல் அணை கிழங்கொடு கனியும் உண்டிலன்
வில் அணைத்து உயர்ந்து தோள் வீரன் வைகிய
புல்லணை மருங்கில் தான் பொடியின் வைகினான்
#58
ஆண்டு நின்று ஆண்தகை அடியின் ஏகினான்
ஈண்டிய நெறி எனத் தானும் ஏகினான்
தூண்டிடு தேர்களும் துரக ராசியும்
காண்தகு கரிகளும் தொடர காலினே
@13 கங்கை காண் படலம்
#1
பூ விரி பொலன் கழல் பொரு_இல் தானையான்
காவிரி நாடு அன்ன கழனி நாடு ஒரீஇ
தாவர சங்கமம் என்னும் தன்மைய
யாவையும் இரங்கிட கங்கை எய்தினான்
#2
எண்ண_அரும் சுரும்பு தம் இனத்துக்கு அல்லது
கண் அகன் பெரும் புனல் கங்கை எங்கணும்
அண்ணல் வெம் கரி மதத்து அருவி பாய்தலால்
உண்ணவும் குடையவும் உரித்து அன்று ஆயதே
#3
அடி மிசைத் தூளி புக்கு அடைந்த தேவர்-தம்
முடி உறப் பரந்தது ஓர் முறைமை தேர்ந்திலெம்
நெடிது உயிர்த்து உண்டவும் நீந்தி நின்றவும்
பொடி மிசைப் புரண்டவும் புரவி ஈட்டமே
#4
பாலை ஏய் நிறத்தொடு பண்டு தான் படர்
ஓலை ஏய் நெடும் கடல் ஓடிற்று இல்லையால்
மாலை ஏய் நெடு முடி மன்னன் சேனை ஆம்
வேலையே மடுத்தது அக் கங்கை வெள்ளமே
#5
கான்-தலை நண்ணிய காளை பின் படர்
தோன்றலை அவ்வழித் தொடர்ந்து சென்றன
ஆன்றவர் உணர்த்திய அக்குரோணிகள்
மூன்று_பத்து ஆயிரத்து இரட்டி முற்றுமே
#6
அப் படை கங்கையை அடைந்த ஆயிடை
துப்பு உடைக் கடலின் நீர் சுமந்த மேகத்தை
ஒப்பு உடை அண்ணலோடு உடற்றவே-கொலாம்
இப் படை எடுத்தது என்று எடுத்த சீற்றத்தான்
#7
குகன் எனப் பெயரிய கூற்றின் ஆற்றலான்
தொகை முரண் சேனையைத் துகளின் நோக்குவான்
நகை மிகக் கண்கள் தீ நாற நாசியில்
புகை உறக் குனிப்புறும் புருவப் போர்விலான்
#8
மை உற உயிர் எலாம் இறுதி வாங்குவான்
கை உறு கவர் அயில் பிடித்த காலன்தான்
ஐ_ஐ நூறாயிரம் உருவம் ஆயின
மெய் உறு தானையான் வில்லின் கல்வியான்
#9
கட்டிய சுரிகையன் கடித்த வாயினன்
வெட்டிய மொழியினன் விழிக்கும் தீயினன்
கொட்டிய துடியினன் குறிக்கும் கொம்பினன்
கிட்டியது அமர் எனக் கிளரும் தோளினான்
#10
எலி எலாம் இப் படை அரவம் யான் என
ஒலி உலாம் சேனையை உவந்து கூவினான்
வலி உலாம் உலகினில் வாழும் வள் உகிர்ப்
புலி எலாம் ஒரு வழிப் புகுந்த போலவே
#11
மருங்கு அடை தென் கரை வந்து தோன்றினான்
ஒருங்கு அடை நெடும் படை ஒல்லென் ஆர்ப்பினோடு
அரும் கடையுகம்-தனில் அசனி மா மழை
கரும் கடல் கிளர்ந்து எனக் கலந்து சூழவே
#12
தோன்றிய புளிஞரை நோக்கிச் சூழ்ச்சியின்
ஊன்றிய சேனையை உம்பர் ஏற்றுதற்கு
ஏன்றனென் என் உயிர்த்துணைவற்கு ஈகுவான்
ஆன்ற பேரரசு நீர் அமைதிர் ஆம் என்றான்
#13
துடி எறி நெறிகளும் துறையும் சுற்றுற
ஒடியெறி அம்பிகள் யாதும் ஓட்டலிர்
கடி எறி கங்கையின் கரை வந்தோர்களைப்
பிடி எறி பட எனா பெயர்த்தும் கூறுவான்
#14
அஞ்சன_வண்ணன் என் ஆருயிர் நாயகன் ஆளாமே
வஞ்சனையால் அரசு எய்திய மன்னரும் வந்தாரே
செம் சரம் என்பன தீ உமிழ்கின்றன செல்லாவோ
உஞ்சு இவர் போய்விடின் நாய்க் குகன் என்று எனை ஓதாரோ
#15
ஆழ நெடும் திரை ஆறு கடந்து இவர் போவாரோ
வேழ நெடும் படை கண்டு விலங்கிடும் வில்லாளோ
தோழமை என்று அவர் சொல்லிய சொல் ஒரு சொல் அன்றோ
ஏழைமை வேடன் இறந்திலன் என்று எனை ஏசாரோ
#16
முன்னவன் என்று நினைந்திலன் மொய் புலி அன்னான் ஓர்
பின்னவன் நின்றனன் என்றிலன் அன்னவை பேசானேல்
என் இவன் என்னை இகழ்ந்தது இவ் எல்லை கடந்து அன்றோ
மன்னவர் நெஞ்சினில் வேடர் விடும் சரம் வாயாவோ
#17
பாவமும் நின்ற பெரும் பழியும் பகை நண்போடும்
ஏவமும் என்பவை மண் உலகு ஆள்பவர் எண்ணாரோ
ஆவது போக என் ஆருயிர் தோழமை தந்தான் மேல்
போவது சேனையும் ஆருயிரும் கொடு போய் அன்றோ
#18
அரும் தவம் என் துணை ஆள இவன் புவி ஆள்வானோ
மருந்து எனின் அன்று உயிர் வண் புகழ் கொண்டு பின் மாயேனோ
பொருந்திய கேண்மை உகந்தவர்-தம்மொடு போகாதே
இருந்தது நன்று கழிக்குவென் என் கடன் இன்றோடே
#19
தும்பியும் மாவும் மிடைந்த பெரும் படை சூழ்வு ஆரும்
வம்பு இயல் தார் இவர் வாள் வலி கங்கை கடந்து அன்றோ
வெம்பிய வேடர் உளீர் துறை ஓடம் விலக்கீரோ
நம்பி முன்னே இனி நாம் உயிர் மாய்வது நன்று அன்றோ
#20
போன படைத்-தலை வீரர்-தமக்கு இரை போதா இச்
சேனை கிடக்கிடு தேவர் வரின் சிலை மா மேகம்
சோனை படக் குடர் சூறைபடச் சுடர் வாளோடும்
தானை படத் தனி யானை படத் திரள் சாயேனோ
#21
நின்ற கொடைக் கை என் அன்பன் உடுக்க நெடும் சீரை
அன்று கொடுத்தவள் மைந்தர் பலத்தை என் அம்பாலே
கொன்று குவித்த நிணம் கொள் பிணக் குவை கொண்டு ஓடி
துன்று திரைக் கடல் கங்கை மடுத்து இடை தூராதோ
#22
ஆடு கொடிப் படை சாடி அறத்தவரே ஆள
வேடு கொடுத்தது பார் எனும் இப் புகழ் மேவீரோ
நாடு கொடுத்த என் நாயகனுக்கு இவர் நாம் ஆளும்
காடு கொடுக்கிலர் ஆகி எடுத்தது காணீரோ
#23
மா முனிவர்க்கு உறவாகி வனத்திடையே வாழும்
கோ முனியத் தகும் என்று மனத்து இறை கொள்ளாதே
ஏ முனை உற்றிடில் ஏழு கடல் படை என்றாலும்
ஆ முனையின் சிறு கூழ் என இப்பொழுது ஆகாதோ
#24
என்பன சொல்லி இரும்பு அன மேனியர் ஏனோர் முன்
வன் பணை வில்லினன் மல் உயர் தோளினன் வாள் வீரற்கு
அன்பனும் நின்றனன் நின்றது கண்டு அரி_ஏறு அன்ன
முன்பனில் வந்து மொழிந்தனன் மூரிய தேர்_வல்லான்
#25
கங்கை இரு கரை உடையான் கணக்கிறந்த நாவாயான்
உங்கள் குலத் தனி நாதற்கு உயிர்த்துணைவன் உயர் தோளான்
வெம் கரியின் ஏறு அனையான் வில் பிடித்த வேலையினான்
கொங்கு அலரும் நறும் தண் தார் குகன் என்னும் குறி உடையான்
#26
கல் காணும் திண்மையான் கரை காணாக் காதலான்
அற்கு ஆணி கண்டு அனைய அழகு அமைந்த மேனியான்
மல் காணும் திரு நெடும் தோள் மழை காணும் மணி நிறத்தாய்
நின் காணும் உள்ளத்தான் நெறி எதிர் நின்றனன் என்றான்
#27
தன் முன்னே அவன் தன்மை தந்தை துணை முந்து உரைத்த
சொல் முன்னே உவக்கின்ற துரிசு_இலா திரு மனத்தான்
மன் முன்னே தழீஇக் கொண்ட மனக்கு இனிய துணைவனேல்
என் முன்னே அவன் காண்பென் யானே சென்று என எழுந்தான்
#28
என்று எழுந்த தம்பியொடும் எழுகின்ற காதலொடும்
குன்று எழுந்து சென்றது எனக் குளிர் கங்கைக் கரை குறுகி
நின்றவனை நோக்கினான் திரு மேனி நிலை உணர்ந்தான்
துன்று கரு நறும் குஞ்சி எயினர்_கோன் துண்ணென்றான்
#29
வற்கலையின் உடையானை மாசடைந்த மெய்யானை
நல் கலை_இல் மதி என்ன நகை இழந்த முகத்தானை
கல் கனியக் கனிகின்ற துயரானைக் கண்ணுற்றான்
வில் கையினின்று இடை வீழ விம்முற்று நின்று ஒழிந்தான்
#30
நம்பியும் என் நாயகனை ஒக்கின்றான் அயல் நின்றான்
தம்பியையும் ஒக்கின்றான் தவ வேடம் தலைநின்றான்
துன்பம் ஒரு முடிவு இல்லை திசை நோக்கித் தொழுகின்றான்
எம்பெருமான் பின் பிறந்தார் இழைப்பரோ பிழைப்பு என்றான்
#31
உண்டு இடுக்கண் ஒன்று உடையான் உலையாத அன்புடையான்
கொண்ட தவ வேடமே கொண்டிருந்தான் குறிப்பு எல்லாம்
கண்டு உணர்ந்து பெயர்கின்றேன் கா-மின்கள் நெறி என்னா
தண் துறை ஓர் நாவாயில் ஒரு தனியே தான் வந்தான்
#32
வந்து எதிரே தொழுதானை வணங்கினான் மலர் இருந்த
அந்தணனும் தனை வணங்கும் அவனும் அவன் அடி வீழ்ந்தான்
தந்தையினும் களிகூரத் தழுவினான் தகவுடையோர்
சிந்தையினும் சென்னியினும் வீற்றிருக்கும் சீர்த்தியான்
#33
தழுவின புளிஞர்_வேந்தன் தாமரைச் செங்கணானை
எழுவினும் உயர்ந்த தோளாய் எய்தியது என்னை என்ன
முழுது உலகு அளித்த தந்தை முந்தையோர் முறையின்-நின்றும்
வழுவினன் அதனை நீக்க மன்னனைக் கொணர்வான் என்றான்
#34
கேட்டனன் கிராதர்_வேந்தன் கிளர்ந்து எழும் உயிர்ப்பன் ஆகி
மீட்டும் மண் அதனில் வீழ்ந்தான் விம்மினன் உவகை வீங்க
தீட்ட_அரு மேனி மைந்தன் சேவடிக் கமலப் பூவில்
பூட்டிய கையன் பொய்_இல் உள்ளத்தன் புகலலுற்றான்
#35
தாய் உரை கொண்டு தாதை உதவிய தரணி-தன்னைத்
தீவினை என்ன நீத்துச் சிந்தனை முகத்தில் தேக்கிப்
போயினை என்ற போழ்து புகழினோய் தன்மை கண்டால்
ஆயிரம் இராமர் நின் கேழ் ஆவரோ தெரியின் அம்மா
#36
என் புகழ்கின்றது ஏழை எயினனேன் இரவி என்பான்
தன் புகழ்க் கற்றை மற்றை ஒளிகளைத் தவிர்க்குமா போல்
மன் புகழ் பெருமை நுங்கள் மரபினோர் புகழ்கள் எல்லாம்
உன் புகழ் ஆக்கிக்கொண்டாய் உயர் குணத்து உரவுத் தோளாய்
#37
என இவை அன்ன மாற்றம் இயைவன பலவும் கூறிப்
புனை சுழல் புலவு வேல் கை புளிஞர்_கோன் பொரு_இல் காதல்
அனையவற்கு அமைவின் செய்தான் ஆர் அவற்கு அன்பிலாதார்
நினைவு_அரும் குணம் கொடு அன்றோ இராமன் மேல் நிமிர்ந்த காதல்
#38
அவ்வழி அவனை நோக்கி அருள் தரு வாரி அன்ன
செவ் வழி உள்ளத்து அண்ணல் தென்திசை செங் கை கூப்பி
எவ் வழி உறைந்தான் நம்முன் என்றலும் எயினர்_வேந்தன்
இவ் வழி வீர யானே காட்டுவல் எழுக என்றான்
#39
கார் எனக் கடிது சென்றான் கல்லிடைப் படுத்த புல்லின்
வார் சிலைத் தடக் கை வள்ளல் வைகிய பள்ளி கண்டான்
பார் மிசைப் பதைத்து வீழ்ந்தான் பருவரல் பரவை புக்கான்
வார் மணிப் புனலால் மண்ணை மண்ணு நீர் ஆட்டும் கண்ணான்
#40
இயன்றது என்-பொருட்டினால் இவ் இடர் உனக்கு என்ற போழ்தும்
அயின்றனை கிழங்கும் காயும் அமுது என அரிய புல்லில்
துயின்றனை எனவும் ஆவி துறந்திலென் சுடரும் காசு
குயின்று உயர் மகுடம் சூடும் செல்வமும் கொள்வென் யானே
#41
தூண்தர நிவந்த தோளான் பின்னரும் சொல்லுவான் அ
நீண்டவன் துயின்ற சூழல் இது எனின் நிமிர்ந்த நேயம்
பூண்டவன் தொடர்ந்து பின்னே போந்தவன் பொழுது நீத்தது
யாண்டு என இனிது கேட்டான் எயினர்_கோன் இதனைச் சொன்னான்
#42
அல்லை ஆண்டு அமைந்த மேனி அழகனும் அவளும் துஞ்ச
வில்லை ஊன்றிய கையோடும் வெய்து_உயிர்ப்போடும் வீரன்
கல்லை ஆண்டு உயர்ந்த தோளாய் கண்கள் நீர் சொரியக் கங்குல்
எல்லை காண்பளவும் நின்றான் இமைப்பிலன் நயனம் என்றான்
#43
என்பத்தைக் கேட்ட மைந்தன் இராமனுக்கு இளையார் என்று
முன்பு ஒத்த தோற்றத்தேமில் யான் என்றும் முடிவிலாத
துன்பத்துக்கு ஏது ஆனேன் அவன் அது துடைக்க நின்றான்
அன்பத்துக்கு எல்லை உண்டோ அழகிது என் அடிமை என்றான்
#44
அவ்விடை அண்ணல்தானும் அன்று அரும் பொடியின் வைகி
தெவ் இடைதர நின்று ஆர்க்கும் செறி கழல் புளிஞர்_கோமாஅன்
இவ்விடை கங்கை ஆற்றின் ஏற்றினை ஆயின் எம்மை
வெவ் இடர் கடல் நின்று ஏற்றி வேந்தன்-பால் விடுத்தது என்றான்
#45
நன்று எனப் புளிஞர்_வேந்தன் நண்ணினன் தமரை நாவாய்
சென்று இனித் தருதிர் என்ன வந்தன சிவன் சேர் வெள்ளிக்
குன்று எனக் குனிக்கும் அம் பொன் குவடு எனக் குபேரன் மானம்
ஒன்று என நாணிப் பல் வேறு உருவு கொண்டனைய ஆன
#46
நங்கையர் நடையின் அன்னம் நாணுறு செலவின் நாவாய்
கங்கையும் இடம் இலாமை மிடைந்தன கலந்த எங்கும்
அங்கொடு இங்கு இழித்தி ஏற்றும் அமைதியின் அமரர் வையத்து
இங்கொடு அங்கு இழித்தி ஏற்றும் இருவினை என்னல் ஆன
#47
வந்தன வரம்பு_இல் நாவாய் வரி சிலை குரிசில் மைந்த
சிந்தனை யாவது என்று சிருங்கிபேரியர்_கோன் செப்ப
சுந்தர வரி விலானும் சுமந்திரன்-தன்னை நோக்கி
எந்தை இத் தானை-தன்னை ஏற்றுதி விரைவின் என்றான்
#48
குரிசிலது ஏவலால் அக் குரகதத் தேர்_வலானும்
வரிசையின் வழாமை நோக்கி மரபுளி வகையின் ஏற்றக்
கரி பரி இரதம் காலாள் கணக்கறு கரை_இல் வேலை
எரி மணி திரையின் வீசும் கங்கை யாறு ஏறிற்று அன்றே
#49
இடிபடு முழக்கம் பொங்க இன மழை மகர நீரை
முடிவுற முகப்ப ஊழி இறுதியின் மொய்ப்ப போலக்
கொடியொடு வங்கம் வேலை கூம்பொடு படர்வ போல
நெடிய கை எடுத்து நீட்டி நீந்தின நெடும் கை வேழம்
#50
சங்கமும் மகர மீனும் தரளமும் மணியும் தள்ளி
வங்க நீர்க் கடலும் வந்து தன் வழிப் படர மானப்
பொங்கு வெம் களிறு நூக்கக் கரை ஒரீஇப் போயிற்று அம்மா
கங்கையும் இராமன் காணும் காதலது என்ன மாதோ
#51
பாங்கின் உத்தரியம் மானப் படர் திரை தவழப் பாரின்
வீங்கு நீர் அழுவம்-தன்னுள் விழு மதக் கலுழி வெள்ளத்து
ஓங்கல்கள் தலைகள் தோன்ற ஒளித்து அவண் உயர்ந்த கும்பம்
பூம் குழல் கங்கை நங்கை முலை எனப் பொலிந்த மாதோ
#52
கொடிஞ்சொடு தட்டும் அச்சும் ஆழியும் கோத்த மொட்டும்
நெடும் சுவர் கொடியும் யாவும் நெறிவரு முறையின் நீக்கி
விடும் சுவல் புரவியோடும் வேறுவேறு ஏற்றிச் சென்ற
மடிஞ்ச பின் உடம்பு கூட்டும் வினை என வயிரத் தேர்கள்
#53
நால்_இரண்டு ஆய கோடி நவை_இல் நாவாய்கள் மீதா
சேல் திரண்டு அனைய ஆய கதியொடும் நிமிரச் சென்ற
பால் திரண்டு அனைய மெய்ய பயம் திரண்டு அனைய நெஞ்ச
கால் திரண்டு அனைய கால கடு நடைக் கலினப் பாய் மா
#54
ஊடுற நெருக்கி ஓடத்து ஒருவர் முன் ஒருவர் கிட்டிச்
சூடகத் தளிர்க் கை மாதர் குழுமினர் துவன்றித் தோன்ற
பாடு இயல் களி நல் யானைப் பந்தி அம் கடையின் குத்தக்
கோடுகள் மிடைந்த என்ன மிடைந்தன குவவுக் கொங்கை
#55
பொலம் குழை மகளிர் நாவாய்ப் போக்கின் ஒன்றுஒன்று தாக்க
மலங்கினர் இரண்டு பாலும் மறுகினர் வெருவி நோக்க
அலங்கு நீர் வெள்ளம் தள்ளி அழிதர அங்குமிங்கும்
கலங்கலின் வெருவிப் பாயும் கயல் குலம் நிகர்த்த கண்கள்
#56
இயல்வு உறு செலவின் நாவாய் இரு கையும் எயினர் தூண்ட
துயல்வன துடுப்பு வீசும் துவலைகள் மகளிர் மென் தூசு
உயல்வு உறு பரவை அல்குல் ஒளிப்பு அறத் தளிப்ப உள்ளத்து
அயர்வுறும் மதுகை மைந்தர்க்கு அயா_உயிர்ப்பு அளித்தது அம்மா
#57
இக் கரை இரைத்த சேனை எறி கடல் முகந்து வெஃகி
அக் கரை அடைய வீசி வறியன அணுகும் நாவாய்
புக்கு அலை ஆழி நல் நீர் பொறுத்தன போக்கிப் போக்கி
அக் கணத்து உவரி மீளும் அகல் மழை நிகர்த்த அம்மா
#58
அகில் இடு தூபம் அன்ன ஆய் மயில் பீலி ஆர்த்த
முகிழ் உடை முரண் மாத் தண்டு கூம்பு என முகிலின் வண்ணத்
துகிலொடு தொடுத்த செம்பொன் தகட்டிடை தொடுத்த முத்தின்
நகு கொடி நெடிய பாயா நவ்வெனச் சென்ற நாவாய்
#59
ஆனனம் கமலத்து அன்ன மின் அன்ன அமுதச் செவ் வாய்
தேன் நனை குழலார் ஏறும் அம்பிகள் சிந்து முத்தம்
மீன் என விரிந்த கங்கை விண் எனப் பண்ணை முற்றி
வானவர் மகளிர் ஊரும் மானமே நிகர்த்த மாதோ
#60
துளி படத் துழாவு திண் கோல் துடுப்பு இரு காலின் தோன்ற
நளிர் புனல் கங்கை ஆற்றில் நண்டு எனச் செல்லும் நாவாய்
களி உடை மஞ்ஞை அன்ன கனம் குழை கயல் கண் மாதர்
ஒளிர் அடிக் கமலம் தீண்ட உயிர் படைத்தனவே ஒத்த
#61
மை_அறு விசும்பில் மண்ணில் மற்றும் ஓர் உலகில் முற்றும்
மெய் வினை தவமே அன்றி மேலும் ஒன்று உளதோ கீழோர்
செய் வினை நாவாய் ஏறித் தீண்டலர் மனத்தின் செல்லும்
மொய் விசும்பு ஓடம் ஆக தேவரின் முனிவர் போனார்
#62
அறுபதினாயிரம் அக்குரோணி என்று
இறுதிசெய் சேனையும் எல்லை தீர் நகர்
மறு_அறு மாந்தரும் மகளிர் வெள்ளமும்
செறி திரைக் கங்கை பின் கிடக்கச் சென்றவே
#63
கழித்து நீர் வரு துறை ஆற்றைச் சூழ் படை
கழித்து நீங்கியது எனக் கள்ள ஆசையை
அழித்து வேறு அவனி பண்டு ஆண்ட வேந்தரை
இழித்து மேல் ஏறினான்தானும் ஏறினான்
#64
சுற்றத்தார் தேவரொடும் தொழ நின்ற கோசலையைத் தொழுது நோக்கிக்
கொற்றத் தார்க் குரிசில் இவர் ஆர் என்று குகன் வினவ கோக்கள் வைகும்
முற்றத்தான் முதல் தேவி மூன்று உலகும் ஈன்றானை முன் ஈன்றானைப்
பெற்றத்தால் பெறும் செல்வம் யான் பிறத்தலால் துறந்த பெரியாள் என்றான்
#65
என்றலுமே அடியின் மிசை நெடிது வீழ்ந்து அழுவானை இவன் யார் என்று
கன்று பிரி காராவின் துயர் உடைய கொடி வினவ கழல் கால் மைந்தன்
இன் துணைவன் இராகவனுக்கு இலக்குவற்கும் இளையவற்கும் எனக்கும் மூத்தான்
குன்று அனைய திரு நெடும் தோள் குகன் என்பான் இ நின்ற குரிசில் என்றான்
#66
நைவீர்_அலீர் மைந்தீர் இனித் துயரால் நாடு இறந்து காடு நோக்கி
மெய் வீரர் பெயர்ந்ததுவும் நலம் ஆயிற்று ஆம் அன்றே விலங்கல் திண் தோள்
கை வீரக் களிறு அனைய காளை இவன்-தன்னோடும் கலந்து நீவிர்
ஐவீரும் ஒருவீராய் அகல் இடத்தை நெடும் காலம் அளித்திர் என்றாள்
#67
அறம் தானே என்கின்ற அயல் நின்றாள்-தனை நோக்கி ஐய அன்பின்
நிறைந்தாளை உரை என்ன நெறி திறம்பாத் தன் மெய்யை நிற்பது ஆக்கி
இறந்தான்-தன் இளம் தேவி யாவர்க்கும் தொழு குலம் ஆம் இராமன் பின்பு
பிறந்தானும் உளன் என்ன பிரியாதான்-தனைப் பயந்த பெரியாள் என்றான்
#68
சுடு மயானத்திடை தன் துணை ஏகத் தோன்றல் துயர்க் கடலின் ஏகக்
கடுமை ஆர் கானகத்துக் கருணை ஆர்கலி ஏகக் கழல் கால் மாயன்
நெடுமையால் அன்று அளந்த உலகு எல்லாம் தன் மனத்தே நினைந்து செய்யும்
கொடுமையால் அளந்தாளை ஆர் இவர் என்று உரை என்ன குரிசில் கூறும்
#69
படர் எலாம் படைத்தாளைப் பழி வளர்க்கும் செவிலியைத் தன் பாழ்த்த பாவி
குடரிலே நெடும் காலம் கிடந்தேற்கும் உயிர்ப் பாரம் குறைந்து தேய
உடர் எலாம் உயிர் இலா எனத் தோன்றும் உலகத்தே ஒருத்தி அன்றே
இடர் இலா முகத்தாளை அறிந்திலையேல் இ நின்றாள் என்னை ஈன்றாள்
#70
என்னக் கேட்டு அவ் இரக்கம் இலாளையும்
தன் நல் கையின் வணங்கினன் தாய் என
அன்னப் பேடை சிறை இலதாய்க் கரை
துன்னிற்று என்னவும் வந்தது தோணியே
#71
இழிந்த தாயர் சிவிகையின் ஏறத் தான்
பொழிந்த கண்ணின் புதுப் புனல் போயினான்
ஒழிந்திலன் குகனும் உடன் ஏகினான்
கழிந்தனன் பல காவதம் காலினே
#72
பரத்தின் நீங்கும் பரத்துவன் என்னும் பேர்
வரத்தின் மிக்கு உயர் மாதவன் வைகு இடம்
அருத்தி கூர அணுகினன் ஆண்டு அவன்
விருத்தி வேதியரோடு எதிர் மேவினான்
@14 திருவடி சூட்டு படலம்
#1
வந்த மா தவத்தோனை அ மைந்தனும்
தந்தை ஆம் எனத் தாழ்ந்து வணங்கினான்
இந்து_மோலி அன்னானும் இரங்கினான்
அந்தம்_இல் நலத்து ஆசிகள் கூறினான்
#2
எடுத்த மா முடி சூடி நின்-பால் இயைந்து
அடுத்த பேரரசு ஆண்டிலை ஐய நீ
முடித்த வார் சடைக் கற்றையை மூசு தூசு
உடுத்து நண்ணுதற்கு உற்றுளது யாது என்றான்
#3
சினக் கொடும் திறல் சீற்ற வெம் தீயினான்
மனக் கடுப்பினன் மா தவத்து ஓங்கலை
எனக்கு அடுத்தது செய்திலன் என்ற சொல்
உனக்கு அடுப்பது அன்றால் உரவோய் என்றான்
#4
மறையின் கேள்வற்கு மன் இளம் தோன்றல் பின்
முறையின் நீங்கி முது நிலம் கொள்கிலேன்
இறைவன் கொள்கிலன் ஆம் எனின் யாண்டு எலாம்
உறைவென் கானத்து ஒருங்கு உடனே என்றான்
#5
உரைத்த வாசகம் கேட்டலும் உள் எழுந்து
இரைத்த காதல் இரும் தவத்தோர்க்கு எலாம்
குரைத்த மேனியோடு உள்ளம் குளிர்ந்ததால்
அரைத்த சாந்து கொடு அப்பியது என்னவே
#6
ஆய காதலோடு ஐயனைக் கொண்டு தன்
தூய சாலை உறைவிடம் துன்னினான்
மேய சேனைக்கு அமைப்பென் விருந்து எனா
தீயின் ஆகுதிச் செல்வனும் சிந்தித்தான்
#7
துறந்த செல்வன் நினைய துறக்கம்தான்
பறந்து வந்து படிந்தது பல் சனம்
பிறந்து வேறு ஓர் உலகு பெற்றார் என
மறந்து வைகினர் முன்னைத் தம் வாழ்வு எலாம்
#8
நந்தல்_இல் அறம் நந்தினர் ஆம் என
அந்தரத்தின் அரம்பையர் அன்பினர்
வந்து உவந்து எதிர் ஏத்தினர் மைந்தரை
இந்துவின் சுடர் கோயில் கொண்டு ஏகினார்
#9
நானம் நன்கு உரைத்தார் நளிர் வானிடை
ஆன கங்கை அரும் புனல் ஆட்டினார்
தான மா மணிக் கற்பகம் தாங்கிய
ஊனம்_இல் மலர் ஆடை உடுத்தினார்
#10
கொம்பின் நின்று நுடங்குறு கொள்கையார்
செம்பொனின் கல ராசி திருத்தினார்
அம்பரத்தின் அரம்பையர் அன்பொடும்
உம்பர்_கோன் நுகர் இன் அமுது ஊட்டினார்
#11
அஞ்சு அடுத்த அமளி அலத்தகப்
பஞ்சு அடுத்த பரிபுரப் பல்லவ
நஞ்சு அடுத்த நயனியர் நவ்வியின்
துஞ்ச அத்தனை மைந்தரும் துஞ்சினார்
#12
ஏந்து செல்வத்து இமையவர் ஆம் எனக்
கூந்தல் தெய்வ மகளிர் கொண்டாடினார்
வேந்தர் ஆதி சிவிகையின் வீங்கு தோள்
மாந்தர்-காறும் வரிசை வழாமலே
#13
மாதர் யாவரும் வானவர் தேவியர்
கோது_இல் செல்வத்து வைகினர் கொவ்வை வாய்த்
தீது_இல் தெய்வ மடந்தையர் சேடியர்
தாதிமார் எனத் தம் பணி கேட்பவே
#14
நந்து நந்தவனங்களில் நாள்_மலர்க்
கந்தம் உந்திய கற்பகக் காவில்-நின்று
அந்தர் வந்து என அந்தி தன் கை தர
மந்தமந்த நடந்தது வாடையே
#15
மான்று அளிக் குலம் மா மதம் வந்து உணத்
தேன் தளிர்த்த கவளமும் செம் கதிர்
கான்ற நெல் தழைக் கற்றையும் கற்பகம்
ஈன்று அளிக்க நுகர்ந்தன யானையே
#16
நரகதர்க்கு அறம் நல்கும் நலத்த நீர்
கர கதக் கரி கால் நிமிர்ந்து உண்டன
மரகதத்தின் கொழுந்து என வார்ந்த புல்
குரகதத்தின் குழாங்களும் கொண்டவே
#17
இன்னர் இன்னணம் யாவரும் இந்திரன்
துன்னு போகங்கள் துய்த்தனர் தோன்றல்தான்
அன்ன காயும் கிழங்கும் உண்டு அப் பகல்
பொன்னின் மேனி பொடியுறப் போக்கினான்
#18
நீல வல் இருள் நீங்கலும் நீங்குறும்
மூலம்_இல் கனவின் திரு முற்றுற
ஏலும் நல்வினை துய்ப்பவர்க்கு ஈறு செல்
காலம் என்னக் கதிரவன் தோன்றினான்
#19
ஆறி நின்று அறம் ஆற்றலர் வாழ்வு எனப்
பாறி வீந்தது செல்வம் பரிந்திலர்
தேறி முந்தைத் தம் சிந்தையர் ஆயினார்
மாறி வந்து பிறந்து அன்ன மாட்சியார்
#20
காலை என்று எழுந்தது கண்டு வானவர்
வேலை அன்று அனிகமே என்று விம்முறச்
சோலையும் கிரிகளும் சுண்ணமாய் எழ
பாலை சென்று அடைந்தது பரதன் சேனையே
#21
எழுந்தது துகள் அதின் எரியும் வெய்யவன்
அழுந்தினன் அவிப்ப_அரும் வெம்மை ஆறினான்
பொழிந்தன கரி மதம் பொடி வெம் கானகம்
இழிந்தன வழி நடந்து ஏற ஒணாமையே
#22
வடி உடை அயில் படை மன்னர் வெண்குடை
செடி உடை நெடு நிழல் செய்ய தீப் பொதி
படி உடைப் பரல் உடைப் பாலை மேல் உயர்
கொடி உடைப் பந்தரின் குளிர்ந்தது எங்குமே
#23
பெருகிய செல்வம் நீ பிடி என்றாள்-வயின்
திருகிய சீற்றத்தால் செம்மையான் நிறம்
கருகிய அண்ணலைக் கண்டு காதலின்
உருகிய தளிர்த்தன உலவை ஈட்டமே
#24
வன் தெறு பாலையை மருதம் ஆம் எனச்
சென்றது சித்திரகூடம் சேர்ந்ததால்
ஒன்று உரைத்து உயிரினும் ஒழுக்கம் நன்று என
பொன்றிய புரவலன் பொரு_இல் சேனையே
#25
தூளியின் படலையும் துரகம் தேரொடு
மூள் இரும் சின கரி முழங்கும் ஓதையும்
ஆள் இருள் குழுவினர் ஆரவாரமும்
கோள் இரும் படை இது என்று உணரக் கூறவே
#26
எழுந்தனன் இளையவன் ஏறினான் நிலம்
கொழுந்து உயர்ந்து அனையது ஓர் நெடிய குன்றின் மேல்
செழும் திரைப் பரவையைச் சிறுமை செய்த அக்
கழுந்து உடை வரி சிலைக் கடலை நோக்கினான்
#27
பரதன் இப் படை கொடு பார் கொண்டு ஆள் மறம்
கருதி உள் கிடந்தது ஓர் கறுவு காந்தலால்
விரதம் உற்று இருந்தவன் மேல் வந்தான் இது
சரதம் மற்று இலது எனத் தழங்கு சீற்றத்தான்
#28
கட்டினன் சுரிகையும் கழலும் பல் கணைப்
புட்டிலும் பொறுத்தனன் கவசம் பூட்டு அமைத்து
இட்டனன் எடுத்தனன் வரி வில் ஏந்தலைத்
தொட்டு அடி வணங்கி நின்று இனைய சொல்லினான்
#29
இருமையும் இழந்த அப் பரதன் ஏந்து தோள்
பருமையும் அன்னவன் படைத்த சேனையின்
பெருமையும் நின் ஒரு பின்பு வந்த என்
ஒருமையும் கண்டு இனி உவத்தி உள்ளம் நீ
#30
படர் எலாம் படப் படும் பரும யானையின்
திடர் எலாம் உருட்டின தேரும் ஈர்த்தன
குடர் எலாம் திரைத்தன குருதி ஆறுகள்
கடர் எலாம் மடுப்பன பலவும் காண்டியால்
#31
கருவியும் கைகளும் கவச மார்பமும்
உருவின உயிரினோடு உதிரம் தோய்வு இல
திரிவன சுடர்க் கணை திசைக் கை யானைகள்
வெருவரச் செய்வன காண்டி வீர நீ
#32
பண் முதிர் களிற்றொடு பரந்த சேனையின்
எண் முதல் அறுத்து நான் இமைப்பின் நீக்கலால்
விண் முதுகு உளுக்கவும் வேலை ஆடையின்
மண் முதுகு ஆற்றவும் காண்டி வள்ளல் நீ
#33
நிவந்த வான் குருதியின் நீத்தம் நீந்தி மெய்
சிவந்த சாதகரொடு சிறு கண் கூளியும்
கவந்தமும் உலகம் நின் கையது ஆயது என்று
உவந்தன குனிப்பன காண்டி உம்பர் போல்
#34
சூழி வெம் கட கரி துரக ராசிகள்
பாழி வன் புயத்து இகல் வயவர் பட்டு அற
வீழி வெம் குருதியால் அலைந்த வேலைகள்
ஏழும் ஒன்றாகி நின்று இரைப்பக் காண்டியால்
#35
ஆள் அற அலங்கு தேர் அழிய ஆடவர்
வாள் அற வரி சிலை துணிய மாக் கரி
தாள் அற தலை அற புரவி தாளொடும்
தோள் அற வடிக் கணை தொடுப்ப காண்டியால்
#36
தழைத்த வான் சிறையன தசையும் கவ்வின
அழைத்த வான் பறவைகள் அலங்கு பொன் வடிம்பு
இழைத்த வான் பகழி புக்கு இருவர் மார்பிடைப்
புழைத்த வான் பெரு வழி போகக் காண்டியால்
#37
ஒரு மகள் காதலின் உலகை நோய் செய்த
பெருமகன் ஏவலின் பரதன் தான் பெறும்
இரு நிலம் ஆள்கை விட்டு இன்று என் ஏவலால்
அரு நரகு ஆள்வது காண்டி ஆழியாய்
#38
வையகம் துறந்து வந்து அடவி வைகுதல்
எய்தியது உனக்கு என நின்னை ஈன்றவள்
நைதல் கண்டு உவந்தவள் நவையின் ஓங்கிய
கைகயன்_மகள் விழுந்து அரற்றக் காண்டியால்
#39
அரம் சுட அழல் நிமிர் அலங்கல் வேலினாய்
விரைஞ்சு ஒரு நொடியில் இவ் அனிக வேலையை
உரம் சுடு வடிக் கணை ஒன்றில் வென்று முப்புரம்
சுடும் ஒருவனின் பொலிவென் யான் என்றான்
#40
இலக்குவ உலகம் ஓர் ஏழும் ஏழும் நீ
கலக்குவென் என்பது கருதினால் அது
விலக்குவது அரிது அது விளம்பல் வேண்டுமோ
புலக்கு உரித்து ஒரு பொருள் புகலக் கேட்டியால்
#41
நம் குலத்து உதித்தவர் நவையின் நீங்கினர்
எங்கு உலப்புறுவர்கள் எண்ணின் யாவரே
தம் குலத்து ஒருவ அரும் தருமம் நீங்கினர்
பொங்கு உலத் திரளொடும் பொருத தோளினாய்
#42
எனைத்து உள மறை அவை இயம்பற்பாலன
பனைத் திரள் கரக் கரிப் பரதன் செய்கையே
அனைத் திறம் அல்லன அல்ல அன்னது
நினைத்திலை என்-வயின் நேய நெஞ்சினால்
#43
பெருமகன் என்-வயின் பிறந்த காதலின்
வரும் என நினைகையும் மண்ணை என்-வயின்
தரும் என நினைகையும் தவிர தானையால்
பொரும் என நினைகையும் புலமைப்பாலதோ
#44
பொன்னொடும் பொரு கழல் பரதன் போந்தனன்
நல் நெடும் பெரும் படை நல்கல் அன்றியே
என்னொடும் பொரும் என இயம்பற்பாலதோ
மின்னொடும் பொருவுற விளங்கு வேலினாய்
#45
சேண் உயர் தருமத்தின் தேவை செம்மையின்
ஆணியை அன்னது நினைக்கல் ஆகுமோ
பூண் இயல் மொய்ம்பினாய் போந்தது ஈண்டு எனைக்
காணிய நீ இது பின்னும் காண்டியால்
#46
என்றனன் இளவலை நோக்கி ஏந்தலும்
நின்றனன் பரதனும் நிமிர்ந்த சேனையைப்
பின் தருக என்று தன் பிரிவு_இல் காதலின்
தன் துணைத் தம்பியும் தானும் முந்தினான்
#47
தொழுது உயர் கையினன் துவண்ட மேனியன்
அழுது அழி கண்ணினன் அவலம் ஈது என
எழுதிய படிவம் ஒத்து எய்துவான்-தனை
முழுது உணர் சிந்தையான் முடிய நோக்கினான்
#48
கார்ப் பொரு மேனி அக் கண்ணன் காட்டினான்
ஆர்ப்புறு வரி சிலை இளைய ஐய நீ
தேர்ப் பெரும் தானையால் பரதன் சீறிய
போர்ப் பெரும் கோலத்தைப் பொருந்த நோக்கு எனா
#49
எல் ஒடுங்கிய முகத்து இளவல் நின்றனன்
மல் ஒடுங்கிய புயத்தவனை வைது எழுது
சொல்லொடும் சினத்தொடும் உணர்வு சோர்தர
வில்லொடும் கண்ண நீர் நிலத்து வீழவே
#50
கோது_அறத் தவம் செய்து குறிப்பின் எய்திய
நாதனைப் பிரிந்தனன் நலத்தின் நீங்கினாள்
வேதனைத் திருமகள் மெலிகின்றாள் விடு
தூது எனப் பரதனும் தொழுது தோன்றினான்
#51
அறம்-தனை நினைந்திலை அருளை நீத்தனை
துறந்தனை முறைமையை என்னும் சொல்லினான்
மறந்தனன் மலர் அடி வந்து வீழ்ந்தனன்
இறந்தனன் தாதையை எதிர்கண்டு என்னவே
#52
உண்டு-கொல் உயிர் என ஒடுங்கினான் உருக்
கண்டனன் நின்றனன் கண்ணன் கண் எனும்
புண்டரீகம் பொழி புனல் அவன் சடா
மண்டலம் நிறைந்து போய் வழிந்து சோரவே
#53
அயா_உயிர்த்து அழு கணீர் அருவி மார்பிடை
உயாவுறத் திரு உளம் உருகப் புல்லினான்
நியாயம் அத்தனைக்கும் ஓர் நிலயம் ஆயினான்
தயா முதல் அறத்தினை தழீஇயது என்னவே
#54
புல்லினன் நின்று அவன் புனைந்த வேடத்தைப்
பல் முறை நோக்கினான் பலவும் உன்னினான்
அல்லலின் அழுங்கினை ஐய ஆள் உடை
மல் உயர் தோளினான் வலியனோ என்றான்
#55
அரியவன் உரைசெயப் பரதன் ஐய நின்
பிரிவு எனும் பிணியினால் என்னைப் பெற்ற அக்
கரியவள் வரம் எனும் காலனால் தனக்கு
உரிய மெய் நிறுவிப் போய் உம்பரான் என்றான்
#56
விண்ணிடை அடைந்தனன் என்ற வெய்ய சொல்
புண்ணிடை அயில் எனச் செவி புகா முனம்
கண்ணொடு மனம் சுழல் கறங்கு போல ஆய்
மண்ணிடை விழுந்தனன் வானின் உம்பரான்
#57
இரு நிலம் சேர்ந்தனன் இறை உயிர்த்திலன்
உரும் இனை அரவு என உணர்வு நீங்கினான்
அருமையின் உயிர் வர அயா_உயிர்த்து அகம்
பொருமினன் பல் முறை புலம்பினான் அரோ
#58
நந்தா விளக்கு அனைய நாயகனே நானிலத்தோர்
தந்தாய் தனி அறத்தின் தாயே தயா நிலையே
எந்தாய் இகல் வேந்தர் ஏறே இறந்தனையே
அந்தோ இனி வாய்மைக்கு ஆர் உளரே மற்று என்றான்
#59
சொல் பெற்ற நோன்பின் துறையோன் அருள் வேண்டி
நல் பெற்ற வேள்வி நவை நீங்க நீ இயற்றி
என் பெற்று நீ பெற்றது இன் உயிர் போய் நீங்கலோ
கொல் பெற்ற வெற்றிக் கொலை பெற்ற கூர் வேலோய்
#60
மன் உயிர்க்கு நல்கு உரிமை மண் பாரம் நான் சுமக்கப்
பொன் உயிர்க்கும் தாரோய் பொறை உயிர்த்த ஆறு இதுவோ
உன் உயிர்க்குக் கூற்றாய் உலகு ஆள உற்றேனோ
மின் உயிர்க்கும் தீ வாய் வெயில் உயிர்க்கும் வெள் வேலோய்
#61
எம் பரத்தது ஆக்கி அரசு உரிமை இந்தியங்கள்
வெம் பவத்தின் வீய தவம் இழைத்தவாறு இதுவோ
சம்பரப் பேர் தானவனைத் தள்ளிச் சதமகற்கு அன்று
அம்பரத்தின் நீங்கா அரசு அளித்த ஆழியாய்
#62
வேண்டும் திறத்தாரும் வேண்டா அரசாட்சி
பூண்டு இவ் உலகுக்கு இடர் கொடுத்த புல்லனேன்
மாண்டு முடிவது அல்லால் மாயா உடம்பு இது கொண்டு
ஆண்டு வருவது இனி யார் முகத்தே நோக்கவோ
#63
தேன் அடைந்த சோலைத் திரு நாடு கைவிட்டுக்
கான் அடைந்தேன் என்னத் தரியாது காவல நீ
வான் அடைந்தாய் இன்னம் இருந்தேன் நான் வாழ்வு உகந்தே
ஊன் அடைந்த தெவ்வர் உயிர் அடைந்த ஒள் வேலோய்
#64
வண்மையும் மானமும் மேல் வானவர்க்கும் பேர்க்ககிலாத்
திண்மையும் செங்கோல் நெறியும் திறம்பாத
உண்மையும் எல்லாம் உடனே கொண்டு ஏகினையே
தண்மை தகை மதிக்கும் ஈந்த தனிக் குடையோய்
#65
என்று எடுத்துப் பற்பலவும் பன்னி இடர் உழக்கும்
குன்று எடுத்த போலும் குலவுத் தோள் கோளரியை
வன் தடக் கைத் தம்பியரும் வந்து அடைந்த மன்னவரும்
சென்று எடுத்துத் தாங்கினார் மா வதிட்டன் தேற்றினான்
#66
பன்ன_அரிய நோன்பின் பரத்துவனே ஆதி ஆம்
பின்னு சடையோரும் பேருலகம் ஓர் ஏழின்
மன்னவரும் மந்திரியர் எல்லாரும் வந்து அடைந்தார்
தன் உரிமைச் சேனைத்தலைவோரும்தாம் அடைந்தார்
#67
மற்றும் வரற்பாலர் எல்லாரும் வந்து அடைந்து
சுற்றும் இருந்த அமைதியினில் துன்பு உழக்கும்
கொற்றக் குரிசில் முகம் நோக்கிக் கோ மலரோன்
பெற்ற பெருமைத் தவ முனிவன் பேசுவான்
#68
துறத்தலும் நல் அறத் துறையும் அல்லது
புறத்து ஒரு துணை இலை பொருந்தும் மன் உயிர்க்கு
இறத்தலும் பிறத்தலும் இயற்கை என்பதே
மறத்தியோ மறைகளின் வரம்பு கண்ட நீ
#69
உண்மை_இல் பிறவிகள் உலப்பு_இல் கோடிகள்
தண்மையில் வெம்மையில் தழுவின எனும்
வண்மையை நோக்கிடா அரிய கூற்றின்-பால்
கண்மையும் உளது எனக் கருதல் ஆகுமோ
#70
பெறுவதன் முன் உயிர் பிரிதல் காண்டியால்
மறு_அறு கற்பினில் வையம் யாவையும்
அறுபதினாயிரம் ஆண்டும் ஆண்டவன்
இறுவது கண்டு அவற்கு இரங்கல் வேண்டுமோ
#71
சீலமும் தருமமும் சிதைவு_இல் செய்கையாய்
சூலமும் திகிரியும் சொல்லும் தாங்கிய
மூலம் வந்து உதவிய மூவர்க்கு ஆயினும்
காலம் என்று ஒரு வலை கடக்கல் ஆகுமோ
#72
கண் முதல் காட்சிய கரை_இல் நீளத்த
உள் முதல் பொருட்கு எலாம் ஊற்றம் ஆவன
மண் முதல் பூதங்கள் மாயும் என்ற போது
எண் முதல் உயிர்க்கு நீ இரங்கல் வேண்டுமோ
#73
புண்ணிய நறு நெயில் பொரு_இல் காலம் ஆம்
திண்ணிய திரியினில் விதி என் தீயினில்
எண்ணிய விளக்கு அவை இரண்டும் எஞ்சினால்
அண்ணலே அவிவதற்கு ஐயம் யாவதோ
#74
இவ் உலகத்தினும் இடருளே கிடந்து
அவ் உலகத்தினும் நரகின் ஆழ்ந்து பின்
வெவ் வினை துய்ப்பன விரிந்த யோனிகள்
எவ் அளவில் செல எண்ணல் ஆகுமோ
#75
உண்டு-கொல் இது அலது உதவி நீ செய்வது
எண் தகு குணத்தினாய் தாதை என்றலால்
புண்டரீகத் தனி முதற்கும் போக்கு_அரு
விண்டுவின் உலகிடை விளங்கினான் அரோ
#76
ஐய நீ யாது ஒன்றும் அவலிப்பாய்_அலை
உய்_திறம் அவற்கு இனி இதனின் ஊங்கு உண்டோ
செய்வன வரன் முறை திருத்திச் சேந்த நின்
கையினால் ஒழுக்குதி கடன் எலாம் என்றான்
#77
விண்ணு நீர் மொக்குளின் விளியும் யாக்கையை
எண்ணி நீ அழுங்குதல் இழுதைப்பாலதால்
கண்ணின் நீர் உகுத்தலின் கண்டது இல்லை போய்
மண்ணு நீர் உகுத்தி நீ மலர்க் கையால் என்றான்
#78
என்ற பின் ஏந்தலும் எழுந்து நான்மறை
பொன் திணிந்து அன சடைப் புனிதனோடும் போய்ச்
சென்றனர் செறி திரைப் புனலில் செய்க என
நின்றனர் இராமனும் நெறியை நோக்கினான்
#79
புக்கனன் புனலிடை முழுகிப் போந்தனன்
தக்க நல் மறையவன் சடங்கு காட்டத் தான்
முக் கையின் நீர் விதி முறையின் ஈந்தனன்
ஒக்க நின்று உயிர்-தொறும் உணர்வு நல்குவான்
#80
ஆனவன் பிற உள யாவும் ஆற்றிப் பின்
மான மந்திரத்தவர் மன்னர் மா தவர்
ஏனையர் பிறர்களும் சுற்ற ஏகினன்
சானகி இருந்த அச் சாலை எய்தினான்
#81
எய்திய வேலையில் தமியள் எய்திய
தையலை நோக்கினன் சாலை நோக்கினான்
கைகளின் கண்_மலர் புடைத்துக் கால் மிசை
ஐயன் அப் பரதன் வீழ்ந்து அரற்றினான் அரோ
#82
வெந் துயர் தொடர்தர விம்மி விம்மி நீர்
உந்திய நிரந்தரம் ஊற்று மாற்றில
சிந்திய குரிசில் அச் செம்மல் சேந்த கண்
இந்தியங்களில் எறி கடல் உண்டு என்னவே
#83
அ நெடும் துயருறும் அரிய வீரனைத்
தன் நெடும் தடக் கையால் இராமன் தாங்கினான்
நல் நெடும் கூந்தலை நோக்கி நாயகன்
என் நெடும் பிரிவினால் துஞ்சினான் என்றான்
#84
துண்ணெனும் நெஞ்சினாள் துளங்கினாள் துணைக்
கண் எனும் கடல் நெடும் கலுழி கான்றிட
மண் எனும் செவிலி மேல் வைத்த கையினாள்
பண் எனும் கிளவியால் பன்னி ஏங்கினாள்
#85
கல் நகு திரள் புயக் கணவன் பின் செல
நல் நகர் ஒத்தது நடந்த கானமும்
மன்னவன் துஞ்சினன் என்ற மாற்றத்தால்
அன்னமும் துயர்க் கடல் அடிவைத்தாள் அரோ
#86
ஆயவள்-தன்னை நேர்ந்து அங்கை ஏந்தினர்
தாயரின் முனிவர்-தம் தருமப் பன்னியர்
தூய நீர் ஆட்டினர் துயரம் நீக்கினர்
நாயகன் சேர்த்தினர் நவையுள் நீங்கினார்
#87
தேன் தரும் தெரியல் அச் செம்மல் நால்வரை
ஈன்றவர் மூவரோடு இருமை நோக்குறும்
சான்றவர் குழாத்தொடும் தருமம் நோக்கிய
தோன்றல்-பால் சுமந்திரன் தொழுது தோன்றினான்
#88
எந்தை யாண்டையான் இயம்புவீர் எனா
வந்த தாயர்-தம் வயங்கு சேவடிச்
சிந்தி நின்றனன் சேந்த கண்ண நீர்
முந்தை நான்முகத்தவற்கும் முந்தையான்
#89
தாயரும் தலைப்பெய்து தாம் தழீஇ
ஓய்வு_இல் துன்பினால் உரறல் ஓங்கினார்
ஆய சேனையும் அணங்கு_அனார்களும்
தீயில் வீழ்ந்து தீ மெழுகின் தேம்பினார்
#90
பின்னர் வீரரைப் பெற்ற பெற்றி அப்
பொன்_அனார்களும் சனகன் பூவையைத்
துன்னி மார்பு உறத் தொடர்ந்து புல்லினார்
இன்னல் வேலை புக்கு இழிந்து அழுந்துவார்
#91
சேனை வீரரும் திரு நல் மா நகர்
மான மாந்தரும் மற்றுளோர்களும்
ஏனை வேந்தரும் பிறரும் யாவரும்
கோனை எய்தினார் குறையும் சிந்தையார்
#92
படம் செய் நாகணைப் பள்ளி நீங்கினான்
இடம் செய் தொல் குலத்து இறைவன் ஆதலால்
தடம் செய் தேரினான் தானும் நீரினால்
கடம் செய்வான் எனக் கடலில் மூழ்கினான்
#93
அன்று தீர்ந்த பின் அரச வேலையும்
துன்று செம் சடைத் தவரும் சுற்றமும்
தன் துணைத் திருத் தம்பிமார்களும்
சென்று சூழ ஆண்டு இருந்த செம்மல்தான்
#94
வரதன் துஞ்சினான் வையம் ஆணையால்
சரதம் நின்னதே மகுடம் தாங்கலாய்
விரத வேடம் நீ என்-கொல் வேண்டினாய்
பரத கூறு எனாப் பரிந்து கூறினான்
#95
என்றலும் பதைத்து எழுந்து கைதொழா
நின்று தோன்றலை நெடிது நோக்கி நீ
அன்றி யாவரே அறத்து உளோர் அதில்
பின்றுவாய்-கொலாம் என்னப் பேசுவான்
#96
மனக்கு ஒன்றாதன வரத்தின் நின்னையும்
நினக்கு ஒன்றா நிலை நிறுவி நேமியான்
தனைக் கொன்றாள் தரும் தனையன் ஆதலால்
எனக்கு ஒன்றா தவம் அடுப்பது எண்ணினால்
#97
நோவது ஆக இவ் உலகை நோய் செய்த
பாவகாரியின் பிறந்த பாவியேன்
சாவது ஓர்கிலேன் தவம் செய்வேன்_அலேன்
யாவன் ஆகி இப் பழி-நின்று ஏறுவேன்
#98
நிறையின் நீங்கிய மகளிர் நீர்மையும்
பொறையின் நீங்கிய தவமும் பொங்கு அருள்
துறையின் நீங்கிய அறமும் தொல்லையோர்
முறையின் நீங்கிய அரசின் முந்துமோ
#99
பிறந்து நீ உடைப் பிரிவு_இல் தொல் பதம்
துறந்து மா தவம் தொடங்குவாய் என்றால்
மறந்து நீதியின் திறம்பி வாளின் கொன்று
அறம் தின்றான் என அரசு அது ஆள்வெனோ
#100
தொகை_இல் அன்பினால் இறைவன் துஞ்ச நீ
புகையும் வெம் சுரம் புகுத புந்தியால்
வகை_இல் வஞ்சனாய் அரசு வவ்வ யான்
பகைவனே-கொலாம் இறவு பார்க்கின்றேன்
#101
உந்தை தீமையும் உலகு உறாத நோய்
தந்த தீவினைத் தாய் செய் தீமையும்
எந்தை நீங்க மீண்டு அரசு செய்க எனா
சிந்தை யாவதும் தெரியக் கூறினான்
#102
சொற்ற வாசகத் துணிவு உணர்ந்த பின்
இற்றதோ இவன் மனம் என்று எண்ணுவான்
வெற்றி வீர யான் விளம்பக் கேள் எனா
முற்ற நோக்கினான் மொழிதல் மேயினான்
#103
முறையும் வாய்மையும் முயலும் நீதியும்
அறையும் மேன்மையோடு அறனும் ஆதி ஆம்
துறையுள் யாவையும் சுருதி நூல் விடா
இறைவர் ஏவலால் இயைவ காண்டியால்
#104
பரவு கேள்வியும் பழுது_இல் ஞானமும்
விரவு சீலமும் வினையின் மேன்மையும்
உர விலோய் தொழற்கு உரிய தேவரும்
குரவரே எனப் பெரிது கோடியால்
#105
அந்த நல் பெரும் குரவர் ஆர் எனச்
சிந்தை தேர்வுறத் தெரிய நோக்கினால்
தந்தை தாயர் என்று இவர்கள்தாம் அலால்
எந்தை கூற வேறு எவரும் இல்லையால்
#106
தாய் வரம் கொளத் தந்தை ஏவலால்
மேய நம் குலத் தருமம் மேவினேன்
நீ வரம் கொளத் தவிர்தல் நீர்மையோ
ஆய்வு_அரும் புலத்து அறிவு மேவினாய்
#107
தனையர் ஆயினார் தந்தை தாயரை
வினையின் நல்லது ஓர் இசையை வேய்தலோ
நினையல் ஓவிடா நெடிய வன் பழி
புனைதலோ ஐய புதல்வர் ஆதல்தான்
#108
இம்மை பொய் உரைத்து இவறி எந்தையார்
அம்மை வெம்மை சேர் நரகம் ஆள யான்
கொம்மை வெம் முலைக் குவையின் வைகி வாழ்
செம்மை சேர் நிலத்து அரசு செய்வெனோ
#109
வரன் நில் உந்தை சொல் மரபினால் உடைத்
தரணி நின்னது என்று இயைந்த தன்மையால்
உரனின் நீ பிறந்து உரிமை ஆதலால்
அரசு நின்னதே ஆள்க என்னவே
#110
முன்னர் வந்து உதித்து உலகம் மூன்றினும்
நின்னை ஒப்பு இலா நீ பிறந்த பார்
என்னது ஆகில் யான் இன்று தந்தனென்
மன்ன போந்து நீ மகுடம் சூடு எனா
#111
மலங்கி வையகம் வருந்தி வைக நீ
உலம் கொள் தோள் உனக்கு உறுவ செய்தியோ
கலங்குறாவணம் காத்தி போந்து எனா
பொலம் குலாவு தாள் பூண்டு வேண்டினான்
#112
பசைந்த சிந்தை நீ பரிவின் வையம் என்
வசம் செய்தால் அது முறைமையோ வசைக்கு
அசைந்த எந்தையார் அருள அன்று நான்
இசைந்த ஆண்டு எலாம் இன்றொடு ஏறுமோ
#113
வாய்மை என்னும் ஈது அன்றி வையகம்
தூய்மை என்னும் ஒன்று உண்மை சொல்லுமோ
தீமைதான் அதின் தீர்தல் அன்றியே
ஆய் மெய்யாக வேறு அறையல் ஆவதே
#114
எந்தை ஏவ ஆண்டு ஏழொடு ஏழ் எனா
வந்த காலம் நான் வனத்துள் வைக நீ
தந்த பாரகம்-தன்னை மெய்ம்மையால்
அந்த நாள் எலாம் ஆள் என் ஆணையால்
#115
மன்னவன் இருக்கவேயும் மணி அணி மகுடம் சூடுக
என்ன யான் இயைந்தது அன்னான் ஏயது மறுக்க அஞ்சி
அன்னது நினைந்தும் நீ என் ஆணையை மறுக்கலாமோ
சொன்னது செய்தி ஐய துயர் உழந்து அயரல் என்றான்
#116
ஒள்ளியோன் இனைய எல்லாம் உரைத்தலும் உரைக்கலுற்ற
பள்ள நீர் வெள்ளம் அன்ன பரதனை விலக்கிப் பண்டு
தெள்ளிய குலத்தோர் செய்கை சிக்கு_அற சிந்தை நோக்கி
வள்ளியோய் கேட்டி என்னா வசிட்ட மா முனிவன் சொன்னான்
#117
கிளர் அகன் புனலுள் நின்று அரி ஒர் கேழலாய்
இளை எனும் திருவினை ஏந்தினான் அரோ
உளைவு_அரும் பெருமை ஓர் எயிற்றின் உள்புரை
வளர் இளம் பிறையிடை மறுவின் தோன்றவே
#118
ஆதிய அமைதியின் இறுதி ஐம் பெரும்
பூதமும் வெளி ஒழித்து எவையும் புக்க பின்
நாதன் அவ் அகன் புனல் நல்கி நண்ண_அரும்
சோதி ஆம் தன்மையின் துயிறல் மேயினான்
#119
ஏற்ற இத் தன்மையின் அமரர்க்கு இன் அமுது
ஊற்றும் அக் கடவுள்-தன் உந்தி உந்திய
நூற்று இதழ்க் கமலத்தில் நொய்தின் யாவையும்
தோற்றுவித்து உதவிட முதல்வன் தோன்றினான்
#120
அன்று அவன் உலகினை அளிக்க ஆகியது
உன் தனிக் குலம் முதல் உள்ள வேந்தர்கள்
இன்றளவினும் முறை இகந்துளார் இலை
ஒன்று உளது உரை இனம் உணரக் கேட்டியால்
#121
இத இயல் இயற்றிய குரவர் யாரினும்
மத இயல் களிற்றினாய் மறு_இல் விஞ்சைகள்
பதவிய இருமையும் பயக்க பண்பினால்
உதவிய ஒருவனே உயரும் என்பரால்
#122
என்றலால் யான் உனை எடுத்து விஞ்சைகள்
ஒன்று அலாதன பல உதவிற்று உண்மையால்
அன்று எனாது இன்று எனது ஆணை ஐய நீ
நன்று போந்து அளி உனக்கு உரிய நாடு என்றான்
#123
கூறிய முனிவனைக் குவிந்த தாமரை
சீறிய கைகளால் தொழுது செங்கணான்
ஆறிய சிந்தனை அறிஞ ஒன்று உரை
கூறுவது உளது எனக் கூறல் மேயினான்
#124
சான்றவர் ஆகத் தன் குரவர் ஆகத் தாய்
போன்றவர் ஆக மெய் புதல்வர் ஆகத் தான்
தேன் தரு மலருளான் சிறுவ செய்வென் என்று
ஏன்ற பின் அவ் உரை மறுக்கும் ஈட்டதோ
#125
தாய் பணித்து உவந்தன தந்தை செய்க என
ஏய எப் பொருள்களும் இறைஞ்சி மேற்கொளாத்
தீய அப் புலையனின் செய்கை தேர்கிலா
நாய் எனத் திரிவது நல்லது அல்லதோ
#126
முன் உறப் பணித்தவர் மொழியை யான் எனச்
சென்னியில் கொண்டு அது செய்வென் என்றதன்
பின்னுறப் பணித்தனை பெருமையோய் எனக்கு
என் இனிச் செய்வகை உரைசெய் ஈங்கு என்றான்
#127
முனிவனும் உரைப்பது ஓர் முறைமை கண்டிலெம்
இனி என இருந்தனன் இளைய மைந்தனும்
அனையதேல் ஆள்பவர் ஆள்க நாடு நான்
பனி படர் காடு உடன் படர்தல் மெய் என்றான்
#128
அவ்வழி இமையவர் அறிந்து கூடினார்
இவ் வழி இராமனை இவன் கொண்டு ஏகுமேல்
செவ் வழித்து அன்று நம் செயல் என்று எண்ணினார்
கவ்வையர் விசும்பிடைக் கழறல் மேயினார்
#129
ஏத்த_அரும் பெரும் குணத்து இராமன் இவ் வழிப்
போத்தரும் தாதை சொல் புரக்கும் பூட்சியான்
ஆத்த ஆண்டு ஏழினொடு ஏழும் அ நிலம்
காத்தல் உன் கடன் இவை கடமை என்றனர்
#130
வானவர் உரைத்தலும் மறுக்கற்பாலது அன்று
யான் உனை இரந்தனென் இனி என் ஆணையால்
ஆனது ஓர் அமைதியின் அளித்தி பார் எனா
தான் அவன் துணை மலர்த் தடக் கை பற்றினான்
#131
ஆம் எனில் ஏழ்_இரண்டு ஆண்டில் ஐய நீ
நாம நீர் நெடு நகர் நண்ணி நானிலம்
கோ முறை புரிகிலை என்னின் கூர் எரி
சாம் இது சரதம் நின் ஆணை சாற்றினேன்
#132
என்பது சொல்லிய பரதன் யாதும் ஓர்
துன்பிலன் அவனது துணிவை நோக்கினான்
அன்பினன் உருகினன் அன்னது ஆக என்றான்
தன் புகழ் தன்னினும் பெரிய தன்மையான்
#133
விம்மினன் பரதனும் வேறு செய்வது ஒன்று
இன்மையின் அரிது என எண்ணி ஏங்குவான்
செம்மையின் திருவடித்தலம் தந்தீக என
எம்மையும் தருவன இரண்டும் நல்கினான்
#134
அடித்தலம் இரண்டையும் அழுத கண்ணினான்
முடித்தலம் இவை என முறையின் சூடினான்
படித்தலத்து இறைஞ்சினன் பரதன் போயினான்
பொடித் தலம் இலங்குறு பொலம் கொள் மேனியான்
#135
ஈன்றவர் முதலிய எண்_இல் சுற்றமும்
சான்றவர் குழுவொடு தவத்துளோர்களும்
வான் தரு சேனையும் மற்றும் சுற்றுற
மூன்று நூல் கிடந்த தோள் முனியும் போயினான்
#136
பண்டை நூல் தெரி பரத்துவனும் போயினான்
மண்டு நீர் நெடு நகர் மாந்தர் போயினார்
விண்டு உறை தேவரும் விலகிப் போயினார்
கொண்டல்-தன் ஆணையால் குகனும் போயினான்
#137
பாதுகம் தலைக் கொடு பரதன் பைம் புனல்
மோது கங்கையின் கரை கடந்து முந்தினான்
போது உகும் கடி பொழில் அயோத்தி புக்கிலன்
ஓது கங்குலில் நெடிது உறக்கம் நீங்கினான்
#138
நந்தி அம் பதியிடை நாதன் பாதுகம்
செம் தனிக் கோல் முறை செலுத்த சிந்தையான்
இந்தியங்களை அவித்து இருத்தல் மேயினான்
அந்தியும் பகலும் நீர் அறாத கண்ணினான்
#139
குன்றினில் இருந்தனன் என்னும் கொள்கையால்
நின்றவர் நலிவரால் நேயத்தால் எனா
தன் துணைத் தம்பியும் தானும் தையலும்
தென்திசை நெறியினைச் சேறல் மேயினான்
*** மிகைப் பாடல்கள்
&21 அயோத்தியா காண்டம்
@1. அயோத்தியா காண்டம் - மந்திரப்படலம் - மிகைப் பாடல்கள்
#1
மன்னனே அவனியை மகனுக்கு ஈந்து நீ
பன்ன_அரும் தவம் புரி பருவம் ஈது எனக்
கன்ன மூலத்தினில் கழற வந்து என
மின் எனக் கருமை போய் வெளுத்தது ஓர் மயிர்
#2
தீங்கு இழை இராவணன் செய்த தீமைதான்
ஆங்கு ஒரு நரையதுவாய் அணுகிற்றாம் எனப்
பாங்கில் வந்திடு நரை படிமக் கண்ணாடி
ஆங்கு அதில் கண்டனன் அவனி காவலன்
#3
எய்திய முனிவரன் இணை கொள் தாமரை
செய்ய பூம் கழலவன் சென்னி சேர்ந்த பின்
வையகத்து அரசரும் மதி_வல்லாளரும்
வெய்தினில் வருக என மேயினான் அரோ
#4
ஆளும் நல் நெறிக்கு அமைவரும் அமைவினன் ஆகி
நாளும் நல் தவம் புரிந்து நல் நளிர் மதிச் சடையோன்
தாளில் பூசையின் கங்கையைத் தந்து தந்தையரை
மீள்வு_இல் இன் உலகு ஏற்றினன் ஒரு மகன் மேல்_நாள்
#5
நறைக் குழல் சீதையும் ஞால நங்கையும்
மறுத்தும் இங்கு ஒருவற்கு மணத்தின்பாலரோ
கறுத்த மா மிடறு உடைக் கடவுள் கால வில்
இறுத்தவற்கு அன்றி என்று இரட்டர் கூறினார்
#6
ஏத்த வந்து உலகு எலாம் ஈன்ற வேந்தனைப்
பூத்தவன் அல்லனேல் புனித வேள்வியைக்
காத்தவன் உலகினைக் காத்தல் நன்று என
வேத்தவை வியப்புற விதர்ப்பர் கூறினார்
#7
பெருமையால் உலகினைப் பின்னும் முன்னும் நின்று
உரிமையோடு ஓம்புதற்கு உரிமை பூண்ட அத்
தருமமே தாங்கலில் தக்கது ஈண்டு ஒரு
கருமம் வேறு இலது எனக் கலிங்கர் கூறினார்
#8
கேடு அகல் படியினைக் கெடுத்துக் கேடு_இலா
தாடைகை வலிக்கு ஒரு சரம் அன்று ஏவிய
ஆடக வில்லிக்கே ஆக பார் எனாத்
தோடு அவிழ் மலர் முடி துருக்கர் சொல்லினர்
#9
கற்ற நான்மறையவர் கண்ணை மன் உயிர்
பெற்ற தாய் என அருள் பிறக்கும் வாரியை
உற்றதேல் உலகினில் உறுதி யாது எனக்
கொற்ற வேல் கனை கழல் குருக்கள் கூறினார்
#10
வாய் நனி புரந்த மா மனுவின் நூல் முறைத்
தாய் நனி புரந்தனை தரும வேலினாய்
நீ நனி புரத்தலின் நெடிது காலம் நின்
சேய் நனி புரக்க எனத் தெலுங்கர் கூறினார்
#11
வையமும் வானமும் மதியும் ஞாயிறும்
எய்திய எய்துப திகழும் யாண்டு எலாம்
நெய் தவழ் வேலினாய் நிற்கும் வாசகம்
செய் தவம் பெரிது எனச் சேரர் கூறினார்
#12
பேரிசை பெற்றனை பெறாதது என் இனி
சீரியது எண்ணினை செப்புகின்றது என்
ஆரிய நம் குடிக்கு அதிப நீயும் ஒர்
சூரியன் ஆம் எனச் சோழர் சொல்லினார்
#13
ஒன்றிய உவகையர் ஒருங்கு சிந்தையர்
தென் தமிழ் சேண் உற வளர்த்த தென்னரும்
என்றும் நின் புகழொடு தருமம் ஏமுற
நின்றது நிலை என நினைந்து கூறினார்
#14
வாள் தொழில் உழவ நீ உலகை வைகலும்
ஊட்டினை அருள் அமுது உரிமை மைந்தனைப்
பூட்டினை ஆதலின் பொரு_இல் நல் நெறி
காட்டினை நன்று எனக் கங்கர் கூறினர்
#15
தொழு கழல் வேந்த நின் தொல் குலத்துளோர்
முழுமுதல் இழித்தகை முறைமை ஆக்கி ஈண்டு
எழு முகில்_வண்ணனுக்கு அளித்த இச் செல்வம்
விழுமிது பெரிது என மிலேச்சர் கூறினார்
#16
கொங்கு அலர் நறு விரை கோதை மோலியாய்
சங்க நீர் உலகத்துள் தவத்தின் தன்மையால்
அங்கணன் அரசு செய்தருளும் ஆயிடின்
சிங்களர் இங்கு இதில் சிறந்தது இல் என்றார்
#17
ஆதியும் மனுவும் நின் அரிய மைந்தற்குப்
பாதியும் ஆகிலன் பரிந்து வாழ்த்தும் நல்
வேதியர் தவப் பயன் விளைந்ததாம் எனச்
சேதியர் சிந்தனை தெரியச் செப்பினார்
#18
அளம் படு குரை கடல் அகழி ஏழுடை
வளம் படு நெடு நில மன்னர்_மன்னனே
உளம் படிந்து உயிர் எலாம் உவப்பது ஓர் பொருள்
விளம்பினை பெரிது என விராடர் கூறினார்
@2. அயோத்தியா காண்டம் - மந்தரை சூழ்ச்சிப் படலம் - மிகைப் பாடல்கள்
#1
பொன்னும் மா மணியும் புனை சாந்தமும்
கன்னிமாரொடு காசினி ஈட்டமும்
இன்ன யாவையும் ஈந்தனள் அந்தணர்க்கு
அன்னமும் தளிர் ஆடையும் நல்கினாள்
#2
நல்கி நாயகன் நாள்_மலர்ப் பாதத்தைப்
புல்லிப் போற்றி வணங்கிப் புரை இலா
மல்லல் மாளிகைக் கோயில் வலங்கொளா
தொல்லை நோன்புகள் யாவும் தொடங்கினாள்
#3
கடி கமழ் தாரினான் கணித_மாக்களை
முடிவு உற நோக்கி ஓர் முகமன் கூறிப் பின்
வடி மழு_வாளவன் கடந்த மைந்தற்கு
முடி புனை முதன்மை நாள் மொழி-மின் என்றனன்
#4
ஆர்த்தனர் களித்தனர் ஆடிப் பாடினர்
வேர்த்தனர் தடித்தனர் சிலிர்த்து மெய் மயிர்
போர்த்தனர் மன்னனைப் புகழ்ந்து வாழ்த்தினர்
தூர்த்தனர் நீள் நிதி சொல்லினார்க்கு எலாம்
@3. அயோத்தியா காண்டம் - கைகேயி சூழ்வினைப் படலம் - மிகைப் பாடல்கள்
#1
வந்து மன் நகரில் தம்தம் வகைப்படும் உருவம் மாற்றிக்
சுந்தரத் தடம் தோள் மாந்தர் தொல் உருச் சுமந்து தோன்றாது
அந்தரத்து அமரர் சித்தர் அரம்பையர் ஆதி ஆக
இந்திரை கொழுநன் போற்றி இரைத்துமே எய்தி நின்றார்
@4. அயோத்தியா காண்டம் - நகர் நீங்கு படலம் - மிகைப் பாடல்கள்
#1
விழுந்து பார் மிசை வெய்து_உயிர்த்து ஆவி சோர்ந்து
எழுந்து என் நாயகனே துயர் ஏது எனாத்
தெளிந்திலேன் இது செப்புதி நீ எனா
அழுந்தினாள் பின்னர் அரற்றத் தொடங்கினாள்
#2
அன்னாள் இன்ன பன்னி அழியத் துயரால் மன்னர்
மன்னானவனும் இடரின் மயங்கி மைந்தா மைந்தா
முன்னே வனம் ஏகிடல் நீ முறையோ முதல்வா முறையோ
என்னே யான் செய் குறைதான் என்றே இரங்கி மொழிவான்
#3
உணர்வு ஏதும் இலாள் உரையால் உரை சால் குமரன் நெடு நாள்
புணரான் நிலம் மா வனமே போவானேயாம் என்னில்
இணரே பொலி தார் நிருபா இடரால் அயர்வாய் இதுவும்
துணையோ துணைவா என்றாள் துயரேல் துயரேல் என்றான்
#4
சேலாகிய மா முதல்வன் திரு உந்தியின் நீள் மலரின்
மேலாகிய நான்முகனால் வேதங்களின் மா முறையின்
பாலாகிய யோனிகளின் பலவாம் வருணம் தருவான்
நாலாகியதாம் வருணன்-தனின் முன் எமை நல்கினனால்
#5
அ நான்மறையோன் வழியில் அருள் காசிபன் நல் மைந்தன்
மின் ஆர் புரி நூல் மார்பன் விருத்தேசனன் மெய்ப் புதல்வன்
நல் நான்மறை நூல் தெரியும் நாவான் சலபோசன் எனச்
சொன்னான் முனிவன் தரு சுரோசனன் யான் என்றான்
#6
தாவாத அரும் தவர் சொல் தவறாததனால் தமியேன்
சாவாதவரும் உளரோ தண்டா மகவு உண்டு என்றே
ஓவாதார் முன் நின்றே ஒரு சொல் உடையாது அவரும்
பூவார் அனலுள் பொன்றிப் பொன்_நாடதனில் புக்கார்
#7
இ மா மொழி தந்து அரசன் இடர் உற்றிடும் போழ்தினில் அச்
செ மா மயில் கோசலையும் திகையா உணர்வு ஓவினளாய்
மெய்ம் மாண் நெறியும் விதியின் விளைவும் தளர்வின்றி உணரும்
அம் மா தவனும் விரைவோடு அவலம் தரு நெஞ்சினனாய்
#8
என்றுஎன்று சீற்றத்து இளையோன் இது இயம்பிடா முன்
கன்று ஒன்றும் ஆவின் பல யோனியும் காத்த நேமி
வன் திண் சிலைக் கைம் மனு என்னும் வயங்கு சீர்த்திக்
குன்று ஒன்று தோளான் மருமான் இவை கூறலுற்றான்
#9
ஆய் தந்த மென் சீரை அணிந்து அடி தாழ்ந்து நின்ற
சேய் உந்து நிலை நோக்கினன் சேய் அரி கண்கள் தேம்ப
வேய் தந்த மென் தோளி தன் மென் முலை பால் உகுப்பத்
தாய் நிந்தை இன்றிப் பல ஊழி தழைத்தி என்றாள்
#10
மாறு இனி என்னை நீ வனம் கொள்வாய் என
ஏறின வெகுளியை யாதும் முற்றுற
ஆறினை தவிர்க என ஐய ஆணையின்
கூறிய மொழியினும் கொடியது ஆம் என்றான்
#11
வானமே அனையதோர் கருணை மாண்பு அலால்
ஊனம் வேறு இலானுடன் உலகம் யாவையும்
கானமே புகும் எனில் காதல் மைந்தனும்
தானுமே ஆளும்-கொல் தரை என்றார் சிலர்
#12
பிறிது ஓர் மாற்றம் பெருந்தகை பேசலன்
மறுகி வீழ்ந்து அழ மைந்தரும் மாதரும்
செறுவின் வீழ்ந்த நெடும் தெருச் சென்றனன்
நெறி பெறாமை அரிதினின் நீங்குவான்
#13
போயினான் நகர் நீங்கி பொலிதரு
தூய பேரொளி ஆகி துலங்கு அருள்
ஆய மூவரும் ஆகி உயிர் தொகைக்கு
ஆயும் ஆகி அளித்து அருள் ஆதியான்
@5. அயோத்தியா காண்டம் சுமந்திரன் மீட்சிப் படலம் - மிகைப் பாடல்கள்
#1
தொடுத்த கல் இடைச் சிலர் துவண்டனர் துயின்றார்
அடுத்த அடையில் சிலர் அழிந்தனர் அயர்ந்தார்
உடுத்த துகில் சுற்று ஒரு தலை சிலர் உறைந்தார்
படுத்த தளிரில் சிலர் பசைந்தனர் அசந்தார்
#2
ஒரு திறத்து உயிர் எலாம் புரந்து மற்று அவண்
இரு திறத்து உள வினை இயற்றும் எம்பிரான்
தரு திறத்து ஏவலைத் தாங்கி தாழ்வு_இலாப்
பொரு திறல் சுமந்திரன் போய பின்னரே
@6. அயோத்தியா காண்டம் - தசரதன் மோட்சப் படலம் - மிகைப் பாடல்கள்
#1
துந்துமி முழங்க தேவர் தூய் மலர் பொழிந்து வாழ்த்த
சந்திர வதனத்து ஏயும் அரம்பையர் தழுவத் தங்கள்
முந்து தொல் குலத்துளோரும் முக்கணான் கணமும் சூழ
அந்தரத்து அரசன் சென்றான் ஆன தேர்ப்பாகன் சொல்லால்
#2
வந்த முனிவன் வரம் கொடுத்து மகனை நீத்த வன்கண்மை
எந்தை தீர்த்தான் என உள்ளத்து எண்ணிஎண்ணி இரங்குவான்
உந்து கடலில் பெரும் கலம் ஒன்று உடையாநிற்கத் தனி நாய்கன்
நைந்து நீங்கச் செயல் ஓரா மீகாமனைப் போல் நலிவுற்றான்
@7. அயோத்தியா காண்டம் - கங்கைப் படலம் - மிகைப் பாடல்கள்
#1
அன்ன காரணத்து ஐயனும் ஆங்கு அவர்
உன்னு பூசனை யாவும் உவந்த பின்
மின்னு செம் சடை மெய்த் தவர் வேண்டிடப்
பன்னசாலையின் பாடு இருந்தான் அரோ
@8. அயோத்தியா காண்டம் - குகப் படலம் - மிகைப் பாடல்கள்
#1
ஊற்றமே மிக ஊனொடு மீன் நுகர்
நாற்றம் மேய நகை_இல் முகத்தினான்
சீற்றம் இன்றியும் தீ எழ நோக்குவான்
கூற்றம் அஞ்சக் குமுறும் குரலினான்
#2
நின்றான் நெஞ்சில் நிரம்புறும் அன்பால்
இன்றே நின் பணி செய்திட இறைவா
நன்றே வந்தனென் நாய் அடியேன் யான்
என்றே கூவினன் எயினரின் இறையோன்
#3
அடி தொழுது உவகை தூண்ட அழைத்தனன் ஆழி அன்ன
துடி உடைச் சேனை வெள்ளம் பள்ளியைச் சுற்ற ஏவி
வடி சிலை பிடித்து வாளும் வீக்கி வாய் அம்பு பற்றி
இடி உடை மேகம் என்ன இரைத்து அவண் காத்து நின்றான்
#4
வெயில் விரி கனகக் குன்றத்து எழில் கெட விலகு சோதிக்
கயில் விரி வயிரப் பைம் பூண் கடும் திறல் மடங்கல் அன்னான்
துயில் எனும் அணங்கு வந்து தோன்றலும் அவளை நாமே
எயில் உடை அயோத்தி மூதூர் எய்து நாள் எய்துக என்றான்
#5
மறக் கண் வாள் இளைய வீரன் ஆணையை மறுத்தல் செல்லா
உறக்க மா மாதும் அண்ணல் உபய பங்கயங்கள் போற்றித்
துறக்கமாம் என்னல் ஆய தூய் மதில் அயோத்தி எய்தி
இறுக்கும் நாள் எந்தை பாதம் எய்துவல் என்னப் போனாள்
#6
மற்றவள் இறைஞ்சி ஏக மா மலர்த் தவிசின் நீங்காப்
பொற்றொடியோடும் ஐயன் துயில்தரும் புன்மை நோக்கி
இற்றது ஓர் நெஞ்சன் ஆகி இரு கண் நீர் அருவி சோர
உற்ற ஓவியம் அது என்ன ஒரு சிலை அதனின் நின்றான்
@10. அயோத்தியா காண்டம் - சித்திரகூடப் படலம் - மிகைப் பாடல்கள்
#1
நெய் கொள் நீர் உண்டு நெருப்பு உண்டு நீண்டு மை நிறைந்த
வை கொள் வேல் எனக் காலனும் மறுகுறும் கண்ணாய்
மெய்கள் நோகின்ற பிடிகளை விரும்பிய வேழம்
கைகள் நோகில தாங்கின நிற்பன காணாய்
#2
விடம் கொள் நோக்கி நின் இடையினை மின் என வெருவி
படம் கொள் நாகங்கள் முழை புகப் பதைப்பன பாராய்
மடங்கல் ஆளிகள் எனக் கொடு மழை இனம் முழங்க
கடம் கொள் கார் மதக் கைம்மலை இரிவன காணாய்
#3
எய்த இன்னல் வந்த போது யாவரேனும் யாவையும்
செய்ய வல்லர் என்று கொள்க சேண் நெறிக்-கண் நீங்கிட
மைய கண்ணி செய்ய பாதம் வல்ல ஆய எம்பி-தன்
கைகள் இன்று பன்னசாலை கட்ட வல்ல ஆயவே
#4
தினைத்துணை வயிறு அலாச் சிற்றெறும்புகள்
வனத்திடைக் கரிகளை வருத்தி வாழ்வன
அனைத்து உள உயிர்களும் யாவும் அங்ஙனே
மனத்து இடர் நீங்கினார் இல்லை மன்னனே
@11. அயோத்தியா காண்டம் - பள்ளிபடைப் படலம் - மிகைப் பாடல்கள்
#1
பொரு_இல் தூதுவர் போயினர் பொய் இலார்
இரவும் நன் பகலும் கடிது ஏகினர்
பரதன் கோயில் உற்றார் படிகாரிர் எம்
வரவு சொல்லு-மின் மன்னவற்கே என்றார்
#2
ஆய காதல் தனையனைத் தந்த அத்
தூய தையல் தொழிலுறுவார் உனைக்
கூயள் அன்னை என்றே சென்று கூறலும்
ஏய அன்பினன்தானும் சென்று எய்தினான்
#3
கவ்வு அரவு இது என இருந்திர் கற்பு எனும்
அவ் வரம்பு அழித்து உமை அகத்து உளே வைத்த
வெவ் அரம் பொருத வேல் அரசை வேரறுத்து
இவ் வரம் கொண்ட நீர் இனி என் கோடிரோ
#4
பொய்க்கரி கூறினோன் போருக்கு அஞ்சினோன்
கைக் கொளும் அடைக்கலம் கரந்து வவ்வினோன்
எய்த்த இடத்து இடர் செய்தோன் என்று இன்னோர் புகும்
மெய்க் கொடு நரகிடை விரைவின் வீழ்க யான்
#5
தீ அன கொடியவள் செய்த செய்கையை
நாயினேன் உணரின் நல் நெறியின் நீங்கலாத்
தூயவர்க்கு இடர் இழைத்து உழலும் தோமுடை
ஆயவர் வீழ் கதியதனின் வீழ்க யான்
#6
எனை பல சூழ் உரைத்து என்னை ஈன்றவள்
வினை திறத்து அரசினை விரும்பில் அன்னை கேள்
அனைத்து உள நரகு எனக்கு ஆக என்று அவள்
பனி கமல பதம் பணிந்து இறைஞ்சினாள்
#7
செம்மை நல் மனத்து அண்ணல் செய்கையும்
அம்மை தீமையும் அறிதல் தேற்றினாள்
கொம்மை வெம் முலை குமுறு பால் உக
விம்மிவிம்மி நின்று இவை விளம்புவாள்
#8
உன்னி நைந்து உளைந்து உருகி அன்பு கூர்
அன்னை தாளில் வீழ்ந்து இளைய அண்ணலும்
சொன்ன நீர்மையால் தொழுது மாழ்கினான்
இன்ன வேலை-வாய் முனிவன் எய்தினான்
#9
வந்த மா தவன் தாளில் வள்ளல் வீழ்ந்து
எந்தை யாண்டையான் இயம்புவீர் எனா
நொந்து மாழ்கினான் நுவல்வது ஓர்கிலா
அந்த மா தவன் அழுது புல்லினான்
#10
உந்து பொன் தடம் தேர்_வலானொடும்
மந்திரப் பெரும் தலைவர் மற்றுளோர்
தந்திரத் தனித் தலைவர் நண்பினோர்
வந்து சுற்றும் உற்று அழுது மாழ்கினார்
#11
என்று கொண்டு மா தவன் இயம்பலும்
நின்றுநின்று தான் நெடிது உயிர்த்தனன்
நன்றுநன்று எனா நகை முகிழ்த்தனன்
குன்று குன்றுறக் குலவு தோளினான்
#12
அன்னதாக அங்கு ஆறு பத்து எனச்
சொன்ன ஆயிரம் தோகைமார்களும்
துன்னி வந்தனர் சோர்வு இலாது அவர்
மின்னும் வாள் எரி மீது வீழவே
#13
முற்றும் முற்றுவித்து உதவி மும்மை நூல்
சுற்றம் யாவையும் தொடரத் தோன்றினான்
வெற்றி மா தவன் வினை முடித்த அக்
கொற்ற வேல் நெடும் குமரன் கூறுவான்
#14
மன்னர் இன்றியே வையம் வைகல்தான்
தொன்மை அன்று எனத் துணியும் நெஞ்சினார்
அன்ன மா நிலத்து அறிஞர்-தம்மொடும்
முன்னை மந்திரக் கிழவர் முந்தினார்
@12. அயோத்தியா காண்டம் - ஆறுசெல் படலம் - மிகைப் பாடல்கள்
#1
ஆதலால் முனியும் என்று ஐயன் அந்தம்_இல்
வேதனைக் கூனியை வெகுண்டும் என்னினும்
கோது_இலா அரு மறை குலவும் நூல்_வலாய்
போதும் நாம் என்று கொண்டு அரிதின் போயினான்
@13. அயோத்தியா காண்டம் கங்கை காண் படலம் - மிகைப் பாடல்கள்
#1
வந்து எதிரே விழுந்தவனும் வணங்கினான் வணங்கா முன்
சந்த நெடும் திரள் புயத்தான் தழுவினான் தழுவிய பின்
இந்த இடர் வடிவுடன் நீ எங்கு எழுந்தாய் இமையோர்-தம்
சிந்தையினும் சென்னியினும் வீற்றிருக்கும் சீர்த்தியாய்
#2
ஏறினர் இளவலோடு இரங்கு நெஞ்சு கொண்டு
ஊறிய தாயரும் உரிய சுற்றமும்
பேறு உள பெரு நதி நீங்கி பெட்பொடும்
கூறு தென் கரையிடைக் குழீஇய போதிலே
#3
தன் அன தம்பியும் தாயர் மூவரும்
சொன்ன தேர்_வலவனும் தூய தோழனும்
துன்னியர் ஏறலும் துழா துடுப்பு எனும்
நல் நயக் காலினால் நடத்தல் மேயினான்
@14. அயோத்தியா காண்டம் திருவடி சூட்டுப் படலம் - மிகைப் பாடல்கள்
#1
அன்ன காதல் அரும் தவர் ஆண் தகை
நின்னை ஒப்பவர் யார் உளர் நீ அலால்
என்ன வாழ்த்திடும் ஏல்வையில் இரவியும்
பொன்னின் மேருவில் போய் மறைந்திட்டதே
#2
இன்ன ஆய எறி கடல் சேனையும்
மன்னர் யாவரும் மன் இளம் தோன்றலும்
அன்ன மா முனியோடு எழுந்து ஆண்தகை
துன்னு நீள் வரைக்கு ஏகிய சொல்லுவாம்
#3
குதித்தனன் பாரிடை குவடு நீறு எழ
மிதித்தனன் இராமனை விரைவின் எய்தினான்
மதித்திலன் பரதன் நின் மேல் வந்தான் மதில்
பதிப் பெரும் சேனையின் பரப்பினான் என்றான்
#4
கோடகத் தேர் படு குதிரை தாவிய
ஆடகத் தட்டிடை அலகை அற்று உகு
கேடகத் தடக் கைகள் கவ்வி கீதத்தின்
நாடகம் நடிப்பன காண்டி நாத நீ
#5
ஐய நின்னுடைய அன்னை மூவரும்
வைய மன்னரும் மற்றும் மாக்களும்
துய்ய நாடு ஒரீஇத் தோன்றினார் அவர்க்கு
உய்ய நல் அருள் உதவுவாய் என்றான்
#6
கங்குல் வந்திடக் கண்டு யாவரும்
அங்கணே துயில் அமைய ஆர் இருள்
பொங்கு வெம் பகை போக மற்றை நாள்
செம் கதிர் குண திசையில் தோன்றினான்
#7
வானின் நுந்தை சொல் மரபினால் உடைத்
தானம் நின்னது என்று இயைந்த தன்மையால்
ஊனினில் பிறந்து உரிமையாகையின்
யான் அது ஆள்கிலேன் என அவன் சொல்வான்
**