சங்க இலக்கியம் 15 - எட்டுத்தொகை -5 - பரிபாடல்

சொற்பிரிப்பு-மூலம் அடிநேர்-உரை
** பரிபாடல்

# 1 திருமால்
ஆயிரம் விரித்த அணங்கு உடை அரும் தலை
தீ உமிழ் திறலொடு முடி மிசை அணவர
மா உடை மலர் மார்பின் மை இல் வால் வளை மேனி
சேய் உயர் பணை மிசை எழில் வேழம் ஏந்திய
வாய் வாங்கும் வளை நாஞ்சில் ஒரு_குழை_ஒருவனை		5
எரி மலர் சினைஇய கண்ணை பூவை
விரி மலர் புரையும் மேனியை மேனி
திரு ஞெமிர்ந்து அமர்ந்த மார்பினை மார்பில்
தெரி மணி பிறங்கும் பூணினை மால் வரை

எரி திரிந்து அன்ன பொன் புனை உடுக்கையை		10
சேவல் அம் கொடியோய் நின் வல-வயின் நிறுத்தும்
ஏவல் உழந்தமை கூறும்
நா வல் அந்தணர் அரு மறை பொருளே
இணை பிரி அணி துணி பணி எரி புரைய
விடர் இடு சுடர் படர் பொலம் புனை வினை மலர்		15
நெரி கிடர் எரி புரை தன மிகு தன முரண் மிகு
கடல் தரு மணியொடும் முத்து யாத்த நேர்_அணி
நெறி செறி வெறி-உறு முறல் விறல் வணங்கு அணங்கு வில்
தார் அணி துணி மணி வெயில் உறழ் எழில் புகழ் அலர் மார்பின்

எரி வயிர நுதி எறி படை எருத்து மலை இவர் நவையினில்	20
துணி படல் இல மணி வெயில் உறழ் எழில் நக்கு
இமை இருள் அகல முறு கிறுகு புரி ஒரு புரி நாள்_மலர்
மலர் இலகின வளர் பரிதியின் ஒளி மணி மார்பு அணி
மணம் மிக நாறு உருவின விரை வளி மிகு கடு விசை
உடு உறு தலை நிரை இதழ் அணி வயிறு இரிய அமரரை	25
போரெழுந்து உடன்று இரைத்து உரைஇய தானவர்
சிரம் உமிழ் புனல் பொழிபு இழிந்து உரம்
உதிர்பு அதிர்பு அலம் தொடா அமர் வென்ற கணை
பொருவேம் என்றவர் மதம் தப கடந்து

செரு மேம்பட்ட செயிர் தீர் அண்ணல்			30
இருவர் தாதை இலங்கு பூண் மாஅல்
தெருள நின் வரவு அறிதல்
மருள் அறு தேர்ச்சி முனைவர்க்கும் அரிதே
அன்ன மரபின் அனையோய் நின்னை
இன்னன் என்று உரைத்தல் எமக்கு எவன் எளிது		35
அருமை நற்கு அறியினும் ஆர்வம் நின்-வயின்
பெருமையின் வல்லா யாம் இவண் மொழிபவை
மெல்லிய எனாஅ வெறாஅது அல்லி அம்
திரு_மறு_மார்ப நீ அருளல் வேண்டும்

விறல் மிகு விழு சீர் அந்தணர் காக்கும்			40
அறனும் ஆர்வலர்க்கு அருளும் நீ
திறன் இலோர் திருத்திய தீது தீர் கொள்கை
மறனும் மாற்றலர்க்கு அணங்கும் நீ
அம் கண் வானத்து அணி நிலா திகழ்தரும்
திங்களும் தெறு கதிர் கனலியும் நீ			45
ஐம் தலை உயிரிய அணங்கு உடை அரும் திறல்
மைந்து உடை ஒருவனும் மடங்கலும் நீ
நலம் முழுது அளைஇய புகர் அறு காட்சி
புலமும் பூவனும் நாற்றமும் நீ

வலன் உயர் எழிலியும் மாக விசும்பும்			50
நிலனும் நீடிய இமயமும் நீ
அதனால்
இன்னோர் அனையை இனையையால் என
அன்னோர் யாம் இவண் காணாமையின்
பொன் அணி நேமி வலம் கொண்டு ஏந்திய			55
மன் உயிர் முதல்வனை ஆதலின்
நின்னோர் அனையை நின் புகழோடும் பொலிந்தே
நின் ஒக்கும் புகழ் நிழலவை
பொன் ஒக்கும் உடையவை

புள்ளின் கொடியவை புரி வளையினவை			60
எள்ளுநர் கடந்து அட்ட இகல் நேமியவை
மண்-உறு மணி பாய் உருவினவை
எண் இறந்த புகழவை எழில் மார்பினவை
ஆங்கு
காமரு சுற்றமொடு ஒருங்கு நின் அடியுறை			65
யாம் இயைந்து ஒன்றுபு வைகலும் பொலிக என
ஏமுறு நெஞ்சத்தேம் பரவுதும்
வாய்மொழி புலவ நின் தாள் நிழல் தொழுதே

# 2 திருமால்
தொன் முறை இயற்கையின் மதிய		
மரபிற்று ஆக
பசும்_பொன் உலகமும் மண்ணும் பாழ்பட
விசும்பில் ஊழி ஊழ்_ஊழ் செல்ல
கரு வளர் வானத்து இசையின் தோன்றி		5
உரு அறிவாரா ஒன்றன் ஊழியும்			
உந்து வளி கிளர்ந்த ஊழ்_ஊழ் ஊழியும்
செம் தீ சுடரிய ஊழியும் பனியொடு
தண் பெயல் தலைஇய ஊழியும் அவையிற்று

உள் முறை வெள்ளம் மூழ்கி ஆர் தருபு		10
மீண்டும் பீடு உயர்பு ஈண்டி அவற்றிற்கும்
உள்ளீடு ஆகிய இரு நிலத்து ஊழியும்
நெய்தலும் குவளையும் ஆம்பலும் சங்கமும்
மை இல் கமலமும் வெள்ளமும் நுதலிய
செய் குறி ஈட்டம் கழிப்பிய வழிமுறை		15
கேழல் திகழ்வர கோலமொடு பெயரிய
ஊழி ஒரு வினை உணர்த்தலின் முதுமைக்கு
ஊழி யாவரும் உணரா
ஆழி முதல்வ நின் பேணுதும் தொழுது

நீயே வளையொடு புரையும் வாலியோற்கு அவன்	20
இளையன் என்போர்க்கு இளையை ஆதலும்
புதை இருள் உடுக்கை பொலம் பனைக்கொடியோற்கு
முதியை என்போர்க்கு முதுமை தோன்றலும்
வடு இல் கொள்கையின் உயர்ந்தோர் ஆய்ந்த
கெடு இல் கேள்வியுள் நடு ஆகுதலும்		25
இ நிலை தெரி பொருள் தேரின் இ நிலை
நின் நிலை தோன்றும் நின் தொல் நிலை சிறப்பே
ஓங்கு உயர் வானின் வாங்கு வில் புரையும்
பூண் அணி கவைஇய ஆர் அணி நித்தில

நித்தில மதாணி அ தகு மதி மறு			30
செய்யோள் சேர்ந்த நின் மாசு இல் அகலம்
வளர் திரை மண்ணிய கிளர் பொறி நாப்பண்
வை வால் மருப்பின் களிறு மணன் அயர்பு
புள்ளி நிலனும் புரைபடல் அரிது என
உள்ளுநர் உரைப்போர் உரையொடு சிறந்தன்று	35
ஒடியா உள்ளமொடு உருத்து ஒருங்கு உடன் இயைந்து
இடி எதிர் கழறும் கால் உறழ்பு எழுந்தவர்
கொடி அறுபு இறுபு செவி செவிடு படுபு
முடிகள் அதிர படிநிலை தளர

நனி முரல் வளை முடி அழிபு இழிபு		40
தலை இறுபு தாரொடு புரள
நிலை தொலைபு வேர் தூர் மடல்
குருகு பறியா நீள் இரும் பனை மிசை
பல பதினாயிரம் குலை தரை உதிர்வ போல்
நில்லாது ஒரு முறை கொய்பு கூடி		45
ஒருங்கு உருண்டு பிளந்து நெரிந்து உருள்பு சிதறுபு
அளறு சொரிபு நிலம் சோர
சேரார் இன் உயிர் செகுக்கும்
போர் அடு குரிசில் நீ ஏந்திய படையே

ஒன்னார் உடங்கு உண்ணும் கூற்றம் உடலே		50
பொன் ஏர்பு அவிர் அழல் நுடக்கு அதன் நிறனே
நின்னது திகழ் ஒளி சிறப்பு இருள் திரு மணி
கண்ணே புகழ் சால் தாமரை அலர் இணை பிணையல்
வாய்மை வயங்கிய வைகல் சிறந்த
நோன்மை நாடின் இரு நிலம் யாவர்க்கும்		55
சாயல் நினது வான் நிறை என்னும்
நா வல் அந்தணர் அரு மறை பொருளே
அவ்வும் பிறவும் ஒத்தனை உவ்வும்
எ வயினோயும் நீயே

செ வாய் உவணத்து உயர் கொடியோயே		60
கேள்வியுள் கிளந்த ஆசான் உரையும்
படிநிலை வேள்வியுள் பற்றி ஆடு கொளலும்
புகழ் இயைந்து இசை மறை உறு கனல் முறை மூட்டி
திகழ் ஒளி ஒண் சுடர் வளப்பாடு கொளலும்
நின் உருபுடன் உண்டி				65
பிறர் உடம்படுவாரா
நின்னொடு புரைய
அந்தணர் காணும் வரவு
வாயடை அமிர்தம் நின் மனத்து அகத்து அடைத்தர

மூவா மரபும் ஓவா நோன்மையும்			70
சாவா மரபின் அமரர்க்கா சென்ற நின்
------------------- மரபினோய் நின் அடி
தலை உற வணங்கினேம் பல் மாண் யாமும்
கலி இல் நெஞ்சினேம் ஏத்தினேம் வாழ்த்தினேம்
கடும்பொடும் கடும்பொடும் பரவுதும்		75
கொடும்பாடு அறியற்க எம் அறிவு எனவே

# 3 திருமால்
மாஅயோயே மாஅயோயே
மறுபிறப்பு அறுக்கும் மாசு இல் சேவடி
மணி திகழ் உருபின் மாஅயோயே
தீ வளி விசும்பு நிலன் நீர் ஐந்தும்
ஞாயிறும் திங்களும் அறனும் ஐவரும்		5
திதியின் சிறாரும் விதியின் மக்களும்
மாசு இல் எண்மரும் பதினொரு கபிலரும்
தா_மா_இருவரும் தருமனும் மடங்கலும்
மூ_ஏழ் உலகமும் உலகினுள் மன்பதும்

மாயோய் நின்-வயின் பரந்தவை உரைத்தேம்		10
மாயா வாய்மொழி உரைதர வலந்து
வாய்மொழி ஓடை மலர்ந்த
தாமரை பூவினுள் பிறந்தோனும் தாதையும்
நீ என பொழியுமால் அந்தணர் அரு மறை
ஏஎர் வயங்கு பூண் அமரரை வௌவிய அமிழ்தின்	15
பயந்தோள் இடுக்கண் களைந்த புள்ளினை
பயந்தோள் இடுக்கண் களைந்த புள்ளின்
நிவந்து ஓங்கு உயர் கொடி சேவலோய் நின்
சேவடி தொழாரும் உளரோ அவற்றுள்

கீழ் ஏழ் உலகமும் உற்ற அடியினை		20
தீ செம் கனலியும் கூற்றமும் ஞமனும்
மாசு இல் ஆயிரம் கதிர் ஞாயிறும் தொகூஉம்
ஊழி ஆழி-கண் இரு நிலம் உரு கெழு
கேழலாய் மருப்பின் உழுதோய் எனவும்
மா விசும்பு ஒழுகு புனல் வறள அன்ன		25
சேவலாய் சிறகர் புலர்த்தியோய் எனவும்
ஞாலத்து உறையுள் தேவரும் வானத்து
நால் எண் தேவரும் நயந்து நின் பாடுவோர்
பாடும் வகையே எம் பாடல் தாம் அ

பாடுவார் பாடும் வகை			30
கூந்தல் என்னும் பெயரொடு கூந்தல்
எரி சினம் கொன்றோய் நின் புகழ் உருவின கை
நகை அச்சாக நல் அமிர்து கலந்த
நடுவுநிலை திறம்பிய நயம் இல் ஒரு கை
இரு கை மாஅல்				35
மு கை முனிவ நால் கை அண்ணல்
ஐம் கைம் மைந்த அறு கை நெடுவேள்
எழு கையாள எண் கை ஏந்தல்
ஒன்பதிற்று தட கை மன் பேராள

பதிற்று கை மதவலி நூற்று கை ஆற்றல்		40
ஆயிரம் விரித்த கைம் மாய மள்ள
பதினாயிரம் கை முதுமொழி முதல்வ
நூறு_ஆயிரம் கை ஆறு அறி கடவுள்
அனைத்தும் அல்ல பல அடுக்கல் ஆம்பல்
இனைத்து என எண் வரம்பு அறியா யாக்கையை	45
நின்னை புரை நினைப்பின் நீ அலது உணர்தியோ
முன்னை மரபின் முதுமொழி முதல்வ
நினக்கு விரிந்து அகன்ற கேள்வி அனைத்தினும்
வலியினும் மனத்தினும் உணர்வினும் எல்லாம்

வனப்பு வரம்பு அறியா மரபினோயே		50
அணி நிழல் வயங்கு ஒளி ஈர் எண் தீம் கதிர்
பிறை வளர் நிறை மதி உண்டி
அணி மணி பைம் பூண் அமரர்க்கு முதல்வன் நீ
திணி நிலம் கடந்த-கால் திரிந்து அயர்ந்து அகன்று ஓடி
நின் அஞ்சி கடல் பாய்ந்த பிணி நெகிழ்பு அவிழ் தண் தார்	55
அன்னவர் பட அல்லா அவுணர்க்கும் முதல்வன் நீ
அதனால் பகைவர் இவர் இவர் நட்டோர் என்னும்
வகையும் உண்டோ நின் மரபு அறிவோர்க்கே
ஆயிர அணர் தலை அரவு வாய் கொண்ட

சேவல் ஊர்தியும் செம் கண் மாஅல்		60
ஓ என கிளக்கும் கால_முதல்வனை
ஏஎ இன கிளத்தலின் இனைமை நற்கு அறிந்தனம்
தீயினுள் தெறல் நீ பூவினுள் நாற்றம் நீ
கல்லினுள் மணியும் நீ சொல்லினுள் வாய்மை நீ
அறத்தினுள் அன்பு நீ மறத்தினுள் மைந்து நீ		65
வேதத்து மறை நீ பூதத்து முதலும் நீ
வெம் சுடர் ஒளியும் நீ திங்களுள் அளியும் நீ
அனைத்தும் நீ அனைத்தின் உட்பொருளும் நீ ஆதலின்
உறையும் உறைவதும் இலையே உண்மையும்

மறவியில் சிறப்பின் மாயம்-மார் அனையை		70
முதல் முறை இடை முறை கடை முறை தொழிலில்
பிறவா பிறப்பு இலை பிறப்பித்தோர் இலையே
பறவா பூவை பூவினோயே
அருள் குடை ஆக அறம் கோல் ஆக
இரு நிழல் படாமை மூ_ஏழ் உலகமும்		75
ஒரு நிழல் ஆக்கிய ஏமத்தை மாதோ
பாழ் என கால் என பாகு என ஒன்று என
இரண்டு என மூன்று என நான்கு என ஐந்து என
ஆறு என ஏழு என எட்டு என தொண்டு என

நால் வகை ஊழி எண் நவிற்றும் சிறப்பினை		80
செம் கண் காரி கரும் கண் வெள்ளை
பொன் கண் பச்சை பைம் கண் மாஅல்
இட வல குட அல கோவல காவல
காணா மரப நீயா நினைவ
மாயா மன்ன உலகு ஆள் மன்னவ		85
தொல் இயல் புலவ நல் யாழ் பாண
மாலை செல்வ தோலா கோட்ட
பொலம் புரி ஆடை வலம்புரி வண்ண
பருதி வலவ பொரு திறல் மல்ல

திருவின் கணவ பெரு விறல் மள்ள		90
மா நிலம் இயலா முதல் முறை அமையத்து
நாம வெள்ளத்து நடுவண் தோன்றிய
வாய்மொழி மகனொடு மலர்ந்த
தாமரை பொகுட்டு நின் நேமி நிழலே

# 4 திருமால்
ஐந்து இருள் அற நீக்கி நான்கினுள் துடைத்து தம்
ஒன்று ஆற்றுப்படுத்த நின் ஆர்வலர் தொழுது ஏத்தி
நின் புகழ் விரித்தனர் கிளக்கும்-கால் அவை நினக்கு
இறும்பூது அன்மை நற்கு அறிந்தேம் ஆயினும்
நகுதலும் தகுதி ஈங்கு ஊங்கு நின் கிளப்ப		5
திரு மணி திரை பாடு அவிந்த முந்நீர்
வரு மழை இரும் சூல் மூன்றும் புரையும் மா மெய்
மாஅ மெய்யொடு முரணிய உடுக்கையை
நோனார் உயிரொடு முரணிய நேமியை

செயிர் தீர் செம் கண் செல்வ நின் புகழ		10
புகைந்த நெஞ்சின் புலர்ந்த சாந்தின்
பிருங்கலாதன் பல_பல பிணி பட
வலந்து-உழி மலர்ந்த நோய் கூர் கூம்பிய நடுக்கத்து
அலர்ந்த புகழோன் தாதை ஆகலின்
இகழ்வோன் இகழா நெஞ்சினன் ஆக நீ இகழா	15
நன்றா நட்ட அவன் நன் மார்பு முயங்கி
ஒன்றா நட்டவன் உறு வரை மார்பின்
படிமதம் சாம்ப ஒதுங்கி
இன்னல் இன்னரொடு இடி முரசு இயம்ப

வெடி படா ஒடி தூண் தடியொடு			20
தடி தடி பல பட வகிர் வாய்த்த உகிரினை
புருவத்து கரு வல் கந்தரத்தால்
தாங்கி இ உலகம் தந்து அடிப்படுத்ததை நடுவண்
ஓங்கிய பலர் புகழ் குன்றினோடு ஒக்கும்
நின் வெம்மையும் விளக்கமும் ஞாயிற்று உள	25
நின் தண்மையும் சாயலும் திங்கள் உள
நின் சுரத்தலும் வண்மையும் மாரி உள
நின் புரத்தலும் நோன்மையும் ஞாலத்து உள
நின் நாற்றமும் ஒண்மையும் பூவை உள

நின் தோற்றமும் அகலமும் நீரின் உள		30
நின் உருவமும் ஒலியும் ஆகாயத்து உள
நின் வருதலும் ஒடுக்கமும் மருத்தின் உள
அதனால் இவ்வும் உவ்வும் அவ்வும் பிறவும்
ஏமம் ஆர்த்த நின் பிரிந்து
மேவல் சான்றன எல்லாம்		35
சேவல் ஓங்கு உயர் கொடியோயே
சேவல் ஓங்கு உயர் கொடி
நின் ஒன்று உயர் கொடி பனை
நின் ஒன்று உயர் கொடி நாஞ்சில்

நின் ஒன்று உயர் கொடி யானை		40
நின் ஒன்றா உயர் கொடி ஒன்று இன்று
விடம் உடை அரவின் உடல் உயிர் உருங்கு உவணம்
அவன் மடி மேல் வலந்தது பாம்பு
பாம்பு தொடி பாம்பு முடி மேலன
பாம்பு பூண் பாம்பு தலை மேலது		45
பாம்பு சிறை தலையன
பாம்பு படிமதம் சாய்த்தோய் பசும் பூணவை
கொடி மேல் இருந்தவன் தாக்கு இரையது பாம்பு
கடு நவை அணங்கும் கடுப்பும் நல்கலும்

கொடுமையும் செம்மையும் வெம்மையும் தண்மையும்		50
உள்-வழி உடையை இல்-வழி இலையே
போற்றார் உயிரினும் போற்றுநர் உயிரினும்
மாற்று ஏமாற்றல் இலையே நினக்கு
மாற்றோரும் இலர் கேளிரும் இலர் எனும்
வேற்றுமை இன்று அது போற்றுநர் பெறினே		55
மனக்கோள் நினக்கு என வடிவு வேறு இலையே
கோள் இருள் இருக்கை ஆய் மணி மேனி
நக்கு அலர் துழாஅய் நாறு இணர் கண்ணியை
பொன்னின் தோன்றிய புனை மறு மார்ப

நின்னில் தோன்றிய நிரை இதழ் தாமரை		60
அன்ன நாட்டத்து அளப்ப அரியவை
நின்னின் சிறந்த நின் தாள் இணையவை
நின்னில் சிறந்த நிறை கடவுளவை
அன்னோர் அல்லா வேறும் உள அவை
நின் ஓர் அன் ஓர் அந்தணர் அருமறை		65
அழல் புரை குழை கொழு நிழல் தரும் பல சினை
ஆலமும் கடம்பும் நல் யாற்று நடுவும்
கால் வழக்கு அறு நிலை குன்றமும் பிறவும்
அவ்வவை மேவிய வேறு_வேறு பெயரோய்

எ வயினோயும் நீயே நின் ஆர்வலர்		70
தொழுத கை அமைதியின் அமர்ந்தோயும் நீயே
அவரவர் ஏவலாளனும் நீயே
அவரவர் செய் பொருட்கு அரணமும் நீயே

# 5 செவ்வேள்
பாய் இரும் பனி கடல் பார் துகள் பட புக்கு
சேய் உயர் பிணிமுகம் ஊர்ந்து அமர் உழக்கி
தீ அழல் துவைப்ப திரிய விட்டெறிந்து
நோய் உடை நுடங்கு சூர் மா முதல் தடிந்து
வென்றியின் மக்களுள் ஒருமையொடு பெயரிய	5
கொன்று உணல் அஞ்சா கொடு வினை கொல் தகை
மாய அவுணர் மருங்கு அற தபுத்த வேல்
நாவல் அம் தண் பொழில் வட பொழில் ஆயிடை
குருகொடு பெயர் பெற்ற மால் வரை உடைத்து

மலை ஆற்றுப்படுத்த மூ_இரு கயந்தலை		10
மூ_இரு கயந்தலை மு_நான்கு முழவு தோள்
ஞாயிற்று ஏர் நிற தகை நளினத்து பிறவியை
காஅய் கடவுள் சேஎய் செவ்வேள்
சால்வ தலைவ என பேஎ விழவினுள்
வேலன் ஏத்தும் வெறியும் உளவே		15
அவை வாயும் அல்ல பொய்யும் அல்ல
நீயே வரம்பிற்று இ உலகம் ஆதலின்
சிறப்போய் சிறப்பு இன்றி பெயர்குவை
சிறப்பினுள் உயர்பு ஆகலும்

பிறப்பினுள் இழிபு ஆகலும்		20
ஏனோர் நின் வலத்தினதே
ஆதி அந்தணன் அறிந்து பரி கொளுவ
வேத மா பூண் வைய தேர் ஊர்ந்து
நாகம் நாணா மலை வில் ஆக
மூ வகை ஆர் எயில் ஓர் அழல் அம்பின் முளிய	25
மாதிரம் அழல எய்து அமரர் வேள்வி
பாகம் உண்ட பைம் கண் பார்ப்பான்
உமையொடு புணர்ந்து காம வதுவையுள்
அமையா புணர்ச்சி அமைய நெற்றி

இமையா நாட்டத்து ஒரு வரம் கொண்டு		30
விலங்கு என விண்ணோர் வேள்வி முதல்வன்
விரி கதிர் மணி பூணவற்கு தான் ஈத்தது
அரிது என மாற்றான் வாய்மையன் ஆதலின்
எரி கனன்று ஆனா குடாரி கொண்டு அவன் உருவு
திரித்திட்டோன் இ உலகு ஏழும் மருள		35
கரு பெற்று கொண்டோர் கழிந்த சேய் யாக்கை
நொசிப்பின் ஏழ் உறு முனிவர் நனி உணர்ந்து
வசித்ததை கண்டம் ஆக மாதவர்
மனைவியர் நிறை-வயின் வசி தடி சமைப்பின்

சாலார் தானே தரிக்க என அவர் அவி		40
உடன் பெய்தோரே அழல் வேட்டு அ அவி
தடவு நிமிர் முத்தீ பேணிய மன் எச்சில்
வட-வயின் விளங்கு ஆல் உறை எழு_மகளிருள்
கடவுள் ஒரு மீன் சாலினி ஒழிய
அறுவர் மற்றையோரும் அ நிலை அயின்றனர்	45
மறு அறு கற்பின் மாதவர் மனைவியர்
நிறை-வயின் வழாஅது நின் சூலினரே
நிவந்து ஓங்கு இமயத்து நீல பைம் சுனை
பயந்தோர் என்ப பதுமத்து பாயல்

பெரும் பெயர் முருக நின் பயந்த ஞான்றே		50
அரிது அமர் சிறப்பின் அமரர்_செல்வன்
எரி உமிழ் வச்சிரம் கொண்டு இகந்து வந்து எறிந்து என
அறு வேறு துணியும் அறுவர் ஆகி
ஒருவனை வாழி ஓங்கு விறல் சேஎய்
ஆரா உடம்பின் நீ அமர்ந்து விளையாடிய		55
போரால் வறும் கைக்கு புரந்தரன் உடைய
அல்லல் இல் அனலன் தன் மெய்யின் பிரித்து
செல்வ வாரணம் கொடுத்தோன் வானத்து
வளம் கெழு செல்வன் தன் மெய்யின் பிரித்து

திகழ் பொறி பீலி அணி மயில் கொடுத்தோன்		60
திருந்து கோல் ஞமன் தன் மெய்யின் பிரிவித்து
இரும் கண் வெள் யாட்டு எழில் மறி கொடுத்தோன்
ஆஅங்கு அவரும் பிறரும் அமர்ந்து படை அளித்த
மறியும் மஞ்ஞையும் வாரண சேவலும்
பொறி வரி சாபமும் மரனும் வாளும்		65
செறி இலை ஈட்டியும் குடாரியும் கணிச்சியும்
தெறு கதிர் கனலியும் மாலையும் மணியும்
வேறு_வேறு உருவின் இ ஆறு இரு கை கொண்டு
மறு இல் துறக்கத்து அமரர்_செல்வன்-தன்

பொறி வரி கொட்டையொடு புகழ் வரம்பு இகந்தோய்	70
நின் குணம் எதிர்கொண்டோர் அறம் கொண்டோர் அல்லதை
மன் குணம் உடையோர் மாதவர் வணங்கியோர் அல்லதை
செறு தீ நெஞ்சத்து சினம் நீடினோரும்
சேரா அறத்து சீர் இலோரும்
அழி தவ படிவத்து அயரியோரும்		75
மறுபிறப்பு இல் எனும் மடவோரும் சேரார்
நின் நிழல் அன்னோர் அல்லது இன்னோர்
சேர்வார் ஆதலின் யாஅம் இரப்பவை
பொருளும் பொன்னும் போகமும் அல்ல நின் பால்

அருளும் அன்பும் அறனும் மூன்றும்	80
உருள் இணர் கடம்பின் ஒலி தாரோயே

# 6 வையை
நிறை கடல் முகந்து உராய் நிறைந்து நீர் துளும்பும் தம்
பொறை தவிர்பு அசைவிட பொழிந்தன்று வானம்
நிலம் மறைவது போல் மலிர் புனல் தலை தலைஇ
மலைய இனம் கலங்க மலைய மயில் அகவ
மலை மாசு கழிய கதழும் அருவி இழியும்		5
மலி நீர் அதர் பல கெழுவு தாழ் வரை
மாசு இல் பனுவல் புலவர் புகழ் புல
நாவின் புனைந்த நன் கவிதை மாறாமை
மேவி பரந்து விரைந்து வினை நந்த

தாயிற்றே தண்ணம் புனல்			10
புகை பூ அவி ஆராதனை அழல் பல ஏந்தி
நகை அமர் காதலரை நாள்_அணி கூட்டும்
வகை சாலும் வையை வரவு
தொடி தோள் செறிப்ப தோள் வளை இயங்க
கொடி சேரா திரு கோவை காழ்கொள		15
தொகு கதிர் முத்து தொடை கலிழ்பு மழுக
உகிரும் கொடிறும் உண்ட செம் பஞ்சியும்
நகில் அணி அளறு நனி வண்டல் மண்ட
இலையும் மயிரும் ஈர்ம் சாந்து நிழத்த

முலையும் மார்பும் முயங்கு அணி மயங்க		20
விருப்பு ஒன்றுபட்டவர் உளம் நிறை உடைத்து என
வரை சிறை உடைத்ததை வையை வையை
திரை சிறை உடைத்தன்று கரை சிறை அறைக எனும்
உரை சிறை பறை எழ ஊர் ஒலித்தன்று
அன்று போர் அணி அணியின் புகர்_முகம் சிறந்த என	25
நீர் அணி அணியின் நிரை நிரை பிடி செல
ஏர் அணி அணியின் இளையரும் இனியரும்
ஈரணி அணியின் இகல் மிக நவின்று
தணி புனல் ஆடும் தகை மிகு போர்-கண்

துணி புனல் ஆக துறை வேண்டும் மைந்தின்		30
அணி அணி ஆகிய தாரர் கருவியர்
அடு புனலது செல அவற்றை இழிவர்
கைம்_மான் எருத்தர் கலி மட மாவினர்
நெய்ம் மாண் சிவிறியர் நீர் மண கோட்டினர்
வெண் கிடை மிதவையர் நன் கிடை தேரினர்		35
சாரிகை மறுத்து தண்டா உண்டிகை
ஓர் இயவு உறுத்தர ஊர்_ஊர்பு இடம் திரீஇ
சேரி இளையர் செல அரு நிலையர்
வலியர் அல்லோர் துறை_துறை அயர

மெலியர் அல்லோர் விருந்து புனல் அயர		40
சாறும் சேறும் நெய்யும் மலரும்
நாறுபு நிகழும் யாறு வரலாறு
நாறுபு நிகழும் யாறு கண்டு அழிந்து
வேறுபடு புனல் என விரை மண்ணு கலிழை
புலம் புரி அந்தணர் கலங்கினர் மருண்டு		45
மாறு மென் மலரும் தாரும் கோதையும்
வேரும் தூரும் காயும் கிழங்கும்
பூரிய மாக்கள் உண்பது மண்டி
நார் அரி நறவம் உகுப்ப நலன் அழிந்து

வேறு ஆகின்று இ விரி புனல் வரவு என		50
சேறு ஆடு புனலது செலவு
வரை அழி வால் அருவி வா தாலாட்ட
கரை அழி வால் அருவி கால் பாராட்ட
இரவில் புணர்ந்தோர் இடை முலை அல்கல்
புரைவது பூந்தாரான் குன்று என கூடார்க்கு		55
உரையோடு இழிந்து உராய் ஊர் இடை ஓடி
சல படையான் இரவில் தாக்கியது எல்லாம்
புலப்பட புன்னம் புலரியின் நிலப்பட
தான் மலர்ந்தன்றே

தமிழ் வையை தண்ணம் புனல்			60
விளியா விருந்து விழுவார்க்கு கொய்தோய்
தளிர் அறிந்தாய் தாம் இவை
பணிபு ஒசி பண்ப பண்டு எல்லாம் நனி உருவத்து
என்னோ துவள் கண்டீ
எய்தும் களவு இனி நின் மார்பின் தார் வாட		65
கொய்ததும் வாயாளோ கொய் தழை கை பற்றி
செய்ததும் வாயாளோ செப்பு
புனை புணை ஏற தாழ்த்ததை தளிர் இவை
நீரின் துவண்ட சேஎய் குன்றம் காமர்

பெருக்கு அன்றோ வையை வரவு			70
ஆம் ஆம் அது ஒக்கும் காதல் அம் காமம்
ஒருக்க ஒருதன்மை நிற்குமோ ஒல்லை
சுருக்கமும் ஆக்கமும் சூள் உறல் வையை
பெருக்கு அன்றோ பெற்றாய் பிழை
அருகு பதியாக அம்பியின் தாழ்ப்பிக்கும்		75
குருகு இரை தேர கிடக்கும் பொழி காரில்
இன் இளவேனில் இது அன்றோ வையை நின்
வையை வயம் ஆக வை
செல் யாற்று தீம் புனலில் செல் மரம் போல

வவ்வு வல்லார் புணை ஆகிய மார்பினை		80
என்னும் பனியாய் இரவு எல்லாம் வைகினை
வையை உடைந்த மடை அடைத்த-கண்ணும்
பின்னும் மலிரும் பிசிர் போல இன்னும்
அனற்றினை துன்பு அவிய நீ அடைந்த-கண்ணும்
பனித்து பனி வாரும் கண்ணவர் நெஞ்சம்		85
கனற்றுபு காத்தி வரவு
நல்லாள் கரை நிற்ப நான் குளித்த பைம் தடத்து
நில்லாள் திரை மூழ்கி நீங்கி எழுந்து என் மேல்
அல்லா விழுந்தாளை எய்தி எழுந்து ஏற்று யான்

கொள்ளா அளவை எழும் தேற்றாள் கோதையின்	90	
உள் அழுத்தியாள் எவளோ தோய்ந்தது யாது என
தேறி தெரிய உணர் நீ பிறிதும் ஓர்
யாறு உண்டோ இ வையை யாறு
இ வையை யாறு என்ற மாறு என்னை கையால்
தலை தொட்டேன் தண் பரங்குன்று		95
சினவல் நின் உண்கண் சிவப்பு அஞ்சுவாற்கு
துனி நீங்கி ஆடல் தொடங்கு துனி நனி
கன்றிடின் காமம் கெடூஉம் மகள் இவன்
அல்லா நெஞ்சம் உற பூட்ட காய்ந்தே

வல் இருள் நீயல் அது பிழை ஆகும் என		100
இல்லவர் ஆட இரந்து பரந்து உழந்து
வல்லவர் ஊடல் உணர்த்தர நல்லாய்
களிப்பர் குளிப்பர் காமம் கொடி விட
அளிப்ப துனிப்ப ஆங்காங்கு ஆடுப
ஆடுவார் நெஞ்சத்து அலர்ந்து அமைந்த காமம்	105
வாடற்க வையை நினக்கு

# 7 வையை
திரை இரும் பனி பௌவம் செவ்விதா அற முகந்து
உர உரும் உடன்று ஆர்ப்ப ஊர் பொறை கொள்ளாது
கரை உடை குளம் என கழன்று வான் வயிறு அழிபு
வரை_வரை தொடுத்த வயங்கு வெள் அருவி
இரவு இருள் பகல் ஆக இடம் அரிது செலவு என்னாது	5
வலன் இரங்கு முரசின் தென்னவர் உள்ளிய
நிலன் உற நிமிர் தானை நெடு நிரை நிவப்பு அன்ன
பெயலான் பொலிந்து பெரும் புனல் பல நந்த
நலன் நந்த நாடு அணி நந்த புலன் நந்த

வந்தன்று வையை புனல்			10
நளி இரும் சோலை நரந்தம் தாஅய்
ஒளிர் சினை வேங்கை விரிந்த இணர் உதிரலொடு
துளியின் உழந்த தோய்வு அரும் சிமை-தொறும்
வளி வாங்கு சினைய மா மரம் வேர் கீண்டு
உயர்ந்து-உழி உள்ளன பயம்பு இடை பரப்பி		15
உழவர் களி தூங்க முழவு பணை முரல
ஆடல் அறியா அரிவை போலவும்
ஊடல் அறியா உவகையள் போலவும்
வேண்டு வழி நடந்து தாங்கு தடை பொருது

விதி ஆற்றான் ஆக்கிய மெய் கலவை போல		20
பொது நாற்றம் உள்ளுள் கரந்து புது நாற்றம்
செய்கின்றே செம் பூ புனல்
கவிழ்ந்த புனலின் கயம் தண் கழுநீர்
அவிழ்ந்த மலர் மீது உற்று என ஒருசார்
மாதர் மட நல்லார் மணலின் எழுதிய		25
பாவை சிதைத்தது என அழ ஒருசார்
அக வயல் இள நெல் அரி கால் சூடு
தொகு புனல் பரந்த என துடி பட ஒருசார்
ஓதம் சுற்றியது ஊர் என ஒருசார்

கார் தூம்பு அற்றது வான் என ஒருசார்		30
பாடுவார் பாக்கம் கொண்டு என
ஆடுவார் சேரி அடைந்து என
கழனி வந்து கால் கோத்து என
பழன வாளை பாளை உண்டு என
வித்து இடு புலம் மேடு ஆயிற்று என		35
உணர்த்த உணரா ஒள் இழை மாதரை
புணர்த்திய இச்சத்து பெருக்கத்தின் துனைந்து
சினை வளர் வாளையின் கிளையொடு கெழீஇ
பழன உழவர் பாய் புனல் பரத்தந்து

இறுவரை புரையுமாறு இரு கரை ஏமத்து		40
வரை புரை உருவின் நுரை பல சுமந்து
பூ வேய்ந்து பொழில் பரந்து
துனைந்து ஆடுவார் ஆய் கோதையர்
அலர் தண் தாரவர் காதில்
தளிர் செரீஇ கண்ணி பறித்து			45
கை வளை ஆழி தொய்யகம் புனை துகில்
மேகலை காஞ்சி வாகுவலயம்
எல்லாம் கவரும் இயல்பிற்றாய் தென்னவன்
ஒன்னார் உடை புலம் புக்கற்றால் மாறு அட்ட

தானையான் வையை வனப்பு			50
புரிந்த தகையினான் யாறு ஆடுவாருள்
துரந்து புனல் தூவ தூ மலர் கண்கள்
அமைந்தன ஆங்கண் அவருள் ஒருத்தி
கை புதைஇயவளை
ஏக்கழுத்து நாணான் கரும்பின் அணை மென் தோள்	55
போக்கி சிறைப்பிடித்தாள் ஓர் பொன் அம் கொம்பு
பரிந்து அவளை கை பிணை நீக்குவான் பாய்வாள்
இரும்பு ஈர் வடி ஒத்து மை விளங்கும் கண் ஒளியால்
செம்மை புது புனல் சென்று இருள் ஆயிற்றே

வையை பெருக்கு வடிவு			60
விரும்பிய ஈரணி மெய் ஈரம் தீர
சுரும்பு ஆர்க்கும் சூர் நறா ஏந்தினாள் கண் நெய்தல்
பேர் மகிழ் செய்யும் பெரு நறா பேணியவே
கூர் நறா ஆர்ந்தவள் கண்
கண் இயல் கண்டு ஏத்தி காரிகை நீர் நோக்கினை	65
பாண் ஆதரித்து பல பாட அ பாட்டு
பேணாது ஒருத்தி பேது உற ஆயிடை
என்னை வருவது எனக்கு என்று இனையா
நன் ஞெமர் மார்பன் நடுக்கு-உற நண்ணி

சிகை கிடந்த ஊடலின் செம் கண் சேப்பு ஊர		70
வகை தொடர்ந்த ஆடலுள் நல்லவர் தம்முள்
பகை தொடர்ந்து கோதை பரியூஉ நனி வெகுண்டு
யாறு ஆடு மேனி அணி கண்ட தன் அன்பன்
சேறு ஆடு மேனி திரு நிலத்து உய்ப்ப சிரம் மிதித்து
தீர்வு இலது ஆக செரு உற்றாள் செம் புனல்		75
ஊர் உடன் ஆடும் கடை
புரி நரம்பு இன் கொளை புகல் பாலை ஏழும்
எழூஉ புணர் யாழும் இசையும் கூட
குழல் அளந்து நிற்ப முழவு எழுந்து ஆர்ப்ப

மன் மகளிர் சென்னியர் ஆடல் தொடங்க		80
பொருது இழிவார் புனல் பொற்பு அஃது
உரும் இடி சேர்ந்த முழக்கம் புரையும்
திருமருத முன்துறை சேர் புனல்-கண் துய்ப்பார்
தாமம் தலை புனை பேஎம் நீர் வையை
நின் பயம் பாடி விடிவு உற்று ஏமாக்க		85
நின் படிந்து நீங்காமை இன்று புணர்ந்து எனவே

# 8 செவ்வேள்
மண் மிசை அவிழ் துழாய் மலர் தரு செல்வத்து
புள் மிசை கொடியோனும் புங்கவம் ஊர்வோனும்
மலர் மிசை முதல்வனும் மற்று அவன் இடை தோன்றி
உலகு இருள் அகற்றிய பதின்மரும் இருவரும்
மருந்து-உரை இருவரும் திருந்து_நூல் எண்மரும்	5
ஆதிரை முதல்வனின் கிளந்த
நாதர் பன்னொருவரும் நன் திசை காப்போரும்
யாவரும் பிறரும் அமரரும் அவுணரும்
மேவரு முதுமொழி விழு தவ முதல்வரும்

பற்று ஆகின்று நின் காரணமாக			10
பரங்குன்று இமய குன்றம் நிகர்க்கும்
இமய குன்றினில் சிறந்து
நின் ஈன்ற நிரை இதழ் தாமரை
மின் ஈன்ற விளங்கு இணர் ஊழா
ஒரு நிலை பொய்கையோடு ஒக்கும் நின் குன்றின்	15
அருவி தாழ் மாலை சுனை
முதல்வ நின் யானை முழக்கம் கேட்ட
கதியிற்றே காரின் குரல்
குரல் கேட்ட கோழி குன்று அதிர கூவ

மத நனி வாரணம் மாறுமாறு அதிர்ப்ப		20
எதிர்குதிர் ஆகின்று அதிர்ப்பு மலை முழை
ஏழ் புழை ஐம் புழை யாழ் இசை கேழ்த்து அன்ன இனம்
வீழ் தும்பி வண்டொடு மிஞிறு ஆர்ப்ப சுனை மலர
கொன்றை கொடி இணர் ஊழ்ப்ப கொடி மலர்
மன்றல மலர மலர் காந்தள் வாய் நாற		25
நன்று அவிழ் பல் மலர் நாற நறை பனிப்ப
தென்றல் அசைவரூஉம் செம்மற்றே அம்ம நின்
குன்றத்தான் கூடல் வரவு
குன்றம் உடைத்த ஒளிர் வேலோய் கூடல்

மன்றல் கலந்த மணி முரசின் ஆர்ப்பு எழ		30
காலொடு மயங்கிய கலிழ் கடல் என
மால் கடல் குடிக்கும் மழை குரல் என
ஏறு அதிர்க்கும் இந்திரன் இரும் உரும் என
மன்றல் அதிரதிர மாறுமாறு அதிர்க்கும் நின்
குன்றம் குமுறிய உரை			35
தூது ஏய வண்டின் தொழுதி முரல்வு அவர்
காதல் மூதூர் மதில் கம்பலைத்தன்று
வடு வகிர் வென்ற கண் மா தளிர் மேனி
நெடு மென் பணை தோள் குறும் தொடி மகளிர்

ஆரா காமம் ஆர் பொழில் பாயல்			40
வரை_அகத்து இயைக்கும் வரையா நுகர்ச்சி
முடியா நுகர்ச்சி முற்றா காதல்
அடியோர் மைந்தர் அகலத்து அகலா
அலர் ஞெமல் மகன்றில் நன்னர் புணர்ச்சி
புலரா மகிழ் மறப்பு அறியாது நல்கும்		45
சிறப்பிற்றே தண் பரங்குன்று
இனி மன்னும் ஏதிலர் நாறுதி ஆண்டு
பனி மலர் கண்ணாரோடு ஆட நகை மலர்
மாலைக்கு மாலை வரூஉம் வரை சூள் நில்

காலை போய் மாலை வரவு			50
இனி மணல் வையை இரும் பொழிலும் குன்ற
பனி பொழி சாரலும் பார்ப்பாரும்
துனியல் மலர் உண்கண் சொல் வேறு நாற்றம்
கனியின் மலரின் மலிர் கால் சீப்பு இன்னது
துனியல் நனி நீ நின் சூள்			55
என் பாணி நில் நில் எலாஅ பாணி நீ நின் சூள்
சான்றாளர் ஈன்ற தகாஅ தகாஅ மகாஅன்
ஈன்றாட்கு ஒரு பெண் இவள்
இருள் மை ஈர் உண்கண் இலங்கு இழை ஈன்றாட்கு

அரியளோ ஆவது அறிந்திலேன் ஈதா		60
வரு புனல் வையை மணல் தொட்டேன் தரு மண வேள்
தண் பரங்குன்றத்து அடி தொட்டேன் என்பாய்
கேளிர் மணலின் கெழுவும் இதுவோ
ஏழ் உலகும் ஆளி திரு_வரை மேல் அன்பு அளிதோ
என்னை அருளி அருள் முருகு சூள் சூளின்		65
நின்னை அருள் இல் அணங்கான் மெய் வேல் தின்னும்
விறல் வெய்யோன் ஊர் மயில் வேல் நிழல் நோக்கி
அறவர் அடி தொடினும் ஆங்கு அவை சூளேல்
குறவன்_மகள் ஆணை கூறு ஏலா கூறேல்

ஐய சூளின் அடி தொடு குன்றொடு		70
வையைக்கு தக்க மணல் சீர் சூள் கூறல்
யார் பிரிய யார் வர யார் வினவ யார் செப்பு
நீர் உரைசெய் நீர்மை இல் சூள் என்றி நேர்_இழாய்
கய வாய் நெய்தல் அலர் கமழ் முகை மண நகை
நயவரு நறவு இதழ் மதர் உண்கண் வாள் நுதல்	75
முகை முல்லை வென்று எழில் முத்து ஏய்க்கும் வெண் பல்
நகை சான்ற கனவு அன்று நனவு அன்று நவின்றதை
இடு துனி கை ஆறா என் துயர் கூர
சுடும் இறை ஆற்றிசின் அடி சேர்ந்து சாற்றுமின்

மிக ஏற்றுதும் மலர் ஊட்டுதும் அவி		80
கேட்டுதும் பாணி எழுதும் கிணை முருகன்
தாள் தொழு தண் பரங்குன்று
தெரி_இழாய் செல்க என்றாய் எல்லா யாம் பெற்றேம்
ஒருவர்க்கும் பொய்யா நின் வாய் இல் சூள் வௌவல்
பருவத்து பல் மாண் நீ சேறலின் காண்டை		85
எருமை இரு தோட்டி எள்ளீயும் காளை
செருவம் செயற்கு என்னை முன்னை தன் சென்னி
அருள் வயினான் தூங்கு மணி கையால் தாக்கி
நிரை வளை ஆற்று இரும் சூள்

வளி பொரு சேண் சிமை வரை_அகத்தால்		90
தளி பெருகும் தண் சினைய
பொழில் கொள குறையா மலர
குளிர் பொய்கை அளறு நிறைய
மருதம் நளி மணல் ஞெமர்ந்த
நனி மலர் பெரு வழி				95
சீறடியவர் சாறு கொள எழுந்து
வேறுபடு சாந்தமும் வீறுபடு புகையும்
ஆறு செல் வளியின் அவியா விளக்கமும்
நாறு கமழ் வீயும் கூறும் இசை முழவமும்

மணியும் கயிறும் மயிலும் குடாரியும்		100
பிணிமுகம் உளப்பட பிறவும் ஏந்தி
அரு வரை சேரா தொழுநர்
கனவின் தொட்டது கை பிழை ஆகாது
நனவின் சேஎப்ப நின் நளி புனல் வையை
வரு புனல் அணிக என வரம் கொள்வோரும்		105
கரு வயிறு உறுக என கடம்படுவோரும்
செய்_பொருள் வாய்க்க என செவி சார்த்துவோரும்
ஐ அமர் அடுக என அருச்சிப்போரும்
பாடுவார் பாணி சீரும் ஆடுவார் அரங்க தாளமும்

மஞ்சு ஆடு மலை முழக்கும்			110
துஞ்சா கம்பலை
பைம் சுனை பாஅய் எழு பாவையர்
ஆய் இதழ் உண்கண் அலர் முக தாமரை
தாள் தாமரை தோள் தமனிய கய மலர்
எம் கை பதுமம் கொங்கை கய முகை		115
செ வாய் ஆம்பல் செல் நீர் தாமரை
புனல் தாமரையொடு புலம் வேறுபாடுறா
கூர் ஏயிற்றார் குவி முலை பூணொடு
மாரன் ஒப்பார் மார்பு அணி கலவி

அரிவையர் அமிர்த பானம்			120
உரிமை_மாக்கள் உவகை அமிர்து உய்ப்ப
மைந்தர் மார்வம் வழி வந்த
செம் தளிர் மேனியார் செல்லல் தீர்ப்ப
என ஆங்கு
உடம் புணர் காதலரும் அல்லாரும் கூடி		125
கடம்பு_அமர்_செல்வன் கடி நகர் பேண
மறு மிடற்று அண்ணற்கு மாசிலோள் தந்த
நெறி நீர் அருவி அசும்பு உறு செல்வம்
மண் பரிய வானம் வறப்பினும் மன்னுகமா

தண் பரங்குன்றம் நினக்கு			130

# 9 செவ்வேள்
இரு நிலம் துளங்காமை வட-வயின் நிவந்து ஓங்கி
அரு நிலை உயர் தெய்வத்து அணங்கு சால் தலை காக்கும்
உருமு சூழ் சேண் சிமை உயர்ந்தவர் உடம்பட
எரி மலர் தாமரை இறை வீழ்த்த பெரு வாரி
விரி சடை பொறை ஊழ்த்து விழு நிகர் மலர் ஏய்ப்ப	5
தணிவு-உற தாங்கிய தனி நிலை சலதாரி
மணி மிடற்று அண்ணற்கு மதி ஆரல் பிறந்தோய் நீ
மை இரு நூற்று இமை உண்கண் மான் மறி தோள் மணந்த ஞான்று
ஐ_இருநூற்று மெய் நயனத்தவன் மகள் மலர் உண்கண்

மணி மழை தலைஇ என மா வேனில் கார் ஏற்று	10	
தணி மழை தலையின்று தண் பரங்குன்று
நான்மறை விரித்து நல் இசை விளக்கும்
வாய்மொழி புலவீர் கேண்-மின் சிறந்தது
காதல் காமம் காமத்து சிறந்தது
விருப்போர் ஒத்து மெய்யுறு புணர்ச்சி		15
புலத்தலின் சிறந்தது கற்பே அது தான்
இரத்தலும் ஈதலும் இவை உள்ளீடா
பரத்தை உள்ளதுவே பண்புறு கழறல்
தோள் புதிது உண்ட பரத்தை இல் சிவப்பு-உற

நாள் அணிந்து உவக்கும் சுணங்கறையதுவே		20
கேள் அணங்கு உற மனை கிளந்து உள சுணங்கறை
சுணங்கறை பயனும் ஊடல் உள்ளதுவே
அதனால் அகறல் அறியா அணி இழை நல்லார்
இகல் தலைக்கொண்டு துனிக்கும் தவறு இலர் இ
தள்ளா பொருள் இயல்பின் தண் தமிழ் ஆய்வந்திலார்	25
கொள்ளார் இ குன்று பயன்
ஊழ் ஆரத்து ஓய் கரை நூக்கி புனல் தந்த
காழ் ஆரத்து அம் புகை சுற்றிய தார் மார்பின்
கேழ் ஆரம் பொற்ப வருவானை தொழாஅ

வாழிய மாயா நின் தவறு இலை எம் போலும்	30
கேழ் இலார் மாண் நலம் உண்கோ திரு உடையார்
மென் தோள் மேல் அல்கி நல்கலும் இன்று
வை எயிற்று எய்யா மகளிர் திறம் இனி
பெய்ய உழக்கும் மழை கா மற்று ஐய
கரையா வெம் நோக்கத்தான் கை சுட்டி பெண்டின்	35
இகலின் இகந்தாளை அ வேள் தலை கண்ணி
திருந்து அடி தோய திறை கொடுப்பானை
வருந்தல் என அவற்கு மார்பு அளிப்பாளை
குறுகல் என்று ஒள் இழை கோதை கோல் ஆக

இறுகிறுக யாத்து புடைப்ப			40
ஒருவர் மயில் ஒருவர் ஒண் மயிலோடு ஏல
இருவர் வான் கிளி ஏற்பில் மழலை
செறி கொண்டை மேல் வண்டு சென்று பாய்ந்தன்றே
வெறி கொண்டான் குன்றத்து வண்டு
தார் தார் பிணக்குவார் கண்ணி ஓச்சி தடுமாறுவார்	45
மார்பு அணி கொங்கை வார் மத்திகையா புடைப்பார்
கோதை வரி பந்து கொண்டு எறிவார்
பேதை மட நோக்கம் பிறிது ஆக ஊத
நுடங்கு நொசி நுசுப்பார் நூழில் தலைக்கொள்ள

கயம் படு கமழ் சென்னி களிற்று இயல் கைம்மாறுவார்	50
வயம் படு பரி புரவி மார்க்கம் வருவார்
தேர் அணி அணி கயிறு தெரிபு வருவார்
வரி சிலை வளைய மார்பு உற வாங்குவார்
வாளி வாளிகள் நிலைபெற மறலுவார்
தோள் வளை ஆழி சுழற்றுவார்			55
மென் சீர் மயில் இயலவர்
வாள் மிகு வய மொய்ம்பின்
வரை அகலத்தவனை வானவன் மகள்
மாண் எழில் மலர் உண்கண்

மட மொழியவர் உடன் சுற்றி			60
கடி சுனையுள் குளித்து ஆடுநரும்
அறை அணிந்த அரும் சுனையான்
நற உண் வண்டாய் நரம்பு உளர்நரும்
சிகை மயிலாய் தோகை விரித்து ஆடுநரும்
கோகுலமாய் கூவுநரும்			65
ஆகுலம் ஆகுநரும்
குறிஞ்சி குன்றவர் மறம் கெழு வள்ளி தமர்
வித்தக தும்பை விளைத்தலான் வென் வேலாற்கு
ஒத்தன்று தண் பரங்குன்று

கடும் சூர் மா முதல் தடிந்து அறுத்த வேல்		70
அடும் போராள நின் குன்றின் மிசை
ஆடல் நவின்றோர் அவர் போர் செறுப்பவும்
பாடல் பயின்றோரை பாணர் செறுப்பவும்
வல்லாரை வல்லார் செறுப்பவும்
அல்லாரை அல்லார் செறுப்பவும் ஓர் சொல்லாய்	75
செம்மை புது புனல்
தடாகம் ஏற்ற தண் சுனை பாங்கர்
படாகை நின்றன்று
மேஎ எஃகினவை

வென்று உயர்த்த கொடி விறல் சான்றவை		80
கற்பு இணை நெறியூடு அற்பு இணை கிழமை
நய_தகு மரபின் விய_தகு குமர
வாழ்த்தினேம் பரவுதும் தாழ்த்து தலை நினை யாம்
நயத்தலின் சிறந்த எம் அடியுறை
பயத்தலின் சிறக்க நாள்-தொறும் பொலிந்தே		85

# 10 வையை
மலை வரை மாலை அழி பெயல் காலை
செல வரை காணா கடல் தலை கூட
நில வரை அல்லல் நிழத்த விரிந்த
பல உறு போர்வை பரு மணல் மூஉய்
வரி அரி ஆணு முகிழ் விரி சினைய		5
மா தீம் தளிரொடு வாழை இலை மயக்கி
ஆய்ந்து அளவா ஓசை அறையூஉ பறை அறைய
போந்தது வையை புனல்
புனல் மண்டி ஆடல் புரிவான் சனம் மண்டி

தாளித நொய் நூல் சரணத்தர் மேகலை		10
ஏணிப்படுகால் இறுகிறுக தாள் இடீஇ
நெய்த்தோர் நிற அரக்கின் நீர் எக்கி யாவையும்
முத்து நீர் சாந்து அடைந்த மூஉய் தத்தி
புக அரும் பொங்கு உளை புள் இயல் மாவும்
மிக வரினும் மீது இனிய வேழ பிணவும்		15
அகவு அரும் பாண்டியும் அத்திரியும் ஆய் மா
சகடமும் தண்டு ஆர் சிவிகையும் பண்ணி
வகை_வகை ஊழ்_ஊழ் கதழ்பு மூழ்த்து ஏறி
முதியர் இளையர் முகை பருவத்தர்

வதி மண வம்பு அலர் வாய் அவிழ்ந்து அன்னார்	20
இரு திரு மாந்தரும் இன்னினியோரும்
விரவு நரையோரும் வெறு நரையோரும்
பதிவத_மாதர் பரத்தையர் பாங்கர்
அதிர் குரல் வித்தகர் ஆக்கிய தாள
விதி கூட்டிய இய மென் நடை போல		25
பதி எதிர் சென்று பரூஉ கரை நண்ணி
நீர் அணி காண்போர் நிரை மாடம் ஊர்குவோர்
பேர் அணி நிற்போர் பெரும் பூசல் தாக்குவோர்
மா மலி ஊர்வோர் வய பிடி உந்துவோர்

வீ மலி கான்யாற்றின் துருத்தி குறுகி		30
தாம் வீழ்வார் ஆகம் தழுவுவோர் தழுவு எதிராது
யாம குறை ஊடல் இன் நசை தேன் நுகர்வோர்
காம கணிச்சியால் கையறவு வட்டித்து
சேம திரை வீழ்த்து சென்று அமளி சேர்குவோர்
தாம் வேண்டு காதல் கணவர் எதிர்ப்பட		35
பூ மேம்பாடு உற்ற புனை சுரும்பின் சேம
மட நடை பாட்டியர் தப்பி தடை இறந்து
தாம் வேண்டும் பட்டினம் எய்தி கரை சேரும்
ஏமுறு நாவாய் வரவு எதிர்கொள்வார் போல்

யாம் வேண்டும் வையை புனல் எதிர்கொள் கூடல்	40
ஆங்க அணி நிலை மாடத்து அணி நின்ற பாங்காம்
மட பிடி கண்டு வய கரி மால்-உற்று
நடத்த நடவாது நிற்ப மட பிடி
அன்னம் அனையாரோடு ஆயா நடை கரி மேல்
செல் மனம் மால்-உறுப்ப சென்று எழில் மாடத்து	45
கை புனை கிளர் வேங்கை காணிய வெருவு-உற்று
மை புரை மட பிடி மட நல்லார் விதிர்ப்பு உற
செய் தொழில் கொள்ளாது மதி செத்து சிதைதர
கூம் கை மத_மா கொடும் தோட்டி கைந்நீவி

நீங்கும் பதத்தால் உருமு பெயர்த்தந்து		50
வாங்கி முயங்கி வய பிடி கால்கோத்து
சிறந்தார் நடுக்கம் சிறந்தார் களையல்
இதையும் கயிறும் பிணையும் இரிய
சிதையும் கலத்தை பயினான் திருத்தும்
திசை அறி நீகானும் போன்ம்			55
பரு கோட்டு யாழ் பக்கம் பாடலோடு ஆடல்
அருப்பம் அழிப்ப அழிந்த மன கோட்டையர்
ஒன்றோடு இரண்டா முன் தேறார் வென்றியின்
பல் சனம் நாணி பதைபதைப்பு மன்னவர்

தண்டம் இரண்டும் தலைஇ தாக்கி நின்றவை		60
ஒன்றியும் உடம்பாடு ஒலி எழுதற்கு அஞ்சி
நின்ற நிகழ்ச்சியும் போன்ம்
காமம் கனைந்து எழ கண்ணின் களி எழ
ஊர் மன்னும் அஞ்சி ஒளிப்பார் அவர் நிலை
கள்ளின் களி எழ காத்த ஆங்கு அலர் அஞ்சி		65
உள்ளம் உளை எழ ஊக்கத்தான் உள்_உள்
பரப்பி மதர் நடுக்கி பார் அலர் தூற்ற
கரப்பார் களி மதரும் போன்ம்
கள்ளொடு காமம் கலந்து கரை வாங்கும்

வெள்ளம் தரும் இ புனல்			70
புனல் பொருது மெலிந்தார் திமில் விட
கனல் பொருத அகிலின் ஆவி கா எழ
நகில் முகடு மெழுகிய அளறு மடை திறந்து
திகை முழுது கமழ முகில் அகடு கழி மதியின்
உறை கழி வள்ளத்து உறு நறவு வாக்குநர்		75
அரவு செறி உவவு மதி என அங்கையில் தாங்கி
ஏறி மகர வலயம் அணி திகழ் நுதலியர்
மதி உண் அர_மகள் என ஆம்பல் வாய் மடுப்ப
மீ பால் வெண் துகில் போர்க்குநர் பூ பால்

வெண் துகில் சூழ்ப்ப குழல் முறுக்குநர்		80
செம் குங்கும செழும் சேறு
பங்கம் செய் அகில் பல பளிதம்
மறுகுபட அறை புரை அறு குழவியின்
அவி அமர் அழல் என அரைக்குநர்
நத்தொடு நள்ளி நடை இறவு வய வாளை		85
வித்தி அலையில் விளைக பொலிக என்பார்
இல்லது நோக்கி இளிவரவு கூறா முன்
நல்லது வெஃகி வினை செய்வார்
மண் ஆர் மணியின் வணர் குரல் வண்டு ஆர்ப்ப

தண்ணம் துவர் பல ஊட்டி சலம் குடைவார்		90
எண்ணெய் கழல இழை துகள் பிசைவார்
மாலையும் சாந்தும் மதமும் இழைகளும்
கோலம் கொள நீர்க்கு கூட்டுவார் அ புனல்
உண்ணா நறவினை ஊட்டுவார் ஒண்_தொடியார்
வண்ணம் தெளிர முகமும் வளர் முலை		95
கண்ணும் கழிய சிவந்தன அன்ன வகை
ஆட்டு அயர்ந்து அரி படும் ஐ விரை மாண் பகழி
அரம் தின் வாய் போன்ம் போன்ம் போன்ம்
பின்னும் மலர் கண் புனல்

தண்டி தண்டின் தாய் செல்வாரும்			100
கண்டல் தண் தாது திரை நுரை தூவாரும்
வெய்ய திமிலின் விரை புனலோடு ஓய்வாரும்
மெய்யது உழவின் எதிர் புனல் மாறு ஆடி
பைய விளையாடுவாரும் மென் பாவையர்
செய்த பூ சிற்றடிசில் இட்டு உண்ண ஏற்பார்		105
இடுவார் மறுப்பார் சிறுகு இடையார்
பந்தும் கழங்கும் பல களவு கொண்டு ஓடி
அம் தண் கரை நின்று பாய்வாராய் மைந்தர்
ஒளிறு இலங்கு எஃகொடு வாள் மாறு உழக்கி

களிறு போர் உற்ற களம் போல நாளும்		110
தெளிவு இன்று தீம் நீர் புனல்
மதி மாலை மால் இருள் கால்சீப்ப கூடல்
வதி மாலை மாறும் தொழிலான் புது மாலை
நாள் அணி நீக்கி நகை மாலை பூ வேய்ந்து
தோள் அணி தோடு சுடர் இழை நித்திலம்		115
பாடுவார் பாடல் பரவல் பழிச்சுதல்
ஆடுவார் ஆடல் அமர்ந்த சீர் பாணி
நல்ல கமழ் தேன் அளி வழக்கம் எல்லாமும்
பண் தொடர் வண்டு பரிய எதிர் வந்து ஊத

கொண்டிய வண்டு கதுப்பின் குரல் ஊத		120
தென் திசை நோக்கி திரிதர்-வாய் மண்டு கால் சார்வா
நளிர் மலை பூ கொடி தங்குபு உகக்கும்
பனி வளர் ஆவியும் போன்ம் மணிமாடத்து
உள் நின்று தூய பனி நீருடன் கலந்து
கால் திரிய ஆர்க்கும் புகை			125
இலம்படு புலவர் ஏற்ற கை ஞெமர
பொலம் சொரி வழுதியின் புனல் இறை பரப்பி
செய்யில் பொலம் பரப்பும் செய்வினை ஓயற்க
வருந்தாது வரும் புனல் விருந்து அயர் கூடல்

அரும் கறை அறை இசை வயிரியர் உரிமை		130
ஒருங்கு அமர் ஆயமொடு ஏத்தினர் தொழவே

# 11 வையை
விரி கதிர் மதியமொடு வியல் விசும்பு புணர்ப்ப
எரி சடை எழில் வேழம் தலை என கீழ் இருந்து
தெரு இடைப்படுத்த மூன்று ஒன்பதிற்று இருக்கையுள்
உரு கெழு வெள்ளி வந்து ஏற்றியல் சேர
வருடையை படிமகன் வாய்ப்ப பொருள் தெரி		5
புந்தி மிதுனம் பொருந்த புலர் விடியல்
அங்கி உயர் நிற்ப அந்தணன் பங்குவின்
இல்ல துணைக்கு உப்பால் எய்த இறை யமன்
வில்லின் கடை மகரம் மேவ பாம்பு ஒல்லை

மதியம் மறைய வரு நாளில் வாய்ந்த		10
பொதியில் முனிவன் புரை வரை கீறி
மிதுனம் அடைய விரி கதிர் வேனில்
எதிர் வரவு மாரி இயைக என இ ஆற்றால்
புரை கெழு சையம் பொழி மழை தாழ
நெரிதரூஉம் வையை புனல்			15
வரையன புன்னாகமும்
கரையன சுரபுன்னையும்
வண்டு அறைஇய சண்பக நிரை தண் பதம்
மனைமாமரம் வாள்வீரம்

சினை வளர் வேங்கை கணவிரி காந்தள்		20
தாய தோன்றி தீ என மலரா
ஊதை அவிழ்த்த உடை இதழ் ஒண் நீலம்
வேய் பயில் சோலை அருவி தூர்த்தர
பாய் திரை உந்தி தருதலான் ஆய் கோல்
வயவர் அரி மலர் துறை என்கோ			25
அரி மலர் மீ போர்வை ஆரம் தாழ் மார்பின்
திரை நுரை மென் பொகுட்டு தேம் மண சாந்தின்
அரிவையது தானை என்கோ கள் உண்ணூஉ
பருகு படி மிடறு என்கோ பெரிய

திருமருத நீர் பூ துறை				30
ஆம் நாள் நிறை மதி அலர்தரு பக்கம் போல்
நாளின்_நாளின் நளி வரை சிலம்பு தொட்டு
நிலவு பரந்து ஆங்கு நீர் நிலம் பரப்பி
உலகு பயம் பகர ஓம்பு பெரும் பக்கம்
வழியது பக்கத்து அமரர் உண்டி			35
மதி நிறைவு அழிவதின் வரவு சுருங்க
எண் மதி நிறை உவா இருள் மதி போல
நாள் குறைபடுதல் காணுநர் யாரே
சேண் இகந்து கல் ஊர்ந்த மாண் இழை வையை

வய தணிந்து ஏகு நின் யாணர் இறு நாள் பெற	40
மா மயில் அன்னார் மறையில் புணர் மைந்தர்
காமம் கள விட்டு கை கொள் கற்பு-உற்று என
மல்லல் புனல் வையை மா மலை விட்டு இருத்தல்
இல்லத்து நீ தனி சேறல் இளிவரல்
என ஆங்கு					45
கடை அழிய நீண்டு அகன்ற கண்ணாளை காளை
படையொடும் கொண்டு பெயர்வானை சுற்றம்
இடை நெறி தாக்கு-உற்றது ஏய்ப்ப அடல் மதுரை
ஆடற்கு நீர் அமைந்தது யாறு

ஆற்று அணி வெள் வாள் விதிர்ப்போர் மிளிர் குந்தம் ஏந்துவோர்	50
கொள்வார் கோல் கொள்ள கொடி திண் தேர் ஏறுவோர்
புள் ஏர் புரவி பொலம் படை கைம்_மாவை
வெள்ள நீர் நீத்தத்துள் ஊர்பு_ஊர்பு உழக்குநரும்
கண் ஆரும் சாயல் கழி துரப்போரை
வண்ண நீர் கரந்த வட்டு விட்டு எறிவோரும்		55
மணம் வரு மாலையின் வட்டிப்போரை
துணி பிணர் மருப்பின் நீர் எக்குவோரும்
தெரி கோதை நல்லார் தம் கேளிர் திளைக்கும்
உரு கெழு தோற்றம் உரைக்கும்-கால் நாளும்

பொரு_களம் போலும் தகைத்தே பரி கவரும்		60
பாய் தேரான் வையை அகம்
நீர் அணி வெறி செறி மலர் உறு கமழ் தண்
தார் வரை அகலத்து அ ஏர் அணி நேர் இழை
ஒளி திகழ் தகை வகை செறி பொறி
புனை வினை பொலம் கோதையவரொடு		65
பாகர் இறை வழை மது நுகர்பு களி பரந்து
நாகரின் நல் வள வினை வயவு ஏற நளி புணர்-மார்
காரிகை மது ஒருவரின் ஒருவர் கண்ணின் கவர்பு-உற
சீர் அமை பாடல் பயத்தால் கிளர் செவி தெவி

உம்பர் உறையும் ஒளி கிளர் வான் ஊர்பு ஆடும்	70
அம்பி கரவா வழக்கிற்றே ஆங்கு அதை
கார் ஒவ்வா வேனில் கலங்கி தெளிவரல்
நீர் ஒவ்வா வையை நினக்கு
கனைக்கும் அதிர் குரல் கார் வானம் நீங்க
பனி படு பைதல் விதலை பருவத்து		75
ஞாயிறு காயா நளி மாரி பின் குளத்து
மா இரும் திங்கள் மறு நிறை ஆதிரை
விரி நூல் அந்தணர் விழவு தொடங்க
புரிநூல் அந்தணர் பொலம் கலம் ஏற்ப

வெம்பாது ஆக வியல் நில வரைப்பு என		80
அம்பா ஆடலின் ஆய் தொடி கன்னியர்
முனி துறை முதல்வியர் முறைமை காட்ட
பனி புலர்பு ஆடி பரு மணல் அருவியின்
ஊதை ஊர்தர உறை சிறை வேதியர்
நெறி நிமிர் நுடங்கு அழல் பேணிய சிறப்பின்		85
தையல் மகளிர் ஈர் அணி புலர்த்தர
வையை நினக்கு மடை வாய்த்தன்று
மையாடல் ஆடல் மழ புலவர் மாறு எழுந்து
பொய் ஆடல் ஆடும் புணர்ப்பின் அவர் அவர்

தீ எரி பாலும் செறி தவம் முன் பற்றியோ		90
தாய் அருகா நின்று தவ தை_நீராடுதல்
நீ உரைத்தி வையை நதி
ஆயிடை மா இதழ் கொண்டு ஓர் மட மாதர் நோக்கினாள்
வேய் எழில் வென்று வெறுத்த தோள் நோக்கி
சாய் குழை பிண்டி தளிர் காதில் தையினாள்		95
பாய் குழை நீலம் பகல் ஆக தையினாள்
குவளை குழை காதின் கோல செவியின்
இவள் செரீஇ நான்கு விழி படைத்தாள் என்று
நெற்றி விழியா நிறை திலகம் இட்டாளே

கொற்றவை கோலம்கொண்டு ஓர் பெண்		100
பவள வளை செறித்தாள் கண்டு அணிந்தாள் பச்சை
குவளை பசும் தண்டு கொண்டு
கல்லகார பூவால் கண்ணி தொடுத்தாளை
நில்லிகா என்பாள் போல் நெய்தல் தொடுத்தாளே
மல்லிகா மாலை வளாய்			105
தண்டு தழுவா தாவு நீர் வையையுள்
கண்ட பொழுதில் கடும் புனல் கை வாங்க
நெஞ்சம் அவள் வாங்க நீடு புணை வாங்க
நேர்_இழை நின்று-உழி கண் நிற்ப நீர் அவன்

தாழ்வு-உழி உய்யாது தான் வேண்டும் ஆறு உய்ப்ப	110
ஆயத்துடன் நில்லாள் ஆங்கு அவன் பின் தொடரூஉ
தாய் அ திறம் அறியாள் தாங்கி தனி சேறல்
ஆயத்தில் கூடு என்று அரற்றெடுப்ப தாக்கிற்றே
சேய் உற்ற கார் நீர் வரவு
நீ தக்காய் தை_நீர் நிறம் தெளிந்தாய் என்மாரும்	115
கழுத்து அமை கை வாங்கா காதலர் புல்ல
விழு_தகை பெறுக என வேண்டுதும் என்மாரும்
பூ வீழ் அரியின் புலம்ப போகாது
யாம் வீழ்வார் ஏமம் எய்துக என்மாரும்

கிழவர் கிழவியர் என்னாது ஏழ்-காறும்		120
மழ ஈன்று மல்லல் கேள் மன்னுக என்மாரும்
கண்டார்க்கு தாக்கு அணங்கு இ காரிகை காண்-மின்
பண்டாரம் காமன் படை உவள் கண் காண்-மின்
நீல் நெய் தாழ் கோதையவர் விலக்க நில்லாது
பூ ஊது வண்டு இனம் யாழ் கொண்ட கொளை கேண்-மின்	125
கொளை பொருள் தெரிதர கொளுத்தாமல் குரல் கொண்ட
கிளைக்கு உற்ற உழை சுரும்பின் கேழ் கெழு பாலை இசை ஓர்-மின்
பண் கண்டு திறன் எய்தா பண் தாளம் பெற பாடி
கொண்ட இன் இசை தாளம் கொளை சீர்க்கும் விரித்து ஆடும்

தண் தும்பி இனம் காண்-மின் தான் வீழ் பூ நெரித்தாளை		130
முனை கெழு சின நெஞ்சின் முன் எறிந்து பின்னும்
கனை வரல் ஒரு தும்பி காய் சினத்து இயல் காண்-மின்
என ஆங்கு
இன்ன பண்பின் நின் தை_நீராடல்
மின் இழை நறு நுதல் மகள் மேம்பட்ட		135
கன்னிமை கனியா கைக்கிளை காம
இன் இயல் மாண் தேர்ச்சி இசை பரிபாடல்
முன் முறை செய் தவத்தின் இ முறை இயைந்தேம்
மறு முறை அமையத்தும் இயைக

நறு நீர் வையை நய_தகு நிறையே		140

# 12 வையை
வளி பொரு மின்னொடு வான் இருள் பரப்பி
விளிவு இன்று கிளையொடு மேல் மலை முற்றி
தளி பொழி சாரல் ததர் மலர் தாஅய்
ஒளி திகழ் உத்தி உரு கெழு நாகம்
அகரு வழை ஞெமை ஆரம் இனைய		5
தகரமும் ஞாழலும் தாரமும் தாங்கி
நளி கடல் முன்னியது போலும் தீம் நீர்
வளி வரல் வையை வரவு
வந்து மதுரை மதில் பொரூஉம் வான் மலர் தாஅய்

அம் தண் புனல் வையை யாறு என கேட்டு		10
மின் அவிர் ஒளி இழை வேயுமோரும்
பொன் அடர் பூ புனை திருத்துவோரும்
அகில் கெழு சாந்தம் மாற்றி ஆற்ற
புகை கெழு சாந்தம் பூசுவோரும்
கார் கொள் கூந்தல் கதுப்பு அமைப்போரும்		15
வேர் பிணி பல் மலர் வேயுமோரும்
புட்டகம் பொருந்துவ புனைகுவோரும்
கட்டிய கயில் அணி காழ் கொள்வோரும்
வாச நறு நெய் ஆடி வான் துகள்

மாசு அற கண்ணடி வயக்கி வண்ணமும்		20
தேசும் ஒளியும் திகழ நோக்கி
வாச மண துவர் வாய் கொள்வோரும்
இடு புணர் வளையொடு தொடு தோள் வளையர்
கட்டுவட கழலினர் மட்டு மாலையர்
ஓசனை கமழும் வாச மேனியர்			25
மட மா மிசையோர்
பிடி மேல் அன்ன பெரும் படை அனையோர்
கடு மா கடவுவோரும் களிறு மேல் கொள்வோரும்
வடி மணி நெடும் தேர் மா முள் பாய்க்குநரும்

விரைபு_விரைபு மிகை_மிகை ஈண்டி		30
ஆடல் தலைத்தலை சிறப்ப கூடல்
உரைதர வந்தன்று வையை நீர் வையை
கரை தர வந்தன்று காண்பவர் ஈட்டம்
நிவந்தது நீத்தம் கரை மேலா நீத்தம்
கவர்ந்தது போலும் காண்பவர் காதல்		35
முன்துறை நிறை அணி நின்றவர் மொழி மொழி
ஒன்று அல பல_பல உடன் எழுந்தன்று அவை
எல்லாம் தெரிய கேட்குநர் யார் அவை
கில்லா கேள்வி கேட்டன சில_சில

ஒத்த குழலின் ஒலி எழ முழவு இமிழ்		40
மத்தரி தடாரி தண்ணுமை மகுளி
ஒத்து அளந்து சீர்தூக்கி ஒருவர் பிற்படார்
நித்தம் திகழும் நேர் இறை முன்கையால்
அ தக அரிவையர் அளத்தல் காண்-மின்
நாணாள்-கொல் தோழி நயன் இல் பரத்தையின்	45
தோள் நலம் உண்டு துறந்தான் என ஒருத்தி
யாணர் மலி புனல் நீத்தத்து இரும் பிடி
சேண வெரிநின் சிறந்தானோடு ஏறினாள்
நாணு குறைவு இலள் நங்கை மற்று என்மரும்

கோட்டியுள் கொம்பர் குவி முலை நோக்குவோன்	50
ஓட்டை மனவன் உரம் இலி என்மரும்
சொரிந்ததூஉம் சொற்றதூஉம் பற்றாள் நிறம் திரிந்தாள்
நெஞ்சத்தை நீத்தாள் நெறி செல்வான் பின் நிறை
அஞ்சி கழியாமோ அன்பு உற்றால் என்மரும்
பூண் ஆரம் நோக்கி புணர் முலை பார்த்தான் உவன்	55
நாணாள் அவனை இ நாரிகை என்மரும்
அமிர்து அன நோக்கத்து அணங்கு ஒருத்தி பார்ப்ப
கமழ் கோதை கோலா புடைத்து தன் மார்பில்
இழையினை கை யாத்து இறுகிறுக்கி வாங்கி

பிழையினை என்ன பிழை ஒன்றும் காணான்		60
தொழுது பிழை கேட்கும் தூயவனை காண்-மின்
பார்த்தாள் ஒருத்தி நினை என பார்த்தவளை
பொய் சூளாள் என்பது அறியேன் யான் என்று இரந்து
மெய் சூள்-உறுவானை மெல்லியல் பொய் சூள் என்று
ஒல்லுவ சொல்லாது உரை வழுவ சொல்ல		65
உறைத்தும் செறுத்தும் உணர்த்துவானை
புல்லாது ஊடி புலந்து நின்றவள்
பூ எழில் வண்ண நீர் பூரித்த வட்டு எறிய
வேல் எழில் உண்கண் எறி நோக்கம் பட்ட புண்

பாய் குருதி சோர பகை இன்று உளம் சோர		70
நில்லாது நீங்கி நிலம் சோர அல்லாந்து
மல் ஆர் அகலம் வடு அஞ்சி மம்மர் கூர்ந்து
எல்லா துனியும் இறப்ப தன் காதலன்
நல் ஏர் எழில் ஆகம் சேர்வித்தல் எஞ்ஞான்றும்
வல்லதால் வையை புனல்			75
என ஆங்கு
மல்லிகை மௌவல் மணம் கமழ் சண்பகம்
அல்லி கழுநீர் அரவிந்தம் ஆம்பல்
குல்லை வகுளம் குருக்கத்தி பாதிரி

நல் இணர் நாகம் நறவம் சுரபுன்னை		80
எல்லாம் கமழும் இருசார் கரை கலிழ
தேறி தெளிந்து செறி இருள் மால் மாலை
பாறை பரப்பில் பரந்த சிறை நின்று
துறக்கத்து எழிலை தன் நீர் நிழல் காட்டும்
கார் அடு காலை கலிழ் செம் குருதித்தே		85
போர் அடு தானையான் யாறு
சுடு நீர் வினை குழையின் ஞால சிவந்த
கடி மலர் பிண்டி தன் காதில் செரீஇ
விடு மலர் பூ கொடி போல நுடங்கி

அடி மேல் அடி மேல் ஒதுங்கி தொடி முன்கை	90
காரிகை ஆக தன் கண்ணி திருத்தினாள்
நேர் இறை முன்கை நல்லவள் கேள் காண்-மின்
துகில் சேர் மலர் போல் மணி நீர் நிறைந்தன்று
புனல் என மூதூர் மலிந்தன்று அவர் உரை
உரையின் உயர்ந்தன்று கவின்			95
போர் ஏற்றன்று நவின்று தகரம்
மார்பு அழி சாந்தின் மணல் அளறு பட்டன்று
துகில் பொசி புனலின் கரை கார் ஏற்றன்று
விசும்பு கடி விட்டன்று விழவு புனல் ஆங்க

இன்பமும் கவினும் அழுங்கல் மூதூர்		100
நன் பல நன் பல நன் பல வையை
நின் புகழ் கொள்ளாது இ மலர் தலை உலகே

# 13 திருமால்
மணி வரை ஊர்ந்த மங்குல் ஞாயிற்று
அணி வனப்பு அமைந்த பூ துகில் புனை முடி
இறுவரை இழிதரும் பொன் மணி அருவியின்
நிறனொடு மாறும் தார் புள்ளு பொறி புனை கொடி
விண் அளி கொண்ட வியன் மதி அணி கொள	5
தண் அளி கொண்ட அணங்கு உடை நேமி மால்
பருவம் வாய்த்தலின் இரு விசும்பு அணிந்த
இரு வேறு மண்டிலத்து இலக்கம் போல
நேமியும் வளையும் ஏந்திய கையான்

கருவி மின் அவிர் இலங்கும் பொலம் பூண்		10
அருவி உருவின் ஆரமொடு அணிந்த நின்
திரு வரை அகலம் தொழுவோர்க்கு
உரிது அமர் துறக்கமும் உரிமை நன்கு உடைத்து
சுவைமை இசைமை தோற்றம் நாற்றம் ஊறு
அவையும் நீயே அடு போர் அண்ணால்		15
அவை_அவை கொள்ளும் கருவியும் நீயே
முந்து யாம் கூறிய ஐந்தனுள்ளும்
ஒன்றனில் போற்றிய விசும்பும் நீயே
இரண்டின் உணரும் வளியும் நீயே

மூன்றின் உணரும் தீயும் நீயே			20
நான்கின் உணரும் நீரும் நீயே
ஐந்துடன் முற்றிய நிலனும் நீயே
அதனால்
நின் மருங்கின்று மூ_ஏழ் உலகமும்
மூலமும் அறனும் முதன்மையின் இகந்த		25
காலமும் விசும்பும் காற்றொடு கனலும்
தன் உரு உறழும் பாற்கடல் நாப்பண்
மின் அவிர் சுடர் மணி ஆயிரம் விரித்த
கவை நா அரும் தலை காண்பின் சேக்கை

துளவம் சூடிய அறிதுயிலோனும்			30
மறம் மிகு மலி ஒலி மாறு அடு தானையால்
திறன் இகந்து வரூஉம் அவர் உயிர் அகற்றும்
விறல் மிகு வலி ஒலி பொலிபு அகழ் புழுதியின்
நிறன் உழும் வளை வாய் நாஞ்சிலோனும்
நானிலம் துளக்கு அற முழு_முதல் நாற்றிய		35
பொலம் புனை இதழ் அணி மணி மடல் பேர் அணி
இலங்கு ஒளி மருப்பின் களிறும் ஆகி
மூ உரு ஆகிய தலை_பிரி_ஒருவனை
படர் சிறை பல் நிற பாப்பு பகையை

கொடி என கொண்ட கோடா செல்வனை		40
ஏவல் இன் முதுமொழி கூறும்
சேவல் ஓங்கு உயர் கொடி செல்வ நன் புகழவை
கார் மலர் பூவை கடலை இருள் மணி
அவை ஐந்தும் உறழும் அணி கிளர் மேனியை
வலம்புரி வாய்மொழி அதிர்பு வான் முழக்கு செல்	45
அவை நான்கும் உறழும் அருள் செறல்-வயின் மொழி
முடிந்ததும் முடிவதும் முகிழ்ப்பதும் அவை மூன்றும்
கடந்து அவை அமைந்த கழலின் நிழலவை
இருமை வினையும் இல ஏத்துமவை

ஒருமை வினை மேவும் உள்ளத்தினை		50
அடை இறந்து அவிழ்ந்த வள் இதழ் தாமரை
அடியும் கையும் கண்ணும் வாயும்
தொடியும் உந்தியும் தோள் அணி வலயமும்
தாளும் தோளும் எருத்தொடு பெரியை
மார்பும் அல்குலும் மனத்தொடு பரியை		55
கேள்வியும் அறிவும் அறத்தொடு நுண்ணியை
வேள்வியும் மறனும் விருப்பொடு வெய்யை
அறாஅ மைந்தின் செறாஅ செம் கண்
செரு மிகு திகிரி_செல்வ வெல் போர்

எரி நகை இடை இடுபு இழைத்த நறும் தார்		60
புரி மலர் துழாஅய் மேவல் மார்பினோய்
அன்னை என நினைஇ நின் அடி தொழுதனெம்
பல் மாண் அடுக்க இறைஞ்சினெம் வாழ்த்தினெம்
முன்னும் முன்னும் யாம் செய் தவ பயத்தால்
இன்னும் இன்னும் எம் காமம் இதுவே		65

# 14 செவ்வேள்
கார் மலி கதழ் பெயல் தலைஇ ஏற்ற
நீர் மலி நிறை சுனை பூ மலர்ந்தனவே
தண் நறும் கடம்பின் கமழ் தாது ஊதும்
வண்ண வண்டு இமிர் குரல் பண்ணை போன்றனவே
அடியுறை_மகளிர் ஆடும் தோளே			5
நெடு வரை அடுக்கத்து வேய் போன்றனவே
வாகை ஒண் பூ புரையும் முச்சிய
தோகை ஆர் குரல் மணந்து தணந்தோரை
நீடன்-மின் வாரும் என்பவர் சொல் போன்றனவே

நாள்_மலர் கொன்றையும் பொலம் தார் போன்றன	10
மெல் இணர் வேங்கை வியல் அறை தாயின
அழுகை மகளிர்க்கு உழுவை செப்ப
நீர் அயல் கலித்த நெரி முகை காந்தள்
வார் குலை அவிழ்ந்த வள் இதழ் நிரை-தொறும்
விடு கொடி பிறந்த மென் தகை தோன்றி		15
பவழத்து அன்ன வெம் பூ தாஅய்
கார் மலிந்தன்று நின் குன்று போர் மலிந்து
சூர் மருங்கு அறுத்த சுடர் படையோயே
கறை இல் கார் மழை பொங்கி அன்ன

நறையின் நறும் புகை நனி அமர்ந்தோயே		20
அறு முகத்து ஆறு_இரு தோளால் வென்றி
நறு மலர் வள்ளி பூ நயந்தோயே
கெழீஇ கேளிர் சுற்ற நின்னை
எழீஇ பாடும் பாட்டு அமர்ந்தோயே
பிறந்த ஞான்றே நின்னை உட்கி			25
சிறந்தோர் அஞ்சிய சீர் உடையோயே
இரு பிறப்பு இரு பெயர் ஈர நெஞ்சத்து
ஒரு பெயர் அந்தணர் அறன் அமர்ந்தோயே
அன்னை ஆகலின் அமர்ந்து யாம் நின்னை

துன்னி துன்னி வழிபடுவதன் பயம்		30
இன்னும் இன்னும் அவை ஆகுக
தொன் முதிர் மரபின் நின் புகழினும் பலவே

# 15 திருமால்
புல வரை அறியா புகழொடு பொலிந்து
நில வரை தாங்கிய நிலைமையின் பெயரா
தொலையா நேமி முதல் தொல் இசை அமையும்
புலவர் ஆய்பு உரைத்த புனை நெடும் குன்றம்
பல எனின் ஆங்கு அவை பலவே பலவினும்		5
நிலவரை ஆற்றி நிறை பயன் ஒருங்கு உடன்
நின்று பெற நிகழும் குன்று அவை சிலவே
சிலவினும் சிறந்தன தெய்வம் பெட்பு-உறும்
மலர் அகல் மார்பின் மை படி குடுமிய

குல வரை சிலவே குல வரை சிலவினும்		10
சிறந்தது கல் அறை கடலும் கானலும் போலவும்
புல்லிய சொல்லும் பொருளும் போலவும்
எல்லாம் வேறு_வேறு உருவின் ஒரு தொழில் இருவர்
தாங்கும் நீள் நிலை ஓங்கு இருங்குன்றம்
நாறு இணர் துழாயோன் நல்கின் அல்லதை		15
ஏறுதல் எளிதோ வீறு பெறு துறக்கம்
அரிதின் பெறு துறக்கம் மாலிருங்குன்றம்
எளிதின் பெறல் உரிமை ஏத்துகம் சிலம்ப
அரா அணர் கயம் தலை தம்முன் மார்பின்

மரா மலர் தாரின் மாண் வர தோன்றி		20
அலங்கும் அருவி ஆர்த்து இமிழ்பு இழிய
சிலம்பாறு அணிந்த சீர் கெழு திருவின்
சோலையொடு தொடர் மொழி மாலிருங்குன்றம்
தாம் வீழ் காமம் வித்துபு விளைக்கும்
நாம தன்மை நன்கனம் படி எழ			25
யாம தன்மை இ ஐ இருங்குன்றத்து
மன் புனல் இள வெயில் வளாவ இருள் வளர்வு என
பொன் புனை உடுக்கையோன் புணர்ந்து அமர் நிலையே
நினை-மின் மாந்தீர் கேண்-மின் கமழ் சீர்

சுனை எலாம் நீலம் மலர சுனை சூழ்		30
சினை எலாம் செயலை மலர காய் கனி
உறழ நனை வேங்கை ஒள் இணர் மலர
மாயோன் ஒத்த இன் நிலைத்தே
சென்று தொழுகல்லீர் கண்டு பணி-மின்மே
இருங்குன்று என்னும் பெயர் பரந்ததுவே		35
பெரும் கலி ஞாலத்து தொன்று இயல் புகழது
கண்டு மயர் அறுக்கும் காமக்கடவுள்
மக முயங்கு மந்தி வரை_வரை பாய
முகிழ் மயங்கு முல்லை முறை நிகழ்வு காட்ட

மணி மருள் நன் நீர் சினை மட மயில் அகவ		40
குருகு இலை உதிர குயில்_இனம் கூவ
பகர் குழல் பாண்டில் இயம்ப அகவுநர்
நா நவில் பாடல் முழவு எதிர்ந்த அன்ன
சிலம்பின் சிலம்பு இசை ஓவாது ஒன்னார்
கடந்து அட்டான் கேழ் இருங்குன்று		45
தையலவரொடும் தந்தாரவரொடும்
கைம்_மகவோடும் காதலவரொடும்
தெய்வம் பேணி திசை தொழுதனிர் செல்-மின்
புவ்வ_தாமரை புரையும் கண்ணன்

வௌவல் கார் இருள் மயங்கு மணி மேனியன்	50
எ-வயின் உலகத்தும் தோன்றி அ-வயின்
மன்பது மறுக்க துன்பம் களைவோன்
அன்பு அது மேஎய் இருங்குன்றத்தான்
கள் அணி பசும் துளவினவை கரும் குன்று அனையவை
ஒள் ஒளியவை ஒரு குழையவை			55
புள் அணி பொலம் கொடியவை
வள் அணி வளை நாஞ்சிலவை
சலம் புரி தண்டு ஏந்தினவை
வலம்புரி வய நேமியவை

வரி சிலை வய அம்பினவை			60
புகர் இணர் சூழ் வட்டத்தவை புகர் வாளவை
என ஆங்கு
நலம் புரீஇ அம் சீர் நாம வாய்மொழி
இது என உரைத்தலின் எம் உள் அமர்ந்து இசைத்து இறை
இருங்குன்றத்து அடியுறை இயைக என		65
பெரும் பெயர் இருவரை பரவுதும் தொழுதே

# 16 வையை
கரையே கைவண் தோன்றல் ஈகை போன்ம் என
மை படு சிலம்பின் கறியொடும் சாந்தொடும்
நெய் குடை தயிரின் நுரையொடும் பிறவொடும்
எ வயினானும் மீது_மீது அழியும்
துறையே முத்து நேர்பு புணர் காழ் மத்தக நித்திலம்	5
பொலம் புனை அவிர் இழை கலங்கல் அம் புனல் மணி
வலஞ்சுழி உந்திய திணை பிரி புதல்வர்
கயம் தலை முச்சிய முஞ்சமொடு தழீஇ
தத்தம் துணையோடு ஒருங்கு உடன் ஆடும்

தத்து அரி கண்ணார் தலைத்தலை வருமே		10
செறுவே விடு மலர் சுமந்து பூ நீர் நிறைதலின்
படு கண் இமிழ் கொளை பயின்றனர் ஆடும்
களி நாள் அரங்கின் அணி நலம் புரையும்
காவே சுரும்பு இமிர் தாதொடு தலைத்தலை மிகூஉம்
நரந்த நறு மலர் நன்கு அளிக்கும்மே		15
கரைபு ஒழுகு தீம் புனற்கு எதிர் விருந்து அயர்வ போல்
கான் அல் அம் காவும் கயமும் துருத்தியும் தேன்
தேன் உண்டு பாட திசை_திசை பூ நலம்
பூத்தன்று வையை வரவு

சுருங்கையின் ஆயத்தார் சுற்றும் எறிந்து		20
குரும்பையின் முலை பட்ட பூ நீர் துடையாள்
பெருந்தகை மீளி வருவானை கண்டே
இரும் துகில் தானையின் ஒற்றி பொருந்தலை
பூத்தனள் நீங்கு என பொய் ஆற்றால் தோழியர்
தோற்றம் ஓர் ஒத்த மலர் கமழ் தண் சாந்தின்	25
நாற்றத்தின் போற்றி நகையொடும் போத்தந்து
இரும் கடற்கு ஊங்கு இவரும் யாறு என தங்கான்
மகிழ களி பட்ட தேன் தேறல் மாற்றி
குருதி துடையா குறுகி மருவ இனியர்

பூத்தனள் நங்கை பொலிக என நாணுதல்		30
வாய்த்தன்றால் வையை வரவு
மலையின் இழி அருவி மல்கு இணர் சார் சார்
கரை மரம் சேர்ந்து கவினி மடவார்
நனை சேர் கதுப்பினுள் தண் போது மைந்தர்
மலர் மார்பின் சோர்ந்த மலர் இதழ் தாஅய்		35
மீன் ஆரம் பூத்த வியன் கங்கை நந்திய
வானம் பெயர்ந்த மருங்கு ஒத்தல் எஞ்ஞான்றும்
தேன் இமிர் வையைக்கு இயல்பு
கள்ளே புனலே புலவி இ மூன்றினும்

ஒள் ஒளி சேய்தா ஒளி கிளர் உண்கண் கெண்டை	40
பல் வரி வண்டு_இனம் வாய் சூழ் கவினொடும்
செல் நீர் வீ-வயின் தேன் சோர பல் நீர்
அடுத்தடுத்து ஆடுவார் புல்ல குழைந்து
வடு படு மான்_மத_சாந்து ஆர் அகலத்தான்
எடுத்த வேய் எக்கி நூக்கு உயர்பு தாக்க		45
தொடுத்த தேன் சோரும் வரை போலும் தோற்றம்
கொடி தேரான் வையைக்கு இயல்பு
வரை ஆர்க்கும் புயல் கரை
திரை ஆர்க்கும் இ தீம் புனல்

கண்ணியர் தாரர் கமழ் நறும் கோதையர்		50
பண்ணிய ஈகை பயன் கொள்வான் ஆடலால்
நாள்_நாள் உறையும் நறும் சாந்தும் கோதையும்
பூத்த புகையும் அவியும் புலராமை
மறாஅற்க வானம் மலிதந்து நீத்தம்
வறாஅற்க வைகை நினக்கு			55

# 17 செவ்வேள்
தேம் படு மலர் குழை பூ துகில் வடி மணி
ஏந்து இலை சுமந்து சாந்தம் விரைஇ
விடை அரை அசைத்த வேலன் கடி_மரம்
பரவினர் உரையொடு பண்ணிய இசையினர்
விரி மலர் மதுவின் மரன் நனை குன்றத்து		5
கோல் எரி கொளை நறை புகை கொடி ஒருங்கு எழ
மாலை மாலை அடியுறை இயைநர்
மேலோர் உறையுளும் வேண்டுநர் யாஅர்
ஒருதிறம் பாணர் யாழின் தீம் குரல் எழ

ஒருதிறம் யாணர் வண்டின் இமிர் இசை எழ		10
ஒருதிறம் கண் ஆர் குழலின் கரைபு எழ
ஒருதிறம் பண் ஆர் தும்பி பரந்து இசை ஊத
ஒருதிறம் மண் ஆர் முழவின் இசை எழ
ஒருதிறம் அண்ணல் நெடு வரை அருவி நீர் ததும்ப
ஒருதிறம் பாடல் நல் விறலியர் ஒல்குபு நுடங்க	15
ஒருதிறம் வாடை உளர்-வயின் பூ கொடி நுடங்க
ஒருதிறம் பாடினி முரலும் பாலை அம் குரலின்
நீடு கிளர் கிழமை நிறை குறை தோன்ற
ஒருதிறம் ஆடு சீர் மஞ்ஞை அரி குரல் தோன்ற

மாறுமாறு உற்றன போல் மாறு எதிர் கோடல்	20
மாறு அட்டான் குன்றம் உடைத்து
பாடல் சான்று பல் புகழ் முற்றிய
கூடலொடு பரங்குன்றின் இடை
கமழ் நறும் சாந்தின் அவரவர் திளைப்ப
நணி_நணித்து ஆயினும் சேஎய் சேய்த்து		25
மகிழ் மிகு தேஎம் கோதையர் கூந்தல் குஞ்சியின்
சோர்ந்து அவிழ் இதழின் இயங்கும் ஆறு இன்று
வசை நீங்கிய வாய்மையால் வேள்வியால்
திசை நாறிய குன்று அமர்ந்து ஆண்டு_ஆண்டு

ஆவி உண்ணும் அகில் கெழு கமழ் புகை		30
வாய்வாய் மீ போய் உம்பர் இமைபு இறப்ப
தேயா_மண்டிலம் காணுமாறு இன்று
வளை முன்கை வணங்கு இறையார்
அணை மென் தோள் அசைபு ஒத்தார்
தார் மார்பின் தகை இயலார்			35
ஈர மாலை இயல் அணியார்
மனம் மகிழ் தூங்குநர் பாய்பு உடன் ஆட
சுனை மலர் தாது ஊதும் வண்டு ஊதல் எய்தா
அனைய பரங்குன்றின் அணி

கீழோர் வயல் பரக்கும் வார் வெள் அருவி பரந்து ஆனாது அரோ	40
மேலோர் இயங்குதலால் வீழ் மணி நீலம் செறு உழக்கும் அரோ
தெய்வ விழவும் திருந்து விருந்து அயர்வும்
அம் வெள் அருவி அணி பரங்குன்றிற்கும்
தொய்யா விழு சீர் வளம் கெழு வையைக்கும்
கொய் உளை மான் தேர் கொடி தேரான் கூடற்கும்		45
கை ஊழ் தடுமாற்றம் நன்று
என ஆங்கு
மணி நிற மஞ்ஞை ஓங்கிய புள் கொடி
பிணிமுகம் ஊர்ந்த வெல் போர் இறைவ

பணி ஒரீஇ நின் புகழ் ஏத்தி			50
அணி நெடும் குன்றம் பாடுதும் தொழுதும்
அவை யாமும் எம் சுற்றமும் பரவுதும்
ஏம வைகல் பெறுக யாம் எனவே

# 18 செவ்வேள்
போர் எதிர்ந்து ஏற்றார் மதுகை மதம் தப
கார் எதிர்ந்து ஏற்ற கமம் சூல் எழிலி போல்
நீர் நிரந்து ஏற்ற நிலம் தாங்கு அழுவத்து
சூர் நிரந்து சுற்றிய மா தபுத்த வேலோய் நின்
சீர் நிரந்து ஏந்திய குன்றொடு நேர்நிரந்து		5
ஏறுமாறு ஏற்கும் இ குன்று
ஒள் ஒளி மணி பொறி ஆல் மஞ்ஞை நோக்கி தன்
உள்ளத்து நினைப்பானை கண்டனள் திரு நுதலும்
உள்ளியது உணர்ந்தேன் அஃது உரை இனி நீ எம்மை

எள்ளுதல் மறைத்தல் ஓம்பு என்பாளை பெயர்த்து அவன்		10
காதலாய் நின் இயல் களவு எண்ணி களி மகிழ்
பேது உற்ற இதனை கண்டு யான் நோக்க நீ எம்மை
ஏதிலா நோக்குதி என்று ஆங்கு உணர்ப்பித்தல்
ஆய் தேரான் குன்ற இயல்பு
ஐ வளம் பூத்த அணி திகழ் குன்றின் மேல்		15
மை வளம் பூத்த மலர் ஏர் மழை கண்ணார்
கை வளம் பூத்த வடுவொடு காணாய் நீ
மொய் வளம் பூத்த முயக்கம் யாம் கைப்படுத்தேம்
மெய் வளம் பூத்த விழை_தகு பொன் அணி

நைவளம் பூத்த நரம்பு இயை சீர் பொய் வளம்	20
பூத்தன பாணா நின் பாட்டு
தண் தளிர் தரு படுத்து எடுத்து உரைஇ
மங்குல் மழை முழங்கிய விறல் வரையால்
கண் பொருபு சுடர்ந்து அடர்ந்து இடந்து
இருள் போழும் கொடி மின்னால்			25
வெண் சுடர் வேல் வேள் விரை மயில் மேல் ஞாயிறு நின்
ஒண் சுடர் ஓடை களிறு ஏய்க்கும் நின் குன்றத்து
எழுது எழில் அம்பலம் காமவேள் அம்பின்
தொழில் வீற்றிருந்த நகர்

ஆர் ததும்பும் அயில் அம்பு நிறை நாழி		30
சூர் ததும்பு வரைய காவால்
கார் ததும்பு நீர் ததும்புவன சுனை
ஏர் ததும்புவன பூ அணி செறிவு
போர் தோற்று கட்டுண்டார் கை போல்வ கார் தோற்றும்
காந்தள் செறிந்த கவின்			35
கவின் முகை கட்டு அவிழ்ப்ப தும்பி கட்டு யாழின்
புரி நெகிழ்ப்பார் போன்றன கை
அச்சிரக்கால் ஆர்த்து அணி மழை கோலின்றே
வச்சிரத்தான் வானவில்லு

வில்லு சொரி பகழியின் மென் மலர் தாயின		40
வல்லு போர் வல்லாய் மலை மேல் மரம்
வட்டு உருட்டு வல்லாய் மலைய நெட்டுருட்டு
சீர் ததும்பும் அரவமுடன் சிறந்து
போர் ததும்பும் அரவம் போல்
கருவி ஆர்ப்ப கருவி நின்றன குன்றம்		45
அருவி ஆர்ப்ப முத்து அணிந்தன வரை
குருவி ஆர்ப்ப குரல் குவிந்தன தினை
எருவை கோப்ப எழில் அணி திருவில்
வானில் அணித்த வரி ஊதும் பல் மலரால்

கூனி வளைத்த சுனை				50
புரி உறு நரம்பும் இயலும் புணர்ந்து
சுருதியும் பூவும் சுடரும் கூடி
எரி உருகு அகிலோடு ஆரமும் கமழும்
செரு வேல் தானை செல்வ நின் அடியுறை
உரிதினின் உறை பதி சேர்ந்து ஆங்கு		55
பிரியாது இருக்க எம் சுற்றமோடு உடனே

# 19 செவ்வேள்
நில வரை அழுவத்தான் வான் உறை புகல் தந்து
புல வரை அறியாத புகழ் பூத்த கடம்பு அமர்ந்து
அரு முனி மரபின் ஆன்றவர் நுகர்ச்சி மன்
இரு நிலத்தோரும் இயைக என ஈத்த நின்
தண் பரங்குன்றத்து இயல் அணி நின் மருங்கு	5
சாறு கொள் துறக்கத்தவளொடு
மாறு கொள்வது போலும் மயில் கொடி வதுவை
புலத்தினும் போரினும் போர் தோலா கூடல்
கலப்போடு இயைந்த இரவு தீர் எல்லை

அறம் பெரிது ஆற்றி அதன் பயன் கொள்-மார்		10
சிறந்தோர்_உலகம் படருநர் போல
உரி மாண் புனை கலம் ஒண் துகில் தாங்கி
புரி மாண் புரவியர் போக்கு அமை தேரர்
தெரி மலர் தாரர் தெரு இருள் சீப்ப நின்
குன்றொடு கூடல் இடை எல்லாம் ஒன்றுபு		15
நேர் பூ நிறை பெய்து இரு நிலம் பூட்டிய
தார் போலும் மாலை தலை நிறையால் தண் மணல்
ஆர் வேலை யாத்திரை செல் யாறு
சுடரொடு சூழ்வரு தாரகை மேரு

புடை வரு சூழல் புலம் மாண் வழுதி		20
மட மயில் ஓரும் மனையவரோடும்
கடன் அறி காரிய கண்ணவரோடும் நின்
சூர் உறை குன்றின் தட வரை ஏறி மேல்
பாடு வலம் திரி பண்பின் பழ மதி
சூடி அசையும் சுவல் மிசை தானையின்		25
பாடிய நாவின் பரந்த உவகையின்
நாடும் நகரும் அடைய அடைந்து அனைத்தே
படு மணி யானை நெடியாய் நீ மேய
கடி நகர் சூழ் நுவலும்-கால்

தும்பி தொடர் கதுப்ப தும்பி தொடர் ஆட்டி		30
வம்பு அணி பூ கயிறு வாங்கி மரன் அசைப்பார்
வண் தார் புரவி வழி நீங்க வாங்குவார்
திண் தேர் வழியின் செல நிறுப்பார் கண்ட
கரும்பு கவழம் மடுப்பார் நிரந்து
பரி நிமிர் தானையான் பாசறை நீர்த்தே		35
குருகு எறி வேலோய் நின் குன்ற கீழ் நின்ற
இடை நிலம் யாம் ஏத்தும் ஆறு
குரங்கு அருந்து பண்ணியம் கொடுப்போரும்
கரும்பு கரு_முக கணக்கு அளிப்போரும்

தெய்வ பிரமம் செய்குவோரும்			40
கை வைத்து இமிர்பு குழல் காண்குவோரும்
யாழின் இளி குரல் சமம் கொள்வோரும்
வேள்வியின் அழகு இயல் விளம்புவோரும்
கூர நாண் குரல் கொம்மென ஒலிப்ப
ஊழ்-உற முரசின் ஒலி செய்வோரும்		45
என்றூழ் உற வரும் இரு சுடர் நேமி
ஒன்றிய சுடர் நிலை உள்படுவோரும்
இரதி காமன் இவள் இவன் எனாஅ
விரகியர் வினவ வினா இறுப்போரும்

இந்திரன் பூசை இவள் அகலிகை இவன்		50
சென்ற கவுதமன் சினன் உற கல் உரு
ஒன்றிய படி இது என்று உரைசெய்வோரும்
இன்ன பல_பல எழுத்து_நிலை_மண்டபம்
துன்னுநர் சுட்டவும் சுட்டு அறிவுறுத்தவும்
நேர் வரை விரி அறை வியல் இடத்து இழைக்க	55
சோபன நிலை அது துணி பரங்குன்றத்து
மாஅல் மருகன் மாட மருங்கு
பிறந்த தமரின் பெயர்ந்து ஒரு பேதை
பிறங்கல் இடையிடை புக்கு பிறழ்ந்து யான்

வந்த நெறியும் மறந்தேன் சிறந்தவர்		60
ஏஎ ஓஒ என விளி ஏற்பிக்க
ஏஎ ஓஒ என்று ஏலா அ விளி
அ இசை முழை ஏற்று அழைப்ப அழைத்து-உழி
செல்குவள் ஆங்கு தமர் காணாமை
மீட்சியும் கூஉ_கூஉ மேவும் மடமைத்தே		65
வாழ்த்து உவப்பான் குன்றின் வகை
நனி நுனி நயவரு சாய்ப்பின் நாறு இணர்
சினை போழ் பல்லவம் தீம் சுனை உதிர்ப்ப
உதிர்த்த சுனையின் எடுத்த தலைய

அலர் முகிழ் உற அவை கிடப்ப			70
தெரி மலர் நனை உறுவ
ஐம் தலை அவிர் பொறி அரவம் மூத்த
மைந்தன் அருகு ஒன்று மற்று இளம் பார்ப்பு என
ஆங்கு இள மகளிர் மருள பாங்கர்
பசும்பிடி இள முகிழ் நெகிழ்ந்த வாய் ஆம்பல்		75
கை போல் பூத்த கமழ் குலை காந்தள்
எருவை நறும் தோடு எரி இணர் வேங்கை
உருவம் மிகு தோன்றி ஊழ் இணர் நறவம்
பருவம் இல் கோங்கம் பகை மலர் இலவம்

நிணந்தவை கோத்தவை நெய்தவை தூக்க		80
மணந்தவை போல வரை மலை எல்லாம்
நிறைந்தும் உறழ்ந்தும் நிமிர்ந்தும் தொடர்ந்தும்
விடியல் வியல் வானம் போல பொலியும்
நெடியாய் நின் குன்றின் மிசை
நின யானை சென்னி நிறம் குங்குமத்தால்		85
புனையா பூ நீர் ஊட்டி புனை கவரி சார்த்தா
பொன் பவழ பூ காம்பின் பொன் குடை ஏற்றி
மலிவு உடை உள்ளத்தான் வந்து செய் வேள்வியுள்
பல் மணம் மன்னு பின் இரும் கூந்தலர்

கன்னிமை கனிந்த காலத்தார் நின்			90
கொடி ஏற்று வாரணம் கொள் கவழ மிச்சில்
மறு அற்ற மைந்தர் தோள் எய்தார் மணந்தார்
முறுவல் தலையளி எய்தார் நின் குன்றம்
குறுகி சிறப்பு உணா-கால்
குற_பிணா_கொடியை கூடியோய் வாழ்த்து		95
சிறப்பு உணா கேட்டி செவி
உடையும் ஒலியலும் செய்யை மற்று ஆங்கே
படையும் பவழ கொடி நிறம் கொள்ளும்
உருவும் உருவ தீ ஒத்தி முகனும்

விரி கதிர் முற்றா விரி சுடர் ஒத்தி		100
எவ்வத்து ஒவ்வா மா முதல் தடிந்து
தெவ்வு குன்றத்து திருந்து வேல் அழுத்தி
அ வரை உடைத்தோய் நீ இ வரை மருங்கில்
கடம்பு அமர் அணி நிலை பகர்ந்தேம்
உடங்கு அமர் ஆயமொடு ஏத்தினம் தொழுதே	105

# 20 வையை
கடல் குறைபடுத்த நீர் கல் குறைபட எறிந்து
உடல் ஏறு உருமினம் ஆர்ப்ப மலை மாலை
முற்றுபு_முற்றுபு பெய்து சூல் முதிர் முகில்
பொருது இகல் புலி போழ்ந்த பூ நுதல் எழில் யானை
குருதி கோட்டு அழி கறை தெளி பெற கழீஇயின்று	5
காலை கடல் படிந்து காய் கதிரோன் போய வழி
மாலை மலை மணந்து மண் துயின்ற கங்குலான்
வான் ஆற்றும் மழை தலைஇ மரன் ஆற்றும் மலர் நாற்றம்
தேன் ஆற்றும் மலர் நாற்றம் செறு வெயில் உறு கால

கான் ஆற்றும் கார் நாற்றம் கொம்பு உதிர்த்த கனி நாற்றம்	10
தான் நாற்றம் கலந்து உடன் தழீஇ வந்து தரூஉம் வையை
தன் நாற்றம் மீது தடம் பொழில் தான் யாற்று
வெம் நாற்று வேசனை நாற்றம் குதுகுதுப்ப
ஊர்_ஊர் பறை ஒலி கொண்டன்று உயர் மதிலில்
நீர் ஊர் அரவத்தால் துயில் உணர்பு எழீஇ		15
திண் தேர் புரவி வங்கம் பூட்டவும்
வங்க பாண்டியில் திண் தேர் ஊரவும்
வய_மா பண்ணுந மத_மா பண்ணவும்
கய மா பேணி கலவாது ஊரவும்

மகளிர் கோதை மைந்தர் புனையவும்		20
மைந்தர் தண் தார் மகளிர் பெய்யவும்
முந்துறல் விருப்பொடு முறை மறந்து அணிந்தவர்
ஆடுவார் பொய்தல் அணி வண்டு இமிர் மணல்
கோடு ஏறு எருத்தத்து இரும் புனலில் குறுகி
மாட மறுகின் மருவி மறுகு-உற			25
கூடல் விழையும் தகைத்து தகை வையை
புகை வகை தைஇயினார் பூம் கோதை நல்லார்
தகை வகை தைஇயினார் தார்
வகை_வகை தைஇயினார் மாலை மிக_மிக

சூட்டும் கண்ணியும் மோட்டு வலையமும்		30
இயல் அணி அணி நிற்ப ஏறி அமர் பரப்பின்
அயல்_அயல் அணி நோக்கி ஆங்கு ஆங்கு வருபவர்
இடு வளை ஆரமோடு ஈத்தான் உடனாக
கெடு வளை பூண்டவள் மேனியில் கண்டு
நொந்து அவள் மாற்றாள் இவள் என நோக்க		35
தந்த கள்வன் சமழ்ப்பு முகம் காண்-மின்
செரு செய்த வாளி சீற்றத்தவை அன்ன
நேர் இதழ் உண்கணார் நிரை காடு ஆக
ஓடி ஒளித்து ஒய்ய போவாள் நிலை காண்-மின்

என ஆங்கு					40
ஒய்ய போவாளை உறழ்த்தோள் இ வாள்_நுதல்
வையை மடுத்தால் கடல் என தெய்ய
நெறி மணல் நேடினர் செல்ல சொல் ஏற்று
செறி நிரை பெண் வல் உறழ்பு யாது தொடர்பு என்ன
மறலினாள் மாற்றாள் மகள்			45
வாய் வாளா நின்றாள்
செறி நகை சித்தம் திகைத்து
ஆயத்து ஒருத்தி அவளை அமர் காமம்
மாய பொய் கூட்டி மயக்கும் விலை கணிகை

பெண்மை பொதுமை பிணையிலி ஐம் புலத்தை	50
துற்றுவ துற்றும் துணை இதழ் வாய் தொட்டி
முற்றா நறு நறா மொய் புனல் அட்டி
காரிகை நீர் ஏர் வயல் காம களி நாஞ்சில்
மூரி தவிர முடுக்கு முது சாடி
மட மதர் உண்கண் கயிறு ஆக வைத்து		55
தட மென் தோள் தொட்டு தகைத்து மட விரலால்
இட்டார்க்கு யாழ் ஆர்த்தும் பாணியில் எம் இழையை
தொட்டு ஆர்த்தும் இன்ப துறை பொதுவி கெட்டதை
பொய்தல் மகளிர் கண் காண இகுத்தந்து இ

வையை தொழுவத்து தந்து அடித்து இடித்து		60
மத்திகை மாலையா மோதி அவையத்து
தொடர்ந்தேம் எருது தொழில் செய்யாது ஓட
விடும் கடன் வேளாளர்க்கு இன்று படர்ந்து யாம்
தன் மார்பம் தண்டம் தரும் ஆரத்தாள் மார்பும்
நின் மார்பும் ஓர் ஒத்த நீர்மைய-கொல் என்னாமுன்	65
தேடினாள் ஏச சில மகளிர் மற்று அதற்கு
ஊடினார் வையை அகத்து
சிந்திக்க தீரும் பிணியாள் செறேற்க
மைந்து உற்றாய் வெம் சொல் மட மயில் சாயலை

வந்திக்க வார் என மன தக்க நோய் இது		70
வேற்றாரை வேற்றார் தொழுதல் இளிவரவு
போற்றாய் காண் அன்னை புரையோய் புரை இன்று
மாற்றாளை மாற்றாள் வரவு
அ சொல் நல்லவை நாணாமல்
தந்து முழவின் வருவாய் நீ வாய்வாளா		75
எந்தை எனக்கு ஈத்த இடு வளை ஆர பூண்
வந்த வழி நின்-பால் மாய களவு அன்றேல்
தந்தானை தந்தே தருக்கு
மாலை அணிய விலை தந்தான் மாதர் நின்

கால சிலம்பும் கழற்றுவான் சால			80
அதிரல் அம் கண்ணி நீ அன்பன் எற்கு அன்பன்
கதுவாய் அவன் கள்வன் கள்வி நான் அல்லேன்
என ஆங்கு
வச்சிய மானே மறலினை மாற்று உமக்கு
நச்சினார் ஈபவை நாடு அறிய நும்மவே		85
சேக்கை இனியார்-பால் செல்வான் மனையாளால்
காக்கை கடிந்து ஒழுகல் கூடுமோ கூடா
தகவு உடை மங்கையர் சான்றாண்மை சான்றார்
இகழினும் கேள்வரை ஏத்தி இறைஞ்சுவார்

நிகழ்வது அறியாது நில்லு நீ நல்லாய்		90
மகளிரை மைந்து உற்று அமர்பு-உற்ற மைந்தர்
அகலம் கடிகுவேம் என்பவை யார்க்கானும்
முடி பொருள் அன்று முனியல் முனியல்
கட வரை நிற்குமோ காமம் கொடி இயலாய்
என ஆங்கு					95
இன்ன துணியும் புலவியும் ஏற்பிக்கும்
தென்னவன் வையை சிறப்பு
கொடி இயலார் கை போல் குவிந்த முகை
அரவு உடன்றவை போல் விரிந்த குலை

குடை விரிந்தவை போல கோலும் மலர்		100
சுனை கழிந்து தூங்குவன நீரின் மலர்
சினை விரிந்து உதிர்ந்த வீ புதல் விரி போதொடும்
அருவி சொரிந்த திரையின் துரந்து
நெடு மால் சுருங்கை நடு வழி போந்து
கடு மா களிறு அணைத்து கைவிடு நீர் போலும்	105
நெடு நீர் மலி புனல் நீள் மாட கூடல்
கடி மதில் பெய்யும் பொழுது
நாம் அமர் ஊடலும் நட்பும் தணப்பும்
காமமும் கள்ளும் கலந்து உடன் பாராட்ட

தாம் அமர் காதலரொடு ஆட புணர்வித்தல்		110
பூ மலி வையைக்கு இயல்பு

# 21 செவ்வேள்
ஊர்ந்ததை எரி புரை ஓடை இடை இமைக்கும் சென்னி
பொரு சமம் கடந்த புகழ் சால் வேழம்
தொட்டதை தைப்பு அமை சருமத்தின் தாள் இயை தாமரை
துப்பு அமை துவர் நீர் துறை மறை அழுத்திய
வெரிந தோலொடு முழு மயிர் மிடைந்த		5
வரி மலி அர உரி வள்பு கண்டு அன்ன
புரி மென் பீலி போழ் புனை அடையல்
கையதை கொள்ளா தெவ்வர் கொள் மா முதல் தடிந்து
புள்ளொடு பெயரிய பொருப்பு புடை திறந்த வேல்

பூண்டதை சுருள் உடை வள்ளி இடை இடுபு இழைத்த		10
உருள் இணர் கடம்பின் ஒன்றுபடு கமழ் தார்
அமர்ந்ததை புரையோர் நாவில் புகழ் நலம் முற்றி
நிரை ஏழ் அடுக்கிய நீள் இலை பாலை
அரை வரை மேகலை அணி நீர் சூழி
தரை விசும்பு உகந்த தண் பரங்குன்றம்		15
குன்றத்து அடியுறை இயைக என பரவுதும்
வென்றி கொடி அணி வெல்வ நின் தொழுது
சுடு பொன் ஞெகிழத்து முத்து அரி சென்று ஆர்ப்ப
துடியின் அடி பெயர்த்து தோள் அசைத்து தூக்கி

அடு நறா மகிழ் தட்ப ஆடுவாள் தகைமையின்	20
நுனை இலங்கு எஃகு என சிவந்த நோக்கமொடு
துணை அணை கேள்வனை துனிப்பவள் நிலையும்
நிழல்_காண்_மண்டிலம் நோக்கி
அழல் புனை அவிர் இழை திருத்துவாள் குறிப்பும்
பொதிர்த்த முலை இடை பூசி சந்தனம்		25
உதிர்த்து பின் உற ஊட்டுவாள் விருப்பும்
பல் ஊழ் இவை இவை நினைப்பின் வல்லோன்
ஓவத்து எழுது எழில் போலும் மா
தடிந்திட்டோய் நின் குன்றின் மிசை

மிசை படு சாந்தாற்றி போல எழிலி		30
இசை படு பக்கம் இரு பாலும் கோலி
விடு பொறி மஞ்ஞை பெயர்பு உடன் ஆட
விரல் செறி தூம்பின் விடு துளைக்கு ஏற்ப
முரல் குரல் தும்பி அவிழ் மலர் ஊத
யாணர் வண்டு_இனம் யாழ் இசை பிறக்க		35
பாணி முழவு இசை அருவி நீர் ததும்ப
ஒருங்கு பரந்தவை எல்லாம் ஒலிக்கும்
இரங்கு முரசினான் குன்று
தாழ் நீர் இமிழ் சுனை நாப்பண் குளித்து அவண்

மீ நீர் நிவந்த விறல்_இழை கேள்வனை		40
வேய் நீர் அழுந்து தன் கையின் விடுக என
பூ நீர் பெய் வட்டம் எறிய புணை பெறாது
அரு நிலை நீரின் அவள் துயர் கண்டு
கொழுநன் மகிழ் தூங்கி கொய் பூ புனல் வீழ்ந்து
தழுவும் தகை வகைத்து தண் பரங்குன்று		45
வண்டு ஆர் பிறங்கல் மைந்தர் நீவிய
தண் கமழ் சாந்தம் தைஇய வளியும்
கயல் புரை கண்ணியர் கமழ் துகள் உதிர்த்த
புயல் புரை கதுப்பு_அகம் உளரிய வளியும்

உருள் இணர் கடம்பின் நெடுவேட்கு எடுத்த		50
முருகு கமழ் புகை நுழைந்த வளியும்
அசும்பும் அருவி அரு விடர் பரந்த
பசும் பூண் சேஎய் நின் குன்றம் நன்கு உடைத்து
கண் ஒளிர் திகழ் அடர் இடு சுடர் படர் கொடி மின்னு போல்
ஒண் நகை தகை வகை நெறிபெற இடையிடை இழைத்து யாத்த	55
செண்ணிகை கோதை கதுப்போடு இயல
மணி மருள் தேன் மகிழ் தட்ப ஒல்கி
பிணி நெகிழ பைம் துகில் நோக்கம் சிவப்பு ஊர
பூ கொடி போல நுடங்குவாள் ஆங்கு தன்

சீர் தகு கேள்வன் உருட்டும் துடி சீரான்		60
கோடு அணிந்த முத்து ஆரம் ஒல்க ஒசிபவள் ஏர்
ஆடை அசைய அணி அசைய தான் அசையும்
வாடை உளர் கொம்பர் போன்ம்
வாளி புரள்பவை போலும் துடி சீர்க்கு
தோள் ஊழ் பெயர்ப்பவள் கண்			65
மாறு அமர் அட்டவை மற வேல் பெயர்ப்பவை
ஆறு_இரு தோளவை அறு முகம் விரித்தவை
நன்று அமர் ஆயமோடு ஒருங்கு நின் அடியுறை
இன்று போல் இயைக என பரவுதும்

ஒன்றார் தேய்த்த செல்வ நின் தொழுதே		70

# 22 வையை
ஒளிறு வாள் பொருப்பன் உடல் சமத்து இறுத்த
களிறு நிரைத்தவை போல் கொண்மூ நெரிதர
அரசு பட கடந்த ஆனா சீற்றத்தவன்
முரசு அதிர்பவை போல் முழங்கு இடி பயிற்றி
ஒடுங்கார் உடன்றவன் தானை வில் விசை		5
விடும் கணை ஒப்பின் கதழ் உறை சிதறூஉ
கண் ஒளிர் எஃகின் கடிய மின்னி அவன்
வண்மை போல் வானம் பொழிந்த நீர் மண் மிசை
ஆனாது வந்து தொகுபு ஈண்டி மற்று அவன்

தானையின் ஊழி தா ஊக்கத்தின்			10
போன நிலம் எல்லாம் போர் ஆர் வயல் புகுத
நீக்கி
கான மலைத்தரை கொன்று மணல பினறீ
வான மலைத்த
மண முரசு எறிதர				15
தானை தலைத்தலை வந்து மைந்து உற்று
பொறிவி யாற்றுறி துவர் புகை சாந்தம்
எறிவன எக்குவ ஈரணிக்கு ஏற்ற
நறவு அணி பூ துகில் நன் பல ஏந்தி

பிற தொழின பின்_பின் தொடர			20
செறி வினை பொலிந்த செம் பூ கண்ணியர்
ஈர் அமை வெட்சி இதழ் புனை கோதையர்
தார் ஆர் முடியர் தகை கெழு மார்பினர்
மாவும் களிறும் மணி அணி வேசரி
காவு நிறைய கரை நெரிபு ஈண்டி			25
வேல் ஆற்றும் மொய்ம்பனின் விரை மலர் அம்பினோன்
போல் ஆற்று முன்பின் புனை கழல் மைந்தரொடு
தார் அணி மைந்தர் தவ பயன் சான்ம் என
கார் அணி கூந்தல் கயல் கண் கவிர் இதழ்

வார் அணி கொம்மை வகை அமை மேகலை	30
ஏர் அணி இலங்கு எயிற்று இன் நகையவர்
சீர் அணி வையைக்கு அணி-கொல்லோ வையை-தன்
நீர் அணி நீத்தம் இவர்க்கு அணி-கொல் என
தேருநர் தேரும்-கால் தேர்தற்கு அரிது காண்
தீரமும் வையையும் சேர்கின்ற கண் கவின்		35
மண் கணை முழவின் இன் கண் இமிழ்விற்கு
எதிர்வ பொருவி ஏறு மாறு இமிழ்ப்ப
கவர் தொடை நல் யாழ் இமிழ காவில்
புகர் வரி வண்டு_இனம் பூ சினை இமிர

ஊது சீர் தீம் குழல் இயம்ப மலர் மிசை		40
தாது ஊது தும்பி தவிர்பு அல இயம்ப
துடி சீர் நடத்த வளி நடன்
மெல் இணர் பூ கொடி மேவர நுடங்க
ஆங்கு அவை தத்தம் தொழில் மாறு கொள்ளும்
தீம் புனல் வையை திருமருத முன்துறையால்	45
கோடு உளர் குரல் பொலி ஒலி துயல் இரும் கூந்தல்
புரை தீர் நெடு மென்
தோள் தாழ்பு தழை மலர் துவளா வல்லியின்
நீள் தாழ்பு தோக்கை நித்தில அரி சிலம்பு
* பரிபாடல் முற்றிற்று
* பரிபாடல் திரட்டு

# 23.1 திருமால்
வான் ஆர் எழிலி மழை வளம் நந்த
தேன் ஆர் சிமைய மலையின் இழிதந்து
நான்மாடக்கூடல் எதிர்கொள்ள ஆனா
மருந்து ஆகும் தீம் நீர் மலி துறை மேய
இருந்தையூர் அமர்ந்த செல்வ நின்		5
திருந்து அடி தலை உற பரவுதும் தொழுது
ஒருசார் அணி மலர் வேங்கை மராஅ மகிழம்
பிணி நெகிழ் பிண்டி நிவந்து சேர்பு ஓங்கி
மணி நிறம் கொண்ட மலை

ஒருசார் தண் நறும் தாமரை பூவின் இடையிடை	10
வண்ண வரி இதழ் போதின் வாய் வண்டு ஆர்ப்ப
விண் வீற்றிருக்கும் கய மீன் விரி தகையின்
கண் வீற்றிருக்கும் கயம்
ஒருசார் சாறு கொள் ஓதத்து இசையொடு மாறு-உற்று
உழவின் ஓதை பயின்று அறிவு இழந்து		15
திரிநரும் ஆர்த்து நடுநரும் ஈண்டி
திரு நய_தக்க வயல்
ஒருசார் அறத்தொடு வேதம் புணர் தவம் முற்றி
விறல் புகழ் நிற்ப விளங்கிய கேள்வி

திறத்தின் திரிவு இல்லா அந்தணர் ஈண்டி		20
அறத்தின் திரியா பதி
ஆங்கு ஒருசார் உண்ணுவ பூசுவ பூண்ப உடுப்பவை
மண்ணுவ மணி பொன் மலைய கடல்
பண்ணியம் மாசு அறு பயம் தரு காருக
புண்ணிய வணிகர் புனை மறுகு ஒருசார்		25
விளைவதை வினை எவன் மென்_புல வன்_புல
களமர் உழவர் கடி மறுகு பிறசார்
ஆங்க அனையவை நல்ல நனி கூடும் இன்பம்
இயல் கொள நண்ணியவை

வண்டு பொரேரென எழ			30
வண்டு பொரேரென எழும்
கடி புகு வேரி கதவம் இல் தோட்டி
கடிப்பு இகு காதில் கனம் குழை தொடர
மிளிர் மின் வாய்ந்த விளங்கு ஒளி நுதலார்
ஊர் களிற்று அன்ன செம்மலோரும்		35
வாய் இருள் பனிச்சை வரி சிலை புருவத்து
ஒளி இழை ஒதுங்கிய ஒள் நுதலோரும்
புலத்தோடு அளவிய புகழ் அணிந்தோரும்
நலத்தோடு அளவிய நாண் அணிந்தோரும்

விடையோடு இகலிய விறல் நடையோரும்		40
நடை மடம் மேவிய நாண் அணிந்தோரும்
கடல் நிரை திரையின் கரு நரையோரும்
சுடர் மதி கதிர் என தூ நரையோரும்
மடையர் குடையர் புகையர் பூ ஏந்தி
இடை ஒழிவு இன்றி அடியுறையார் ஈண்டி		45
விளைந்து ஆர் வினையின் விழு பயன் துய்க்கும்
துளங்கா விழு சீர் துறக்கம் புரையும்
இரு கேழ் உத்தி அணிந்த எருத்தின்
வரை கெழு செல்வன் நகர்

வண்டொடு தும்பியும் வண் தொடை யாழ் ஆர்ப்ப	50
விண்ட கட கரி மேகமொடு அதிர
தண்டா அருவியொடு இரு முழவு ஆர்ப்ப
அரி உண்ட கண்ணாரொடு ஆடவர் கூடி
புரிவுண்ட பாடலொடு ஆடலும் தோன்ற
சூடு நறவொடு தாமம் முகிழ் விரிய		55
சூடா நறவொடு காமம் விரும்ப
இனைய பிறவும் இவை போல்வனவும்
அனையவை எல்லாம் இயையும் புனை இழை
பூ முடி நாகர் நகர்

மணி மருள் தகை வகை நெறி செறி ஒலி பொலி	60
அவிர் நிமிர் புகழ் கூந்தல்
பிணி நெகிழ் துளையினை தெளி ஒளி திகழ் ஞெகிழ் தெரி அரி
மது மகிழ்பு அரி மலர் மகிழ் உண்கண் வாள் நுதலோர்
மணி மயில் தொழில் எழில் இகல் மலி திகழ் பிறிது
இகழ் கடும் கடா களிற்று அண்ணலவரோடு		65
அணி மிக வந்து இறைஞ்ச அல் இகப்ப பிணி நீங்க
நல்லவை எல்லாம் இயைதரும் தொல் சீர்
வரை வாய் தழுவிய கல் சேர் கிடக்கை
குளவாய் அமர்ந்தான் நகர்

திகழ் ஒளி முந்நீர் கடைந்த அ-கால் வெற்பு		70
திகழ்பு எழ வாங்கி தம் சீர் சிரத்து ஏற்றி
மகர மறி கடல் வைத்து நிறுத்து
புகழ் சால் சிறப்பின் இரு திறத்தோர்க்கும்
அமுது கடைய இரு-வயின் நாண் ஆகி
மிகாஅ இரு வடம் ஆழியான் வாங்க		75
உகாஅ வலியின் ஒரு தோழம் காலம்
அறாஅது அணிந்தாரும் தாம்
மிகாஅ மறலிய மே வலி எல்லாம்
புகாஅ எதிர் பூண்டாரும் தாம்

மணி புரை மா மலை ஞாறிய ஞாலம்		80
அணி போல் பொறுத்தாரும் தாஅம் பணிபு இல் சீர்
செல் விடை பாகன் திரிபுரம் செற்று-உழி
கல் உயர் சென்னி இமய வில் நாண் ஆகி
தொல் புகழ் தந்தாரும் தாம்
அணங்கு உடை அரும் தலை ஆயிரம் விரித்த	85
கணம்_கொள் சுற்றத்து அண்ணலை வணங்கி
நல் அடி ஏத்தி நின் பரவுதும்
எல்லேம் பிரியற்க எம் சுற்றமொடு ஒருங்கே

# 24.2 வையை
மா நிலம் தோன்றாமை மலி பெயல் தலைஇ
ஏம நீர் எழில் வானம் இகுத்தரும் பொழுதினான்
நாக நீள் மணி வரை நறு மலர் பல விரைஇ
காமரு வையை கடுகின்றே கூடல்
நீர் அணி கொண்டன்று வையை என விரும்பி	5
தார் அணி கொண்ட உவகை தலைக்கூடி
ஊர் அணி கோலம் ஒருவர் ஒருவரின்
சேர் அணி கொண்டு நிறம் ஒன்று வெவ்வேறு
நீர் அணி கொண்ட நிறை அணி அங்காடி

ஏர் அணி கொண்டார் இயல்			10
கை புனை தாரினர் கண்ணியர்
ஐ எனும் ஆவியர் ஆடையர்
நெய் அணி கூந்தலர் பித்தையர்
மெய் அணி யானை மிசையராய் ஒய்யென
தங்கா சிறப்பின் தளிர் இயலார் செல்ல		15
பொங்கு புரவி புடை_போவோரும் பொங்கு சீர்
வையமும் தேரும் அமைப்போரும் எ வாயும்
பொய்யாம் போய் என்னா புடை கூட்டி போவநர்
மெய்யாப்பு மெய் ஆர மூடுவார் வையத்துக்கு

ஊடுவார் ஊடல் ஒழிப்பார் உணர்குவார்		20
ஆடுவார் பாடுவார் ஆர்ப்பார் நகுவார் நக்கு
ஓடுவார் ஓடி தளர்வார் போய் உற்றவரை
தேடுவார் ஊர்க்கு திரிவார் இலர் ஆகி
கற்றாரும் கல்லாதவரும் கயவரும்
பெற்றாரும் பெற்றான் பிழையாத பெண்டிரும்		25
பொன் தேரான் தானும் பொலம் புரிசை கூடலும்
முற்று இன்று வையை துறை
துறை ஆடும் காதலர் தோள் புணை ஆக
மறை ஆடுவாரை அறியார் மயங்கி

பிறை ஏர் நுதலியர் எல்லாரும் தம் முன்		30
நிகழும் நிகழ்ச்சி எம்-பால் என்று ஆங்கே
இகல் பல செல்வம் விளைத்து அவண் கண்டு இப்பால்
அகல் அல்கும் வையை துறை
காதலான் மார்பின் கமழ் தார் புனல் வாங்கி
ஏதிலாள் கூந்தலிடை கண்டு மற்று அது		35
தா தா என்றாளுக்கு தானே புறன் தந்து
வேய்தந்தது என்னை விளைந்தமை மற்று அது
நோதலே செய்யேன் நுணங்கு இழையாய் இ செவ்வி
போதல் உண்டாம்-கொல் அறிந்து புனல் புணர்த்தது

ஓஓ பெரிதும் வியப்பு				40
கய தக்க பூ பெய்த காம கிழமை
நய_தகு நல்லாளை கூடுமா கூடும்
முயக்குக்கு செவ்வி முலையும் முயக்கத்து
நீரும் அவட்கு துணை கண்ணி நீர் விட்டோய்
நீயும் அவட்கு துணை				45
பணிவு இல் உயர் சிறப்பின் பஞ்சவன் கூடல்
மணி எழில் மா மேனி முத்த முறுவல்
அணி பவள செம் வாய் அறம் காவல் பெண்டிர்
மணி அணிந்த தம் உரிமை_மைந்தரோடு ஆடி

தணிவு இன்று வையை புனல்			50
புனல் ஊடுபோவது ஓர் பூ மாலை கொண்டை
எனல் ஊழ் வகை எய்திற்று என்று ஏற்றுக்கொண்ட
புனல் ஊடு நாடு அறிய பூ மாலை அப்பி
நினைவாரை நெஞ்சு இடுக்கண் செய்யும் கனல்புடன்
கூடாமுன் ஊடல் கொடிய திறம் கூடினால்		55
ஊடாளோ ஊர்த்து அலர் வந்து ஊர்ந்து
என ஆங்கு
ஈ பாய் அடு நறா கொண்டது இ யாறு என
பார்ப்பார் ஒழிந்தார் படிவு

மைந்தர் மகளிர் மண விரை தூவிற்று என்று		60
அந்தணர் தோயலர் ஆறு
வையை தேம் மேவ வழுவழுப்பு-உற்று என
ஐயர் வாய்பூசுறார் ஆறு
விரைபு இரை விரை துறை கரை அழிபு இழிபு ஊர ஊர்தரும் புனல்
கரையொடு கடல் இடை வரையொடு கடல் இடை நிரை_நிரை நீர் தரு நுரை	65
நுரையுடன் மதகு-தொறு இழிதரு புனல் கரை புரளிய செலும் மறி கடல்
புகும் அளவு_அளவு இயல் இசை சிறை தணிவு இன்று வெள்ள மிகை
வரை பல புரை உயர் கயிறு அணி பயில் தொழில்
மணி அணி யானை மிசை மைந்தரும் மடவாரும்

நிரை_நிரை குழீஇயினர் உடன்சென்று		70
குரு மணி யானை இயல் தேர் பொருநன்
திருமருத முன்துறை முற்றம் குறுகி
தெரி மருதம் பாடுப பிணி கொள் யாழ் பாணர்
பாடி_பாடி பாய் புனல்
ஆடி_ஆடி அருளியவர்				75
ஊடி_ஊடி உணர்த்த புகன்று
கூடி_கூடி மகிழ்பு மகிழ்பு
தேடி_தேடி சிதைபு சிதைபு
சூடி_சூடி தொழுது தொழுது

மழுபொடு நின்ற மலி புனல் வையை		80
விழு_தகை நல்லாரும் மைந்தரும் ஆடி
இமிழ்வது போன்றது இ நீர் குணக்கு சான்றீர்
முழுவதும் மிச்சிலா உண்டு
சாந்தும் கமழ் தாரும் கோதையும் சுண்ணமும்
கூந்தலும் பித்தையும் சோர்ந்தன பூவினும் அல்லால்	85
சிறிதானும் நீர் நிறம்
தான் தோன்றாது இ வையை ஆறு
மழை நீர் அறு குளத்து வாய்பூசி ஆடும்
கழு நீர மஞ்சன குங்கும கலங்கல்

வழி நீர் விழு நீர அன்று வையை			90
வெரு வரு கொல் யானை வீங்கு தோள் மாறன்
உரு கெழு கூடலவரொடு வையை
வரு புனல் ஆடிய தன்மை பொருவும்-கால்
இரு முந்நீர் வையம் பிடித்து என்னை யான் ஊர்க்கு
ஒரு நிலையும் ஆற்ற இயையா அரு மரபின்		95
அந்தர வான் யாற்று ஆயிரம் கண்ணினான்
இந்திரன் ஆடும் தகைத்து

# 25.3 வையை
அறவோர் உள்ளார் அரு மறை காப்ப
---------------- -------------------
செறுநர் விழையா செறிந்த நம் கேண்மை
மறுமுறை யானும் இயைக நெறி மாண்ட
தண் வரல் வையை எமக்கு

# 26.4 வையை
தெரி மாண் தமிழ் மும்மை தென்னம்பொருப்பன்
பரி_மா நிரையின் பரந்தன்று வையை

# 27.5
மண் ஆர்ந்து இசைக்கும் முழவொடு கொண்ட தோள்
கண்ணாது உடன் வீழும் காரிகை கண்டோர்க்கு
தம்மொடு நிற்குமோ நெஞ்சு

# 28.6
முன்புற்று அறியா முதல் புணர்ச்சி மொய் குழலை
இன்புற்று அணிந்த இயல் அணியும் வன் பணியும்
நாண் எனும் தொல்லை அணி என்ன நல்_நுதலை

# 29.7 மதுரை
உலகம் ஒரு நிறையா தான் ஓர் நிறையா
புலவர் புல கோலால் தூக்க உலகு அனைத்தும்
தான் வாட வாடாத தன்மைத்தே தென்னவன்
நான்மாடக்கூடல் நகர்

# 30.8 எட்டாம் பாடல்
மாயோன் கொப்பூழ் மலர்ந்த தாமரை
பூவொடு புரையும் சீர் ஊர் பூவின்
இதழ்_அகத்து அனைய தெருவம் இதழ்_அகத்து
அரும் பொகுட்கு அனைத்தே அண்ணல் கோயில்
தாதின் அனையர் தண் தமிழ் குடிகள்		5
தாது உண் பறவை அனையர் பரிசில்_வாழ்நர்
பூவினுள் பிறந்தோன் நாவினுள் பிறந்த
நான்மறை கேள்வி நவில் குரல் எடுப்ப
ஏம இன் துயில் எழுதல் அல்லதை

வாழிய வஞ்சியும் கோழியும் போல		10
கோழியின் எழாது எம் பேர் ஊர் துயிலே

# 31.9 ஒன்பதாம் பாடல்
தண் தமிழ் வேலி தமிழ்நாட்டு_அகம் எல்லாம்
நின்று நிலைஇ புகழ் பூத்தல் அல்லது
குன்றுதல் உண்டோ மதுரை கொடி தேரான்
குன்றம் உண்டாகும் அளவு

# 32.10 பத்தாம் பாடல்
செய்யாட்கு இழைத்த திலகம் போல் சீர்க்கு ஒப்ப
வையம் விளங்கி புகழ் பூத்தல் அல்லது
பொய் ஆதல் உண்டோ மதுரை புனை தேரான்
வையை உண்டாகும் அளவு

# 33.11 பதினோராம் பாடல்
கார்த்திகை காதில் கன மகர குண்டலம் போல்
சீர்த்து விளங்கி திரு பூத்தல் அல்லது
கோத்தை உண்டாமோ மதுரை கொடி தேரான்
வார்த்தை உண்டாகும் அளவு

# 34.12 பனிரெண்டாம் பாடல்
ஈவாரை கொண்டாடி ஏற்பாரை பார்த்து உவக்கும்
சேய் மாட கூடலும் செவ்வேள் பரங்குன்றம்
வாழ்வாரே வாழ்வார் எனப்படுவார் மற்றையார்
போவார் ஆர் புத்தேள்_உலகு

# 35.13 பதிமூன்றாம் பாடல்
வையை வரு புனல் ஆடல் இனிது-கொல்
செவ்வேள் கோ குன்றம் நுகர்தல் இனிது-கொல்
வை வேல் நுதி அன்ன கண்ணார் துணை ஆக
எவ்வாறு செய்வாம்-கொல் யாம் என நாளும்
வழி மயக்கு-உற்று மருடல் நெடியான்		5
நெடு மாட கூடற்கு இயல்பு
*
** பரிபாடல்

# 1 திருமால்
ஆயிரமாய்ப் படம் விரித்த அச்சந்தரும் அரிய தலைகளும்
சினமாகிய தீயை உமிழ்கின்ற வலிமையுடன் உன் திருமுடியின் மேல் கவித்துநிற்க,
திருமகள் வீற்றிருக்கும் அகன்ற மார்பினைக்கொண்டும், குற்றமில்லாத வெண்மையான சங்கினைப் போன்ற மேனியுடனும்,
மிக உயர்ந்த மூங்கில் கோலின் உச்சியில் அழகிய யானைக்கொடியை உயர்த்தியபடியும்,
கூர்மை செய்யப்பட்ட வளைந்த கலப்பைப் படையினைக் கொண்டும், ஒற்றைக் குழையை உடைய பலதேவனாகவும் விளங்குகிறாய்!
எரிகின்ற நெருப்பைப்போன்ற தாமரை மலரை வென்ற கண்களையுடையவன்! காயாம்பூவின்
மலர்ந்த மலரைப் போன்ற மேனியினன்! அந்த மேனியில்
திருமகள் நிறைந்து உறையும் மார்பினையுடையவன்! அந்த மார்பில்
தெரிந்தெடுத்துத் தொடுத்த மணிகள் ஒளிவீசும் பூணை அணிந்திருப்பவன்! நீல மலையைச் சூழ்ந்து

தீப்பிழம்பு சுற்றினாற் போன்ற பொன்னாற் செய்த ஆடையை அணிந்திருப்பவன்!
கருடச்சேவல் வரையப்பட்ட அழகிய கொடியினையுடையவனே! உன் வலப்பக்கத்தில் இருப்போர்கள்
ஓதுகின்ற உன் பெருமைகளைக் கூறுகின்றன,
நாவன்மை மிக்க அந்தணர்களின் அரிய வேதங்களின் பொருள்!
இணை பிரி அணி துணி பணி எரி புரைய
விடர் இடு சுடர் படர் பொலம் புனை வினை மலர்
நெரி கிடர் எரி புரை தன மிகு தன முரண் மிகு
கடல் தரு மணியொடும் முத்து யாத்த நேர்_அணி
நெறி செறி வெறி_உறு முறல் விறல் வணங்கு அணங்கு வில்
தார் அணி துணி மணி வெயில் உறழ் எழில் புகழ் அலர் மார்பின்

எரி வயிர நுதி எறி படை எருத்து மலை இவர் நவையினில்
துணி படல் இல மணி வெயில் உறழ் எழில் நக்கு
இமை இருள் அகல முறு கிறுகு புரி ஒரு புரி நாள்_மலர்
மலர் இலகின வளர் பரிதியின் ஒளி மணி மார்பு அணி
மணம் மிக நாறு உருவின விரை வளி மிகு கடு விசை
உடு உறு தலை நிரை இதழ் அணி வயிறு இரிய அமரரை
போரெழுந்து உடன்று இரைத்து உரைஇய தானவர்
சிரம் உமிழ் புனல் பொழிபு இழிந்து உரம்
உதிர்பு அதிர்பு அலம் தொடா அமர் வென்ற கணை
உன்னோடு போரிடுவோம் என்று வந்த அவுணரின் வலிமை கெடும்படி அவரை வென்று,

போரில் மேன்மையடைந்த குற்றமற்ற அண்ணலே!
காமன், சாமன் ஆகிய இருவருக்குத் தந்தையே! ஒளிவிடும் பூண்களை அணிந்த திருமாலே!
விளக்கமாக உன் பிறப்பினை அறிதல்
மயக்கம் தீர்ந்த தெளிவினையுடைய முனிவர்க்கும் அரிதேயாகும்!
அப்படிப்பட்ட மரபினைச் சேர்ந்த அத்தகையவனாகிய உன்னை
இன்ன தன்மையுடையவன் என்று சொல்வது எமக்கு எப்படி எளிதாகும்?
உன் தகுதிகளின் அருமையை நன்றாக அறிந்திருப்பினும், உன் மேலிட்ட ஆர்வம்
மிக அதிகமாக இருப்பதால் வலிமையில்லாதனவாக நாம் இங்கே கூறுபவை
சிறுமையுடையன் என்று வெறுக்காமல், அல்லி மலரில் வீற்றிருக்கும் அழகிய
திருமகளாகிய மறுவினை மார்பில் கொண்டவனே! நீ எமக்குத் திருவருள் புரிய வேண்டும்.

ஆற்றல் மிகுந்த மேன்மையான சிறப்பினைக் கொண்ட அந்தணர்கள் காக்கும்
அறமும், உன் அன்பர்களுக்கு அருள்கின்ற திருவருளும் நீ!
திறனில்லாதவர்களைத் திருத்திய தீமை பயக்காத கொள்கையையுடைய
மறப்பண்பும், உன்னை மறுதலிப்போருக்கு அச்சத்தை உண்டாக்கும் அணங்கும் நீ!
அழகிய இடமான வானத்தில் அழகான நிலவொளியாய்த் திகழும்
திங்களும், சுட்டுப்பொசுக்கும் கதிர்களையுடைய சூரியனும் நீ!
ஐந்து தலைகளை உருவாக்கிக்கொண்டு, அச்சத்தைத்தரும் வெல்லமுடியாத திறமையும்
வலிமையும் உடைய ஒருவனாகிய ஈசனும், ஊழிக்காலத்தீயும் நீ!
நலம் என்று கூறப்படுவன அனைத்தும் பொருந்திய குற்றமற்ற அறிவைத் தரும்
வேதமும், பூவின்மேலுள்ளோனாகிய நான்முகனும், பூவின் நாற்றம் போன்ற நான்முகனின் படைப்புத்தொழிலும் நீ!

வலமாக உயர்ந்தெழும் மேகமும், மேலிடமாகிய விசும்பும்,
இந்த நிலவுலகும், அதில் நெடிதுயர்ந்து நிற்கும் இமயமும் நீ!
அதனால்
இப்படிப்பட்டவரைப் போன்றவன், இன்ன தன்மையினன் என்று கூறும்படியாக
அப்படிப்பட்டவரை நாம் இங்கு காணாததால்,
பொன்னால் செய்யப்பட்ட அழகிய சக்கரப்படையை வலது கையில் தாங்கிக்கொண்டவனாய்,
உலகத்து உயிர்களுக்கு முதல்வனாக இருப்பதனால்
உனக்கு நீயே ஒப்பாவாய்! உன் புகழோடும் பொலிவுற்று -
உன்னைப் போன்றே ஒளிவீசும் புகழினைக் கொண்டுள்ளாய்!
பொன்னைப் போன்ற ஒளியுள்ள ஆடையினைக் கொண்டுள்ளாய்!

கருடக்கொடியைக் கொண்டுள்ளாய்! வலப்பக்கம் முறுக்குண்ட சங்கினைக் கொண்டுள்ளாய்!
இகழும் பகைவரைச் சென்று அழித்த வலிமை மிக்க சக்கரத்தைக் கொண்டுள்ளாய்!
தூய்மை செய்யப்பட்ட நீலமணியின் ஒளி பாயும் உருவத்தைக் கொண்டுள்ளாய்!
எண்ணிலடங்காப் புகழினைக் கொண்டுள்ளாய்! எழிலான மார்பினைக் கொண்டுள்ளாய்!
அவ்விடத்தில்
உன்னை விரும்பும் அடியார்களோடும் சேர்ந்து உன் அடியவராம்
யாமும் பொருந்தி ஒன்றுபட்டு 'நாளும் சிறப்புற்றிருக்க' என்று
இன்பம் நிறைந்த உள்ளத்தினராய்த் தொழுது போற்றுவோம்,
வேதங்களை உரைத்தருளிய புலவனே! உன் காலடி நிழலைத் தொழுது -

# 2 திருமால்
தொன்றுதொட்டு வரும் இயற்கையின்படி -------
-------------------- -------------------- -----    மரபாகக் கொண்டு
பசிய பொன்மயமான தேவருலகமும், இந்த மண்ணுலகமும் பாழாய்ப்போக,
வானமும் இல்லாதுபோய், ஊழிக்காலம் இவ்வாறு தோன்றியும் ஒடுங்கியும் செல்ல,
அதன்பின், கரு வளர்வதற்காக, வானத்தின் ஒலியிலிருந்து தோன்றி
எந்த உருவமும் காணப்படாத முதல் ஊழிக்காலமும்,
பொருள்களை இயக்கும் காற்று தோன்றி மேலெழுந்த முறை முறையான இரண்டாம் ஊழியும்,
சிவந்த தீ தோன்றி ஒளிவிட்ட மூன்றாம் ஊழியும், குளிர்ச்சி உண்டாகி
குளிர்ந்த மழை பெய்யத்தொடங்கிய நான்காம் ஊழியும், அவைகளுக்குள்

பின்பு தொன்மையில் வெள்ளத்தில் மூழ்கிக் கரைந்து கிடந்து
மீண்டும் தம் சிறப்பாற்றலால் செறிந்து திரண்டு, இந்த நான்கிற்கும்
உள்ளீடாகிய பெரிய நிலம் தோன்றிய ஐந்தாம் ஊழியும்,
நெய்தல், குவளை, ஆம்பல், சங்கம்
குற்றமற்ற தாமரை, வெள்ளம் ஆகிய பேரெண்களால்
குறிக்கப்பட்ட காலங்களின் ஈட்டங்களையும் கடந்த பின்னர்
பன்றியின் சிறப்பான கோலத்தின் பெயரைக் கொண்ட
வராக கற்பம் என்னும் இந்த ஊழிக்காலம் உனது ஒரு திருவிளையாடலை உணர்த்துவதால், உனது பழைமைக்குள்ளான
ஊழிகள் யாராலும் அறியப்படாதன;
சக்கரப்படையை உடைய முதல்வனே! உன்னைப் போற்றி வணங்குகிறோம்.

நீதான், சங்கின் நிறத்தைப் போன்ற வெண்மையான நிறமுடைய பலதேவனுக்கு, அவனுடைய
இளையவன் என்று சொல்வோர்க்கு இளையவன் ஆகி இருப்பதுவும்,
எதனையும் மறைக்கும் இருள் நிற ஆடையை உடைய, பொன்னாலான பனைக்கொடியானாகிய பலதேவனுக்கு
முற்பட்டவன் ஆவாய் என்போர்க்கு முதியவனாக இருப்பதுவும்,
குற்றமற்ற கொள்கையினையுடைய ஞானிகள் ஆராய்ந்த
தீமை இல்லாத கேள்வியாகிய வேதத்தினுள் அவற்றின் நடுவான
இந்த நிலையிலான தெரிந்துள்ள உண்மைகளை ஆராய்ந்துபார்த்தால், இந்த நிலையெல்லாம்
உன்னிடத்துத் தோன்றும் உன் தொன்மையான நிலையின் சிறப்பேயாகும்;
ஓங்கி உயர்ந்த வானத்தில் தோன்றும் வளைந்த வானவில்லைப் போன்ற
பலநிறப் பூணாகிய அணிகள் அகத்திடப்பட்ட, நிறைந்த அழகான முத்துக்களால் ஆன

நித்தில மதாணி என்னும் அழகிய தகுதிபடைத்த மதியினோடு, அந்த மதியில் உள்ள களங்கம் போன்று
சிவந்த நிறத்தவளான திருமகள் வீற்றிருக்கும் உன் மாசற்ற மார்பு;
எழுகின்ற அலைகளால் கழுவித் தூய்மையாக்கப்பட்ட, ஒளிவிடும் புள்ளிகளை நடுவிலே கொண்ட,
கூரிய வெண்மையான கொம்புகளால் பன்றிவடிவ வராகத்தில் நிலவுலகை எடுத்து அவளை மணம் செய்து
ஒரு புள்ளி அளவு நிலம்கூட வருந்துவதில்லை என்று
எண்ணிப்பார்த்து உரைப்போரின் புகழுரைகளோடு உன் செயலும் சிறந்து விளங்கும்.
வலிமைகெடாத உள்ளத்தோடு, சினங்கொண்டு, ஒருங்கே ஒன்று சேர்ந்து,
இடிக்கு எதிராய் முழங்கும் முழக்கத்தோடு, காற்றைப் போன்ற வலிமையுடன் போருக்கு எழுந்தவரின்
கொடிகள் அற்று விழவும், செவிகள் செவிடாகிப் போகவும்,
மணிமுடிகள் அதிரவும், அவர்கள் நின்ற நிலை தளர்ந்துபோகுமாறு

மிகுந்து ஒலிக்கின்ற சங்கினால், தலைகள் வலிமை அழிந்து கீழே விழுந்து,
தலை அற்றனவாய் மாலையோடு புரளும்வகையில்,
தமது நிலை கெட்டு, வேரும் தூரும் மடலும்
குருத்தும் பறிக்கப்படாத உயர்ந்த கரிய பனைகளின் உச்சியிலிருக்கும்
பல பதினாயிரம் குலைகள் நிலத்தில் உதிர்வது போல்
ஏதும் தத்தம் உடலின் மேல் நில்லாவண்ணம் ஒருமுறையிலேயே கொய்யப்பெற்று,
ஒருசேர, உருண்டு, பிளந்து, நொறுங்குண்டு, உருண்டோடிச் சிதறிக்
குருதிச் சேற்றைச் சொரிந்து நிலத்தில் சோர்ந்து கிடக்க,
உன்னைச் சேராதவராகிய அவுணரின் இனிய உயிரை அழிக்கும் வல்லமை படைத்தது,
போரில் பகைவரைக் கொல்லும் குரிசிலே! நீ ஏந்திய சக்கராயுதப்படை;

பகைவரை ஒருசேர அழிக்கும் கூற்றுவனைப் போன்றது அந்த சக்கரப்படை;
பொன்னைப் போல ஒளிவிடும் நெருப்பின் கொழுந்துதான் அதன் நிறம்;
உன்னுடைய பிரகாசிக்கும் ஒளி, சிறப்புடைய நீலத் திருமணியினுடையது;
கண்களோ, புகழ் பெற்ற தாமரை மலர்கள் இரண்டினைப் பிணைத்ததாகும்;
வாய்மையோ தப்பாமல் ஒளிவிட்டு வரும் விடியற்காலை; உன் சிறந்த
பொறுமையை நோக்கினால் அது இந்த பெரிய நிலவுலகம்; எல்லாருக்கும்
அருளும் உனது அருளோ நிறைந்த மேகம்; என்று கூறுகின்றது
நாவன்மை கொண்ட அந்தணர்களின் வேதத்தின் பொருள்;
இங்குக் கூறிய அந்தப் பொருள்களையும், வேறு பிற பொருள்களையும் போன்றிருக்கின்றாய்; இவைகளுக்கிடையிலும்
வேறு எந்த இடத்திலும் இருக்கிறாய் நீயே!

சிவந்த வாயையுடைய கருடனை உயர்த்திய கொடியில் வைத்திருப்பவனே!
வேதங்களில் தேர்ந்த ஆசானின் மந்திரமொழிகளும்,
படிப்படியாக உயர்ந்துகொண்டே செல்லும் வேள்விச்சாலையில் யாகபலிக்காக ஆடுகளைக் கொண்டுபோவதும்,
புகழ் பொருந்த இசைக்கும் வேதவிதிகளின்படி யாகத்தீயை முறையாக மூட்டி,
திகழும் ஒளியையுடைய பிரகாசமான சுடரினை மேலும் பெருக்கிக்கொள்வதும், ஆகிய இம்மூன்று செயல்களும்
முறையே, உன் உருவமும், உன் உணவும்,
பிறரும் ஏற்றுக்கொள்ளும்படியான
உனது பெருமைக்குப் பொருந்தும்படி
அந்தணர்கள் போற்றிக் காணும் உன்னுடைய தோற்றப்பொலிவின் சிறப்பும் ஆகும்.
தேவர்களின் உணவான அமிர்தத்தை உன் மனத்தினுள்ளே நினைத்த பொழுதே,

மூப்படையாத முறைமையும், ஒழியாத ஆற்றலும்,
இறவாத மரபையுடைய அந்தத் தேவர்களைச் சென்றடைந்தன; 
--------------- மரபினை உடையவனே! உனது திருவடியினை,
தலை நிலத்தில் பட வணங்கினோம், பலமுறை யாமும்;
மனக்கலக்கம் இல்லாத நெஞ்சினேமாய், போற்றினோம், வாழ்த்தினோம்,
சுற்றத்தார் பலரோடும் புகழ்ந்து வேண்டுகிறோம் -
பொய்யை மெய்யெனக்கொள்ளும் மயக்கத்தை அறியாமல் போவதாக எம் அறிவு என்று-

# 3 திருமால்
திருமாலே! திருமாலே!
மீண்டும் பிறப்பதை ஒழிக்கின்ற மாசற்ற சிவந்த திருவடிகளையும்,
நீல மணி போன்ற திருமேனியையும் உடைய திருமாலே!
நெருப்பு, காற்று, வானம், நிலம், நீர் ஆகிய ஐந்தும்
ஞாயிறும், திங்களும், வேள்வி முதல்வனும், ஏனைய கோள்களான புதன், வியாழன், வெள்ளி, சனி ஆகிய ஐவரும்,
திதியின் சிறுவர்களாகிய அசுரர்களும், விதியின் மக்களாகிய சூரியன் பன்னிருவரும்,
மாசற்ற வசுக்கள் எட்டுப்பேரும், பதினொரு கபிலர் எனப்படும் உருத்திரர்களும்,
அசுவினி, தேவர் ஆகிய இருவரும், இயமனும், கூற்றுவனும், 
மூன்று ஏழேழு உலகங்களாகிய இருபத்தியொரு உலகங்களும், அவ் உலகத்து உயிர்களும்,

மாயவனே! உன்னிடமிருந்து தோன்றிப் பரவினவை என்று சொன்னோம்,
அழிவற்ற வேதங்கள் சொன்னபடி விரிவாக, 
வேதங்களாகிய ஓடையில் மலர்ந்த
தாமரைப் பூவினில் பிறந்தவனாகிய பிரமனும், அவனுடைய தந்தையும்,
நீயே என்று கூறுகின்றன அந்தணரின் வேதங்கள்.
அழகு விளங்கும் பூண்களைக் கொண்ட தேவரிடத்திலிருந்து கவர்ந்துகொள்ளப்பட்டு வந்த அமிழ்தத்தால்
தன்னைப் பெற்ற தாயான விந்தையின் துன்பத்தைக் களைந்த கருடனை ஊர்தியாகக் கொண்டிருக்கிறாய்!
தன்னைப் பெற்ற தாயான விந்தையின் துன்பத்தைக் களைந்த கருடனின்
சேவலை மிக ஓங்கி உயர்ந்த கொடியில் கொண்டுள்ளோய்! உன்
சிவந்த அடிகளைத் தொழாதவரும் இருக்கின்றாரோ? அந்தச் சேவடிக்குள்

கீழேயுள்ள ஏழு உலகங்களும் ஒரு பாதத்தை வைத்திருக்கிறாய்!
உலகத்தைத் தீய்த்து அழிக்கும் சிவந்த ஊழித்தீயும், கூற்றுவனும், இயமனும்,
மாசற்ற ஆயிரம் கதிர்களையுடைய பன்னிரண்டு சூரியர்களும் ஆகிய அனைத்தும் ஒன்றுகூடிநிற்கும்
ஊழிக் காலத்துக் கடலின்கண் மூழ்கிய பெரிய நிலத்தை அச்சம்பொருந்திய
பன்றியாகிக் கொம்பால் உழுது மேலே எடுத்து வந்தவனே என்றும்,
பெரிய வானத்திலிருந்து நிற்காமல் வழிகின்ற மழைநீர் வறண்டுபோகும்படி, அன்னத்தின்
சேவலாய்ச் சிறகுகளால் உலரச் செய்தவனே என்றும்,
இந்த ஞாலத்தில் வாழ்கின்ற முனிவர்களும், வானுலகின்
நால்வகை எண்ணிக்கையான மொத்தம் முப்பத்திமூன்று தேவர்களும் விரும்பி உன்னைப் பாடுவார்,
அது அவரின் முன்னோர் பாடும் வகையே,

எமது பாடல் தாமும் அப்படிப் பாடுவார் பாடும் வகையே!
கூந்தல்மா என்ற குதிரை வடிவத்தோடு வந்த கேசி என்பவனின்
எரிகின்ற சினத்தைக் கொன்றவனே! உன் புகழைப் போன்றன உன் கைகள்;
அவுணர்களின் மகிழ்ச்சியே அவர்களுக்கு அச்சமாக மாற, தேவர்களுக்கு நல்ல அமிழ்தத்தை வழங்கிய
நடுவுநிலைமையிலிருந்து தவறிய நலமில்லாத ஒரு கை;
இரு கைகளைக் கொண்ட மாலே!
மூன்று கைகளைக் கொண்ட முனிவனே! நான்கு கைகளைக் கொண்ட அண்ணலே!
ஐந்து கைகளைக் கொண்ட கணபதியே! ஆறு கைகளைக் கொண்ட நெடுவேளே!
ஏழு கைகளைக் கொண்டவனே! எட்டுக் கைகளைக் கொண்ட ஏந்தலே!
ஒன்பது பெரிய கைகளைக் கொண்ட புகழ் நிலைபெற்ற பேராளனே!

பத்துக் கைகளைக் கொண்ட மிகுந்த வலிமை கொண்டவனே! நூறு கைகளைக் கொண்ட ஆற்றலாளனே!
ஆயிரமாக விரித்த கைகளைக் கொண்ட மாயத்தில் வல்ல மள்ளனே!
பதினாயிரம் கைகளைக் கொண்ட வேத முதல்வனே!
நூறாயிரம் கைகளைக் கொண்ட அறுவகை நெறிகளையும் அறிந்த கடவுளே!
இவை அனைத்தும் மட்டும் அல்ல, பலவாக அடுக்கப்பட்ட ஆம்பல்களின் எண்ணிக்கையில் கைகளைக் கொண்டுள்ளாய்,
இந்த அளவிளானது என்ற எண் வரம்பு அறியாத உடல்களைக் கொண்டுள்ளவனே!
உனக்கு ஒப்பாக யாரையாவது நினைத்தால் அது நீ அல்லாமல் வேறு யாரையேனும் அறிவாயோ?
அநாதிக் காலமாய் வரும் மரபினையுடைய வேதத்திற்கு முதல்வனே!
உனக்காக விரிந்து அகன்ற ஆகமங்கள் அனைத்திலும்
ஆற்றலாலும், மனத்தாலும், உணர்வினாலும், இவை எல்லாம் சேர்ந்தும்

உன் வனப்பின் எல்லையைக் காணமுடியாதபடியான தன்மையினை உடையவனே!
அழகிய குளிர்ச்சியோடு விளங்கும் ஒளியாகிய பதினாறு கலைகளாகிய இனிய கதிர்களையுடைய
பிறைகளாகி வளர்கின்ற நிறைத்திங்களான உணவினையும்,
அழகிய மணிகளால் செய்த பசிய பூண்களையும் உடைய தேவர்களுக்கு முதல்வன் நீ!
மண் செறிந்த உலகத்தை நீ அளந்த பொழுது மனம் மாறுபட்டு, மயங்கி இடம் பெயர்ந்து ஓடி,
உனக்கு அஞ்சிக் கடலுக்குள் தம்மை ஒளித்துக்கொண்ட, கட்டவிழ்ந்து மலர்ந்த குளிர்ந்த மாலையினையுடைய
அப்படிப்பட்டவர் உட்பட எல்லா அவுணர்க்கும் முதல்வன் நீ!
அதனால், பகைவர் இவை, நண்பர் இவர் என்னும்
வேறுபாடு உண்டோ, உன் இயல்பினை அறிவோர்க்கு?
உயர்த்தப்பட்ட ஆயிரம் தலைகளைக் கொண்ட ஆதிசேடனாகிய பாம்பினைத் தன் வாயில் கொண்ட

உன் ஊர்தியான கருடச் சேவலும், 'சிவந்த கண்களையுடைய திருமாலே,
எனைக் காத்தருள்க' என்று 'ஓ'-வென்று கதறுகின்ற, காலங்களைக் கடந்து நிற்கும் முதல்வனே!
சாமவேதம் இப்படிப்பட்டவன் என்று கூறுவதால் அப்படி இருத்தலை நன்கு அறிந்தோம்;
தீயினுள் சுடுகின்ற கடுமை நீ! பூவினுள் கமழ்கின்ற மணம் நீ!
கற்களுக்குள் மாணிக்கக் கல் நீ! சொற்களுள் வாய்மை நீ!
அறநெறிகளில் அன்பாக இருப்பவன் நீ! மறத்தினில் ஆற்றலாக இருப்பவன் நீ!
வேதங்களுள் மந்திரச் சொல் நீ! பூதங்களுள் முதன்மையான வானமும் நீ!
வெம்மையான சுடராகிய ஞாயிற்றின் ஒளியும் நீ! குளிர் திங்களின் குளிர்ச்சியும் நீ!
எல்லாப்பொருளும் நீ! அப் பொருள்களின் உட்பொருளாக இருப்பவனும் நீ! எனவே,
நீ தங்குமிடம் என்பதுவும், உன்னிடத்துத் தங்குவது என்பதுவும் இல்லை! உனக்கு உள்ள தன்மையாக,

மறதியுடையார் உன்னைச் சிறப்பித்துக் கூறியவை பொய்யுரைகள், நீ அப்படிப்பட்டவன்!
முதலிலும், இடையிலும், இறுதியிலும், முறையே படைப்பு, காத்தல், அழித்தல் என்ற தொழில்களைச் செய்யும்பொருட்டு
நீ பிறவாத பிறப்பு இல்லை, உன்னைப் பிறப்பிக்கும்படி செய்தோரும் இல்லை;
பறக்காத பூவாகிய காயாம்பூவின் நிறத்தவனே!
உன் திருவருளே வெண்கொற்றக்குடையாக, அறமே செங்கோலாக,
வேறு இரண்டாவதான குடைநிழல் படாதபடி, மூன்று கூறுகளான இருபத்தியொரு உலகங்களும்
உனது ஒரு குடை நிழலின் கீழ் ஆக்கிய இனிய காவலினை உடையவன் நீ!
பாழ் என்ற புருடதத்துவமும், கால் என்ற ஐந்து பூதங்களும், பாகு என்ற தொழிற்கருவிகள் ஐந்தும், ஒன்றாவதான ஓசையும்,
இரண்டாவதான தொடுவுணர்ச்சியாகிய ஊறும், மூன்றாவதான ஒளியும், நான்காவதான சுவையும், ஐந்தாவதான நாற்றமும்,
ஆறாவதான மனத்தைச் சேர்த்த அறிகருவிகள் ஆறும், ஏழாவதான ஆணவமும், எட்டாவதான புத்தியும், ஒன்பதாவதான மூலப்பகுதியும்,

நால்வகை ஊழியின்போதும், இந்த எண்களால் கூறப்படும் பெருமையினையுடையவனே!
சிவந்த கண்ணும் கரிய மேனியும் உடைய வாசுதேவனே! கரிய கண்ணும் வெள்ளை உடம்பும் உடைய பலதேவனே!
பொன்னிறக் கண்ணையும் பச்சைமேனியும் உடைய பிரத்தியும்நனே! பசிய கண்ணையுடைய திருமாலே!
ஆய்ச்சியர்க்கு இடமும் வலமும் ஆடியவனே! குடக் கூத்தாடுபவனே! கலப்பைப் படை உள்ளவனே! கோவலனே காவலனே!
காணப்படாத இயல்பினனே! அன்பரின் நீங்காத நினைவிலுள்ளவனே!
அழியாத நிலைபேறுடையவனே! உலகினை ஆளும் மன்னவனே!
தொன்மை இயல்புகளை அறிந்தவனே! நல்ல முறையில் யாழிசைக்கும் பாணனே!
துளசி மாலை அணிந்த செல்வனே! தோல்வியினை அறியாத சங்கினை உடையவனே!
பொன்னாற் செய்த ஆடையினையும், வலம்புரிச் சங்கைப் போன்ற நிறத்தையும் கொண்டவனே!
சக்கரத்தை வலக்கையில் ஏந்தியிருப்பவனே! மற்போரில் ஆற்றலுள்ள மல்லனே!

திருமகளின் கணவனே! பேராற்றல் கொண்ட மள்ளனே!
இந்தப் பெரிய உலகம் இயங்காத ஆதி ஊழியின் காலத்தின்
அச்சந்தரும் அந்த வெள்ளத்து நடுவில் தோன்றிய,
வேதத்தை உரைக்கும் மகனாகிய பிரம்மனைக் கொண்டு மலர்ந்த,
உந்தித் தாமரைப் பொகுட்டை உடையவனே! உன் சக்கரப்படையே உலகுக்கு நிழல் ஆவது.

# 4 திருமால்
ஐந்து பொறிகளால் உண்டாகும் மயக்கமாகிய இருளை முற்றிலும் நீக்கி, நான்கு குணங்களால் உள்ளத்தைத் தூயதாக்கி, தம்மைத்
தியானமாகிய ஒரே நெறியில் செலுத்திய உன் அன்பர்கள் உன்னைத் தொழுது போற்றி
உன்னுடைய புகழை விரித்துக் கூறினர், சொல்லப்போனால் அவை உனக்கு
பெருமகிழ்ச்சி தருவதாகாது என்பதனை நன்கு அறிவோம். ஆயினும்
நீ சிரிப்பதற்கேற்றவற்றை இங்கும், அங்கும் நாங்கள் உன்னைப்பற்றிக் கூற
அழகிய நீலமணி, அலைகளின் ஓசை அடங்கிய கடல்,
பெய்யப்போகும் மழை கொண்டிருக்கும் கரிய முதிர்ந்த மேகம், ஆகிய மூன்றையும் போன்றது உன் கரிய மேனி;
அந்தக் கரிய மேனியோடு மாறுபட்ட பொன்னிற ஆடையை உடையவனே!
பகைவருடைய உயிரோடு மாறுபட்ட சக்கரப்படையையுடையவனே!

சினம் தீர்ந்த சிவந்த கண்ணையுடைய செல்வனே! பிரகலாதன் உன்னைப் புகழ,
பொறாமைத் தீயால் புகைந்துபோன நெஞ்சினோடும், புலர்ந்த சந்தனத்தோடும்,
இரணியன் அந்தப் பிரகலாதனைப் பலவாறு பிணிபடுமாறு
கட்டிப்போட்ட பொழுது, மிகுந்த துன்பமெய்தியதால் ஊக்கம் குன்றிய நடுக்கத்துடன்,
அந்த விரிந்த புகழையுடையவன், இவ்வாறு செய்பவன் தந்தை என்பதால்
அவ்வாறு இகழ்பவனை இகழாத நெஞ்சினனாய் இருக்க, நீ இகழ்ந்து
உன்னுடன் நன்றாக நட்புப்பாராட்டிய பிரகலாதனின் நல்ல மார்பினைத் தழுவி,
உன்னிடம் ஒன்றாத உறவுகொண்டவனின் பெரிய மலை போன்ற மார்பில்
படிந்திருந்த செருக்கு அழியும்படியாக அவன்மேல் பாய்ந்து,
துன்பத்தைக் காட்டும் தீயசகுனங்களுடன் இடியைப் போன்ற முரசு ஒலிக்க,

வெடிபட்டு ஒடிந்துபோன தூணின் துண்டங்களோடு,
இரணியனின் தசைத் துண்டங்களும் பலவாகக் கலந்து விழும்படி அவனது மார்பினை வகிர்த்ந நகத்தினை உடையவனே!
முற்காலத்தில், உன்னுடைய கருமையான, வலிய கழுத்தால்
தாங்கிப் பிடித்து இந்த உலகத்தைக் கடலுக்குள்ளிருந்து வெளிக்கொணர்ந்து நீ நிலைநிறுத்தியது, உலகின் நடுவில்
ஓங்கி உயர்ந்திருக்கும், பலரும் புகழும் மேருமலையைப் போன்ற சிறப்பினை உடையது
அனைத்தையும் அழிக்கவல்ல உன் வெம்மையும், அனைத்தையும் தெளிவுறுத்தும் உன் ஒளியும் ஞாயிற்றில் இருக்கின்றன;
அனைவர்க்கும் அருளும் உன் குளிர்நோக்கும், மென்மையும் திங்களிடத்தில் இருக்கின்றன;
அனைவர்க்கும் அருள்சுரக்கும் இயல்பும், கொடைத்தன்மையும் மழையினிடத்தில் இருக்கின்றன;
அனைவரையும் காக்கும் இயல்பும், பொறுமையும் பூமியினிடத்தில் இருக்கின்றன;
உன் மணமும் ஒளியும் பூவில் உள்ளன;

உனது வெளிப்பாடும், பரப்பும் கடலினிடத்தில் உள்ளன;
உன் உருவமும் ஒலியும் ஆகாயத்தில் உள்ளன;
உன் பிறப்பும், மறைதலும் காற்றினில் உள்ளன;
அதனால், இங்கிருப்பவையும், நடுவிலிருப்பவையும், அங்கிருப்பவையும், பிறவும்
தமக்குப் பாதுகாவலாக அமைந்த உன்னிடத்திலிருந்து பிரிந்து
உன்னையே சார்ந்திருப்பன எல்லாமே!
கருடச் சேவல் வரையப்பட்ட ஓங்கி உயர்ந்த கொடியினை உடையவனே!
கருடச் சேவல் வரையப்பட்ட ஓங்கி உயர்ந்த கொடியுடன்,
உனக்குரியதாக சிறந்துயர்ந்த கொடி பனைக்கொடி,
உனக்குரியதாக சிறந்துயர்ந்த கொடி கலப்பைக்கொடி,

உனக்குரியதாக சிறந்துயர்ந்த கொடி யானைக்கொடி,
உனக்கே சிறப்பாய் உயர்ந்த கொடியை மற்றக் கொடிகள் ஒத்தல் இல்லை,
நஞ்சை உடைய பாம்பின் உடலையும், உயிரையும் உண்ணும் கருடன்,
அவனது வயிற்றின் மேல் பட்டியும் பாம்பு,
அந்தப் பாம்பே அவனது தோள்வளையுமாகும், அந்தப் பாம்புகளே அவன் தலையின் திருமுடி மேல் உள்ளன,
பாம்புகளே அவன் அணிந்திருக்கும் பூண்கள் எல்லாம், பாம்புதான் அவன் தலையின் மேல் அணியும் சூட்டு என்ற அணியும்,
பாம்புகளே அவன் சிறகுகளில் அணியப்படுவன,
பாம்பின் பகையின் செருக்கை அழித்தவனே! பொன் அணிகலன் அணிந்த உன்
கொடியில் இருக்கும் கருடன் தாக்குகின்ற இரையும் பாம்பே!
மிகவும் துன்பம் உண்டாகும்படி வருத்தும் சினமும், அருள்புரிதலும்,

கொடுமையும், செம்மையும், வெம்மையும், தண்மையும்
உள்ளவரிடம் நீயும் அக் குணங்களை உடையவன், இவை இல்லாதவரிடம் நீயும் அவற்றை இல்லாதவனாகவே இருக்கிறாய்,
உன்னைப் போற்றாதவரின் உயிரிடத்திலும், போற்றுவாருடைய உயிரிடத்திலும்
முறையே மாற்றுதலும் காப்பாற்றுதலும் செய்வதில்லை, உனக்கு
பகைவரும் இலர், நண்பரும் இலர் என்ற கூற்றில்
முரண்பாடு இல்லை, அதனை ஆராய்ந்து உணர்வாரைப் பெற்றால்;
அன்பர்கள் மனத்திற்கொண்ட வடிவத்தைத்தவிர உனக்கென வடிவு வேறு இல்லை;
எப்பொருளையும் மறைத்துக்கொள்ளும் இருளின் இருப்பிடம் போன்ற அழகிய நீலமணி போன்ற திருமேனியில்
சிரித்து மலர்ந்த துளசியின் நறுமணம் கமழும் கொத்தாலான தலைமாலையை உடையவனே!
பொன்னைப் போல் தோன்றும் புகழ்பெற்ற மறுவையுடைய மார்பனே!

உன்னுடைய உந்தியில் தோன்றிய வரிசையான இதழ்களையுடைய தாமரையைப்
போன்ற கண்களுடன் அளப்பதற்கு அரியவனாய் இருக்கிறாய்!
உன்னிலும் சிறந்தவை உனது இரு தாளிரண்டும்!
உன்னிடத்தில் சிறந்த நிறைவான கடவுள்பண்பை உடையவன்!
அத்தன்மை அல்லாத வேறு பண்புகளும் உன்னிடத்தில் உள்ளன; அவை
உன்னையே ஒத்த உணர்வதர்கு அரிய அந்தணரின் அருமறைப் பொருளாக உள்ளன.
தீக் கொழுந்தைப் போன்ற தளிரையும், மிகுதியான நிழலைத் தரும் பல கிளைகளையும் கொண்ட
ஆலமரத்தின் கீழும், கடம்பமரத்திலும், நல்ல ஆற்றிடைக்குறையிலும்,
காற்றின் போக்கைத் தடுத்து நிறுத்தும் உயந்த நிலையினையுடைய குன்றங்களிலும், பிற இடங்களிலும்,
அந்தந்த இடங்களில் பொருந்திய வேறுவேறு பெயர்களையுடையவனே!

எந்த இடத்திலும் இருப்பவன் நீயே! உன் அன்பர்களின்
தொழுத கைகளின் நிலையில் அமர்ந்தவனும் நீயே!
அவரவரின் வேண்டுதலைச் செய்யும் ஏவலாளனும் நீயே!
அவரவர் செய்கின்ற அறம் முதலிய பொருள்களுக்குக் காவலும் நீயே!

# 5 செவ்வேள்
பரந்த பெரிய குளிர்ந்த கடலில் உள்ள பாறைகள் தூள்தூளாகும்படி புகுந்து,
மிகவும் உயர்ந்த பிணிமுகம் என்னும் யானையின் மீதேறிப் போர்செய்து,
நெருப்பின் கொழுந்து போல் ஆரவாரிக்குபடி உன் வேலைச் சுழற்றி விட்டெறிந்து,
பிறரைத் துன்புறுத்தும் இயல்பினையுடைய அசைந்தாடும் சூரபத்மனாகிய மா மரத்தைனை அடியோடு சாய்த்து
வெற்றியையுடைய புண்ணிய மக்கள், பாவ மக்கள் என்ற பெயர்களுள் புண்ணிய மக்கள் என்ற பெயரைப் பெற்ற
பிற உயிர்களைக் கொன்று உண்பதற்கு அஞ்சாத கொடிய செயல்களையுடைய கொல்லக்கூடிய தகுதிபடைத்த
மாயம் செய்வதில் வல்ல அவுணரின் குலம் அழியும்படியாகக் கெடுத்த வேலினால்,
இந்த நாவலந்தீவு எனப்பட்ட குளிர்ந்த சோலைகளைக் கொண்ட நிலப்பகுதியின் வடக்கிலிருக்கும் பொழிலில் உள்ள
கிரவுஞ்சம் என்கிற பறவையின் பெயர்கொண்ட பெரிய மலையை உடைத்து

அந்தமலையினில் வழிகளை அமைத்த ஆறு மெல்லிய தலைகளை உடையவனே!
ஆறு மென்மையான தலைகளையும், முழவினைப் போன்ற பன்னிரண்டு தோள்களையும்,
ஞாயிறு எழுகின்ற போதுள்ள நிறம் போன்ற அழகினையும் கொண்ட, தாமரையின் மேல் பிறப்பினை உடைய, பெருமானே!
உலகத்தை அழிக்கும் கடவுளான சிவனின் மகனே! செவ்வேளே!
சான்றாண்மையுடையவனே! தலைவனே! என்று அச்சந்தரும் வெறியாட்டு விழாவில்
வேலன் புகழ்ந்துபாடும் வெறியாட்டுப் பாடல்களும் உள்ளன;
அவை உண்மையானவையும் அல்ல; பொய்யானவையும் அல்ல;
உன்னையே வரம்பாகக் கொண்டது இந்த உலகம், எனவே
சிறந்து விளங்குபவனே! இப் பண்புகள் உன் உண்மைப் புகழுக்குக் குறைவுள்ளதாதலால் அந்தச் சிறப்பினின்றும் நீ நீங்கிவிடுவாய்!
சிறப்புகளில் உயர்ந்தவர் ஆகுவதும்,

பிறப்பினில் இழிந்த நிலை அடைதலும் உடைய
உன்னை அல்லாத பிற உயிர்கள் உன் ஆணைக்குட்பட்டவை;
பிரம்மதேவன் செலுத்தும் முறையை அறிந்தவனாக, குதிரையைச் செலுத்த,
வேதங்களாகிய குதிரைகள் பூட்டப்பட்ட வையகமாகிய தேரில் ஏறி,
வாசுகி என்ற பாம்பினை நாணாகக் கொண்டு, மேரு மலையே வில்லாக,
பொன், வெள்ளி, இரும்பு ஆகிய மூன்று வகையான கடத்தற்கரிய திரிபுரக் கோட்டைகளை ஒரு தீக்கணையால் வேகும்படியும்,
திக்கெல்லாம் பற்றியெரியும்படியும் எய்து, அமரர்கள் எழுப்பிய வேள்வியின்
அவியுணவை உண்ட பசிய கண்ணையுடைய சிவபெருமான்
உமாதேவியோடு புணர்ந்த காமநுகர்ச்சிக்கான திருமண நாளில்
கைவிட முடியாத புணர்ச்சியை அடைய, நெற்றியில்

இமைக்காத கண்ணையுடைய சிவபெருமானிடம், இந்திரன் ஒரு வரத்தைப் பெற்று
'உன் புணர்ச்சியால் உண்டான கருவை அழிப்பாயாக' என்று வேண்ட, அந்த விண்ணவரின் வேள்வியின் முதல்வனான
விரிந்த கதிர்களையுடைய மணிகளைப் பூண்டிருக்கும் இந்திரனுக்கு, தான் கொடுத்த வரம்
செய்வதற்கு அரியது என்று எண்ணி அதனை மாற்றாதவனாய், அவன் வாய்மையைப் போற்றுபவனாதலால்
நெருப்பு கனன்று தணியாமல் கொழுந்துவிட்டு எரியும் தன் மழுப்படையைக் கொண்டு அந்தக் கருவின் உருவத்தைப்
பல கண்டங்களாகச் சிதைத்துக் கொடுத்துவிட்டான், இந்த உலகம் ஏழும் மருண்டுபோக,
இந்திரனிடமிருந்து இந்தக் கருவினைப் பெற்றுக்கொண்டோர், சிதைக்கப்பட்ட கருவாகிய குழந்தை உடலை,
எதிர்காலத்தை உணரும் ஆற்றல் பெற்ற ஏழு என்ற எண்ணை அடையாகக் கொண்ட முனிவர்கள் நன்றாகத் தெளிந்து,
பிளவுபட்டதைத் துண்டங்களாக, அம் முனிவர்களின்
மனைவியர், தம் கற்புடைமையில், அந்தப் பிளக்கப்பட்ட துண்டுகளைத் தாங்கி வளர்த்தால்

அமைவுடையவராகமாட்டார் என்று எண்ணி, 'தீயே அவற்றைத் தாங்குவதாக' என்று அந்த முனிவர்கள் வேள்வியுணவாக,
ஒன்றாகச் சேர்த்துப் போட்டார் தீயினால் வேள்வி செய்து; அந்த வேள்வி அவியைக்
குண்டங்களில் எழுந்த முத்தீயும் உண்ணுவதால் சேர்ந்த பெருமைக்குரிய எச்சத்தை,
வானத்தில் வடக்குத்திசையில் ஒளிவிட்டுத் திகழும் கார்த்திகை மீனாய் இருக்கும் ஏழு மகளிருள்
கடவுள் கற்பினையுடைய ஒரு மீனாகிய அருந்ததி ஒழிய
அறுவராகிய ஏனையோரும் அப்பொழுதே உண்டனர்;
குற்றமற்ற கற்பினையுடைய அந்த முனிவர்களின் மனைவியர்
தம் கற்பில் குறைவுபடாது உன்னைக் கருக்கொண்டனர்;
உயர்ந்து ஓங்கிய இமயத்திலுள்ள நீலப்பூக்களைக் கொண்ட பசிய சரவணம் என்ற சுனையில்
உன்னைப் பெற்றெடுத்தனர் என்பர், தாமரைப்பூவாகிய படுக்கையில்,

பெரிய புகழினை உடைய முருகனே! உன்னை இவ்வாறு பெற்ற பொழுதே
கிட்டுவதற்கு அரிய, பிறரும் விரும்பும் சிறப்பினை உடைய தேவர் கோமான்
தீயை உமிழும் வச்சிரப்படையைக் கொண்டு, பகைமை கொண்டு வந்து வெட்டினானாக,
முன்னர் ஆறு வேறு துண்டுகளும் ஆறு வடிவம் ஆகி,
பின்னர் ஒரே உருவம் உடையவனானாய்! ஓங்குகின்ற வெற்றியை உடைய குமாரதெய்வமே!
வளராத உடம்பினையுடைய நீ விரும்பி விளையாட்டாகச் செய்த அந்தப்
போரில் உன்னுடைய வெறும் கைகளுக்கே அந்த இந்திரன் தோற்றோட,
துன்பமில்லாத தீக்கடவுள் தன் உடலிலிருந்து பிரித்து
வளப்பமான கோழிச் சேவலைக் கொடியாகக் கொடுத்தான், வானுலகத்தில்
வளம் பொருந்திய செல்வத்தையுடைய இந்திரன் தன் உடலிலிருந்து பிரித்து

ஒளிதிகழும் புள்ளிகளையுடைய தோகையால் அழகு பெற்ற மயிலாகக் கொடுத்தான்,
திருந்திய செங்கோலையுடைய இயமன் தன் உடம்பிலிருந்து பிரித்து
கரிய கண்ணையுடைய வெள்ளாட்டின் அழகிய குட்டியாகக் கொடுத்தான்;
அவ்வாறு, அவர்களும், பிறரும் மகிழ்ந்து உனக்குப் படைகளாக அளித்த,
வெள்ளாட்டுக் குட்டியும், மயிலும், கோழிச் சேவலும்,
இலச்சினையிடப்பட்ட வரிகளையுடைய வில்லும், தோமரமும், வாளும்,
செறிவான இலையைக் கொண்ட ஈட்டியும், கோடரியும், குந்தாலியும்
சுடுகின்ற கதிர்களையுடைய மழுப்படையும், மாலையும், மணிகளும்,
வேறுவேறு உருவினையுடைய இந்தப் பன்னிரண்டு கைகளிலும் ஏந்திக்கொண்டு
குற்றமற்ற வானுலகில் வாழும் தேவர் கோமானாகிய இந்திரனின் -

தாமரைப் பூவின் புள்ளிகளையுடைய பொகுட்டுடனான இளம்பருவத்திலேயே - புகழின் எல்லையைக் கடந்தவனே!
உன் குணமாகிய அருளைத் தம்மிடம் ஏற்றிருப்பாராய், உன் அறத்தைத் தாமும் மேற்கொண்டோராய் இல்லாதவரும்
நிலைபெற்ற நல்ல குணங்களையுடையோராய், பெரும் தவத்தினை மேற்கொண்டோராய், உன்னை வணங்குபவராய் இல்லாதவரும்
கொல்லுகின்ற தீய நெஞ்சத்தில் சினத்தை நீட்டித்திருப்போரும்,
அறநெறியில் சேராத சீர்மைகெட்டோரும்,
அழிந்துபோன தவ வடிவோடு உன்னை மறந்துபோனவர்களும்,
மறுபிறப்பு என்பது இல்லையென்று வாதிடும் அறிவற்றோரும் உன்னை ஒருபோதும் அடையமாடார்கள்;
உன் திருவடி நிழலை மேற்கூறியவரை அன்றி பிறர்
சேர்வாராதலால், நாம் வேண்டிக்கேட்டுக்கொள்பவை
பொருளும், பொன்னும், போகமும் அல்ல, உன்னிடம்

அருளும், அன்பும் அறனும் ஆகிய மூன்றனையுமே!
உருளாகப் பூக்கும் கொத்துக்களையுடைய கடம்பின் செழுமையான மாலையை அணிந்தவனே!

# 6 வையை
நீர் நிறைந்த கடலில் நீரை முகந்து வானத்தில் பரவி, நிறைவாக நீர் தளும்பும் தம்
பாரத்தை இறக்கிவைத்து இளைப்பாறும்பொருட்டு பொழிந்தன மேகங்கள்;
நிலம் முழுவதும் மறைந்துவிடுவதுபோல் மிகுந்த வெள்ளம் இடங்கள்தோறும் கூடி,
மலையிலுள்ள விலங்கினங்கள் கலங்க, மலையிலுள்ள மயில்கள் கூவ,
மலையின் மாசுகள் கழிந்துபோகும்படி, விரைவான அருவியாய் இறங்கும்
மிகுந்த நீர் ஓடுவதற்குரிய வழிகள் பற்பல பொருந்திய மலைச் சாரலில்,
குற்றமில்லாத நூல்களைக் கற்ற புலவர்கள், புகழுடைய அறிவினைக் கொண்ட
தம் நாவால் பாடிய வையை ஆற்றைப் பற்றிய நல்ல கவிதைகள் பொய்படாமல் நிலைநிற்கச் செய்ய,
எங்கும் சென்று பரவி, விரைந்து உழவு முதலிய தொழில்கள் பெருகும்படியாக

தாவிச் சென்றது குளிர்ந்த அழகிய வெள்ளம்;
புகை எழுப்ப அகில், சந்தனம், சூடிக்கொள்ள பூ, வழிபாட்டுக்குரிய பொருள்கள், நெருப்பு ஆகிய பலவற்றை ஏந்திக்கொண்டு
மகிழ்ச்சி பொருந்திய தம் காதலரை நீர் விளையாட்டுக்குரிய நாளணிகளை அணியச்செய்விக்கும்
வகையில் பொருந்தியிருக்கிறது வையையில் நீர் வரவு;
தோளணிகள் தோளில் செறிந்திருக்க, தோளின் வளையம் முன்கையில் விழுந்து முன்னும் பின்னும் அசைய,
வரையப்பட்ட தொய்யில் கொடிகள் ஒன்றோடொன்று கலந்து அழிய, அழகிய மேகலையின் சரங்கள் உதிர்ந்து நூல்மட்டும் தெரிய,
திரண்ட ஒளியினையுடைய முத்துமாலைகள் சந்தனப்பூச்சால் கலங்கி ஒளிமங்கித் தெரிய,
நகத்திலும், கன்னங்களிலும் பூசப்பட்ட செம்பஞ்சிக்குழம்பும்,
முலைகளில் அணிந்த குங்குமக் குழம்பும் மிகுதியாய் வண்டல் போன்று படிந்து தோன்ற,
தளிரால் செய்யப்பட்ட படலைமாலையும், கூந்தலும், குளிர்ந்த சந்தனத்தை அழிக்க,

மகளிர் முலையும், மைந்தர் மார்பும் முயங்குவதால் அவற்றிலுள்ள அணிகலன்கள் ஒன்றோடொன்று பின்னிக்கிடக்க,
அன்பாலே ஒன்றுபட்டவரின் உள்ளங்களின் நிறையாகிய காப்பு உடைந்துவிடுவது போல
மலைபோன்ற இருகரைகளையும் உடைத்தது வையை; வையையின்
அலைகளான சிறகுகள் உடைத்தன கரையாகிய காவலை; பறையை முழக்குக என்னும்
கரைக் காவலர் ஒலியுடன் பறையின் ஒலி எழுந்ததாக ஊரின் ஆரவாரமும் ஒலித்தது;
அந்த நாளில், போருக்காக அணிவகுக்கப்பட்ட அணியில் புள்ளிகளையுடைய முகத்தையுடைய யானைகள் ஊக்கமாகச் செல்வது போல
இந்த நீராட்டுவிழாவின் காரணமாக வகுக்கப்பட்ட அணியில் வரிசை வரிசையாகப் பெண்யானைகள் செல்ல,
அழகாக அணிந்த அணியினரான இளையவர்களும், அவருக்கு இனியரான அவரின் காதலியரும்,
நீராடத்தகுந்த ஈரமான அணிகளுடன், விளையாட்டாகச் சண்டையிடுவதை மிகவும் விரும்பி,
குளிர்ந்த புதுப்புனலில் ஆடுகின்ற பொருத்தம் மிகுந்த போரிடும் இடமாக

அந்தத் தெளிந்த ஆற்று நீர் அமைய, ஏற்ற துறைக்கு முந்திச் செல்ல முற்பட்டு,
அணியணியாகிய போரின் முன்னணிப்படையினரைப் போல, தேவையான கருவிகளுடன்,
கரையை இடிக்கும் வெள்ளத்தினூடே செல்ல, தம் அணிகலன்களைக் களைவர்;
யானைகளின் கழுத்தில் அமர்ந்திருப்போரும், விரைந்து செல்லும் இளைய குதிரையில் அமர்ந்திருப்போரும்,
நெய்பூசிச் சிறப்படைந்த துருத்தியை உடையோரும், உள்ளே மணக்கும் நீர் கொண்ட கொம்பினையுடையோரும்,
வெண்மையான சாரம் அமைத்த தெப்பத்தினையுடையவரும், நல்ல இருக்கைகள் கொண்ட தேரில் வருபவர்களும்,
யானை, குதிரை ஆகியவை செல்வதற்கு இடங்கொடாமல், குறைவில்லாத மக்கள் கூட்டம்,
ஒரே ஒரு வழியில் நெருக்கியடித்துக்கொண்டு, ஊர்ந்து ஊர்ந்து இடமெல்லாம் திரிய,
புறச்சேரியிலிருக்கும் இளையர் வெளியே செல்வதற்கு முடியாத நிலையினராக,
நீருக்குள் பாயும் வலிமையற்றோர் துறைதுறையாகச் சென்று நீரில் குளிக்க,

மெலியர் அல்லாத வலியவர் புதுப்புனலுக்குள் பாய்ந்து விளையாட,
மணப்பொருள்களாகிய சாறும், சந்தனம், குங்குமம் ஆகியவற்றின் குழம்பும், வாசனை நெய்யும், பூக்களும்
மணக்கும்படியாக நிகழ்கின்றது வையையாறு வருகின்ற முறை;
பல்வேறு மணம் கமழ ஓடுகின்ற ஆற்றினைக் கண்டு மனமழிந்து
வேறுபட்டுப்போன நீர் என்று எண்ணி, அந்த மணப்பொருள்களைக் கழுவிய கலங்கல்நீரைக் கண்டு
வேதங்களை விரும்பும் அந்தணர் கலங்கினர் மருண்டுபோய்;
தம் இயல்பினின்றும் மாறிப்போன மென்மையான மலர்களும், ஆண்களின் மாலைகளும், பெண்களின் மாலைகளும்,
மரத்து வேர்களும், தூர்களும், காய்களும், கிழங்குகளும்,
கீழ்மக்கள் உண்டு எஞ்சிய பகுதிகளும்,
நார்க்கூடையால் அரிக்கப்பட்ட கள்ளின் சிந்திய பாகங்களும் வெள்ளத்தில் சேர்ந்துவர, தன் தூய இயல்பு அழிந்துபோய்

வேறாகிவிட்டது இந்த அகன்ற புதுநீரின் வரவு என்று சொல்லும்படி
சேறாகக் குழம்பிப் போனது புதுவெள்ளத்தின் போக்கு;
மலைப்பகுதிகளைக் கடந்துவரும் வெண்மையான அருவி தாலாட்ட,
கரைகளைக் உடைக்குப்படியாகத் தூய அருவிநீரைக் காற்று எடுத்து மோத,
இரவில் தலைவியைக் கூடிய தலைவர், தலைவியரின் முலைகளுக்கிடையே துயிலும் இன்பத்திற்கு
ஒப்பானது பூமாலையணிந்தவனின் திருப்பரங்குன்று என, அங்குக் கூடாதவர்க்குச்
சொல்லுவதோடு, கரையை விட்டிறங்கிப் பரந்து மதுரையின் தெருக்களினூடே ஓடி,
தண்ணீர்ப் பெருக்கால் இரவில் தாக்கியது எல்லாம்
வெளியே தெரியும்படி, புன்மையான வைகறைப்பொழுதில் தரையில் தான் செய்த அடையாளங்களைக் காட்டி,
தான் பரந்தது

தமிழையுடைய வையை ஆற்றில் வந்த குளிர்ந்த அழகிய புதுவெள்ளம்;
"அழைக்கப்படாத விருந்தினனாகிய நீ உன்னை விரும்பும் பிற மகளிர்க்கே கொய்தாய்
இந்தத் தளிரை;" "அறிந்துகொண்டாய், அப்படியேதாம், இவை"
"பணிமொழியொடு குறுகிநிற்கும் பண்பாளனே! முன்பு நீ கொண்டுவந்ததெல்லாம் சிறந்த உருவத்தைக் கொண்டிருந்தது,
இது ஏனோ துவண்டிருக்கிறது பார்,
"வாய்க்கட்டும் உன் களவுக்காதல் இனி, உன் மார்பின் மாலை வாடும்படி மிக வருந்தி
இத்தளிரைக் கொய்து வந்ததற்கேனும் உனக்கு வாய்க்கமாட்டாளோ? கொய்யப்பட்ட இந்தத் தழையை அன்பளிப்பாகக் கொண்டு
கொடுத்த பின்னும் உனக்கு வாய்க்கமாட்டாளோ? சொல்"
"அழகாகச் செய்யப்பட்ட தெப்பத்தில் ஏறி வரும்போது தாமதமானதால் தளிரான இவை
வையையின் நீர் காரணமாகத் துவண்டன, முருகனின் திருப்பரங்குன்றத்தின்மேல் ஆணை! அழகிய

நீர்ப்பெருக்கு அன்றோ இந்த வையையின் புதுப்புனல் வரவு"
"ஆமாம், அது சரிதான் காதலையுடைய அழகிய காமமும்
ஒருமிக்க ஒரே தன்மையுடையதாய் இருப்பதுண்டோ? விரைவாகச்
சுருங்கிப்போவதும், பின்பு பெருகுவதும் - இதற்காக நீ சூளுரைக்கவேண்டாம் - வையையின்
பெருக்கினைப் போலத்தானே அதுவும்! பெற்றாய் தெய்வ குற்றம்!
"அருகில் உன் ஊர் இருந்தும், வைகையின் நீர்ப்பெருக்கினால் தெப்பத்தில் வருவதனால் அது உன்னைத் தாமதப்படுகின்றது,
குருகினங்கள் இரை தேடுமளவுக்கு வைகையில் நீர் வற்றிக்கிடக்கின்றது, முறையே, பொழிகின்ற கார்காலத்திலும்,
இனிய இளவேனிகாலத்திலும்; இத்தன்மை உடையதன்றோ வையை, உன்னுடைய காமமும்
வையையின் வழிப்பட்டதே என்று கொள்;
"ஓடுகின்ற ஆற்றின் இனிய நீரில் அதன் வழியே செல்லும் மரத்தைப் போல,

கவர்வதில் வல்லவராகிய மகளிர் இயக்கிய வழியே இயங்கி அவருக்குத் தெப்பம் ஆகிய மார்பினைக் கொண்டாய்!
ஒருசிறிதும் அஞ்சாமல் இரவெல்லாம் அவரோடு தங்கினாய்!
வையையில் உடைந்த மடையை அடைத்தபோதும்,
மீண்டும் ஒழுகும் கசிவுநீர் போல, இங்கு வந்த பின்னும்
அவரை வெம்மையுறச் செய்தாய்! துன்பம் நீங்கும்படி நீ மீண்டும் அவரிடம் சென்று தங்கியிருந்தபோதும்
நடுங்கி நீர் ஒழுகும் கண்ணையுடையவராய் இருக்கும் அம் மகளிரின் நெஞ்சத்தை
வெதும்பச் செய்து இங்கு வருவதைத் தவிர்ப்பாயாக!"
"நல்லவள் ஒருத்தி கரையில் நிற்க, நான் குளித்த பசிய குளத்தில்
கரையிலே நில்லாதவளாய், நீரில் பாய்ந்து அலையில் மூழ்கி, அதைவிட்டு நீங்கி எழுந்து, என் மேல்
துன்பமுற்று விழுந்தவளை அடைந்து எழுந்து கைகளில் தாங்கி நான்

எடுத்துக்கொள்ளும் முன்பே எழுந்துவிட்டாள் அந்தக் குற்றமில்லாதவள், மாலை போல
என் மார்பினுள்ளே அழுந்த முயங்கியவள் எவளோ? இவ்வாறு அவள் என்மீது விழுந்தது எந்த இடத்தில்?" என்று கூற
"தெளிவாகத் தெரிந்துகொள்ளும்வண்ணம் உணர்வாய் நீ, வேறோர்
ஆறும் உண்டோ? நீ ஆடியது இந்த வையையாறுதான்"
"நான் குளம் என்று சொல்லும்போது, அது இந்த வையை ஆறு என்ற கூற்று எதனால்? என் கையால்
உன் தலையைத் தொட்டுக் கூறுகிறேன், குளிர்ந்த திருப்பரங்குன்றத்தின் மீது ஆணை"
"கோபங்கொள்ள வேண்டாம், உன் மையுண்ட கண்கள் கோபத்தினால் சிவப்பாவதைக் கண்டு அஞ்சுகின்ற உன் தலைவனோடு
ஊடல் நீங்கி, நீரில் விளையாடுதலைத் தொடங்கு, ஊடல் மிகவும்
கன்றிப்போனால் உங்கள் காம இன்பத்தை அது கெடுத்துவிடும், மகளே! இவன்
துன்புற்ற நெஞ்சம் இறுகப் பூட்டிக்கொள்ளும்படி அவன் மீது சினந்துவிட்டுப்

பின்னர் அவனைத் தேடிச் செறிந்த இருளில் செல்லவேண்டாம், அது பிழையாகும் என்று
வீட்டிலுள்ள முதுபெண்டிர் முயன்று கெஞ்சியும், மீறியும், வருந்தியும்
வல்லவர் வாயிலாக ஊடலை உணர்த்துதலால், நல்ல விறலியே!
இருவரும் கள்ளுண்டு களிப்பர், வையையில் குளிப்பர், காம இன்பம் கொடிவிட்டு வளர
அவன் அளிசெய்ய, இவள் ஊட, ஆங்காங்கே ஆடி மகிழ்ந்தனர்;
இவ்வாறு நீராடுபவரின் நெஞ்சங்களில் மலர்ந்து விளங்கிய காமம்
என்றும் வாடாமல் இருப்பதாக, வையையாறே, உன்னிடம்.

# 7 வையை
அலைகளையுடைய கரிய குளிர்ச்சியான கடலை நன்கு வற்றிப்போகுமளவு முகந்துகொண்டு
வலிய இடி சினந்து ஆரவாரிக்க, தம்மேல் ஏறியுள்ள பாரத்தைப் பொறுக்கமாட்டாமல்,
கரையை உடைத்துக்கொண்டு வரும் குளத்து நீர் போல நெகிழ்ந்து மேகங்கள் தம் வயிறு கிழிந்ததனால்,
மலையின் சிகரங்கள்தோறும் தொடுக்கப்பட்டதுபோல் உருவான ஒளிவிடும் வெண்மையான அருவிநீர்,
இரவையுடைய இருளிலும் பகலிலுமாக, தான் செல்லுவதற்குரிய இடம் அடைதற்கு அரியது என்று எண்ணாமல்,
வெற்றியுண்டாக முழங்கும் முரசினையுடைய பாண்டிய மன்னர் கொள்ளக் கருதிய
நாட்டைச் சேர்வதற்கு நிமிர்ந்து செல்லும் படையின் நீண்ட அணியின் எழுச்சியைப் போல,
மழையால் பொலிவுற்றுப் பெருக்கெடுத்துவரும் வெள்ளமாய்ப் பல திசைகளிலிருந்தும் வந்து கூடிப்பெருக,
உயிர்களுக்கு நன்மை பெருக, மக்கள் வாழும் பகுதிகளின் அழகு சிறந்து விளங்க, விளைபுலன்களின் வளம் பெருக,

வந்தது வையையின் நீர்ப்பெருக்கு;
அடர்ந்த கரிய சோலைகளிலுள்ள நரந்தம் புற்களின் மேலே பரவி,
ஒளிர்கின்ற கிளைகளையுடைய வேங்கை மரத்தில் மலர்ந்த பூங்கொத்துகளிலிருந்து உதிர்ந்த பூக்களோடு சேர்ந்து,
மழைத்துளிகளால் ஓங்கி அறையப்பெற்ற எட்டுவதற்கு அரிய மலைச் சிகரங்கள்தோறும்
காற்றால் வளைக்கப்பட்ட கிளைகளையுடைய பெரிய மரங்களை வேரோடு கிழித்துப் பிளந்து உருட்டித் தள்ளி,
உயரமான இடங்களிலுள்ளனவற்றைப் பள்ளங்களில் பரப்பி,
உழவர்கள் மகிழ்ச்சியால் கூத்தாட, முழவுகளும், பெரும் முரசுகளும் முழங்க,
ஆடல் கூத்தினை அறியாத கூத்தியைப் போலவும்,
ஊடலின் தன்மை அறியாத உவகையினளைப் போலவும், 
விருப்பமான வழிகளிலெல்லாம் நடந்து, குறுக்கிடும் தடைகளை மோதித்தாக்கி,

விதிமுறைகளைக் கடைப்பிடிக்காதவன் செய்த மேனிப் பூச்சுக்குரிய கலவையைப் போல,
பொதுவான மணத்தை உள்ளுக்குள் மறைத்துக்கொண்டு, புதிய ஒரு மணத்தைச்
செய்து வந்தது சிவந்த அழகிய புதுப்புனல்;
பாய்ந்துவரும் நீரால் குளத்திலுள்ள குளிர்ச்சியான செங்கழுநீரின்
மலர்ந்த பூக்களின் மீது வெள்ளம் ஏறி மூழ்கடித்தது என்று ஒரு பக்கமாய்ச் சிலர் கூற,
இள மங்கையர் தாம் மணலின் மீது செய்த
மணற்பாவையைச் சிதைத்துப்போனது வெள்ளம் என்று ஒருபக்கமாய் அழுதுநிற்க,
வயலுக்குள் விளைந்து நின்ற இள நெற்பயிரை அறுத்து ஒருமுறை அடித்து வைத்த நெற்கட்டுகளின் மீது
மிகுந்த வெள்ளம் பெருகியது என்று துடியை முழக்கி ஒருபக்கமாய்ச் சிலர் அழைப்ப,
பெருவெள்ளம் ஊரையே சுற்றி வளைத்தது என்று ஒருபக்கமாய்ச் சிலர் கூற,

மேகக் கூட்டங்கள் நீரைச் சொரியும் சிறுதுளைகள் உடைந்துபோயின வானத்தில் என்று ஒருபக்கமாய்ச் சிலர் கூற,
பாடுகின்ற பாணர்களின் பாக்கத்தை வெள்ளம் கவர்ந்து கொண்டது எனவும்,
ஆடுகின்ற கூத்தரின் சேரியை வெள்ளம் சுற்றியது எனவும்,
வெள்ளம் வயலுக்குள் வந்து வாய்க்கால்களோடு மூழ்கடித்தது எனவும்,
வெள்ளம் கமுகு மரத்தளவு உயர்ந்து வயலின் வாளை மீன்கள் கமுகின் பாளைகளை உண்டன எனவும்,
உழவரின் நாற்றாங்கால்கள் வண்டல் பரந்து மேடாகிப் போயின எனவும் பேச்சுக்கள் எழ,
ஊடலைத் தீர்ப்பதற்கு உணர்த்திக்கூறியும் உணராத ஒளிரும் இழையணிந்த பெண்களைச்
சேர்வதற்கான எழும் ஆடவரின் ஆசைப் பெருக்கினைப் போல வெள்ளம் பெருகி விரைய,
கரு முதிர்ந்த வாளை மீனின் வயிற்றைப் போலத் தம் சுற்றத்தாரோடு சூழ்ந்து நின்று,
வயல்களின் உழவர்கள் பாய்கின்ற வெள்ளத்தில் பரவிச் சென்றனர்;

அதலபாதாளமான மலைச் சரிவைப் போன்று நிற்கும் இரண்டு கரைகளாகிய காவலுக்குள் அடங்கி,
பனிமலையின் சிகரங்களைப் போன்ற உருவமுடையதாய் நிறைய நுரைகளைச் சுமந்துகொண்டு,
முழுதும் பூக்களால் மூடப்பட்டு, சோலைகளில் பரந்து,
விரைந்து நீருக்குள் விளையாடும் ஆராய்ந்தணிந்த மாலையினையுடைய பெண்கள்,
மலர்ந்த குளிர்ந்த மாலையணிந்த ஆடவர், ஆகியோருக்கு, முறையே, காதுகளில்
தளிர்களைச் செருகியும், தலையின் மாலையைப் பறித்துக்கொண்டும்,
பெண்களின் கைவளையல்கள், மோதிரங்கள், தலையணியாகிய தொய்யகங்கள், உடுத்தியிருந்த ஆடை,
மேகலைகள், காஞ்சிகள் ஆகியவற்றையும், ஆண்களின் தோள்வளையங்கள் ஆகிய
எல்லாவற்றையும் கவர்ந்து செல்லும் தன்மையையுடையதாய், பாண்டிய மன்னன்
பகைவரின் தோற்றுப்போன நிலத்துக்குள் புகுவதைப் போன்று இருந்தது, அந்தப் பகைவரைக் கொன்றழித்த

படையை உடையவனின் வையையின் வனப்பு;
அனைவரும் விரும்பத்தக்க குணங்களையுடைய பாண்டியனின் வையை ஆற்றில் ஆடிமகிழ்வோருள்
ஒருத்தி, பீச்சுங்குழலுள் நீரைச் செலுத்தி மற்றவர்மேல் பீச்ச, அவர்கள் தமது தூய மலர் போன்ற கண்கள்
இமைக்காமல் விழித்து நோக்க, அங்கு அவர்களுள் ஒருத்தி
கைகளால் கண்களை மூடிக்கொண்டவளை
வெற்றியால் இறுமாந்து தன்னுடைய பொன் சரடால், கரும்பு வரையப்பட்ட அணை போன்ற மென்மையான தோள்களைக்
கட்டிச் சிறைப்பிடித்தாள்; அதைக் கண்ட பொற்கொம்பு போன்ற மற்றொருத்தி
இரக்கங்கொண்டு, அவளைக் கைச்சிறைக்குள்ளிருந்து நீக்குவதற்காகப் பாய்ந்தாள்;
அவளின் வாளால் இரண்டாக அரியப்பட்ட மாவடுவைப் போன்ற, மை தீட்டப்பெற்ற கண்ணின் ஒளி பாய்ந்து
சிவந்த புது வெள்ளம் தன் நிறம் அகன்று நீல நிறம் பெற்றது,

இவ்வாறானது வையையின் நீர்ப்பெருக்கின் பொலிவு;
விரும்பத்தகுந்த ஈரமான அணிகளைக் கொண்ட உடலின் ஈரம் போகும்படி,
வண்டுகள் மொய்க்கும் கடுப்புடைய கள்ளினைத் தன் கையில் ஏந்தினாள், நீல நிற நெய்தல் போன்ற கண்களையுடையவள்;
கண்டார்க்குப் பெரு மகிழ்ச்சியைச் செய்யும் பெரிய நறவத்தின் சிவந்த நிறத்தைப் பெற்றன,
மிகுதியான கள்ளினைக் குடித்தவளின் கண்;
அந்தச் சிவந்த கண்களின் இயல்பினைக் கண்டு, தலைவன் பாராட்டி, தலைவியின் அழகிய தன்மையுள்ள பார்வையை
இசைப்பாட்டால் பாட விரும்பி, பற்பல பாடல்களைப் பாட, அந்தப் பாடல்களைப்
பாடுபவனின் கருத்தை அறியாமல் ஒருத்தி தான் மயங்கிப்போக, அப்பொழுது
எத்தகைய துன்பம் வருமோ எனக்கு என்று வருந்தி
நன்கு பரந்த மார்பினையுடைய தலைவன் நடுங்கிப்போய் தலைவியின் அருகில் செல்ல,

முன்னரே மீந்துபோய்க்கிடந்த ஊடலால் சிவந்திருந்த கண்களில் மேலும் சிவப்பேற,
முறையோடு நிகழ்ந்துகொண்டிருந்த நீர்விளையாட்டின் மங்கையர் பலருள்ளே அந்த ஒருத்தியோடு
பகைமை கொண்டு, தன் மாலையை அறுத்தெறிந்து, மிகுந்த சினங்கொண்டு
ஆற்றினில் விளையாடும் தன் தலைவியின் மேனி அழகைக் கண்ட தலைவன்
சந்தனம் பூசிய தன் மேனியை அழகிய நிலத்தில் கிடத்தி வணங்க, அவனுடைய தலையை மிதித்து
தன் சினம் தீரப்பெறாதவளாக ஊடல் கொண்டாள், சிவந்த நீரில்
ஊர் மக்களுடன் புதுநீர் ஆடிய இடத்தில்;
முறுக்குண்ட நரம்பில் இனிய தாளஓசையைத் தருகின்ற, விரும்புதற்குரிய பாலைப் பண் ஏழினையும்
எழுப்பிக் கலந்து சேர்க்கின்ற யாழின் இசையும், இசைப்பாட்டும் தம்முள் பொருந்த,
குழலும் அவற்றின் இசையளவை ஒத்து நிற்க, முழவோசை எழுந்து முழங்க,

அரசனால் தலைக்கோல் பட்டம் பெற்ற மகளிரும், பாணரும் கூத்தாடுதலைத் தொடங்க,
கரைகளை இடித்து ஓடுகின்ற புதுப்புனலின் அழகிய ஆரவாரம்
உருமேறாகிய இடியோடு சேர்ந்த முகிலின் முழக்கத்தைப் போன்று ஒலிக்கும்
திருமருத முன்துறை என்ற பெயர்கொண்ட துறையைச் சேரும் வையை நீரில் குளித்து இன்புறுவாரின்
கழுத்து மாலைகளத் தன் தலைமேல் சூட்டிக்கொள்ளும் அச்சந்தரும் ஆழமான நீரைக்கொண்ட வையையே!
- உன்னால் கிடைக்கும் இன்பமான பயனைப் பாடி, துன்பம் நீங்கப்பெற்று மகிழ்வோமாக!
உன்னைத் தழுவி நீராடும் இன்பம் எம்மிடத்திலிருந்து என்றும் நீங்காமல் இருக்கட்டும், இன்று கூடினாற் போலவே என்று -

# 8 செவ்வேள்
இந்த மண்ணுலகத்தில் - மலர்ந்த துளசி மாலையினையும், உயிர்களுக்கு அளிக்கும் செல்வத்தினையும்,
மேலே கருடப்பறவை வரையப்பெற்ற கொடியினையும் உடைய திருமாலும், காளையின் மேல் ஏறிவரும் சிவபெருமானும்,
தாமரை மலர் மேல் அமர்ந்திருக்கும் பிரமனும், அந்தப் பிரமனிடத்திலிருந்து தோன்றி
உலகின் இருளை அகற்றிய சூரியர் பன்னிருவரும்,
தேவ மருத்துவராகிய அசுவனி, தேவர் ஆகிய இருவரும், மக்கள் திருந்துவதற்குக் காரணமான நூல்களை உணர்ந்த எண்பது வசுக்களும்,
திருவாதிரை மீனுக்குரிய முதல்வனாகிய சிவபெருமானின் பெயரால் சொல்லப்பட்ட
தலைவர்கள் உருத்திரர் பதினொருவரும், நல்ல திசைகளைக் காப்பவராகிய திசைக்காவலர் எண்மரும்,
ஆகிய இவர்கள் யாவரும், பிறரும், தேவர்களும், அசுரர்களும்,
உள்ளத்தால் உணர்வதற்கு அரிய வேதங்களைக் கற்றுணர்ந்த உயர்ந்த தவமுனிவர்களும்,

- தங்குவதற்குரிய இடமானது, உன்னை வழிபடும் பொருட்டு,
இந்தத் திருப்பரங்குன்றம்; எனவே இது இமயத்தை நிகர்க்கும்;
அந்த இமய மலையினும் சிறந்து,
உன்னை ஈன்ற வரிசையான இதழ்களையுடைய தாமரையின்
மின்னல் போன்று விளங்கும் இதழ்த்தொகுதி என்றும் உதிராத தன்மையுடைய
வற்றாமல் ஒரே நிலையிலிருக்கும் சரவணப் பொய்கையைப் போன்றது, உன் குன்றினில்
அருவிநீர் தங்கும் வரிசையாக அமைந்த சுனை;
முதல்வனே! உன் ஊர்தியாகிய யானை பிளிறும் ஒலியின் முழக்கத்தைக் கேட்ட
தன்மையது முகிலின் இடிக்குரல்;
அந்தக் காரின் இடிக் குரலைக் கேட்ட கோழி குன்றே அதிரும்படி கூவும்;

அதைக் கேட்ட மதம் நிறைந்த யானையும் எதிர்க்குரலிட்டு அதிர முழங்கும்;
இந்த ஒலிகளுக்கு எதிரும் குதிருமாய் ஆனது எதிரொலிக்கும் திருப்பரங்குன்றத்து மலைக்குகைகள்;
ஏழு துளை, ஐந்து துளை ஆகியவற்றைக் கொண்ட குழல்கள், யாழ் ஆகியவற்றின் இசைக்கு ஒப்பானதைப் போன்று, தம் இனத்தை
விரும்புகின்ற தும்பியும், வண்டும், மிஞிறும் ஆரவாரிக்க, சுனைகளில் பூக்கள் மலர்ந்து நிற்க,
கொன்றை மரங்களில் கொடி போன்று பூங்கொத்துக்ள் மலர்ந்திருக்க, கொடிகளில் மலர்கள்
நறுமணம் உடையவாய் மலர்ந்திருக்க, மலரான காந்தள் இடமெல்லாம் மணக்க,
நன்றாக இதழ் அவிழ்ந்த பலவான மலர்கள் மணம் பரப்பித் தேன்துளிகளைச் சிந்த,
தென்றலானது அசைந்து வரும் சிறந்த தன்மையை உடையது, உன்
திருப்பரங்குன்றத்துக்கு மதுரையிலிருந்து வருகின்ற வழி.
கிரவுஞ்சம் என்னும் குன்றினை உடைத்த ஒளிரும் வேலினையுடையவனே! கூடல்நகரில்

மணவிழா பொருந்திய மணிநிற முரசுகளின் முழக்கம் எழ,
காற்றினால் மோதி அடிக்கப்பட்டு, கரைக்கு இடம்பெயர்ந்து வரும் கடலின் முழக்கத்தைப் போலவும்,
கரிய கடல்நீரைக் குடிக்கும் மேகத்தின் இடிமுழக்கத்தைப் போலவும்,
இந்திரனின் இடியேறு முழக்கும் பெரிய இடிமுழக்கம் போலவும்,
மணவிழா முரசுகள் முழங்க முழங்க, அம் முழக்கத்திற்கு மாறுமாறாக முழங்கும் உன்
திருப்பரங்குன்றம் முழங்கிய முழக்கம்;
தலைவியரால் தூதாக ஏவிவிடப்பட்ட வண்டுக் கூட்டத்தின் இனிய இசை, அவர்களின்
காதல் பெருக்கத்தைப் பழமையான மதுரையின் மதிலோரத்து மக்கள் அறிந்துகொள்ளும் ஆரவாரமாயிற்று;
வகிர்ந்த மாவடுவின் அழகை வெல்லும் கண்களும், மாந்தளிர் போன்ற மேனியும்,
நீண்ட மெல்லிய மூங்கில் போன்ற தோள்களும், குறிய வளையல்களும் உடைய மகளிரின்

தீராத காம இன்பத்தினை, அழகிய சோலையில், பூப்படுக்கையில்,
மலைச் சாரலில் தலைவரோடு கூடிப்பெறும் களவுப் புணர்ச்சியினையும்,
முடிவுறாத இன்ப நுகர்ச்சியினைக் கொண்ட முதிர்தல் இல்லாத காதல் வசப்பட்ட
கணவரின் அடியைச் சேர்ந்து வாழும் மகளிர் தம் கணவரின் மார்பினை விட்டு அகலாத
மலர்களினூடே திரியும் மகன்றில் பறவைகளின் நல்ல புணர்ச்சியைப் போன்ற
உலராத மகிழ்ச்சியினையும் மறவாமல் காதலர்க்கு அளிக்கும்
சிறப்பினையுடையது குளிர்ந்த திருப்பரங்குன்றம்;
"இப்பொழுது வேற்று மகளிரின் மணம் உன்மேல் மணக்கின்றதே! அங்கு
குளிர்ந்த மலர் போன்ற கண்களையுடையவரோடு ஆடிக்களிக்க, சிரிக்கின்ற மலர்களையுடைய
மாலைதோறும் நிகழ்கின்றது; நீ உறுதியாகக் கூறிய உன் சூள்மொழிகளை நிறுத்திக்கொள்;

நாள்தோறும் காலையில் போய் மாலையில் திரும்பும் உன்னுடைய வருகை -"
இனிய மணலைக் கொண்ட வையை ஆற்றங்கரையின் பெரிய சோலைகளும், திருப்பரங்குன்றத்தின்
பனி பொழியும் மலைச் சாரலும், பார்ப்பனரும் சாட்சியாகக் கூறுகின்றேன்,
பெரிதும் வருந்தாதே! மலர் போன்ற மையுண்ட கண்களையுடையவளே! நீ சொல்வது உண்மை அன்று; இந்த மணம்
பழங்களிலும், மலர்களிலும், வீசுகின்ற காற்றினால் அடித்துக்கொண்டுவந்ததாலும் உண்டானது,
வருந்தாதே மிகவும் நீ! உன் மீது ஆணை!"
"இது என்னுடைய சமயம்! கொஞ்சம் பொறு! ஏடா! நிறுத்திக்கொள் நீ உன்னுடைய சூளுரைகளை!
சான்றாளர் பெற்றெடுத்தும் அதற்குத் தகுதியில்லாத மகனே!
இவளைப் பெற்றவளுக்கு இவள் ஒரே பெண்"
"'இருண்ட மைதீட்டிய, குளிர்ந்த கண்களையும், மின்னுகின்ற அணிகலன்களையுமுடைய இவள், இவளைப் பெற்ற தாய்க்கு

ஒரே பெண்ணாகிய அருமையானவள் என்பதனை நான் அறிந்திருக்கவில்லை! இதோ பார்!
ஓடிவரும் நீரையுடைய வையை ஆற்றின் மணலைத் தொட்டு ஆணையிடுகின்றேன்! மண வாழ்வைத் தரும் முருகவேளின்
குளிர்ந்த பரங்குன்றத்து அடியைத் தொட்டு ஆணையிடுகின்றேன்!' என்கிறாய்
எம் உறவினைப் போல் விளங்கும் வையை மணலிடத்தில் உன் அன்புடைமை இதுதானோ?
ஏழு உலகங்களையும் ஆள்பவனின் திருப்பரங்குன்றத்தின் மேல் நீ கொண்டுள்ள அன்பும் இரங்கத்தக்கது!
"எமக்கு அருளுவதாகத் திருவருளையுடைய முருகப்பெருமான் மீது சூள் உரைப்பாயென்றால்,
உன்னைக் கொஞ்சமும் இரக்கமற்ற வருத்தும் தெய்வங்களுடன், முருகனின் மெய்யான வேலும் பெரிதும் வருத்தும்,
வெற்றியையே விரும்பும் முருகப்பெருமான் ஏறிச் செல்லும் மயில், அவனது வேலின் ஒளி ஆகிய இவற்றைக் குறித்து,
அறவோர்களின் அடியைத் தொட்டு மொழிந்தாலும் மொழியலாம், ஆனால் மேற்கூறியவற்றைக் குறித்துச் சூளுரைக்கவேண்டாம்;
மேலும் முருகனின் துணைவியாகிய குறவன்மகளாகிய வள்ளிமீதும் ஆணைகூறத்துணிகின்றவனே! அவ்வாறு கூறவேண்டாம்!

ஐயனே! அவ்வாறு சூளுரைத்தால் அடியவர் வணங்கும் குன்றோடு,
வையை ஆற்றுக்குத் தகுந்த புகழையுடைய மணலின் மேலும் சூளினைக் கூறவேண்டாம்!"
"யார் பிரிவது? யார் வருவது? யார் கேட்பது? யார் விடைகூறுவது?
'நீர் சொல்வது இன்சொல் இல்லாத சூள்' என்கிறாய்! நேரிய இழைகளை அணிந்தவளே!
குளத்திடத்து இருக்கும் நெய்தல் பூக்களையும், மலர்ந்து மணங்கமழும் மொட்டுக்களின் மணத்துடனான மலர்ச்சியினால்
கண்டோர் விரும்புவதற்குரிய நறவம் பூவின் இதழையும் போன்ற மதர்த்த மையுண்ட கண்களையும், ஒளிவிடும் நெற்றியையும்,
மொட்டாகிய முல்லையையும் வென்று, அழகிய முத்துக்களைப் போன்றிருக்கும் வெண்மையான பற்களையும் கொண்ட தலைவி
கூறியது நகைப்பதற்குரிய கனவு அன்று, உண்மையாக நடந்த நிகழ்ச்சியும் அன்று!
"என்மேல் பொய்யாகக் கூறப்பட்ட துன்பந்தரும் குற்றத்தின் காரணமாக, எனது ஒழுக்கநெறியைத் தவறாகக் கொண்டு என் துயர் மிகும்படி
என்னைத் தண்டிப்பான் இறைவன்! அவன் சினத்தை ஆற்றுவிப்பாயாக, அவனது அடியைச் சேர்ந்து! நான் கூறுவதை எல்லாருக்கும் கூறுங்கள்!

மிகவும் தூவுவோம் மலர்களை! படைப்போம் பலிப்பொருள்களை!
பாடுவோம் தாளத்துடன் கூடிய இசைப்பாடல்களை! எழுப்புவோம் கிணைப்பறையின் முழக்கத்தை! முருகப்பெருமானின்
திருவடிகளைத் தொழுவதற்குரிய இடமான குளிர்ந்த திருப்பரங்குன்றத்தில்;"
"'ஆய்ந்த அணிகளை அணிந்தவளே! முருகனை வணங்குவதற்கு நீயே செல்க' என்று சொல்கிறாய், ஏடா! நாம் அறிந்தோம்,
ஒருவரிடத்தும் பொய்க்காத உன் மெய்மை அற்ற சூள் உன்னைப் பழிவாங்கும் என்பதனை;
பரத்தையரைத் தேடிச் செல்லும் பருவத்தில் பலமுறை நீ திருப்பரங்குன்றத்துக்குச் செல்வாயாதலின் காண்பாயாக -
எருமைவாகனத்தானாகிய கூற்றுவனின் பெரிய ஆணையையும் இகழும் ஆற்றலையுடைய முருகப்பெருமான்
உனது பொய்ச்சூளால் உன்னைச் சினந்துகொள்ளாமல் இருப்பதற்கு, எனக்கும் முன்னரே, தன் தலையால் வணங்கி,
அப் பெருமானுடைய, தொங்குகின்ற மணியைக் கையால் அடித்து,
வரிசையான வளையல்களை அணிந்தவள், உன் கடும் சூளால் உனக்கு வரும் துன்பத்தை ஆற்றுவதற்கான காட்சியை -

காற்றால் மோதப்படும் உயரமான சிகரங்களையுடைய மலையகத்தே
மழைநீரினால் தழைத்த குளிர்ந்த கிளைகளையுடைய
பொழில்கள் பறிக்கப்பறிக்கக் குறையாத மலர்களைக் கொண்டிருக்க,
குளிர்ந்த பொய்கைகளில் நீர் நிறைந்திருக்க,
மருத நிலங்களினூடே செறிந்த மணல் பரந்திருக்கும்
மிகுந்த மலர்களைக் கொண்டிருக்கும் பெருவழியில்
சிற்றடிகளைக் கொண்ட பெண்கள் விழாச்செய்ய எழுந்து
பல்வேறான சந்தன வகைகளும், பெருமையுடைய புகைப் பொருள்களும்,
வழியில் வீசுகின்ற காற்றால் அணைந்துபோகாத விளக்குகளும்,
மணங்கமழும் பூக்களும், இசையை எழுப்பும் முழவுகளும்,

மணிகளும், கயிறுகளும், மயில்களும், கோடரிகளும்,
பிணிமுகம் என்னும் யானைகளும் உட்பட பிற பொருள்களையும் ஏந்திக்கொண்டு,
அரிய திருப்பரங்குன்றத்தைச் சேர்ந்து முருகப்பெருமானைத் தொழுபவர்;
கனவில் காதலரின் கையைத் தொட்டது பொய்யாகாமல்
நனவினிலும் கிட்டும்படி, 'உனக்குரிய செறிந்த நீரையுடைய வையை ஆறு
புதிதாய் வரும் புனலை அணிவதாக' என்று வரம் கேட்போரும்,
கரு வயிற்றினில் உண்டாகட்டும் என்று நேர்த்திக்கடன் செய்வாரும்,
பொருளீட்டச் சென்ற கணவனுக்கு ஈட்டும் பொருள் வாய்க்க என்று முருகனின் செவியினைச் சேரக் கூறுவோரும்,
போர்மேற் சென்றுள்ள தலைவர் போரில் பகைவரைக் கொன்று வெற்றி சூடுக என்று அருச்சனை செய்வோரும்,
பாடுபவர்களின் பாணியாகிய தாளமும், அரங்கத்தில் ஆடுவாரின் தாளமும்,

மேகங்கள் தவழும் மலையில் எழும் எதிரொலி முழக்கமும் ஆகிய
குன்றாத ஆரவாரத்தில் -
பசிய சுனைக்குள் பாய்ந்து மூழ்கி எழும் பாவையரின்
அழகிய இமைகளை உடைய மையுண்ட கண்களைக் கொண்ட மலர்ந்த முகமாகிய தாமரையும்,
அவரின் பாதங்களாகிய தாமரையும், தோளாகிய பொற்குளத்தில் மலர்ந்த
தம் கையாகிய தாமரையும், கொங்கைகளாகிய பெரிய தாமரை மொட்டுகளும்,
சிவந்த வாயாகிய செவ்வாம்பலும், ஆகிய இயங்கும் தன்மையுள்ள இந்தத் தாமரைகள் எல்லாம்
நீரில் பூத்த தாமரையோடு புலப்படுதலில் வேறுபாடு இல்லாத
கூர்மையான பற்களைக் கொண்டோரின் குவிந்த முலையில் அணிந்திருந்த பூண்களோடு
மன்மதனைப் போன்றவராகிய கணவன்மார்களின் மார்பில் அணிந்த அணிகலன்கள் கலந்திருக்க,

அரிவையரின் இதழமுதமான பானத்தை
அவரின் உரிமைமக்களாகிய கணவன்மார் மகிழ்ச்சியோடு அமுதமாகக் கருதி உண்டு களிக்க,
அந்த மைந்தரின் மார்பினைத் தழுவிப்பெற்ற இன்பத்தின் வழியாக வந்த பெருமகிழ்ச்சி
சிவந்த தளிர் போன்ற மேனியரின் துன்பத்தைத் தீர்க்க,
என்று இவ்வாறாக
ஒன்று கலந்திருக்கும் காதலரும், அவர் அல்லாதவரும் கூடி
- கடம்ப மரத்தின் அடியில் அமர்ந்திருக்கும் செல்வனான முருகப்பெருமானின் காவல் அமைந்த கோயிலில் வழிபட
கழுத்தில் கறையையுடைய அண்ணலான சிவபெருமானுக்கு மாசற்றவளான உமை பெற்றுத்தந்த -
நெறிப்படச் செல்லும் அருவிநீரும், ஊற்று நீருமாகிய நீர்வளம்
நிலம் வெடிப்புற வானம் வறண்டுபோனாலும், நிலைபெற்று நிற்பதாக

குளிர்ந்த திருப்பரங்குன்றமே உனக்கு.

# 9 செவ்வேள்
பெரிய இந்த நிலவுலகம் அசையாமல் இருக்கும்படி, வடக்கில் உயர்ந்து ஓங்கி
ஏறுவதற்கரிய நிலையையுடையதும், உயரிய தெய்வத்தன்மை வாய்ந்த அணங்குகள் சிறப்பாகப் பேணிக் காப்பதும்,
இடியேறுகள் சூழ்ந்திருப்பதுமான மிக உயரமான சிகரத்தில்,  தம் கணவராகிய உயர்ந்த முனிவர்கள் இசைவு தெரிவிக்க,
தீயைப் போன்று மலர்ந்திருக்கும் தாமரையில் வீற்றிருக்கும் பிரமதேவன் விழச்செய்த பெரு வெள்ளத்தைத்
தன் விரித்த சடையினில் பாரமாக, மலர்ந்து விழும் புதிய மலரைத் தாங்குவது போன்று,
விழுகின்ற வேகம் தணியும்படியாகத் தாங்கிய ஒப்பற்ற நிலையையுடைய சலதாரி என்னும் பெயர்கொண்ட
நீல நிறக் கழுத்தினையுடைய சிவபெருமானுக்கு, மதிப்பு வாய்ந்த கார்த்திகை மகளிரிடத்தில் பிறந்தவனே! நீ
மையாகிய கரிய இழுதினைப் பூசிய, இமைக்கின்ற, மையுண்ட கண்களையுடைய மான்குட்டியாகிய வள்ளியை மணந்தபோது
ஆயிரம் கண்களை உடலில் கொண்ட இந்திரனின் மகளாகிய தேவயானியின் மலர் போன்ற மையுண்ட கண்கள் 

மணி போன்ற கண்ணீர் மழையைச் சொரிந்தனவாக, முதிர்ந்த வேனிற்காலத்திலும் கார்கால மேகங்கள் திரண்டெழுந்து,
மிகுந்த மழையினைப் பெய்யத்தொடங்கிற்று தண்ணிய பரங்குன்றத்தில்;
வேதங்களை விரித்துரைத்து அவற்றின் நல்ல புகழை உலகுக்கு விளக்கும்
மெய்யான மொழியினையுடைய புலவர்களே! கேளுங்கள் சிறந்ததொன்றை;
காதலோடு கூடிப் பெறுகின்ற காம இன்பமே, காம இன்பங்களுள் சிறந்தது,
அது விருப்பமுடையவர் இருவர் மனமொத்துப் பெறுகின்ற உடற்சேர்க்கையே!
ஊடலினால் சிறப்புறுவது கற்புக்காமம்; அதுதான்
தலைவன் இரந்து வேண்டலும், தலைவி மனமிரங்கி தன்னை அவனுக்கு அளித்தலும் ஆகிய இவற்றை உட்பொருளாகக் கொண்டு
தலைவனின் பரத்தை உறவினால் உண்டாவதாகும்; தலைவியின் பூப்பினை அறிவிக்கும் பண்புறு கழறல் என்பது
தோள்நலத்தைப் புதிதாக உண்ட பரத்தையின் இல்லத்தில் தலைவன் இருக்கும்போது, தோழி சிவந்த அணிகலன்களை

நாள்காலையில் அணிந்து தலைவனுக்கு அறிவிக்க, தலைவன் வீடுவந்து தலைவியுடன் கூடி உவக்கும் புணர்ச்சிக்கண் உள்ளது;
தலைவியின் தோழியர் கேட்டு வருத்தமுறும்படி பரத்தை தன் வீட்டில் பழிச்சொல் கூறுவதில் உள்ளது அந்தப் புணர்ச்சிகள்;
அந்தப் புணர்ச்சியின் பயனும் ஊடல் செய்வதில் உள்ளது;
அதனால், தம் துணைவர் தம்மைவிட்டு அகன்றிருத்தலையே அறியாத அழகிய அணிகலன் அணிந்த மகளிர்
தம் கணவருடன் மனவேறுபாடு கொண்டு அவரை வருத்தும் தவறினைச் செய்யமாட்டார்;
இத்தகைய தள்ளிவிடமுடியாத அகப்பொருளின் இயல்புகளையுடைய தண்ணிய தமிழ்ப் பண்பாட்டை ஆராயாத மகளிர்
கொள்ளமாட்டார்கள் இந்தத் திருப்பரங்குன்றத்தில் எந்தப் பயனையும்;
கொஞ்சம் கொஞ்சமாக உடைந்துவிழும் கரையிலிருந்து சந்தன மரங்களை அசைத்து வெள்ளம் அடித்துக்கொண்டுவந்த
வயிரம் பாய்ந்த சந்தனக் கட்டையின் அழகிய புகை சூழ்ந்ததும், மாலையினையுடையதுமான மார்பில்
நிறம் பொருந்திய முத்துமாலை அழகுசெய்ய தன் பக்கத்தே வரும் முருகப்பெருமானைத் தொழுது,

தேவசேனை எதிர்கொண்டு, "வாழ்க, வஞ்சனே! உன் தவறு இல்லை, எம்மைப் போன்று
பிரிவால் நிறம் கெட்டவர் உனது மாட்சிமைப்பட்ட நலத்தை நுகர்வோமோ, உன்னை அடையும் பேறு பெற்றோரின்
மென்மையான தோளின்மேல் எழுந்தருளி அவர்க்கு அருள்செய்வதுவும் உனக்கு இல்லை,
கூர்மையான பற்களையுடைய, உன் மையலில் அகப்பட்ட மகளிரின் தன்மை, இனி
மழை பெய்ய வேண்டி வருந்திநிற்கும் சோலையைப் போன்றது, உரைப்பாயாக, ஐயனே!" என்று
வெறித்த பார்வையுடன் கையால் சுட்டிச் சொல்லி, வள்ளி காரணமாக
ஊடிச் செல்லும் தேவசேனையை, அந்த முருகவேள் தன் தலைமாலை
அவளின் திருத்தமான அடிகளில் படும்படியாகப் பணிந்து அவளுக்குத் தன் வணக்கமாகிய திறைப்பொருளைக் கொடுக்க,
"வருந்தவேண்டாம்" என்று என்று ஆறுதல் கூறி அவனுக்குத் தன் மார்பினைத் தேவசேனை கொடுக்க,
"அவளிடம் நெருங்கிச் செல்லாதே" என்று ஒளிரும் அணிகலன்களையுடைய வள்ளி, தன் மாலையையே கோலாகக் கொண்டு

முருகனின் கைகளை மிகவும் இறுக்கமாகப் பற்றிக்கொண்டு, அடிக்க, 
ஒருவரின் மயில் ஒருவரின் மயிலோடு போர்தொடங்க,
அந்த இருவருடைய உயர்ந்த கிளிகளும் தம் மழலைக் குரலால் ஏசத்தொடங்க,
தேவசேனையின் செறிவான கொண்டையின்மேல் இருக்கும் வண்டின்மேல் பாய்ந்தது
வெறியாட்டினை உவந்து ஏற்கும் முருகப்பெருமானின் திருப்பரங்குன்றத்து வள்ளியின் வண்டு;
மாலையோடு மாலையை வீசிப் பின்னுவார், தம் தலைமாலையை எடுத்து ஓங்கித் தடுமாறுவார்,
மார்பினை அழகுசெய்யும் தம் கொங்கைகளின் கச்சினையே சாட்டையாகக் கொண்டு அடித்துக்கொள்வார்,
தமது மாலைகளையும், வரியினையுடைய பந்துகளையும் ஒருவர்மேல் ஒருவர் எறிவார்,
அந்தப் பேதையரின் மென்மையான பார்வை சினத்தால் மாறுபட, வாயில் ஊதினாலும்
வளைந்து மடங்கும் நுண்ணிய இடுப்பினையுடையவர் போரினை மேற்கொள்ள,

துதிக்கையைத்தூக்கிக் குளத்தில் நீராடும், மதநீர் கமழும் தலையுடைய யானைகளைப் போலத் தம் கைகளை வளைத்துப் போரிடுவார்,
வெற்றிக்குக் காரணமான ஓட்டத்தையுடைய குதிரைகளின் நடையினைக் கொண்டனர்,
தேருக்கு அழகுசெய்யும் அழகிய கயிற்றைப் பிடிக்கும் முறையினைத் தெரிந்தாற்போல சடைகளைப் பற்றிக்கொண்டு போரிடுவார்,
நன்கு கட்டமைந்த வில்லினை வளைப்பது போல மற்றவர் உடலை இழுத்து மார்புற வளைப்பார்,
ஒருவரின் கண்களாகிய அம்புகள் மற்றவரின் கண்களாகிய அம்புகள் மேல் நிலைத்து நிற்குமாறு எதிர்த்து நோக்குவார்,
தம் தோள்வளைகளைக் கழற்றிச் சக்கரப் படைபோல் சுழற்றுவார்,
மென்மைத்தன்மை வாய்ந்த மயிலின் சாயலைக் கொண்ட அந்த இருவரின் தோழிமார்;
ஒளி மிக்கதும், வெற்றியாற்றலையுடையதும் ஆன
மலை போன்ற மார்பினையுடைய முருகப்பெருமானை, இந்திரன் மகளான தேவசேனையின்
மாட்சிமை கொண்ட அழகால் மலர் போன்ற மையுண்ட கண்களையும்

மடப்பமுடைய மொழியினையும் உடைய தோழியர் ஒன்றுசேர்ந்து சூழ்ந்துகொண்டு
வள்ளியின் தோழியருக்கு அஞ்சி, மணங்கமழும் சுனையில் குளித்து ஆடுவோரும்,
பாறைகள் அழகுசெய்யும் அரிய சுனையில்
தேனை உண்ணும் வண்டுகளாக யாழினை இசைப்போரும்,
தம் கூந்தலையே மயிலின் தோகைபோல் விரித்து ஆடுபவர்களும்,
குயில்களாகக் கூவுபவரும்,
துன்பங்களை நுகர்வாரும் ஆகி நிற்க,
குறிஞ்சி நிலத்துக் குறவரின் வீரம் பொருந்திய மகளாகிய வள்ளியின் தோழிமார்
திறமையோடு போரிட்டு வெற்றியை விளைத்ததால் வெற்றியையுடைய வேலவனுக்குப்
பெரிதும் பொருந்துவதாயிற்று தண்ணிய பரங்குன்றம்;

கடிய சூரபதுமன் என்னும் மாமரத்தினை அடியோடு வெட்டி அறுத்த வேற்படையினையுடைய
பகைவரை வெல்லும் போரினையுடையவனே! உன்னுடைய திருப்பரங்குன்றத்தில்,
கூத்தினைப் பயின்றோரை அவரைப் போன்றோர் போரில் வெல்லவும்,
பாடல் பயின்றவரை அவரைப் போன்ற பாடல் பயின்றவர் போரில் வெல்லவும்,
வலிமையுடையவர்களை வலிமையுடையவர்கள் போரில் வெல்லவும்,
அவ்வாறு அல்லாதவர்களை அப்படிப்போன்றோரே வெல்லவும், இவ்வாறு எப்பக்கமும் போர் என்ற ஒரே சொல்லாய்ப் பரந்து,
செம்மையான புதிய நீரால் நிறைந்த
தடாகத்தைப் போன்ற குளிர்ந்த சுனையின் பக்கத்தில்
கொடி உயர்ந்து நின்றது;
அன்பர் விரும்பும் வேற்படையினை உடையாய்!

உன் பகைவரை வென்று உயர்த்திய கொடி உன் வெற்றிக்குச் சான்று பகரும்,
கற்பு மணத்தால் இணையும் நெறியுடன், அன்பினாலும் இணையும் உரிமையினையுடைய
விரும்பத்தகுந்த பண்பினையுடைய வியக்கத்தக்க குமரவேளே!
உன்னை வாழ்த்துகின்றோம்! புகழ்கின்றோம்! தலைகளைத் தாழ்த்தியவராய் உன்னை நாம்
விரும்புதலினால் சிறப்புற்று விழங்கும் எமது அடியுறை வாழ்வானது
நீ எமக்கு அருள்செய்வதனால் சிறந்து விளங்கட்டும் நாள்தோறும் மேலும் மேலும் அழகுபெற்று.

# 10 வையை
மலைப்பகுதிகளில் மாலையில் பெய்த மிக்க மழை, காலையில்
சென்று எல்லை காணமுடியாத கடலோடு கலப்பதற்காக,
நிலப்பகுதிகளின் துன்பத்தைத் தீர்ப்பதற்கு, மலர்ந்த
பலவான மலர்ப் போர்வையால் பருத்த மணற்பரப்பை மூடி,
வரிகளைக் கொண்ட வண்டுகள் மொய்க்கும் மொட்டுக்கள் மலர்ந்த கிளைகளையுடைய
மாமரத்தின் காண்பதற்கு இனிமையான தளிரோடு, வாழை இலைகளையும் கலந்து
ஆராய்ந்து அளவிடமுடியாத பல்வேறு ஓசைகள் ஒலிக்க, கரைக் காவலர் பறை அறைய,
போகிறது வையையின் வெள்ளம்;
புதுப்புனலில் திளைத்து ஆடல்புரிவதற்கு மக்கள் கூட்டம் நெருக்கியடித்துக்கொண்டு திரண்டெழ,

காலுக்கு இதமான மென்மையான நூலினாலான மிதியடிகளை அணிந்தவராய், மேகலை,
ஏணிப்படுகால் ஆகிய இடையணிகளை மிகவும் இறுக்கமாகக் கட்டிப் பூட்டிக்கொண்டு,
இரத்த நிற அரக்குப்போன்ற சாயநீரைக் கொண்ட பீச்சாங்குழல் முதலிய யாவற்றையும் எடுத்துக்கொண்டு
தெளிவான நீர் கலந்த சந்தனம் அடைத்த பெட்டியுடன், தாவி
ஏறி அமர்வதற்கு அரிய பொங்கிய பிடரிமயிரையுடைய பறவைபோல் விரைந்துசெல்லும் குதிரைகள்,
மிக விரைவாக வந்தாலும் மேலே அமர்ந்திருக்க இனிதாக இருக்கும் பெண்யானைகள்,
அதட்டி ஓட்டத் தேவையற்ற மாட்டுவண்டிகள், கோவேறு கழுதைகள், தெரிந்தெடுத்த குதிரைகள் பூட்டிய
வண்டிகள், தண்டு மரங்களோடு கூடிய பல்லக்குகள் ஆகியவற்றைத் தயார்செய்துகொண்டு
வகைவகையாகவும், முறைமுறையாகவும் விரைவாக மொய்த்துக்கொண்டு அவற்றின் மீது ஏறி,
முதியவர்களும், இளையவர்களும், விடலைப் பருவத்தாரும்,

நறுமணம் தங்குகின்ற புதிய மலர் வாய்விரிந்தாற்போன்ற பருவத்தையுடையவரும் ஆகிய
இரு பருவத்து மாந்தரும், அவர்களுக்கு இனியவரும்,
நரைக்கத்தொடங்கிக் கருப்பும் வெள்ளையுமான தலைமுடியை உடையோரும், முற்றிலும் நரைத்தவர்களும்,
பதிவிரதம் இருக்கும் கற்புடைய மகளிரும், பரத்தையரும், அவருக்குத் தோழியரும்,
அதிரும் குரலையுடைய, இசைவல்லுநர்கள் ஆக்கிய தாள
விதியால் கூட்டப்பட்ட, பல்வேறு இசைக்கருவிகளின் இசையும் மென்மையான நடையில் சென்றாற்போல
ஊரார் அனைவரும் ஆற்றுக்கு எதிரே சென்று, ஆற்றின் பெரிய கரைகளை அடைந்து,
புதுவெள்ளத்தின் அழகைக் காண்போரும், வரிசையான நீரணி மாடங்களில் ஊர்ந்துசெல்வோரும்,
பேரணியாக அணிவகுத்து நிற்போரும், பெரிதாகப் பூசலிட்டு ஒருவரையொருவர் நீரால் தாக்கிக்கொள்வோரும்,
குதிரைகளில் விரைவாக நீருக்குள் செல்வோரும், வலிமையான பெண்யானைகளை நீருக்குள் செலுத்துவோரும்,

பூக்கள் நிறைந்த காட்டாற்றின் நடுவேயுள்ள திட்டுக்களை அடைந்து
தாம் விரும்பும் காதலியரின் மார்பினைத் தழுவுவோரும், அக் காதலரின் தழுவலை ஏற்றுக்கொள்ளாது
முந்திய இரவின் மீந்துநிற்கும் ஊடலாகிய இனிய விரும்பத்தக்க தேனை உண்டுமகிழ்வோரும்,
காமம் என்னும் கோடரியால் தமது ஊடலால் ஏற்பட்ட செயலற்ற நிலையை உடைத்தெறிந்துவிட்டு
பாதுகாவலான திரையைச் சூழப்போட்டு தன் கணவருடன் மலர்ப்படுக்கையில் கூடிக்களிப்போருமாய்,
தாம் விரும்புகின்ற காதல் கணவர்கள் எதிர்ப்பட்டபோது,
பூவின் சிறப்பினால் அதன்மீது மொய்க்கவரும் அழகிய வண்டினைப் போல, தமக்குக் காவலாகிய
தளர்நடைப் பாட்டியரிடமிருந்து தப்பித்து, தடைகளை மீறிக் காதலரை எதிர்கொள்ள,
தாம் நினைக்கும் பட்டினத்தை நோக்கி வந்து கரை சேர்கின்ற
இன்பமான நாவாயின் வரவை எதிர்கொள்ளும் வணிகர் போல,

யாம் எதிர்கொள்ள விரும்பும் வையையின் புதுப்புனலை எதிர்கொண்டது கூடல்நகரம்;
அவ்விடத்தில், அழகிய நீரணிமாடத்தின் அருகாமையில் நின்ற இணக்கமான
இளைய பெண்யானையைக் கண்டு, இளங்களிறு ஒன்று மையல்கொண்டு,
பாகர்கள் நடத்தவும் நடவாமல் நிற்க, அந்த இளைய பெண்யானையும்
தன் மேல் அமர்ந்திருக்கும் அன்னம் போன்ற மகளிரோடு, ஓய்ந்த நடையைக் கொண்ட ஆண்யானைமேல்
சென்ற தன் மனமானது மையலைச் செய்ய நடந்து சென்று, அழகிய அந்த மாடத்தில்
கையால் புனையப்பட்ட பாயும் வேங்கைப் புலியைக் கண்டு, அச்சங்கொண்டு,
மை போன்ற கரிய அந்த இளம் பெண்யானை, அந்த இளைய பெண்கள் நடுக்கமெய்த
பாகரின் அடக்கும் தொழிலுக்கும் அடங்காது, தன் மதி கெட்டுச் சிதைந்து ஓட,
பிளிறுகின்ற கையுடன், மதக்களிப்பையுடைய அந்த களிறு, வளைவான அங்குசத்திற்கும் அடங்காமல்

அவ்விடத்தைவிட்டு நீங்குகின்ற பொழுதில் அதன் இடிபோன்ற முழக்கத்தை ஒழித்து,
அதனைத் தம் கட்டுப்பாட்டுக்குள் வளைத்து, அணைவாக அந்த இளம் பெண்யானையுடன் சேர்த்து,
பெண்யானையின் மேலிருந்த பெண்களின் நடுக்கத்தை, தம் தொழிலில் சிறந்த பாகர்கள் களைந்தனர்;
இது, பாயும், கயிறும், மரங்களும் பிடுங்கிக்கொண்டு சிதறிப்போக,
சிதைந்துபோன பாய்மரக்கப்பலை சேர்த்துக்கட்டி சீர்திருத்தும்
திசையறிந்து ஓட்டும் நீகானின் செயலைப் போலிருந்தது;
பெரிய தண்டினையுடைய யாழின் இசையும், பாடலுடன் ஆடலும்
ஊடியிருந்தவரின் மனவுறுதியை அழிக்க, இவ்வாறு மனம் என்னும் கோட்டை அழிந்துபோன மைந்தரும், மகளிரும்,
மனம் ஒன்றுபட்டு, முன்பு இரண்டாக விளங்கிய நிலைமை கெடத் துணியமாட்டார், ஊடலில் வெல்லவேண்டும் என்ற எண்ணத்தில்,
அவர்கள் அங்குத் திரண்டிருந்த பலவகை மக்களால் வெட்கப்பட்டனர், மனம் பதைபதைத்தனர், இந்த நிலை, பகைமன்னர் இருவரின்

படைகள் இரண்டும் ஒருவரையொருவர் தாக்கி நின்றவை
மனம் ஒன்றுபட்டும், அவர்கள் உடம்பட்டதற்கு அச்சமே காரணம் என்ற பேச்சு எழுமே என்று அஞ்சி
நின்ற நிகழ்ச்சியைப் போலிருந்தது;
காம உணர்வு மிகுந்து எழ, அதனால் கண்ணில் வெறி தோன்ற,
ஊருக்காக மிகவும் அஞ்சி, தம் உணர்வுகளை ஒளிப்பார் சிலர், அவரின் நிலை
கள்ளுண்டதால் களிப்பு மிகுந்து எழ, அதைக் கட்டுப்படுத்துவது போன்றிருந்தது; ஆனால் ஊராரின் பேச்சுக்கு அஞ்சி,
உள்ளத்தில் துன்பம் உண்டாக, கள்வெறியை மறைக்க முயலும் முயற்சியால் அதை மேலும் மேலும்
பரப்பி, தம் செருக்குக்காக நடுங்கி, உலகம் பலவாறாய்த் தூற்ற,
தம்முள் மறைக்கும் கள்வெறியைப் போன்றது, முன்னவர் கொண்ட காமவெறி.
இவ்வாறாகக் கள்வெறியுடன் காமவெறியையும் கலந்து கரைகளை உடைத்துச் செல்லும்

வெள்ளத்தைத் தருகின்றது வையையின் புதுப்புனல்;
வெள்ளத்தில் விளையாடிக் களைத்துப்போன மகளிர் தம் தெப்பங்களை விட்டுக் கரையேற,
அவர்கள் மூட்டிய தீயில் வெந்த அகிலின் புகை அந்தச் சோலைமுழுக்கப் பரவ,
அவர்கள் தம் முலைமுகட்டில் பூசிய சந்தனத்தின் மணம், மடைதிறந்த வெள்ளம்போல்
திசைகள் முழுதும் கமழ, முகிலின் வயிற்றைக் கிழித்துக்கொண்டு வெளிவரும் திங்களைப் போல்
கரிய உறைக்குள் போட்டுவைத்திருந்த வெள்ளி வட்டிலை வெளியில் எடுத்து, சூட்டை உண்டாக்கும் கள்ளை வார்த்து,
பாம்பு பற்றிய முழுநிலவைப் போலத் தம் உள்ளங்கையில் தாங்கி,
தாக்கிக் கொல்லும் சுறாமீன் வடிவத்தில் அமைந்த மகரவலயம் என்னும் அணி விளங்கும் நெற்றியையுடைய மகளிர்,
நிலவின் ஒளியைப் பருகும் தேவமகளிரைப் போன்று அக் கிண்ணத்தைத் தம் செவ்வாம்பல் போன்ற வாயில் வைத்துக் குடித்தனர்;
உடலின் மேல் வெண்துகிலைப் போர்த்திருந்தனர் சிலர்; பூவேலை செய்யப்பெற்ற

வெண்துகிலைத் தம் கூந்தலைச் சுற்றி முறுக்கிப்பிழிந்தனர் சிலர்;
சிவந்த குங்குமத்தால் ஆகிய செழுமையான சேற்றையும்,
நறுக்கப்பட்ட அகில் துண்டுகளையும், பலவகைப் பச்சைக்கற்பூரத்தையும்,
ஒன்றாகக் கலக்குமாறு குற்றமற்ற குழவிக்கல்லால்
அவியாக பலியுணவை இட்ட வேள்வித்தீயின் நிறத்தைப் போன்று அரைப்பார் சிலர்;
சங்கு, நண்டு, நடக்கின்ற இறால், வலிய வாளைமீன் ஆகியவற்றின் பொன்னாற்செய்த உருவங்களை
அலைகளோடு வரும் நீரிலிட்டு, 'கழனிகள் விளைக, வளம் சிறக்க' என்பார் சிலர்;
இரப்போரின் இல்லாமையைக் கண்டு, அவர் தம் இழிந்த நிலையைக் கூறுவதற்கு முன்னரே,
அவர்க்கு நன்மை செய்தலை விரும்பி அவர் துயர் தீர்ப்பார் சிலர்;
நன்கு கழுவப்பட்ட நீல மணியைப் போல, வளைந்த தம் மயிர்க்கற்றையில், வண்டுகள் மொய்த்து ஆரவாரிக்க,

குளிர்ச்சியான அழகிய பத்துவகைத் துவர்களையும் தேய்த்துக்கொண்டு நீரில் முழுகுவோர் சிலர்;
தலையில் தேய்த்திருக்கும் எண்ணேய் நீங்குமாறு நுண்ணிய அரைப்புப்பொடியால் கசக்குவார் சிலர்;
மாலை, சந்தனம், கத்தூரி, அணிகலன்கள் ஆகியவற்றை
வையையின் நீர் அழகுபெறும்பொருட்டு, ஆற்றுநீரில் விடுவார் சிலர்; அந்த நீர்
உண்ணாத கள்ளினை அதற்கு ஊட்டுவார் சிலர்; ஒளிரும் வளையலையுடைய அம் மகளிர்,
நீர்விளையாட்டினால் தம் நிறம் மேலும் ஒளிபெற்று விளங்க, அவரின் முகமும், முலைகளின்
கண்களும் மிகவும் சிவந்தன; அத்தன்மையுடைய
நீர்விளையாட்டை ஆடிக் களித்து, வண்டுகள் மொய்க்கின்ற, மணத்தினால் மாட்சிமையுடைய ஐந்து மன்மத அம்புகளின்
அரத்தினால் கூர்மை செய்யப்பட்ட வாயினைப் பெரிதும் ஒத்தனவாக இருந்தன,
மேலும் மேலும் நீராடும் அந்த மகளிரின் மலர் போன்ற கண்கள்;

விருப்பத்துடன் வாழைத்தண்டுகளைத் தழுவிக்கொண்டு தாவித்தாவிச் செல்வார் சிலர்;
தாழைமலரின் குளிர்ந்த பூந்தாதுக்களை, அலைகளின் மேலுள்ள நுரைகளில் தூவுவார் சிலர்;
விரும்பத்தக்க படகுகளில் விரைகின்ற ஆற்றுநீரில் ஓய்ந்திருப்போர் சிலர்;
தமது மெய்யின் முயற்சியால் எதிர்த்துவரும் நீரை மாறிமாறிக் கைகளைப் போட்டு நீந்திக்
களைத்துப்போய் மெல்ல விளையாடுவார் சிலர்; மென்மை வாய்ந்த மகளிர்
தாம் செய்த அழகிய சிறுசோற்றைக் கைகளில் இடுவதுபோன்று வைக்க அதனை உண்பது போன்று ஏற்பாருக்கு
இடுவார் சிலர்; இட மறுப்பார் சிலர்; மறுக்கும் அந்தச் சிற்றிடையார்களின்
பந்துகள், கழங்குகள் ஆகிய பலவற்றைக் களவாடிக்கொண்டு ஓடி
அழகிய குளிர்ந்த கரையினில் நின்று நீருக்குள் பாய்வார் சிலர்; இதனால், வீரர்கள்
சுடர்விட்டுப் பிரகாசிக்கும் வேலுடன், வாள்களையும் பகைமையினால் மோதிக்கொள்ள

களிறுகள் போரிடும் போர்க்களத்தைப் போல, நாள்முழுக்க
கலங்கிப்போய்த் தெளிவில்லாமல் இருந்தது இனிமையான இயல்பினையுடைய வையை ஆற்று நீர்
திங்களானது, மாலைக்காலத்து மயக்கந்தரும் இருளைக் கூட்டித்தள்ள, மதுரை நகருக்குள்
தங்கும் இயல்பினை நினைத்து, அவ்விடத்தைவிட்டு நீங்கிப்போகும் செயலால், புதிய இயல்பினையுடைய
நீராட்ட நாளுக்கான அணிகலன்களை நீக்கி, சிரிக்கும் இயல்பினையுடைய மலர்ந்த பூக்களைச் சூடிக்கொண்டு,
தோள்வளை, தோடு, ஒளிவிடும் இழைகள், முத்துமாலை ஆகியவற்றை அணிந்துகொண்டனர்;
பாடுவோரின் பாடலும், கடவுளைப் பரவுவோரின் துதியும், வையையைப் புகழ்வாரின் புகழ்ச்சியும்,
ஆடுவோரின் ஆடலும், அந்த ஆடலுக்குப் பொருத்தமான சீருடன் கூடிய தாளமும் எழுந்தன;
நறுமணம் கமழும் தேனை உண்ணப் புறப்பட்டன வண்டினம் எல்லாம்;
பண் பாடுவாரைத் தொடர்ந்து வந்த வண்டுகள் அவர் வருந்துமாறு அவருக்கு எதிராக வந்து ஒலியெழுப்ப,

கூந்தலிலுள்ள மலர்களின் தேனைக் கொள்ளையாய் உண்ட வண்டுகள் இனிய குரலில் பாட,
எல்லாரும் தெற்குப்பக்கம் இருக்கும் நகருக்குச் செல்லத் திரும்புகின்ற பொழுது, விரைந்து இயங்கும் காற்றினைச் சார்ந்து,
செறிந்த மலையிடத்துப் பூங்கொடிகளிடத்தில் தங்குவதற்காக மேலேறிச் செல்லும்,
குளிர்ச்சி மிகுந்த நீராவியான மேகத்தைப் போன்றிருந்தது, மதுரை நகரின் மணிமாடங்களின்
உள்ளேயிருந்து தூவிய பனிநீர் மணத்துடன் கலந்து,
தென்றல் காற்று மணமுடையதாக மாறும்படியாக எழுப்பும் நறுமணப்புகை;
இல்லாத புலவர்கள் ஏந்திநின்ற கைகள் நிரம்பும்படி
தங்கத்தைச் சொரிகின்ற பாண்டிய மன்னனைப் போலவே, வையைஆறு நீரை நாடெங்கும் இறைத்துப் பரப்பி,
நாட்டின் வயல்களில் பொன்னை நிறைக்கும் செயலாகிய தொழில் ஓய்ந்துபோகாமல் இருக்கக்கடவது!
உயிர்கள் வருந்தாமல் இருக்கும்பொருட்டு வருகின்ற வையையின் புதுநீரைக் கொண்டாடி மகிழும் மதுரை நகரில்

கறைகள் அற்ற ஒலிக்கும் இசையை இசைக்கின்ற கூத்தர்கள், உரிமையுடன்
தம்முடன் சேர்ந்து இருக்கும் கூட்டத்தோடு ஏத்தி வணங்கும்படி.

# 11 வையை
விரிந்த ஒளிக்கதிர்களையுடைய திங்களுடன் அகன்ற வானத்தில் சேர்க்கப்படுவனவாகிய,
எரி என்னும் கார்த்திகை, சடை என்னும் திருவாதிரை, அழகிய யானை என்னும் பரணி ஆகிய நாள்கள் முதலாக, இவற்றின் பெயரால்
இடபவீதி, மிதுனவீதி, மேடவீதி என்று வேறுபடுத்திக்கூறப்பட்ட ஒவ்வொன்றும் ஒன்பது நாட்களைக்கொண்ட, மூவகை இராசிகளுள்
மிக்க வெண்மையான நிறத்தைக்கொண்ட வெள்ளியானது இடபராசியைச் சேர,
மேடராசியைச் செவ்வாய் சேர்ந்துநிற்க, பொருள்களை ஆராய்ந்தறிகின்ற
புத்தி எனப்படும் புதன் மிதுன ராசியில் நிற்க, இருள் புலரும் விடியலில்
கார்த்திகை உச்சமாக நிற்க, வியாழன் சனியின்
இரட்டை இல்லங்களாகிய மகரம், கும்பம் ஆகியவற்றுக்கு மேலேயுள்ள மீனராசியைச் சேர, யமனைத் தமையனாகக் கொண்ட சனி
தனுராசியின் பின்னர் உள்ள மகரராசியில் நிற்க, இராகு விரைவாக

திங்களை மறைக்க வருகின்ற நாளில், இப்படியாக வாய்ந்த,
பொதிகை முனிவனின் பெயர்கொண்ட அகத்தியன் என்னும் மீன் தன் உயர்ந்த இடத்தைக் கடந்து
மிதுன ராசியைச் சேர, விரிந்த கதிர்களையுடைய வேனிற்காலம்
எதிர்கொள்ளும் கார்காலத்தில் மழை பெய்க என்ற இந்த முறையினால்,
உயர்ச்சி பொருந்திய சையமலையில் பொழிகின்ற மழை மிகுதியாய் இறங்கிப்பாய
கரைகளை உடைத்துக்கொண்டு வருகிறது வையை ஆற்றில் வெள்ளம்;
மலையில் உள்ள புன்னை மரன்களும்,
ஆற்றங்கரையில் உள்ள சுரபுன்னை மரங்களும்,
வண்டுகள் ஓங்கி ஒலிக்கின்ற வரிசையான சண்பக மரங்களும், குளிர்ந்த தன்மையுடைய
தேற்றா மரங்களும் வாள்வீரமரங்களும்,

கிளைகள் செழித்து வளரும் வேங்கை மரங்களும், செவ்வலரியும், காந்தளும்
தீ போன்று மலரும் தழைத்த தோன்றியும் ,
ஊதைக் காற்றால் கட்டவிக்கப்பட்ட நெகிழ்ந்த இதழ்களையுடைய ஒளிரும் நீலம் ஆகியவற்றின் மலர்களை
மூங்கில்கள் நிறைந்து வளர்ந்திருக்கும் சோலையில் அருவிநீர் கொணர்ந்து குவிக்க,
பாய்கின்ற அலைநீர் தள்ளிக்கொண்டு வந்து தருதலால், ஆராய்ந்து மலர் பறிப்பதற்குரிய கோலினையுடைய 
வலிய மக்கள் தாம் பறித்த மலர்களைக் கொண்டுவந்து குவிக்கும் துறை என்று கூறவா?
அழகிய மலர்களான மேற்போர்வையினையும், முத்தாரம் தொங்கும் மார்பினைப் போன்று விளங்கும்
அலைகளின் நுரைகளாகிய மென்மையாகிய குமிழ்களையும், இனிய மணத்தோடு சேர்ந்த சந்தனக் குழம்பினையும் உடைய
வையைப் பெண்ணின் முன்தானை என்று கூறவா? கள்ளினை வாயில் கொண்டு
பருகும் நிலமகளின் கழுத்து என்று கூறவா? பெரிய

திருமருத நீர்ப்பெருந்துறையை;
தோன்றிய நாள் தொடங்கி, மிகுந்துகொண்டுவரும் மதியின் வளர்பிறை போல
நாளுக்கு நாள், செறிந்த மலைச் சாரல் தொடங்கி
நிலவொளி எங்கும் பரவுவது போல, நீரை நிலமெங்கும் பரப்பி,
உலகத்துக்குப் பயனைத் தந்து பாதுகாத்து, பெருகுகின்ற பக்கத்துக்கு
அடுத்த தேய்கின்ற பக்கத்தில், தேவர்களின் உணவாகிய
திங்கள் தன் கலையில் குறைவுபடுவது போல, ஆற்றில் நீர் வரவு குறைய
எட்டாம் நாள் திங்களாகி, அமாவாசைக் காலத்து இருண்ட மதியினைப் போன்று
ஒரு நாளில் நீர் இல்லாமல்போவதை காண்பவர் யாரோ?
நெடுந்தொலைவைக் கடந்து மலைகளில் ஊர்ந்துவந்த சிறப்புமிக்க அணிகலன்களை அணிந்த வையையே!

உன் வலிமை தணிந்து செல்வாயாக! உன் புதுவெள்ளத்தை வற்றிய நாட்களிலும் மக்கள் பெறுவதற்காக,
நீல மயிலைப் போன்ற பெண்கள், மறைவாகத் தம்மைக் கூடும் காளையரின்
காமக் கூட்டமாகிய களவொழுக்கத்தை விட்டு, சிறப்பற்ற கற்பொழுக்கத்தை மேற்கொண்டதைப் போல்,
மிக்க வெள்ளத்தையுடைய வையையே! உன் பெரிய மலையை விட்டு நிலையாகத் தங்கியிருக்கும்
இல்லமாகிய கடலுக்கு நீ தனியே சென்றடைவது சிறப்பானதன்று
என்று கூறும் வண்ணம், அங்கு,
கடைக்கண் இல்லையோ என்னுமாறு நீண்டு அகன்ற கண்ணையுடையவளான தன் காதலியைக் காதலன்
தன் படைக்கலன்களோடு கூட்டிக்கொண்டு செல்லும்போது, பெண்ணின் சுற்றத்தார்
இடைவழியில் தடுத்து அவனைத் தாக்கியது போல, பகைவரை வெல்லும் மதுரை மக்கள்
இடையில் புகுந்து நீராடுவதற்கு ஏற்றது இந்த ஆறு.

ஆற்றில் அணிஅணியாக, வெண்மையான வாளைச் சுழற்றுவோரும், ஒளிரும் குத்துவேலை ஏந்திக்கொண்டிருப்போரும்,
வாரினைப் பிடித்திருப்பவர்கள், கைக் கோலினை உயர்த்த, கொடியையுடைய திண்ணிய தேரில் ஏறுவோரும்,
பறவை போல் விரையும் குதிரைகளையும், பொன்னாலான முகபடாம் அணிந்திருக்கும் யானைகளையும்
வெள்ள நீர்ப் பெருக்கினுள் மேலும் மேலும் செலுத்தி நீரைக் கலக்குவோரும்,
கண்ணுக்கு நிறைந்த அழகையுடைய மூங்கில்குழாயில் நீரை உறிஞ்சிப் பீச்சுவோரின்மேல்,
சாயம் கலந்த நீரை உள்ளேகொண்ட வட்டினை விட்டெறிவோரும்,
மணம்தருகின்ற மாலையினால் சுழற்றியடிப்போரின்மேல்
அறுக்கப்பட்ட சொரசொரப்பான கொம்பில் நீரை மொண்டு வீசுவோரும், இவர்களுடன்
தெரிந்தெடுத்த மாலையினையுடைய மகளிர் தம் காதலரோடு இன்புற்று மகிழும்
அழகு பொருந்திய காட்சியினைக் கூறினால், ஒவ்வொருநாளும்

போர்க்களத்தைப் போன்ற தன்மையினையுடையது, குதிரைகளை வென்று கவர்ந்துகொள்ளும்
பாய்கின்ற தேரினையுடைய பாண்டியனின் வையையாற்றின் உள்ளிடம்;
நீராடுவதற்கேற்ற அணிகலன்களோடு, தேன் செறிந்த மலர்களால் புனைந்த மணங்கமழும் குளிர்ந்த
மாலையணிந்த மலைபோன்ற மார்பினில், அந்த அழகிய ஒப்பனையையும், நேரிய பிற அணிகலன்களையும்
ஒளி திகழும் தகைமையுடைய பல வகைகளால் செறிவுற்ற மூட்டுவாய்
புனைந்த தொழிலையுடைய பொன்னால் செய்யப்பட்ட கழுத்துமாலைகளை அணிந்த மகளிரோடு
பாகு தங்கிய இளம் கள்ளைப் பருகி, களிப்பு மிகுந்து,
நாகர்களைப் போன்று நல்ல வளமையான அறச்செயல்களில் நாட்டம் மிக, நெருங்கிச் சேரும்பொருட்டு
அழகாகிய மதுவை ஒருவருக்கொருவர் கண்களாலேயே கவர்ந்து பருகும்படியாக,
தாளம் அமைந்த பாடல் இன்பத்தால் தமது கிளர்ச்சியையுடைய செவி தெவிட்டும்படியாக நிறைத்துக்கொள்ள,

தேவர்கள் வாழும் ஒளி மிகுந்த வானத்தில் ஊர்ந்து செல்லும்
விமானங்களையும் மறைக்காமல் தெளிவாகக் காட்டுகின்ற நீரோட்டத்தையுடையது அந்த வையை ஆறு;
கார்காலத்திலும், அதற்கு ஒவ்வாத வேனிற்காலத்திலும் முறையே கலங்கலான நீரோடும், தெளிவான நீரோடும் வருகின்ற
இந்த இயல்பு எப்பொழுதும் ஒத்துவருவதில்லையே, வையையே! உனக்கு!
முழங்கி அதிர்கின்ற குரலைக் கொண்ட கார்காலத்து மேகங்கள் நீங்கிப்போக,
பனி மிகுந்த குளிரால் நடுக்கத்தையுடைய முன்பனிப் பருவத்தில்,
சூரியன் காயாத குளிர்ந்த மாரிக்காலத்துக்குப் பின்னர் வரும் மார்கழி மாதத்தில்
மிகப் பெரிய திங்கள் மண்டிலம் தன்னுள்ளே கொண்டுள்ள களங்கம் நிறைந்த திருவாதிரைநாளில்
விரிந்த மெய்நூல்களைக் கற்றறிந்த அந்தணர் திருவிழாவைத் தொடங்க,
முப்புரியாக பூணுலை அணிந்த அந்தணர் பொன்னாலான கலன்களை ஏந்தி நிற்க'

'வெம்மையால் வாடாது இருக்கட்டும் இந்த அகன்ற நிலப்பரப்பு' என்று
தம் தாய்மாருடன் நீராடும் அம்பா ஆடலை மேற்கொண்டதினால், அழகிய வளையணிந்த கன்னியர்,
சடங்குகளை அறிந்த முதுபெண்டிர் நோன்பு செய்யும் முறையினைக் காட்ட,
பனி மிக்க வைகறைப் பொழுதில் நீராடி, பெரிய மணலில் ஓடும் நீரில்
குளிர்வாடை தவழ்ந்து வருதலால், கரையில் இருக்கும் அந்தணரால்
வேதநெறியின்படி வளர்க்கப்பட்ட நிமிர்ந்தும் வளைந்தும் எரியும் தீயினை வழிபடும் சிறப்பான
ஒப்பனையையுடைய அந்தக் கன்னியர், தம் ஈர உடையை அந்தத் தீயில் உலர்த்திநிற்க,
வையையே! உனக்கு அந்தத் தீயிலிடும் அவியுணவு வாய்ப்புடையதாயிருக்கும்!
மையோலையைக் கையில் பிடித்து சுவடி தூக்கி ஆடும் இளம் சிறுவரின் ஆட்டத்திற்கு மாறாக எழுந்து,
பொய்யாக ஆட்டத்தை ஆடுகின்ற தோழியரைக் கொண்ட அந்தக் கன்னி மகளிர், அவரின் -

எரிகின்ற தீயின் பக்கத்தில் நின்று செறிந்த நோன்பினை முற்பிறப்புகளிலும் மேற்கொண்டமையாலோ?
- தாய்மார் அருகே நின்று நோன்புடைய இந்தத் தைந்நீராடுதல்,
நீ உரைப்பாய் வையை நதியே!
அவ்விடத்தில், நீல மலரைத் தன் காதில் செருகிக்கொண்டு, ஓர் இள மங்கையை நோக்கினாள்
மூங்கிலின் அழகை வெல்லும் அழகுமிக்க தோளினையுடைய ஒருத்தி, அதனைப் பார்த்த அந்த இள மங்கை,
சாய்ந்து குழைந்த அசோகின் தளிரைத் தன் காதில் செருகியிருந்தவள், தான் அணிந்திருந்த அசோகந்தளிரின் செம்மையால் 
ஒளிபாயும் குழையையுடையவள் அணிந்திருந்த நீலமலர் இளவெயில் படர்ந்தது போன்று ஆகும்படி சூடிக்கொண்டாள்,
குவளை மலரை, குழையணிந்த காதான அழகிய செவியில்
இவள் செருகிக்கொண்டு நான்கு விழிகளை உடையவள் ஆயினாள் என்று
நெற்றிக்கண் போலத் தோன்றும் நிறைந்த திலகத்தை நெற்றியில் இட்டாள்,

கொற்றவையின் கோலம் கொண்டு ஒரு பெண்;
பவள வளையலைச் செறிய அணிந்திருந்தாள் ஒருத்தியைக் கண்டு, இன்னொருத்தி அணிந்தாள் பச்சையான
குவளையின் இளம் தண்டினைக் கையில் வளையல்போல்,
குளிரிப்பூவால் தலைமாலை தொடுக்கும் ஒருத்தியை
அவ்வாறு தொடுப்பதை நிறுத்துக என்பாள் போல் நெய்தல் மலரைத் தொடுத்தாள்
மல்லிகை மாலையில் இடையிடையே கலந்து;
ஓர் இளைஞன் வாழைத்தண்டைத் தழுவிக்கொண்டு பாய்ந்து வரும் நீரைக் கொண்ட வையை ஆற்றில்,
கரையினில் இருந்த கன்னி ஒருத்தியைக் கண்ட மாத்திரத்தில், விரையும் நீர் அவன் கைகளை நெகிழ்க்க,
அவன் நெஞ்சத்தை அவள் நெகிழ்க்க, நீண்ட வாழைமரத்தை வெள்ளம் இழுத்துச் செல்ல,
நேரிய இழையணிந்த அவள் நின்ற இடத்திலேயே அவன் கண்கள் நிலைத்து நிற்க, தண்ணீரோ அவன்

விரும்பிய அவளிடத்தில் கொண்டுசெல்லாமல் தன் போக்குக்கு அவனை இழுத்துக்கொண்ட செல்ல,
அவளோ, தன் தோழியருடன் நிற்காமல், அங்கு அவனைப் பின்தொடர்ந்து செல்ல,
தாயானவள் தன் மகளின் அன்பின் திறத்தை அறியாதவளாய், அவளைத் தடுத்து, 'தனியே போகவேண்டாம்
தோழிமாரோடு சேர்ந்திரு' என்று உரத்துக் கூவ, கரையினை மோதியது
சிவந்துபோன கார்கால நீரின் வரவு;
நீ மேன்மை பெற்றாய், தைநீரே! உன்னுடைய செம்மை நிறம் தெளிந்துவருகிறாய் என்போரும்,
எம் கழுத்தில் அமைந்த கையை அகற்றாமல் என் காதலர் அணைத்திருக்கும்
சிறப்பான நிலையை நாம் பெறுக என்று வேண்டுகிறோம் என்போரும்,
பூவினை விரும்பிவரும் வண்டினைப் போல, எம்மைத் தனித்திருக்க விட்டுவிட்டுப் போகாமல்
நாம் விரும்புவாரிடத்தில் நீங்காத இன்பம் எய்யவேண்டும் என்று வேண்டிநிற்போரும்,

கிழவர், கிழவியர் என்று சொல்லப்படாமல், எமது ஏழாம் பருவத்தினை யாம் அடையும்வரைக்கும்
இளமையைத் தந்து யாம் செல்வத்தோடும் சுற்றத்தோடும் நிலைபெறவேண்டும் என்போரும் ஆக,
தம்மைக் கண்டவரைத் தாக்கி வருத்தும் அணங்கைப் போன்ற இந்தக் காரிகையைப் பாருங்கள்!
காமதேவனின் கருவூலமும், படைக்கலங்களும் ஆகும் இவளின் கண்களைப் பாருங்கள்!
முதிர்ந்த நீல நிறத் தேன் சொரியும் மாலைகளை அணிந்திருக்கும் பெண்கள் விலக்கிய போதும், நிற்காமல்
பூக்களை மொய்க்கும் வண்டினம் யாழிசை போன்று இசைக்கின்ற பாடலைக் கேளுங்கள்!
பாடலின் பொருள் தெரியும்படி பாடாமல், குரல்,
கிளை, உழை என்ற பாட்டின் அமைதிகள் பொருந்திய, வண்டுகள் பாடும் வண்ணங்கள் கொண்ட பாலைப் பண்ணைக் கேளுங்கள்!
பண்ணைத் தெரிந்து, அதன் திறத்தைப் பெற்று, அதன் தாளத்திற்கும் பொருந்தப் பாடி,
தாம் மேற்கொண்ட இன்னிசைக்கும் பொருந்திய தாளத்திற்கும் ஏற்றபடி, தம் சிறகை விரித்து ஆடும்

குளிர்ந்த தும்பிக்கூட்டங்களைப் பாருங்கள்! தான் விரும்பி மொய்த்த பூவினை நசுக்கியவளை
போர்முனையிடத்தில் பொருந்திய சினத்தைக் கொண்ட நெஞ்சினையுடையதாய் முதலில் தாக்கி, அதன் பின்னும்
விரைந்து வருகின்ற ஒரு வண்டின் கடும் சினத்தின் தன்மையைக் காணுங்கள்!
என்று இவ்விதமாக,
இத்தகைய சிறப்புமிக்க உனது தைநீராடலானது,
மின்னுகின்ற அணிகலன்களையும் நறுமணம் கமழும் நெற்றியையும் உடைய பெண் ஒருத்தி, தன் பெண்தன்மை மேம்பட்ட
கன்னித்தன்மை முதிராத ஒருதலைக்காதலின் காமத்தின்
இனிய தன்மையினையும், சிறந்த தேர்ச்சியினையும் கொண்ட இசையோடு கூடிய பரிபாடலே!
இதனை, முற்பிறப்பில் செய்த தவத்தினால் இப் பிறப்பில் நாங்கள் பெற்றோம்!
மீண்டும் ஒரு முறை பிறக்கும்போதும் இது எமக்குக் கிட்டுக!

நறிய நீரினைக் கொண்ட வையையே! உன் விரும்பத்தக்க நிறைந்த நீர் -

# 12 வையை
காற்று மோதுவதால், மின்னலுடன், மேகங்கள் இருளையும் பரப்பி,
இடையறாமல், தம் தொகுதியோடு மலையின் மேல்பக்கத்தை வளைத்துக்கொண்டு
மழையைப் பொழிகின்ற மலைச்சாரலில், தன்மேல் உதிர்கின்ற மலர்களைப் பரப்பிக்கொண்டு,
ஒளி விளங்கும் படப்புள்ளிகளைக் கொண்ட, பார்ப்பதற்கு அச்சந்தரக்கூடிய பாம்பின் பெயரைக்கொண்ட நாகமரமும்,
அகிலும், சுரபுன்னையும், ஞெமை மரமும், சந்தன மரமும் ஆகிய இவை வருந்தும்படியாக,
தகர மரம், ஞாழல் மரம், தேவதாரு மரம் ஆகியவற்றைச் சாய்த்துச் சுமந்துகொண்டு,
செறிந்த நீரையுடைய கடல் பொங்கி வருவதைப் போன்றிருக்கிறது - இனிய நீரையுடைய
காற்றோடு கலந்து வரும் வையையின் வரவு;
இவ்வாறு வந்து மதுரை நகரின் மதிலை மோதுகின்றது, தூய மலர்களைப் பரப்பிக்கொண்டு

அழகிய குளிர்ந்த நீரையுடைய வையையாறு என்று சொல்லக் கேட்டு,
மின்னல் போல் ஒளிர்கின்ற ஒளிவிடும் அணிகலன்களை எடுத்து அணிந்துகொள்வோரும்,
பொன் தகட்டால் செய்யப்பட்ட பூவாகிய அணிகலன்கள் அணிந்திருப்பதைத் திருத்திக்கொள்வோரும்,
அகில்புகை கலந்த சந்தனம் பூசியிருப்பதை மாற்றி, பெருமளவில்
வேறு மணமுள்ள புகை கலந்த சந்தனத்தைப் பூசிக்கொள்வோரும்,
கருமை கொண்ட கூந்தலைக் குழலாக முடிந்துகொள்வோரும்,
வெட்டிவேரை இடையிடையே வைத்துக் கட்டிய பலவித மலர்களைச் சூடிக்கொள்வோரும்,
புடவைகளில் தமக்குப் பொருத்தமானவற்றை உடுத்திக்கொள்வோரும்,
கட்டப்பட்ட கொக்கிகளையுடைய அணிகலன்களை வடங்களாகப் பூண்டுகொள்வோரும்,
வாசமுள்ள நறிய நெய்யைப் பூசி, வெண்மையான நுண்துகளால்

அழுக்கு நீங்க கண்ணாடியைப் பளபளப்பாக்கி, அதில் தம் இயற்கையழகும்,
செயற்கையழகும், மேனியெழிலும் தோன்ற, அவற்றைக் கண்டு மகிழ்ந்து
வாசனைப் பொருள்களோடு கூடிய பாக்கினை வாயில் போட்டுக்கொள்வோரும்,
ஆணியிட்டுச் சேர்க்கப்படும் வளையல்களோடு, செறிக்கப்பட்ட தோள்வளையினை உடையவரும்,
கட்டுவடத்தோடு, கால்விரலில் மோதிரம் அணிந்துகொண்டோரும், தேன் துளிக்கும் மாலையினரும்,
நெடுந்தொலைவுக்கு மணம் வீசும் வாசமுள்ள மேனியரும்,
மிகவும் இளைய குதிரையின் மீது ஏறிவருவோரும்,
பெண்யானையின் மேல் வரும் பெரிய பெடையன்னம் போன்றவரும்,
விரைவாகச் செல்லும் குதிரையின் மீது ஏறிச் செலுத்துவோரும், ஆண்யானையின் மீது ஏறி வருவோரும்,
நன்கு வடிக்கப்பட்ட மணிகளைக் கொண்ட நெடிய தேரின் குதிரைகளை முள்கோலால் குத்தி ஓட்டுவோரும்,

விரைந்து விரைந்து மிகமிக நெருக்கமாய்ச் செல்ல,
வையை நீரில் நீராடுவது அங்கங்கே சிறந்துவிளங்க, மதுரை மக்கள்
தன்னைப் புகழ்ந்து போற்ற வருகின்றது வையையின் நீர்; வையை ஆற்றின்
கரையோ என வந்தது காணவந்தவரின் கூட்டம்;
உயர்ந்தது வெள்ளம் கரைக்கு மேலே; வெள்ளமானது
கவர்ந்துகொண்டு பெருகியது போலிருந்தது, மக்களின் ஆசைவெள்ளத்தை;
திருமருத முன்துறையில் நிறைய அணியணியாக நின்றுகொண்டிருந்தவர் பேசிக்கொண்ட பேச்சுக்கள்
ஒரே தன்மையதாய் இல்லாமல் பலப்பலவாக ஒன்றுசேர்ந்து எழுந்தன; அவற்றை
எல்லாம் தெளிவாகக் கேட்டுப் புரிந்துகொள்பவர் யார்? அவை
கேட்பதற்கு முடியாதவை; எம்மால் கேட்கப்பட்டன ஒருசிலவே;

ஒன்றோடொன்று ஒத்து இசைக்கும் குழல் வாத்தியங்களினின்றும் இசை எழ, முழவின் முழக்கத்தோடு
மத்தரி, தடாரி, தண்ணுமை, மகுளி ஆகிய இசைக்கருவிகளின்
தாளத்தை அளந்து சீரின் கூறுபாட்டை அறிந்து, ஒருவருக்கொருவர் பின்னிடாத தகுதியுடையவராய்
நடன அசைவுகள் நன்கு விளங்கும் நேராக இறங்கும் தம் முன்கையால்
அழகுமிக்கதாய் ஆடல்மகளிர் அந்தத் தாளத்தை அளத்தலைப் பாருங்கள்;
இவள் வெட்கப்படமாட்டாளோ? தோழி! ஒரு நன்மையும் இல்லாத பரத்தையின்
தோள்களின் அழகை நுகர நம்மைவிட்டுப் பிரிந்து சென்றான் என்றிருந்த இவள்
புதிதாக நிறைந்து வரும் நீராகிய வெள்ளத்தில், பெரிய பெண்யானையின்
உயரமான முதுகில் அந்தக் கணவனோடு ஏறிவருகிறாள்
நாணம் குறைவுபடாத இந்தக் குலமங்கை என்று சொல்வோரும்,

கூடவருகின்றவர்களுள், பூங்கொம்பு போன்ற ஒரு பெண்ணின் குவிந்த முலையைக் கூர்ந்து பார்ப்பவன்
ஓட்டையான மனத்தையுடையவன், நெஞ்சுரம் அற்றவன் என்று சொல்வோரும்,
தனக்கு எதுவும் தந்தோ, தன்னிடம் ஏதாவது பேசியோ அவள் அறியாள், எனினும் அவனுக்காக ஏங்கிநின்றாள்,
தன் மனத்தை ஓடவிட்டாள் அந்த வழிப்போக்கனின் பின்னே, தன் பெண்மையாகிய மாட்சிமை
அழிந்துபோவதற்கு அஞ்சி இதனைக் கைவிடமாட்டாளோ, என்னதான் காதல் கொண்டாலும் என்று சொல்வோரும்,
பூண்டுள்ள ஆரத்தைப் பார்ப்பது போல, நெருங்கியிருக்கும் இவளின் முலைகளைப் பார்த்தான் ஒருவன்
நாணுகின்றாளில்லை அவனைக்கண்டு இந்த மடந்தை என்று சொல்வோரும்,
அமிழ்தத்தைப் போன்ற இனிய பார்வையால் பெண் ஒருத்தி (தன் கணவனைப்)பார்க்க,
மணங்கமழும் தன் மாலையைக் கழற்றி அதனைக் கோலாகக்கொண்டு அவனைப் புடைத்து, தன் மார்பின்
வடத்தைக் கழற்றி அவனது கைகளைக் கட்டி, அவனை மிகவும் இறுக்கமாகப் பற்றிக்கொண்டு

"தவறிழைத்தாய்" என்று சொல்ல, தன் மீது பிழையொன்றும் காணாதவனாய்
கைகூப்பி "என்ன பிழை" என்று கேட்கும் குற்றமற்றனைப் பாருங்கள்;
"பார்த்தாள் ஒருத்தி உன்னை" என்று சொல்லி, "அவ்வாறு பார்த்தவள்
உன்னால் சூளுரைக்கப்பட்டு ஏமாற்றப்பட்டவள்" என்று கூற, "நீ கூறுவது ஒன்றும் அறியேன் நான்" என்று பணிந்து
மெய்யாகவே சூளுரைப்பானை, அந்த மெல்லியலாள், "இதுவும் பொய்ச்சத்தியம்" என்று
அவன் பொறுக்கும்படியான சொற்களைச் சொல்லாமல், தன் கூற்று குற்றமுடையதாகக் கூற,
அவன் மீண்டும் வலியுறுத்திக்கூறியும், சினந்து மொழிந்தும் அவளைத் தெளிவிப்பானை,
அணைத்துக்கொள்ளாது ஊடல்கொண்டவளாகக் பிணக்குற்றிருப்பவள்
பூவின் மணத்தையும் அழகையும் கொண்ட, அரக்கு வண்ணமூட்டப்பட்ட நீரால் நிறைக்கப்பெற்ற, வட்டினை எறிய,
வேலாகிய அழகிய மையுண்ட கண்கள் வீசிய பார்வை பட்டதுபோல் புண்ணிலிருந்து

பாய்கின்ற குருதியாக வண்ணநீர் வடிய, அவன் அவளிடம் பகைமை கொள்ளாமல் உள்ளம் சோர்ந்துபோக,
அவ்விடத்தில் நிற்காமல் நீங்கிச் சென்று நிலத்தில் வீழ, மனம் கலங்கி,
அவனது மற்போருக்கு இயைந்த மார்பில் பட்ட புண்ணுக்காக அச்சமுற்று, துயரங்கொண்டு
தன் கோபம் தணிந்தவளாய், தன் காதலனின்
நல்ல பொலிவுள்ள அழகிய மார்பினைத் தழுவிக்கொள்ளச் செய்தது, எக்காலத்திலும்
வல்லமை மிக்க வையையின் நீர்,
என்று சிலர் கூறினர், இவ்வாறு அங்கே
மல்லிகை, முல்லை, மணங்கமழும் சண்பகம்,
அல்லி, செங்கழுநீர், தாமரை, ஆம்பல்,
வெட்சி, மகிழம், குருக்கத்தி, பாதிரி,

நல்ல கொத்துக்களையுடைய நாகம், நறவம், சுரபுன்னை
ஆகிய எல்லாவகையான கமழ்கின்ற இருபக்கக் கரைகளையும் மோதிக் கலங்கிப் பின்னர்
மிகத் தெளிந்து செறிந்த இருள் மயங்கியிருக்கும் மாலைப்பொழுதில்
பாறைகள் நிறைந்த நிலப்பரப்பில் பரந்த கல்லணையால் தடைப்பட்டு தேங்கி நின்று
சொர்க்கத்தின் அழகினை தனது நீரின் நிழலில் காட்டிநிற்கும்,
மேகங்கள் மழைபொழியும் காலைப்பொழுதில் கலங்கியதாய் சிவந்த குருதியின் தன்மையைக் காட்டி நிற்கும்
போரில் பகைவரை வெல்லும் படையினையுடைய பாண்டியனின் வையை ஆறு;
நெருப்பிலிட்டுச் சுடுகின்ற தன்மையுள்ள வேலைப்பாடு அமைந்த குழையினைப் போல, மிகவும் சிவந்த
வாசமுள்ள மலரான அசோகமலரைத் தன் காதில் செருகிக்கொண்டு,
கட்டுவிட்ட மலர்ந்த மலரையுடைய கொடியினைப் போல மடங்கி அசைந்து,

முன்னிருக்கும் அடிச்சுவட்டின்மேல் அடியெடுத்து வைத்து, ஒருபக்கமாக ஒதுங்கி, வளையணிந்த முன்கையைக் கொண்ட
பெண்ணொருத்தி தன் தலைமாலையைச் சரிசெய்துகொண்டாள்,
நேராக இறங்கும் முன்கையைக் கொண்ட அந்த நல்லவளின் கணவனைப் பாருங்கள்;
ஆடையில் செய்யப்பட்டுள்ள பூவேலைப்பாட்டைப் போன்று மணிகளின் நீரோட்டத்தால் நிறைந்தது
வையை நீர் என்று மதுரையில் மிக்குப் பரவியது நீராடியோர் கூறிய பேச்சு;
இந்தப் பேச்சைக் காட்டிலும் சிறந்து விளங்கியது அங்கு நீராடியோரின் அழகு;
அந்தப் புத்தழகு பிற அழகுகளுடன் மிகுதியாகப் போட்டிபோட்டு நின்றது; மணப்பொருளுடன்,
மார்பிலிருந்து வழித்து எறியப்பட்ட சந்தனக் குழம்பால் ஆற்றோர மணல் சகதியாய்ப்போனது;
ஆடையிலிருந்து சிந்திய நீர்த்துளிகளால் கரை மழைபெய்த பூமியாயிற்று;
வானுலகம் தன் சிறப்பை இழந்தது, விழாக்காலத்து நீராட்டத்தால்;

உன்னால் இன்பமும், அழகும், ஆரவாரமுள்ள மூதூராகிய மதுரை மக்களுக்கு ,
பலவான நன்மைகளாய் அமைந்தன வையையே!
உன் புகழைக் கொள்ளமுடியாதது இந்த அகன்ற இடத்தையுடைய உலகம்.

# 13 திருமால்
நீலமணியைப் போன்று விளங்கும் மலையில் இறங்குகின்ற மஞ்சள்பூத்த மாலைக் கதிரவனின்
அழகிய செவ்வனப்பினைக் கொண்ட பூவேலைப்பாடான துகிலையும், அலங்கரிப்பட்ட திருமுடியினையும்,
செங்குத்தான மலைப்பகுதியில் இறங்கும், பொன்னையும் மணியையும் கொண்ட அருவியின்
நிறத்தோடு மாறுபட்ட மலர்மாலையினையும், கருடன் வரையப்பட்ட ஒப்பனை செய்த கொடியினையும்,
வானத்திலிருந்து காத்தலை மேற்கொண்ட முழுமதியைப்போன்று அழகு கொள்ள
குளிர்ந்த கருணையைக் கொண்ட, பகைவர்க்கு அச்சத்தைத்தரும் சக்கரப்படையினைக் கொண்ட திருமாலே!
கார்ப்பருவத்து பெரிய முகிலானது அணிந்துகொண்ட
இரு வேறுபட்ட ஞாயிறு, திங்கள் ஆகியவற்றின் பிரகாசத்தைப் போல
சக்கரத்தையும், சங்கினையும் ஏந்திய கைகளுடனே,

கூட்டமான மின்னல்கள் போன்று ஒளிர்ந்து பிரகாசிக்கும் பொன்னாரத்தை
அருவியின் நிறத்தைப் போன்ற முத்தாரத்தோடு அணிந்த உனது
அழகிய மலைபோன்ற மார்பினைத் தொழுவோர்க்கு
உனக்கு உரித்தாய்க் கொண்டிருக்கும் திருவைகுண்டமும் நன்கு உரிமையுடையது;
சுவை, ஒலி, ஒளி, நாற்றம், ஊறு ஆகிய
ஐம்புலன்களும் நீயே! பகைவரைக் கொல்லும் போரினையுடைய அண்ணலே!
அந்த ஐம்புலன்களையும் அறிந்துகொள்ளும் கருவியும் நீயே!
முன்னர் நாம் கூறிய ஐந்தனுள்ளும்
முதற்புலனாகிய ஓசையினால் உணரப்படும் வானமும் நீயே!
ஓசையும், ஊறும் ஆகிய இரண்டு புலன்களால் உணரப்படும் காற்றும் நீயே!

ஓசை, ஊறு, ஒளி ஆகிய மூன்றனால் உணரப்படும் தீயும் நீயே!
ஓசை, ஊறு, ஒளி, சிவை ஆகிய நான்கினாலும் உணரப்படும் நீரும் நீயே!
இவ்வைந்து புலன்களாலும் உணரப்படும் நிலனும் நீயே!
அதனால்,
உன்னையே சார்ந்திருப்பன மூவேழ் உலகின் உயிர்களும்,
அனைத்துக்கும் மூலமான ஆதிப்பொருளும், அறமும், முதன்மை என்பதைக் கடந்த
காலமும், வானமும், காற்றோடு தீயும்;
தன் நீலமேனியினின்றும் மாறுபட்ட வெண்மையான பாற்கடலின் நடுவே
மின்னல் போன்று ஒளிரும் ஒளியினையுடைய மணிகளோடே, ஆயிரமாய் விரிந்து நிற்கும்
பிளவுபட்ட நாவினையுடைய அரிய தலைகளையுடைய, காண்பதற்கு இனிய படுக்கையில்

துளசி மாலை அணிந்த யோகநித்திரையில் இருப்பவனும்,
வீரம் மிக்கு மிகுந்த முழக்கத்தோடு பகைவரைக் கொல்லுகின்ற படைகளுடன்,
தம் ஆற்றலையும் மீறி தன் மேல் படையெடுத்து வரும் பகைவரின் உயிரைப் போக்கும்
வெற்றி மிகுந்த ஆற்றலும், ஆரவாரத்தால் பொலிந்து தன்னால் அகழப்படும் புழுதியை உழுவது போல
பகைவரின் மார்பை உழுகின்ற வளைந்த வாயினையுடைய கலப்பைப் படையையும் உடைய பலதேவனும்,
இம் மண்ணுலகத்து மக்களின் நடுக்கம் தீர, பெரிய அடிப்பகுதிவரை சென்று நாட்டிய
பொன்னாலான மலரால் அழகிய மணிகளையுடைய மடலையுடைய பெரிய குமிழ் போன்ற பூணினைக் கொண்ட
பிரகாசமாய் ஒளிவிடும் கொம்புகளையுடைய ஆண்பன்றியும் ஆகி
மூன்று கடவுளராகப் பிரிந்த ஒரே முழுமுதற்கடவுளாகிய பெருமானே!
விரிந்த சிறகுகளைப் பல நிறங்களில் கொண்டதும், பாம்பின் பகையுமான கருடனைக்

கொடியாகக் கொண்ட மனக்கோட்டமில்லாத செல்வனாவாய்!
ஓதுவதற்கு இனிய வேதங்கள் கூறுகின்ற,
கருடச் சேவல் எழுதப்பட்ட மிகவும் உயர்ந்த கொடியையுடைய செல்வனே! நல்ல புகழினை உடையவன் நீ;
கருமேகம், காயாமலர், கடல், இருள், நீலமணி
ஆகிய இவை ஐந்தும் சேர்ந்த நிறத்தினை ஒத்த அழகு விளங்கும் மேனியையுடைவன்!
வலம்புரிச் சங்கின் முழக்கமும், வேதங்கள் ஓதும் ஒலியும், மேகங்களின் அதிர்ந்த ஒலியும், இடிமுழக்கமும்
ஆகிய நான்கையும் போன்ற அருளுடைமை, சினத்தல் ஆகியவற்றை நிலைக்களனாகக் கொண்டவை உன் மொழிகள்;
முடிந்துபோனதும், இனி முடியப்போவதும், இப்போது தோன்றியிருப்பதும் ஆகிய மூன்று காலங்களும்
கடந்து, அவை பொருந்தப்பெற்ற உன் திருவடிகளின் நிழலில் உள்ளவை;
நல்வினை, தீவினையாகிய இரு வினையின் பற்றுதலும் இல்லை, உன்னைப் போற்றும் உயிர்களுக்கு;

உயிர்களைக் காக்கும் ஒரு வினையில் பொருந்திய உள்ளத்தையுடையவன் நீ!
இலைகளைவிட்டு உயர்ந்தெழுந்து மலர்ந்த பெரிய இதழ்களைக் கொண்ட தாமரையைப் போன்றவை
உன் திருவடியும், கைகளும், கண்ணும், வாயும்;
உன் கைவளையும், தொப்புளும், தோளில் அணிந்திருக்கும் வளையமும்
திருவடியும், தோளும், உன் பிடரியுடனே பெரியனவாகக் கொண்டிருக்கிறாய்;
உன் மார்பும், பின்புறமும் உன் மனத்தோடு மிக்க பருமையுடையனவாகக் கொண்டிருக்கிறாய்;
உன் கேள்வியும், அறிவும், அறப்பண்புடன் மிக்க நுண்ணிதாகக் கொண்டிருக்கிறாய்;
வேள்வியில் விருப்பமும், வீரத்தில் வெம்மையும் கொண்டிருக்கிறாய்;
குன்றாத வலிமையினையும், சினவாத சிவந்த கண்களையும்
வெல்லும் போரினில் செருக்களத்தில் மேம்பட்டுநிற்கும் சக்கரப்படையையும் கொண்டுள்ள செல்வனே! 

நெருப்பினைப் போன்று மலர்ந்த வெட்சிப்பூவை இடையிட்டுத் தொடுத்த நறிய மாலையில்
முறுக்குடைய மலரையுடைய துளசி பொருந்திய மார்பினையுடையவனே!
உன்னை எம் அன்னையாகவே நினைத்து உன் திருவடிகளைத் தொழுகின்றோம்;
பலமுறை அடுத்தடுத்து உன்னை வேண்டுகின்றோம், வாழ்த்துகின்றோம் -
முன்னர் பல பிறவிகளில் நாம் செய்த தவத்தின் பயனாக -
இனிவரும் பல பிறவிகளிலும் எம் விருப்பம் இதுவே!

# 14 செவ்வேள்
மேகம் மிக விரைவான மழையைப் பெய்தலால், அதனை ஏற்றுக்கொண்ட
நீர் மிகவும் நிறைந்த சுனையில் பூக்கள் மலர்ந்தனவே!
குளிர்ந்த நறிய கடம்பின் மணங்கமழும் பூந்தாதுக்களை உண்பதற்காக
நிறம் மிக்க வண்டுகள் எழுப்பும் இசை, பண்களைப் போன்றிருந்தனவே!
உன் திருமுன்னர்க் கூத்தாடும் மகளிரின் தோள்கள்
நெடிய மலைச் சாரலில் உள்ள மூங்கில்கள் போன்றனவே!
வாகையின் ஒளிரும் பூவினைப் போன்ற கொண்டையைக் கொண்ட
மயில்களின் நிறைந்த அகவல் குரல், மணம்செய்துவிட்டுப் பின் பிரிந்துசென்றோரை
பிரிவை நீட்டிக்காது வாருங்கள் என்பவரின் கூற்றுப்போல் இருந்தனவே!

அன்றைக்குப் பூத்த கொன்றைச் சரங்கள் பொன்மாலை போன்றிருந்தன;
மெல்லிய பூங்கொத்துக்களையுடைய வேங்கையின் மலர் அகன்ற பாறைகளில் உதிர்ந்து பரவ,
அழுகின்ற மகளிர்க்குப் 'புலி புலி' என்று அச்சுறுத்திச் சொல்லும்படி இருந்தன;
நீர்நிலையின் அருகே தழைத்திருக்கும் சுருக்கங்களையுடைய அரும்புகளையுடைய காந்தளின்
நெடிய பூங்கொத்துக்கள் மலர்ந்த வளமையான இதழ்களின் வரிசைகள்தோறும்
கொழுந்துவிட்டுப் படர்ந்த கொடியில் தோன்றிய மென்மையான அழகுடைய தோன்றி
பவழம் போன்ற செந்நிறமுடைய மலர்கள் பரவிநிற்க,
கார்காலத்துத்தன்மை மிக்கது உன் குன்று! போரினை மேற்கொண்டு
சூரனை அவன் சுற்றத்தோடும் அழித்த ஒளிவிடும் வேற்படையையுடையவனே!
களங்கமில்லாத கார்காலத்து வெண்மேகம் பொங்கி எழுந்தாற்போன்று

நறிய பொருள்களால் எழுப்பப்பட்ட நறுமணப் புகையை மிகவும் விரும்புகின்றவனே!
ஆறு முகங்களும், பன்னிரு கைகளும் உடையவனாய், மணத்தால் மற்ற மலர்களை வெற்றிகொண்ட
நறிய மலரான வள்ளியம்மை என்ற மலரினை விரும்பியவனே!
தம்மைச் சேர்ந்த கணவர் தம்மைவிட்டு நீங்காமல் இருக்க, உன்னைப் பெண்கள்
இசையெழுப்பிப் பாடும் பாட்டை விரும்புபவனே!
நீ பிறந்த அந்த நாளிலேயே உன்னைக் கண்டு அச்சங்கொண்டு
தேவர்களெல்லாம் அஞ்சிய பெருமையை உடையவனே!
இருபிறப்பும், இருபெயரும் கொண்டு அருளுடைய நெஞ்சத்தினராய்
உயர்ந்த புகழைக்கொண்ட அந்தணர்களின் அறவாழ்வில் பொருந்தியிருப்பவனே!
அப்படிப்பட்ட சிறப்புகளைக் கொண்டவனாதலால். உன்னை விரும்பி நாம் உன்னை

அடுத்தடுத்து வழிபடுவதன் பயனாக,
மேலும் மேலும் அந்த வழிபாடுகள் இருப்பதாக,
தொன்மையான முதிர்ந்த மரபினையுடைய உன் புகழினும் பலவாக -

# 15 திருமால்
அறிவின் எல்லையே அறியாத மிகுந்த புகழோடு பொலிவுடன் விளங்கி,
நிலத்தின் எல்லையைத் தாங்கி நிற்கும் நிலைமையிலிருந்து நீங்காத,
அழிவற்ற சக்கரவாளம் முதலாக, தொன்மையான புகழ் அமைந்த
புலவர்கள் ஆய்ந்து கூறிய அழகுடன் உயர்ந்து நிற்கும் மலைகள்
பல என்றால், அந்த மலைகள் பற்பல என்பது உண்மையேயாயினும் அம்மலைகள் பலவற்றிலும்
இந்த நிலவுலகிற்கு உதவும் வகையில் பல பயன்களைத் எல்லாம்
எப்பொழுதும் தந்து நிலையாக அமைந்து விளங்கும் மலைகள் சிலவே!
அந்தச் சில மலைகளிலும் சிறந்து விளங்குவன தெய்வங்கள் விரும்பும்
மலர்களையுடைய அகன்ற பகுதிகளையுடைய மேகங்கள் படியும் உச்சிகளையுடைய

குலமலைகள் சிலவே! அந்தக் குலமலைகள் சிலவற்றிலும்
சிறந்தது, கல்லென்று ஒலிக்கும் நீலக் கடலும், கடலையொட்டிய வெண்மணற்பரப்பும் போலவும்,
பிரிவில்லாத சொல்லும் பொருளும் போலவும்
எல்லாமே வேறுபட்ட உருவத்தையும், தம்முள் வேறுபடாத ஒரு தொழிலையும் உடைய இருவரையும்
தாங்கும் பெரிய நிலைமையையுடைய புகழ் அமைந்த இருங்குன்றம் என்ற திருமாலிருஞ்சோலை;
மணங்கமழும் பூங்கொத்துக்களோடு கூடிய துளசிமாலையை அணிந்தோனாகிய நீ அளித்தால் அல்லாமல்
ஏறிச் சென்று அடைதல் எளிதோ, சிறப்பினைக் கொண்ட அந்தத் துறக்கத்தை?
அவ்வாறு அரிதில் பெறக்கூடிய துறக்கத்தை, மாலிருங்குன்றமானது
எளிதில் பெறக்கூடிய உரிமையை நல்கும்; போற்றித்தொழுவோம் மிக்க ஒலியுடன்;
பாம்பாய் நிமிர்ந்து நிற்கும் மென்மையான தலைகளைக் கொண்ட ஆதிசேடனின் அவதாரமாகிய பலராமன் மார்பில் உள்ள

வெண்கடம்பு மலர் மாலையைப் போன்று மாட்சிமை தோன்றக் காணப்பட்டு,
அசைகின்ற அருவிநீர் ஆரவாரித்து மிக்க ஒலியுடன் இறங்குதலால்
சிலம்பாற்றினை அழகு செய்ய, அழகு பொருந்திய திரு என்ற சொல்லோடும்
சோலை என்ற சொல்லோடும் தொடர்மொழியாக வருகின்ற மாலிருங்குன்றத்தில்
மக்கள் தாம் விரும்பும் இச்சைகளை உன்முன்னே விதைத்து, அதன் விளைவான பயனைக் கொள்வர்;
தன்னுடைய பெயரின் தன்மை நன்றாக இவ்வுலகத்தில் பரவிநிற்க,
கூதிர் யாமத்தைத் தன் இயல்பாகக் கொண்ட இந்த வியக்கத்தக்க இருங்குன்றத்தில்,
நிலையான குளிர்ச்சியையுடைய இளவெயில் தன்னைச் சூழ்ந்து நிற்க, உள்ளே இருள் வளர்ந்திருப்பதைப் போல்,
பொன்னால் புனையப்பட்ட ஆடையினை அணிந்திருப்போன் தன் முன்னோனுடன் சேர்ந்து அமர்ந்திருக்கும் நிலையை
நினையுங்கள் மாந்தர்காள்! கேளுங்கள்! மணம்பொருந்திய அதன் சிறப்பை!

சுனைகளிலெல்லாம் நீலப்பூக்கள் மலர, சுனையைச் சூழ்ந்துள்ள
மரக்கிளைகளிலெல்லாம் அசோக மலர்கள் பூத்திருக்க, காய்களும் கனிகளும்
கலந்து திகழ, அரும்புகளைக் கொண்ட வேங்கை மரத்தில் ஒளிரும் கொத்துக்களாய் பூக்கள் மலர,
இவ்வாறு இந்த மலை திருமாலைப் போன்ற இனிய நிலையினைக் கொண்டிருக்கிறது;
அங்குச் சென்று தொழுதுகொள்ளுங்கள்! அதனைக் கண்டு பணிந்துகொள்ளுங்கள்!
இருங்குன்றம் என்ற பெயர் பரந்த அந்த மலை
கடல்சூழ்ந்த நிலவுலகில் தொன்மையான இயல்பையுடைய புகழினைக் கொண்டது;
அதனைக் கண்ட அளவில் காண்போரின் மயக்கத்தைப் போக்கும் வழிபடும் கடவுள் அது;
குட்டி இறுகப்படித்துக்கொண்ட குரங்கு மலைக்கு மலை தாவ,
அரும்புகள் நெருங்கியிருக்கின்ற முல்லை மகளிரின் முறையாக நடக்கின்ற கற்புநெறியைக் காட்ட,

நீலமணியைப் போன்ற நல்ல இயல்பினைப் பெற்ற, கிளைகளில் இருக்கும் இளம் மயில்கள் அகவ,
குருக்கத்தி இலைகள் உதிரும்வண்ணம் குயில் கூட்டங்கள் கூவ,
சுருதியை உணர்த்துகின்ற குழலும் தாளமும் ஒலியெழுப்பும்போது, பாடுவோர்
நாவால் இசைத்துப் பாடும் பாடலானது முழவின் இசையை எதிர்கொண்டது போல
மலைக்குகைகளில் முழங்கி எதிரொலிக்கின்ற இசை முடிவின்றி ஒலிக்கும், பகைவரை
வென்று அவரை அழித்தவனின் நிறத்தையுடைய இருங்குன்றத்தில்;
உங்கள் மனைவியரோடும், உம்மைப் பெற்ற தாய்தந்தையரோடும்
கைக்குழந்தைகளோடும், உம்மேல் அன்புகொண்டவரோடும்
தெய்வமாக எண்ணி வணங்கி, அம் மலை இருக்கும் திசையைத் தொழுதவாறு செல்லுங்கள்;
தனது தொப்புள்தாமரையைப் போன்ற கண்ணையுடையவன்,

நம்மைக் கவ்விக்கொள்ளும் கரிய இருள் போன்ற நீலமணி நிற மேனியன்,
எல்லா உலகங்களிலும் வெளிப்பட்டு, அங்கங்குள்ள
உயிர்களின் மயக்கம் தரும் துன்பத்தைக் களைவோன்,
அன்பு பொருந்தியவனாய் இருங்குன்றத்தில் இருப்பவன்;
தேன் துளிக்கும் பசிய துளசிமாலையை அணிந்துள்ளாய்; கரிய மலையைப் போன்றிருக்கின்றாய்;
மிகுந்த ஒளியினையுடையவனாயிருக்கிறாய்; ஒப்பற்ற குழையினை அணிந்திருக்கிறாய்;
கருடப்பறவை எழுதிய அழகிய பொன்னாலான கொடியினைக் கொண்டிருக்கிறாய்;
கூர்மை வாய்ந்த வளைந்த கலப்பையினை வைத்திருக்கிறாய்;
சினம் பொருந்திய தண்டாகிய படைக்கலத்தைக் கொண்டிருக்கிறாய்;
வலம்புரிச் சங்கோடு வெற்றி மிக்க சக்கரப்படையையுடையவனாயிருக்கிறாய்;

வரிந்த வில்லுடன் வெற்றி மிக்க அம்புகளையும் கொண்டிருக்கிறாய்;
புள்ளிகள் நெருக்கமாய்ச் சூழ்ந்திருக்கும் சுழல்வட்டத்தையும், புள்ளிகளுடைய வாளினையும் வைத்திருக்கிறாய்;
என்று இவ்வாறாக
தனக்கு நன்மை விளைவதை விரும்பி, அழகிய ஒழுங்கையும், பெருமையையும் உடைய வேதம்
அவரின் பெருமை இப்படிப்பட்டது என்று சொல்லுவதால், எமது உள்ளத்தில் விரும்பி இசைத்து, இறைவனே!
திருமாலிருஞ்சோலையின் அடியினில் வாழ்கின்ற பேறு அமைக என்று,
பெரும் புகழையுடைய இருவராகிய கண்ணனும் பலராமரும் ஆகிய உம் அடிகளைப் போற்றித் தொழுகின்றோம்.

# 16 வையை
வையை ஆற்றின் கரைகளில், வள்ளண்மை உடைய பாண்டியனின் ஈகையைப் போன்றதாக,
முகில்கள் படியும் மலைச் சாரல்களிலுள்ள மிளகோடும், சந்தனமரங்களோடும்,
வெண்ணெய் எடுப்பதற்காகக் கடையப்படும் தயிரைப் போன்ற நுரையோடும், பிறபொருள்களோடும்,
எல்லாவிடங்களிலும் மேலும் மேலும் வந்து குவிக்கும்;
நீராடும் துறைகளில், முத்துக்களை ஒன்றாகக் கட்டிய வடம், தலைக்கோலம் என்ற முத்தணி,
பொன்னால் செய்யப்பட்ட ஒளிரும் அணிகலன்கள், கலங்கலான அழகிய நீரைப் போன்ற சிவந்த மணிகள்,
ஆகியவை, வலமாகச் சுழித்துக்கொண்டு வரும் சுழியினால் உந்தப்பட்டுவர, வீட்டைவிட்டுத் தனியே வந்து நீராடும் சிறுவரின்
மெல்லிய தலையுச்சியில் இருக்கும் முஞ்சம் என்னும் அணிகலனோடு அவை சேர்ந்துகொள்ள,
தத்தம் காதல் துணைவரோடு ஒன்றுகூடி நீராடுகின்ற

செவ்வரியும், கருவரியும் படர்ந்த கண்களையுடைய மகளிர் நீர்த்துறைதோறும் வருவர்;
வயல்கள், ஆற்றுநீரில் தூவப்பட்ட மலர்களைச் சுமந்துகொண்டு வந்த பொலிவுள்ள நீர் வந்து நிறைதலால்,
ஓங்கியடிக்கும் கண்களைக் கொண்ட இசைக்கருவிகளின் ஒலியினையும், பாட்டினையும் பயின்ற கூத்துமகளிர் ஆடுகின்ற
மகிழ்ச்சிமிக்க நாளில் இயற்றப்பட்ட ஆடலரங்கின் ஒப்பனைசெய்யப்பட்ட அழகினைப் போன்று விளங்கின;
சோலைகள், வண்டுகள் ஒலியெழுப்பும் பூந்தாதுக்களுடனே ஆங்காங்கே நிறைந்திருக்கின்ற
நரந்தம் போன்று மணக்கும் நறிய மலர்களை நன்கு அளிக்கும் -
அது ஆரவாரத்துடன் செல்லும் இனிய ஆற்றுநீருக்கு எதிர்விருந்து அளிப்பது போலிருந்தது;
நறுமணத்தைப் பரப்பும் அழகிய சோலைகளிலும், குளங்களிலும், ஆற்றுநடுவே இருக்கும் மேடுகளிலும் வண்டுகள்
கள்ளுண்டு பாடும்படி, திசைகள்தோறும் பூக்களால் ஆகிய அழகு
பூத்து நின்றது, வையையின் புதுநீர் வரவால்;

பீச்சாங்குழலைக் கொண்ட தோழியர் சுற்றிலும் வளைத்துக்கொண்டு ஒரு பரத்தையின் மீது சாய நீரைப் பாய்ச்ச,
அதனால், சிறிய இளநீரைப் போன்ற முலைகளில் பட்ட அந்தச் சாயநீரைத் துடைக்காமலிருந்தவள்,
பெருந்தகையான தலைவன் வருவதனைக் கண்டு,
நீண்ட துகிலின் முந்தானையால் நீத்துளிகளை ஒற்றியெடுக்க, "கிட்டே வராதீர்,
அவள் பூப்பெய்தியிருக்கிறாள், நீங்குக என்று தோழியர் பொய்யாகக் கூறினராக,
பூப்பெய்திய தோற்றத்தைப் போலிருந்தும், அவள் மீதிருந்த மலர் போன்று மணங்கமழும் சந்தனத்தின்
மணத்தால் பூப்பின்மையையை அறிந்து, அவரின் பொய்யாடலுக்காக நகைத்து அவ்விடத்தை விட்டு நீங்கி,
பெரிய கடலை நோக்கி விரைந்து செல்லும் ஆற்றினைப் போல சிறிதும் தங்காமல் விரைந்து கரையேற
அவன் மகிழும்படி, களிப்பு மிக்க தேனால் சமைக்கப்பட்ட தேறலை அவனுக்குத் தர, அவன் அதனை மறுத்து,
அவள் மீது படிந்திருக்கும் சாயநீரைத் துடைப்பான்போல் கிட்டே சென்று அவளைத் தழுவிக்கொள்ள, அத் தோழியர்

மீண்டும், பூப்பெய்தினாள் நம் நங்கை, அவள் சிறக்க என்று நகையாட அதற்கு அவள் நாணிநிற்றலாகிய நிகழ்வை
ஏற்படுத்திக்கொடுத்தது வையையின் நீர் வரவு;
மலையிலிருந்து இறங்கும் அருவிநீர், செழித்த பூங்கொத்துக்களை இடமெல்லாம் கொண்ட
கரைமரங்களைச் சேர்ந்து அவற்றின் நிழலால் அழகுபெற்று, நீராடும் பெண்களின்
அரும்புகள் சேர்ந்த கூந்தலுக்குள் இருக்கும் குளிர்ந்த மலர்களும், மைந்தர்களின்
அகலமான மார்பிலிருந்து உதிர்ந்து விழுந்த மலரிதழ்களும் கலந்து பரவி,
விண்மீன்கள் முத்தாரமாய்ப் பூத்துக்கிடக்கும் அகன்ற ஆகாய கங்கை பெருக்கெடுத்தோடும்
வானம் பெயர்ந்து இங்கே பக்கத்தில் வந்தது போன்றிருப்பது எந்நாளுமே
வண்டுகள் மொய்த்து ஆரவாரிக்கும் வையை ஆற்றின் இயல்பு;
கள்ளுண்டதாலும், நீராடியதாலும், கணவருடன் ஊடியதாலும் ஆகிய மூன்று காரணங்களினால்

மகளிரின் ஒளிமிக்க மையுண்ட கண்களாகிய கெண்டைமீன்கள் தம் சிவந்த ஒளி மேலும் சிவந்து நிற்க,
பலவரிகளைக் கொண்ட வண்டுக்கூட்டம் தம் வாயினைச் சூழ்ந்துகொண்டு மொய்க்கும் அழகுடன்
சற்றுநேரத்தில் தூக்கியெறியப்படும் தன்மையுள்ள பூக்களினின்றும் தேன் சொரிய, மிக்க நீரில்
மீண்டும் மீண்டும் நீராடும் பரத்தையரைத் தழுவியதால், குழைந்துபோய்
உருக்குலைந்துபோன கத்தூரிச் சாந்து நிறைந்த மார்பினையுடைவன்,
காற்றால் எடுக்கப்பட்ட காட்டுமூங்கில் மேலாக நிமிர்ந்து உயர்ந்து தாக்கியதால்
தேன் சேர்த்து வைத்திருந்த கூடு தேனைச் சொரிகின்ற பாறையைப் போல தோற்றங்கொள்ளச் செய்வது
கொடிகளையுடைய தேரினைக் கொண்ட பாண்டியனின் வையைக்கு இயல்பு;
மலைகளில் முழங்கும் மேகங்கள்; அந்த அளவில், கரைகளில்
அலைகளோடு வந்துமோதும் இந்த இனிய நீர்;

தலையில் கண்ணியையும், கழுத்தில் மாலையையும் சூடிய ஆடவரும், மணங்கமழும் மாலையணிந்த மகளிரும்,
செய்த ஈகையின் பயனைப் பெறுவதற்காக, நீராடுதலால்
நாள்தோறும் அவர் கொணர்ந்த காணிக்கைப் பொருள்களும், நறிய சந்தனமும், மலர்மாலைகளும்
பொலிவுற்ற அகிற்புகையும், பலியுணவும், குறையாமலிருக்கும்பொருட்டு
மறவாதிருக்கட்டும் வானம், மிகுந்த பெருக்கினைத் தந்து வெள்ளம்
வற்றாது இருக்கட்டும் வையையே உனக்கு.

# 17 செவ்வேள்
தேன் விளையும் மலர்கள், இளந்தளிர்கள், பூவேலைப்பாடமைந்த துகில், வார்த்த மணி,
ஏந்துகின்ற இலைவடிவையுடைய வேல் ஆகியவற்றைச் சுமந்துவந்து, சந்தனம் தெளித்து
ஆட்டுக்கிடாய் அடியிலே கட்டப்பட்ட வேலனின் சிறப்புமிக்க கடம்ப மரத்தை
சொற்களால் புகழ்ந்தவராய், இசைக்கருவிகளினின்றும் எழுப்பப்பட்ட இசையினையுடையவர்,
மலர்ந்த பூக்களினின்றும் ஒழுகும் தேனினால் மரங்கள் நனைந்துபோகும் திருப்பரங்குன்றத்தில்,
தீப்பந்தம், இசைக்கருவிகளின் ஒலி, மணப்பொருள்களின் மணம், நறிய புகை, சேவற்கொடி, ஆகியவை ஒன்றாய் எழ
மாலைநேரந்தோறும் உன் திருவடியில் தம்மை ஈடுபடுத்தி வழிபடுபவருள்
தேவர்கள் உலகத்தில் உறைவதை வேண்டுபவர் யாரிருக்கக்கூடும்?
ஒருபக்கம் பாணர்களுடைய யாழின் இனிய குரல் எழுந்தவண்ணம் இருக்கும் - அதற்கு மாறாக

இன்னொரு பக்கம் புதுமலரை மொய்க்கும் வண்டுகள் இமிரும் ஓசை எழுந்தபடி இருக்கும்;
ஒருபக்கம் கணுக்கள் நிறைந்த குழலின் இசையொலி எழுந்தவண்ணம் இருக்கும் - அதற்கு மாறாக
இன்னொரு பக்கம் பண்ணின் அமைதியுடன் ஒலிக்கும் தும்பிகள் எல்லாவிடங்களிலும் இசைத்துப் பறக்கும்;
ஒருபக்கம் மண்பூசப்பெற்ற முழவின் முழக்கம் எழுந்தவண்ணம் இருக்கும் - அதற்கு மாறாக
இன்னொரு பக்கம் பெருமை மிக்க உயர்ந்த மலையிலிருந்து அருவி நீர் பேரொலி எழுப்பி நிற்கும்;
ஒருபக்கம் பாடலில் தேர்ந்த விறலியர் வளைந்து அசைந்தாடி நிற்பர் - அதற்கு மாறாக
இன்னொரு பக்கம் வாடைக்காற்று வருடிக்கொடுப்பதால் பூங்கொடிகள் வளைந்து அசைந்தாடும்;
ஒருபக்கம் பாடினி பாடுகின்ற பாலைப் பண்ணாகிய வாய்ப் பாட்டின் கூறுபாடுகள்
நெடிய கிளர்ச்சியுடையதாய் இசைநயத்துக்குரிய நிறையும் குறையும் பெற்று ஒலிக்கும் - அதற்கு மாறாக
இன்னொரு பக்கம் ஆடுதலில் சிறந்த மயில்களின் அரிக்கின்ற குரலோசை வெளிப்படும்;

இவ்வாறு ஒன்றற்கொன்று மாறுபட்டு நிற்கும் தன்மையுற்றன போன்ற மாறுபாடுகளை ஏற்றுக்கொள்ளுதலை
பகைவரை வென்றவனாகிய முருகனின் குன்றம் உடையதாகும்;
புலவரின் பாடலால் சிறப்புப்பெற்று, பல்வேறான புகழ் முதிர்ந்து விளங்கிய
மதுரை நகருக்கும், பரங்குன்றினுக்கும் இடைப்பட்ட வெளியானது,
மணங்கமழும் நறிய சாந்தினை பூசிக்கொண்ட ஆண்களும் பெண்களும் விளையாடிக்கொண்டே வருவதால்,
மிகவும் சிறிது தொலைவினதேயாயினும், நெடுந்தொலைவுள்ளதாயிற்று;
மகிழ்ச்சி மிக்க தேன் துளிக்கும் மாலையணிந்தவரின் கூந்தலிலிருந்தும், குடுமியிலிருந்தும்
விழுந்து அவிழ்ந்துபோன மாலைகளால் நடப்பதற்குரிய வழி இல்லையாயிற்று;
குற்றமற்ற மெய்ச்சொற்களாலும், வேள்விகளாலும்
எல்லாத் திசைகளிலும் உன் புகழ் பரவிய குன்றினில் கோயில்கொண்டிருந்து, பலகாலமாய்

முருகன் ஆவியாகக் கொள்கின்ற, அகிலிட்டு எழுப்பிய மணங்கமழும் புகை
இடங்கள்தோறும் மிகவும் மேலுயர்ந்து போவதால், கண்ணிமைக்காத வானவர்கள் கண்ணிமைத்து அகல,
ஞாயிற்று மண்டிலமும் காணமுடியாததாயிற்று;
வளையலணிந்த முன்கையையுடைய, வளைவாக இறங்குகின்ற தோள்களையுடைய மகளிரும்,
அணை போன்ற அவரின் மென்மையான தோள்களில் தங்கி அவரோடு அன்பில் ஒத்தவரும்,
மாலையணிந்த மார்பினையும் இயற்கை அழகும் உடைய ஆடவரும்,
குளிர்ந்த மாலையை அணிந்த இயல்பான அழகுடையாரும்,
மனத்தில் மகிழ்ச்சி மிகுந்து பாய்ந்து ஒருசேர நீராடுதலால்
சுனைகளிலே உள்ள மலர்களில் தாதினை ஊதும் வண்டுகள் அவ்வாறு ஊதல் செய்யாமற்போகும்;
அத்தன்மையது திருப்பரங்குன்றத்தின் அழகு;

உழவர்களின் வயல்களில் பரவுகின்ற நெடிதாய் வீழும் வெண்மையான அருவி பரவி ஓயாது;
குன்றின் மேலுள்ள மகளிர் விளையாடுதலால் உதிர்கின்ற நீலமணிகள் வயல்களில் சேறுபடச் செய்யும்;
தெய்வங்களுக்காக எடுக்கப்பட்ட விழாக்களும், ஒழுங்குமுறைப்பட்ட புதுநீராடலும்,
அழகிய வெள்ளிய அருவி அணிசெய்யும் திருப்பரங்குன்றத்துக்கும்,
தொய்வுபடாத பெருமை மிக்க சிறப்பையுடைய வளம் சிறக்கும் வையைக்கும்,
கொய்யப்பட்ட பிடரிமயிரினையுடைய குதிரைகளைக் கொண்ட தேர்களுடன் மீன்கொடி பறக்கும் தேரினனின் மதுரைக்கும்,
தத்தமக்குக் காரணங்களாயும் காரியங்களாயும் தடுமாறிவருதல் நன்மையாக அமைந்தது;
என்று இவ்வாறு இருக்க,
நீலமணியின் நிறத்தையுடைய மயிலினையும், உயர்ந்த கோழிக்கொடியினையும்,
பிணிமுகம் என்ற யானையில் ஏறிச் செய்த வெற்றியையுடைய போரினையும் உடைய இறைவனே!

மனிதரைப்பாடும் பணிமொழிகளை ஒழித்து, உன் புகழைப் போற்றி,
அழகிய நெடிய குன்றத்தினைப் பாடியவராய்த் தொழுகின்றோம்,
அவற்றை நாமும் என் சுற்றமும் வணங்கித் துதிக்கிறோம்,
இன்பம் நிறைந்த நாட்களைப் பெறக்கடவோம் யாம் என்று.

# 18 செவ்வேள்
போரை எதிர்கொண்டு அதனை ஏற்றுக்கொண்டோரின் வலிமையால் உண்டான செருக்கை அழித்து,
கார்காலத்தை எதிர்கொண்டு அதனை ஏற்றுக்கொண்ட நிறைவான சூலையுடைய மேகத்தைப் போல
நீரைப் பரந்து ஏற்ற நிலம் தாங்குகின்ற கடற்பரப்பில்
கொடுமையுடன் பரந்து சுற்றிய சூரபன்மாவை அழித்த வேலினையுடையவனே! உன்னுடைய
புகழைப் பரந்து பெற்று விளங்கும் இமயமலையுடன் நேர்நின்று
மாறுபடுதலை ஏற்கும் இந்தத் திருப்பரங்குன்றம்;
சிறப்பான ஒளியினைக் கொண்ட மணி போன்ற புள்ளியினையுடையதாய் ஆடுகின்ற மயிலைப் பார்த்துத் தன்
உள்ளத்துள் ஏதோவொன்றை நினைக்கும் தன் காதலனைக் கண்டாள் அழகிய நெற்றியையுடையவள்,
"உன் உள்ளத்துள் எண்ணியதை அறிவேன், அதனைச் சொல் இப்போது, நீ என்னை

இகழ்வதை மறைக்கவேண்டாம்" என்று சொல்பவளை, பேச்சை மாற்றி, அந்தக் காதலன்
"காதலியே! உன்னுடைய மேனிவனப்பைக் களவாடிவிட்டதாக எண்ணிக் களிப்புற்றதாய் மகிழ்ந்து
அறிவின்றி இருக்கும் இந்த மயிலைக் கண்டு நான் நோக்க, நீ என்னைப்
பகைமையோடு பார்க்கிறாய்" என்று அங்கு அவளைத் தெளிவித்தல்
அழகிய தேரினையுடைய பாண்டியனின் குன்றத்தின் இயல்பு;
ஐந்து வளங்களும் பொலிந்து விளங்கும் அழகு பொருந்திய திருப்பரங்குன்றத்தில்,
நிரம்ப மை தீட்டப்பெற்ற, மலரின் அழகு பொருந்திய, குளிர்ச்சியையுடைய கண்களையுடைய மகளிரின்
கைநகங்கள் ஏற்படுத்திய வடுக்களைப் பார்க்கவில்லையா நீ?
அந்தப் பரத்தையரின் இறுகல் மிகுந்த முயக்கத்தை நாம் நன்கு அறிந்துகொண்டோம்,
மேனி மிகவும் பொலிய விரும்பத்தகுந்த பொன் அணிகலன்களை அணிந்திருப்பவனே!

நைவளம் என்னும் பண் எழுகின்ற யாழ்நரம்புக்கு இயைந்த தாளத்துடன், பொய்யை மிகுதியாய்த்
தோற்றுவிக்கிறது, பாணனே! உன் பாட்டு;
குளிர்ந்த தளிரை மரங்களில் தோற்றுவித்து அதனை உலகுக்கு எடுத்துரைப்பது போல்
இருண்ட மேகங்கள் முழங்குகின்ற வெற்றியையுடை மலையும்,
கண்களைக் கூசவைத்து, சுடர்விட்டு, நெருக்கமாக அமைந்து, பெயர்த்து
இருளைக் கிழிக்கும் கொடி மின்னலும்,
வெள்ளிய ஒளிகொண்ட வேலையுடைய செவ்வேளே! விரைகின்ற மயிலின் மேலிருக்கும் ஞாயிறே! உன்
ஒளிர்ந்து சுடர்விடும் முகபடாத்தையுடைய களிற்றினைப் போன்றிருக்கும், அப்படியான உன் குன்றிலிருக்கும்
ஓவியம் எழுதப்பட்ட அழகையுடைய அம்பலம், காமவேளுடைய அம்பின்
தொழில் வீற்றிருக்கும் மண்டபமாகத் திகழும்;

அழகு ததும்பும் கூர்மையான அம்புகள் நிறைந்த அம்பறாத்தூணி யாக இருக்கிறது
தெய்வமகளிர் நிறைந்த மலையிலிருக்கும் சோலை;
அங்கே மேகங்கள் பொழியும் நீரால் நிறைந்துவழியும் சுனை;
அவற்றின் அழகு ததும்ப விளங்குகிறது மலர்களின் அழகிய செறிவு;
போரில் தோற்றுக் கட்டப்பட்டவரின் கைகளைப் போன்று இருக்கும், கார்காலம் தோற்றுவித்த
காந்தள்கள் செறிந்த கவின்;
காந்தளின் கவின்பெறு மொட்டுக்களைத் தும்பி கட்டவிழ்க்க, அவை யாழின்
முறுக்கினை நெகிழ்விப்பாரின் கைகளைப் போன்று விளங்கும்;
முன்பனிக் காலத்தில் ஆரவாரித்துடன் அழகிய மேகம் தோற்றுவித்தது
இந்திரனின் வானவில்லை;

அந்த இந்திரவில்லிலிருந்து புறப்படும் அம்புகளைப் போல் மெல்லிய மலர்களைச் சொரிந்து பரப்பின -
சூதாட்டத்தில் வல்லவனே! உன் மலை மேலிருக்கும் மரங்கள்;
சூதில் வட்டு உருட்டுவதில் வல்லவனே! உன் மலையில், நெட்டுருட்டு என்னும்
தாளவகை மிகுந்து ஒலிக்கும் ஒலியுடன் சிறந்து,
போரில் மிகுத்து எழும் ஆரவாரம் போல
இசைக்கருவிகள் ஆரவாரிக்க, கூட்டமான மேகங்களும் அவற்றுடன் முழங்கி நின்றன;
அருவி ஆரவாரத்துடன் விழுவதால் முத்துமாலை அணிந்தது போல் இருக்கிறது உன் மலை;
குருவிகள் ஆரவாரத்துடன் வந்து மொய்க்குமாறு தினைக்கதிர்கள் முற்றிக் குவிந்திருக்கும்;
கரையிலிருந்து வளைந்து சாயும் கொறுக்கச்சிப் புற்கள் வந்து கோத்துக்கொள்ள, அழகுற்ற இந்திரவில்லை
வானில் வளைத்தது போல் அழகுடையவாயின வண்டுகள் ஊதும் பலதிறப்பட்ட மலர்களால்

கூனற்பட்டு வளைவான அமைப்பைக் கொண்டிருந்த சுனை;
முறுக்குற்ற யாழ்நரம்பின் இசையும், இயல்பாடல்களும் சேர்ந்து,
வேத ஒலியும், மலர்களும், விளக்குகளும் கூடி,
நெருப்பிலிடப்பட்டுப் புகையும் அகிலோடு சந்தனப்புகையும் கமழும்
போர் வெற்றியினையுடைய வேற்படை ஏந்திய செல்வனே! உன் திருவடியில் வாழ்வதை
உரிமையோடு சொந்த ஊரில் இருப்பது போல்,
நீங்காமல் இருக்கவேண்டும், எம் சுற்றத்தாரோடு கூடி.

# 19 செவ்வேள்
இந்த நிலவுலகமாகிய கடல்சூழ்ந்த பகுதியில் வாழ, வானவர் உலகில் வாழும் அதே விருப்பத்தைக் கொண்டு
அறிவின் எல்லையால் அறியப்படாத புகழையுடைய கடம்ப மரத்தில் பொருந்தி,
அரிய முனிவர்களின் மரபில் வந்த ஆன்றோர்கள் உன்னைத் தொழுது இன்புறும் இன்ப நுகர்ச்சியை, இந்தப்
பெரிய மண்ணுலகத்தவரும் துய்க்க என்று எழுந்தருளிய உன்
குளிர்ந்த திருப்பரங்குன்றத்தில், இயற்கை அழகும் அணிகளின் அழகும் பொருந்திய உன் பக்கத்தில்
மணவிழாக்கொண்டு முறையாகப் பெற்ற விண்மகளாகிய தேவயானையுடன்
மாறுபட்டது போன்றது மயிலின் சாயலையும் பூங்கொடியின் மென்மையையும் கொண்ட வள்ளியுடனான திருமணம்;
சொற்போர், மறப்போர் ஆகிய போர்களில் தோல்வியுறாத மதுரை மக்கள்
புணர்ச்சியின்பத்தோடு பொருந்திய இரவு முடிந்த எல்லயாகிய அதிகாலையிலே,

அறவினைகளைப் பெரிதும் செய்து, அதன் பயனைத் துய்ப்பதற்காக
வானோர் உலகத்துக்கு மகிழ்ந்து செல்வார் போல,
தமக்குரிய மாட்சிமையுடைய அணிவதற்குரிய கலன்களையும், ஒளிரும் துகில்களையும் அணிந்துகொண்டு
கண்டோர் விரும்பும் மாண்புள்ள குதிரையில் செல்வாரும், நல்ல ஓட்டம் அமைந்த தேரில் செல்வாரும்,
தெரிந்தெடுத்த மலர்களைக் கொண்ட மாலை அணிந்தோரும் தெருவில் படர்ந்த இருளைத் தேய்த்து அகற்ற, உன்
குன்றத்திற்கும், கூடல்மாநகருக்கும் இடைப்பட்ட வெளியெல்லாம் ஒன்றாகி,
ஒத்த பூக்களை நிறைய வைத்துப் பெரிய நிலமகளுக்குச் சூட்டிய
மாலை போன்றதானது, மலர்மாலை அணிந்த தலைகளின் நிறைவான நெருக்கத்தால், குளிர்ந்த மணற்பரப்பில்
ஆரவாரிக்கும் கடலின் முழக்கத்தைக் கொண்டுள்ளது அந்தப் பயணம் செல்கின்ற வழி;
திங்கள் தன்னோடு சூழ்ந்துவரும் விண்மீன்களோடு மேருவின்

பக்கத்தே சுற்றிவரும் சூழலானது - அறிவிற் சிறந்த பாண்டியன்
இளமையான மயில் போன்ற தன் மனைவியரோடும்,
தமக்குரிய கடமைகளை நன்கு அறிந்து செயல்படும் கண்களைப் போன்ற அமைச்சர்களோடும், உன்
சூரர மகளிர் வாழும் குன்றின் உயர்ந்த மலையில் ஏறி, மேலே
பெருமையுண்டாக வலமாக வருகின்ற பண்பினோடே, பழமைச் சிறப்புள்ள் மதியினைச்
சூடியவனாய், அசைகின்ற, தோள்மீதுள்ள துகிலினை உடையவனாய்,
உன்னைப் புகழ்ந்து பாடும் நாவினையுடையவனாய், மிகுந்த மகிழ்ச்சியுடையவனாய்,
நாட்டிலுள்ளோரும், நகரத்திலுள்ளோரும் வந்து நெருக்கமாய்ச் சூழ்ந்திருப்பதை ஒத்தது -
ஒலிக்கின்ற மணிகளைக்கொண்ட யானையையுடைய நெடியவனே! நீ எழுந்தருளிய
திருக்கோயிலைச் சுற்றிவருதலைச் சொல்லும்போது;

வண்டுகள் தொடர்ந்து மொய்த்துக்கொண்டுவரும் கன்னங்களையுடைய யானைகளின் கால்களில் சங்கிலியைப் பிணித்து,
கச்சை அணிந்த புரோசக்கயிற்றினால் கழுத்தைச் சுற்றிக் கட்டி அந்த யானைகளை மரத்தில் கட்டுவர்;
பெரிய மாலையை அணிந்த குதிரைகளை வழியைவிட்டு ஒதுக்கிக் கட்டுவர்;
திண்ணிய தேர்களை வழியிலிருந்து அப்பாற்சென்று நிறுத்துவார்; துண்டிக்கப்பட்ட
கரும்பினையும் சோற்றுக் கவழங்களையும் அந்த யானைகளுக்கு ஊட்டுவர்; இவை வரிசையாய் நிற்க,
குதிரைகள் நிமிர்ந்து செல்லும் படையினை உடையோனாகிய பாண்டியனின் போர்ப்பாசறையின் தன்மையுடையதாயிற்று,
கிரவுஞ்சப் பறவையின் பெயர் கொண்ட மலையை உடைத்த வேலினையுடையவனே! உன் குன்றத்தின் கீழ் நின்ற
இடைப்பட்ட நிலத்தை யாம் புகழும் முறை;
குரங்குகளுக்கு உண்பதற்காகப் பலகாரங்கள் கொடுப்போரும்,
கரும்பினைக் கரிய முகமுடைய முசுக்கலைக் கூட்டத்துக்கு அளிப்போரும்,

தெய்வத்தன்மையுள்ள பிரமவீணையினை இசைப்போரும்,
விரல்களைத் துளைகளில் வைத்து இசைக்கும் வேய்ங்குழலைக் கொண்டிருப்போரும்,
யாழில் இளி, குரல், சமம் ஆகிய இசைவகைப் பண்களை மீட்டுவோரும்,
முருகனுக்காகச் செய்யப்படும் வேள்வியின் அழகுத்தன்மையைப் புகழ்வோரும்,
யாழ்நரம்புகளின் இசை 'கொம்'மென்று ஒலிக்க,
அதனுடன் பொருந்தும்படி முரசின் ஒலியை எழுப்புவோரும்,
ஞாயிறு முதலாக வரும் நாள்மீன்களையும் கோள்மீன்களையும் உடைய சுடர்ச் சக்கரத்தைப்
பொருந்திய கோள்களின் நிலையைத் தீட்டிய ஓவியங்களைப் பார்த்துக்கொண்டிருப்போரும்,
இரதி இவள், காமன் இவன் என்று
காமவயப்பட்டிருப்போர் எழுப்பிய வினாக்களுக்கு விடையிறுப்போரும்,

இந்திரன் இந்தப் பூனை, இவள் அகலிகை , இவன்
வெளியில் சென்ற கவுதமன், இவன் சினங்கொள்ள கல்லுருவம்
அடைந்த வகை இது என்று விளக்கிச் சொல்வோரும்,
இன்னும் பற்பல ஓவியங்கள் நிலைபெற்ற மண்டபங்களை
அருகேசென்று சுட்டிக்காட்டவும், அவற்றை விளக்கி அறிவுறுத்தவும்,
செம்மையான மூங்கில்களையும், அகன்ற பாறைகளையும் உடைய அகன்ற இடங்களில் இயற்றலால்
பெரிதும் மங்கலமான நிலையை உடையதாயிற்று தெளிவான திருப்பரங்குன்றத்து
திருமால் மருகனாகிய எழுந்தருளியுள்ள மாடத்தின் பக்கம்;
தான் பிறந்த சுற்றத்தாரினின்றும் பிரிந்து ஓர் அறியா இளம்பெண்
செறிவான பாறைக்கற்களுக்கு இடையிடையே புகுந்து, வழிதவறி, நான்

வந்த வழியை மறந்துவிட்டேன் என்று தன் பெற்றோரை,
"ஏஎ ஓஒ" என்று தன் அவர் கேட்கும்படி செய்ய,
"ஏஎ ஓஒ" என்பதைக் கேட்காமல், அந்தக் கூவலின்
ஒலியைமட்டும் மலையின் பிளவுகள் ஏற்று எதிரொலிக்க, அந்த அழைப்பொலியைக் கேட்டு
அங்குச் சென்றவள், அங்கே தன் சுற்றத்தைக் காணாமல்
மீண்டும் மீண்டும் கூவுதலை மேற்கொள்ளும் மடமையை உடையது
அடியவரின் வாழ்த்தினைக் கேட்டு மகிழ்வானாகிய முருகனின் குன்றத்தின் தன்மை;
ஒரு மரக்கொம்பின் கடைசி நுனி விரும்பத்தக்கவகையில் சுனைநீரின்மேல் சாய்ந்திருக்க, மணமிக்க பூங்கொத்துக்களைக் கொண்ட
அந்தக் மரக் கொம்பினைப் பிளந்துகொண்டுவரும் இளந்தளிர்களை மரத்தின் மீதேறிய மங்கையர் பறித்து நீரில் உதிர்த்துவிட
அவ்வாறு உதிர்க்கப்பட்ட சுனையில் நிமிர்ந்து நிற்கும் தலையினையுடைய

மலரும் மொட்டுக்களின் மேல் படியுமாறு அத் தளிர்கள் கிடக்க,
இவ்வாறு விரிந்த பூக்கள்மீதும் அரும்புகள்மீதும் பொருந்திக்கிடக்க,
ஐந்து தலைகளையும், ஒளிரும் பொறிகளையும் உடைய பாம்பின் மூத்த
பிள்ளை அருகில் இருக்கும் ஒன்று, மற்றொன்று அதன் இளம்பிள்ளை என்று
அங்கு நீராடும் இளம் மகளிர் மருண்டுநோக்க, அச் சுனையின் பக்கத்தில்
பச்சிலையின் இளந்தளிரும், மலர்ந்த வாயையுடைய ஆம்பலும்,
கைவிரல்கள் போல் பூத்த கமழ்கின்ற குலைகளையுடைய காந்தளும்,
பஞ்சாய்க் கோரையின் நறிய பூக்களும், தீப் போன்ற கொத்துக்களையுடைய வேங்கைமலர்களும்,
நிறம் மிகுந்த தோன்றியும், மலர்ந்த பூங்கொத்துக்களையுடைய நறவமும்,
பருவம் பாராமல் எப்போதும் பூக்கும் கோங்கமும், அதனோடு மாறுபட்ட நிறத்தையுடைய இலவமலர்களும்,

செறிவாகக்கட்டியவை, கோத்தவை, நெய்யப்பட்டவை, தூக்கிக்
கட்டப்பட்டவை ஆகிய மாலைகளைப் போல மலைப்பக்கம் எங்கும்
நிறைந்தும், கலந்தும், இடையிட்டும், நெருங்கியும்
விடியற்காலத்து அகன்ற வானத்தைப் போன்று பொலிவுற்றுத் திகழும்
நெடியவனே! உன் குன்றின் மேல்;
உனது யானையின் நெற்றியின் நிறத்தைக் குங்குமத்தால்
கோலம் செய்து, மலருடன் நீரையும் ஊட்டி, காதுகளில் ஒப்பனை செய்வதற்குக் கவரிகளைச் சார்த்தி,
பொலிவுடைய பவளத்தால் ஆன காம்பையுடைய அழகிய பொன் குடையை ஏற்றி,
மகிழ்வுடைய நெஞ்சத்தால் அன்பர்கள் வந்து செய்கின்ற பூசையில்,
பலவகைப்பட்ட நறுமணங்களும் பொருந்திய பின்னலையுடைய கருங்கூந்தலையுடைய மகளிரும்,

கன்னித்தன்மை முதிர்ந்த பருவத்தை அடைந்த மகளிரும், உன்
கொடியேற்றிய யானை உண்கின்ற கவளத்தின் மிச்சிலை (உண்ணாராயின்),
குறைவற்ற தம் காதலரின் அணைப்பினைப் பெறமாட்டார், தம்மை மணந்தாரின்
புன்முறுவலுடன் கூடிய அன்பைப் பெறமாட்டார், உன் குன்றத்தை
அடைந்து அந்தச் சிறப்புணவை உண்ணாவிட்டால்;
குறப்பெண்ணாகிய பூங்கொடிபோன்றவளை மணந்தவனே! எமது வாழ்த்தாகிய
சிறப்பு உணவையும் கேட்பாயாக உன் செவியால்!
உன்னுடைய உடையையும், தழைமாலையையும் செந்நிறமாகக் கொண்டாய்! மேலும் அதனால்
உன் வேற்படையும் பவளக்கொடியின் நிறத்தைக் கொண்டிருக்கிறது; 
உன்னுடைய மேனியாலும் எரிகின்ற தீயைப் போன்றிருக்கிறாய்! உன் முகத்தாலும்

விரிந்த கதிர்களையுடைய விடியற்காலத்து ஞாயிற்றைப் போலிருக்கிறாய்!
உலகிற்குத் துன்பம் செய்யும் அதற்கு ஒவ்வாத சூரபன்மாவினை அடியோடு வீழ்த்தி,
பகைமை பொருந்திய கிரவுஞ்ச மலையில் உன் திருத்தமான வேலினைப் பாய்ச்சி
அந்த மலையினை உடைத்தவனே! நீ இந்தத் திருப்பரங்குன்றத்தின் பக்கத்தில்
கடம்ப மரத்தில் எழுந்தருளிய அழகிய நிலையை வாழ்த்துகின்றோம்;
எம்மோடு அமர்ந்த எம் சுற்றத்தாரோடு உன்னை புகழ்கின்றோம் தொழுது.

# 20 வையை
கடல் குறைவுபடும்படியாக முகந்துகொண்ட நீரை, பாறைகள் பிளக்க வேகமாக வீசி,
கோபங்கொண்டதைப் போல் இடியேற்றுக்கூட்டம் ஆரவாரிக்க, அடுத்தடுத்து இருக்கும் மலைகளை
நன்றாக வளைத்துக்கொண்டு மழையைப் பொழிந்தன நன்றாய்க் கருக்கொண்ட மேகங்கள்;
தன்னொடு போரிட்டு மாறுபட்ட புலியைக் குத்திப் பிளந்த பொலிவுள்ள நெற்றியையுடைய அழகிய யானையின்
குருதி படிந்த கொம்பிலிருக்கும் மிக்க கறை நீங்குமாறு அந்த மழை கழுவிவிட்டது;
காலையில் கடலில் படிந்து, பின்னர் காய்கின்ற ஞாயிறு போகின்ற வழியில் சென்று
மாலையில் மலையைச் சேர்ந்து, மண்ணுலகின் உயிர்கள் துயில்கின்ற நள்ளிரவில்
மேகங்கள் வழங்கும் மழை தொடர்ந்து பெய்து, மரங்கள் தரும் மலர்களின் மணமும்,
தேனைத்குளிர்ந்த் தரும் மலர்களின் மணமும், சுடும் வெயிலால் காய்ந்து, மேலெழும் காற்றை உடைய

கானங்கள் எழுப்பும் புதுமழையின் மணமும், மரக்கிளைகள் உதிர்த்த கனிகளின் மணமும்,
தான் இவ்வாறான மணங்களைக் ஒருசேரக் கலந்து கொணர்ந்து வந்து தருகின்றது வையை;
பெரிய பொழில்களின் மலர்களின் மணத்திற்கும் மேலாக, ஆற்றின்
வெம்மையான மணலில் புதுநீர் பரவுவதால் புதிதாய் புகுந்து பரவும் நாற்றம் குளிர்ந்த வாடையாய் மாற,
ஊரூருக்குப் பறையொலி எழும்புவதாயிற்று; மதுரை நகரத்து உயரமான கோட்டைச் சுவர்களில்
நீர் மோதிச்சென்று பாயும் அரவத்தால் உறக்கம் கலைந்து எழுந்து,
அவசரத்தில் திண்ணிய தேருக்குரிய குதிரைகளை வண்டியில் பூட்டவும்,
வண்டிக்குரிய மாடுகளைப் பூட்டிக்கொண்டு திண்ணிய தேரில் செல்லவும்,
குதிரைகளின் சேணத்தை யானைகளுக்கு மாட்டவும்,
யானை, குதிரை ஆகியவற்றை ஆயத்தம் செய்து எதனையும் அணிவியாமல் ஏறிச் செல்லவும்,

மகளிர் அணிதற்குரிய மாலைகளை மைந்தர் அணிந்துகொள்ளவும்,
மைந்தர்களின் குளிர்ச்சியான மாலைகளை மகளிர் சூடிக்கொள்ளவும்,
முந்திச் செல்லவேண்டும் என்ற விருப்பத்தினால் அணிகளை அணியும் முறைகளை மறந்து மாற்றி அணிந்தவராய்,
சிறுமியர் சிற்றில் செய்து விளையாடிய, அழகிய வண்டுகள் பாடித்திரிந்த மணலைக் கொண்ட
கரையில் ஏறி அதன் பிடரியைத் தொட்டுக்கொண்டு ஓடிய பெரும் வெள்ளத்தின் கிட்டேசெல்ல,
பின்னால் வந்தவர்கள் மாடங்களையுடைய தெருவில் வந்து சேர்ந்து மென் செல்ல வழியில்லாமல் வருந்தி நிற்க,
மதுரை மக்கள் பெரிதும் விரும்பத்தக்கதாய் இருந்தது அழகிய வையையாறு;
நறுமணப்புகை வகைகளையூட்டிய பூமாலைகளை அணிந்த மகளிரும்,
அழகு மிகும் வகையினால் அணிந்த மாலையினரான மைந்தரும்,
வகை வகையாகச் சூடிக்கொண்ட மாலைகளை அணிந்தவரும், மேலும் மேலும்

தலையில் சூடிக்கொள்ளும் சூட்டும், கண்ணியும், பெரிய வளையமுமாய்
செய்யப்பட்ட அணிகளையுடைவர்கள் திரளாக ஏறி விரும்பத்தக்க கரைப் பரப்பில் நிற்க,
அயலவர்கள் அணிந்திருக்கும் அணிகலன்களை நோக்குவதற்காக அங்கே வருபவர்,
ஒரு பரத்தை கையிலிடும் வளையுடனும், ஆரத்துடனும் வர, அவற்றைக் கொடுத்த தலைவன் தன் மனைவியோடு இருக்க,
தலைவியின் காணாமற்போனதாகச் சொல்லப்பட்ட அந்த நகைகளை அந்தப் பரத்தை மேனியில் அணிந்திருப்பதைக் கண்டு,
நொந்துபோய் தலைவியின் மாற்றாள் இவள் என்று அந்தப் பரத்தையைக் கூர்ந்து நோக்க,
அவற்றை இவளுக்குத் தந்த கள்வனாகிய தலைவனின் நாணமிக்க முகத்தைப் பாருங்கள்;
போரில் எய்யப்பட்ட அம்பு சினந்துகொண்டு பாய்வது போல,
நேரிய இமைகளையும் மையுண்ட கண்களையுமுடையவரை மகளிர் கூட்டத்தைக் காவற்காடாகக் கொண்டு
ஓடி ஒளித்துத் தப்பித்துப்போவாளின் நிலையைப் பாருங்கள்,

என்று, அவ்விடத்தில்,
தப்பிப்போவாளை, நம் தலைவிக்கு மாற்றாள் இந்த ஒளிவிடும் நெற்றியையுடையவள்,
வையை கடலில் சென்று புகுந்தாற்போல
அலையலையாய்க் கிடந்த அந்த மணற்பரப்பில் தேடியவராகச் செல்ல, அந்தப் பரத்தை பேசத் துணிந்து,
செறிந்த பெண்களின் கூட்டத்தில், மிகவும் மாறுபட்டு, "என்னைத் தொடர்ந்து வருவது எதற்காக" என்று
மறுத்துப் பேசினாள் அந்த மாற்றாளாகிய பெண்;
வாய்பேச முடியாமல் நின்றாள்,
அந்தத் தோழியரைப் பின் தொடர்ந்து சென்ற செறிவான பற்களைக் கொண்ட தலைவி, அதைக் கேட்டு சித்தம் திகைத்து;
தோழிகளுள் ஒருத்தி அந்தப் பரத்தையை, "விரும்பப்படும் காம இன்பத்தை
மாயப் பொய்யுடன் சேர்த்து வந்தவரை மயக்கும் விலைமாதே!

உன் பெண்மை யாவர்க்கும் பொதுவாகிப்போனதால் காப்பு என்று ஒருவரும் இல்லாதவளே! ஐம்புல இன்பத்தை மட்டும்
நுகரும் இயல்புடைய காமுகப் பன்றிகள் நுகரும் இரண்டு உதடுகளையுடைய வாயைத் தொட்டியாக உடையவளே!
முதிராத நறிய கள்ளைத் திரண்ட நீராகப் பாய்ச்சி,
பெண்ணின் தன்மையைக் கொண்ட அழகு என்னும் வயலில், காமவெறியாகிய கலப்பையைக் கட்டி
எம் தலைவரான எருமையைச் சோம்பிக்கிடக்காமல் முடுக்கிவிட்டு உழுகின்ற பலமுறை உழப்படும் உழவே! 
இணக்கமுள்ள செழித்த மையுண்ட கண்களைக் கயிறாகக் கொண்டு,
தன் பெரிய மென்மையான தோள்களாகிய கட்டுத்தறியிலே கட்டி, நிறுத்தி, இளமைபொருந்திய விரல்களால்
பொருள்கொடுப்போருக்கு யாழினை இசைத்து இசையெழுப்பி இன்பமூட்டும் பொழுதே, என் அணிகலன்களையும்
அணிந்து, மகிழ்வித்து, இன்பம் வழங்குவதில் பொதுமையுடையவளே! காணாமற்போன எருதான அவனை
இந்த விளையாட்டு மகளிர் காணும்படியாக இழுத்துவந்து, இந்த

வையையாகிய தொழுவத்தில் கட்டி, அடித்து இடித்து
மாலையையே சாட்டையாகக் கொண்டு புடைக்க, மகளிர் கூட்டமாக
உன்னைப் பின்தொடர்ந்தோம், எருதானது தனது தொழிலைச் செய்யாமல் வேறிடத்திற்கு ஓடிவிட
விட்டுவிடும் முறைமை வேளாளர்க்கு இல்லையாதலால் நாங்கள் உன் பின்வந்தோம்;
தன்னுடைய தலைவனின் மார்பை உனக்கு வீணாகத் தந்திருக்கும் முத்துமாலையையுடைய இவளின் மார்பும்
உன்னுடைய மார்பும் ஒன்றான தன்மையனவோ?" என்று சொல்லி முடிக்கும் முன்னரே
தேடிச்சென்ற அவளும் சில வசவுமொழிகளைக் கூற, அதுகேட்ட சில மகளிர் அதற்கு
வெறுப்பினைக் காட்டினார் வையைக் கரையில்;
"இவள் பெயரைச் சிந்தித்தாலேயே தீர்ந்துவிடும் பாவப்பிணிகள், அப்படிப்பட்டவள் மீது சினங்கொள்ளாதே,
பேதைமைகொண்டாய் கொடிய சொல்கூறி, இந்த இளம் மயில்போன்ற சாயல் உடையவளை

வணங்க வருவாயாக" என்று சொல்ல, என்றும் நீங்காத துன்பமாகிவிட்டதே என்று எண்ணிய பரத்தை,
"வேற்றவரை வேற்றவர் தொழுவதென்பது இழிவு தருவதாகும்,
அறியமாட்டாயோ? அன்னையே! பெரியவளே! பெருமைக்குரியதல்ல
மாற்றாளை மாற்றாள் வழிபடுவது" என்று சொல்ல,
"அவ்வாறான சொற்களாகிய நல்லவற்றுக்கு நாணாமல்,
மத்தளத்தை முழக்கியதுபோல் முழங்கிக்கொண்டு வருபவளே! நீ வாயை அடக்கு!
என் தந்தை எனக்குக் கொடுத்த இந்த இடுவளையும், முத்தாரமும் ஆகிய நகைகள்
உன்னிடத்திற்கு வந்தவழியானது, வஞ்சனையுடைய களவு வழியாக இல்லையென்றால்,
அதனை உனக்குத் தந்தவனைக் கூறிவிட்டுத் தருக்கிக்கொள்ளலாம்"
"இந்த நகைகளை நான் அணிந்துகொள்ள நான் தந்த இன்பத்திற்கு விலையாகத் தந்தான், அழகுடையவளே! உன்

கால்களிலுள்ள சிலம்புகளையும் எனக்காக அவன் கழற்றித்தருவான், மிகுந்த அழகுள்ள
காட்டுமல்லிகையின் அழகுள்ள மாலையை அணிந்தவளே! உனக்குக் காதலன் எனக்கும் காதலன்,
அவனைப்பிடித்துக்கேள், அவனே கள்வன், நால் இல்லை"
என்று அந்தப் பரத்தை கூறிய அளவிலே,
"வசிகரிக்கும் மானே! இவ்வாறு எதிர்த்து உரையாடுவதை மாற்றிக்கொள், உம்மை
விரும்பியவர் உனக்கு அளித்தவை நாடறிய உன்னுடையவே" என்ற சிலர்,
"படுக்கைக்கு இனியவரிடம் செல்கின்றவனை, அவனது மனையாளால்
காக்கவும், கடிந்து நடக்கவும் இயலுமோ? இயலாது,
கற்புடைய மங்கையர் சான்றாண்மை மிக்க பெரியவர்,
இகழ்ந்தபோதும் கணவரை ஏற்றி வணங்குவர்,

உலக நடப்பை அறியாமல் இருக்கிறாய், நீ சற்றுப் பொறு, நல்லவளே!
மகளிர்மேல் காமமயக்கம் கொண்டு அவரை விரும்பிச் சென்ற ஆடவரின்
மார்பினைக் கடிந்து ஒதுக்குவோம் என்று சொல்வது குலமகளிர் யாருக்கேனும்
முடிந்த முடிவு அன்று, சினங்கொள்ளவேண்டாம்,
சொன்ன இடத்தில் நிற்குமோ மைந்தரின் காமம்? கொடியைப் போன்றவளே!"
என்று அவர்கள் கூற
இத் தன்மையவாகிய பிணக்கமும் புலவியும் ஏற்படுத்துவது
பாண்டியனின் வையையின் சிறப்பு;
பூங்கொடி போன்ற தன்மையையுடைய பெண்களின் குவிந்த கைபோலக் குவிந்த காந்தள் மொட்டுக்களையும்,
பாம்புகள் சீறியெழுந்தவை போல விரிந்த காந்தள் மலர்க் கொத்துக்களையும்,

குடை விரித்தாற்போன்று சூழ அமைந்திருக்கும் மலர்களையும்,
சுனைகளிலிருந்து வழிந்து கீழே இறங்குவனவாகிய நீர்ப்பூக்களையும்,
மரக்கிளைகளிலிருந்து மலர்ந்து உதிரும் பூக்களோடு, புதர்களில் மலர்ந்த பூக்களையும்,
அருவி சொரிந்த பூக்களையும் வையையாறு தன் நீரலைகளினால் தள்ளிக்கொண்டுவந்து,
நீண்ட பெரிய நிலத்தடி வழியாக நீரின் நடுவழியே கொண்டு சென்று,
கடிய விலங்காகிய களிறு தன் கையைத் தூக்கி அதிலிருந்து வெளிவிடும் நீரைப் போன்றிருந்தது
பேரளவான ஆற்று நீரால் மிகுந்த நீர்ப்பெருக்கையுடைய நீண்ட மாடங்களையுடைய மதுரையின்
காவல் மிக்க மதிலுக்கு வெளியே வந்து விழும்பொழுது;
தலைவியின் அச்சந்தரும் ஊடலும், பின்னர் ஏற்படும் நட்பும், பிரிவும் ஆகியவற்றோடு
காம இன்பத்தையும், கள்ளின் செருக்கினையும் கலந்து அனைவரும் பாராட்டுமாறு

தாம் விரும்பும் காதலரோடு புனலாட அவர்களைச் சேர்த்துவைத்தல்
பூக்கள் மலிந்த வையை ஆற்றின் இயல்பு.

# 21 செவ்வேள்
நீ ஊர்ந்த ஊர்தி, நெருப்பைப்போன்ற நெற்றிப்பட்டம் இடையே கிடந்து ஒளிரும் நெற்றியையுடைய
போரிடும் போர்களிலெல்லாம் வெற்றிகண்ட புகழ் நிறைந்த யானை;
நீ அணிந்துகொண்டது, தைப்பதற்காக அமைந்த தோலினால், உன் திருவடிக்குப் பொருந்திய தாமரை மலர் போன்று செய்யப்பட்டது;
செம்பவளம் போன்ற துவர்நீர்த் துறையில் முழுதும் மறையும்படி அழுத்திப் பதனிடப்பட்டது;
அதன் முதுகுப்பக்கத் தோலோடு முழுதும் மயிர் செறிந்திருக்கும்;
வரிகள் மிக்க பாம்பின் தோலைக் கீறி எடுத்த வார் போன்ற
விரும்புதற்குரிய மென்மையான மயிற்பீலிப் பிளவுகளை வைத்து அழகுசெய்யப்பட்டது அந்த அடையலாகிய செருப்பு;
உன் கையில் உள்ளது, உன்னை ஏற்றுக்கொள்ளாத பகைவர் தமக்குத் தலைவனாகக் கொண்ட சூரபன்மாவினை அடியோடு வீழ்த்தி,
கிரவுஞ்சம் என்னும் பறவையின் பெயர்கொண்ட மலையினைப் பிளந்த வேல்;

நீ அணிந்துகொண்டது, சுருளும்தன்மையுடைய வள்ளிப்பூவை இடையிடையே இட்டுத் தொடுத்த
தேருருள் போன்ற பூங்கொத்துக்களையுடைய கடம்பின் பூவுடன் சேர்ந்து கமழ்கின்ற மாலை;
நீ எழுந்தருளியிருப்பது, உயர்ந்தவரின் நாவினால் புகழப்படும் நன்மை நிறைந்து,
நிரைபட ஏழு ஏழாக அடுக்கிய நீண்ட இலைகளையுடைய பாலைமரத்தினைக் கொண்ட
இடைநிலமான அம்பாரியையும், அழகிய அருவி நீராகிய முகபடாத்தையும் (கொண்டு யானை போல் இருக்கும்)
தரையிலிருந்து வானுற உயர்ந்த குளிர்ந்த திருப்பரங்குன்றம்;
உன் திருப்பரங்குன்றத்தின் அடியிலே இருந்துவாழும் பேற்றினைத் தருக என்று வேண்டிநின்றோம்,
வெற்றிக்கொடியால் அழகு பெற்ற செல்வனே! உன்னைத் தொழுது;
சுட்ட பொன்னால் செய்யப்பட்ட காற்சிலம்பின் முத்துப்பரல்கள் எங்கேயும் செல்லுமாறு மிக்கு ஒலிக்க,
உடுக்கை ஒலிக்கேற்றவாறு தன் கால்களை எடுத்துவைத்து, தன் தோள்களை அசைத்துத் தூக்கி

சமைக்கப்பட்ட கள்ளை உண்டதனாலான களிப்பு தன்னைத் தடுக்க, ஆடுகின்ற விறலியின் அழகு காரணமாக,
நுனி ஒளிரும் வேலினைப்போன்ற சிவந்த பார்வையோடே,
தனக்குத் துணையாக அணைத்துக்கொண்டிருக்கும் தன் கணவனிடம் ஊடல்கொண்டவளின் நிலையும்,
தன் கைக்கண்ணாடியைப் பார்த்து,
தீயினை அணிந்துகொண்டது போன்ற ஒளிவிடும் தன் அணிகலன்களைத் திருத்திக்கொள்வாளின் மெய்ப்பாடும்,
பருத்தெழுந்த தன் முலையின்மேல் சந்தனத்தைப் பூசி, பின் காய்ந்துபோன அச் சந்தனத்தை
உதிர்த்துவிட்டு மேலும் நிறைய சந்தனத்தைப் பூசுபவளின் காம விருப்பமும்,
பலமுறை நிகழும் இவற்றையெல்லாம் நினைத்துப்பார்க்கும்போது, வரைவதில் வல்லவன்
எழுதிய ஓவியத்தின் அழகுக் காட்சியைப் போன்றிருக்கின்றன, சூரபன்மாவை
அழித்தவனே! உன் குன்றத்தின் மேல்;

மேலே எடுத்துவைக்கப்பட்ட விசிறியைப் போல, மேகங்களின்
முழக்கம் எழுகின்ற திசையில் இரு சிறகுகளையும் விரித்துக்கொண்டு
ஒளிவிடும் புள்ளிகளைக் கொண்ட மயில் இடம்பெயர்ந்து ஒன்றாக ஆட,
விரலால் மூடியும் திறந்தும் குழலின் காற்றுவிடும் துளையினின்றும் எழும் இசையைப் போல
இசைபாடும் குரலையுடைய தும்பி கட்டவிழ்கின்ற மலரின் மீது பாடிக்கொண்டு பறக்க,
புதுமலரைத் தேரும் வண்டினங்கள் யாழிசையைப் பிறப்பிக்க,
தாளத்துடன் கூடிய முழவின் இசையாக அருவிநீர் முழங்க,
ஒன்றாகப் பலவிடங்களிலிருந்தும் பரவிய இசைகள் எல்லாம் ஒலிக்கும்
முழங்குகின்ற முரசினையுடைய முருகனின் குன்றத்தில்;
தாழ்ந்து விழும் நீர் முழங்குகின்ற சுனையின் நடுவே மூழ்கிக் குளித்து அங்கே

நீர் மேல் எழுந்த மிகச் சிறந்த அணிகலன்களை அணிந்த பெண்ணொருத்தி, கரையில் நிற்கும் தன் கணவனை
ஒரு மூங்கிற்கழியைப் புணையாக நீரில் மூழ்கும் தன் கையில் எட்டுமாறு கொடுக்க என்று வேண்ட,
அவன் மணமுள்ள சாயநீர் நிரப்பிய வட்டமான பாத்திரத்தை எறிய, அதில் ஆதரவான மிதவையைப் பெறாமல்
நிலைகொள்ள அரிதான ஆழத்தையுடைய நீரில் அவளின் துயரத்தைக் கண்டு,
அந்தக் கணவன் உள்ளத்தில் மகிழ்ச்சிநிலை மாறி, கொய்தற்குரிய பூக்களைக் கொண்ட நீருக்குள் பாய்ந்து
அவளைத் தழுவிக்கொள்ளும் தன்மையினையுடையது குளிர்ந்த திருப்பரங்குன்றம்;
வண்டுகள் ஆரவாரிக்கின்ற ஒளிவிடும் பாறை போன்ற மார்பினையுடைய மைந்தர்கள் தம் மார்பில் பூசிய
குளிர்ச்சி பொருந்திய கமழ்கின்ற சந்தனத்தைத் தடவி ஏற்றுவரும் காற்றையும்,
மீனைப் போன்ற கண்களையுடைய மகளிர் நறுமணங்கமழும் துகள்களைச் சேர்த்த
மேகக்கூடத்தைப் போன்ற கூந்தலினூடே புகுந்து அதைக் கோதிவிடும் காற்றையும்,

தேருருள் போன்ற பூங்கொத்துக்களையுடைய கடம்பமரத்தில் எழுந்தருளியிருக்கும் முருகனுக்கு எடுத்த
வெறியாட்டில் எழுந்த கமழ்கின்ற புகைவழியே புகுந்துவந்த காற்றையும்,
இடைவிடாமல் ஒழுகிக்கொண்டிருக்கும் அருவிநீர் அரிய மலைப் பிளவுகளில் பரந்த
பைம்பொன்னால் செய்த பூண்களை அணிந்த குமரனே! உன் குன்றம் மிகவும் உடையது;
கண் கவர ஒளிர்ந்து விளங்கும் பொன் தகட்டினை, மேகத்தால் இடப்பட்ட ஒளி பரப்பும் மின்னல் கொடி போல,
ஒள்ளிய நகையின் கூறுபாடுகள் அனைத்தும் முறையுடன் விளங்க, இடையிடையே சேர்த்துக் கட்டிய
தலைக்கோலங்களாகிய மாலை கூந்தலோடு அசைய,
மாணிக்கம் போன்ற சிவந்த தேனாற்செய்த மதுவின் மகிழ்ச்சி தடுத்துநிற்க அசைந்து
அழகிய ஆடையின் இறுக்கம் நெகிழ, கண்களில் சிவப்பு ஊர,
பூங்கொடியைப் போல வளைந்து ஆடுவாள், அங்கு தன்

அழகுக்கேற்ற கணவன் இசைக்கும் உடுக்கையின் தாளத்திற்கேற்ப,
தன் முலையின் மேல் கிடக்கும் முத்தாரங்கள் விலகிச் செல்ல, ஆடுபவளது அழகிய
ஆடை அசையவும், அணிகலன்கள் அசையவும் தான் அசையும்
வாடையால் நீவிவிடப்பட்ட பூங்கொம்பினைப் போன்றிருக்கும் அவளின் ஆட்டம்;
அம்புகள் புரள்வது போன்றிருக்கும், உடுக்கையின் தாளத்திற்கு
தோளை முறையாக அசைப்பவளின் கண்கள்;
பகைவரைப் போரில் அழித்தவனே! வீரவேலினைச் சுழற்றுபவனே!
பன்னிரண்டு தோள்களையுடையவனே! ஆறு திருமுகங்களையும் மலர்ச்சியாகக் கொண்டவனே!
பெரிதும் விரும்பும் சுற்றத்தாரோடு, ஒன்றுசேர்ந்து உன் திருவடி நிழலில் தங்குதல்
இன்று போல் என்றும் அமைவதாக என்று வேண்டுகிறோம்,

உன்னுடன் ஒன்றிப்போகாதோரை இல்லையாக்கிய செல்வனே! உன்னைத் தொழுது;

# 22 வையை
ஒளிவீசும் வாளினையுடைய பாண்டியன் சினந்து போரில் இறைப்பொருளாகப் பெற்ற
களிறுகளை நெருக்கமா நிறுத்திவைத்தது போன்று மேகங்கள் நெருங்கியிருக்க,
பகையரசர்களைக் கொன்று அவர்களை வென்ற குறையாத சீற்றத்தையுடைய அந்தப் பாண்டியனின்
முரசுகள் அதிர்வது போல முழங்குகின்ற இடிகள் திரும்பத் திரும்ப ஒலிக்க,
தனக்கு அடங்காதோரின் மீது சினங்கொண்ட மன்னவனின் படையினர் வில்லிலிருந்து விசையுடன்
விடுகின்ற அம்புகளைப் போன்று மிக்க துளிகளை அந்த மேகம் பொழிய,
கண்களைக் கூசவைக்கும் வேற்படையைப் போல மிகுதியாக மின்னி, அந்தப் பாண்டியனின்
வள்ளல்தன்மை போல வானம் பொழிந்த மழைநீர் மண்ணின் மேல்
குறையாமல் வந்து திரண்டு பெருகி, அவன்

படையினரின் படைமுறைமையோடு பரவிச்செல்லும் மனவெழுச்சியுடன் 
அந் நாட்டில் சென்ற நிலம் எங்கும் நெற்போர் நிரம்பிய வயல்களில் புகுந்தது;
------------ -------------- நீக்கி பபு----------  --------------
கான மலைத்தரை கொன்று மணல பினறீ
வான மலைத்த  -----------வ -------------------------
----------லைத்தவ மண முரசு எறிதர
தானை தலைத்தலை வந்து மைந்து உற்று
பொறிவி யாற்றுறி ------- சாயப்பொருள்கள், புகைப்பொருள்கள், சாந்து வகைகள்
வீசிஎறிவனவும், தெளிப்பனவும் ஆகிய நீர்விளையாட்டுக்கு ஏற்ற கருவிகளையும்
கள்ளும், அணிகலன்களும், பூவேலைப்பாடமைந்த துகில்களும் ஆகிய மிகப்பலவற்றை எடுத்துக்கொண்டு

பிற பணியினரும் பின்னே தொடர்ந்து வர,
செறிவான வேலைப்பாட்டால் பொலிவுற்ற சிவந்த மலர்மாலையத் தலையில் அணிந்த ஆடவரும்,
குளிர்ச்சி பொருந்திய வெட்சி மலரால் தொடுக்கப்பட்ட மாலையைச் சூடிய மகளிரும்,
மாலை நிறைந்த முடியினையுடையவரும், அழகு பொருந்திய மார்பினையுடையவரும்,
குதிரைகளும், களிறுகளும், மணிகள் அணிந்த கோவேறு கழுதைகளும்
ஆற்றங்கரைச் சோலை நிறையவும், கரையையும் நெருக்கமாக வந்து கூடி
வேலினால் போர் செய்யும் முருகனைப் போல, மணமுள்ள மலர்களை அம்பாகக் கொண்ட மன்மதனைப்
போல, முறையே போரிடும் வலிமையினைக்கொண்டு வீரக்கழல் அணிந்த மைந்தரும்,
மாலையினையும் அழகினையும் கொண்ட மைந்தரும், செய்த தவத்தின் பயன் பெரிதென்று பிறர் கூற,
முகிலின் அழகுடைய கூந்தலினையும், கயல் போன்ற கண்ணினையும், செம்முருக்கம் பூவைப் போன்ற உதடுகளையும்

கச்சணிந்த இளம் முலைகளையும், சிறப்பாக அமைந்த மேகலையையும்,
அழகிய வரிசையாய் ஒளிரும் பற்களையும், இனிய புன்முறுவலையும் உடைய மகளிரும்,
இயற்கை அழகினையுடைய வையைக்கு அழகாய் அமைந்தாரோ? வையையின்
நீரால் அழகுற்ற வெள்ளம் இவருக்கு அழகு தந்ததோ? என்று
தெளிந்தறிய முயல்வோர் எண்ணிப்பார்த்தால் தெளிந்துகொள்வதற்கு அரிதாகும்,
கரையிலும் வையையிலும் சேர்கின்ற கண்ணுக்குப்புலனாகும் அழகு;
மண்ணுதல் செய்யப்பட்ட திரண்ட முழவின் இனிய கண்ணில் பிறக்கும் முழக்கத்திற்கு
எதிர்த்துப் போட்டிபோடுவது போன்று ................. இடியின் முழக்கம் மாறாக முழங்க
உள்ளத்தைக் கவரும் பாலைப்பண் கோவையையுடைய நல்ல யாழ் இசையெழுப்ப, அதற்கு மாறாகச் சோலையில்
புள்ளிகளையும் வரிகளையும் உடைய வண்டுக் கூட்டம் பூத்த மரக்கொம்புகளில் ஒலியெழுப்ப,

ஊதுதற்குரிய ஓசை இலயத்தைக் கொண்ட இனிய குழல் ஒலிக்க, அதற்கு மாறாக, மலர்களின் மேல்
பூந்தாதுக்களை ஊதும் தும்பிகள் நிற்காமல் ஒலிக்க,
------------ உடுக்கையின் தாளங்கள் எழும்ப, அதற்கு மாறாக, காற்றாகிய நட்டுவன்
மென்மையான பூங்கொத்துக்களையுடைய பூங்கொடிகளை விரும்புமாறு அசைந்தாடச் செய்ய,
அங்கே இந்தக் கலைகள் தத்தம் தொழிலில் ஒன்றற்கொன்று மாறாக இயங்குகின்றன,
இனிய நீரையுடைய வையையின் திருமருத முன்துறையில்;
மரக்கொம்பில் அசைகின்ற பூங்கொத்துக்களால் பொலிவடைந்து தழைத்து அசைகின்ற கரிய கூந்தலையுடைய
................................. குற்றமற்ற நெடிய மெல்லிய
தோளில் தாழ்ந்து தழைக்கும் மலரையுடைய துவள்கின்ற கொடிபோல
நீண்டு தாழ்ந்த தொங்கலுடன் முத்துப் பரலைக் கொண்ட சிலம்பு
* பரிபாடல் முற்றிற்று
* பரிபாடல் திரட்டு

# 23.1 திருமால்
வானத்தில் நிறைந்த மேகங்களினால் மழை வளம் பெருக,
தேனிறால்கள் நிறைந்த மலையுச்சியையுடைய மலையிலிருந்து இறங்கிவந்து
மதுரையின் மக்கள் எதிர்கொள்ள, இன்றியமையாத
ஆருயிர் மருந்தாகிய இனிய நீர் பெருக்கெடுத்தோடும் நீர்த்துறையில் பொருந்திய
இருந்தையூர் என்ற ஊரில் எழுந்தருளியுள்ள செல்வனே! உன்
திருத்தமான திருவடிகளை எம் தலை மேல் கொண்டு வாழ்த்துகிறோம் தொழுது;
இவ்வூரின் ஒரு பக்கத்தே, அழகிய மலர்களையுடைய வேங்கை, வெண்கடம்பு, மகிழம்,
அரும்புகள் கட்டவிழ்ந்த அசோகம் ஆகியவை உயர்ந்து ஒன்றுகூடி வளர்ந்து
பச்சை மணியின் நிறம் கொண்ட மலை;

மற்றொரு பக்கம், குளிர்ந்த நறிய தாமரைப்பூவின் இடையிடையே
நிறமும் வரியும் அமைந்த, அன்றலரும் இதழ்களையுடைய மலர்நிலைப் பூக்களின் வாயில், வண்டுகள் மிகுந்தொலிக்க,
வானம், தன்னிடம் நிலைகொண்டு மெல்லென ஒளிதரும் விண்மீன்களைக் கொண்டு விரிந்திருப்பதைப் போன்று,
விரிந்துகிடக்கும் இடத்தையுடையனவாயிருக்கும் நீர்நிலைகள்;
ஒன்னொரு பக்கம், கருப்பஞ்சாற்றினைப் பிழிந்தெடுக்கும் ஆரவாரத்தின் ஒலியுடன் மாறுபட்டு,
உழவர்கள் உழும்போது எழும் ஆரவாரம் மிகுந்தொலித்து, கள்ளுண்டு அறிவு மயங்கித்
திரிந்துகொண்டிருப்போரும், குரவை பாடி நாற்றுநடுவோரும் எழுப்பும் ஒலியும் ஆகிய இவை ஒன்றாகச் சேர்ந்தொலிக்க
திருமகளும் விரும்பி வீற்றிருக்கும் வயல்கள்;
வேறோர் பக்கம், அறநெறியும், வேதங்களும் சேர்ந்த தவ ஒழுக்கத்தில் முதிர்வெய்தி,
மிகச் சிறந்த புகழ் நிலைத்து நிற்க, உயர்வான கேள்வித்

திறத்தால் சிறிதும் பிறழ்தல் இல்லாத அந்தணர் மிகுந்து வாழ்தலால்
அறவொழுக்கத்தில் பிறழாத நகரம்;
அந்த நகரத்தில், ஒருபக்கம், உண்ணக்குடியவை, பூசிக்கொள்பவை, அணிந்துகொள்பவை, உடுத்திக்கொள்பவை
மஞ்சனமாடுதற்குரியவை, மணி, பொன், மலையில் கிடைப்பவை, கடலில்
கிடைக்கும் பொருள்கள், குற்றமற்ற வகையில் பயன்தரக்கூடிய நெசவுப்பொருள்கள் ஆகியவற்றை வணிகம் செய்யும்
அறவுணர்வுடைய வணிகர்கள் முறையாக அமைந்த தெருக்கள்; ஒருபக்கம்
விளையும் பொருளை விளைத்துத் தரும் தொழிலையுடைய, நன்செய், புன்செய் ஆகிய நிலங்களில்
தொழில்செய்வோர், வேளாளர் ஆகியோர் வாழும் காவலையுடைய தெருக்கள்; வேறு பக்கங்களில்
அவ்வாறே; இவ்வாறு அனைவரும் வாழ்வதால் நல்லனவாக நன்றாகப் பொருந்துகின்ற இன்பம் பலவும்
இயல்பாகவே பொருந்தியிருப்பன:

கைவளையல்கள் திடீரென மேலே உயர்வதால்
வண்டுகள் திடுமென மேலே எழும் -
மணம் பொருந்திய தேன் நிரம்பிய மலர்மாலைகளில் மறைவின்றி மொய்த்திருந்த அழகு மிக்க (அந்த வண்டுகள்)
கடிப்பு என்னும் அணியினால் தாழ்ந்து விழுந்த காதில் பொன்னாலாகிய குழையை அணிவதற்காக -
மிளிருகின்ற ஒளிச்சுடர் பாய்தலால் பளிச்சிடும் ஒளியினையுடைய நெற்றியையுடைய பெண்டிரும்,
தாம் ஏறிச் செல்லும் களிற்றினைப் போன்ற தலைமைப் பண்புடைய ஆடவரும்,
இருள் வாய்ந்த கூந்தலினையும், வரிந்த வில்லினைப் போன்ற புருவங்களையும்
ஒளியையுடைய தலை அணிகலன்கள் ஒதுங்கிக்கிடக்கும் ஒள்ளிய நெற்றியையுடையவரும்,
அறிவோடு கூடிய புகழை அணிகலனாகக் கொண்டோரும்,
கற்புடைமையோடு பொருந்திய நாணத்தை அணிகலனாகக் கொண்டோரும்,

எருதுவின் நடையுடன் மாறுபட்ட வெற்றியையுடைய பீடுநடையினரும்,
ஒழுக்கமும் மடமும் பொருந்திய நாணத்தினை அணிகலனாகக் கொண்டோரும்,
கடலில் வரிசையாக வரும் அலைகளைப் போன்று கருமையும் நரையும் கலந்த தலைமயிர் உடையோரும்,
ஒளிரும் நிலவுக் கதிர் என்று சொல்லுமாறு முழுதும் வெளுத்த முடியினை உடையோரும்,
அவிப்பொருள் கொணர்ந்தவர், குடையை ஏந்தியவர், நறுமணப் புகையை உடையவர் ஆகியோர் பூக்களை ஏந்தி,
இடையறாமல் திருவடியின் கீழ் வந்து நெருக்கமாய்க் கூடி நிற்க,
விளைந்து முதிர்ந்த நல்வினையின் சிறந்த பயனைத் துய்ப்பதற்குரிய
நிலைகெடாத உயர்ந்த சிறப்பினையுடைய மேலுலகத்தைப் போல் விளங்கியது,
கரியநிறப் படப்புள்ளிகள் அழகுடன் விளங்கும் கழுத்தையுடைவனாகிய
மலை போன்ற மார்பினையுடைய செல்வனாகிய ஆதிசேடனின் கோயில்;

வண்டுகளும் தும்பிகளும் வளமையான நரம்புக்கட்டினையுடைய யாழிசை போல் ஒலியெழுப்ப,
பிளிறுகின்ற மதயானை மேகத்தின் முழக்கத்தைப் போல் முழங்க,
குறையாமல் வீழ்கின்ற அருவியின் முழக்கத்துடன் பெரிய முழவுகள் முழங்க,
செவ்வரி பாய்ந்த மையுண்ட கண்களையுடைய மகளிரோடு ஆடவர் கூடிநிற்க,
யாவராலும் விரும்பப்படும் பாடலோடு ஆடலும் தோன்ற,
சூடியுள்ள நறவத்தின் மொட்டுடன் பூமாலையின் மொட்டுக்களும் மலர,
சூடாத நறவமாகிய கள்ளோடு காம இன்பம் விரும்புதற்குரியதாக,
இதனைப் போன்ற பிறவும், இன்னும் இவை போன்றனவும்,
அப்படிப்பட்டவை எல்லாம் தம்முள் பொருந்திநிற்கும், ஒப்பனை செய்யப்பட்ட அணிகலன்களையும்
பூமகளையும் தன் திருமுடியில் கொண்டுள்ள ஆதிசேடனின் கோயிலில்;

நீலமணி போன்ற அழகுடன், ஐவகையாகப் பிரிக்கப்பட்டு அறல்பட்டுச் செறிந்து தழைத்துப் பொலிவுற்று
ஒளிரும் எழுச்சியினைக் கொண்ட புகழ்வாய்ந்த கூந்தலினையும்,
பிணிப்பு நெகிழ்ச்சியாக உள்ளவாறு துளையிடப்பட்ட, தெளிந்த ஒளி விளங்கும் சிலம்பினையும், ஆய்ந்து அரிக்கப்பட்ட
மதுவுண்ட மகிழ்ச்சியால் செவ்வரி படர்ந்த மலர்ந்த மகிழ்ச்சியான மையுண்ட கண்களையும், ஒளியுள்ள நெற்றியையும் உடையோர்
நீலமணி போன்ற நிறமுள்ள மயிலுடன் தொழிலாலும் அழகாலும் மாறுபட்டு மிக்க ஒளியுடன் விளங்குமாறு, வேறு
இகழ்ச்சியும், கடுமையும் மிகுந்த மதத்தினையுடைய ஆண்யானை போன்ற தலைமைத் தன்மையுள்ள தத்தம் கணவர்களோடு
அழகு மிகும்படி வந்து வணங்கி வேண்ட, இருளாகிய துன்பம் அகல, பிணிகள் நீங்க,
நல்லன அனைத்தும் தாமே வந்து பொருந்தி நிற்கிறது - தொன்மையான புகழையுடைய
மலையைச் சார்ந்த பாறைகள் சேர்ந்து கிடக்கின்ற
குளவாய் என்னும் ஊரில் எழுந்தருளியுள்ள ஆதிசேடனின் கோயில்;

ஒளி திகழும் பாற்கடலைக் கடைந்த பொழுது, மந்திரமலையைப்
பொலிவுடன் மேலே எழ எடுத்து, தன் அழகிய முதுகின்மேல் அதனை ஏற்றிவைத்து,
மகரமீனையுடைய அலைபுரளும் அந்தப் பாற்கடலில் வைத்து நிலைபெறச் செய்து,
புகழ்மிக்க சிறப்பினையுடைய தேவரும் அசுரரும் ஆகிய இருதிறத்தோரும்
அமுது கடைய இரு பக்கமும் நாணாக இருந்து,
எஞ்சிய பெரிய நாணை திருமாலே பற்றி இழுக்க,
தமது அழியாத ஆற்றலாலே, ஒரு தோழம் என்னும் கால அளவுக்கு
அற்றுப்போகாமல் நாணாகி கிடந்து அழகுசெய்தவரும் ஆதிசேடனே!
மேருமலையை மோதித்தாக்க மிக்கு வந்து மோதிய காற்றுத்தேவனின் மேம்பட்ட வலிமை எல்லாம்
அந்த மலையில் புகாதபடி எதிர்ப்பினை மேற்கொண்டாரும் ஆதிசேடனே!

நீலமணி போன்ற பெரிய மலைகள் தோன்றிய இந்த மண்ணுலகத்தையே
அணிகலன்களைத் தாங்குவதுபோல் எளிதாகத் தாங்கியிருப்பவரும் ஆதிசேடனே! பிறரைப் பணிதல் இல்லாத புகழையுடைய,
விரைந்து செல்லும் எருதாகிய ஊர்தியையுடையோன் முப்புரத்தை அழித்தபோது
மலைகளிலேயே உயர்ந்த சிகரத்தையுடைய இமயத்தை வில்லாகக் கொள்ள, அதற்கு நாண் ஆகி
தொன்மையான புகழினைத் தந்தவரும் ஆதிசேடனே!
அச்சமூட்டக்குடிய அரிய தலைகள் ஆயிரத்தை விரித்த
திரளான சுற்றத்தைக் கொண்ட அந்த அண்ணலை வணங்கி,
உனது நல்ல திருவடிகளைப் போற்றி உன்னை வாழ்த்துகிறோம்,
யாம் எல்லாரும் எப்பொழுதும் உன் திருவடியைப் பிரியாமல் இருக்க, எம் சுற்றத்தாரோடு ஒன்று சேர்ந்து.

# 24.2 வையை
இந்தப் பெரிய நிலமே கண்ணுக்குத் தெரியாமல் மறையும்படி, மிகுந்த மழையைப் பொழிந்து
உலகுக்குப் பாதுகாவலான நீரினை அழகிய மேகங்கள் கீழிறக்கும் பொழுதில்,
நாக மரங்கள் உயர்ந்த நீலமணி போன்ற மலையில் நறிய மலர்கள் பல உதிர்ந்து மணங்கமழ,
கண்டார் விரும்பும் வையை விரைந்து வந்தது மதுரையை நோக்கி;
புதுநீரால் அழகு பெற்றது வையை என விரும்பி
தூசிப்படையினரின் விரைவை மேற்கொண்டு உவகையெல்லாம் ஒன்றுசேர,
ஊர்மக்கள் தத்தம் இயற்கையழகிற்கேற்ப ஒவ்வொருவரும் 
ஒப்பனைகளால் அழகு சேர்த்துக்கொண்டு, நல்ல நிறம் பொருந்திய பல்வேறு வகையான
நீராட்டுக்குரிய அழகுப்பொருள்கள் கொண்ட நிறைந்த நீரங்காடியில்

தங்கள் இயற்கை அழகை, அங்காடிப்பொருள்களால் அழகு செய்துகொண்டனர்;
(பெண்கள்)திறம்படக் கையால் புனையப்பட்ட மாலை சூடியவராய், (ஆண்கள்)தலை மாலை சூடியவராய்,
(பெண்கள்)வியத்தகுவகையில் நறுமணப்புகை ஊட்டிக்கொண்டவராய், (ஆண்கள்)வியத்தகு ஆடை அணிந்தவராய்,
(பெண்கள்)நெய் பூசப்பெற்ற கூந்தலையுடையவராய், (ஆண்கள்)குடுமியில் நெய் பூசியவராய்,
உடலில் ஒப்பனை செய்யப்பட்ட யானையின் மேல் அமர்ந்தவராய் விரைவாக
தாழாத சிறப்பினையுடைய மாந்தளிர் போன்ற பெண்கள் செல்ல,
(ஆண்கள்)செருக்குள்ள குதிரைகளில் அந்த யானைகளின் பக்கத்தே போவோரும், மிக்க அழகுடைய
வண்டிகளும் தேர்களும் அமைத்துக்கொண்டு செல்வோரும், எந்தவிடத்தும்
காணாமற்போகோம் என்று சொல்லி மற்றவரை அருகருகே அழைத்துக்கொண்டு செல்வர்;
மகளிர் தம் மெய்யாப்பால் தம் மெய்முழுக்க மூடுவார், வண்டிக்குள் இருக்கும் பெண்கள் தம் கணவருடன்

ஊடல் கொள்வார், கணவர் ஊடலை ஒழிப்பார், அதனை உணர்ந்து ஊடல் தீர்வார்,
சிலர் ஆடுவார், சிலர் பாடுவார், சிலர் ஆராவரிப்பார், சிலர் வாய்விட்டுச் சிரிப்பார், சிரித்துக்கொண்டே
சிலர் ஓடுவார், ஓடித் தளர்வார், அங்குமிங்கும் போய் தமக்குரியவரைத்
தேடுவார் - இவர்களுள் ஊருக்குள் திரும்பிச் செல்வார் யாரும் இல்லையாகி,
கற்றாரும், கல்லாதவரும், கயவரும்,
மக்களைப் பெற்றாரும், தம்மை மணந்த கணவன்மார் சொல்தட்டாத பெண்டிரும்,
பொன்னாலான தேரினையுடைய பாண்டியன்தானும், பொன் மதிலைக் கொண்ட மதுரை மக்களும்,
முற்றுகையிட்டனர் வையைத் துறையை;
வையைத்துறையில் புனலாடும் காதலரின் தோள்களே தெப்பமாக இருக்க,
மறைவாக நீராடும் பரத்தையரை அறியாதவராக அந்தக் கணவர் மயங்குமாறு செய்து,

பிறையின் அழகினைப் போன்ற நெற்றியையுடைய மகளிர் எல்லாரும் தமக்கு முன்னால்
நிகழ்கின்ற நீர்விளையாடல் நிகழ்ச்சிகள் எவ்விடத்தில் நிகழ்கின்றன என்று 
ஊடலாகிய பல செல்வத்தை உண்டாக்குவது அங்கு காணத்தக்கது - இவ்வாறு
அகன்றதானது சுருங்கிக்காணப்பட்டது - இந்த வையையின் நீர்த்துறை;
ஒரு காதற்பரத்தையின் காதலன் தன் மார்பில் கிடந்த மணங்கமழும் மாலையைக் கழற்றி நீரில் விட, அதனை நீர் இழுத்துச் செல்ல,
அவனது இல்பரத்தை அதனை எடுத்துச் சூடிக்கொள்ள, ஓர் அயலாளின் கூந்தலில் தன் காதலன் மாலையைக் கண்டு, அதனைக்
கொடு, கொடு என்று கேட்ட காதற்பரத்தைக்கு, "இது தானாகவே எங்கிருந்தோ வந்து
என் கூந்தலில் சூட்டிக்கொண்டது" என்று சொல்ல, "இது எப்படி நடந்தது? அவ்வாறு விளைந்ததற்கு
வருந்தமாட்டேன், நுண்ணிய வேலைப்பாடமைந்த அணிகலன்களையுடையவளே! இத்தகைய தருணத்தில்
நீ இங்கு இருப்பாய் என அறிந்து அந்த மாலையை நீர் கொண்டுவந்து சேர்த்தது

ஓஓ இது பெரிதும் வியப்பிற்குரியது" எனக் கூறி,
"தலைவனே! மென்மை தங்கிய இந்தப் பூமாலையை நீ நீரிலே விட்டாய், அது காம நுகர்ச்சிக்குரிய
விரும்பத்தகுந்த அழகியையே சரியாகச் சென்று சேர்ந்தது; 
தழுவுதற்குச் சரியாக அமைந்த அவள் முலைகளும் அவற்றைத் தழுவிச்செல்லும்
நீரும் அவளுக்குத் துணையாக அமைந்தன; மாலையை நீரில் நழுவ விட்டவனே!
நீயும் அவளுக்குத் துணையாவாய்" என்றாள்.
பிறரைப் பணிதல் இல்லாத உயர்ந்த சிறப்பினையுடைய பாண்டியனின் மதுரையில் வாழும்
மணி போன்ற அழகினையும், மாநிற மேனியையும், முத்துப்போன்ற பற்களையும்
அழகிய பவளம் போன்ற சிவந்த வாயினையும் கொண்டு, கற்புடைமையைக் காத்துக்கொள்ளும் பெண்டிர்
மணிகளால் செய்யப்பட்ட அணிகலன்களை அணிந்த தம் கணவரோடு நீராட,

குறையாமற் செல்கிறது வையையின் புதுநீர்;
புனலோடு போகின்ற ஒரு பூமாலை கொண்டையில்
ஊழ்வகையால் வந்து அடைந்தது என்று அதனை ஏற்றுக்கொண்டு,
நீராடியவரின் ஊரறிய அந்தப் பூமாலையை அணிந்துகொண்டாள் என்ற செய்தி,
நினைத்துப்பார்ப்பவரின் நெஞ்சிற்குத் துன்பம் விளைவிக்கும்; கொதிப்புடன்,
தலைவன் தலைவியிடம் வந்து சேர்வதற்கு முன்னரே இந்தக் கொடுந்தன்மை தலைவியை வந்து சேர்ந்தால்,
ஊடமாட்டாளோ? ஊரிலுள்ள அலர் பேச்சு ஊர்ந்துவந்து அவளைச் சேர,
என்று கூறும்படி புனலாட்டு நிகழ,
ஈக்கள் மொய்க்கும் சமைக்கப்பட்ட கள்ளினைக் கொண்டது இந்த ஆறு என்று
பார்ப்பனர் தவிர்த்தார் நீராடுதலை;

ஆடவரும் பெண்டிரும் பூசியிருந்த நறுமணப் பொருட்களைத் தூவப்பெற்றதாயிற்று என்று
அந்தணர்கள் நீராடவில்லை ஆற்றில்;
வையையின் நீர் தேன் கலந்து மழுமழுவென்றானது என்று
ஐயர் வாய்கொப்பளிக்கவில்லை ஆற்றில்;
விரைவான இரைச்சலுடன் நறுமணமிக்க துறைகளின் கரைகள் அழியும்படியாக இழிந்து ஊர்ந்து ஊர்ந்து செல்லும் புனல்;
கரையோரத்திலும், கடலில் கலக்குமிடத்திலும் மலையிலிருந்து கடல்வரை வரிசை வரிசையாக நீரானது நுரையை எழுப்பும்;
மிக்க நுரையுடன் மதகுகள்தோறும் புகுந்து வெளிவரும் நீர் கரை புரண்டு ஓடும்; அலைகள் புரளும் கடலுக்குள்
சென்று புகும் வரை மிகுந்து மேலும் மேலும் வந்து ஓசையுடன் கரைகளாகிய சிறைக்குள் அடங்காதவாய் வெள்ளம் மிகும்;
பல மலைகளைப் போல உயர்ந்த, கழுத்தில் கயிறிட்ட, நன்கு தொழில் பயின்ற,
மணிகள் கட்டப்பட்ட யானைகளின் மேல் வந்த மைந்தரும் மகளிரும்,

வரிசை வரிசையாக வந்து கூடினர்; யாவரும் ஒன்று சேர்ந்து
நிறமிக்க மணிகள் பூட்டிய யானைகளையும், அழகிய தேர்களையும் உடைய பாண்டியனின்
திருமருத முன்துறையை அணுக,
தெரிந்தெடுத்த மருதப்பண்ணினை, கேட்டோரைப் பிணிக்கும் யாழினையுடைய பாணர்கள் பாடினர்,
மக்களும் தாமும் பாடிப்பாடி புனலில் பாய்ந்து
ஆடியாடி இன்புற்றனர்; தமக்கு அருளியவரான கணவருடன்
மீண்டும் மீண்டும் ஊடிக்கொண்டிருக்க, கணவர்கள் அவர்களைத் தெளிவித்து விருப்பத்துடன்
கூடிக்கூடி மகிழ்ந்துகொண்டே இருப்பர்;
காணாமற்போனவர்களை தேடித் தேடி மனம் மிகவும் சிதைந்திருப்பர்;
மணமிக்க மலர்களை வெகுவாகச் சூடிக்கொண்டு வையையை மீண்டும் மீண்டும் தொழுவர்;

சேற்றோடு கலங்கிய மிக்க வெள்ளத்தையுடைய வையை ஆற்றில்
சிறந்த அழகினையுடைய மகளிரும் மைந்தரும் ஆடுதலால்
உமிழ்ந்தது போலானது இந்த நீர், குணத்தால் நிறைந்த சான்றோரே!
முழுவதும் எச்சிலாகும்படி பருகி;
நீராடியோர் அணிந்திருந்த சந்தனமும், மணங்கமழும் கழுத்து மாலைகளும், தலைமாலைகளும், நறுமணப்பொடிகளும்,
மகளிர் கூந்தலிலிருந்தும், மைந்தரின் குடுமியிலிருந்தும் நழுவி வீழ்ந்தன; அத்தகை பூக்களின் நிறத்தைத் தவிர,
சிறிதளவும் நீரின் நிறம்
மட்டும் தோன்றாது இந்த வையை ஆற்றில்;
மழைநீரானது வற்றிப்போன குளங்களில் நிறைந்து, மக்கள் வாய்கொப்பளிக்கவும், நீராடவும் ஆகும்,
கழுவப்படும் தன்மையுள்ள மஞ்சனப் பொருள்களும், குங்குமம், குழம்பு முதலியனவும் கலந்து கலங்கலாகி

ஆற்றில் வழிகின்ற நீர் தூயநீராக இல்லை வையையில்;
பார்த்தால் அச்சம் வரக்கூடிய கொல்லும் தொழிலையுடைய யானைகளையும், புடைத்தெழுந்த தோள்களையும் உடைய பாண்டியன்
அழகு பொருந்திய தன் மதுரை மாந்தருடனே, வையையில்
வருகின்ற நீரில் புனலாடிய தன்மையை ஒப்பிடுங்கால்
பெரிய கடலால் சூழப்பட்ட நிலவுலகத்தில் தேடினால் என்ன பயன்? அதுதான் இந்த ஊருக்கு
ஒரு வகையாலும் முற்றிலும் பொருந்துவதில்லை; அரிய மரபின்
அந்தரத்திலே உள்ள ஆகாயகங்கையில் ஆயிரம் கண்ணையுடையவனாகிய
இந்திரன் நீராடும் தன்மையையுடையது.

# 25.3 வையை
மதுரையில் அறவோராய் உள்ளவர்கள் அரிய வேதங்களைக் கடைப்பிடித்து நிற்க
---------- ---------- ------------- ---------------
பகைவரும் விரும்பும் நெருக்கமான நம்முடைய நட்பு
மறுபிறப்பிலும் இயைவதாக!  ஒழுக்கத்தால் மாட்சிமைப்பட்ட 
குளிர்ந்த நீர் வரவினையுடைய வையையே எமக்கு;

# 26.4 வையை
ஆராய்ந்தெடுத்த மாட்சிமைக்குரிய தமிழ் மூன்றினையும் கொண்ட தெற்குமலைக்குத் தலைவனான  பாண்டியனின்
குதிரைகள் வரிசையாக பரந்து வருவதைப் போன்று பரவி வருகிறது வையை;

# 27.5
மார்ச்சனை இடப்பட்டு முழங்கும் முழவோடு ஒப்பிடத்தக்க தோளினைக்
கருதி அவர்பால் செல்வதேயன்றி, விரும்பும் அழகினைக் கண்டவர்க்கு
தம்முடனேயே நிற்குமோ அவர் நெஞ்சு?

# 28.6
முன்னர் நுகர்ந்து அறியாத முதல் உறவினைக் கொண்ட திரண்ட கூந்தலினையுடையவளை,
அந்த உறவினால் இன்புற்றதால் ஏற்பட்ட இயற்கை அழகும், செயற்கை அழகும்,
நாணம் என்னும் பழைய அணியும் கொண்ட நல்ல நெற்றியையுடையவளை ..

# 29.7 மதுரை
இந்த உலகத்தின் அனைத்து நகர்களின் பெருமையையும் ஒரு பக்கமும்,. மதுரை நகரை ஒரு பக்கமும்
புலவர்கள் தம் அறிவாகிய துலாக்கோலில் இட்டு சீர்தூக்கும்போது, அந்த அனைத்து நகர்களின் பெருமையும்
தாம் வாடிப்போக, வாடிப்போகாத தன்மையையுடையது, பாண்டியனின்
நான்மாடக் கூடலாகிய மதுரை.

# 30.8 எட்டாம் பாடல்
திருமாலின் தொப்புளில் தோன்றி மலர்ந்த தாமரைப்
பூவோடு ஒத்தது அழகிய ஊர், அந்தப் பூவின்
அக இதழ்களை ஒத்தன தெருக்கள்; அந்த இதழ்களின் நடுவே உள்ள
அரிய பொகுட்டினை ஒத்ததே பாண்டியனின் அரண்மனை;
அந்தப் பூவின் பூந்தாதுக்களைப் போன்றவர் இனிய தமிழ்க்குடி மக்கள்;
அந்தத் தாதுக்களை உண்ணும் பறவைகளைப் போன்றவர் பரிசில் பெற்று வாழ்பவர்;
அந்தத் தாமரைப் பூவில் தோன்றிய பிரமதேவனுடைய நாவில் பிறந்த
நான்கு வேதங்களையும் கேள்வியால் கற்றவர்கள் ஓதுகின்ற குரலால் எழுப்ப,
மிக்க இன்பமான துயிலிலிருந்து எழுதலன்றி,

வாழ்த்துப்பெற்ற வஞ்சியும் உறைந்தையும் போல
கோழி கூவ எழாது எமது பெரிய ஊர்மக்களின் துயில்;

# 31.9 ஒன்பதாம் பாடல்
இனிய தமிழ்மொழியையே எல்லையாகக் கொண்ட தமிழ்நாடெங்கும்
நின்று நிலைத்து, புகழால் பொலிந்து விளங்குவதன்றி,
சிறிதளவும் குறைந்துபோதல் உண்டோ, மதுரை நகரின் புகழ்? மீன்கொடியைத் தேரில் கொண்ட பாண்டியனின்
பொதியில் மலை இருக்கும் காலம் அளவும்.

# 32.10 பத்தாம் பாடல்
திருமகளுக்கு இட்ட திலகம் போல், தனது தலைமைப் பண்பிற்கு ஏற்ப,
இந்த உலகத்தில் திகழ்ந்து புகழால் பொலிந்து விளங்குவதன்றி,
பொய்யாகிப்போய்விடுமோ மதுரை நகரின் புகழ்? ஒப்பனை செய்யப்பட்ட தேரினையுடைய பாண்டியனின்
வையை ஆறு இருக்கும் காலம் அளவும்.

# 33.11 பதினோராம் பாடல்
கார்த்திகை மகளிரின் பொன்னாலாகிய மகரக்குழை போன்று
சிறந்து விளங்கி, செல்வம் பெருகிப் பொலிதலை அன்றி
குற்றம் உடையதாகுமோ மதுரை நகரின் புகழ்? மீன்கொடியைத் தேரில் கொண்ட பாண்டியனின்
செந்தமிழ் மொழி இருக்கின்ற காலம் அளவும்.

# 34.12 பனிரெண்டாம் பாடல்
வள்ளண்மையோடு ஈதலைச் செய்வாரைப் போற்றி, தம்மிடம் வேண்டிவந்து பெற்றுக்கொள்வாரைப் பார்த்து மகிழ்கின்ற
பாண்டியனின் நான்மாடக் கூடலிலும், முருகன் இருக்கும் திருப்பரங்குன்றத்திலும்
வாழ்பவரே வாழ்பவர் எனப்படுவார், ஏனையோருள்
போவார் யார் தேவருலகிற்கு?

# 35 13 பதிமூன்றாம் பாடல்
வையையில் புதிதாக வருகின்ற நீரில் புனலாடுவது இனியதா?
முருகப்பிரான் இருக்கும் தலைமைப் பண்புள்ள திருப்பரங்குன்றத்தினை வணங்கி இன்புறுதல் இனியதா?
கூர்மையான வேலின் நுனி போன்ற கண்களையுடைய பெண்கள் துணையாக வர
இவ்விரண்டினில் எதனைச் செய்வோம் நாம் என்று எந்நாளும்
வழியறியாது மருட்சியடைதல், பாண்டியனின்
நெடிய மாடங்களையுடைய மதுரை மக்களுக்கு இயல்பு.
*