<<முந்திய பக்கம்

சொற்பிரிப்பு நெறிகள்

தமிழ் மொழியில் உள்ள புணர்ச்சி விதிகளால், தமிழ் இலக்கியங்களின் மரபு வழி மூலங்களைப் படித்துப் புரிந்துகொள்வது மிகவும் கடினமாக அமைகின்றது. கூருகிர் ஞமலிக் கொடுந்தா ளேற்றை யேழகத் தகரோ டுகளு முன்றிற் -- பட்டினப்பாலை 140, 141 என்ற வரிகளில் பெரும்பாலும் இயல்புப் புணர்ச்சிகளே இருப்பினும், மனத்திற்குள்ளேனும் இந்தப் புணர்ச்சிகளைப் பிரித்த பின்னரே சொற்பொருள் காண்பது எளிதாக அமையும். சொல்லாய்வாளர்கள், குறிப்பாக, சொற்கணக்கீட்டாளர்கள் செய்யும் முதற் பணியே இவ்விலக்கிய வரிகளைத் தனித்தனிச் சொற்களாகப் பிரித்துக்கொள்வது தான். இத்தகைய ஆய்வுகளுக்குத் துணைபுரியும் வண்ணமாக சொற்பிரிப்புப் பதிப்புகள் பல வந்திருக்கின்றன. அவற்றில் முதன்மையானது மர்ரே எஸ்.ராஜம் நிறுவனத்தாரின் பதிப்புக்களே. எனினும், இப்பதிப்புக்களில் உள்ள குறைபாடுகளை முத்துச்சண்முகன், மாதையன் போன்றோர் சுட்டிக் காண்பித்துள்ளனர். சங்க இலக்கியங்களின் சொல்லடைவை உருவாக்கியிருக்கும் Thomas Lehmann and Thomas Malten (ஆசியவியல் நிறுவன வெளியீடு) மற்றும் மாதையன் (தமிழ்ப் பல்கலைக் கழக வெளியீடு) ஆகியோர் தங்கள் நூற்களில், சொற்பிரிப்புக்காகத் தாங்கள் கையாண்டுள்ள நெறிகளைக் குறிப்பிட்டுள்ளனர். ஆனால் இந்த நெறிகள் ஆசிரியருக்குத் தகுந்தவாறு, தேவைக்குத் தகுந்தவாறு வேறுபடலாம். குறிப்பாக, சொற்களின் எண்ணிக்கை பற்றிய ஆய்வு செய்வோர், மிக அதிகமாக அல்லது மிகக் குறைவாக வழங்கும் சொற்களைக் கணக்கிடுவதில் மிகவும் கவனத்தோடு செயல்பட வேண்டும். ஒரு குறிப்பிட்ட நூலாசிரியரின் சொல்வளம் (vocabulary) பற்றிய ஆய்வில் சொற்களைப் பிரிப்பதிலும் அல்லது பிரிக்காமல் இருப்பதிலும் பலவித மயக்கங்கள் (ambiguities) வரலாம். எனவே, மேற்குறிப்பிட்டுள்ள சொற்பிரிப்பு நெறிகள் இரண்டினையும் கருத்திற் கொண்டு, அவற்றை ஒட்டியும், அவற்றிலிருந்து மாறுபட்டும், இவ் ஆய்விற்கான சொற்பிரிப்பு நெறிகள் உருவாக்கப்பட்டுள்ளன. ஒரு சொல்லைத் தக்க இடத்தில் பயன்படுத்துவதில் ஆசிரியருக்கு உரிமையுண்டு. ‘கண்' என்பதற்குப் பதிலாக ‘விழி' என்றும் ஆசிரியர் அழைக்கலாம். எனவே ‘கண்', ‘விழி' என்ற சொற்களின் எண்ணிக்கை ஆசிரியரின் நடையை விளக்கவும் புரிந்துகொள்ளவும் உதவும். இது அவரின் சொல்வளத்திற்கு ஓர் அளவுகோலாகவும் அமையும். ஆனால், வேற்றுமை உருபுகள், கால இடைநிலைகள், விகுதிகள் போன்றவற்றை வேர்ச்சொல்லோடு சேர்த்துப் பயன்படுத்துவதில் ஆசிரியருக்கு உரிமையில்லை. காட்டாக, கண்ணை, கண்ணோடு, கண்ணால், கண்ணுக்கு என்பவை தனிச்சொற்களாகவே கொள்ளப்பட்டாலும், இவை ‘கண்' என்ற ஒரு சொல்லின் இலக்கண வேறுபாடுகளே (grammatical variations). எனவே, அத்தகைய சொற்களைத் தனிச்சொற்களாகக் கொண்டு அவற்றின் எண்ணிக்கையை ஆசிரியரின் சொல்லாட்சிக்கு அளவுகோலாகக் கொள்ளக்கூடாது. இச் சொற்கள் ‘கண்' என்ற பெயர்ச்சொல் வகுப்பை (word class)ச் சேர்ந்தவையே. எனவே, சொல் எண்ணிக்கையோடு (word frequency), சொல் வகுப்பு எண்ணிக்கையும் (word class frequency) முக்கியமானதே. காட்டாக, வர, வந்து, வரும், வந்தான் போன்றவை ‘வா' என்ற வினைச்சொல் வகுப்பைச் சேர்ந்தவையாதலால், இவை அனைத்தின் கூட்டுத்தொகையே, ‘வா' என்ற வினைச்சொல் வகுப்பின் எண்ணிக்கையாகக் கொள்ளப்பெறும். ஆனால், வந்தவன், வருகின்றவன், வந்தோன் போன்றவை பெயர்ச்சொற்களாதலால், இவை அவ் வகுப்பில் சேரா. எனினும், இவையும் ‘வா' என்ற வினைச்சொல்லின் அடியாகப் பிறந்தவையே. எனவே, ‘வா' என்ற வினைச்சொல்லை அடியாகக் கொண்டு பிறந்த வினையாலணையும் பெயர், அன்மொழித்தொகை போன்ற சொற்களுமே, ஒரு சொல் குடும்பத்தைச் (word family) சேர்ந்தவையாகக் கொள்ளப்பெறும். ஆனால், வருகை, வரவு போன்ற தொழிற் பெயர்கள் வெவ்வேறு சொற்களாகவே கொள்ளப்பெறும். சொற்களின் எண்ணிக்கை மட்டுமே சொல்லாராய்ச்சிக்கு அவ்வளவாக உதவமுடியாது. ஒரு சொல் எந்தப் பொருளில் எத்தனை முறை பயன்படுத்தப்பட்டுள்ளது என்பதுவும் முக்கியமானதே. காட்டாக, ‘அகல்' என்ற சொல், (1) ‘நீங்கு' (புலம்பு சேண் அகல புதுவிர் ஆகுவிர் - மலை 412), (2) ‘அகலமான' (அகல் இரு வானத்துக் குறைவில் ஏய்ப்ப - பெரும் 292), (3) ‘பாத்திரம்' (ஐ அகல் நிறைய நெய் சொரிந்து - நெடு 102) என்ற பல்வேறுபட்ட பொருள்களில் வரக்காணலாம். மேலும், ஒவ்வொரு பொருளுக்கும் இலக்கண மாறுபாடுகள் வரலாம். 1.அகன்மின், அகன்று, அகன்ற, அகறிரோ - 2. அகலமான, அகன்ற, அகன் - 3. அகலில், அகலை, அகலுள் எனவே சொற்பொருள் சார்ந்த சொல் வகுப்பு எண்ணிக்கைகளும் ஆய்வுக்குத் தேவையானவையே. ஆனால் இத் தொகுப்பில் இந்த வகைக் கணக்கீடு செய்யப்படவில்லை. அடிப்படை ஆய்வுக்கான சொற்களின் எண்ணிக்கை மட்டுமே இங்கு கணக்கிடப்பட்டுள்ளது. இனி, இத் தொகுப்பில் கையாளப்பட்டுள்ள சொற்பிரிப்பு நெறிகளைக் காண்போம். நெறி 1 - புணர்ச்சி விதிகளைக் களைதல். தமிழ் இலக்கண விதிகளின்படி சொற்சேர்க்கையின் போது நிகழும் மாற்றங்கள் இலக்கணம் சார்ந்தவை. எனவே, இவற்றை முற்றும் களைவது அவசியம். காட்டாக, குழலினி தியாழினி தென்பதம் மக்கண் மழலைச்சொற் கேளா தவர் - குறள் - புதல்வரைப்பெறுதல் - 6 என்ற குறள் குழல் இனிது யாழ் இனிது என்ப தம் மக்கள் மழலை சொல் கேளாதவர் என்று பிரிக்கப்படுகிறது. ஆனால், சில சிக்கலான இடங்களும் உண்டு. ‘பண்புடை மக்கட் பெறின்' என்பதில், ‘மக்கட்' என்பது ‘மக்களை' என்ற பொருள் தருகிறது. ஆனால், ‘மக்கள் பெறின்' என்பதில் ‘மக்கள்' என்பது எழுவாயாகத் தோன்றி வேறு பொருள் தரக்கூடிய நிலையும் உள்ளது. எனினும், சொல்லாய்வுக்காகப் பிரிக்க நேரிடுகையில், இதனை ‘மக்கள் பெறின்' என்றே கொள்ளவேண்டியுள்ளது. ஒற்று மிகுகின்ற இடங்களிலெல்லாம் அவை நீக்கப்பெறுகின்றன. மழலைச் சொல் -> மழலை சொல் சொற்கள் புணரும்போது ஏற்படும் ‘இயல்பான' மாற்றங்கள் இங்கு களையப்படுகின்றன. பொற்சிலம்பு -> பொன் சிலம்பு கட்புலன் -> கண் புலன் பெருஞ்சிறப்பு -> பெரும் சிறப்பு நெறி 2 - வேற்றுமை உருபுகள் . வேற்றுமை உருபுகள் பெயர்ச்சொல்லின் பயன்பாட்டை விளக்கிநிற்பன. எனவே எந்தவொரு வேற்றுமை உருபும் பெயர்ச்சொல்லிலிருந்து பிரிக்கப்படவில்லை. சில வேற்றுமை உருபுகள் தனிச் சொற்களாக (free forms) வரும் வாய்ப்புக்களும் உண்டு. இருப்பினும், அவை பெயர்சொற்களோடு சேர்த்தே கொள்ளப்பட்டுள்ளன. எனினும், சொல் எண்ணிக்கையைப் பொருத்த அளவில், இந்த உருபுகள் தனிச்சொற்களாக வருமிடங்கள் எத்தனை, உருபுகளாக வருமிடங்கள் எத்தனை என்ற எண்ணிக்கை தேவைப்படலாம். காட்டாக, ‘கண்' என்ற ஏழன் உருபு ‘அதன்கண்' என்பது போன்று வருமிடங்களில் ‘அதன்-கண்' என்று எடுக்கப்பட்டுள்ளது. இந்நூலில், இத்தகைய சொல்உருபுகளின் எண்ணிக்கைகளும் தனியே கொடுக்கப்பட்டுள்ளன. நெறி 3 - கூட்டுச்சொற்கள் (Compound words) அ. நேர்ப்பொருள் கூட்டுச்சொற்கள் சொற்பிரிப்பில் மிகப் பெரும்பாலான சிக்கல்கள் கூட்டுச்சொற்களின் போது தான் ஏற்படுகின்றன. இத்தகைய சொற்களைப் பிரிப்பதற்கான நெறிமுறைகள் ஏற்படுத்தப் பெறினும், அந்த நெறிமுறைகளுக்குள் சில கூட்டுச்சொற்கள் அடங்குமா என்பதுவே விவாதத்திற்குரியதாகிவிடும். பொதுவாக, சொற்கள் சேரும்போது, அச்சேர்க்கை ஒரு புதிய பொருளை உணர்த்துவதாக அமையும். ஆனால், சில சேர்க்கைகள், அச்சொற்களின் கூட்டுப்பொருளையே உணர்த்திநிற்கும். தலைநாள், வழிநாள், முன்நாள் போன்றன அப்படிப்பட்டவை. நாள்மலர், நாள்மீன், கோள்மீன், நாளங்காடி, அல்லங்காடி, முழுமுதல், கடிமரம் போன்றவையும் அப்படிப்பட்டவையே. இவற்றில் சில அந்நாட்களில் பெருவழக்குள்ளதாக அமையப்பெற்றிருக்கலாம். எனவே, இவை ஒரே சொல்லாகக் கையாளப்பட்டிருக்கலாம். எனினும், சேமச்செப்பு, அல்கிரை குப்பைவேளை, குப்பைக்கீரை, குமரிமூத்த, தலைநாள்வேட்டம், நாள்மகிழிருக்கை, புன்புலம், அகன்றலை, நனந்தலை போன்றவை விவாதத்திற்குரியவை. சொல்லடைவாளர்களால் இவற்றில் சில பிரிக்கப்பட்டும், பிரிக்கப்படாமலும் எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளன. காட்டாக, தமிழ்ப் பல்கலைக்கழகச் சொல்லடைவில், வழிநாள், முன்நாள் ஆகியவை பிரிக்கப்படாமலும், தலைநாள் பிரிக்கப்பட்டும் உள்ளன. குப்பைவேளை என்ற சொல் ஆசிய நிறுவனச் சொல்லடைவில் பிரிக்கப்பட்டும், தமிழ்ப்பல்கலைக்கழகச் சொல்லடைவில் பிரிக்கப்படாமலும் உள்ளது. கெட்டாங்கு என்பது ஆசிய நிறுவனச் சொல்லடைவில் பிரிக்கப்படாமலும், தமிழ்ப்பல்கலைக்கழகச் சொல்லடைவில் பிரிக்கப்பட்டும் உள்ளது. ஆசிய நிறுவனச் சொல்லடைவில் கானக்கோழி (மலை 510) பிரிக்கப்படாமலும், பொரு 222-இல் வரும் அதே சொல் பிரிக்கப்பட்டும் உள்ளது. ‘தளையவிழ்' என்ற சொல் ‘மலர்' என்ற வினைச்சொற் பொருளில் கையாளப்படுகிறது. காட்டாக, தளையவிழ் தெரியல் தகையோர் பாடி - சிறு 161 என்ற வரியில், ஓசை நயத்திற்காக, மலர்தல் என்பது தளையவிழ்தல் என்று விரித்துக் கூறப்பட்டிருப்பதாகத் தோன்றுகிறது. காமர் கயல்புரள காவி முகைநெகிழ தாமரையின் செந்தேன் தளையவிழ - நள 19 என்ற விடத்து ‘தளை (கொஞ்சம் கொஞ்சமாக) அவிழ்ந்தது' எனக் கொள்ளும்போது பிறக்கும் செய்யுளின்பம் இதனை ஒரே சொல்லாகக் கொள்ளும்போது கிடைக்குமா என்பது ஐயமே. தமிழ்ப் பல்கலைக்கழகச் சொல்லடைவு இதனை ஒரே சொல்லாகக் கொள்கிறது. ஆனால், குறுநர் இட்ட கூம்பு விடு பன் மலர் - பெரும் 295 ஆம்பல் ஆய் இதழ் கூம்பு விட - குறி 223 போது பிணி விட்ட கமழ் நறும் பொய்கை - மது 654 என்ற இடங்களில் கூம்புவிடு/பிணிவிடு என்பனவும் தளையவிழ் போன்றே வந்திடினும், இச்சொற்கள் இச்சொல்லடைவில் பிரிக்கப்பட்டுள்ளன. மேற்கூறிய நூற்கள் பெரு முயற்சியினாலேயே உருவாக்கப்பட்டுள்ளன என்பது உண்மையே. ஆயினும், இவை இந்நூற்களின் குறைகள் என்பதை விட, இம்மாதிரிச் சொற்கள் குழப்பம் விளைவிப்பவை என்பதைக் காட்டுவதற்காகவே இவை குறிப்பிடப்படுகின்றன. இத்தகைய குறைகள் இந்தத் தொகுப்பிலும் காணப்படலாம். எனவே, சங்க இலக்கியங்களைப் பொருத்தமட்டிலாவது, நேர்ப்பொருள் தரும் கூட்டுச்சொற்கள் தொகுக்கப்பட்டு, அவற்றைப் பிரிப்பது பற்றிய முடிவினை எடுக்க வல்லுநர் குழு அமைக்கப்படவேண்டும். இவ்வகைக் கூட்டுச்சொற்களான பல்லியம், இன்னியம், முருகியம் ஆகியவை இவ்வாய்வில் பிரிக்கப்பட்டே எடுக்கப்பட்டுள்ளன. ஆ. விரிவுப்பொருள் கூட்டுச்சொற்கள் அடுத்தவகைக் கூட்டுச்சொற்கள், தாம் உணர்த்தும் நேர்ப்பொருளோடு, கூடுதல் பொருளும் (extended meaning) தருபவை. ஆகுபெயர்கள், அன்மொழித்தொகை போன்றவை இதிலடங்கும். நன்னுதல், ஒண்ணுதல், ஆயிழை, ஆர்பதம் போன்றவை தமது கூடுதற் பொருளால் ஒரே சொல்லாகக் கொள்ளப்படும். ஆனால், இம்மாதிரிச் சொற்களின் வழங்கிடங்களை (context)ப் பொருத்தே முடிவுகள் அமையும். காட்டாக, வாரிருங் கூந்தல் வயங்கிழை ஒழிய - பட் 300 அழல் அவிர் வயங்கு இழை பொலிந்த மேனி - புறம் 222/1 என்ற வரிகளில், முன்னதில் ‘வயங்கிழை' என்பது ஒளிரும் அணிகலன்களை அணிந்த பெண்ணைக் குறிப்பதால், அன்மொழித்தொகையாகி, ஒரே சொல்லாகும். அடுத்த வரியில், வயங்கிழை என்பது ஒளிரும் அணிகலன்களை மட்டும் குறிப்பதால், பிரிக்கப்படும். இ. சிறப்புப்பொருள் கூட்டுச்சொற்கள் இவ்வகைக் கூட்டுச்சொற்கள் தாம் உணர்த்தும் நேர்ப்பொருளுக்கும் கூடுதலான ஒரு பொருளை (special meaning) உணர்த்திநிற்பன. விழுப்புண், முந்நீர், தன்னையர், என்னையர், கார்கோள், கால்கழுவு, வெண்கொற்றக்குடை, குடைநிழல், கடிமரம், கழுநீர், இறைகூடு, துறைபோதல், வாய்ப்புள், கொடைக்கடன், பொருட்பிணி, செய்வினை, கைவல் (கம்மியன்), மீக்கூறு, ஒன்றுமொழி (கோசர்), அல்கிரை, சேமச்சேப்பு, கொடுவரி, முளவுமா, வயமா போன்றவை இதிலடங்கும். இவற்றில் சில விரிவுப்பொருளாகவும் கொள்ளப்படலாம். திணிமணல், இடுமணல், அடைகரை, நெடுந்தகை, பெருந்தகை, இகழ்பதம், வாப்பறை போன்றவையும் இவ்வகையில் அடங்கும். ‘வெய்துயிர்த்து' என்பது ‘வெப்பமாக மூச்சுவிட்டு' என்ற பொருள்படினும், அதனோடு சேர்ந்த ஏக்கம், அச்சம் போன்ற உணர்ச்சிகளையும் குறிப்பதால் ‘பெருமூச்சு' என்ற பொருளில் ஒரே சொல்லாகவே கொள்ளப்படுகிறது. வடமலை, வடமீன், வடமொழி, சுடுமண் (செங்கல் - பெரும் 405) போன்ற இவ்வகைக் கூட்டுச்சொற்களும் ஒரே சொல்லாகவே எடுத்துக்கொள்ளப்படும். ஈ. மாறுபொருள் கூட்டுச்சொற்கள் இவ்வகைக் கூட்டுச்சொற்கள் தாம் உணர்த்தும் நேர்ப்பொருளினும் மாறான ஒரு பொருளை (different meaning) உணர்த்திநிற்பன. பெரும்பிறிது, கண்படை, கடுங்கண், வன்கண், பருவரல், செவ்வழி (ஒருவகைப் பண்) போன்றவை இவ்வகையில் அடங்கும். இவையும் ஒரே சொல்லாகவே எடுத்துக்கொள்ளப்படும். உ. கலைச்சொல்லாகும் கூட்டுச்சொற்கள் சிலவகைக் கூட்டுச்சொற்கள் ஒரு குறிப்பிட்ட பொருளை மட்டுமே உணர்த்துவதாக வரையறுக்கப்பெறும். தற்காலத்திய வழக்கில், பல்கலைக்கழகம், பேருந்து, கால்நடை, மென்பொருள், திசைவேகம், நீர்வீழ்ச்சி போன்றவை இத்தகையன. இவற்றில் சில மேற்கூறப்பட்ட வகைகளில் சிலவற்றில் அடங்கலாம். மேலும் சில சொற்கள் கூட்டுப்பொருள் சொற்களாக (idioms and phrases) அமையும். காலமானார், (அந்தக் காலம்) மலையேறிவிட்டது, தேனொழுக(ப்பேசினான்) போன்றவை இவ்வாறானவை. ஆனால், சங்க காலத்தில் இவ்வாறு வழக்கிலிருந்த சொற்களைக் கண்டுபிடிப்பது எளிதன்று. மெய்ப்பை, தொடுதோல், சிறுகுடி, சிறுபறை, தண்பணை, மகரப்பகுவாய், கூட்டுணவு, வாடூன் (உப்புக்கண்டம்), குமரிமூத்தல், ஈனில், மனையுறு (domesticated) (பேடை), சில்பதஉணவு, பசிப்பிணிமருத்துவன், அறுகாற்பறவை போன்றவை இவ்வாறான சொற்களாகலாம். இரும் கல் இகுப்பத்து இறுவரை சேராது - மலை 367 குன்ற இறுவரை கோண்மா இவர்ந்தாங்கு - கலி 86-32 என்ற அடிகளில் காணப்படும் ‘இறுவரை' (இறு - அறு, முறி, முடிவு பெறு, வரை - மலை) என்ற சொல் செங்குத்தான மலைப்பகுதி என்ற பொருள் தரும். மேற்குறிப்பிடப்பட்டுள்ள இரு சொல்லடைவுகளிலும் பின்னது ஒரே சொல்லாகவும், முன்னது பிரிக்கப்பட்டும் காணப்படுகின்றன. ஆனால், cliff என்ற சொல்லுக்குரிய அழகான கலைச்சொல்லாக இது காணப்படுகிறது. ஒருவேளை, அக்காலத்திலும் இது ஒரு கலைச்சொல்லாகவே கையாளப்பட்டிருக்கலாம். இந்நூலில் இது ஒரே சொல்லாகவே கொள்ளப்பட்டுள்ளது. திருமணம் நடக்கவிருக்கின்ற ஒரு இளம்பெண்ணின் நெருங்கிய உறவினர்கள், ஒரு நல்ல நாளில் அப்பெண்ணை அலங்கரித்து, மனையில் அமர்த்தி, வெகுமதிகள் கொடுப்பது சில குடும்பங்களில் இன்றும் காணப்படுகிறது. இதற்கு ‘நாள் செய்தல்' என்று பெயர். திருந்து வேல் அண்ணற்கு விருந்து இறை சான்ம் என நறவு நாள்செய்த குறவர் தம் பெண்டிரொடு மான் தோற் சிறுபறை கறங்கக் கல்லென வான் தோய் மீமிசை அயரும் குரவை - மலை 319 - 322 என்ற வரிகளில் காணப்படும் ‘நாள்செய்த' என்ற கூட்டுச்சொல், தொலைவில் இருக்கும் மன்னனை எண்ணி, அவனுக்காகத் தம் வீட்டில் நாள்செய்த விழாவினைக் குறவர்கள் கொண்டாடினார்கள் என்று எண்ண இடமிருக்கிறது. எனவே இந்நூலில், இச் சொல்லும் ஒரே சொல்லாக எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது. ஆறலைக்கள்வர் (பொரு 21), மயிர்குறைக்கருவி (பொரு 29) போன்றன அக்காலத்தில் கலைச்சொற்களாகப் பயன்படுத்தப்பட்டனவா எனத் தெரியவில்லை. எனினும் இவ்வாறான கூட்டுச்சொற்களைப் பிரிப்பதுவும் ஏற்றுக்கொள்வதுவும் விவாதத்திற்குரியது. இவற்றைப்பற்றிய தெளிவான கொள்கைகளும் வகுக்கப்படவேண்டும். இத்தகைய சொற்கள் எவ்வாறு பிரிக்கப்பட்டுள்ளன என்பதை இந்நூலின் சொல்லடைவில் கண்டுகொள்ளலாம். ஆனால், இவை முடிந்த முடிபுகள் அல்ல. ஊ. உருமாறிய கூட்டுச்சொற்கள் புணர்ச்சி விதிகளாலோ அல்லது சில மரபுகளாலோ சொற்கள் புணரும்போது ஏற்படும் உருமாற்றம் அச்சொற்களையே ‘பெருமளவு' மாற்றினால், அத்தகைய சொற்கள் பிரிக்கப்படவில்லை. சீறடி, சீறிதழ், சீறியாழ், சீறிலை, சீறுரல், சேவடி, பச்சூன், பரியரை, பரேர், பாசடை, பாசிலை, பேரியாறு, பேரியாழ், போன்றவை பிரிக்கப்படவில்லை. இத்தகையவை சிறப்பு வடிவங்களாக (special forms) எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளன. ‘பெருமளவு' மாற்றம் என்பது நபர் சார்ந்த அளவுகோலாக (subjective) இருப்பதால், இங்கு கொடுக்கப்பட்டவையே இறுதியான முடிவாகக் கொள்ளக்கூடாது. நெறி 4 - துணைவினைகள் (auxiliary verbs) (அ) வினையாக்கிகள் - verbalisers வினையாக்கிகள் மூன்று வகைப்படும். (1) ஒரு பெயர்ச்சொல்லுக்குரிய வினைச்சொல் இல்லாத போது அப்பெயர்ச் சொல்லை வினைச்சொல்லாக ஆக்குவதற்கு வரும் உருபு. நசை -> நசையுறு செவி -> செவியுறு விதுப்பு -> விதுப்புறு இத்தகைய சொற்கள் நசை_உறு, செவி_உறு, விதுப்பு_உறு என எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளன. இவ்வகைப்பாகுபாடு, சொல்லையும் உருபையும் தனித்தனியாகவும், இரண்டும் சேர்ந்த ஒரே சொல்லாகவும் எடுத்துக்கொள்ள வழி வகுக்கின்றது. (2) வினைச்சொல் வடிவம் இருந்த போதிலும், அதனைப் பெயர்ச்சொல்லாக்கிப் பின்னர் வினையாக்குதல். முனி தூ முனிதல் தூ முனிதலுறு பெறாஅன் பெயரினும் முனியலுறாஅன் - குறி 243 மகிழ் தூ மகிழ்வு தூ மகிழ்வுறு பெண் மகிழ்வுற்ற பிணை நோக்கு மகளிர் - மது 555 (3) தன்வினை போல் தோன்றி, பிறவினையாக்கும் (passiviser) வினையாக்கிகள் உண்டு. காடி கொண்ட கழுவுறு கலிங்கம் - நெடு 134 நுண் உருக்குற்ற விளங்கு அடர் பாண்டில் - மலை 4 சூடுறு நன் பொன் சுடர் இழை புனைநரும் - மது 512 போன்றவிடங்களில் வரும் வினையாக்கிகள், உண்மையில் பிறவினையாக்கிகளாகவே காணப்படுகின்றன. (கழுவுறு -- கழுவுதல் உற்ற -- கழுவப்பட்ட) (உருக்குற்ற -- உருக்குதல் உற்ற -- உருக்கப்பட்ட) (சூடுறு -- சூ(ட்)டுதல் உற்ற - சூ(ட்)டப்பட்ட) வினையாக்கிகளில் ‘உறு' என்ற சொல்லே மிகுத்துக்காணப்படுகிறது. இதன் பயன்பாட்டை இனம் கண்டுகொண்டு பகுப்பதுவும், தேவைப்பட்டால் பிரிப்பதுவும், அறைகூவல் விடுக்கும் பணியாகும். (அ) ‘உறு' என்ற சொல். இச் சொல் மூன்று விதமாகப் பயன்படுத்தப்பட்டுள்ளது. (1) உரிச்சொல்லாக, பெயரடை அல்லது வினையடையின் தன்மையில் ‘மிகுதி' என்ற பொருளில் கையாளப்படுகிறது. உறு வினைக்கு அசாவா உலைவு இல் கம்மியன் - நற் 363/4 உறு துயர் அவலமொடு உயிர் செல சாஅய் - ஐங் 313/2 உறு வளி ஒலி கழை கண் உறுபு தீண்டலின் - அகம் 153/9 உறு முரண் கடந்த ஆற்றல் - புறம் 135/21 இத்தகைய இடங்களில் ‘உறு' தனிச்சொல்லாகவே கொள்ளப்படுகிறது. (2) தனிவினையாகவும் ‘உறு' கையாளப்படுகிறது. ஏ உறு மஞ்ஞையின் நடுங்கி இழை நெகிழ்ந்து - முல் 84 கொய்பதம் உற்றன குலவு குரல் ஏனல் - மலை 108 புலி உற வெறுத்த தன் வீழ் துணை உள்ளி - மலை 404 நாம் உறு துயரம் செய்யலர் என்னும் - நற் 133/7 தன் உறு விழுமம் நீந்துமோ எனவே - அகம் 170/14 இத்தகைய இடங்களில் ‘அனுபவி (experience), நிலையை அடை, ஏற்படு, ஒன்றினால் பாதிக்கப்படு, படு, தொடு, அடை, பெறு, நிகழ், சம்பவி, போன்றிரு, எதிர்ப்படு, மிகு, பொருந்து, இணை' போன்ற பொருள்களில் ‘உறு' வினைச்சொல்லாக வருவதால், இது தனிச்சொல்லாகவே கொள்ளப்படுகிறது. (3) முன்னர்க் குறிப்பிட்டது போன்று, ‘உறு' ஒரு துணைவினையாக அல்லது வினையாக்கியாகக் கையாளப்படுகிறது. துணைவினையாக வருமிடங்களில் ‘உறு' கூட்டுச்சொல்லின் ஒரு பகுதியாகவே கொள்ளப்படுவதால், அது தனிச்சொல்லாக எடுத்துக்கொள்ளப்படுவதில்லை. இருப்பினும், ‘உறு' தனிவினையாக அல்லது துணைவினையாக வருமிடங்கள் விவாதத்திற்குரியன. காட்டாக, ஊழுறு தீம் கனி உண்ணுநர் தடுத்த - அக 2-2 கரு நனை அவிழ்ந்த ஊழுறு முருக்கின் - 41-18 என்ற வரிகளிலும், இன்னும் இதைப்போன்ற பல வரிகளிலும் ‘ஊழுறு' என்பது இரு சொல்லடைவுகளிலும் ஒரே சொல்லாகக் கொள்ளப்பட்டுள்ளது. ஆனால், கமழ் தண் தாது உதிர்ந்து உக ஊழ் உற்ற கோடல் வீ - கலி 121-13 ஊழ் உற்று அலமரு உந்தூழ் அகல் அறை - 133மலை என்ற வரிகளில் ‘உறு'-வின் வேறு வடிவமான ‘உற்று', ‘உற்ற' என்பன அவ்விரு சொல்லடைவுகளிலும் பிரிக்கப்பட்டுள்ளன. இதே போன்று, வெயில் உருப்புற்ற வெம் பரல் கிழிப்ப - சிறு 8 உருப்புறு பசுங்காய் போழொடு கறி கலந்து - பெரும் 307 என்றவிடங்களில் உருப்புற்ற, உருப்புறு என்பன ஒரே சொல்லாகக் கொள்ளப்பட்டுள்ளன. அயிர் உருப்பு உற்ற ஆடு அமை விசயம் - மது 625 என்றவிடத்தில் உருப்புற்ற என்பது உருப்பு உற்ற என இரண்டு சொற்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. எனவே ‘உறு' என்ற சொல்லைத் தனி வினையாகவோ அல்லது துணைவினையாகவோ எடுத்துக்கொள்வது மயக்கத்தை ஏற்படுத்தக்கூடியது எனப் பெறப்படுகிறது. இந்தப் பதிப்பில், கீழ்க்கண்ட சொற்கள் பிரிக்கப்படாமல், ஒரே சொல்லாகவே எடுக்கப்பட்டுள்ளன. அறிவுறாலின், இடையுறாஅது, இன்புறு, ஏமுறு, கண்ணுறு, காமுறு, துன்புறு, பண்புறு, முந்துறு, மெய்யுறு, வலியுறுத்தனை, வைகுறு. இந்நூலில், இம்மாதிரியான சொற்கள் எவ்வாறு பிரிக்கப்பட்டுள்ளன என்பதைத் தொடரடைவில் காணலாம். எனினும், இம்முறை மறு ஆய்விற்குரியது - முடிந்த முடிபல்ல. ‘உறு'- வைப்போன்ற ஏனைய வினை/துணைவினைகளும் இவ்வாறே கையாளப்பட்டுள்ளன. (ஆ) ‘வர', ‘வரு', ‘வரும்' - வகைத் துணைவினைகள் அழல் திகழ்ந்து இமைக்கும் அஞ்சுவரு நெடு வேல் - சிறு 94 நச். உரை - அச்சந்தோன்றும் நெடிய வேல் நீர் அகம் பனிக்கும் அஞ்சுவரு கடும் திறல் - மலை 81 நச். உரை - உலகு நடுங்கும் அஞ்சுதல்தோன்றும் கடியவலி அஞ்சுவந்த போர்க்களத்தான் - மது 28 நச். உரை - அஞ்சுதலுண்டான போர்க்களத்திடத்தே அஞ்சுவர, அஞ்சுவரு, அஞ்சுவரும் என்பவற்றை ஆசியவியல் நிறுவனச் சொல்லடைவு ஒரே சொல்லாகக் கொண்டுள்ளது. ஆனால் தமிழ்ப் பல்கலக்கழகச் சொல்லடைவு இச்சொற்களைப் பிரித்தே கொடுத்துள்ளது. ஆனால், இக்குழப்பம் துயல்வர, துயல்வரும் போன்ற ஆளுகைகளில் இல்லை. வாடா மாலை ஓடையொடு துயல்வர - திரு 79 நச். உரை - பொன்னரிமாலை பட்டத்தோடே கிடந்து அசைய சிறு குழை துயல்வரும் காதின் - பெரும் 161 நச். உரை - தாளுருவி அசையும் காதினையும் துணி மழை தவழும் துயல் கழை நெடும் கோட்டு - சிறு 265 நச். உரை - . . . அசைகின்ற மூங்கிலையுடைய நெடிய மலையிடத்து இங்கே, துயல்வர, துயல்வரும் போன்றவை இரு சொல்லடைவுகளிலும் ஒரே சொல்லாகவே கொள்ளப்படுகின்றன. உரைகாரரும் துயல்வரும் (காது), துயல் (கழை) என்ற இரு வகைப் பயன்பாட்டிலும் ‘அசையும்' என்று ஒரே பொருளையே தருகிறார். இந்நூலில், அஞ்சுவரு, துயல்வரு ஆகிய இரண்டுவகைப் பயன்பாடுகளுமே ஒரே சொல்லாகவே எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளன. இவற்றைத்தவிர, காண்வர, மேவர, நல்குவர, வெருவர, அமைவர, அசைவர போன்றவையும் இவற்றின் வேற்று வடிவங்களும் இவ்வகையில் அடங்கும். நான்முக ஒருவர் சுட்டி காண்வர - திரு 165 தாமரை பொகுட்டின் காண்வர தோன்றி - பெரும் 404 உரை - காண்வர - அழகுதோன்ற, அழகுவிளங்க யாவதும் அறியா இயல்பினர் மேவர - திரு 136 ஆர்வலர் ஏத்த மேவரு நிலையினும் - திரு 221 கொழும் கொம்பு கொழுதி நீர் நனை மேவர - மது 587 உரை - மேவர - (மனம்)பொருந்துதல் வர பல் புரி சிமிலி நாற்றி நல்குவர - மது 483 உரை - நல்குவர - சொல்லுதல் வரும்படி உருவ பல் பூ தூஉய் வெருவர - திரு 241 வெண்ணி தாக்கிய வெருவரு நோன் தாள் - பொரு 147 வெருவரு செலவின் வெகுளி வேழம் - பொரு 172 மெய்ப்பை புக்க வெருவரும் தோற்றத்து - முல் 60 உரை: வெருவர - அச்சம் வரும்படி வெருவரு - அச்சந்தோன்றுகின்ற, அச்சந்தோன்றும் வெருவரும் - அச்சந்தோன்றுதற்குக் காரணமான அணங்கு மெய் நின்ற அமைவரு காட்சி - பொரு 20 ஐம் பால் திணையும் கவினி அமைவர - மது 326 உரை: அமைவரு - அமைதல்வரும் அமைவர - பொருந்துதல்தோன்ற இருப்பினும், ஆமான் சூடின் அமைவரப் பெறுகுவிர் - சிறு 177 அறுஅறுகாலைதொறு அமைவரப்பண்ணி - நெடு 104 என்றவிடங்களில் இடத்திற்குத் தகுந்தாற்போல் வெவ்வேறு பொருள் தரப்பட்டுள்ளன. சிதர் வரல் அசை வளிக்கு அசைவந்தாஆங்கு - முல் 52 அசைவந்தாஅங்கு - அசைந்தாற்போல வெருவர, வெருவரு, வெருவரும், வெருவரூஉம் ஆகியவை ஒரு குடும்பத்தைச் சேர்ந்த சொற்களே. எனவே, சொல்வகுப்பு அகராதியில், இவற்றின் மூலச்சொல்லாக எதனைக் கொள்வது என்பது கேல்விக்குறியாகியது. காண்வர என்ற சொல்லுக்கு மூலச்சொல்லாக காண்வா என்றும் தைவர என்ற சொல்லுக்கு மூலச்சொல்லாக தைவா என்றும் பால்ஸ் தமிழ் (ஆலோசகர்- முனைவர் வி.ஜெயதேவன் - ஆசிரியர் முனைவர் வி.முருகன்) அகராதி கூறுகிறது. எனினும் இத்தகைய சொல்லாட்சி ஏற்புடையதா எனத் தெரியவில்லை. எனவே, வெருவர போன்ற சொற்கள் வெருவரல் - அச்சம்கொள்ளுதல் என்ற பொருளில் மூலச்சொல்லாகக் கொள்ளப்பட்டு, மற்றையவை அதன் வேறு வடிவங்களாகக் காட்டப்பட்டுள்ளன. தைவரல் என்ற மூலச்சொல்லுக்குரிய வேறு வடிவங்களுக்கான எடுத்துக்காட்டுகள் கீழே தரப்பட்டுள்ளன. கல்லா இளையர் மெல்ல தைவர - சிறு 33 தெண் திரை மணி புறம் தைவரும் - நற் 54/10 அமளி தைவந்தனனே குவழை - குறு 30/4 வறும் குரல் கூந்தல் தைவருவேனே - குறு 192/6 தைவரல் அசை வளி மெய் பாய்ந்து ஊர்தர - குறு 195/5 மூதா தைவந்தாஆங்கு - குறு 204/4 தொய்யில் இள முலை இனிய தைவந்து - கலி 54/12 விசும்பு தைவரு வளியும் - புறம் 2/3 புலவு நாறும் என் தலை தைவரும்_மன்னே - புறம் 235/9 (இ) ‘தர', ‘தரு', ‘தரும்' - வகைத் துணைவினைகள் திரிதரு, இழிதரு, விழைதரு, இவர்தரு, உழிதரு போன்ற சொற்களும் இவற்றின் வகைகளும் மேற்கூறப்பட்ட (ஆ) பிரிவிலான துணைவினை வகைகளைச் சேர்ந்தவையே. சிலரொடு திரிதரும் வேந்தன் - நெடு 187 கிளை கவின்று எழுதரு கீழ் நீர் செ அரும்பு - திரு 29 இன் சேறு இகுதரும் எயிற்றின் எயிறு என - சிறு 28 முடங்கு இறை சொரிதரும் மா திரள் அருவி - முல் 87 கந்து நீத்து உழிதரும் கடாஅ யானையும் - மது 383 அல்லங்காடி அழிதரு கம்பலை - மது 544 குன்று கெழு நாடன் எம் விழைதரு பெரு விறல் - குறி 199 குண கடற்கு இவர்தரும் குரூஉ புனல் உந்தி - மது 245 நெடு வரை இழிதரு நீத்தம் சால் அருவி - மலை 554 கந்து நீத்து உழிதரும் கடாஅ யானையும் - மது 383 நெறி 5 - ‘அன்ன' என்ற உவம உருபு. இவ்வுவம உருபு ஒரு பெயர்ச்சொல்லோடு வரும்போது, எளிதில் பிரிக்கக்கூடியதே. குளப்பு வழி அன்ன கவடு படு பத்தல் - பொரு 4 அரவு உரி அன்ன அறுவை நல்கி - பொரு 83 என்பது போன்ற இடங்களில் ‘அன்ன'- வைப் பிரிப்பதில் குழப்பமில்லை. வளி கிளர்ந்தன்ன செலவினர் - திரு 170 குன்று குயின்றன்ன அந்தணர் பள்ளியும் - மது 474 கயம் புக்கன்ன பயம் படு தண் நிழல் - மலை 47 என்று வருமிடங்களில் ‘அன்ன'- வைப் பிரிப்பதில் இருவேறு கருத்துக்கள் நிலவுகின்றன. இதன் காரணமாகவோ என்னவோ மர்ரே பதிப்பில் இத்தகைய சொற்கள் பிரிக்கப்படவில்லை. ஆசியவியல் நிறுவனச் சொல்லடைவிலும் இத்தகைய சொற்களில் ‘அன்ன' பிரிக்கப்படவில்லை. தமிழ்ப் பல்கலைக்கழகச் சொல்லடைவில், இவை - கிளர்ந்து அன்ன , குயின்று அன்ன, புக்கு அன்ன - எனப் பிரிக்கப்பட்டுள்ளன. இதுவே மொழியியலார் நெறி எனக்கூறும் அந்நூல். ஆனால் இலக்கிய அறிஞர்கள் இவை - கிளர்ந்த அன்ன , குயின்ற அன்ன, புக்க அன்ன - எனப் பிரிக்கப்படவேண்டும் எனக் கூறுவர். இக் கருத்துக்களின் அடிப்படியில், இந்நூலின் தரவுகள் இரு முறை மாற்றியமைக்கப்பட்டன. எனினும் இறுதியில், மொழியியலார் கூற்றுப்படியே இச்சொற்கள் பிரிக்கப்பட்டிருக்கின்றன. இருப்பினும் இது பற்றி ஒரு இறுதியான முடிவை அறிஞர்கள் எடுப்பது தமிழ்ச் சொல்லாய்வுக்கு நன்மை பயப்பதாக அமையும். மேலும், நான் மொழி கோசர் தோன்றியன்ன - மது 509 உருக்கியன்ன பொருத்துறு போர்வை - பெரும் 9 போன்ற விடங்களில் இவை தோன்றி அன்ன, உருக்கி அன்ன எனப் பிரிக்கப்பட்டுள்ளன. நெறி 6 - ‘தொறு/தொறும், தோறு/தோறும்' என்ற கட்டுருபன். இவை கட்டுருபன்கள் என்ற முறையில், இந்நூலில் பிரிக்கப்படவில்லை. ‘அன்ன' என்பதைப் போலவே இவை வருமிடங்களிலும் இரு வகை உண்டு. 1. எறிதொறும், நுழைதொறும், வருதோறும் என்பன போல் வினைச்சொல்லோடு வந்து கூட்டுவினையெச்சங்களாகுமிடங்கள். 2. ஆலைதொறும், மனைதொறும், அரமியம்தோறும், வைகல்தொறும், நாள்தொறும் என்பன போல் பெயர்ச்சொல்லோடு வந்து கூட்டுவினையடைகளாகுமிடங்கள். இவற்றில் முதல் வகையைச் சேர்ந்தவை இரு சொல்லடைவுகளிலும் பிரிக்கப்படவில்லை. எனினும் இரண்டாம் வகையைச் சேர்ந்தவற்றில், ‘நாள்தொறும்/நாள்தோறும்' ஆகியவை தமிழ்ப் பல்கலைக்கழகச் சொல்லடைவில் பிரிக்கப்படவில்லை. மற்றையவை அதில் பிரிக்கப்பட்டுள்ளன. ஆசியவியல் நிறுவனச் சொல்லடைவில் இவ்வகைச் சொற்கள் அனைத்துமே பிரிக்கப்பட்டுள்ளன. இந்நூலில், இருவகைச் சொற்களிலும் இச்சொல் கட்டுருபனாகவே எடுக்கப்பட்டு, எறி_தொறும், நுழை_தொறும், வைகல்_தொறும், நாள்_தொறும் என்று எடுக்கப்பட்டுள்ளன. இவை ஒரே சொல்லாகக் கொள்ளப்பட்டிருப்பதால், இக் கட்டுருபுகளின் எண்ணிக்கை எழுத்துக்களின் மொத்த எண்ணிக்கையில் சேர்க்கப்படவில்லை. இருப்பினும் இவை அடிக்கோடிடப்பட்டு சேர்க்கப்பட்டிருப்பதால் இவற்றின் தனி எண்ணிக்கையும் பெறப்பட்டு, இவற்றின் சொல்லடைவுகளும், தொடரடைவுகளும் தனியே கொடுக்கப்பட்டுள்ளன. நெறி 7 - அசைச்சொற்கள். மன், மதி, கொல், மின் போன்ற சொற்கள் தனித்து வரும்போது வேறு பொருள் தருவதால் இவ்வகை அசைச்சொற்கள் அவற்றிற்கு முன்னர் வரும் சொற்களோடு அடிக்கோட்டுடன் சேர்த்துக் கொள்ளப்படும். எடுத்துக்காட்டுகள்: செல்க என விடுநள்_மன்_கொல்லோ எல் உமிழ்ந்து - நற் 68/7 நிறுக்கல் ஆற்றினோ நன்று_மன்_தில்ல - குறு 58/2 அறிந்தனை ஒழுகு_மதி அறனும்_ஆர் அதுவே - ஐங் 44/4 உண்_மின் கள்ளே அடு_மின் சோறே - பதி 18/1 அறிந்த மாக்கட்டு ஆகுக_தில்ல - அகம் 15/8 வருக_மாள என் உயிர் என பெரிது உவந்து - அகம் 16/10 செல்லாமோ_தில் சில் வளை விறலி - புறம் 64/2 நேர்வரும் குரைய கலம் கெடின் புணரும் - குறி 14 பெரிதால் அத்தை என் கடும்பினது இடும்பை - புறம் 169/7 மயில் ஓர் அன்ன சாயல் - மது 706 இவை சொற்களோடு சேர்ந்து வரும் போது சில சமயங்களில் சொற்பொருளில் கூடுதல் பொருள்தரும் வகையிலும் அமைந்துள்ளன. எனவே எண்ணிக்கைக்காகக் கொள்ளப்படும்போது அசை சேர்ந்த சொற்கள் தனிச்சொற்களாகவே எடுத்துக்கொள்ளப்படும். விடுநள், விடுநள்_மன் என்பவை வெவ்வேறான சொற்களாகக் கொள்ளப்படும். மயில் ஓர் அன்ன என்ற தொடரில், ஓர் என்பது ‘ஒரு தன்மைத்தாய' என்ற பொருள்தரும் தனிச்சொல் எனினும், ‘மயிலோரன்ன சாயல்' என்புழி ஓர்: அசையுமாம்' - எனக் கழக உரை கூறுகிறது. எனினும், இந்நூலில் ‘ஓர்' தனிச்சொல்லாகவே கொள்ளப்படுகிறது. நெறி 8 - ‘என்', ‘என' என்னும் சொற்கள் இவை, விரைவுக்குறிப்பு, ஒலிக்குறிப்பு போன்ற சொற்களோடு வருமிடங்களில் பிரிக்கப்படவில்லை. எடுத்துக்காட்டுகள்: இழுமென இழிதரும் அருவி - திரு 316 கதுமென கரைந்து வம் என கூஉய் - பொரு 101 கல்லென் சுற்றமொடு கால் கிளர்ந்து திரிதரும் - பெரும் 21 புல்லென் யாக்கை புலவு வாய் பாண - பெரும் 22 ஒல்லென் இமிழ் இசை மான கல்லென - மது 538 தவ்வென்று அசைஇ தா துளி மறைப்ப - நெடு 185 நள்ளென் யாமத்தும் பள்ளி கொள்ளான் - நெடு 186 ஒய்யென பிரியவும் விடாஅன் கவைஇ - குறி 185 மெல்லென கூறி விடுப்பின் நும்முள் - மலை 568 எனினும், இவை ஒரு தனிச் சொல்லுக்குப் பின்னரோ அல்லது உவம உருபாகவோ வருமிடங்களில் பிரிக்கப்பட்டுள்ளன. எடுத்துக்காட்டுகள்: இருவேம் ஆய்ந்த மன்றல் இது என - குறி 21 வாழிய பெரிது என்று ஏத்தி பலர் உடன் - திரு 39 அணங்கு என உருத்த சுணங்கு அணி ஆகத்து - பொரு 35 யாவரும் வருக ஏனோரும் தம் என - மது 747 பொய்யா வானம் புது பெயல் பொழிந்து என - நெடு 2 நெறி 9 - ‘உழி' என்னும் சொல் உழி என்ற சொல் அலைந்து திரி என்ற தனி வினையாகவோ, இடம், பக்கம் என்ற தனிப் பெயராகவோ வரும்போது சிக்கலில்லை. ஆனால் அச்சொல் (அந்த) நேரத்தில் என்ற பொருளில் ஒரு வினையுடனோ அல்லது ஒரு பெயரின் ஏழன் உருபாகவோ வரும்போது அதனைக் கணக்கிடுவதில் சிக்கலுண்டு. காட்டாக, பல் காலும் ஆடிய செல்வுழி ஒல்கி - கலி 98/35 (பகுதி) கலத்தொடு யாம் செல்வுழி நாடி புலத்தும் - கலி 116/16 செல்வுழி செல்வுழி மெய் நிழல் போல - அகம் 49/15 (பகுதி) நீள் கழல் மறவர் செல்வுழி செல்க என - புறம் 93/10 (பகுதி) செல்வுழி எழாஅ நல் ஏர் முதியன் - புறம் 389/12 (பகுதி) என, மேற்கண்ட எல்லா இடங்களிலும் ‘செல்வுழி' என்பதற்கு உரைகளில் ‘செல்லும் இடம்' என்ற பொருள் காணப்படுகிறது. எனவே இதனை, செல்வு உழி எனப் பிரிக்கவேண்டும். ஆனால், மேற்கூறிய இரு சொல்லடைவுகளிலும் அகம் 49/15 -இல் வரும் செல்வுழி என்ற சொல் செல் உழி எனப் பிரிக்கப்பட்டுள்ளது. த. ப. சொல்லடைவில் கலி. புறம் 93/10 இவற்றில் வரும் செல்வுழி ஒரே சொல்லாகவும், புறம் 389/12 - இல் வரும் செல்வுழி, செல் உழி எனப் பிரிக்கப்பட்டும் காட்டப்பட்டுள்ளது. ஆ.நி. சொல்லடைவில் ‘அகம்' தவிர ஏனைய எல்லா இடங்களிலும் செல்வுழி ஒரே சொல்லாகவே காட்டப்பட்டுள்ளது. உரை கேட்புழி எல்லாம் செல்வேன் புரை தீர்ந்தான் - கலி 146/30 என்ற வரியில் உள்ள கேட்புழி, த. ப. சொல்லடைவில் ஒரே சொல்லாகவும், ஆ.நி. சொல்லடைவில் கேட்பு உழி எனப் பிரிக்கப்பட்டும் காணப்படுகிறது. இந்த இரு சொல்லடைவுகளையும் ஒப்பிட்டு நோக்குவது, சொல்லடைவு உருவாக்குவதில் உள்ள சிக்கல்களை வெளிக்கொணர்வதற்காகத் தானேயொழிய அவற்றில் குறைகாண வேண்டும் என்ற நோக்கத்தில் அல்ல என்பதை மீண்டும் வலியுறுத்த விரும்புகிறேன். இந்நூலில், ஒட்டுச்சொல்லாக வினை அடையாகவோ அல்லது ஏழன் உருபாகவோ வருமிடங்களில், இச்சொல் அடிக்கோடிட்டுச் (செல்வு_உழி, கேட்பு_உழி) சேர்க்கப்பட்டுள்ளது. நெறி 10 - அடுக்குத்தொடர் அல்லது சொல் இரட்டிப்பு (Repetitions) ஒரு சொல் அடுத்தடுத்து இரண்டு முறை வரும்போது அச்சொல்லின் பொருளில் சற்றேனும் மாறுதல் ஏற்படும். எனவே இரட்டையாக வரும் அச்சொல் பொருள் அடிப்படையில் ஒரே சொல்லாகவே எடுத்துக்கொள்ளப்படவேண்டும். ஊரூர் கொண்ட சீர் கெழு விழவினும் - திரு 220 வைகல்வைகல் கை கவி பருகி - பொரு 158 பெற்றவை பிறர்பிறர்க்கு ஆர்த்தி தெற்றென - பொரு மாமாவின் வயின்வயின் நெல் - பொரு வறல் குழல் சூட்டின் வயின்வயின் பெறுகுவிர் - சிறு 163 வேண்டுபவேண்டுப வேண்டினர்க்கு அருளி - பெரும் 445 வழிவழி சிறக்க நின் வலம் படு கொற்றம் - மது 194 கமழ் நறும் பூவொடு மனைமனை மறுக - மது 423 கொளக்கொள குறையாது தரத்தர மிகாது - மது 426 நன் மா மயிலின் மென்மெல இயலி - மது 608 பொன் போல் பீரமொடு புதல்புதல் மலர - நெடு 14 அறுஅறு காலைதோறு அமைவர பண்ணி - நெடு 104 முன்னோன் முறைமுறை காட்ட பின்னர் - நெடு 177 கிளி கடி மரபின ஊழூழ் வாங்கி - குறி 44 ‘புதல்புதல் மலர' என்ற அழகிய சொல்லாட்சியில், இச்சேர்க்கை ‘புதல்தொறும்' என்ற பொருளில் வருகிறது. ஆ. நி இச் சொல்லை புதல் - நெடு 14 என்று மட்டுமே காட்டுகிறது. இதனை அடுத்து வேறோர் இடத்தில் வரும் புதல்தொறும் அகம் 217-6 என்ற சொல்லைத் தனிச்சொல்லாகக் காட்டுகிறது. த. ப. சொல்லடைவோ இதனை புதல் - நெடு 14, 14 என இரு முறை வருவதாகக் காட்டுகிறது. ஒரு சொல்லடைவு, சொற்கள் வழங்குமிடங்களை குறிப்பிடுவதோடு நில்லாமல், ஓரளவிற்கேனும் அச்சொற்களின் பொருள் சார்ந்தும் வழங்குமிடங்களைக் குறிப்பிடவேண்டும். இந்தக் கருத்தை ஏற்றுக்கொள்ளும் வண்ணமாக, ‘வழிவழி சிறக்க .. மது 194' என்ற தொடரில் உள்ள வழிவழி என்ற சொல் ஒரே சொல்லாகவே இந்த இரு சொல்லடைவுகளிலும் காட்டப்பட்டுள்ளது. (ஆ.நி. சொல்லடைவில் இச்சொல் சங்க இலக்கியத்தில் வரும் மொத்தம் ஆறு இடங்களில், இரண்டைத் தவிர ஏனையவை பிரிக்கப்பட்டுள்ளன) புதல்புதல் என்ற சொல் புதல்தொறும் என்ற பொருளைத் தருவது போல, துறைதுறை என்ற சொல் துறைதோறும் என்ற பொருள் பெறும். அப்படியிருக்க, துறைதொறும்துறைதொறும் என துறைதொறும் என்ற சொல்லே அடுக்குத்தொடராக வருவதையும் சங்க இலக்கியங்களில் காண்கிறோம். காட்டாக, துறைதுறைதோறும் பொறை உயிர்த்து ஒழுகி - பொரு 239 அவிர் அறல் வையை துறைதுறைதோறும் - மது 340 என்று வருகின்ற இடங்களில் துறைகள்தோறும் துறைகள்தோறும் என உரை கொடுக்கப்படுகிறது. எனவே துறைதுறைதோறும் என்ற சொல் தனிச்சொல்லாகக் கொள்ளப்பட்டுள்ளது. இதற்கும் மேலாக, துடைதொறும்துடைதொறும் கலங்கி - ஐங் 358/3 காண்தொறும்காண்தொறும் கலங்க - ஐங் 375/5 முயங்குதொறும்முயங்குதொறும் உயங்க முகந்து கொண்டு - அகம் 328/10 வியத்தொறும்வியத்தொறும் வியப்பு இறந்தன்றே - புறம் 217/9 என்ற வழக்காறும் இலக்கியங்களில் வரக் காண்கிறோம். இந்நூலில், துறை, துறைதுறை, துறைதோறும், துறைதுறைதோறும் என்பனவும், முயங்கு, முயங்குதொறும், முயங்குதொறும்முயங்குதொறும் என்பனவும் தனித்தனிச் சொற்களாகவே கொள்ளப் பட்டுள்ளன. நெறி 11 - ‘ஆங்கு' எனும் சொல் ஆங்கு என்ற சொல் வினை அடையாக, அந்த இடத்தில், அந்த நேரத்தில் என்ற பொருளில் வரும்போது தனிச்சொல்லாகக் கொள்ளப்படுகிறது. ஆங்கு வியம் கொண்மின் அது அதன் பண்பே - மலை 427 நின்னொடு உண்டலும் புரைவது என்று ஆங்கு அறம் புணை ஆக தேற்றி - குறி 207, 208 ஆங்கு அவர் வதி வயின் நீங்கப்படினே - குறு 395/8 இடைச்சொல்லாக உவம உருபு போல் வரும்போதும் ஆங்கு தனிச்சொல்லாகிறது. கண்டாங்கு, படர்ந்தாங்கு, தூங்கியாங்கு என வரும் இடங்களில் கண்டு ஆங்கு, படர்ந்து ஆங்கு, தூங்கி ஆங்கு என மொழியியலார் நெறிப்படியே பிரிக்கப்பட்டுள்ளன. பெயரெச்ச விகுதியாக அவ்வாறு, அப்படி என்ற பொருளில் வரும்பொது ‘ஆங்கு' பிரிக்கப்படவில்லை. வேண்டுநர் வேண்டியாங்கு எய்தினர் வழிபட - திரு 248 பெறல் அரும் கலத்தில் பெட்டாங்கு உண்க என - பொரு 156 வேட்டாங்கு, அசைவுழி அசைஇ நசைவுழி தங்கி - பெரும் 43,44 இட்ட எல்லாம் பெட்டாங்கு விளைய - மலை 98 இங்கு இச்சொற்கள், வேண்டியவாறு/வேண்டியபடி, விரும்பியவாறு/விரும்பியபடி எனப் பொருள் கொள்ளப்பட்டுள்ளன. சில உரைகாரர்கள் இச்சொற்களுக்கு வேண்டினாற்போல, விரும்பினாற்போல எனப் பொருள் கொண்டிருக்கின்றனர். இங்கு ‘போல' என்ற சொல் பயன்படுத்தப்பட்டிருப்பினும், அதனை உவம உருபு எனக் கொள்ளலாமா என்பது விவாதத்திற்குரியது. சொற்குறியீட்டு முறை: 1.கூட்டுச்சொற்கள்: மயிர்குறைகருவி, சில்பதஉணவு, அறுகால்பறவை போன்ற சொற்கள் ஒன்றுக்கு மேற்பட்ட சொற்களைக்கொண்டு உருவாக்கப்பட்ட தனிச்சொற்கள். எனவே இவற்றின் உறுப்புகளாக அமைந்த சொற்களும் கணக்கிடப்படவேண்டும். காட்டாக, உணவு என்ற சொல்லின் வழங்கிடங்களில் சில்பதஉணவு என்ற சொல் வருமிடமும் இடம்பெறவேண்டும். எனவே இச்சொற்களின் உறுப்புச் சொற்கள் கீழ்க்கோட்டால் (underscore ‘_') இணைக்கப்பட்டுள்ளன. எ.டு: மயிர்_குறை_கருவி, சில்_பத_உணவு, அறு_கால்_பறவை. எனவே, காட்டாக, மயிர்_குறை_கருவி என்ற சொல் வழங்குமிடம், மயிர், குறை, கருவி, மயிர்_குறை_கருவி ஆகிய நான்கு சொற்களின் வழங்கிடங்களிலும் காணப்படும். இவற்றில் மயிர்_குறை_கருவி என்பது ஒரு தனிச்சொல்லாகவும், மயிர், குறை, கருவி ஆகியவை மூன்று பிரிசொற்களாகவும் கணக்கிடப்பட்டுள்ளன. 2. கட்டுருபன் கொண்ட சொற்கள் பொதுவாகக் கட்டுருபன்கள் பிரிக்கப்படுவதில்லை. தொறும், தோறும், நாள்-தொறும், அறை-தோறும், கேள்-மதி, கழி-மின், உய்ம்-மார், செல்வர்-கொல், விடுநள்-மன்-கொல்லோ, ஆற்றலர்-மன்னே, நேர்வரும்-குரைய போன்ற சொற்களின் பின்னொட்டுகளாக வரும் கட்டுருபன்கள் பிரிக்கமுடியாதவை. ஒருசில அசைச் சொற்களாக வரினும், பல அடிச்சொற்களுக்கு ஒரு கூடுதல் பொருளைத் தருவது உண்மையே. எனவே இந்த உருபன்கள் ‘-‘ என்ற சிறுகோட்டால் இணைக்கப்பட்டு, அவற்றின் வழங்கிடங்களும் பெறப்படுகின்றன. காட்டாக, ஆற்றலர்-மன்னே என்ற சொல்லுக்கும், -மன்னே என்ற கட்டுருபனுக்கும் வழங்கிடங்கள் பெறப்பட்டுள்ளன. சொற்பிரிப்பு நெறிகள் அனைத்தும் இங்கே விளக்கப்பட்டுள்ளன எனக் கூறமுடியாது. மேலும் இங்கு கூறப்பட்டுள்ள நெறிகள் ஆசிரியரின் முடிந்த முடிபுகளும் அல்ல. மேற்கூறப்பட்டுள்ள நெறிமுறைகளில் சில திருத்தப்படலாம். இன்னும் சில சேர்க்கப்படலாம். அந்த நெறிகளுக்கேற்ற வகையில் சில சொல்லடைவுகளும் தொடரடைவுகளும் மாற்றப்படலாம். அனைத்துமே கணினி வழியான நிரல்களால் (programs) பெறப்பட்ட வெளிக்கொடுப்புகள் (output) என்பதால், புதிய மாற்றங்களுக்கேற்ற வகையில் வெளிக்கொடுப்புகளை மாற்றுவது எளிதான காரியமே. எனினும், இந்நெறிமுறைகள் சொற்களின் எண்ணிக்கையைப் பெறுவதற்கும், அதன் மூலமாக சொல்வளத்தை (vocabulary)க் கண்டறிவதற்கும், சொல் பயன்பாட்டை அறிந்துகொள்வதற்கும் ஏற்ற வகையில் வகுக்கப்பட்டுள்ளன. இந்த இடத்தில் ஆசியவியல் நிறுவனத்தின் சொல்லடைவின் முன்னுரையில் முனைவர்.முத்துச்சண்முகன் சொல்லியிருப்பதைக் குறிப்பிடுவது பொருத்தமானதாக இருக்கும். அவர் கூறுகிறார், “எனவே தமிழில் சொல் எது, எதை ஏன் சொல் என்று கருதலாம் என்று வரையறுத்துக்கொண்டு அதன் அடிப்படையில் சொற்களைத் தலைச் சொற்களாகக் கொடுப்பதுவே சிறந்த அணுகுமுறை. ஆசிரியருக்குத் தகுந்தவாறு, தேவைக்குத் தகுந்தவாறு இவ்வரையறை வேறுபடலாம். தமிழ் மொழியின் அமைப்பு அப்படி .. பார்வை 1. சங்க இலக்கியச் சொல்லடைவு - முனைவர் பெ.மாதையன், தமிழ்ப் பல்கலைக்கழகம், தஞ்சாவூர் - 2007 2. A Word Index for Cankam Literature - Thomas Lehmann and Thomas Malten - Institute of Asian Studies, Chennai, Second Edition 2007 (முன்னுரை - முனைவர்.முத்துச்சண்முகன்) 3. சங்க இலக்கியங்கள் - பன்னிரண்டு பாகங்கள் - பதிப்பு - ஆசிரியர் குழு - மர்ரே எஸ்.ராஜம் பதிப்பு - வெளியிட்டோர் - நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் பிரைவேட் லிமிடெட் , சென்னை , இரண்டாம் பதிப்பு - 1981