சங்க இலக்கியம் 17 - எட்டுத்தொகை -7 - அகநானூறு

சொற்பிரிப்பு-மூலம் அடிநேர்-உரை
** அகநானூறு

#0 கடவுள் வாழ்த்து
கார் விரி கொன்றைப் பொன் நேர் புது மலர்
தாரன் மாலையன் மலைந்த கண்ணியன்
மார்பினஃதே மை இல் நுண் ஞாண்
நுதலது இமையா நாட்டம் இகல் அட்டு
கையது கணிச்சியொடு மழுவே மூவாய்			5
வேலும் உண்டு அத் தோலாதோற்கே
ஊர்ந்தது ஏறே சேர்ந்தோள் உமையே
செவ் வான் அன்ன மேனி அவ் வான்
இலங்கு பிறை அன்ன விலங்கு வால் வை எயிற்று
எரி அகைந்து அன்ன அவிர்ந்து விளங்கு புரி சடை		10
முதிராத் திங்களொடு சுடரும் சென்னி
மூவா அமரரும் முனிவரும் பிறரும்
யாவரும் அறியாத் தொன் முறை மரபின்
வரி கிளர் வய_மான் உரிவை தைஇய
யாழ் கெழு மணி மிடற்று அந்தணன்			15
தா இல் தாள் நிழல் தவிர்ந்தன்றால் உலகே

#1 பாலை - மாமூலனார்
வண்டு படத் ததைந்த கண்ணி ஒண் கழல்
உருவக் குதிரை மழவர் ஓட்டிய
முருகன் நல் போர் நெடுவேள் ஆவி
அறு கோட்டு யானைப் பொதினி ஆங்கண்
சிறு காரோடன் பயினொடு சேர்த்திய		5
கல் போல் பிரியலம் என்ற சொல் தாம்
மறந்தனர்-கொல்லோ தோழி சிறந்த
வேய் மருள் பணைத் தோள் நெகிழச் சேய் நாட்டுப்
பொலம் கல வெறுக்கை தருமார் நிலம் பக
அழல் போல் வெம் கதிர் பைது அறத் தெறுதலின்		10
நிழல் தேய்ந்து உலறிய மரத்த அறை காய்பு
அறு நீர்ப் பைம் சுனை ஆம் அறப் புலர்தலின்
உகு நெல் பொரியும் வெம்மைய யாவரும்
வழங்குநர் இன்மையின் வௌவுநர் மடிய
சுரம் புல்லென்ற ஆற்ற அலங்கு சினை		15
நார் இல் முருங்கை நவிரல் வான் பூச்
சூரல் அம் கடு வளி எடுப்ப ஆருற்று
உடை திரைப் பிதிர்வின் பொங்கி முன்
கடல் போல் தோன்றல காடு இறந்தோரே

#2 குறிஞ்சி - கபிலர்
கோழ் இலை வாழைக் கோள் முதிர் பெரும் குலை
ஊழுறு தீம் கனி உண்ணுநர்த் தடுத்த
சாரல் பலவின் சுளையொடு ஊழ் படு
பாறை நெடும் சுனை விளைந்த தேறல்
அறியாது உண்ட கடுவன் அயலது		5
கறி வளர் சாந்தம் ஏறல் செல்லாது
நறு வீ அடுக்கத்து மகிழ்ந்து கண்படுக்கும்
குறியா இன்பம் எளிதின் நின் மலை
பல் வேறு விலங்கும் எய்தும் நாட
குறித்த இன்பம் நினக்கு எவன் அரிய		10
வெறுத்த ஏஎர் வேய் புரை பணைத் தோள்
நிறுப்ப நில்லா நெஞ்சமொடு நின்-மாட்டு
இவளும் இனையள் ஆயின் தந்தை
அரும் கடிக் காவலர் சோர்_பதன் ஒற்றி
கங்குல் வருதலும் உரியை பைம் புதல்		15
வேங்கையும் ஒள் இணர் விரிந்தன
நெடு வெண் திங்களும் ஊர்கொண்டன்றே

#3 பாலை - எயினந்தை மகனார் இளங்கீரனா?ர்
இரும் கழி முதலை மேஎந்தோல் அன்ன
கரும் கால் ஓமை காண்பு இன் பெரும் சினை
கடி உடை நனம் தலை ஈன்று இளைப்பட்ட
கொடு வாய்ப் பேடைக்கு அல்கு_இரை தரீஇய
மான்று வேட்டு எழுந்த செம் செவி எருவை		5
வான் தோய் சிமைய விறல் வரைக் கவாஅன்
துளங்கு நடை மரையா வலம் படத் தொலைச்சி
ஒண் செம் குருதி உவற்றி உண்டு அருந்துபு
புலவுப் புலி துறந்த கலவுக் கழிக் கடு முடை
கொள்ளை மாந்தரின் ஆனாது கவரும்		10
புல் இலை மராஅத்த அகன் சேண் அத்தம்
கலம் தரல் உள்ளமொடு கழியக் காட்டி
பின் நின்று துரக்கும் நெஞ்சம் நின் வாய்
வாய் போல் பொய்ம்மொழி எவ்வம் என் களைமா
கவிர் இதழ் அன்ன காண்பு இன் செவ் வாய்		15
அம் தீம் கிளவி ஆய் இழை மடந்தை
கொடும் குழைக்கு அமர்த்த நோக்கம்
நெடும் சேண் ஆர் இடை விலங்கும் ஞான்றே

#4 முல்லை - குறுங்குடி மருதனார்
முல்லை வை நுனை தோன்ற இல்லமொடு
பைம் கால் கொன்றை மென் பிணி அவிழ
இரும்பு திரித்து அன்ன மா இரு மருப்பின்
பரல் அவல் அடைய இரலை தெறிப்ப
மலர்ந்த ஞாலம் புலம்பு புறக்கொடுப்ப		5
கருவி வானம் கதழ் உறை சிதறிக்
கார் செய்தன்றே கவின் பெறு கானம்
குரங்கு உளைப் பொலிந்த கொய் சுவல் புரவி
நரம்பு ஆர்த்து அன்ன வாங்கு வள் பரிய
பூத்த பொங்கர்த் துணையொடு வதிந்த		10
தாது_உண்_பறவை பேதுறல் அஞ்சி
மணி நா ஆர்த்த மாண் வினைத் தேரன்
உவக் காண் தோன்றும் குறும்பொறை நாடன்
கறங்கு இசை விழவின் உறந்தைக் குணாது
நெடும் பெரும் குன்றத்து அமன்ற காந்தள்		15
போது அவிழ் அலரின் நாறும்
ஆய் தொடி அரிவை நின் மாண் நலம் படர்ந்தே

#5 பாலை - பாலை பாடிய பெருங்கடுங்கோ
அளி நிலை பொறாஅது அமரிய முகத்தள்
விளி நிலை கொள்ளாள் தமியள் மென்மெல
நலம் மிகு சேவடி நிலம் வடுக் கொளாஅக்
குறுக வந்து தன் கூர் எயிறு தோன்ற
வறிது அகத்து எழுந்த வாய் அல் முறுவலள்		5
கண்ணியது உணரா அளவை ஒண்_நுதல்
வினை தலைப்படுதல் செல்லா நினைவுடன்
முளிந்த ஓமை முதையல் அம் காட்டு
பளிங்கத்து அன்ன பல் காய் நெல்லி
மோட்டு இரும் பாறை ஈட்டு வட்டு ஏய்ப்ப		10
உதிர்வன படூஉம் கதிர் தெறு கவாஅன்
மாய்த்த போல மழுகு நுனை தோற்றி
பாத்தி அன்ன குடுமிக் கூர்ம் கல்
விரல் நுதி சிதைக்கும் நிரை நிலை அதர
பரல் முரம்பு ஆகிய பயம் இல் கானம்		15
இறப்ப எண்ணுதிர் ஆயின் அறத்தாறு
அன்று என மொழிந்த தொன்றுபடு கிளவி
அன்ன ஆக என்னுநள் போல
முன்னம் காட்டி முகத்தின் உரையா
ஓவச் செய்தியின் ஒன்று நினைந்து ஒற்றி		20
பாவை மாய்த்த பனி நீர் நோக்கமொடு
ஆகத்து ஒடுக்கிய புதல்வன் புன் தலை
தூ நீர் பயந்த துணை அமை பிணையல்
மோயினள் உயிர்த்த காலை மா மலர்
மணி உரு இழந்த அணி அழி தோற்றம்		25
கண்டே கடிந்தனம் செலவே ஒண்_தொடி
உழையம் ஆகவும் இனைவோள்
பிழையலள்-மாதோ பிரிதும் நாம் எனினே

#6 மருதம் - பரணர்
அரி பெய் சிலம்பின் ஆம்பல் அம் தொடலை
அரம் போழ் அம் வளைப் பொலிந்த முன்கை
இழை அணி பணைத் தோள் ஐயை தந்தை
மழை வளம் தரூஉம் மா வண் தித்தன்
பிண்ட நெல்லின் உறந்தை ஆங்கண்		5
கழை நிலை பெறாஅக் காவிரி நீத்தம்
குழை மாண் ஒள் இழை நீ வெய்யோளொடு
வேழ வெண் புணை தழீஇப் பூழியர்
கயம் நாடு யானையின் முகன் அமர்ந்து ஆங்கு
ஏந்து எழில் ஆகத்துப் பூம் தார் குழைய		10
நெருநல் ஆடினை புனலே இன்று வந்து
ஆக வன முலை அரும்பிய சுணங்கின்
மாசு இல் கற்பின் புதல்வன் தாய் என
மாயப் பொய்ம்மொழி சாயினை பயிற்றி எம்
முதுமை எள்ளல் அஃது அமைகும்-தில்ல		15
சுடர் பூம் தாமரை நீர் முதிர் பழனத்து
அம் தூம்பு வள்ளை ஆய் கொடி மயக்கி
வாளை மேய்ந்த வள் எயிற்று நீர்நாய்
முள் அரைப் பிரம்பின் மூதரில் செறியும்
பல் வேல் மத்தி கழாஅர் அன்ன எம்		20
இளமை சென்று தவத் தொல்லஃதே
இனிமை எவன் செய்வது பொய்ம்மொழி எமக்கே

#7 பாலை - கயமனார்
முலை முகம்செய்தன முள் எயிறு இலங்கின
தலை முடி சான்ற தண் தழை உடையை
அலமரல் ஆயமொடு யாங்கணும் படாஅல்
மூப்பு உடை முது பதி தாக்கு அணங்கு உடைய
காப்பும் பூண்டிசின் கடையும் போகலை		5
பேதை அல்லை மேதை அம் குறுமகள்
பெதும்பைப் பருவத்து ஒதுங்கினை புறத்து என
ஒண் சுடர் நல் இல் அரும் கடி நீவி
தன் சிதைவு அறிதல் அஞ்சி இன் சிலை
ஏறு உடை இனத்த நாறு உயிர் நவ்வி		10
வலை காண் பிணையின் போகி ஈங்கு ஓர்
தொலைவு இல் வெள் வேல் விடலையொடு என் மகள்
இச் சுரம் படர்தந்தோளே ஆயிடை
அத்தக் கள்வர் ஆ தொழு அறுத்து என
பிற்படு பூசலின் வழிவழி ஓடி			15
மெய்த் தலைப்படுதல் செல்லேன் இத் தலை
நின்னொடு வினவல் கேளாய் பொன்னொடு
புலிப் பல் கோத்த புலம்பு மணித் தாலி
ஒலிக் குழைச் செயலை உடை மாண் அல்குல்
ஆய் சுளைப் பலவின் மேய் கலை உதிர்த்த		20
துய்த் தலை வெண் காழ் பெறூஉம்
கல் கெழு சிறுகுடிக் கானவன் மகளே

#8 குறிஞ்சி - பெருங்குன்றூர்கிழார்
ஈயல் புற்றத்து ஈர்ம் புறத்து இறுத்த
குரும்பி வல்சிப் பெரும் கை ஏற்றைக்
தூங்கு தோல் துதிய வள் உகிர் கதுவலின்
பாம்பு மதன் அழியும் பானாள் கங்குலும்
அரிய அல்ல-மன் இகுளை பெரிய		5
கேழல் அட்ட பேழ் வாய் ஏற்றைப்
பலா அமல் அடுக்கம் புலாவ ஈர்க்கும்
கழை நரல் சிலம்பின் ஆங்கண் வழையொடு
வாழை ஓங்கிய தாழ் கண் அசும்பில்
படு கடும் களிற்றின் வருத்தம் சொலிய		10
பிடி படி முறுக்கிய பெரு மரப் பூசல்
விண் தோய் விடரகத்து இயம்பும் அவர் நாட்டு
எண் அரும் பிறங்கல் மான் அதர் மயங்காது
மின்னு விடச் சிறிய ஒதுங்கி மென்மெல
துளித் தலை தலைஇய மணி ஏர் ஐம்பால்		15
சிறுபுறம் புதைய வாரிக் குரல் பிழியூஉ
நெறி கெட விலங்கிய நீயிர் இச் சுரம்
அறிதலும் அறிதிரோ என்னுநர்ப் பெறினே

#9 பாலை கல்லாடனார்
கொல் வினைப் பொலிந்த கூர்ம் குறும் புழுகின்
வில்லோர் தூணி வீங்கப் பெய்த
அப்பு நுனை ஏய்ப்ப அரும்பிய இருப்பைச்
செப்பு அடர் அன்ன செம் குழை அகம்-தோறு
இழுதின் அன்ன தீம் புழல் துய் வாய்		5
உழுது காண் துளைய ஆகி ஆர் கழல்பு
ஆலி வானின் காலொடு பாறித்
துப்பின் அன்ன செம் கோட்டு இயவின்
நெய்த்தோர் மீமிசை நிணத்தின் பரிக்கும்
அத்தம் நண்ணிய அம் குடிச் சீறூர்		10
கொடு நுண் ஓதி மகளிர் ஓக்கிய
தொடி மாண் உலக்கைத் தூண்டு உரல் பாணி
நெடுமால் வரைய குடிஞையோடு இரட்டும்
குன்று பின் ஒழியப் போகி உரம் துரந்து
ஞாயிறு படினும் ஊர் சேய்த்து எனாது		15
துனை பரி துரக்கும் துஞ்சாச் செலவின்
எம்மினும் விரைந்து வல் எய்திப் பல் மாண்
ஓங்கிய நல் இல் ஒரு சிறை நிலைஇ
பாங்கர்ப் பல்லி படு-தொறும் பரவிக்
கன்று புகு மாலை நின்றோள் எய்திக்		20
கை கவியாச் சென்று கண் புதையாக் குறுகி
பிடிக் கை அன்ன பின்னகம் தீண்டி
தொடிக் கை தைவரத் தோய்ந்தன்று-கொல்லோ
நாணொடு மிடைந்த கற்பின் வாள் நுதல்
அம் தீம் கிளவிக் குறுமகள்		25
மென் தோள் பெற நசைஇச் சென்ற என் நெஞ்சே

#10 நெய்தல் - அம்மூவனார்
வான் கடல் பரப்பில் தூவற்கு எதிரிய
மீன் கண்டு அன்ன மெல் அரும்பு ஊழ்த்த
முடவு முதிர் புன்னைத் தடவு நிலை மாச் சினை
புள் இறைகூரும் மெல்லம்புலம்ப
நெய்தல் உண்கண் பைதல கலுழ		5
பிரிதல் எண்ணினை ஆயின் நன்றும்
அரிது உற்றனையால் பெரும உரிதினின்
கொண்டு ஆங்கு பெயர்தல் வேண்டும் கொண்டலொடு
குரூஉத் திரைப் புணரி உடைதரும் எக்கர்ப்
பழம் திமில் கொன்ற புது வலைப் பரதவர்		10
மோட்டு மணல் அடைகரைக் கோட்டு_மீன் கெண்டி
மணம் கமழ் பாக்கத்துப் பகுக்கும்
வளம் கெழு தொண்டி அன்ன இவள் நலனே

#11 பாலை - ஔவையார்
வானம் ஊர்ந்த வயங்கு ஒளி மண்டிலம்
நெருப்பு எனச் சிவந்த உருப்பு அவிர் அம் காட்டு
இலை இல மலர்ந்த முகை இல் இலவம்
கலி கொள் ஆயம் மலிபு தொகுபு எடுத்த
அம் சுடர் நெடும் கொடி பொற்பத் தோன்றி		5
கயம் துகள் ஆகிய பயம் தபு கானம்
எம்மொடு கழிந்தனர் ஆயின் கம்மென
வம்பு விரித்து அன்ன பொங்கு மணல் கான்யாற்றுப்
படு சினை தாழ்ந்த பயில் இணர் எக்கர்
மெய் புகுவு அன்ன கை கவர் முயக்கம்		10
அவரும் பெறுகுவர்-மன்னே நயவர
நீர் வார் நிகர் மலர் கடுப்ப ஓ மறந்து
அறு குளம் நிறைக்குந போல அல்கலும்
அழுதல் மேவல ஆகி
பழி தீர் கண்ணும் படுகுவ-மன்னே		15

#12 குறிஞ்சி - கபிலர்
யாயே கண்ணினும் கடும் காதலளே
எந்தையும் நிலன் உறப் பொறாஅன் சீறடி சிவப்ப
எவன் இல குறுமகள் இயங்குதி என்னும்
யாமே பிரிவு இன்று இயைந்த துவரா நட்பின்
இரு தலைப் புள்ளின் ஓர் உயிர் அம்மே		5
ஏனல் அம் காவலர் ஆனாது ஆர்-தொறும்
கிளி விளி பயிற்றும் வெளில் ஆடு பெரும் சினை
விழுக் கோட்டுப் பலவின் பழு பயம் கொள்மார்
குறவர் ஊன்றிய குரம்பை புதைய
வேங்கை தாஅய தேம் பாய் தோற்றம்		10
புலி செத்து வெரீஇய புகர் முக வேழம்
மழை படு சிலம்பில் கழைபடப் பெயரும்
நல் வரை நாட நீ வரின்
மெல்_இயல் ஓரும் தான் வாழலளே

#13 பாலை - பெருந்தலை சாத்தனார்
தன் கடல் பிறந்த முத்தின் ஆரமும்
முனை திறை கொடுக்கும் துப்பின் தன் மலை
தெறல் அரு மரபின் கடவுள் பேணிக்
குறவர் தந்த சந்தின் ஆரமும்
இரு பேர் ஆரமும் எழில் பெற அணியும்		5
திரு வீழ் மார்பின் தென்னவன் மறவன்
குழியில் கொண்ட மராஅ யானை
மொழியின் உணர்த்தும் சிறு வரை அல்லது
வரை நிலை இன்றி இரவலர்க்கு ஈயும்
வள் வாய் அம்பின் கோடைப் பொருநன்		10
பண்ணி தைஇய பயம் கெழு வேள்வியின்
விழுமிது நிகழ்வது ஆயினும் தெற்கு ஏர்பு
கழி மழை பொழிந்த பொழுது கொள் அமையத்து
சாயல் இன் துணை இவள் பிரிந்து உறையின்
நோய் இன்றாக செய்பொருள் வயிற்பட		15
மாசு இல் தூ மடி விரிந்த சேக்கை
கவவு இன்புறாமைக் கழிக வள வயல்
அழல் நுதி அன்ன தோகை ஈன்ற
கழனி நெல் ஈன் கவை முதல் அலங்கல்
நிரம்பு அகன் செறுவில் வரம்பு அணையாத் துயல்வரப்		20
புலம்பொடு வந்த பொழுது கொள் வாடை
இலங்கு பூம் கரும்பின் ஏர் கழை இருந்த
வெண் குருகு நரல வீசும்
நுண் பல் துவலைய தண் பனி நாளே

#14 முல்லை - ஒக்கூர் மாசாத்தனார்
அரக்கத்து அன்ன செந்நிலப் பெரு வழி
காயாம் செம்மல் தாஅய்ப் பல உடன்
ஈயல் மூதாய் வரிப்பப் பவளமொடு
மணி மிடைந்து அன்ன குன்றம் கவைஇய
அம் காட்டு ஆர் இடை மடப் பிணை தழீஇ		5
திரி மருப்பு இரலை புல் அருந்து உகள
முல்லை வியன் புலம் பரப்பிக் கோவலர்
குறும்பொறை மருங்கின் நறும் பூ அயரப்
பதவு மேயல் அருந்து மதவு நடை நல் ஆன்
வீங்கு மாண் செருத்தல் தீம் பால் பிலிற்ற		10
கன்று பயிர் குரல மன்று நிறை புகுதரும்
மாலையும் உள்ளார் ஆயின் காலை
யாங்கு ஆகுவம்-கொல் பாண என்ற
மனையோள் சொல் எதிர் சொல்லல் செல்லேன்
செவ்வழி நல் யாழ் இசையினென் பையென		15
கடவுள் வாழ்த்திப் பையுள் மெய் நிறுத்து
அவர் திறம் செல்வேன் கண்டனென் யானே
விடு விசைக் குதிரை விலங்கு பரி முடுகக்
கல் பொருது இரங்கும் பல் ஆர் நேமிக்
கார் மழை முழக்கு இசை கடுக்கும்		20
முனை நல் ஊரன் புனை நெடும் தேரே

#15 பாலை - மாமூலனார்
எம் வெம் காமம் இயைவது ஆயின்
மெய்மலி பெரும் பூண் செம்மல் கோசர்
கொம்மை அம் பசும் காய்க் குடுமி விளைந்த
பாகல் ஆர்கைப் பறைக் கள் பீலித்
தோகைக் காவின் துளுநாட்டு அன்ன		5
வறும் கை வம்பலர் தாங்கும் பண்பின்
செறிந்த சேரிச் செம்மல் மூதூர்
அறிந்த மாக்கட்டு ஆகுக-தில்ல
தோழிமாரும் யானும் புலம்பச்
சூழி யானைச் சுடர்ப் பூண் நன்னன்		10
பாழி அன்ன கடி உடை வியல் நகர்ச்
செறிந்த காப்பு இகந்து அவனொடு போகி
அத்த இருப்பை ஆர் கழல் புதுப் பூத்
துய்த்த வாய துகள் நிலம் பரக்க
கொன்றை அம் சினைக் குழல் பழம் கொழுதி		15
வன் கை எண்கின் வய நிரை பரக்கும்
இன் துணைப் படர்ந்த கொள்கையொடு ஒராங்குக்
குன்ற வேயின் திரண்ட என்
மென் தோள் அஞ்ஞை சென்ற ஆறே

#16 மருதம் - சாகலாசனார்
நாய் உடை முது நீர்க் கலித்த தாமரை
தாதின் அல்லி அவிர் இதழ் புரையும்
மாசு இல் அங்கை மணி மருள் அம் வாய்
நாவொடு நவிலா நகைபடு தீம் சொல்
யாவரும் விழையும் பொலம் தொடிப் புதல்வனைத்		5
தேர் வழங்கு தெருவில் தமியோன் கண்டே
கூர் எயிற்று அரிவை குறுகினள் யாவரும்
காணுநர் இன்மையின் செத்தனள் பேணிப்
பொலம் கலம் சுமந்த பூண் தாங்கு இள முலை
வருக மாள என் உயிர் எனப் பெரிது உவந்து		10
கொண்டனள் நின்றோள் கண்டு நிலைச் செல்லேன்
மாசு இல் குறுமகள் எவன் பேதுற்றனை
நீயும் தாயை இவற்கு என யான் தன்
கரைய வந்து விரைவனென் கவைஇ
களவு உடம்படுநரின் கவிழ்ந்து நிலம் கிளையா		15
நாணி நின்றோள் நிலை கண்டு யானும்
பேணினென் அல்லெனோ மகிழ்ந வானத்து
அணங்கு அரும் கடவுள் அன்னோள் நின்
மகன் தாய் ஆதல் புரைவது ஆங்கு எனவே

#17 பாலை - கயமனார்
வளம் கெழு திரு நகர்ப் பந்து சிறிது எறியினும்
இளம் துணை ஆயமொடு கழங்கு உடன் ஆடினும்
உயங்கின்று அன்னை என் மெய் என்று அசைஇ
மயங்கு வியர் பொறித்த நுதலள் தண்ணென
முயங்கினள் வதியும்-மன்னே இனியே		5
தொடி மாண் சுற்றமும் எம்மும் உள்ளாள்
நெடுமொழித் தந்தை அரும் கடி நீவி
நொதுமலாளன் நெஞ்சு அறப் பெற்ற என்
சிறு முதுக்குறைவி சிலம்பு ஆர் சீறடி
வல்ல-கொல் செல்லத் தாமே கல்லென		10
ஊர் எழுந்து அன்ன உரு கெழு செலவின்
நீர் இல் அத்தத்து ஆர் இடை மடுத்த
கொடும் கோல் உமணர் பகடு தெழி தெள் விளி
நெடும் பெரும் குன்றத்து இமிழ் கொள இயம்பும்
கடும் கதிர் திருகிய வேய் பயில் பிறங்கல்		15
பெரும் களிறு உரிஞ்சிய மண் அரை யாஅத்து
அரும் சுரக் கவலைய அதர் படு மருங்கின்
நீள் அரை இலவத்து ஊழ் கழி பல் மலர்
விழவு தலைக்கொண்ட பழ விறல் மூதூர்
நெய் உமிழ் சுடரின் கால் பொரச் சில்கி		20
வைகுறு மீனின் தோன்றும்
மை படு மா மலை விலங்கிய சுரனே

#18 குறிஞ்சி - கபிலர்
நீர் நிறம் கரப்ப ஊழுறுபு உதிர்ந்து
பூ மலர் கஞலிய கடு வரல் கான்யாற்று
கராஅம் துஞ்சும் கல் உயர் மறி சுழி
மராஅ யானை மதம் தப ஒற்றி
உராஅ ஈர்க்கும் உட்குவரு நீத்தம்		5
கடுங்கண் பன்றியின் நடுங்காது துணிந்து
நாம அரும் துறைப் பேர்தந்து யாமத்து
ஈங்கும் வருபவோ ஓங்கல் வெற்ப
ஒரு நாள் விழுமம் உறினும் வழி_நாள்
வாழ்குவள் அல்லள் என் தோழி யாவதும்		10
ஊறு இல் வழிகளும் பயில வழங்குநர்
நீடு இன்று ஆக இழுக்குவர் அதனால்
உலமரல் வருத்தம் உறுதும் எம் படப்பை
கொடும் தேன் இழைத்த கோடு உயர் நெடு வரை
பழம் தூங்கு நளிப்பின் காந்தள் அம் பொதும்பில்		15
பகல் நீ வரினும் புணர்குவை அகல் மலை
வாங்கு அமைக் கண் இடை கடுப்ப யாய்
ஓம்பினள் எடுத்த தட மென் தோளே

#19 பாலை - பொருந்தில் இளங்கீரனார்
அன்று அவண் ஒழிந்தன்றும் இலையே வந்து நனி
வருந்தினை வாழி என் நெஞ்சே பருந்து இருந்து
உயா விளி பயிற்றும் யா உயர் நனம் தலை
உருள் துடி மகுளியின் பொருள் தெரிந்து இசைக்கும்
கடும் குரல் குடிஞைய நெடும் பெரும் குன்றம்		5
எம்மொடு இறத்தலும் செல்லாய் பின் நின்று
ஒழிய சூழ்ந்தனை ஆயின் தவிராது
செல் இனிச் சிறக்க நின் உள்ளம் வல்லே
மறவல் ஓம்பு-மதி எம்மே நறவின்
சே இதழ் அனைய ஆகிக் குவளை		10
மா இதழ் புரையும் மலிர் கொள் ஈர் இமை
உள்ளகம் கனல உள்ளு-தொறு உலறி
பழங்கண் கொண்ட கலிழ்ந்து வீழ் அவிர் அறல்
வெய்ய உகுதர வெரீஇப் பையென
சில் வளை சொரிந்த மெல் இறை முன்கை		15
பூ வீ கொடியின் புல்லெனப் போகி
அடர்செய் ஆய் அகல் சுடர் துணை ஆக
இயங்காது வதிந்த நம் காதலி
உயங்கு சாய் சிறுபுறம் முயங்கிய பின்னே

#20 நெய்தல் - உலோச்சனார்
பெருநீர் அழுவத்து எந்தை தந்த
கொழு மீன் உணங்கல் படு புள் ஓப்பி
எக்கர்ப் புன்னை இன் நிழல் அசைஇச்
செக்கர் ஞெண்டின் குண்டு அளை கெண்டி
ஞாழல் ஓங்கு சினை தொடுத்த கொடும் கழித்		5
தாழை வீழ் கயிற்று ஊசல் தூங்கிக்
கொண்டல் இடு மணல் குரவை முனையின்
வெண் தலைப் புணரி ஆயமொடு ஆடி
மணிப் பூம் பைம் தழை தைஇ அணித்தகப்
பல் பூம் கானல் அல்கினம் வருதல்		10
கவ்வை நல் அணங்கு உற்ற இ ஊர்
கொடிது அறி பெண்டிர் சொல் கொண்டு அன்னை
கடி கொண்டனளே தோழி பெரும் துறை
எல்லையும் இரவும் என்னாது கல்லென
வலவன் ஆய்ந்த வண் பரி		15
நிலவு மணல் கொட்கும் ஓர் தேர் உண்டு எனவே

#21 பாலை - காவன்முல்லை பூதனார்
மனை இள நொச்சி மௌவல் வால் முகைத்
துணை நிரைத்து அன்ன மா வீழ் வெண் பல்
அம் வயிற்று அகன்ற அல்குல் தைஇத்
தாழ் மென் கூந்தல் தட மென் பணைத் தோள்
மடந்தை மாண் நலம் புலம்பச் சேய் நாட்டுச்		5
செல்லல் என்று யான் சொல்லவும் ஒல்லாய்
வினை நயந்து அமைந்தனை ஆயின் மனை நகப்
பல் வேறு வெறுக்கை தருகம் வல்லே
எழு இனி வாழி என் நெஞ்சே புரி இணர்
மெல் அவிழ் அம் சினை புலம்ப வல்லோன்		10
கோடு அறை கொம்பின் வீ உகத் தீண்டி
மராஅம் அலைத்த மண வாய்த் தென்றல்
சுரம் செல் மள்ளர் சுரியல் தூற்றும்
என்றூழ் நின்ற புன் தலை வைப்பில்
பருந்து இளைப்படூஉம் பாறு தலை ஓமை		15
இரும் கல் விடரகத்து ஈன்று இளைப்பட்ட
மென் புனிற்று அம் பிணவு பசித்தெனப் பைம் கண்
செந்நாய் ஏற்றை கேழல் தாக்க
இரியல் பிணவல் தீண்டலின் பரீஇச்
செங்காய் உதிர்ந்த பைம் குலை ஈந்தின்		20
பரல் மண் சுவல முரண் நிலம் உடைத்த
வல் வாய்க் கணிச்சிக் கூழ் ஆர் கோவலர்
ஊறாது இட்ட உவலைக் கூவல்
வெண் கோடு நயந்த அன்பு இல் கானவர்
இகழ்ந்து இயங்கு இயவின் அகழ்ந்த குழி செத்து		25
இரும் களிற்று இன நிரை தூர்க்கும்
பெரும் கல் அத்தம் விலங்கிய காடே

#22 குறிஞ்சி - வெறிபாடிய காமக்கண்ணியார்
அணங்கு உடை நெடு வரை உச்சியின் இழிதரும்
கணம்கொள் அருவி கான் கெழு நாடன்
மணம் கமழ் வியல் மார்பு அணங்கிய செல்லல்
இது என அறியா மறுவரல் பொழுதில்
படியோர்த் தேய்த்த பல் புகழ்த் தடக் கை		5
நெடுவேள் பேணத் தணிகுவள் இவள் என
முது வாய்ப் பெண்டிர் அது வாய் கூற
களம் நன்கு இழைத்துக் கண்ணி சூட்டி
வள நகர் சிலம்பப் பாடி பலிகொடுத்து
உருவச் செந்தினை குருதியொடு தூஉய்		10
முருகு ஆற்றுப்படுத்த உரு கெழு நடுநாள்
ஆரம் நாற அரு விடர்த் ததைந்த
சாரல் பல் பூ வண்டு படச் சூடிக்
களிற்று இரை தெரீஇய பார்வல் ஒதுக்கின்
ஒளித்து இயங்கும் மரபின் வயப் புலி போல		15
நல் மனை நெடு நகர்க் காவலர் அறியாமை
தன் நசை உள்ளத்து நம் நசை வாய்ப்ப
இன் உயிர் குழைய முயங்கு-தொறும் மெய் மலிந்து
நக்கனென் அல்லெனோ யானே எய்த்த
நோய் தணி காதலர் வர ஈண்டு		20
ஏதில் வேலற்கு உலந்தமை கண்டே

#23 பாலை - ஒரோடோகத்து கந்தரத்தனார்
மண் கண் குளிர்ப்ப வீசித் தண் பெயல்
பாடு உலந்தன்றே பறைக் குரல் எழிலி
புதல் மிசைத் தளவின் இதல் முள் செம் நனை
நெருங்கு குலைப் பிடவமொடு ஒருங்கு பிணி அவிழக்
காடே கம்மென்றன்றே அவல		5
கோடு உடைந்து அன்ன கோடல் பைம் பயிர்
பதவின் பாவை முனைஇ மதவு நடை
அண்ணல் இரலை அமர் பிணை தழீஇத்
தண் அறல் பருகித் தாழ்ந்துபட்டனவே
அனைய-கொல் வாழி தோழி மனைய		10
தாழ்வின் நொச்சி சூழ்வன மலரும்
மௌவல் மாச் சினை காட்டி
அவ்வளவு என்றார் ஆண்டுச் செய்பொருளே

#24 முல்லை - ஆவூர் மூலம் கிழார்
வேளாப் பார்ப்பான் வாள் அரம் துமித்த
வளை களைந்து ஒழிந்த கொழுந்தின் அன்ன
தளை பிணி அவிழாச் சுரி முகப் பகன்றை
சிதரல் அம் துவலை தூவலின் மலரும்
தைஇ நின்ற தண் பெயல் கடை நாள்		5
வயங்கு கதிர் கரந்த வாடை வைகறை
விசும்பு உரிவது போல் வியல் இடத்து ஒழுகி
மங்குல் மா மழை தென்புலம் படரும்
பனி இரும் கங்குலும் தமியள் நீந்தி
தம் ஊரோளே நல்_நுதல் யாமே		10
கடி மதில் கதவம் பாய்தலின் தொடி பிளந்து
நுதி முகம் மழுகிய மண்ணை வெண் கோட்டு
சிறு கண் யானை நெடு நா ஒண் மணி
கழி பிணிக் கறைத் தோல் பொழி கணை உதைப்புத்
தழங்கு குரல் முரசமொடு முழங்கும் யாமத்து		15
கழித்து உறை செறியா வாள் உடை எறுழ்த் தோள்
இரவுத் துயில் மடிந்த தானை
உரவுச் சின வேந்தன் பாசறையேமே

#25 பாலை - ஒல்லையூர் தந்த பூதப்பாண்டியன்
நெடும் கரைக் கான்யாற்றுக் கடும் புனல் சாஅய்
அவிர் அறல் கொண்ட விரவு மணல் அகன் துறைத்
தண் கயம் நண்ணிய பொழில்-தொறும் காஞ்சிப்
பைம் தாது அணிந்த போது மலி எக்கர்
வதுவை நாற்றம் புதுவது கஞல		5
மா நனை கொழுதிய மணி நிற இரும் குயில்
படு நா விளியால் நடு நின்று அல்கலும்
உரைப்ப போல ஊழ் கொள்பு கூவ
இனச் சிதர் உகுத்த இலவத்து ஆங்கண்
சினைப் பூம் கோங்கின் நுண் தாது பகர்நர்		10
பவளச் செப்பில் பொன் சொரிந்து அன்ன
இகழுநர் இகழா இளநாள் அமையம்
செய்தோர்-மன்ற குறி என நீ நின்
பைதல் உண்கண் பனி வார்பு உறைப்ப
வாராமையின் புலந்த நெஞ்சமொடு		15
நோவல் குறுமகள் நோயியர் என் உயிர் என
மெல்லிய இனிய கூறி வல்லே
வருவர் வாழி தோழி பொருநர்
செல் சமம் கடந்த வில் கெழு தடக் கைப்
பொதியின் செல்வன் பொலம் தேர்த் திதியன்		20
இன் இசை இயத்தின் கறங்கும்
கல் மிசை அருவிய காடு இறந்தோரே

#26 மருதம்  - பாண்டியன் கானப்பேரெயில் தந்த உக்கிரப்பெருவழுதி
கூன் முள் முள்ளிக் குவி குலைக் கழன்ற
மீன் முள் அன்ன வெண் கால் மா மலர்
பொய்தல் மகளிர் விழவு அணிக் கூட்டும்
அம் வயல் நண்ணிய வளம் கேழ் ஊரனை
புலத்தல் கூடுமோ தோழி அல்கல்		5
பெரும் கதவு பொருத யானை மருப்பின்
இரும்பு செய் தொடியின் ஏர ஆகி
மாக் கண் அடைய மார்பகம் பொருந்தி
முயங்கல் விடாஅல் இவை என மயங்கி
யான் ஓம் என்னவும் ஒல்லார் தாம் மற்று		10
இவை பாராட்டிய பருவமும் உளவே இனியே
புதல்வன் தடுத்த பாலொடு தடைஇத்
திதலை அணிந்த தேம் கொள் மென் முலை
நறும் சாந்து அணிந்த கேழ் கிளர் அகலம்
வீங்க முயங்கல் யாம் வேண்டினமே		15
தீம் பால் படுதல் தாம் அஞ்சினரே ஆயிடை
கவவுக் கை நெகிழ்ந்தமை போற்றி மதவு நடைச்
செவிலி கை என் புதல்வனை நோக்கி
நல்லோர்க்கு ஒத்தனிர் நீயிர் இஃதோ
செல்வற்கு ஒத்தனம் யாம் என மெல்ல என்		20
மகன்-வயின் பெயர்தந்தேனே அது கண்டு
யாமும் காதலம் அவற்கு எனச் சாஅய்ச்
சிறுபுறம் கவையினன் ஆக உறு பெயல்
தண் துளிக்கு ஏற்ற பல உழு செம் செய்
மண் போல் நெகிழ்ந்து அவன் கலுழ்ந்தே		25
நெஞ்சு அறைபோகிய அறிவினேற்கே

#27 பாலை - மதுரைக் கணக்காயனார்
கொடு வரி இரும் புலித் தயங்க நெடு வரை
ஆடு கழை இரு வெதிர் கோடைக்கு ஒல்கும்
கானம் கடிய என்னார் நாம் அழ
நின்றது இல் பொருட்பிணிச் சென்று இவண் தருமார்
செல்ப என்ப என்போய் நல்ல		5
மடவை மன்ற நீயே வட வயின்
வேங்கடம் பயந்த வெண் கோட்டு யானை
மறப் போர்ப் பாண்டியர் அறத்தின் காக்கும்
கொற்கை அம் பெரும் துறை முத்தின் அன்ன
நகை பொலிந்து இலங்கும் எயிறு கெழு துவர் வாய்		10
தகைப்பத் தங்கலர் ஆயினும் இகப்ப
யாங்ஙனம் விடுமோ மற்றே தேம் படத்
தெள் நீர்க்கு ஏற்ற திரள் கால் குவளைப்
பெருந்தகை சிதைத்தும் அமையாப் பருந்து பட
வேத்து அமர்க் கடந்த வென்றி நல் வேல்		15
குருதியொடு துயல்வந்து அன்ன நின்
அரி வேய் உண்கண் அமர்த்த நோக்கே

#28 குறிஞ்சி - பாண்டியன் அறிவுடைநம்பி
மெய்யின் தீரா மேவரு காமமொடு
எய்யாய் ஆயினும் உரைப்பல் தோழி
கொய்யா முன்னும் குரல் வார்பு தினையே
அருவி ஆன்ற பைம் கால்-தோறும்
இருவி தோன்றின பலவே நீயே		5
முருகு முரண்கொள்ளும் தேம் பாய் கண்ணிப்
பரியல் நாயொடு பன் மலைப் படரும்
வேட்டுவன் பெறலொடு அமைந்தனை யாழ நின்
பூக் கெழு தொடலை நுடங்க எழுந்துஎழுந்து
கிள்ளைத் தெள் விளி இடையிடை பயிற்றி		10
ஆங்காங்கு ஒழுகாய் ஆயின் அன்னை
சிறு கிளி கடிதல் தேற்றாள் இவள் என
பிறர் தந்து நிறுக்குவள் ஆயின்
உறற்கு அரிது ஆகும் அவன் மலர்ந்த மார்பே

#29 பாலை - வெள்ளாடியனார்
தொடங்கு வினை தவிரா அசைவு இல் நோன் தாள்
கிடந்து உயிர் மறுகுவது ஆயினும் இடம்படின்
வீழ் களிறு மிசையாப் புலியினும் சிறந்த
தாழ்வு இல் உள்ளம் தலைத்தலைச் சிறப்பச்
செய்வினைக்கு அகன்ற காலை எஃகுற்று		5
இரு வேறு ஆகிய தெரிதகு வனப்பின்
மாவின் நறு வடி போலக் காண்-தொறும்
மேவல் தண்டா மகிழ் நோக்கு உண்கண்
நினையாது கழிந்த வைகல் எனையதூஉம்
வாழலென் யான் எனத் தேற்றி பல் மாண்		10
தாழக் கூறிய தகைசால் நல் மொழி
மறந்தனிர் போறிர் எம் எனச் சிறந்த நின்
எயிறு கெழு துவர் வாய் இன் நகை அழுங்க
வினவல் ஆனாப் புனை_இழை கேள் இனி
வெம்மை தண்டா எரி உகு பறந்தலைக்		15
கொம்மை வாடிய இயவுள் யானை
நீர் மருங்கு அறியாது தேர் மருங்கு ஓடி
அறு நீர் அம்பியின் நெறி முதல் உணங்கும்
உள்ளுநர்ப் பனிக்கும் ஊக்கு அரும் கடத்து இடை
எள்ளல் நோனாப் பொருள் தரல் விருப்பொடு			20
நாணுத் தளை ஆக வைகி மாண் வினைக்கு
உடம்பு ஆண்டு ஒழிந்தமை அல்லதை
மடம் கெழு நெஞ்சம் நின் உழையதுவே

#30 நெய்தல் - முடங்கிக் கிடந்த நெடுஞ்சேரலாதன்
நெடும் கயிறு வலந்த குறும் கண் அம் வலை
கடல் பாடு அழிய இன மீன் முகந்து
துணை புணர் உவகையர் பரத மாக்கள்
இளையரும் முதியரும் கிளையுடன் துவன்றி
உப்பு ஒய் உமணர் அரும் துறை போக்கும்		5
ஒழுகை நோன் பகடு ஒப்பக் குழீஇ
அயிர் திணி அடைகரை ஒலிப்ப வாங்கிப்
பெரும் களம் தொகுத்த உழவர் போல
இரந்தோர் வறும் கலம் மல்க வீசிப்
பாடு பல அமைத்துக் கொள்ளை சாற்றிக்		10
கோடு உயர் திணி மணல் துஞ்சும் துறைவ
பெருமை என்பது கெடுமோ ஒரு நாள்
மண்ணா முத்தம் அரும்பிய புன்னைத்
தண் நறும் கானல் வந்து நும்
வண்ணம் எவனோ என்றனிர் செலினே		15

#31 பாலை - மாமூலனார்
நெருப்பு எனச் சிவந்த உருப்பு அவிர் மண்டிலம்
புலம் கடை மடங்கத் தெறுதலின் ஞொள்கி
நிலம் புடைபெயர்வது அன்று-கொல் இன்று என
மன் உயிர் மடிந்த மழை மாறு அமையத்து
இலை இல ஓங்கிய நிலை உயர் யாஅத்து		5
மேல் கவட்டு இருந்த பார்ப்பு இனங்கட்குக்
கல் உடைக் குறும்பின் வயவர் வில் இட
நிண வரிக் குறைந்த நிறத்த அதர்-தொறும்
கணவிர மாலை இடூஉக் கழிந்து அன்ன
புண் உமிழ் குருதி பரிப்பக் கிடந்தோர்		10
கண் உமிழ் கழுகின் கானம் நீந்திச்
சென்றார் என்பு இலர் தோழி வென்றியொடு
வில் அலைத்து உண்ணும் வல் ஆண் வாழ்க்கைத்
தமிழ் கெழு மூவர் காக்கும்
மொழிபெயர் தேஎத்த பல் மலை இறந்தே		15

#32 குறிஞ்சி - நல்வெள்ளியார்
நெருநல் எல்லை ஏனல் தோன்றித்
திரு மணி ஒளிர்வரும் பூணன் வந்து
புரவலன் போலும் தோற்றம் உறழ் கொள
இரவல் மாக்களின் பணிமொழி பயிற்றிச்
சிறுதினைப் படு கிளி கடீஇயர் பல் மாண்		5
குளிர் கொள் தட்டை மதன் இல புடையாச்
சூர்_அர_மகளிரின் நின்ற நீ மற்று
யாரையோ எம் அணங்கியோய் உண்கு எனச்
சிறுபுறம் கவையினன் ஆக அதன் கொண்டு
இகு பெயல் மண்ணின் ஞெகிழ்பு அஞர் உற்ற என்		10
உள் அவன் அறிதல் அஞ்சி உள் இல்
கடிய கூறி கைபிணி விடாஅ
வெரூஉம் மான் பிணையின் ஒரீஇ நின்ற
என் உரத் தகைமையின் பெயர்த்துப் பிறிது என்-வயின்
சொல்ல வல்லிற்றும் இலனே அல்லாந்து		15
இனம் தீர் களிற்றின் பெயர்ந்தோன் இன்றும்
தோலாவாறு இல்லை தோழி நாம் சென்மோ
சாய் இறைப் பணைத் தோள் கிழமை தனக்கே
மாசு இன்று ஆதலும் அறியான் ஏசற்று
என் குறைப் புறனிலை முயலும்		20
அண்கணாளனை நகுகம் யாமே

#33 பாலை - மதுரை அளக்கர் ஞாழார் மகனார் மள்ளனார்
வினை நன்று ஆதல் வெறுப்பக் காட்டி
மனை மாண் கற்பின் வாள்_நுதல் ஒழிய
கவை முறி இழந்த செந்நிலை யாஅத்து
ஒன்று ஓங்கு உயர் சினை இருந்த வன் பறை
வீளைப் பருந்தின் கோள் வல் சேவல்		5
வளை வாய்ப் பேடை வருதிறம் பயிரும்
இளி தேர் தீம் குரல் இசைக்கும் அத்தம்
செலவு அரும்-குரைய என்னாது சென்று அவள்
மலர் பாடு ஆன்ற மை எழில் மழைக் கண்
தெளியா நோக்கம் உள்ளினை உளி வாய்		10
வெம் பரல் அதர குன்று பல நீந்தி
யாமே எமியம் ஆக நீயே
ஒழியச் சூழ்ந்தனை ஆயின் முனாஅது
வெல் போர் வானவன் கொல்லி மீமிசை
நுணங்கு அமை புரையும் வணங்கு இறைப் பணைத் தோள்	15
வரி அணி அல்குல் வால் எயிற்றோள்-வயின்
பிரியாய் ஆயின் நன்று-மன்-தில்ல
அன்று நம் அறியாய் ஆயினும் இன்று நம்
செய்வினை ஆற்று உற விலங்கின்
எய்துவை அல்லையோ பிறர் நகு பொருளே		20

#34 முல்லை - மதுரை மருதன் இளநாகனார்
சிறு கரும் பிடவின் வெண் தலைக் குறும் புதல்
கண்ணியின் மலரும் தண் நறும் புறவில்
தொடுதோல் கானவன் கவை பொறுத்து அன்ன
இரு திரி மருப்பின் அண்ணல் இரலை
செறி இலைப் பதவின் செம் கோல் மென் குரல்		5
மறி ஆடு மருங்கின் மடப் பிணை அருத்தித்
தெள் அறல் தழீஇய வார் மணல் அடைகரை
மெல்கிடு கவுள துஞ்சு புறம் காக்கும்
பெருந்தகைக்கு உடைந்த நெஞ்சம் ஏமுற
செல்க தேரே நல் வலம் பெறுந		10
பசை கொல் மெல் விரல் பெரும் தோள் புலைத்தி
துறை விட்டு அன்ன தூ மயிர் எகினம்
துணையொடு திளைக்கும் காப்பு உடை வரைப்பில்
செம் தார்ப் பைம் கிளி முன்கை ஏந்தி
இன்று வரல் உரைமோ சென்றிசினோர்-திறத்து என		15
இல்லவர் அறிதல் அஞ்சி மெல்லென
மழலை இன் சொல் பயிற்றும்
நாண் உடை அரிவை மாண் நலம் பெறவே

#35 பாலை - குடவாயில் கீரத்தனார்
ஈன்று புறந்தந்த எம்மும் உள்ளாள்
வான் தோய் இஞ்சி நல் நகர் புலம்பத்
தனி மணி இரட்டும் தாள் உடைக் கடிகை
நுழை நுதி நெடு வேல் குறும் படை மழவர்
முனை ஆத் தந்து முரம்பின் வீழ்த்த		5
வில் ஏர் வாழ்க்கை விழுத் தொடை மறவர்
வல் ஆண் பதுக்கைக் கடவுள் பேண்மார்
நடுகல் பீலி சூட்டித் துடிப்படுத்துத்
தோப்பிக் கள்ளொடு துரூஉப் பலி கொடுக்கும்
போக்கு அரும் கவலைய புலவு நாறு அரும் சுரம்		10
துணிந்து பிறள் ஆயினள் ஆயினும் அணிந்துஅணிந்து
ஆர்வ நெஞ்சமொடு ஆய் நலன் அளைஇத் தன்
மார்பு துணை ஆகத் துயிற்றுக-தில்ல
துஞ்சா முழவின் கோவல் கோமான்
நெடும் தேர்க் காரி கொடும் கால் முன்துறை		15
பெண்ணை அம் பேரியாற்று நுண் அறல் கடுக்கும்
நெறி இரும் கதுப்பின் என் பேதைக்கு
அறியாத் தேஎத்து ஆற்றிய துணையே

#36 மருதம் - மதுரை நக்கீரர்
பகு வாய் வராஅல் பல் வரி இரும் போத்துக்
கொடு வாய் இரும்பின் கோள் இரை துற்றி
ஆம்பல் மெல் அடை கிழியக் குவளைக்
கூம்புவிடு பல் மலர் சிதையப் பாய்ந்து எழுந்து
அரில் படு வள்ளை ஆய் கொடி மயக்கித்		5
தூண்டில் வேட்டுவன் வாங்க வாராது
கயிறு இடு கதச் சேப் போல மதம் மிக்கு
நாள் கயம் உழக்கும் பூக் கேழ் ஊர
வரு புனல் வையை வார் மணல் அகன் துறை
திரு மருது ஓங்கிய விரி மலர்க் காவில்		10
நறும் பல் கூந்தல் குறும் தொடி மடந்தையொடு
வதுவை அயர்ந்தனை என்ப அலரே
கொய் சுவல் புரவிக் கொடித் தேர்ச் செழியன்
ஆலங்கானத்து அகன் தலை சிவப்பச்
சேரல் செம்பியன் சினம் கெழு திதியன்		15
போர் வல் யானைப் பொலம் பூண் எழினி
நார் அரி நறவின் எருமையூரன்
தேம் கமழ் அகலத்துப் புலர்ந்த சாந்தின்
இருங்கோ வேண்மான் இயல் தேர்ப் பொருநன் என்று
எழுவர் நல் வலம் அடங்க ஒரு பகல்		20
முரைசொடு வெண்குடை அகப்படுத்து உரை செலக்
கொன்று களம் வேட்ட ஞான்றை
வென்றி கொள் வீரர் ஆர்ப்பினும் பெரிதே

#37 பாலை - விற்றூற்று மூதெயினனார்
மறந்து அவண் அமையார் ஆயினும் கறங்கு இசைக்
கங்குல் ஓதைக் கலி மகிழ் உழவர்
பொங்கழி முகந்த தா இல் நுண் துகள்
மங்குல் வானின் மாதிரம் மறைப்ப
வைகு புலர் விடியல் வை பெயர்த்து ஆட்டித்		5
தொழில் செருக்கு அனந்தர் வீட எழில் தகை
வளியொடு சினைஇய வண் தளிர் மாஅத்துக்
கிளி போல் காய கிளைத் துணர் வடித்துப்
புளிப் பதன் அமைத்த புதுக் குட மலிர் நிறை
வெயில் வெரிந் நிறுத்த பயில் இதழ்ப் பசும் குடைக்		10
கயம் மண்டு பகட்டின் பருகிக் காண்வரக்
கொள்ளொடு பயறு பால் விரைஇ வெள்ளி
கோல் வரைந்து அன்ன வால் அவிழ் மிதவை
வாங்கு கை தடுத்த பின்றை ஓங்கிய
பருதி அம் குப்பை சுற்றிப் பகல் செல		15
மருத மரன் நிழல் எருதொடு வதியும்
காமர் வேனில்-மன் இது
மாண் நலம் நுகரும் துணையுடையோர்க்கே

#38 குறிஞ்சி - வடம வண்ணக்கன் பேரிசாத்தனார்
விரி இணர் வேங்கை வண்டு படு கண்ணியன்
தெரி இதழ்க் குவளைத் தேம் பாய் தாரன்
அம் சிலை இடவது ஆக வெம் செலல்
கணை வலம் தெரிந்து துணை படர்ந்து உள்ளி
வருதல் வாய்வது வான் தோய் வெற்பன்		5
வந்தனன் ஆயின் அம் தளிர்ச் செயலைத்
தாழ்வு இல் ஓங்கு சினை தொடுத்த வீழ் கயிற்று
ஊசல் மாறிய மருங்கும் பாய்பு உடன்
ஆடாமையின் கலுழ்பு இல தேறி
நீடு இதழ் தலைஇய கவின் பெறு நீலம்		10
கண் என மலர்ந்த சுனையும் வண் பறை
மடக் கிளி எடுத்தல் செல்லாத் தடக் குரல்
குலவுப் பொறை இறுத்த கோல் தலை இருவி
கொய்து ஒழி புனமும் நோக்கி நெடிது நினைந்து
பைதலன் பெயரலன்-கொல்லோ ஐ தேய்கு		15
அய வெள் அருவி சூடிய உயர் வரைக்
கூஉம் கணஃது எம் ஊர் என
ஆங்கு அதை அறிவுறல் மறந்திசின் யானே

#39 பாலை - மதுரை செங்கண்ணனார்
ஒழித்தது பழித்த நெஞ்சமொடு வழிப் படர்ந்து
உள்ளியும் அறிதிரோ எம் என யாழ நின்
முள் எயிற்றுத் துவர் வாய் முறுவல் அழுங்க
நோய் முந்துறுத்து நொதுமல் மொழியல் நின்
ஆய் நலம் மறப்பெனோ மற்றே சேண் இகந்து		5
ஒலி கழை பிசைந்த ஞெலி சொரி ஒண் பொறி
படு ஞெமல் புதையப் பொத்தி நெடு நிலை
முளி புல் மீமிசை வளி சுழற்று உறாஅ
காடு கவர் பெரும் தீ ஓடு வயின் ஓடலின்
அதர் கெடுத்து அலறிய சாத்தொடு ஒராங்கு		10
மதர் புலி வெரீஇய மையல் வேழத்து
இனம் தலைமயங்கிய நனம் தலைப் பெரும் காட்டு
ஞான்று தோன்று அவிர் சுடர் மான்றால் பட்டு எனக்
கள்_படர்_ஓதி நின் படர்ந்து உள்ளி
அரும் செலவு ஆற்றா ஆர் இடை ஞெரேரென		15
பரந்து படு பாயல் நவ்வி பட்டு என
இலங்கு வளை செறியா இகுத்த நோக்கமொடு
நிலம் கிளை நினைவினை நின்ற நின் கண்டு
இன்_நகை இனையம் ஆகவும் எம்-வயின்
ஊடல் யாங்கு வந்தன்று என யாழ நின்		20
கோடு ஏந்து புருவமொடு குவவு நுதல் நீவி
நறும் கதுப்பு உளரிய நன்னர் அமையத்து
வறும் கை காட்டிய வாய் அல் கனவின்
ஏற்று ஏக்கற்ற உலமரல்
போற்றாய் ஆகலின் புலத்தியால் எம்மே		25

#40 நெய்தல் - குன்றியனார்
கானல் மாலைக் கழிப் பூக் கூம்ப
நீல் நிறப் பெரும் கடல் பாடு எழுந்து ஒலிப்ப
மீன் ஆர் குருகின் மென் பறைத் தொழுதி
குவை இரும் புன்னைக் குடம்பை சேர
அசை வண்டு ஆர்க்கும் அல்குறு காலைத்		5
தாழை தளரத் தூக்கி மாலை
அழிதக வந்த கொண்டலொடு கழி படர்க்
காமர் நெஞ்சம் கையறுபு இனையத்
துயரம் செய்து நம் அருளார் ஆயினும்
அறாஅலியரோ அவர் உடைக் கேண்மை		10
அளி இன்மையின் அவண் உறை முனைஇ
வாரற்க-தில்ல தோழி கழனி
வெண்ணெல் அரிநர் பின்றைத் ததும்பும்
தண்ணுமை வெரீஇய தடம் தாள் நாரை
செறி மடை வயிரின் பிளிற்றிப் பெண்ணை		15
அக மடல் சேக்கும் துறைவன்
இன் துயில் மார்பில் சென்ற என் நெஞ்சே

#41 பாலை - குன்றியனார்
வைகு புலர் விடியல் மை புலம் பரப்பக்
கரு நனை அவிழ்ந்த ஊழுறு முருக்கின்
எரி மருள் பூம் சினை இனச் சிதர் ஆர்ப்ப
நெடு நெல் அடைச்சிய கழனி ஏர் புகுத்துக்
குடுமிக் கட்டிய படப்பையொடு மிளிர		5
அரிகால் போழ்ந்த தெரி பகட்டு உழவர்
ஓதைத் தெள் விளி புலம்-தொறும் பரப்பக்
கோழ் இணர் எதிரிய மரத்த கவினிக்
காடு அணி கொண்ட காண்தகு பொழுதில்
நாம் பிரி புலம்பின் நலம் செலச் சாஅய்		10
நம் பிரிபு அறியா நலனொடு சிறந்த
நல் தோள் நெகிழ வருந்தினள்-கொல்லோ
மென் சிறை வண்டின் தண் கமழ் பூம் துணர்
தாது இன் துவலை தளிர் வார்ந்து அன்ன
அம் கலுழ் மாமை கிளைஇய		15
நுண் பல் தித்தி மாஅயோளே

#42 குறிஞ்சி - கபிலர்
மலி பெயல் கலித்த மாரிப் பித்திகத்துக்
கொயல் அரு நிலைஇய பெயல் ஏர் மண முகைச்
செவ் வெரிந் உறழும் கொழும் கடை மழைக் கண்
தளிர் ஏர் மேனி மாஅயோயே
நாடு வறம் கூர நாஞ்சில் துஞ்ச		5
கோடை நீடிய பைது அறு காலைக்
குன்று கண்டு அன்ன கோட்ட யாவையும்
சென்று சேக்கல்லாப் புள்ள உள் இல்
என்றூழ் வியன் குளம் நிறைய வீசி
பெரும் பெயல் பொழிந்த ஏம வைகறை		10
பல்லோர் உவந்த உவகை எல்லாம்
என்னுள் பெய்தந்தற்றே சேண் இடை
ஓங்கித் தோன்றும் உயர் வரை
வான் தோய் வெற்பன் வந்த மாறே

#43 பாலை - மதுரை ஆசிரியர் நல்லந்துவனார்
கடல் முகந்து கொண்ட கமம் சூல் மா மழை
சுடர் நிமிர் மின்னொடு வலன் ஏர்பு இரங்கி
என்றூழ் உழந்த புன் தலை மடப் பிடி
கை மாய் நீத்தம் களிற்றொடு படீஇய
நிலனும் விசும்பும் நீர் இயைந்து ஒன்றிக்		5
குறுநீர்க் கன்னல் எண்ணுநர் அல்லது
கதிர் மருங்கு அறியாது அஞ்சுவரப் பாஅய்த்
தளி மயங்கின்றே தண் குரல் எழிலி யாமே
கொய் அகை முல்லை காலொடு மயங்கி
மை இரும் கானம் நாறும் நறு நுதல்		10
பல் இரும் கூந்தல் மெல் இயல் மடந்தை
நல் எழில் ஆகம் சேர்ந்தனம் என்றும்
அளியரோ அளியர் தாமே அளி இன்று
ஏதில் பொருட்பிணி போகித் தம்
இன் துணை பிரியும் மடமையோரே		15

#44 முல்லை - குடவாயில் கீரத்தனார்
வந்து வினை முடித்தனன் வேந்தனும் பகைவரும்
தம் திறை கொடுத்துத் தமர் ஆயினரே
முரண் செறிந்து இருந்த தானை இரண்டும்
ஒன்று என அறைந்தன பணையே நின் தேர்
முன் இயங்கு ஊர்திப் பின்னிலை ஈயாது		5
ஊர்க பாக ஒரு வினை கழிய
நன்னன் ஏற்றை நறும் பூண் அத்தி
துன் அரும் கடும் திறல் கங்கன் கட்டி
பொன் அணி வல் வில் புன்றுறை என்று ஆங்கு
அன்று அவர் குழீஇய அளப்பு அரும் கட்டூர்		10
பருந்து படப் பண்ணி பழையன் பட்டு எனக்
கண்டது நோனான் ஆகித் திண் தேர்க்
கணையன் அகப்படக் கழுமலம் தந்த
பிணையல் அம் கண்ணிப் பெரும் பூண் சென்னி
அழும்பில் அன்ன அறாஅ யாணர்		15
பழம் பல் நெல்லின் பல் குடிப் பரவை
பொங்கடி படி கயம் மண்டிய பசு மிளை
தண் குடவாயில் அன்னோள்
பண்பு உடை ஆகத்து இன் துயில் பெறவே

#45 பாலை - வெள்ளிவீதியார்
வாடல் உழுஞ்சில் விளை நெற்று அம் துணர்
ஆடுகளப் பறையின் அரிப்பன ஒலிப்பக்
கோடை நீடிய அகன் பெரும் குன்றத்து
நீர் இல் ஆர் ஆற்று நிவப்பன களிறு அட்டு
ஆள் இல் அத்தத்து உழுவை உகளும்		5
காடு இறந்தனரே காதலர் மாமை
அரி நுண் பசலை பாஅய்ப் பீரத்து
எழில் மலர் புரைதல் வேண்டும் அலரே
அன்னி குறுக்கைப் பறந்தலைத் திதியன்
தொல் நிலை முழுமுதல் துமியப் பண்ணிப்		10
புன்னை குறைத்த ஞான்றை வயிரியர்
இன் இசை ஆர்ப்பினும் பெரிதே யானே
காதலன் கெடுத்த சிறுமையொடு நோய் கூர்ந்து
ஆதிமந்தி போலப் பேதுற்று
அலந்தனென் உழல்வென்-கொல்லோ பொலம் தார்		15
கடல் கால்கிளர்ந்த வென்றி நல் வேல்
வானவரம்பன் அடல் முனைக் கலங்கிய
உடை மதில் ஓர் அரண் போல
அஞ்சுவரு நோயொடு துஞ்சாதேனே

#46 மருதம்  - அள்ளூர் நன்முல்லையார்
சேற்று நிலை முனைஇய செம் கண் காரான்
ஊர் மடி கங்குலில் நோன் தளை பரிந்து
கூர் முள் வேலி கோட்டின் நீக்கி
நீர் முதிர் பழனத்து மீன் உடன் இரிய
அம் தூம்பு வள்ளை மயக்கித் தாமரை		5
வண்டு ஊது பனி மலர் ஆரும் ஊர
யாரையோ நின் புலக்கேம் வாருற்று
உறை இறந்து ஒளிரும் தாழ் இரும் கூந்தல்
பிறரும் ஒருத்தியை நம் மனை தந்து
வதுவை அயர்ந்தனை என்ப அஃது யாம்		10
கூறேம் வாழியர் எந்தை செறுநர்
களிறு உடை அரும் சமம் ததைய நூறும்
ஒளிறு வாள் தானைக் கொற்றச் செழியன்
பிண்ட நெல்லின் அள்ளூர் அன்ன என்
ஒண் தொடி நெகிழினும் நெகிழ்க		15
சென்றி பெரும நின் தகைக்குநர் யாரோ

#47 பாலை - ஆலம்பேரி சாத்தனார்
அழிவு இல் உள்ளம் வழிவழிச் சிறப்ப
வினை இவண் முடித்தனம் ஆயின் வல் விரைந்து
எழு இனி வாழிய நெஞ்சே ஒலி தலை
அலங்கு கழை நரலத் தாக்கி விலங்கு எழுந்து
கடு வளி உருத்திய கொடி விடு கூர் எரி		5
விடர் முகை அடுக்கம் பாய்தலின் உடன் இயைந்து
அமைக் கண் விடு நொடி கணக் கலை அகற்றும்
வெம் முனை அரும் சுரம் நீந்திக் கைம்மிக்கு
அகன் சுடர் கல் சேர்பு மறைய மனை-வயின்
ஒண் தொடி மகளிர் வெண் திரிக் கொளாஅலின்		10
குறு நடைப் புறவின் செம் கால் சேவல்
நெடு நிலை வியன் நகர் வீழ் துணைப் பயிரும்
புலம்பொடு வந்த புன்கண் மாலை
யாண்டு உளர்-கொல் எனக் கலிழ்வோள் எய்தி
இழை அணி நெடும் தேர்க் கைவண் செழியன்		15
மழை விளையாடும் வளம் கெழு சிறுமலை
சிலம்பின் கூதளம் கமழும் வெற்பின்
வேய் புரை பணைத் தோள் பாயும்
நோய் அசா வீட முயங்குகம் பலவே

#48 குறிஞ்சி - தங்கால் முடக் கொற்றனார்
அன்னாய் வாழி வேண்டு அன்னை நின் மகள்
பாலும் உண்ணாள் பழங்கண் கொண்டு
நனி பசந்தனள் என வினவுதி அதன் திறம்
யானும் தெற்றென உணரேன் மேல்_நாள்
மலி பூம் சாரல் என் தோழிமாரோடு		5
ஒலி சினை வேங்கை கொய்குவம் சென்றுழி
புலிபுலி என்னும் பூசல் தோன்ற
ஒண் செங்கழுநீர் கண் போல் ஆய் இதழ்
ஊசி போகிய சூழ் செய் மாலையன்
பக்கம் சேர்த்திய செச்சைக் கண்ணியன்		10
குயம் மண்டு ஆகம் செம் சாந்து நீவி
வரி புனை வில்லன் ஒரு கணை தெரிந்து கொண்டு
யாதோ மற்று அம் மா திறம் படர் என
வினவி நிற்றந்தோனே அவன் கண்டு
எம்முள்எம்முள் மெய்மறைபு ஒடுங்கி		15
நாணி நின்றனெமாக பேணி
ஐவகை வகுத்த கூந்தல் ஆய் நுதல்
மை ஈர் ஓதி மடவீர் நும் வாய்
பொய்யும் உளவோ என்றனன் பையென
பரி முடுகு தவிர்த்த தேரன் எதிர்மறுத்து		20
நின் மகள் உண்கண் பல் மாண் நோக்கி
சென்றோன்-மன்ற அக் குன்று கிழவோனே
பகல் மாய் அந்தி படு_சுடர் அமையத்து
அவன் மறை தேஎம் நோக்கி மற்று இவன்
மகனே தோழி என்றனள்		25
அதன் அளவு உண்டு கோள் மதி வல்லோர்க்கே

#49 பாலை - வண்ணப்புற கந்தரத்தனார்
கிளியும் பந்தும் கழங்கும் வெய்யோள்
அளியும் அன்பும் சாயலும் இயல்பும்
முன்_நாள் போலாள் இறீஇயர் என் உயிர் என
கொடும் தொடைக் குழவியொடு வயின் மரத்து யாத்த
கடுங்கண் கறவையின் சிறுபுறம் நோக்கிக்		5
குறுக வந்து குவவு நுதல் நீவி
மெல்லெனத் தழீஇயினேன் ஆக என் மகள்
நன்னர் ஆகத்து இடை முலை வியர்ப்ப
பல் கால் முயங்கினள்-மன்னே அன்னோ
விறல் மிகு நெடுந்தகை பல பாராட்டி		10
வறன் நிழல் அசைஇ வான் புலந்து வருந்திய
மட மான் அசா இனம் திரங்கு மரல் சுவைக்கும்
காடு உடன்கழிதல் அறியின் தந்தை
அல்கு_பதம் மிகுத்த கடி உடை வியல் நகர்
செல்வுழிச்செல்வுழி மெய் நிழல் போலக்		15
கோதை ஆயமொடு ஓரை தழீஇத்
தோடு அமை அரிச் சிலம்பு ஒலிப்ப அவள்
ஆடுவழிஆடுவழி அகலேன் மன்னே

#50 நெய்தல் - கருவூர் பூதஞ்சாத்தனார்
கடல் பாடு அவிந்து தோணி நீங்கி
நெடு நீர் இரும் கழிக் கடு_மீன் கலிப்பினும்
வெவ் வாய்ப் பெண்டிர் கௌவை தூற்றினும்
மாண் இழை நெடும் தேர் பாணி நிற்பப்
பகலும் நம்-வயின் அகலான் ஆகிப்		5
பயின்று வரும் மன்னே பனி நீர்ச் சேர்ப்பன்
இனியே மணப்பு அரும் காமம் தணப்ப நீந்தி
வாராதோர் நமக்கு யாஅர் என்னாது
மல்லல் மூதூர் மறையினை சென்று
சொல்லின் எவனோ பாண எல்லி		10
மனை சேர் பெண்ணை மடி வாய் அன்றில்
துணை ஒன்று பிரியினும் துஞ்சா காண் எனக்
கண் நிறை நீர் கொடு கரக்கும்
ஒண் நுதல் அரிவை யான் என் செய்கோ எனவே

#51 பாலை - பெருந்தேவனார்
ஆள்_வழக்கு அற்ற சுரத்திடைக் கதிர் தெற
நீள் எரி பரந்த நெடும் தாள் யாத்து
போழ் வளி முழங்கும் புல்லென் உயர் சினை
முடை நசை இருக்கைப் பெடை முகம் நோக்கி
ஊன் பதித்து அன்ன வெருவரு செம் செவி		5
எருவைச் சேவல் கரிபு சிறை தீய
வேனில் நீடிய வேய் உயர் நனம் தலை
நீ உழந்து எய்தும் செய்வினை பொருட்பிணி
பல் இதழ் மழைக் கண் மாஅயோள்-வயின்
பிரியின் புணர்வது ஆயின் பிரியாது			10
ஏந்து முலை முற்றம் வீங்கப் பல் ஊழ்
சே_இழை தெளிர்ப்பக் கவைஇ நாளும்
மனை முதல் வினையொடும் உவப்ப
நினை மாண் நெஞ்சம் நீங்குதல் மறந்தே

#52 குறிஞ்சி - நொச்சி நியமம் கிழார்
வலந்த வள்ளி மரன் ஓங்கு சாரல்
கிளர்ந்த வேங்கைச் சேண் நெடும் பொங்கர்ப்
பொன் நேர் புது மலர் வேண்டிய குற_மகள்
இன்னா இசைய பூசல் பயிற்றலின்
ஏ கல் அடுக்கத்து இருள் அளைச் சிலம்பின்		5
ஆ கொள் வயப் புலி ஆகும் அஃது எனத் தம்
மலை கெழு சீறூர் புலம்பக் கல்லெனச்
சிலை உடை இடத்தர் போதரும் நாடன்
நெஞ்சு அமர் வியன் மார்பு உடைத்து என அன்னைக்கு
அறிவிப்பேம்-கொல் அறியலெம்-கொல் என		10
இரு பால் பட்ட சூழ்ச்சி ஒரு பால்
சேர்ந்தன்று வாழி தோழி யாக்கை
இன் உயிர் கழிவது ஆயினும் நின் மகள்
ஆய் மலர் உண்கண் பசலை
காம நோய் எனச் செப்பாதீமே		15

#53 பாலை - சீத்தலை சாத்தனார்
அறியாய் வாழி தோழி இருள் அற
விசும்புடன் விளங்கும் விரை செலல் திகிரி
கடும் கதிர் எறித்த விடுவாய் நிறைய
நெடும் கால் முருங்கை வெண் பூத் தாஅய்
நீர் அற வறந்த நிரம்பா நீள் இடை		5
வள் எயிற்றுச் செந்நாய் வருந்து பசிப் பிணவொடு
கள்ளி அம் காட்ட கடத்திடை உழிஞ்சில்
உள் ஊன் வாடிய சுரி மூக்கு நொள்ளை
பொரி அரை புதைத்த புலம்பு கொள் இயவின்
விழுத் தொடை மறவர் வில் இட வீழ்ந்தோர்		10
எழுத்து உடை நடுகல் இன் நிழல் வதியும்
அரும் சுரக் கவலை நீந்தி என்றும்
இல்லோர்க்கு இல் என்று இயைவது கரத்தல்
வல்லா நெஞ்சம் வலிப்ப நம்மினும்
பொருளே காதலர் காதல்		15
அருளே காதலர் என்றி நீயே

#54 முல்லை - மாற்றூர் கிழார் மகனார் கொற்றம் கொற்றனார்
விருந்தின் மன்னர் அரும் கலம் தெறுப்ப
வேந்தனும் வெம் பகை தணிந்தனன் தீம் பெயல்
காரும் ஆர்கலி தலையின்று தேரும்
ஓவத்து அன்ன கோபச் செந்நிலம்
வள் வாய் ஆழி உள் உறுபு உருளக்		5
கடவுக காண்குவம் பாக மதவு நடைத்
தாம்பு அசை குழவி வீங்கு சுரை மடியக்
கனையல் அம் குரல கால் பரி பயிற்றிப்
படு மணி மிடற்ற பய நிரை ஆயம்
கொடு மடி உடையர் கோல் கைக் கோவலர்		10
கொன்றை அம் குழலர் பின்றைத் தூங்க
மனைமனைப் படரும் நனை நகு மாலைத்
தனக்கு என வாழாப் பிறர்க்கு உரியாளன்
பண்ணன் சிறுகுடிப் படப்பை நுண் இலைப்
புன் காழ் நெல்லிப் பைம் காய் தின்றவர்		15
நீர் குடி சுவையின் தீவிய மிழற்றி
முகிழ் நிலாத் திகழ்தரும் மூவாத் திங்கள்
பொன் உடைத் தாலி என் மகன் ஒற்றி
வருகுவை ஆயின் தருகுவென் பால் என
விலங்கு அமர்க் கண்ணள் விரல் விளி பயிற்றி	20
திதலை அல்குல் எம் காதலி
புதல்வன் பொய்க்கும் பூங்கொடி நிலையே

#55 பாலை - மாமூலனார்
காய்ந்து செலல் கனலி கல் பகத் தெறுதலின்
ஈந்து குருகு உருகும் என்றூழ் நீள் இடை
உளி முக வெம் பரல் அடி வருத்துறாலின்
விளி முறை அறியா வேய் கரி கானம்
வயக் களிற்று அன்ன காளையொடு என் மகள்		5
கழிந்ததற்கு அழிந்தன்றோ இலெனே ஒழிந்து யாம்
ஊது உலைக் குருகின் உள் உயிர்த்து அசைஇ
வேவது போலும் வெய்ய நெஞ்சமொடு
கண்படை பெறேன் கனவ ஒண் படைக்
கரிகால்வளவனொடு வெண்ணிப்பறந்தலைப்		10
பொருது புண் நாணிய சேரலாதன்
அழி கள மருங்கின் வாள் வடக்கிருந்து என
இன்னா இன் உரை கேட்ட சான்றோர்
அரும் பெறல் உலகத்து அவனொடு செலீஇயர்
பெரும்பிறிது ஆகிய ஆங்கு பிரிந்து இவண்		15
காதல் வேண்டி என் துறந்து
போதல் செல்லா என் உயிரொடு புலந்தே

#56 மருதம் - மதுரை அறுவை வாணிகன் இளவேட்டனார்
நகை ஆகின்றே தோழி நெருநல்
மணி கண்டு அன்ன துணி கயம் துளங்க
இரும்பு இயன்று அன்ன கரும் கோட்டு எருமை
ஆம்பல் மெல் அடை கிழியக் குவளைக்
கூம்புவிடு பன் மலர் மாந்திக் கரைய		5
காஞ்சி நுண் தாது ஈர்ம் புறத்து உறைப்ப
மெல்கிடு கவுள அல்கு நிலை புகுதரும்
தண் துறை ஊரன் திண் தார் அகலம்
வதுவை நாள் அணிப் புதுவோர்ப் புணரிய
பரிவொடு வரூஉம் பாணன் தெருவில்		10
புனிற்று ஆப் பாய்ந்து எனக் கலங்கி யாழ் இட்டு
எம் மனைப் புகுதந்தோனே அது கண்டு
மெய் மலி உவகை மறையினென் எதிர் சென்று
இ மனை அன்று அஃது உம் மனை என்ற
என்னும் தன்னும் நோக்கி		15
மம்மர் நெஞ்சினோன் தொழுது நின்றதுவே

#57 பாலை - நக்கீரர்
சிறு பைம் தூவிச் செம் கால் பேடை
நெடு நீர் வானத்து வாவுப் பறை நீந்தி
வெயில் அவிர் உருப்பொடு வந்து கனி பெறாஅது
பெறு நாள் யாணர் உள்ளிப் பையாந்து
புகல் ஏக்கு அற்ற புல்லென் உலவைக்		5
குறும் கால் இற்றிப் புன் தலை நெடு வீழ்
இரும் பிணர்த் துறுகல் தீண்டி வளி பொர
பெரும் கை யானை நிவப்பின் தூங்கும்
குன்ற வைப்பின் என்றூழ் நீள் இடை
யாமே எமியம் ஆகத் தாமே		10
பசு நிலா விரிந்த பல் கதிர் மதியின்
பெரு நல் ஆய் கவின் ஒரீஇச் சிறு பீர்
வீ ஏர் வண்ணம் கொண்டன்று-கொல்லோ
கொய் சுவல் புரவி கொடித் தேர்ச் செழியன்
முதுநீர் முன்துறை முசிறி முற்றி		15
களிறு பட எருக்கிய கல்லென் ஞாட்பின்
அரும் புண் உறுநரின் வருந்தினள் பெரிது அழிந்து
பானாள் கங்குலும் பகலும்
ஆனாது அழுவோள் ஆய் சிறு நுதலே

#58 குறிஞ்சி - மதுரை பண்ட வாணிகன் இளந்தேவனார்
இன் இசை உருமொடு கனை துளி தலைஇ
மன் உயிர் மடிந்த பானாள் கங்குல்
காடு தேர் வேட்டத்து விளிவிடம் பெறாஅது
வரி அதள் படுத்த சேக்கை தெரி இழைத்
தேன் நாறு கதுப்பின் கொடிச்சியர் தந்தை		5
கூதிர் இல் செறியும் குன்ற நாட
வனைந்து வரல் இள முலை ஞெமுங்கப் பல் ஊழ்
விளங்கு தொடி முன்கை வளைந்து புறம் சுற்ற
நின் மார்பு அடைதலின் இனிது ஆகின்றே
நும் இல் புலம்பின் நும் உள்ளு-தொறும் நலியும்		10
தண் வரல் அசைஇய பண்பு இல் வாடை
பதம் பெறுகல்லாது இடம் பார்த்து நீடி
மனை மரம் ஒசிய ஒற்றிப்
பலர் மடி கங்குல் நெடும் புறநிலையே

#59 பாலை - மதுரை மருதன் இளநாகனார்
தண் கயத்து அமன்ற வண்டு படு துணை மலர்ப்
பெரும் தகை இழந்த கண்ணினை பெரிதும்
வருந்தினை வாழியர் நீயே வடாஅது
வண் புனல் தொழுநை வார் மணல் அகன் துறை
அண்டர் மகளிர் தண் தழை உடீஇயர்		5
மரம் செல மிதித்த மாஅல் போலப்
புன் தலை மடப் பிடி உணீஇயர் அம் குழை
நெடு நிலை யாஅம் ஒற்றி நனை கவுள்
படி ஞிமிறு கடியும் களிறே தோழி
சூர் மருங்கு அறுத்த சுடர் இலை நெடு வேல்		10
சினம் மிகு முருகன் தண் பரங்குன்றத்து
அந்துவன் பாடிய சந்து கெழு நெடு வரை
இன் தீம் பைம் சுனை ஈர் அணிப் பொலிந்த
தண் நறும் கழுநீர் செண் இயல் சிறுபுறம்
தாம் பாராட்டிய காலையும் உள்ளார்		15
வீங்கு இறை பணைத் தோள் நெகிழச் சேய் நாட்டு
அரும் செயல் பொருட்பிணி முன்னி நம்
பிரிந்து சேண் உறைநர் சென்ற ஆறே

#60 நெய்தல் - குடவாயில் கீரத்தனார்
பெரும் கடல் பரப்பில் சே இறா நடுங்கக்
கொடும் தொழில் முகந்த செம் கோல் அம் வலை
நெடும் திமில் தொழிலொடு வைகிய தந்தைக்கு
உப்பு நொடை நெல்லின் மூரல் வெண் சோறு
அயிலை துழந்த அம் புளிச் சொரிந்து		5
கொழு மீன் தடியொடு குறுமகள் கொடுக்கும்
திண் தேர் பொறையன் தொண்டி அன்ன எம்
ஒண் தொடி ஞெமுக்காதீமோ தெய்ய
ஊதை ஈட்டிய உயர் மணல் அடைகரை
கோதை ஆயமொடு வண்டல் தைஇ		10
ஓரை ஆடினும் உயங்கும் நின் ஒளி என
கொன்னும் சிவப்போள் காணின் வென் வேல்
கொற்றச் சோழர் குடந்தை வைத்த
நாடு தரு நிதியினும் செறிய
அரும் கடிப் படுக்குவள் அறன் இல் யாயே		15

#61 பாலை - மாமூலனார்
நோற்றோர்-மன்ற தாமே கூற்றம்
கோள் உற விளியார் பிறர் கொள விளிந்தோர் எனத்
தாள் வலம் படுப்ப சேண் புலம் படர்ந்தோர்
நாள் இழை நெடும் சுவர் நோக்கி நோய் உழந்து
ஆழல் வாழி தோழி தாழாது		5
உரும் என சிலைக்கும் ஊக்கமொடு பைம் கால்
வரி மாண் நோன் ஞாண் வன் சிலைக் கொளீஇ
அரு நிறத்து அழுத்திய அம்பினர் பலர் உடன்
அண்ணல் யானை வெண் கோடு கொண்டு
நறவு நொடை நெல்லின் நாள்_மகிழ் அயரும்		10
கழல் புனை திருந்து அடிக் கள்வர் கோமான்
மழபுலம் வணக்கிய மா வண் புல்லி
விழவு உடை விழுச் சீர் வேங்கடம் பெறினும்
பழகுவர் ஆதலோ அரிதே முனாஅது
முழவு உறழ் திணி தோள் நெடுவேள் ஆவி		15
பொன் உடை நெடு நகர்ப் பொதினி அன்ன நின்
ஒண் கேழ் வன முலைப் பொலிந்த
நுண் பூண் ஆகம் பொருந்துதல் மறந்தே

#62 குறிஞ்சி - பரணர்
அயத்து வளர் பைஞ்சாய் முருந்தின் அன்ன
நகைப் பொலிந்து இலங்கும் எயிறு கெழு துவர் வாய்
ஆகத்து அரும்பிய முலையள் பணைத் தோள்
மாத் தாள் குவளை மலர் பிணைத்து அன்ன
மா இதழ் மழைக் கண் மாஅயோளொடு		5
பேயும் அறியா மறை அமை புணர்ச்சி
பூசல் துடியின் புணர்பு பிரிந்து இசைப்பக்
கரந்த கரப்பொடு நாம் செலற்கு அருமையின்
கடும் புனல் மலிந்த காவிரிப் பேரியாற்று
நெடும் சுழி நீத்தம் மண்ணுநள் போல		10
நடுங்கு அஞர் தீர முயங்கி நெருநல்
ஆகம் அடைதந்தோளே வென் வேல்
களிறு கெழு தானைப் பொறையன் கொல்லி
ஒளிறு நீர் அடுக்கத்து வியலகம் பொற்பக்
கடவுள் எழுதிய பாவையின்		15
மடவது மாண்ட மாஅயோளே

#63 பாலை - கருவூர்க் கண்ணம்புல்லனார்
கேளாய் வாழியோ மகளை நின் தோழி
திரு நகர் வரைப்பகம் புலம்ப அவனொடு
பெரு மலை இறந்தது நோவேன் நோவல்
கடுங்கண் யானை நெடும் கை சேர்த்தி
முடங்கு தாள் உதைத்த பொலம் கெழு பூழி		5
பெரும் புலர் விடியல் விரிந்து வெயில் எறிப்பக்
கரும் தாள் மிடற்ற செம் பூழ்ச் சேவல்
சிறு புன் பெடையொடு குடையும் ஆங்கண்
அஞ்சுவரத் தகுந கானம் நீந்தி
கன்று காணாது புன் கண்ண செவி சாய்த்து		10
மன்று நிறை பைதல் கூரப் பல உடன்
கறவை தந்த கடும் கால் மறவர்
கல்லென் சீறூர் எல்லியின் அசைஇ
முது வாய்ப் பெண்டின் செது கால் குரம்பை
மட மயில் அன்ன என் நடை மெலி பேதை		15
தோள் துணை ஆகத் துயிற்றத் துஞ்சாள்
வேட்டக் கள்வர் விசியுறு கடும் கண்
சேக் கோள் அறையும் தண்ணுமை
கேட்குநள்-கொல் எனக் கலுழும் என் நெஞ்சே

#64 முல்லை - ஆர்க்காடு கிழார் மகனார் வெள்ளை கண்ணத்தனார்
களையும் இடனால் பாக உளை அணி
உலகு கடப்பு அன்ன புள் இயல் கலிமா
வகை அமை வனப்பின் வள்பு நீ தெரியத்
தளவுப் பிணி அவிழ்ந்த தண் பதப் பெரு வழி
ஐது இலங்கு அகல் இலை நெய் கனி நோன் காழ்		5
வெள் வேல் இளையர் வீங்கு பரி முடுகச்
செலவு நாம் அயர்ந்தனம் ஆயின் பெயல
கடு நீர் வரித்த செந்நில மருங்கின்
விடு நெறி ஈர் மணல் வாரணம் சிதரப்
பாம்பு உறை புற்றத்து ஈர்ம் புறம் குத்தி		10
மண் உடைக் கோட்ட அண்ணல் ஏஎறு
உடன் நிலை வேட்கையின் மட நாகு தழீஇ
ஊர்-வயின் பெயரும் பொழுதில் சேர்பு உடன்
கன்று பயிர் குரல மன்று நிறை புகுதரும்
ஆ பூண் தெண் மணி ஐது இயம்பு இன் இசை		15
புலம்பு கொள் மாலை கேள்-தொறும்
கலங்கினள் உறைவோள் கையறு நிலையே

#65 பாலை - மாமூலனார்
உன்னம் கொள்கையொடு உளம் கரந்து உறையும்
அன்னை சொல்லும் உய்கம் என்னதூஉம்
ஈரம் சேரா இயல்பின் பொய்ம்மொழிச்
சேரி அம் பெண்டிர் கௌவையும் ஒழிகம்
நாடு கண் அகற்றிய உதியஞ்சேரல்		5
பாடிச் சென்ற பரிசிலர் போல
உவ இனி வாழி தோழி அவரே
பொம்மல் ஓதி நம்மொடு ஒராங்குச்
செலவு அயர்ந்தனரால் இன்றே மலை-தொறும்
மால் கழை பிசைந்த கால் வாய் கூர் எரி		10
மீன் கொள் பரதவர் கொடும் திமில் நளி சுடர்
வான் தோய் புணரி மிசைக் கண்டு ஆங்கு
மேவரத் தோன்றும் யாஅ உயர் நனம் தலை
உயவல் யானை வெரிநுச் சென்று அன்ன
கல் ஊர்பு இழிதரும் புல் சாய் சிறு நெறிக்		15
காடு மீக்கூறும் கோடு ஏந்து ஒருத்தல்
ஆறு கடி கொள்ளும் அரும் சுரம் பணைத் தோள்
நாறு ஐம் கூந்தல் கொம்மை வரி முலை
நிரை இதழ் உண்கண் மகளிர்க்கு
அரியவால் என அழுங்கிய செலவே		20

#66 மருதம் - செல்லூர் கோசிகன் கண்ணனார்
இம்மை உலகத்து இசையொடும் விளங்கி
மறுமை உலகமும் மறு இன்று எய்துப
செறுநரும் விழையும் செயிர் தீர் காட்சிச்
சிறுவர் பயந்த செம்மலோர் எனப்
பல்லோர் கூறிய பழமொழி எல்லாம்		5
வாயே ஆகுதல் வாய்த்தனம் தோழி
நிரை தார் மார்பன் நெருநல் ஒருத்தியொடு
வதுவை அயர்தல் வேண்டிப் புதுவதின்
இயன்ற அணியன் இத் தெரு இறப்போன்
மாண் தொழில் மா மணி கறங்கக் கடை கழிந்து		10
காண்டல் விருப்பொடு தளர்புதளர்பு ஓடும்
பூம் கண் புதல்வனை நோக்கி நெடும் தேர்
தாங்கு-மதி வலவ என்று இழிந்தனன் தாங்காது
மணி புரை செவ் வாய் மார்பகம் சிவணப்
புல்லிப் பெரும செல் இனி அகத்து எனக்		15
கொடுப்போற்கு ஒல்லான் கலுழ்தலின் தடுத்த
மா நிதிக் கிழவனும் போன்ம் என மகனொடு
தானே புகுதந்தோனே யான் அது
படுத்தனென் ஆகுதல் நாணி இடித்து இவன்
கலக்கினன் போலும் இக் கொடியோன் எனச் சென்று		20
அலைக்கும் கோலொடு குறுகத் தலைக்கொண்டு
இமிழ் கண் முழவின் இன் சீர் அவர் மனைப்
பயிர்வன போல வந்து இசைப்பவும் தவிரான்
கழங்கு ஆடு ஆயத்து அன்று நம் அருளிய
பழம் கண்ணோட்டமும் நலிய		25
அழுங்கினன் அல்லனோ அயர்ந்த தன் மணனே

#67 பாலை - நோய்பாடியார்
யான் எவன் செய்கோ தோழி பொறி வரி
வானம்வாழ்த்தி பாடவும் அருளாது
உறை துறந்து எழிலி நீங்கலின் பறைபு உடன்
மரம் புல்லென்ற முரம்பு உயர் நனம் தலை
அரம் போழ் நுதிய வாளி அம்பின்		5
நிரம்பா நோக்கின் நிரயம் கொள்மார்
நெல்லி நீள் இடை எல்லி மண்டி
நல் அமர்க் கடந்த நாண் உடை மறவர்
பெயரும் பீடும் எழுதி அதர்-தொறும்
பீலி சூட்டிய பிறங்கு நிலை நடுகல்		10
வேல் ஊன்று பலகை வேற்று முனை கடுக்கும்
மொழிபெயர் தேஎம் தருமார் மன்னர்
கழிப் பிணிக் கறைத்தோல் நிரை கண்டு அன்ன
உவல் இடு பதுக்கை ஆள் உகு பறந்தலை
உரு இல் பேஎய் ஊராத் தேரொடு		15
நிலம் படு மின்மினி போலப் பல உடன்
இலங்கு பரல் இமைக்கும் என்ப நம்
நலம் துறந்து உறைநர் சென்ற ஆறே

#68 குறிஞ்சி - ஊட்டியார்
அன்னாய் வாழி வேண்டு அன்னை நம் படப்பைத்
தண் அயத்து அமன்ற கூதளம் குழைய
இன் இசை அருவிப் பாடும் என்னதூஉம்
கேட்டியோ வாழி வேண்டு அன்னை நம் படப்பை
ஊட்டி அன்ன ஒண் தளிர்ச் செயலை		5
ஓங்கு சினைத் தொடுத்த ஊசல் பாம்பு என
முழுமுதல் துமிய உரும் எறிந்தன்றே
பின்னும் கேட்டியோ எனவும் அஃது அறியாள்
அன்னையும் கனை துயில் மடிந்தனள் அதன்தலை
மன் உயிர் மடிந்தன்றால் பொழுதே காதலர்		10
வருவர் ஆயின் பருவம் இது எனச்
சுடர்ந்து இலங்கு எல் வளை நெகிழ்ந்த நம்-வயின்
படர்ந்த உள்ளம் பழுது அன்று ஆக
வந்தனர் வாழி தோழி அந்தரத்து
இமிழ் பெயல் தலைஇய இனப் பல கொண்மூ		15
தவிர்வு இல் வெள்ளம் தலைத்தலைச் சிறப்பக்
கன்று கால் ஒய்யும் கடும் சுழி நீத்தம்
புன் தலை மடப் பிடிப் பூசல் பல உடன்
வெண் கோட்டு யானை விளி படத் துழவும்
அகல் வாய்ப் பாந்தள் படாஅர்ப்		20
பகலும் அஞ்சும் பனிக் கடும் சுரனே

#69 பாலை - உமட்டூர் கிழார் மகனார் பரங்கொற்றனார்
ஆய் நலம் தொலைந்த மேனியும் மா மலர்
தகை வனப்பு இழந்த கண்ணும் வகை இல
வண்ணம் வாடிய வரியும் நோக்கி
ஆழல் ஆன்றிசின் நீயே உரிதினின்
ஈதல் இன்பம் வெஃகி மேவரச்		5
செய்பொருள் திறவர் ஆகிப் புல் இலைப்
பராரை நெல்லி அம் புளித் திரள் காய்
கான மட மரைக் கண நிரை கவரும்
வேனில் அத்தம் என்னாது ஏமுற்று
விண் பொரு நெடும் குடை இயல் தேர் மோரியர்		10
பொன் புனை திகிரி திரிதரக் குறைத்த
அறை இறந்து அகன்றனர் ஆயினும் எனையதூஉம்
நீடலர் வாழி தோழி ஆடு இயல்
மட மயில் ஒழித்த பீலி வார்ந்து தம்
சிலை மாண் வல் வில் சுற்றிப் பல மாண்		15
அம்பு உடைக் கையர் அரண் பல நூறி
நல் கலம் தரூஉம் வயவர் பெருமகன்
சுடர் மணிப் பெரும் பூண் ஆஅய் கானத்துத்
தலை_நாள் அலரின் நாறும் நின்
அலர் முலை ஆகத்து இன் துயில் மறந்தே		20

#70 நெய்தல் - மதுரை தமிழ் கூத்தனார் கடுவன் மள்ளனார்
கொடும் திமில் பரதவர் வேட்டம் வாய்த்து என
இரும் புலாக் கமழும் சிறுகுடிப் பாக்கத்துக்
குறும் கண் அம் வலைப் பயம் பாராட்டிக்
கொழும் கண் அயிலை பகுக்கும் துறைவன்
நம்மொடு புணர்ந்த கேண்மை முன்னே		5
அலர் வாய்ப் பெண்டிர் அம்பல் தூற்றப்
பலரும் ஆங்கு அறிந்தனர்-மன்னே இனியே
வதுவை கூடிய பின்றைப் புதுவது
பொன் வீ ஞாழலொடு புன்னை வரிக்கும்
கானல் அம் பெரும் துறைக் கவினி மா நீர்ப்		10
பாசடைக் கலித்த கணைக் கால் நெய்தல்
விழவு அணி மகளிர் தழை அணிக் கூட்டும்
வென் வேல் கவுரியர் தொல் முது கோடி
முழங்கு இரும் பௌவம் இரங்கும் முன்துறை
வெல் போர் இராமன் அரு மறைக்கு அவித்த		15
பல் வீழ் ஆலம் போல
ஒலி அவிந்தன்று இவ் அழுங்கல் ஊரே

#71 பாலை - மதுரை தமிழ் கூத்தனார் கடுவன் மள்ளனார்
நிறைந்தோர்த் தேரும் நெஞ்சமொடு குறைந்தோர்
பயன் இன்மையின் பற்று விட்டு ஒரூஉம்
நயன் இல் மாக்கள் போல வண்டு இனம்
சுனைப் பூ நீத்துச் சினைப் பூப் படர
மை இல் மான் இனம் மருளப் பையென		5
வெந்து ஆறு பொன்னின் அந்தி பூப்ப
ஐ அறிவு அகற்றும் கையறு படரோடு
அகல் இரு வானம் அம் மஞ்சு ஈனப்
பகல் ஆற்றுப்படுத்த பழங்கண் மாலை
காதலர்ப் பிரிந்த புலம்பின் நோதக		10
ஆர் அஞர் உறுநர் அரு நிறம் சுட்டிச்
கூர் எஃகு எறிஞரின் அலைத்தல் ஆனாது
எள் அற இயற்றிய நிழல்_காண்_மண்டிலத்து
உள் ஊது ஆவியின் பைப்பய நுணுகி
மதுகை மாய்தல் வேண்டும் பெரிது அழிந்து		15
இது-கொல் வாழி தோழி என் உயிர்
விலங்கு வெம் கடு வளி எடுப்பத்
துளங்கு மரப் புள்ளின் துறக்கும் பொழுதே

#72 குறிஞ்சி - எருமை வெளியனார் மகனார் கடலனார்
இருள் கிழிப்பது போல் மின்னி வானம்
துளி தலைக்கொண்ட நளி பெயல் நடுநாள்
மின்மினி மொய்த்த முரவு வாய்ப் புற்றம்
பொன் எறி பிதிரின் சுடர வாங்கிக்
குரும்பி கெண்டும் பெரும் கை ஏற்றை		5
இரும்பு செய் கொல் எனத் தோன்றும் ஆங்கண்
ஆறே அரு மரபினவே யாறே
சுட்டுநர்ப் பனிக்கும் சூர் உடை முதலைய
கழை மாய் நீத்தம் கல் பொருது இரங்க
அஞ்சுவம் தமியம் என்னாது மஞ்சு சுமந்து		10
ஆடு கழை நரலும் அணங்கு உடைக் கவாஅன்
ஈர் உயிர் பிணவின் வயவுப் பசி களைஇய
இரும் களிறு அட்ட பெரும் சின உழுவை
நாம நல்_அராக் கதிர்பட உமிழ்ந்த
மேய் மணி விளக்கின் புலர ஈர்க்கும்		15
வாள் நடந்து அன்ன வழக்கு அரும் கவலை
உள்ளுநர் உட்கும் கல் அடர்ச் சிறு நெறி
அருள் புரி நெஞ்சமொடு எஃகு துணை ஆக
வந்தோன் கொடியனும் அல்லன் தந்த
நீ தவறுடையையும் அல்லை நின்-வயின்		20
ஆனா அரும் படர் செய்த
யானே தோழி தவறுடையேனே

#73 பாலை - எருமை வெளியனார்
பின்னொடு முடித்த மண்ணா முச்சி
நெய் கனி வீழ் குழல் அகப்படத் தைஇ
வெருகு இருள் நோக்கி அன்ன கதிர் விடுபு
ஒரு காழ் முத்தம் இடை முலை விளங்க
அணங்குறு கற்பொடு மடம் கொளச் சாஅய்		5
நின் நோய்த் தலையையும் அல்லை தெறுவர
என் ஆகுவள்-கொல் அளியள் தான் என
என் அழிபு இரங்கும் நின்னொடு யானும்
ஆறு அன்று என்னா வேறு அல் காட்சி
இருவேம் நம் படர் தீர வருவது		10
காணிய வம்மோ காதல் அம் தோழி
கொடி பிணங்கு அரில இருள் கொள் நாகம்
மடி_பதம் பார்க்கும் வய_மான் துப்பின்
ஏனல் அம் சிறுதினைச் சேணோன் கையதைப்
பிடிக் கை அமைந்த கனல் வாய்க் கொள்ளி		15
விடு பொறிச் சுடரின் மின்னி அவர்
சென்ற தேஎத்து நின்றதால் மழையே

#74 முல்லை - மதுரை கவுணியன் பூதத்தனார்
வினை வலம் படுத்த வென்றியொடு மகிழ் சிறந்து
போர் வல் இளையர் தாள் வலம் வாழ்த்த
தண் பெயல் பொழிந்த பைதுறு காலைக்
குருதி உருவின் ஒண் செம் மூதாய்
பெரு வழி மருங்கில் சிறு பல வரிப்பப்		5
பைம் கொடி முல்லை மென் பதப் புது வீ
வெண் களர் அரி மணல் நல் பல தாஅய்
வண்டு போது அவிழ்க்கும் தண் கமழ் புறவில்
கரும் கோட்டு இரலை காமர் மடப் பிணை
மருண்ட மான் நோக்கம் காண்-தொறும் நின் நினைந்து		10
திண் தேர் வலவ கடவு எனக் கடைஇ
இன்றே வருவர் ஆன்றிகம் பனி என
வன்புறை இன் சொல் நன் பல பயிற்றும்
நின் வலித்து அமைகுவென்-மன்னோ அல்கல்
புன்கண் மாலையொடு பொருந்திக் கொடும் கோல்		15
கல்லாக் கோவலர் ஊதும்
வல் வாய் சிறு குழல் வருத்தாக்காலே

#75 பாலை - மதுரைப் போத்தனார்
அருள் அன்று ஆக ஆள்வினை ஆடவர்
பொருள் என வலித்த பொருள் அல் காட்சியின்
மைந்து மலி உள்ளமொடு துஞ்சல் செல்லாது
எரி சினம் தவழ்ந்த இரும் கடற்று அடை முதல்
கரி குதிர் மரத்த கான வாழ்க்கை		5
அடு புலி முன்பின் தொடு கழல் மறவர்
தொன்று இயல் சிறுகுடி மன்று நிழல் படுக்கும்
அண்ணல் நெடு வரை ஆம் அறப் புலர்ந்த
கல் நெறி படர்குவர் ஆயின் நல் நுதல்
செயிர் தீர் கொள்கை சில் மொழி துவர் வாய்		10
அவிர் தொடி முன்கை ஆய் இழை மகளிர்
ஆரம் தாங்கிய அலர் முலை ஆகத்து
ஆராக் காதலொடு தார் இடைக் குழையாது
சென்று படு விறல் கவின் உள்ளி என்றும்
இரங்குநர் அல்லது பெயர்தந்து யாவரும்		15
தருநரும் உளரோ இவ் உலகத்தான் என
மாரி ஈங்கை மாத் தளிர் அன்ன
அம் மா மேனி ஐது அமை நுசுப்பின்
பல் காசு நிரைத்த கோடு ஏந்து அல்குல்
மெல் இயல் குறுமகள் புலந்து பல கூறி		20
ஆனா நோயை ஆக யானே
பிரிய சூழ்தலும் உண்டோ
அரிது பெறு சிறப்பின் நின்-வயினானே

#76 மருதம் - பரணர்
மண் கனை முழவொடு மகிழ் மிகத் தூங்கத்
தண் துறை ஊரன் எம் சேரி வந்து என
இன் கடும் கள்ளின் அஃதை களிற்றொடு
நல் கலன் ஈயும் நாள்_மகிழ்_இருக்கை
அவை புகு பொருநர் பறையின் ஆனாது		5
கழறுப என்ப அவன் பெண்டிர் அந்தில்
கச்சினன் கழலினன் தேம் தார் மார்பினன்
வகை அமைப் பொலிந்த வனப்பு அமை தெரியல்
சுரியல் அம் பொருநனைக் காண்டிரோ என
ஆதிமந்தி பேதுற்று இனைய		10
சிறை பறைந்து உரைஇச் செம் குணக்கு ஒழுகும்
அம் தண் காவிரி போலக்
கொண்டு கைவலித்தல் சூழ்ந்திசின் யானே

#77 பாலை - மருதன் இள நாகனார்
நல் நுதல் பசப்பவும் ஆள்வினை தரீஇயர்
துன் அரும் கானம் துன்னுதல் நன்று எனப்
பின் நின்று சூழ்ந்தனை ஆயின் நன்று இன்னாச்
சூழ்ந்திசின் வாழிய நெஞ்சே வெய்துற
இடி உமிழ் வானம் நீங்கி யாங்கணும்		5
குடி பதிப்பெயர்ந்த சுட்டு உடை முது பாழ்
கயிறு பிணிக் குழிசி ஓலை கொள்மார்
பொறி கண்டு அழிக்கும் ஆவண மாக்களின்
உயிர் திறம் பெயர நல் அமர்க் கடந்த
தறுகணாளர் குடர் தரீஇத் தெறுவரச்		10
செம் செவி எருவை அஞ்சுவர இகுக்கும்
கல் அதர் கவலை போகின் சீறூர்
புல் அரை இத்திப் புகர் படு நீழல்
எல் வளி அலைக்கும் இருள் கூர் மாலை
வானவன் மறவன் வணங்கு வில் தடக் கை		15
ஆனா நறவின் வண் மகிழ் பிட்டன்
பொருந்தா மன்னர் அரும் சமத்து உயர்த்த
திருந்து இலை எஃகம் போல
அரும் துயர் தரும் இவள் பனி வார் கண்ணே

#78 குறிஞ்சி - மதுரை நக்கீரனார்
நனம் தலைக் கானத்து ஆளி அஞ்சி
இனம் தலைத்தரூஉம் எறுழ் கிளர் முன்பின்
வரி ஞிமிறு ஆர்க்கும் வாய் புகு கடாத்து
பொறி நுதல் பொலிந்த வயக் களிற்று ஒருத்தல்
இரும் பிணர்த் தடக் கையின் ஏமுறத் தழுவக்		5
கடும் சூல் மடப் பிடி நடுங்கும் சாரல்
தேம் பிழி நறவின் குறவர் முன்றில்
முந்தூழ் ஆய் மலர் உதிரக் காந்தள்
நீடு இதழ் நெடும் துடுப்பு ஒசியத் தண்ணென
வாடை தூக்கும் வரு பனி அற்சிரம்		10
நம் இல் புலம்பின் தம் ஊர் தமியர்
என் ஆகுவர்-கொல் அளியர் தாம் என
எம் விட்டு அகன்ற சில் நாள் சிறிதும்
உள்ளியும் அறிதிரோ ஓங்கு மலை நாட
உலகுடன் திரிதரும் பலர் புகழ் நல் இசை		15
வாய்மொழிக் கபிலன் சூழச் சேய் நின்று
செழும் செய் நெல்லின் விளை கதிர் கொண்டு
தடம் தாள் ஆம்பல் மலரொடு கூட்டி
யாண்டு பல கழிய வேண்டு வயின் பிழையாது
ஆள் இடூஉக் கடந்து வாள் அமர் உழக்கி		20
ஏந்து கோட்டு யானை வேந்தர் ஓட்டிய
கடும் பரிப் புரவிக் கைவண் பாரி
தீம் பெரும் பைம் சுனைப் பூத்த
தேம் கமழ் புது மலர் நாறும் இவள் நுதலே

#79 பாலை - குடவாயில் கீரத்தனார்
தோள் பதன் அமைத்த கரும் கை ஆடவர்
கனை பொறி பிறப்ப நூறி வினைப் படர்ந்து
கல்லுறுத்து இயற்றிய வல் உவர்ப் படுவில்
பார் உடை மருங்கின் ஊறல் மண்டிய
வன்புலம் துமியப் போகிக் கொங்கர்		5
படு மணி ஆயம் நீர்க்கு நிமிர்ந்து செல்லும்
சேதா எடுத்த செந்நிலக் குரூஉத் துகள்
அகல் இரு விசும்பின் ஊன்றித் தோன்றும்
நனம் தலை அழுவம் நம்மொடு துணைப்ப
வல்லாங்கு வருதும் என்னாது அல்குவர		10
வருந்தினை வாழி என் நெஞ்சே இரும் சிறை
வளை வாய்ப் பருந்தின் வான் கண் பேடை
ஆடு-தொறு கனையும் அம் வாய் கடும் துடிக்
கொடு வில் எயினர் கோள் சுரம் படர
நெடு விளி பயிற்றும் நிரம்பா நீள் இடை		15
கல் பிறங்கு அத்தம் போகி
நில்லாப் பொருட்பிணி பிரிந்த நீயே

#80 நெய்தல் - மருங்கூர் கிழார் பெரும் கண்ணனார்
கொடும் தாள் முதலையொடு கோட்டு மீன் வழங்கும்
இரும் கழி இட்டுச் சுரம் நீந்தி இரவின்
வந்தோய்-மன்ற தண் கடல் சேர்ப்ப
நினக்கு எவன் அரியமோ யாமே எந்தை
புணர் திரைப் பரப்பகம் துழைஇத் தந்த		5
பல் மீன் உணங்கல் படு புள் ஓப்புதும்
முண்டகம் கலித்த முது நீர் அடைகரை
ஒண் பல் மலர கவட்டு இலை அடும்பின்
செம் கேழ் மென் கொடி ஆழி அறுப்ப
இன மணிப் புரவி நெடும் தேர் கடைஇ		10
மின் இலைப் பொலிந்த விளங்கு இணர் அவிழ் பொன்
தண் நறும் பைம் தாது உறைக்கும்
புன்னை அம் கானல் பகல் வந்தீமே

#81 பாலை - ஆலம்பேரி சாத்தனார்
நாள் உலா எழுந்த கோள் வல் உளியம்
ஓங்கு சினை இருப்பை தீம் பழம் முனையின்
புல் அளைப் புற்றின் பல் கிளைச் சிதலை
ஒருங்கு முயன்று எடுத்த நனை வாய் நெடும் கோடு
இரும்பு ஊது குருகின் இடந்து இரை தேரும்		5
மண் பக வறந்த ஆங்கண் கண் பொரக்
கதிர் தெறக் கவிழ்ந்த உலறு தலை நோன் சினை
நெறி அயல் மராஅம் ஏறிப் புலம்பு கொள
எறி பருந்து உயவும் என்றூழ் நீள் இடை
வெம் முனை அரும் சுரம் நீந்திச் சிறந்த		10
செம்மல் உள்ளம் துரத்தலின் கறுத்தோர்
ஒளிறு வேல் அழுவம் களிறு படக் கடக்கும்
மா வண் கடலன் விளங்கில் அன்ன எம்
மை எழில் உண்கண் கலுழ
ஐய சேறிரோ அகன்று செய்பொருட்கே		15

#82 குறிஞ்சி - கபிலர்
ஆடு அமைக் குயின்ற அவிர் துளை மருங்கின்
கோடை அம் வளி குழலிசை ஆகப்
பாடு இன் அருவிப் பனி நீர் இன் இசைத்
தோடு அமை முழவின் துதை குரல் ஆகக்
கணக் கலை இகுக்கும் கடும் குரல் தூம்பொடு		5
மலைப் பூம் சாரல் வண்டு யாழ் ஆக
இன் பல் இமிழ் இசை கேட்டுக் கலி சிறந்து
மந்தி நல் அவை மருள்வன நோக்க
கழை வளர் அடுக்கத்து இயலி ஆடு மயில்
நனவுப் புகு விறலியின் தோன்றும் நாடன்		10
உருவ வல் வில் பற்றி அம்பு தெரிந்து
செருச் செய் யானை செல் நெறி வினாஅய்
புலர் குரல் ஏனல் புழை உடை ஒரு சிறை
மலர் தார் மார்பன் நின்றோன் கண்டோர்
பலர்-தில் வாழி தோழி அவருள்		15
ஆர் இருள் கங்குல் அணையொடு பொருந்தி
ஓர் யான் ஆகுவது எவன்-கொல்
நீர் வார் கண்ணொடு நெகிழ் தோளேனே

#83 பாலை - கல்லாடனார்
வலம் சுரி மராஅத்துச் சுரம் கமழ் புது வீச்
சுரி ஆர் உளைத் தலை பொலியச் சூடிக்
கறை அடி மடப் பிடி கானத்து அலறக்
களிற்றுக் கன்று ஒழித்த உவகையர் கலி சிறந்து
கரும் கால் மராஅத்துக் கொழும் கொம்பு பிளந்து		5
பெரும் பொளி வெண் நார் அழுந்துபடப் பூட்டி
நெடும் கொடி நுடங்கும் நியம மூதூர்
நறவு நொடை நல் இல் புதவு முதல் பிணிக்கும்
கல்லா இளையர் பெருமகன் புல்லி
வியன் தலை நல் நாட்டு வேங்கடம் கழியினும்		10
சேயர் என்னாது அன்பு மிகக் கடைஇ
எய்த வந்தனவால் தாமே நெய்தல்
கூம்புவிடு நிகர் மலர் அன்ன
ஏந்து எழில் மழைக் கண் எம் காதலி குணனே

#84 முல்லை - மதுரை எழுத்தாளன்
மலை மிசைக் குலைஇய உரு கெழு திருவில்
பணை முழங்கு எழிலி பௌவம் வாங்கித்
தாழ் பெயல் பெரு நீர் வலன் ஏர்பு வளைஇ
மாதிரம் புதைப்பப் பொழிதலின் காண்வர
இரு நிலம் கவினிய ஏமுறு காலை		5
நெருப்பின் அன்ன சிறு கண் பன்றி
அயிர்க்-கண் படாஅர்த் துஞ்சு புறம் புதைய
நறு வீ முல்லை நாள்_மலர் உதிரும்
புறவு அடைந்து இருந்த அரு முனை இயவின்
சீறூரோளே ஒண்_நுதல் யாமே		10
எரி புரை பல் மலர் பிறழ வாங்கி
அரிஞர் யாத்த அலங்கு தலைப் பெரும் சூடு
கள் ஆர் வினைஞர் களம்-தொறும் மறுகும்
தண்ணடை தழீஇய கொடி நுடங்கு ஆர் எயில்
அரும் திறை கொடுப்பவும் கொள்ளான் சினம் சிறந்து		15
வினை-வயின் பெயர்க்கும் தானைப்
புனை தார் வேந்தன் பாசறையேமே

#85 பாலை - காட்டூர் கிழார் மகனார் கண்ணனார்
நல் நுதல் பசப்பவும் பெரும் தோள் நெகிழவும்
உண்ணா உயக்கமொடு உயிர் செலச் சாஅய்
இன்னம் ஆகவும் இங்கு நம் துறந்தோர்
அறவர் அல்லர் அவர் எனப் பல புலந்து
ஆழல் வாழி தோழி சாரல்		5
ஈன்று நாள் உலந்த மெல் நடை மடப் பிடி
கன்று பசி களைஇய பைம் கண் யானை
முற்றா மூங்கில் முளை தருபு ஊட்டும்
வென் வேல் திரையன் வேங்கட நெடு வரை
நல் நாள் பூத்த நாகு இள வேங்கை		10
நறு வீ ஆடிய பொறி வரி மஞ்ஞை
நனைப் பசும் குருந்தின் நாறு சினை இருந்து
துணைப் பயிர்ந்து அகவும் துணைதரு தண் கார்
வருதும் யாம் எனத் தேற்றிய
பருவம் காண் அது பாயின்றால் மழையே		15

#86 மருதம் - நல்லாவூர் கிழார்
உழுந்து தலைப்பெய்த கொழும் களி மிதவை
பெரும் சோற்று அமலை நிற்ப நிரை கால்
தண் பெரும் பந்தர்த் தரு மணல் ஞெமிரி
மனை விளக்குறுத்து மாலை தொடரிக்
கனை இருள் அகன்ற கவின் பெறு காலை		5
கோள் கால் நீங்கிய கொடு வெண் திங்கள்
கேடு இல் விழுப் புகழ் நாள் தலைவந்து என
உச்சிக் குடத்தர் புத்து அகல் மண்டையர்
பொது செய் கம்பலை முது செம் பெண்டிர்
முன்னவும் பின்னவும் முறைமுறை தரத்தரப்		10
புதல்வன் பயந்த திதலை அம் வயிற்று
வால் இழை மகளிர் நால்வர் கூடிக்
கற்பினின் வழாஅ நல் பல உதவிப்
பெற்றோன் பெட்கும் பிணையை ஆக என
நீரொடு சொரிந்த ஈர் இதழ் அலரி		15
பல் இரும் கதுப்பின் நெல்லொடு தயங்க
வதுவை நல் மணம் கழிந்த பின்றைக்
கல்லென் சும்மையர் ஞெரேரெனப் புகுதந்து
பேர் இற்கிழத்தி ஆக எனத் தமர் தர
ஓர் இல் கூடிய உடன் புணர் கங்குல்		20
கொடும் புறம் வளைஇக் கோடிக் கலிங்கத்து
ஒடுங்கினள் கிடந்த ஓர் புறம் தழீஇ
முயங்கல் விருப்பொடு முகம் புதை திறப்ப
அஞ்சினள் உயிர்த்த காலை யாழ நின்
நெஞ்சம் படர்ந்தது எஞ்சாது உரை என		25
இன் நகை இருக்கைப் பின் யான் வினவலின்
செம் சூட்டு ஒண் குழை வண் காது துயல்வர
அகம் மலி உவகையள் ஆகி முகன் இகுத்து
ஒய்யென இறைஞ்சியோளே மாவின்
மடம் கொள் மதைஇய நோக்கின்		30
ஒடுங்கு ஈர் ஓதி மாஅயோளே

#87 பாலை - மதுரை பேராலவாயார்
தீம் தயிர் கடைந்த திரள் கால் மத்தம்
கன்று வாய் சுவைப்ப முன்றில் தூங்கும்
படலைப் பந்தர்ப் புல் வேய் குரம்பை
நல்கூர் சீறூர் எல்லித் தங்கிக்
குடுமி நெற்றி நெடு மரச் சேவல்		5
தலைக் குரல் விடியல் போகி முனாஅது
கடுங்கண் மறவர் கல் கெழு குறும்பின்
எழுந்த தண்ணுமை இடம் கள் பாணி
அரும் சுரம் செல்வோர் நெஞ்சம் துண்ணென
குன்று சேர் கவலை இசைக்கும் அத்தம்		10
நனி நீடு உழந்தனை-மன்னே அதனால்
உவ இனி வாழிய நெஞ்சே மை அற
வைகு சுடர் விளங்கும் வான் தோய் வியல் நகர்ச்
சுணங்கு அணி வன முலை நலம் பாராட்டி
தாழ் இரும் கூந்தல் நம் காதலி		15
நீள் அமை வனப்பின் தோளுமார் அணைந்தே

#88 குறிஞ்சி - ஈழத்துப் பூதன் தேவனார்
முதைச் சுவல் கலித்த மூரிச் செந்தினை
ஓங்கு வணர்ப் பெரும் குரல் உணீஇய பாங்கர்ப்
பகு வாய்ப் பல்லி பாடு ஓர்த்துக் குறுகும்
புருவைப் பன்றி வருதிறம் நோக்கிக்
கடும் கைக் கானவன் கழுது மிசைக் கொளீஇய		5
நெடும் சுடர் விளக்கம் நோக்கி வந்து நம்
நடுங்கு துயர் களைந்த நன்னராளன்
சென்றனன்-கொல்லோ தானே குன்றத்து
இரும் புலி தொலைத்த பெரும் கை யானை
கவுள் மலிபு இழிதரும் காமர் கடாஅம்		10
இரும் சிறைத் தொழுதி ஆர்ப்ப யாழ் செத்து
இரும் கல் விடர் அளை அசுணம் ஓர்க்கும்
காம்பு அமல் இறும்பில் பாம்பு படத் துவன்றிக்
கொடு விரல் உளியம் கெண்டும்
வடு ஆழ் புற்றின வழக்கு அரு நெறியே		15

#89 பாலை - மதுரைக் காஞ்சிப் புலவர்
தெறு கதிர் ஞாயிறு நடு நின்று காய்தலின்
உறு பெயல் வறந்த ஓடு தேர் நனம் தலை
உருத்து எழு குரல குடிஞைச் சேவல்
புல் சாய் விடரகம் புலம்ப வரைய
கல் எறி இசையின் இரட்டும் ஆங்கண்		5
சிள்வீடு கறங்கும் சிறி இலை வேலத்து
ஊழுறு விளை நெற்று உதிரக் காழியர்
கவ்வைப் பரப்பின் வெவ் உவர்ப்பு ஒழியக்
களரி பரந்த கல் நெடு மருங்கின்
விளர் ஊன் தின்ற வீங்கு சிலை மறவர்		10
மை படு திண் தோள் மலிர வாட்டி
பொறை மலி கழுதை நெடு நிரை தழீஇய
திருந்து வாள் வயவர் அரும் தலை துமித்த
படு புலாக் கமழும் ஞாட்பில் துடி இகுத்து
அரும் கலம் தெறுத்த பெரும் புகல் வலத்தர்		15
வில் கெழு குறும்பில் கோள் முறை பகுக்கும்
கொல்லை இரும் புனம் நெடிய என்னாது
மெல்லென் சேவடி மெலிய ஏக
வல்லுநள்-கொல்லோ தானே தேம் பெய்து
அளவுறு தீம் பால் அலைப்பவும் உண்ணாள்		20
இடு மணல் பந்தருள் இயலும்
நெடு மென் பணைத் தோள் மாஅயோளே

#90 நெய்தல் - மதுரை மருதன் இளநாகனார்
மூத்தோர் அன்ன வெண் தலைப் புணரி
இளையோர் ஆடும் வரி மனை சிதைக்கும்
தளை அவிழ் தாழைக் கானல் அம் பெரும் துறை
சில் செவித்து ஆகிய புணர்ச்சி அலர் எழ
இல்-வயின் செறித்தமை அறியாய் பல் நாள்		5
வரு முலை வருத்தா அம் பகட்டு மார்பின்
தெருமரல் உள்ளமொடு வருந்தும் நின்-வயின்
நீங்குக என்று யான் யாங்ஙனம் மொழிகோ
அரும் திறல் கடவுள் செல்லூர்க் குணாஅது
பெரும் கடல் முழக்கிற்று ஆகி யாணர்		10
இரும்பு இடம்படுத்த வடு உடை முகத்தர்
கரும் கண் கோசர் நியமம் ஆயினும்
உறும் எனக் கொள்குநர் அல்லர்
நறு நுதல் அரிவை பாசிழை விலையே

#91 பாலை - மாமூலனார்
விளங்கு பகல் உதவிய பல் கதிர் ஞாயிறு
வளம் கெழு மா மலை பயம் கெடத் தெறுதலின்
அருவி ஆன்ற பெரு வரை மருங்கில்
சூர்ச் சுனை துழைஇ நீர்ப் பயம் காணாது
பாசி தின்ற பைம் கண் யானை		5
ஓய் பசிப் பிடியொடு ஒரு திறன் ஒடுங்க
வேய் கண் உடைந்த வெயில் அவிர் நனம் தலை
அரும் பொருள் வேட்கையின் அகன்றனர் ஆயினும்
பெரும் பேர் அன்பினர் தோழி இரும் கேழ்
இரலை சேக்கும் பரல் உயர் பதுக்கைக்		10
கடுங்கண் மழவர் களவு உழவு எழுந்த
நெடும் கால் ஆசினி ஒடுங்காட்டு உம்பர்
விசி பிணி முழவின் குட்டுவன் காப்பப்
பசி என அறியா பணை பயில் இருக்கைத்
தட மருப்பு எருமை தாமரை முனையின்		15
முடம் முதிர் பலவின் கொழு நிழல் வதியும்
குடநாடு பெறினும் தவிரலர்
மட மான் நோக்கி நின் மாண் நலம் மறந்தே

#92 குறிஞ்சி - மதுரைப் பாலாசிரியர் நற்றாமனார்
நெடு மலை அடுக்கம் கண் கெட மின்னிப்
படு மழை பொழிந்த பானாள் கங்குல்
குஞ்சரம் நடுங்கத் தாக்கிக் கொடு வரிச்
செம் கண் இரும் புலி குழுமும் சாரல்
வாரல் வாழியர் ஐய நேர் இறை		5
நெடு மென் பணைத் தோள் இவளும் யானும்
காவல் கண்ணினம் தினையே நாளை
மந்தியும் அறியா மரம் பயில் இறும்பின்
ஒண் செம் காந்தள் அவிழ்ந்த ஆங்கண்
தண் பல் அருவித் தாழ் நீர் ஒரு சிறை		10
உருமுச் சிவந்து எறிந்த உரன் அழி பாம்பின்
திரு மணி விளக்கின் பெறுகுவை
இருள் மென் கூந்தல் ஏமுறு துயிலே

#93 பாலை - கணக்காயனார் மகனார் நக்கீரனார்
கேள் கேடு ஊன்றவும் கிளைஞர் ஆரவும்
கேள் அல் கேளிர் கெழீஇயினர் ஒழுகவும்
ஆள்வினைக்கு எதிரிய ஊக்கமொடு புகல் சிறந்து
ஆரம் கண்ணி அடு போர்ச் சோழர்
அறம் கெழு நல் அவை உறந்தை அன்ன		5
பெறல் அரு நன் கலம் எய்தி நாடும்
செயல் அரும் செய்வினை முற்றினம் ஆயின்
அரண் பல கடந்த முரண் கொள் தானை
வாடா வேம்பின் வழுதி கூடல்
நாள்_அங்காடி நாறும் நறு நுதல்		10
நீள் இரும் கூந்தல் மாஅயோளொடு
வரை குயின்று அன்ன வான் தோய் நெடு நகர்
நுரை முகந்து அன்ன மென் பூம் சேக்கை
நிவந்த பள்ளி நெடும் சுடர் விளக்கத்து
நலம் கேழ் ஆகம் பூண் வடு பொறிப்ப		15
முயங்குகம் சென்மோ நெஞ்சே வரி நுதல்
வயம் திகழ்பு இழிதரும் வாய் புகு கடாஅத்து
மீளி மொய்ம்பொடு நிலன் எறியாக் குறுகி
ஆள் கோள் பிழையா அஞ்சுவரு தடக் கைக்
கடும் பகட்டு யானை நெடும் தேர்க் கோதை		20
திரு மா வியல் நகர் கருவூர் முன்துறைத்
தெண் நீர் உயர் கரை குவைஇய
தண் ஆன்பொருநை மணலினும் பலவே

#94 முல்லை - நன்பலூர் சிறுமேதாவியார்
தேம் படு சிமயப் பாங்கர்ப் பம்பிய
குவை இலை முசுண்டை வெண் பூக் குழைய
வான் எனப் பூத்த பானாள் கங்குல்
மறித் துரூஉத் தொகுத்த பறிப் புற இடையன்
தண் கமழ் முல்லை தோன்றியொடு விரைஇ		5
வண்டு படத் தொடுத்த நீர் வார் கண்ணியன்
ஐது படு கொள்ளி அங்கை காயக்
குறுநரி உளம்பும் கூர் இருள் நெடு விளி
சிறு கண் பன்றிப் பெரு நிரை கடிய
முதைப் புனம் காவலர் நினைத்திருந்து ஊதும்		10
கரும் கோட்டு ஓசையொடு ஒருங்கு வந்து இசைக்கும்
வன்புலக் காட்டு நாட்டதுவே அன்பு கலந்து
ஆர்வம் சிறந்த சாயல்
இரும் பல் கூந்தல் திருந்து_இழை ஊரே

#95 பாலை - ஒரோடோகத்து கந்தரத்தனார்
பைபயப் பசந்தன்று நுதலும் சாஅய்
ஐது ஆகின்று என் தளிர் புரை மேனியும்
பலரும் அறியத் திகழ்தரும் அவலமும்
உயிர் கொடு கழியின் அல்லதை நினையின்
எவனோ வாழி தோழி பொரி கால்		5
பொகுட்டு அரை இருப்பை குவி குலைக் கழன்ற
ஆலி ஒப்பின் தூம்பு உடைத் திரள் வீ
ஆறு செல் வம்பலர் நீள் இடை அழுங்க
ஈனல் எண்கின் இரும் கிளை கவரும்
சுரம் பல கடந்தோர்க்கு இரங்குப என்னார்		10
கௌவை மேவலர் ஆகி இ ஊர்
நிரையப் பெண்டிர் இன்னா கூறுவ
புரைய அல்ல என் மகட்கு எனப் பரைஇ
நம் உணர்ந்து ஆறிய கொள்கை
அன்னை முன்னர் யாம் என் இதன் படலே		15

#96 மருதம் மருதம் பாடிய இளங்கடுங்கோ
நறவு உண் மண்டை நுடக்கலின் இறவு கலித்துப்
பூட்டு அறு வில்லின் கூட்டு முதல் தெறிக்கும்
பழனப் பொய்கை அடைகரைப் பிரம்பின்
அர வாய் அன்ன அம் முள் நெடும் கொடி
அருவி ஆம்பல் அகல் அடை துடக்கி		5
அசைவரல் வாடை தூக்கலின் ஊதுலை
விசை வாங்கு தோலின் வீங்குபு ஞெகிழும்
கழனி அம் படப்பைக் காஞ்சி ஊர
ஒண் தொடி ஆயத்துள்ளும் நீ நயந்து
கொண்டனை என்ப ஓர் குறுமகள் அதுவே		10
செம்பொன் சிலம்பின் செறிந்த குறங்கின்
அம் கலுழ் மாமை அஃதை தந்தை
அண்ணல் யானை அடு போர்ச் சோழர்
வெண்ணெல் வைப்பின் பருவூர்ப் பறந்தலை
இரு பெரு வேந்தரும் பொருது களத்து ஒழிய		15
ஒளிறு வாள் நல் அமர் கடந்த ஞான்றைக்
களிறு கவர் கம்பலை போல
அலர் ஆகின்றது பலர் வாய்ப் பட்டே

#97 பாலை - மாமூலனார்
கள்ளி அம் காட்ட புள்ளி அம் பொறிக் கலை
வறன் உறல் அம் கோடு உதிர வலம் கடந்து
புலவுப் புலி துறந்த கலவுக் கழிக் கடு முடை
இரவுக் குறும்பு அலற நூறி நிரை பகுத்து
இரும் கல் முடுக்கர்த் திற்றி கெண்டும்		5
கொலை வில் ஆடவர் போலப் பல உடன்
பெரும் தலை எருவையொடு பருந்து வந்து இறுக்கும்
அரும் சுரம் இறந்த கொடியோர்க்கு அல்கலும்
இரும் கழை இறும்பின் ஆய்ந்து கொண்டு அறுத்த
நுணங்கு கண் சிறு கோல் வணங்கு இறை மகளிரொடு		10
அகவுநர்ப் புரந்த அன்பின் கழல் தொடி
நறவு_மகிழ்_இருக்கை நன்னன் வேண்மான்
வயலை வேலி வியலூர் அன்ன நின்
அலர் முலை ஆகம் புலம்பப் பல நினைந்து
ஆழல் என்றி தோழி யாழ என்		15
கண் பனி நிறுத்தல் எளிதோ குரவு மலர்ந்து
அற்சிரம் நீங்கிய அரும் பத வேனில்
அறல் அவிர் வார் மணல் அகல் யாற்று அடைகரைத்
துறை அணி மருதமொடு இகல் கொள ஓங்கிக்
கலிழ் தளிர் அணிந்த இரும் சினை மாஅத்து		20
இணர் ததை புதுப் பூ நிரைத்த பொங்கர்ப்
புகை புரை அம் மஞ்சு ஊர
நுகர் குயில் அகவும் குரல் கேட்போர்க்கே

#98 குறிஞ்சி - வெறிபாடிய காமக்கண்ணியார்
பனிவரை நிவந்த பயம் கெழு கவாஅன்
துனி இல் கொள்கையொடு அவர் நமக்கு உவந்த
இனிய உள்ளம் இன்னா ஆக
முனிதக நிறுத்த நல்கல் எவ்வம்
சூர் உறை வெற்பன் மார்பு உறத் தணிதல்		5
அறிந்தனள் அல்லள் அன்னை வார் கோல்
செறிந்து இலங்கு எல் வளை நெகிழ்ந்தமை நோக்கிக்
கையறு நெஞ்சினள் வினவலின் முதுவாய்
பொய் வல் பெண்டிர் பிரப்பு உளர்பு இரீஇ
முருகன் ஆர் அணங்கு என்றலின் அது செத்து		10
ஓவத்து அன்ன வினை புனை நல் இல்
பாவை அன்ன பலர் ஆய் மாண் கவின்
பண்டையின் சிறக்க என் மகட்கு எனப் பரைஇக்
கூடு கொள் இன்னியம் கறங்கக் களன் இழைத்து
ஆடு அணி அயர்ந்த அகன் பெரும் பந்தர்		15
வெண் போழ் கடம்பொடு சூடி இன் சீர்
ஐது அமை பாணி இரீஇக் கைபெயராச்
செல்வன் பெரும் பெயர் ஏத்தி வேலன்
வெறி அயர் வியன் களம் பொற்ப வல்லோன்
பொறி அமை பாவையின் தூங்கல் வேண்டின்		20
என் ஆம்-கொல்லோ தோழி மயங்கிய
மையல் பெண்டிர்க்கு நொவ்வல் ஆக
ஆடிய பின்னும் வாடிய மேனி
பண்டையின் சிறவாது ஆயின் இ மறை
அலர் ஆகாமையோ அரிதே அஃதான்று		25
அறிவர் உறுவிய அல்லல் கண்டு அருளி
வெறி கமழ் நெடு வேள் நல்குவன் எனினே
செறி தொடி உற்ற செல்லலும் பிறிது எனக்
கான் கெழு நாடன் கேட்பின்
யான் உயிர்வாழ்தல் அதனினும் அரிதே		30

#99 பாலை - பாலை பாடிய பெருங்கடுங்கோ
வாள் வரி வய_மான் கோள் உகிர் அன்ன
செம் முகை அவிழ்ந்த முள் முதிர் முருக்கின்
சிதர் ஆர் செம்மல் தாஅய் மதர் எழில்
மாண் இழை மகளிர் பூண் உடை முலையின்
முகை பிணி அவிழ்ந்த கோங்கமொடு அசைஇ நனை		5
அதிரல் பரந்த அம் தண் பாதிரி
உதிர் வீ அம் சினை தாஅய் எதிர் வீ
மராஅ மலரொடு விராஅய்ப் பராஅம்
அணங்கு உடை நகரின் மணந்த பூவின்
நன்றே கானம் நயவரும் அம்ம		10
கண்டிசின் வாழியோ குறுமகள் நுந்தை
அடு களம் பாய்ந்த தொடி சிதை மருப்பின்
பிடி மிடை களிற்றின் தோன்றும்
குறு நெடும் துணைய குன்றமும் உடைத்தே

#100 நெய்தல் - உலோச்சனார்
அரையுற்று அமைந்த ஆரம் நீவிப்
புரைய பூண்ட கோதை மார்பினை
நல் அகம் வடுக்கொள முயங்கி நீ வந்து
எல்லினில் பெயர்தல் எனக்குமார் இனிதே
பெரும் திரை முழக்கமொடு இயக்கு அவிந்து இருந்த		5
கொண்டல் இரவின் இரும் கடல் மடுத்த
கொழு மீன் கொள்பவர் இருள் நீங்கு ஒண் சுடர்
ஓடாப் பூட்கை வேந்தன் பாசறை
ஆடு இயல் யானை அணி முகத்து அசைத்த
ஓடை ஒண் சுடர் ஒப்பத் தோன்றும்		10
பாடுநர்த் தொடுத்த கைவண் கோமான்
பரி உடை நல் தேர் பெரியன் விரி இணர்ப்
புன்னை அம் கானல் புறந்தை முன்துறை
வம்ப நாரை இனன் ஒலித்து அன்ன
அம்பல் வாய்த்த தெய்ய தண் புலர்		15
வைகுறு விடியல் போகிய எருமை
நெய்தல் அம் புது மலர் மாந்தும்
கைதை அம் படப்பை எம் அழுங்கல் ஊரே

#101 பாலை - மாமூலனார்
அம்ம வாழி தோழி இம்மை
நன்று செய் மருங்கில் தீது இல் என்னும்
தொன்றுபடு பழமொழி இன்று பொய்த்தன்று-கொல்
தகர் மருப்பு ஏய்ப்பச் சுற்றுபு சுரிந்த
சுவல் மாய் பித்தைச் செம் கண் மழவர்		5
வாய்ப் பகை கடியும் மண்ணொடு கடும் திறல்
தீப் படு சிறு கோல் வில்லொடு பற்றி
நுரை தெரி மத்தம் கொளீஇ நிரைப் புறத்து
அடி புதை தொடுதோல் பறைய ஏகிக்
கடி புலம் கவர்ந்த கன்று உடைக் கொள்ளையர்		10
இனம் தலைபெயர்க்கும் நனம் தலை பெரும் காட்டு
அகல் இரு விசும்பிற்கு ஓடம் போல
பகல் இடை நின்ற பல் கதிர் ஞாயிற்று
உருப்பு அவிர்பு உளரிய சுழன்று வரு கோடை
புன் கால் முருங்கை ஊழ் கழி பல் மலர்		15
தண் கார் ஆலியின் தாவன உதிரும்
பனி படு பல் மலை இறந்தோர்க்கு
முனிதகு பண்பு யாம் செய்தன்றோ இலமே

#102 குறிஞ்சி - மதுரை இளம்பாலாசிரியன் சேந்தம் கூத்தன்
உளை மான் துப்பின் ஓங்கு தினைப் பெரும் புனத்துக்
கழுதில் கானவன் பிழி மகிழ்ந்து வதிந்து என
உரைத்த சந்தின் ஊரல் இரும் கதுப்பு
ஐது வரல் அசை வளி ஆற்றக் கை பெயரா
ஒலியல் வார் மயிர் உளரினள் கொடிச்சி		5
பெரு வரை மருங்கில் குறிஞ்சி பாடக்
குரலும் கொள்ளாது நிலையினும் பெயராது
படாஅப் பைம் கண் பாடு பெற்று ஒய்யென
மறம் புகல் மழ களிறு உறங்கும் நாடன்
ஆர மார்பின் அரி ஞிமிறு ஆர்ப்பத்		10
தாரன் கண்ணியன் எஃகு உடை வலத்தன்
காவலர் அறிதல் ஓம்பிப் பையென
வீழாக் கதவம் அசையினன் புகுதந்து
உயங்கு படர் அகலம் முயங்கித் தோள் மணந்து
இன் சொல் அளைஇப் பெயர்ந்தனன் தோழி		15
இன்று எவன்-கொல்லோ கண்டிகும் மற்று அவன்
நல்காமையின் அம்பல் ஆகி
ஒருங்கு வந்து உவக்கும் பண்பின்
இரும் சூழ் ஓதி ஒண் நுதல் பசப்பே

#103 பாலை - காவிரிப்பூம்பட்டினத்துச் செங்கண்ணனார்
நிழல் அறு நனம் தலை எழால் ஏறு குறித்த
கதிர்த்த சென்னி நுணங்கு செம் நாவின்
விதிர்த்த போலும் அம் நுண் பல் பொறிக்
காமர் சேவல் ஏமம் சேப்ப
முளி அரில் புலம்பப் போகி முனாஅது		5
முரம்பு அடைந்து இருந்த மூரி மன்றத்து
அதர் பார்த்து அல்கும் ஆ கெழு சிறுகுடி
உறையுநர் போகிய ஓங்கு நிலை வியன் மனை
இறை நிழல் ஒரு சிறைப் புலம்பு அயா உயிர்க்கும்
வெம் முனை அரும் சுரம் நீந்தித் தம்-வயின்		10
ஈண்டு வினை மருங்கின் மீண்டோர்-மன் என
நள்ளென் யாமத்து உயவுத் துணை ஆக
நம்மொடு பசலை நோன்று தம்மொடு
தானே சென்ற நலனும்
நல்கார்-கொல்லோ நாம் நயந்திசினோரே		15

#104 முல்லை - மதுரை மருதன் இளநாகனார்
வேந்து வினை முடித்த காலைத் தேம் பாய்ந்து
இன வண்டு ஆர்க்கும் தண் நறும் புறவின்
வென் வேல் இளையர் இன்புற வலவன்
வள்பு வலித்து ஊரின் அல்லது முள் உறின்
முந்நீர் மண்டிலம் ஆதி ஆற்றா		5
நன்னால்கு பூண்ட கடும் பரி நெடும் தேர்
வாங்கு சினை பொலிய ஏறிப் புதல
பூம் கொடி அவரைப் பொய் அதள் அன்ன
உள் இல் வயிற்ற வெள்ளை வெண் மறி
மாழ்கி அன்ன தாழ் பெரும் செவிய		10
புன் தலைச் சிறாரோடு உகளி மன்றுழைக்
கவை இலை ஆரின் அம் குழை கறிக்கும்
சீறூர் பல பிறக்கு ஒழிய மாலை
இனிது செய்தனையால் எந்தை வாழிய
பனி வார் கண்ணள் பல புலந்து உறையும்		15
ஆய் தொடி அரிவை கூந்தல்
போது குரல் அணிய வேய் தந்தோயே

#105 பாலை - தாயங்கண்ணனார்
அகல் அறை மலர்ந்த அரும்பு முதிர் வேங்கை
ஒள் இலைத் தொடலை தைஇ மெல்லென
நல் வரை நாடன் தன் பாராட்ட
யாங்கு வல்லுநள்-கொல் தானே தேம் பெய்து
மணி செய் மண்டைத் தீம் பால் ஏந்தி		5
ஈனாத் தாயர் மடுப்பவும் உண்ணாள்
நிழல் கயத்து அன்ன நீள் நகர் வரைப்பின்
எம்முடைச் செல்வமும் உள்ளாள் பொய்ம் மருண்டு
பந்து புடைப்பு அன்ன பாணிப் பல் அடிச்
சில் பரிக் குதிரை பல் வேல் எழினி		10
கெடல் அரும் துப்பின் விடு தொழில் முடிமார்
கனை எரி நடந்த கல் காய் கானத்து
வினை வல் அம்பின் விழுத் தொடை மறவர்
தேம் பிழி நறும் கள் மகிழின் முனை கடந்து
வீங்கு மென் சுரைய ஏற்று இனம் தரூஉம்		15
முகை தலை திறந்த வேனில்
பகை தலைமணந்த பல் அதர்ச் செலவே

#106 மருதம் - ஆலங்குடி வங்கனார்
எரி அகைந்து அன்ன தாமரைப் பழனத்துப்
பொரி அகைந்து அன்ன பொங்கு பல் சிறு மீன்
வெறி கொள் பாசடை உணீஇயர் பைப்பயப்
பறை தபு முது சிரல் அசைபு வந்து இருக்கும்
துறை கேழ் ஊரன் பெண்டு தன் கொழுநனை		5
நம்மொடு புலக்கும் என்ப நாம் அது
செய்யாம் ஆயினும் உய்யாமையின்
செறி தொடி தெளிர்ப்ப வீசிச் சிறிது அவண்
உலமந்து வருகம் சென்மோ தோழி
ஒளிறு வாள் தானைக் கொற்றச் செழியன்		10
வெளிறு இல் கற்பின் மண்டு அமர் அடு-தொறும்
களிறு பெறு வல்சி பாணன் எறியும்
தண்ணுமை கண்ணின் அலைஇயர் தன் வயிறே

#107 பாலை - காவிரிப்பூம்பட்டினத்துக் காரிக்கண்ணனார்
நீ செலவு அயரக் கேள்-தொறும் பல நினைந்து
அன்பின் நெஞ்சத்து அயாஅப் பொறை மெலிந்த
என் அகத்து இடும்பை களைமார் நின்னொடு
கரும் கல் வியல் அறைக் கிடப்பி வயிறு தின்று
இரும் புலி துறந்த ஏற்று மான் உணங்கல்		5
நெறி செல் வம்பலர் உவந்தனர் ஆங்கண்
ஒலி கழை நெல்லின் அரிசியொடு ஓராங்கு
ஆன் நிலைப் பள்ளி அளை பெய்து அட்ட
வால் நிணம் உருக்கிய வாஅல் வெண் சோறு
புகர் அரைத் தேக்கின் அகல் இலை மாந்தும்		10
கல்லா நீள்மொழிக் கத நாய் வடுகர்
வல் ஆண் அரு முனை நீந்தி அல்லாந்து
உகு மண் ஊறு அஞ்சும் ஒரு கால் பட்டத்து
இன்னா ஏற்றத்து இழுக்கி முடம் கூர்ந்து
ஒரு தனித்து ஒழிந்த உரன் உடை நோன் பகடு		15
அம் குழை இருப்பை அறை வாய் வான் புழல்
புல் உளைச் சிறாஅர் வில்லின் நீக்கி
மரை கடிந்து ஊட்டும் வரையகச் சீறூர்
மாலை இன் துணை ஆகிக் காலைப்
பசு நனை நறு வீப் பரூஉப் பரல் உறைப்ப		20
மண மனை கமழும் கானம்
துணை ஈர் ஓதி என் தோழியும் வருமே

#108 குறிஞ்சி - தங்கால் பொற்கொல்லனார்
புணர்ந்தோர் புன்கண் அருளலும் உணர்ந்தோர்க்கு
ஒத்தன்று-மன்னால் எவன்-கொல் முத்தம்
வரை முதல் சிதறிய வை போல் யானைப்
புகர் முகம் பொருத புது நீர் ஆலி
பளிங்கு சொரிவது போல் பாறை வரிப்பக்		5
கார் கதம்பட்ட கண் அகன் விசும்பின்
விடு பொறி ஞெகிழியின் கொடி பட மின்னிப்
படு மழை பொழிந்த பானாள் கங்குல்
ஆர் உயிர்த் துப்பின் கோள்_மா வழங்கும்
இருளிடைத் தமியன் வருதல் யாவதும்		10
அருளான் வாழி தோழி அல்கல்
விரவுப் பொறி மஞ்ஞை வெரீஇ அரவின்
அணங்கு உடை அரும் தலை பை விரிப்பவை போல்
காயா மென் சினை தோய நீடிப்
பல் துடுப்பு எடுத்த அலங்கு குலைக் காந்தள்		15
அணி மலர் நறும் தாது ஊதும் தும்பி
கை ஆடு வட்டின் தோன்றும்
மை ஆடு சென்னிய மலை கிழவோனே

#109 பாலை - கடுந்தொடைக் காவினார்
பல் இதழ் மென் மலர் உண்கண் நல் யாழ்
நரம்பு இசைத்து அன்ன இன் தீம் கிளவி
நலம் நல்கு ஒருத்தி இருந்த ஊரே
கோடு உழு களிற்றின் தொழுதி ஈண்டிக்
காடு கால்யாத்த நீடு மரச் சோலை		5
விழை வெளில் ஆடும் கழை வளர் நனம் தலை
வெண் நுனை அம்பின் விசை இட வீழ்ந்தோர்
எண்ணு வரம்பு அறியா உவல் இடு பதுக்கைச்
சுரம் கெழு கவலை கோட்பால் பட்டு என
வழங்குநர் மடிந்த அத்தம் இறந்தோர்		10
கைப்பொருள் இல்லை ஆயினும் மெய் கொண்டு
இன் உயிர் செகாஅர் விட்டு அகல் தப்பற்குப்
பெரும் களிற்று மருப்பொடு வரி அதள் இறுக்கும்
அறன் இல் வேந்தன் ஆளும்
வறனுறு குன்றம் பல விலங்கினவே		15

#110 நெய்தல் - போந்தைப் பசலையார்
அன்னை அறியினும் அறிக அலர் வாய்
அம் மென் சேரி கேட்பினும் கேட்க
பிறிது ஒன்று இன்மை அறியக் கூறிக்
கொடும் சுழிப் புகாஅர்த் தெய்வம் நோக்கிக்
கடும் சூள் தருகுவன் நினக்கே கானல்		5
தொடலை ஆயமொடு கடல் உடன் ஆடியும்
சிற்றில் இழைத்தும் சிறு சோறு குவைஇயும்
வருந்திய வருத்தம் தீர யாம் சிறிது
இருந்தனம் ஆக எய்த வந்து
தட மென் பணைத் தோள் மட நல்லீரே		10
எல்லும் எல்லின்று அசைவு மிக உடையேன்
மெல் இலை பரப்பின் விருந்து உண்டு யானும் இக்
கல்லென் சிறுகுடி தங்கின் மற்று எவனோ
என மொழிந்தனனே ஒருவன் அவன் கண்டு
இறைஞ்சிய முகத்தேம் புறம் சேர்பு பொருந்தி		15
இவை நுமக்கு உரிய அல்ல இழிந்த
கொழு மீன் வல்சி என்றனம் இழுமென
நெடும் கொடி நுடங்கும் நாவாய் தோன்றுவ
காணாமோ எனக் காலின் சிதையா
நில்லாது பெயர்ந்த பல்லோருள்ளும்		20
என்னே குறித்த நோக்கமொடு நல்_நுதால்
ஒழிகோ யான் என அழிதகக் கூறி
யான் பெயர்க என்ன நோக்கித் தான் தன்
நெடும் தேர்க் கொடிஞ்சி பற்றி
நின்றோன் போலும் என்றும் என் கட்கே		25

#111 பாலை - பாலை பாடிய பெருங்கடுங்கோ
உள்ளாங்கு உவத்தல் செல்லார் கறுத்தோர்
எள்ளல் நெஞ்சத்து ஏஎச் சொல் நாணி
வருவர் வாழி தோழி அரச
யானை கொண்ட துகில் கொடி போல
அலந்தலை ஞெமையத்து வலந்த சிலம்பி		5
ஓடைக் குன்றத்துக் கோடையொடு துயல்வர
மழை என மருண்ட மம்மர் பல உடன்
ஓய் களிறு எடுத்த நோய் உடை நெடும் கை
தொகு சொல் கோடியர் தூம்பின் உயிர்க்கும்
அத்தக் கேழல் அட்ட நல் கோள்		10
செந்நாய் ஏற்றைக் கம்மென ஈர்ப்பக்
குருதி ஆரும் எருவைச் செம் செவி
மண்டு அமர் அழுவத்து எல்லிக் கொண்ட
புண் தேர் விளக்கின் தோன்றும்
விண் தோய் பிறங்கல் மலை இறந்தோரே		15

#112 குறிஞ்சி - ஆவூர் கிழார்
கூனல் எண்கின் குறு நடைத் தொழுதி
சிதலை செய்த செந்நிலைப் புற்றின்
மண் புனை நெடும் கோடு உடைய வாங்கி
இரை நசைஇப் பரிக்கும் அரைநாள் கங்குல்
ஈன்று அணி வயவுப் பிணப் பசித்து என மறப் புலி		5
ஒளிறு ஏந்து மருப்பின் களிறு அட்டுக் குழுமும்
பனி இரும் சோலை எமியம் என்னாய்
தீங்கு செய்தனையே ஈங்கு வந்தோயே
நாள் இடைப்படின் என் தோழி வாழாள்
தோளிடை முயக்கம் நீயும் வெய்யை			10
கழியக் காதலர் ஆயினும் சான்றோர்
பழியொடு வரூஉம் இன்பம் வெஃகார்
வரையின் எவனோ வான் தோய் வெற்ப
கணக் கலை இகுக்கும் கறி இவர் சிலம்பின்
மணப்பு அரும் காமம் புணர்ந்தமை அறியார்		15
தொன்று இயல் மரபின் மன்றல் அயரப்
பெண்கோள் ஒழுக்கம் கண் கொள நோக்கி
நொதுமல் விருந்தினம் போல இவள்
புது நாண் ஒடுக்கமும் காண்குவம் யாமே

#113 பாலை - கல்லாடனார்
நன்று அல் காலையும் நட்பின் கோடார்
சென்று வழிப்படூஉம் திரிபு இல் சூழ்ச்சியின்
புன் தலை மடப் பிடி அகவுநர் பெருமகன்
மா வீசு வண் மகிழ் அஃதைப் போற்றிக்
காப்புக் கைந்நிறுத்த பல் வேல் கோசர்		5
இளம் கள் கமழும் நெய்தல் அம் செறுவின்
வளம் கெழு நல் நாடு அன்ன என் தோள் மணந்து
அழுங்கல் மூதூர் அலர் எடுத்து அரற்ற
நல்காது துறந்த காதலர் என்றும்
கல் பொரூஉ மெலியாப் பாடு இன் நோன் அடியன்		10
அல்கு வன் சுரைப் பெய்த வல்சியர்
இகந்தனர் ஆயினும் இடம் பார்த்துப் பகைவர்
ஓம்பினர் உறையும் கூழ் கெழு குறும்பில்
குவை இமில் விடைய வேற்று ஆ ஒய்யும்
கனை இரும் சுருணைக் கனி காழ் நெடு வேல்		15
விழவு அயர்ந்து அன்ன கொழும் பல் திற்றி
எழாஅப் பாணன் நல் நாட்டு உம்பர்
நெறி செல் வம்பலர்க் கொன்ற தெவ்வர்
எறி படை கழீஇய சேய் அரிச் சில் நீர்
அறு துறை அயிர் மணல் படுகரைப் போகிச்		20
சேயர் என்றலின் சிறுமையுற்ற என்
கையறு நெஞ்சத்து எவ்வம் நீங்க
அழாஅம் உறைதலும் உரியம் பராரை
அலங்கல் அம் சினைக் குடம்பை புல்லெனப்
புலம் பெயர் மருங்கில் புள் எழுந்து ஆங்கு		25
மெய் இவண் ஒழியப் போகி அவர்
செய்வினை மருங்கில் செலீஇயர் என் உயிரே

#114 முல்லை
கேளாய் எல்ல தோழி வேலன்
வெறி அயர் களத்துச் சிறு பல தாஅய
விரவு வீ உறைத்த ஈர் நறும் புறவின்
உரவுக் கதிர் மழுங்கிய கல் சேர் ஞாயிறு
அரவு நுங்கு மதியின் ஐயென மறையும்		5
சிறு புன் மாலையும் உள்ளார் அவர் என
நம் புலந்து உறையும் எவ்வம் நீங்க
நூல் அறி வலவ கடவு-மதி உவக் காண்
நெடும் கொடி நுடங்கும் வான் தோய் புரிசை
யாமம் கொள்பவர் நாட்டிய நளி சுடர்		10
வானக மீனின் விளங்கித் தோன்றும்
அரும் கடிக் காப்பின் அஞ்சுவரு மூதூர்த்
திரு நகர் அடங்கிய மாசு இல் கற்பின்
அரி மதர் மழைக் கண் அமை புரை பணைத் தோள்
அணங்கு சால் அரிவையைக் காண்குவம்		15
பொலம் படைக் கலிமாப் பூண்ட தேரே

#115 பாலை - மாமூலனார்
அழியா விழவின் அஞ்சுவரு மூதூர்ப்
பழி இலர் ஆயினும் பலர் புறங்கூறும்
அம்பல் ஒழுக்கமும் ஆகியர் வெம் சொல்
சேரி அம் பெண்டிர் எள்ளினும் எள்ளுக
நுண் பூண் எருமை குடநாட்டு அன்ன என்		5
ஆய் நலம் தொலையினும் தொலைக என்றும்
நோயிலர் ஆக நம் காதலர் வாய் வாள்
எவ்வி வீழ்ந்த செருவில் பாணர்
கைதொழு மரபின் முன் பரித்து இடூஉப் பழிச்சிய
வள் உயிர் வணர் மருப்பு அன்ன ஒளி இணர்ச்		10
சுடர்ப் பூம் கொன்றை ஊழுறு விளை நெற்று
அறை மிசைத் தாஅம் அத்த நீள் இடை
பிறை மருள் வான் கோட்டு அண்ணல் யானைச்
சினம் மிகு முன்பின் வாம் மான் அஞ்சி
இனம் கொண்டு ஒளிக்கும் அஞ்சுவரு கவலை		15
நன்னர் ஆய் கவின் தொலையச் சேய் நாட்டு
நம் நீத்து உறையும் பொருட்பிணிக்
கூடாமையின் நீடியோரே

#116 மருதம் - பரணர்
எரி அகைந்து அன்ன தாமரை இடையிடை
அரிந்து கால் குவித்த செந்நெல் வினைஞர்
கள் கொண்டு மறுகும் சாகாடு அளற்று உறின்
ஆய் கரும்பு அடுக்கும் பாய் புனல் ஊர
பெரிய நாணிலை-மன்ற பொரி எனப்		5
புன்கு அவிழ் அகன் துறைப் பொலிய ஒண் நுதல்
நறு மலர்க் காண்வரும் குறும் பல் கூந்தல்
மாழை நோக்கின் காழ் இயல் வன முலை
எஃகு உடை எழில் நலத்து ஒருத்தியொடு நெருநை
வைகு புனல் அயர்ந்தனை என்ப அதுவே		10
பொய் புறம் பொதிந்து யாம் கரப்பவும் கையிகந்து
அலர் ஆகின்றால் தானே மலர் தார்
மை அணி யானை மறப் போர்ச் செழியன்
பொய்யா விழவின் கூடல் பறந்தலை
உடன் இயைந்து எழுந்த இரு பெரு வேந்தர்		15
கடல் மருள் பெரும் படை கலங்கத் தாக்கி
இரங்கு இசை முரசம் ஒழியப் பரந்து அவர்
ஓடு புறம் கண்ட ஞான்றை
ஆடு கொள் வியன் களத்து ஆர்ப்பினும் பெரிதே

#117 பாலை
மௌவலொடு மலர்ந்த மாக் குரல் நொச்சியும்
அவ் வரி அல்குல் ஆயமும் உள்ளாள்
ஏதிலன் பொய்ம்மொழி நம்பி ஏர் வினை
வளம் கெழு திரு நகர் புலம்பப் போகி
வெருவரு கவலை ஆங்கண் அருள்வர		5
கரும் கால் ஓமை ஏறி வெண் தலைப்
பருந்து பெடை பயிரும் பாழ் நாட்டு ஆங்கண்
பொலம் தொடி தெளிர்ப்ப வீசிச் சேவடிச்
சிலம்பு நக இயலிச் சென்ற என் மகட்கே
சாந்து உளர் வணர் குரல் வாரி வகை வகுத்து		10
யான் போது துணைப்பத் தகரம் மண்ணாள்
தன் ஓர் அன்ன தகை வெம் காதலன்
வெறி கமழ் பல் மலர் புனைய பின்னுவிடச்
சிறுபுறம் புதைய நெறிபு தாழ்ந்தன-கொல்
நெடும் கால் மாஅத்து ஊழுறு வெண் பழம்		15
கொடும் தாள் யாமை பார்ப்பொடு கவரும்
பொய்கை சூழ்ந்த பொய்யா யாணர்
வாணன் சிறுகுடி வடாஅது
தீம் நீர் கான்யாற்று அவிர் அறல் போன்றே

#118 குறிஞ்சி - கபிலர்
கறங்கு வெள் அருவி பிறங்கு மலைக் கவாஅன்
தேம் கமழ் இணர வேங்கை சூடித்
தொண்டகப்பறைச் சீர்ப் பெண்டிரொடு விரைஇ
மறுகில் தூங்கும் சிறுகுடிப் பாக்கத்து
இயல் முருகு ஒப்பினை வய நாய் பிற்படப்		5
பகல் வரின் கவ்வை அஞ்சுதும் இகல் கொள
இரும் பிடி கன்றொடு விரைஇய கய வாய்ப்
பெரும் கை யானைக் கோள் பிழைத்து இரீஇய
அடு புலி வழங்கும் ஆர் இருள் நடுநாள்
தனியை வருதல் அதனினும் அஞ்சுதும்		10
என் ஆகுவள்-கொல் தானே பல் நாள்
புணர் குறி செய்த புலர் குரல் ஏனல்
கிளி கடி பாடலும் ஒழிந்தனள்
அளியள் தான் நின் அளி அலது இலளே

#119 பாலை - குடவாயிற் கீரத்தனார்
நுதலும் தோளும் திதலை அல்குலும்
வண்ணமும் வனப்பும் வரியும் வாட
வருந்துவள் இவள் எனத் திருந்துபு நோக்கி
வரைவு நன்று என்னாது அகலினும் அவர் வறிது
ஆறு செல் மாக்கள் அறுத்த பிரண்டை		5
ஏறு பெறு பாம்பின் பைம் துணி கடுப்ப
நெறி அயல் திரங்கும் அத்தம் வெறிகொள
உமண் சாத்து இறந்த ஒழி கல் அடுப்பில்
நோன் சிலை மழவர் ஊன் புழுக்கு அயரும்
சுரன் வழக்கு அற்றது என்னாது உரம் சிறந்து		10
நெய்தல் உருவின் ஐது இலங்கு அகல் இலைத்
தொடை அமை பீலிப் பொலிந்த கடிகை
மடை அமை திண் சுரை மாக் காழ் வேலொடு
தணி அமர் அழுவம் தம்மொடு துணைப்பத்
துணிகுவர்-கொல்லோ தாமே துணி கொள		15
மறப் புலி உழந்த வசி படு சென்னி
உறு நோய் வருத்தமொடு உணீஇய மண்டி
படி முழம் ஊன்றிய நெடு நல் யானை
கை தோய்த்து உயிர்க்கும் வறும் சுனை
மை தோய் சிமைய மலை முதல் ஆறே		20

#120 நெய்தல் - நக்கீரனார்
நெடுவேள் மார்பின் ஆரம் போலச்
செவ் வாய் வானம் தீண்டி மீன் அருந்தும்
பைம் கால் கொக்கு இனம் நிரை பறை உகப்ப
எல்லை பைப்பய கழிப்பிக் குட வயின்
கல் சேர்ந்தன்றே பல் கதிர் ஞாயிறு		5
மதர் எழில் மழைக் கண் கலுழ இவளே
பெரு நாண் அணிந்த சிறு மென் சாயல்
மாண் நலம் சிதைய ஏங்கி ஆனாது
அழல் தொடங்கினளே பெரும அதனால்
கழிச் சுறா எறிந்த புண் தாள் அத்திரி		10
நெடு நீர் இரும் கழிப் பரி மெலிந்து அசைஇ
வல் வில் இளையரொடு எல்லிச் செல்லாது
சேர்ந்தனை செலினே சிதைகுவது உண்டோ
பெண்ணை ஓங்கிய வெண் மணல் படப்பை
அன்றில் அகவும் ஆங்கண்		15
சிறு குரல் நெய்தல் எம் பெரும் கழி நாட்டே

#121 பாலை - மதுரை மருதன் இளநாகனார்
நாம் நகை உடையம் நெஞ்சே கடும் தெறல்
வேனில் நீடிய வான் உயர் வழி_நாள்
வறுமை கூரிய மண் நீர்ச் சிறு குளத்
தொடு குழி மருங்கில் துவ்வாக் கலங்கல்
கன்று உடை மடப் பிடிக் கயம் தலை மண்ணி		5
சேறு கொண்டு ஆடிய வேறுபடு வயக் களிறு
செம் கோல் வால் இணர் தயங்கத் தீண்டிச்
சொரி புறம் உரிஞிய நெறி அயல் மராஅத்து
அல்குறு வரி நிழல் அசைஇ நம்மொடு
தான் வரும் என்ப தட மென் தோளி		19
உறுகண் மழவர் உருள் கீண்டிட்ட
ஆறு செல் மாக்கள் சோறு பொதி வெண் குடை
கனை விசைக் கடு வளி எடுத்தலின் துணை செத்து
வெருள் ஏறு பயிரும் ஆங்கண்
கரு முக முசுவின் கானத்தானே		15

#122 குறிஞ்சி - பரணர்
இரும் பிழி மகாஅர் இவ் அழுங்கல் மூதூர்
விழவு இன்று ஆயினும் துஞ்சாது ஆகும்
மல்லல் ஆவணம் மறுகு உடன் மடியின்
வல் உரை கடும் சொல் அன்னை துஞ்சாள்
பிணி கோள் அரும் சிறை அன்னை துஞ்சின்		5
துஞ்சாக் கண்ணர் காவலர் கடுகுவர்
இலங்கு வேல் இளையர் துஞ்சின் வை எயிற்று
வலம் சுரித் தோகை ஞாளி மகிழும்
அரவ வாய் ஞமலி மகிழாது மடியின்
பகல் உரு உறழ நிலவு கான்று விசும்பின்		10
அகல் வாய் மண்டிலம் நின்று விரியும்மே
திங்கள் கல் சேர்பு கனை இருள் மடியின்
இல் எலி வல்சி வல் வாய்க் கூகை
கழுது வழங்கு யாமத்து அழிதகக் குழறும்
வளைக் கண் சேவல் வாளாது மடியின்		15
மனைச் செறி கோழி மாண் குரல் இயம்பும்
எல்லாம் மடிந்த காலை ஒரு நாள்
நில்லா நெஞ்சத்து அவர் வாரலரே அதனால்
அரி பெய் புட்டில் ஆர்ப்பப் பரி சிறந்து
ஆதி போகிய பாய் பரி நல் மா		20
நொச்சி வேலித் தித்தன் உறந்தைக்
கல் முதிர் புறங்காட்டு அன்ன
பல் முட்டு இன்றால் தோழி நம் களவே

#123 பாலை - காவிரிப்பூம்பட்டினத்துக் காரிக் கண்ணனார்
உண்ணாமையின் உயங்கிய மருங்கின்
ஆடாப் படிவத்து ஆன்றோர் போல
வரை செறி சிறு நெறி நிரைபு உடன் செல்லும்
கான யானை கவின் அழி குன்றம்
இறந்து பொருள் தருதலும் ஆற்றாய் சிறந்த		5
சில் ஐம் கூந்தல் நல் அகம் பொருந்தி
ஒழியின் வறுமை அஞ்சுதி அழிதகவு
உடை-மதி வாழிய நெஞ்சே நிலவு என
நெய் கனி நெடு வேல் எஃகின் இமைக்கும்
மழை மருள் பல் தோல் மா வண் சோழர்		10
கழை மாய் காவிரிக் கடல் மண்டு பெரும் துறை
இறவொடு வந்து கோதையொடு பெயரும்
பெரும் கடல் ஓதம் போல
ஒன்றில் கொள்ளாய் சென்று தரு பொருட்கே

#124 முல்லை - மதுரை அறுவை வாணிகன் இளவேட்டனார்
நன் கலம் களிற்றொடு நண்ணார் ஏந்தி
வந்து திறை கொடுத்து வணங்கினர் வழிமொழிந்து
சென்றீக என்ப ஆயின் வேந்தனும்
நிலம் வகுத்துறாஅ ஈண்டிய தானையொடு
இன்றே புகுதல் வாய்வது நன்றே		5
மாட மாண் நகர்ப் பாடு அமை சேக்கைத்
துனி தீர் கொள்கை நம் காதலி இனிதுறப்
பாசறை வருத்தம் வீட நீயும்
மின்னு நிமிர்ந்து அன்ன பொன் இயல் புனை படைக்
கொய் சுவல் புரவிக் கை கவர் வயங்கு பரி		10
வண் பெயற்கு அவிழ்ந்த பைம் கொடி முல்லை
வீ கமழ் நெடு வழி ஊது வண்டு இரிய
காலை எய்தக் கடவு-மதி மாலை
அந்திக் கோவலர் அம் பணை இமிழ் இசை
அரமிய வியலகத்து இயம்பும்		15
நிரை நிலை ஞாயில் நெடு மதில் ஊரே

#125 பாலை - பரணர்
அரம் போழ் அவ் வளை தோள் நிலை நெகிழ
நிரம்பா வாழ்க்கை நேர்தல் வேண்டி
இரம் காழ் அன்ன அரும்பு முதிர் ஈங்கை
ஆலி அன்ன வால் வீ தாஅய்
வை வால் ஓதி மை அணல் ஏய்ப்பத்		5
தாது உறு குவளைப் போது பிணி அவிழப்
படாஅப் பைம் கண் பா அடிக் கய வாய்க்
கடாஅம் மாறிய யானை போலப்
பெய்து வறிது ஆகிய பொங்கு செலல் கொண்மூ
மை தோய் விசும்பின் மாதிரத்து உழிதரப்		10
பனி அடூஉ நின்ற பானாள் கங்குல்
தனியோர் மதுகை தூக்காய் தண்ணென
முனிய அலைத்தி முரண் இல் காலை
கைதொழு மரபின் கடவுள் சான்ற
செய்வினை மருங்கின் சென்றோர் வல் வரின்		15
விரி உளைப் பொலிந்த பரி உடை நல் மான்
வெருவரு தானையொடு வேண்டு புலத்து இறுத்த
பெரு வளக் கரிகால் முன் நிலைச் செல்லார்
சூடா வாகைப் பறந்தலை ஆடு பெற
ஒன்பது குடையும் நல் பகல் ஒழித்த		20
பீடு இல் மன்னர் போல
ஓடுவை-மன்னால் வாடை நீ எமக்கே

#126 மருதம் - நக்கீரர்
நின வாய் செத்து நீ பல உள்ளிப்
பெரும் புன் பைதலை வருந்தல் அன்றியும்
மலை மிசை தொடுத்த மலிந்து செலல் நீத்தம்
தலை_நாள் மா மலர் தண் துறைத் தயங்கக்
கடற்கரை மெலிக்கும் காவிரிப் பேரியாற்று		5
அறல் வார் நெடும் கயத்து அரு நிலை கலங்க
மால் இருள் நடுநாள் போகித் தன் ஐயர்
காலைத் தந்த கணைக் கோட்டு வாளைக்கு
அம் வாங்கு உந்தி அம் சொல் பாண்_மகள்
நெடும் கொடி நுடங்கும் நறவு மலி மறுகில்		10
பழம் செந்நெல்லின் முகவை கொள்ளாள்
கழங்கு உறழ் முத்தமொடு நல் கலம் பெறூஉம்
பயம் கெழு வைப்பின் பல் வேல் எவ்வி
நயம் புரி நல் மொழி அடக்கவும் அடங்கான்
பொன் இணர் நறு மலர் புன்னை வெஃகித்		15
திதியனொடு பொருத அன்னி போல
விளிகுவை-கொல்லோ நீயே கிளி எனச்
சிறிய மிழற்றும் செவ் வாய்ப் பெரிய
கயல் என அமர்த்த உண்கண் புயல் எனப்
புறம் தாழ்பு இருளிய பிறங்கு குரல் ஐம்பால்		20
மின் நேர் மருங்குல் குறுமகள்
பின் நிலை விடாஅ மடம் கெழு நெஞ்சே

#127 பாலை - மாமூலனார்
இலங்கு வளை நெகிழச் சாஅய் அல்கலும்
கலங்கு அஞர் உழந்து நாம் இவண் ஒழிய
வலம் படு முரசின் சேரலாதன்
முந்நீர் ஓட்டிக் கடம்பு அறுத்து இமயத்து
முன்னோர் மருள வணங்கு வில் பொறித்து		5
நல் நகர் மரந்தை முற்றத்து ஒன்னார்
பணி திறை தந்த பாடு சால் நல் கலம்
பொன் செய் பாவை வயிரமொடு ஆம்பல்
ஒன்று வாய் நிறையக் குவைஇ அன்று அவண்
நிலம் தினத் துறந்த நிதியத்து அன்ன		10
ஒரு நாள் ஒரு பகல் பெறினும் வழி_நாள்
தங்கலர் வாழி தோழி செம் கோல்
கரும் கால் மராத்து வாஅல் மெல் இணர்
சுரிந்து வணர் பித்தை பொலியச் சூடிக்
கல்லா மழவர் வில் இடம் தழீஇ		15
வருநர்ப் பார்க்கும் வெருவரு கவலை
மொழிபெயர் தேஎத்தர் ஆயினும்
பழி தீர் காதலர் சென்ற நாட்டே

#128 குறிஞ்சி - கபிலர்
மன்று பாடு அவிந்து மனை மடிந்தன்றே
கொன்றோர் அன்ன கொடுமையோடு இன்றே
யாமம் கொள வரின் கனைஇக் காமம்
கடலினும் உரைஇக் கரை பொழியும்மே
எவன்-கொல் வாழி தோழி மயங்கி		5
இன்னம் ஆகவும் நன்னர் நெஞ்சம்
என்னொடும் நின்னொடும் சூழாது கைம்மிக்கு
இறும்பு பட்டு இருளிய இட்டு அரும் சிலம்பில்
குறும் சுனைக் குவளை வண்டு படச் சூடிக்
கான நாடன் வரூஉம் யானைக்		10
கயிற்றுப் புறத்து அன்ன கல் மிசைச் சிறு நெறி
மாரி வானம் தலைஇ நீர் வார்பு
இட்டு அரும் கண்ண படுகுழி இயவின்
இருளிடை மிதிப்புழி நோக்கி அவர்
தளர் அடி தாங்கிய சென்றது இன்றே		15

#129 பாலை - குடவாயில் கீரத்தனார்
உள்ளல் வேண்டும் ஒழிந்த பின் என
நள்ளென் கங்குல் நடுங்கு துணை ஆயவர்
நின் மறந்து உறைதல் யாவது புல் மறைந்து
அலங்கல் வான் கழை உதிர் நெல் நோக்கிக்
கலை பிணை விளிக்கும் கானத்து ஆங்கண்		5
கல் சேர்பு இருந்த கதுவாய்க் குரம்பைத்
தாழி முதல் கலித்த கோழ் இலைப் பருத்திப்
பொதி வயிற்று இளம் காய் பேடை ஊட்டிப்
போகில் பிளந்திட்ட பொங்கல் வெண் காழ்
நல்கூர் பெண்டிர் அல்கல் கூட்டும்		10
கலங்கு முனைச் சீறூர் கை தலைவைப்பக்
கொழுப்பு ஆ தின்ற கூர்ம் படை மழவர்
செருப்பு உடை அடியர் தெண் சுனை மண்டும்
அரும் சுரம் அரிய அல்ல வார் கோல்
திருந்து இழைப் பணைத் தோள் தேன் நாறு கதுப்பின்		15
குவளை உண்கண் இவளொடு செலற்கு என
நெஞ்சு வாய் அவிழ்ந்தனர் காதலர்
அம் சில் ஓதி ஆய்_இழை நமக்கே

#130 நெய்தல் - வெண்கண்ணனார்
அம்ம வாழி கேளிர் முன் நின்று
கண்டனிர் ஆயின் கழறலிர்-மன்னோ
நுண் தாது பொதிந்த செம் கால் கொழு முகை
முண்டகம் கெழீஇய மோட்டு மணல் அடைகரைப்
பேஎய்த் தலைய பிணர் அரைத் தாழை		5
எயிறு உடை நெடும் தோடு காப்பப் பல உடன்
வயிறு உடைப் போது வாலிதின் விரீஇப்
புலவுப் பொருது அழித்த பூ நாறு பரப்பின்
இவர் திரை தந்த ஈர்ம் கதிர் முத்தம்
கவர் நடைப் புரவிக் கால் வடுத் தபுக்கும்		10
நல் தேர் வழுதி கொற்கை முன்துறை
வண்டு வாய் திறந்த வாங்கு கழி நெய்தல்
போது புறங்கொடுத்த உண்கண்
மாதர் வாள் முகம் மதைஇய நோக்கே

#131 பாலை  - மதுரை மருதன் இளநாகனார்
விசும்புற நிவந்த மாத் தாள் இகணைப்
பசும் கேழ் மெல் இலை அருகு நெறித்து அன்ன
வண்டு படுபு இருளிய தாழ் இரும் கூந்தல்
சுரும்பு உண விரிந்த பெரும் தண் கோதை
இவளினும் சிறந்தன்று ஈதல் நமக்கு என		5
வீளை அம்பின் விழுத் தொடை மழவர்
நாள் ஆ உய்த்த நாம வெம் சுரத்து
நடை மெலிந்து ஒழிந்த சேண் படர் கன்றின்
கடை மணி உகு நீர் துடைத்த ஆடவர்
பெயரும் பீடும் எழுதி அதர்-தொறும்		10
பீலி சூட்டிய பிறங்கு நிலை நடுகல்
வேல் ஊன்று பலகை வேற்று முனை கடுக்கும்
வெருவரு தகுந கானம் நம்மொடு
வருக என்னுதி ஆயின்
வாரேன் நெஞ்சம் வாய்க்க நின் வினையே		15

#132 குறிஞ்சி - தாயங்கண்ணனார்
ஏனலும் இறங்கு குரல் இறுத்தன நோய் மலிந்து
ஆய் கவின் தொலைந்த இவள் நுதலும் நோக்கி
ஏதில மொழியும் இவ் ஊரும் ஆகலின்
களிற்று முகம் திறந்த கவுள் உடைப் பகழி
வால் நிணப் புகவின் கானவர் தங்கை		5
அம் பணை மென் தோள் ஆய் இதழ் மழைக் கண்
ஒல்கு இயல் கொடிச்சியை நல்கினை ஆயின்
கொண்டனை சென்மோ நுண் பூண் மார்ப
துளி தலைத் தலைஇய சாரல் நளி சுனைக்
கூம்பு முகை அவிழ்த்த குறும் சிறைப் பறவை		10
வேங்கை விரி இணர் ஊதிக் காந்தள்
தேன் உடைக் குவி குலைத் துஞ்சி யானை
இரும் கவுள் கடாஅம் கனவும்
பெரும் கல் வேலி நும் உறைவு இன் ஊர்க்கே

#133 பாலை - உறையூர் மருத்துவன் தாமோதரனார்
குன்றி அன்ன கண்ண குரூஉ மயிர்ப்
புன் தாள் வெள்_எலி மோவாய் ஏற்றை
செம் பரல் முரம்பில் சிதர்ந்த பூழி
நல் நாள் வேங்கை வீ நல் களம் வரிப்பக்
கார் தலைமணந்த பைம் புதல் புறவின்		5
வில் எறி பஞ்சியின் வெண் மழை தவழும்
கொல்லை இதைய குறும் பொறை மருங்கில்
கரி பரந்து அன்ன காயாம் செம்மலொடு
எரி பரந்து அன்ன இல மலர் விரைஇப்
பூம் கலுழ் சுமந்த தீம் புனல் கான்யாற்று		10
வான் கொள் தூவல் வளி தர உண்கும்
எம்மொடு வருதல் வல்லையோ மற்று எனக்
கொன் ஒன்று வினவினர்-மன்னே தோழி
இதல் முள் ஒப்பின் முகை முதிர் வெட்சி
கொல் புனக் குருந்தொடு கல் அறைத் தாஅம்		15
மிளைநாட்டு அத்தத்து ஈர்ம் சுவல் கலித்த
வரி மரல் கறிக்கும் மடப் பிணைத்
திரி மருப்பு இரலைய காடு இறந்தோரே

#134 முல்லை - சீத்தலை சாத்தனார்
வானம் வாய்ப்பக் கவினிக் கானம்
கமம் சூல் மா மழை கார் பயந்து இறுத்து என
மணி மருள் பூவை அணி மலர் இடையிடைச்
செம் புற மூதாய் பரத்தலின் நல் பல
முல்லை வீ கழல் தாஅய் வல்லோன்		5
செய்கை அன்ன செந்நிலப் புறவின்
வாஅப் பாணி வயங்கு தொழில் கலிமாத்
தாஅத் தாள் இணை மெல்ல ஒதுங்க
இடி மறந்து ஏ-மதி வலவ குவி முகை
வாழை வான் பூ ஊழுறுபு உதிர்ந்த		10
ஒழி குலை அன்ன திரி மருப்பு ஏற்றொடு
கணைக் கால் அம் பிணைக் காமர் புணர் நிலை
கடு_மான் தேர் ஒலி கேட்பின்
நடுநாள் கூட்டம் ஆகலும் உண்டே

#135 பாலை - பரணர்
திதலை மாமை தளிர் வனப்பு அழுங்கப்
புதல் இவர் பீரின் எதிர் மலர் கடுப்பப்
பசலை பாய்ந்த நுதலேன் ஆகி
எழுது எழில் மழைக் கண் கலுழ நோய் கூர்ந்து
ஆதிமந்தியின் அறிவு பிறிது ஆகிப்		5
பேதுற்றிசினே காதல் அம் தோழி
காய் கதிர் திருகலின் கனைந்து கால் கடுகி
ஆடு தளிர் இருப்பைக் கூடு குவி வான் பூக்
கோடு கடை கழங்கின் அறை மிசைத் தாஅம்
காடு இறந்தனரே காதலர் அடு போர்		10
வீயா விழுப் புகழ் விண் தோய் வியன் குடை
ஈர்_எழு வேளிர் இயைந்து ஒருங்கு எறிந்த
கழுவுள் காமூர் போலக்
கலங்கின்று-மாது அவர் தெளிந்த என் நெஞ்சே

#136 மருதம் - விற்றூற்று மூதெயினனார்
மைப்பு அறப் புழுக்கின் நெய்க் கனி வெண் சோறு
வரையா வண்மையொடு புரையோர்ப் பேணிப்
புள்ளுப் புணர்ந்து இனிய ஆகத் தெள் ஒளி
அம் கண் இரு விசும்பு விளங்கத் திங்கள்
சகடம் மண்டிய துகள் தீர் கூட்டத்துக்		5
கடி நகர் புனைந்து கடவுள் பேணிப்
படு மண முழவொடு பரூஉப் பணை இமிழ
வதுவை மண்ணிய மகளிர் விதுப்புற்றுப்
பூக் கணும் இமையார் நோக்குபு மறைய
மென் பூ வாகைப் புன் புறக் கவட்டு இலை		10
பழம் கன்று கறித்த பயம்பு அமல் அறுகைத்
தழங்கு குரல் வானின் தலைப்பெயற்கு ஈன்ற
மண்ணு மணி அன்ன மா இதழ்ப் பாவைத்
தண் நறு முகையொடு வெண் நூல் சூட்டித்
தூ உடைப் பொலிந்து மேவரத் துவன்றி		15
மழை பட்டு அன்ன மணல் மலி பந்தர்
இழை அணி சிறப்பின் பெயர் வியர்ப்பு ஆற்றித்
தமர் நமக்கு ஈத்த தலை_நாள் இரவின்
உவர் நீங்கற்பின் எம் உயிர் உடம்படுவி
முருங்காக் கலிங்கம் முழுவதும் வளைஇப்		20
பெரும் புழுக்குற்ற நின் பிறை நுதல் பொறி வியர்
உறு வளி ஆற்ற சிறு வரை திற என
ஆர்வ நெஞ்சமொடு போர்வை வவ்வலின்
உறை கழி வாளின் உருவு பெயர்ந்து இமைப்ப
மறை திறன் அறியாள் ஆகி ஒய்யென		25
நாணினள் இறைஞ்சியோளே பேணிப்
பரூஉப் பகை ஆம்பல் குரூஉத் தொடை நீவிச்
சுரும்பு இமிர் ஆய் மலர் வேய்ந்த
இரும் பல் கூந்தல் இருள் மறை ஒளித்தே

#137 பாலை - உறையூர் முதுகூத்தனார்
ஆறு செல் வம்பலர் சேறு கிளைத்து உண்ட
சிறு பல் கேணி பிடி அடி நசைஇச்
களிறு தொடூஉக் கடக்கும் கான்யாற்று அத்தம்
சென்று சேர்பு ஒல்லார் ஆயினும் நினக்கே
வென்று எறி முரசின் விறல் போர்ச் சோழர்		5
இன் கடும் கள்ளின் உறந்தை ஆங்கண்
வரு புனல் நெரிதரும் இகு கரைப் பேரியாற்று
உருவ வெண் மணல் முருகு நாறு தண் பொழில்
பங்குனி முயக்கம் கழிந்த வழி_நாள்
வீ இலை அமன்ற மரம் பயில் இறும்பில்		10
தீ இல் அடுப்பின் அரங்கம் போலப்
பெரும் பாழ் கொண்டன்று நுதலே தோளும்
தோளா முத்தின் தெண் கடல் பொருநன்
திண் தேர்ச் செழியன் பொருப்பின் கவாஅன்
நல் எழில் நெடு வேய் புரையும்		15
தொல் கவின் தொலைந்தன நோகோ யானே

#138 குறிஞ்சி - எழூஉப் பன்றி நாகன் குமரனார்
இகுளை கேட்டிசின் காதல் அம் தோழி
குவளை உண்கண் தெண் பனி மல்க
வறிது யான் வருந்திய செல்லற்கு அன்னை
பிறிது ஒன்று கடுத்தனள் ஆகி வேம்பின்
வெறி கொள் பாசிலை நீலமொடு சூடி		5
உடலுநர்க் கடந்த கடல் அம் தானை
திருந்து இலை நெடு வேல் தென்னவன் பொதியில்
அரும் சிமை இழிதரும் ஆர்த்து வரல் அருவியின்
ததும்பு சீர் இன்னியம் கறங்கக் கைதொழுது
உரு கெழு சிறப்பின் முருகு மனைத் தரீஇக்		10
கடம்பும் களிறும் பாடி நுடங்குபு
தோடும் தொடலையும் கைக்கொண்டு அல்கலும்
ஆடினர் ஆதல் நன்றோ நீடு
நின்னொடு தெளித்த நல் மலை நாடன்
குறி வரல் அரைநாள் குன்றத்து உச்சி		15
நெறி கெட வீழ்ந்த துன் அரும் கூர் இருள்
திரு மணி உமிழ்ந்த நாகம் காந்தள்
கொழு மடல் புதுப் பூ ஊதும் தும்பி
நல் நிறம் மருளும் அரு விடர்
இன்னா நீள் இடை நினையும் என் நெஞ்சே		20

#139 பாலை - இடைக்காடனார்
துஞ்சுவது போல இருளி விண் பக
இமைப்பது போல மின்னி உறைக்கொண்டு
ஏறுவது போலப் பாடு சிறந்து உரைஇ
நிலம் நெஞ்சு உட்க ஓவாது சிலைத்து ஆங்கு
ஆர் தளி பொழிந்த வார் பெயல் கடை நாள்		5
ஈன்று நாள் உலந்த வாலா வெண் மழை
வான் தோய் உயர் வரை ஆடும் வைகறைப்
புதல் ஒளி சிறந்த காண்பு இன் காலை
தண் நறும் படு நீர் மாந்திப் பதவு அருந்து
வெண் புறக்கு உடைய திரி மருப்பு இரலை		10
வார் மணல் ஒரு சிறைப் பிடவு அவிழ் கொழு நிழல்
காமர் துணையொடு ஏமுற வதிய
அரக்கு நிற உருவின் ஈயல் மூதாய்
பரப்பியவை போல் பாஅய்ப் பல உடன்
நீர் வார் மருங்கின் ஈர் அணி திகழ		15
இன்னும் வாரார் ஆயின் நல்_நுதல்
யாது-கொல் மற்று அவர் நிலையே காதலர்
கருவிக் கார் இடி இரீஇய
பருவம் அன்று அவர் வருதும் என்றதுவே

#140 நெய்தல் - அம்மூவனார்
பெரும் கடல் வேட்டத்துச் சிறுகுடிப் பரதவர்
இரும் கழி செறுவின் உழாஅது செய்த
வெண் கல் உப்பின் கொள்ளை சாற்றி
என்றூழ் விடர குன்றம் போகும்
கதழ் கோல் உமணர் காதல் மட_மகள்		5
சில் கோல் எல் வளை தெளிர்ப்ப வீசி
நெல்லின் நேரே வெண் கல் உப்பு எனச்
சேரி விலைமாறு கூறலின் மனைய
விளி அறி ஞமலி குரைப்ப வெரீஇய
மதர் கயல் மலைப்பின் அன்ன கண் எமக்கு		10
இதை முயல் புனவன் புகை நிழல் கடுக்கும்
மா மூது அள்ளல் அழுந்திய சாகாட்டு
எவ்வம் தீர வாங்கும் தந்தை
கை பூண் பகட்டின் வருந்தி
வெய்ய உயிர்க்கும் நோய் ஆகின்றே		15

#141 பாலை - நக்கீரர்
அம்ம வாழி தோழி கைம்மிகக்
கனவும் கங்குல்-தோறு இனிய நனவும்
புனை வினை நல் இல் புள்ளும் பாங்கின
நெஞ்சும் நனி புகன்று உறையும் எஞ்சாது
உலகு தொழில் உலந்து நாஞ்சில் துஞ்சி		5
மழை கால் நீங்கிய மாக விசும்பில்
குறு முயல் மறு நிறம் கிளர மதி நிறைந்து
அறு_மீன் சேரும் அகல் இருள் நடுநாள்
மறுகு விளக்குறுத்து மாலை தூக்கிப்
பழ விறல் மூதூர் பலருடன் துவன்றிய		10
விழவு உடன் அயர வருக-தில் அம்ம
துவரப் புலர்ந்து தூ மலர் கஞலித்
தகரம் நாறும் தண் நறும் கதுப்பின்
புது மண மகடூஉ அயினிய கடி நகர்ப்
பல் கோட்டு அடுப்பில் பால் உலை இரீஇக்		15
கூழைக் கூந்தல் குறும் தொடி மகளிர்
பெரும் செய் நெல்லின் வாங்கு கதிர் முறித்துப்
பாசவல் இடிக்கும் இரும் காழ் உலக்கைக்
கடிது இடி வெரீஇய கமம் சூல் வெண் குருகு
தீம் குலை வாழை ஓங்கு மடல் இராது		20
நெடும் கால் மாஅத்துக் குறும் பறை பயிற்றும்
செல் குடி நிறுத்த பெரும் பெயர்க் கரிகால்
வெல் போர்ச் சோழன் இடையாற்று அன்ன
நல் இசை வெறுக்கை தருமார் பல் பொறி
புலிக் கேழ் உற்ற பூ இடைப் பெரும் சினை		25
நரந்த நறும் பூ நாள்_மலர் உதிரக்
கலை பாய்ந்து உகளும் கல் சேர் வேங்கை
தேம் கமழ் நெடு வரை பிறங்கிய
வேங்கட வைப்பின் சுரன் இறந்தோரே

#142 குறிஞ்சி - பரணர்
இல மலர் அன்ன அம் செம் நாவின்
புலம் மீக்கூறும் புரையோர் ஏத்த
பலர் மேம் தோன்றிய கவி கை வள்ளல்
நிறை அரும் தானை வெல் போர் மாந்தரம்
பொறையன் கடுங்கோப் பாடிச் சென்ற		5
குறையோர் கொள்கலம் போல நன்றும்
உவ இனி வாழிய நெஞ்சே காதலி
முறையின் வழாஅது ஆற்றிப் பெற்ற
கறை அடி யானை நன்னன் பாழி
ஊட்டு அரு மரபின் அஞ்சுவரு பேஎய்க்		10
கூட்டு எதிர்கொண்ட வாய் மொழி மிஞிலி
புள்ளிற்கு ஏமம் ஆகிய பெரும் பெயர்
வெள்ளத் தானை அதிகன் கொன்று உவந்து
ஒள் வாள் அமலை ஆடிய ஞாட்பின்
பலர் அறிவுறுதல் அஞ்சிப் பைப்பய		15
நீர்த் திரள் கடுக்கும் மாசு இல் வெள்ளிச்
சூர்ப்புறு கோல் வளை செறித்த முன்கைக்
குறை அறல் அன்ன இரும் பல் கூந்தல்
இடன் இல் சிறுபுறத்து இழையொடு துயல்வரக்
கடல் மீன் துஞ்சும் நள்ளென் யாமத்து		20
உருவு கிளர் ஏர் வினைப் பொலிந்த பாவை
இயல் கற்று அன்ன ஒதுக்கினள் வந்து
பெயல் அலை கலங்கிய மலைப் பூம் கோதை
இயல் எறி பொன்னின் கொங்கு சோர்பு உறைப்பத்
தொடிக் கண் வடுக் கொள முயங்கினள்		25
வடிப்புறு நரம்பின் தீவிய மொழிந்தே

#143 பாலை - ஆலம்பேரி சாத்தனார்
செய்வினைப் பிரிதல் எண்ணிக் கைம்மிகக்
காடு கவின் ஒழியக் கடும் கதிர் தெறுதலின்
நீடு சினை வறிய ஆக ஒல்லென
வாடு பல் அகல் இலை கோடைக்கு ஒய்யும்
தேக்கு அமல் அடுக்கத்து ஆங்கண் மேக்கு எழுபு		5
முளி அரில் பிறந்த வளி வளர் கூர் எரிச்
சுடர் நிமிர் நெடும் கொடி விடர் முகை முழங்கும்
வெம் மலை அரும் சுரம் நீந்தி ஐய
சேறும் என்ற சிறுசொற்கு இவட்கே
வசை இல் வெம் போர் வானவன் மறவன்		10
நசையின் வாழ்நர்க்கு நல் கலம் சுரக்கும்
பொய்யா வாய் வாள் புனை கழல் பிட்டன்
மை தவழ் உயர் சிமைக் குதிரைக் கவாஅன்
அகல் அறை நெடும் சுனை துவலையின் மலர்ந்த
தண் கமழ் நீலம் போலக்		15
கண் பனி கலுழ்ந்தன நோகோ யானே

#144 முல்லை - மதுரை அளக்கர் ஞாழலார் மகனார் மள்ளனார்
வருதும் என்ற நாளும் பொய்த்தன
அரி ஏர் உண்கண் நீரும் நில்லா
தண் கார்க்கு ஈன்ற பைம் கொடி முல்லை
வை வாய் வான் முகை அவிழ்ந்த கோதை
பெய் வனப்பு இழந்த கதுப்பும் உள்ளார்		5
அருள் கண்மாறலோ மாறுக அந்தில்
அறன் அஞ்சலரே ஆய்_இழை நமர் என
சிறிய சொல்லிப் பெரிய புலப்பினும்
பனி படு நறும் தார் குழைய நம்மொடு
துனி தீர் முயக்கம் பெற்றோள் போல		10
உவக்குநள் வாழிய நெஞ்சே விசும்பின்
ஏறு எழுந்து முழங்கினும் மாறு எழுந்து சிலைக்கும்
கடாஅ யானை கொட்கும் பாசறைப்
போர் வேட்டு எழுந்த மள்ளர் கையதை
கூர் வாள் குவி முகம் சிதைய நூறி		15
மான் அடி மருங்கில் பெயர்த்த குருதி
வான மீனின் வயின்வயின் இமைப்ப
அமர் ஓர்த்து அட்ட செல்வம்
தமர் விரைந்து உரைப்பக் கேட்கும் ஞான்றே

#145 பாலை - கயமனார்
வேர் முழுது உலறி நின்ற புழல் கால்
தேர் மணி இசையின் சிள்வீடு ஆர்க்கும்
வற்றல் மரத்த பொன் தலை ஓதி
வெயில் கவின் இழந்த வைப்பின் பையுள் கொள
நுண்ணிதின் நிவக்கும் வெண் ஞெமை வியன் காட்டு		5
ஆள் இல் அத்தத்து அளியள் அவனொடு
வாள் வரி பொருத புண் கூர் யானை
புகர் சிதை முகத்த குருதி வார
உயர் சிமை நெடும் கோட்டு உரும் என முழங்கும்
அரும் சுரம் இறந்தனள் என்ப பெரும் சீர்		10
அன்னி குறுக்கைப் பறந்தலைத் திதியன்
தொல் நிலை முழுமுதல் துமியப் பண்ணிய
நன்னர் மெல் இணர்ப் புன்னை போலக்
கடு நவைப் படீஇயர்-மாதோ களி மயில்
குஞ்சரக் குரல குருகோடு ஆலும்		15
துஞ்சா முழவின் துய்த்து இயல் வாழ்க்கை
கூழ் உடை தந்தை இடன் உடை வரைப்பின்
ஊழ் அடி ஒதுங்கினும் உயங்கும் ஐம்பால்
சிறு பல் கூந்தல் போது பிடித்து அருளாது
எறி கோல் சிதைய நூறவும் சிறுபுறம்		20
எனக்கு உரித்து என்னாள் நின்ற என்
அமர்க் கண் அஞ்ஞையை அலைத்த கையே

#146 மருதம் - உவர்க்கண்ணூர்ப் புல்லங்கீரனார்
வலி மிகு முன்பின் அண்ணல் ஏஎறு
பனி மலர்ப் பொய்கைப் பகல் செல மறுகி
மடக் கண் எருமை மாண் நாகு தழீஇப்
படப்பை நண்ணிப் பழனத்து அல்கும்
கலி மகிழ் ஊரன் ஒலி மணி நெடும் தேர்		5
ஒள் இழை மகளிர் சேரிப் பல் நாள்
இயங்கல் ஆனாது ஆயின் வயங்கு_இழை
யார்-கொல் அளியள் தானே எம் போல்
மாயப் பரத்தன் வாய்மொழி நம்பி
வளி பொரத் துயல்வரும் தளி பொழி மலரின்		10
கண் பனி ஆகத்து உறைப்பக் கண் பசந்து
ஆயமும் அயலும் மருள
தாய் ஓம்பு ஆய் நலம் வேண்டாதோளே

#147 பாலை - ஔவையார்
ஓங்கு மலைச் சிலம்பில் பிடவுடன் மலர்ந்த
வேங்கை வெறித் தழை வேறு வகுத்து அன்ன
ஊன் பொதி அவிழாக் கோட்டு உகிர்க் குருளை
மூன்று உடன் ஈன்ற முடங்கர் நிழத்த
துறுகல் விடர் அளைப் பிணவுப் பசி கூர்ந்து எனப்		5
பொறி கிளர் உழுவைப் போழ் வாய் ஏற்றை
அறு கோட்டு உழை மான் ஆண் குரல் ஓர்க்கும்
நெறி படு கவலை நிரம்பா நீள் இடை
வெள்ளிவீதியைப் போல நன்றும்
செலவு அயர்ந்திசினால் யானே பல புலந்து		10
உண்ணா உயக்கமொடு உயிர் செலச் சாஅய்த்
தோளும் தொல் கவின் தொலைய நாளும்
பிரிந்தோர் பெயர்வுக்கு இரங்கி
மருந்து பிறிது இன்மையின் இருந்து வினை இலனே

#148 குறிஞ்சி - பரணர்
பனைத் திரள் அன்ன பரேர் எறுழ்த் தடக் கைக்
கொலைச் சினம் தவிரா மதன் உடை முன்பின்
வண்டு படு கடாஅத்து உயர் மருப்பு யானை
தண் கமழ் சிலம்பின் மரம் படத் தொலைச்சி
உறு புலி உரறக் குத்தி விறல் கடிந்து		5
சிறுதினைப் பெரும் புனம் வவ்வும் நாட
கடும் பரிக் குதிரை ஆஅய் எயினன்
நெடும் தேர் ஞிமிலியொடு பொருது களம் பட்டு எனக்
காணிய செல்லா கூகை நாணிக்
கடும் பகல் வழங்காத ஆஅங்கு இடும்பை		10
பெரிதால் அம்ம இவட்கே அதனால்
மாலை வருதல் வேண்டும் சோலை
முளை மேய் பெரும் களிறு வழங்கும்
மலை முதல் அடுக்கத்த சிறு கல் ஆறே

#149 பாலை - எருக்காட்டூர்த் தாயங்கண்ணனார்
சிறு புன் சிதலை சேண் முயன்று எடுத்த
நெடும் செம் புற்றத்து ஒடுங்கு இரை முனையின்
புல் அரை இருப்பைத் தொள்ளை வான் பூப்
பெரும் கை எண்கின் இரும் கிளை கவரும்
அத்த நீள் இடைப் போகி நன்றும்			5
அரிது செய் விழுப் பொருள் எளிதினின் பெறினும்
வாரேன் வாழி என் நெஞ்சே சேரலர்
சுள்ளி அம் பேரியாற்று வெண் நுரை கலங்க
யவனர் தந்த வினை மாண் நல் கலம்
பொன்னொடு வந்து கறியொடு பெயரும்		10
வளம் கெழு முசிறி ஆர்ப்பு எழ வளைஇ
அரும் சமம் கடந்து படிமம் வவ்விய
நெடு நல் யானை அடு போர்ச் செழியன்
கொடி நுடங்கு மறுகின் கூடல் குடாஅது
பல் பொறி மஞ்ஞை வெல் கொடி உயரிய		15
ஒடியா விழவின் நெடியோன் குன்றத்து
வண்டு பட நீடிய குண்டு சுனை நீலத்து
எதிர் மலர்ப் பிணையல் அன்ன இவள்
அரி மதர் மழைக் கண் தெண் பனி கொளவே

#150 நெய்தல் - குறுவழுதியார்
பின்னு விட நெறித்த கூந்தலும் பொன் என
ஆகத்து அரும்பிய சுணங்கும் வம்பு விடக்
கண் உருத்து எழுதரு முலையும் நோக்கி
எல்லினை பெரிது எனப் பல் மாண் கூறிப்
பெரும் தோள் அடைய முயங்கி நீடு நினைந்து		5
அரும் கடிப்படுத்தனள் யாயே கடும் செலல்
வாள் சுறா வழங்கும் வளை மேய் பெரும் துறை
கனைத்த நெய்தல் கண் போல் மா மலர்
நனைத்த செருந்தி போது வாய் அவிழ
மாலை மணி இதழ் கூம்பக் காலைக்		10
கள் நாறு காவியொடு தண்ணென மலரும்
கழியும் கானலும் காண்-தொறும் பல புலந்து
வாரார்-கொல் எனப் பருவரும்
தார் ஆர் மார்ப நீ தணந்த ஞான்றே

#151 பாலை - காவன்முல்லைப் பூதரத்தனார்
தம் நயந்து உறைவோர்த் தாங்கித் தாம் நயந்து
இன் அமர் கேளிரொடு ஏமுறக் கெழீஇ
நகுதல் ஆற்றார் நல்கூர்ந்தோர் என
மிகு பொருள் நினையும் நெஞ்சமொடு அருள் பிறிது
ஆப-மன் வாழி தோழி கால் விரிபு		5
உறு வளி எறி-தொறும் கலங்கிய பொறி வரிக்
கலைமான் தலையின் முதன்முதல் கவர்த்த
கோடல் அம் கவட்ட குறும் கால் உழுஞ்சில்
தாறு சினை விளைந்த நெற்றம் ஆடு_மகள்
அரி கோல் பறையின் ஐயென ஒலிக்கும்		10
பதுக்கைத்து ஆய செதுக்கை நீழல்
கள்ளி முள் அரை பொருந்திச் செல்லுநர்க்கு
உறுவது கூறும் சிறு செம் நாவின்
மணி ஓர்த்து அன்ன தெண் குரல்
கணி வாய்ப் பல்லிய காடு இறந்தோரே		15

#152 குறிஞ்சி - பரணர்
நெஞ்சு நடுங்கு அரும் படர் தீர வந்து
குன்றுழை நண்ணிய சீறூர் ஆங்கண்
செலீஇய பெயர்வோள் வணர் சுரி ஐம்பால்
நுண் கோல் அகவுநர்ப் புரந்த பேர் இசைச்
சினம் கெழு தானைத் தித்தன் வெளியன்		5
இரங்கு நீர்ப் பரப்பின் கானல் அம் பெரும் துறைத்
தனம் தரு நல் கலம் சிதையத் தாக்கும்
சிறு வெள் இறவின் குப்பை அன்ன
உறு பகை தரூஉம் மொய்ம் மூசு பிண்டன்
முனை முரண் உடையக் கடந்த வென் வேல்		10
இசை நல் ஈகைக் களிறு வீசு வண் மகிழ்
பாரத்துத் தலைவன் ஆர நன்னன்
ஏழில் நெடு வரைப் பாழிச் சிலம்பில்
களி மயில் கலாவத்து அன்ன தோளே
வல் வில் இளையர் பெருமகன் நள்ளி		15
சோலை அடுக்கத்துச் சுரும்பு உண விரிந்த
கடவுள் காந்தளுள்ளும் பல உடன்
இறும்பூது கஞலிய ஆய் மலர் நாறி
வல்லினும் வல்லார் ஆயினும் சென்றோர்க்குச்
சால் அவிழ் நெடும் குழி நிறைய வீசும்		20
மாஅல் யானை ஆஅய் கானத்துத்
தலையாற்று நிலைஇய சேய் உயர் பிறங்கல்
வேய் அமைக் கண் இடை புரைஇச்
சேய ஆயினும் நடுங்கு துயர் தருமே

#153 பாலை - சேரமான் இளங்குட்டுவன்
நோகோ யானே நோதகும் உள்ளம்
அம் தீம் கிளவி ஆயமொடு கெழீஇப்
பந்து வழிப் படர்குவள் ஆயினும் நொந்து நனி
வெம்பும்-மன் அளியள் தானே இனியே
வன்கணாளன் மார்புற வளைஇ		5
இன் சொல் பிணிப்ப நம்பி நம்-கண்
உறுதரு விழுமம் உள்ளாள் ஒய்யெனத்
தெறு கதிர் உலைஇய வேனில் வெம் காட்டு
உறு வளி ஒலி கழை கண் உறுபு தீண்டலின்
பொறி பிதிர்பு எடுத்த பொங்கு எழு கூர் எரிப்		10
பைது அறு சிமையப் பயம் நீங்கு ஆர் இடை
நல் அடிக்கு அமைந்த அல்ல மெல் இயல்
வல்லுநள்-கொல்லோ தானே எல்லி
ஓங்கு வரை அடுக்கத்து உயர்ந்த சென்னி
மீனொடு பொலிந்த வானின் தோன்றித்		15
தேம் பாய்ந்து ஆர்க்கும் தெரி இணர்க் கோங்கின்
கால் உறக் கழன்ற கள் கமழ் புது மலர்
கை விடு சுடரின் தோன்றும்
மை படு மா மலை விலங்கிய சுரனே

#154 முல்லை - பொதும்பிற் புல்லாளங்கண்ணியார்
படு மழை பொழிந்த பயம் மிகு புறவின்
நெடு நீர் அவல பகு வாய்த் தேரை
சிறு பல்லியத்தின் நெடு நெறிக் கறங்கக்
குறும் புதல் பிடவின் நெடும் கால் அலரி
செந்நில மருங்கின் நுண் அயிர் வரிப்ப		5
வெம் சின அரவின் பை அணந்து அன்ன
தண் கமழ் கோடல் தாது பிணி அவிழத்
திரி மருப்பு இரலை தெள் அறல் பருகிக்
காமர் துணையொடு ஏமுற வதிய
காடு கவின் பெற்ற தண் பதப் பெரு வழி		10
ஓடு பரி மெலியாக் கொய் சுவல் புரவி
தாள் தாழ் தார் மணி தயங்குபு இயம்ப
ஊர்-மதி வலவ தேரே சீர் மிகுபு
நம்-வயின் புரிந்த கொள்கை
அம் மா அரிவையைத் துன்னுகம் விரைந்தே		15

#155 பாலை - பாலை பாடிய பெருங்கடுங்கோ
அறன் கடைப்படாஅ வாழ்க்கையும் என்றும்
பிறன் கடைச் செலாஅச் செல்வமும் இரண்டும்
பொருளின் ஆகும் புனை_இழை என்று நம்
இருள் ஏர் ஐம்பால் நீவியோரே
நோய் நாம் உழக்குவம் ஆயினும் தாம் தம்		5
செய்வினை முடிக்க தோழி பல் வயின்
பய நிரை சேர்ந்த பாழ் நாட்டு ஆங்கண்
நெடு விளிக் கோவலர் கூவல் தோண்டிய
கொடு வாய்ப் பத்தல் வார்ந்து உகு சிறு குழி
நீர் காய் வருத்தமொடு சேர்விடம் பெறாது		10
பெரும் களிறு மிதித்த அடியகத்து இரும் புலி
ஒதுங்குவன கழிந்த செதும்பல் ஈர் வழி
செயிர் தீர் நாவின் வயிரியர் பின்றை
மண் ஆர் முழவின் கண்ணகத்து அசைத்த
விரல் ஊன்று வடுவின் தோன்றும்		15
மரல் வாடு மருங்கின் மலை இறந்தோரே

#156 மருதம் - ஆவூர் மூலங்கிழார்
முரசு உடைச் செல்வர் புரவிச் சூட்டும்
மூட்டுறு கவரி தூக்கி அன்ன
செழும் செய் நெல்லின் சேய் அரிப் புனிற்றுக் கதிர்
மூதா தின்றல் அஞ்சிக் காவலர்
பாகல் ஆய் கொடி பகன்றையொடு பரீஇக்		5
காஞ்சியின் அகத்துக் கரும்பு அருத்தி யாக்கும்
தீம் புனல் ஊர திறவிது ஆகக்
குவளை உண்கண் இவளும் யானும்
கழனி ஆம்பல் முழுநெறிப் பைம் தழை
காயா ஞாயிற்று ஆகத் தலைப்பெயப்		10
பொய்தல் ஆடிப் பொலிக என வந்து
நின் நகாப் பிழைத்த தவறோ பெரும
கள்ளும் கண்ணியும் கையுறை ஆக
நிலைக் கோட்டு வெள்ளை நால் செவிக் கிடாஅய்
நிலைத் துறைக் கடவுட்கு உளப்பட ஓச்சித்		15
தணி மருங்கு அறியாள் யாய் அழ
மணி மருள் மேனி பொன் நிறம் கொளலே

#157 பாலை - வேம்பற்றூர் குமரனார்
அரியல் பெண்டிர் அல்குல் கொண்ட
பகு வாய்ப் பாளைக் குவி முலை சுரந்த
அரி நிறக் கலுழி ஆர மாந்திச்
செரு வேட்டுச் சிலைக்கும் செம் கண் ஆடவர்
வில் இட வீழ்ந்தோர் பதுக்கைக் கோங்கின்		5
எல்லி மலர்ந்த பைம் கொடி அதிரல்
பெரும் புலர் வைகறை அரும்பொடு வாங்கிக்
கான யானை கவளம் கொள்ளும்
அஞ்சுவரு நெறியிடைத் தமியர் செல்மார்
நெஞ்சு உண மொழிப-மன்னே தோழி		10
முனை புலம் பெயர்த்த புல்லென் மன்றத்துப்
பெயல் உற நெகிழ்ந்து வெயில் உறச் சாஅய்
வினை அழி பாவையின் உலறி
மனை ஒழிந்திருத்தல் வல்லுவோர்க்கே

#158 குறிஞ்சி - கபிலர்
உரும் உரறு கருவிய பெரு மழை தலைஇப்
பெயல் ஆன்று அவிந்த தூங்கு இருள் நடுநாள்
மின்னு நிமிர்ந்து அன்ன கனம் குழை இமைப்பப்
பின்னு விடு நெறியின் கிளைஇய கூந்தலள்
வரை இழி மயிலின் ஒல்குவனள் ஒதுங்கி		5
மிடை ஊர்பு இழியக் கண்டனென் இவள் என
அலையல் வாழி வேண்டு அன்னை நம் படப்பைச்
சூர் உடைச் சிலம்பில் சுடர்ப் பூ வேய்ந்து
தாம் வேண்டு உருவின் அணங்குமார் வருமே
நனவின் வாயே போலத் துஞ்சுநர்க்		10
கனவு ஆண்டு மருட்டலும் உண்டே இவள் தான்
சுடர் இன்று தமியளும் பனிக்கும் வெருவர
மன்ற மராஅத்த கூகை குழறினும்
நெஞ்சு அழிந்து அரணம் சேரும் அதன்தலைப்
புலிக் கணத்து அன்ன நாய் தொடர் விட்டு		15
முருகன் அன்ன சீற்றத்துக் கடும் திறல்
எந்தையும் இல்லன் ஆக
அஞ்சுவள் அல்லளோ இவள் இது செயலே

#159 பாலை - ஆமூர்க் கவுதமன் சாதேவனார்
தெண் கழி விளைந்த வெண் கல் உப்பின்
கொள்ளை சாற்றிய கொடு நுக ஒழுகை
உரன் உடைச் சுவல பகடு பல பரப்பி
உமண் உயிர்த்து இறந்த ஒழிகல் அடுப்பின்
வடியுறு பகழிக் கொடு வில் ஆடவர்		5
அணங்கு உடை நோன் சிலை வணங்க வாங்கிப்
பல் ஆன் நெடு நிரை தழீஇக் கல்லென
அரு முனை அலைத்த பெரும் புகல் வலத்தர்
கனை குரல் கடும் துடிப் பாணி தூங்கி
உவலைக் கண்ணியர் ஊன் புழுக்கு அயரும்		10
கவலைக் காதலர் இறந்தனர் என நனி
அவலம் கொள்ளல் மா காதல் அம் தோழி
விசும்பின் நல் ஏறு சிலைக்கும் சேண் சிமை
நறும் பூம் சாரல் குறும்பொறைக் குணாஅது
வில் கெழு தடக் கை வெல் போர் வானவன்		15
மிஞிறு மூசு கவுள சிறு கண் யானைத்
தொடி உடைத் தட மருப்பு ஒடிய நூறிக்
கொடுமுடி காக்கும் குரூஉக் கண் நெடு மதில்
சேண் விளங்கு சிறப்பின் ஆமூர் எய்தினும்
ஆண்டு அமைந்து உறையுநர் அல்லர் நின்		20
பூண் தாங்கு ஆகம் பொருந்துதல் மறந்தே

#160 நெய்தல் - குமுழி ஞாழலார் நப்பசலையார்
ஒடுங்கு_ஈர்_ஓதி நினக்கும் அற்றோ
நடுங்கின்று அளித்து என் நிறை இல் நெஞ்சம்
அடும்பு கொடி சிதைய வாங்கிக் கொடும் கழிக்
குப்பை வெண் மணல் பக்கம் சேர்த்தி
நிறைச் சூல் யாமை மறைத்து ஈன்று புதைத்த		5
கோட்டு வட்டு உருவின் புலவு நாறு முட்டைப்
பார்ப்பு இடன் ஆகும் அளவை பகு வாய்க்
கணவன் ஓம்பும் கானல் அம் சேர்ப்பன்
முள் உறின் சிறத்தல் அஞ்சி மெல்ல
வாவு உடைமையின் வள்பின் காட்டி		10
ஏத் தொழில் நவின்ற எழில் நடைப் புரவி
செழு நீர்த் தண் கழி நீந்தலின் ஆழி
நுதி முகம் குறைந்த பொதி முகிழ் நெய்தல்
பாம்பு உயர் தலையின் சாம்புவன நிவப்ப
இர வந்தன்றால் திண் தேர் கரவாது		15
ஒல்லென ஒலிக்கும் இளையரொடு வல் வாய்
அரவ சீறூர் காணப்
பகல் வந்தன்றால் பாய் பரி சிறந்தே

#161 பாலை - மதுரைப் புல்லங்கண்ணனார்
வினை-வயின் பிரிதல் யாவது வணர் சுரி
வடியாப் பித்தை வன்கண் ஆடவர்
அடி அமை பகழி ஆர வாங்கி
வம்பலர்ச் செகுத்த அஞ்சுவரு கவலைப்
படு முடை நசைஇய வாழ்க்கைச் செம் செவி		5
எருவைச் சேவல் ஈண்டு கிளை பயிரும்
வெருவரு கானம் நீந்தி பொருள் புரிந்து
இறப்ப எண்ணினர் என்பது சிறப்பக்
கேட்டனள்-கொல்லோ தானே தோள் தாழ்பு
சுரும்பு உண ஒலிவரும் இரும் பல் கூந்தல்		10
அம் மா மேனி ஆய் இழைக் குறுமகள்
சுணங்கு சூழ் ஆகத்து அணங்கு என உருத்த
நல் வரல் இள முலை நனைய
பல் இதழ் உண்கண் பரந்தன பனியே

#162 குறிஞ்சி - பரணர்
கொளக் குறைபடாஅக் கோடு வளர் குட்டத்து
அளப்பு அரிது ஆகிய குவை இரும் தோன்றல
கடல் கண்டு அன்ன மாக விசும்பின்
அழல் கொடி அன்ன மின்னு வசிபு நுடங்கக்
கடிது இடி உருமொடு கதழ் உறை சிதறி		5
விளிவிடன் அறியா வான் உமிழ் நடுநாள்
அரும் கடிக் காவலர் இகழ்_பதம் நோக்கிப்
பனி மயங்கு அசை வளி அலைப்பத் தந்தை
நெடு நகர் ஒரு சிறை நின்றனென் ஆக
அறல் என அவிர்வரும் கூந்தல் மலர் என		10
வாள் முகத்து அலமரும் மா இதழ் மழைக் கண்
முகை நிரைத்து அன்ன மா வீழ் வெண் பல்
நகை மாண்டு இலங்கும் நலம் கெழு துவர் வாய்க்
கோல் அமை விழுத் தொடி விளங்க வீசி
கால் உறு தளிரின் நடுங்கி ஆனாது		15
நோய் அசா வீட முயங்கினள் வாய்மொழி
நல் இசை தரூஉம் இரவலர்க்கு உள்ளிய
நசை பிழைப்பு அறியாக் கழல் தொடி அதிகன்
கோள் அறவு அறியாப் பயம் கெழு பலவின்
வேங்கை சேர்ந்த வெற்பகம் பொலிய		20
வில் கெழு தானைப் பசும்பூண் பாண்டியன்
களிறு அணி வெல் கொடி கடுப்பக் காண்வர
ஒளிறுவன இழிதரும் உயர்ந்து தோன்று அருவி
நேர்கொள் நெடு வரைக் கவாஅன்
சூர்_அர_மகளிரின் பெறற்கு அரியோளே		25

#163 பாலை - கழார்க்கீரன் எயிற்றியார்
விண் அதிர்பு தலைஇய விரவு மலர் குழையத்
தண் மழை பொழிந்த தாழ் பெயல் கடை நாள்
எமியம் ஆகத் துனி உளம் கூரச்
சென்றோர் உள்ளி சில் வளை நெகிழப்
பெரு நசை உள்ளமொடு வரு நசை நோக்கி		5
விளியும் எவ்வமொடு அளியள் என்னாது
களிறு உயிர்த்து அன்ன கண் அழி துவலை
முளரி கரியும் முன்பனிப் பானாள்
குன்று நெகிழ்ப்பு அன்ன குளிர் கொள் வாடை
எனக்கே வந்தனை போறி புனல் கால்		10
அயிர் இடு குப்பையின் நெஞ்சு நெகிழ்ந்து அவிழக்
கொடியோர் சென்ற தேஎத்து மடியாது
இனையை ஆகி செல்-மதி
வினை விதுப்புறுநர் உள்ளலும் உண்டே

#164 முல்லை - மதுரைத் தமிழ்க் கூத்தன் நாகன்தேவனார்
கதிர் கை ஆக வாங்கி ஞாயிறு
பைது அறத் தெறுதலின் பயம் கரந்து மாறி
விடுவாய்ப்பட்ட வியன் கண் மா நிலம்
காடு கவின் எதிரக் கனை பெயல் பொழிதலின்
பொறி வரி இன வண்டு ஆர்ப்பப் பல உடன்		5
நறு வீ முல்லையொடு தோன்றி தோன்ற
வெறி ஏன்றன்றே வீ கமழ் கானம்
எவன்-கொல் மற்று அவர் நிலை என மயங்கி
இகு பனி உறைக்கும் கண்ணொடு இனைபு ஆங்கு
இன்னாது உறைவி தொல் நலம் பெறூஉம்		10
இது நல் காலம் கண்டிசின் பகைவர்
மதில் முகம் முருக்கிய தொடி சிதை மருப்பின்
கந்து கால் ஒசிக்கும் யானை
வெம் சின வேந்தன் வினை விடப் பெறினே

#165 பாலை
கயம் தலை மடப் பிடி பயம்பில் பட்டு என
களிறு விளிப்படுத்த கம்பலை வெரீஇ
ஒய்யென எழுந்த செவ் வாய்க் குழவி
தாது எரு மறுகின் மூதூர் ஆங்கண்
எருமை நல் ஆன் பெறு முலை மாந்தும்		5
நாடு பல இறந்த நன்னராட்டிக்கு
ஆயமும் அணி இழந்து அழுங்கின்று தாயும்
இன் தோள் தாராய் இறீஇயர் என் உயிர் என
கண்ணும் நுதலும் நீவித் தண்ணெனத்
தடவு நிலை நொச்சி வரி நிழல் அசைஇத்		10
தாழிக் குவளை வாடு மலர் சூட்டித்
தரு மணல் கிடந்த பாவை என்
அரு மகளே என முயங்கினள் அழுமே

#166 மருதம் - இடையன் நெடுங்கீரனார்
நல் மரம் குழீஇய நனை முதிர் சாடி
பல் நாள் அரித்த கோஒய் உடைப்பின்
மயங்கு மழைத் துவலையின் மறுகு உடன் பனிக்கும்
பழம் பல் நெல்லின் வேளூர் வாயில்
நறு விரை தெளித்த நாறு இணர் மாலைப்		5
பொறி வரி இன வண்டு ஊதல கழியும்
உயர் பலி பெறூஉம் உரு கெழு தெய்வம்
புனை இரும் கதுப்பின் நீ கடுத்தோள்-வயின்
அனையேன் ஆயின் அணங்குக என் என
மனையோள் தேற்றும் மகிழ்நன் ஆயின்		10
யார்-கொல் வாழி தோழி நெருநல்
தார் பூண் களிற்றின் தலைப் புணை தழீஇ
வதுவை ஈர் அணிப் பொலிந்து நம்மொடு
புதுவது வந்த காவிரிக்
கோடு தோய் மலிர் நிறை ஆடியோரே		15

#167 பாலை - கடியலூர் உருத்திரங்கண்ணனார்
வயங்கு மணி பொருத வகை அமை வனப்பின்
பசும் காழ் அல்குல் மாஅயோளொடு
வினை வனப்பு எய்திய புனை பூம் சேக்கை
விண் பொரு நெடு நகர்த் தங்கி இன்றே
இனிது உடன் கழிந்தன்று-மன்னே நாளைப்		5
பொருந்தாக் கண்ணேம் புலம்பு வந்து உறுதரச்
சேக்குவம்-கொல்லோ நெஞ்சே சாத்து எறிந்து
அதர் கூட்டுண்ணும் அணங்கு உடைப் பகழிக்
கொடு வில் ஆடவர் படு பகை வெரீஇ
ஊர் எழுந்து உலறிய பீர் எழு முது பாழ்		10
முருங்கை மேய்ந்த பெரும் கை யானை
வெரிந் ஓங்கு சிறுபுறம் உரிஞ ஒல்கி
இட்டிகை நெடும் சுவர் விட்டம் வீழ்ந்து என
மணிப்புறாத் துறந்த மரம் சோர் மாடத்து
எழுது அணி கடவுள் போகலின் புல்லென்று		15
ஒழுகு பலி மறந்த மெழுகாப் புன் திணைப்
பால் நாய் துன்னிய பறைக் கண் சிற்றில்
குயில் காழ் சிதைய மண்டி அயில் வாய்க்
கூர் முகச் சிதலை வேய்ந்த
போர் மடி நல் இறைப் பொதியிலானே

#168 குறிஞ்சி - கோட்டம்பலத்துத் துஞ்சிய சேரமான்
யாமம் நும்மொடு கழிப்பி நோய் மிக
பனி வார் கண்ணேம் வைகுதும் இனியே
ஆன்றல் வேண்டும் வான் தோய் வெற்ப
பல்லான்குன்றில் படு நிழல் சேர்ந்த
நல் ஆன் பரப்பின் குழுமூர் ஆங்கண்		5
கொடைக்கடன் ஏன்ற கோடா நெஞ்சின்
உதியன் அட்டில் போல ஒலி எழுந்து
அருவி ஆர்க்கும் பெரு வரைச் சிலம்பின்
ஈன்று அணி இரும் பிடி தழீஇக் களிறு தன்
தூங்கு நடைக் குழவி துயில் புறங்காப்ப		10
ஒடுங்கு அளை புலம்பப் போகிக் கடுங்கண்
வாள் வரி வயப் புலி கல் முழை உரற
கானவர் மடிந்த கங்குல்
மான் அதர்ச் சிறு நெறி வருதல் நீயே

#169 பாலை - தொண்டி ஆமூர்ச் சாத்தனார்
மரம் தலை கரிந்து நிலம் பயம் வாட
அலங்கு கதிர் வேய்ந்த அழல் திகழ் நனம் தலை
புலி தொலைத்து உண்ட பெரும் களிற்று ஒழி ஊன்
கலி கெழு மறவர் காழ் கோத்து ஒழிந்ததை
ஞெலிகோல் சிறு தீ மாட்டி ஒலி திரைக்		5
கடல் விளை அமிழ்தின் கணம் சால் உமணர்
சுனை கொள் தீம் நீர்ச் சோற்று உலைக் கூட்டும்
சுரம் பல கடந்த நம்-வயின் படர்ந்து நனி
பசலை பாய்ந்த மேனியள் நெடிது நினைந்து
செல் கதிர் மழுகிய புலம்பு கொள் மாலை		10
மெல் விரல் சேர்த்திய நுதலள் மல்கி
கயல் உமிழ் நீரின் கண் பனி வாரப்
பெரும் தோள் நெகிழ்ந்த செல்லலொடு
வருந்துமால் அளியள் திருந்து_இழை தானே

#170 நெய்தல் - மதுரை கள்ளிற் கடையத்தன் வெண்ணாகனார்
கானலும் கழறாது கழியும் கூறாது
தேன் இமிர் நறு மலர் புன்னையும் மொழியாது
ஒரு நின் அல்லது பிறிது யாதும் இலனே
இரும் கழி மலர்ந்த கண் போல் நெய்தல்
கமழ் இதழ் நாற்றம் அமிழ்து என நசைஇத்		5
தண் தாது ஊதிய வண்டு இனம் களி சிறந்து
பறைஇய தளரும் துறைவனை நீயே
சொல்லல் வேண்டுமால் அலவ பல் கால்
கைதை அம் படு சினை எவ்வமொடு அசாஅம்
கடல் சிறு காக்கை காமர் பெடையொடு		10
கோட்டு_மீன் வழங்கும் வேட்டம் மடி பரப்பின்
வெள் இறாக் கனவும் நள்ளென் யாமத்து
நின் உறு விழுமம் களைந்தோள்
தன் உறு விழுமம் நீந்துமோ எனவே

#171 பாலை - கல்லாடனார்
நுதலும் நுண் பசப்பு இவரும் தோளும்
அகல் மலை இறும்பின் ஆய்ந்து கொண்டு அறுத்த
பணை எழில் அழிய வாடும் நாளும்
நினைவல் மாது அவர் பண்பு என்று ஓவாது
இனையல் வாழி தோழி புணர்வர்		5
இலங்கு கோல் ஆய் தொடி நெகிழப் பொருள் புரிந்து
அலந்தலை ஞெமையத்து அதர் அடைந்து இருந்த
மால் வரைச் சீறூர் மருள் பல் மாக்கள்
கோள் வல் ஏற்றை ஓசை ஓர்மார்
திருத்திக் கொண்ட அம்பினர் நோன் சிலை		10
எருத்தத்து இரீஇ இடம்-தொறும் படர்தலின்
கீழ்ப்படு தாரம் உண்ணா மேல் சினைப்
பழம் போல் சேற்ற தீம் புழல் உணீஇய
கரும் கோட்டு இருப்பை ஊரும்
பெரும் கை எண்கின் சுரன் இறந்தோரே		15

#172 குறிஞ்சி - மதுரைப் பாலாசிரியர் நப்பாலனார்
வாரணம் உரறும் நீர் திகழ் சிலம்பில்
பிரசமொடு விரைஇய வயங்கு வெள் அருவி
இன் இசை இமிழ் இயம் கடுப்ப இம்மெனக்
கல் முகை விடரகம் சிலம்ப வீழும்
காம்பு தலைமணந்த ஓங்கு மலைச் சாரல்		5
இரும்பு வடித்து அன்ன கரும் கைக் கானவன்
விரி மலர் மராஅம் பொருந்திக் கோல் தெரிந்து
வரி நுதல் யானை அரு நிறத்து அழுத்தி
இகல் அடு முன்பின் வெண் கோடு கொண்டு தன்
புல் வேய் குரம்பை புலர ஊன்றி		10
முன்றில் நீடிய முழவு உறழ் பலவில்
பிழி மகிழ் உவகையன் கிளையொடு கலி சிறந்து
சாந்த ஞெகிழியின் ஊன் புழுக்கு அயரும்
குன்ற நாட நீ அன்பு இலை ஆகுதல்
அறியேன் யான் அஃது அறிந்தனென் ஆயின்		15
அணி இழை உண்கண் ஆய் இதழ்க் குறுமகள்
மணி ஏர் மாண் நலம் சிதைய
பொன் நேர் பசலை பாவின்று-மன்னே

#173 பாலை - முள்ளியூர்ப் பூதியார்
அறம் தலைப்பிரியாது ஒழுகலும் சிறந்த
கேளிர் கேடு பல ஊன்றலும் நாளும்
வருந்தா உள்ளமொடு இருந்தோர்க்கு இல் எனச்
செய்வினை புரிந்த நெஞ்சினர் நறு_நுதல்
மை_ஈர்_ஓதி அரும் படர் உழத்தல்		5
சில நாள் தாங்கல் வேண்டும் என்று நின்
நல் மாண் எல் வளை திருத்தினர் ஆயின்
வருவர் வாழி தோழி பல புரி
வார் கயிற்று ஒழுகை நோன் சுவல் கொளீஇ
பகடு துறை ஏற்றத்து உமண் விளி வெரீஇ		10
உழைமான் அம் பிணை இனன் இரிந்து ஓட
காடு கவின் அழிய உரைஇக் கோடை
நின்று தின விளிந்த அம் பணை நெடு வேய்க்
கண் விடத் தெறிக்கும் மண்ணா முத்தம்
கழங்கு உறழ் தோன்றல பழம் குழித் தாஅம்		15
இன் களி நறவின் இயல் தேர் நன்னன்
விண் பொரு நெடு வரைக் கவாஅன்
பொன் படு மருங்கின் மலை இறந்தோரே

#174 முல்லை - மதுரை அளக்கர் ஞாழார் மகனார் மள்ளனார்
இரு பெரு வேந்தர் மாறுகொள் வியன் களத்து
ஒரு படை கொண்டு வரு படை பெயர்க்கும்
செல்வம் உடையோர்க்கு நின்றன்று விறல் எனப்
பூக் கோள் ஏய தண்ணுமை விலக்கிச்
செல்வேம் ஆதல் அறியாள் முல்லை		5
நேர் கால் முது கொடி குழைப்ப நீர் சொரிந்து
காலை வானத்துக் கடும் குரல் கொண்மூ
முழங்கு-தொறும் கையற்று ஒடுங்கி நம் புலந்து
பழங்கண் கொண்ட பசலை மேனியள்
யாங்கு ஆகுவள்-கொல் தானே வேங்கை		10
ஊழுறு நறு வீ கடுப்பக் கேழ் கொள
ஆகத்து அரும்பிய மாசறு சுணங்கினள்
நல் மணல் வியல் இடை நடந்த
சில் மெல் ஒதுக்கின் மாஅயோளே

#175 பாலை - ஆலம்பேரி சாத்தனார்
வீங்கு விளிம்பு உரீஇய விசை அமை நோன் சிலை
வாங்கு தொடை பிழையா வன்கண் ஆடவர்
விடு-தொறும் விளிக்கும் வெவ் வாய் வாளி
ஆறு செல் வம்பலர் உயிர் செலப் பெயர்ப்பின்
பாறு கிளை பயிர்ந்து படு முடை கவரும்		5
வெம் சுரம் இறந்த காதலர் நெஞ்சு உணர
அரிய வஞ்சினம் சொல்லியும் பல் மாண்
தெரி வளை முன்கை பற்றியும் வினை முடித்து
வருதும் என்றனர் அன்றே தோழி
கால் இயல் நெடும் தேர்க் கைவண் செழியன்		10
ஆலங்கானத்து அமர் கடந்து உயர்த்த
வேலினும் பல் ஊழ் மின்னி முரசு என
மா இரு விசும்பில் கடி இடி பயிற்றி
நேர் கதிர் நிரைத்த நேமி அம் செல்வன்
போர் அடங்கு அகலம் பொருந்திய தார் போல்		15
திருவில் தேஎத்துக் குலைஇ உரு கெழு
மண் பயம் பூப்பப் பாஅய்த்
தண் பெயல் எழிலி தாழ்ந்த போழ்தே

#176 மருதம் - மருதம் பாடிய இளங்கடுங்கோ
கடல் கண்டு அன்ன கண் அகன் பரப்பின்
நிலம் பக வீழ்ந்த வேர் முதிர் கிழங்கின்
கழை கண்டு அன்ன தூம்பு உடைத் திரள் கால்
களிற்றுச் செவி அன்ன பாசடை மருங்கில்		5
கழு நிவந்து அன்ன கொழு முகை இடையிடை
முறுவல் முகத்தின் பல் மலர் தயங்கப்
பூத்த தாமரைப் புள் இமிழ் பழனத்து
வேப்பு நனை அன்ன நெடும் கண் நீர் ஞெண்டு
இரை தேர் வெண் குருகு அஞ்சி அயலது		10
ஒலித்த பகன்றை இரும் சேற்று அள்ளல்
திதலையின் வரிப்ப ஓடி விரைந்து தன்
நீர் மலி மண் அளைச் செறியும் ஊர
மனை நகு வயலை மரன் இவர் கொழும் கொடி
அரி மலர் ஆம்பலொடு ஆர் தழை தைஇ		15
விழவு ஆடு மகளிரொடு தழூஉ அணிப் பொலிந்து
மலர் ஏர் உண்கண் மாண் இழை முன்கைக்
குறும் தொடி துடக்கிய நெடும் தொடர் விடுத்தது
உடன்றனள் போலும் நின் காதலி எம் போல்
புல் உளைக் குடுமிப் புதல்வன் பயந்து		20
நெல் உடை நெடு நகர் நின் இன்று உறைய
என்ன கடத்தளோ மற்றே தன் முகத்து
எழுது எழில் சிதைய அழுதனள் ஏங்கி
அடித்து என உருத்த தித்திப் பல் ஊழ்
நொடித்து எனச் சிவந்த மெல் விரல் திருகுபு		25
கூர் நுனை மழுகிய எயிற்றள்
ஊர் முழுதும் நுவலும் நின் காணிய சென்மே

#177 பாலை - செயலூர் இளம் பொன்சாத்தன் கொற்றனார்
தொல் நலம் சிதையச் சாஅய் அல்கலும்
இன்னும் வாரார் இனி எவன் செய்கு எனப்
பெரும் புலம்பு உறுதல் ஓம்பு-மதி சிறு கண்
இரும் பிடித் தடக் கை மான நெய் அருந்து
ஒருங்கு பிணித்து இயன்ற நெறி கொள் ஐம்பால்		5
தேம் கமழ் வெறி மலர் பெய்ம்மார் காண்பு இன்
கழை அமல் சிலம்பின் வழை தலை வாடக்
கதிர் கதம் கற்ற ஏ கல் நெறியிடைப்
பைம் கொடிப் பாகல் செம் கனி நசைஇக்
கான மஞ்ஞை கமம் சூல் மாப் பெடை		10
அயிர் யாற்று அடைகரை வயிரின் நரலும்
காடு இறந்து அகன்றோர் நீடினர் ஆயினும்
வல்லே வருவர் போலும் வென் வேல்
இலை நிறம் பெயர ஓச்சி மாற்றோர்
மலை மருள் யானை மண்டு அமர் ஒழித்த		15
கழல் கால் பண்ணன் காவிரி வட வயின்
நிழல் கயம் தழீஇய நெடும் கால் மாவின்
தளிர் ஏர் ஆகம் தகை பெற முகைந்த
அணங்கு உடை வன முலைத் தாஅய நின்
சுணங்கிடை வரித்த தொய்யிலை நினைந்தே		20

#178 குறிஞ்சி - பரணர்
வயிரத்து அன்ன வை ஏந்து மருப்பின்
வெதிர் வேர் அன்ன பரூஉ மயிர்ப் பன்றி
பறைக் கண் அன்ன நிறைச் சுனை பருகி
நீலத்து அன்ன அகல் இலைச் சேம்பின்
பிண்டம் அன்ன கொழும் கிழங்கு மாந்தி		5
பிடி மடிந்து அன்ன கல் மிசை ஊழ் இழிபு
யாறு சேர்ந்து அன்ன ஊறு நீர்ப் படாஅர்ப்
பைம் புதல் நளி சினைக் குருகு இருந்து அன்ன
வண் பிணி அவிழ்ந்த வெண் கூதாளத்து
அலங்கு குலை அலரி தீண்டித் தாது உகப்		10
பொன் உரை கட்டளை கடுப்பக் காண்வரக்
கிளை அமல் சிறுதினை விளை குரல் மேய்ந்து
கண் இனிது படுக்கும் நல் மலை நாடனொடு
உணர்ந்தனை புணர்ந்த நீயும் நின் தோள்
பணைக் கவின் அழியாது துணைப் புணர்ந்து என்றும்	15
தவல் இல் உலகத்து உறைஇயரோ தோழி
எல்லையும் இரவும் என்னாது கல்லெனக்
கொண்டல் வான் மழை பொழிந்த வைகறை
தண் பனி அற்சிரம் தமியோர்க்கு அரிது எனக்
கனவினும் பிரிவு அறியலனே அதன்தலை		20
முன் தான் கண்ட ஞான்றினும்
பின் பெரிது அளிக்கும் தன் பண்பினானே

#179 பாலை - கொடிமங்கலத்து வாதுளி நற்சேந்தனார்
விண் தோய் சிமைய விறல் வரைக் கவாஅன்
வெண் தேர் ஓடும் கடம் காய் மருங்கில்
துனை எரி பரந்த துன் அரும் வியன் காட்டுச்
சிறு கண் யானை நெடும் கை நீட்டி
வான் வாய் திறந்தும் வண் புனல் பெறாஅது		5
கான் புலந்து கழியும் கண் அகன் பரப்பின்
விடு வாய் செம் கணைக் கொடு வில் ஆடவர்
நல் நிலை பொறித்த கல் நிலை அதர
அரம்பு கொள் பூசல் களையுநர்க் காணாச்
சுரம் செல விரும்பினிர் ஆயின் இன் நகை		10
முருந்து எனத் திரண்ட முள் எயிற்றுத் துவர் வாய்க்
குவளை நாள்_மலர் புரையும் உண்கண் இ
மதி ஏர் வாள் நுதல் புலம்ப
பதி பெயர்ந்து உறைதல் ஒல்லுமோ நுமக்கே

#180 நெய்தல் - கருவூர் கண்ணம்பாளனார்
நகை நனி உடைத்தால் தோழி தகை மிக
கோதை ஆயமொடு குவவு மணல் ஏறி
வீ ததை கானல் வண்டல் அயர
கதழ் பரித் திண் தேர் கடைஇ வந்து
தண் கயத்து அமன்ற ஒண் பூம் குவளை		5
அரும்பு அலைத்து இயற்றிய சுரும்பு ஆர் கண்ணி
பின்னுப் புறம் தாழக் கொன்னே சூட்டி
நல் வரல் இள முலை நோக்கி நெடிது நினைந்து
நில்லாது பெயர்ந்தனன் ஒருவன் அதற்கே
புலவு நாறு இரும் கழி துழைஇப் பல உடன்	10
புள் இறை கொண்ட முள் உடை நெடும் தோட்டுத்
தாழை மணந்து ஞாழலொடு கெழீஇப்
படப்பை நின்ற முடத் தாள் புன்னைப்
பொன் நேர் நுண் தாது நோக்கி
என்னும் நோக்கும் இவ் அழுங்கல் ஊரே		15

#181 பாலை - பரணர்
துன் அரும் கானமும் துணிதல் ஆற்றாய்
பின் நின்று பெயரச் சூழ்ந்தனை ஆயின்
என் நிலை உரைமோ நெஞ்சே ஒன்னார்
ஓம்பு அரண் கடந்த வீங்கு பெரும் தானை
அடு போர் மிஞிலி செரு வேல் கடைஇ		5
முருகு உறழ் முன்பொடு பொருது களம் சிவப்ப
ஆஅய் எயினன் வீழ்ந்து என ஞாயிற்று
ஒண் கதிர் உருப்பம் புதைய ஓராங்கு
வம்பப் புள்ளின் கம்பலைப் பெரும் தோடு
விசும்பிடை தூர ஆடி மொசிந்து உடன்		10
பூ விரி அகன் துறை கணை விசைக் கடு நீர்க்
காவிரிப் பேரியாற்று அயிர் கொண்டு ஈண்டி
எக்கர் இட்ட குப்பை வெண் மணல்
வைப்பின் யாணர் வளம் கெழு வேந்தர்
ஞாலம் நாறும் நலம் கெழு நல் இசை		15
நான்மறை முது நூல் முக்கண் செல்வன்
ஆலமுற்றம் கவின் பெறத் தைஇய
பொய்கை சூழ்ந்த பொழில் மனை மகளிர்
கை செய் பாவைத் துறைக்-கண் இறுக்கும்
மகர நெற்றி வான் தோய் புரிசைச்		20
சிகரம் தோன்றா சேண் உயர் நல் இல்
புகாஅர் நல் நாட்டதுவே பகாஅர்
பண்டம் நாறும் வண்டு அடர் ஐம்பால்
பணைத் தகைத் தடைஇய காண்பு இன் மென் தோள்
அணங்கு சால் அரிவை இருந்த		25
மணம் கமழ் மறுகின் மணல் பெரும் குன்றே

#182 குறிஞ்சி - கபிலர்
பூம் கண் வேங்கைப் பொன் இணர் மிலைந்து
வாங்கு அமை நோன் சிலை எருத்தத்து இரீஇத்
தீம் பழப் பலவின் சுளை விளை தேறல்
வீளை அம்பின் இளையரொடு மாந்தி
ஓட்டு இயல் பிழையா வய நாய் பிற்பட		5
வேட்டம் போகிய குறவன் காட்ட
குளவித் தண் புதல் குருதியொடு துயல்வர
முளவு_மாத் தொலைச்சும் குன்ற நாட
அரவு எறி உருமோடு ஒன்றிக் கால் வீழ்த்து
உரவு மழை பொழிந்த பானாள் கங்குல்		10
தனியை வந்த ஆறு நினைந்து அல்கலும்
பனியொடு கலுழும் இவள் கண்ணே அதனால்
கடும் பகல் வருதல் வேண்டும் தெய்ய
அதிர் குரல் முது கலை கறி முறி முனைஇ
உயர் சிமை நெடும் கோட்டு உகள உக்க		15
கமழ் இதழ் அலரி தாஅய் வேலன்
வெறி அயர் வியன் களம் கடுக்கும்
பெரு வரை நண்ணிய சாரலானே

#183 பாலை - கருவூர்க் கலிங்கத்தார்
குவளை உண்கண் கலுழவும் திருந்து_இழை
திதலை அல்குல் அவ் வரி வாடவும்
அத்தம் ஆர் அழுவம் நம் துறந்து அருளார்
சென்று சேண் இடையர் ஆயினும் நன்றும்
நீடலர் என்றி தோழி பாடு ஆன்று		5
பனித் துறைப் பெரும் கடல் இறந்து நீர் பருகிக்
குவவுத் திரை அருந்து கொள்ளைய குடக்கு ஏர்பு
வயவுப் பிடி இனத்தின் வயின்வயின் தோன்றி
இரும் கிளைக் கொண்மூ ஒருங்குடன் துவன்றி
காலை வந்தன்றால் காரே மாலைக்		10
குளிர் கொள் பிடவின் கூர் முகை அலரி
வண்டு வாய் திறக்கும் தண்டா நாற்றம்
கூதிர் அற்சிரத்து ஊதை தூற்ற
பனி அலைக் கலங்கிய நெஞ்சமொடு
வருந்துவம் அல்லமோ பிரிந்திசினோர் திறத்தே		15

#184 முல்லை - மதுரை மருதன் இளநாகனார்
கடவுள் கற்பொடு குடிக்கு விளக்கு ஆகிய
புதல்வன் பயந்த புகழ் மிகு சிறப்பின்
நன்னராட்டிக்கு அன்றியும் எனக்கும்
இனிது ஆகின்றால் சிறக்க நின் ஆயுள்
அரும் தொழில் முடித்த செம்மல் உள்ளமொடு		5
சுரும்பு இமிர் மலர கானம் பிற்பட
வெண் பிடவு அவிழ்ந்த வீ கமழ் புறவில்
குண்டைக் கோட்ட குறு முள் கள்ளிப்
புன் தலை புதைத்த கொழும் கொடி முல்லை
ஆர் கழல் புதுப் பூ உயிர்ப்பின் நீக்கித்		10
தெள் அறல் பருகிய திரி மருப்பு எழில் கலை
புள்ளி அம் பிணையொடு வதியும் ஆங்கண்
கோடு உடைக் கையர் துளர் எறி வினைஞர்
அரியல் ஆர்கையர் விளை மகிழ் தூங்கச்
செல் கதிர் மழுகிய உருவ ஞாயிற்றுச்		15
செக்கர் வானம் சென்ற பொழுதில்
கல் பால் அருவியின் ஒலிக்கும் நல் தேர்த்
தார் மணி பல உடன் இயம்பச்
சீர் மிகு குருசில் நீ வந்து நின்றதுவே

#185 பாலை - பாலை பாடிய பெருங்கடுங்கோ
எல் வளை ஞெகிழச் சாஅய் ஆய்_இழை
நல் எழில் பணைத் தோள் இரும் கவின் அழியப்
பெரும் கையற்ற நெஞ்சமொடு நம் துறந்து
இரும்பின் இன் உயிர் உடையோர் போல
வலித்து வல்லினர் காதலர் வாடல்		5
ஒலி கழை நிவந்த நெல் உடை நெடு வெதிர்
கலி கொள் மள்ளர் வில் விசையின் உடைய
பைது அற வெம்பிய கல் பொரு பரப்பின்
வேனில் அத்தத்து ஆங்கண் வான் உலந்து
அருவி ஆன்ற உயர் சிமை மருங்கில்		10
பெரு விழா விளக்கம் போலப் பல உடன்
இலை இல மலர்ந்த இலவமொடு
நிலை உயர் பிறங்கல் மலை இறந்தோரே

#186 மருதம் - பரணர்
வானம் வேண்டா வறன் இல் வாழ்க்கை
நோன் ஞாண் வினைஞர் கோள் அறிந்து ஈர்க்கும்
மீன் முதிர் இலஞ்சிக் கலித்த தாமரை
நீர் மிசை நிவந்த நெடும் தாள் அகல் இலை
இரும் கயம் துளங்கக் கால் உறு-தொறும்		5
பெரும் களிற்றுச் செவியின் அலைக்கும் ஊரனொடு
எழுந்த கௌவையோ பெரிதே நட்பே
கொழும் கோல் வேழத்துப் புணை துணை ஆகப்
புனல் ஆடு கேண்மை அனைத்தே அவனே
ஒண் தொடி மகளிர் பண்டை யாழ் பாட		10
ஈர்ம் தண் முழவின் எறி குணில் விதிர்ப்ப
தண் நறும் சாந்தம் கமழும் தோள் மணந்து
இன்னும் பிறள்-வயினானே மனையோள்
எம்மொடு புலக்கும் என்ப வென் வேல்
மாரி அம்பின் மழைத் தோல் பழையன்		15
காவிரி வைப்பின் போஒர் அன்ன என்
செறி வளை உடைத்தலோ இலனே உரிதினின்
யாம் தன் பகையேம் அல்லேம் சேர்ந்தோர்
திரு நுதல் பசப்ப நீங்கும்
கொழுநனும் சாலும் தன் உடன் உறை பகையே		20

#187 பாலை - மாமூலனார்
தோள் புலம்பு அகலத் துஞ்சி நம்மொடு
நாள் பல நீடிய கரந்து உறை புணர்ச்சி
நாண் உடைமையின் நீங்கிச் சேய் நாட்டு
அரும் பொருள் வலித்த நெஞ்சமொடு ஏகி
நம் உயர்வு உள்ளினர் காதலர் கறுத்தோர்		5
தெம் முனை சிதைத்த கடும் பரிப் புரவி
வார் கழல் பொலிந்த வன்கண் மழவர்
பூம் தொடை விழவின் தலை_நாள் அன்ன
தரு மணல் ஞெமிரிய திரு நகர் முற்றம்
புலம்புறும்-கொல்லோ தோழி சேண் ஓங்கு		10
அலந்தலை ஞெமையத்து ஆள் இல் ஆங்கண்
கல் சேர்பு இருந்த சில்குடிப் பாக்கத்து
எல் விருந்து அயர ஏமத்து அல்கி
மனை உறை கோழி அணல் தாழ்பு அன்ன
கவை ஒண் தளிர கரும் கால் யாஅத்து		15
வேனில் வெற்பின் கானம் காய
முனை எழுந்து ஓடிய கெடு நாட்டு ஆர் இடை
பனை வெளிறு அருந்து பைம் கண் யானை
ஒண் சுடர் முதிரா இளம் கதிர் அமையத்து
கண்படு பாயல் கை ஒடுங்கு அசை நிலை		20
வாள் வாய்ச் சுறவின் பனித் துறை நீந்தி
நாள் வேட்டு எழுந்த நயன் இல் பரதவர்
வைகு கடல் அம்பியின் தோன்றும்
மை படு மா மலை விலங்கிய சுரனே

#188 குறிஞ்சி - வீரை வெளியன் தித்தனார்
பெரும் கடல் முகந்த இரும் கிளைக் கொண்மூ
இருண்டு உயர் விசும்பின் வலன் ஏர்பு வளைஇப்
போர்ப்புறு முரசின் இரங்கி முறை புரிந்து
அறன் நெறி பிழையாத் திறன் அறி மன்னர்
அரும் சமத்து எதிர்ந்த பெரும் செய் ஆடவர்		5
கழித்து எறி வாளின் நளிப்பன விளங்கும்
மின் உடைக் கருவியை ஆகி நாளும்
கொன்னே செய்தியோ அரவம் பொன் என
மலர்ந்த வேங்கை மலி தொடர் அடைச்சிப்
பொலிந்த ஆயமொடு காண்தக இயலித்		10
தழலை வாங்கியும் தட்டை ஓப்பியும்
அழல் ஏர் செயலை அம் தழை அசைஇயும்
குற_மகள் காக்கும் ஏனல்
புறமும் தருதியோ வாழிய மழையே

#189 பாலை - கயமனார்
பசும் பழப் பலவின் கானம் வெம்பி
விசும்பு கண் அழிய வேனில் நீடிக்
கயம் கண் அற்ற கல் ஓங்கு வைப்பின்
நாறு உயிர் மடப் பிடி தழைஇ வேறு நாட்டு
விழவுப் படர் மள்ளரின் முழவு எடுத்து உயரிக்		5
களிறு அதர்ப்படுத்த கல் உயர் கவாஅன்
வெவ் வரை அத்தம் சுட்டிப் பையென
வயலை அம் பிணையல் வார்ந்த கவாஅன்
திதலை அல்குல் குறுமகள் அவனொடு
சென்று பிறள் ஆகிய அளவை என்றும்		10
படர் மலி எவ்வமொடு மாதிரம் துழைஇ
மனை மருண்டு இருந்த என்னினும் நனை மகிழ்
நன்னராளர் கூடு கொள் இன்னியம்
தேர் ஊர் தெருவில் ததும்பும்
ஊர் இழந்தன்று தன் வீழ்வு உறு பொருளே		15

#190 நெய்தல் - உலோச்சனார்
திரை உழந்து அசைஇய நிரை வளை ஆயமொடு
உப்பின் குப்பை ஏறி எல் பட
வரு திமில் எண்ணும் துறைவனொடு ஊரே
ஒரு தன் கொடுமையின் அலர் பாடும்மே
அலமரல் மழைக் கண் அமர்ந்து நோக்காள்		5
அலையல் வாழி வேண்டு அன்னை உயர் சிமைப்
பொதும்பில் புன்னைச் சினை சேர்பு இருந்த
வம்ப நாரை இரிய ஒரு நாள்
பொங்கு வரல் ஊதையொடு புணரி அலைப்பவும்
உழை கடல் வழங்கலும் உரியன் அதன்தலை		10
இரும் கழிப் புகாஅர் பொருந்தத் தாக்கி
வயச் சுறா எறிந்து என வலவன் அழிப்ப
எழில் பயம் குன்றிய சிறை அழி தொழில
நிரை மணிப் புரவி விரை நடை தவிர
இழுமென் கானல் விழு மணல் அசைஇ		15
ஆய்ந்த பரியன் வந்து இவண்
மான்ற மாலைச் சேர்ந்தன்றோ இலனே

#191 பாலை ஒரோடோகத்துக் கந்தரத்தனார்
அத்தப் பாதிரித் துய்த் தலைப் புது வீ
எரி இதழ் அலரியொடு இடைப்பட விரைஇ
வண் தோட்டுத் தொடுத்த வண்டு படு கண்ணித்
தோல் புதை சிரற்று அடிக் கோல் உடை உமணர்
ஊர் கண்டு அன்ன ஆரம் வாங்கி		5
அரும் சுரம் இவர்ந்த அசைவு இல் நோன் தாள்
திருந்து பகட்டு இயம்பும் கொடு மணி புரிந்து அவர்
மடி விடு வீளையொடு கடிது எதிர் ஓடி
ஓமை அம் பெரும் காட்டு வரூஉம் வம்பலர்க்கு
ஏமம் செப்பும் என்றூழ் நீள் இடை		10
அரும் பொருள் நசைஇப் பிரிந்து உறை வல்லி
சென்று வினை எண்ணுதி ஆயின் நன்றும்
உரைத்திசின் வாழி என் நெஞ்சே நிரை முகை
முல்லை அருந்தும் மெல்லிய ஆகி
அறல் என விரிந்த உறல் இன் சாயல்		15
ஒலி இரும் கூந்தல் தேறும் என
வலிய கூறவும் வல்லையோ மற்றே

#192 குறிஞ்சி - பொதும்பில் கிழான் வெண்கண்ணனார்
மதி இருப்பு அன்ன மாசறு சுடர் நுதல்
பொன் நேர் வண்ணம் கொண்டன்று அன்னோ
யாங்கு ஆகுவள்-கொல் தானே விசும்பின்
எய்யா வரி வில் அன்ன பைம் தார்ச்
செவ் வாய்ச் சிறு கிளி சிதைய வாங்கிப்		5
பொறை மெலிந்திட்ட புன் புறப் பெரும் குரல்
வளை சிறை வாரணம் கிளையொடு கவர
ஏனலும் இறங்கு பொறை உயிர்த்தன பானாள்
நீ வந்து அளிக்குவை எனினே மால் வரை
மை படு விடரகம் துழைஇ ஒய்யென		10
அருவி தந்த அரவு உமிழ் திரு மணி
பெரு வரைச் சிறுகுடி மறுகு விளக்குறுத்தலின்
இரவும் இழந்தனள் அளியள் உரவுப் பெயல்
உரும் இறை கொண்ட உயர் சிமைப்
பெரு மலை நாட நின் மலர்ந்த மார்பே		15

#193 பாலை - மதுரை மருதன் இளநாகனார்
கான் உயர் மருங்கில் கவலை அல்லது
வானம் வேண்டா வில் ஏர் உழவர்
பெரு நாள் வேட்டம் கிளை எழ வாய்த்த
பொருகளத்து ஒழிந்த குருதிச் செவ் வாய்ப்
பொறித்த போலும் வால் நிற எருத்தின்		5
அணிந்த போலும் செம் செவி எருவை
குறும் பொறை எழுந்த நெடும் தாள் யாஅத்து
அரும் கவட்டு உயர் சினைப் பிள்ளை ஊட்ட
விரைந்து வாய் வழுக்கிய கொழும் கண் ஊன் தடி
கொல் பசி முது நரி வல்சி ஆகும்		10
சுரன் நமக்கு எளிய-மன்னே நல் மனைப்
பல் மாண் தங்கிய சாயல் இன் மொழி
முருந்து ஏர் முறுவல் இளையோள்
பெரும் தோள் இன் துயில் கைவிடுகலனே

#194 முல்லை - இடைக்காடனார்
பேர் உறை தலைஇய பெரும் புலர் வைகறை
ஏர் இடம்படுத்த இரு மறுப் பூழிப்
புறம் மாறுபெற்ற பூவல் ஈரத்து
ஊன் கிழித்து அன்ன செம் சுவல் நெடும் சால்
வித்திய மருங்கின் விதை பல நாறி		5
இரலை நல் மான் இனம் பரந்தவை போல்
கோடு உடைத் தலைக்குடை சூடிய வினைஞர்
கறங்கு பறைச் சீரின் இரங்க வாங்கிக்
களை கால் கழீஇய பெரும் புன வரகின்
கவைக் கதிர் இரும் புறம் கதூஉ உண்ட		10
குடுமி நெற்றி நெடு மாத் தோகை
காமர் கலவம் பரப்பி ஏமுற
கொல்லை உழவர் கூழ் நிழல் ஒழித்த
வல் இலைக் குருந்தின் வாங்கு சினை இருந்து
கிளி கடி மகளிரின் விளி படப் பயிரும்		15
கார்-மன் இதுவால் தோழி போர் மிகக்
கொடுஞ்சி நெடும் தேர் பூண்ட கடும் பரி
விரி உளை நல் மான் கடைஇ
வருதும் என்று அவர் தெளித்த போழ்தே

#195 பாலை - கயமனார்
அரும் சுரம் இறந்த என் பெரும் தோள் குறுமகள்
திருந்து வேல் விடலையொடு வரும் எனத் தாயே
புனை மாண் இஞ்சி பூவல் ஊட்டி
மனை மணல் அடுத்து மாலை நாற்றி
உவந்து இனிது அயரும் என்ப யானும்		5
மான் பிணை நோக்கின் மட நல்லாளை
ஈன்ற நட்பிற்கு அருளான் ஆயினும்
இன் நகை முறுவல் ஏழையைப் பல் நாள்
கூந்தல் வாரி நுசுப்பு இவர்ந்து ஓம்பிய
நலம் புனை உதவியும் உடையன்-மன்னே		10
அஃது அறிகிற்பினோ நன்று-மன்-தில்ல
அறுவை தோயும் ஒரு பெரும் குடுமி
சிறு பை நாற்றிய பல் தலைக் கொடும் கோல்
ஆகுவது அறியும் முது வாய் வேல
கூறுக மாதோ நின் கழங்கின் திட்பம்		15
மாறா வரு பனி கலுழும் கங்குலில்
ஆனாது துயரும் எம் கண் இனிது படீஇயர்
எம் மனை முந்துறத் தருமோ
தன் மனை உய்க்குமோ யாது அவன் குறிப்பே

#196 மருதம் - பரணர்
நெடும் கொடி நுடங்கும் நறவு மலி பாக்கத்து
நாள் துறைப்பட்ட மோட்டு இரு வராஅல்
துடிக் கண் கொழும் குறை நொடுத்து உண்டு ஆடி
வேட்டம் மறந்து துஞ்சும் கொழுநர்க்குப் பாட்டி
ஆம்பல் அகல் இலை அமலை வெம் சோறு		5
தீம் புளிப் பிரம்பின் திரள் கனி பெய்து
விடியல் வைகறை இடூஉம் ஊர
தொடுகலம் குறுக வாரல் தந்தை
கண் கவின் அழித்ததன் தப்பல் தெறுவர
ஒன்றுமொழிக் கோசர் கொன்று முரண் போகிய		10
கடும் தேர்த் திதியன் அழுந்தைக் கொடும் குழை
அன்னிமிஞிலியின் இயலும்
நின் நலத் தகுவியை முயங்கிய மார்பே

#197 பாலை - மாமூலனார்
மா மலர் வண்ணம் இழந்த கண்ணும்
பூ நெகிழ் அணையின் சாஅய தோளும்
நன்னர் மாக்கள் விழைவனர் ஆய்ந்த
தொல் நலம் இழந்த துயரமொடு என்னதூஉம்
இனையல் வாழி தோழி முனை எழ		5
முன்னுவர் ஓட்டிய முரண் மிகு திருவின்
மறம் மிகு தானைக் கண்ணன் எழினி
தேம் முது குன்றம் இறந்தனர் ஆயினும்
நீடலர் யாழ நின் நிரை வளை நெகிழத்
தோள் தாழ்பு இருளிய குவை இரும் கூந்தல்		10
மடவோள் தழீஇய விறலோன் மார்பில்
புன் தலைப் புதல்வன் ஊர்பு இழிந்து ஆங்கு
கடும் சூல் மடப் பிடி தழீஇய வெண் கோட்டு
இனம் சால் வேழம் கன்று ஊர்பு இழிதரப்
பள்ளிகொள்ளும் பனிச் சுரம் நீந்தி		15
ஒள் இணர்க் கொன்றை ஓங்கு மலை அத்தம்
வினை வலியுறூஉம் நெஞ்சமொடு
இனையர் ஆகி நம் பிரிந்திசினோரே

#198 குறிஞ்சி - பரணர்
கூறுவம்-கொல்லோ கூறலம்-கொல் எனக்
கரந்த காமம் கைந்நிறுக்க அல்லாது
நயந்து நாம் விட்ட நல் மொழி நம்பி
அரைநாள் யாமத்து விழு மழை கரந்து
கார் விரை கமழும் கூந்தல் தூ வினை		5
நுண் நூல் ஆகம் பொருந்தினள் வெற்பின்
இள மழை சூழ்ந்த மட மயில் போல
வண்டு வழிப் படர தண் மலர் வேய்ந்து
வில் வகுப்புற்ற நல் வாங்கு குடைச் சூல்
அம் சிலம்பு ஒடுக்கி அஞ்சினள் வந்து		10
துஞ்சு ஊர் யாமத்து முயங்கினள் பெயர்வோள்
ஆன்ற கற்பின் சான்ற பெரியள்
அம் மா அரிவையோ அல்லள் தெனாஅது
ஆஅய் நல் நாட்டு அணங்கு உடைச் சிலம்பில்
கவிரம் பெயரிய உரு கெழு கவாஅன்	15
ஏர் மலர் நிறை சுனை உறையும்
சூர்_மகள் மாதோ என்னும் என் நெஞ்சே

#199 பாலை - கல்லாடனார்
கரை பாய் வெண் திரை கடுப்பப் பல உடன்
நிரை கால் ஒற்றலின் கல் சேர்பு உதிரும்
வரை சேர் மராஅத்து ஊழ் மலர் பெயல் செத்து
உயங்கல் யானை நீர் நசைக்கு அலமரச்
சிலம்பி வலந்த வறும் சினை வற்றல்		5
அலங்கல் உலவை அரி நிழல் அசைஇத்
திரங்கு மரல் கவ்விய கையறு தொகுநிலை
அரம் தின் ஊசித் திரள் நுதி அன்ன
திண் நிலை எயிற்ற செந்நாய் எடுத்தலின்
வளி முனைப் பூளையின் ஒய்யென்று அலறிய	10
கெடு மான் இன நிரை தரீஇய கலையே
கதிர் மாய் மாலை ஆண் குரல் விளிக்கும்
கடல் போல் கானம் பிற்படப் பிறர் போல்
செல்வேம் ஆயின் எம் செலவு நன்று என்னும்
ஆசை உள்ளம் அசைவு இன்று துரப்ப		15
நீ செலற்கு உரியை நெஞ்சே வேய் போல்
தடையின மன்னும் தண்ணிய திரண்ட
பெரும் தோள் அரிவை ஒழியக் குடாஅது
இரும் பொன் வாகைப் பெருந்துறைச் செருவில்
பொலம் பூண் நன்னன் பொருது களத்து ஒழிய	20
வலம் படு கொற்றம் தந்த வாய் வாள்
களங்காய்க் கண்ணி நார்முடிச்சேரல்
இழந்த நாடு தந்து அன்ன
வளம் பெரிது பெறினும் வாரலென் யானே

#200 நெய்தல் - உலோச்சனார்
நிலாவின் இலங்கு மணல் மலி மறுகில்
புலால் அம் சேரிப் புல் வேய் குரம்பை
ஊர் என உணராச் சிறுமையொடு நீர் உடுத்து
இன்னா உறையுட்டு ஆயினும் இன்பம்
ஒரு நாள் உறைந்திசினோர்க்கும் வழி_நாள்		5
தம் பதி மறக்கும் பண்பின் எம் பதி
வந்தனை சென்மோ வளை மேய் பரப்ப
பொம்மல் படு திரை கம்மென உடைதரும்
மரன் ஓங்கு ஒரு சிறை பல பாராட்டி
எல்லை எம்மொடு கழிப்பி எல் உற		10
நல் தேர் பூட்டலும் உரியீர் அற்றன்று
சேந்தனிர் செல்குவிர் ஆயின் யாமும்
எம் வரை அளவையின் பெட்குவம்
நும் ஒப்பதுவோ உரைத்திசின் எமக்கே

#201 பாலை - மாமூலனார்
அம்ம வாழி தோழி பொன்னின்
அவிர் எழில் நுடங்கும் அணி கிளர் ஓடை
வினை நவில் யானை விறல் போர்ப் பாண்டியன்
புகழ் மலி சிறப்பின் கொற்கை முன்துறை
அவிர் கதிர் முத்தமொடு வலம்புரி சொரிந்து		5
தழை அணிப் பொலிந்த கோடு ஏந்து அல்குல்
பழையர் மகளிர் பனித் துறைப் பரவ
பகலோன் மறைந்த அந்தி ஆர் இடை
உரு கெழு பெரும் கடல் உவவுக் கிளர்ந்து ஆங்கு
அலரும் மன்று பட்டன்றே அன்னையும்		10
பொருந்தாக் கண்ணள் வெய்ய உயிர்க்கும் என்று
எவன் கையற்றனை இகுளை சோழர்
வெண்ணெல் வைப்பின் நல் நாடு பெறினும்
ஆண்டு அமைந்து உறைநர் அல்லர் முனாஅது
வான் புகு தலைய குன்றத்துக் கவாஅன்		15
பெரும் கை எண்கின் பேழ் வாய் ஏற்றை
இருள் துணிந்து அன்ன குவவு மயிர்க் குருளைத்
தோல் முலைப் பிணவொடு திளைக்கும்
வேனில் நீடிய சுரன் இறந்தோரே

#202 குறிஞ்சி - ஆவூர்கிழார் மகனார் கண்ணனார்
வயங்கு வெள் அருவிய குன்றத்துக் கவாஅன்
கயம் தலை மடப் பிடி இனன் ஏமார்ப்பப்
புலிப் பகை வென்ற புண் கூர் யானை
கல்லகச் சிலம்பில் கை எடுத்து உயிர்ப்பின்
நல் இணர் வேங்கை நறு வீ கொல்லன்		5
குருகு ஊது மிதி உலைப் பிதிர்வின் பொங்கி
சிறு பல் மின்மினி போலப் பல உடன்
மணி நிற இரும் புதல் தாவும் நாட
யாமே அன்றியும் உளர்-கொல் பானாள்
உத்தி அரவின் பைத் தலை துமிய		10
உர உரும் உரறும் உட்குவரு நனம் தலை
தவிர்வு இல் உள்ளமொடு எஃகு துணை ஆகக்
கனை இருள் பரந்த கல் அதர்ச் சிறு நெறி
தேராது வரூஉம் நின்-வயின்
ஆர் அஞர் அரும் படர் நீந்துவோரே		15

#203 பாலை - கபிலர்
உவக்குநள் ஆயினும் உடலுநள் ஆயினும்
யாய் அறிந்து உணர்க என்னார் தீ வாய்
அலர் வினை மேவல் அம்பல் பெண்டிர்
இன்னள் இனையள் நின் மகள் எனப் பல் நாள்
எனக்கு வந்து உரைப்பவும் தனக்கு உரைப்பு அறியேன்	5
நாணுவள் இவள் என நனி கரந்து உறையும்
யான் இவ் வறு மனை ஒழியத் தானே
அன்னை அறியின் இவண் உறை வாழ்க்கை
எனக்கு எளிது ஆகல் இல் எனக் கழல் கால்
மின் ஒளிர் நெடு வேல் இளையோன் முன் உறப்		10
பல் மலை அரும் சுரம் போகிய தனக்கு யான்
அன்னேன் அன்மை நல் வாய் ஆக
மான் அதர் மயங்கிய மலை முதல் சிறு நெறி
வெய்து இடையுறாஅது எய்தி முன்னர்ப்
புல்லென் மா மலைப் புலம்பு கொள் சீறூர்		15
செல்_விருந்து ஆற்றித் துச்சில் இருத்த
நுனை குழைத்து அலமரும் நொச்சி
மனை கெழு பெண்டு யான் ஆகுக-மன்னே

#204 முல்லை - மதுரைக் காமக்கணி நப்பாலத்தனார்
உலகு உடன் நிழற்றிய தொலையா வெண்குடைக்
கடல் போல் தானைக் கலிமா வழுதி
வென்று அமர் உழந்த வியன் பெரும் பாசறை
சென்று வினை முடித்தனம் ஆயின் இன்றே
கார் பெயற்கு எதிரிய காண்தகு புறவில்		5
கணம்கொள் வண்டின் அம் சிறைத் தொழுதி
மணம் கமழ் முல்லை மாலை ஆர்ப்ப
உதுக் காண் வந்தன்று பொழுதே வல் விரைந்து
செல்க பாக நின் நல் வினை நெடும் தேர்
வெண்ணெல் அரிநர் மடி வாய்த் தண்ணுமை		10
பல் மலர்ப் பொய்கைப் படு புள் ஓப்பும்
காய் நெல் படப்பை வாணன் சிறுகுடித்
தண்டலை கமழும் கூந்தல்
ஒண் தொடி மடந்தை தோள் இணை பெறவே

#205 பாலை - நக்கீரர்
உயிர் கலந்து ஒன்றிய தொன்று படு நட்பின்
செயிர் தீர் நெஞ்சமொடு செறிந்தோர் போலத்
தையல் நின்-வயின் பிரியலம் யாம் எனப்
பொய் வல் உள்ளமொடு புரிவுணக் கூறித்
துணிவு இல் கொள்கையர் ஆகி இனியே		5
நோய் மலி வருத்தமொடு நுதல் பசப்பூர
நாம் அழத் துறந்தனர் ஆயினும் தாமே
வாய்மொழி நிலைஇய சேண் விளங்கு நல் இசை
வளம் கெழு கோசர் விளங்கு படை நூறி
நிலம் கொள வெஃகிய பொலம் பூண் கிள்ளி		10
பூ விரி நெடும் கழி நாப்பண் பெரும் பெயர்க்
காவிரிப் படப்பைப் பட்டினத்து அன்ன
செழு நகர் நல் விருந்து அயர்மார் ஏமுற
விழு நிதி எளிதினின் எய்துக-தில்ல
மழை கால் அற்சிரத்து மால் இருள் நீங்கி		15
நீடு அமை நிவந்த நிழல் படு சிலம்பில்
கடாஅ யானைக் கவுள் மருங்கு உறழ
ஆம் ஊர்பு இழிதரு காமர் சென்னிப்
புலி உரி வரி அதள் கடுப்பக் கலி சிறந்து
நாள்_பூ வேங்கை நறு மலர் உதிர		20
மேக்கு எழு பெரும் சினை ஏறிக் கணக் கலை
கூப்பிடூஉ உகளும் குன்றகச் சிறு நெறிக்
கல் பிறங்கு ஆர் இடை விலங்கிய
சொல் பெயர் தேஎத்த சுரன் இறந்தோரே

#206 மருதம் - மதுரை மருதன் இளநாகனார்
என் எனப்படும்-கொல் தோழி நல் மகிழ்ப்
பேடி பெண் கொண்டு ஆடுகை கடுப்ப
நகுவரப் பணைத்த திரி மருப்பு எருமை
மயிர்க் கவின் கொண்ட மாத் தோல் இரும் புறம்
சிறு தொழில் மகாஅர் ஏறிச் சேணோர்க்குத்		5
துறுகல் மந்தியின் தோன்றும் ஊரன்
மாரி ஈங்கை மாத் தளிர் அன்ன
அம் மா மேனி ஆய் இழை மகளிர்
ஆரம் தாங்கிய அலர் முலை ஆகத்து
ஆராக் காதலொடு தார் இடை குழைய		10
முழவு முகம் புலரா விழவு உடை வியல் நகர்
வதுவை மேவலன் ஆகலின் அது புலந்து
அடு போர் வேளிர் வீரை முன்துறை
நெடு வெள் உப்பின் நிரம்பாக் குப்பை
பெரும் பெயற்கு உருகி ஆங்குத்		15
திருந்து இழை நெகிழ்ந்தன தட மென் தோளே

#207 பாலை - மதுரை எழுத்தாளன் சேந்தம்பூதனார்
அணங்கு உடை முந்நீர் பரந்த செறுவின்
உணங்கு திறம் பெயர்ந்த வெண் கல் அமிழ்தம்
குடபுல மருங்கின் உய்மார் புள் ஓர்த்துப்
படை அமைத்து எழுந்த பெரும் செய் ஆடவர்
நிரைப் பரப் பொறைய நரைப் புறக் கழுதைக்		5
குறைக் குளம்பு உதைத்த கல் பிறழ் இயவின்
வெம் சுரம் போழ்ந்த அஞ்சுவரு கவலை
மிஞிறு ஆர் கடாஅம் கரந்து விடு கவுள
வெயில் தின வருந்திய நீடு மருப்பு ஒருத்தல்
பிணர் அழி பெரும் கை புரண்ட கூவல்		10
தெண் கண் உவரி குறைக் குட முகவை
அறனிலாளன் தோண்ட வெய்துயிர்த்துப்
பிறை நுதல் வியர்ப்ப உண்டனள்-கொல்லோ
தேம் கலந்து அளைஇய தீம் பால் ஏந்திக்
கூழை உளர்ந்து மோழைமை கூறவும்		15
மறுத்த சொல்லள் ஆகி
வெறுத்த உள்ளமொடு உண்ணாதோளே

#208 குறிஞ்சி - பரணர்
யாம இரவின் நெடும் கடை நின்று
தேம் முதிர் சிமையக் குன்றம் பாடும்
நுண் கோல் அகவுநர் வேண்டின் வெண் கோட்டு
அண்ணல் யானை ஈயும் வண் மகிழ்
வெளியன் வேண்மான் ஆஅய் எயினன்		5
அளி இயல் வாழ்க்கைப் பாழிப் பறந்தலை
இழை அணி யானை இயல் தேர் மிஞிலியொடு
நண்பகல் உற்ற செருவில் புண் கூர்ந்து
ஒள் வாள் மயங்கு அமர் வீழ்ந்து எனப் புள் ஒருங்கு
அம் கண் விசும்பின் விளங்கு ஞாயிற்று		10
ஒண் கதிர் தெறாமை சிறகரின் கோலி
நிழல் செய்து உழறல் காணேன் யான் எனப்
படுகளம் காண்டல் செல்லான் சினம் சிறந்து
உரு வினை நன்னன் அருளான் கரப்பப்
பெரு விதுப்புற்ற பல் வேள் மகளிர்		15
குரூஉப் பூம் பைம் தார் அருக்கிய பூசல்
வசை விடக் கடக்கும் வயங்கு பெரும் தானை
அகுதை கிளைதந்து ஆங்கு மிகு பெயல்
உப்புச் சிறை நில்லா வெள்ளம் போல
நாணு வரை நில்லாக் காமம் நண்ணி		20
நல்கினள் வாழியர் வந்தே ஓரி
பல் பழப் பலவின் பயம் கெழு கொல்லிக்
கார் மலர் கடுப்ப நாறும்
ஏர் நுண் ஓதி மாஅயோளே

#209 பாலை - கல்லாடனார்
தோளும் தொல் கவின் தொலைந்தன நாளும்
அன்னையும் அரும் துயர் உற்றனள் அலரே
பொன் அணி நெடும் தேர்த் தென்னர் கோமான்
எழு உறழ் திணி தோள் இயல் தேர்ச் செழியன்
நேரா எழுவர் அடிப்படக் கடந்த		5
ஆலங்கானத்து ஆர்ப்பினும் பெரிது என
ஆழல் வாழி தோழி அவரே
மாஅல் யானை மறப் போர்ப் புல்லி
காம்பு உடை நெடு வரை வேங்கடத்து உம்பர்
அறை இறந்து அகன்றனர் ஆயினும் நிறை இறந்து	10
உள்ளார் ஆதலோ அரிதே செவ் வேல்
முள்ளூர் மன்னன் கழல் தொடிக் காரி
செல்லா நல் இசை நிறுத்த வல் வில்
ஓரிக் கொன்று சேரலர்க்கு ஈத்த
செவ் வேர்ப் பலவின் பயம் கெழு கொல்லி		15
நிலை பெறு கடவுள் ஆக்கிய
பலர் புகழ் பாவை அன்ன நின் நலனே

#210 நெய்தல் - உலோச்சனார்
குறி இறைக் குரம்பைக் கொலை வெம் பரதவர்
எறியுளி பொருத ஏமுறு பெரு மீன்
புண் உமிழ் குருதி புலவுக் கடல் மறுப்பட
விசும்பு அணி வில்லின் போகிப் பசும் பிசிர்த்
திரை பயில் அழுவம் உழக்கி உரன் அழிந்து		5
நிரை திமில் மருங்கில் படர்தரும் துறைவன்
பானாள் இரவில் நம் பணைத் தோள் உள்ளி
தான் இவண் வந்த காலை நம் ஊர்க்
கானல் அம் பெரும் துறை கவின் பாராட்டி
ஆனாது புகழ்ந்திசினோனே இனித் தன்		10
சாயல் மார்பின் பாயல் மாற்றிக்
கைதை அம் படு சினைக் கடும் தேர் விலங்கச்
செலவு அரிது என்னும் என்பது
பல கேட்டனமால் தோழி நாமே

#211 பாலை - மாமூலனார்
கேளாய் எல்ல தோழி வாலிய
சுதை விரிந்து அன்ன பல் பூ மராஅம்
பறை கண்டு அன்ன பா அடி நோன் தாள்
திண் நிலை மருப்பின் வயக் களிறு உரிஞு-தொறும்
தண் மழை ஆலியின் தாஅய் உழவர்		5
வெண்ணெல் வித்தின் அறை மிசை உணங்கும்
பனி படு சோலை வேங்கடத்து உம்பர்
மொழிபெயர் தேஎத்தர் ஆயினும் நல்குவர்
குழி இடை கொண்ட கன்று உடைப் பெரு நிரை
பிடி படு பூசலின் எய்தாது ஒழியக்		10
கடும் சின வேந்தன் ஏவலின் எய்தி
நெடும் சேண் நாட்டில் தலைத்தார்ப் பட்ட
கல்லா எழினி பல் எறிந்து அழுத்திய
வன்கண் கதவின் வெண்மணி வாயில்
மத்தி நாட்டிய கல் கெழு பனித் துறை		15
நீர் ஒலித்த அன்ன பேஎர்
அலர் நமக்கு ஒழிய அழப் பிரிந்தோரே

#212 குறிஞ்சி - பரணர்
தா இல் நல் பொன் தைஇய பாவை
விண் தவழ் இளவெயில் கொண்டு நின்று அன்ன
மிகு கவின் எய்திய தொகு குரல் ஐம்பால்
கிளை அரில் நாணல் கிழங்கு மணற்கு ஈன்ற
முளை ஓர் அன்ன முள் எயிற்றுத் துவர் வாய்		5
நயவன் தைவரும் செவ்வழி நல் யாழ்
இசை ஓர்த்து அன்ன இன் தீம் கிளவி
அணங்கு சால் அரிவையை நசைஇப் பெரும் களிற்று
இனம் படி நீரின் கலங்கிய பொழுதில்
பெறல் அரும்-குரையள் என்னாய் வைகலும்		10
இன்னா அரும் சுரம் நீந்தி நீயே
என்னை இன்னல் படுத்தனை மின்னு வசிபு
உரவுக் கார் கடுப்ப மறலி மைந்துற்று
விரவு மொழிக் கட்டூர் வேண்டுவழிக் கொளீஇ
படை நிலா இலங்கும் கடல் மருள் தானை		15
மட்டு அவிழ் தெரியல் மறப் போர்க் குட்டுவன்
பொரு முரண் பெறாஅது விலங்கு சினம் சிறந்து
செருச் செய் முன்பொடு முந்நீர் முற்றி
ஓங்கு திரைப் பௌவம் நீங்க ஓட்டிய
நீர் மாண் எஃகம் நிறத்துச் சென்று அழுந்தக்		20
கூர் மதன் அழியரோ நெஞ்சே ஆனாது
எளியள் அல்லோள் கருதி
விளியா எவ்வம் தலைத் தந்தோயே

#213 பாலை - தாயங்கண்ணனார்
வினை நவில் யானை விறல் போர்த் தொண்டையர்
இன மழை தவழும் ஏற்று அரு நெடும் கோட்டு
ஓங்கு வெள் அருவி வேங்கடத்து உம்பர்க்
கொய் குழை அதிரல் வைகு புலர் அலரி
சுரி இரும் பித்தை சுரும்பு படச் சூடி		5
இகல் முனைத் தரீஇய ஏறு உடைப் பெரு நிரை
நனை முதிர் நறவின் நாள்_பலி கொடுக்கும்
வால் நிணப் புகவின் வடுகர் தேஎத்து
நிழல் கவின் இழந்த நீர் இல் நீள் இடை
அழல் அவிர் அரும் சுரம் நெடிய என்னாது		10
அகறல் ஆய்ந்தனர் ஆயினும் பகல் செலப்
பல் கதிர் வாங்கிய படு சுடர் அமையத்துப்
பெரு மரம் கொன்ற கால் புகு வியன் புனத்து
எரி மருள் கதிர திரு மணி இமைக்கும்
வெல் போர் வானவன் கொல்லிக் குடவரை		15
வேய் ஒழுக்கு அன்ன சாய் இறைப் பணைத் தோள்
பெரும் கவின் சிதைய நீங்கி ஆன்றோர்
அரும் பெறல் உலகம் அமிழ்தொடு பெறினும்
சென்று தாம் நீடலோ இலரே என்றும்
கலம் பெயக் கவிழ்ந்த கழல் தொடித் தடக் கை		20
வலம் படு வென்றி வாய் வாள் சோழர்
இலங்கு நீர்க் காவிரி இழி புனல் வரித்த
அறல் என நெறிந்த கூந்தல்
உறல் இன் சாயலொடு ஒன்றுதல் மறந்தே

#214 முல்லை - வடம வண்ணக்கன் பேரி சாத்தனார்
அகல் இரு விசும்பகம் புதையப் பாஅய்ப்
பகல் உடன் கரந்த பல் கதிர் வானம்
இரும் களிற்று இன நிரை குளிர்ப்ப வீசி
பெரும் பெயல் அழி துளி பொழிதல் ஆனாது
வேந்தனும் வெம் பகை முரணி ஏந்து இலை		5
விடு கதிர் நெடு வேல் இமைக்கும் பாசறை
அடு புகழ் மேவலொடு கண்படை இலனே
அமரும் நம்-வயினதுவே நமர் என
நம் அறிவு தெளிந்த பொம்மல் ஓதி
யாங்கு ஆகுவள்-கொல் தானே ஓங்கு விடைப்	10
படு சுவல் கொண்ட பகு வாய்த் தெள் மணி
ஆ பெயர் கோவலர் ஆம்பலொடு அளைஇப்
பையுள் நல் யாழ் செவ்வழி வகுப்ப
ஆர் உயிர் அணங்கும் தெள் இசை
மாரி மாலையும் தமியள் கேட்டே		15

#215 பாலை -இறங்குகுடிக் குன்ற நாடன்
விலங்கு இரும் சிமையக் குன்றத்து உம்பர்
வேறு பல் மொழிய தேஎம் முன்னி
வினை நசைஇப் பரிக்கும் உரன் மிகு நெஞ்சமொடு
புனை மாண் எஃகம் வல வயின் ஏந்தி
செலல் மாண்புற்ற நும்-வயின் வல்லே		5
வலன் ஆக என்றலும் நன்று-மன்-தில்ல
கடுத்தது பிழைக்குவது ஆயின் தொடுத்த
கை விரல் கவ்வும் கல்லாக் காட்சிக்
கொடு மரம் பிடித்த கோடா வன்கண்
வடி நவில் அம்பின் ஏவல் ஆடவர்		10
ஆள் அழித்து உயர்த்த அஞ்சுவரு பதுக்கைக்
கூர் நுதிச் செவ் வாய் எருவைச் சேவல்
படு பிணப் பைம் தலை தொடுவன குழீஇ
மல்லல் மொசி விரல் ஒற்றி மணி கொண்டு
வல் வாய்ப் பேடைக்குச் சொரியும் ஆங்கண்		15
கழிந்தோர்க்கு இரங்கும் நெஞ்சமொடு
ஒழிந்து இவண் உறைதல் ஆற்றுவோர்க்கே

#216 மருதம் - ஐயூர் முடவனார்
நாண் கொள் நுண் கோலின் மீன் கொள் பாண்_மகள்
தான் புனல் அடைகரைப் படுத்த வராஅல்
நார் அரி நறவு உண்டு இருந்த தந்தைக்கு
வஞ்சி விறகின் சுட்டு வாய் உறுக்கும்
தண் துறை ஊரன் பெண்டிர் எம்மைப்		5
பெட்டாங்கு மொழிப என்ப அவ் அலர்
பட்டனம் ஆயின் இனி எவன் ஆகியர்
கடல் ஆடு மகளிர் கொய்த ஞாழலும்
கழனி உழவர் குற்ற குவளையும்
கடி மிளைப் புறவின் பூத்த முல்லையொடு		10
பல் இளம் கோசர் கண்ணி அயரும்
மல்லல் யாணர்ச் செல்லிக் கோமான்
எறிவிடத்து உலையாச் செறி சுரை வெள் வேல்
ஆதன் எழினி அரு நிறத்து அழுத்திய
பெரும் களிற்று எவ்வம் போல		15
வருந்துப மாது அவர் சேரி யாம் செலினே

#217 பாலை - கழார்க்கீரன் எயிற்றியார்
பெய்து புறம் திறந்த பொங்கல் வெண் மழை
எஃகுறு பஞ்சித் துய்ப்பட்டு அன்ன
துவலை தூவல் கழிய அகல் வயல்
நீடு கழைக் கரும்பின் கணைக் கால் வான் பூக்
கோடைப் பூளையின் வாடையொடு துயல்வர		5
பாசிலை பொதுளிய புதல்-தொறும் பகன்றை
நீல் உண் பச்சை நிறம் மறைத்து அடைச்சிய
தோல் எறி பாண்டிலின் வாலிய மலரக்
கோழ் இலை அவரைக் கொழு முகை அவிழ
ஊழுறு தோன்றி ஒண் பூத் தளைவிடப்		10
புலம்-தொறும் குருகு இனம் நரலக் கல்லென
அகன்று உறை மகளிர் அணி துறந்து நடுங்க
அற்சிரம் வந்தன்று அமைந்தன்று இது என
எப் பொருள் பெறினும் பிரியன்-மினோ எனச்
செப்புவல் வாழியோ துணையுடையீர்க்கே		15
நல்காக் காதலர் நலன் உண்டு துறந்த
பாழ் படு மேனி நோக்கி நோய் பொர
இணர் இறுபு உடையும் நெஞ்சமொடு புணர்வு வேட்டு
எயிறு தீப் பிறப்பத் திருகி
நடுங்குதும் பிரியின் யாம் கடும் பனி உழந்தே		20

#218 குறிஞ்சி - கபிலர்
கிளை பாராட்டும் கடு நடை வயக் களிறு
முளை தருபு ஊட்டி வேண்டு குளகு அருத்த
வாள் நிற உருவின் ஒளிறுபு மின்னி
பரூஉ உறைப் பல் துளி சிதறி வான் நவின்று
பெரு வரை நளிர் சிமை அதிர வட்டித்துப்		5
புயலேறு உரைஇய வியல் இருள் நடுநாள்
விறல் இழைப் பொலிந்த காண்பு இன் சாயல்
தடைஇத் திரண்ட நின் தோள் சேர்பு அல்லதை
படாஅ ஆகும் எம் கண் என நீயும்
இருள் மயங்கு யாமத்து இயவுக் கெட விலங்கி	10
வரி வயங்கு இரும் புலி வழங்குநர்ப் பார்க்கும்
பெரு மலை விடரகம் வர அரிது என்னாய்
வர எளிது ஆக எண்ணுதி அதனால்
நுண்ணிதின் கூட்டிய படு மாண் ஆரம்
தண்ணிது கமழும் நின் மார்பு ஒரு நாள்		15
அடைய முயங்கேம் ஆயின் யாமும்
விறல் இழை நெகிழச் சாஅய்தும் அதுவே
அன்னை அறியினும் அறிக அலர் வாய்
அம்பல் மூதூர் கேட்பினும் கேட்க
வண்டு இறை கொண்ட எரி மருள் தோன்றியொடு		20
ஒண் பூ வேங்கை கமழும்
தண் பெரும் சாரல் பகல் வந்தீமே

#219 பாலை - கயமனார்
சீர் கெழு வியல் நகர்ச் சிலம்பு நக இயலி
ஓரை ஆயமொடு பந்து சிறிது எறியினும்
வாராயோ என்று ஏத்திப் பேர் இலைப்
பகன்றை வான் மலர் பனி நிறைந்தது போல்
பால் பெய் வள்ளம் சால்கை பற்றி		5
என் பாடு உண்டனை ஆயின் ஒரு கால்
நுந்தை பாடும் உண் என்று ஊட்டிப்
பிறந்ததன் கொண்டும் சிறந்தவை செய்து யான்
நலம் புனைந்து எடுத்த என் பொலம் தொடிக் குறுமகள்
அறனிலாளனொடு இறந்தனள் இனி என		10
மறந்து அமைந்து இராஅ நெஞ்சம் நோவேன்
பொன் வார்ந்து அன்ன வை வால் எயிற்றுச்
செந்நாய் வெரீஇய புகர் உழை ஒருத்தல்
பொரி அரை விளவின் புன் புற விளை புழல்
அழல் எறி கோடை தூக்கலின் கோவலர்		15
குழல் என நினையும் நீர் இல் நீள் இடை
மடத் தகை மெலியச் சாஅய்
நடக்கும்-கொல் என நோவல் யானே

#220 நெய்தல் - மதுரை மருதன் இளநாகனார்
ஊரும் சேரியும் உடன் இயைந்து அலர் எழத்
தேரொடு மறுகியும் பணிமொழி பயிற்றியும்
கெடாஅத் தீயின் உரு கெழு செல்லூர்க்
கடாஅ யானைக் குழூஉச் சமம் ததைய
மன் மருங்கு அறுத்த மழு வாள் நெடியோன்		5
முன் முயன்று அரிதினின் முடித்த வேள்வி
கயிறு அரை யாத்த காண்தகு வனப்பின்
அரும் கடி நெடும் தூண் போல யாவரும்
காணல் ஆகா மாண் எழில் ஆகம்
உள்ளு-தொறும் பனிக்கும் நெஞ்சினை நீயே		10
நெடும் புறநிலையினை வருந்தினை ஆயின்
முழங்கு கடல் ஓதம் காலைக் கொட்கும்
பழம் பல் நெல்லின் ஊணூர் ஆங்கண்
நோலா இரும் புள் போல நெஞ்சு அமர்ந்து
காதல் மாறாக் காமர் புணர்ச்சியின்		15
இரும் கழி முகந்த செம் கோல் அவ் வலை
முடங்கு புற இறவொடு இன மீன் செறிக்கும்
நெடும் கதிர்க் கழனித் தண் சாய்க்கானத்து
யாணர்த் தண் பணை உறும் எனக் கானல்
ஆயம் ஆய்ந்த சாய் இறைப் பணைத் தோள்		20
நல் எழில் சிதையா ஏமம்
சொல் இனித் தெய்ய யாம் தெளியுமாறே

#221 பாலை - கயமனார்
நனை விளை நறவின் தேறல் மாந்திப்
புனை வினை நல் இல் தரு மணல் குவைஇப்
பொம்மல் ஓதி எம் மகள் மணன் என
வதுவை அயர்ந்தனர் நமரே அதனால்
புதுவது புனைந்த சேய் இலை வெள் வேல்		5
மதி உடம்பட்ட மை அணல் காளை
வாங்கு சினை மலிந்த திரள் அரை மராஅத்துத்
தேம் பாய் மெல் இணர் தளிரொடு கொண்டு நின்
தண் நறு முச்சி புனைய அவனொடு
கழை கவின் போகிய மழை உயர் நனம் தலை	10
களிற்று இரை பிழைத்தலின் கய வாய் வேங்கை
காய் சினம் சிறந்து குழுமலின் வெரீஇ
இரும் பிடி இரியும் சோலை
அரும் சுரம் சேறல் அயர்ந்தனென் யானே

#222 குறிஞ்சி - பரணர்
வானுற நிவந்த நீல் நிறப் பெரு மலைக்
கான நாடன் உறீஇய நோய்க்கு என்
மேனி ஆய் நலம் தொலைதலின் மொழிவென்
முழவு முகம் புலராக் கலி கொள் ஆங்கண்
கழாஅர்ப் பெரும் துறை விழவின் ஆடும்		5
ஈட்டு எழில் பொலிந்த ஏந்து குவவு மொய்ம்பின்
ஆட்டனத்தி நலன் நயந்து உரைஇத்
தாழ் இரும் கதுப்பின் காவிரி வவ்வலின்
மாதிரம் துழைஇ மதி மருண்டு அலந்த
ஆதிமந்தி காதலன் காட்டிப்		10
படு கடல் புக்க பாடல் சால் சிறப்பின்
மருதி அன்ன மாண் புகழ் பெறீஇயர்
சென்மோ வாழி தோழி பல் நாள்
உரவு உரும் ஏறொடு மயங்கி
இரவுப் பெயல் பொழிந்த ஈர்ம் தண் ஆறே		15

#223 பாலை - பாலை பாடிய பெருங்கடுங்கோ
பிரிதல் வல்லியர் இது நம் துறந்தோர்
மறந்தும் அமைகுவர்-கொல் என்று எண்ணி
ஆழல் வாழி தோழி கேழல்
வளை மருப்பு உறழும் முளை நெடும் பெரும் காய்
நனை முதிர் முருக்கின் சினை சேர் பெரும் கல்		5
காய் சினக் கடு வளி எடுத்தலின் வெம் காட்டு
அழல் பொழி யானையின் ஐயெனத் தோன்றும்
நிழல் இல் ஓமை நீர் இல் நீள் இடை
இறந்தனர் ஆயினும் காதலர் நம்-வயின்
மறந்து கண்படுதல் யாவது புறம் தாழ்		10
அம் பணை நெடும் தோள் தங்கித் தும்பி
அரி இனம் கடுக்கும் சுரி வணர் ஐம்பால்
நுண் கேழ் அடங்க வாரிப் பையுள் கெட
நல் முகை அதிரல் போதொடு குவளைத்
தண் நறும் கமழ் தொடை வேய்ந்த நின்		15
மண் ஆர் கூந்தல் மரீஇய துயிலே

#224 முல்லை - ஆவூர் மூலங்கிழார் மகனார் பெருந்தலைச் சாத்தனார்
செல்க பாக எல்லின்று பொழுதே
வல்லோன் அடங்கு கயிறு அமைப்பக் கொல்லன்
விசைத்து வாங்கு துருத்தியின் வெய்ய உயிராக்
கொடு நுகத்து யாத்த தலைய கடு நடைக்
கால் கடுப்பு அன்ன கடும் செலல் இவுளி		5
பால் கடை நுரையின் பரூஉ மிதப்பு அன்ன
வால் வெண் தெவிட்டல் வழி வார் நுணக்கம்
சிலம்பி நூலின் நுணங்குவன பாறிச்
சாந்து புலர் அகலம் மறுப்பக் காண்தகப்
புது நலம் பெற்ற வெய்து நீங்கு புறவில்		10
தெறி நடை மரைக் கணம் இரிய மனையோள்
ஐது உணங்கு வல்சி பெய்து முறுக்குறுத்த
திரிமரக் குரல் இசை கடுப்ப வரி மணல்
அலங்கு கதிர் திகிரி ஆழி போழ
வரும்-கொல் தோழி நம் இன் உயிர்த் துணை என		15
சில் கோல் எல் வளை ஒடுக்கிப் பல் கால்
அரும் கடி வியன் நகர் நோக்கி
வருந்துமால் அளியள் திருந்து_இழை தானே

#225 பாலை - எயினந்தை மகனார் இளங்கீரனார்
அன்பும் மடனும் சாயலும் இயல்பும்
என்பு நெகிழ்க்கும் கிளவியும் பிறவும்
ஒன்றுபடு கொள்கையொடு ஓராங்கு முயங்கி
இன்றே இவணம் ஆகி நாளைப்
புதல் இவர் ஆடு அமைத் தும்பி குயின்ற		5
அகலா அம் துளை கோடை முகத்தலின்
நீர்க்கு இயங்கு இன நிரைப் பின்றை வார் கோல்
ஆய் குழல் பாணியின் ஐது வந்து இசைக்கும்
தேக்கு அமல் சோலை கடறு ஓங்கு அரும் சுரத்து
யாத்த தூணி தலை திறந்தவை போல்		10
பூத்த இருப்பைக் குழை பொதி குவி இணர்
கழல் துளை முத்தின் செந்நிலத்து உதிர
மழை துளி மறந்த அம் குடிச் சீறூர்ச்
சேக்குவம்-கொலோ நெஞ்சே பூப் புனை
புயல் என ஒலிவரும் தாழ் இரும் கூந்தல்		15
செறி தொடி முன்கை நம் காதலி
அறிவு அஞர் நோக்கமும் புலவியும் நினைந்தே

#226 மருதம் - பரணர்
உணர்குவென் அல்லென் உரையல் நின் மாயம்
நாணிலை-மன்ற யாணர் ஊர
அகலுள் ஆங்கண் அம் பகை மடிவைக்
குறும் தொடி மகளிர் குரூஉப் புனல் முனையின்
பழனப் பைம் சாய் கொழுதிக் கழனிக்		5
கரந்தை அம் செறுவின் வெண் குருகு ஓப்பும்
வல் வில் எறுழ் தோள் பரதவர் கோமான்
பல் வேல் மத்தி கழாஅர் முன்துறை
நெடு வெண் மருதொடு வஞ்சி சாஅய
விடியல் வந்த பெரு நீர்க் காவிரி		10
தொடி அணி முன்கை நீ வெய்யோளொடு
முன்_நாள் ஆடிய கவ்வை இ நாள்
வலி மிகும் முன்பின் பாணனொடு மலி தார்த்
தித்தன் வெளியன் உறந்தை நாள்_அவைப்
பாடு இன் தெண் கிணைப் பாடு கேட்டு அஞ்சி		15
போர் அடு தானைக் கட்டி
பொராஅது ஓடிய ஆர்ப்பினும் பெரிதே

#227 பாலை - நக்கீரர்
நுதல் பசந்தன்றே தோள் சாயினவே
திதலை அல்குல் வரியும் வாடின
என் ஆகுவள்-கொல் இவள் எனப் பல் மாண்
நீர் மலி கண்ணொடு நெடிது நினைந்து ஒற்றி
இனையல் வாழி தோழி நனை கவுள்		5
காய் சினம் சிறந்த வாய் புகு கடாத்தொடு
முன் நிலை பொறாஅது முரணிப் பொன் இணர்ப்
புலிக் கேழ் வேங்கைப் பூம் சினை புலம்ப
முதல் பாய்ந்திட்ட முழு வலி ஒருத்தல்
செந்நிலப் படு நீறு ஆடிச் செரு மலைந்து	10
களம் கொள் மள்ளரின் முழங்கும் அத்தம்
பல இறந்து அகன்றனர் ஆயினும் நிலைஇ
நோயிலர் ஆக நம் காதலர் வாய் வாள்
தமிழ் அகப்படுத்த இமிழ் இசை முரசின்
வருநர் வரையா பெருநாள் இருக்கை	15
தூங்கல் பாடிய ஓங்கு பெரு நல் இசைப்
பிடி மிதி வழுதுணைப் பெரும் பெயர் தழும்பன்
கடி மதில் வரைப்பின் ஊணூர் உம்பர்
விழு நிதி துஞ்சும் வீறு பெறு திரு நகர்
இரும் கழிப் படப்பை மருங்கூர்ப் பட்டினத்து		20
எல் உமிழ் ஆவணத்து அன்ன
கல்லென் கம்பலை செய்து அகன்றோரே

#228 குறிஞ்சி - அண்டர் மகன் குறுவழுதியார்
பிரசப் பல் கிளை ஆர்ப்பக் கல்லென
வரை இழி அருவி ஆரம் தீண்டித்
தண் என நனைக்கும் நளிர் மலைச் சிலம்பில்
கண் என மலர்ந்த மா இதழ்க் குவளைக்
கல் முகை நெடும் சுனை நம்மொடு ஆடிப்		5
பகலே இனிது உடன் கழிப்பி இரவே
செல்வர் ஆயினும் நன்று-மன்-தில்ல
வான் கண் விரிந்த பகல் மருள் நிலவின்
சூரல் மிளைஇய சாரல் ஆர் ஆற்று
ஓங்கல் மிசைய வேங்கை ஒள் வீ		10
புலிப் பொறி கடுப்பத் தோன்றலின் கய வாய்
இரும் பிடி இரியும் சோலைப்
பெரும் கல் யாணர்த் தம் சிறுகுடியானே

#229 பாலை - மதுரைக் கூலவாணிகன் சீத்தலைச் சாத்தனார்
பகல் செய் பல் கதிர்ப் பருதி அம் செல்வன்
அகல் வாய் வானத்து ஆழி போழ்ந்து என
நீர் அற வறந்த நிரம்பா நீள் இடைக்
கயம் தலைக் குழவிக் கவி உகிர் மடப் பிடி
குளகு மறுத்து உயங்கிய மருங்குல் பல உடன்	5
பாழ் ஊர்க் குரம்பையின் தோன்றும் ஆங்கண்
நெடும் சேண் இடைய குன்றம் போகிப்
பொய்வலாளர் முயன்று செய் பெரும் பொருள்
நம் இன்று ஆயினும் முடிக வல்லெனப்
பெரும் துனி மேவல் நல்கூர் குறுமகள்		10
நோய் மலிந்து உகுத்த நொசி வரல் சில் நீர்
பல் இதழ் மழைக் கண் பாவை மாய்ப்பப்
பொன் ஏர் பசலை ஊர்தரப் பொறி வரி
நல் மா மேனி தொலைதல் நோக்கி
இனையல் என்றி தோழி சினைய		15
பாசரும்பு ஈன்ற செம் முகை முருக்கினப்
போது அவிழ் அலரி கொழுதி தாது அருந்து
அம் தளிர் மாஅத்து அலங்கல் மீமிசை
செம் கண் இரும் குயில் நயவரக் கூஉம்
இன் இளவேனிலும் வாரார்		20
இன்னே வருதும் எனத் தெளித்தோரே

#230 நெய்தல் - மதுரை அறுவை வாணிகன் இளவேட்டனார்
உறு கழி மருங்கின் ஓதமொடு மலர்ந்த
சிறு கரு நெய்தல் கண் போல் மா மலர்ப்
பெரும் தண் மாத் தழை இருந்த அல்குல்
ஐய அரும்பிய சுணங்கின் வை எயிற்று
மை ஈர் ஓதி வாள் நுதல் குறுமகள்		5
விளையாட்டு ஆயமொடு வெண் மணல் உதிர்த்த
புன்னை நுண் தாது பொன்னின் நொண்டு
மனை புறந்தருதி ஆயின் எனையதூஉம்
இ மனைக் கிழமை எம்மொடு புணரின்
தீதும் உண்டோ மாதராய் எனக்		10
கடும் பரி நல் மான் கொடிஞ்சி நெடும் தேர்
கை வல் பாகன் பையென இயக்க
யாம் தம் குறுகினம் ஆக ஏந்து எழில்
அரி வேய் உண் கண் பனி வரல் ஒடுக்கிச்
சிறிய இறைஞ்சினள் தலையே		15
பெரிய எவ்வம் யாம் இவண் உறவே

#231 பாலை - மதுரை ஈழத்துப் பூதன் தேவனார்
செறுவோர் செம்மல் வாட்டலும் சேர்ந்தோர்க்கு
உறும் இடத்து உவக்கும் உதவி ஆண்மையும்
இல் இருந்து அமைவோர்க்கு இல் என்று எண்ணி
நல் இசை வலித்த நாண் உடை மனத்தர்
கொடு வில் கானவர் கணை இடத் தொலைந்தோர்	5
படு களத்து உயர்த்த மயிர்த் தலைப் பதுக்கை
கள்ளி அம் பறந்தலைக் களர்-தொறும் குழீஇ
உள்ளுநர்ப் பனிக்கும் ஊக்கு அரும் கடத்து இடை
வெம் சுரம் இறந்தனர் ஆயினும் நெஞ்சு உருக
வருவர் வாழி தோழி பொருவர்		10
செல் சமம் கடந்த செல்லா நல் இசை
விசும்பு இவர் வெண் குடை பசும் பூண் பாண்டியன்
பாடு பெறு சிறப்பின் கூடல் அன்ன நின்
ஆடு வண்டு அரற்றும் முச்சித்
தோடு ஆர் கூந்தல் மரீஇயோரே		15

#232 குறிஞ்சி - கொடிமங்கலத்து வாதுளி நற்சேந்தனார்
காண் இனி வாழி தோழி பானாள்
மழை முழங்கு அரவம் கேட்ட கழை தின்
மாஅல் யானை புலி செத்து வெரீஇ
இரும் கல் விடரகம் சிலம்பப் பெயரும்
பெரும் கல் நாடன் கேண்மை இனியே		5
குன்ற வேலிச் சிறுகுடி ஆங்கண்
மன்ற வேங்கை மண நாள் பூத்த
மணி ஏர் அரும்பின் பொன் வீ தாஅய்
வியல் அறை வரிக்கும் முன்றில் குறவர்
மனை முதிர் மகளிரொடு குரவை தூங்கும்		10
ஆர் கலி விழவுக்களம் கடுப்ப நாளும்
விரவுப் பூம் பலியொடு விரைஇ அன்னை
கடி உடை வியல் நகர்க் காவல் கண்ணி
முருகு என வேலன் தரூஉம்
பருவம் ஆகப் பயந்தன்றால் நமக்கே		15

#233 பாலை - மாமூலனார்
அலமரல் மழைக் கண் மல்கு பனி வார நின்
அலர் முலை நனைய அழாஅல் தோழி
எரி கவர்பு உண்ட கரி புறப் பெரு நிலம்
பீடு கெழு மருங்கின் ஓடு மழை துறந்து என
ஊன் இல் யானை உயங்கும் வேனில்		5
மறப் படை குதிரை மாறா மைந்தின்
துறக்கம் எய்திய தொய்யா நல் இசை
முதியர் பேணிய உதியஞ்சேரல்
பெரும் சோறு கொடுத்த ஞான்றை இரும் பல்
கூளிச் சுற்றம் குழீஇ இருந்தாங்கு	10
குறியவும் நெடியவும் குன்று தலைமணந்த
சுரன் இறந்து அகன்றனர் ஆயினும் மிக நனி
மடங்கா உள்ளமொடு மதி மயக்குறாஅ
பொருள்-வயின் நீடலோ இலர் நின்
இருள் ஐம் கூந்தல் இன் துயில் மறந்தே		15

#234 முல்லை - பேயனார்
கார் பயம் பொழிந்த நீர் திகழ் காலை
நுண் அயிர் பரந்த தண் அய மருங்கின்
நிரை பறை அன்னத்து அன்ன விரை பரிப்
புல் உளைக் கலிமா மெல்லிதின் கொளீஇய
வள்பு ஒருங்கு அமையப் பற்றி முள்கிய		5
பல் கதிர் ஆழி மெல் வழி அறுப்பக்
கால் என மருள ஏறி நூல் இயல்
கண் நோக்கு ஒழிக்கும் பண் அமை நெடும் தேர்
வல் விரைந்து ஊர்-மதி நல் வலம் பெறுந
ததர் தழை முனைஇய தெறி நடை மடப் பிணை		10
ஏறு புணர் உவகைய ஊறு இல உகள
அம் சிறை வண்டின் மென் பறைத் தொழுதி
முல்லை நறு மலர்த் தாது நயந்து ஊத
எல்லை போகிய புல்லென் மாலை
புறவு அடைந்திருந்த உறைவு இன் நல் ஊர்		15
கழி படர் உழந்த பனி வார் உண்கண்
நல் நிறம் பரந்த பசலையள்
மின் நேர் ஓதி பின்னு பிணி விடவே

#235 பாலை - கழார்க்கீரன் எயிற்றியார்
அம்ம வாழி தோழி பொருள் புரிந்து
உள்ளார்-கொல்லோ காதலர் உள்ளியும்
சிறந்த செய்தியின் மறந்தனர்-கொல்லோ
பயன் நிலம் குழைய வீசிப் பெயல் முனிந்து
விண்டு முன்னிய கொண்டல் மா மழை		5
மங்குல் அற்கமொடு பொங்குபு துளிப்ப
வாடையொடு நிவந்த ஆய் இதழ்த் தோன்றி
சுடர் கொள் அகலின் சுருங்கு பிணி அவிழச்
சுரி முகிழ் முசுண்டைப் பொதி அவிழ் வான் பூ
விசும்பு அணி மீனின் பசும் புதல் அணியக்		10
களவன் மண் அளை செறிய அகல் வயல்
கிளை விரி கரும்பின் கணைக் கால் வான் பூ
மாரி அம் குருகின் ஈரிய குரங்க
நனி கடும் சிவப்பொடு நாமம் தோற்றிப்
பனி கடிகொண்ட பண்பு இல் வாடை		15
மருளின் மாலையொடு அருள் இன்றி நலிய
நுதல் இறைகொண்ட அயல் அறி பசலையொடு
தொல் நலம் சிதையச் சாஅய்
என்னள்-கொல் அளியள் என்னாதோரே

#236 மருதம் - பரணர்
மணி மருள் மலர முள்ளி அமன்ற
துணி நீர் இலஞ்சிக் கொண்ட பெரு மீன்
அரி நிறக் கொழும் குறை வௌவினர் மாந்தி
வெண்ணெல் அரிநர் பெயர் நிலைப் பின்றை
இடை நிலம் நெரிதரு நெடும் கதிர் பல் சூட்டு		5
பனி படு சாய்ப் புறம் பரிப்பக் கழனிக்
கரும் கோட்டு மாஅத்து அலங்கு சினைப் புதுப் பூ
மயங்கு மழைத் துவலையின் தாஅம் ஊரன்
காமம் பெருமை அறியேன் நன்றும்
உய்ந்தனென் வாழி தோழி அல்கல்		10
அணி கிளர் சாந்தின் அம் பட்டு இமைப்பக்
கொடும் குழை மகளிரின் ஒடுங்கிய இருக்கை
அறியாமையின் அழிந்த நெஞ்சின்
ஏற்று இயல் எழில் நடைப் பொலிந்த மொய்ம்பின்
தோட்டு இரும் சுரியல் மணந்த பித்தை		15
ஆட்டனத்தியைக் காணீரோ என
நாட்டின்நாட்டின் ஊரின்ஊரின்
கடல் கொண்டன்று எனப் புனல் ஒளித்தன்று எனக்
கலுழ்ந்த கண்ணள் காதலன் கெடுத்த
ஆதிமந்தி போல
ஏதம் சொல்லிப் பேது பெரிது உறலே

#237 பாலை - தாயங்கண்ணனார்
புன் கால் பாதிரி அரி நிறத் திரள் வீ
நுண் கொடி அதிரலொடு நுணங்கு அறல் வரிப்ப
அரவு எயிற்று அன்ன அரும்பு முதிர் குரவின்
தேன் இமிர் நறும் சினை தென்றல் போழ
குயில் குரல் கற்ற வேனிலும் துயில் துறந்து		5
இன்னா கழியும் கங்குல் என்று நின்
நல் மா மேனி அணி நலம் புலம்ப
இனைதல் ஆன்றிசின் ஆய்_இழை கனை திறல்
செம் தீ அணங்கிய செழு நிணக் கொழும் குறை
மென் தினை புன்கம் உதிர்த்த மண்டையொடு		10
இரும் கதிர் அலமரும் கழனிக் கரும்பின்
விளை கழை பிழிந்த அம் தீம் சேற்றொடு
பால் பெய் செந்நெல் பாசவல் பகுக்கும்
புனல் பொரு புதவின் உறந்தை எய்தினும்
வினை பொருள் ஆகத் தவிரலர் கடை சிவந்து		15
ஐய அமர்த்த உண்கண் நின்
வை ஏர் வால் எயிறு ஊறிய நீரே

#238 குறிஞ்சி - கபிலர்
மான்றமை அறியா மரம் பயில் இறும்பின்
ஈன்று இளைப்பட்ட வயவுப் பிணப் பசித்து என
மட மான் வல்சி தரீஇய நடுநாள்
இருள் முகைச் சிலம்பின் இரை வேட்டு எழுந்த
பணை மருள் எருத்தின் பல் வரி இரும் போத்து		5
மடக் கண் ஆமான் மாதிரத்து அலற
தடக் கோட்டு ஆமான் அண்ணல் ஏஎறு
நனம் தலைக் கானத்து வலம் படத் தொலைச்சி
இரும் கல் வியல் அறை சிவப்ப ஈர்க்கும்
பெரும் கல் நாட பிரிதி ஆயின்		10
மருந்தும் உடையையோ மற்றே இரப்போர்க்கு
இழை அணி நெடும் தேர் களிறொடு என்றும்
மழை சுரந்து அன்ன ஈகை வண் மகிழ்
கழல் தொடி தடக் கை கலி மான் நள்ளி
நளி முகை உடைந்த நறும் கார் அடுக்கத்துப்		15
போந்தை முழுமுதல் நிலைஇய காந்தள்
மென் பிணி முகை அவிழ்ந்து அலர்ந்த
தண் கமழ் புது மலர் நாறும் நறு நுதற்கே

#239 பாலை - எயினந்தை மகன் இளங்கீரனார்
அளிதோ தானே எவன் ஆவது-கொல்
மன்றும் தோன்றாது மரனும் மாயும்
புலி என உலம்பும் செம் கண் ஆடவர்
ஞெலியொடு பிடித்த வார் கோல் அம்பினர்
எல் ஊர் எறிந்து பல் ஆத் தழீஇய		5
விளி படு பூசல் வெம் சுரத்து இரட்டும்
வேறு பல் தேஎத்து ஆறு பல நீந்திப்
புள்ளித் தொய்யில் பொறி படு சுணங்கின்
ஒள் இழை மகளிர் உயர் பிறை தொழூஉம்
புல்லென் மாலை யாம் இவண் ஒழிய		10
ஈட்டு அரும்-குரைய பொருள்-வயின் செலினே
நீட்டுவிர் அல்லிரோ நெடுந்தகையீர் என
குறு நெடும் புலவி கூறி நம்மொடு
நெருநலும் தீம் பல மொழிந்த
சிறு நல் ஒருத்தி பெரு நல் ஊரே		15

#240 நெய்தல் - எழுஉப்பன்றி நாகன் குமரனார்
செவ் வீ ஞாழல் கரும் கோட்டு இரும் சினைத்
தனிப் பார்ப்பு உள்ளிய தண் பறை நாரை
மணிப் பூ நெய்தல் மாக் கழி நிவப்ப
இனிப் புலம்பின்றே கானலும் நளி கடல்
திரைச் சுரம் உழந்த திண் திமில் விளக்கில்		5
பல் மீன் கூட்டம் என் ஐயர் காட்டிய
எந்தையும் செல்லுமார் இரவே அந்தில்
அணங்கு உடைப் பனித் துறை கைதொழுது ஏத்தி
யாயும் ஆயமோடு அயரும் நீயும்
தேம் பாய் ஓதி திரு நுதல் நீவிக்		10
கோங்கு முகைத்து அன்ன குவி முலை ஆகத்து
இன் துயில் அமர்ந்தனை ஆயின் வண்டு பட
விரிந்த செருந்தி வெண் மணல் முடுக்கர்ப்
பூ வேய் புன்னை அம் தண் பொழில்
வாவே தெய்ய மணந்தனை செலற்கே		15

#241 பாலை - காவன் முல்லை பூதனார்
துனி இன்று இயைந்த துவரா நட்பின்
இனியர் அம்ம அவர் என முனியாது
நல்குவர் நல்ல கூறினும் அல்கலும்
பிரியாக் காதலொடு உழையர் ஆகிய
நமர்-மன் வாழி தோழி உயர் மிசை		5
மூங்கில் இள முளை திரங்கக் காம்பின்
கழை நரல் வியலகம் வெம்ப மழை மறந்து
அருவி ஆன்ற வெருவரு நனம் தலைப்
பேஎய் வெண் தேர்ப் பெயல் செத்து ஓடி
தாஅம் பட்ட தனி முதிர் பெரும் கலை	10
புலம் பெயர்ந்து உறைதல் செல்லாது அலங்கு தலை
விருந்தின் வெம் காட்டு வருந்தி வைகும்
அத்த நெல்லித் தீம் சுவைத் திரள் காய்
வட்டக் கழங்கின் தாஅய்த் துய்த் தலை
செம் முக மந்தி ஆடும்		15
நல் மர மருங்கின் மலை இறந்தோரே

#242 குறிஞ்சி - பேரிசாத்தனார்
அரும்பு முதிர் வேங்கை அலங்கல் மென் சினைச்
சுரும்பு வாய் திறந்த பொன் புரை நுண் தாது
மணி மருள் கலவத்து உறைப்ப அணி மிக்கு
அவிர் பொறி மஞ்ஞை ஆடும் சோலைப்
பைம் தாள் செந்தினைக் கொடும் குரல் வியன் புனம்		5
செம் தார்க் கிள்ளை நம்மொடு கடிந்தோன்
பண்பு தர வந்தமை அறியாள் நுண் கேழ்
முறி புரை எழில் நலத்து என் மகள் துயர் மருங்கு
அறிதல் வேண்டும் எனப் பல் பிரப்பு இரீஇ
அறியா வேலன் தரீஇ அன்னை		10
வெறி அயர் வியன் களம் பொலிய ஏத்தி
மறி உயிர் வழங்கா அளவை சென்று யாம்
செல வரத் துணிந்த சேண் விளங்கு எல் வளை
நெகிழ்ந்த முன்கை நேர் இறைப் பணைத் தோள்
நல் எழில் அழிவின் தொல் கவின் பெறீஇய		15
முகிழ்த்து வரல் இள முலை மூழ்கப் பல் ஊழ்
முயங்கல் இயைவது-மன்னோ தோழி
நறை கால்யாத்த நளிர் முகைச் சிலம்பில்
பெரு மலை விடரகம் நீடிய சிறி இலைச்
சாந்த மென் சினை தீண்டி மேலது		20
பிரசம் தூங்கும் சேண் சிமை
வரையக வெற்பன் மணந்த மார்பே

#243 பாலை - கொடியூர்க் கிழார் மகனார் நெய்தல் தத்தனார்
அவரை ஆய் மலர் உதிரத் துவரின
வாங்கு துளைத் துகிரின் ஈங்கை பூப்ப
இறங்கு போது அவிழ்ந்த ஈர்ம் புதல் பகன்றைக்
கறங்கு நுண் துவலையின் ஊர் உழை அணியப்
பெயல் நீர் புது வரல் தவிரச் சினை நேர்பு		5
பீள் விரிந்து இறைஞ்சிய பிறங்கு கதிர்க் கழனி
நெல் ஒலி பாசவல் துழைஇக் கல்லெனக்
கடிது வந்து இறுத்த கண் இல் வாடை
நெடிது வந்தனை என நில்லாது ஏங்கி
பல புலந்து உறையும் துணை இல் வாழ்க்கை		10
நம் வலத்து அன்மை கூறி அவர் நிலை
அறியுநம் ஆயின் நன்று-மன்-தில்ல
பனி வார் கண்ணேம் ஆகி இனி அது
நமக்கே எவ்வம் ஆகின்று
அனைத்தால் தோழி நம் தொல் வினைப் பயனே		15

#244 முல்லை - மதுரை மள்ளனார்
பசை படு பச்சை நெய் தோய்த்து அன்ன
சேய் உயர் சினைய மாச் சிறைப் பறவை
பகல் உறை முது மரம் புலம்பப் போகி
முகை வாய் திறந்த நகை வாய் முல்லை
கடி_மகள் கதுப்பின் நாறிக் கொடி மிசை		5
வண்டு இனம் தவிர்க்கும் தண் பதக் காலை
வரினும் வாரார் ஆயினும் ஆண்டு அவர்க்கு
இனிது-கொல் வாழி தோழி எனத் தன்
பல் இதழ் மழைக் கண் நல் அகம் சிவப்ப
அரும் துயர் உடையள் இவள் என விரும்பிப்		10
பாணன் வந்தனன் தூதே நீயும்
புல் ஆர் புரவி வல் விரைந்து பூட்டி
நெடும் தேர் ஊர்-மதி வலவ
முடிந்தன்று அம்ம நாம் முன்னிய வினையே

#245 பாலை - மதுரை மருதன் இளநாகனார்
உயிரினும் சிறந்த ஒண் பொருள் தருமார்
நன்று புரி காட்சியர் சென்றனர் அவர் என
மனை வலித்து ஒழியும் மதுகையள் ஆதல்
நீ நற்கு அறிந்தனை ஆயின் நீங்கி
மழை பெயல் மறந்த கழை திரங்கு இயவில்		5
செல் சாத்து எறியும் பண்பு இல் வாழ்க்கை
வல் வில் இளையர் தலைவர் எல் உற
வரி கிளர் பணைத் தோள் வயிறு அணி திதலை
அரியலாட்டியர் அல்கு மனை வரைப்பில்
மகிழ் நொடை பெறாஅராகி நனை கவுள்		10
கான யானை வெண் கோடு சுட்டி
மன்று ஓடு புதல்வன் புன் தலை நீவும்
அரு முனைப் பாக்கத்து அல்கி வைகுற
நிழல் படக் கவின்ற நீள் அரை இலவத்து
அழல் அகைந்து அன்ன அலங்கு சினை ஒண் பூக்		15
குழல் இசைத் தும்பி ஆர்க்கும் ஆங்கண்
குறும் பொறை உணங்கும் ததர் வெள் என்பு
கடும் கால் ஒட்டகத்து அல்கு பசி தீர்க்கும்
கல் நெடும் கவலைய கானம் நீந்தி
அம் மா அரிவை ஒழிய		20
சென்மோ நெஞ்சம் வாரலென் யானே

#246 மருதம் - பரணர்
பிணர் மோட்டு நந்தின் பேழ் வாய் ஏற்றை
கதிர் மூக்கு ஆரல் களவன் ஆக
நெடு நீர்ப் பொய்கைத் துணையொடு புணரும்
மலி நீர் அகல் வயல் யாணர் ஊர
போது ஆர் கூந்தல் நீ வெய்யோளொடு		5
தாது ஆர் காஞ்சித் தண் பொழில் அகல் யாறு
ஆடினை என்ப நெருநை அலரே
காய் சின மொய்ம்பின் பெரும் பெயர்க் கரிகால்
ஆர்கலி நறவின் வெண்ணிவாயில்
சீர் கெழு மன்னர் மறலிய ஞாட்பின்		10
இமிழ் இசை முரசம் பொருகளத்து ஒழியப்
பதினொரு வேளிரொடு வேந்தர் சாய
மொய் வலி அறுத்த ஞான்றை
தொய்யா அழுந்தூர் ஆர்ப்பினும் பெரிதே

#247 பாலை - மதுரை மருதம் கிழார் மகனார் பெருங்கண்ணனார்
மண்ணா முத்தம் ஒழுக்கிய வன முலை
நல் மாண் ஆகம் புலம்பத் துறந்தோர்
அருள் இலர் வாழி தோழி பொருள் புரிந்து
இரும் கிளை எண்கின் அழல் வாய் ஏற்றை
கரும் கோட்டு இருப்பை வெண் பூ முனையின்		5
பெரும் செம் புற்றின் இரும் தலை இடக்கும்
அரிய கானம் என்னார் பகை பட
முனை பாழ்பட்ட ஆங்கண் ஆள் பார்த்துக்
கொலை வல் யானை சுரம் கடிகொள்ளும்
ஊறு படு கவலைய ஆறு பல நீந்திப்		10
படு முடை நசைஇய பறை நெடும் கழுத்தின்
பாறு கிளை சேக்கும் சேண் சிமைக்
கோடு உயர் பிறங்கல் மலை இறந்தோரே

#248 குறிஞ்சி - கபிலர்
நகை நீ கேளாய் தோழி அல்கல்
வய நாய் எறிந்து வன் பறழ் தழீஇ
இளையர் எய்துதல் மடக்கிக் கிளையொடு
நால் முலைப் பிணவல் சொலியக் கான் ஒழிந்து
அரும் புழை முடுக்கர் ஆள் குறித்து நின்ற	5
தறுகண் பன்றி நோக்கிக் கானவன்
குறுகினன் தொடுத்த கூர் வாய்ப் பகழி
மடை செலல் முன்பின் தன் படை செலச் செல்லாது
அரு வழி விலக்கும் எம் பெரு விறல் போன்ம் என
எய்யாது பெயரும் குன்ற நாடன்		10
செறி அரில் துடக்கலின் பரீஇப் புரி அவிழ்ந்து
ஏந்து குவவு மொய்ம்பின் பூச் சோர் மாலை
ஏற்று இமில் கயிற்றின் எழில் வந்து துயல்வர
இல் வந்து நின்றோன் கண்டனள் அன்னை
வல்லே என் முகம் நோக்கி		15
நல்லை-மன் என நகூஉப் பெயர்ந்தோளே

#249 பாலை - நக்கீரனார்
அம்ம வாழி தோழி பல் நாள்
இவ் ஊர் அம்பல் எவனோ வள் வார்
விசி பிணித்து யாத்த அரி கோல் தெண் கிணை
இன் குரல் அகவுநர் இரப்பின் நாள்-தொறும்
பொன் கோட்டுச் செறித்துப் பொலம் தார் பூட்டிச்	5
சாந்தம் புதைத்த ஏந்து துளங்கு எழில் இமில்
ஏறு முந்துறுத்துச் சால் பதம் குவைஇ
நெடும் தேர் களிற்றொடு சுரக்கும் கொடும் பூண்
பல் வேல் முசுண்டை வேம்பி அன்ன என்
நல் எழில் இள நலம் தொலையினும் நல்கார்		10
பல் பூம் கானத்து அல்கு நிழல் அசைஇத்
தோகைத் தூவித் தொடைத் தார் மழவர்
நாகு ஆ வீழ்த்து திற்றி தின்ற
புலவுக் களம் துழைஇய துகள் வாய்க் கோடை
நீள் வரைச் சிலம்பின் இரை வேட்டு எழுந்த		15
வாள் வரி வயப் புலி தீண்டிய விளி செத்து
வேறுவேறு கவலைய ஆறு பரிந்து அலறி
உழைமான் இன நிரை ஓடும்
கழை மாய் பிறங்கல் மலை இறந்தோரே

#250 நெய்தல் - செல்லூர் கிழார் மகனார் பெரும்பூதங்கொற்றனார்
எவன்-கொல் வாழி தோழி மயங்கு பிசிர்
மல்கு திரை உழந்த ஒல்கு நிலைப் புன்னை
வண்டு இமிர் இணர நுண் தாது வரிப்ப
மணம் கமழ் இள மணல் எக்கர்க் காண்வரக்
கணம்கொள் ஆயமொடு புணர்ந்து விளையாட		5
கொடுஞ்சி நெடும் தேர் இளையரொடு நீக்கித்
தாரன் கண்ணியன் சேர வந்து ஒருவன்
வரி மனை புகழ்ந்த கிளவியன் யாவதும்
மறுமொழி பெறாஅன் பெயர்ந்தனன் அதற்கொண்டு
அரும் படர் எவ்வமொடு பெரும் தோள் சாஅய்	10
அவ் வலைப் பரதவர் கானல் அம் சிறுகுடி
வெவ் வாய்ப் பெண்டிர் கவ்வையின் கலங்கி
இறை வளை நெகிழ்ந்த நம்மொடு
துறையும் துஞ்சாது கங்குலானே

#251 பாலை - மாமூலனார்
தூதும் சென்றன தோளும் செற்றும்
ஓதி ஒண் நுதல் பசலையும் மாயும்
வீங்கு இழை நெகிழச் சாஅய்ச் செல்லலொடு
நாம் படர் கூரும் அரும் துயர் கேட்பின்
நந்தன் வெறுக்கை எய்தினும் மற்று அவண்		5
தங்கலர் வாழி தோழி வெல் கொடித்
துனை கால் அன்ன புனை தேர்க் கோசர்
தொல் மூதாலத்து அரும் பணைப் பொதியில்
இன் இசை முரசம் கடிப்பு இகுத்து இரங்கத்
தெம் முனை சிதைத்த ஞான்றை மோகூர்		10
பணியாமையின் பகை தலைவந்த
மா கெழு தானை வம்ப மோரியர்
புனை தேர் நேமி உருளிய குறைத்த
இலங்கு வெள் அருவிய அறை வாய் உம்பர்
மாசு இல் வெண் கோட்டு அண்ணல் யானை		15
வாயுள் தப்பிய அரும் கேழ் வயப் புலி
மா நிலம் நெளியக் குத்திப் புகலொடு
காப்பு இல வைகும் தேக்கு அமல் சோலை
நிரம்பா நீள் இடைப் போகி
அரம் போழ் அவ் வளை நிலை நெகிழ்த்தோரே		20

#252 குறிஞ்சி - நக்கண்ணையார்
இடம்படுபு அறியா வலம் படு வேட்டத்து
வாள் வரி நடுங்கப் புகல்வந்து ஆளி
உயர் நுதல் யானைப் புகர் முகத்து ஒற்றி
வெண் கோடு புய்க்கும் தண் கமழ் சோலைப்
பெரு வரை அடுக்கத்து ஒரு வேல் ஏந்தி		5
தனியன் வருதல் அவனும் அஞ்சான்
பனி வார் கண்ணேன் ஆகி நோய் அட
எமியேன் இருத்தலை யானும் ஆற்றேன்
யாங்கு செய்வாம்-கொல் தோழி ஈங்கைத்
துய் அவிழ் பனி மலர் உதிர வீசித்		10
தொழில் மழை பொழிந்த பானாள் கங்குல்
எறி திரை திவலை தூஉம் சிறு கோட்டுப்
பெரும் குளம் காவலன் போல
அரும் கடி அன்னையும் துயில் மறந்தனளே

#253 பாலை - நக்கீரர்
வைகல்-தோறும் பசலை பாய என்
மெய்யும் பெரும்பிறிது ஆகின்று ஒய்யென
அன்னையும் அமரா முகத்தினள் அலரே
வாடாப் பூவின் கொங்கர் ஓட்டி
நாடு பல தந்த பசும் பூண் பாண்டியன்		5
பொன் மலி நெடு நகர்க் கூடல் ஆடிய
இன் இசை ஆர்ப்பினும் பெரிதே ஈங்கு யான்
சில நாள் உய்யலென் போன்ம் எனப் பல நினைந்து
ஆழல் வாழி தோழி வடாஅது
ஆர் இருள் நடுநாள் ஏர் ஆ ஒய்யப்		10
பகை முனை அறுத்துப் பல் இனம் சாஅய்
கணம் சால் கோவலர் நெடு விளிப் பயிர் அறிந்து
இனம் தலைத் தரூஉம் துளங்கு இமில் நல் ஏற்று
தழூஉப் பிணர் எருத்தம் தாழப் பூட்டிய
அம் தூம்பு அகல் அமை கமம் செலப் பெய்த		15
துறு காழ் வல்சியர் தொழு அறை வௌவி
கன்று உடைப் பெரு நிரை மன்று நிறை தரூஉம்
நேரா வன் தோள் வடுகர் பெருமகன்
பேர் இசை எருமை நல் நாட்டு உள்ளதை
அயிரி யாறு இறந்தனர் ஆயினும் மயர் இறந்து		20
உள்ளுப-தில்ல தாமே பணைத் தோள்
குரும்பை மென் முலை அரும்பிய சுணங்கின்
நுசுப்பு அழித்து ஒலிவரும் தாழ் இரும் கூந்தல்
மாக விசும்பின் திலகமொடு பதித்த
திங்கள் அன்ன நின் திரு முகத்து			25
ஒண் சூட்டு அவிர் குழை மலைந்த நோக்கே

#254 முல்லை - மதுரை அறுவை வாணிகன் இளவேட்டனார்
நரை விராவுற்ற நறு மென் கூந்தல்
செம் முது செவிலியர் பல பாராட்டப்
பொலன் செய் கிண்கிணி நலம் பெறு சேவடி
மணல் மலி முற்றத்து நிலம் வடுக்கொளாஅ
மனை உறை புறவின் செம் கால் சேவல்		5
துணையொடு குறும் பறை பயிற்றி மேல் செல
விளையாடு ஆயத்து இளையோர் காண்-தொறும்
நம்-வயின் நினையும் நல் நுதல் அரிவை
புலம்பொடு வதியும் கலங்கு அஞர் அகல
வேந்து உறு தொழிலொடு வேறு புலத்து அல்கி		10
வந்து வினை முடித்தனம் ஆயின் நீயும்
பணை நிலை முனைஇய வினை நவில் புரவி
இழை அணி நெடும் தேர் ஆழி உறுப்ப
நுண் கொடி மின்னின் பைம் பயிர் துமியத்
தளவ முல்லையொடு தலைஇத் தண்ணென		15
வெறி கமழ் கொண்ட வீ ததை புறவின்
நெடி இடை பின் படக் கடவு-மதி என்று யான்
சொல்லிய அளவை நீடாது வல்லெனத்
தார் மணி மா அறிவுறாஅ
ஊர் நணித் தந்தனை உவகை யாம் பெறவே		20

#255 பாலை - மதுரை மருதன் இளநாகனார்
உலகு கிளர்ந்து அன்ன உரு கெழு வங்கம்
புலவு திரைப் பெரும் கடல் நீர் இடைப் போழ
இரவும் எல்லையும் அசைவு இன்று ஆகி
விரை செலல் இயற்கை வங்கூழ் ஆட்டக்
கோடு உயர் திணி மணல் அகன் துறை நீகான்		5
மாட ஒள் எரி மருங்கு அறிந்து ஒய்ய
ஆள் வினைப் பிரிந்த காதலர் நாள் பல
கழியாமையே அழி படர் அகல
வருவர்-மன்னால் தோழி தண் பணைப்
பொரு புனல் வைப்பின் நம் ஊர் ஆங்கண்		10
கருவிளை முரணிய தண் புதல் பகன்றைப்
பெரு வளம் மலர அல்லி தீண்டிப்
பலவுக் காய்ப் புறத்த பசும் பழப் பாகல்
கூதள மூதிலைக் கொடி நிரைத் தூங்க
அறன் இன்று அலைக்கும் ஆனா வாடை		15
கடி மனை மாடத்துக் கங்குல் வீசத்
திருந்து இழை நெகிழ்ந்து பெரும் கவின் சாய
நிரை வளை ஊரும் தோள் என
உரையொடு செல்லும் அன்பினர்ப் பெறினே

#256 மருதம் - மதுரைத் தமிழ்க் கூத்தனார் கடுவன் மள்ளனார்
பிணங்கு அரில் வள்ளை நீடு இலைப் பொதும்பின்
மடி துயில் முனைஇய வள் உகிர் யாமை
நொடி விடு கல்லின் போகி அகன் துறைப்
பகு வாய் நிறைய நுங்கின் கள்ளின்
நுகர்வார் அருந்து மகிழ்பு இயங்கு நடையொடு		5
தீம் பெரும் பழனம் உழக்கி அயலது
ஆம்பல் மெல் அடை ஒடுங்கும் ஊர
பொய்யால் அறிவென் நின் மாயம் அதுவே
கையகப்பட்டமை அறியாய் நெருநை
மை எழில் உண்கண் மடந்தையொடு வையை		10
ஏர் தரு புதுப் புனல் உரிதினின் நுகர்ந்து
பரத்தை ஆயம் கரப்பவும் ஒல்லாது
கவ்வை ஆகின்றால் பெரிதே காண்தகத்
தொல் புகழ் நிறைந்த பல் பூம் கழனிக்
கரும்பு அமல் படப்பைப் பெரும் பெயர் கள்ளூர்த்		15
திரு நுதல் குறுமகள் அணி நலம் வவ்விய
அறனிலாளன் அறியேன் என்ற
திறன் இல் வெம் சூள் அறி கரி கடாஅய்
முறி ஆர் பெரும் கிளை செறியப் பற்றி
நீறு தலைப்பெய்த ஞான்றை
வீறு சால் அவையத்து ஆர்ப்பினும் பெரிதே

#257 பாலை - உறையூர் மருத்துவன் தாமோதரனார்
வேனில் பாதிரிக் கூனி மா மலர்
நறை வாய் வாடல் நாறும் நாள் சுரம்
அரி ஆர் சிலம்பின் சீறடி சிவப்ப
எம்மொடு ஓர் ஆறு படீஇயர் யாழ நின்
பொம்மல் ஓதி பொதுள வாரி		5
அரும்பு அற மலர்ந்த ஆய் பூ மராஅத்து
சுரும்பு சூழ் அலரி தைஇ வேய்ந்த நின்
தேம் பாய் கூந்தல் குறும் பல மொசிக்கும்
வண்டு கடிந்து ஓம்பல் தேற்றாய் அணிகொள
நுண் கோல் எல் வளை தெளிர்க்கும் முன்கை		10
மெல் இறைப் பணைத் தோள் விளங்க வீசி
வல்லுவை-மன்னால் நடையே கள்வர்
பகை மிகு கவலைச் செல் நெறி காண்மார்
மிசை மரம் சேர்த்திய கவை முறி யாஅத்து
நார் அரை மருங்கின் நீர் வரப் பொளித்துக்		15
களிறு சுவைத்திட்ட கோது உடைத் ததரல்
கல்லா உமணர்க்குத் தீமூட்டு ஆகும்
துன்புறு தகுவன ஆங்கண் புன் கோட்டு
அரில் இவர் புற்றத்து அல்கு_இரை நசைஇ
வெள் அரா மிளிர வாங்கும்		20
பிள்ளை எண்கின் மலை-வயினானே

#258 குறிஞ்சி - பரணர்
நன்னன் உதியன் அரும் கடிப் பாழித்
தொல் முதிர் வேளிர் ஓம்பினர் வைத்த
பொன்னினும் அருமை நன்கு அறிந்தும் அன்னோள்
துன்னலம்-மாதோ எனினும் அஃது ஒல்லாய்
தண் மழை தவழும் தாழ் நீர் நனம் தலைக்		5
கடும் காற்று எடுக்கும் நெடும் பெரும் குன்றத்து
மாய இருள் அளை மாய் கல் போல
மாய்க-தில் வாழிய நெஞ்சே நாளும்
மெல் இயல் குறுமகள் நல் அகம் நசைஇ
அரவு இரை தேரும் அஞ்சுவரு சிறு நெறி		10
இரவின் எய்தியும் பெறாஅய் அருள் வரப்
புல்லென் கண்ணை புலம்புகொண்டு உலகத்து
உள்ளோர்க்கு எல்லாம் பெரு நகை ஆக
காமம் கைம்மிக உறுதர
ஆனா அரும் படர் தலைத்தந்தோயே		15

#259 பாலை - கயமனார்
வேலும் விளங்கின இளையரும் இயன்றனர்
தாரும் தையின தழையும் தொடுத்தன
நிலம் நீர் அற்ற வெம்மை நீங்கப்
பெயல் நீர் தலைஇ உலவை இலை நீத்துக்
குறு முறி ஈன்றன மரனே நறு மலர்		5
வேய்ந்தன போலத் தோன்றிப் பல உடன்
தேம் படப் பொதுளின பொழிலே கானமும்
நனி நன்று ஆகிய பனி நீங்கு வழி_நாள்
பால் எனப் பரத்தரும் நிலவின் மாலைப்
போது வந்தன்று தூதே நீயும்		10
கலங்கா மனத்தை ஆகி என் சொல்
நயந்தனை கொண்மோ நெஞ்சு அமர் தகுவி
தெற்றி உலறினும் வயலை வாடினும்
நொச்சி மென் சினை வணர் குரல் சாயினும்
நின்னினும் மடவள் நனி நின் நயந்த		15
அன்னை அல்லல் தாங்கி நின் ஐயர்
புலி மருள் செம்மல் நோக்கி
வலியாய் இன்னும் தோய்க நின் முலையே

#260 நெய்தல் - மோசிக் கரையனார்
மண்டிலம் மழுக மலை நிறம் கிளர
வண்டு இனம் மலர் பாய்ந்து ஊத மீமிசைக்
கண்டல் கானல் குருகு இனம் ஒலிப்பத்
திரை பாடு அவிய திமில் தொழில் மறப்பக்
கரை ஆடு அலவன் அளை-வயின் செறிய		5
செக்கர் தோன்றத் துணை புணர் அன்றில்
எக்கர்ப் பெண்ணை அக மடல் சேரக்
கழி மலர் கமழ் முகம் கரப்பப் பொழில் மனைப்
புன்னை நறு வீ பொன் நிறம் கொளாஅ
எல்லை பைப்பய கழிப்பி எல் உற		10
யாங்கு ஆகுவல்-கொல் யானே நீங்காது
முது மரத்து உறையும் முரவு வாய் முது புள்
கதுமெனக் குழறும் கழுது வழங்கு அரைநாள்
நெஞ்சு நெகிழ் பருவரல் செய்த
அன்பிலாளன் அறிவு நயந்தேனே		15

#261 பாலை - பாலை பாடிய பெருங்கடுங்கோ
கானப் பாதிரிக் கரும் தகட்டு ஒள் வீ
வேனில் அதிரலொடு விரைஇக் காண்வர
சில் ஐம் கூந்தல் அழுத்தி மெல் இணர்த்
தேம் பாய் மராஅம் அடைச்சி வான் கோல்
இலங்கு வளை தெளிர்ப்ப வீசிச் சிலம்பு நகச்		5
சின் மெல் ஒதுக்கமொடு மென்மெல இயலி நின்
அணி மாண் சிறுபுறம் காண்கம் சிறு நனி
ஏகு என ஏகல் நாணி ஒய்யென
மா கொள் நோக்கமொடு மடம் கொளச் சாஅய்
நின்று தலை இறைஞ்சியோளே அது கண்டு		10
யாம் முந்துறுதல் செல்லேம் ஆயிடை
அரும் சுரத்து அல்கியேமே இரும் புலி
களிறு அட்டுக் குழுமும் ஓசையும் களி பட்டு
வில்லோர் குறும்பில் ததும்பும்
வல் வாய் கடும் துடிப் பாணியும் கேட்டே		15

#262 குறிஞ்சி - பரணர்
முதை படு பசும் காட்டு அரில் பவர் மயக்கிப்
பகடு பல பூண்ட உழவுறு செம் செய்
இடு முறை நிரம்பி ஆகு வினைக் கலித்துப்
பாசிலை அமன்ற பயறு ஆ புக்கு என
வாய்மொழித் தந்தையைக் கண் களைந்து அருளாது		5
ஊர் முது கோசர் நவைத்த சிறுமையின்
கலத்தும் உண்ணாள் வாலிதும் உடாஅள்
சினத்தின் கொண்ட படிவம் மாறாள்
மறம் கெழு தானைக் கொற்றக் குறும்பியன்
செரு இயல் நன் மான் திதியற்கு உரைத்து அவர்		10
இன் உயிர் செகுப்பக் கண்டு சினம் மாறிய
அன்னிமிஞிலி போல மெய்மலிந்து
ஆனா உவகையேம் ஆயினெம் பூ மலிந்து
அருவி ஆர்க்கும் அயம் திகழ் சிலம்பின்
நுண் பல துவலை புதல் மிசை நனைக்கும்		15
வண்டு படு நறவின் வண் மகிழ்ப் பேகன்
கொண்டல் மா மலை நாறி
அம் தீம் கிளவி வந்த மாறே

#263 பாலை - கருவூர் கண்ணம்பாளனார்
தயங்கு திரைப் பெரும் கடல் உலகு தொழத் தோன்றி
வயங்கு கதிர் விரிந்த உரு கெழு மண்டிலம்
கயம் கண் வறப்பப் பாஅய் நல் நிலம்
பயம் கெடத் திருகிய பைது அறு காலை
வேறு பல் கவலைய வெருவரு வியன் காட்டு		5
ஆறு செல் வம்பலர் வரு திறம் காண்மார்
வில் வல் ஆடவர் மேல் ஆள் ஒற்றி
நீடு நிலை யாஅத்துக் கோடு கொள் அரும் சுரம்
கொண்டனன் கழிந்த வன்கண் காளைக்கு
அவள் துணிவு அறிந்தனென் ஆயின் அன்னோ		10
ஒளிறு வேல் கோதை ஓம்பிக் காக்கும்
வஞ்சி அன்ன என் வள நகர் விளங்க
இனிதினின் புணர்க்குவென்-மன்னோ துனி இன்று
திரு நுதல் பொலிந்த என் பேதை
வரு முலை முற்றத்து ஏமுறு துயிலே		15

#264 முல்லை - உம்பற் காட்டு இளங்கண்ணனார்
மழை இல் வானம் மீன் அணிந்து அன்ன
குழை அமல் முசுண்டை வாலிய மலர
வரி வெண் கோடல் வாங்கு குலை வான் பூப்
பெரிய சூடிய கவர் கோல் கோவலர்
எல்லுப் பெயல் உழந்த பல் ஆன் நிரையொடு		5
நீர் திகழ் கண்ணியர் ஊர்-வயின் பெயர்தர
நனி சேண்பட்ட மாரி தளி சிறந்து
ஏர் தரு கடு நீர் தெருவு-தொறு ஒழுக
பேர் இசை முழக்கமொடு சிறந்து நனி மயங்கிக்
கூதிர் நின்றன்றால் பொழுதே காதலர்		10
நம் நிலை அறியார் ஆயினும் தம் நிலை
அறிந்தனர்-கொல்லோ தாமே ஓங்கு நடைக்
காய் சின யானை கங்குல் சூழ
அஞ்சுவர இறுத்த தானை
வெம் சின வேந்தன் பாசறையோரே		15

#265 பாலை - மாமூலனார்
புகையின் பொங்கி வியல் விசும்பு உகந்து
பனி ஊர் அழல் கொடி கடுப்பத் தோன்றும்
இமயச் செவ் வரை மானும்-கொல்லோ
பல் புகழ் நிறைந்த வெல் போர் நந்தர்
சீர் மிகு பாடலி குழீஇக் கங்கை		5
நீர் முதல் கரந்த நிதியம்-கொல்லோ
எவன்-கொல் வாழி தோழி வயங்கு ஒளி
நிழல்-பால் அறலின் நெறித்த கூந்தல்
குழல் குரல் பாவை இரங்க நம் துறந்து
ஒண் தொடி நெகிழச் சாஅய்ச் செல்லலொடு		10
கண் பனி கலுழ்ந்து யாம் ஒழியப் பொறை அடைந்து
இன் சிலை எழில் ஏறு கெண்டிப் புரைய
நிணம் பொதி விழுத் தடி நெருப்பின் வைத்து எடுத்து
அணங்கு அரு மரபின் பேஎய் போல
விளர் ஊன் தின்ற வேட்கை நீங்கத்		15
துகள் அற விளைந்த தோப்பி பருகித்
குலாஅ வல் வில் கொடு நோக்கு ஆடவர்
புலாஅல் கையர் பூசா வாயர்
ஒராஅ உருட்டும் குடுமிக் குராலொடு
மரா அம் சீறூர் மருங்கில் தூங்கும்		20
செம் நுதல் யானை வேங்கடம் தழீஇ
வெம் முனை அரும் சுரம் இறந்தோர்
நம்மினும் வலிதாத் தூக்கிய பொருளே

#266 மருதம் - பரணர்
கோடு உற நிவந்த நீடு இரும் பரப்பின்
அந்திப் பராஅய புதுப் புனல் நெருநை
மைந்து மலி களிற்றின் தலைப் புணை தழீஇ
நரந்தம் நாறும் குவை இரும் கூந்தல்
இளம் துணை மகளிரொடு ஈர் அணிக் கலைஇ		5
நீர் பெயர்ந்து ஆடிய ஏந்து எழில் மழைக் கண்
நோக்கு-தொறும் நோக்கு-தொறும் தவிர்வு இலை ஆகிக்
காமம் கைம்மிகச் சிறத்தலின் நாண் இழந்து
ஆடினை என்ப மகிழ்ந அதுவே
யாழ் இசை மறுகின் நீடூர் கிழவோன்		10
வாய் வாள் எவ்வி ஏவல் மேவார்
நெடு மிடல் சாய்த்த பசும் பூண் பொருந்தலர்
அரிமணவாயில் உறத்தூர் ஆங்கண்
கள் உடைப் பெரும் சோற்று எல் இமிழ் அன்ன
கவ்வை ஆகின்றால் பெரிதே இனி அஃது		15
அவலம் அன்று-மன் எமக்கே அயல
கழனி உழவர் கலி சிறந்து எடுத்த
கறங்கு இசை வெரீஇப் பறந்த தோகை
அணங்கு உடை வரைப்பகம் பொலிய வந்து இறுக்கும்
திரு மணி விளக்கின் அலைவாய்ச்		20
செரு மிகு சேஎயொடு உற்ற சூளே

#267 பாலை - பாலை பாடிய பெருங்கடுங்கோ
நெஞ்சு நெகிழ்தகுந கூறி அன்பு கலந்து
அறாஅ வஞ்சினம் செய்தோர் வினை புரிந்து
திறம் வேறு ஆகல் எற்று என்று ஒற்றி
இனைதல் ஆன்றிசின் நீயே சினை பாய்ந்து
உதிர்த்த கோடை உட்குவரு கடத்திடை		5
வெருக்கு அடி அன்ன குவி முகிழ் இருப்பை
மருப்புக் கடைந்து அன்ன கொள்ளை வான் பூ
மயிர்க் கால் எண்கின் ஈர் இனம் கவர
மை பட்டு அன்ன மா முக முசு இனம்
பைது அறு நெடும் கழை பாய்தலின் ஒய்யென		10
வெதிர் படு வெண்ணெல் வெவ் அறைத் தாஅய்
உகிர் நெரி ஓசையின் பொங்குவன பொரியும்
ஓங்கல் வெற்பின் சுரம் பல இறந்தோர்
தாம் பழி உடையர் அல்லர் நாளும்
நயந்தோர்ப் பிணித்தல் தேற்றா வயங்கு வினை		15
வாள் ஏர் எல் வளை நெகிழ்த்த
தோளே தோழி தவறுடையவ்வே

#268 குறிஞ்சி - வடம வண்ணக்கன் பேரி சாத்தனார்
அறியாய் வாழி தோழி பொறி வரிப்
பூ நுதல் யானையொடு புலி பொரக் குழைந்த
குருதிச் செம் களம் புலவு அற வேங்கை
உரு கெழு நாற்றம் குளவியொடு விலங்கும்
மா மலை நாடனொடு மறு இன்று ஆகிய		5
காமம் கலந்த காதல் உண்டு எனின்
நன்று-மன் அது நீ நாடாய் கூறுதி
நாணும் நட்பும் இல்லோர் தேரின்
யான் அலது இல்லை இவ் உலகத்தானே
இன் உயிர் அன்ன நின்னொடும் சூழாது		10
முளை அணி மூங்கிலின் கிளையொடு பொலிந்த
பெரும் பெயர் எந்தை அரும் கடி நீவிச்
செய்து பின் இரங்கா வினையொடு
மெய் அல் பெரும் பழி எய்தினென் யானே

#269 பாலை - மதுரை மருதன் இளநாகனார்
தொடி தோள் இவர்க எவ்வமும் தீர்க
நெறி இரும் கதுப்பின் கோதையும் புனைக
ஏறு உடை இன நிரை பெயரப் பெயராது
செறி சுரை வெள் வேல் மழவர்த் தாங்கிய
தறுகணாளர் நல் இசை நிறுமார்			5
பிடி மடிந்து அன்ன குறும்பொறை மருங்கின்
நட்ட போலும் நடாஅ நெடும் கல்
அகல் இடம் குயின்ற பல் பெயர் மண்ணி
நறு விரை மஞ்சள் ஈர்ம் புறம் பொலிய
அம்பு கொண்டு அறுத்த ஆர் நார் உரிவையின்		10
செம் பூம் கரந்தை புனைந்த கண்ணி
வரி வண்டு ஆர்ப்பச் சூட்டிக் கழல் கால்
இளையர் பதிப் பெயரும் அரும் சுரம் இறந்தோர்
தைஇ நின்ற தண் பெயல் கடை நாள்
பொலம் காசு நிரைத்த கோடு ஏந்து அல்குல்		15
நலம் கேழ் மாக் குரல் குழையொடு துயல்வரப்
பாடு ஊர்பு எழுதரும் பகு வாய் மண்டிலத்து
வயிர் இடைப்பட்ட தெள் விளி இயம்ப
வண்டல் பாவை உண்துறை தரீஇத்
திரு நுதல் மகளிர் குரவை அயரும்		20
பெரு நீர்க் கானல் தழீஇய இருக்கை
வாணன் சிறுகுடி வணங்கு கதிர் நெல்லின்
யாணர்த் தண் பணை போது வாய் அவிழ்ந்த
ஒண் செம் கழுநீர் அன்ன நின்
கண் பனி துடைமார் வந்தனர் விரைந்தே		25

#270 நெய்தல் - சாகலாசனார்
இரும் கழி மலர்ந்த வள் இதழ் நீலம்
புலாஅல் மறுகின் சிறுகுடிப் பாக்கத்து
இன மீன் வேட்டுவர் ஞாழலொடு மிலையும்
மெல்லம்புலம்ப நெகிழ்ந்தன தோளே
சே இறாத் துழந்த நுரை பிதிர்ப் படு திரை		5
பராஅரைப் புன்னை வாங்கு சினைத் தோயும்
கானல் அம் பெரும் துறை நோக்கி இவளே
கொய் சுவல் புரவிக் கைவண் கோமான்
நல் தேர்க் குட்டுவன் கழுமலத்து அன்ன
அம் மா மேனி தொல் நலம் தொலையத்		10
துஞ்சாக் கண்ணள் அலமரும் நீயே
கடவுள் மரத்த முள் மிடை குடம்பைச்
சேவலொடு புணரா சிறு கரும் பேடை
இன்னாது உயங்கும் கங்குலும்
நும் ஊர் உள்ளுவை நோகோ யானே		15

#271 பாலை - காவிரிப்பூம்பட்டினத்துச் செங்கண்ணனார்
பொறி வரிப் புறவின் செம் கால் சேவல்
சிறு புன் பெடையொடு சேண் புலம் போகி
அரி மணல் இயவில் பரல் தேர்ந்து உண்டு
வரி மரல் வாடிய வான் நீங்கு நனம் தலைக்
குறும்பொறை மருங்கின் கோள் சுரம் நீந்தி		5
நெடும் சேண் வந்த நீர் நசை வம்பலர்
செல் உயிர் நிறுத்த சுவைக் காய் நெல்லிப்
பல் காய் அம் சினை அகவும் அத்தம்
சென்று நீர் அவணிர் ஆகி நின்று தரு
நிலை அரும் பொருட்பிணி நினைந்தனிர் எனினே		10
வல்வது ஆக நும் செய்வினை இவட்கே
களி மலி கள்ளின் நல் தேர் அவியன்
ஆடு இயல் இள மழை சூடித் தோன்றும்
பழம் தூங்கு விடரகத்து எழுந்த காம்பின்
கண் இடை புரையும் நெடு மென் பணைத் தோள்		15
திருந்து கோல் ஆய் தொடி ஞெகிழின்
மருந்தும் உண்டோ பிரிந்து உறை நாட்டே

#272 குறிஞ்சி - மதுரை அறுவை வாணிகன் இளவேட்டனார்
இரும் புலி தொலைத்த பெரும் கை வேழத்துப்
புலவு நாறு புகர் நுதல் கழுவக் கங்குல்
அருவி தந்த அணங்கு உடை நெடும் கோட்டு
அஞ்சுவரு விடர் முகை ஆர் இருள் அகற்றி
மின் ஒளிர் எஃகம் செல் நெறி விளக்கத்		5
தனியன் வந்து பனி அலை முனியான்
நீர் இழி மருங்கின் ஆர் இடத்து அமன்ற
குளவியொடு மிடைந்த கூதளம் கண்ணி
அசையா நாற்றம் அசை வளி பகரத்
துறுகல் நண்ணிய கறி இவர் படப்பைக்		10
குறி இறைக் குரம்பை நம் மனை-வயின் புகுதரும்
மெய் மலி உவகையன் அ நிலை கண்டு
முருகு என உணர்ந்து முகமன் கூறி
உருவச் செந்தினை நீரொடு தூஉய்
நெடுவேள் பரவும் அன்னை அன்னோ		15
என் ஆவது-கொல் தானே பொன் என
மலர்ந்த வேங்கை அலங்கு சினை பொலிய
மணி நிற மஞ்ஞை அகவும்
அணி மலை நாடனொடு அமைந்த நம் தொடர்பே

#273 பாலை - ஔவையார்
விசும்பு விசைத்து எழுந்த கூதளம் கோதையின்
பசும் கால் வெண் குருகு வாப் பறை வளைஇ
ஆர்கலி வள வயின் போதொடு பரப்பப்
புலம் புனிறு தீர்ந்த புது வரல் அற்சிரம்
நலம் கவர் பசலை நலியவும் நம் துயர்		5
அறியார்-கொல்லோ தாமே அறியினும்
நம் மனத்து அன்ன மென்மை இன்மையின்
நம் உடை உலகம் உள்ளார்-கொல்லோ
யாங்கு என உணர்கோ யானே வீங்குபு
தலை வரம்பு அறியாத தகை வரல் வாடையொடு		10
முலை இடைத் தோன்றிய நோய் வளர் இள முளை
அசைவு உடை நெஞ்சத்து உயவுத் திரள் நீடி
ஊரோர் எடுத்த அம்பல் அம் சினை
ஆராக் காதல் அவிர் தளிர் பரப்பிப்
புலவர் புகழ்ந்த நாண் இல் பெரு மரம்		15
நில வரை எல்லாம் நிழற்றி
அலர் அரும்பு ஊழ்ப்பவும் வாராதோரே

#274 முல்லை - இடைக்காடனார்
இரு விசும்பு அதிர முழங்கி அர நலிந்து
இகு பெயல் அழி துளி தலைஇ வானம்
பருவம் செய்த பானாள் கங்குல்
ஆடு தலைத் துருவின் தோடு ஏமார்ப்பக்
கடை கோல் சிறு தீ அடைய மாட்டித்		5
திண் கால் உறியன் பானையன் அதளன்
நுண் பல் துவலை ஒரு திறம் நனைப்பத்
தண்டு கால் ஊன்றிய தனி நிலை இடையன்
மடி விடு வீளை கடிது சென்று இசைப்படத
தெறி மறி பார்க்கும் குறுநரி வெரீஇ		10
முள் உடைக் குறும் தூறு இரியப் போகும்
தண் நறு புறவினதுவே நறு மலர்
முல்லை சான்ற கற்பின்
மெல் இயல் குறுமகள் உறைவு இன் ஊரே

#275 பாலை - கயமனார்
ஓங்கு நிலைத் தாழி மல்கச் சார்த்திக்
குடை அடை நீரின் மடையினள் எடுத்த
பந்தர் வயலை பந்து எறிந்து ஆடி
இளமைத் தகைமையை வள மனைக் கிழத்தி
பிதிர்வை நீரை வெண் நீறு ஆக என		5
யாம் தன் கழறும் காலைத் தான் தன்
மழலை இன் சொல் கழறல் இன்றி
இன் உயிர் கலப்பக் கூறி நல்_நுதல்
பெரும் சோற்று இல்லத்து ஒருங்கு இவண் இராஅள்
ஏதிலாளன் காதல் நம்பித்		10
திரள் அரை இருப்பைத் தொள்ளை வான் பூக்
குருளை எண்கின் இரும் கிளை கவரும்
வெம் மலை அரும் சுரம் நம் இவண் ஒழிய
இரு நிலன் உயிர்க்கும் இன்னாக் கானம்
நெருநை போகிய பெரு மடத் தகுவி		15
ஐது அகல் அல்குல் தழை அணி கூட்டும்
கூழை நொச்சிக் கீழது என் மகள்
செம் புடைச் சிறு விரல் வரித்த
வண்டலும் காண்டிரோ கண் உடையீரே

#276 மருதம் - பரணர்
நீள் இரும் பொய்கை இரை வேட்டு எழுந்த
வாளை வெண் போத்து உணீஇய நாரை தன்
அடி அறிவுறுதல் அஞ்சிப் பைப்பயக்
கடி இலம் புகூஉம் கள்வன் போலச்
சாஅய் ஒதுங்கும் துறை கேழ் ஊரனொடு		5
ஆவது ஆக இனி நாண் உண்டோ
வருக-தில் அம்ம எம் சேரி சேர
அரி வேய் உண்கண் அவன் பெண்டிர் காண
தாரும் தானையும் பற்றி ஆரியர்
பிடி பயின்று தரூஉம் பெரும் களிறு போலத்		10
தோள் கந்து ஆகக் கூந்தலின் பிணித்து அவன்
மார்பு கடிகொள்ளேன் ஆயின் ஆர்வுற்று
இரந்தோர்க்கு ஈயாது ஈட்டியோன் பொருள் போல்
பரந்து வெளிப்படாது ஆகி
வருந்துக-தில்ல யாய் ஓம்பிய நலனே		15

#277 பாலை - கருவூர் நன்மார்பன்
தண் கதிர் மண்டிலம் அவிர் அறச் சாஅய்ப்
பகல் அழி தோற்றம் போலப் பையென
நுதல் ஒளி கரப்பவும் ஆள்வினை தருமார்
தவல் இல் உள்ளமொடு எஃகு துணை ஆகக்
கடையல் அம் குரல வாள் வரி உழுவை		5
பேழ் வாய்ப் பிணவின் விழுப் பசி நோனாது
இரும் பனம் செறும்பின் அன்ன பரூஉ மயிர்ச்
சிறு கண் பன்றி வரு திறம் பார்க்கும்
அத்தம் ஆர் அழுவத்து ஆங்கண் நனம் தலை
பொத்து உடை மரத்த புகர் படு நீழல்		10
ஆறு செல் வம்பலர் அசையுநர் இருக்கும்
ஈரம் இல் வெம் சுரம் இறந்தோர் நம்-வயின்
வாரா அளவை ஆய்_இழை கூர் வாய்
அழல் அகைந்து அன்ன காமர் துதை மயிர்
மனை உறை கோழி மறன் உடைச் சேவல்		15
போர் புரி எருத்தம் போலக் கஞலிய
பொங்கு அழல் முருக்கின் ஒண் குரல் மாந்திச்
சிதர் சிதர்ந்து உகுத்த செவ்வி வேனில்
வந்தன்று அம்ம தானே
வாரார் தோழி நம் காதலோரே		20

#278 குறிஞ்சி - கபிலர்
குண கடல் முகந்த கொள்ளை வானம்
பணை கெழு வேந்தர் பல் படைத் தானைத்
தோல் நிரைத்து அனைய ஆகி வலன் ஏர்பு
கோல் நிமிர் கொடியின் வசிபட மின்னி
உரும் உரறு அதிர் குரல் தலைஇப் பானாள்		5
பெரு மலை மீமிசை முற்றின ஆயின்
வாள் இலங்கு அருவி தாஅய் நாளை
இரு வெதிர் அம் கழை ஒசியத் தீண்டி
வருவது-மாதோ வண் பரி உந்தி
நனி பெரும் பரப்பின் நம் ஊர் முன்துறை		10
பனி பொரு மழைக் கண் சிவப்பப் பானாள்
முனி படர் அகல மூழ்குவம்-கொல்லோ
மணி மருள் மேனி ஆய் நலம் தொலையத்
தணிவு அரும் துயரம் செய்தோன்
அணி கிளர் நெடு வரை ஆடிய நீரே		15

#279 பாலை - இருங்கோன் ஒல்லையாயன் செங்கண்ணனார்
நட்டோர் இன்மையும் கேளிர் துன்பமும்
ஒட்டாது உறையுநர் பெருக்கமும் காணூஉ
ஒரு பதி வாழ்தல் ஆற்றுப-தில்ல
பொன் அவிர் சுணங்கொடு செறிய வீங்கிய
மென் முலை முற்றம் கடவாதோர் என		5
நள்ளென் கங்குலும் பகலும் இயைந்துஇயைந்து
உள்ளம் பொத்திய உரம் சுடு கூர் எரி
ஆள்வினை மாரியின் அவியா நாளும்
கடறு உழந்து இவணம் ஆகப் படர் உழந்து
யாங்கு ஆகுவள்-கொல் தானே தீம் தொடை		10
விளரி நரம்பின் நயவரு சீறியாழ்
மலி பூம் பொங்கர் மகிழ் குரல் குயிலொடு
புணர் துயில் எடுப்பும் புனல் தெளி காலையும்
நம் உடை மதுகையள் ஆகி அணி நடை
அன்ன மாண் பெடையின் மென்மெல இயலிக்		15
கையறு நெஞ்சினள் அடைதரும்
மை ஈர் ஓதி மாஅயோளே

#280 நெய்தல் - அம்மூவனார்
பொன் அடர்ந்து அன்ன ஒள் இணர்ச் செருந்திப்
பல் மலர் வேய்ந்த நலம் பெறு கோதையள்
திணி மணல் அடைகரை அலவன் ஆட்டி
அசையினள் இருந்த ஆய் தொடிக் குறுமகள்
நலம் சால் விழுப் பொருள் கலம் நிறை கொடுப்பினும்		5
பெறல் அரும்-குரையள் ஆயின் அறம் தெரிந்து
நாம் உறை தேஎம் மரூஉப் பெயர்ந்து அவனொடு
இரு நீர்ச் சேர்ப்பின் உப்பு உடன் உழுதும்
பெருநீர்க் குட்டம் புணையொடு புக்கும்
படுத்தனம் பணிந்தனம் அடுத்தனம் இருப்பின்		10
தருகுவன்-கொல்லோ தானே விரி திரைக்
கண் திரள் முத்தம் கொண்டு ஞாங்கர்த்
தேன் இமிர் அகன் கரைப் பகுக்கும்
கானல் அம் பெரும் துறைப் பரதவன் எமக்கே

#281 பாலை - மாமூலனார்
செய்வது தெரிந்திசின் தோழி அல்கலும்
அகலுள் ஆண்மை அச்சு அறக் கூறிய
சொல் பழுது ஆகும் என்றும் அஞ்சாது
ஒல்கு இயல் மட மயில் ஒழித்த பீலி
வான் போழ் வல் வில் சுற்றி நோன் சிலை		5
அம் வார் விளிம்பிற்கு அமைந்த நொவ்வு இயல்
கனை குரல் இசைக்கும் விரை செலல் கடும் கணை
முரண் மிகு வடுகர் முன் உற மோரியர்
தென்திசை மாதிரம் முன்னிய வரவிற்கு
விண்ணுற ஓங்கிய பனி இரும் குன்றத்து		10
ஒண் கதிர் திகிரி உருளிய குறைத்த
அறை இறந்து அவரோ சென்றனர்
பறை அறைந்து அன்ன அலர் நமக்கு ஒழித்தே

#282 குறிஞ்சி - தொல் கபிலன்
பெரு மலைச் சிலம்பின் வேட்டம் போகிய
செறி மடை அம்பின் வல் வில் கானவன்
பொருது தொலை யானை வெண் கோடு கொண்டு
நீர் திகழ் சிலம்பின் நல் பொன் அகழ்வோன்
கண் பொருது இமைக்கும் திண் மணி கிளர்ப்ப		5
வை நுதி வான் மருப்பு ஒடிய உக்க
தெண் நீர் ஆலி கடுக்கும் முத்தமொடு
மூ வேறு தாரமும் ஒருங்கு உடன் கொண்டு
சாந்தம் பொறை_மரம் ஆக நறை நார்
வேங்கைக் கண்ணியன் இழிதரும் நாடற்கு		10
இன் தீம் பலவின் ஏர் கெழு செல்வத்து
எந்தையும் எதிர்ந்தனன் கொடையே அலர் வாய்
அம்பல் ஊரும் அவனொடு மொழியும்
சாய் இறை திரண்ட தோள் பாராட்டி
யாயும் அவனே என்னும் யாமும்		15
வல்லே வருக வரைந்த நாள் என
நல் இறை மெல் விரல் கூப்பி
இல் உறை கடவுட்கு ஓக்குதும் பலியே

#283 பாலை - மதுரை மருதன் இளநாகனார்
நல் நெடும் கதுப்பொடு பெரும் தோள் நீவிய
நின் இவண் ஒழிதல் அஞ்சிய என்னினும்
செலவு தலைக்கொண்ட பெரு விதுப்பு உறுவி
பல் கவர் மருப்பின் முது மான் போக்கிச்
சில் உணாத் தந்த சீறூர்ப் பெண்டிர்		5
திரி வயின் தெவுட்டும் சேண் புலக் குடிஞைப்
பைதல் மென் குரல் ஐது வந்து இசைத்-தொறும்
போகுநர் புலம்பும் ஆறே ஏகுதற்கு
அரிய ஆகும் என்னாமைக் கரி மரம்
கண் அகை இளம் குழை கால் முதல் கவினி		10
விசும்புடன் இருண்டு வெம்மை நீங்கப்
பசும் கண் வானம் பாய் தளி பொழிந்து எனப்
புல் நுகும்பு எடுத்த நல் நெடும் கானத்து
ஊட்டுறு பஞ்சிப் பிசிர் பரந்து அன்ன
வண்ண மூதாய் தண் நிலம் வரிப்ப		15
இனிய ஆகுக தணிந்தே
இன்னா நீப்பின் நின்னொடு செலற்கே

#284 முல்லை - இடைக்காடனார்
சிறி இலை நெல்லிக் காய் கண்டு அன்ன
குறு விழிக் கண்ண கூரல் அம் குறு முயல்
முடந்தை வரகின் வீங்கு பீள் அருந்துபு
குடந்தை அம் செவிய கோள் பவர் ஒடுங்கி
இன் துயில் எழுந்து துணையொடு போகி		5
முன்றில் சிறு நிறை நீர் கண்டு உண்ணும்
புன்புலம் தழீஇய பொறை முதல் சிறுகுடித்
தினைக் கள் உண்ட தெறி கோல் மறவர்
விசைத்த வில்லர் வேட்டம் போகி
முல்லைப் படப்பைப் புல்வாய் கெண்டும்		10
காமர் புறவினதுவே காமம்
நம்மினும் தான் தலைமயங்கிய
அம் மா அரிவை உறைவு இன் ஊரே

#285 பாலை - காவிரிப்பூம் பட்டினத்துக் காரிக்கண்ணனார்
ஒழியச் சென்மார் செல்ப என்று நாம்
அழி படர் உழக்கும் அவல நெஞ்சத்து
எவ்வம் இகந்து சேண் அகல வை எயிற்று
ஊன் நசைப் பிணவின் உறு பசி களைஇயர்
காடு தேர் மடப் பிணை அலறக் கலையின்		5
ஓடு குறங்கு அறுத்த செந்நாய் ஏற்றை
வெயில் புலந்து இளைக்கும் வெம்மைய பயில் வரி
இரும் புலி வேங்கைக் கரும் தோல் அன்ன
கல் எடுத்து எறிந்த பல் கிழி உடுக்கை
உலறு குடை வம்பலர் உயர் மரம் ஏறி		10
ஏறு வேட்டு எழுந்த இனம் தீர் எருவை
ஆடு செவி நோக்கும் அத்தம் பணைத் தோள்
குவளை உண்கண் இவளும் நம்மொடு
வரூஉம் என்றனரே காதலர்
வாராய் தோழி முயங்குகம் பலவே		15

#286 மருதம் - ஓரம்போகியார்
வெள்ளி விழுத் தொடி மென் கருப்பு உலக்கை
வள்ளி நுண் இடை வயின்வயின் நுடங்க
மீன் சினை அன்ன வெண் மணல் குவைஇக்
காஞ்சி நீழல் தமர் வளம் பாடி
ஊர்க் குறுமகளிர் குறுவழி விறந்த		5
வராஅல் அருந்திய சிறு சிரல் மருதின்
தாழ் சினை உறங்கும் தண் துறை ஊர
விழையா உள்ளம் விழையும் ஆயினும்
என்றும் கேட்டவை தோட்டி ஆக மீட்டு ஆங்கு
அறனும் பொருளும் வழாமை நாடித்		10
தன் தகவு உடைமை நோக்கி மற்று அதன்
பின் ஆகும்மே முன்னியது முடித்தல்
அனைய பெரியோர் ஒழுக்கம் அதனால்
அரிய பெரியோர்த் தெரியும் காலை
நும்மோர் அன்னோர் மாட்டும் இன்ன		15
பொய்யொடு மிடைந்தவை தோன்றின்
மெய் யாண்டு உளதோ இவ் உலகத்தானே

#287 பாலை - குடவாயிற்கீரத்தனார்
தொடி அணி முன்கைத் தொகு விரல் குவைஇப்
படிவ நெஞ்சமொடு பகல் துணை ஆக
நோம்-கொல் அளியள் தானே தூங்கு நிலை
மரை ஏறு சொறிந்த மாத் தாள் கந்தின்
சுரை இவர் பொதியில் அம் குடிச் சீறூர்		5
நாள்_பலி மறந்த நரைக் கண் இட்டிகைப்
புரிசை மூழ்கிய பொரி அரை ஆலத்து
ஒரு தனி நெடு வீழ் உதைத்த கோடை
துணைப் புறா இரிக்கும் தூய் மழை நனம் தலைக்
கணைக் கால் அம் பிணை ஏறு புறம் நக்க		10
ஒல்கு நிலை யாஅத்து ஓங்கு சினை பயந்த
அல்குறு வரி நிழல் அசையினம் நோக்க
அரம்பு வந்து அலைக்கும் மாலை
நிரம்பா நீள் இடை வருந்துதும் யாமே

#288 குறிஞ்சி - விற்றூற்று மூதெயினனார்
செல்-மதி சிறக்க நின் உள்ளம் நின் மலை
ஆரம் நீவிய அம் பகட்டு மார்பினை
சாரல் வேங்கைப் படு சினை புதுப் பூ
முருகு முரண் கொள்ளும் உருவக் கண்ணியை
எரி தின் கொல்லை இறைஞ்சிய ஏனல்		5
எவ்வம் கூரிய வைகலும் வருவோய்
கனி முதிர் அடுக்கத்து எம் தனிமை காண்டலின்
எண்மை செய்தனை ஆகுவை நண்ணிக்
கொடியோர் குறுகும் நெடி இரும் குன்றத்து
இட்டு ஆறு இரங்கும் விட்டு ஒளிர் அருவி		10
அரு வரை இழிதரும் வெருவரு படாஅர்க்
கயம் தலை மந்தி உயங்கு பசி களைஇயர்
பார்ப்பின் தந்தை பழச் சுளை தொடினும்
நனி நோய் ஏய்க்கும் பனி கூர் அடுக்கத்து
மகளிர் மாங்காட்டு அற்றே துகள் அறக்		15
கொந்தொடு உதிர்த்த கதுப்பின்
அம் தீம் கிளவித் தந்தை காப்பே

#289 பாலை - எயினந்தை மகன் இளங்கீரனார்
சிலை ஏறட்ட கணை வீழ் வம்பலர்
உயர் பதுக்கு இவர்ந்த ததர் கொடி அதிரல்
நெடு நிலை நடுகல் நாள் பலிக் கூட்டும்
சுரன் இடை விலங்கிய மரன் ஓங்கு இயவின்
வந்து வினை வலித்த நம்-வயின் என்றும்		5
தெருமரல் உள்ளமொடு வருந்தல் ஆனாது
நெகிழா மென் பிணி வீங்கிய கை சிறிது
அவிழினும் உயவும் ஆய் மடத் தகுவி
சேண் உறை புலம்பின் நாள் முறை இழைத்த
திண் சுவர் நோக்கி நினைந்து கண் பனி		10
நெகிழ் நூல் முத்தின் முகிழ் முலை தெறிப்ப
மை அற விரிந்த படை அமை சேக்கை
ஐ மென் தூவி அணை சேர்பு அசைஇ
மையல் கொண்ட மதன் அழி இருக்கையள்
பகு வாய்ப் பல்லி படு-தொறும் பரவி		15
நல்ல கூறு என நடுங்கிப்
புல்லென் மாலையொடு பொரும்-கொல் தானே

#290 நெய்தல் - நக்கீரர்
குடுமிக் கொக்கின் பைம் கால் பேடை
இரும் சேற்று அள்ளல் நாள்_புலம் போகிய
கொழு மீன் வல்சிப் புன் தலைச் சிறாஅர்
நுண் ஞாண் அம் வலைச் சேவல் பட்டு என
அல்குறு பொழுதின் மெல்கு இரை மிசையாது		5
பைதல் பிள்ளை தழீஇ ஒய்யென
அம் கண் பெண்ணை அன்புற நரலும்
சிறு பல் தொல் குடிப் பெருநீர்ச் சேர்ப்பன்
கழி சேர் புன்னை அழி பூம் கானல்
தணவா நெஞ்சமொடு தமியன் வந்து நம்		10
மணவா முன்னும் எவனோ தோழி
வெண் கோட்டு யானை விறல் போர்க் குட்டுவன்
தெண் திரைப் பரப்பின் தொண்டி முன்துறைச்
சுரும்பு உண மலர்ந்த பெரும் தண் நெய்தல்
மணி ஏர் மாண் நலம் ஒரீஇப்		15
பொன் நேர் வண்ணம் கொண்ட என் கண்ணே

#291 பாலை - பாலை பாடிய பெரும் கடுங்கோ
வானம் பெயல் வளம் கரப்பக் கானம்
உலறி இலை இல ஆகப் பல உடன்
ஏறு உடை ஆயத்து இனம் பசி தெறுப்பக்
கயன் அற வறந்த கோடையொடு நயன் அறப்
பெரு வரை நிவந்த மருங்கில் கொடு வரிப்		5
புலியொடு பொருது சினம் சிறந்து வலியோடு
உரவுக் களிறு ஒதுங்கிய மருங்கில் பரூஉப் பரல்
சிறு பல் மின்மினி கடுப்ப எவ்வாயும்
நிறைவன இமைக்கும் நிரம்பா நீள் இடை
எருவை இரும் சிறை இரீஇய விரி இணர்த்	10
தாது உண் தும்பி முரல் இசை கடுப்பப்
பரியினது உயிர்க்கும் அம்பினர் வெருவர
உவலை சூடிய தலையர் கவலை
ஆர்த்து உடன் அரும் பொருள் வவ்வலின் யாவதும்
சாத்து இடை வழங்காச் சேண் சிமை அதரச்		15
சிறி இலை நெல்லித் தீம் சுவைத் திரள் காய்
உதிர்வன தாஅம் அத்தம் தவிர்வு இன்று
புள்ளி அம் பிணை உணீஇய உள்ளி
அறு மருப்பு ஒழித்த தலைய தோல் பொதி
மறு மருப்பு இளம் கோடு அதிரக் கூஉம்		20
சுடர் தெற வருந்திய அரும் சுரம் இறந்து ஆங்கு
உள்ளினை வாழிய நெஞ்சே போது எனப்
புலம் கமழ் நாற்றத்து இரும் பல் கூந்தல்
நல் எழில் மழைக் கண் நம் காதலி
மெல் இறைப் பணைத் தோள் விளங்கும் மாண் கவினே		25

#292 குறிஞ்சி - கபிலர்
கூறாய் செய்வது தோழி வேறு உணர்ந்து
அன்னையும் பொருள் உகுத்து அலமரும் மென் முறிச்
சிறு குளகு அருந்து தாய் முலை பெறாஅ
மறி கொலைப் படுத்தல் வேண்டி வெறி புரி
ஏதில் வேலன் கோதை துயல்வரத்		5
தூங்கும் ஆயின் அதூஉம் நாணுவல்
இலங்கு வளை நெகிழ்ந்த செல்லல் புலம் படர்ந்து
இரவின் மேயல் மரூஉம் யானைக்
கால் வல் இயக்கம் ஒற்றி நடுநாள்
வரையிடைக் கழுதின் வன் கைக் கானவன்		10
கடு விசைக் கவணின் எறிந்த சிறு கல்
உடு உறு கணையின் போகிச் சாரல்
வேங்கை விரி இணர் சிதறித் தேன் சிதையூஉ
பலவின் பழத்துள் தங்கும்
மலை கெழு நாடன் மணவாக்காலே		15

#293 பாலை -காவன்முல்லைப் பூதனார்
இலை ஒழித்து உலறிய புன் தலை உலவை
வலை வலந்து அனைய ஆகப் பல உடன்
சிலம்பி சூழ்ந்த புலம் கெடு வைப்பின்
துகில் ஆய் செய்கைப் பா விரிந்து அன்ன
வெயில் அவிர்பு நுடங்கும் வெவ்வெம் களரி		5
குயில் கண் அன்ன குரூஉக் காய் முற்றி
மணிக் காசு அன்ன மால் நிற இரும் கனி
உகாஅ மென் சினை உதிர்வன கழியும்
வேனில் வெம் சுரம் தமியர் தாமே
செல்ப என்ப தோழி யாமே		10
பண்பு இல் கோவலர் தாய் பிரித்து யாத்த
நெஞ்சு அமர் குழவி போல நொந்துநொந்து
இன்னா மொழிதும் என்ப
என் மயங்கினர்-கொல் நம் காதலோரே

#294 முல்லை - கழார்க் கீரன் எயிற்றியார்
மங்குல் மா மழை விண் அதிர்பு முழங்கித்
துள்ளு பெயல் கழிந்த பின்றைப் புகை உறப்
புள்ளி நுண் துவலைப் பூ அகம் நிறையக்
காதலர்ப் பிரிந்த கையறு மகளிர்
நீர் வார் கண்ணின் கருவிளை மலரத்		5
துய்த் தலைப் பூவின் புதல் இவர் ஈங்கை
நெய் தோய்த்து அன்ன நீர் நனை அம் தளிர்
இரு வகிர் ஈருளின் ஈரிய துயல்வர
அவரைப் பைம் பூப் பயில அகல் வயல்
கதிர் வார் காய் நெல் கட்கு இனிது இறைஞ்சக்		10
சிதர் சினை தூங்கும் அற்சிர அரைநாள்
காய் சின வேந்தன் பாசறை நீடி
நம் நோய் அறியா அறனிலாளர்
இ நிலை களைய வருகுவர்-கொல் என
ஆனாது எறிதரும் வாடையொடு		15
நோனேன் தோழி என் தனிமையானே

#295 பாலை - மாமூலனார்
நிலம் நீர் அற்று நீள் சுனை வறப்ப
குன்று கோடு அகையக் கடும் கதிர் தெறுதலின்
என்றூழ் நீடிய வேய் படு நனம் தலை
நிலவு நிற மருப்பின் பெரும் கை சேர்த்தி
வேங்கை வென்ற வெருவரு பணைத் தோள்		5
ஓங்கல் யானை உயங்கி மதம் தேம்பிப்
பல் மர ஒரு சிறைப் பிடியொடு வதியும்
கல் உடை அதர கானம் நீந்திக்
கடல் நீர் உப்பின் கணம் சால் உமணர்
உயங்கு பகடு உயிர்ப்ப அசைஇ முரம் இடித்து		10
அகல் இடம் குழித்த அகல் வாய்க் கூவல்
ஆறு செல் வம்பலர் அசை விட ஊறும்
புடையல் அம் கழல் கால் புல்லி குன்றத்து
நடை அரும் கானம் விலங்கி நோன் சிலைத்
தொடை அமை பகழித் துவன்று நிலை வடுகர்		15
பிழி ஆர் மகிழர் கலி சிறந்து ஆர்க்கும்
மொழிபெயர் தேஎம் இறந்தனர் ஆயினும்
பழி தீர் மாண் நலம் தருகுவர்-மாதோ
மாரிப் பித்திகத்து ஈர் இதழ் புரையும்
அம் கலுழ் கொண்ட செம் கடை மழைக் கண்		20
மணம் கமழ் ஐம்பால் மடந்தை நின்
அணங்கு நிலைபெற்ற தட மென் தோளே

#296 மருதம் - மதுரைப் பேராலவாயார்
கோதை இணர குறும் கால் காஞ்சிப்
போது அவிழ் நறும் தாது அணிந்த கூந்தல்
அரி மதர் மழைக் கண் மாஅயோளொடு
நெருநையும் கமழ் பொழில் துஞ்சி இன்றும்
பெரு நீர் வையை அவளொடு ஆடிப்		5
புலரா மார்பினை வந்து நின்று எம்-வயின்
கரத்தல் கூடுமோ மற்றே பரப்பில்
பல் மீன் கொள்பவர் முகந்த இப்பி
நார் அரி நறவின் மகிழ் நொடைக் கூட்டும்
பேர் இசை கொற்கைப் பொருநன் வென் வேல்		10
கடும் பகட்டு யானை நெடும் தேர்ச் செழியன்
மலை புரை நெடு நகர்க் கூடல் நீடிய
மலிதரு கம்பலை போல
அலர் ஆகின்று அது பலர் வாய்ப் பட்டே

#297 பாலை - மதுரை மருதன் இளநாகனார்
பானாள் கங்குலும் பெரும் புன் மாலையும்
ஆனா நோயொடு அழி படர்க் கலங்கி
நம்-வயின் இனையும் இடும்பை கைம்மிக
என்னை ஆகுமோ நெஞ்சே நம்-வயின்
இரும் கவின் இல்லாப் பெரும் புன் தாடிக்		5
கடுங்கண் மறவர் பகழி மாய்த்து என
மருங்குல் நுணுகிய பேஎம் முதிர் நடுகல்
பெயர் பயம் படரத் தோன்று குயில் எழுத்து
இயைபுடன் நோக்கல் செல்லாது அசைவுடன்
ஆறு செல் வம்பலர் விட்டனர் கழியும்		10
சூர் முதல் இருந்த ஓமை அம் புறவின்
நீர் முள் வேலிப் புலவு நாறு முன்றில்
எழுதி அன்ன கொடி படு வெருகின்
பூளை அன்ன பொங்கு மயிர்ப் பிள்ளை
மதி சூழ் மீனின் தாய் வழிப்படூஉம்		15
சிறுகுடி மறவர் சேக் கோள் தண்ணுமைக்கு
எருவைச் சேவல் இரும் சிறை பெயர்க்கும்
வெருவரு கானம் நம்மொடு
வருவல் என்றோள் மகிழ் மட நோக்கே

#298 குறிஞ்சி  மதுரைப் பண்ட வாணிகன் இளந்தேவனார்
பயம் கெழு திருவின் பல் கதிர் ஞாயிறு
வயங்கு தொழில் தரீஇயர் வலன் ஏர் விளங்கி
மல்கு கடல் தோன்றி ஆங்கு மல்கு பட
மணி மருள் மாலை மலர்ந்த வேங்கை
ஒண் தளிர் அவிர்வரும் ஒலி கெழு பெரும் சினைத்		5
தண் துளி அசை வளி தைவரும் நாட
கொன்று சினம் தணியாது வென்று முரண் சாம்பாது
இரும் பிடித் தொழுதியின் இனம் தலைமயங்காது
பெரும் பெயல் கடாஅம் செருக்கி வள மலை
இரும் களிறு இயல்வரும் பெரும் காட்டு இயவின்		10
ஆர் இருள் துமிய வெள் வேல் ஏந்தித்
தாழ் பூம் கோதை ஊது வண்டு இரீஇ
மென் பிணி அவிழ்ந்த அரைநாள் இரவு இவண்
நீ வந்ததனினும் இனிது ஆகின்றே
தூவல் கள்ளின் துனை தேர் எந்தை		15
கடி உடை வியல் நகர் ஓம்பினள் உறையும்
யாய் அறிவுறுதல் அஞ்சிப் பானாள்
காவல் நெஞ்சமொடு காமம் செப்பேன்
யான் நின் கொடுமை கூற நினைபு ஆங்கு
இனையல் வாழி தோழி நம் துறந்தவர்		20
நீடலர் ஆகி வருவர் வல்லென
கங்குல் உயவு துணை ஆகிய
துஞ்சாது உறைவி இவள் உவந்ததுவே

#299 பாலை - எயினந்தை மகனார் இளங்கீரனார்
எல்லையும் இரவும் வினை-வயின் பிரிந்த
முன்னம் முன் உறுபு அடைய உள்ளிய
பதி மறந்து உறைதல் வல்லுநம் ஆயினும்
அது மறந்து உறைதல் அரிது ஆகின்றே
கடு வளி எடுத்த கால் கழி தேக்கு இலை		5
நெடு விளிப் பருந்தின் வெறி எழுந்து ஆங்கு
விசும்பு கண் புதையப் பாஅய்ப் பல உடன்
அகல் இடம் செல்லுநர் அறிவு கெடத் தாஅய்க்
கவலை கரக்கும் காடு அகல் அத்தம்
செய்பொருள் மருங்கின் செலவு தனக்கு உரைத்து என		10
வைகு நிலை மதியம் போலப் பையெனப்
புலம்பு கொள் அவலமொடு புதுக் கவின் இழந்த
நலம் கெழு திரு முகம் இறைஞ்சி நிலம் கிளையா
நீரொடு பொருத ஈர் இதழ் மழைக் கண்
இகுதரு தெண் பனி ஆகத்து உறைப்பக்		15
கால் நிலை செல்லாது கழி படர்க் கலங்கி
நா நடுக்குற்ற நவிலாக் கிளவியொடு
அறல் மருள் கூந்தலின் மறையினள் திறல் மாண்டு
திருந்துக-மாதோ நும் செலவு என வெய்துயிராப்
பருவரல் எவ்வமொடு அழிந்த		20
பெரு விதுப்பு உறுவி பேதுறு நிலையே

#300 நெய்தல் - உலோச்சனார்
நாள் வலை முகந்த கோள் வல் பரதவர்
நுணங்கு மணல் ஆங்கண் உணங்கப் பெய்ம்மார்
பறி கொள் கொள்ளையர் மறுக உக்க
மீன் ஆர் குருகின் கானல் அம் பெரும் துறை
எல்லை தண் பொழில் சென்று எனச் செலீஇயர்		5
தேர் பூட்டு அயர ஏஎய் வார் கோல்
செறி தொடி திருத்திப் பாறு மயிர் நீவிச்
செல் இனி மடந்தை நின் தோழியொடு மனை எனச்
சொல்லிய அளவை தான் பெரிது கலுழ்ந்து
தீங்கு ஆயினள் இவள் ஆயின் தாங்காது		10
நொதுமலர் போலப் பிரியின் கதுமெனப்
பிறிது ஒன்று ஆகலும் அஞ்சுவல் அதனால்
சேணின் வருநர் போலப் பேணா
இரும் கலி யாணர் எம் சிறுகுடித் தோன்றின்
வல் எதிர் கொண்டு மெல்லிதின் வினைஇத்		15
துறையும் மான்றன்று பொழுதே சுறவும்
ஓதம் மல்கலின் மாறு ஆயினவே
எல்லின்று தோன்றல் செல்லாதீம் என
எமர் குறை கூறத் தங்கி ஏமுற
இளையரும் புரவியும் இன்புற நீயும்		20
இல் உறை நல் விருந்து அயர்தல்
ஒல்லுதும் பெரும நீ நல்குதல் பெறினே

#301 பாலை அதியன் விண்ணத்தனார்
வறனுறு செய்யின் வாடுபு வருந்திப்
படர் மிகப் பிரிந்தோர் உள்ளுபு நினைதல்
சிறு நனி ஆன்றிகம் என்றி தோழி
நல்குநர் ஒழித்த கூலிச் சில் பதம்
ஒடிவை இன்றி ஓம்பாது உண்டு		5
நீர் வாழ் முதலை ஆவித்து அன்ன
ஆரை வேய்ந்த அறை வாய்ச் சகடத்து
ஊர் இஃது என்னாஅர் ஊறு இல் வாழ்க்கை
சுர முதல் வருத்தம் மர முதல் வீட்டி
பாடு இன் தெண் கிணை கறங்கக் காண்வர		10
குவி இணர் எருக்கின் ததர் பூம் கண்ணி
ஆடூஉ சென்னித் தகைப்ப மகடூஉ
முளரித் தீயின் முழம் அழல் விளக்கத்துக்
களரி ஆவிரைக் கிளர் பூம் கோதை
வண்ண மார்பின் வன முலைத் துயல்வர		15
செறி நடைப் பிடியொடு களிறு புணர்ந்து என்னக்
குறு நெடும் தூம்பொடு முழவு புணர்ந்து இசைப்பக்
கார் வான் முழக்கின் நீர் மிசைத் தெவுட்டும்
தேரை ஒலியின் மாணச் சீர் அமைத்து
சில் அரி கறங்கும் சிறு பல்லியத்தொடு		20
பல் ஊர் பெயர்வனர் ஆடி ஒல்லெனத்
தலைப் புணர்த்து அசைத்த பல் தொகைக் கலப் பையர்
இரும் பேர் ஒக்கல் கோடியர் இறந்த
புன் தலை மன்றம் காணின் வழி_நாள்
அழுங்கல் மூதூர்க்கு இன்னாது ஆகும்		25
அதுவே மருவினம் மாலை அதனால்
காதலர் செய்த காதல்
நீ இன்று மறத்தல் கூடுமோ மற்றே

#302 குறிஞ்சி - மதுரை அறுவை வாணிகன் இளவேட்டனார்
சிலம்பில் போகிய செம் முக வாழை
அலங்கல் அம் தோடு அசை வளி உறு-தொறும்
பள்ளி யானைப் பரூஉப் புறம் தைவரும்
நல் வரை நாடனொடு அருவி ஆடியும்
பல் இதழ் நீலம் படு சுனைக் குற்றும்		5
நறு வீ வேங்கை இன வண்டு ஆர்க்கும்
வெறி கமழ் சோலை நயந்து விளையாடலும்
அரிய போலும் காதல் அம் தோழி
இரும் கல் அடுக்கத்து என் ஐயர் உழுத
கரும்பு எனக் கவினிய பெரும் குரல் ஏனல்		10
கிளி பட விளைந்தமை அறிந்தும் செல்க என
நம் அவண் விடுநள் போலாள் கைம்மிகச்
சில் சுணங்கு அணிந்த செறிந்து வீங்கு இள முலை
மெல் இயல் ஒலிவரும் கதுப்பொடு
பல் கால் நோக்கும் அறன் இல் யாயே		15

#303 பாலை - ஔவையார்
இடை பிறர் அறிதல் அஞ்சி மறை கரந்து
பேஎய் கண்ட கனவின் பல் மாண்
நுண்ணிதின் இயைந்த காமம் வென் வேல்
மறம் மிகு தானைப் பசும் பூண் பொறையன்
கார் புகன்று எடுத்த சூர் புகல் நனம் தலை		5
மா இரும் கொல்லி உச்சித் தாஅய்த்
ததைந்து செல் அருவியின் அலர் எழப் பிரிந்தோர்
புலம் கந்து ஆக இரவலர் செலினே
வரை புரை களிற்றொடு நல் கலன் ஈயும்
உரை சால் வண் புகழ்ப் பாரி பறம்பின்		10
நிரை பறைக் குரீஇ இனம் காலைப் போகி
முடங்கு புறச் செந்நெல் தரீஇயர் ஓராங்கு
இரை தேர் கொட்பின ஆகிப் பொழுது படப்
படர் கொள் மாலைப் படர்தந்து ஆங்கு
வருவர் என்று உணர்ந்த மடம் கெழு நெஞ்சம்		15
ஐயம் தெளியரோ நீயே பல உடன்
வறல் மரம் பொருந்திய சிள்வீடு உமணர்
கண நிரை மணியின் ஆர்க்கும் சுரன் இறந்து
அழி நீர் மீன் பெயர்ந்து ஆங்கு அவர்
வழி நடைச் சேறல் வலித்திசின் யானே		20

#304 முல்லை - இடைக்காடனார்
இரு விசும்பு இவர்ந்த கருவி மா மழை
நீர் செறி நுங்கின் கண் சிதர்ந்தவை போல்
சூர்ப் பனிப்பு அன்ன தண் வரல் ஆலியொடு
பரூஉப் பெயல் அழி துளி தலைஇ வான் நவின்று
குரூஉத் துளி பொழிந்த பெரும் புலர் வைகறை		5
செய்து விட்டு அன்ன செந்நில மருங்கில்
செறித்து நிறுத்து அன்ன தெள் அறல் பருகி
சிறு மறி தழீஇய தெறி நடை மடப் பிணை
வலம் திரி மருப்பின் அண்ணல் இரலையொடு
அலங்கு சினைக் குருந்தின் அல்கு நிழல் வதியச்		10
சுரும்பு இமிர்பு ஊதப் பிடவுத் தளை அவிழ
அரும் பொறி மஞ்ஞை ஆல வரி மணல்
மணி மிடை பவளம் போல அணி மிகக்
காயாம் செம்மல் தாஅய்ப் பல உடன்
ஈயல் மூதாய் ஈர்ம் புறம் வரிப்பப்		15
புலன் அணி கொண்ட கார் எதிர் காலை
ஏந்து கோட்டு யானை வேந்தன் பாசறை
வினையொடு வேறு புலத்து அல்கி நன்றும்
அறவர் அல்லர் நம் அருளாதோர் என
நம் நோய் தன்-வயின் அறியாள்		20
எம் நொந்து புலக்கும்-கொல் மாஅயோளே

#305 பாலை - வடம வண்ணக்கன் பேரிசாத்தனார்
பகலினும் அகலாது ஆகி யாமம்
தவல் இல் நீத்தமொடு ஐயெனக் கழியத்
தளி மழை பொழிந்த தண் வரல் வாடையொடு
பனி மீக்கூரும் பைதல் பானாள்
பல் படை நிவந்த வறுமை இல் சேக்கை		5
பருகு அன்ன காதலொடு திருகி
மெய் புகு அன்ன கை கவர் முயக்கத்து
ஓர் உயிர் மாக்களும் புலம்புவர்-மாதோ
அருள் இலாளர் பொருள்-வயின் அகல
எவ்வம் தாங்கிய இடும்பை நெஞ்சத்து		10
யான் எவன் உளனோ தோழி தானே
பராரைப் பெண்ணைச் சேக்கும் கூர் வாய்
ஒரு தனி அன்றில் உயவுக் குரல் கடைஇய
உள்ளே கனலும் உள்ளம் மெல்லென
கனை எரி பிறப்ப ஊதும்		15
நினையா மாக்கள் தீம் குழல் கேட்டே

#306 மருதம் - மதுரை கூலவாணிகன் சீத்தலை சாத்தனார்
பெரும் பெயர் மகிழ்ந பேணாது அகன்மோ
பரந்த பொய்கைப் பிரம்பொடு நீடிய
முள் கொம்பு ஈங்கைத் துய்த் தலைப் புது வீ
ஈன்ற மாத்தின் இளம் தளிர் வருட
ஆர் குருகு உறங்கும் நீர் சூழ் வள வயல்		5
கழனிக் கரும்பின் சாய்ப் புறம் ஊர்ந்து
பழன யாமை பசு வெயில் கொள்ளும்
நெல் உடை மறுகின் நன்னர் ஊர
இதுவோ மற்று நின் செம்மல் மாண்ட
மதி ஏர் ஒள் நுதல் வயங்கு இழை ஒருத்தி		10
இகழ்ந்த சொல்லும் சொல்லிச் சிவந்த
ஆய் இதழ் மழைக் கண் நோயுற நோக்கித்
தண் நறும் கமழ் தார் பரீஇயினள் நும்மொடு
ஊடினள் சிறு துனி செய்து எம்
மணல் மலி மறுகின் இறந்திசினோளே		15

#307 பாலை - மதுரை ஈழத்துப் பூதன் தேவனார்
சிறு நுதல் பசந்து பெரும் தோள் சாஅய்
அகல் எழில் அல்குல் அம் வரி வாடப்
பகலும் கங்குலும் மயங்கிப் பையெனப்
பெயல் உறு மலரின் கண் பனி வார
ஈங்கு இவள் உழக்கும் என்னாது வினை நயந்து		5
நீங்கல் ஒல்லுமோ ஐய வேங்கை
அடு முரண் தொலைத்த நெடு நல் யானை
மையல் அம் கடாஅம் செருக்கி மதம் சிறந்து
இயங்குநர்ச் செகுக்கும் எய் படு நனம் தலைப்
பெரும் கை எண்கு இனம் குரும்பி தேரும்		10
புற்று உடைச் சுவர புதல் இவர் பொதியில்
கடவுள் போகிய கரும் தாள் கந்தத்து
உடன் உறை பழமையின் துறத்தல் செல்லாது
இரும் புறாப் பெடையொடு பயிரும்
பெரும் கல் வைப்பின் மலை முதல் ஆறே		15

#308 குறிஞ்சி - பிசிராந்தையார்
உழுவையொடு உழந்த உயங்கு நடை ஒருத்தல்
நெடு வகிர் விழுப்புண் கழாஅக் கங்குல்
ஆலி அழி துளி பொழிந்த வைகறை
வால் வெள் அருவிப் புனல் மலிந்து ஒழுகலின்
இலங்கு மலை புதைய வெண் மழை கவைஇக்		5
கலம் சுடு புகையின் தோன்றும் நாட
இரவின் வருதல் எவனோ பகல் வரின்
தொலையா வேலின் வண் மகிழ் எந்தை
களிறு அணந்து எய்தாக் கல் முகை இதணத்துக்
சிறுதினைப் படு கிளி எம்மொடு ஓப்பி		10
மல்லல் அறைய மலிர் சுனைக் குவளை
தேம் பாய் ஒண் பூ நறும் பல அடைச்சிய
கூந்தல் மெல் அணை துஞ்சிப் பொழுது படக்
காவலர்க் கரந்து கடி புனம் துழைஇய
பெரும் களிற்று ஒருத்தலின் பெயர்குவை		15
கரும் கோல் குறிஞ்சி நும் உறைவு இன் ஊர்க்கே

#309 பாலை - கருவூர் கந்தப்பிள்ளைச் சாத்தனார்
வய வாள் எறிந்து வில்லின் நீக்கி
பயம் நிரை தழீஇய கடுங்கண் மழவர்
அம்பு சேண் படுத்து வன்புலத்து உய்த்து எனத்
தெய்வம் சேர்ந்த பராரை வேம்பில்
கொழுப்பு ஆ எறிந்து குருதி தூஉய்ப்		5
புலவுப் புழுக்கு உண்ட வான் கண் அகல் அறைக்
களிறு புறம் உரிஞ்சிய கரும் கால் இலவத்து
அரலை வெண் காழ் ஆலியின் தாஅம்
காடு மிக நெடிய என்னார் கோடியர்
பெரும் படைக் குதிரை நல் போர் வானவன்		10
திருந்து கழல் சேவடி நசைஇப் படர்ந்து ஆங்கு
நாம் செலின் எவனோ தோழி காம்பின்
வனை கழை உடைந்த கவண் விசைக் கடி இடிக்
கனை சுடர் அமையத்து வழங்கல் செல்லாது
இரவுப் புனம் மேய்ந்த உரவுச் சின வேழம்		15
தண் பெரும் படாஅர் வெரூஉம்
குன்று விலங்கு இயவின் அவர் சென்ற நாட்டே

#310 நெய்தல் - நக்கீரனார்
கடும் தேர் இளையரொடு நீக்கி நின்ற
நெடுந்தகை நீர்மையை அன்றி நீயும்
தொழுதகு மெய்யை அழிவு முந்துறுத்துப்
பல் நாள் வந்து பணிமொழி பயிற்றலின்
குவளை உண்கண் கலுழ நின் மாட்டு		5
இவளும் பெரும் பேது உற்றனள் ஓரும்
தாய் உடை நெடு நகர்த் தமர் பாராட்டக்
காதலின் வளர்ந்த மாதர் ஆகலின்
பெரு மடம் உடையரோ சிறிதே அதனால்
குன்றின் தோன்றும் குவவு மணல் சேர்ப்ப		10
இன்று இவண் விரும்பாதீமோ சென்று அப்
பூ விரி புன்னை மீது தோன்று பெண்ணைக்
கூஉம் கண்ணஃதே தெய்ய ஆங்க
உப்பு ஒய் உமணர் ஒழுகையொடு வந்த
இளைப் படு பேடை இரியக் குரைத்து எழுந்து		15
உரும் இசைப் புணரி உடைதரும்
பெருநீர் வேலி எம் சிறு நல் ஊரே

#311 பாலை - மாமூலனார்
இரும் பிடிப் பரிசிலர் போலக் கடை நின்று
அரும் கடிக் காப்பின் அகல் நகர் ஒரு சிறை
எழுதி அன்ன திண் நிலைக் கதவம்
கழுது வழங்கு அரைநாள் காவலர் மடிந்து என
திறந்து நம் புணர்ந்து நும்மின் சிறந்தோர்		5
இம்மை உலகத்து இல் எனப் பல் நாள்
பொம்மல் ஓதி நீவிய காதலொடு
பயம் தலைப்பெயர்ந்து மாதிரம் வெம்ப
வரு வழி வம்பலர் பேணிக் கோவலர்
மழ விடைப் பூட்டிய குழாஅய்த் தீம் புளி		10
செவி அடை தீரத் தேக்கு இலைப் பகுக்கும்
புல்லி நல் நாட்டு உம்பர் செல் அரும்
சுரம் இறந்து ஏகினும் நீடலர்
அருள் மொழி தேற்றி நம் அகன்றிசினோரே

#312 குறிஞ்சி - மதுரை மருதன் இளநாகனார்
நெஞ்சு உடம்படுதலின் ஒன்று புரிந்து அடங்கி
இரவின் வரூஉம் இடும்பை நீங்க
வரையக் கருதும் ஆயின் பெரிது உவந்து
ஓங்கு வரை இழிதரும் வீங்கு பெயல் நீத்தம்
காந்தள் அம் சிறுகுடிக் கௌவை பேணாது		5
அரி மதர் மழைக் கண் சிவப்ப நாளைப்
பெரு மலை நாடன் மார்பு புணை ஆக
ஆடுகம் வம்மோ காதல் அம் தோழி
வேய் பயில் அடுக்கம் புதையக் கால் வீழ்த்து
இன் இசை முரசின் இரங்கி ஒன்னார்		10
ஓடு புறம் கண்ட தாள் தோய் தடக் கை
வெல் போர் வழுதி செல் சமத்து உயர்த்த
அடு புகழ் எஃகம் போலக்
கொடிபட மின்னிப் பாயின்றால் மழையே

#313 பாலை - பாலை பாடிய பெருங்கடுங்கோ
இனி பிறிது உண்டோ அஞ்சல் ஓம்பு என
அணிக் கவின் வளர முயங்கி நெஞ்சம்
பிணித்தோர் சென்ற ஆறு நினைந்து அல்கலும்
குளித்துப் பொரு கயலின் கண் பனி மல்க
ஐய ஆக வெய்ய உயிரா		5
இரவும் எல்லையும் படர் அட வருந்தி
அரவு நுங்கு மதியின் நுதல் ஒளி கரப்பத்
தம் அலது இல்லா நம் இவண் ஒழியப்
பொருள் புரிந்து அகன்றனர் ஆயினும் அருள் புரிந்து
வருவர் வாழி தோழி பெரிய		10
நிதியம் சொரிந்த நீவி போலப்
பாம்பு ஊன் தேம்பும் வறம் கூர் கடத்திடை
நீங்கா வம்பலர் கணை இடத் தொலைந்தோர்
வசி படு புண்ணின் குருதி மாந்தி
ஒற்றுச் செல் மாக்களின் ஒடுங்கிய குரல		15
இல் வழிப் படூஉம் காக்கைக்
கல் உயர் பிறங்கல் மலை இறந்தோரே

#314 முல்லை - மதுரை அளக்கர் ஞாழார் மகனார் அம்மள்ளனார்
நீலத்து அன்ன நீர் பொதி கருவின்
மா விசும்பு அதிர முழங்கி ஆலியின்
நிலம் தண்ணென்று கானம் குழைப்ப
இனம் தேர் உழவர் இன் குரல் இயம்ப
மறி உடை மடப் பிணை தழீஇப் புறவின்		5
திரி மருப்பு இரலை பைம் பயிர் உகள
ஆர் பெயல் உதவிய கார் செய் காலை
நூல் நெறி நுணங்கிய கால் நவில் புரவிக்
கல்லெனக் கறங்கு மணி இயம்ப வல்லோன்
வாய்ச் செல வணக்கிய தாப் பரி நெடும் தேர்		10
ஈர்ம் புறவு இயங்கு வழி அறுப்பத் தீம் தொடைப்
பையுள் நல் யாழ் செவ்வழி பிறப்ப
இ நிலை வாரார் ஆயின் தம் நிலை
எவன்-கொல் பாண உரைத்திசின் சிறிது எனக்
கடவுள் கற்பின் மடவோள் கூறச்		15
செய்வினை அழிந்த மையல் நெஞ்சின்
துனி கொள் பருவரல் தீர வந்தோய்
இனிது செய்தனையால் வாழ்க நின் கண்ணி
வேலி சுற்றிய வால் வீ முல்லைப்
பெரும் தார் கமழும் விருந்து ஒலி கதுப்பின்		20
இன் நகை இளையோள் கவவ
மன்னுக பெரும நின் மலர்ந்த மார்பே

#315 பாலை - குடவாயில் கீரத்தனார்
கூழையும் குறு நெறிக் கொண்டன முலையும்
சூழி மென் முகம் செப்புடன் எதிரின
பெண் துணை சான்றனள் இவள் எனப் பல் மாண்
கண் துணை ஆக நோக்கி நெருநையும்
அயிர்த்தன்று-மன்னே நெஞ்சம் பெயர்த்தும்		5
அறியாமையின் செறியேன் யானே
பெரும் பெயர் வழுதி கூடல் அன்ன தன்
அரும் கடி வியல் நகர்ச் சிலம்பும் கழியாள்
சேணுறச் சென்று வறும் சுனை ஒல்கி
புறவுக் குயின்று உண்ட புன் காய் நெல்லிக்		10
கோடை உதிர்த்த குவி கண் பசும் காய்
அறு நூல் பளிங்கின் துளைக் காசு கடுப்ப
வறு நிலத்து உதிரும் அத்தம் கதுமெனக்
கூர் வேல் விடலை பொய்ப்பப் போகிச்
சேக்குவள்-கொல்லோ தானே தேக்கின்		15
அகல் இலை கவித்த புதல் போல் குரம்பை
ஊன் புழுக்கு அயரும் முன்றில்
கான் கெழு வாழ்நர் சிறுகுடியானே

#316 மருதம் ஓரம்போகியார்
துறை மீன் வழங்கும் பெரு நீர்ப் பொய்கை
அரி மலர் ஆம்பல் மேய்ந்த நெறி மருப்பு
ஈர்ம் தண் எருமை சுவல் படு முது போத்துத்
தூங்கு சேற்று அள்ளல் துஞ்சிப் பொழுது படப்
பைம் நிண வராஅல் குறையப் பெயர்தந்து		5
குரூஉக் கொடிப் பகன்றை சூடி மூதூர்ப்
போர்ச் செறி மள்ளரின் புகுதரும் ஊரன்
தேர் தர வந்த தெரி இழை நெகிழ் தோள்
ஊர் கொள்கல்லா மகளிர் தரத்தரப்
பரத்தைமை தாங்கலோ இலென் என வறிது நீ		10
புலத்தல் ஒல்லுமோ மனை கெழு மடந்தை
அது புலந்து உறைதல் வல்லியோரே
செய்யோள் நீங்கச் சில்பதம் கொழித்துத்
தாம் அட்டு உண்டு தமியர் ஆகித்
தே மொழிப் புதல்வர் திரங்கு முலை சுவைப்ப		15
வைகுநர் ஆகுதல் அறிந்தும்
அறியார் அம்ம அஃது உடலுமோரே

#317 பாலை - வடமோதம் கிழார்
மாக விசும்பின் மழை தொழில் உலந்து எனப்
பாஅய் அன்ன பகல் இருள் பரப்பிப்
புகை நிற உருவின் அற்சிரம் நீங்கக்
குவி முகை முருக்கின் கூர் நுனை வை எயிற்று
நகை முக மகளிர் ஊட்டு உகிர் கடுக்கும்		5
முதிராப் பல் இதழ் உதிரப் பாய்ந்து உடன்
மலர் உண் வேட்கையின் சிதர் சிதர்ந்து உகுப்பப்
பொன் செய் கன்னம் பொலிய வெள்ளி
நுண் கோல் அறை குறைந்து உதிர்வன போல
அரவ வண்டு இனம் ஊது-தொறும் குரவத்து		10
ஓங்கு சினை நறு வீ கோங்கு அலர் உறைப்பத்
துவைத்து எழு தும்பி தவிர் இசை விளரி
உதைத்து விடு நரம்பின் இம்மென இமிரும்
மரன் ஏமுற்ற காமர் வேனில்
வெயில் அவிர் புரையும் வீ ததை மராஅத்துக்		15
குயில் இடு பூசல் எம்மொடு கேட்ப
வருவேம் என்ற பருவம் ஆண்டை
இல்லை-கொல் என மெல்ல நோக்கி
நினைந்தனம் இருந்தனம் ஆக நயந்து ஆங்கு
உள்ளிய மருங்கின் உள்ளம் போல		20
வந்து நின்றனரே காதலர் நம் துறந்து
என் உழியது-கொல் தானே பல் நாள்
அன்னையும் அறிவுற அணங்கி
நல் நுதல் பாஅய பசலை நோயே

#318 குறிஞ்சி - கபிலர்
கான மான் அதர் யானையும் வழங்கும்
வான மீமிசை உருமு நனி உரறும்
அரவும் புலியும் அஞ்சுதகவு உடைய
இர வழங்கு சிறு நெறி தமியை வருதி
வரை இழி அருவி பாட்டொடு பிரசம்		5
முழவுச் சேர் நரம்பின் இம்மென இமிரும்
பழ விறல் நனம் தலைப் பய மலை நாட
மன்றல் வேண்டினும் பெறுகுவை ஒன்றோ
இன்று தலையாக வாரல் வரினே
ஏமுறு துயரமொடு யாம் இவண் ஒழிய		10
என் கண்டு பெயரும் காலை யாழ நின்
கல் கெழு சிறுகுடி எய்திய பின்றை
ஊதல் வேண்டுமால் சிறிதே வேட்டொடு
வேய் பயில் அழுவத்துப் பிரிந்த நின்
நாய் பயிர் குறி நிலை கொண்ட கோடே		15

#319 பாலை - எருக்காட்டூர் தாயங்கண்ணனார்
மணி வாய்க் காக்கை மா நிறப் பெரும் கிளை
பிணி வீழ் ஆலத்து அலம் சினை ஏறிக்
கொடு வில் எயினர் குறும்பிற்கு ஊக்கும்
கடு வினை மறவர் வில் இடத் தொலைந்தோர்
படு பிணம் கவரும் பாழ் படு நனம் தலை		5
அணங்கு என உருத்த நோக்கின் ஐயென
நுணங்கிய நுசுப்பின் நுண் கேழ் மாமைப்
பொன் வீ வேங்கைப் புது மலர் புரைய
நல் நிறத்து எழுந்த சுணங்கு அணி வன முலை
சுரும்பு ஆர் கூந்தல் பெரும் தோள் இவள்-வயின்		10
பிரிந்தனிர் அகறல் சூழின் அரும் பொருள்
எய்துக-மாதோ நுமக்கே கொய் குழைத்
தளிர் ஏர் அன்ன தாங்கு அரு மதுகையள்
மெல்லியள் இளையள் நனி பேர் அன்பினள்
செல்வேம் என்னும் நும் எதிர்	15
ஒழிவேம் என்னும் ஒண்மையோ இலளே

#320 நெய்தல் - மதுரைக் கூலவாணிகன் சீத்தலைச் சாத்தனார்
ஓங்கு திரைப் பரப்பின் வாங்கு விசை கொளீஇத்
திமிலோன் தந்த கடுங்கண் வய மீன்
தழை அணி அல்குல் செல்வத் தங்கையர்
விழவு அயர் மறுகின் விலை எனப் பகரும்
கானல் அம் சிறுகுடிப் பெருநீர்ச் சேர்ப்ப		5
மலர் ஏர் உண்கண் எம் தோழி எவ்வம்
அலர் வாய் நீங்க நீ அருளாய் பொய்ப்பினும்
நெடும் கழி துழைஇய குறும் கால் அன்னம்
அடும்பு அமர் எக்கர் அம் சிறை உளரும்
தடவு நிலைப் புன்னைத் தாது அணி பெரும் துறை	10
நடுங்கு அயிர் போழ்ந்த கொடுஞ்சி நெடும் தேர்
வண்டல் பாவை சிதைய வந்து நீ
தோள் புதிது உண்ட ஞான்றைச்
சூளும் பொய்யோ கடல் அறி கரியே

#321 பாலை - கயமனார்
பசித்த யானைப் பழம் கண் அன்ன
வறும் சுனை முகந்த கோடைத் தெள் விளி
விசித்து வாங்கு பறையின் விடரகத்து இயம்ப
கதிர்க் கால் அம் பிணை உணீஇய புகல் ஏறு
குதிர்க் கால் இருப்பை வெண் பூ உண்ணாது		5
ஆண் குரல் விளிக்கும் சேண் பால் வியன் சுரைப்
படு மணி இன நிரை உணீஇய கோவலர்
விடு நிலம் உடைத்த கலுழ் கண் கூவல்
கன்று உடை மடப் பிடி களிறொடு தடவரும்
புன் தலை மன்றத்து அம் குடிச் சீறூர்த்		10
துணையொடு துச்சில் இருக்கும்-கொல்லோ
கணையோர் அஞ்சாக் கடுங்கண் காளையொடு
எல்லி முன் உறச் செல்லும்-கொல்லோ
எ வினை செயும்-கொல் நோகோ யானே
அரி பெய்து பொதிந்த தெரி சிலம்பு கழீஇ		15
யாய் அறிவுறுதல் அஞ்சி
வேய் உயர் பிறங்கல் மலை இறந்தோளே

#322 குறிஞ்சி - பரணர்
வயங்கு வெயில் ஞெமியப் பாஅய் மின்னு வசிபு
மயங்கு துளி பொழிந்த பானாள் கங்குல்
ஆராக் காமம் அடூஉ நின்று அலைப்ப
இறுவரை வீழ்நரின் நடுங்கித் தெறுவரப்
பாம்பு எறி கோலின் தமியை வைகித்		5
தேம்புதி-கொல்லோ நெஞ்சே உரும் இசைக்
களிறு கண்கூடிய வாள் மயங்கு ஞாட்பின்
ஒளிறு வேல் தானைக் கடும் தேர்த் திதியன்
வரு புனல் இழிதரு மரம் பயில் இறும்பில்
பிறை உறழ் மருப்பின் கடுங்கண் பன்றிக்		10
குறை ஆர் கொடு_வரி குழுமும் சாரல்
அறை உறு தீம் தேன் குறவர் அறுப்ப
முயலுநர் முற்றா ஏற்று அரு நெடும் சிமைப்
புகல் அரும் பொதியில் போலப்
பெறல் அரும்-குரையள் எம் அணங்கியோளே		15

#323 பாலை - புறநாட்டுப் பெருங்கொற்றனார்
இம்மென் பேர் அலர் இவ் ஊர் நம்-வயின்
செய்வோர் ஏச் சொல் வாடக் காதலர்
வருவர் என்பது வாய்வது ஆக
ஐய செய்ய மதன் இல சிறிய நின்
அடி நிலன் உறுதல் அஞ்சிப் பையத்		5
தடவரல் ஒதுக்கம் தகை கொள இயலிக்
காணிய வம்மோ கற்பு மேம்படுவி
பலவுப் பல தடைஇய வேய் பயில் அடுக்கத்து
யானைச் செல் இனம் கடுப்ப வானத்து
வயங்கு கதிர் மழுங்கப் பாஅய்ப் பாம்பின்		10
பை பட இடிக்கும் கடும் குரல் ஏற்றொடு
ஆலி அழி துளி தலைஇக்
கால் வீழ்த்தன்று நின் கதுப்பு உறழ் புயலே

#324 முல்லை - ஒக்கூர் மாசாத்தியார்
விருந்தும் பெறுகுநள் போலும் திருந்து இழைத்
தட மென் பணைத் தோள் மட மொழி அரிவை
தளிர் இயல் கிள்ளை இனிதினின் எடுத்த
வளராப் பிள்ளைத் தூவி அன்ன
வார் பெயல் வளர்த்த பைம் பயிர்ப் புறவில்		5
பறைக் கண் அன்ன நிறைச் சுனை-தோறும்
துளி படு மொக்குள் துள்ளுவன சாலத்
தொளி பொரு பொகுட்டுத் தோன்றுவன மாய
வளி சினை உதிர்த்தலின் வெறி கொள்பு தாஅய்ச்
சிரல் சிறகு ஏய்ப்ப அறல்-கண் வரித்த		10
வண்டு உண் நறு வீ துமித்த நேமி
தண் நில மருங்கில் போழ்ந்த வழியுள்
நிரை செல் பாம்பின் விரைபு நீர் முடுகச்
செல்லும் நெடுந்தகை தேரே
முல்லை மாலை நகர் புகல் ஆய்ந்தே		15

#325 பாலை - மாமூலனார்
அம்ம வாழி தோழி காதலர்
வெண் மணல் நிவந்த பொலம் கடை நெடு நகர்
நளி இரும் கங்குல் புணர் குறி வாய்த்த
களவும் கைம்மிக அலர்ந்தன்று அன்னையும்
உட்கொண்டு ஓவாள் காக்கும் பின் பெரிது		5
இவண் உறைபு எவனோ அளியள் என்று அருளி
ஆடு நடைப் பொலிந்த புகற்சியின் நாடு கோள்
அள்ளனைப் பணித்த அதியன் பின்றை
வள் உயிர் மாக் கிணை கண் அவிந்து ஆங்கு
மலை கவின் அழிந்த கனை கடற்று அரும் சுரம்		10
வெய்ய-மன்ற நின் வை எயிறு உணீஇய
தண் மழை ஒரு நாள் தலைஇய ஒள் நுதல்
ஒல்கு இயல் அரிவை நின்னொடு செல்கம்
சில் நாள் ஆன்றனை ஆக எனப் பல் நாள்
உலைவு இல் உள்ளமொடு வினை வலியுறீஇ		15
எல்லாம் பெரும்பிறிதாக வடாஅது
நல் வேல் பாணன் நல் நாட்டு உள்ளதை
வாள் கண் வானத்து என்றூழ் நீள் இடை
ஆள் கொல் யானை அதர் பார்த்து அல்கும்
சோலை அத்தம் மாலை போகி		20
ஒழியச் சென்றோர்-மன்ற
பழி எவன் ஆம்-கொல் நோய் தரு பாலே

#326 மருதம் - பரணர்
ஊரல் அவ் வாய் உருத்த தித்தி
பேர் அமர் மழைக் கண் பெரும் தோள் சிறு நுதல்
நல்லள் அம்ம குறுமகள் செல்வர்
கடும் தேர் குழித்த ஞெள்ளல் ஆங்கண்
நெடும் கொடி நுடங்கும் அட்டவாயில்		5
இரும் கதிர்க் கழனிப் பெரும் கவின் அன்ன
நலம் பாராட்டி நடை எழில் பொலிந்து
விழவில் செலீஇயர் வேண்டும் வென் வேல்
இழை அணி யானைச் சோழர் மறவன்
கழை அளந்து அறியாக் காவிரிப் படப்பை		10
புனல் மலி புதவின் போஒர் கிழவோன்
பழையன் ஓக்கிய வேல் போல்
பிழையல கண் அவள் நோக்கியோர்-திறத்தே

#327 பாலை - மருங்கூர்ப் பாகைச் சாத்தன் பூதனார்
இன்பமும் இடும்பையும் புணர்வும் பிரிவும்
நல் பகல் அமையமும் இரவும் போல
வேறுவேறு இயல ஆகி மாறு எதிர்ந்து
உள என உணர்ந்தனை ஆயின் ஒரூஉம்
இன்னா வெம் சுரம் நல் நசை துரப்பத்		5
துன்னலும் தகுமோ துணிவு இல் நெஞ்சே
நீ செல வலித்தனை ஆயின் யாவதும்
நினைதலும் செய்தியோ எம்மே கனை கதிர்
ஆவி அம் வரி நீர் என நசைஇ
மா தவப் பரிக்கும் மரல் திரங்கு நனம் தலைக்		10
களர் கால் யாத்த கண் அகல் பரப்பின்
செவ் வரைக் கொழி நீர் கடுப்ப அரவின்
அவ் வரி உரிவை அணவரும் மருங்கின்
புற்று அரை யாத்த புலர் சினை மரத்த
மை நிற உருவின் மணிக் கண் காக்கை		15
பைம் நிணம் கவரும் படு பிணக் கவலை
சென்றோர் செல் புறத்து இரங்கார் கொன்றோர்
கோல் கழிபு இரங்கும் அதர
வேய் பயில் அழுவம் இறந்த பின்னே

#328 குறிஞ்சி - மதுரைப் பண்ட வாணிகன் இளந்தேவனார்
வழை அமல் அடுக்கத்து வலன் ஏர்பு வயிரியர்
முழவு அதிர்ந்து அன்ன முழக்கத்து ஏறோடு
உரவுப் பெயல் பொழிந்த நள்ளென் யாமத்து
அரவின் பைம் தலை இடறிப் பானாள்
இரவின் வந்து எம் இடை முலை முயங்கித்		5
துனி கண் அகல வளைஇக் கங்குலின்
இனிதின் இயைந்த நண்பு அவர் முனிதல்
தெற்று ஆகுதல் நற்கு அறிந்தனம் ஆயின்
இலங்கு வளை நெகிழப் பரந்து படர் அலைப்ப யாம்
முயங்கு-தொறும் முயங்கு-தொறும் உயங்க முகந்து கொண்டு	10
அடக்குவம்-மன்னோ தோழி மடப் பிடி
மழை தவழ் சிலம்பில் கடும் சூல் ஈன்று
கழை தின் யாக்கை விழை களிறு தைவர
வாழை அம் சிலம்பில் துஞ்சும்
சாரல் நாடன் சாயல் மார்பே		15

#329 பாலை - உறையூர் முதுகூத்தனார்
பூம் கணும் நுதலும் பசப்ப நோய் கூர்ந்து
ஈங்கு யான் வருந்தவும் நீங்குதல் துணிந்து
வாழ்தல் வல்லுநர் ஆயின் காதலர்
குவிந்த குரம்பை அம் குடிச் சீறூர்ப்
படு மணி இயம்பப் பகல் இயைந்து உமணர்		5
கொடு நுகம் பிணித்த செம் கயிற்று ஒழுகைப்
பகடு அயாக் கொள்ளும் வெம் முனைத் துகள் தொகுத்து
எறி வளி சுழற்றும் அத்தம் சிறிது அசைந்து
ஏகுவர்-கொல்லோ தாமே பாய் கொள்பு
உறு வெரிந் ஒடிக்கும் சிறு வரிக் குருளை		10
நெடு நல் யானை நீர் நசைக்கு இட்ட
கை கறித்து உரறும் மை தூங்கு இறும்பில்
புலி புக்கு ஈனும் வறும் சுனைப்
பனி படு சிமையப் பல் மலை இறந்தே

#330 நெய்தல் - உலோச்சனார்
கழிப் பூக் குற்றும் கானல் அல்கியும்
வண்டல் பாவை வரி மணல் அயர்ந்தும்
இன்புறப் புணர்ந்தும் இளி வரப் பணிந்தும்
தன் துயர் வெளிப்படத் தவறு இல் நம் துயர்
அறியாமையின் அயர்ந்த நெஞ்சமொடு		5
செல்லும் அன்னோ மெல்லம்புலம்பன்
செல்வோன் பெயர் புறத்து இரங்கி முன் நின்று
தகைஇய சென்ற என் நிறை இல் நெஞ்சம்
எய்தின்று-கொல்லோ தானே எய்தியும்
காமம் செப்ப நாண் இன்று-கொல்லோ		10
உதுவக் காண் அவர் ஊர்ந்த தேரே
குப்பை வெண் மணல் குவவு மிசையானும்
எக்கர்த் தாழை மடல்-வயினானும்
ஆய் கொடிப் பாசடும்பு பரிய ஊர்பு இழிபு
சிறுகுடிப் பரதவர் பெரும் கடல் மடுத்த		15
கடும் செலல் கொடும் திமில் போல
நிவந்து படு தோற்றமொடு இகந்து மாயும்மே

#331 பாலை - மாமூலனார்
நீடு நிலை அரைய செம் குழை இருப்பைக்
கோடு கடைந்து அன்ன கொள்ளை வான் பூ
ஆடு பரந்து அன்ன ஈனல் எண்கின்
தோடு சினை உரீஇ உண்ட மிச்சில்
பைம் குழைத் தழையர் பழையர் மகளிர்		5
கண் திரள் நீள் அமை கடிப்பின் தொகுத்து
குன்றகச் சிறுகுடி மறுகு-தொறும் மறுகும்
சீறூர் நாடு பல பிறக்கு ஒழியச்
சென்றோர் அன்பிலர் தோழி என்றும்
அரும் துறை முற்றிய கரும் கோட்டுச் சீறியாழ்		10
பாணர் ஆர்ப்பப் பல் கலம் உதவி
நாள்_அவை இருந்த நனை மகிழ் திதியன்
வேளிரொடு பொரீஇய கழித்த
வாள் வாய் அன்ன வறும் சுரம் இறந்தே

#332 குறிஞ்சி - கபிலர்
முளை வளர் முதல மூங்கில் முருக்கிக்
கிளையொடு மேய்ந்த கேழ் கிளர் யானை
நீர் நசை மருங்கின் நிறம் பார்த்து ஒடுங்கிய
பொரு முரண் உழுவை தொலைச்சிக் கூர் நுனைக்
குருதிச் செம் கோட்டு அழி துளி கழாஅக்		5
கல் முகை அடுக்கத்து மென்மெல இயலிச்
செறு பகை வாட்டிய செம்மலொடு அறு கால்
யாழ் இசைப் பறவை இமிரப் பிடி புணர்ந்து
வாழை அம் சிலம்பில் துஞ்சும் நாடன்
நின் புரைத் தக்க சாயலன் என நீ		10
அன்பு உரைத்து அடங்கக் கூறிய இன் சொல்
வாய்த்தன வாழி தோழி வேட்டோர்க்கு
அமிழ்தத்து அன்ன கமழ் தார் மார்பின்
வண்டு இடைப்படாஅ முயக்கமும்
தண்டாக் காதலும் தலை_நாள் போன்மே	15

#333 பாலை - கல்லாடனார்
யாஅ ஒண் தளிர் அரக்கு விதிர்த்து அன்ன நின்
ஆக மேனி அம் பசப்பு ஊர
அழிவு பெரிது உடையை ஆகி அவர்-வயின்
பழி தலைத்தருதல் வேண்டுதி மொழி கொண்டு
தாங்கல் ஒல்லுமோ மற்றே ஆங்கு நின்		5
எவ்வம் பெருமை உரைப்பின் செய்பொருள்
வயங்காது ஆயினும் பயம் கெடத் தூக்கி
நீடலர் வாழி தோழி கோடையில்
குருத்து இறுபு உக்க வருத்தம் சொலாது
தூம்பு உடைத் துய்த் தலை கூம்புபு திரங்கிய		10
வேனில் வெளிற்றுப் பனை போலக் கை எடுத்து
யானைப் பெரு நிரை வானம் பயிரும்
மலைச் சேண் இகந்தனர் ஆயினும் நிலைபெயர்ந்து
நாள் இடைப்படாமை வருவர் நமர் எனப்
பயம் தரு கொள்கையின் நயம் தலைதிரியாது		15
நின் வாய் இன் மொழி நல் வாயாக
வருவர் ஆயினோ நன்றே வாராது
அவணர் காதலர் ஆயினும் இவண் நம்
பசலை மாய்தல் எளிது-மன்-தில்ல
சென்ற தேஎத்துச் செய்வினை முற்றி		20
மறுதரல் உள்ளத்தர் எனினும்
குறுகு பெரு நசையொடு தூது வரப்பெறினே

#334 முல்லை - மதுரைக் கூத்தனார்
ஓடா நல் ஏற்று உரிவை தைஇய
ஆடு கொள் முரசம் இழுமென முழங்க
நாடு திறை கொண்டனம் ஆயின் பாக
பாடு இமிழ் கடலின் எழுந்த சும்மையொடு
பெரும் களிற்றுத் தடக் கை புரையக் கால் வீழ்த்து	5
இரும் பிடித் தொழுதியின் ஈண்டுவன குழீஇ
வணங்கு இறை மகளிர் அயர்ந்தனர் ஆடும்
கழங்கு உறழ் ஆலியொடு கதழ் உறை சிதறிப்
பெயல் தொடங்கின்றால் வானம் வானின்
வயங்கு சிறை அன்னத்து நிரை பறை கடுப்ப		10
நால் உடன் பூண்ட கால் நவில் புரவிக்
கொடிஞ்சி நெடும் தேர் கடும் பரி தவிராது
இன மயில் அகவும் கார் கொள் வியன் புனத்து
நோன் சூட்டு ஆழி ஈர் நிலம் துமிப்ப
ஈண்டே காணக் கடவு-மதி பூம் கேழ்		15
பொலிவன அமர்த்த உண்கண்
ஒலி பல் கூந்தல் ஆய் சிறு நுதலே

#335 பாலை - மதுரை தத்தம் கண்ணனார்
இருள் படு நெஞ்சத்து இடும்பை தீர்க்கும்
அருள் நன்கு உடையர் ஆயினும் ஈதல்
பொருள் இல்லோர்க்கு அஃது இயையாது ஆகுதல்
யானும் அறிவென்-மன்னே யானை தன்
கொல் மருப்பு ஒடியக் குத்திச் சினம் சிறந்து		5
இன்னா வேனில் இன் துணை ஆர
முளி சினை மராஅத்துப் பொளி பிளந்து ஊட்டப்
புலம்பு வீற்றிருந்த நிலம் பகு வெம் சுரம்
அரிய அல்ல-மன் நமக்கே விரி தார்
ஆடு கொள் முரசின் அடு போர்ச் செழியன்		10
மாட மூதூர் மதில் புறம் தழீஇ
நீடு வெயில் உழந்த குறி இறைக் கணைக் கால்
தொடை அமை பல் மலர்த் தோடு பொதிந்து யாத்த
குடை ஓர் அன்ன கோள் அமை எருத்தின்
பாளை பற்று இழிந்து ஒழியப் புறம் சேர்பு		15
வாள் வடித்து அன்ன வயிறு உடைப் பொதிய
நாள் உறத் தோன்றிய நயவரு வனப்பின்
ஆரத்து அன்ன அணி கிளர் புதுப் பூ
வாருறு கவரியின் வண்டு உண விரிய
முத்தின் அன்ன வெள் வீ தாஅய்		20
அலகின் அன்ன அரி நிறத்து ஆலி
நகை நனி வளர்க்கும் சிறப்பின் தகை மிகப்
பூவொடு வளர்ந்த மூவாப் பசும் காய்
நீரினும் இனிய ஆகிக் கூர் எயிற்று
அமிழ்தம் ஊறும் செவ் வாய்		25
ஒண் தொடிக் குறுமகள் கொண்டனம் செலினே

#336 மருதம் - பாவைக் கொட்டிலார்
குழல் கால் சேம்பின் கொழு மடல் அகல் இலைப்
பாசிப் பரப்பில் பறழொடு வதிந்த
உண்ணாப் பிணவின் உயக்கம் சொலிய
நாள்_இரை தரீஇய எழுந்த நீர் நாய்
வாளையொடு உழப்பத் துறை கலுழ்ந்தமையின்		5
தெண் கள் தேறல் மாந்தி மகளிர்
நுண் செயல் அம் குடம் இரீஇப் பண்பின்
மகிழ்நன் பரத்தைமை பாடி அவிழ் இணர்க்
காஞ்சி நீழல் குரவை அயரும்
தீம் பெரும் பொய்கைத் துறை கேழ் ஊரன்		10
தேர் தர வந்த நேர் இழை மகளிர்
ஏசுப என்ப என் நலனே அதுவே
பாகன் நெடிது உயிர் வாழ்தல் காய் சினக்
கொல் களிற்று யானை நல்கல் மாறே
தாமும் பிறரும் உளர் போல் சேறல்		15
முழவு இமிழ் துணங்கை தூங்கும் விழவின்
யான் அவண் வாராமாறே வரினே வான் இடை
சுடரொடு திரிதரும் நெருஞ்சி போல
என்னொடு திரியான் ஆயின் வென் வேல்
மாரி அம்பின் மழைத் தோல் சோழர்		20
வில் ஈண்டு குறும்பின் வல்லத்துப் புற மிளை
ஆரியர் படையின் உடைக என்
நேர் இறை முன்கை வீங்கிய வளையே

#337 பாலை - பாலை பாடிய பெருங்கடுங்கோ
சாரல் யாஅத்து உயர் சினை குழைத்த
மாரி ஈர்ம் தளிர் அன்ன மேனிப்
பேர் அமர் மழைக் கண் புலம் கொண்டு ஒழிய
ஈங்குப் பிரிந்து உறைதல் இனிது அன்று ஆகலின்
அவணது ஆகப் பொருள் என்று உமணர்		5
கண நிரை அன்ன பல் கால் குறும்பொறைத்
தூது ஒய் பார்ப்பான் மடி வெள் ஓலைப்
படை உடைக் கையர் வரு திறம் நோக்கி
உண்ணா மருங்குல் இன்னோன் கையது
பொன் ஆகுதலும் உண்டு எனக் கொன்னே	10
தடிந்து உடன் வீழ்த்த கடுங்கண் மழவர்
திறன் இல் சிதாஅர் வறுமை நோக்கிச்
செம் கோல் அம்பினர் கை நொடியாப் பெயரக்
கொடி விடு குருதித் தூங்கு குடர் கறீஇ
வரி மரல் இயவின் ஒரு நரி ஏற்றை		15
வெண் பரல் இமைக்கும் கண் பறி கவலைக்
கள்ளி நீழல் கதறு வதிய
மழை கண்மாறிய வெம் காட்டு ஆர் இடை
எமியம் கழிதந்தோயே பனி இருள்
பெரும் கலி வானம் தலைஇய		20
இரும் குளிர் வாடையொடு வருந்துவள் எனவே

#338 குறிஞ்சி - மதுரைக் கணக்காயனார்
குன்று ஓங்கு வைப்பின் நாடு மீக்கூறும்
மறம் கெழு தானை அரசருள்ளும்
அறம் கடைப்பிடித்த செங்கோலுடன் அமர்
மறம் சாய்த்து எழுந்த வலன் உயர் திணி தோள்
பலர் புகழ் திருவின் பசும் பூண் பாண்டியன்		5
அணங்கு உடை உயர் நிலைப் பொருப்பின் கவாஅன்
சினை ஒண் காந்தள் நாறும் நறு நுதல்
துணை ஈர் ஓதி மாஅயோள் வயின்
நுண் கோல் அவிர் தொடி வண் புறம் சுற்ற
முயங்கல் இயையாது ஆயினும் என்றும்		10
வயவுறு நெஞ்சத்து உயவுத் துணை ஆக
ஒன்னார் தேஎம் பாழ்பட நூறும்
துன் அரும் துப்பின் வென் வேல் பொறையன்
அகல் இரும் கானத்துக் கொல்லி போலத்
தவாஅலியரோ நட்பே அவள்-வயின்		15
அறாஅலியரோ தூதே பொறாஅர்
விண் பொரக் கழித்த திண் பிடி ஒள் வாள்
புனிற்று ஆன் தரவின் இளையர் பெருமகன்
தொகு போர்ச் சோழன் பொருள் மலி பாக்கத்து
வழங்கல் ஆனாப் பெரும் துறை		20
முழங்கு இரு முந்நீர்த் திரையினும் பலவே

#339 பாலை - நரைமுடி நெட்டையார்
வீங்கு விசைப் பிணித்த விரை பரி நெடும் தேர்
நோன் கதிர் சுமந்த ஆழி ஆழ் மருங்கில்
பாம்பு என முடுகு நீர் ஓடக் கூம்பிப்
பற்று விடு விரலின் பயறு காய் ஊழ்ப்ப
அற்சிரம் நின்றன்றால் பொழுதே முற்பட		5
ஆள்வினைக்கு எழுந்த அசைவு இல் உள்ளத்து
ஆண்மை வாங்கக் காமம் தட்பக்
கவைபடு நெஞ்சம் கண்கண் அகைய
இரு தலைக் கொள்ளி இடை நின்று வருந்தி
ஒரு தலைப் படாஅ உறவி போன்றனம்		10
நோம்-கொல் அளியள் தானே யாக்கைக்கு
உயிர் இயைந்து அன்ன நட்பின் அவ் உயிர்
வாழ்தல் அன்ன காதல்
சாதல் அன்ன பிரிவு அரியோளே

#340 நெய்தல் - நக்கீரர்
பல் நாள் எவ்வம் தீரப் பகல் வந்து
புன்னை அம் பொதும்பின் இன் நிழல் கழிப்பி
மாலை மால்கொள நோக்கிப் பண் ஆய்ந்து
வலவன் வண் தேர் இயக்க நீயும்
செலவு விருப்புறுதல் ஒழிக-தில் அம்ம		5
செல்லா நல் இசைப் பொலம் பூண் திரையன்
பல் பூம் கானல் பவத்திரி அன இவள்
நல் எழில் இள நலம் தொலைய ஒல்லெனக்
கழியே ஓதம் மல்கின்று வழியே
வள் எயிற்று அரவொடு வய மீன் கொட்கும்		10
சென்றோர்-மன்ற மான்றன்று பொழுது என
நின் திறத்து அவலம் வீட இன்று இவண்
சேப்பின் எவனோ பூக் கேழ் புலம்ப
பசு மீன் நொடுத்த வெண்ணெல் மாஅத்
தயிர் மிதி மிதவை ஆர்த்துவம் நினக்கே		15
வடவர் தந்த வான் கேழ் வட்டம்
குடபுல உறுப்பின் கூட்டுபு நிகழ்த்திய
வண்டு இமிர் நறும் சாந்து அணிகுவம் திண் திமில்
எல்லுத் தொழில் மடுத்த வல் வினைப் பரதவர்
கூர் உளிக் கடு விசை மாட்டலின் பாய்பு உடன்		20
கோள் சுறாக் கிழித்த கொடு முடி நெடு வலை
தண் கடல் அசை வளி எறி-தொறும் வினை விட்டு
முன்றில் தாழைத் தூங்கும்
தெண் கடல் பரப்பின் எம் உறைவு இன் ஊர்க்கே

#341 பாலை - ஆவூர் மூலங்கிழார்
உய் தகை இன்றால் தோழி பைபயக்
கோங்கும் கொய் குழை உற்றன குயிலும்
தேம் பாய் மாஅத்து ஓங்கு சினை விளிக்கும்
நாடு ஆர் காவிரிக் கோடு தோய் மலிர் நிறைக்
கழை அழி நீத்தம் சாஅய வழி_நாள்		5
மழை கழிந்து அன்ன மாக் கால் மயங்கு அறல்
பதவு மேயல் அருந்து துளம் இமில் நல் ஏறு
மதவு உடை நாக்கொடு அசை வீடப் பருகி
குறும் கால் காஞ்சிக் கோதை மெல் இணர்ப்
பொன் தகை நுண் தாது உறைப்பத் தொக்கு உடன்		10
குப்பை வார் மணல் எக்கர்த் துஞ்சும்
யாணர் வேனில்-மன் இது
மாண் நலம் நுகரும் துணையுடையோர்க்கே

#342 குறிஞ்சி - மதுரைக் கணக்காயனார்
ஒறுப்ப ஓவலை நிறுப்ப நில்லலை
புணர்ந்தோர் போலப் போற்று-மதி நினக்கு யான்
கிளைஞன் அல்லெனோ நெஞ்சே தெனாஅது
வெல் போர்க் கவுரியர் நல் நாட்டு உள்ளதை
மண் கொள் புற்றத்து அருப்பு உழை திறப்பின்		5
ஆ கொள் மூதூர் களவர் பெருமகன்
ஏவல் இளையர் தலைவன் மேவார்
அரும் குறும்பு எறிந்த ஆற்றலொடு பருந்து படப்
பல் செருக் கடந்த செல் உறழ் தடக் கை
கெடாஅ நல் இசைத் தென்னன் தொடாஅ		10
நீர் இழி மருங்கில் கல் அளைக் கரந்த அம்
வரை அர_மகளிரின் அரியள்
அம் வரி அல்குல் அணையாக்காலே

#343 பாலை - மதுரை மருதன் இளநாகனார்
வாங்கு அமை புரையும் வீங்கு இறைப் பணைத் தோள்
சில் சுணங்கு அணிந்த பல் பூண் மென் முலை
நல் எழில் ஆகம் புல்லுதல் நயந்து
மரம் கோள் உமண்_மகன் பேரும் பருதிப்
புன் தலை சிதைத்த வன் தலை நடுகல்		5
கண்ணி வாடிய மண்ணா மருங்குல்
கூர் உளி குயின்ற கோடு மாய் எழுத்து அவ்
ஆறு செல் வம்பலர் வேறு பயம் படுக்கும்
கண் பொரி கவலைய கானத்து ஆங்கண்
நனம் தலை யாஅத்து அம் தளிர்ப் பெரும் சினை		10
இல் போல் நீழல் செல் வெயில் ஒழிமார்
நெடும் செவிக் கழுதைக் குறும் கால் ஏற்றைப்
புறம் நிறை பண்டத்துப் பொறை அசாஅக் களைந்த
பெயர் படை கொள்ளார்க்கு உயவுத் துணை ஆகி
உயர்ந்த ஆள்வினை புரிந்தோய் பெயர்ந்து நின்று		15
உள்ளினை வாழி என் நெஞ்சே கள்ளின்
மகிழின் மகிழ்ந்த அரி மதர் மழைக் கண்
சில் மொழிப் பொலிந்த துவர் வாய்ப்
பல் மாண் பேதையின் பிரிந்த நீயே

#344 முல்லை - மதுரை அளக்கர் ஞாழார் மகனார் மள்ளனார்
வள மழை பொழிந்த வால் நிறக் களரி
உளர்தரு தண் வளி உறு-தொறும் நிலவு என
தொகு முகை விரிந்த முடக் கால் பிடவின்
வை ஏர் வால் எயிற்று ஒள் நுதல் மகளிர்
கை மாண் தோணி கடுப்பப் பையென		5
மயில் இனம் பயிலும் மரம் பயில் கானம்
எல் இடையுறாஅ அளவை வல்லே
கழல் ஒலி நாவின் தெண் மணி கறங்க
நிழல் ஒளிப்பு அன்ன நிமிர் பரிப் புரவி
வயக்குறு கொடிஞ்சி பொலிய வள்பு ஆய்ந்து		10
இயக்கு-மதி வாழியோ கை உடை வலவ
பயப்பு உறு படர் அட வருந்திய
நயப்பு இன் காதலி நகை முகம் பெறவே

#345 பாலை - குடவாயில் கீரத்தனார்
விசும்பு தளி பொழிந்து வெம்மை நீங்கித்
தண் பதம் படுதல் செல்க எனப் பல் மாண்
நாம் செல விழைந்தனம் ஆக ஓங்கு புகழ்க்
கான் அமர் செல்வி அருளலின் வெண் கால்
பல் படைப் புரவி எய்திய தொல் இசை		5
நுணங்கு நுண் பனுவல் புலவன் பாடிய
இன மழை தவழும் ஏழில் குன்றத்துக்
கரும் கால் வேங்கைச் செம் பூம் பிணையல்
ஐது ஏந்து அல்குல் யாம் அணிந்து உவக்கும்
சில் நாள் கழிக என்று முன்_நாள்		10
நம்மொடு பொய்த்தனர் ஆயினும் தம்மொடு
திருந்து வேல் இளையர் சுரும்பு உண மலைமார்
மா முறி ஈன்று மரக் கொம்பு அகைப்ப
உறை கழிந்து உலந்த பின்றைப் பொறைய
சிறு வெள் அருவி துவலையின் மலர்ந்த		15
கரும் கால் நுணவின் பெரும் சினை வான் பூச்
செம் மணல் சிறு நெறி கம்மென வரிப்பக்
காடு கவின் பெறுக தோழி ஆடு வளிக்கு
ஒல்கு நிலை இற்றி ஒரு தனி நெடு வீழ்
கல் கண் சீக்கும் அத்தம்		20
அல்கு வெயில் நீழல் அசைந்தனர் செலவே

#346 மருதம் - நக்கீரர்
நகை நன்று அம்ம தானே இறை மிசை
மாரிச் சுதையின் ஈர்ம் புறத்து அன்ன
கூரல் கொக்கின் குறும் பறைச் சேவல்
வெள்ளி வெண் தோடு அன்ன கயல் குறித்துக்
கள் ஆர் உவகைக் கலி மகிழ் உழவர்		5
காஞ்சி அம் குறும் தறி குத்தித் தீம் சுவை
மென் கழைக் கரும்பின் நல் பல மிடைந்து
பெரும் செய் நெல்லின் பாசவல் பொத்தி
வருத்திக் கொண்ட வல் வாய்க் கொடும் சிறை
மீது அழி கடு நீர் நோக்கிப் பைப்பயப்		10
பார்வல் இருக்கும் பயம் கேழ் ஊர
யாம் அது பேணின்றோ இலமே நீ நின்
பண் அமை நல் யாழ்ப் பாணனொடு விசி பிணி
மண் ஆர் முழவின் கண் அதிர்ந்து இயம்ப
மகிழ் துணைச் சுற்றமொடு மட்டு மாந்தி		15
எம் மனை வாராய் ஆகி முன்_நாள்
நும் மனை சேர்ந்த ஞான்றை அ மனைக்
குறும் தொடி மடந்தை உவந்தனள் நெடும் தேர்
இழை அணி யானைப் பழையன் மாறன்
மாடம் மலி மறுகின் கூடல் ஆங்கண்		20
வெள்ளத் தானையொடு வேறு புலத்து இறுத்த
கிள்ளி வளவன் நல் அமர் சாஅய்க்
கடும் பரிப் புரவியொடு களிறு பல வவ்வி
ஏதில் மன்னர் ஊர் கொளக்
கோதை மார்பன் உவகையின் பெரிதே		25

#347 பாலை - மாமூலனார்
தோளும் தொல் கவின் தொலைய நாளும்
நலம் கவர் பசலை நல்கின்று நலிய
சால் பெரும் தானைச் சேரலாதன்
மால் கடல் ஓட்டிக் கடம்பு அறுத்து இயற்றிய
பண் அமை முரசின் கண் அதிர்ந்து அன்ன		5
கவ்வை தூற்றும் வெவ் வாய்ச் சேரி
அம்பல் மூதூர் அலர் நமக்கு ஒழியச்
சென்றனர் ஆயினும் செய்வினை அவர்க்கே
வாய்க்க-தில் வாழி தோழி வாயாது
மழை கரந்து ஒளித்த கழை திரங்கு அடுக்கத்து		10
ஒண் கேழ் வயப் புலி பாய்ந்து எனக் குவவு அடி
வெண் கோட்டு யானை முழக்கு இசை வெரீஇக்
கன்று ஒழித்து ஓடிய புன் தலை மடப் பிடி
கை தலை வைத்த மையல் விதுப்பொடு
கெடு மகப் பெண்டிரின் தேரும்		15
நெடு மர மருங்கின் மலை இறந்தோரே

#348 குறிஞ்சி - மதுரை இளம்பாலாசிரியன் சேந்தன் கூத்தனார்
என் ஆவது-கொல் தானே முன்றில்
தேன் தேர் சுவைய திரள் அரை மாஅத்துக்
கோடைக்கு ஊழ்த்த கமழ் நறும் தீம் கனி
பயிர்ப்புறுப் பலவின் எதிர்ச் சுளை அளைஇ
இறாலொடு கலந்த வண்டு மூசு அரியல்		5
நெடும் கண் ஆடு அமைப் பழுநிக் கடும் திறல்
பாப்புக் கடுப்பு அன்ன தோப்பி வான் கோட்டுக்
கடவுள் ஓங்கு வரைக்கு ஓக்கிக் குறவர்
முறித் தழை மகளிர் மடுப்ப மாந்தி
அடுக்கல் ஏனல் இரும் புனம் மறந்துழி		10
யானை வவ்வின தினை என நோனாது
இளையரும் முதியரும் கிளையுடன் குழீஇச்
சிலை ஆய்ந்து திரிதரும் நாடன்
நிலையா நல் மொழி தேறிய நெஞ்சே

#349 பாலை - மாமூலனார்
அரம் போழ் அவ் வளை செறிந்த முன்கை
வரைந்து தாம் பிணித்த தொல் கவின் தொலைய
எவன் ஆய்ந்தனர்-கொல் தோழி ஞெமன்ன்
தெரிகோல் அன்ன செயிர் தீர் செம்மொழி
உலைந்த ஒக்கல் பாடுநர் செலினே		5
உரன் மலி உள்ளமொடு முனை பாழ் ஆக
அரும் குறும்பு எறிந்த பெரும் கல் வெறுக்கை
சூழாது சுரக்கும் நன்னன் நல் நாட்டு
ஏழில் குன்றத்துக் கவாஅன் கேழ் கொளத்
திருந்து அரை நிவந்த கரும் கால் வேங்கை		10
எரி மருள் கவளம் மாந்திக் களிறு தன்
வரி நுதல் வைத்த வலி தேம்பு தடக் கை
கல் ஊர் பாம்பின் தோன்றும்
சொல் பெயர் தேஎத்த சுரன் இறந்தோரே

#350 நெய்தல் - சேந்தன் கண்ணனார்
கழியே சிறு குரல் நெய்தலொடு காவி கூம்ப
எறி திரை ஓதம் தரல் ஆனாதே
துறையே மருங்கின் போகிய மாக் கவை மருப்பின்
இரும் சேற்று ஈர் அளை அலவன் நீப்ப
வழங்குநர் இன்மையின் பாடு ஆன்றன்றே		5
கொடு நுகம் நுழைந்த கணைக் கால் அத்திரி
வடி மணி நெடும் தேர் பூண ஏவாது
ஏந்து எழில் மழைக் கண் இவள் குறை ஆகச்
சேந்தனை சென்மோ பெருநீர்ச் சேர்ப்ப
இலங்கு இரும் பரப்பின் எறி சுறா நீக்கி		10
வலம்புரி மூழ்கிய வான் திமில் பரதவர்
ஒலி தலைப் பணிலம் ஆர்ப்பக் கல்லெனக்
கலி கெழு கொற்கை எதிர்கொள இழிதரும்
குவவு மணல் நெடும் கோட்டு ஆங்கண்
உவக் காண் தோன்றும் எம் சிறு நல் ஊரே		15

#351 பாலை - பொருந்தில் இளங்கீரனார்
வேற்று நாட்டு உறையுள் விருப்புறப் பேணி
பெறல் அரும் கேளிர் பின் வந்து விடுப்ப
பொருள் அகப்படுத்த புகல் மலி நெஞ்சமொடு
குறை வினை முடித்த நிறைவு இன் இயக்கம்
அறிவுறூஉம்-கொல்லோ தானே கதிர் தெற		5
கழல் இலை உகுத்த கால் பொரு தாழ் சினை
அழல் அகைந்து அன்ன அம் குழைப் பொதும்பில்
புழல் வீ இருப்பைப் புன் காட்டு அத்தம்
மறுதரல் உள்ளமொடு குறுகத் தோற்றிய
செய் குறி ஆழி வைகல்-தோறு எண்ணி		10
எழுது சுவர் நினைந்த அழுது வார் மழைக் கண்
விலங்கு வீழ் அரிப் பனி பொலம் குழைத் தெறிப்பத்
திருந்து இழை முன்கை அணல் அசைத்து ஊன்றி
இருந்து அணை மீது பொருந்துழிக் கிடக்கை
வருந்து தோள் பூசல் களையும் மருந்து என		15
உள்ளு-தொறு படூஉம் பல்லி
புள்ளுத் தொழுது உறைவி செவி முதலானே

#352 குறிஞ்சி - அஞ்சியத்தை மகள் நாகையார்
முடவு முதிர் பலவின் குடம் மருள் பெரும் பழம்
பல் கிளைத் தலைவன் கல்லாக் கடுவன்
பாடு இமிழ் அருவிப் பாறை மருங்கின்
ஆடு மயில் முன்னது ஆகக் கோடியர்
விழவு கொள் மூதூர் விறலி பின்றை		5
முழவன் போல அகப்படத் தழீஇ
இன் துணைப் பயிரும் குன்ற நாடன்
குடி நன்கு உடையன் கூடுநர்ப் பிரியலன்
கெடு நா மொழியலன் அன்பினன் என நீ
வல்ல கூறி வாய்வதின் புணர்த்தோய்		10
நல்லை காண் இனிக் காதல் அம் தோழீஇ
கடும் பரி புரவி நெடும் தேர் அஞ்சி
நல் இசை நிறுத்த நயம் வரு பனுவல்
தொல் இசை நிறீஇய உரை சால் பாண்_மகன்
எண்ணு முறை நிறுத்த பண்ணினுள்ளும்		15
புதுவது புனைந்த திறத்தினும்
வதுவை நாளினும் இனியனால் எமக்கே

#353 பாலை - மதுரை அளக்கர் ஞாழார் மகனார் மள்ளனார்
ஆள்வினைப் பிரிதலும் உண்டோ பிரியினும்
கேள் இனி வாழிய நெஞ்சே நாளும்
கனவுக் கழிந்து அனைய ஆகி நனவின்
நாளது செலவும் மூப்பினது வரவும்
அரிது பெறு சிறப்பின் காமத்து இயற்கையும்			5
இ நிலை அறியாய் ஆயினும் செந்நிலை
அமை ஆடு அம் கழை தீண்டிக் கல்லென
ஞெமை இலை உதிர்த்த எரி வாய்க் கோடை
நெடு வெண் களரி நீறு முகந்து சுழலக்
கடு வெயில் திருகிய வேனில் வெம் காட்டு		10
உயங்கு நடை மடப் பிணை தழீஇய வயங்கு பொறி
அறு கோட்டு எழில் கலை அறு கயம் நோக்கித்
தெண் நீர் வேட்ட சிறுமையின் தழை மறந்து
உண் நீர் இன்மையின் ஒல்குவன தளர
மரம் நிழல் அற்ற இயவின் சுரன் இறந்து		15
உள்ளுவை அல்லையோ மற்றே உள்ளிய
விருந்து ஒழிவு அறியா பெரும் தண் பந்தர்
வருந்தி வருநர் ஓம்பித் தண்ணெனத்
தாது துகள் உதிர்த்த தாழை அம் கூந்தல்
வீழ் இதழ் அலரி மெல் அகம் சேர்த்தி		20
மகிழ் அணி முறுவல் மாண்ட சேக்கை
நம்மொடு நல் மொழி நவிலும்
பொம்மல் ஓதி புனை_இழை குணனே

#354 முல்லை - மதுரைத் தமிழ்க் கூத்தன் கடுவன் மள்ளனார்
மத வலி யானை மறலிய பாசறை
இடி உமிழ் முரசம் பொருகளத்து இயம்ப
வென்று கொடி எடுத்தனன் வேந்தனும் கன்றொடு
கறவைப் பல் இனம் புறவு-தொறு உகள
குழல் வாய்வைத்தனர் கோவலர் வல் விரைந்து		5
இளையர் ஏகுவனர் பரிய விரி உளைக்
கடு நடைப் புரவி வழி-வாய் ஓட
வலவன் வள்பு வலி உறுப்பப் புலவர்
புகழ் குறி கொண்ட பொலம் தார் அகலத்துத்
தண் கமழ் சாந்தம் நுண் துகள் அணிய		10
வென்றி கொள் உவகையொடு புகுதல் வேண்டின்
யாண்டு உறைவது-கொல் தானே மாண்ட
போது உறழ் கொண்ட உண்கண்
தீதிலாட்டி திரு நுதல் பசப்பே

#355 பாலை - தங்கால் பொற்கொல்லனார்
மாவும் வண் தளிர் ஈன்றன குயிலும்
இன் தீம் பல் குரல் கொம்பர் நுவலும்
மூதிலை ஒழித்த போது அவிழ் பெரும் சினை
வல்லோன் தைவரும் வள் உயிர்ப் பாலை
நரம்பு ஆர்த்து அன்ன வண்டு இனம் முரலும்		5
துணி கயம் துன்னிய தூ மணல் எக்கர்த்
தாது உகு தண் பொழில் அல்கிக் காதலர்
செழு மனை மறக்கும் செவ்வி வேனில்
தானே வந்தன்று ஆயின் ஆனாது
இலங்கு வளை நெகிழ்ந்த எவ்வம் காட்டிப்		10
புலந்தனம் வருகம் சென்மோ தோழி
யாமே எமியம் ஆக நீயே
பொன் நயந்து அருளிலை ஆகி
இன்னை ஆகுதல் ஒத்தன்றால் எனவே

#356 மருதம் - பரணர்
மேல் துறைக் கொளீஇய கழாலின் கீழ்த் துறை
உகு வார் அருந்தப் பகு வாய் யாமை
கம்புள் இயவன் ஆக விசி பிணித்
தெண் கண் கிணையின் பிறழும் ஊரன்
இடை நெடும் தெருவில் கதுமெனக் கண்டு என்		5
பொன் தொடி முன்கை பற்றினன் ஆக
அன்னாய் என்றனென் அவன் கை விட்டனனே
தொல் நசை சாலாமை நன்னன் பறம்பில்
சிறுகாரோடன் பயினொடு சேர்த்திய
கல் போல் நாவினேன் ஆகி மற்று அது		10
செப்பலென்-மன்னால் யாய்க்கே நல் தேர்க்
கடும் பகட்டு யானைச் சோழர் மருகன்
நெடும் கதிர் நெல்லின் வல்லம் கிழவோன்
நல்லடி உள்ளான் ஆகவும் ஒல்லார்
கதவம் முயறலும் முயல்ப அதாஅன்று		15
ஒலி பல் கூந்தல் நம்-வயின் அருளாது
கொன்றனன் ஆயினும் கொலை பழுது அன்றே
அருவி ஆம்பல் கலித்த முன்துறை
நன்னன் ஆஅய் பிரம்பு அன்ன
மின்_ஈர்_ஓதி என்னை நின் குறிப்பே		20

#357 பாலை - எருக்காட்டூர் தாயங்கண்ணனார்
கொடு முள் ஈங்கைச் சூரலொடு மிடைந்த
வான் முகை இறும்பின் வயவொடு வதிந்த
உண்ணாப் பிணவின் உயக்கம் தீரிய
தட மருப்பு யானை வலம் படத் தொலைச்சி
வியல் அறை சிவப்ப வாங்கி முணங்கு நிமிர்ந்து		5
புலவுப் புலி புரண்ட புல் சாய் சிறு நெறி
பயில் இரும் கானத்து வழங்கல் செல்லாது
பெரும் களிற்று இன நிரை கை தொடூஉப் பெயரும்
தீம் சுளைப் பலவின் தொழுதி உம்பல்
பெரும் காடு இறந்தனர் ஆயினும் யாழ நின்		10
திருந்து இழைப் பணைத் தோள் வருந்த நீடி
உள்ளாது அமைதலோ இலரே நல்குவர்
மிகு பெயல் நிலைஇய தீம் நீர்ப் பொய்கை
அடை இறந்து அவிழ்ந்த தண் கமழ் நீலம்
காலொடு துயல்வந்து அன்ன நின்		15
ஆய் இதழ் மழைக் கண் அமர்த்த நோக்கே

#358 குறிஞ்சி - மதுரை மருதன் இளநாகனார்
நீலத்து அன்ன நிறம் கிளர் எருத்தின்
காமர் பீலி ஆய் மயில் தோகை
இன் தீம் குரல துவன்றி மென் சீர்
ஆடு தகை எழில் நலம் கடுப்பக் கூடி
கண் நேர் இதழ தண் நறும் குவளை		5
குறும் தொடர் அடைச்சிய நறும் பல் கூழை
நீடு நீர் நெடும் சுனை ஆயமொடு ஆடாய்
உயங்கிய மனத்தை ஆகிப் புலம்பு கொண்டு
இன்னை ஆகிய நின் நிறம் நோக்கி
அன்னை வினவினள் ஆயின் அன்னோ		10
என் என உரைக்கோ யானே துன்னிய
பெரு வரை இழிதரும் நெடு வெள் அருவி
ஓடை யானை உயர் மிசை எடுத்த
ஆடு கொடி கடுப்பத் தோன்றும்
கோடு உயர் வெற்பன் உறீஇய நோயே		15

#359 பாலை - மாமூலனார்
பனி வார் உண்கணும் பசந்த தோளும்
நனி பிறர் அறியச் சாஅய நாளும்
கரந்தனம் உறையும் நம் பண்பு அறியார்
நீடினர்-மன்னோ காதலர் என நீ
எவன் கையற்றனை இகுளை அவரே		5
வானவரம்பன் வெளியத்து அன்ன நம்
மாண் நலம் தம்மொடு கொண்டனர் முனாஅது
அரும் சுரக் கவலை அசைஇய கோடியர்
பெரும் கல் மீமிசை இயம் எழுந்து ஆங்கு
வீழ் பிடி கெடுத்த நெடும் தாள் யானை		10
சூர் புகல் அடுக்கத்து மழை மாறு முழங்கும்
பொய்யா நல் இசை மா வண் புல்லி
கவைக் கதிர் வரகின் யாணர்ப் பைம் தாள்
முதைச் சுவல் மூழ்கிய கான் சுடு குரூஉப் புகை
அருவித் துவலையொடு மயங்கும்		15
பெரு வரை அத்தம் இயங்கியோரே

#360 நெய்தல் - மதுரைக் கண்ணத்தனார்
பல் பூம் தண் பொழில் பகல் உடன் கழிப்பி
ஒரு கால் ஊர்தி பருதி அம் செல்வன்
குட வயின் மா மலை மறையக் கொடும் கழித்
தண் சேற்று அடைஇய கணைக் கால் நெய்தல்
நுண் தாது உண்டு வண்டு இனம் துறப்ப		5
வெருவரு கடும் திறல் இரு பெரும் தெய்வத்து
உரு உடன் இயைந்த தோற்றம் போல
அந்தி வானமொடு கடல் அணி கொளாஅ
வந்த மாலை பெயரின் மற்று இவள்
பெரும் புலம்பினளே தெய்ய அதனால்		15
பாணி பிழையா மாண் வினைக் கலி மா
துஞ்சு ஊர் யாமத்துத் தெவிட்டல் ஓம்பி
நெடும் தேர் அகல நீக்கிப் பையெனக்
குன்று இழி களிற்றின் குவவு மணல் நீந்தி
இரவின் வம்மோ உரவு நீர்ச் சேர்ப்ப		20
இன மீன் அருந்தும் நாரையொடு பனை மிசை
அன்றில் சேக்கும் முன்றில் பொன் என
நல் மலர் நறு வீ தாஅம்
புன்னை நறும் பொழில் செய்த நம் குறியே

#361 பாலை - எயினந்தை மகனார் இளங்கீரனார்
தூ மலர்த் தாமரைப் பூவின் அம் கண்
மா இதழ்க் குவளை மலர் பிணைத்து அன்ன
திரு முகத்து அலமரும் பெரு மதர் மழைக் கண்
அணி வளை முன்கை ஆய் இதழ் மடந்தை
வார் முலை முற்றத்து நூல் இடை விலங்கினும்		5
கவவுப் புலந்து உறையும் கழி பெரும் காமத்து
இன்புறு நுகர்ச்சியின் சிறந்தது ஒன்று இல் என
அன்பால் மொழிந்த என் மொழி கொள்ளாய்
பொருள் புரிவு உண்ட மருளி நெஞ்சே
கரியாப் பூவின் பெரியோர் ஆர		10
அழல் எழு தித்தியம் மடுத்த யாமை
நிழல் உடை நெடும் கயம் புகல் வேட்டு ஆங்கு
உள்ளுதல் ஓம்பு-மதி இனி நீ முள் எயிற்றுச்
சில் மொழி அரிவை தோளே பல் மலை
வெம் அறை மருங்கின் வியன் சுரம்		15
எவ்வம் கூர இறந்தனம் யாமே

#362 குறிஞ்சி - வெள்ளிவீதியார்
பாம்பு உடை விடர பனி நீர் இட்டுத் துறை
தேம் கலந்து ஒழுக யாறு நிறைந்தனவே
வெண் கோட்டு யானை பொருத புண் கூர்ந்து
பைம் கண் வல்லியம் கல் அளைச் செறிய
முருக்கு அரும்பு அன்ன வள் உகிர் வயப் பிணவு		5
கடிகொள வழங்கார் ஆறே ஆயிடை
எல்லிற்று என்னான் வென் வேல் ஏந்தி
நசை தர வந்த நன்னராளன்
நெஞ்சு பழுது ஆக வறுவியன் பெயரின்
இன்று இப்பொழுதும் யான் வாழலெனே		10
எவன்-கொல் வாழி தோழி நம் இடை முலைச்
சுணங்கு அணி முற்றத்து ஆரம் போலவும்
சிலம்பு நீடு சோலைச் சிதர் தூங்கு நளிப்பின்
இலங்கு வெள் அருவி போலவும்
நிலம் கொண்டனவால் திங்கள் அம் கதிரே		15

#363 பாலை - மதுரைப் பொன்செய் கொல்லன் வெண்ணாகனார்
நிரை செலல் இவுளி விரைவு உடன் கடைஇ
அகல் இரு விசும்பில் பகல் செலச் சென்று
மழுகு சுடர் மண்டிலம் மா மலை மறைய
பொழுது கழி மலரின் புனை_இழை சாஅய்
அணை அணைந்து இனையை ஆகல் கணை அரைப்		5
புல் இலை நெல்லிப் புகர் இல் பசும் காய்
கல் அதர் மருங்கில் கடு வளி உதிர்ப்பப்
பொலம் செய் காசின் பொற்பத் தாஅம்
அத்தம் நண்ணி அதர் பார்த்து இருந்த
கொலை வெம் கொள்கைக் கொடும் தொழில் மறவர்		10
ஆறு செல் மாக்கள் அரு நிறத்து எறிந்த
எஃகுறு விழுப்புண் கூர்ந்தோர் எய்திய
வளை வாய்ப் பருந்தின் வள் உகிர்ச் சேவல்
கிளை தரு தெள் விளி கெழு முடைப் பயிரும்
இன்னா வெம் சுரம் இறந்தோர் முன்னிய		15
செய்வினை வலத்தர் ஆகி இவண் நயந்து
எய்த வந்தனரே தோழி மை எழில்
துணை ஏர் எதிர் மலர் உண்கண்
பிணை ஏர் நோக்கம் பெரும் கவின் கொளவே

#364 முல்லை - மதுரை மருதங்கிழார் மகனார் பெருங்கண்ணனார்
மாதிரம் புதையப் பாஅய்க் கால் வீழ்த்து
ஏறு உடைப் பெரு மழை பொழிந்து என அவல்-தோறு
ஆடுகளப் பறையின் வரி நுணல் கறங்க
ஆய் பொன் அவிர் இழை தூக்கி அன்ன
நீடு இணர்க் கொன்றை கவின் பெறக் காடு உடன்		5
சுடர் புரை தோன்றிப் புதல் தலைக் கொளாஅ
முல்லை இல்லமொடு மலரக் கல்ல
பகு வாய்ப் பைம் சுனை மா உண மலிரக்
கார் தொடங்கின்றே காலை காதலர்
வெம் சின வேந்தன் வியன் பெரும் பாசறை		10
வென்றி வேட்கையொடு நம்மும் உள்ளார்
யாது செய்வாம்-கொல் தோழி நோதக
கொலை குறித்து அன்ன மாலை
துனைதரு போழ்தின் நீந்தலோ அரிதே

#365 பாலை - மதுரை மருதன் இளநாகனார்
அகல் வாய் வானம் ஆல் இருள் பரப்பப்
பகல் ஆற்றுப்படுத்த பையென் தோற்றமொடு
சினவல் போகிய புன்கண் மாலை
அத்த நடுகல் ஆள் என உதைத்த
கான யானைக் கதுவாய் வள் உகிர்		5
இரும் பனை இதக்கையின் ஒடியும் ஆங்கண்
கடும் கண் ஆடவர் ஏ முயல் கிடக்கை
வருநர் இன்மையின் களையுநர்க் காணா
என்றூழ் வெம் சுரம் தந்த நீயே
துயர் செய்து ஆற்றாய் ஆகிப் பெயர்பு ஆங்கு		10
உள்ளினை வாழிய நெஞ்சே வென் வேல்
மா வண் கழுவுள் காமூர் ஆங்கண்
பூதம் தந்த பொரி அரை வேங்கைத்
தண் கமழ் புது மலர் நாறும்
அம்_சில்_ஓதி ஆய் மடத் தகையே		15

#366 மருதம் - குடவாயில் கீரத்தனார்
தாழ் சினை மருதம் தகை பெறக் கவினிய
நீர் சூழ் வியன் களம் பொலியப் போர்பு அழித்து
கள் ஆர் களமர் பகடு தலை மாற்றி
கடும் காற்று எறியப் போகிய துரும்பு உடன்
காயல் சிறு தடிக் கண் கெடப் பாய்தலின்		5
இரு நீர்ப் பரப்பின் பனித் துறைப் பரதவர்
தீம் பொழி வெள் உப்புச் சிதைதலின் சினைஇக்
கழனி உழவரொடு மாறு எதிர்ந்து மயங்கி
இரும் சேற்று அள்ளல் எறி செருக் கண்டு
நரை மூதாளர் கை பிணி விடுத்து		10
நனை முதிர் தேறல் நுளையர்க்கு ஈயும்
பொலம் பூண் எவ்வி நீழல் அன்ன
நலம் பெறு பணைத் தோள் நல் நுதல் அரிவையொடு
மணம் கமழ் தண் பொழில் அல்கி நெருநை
நீ தன் பிழைத்தமை அறிந்து		15
கலுழ்ந்த கண்ணள் எம் அணங்கு அன்னாளே

#367 பாலை - பரணர்
இலங்கு சுடர் மண்டிலம் புலம் தலைப்பெயர்ந்து
பல் கதிர் மழுகிய கல் சேர் அமையத்து
அலந்தலை மூதேறு ஆண் குரல் விளிப்ப
மனை வளர் நொச்சி மா சேர்பு வதிய
முனை உழை இருந்த அம் குடிச் சீறூர்க்		5
கரும் கால் வேங்கைச் செம் சுவல் வரகின்
மிகு பதம் நிறைந்த தொகு கூட்டு ஒரு சிறைக்
குவி அடி வெருகின் பைம் கண் ஏற்றை
ஊன் நசைப் பிணவின் உயங்கு பசி களைஇயர்
தளிர் புரை கொடிற்றின் செறி மயிர் எருத்தின்		10
கதிர்த்த சென்னிக் கவிர்ப் பூ அன்ன
நெற்றிச் சேவல் அற்றம் பார்க்கும்
புல்லென் மாலையும் இனிது-மன்ற அம்ம
நல் அக வன முலை அடையப் புல்லு-தொறும்
உயிர் குழைப்பு அன்ன சாயல்		15
செயிர் தீர் இன் துணை புணர்ந்திசினோர்க்கே

#368 குறிஞ்சி - மதுரை மருதன் இளநாகனார்
தொடுதோல் கானவன் சூடுறு வியன் புனம்
கரி புறம் கழீஇய பெரும் பாட்டு ஈரத்துத்
தோடு வளர் பைம் தினை நீடு குரல் காக்கும்
ஒண் தொடி மகளிர்க்கு ஊசல் ஆக
ஆடு சினை ஒழித்த கோடு இணர் கஞலிய		5
குறும்பொறை அயலது நெடும் தாள் வேங்கை
மட மயில் குடுமியின் தோன்றும் நாடன்
உயர் வரை மருங்கின் காந்தள் அம் சோலை
குரங்கு அறிவாரா மரம் பயில் இறும்பில்
கடி சுனைத் தெளிந்த மணி மருள் தீம் நீர்		10
பிடி புணர் களிற்றின் எம்மொடு ஆடி
பல் நாள் உம்பர்ப் பெயர்ந்து சில் நாள்
கழியாமையே வழிவழிப் பெருகி
அம் பணை விளைந்த தேக் கள் தேறல்
வண்டு படு கண்ணியர் மகிழும் சீறூர்		15
எவன்-கொல் வாழி தோழி கொங்கர்
மணி அரை யாத்து மறுகின் ஆடும்
உள்ளி_விழவின் அன்ன
அலர் ஆகின்று அது பலர் வாய்ப் பட்டே

#369 பாலை - நக்கீரர்
கண்டிசின் மகளே கெழீஇ இயைவெனை
ஒண் தொடி செறித்த முன்கை ஊழ் கொள்பு
மங்கையர் பல பாராட்டச் செம் தார்க்
கிள்ளையும் தீம் பால் உண்ணா மயில் இயல்
சே இழை மகளிர் ஆயமும் அயரா		5
தாழியும் மலர் பல அணியா கேழ் கொளக்
காழ் புனைந்து இயற்றிய வனப்பு அமை நோன் சுவர்
பாவையும் பலி எனப் பெறாஅ நோய் பொர
இவை கண்டு இனைவதன்தலையும் நினைவிலேன்
கொடியோள் முன்னியது உணரேன் தொடியோய்		10
இன்று நின் ஒலி குரல் மண்ணல் என்றதற்கு
என் புலந்து அழிந்தனள் ஆகித் தன் தகக்
கடல் அம் தானைக் கைவண் சோழர்
கெடல் அரு நல் இசை உறந்தை அன்ன
நிதி உடை நல் நகர்ப் புதுவது புனைந்து		15
தமர் மணன் அயரவும் ஒல்லாள் கவர் முதல்
ஓமை நீடிய உலவை நீள் இடை
மணி அணி பலகை மாக் காழ் நெடு வேல்
துணிவு உடை உள்ளமொடு துதைந்த முன்பின்
அறியாத் தேஎத்து அரும் சுரம் மடுத்த		20
சிறியோற்கு ஒத்த என் பெரு மடத் தகுவி
சிறப்பும் சீரும் இன்றிச் சீறூர்
நல்கூர் பெண்டின் புல் வேய் குரம்பை
ஓர் ஆ யாத்த ஒரு தூண் முன்றில்
ஏதில் வறு மனை சிலம்பு உடன் கழீஇ		25
மேயினள்-கொல் என நோவல் யானே

#370 நெய்தல் - அம்மூவனார்
வளை வாய்க் கோதையர் வண்டல் தைஇ
இளையோர் செல்ப எல்லும் எல்லின்று
அகல் இலைப் புன்னைப் புகர் இல் நீழல்
பகலே எம்மொடு ஆடி இரவே
காயல் வேய்ந்த தேயா நல் இல்		5
நோயொடு வைகுதி ஆயின் நுந்தை
அரும் கடிப் படுவலும் என்றி மற்று நீ
செல்லல் என்றலும் ஆற்றாய் செலினே
வாழலென் என்றி ஆயின் ஞாழல்
வண்டு படத் ததைந்த கண்ணி நெய்தல்		10
தண் அரும் பைம் தார் துயல்வர அந்தி
கடல் கெழு செல்வி கரை நின்று ஆங்கு
நீயே கானல் ஒழிய யானே
வெறி கொள் பாவையின் பொலிந்த என் அணி துறந்து
ஆடு_மகள் போலப் பெயர்தல்		15
ஆற்றேன் தெய்ய அலர்க இவ் ஊரே

#371 பாலை - எயினந்தை மகன் இளங்கீரனார்
அவ் விளிம்பு உரீஇய விசை அமை நோன் சிலை
செவ் வாய்ப் பகழிச் செயிர் நோக்கு ஆடவர்
கணை இடக் கழிந்த தன் வீழ் துணை உள்ளிக்
குறு நெடும் துணைய மறி புடை ஆடப்
புன்கண் கொண்ட திரி மருப்பு இரலை		5
மேய் பதம் மறுத்த சிறுமையொடு நோய் கூர்ந்து
நெய்தல் அம் படுவில் சில் நீர் உண்ணாது
எஃகு உறு மாந்தரின் இனைந்து கண்படுக்கும்
பைது அற வெம்பிய பாழ் சேர் அத்தம்
எமியம் நீந்தும் எம்மினும் பனி வார்ந்து		10
என்ன ஆம்-கொல் தாமே தெண் நீர்
ஆய் சுனை நிகர் மலர் போன்ம் என நசைஇ
வீ தேர் பறவை விழையும்
போது ஆர் கூந்தல் நம் காதலி கண்ணே

#372 குறிஞ்சி - பரணர்
அரும் தெறல் மரபின் கடவுள் காப்பப்
பெரும் தேன் தூங்கும் நாடு காண் நனம் தலை
அணங்கு உடை வரைப்பின் பாழி ஆங்கண்
வேள் முது மாக்கள் வியன் நகர் கரந்த
அரும் கல வெறுக்கையின் அரியோள் பண்பு நினைந்து		5
வருந்தினம்-மாதோ எனினும் அஃது ஒல்லாய்
இரும் பணைத் தொடுத்த பலர் ஆடு ஊசல்
ஊர்ந்து இழி கயிற்றின் செல வர வருந்தி
நெடு நெறிக் குதிரைக் கூர் வேல் அஞ்சி
கடு முனை அலைத்த கொடு வில் ஆடவர்		10
ஆடு கொள் பூசலின் பாடு சிறந்து எறியும்
பெரும் துடி வள்பின் வீங்குபு நெகிழா
மேய் மணி இழந்த பாம்பின் நீ நனி
தேம்பினை வாழி என் நெஞ்சே வேந்தர்
கோண் தணி எயிலின் காப்புச் சிறந்து		15
ஈண்டு அரும்-குரையள் நம் அணங்கியோளே

#373 பாலை - பாண்டியன் ஏனாதி நெடுங்கண்ணனார்
முனை கவர்ந்து கொண்டு என கலங்கிப் பீர் எழுந்து
மனை பாழ்பட்ட மரை சேர் மன்றத்துப்
பணைத் தாள் யானை பரூஉப் புறம் உரிஞ்சச்
செது காழ் சாய்ந்த முது கால் பொதியில்
அரும் சுரம் நீந்திய வருத்தமொடு கையற்றுப்		5
பெரும் புன் மாலை புலம்பு வந்து உறுதர
மீளி உள்ளம் செலவு வலியுறுப்பத்
தாள் கை பூட்டிய தனி நிலை இருக்கையொடு
தன் நிலை உள்ளும் நம் நிலை உணராள்
இரும் பல் கூந்தல் சேய் இழை மடந்தை		10
கனை இருள் நடுநாள் அணையொடு பொருந்தி
வெய்துற்றுப் புலக்கும் நெஞ்சமொடு ஐது உயிரா
ஆய் இதழ் மழைக் கண் மல்க நோய் கூர்ந்து
பெரும் தோள் நனைக்கும் கலுழ்ந்து வார் அரிப் பனி
மெல் விரல் உகிரின் தெறியினள் வென் வேல்		15
அண்ணல் யானை அடு போர் வேந்தர்
ஒருங்கு அகப்படுத்த முரவு வாய் ஞாயில்
ஓர் எயில் மன்னன் போலத்
துயில் துறந்தனள்-கொல் அளியள் தானே

#374 முல்லை - இடைக்காடனார்
மாக் கடல் முகந்து மாதிரத்து இருளி
மலர் தலை உலகம் புதைய வலன் ஏர்பு
பழங்கண் கொண்ட கொழும் பல் கொண்மூ
போழ்ந்த போல பல உடன் மின்னி
தாழ்ந்த போல நனி அணி வந்து		5
சோர்ந்த போலச் சொரிவன பயிற்றி
இடியும் முழக்கும் இன்றிப் பாணர்
வடியுறு நல் யாழ் நரம்பு இசைத்து அன்ன
இன் குரல் அழி துளி தலைஇ நல் பல
பெயல் பெய்து கழிந்த பூ நாறு வைகறைச்		10
செறி மணல் நிவந்த களர் தோன்று இயவில்
குறு மோட்டு மூதாய் குறுகுறு ஓடி
மணி மண்டு பவளம் போலக் காயா
அணி மிகு செம்மல் ஒளிப்பன மறையக்
கார் கவின் கொண்ட காமர் காலைச்		15
செல்க தேரே நல் வலம் பெறுந
பெரும் தோள் நுணுகிய நுசுப்பின்
திருந்து இழை அரிவை விருந்து எதிர்கொளவே

#375 பாலை - இடையன் சேந்தன் கொற்றனார்
சென்று நீடுநர் அல்லர் அவர்-வயின்
இனைதல் ஆனாய் என்றிசின் இகுளை
அம்பு தொடை அமைதி காண்மார் வம்பலர்
கலன் இலர் ஆயினும் கொன்று புள் ஊட்டும்
கல்லா இளையர் கலித்த கவலைக்		5
கண நரி இனனொடு குழீஇ நிணன் அருந்தும்
நெய்த்தோர் ஆடிய மல்லல் மொசி விரல்
அத்த எருவைச் சேவல் சேர்ந்த
அரை சேர் யாத்த வெண் திரள் வினை விறல்
எழூஉத் திணி தோள் சோழர் பெருமகன்		10
விளங்கு புகழ் நிறுத்த இளம் பெரும் சென்னி
குடிக் கடன் ஆகலின் குறை வினை முடிமார்
செம்பு உறழ் புரிசைப் பாழி நூறி
வம்ப வடுகர் பைம் தலை சவட்டிக்
கொன்ற யானைக் கோட்டின் தோன்றும்		15
அஞ்சுவரு மரபின் வெம் சுரம் இறந்தோர்
நோயிலர் பெயர்தல் அறியின்
ஆழல-மன்னோ தோழி என் கண்ணே

#376 மருதம் - பரணர்
செல்லல் மகிழ்ந நின் செய் கடன் உடையென்-மன்
கல்லா யானை கடி புனல் கற்று என
மலி புனல் பொருத மருது ஓங்கு படப்பை
ஒலி கதிர்க் கழனி கழாஅர் முன்துறை
கலி கொள் சுற்றமொடு கரிகால் காணத்		5
தண்_பதம் கொண்டு தவிர்ந்த இன் இசை
ஒண் பொறிப் புனை கழல் சே அடி புரளக்
கரும் கச்சு யாத்த காண்பு இன் அம் வயிற்று
இரும் பொலப் பாண்டில் மணியொடு தெளிர்ப்பப்
புனல் நயந்து ஆடும் அத்தி அணி நயந்து		10
காவிரி கொண்டு ஒளித்து ஆங்கு-மன்னோ
நும்-வயின் புலத்தல் செல்லேம் எம்-வயின்
பசந்தன்று காண்டிசின் நுதலே அசும்பின்
அம் தூம்பு வள்ளை அழல் கொடி மயக்கி
வண் தோட்டு நெல்லின் வாங்கு பீள் விரியத்		15
துய்த் தலை முடங்கு இறாத் தெறிக்கும் பொற்பு உடைக்
குரங்கு உளைப் புரவிக் குட்டுவன்
மரந்தை அன்ன என் நலம் தந்து சென்மே

#377 பாலை - மாறோக்கத்துக் காமக்கணி நப்பாலத்தனார்
கோடை நீடலின் வாடு புலத்து உக்க
சிறு புல் உணவு நெறி பட மறுகி
நுண் பல் எறும்பி கொண்டு அளைச் செறித்த
வித்தா வல்சி வீங்கு சிலை மறவர்
பல் ஊழ் புக்குப் பயன் நிரை கவர		5
கொழும் குடி போகிய பெரும் பாழ் மன்றத்து
நரை மூதாளர் அதிர் தலை இறக்கிக்
கவை மனத்து இருத்தும் வல்லு வனப்பு அழிய
வரி நிறச் சிதலை அரித்தலின் புல்லென்று
பெரு நலம் சிதைந்த பேஎம் முதிர் பொதியில்		10
இன்னா ஒரு சிறைத் தங்கி இன் நகை
சிறு மென் சாயல் பெரு நலம் உள்ளி
வம்பலர் ஆகியும் கழிப மன்ற
நசை தர வந்தோர் இரந்தவை
இசை பட பெய்தல் ஆற்றுவோரே		15

#378 குறிஞ்சி - காவட்டனார்
நிதியம் துஞ்சும் நிவந்து ஓங்கு வரைப்பின்
வதுவை மகளிர் கூந்தல் கமழ் கொள
வங்கூழ் ஆட்டிய அம் குழை வேங்கை
நல் பொன் அன்ன நறும் தாது உதிர
காமர் பீலி ஆய் மயில் தோகை		5
வேறுவேறு இனத்த வரை வாழ் வருடை
கோடு முற்று இளம் தகர் பாடு விறந்து அயல
ஆடு கள வயிரின் இனிய ஆலிப்
பசும் புற மென் சீர் ஒசிய விசும்பு உகந்து
இரும் கண் ஆடு அமைத் தயங்க இருக்கும்		10
பெரும் கல் நாடன் பிரிந்த புலம்பும்
உடன்ற அன்னை அமரா நோக்கமும்
வடந்தை தூக்கும் வரு பனி அற்சிரச்
சுடர் கெழு மண்டிலம் அழுங்க ஞாயிறு
குட கடல் சேரும் படர் கூர் மாலையும்		15
அனைத்தும் அடூஉ நின்று நலிய உஞற்றி
யாங்ஙனம் வாழ்தி என்றி தோழி
நீங்கா வஞ்சினம் செய்து நம் துறந்தோர்
உள்ளார் ஆயினும் உளனே அவர் நாட்டு
அள் இலைப் பலவின் கனி கவர் கைய		20
கல்லா மந்தி கடுவனோடு உகளும்
கடும் திறல் அணங்கின் நெடும் பெரும் குன்றத்துப்
பாடு இன் அருவி சூடி
வான் தோய் சிமையம் தோன்றலானே

#379 பாலை - பாலை பாடிய பெருங்கடுங்கோ
நம் நயந்து உறைவி தொல் நலம் அழிய
தெருளாமையின் தீதொடு கெழீஇ
அருள் அற நிமிர்ந்த முன்பொடு பொருள் புரிந்து
ஆள்வினைக்கு எதிரிய மீளி நெஞ்சே
நினையினை ஆயின் எனவ கேள்-மதி		5
விரி திரை முந்நீர் மண் திணி கிடக்கைப்
பரிதி அம் செல்வம் பொதுமை இன்றி
நனவின் இயன்றது ஆயினும் கங்குல்
கனவின் அற்று அதன் கழிவே அதனால்
விரவுறு பல் மலர் வண்டு சூழ்பு அடைச்சிச்		10
சுவல் மிசை அசைஇய நிலை தயங்கு உறு முடி
ஈண்டு பல் நாற்றம் வேண்டு வயின் உவப்பச்
செய்வுறு விளங்கு இழைப் பொலிந்த தோள் சேர்பு
எய்திய கனை துயில் ஏல்-தொறும் திருகி
மெய் புகு அன்ன கை கவர் முயக்கின்		15
மிகுதி கண்டன்றோ இலெனே நீ நின்
பல் பொருள் வேட்கையின் சொல் வரை நீவிச்
செலவு வலியுறுத்தனை ஆயின் காலொடு
கனை எரி நிகழ்ந்த இலை இல் அம் காட்டு
உழைப் புறத்து அன்ன புள்ளி நீழல்		20
அசைஇய பொழுதில் பசைஇய வந்து இவள்
மறப்பு அரும் பல் குணம் நிறத்து வந்து உறுதர
ஒரு திறம் நினைத்தல் செல்லாய் திரிபு நின்று
உறு புலி உழந்த வடு மருப்பு ஒருத்தற்குப்
பிடி இடு பூசலின் அடி படக் குழிந்த		25
நிரம்பா நீள் இடைத் தூங்கி
இரங்குவை அல்லையோ உரம் கெட மெலிந்தே

#380 நெய்தல் - மதுரை மருதன் இளநாகனார்
தேர் சேண் நீக்கித் தமியன் வந்து நும்
ஊர் யாது என்ன நணிநணி ஒதுங்கி
முன்_நாள் போகிய துறைவன் நெருநை
அகல் இலை நாவல் உண்துறை உதிர்த்த
கனி கவின் சிதைய வாங்கிக் கொண்டு தன்		5
தாழை வேர் அளை வீழ் துணைக்கு இடூஉம்
அலவன் காட்டி நல் பாற்று இது என
நினைந்த நெஞ்சமொடு நெடிது பெயர்ந்தோனே
உதுக் காண் தோன்றும் தேரே இன்றும்
நாம் எதிர்கொள்ளாம் ஆயின் தான் அது		10
துணிகுவன் போலாம் நாணு மிக உடையன்
வெண் மணல் நெடும் கோட்டு மறைகோ
அம்ம தோழி கூறு-மதி நீயே

#381 பாலை - மதுரை இளங்கௌசிகனார்
ஆளி நல் மான் அணங்கு உடை ஒருத்தல்
மீளி வேழத்து நெடுந்தகை புலம்ப
ஏந்தல் வெண் கோடு வாங்கிக் குருகு அருந்தும்
அஞ்சுவரத் தகுந ஆங்கண் மஞ்சு தப
அழல் கான்று திரிதரும் அலங்கு கதிர் மண்டிலம்		5
நிழல் சூன்று உண்ட நிரம்பா நீள் இடை
கற்று உரிக் குடம்பைக் கத நாய் வடுகர்
வில் சினம் தணிந்த வெருவரு கவலை
குருதி ஆடிய புலவு நாறு இரும் சிறை
எருவைச் சேவல் ஈண்டு கிளைத் தொழுதி		10
பச்சூன் கொள்ளை சாற்றிப் பறை நிவந்து
செக்கர் வானின் விசும்பு அணி கொள்ளும்
அரும் சுரம் நீந்திய நம்மினும் பொருந்தார்
முனை அரண் கடந்த வினை வல் தானைத்
தேன் இமிர் நறும் தார் வானவன் உடற்றிய		15
ஒன்னாத் தெவ்வர் மன் எயில் போலப்
பெரும் பாழ் கொண்ட மேனியள் நெடிது உயிர்த்து
வருந்தும்-கொல் அளியள் தானே சுரும்பு உண
நெடு நீர் பயந்த நிரை இதழ்க் குவளை
எதிர் மலர் இணைப் போது அன்ன தன்		20
அரி மதர் மழைக் கண் தெண் பனி கொளவே

#382 குறிஞ்சி - கபிலர்
பிறர் உறு விழுமம் பிறரும் நோப
தம் உறு விழுமம் தமக்கோ தஞ்சம்
கடம்பு கொடி யாத்துக் கண்ணி சூட்டி
வேறு பல் குரல ஒரு தூக்கு இன்னியம்
காடு கெழு நெடு வேள் பாடு கொளைக்கு ஏற்ப		5
அணங்கு அயர் வியன் களம் பொலியப் பையத்
தூங்குதல் புரிந்தனர் நமர் என ஆங்கு அவற்கு
அறியக் கூறல் வேண்டும் தோழி
அருவி பாய்ந்த கரு விரல் மந்தி
செழும் கோள் பலவின் பழம் புணை ஆகச்		10
சாரல் பேர் ஊர் முன்துறை இழிதரும்
வறனுறல் அறியாச் சோலை
விறல் மலை நாடன் சொல் நயந்தோயே

#383 பாலை - கயமனார்
தன் புரந்து எடுத்த என் துறந்து உள்ளாள்
ஊரும் சேரியும் ஓராங்கு அலர் எழ
காடும் கானமும் அவனொடு துணிந்து
நாடும் தேயமும் நனி பல இறந்த
சிறு வன்கண்ணிக்கு ஏர் தேறுவர் என		5
வாடினை வாழியோ வயலை நாள்-தொறும்
பல் கிளைக் கொடி கொம்பு அலமர மலர்ந்த
அல்குல் தழைக் கூட்டு அம் குழை உதவிய
வினை அமை வரல் நீர் விழுத் தொடி தத்தக்
கமம் சூல் பெரு நிறை தயங்க முகந்து கொண்டு		10
ஆய் மடக் கண்ணள் தாய் முகம் நோக்கிப்
பெய் சிலம்பு ஒலிப்பப் பெயர்வனள் வைகலும்
ஆர நீர் ஊட்டிப் புரப்போர்
யார் மற்று பெறுகுவை அளியை நீயே

#384 முல்லை - ஒக்கூர் மாசாத்தியார்
இருந்த வேந்தன் அரும் தொழில் முடித்து எனப்
புரிந்த காதலொடு பெரும் தேர் யானும்
ஏறியது அறிந்தன்று அல்லது வந்த
ஆறு நனி அறிந்தன்றோ இலெனே தாஅய்
முயல் பறழ் உகளும் முல்லை அம் புறவில்		5
கவைக் கதிர் வரகின் சீறூர் ஆங்கண்
மெல் இயல் அரிவை இல் வயின் நிறீஇ
இழி-மின் என்ற நின் மொழி மருண்டிசினே
வான் வழங்கு இயற்கை வளி பூட்டினையோ
மான் உரு ஆக நின் மனம் பூட்டினையோ		10
உரை-மதி வாழியோ வலவ எனத் தன்
வரை மருள் மார்பின் அளிப்பனன் முயங்கி
மனைக் கொண்டு புக்கனன் நெடுந்தகை
விருந்து ஏர் பெற்றனள் திருந்து_இழையோளே

#385 பாலை - குடவாயில் கீரத்தனார்
தன் ஓர் அன்ன ஆயமும் மயில் இயல்
என் ஓர் அன்ன தாயரும் காணக்
கை வல் யானைக் கடும் தேர்ச் சோழர்
காவிரிப் படப்பை உறந்தை அன்ன
பொன் உடை நெடு நகர் புரையோர் அயர		5
நல் மாண் விழவில் தகரம் மண்ணி
யாம் பல புணர்ப்பச் சொல்லாள் காம்பொடு
நெல்லி நீடிய கல் அறைக் கவாஅன்
அத்த ஆலத்து அலந்தலை நெடு வீழ்
தித்திக் குறங்கில் திருந்த உரிஞ		10
வளை உடை முன்கை அளைஇக் கிளைய
பயில் இரும் பிணையல் பசும் காழ்க் கோவை
அகல் அமை அல்குல் பற்றிக் கூந்தல்
ஆடு மயில் பீலியின் பொங்க நன்றும்
தான் அமர் துணைவன் ஊக்க ஊங்கி		15
உள்ளாது கழிந்த முள் எயிற்றுத் துவர் வாய்ச்
சிறு வன்கண்ணி சிலம்பு கழீஇ
அறியாத் தேஎத்தள் ஆகுதல் கொடிதே

#386 மருதம் - பரணர்
பொய்கை நீர்நாய்ப் புலவு நாறு இரும் போத்து
வாளை நாள்_இரை தேரும் ஊர
நாணினென் பெரும யானே பாணன்
மல் அடு மார்பின் வலியுற வருந்தி
எதிர் தலைக்கொண்ட ஆரியப் பொருநன்		5
நிறைத் திரள் முழவுத் தோள் கையகத்து ஒழிந்த
திறன் வேறு கிடக்கை நோக்கி நல் போர்க்
கணையன் நாணிய ஆங்கு மறையினள்
மெல்ல வந்து நல்ல கூறி
மை ஈர் ஓதி மடவோய் யானும் நின்		10
சேரியேனே அயலிலாட்டியேன்
நுங்கை ஆகுவென் நினக்கு எனத் தன் கை
தொடு மணி மெல் விரல் தண்ணெனத் தைவர
நுதலும் கூந்தலும் நீவிப்
பகல் வந்து பெயர்ந்த வாள்_நுதல் கண்டே		15

#387 பாலை - மதுரை மருதன் இளநாகனார்
திருந்து இழை நெகிழ்ந்து பெரும் தோள் சாஅய்
அரி மதர் மழைக் கண் கலுழச் செல்வீர்
வருவீர் ஆகுதல் உரை-மின் மன்னோ
உவர் உணப் பறைந்த ஊன் தலைச் சிறாஅரொடு
அவ் வரிக் கொன்ற கறை சேர் வள் உகிர்ப்		5
பசை விரல் புலைத்தி நெடிது பிசைந்து ஊட்டிய
பூம் துகில் இமைக்கும் பொலன் காழ் அல்குல்
அம் வரி சிதைய நோக்கி வெம் வினைப்
பயில் அரில் கிடந்த வேட்டு விளி வெரீஇ
வரிப் புற இதலின் மணிக் கண் பேடை		10
நுண் பொறி அணிந்த எருத்தின் கூர் முள்
செம் கால் சேவல் பயிரும் ஆங்கண்
வில் ஈண்டு அரும் சமம் ததைய நூறி
நல் இசை நிறுத்த நாண் உடை மறவர்
நிரை நிலை நடுகல் பொருந்தி இமையாது		15
இரை நசைஇக் கிடந்த முது வாய்ப் பல்லி
சிறிய தெற்றுவது ஆயின் பெரிய
ஓடை யானை உயர்ந்தோர் ஆயினும்
நின்று ஆங்குப் பெயரும் கானம்
சென்றோர்-மன் என இருக்கிற்போர்க்கே		20

#388 குறிஞ்சி - ஊட்டியார்
அம்ம வாழி தோழி நம் மலை
அமை அறுத்து இயற்றிய வெம் வாய்த் தட்டையின்
நறு விரை ஆரம் அற எறிந்து உழுத
உளைக் குரல் சிறுதினை கவர்தலின் கிளை அமல்
பெரு வரை அடுக்கத்துக் குரீஇ ஓப்பி		5
ஓங்கு இரும் சிலம்பின் ஒள் இணர் நறு வீ
வேங்கை அம் கவட்டிடை நிவந்த இதணத்துப்
பொன் மருள் நறும் தாது ஊதும் தும்பி
இன் இசை ஓரா இருந்தனம் ஆக
மை ஈர் ஓதி மட நல்லீரே		10
நொவ்வு இயல் பகழி பாய்ந்து எனப் புண் கூர்ந்து
எவ்வமொடு வந்த உயர் மருப்பு ஒருத்தல் நும்
புனத்துழிப் போகல் உறுமோ மற்று என
சினவுக் கொள் ஞமலி செயிர்த்துப் புடை ஆடச்
சொல்லிக் கழிந்த வல் வில் காளை		15
சாந்து ஆர் அகலமும் தகையும் மிக நயந்து
ஈங்கு நாம் உழக்கும் எவ்வம் உணராள்
நன்னர் நெஞ்சமொடு மயங்கி வெறி என
அன்னை தந்த முது வாய் வேலன்
எம் இறை அணங்கலின் வந்தன்று இ நோய்		20
தணி மருந்து அறிவல் என்னும் ஆயின்
வினவின் எவனோ மற்றே கனல் சின
மையல் வேழம் மெய் உளம் போக
ஊட்டி அன்ன ஊன் புரள் அம்பொடு
காட்டு மான் அடி வழி ஒற்றி		25
வேட்டம் செல்லுமோ நும் இறை எனவே

#389 பாலை - நக்கீரனார்
அறியாய் வாழி தோழி நெறி குரல்
சாந்து ஆர் கூந்தல் உளரிப் போது அணிந்து
தேம் கமழ் திரு நுதல் திலகம் தைஇயும்
பல் இதழ் எதிர் மலர் கிள்ளி வேறுபட
நல் இள வன முலை அல்லியொடு அப்பியும்		5
பெரும் தோள் தொய்யில் வரித்தும் சிறு பரட்டு
அம் செம் சீறடிப் பஞ்சி ஊட்டியும்
என் புறந்தந்து நின் பாராட்டிப்
பல் பூம் சேக்கையின் பகலும் நீங்கார்
மனை-வயின் இருப்பவர்-மன்னே துனைதந்து	10
இரப்போர் ஏந்து கை நிறையப் புரப்போர்
புலம்பு இல் உள்ளமொடு புதுவ தந்து உவக்கும்
அரும் பொருள் வேட்டம் எண்ணிக் கறுத்தோர்
சிறு புன் கிளவிச் செல்லல் பாழ்பட
நல் இசை தம்-வயின் நிறுமார் வல் வேல்		15
வானவரம்பன் நல் நாட்டு உம்பர்
வேனில் நீடிய வெம் கடற்று அடை முதல்
ஆறு செல் வம்பலர் வேறு பிரிந்து அலறக்
கொலை வெம்மையின் நிலை பெயர்ந்து உறையும்
பெரும் களிறு தொலைச்சிய இரும் கேழ் ஏற்றை		20
செம் புல மருங்கில் தன் கால் வாங்கி
வலம் படு வென்றியொடு சிலம்பகம் சிலம்பப்
படு மழை உருமின் முழங்கும்
நெடு மர மருங்கின் மலை இறந்தோரே

#390 நெய்தல் - அம்மூவனார்
உவர் விளை உப்பின் கொள்ளை சாற்றி
அதர் படு பூழிய சேண் புலம் படரும்
ததர் கோல் உமணர் பதி போகு நெடு நெறிக்
கண நிரை வாழ்க்கை தான் நன்று-கொல்லோ
வணர் சுரி முச்சி முழுதும் மன் புரள		5
ஐது அகல் அல்குல் கவின் பெறப் புனைந்த
பல் குழைத் தொடலை ஒல்கு வயின் ஒல்கி
நெல்லும் உப்பும் நேரே ஊரீர்
கொள்ளீரோ எனச் சேரி-தொறும் நுவலும்
அம் வாங்கு உந்தி அமைத் தோளாய் நின்		10
மெய் வாழ் உப்பின் விலை எய்யாம் எனச்
சிறிய விலங்கினம் ஆகப் பெரிய தன்
அரி வேய் உண்கண் அமர்த்தனள் நோக்கி
யாரீரோ எம் விலங்கியீஇர் என
மூரல் முறுவலள் பேர்வனள் நின்ற		15
சில் நிரை வால் வளைப் பொலிந்த
பல் மாண் பேதைக்கு ஒழிந்தது என் நெஞ்சே

#391 பாலை - காவன் முல்லைப் பூதனார்
பார்வல் வெருகின் கூர் எயிற்று அன்ன
வரி மென் முகைய நுண் கொடி அதிரல்
மல்கு அகல் வட்டியர் கொள்விடம் பெறாஅர்
விலைஞர் ஒழித்த தலை வேய் கான் மலர்
தேம் பாய் முல்லையொடு ஞாங்கர்ப் போக்கித்		5
தண் நறும் கதுப்பில் புணர்ந்தோர் புனைந்த என்
பொதி மாண் முச்சி காண்-தொறும் பண்டைப்
பழ அணி உள்ளப்படுமால் தோழி
இன்றொடு சில் நாள் வரினும் சென்று நனி
படாஅ ஆகும் எம் கண்ணே கடாஅ		10
வான் மருப்பு அசைத்தல் செல்லாது யானை தன்
வாய் நிறை கொண்ட வலி தேம்பு தடக் கை
குன்று புகு பாம்பின் தோன்றும்
என்றூழ் வைப்பின் சுரன் இறந்தோரே

#392 குறிஞ்சி - மோசிகீரனார்
தாழ் பெரும் தடக் கை தலைஇய கானத்து
வீழ் பிடி கெடுத்த வெண் கோட்டு யானை
உண் குளகு மறுத்த உயக்கத்து அன்ன
பண்பு உடை யாக்கைச் சிதைவு நன்கு அறீஇப்
பின் நிலை முனியான் ஆகி நன்றும்		5
தாது செய் பாவை அன்ன தையல்
மாதர் மெல் இயல் மட நல்லோள்-வயின்
தீது இன்றாக நீ புணை புகுக என
என்னும் தண்டும் ஆயின் மற்று அவன்
அழிதகப் பெயர்தல் நனி இன்னாதே		10
ஒல் இனி வாழி தோழி கல்லெனக்
கண மழை பொழிந்த கான் படி இரவில்
தினை மேய் யானை இனன் இரிந்து ஓட
கல் உயர் கழுதில் சேணோன் எறிந்த
வல் வாய்க் கவணின் கடு வெடி ஒல்லென		15
மறப் புலி உரற வாரணம் கதற
நனவுறு கட்சியின் நல் மயில் ஆல
மலை உடன் வெரூஉம் மாக் கல் வெற்பன்
பிரியுநன் ஆகலோ அரிதே அதாஅன்று
உரிது அல் பண்பின் பிரியுநன் ஆயின்		20
வினை தவப் பெயர்ந்த வென் வேல் வேந்தன்
முனை கொல் தானையொடு முன் வந்து இறுப்ப
தன் வரம்பு ஆகிய மன் எயில் இருக்கை
ஆற்றாமையின் பிடித்த வேல் வலி
தோற்றம் பிழையாத் தொல் புகழ் பெற்ற		25
விழை தக ஓங்கிய கழை துஞ்சு மருங்கின்
கான் அமர் நன்னன் போல
யான் ஆகுவல் நின் நலம் தருவேனே

#393 பாலை - மாமூலனார்
கோடு உயர் பிறங்கல் குன்று பல நீந்தி
வேறு புலம் படர்ந்த வினை தரல் உள்ளத்து
ஆறு செல் வம்பலர் காய் பசி தீரிய
முதைச் சுவல் கலித்த ஈர் இலை நெடும் தோட்டுக்
கவைக் கதிர் வரகின் கால் தொகு பொங்கழி		5
கவட்டு அடிப் பொருத பல் சினை உதிர்வை
அகன் கண் பாறைச் செவ் வயின் தெறீஇ
வரி அணி பணைத் தோள் வார் செவித் தன்னையர்
பண்ணை வெண் பழத்து அரிசி ஏய்ப்பச்
சுழல் மரம் சொலித்த சுளகு அலை வெண் காழ்		10
தொடி மாண் உலக்கை ஊழின் போக்கி
உரல் முகம் காட்டிய சுரை நிறை கொள்ளை
ஆங்கண் இரும் சுனை நீரொடு முகவாக்
களி படு குழிசிக் கல் அடுப்பு ஏற்றி
இணர் ததை கடுக்கை ஈண்டிய தாதின்		15
குடவர் புழுக்கிய பொங்கு அவிழ் புன்கம்
மதர்வை நல் ஆன் பாலொடு பகுக்கும்
நிரை பல குழீஇய நெடுமொழிப் புல்லி
தேன் தூங்கு உயர் வரை நல் நாட்டு உம்பர்
வேங்கடம் இறந்தனர் ஆயினும் ஆண்டு அவர்		20
நீடலர் வாழி தோழி தோடு கொள்
உரு கெழு மஞ்ஞை ஒலி சீர் ஏய்ப்பத்
தகரம் மண்ணிய தண் நறு முச்சி
புகர் இல் குவளை போதொடு தெரி இதழ்ப்
வேனில் அதிரல் வேய்ந்த நின்		25
ஏமுறு புணர்ச்சி இன் துயில் மறந்தே

#394 முல்லை - நன்பலூர்ச் சிறுமேதாவியார்
களவும் புளித்தன விளவும் பழுநின
சிறு தலைத் துருவின் பழுப்புறு விளை தயிர்
இதைப் புன வரகின் அவைப்பு மாண் அரிசியொடு
கார் வாய்த்து ஒழிந்த ஈர் வாய்ப் புற்றத்து
ஈயல் பெய்து அட்ட இன் புளி வெம் சோறு		5
சேதான் வெண்ணெய் வெம் புறத்து உருக
இளையர் அருந்தப் பின்றை நீயும்
இடு முள் வேலி முடக் கால் பந்தர்ப்
புதுக் கலத்து அன்ன செவ் வாய்ச் சிற்றில்
புனை இரும் கதுப்பின் நின் மனையோள் அயரப்		10
பால் உடை அடிசில் தொடீஇய ஒரு நாள்
மா வண் தோன்றல் வந்தனை சென்மோ
காடு உறை இடையன் யாடு தலைப்பெயர்க்கும்
மடி விடு வீளை வெரீஇக் குறு முயல்
மன்ற இரும் புதல் ஒளிக்கும்		15
புன் புல வைப்பின் எம் சிறு நல் ஊரே

#395 பாலை - எயினந்தை மகனார் இளங்கீரனார்
தண் கயம் பயந்த வண் கால் குவளை
மாரி மா மலர் பெயற்கு ஏற்று அன்ன
நீரொடு நிறைந்த பேர் அமர் மழைக் கண்
பனி வார் எவ்வம் தீர இனி வரின்
நன்று-மன் வாழி தோழி தெறு கதிர்		5
ஈரம் நைத்த நீர் அறு நனம் தலை
அழல் மேய்ந்து உண்ட நிழல் மாய் இயவின்
வறல் மரத்து அன்ன கவை மருப்பு எழில் கலை
அறல் அவிர்ந்து அன்ன தேர் நசைஇ ஓடிப்
புலம்பு வழிப்பட்ட உலமரல் உள்ளமொடு		10
மேய் பிணைப் பயிரும் மெலிந்து அழி படர் குரல்
அரும் சுரம் செல்லுநர் ஆள் செத்து ஓர்க்கும்
திருந்து அரை ஞெமைய பெரும் புனக் குன்றத்து
ஆடு கழை இரு வெதிர் நரலும்
கோடு காய் கடற்ற காடு இறந்தோரே		15

#396 மருதம் - பரணர்
தொடுத்தேன் மகிழ்ந செல்லல் கொடித் தேர்ப்
பொலம் பூண் நன்னன் புனனாடு கடிந்து என
யாழ் இசை மறுகின் பாழி ஆங்கண்
அஞ்சல் என்ற ஆஅய் எயினன்
இகல் அடு கற்பின் மிஞிலியொடு தாக்கி		5
தன் உயிர் கொடுத்தனன் சொல்லியது அமையாது
தெறல் அரும் கடவுள் முன்னர்த் தேற்றி
மெல் இறை முன்கை பற்றிய சொல் இறந்து
ஆர்வ நெஞ்சம் தலைத்தலை சிறப்ப நின்
மார்பு தருகல்லாய் பிறன் ஆயினையே		10
இனி யான் விடுக்குவென் அல்லென் மந்தி
பனி வார் கண்ணள் பல புலந்து உறைய
அடும் திறல் அத்தி ஆடு அணி நசைஇ
நெடு நீர்க் காவிரி கொண்டு ஒளித்து ஆங்கு நின்
மனையோள் வவ்வலும் அஞ்சுவல் சினைஇ		15
ஆரியர் அலறத் தாக்கிப் பேர் இசைத்
தொன்று முதிர் வடவரை வணங்கு வில் பொறித்து
வெம் சின வேந்தரைப் பிணித்தோன்
வஞ்சி அன்ன என் நலம் தந்து சென்மே

#397 பாலை - கயமனார்
என் மகள் பெரு மடம் யான் பாராட்டத்
தாய் தன் செம்மல் கண்டு கடன் இறுப்ப
முழவு முகம் புலரா விழவு உடை வியன் நகர்
மணன் இடையாகக் கொள்ளான் கல் பகக்
கண மழை துறந்த கான் மயங்கு அழுவம்		5
எளிய ஆக ஏந்து கொடி பரந்த
பொறி வரி அல்குல் மாஅயோட்கு எனத்
தணிந்த பருவம் செல்லான் படர்தரத்
துணிந்தோன்-மன்ற துனை வெம் காளை
கடும் பகட்டு ஒருத்தல் நடுங்கக் குத்திப்		10
போழ் புண் படுத்த பொரி அரை ஓமைப்
பெரும் பொளிச் சேய அரை நோக்கி ஊன் செத்துச்
கரும் கால் யாத்துப் பருந்து வந்து இறுக்கும்
சேண் உயர்ந்து ஓங்கிய வான் உயர் நெடும் கோட்டுக்
கோடை வெம் வளிக்கு உலமரும்		15
புல் இலை வெதிர நெல் விளை காடே

#398 குறிஞ்சி - இம்மென் கீரனார்
இழை நிலை நெகிழ்ந்த எவ்வம் கூரப்
படர் மலி வருத்தமொடு பல புலந்து அசைஇ
மென் தோள் நெகிழச் சாஅய்க் கொன்றை
ஊழுறு மலரின் பாழ்பட முற்றிய
பசலை மேனி நோக்கி நுதல் பசந்து		5
இன்னேம் ஆகிய எம் இவண் அருளான்
நும்மோன் செய்த கொடுமைக்கு இம்மென்று
அலமரல் மழைக் கண் தெண் பனி மல்க
நன்று புறம்மாறி அகறல் யாழ நின்
குன்று கெழு நாடற்கு என் எனப்படுமோ		10
கரை பொரு நீத்தம் உரை எனக் கழறி
நின்னொடு புலத்தல் அஞ்சி அவர் மலைப்
பல் மலர் போர்த்து நாணு மிக ஒடுங்கி
மறைந்தனை கழியும் நின் தந்து செலுத்தி
நயன் அறத் துறத்தல் வல்லியோரே		15
நொதுமலாளர் அது கண்ணோடாது
அழல் சினை வேங்கை நிழல் தவிர்ந்து அசைஇ
மாரி புறந்தர நந்தி ஆரியர்
பொன் படு நெடு வரை புரையும் எந்தை
பல் பூம் கானத்து அல்கி இன்று இவண்		20
சேர்ந்தனை செலினே சிதைகுவது உண்டோ
குய வரி இரும் போத்துப் பொருத புண் கூர்ந்து
உயங்கு பிடி தழீஇய மதன் அழி யானை
வாங்கு அமைக் கழையின் நரலும் அவர்
ஓங்கு மலை நாட்டின் வரூஉவோயே		25

#399 பாலை - எயினந்தை மகனார் இளங்கீரனார்
சிமைய குரல சாந்து அருந்தி இருளி
இமையக் கானம் நாறும் கூந்தல்
நல் நுதல் அரிவை இன் உறல் ஆகம்
பருகு அன்ன காதல் உள்ளமொடு
திருகுபு முயங்கல் இன்றி அவண் நீடார்		5
கடற்று அடை மருங்கின் கணிச்சியின் குழித்த
உடைக்-கண் நீடு அமை ஊறல் உண்ட
பாடு இன் தெண் மணி பயம் கெழு பெரு நிரை
வாடு புலம் புக்கு எனக் கோடு துவைத்து அகற்றி
ஒல்கு நிலைக் கடுக்கை அல்கு நிழல் அசைஇப்		10
பல் ஆன் கோவலர் கல்லாது ஊதும்
சிறு வெதிர் தீம் குழல் புலம் கொள் தெள் விளி
மை இல் பளிங்கின் அன்ன தோற்றப்
பல் கோள் நெல்லிப் பைம் காய் அருந்தி
மெல்கிடு மட மரை ஓர்க்கும் அத்தம்		15
காய் கதிர் கடுகிய கவின் அழி பிறங்கல்
வேய் கண் உடைந்த சிமைய
வாய் படு மருங்கின் மலை இறந்தோரே

#400 நெய்தல் - உலோச்சனார்
நகை நன்று அம்ம தானே அவனொடு
மனை இறந்து அல்கினும் அலர் என நயந்து
கானல் அல்கிய நம் களவு அகல
பல் புரிந்து இயறல் உற்ற நல் வினை
நூல் அமை பிறப்பின் நீல உத்திக்		5
கொய்ம் மயிர் எருத்தம் பிணர்படப் பெருகி
நெய்ம்மிதி முனைஇய கொழும் சோற்று ஆர்கை
நிரல் இயைந்து ஒன்றிய செலவின் செந்தினைக்
குரல் வார்ந்து அன்ன குவவுத் தலை நந்நான்கு
வீங்கு சுவல் மொசியத் தாங்கு நுகம் தழீஇப்		10
பூம் பொறிப் பல் படை ஒலிப்பப் பூட்டி
மதி உடை வலவன் ஏவலின் இகு துறைப்
புனல் பாய்ந்து அன்ன வாம் மான் திண் தேர்க்
கணை கழிந்து அன்ன நோன் கால் வண் பரி
பால் கண்டு அன்ன ஊதை வெண் மணல்		15
கால் கண்டு அன்ன வழிபடப் போகி
அயிர்ச் சேற்று அள்ளல் அழுவத்து ஆங்கண்
இருள் நீர் இட்டுச் சுரம் நீந்தித் துறை கெழு
மெல்லம்புலம்பன் வந்த ஞான்றை
பூ மலி இரும் கழி துயல்வரும் அடையொடு		20
நேமி தந்த நெடு_நீர் நெய்தல்
விளையா இளம் கள் நாறப் பல உடன்
பொதி அவிழ் தண் மலர் கண்டும் நன்றும்
புதுவது ஆகின்று அம்ம பழ விறல்
பாடு எழுந்து இரங்கும் முந்நீர்		25
நீடு இரும் பெண்ணை நம் அழுங்கல் ஊரே
**
** அகநானூறு

#0 கடவுள் வாழ்த்து
கார்காலத்தில் மலரும் கொன்றை மரத்தின் பொன்னை ஒத்த புதிய மலர்களாலான
குறுமாலையன்; நீள்மாலையன்; சூடிய தலைமாலையன்;
மார்பின்கண் உள்ளது குற்றமற்ற நுண்ணிய பூணூல்;
நெற்றியில் உள்ளது இமைக்காத கண்; பகைவரைக் கொல்லும்,
கையில் இருப்பது, குந்தாலியுடன் கோடரி, மூன்று கூறுகளையுடைய
சூலாயுதமும் உண்டு அந்தத் தோல்வி இல்லாதவருக்கு;
ஏறிச்செல்வது காளை; சேர்ந்து இருப்பது உமையவள்;
சிவந்த வானத்தைப் போன்ற மேனி; அந்த வானத்தில்
ஒளிரும் பிறை போன்ற நேர்குறுக்கான வெண்மையான கூரிய பற்கள்;
நெருப்பு அகைந்து எரிவதைப் போன்ற மின்னிப் பிரகாசிக்கும் முறுக்கிய சடைமுடி;
இளம்பிறையுடன் ஒளிரும் நெற்றி;
மூப்படையாத அமரரும், முனிவரும், பிறரும் (ஆகிய)
அனைவரும் அறியாத தொன்மையான மரபினையுடைய;
கோடுகள் அழகுடன் விளங்கும் வலிய புலியின் தோலை உடுத்த;
யாழ் (இசையின் இனிமை)வாய்ந்த நீலமணி(போன்ற) மிடற்றை உடைய அந்தணன்
(ஆகிய சிவபெருமானின்)மாசற்ற அடிகளின் நிழலில் உலகமக்கள் உறைகின்றனர்.

#1 பாலை மாமூலனார்
வண்டுகள் மொய்ப்பதால் சிதைவுண்ட தலைமாலையையும், ஒளிரும் கழலையும்,
அச்சம்தரும் குதிரைகளையும் உடைய மழவரை ஓட்டிய,
முருகனைப் போன்ற நல்ல போர்த்திறம் கொண்ட நெடுவேள் ஆவியின்
அறுக்கப்பட்ட தந்தங்களையுடைய யானைகளைக் கொண்ட பொதினியில் உள்ள
சாணைபிடிக்கும் சிறுவன் அரக்குடன் இணைத்துச் செய்த
சாணைக்கல் போல் (உன்னைப்) ‘பிரியமாட்டேன்' என்ற சொல்லைத் தாம்
மறந்துவிட்டாரோ! தோழி! (என்) சிறந்த
மூங்கிலைப் போன்ற பருத்த தோள்கள் மெலிந்துபோக, தொலைநாட்டுப்
பொன் அணிகலன்களாகிய செல்வத்தை ஈட்டிவருவதற்காக - நிலம் பிளக்குமாறு
தீயைப் போல் வெம் கதிர்கள் பசுமையே அற்றுப்போகும்படி எரித்தலால்
(தம்)நிழல் குறைந்து உலர்ந்துபோன மரங்களைக் கொண்ட - பாறைகள் காய்ந்து
நீர் அற்ற பசுமையான சுனைகள் ஈரப்பசையே இன்றிக் காய்ந்துபோனதால்
நெல்விழுந்தால் பொரிந்துபோகும் அளவு வெம்மையுடைய - ஒருவரேனும்
அவ்வழியே செல்பவர் இல்லாததால், வழிப்பறிசெய்வோரும் சோர்ந்திருக்கும்
வறண்ட நிலத்தின் பொலிவற்ற பாதைகளை உடைய - ஆடும் கிளைகளிலுள்ள
நாரற்ற முருங்கையான நவிரலின் வெண்மையான பூக்கள்
சுழற்றி அடிக்கும் கடுமையான காற்று மேலெழும்ப, சிதறலுண்டு,
உடைந்த அலைகளின் சிதறலைப் போன்று நுரைத்தெழ, முன்பகுதிக்
கடல் போன்று தோன்றும் காட்டினைக் கடந்து சென்றோர்.

#2 குறிஞ்சி கபிலர்
கொழுத்த இலைகளைக் கொண்ட வாழையின், அடுக்குகள் முற்றிய பெரிய குலையின்
நன்கு பழுத்த இனிய கனிகள், (மிக்க இனிமையால்)உண்பவருக்குத் திகட்டும்,
மலைச்சரிவின் பலாச் சுளைகளுடன் (கலந்ததால்), நாட்பட்டு,
பாறையின் குழிந்த பகுதியில் சுனை போல் உண்டாகிய தெளிந்த சாறை
(தேறல் என)அறியாமல் குடித்த ஆண்குரங்கு, (பின்னர்) அருகிலிருக்கும்
மிளகுக் கொடிகள் படர்ந்த சந்தனமரத்தில் ஏறாமல்,
நறிய பூக்களாலான படுக்கையில் களிப்புற்றுத் தூங்கும்
எண்ணி முயலாத இன்பத்தை எளிதாக, நின் மலையிலுள்ள
பல்வேறு விலங்குகளும் எய்தும் நாடனே!
(நீ)எண்ணி முயன்ற இன்பம் நினக்கு எங்ஙனம் அரிதாக இருக்கும்?
மிக்க அழகினையுடைய மூங்கில் போன்ற பருத்த தோளைக் கொண்ட(இவளும்),
கட்டுப்படுத்த எண்ணியும் அடங்காத நெஞ்சமுடன், உன்னிடம்
இவளும் இத்துணை காதல் கொண்டவளாயின், (இவளது)தந்தையின்
கடும் காவலையுடைய காவலர்கள் சோர்ந்திருக்கும் தக்க சமயத்தை உளவறிந்து கண்டு
இரவில் வருவதுவும் (நினக்கு)உரியதே, பசுமையான புதர்கள் (சூழ்ந்த)
வேங்கை மரங்களும் நல்ல பூங்கொத்துகளை மலரப்பெற்றுள்ளன,
மிகுந்த வெண்மை நிறமுள்ள திங்களும் ஒளிவட்டம் கொண்டுள்ளது.

#3 பாலை
கருமையான சேற்றுப்பகுதிகளில் இருக்கும் முதலையின் மேல் தோலைப் போன்ற
கருத்த அடிப்பகுதியை உடைய ஓமை மரத்தின் காண்பதற்கு இனிய பெரிய கிளையில்
மிக்க பாதுகாப்பை உடைய அகன்ற இடத்தில் குஞ்சுபொரித்துக் காத்துக்கிடக்கும்
வளைந்த அலகினை உடைய (தன்)பேடைக்கு இருப்பு உணவைக் கொண்டுவர,
மயங்கி ஆசையுடன் பறந்து சென்ற சிவந்த காதுகளை உடைய எருவைப் பருந்து,
விண்ணைத் தொடும் முகடுகளைக் கொண்ட பெருமை மிக்க மலைச் சரிவில்
அசைந்தாடும் நடையைக் கொண்ட மரையா மானை வலப்பக்கம் வீழ்த்தி,
(அதன்) ஒள்ளிய சிவந்த குருதியை உறிஞ்சிக் குடித்து,
முடைவீசும் புலி விட்டுச்சென்ற மூட்டு கழன்ற மிகுந்த நாற்றமுள்ள தசையைக்
கொள்ளை மாந்தரைப் போல் விரைந்து திரும்பத் திரும்பக் கவரும்,
குறைந்த இலைகளை உடைய மரா மரங்களை உடைய அகன்ற நீண்ட நெறியை,
அணிகலன்கள் ஈட்டவேண்டும் என்ற எண்ணத்துடன் கடந்துசெல்வதாகக் காட்டி
பின்னால் இருந்து விரட்டும் நெஞ்சமே! உன் வாயின்
மெய் போன்ற பொய்மொழிகள் (என்)துன்பத்தை எவ்வாறு களையும்?
முள்முருங்கைப்பூவின் இதழ் போன்ற, காண்பதற்கு இனிய சிவந்த வாயின்
அழகிய இனிய சொற்களும், ஆய்ந்த அணிகலன்களும் கொண்ட பெண்ணின்(தலைவியின்),
வளைந்த காதணிகளுடன் ஒத்து நிற்கும் பார்வை
நீண்டுகிடக்கும் அந்தத் தொலைவிடத்திலும் குறுக்கே மறிக்கும் நேரத்தில் -

#4 முல்லை குறுங்குடி மருதனார்
முல்லைக்கொடியில் கூரிய நுனியையுடைய (அரும்புகள்) தோன்ற, தேற்றாமரத்துடன்,
பசிய காம்புகளைக் கொண்ட கொன்றைமுகைகள் தம் மெல்லிய கட்டுகள் அவிழ,
இரும்பை முறுக்கினாற் போன்ற கரிய பெரிய கொம்பினையுடைய,
பரற்கற்கள் உள்ள பள்ளங்களை அடுத்துள்ள, இரலை மான்கள் துள்ளிவிளையாட,
பொலிவுபெற்ற நிலம் (வறட்சித்)துன்பத்தைப் பின்துரத்த,
கூட்டமான மேகங்கள் சீறிவரும் மழைத்துளிகளைச் சிதறி
கார்கால மலர்ச்சியைச் செய்தன கவின் பெற்ற கானத்தை;
வளைந்த தலையாட்டத்தால் பொலிவுற்ற, கொய்த பிடரிமயிரைக் கொண்ட குதிரைகள்
நரம்புகளைச் சேர்த்தது போன்ற, வளைந்த கடிவாளத்துடன் விரைந்து ஓடுகின்ற,
பூத்திருக்கும் சோலைகளில் துணையோடு தங்கி வாழும்
பூந்தாது உண்ணும் பறவை(வண்டுகள்) கலக்கமடைவதை(எண்ணி) அஞ்சி,
மணிகளின் நாவுகளைச் சேர்த்துக்கட்டிய, சிறந்த வேலைப்பாடுள்ள, தேரையுடைவன்
உங்கு பார், வந்துவிடுவான் - குறிய மலைகளையுடைய நாட்டைச் சேர்ந்தவன்
சுற்றுப்புறம் எங்கிலும் ஒலிக்கும் இசையுடன் விழா நடக்கும் உறந்தையின் கிழக்கே
நெடிய பெரிய குன்றத்தில் நெருக்கமாய் வளர்ந்த காந்தள்
மொட்டு அவிழ்ந்த மலரைப் போன்று மணக்கும்
ஆய்ந்த தோள்வளையையுடைய அரிவையாகிய நின் சிறந்த அழகினை நினைத்து.

#5 பாலை பாலை பாடிய பெருங்கடுங்கோ
(நாம்)கனிவுடன் இருக்கும் நிலையை ஏற்காமல், பூசல் கொண்ட முகத்தவளாய்,
(அன்புடன்)விளிக்கும் நிலையை மனதில் கொள்ளாளாய், தனித்தவளாய், மெதுவாக
அழகு மிக்க சிவந்த அடிகளை நிலத்தில் அழுந்தத் தடம் பதித்து,
மிக அருகில் வந்து, தன் கூரிய பற்கள் தோன்ற
சிறிதே தன் உள்ளத்தில் எழுந்த பொய்மையான முறுவலை உடையவள்,
(நாம்)எண்ணியதை முழுதும் உணர்வதற்கு முன்னரேயே, ஒள்நுதல் தலைவி,
(நாம்) பொருள்தேடச் செல்லுதலை ஏற்றுக்கொள்ளா எண்ணத்துடன் -
உலர்ந்துபோன ஓமை மரங்களுள்ள பழமையான (அழகிய) காட்டில்
பளிங்கைப் போன்று பல காய்களைக் காய்க்கும் நெல்லிமரங்கள்
முகடுகளில் இருக்கும் பாறையில், (சிறுவரின்)பல கோலிக்குண்டுகள் போன்று 
உதிர்ந்து கிடக்கும் - ஞாயிற்றின் கதிர்கள் காயும் - உச்சிமலைச் சரிவுகளில்
(சாணையால்) தேய்க்கப்பட்டது போல் மழுங்கிய நுனைகளை வெளியே காட்டி,
பாத்திகட்டியதைப் போல் இருக்கும் குடுமியை உடைய கூர்மையான கற்கள்
விரல்களின் நுனியைச் சிதைக்கும் நிரைத்த நிலையிலுள்ள வழிகள் உடைய
பரற்கற்களைக் கொண்ட மேட்டுநிலமாகிய பயனற்ற காட்டுநிலத்துவழியில்
செல்ல எண்ணுவீராயின், அது அறத்தின்பாற்பட்டது
அன்று என மொழிந்த பழமையான முதுமொழி
பழம்பேச்சாகவே ஆக என்று சொல்பவள் போல
(தன்)உட்கிடக்கையைக் காட்டி, முகக்குறிப்பால் உரைத்து
ஓவியத்தின் நிலை போல ஒன்றையே நினைத்தவளாய் (என்னை)உரசிக்கொண்டு
கண்ணின் கருவிழிகள் மறைத்த, துளிர்த்த நீருடனான பார்வையோடு
(தன்) மார்பில் ஒடுக்கிய தன் புதல்வனின் சிறிய தலையிலுள்ள
தூய நீர் தந்த துணையோடு அமைந்த (இரட்டை வடமாகப்)பின்னிய மாலையை   
மோந்து பெருமூச்சுவிட்ட நேரத்தில், (அதன் வெப்பத்தால்)அந்த சிறந்த மலர்கள்
பவளம் போல் ஒளி இழந்து தம் அழகு அழிந்த தோற்றத்தைக்
கண்டு தவிர்த்துவிட்டோம் நாம் செல்வதை, ஒளிரும் தொடியுடையாள்
(நாம்)அருகிலிருக்கும்போதே இங்ஙனம் ஆகிவிட்டவள்
பிழைத்திருக்கமாட்டாள் அல்லவா பிரிந்துசென்றோம் நாம் எனின்.

#6 மருதம் பரணர்
பரல்கள் இடப்பெற்ற சிலம்பினையும், ஆம்பல் மலரின் அழகிய மாலையையும்,
அரத்தால் அறுக்கப்பட்ட அழகிய வளைகளால் அழகுபெற்ற முன்கையையும்,
நகைகள் அணிந்த, மூங்கில் போன்ற தோள் உடைய, ஐயை-இன் தந்தையாகிய,
மழை போன்று வளம்தரும் மிக்க வண்மையுடைய தித்தனின்,
குவியல் நெல்லையுடைய உறந்தை நகரில்
ஓடக்கோலும் நிலைத்து நில்லாத காவிரி ஆற்றின் நீர்ப்பெருக்கில்,
குழை முதலான சிறந்த அணிகளையுடைய நீ விரும்பியவளுடன்
வேழக் கரும்பினாலான வெண்மையான தெப்பத்தில் ஏறி, பூழியரின்
குளத்தை நாடிச் செல்லும் யானையைப் போன்று முகமலர்ச்சியுற்று,
உயர்ந்த அழகிய மார்பிலுள்ள மாலை குழைந்துபோகும்படி,
நேற்று புனலாடினாய், இன்று (இங்கே) வந்து
மார்பினில் அழகிய கொங்கைகளில் அழகுத்தேமலை உடையவளே,
மாசற்ற கற்புடையவளே, என் மகனுக்குத் தாயே என்று
மாய்மாலமான பொய்மொழிகளைப் பணிவுடன் பலமுறை கூறி, எனது
முதுமையை இகழ வேண்டாம். அது எனக்குப் பொருந்தும்தானே!
தீச்சுடர் போன்ற அழகிய தாமரை மலர்கள் உள்ள, நீர் நெடுநாள் நிற்கும் வயலில்
அழகிய உள்துளையுள்ள வள்ளையின் மெல்லிய கொடிகளை உழப்பி,
வாளைமீனைத் தின்ற கூரிய பற்களை உடைய நீர்நாய்
முட்கள் கொண்ட தண்டினை உடைய பிரம்பின் பழைய புதரில் தங்கும்,
பல வேல்களை உடைய மத்தி என்பானது கழார் என்ற ஊரைப் போன்று, என்
இளமை கழிந்து மிகவும் பழையதானது,
இனிக்கவா போகிறது (உன்) பொய்மொழி எனக்கு.

#7 பாலை கயமனார்
“முலைகள் கூம்பி நிறைந்த வளர்ச்சியுற்றன. கூரிய பற்கள் மின்னுகின்றன.
தலையில் கூந்தலும் நன்கு வளர்ந்துள்ளது. குளிர்ந்த தழையாடையையும் உடுத்தியுள்ளாய்.
சுற்றித்திரியும் விளையாட்டுத் தோழியருடன் எவ்விடத்தும் செல்லாதிருப்பாய்,
மிகப் பழமை வாய்ந்த இந்த மூதூர் வருத்தும் தெய்வங்களை உடையது.
(எனவே நீ)காவலுக்கு உட்பட்டிருக்கவேண்டும், வீட்டின் வெளி வாசல் வரைக்கும் போகக்கூடாது.
சிறுமி அல்லவே நீ, அறிவுள்ள சிறுமகளே!,
இளம்பெண் பருவத்தில் வெளியில் சென்றாயே” என்று நான் கூற,
ஒளிரும் விளக்குகளையுடைய நல்ல இல்லத்தின் அரிய கட்டுக்காவலையும் மீறி,
தன் மனமாற்றத்தை வீட்டார் அறிந்துவிடுவர் என்று அஞ்சி, இனிதாக முழக்கமிடும்
ஆண்மானைக் கொண்ட கூட்டத்தைச் சேர்ந்த, மோப்பது போல் மூச்சுவிடும் இளைய பெண்மானே!
வலையைக் கண்ட பெண்மானைப் போலத் தப்பி ஓடி, இங்கு ஒரு,
தோல்வியையே அறியாத வெள்ளிய வேலை உடைய இளங்காளையொடு என் மகள்
இந்த வழியே சென்றுவிட்டாள்; அதனால்
வழிப்பறிக் கள்வர்கள் பசுக்களைத் தொழுவை உடைத்துக் கொண்டுசென்றனராக,
அவர்களின் பின்னே துரத்திச்செல்வோர் ஆரவாரிப்பது போல, அங்குமிங்கும் ஓடி,
அவளின் மேனியை எதிர்ப்பட்டிலேன், இவ்விடத்தில்
உன்னிடம் வினவுவதைக் கேட்பாயாக,
பொன் சரட்டில் புலிப்பல் கோத்த ஒற்றைத் தாலியையும்,
செழித்த அசோகத் தளிரால் ஆன தழையுடை அணிந்த கீழிடுப்பையும் உடைய,
ஆய்ந்தெடுத்த சுளைகளைக் கொண்ட பலாக்கனியைத் தின்று, முசுக்கலை உதிர்த்த
தலையில் வெண்பஞ்சுவைக் கொண்ட வெள்ளிய கொட்டைகளைப் பெறும்
பாறைகளைக் கொண்ட சிறுகுடியைச் சேர்ந்த கானவன் மகளாகிய என் மகளே.

#8 குறிஞ்சி பெருங்குன்றூர்கிழார்
ஈசல்புற்றின் ஈரமான வெளிப்பக்கத்தில் தங்கிய
புற்றாஞ்சோறை உணவாகக் கொண்ட பெரிய கையை உடைய ஆண்கரடியின்
தொங்கும் தோலின் நுனியில் உள்ள பெரிய நகம் கவ்விப் பிடிப்பதால்
பாம்பு தன் வலிமையை இழக்கும் பாதிநாளாகிய இரவும்
நமக்கு அரியது அல்ல, தோழி! பெரிய
ஆண்பன்றியைக் கொன்ற பிளந்த வாயையுடைய ஆண்புலி,
பலா மரங்கள் நெருக்கமாய் இருக்கும் குன்றுகளில் புலால் நாற இழுத்துச்செல்லும்,
மூங்கில்கள் ஒலிக்கும் மலைச் சரிவில், சுரபுன்னையோடு
வாழைமரங்கள் ஓங்கிய தாழ்வான இடத்திலுள்ள வழுக்குநிலத்தில்
அகப்பட்டுக்கொண்ட கடுமையான களிற்றின் துன்பத்தினைப் போக்க
பெண்யானை, படியாக அமைக்க ஒடிக்கும் பெரிய மரத்தின் ஓசை
விண்ணளாவிய மலையின் குகைகளில் ஒலித்து அதிரும் அவருடைய நாட்டில்,
எண்ணிலடங்காக் குன்றுகளிலுள்ள விலங்குகள் நடந்த நெறிகளில் வழிதவறாமல்,
மின்னலடிக்கும்போது சிறிதே ஒதுங்கிக்கொண்டு, மெள்ளமெள்ள நடந்து,
மழைத்துளிகளைக் கொண்ட நீலமணி போன்ற அழகிய கூந்தலைப்
பின்புறம் மறையப் பின்னே கோதிவிட்டு. கூந்தலைக் கொத்தாகப் பிழிந்து,
நேர்வழிகள் குலைய, குறுக்கும் நெடுக்குமாகக்கிடக்கும் இந்தக் காட்டுப்புறத்தை நீவிர்
அறியவும் அறிவீரோ என்று கேட்பாரைப் பெறின்.

#9 பாலை கல்லாடனார்
கொல்லும் தொழிலில் சிறந்த, கூரிய, குறிய, புழுகு எனப் பெயர்கொண்ட
வில்வீரர் அம்புக்கூட்டில் நிறைய வைத்திருக்கும்
அம்பின் குப்பி நுனையைப் போன்று அரும்பிய இலுப்பையின்
செப்புத் தகட்டைப் போன்ற சிவந்த தளிர்களின் கீழேயெல்லாம்
வெண்ணெய் போன்ற, இனிய, உள்துளை உள்ள மெல்லிய வாயை உடைய பூக்கள்,
காம்பை நீக்கிக் காணத்தக்க துளையினை உடையவாகி, புல்லிவட்டம் கழன்று,
ஆலங்கட்டி போல காற்றால் சிதறுண்டு
பவளம் போன்ற சிவந்த மேட்டுநில வழிகளில்
குருதி மீது உள்ள கொழுப்பைப் போல் பரந்துகிடக்கும்,
காட்டுப்பாதை அருகில் செல்லும் அழகிய குடிகளை உடைய சிற்றூரில்,
வளைந்த நுண்ணிய கூந்தலை உடைய மகளிர் உயர்த்திய
பூணால் சிறந்த உலக்கையால் குற்றும் உரலிலிருந்து எழும் தாளஒலி
நெடிய பெரிய மலையில் உள்ள ஆந்தையின் குரலோடு மாறிமாறி ஒலிக்கும்
குன்றுகள் பின்னிட முன்னே செல்ல, மனஉறுதியுடன் முனைப்புக்கொண்டு,
ஞாயிறு மறைந்தாலும், ஊர் வெகுதொலைவில் உள்ளது என்று சொல்லாமல்,
வேகமாக ஓடும் குதிரைகளை மேலும் முடுக்கிவிட்டுச் சோர்வின்றிப் பயணம்செய்யும் 
எம்மைக் காட்டிலும் விரைந்து சீக்கிரமாகச் சென்று, பல கட்டுக்களால் சிறப்புற
உயர்ந்த நல்ல இல்லத்தில் ஒரு பக்கமாக நிலைகொண்டு,
அருகில் உள்ள பல்லி ஒலிக்கும்தோறும் அதனை வாழ்த்தி,
பசுவின் கன்றுகள் நுழையும் மாலையில், நின்றுகொண்டிருப்பவளை அடைந்து,
கைகளை வளைத்தவாறு சென்று, கண்களைப் பொத்தியவாறு மிகநெருங்கி,
பெண்யானையின் துதிக்கை போன்ற பின்னிய கூந்தலைத் தீண்டி,
தொடி அணிந்த கையைத் தழுவி வருடிவிட்டவாறு அணைத்தது அன்றோ!
நாணத்தோடு கலந்த கற்பினையும், ஒளிபொருந்திய நெற்றியினையும்
அழகிய இனிய பேச்சையும் உடைய இளையோளின்
மென்மையான தோள்களை அடைவதற்கு விரும்பிச் சென்ற என் நெஞ்சம்.

#10 நெய்தல் அம்மூவனார்
பெரிய கடல்பரப்பினின்றும் எழும் நீர்த்திவலைகளுக்கு எதிர்நின்ற,
விண்மீன்களைக் கண்டாற் போன்ற, மெல்லிய அரும்புகள் மலர்ந்த
கூனல்பட்டு முதிர்ந்த புன்னைமரத்தின் பெரிதாய் நின்ற கரிய கிளைகளில்
பறவைகள் அடைந்துகிடக்கும் நெய்தல் நிலத் தலைவனே!
நெய்தல் மலரைப் போன்று மை உண்ட கண்கள் துன்பத்துடன் கலங்க,
(தலைவியைப்)பிரிதலை நினைத்தாயாயின் மிகவும்
அரியசெயலைச் செய்யவேண்டியவன் ஆனாய், பெருமானே!, உரிமையுடன்
எடுத்துக்கொண்டு உன் ஊருக்குப் போகவேண்டும், கீழ்க்காற்றால்
கலங்கி நிறம் மாறிய கடல் அலைகள் உடைக்கும் மணல்மேட்டின்
பழைய கட்டுமரத்தை அழித்துவிட்டுப் புதிய வலையைக் கொண்ட பரதவர்
மேடான மணலால் ஆன அடைகரையில் வந்த சுறாமீனைக் கைப்பற்றி,
மணம் கமழும் பாக்கத்தில் உள்ளோருக்குப் பகிர்ந்தளிக்கும்
வளம் மிக்க தொண்டியைப் போன்ற அழகிய இவளது நலனை.

#11 பாலை ஔவையார்
வானத்தில் ஊர்ந்துசெல்லும், சுடர்கின்ற ஒளியையுடைய சூரிய மண்டிலம்
நெருப்போ என்னுமாறு சிவந்துபோய், வெப்பம் தகிக்கின்ற காட்டில்
இலையே இல்லாமல் மலர்ந்த, மொட்டுக்கள் அற்ற இலவ மலர்கள் -
ஆரவாரத்துடன் மகளிர்கூட்டம் மகிழ்வுடன் ஒன்றுசேர்ந்து எடுத்த
அழகிய விளக்குகளின் நீண்ட வரிசையைப் போலத் தோன்ற,
குளங்கள் புழுதிக்காடாய் ஆகியிருக்கும் வளம் அற்றுப்போன காட்டில்,
நம்மோடு சென்றிருந்தால், மனதிற்கினிமையாகப்
புதுத்துணியை விரித்தாற்போன்ற செழித்து எழும் மணலைக் கொண்ட காட்டாற்றின்
பெரிய கிளைகள் தாழ்ந்திருக்கும், நிறைந்த பூங்கொத்துகளைக் கொண்ட மணல்மேட்டில்,
உடம்பினுள் புகுந்துவிடுவதைப் போன்று கைகள் சூழ்ந்த அணைப்பினை
அவரும் பெற்றிடுவாரே பாசத்துடன்,
நீர் ஒழுகும் ஒளியுள்ள மலரைப் போன்று, இடைவிடாமல்
(அம் மலர்கள்)நீரற்ற குளத்தை நிறைப்பது போல நாளும்
அழுதலை மேற்கொள்ளாதவை ஆகி,
குற்றமற்ற (எமது)கண்களும் தூங்கப்பெறுமே.

#12 குறிஞ்சி கபிலர்
எம் தாய் (தன்)கண்ணைக்காட்டிலும் (இவளிடம்)மிக்க அன்புடையவள், எம் தந்தையும்
(இவள்)தரையில் கால்வைக்கப் பொறுக்கமாட்டார். “(உன்) சின்னப் பாதங்கள் சிவக்க
எங்கே, அடி, சின்னவளே! போகிறாய் என்பார்,
நானும் அவளும், பிரிவு இல்லாமல் அமைந்த உவர்ப்பில்லாத நட்பினால்
இருதலைப் பறவையைப் போல ஓருயிராய் இருக்கின்றோம்.
தினைப்புனக் காவல் மகளிர் ஓயாது ஆரவாரிக்குந்தோறும்
கிளிகள் (தம் இனத்தை)பலமுறை அழைத்துக்கூவும் அணில் ஆடும் பெரிய கிளைகளில்
சிறந்த குலைகளைக் கொண்ட பலாமரத்தின் பழங்களின் பயனைக் கொள்வதற்கு
குறவர்கள் எழுப்பிய குடிசை மறையுமாறு  
வேங்கைப்பூக்கள் உருவாக்கிய தேன்சிந்தும் தோற்றத்தைப்
புலியென்று எண்ணி வெருண்ட புகர்முக யானை
மேகங்கள் படர்ந்த மலைச்சரிவில் மூங்கில்கள் முறிபடப் பெயர்ந்துசெல்லும்
நல்ல மலை நாட்டைச் சேர்ந்தவனே! நீ (இரவில்) வந்தால்
மெல்லியலாள் (உனக்கு நேரக்கூடிய ஊறுகளை எண்ணி) வாழமாட்டாள்.

#13 பாலை பெருந்தலை சாத்தனார்
தன்னுடைய தென்கடலில் உண்டான முத்தினால் ஆகிய மாலையும்,
பகைவர் திறைகொடுக்கும் வலிமையையுடய தனது மலையிலுள்ள
யாராலும் அழிக்கமுடியாத மரபையுடைய கடவுளாகிய முருகனுக்குப் பூசையிட்டுக்
குறவர்கள் தந்த சந்தனத்தின் மாலையும் ஆகிய
இரண்டு பெரிய மாலைகளையும் அழகுற அணிந்திருக்கும்,
செல்வம் விரும்புகின்ற மார்பின் பாண்டியனின் படைத்தலைவனான -
குழியில் (விழவைத்துப்) பிடித்த பழக்கப்படாத யானைகளை
விலங்கு மொழியால் புரியவைக்கும் குறுகிய பொழுதில் அன்றி,
(மற்ற நேரங்களில்)தனக்கெனக் கொள்ளும் நிலை இன்றி இரவலர்களுக்கு ஈயும்,
கூர்மையான வாயைக்கொண்ட அம்பினை உடைய கோடைமலைத் தலைவன் -
பண்ணி என்பான் செய்த பயன் மிகுந்த களவேள்வியைப் போல (க்காட்டிலும்)
சிறந்த பயன் நிகழுமாயினும் – தெற்கே ஏறிச்சென்று
மிகுந்த மழையைப் பொழிந்த ஞாயிறு கொண்ட அதிகாலைநேரத்தில்
வனப்பில் இனிய துணையாகிய இவளைப் பிரிந்துபோய்த் தங்கினால்,
எக்குறையும் இல்லாமல் இருப்பதாக நீ ஈட்டும் பொருள்! நல்ல பக்குவமாக,
குற்றமற்ற தூய்மையான மடிக்கப்பட்ட துணி விரித்த படுக்கையில்
தழுவி இன்புறுதல் இன்றிக் கழிக – வளமுடைய வயல்களில்
தீக்கொழுந்துகளைப் போன்ற தோடுகள் ஈன்ற
வயற்காட்டு நெல்லின் கவைத்த அடியைக் கொண்ட நெற்கதிர்
நிரம்பிய அகன்ற வயலில் வரப்புகளை அணைத்து அசைய,
தனிமைத் துயரைக் கொண்டுவரும், மாலைபொழுதைக் கொண்ட வாடைக் காற்று
மின்னுகின்ற பூக்களைக் கொண்ட கரும்பின் ஓங்கி உயந்த கழையின் மீது இருந்த
வெண்குருகு ஒலி எழுப்பும் அளவுக்கு வீசுகின்ற
நுண்ணிய பல துளிகளைக் கொண்ட குளிர்ந்த பனிக்காலத்து நாட்கள்.

#14 முல்லை ஒக்கூர் மாசாத்தனார்
செவ்வரக்கினைப் போன்ற சிவந்த நிலத்தில் செல்லும் பெருவழியில்
காயாம்பூவின் வாடிய பூக்கள் பரவிக்கிடக்க, பலவும் ஒன்றாகச் சேர்ந்து
தம்பலப் பூச்சிகள் வரிசையாக ஊர்ந்துசெல்ல, பவளத்துடன்
நீலமணி நெருங்கி இருந்ததைப் போன்று இருக்கும் குன்றுகள் சூழ்ந்த
அழகிய காட்டின் அரிய வழிகளில் மடப்பமுடைய தம் பெண்மானைத் தழுவி
முறுக்கிய கொம்புகளை உடைய இரலை மான்கள் புல்லை உண்டு தாவி மகிழ
முல்லை ஆகிய அகன்ற புலத்தில் பரவலாக விட்டு, கோவலர்கள்
சிறிய குன்றுகளின் பக்கங்களில் உள்ள நறிய பூக்களைப் பறித்துச் சூடிக்கொள்ள,
அறுகம்புல் மேய்ச்சலில் உணவருந்திய செருக்கிய நடையுடைய நல்ல ஆனினங்கள்
பருத்த மாண்புடைய மடி இனிய பாலைப் பொழிய,
கன்றை நினைத்து அழைக்கும் குரலையுடையவாய் மன்றத்தில் கூட்டமாய்ப் புகுகின்ற
மாலைக் காலத்திலும் நினைக்கமாட்டார் எனின், காலையில்
என்ன ஆவோமோ பாணனே! என்று சொன்ன
தலைவியின் சொல்லுக்கு எதிர்ச்சொல் சொல்ல முடியாதவனாகி,
செவ்வழிப் பண்ணை நல்ல யாழில் இசைத்தவனாய் மெல்ல,
கடவுளை வாழ்த்தி, துயரத்தை வெளிக்காட்டி,
அவர் வரும்வழியே சென்றேனாக, கண்டேன் யானே
(இழுத்து)விட்ட (அம்பு போன்ற)வேகத்தையுடைய குதிரையின் வேறுபட்ட ஓட்டம் அதிகரிக்க
கற்களில் மோதி ஒலிக்கும் பல ஆரங்களைக்கொண்ட சக்கரம்
கார்காலத்து மழையின்  இடிமுழக்கின் ஒலியை ஒக்கும்
போர்முனையே தன் ஊராகக் கொண்ட தலைவனின் புனையப்பட்ட நெடும் தேரினை.

#15 பாலை மாமூலனார்
எம்முடைய மிகுந்த விருப்பம் சரியாக அமைந்தால்,
மெய்மையையே நிறைந்த பெரிய கொள்கையாய்ப் பூண்ட தலைமை சான்ற கோசர்களின் -
திரண்ட பசிய காய்களின் குடுமிப்பக்கம் பழுத்த
பாகல்பழங்களை விரும்பி உண்ணும், பறை போன்ற கண்ணையுடைய பீலிகளையுடைய
மயில்கள் வாழும் சோலைகளையுடைய - துளுநாட்டைப் போன்று,
வெறுங்கையுடன் வரும் அயலவர்களை நன்கு உபசரிக்கும் பண்புடைய
நெருக்கமாக அமைந்த சேரிகளையுடைய தலைமையான முதிய ஊர்கள்
அறிமுகம் உள்ள மக்களைக் கொண்டது ஆகுக - 
தோழியர்களும் நானும் தனிமையில் வருந்த,
முகபடாம் அணிந்த யானையினைக் கொண்ட - ஒளிர்கின்ற அணிகலன்களைப் பூண்ட - நன்னனின்
பாழி நகரத்தைப் போன்று மிகுந்த கட்டுக்காவலை உடைய அகன்ற (நம்)இல்லத்தின்
செறிந்த பாதுகாப்பையும் மீறி அவனோடு போன,
அரிய சுரத்தில் உள்ள இலுப்பை மரத்தின் ஆர்க்கு கழன்ற புதிய பூக்களைத்
தின்ற வாயையுடைய, தூசி நிலத்தின்மேல் பரவும்படியாகக்
கொன்றை மரத்தின் கிளைகளில் உள்ள குழல் போன்ற பழத்தைத் தடவிக்கொடுத்து-
வலிய கையை உடைய கரடியின் வலிமை உள்ள கூட்டம்- பரவலாகச் செல்லும்-
தனது இனிய துணைவனை நினைந்த உள்ளத்தோடு ஒன்றுசேர்ந்து
மலை மூங்கிலைப் போன்ற திரண்ட என்
மெல்லிய தோளையுடைய மகள் சென்ற - வழி.

#16 மருதம் சாகலாசனார்
நீர்நாய் உள்ள பழைய குளத்தில் செழித்து வளர்ந்த தாமரை
மலரின் அல்லிவட்டத்தில் உள்ள ஒளிவிடும் இதழைப் போன்ற
மாசற்ற உள்ளங்கையையும், பவளமணி போன்ற அழகிய வாயையும்
நாவினால் திருத்தமாகப் பேசாத, சிரிப்பைத் தோற்றுவிக்கும் இனிய பேச்சையும்(உடைய)
அனைவரும் விரும்பும் பொற்கொடி அணிந்த நம் புதல்வனைத்
தேர்கள் ஓடும் தெருவில் தனியனாய்க் கண்டு
கூரிய பற்களைக் கொண்ட இளம்பெண் கிட்டச் சென்றவளாய், ஒருவருமே
பார்ப்பவர்கள் இல்லாததால், தோற்ற ஒப்புமையைக் கருதியவளாய்ப் பாசத்துடன் தூக்கி
பொன் அணிகலன்களைச் சுமந்த, பூண்கள் தாங்கிய தன் இளம் கொங்கைகளில் -
“வா என் உயிரே” எனப் பெரிதும் உவந்து-
அணைத்துக்கொண்டவளாய் நின்றவளைப் பார்த்து, நின்ற இடத்தில் நிலைகொள்ளாமல்,
“மாசற்ற இளையவளே, எதற்குக் கலங்குகிறாய்,
நீயும் தாயாவாய் இவனுக்கு” என்று சொல்லி நான் பாராட்டிக்
கூறி, விரைவாகச் சென்று அவளை அணைத்துக்கொள்ள,
கையும் களவுமாய்ப் பிடிபட்டவரைப் போல் தலைகவிழ்ந்து, நிலத்தைக் கீறிக்கொண்டு
நாணி நின்றவளின் நிலைகண்டு, நானும்
அன்புடன் உபசரித்தேன் அல்லவா! தலைமகனே! வானத்துத்
தெய்வமகளாகிய அரும் கடவுள் போன்றோள் உன்னுடைய
மகனுக்குத் தாய் ஆகுதல் பொருத்தமானதுதானே என்று.

#17 பாலை கயமனார்
வளப்பம் பொருந்திய அழகிய மாளிகையில் பந்தைச் சிறிதுநேரமே எறிந்து விளையாடினாலும்,
இளைய துணைகளான தோழியருடன் கழங்கு ஆட்டத்தைச் சேர்ந்து ஆடினாலும்,
வருந்துகின்றது அன்னையே என் உடம்பு என்று தளர்ந்துபோய்,
கொட்டுகின்ற வியர்வைத் துளிகள் கோத்துநிற்கும் நெற்றியை உடையவள், சில்லெனும்படியாக
தழுவினவளாய் அமர்வாள் - (அதெல்லாம் போச்சே!) இப்போதோ,
தோள்வளை அணிந்த சிறந்த தோழியர் கூட்டத்தையும், என்னையும் நினைக்காதவளாய்,
மிக்க புகழையுடைய (தன்) தந்தையின் கடுமையான கட்டுக்காவலையும் மீறி,
(ஓர்)அன்னியனின் உள்ளத்தை முழுவதுவாய்ப் பெற்ற என்
சிறிய அறிவுசான்ற மகளின் சிலம்பு ஒலிக்கும் சிறிய அடிகள்
வலிமை கொண்டனவோ? - நடந்துசெல்வதற்கு, பேரிரைச்சலுடன்
ஊரே ஒன்றுசேர்ந்து வருவதைப் போன்ற அச்சம் மிக்க பயணத்தை மேற்கொண்ட,
நீரற்ற காட்டுவெளியின் கடுமையான பாதையில், ஒன்றுசேர்ந்த,
கடிய தார்க்குச்சிகளையுடைய, உப்புவணிகர் தம் காளைகளை அதட்டும் தெளிந்த குரல்கள்
உயர்ந்த பெரிய மலையில் மோதி எதிரொலிக்கும்
கடுமையான ஞாயிற்றின் கதிர்கள் முறுகிய மூங்கில் நிறைந்த வறண்ட மலைகளில்,
பெரும் களிறு உரசிய மண்ணையுடைய நடுப்பகுதியைக் கொண்ட யா மரங்களை உடைய,
அரிய பாலைநிலத்தில் கிளைத்துச் செல்லும் வழிகளையுடைய நீண்ட பாதையின் ஓரங்களில்,
நீண்ட நடுப்பகுதியை உடைய இலவமரங்களில் பூத்து முடிந்த பல மலர்கள் -
திருவிழாவை மேற்கொண்ட பழமைச் சிறப்புவாய்ந்த முதிய ஊரில்
நெய்யைக் கக்கும் தீச்சுடர்கள் (அணைவது)போன்று - காற்று மோதுவதால் மிகச்சிலவாகி,
வைகறைப் பொழுதின் வானத்து மீனைப் போன்று தோன்றும் -
மேகங்கள் தங்கும் பெரிய மலைகள் எதிர்நிற்கும் வழியில்

#18 குறிஞ்சி கபிலர்
நீரின் நிறம் மறைந்துபோகும்படி, முதிர்வுற்று உதிர்ந்த
அழகிய மலர்கள் நெருக்கமாக அமைந்த, விரைவான ஓட்டமுள்ள காட்டாற்றில்
முதலைகள் படுத்திருக்கும் பாறைகளில் உயர எழுந்து மோதித் திரும்பும் சுழிகளை உடையதும்
தன் கூட்டத்தோடு சேராத யானையின் மதம் கெட மோதி
வலியுற்று இழுக்கும் அச்சம் தருவதுமான  வெள்ளத்தை
அஞ்சாமையுள்ள ஒரு காட்டுப்பன்றியைப் போல நடுங்காமல் துணிவுடன்
அச்சம்தரும் அரிய துறையைத் தாண்டி, நள்ளிரவில்
இங்கு வருபவர்களும் உளரோ? உயர்ந்த மலையைச் சேர்ந்தவனே!
ஒருநாள் (நீ) துன்பம் அடைந்தாலும், அடுத்த நாள்
வாழ்பவள் அல்லள் என் தோழி, ஒருசிறிதும்
இடையூறு இல்லாத வழிகளில்கூட, பலமுறை போய்வருபவர்கள்
நீண்ட நாட்கள் அவ்வாறின்றித் தவறிவிடுவர், அதனால்
துன்புற்று வருத்தம் அடைகிறோம் – எம் தோட்டத்தை அடுத்துள்ள
வளைந்த தேனிறால் கட்டப்பட்ட உச்சி உயர்ந்த நெடிய மலையில்
பழங்கள் தொங்குகின்ற செறிவான மரங்கள் உள்ள காந்தள் பூத்துள்ள சோலையில்
பகலில் நீ வந்தாலும் பொருந்தலாம் – அகன்ற மலையின்
வளைந்த மூங்கிலின் கணுக்களின் இடைப்பகுதியைப் போன்ற, எம் தாய்
போற்றி வளர்த்த அகன்ற மெல்லிய தோள்களை.

#19 பாலை பொருந்தில் இளங்கீரனார்
அன்று அங்கேயே இருந்திருக்கலாம் - அதுவும் இல்லை, வந்தபின் மிகுதியாக
வருந்துகிறாய், வாழிய என் நெஞ்சே! பருந்து இருந்து
வருந்தும் குரலில் பலமுறை அழைக்கும் யாமரங்களின் உயர்ந்த அகன்ற இடத்தில்
உருண்டையான உடுக்கின் ஓசையைப் போன்று, பொருள் தெரிந்து ஒலிக்கும்
கடும் குரலையுடைய ஆந்தைகள் உள்ள உயரமான பெரிய மலையில்,
எம்முடன் கடந்து செல்லவும் மாட்டாய், பின் தங்கி
(திரும்பிச்) செல்ல நினைத்தால், தடையின்றிப்
போகலாம் இனியே - சிறப்புறட்டும் உன் உள்ளம்! – விரைவாக,
மறப்பதைச் செய்யாதிருப்பாயாக எம்மை – நறவம்பூவின்
சிவந்த இதழ் போன்றவை ஆகி - (முன்பு)குவளையின்
கரிய இதழைப் போன்ற மிகுந்த நீரைக்கொண்ட, ஈரமான இமைகள் -
உள்ளம் கொதிப்பதால் நினைக்கும்போதெல்லாம் காய்ந்துபோக -
துன்பம் கொண்டு விரைந்து விழுகின்ற பளபளக்கும் நீர்த்துளிகள்
வெம்மையுடன் கீழே விழ, (அதனால்) அஞ்சி, மெதுவாக
(அணிந்திருக்கும்)சில வளையல்களும் கழன்று விழுந்த மெலிந்த கைகளின் மணிக்கட்டு
பூக்கள் உதிர்ந்த கொடியைப் போல பொலிவிழந்து போக,
தகட்டை அழுத்திச் செய்த அழகிய அகல்விளக்கின் சுடரே துணையாக
எங்குமே செல்லாது நின்றிருக்கும் நம் காதலியின்
வருந்திய மெலிந்த முதுகினைத் தழுவிய பின்னர்.

#20 நெய்தல் உலோச்சனார்
கடற்பரப்பில் (பிடித்து) எம் தந்தை கொண்டுவந்த
ஏராளமான மீனை உலர்மீனாக்க(காயப்போட), அதைத் தின்னவரும் பறவைகளை ஓட்டி,
மணல்மேட்டிலுள்ள புன்னைமரத்தின் இனிய நிழலில் தங்கி,
சிவந்த நண்டின் ஆழமான வளைகளைக் கிண்டிக்கிளறி,
ஞாழலின் உயர்ந்த கிளையில் கட்டப்பட்ட, வளைந்த கழியை
தாழை விழுதால் ஆன கயிற்றால் செய்த ஊஞ்சலில் ஆடி,
கீழ்க்காற்று கொணர்ந்த மணலில் குரவைக்கூத்து ஆடி, அது வெறுத்துப்போய்,
வெள்ளிய நுரையைத் தலையில் கொண்ட கடல் அலைகளில் தோழியரோடு ஆடி,
மணி போன்ற மலர்களால் ஆன பசிய தழையுடையைத் தைத்து அழகுபெற (உடுத்தி)
பலவிதப் பூக்களையுடைய கடற்கரைச் சோலையில் தங்கி வருதலை,
பழித்துச் சொல்லல் என்னும் மனநோயுற்ற இந்த ஊரின்
கொடுமை மட்டுமே அறிந்த பெண்களின் சொற்களைக் கேட்டு, அன்னை
வீட்டுக்காவலை மேற்கொண்டாளே தோழி, பெரும் துறைகளில்
பகலென்றும் இரவென்றும் இல்லாமல், ஒலி எழுப்பிக்கொண்டு
பாகன் ஆய்ந்து தெரிந்த நன்கு வளர்ந்த குதிரைகள் (பூட்டிய)
நிலா வெளிச்சம் போன்ற வெண்மணலில் சுற்றிச் சுற்றி வரும் ஒரு தேர் உள்ளது என்று -

#21 பாலை காவன்முல்லை பூதனார்
இளமையான, வீட்டு நொச்சிச் செடியில் (படர்ந்த) காட்டுமுல்லையின் வெள்ளிய மொட்டுகளை
இரண்டிரண்டாய் வரிசையாக வைத்ததைப் போன்ற, வண்டுகள் விரும்பும் வெள்ளைப் பற்கள்,
அழகிய வயிறு, அகன்ற அல்குல், அலங்கரிக்கப்பட்ட
தாழ்ந்த மெல்லிய கூந்தல், பருத்த மெல்லிய மூங்கில்(போன்ற)தோள்கள்(கொண்ட)
தலைவியின் மாட்சிமையுடைய பெண்மைநலம் தனிமையில் வருந்த, தொலை நாட்டுக்குச்
செல்லவேண்டாம் என்று யான் சொல்லவும் (அதற்கு) உடன்படாமல்
பொருளீட்டும் செயலை விரும்பி இருந்தாய்; ஆதலால், (நம்) இல்லம் பொலிவுற
பலவித வேறுபட்ட செல்வத்தை ஈட்டிக் கொணர்வோம் - விரைவாக
எழுவாயாக இனி, வாழ்க என் நெஞ்சே! புரி போல் சுருண்ட பூங்கொத்துகள்
மெல்ல மலரும் அழகிய கிளைகள் வறிது ஆகுமாறு, வலியவன் ஒருவன்
கிளையின் உச்சியை அடிக்கும் கோல் போன்று, மலர்கள் உதிரத் தாக்கி
மரா மரத்தை அலைக்கழித்த மணம் வாய்க்கப்பெற்ற தென்றல்
பாலைவழியில் செல்லும் மள்ளரின் சுருள்முடியில் (அம் மலர்களைத்)தூவிவிடும்-
வெப்பம் நின்று காயும் புல்லிய இடங்களில் உள்ள ஊர்களையுடைய -
பருந்து அடைகாக்கும் பரட்டைத்தலை ஓமை மரங்களையுடைய -
பெரிய பாறைகளின் இடுக்கில் ஈன்று படுத்திருக்கும்
மெலிந்த, அண்மையில் ஈன்ற, அழகிய பெண்நாய் பசியுற்றது என, பசிய கண்ணை உடைய
ஆண் செந்நாய் ஆண் காட்டுப்பன்றியைத் தாக்க,
பதறியோடும் பெண்பன்றி உராய்தலால் சிதறி,
செங்காய்கள் உதிரும் பசுங்குலைகளைக் கொண்ட ஈந்தின்
விதைகள் பரவிய மண் மேடுகளான கட்டாந்தரையை உடைத்த
வலிய வாயையுடைய கோடலியையுடைய கூழ் குடிக்கும் கிணறுதோண்டுவோர்
(நீர்) ஊறாமையால் விட்டுவிட்டுச் சென்ற சருகுகள் நிறைந்த பள்ளங்களை,
தந்தங்களை விரும்பிய கடின மனம் படைத்த கானவர்
எளிதாக எண்ணி நடக்கும் வழிகளில் தோண்டிய குழிகள் என்று எண்ணி
பெரிய ஆண்யானையைக் கொண்ட யானைக்கூட்டம் தூர்க்கும் -
பெரிய பாறைகளைக் கொண்ட பாலைநிலம் முன்னர்நிற்கும் இக் காட்டினில் (செல்ல).

#22 குறிஞ்சி வெறிபாடிய காமக்கண்ணியார்
தெய்வங்களை உடைய உயர்ந்த மலையின் உச்சியிலிருந்து கீழிறங்கும்
திரண்ட நீர் உள்ள அருவிகளை உடைய காடுகள் நிறைந்த நாட்டைச் சேர்ந்த தலைவனின்
மணங் கமழும் அகன்ற மார்பைத் தழுவியதால் ஏற்பட்ட துன்பத்தை,
இன்னது என்று அறியாமல் (தாய்) மனக்கலக்கம் அடைந்த போழ்து,
தனக்குப் படியாதாரை அழித்த, நிறைந்த புகழையும் நீண்ட கைகளையும் உடைய
நெடுவேளைத் தொழ, நோய் தணியப்பெறுவள் இவள் என
முதுமை வாய்ந்த பெண்டிர் அதனை உண்மை எனக் கூற,
வெறிக்களத்தை நன்கு அலங்கரித்து, பூமாலை சூட்டி,
வளம்பொருந்திய வீடே எதிரொலிக்கப் பாடி, பலி கொடுத்து,
அழகிய செந்தினையைக் குருதி கலந்து தூவி,
முருகனை வரவழைத்த நாளின் அச்சம் பொருந்திய நள்ளிரவில்,
(மார்பில்) சந்தனம் கமழ, அரிய மலையிடுக்கில் செறிவாய்க் கிடந்த,
சாரலின் பல பூக்களையும், வண்டுகள் மொய்க்கச் சூடி,
களிறாகிய இரையைத் தெரிந்துகொள்ளப் பார்வையினாலே ஒதுங்கி,
மறைவாக இயங்கும் வழக்கத்தை உடைய வலிய புலியைப் போல,
நல்ல மனைஉயர்ந்த இல்லங்களைக் கொண்ட ஊரின் காவலர்கள் அறியாவண்ணம்,
தன் நசை உள்ளத்து, நம்முடைய விருப்பம் நிறைவேற,
இனிய உயிர் குழையுமாறு தழுவுதோறும், உடல் பூரித்து,
சிரித்தேன் அல்லவா நான்? எம்மை மெலிவித்த
நோயைத் தணிக்க காதலர் வர, இதற்கு
ஏதும் தொடர்பில்லாத வேலனுக்காக (அந்நோய்)அழிந்தது அறிந்தே.

#23 பாலை ஒரோடோகத்து கந்தரத்தனார்
சில்லென்ற மழையினை - நிலத்து இடமெல்லாம் குளிரும்படி பெய்து,
முழக்கம் அடங்கிப்போயிற்றே முரசுக் குரல் மேகம்;
புதரின் மேலுள்ள செம்முல்லையின், காடையின் கால்முள்ளைப் போன்ற சிவந்த அரும்புகள்
நெருக்கமான கொத்துக்களை உடைய பிடாவுடன் ஒன்று சேரத் தளையவிழ
காடு முழுதுமே ‘கம்'மென மணக்கின்றதே! பள்ளங்களில் உள்ள,
சங்கு உடைந்ததைப் போன்ற வெண்காந்தளின் பசிய பயிரோடு,
அறுகின் கிழங்கையும் வெறுத்து, செருக்கான நடையினை உடைய
தலைமைப் பண்புள்ள ஆண் இரலைமான்கள் தான் விரும்பிய பெண்மானைத் தழுவி
குளிர்ந்த நீரைப் பருகிப் படுத்துக்கொண்டன;
(காலமும்)அவ்வளவாகிவிட்டதே!; வாழி என் தோழி! வீட்டிலுள்ள
குட்டையான நொச்சியினைச் சூழ்ந்து மலரும்
காட்டுமுல்லைக் கொடியினை உடைய கருத்த கிளைகளைக் காட்டி,
அந்த முல்லை பூக்கும் காலம்தான் என்றார்-அங்கே செல்வம் சேர்த்துத் திரும்பி வரும் கால அளவு.

#24 முல்லை ஆவூர் மூலம் கிழார்
வேள்வி செய்யாத பார்ப்பான் அறுக்கும் அரத்தால் துண்டாக்கி எடுத்த
வளையல்கள் போக எஞ்சிய சங்கின் தலைப்பகுதியைப் போன்ற
கட்டுண்ட பிணிப்பு அவிழாத சுரிந்த முகத்தையுடைய பகன்றையின் போதுகள்
சிதறுகின்ற அழகிய துளிகள் தூவுதலால் மலர்கின்ற
தைத்திங்களில் நின்று குளிரப் பெய்யும் கடைசி நாளில்
ஒளிவிடும் (ஞாயிற்றின்)கதிர்கள் ஒளிந்திருக்கும் வாடை வீசும் வைகறையில்
உச்சிவானமே உரிந்து விழுவது போல் அகன்ற வானில் இயங்கி
பஞ்சுமூட்டத்துடன் பெரு மழை தென்திசையில் சென்று ஏகும்
பனி கொட்டும் கரிய இருட்டாகிய வெள்ளத்தைத் தனி ஒருத்தியாய் நீந்தித்
தனது ஊரில் இருக்கிறாள் நல்ல நெற்றியை உடையவள்; நானோ
காவலை உடைய கதவை முட்டுவதால் பூண் பிளந்து
கூரிய முனை மழுங்கிப்போன மொண்ணையான வெள்ளிய தந்தத்தை உடைய
சிறு கண் யானையின் நெடு நா ஒள் மணியோசையும்,
கழியில் பிணித்த கரிய தோல் கேடகத்தில் வந்து தைக்கும் அம்புகளின் ஓசையும்,
முழங்கும் ஓசையை உடைய முரசின் ஒலியுடன் சேர்ந்து ஒலிக்கும் யாமத்தில்
உருவி மீண்டும் உறையில் இடாத வாளையுடைய வலிய தோளினையும்
இரவில் தூக்கத்தை முடித்துவிட்ட சேனையையும் உடைய
மிக்க சினம் கொண்ட வேந்தனின் பாசறையில் உள்ளேன்.

#25 பாலை ஒல்லையூர் தந்த பூத பாண்டியன்
உயர்ந்த கரைகளைக் கொண்ட காட்டாற்றின் வேகம் மிக்க வெள்ளம் வற்றிவிட,
பளபளக்கும் அறல்களைக் கொண்ட பரந்த மணலுள்ள அகன்ற நீர்த்துறைகளில்
குளிர்ந்த மடுக்களை ஒட்டிய சோலைகள்தோறும் காஞ்சி மரத்தின்
அழகிய தாதுக்களை அணிந்த பூக்கள் நிறைந்த மணல்மேடுகள்
திருமணமாலையின் புதுமணத்தோடு புத்துணர்ச்சியுடன் திகழ,
மாமரத்தின் அரும்புகளைக் கோதிய நீலமணி நிறமுள்ள கரிய குயில்கள்
ஒலிக்கும் தமது நாவினால் (மன்றத்தின்) நடுவில் நின்று நாள்முழுக்க
உரத்துக்கூறுவது போல மாறிமாறிக் கூவ,
கூட்டமான வண்டுகள் உகுத்துவிட்ட - இலவமலர்களின் மேல் -
கிளைகளில் பூத்திருக்கும் கோங்கின் நுண்தாது - விற்போர்
பவளச் செப்பில் பொன்துகளைச் சொரிந்தது போன்ற,
அலட்சியத்துடன் இருப்பவர்களும் அலட்சியப்படுத்தாத இளவேனில் நாளை
(திரும்பிவரும் நாள் ஆகக்) குறித்தல் செய்தார் என நீ உனது
வருந்துகின்ற உன் மையிட்ட கண்களில் நீர் வடிந்து உதிர;
(தலைவன்) “வராததினால் வெறுத்துப்போன நெஞ்சத்துடன்
வருந்த வேண்டாம், இளையோளே! வருந்துவதாக என் உயிர்” என
மென்மையான இனிய சொற்களைக் கூறி, விரைவிலேயே
வந்துவிடுவார்; வாழ்க! தோழியே! போர்வீரர்கள்
எதிர்த்து வரும் போரினை வென்ற, வில் ஏந்திய பெரிய கைகளையுடைய,
பொதிகை மலைத் தலைவன் - பொன்னால் ஆன தேரை உடைய - திதியனின்
இனிய இசையுள்ள முரசைப் போன்று முழங்கும்,
மலை மேலுள்ள அருவிகளைக் கொண்ட காடுகளைக் கடந்து சென்றவர்.

#26 மருதம் பாண்டியன் கானப்பேரெயில் தந்த உக்கிரப்பெருவழுதி
வளைவான முள்ளை உடைய முள்ளிச் செடியின் குவிந்த குலையிலிருந்து கழன்று விழுந்த
மீனின் முள்ளைப் போன்ற வெண்ணிற காம்புகளையுடைய கரிய மலர்களை,
விளையாட்டு மகளிர் தமது திருவிழா ஆட்டத்துக்கு அழகுசெய்ய எடுத்துச் சேர்க்கும் 
அழகிய வயல்களை அருகில்கொண்ட வளம் மிகுந்த ஊரனாகிய தலைவனைக்
கோபித்துக்கொள்ள முடியுமா?, தோழியே! ஒவ்வொரு நாளும்,
பெரிய கோட்டைக் கதவினைக் குத்தித் தாக்கிய யானையின் தந்தங்களில் உள்ள
இரும்பாலான (கரிய) வளையத்தைப் போன்ற அழகினை உடையதாகி,
கரிய கண்களை உடைய (என் கொங்கைகளைத் தன்)மார்பகத்தில் சேர்த்து
(முற்றிலும்) முயங்குவதைத் தடுக்கின்றன இவை என்று கூற, தடுமாறி
நான் “விடும்” என்று கூறவும் உடன்படாராய், தாம் மேலும்
இவற்றைப் பாராட்டிய காலங்களும் உண்டு; இப்பொழுதோ,
புதல்வனுக்கே திகட்டும் பாலுடன் சரிந்து
அழகுத் தேமலை அணிந்த இனிமை கொண்ட மெல்லிய கொங்கைகள்
மணமிக்க சந்தனம் அணிந்த நிறம் விளங்கும் (தலைவனின்) மார்பில்,
விம்மும்படி முயங்குதலை நான் விரும்பினேனாகவும்,
இனிய பால் (தன் மார்பில்) படுதலை அவர் அஞ்சினார்; அப்போது,
(முன்பு இறுக)அணைத்த கை (இப்போது) நெகிழ்ந்ததைக் கண்டு, ஆர்வ நடையுள்ள
செவிலியின் கையிலுள்ள என் புதல்வனை நோக்கி
(என்னைக் காட்டிலும்)நன்றாக இருப்போரிடம் ஒத்துப்போவீர் நீவிர், இதோ
(என்)செல்வனுடன் சேர்ந்துகொள்கிறேன் நான் எனறு சொல்லி, மெதுவாக என்
மகனிடத்திற்குச் சென்றேன்; அதைப் பார்த்து,
நானும் விருப்பமுடையேன் அவனிடம் எனப் பணிந்து
(என்) முதுகினைச் வளைத்து அணைத்துக்கொண்டாராக, மிகுந்த மழையின்
குளிர்ந்த துளிகளை ஏற்றுக்கொண்ட, பல முறை உழுத செங்காட்டின்
மண் போல நெகிழ்ந்து அவனுக்காகக் கலங்கிப்போய்
நெஞ்சழிந்துபோன அறிவினை உடைய என்னால் - (கோபித்துக்கொள்ள முடியுமா?)

#27 பாலை மதுரைக்கணக்காயனார்
வளைந்த வரிகளையுடைய பெரிய புலி இருக்குமிடம் தெரியும்படியாக, நீண்ட மலையில்
ஆடுகின்ற தண்டினைக் கொண்ட வலுவான கல்மூங்கில்கள் மேல்காற்றினால் வளையும்
காட்டு வழி கடினமானது என்னாமல்; நம்மை அழவிட்டு,
நிலையற்ற செல்வத்தின் மீது கொண்ட ஆசையினால் சென்று, இங்கு திரட்டிக் கொணரச்
செல்கிறார் என்று சொல்கிறார்கள் என்கிறாயே, நல்ல
பேதைப்பெண் நீ, வடக்கிலிருக்கும்
வேங்கடமலையில் பிடித்த வெண்மையான தந்தங்களையுடைய யானைப்படையுள்ள,
வீரப் போர் புரியும் பாண்டியர், அறநெறியில் காக்கும்
கொற்கை என்ற அழகிய பெரிய துறைநகரில் விளையும் முத்தைப் போன்ற,
முறுவலால் பொலிவுடன் விளங்கும் பற்கள் உள்ள சிவந்த உன் வாய்
தடுத்து நிறுத்தினால் வெளியில் சென்று தங்கமாட்டார் - எனினும், மீறிச்செல்ல
எப்படி விட்டுவிடும் பார்ப்போம். இனிமை சொட்ட,
தெளிந்த நீருக்கு ஏற்ற திரண்ட கால்களை உடைய குவளையின்
பேரழகைப் பழிக்கும் வகையில் இருந்தும் அமையாது, பருந்துகள் வட்டமிட
மன்னர்களைப் போரில் வென்ற வெற்றியை உடைய நல்ல வேல்
குருதியுடன் ஆடுவது போன்ற உன்
செவ்வரி படர்ந்த மையுண்ட கண்களின் மாறுபட்ட பார்வை -

#28 குறிஞ்சி பாண்டியன் அறிவுடைநம்பி
எவ்வளவு நேரம் ஒன்றுசேர்ந்து இருந்தாலும் குறைவுபடாமலும் இயைந்தும் உள்ள விருப்பத்துடன்
தளர்ந்துபோக மாட்டாய் எனினும் (ஒன்று) சொல்வேன், தோழி!
கொய்வதற்கு முன்னரேயே கதிர்கள் தினையை உதிர்க்க ஆரம்பித்துவிட்டன.
நீர் அற்ற பசிய பயிர்கள் எல்லாம்
வெறும் தட்டைகளாய்ப் ஆகிவிட்டன, பல இடங்களில் - நீதான்
பலவகையான மணங்களும் கமழும் தேன் ஒழுகும் தலைமாலையை உடைய,
விரைந்து ஓடும் வேட்டை நாயுடன் பல மலைகளையும் கடந்து செல்லும்
வேட்டைக்காரனைப் பெறுவது ஒன்றே போதுமென்று இருக்கிறாய்! உனது
பூக்கள் சிறந்த மாலை அசைய, அடிக்கடி எழுந்து சென்று
கிளிகளை விரட்டும் தெளிந்த ஓசையை அவ்வப்போது எழுப்பி,
அங்கங்கே சென்று வராவிட்டால், நம் அன்னை
சிறிய கிளிகளை விரட்டுவதற்கு இவள் சரிப்பட்டுவரமாட்டாள் என எண்ணி
வேறு சிலரை இங்கே கொண்டுவந்து நிறுத்திவிடுவாள் - அப்படியாயின்
(நீ) அடைவதற்கு அரிதாய்ப்போய்விடும் அவனது அகன்ற மார்பு.

#29 பாலை வெள்ளாடியனார்
தொடங்கிய வினையைக் கைவிடாத - தளர்ச்சியற்ற - வலிமையான முயற்சியை உடைய -
(படுத்துக்)கிடந்து உயிர் வருந்தினாலும், (தான் தாக்கி) இடப்பக்கம் சாய்ந்து
விழுந்த களிறை உண்ணாத புலியைக் காட்டிலும் சிறந்த,
தாழ்வுணர்ச்சி இல்லாத உள்ளம் மென்மேலும் மிகுந்து விளங்க,
பொருளீட்டும் செயலுக்குப் பிரிந்து சென்ற நேரத்தில், - ‘கத்தியால் வெட்டுப்பட்டு
இரண்டு பகுதியாக ஆன, நன்கு புலனாகும் அழகினையுடைய
மாவின் நறும் பிஞ்சு போல, காணுந்தோறும்
ஆசை குறையாத மகிழ்ந்த நோக்கினை உடைய மைதீட்டிய கண்களை
நினையாது கழிந்த நாளில் சிறிதுநேரங்கூட
வாழமாட்டேன் நான்' - என்று ஆறுதல் கூறி பல்வேறு மாண்புகளும்
தாழ்ந்துபோகும்படி கூறிய உயர்வான நல்ல சொற்களை
மறந்துவிட்டீர் போலத் தோன்றுகிறீர் எனக்கு” எனச் சிறந்த உனது
பற்கள் சிறந்து விளங்கும் பவள வாயில் இனிய புன்னகை கெடும்படியாகக்
கேட்டுக்கொண்டே இருக்கிறாயே, அழகிய அணிகளை உடையவளே! கேட்பாயாக, இப்போது
வெம்மை குறையாத நெருப்பு கொட்டும் பாழ்நிலத்தில்
(தன் உடல்) பருமன் வற்றிப்போன தலைமைப் பொறுப்புள்ள யானை
நீர் இருக்குமிடம் அறியாது, கானல்நீர் தோன்றுமிடமெல்லாம் ஓடி,
வற்றிப்போன ஆற்றில் உள்ள ஓடத்தைப் போல, வழிநடுவே வாடிக்கிடக்கும்,
நினைத்துப்பார்ப்பவரையும் நடுக்கும் ஊக்கம் அழிக்கும் வறும் காட்டினில்
(பிறர்) இகழ்வதைப் பொறுக்காத பொருளீட்டும் விருப்பத்துடன்
மான உணர்வு கட்டிப்போட்டதனால் தங்கி, மாண்புள்ள வினை காரணமாக
(என்)உடம்பு அங்கு இருந்ததே ஒழிய
பேதைமை உள்ள (என்) நெஞ்சம் உன் அருகிலேயேதான் இருந்தது.

#30 நெய்தல் முடங்கி கிடந்த நெடுஞ்சேரலாதன்
நீண்ட கயிற்றில் கட்டப்பட்ட சிறிய கண்களையுடைய அழகிய வலையில்
கடலின் பெருமை அழிய மீன்களை முகந்து
துணையுடன் கூடிய மகிழ்ச்சியுடையோரான மீனவ மக்கள்
இளையரும் முதியருமாய்ச் சுற்றத்துடன் கூடி
உப்பைக் கொண்டுசெல்லும் உமணர் அரிய துறைகளில் செலுத்தும்
வரிசை வண்டிகளின் வலிய காளைகளைப் போலக் குழுமி
நுண்மணல் செறிவாக அடைந்துள்ள கரையில் ஆரவாரத்துடன் இழுத்து
பெரிய களத்தில் (நெல்லைக்)குவித்துவைத்த உழவர் போல
இரப்போரின் வெறும் கலன்களில் நிறையச் சொரிந்து
பல கூறுகளாகச் செய்து தாம் கொண்டவற்றை விலைகூறி விற்று
கரை உயர்ந்த திண்ணிய மணற்பரப்பில் தூங்கும் தலைவனே!
நின் பெருமை என்பது குறைந்துபோகுமோ? ஏதேனும் ஒரு நாளில்
கழுவப்படாத முத்துக்கள் (போல) அரும்பியிருக்கும் புன்னையின்
குளிர்ந்த மணங்கமழும் கடற்கரைச் சோலையில் வந்து, “உம்
அழகு எப்படி இருக்கிறது?” என்றவராய்க் கேட்டுவிட்டுப் போனால்.

#31 பாலை மாமூலனார்
தீயைப்போலச் சினந்து விளங்கும் வெம்மை ஒளிரும் ஞாயிறு
விளைநிலங்களின் கடைசிமட்டும் கருகிப்போகத் தக்கதாகச் சுட்டுப்பொசுக்குவதால் சுருங்கிப்போய்
நிலம் (வெடித்து) நிலைபெயருமோ இன்று என
உலகத்து உயிர்கள் மடிந்துபோக மழை அற்றுப்போன இக் காலத்தில்
இலைகள் இல்லாதுபோய், நிமிர்ந்த நிலையில் உயர்ந்து நிற்கும் யா மரத்தின்
உச்சிக் கவட்டில் இருந்த தன் குஞ்சுகளுக்கு
கல்லை உடைய சிற்றரணில் இருக்கும் மறவர்கள் வில்லால் (அம்பினை) எய்ய
நிணம் ஒழுகும் பொலிவற்ற நிறமுள்ள வழிகள்தோறும்
செவ்வலரி மாலை இட்டவாறு இறந்துகிடந்தாற் போல
புண் சொரியும் குருதி சூழ்ந்து பரவக் கிடந்தோரின்
கண்களை (க் கொத்திச் சென்று) ஊட்டிவிடும் கழூகுகளையுடைய காட்டைக் கடந்து
சென்றார் என்று கூறுபவர் இலர், தோழி! வெற்றியோடு
வில்லால் (பகைவரை)அழித்து (அவரின் செல்வத்தைத்)துய்க்கும் வலிய ஆண்மையுள்ள வாழ்க்கை உடைய
தமிழ்நாட்டினை ஆளும் மன்னர் மூவரும் காக்கும்
தமிழ் மொழியின் வேறான மொழிவழங்கும் தேயங்களின் பல மலைகளையும் கடந்து.

#32 குறிஞ்சி நல்வெள்ளியார்
நேற்றுப் பகலில் தினைப்புனத்தில் தோன்றி,
அழகிய மணிகள் ஒளிரும் அணிகளைப் பூண்டவனாய் வந்து,
அரசன் போன்ற (தனது)தோற்றத்துக்கு மாறாக
இரத்தல் செய்யும் மக்களைப் போல பணிவான சொற்களைப் பலமுறை கூறி,
“சிறுதினையில் படியும் கிளிகளைக் விரட்டுவதற்கு, பலவிதமான உயர்ந்த
குளிருடன் கூடிய தட்டைகளை வலுவில்லாமல் அடித்துக்கொண்டு,
சூர்கொண்ட தெய்வமகளிர் போல நிற்கின்ற நீ
யாரோ, என்னை வருத்துகின்றவளே, (உன்னை)விழுங்கட்டுமா?” என்று
என் பின்கழுத்தை வளைத்துப் பிடித்தவனாக, அதன் காரணமாகக்
கொட்டும் மழை பெய்த மண்ணைப்போல நெகிழ்ந்து வருந்திய என்
உள்ளத்தை அவன் அறிதலை அஞ்சி, (என்)உள்ளத்தில் இல்லாத
கடுஞ்சொற்களைக் கூறி (அவனது) கையின் பிணைப்பினை விடுவித்து
வெருளும் பெண்மானைப் போல் விலகி நின்ற
என் உறுதியின் தன்மையினால் (அவன்)தன்னிலைக்கு வந்து, வேறு என்னிடம்
சொல்ல வலுவுள்ள சொற்கள் எதுவும் இல்லாதவனாய், அலமந்து
(தன்)கூட்டத்திலிருந்து நீங்கும் களிற்றைப் போல் சென்றவன், இன்றைக்கும்
தோற்காதிருத்தல் இல்லை, தோழியே! நாம் செல்வோமாக,
வளைந்து இறங்கும் பெரிய (என்)தோள்களின் உரிமை தனக்கே
களங்கமின்றி உடையது என்பதையும் அறியான், வருத்தமுற்று
என் தேவையை (என்னிடமே) இரந்து நிற்க முயலும்
(என்)கண் முன்னே வந்து நிற்பவனை நகையாடுவோம் யாம்.

#33 பாலை மதுரை அளக்கர் ஞாழார் மகனார் மள்ளனார்
பொருளீட்ட மேற்கொள்ளவிருக்கும் செயல் நல்லது என்பதை வெகுவாக உணர்த்தி
மனையில் இருக்கும் சிறந்த கற்பினையுடைய ஒளிரும் நெற்றியை உடையோளைப் பிரிந்து,
கவடுகளில் முளைவிடும் தளிர்களும் இல்லாத, செங்குத்தாக நிற்கும் யாமரத்தின்
ஒரே தண்டாக ஓங்கி உயர்ந்த மரத்தின் (உச்சிக்) கிளையில் இருக்கும், வலிய பறத்தலையுடைய
சீட்டி ஒலி எழுப்பும் பருந்தின் (இரையைக் குறிபார்த்துக்)கவர்வதில் திறமைமிக்க ஆண் பறவை
வளைந்த வாயை உடைய பெண்பருந்தை அழைப்பதற்காக மீண்டும் மீண்டும் ஒலிக்கும்
இளி என்ற சுரத்தைத் தேரும் இனிய குரல் ஒலிக்கும் அருஞ்சுரம்
செல்வதற்கு மிகவும் கடினமானது என்று எண்ணாமல் பயணத்தை மேற்கொண்டு, தலைவியின்
மலரின் பெருமையைக் குலைக்கும் வகையில் அமைந்த, மையிட்ட அழகிய குளிர்ந்த கண்களின்
தெளிவில்லாத பார்வையை நினைத்துப்பார்க்கிறாய் - உளியின் வாயைப்போன்று (கூர்மையான)
சூடான பரல்கற்களைக் கொண்ட பாதைகளையுடைய குன்றுகள் பலவற்றைக் கடந்து,
(இப்போது இங்கே)நான் தனியனாய் இருக்க, (என் நெஞ்சே!) நீ மட்டும்
(என்னை)விட்டுப் போக எண்ணுகிறாய் என்றால், மிகப் பழமையான,
வெற்றிப்போர்களின் சேரமன்னனின் கொல்லிமலையின் உச்சியில் உள்ள
சிறிய கெட்டிமூங்கில் போன்ற வளைந்த பக்கங்களையுடைய பருத்த தோள்களையும்,
தேமலைக்கொண்ட அல்குலையும், வெண்மையான பற்களையும் கொண்ட தலைவியைவிட்டுப்
பிரியாமல் இருந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும்,
பிரிந்த நாளில் என்னைப்பற்றி நீ சரியாக அறிந்திருக்கவில்லை. எனினும் இன்று நாம்
மேற்கொண்டுள்ள பணியை நடுவழியில் விலக்கிவைத்தால்
அடையமாட்டாயோ, பிறர் எள்ளி நகையாடும் நிலையை?

#34 முல்லை மதுரை மருதன் இளநாகனார்
சிறிய கரிய பிடவஞ்செடியின் வெள்ளை நிறத் தலையை உடைய சிறிய புதர்
தலைமாலை போல மலரும் குளிர்ந்த மணமிக்க முல்லை நிலத்தில்
செருப்பு அணிந்த வேட்டுவன் இரண்டாகப் பிளப்புண்ட கோலைத் தோளில் சுமப்பதைப் போல
பெரிய முறுக்குண்ட கொம்புகளையுடைய பெருமை தங்கிய ஆண்மான்கள்
செறிவாக அமைந்த இலைகளையுடைய அறுகம்புல்லின் சிவந்த தண்டினோடு மெல்லிய கொத்துக்களை
குட்டிகள் விளையாடும் பக்கத்தினையுடைய இளைய பெண்மானை தின்னச்செய்து
தெளிவாக அறுத்துக்கொண்டு செல்லும் நீரையொட்டிய நீண்ட மணல்சார்ந்த கரைகளில்
அசைபோடும் கதுப்புக்களுடன் துயில்கொள்ளும் இடத்தைக் காத்து நிற்கும்
பெருந்தன்மையினைக் கண்டு உடைந்துபோன நெஞ்சம் இன்பமடையும்வண்ணம்
நம் தேர் விரைந்து செல்லட்டும், நல்ல திறம்வாய்ந்த பாகனே!
ஆடையில் தோய்த்த அதிகக் கஞ்சிப்பசையை அலசும் மெல் விரல் பெரும் தோள் வண்ணார்ப்பெண்,
ஆற்றுத்துறையில் அலசிவிடுவது போன்ற தூய வெண்மையான மயிர்களையுடைய அன்னங்கள்
தம் பெடைகளுடன் விளையாடி மகிழும் காவல் உள்ள மனையகத்தில்,
சிவந்த மாலை அணிந்தது போன்ற கழுத்தையுடைய பசுங்கிளியைத் தனது முன்னங்கையில் ஏந்தி,
நம்மைப் பிரிந்து சென்றவரைப் பற்றி, இன்று வருவார் என்று உரைப்பாய் என்று
வீட்டிலுள்ளவர்கள் அறிந்துவிடுவாரோ என்று அஞ்சி மிகவும் மெதுவாக
மழலையாகிய இனிய சொற்களைத் திரும்பத்திரும்பச் சொல்லும்
நாணம் மிக்க நம் தலைவியின் மாண்புள்ள அழகினை நுகர்வதற்கு -

#35 பாலை குடவாயில் கீரத்தனார்
பெற்றுப் போற்றி வளர்த்த என்னையும் மறந்துவிட்டாள்-
விண்ணைத் தொடும் உயர்ந்த மதிலையுடைய இந்த நல் மனை தனிமையுற்றது;
தனித்த ஒரு மணி மாறிமாறி ஒலிக்கும், பொருத்துதல் உள்ள கழுத்துப்பட்டை உடைய -
கூரிய முனை கொண்ட நீண்ட வேலை உடைய சிற்றரண் மழவர்கள் (ஓட்டிச் சென்ற) -
போரிட்டு மீட்ட - பசுக்களைக் கொணர்ந்து, (அந்த மழவர்களை) மேட்டுநிலத்தில் வீழ்த்திய
வில்லையே ஏராகக் கொண்ட வாழ்க்கையை உடைய, சிறப்பாக அம்பு எய்யும் மறவர்கள்
தம் வலிய ஆண்மையின் சின்னமான பதுக்கைக் கடவுளை வழிபடுவதற்கு
அந்த நடுகல்லில் மயில்தோகைகளை அணிவித்து, உடுக்கு அடித்து,
நெல்லால் ஆக்கிய கள்ளோடு செம்மறியாட்டையும் பலி கொடுக்கும்
செல்வதற்கு இயலாத கவர்த்த வழிகளையுடைய புலால் நாறும் அரிய சுரநெறியில்
துணிவுடன் சென்று (நமக்கு) அன்னியள் ஆகிவிட்டாலும் - (அவளுக்குப்) பலவித அணிகளை அணிந்து
ஆர்வமுள்ள நெஞ்சமோடு அவளது அழகிய நலனைத் துய்த்துத் தன்னுடைய
மார்பே துணையாக அவளைத் துயில்விப்பானாக -
ஓயாது ஒலிக்கும் முரசை உடைய, திருக்கோவலூருக்குத் தலைவனான,
நெடிய தேரைக் கொண்ட காரியின் கொடுங்கால் என்னும் இடத்தின் முன்துறையில் உள்ள
பெண்ணை ஆகிய அழகிய பெரிய ஆற்றின் நுண்ணிய கருமணலைப் போன்ற
நெளிந்த கரிய கூந்தலை உடைய என் பேதைமகளுக்கு
அறியாத நாட்டில் அவளைக் கூட்டிச் சென்ற துணைவன்.

#36 மருதம் மதுரை நக்கீரர்
பிளந்த வாயையுடைய வராலின், பல வரிகளைக் கொண்ட ஆண்மீன்
வளைந்த வாயையுடைய தூண்டில்முள்ளில் மாட்டிய இரையை விழுங்கி,
ஆம்பலின் மெல்லிய இலை கிழியுமாறு, குவளையின்
மலர்கின்ற பல மலர்கள் சிதைந்துபோகப் பாய்ந்து எழுந்து,
பின்னிக்கிடக்கும் வள்ளையின் அழகிய கொடிகளை உழப்பி,
தூண்டில்காரன் வளைத்து இழுக்க வராமல்,
கயிறிட்டுப் பிடிக்கும் சினம் மிக்க காளையைப் போல வெறி மிகுந்து,
காலையில் குளத்தைக் கலக்கும் பூக்கள் பொருந்திய ஊரனே!
(வற்றாது) வரும் நீரை உடைய வைகையின் நீண்ட மணற்பரப்புள்ள அகன்ற துறையின்
அழகிய மருதமரங்கள் ஓங்கி வளர்ந்த, விரிந்த மலர்களுள்ள சோலையில்
நறிய, மிக்க கூந்தலையுடைய, குறு வளையல்களை அணிந்த இளம்பெண்ணுடன்
மணவாழ்க்கை நடத்தினாய் என்று ஊரார் கூறுகின்றனர் - ஊரார் ஏளனப் பேச்சு,
கொய்த பிடரிமயிரைக் கொண்ட குதிரைகள் பூட்டிய கொடி பறக்கும் தேர் உடைய நெடுஞ்செழியன்
தலையாலங்கானத்து அகன்ற போர்க்களம் செந்நிறம் அடைய -
சேரன், சோழன், சினம் மிக்க திதியன்,
போரில் வல்ல யானையை உடைய பொன் அணிகள் அணிந்த எழினி,
நாரால் அரிக்கப்பட்ட கள்ளினையுடைய எருமையூரன்,
தேன் மணம் கமழும் மார்பினில் பூசிப் புலர்ந்த சந்தனத்தையுடைய
இருங்கோவேண்மான், சிறப்பாகச் செய்யப்பட்ட தேரையுடைய பொருநன் என்ற
எழுவரின் சிறந்த வெற்றிகள் அடங்கிப்போக, ஒரு பகலிலே
முரசுகளுடன் வெண்கொற்றக்குடைகளையும் கைப்பற்றி, தன் புகழ் எங்கும் பரவ,
அவரைக் கொன்று களவேள்வி செய்த பொழுது
வெற்றியடைந்த வீர்ர் எழுப்பிய ஆரவாரத்தினும் பெரிதாக உள்ளது.

#37 பாலை விற்றூற்று மூதெயினனார்
(தலைவர்) என்னை மறந்து வெளியூரிலேயே தங்கிவிடமாட்டாரெனினும், கறங்கும் ஒலிகளையுடைய
பின்னிருட்டில் ஆரவாரத்தை உடைய மிகுந்த மகிழ்ச்சியுள்ள உழவர்
தூற்றாப் பொலியை முகந்து தூற்ற எழும் கனமற்ற நுண்ணிய தூசுகள்
மூடுபனி வானத்தைப் போன்று நாற்புரத்தையும் மறைக்க -
வைகறை புலர்ந்த விடியற்காலையில் வைக்கோலைப் பிடித்துப்போட்டு கடாவிட்டு,
வேலைக் களைப்பால் கள்ளுண்ட மயக்கம் தீர, அழகால் மேம்பட்ட,
காற்றால் கிளைத்த கொழுவிய தளிர்களையுடைய மாமரத்தில்
கிளி(மூக்கு) போன்ற காய்களைக் கொண்ட கிளை(யில் தொங்கும்) கொத்துக்களைச் சாறெடுத்து,
புளிப்புச் சுவை சேர்த்துப் புதுக்குடங்களில் விளிம்புதட்ட நிறைத்ததை,
வெயிலில் குப்புற நிறுத்திய மிக்க இதழ்களையுடைய பசிய (பனையோலைக்)குடையில்
குளத்தில் நீரை மண்டும் காளையைப் போலப் பருகி, அழகு பொருந்த
கொள்ளும் பயறும் பாலுடன் கலந்து, வெள்ளியால்
கோலம் வரைந்ததைப் போன்ற வெண்மைநிறமுள்ள நன்கு வெந்த கஞ்சியை
வளைத்து உண்ட கை தடுத்த பின்னர் - உயரமாக,
சூரியனைப் போன்ற அழகான நெற்குவியலைச் சுற்றிப் பகல் முடிய
மருதமர நிழலில் காளைகளுடன் தங்கியிருக்கும்
விரும்பித்துய்க்கும் வேனில் காலம் அல்லவா இது!
இவ்வாறாகச் சிறப்பான நலத்தினைத் துய்க்கும் துணையைப் பெற்றவருக்கு -

#38 குறிஞ்சி வடம வண்ணக்கன் பேரிசாத்தனார்
மலர்ந்த கொத்துக்களை உடைய வேங்கைப்பூவால் செய்த, வண்டுகள் மொய்க்கும் கண்ணியன்-
ஆய்ந்தெடுத்த இதழ்களையுடைய குவளை மலர்களால் ஆன தேனொழுகும் மாலையன் -
அழகிய வில் இடக்கையது ஆக, கடிதாய்ப் பறக்கும்
அம்பினை வலக்கையில் தெரிந்துகொண்டு, காதலியை அடைய எண்ணி
வருவது (இன்றும்)நடக்கும் - அந்த வானளாவிய மலைநாட்டவன்
(இன்று)அவ்வாறு வந்தால், அழகிய தளிர்களை உடைய அசோக மரத்தின்
தாழ்வாக இல்லாமல் நீண்டிருக்கும் கிளையில் கட்டிய, கீழிறங்கும் கயிற்றின்
ஊஞ்சல் இல்லாமல்போன இடத்தையும், (நீரில்)பாய்ந்து ஒன்றாக
விளையாடாததினால் கலங்கல் இல்லாமல் தெளிந்து,
நீளமான இதழ்களைக் கொண்ட அழகுபெற்ற நீலப்பூக்கள்
கண் போல மலர்ந்துகிடக்கும் சுனையையும், வளவிய சிறகுகளையுடைய
இளங்கிளிகள் தூக்கிச் செல்ல முடியாத பெரிய கதிர்களின்
வளைந்த பாரத்தை அறுத்துவிட்ட தட்டைகளே தலையாய்க் கொண்ட அரிதாள்களைக்கொண்ட
அறுவடை முடிந்த தினைப்புனத்தையும் பார்த்து - நீண்ட நேரம் நினைத்துக்கொண்டே இருந்து
துயருற்றவனாய்த் திரும்பிச் செல்வானல்லனோ! என் அழகு தேய்ந்துபோகட்டும்!
சுனையிலிருந்து வரும் வெள்ளிய அருவியை உச்சியில் கொண்ட உயர்ந்த மலையில்
கூப்பிடுதூரத்தில்தான் உள்ளது எம் ஊர் என்று
அப்பொழுதே அதனை (அவனுக்கு)அறிவுறுத்தலை மறந்துவிட்டேனே நான்!

#39 பாலை மதுரை செங்கண்ணனார்
செய்யலாகாது என்று ஒழித்த கொள்கையைப் பழித்த நெஞ்சமோடு, பயணம் மேற்கொண்டு
நினைத்தும் அறிந்தீரோ என்னை என்று, உன்	
கூரிய பற்களை உடைய சிவந்த வாயின் முறுவல் அழிய
நோவினை ஏற்படுத்தி அன்பற்றவற்றைப் பேசாதே - உன்
தேடிநுகரும் அழகினை மறப்பேனோ - மாட்டேனே! நெடுந்தூரம் கடந்து,
தழைத்த மூங்கில்கள் உரசிக்கொண்டதால், மூங்கில்கழை சொரிந்த ஒள்ளிய தீப்பொறி
மிகுந்த சருகுகளுக்குள் விழுந்து தீ மூள, நாட்பட்ட
காய்ந்துபோன புல்லின் மீது காற்று சுழற்றிப் பரவச்செய்ய
காட்டையே சூழ்ந்த பெரும் தீ காற்றடிக்கும் பக்கமெல்லாம் பரவியதால்,
பாதையைத் தவறவிட்ட வணிகக் கூட்டத்தாருடன் சேர்ந்து
செருக்குற்ற புலியைக் கண்டு அஞ்சிய மதங்கொண்ட யானைகளின்
கூட்டம் சிதறுண்டு திரியும் அகன்ற இடத்தையுடைய பெரிய காட்டில்,
தொங்குவது போல் தோன்றிய ஞாயிறு மயங்கி மறைந்திட -
வண்டுகள் சூழும் கூந்தலினாய்! உன்னை நாடி நினைத்து
அரும் பயணமும் இயலாமற்போன அந்த அரிய வழியில், ‘சட்'டென்று
படுத்துக் கண்மூடிய தூக்கத்தில் - ஒரு பெண்மான் கண்ணிற்பட்டாற் போன்ற
மின்னும் கைவளையல்களைச் சேர்த்து மேலிழுத்து, குனிந்த பார்வையுடன்,
நிலத்தைக் காலால் கிளறிக்கொண்டு சிந்தனைசெய்துகொண்டிருந்த உன்னைக் கண்டு
‘இனிய முறுவல் கொண்டவளே!, நான் இவ்வாறு வருந்தியிருக்கவும், என்னுடன்
(உனக்கு)ஊடல் எங்ஙனம் வந்தது?' என்று உன்
பக்கம் உயர்ந்த புருவங்களுடன் திரண்டு குறுகிய நெற்றியை நீவிவிட்டு,
மணமுள்ள பக்கக் கூந்தலைக் கோதிவிட்ட நல்ல நேரத்தில்
வெறுங்கையாய் ஆக்கிய அந்தப் பொய்க் கனவினின்றும்
கண்விழித்து உள்ளம் நலிவடைந்த துயரத்தை
ஏற்றுக்கொள்ளாததினால் ஊடல்கொள்கிறாய் என்னுடன்.

#40 நெய்தல் குன்றியனார்
கடற்கரைச் சோலை மாலைக் காலத்துக் கழியில் இருக்கும் பூக்கள் குவிய,
நீல நிறப் பெருங்கடலின் ஓசை மிகுந்து ஒலிக்க,
மீனை உண்ணும் கொக்குகளின் குறும்பறப்புக் கூட்டம்
திரண்ட பெரிய புன்னை மரத்தின் கூடுகளைச் சென்றடைய,
(தம் கூடுகளில் வந்து சேரும்)வண்டுகள் மிகுந்து ஒலிக்கும் அடையும்பொழுதில்
தாழைகள் தளரும்படி அசைத்து, மாலையில்
நோகும்படி வந்த கீழ்க்காற்றினால் மிகுந்த துன்பம் கொண்ட
ஆசைகொண்ட நெஞ்சம் செயலற்று வருந்த
நமக்குத் துன்பம் விளைவித்து (அது தீர)நம்மீது அருள்கூராராயினும்
அற்றுப்போகாதிருப்பதாக அவருடைய நட்பு -
(அவரிடம்) கருணை இல்லாததால் அவ்விடத்தில் தங்குதலை வெறுத்து,
(திரும்பி)வராமல் இருப்பதாக, தோழி - வயல்வெளிகளில்
வெண்ணெல்லை அரிவோரின் பின்னே நிறைந்து ஒலிக்கும்
தண்ணுமைப் பறையின் ஓசைக்கு அஞ்சிய நீண்ட கால்களையுடைய நாரை
செறிந்த மூட்டுவாயினை உடைய கொம்புவாத்தியம் போல் பிளிற்றிப் பனைமரத்தின்
அகமடலில் தங்கும் கடல்துறையில் வாழும் தலைவனது
இனிய துயில் கொள்ளத்தக்க மார்பினை எண்ணிச் சென்ற என் நெஞ்சம் - 

#41 பாலை குன்றியனார்
பின்னிருட்டு புலர்ந்த விடியல் வேளையில் எருமைகளை மேய்நிலத்திற்கு ஓட்டிவிட,
கருஞ்சிவப்பான அரும்புகள் தம் பிணியவிழ்ந்த மலர்ச்சியடைந்த முருக்கமரத்தின்
நெருப்பைப் போன்ற பூக்களைக் கொண்ட கிளைகளில் வண்டினம் மிக்கு ஒலிக்க,
நெடிய நெற்பயிர்களைச் சேர்த்துக் கட்டிய கழினியினுள் ஏர்களை எடுத்துச்சென்று
தலை குவிந்த மண்கட்டிகளையுடைய தோட்டத்தைப் போன்று சிறந்து விளங்க
அரிதாள்களைப் பிளந்து உழுகின்ற, தெரிந்தெடுத்த காளைகளையுடைய உழவர்கள்
(காளைகளை அதட்டும்)ஓசையாகிய தெளிந்த குரல் காடுகள்தோறும் பரக்க,
செழித்த பூங்கொத்துகள் எதிர்த்துத் தோன்றிய மரங்களையுடைவாய் அழகுற்று,
காடு அழகு பெற்ற காண்பதற்கினிய பொழுதில்,
நாம் பிரிந்திட்டதன் தனிமையால் அழகுகெட மெலிந்து
நம் பிரிவை இதுவரை அறியாத அழகுடன் சிறந்து விளங்கிய
நல்ல தோள்கள் நெகிழும்வண்ணம் வருந்துவாளோ!
மென் சிறகுடைய வண்டுகள் உள்ள குளிர்ந்த மணங்கமழும் பூங்கொத்துகளில் உள்ள
தாதுடன் கூடிய தேன்துளி தளிரில் ஒழுகியது போல
அழகு ததும்பும் மாநிறமேனியில் கிளைத்துத்தோன்றும்
நுண்ணிய பல தேமல் புள்ளிகளையுடைய நம் தலைவி

#42 குறிஞ்சி கபிலர்
மிகுந்த மழையால் தழைத்த மழைக்காலப் பிச்சிக் கொடியின்
கொய்வதற்கு முடியாத நிலையையுடைய மழைக்கு எழுச்சிபெற்ற மணமுள்ள அரும்பின்
சிவந்த பின்புறத்தைப் போன்ற வளமையான, குளிர்ந்த கடைக்கண்ணையும்
தளிரைப் போன்ற அழகிய மேனியையும் உடைய மாநிறத்தவளே!
நாட்டில் வறுமை மிக, கலப்பைகள் செயலற்று இருக்க
கோடை நீண்ட பசுமையற்ற காலத்தில் -
குன்றுகளைப் பார்த்தது போன்ற கரைகளையுடையவும், முற்றிலும்
பறவைகள் வந்து தங்குதல் இல்லாதனவும் ஆகிய, உள்ளே நீர் அற்ற
வெப்பமுடைய அகன்ற குளம் நிறையும்படி மிகுதியாகக் கொட்டிப்
பெரிய மழை பொழிந்த இன்பமிக்க விடியற்காலத்தில்
பலரும் மகிழ்ந்த மகிழ்ச்சி எல்லாம்
எனக்குள் பெய்ததைப் போன்று இருக்கிறதே! நெடுந்தொலைவில்
உயர்ந்து தோன்றும் உயரமான மலைகளையுடைய
வானளாவிய மலையைச் சேர்ந்தவன் வந்ததாலே.

#43 பாலை மதுரையாசிரியர் நல்லந்துவனார்
கடல்நீரை அள்ளி எடுத்த நிறைந்த சூல்கொண்ட கரு மேகம்
ஒளி நிமிர்ந்த மின்னலோடு வலமாக எழுந்து ஒலித்து
வெம்மையினால் வருந்திய புல்லிய தலையை உடைய இளைய பெண்யானை
தன் துதிக்கை மறையத்தக்க வெள்ளத்தில் தன் ஆண்யானையுடன் படிந்து விளையாட
நிலமும் வானமும் நீரால் பொருந்திச் சேர
குறுநீரையுடைய நாழிகை வட்டிலில் நாழிகை பார்ப்போர் அன்றி
ஞாயிறு உள்ள பக்கம் தெரியாது உலகமே அஞ்சிக்கிடக்கப் பரவி
நீர்த்துளிகளைக் கொட்டியது குளிர்ந்த, முழக்கத்தையுடைய மேகங்கள் - நானோ	
கொய்யும்போது துண்டிக்கப்பட்ட முல்லைமலரின் மணம் காற்றில் கலந்து
இருண்ட பெரிய காடு (மணக்கின்றதைப் போல்) மணக்கும் நறிய நெற்றியையும்
செழித்த கரிய கூந்தலையுடைய மென்மையான இயல்புடைய தலைவியின்
நல்ல அழகுள்ள மார்பினைச் சேர்ந்திருக்கின்றேன்; எப்போதுமே
(நிச்சயமாய்) இரங்கத்தக்கவராவர் - இரக்கமின்றி
அயல்நாட்டுப் பொருளீட்டும் ஆசையால் பிரிந்து சென்று தம்முடைய
இனிய துணையைப் பிரியும் மடமையையுடையோர்.

#44 முல்லை குடவாயில் கீரத்தனார்
மேற்கொண்ட செயலான போரை முடித்துவிட்டான் நம் வேந்தனும்; பகைவரும்
தாம் கொடுக்கவேண்டிய கப்பத்தைச் செலுத்தி வேண்டியவர்கள் ஆகிவிட்டனர்;
பகைமை மிகுந்திருந்த படைகள் இரண்டும்
ஒன்றாகிவிட்டதாக ஒலிக்கப்பட்டது முரசு. உனது தேர்
முன்னிடத்தில் செயல்படுகின்ற ஊர்தி - அதற்குப் பின்னடைவு ஏற்படுத்தாமல்
(விரைந்து)செலுத்துக, பாகனே! (ஏனையோரை) விட்டு விலகியவனாய்க் கடந்துசெல்ல;
நன்னனும், ஏற்றை என்பவனும், நறிய பூண்களை அணிந்த அத்தியும்,
(பகைவர்) நெருங்குதற்கரிய மிக்க வலிமையுடைய கங்கனும், கட்டியும்,
பொன் அணிகலன்கள் அணிந்த வலிய வில்லையுடைய புன்றுறையும், என்பதாக
முன்பு அவர்கள் ஒன்றுகூடியிருந்த அளத்தற்கரிய சிறப்பு வாய்ந்த பாசறையில்,
பருந்துகள் மேலே சுற்றுமாறு போரிட்டுப் பழையன் இறந்தானாக,
அதனைக் கண்டு பொறுக்காதவனாகி, திண்ணிய தேரையுடைய
கணையன் என்பானை அகப்படுத்தி, கழுமலம் என்ற ஊரைக் கைப்பற்றிய
பிணைப்புள்ள அழகிய கண்ணியையும், மிகுந்த அணிகலன்களையும் அணிந்த சென்னியின்
அழும்பில் என்ற ஊரை ஒத்த, குறையாத புதுவருவாயையுடைய
பழமையான பலவான நெல்லையுடைய பல குடிப் பரப்பினை உடையதும்
யானைகளும் மூழ்கும் குளங்களையும், செறிந்த பசிய காவற்காடுகளையும் (உடைய)
குளிர்ந்த குடவாயில் என்னும் ஊரைப் போன்றவளின்
நல்ல பண்புகளையுடைய மார்பினில் இனிய துயிலைப் பெறுவதற்கு.

#45 பாலை வெள்ளிவீதியார்
உலர்ந்த வாகைமரத்திலுள்ள விளைந்த நெற்றுக்களின் கொத்து
ஆடுகளத்தில் (ஒலிக்கும் கழைக் கூத்தர்களின்) பறையினைப் போல் விட்டுவிட்டு ஒலிக்கும்
கோடைக்காலம் நீடித்திருக்கும் அகன்ற பெரிய குன்றில்
நீரற்று இருக்கும் அரிய வழியில் நிமிர்ந்துவரும் களிற்றினைக் கொன்று
போய்வருவோர் இல்லாத கிளைவழிகளில் புலிகள் புரண்டுவிளையாடும்
பாலைக் காட்டைக் கடந்துதான் காதலர் சென்றிருக்கிறார் -- எனது மாமை நிறமானது
மெல்லிய நுண்ணிய பசலை பரத்தலால், பீர்க்கின்
அழகிய மலரைப் போன்று மாறிவிட்டது. ஊர்மக்கள் பேச்சோ
அன்னி என்பவன், குறுக்கை என்னும் போர்க்களத்தில், திதியன் என்பானின்,
நெடுங்காலம் நின்றிருக்கும் அடிமரத்தை வெட்டச் செய்து,
அந்தப் புன்னை மரத்தை மொட்டையாக்கிய போது, கூத்தர்கள்
(எழுப்பிய) இன்னிசையின் ஆரவாரத்தினும் பெரிதே - நானோ,
என் தலைவனைக் காணாமற்போக்கிய சிறுமையால் மனநோய் மிகுந்து
ஆதிமந்தி போல பித்துப்பிடித்து
துயரத்துள் மூழ்கித் திரிவேனோ! பொன் மாலை அணிந்தவனும்
கடலையே கலக்கிய வெற்றியை உடையவனும் நல்ல வேலினை உடையவனும் ஆகிய
வானவரம்பன் தாக்குமுனையில் கலங்கிய
உடைந்துபோன மதிலைக் கொண்ட ஒரே அரணைப் போல
அச்சமெனும் பிணியோடு தூங்காமல் கிடக்கின்றேன்.

#46 மருதம் அள்ளூர் நன்முல்லையார்
சேற்றில் நிற்பதை வெறுத்த சிவந்த கண்களையுடைய எருமை
ஊரார் உறங்கும் இருளில் தனது வலுவுள்ள கயிறை அறுத்துக்கொண்டு
கூரான முள்ளாலான வேலியைத் தனது கொம்பினால் தட்டிவிட்டு
நீர் மிக்க குளத்தில் மீன்கள் எல்லாம் வெருண்டோட
அழகிய துளையையுடைய வள்ளைக்கொடியைச் சிதைத்துக்கொண்டு, தாமரையின்
வண்டுகள் ஒலியெழுப்பும் குளிர்ந்த மலரை ஆசையுடன் தின்னும் ஊரனே!
உன்னை யாம் கடிந்துகொள்வதற்கு நீ யாரோ? நீளத் தொங்கவிடப்பட்டு
கீழிறங்கும் மேகத்தைக் காட்டிலும் பளபளத்துத் தாழ்ந்து விழும் கரிய கூந்தலையுடையவள்
ஒருத்தியை, இவ்வூரார் நம் மனைக்குக் கூட்டிவந்து
“நீ அவளை மணந்தாய்” என்று கூறினர்; அதனை நாங்கள்
கூறவில்லை; நீ வாழ்வாயாக! பகைவரின்
யானைப் படையைக் கொண்ட அரிய போரினை சிதையுமாறு கொல்லும்
ஒளிவீசும் வாள்படையைக் கொண்ட வெற்றி பொருந்திய செழியனது
நெல்பொலி கொண்ட அள்ளூர் நகரைப் போன்ற, எனது
ஒளிரும் வளையணிந்த தலைவியின் அழகு குன்றினும் குன்றுக;
போய்விடு பெருந்தகையே! உன்னைத் தடுப்பவர் யாருமில்லை.

#47 பாலை ஆலம்பேரி சாத்தனார்
கொண்ட உறுதியினின்றும் பிறழ்வுபடாத உள்ளம் பன்னெடுங்காலம் சிறந்து விளங்க,
இவ்விடத்தில் வந்த வேலையை முடித்தோமென்றால், மிகவும் விரைவாக
எழுவாயாக, நெஞ்சே நீ வாழ்வாயாக; தழைத்த உச்சியினையுடைய
ஆடுகின்ற மூங்கிலை ஒலி எழுமாறு தாக்கி, குறுக்காக எழுந்து
சூறாவளி வெப்பமுறச் செய்த, பக்கங்களில் நீண்டும், கூரான கொழுந்துவிட்டும் எரியும் நெருப்பு
பிளவுகளும் குகைகளும் கொண்ட மலைச் சரிவில் பரந்து விரிதலால், அதனுடன் சேர்ந்து,
மூங்கில் கணுக்கள் வெடித்தலால் எழும் ஒலி மான் கூட்டத்தை விரட்டும்
கொடும் போர்முனையைப் போன்ற அரிய பாதையைக் கடந்து, அளவுகடந்து,
பெரிய ஞாயிறு மலையைச் சேர்ந்து மறைய, வீட்டில்
ஒளிரும் வளையணிந்த பெண்கள் வெள்ளிய திரிகளைக் கொளுத்த,
சிறுநடை போடும் புறாவின் சிவந்த கால்களையுடைய ஆண்புறா
உயர்ந்த மாடங்களை உடைய பெரிய மனையில் உள்ள தான் விரும்பும் பெடையை அழைக்கும்
தனிமைத் துயருடன் வந்த துன்பத்தைத் தரும் மாலைவேளையில்,
“எங்கு இருக்கின்றாரோ” என நினைத்துக் கலங்கியிருக்கும் தலைவியை அடைந்து,
இழைகள் அணியப்பெற்ற நெடிய தேரினைக்கொண்ட வள்ளல்தன்மை நிறைந்த செழியனின்
முகில்கள் தவழும் வளம் மிக்க சிறுமலை என்னும் மலையின்
சாரல்களில் கூதளம் கமழும் மலையின்
மூங்கிலைப் போன்ற பருத்த தோளில் பரவியுள்ள
பசலை நோயின் வருத்தம் நீங்கப் பலமுறையும் முயங்குவோம்.

#48 குறிஞ்சி தங்கால் முட கொற்றனார்
அன்னையே வணக்கம், நான் கூறுவதைக் கேட்குமாறு வேண்டுகிறேன். ‘உனது மகள்
பாலையும் பருகாள், துன்பம் கொண்டு
மிகவும் மெலிவடைந்துள்ளாள்' என்று (காரணம்)கேட்கிறாய், அதன் காரணத்தை
நானும் தெளிவாக அறியேன், முன்பொருநாள்
நிறைந்த பூக்களையுடைய மலைச்சாரலில் என் தோழிமாருடன்
தழைத்த கிளைகளையுடைய வேங்கை மரத்தின் பூக்களைக் கொய்யச் சென்றபோது
‘புலி, புலி' என்று நாங்கள் கூச்சலிட,
ஒளி பொருந்திய செங்கழுநீரின் கண்போன்ற அழகிய இதழ்களை
ஊசியினால் கோத்துத் தைத்துக் கட்டிய மாலையை அணிந்தவன்,
தலையின் ஒரு பக்கத்தே சேர்த்துச் செருகிய வெட்சிப்பூத் தலைமாலை அணிந்தவன்,
இளமை தங்கும் மார்பினில் சிவந்த சந்தனத்தைப் பூசி,
வரிந்து கட்டிய வில்லையுடையவன், ஒரு நல்ல அம்பைக் கையினில் கொண்டு,
‘அந்தப் புலி சென்ற வழி எது?' என்று
வினவி நின்றான்; அவனைக் கண்டு
எமக்குள்ளே ஒருவரையொருவர் மறைத்துக்கொண்டு
நாணி நின்றோம், அதனால், ‘அக்கறையுடன்
ஐந்துவகையாக வகுத்த கூந்தலையும், அழகிய நெற்றியையும்,
கரிய நெய்தடவிய கொண்டையினையும் உடைய இளமங்கையரே! உமது வாயில்
பொய்யும் உண்டோ?' என்றனன், (பின்னர்) மெதுவாகச் செல்லுமாறு
தன் தேரின் குதிரைகளின் வேகத்தைத் தடுத்தவன், எதிர்நோக்கலாக
நின் மகளின் மையுண்ட கண்களைப் பலமுறை நோக்கிச்
சென்றான், அந்தக் குன்றுக்கு உரியவன்;
பகல் முடிந்த அந்தியில் மலையில் ஞாயிறு மறையும் நேரத்தில்
அவன் சென்று மறைந்த திசையை நோக்கியவாறே, ‘இவனே
ஆண்மகன், தோழியே' என்றாள் உன் மகள்;
அது எத்தகையது என்று அறிவு மிக்கோர் அறிந்துகொள்வார்'.

#49 பாலை வண்ணப்புற கந்தரத்தனார்
கிளி, பந்து, கழங்கு ஆகியவற்றை விரும்பியள் (இப்போது)
அருள், அன்பு, மென்மை, செயல் ஆகியவற்றில்
வேறுபட்டுள்ளாள்; “என் உயிர் போவதாக” என்று கூறி,
வளைந்த தொடையினை உடைய கன்றுடன் மரத்தில் கட்டப்பெற்ற
ஆசைமிக்க பசுவைப் போல, (அவள்) முதுகினைப் பார்த்து,
கிட்டே வந்து குவிந்திருக்கும் நெற்றியைத் தடவி,
மென்மையாக தழுவிக்கொண்டேனாக – என் மகள்
என்னுடைய நல்ல மார்பின் முலைகளிடையே வியர்வை உண்டாக
பலமுறை என்னைத் தழுவிக்கொண்டாள்; ஐயகோ!
வெற்றி மிகு பெருந்தகையாளன் பலபடியாகப் பாராட்ட,
பட்டுப்போன மரநிழலில் தங்கி, தலையை மேல்நோக்கிப் பார்த்து வருந்தும்
இளையமானின் தளர்வுற்ற கூட்டம் வற்றிய மரல் செடிகளைச் சுவைக்கும்
பாலைநிலத்தில் உடன்போகுதலை அறிந்திருந்தால் - இவள் தந்தையின்
உணவிருப்பு மிகுந்த காவல் பொருந்திய அகன்ற இல்லத்தில்
செல்லுமிடமெல்லாம் கூடவரும் நிழல் போல
மாலை சூடிய தோழியரோடு ஓரை விளையாட்டில்
கூடு போன்ற சிலம்பின் பரல்கள் ஒலிக்க, அவள்
ஆடுகின்றபோதெல்லாம் அகலாதிருந்திருப்பேனே!

#50 நெய்தல் கருவூர் பூதஞ்சாத்தனார்
கடலில் ஓசை குன்றி, தோணிகள் கடலைவிட்டு நீங்கி(க் கரையில் கிடக்க)
நெடியவாய் நிறைந்த நீரைக்கொண்ட பெரிய கழியில் சுறாமீன்கள் செருக்கித் திரிந்தாலும்,
கொடிய பேச்சைக்கொண்ட பெண்டிர் பழிசொல்லித் திரிந்தாலும்,
நன்கு அலங்கரிக்கப்பட்ட நீண்ட தேர் காத்துநிற்கப்,
பகலிலும் நம்மைவிட்டு அகலாதவனாகி,
(முன்பெல்லாம்)அடிக்கடி வருவானே! குளிர்ந்த கடற்கரையையுடைய தலைவன்; இப்பொழுதோ,
ஒன்றுசேர்வதற்கு அரிதாயிருந்த (பழைய)விருப்பம் நீங்கிவிட, (இப்பொழுது இருக்குமிடத்தைத்) துறந்து
வராமலிருப்பவர் நமக்கு யார் என்று வாளாவிராமல்,
(இப்பொழுது தலைவன் இருக்கும் அந்த)வளமிக்க பழமையான ஊருக்கு மறைவாகச் சென்று
(அவனிடம்) சொன்னால் என்ன பாணனே!, “இரவில்
(நம்)வீட்டைச் சேர்ந்துள்ள பனைமரத்தில், வளைந்த அலகையுடைய அன்றில் பறவைகள்
ஏதேனும் ஒரு துணை பிரிந்திருந்தாலும் தூங்கமாட்டா, காண்பாயாக என்று
கண்ணில் நிறைந்து இருக்கும் கண்ணீரைக்கொண்டு தன் துயரை மறைப்பாள்
ஒளிபொருந்திய நெற்றியையுடைய தலைவி, இதற்கு யான் என்ன செய்வேன்?” என்று. 

#51 பாலை பெருந்தேவனார்
ஆட்கள் நடமாட்டம் இல்லாத காட்டுவழியில், சூரியனின் கதிர்கள் சுடுதலால்
மிக்க வெம்மை பரவிய  - நீண்ட அடிமரத்தை உடைய யா மரத்தில்
புகுந்துகொண்டு செல்லும் காற்று முழங்கும் பொலிவற்ற உயர்ந்த கிளையில்,
புலால் விருப்பத்துடன் இருக்கும் தன் பேடையின் முகத்தைப் பார்த்து வரும்
மாமிசத்துண்டைப் பதித்து வைத்ததைப் போன்ற அச்சம்தரும் சிவந்த செவியை உடைய
ஆண் பருந்தின் சிறகுகள் கரிந்து தீய்ந்துபோக,
வேனில் நீண்டிருக்கும் - மூங்கில்கள் உயர்ந்த - அகன்ற காட்டுவெளியில்
நீ துன்புற்றதால் கிடைக்கும் வேலையினால் அடையும் சம்பாத்தியம்
பூப்போன்ற குளிர்ந்த கண்களையுடைய மாநிறத்தவளைப்
பிரிவதால் பெறுவது என்றால், அவளைப் பிரியாமல்
அவளின் நிமிர்ந்த மார்பகங்கள் விம்ம, பலமுறை
சிவந்த அணிகலன்கள் ஒலிக்க அவளைத் தழுவி, நாள்தோறும்
தலைவியுடன் இல்வாழ்க்கையில் மகிழ்ந்திருக்க
நினைப்பாயாக! சிறந்த நெஞ்சமே! நீ அவளைவிட்டுப் பிரிதலை மறந்து - 

#52 குறிஞ்சி நொச்சிநியமம் கிழார்
சுற்றிய வள்ளிக் கொடியையுடைய, மரங்கள் உயர்ந்த மலைச் சரிவில்
செழித்தெழுந்த வேங்கை மரத்தின் மிக உயர்ந்த நெடிய கிளையிலுள்ள
பொன்னைப் போன்ற புதிய மலரினைப் பறிக்க விரும்பிய குறமகள்,
இனிமையற்ற குரலில் “வேங்கை வேங்கை” என்ற ஆரவாரத்தை அடுத்தடுத்து எழுப்பியதால்
உயர்ந்த பாறைகளின் அடுக்குகளில் இருண்ட குகைகள் கொண்ட மலைச் சாரலில்
பசுவைக் கவரும் வலிய புலியைக் கண்டு எழுப்பிய ஒலி அது என்று எண்ணி, தமது
மலையை அடுத்துள்ள சிறிய ஊரை விட்டுவிட்டு, பெருத்த ஒலியுடன்
இடது கையில் வில்லை உடையவராய் ஓடிவரும் நாட்டினைச் சேர்ந்த நம் தலைவனது
அகன்ற மார்பில் அடங்கியுள்ளது அவனை விரும்பும் நமது நெஞ்சம் என்பதை அன்னைக்குத்
தெரிவிப்போமா, தெரிவிக்காமல் இருப்போமா என்று
இருவகையால் நாம் எண்ணி ஆய்ந்தது, இப்போது (தெரிவிக்கலாம் என்ற) ஒரு முடிவுக்கு
வந்துள்ளது; நீ வாழ்வாயாக தோழியே! நம் உடம்பினின்றும்
இனிய உயிர் பிரிவதாயினும் உன் மகளின்
ஆய்ந்தெடுத்த மலர் (போன்ற) மைதீட்டிய கண்களில் படர்ந்துள்ள பசலையானது
கலியாண ஆசையால் உண்டானது என்று(மட்டும்) உரைத்துவிடாதே!

#53 பாலை சீத்தலை சாத்தனார்
(நீ) அறியமாட்டாய் தோழி, வாழ்வாயாக!, இருள் நீங்கும்படியாக
வானம் முழுவதிலும் ஒளிவிட்டு, வேகமாகச் செல்லும் ஞாயிற்றின்
கடுமையான கதிர்கள் எறித்து உண்டாக்கிய வெடிப்புகள் நிறையும்படியாக,
நீண்ட அடிமரத்தைக் கொண்ட முருங்கையின் வெண்மையான பூக்கள் பரவியிருக்க,
நீரில்லாமல் வறண்டுபோன முடிவில்லாமற்செல்லும் நீண்ட இடைவெளியில்,
கூரிய பற்களையுடைய செந்நாய் பசியால் வருந்தும் தன் பெண்நாயுடன் -
கள்ளிகள் நிறைந்த கட்டாந்தரை நிலத்தில் வாகைமரத்தின் (அடிமரத்தை)
உள்ளிருக்கும் ஊன் வாடிப்போன சுருண்ட மூக்குள்ள சிறிய நத்தைகள்
பொரித்துப்போனது போலக் கூட்டமாய் மொய்த்திருக்கும் ஆளரவமற்ற வழியில்
இழுத்துக்கட்டிய வில்லையுடைய மறவர்கள் அம்பு எய்ய, இறந்து வீழ்ந்தோரின்
பெயரெழுதிய நடுகல்லின்  - இனிய நிழலில் தங்கியிருக்கும்
அரிய பாலைநிலத்தின் கிளைத்துச் செல்லும் வழிகளைக் கடந்துசென்று, என்றும்
இல்லாதவர்களுக்கு இல்லையென்று கூறி அவரைப் போலிருந்து மறைத்தலைச்
செய்ய மாட்டாத நெஞ்சம் வற்புறுத்தலால், நம்மைக்காட்டிலும்
பொருளே காதலரின் விருப்பம்;
(அதைவிடுத்து, அவரின்) காதல் அருள்மீதுதான் என்கிறாய் நீ.

#54 முல்லை மாற்றூர் கிழார் மகனார் கொற்றம் கொற்றனார்
புதிதாய் முளைத்த அரசர்கள் அரிய அணிகலன்களைத் திறையாகக் கொட்ட
(நம்)வேந்தனும் கொடிய பகைமை தீர்ந்தனன்; இனிமையான மழையைப் பெய்யும்
மேகமும் பேரொலி எழுப்புகிறது; தேரை
ஓவியம் போன்ற, இந்திரகோபம் போன்று சிவந்த, செம்மண் நிலத்தில்
உறுதியான சக்கரங்கள் பதிந்து உருண்டுவர,
விரைந்து செலுத்துக! காண்போம் பாகனே! செருக்கான நடையுடன்
கயிற்றால் கட்டப்பட்ட இளங்கன்றுகள் (தம்) பெருத்த மடியைக் குடித்துக் குறைக்க
கனைக்கின்ற குரலுடனே காலால் தாவித் தாவிப் பாய்ந்து
ஒலிக்கும் மணிகள் கழுத்தில் கட்டப்பட்ட பால்பசுக்களாகிய கூட்டம்
வளைந்த (வேட்டி)மடிப்பினையுடைய, கோலைக் கையிலே கொண்ட இடையர்,
கொன்றக்கனியால் குழலிசைப்பவராய்ப் பின்னால் மெதுவே நடந்துவர,
வீடுகள்தோறும் செல்லும், மொட்டுகள் மலரும், மாலை நேரத்தில்;
தனக்கென வாழாமல் பிறர்க்கு எல்லாம் உரியவனான
பண்ணனின் சிறுகுடித் தோட்டத்திலுள்ள, நுண்ணிய இலைகளையும்
புல்லிய விதைகளையும் கொண்ட நெல்லியின் பசுங்காயைத் தின்றவர்
நீர் குடிக்கும்போது பெறும் சுவையைப் போல, இனிய மொழிகளைக் கூறி,
வளரும் நிலவினால் விளங்கும் பிறைமதியே!
(கழுத்தில்)பொன்சங்கிலி அணிந்த என் மகன் இருப்பிடம் தெரிந்து
வந்தால் (உனக்குப்) பால் தருவேன் என்று
ஓரக்கண்ணால் பார்த்தவளாய் விரலால் (நிலவை) மீண்டும் மீண்டும் அழைத்து,
தேமல் படர்ந்த அல்குலையுடைய என் காதலி,
புதல்வனிடம் பொய்யாகக் கூறும் பூங்குடியின் நிலையை(காண்போம் பாகனே) 

#55 பாலை மாமூலனார்
வெம்மையுடன் செல்லும் ஞாயிறு (சூரியன்) பாறைகள் பிளக்கச் சுடுவதால்
பறக்கும் கொக்குகள் வருந்தும் வெப்பம் மிக்க நீண்ட வெளியில்,
உளிபோன்ற வாயை உடைய பரல் கற்கள் பாதங்களை வருத்துவதால்
உயிர் எப்போது போகும் என்று தெரியாத, மூங்கிலும் எரிந்து கரியாக நிற்கும் காட்டில்
வலிமைமிக்க ஆண்யானை போன்ற தலைவனுடன் என் மகள்
சென்றுவிட்டதற்காக நான் வருந்தவில்லை. அவளைப் பிரிந்து
உலையில் ஊதும் துருத்தி போல பெருமூச்சு விட்டு
தீயில் வேவது போன்ற வெம்மையான நெஞ்சமுடன்
கண்ணைமூடாமல் கனவு காண்கிறேன்; ஒளியுடைய படையையுடைய
கரிகால்வளவனோடு வெண்ணிப்பறந்தலையில்
போரிட்டு (முதுகில்) காயமடைந்த சேரலாதன்
போர்க்களத்தருகே வாளையுயர்த்தி வடக்கிருக்க,
அச் செய்தியைக் கேட்ட சான்றோர்
சுவர்க்கத்துக்கு அவனோடு செல்வதற்காக
உயிர் நீத்ததைப் போல, என் மகளைவிட்டுப் பிரிந்து இங்கே
இவ்வுலகத்து ஆசையை விரும்பி, என்னை விட்டுப் பிரிந்து
போகாத என் உயிரை வெறுத்து (அழுகின்றேன்.)

#56 மருதம் மதுரை அறுவை வாணிகன் இளவேட்டனார்
சிரிப்பை உண்டாக்குகின்றது தோழி, நேற்று
பளிங்கைப் போன்ற தெளிந்த நீருள்ள குளம் அலையடித்துக் கலங்க
இரும்பினால் செய்தது போன்ற கரிய கொம்பை உடைய எருமை
ஆம்பலின் மெல்லிய இலைகள் கிழியுமாறு, குவளையின்
அப்போது மலர்ந்த பல மலர்களை நிறைய உண்டு, கரையிலிருக்கும்
காஞ்சி மரத்துப் பூவின் நுண்ணிய தாதுக்கள் ஈரமான முதுகில் உதிர்ந்து விழ,
மெல்லும் கதுப்புகளையுடையவாய்த் தன் கொட்டிலுக்குள் நுழையும்
குளிர்ந்த துறையினையுடைய ஊரனின் செறிந்த மாலையணிந்த மார்பினில்
மணக்கோலத்திலிருக்கும் புதிய பெண்களைச் சேர்க்க
ஆசையுடன் வந்த பாணன், தெருவில்
அண்மையில் ஈன்ற ஒரு தாய்ப்பசு தன்மீது பாய்ந்ததால் கலங்கிப்போய், யாழினைக் கீழே போட்டு,
எமது வீட்டுக்குள் புகுந்துவிட்டான், அதனைக் கண்டு
மனத்தில் தோன்றிய மிகுந்த மகிழ்ச்சியை மறைத்து, அவனை எதிர்கொண்டு
இந்த வீடு அல்ல , அதுவே உமது வீடு என்ற
என்னையும் தன்னையும் நோக்கி
மருண்ட மனத்தினனாய் (என்னைத்) தொழுதுநின்ற நிலையே!

#57 பாலை நக்கீரர்
சிறிய மெல்லிய சிறகுகளையும் சிவந்த கால்களையும் உடைய வௌவால் பேடை
நீண்ட தன்மையையுடைய வானத்தில் தாவித்தாவிப் பறந்து கடந்து,
வெயில் தகதகக்கும் வெம்மையோடு வந்து, (மரத்தில்) கனி பெறாது
அம் மரத்தில் எந்நாளில் புதிய கனிகள் கிடைக்குமோ என நினைந்து வருந்தி,
உட்புகுந்து கனிதின்ன ஏங்கிப்போகும் புல்லிய கிளைகளையுடைய
குட்டையான அடிமரத்தையுடைய இத்திமரத்தில் புல்லிய உச்சியை உடைய நீண்ட விழுதுகள்
பெரிய சொரசொரப்பான உருண்டைக் கல்லைத் தொட்டுக்கொண்டு, காற்றடிப்பதால்
பெரிய துதிக்கையையுடைய யானை உயர்த்தினாற்போன்று ஆடும்,
குன்றத்துச் சிற்றூர்களைக் கொண்ட கோடைகாலத்து நெடிய வெளியில்
யான் தனியனாக இருக்க, தலைவியோ,
குளிர்ந்த நிலா விரிந்த பல கதிர்களையுடைய குறைமதியைப் போல,
மிகவும் சிறந்த ஆராயத்தக்க அழகு நீங்கப்பெற்று,
சிறிய பீர்க்கம்பூவினைப் போன்ற நிறம் கொண்டதோ!
கொய்த பிடரி மயிர்க் குதிரைகளையுடைய, கொடி கட்டிய தேரையுடைய பாண்டியன்
பழமையான கடலின் துறைமுகத்தையுடைய முசிறியை வளைத்து,
யானைகளைக் கொன்ற பலத்த ஒலியையுடைய போரில்
விழுப்புண்பட்டவரைப் போல மிகவும் மனம் நொந்து வருந்தி
நடு இரவிலும் பகலிலும் 
நிற்காமல் அழுவோளின் அழகிய சிறு நெற்றியே!

#58 குறிஞ்சி மதுரை பண்ட வாணிகன் இளந்தேவனார்
இனிய ஓசையுடன் கூடிய இடியுடன் பெரிய மழை பெய்ய,
உலகத்து உயிர்களெல்லாம் துயின்ற பாதியிரவில்,
காட்டில் தேடுகின்ற வேட்டை முடிவடையாமல்
புலித்தோல் விரித்த படுக்கையில், தெரிந்தெடுத்த அணிகலன்களைக் கொண்ட
தேன் மணக்கும் கூந்தலையுடைய குறப்பெண்களின் தந்தையர்
குளிரில் தம் வீட்டுக்குள் முடங்கிக்கிடக்கும் குன்றுகளின் தலைவனே!
வடிவமைக்கப்பட்டதைப் போன்ற இளமையான முலைகள் அமுங்க, பலமுறை 
மின்னும் வளையணிந்த முன்கை வளைந்து முதுகினைச் சுற்றிக்கொள்ள
உனது மார்பை அணைப்பதிலும் இனியதாயிற்று –
நீவிர் இல்லாத தனிமையில் நும்மை நினக்குந்தோறும் வருந்தி மெலியும்,
குளிருடன் அசைந்து வரும் பண்பு இல்லாத வாடையில்,
நீ வரப்பெறாமல் நும் வருகையைப் பார்த்துப் பதனழிந்து,
வீட்டு மரத்தில் சாய்ந்து ஒட்டிக்கொண்டு
பலரும் துயிலும் இரவில் நீண்ட நேரம் வெளியில் நின்றுகொண்டிருக்கும் என் நிலை

#59 பாலை மதுரை மருதன் இளநாகன்
குளிர்ந்த குளத்தில் நிறைந்த வண்டுகள் மொய்க்கும் இரட்டை மலர்கள் போன்ற
பெரிய அழகினை இழந்த கண்களையுடையவளாய்ப் பெரிதும்
வருந்துகின்றாய் வாழ்வாயாக நீயே; வடக்குத் திசையில் உள்ள
வளமிக்க நீருள்ள யமுனை ஆற்றின் நீண்ட மணலையுடைய அகன்ற துறையில்
ஆயர் பெண்கள் குளிர்ந்த தழைகளை உடுத்திக்கொள்ள
மரம் வளையும்படி மிதித்துத் தந்த கண்ணன் போல
புல்லிய தலையையுடைய இளைய பெண்யானை உண்பதற்காக, அழகிய குழைகளை
உயர்ந்து நிற்கும் யா மரத்தினை வளைத்துத் தந்து, (தன்) நனைந்த கன்னத்தில்
படியும் வண்டுகளை ஓட்டும் ஆண்யானை - தோழி
சூரபதுமனை அவன் சுற்றத்தோடு தொலைத்த ஒளிவிடும் இலையுள்ள நீண்ட வேலின்
சினம் மிகு முருகனது குளிர்ந்த திருப்பரங்குன்றத்து
அந்துவன் பாடிய சந்தன மரங்கள் மிக்க உயர்ந்த மலையில் உள்ள
இனிய சுவையுள்ள புதிய சுனையில் வழவழப்பான மேற்பகுதியையுடைய
குளிர்ந்த மணமுள்ள குவளை போன்ற கொண்டை அசையும் முதுகினை
தான் பாராட்டிய காலத்தினையும் நினைத்துப்பாராமல்,
புடைத்த பக்கங்களைக் கொண்ட மூங்கில் போன்ற தோள்கள் மெலிய, தொலைநாட்டில்
அரிய செயலாகிய பொருளிட்டலை நினைத்து, நம்மைப்
பிரிந்து தூரத்தே தங்கியிருப்பவர் சென்ற வழியில்.

#60 நெய்தல் குடவாயில் கீரத்தனார்
பெரிய கடற்பரப்பில் சிவந்த இறால் மீன் நடுக்கமுறும்படி
கொடிய தொழிலான (மீனை) முகக்கும் நேரான கோலையுடைய அழகிய வலையைக் கொண்ட
நீண்ட திமிலிலிருந்து மீன்பிடிக்கும் தொழிலில் நிலைத்த தந்தைக்கு
உப்பைவிற்றுக்கொண்ட நெல்லினின்றும் ஆக்கிய பதமான வெண்சோற்றில்
அயிரை மீனை இட்டு ஆக்கிய அழகிய புளிக்குழம்பைச் சொரிந்து
கொழுத்த மீனின் துண்டத்தோடே சிறுமி கொடுக்கும் இடமாகிய
திண்ணிய தேரையுடைய பொறையனின் தொண்டிநகரைப் போன்ற எமது
ஒளிவிடும் தோள்வளையை அமுக்கவேண்டாம்; 
ஊதற்காற்று குவித்த உயர்ந்த மணல் மேடாகிய கரையில்,
மாலையையுடைய தோழிகளுடனே மணல்வீடு கட்டி
விளையாடினும் குன்றும் உன் மேனி அழகு என்று,
காரணமின்றியே கோபிக்கும் அன்னை கண்டால், வெல்லும் வேலையுடைய
அரசாண்மை உள்ள சோழரின் குடந்தை நகரில் வைத்த
பகை நாடுகள் தரும் செல்வத்தின் காவலைக் காட்டிலும், செறிந்த 
கடுமையான காவலில் வைத்துவிடுவாள் அறனில்லாத எம்முடைய தாய்.

#61 பாலை மாமூலனார்
‘புண்ணியம் செய்தவர்கள் அவர்கள், இயமனால்
கொள்ளப்பட்டு இறக்காமல், பிறரால் கொள்ளப்பட்டு இறந்தோர்' என்று
முயற்சி வெற்றிசிறக்க, தொலைநாட்டுக்குச் சென்றோர் (சென்ற)
நாள்களைக் குறித்துவைக்கும் நெடிய சுவரை நோக்கி, வருத்தமெனும் துன்பத்துள்
ஆழ்ந்துவிடாதே தோழி! தாழ்க்காமல்
இடியைப்போன்று ஒலிக்கும் ஊக்கத்துடன், புதிய காலும்
வரியும் கொண்டு மாண்புற்று விளங்கும் வலிய நாண் பூட்டிய வலிய வில்லை ஏற்றி
அரிய மார்பில் அழுத்தும் அம்பினையுடையவர்கள் பலருடன்,
தலைமை வாய்ந்த யானைகளின் வெண்மையான கொம்புகளைக் கொண்டு,
கள்ளை விற்றுக்கொண்ட நெல்லால் நாளோலக்கச் சிறப்புச் செய்யும்
கழலினைப் புனைந்த திருத்தமான அடிகளைக் கொண்ட கள்வர்களின் தலைவன்,
மழவரின் நாட்டை வணக்கிய மிகுந்த வள்ளண்மைகொண்ட புல்லி என்பானின்
விழாக்களையுடைய மிக்க சிறப்பு வாய்ந்த திருவேங்கட மலையைப் பெறினும்,
அந்த இடம் பழகிப்போய் அங்கேயே தங்கியவராதல் நடவாததாகும் - மிகப் பழமையான,
முரசைப்போன்ற திணிந்த தோள்களையுடைய நெடுவேளாகிய ஆவி என்பானின்
பொன் மிகுந்த பெரிய நகரமாகிய பொதினியைப் போன்ற உனது
ஒளி விளங்கும் அழகிய முலைகளில் பொலிவுற்று விளங்கும்
நுண்ணிய பூணினை அணிந்த மார்பினில் பொருந்துதலை மறந்து -

#62 குறிஞ்சி பரணர்
பள்ளத்துநீரில் வளரும் பைஞ்சாய்க் கோரைத் தண்டின் அடிப்பகுதியை ஒத்த
ஒளி சிறந்துவிளங்கும் பற்கள் பொருந்திய பவளம் போன்ற வாயினையும்,
மார்பில் அரும்பிய முலைகளையும், பருத்த தோள்களையும்,
கரிய தண்டினையுடைய குவளை மலர்களைச் சேர்த்து வைத்தாற் போன்ற
கரிய இமைகளையுடைய குளிர்ந்த கரிய கண்களையும் உடையவளாகிய அவளுடன்,
பேயும் அறியாத காலத்தில் நடந்த மறைவான சந்திப்பினை
ஒலிக்கும் உடுக்கினைப் போன்று தனித்தும் சேர்ந்தும் பழித்துக் கூறுவதால்
மறைவான ஒழுக்கத்தில் இனி நாம் செல்வது அரிதாகிவிட்டது; அதனால்
கடுமையான வெள்ளம் பெருகிய காவிரி ஆற்றில்
நெடிய சுழியுள்ள நீரில் மூழ்கி எழுபவள் போல,
உள்ளம் நடுங்கும் துன்பம் போகத் தழுவி, நேற்று
என் மார்புள் புதைந்துகிடந்தாள்; வெல்லும் வேலினையும்
யானைகள் மிக்க படையினையுமுடைய சேரனது கொல்லி மலையின்
ஒளிறும் அருவியினை உடைய மலைச் சரிவின் அகலமான இடம் பொலிவுபெற
தெய்வமாக அமைத்த கொல்லிப்பாவையினைப் போன்ற
பேதைமையால் சிறந்த மாநிறத்தவளாகிய தலைவி.

#63 பாலை கருவூர் கண்ணம்புல்லனார்
கேட்பாயாக! வாழ்க! மகளே! உன்னுடைய தோழி
அழகிய இல்லத்தின் இடங்களெல்லாம் வெறிச்சோடிப்போக, தன் தலைவனுடன்
பெரிய மலைகளைத் தாண்டிச் சென்றதற்காக வருந்தவில்லை - வருந்துகிறேன்
கடுமையான யானை தன் நீண்ட கையைச் சேர்த்து
வளைந்த காலால் உதைத்த பொன்துகள் கிளம்பும் புழுதியை,
பெரிதாக விடிகின்ற விடியலின் ஞாயிற்றின் கதிர்கள் விரிந்து வெயில் எறிக்க,
கரிய மாலை போட்டது போன்ற கழுத்தையுடைய காடையின் சேவல்
தன் சிறிய புல்லிய பெடையுடன் குடையும் அவ்விடங்களையுடைய
அஞ்சத் தகுந்த பாலைநிலத்தைக் கடந்து,
தம் கன்றுகளைக் காணாமல் துயரம் மிகுந்தனவாய்ச் செவிகளைச் சாய்த்து
மன்றத்தில் நெருக்கிநிற்பதால் ஆகும் துன்பம் மிகுந்துபோக, பலவும் சேர்ந்த
கறவைகளைக் கொண்டுவந்த மிகுந்த வேகமுள்ள காலையுடைய மறவர்களின்
ஆரவாரமிக்க சிறிய ஊரில் இரவில் தங்கி
முதிய பெண்ணின் சோர்ந்த கால்களையுடைய குடிசையில்
இளம் மயிலைப் போன்ற எனது நடை மெலிந்த பேதைமகள்
தன் தலைவன் தனது தோளையே அணையாக வைத்துத் தூங்கப்பண்ணவும் தூங்காதவளாகி,
வேட்டையாடும் கள்வரின் வாரினை இழுத்துக்கட்டிய கடிய கண்களையுடைய,
காளைகளைப் பிடிக்கும்போது அடிக்கும் பறையின் ஒலியினைக்
கேட்டுக்கொண்டிருப்பாள் என நினைத்து அழும் என் நெஞ்சைக் குறித்து -  

#64 முல்லை ஆர்க்காடு கிழார் மகனார் வெள்ளை கண்ணத்தனார்
களைகின்ற காலம் இதுவே! பாகனே! தலையாட்டம் அணிந்த,
உலகத்தையே கடந்து செல்வது போன்ற, பறவையின் தன்மை கொண்ட குதிரையின்
செம்மையாக அமைந்த அழகினையுடைய கடிவாளத்தை நீ கையிலெடுக்க,
செம்முல்லை மொட்டுகள் தம் கட்டுகள் அவிழ்ந்த குளிர்ந்த பதத்திலுள்ள பெருவழியில்
அழகாக ஒளிறும் அகன்ற இலையையும், எண்ணெய் நிறையப் பூசிய வலிய தண்டையும் உடைய
வெற்றி வேலை ஏந்திய இளைஞர்கள் விரைந்த ஓட்டத்தில் மிகுந்த வேகம் கொள்ள,
பயணத்தை நாம் மேற்கொள்வோமாயின், மழைபெய்த
விரைந்து செல்லும் நீர் வரிவரியாகச் செய்த செம்மண் நிலத்துப் பக்கத்தில்
தேர் விடும் தடத்திலுள்ள ஈர மணலைக் காட்டுக்கோழிகள் காலால் கிளற
பாம்புகள் தங்கும் புற்றின் ஈரமான வெளிப்பக்கத்தைக் குத்திக்
கொம்பினில் மண்ணைக் கொண்ட தலைமைப் பண்புள்ள காளை
தன்னோடு உடனிருப்பதை விரும்பிய இளம் பசுவைத் தழுவிக்கொண்டு
ஊருக்குத் திரும்பிவரும் பொழுதில், எல்லாம் ஒன்று சேர்ந்து
கன்றுகளை அழைக்கும் குரலுடையவாய்த் தொழுவத்துக்குள் நிறையப் புகும்
பசுக்கள் அணிந்துள்ள தெளிவான மணிகளின் அழகாக எழும்பும் இனிய ஒலியை
தனிமையைக் கொண்டுள்ள மாலையில் கேட்கும்போதெல்லாம்
கலங்கியவளாய் இருக்கும் நம் தலைவியின் செயலற்ற நிலையை -

#65 பாலை மாமூலனார்
நமது மனவோட்டத்தை உணர்ந்துகொண்ட அறிவுடன், தன் மனத்தை மறைத்துக்கொண்டிருக்கும்
நம் தாயின் கடுஞ்சொற்களிலிருந்தும் தப்பித்துக்கொள்வோம்; சிறிதளவும்
இரக்கமில்லாத இயல்பினையுடைய பொய்யே பேசும்
சேரிப் பெண்களின் பழிச்சொற்களையும் நிறுத்திவிடுவோம்;
தனது நாட்டின் எல்லையை விரிவுபடுத்திய உதியஞ்சேரலாதனைப்
பாடிச் செல்லும் பரிசிலரைப் போல
இப்பொழுது மகிழ்வாயாக, வாழ்க தோழியே! நம் தலைவர்,
அடர்த்தியான கூந்தலையுடையவளே! நம் கருத்தோடு ஒன்றிய கருத்துடையவராய்
நம்மை அவருடன் கூட்டிச்செல்ல விரும்பினார் இப்போது - மலைகள்தோறும்
பெரிய மூங்கில்கழைகள் உரசிக்கொள்வதால் ஏற்பட்ட, காற்றடிப்பதால் மிகுந்து எரியும் நெருப்பு
மீன்பிடிக்கும் பரதவர்களின் வளைந்த படகில் தோன்றும் செறிவான சுடர்கள்
வானளாவிய கடல் அலையின் மீது காணப்படுவது போல்
காட்சிக்கினியதாய்த் தோன்றும் யா மரங்கள் உயர்ந்து நிற்கும் அகன்ற இடத்தில்
பசியால் மெலிந்து வருந்திய யானையின் முதுகில் நடந்து போவது போலப்
பாறைகளில் ஏறியும் இறங்கியும் செல்லும், மூங்கில்கள் கரிந்து சாய்ந்துகிடக்கும் சிறிய வழிகளையுடைய,
காடுகளை உயர்த்திக் கூறுவதற்குக் காரணமான நிமிர்ந்த கொம்புகளையுடைய களிறு
வழியினைக் காவல்கொண்டிருக்கிற கடத்தற்கரிய பாலை வழிகள், மூங்கில் போன்ற தோளினையும்
மணங்கமழும் கூந்தலையும் திரட்சியான தொய்யில் எழுத?ப்ப?ட்ட? முலையினையும்
வரிசையான இத?ழ்க?ளையுடைய? நீல? ம?ல?ர் போன்ற? மையுண்ட? க?ண்க?ளையும் உடைய? பெண்களுக்கு
கடந்து செல்லக் கடுமையானதாகும் என்று சொல்லித் தள்ளிப்போட்டுகொண்டிருந்த உடன்போக்கினை.

#66 மருதம் செல்லூர் கோசிகன் கண்ணனார்
இப்பிறவியில் உலகத்தில் புகழோடும் விளங்கி
மறுபிறப்புக்குக் காரணமான மேனிலையுலகத்தையும் தடையின்றி எய்துவர்,
பகைவரும் விரும்பும் குற்றமற்ற அழகினையுடைய
மக்களைப் பெற்ற திருவுடையோர் என்று
பலரும் கூறுகின்ற பழமொழி முழுவதுமாக
உண்மையாகிப்போவதைக் கண்கூடாகக் காணப்பெற்றேன் தோழியே! 
வரிசையாக மாலைகளைப் போட்டுக்கொண்ட மார்பினையுடைய நம் தலைவன் நேற்று ஒருத்தியை
மணம் செய்துகொள்ள விரும்பி புதிதாகச்
செய்துகொண்ட அலங்காரனாய், இந்தத் தெருவழியே செல்வோன்
சிறந்த தொழில்நுட்பம் கோண்ட (குதிரையின்) மணி ஒலிக்க, தலைவாசலைக்கடந்து சென்று
(தன்னைப்)பார்க்கும் ஆசையுடன் தளர்ந்து தளர்ந்து ஓடிவந்த
பூப்போலும் கண்களையுடைய தன் புதல்வனைக் கண்டு, நம் நெடிய தேரினை
நிறுத்துவாயாக வலவனே! என்று சொல்லிவிட்டுத் தேரை விட்டு இறங்கியவன், சற்றும் தாமதியாமல்
பவளம் போன்ற புதல்வனது சிவந்த வாய் தன் மார்பினில் அழுந்த
அவனைத் தன் மார்போடு அணைத்து, ஐயா! நீ வீட்டுக்குள் போ என்று
கையைவிட்டு இறக்கிவிட முனைபவனுக்கு உடன்படாதவனாய் அழுவதனால் அவனைத் தடுத்த மகனோடு
பெருஞ்செல்வக் குபேரனைப் போன்றவன் என்று கண்டோர் கூறும்படி?, தழுவிய மகனோடு
தானே வந்து இல்லத்திற் புகுந்தான்; நானே இவ்வாறு நடக்கும்படி 
செய்தேன் என்று மற்றவர்கள் நினைப்பார்களோ என்று எண்ணி வெட்கப்பட்டு, இடையூறு செய்து இவன்
காரியத்தைக் கெடுத்துவிட்டான் போலும் இந்தத் துடுக்குப்பயல் என்று போய்
அடிக்கின்ற கோலுடன் நான் அவனருகில் செல்ல, மகனைத் தன்னோடு சேர்த்துக்கொண்டு,
ஒலிக்கும் முகப்பினையுடைய முழவின் இனிய ஓசை, மணம் நடக்கும் அவர் வீட்டிலிருந்து
அழைப்பது போல வந்து ஒலிக்கவும், நம் வீட்டிலிருந்தும் செல்லாதவனாய்
முன்பொருநாள் கழங்கு விளையாடும் தோழியரிடையே வந்து நம்மை அருள்செய்த
பழைய அருட்செயல் நினவுக்கு வந்து தன்னை வருத்த
நடப்பதற்கிருந்த தன் மணவிழாவை நிறுத்திவிட்டான்.

#67 பாலை நோய்பாடியார்
நான் என்ன செய்வேன்? தோழியே! புள்ளிகளையும் வரிகளையுமுடைய
வானம்பாடிப் பறவை பாடவும், மனமிரங்காமல்
துளிபெய்தலை நீத்து மேகம் அகன்று போனதால், தம் இலைகள் காய்ந்து போனதால்
மரங்கள் பொலிவிழந்து நிற்கும், சரளைக்கற்கள் நிறைந்த மேட்டுநிலப்பகுதி உயர்ந்துள்ள அகன்ற இடத்தில்
அரத்தால் கூர்மையாக்கப்பட்ட முனையையுடைய பிறைவாய் அம்பினையும்,
இடுக்கிக் குறிபார்க்கும் பார்வையினையும் உடையவராய்த் தம் ஆனிரையை மீட்கவேண்டி
நெல்லி மரங்களையுடைய நீண்ட வழியிடத்தில் இரவிலேயே விரைந்து சென்று
வெட்சியாருடன் நடந்த நல்ல போரினை வென்று இறந்த மானம் மிக்க கரந்தை வீரர்களின்
பெயரினையும், சிறப்பினையும் பொறித்து, மக்கள் வழங்கும் வழிகள்தோறும்
மயிலிறகை அணிந்த புகழ் விளங்கும் நடுகற்கள்
வேற்படையினை நட்டுக் கிடுகுப்படையும் சார்த்தப்பட்டிருப்பவை பகைவரின் போர்முனையைப் போன்றிருக்கும்
வேற்றுமொழி வழங்கும் நாட்டைக் கொள்ளவதற்காக, மன்னர்களது
கழியால் கட்டப்பட்ட கரிய கேடகத்தைக்கொண்ட காலாட்படையை அணிவகுத்துப் பார்த்தாற் போன்ற,
இறந்தவரின் உடம்பைத் தழை கொண்டு மூடிய கற்குவியல்களையுடைய பாலைப் பரப்பிலே; 
உருவம் இல்லாத, ஊர்ந்து செல்லாத பேய்த்தேர் என்னும் கானல்நீரில்
நிலத்தில் ஊரும் மின்மினிப்பூச்சியைப் போல, பலவாக
ஒளிவிடும் பரல்கற்கள் மினுங்கும் என்று கூறுவர், நமது
பெண்மைநலத்தைத் துறந்து பிரிந்துபோயிருப்பவர் போயிருக்கும் வழி.

#68 குறிஞ்சி ஊட்டியார்
அன்னையே! வாழ்க! நான் கூறுவதைக் கேட்க வேண்டுகிறேன். நம் தோட்டத்திலுள்ள
குளிர்ந்த பள்ளத்தில் நெருங்கி வளர்ந்த கூதளம் செடி குழைந்துபோகுமாறு,அதன் மீது விழுந்து
இனிய இசையையுடைய அருவி ஒலிக்கின்றது, அதனைச் சிறிதேனும்
கேட்டாயா? இதனையும் கேட்பாயாக! நம் தோட்டத்திலுள்ள
அரக்கினைத் தேய்த்துவிட்டாற் போன்ற ஒளிவிடும் தளிரினையுடைய அசோகமரத்தின்
ஓங்கி வளர்ந்த கிளையில் கட்டித்தொங்கவிட்ட ஊஞ்சலைப் பாம்பு என நினைத்து
அந்த மரம் முழுதும் வேரோடு அழிந்துபோகும்படி இடி விழுந்தது அல்லவா,
அதனையும் கேட்டாயா? என்று நான் கேட்டும் அதனை அறியாதவளாய்
அன்னையும் மிகுந்த தூக்கத்தில் ஆழ்ந்திருந்தாள், அதைத்தவிர
உலகத்து உயிர்களெல்லாம் உறங்கிப்போய்விட்டன அந்த நேரத்தில், நம் காதலர்
வந்தால் இது தகுந்த தருணம் என்று
ஒளிவீசிப் பிரகாசிக்கும் பளபளப்பான வளையல்கள் கழன்றுவிழும்படி மெலிந்திருக்கின்ற நம்மை
நினைந்திருக்கும் தமது நெஞ்சம் சிறிதும் குற்றமற்றதாகும்படி
வந்துள்ளார் வாழ்க தோழியே! வானத்திலிருந்து
முழங்கிக்கொண்டு பொழியத்தொடங்கிய கூட்டமான பல மேகங்கள்
இடைவிடாமல் பெய்தலால் உண்டாகிய வெள்ளம் இடங்களெல்லாம் பெருகிவர
யானைக் கன்றின் காலைப் பிடித்திழுக்கும் கடுமையான சுழலினைக் கொண்ட வெள்ளத்தில்
புல்லிய தலையையுடைய இளம் பெண்யானைகளின் ஆரவார ஒலிகள் பலவும் சேர
வெள்ளிய தந்தங்களையுடைய களிறு பிளிறிக்கொண்டு கன்றினைப் பற்றத் துதிக்கையால் துழாவும்,
அங்காந்த வாயையுடைய பாம்புகள் புதர்களில் படுத்திருக்கும்,
பகலிலும் வருவதற்கு மனிதர் அஞ்சுகின்ற நடுங்கவைக்கும் கடுமையான வழியைக் கடந்து -

#69 பாலை உமட்டூர் கிழார் மகனார் பரங்கொற்றனார்
ஆராய்ந்து தெரிந்தெடுத்ததைப் போன்ற அழகினைத் தொலைத்த மேனியினையும், பெரிய செந்தாமரையின்
சிறந்த அழகினை இழந்த கண்ணினையும், இத்தகையது என்று கூற உவமை வகை இல்லாத
தனித்தன்மையுடைய தமது சுணங்குகள் நிறம் மழுங்கிப்போனதையும் நோக்கி
துன்பத்தில் மூழ்கிவிடாதே நீ அமைதியாயிருப்பாய்; தனக்கு உரிமையான
கொடையால்வரும் இன்பத்தையே விரும்பி, அதிலே  மனம் பொருந்தி
பொருளீட்டுவதில் முயல்வாராகி, சிறிய இலையினையும்
பருத்த அடியினையும் உடைய நெல்லியின் இனிய புளிப்பினையுடைய திரண்ட காய்களை,
காட்டிலுள்ள இளம் மரைமானின் பெரிய கூட்டம் கவர்ந்து தின்னுதற்குரிய
வெம்மை மிக்க வழி என்று பாராமல், அந்தத் துன்பத்தையே இன்பமாகக் கொண்டு,
வானளாவிய உயர்ந்த குடையினையும், வேகமாகச் செல்லும் தேரினையும் கொண்ட மோரியர்கள்
தமது பொன்னால் செய்த தேர்ச்சக்கரங்கள் தடையின்றிச் செல்ல வெட்டி வழியுண்டாக்கிய
பாறைகளைக் கடந்து சென்றாராயினும், சிறிதளவும் 
தமது இருப்பினை நீட்டிக்கமாட்டார், வாழ்க தோழியே! ஆடுகின்ற இயல்பினையுடைய
இளம் மயில் உதிர்த்த தோகையை இரண்டாகக் கிழித்துத் தம்முடைய
ஓசை மிக்க வலிய வில்லில் சுற்றி, பலவான, சிறந்த
அம்புகளைக் கையில் கொண்டவராய், பகைவரின் அரண்கள் பலவற்றை அழித்து
அழகிய அணிகலன்களைக் கொணர்கின்ற வலிமைமிக்க மறவர்களுடைய தலைவனாகிய
சுடரும் மணிகள் பதித்த பெரும் பூண்களை அணிந்த ஆய் என்பவனின் காட்டின்
அன்றலர்ந்த மலர் என மணக்கும் உன்னுடைய
பரந்த முலையினையுடைய மார்பினில் துயிலும் இனிய துயிலை மறந்து - 

#70 நெய்தல் மதுரை தமிழ் கூத்தனார் கடுவன் மள்ளனார்
வளைவான படகுகளைக் கொண்ட மீனவர்கள் தம் மீன்வேட்டை நல்லபடியாக வாய்க்கப்பெற்று,
பெரிதும் புலால் நாற்றம் வீசும் சிறிய குடிகளையுடைய கடற்கரையூரில்
குறுகலான கண்களையுடைய அழகிய வலையின் பயன் கருதி அதற்கு நறும்புகைகாட்டிக் கொண்டாடி
தாம் கொணர்ந்த கொழுவிய கண்ணையுடைய அயிலை மீன்களை யாவர்க்கும் பகுத்துக் கொடுக்கும் நம் நெய்தல் தலைவன்
நம்முடன் கொண்ட காதல் நட்பு, இதற்கு முன்னர்
தமக்குள் பேசிக்கொண்ட பெண்கள் ஊர்முழுதும் பரப்ப
ஊரில் பலரும் அறிவதற்கிடமானது. ஆனால் அது கழிந்தது. இப்போது
நம் தலைவருடன் மணம் கூடிய பின்னர், புதிதான
பொன்னிறப் புலிநகக்கொன்றையின் பூக்களோடு, புன்னை மலர்கள் உதிர்ந்து ஓவியமாய்க் கிடக்கும்
கடற்கரைச் சோலையையுடைய அழகிய பெரிய துறைகளின் வயல்களில் கரிய நீரில்
பச்சை இலைகளையுடைய தழைத்த திரண்ட தண்டினையுடைய நெய்தல் பூக்களை
விழாவிற்குத் தம்மை அலங்கரிக்கும் பெண்கள் தங்கள் தழையுடைக்கு அழகுசெய்யச் சேர்க்கும்
வெற்றி வேலினையுடைய பாண்டியரின் மிக்க பழமையுடைய கோடிக்கரையின் அருகில்
முழங்குகின்ற பெரிய கடலின் அருகில் பறவைகள் ஆரவாரிக்கும் துறைமுற்றத்தில்
வெல்லும் போரில் வல்ல இராமன் அரிய வேதங்களை ஓதுவதற்காக அப் பறவைகளின் ஆரவாரத்தை அடக்கிய
பல விழுதுகளைக் கொண்ட ஆலமரம் போல
பேச்சு மூச்சற்றுக்கிடக்கிறது பெரிதாய்ப் பேசிய இந்த ஊர்.

#71 பாலை அந்தி இளங்கீரனார்
செல்வம் நிறைந்தோரைத் தேடிக்காணும் உள்ளத்துடன், தம்மிடம் நட்புக்கொண்டோர் செல்வத்தில் குறைந்துபோனால்
அவர்களால் பயன்பெறுவது இல்லையாதலால், அவர் மேலிருந்த பற்றினை விட்டு அவரை ஒதுக்கிவைக்கும்
பண்பற்ற மக்களைப் போல, வண்டுக்கூட்டம்
சுனையிலிருக்கும் பூக்களை விடுத்து மரக்கிளைகளில் இருக்கும் பூக்களை நாடிச் செல்ல,
களங்கமில்லாத மான்கூட்டம் மருண்டுநோக்க, (மெதுவாக)
உலையில் காய்ந்து பின் (மெதுவாக) ஆறிக்கொண்டிருக்கும் பொன்னைப்போல செக்கர் வானம் பூத்திருக்க,
வியக்கத் தக்க நல்லறிவினையும் போக்கிச் செயலற்றுப்போகச்செய்யும் துன்பத்தோடே
அகன்ற பெரிய வானம் அழகிய பஞ்சுப்பொதிகளான மேகங்களைப் புதிதாய்க் கொண்டுவர
பகலுக்கு வழிவிட்டுநிற்கும் துயரந்தரும் மாலைப்பொழுது -
காதலரைப் பிரிந்த தனிமையால் நொந்துபோயிருக்கவும்,
மிகுந்த துன்பத்தில் இருப்பவர் ஒருவரின் காண்பதற்கரிய மார்பினைக் குறிவைத்து
கூர்மையான வேலை எறிவாரைப்போல மேலும் துயரத்தைச் செய்கிறது.
குற்றம் தீரச் செய்யப்பட்ட உருவம் காட்டும் கண்ணாடியின்
உட்புறத்தே ஊதிய ஆவி, முதலில் பரந்து பின்னர் மெதுவாகச் சுருங்கி மறைவது போல்
என் மனவலிமை சிறுகச் சிறுகக் குறைந்து மாய்ந்துவிடப்போகிறது. பெரிதும் அழிவுற்று,
சுழன்றடிக்கும் மிகக் கடுமையான சூறாவளி மோதித்தாக்க,
அலைமோதும் மரக்கிளையில் அமர்ந்திருக்கும் (எந்நேரமும் பறந்துசெல்லலாம் என்றிருக்கும்)பறவையைப் போல
என் உயிர் என்னைவிட்டு நீங்கும் காலம் இதுதான் போலும், வாழ்க தோழியே

#72 குறிஞ்சி எருமை வெளியனார் மகனார் கடலனார்
கவிழ்ந்திருக்கும் இருளைக் கிழிப்பது போல் மின்னல்வெட்டி, மேகமானது
துளிகளாய் ஆரம்பித்து மிகப் பெரிய மழைபெய்யும் நள்ளிரவில்
மின்மினிப்பூச்சிகள் மொய்த்துக்கொண்டிருக்கும் முனைமுறிந்த வாயையுடைய புற்றினை,
காய்ச்சிய இரும்பை அடிக்கும்போது சிதறும் தீப்பொறிகளைப் போல, அப் பூச்சிகள் ஒளிவிடத் தோண்டி
புற்றாஞ்சோற்றைக் கிளறி எடுக்கும் பெரிய கையையுடைய ஆண்கரடி
இரும்பு வேலை செய்யும் கொல்லனைப் போலத் தோன்றும் அந்த இடத்தில்
தலைவன் வரும் வழிகள் செல்வதற்கு அரிய தன்மையுடையன 
எண்ணிப்பார்த்தாலே நடுங்கவைக்கும் அச்சந்தரும் முதலைகளையுடையன,
ஓடக்கோலையும் மூழ்கவைக்கும் பெருவெள்ளம் பாறைகளை மோதிக்கொண்டு ஒலிக்க,
அச்சம்கொள்ளாமல், தனித்திருக்கிறோம் என்று எண்ணாமல், மேகமூட்டத்தினைச் சுமந்துகொண்டு
அசைகின்ற மூங்கில்கள் 'நரநர'வென்று ஒலிக்கும் தெய்வங்கள் வாழும் உச்சி மலைச்சரிவில்
கருவுற்றிருக்கும் தன் பெண்புலியின் வேட்கை மிக்க பசியினைப் போக்க
கரிய ஆண்பன்றியினைக் கொன்ற மிக்க சினங்கொண்ட ஆண்புலி
அச்சம் தரும் நல்லபாம்பு உமிழ்ந்து வைத்து
தான் மேய்வதற்குப் பயன்படுத்தும் மணியின் வெளிச்சத்தில் குருதி தோய்ந்து காய இழுத்துச்செல்லும்
கத்தி முனையில் நடப்பது போன்ற நடமாட்டமில்லாத பலவாறு பிரிந்துசெல்லும் வழிகளில்
கடக்க நினைப்பவர் அஞ்சும் கற்கள் அடர்ந்த சிறிய பாதையில்
நமக்கு அருள்புரியவேண்டும் என்ற எண்ணத்துடன், வேலையே துணையாகக் கொண்டு
வந்திருக்கும் நம் தலைவனும் கொடியவன் அல்லன், அவனை இங்கு வரச்செய்த
நீயும் தவறுடையவள் அல்லள், உனக்கு
இந்த நீங்காத தீர்த்தற்கரிய துன்பத்தினைச் செய்த
நானே தவறுடையவள் ஆவேன், தோழியே!

#73 பாலை எருமை வெளியனார்
பின்னலிட்டு முடிந்துவிட்ட, வேறு ஒப்பனை செய்யப்படாத கொண்டையினில்,
நெய் தடவப்பெற்றுக் கீழே விழும் குழலினையும் சேர்த்துக்கட்டி
காட்டுப்பூனையின் இருளில் மின்னும் கண்களைப் போன்று ஒளிவிடும்
முத்துக்களாலான ஒற்றை வடம் முலைமேல் கிடந்து திகழ,
வணங்குதற்குரிய கற்புடன், காண்போர் இவள்தான் என்று அறியாமை கொள்ளும்படி பெரிதும் மெலிந்து
நீ எய்துகின்ற நோயினால் மட்டும் வருந்தியிருப்பவளும் இல்லை; அச்சம் வர
என்ன ஆகுமோ இந்த இரங்கத்தக்கவளுக்கு என்று
என்னுடைய வருத்தத்திற்கும் மனமிரங்கும் உன்னோடு நானும்
ஒருவர் செய்வது நல்லதல்ல என்று மற்றவர் சொல்லாத வேற்றுமை அற்ற அறிவினையுடைய
நம் இருவருடைய வருத்தமும் நீங்க, நம் தலைவர் வருவதனைக்
காண்பதற்கு வருவாயாக, அன்புடைய தோழியே!
கொடிகள் பின்னிக்கிடக்கும் சிறு காட்டினில் இருக்கும் இருண்ட நிறத்தையுடைய யானை
சோர்ந்திருக்கும் தகுந்த காலத்தை எதிர்நோக்கியிருக்கும் சிங்கத்தின் வலிமையினையுடைய
தினைவகைகளில் ஒன்றாகிய சிறுதினையைக் காக்கும் பரண்மேலுள்ளவனின் கையிலிருக்கும்
கைப்பிடியைக் கொண்ட தீயை உமிழும் கொள்ளிக்கட்டையை
வீசும்போது எழுகின்ற தீப்பொறியைப் போல மின்னி, நம் தலைவர்
சென்றிருக்கும் நாட்டினில் ஊன்றிப் பெய்கிறது மழை.

#74 முல்லை மதுரை கவுணியன் பூதத்தனார்
தான் மேற்கொண்ட போர்வினையை நிறைவு செய்த வெற்றியுடன் மகிழ்ச்சி மிகுந்து
போரில் வல்ல வீரர் தனது முயற்சியின் வலிமையினை வாழ்த்த
குளிர்ந்த மழை பொழிந்து நிலம் பச்சைப்பசேலென்ற பொழுதினில்
இரத்தச் சிவப்பு நிறமுடைய மின்னுகின்ற சிவந்த தாம்பலப்பூச்சிகள்
பெரிய வழிகளின் ஓரங்களில் பல சிறிய வரிகளாக ஊர்ந்துசெல்ல
பச்சைக் கொடிகளைக் கொண்ட முல்லையின் மென்மைப் பதமுள்ள புதிய பூக்கள்
வெண்மையான களர் ஆகிய அறல்பட்ட மணலில் பரந்து கிடக்க,
வண்டுகள் அரும்பினை ஊதி மலர்த்தும் குளிர்ச்சியான மணம்கமழும் முல்லைநிலத்தில்
கரிய கொம்பினையுடைய ஆண்மான்களின் அழகிய இளம் பெண்மான்களின்
மருட்சியான பார்வையினைப் பார்க்கும்போதெல்லாம் உன்னை நினைத்து
திண்ணிய தேரினை ஓட்டும் பாகனே! இன்னும் வேகமாகப்போ என்று அவனை முடுக்கிவிட்டு
இன்றைக்கே வந்துவிடுவார் நம் தலைவர், பொறுத்திருப்போம் நம் துன்பத்தை என்று
வற்புறுத்தும் இனிய மொழிகளால் நல்லனவற்றைப் பலமுறை திரும்பத்திரும்பச் சொல்லும்
உன் சொல்லைத் துணிந்து கேட்டுக்கொள்வேன் - நாள்தோறும்
வருத்தத்தைத் தரும் மாலைப்பொழுதுடன் கூடி, வளைந்த கோலினையுடைய
தம் தொழிலேயன்றிப் பிறதொழிலைக் கல்லாத கோவலர்கள் ஊதுகின்ற
வலிய வாயினையுடைய சிறிய குழல் என்னை வருத்தாமலிருந்தால்

#75 பாலை மதுரைப்போத்தனார்
அருள் செய்வது என்பதைப் பொருட்டாக எண்ணாமல், பொருளீட்டும் முயற்சியையே ஆண்பிள்ளைகள்
பொருட்டாக எண்ணித் துணிந்த உண்மையற்ற அறிவினையுடைய
வலிமை மிக்க உள்ளத்தால், சோம்பியிராமல்,
தீயின?து வெப்ப?ம் த?வ?ழும் பெரிய? பாலை நில?த்தில், இலை முதலியன
கரிந்து உதிர்ந்த மரத்தையுடைய காட்டினில் வாழும் வாழ்க்கையையுடைய
கொல்லுகின்ற புலியை ஒத்த வலிமையையுடைய வீரக் கழல் கட்டிய அடியினையுடைய மறவர்கள்
பழையதாய் வருகின்ற சிறிய ஊரின்கண் அமைந்த மன்றத்து நிழலிலே துயிலும்
பெருமையையுடைய நெடிய மலையிலுள்ள நீர் வற்றிக் காய்ந்துபோன
பரல்கற்கள் நிறைந்த வழியில் செல்வாராயின், நல்ல நெற்றியினையும்,
குற்றமற்ற விரதக்கோட்பாடுகளையும், ஒருசில சொற்களையே பேசும் பவளம் போன்ற வாயினயும்
ஒளிரும் வளை அணிந்த முன்கையினையும், ஆய்ந்தெடுத்த அணிகலன்களையுமுடைய பெண்களின்
முத்தாரம் தொங்குகின்ற பரந்த முலையையுடைய மார்பினில்
தணியாத விருப்பத்துடன் (அணைப்பதால்) தமது மார்பினில் கொண்ட மாலை குழைந்துபோகாமல்,
மறைந்துபோன பழைய பேரழகினை நினைத்து, என்றும்
வருத்தப்படுவார்தான் இருப்பாரேயன்றி, யாரேனும்
அவ்வழகினை மீண்டும் கொண்டுவந்து கொடுப்போர் இருக்கிறார்களோ இவ்வுலகத்தில் என்று
மழைக்காலத்து இண்டைச்செடியின் கரிய தளிரைப் போன்ற
அழகிய மாமை நிறத்தையுடைய மேனியினையும், நுண்மையான இடையினையும்
ப?ல? காசுக?ளை வரிசையாக?க் கோத்த மேகலையை உடைய? பக்கம் உய?ர்ந்த? அல்குலினையும் 
மென்மையான இயல்பினையுமுடைய சிறுபெண்ணே! நீ என்னிடம் பிணக்கம் கொண்டு பலவும் சொல்லி
குறையாத துன்பமுடையவளாக இருக்கும்போது, நானோ
பிரிந்துசெல்ல எண்ணவும் செய்வேனோ
அரிதாகப் பெற்ற சிறப்பினையுடைய உன்னை விட்டு -

#76 மருதம் பரணர்
மார்ச்சனை என்ற சாந்து செறிவாகப் பூசப்பெற்ற மத்தளத்துடன், காண்போர் மிகுந்த மகிழ்ச்சியடைய நாங்கள் கூத்தினை நடத்த
அதனைக் காண, குளிர்ந்த நீர்த்துறையையுடைய தலைவன் எம் சேரிக்கு வந்ததற்கு
இனிமையும் கடுப்பும் கொண்ட கள்ளினையுடைய அஃதை என்பானது, யானைகளுடன்
நல்ல அணிகலன்களையும் வாரி வழங்கும் நாளோலக்கம் என்னும் காலை அத்தாணி இருக்கையின்போது
அவனுடைய மண்டபத்தில் நுழையும் பொருநர் முழங்குகின்ற பறையைப் போல, விடாமல்
இகழ்ந்து பேசுகிறார்கள் அவனுடைய வீட்டுப்பெண்கள் என்கிறார்கள்.
கச்சணிந்தவனும், கழல் கட்டியவனும், தேனொழுகும் மாலையணிந்த மார்பையுடையவனும்,
பல்வேறு வகைத் தொழில்திறம் அமைந்து பொலிவுற்ற மாலையினையுடையவனும்,
சுருட்டை முடியினையுடையவனுமான அழகிய கூத்தனாகிய ஆட்டனத்தியைப் பார்த்தீர்களா என்று தேடிக்கொண்டு
ஆதிமந்தி என்ற பெண் பித்துப்பிடித்து வருந்தி அலைய
கரையினை மோதி உராய்ந்துகொண்டு நேர்கிழக்காகப் பாயும்
அழகிய குளிர்ந்த காவிரி (ஆட்டனத்தியை இழுத்துக்கொண்டு சென்றது) போல
(நானும்)அந்தத் தலைவனை வளைத்துக் கைக்குள்போட்டுக்கொள்ளலாம் என்று நினைக்கிறேன்.

#77 பாலை மருதன் இள நாகனார்
நம் தலைவியின் நல்ல நெற்றி பசந்துபோகவும், முயற்சியால் பொருள் ஈட்டுவதற்கு
நெருங்க முடியாத காட்டுவழியில் செல்லுதல் நல்லதென்று எண்ணி
என் பின்னே நின்று நீ நினைத்தால், மிகுந்த கொடிய செயலைச்
செய்ய நினைக்கின்றாய், வாழ்க நெஞ்சமே! வெப்பம் மிகுந்திருக்கும்படி
இடிகளை உமிழும் மேகம் மழைபெய்யாமல் அகன்று செல்வதால், எங்கும்
குடிமக்கள் தத்தம் ஊர்களைவிட்டு வெளியேறுகின்ற, பலரும் சுட்டிக்காட்டிக்கூறும் பழைய பாழிடத்தில்
கயிற்றினால் சுற்றிக் கட்டப்பட்ட குடத்திலுள்ள ஒலையை வெளியே எடுப்பதற்கு
குடத்தின் இலச்சினையை நீக்கும் ஆவணப்பெரியோர் (அந்த ஓலைகளை வெளியே எடுப்பது) போன்று
தம் உயிர் தம்மைவிட்டுப் போக, நல்ல போரினை வென்று மடிந்த
அஞ்சாநெஞ்சரின் குடலை வெளியே எடுக்க, மிகவும் வலிந்து,
சிவந்த செவியினைக் கொண்ட பருந்து காண்போர் அஞ்சும்படியாக இழுக்கும்
பரல்கற்கள் நிறைந்த பலவாறாகப் பிரிந்துசெல்லும் வழியில் போனால், அங்குள்ள சிற்றூர்களின்
பொலிவற்ற அடியினையுடைய இத்தி மரத்தின் புள்ளி புள்ளியான நிழலில் 
பெருங்காற்று வீசும் இருள் மிக்க மாலை வேளையில் (ஓய்வெடுக்கக் கண்ணை மூடும்போது)
சேரனின் படைத்தலைவனான, வளைந்த வில்லைப் பெரிய கையில் கொண்ட
குறையாத கள்ளினது மிக்க மகிழ்ச்சியையுடைய பிட்டன் என்பவன்
தன்னோடு ஒத்துவராத மன்னர்களுடனான அரிய போரில் ஓங்கித்தூக்கிய
திருத்தமான இலைத்தொழிலையுடைய வேல் (அப் பகை மன்னர்க்குத் தரும் துன்பத்தைப்) போல
தாங்க முடியாத துயரத்தைத் தரும் நம் தலைவியின் நீர் ஒழுகும் கண்கள் (நம் மனக்கண் முன் தோன்றி)

#78 குறிஞ்சி மதுரை நக்கீரனார்
அகன்ற இடத்தையுடைய காட்டினிலிருக்கும் ஆளி என்ற விலங்கினை எண்ணி அஞ்சி,
தன் இனத்தைத் தன்னிடத்தே சேர்த்துக்கொள்ளும், வெளிப்படையாகத் தெரியும் பேராற்றலையும்,
வரியினையுடைய வண்டுகள் ஒலிக்கும், வாயினுள் செல்லும் மதத்தினையும் உடைய
புள்ளிகள் நிறைந்த நெற்றியால் பொலிவுபெற்ற வலிமை பொருந்திய ஆண்யானைகளின் தலைவன்
தன் கரிய சொரசொரப்பான பெரிய துதிக்கையால் இன்பமுறத் தழுவ
முதன்முதலாகக் கருவுற்றிருக்கும் இளம் பெண்யானை (ஆளியை எண்ணி) நடுங்குகின்ற மலைச்சாரலில்,
இனிமையாகப் பிழிந்தெடுத்த கள்ளினையுடைய குறவர்களின் முற்றத்தில்
மூங்கிலின் அழகிய மலர்கள் உதிரவும், காந்தளின்
நீண்ட இதழ்களான நெடிய துடுப்புகள் முறியவும், குளிர்ச்சியாக
வாடைக்காற்று வீசும் பனிவிழத்தொடங்கும் முன்பனிக்காலத்தில்
நாம் இல்லாத தனிமையில் தம் ஊரில் தனியாளாக இருக்கும் அவர்கள்
எப்படி இருக்கிறார்களோ பாவம் அவர்கள் என்று
எம்மைவிட்டுப் பிரிந்திருந்த சில நாட்களில் சிறிதளவேனும்
நினைந்திருந்தீரோ, ஓங்கிய மலை பொருந்திய நாட்டையுடையவனே -
உலகம் உள்ளளவும் வாழும் பலரும் புகழும் நல்ல புகழினையும்,
வாய்மையே கூறுகின்ற மொழியையுமுடைய கபிலன் ஆலோசனை சொல்ல, நெடும் தொலைவிலிருந்து
வளம் பொருந்திய வயல்களில் விளைந்த நெற்கதிர்களைக் (கிளிகள்மூலம்) கொண்டுவந்து, அவற்றைப்
பெரிய தண்டுகளையுடைய ஆம்பல் மலரோடு சேர்த்து ஆக்கி உண்டு,
பல ஆண்டுகள் கழியவும் தான் விரும்பிய இடத்டைவிட்டு இடம்பெயராமல்
பகைவரின் வாட்போரினைக் கலக்கி, முயற்சியால் வென்று
நிமிர்ந்த கொம்புகளைக் கொண்ட யானைகளையுடைய மூவேந்தரையும் விரட்டியடித்த
மிகுந்த விரைவுடன் செல்லும் குதிரைப்படையை உடைய வள்ளல்தன்மை மிகுந்த பாரியின்
இனிய பெரிய பசுமையான சுனைநீரில் பூத்த
தேன் மணக்கும் புதிய மலராக மணக்கும் இவளின் நெற்றியை - (சிறிதளவேனும் நினைந்திருந்தீரோ)

#79 பாலை குடவாயில் கீரத்தனார்
தோளில் கட்டுச்சோற்றைக் கட்டிக்கொண்ட வலிய கைகளையுடைய ஆடவர்கள்,
மிக்க தீப்பொறி உண்டாக (பாறைகளை உடைத்து) கிணறு வெட்டும் தொழிலில் ஈடுபட்டு
கல்லி எடுத்து உண்டாக்கிய மிக்க உவரையுடைய கிணற்றில்
மண்ணுள்ள பக்கத்தே ஊறிய நீரைப் பருகும் பொருட்டு,
கட்டாந்தரை துகள்படுமாறு நடந்து, கொங்கரின்
ஒலிக்கும் மணிகளைக் கட்டிய பசுத்திரளுள் நீருக்காகத் தலைநிமிர்ந்து செல்லும்
சிவந்த பசு கிளப்பிய செம்மண்ணின் சிவந்த புழுதி
அகன்ற பெரிய வானத்தில் மிகுந்து தோன்றும்
அகன்ற இடத்தையுடைய காட்டில் நம் தலைவி நம்மோடு துணையாக
முடிந்த அளவில் செல்வோம் என்று அங்கேயே நினைக்காமல், இப்போது பயணத்தைக் கைவிடநேரும்படி
வருந்துகிறாய், வாழ்க, என் நெஞ்சமே! பெரிய சிறகுகளையும்,
வளைவான அலகினையும் உடைய பருந்தின் வெண்மையான கண்களையுடைய பேடை,
அசைந்து நடக்கும்போதெல்லாம் ஒலிக்கும், அழகிய வாயையும் கடும் ஓசையினையுடைய உடுக்கையையும்
வளைந்த வில்லையும் உடைய பாலைநில மறவர்கள் வழிச்செல்வோரின் கைப்பொருளைக் கொள்ளையடிக்கும் வழியில் நடந்து செல்ல
(பருந்தின் பேடை) நெடிதாக ஒலியெழுப்பித் தன் துணையை அழைக்கும் நீண்டுகொண்டே செல்லும் இடமான
பரல்கற்கள் பரந்திருக்கும் காட்டில் நடந்து
நிலையில்லாத பொருளைச் சம்பாதிக்க அவளை விட்டுப் பிரிந்துவந்த நீ.

#80 நெய்தல் மருங்கூர் கிழார் பெரும் கண்ணனார்
வளைந்த காலினையுடைய முதலையோடு சுறாமீன்களும் நடமாடும்
கரிய உப்பங்கழியில் குறுகிய பாதையில் நடந்து, இரவிலே
வருகின்றாய், குளிர்ந்த கடற்கரையையுடைய தலைவனே!
நாங்கள் என்ன உனக்குக் காண்பதற்கு அரிதாகவாபோய்விட்டோம், எம் தந்தை
சேர்ந்துவரும் அலைகளையுடைய கடற்பரப்புக்குள் சென்று தேடித் தந்த
நிறைய மீன்களின் வெயிலில் காயும் வற்றல்களைத் தின்ன வரும் பறவைகளை விரட்டிக்கொண்டிருப்போம்
நீர்முள்ளிச்செடிகள் தழைத்த கடலோரக் கரையில் உள்ள
ஒளிவிடும் பலவான மலர்களையுடைய பிளவுபட்ட இலைகளையுடைய அடும்பின்
சிவந்த நிறமுள்ள மெல்லிய கொடிகளை உன்னுடைய தேர்ச்சக்கரங்கள் ஏறித் துண்டிக்க
பல மணிகளைப் பூண்ட குதிரைகள் பூட்டிய நெடிய தேரினைச் செலுத்தி
மின்னுகின்ற இலைகளால் பொலிவுற்று விளங்கும் பூங்கொத்துக்கள் கட்டவிழ்ந்து பொன்னிறமுள்ள
குளிர்ந்த? மணமுள்ள பூந்துகள்க?ளை உதிர்க்கின்ற?
புன்னை மரங்கள் நிறைந்த அழ?கிய? க?ட?ற்க?ரைச் சோலையிலே ப?க?ற்பொழுதிலேயே வ?ந்த?ருள்வாயாக?!

#81 பாலை ஆலம்பேரி சாத்தனார்
விடியற்காலத்தில் இரையைத் தேடி உலாவுவதை மேற்கொண்ட, தன் இரையைக் கொள்ளுதலில் வல்ல கரடி
உயர்ந்த கிளைகளையுடைய இலுப்பை மரத்தின் இனிய பழங்களைத் தின்று சலித்துப்போனால்
பொலிவற்ற துளைகளைக் கொண்ட மண்புற்றின், கூட்டமான கறையான்கள்
ஒன்றுகூடி முயன்று செய்த நனைந்த வாயையுடைய நெடிய உச்சியினை
இரும்புலையில் ஊதும் துருத்தியைப் போல் பெரிதாய் வளைக்குள் மூச்சுவிட்டுப் புற்றாஞ்சோற்றை உண்ணும் -
நிலம் வெடிக்கும்படியாக வறண்டுபோன பாலை நிலமான - அந்த இடத்தில், கண்கள் கூசும்படியாக
ஞாயிறு காய்வதால், கவிழ்ந்து கிடக்கும் பரட்டைத் தலையையுடைய வலிமையான கிளைகளைக் கொண்ட
பாதை ஓரத்து வெண்கடம்பு மரத்தில் ஏறியிருந்து, ஒற்றையாக, 
பாய்ந்து இரையைப் பற்றும் பருந்து வருந்தியிருக்கும் வெப்பம் மிக்க நீண்ட இடங்களான
கடும்சண்டைகள் நடக்கும் கடந்துசெல்லக் கடினமான வழியினைத் தாண்டி - சிறந்த
தலைமைப் பண்புள்ள  உமது உள்ளம் தூண்டுவதால் - வெகுண்டெழுந்த பகைவரின்
ஒளிர்கின்ற வேல்படையுள்ள போர்க்களத்தை, யானைப்படைகளும் அழியுமாறு வெல்லும்,
மிகுந்த வள்ளல்தன்மை நிறைந்த கடலன் என்பவனின் விளங்கில் என்னும் ஊரினைப் போன்ற, எமது
கருமையான அழகிய மையுண்ட கண்கள் கலங்கி அழ
ஐயனே - செல்வீர்களா, எம்மைப் பிரிந்து சென்று பொருள்தேடுவதற்காக.

#82 குறிஞ்சி கபிலர்
அசைந்தாடும் மூங்கிலில் வண்டுகள் துளைத்த மின்னிடும் துளைகளின் பக்கத்தே
கோடை எனும் அழகிய மேற்காற்றினால் எழும் ஒலி குழலின் இசையாகவும்,
ஓசை இனிய அருவியின் குளிர்ந்த நீரின் இனிய இசை
மொத்தமாகச் சேர்ந்த முழவுகளின் செறிவான இசையாகவும்,
கூட்டமான மான்கள் அடித்தொண்டையில் எழுப்பும் கடுங் குரல் பெருவங்கியம் என்னும் கொம்பிசையாகவும்
இவற்றுடன், பூக்களைக் கொண்ட மலைச் சாரலின் வண்டுகள் எழுப்பும் ஓசை யாழிசையாகவும்,
இவ்வாறாக, இனிய பல்விதமாக ஒலிக்கும் இசையினைக் கேட்டு ஆரவாரம் செய்து
குரங்குகளாகிய நல்ல அவையோர் வியப்புடன் காண,
மூங்கில்கள் வளர்ந்த மலைச்சரிவினை ஒட்டிய நிலப்பகுதியில் உலாவி ஆடும் மயில்கள்
விழாக்களத்தில் புகுந்தாடும் விறலியைப் போலத் தோன்றும் நாட்டையுடையவன்
அழகிய வலிமையான வில்லினை ஒரு கையில் கொண்டு, ஆய்ந்த அம்பினை அடுத்த கையில் கொண்டு
தன்னால் அம்பு எய்யப்பெற்ற யானை சென்ற வழியினை விசாரித்துக்கொண்டு
முதிர்ந்த கதிரினையுடைய தினைப்புனத்தின் நுழைவிடத்தின் ஒரு பக்கத்தில்
மலர் மாலை அணிந்த மார்பினையுடையவனாய் நின்றுகொண்டிருந்தவனைக் கண்டவர்கள்
பலரே, வாழ்க தோழியே! அவர்களுள்
நிறைந்த இருள் செறிந்த இரவினில் படுக்கையில் கிடந்து
நான் ஒருத்திமட்டுமே இவ்வாறு இருப்பதற்குக்காரணம் என்ன - 
நீர் ஒழுகும் கண்ணோடு, மெலிந்த தோளினையுடையவளாய் -

#83 பாலை கல்லாடனார்
வலப்பக்கமாக சுழித்திருக்கும், வெண்கடம்பின், பாலைவெளியெல்லாம் மணக்கும் புதிய பூக்களைச்
சுருட்டை நிறைந்திருக்கும் தலையாட்டம் போன்று அசையும்படி தம் தலை பொலிவுறச் சூடி,
உரல் போன்ற பாதங்களையுடைய இளம் பெண்யானை காட்டினில் அலறிக்கொண்டிருக்க,
அதன் ஆண்கன்றினைப் பிரித்துக் கொணர்ந்த மகிழ்ச்சியையுடையவராய், செருக்கு மிகுந்து
கரிய அடிமரத்தையுடைய வெண்கடம்பின் திரண்ட கிளையினைப் பிளந்து
பெரிதாக உரித்த வெண்மையான நாரால் காலில் வடு உண்டாக இறுக்கிக்கட்டி,
உயரமான கொடிகள் அசையும் கடைத்தெருக்களைக் கொண்ட பழமையான ஊரில்
கள்ளினை விற்கும் நல்ல இல்லத்தின் வாசற்கதவண்டைக் கட்டிப்போடும்,
தம் வேட்டைத் தொழிலன்றிப் பிறவற்றைக் கல்லாத இளைஞர்கட்குத் தலைவனான புல்லி என்பவனின்
விரிந்த இடத்தையுடைய நல்ல நாட்டிலுள்ள வேங்கடமலையினைத் தாண்டிச்சென்றாலும்
வெகுதூரம் சென்றுவிட்டார் என்றிராமல், அன்பினை மிகவும் செலுத்தி
நம்மை அடைய வந்தன - நெய்தலின்
முறுக்கவிழ்ந்த ஒளியுடைய மலரைப் போன்ற
உயர்ந்த அழகமைந்த குளிர்ந்த கண்களையுடைய நம் காதலியின் குணங்கள் -

#84 முல்லை மதுரை எழுத்தாளன்
மலைக்கு மேலே குலைந்து தோன்றிய அச்சந்தரும் வானவில்லினையுடைய
முரசம் போன்று முழங்குகின்ற மேகம், கடல்நீரை முகந்துகொண்டு
இறங்கிப் பெய்யும் மிக்க மழையுடன் வலப்பக்கமாக எழுந்து உலகத்தை வளைத்துக்கொண்டு
திசையெல்லாம் மறைந்துபோகப் பொழிதலால், கண்ணுக்கினியதாக
பெரிய நிலமெல்லாம் அழகுபெற்ற இன்பமான வேளையில்,
தீக்கங்கு போன்ற சிறிய கண்ணினைக் கொண்ட பன்றி
குறுமணலில் முளைத்திருக்கும் சிறிய புதரில் முதுகு மறையத் தூங்க,
நறுமணம் மிக்க பூக்களைக்கொண்ட முல்லைக்கொடியின் புதிய மலர்கள் உதிரும்
முல்லைநிலத்தை ஒட்டியிருக்கும் அரிய முகப்பினையுடைய வழியிலுள்ள
சிற்றூரில் இருக்கிறாள் ஒளிவிடும் நெற்றியைக் கொண்ட நம் தலைவி, நானோ
தீப்பிழம்பு போன்ற தாமரை முதலிய பல மலர்களைத் தலைகீழாக வைத்து
கதிர் அறுப்போர் இறுக்கக்கட்டிய, ஆடுகின்ற முகப்பைக் கொண்ட பெரிய நெற்கதிர்க்கட்டுகளை
கள்ளைக் குடித்த வேலையாட்கள் களங்கள்தோறும் எடுத்துச்செல்லும்
மருதநிலம் சூழ்ந்த கொடிகள் அசைந்தாடும் அரிய கோட்டைமதிலைப்
பகை மன்னர் அரிய திறையாகக் கொடுக்கவும் , அதனை ஏற்றுக்கொள்ளாமல், மிகுந்த சினத்துடன்
மேன்மேலும் போரில் நடத்திச்செல்லும் படையினைக்கொண்ட
மாலையை அணிந்த மன்னனின் பாசறைக்குள் இருக்கின்றேன்.

#85 பாலை காட்டூர் கிழார் மகனார் கண்ணனார்
நல்ல நெற்றி பசந்துபோகவும், பெரிய தோள்கள் மெலிந்திடவும்
உண்ணாமல் இருப்பதால் உண்டான வருத்தத்தால் உயிர் போகும்படி மெலிவுற்று
நாம் இந்த நிலைக்கு ஆளாகவும் இங்கு நம்மைவிட்டுப் பிரிந்துசென்ற நம் தலைவர்
அறத்தின்பாற்பட்டவர் அல்லர் அவர் என்று பலவாறு மனம்வெறுத்துத்
துயரத்தில் ஆழ்ந்துவிடாதே வாழ்க, என் தோழியே! மலைச் சாரலில்
ஈன்று நாட்பட்ட மெல்லிய நடை வாய்ந்த இளம் பெண்யானைக்கும்
அதன் கன்றுக்கும் பசியைத் தீர்க்கும்பொருட்டு, பசிய கண்களையுடைய ஆண்யானை
மூங்கிலின் முற்றாத இளம் முளையைக் கொண்டுவந்து ஊட்டும்
வெற்றி பொருந்திய வேலினையுடைய திரையன் என்பவனின் வேங்கடமென்னும் நீண்ட மலையில்
நல்ல நாள் காலையில் பூத்த மிகவும் இளைய வேங்கைமரத்தின்
மணமுள்ள பூக்களினூடே நுழைவதால் அவற்றின் துகள்படியப்பெற்ற புள்ளியையும் கோடுகளையும் உடைய மயில்
அரும்பிய பசிய குருந்த மரத்தின் நறுமணம் கமழுகின்ற கிளையின் மேல் இருந்து
தனது பெடையை அழைத்து அகவுகின்ற, விரைந்து வரும் குளிர்ந்த கார்ப்பருவமே
யாம் திரும்ப வருவோம் என்று அவர் தெளிவாகக் கூறிச்சென்ற
பருவம், இங்கே பார், மேகமும் பரவி வருகின்றது. 

#86 மருதம் நல்லாவூர் கிழார்
உழுந்தப்பருப்பைச் சேர்த்துச் செய்த குழைவான களி உருண்டையோடு
அறுசுவை உணவை உண்ணும் ஆரவாரம் இடைவிடாமல் நிற்க, வரிசையான கால்களுடன்
குளிர்ச்சியான பெரிய பந்தலின் கீழ் வெளியிலிருந்து கொண்டுவரப்பட்ட புதிய மணலைப் பரப்பி,
வீட்டிலிருக்கும் குத்துவிளக்கை நடுவில்வைத்து ஏற்றி, அதன்மேல் மாலையினைத் தொங்கவிட்டு,
கும்மிருட்டு நீங்கிய அழகு பொருந்திய விடியற்காலையில்
தீய கோள்கள் தன்னைவிட்டு நீங்கப்பெற்ற (இராகுகாலம் நீங்கிய) பிறைத் திங்களானது
குற்றமற்ற சிறந்த புகழினையுடைய உரோகிணி என்னும் நாள்மீனை வந்து சேர,
தலையில் (நிறை)குடத்தை உடையவரும், இடுப்பில் புதிய அகன்ற வாயுள்ள மண்பாண்டத்தை உடையவருமான
பொதுக்காரியங்களை எடுத்துச்செய்யும் ஆரவாரம் மிக்க முதிய மங்கல மகளிர்
முன்னேயும் பின்னேயும் கொடுப்பனவற்றை முறையே கொணர்ந்து கொடுக்கக் கொடுக்க வாங்கி வைக்க,
மக்களைப்பெற்ற, தேமல் படர்ந்த அழகிய வயிற்றையும்,
சிறந்த அணிகலன்களையும் உடைய மங்கல மகளிர் ஒரு நால்வர் ஒன்றாகக் கூடி நின்று
”கற்பொழுக்கத்திலிருந்து சிறிதும் வழுவாமல் நல்ல பல பேறுகளையும் தந்து
உன்னை மனைவியாகப்பெற்ற உன் கணவனை நீ பெரிதும் விரும்புகின்றவளாய் இருப்பாய்” என்று வாழ்த்தி
நீருடன் சேர்த்துத் தலையில் சொரிந்த குளிர்ந்த இதழ்களையுடைய பூக்கள்
நிறைந்த கருமையான கூந்தலில் நெல்லுடன் சிந்திக்கிடக்க,
இவ்வாறு மணமகளுக்குரிய நல்ல திருமணச் சடங்குகள் செய்து முடிந்த பின்னர்,
பெருத்த ஓசையுடன் விரைவாக அந்தக் கூட்டத்துக்குள் புகுந்து,
”பெரிய மனையாட்டி ஆவாய்” என்று தாய்தந்தையராகிய உறவினர் கைப்பிடித்துக்கொடுக்க,
ஓர் அறையில் ஒன்றாய் இருப்பதற்கான இரவில்,
வளைவாக முதுகை வளைத்து, கோடிப் புடவைக்குள்
தன்னை முடக்கிக்கொண்டு தரையில் படுத்திருந்தவளின் முதுகினைத் தழுவி
அவளை அணைத்துக்கொள்ளும் ஆசையுடன் மூடியிருந்த முகத்தைத் திறந்து பார்க்க,
அஞ்சினவளாய் மூச்ச்சினை இழுத்துப்பிடித்து நிறுத்திப் பின் மெதுவாக விட்டபோது, “உன் மனம்
என்ன நினைத்துக்கொண்டிருந்தது என்று மறைக்காமல் என்னிடம் சொல்” என்று
இனிய மகிழ்ச்சியுடன் கூடிய இருக்கையிலே பின்னர் நான் கேட்கவும்,
சிவந்த அணிகலனாகிய ஒளிவிடும் குழைகள் தனது வளமான செவிகளில் அசைந்தாடும்படி
உள்ளம் நிறைந்த மகிழ்ச்சியை உடையவளாய் நாணம்மிக்கு முகங்கவிழ்ந்து
விரைந்து தலைவணங்கினாள், மானின்
மடப்பம் கொண்ட மதர்த்த பார்வையினையும்
இழுத்துச்சீவிய நெய்பூசிய கூந்தலையும் உடைய மாமை நிறத்தினையுடையவள்

#87 பாலை மதுரை பேராலவாயார்
இனிமையான தயிரைக் கடைந்த திரட்சியான தண்டினையுடைய மத்து,
கன்று தன் நாவினால் நக்கிச் சுவைக்கும்படி முற்றத்தில் தொங்கும்,
மரத்து நிழலே பந்தலாக உள்ள, புல்லால் வேயப்பட்ட குடில்களையுடைய
வறுமைப்பட்ட சிற்றூரில் இரவிலே தங்கி,
கொண்டைப்பூவையுடைய நெற்றியையுடைய, உயரமான மரத்தில் அடைந்திருக்கும் சேவலின்
முதற்கூவலில் எழுந்து விடியற்காலையில் புறப்பட்டுப்போய், முன்னே கிடக்கிற
கொடிய பார்வையுள்ள மறவரின் கற்கள் பொருந்திய காட்டரண்களில்
ஒலித்த தண்ணுமைப்பறையின் அகன்ற கண்ணிலிருந்து எழுகின்ற ஓசை
அரிய காட்டுவழியில செல்பவரின் நெஞ்சம் திடுக்கிட,
குன்றினை நோக்கிச் செல்லும் பலவாறான பாதைகளில் ஒலிக்கும் காட்டுவழியில்
மிகவும் நீண்ட நேரம் வருந்தி வந்தாய், அதனால்
இனிமேல் மகிழ்ச்சிகொள் நெஞ்சே! வாழ்வாயாக! இருள் நீங்கும்படியாக
விடிவிளக்கு எரிகின்ற, வானளாவிய பெரிய மாளிகையில்
அழகுத்தேமல் படர்ந்த அழகிய முலையினது அழகைப் பாராட்டி,
தாழ்ந்த கருங்கூந்தலையுடைய நம் காதலியின்
நீண்ட மூங்கில் போன்ற அழகினையுடைய தோள்களையும் அணைத்து - (மகிழ்ச்சிகொள் நெஞ்சே!)

#88 குறிஞ்சி ஈழத்து பூதன் தேவனார்
பழங்கொல்லையாகிய மேட்டுநிலத்தில் செழித்து வளர்ந்த பெரிய செந்தினையின்
உயரமாக வளைந்து நிற்கும் பெரிய கதிர்களைத் தின்பதற்காக, நல்ல திசையிலே
பிளந்த வாயையுடைய பல்லி சொல்லும் நிமித்தத்தை ஆராய்ந்து வருகிற இயல்பையுடைய
இளமை பொருந்திய பன்றி வருவதை எதிர்பார்த்து
வலிமையான கையையுடைய குறவனாகிய தினைப்புனம் காப்போன் தனது பரண் மீது கொளுத்திவைத்த
நீண்ட சுடரின் வெளிச்சத்தைப் பார்த்து வந்து நமது
நடுக்கம் தரும் துயரத்தைக் களைந்துபோட்ட நல்லவனாகிய நம் தலைவன்
நடந்துபோனான் போலும் தானாக! குன்றிலுள்ள
பெரிய புலியைக் கொன்ற பெரிய கையினையுடைய யானையின்
கன்னங்களில் பெருகி வழியும் அழகிய மதநீரில்
கரிய சிறகினைக் கொண்ட வண்டுக்கூட்டம் ஆரவார ஒலியெழுப்ப,அதனை யாழிசை என்று எண்ணி
பெரிய மலையின் பிளந்துள்ள குகையினில் இருக்கும் அசுணம் என்னும் விலங்குகள் கூர்ந்துகேட்கும்
மூங்கில் நிறைந்த குறுங்காட்டில் பாம்புக?ள் இற?ந்தொழியும்ப?டி நெருங்கி
வளைந்த? விரல்களையுடைய கரடி தோண்டும்
சுவ?டுகள் ப?திந்துள்ள? புற்றுக்க?ளையுடைய?, செல்லுதற்கு அரிய? வ?ழியினில் - (நடந்துபோனான் போலும் தானாக!)

#89 பாலை மதுரைக்காஞ்சி புலவர்
சுட்டுப்பொசுக்கும் கதிர்களையுடைய ஞாயிறு உச்சியில் நின்று எரித்தலால்
மிக்க மழைநீர் வற்றிப்போன பேய்த்தேர் என்னும் கானல்நீரையுடைய அகன்ற பாலைப் பரப்பினில்
சினத்தோடு எழுகின்ற குரலினையுடைய பேராந்தைச் சேவல்
புற்களும் இல்லாமற்போன வெடிப்பிடங்கள் தனித்திருக்க (அவற்றைவிட்டு)ப் பறந்துபோய், மலையிலுள்ள
கற்கள் உருண்டு விழும்போது எழும் ஓசை போல மாறி மாறிக் குழறுகின்ற அந்த இடத்தில்,
சிள் வண்டு ஒலிக்கும், சிறிய இலைகளைக் கொண்ட கருவேல மரத்தின்
காய்ந்து முற்றிய நெற்றுகள் உதிர்ந்துவிழ, துணிவெளுப்போரின் 
தொழிலுக்குதவும் பரந்த வெளியிலுள்ள சூடான உவர்மண் எடுத்தது போக மீந்துள்ள
களர்மண் பரந்துள்ள மலைப்பக்கத்தே அமைந்த நீண்ட இடத்தில்,
கொழுப்புள்ள ஊனைத் தின்ற விசைகொண்ட வில்லினரான மறவர்கள்
கருமை பொருந்திய திண்ணிய தோள்கள் பூரிக்க, (துன்புறுத்தி)
சுமைமிக்க கழுதைகளின் நீண்ட வரிசையைத் தொடர்ந்து வருகின்ற
செப்பமுடைய வாளினைக்கொண்ட வீரர்களான வணிகரை(துன்புறுத்தி) அவரின் அரிய தலையை வெட்டிய
மிக்க புலவு நாறும் சண்டைக்களத்தில், உடுக்கையினைத் தாழக் கொட்டி
அரிய கலன்களைத் திறையாகப் பெற்றுக்குவித்த பெரும் போர்விருப்பினைக் கொண்ட வெற்றியாளர்கள்
விற்கள் பொருந்திய அரணில் அவரவர் பங்கைப் பிரித்துக்கொள்ளும்
கொல்லையினைக் கொண்ட பெரிய காடுகள் நீண்டு செல்வன என்று எண்ணாமல்
மென்மையான சிவந்த பாதங்கள் வருந்தும்படி நடந்துசெல்லும்
திறம் கொண்டவளோ? அவள்தான், தேனை ஊற்றிக்
கலந்த இனிய பாலினைக் குடிக்கும்படி வருந்திவேண்டவும் உண்ணமறுத்து
மணல் பரப்பிய பந்தலுக்குள் ஓடியாடித்திரியும்
நீண்ட மெல்லிய மூங்கில்போன்ற தோளினையுடைய மாமை நிறம்கொண்ட மகள்.

#90 நெய்தல் மதுரை மருதன் இளநாகனார்
வயதானவர்களின் நரைத்த தலையைப் போல வெள்ளைத் தலையையுடைய கடலானது
இளம்பெண்கள் விளையாட்டாய்ச் செய்யும் மணல்வீட்டை அழிக்கின்ற,
முறுக்குவிட்டு மலர்கின்ற தாழையையுடைய கடற்கரைச் சோலையையுடைய பெரிய கடல்துறையில்,
ஒருசிலரின் செவிகளில் மட்டுமே பட்டிருந்த உங்கள் சந்திப்பு, பின்னர் எல்லாரும் அறிய அலராக எங்கும் பரவ
வீட்டில் அவளைப் பூட்டிவைத்துவிட்டதை அறியாதவனாய், பல நாள்கள்
வளர்கின்ற இளம் முலைகளையுடைவளை வருத்துகின்ற அழகிய பெருமைமிக்க மார்பினையுடைய,
கலக்கம்கொண்ட உள்ளத்தோடு வருந்துகின்ற உன்னிடம்,
இவ்வாறு சந்திப்பதை நிறுத்திக்கொள் என்று நான் எப்படிச் சொல்வேன்?
அரிய துடிப்பான தெய்வங்கள் இருக்கும் செல்லூரின் கிழக்கிலிருக்கும்,
பெரிய கடல்போல முழக்கத்தையுடையதாகி, புதிய வருவாயினை உடைய,
இரும்பாற் செய்த ஆயுதங்கள் தம்மிடம் உண்டாக்கிய தழும்புகளை உடைய முகத்தை உடையவராகிய
அஞ்சாமையையுடைய கோசருடைய நியமம் என்னும் ஊரினைக் கொடுத்தாலும்
சரியாகும் என்று கொள்ளமாட்டார் எம் வீட்டார்
மணக்கும் நெற்றியினையுடைய பெண்ணான இவளின் அணிகலன்களுக்கு விலையாக.

#91 பாலை மாமூலனார்
ஒளி சிந்தும் பகலினைக் கொடுத்து உதவிய பல கதிர்களைக்கொண்ட ஞாயிறு
வளம் பொருந்திய பெரிய மலையின் பயன்கள் எல்லாம் கெட்டுப்போகும்படி சுட்டுப்பொசுக்குவதால்
அருவிகள் இல்லையாகிப்போன பெரிய மலைச்சாரலில்
தீண்டி வருத்தும் தெய்வங்கள் உறைகின்ற சுனையினைக் கையினால் துழாவியும் நீராகிய பயனைக் காணாமல்
அங்கு உலர்ந்து கிடக்கும் பாசியைத் தின்ற பசிய கண்ணையுடைய ஆண்யானையானது,
இயக்கம் ஓய்ந்து போகும்படியான பசியினையுடைய தனது பெண்யானையோடு ஒரு பக்கத்தே ஒடுங்கிக் கிடப்ப 
மூங்கில்களின் கணுக்கள் உடையும்படி காய்கின்ற வெயில் தகிக்கின்ற அகன்ற பாலைப் பரப்பிலே
கிட்டுதற்கரிய பொருள்மீது கொண்ட ஆசையால் நம் தலைவர் நம்மைப் பிரிந்துசென்றாரெனினும்
நம் மீது மிகவும் அதிகமான அன்பினையுடையவர், தோழியே! கரிய நிறமுடைய
ஆண்மான்கள் படுத்துக்கிடக்கும் பரற்கற்களையுடைய உயரமான கற்குவியலில்
கொடுமை நிறைந்த மழவர்கள் களவு செய்யும் தொழிலுக்காகக் கூடிய
நீண்ட அடிமரத்தைக் கொண்ட ஆசினிப்பலாவையுடைய ஒடுங்காடு என்னும் ஊருக்கு அப்பால்
இழுத்துக் கட்டிய முழவினையுடைய குட்டுவன் என்பவன் பாதுகாத்தலால்
பசி என்பதை அறியாத மருதவளம் மிக்க ஊர்களையுடைய,
வளைந்த கொம்பினையுடைய எருமை தான் மேய்ந்த தாமரையை வெறுக்குமானால்
முடத்தன்மை மிகுந்த பலாவினது கொழுவிய நிழலிலே தங்கும்
குடநாட்டினையே பெறுவதாயிருந்தாலும் அங்குத் தங்கமாட்டார்,
இளமை வாய்ந்த மான் போன்ற பார்வையையுடையவளே! உன்னுடைய  மாட்சிமைப்பட்ட அழகினை மறந்து

#92 குறிஞ்சி மதுரை பாலாசிரியர் நற்றாமனார்
உயர்ந்த மலையின் சரிவை ஒட்டிய சமவெளியிடத்தில் பார்ப்போர் கண்கள் குருடாகும்படி மின்னி
மிகுந்த மழையைப் பொழிந்த பாதி இரவாகிய இருள்நேரத்தில்
யானையை அது நடுங்கும்படி தாக்கி, வளைந்த கோடுகளையும்
சிவந்த கண்களையும் உடைய பெரிய புலி முழங்கும் மலைச்சாரலுக்கு
வரவேண்டாம், வாழ்க நீர், ஐயனே! நேர்த்தியான முன்கையினையும்
நீண்ட மெல்லிய மூங்கில் போன்ற தோளினையும் உடைய இவளும் நானும்
தினைப்புனத்தைக் காவல்காக்கக் கருதியுள்ளோம், நாளைப் பகலில்
மந்திகளும் ஏறி அறிந்திராத மரங்கள் செறிந்த (இருளடர்ந்த) காட்டில் 
ஒளிவிடும் செங்காந்தள் மலர்ந்திருக்கிற அந்த இடத்தில்
குளிர்ச்சியாய் நிறைந்து அருவிகள் விழும் தாழ்வான சுனையின் ஒரு பக்கத்தில்
இடி சினந்து முழங்குதலால் வலி அழிந்த பாம்பு உமிழ்ந்த
சிறந்த மணியாகிய விளக்கொளியின் வெளிச்சத்தில் பெற்றிடுவாய்
இவளின் இருண்ட மெல்லிய கூந்தலே படுக்கையாகக்கொண்ட இன்பமான தூக்கத்தை.

#93 பாலை கணக்காயனார் மகனார் நக்கீரனார்
நம் உறவினர்களைத் துன்பம் போக்கித் தாங்கவும் மேலும் சுற்றத்தார்கள் நன்கு உண்ணவும்
சுற்றம் அல்லாதவர் சுற்றத்தார் போல நம்மொடு பொருந்தி நடக்கவும், 
பொருளீட்டும் முயற்சிக்கு ஏற்றதான ஊக்கம் கொண்டு, ஆசை மிகுந்து,
ஆத்திமாலை சூடிய பகைவரைக் கொல்லும் போர் வன்மை மிக்க சோழருடைய
அறம் பொருந்திய நல்ல அரசவையினையுடைய உறையூரைப் போன்ற
பெறுதற்கரிய நல்ல அணிகலன்களை எய்தி, யாவரும் விரும்பும்
செய்வதற்கரிய பொருளீட்டும் வினையை நாம் முடித்திருக்கிறோம், எனவே
பகை அரண்கள் பலவற்றையும் வென்ற வலிமையையுடைய படைகளையுடைய
வாடாத வேப்ப மாலையைத் தரித்த பாண்டியனின் மதுரையின்
காலைக் கடைவீதியைப் போல் மணக்கும் நறிய நெற்றியினையும்
நீண்ட கரிய கூந்தலையும் உடைய மாநிறத்தவளான நம் தலைவியை - 
மலையைக் குடைந்து செய்ததைப் போன்ற வானளாவிய நீண்ட மாளிகையில்
நுரையை முகந்து வைத்ததைப் போன்ற மென்மையான பூக்களாலான படுக்கையையுடைய,
உயர்ந்து நிற்கும் கட்டிலில், உயரமான குத்துவிளக்கின் வெளிச்சத்தில்
நன்மை பொருந்திய நம் மார்பினில் தலைவியின் மார்பகத்து பூண்கள் அழுந்தித் தடம்பொறிக்க -
தழுவிக்கொள்ளச் செல்வோமா, நெஞ்சே! வரி பொருந்திய நெற்றியினையும்
வேட்கை மிக, வடிந்து வாய்க்குள் புகும் மதநீரையும்,
கூற்றுவனைப் போன்ற வலிமையோடு, நிலத்தின் மேல் சுருட்டி எறிந்து, நெருங்கிவந்து
ஆட்களைப் பிடித்துக்கொள்ளுதலில் தப்பாத அச்சம்தரும் நீண்ட கையினையும் உடைய
கடுமையான களிற்றியானைகளையும், நெடிய தேர்களையும் உடைய சேரனின்
செல்வம் மிக்க சிறந்த அகன்ற நகரனான கருவூரின் நீர்த்துறையின்
தெளிந்த நீர் உயர்ந்த கரையின்கண் குவித்துள்ள
குளிர்ந்த ஆன்பொருநை ஆற்றின் மணலைக்காட்டிலும் பலமுறை -(தழுவிக்கொள்ளச் செல்வோமா, நெஞ்சே!)

#94 முல்லை நன்பலூர் சிறு மேதாவியார்
தேன் அடைகள் தொங்குகின்ற உச்சிமலையின் பக்கத்தில் அடந்து வளர்ந்த
குவிந்த இலைகளையுடைய முசுண்டையின் வெண்மையான பூக்கள், செழிப்புடன்
வானத்தில் மீன்கள் பூத்ததைப் போலப் பூத்துக்கிடக்கும் நள்ளிரவாகிய இருளில்
ஆட்டுக்குட்டிகளை ஒன்றுசேர்த்த (மழைக்கு )ஓலைப்பாய் மறைப்பை முதுகுப்பக்கம் கொண்ட இடையன்
குளிர்ச்சியான, மணங்கமழும் முல்லைப்பூவைத் தோன்றிப்பூவுடன் கலந்து
வண்டுகள் மொய்க்கும்படி தொடுத்த நீர் ஒழுகும் தலைமாலையை அணிந்தவனாய்
மெல்லிதாக எரியும் கொள்ளி உள்ளங்கையைப் பொசுக்க (மழையில் நனையாதபடி உள்ளங்கையால் மறைத்தலால்)
குள்ளநரியை ஓட்டுவதற்கு மிக்க இருளினூடே செய்கின்ற நீண்ட ஒலியானது,
சிறிய கண்களையுடைய பன்றிகளின் பெரிய கூட்டத்தை விரட்டுவதற்கு
முதிர்ந்த தினைப் புனத்துக் காவலாளிகள் பன்றிகள் வரும் காலத்தை எண்ணியிருந்து ஊதுகின்ற
கருமையான கொம்பின் ஓசையுடன் சேர்ந்து வந்து ஒலிக்கின்ற
புன்செய்க் காடுகள் உள்ள பகுதியில் இருக்கிறது, அன்பு கலந்த
விருப்பம் மிக்க மென்மைத்தன்மையையும்
கரிய பலவாகிய கூந்தலையும் திருத்தமான அணிகலன்களையும் உடைய தலைவியின் ஊர்

#95 பாலை ஒரோடோகத்துக் கந்தரத்தனார்
கொஞ்சம் கொஞ்சமாக என் நெற்றியும் பசந்துகொண்டுவருகிறது; மெலிந்து
தேய்ந்துபோகிறது என்னுடைய மாந்தளிரைப் போன்ற உடம்பும்; 
ஊரிலுள்ளோர் பலரும் அறியும்படி விளங்குகின்ற எனது இந்த அவலமும்
என்னுடைய உயிரைக் கொண்டு போவதில்லாமல், நினைத்துப்பார்க்கும்போது
வேறு என்ன செய்யும்? வாழ்க தோழியே! பொரிந்துபோன அடிமரத்தையும்,
கொப்புளம் போன்ற குமிழிகளையுடைய நடுமரத்தையும் கொண்ட இலுப்பை மரத்தின் குவிந்த குலையிலிருந்து கழன்ற
ஆலங்கட்டியைப் போன்ற உள்ளே துளையுள்ள திரளான பூக்களை
பாதையில் செல்கின்ற வழிப்போக்கர் நீண்ட வழியில் தடைப்பட்டுத் தங்கும்படி,
குட்டிகளை ஈன்ற கரடிகளின் பெரிய கூட்டம் கவருகின்ற
கொடிய வழிகள் பலவற்றைக் கடந்துசென்ற நம் தலைவருக்காக நாம் மனம் இரங்குதல் இயல்பு என்று கருதாமல்
பழி தூற்றுதலையே விரும்புவாராய், இந்த ஊரின்
பாழாய்ப்போன பெண்கள் இன்னாத சொற்களைக் கூறுவது
நல்லதல்ல என் மகளுக்கு என்று கடவுளை வேண்டித்தொழுது
நமது நிலையையும் உணர்ந்துகொண்டு, யாதும் சொல்லாமல் அடங்கிய கோட்பாட்டினையுடைய
நம் அன்னைக்கு முன்னால் நாம் இந்தக் காதல்வாழ்க்கையில் ஈடுபடல் எவ்வாறு இயலும்?

#96 மருதம் மருதம் பாடிய இளங்கடுங்கோ
கள்ளுண்ட மொந்தை என்ற மண்கலம் கழுவப்பட, அந்த நீரை உண்ட இறாமீன் செருக்குற்று
பூட்டிய நாண் அறுந்துபோன வில் தெறிப்பது போல் நெல்கூடுகளின் மீது துள்ளி விழுகின்ற
வயலோரப் பொய்கையின் அடைகரையிலுள்ள பிரம்பினது
அரத்தின் வாய் போன்ற அழகிய முட்களையுடைய நீண்ட கொடி
அருவியாய் வந்து விழும் நீரின்மேல் படர்ந்த ஆம்பலின் அகன்ற இலையைச் சுற்றிக்கொள்ள
அசைந்து வரும் வாடைக்காற்று அதனை விட்டுவிட்டுத் தூக்குவதால், அந்த இலை கொல்லனின் ஊதுலையில்
விசைத்து இழுத்துவிடும் தோலாலான துருத்தியைப் போன்று புடைத்துச் சுருங்கும்
வயல்களையும் அழகிய தோட்டங்களையும் உடைய, காஞ்சிமரங்கள் மிக்க ஊரையுடைய தலைவனே!
ஒளிரும் வளையல் அணிந்த பரத்தை மகளிருள்ளே நீ பெரிதும் விரும்பி
மணந்து கொண்டாய் ஓர் இளையவளை என்கின்றனர், இந்தப் பேச்சு
செம்பொன்னாலான சிலம்பினையும், செறிவான தொடையினையும்
அழகு ஒழுகும் மாமை நிறத்தினையும் உடைய அஃதை என்பவளின் தந்தையாகிய
பெருமை தங்கிய யானையையும், வெல்லும் போரினையும் உடைய சோழர்
வெண்ணெல் விளையும் இடங்களையுடைய பருவூர் என்ற ஊரின் போர்க்களத்தில்
சேர, பாண்டிய மன்னராகிய இரண்டு பெரும் வேந்தர்களும் போர்செய்து களத்தில் மடிய,
ஒளிர்கின்ற வாளினால் செய்த நல்ல போரினை வென்ற அந்த நாளில்
அம்மன்னருடைய களிற்றியானைகளைக் கைப்பற்றியபொழுது எழுந்த ஆரவாரம் போல
இவ்வூரில் பலர் வாயிலும்விழுந்து எங்கும் அலர் எழுகின்றது.

#97 பாலை மாமூலனார்
கள்ளிக்காட்டிலேயுள்ள, புள்ளிகளான பொறிகளையுடைய கலைமானை
அதன் வறண்டிருக்கும் அழகிய கொம்பு உதிர்ந்துபோகுமாறு, அதன் ஓட்டத்தை வென்று, (கொன்று தின்ற)
புலால் நாறும் புலி கைவிட்டுப்போன மூட்டுகள் கழன்ற கடும் முடைநாற்றமுள்ள தசை கிடக்குமிடத்தில்
இரவில் அரணிலுள்ளோர் அலறும்படி அவர்களைக் கொன்று, தாம் கைப்பற்றிய ஆநிரைகளைப் பகிர்ந்துகொண்டு
பெரிய பாறைகளின் இடுக்கில் தசையினை அறுத்துத் தின்னும்
கொலைசெய்யும் வில்லினையுடைய ஆடவரைப் போல, பலவும் ஒன்றுசேர்ந்து
பெரிய தலையையுடைய கழுகுகளுடன் பருந்துகளும் வந்து சூழ்ந்துகொள்ளும்
கடத்தற்கரிய காட்டுவழியைக் கடந்துசென்ற கொடுமையாளரான நம்தலைவருக்காக, நாள்தோறும்
பெரிய மூங்கில் புதரினூடே ஆராய்ந்து பார்த்து அறுத்தெடுத்துக் கொண்ட
நுணுகிய கணுக்களையுடைய சிறிய கோலைப் பிடித்த வளைந்து இறங்கும் கையையுடைய விறலியரோடு
பாணர்களைப் பாதுகாக்கும் அன்பினையும், கழலும் தொடியினையும்
கள்ளுண்டு மகிழும் இருக்கையினையும்  உடைய நன்னன் வேண்மானது
பசலைக்கொடி படர்ந்த வேலியினையுடைய வியலூர் என்னும் ஊரினைப் போன்ற உன்னுடைய
பரந்த முலையையுடைய மார்பகம் தனித்து வாட, பலவாறாக நினைத்துக்கொண்டு
துன்பத்திலாழ்ந்திட வேண்டாம் என்று சொல்கிறாய், தோழியே! என்னுடைய
கண்ணின் நீரை நிறுத்துதல் அவ்வளவு எளியதோ? குரவமரங்கள் பூத்து,
பனிக்காலம் நீங்கிய அரிய பக்குவத்தையுடைய இளவேனில் காலத்தில்
அறல் விளங்கும் நீண்ட மணலையுடைய அகன்ற ஆற்றின் கரையிலேயுள்ள
துறையை அழகுசெய்யும் மருதமரங்களோடு மாறுபாடு தோன்ற உயர்ந்து
நீண்டு தொங்குகின்ற தளிரால் அழகு செய்யப்பெற்ற பெரிய கிளைகளையுடைய மாமரங்களினது
பூங்கொத்துகள் செறிந்த புதிய மலர்கள் நெருங்கிய கிளைகளில்
புகைபோன்ற அழகிய வெண்முகில்கள் தவழ,
அவ்வின்பத்தை நுகரும் குயில்கள் கூவும் குரலைக் கேட்போருக்கு - கண்ணின் நீரை நிறுத்துதல் அவ்வளவு எளியதோ?

#98 குறிஞ்சி வெறிபாடிய காமக்கண்ணியார்
குளுமையுள்ள மலையில் உயர்ந்துநிற்கும் வளம் பொருந்திய உச்சிமலைச்சாரலில்
வெறுப்பில்லாத கொள்கையுடன் நம் தலைவர் நமக்கு உவந்தளித்த
அவரது இனிய உள்ளம் இப்பொழுது இன்னாதது ஆகிவிட்டதால்
நாம் வாழ்க்கையை வெறுக்கத்தக்கதாக நம்மிடம் அவரால் நிறுத்தப்பட்ட அவர் தந்த வருத்தமானது
அந்தத் தெய்வம் உறையும் மலையினையுடையவனின் மார்பினைச் சேர்வதால்மட்டுமே தணியுமென்பதை
அறியாதவளாயிருக்கிறாய் தாய், நீண்ட, திரட்சியான,
செறிவான, ஒளிருகின்ற பிரகாசமான வளையல்கள் கழன்றுவிழும் நிலையைப் பார்த்து
செயலற்ற உள்ளத்தினளாய்க் குறிசொல்லும் பெண்களை விசாரித்ததினால், முதுமை வாய்ந்த
பொய்யுரைப்பதில் வல்ல அந்தப் பெண்கள் மூங்கிலரிசியைப் பரப்பி வைத்து
இந்நோய் முருகனால் ஏற்பட்ட அரிய வருத்தம் என்று சொல்ல, அதனை நம்பி,
ஓவியம் போன்ற, சிறந்த தொழில்திறத்தால் புனையப்பட்ட நல்ல மனையில்
பாவையைப் போன்ற பலராலும் ஆராயப்பெறும் சிறந்த அழகானது
முன்பு போல் சிறப்புறட்டும் என் மகளுக்கு எனத் தெய்வத்தைத் தொழுது போற்றி
ஒன்றாய்ச்சேர்ந்த பல இனிய இசைக்கருவிகள் ஒலிக்க, வெறியாடும் களத்தை அமைத்து
ஆடுவதற்கேற்ற அழகுசெய்த அகன்ற பெரிய பந்தலில்
வெண்மையான பனந்தோட்டினைக் கடம்பமலருடன் சூடி, கேட்பதற்கினிய? பாட்டினை
மெலிதாக அமைந்த? தாள?த்தோடே கூட்டி, கையுயர்த்திக் கூப்பி
முருகக்கடவுளின் பெரும் புகழினை ஏற்றிப்புகழ்ந்து, வேலன்,
வெறியாடும் பெரிய களம் அழகுபெற, வல்ல?வ?னாலே
ஆட்டப்ப?டுகின்ற? பொறி அமைக்கப்பட்ட பாவையைப் போல ஆடுவதை விரும்பினால்
அப்பொழுது ந?ம் நிலை என்ன ஆகுமோ? தோழியே! அறிவு மயங்கிப்
பித்துப்பிடித்த இந்தப் பெண்களுக்கு மேலும் துன்பமே உண்டாகும்படி
வேலன் வெறியாடிய பின்னரும்; எனது வாடிப்போன மேனி
முன்பு போல் சிறப்புற விளங்காவிட்டால், இந்த மறைவான காதல் ஒழுக்கம்
பலரும் தூற்றும்படி அனைவருக்கும் தெரியாமற்போவது அரிதான காரியம், அல்லாமல்
நம் தலைவரான அறிவாளி நமக்குச் செய்வித்த இந்த அல்லலைக் கண்டு மனமிரங்கி
மணங்கமழும் நெடுவேளாகிய முருகன் நமது முந்தைய அழகைத் தந்தருளினால்
செறிவாக வளையணிந்த தலைவிக்கு ஏற்பட்ட துயரம் தம்மாலேஅல்லாமல் வேறொன்றால் ஏற்பட்டது என்று
காடுகள் பொருந்திய நாட்டினையுடையவன் கேள்விப்பட்டால்
நான் உயிரோடிருப்பது அதனைக்காட்டிலும் அரிதானதாகும்.

#99 பாலை பாலை பாடிய பெருங்கடுங்கோ
வாள் போன்ற வரிகளையுடைய புலியின், விலங்கினைக் கொன்ற குருதிபடிந்த நகத்தைப் போன்ற
இரத்தச் சிவப்பான மொட்டுகள் மலர்ந்த முள் நிறைந்த முருக்க மலரின்
வண்டுகள் சூழ்ந்த வாடிய பூக்கள் பரவிக்கிடக்க, மதர்த்த அழகையும்
சிறந்த அணிகலன்களையும் உடைய இளம்பெண்களின் பூண் அணிந்த முலையைப் போன்ற
அரும்புகள் கட்டவிழ்ந்த கோங்க மலரோடு கூடி, அரும்பிய
புனலிப் பூக்கள் பரவப்பெற்று, அழகிய குளிர்ச்சியுடைய பாதிரியினது
அழகிய கிளையிலிருந்து உதிர்ந்த மலர்களும் பரவப்பெற்று, பூக்கும் பருவத்தை எதிர்ந்த
வெண்கடம்ப மலரொடு கலந்து, வழிபாடு செய்வதற்குரிய
தெய்வம் உறைகின்ற திருக்கோயில் போல மணம் கமழுகின்ற பல்வேறு மலர்களும் உள்ளதால்
நாம் செல்லும் இக்காடு பெரிதும் விரும்பத் தக்கதாய் இருப்பதைக்
காண்பாயாக, வாழ்க, இளம்பெண்ணே! உன் தந்தை
பகைவரைக் கொல்லும் போர்க்களத்தில் போரிட்டதால் பூண்கள் சிதைந்துபோன கொம்பினையுடையனவும்
பெண்யானைகள் சூழப்பெற்றனவும் ஆகிய களிறுகளைப் போலத் தோன்றும்
சிறிய, பெரிய அளவினையுடைய குன்றுகளையும் கொண்டிருக்கிறது - (காண்பாயாக).

#100 நெய்தல் உலோச்சனார்
அரைக்கப்பெற்று இனிதாக அமைந்த சந்தனத்தைப் பூசி
சிறப்புற அணியப்பட்ட மாலையினையுடைய மார்பினையுடையவனாய்
உனது நல்ல மார்பில் தடம் உண்டாகும்படி தழுவி, நீ வந்து
இரவினில் போவது எனக்கும் இனிமையாகத்தான் இருக்கிறது;
பெரும் அலைகளின் முழக்கத்துடன் அதன் இயக்கமும் ஓய்ந்து இருந்த
மேகங்கள் சூழ்ந்த இரவில், கரிய கடலில் (தமது தோணிகளில்) கொளுத்திவைத்த
நிரைய மீன்களைப் பிடிக்கும் பரதவரின் இருளை நீக்கும் ஒளிபொருந்திய விளக்குகள்,
புறங்கொடாத கொள்கையினைப் பூண்ட வேந்தனின் பாசறையில்
அசைகின்ற இயல்பையுடைய யானைகளின் அழகிய முகங்களில் கட்டிய
பொன்னாலான முகபடாங்களின் ஒளிவிடும் சுடர்களைப் போன்று தோன்றும்,
பாடிவருவோரைத் தன்னுடன் சேர்த்துக்கொள்ளும் வள்ளன்மை மிக்க கோமானாகிய
குதிரைகள் பூண்ட சிறந்த தேரினையுடைய பெரியன் என்பவனின், விரிந்த மலர்க்கொத்துக்களையுடைய
புன்னைமரங்களையுடைய அழகிய கடற்கரைச் சோலை சூழ்ந்த புறையாற்றின் கடல்துறையினில் உள்ள
புதிதாய் வந்த நாரையின் கூட்டம் ஒலித்ததைப் போன்ற
பழிச்சொற்கள் ஓங்கி எழுந்தன, குளிர்ச்சியாய்ப் புலர்ந்திடும்
இருள்தங்கிய விடியற்காலத்தில் சென்ற எருமை
நெய்தலின் அழகிய புதுமலர்களை விருப்புடன் தின்னும்
தாழை வேலியையுடைய அழகிய தோட்டங்கள் அமைந்த எம்முடைய ஆரவாரமுடைய ஊரில் - 

#101 பாலை மாமூலனார்
நான் கூறுவதைக் கேள், வாழ்க, தோழியே! இப்பிறப்பில்
நன்மை செய்யுமிடத்திற்குத் தீமை வருவதில்லை என்கிற
தொன்றுதொட்டு வழங்கும் பழமொழி இன்று பொய்த்துப்போய்விட்டதோ?
செம்மறியாட்டுக் கிடாயின் கொம்பினைப் போன்று சுற்றிக்கொண்டு சுருண்டுபோயுள்ள
பிடரியை மறைக்கும் தலைமயிரினையும், சிவந்த கண்களையும் உடைய மழவர்கள்
வாய்க்குப்பகையாகிய இருமலைத் தவிர்க்க புற்றுமண்ணை வாய்க்குள் அடக்கிக்கொண்டு, கடும் திறன்வாய்ந்த
தீயை உண்டாக்கும் சிறிய அம்பினை வில்லுடன் கையில் பிடித்துக்கொண்டு
வெண்ணெய் வரக் கடையும் மத்தினைக் கவர்ந்துகொண்டு, ஆனிரைகள் இருக்குமிடத்திற்கு
பாதங்களை மறைக்கும் செருப்புகள் ஒலியெழுப்பச் சென்று
காவலையுடைய இடத்தில் கவர்ந்த கன்றுகளுடன் கூடிய ஆனிரைகளைக் கொள்ளையடித்தவர்களாய்
அக் கூட்டத்தைக் கூண்டோடு ஓட்டிக்கொண்டுபோகும் அகன்ற வெளிகளைக் கொண்ட பெரிய காட்டில்,
அகன்ற வானம் என்னும் கடலுக்கு ஓடம் போன்ற
நடுப்பகலில் காய்ந்த பலகதிர்களையுடைய ஞாயிற்றின்
வெப்பம் விளங்கிப் பரக்கச் சுழன்றுவரும் மேல் காற்றினால்
உறுதியற்ற அடிமரத்தினைக் கொண்ட முருங்கையின் முதிர்ந்து கழியும் பல மலர்கள்
குளிர்ந்த முகிலினின்றும் உதிருகின்ற ஆலங்கட்டிகளைப் போலப் பரவி உதிருகின்ற
நடுக்கம்தரும் பல மலைகளைக் கடந்து சென்ற நம் தலைவர்க்கு
வெறுக்கத்தக்க செயலை நாம் செய்யவில்லையே - (நாம் நன்றுதானே செய்தோம், அவர் பிரிந்து சென்றாரே!)

#102 குறிஞ்சி மதுரை இளம்பாலாசிரியன் சேந்தம் கூத்தன்
பிடரிமயிரினையுடைய சிங்கம்போன்ற வலிமையோடு, உயர்ந்து வளர்ந்த தினைப்பயிரைக்கொண்ட பெரிய புனத்தின்
பரண்மேலிருக்கும் குறவன் கள்ளினை உண்டு மகிழ்ந்திருக்க,
பூசிய மயிர்ச் சந்தனத்தையுடைய பரந்த கரிய தனது கூந்தலை
மெல்ல இயங்குகின்ற காற்றானது புகுந்து புலர்த்த, கையைத் தூக்கி
தழைத்து நீண்ட அம்மயிரினைக் கோதியவளாய், கொடிச்சியானவள்
பெரிய மலையின் பக்கத்தில் குறிஞ்சிப்பண்ணைப் பாட
தினையையும் தின்னாமல், இருந்த இடத்தைவிட்டு நகராமல்
தூக்கம் வரப்பெறாத தனது பசிய கண்களும் தூக்கம் வரப்பெற்று, விரைவாக
முரட்டுத்தனத்தையே மிகவும் விரும்புகின்ற இளைய களிறு தூங்குகின்ற நாட்டையுடைய நம் தலைவன்
சந்தனம் பூசிய தனது மார்பினில் அழகிய வண்டுகள் ஒலிக்க,
மார்பிலும் தலையிலும் மாலைகளைச் சூடியவனாய், வலக்கையினில் வேலைப் பிடித்தவனாய்
காவலர் கண்டுபிடிப்பதைத் தவிர்த்து, மெதுவாக,
தாழ்ப்பாள் போடாத கதவினருகே தங்கி, உள்ளே புகுந்து
வருந்துகின்ற துன்பம் நீங்க அணைத்து, தோளின் மேல் பொருந்தி
இனிய சொற்களைக் கலந்து பேசிவிட்டுச் சென்றான், தோழியே!
நாம் ஏனோ காண்கின்றோம், இன்று ஒருநாள் அவன்
வந்து நமக்கு அருள்செய்யாமற்போய்விட்டதால், ஊராருக்குத்தெரிந்து அவர்கள் பழித்துப்பேசும்படியாக ஆகி
அனைவரும் கூடி மகிழ்ச்சிகொள்வதற்குக் காரணமாக, 
கரியவாய்ச் சூழ்ந்திருக்கும் கூந்தல் புரளும் நமது ஒளிவிடும் நெற்றியில் இந்தப் பசலையை (நாம் ஏனோ காண்கின்றோம்)

#103 பாலை காவிரிப்பூம்பட்டினத்து செங்கண்ணனார்
நிழலே இல்லாத அகன்ற பாலை நிலைப்பரப்பினில் வல்லூறினால் பாய்வதற்குக் குறிவைக்கப்பட்ட
ஒளிவிடும் தலையினையும் நுணுகிய சிவந்த நாவினையும்
அள்ளித்தெளித்தாற் போன்ற அழகிய நுண்ணிய பலவாகிய புள்ளிகளையும் உடைய
அழகிய குரும்பூழ்ச் சேவலானது, பாதுகாப்பான இடத்திற்குச் சென்று தங்க எண்ணி
தான் மறைந்திருந்த உலர்ந்த புதர் தனித்துக்கிடக்கும்படி பறந்து போய், தன் முன்னாலிருக்கும்
வன்னிலத்தைச் சார்ந்திருந்த மிகவும் பழைமையான பெரிய மன்றத்தில்
ஆறலை கள்வர் வழிப்போக்கரை எதிர்பார்த்து தங்கியிருக்கும் பசுக்களையுடைய சிற்றூரில்,
குடியிருப்போர் விட்டுப்போன உயர்ந்த நிலையினையுடைய பெரிய பாழ்மனையின்
கூரை இறப்பின் நிழலில் ஒரு பக்கமாய்த் தங்கி, தனிமையால் பெருமூச்செறிந்திருக்கும்
கொடுமையான பகைப்புலத்தின் கடத்தற்கரிய வழிகளைக் கடந்து, தம்மிடத்தே
கடமையாக வந்து சேர்ந்த பொருள் ஈட்டும் வினையில் மீண்டும் சென்றார் என்று
நள்ளென்ற நடுயாமத்தில் நமக்கு உற்றதுணையாக இருக்கும் பொருட்டு
நம்முடனே இப்பசலை நோயையும் இதுவரை பொறுத்திருந்து, இப்போது அவரோடு
தானே போய்விட்ட நமது பெண்மை நலத்தை
இனி நமக்கு அருள மாட்டாரோ, நாம் விரும்பும் நம் தலைவர்.

#104 முல்லை மதுரை மருதன் இளநாகனார்
வேந்தன் தனது போரினை முடித்த பின்னர், திசைகள் எல்லாம் பறந்து
கூட்டமான வண்டுகள் ஆரவாரிக்கும் குளிர்ந்த மணங்கமழும் முல்லைநிலத்தில்
வெற்றி பொருந்திய வேலினையுடைய இளைஞர் இன்பம் அடைய, தேர்ப்பாகன்
கடிவாளத்தை இழுத்துப் பிடித்துச் செலுத்தாமல், தாற்றுக்கோலைக் குதிரைகள் மீது பாய்ச்சினால்
கடல்சூழ்ந்த உலகமே அதன் ஓட்டத்திற்கு ஆற்றாத
மிக்க வேகமுடைய நல்ல நான்கு குதிரைகள் பூட்டப்பெற்ற நீண்ட தேரில்
அதன் வளைவான கொடிஞ்சி பொலிவுறுமாறு ஏறி, புதர்களில் படர்ந்த
பூக்களையுடைய கொடியின் அவரையின் உள்ளீடற்ற பிஞ்சுகளின் பொய்த்தோல் போன்ற
உள்ளீடில்லாத? வ?யிற்றையுடைய? வெள்ளாட்டின் வெண்ணிற?மான? குட்டிக?ள்
ம?ய?ங்கி விழுந்தாற் போன்று தாழ்ந்து தொங்குகின்ற? பெரிய? செவியையுடைன?வாய்
பரட்டைத்தலையையுடைய சிறுவர்களோடு குதித்துச் சென்று, ம?ன்ற?த்தின் ப?க்க?த்திலுள்ள?
க?வ?டுப?ட்ட? இலைக?ளையுடைய? ஆத்திம?ர?த்தின் அழ?கிய தளிரைக் கடிக்கும்
சிறிய ஊர்கள் பல பின்னே போய் மறைந்திட, மாலைப்பொழுதில்
இனியது ஒன்றைச் செய்தாய், எம் பெருமானே, நீர் வாழ்க!
நீர்வடியும் கண்ணையுடையவளாய், பலவற்றையும் எண்ணி வெறுத்து வீட்டிலிருக்கும்
ஆராய்ந்தெடுத்த வளையலையுடைய தலைவி தன் கூந்தலில்
மலர்ச் சரங்களை அணிந்துகொள்ளும்படி சூட்டிவிட்டாய்.

#105 பாலை தாயங்கண்ணனார்
அக?ன்ற? பாறை அருகில் அரும்புக?ள் முதிர்ந்த? வேங்கையின் ம?ல?ரோடு
ஒளிவிடும் ப?ச்சிலையையும் கலந்து தொடுத்த? மாலையைச் சூட்டிவிட்டு, மென்மையாக
நல்ல மலைநாடனாகிய தன் காதலன் தன்னைப் பாராட்ட (அவனுடன் போவது)
எப்படித்தான் அவளால் முடிந்ததோ? தேனை ஊற்றி,
மணிகள் பதித்த பொன்னாலான பாத்திரத்தில் இனிய பாலினை எடுத்துக்கொண்டு
செவிலித்தாய்மார் ஊட்டிவிடவும், அதனை உண்ணாதவளான அவள்,
நிழலுள்ள குளம் போல உயர்ந்த மாடங்களைக் கொண்ட எம் மாளிகையிலுள்ள
பெரிய செல்வத்தையும் பொருட்டாக நினைக்கவில்லை; தன் காதலனின் பொய்யான பேச்சில் மயங்கி,
பந்தை அடிப்பதைப் போன்ற தாளத்துக்குப் பொருத்தமான பலவகையான அடியிட்டு நடத்தலையும்,
மெல்லென்ற ஓட்டத்தையும் உடைய குதிரைகளையும், பெரிய வேற்படையினையும் உடைய எழினி என்பவனின்
ஒருகாலத்திலும் கெட்டுப்போகாத வலிமையினால் தமக்குப் பணித்த தொழிலைச் செய்து முடிக்கும் பொருட்டு
மிகுந்த தீப்போன்ற கதிர்கள் பரவிப் பாறைகள் சுடுகின்ற காட்டில்
தமது தொழிலில் வல்ல அம்புகளைக் குறி தப்பாமல் தொடுப்பதில் சிறந்த மறவர்கள்
தேனால் ச?மைத்த? ந?றிய? க?ள்ளைப் ப?ருகிய?த?ன் செருக்கினோடு ப?கைவ?ர்க?ளைப் போர்க்க?ள?த்தில் வீழ்த்தி வென்று
பருத்த மென்மையான மடியினையுடைய, காளைகளோடு கூடிய ஆனினத்தைக் கைப்பற்றிக் கொண்டுவரும்
பகைமை நிறைந்த பலவாகிய வழிகளில் - ம?லைக?ள் வெடித்துப் பிளவுகளாய்த் திறக்குமளவிற்கான வேனில் ப?ருவ?த்தில் -
போவது - (எப்படித்தான் அவளால் முடிந்ததோ?)

#106 மருதம் ஆலங்குடி வங்கனார்
தீ கொழுந்து விட்டாற்போல இதழ் திறந்து மலருகின்ற தாமரை மலர்களையுடைய வயல்களில்
நெல்லைப் பொரிக்கும்போது பொரிகள் தெரிப்பது போலத் துள்ளுகின்ற பலவாகிய சிறிய மீன்களைப்
பற்றித் தின்பதற்காக, மணமுடைய பசிய இலையின்மேல் மெல்ல மெல்ல
பறக்க முடியாத வயதான மீன்கொத்திப்பறவை அசைந்து வந்து இருக்கும்
நீர்த்துறை பொருந்திய மருதநிலத்துத் தலைவனின் மனைவி, தன் கணவனை
நம்முடன் இணைத்துப்பேசிப் பிணக்கம் கொள்கிறாள் என்கிறார்கள்; நாம் அப்படிச்
செய்யவில்லையென்றாலும், அவள் கூறும் பழியிலிருந்து தப்பிக்க முடியாதாகையால்
செறிவான வளையல்கள் ஒலிக்கும்படி கைகளை வீசிக்கொண்டு கொஞ்ச நேரம் அந்த இடத்தில்
சுற்றித்திரிந்துவிட்டு வருவோம், செல்லலாம் தோழியே!
ஒளிர்கின்ற வாட்படையினையுடைய வெற்றி பொருந்திய பாண்டியன்
குற்றமில்லாத படைப்பயிற்சியுடன் தான் மேற்கொண்டு சென்ற போர்க்களங்களில் வாகைசூடும்போதெல்லாம்
களிற்றியானையைப் பரிசிலாகப் பெறுவதனால் உண்டு வாழ்கின்ற அம்மன்னனுடைய பாணன் அடிக்கின்ற
தண்ணுமையினது கண்ணைப்போல (அவள்) அடித்துக்கொள்ளட்டும் தன் வயிற்றை

#107 பாலை காவிரிப்பூம்பட்டினத்துகாரிக்கண்ணனார்
நீ இவளை உடன் கொண்டுசெல்லும் விருப்பத்தினை அவள் கேட்கும்போதெல்லாம் பலவற்றையும் நினைந்து;
அன்புடைய தனது நெஞ்சத்தினுள்ளே அந்நினைவுகளை ஆராய்ந்து பார்த்து, துன்பச்சுமையால் மெலிந்துள்ள
எனது நெஞ்சத்தின் துன்பத்தை நீக்கும்பொருட்டு, (உன்னுடன்),
கருங்கல்லாலான அகன்ற பாறையில் கிடத்தி, வயிற்றுப்பகுதியைத் தின்றுவிட்டு
பெரிய புலி விட்டுச்சென்ற ஆண்மானின் காய்ந்துபோன தசையை,
வழிப்போக்கரான புதியவர்கள் கண்டு மகிழ்ச்சிகொண்டு, அவ்விடத்தில்
காற்றால் ஒலிக்கின்ற முங்கிலில் விளைந்த நெல்லின் அரிசியுடன் சேர்த்து
பசுமாடுகள் கிடைபோட்டிருக்கும் இடத்தில் கிடைக்கும் தயிரை ஊற்றிச் சமைத்த
வெண்மையான கொழுப்பை உருக்கிக் கூட்டிய? மிக?வும் வெண்மையான? சோற்றினைப்
புள்ளிகளைக்கொண்ட அடிமரத்தையுடைய தேக்கின் அகன்ற இலையிலிட்டு உண்ணும்,
கல்வியறிவில்லாத நெடுமொழி கூறும் சினம் மிக்க நாயைடைய வடுகமறவரின்
வலிய ஆண்மை விளங்குகின்ற கடத்தற்கரிய போர்க்களங்களையும் கடந்து சென்று, (துன்பம் மிக்கு)
சரிந்து விழும் மண்ணினால் ஏற்படும் தீங்குக்கு அஞ்சும்படியான ஒற்றையடிப் பாதையில்
இன்னாததான ஏற்றத்தில் ஏறும்போது வழுக்கி விழுந்து, கால்கள் மடங்கிக்கொண்டு (துன்பம் மிக்கு)
தன்னந்தனியே கிடக்கும் உடல்வலிமை வாய்ந்த பொதி சுமக்கும் காளையினுக்கு
அழ?கிய? த?ளிரையுடைய இலுப்பையின் வெட்டுப்பட்ட வாயையும், வெள்ளிய? உள்துளையையும் உடைய பூவை
புன்மையான தலைமயிரையுடைய சிறுவர்கள் தம் வில்லினால் வீழ்த்தி, (அதனைத் தின்னவரும்)
மரைமானைத் துரத்தி (காளையினுக்கு) உண்ணக்கொடுக்கும் மலையிடத்து அமைந்த சிறிய ஊர்களில்
மாலைக் காலத்தில் உனக்கு இனிய துணையாகத் தங்கி, காலையில்
புதிய தேனையுடைய நறிய மலர்கள் பருத்த பரற்கற்களின் மேல் உதிர்ந்துகிடத்தலால்
திருமண மனை போல நறுமணங் கமழுகின்ற காட்டுவழியே
உன் வாழ்க்கைத் துணைவியாகிய குளிர்ந்த கூந்தலையுடைய என் தோழியும் (உன்னுடன்) வருவாள்

#108 குறிஞ்சி தங்கால் பொற்கொல்லனார்
தாம் அன்புகொண்டவரின் துன்பத்தை நீக்கி அவரைப் பாதுகாத்தருளுதலும் முழுதும் உணர்ந்த சான்றோர்க்குப்
பொருந்திய செயலாம், ஆனால் இது எப்படியோ?, முத்துக்கள்
மலையடிவாரத்தில் சிதறிக்கிடப்பது போல், யானையின்
புள்ளியினையுடைய முகத்தில் மோதிய புதிய ஆலங்கட்டி
பளிங்கினைச் சொரிவது போல பாறையில் விழுந்து அழகுசெய்ய,
மேகங்கள் சினந்தெழுந்த இடம் அகன்ற வானத்தில்
தீக்கடைகோலிலிருந்து தெறித்து விழும் பொறிகளைப் போல கொடிவிட்டு மின்னி
மிக்க மழையைப் பொழிந்த நடுநாளாகிய இரவில்,
அரிய உயிரினங்களையே உணவாகக் கொண்ட கொல்லும் தொழிலையுடைய விலங்குகள் நடமாடும்
இருட்டுக்குள்ளே தனியாக வருவதால் சிறிதளவும்
நமக்கு அருள்செய்கின்றவனாய் இல்லை, வாழ்க தோழியே! - இரவினில்
புள்ளிகள் விரவிய மயிலைக் கண்டு வெருண்டு, பாம்புகளின்
வருத்தத்தைத் தரும் அரிய தலைகள் படமெடுப்பதைப்போன்று
காயாம்பூவின் மெல்லிய கிளைகளைத் தீண்டும்படி நீண்டு அரும்பிய
பல தூக்கிய துடுப்புகள் போன்று அசையும் கொத்தாகிய காந்தளின்
அழகிய மலர்களிலுள்ள நறிய தாதினை நுகருகின்ற வண்டுகள்
கையில்வைத்து ஆடுகின்ற சூதாடும்காயைப்போலத் தோன்றும்
மேகம் தவழும் உச்சிகளைக்கொண்ட மலைக்கு உரியவன் - (நமக்கு அருள்செய்கின்றவனாய் இல்லை)

#109 பாலை கடுந்தொடை காவினார்
பல இதழ்களையுடைய மென்மையான மலர் போன்ற மையுண்ட கண்களையும், நல்ல யாழின்
நரம்பு ஒலிப்பது போன்ற மிக இனிய சொற்களையும் உடைய
நமக்குத் எல்லா நலனும் தரும் ஒப்பற்ற ஒருத்தி இருக்கும் ஊருக்கு (திரும்பிச் செல்ல வேண்டுமென்றால்),
பகைவர் மார்பினை உழுகின்ற கொம்புகளையுடைய களிறுகளின் கூட்டம் கூட
அடர்ந்த காடாக வளர்ந்த உயரமான மரங்களைக் கொண்ட சோலைகளும் -
ஒன்றையொன்று விரும்பும் அணில்கள் ஓடியாடித்திரியும் மூங்கில்கள் வளர்ந்த அகன்ற இடமும் -
தீட்டுவதால் வெள்ளையான நுனிகளைக் கொண்ட அம்புகளின் வேகத்தால் இறந்தோரின்
எண்ணிலடங்காத தழையிட்டு மூடிய பதுக்கைகளையுடைய
பாலைவெளியில் இருக்கும் பல்வேறாய்ப் பிரியும் வழிகள் ஆறலைக் கள்வரால் கொள்ளப்பெற்றது என்று
வழிச்செல்வோர் இல்லாமற்போன கடினமான பாதையில் அறியாமல் வந்தவர்களின்
கையில் பொருள் இல்லையாயினும் அவரின் உடம்பைப் பற்றிக்கொண்டு (மனமிரங்கி)
அவரின் உயிரினைக் கொல்லாதவராய் அவரை விட்டுவிட்ட தவறுக்காக,
பெரிய களிற்றின் கொம்புடன் புலியின் வரியினைக் கொண்ட தோலினைத் தண்டமாக வசூலிக்கும்
அறப்பண்பு சிறிதுமில்லாத எயினர் வேந்தன் ஆளுகின்ற
வறங்கூர்ந்து பாழ்பட்டுக்கிடக்கும் மலைகள் பற்பலவும் - இடையிட்டுக் கிடக்கின்றனவே.

#110 நெய்தல் போந்தை பசலையார்
அன்னையானவள் தெரிந்துகொண்டாலும் தெரிந்துகொள்ளட்டும், அலர்தூற்றும் வாயினால்
'அம்' என்னும் ஒலியுடன்  இச்சேரியில் வாழ்கின்ற மகளிர் கேட்டாலும் கேட்டுக்கொள்ளட்டும்
(தலைவியின் மெய்வேறுபாட்டிற்கு) வேறொரு காரணம் இல்லையென்பதை நீ தெளிவாய்த் தெரிந்து கொள்ள,
வளைந்த சுழிகளையுடைய ஆற்றின் சங்கமுகத்திலுள்ள தெய்வத்தை நோக்கிச்
சத்தியம்செய்து சொல்லுவேன் உனக்கு, கடற்கரைச் சோலையில்
எம்மை மாலை போலத் தொடர்ந்து வரும் தோழிமார் கூட்டத்தோடு சென்று கடலில் சேர்ந்து நீராடியும்
மணல்வீடு கட்டிக்கொண்டும், மணற்சோறு சமைத்துக்கொண்டும்
விளையாடி வருந்திய வருத்தம் தீரும்படி சிறிது நேரம் நாங்கள்
இளைப்பாறி இருக்கும்போது, கிட்டே வந்து
”பெரிய, மென்மையான, மூங்கில் போலும் தோள்களையுடைய மடப்பம் பொருந்திய நல்ல பெண்களே!
பகல்நேர வெளிச்சமும் குறைந்தது, களைப்பாயிருக்கிறேன், 
இந்த மெல்லிய இலைப்பரப்பில் நீங்கள் ஆக்கிய சிறுசோற்றை விருந்தினனாக உண்டு, நானும் இந்த
ஆரவாரமுடைய சிறுகுடியில் தங்கினால் என்ன?”
என்று (கேலியாகக்) கேட்டான் ஒருவன், அவனைக் கண்டு
முகத்தைக் கவிழ்த்துக்கொண்டு, ஒருவர் முதுகை ஒருவர் பற்றிக்கொண்டு
“இந்தச் சாப்பாடு உமக்குப் பொருத்தமானது அல்ல, இழிந்த
கொழுமீனால் ஆக்கிய சோறு” என்று கூறினோம், சட்டென்று
“நீண்ட கொடிகள் அசையும் தோணிகள் தோன்றுகின்றன,
போய்ப் பார்ப்போமா?” என்று அந்த மணல்வீடுகளைக் காலினால் சிதைத்துவிட்டு
நிற்காமல் ஓடிப்போன பலருக்குள்
என்னையே உற்றுப்பார்த்த பார்வையுடன், “நல்ல நெற்றியையுடையவளே!
நான் போகட்டுமா?” என்று தனது நெஞ்சம் வருத்தப்படச் சொல்லிவிட்டு
நான் ”போங்கள்” என்று சொல்லியும், (போகாமல்) பார்த்துக்கொண்டே, தனது
நீண்ட தேரின் கொடிஞ்சியைப் பிடித்துக்கொண்டு 
நின்றிருந்தவனே என் மகளின் மெய்வேறுபாட்டிற்குக் காரணம் போலும் - (என்று அன்னை அறியினும் அறிக)

#111 பாலை பாலை பாடிய பெருங்கடுங்கோ
தம் முன்னோர் வைத்துப் போன பொருள் உள்ள அளவிலே மகிழ்ந்திருக்கமாட்டாராய், தம் பகைவர்
இகழும் நெஞ்சத்தோடு கூறுகின்ற அம்பு போன்ற பழிச் சொல்லிற்கு நாணி, (பொருளீட்டச்சென்றவர்)
விரைவில் வந்துவிடுவார், வாழ்க தோழியே, பட்டத்து
யானை தன் கையில் உயர்த்திப் பிடித்த பட்டுக்கொடியினைப் போல
காய்ந்துபோன ஞெமை மரத்தின் மீது பின்னிய சிலந்திக்கூடு
ஓடைக்குன்றம் என்னும் குன்றிலுள்ள மேல்காற்றினால் அசைய,
அதைப் பார்த்து மேகம் என்று குழம்பிப்போன மயக்கத்தையுடைய கூட்டமாகச் சேர்ந்த
ஓய்ந்துபோன களிறுகள் தூக்கிய வருத்தத்தையுடைய நீண்ட கைகள்
புரவலரின் புகழைத் தொகுத்துப்பாடும் கூத்தர்களின் தூம்புகளைப் போல் ஒலியெழுப்பும்
காட்டு வழியிலுள்ள ஆண்பன்றியினைக் கொன்ற நல்ல இரையைக் கொண்ட
ஆண் செந்நாய் விரைவாக அதனை இழுக்க,
ஒழுகிய குருதியைக் குடிக்கும் பருந்தின் சிவந்த செவிகள்
மறவர்கள் திரண்டு சென்று போரிடும் போர்க்களத்தில் இரவினில் மறவர்கள் தம் கையில் கொண்ட
விழுப்புண்பட்டு விழுந்த மறவருடைய புண்ணை ஆய்வதற்குரிய விளக்குகளைப் போலக் காணப்படுகின்ற
வானைத் தோயும் குவியலான மலையைக் கடந்து சென்ற நம் தலைவர் - (விரைவில் வந்துவிடுவார்)

#112 குறிஞ்சி ஆவூர் கிழார்
கூனிய முதுகினையுடைய கரடிகளின் குறுகக்குறுக அடியெடுத்து நடக்கும் கூட்டம் 
கறையான்கள் கட்டிய செங்குத்தாய் நிற்கும் நிலையினையுடைய புற்றினது
மண்ணால் புனைந்த நெடிய குவடுகள் உடைந்து போகும்படி அகழ்ந்தெடுத்து
புற்றாஞ்சோறாகிய இரையை விரும்பித் தின்பதற்குச் செல்லுகின்ற இந்த நள்ளிரவின் இருளினூடே,
அண்மையில் குட்டியை ஈன்ற, வேட்கையையுடைய பெண்புலி பசித்ததாக தறுகண்மையையுடைய ஆண்புலி
ஒளிவீசும் ஏந்திய கொம்புகளையுடைய ஆண்யானையைக் கொன்று முழங்குகின்ற
குளிர்ந்த அடர்ந்த இருட்டான சோலையில் நாங்கள் தனித்திருக்கிறோம் என்று நினைக்காதவனாய்
இங்கு வந்ததினால் எமக்குத் தீங்கினையே செய்திருக்கிறாய்.
அதனால் நீ வராமற்போனால் ஒரு நாள் இடைப்பட்டாலும் என் தலைவி உயிர் வாழாள்
ஒவ்வொருநாளும் என் தலைவியின் தோள்களை முயங்குதலை நீயும் விரும்புகின்றாய்
எவ்வளவுதான் காதலர் என்றாலும் சான்றோராயிருப்பவர்கள்
பழியுடன் சேர்ந்து வரும் இன்பத்தினை விரும்பமாட்டார்,
கலியாணம் செய்துகொண்டால் என்ன? வானைத் தோயும் மலைநாட்டவனே!
கூட்டமான கலைமான்கள் அடிக்குரலில் தாழ ஒலிக்கும் மிளகுக் கொடி படர்ந்த இம் மலைச் சாரலில்
எய்துவதற்கு அரிய களவொழுக்கத்தால் நீங்கள் ஏற்கனவே சேர்ந்திருப்பதை அறியாத எம் சுற்றத்தார்
தொன்றுதொட்டு வரும் முறைப்படி பெண்கேட்டுவந்து, மணவிழாவும் நடந்தால்
நீ இவளை மனைவியாகக் கொள்ளும் சடங்குகளையும் உங்கள் மணக் கோலங்களையும் கண்ணாரக் கண்டு
யாரோ அயலாராகிய விருந்தினர்போல இருந்து, இவளின்
புதிய நாணமாகிய அடக்கத்தையும் காண்பேன் நான்.

#113 பாலை கல்லாடனார்
தம் நண்பர் நன்றாக இல்லாத காலத்திலும் தமது நட்புப்பண்பில் மாறுபடாமல்
துன்பமுற்ற அவரிடம் சென்று அவர் வழி நின்று அவர்க்கு உதவும் பிறழாத தமது கோட்பாடு காரணமாக,
புல்லிய தலையையுடைய இளைய பிடி யானைகளைப் பாணர்க்குத் தரும் தலைவனான,
பிடியுடன் களிற்றையும் வாரி வழங்கும் தனது வள்ளன்மையால் இன்புறும் அஃதை என்பவனைப் பாதுகாத்து,
அவனைக் காவல் மிகுந்த இடத்தில் நிலைநிறுத்திய பல வேல்படையினையுடைய கோசர் என்பவரின்
புதிய கள் கமழும் நெய்தலம்செறு என்னும்
வளம் பொருந்திய நல்ல நாட்டைப் போன்ற என் தோளினைச் சேர்ந்து,
ஆரவாரமுடைய பழைய ஊர் அலராகிய பழிச்சொற்களை மிகுதியாகக் கூற,
நமக்கு அருள் செய்யாமல் நம்மைப் பிரிந்து சென்ற நம் காதலர், எப்பொழுதும்
கற்கள் தைத்து மெலிந்துபோகாத (செருப்பணிந்த, அதன்) ஒசை இனிய வலிய அடியினையுடையவனும்
மிக்க வலிய மூங்கிற் குழாயில் வைத்த உணவினையுடையவராய்,
தன் எல்லையைக் கடந்து இருப்பவராயினும், நல்ல சமயம் பார்த்து, பகைவர்கள்
பாதுகாப்புடன் இருக்கும் உணவு மிக்க அரண்களில் சென்று
திரண்ட இமிலையுடைய காளைகளுடன் கூடிய பகைநாட்டு ஆனிரைகளைக் கவர்ந்து செலுத்திக்கொண்டுவரும்
செறிந்த கரிய பூணையும் நெய் தடவிய தண்டையும் உடைய நீண்ட வேலினையும்
விழாக் கொண்டாடியது போன்ற கொழுமையான பல உணவையும் உடைய,
பகைவர்க்குப் புறங்கொடாத பாணன் என்பவனின் நல்ல நாட்டிற்கு அப்பாற்பட்ட
வழியில் செல்லும் புதியவர்களைக் கொன்ற கள்வர்கள்
தங்களின் ஆயுதங்களைக் கழுவிய சிவந்த நிறமுடைய அரித்தோடும் சிறிதளவு நீரையுடைய
நடமாட்டம் அற்ற துறையாகிய குறுமணல் பொருந்திய கரையினைத் தாண்டிச் சென்று
மிகவும் தொலைவிலுள்ளார் என்று பலரும் கூறுவதால் சிறுமைப்பட்டுப்போன என்
செயலற்ற நெஞ்சத்தின் துயரம் நீங்குமாறு
அழாமல் இருக்கவும் உரியவராவோம், பருத்த அடிமரத்தில் கிளைத்த
ஆடுகின்ற அழகிய கிளையிலுள்ள தன் கூடு பொலிவிழந்துபோக
இடம் மாறிச் சென்றுவிட எண்ணிய பறவை பறந்து சென்றதைப் போல்
என் உடம்பு இங்கே கிடக்க அதனின்றும் பிரிந்து புறப்பட்டு அவர்
வினையாற்றுமிடத்திற்குச் செல்லட்டும் என் உயிர்

#114 முல்லை
'கேட்பாயாக, ஏடி, தோழியே! வேலன்
வெறியாடும் களத்தில் சிறிய, பலவாகப் பரப்பப்பட்ட
கதம்பமான பூக்கள் போலப் பூக்கள் உதிர்ந்துகிடக்கும் குளிர்ந்த மணங்கமழும் முல்லைநிலத்தில்
வெப்பம் மிகுந்த கதிர்கள் தம் வெம்மை மழுங்கப்பெற்று மேற்கு மலையினை அடைந்த ஞாயிறு
பாம்பு விழுங்கிய மதியைப் போல மெதுவாக மறைகின்ற
பொலிவிழந்த இளம் மாலை நேரத்திலும் நம்மை நினைத்துப்பார்க்கமாட்டார் அவர்' என்று
(எம் காதலி) எம்மீது பிணக்கம் கொண்டு இருக்கும் துன்பம் நீங்கும் வகையில்
குதிரைநூல்களைக் கற்ற பாகனே! முன்னே பார்த்து செலுத்துவாயாக -
நெடிய கொடிகள் அசைகின்ற வானத்தைத் தீண்டுமாறு உயர்ந்த மதிலில்
நடுநிசிக் காவலர்கள் ஏற்றிவைத்த ஒளி செறிந்த விளக்குகள்
விண்மீன்கள் போன்று விளக்கமுடன் தோன்றும்
அணுகுதற்கு அரிய காவலையுடைய அச்சம்தரும் மூதூரிலுள்ள
செல்வம் நிறைந்த மனையில் நாம் கூறியபடியே அடங்கியிருக்கின்ற குற்றமற்ற கற்பினையும்
செவ்வரியோடிய மதர்த்த குளிர்ந்த கண்ணையும் மூங்கில்போன்ற தோளையும்
பிரிவாற்றாமையாகிய துன்பத்தையும் உடைய எம் காதலியைக் காண்போம்
பொன் சேணம் அணிந்த செருக்கினையுடைய குதிரைகள் பூட்டப்பட்ட தேரினை (முன்னே பார்த்து செலுத்துவாயாக)

#115 பாலை மாமூலனார்
என்றும் ஒழிவில்லாத விழாவினையுடைய, நல்லவர்கள் வாழ அச்சப்படும் பழைமையான ஊரினில்
ஒருவர் பழியேதும் இல்லாதவரென்றாலும் அவரைப்பற்றிப் பலர் புறம்பேசும்
அம்பலாகிய ஒழுக்கத்தையும் கொண்டவராய், கடுஞ்சொற்களைப் பேசும்
சேரிப்பெண்கள் நம்மை இகழ்ந்து பேசினாலும் பேசட்டும்,
நுட்ப?மான? தொழில்திறம் அமைந்த? அணிக?ல?ன்க?ளை அணிந்த? எருமை என்ப?வ?ன?து குட?நாட்டினைப் போன்ற
என?து அழ?கிய ந?லம் ஒழிந்துபோனாலும் போகட்டும், என்றைக்கும்
நோயில்லாமல் இருப்பாராக நம் காதலர்; பாய்ச்சுதலில் தப்பாத வாளினைக் கொண்ட
எவ்வி என்பான் தோற்று இறந்த போர்க்களத்தில், பாணர்கள்
கையால் தொழும் முறைமையோடு, முன்னர் வாழ்த்திய, இப்போது ஒடித்துப்போட்ட
வளவிய இசையினையுடைய வளைந்த யாழின் கொம்புகளைப் போல, ஒளி பொருந்திய கொத்துக்களையுடைய
விள?க்குப் போன்ற? ம?லரையுடைய? கொன்றையின்க?ண் முற்றி விளைந்த நெற்றுக்க?ள்
பாறைமீது ப?ர?வ?லாக? உதிரும் சுர?த்தின் நீண்ட? நெறியிலுள்ள?
இள?ம்பிறை போன்ற? வெண்மையான கொம்புக?ளையும் த?லைமைப்பண்பையும் உடைய? யானைப்ப?டைக?ளையும்
சினம் மிக்க ஆற்ற?லுடன் தாவிப்பாயும் குதிரைப்ப?டைக?ளையும் உடைய? அதிக?மான் நெடுமான் அஞ்சி
ஆனிரைகளைக் கைப்பற்றி மறைத்துவைக்கும் அச்சந்தோன்றும் பலவாகப் பிரியும் வழிகளிலே,
நலம் பொருந்திய, கண்டோர் ஆராய்ந்து போற்றத்தகுந்த நமது பேரழகு அழிந்து போகும்படி, தொலைவான நாட்டில்
நம்மைப் பிரிந்து வாழும் பொருளீட்டும் பணி
இன்னும் கைகூடிவராததால் தம் இருப்பை நீட்டிக்கொண்டு செல்பவர் - (நோயில்லாமல் இருப்பாராக)

#116 மருதம் பரணர்
தீ கொழுந்துவிட்டு எரிவது போன்ற தாமரைப்பூக்களின் இடையிடையே
செந்நெல்லை அறுத்து அதன் தாளைக் குவித்துவைத்த கதிரறுப்போர்
தங்களுக்குக் கள்ளினை ஏற்றிக்கொண்டு அலைந்துதிரிந்துவரும் வண்டி சேற்றில் மாட்டிக்கொண்டால்
சிறந்த கரும்புத் தட்டைகளை அடுக்கிவைத்து அண்டக்கொடுக்கும் ந?ன்கு நீர் பாய்கின்ற ஊரின் த?லைவ?னே,
நிச்சயமாய் நீ பெரிதும் வெட்கமில்லாதவனாயிருக்கிறாய், பொரியினைப் போல்
புங்கம்பூ மலரும் அகன்ற நீர்த்துறை பொலிவுபெற, ஒளிபொருந்திய நெற்றியினையும்
நறிய மலர்கள் நிறையச் சூடிய காண்பதற்கினிய குட்டையான, பலவான கூந்தலையும்,
மாவடு போன்ற கண்களையும், முத்துச்சரம் அசையும் அழகிய முலைகளையும்,
நுண்மையுடைய அழகு நலத்தினையும் உடைய ஒரு பரத்தையுடன், நேற்று
குளிர்ச்சி தங்கிய நீரில் விளையாடினாய் என்று அறிந்தோர் எம்மிடம் கூறினர், அதுவேதான்
நாங்கள் பொய்யென்று மறுத்து மூடி மறைக்கவும் எங்களையும் மீறி
ஊரெங்கும் பெரும்பேச்சாய்ப்போய்விட்டது; அதுதான், மலர்ந்த பூமாலையினையும்
மை கொண்டு அழகு செய்த யானையையும் உடைய மறம் பொருந்திய போரில் வல்ல பாண்டியனுடைய
என்றும் நீங்காத திருவிழாக்களையுடைய மதுரை நகரத்தின் பக்கத்திலுள்ள போர்க்களத்திலே
தம்முள் ஒன்று சேர்ந்து போரிடுதற்கு எழுந்துவந்த சேரனும் சோழனுமாகிய இரண்டு முடி மன்னர்களும்
அவருடைய கடல்போன்ற பெரிய படைகளும் கலக்க மெய்தும்படி அவரோடு போர்செய்து
முழங்கும் ஓசையையுடைய தம் போர்முரசங்களைக் கைவிட்டு நாற்றிசையினும் பரவி அம்மன்னர்
தம் படைகளோடு ஓடும்போது (பாண்டியன்) அவரைப் புறங்கண்ட பொழுது
வெற்றிகொண்ட அகன்ற போர்க்களத்தில் எழுந்த ஆரவாரத்தினும் பெரிதாக - (பெரும்பேச்சாய்ப்போய்விட்டது)

#117 பாலை
தான் வளர்த்த முல்லைக்கொடியோடு தான் விளையாடும் கரிய பூங்கொத்தினையுடைய நொச்சியின் நிழலையும்
அழகிய வரிகளையுடைய அல்குலையுடைய தன் தோழிமாரையும் நினையாதவளாய்
யாரோ ஒருவன் கூறிய பொய்யான மொழிகளை நம்பி, அழகிய வேலைப்பாடு மிக்க
வளம் பொருந்திய அழகிய எம் இல்லம் தனித்துக் கிடப்ப அவன் பின்னர்ச் சென்று
அச்சம் வரக்கூடிய பலவாறு பிரியும் வழியையுடைய அப் பாலைநிலத்தில், இரங்கத்தக்கதாக,
கரிய அடியினையுடைய ஓமை மரத்தின் மேல் ஏறி இருந்து, வெண்மையான தலையையுடைய 
பருந்து தனது பெடையினை அழைக்கும் பாழ்பட்டுக் கிடந்த நாடாகிய அவ்விடத்தில்
பொன் வளையல்கள் ஒலிக்கும்படியாகக் கைகளை வீசி, தன் சிவந்த அடிகளில் அணிந்த
சிலம்புகள் சிரிப்பன போல கலகலக்க நடந்து சென்ற என்னுடைய மகளுக்கு -
நறுமணத்தைலத்தை விரலில் தோய்த்துக் கோதி வளைந்த கொத்தான கூந்தலை வாரி, கால்காலாக வகுத்து
நான் மலர்களை அவற்றிடையே சேர்ப்பதற்கு, மயிர்ச் சந்தனத்தைப் பூசிக்கொள்ளவும் மறுக்கின்றவள்
தன்னையே ஒத்த அழகையும் விருப்பத்தையும் உடைய காதலனாகிய தலைவன்
நறுமணங்கமழும் பாலைநிலத்துப் பல்வேறு மலர்களையும் சூட்டுவதற்காகத் தன் கூந்தலைப் பின்னிவிட
அவளுடைய சிறிய பிடரி மறையும்படி அப் பின்னல்கள் அலையலையாய் தாழ்ந்து தொங்கினவோ -
நீண்ட அடியையுடைய மாமரத்தில் முற்றிக் கனிந்த வெள்ளிய பழத்தை
வளைந்த கால்களையுடைய ஆமையும் அதன் குஞ்சும் கவர்ந்து தின்னுகின்ற
பொய்கைகள் சூழ்ந்துள்ள என்றும் பொய்க்காத புதுவருவாயையுடைய
வாணனது சிறுகுடி என்னும் ஊர்க்கு வடக்கே இருக்கும்
இனிய நீருள்ள காட்டாற்றின் நெளிநெளியாய் இருக்கும் கருமணல் போன்று - அலையலையாய் தொங்கினவோ!

#118 குறிஞ்சி கபிலர்
ஆரவாரிக்கின்ற வெள்ளிய அருவியையுடைய விளக்கமான எமது உச்சிமலைச் சாரலிலே
தேன் மணங்கமழுகின்ற பூங்கொத்துக்களிலே மலர்ந்துள்ள வேங்கை மலரை அணிந்து கொண்டு
தொண்டகப்பறையின் தாளத்திற்கு ஏற்றாற்போல, மகளிரொடு கலந்து
தெருவில் குரவைக் கூத்தாடுகின்ற சிறுகுடியாகிய எமது ஊரினில்
வடிவங்கொண்டு வருகின்ற முருகனைப் போன்ற அழகுடையவனாய், வலிய வேட்டைநாய்கள் பின்னே வர
பகல்நேரத்தில் வந்தால் ஊரார் கூறும் பழிச்சொல்லுக்கு அஞ்சுகிறோம், பகைமை கொள்ளும்படி,
கரிய பெண்யானையோடும் கன்றோடும் கூடிய அகன்ற வாயினையுடைய
நீண்ட கையினைக் கொண்ட யானையைக் கொள்ளுதல் பிழைத்து, அவை மறைந்திருக்கும்படி செய்த
கொல்லும் புலி நடமாடும் மிகுந்த இருள் சூழ்ந்த நள்ளிரவில்
நீ தனியாக வருவதற்கு அதனைக்காட்டிலும் அஞ்சுகிறோம்; 
இவளுக்கு இனி என்ன ஆகுமோ? பலநாள்
சந்திப்பிடமாகக் கொண்ட முற்றிக்காய்ந்த கதிரையுடைய தினைப்புனத்தில்
கிளிகளை ஓட்டுவதற்கு அவள் பாடும் பாடலும் இனி இல்லாமற்போயிற்று - (கதிரும் கொய்யப்பட்டது)
மிகவும் இரங்கத்தக்கவள் - உன்னுடைய அருளையன்றி வேறொரு துணையும் இல்லாத இவள்.

#119 பாலை குடவாயில் கீரத்தனார்
நெற்றியும், தோளும், தேமலையுடைய அல்குலும்
நிறமும், அழகும், கண்களின் செவ்வரியும் வாடிப்போகும்படி
இவள் வருந்துவாள் என்று திருத்தமாகக் கண்டு வைத்தும்
இவளை மணந்துகொள்ளுதலே நன்மையாம் என்று நினையாமல் பிரிந்து சென்றாலும், அவர், (வீணாக)
வழிச்செல்வோர் அறுத்துப்போட்ட பிரண்டை
இடியால் தாக்கப்பட்ட பாம்பின் பசிய துண்டு போல
வழியின் பக்கத்தே (வீணாக) வதங்கிக் கிடக்கின்ற காட்டில், (மணமுண்டாகும்படி,)
உப்புவணிகரின் கூட்டம் சமைத்து உண்டு கைவிட்டுப்போன கல்லால் உண்டாக்கிய அடுப்பினில்
வலிய வில்லையுடைய மழவர் (மணமுண்டாகும்படி) ஊனைப் புழுக்கி உண்ணும்
காட்டுவழி நடமாட்டம் அற்றதாகையால் பெண்களோடு செல்வதற்கு ஏற்றதல்ல என்னாமல், ஊக்கம் மிகுந்து
நெய்தல் பூப் போன்ற உருவத்தையுடைய அழகாக ஒளிரும் அகன்ற இலையினையும்
அமைவாகத் தொடுக்கப்பட்ட மயில்தோகையால் பொலிவுற்ற காம்பினையும்
மூட்டுவாய் அமைந்த திண்ணிய சுரையினையும், கருமையான தண்டினையுமுடைய வேலுடன்
பகையைத் தணிவிக்கச் செல்லும் போர்க்களத்திற்குத் தம்முடன் நாமும் துணையாகிச் செல்லத்
துணிந்திடுவாரோ? துண்டமாகப் பிளவுபடும்படி
மறத்தையுடைய புலியுடன் போரிட்டு வருந்திய தழும்புள்ள நெற்றியில்
மிக்க நோயாகிய துன்பத்தோடு நீர் உண்பதற்காக விரைந்து சென்று
மண்ணில் முழங்காலை மடித்து ஊன்றிய நெடிய நல்ல யானை
தன் கையால் தோய்த்தும் நீர் கிடைக்காததால் பெருமூச்சுவிடும் வறண்டுபோன சுனையினையுடைய
மேகங்கள் படியும் உச்சியினையுடைய மலையடிவாரத்தில் செல்லும் வழியில் -

#120 நெய்தல் நக்கீரனார்
முருகக்கடவுளின் மார்பினில் கிடக்கும் முத்தாரம் போல
சிவந்த வானத்தில் பொருந்தி, மீனை உண்ணும்
பசிய காலையுடைய கொக்குக்கூட்டம் வரிசையாகப் பறந்து உயர
பகற்பொழுதினை மெல்ல மெல்லக் கழித்து மேற்குத்திசையில்
மலையை அடைந்தது, பல கதிர்களையுடைய ஞாயிறு,
தனது மதர்த்த அழகிய கண்களில் நீர் ஒழுக, (இவள்)
மிக்க நாணத்தைக்கொண்ட சிறிய மெல்லிய சாயலினையுடைய (இவள்)
தனது மாண்புற்ற அழகு கெட, ஏக்கமுற்று, நிற்காமல்
அழுகையைத் தொடங்கியிருக்கிறாள், பெருமானே! அதனாலும்,
உப்பங்கழியிலுள்ள சுறாமீன் தாக்கிய புண்பட்ட காலையுடைய நினது ஊர்தியாகிய கோவேறுகழுதையும்
நீண்ட நீரினையுடைய கருமையான கழியில் நடப்பதற்கு வலிமை குன்றியதால், (இங்கு இளைப்பாறி),
வலிய வில்லினை ஏந்திய உன் ஏவலரொடு இந்த இரவினில் செல்லாமல்
(இங்கு இளைப்பாறி) நீ தங்கிச்சென்றால் உனக்குக் கேடு ஒன்றும் இல்லையே!
பனைமரங்கள் ஓங்கிய வெண்மையான மணல் பரந்த தோட்டங்களில்
அன்றில் பறவை தன் துணையை அழைக்கும் அவ்விடத்தில்
சிறிய கொத்துக்களான நெய்தல் பூக்களையுடைய எம் பெரிய கழிசூழ்ந்த ஊரில் - 

#121 பாலை மதுரை மருதன் இளநாகன்
நெஞ்சமே! நாம் இப்போது நகைப்பை உடையவர் ஆயினோம், கடுமையாகச் சுடுகின்ற
கோடைக் காலம் நீண்டுசெல்கின்ற மேகங்கள் நீங்கிப்போன வழியில் நாள்தோறும்
தன் வறுமை மிக, முன்னர் குளிப்பதற்கான நீர் இருந்த சிறிய குளத்தில்
தோண்டப்பட்ட குழியினில் குடிக்கமுடியாத கலங்கிய நீரால்
கன்றையுடைய இளமையான தன் பெண்யானையின் மென்மையான தலையைக் கழுவிவிட்டு,
பின் மிஞ்சிய சேற்றை முகந்து தன் மேல் சொரிந்துகொண்டதால் நிறம் மாறிய வலிய ஆண்யானை
சிவந்த காம்பினையுடைய வெண்மையான பூங்கொத்துக்கள் மேலும் கீழும் அசையப் பற்றி இழுத்து
தினவுடைய தன் முதுகினில் தேய்த்துக்கொள்ளும், வழியோரத்தில் இருக்கும் வெண்கடம்பு மரத்தின்
சுருங்கிப்போய் வரிவரியாக இருக்கும் நிழலில் தங்கி, நம்முடன்
தான் கூட வருவேன் என்கிறாள் பெரிய மென்மையான தோளினையுடைய நம் காதலி;
மற்றவர்க்குத் துன்பம் செய்யும் மழவரின் வண்டிச்சக்கரங்கள் தேய்த்து உருவாக்கிய தடங்களையுடைய
வழிச் செல்லும் மக்கள் சோறு கட்டிக்கொண்டுவந்து உண்டு எறிந்த வெண்ணிறப் பனையோலைக் குடைகளை
மிக்க விசையுடன் சூறாவளிக்காற்று தூக்கியெறிதலால், தன் பெண்மானை நினைத்து - 
மருண்டுபோன ஆண்மான் - அதனை அழைக்கும் இடங்களையுடைய
கருத்த முகங்களையுடைய குரங்குகள் மிகுந்திருக்கும் காட்டினில்

#122 குறிஞ்சி பரணர்
நிறையக் கள்ளினைக் குடிக்கும் சிறுவர்கள் ஆடும் இந்த ஆரவாரமுடைய பழமையான ஊர்
திருவிழாக்காலம் இல்லையென்றாலும் உறங்காது இருக்கும்;
வளமுடைய கடைத்தெருவும் மற்ற தெருக்களும் உறங்கி ஒலியடங்கிப்போனாலும்
பெருத்த ஒலியுடன் கூடிய கொடிய சொற்களைப் பேசும் அன்னை தூங்கமாட்டாள்;
நாம் வெளியேசெல்லாமல் நம்மைக் கட்டிவைத்திருக்கிற அரிய சிறையைப் போன்ற அந்த அன்னை தூங்கினாலும்,
துயிலாத கண்களையுடைய காவலர்கள் விரைவாகச் சுற்றிக்கொண்டிருப்பர்;
ஒளிர்கின்ற வேலினையுடைய அந்தக் காவலர் துயின்றாலும், கூர்மையான பற்களையும்
வலமாகச் சுருண்டிருக்கும் வாலினையும் உடைய நாய் குரைக்கும்;
ஒலிமிக்க வாயினையுடைய நாய் குரைக்காமல் தூங்கிப்போனாலும்
பகற்பொழுதின் வெளிச்சம் போல ஒளியினை உமிழ்ந்து வானத்தில்
அகலம் பொருந்திய மதியம் நின்று ஒளிவீசும்;
அந்த மதியமானது மேற்குமலையினை அடைந்து மிகுந்த இருள் படிந்தால்
வீட்டு எலிகளை உணவாகக் கொண்ட வலிமையான வாயினைக் கொண்ட கூகை
பேய்கள் திரியும் நள்ளிரவில் நம் உள்ளம் திடுக்கிட்டு அஞ்சி அழியும்படி குழறும்;
பொந்தில் வாழும் அக் கூகைச் சேவல் ஒலியெழுப்பாமல் உறங்கிப்போனாலும்,
வீட்டில் அடங்கிக்கிடக்கும் கோழிச்சேவல் தனக்கே உரித்தான குரலை எழுப்பிக் கூவும்;
இவை எல்லாம் இல்லாமற்போன பொழுது ஒருநாள்
அவரை எண்ணி நிலையில்லாமல் தவிக்கும் நெஞ்சத்தில் இருக்கும் அவர் வராமற்போய்விடுவார்; அதனால்,
பரல்கள் இடப்பட்ட சதங்கைகள் ஒலிக்க நல்ல நடையால் சிறப்புற்று
ஆதி என்னும் நேரோட்டத்தில் தேர்ச்சிபெற்ற பாய்ந்து செல்லும் ஓட்டத்தினையுடைய நல்ல குதிரைகளையும்
மதில் அரணாகிய காவலையுமுடைய தித்தன் என்னும் சோழமன்னனுடைய உறையூரைச் சூழ்ந்துள்ள
கற்கள் நிறைந்த காவற்புறங்காடு போன்ற
பல்வேறு தடைகளைக் கொண்டது நம் களவுக்காதல்.

#123 பாலை காவிரிப்பூம்பட்டினத்து காரி கண்ணனார்
உண்ணாததினால் ஒட்டிப்போன விலாப்பக்கத்தையும்,
நீராடாத விரதத்தையும் கொண்ட தவம்மேற்கொள்வோர் போல
மலைகள் செறிந்த சிறிய வழிகளில் வரிசையாகச் சேர்ந்து செல்லும்
காட்டு யானைகள் தம் அழகு அழிந்துபோகும் இடமான மலைநிலத்தைக்
கடந்துபோய்ப் பொருள் ஈட்டிக் கொண்டுவருவதையும் செய்கின்றாய் இல்லை, சிறப்பான,
சிறிதளவான ஐந்து பகுப்பினைக் கொண்ட கூந்தலையுடையவள் இருக்கும் நல்ல இல்லத்தில் அமைதியுடன்
தங்கியிருந்தால் வறுமை வந்துவிடுமோ என்று அஞ்சவும் செய்கின்றாய்; இவ்வாறு தடுமாறி அழியும் நிலையைக்
கொண்டிருக்கிறாய், வாழ்க, என் நெஞ்சமே! நிலவு என்று சொல்லும்படியாக
இரும்பாலாகிய இலைகள் ஒளிவீசுகின்ற நெய் மிகவும் பூசப்பட்ட நீண்ட வேல்களையும், ,
கரிய மேகங்களைப் போன்ற பல கேடயங்களையும் கொண்ட பெரிய கொடைத்தன்மை நிறைந்த சோழரின்
ஓடக்கோலையும் மூழ்கச்செய்யும் காவிரியாறு கடலில் புகும் பெரிய நீர்த்துறையில்
இறா மீன்களோடு வந்து மாலைகளோடு திரும்பச்செல்லும்
பெரிய கடலின் கடற்பெருக்கினைப் போல
போகலாமா, இருக்கலாமா என்ற இவை ஒன்றை உறுதியாகக் கொள்ளமாட்டாய்- போய் ஈட்டும் பொருளுக்காக.

#124 முல்லை மதுரை அறுவை வாணிகன் இளவேட்டனார்
பகைவர்கள் நல்ல அணிகலன்களைக் களிறுகளுடன் ஏந்திக்கொண்டு
வந்து திறையாகக் கொடுத்து வணங்கி நின்று, பணிமொழி கூறி
சென்றருள்க என்று வேண்டினால், நம் அரசனும்
நிலத்தைப் பிளப்பது போன்ற நெருங்கிச்செறிந்த படைகளுடனே
இன்றே நம் ஊர்க்குப் புறப்படுதல் வாய்ப்பது நல்லது;
மாடங்களால் சிறப்புற்ற நமது மாளிகையில் பெருமை அமைந்த படுக்கையில்
நம் மீது கொண்ட பிணக்கம் தீர்ந்த நிலைப்பாடு கொண்ட நம் தலைவி இன்பம் எய்தும்படியும்,
நமக்குப் பாசறையினால் உண்டான வருத்தம் நீங்கவும், பாகனாகிய நீயும்
மின்னல் வெட்டியதைப் போன்ற பொன்னால் செய்யப்பட்ட அலங்கரிக்கப்பட்ட சேணத்தையும்
கொய்த பிடரி மயிரையும் கையால் இழுத்து ஓட்டுவதற்கான பொலிவுள்ள நடையினையும் உடைய குதிரையை,
மிகுந்த மழையினால் மலர்ந்த பச்சையான முல்லைக் கொடியின்
பூக்கள் மணக்கின்ற நெடிய வழியில், அப்பூக்களில் மொய்க்கின்ற வண்டுகள் வெருண்டு பறக்க
சரியான நேரத்தில் சென்றுசேரும்படியாகச் செலுத்துவாயாக, மாலையில்
அந்திக்காலத்து இடையரின் அழகிய மூங்கில்குழலில் இசைக்கின்ற இசை
நிலாமுற்றமான அகன்ற இடத்தில் ஒலிக்கும்
வரிசையாக நிற்கும் அம்பெய்யும் புழைவாய்களுள்ள நீண்ட மதில் சூழ்ந்த ஊரினை - (காலை எய்தக் கடவுமதி)

#125 பாலை பரணர்
அரத்தினால் அறுத்த அழகிய வளையல்கள் தாம் தோளில் இறுகப்பற்றியிருக்கும் நிலை நெகிழ்ந்துபோகும்படி
இல்லறத்தில் முற்றுப்பெறாத வாழ்க்கையை நேர்செய்து முற்றுவிக்க வேண்டி
இரவம் விதையைப் போன்ற அரும்புகள் முதிர்ந்த ஈங்கை மரத்தின்
ஆலங்கட்டி போன்ற வெண்மையான பூக்கள் உதிர்ந்து பரவிக்கிடக்கவும்,
கூர்மையான வாலைக் கொண்ட ஓந்தியின் கருமையான தாடிப்பக்கத்தைப் போன்ற
தாது மிக்க குவளையின் மொட்டுகள் தம் கட்டு அவிழவும்,
உறங்காத பசிய கண்ணையும், பரந்த அடியினையும், பெரிய வாயினையுமுடைய
மதநீரொழுக்கு மாறிப்போன யானையைப் போல
மழையினைப் பொழிந்து வறிதாகிப்போய் குபுகுபுவென்று பொங்கியெழும் வெள்ளை மேகங்கள்
கருமை பொருந்திய வானின் எல்லாத் திசைகளிலும் திரியவும்
பனி வருத்துகின்ற நடு இரவின் இருளில்
தனியாக இருப்பவர்களின் பொறுத்துக்கொள்ளும் அளவை எண்ணிப்பாராமல், தண்ணென்று
வெறுக்கும்படியாக  வீசுகின்றாய், உனக்கும் எமக்கும் பகையற்ற காலத்திலும்;
கைகூப்பித் தொழப்படும் மரபினையுடைய கடவுள் தன்மை நிரம்பிய
கல்விகற்கும் செயல்பாட்டிற்காகச் சென்றவர் விரைவில் வந்துவிட்டால்,
விரிந்த பிடரிமயிரால் பொலிவுபெற்ற சிறந்த ஓட்டத்தினையுடைய நல்ல குதிரைகளுடன்
அச்சம் உண்டாக்கும் பெரும்படையும் கொண்டு, தான் விரும்பிய நாட்டில் தங்கக்கூடிய
கரிகால் பெருவளத்தான் முன்னே நிற்கமாட்டாதவராய்
வாகைப் பறந்தலை என்னும் போர்க்களத்தில் அவன் வெற்றிபெற,
தமது ஒன்பது குடைகளையும் ஒரே பகலில் போட்டுச் சென்ற
பெருமை இல்லாத மன்னரைப் போல
ஓடிப்போவாய் வாடையே நீ எமக்கு முன்னால். 

#126 மருதம் நக்கீரர்
உன் எண்ணங்களை உண்மையானவை எனக் கருதி, நீ பலவற்றையும் எண்ணி,
புன்மையான பெரிய துன்பத்தினால் பெரிதும் வருந்துவதோடு நில்லாமல், மேலும்
மலையின் உச்சியிலிருந்து தொடர்ந்து இறங்கி மிகுந்து செல்லும் வெள்ளத்தால்,
முதல்நாள் பூத்த சிறந்த மலர் குளிர்ச்சியான துறைகளில் அசைந்தாட,
கடலின் கரையைக் கரைக்கின்ற காவிரி என்னும் பெரிய ஆற்றின்
கருமணல் ஒழுகும் நீண்ட மடுக்களின் நிலைகொள்ளாத நீரும் கலங்கும்படி,
கரிய இருளையுடைய நள்ளிரவில் சென்று, தன் தமையன்மார்
விடியற்காலையில் கொண்டுவந்த திரண்ட கொம்பினையுடைய வாளைமீனுக்கு
அழகாக வளைந்த கொப்பூழையும், அழகிய சொற்களையும் உடைய பாண்மகள்
நீண்ட கொடிகள் ஆடுகின்ற கள் மிகுந்த தெருவில்
பழைய செந்நெல்லை முகந்து கொடுப்பதை ஏற்றுக்கொள்ளாதவளாகி,
கழற்காய் போன்ற பெரிய முத்துக்களையும் நல்ல அணிகலன்களையும் பெற்றுக்கொள்ளும்
வளம் மிகுந்த ஊர்களையும் பல வேற்படைகளையும் உடைய எவ்வி என்பவன்
நலம் தரும் சிறந்த மொழிகளைக் கூறித் தணிக்கவும், அடங்காதவனாய்
பொன் போன்ற கொத்துக்களான மணமுள்ள பூக்களுள்ள புன்னையாகிய காவல்மரத்தை வெட்ட விரும்பி,
திதியன் என்னும் அரசனுடன் போரிட்டு மாய்ந்த அன்னியைப் போல
நீ இறந்துபோவாய் போலும்; கிளியைப் போல
சில சொற்களைக் கூறும் சிவந்த வாயினையும், பெரிய
கயல்மீன் என்னும்படியாக ஒன்றோடொன்று போரிடும் மையுண்ட கண்களையும், மேகம் என்னும்படி
முதுகில் தாழ்ந்து இருண்டு விளங்கும் கொத்தான ஐந்து பகுப்பையுடைய கூந்தலினையும்,
மின்னலைப் போன்ற இடையினையும் உடைய இளைய தலைவியின்
பின்னே தாழ்ந்து நிற்பதை விடாத அறியாமை மிக்க நெஞ்சமே!

#127 பாலை மாமூலனார்
ஒளிவிடும் கைவளையல்கள் கழன்றுபோகும்படி மெலிந்து, நாளும்
கலங்கும் துன்பத்தால் வருந்தி நாம் இங்கே தனித்திருக்க,
வெற்றி தங்கிய முரசினையுடைய சேரலாதன் என்னும் அரசன்
தனது மரக்கலத்தைக் கடலில் செலுத்தி, பகைவரின் காவல்மரமாகிய கடம்பமரத்தை வெட்டி, இமயமலையில்
தனது முன்னோரைப் போன்று வளைந்த வில்லாகிய முத்திரையைப் பொறித்து
நல்ல நகரமாகிய மாந்தை என்னும் ஊரிலுள்ள தன் அரண்மனையின் முற்றத்தில், பகைவர்
பணிந்து திறையாகக் கொடுத்த பெருமை மிக்க அழகிய அணிகலன்களையும்,
பொன்னால் செய்த பாவையினையும் வயிரங்களையும், ஆம்பல்
என்னும் பேரெண் அளவுக்கு இடமெல்லாம் நிறையும்படிக் குவித்து, அக்காலத்தில் அவ்விடத்தில்
நிலம் அரித்துப்போடும்படி விட்டுவைத்திருக்கும் நிதியம் போன்ற பொருளை
ஒருநாளின் ஒரு பகல்பொழுதில் பெற்றாலும், அவர் வரக்கருதியிருந்த நாளுக்கு அடுத்த நாள்
தங்கியிருக்கமாட்டார், வாழ்க, தோழியே! சிவந்த கிளைகளையும்,
கரிய அடிமரத்தையும் உடைய வெண்கடம்பின் வெண்மையான மெல்லிய பூங்கொத்தினைச்
சுருண்டு வளைந்த தலைமயிர் பொலிவுபெறச் சூடி
தமது தொழிலன்றி வேறெதனையும் கல்லாத எயினமறவர்கள் வில்லினை இடப்பக்கத்தில் தழுவிக்கொண்டு
வழியில் வருவோரைப் பார்த்துக்கொண்டிருக்கும் அச்சம் வரும் கிளைவழிகளையுடைய
மொழி வேறுபட்ட வேற்று நாட்டில் இருப்பவர் என்றாலும்
குற்றமற்ற நம் காதலர் தாம் சென்ற நாட்டில் - (வழி நாள் தங்கலர் வாழி தோழி)

#128 குறிஞ்சி கபிலர்
ஊர்ப்பொதுவிடங்கள் ஒலி அடங்கி, வீட்டினரும் உறங்கிவிட்டனர்,
கொல்வதைப் போன்ற கொடுமையோடு இன்று
நடுயாமம் நம்மைக் கொள்வதற்கு வந்தால், காமம் மிகுந்து
கடலைக்காட்டிலும் ஆரவாரித்துக் கரை கடந்து செல்லும்,
இது எப்படியோ, வாழ்க, தோழியே! மயங்கிப்போய்
நாம் இந்த நிலையில் இருக்கவும், நமக்கு நன்மைசெய்யும் இயல்புள்ள நம் நெஞ்சமோ
என்னோடும் உன்னோடும் இருந்து தகுந்த யோசனை கூறாமல், நமது கையைவிட்டு மீறிப்போய்,
புதர்கள் மண்டி இருண்டு கிடக்கும் குறுகலான கடப்பதற்கு முடியாத மலைச்சரிவில் உள்ள
சிறிய சுனையில் உள்ள குவளை மலரை, வண்டுகள் மொய்க்கும்படி சூடிக்கொண்டு
குறிஞ்சிநிலத்தவனாகிய நம் தலைவன் வருகின்ற, யானையின்
முதுகில் இருக்கும் கயிற்றுத் தடம் போன்ற மலைமீதுள்ள சிறிய வழியில்,
மேகம் மழைபெய்ததால் நீர் வடிந்து
குறுகிய, செல்வதற்கு அரிய இடங்களிலுள்ள, தாமே உண்டான குழிகளுள்ள பாதையில்
இருளில் மிதிக்கும் இடத்தைப் பார்த்து, அவரின்
தளர்ந்து விழுகின்ற அடியைத் தாங்கும்பொருட்டு இன்று சென்றுவிட்டது - (எவன்-கொல் வாழி தோழி)

#129 பாலை குடவாயில் கீரத்தனார்
இவளைப் பிரிந்தபின் இவளையே எண்ணி வருந்த வேண்டிவரும் என்று நினைத்து
நள்ளிரவில் துன்பத்தால் நடுங்குமளவு அன்புடையவரான நம் துணையாகியவர் -
உன்னை மறந்து வேற்றுநாட்டில் தங்கியிருப்பதற்கு எவ்வாறு முடியும்? புல்லைத் தின்பதை மறந்து
அசையும் நெடிய மூங்கிலிலிருந்து உதிர்ந்த நெல்லைப் பார்த்து
கலைமான் தன் பெண்மானை அழைக்கும் காட்டினில்
பாறையை ஒட்டியிருந்த சிதிலமாகிப்போன குடிசையில்
பெரிய பானையின் அடிப்பகுதியில் செழித்துவளர்ந்த கொழுத்த இலைகளையுடைய பருத்தியின்
பொதி போன்ற வயிற்றையுடைய பிஞ்சினைப் பேடைகளுக்கு உண்பித்து
ஆண்பறவைகள் பிளந்துபோட்ட பஞ்சினையுடைய வெண்மையான கொட்டைகளை
வறுமையுற்ற பெண்கள் வைத்துண்ணும் உணவாகச் சேர்க்கும்
கலங்குவதற்கு ஏதுவான போர் நிகழும் சிற்றூர் மக்கள் கவலையுடன் தம் கைகளைத் தலை மீது வைக்க,
கொழுத்த பசுக்களைக் கவர்ந்து சென்று, கொன்று தின்ற கூரிய ஆயுதங்களையுடைய எயின்மறவர்கள்
கால்களில் செருப்பு அணிந்தவராய், தெளிந்த சுனைநீரை மிகுதியாகப் பருகும்
அரிய பாலைவழிகள் கடினமானவை அல்ல, நீண்ட கோல்தொழில் அமைந்த வளையல்களையும்
திருத்தமான அணிகலன்களையும், மூங்கில் போன்ற தோளினையும், தேன் மணக்கும் கூந்தலினையும்
குவளைமலர் போன்ற மையுண்ட கண்களையும் கொண்ட இவளோடு செல்வதற்கு என்று
தம் நெஞ்சில் உள்ளதை வாய்விட்டுக் கூறினார், நம் காதலர்,
அழகிய சிலவாகிய கூந்தலையும் ஆராய்ந்த அணிகலன்களையுமுடைய தலைவியே! நமக்கு -(வாய் அவிழ்ந்தனர்)

#130 நெய்தல் வெண்கண்ணனார்
நான் கூறுவதைக் கேளுங்கள், தோழர்களே! முன்னால் நின்று
பார்த்தீர்களென்றால் இவ்வாறு கூறமாட்டீர்கள்;
நுண்மையான பூந்துகள்கள் பொதிந்திருக்கும், சிவந்த தண்டினையும் கொழுத்த மொட்டினையும் உடைய
கழிமுள்ளியையுடைய உயர்ந்த மணல் அடைந்திருக்கும் கரையினில்
பேய் போன்ற தலையையும், சொரசொரப்பான அடிப்பகுதியையும் உடைய தாழையின்
முள்ளாகிய பற்களையுடைய நீண்ட தம் ஓலைகள் பலவும் சேர்ந்து பாதுகாத்துநிற்கும்
தனது வயிற்றில் உள்ள மலர் தூய்மையாக விரிந்து
அங்கிருக்கும் புலால் நாற்றத்தைப் போரிட்டு அழித்த நறுமணம் கமழும் நெய்தல் பரப்பினில்
ஊர்ந்துவரும் அலைகள் கொணர்ந்த குளிர்ந்த, ஒளியினையுடைய முத்துக்கள்
கண்டோர் உள்ளத்தைக் கவரும் அழகிய நடையினையுடைய குதிரையின் காலினை வடுப்படுத்தித் தடுக்கும்
நல்ல தேரையுடைய பாண்டியனின் கொற்கை என்னும் பட்டினத்துக் கடல்துறை முன்பு
வண்டுகள் கிளறியதால் வாய் திறந்த, வளைவான கழியில் உள்ள நெய்தல்
பூவானது அழகினில் போட்டிபோடமுடியாமல் தோற்றுப்போன மையுண்ட கண்களின்
காதல் கனிந்த ஒளிமிக்க முகத்தின்கண்ணே செருக்கிய பார்வையினை - (கண்டனிர் ஆயின் கழறலிர்-மன்னோ)

#131 பாலை மதுரை மருதன் இளநாகனார்
வானளாவ உயர்ந்த கருமையான அடிப்பகுதியையுடைய இகணை மரத்தின்
பசிய நிறமுடைய மெல்லிய இலைகளை அருகருகே செறிவாக வைத்ததைப் போல
வண்டுகள் மொய்த்து இருண்டு தாழ்ந்த பெரிய கூந்தலையும்
வண்டுகள் தேனை உண்ணும்படி மலர்ந்த பெரிய குளிர்ச்சியான மாலையையும் உடைய
இவளைக் காட்டிலும் நமக்கு ஈதல் சிறந்தது என்று -
சீழ்க்கை போன்று ஒலித்துச் செல்லும் அம்புகளைச் சிறப்பாகத் தொடுக்கும் வெட்சி மறவர்
விடியற்காலத்தில் பசுக்களைக் கவர்ந்துசென்ற அச்சம்தரும் கொடிய பாலை வழியிலே,
போரிட்டு, அப் பசுக்களை மீட்டு வரும்போது நெடுந்தூரம் கடந்து வருவதால் நடை ஓய்ந்து நின்றுவிட்ட கன்றின்
கடைக்கண்ணிலிருந்து ஒழுகும் நீரைத் துடைத்துவிட்ட கரந்தை வீரர்களுள் போரில் மடிந்த மறவருடைய,
பெயரும், சிறப்பும் பொறித்து வழிகள்தோறும்
மயில்தோகையினைச் சூட்டிய விளக்கமான நிலையினையுடைய நடுகல்லின் முன்னர்
வேலும் கிடுகும் ஊன்றியிருக்க, அந்த இடம் பகைவர் போர்முனையைப் போலத் தோன்றும்
அச்சம்வரத் தக்கதான காட்டுவழியில், நம்முடன்
வருக என்று சொல்வாயானால்
நான் வரமாட்டேன் நெஞ்சமே! நீ நினைத்த காரியம் உனக்குக் கைகூடுவதாக!

#132 குறிஞ்சி தாயங்கண்ணனார்
தினையும் முதிர்ந்து வளைந்த கதிர்கள் அறுக்கப்பெற்றன, காம நோய் மிகுந்து
இவளின் ஆராய்ந்து போற்றும் அழகு தொலைந்துபோன நெற்றியைக் கூர்ந்து கவனித்து
பொருத்தமற்ற பழிச்சொற்களை இந்த ஊர்மக்கள் பேசலாயினர், எனவே,
களிற்றின் மதம் பொருந்திய கன்னத்தையுடைய முகத்தைப் பிளந்த அம்பினையும்,
வெண்மையான நிணமாகிய உணவினையும் உடைய குறவரின் பெண்ணாகிய
அழகிய மூங்கில் போன்ற மென்மையான தோள்களையும், அழகிய இமைகளுடன் கூடிய குளிர்ந்த கண்களையும்
துவளுகின்ற இயல்பினையும் உடைய இக் குறிஞ்சிப்பெண் மீது இரக்கம்கொண்டவனென்றால்
இவளை மணம்முடித்து அழைத்துச் செல்க, நுண்ணிய வேலைப்பாடுள்ள அணிகலன் பூண்ட மார்பினனே!
வானம் மழைத்துளியை முதலில் பெய்யும் மலைச் சாரலில், பெரிய சுனையில்
மலராத மொட்டினை மலரச் செய்த குறுகிய சிறகுகளைக் கொண்ட வண்டுகள்
வேங்கைமரத்தின் விரிந்த பூங்கொத்துகளில் தேன் பருகி, காந்தளின்
தேனையுடைய குவிந்த மலர்க்கொத்துகளில் உறங்கி, யானையின்
பெரிய கன்னத்தில் ஒழுகும் மதநீரை உண்பதாகக் கனாக்காணும்
பெரிய மலையை அரணாகக் கொண்ட வாழ்வதற்கு இனியதாகிய உன்னுடைய ஊருக்கு - (கொண்டனை சென்மோ)

#133 பாலை உறையூர் மருத்துவன் தாமோதரனார்
குன்றிமணி போன்ற கண்களையும், நல்ல நிறமுள்ள மயிரினையும்,
மெல்லிய கால்களையும் உடைய வெள்ளெலியின் எடுப்பான மோவாயையுடைய ஆணானது
சிவந்த சரளைக்கற்கள் உள்ள கட்டாந்தரையில் வளை தோண்டியதால் மேலே வந்து கிடக்கும் புழுதியில்
நல்ல நாளைத் தெரியப்படுத்தும் வேங்கை மலர்கள் உதிர்ந்து நல்ல வெறியாடுகளம் போல அழகுசெய்ய,
கார்ப்பருவம் வந்ததால் பசுமை பெற்ற புதர்களையுடைய முல்லைநிலத்தில்
வில்லினால் அடிக்கப்பெற்ற பஞ்சு போல வெண்மையான மேகங்கள் தவழ்ந்திடும்,
கொல்லையாகிய புதிய புனங்களையுடைய சிறிய மலையின் பக்கத்தில்,
கரி பரவியதைப் போன்ற காயா மலர்களின் வாடலோடு
தீப் பரவியதைப் போன்ற இலவமலர்கள் கலந்துகிடப்பதால்,
பூக்களாகிய கலங்கலைச் சுமந்துவரும் இனிய நீரையுடைய காட்டாற்றிலிருந்து
காற்றானது எழுப்புதலால் மேலே எழும் துளிகளையே உண்ணுகின்ற
என்னுடன் வருவதற்கு உன்னால் முடியுமா என்று
பெருமைதங்கிய ஒரு வினாவை எழுப்பினார்; தோழியே!
கவுதாரியின் காலில் உள்ள முள்ளைப் போன்ற அரும்புகள் முதிர்ந்த வெட்சிப்பூக்கள்
தினைப்புனத்தில் வெட்டியெறியப்பட்ட குருந்த மலர்களோடு கலந்து கற்பாறைகளில் பரவிக்கிடக்கும்
மிளை நாட்டிலுள்ள பாலைவழியில் உள்ள ஈரமான மேட்டுநிலத்தில் செழித்து வளர்ந்த
வரிகளையுடைய மரலின் மடலைக் கொறிக்கும் மடப்பத்தையுடைய பெண்மானுடன்
முறுக்கிய கொம்பினையுடைய ஆண்மான்களையுடைய காட்டினைக் கடந்து சென்ற நம் காதலர்.

#134 முல்லை சீத்தலை சாத்தனார்
மழை தப்பாது பெய்வதால் காடு அழகுபெற்று
நிறைந்த சூலினையுடைய கரிய மேகங்கள் கார்காலத்தை உண்டாக்கித் தங்கியதால்
நீலமணிகளைப் போன்ற காயாவின் அழகிய மலர்களின் இடையிடையே
சிவந்த முதுகினைக் கொண்ட இந்திரகோபப் பூச்சிகள் பரவியிருப்பதோடு, நல்ல பல
முல்லைப்பூக்கள் உதிர்ந்து பரந்துகிடப்பதால், ஓவியத்தில் வல்லவன்
செய்த ஓவியம் போன்ற சிவந்த நிலமாகிய முல்லைப் பரப்பினில்,
சீராகப் பாய்ந்து செல்லும் தாள ஒழுங்கு சிறந்து விளங்கும் ஓட்டத்தையுடைய செருக்குடைய நம் குதிரைகளின்
தாவிச் செல்லும் இணையொத்த கால்கள் மெல்லென நடக்கும்படி,
தார்க்குச்சியின் முள்ளால் அவற்றைக் குத்தாமல் செலுத்துவாயாக, வலவனே! குவிந்த மொட்டுள்ள
வாழைப்பூவின் பெரிய சீப்புகள் முதிர்ந்து (அந்த மொட்டும்) உதிர்ந்துபோய்
மீந்திருக்கும் குலைக்காம்பினைப் போன்ற முறுக்கிய கொம்பினையுடைய ஆண்மானுடன்
திரண்ட கால்களையுடைய அழகிய பெண்மான் விருப்பத்தோடு கூடுகின்ற நிலை
நமது வேகமாகச் செல்லும் குதிரைகள் பூண்ட தேரின் ஒலியினைக் கேட்டால்
இந்த நண்பகலில் அவை சேர்ந்திருப்பது நிகழ்வதும் உண்டோ? (நிகழாது அல்லவா!)

#135 பாலை பரணர்
எனது அழகுத்தேமல், மாமை நிறம் ஆகியவற்றின் தளிர் போன்ற அழகு கெட்டுப்போகும்படி
புதர்களில் படர்ந்த பீர்க்கின் புதிய பூவைப் போன்று
பசலை படர்ந்த நெற்றியையுடையவள் ஆகி,
ஓவியர்கள் பார்த்து வரைவதற்குரிய அழகிய குளிர்ச்சியான கண்கள் அழும்படி பிரிவுத்துயர் மிகுந்து
ஆதிமந்தி போல அறிவு திரிந்து
நான் மயங்கித் துன்புறுகின்றேன், என்னிடம் அன்புடைய அழகிய தோழியே!
வெயில் காய்கின்ற கதிரவன் கடுமையாவதால் காற்று மிகுந்து விரைவாக வீசுவதால்
அசையும் தளிரினையுடைய இலுப்ப மரத்தின் உள்ளே ஒன்றுமற்ற குவிந்த வெண்மையான பூக்கள்
யானைத் தந்தத்தைக் கடைந்து செய்ததைப் போன்ற கழங்கினைப் போன்று பாறை மீது பரவிக்கிடக்கும்
காட்டைக் கடந்து சென்றனர் நம் காதலர்; பகைவரைக் கொல்லும் போரினையும்,
நீங்காத சிறந்த புகழினையும் வானளாவிய பெரிய குடையினையும்  உடைய
பதினான்கு வேளிர்கள் ஒன்றுசேர்ந்து தாக்கிய,
கழுவுள் என்பானுடைய காமூரைப் போல
கலங்கிநிற்கிறது, அவர்  நம்மைப்பிரியமாட்டார் என்று உறுதியாய் இருந்த என் நெஞ்சம்.

#136 மருதம் விற்றூற்று மூதெயினனார்
குற்றம் நீங்க, இறைச்சியுடன் கூட்டி ஆக்கிய நெய் மிக்க வெண்மையான சோற்றை
வேண்டியவர், வேண்டாதார் என்ற வரையறை அற்ற கொடைத்தன்மையுடன், உயர்ந்த சுற்றத்தாரை உண்பித்து
பறவைச் சகுனம் இனியதாகக் கூடிவர, தெளிவான ஒளியையுடைய
அழகிய இடம் அகன்ற வானம் பொலிவுடன் விளங்குமாறு, திங்களானது
உரோகிணியைச் சேரும் குற்றமற்ற நல்ல நாள் சேர்க்கையில்,
திருமண வீட்டை நன்கு அலங்கரித்து, கடவுளைத் தொழுது,
முழங்குகின்ற மண முழவுடன், பெரிய மண முரசம் ஒலிக்க,
மணமகளுக்கு மணநீராட்டிய மகளிர், விரைவாக,
தம் மலர் போன்ற கண்களாலும் இமையாதவராய் நோக்கிப் பின் மறைந்துகொள்ள,
மெல்லிய பூவையுடைய வாகையின் பொலிவற்ற பின்புறத்தையுடைய பிளவுபட்ட இலையை,
முதிய கன்று கொறித்த பள்ளத்தில் படர்ந்த அறுகம்புல்லின்
முழங்குகின்ற குரலையுடைய மேகத்தின் முதல் மழை தோற்றுவித்த
கழுவிய நீலமணியைப் போன்ற கரிய இதழையுடைய கிழங்கிலுள்ள
குளிர்ந்த மணமுள்ள அரும்புடன் சேரக்கட்டிய வெண்மையான காப்புநூலை அணிந்து,
தூய திருமணப் புடவையால் பொலிவுபெறச் செய்து, விருப்பத்துடன் ஒன்றுகூடி,
மழை பெய்ததைப் போன்ற ஒலியையுடைய புதுமணல் மிக்க மணப்பந்தலில்
அணிகலன்களை அணிந்ததனால் உண்டான சிறந்த அழகுடன், தோன்றிய வியர்வையை விசிறியால் ஆற்றி,
சுற்றத்தார் இவளை நமக்குத் தந்த முதல்நாள் இரவிலே,
வெறுப்பு நீங்கிய கற்பினையுடைய என் உயிர்க்கு உடம்பாகப் பொருந்தும் இவளை
கசங்காத புத்தாடையால் உடம்பு முழுவதும் போர்த்திக்கொண்டதால்
'மிகுந்த புழுக்கம் எய்திய உனது பிறை போன்ற நெற்றியில் புள்ளிகளாய் அரும்பிய வியர்வைத் துளிகளை
அங்கு வரும் காற்று ஆற்றிவிட சிறிது நேரம் அந்த ஆடையைத் திற' என்று கூறி,
ஆர்வம் உள்ள நெஞ்சத்துடன் போர்த்தியிருந்த புடவையைப் பற்றி இழுத்ததால்
உறையை விட்டு உருவப்பட்ட வாளினைப் போன்று அவளின் உருவம் வெளிப்பட்டு விளங்க
திறந்த மேனியை மறைக்கின்ற வழி அறியாதவளாய்ச் சடக்கென்று
வெட்கப்பட்டவளாய்க் குனிந்துகொண்டாள் - தன் அழகைப் பாதுகாத்து,
பருமனில் தன் இடைக்குப் பகையாகிய ஆம்பல் மலரின் நிறம் மிக்க மாலையை அகற்றி,
வண்டுகள் ஒலிக்கும் ஆராய்ந்தெடுத்த மலர்களைச் சூடின
பெரிய பலவாகிய தன் கரிய கூந்தலை இருண்ட போர்வையாகக் கொண்டு தன்னை மறைத்துக்கொண்டு - 

#137 பாலை உறையூர் முதுகூத்தனார்
வழியே செல்லும் புதியவர்கள், சேற்றைக் கிண்டி ஊறிய நீரை உண்ட
பலவான சிறிய பள்ளங்களைத் தன் பெண்யானையின் அடிச்சுவடு என்று விரும்பி
ஆண்யானை தொட்டுப்பார்த்துக் கடந்து செல்லும் காட்டாற்றினையுடைய அப் பாலை வழியில்
சென்று சேர்வதற்கு நம் தலைவர் ஒப்பமாட்டாரென்றாலும், உனக்கு,
பகைவரை வென்று அடிக்கும் வீரமுரசினையும், வெற்றி தரும் பேராற்றலையும் உடைய சோழர்களின்
இனிய, கடுப்பு மிக்க கள்ளினையுடைய உறையூரில்
வருகின்ற நீர் இடிப்பதால் இடிந்து விழும் கரைகளையுடைய காவிரி என்னும் பெரிய ஆற்றின்
அழகிய வெண்மையான மணலையுடைய தேன் மணம் கமழும் குளிர்ந்த சோலையில்
பங்குனி மாதத்தில் முழுமதியும் உத்திர மீனும் கூடுகின்ற விழாநாள் கழிந்த அடுத்த நாளில்
மலர்களும் இலைகளும் செறிந்த வளமான மரங்கள் அடர்ந்த குறுங்காட்டினூடே
நெருப்பு இல்லாத அடுப்புகளையுடைய திருவரங்கமாகிய தீவினைப் போலப்
பெரிதும் அழகிழந்த நிலையினைக் கொண்டது உன் நெற்றி; தோள்களும்
துளையிடப்படாத முழு முத்துக்களையுடைய தெளிந்த கடலையுடைய வீரனாகிய
திண்ணிய தேரையுடைய பாண்டியனின் பொதிகை மலையின் உச்சிச் சரிவில் உள்ள
நல்ல அழகிய நீண்ட மூங்கிலை ஒத்த
பழைய அழகு கெட்டன; நான் வருந்துகின்றேன்.

#138 குறிஞ்சி எழூஉ பன்றி நாகன் குமரனார்
என் நட்புக்குரியவளே! என்மீது அன்புகொண்ட தோழியே! கேட்பாயாக!
குவளை மலரைப் போன்ற எனது மையுண்ட கண்களில் தெளிந்த நீர் ததும்ப,
நான் வீணே சிறிது வருந்திய துன்பத்தினைக் கண்டு, தாயானவள்
காரணம் வேறொன்றாகக் கருதி ஐயமுற்றவளாய், வேம்பின்
மணமுடைய பசிய இலையுடன், நீலப்பூக்களைச் சூடி,
எதிர்த்த பகைவரை வெற்றிகொண்ட கடல் போன்ற சேனைகளையும்
திருத்தமான இலையைக் கொண்ட நீண்ட வேலினையும் உடைய பாண்டியனின் பொதிகை மலையின்
ஏறமுடியாத உச்சியிலிருந்து இறங்குகின்ற ஆரவாரத்துடன் வருதலையுடைய அருவியினைப் போன்று
முழங்கும் இசையினையுடைய இனிய இசைக்கருவிகள் ஒலிக்க, கைகூப்பித்தொழுது
அச்சம் பொருந்திய தலைமைப் பண்புடைய முருகனை வீட்டுக்கு வருவித்து
அவனது கடம்ப மரத்தையும் களிற்றினையும் பாடி, வளைந்து வளைந்து -
முருகனின் பனந்தோட்டையும் கடப்ப மாலையையும் தாமும் கையினில் கொண்டு - இரவெல்லாம்
வெறியாடுவார் ஆவது நம் தகுதிக்கு நல்லதோ? நெடுநாளாக
உன்னிடம் ‘மணம் முடித்துக்கொள்வேன்' என்று தெளிவாகக் கூறிய நல்ல மலைக்குரிய நம் தலைவன்
நம்மை இரவில் பார்க்கும் இடத்திற்கு வரும் நடு யாமத்தில், குன்றின் உச்சியில்
வழிதப்பிப்போகும்படி உண்டாகிய அணுகமுடியாத மிக்க இரவினில்
தனது அழகிய முடிமணியை இரைதேடுவதற்காக உமிழ்ந்த நாகப்பாம்பு, காந்தளின்
கொழுத்த மடலையுடைய புதிய பூவினில் தேன் பருகும் வண்டின்
நல்ல நிறத்தைக் கண்டு அது தன் மணியோ என ஐயப்பட்டு மயங்கும் அரிய பிளவுகளையுடைய
துயர்தரும் நெடிய வழியை என் நெஞ்சு நினைத்துக் கவலைப்படும். 

#139 பாலை இடைக்காடனார்
கண்ணை மூடி உறங்குவது போல இருண்டு, வானத்தைப் பிளந்து
கண் இமைப்பது போல மின்னி, கடல் நீரை முகந்துகொண்டு
வானத்தில் ஏறுவது போல முழக்கம் மிக்குத் திசையெல்லாம் பரவி,
நிலம் நெஞ்சு துணுக்குற ஓயாமல் இடிஇடித்து 
மிக்க நீரைச் சொரிந்த நீண்ட மழையைக் கொண்ட கார்காலத்தின் கடைசிநாளில்
மழையைப் பொழிந்து தமக்குரிய காலம் கழிந்துபோன தூய்மையில்லாத வெண்மேகங்கள்
விண்ணைத் தொடும் உயர்ந்த மலையுச்சியில் தவழும் வைகறையாகிய
மூங்கிற்புதர்கள் காலை ஒளியில் சிறந்து விளங்கும் காண்பதற்கு இனிய காலத்தில்
குளிர்ந்த மணமுள்ள குளத்து நீரை நிறையப் பருகி, அறுகம்புல்லை மேயும்
வெண்ணிற முதுகினையுடைய முறுக்குண்ட கொம்பினைக் கொண்ட ஆண்மான்
நீண்டமணலின் ஒரு பக்கத்தில் பிடவம்பூக்கள் மலர்ந்திருக்கும் நிறைந்த நிழலில்
அழகிய காதல் துணையாகிய பெண்மானுடன் இன்பம் பொருந்தத் தங்கியிருக்க,
செவ்வரக்கு நிறத்தையுடைய அழகுடைய இந்திரகோபப் பூச்சிகள்
பரப்பி வைத்ததைப் போல் பலவும் ஒன்றாகச் சேர்ந்து பரவிக்கிடந்து
நீர் ஒழுகும் ஈரமான இடத்தில் அழகுடன் திகழ,
இன்னும் நம் காதலர் வரவில்லையெனில், நல்ல நெற்றியையுடைய தோழியே!
அவரது நிலை எப்படிப்பட்டதோ? காதலர்,
மின்னல் முதலிய தொகுதிகளையுடைய மேகங்கள் இடியைத் தம்மிடம் கொண்டுள்ள
இந்தப் பருவம் அன்றோ! அவர் 'திரும்பி வருவேன்' என்று கூறியது

#140 நெய்தல் அம்மூவனார்
பெரிய கடலில் மீன்வேட்டையாடும் சிறு குடியில் வாழும் பரதவர்
பெரிய உப்பங்கழியான வயலில் உழாமலேயே விளைவித்த
வெண்மையான கல் உப்பின் விலையைக் கூறி
கதிரவனின் வெம்மையால் வெடித்த பிளவுகளையுடைய குன்றுகளைக் கடந்துபோகும்,
காளைகளை விரைவாகச் செலுத்தும் கோலையுடைய உப்புவண்டிக்காரரின் அன்பினையுடைய இளைய மகள்
சிலவாகிய திரண்ட ஒளிவீசும் வளையல்கள் ஒலிக்கக் கைகளை வீசி,
நெல்லுக்குச் சமமான அளவே தன் வெண்மையான கல் உப்பு என்று
சேரியில் பண்டமாற்றாக விலைகூறிப் போவதால், வீட்டிலுள்ள
குரலைவைத்து இன்னார் என்று அறியும் நாய் குரைக்க, அதனால் வெருண்டுபோன
செழுமையான கயல்மீன்கள் எதிர்த்துப்போரிடுவது போன்ற அவளின் கண்கள், எமக்கு
புதிய கொல்லையை ஆக்கும் குறவன் செடிகொடிகளைச் சுட்டெரிப்பதால் எழுந்த புகையின் நிழலைப் போன்ற
பழமையான கரிய சேற்றில் அழுந்திய வண்டிச் சக்கரத்தின்
இடர்ப்பாடு நீங்க, வருந்தி இழுக்கும் அவள் தந்தை
கையில் பிடித்த காளையைப் போல வருந்தி
வெம்மையாக மூச்செறியும் நோய் ஆகின்றது.

#141 பாலை நக்கீரர்
வாழ்க தோழியே!  நான் சொல்வதைக் கேட்பாயாக, மிகவும்
இனியவாய் அமைகின்றன இரவுதோறும் கனவுகளும்; நனவிலும்
ஓவியங்களால் அழகுசெய்யப்பட்ட நல்ல இல்லத்தில் பறவைச் சகுனங்கள் நல்லனவாகவே அமைகின்றன;
என் நெஞ்சமும் அவலம் கொள்ளாமல் அவர் வரவை மிகவும் விரும்பி அமைதிகாக்கிறது; 
உலகில் உழுதொழில் முடிந்து, கலப்பைகள் ஓய்ந்திருக்க,
மழை பெய்யும் கார்ப்பருவம் நீங்கிப்போன, மாகமாகிய விசும்பில்
குறுமுயல் போன்ற களங்கம் தன் மார்பினில் விளங்க, திங்கள் முழுமை பெற்று
கார்த்திகை மீன்களைச் சேரும் இருள் அகன்ற நள்ளிரவில்,
தெருவில் விளக்குகளை ஏற்றிவைத்து மலர்மாலைகளைத் தொங்கவிட்டு
பழமையான வெற்றியையுடைய முதிய ஊரில் பலருடன் ஒன்றுசேர்ந்த
திருவிழாவை நம்முடன் கொண்டாட வருவாராக;
நீராடியபின் புகையூட்டியதால் முற்றுமாக உலர்ந்து, தூய மலர்கள் செறிக்கப்பட்டு,
தகர மரத்திலிருந்து செய்யப்பட்ட மணமுள்ள மயிர்ச்சாந்து மணக்கும் குளிர்ச்சியான நறிய கூந்தலையுடைய
புதிய மணமகள், பல்வேறு உணவுவகைகளையுடைய திருமண வீட்டில்
பல குமிழ்களையுடைய அடுப்பில் பாலை உலைநீராக இட்டு
குட்டையான கூந்தலையும், குறிய வளையல்களையும் உடைய மகளிருடன்
பெரிய வயலில் விளைந்த நெல்லின் வளைந்த கதிர்களைக் கொய்து
பச்சை அவலை இடிக்கும் கருமையான வயிரம்பாய்ந்த உலக்கையின்
வேகமான இடிக்கு அஞ்சிய நிறைசூல் கொண்ட வெண்ணிறக் கொக்கு
இனிய குலையினையுடைய வாழையின் உயர்ந்த மடலில் அமராமல்
நெடிய அடிமரத்தைக் கொண்ட மா மரத்திற்குச் செல்ல குறுகியதாய்ப் பறந்து செல்லும் -
இடம் மாறிச் செல்ல எண்ணும் குடிமக்களைப் பாதுகாக்கும் பெரும் புகழைக்கொண்ட கரிகாலன் என்னும்
வெல்லும் போரினையுடைய சோழமன்னனின் - இடையாறு என்னும் ஊரினைப் போன்ற
நல்ல புகழையுடைய செல்வத்தை ஈட்டிவருவதற்காக, பல புள்ளிகளைக் கொண்ட
புலியின் நிறத்தையுடைய பூக்களிடையே, பெரிய கிளையினையுடைய
நாரத்தை மரத்தின் மணமுள்ள அழகிய மலர்கள் உதிர, 
குரங்குகள் பாய்ந்து தாவும் மலையில் உள்ள வேங்கை மரங்களையுடைய,
தேன் கமழும் நெடிய உச்சிகளால் சிறப்புற்ற
வேங்கட மலையைச் சார்ந்த ஊர்களையுடைய பாலை வழியில் சென்றோராகிய நம் தலைவர்.

#142 குறிஞ்சி பரணர்
இலவம்பூ போன்ற அழகிய சிவந்த நாவினால்
புலமையால் உயர்த்திக் கூறப்படும் சான்றோர்கள் புகழ,
பலரைக் காட்டிலும் மேலான, கொடுப்பதால் கவிந்த கைகளையுடைய வள்ளலான
நிறுத்த முடியாத சேனையையுடைய, போரினை வெல்லும் மாந்தரம்
பொறையன் கடுங்கோ என்னும் சேர மன்னனைப் பாடிச் சென்ற
வறியவர்களின் பாத்திரங்கள் நிறைந்திருப்பது போல மிகவும்
நிறைவுற்று மகிழ்வாயாக! வாழ்க! என் நெஞ்சமே! நம் காதலியானவள்,
நீதி முறையிலிருந்து வழுவாமல், தன் கடமையினைச் செய்து பெற்ற
உரல் போன்ற அடியினைக் கொண்ட யானையினையுடைய நன்னனின் பாழியிலுள்ள
களவேள்வி செய்து ஊட்டுவதற்கு அரிதாகிய தன்மையினையுடைய அஞ்சத்தக்க பேய்க்கு
ஊட்டுதலை ஏற்றுக்கொண்ட உண்மையே பேசும் மிஞிலி என்பவன்
பறவைகளுக்குப் பாதுகாவலாகிய பெரும் புகழினையுடைய
வெள்ளம் போன்ற சேனையினையுடைய அதிகன் என்பவனைக் கொன்று மகிழ்ந்து
ஒள்வாள் அமலை  என்னும் வெற்றிக்கூத்தை ஆடிய போர்க்கள நிகழ்ச்சியைப் போன்று,
பலரும் அறிந்து அலர் தூற்றுவதற்கு அஞ்சி, மெல்ல மெல்ல,
நீரைத் திரட்டிய திரட்சியைப் போன்றிருக்கும் குற்றமற்ற வெள்ளியினாலான
வளைவான திரண்ட வளையல்கள் செறிக்கப்பெற்ற முன்கையையுடையவளாய்
நீர் குறைந்து பாயுமிடத்திலுள் படிந்த கருமணல் போன்ற கருமையான பலவாகிய கூந்தல்
அகலமற்ற தனது சிறிய முதுகில் அணிகலன்களோடு சரிந்து புரள
கடல் மீன்கள் துயிலும் நள்ளென்று ஒலிக்கும் இடையாமத்தில்
அழகு மிகுகின்ற, செய்தொழிலால் பொலிவுபெற்ற பாவையானது
நடக்கப் பழகினதைப் போன்று நடந்து வந்து
மழை அலைத்ததால் கலங்கிய மலைப்பூக்களாலான மாலையிலிருந்து
உலைக்களத்தில் அடிக்கும்போது தெறித்து விழும் பொன் துகள் போன்று தேன் துளித்து விழ
தன் தோள்வளையின் கண் வடு உண்டாக்கும்படி என்னைத் தழுவினாள்,
நன்றாக வடித்த யாழ்நரம்பின் ஒலியினைப் போன்ற இனிய மொழிகளைக் கூறி.

#143 பாலை ஆலம்பேரி சாத்தனார்
பொருளீட்டும் செயலுக்காகப் பிரிந்துசெல்வதை எண்ணி, அளவுகடந்து -
காடு அழகுகெட்டுப்போகும்படி - கடுமையான ஞாயிறு சுட்டுப்பொசுக்குவதால்,
நீண்ட கிளைகள் ஒன்றுமில்லாமற்போகும்படி, ஒல்லென்னும் ஓசையுடன்
வாடிப்போன பலவான அகன்ற இலைகள் மேல்காற்றுக்கு உதிர்ந்துபோகும்
தேக்குமரங்கள் செறிந்த மலைச்சாரலாகிய அவ்விடத்தில், (மேலே எழுந்து),
காய்ந்துபோன புதர்களில் உண்டான காற்றால் பெரிதாக்கப்பட்ட பெரும் தீயின்
ஒளிமிக்க நெடிய தீக்கொழுந்து, (மேலே எழுந்து), மலைப் பிளவுகளாகிய குகைகளில் முழங்கும்
வெப்பம் மிக்க மலையிலுள்ள கடப்பதற்கு அரிய வழியைக் கடந்து, ஐயனே!
செல்வேன் என்ற சிலவான உன் சொற்களைக் கேட்டதற்கே, இவளுக்கு -
பழிச்சொல் இல்லாத கொடிய போரில் வல்ல சேரனின் படைத்தலைவனான,
பரிசிலை விரும்பி வாழ்பவர்க்கு நல்ல அணிகலன்களை ஈயும்
குறிதப்பாமல் வெற்றியையே வாய்க்கும் வாளினையும்,புனைந்த கழலினையும் உடைய பிட்டன் என்பவனின்
மேகங்கள் தவழுகின்ற உயர்ந்த உச்சியையுடைய குதிரைமலையின் உச்சிமலைச் சரிவில்
அகன்ற பாறையிலுள்ள நெடிய சுனையில் உள்ள மழைத்துவலையால் மலர்ந்த
குளிர்ச்சியான மணங்கமழும் நீலமலரிலிருந்து நீர் ஒழுகுவது போல
கண்கள் நீரைச் சொரிந்தன, அதைக் கண்டு நான் வருந்துகின்றேன்.

#144 முல்லை மதுரை அளக்கர் ஞாழலார் மகனார் மள்ளனார்
”பிரிந்து செல்கையில், திரும்பி வருவேன் என்று தலைவர் சொல்லிச்சென்ற நாளும் பொய்த்துவிட்டது,
செவ்வரி படர்ந்த அழகிய மையுண்ட கண்களும் நீரை நில்லாமல் சொரிகின்றன,
குளிர்ந்த மழையால் அரும்பிய பசிய முல்லைக்கொடியின் 
கூர்மையான நுனியைக் கொண்ட வெண்ணிற மொட்டுகள் மலர்ந்தன, மலர் மாலை
அணிதலால் உண்டாகும் அழகினை இழந்துவிட்ட நமது கூந்தலையும் நினைக்கவில்லை,
நம்மீது கொண்ட இரக்கம் மாறிப்போனாலும் போகட்டும், 
அறத்திற்கும் அஞ்சுகின்றார் இல்லை, ஆராய்ந்த அணிகலன்களை அணிந்தவளே! நமது காதலர்” என்று
சிலவாகிய சொற்களைச் சொல்லிப் பெரிதாக வெறுப்படைந்தாலும்,
குளிர்ச்சி பொருந்திய மணம்மிக்க மாலை குழைந்துபோகும்படி, நம்முடன்
வெறுப்புக்கொண்டது தீர்ந்துவிட்ட தழுவலைப் பெற்றவள் போல
மகிழ்ந்துபோவாள் அன்றோ! வாழ்க! என் நெஞ்சமே! வானத்தில்
இடி தோன்றி முழங்கினாலும், அதற்கு மாறாகத் தாமும் எழுந்து பிளிறுகின்ற
மதங்கொண்ட யானைகள் சுழன்றுதிரியும் நமது பாசறையிலிருந்து
போரை விரும்பி எழுந்த வீரமறவர்கள், கையிலுள்ள
கூர்மையான வாளின் குவிந்த வாய் சிதைந்துபோகும்படி பகைவரைக் கொன்றழித்து
தமது குதிரைகளின் குளம்பு பட்ட குழிகளில் பாய்ச்சிய குருதி
வானத்து மீன்களைப் போல இடங்கள்தோறும் மின்ன,
நாம் மேற்கொண்ட போரை ஆராய்ந்து பகைவரைக் கொன்று பெற்ற நமது வெற்றிச்செல்வத்தை
நம் சுற்றத்தார் விரைந்து சென்று சொல்லக் கேட்கும்போது - (மகிழ்ந்துபோவாள் அன்றோ!)

#145 பாலை கயமனார்
வேர் முழுவதும் காய்ந்துபோய் நின்ற துளையுள்ள (உள்ளீடற்ற) அடிப்பகுதியையுடைய,
தேரில் கட்டப்பட்ட மணி ஒலிப்பதைப் போன்று சில்வண்டுகள் ஒலிக்கின்ற
வற்றலான மரத்தில் உள்ள பொன் நிறத் தலையையுடைய பச்சோந்தி
வெயிலால் அழகு இழந்த ஊர்களில் வருத்தம் கொண்டு,
மெதுவாக உடலை நிமிர்த்தி நிற்கும் வெண்ணிற ஞெமை மரங்களையுடைய அகன்ற காட்டில்
ஆட்கள் புழங்காத பாழ் வழியில், இரங்கத்தக்கவளாகிய என் மகள், ஓர் அன்னியனுடன்,
வாள் போன்ற வரிகளையுடைய புலியுடன் போரிட்ட புண் மிக்க யானை
புள்ளிகள் சிதைந்த முகத்தினையுடையதாய், குருதி கொட்ட,
உயர்ந்த உச்சிகளைக் கொண்ட நெடிய சிகரத்தில் இடிக்கும் இடியினைப் போன்று முழங்குகின்ற
அரிய பாலை நிலத்தைக் கடந்துசென்றாள் என்று கூறுகின்றனர்; பெரும் புகழையுடைய
அன்னி என்பவன் குறுக்கைப் பறந்தலை என்னும் போர்க்களத்தில் திதியன் என்பவனின்
நெடுநாள் நிற்கும் அடிமரம் துண்டாகும்படி செய்த
நல்ல மெல்லிய பூங்கொத்துக்களையுடைய புன்னை மரத்தைப் போல
மிகுந்த துன்பத்தை அடைவன ஆகுக; களிக்கின்ற மயில்கள்
யானை பிளிறுவது போன்ற குரலையுடைய யானையங்குருகு என்னும் பறவைகளோடு சேர்ந்து ஒலிக்கும்
ஓய்வில்லாத முழவையும், அனைத்தையும் வேண்டும்படி நுகர்ந்து வாழும் வாழ்க்கையினையும்
நெல்முதலிய உணவுப்பொருள்களையும் உடைய தன் தந்தையின் அகன்ற இடமுள்ள மாளிகையில்
மெதுவாக அடியெடுத்துவைத்தாலும் வருந்தும் இயல்புடைய, ஐந்து பகுதியான
சிறிய பலவான கூந்தலை வேய்ந்த மாலையுடன் கையால் பிடித்து, இரக்கமில்லாமல்
குச்சியே சிதைந்துபோகும்படி அடிவெளுக்கவும், ”என் முதுகு
எனக்கு உரியது, அடிக்காதே” என்று சொல்லாமல் பொறுமையுடன் நின்ற எனது
அமர்த்த கண்களையுடைய மகளை அடித்துத் துன்புறுத்திய என் கைகள் - (மிகுந்த துன்பத்தை அடைவன ஆகுக) 

#146 மருதம் உவர்க்கண்ணூர் புல்லங்கீரனார்
உறுதிமிக்க உடல் வலிமையையும், தலைமைப் பண்பையும் உடைய எருமைக்கடா
குளிர்ச்சியான மலர்களையுடைய பொய்கையில் பகற்பொழுது கழியத் தங்கியிருந்து
மடப்பத்தையுடைய கண்களையுடைய மாட்சிமை பொருந்திய பெண் எருமையினை அணைந்துவிட்டு,
தோட்டங்களை அடைந்து வயல்வெளியில் தங்குகின்ற,
ஆரவாரமும் மகிழ்ச்சியுமுடைய மருதநிலத் தலைவனின் ஒலிக்கின்ற மணிகளையுடைய நீண்ட தேரானது
ஒளிபொருந்திய அணிகலன்களை அணிந்த பரத்தையரின் சேரிப்பக்கம் பலநாட்கள்
செல்லவில்லை என்றால், ஒளிரும் அணிகலன்களை அணிந்த அவள்
யாரோ? அவள் இரங்கத்தக்கவள்! என்னைப் போல்
பொய்யையே மெய்போல் பேசுகின்ற பரத்தமைத் தொழிலையுடைய அவன் கூறும் மொழிகளை நம்பி
காற்று மோதுவதாலே அசைகின்ற மழை பொழிந்த காலத்து மலரைப் போன்று
கண்கள் நீரினை மார்பில் சொரிய, கண்கள் வெளுத்து,
தோழிமாரும்,அயலாரும் மருண்டு நோக்க,
தாய் பேணிய, பலரும் ஆய்கின்ற அழகினைப் பேண விரும்பாத அந்தப்பேதை - (யார்-கொல் அளியள் தானே)

#147 பாலை ஔவையார்
உயர்ந்த மலைச் சாரலில், பிடவம்பூவுடன் சேர்ந்து மலர்ந்த
வேங்கையின் மணங்கமழும் பூவுடன் கூடிய தழையை தனித்தனியாக வகுத்து வைத்ததைப் போன்ற
தசையினால் மூடியிருப்பது நீங்காத வளைந்த நகங்களைக்கொண்ட குட்டிகள்
மூன்றை ஒன்றாகப் பெற்றதும், முடக்கமான இடத்தில் மெலிந்துபோய்க்கிடப்பதுவும்
பாறையின் பிளப்பாகிய குகையினிலுள்ளதுமான பெண்புலிக்கு மிகவும் பசித்ததினால்
புள்ளிகள் திகழும் பிளந்த வாயையுடைய ஆண் புலி
வளைவு வளைவான கொம்பினையுடைய உழையாகிய ஆண்மானின் குரலினை உற்றுக்கேட்கும்
பிரிந்துசெல்லும் பாதைகளையுடைய நடந்து முடியாத நீண்ட காட்டில்
தன் கணவனைத் தேடிச் சென்ற வெள்ளிவீதியைப் போலப் பெரிதும்
செல்லத்துணிந்தேன் நானே; பலவற்றையும் வெறுத்து
உண்ணாத வருத்தத்தால் உயிர்போகுமளவுக்கு மெலிந்து,
தோள்களும் தம் பழைய அழகினை இழக்க, நாள்தோறும்
பிரிந்துசென்றவரின் பிரிவுக்கு இரங்கி
அதனைப் போக்கும் மருந்து வேறு இல்லாததினால் உயிரோடிருந்து செயலற்றுப்போய்விட்டேன்.

#148 குறிஞ்சி பரணர்
பனைமரத்தின் திரட்சியைப் போன்ற  பருத்த அழகிய வலிமையான நீண்ட கையையும்
கொல்லுகின்ற சினம் நீங்காத செருக்குப் பொருந்திய உடல்வலிமையையும்,
வண்டுகள் மொய்க்கும் மதநீரையும், நிமிர்ந்த கொம்பினையும் உடைய யானை
குளிர்ச்சியான, மணங்கமழும் மலைச் சாரலிலுள்ள மரம் விழும்படியாக ஒடித்துத்தள்ளி
தனக்கெதிரே வந்த புலியைக் கதறும்படி குத்தி, அதன் வெற்றியைத் தொலைத்துச்
சிறிய தினை வளரும் பெரிய புனத்தில் சென்று மேயும் நாட்டையுடையவனே!
விரைகின்ற ஓட்டத்தையுடைய குதிரையையுடைய ஆய் எயினன் என்பவன்
நீண்ட தேரையுடைய ஞிமிலி என்பவனுடன் போரிட்டுக் களத்தில் இறந்துவிட
அதனைக் காண்பதற்குச் செல்லாத கூகை வெட்கப்பட்டுக்
கடும் பகலிலே வெளிப்படாமல் துன்பப்பட்டதைப் போல, துன்பம்
பெரிதாயிற்று இவளுக்கு, அதனால்
நீ மாலையில் வரவேண்டும், சோலையிலுள்ள
மூங்கில் முளையினை மேயும் பெரிய களிறு திரிகின்ற
மலையடிவாரத்திலுள்ள சாரலில் உள்ள சிறிய பாறைகள் இருக்கும் வழியில் -

#149 பாலை எருக்காட்டூர் தாயங்கண்ணனார்
சிறிய புன்மையான கறையான் நீண்ட நாள் முயன்று கட்டிய
உயர்ந்த சிவந்த புற்றில் மறைந்து கிடக்கும் புற்றாஞ்சோற்றைத் தின்று வெறுத்துப்போனால்,
புல்லிய அடிப்பகுதியையுடைய இருப்பைமரத்தின் தொளை பொருந்திய வெண்மையான பூவைப்
பெரிய கையையுடைய கரடியின் பெரிய கூட்டம் கவர்ந்து உண்ணும்
பாலை நிலத்தின் நீண்ட வழியினில் சென்று மிகவும்
அரிதாக ஈட்டும் சிறந்த பொருளை எளிதாகப் பெற்றாலும்
வரமாட்டேன், வாழ்க என் நெஞ்சமே! சேர அரசர்களின்
சுள்ளி என்னும் அழகிய பெரிய ஆற்றின் வெண்மையான நுரை கலங்கும்படி
யவனர் ஓட்டிவந்த தொழில் திறத்தால் மாட்சிமைப்பட்ட நல்ல மரக்கலம்
பொன்னுடன் வந்து மிளகோடு மீண்டு செல்லும்
வளம்பொருந்திய முசிறி என்னும் பட்டினத்தை ஆரவாரத்துடன் வளைத்து
அரிய போரை வென்று அங்கிருந்த பொன்னாலான பாவையினைக் கவர்ந்துகொண்ட
உயரமான நல்ல யானைகளையும் வெல்லும் போரினையும் உடைய பாண்டியனது
கொடிகள் அசைந்தாடும் தெருவினையுடைய கூடலின் மேற்கேயுள்ள
பல புள்ளிகளையுடைய வெல்லும் மயில்கொடியினை உயர்த்திய
ஓயாத விழாக்களையுடைய முருகனின் திருப்பரங்குன்றத்தில்
வண்டுகள் மொய்த்ததினால் நீண்ட ஆழமான சுனையில் பூத்த நீலப்பூவின்
எதிர்த்து நிற்கும் இரண்டு மலர்களைச் சேர்த்துவைத்ததைப் போன்ற இவளின்
செவ்வரி படர்ந்த மதர்த்த குளிர்ந்த கண்கள் தெளிந்த நீரினைக் கொள்ளும்படி - (வாரேன் வாழி என் நெஞ்சே)

#150 நெய்தல் குறுவழுதியார்
பின்னிவிட்டதால் பெரிதும் நெளிந்துள்ள கூந்தலையும், பொன் போன்று
மார்பிலே தோன்றிய அழகுத்தேமலையும், மார்க்கச்சு மூட்டுவிடும்படி
கண்ணுடன் விம்மி எழுகின்ற முலைகளையும் கூர்ந்து நோக்கி
பெரிதும் அழகுடையவள் என்று பலமுறை கூறி
பெரிய தோளினை முழுவதும் தழுவி, நீண்ட நேரம் நினைத்துப் பார்த்து
அரிய காவலில் (தலைவியை) வைத்துவிட்டாள் அவளுடைய தாய்; விரைந்து செல்லும்
வாள் போன்ற கொம்பினையுடைய சுறாமீன்கள் திரிகின்ற சங்குகள் மேயும் பெரிய துறையினையுடைய -
இதழ்கள் செறிந்த நெய்தலின் கண் போன்ற பெரிய பூக்கள் -
அரும்புவிட்ட செருந்தியின் மொட்டுகள் இதழ் விரியும்போது,
- மாலையில் அழகிய இதழ்கள் குவிய, காலையில்
தேன் மணக்கும் குவளை மலர்களுடன் தண்ணென்று மலர்கின்ற -
கழியையும் கடற்கரைச்சோலையினையும் பார்க்கும்போதெல்லாம் பலவற்றை எண்ணி வெறுத்து
தலவர் வரமாட்டாரோ என்று வருந்துவாள்,
மலர்மாலை சூடிய மார்பினையுடையவனே! நீ அவளைப் பிரிந்தபொழுது.

#151 பாலை காவன்முல்லை பூதரத்தனார்
தம்மை விரும்பி இருப்போரைக் காப்பாற்றி, தாம் விரும்பிய
இனிமை பொருந்திய நண்பரோடே இன்பம் மிகும்படி சேர்ந்திருந்து
மகிழ்ந்திருக்க முடியாதவர்கள் வறுமைப்பட்டவர்கள் என்று கூறி
மிகுந்த பொருளைச் சம்பாதிக்க நினைக்கின்ற நெஞ்சத்தால், நம்மீது அருள் இல்லாதவர்
ஆவர், வாழ்க தோழியே! இடமெல்லாம் விரிந்து
மிகுந்த காற்று வீசுந்தோறும் கலங்கியதும், புள்ளிகளையும், வரிகளையும் உடைய
கலைமானின் தலையில் முதன்முதலில் கிளைவிட்டு முளைத்த
கொம்பினைப் போன்று கவட்டைகளையுடைய குட்டையான அடிமரத்தையுடையதும் ஆன வாகை மரத்தின்
கிளைகளில் விளைந்த நெற்றுக்குலைகள், ஆட்டக்காரி
கோலால் அரித்தெழும் ஒலியினை உண்டாக்கும் பறையின் ஒலியைப் போல வியப்புண்டாக ஒலிக்கும்
கற்குவியல்களின் மேலுள்ள கரடுமுரடான இடத்தில் உள்ள நிழலில்,
கள்ளியின் முள்ளுடைய அடிப்பகுதியில் இருந்துகொண்டு, வழிப்போவாருக்கு
நடக்கப்போவதைக் கூறும் சிறிய சிவந்த நாக்கையுடைய,
மணிச் சத்தத்தைக் கேட்டாற் போன்ற தெளிந்த குரலைக் கொண்ட
சோதிடம் கூறும் வாயையுடைய பல்லிகளையுடைய காட்டைக் கடந்துசென்ற நம் தலைவர்.

#152 குறிஞ்சி பரணர்
நம் நெஞ்சு நடுங்கும்படியான, வேறொன்றால் தீர்வதற்கு அரிய துன்பம் தீரும்படியாக வந்து
குன்றை ஒட்டிய தனது சிற்றூருக்குச்
செல்வதற்குத் திரும்பிப்போகும் நம் தலைவியின் வளைந்து சுருண்ட ஐந்தாகப் பகுக்கப்பட்ட கூந்தல்
நுண்ணிய கோலையுடைய பாணர்களைப் பேணும் பெரிய புகழையும்
சினம் மிக்க படையினையும் உடைய தித்தன் வெளியன் என்பவனின்
ஒலிக்கும் நீர்ப்பரப்பினையுடைய கானலம் பெருந்துறை என்னும் பட்டினத்தில்
பொன்னைக் கொண்டுவருகின்ற நல்ல மரக்கலங்கள் சிதைந்துபோகும்படி தாக்குகின்ற
சிறிய வெண்மையான இறாமீனின் கூட்டம் போன்ற
மிக்க பகையைத் தரும் வலிமை மிக்க பிண்டன் என்பவனின்
போர்செய்யும் பகைமை சிதைய வென்ற வெற்றியையுடைய வேலினையும்
புகழ் நிறைந்த நல்ல ஈகையினையும், களிறுகளை வழங்கும் வள்ளன்மையாகிய மகிழ்ச்சியினையும் உடைய
பாரம் என்னும் ஊர்க்குத் தலைவனாகிய ஆரம் பூண்ட நன்னன் என்பவனின்
ஏழில் என்னும் நீண்ட மலைத்தொடரின் பாழி என்னும் பக்கமலையில் இருந்து
களிக்கும் மயிலின் தோகையைப் போன்றது; தோள்களோ
வலிய வில்லையுடைய வீரர்களுக்குத் தலைவனான நள்ளி என்பவனின்
சோலைகள் இருக்கும் மலைச்சரிவில், வண்டுகள் மொய்ப்பதால் மலர்ந்த
கடவுள் சூடுவதற்குரிய காந்தள் பூக்களுக்குள், பலவும் சேர்ந்து
வியக்கத்தக்க அழகிய மலர்கள் மணப்பது போல மணங்கமழ்ந்து,
வல்லவர்களாக இருந்தாலும், இல்லாவிட்டாலும், தம்மிடம் பரிசில் வேண்டி வந்தவர்க்குப்
பெரிய பானையில் சமைத்த சோற்றினை அவர் ஏந்திய கலங்களின் ஆழமான குழி நிறைய வாரி வழங்கும்
பெரிய யானைகளையுடைய ஆய் என்பவனின் காட்டிலிருக்கும்
தலையாறு என்னுமிடத்தில் நிலைபெற்ற மிக உயர்ந்த மலையிலுள்ள
மூங்கிலில் அமைந்த கணுவின் நடுப்பகுதியைப் போன்று
வெகு தொலைவில் உள்ளனவாயினும் நம்மை நடுங்கவைக்கும் துயரத்தைத் தருவன.

#153 பாலை சேரமான் இளங்குட்டுவன்
நான் நொந்துபோகின்றேன், எனது உள்ளம் வருந்துகிறது;
அழகிய இனிய மொழி பேசும் தோழியருடனே சேர்ந்து
பந்து ஆடும் இடத்திற்குக் கொஞ்ச நேரம் சென்று வந்தாலும், மிகவும் நொந்து
பெரிதும் வருந்துவாள், அந்த இரங்கத்தக்கவள், இப்பொழுதோ,
கொடுமைக்கார ஒருவன் தன் மார்போடு சேர்த்து அவளை வளைத்துக்கொண்டு
இனிய மொழிகளால் அவளைக் கட்டிப்போட்டுவைக்க, அதனை நம்பி, நம்மிடம்
உண்டாகும் துயரத்தை நினைக்காதளாகி, விரைவாக,
காய்கின்ற கதிரவனின் கதிர்கள் கெடுத்த வேனில்காலத்து வெப்பம் மிக்க காட்டினில்,
வேகமாக அடிக்கும் காற்று, தழைத்த மூங்கிலின் கணுக்களைச் சேர்த்துத் தாக்குவதால்
தீப்பொறிகள் சிதறி உண்டாக்கிய, பொங்கி எழுகின்ற மிகுதியான நெருப்பினால்
பசுமை அற்றுப்போன மலைஉச்சிகளிலுள்ள பயனற்ற கடத்தற்கு அரிய வழிகள்
அவளுடைய நல்ல அடிகளுக்கு ஏற்றன அல்ல என்பதால், மென்மையான இயல்பினையுடைய அவள்
கடப்பதற்கு வல்லமையுடையவள் ஆவாளோ? இரவினில்
நெடிய மலைச்சாரலிலுள்ள உயர்ந்த உச்சியில்
மீன்களோடு விளங்குகின்ற வானத்தைப் போன்று தோன்றி,
வண்டுகள் பாய்ந்து ஆரவாரிக்கும் விளக்கமான பூங்கொத்துகளைக் கொண்ட கோங்கின்
காற்று அடிப்பதால் கழன்று விழுந்த தேன் மணக்கும் புதிய மலர்
தன் இருக்கையைவிட்டு வீழ்ந்த விண்கல் போன்று தோன்றும்
மேகம் படியும் பெரிய மலை குறுக்கே நிற்கும் பாலை வழியினை-(கடப்பதற்கு வல்லமையுடையவள் ஆவாளோ?)

#154 முல்லை பொதும்பி புல்லாளங்கண்ணியார்
மிகுந்த மழை பொழிந்ததினால் பயன் மிகுந்த முல்லைநிலத்தில்
ஆழமான நீரையுடைய பள்ளங்களிலுள்ள பிளந்த வாயினையுடைய தேரைகள்
சிறிய பல வாத்தியங்கள் இசைப்பது போன்று நீண்ட வழிகளில் ஒலியெழுப்ப,
சிறு புதராக வளர்ந்த பிடவஞ்செடியின் நீண்ட காம்புகளைக் கொண்ட மலர்கள்
செம்மண்ணாகிய நிலத்தில் குறுமணலில் உதிர்ந்து அழகுசெய்ய,
கடுங்கோபமுள்ள பாம்பின் படம் மேலே உயர்ந்து நிற்பதைப் போல
குளிர்ச்சியான மணங்கமழ்கின்ற காந்தள் பூவின் தாது கட்டவிழ்ந்து விரிய,
முறுக்கிய கொம்புகளையுடைய இரலைமான்கள் தெளிந்த நீரைக் குடித்து
தாம் விரும்பும் துணையுடன் இன்பமாகத் தங்கியிருக்க,
காடு அழகு பெற்ற குளிர்ச்சியான பதமுள்ள பெரிய வழியில்
ஓடுகின்ற ஓட்டம் குறையாத, கொய்யப்பட்ட பிடரி மயிரையுடைய குதிரைகள்
காலின் அளவு தாழ்ந்த மாலையிலுள்ள மணிகள் தெளிவாக ஒலிக்க,
தேரினை ஓட்டுவாயாக, தேர்ப்பாகனே! மகளிர்க்குரிய சிறப்பெல்லாம் மிகப்பெற்று
நம்மிடத்துப் பெரிதும் விருப்பமுள்ள கோட்பாட்டினைக் கொண்ட
அழகிய மாமை நிறமுடைய தலைவியை விரைவாகச் சென்றடைவோம்.

#155 பாலை பாலை பாடிய பெருங்கடுங்கோ
அறத்தைவிட்டு அகலாத வாழ்க்கையும், என்றைக்கும்
பிறர் வீட்டு வாசலில் சென்று இரந்து நிற்காத நல்ல நிலைமையும் ஆகிய இரண்டும்
பொருளினால் ஆகும், அழகிய அணிகலன் அணிந்தவளே! என்று நம்முடைய
இருண்ட அழகிய ஐந்தாகப்பகுப்பட்ட கூந்தலை நீவியவாறு சொன்னவர்,
அவர் பிரிவால் நாம் பிரிவுத்துயரில் ஆழ்வோமென்றாலும், தாம் தம்முடைய
பொருளீட்டும் செயலை நன்கு முடித்துவிட்டு வரட்டும் தோழியே! பல வழியிலும்
பால் வளம் மிக்க பசுக்கூட்டங்கள் இருக்கும் பாண் நாடு என்னும் அவ்விடத்தில்
நீண்ட சீழ்க்கை விடும் கோவலர்கள் தோண்டிய கிணறுகளிலிருந்து முகந்த
வளைந்த வாயையுடைய பத்தலென்னும் கொள்கலத்திலிருந்து நீர் வழிந்து வீழ்ந்து நிரம்பிய சிறிய குழி
நீரில்லாமல் காய்ந்துபோன வருத்தத்துடன் வேறு நீர் குடிக்குமிடம் இல்லாமையால்
பெரிய களிறுகள் மிதித்துச் சென்ற அடிச்சுவட்டில் பெரிய புலிகள்
அடிவைத்து நடந்து சென்ற சேற்று நிலமான ஈரமான வழிகள்,
குற்றமற்ற நாவினையுடைய கூத்தர்கள் தம் முதுகில்
கட்டிய மார்ச்சனை பூசிய மத்தளத்தின் முகப்பாகிய கண்ணில்
தங்கள் விரல்களால் அடித்த வடுக்கள் போலத் தோன்றும்
மரல்கள் வாடிய இடங்களையுடைய மலையைக்கடந்து சென்றவர்.- (தாம் தம் செய்வினை முடிக்க)

#156 மருதம் ஆவூர் மூலங்கிழார்
முரசங்களையுடைய செல்வர்களின் குதிரையின் தலையுச்சியில்
மூட்டித் தைக்கப்பட்ட கவரியை நிமிர்த்து வைத்ததைப் போன்ற,
வளம் மிக்க வயலிலுள்ள நெல்லின் சிவந்த அரிகளையுடைய இளங்கதிரை
முதிய பசு தின்றுவிடும் என அஞ்சி, வயல்காவலர்
பாகலின் சிறந்த கொடியைப் பகன்றையின் கொடியுடன் அறுத்து
கரும்பினை உண்ணக் கொடுத்துக் காஞ்சி மரத்தில் கட்டிப்போடும்
இனிய நீர்வளம் பொருந்திய ஊரையுடைய தலைவனே! மிக நன்றாக,
குவளை மலர் போன்ற மையுண்ட கண்களையுடைய இவளும் நானும்,
கழனியிலுள்ள இதழ் ஒடியாத ஆம்பல் மலர்களுடன் கூடிய பசிய தழையாடையை
ஞாயிறு காயாத விடியற்காலத்தில் மார்பினில் சேர்த்துக்கட்டி
மணல்வீடுகட்டி விளையாடி மகிழ்வோம் என்று வந்து
உன்னுடன் சிரித்துப்பேசிய பிழை செய்த தவறோ? பெருமானே!
கள்ளும், மாலையும் ஆகிய வழிபாட்டுப் பொருள்களும்,
நிமிர்ந்த கொம்பினையுடைய வெள்ளாட்டின் தொங்குகின்ற செவியையுடைய கிடாயும்
உட்பட எல்லாம் நீர்த்துறையில் நிலைபெற்ற தெய்வத்திற்குச் செலுத்தியும்
தன் மகளுக்கு உற்ற நோய் தணியும் வழி அறியாதவளாய் அன்னை அழ,
நீலமணி போன்ற மேனி பசலையால் பொன் நிறத்தை அடைதல்-(உன்னுடன் சிரித்துப்பேசிய பிழைசெய்த தவறோ?)

#157 பாலை வேம்பற்றூர் குமரனார்
கள் விற்கும் பெண்கள் தம் இடுப்பிலே சுமந்துவந்த
விரிந்த வாயையுடைய பானையின் குவிந்த முனையிலிருந்து சொரிந்த
அரித்த, நிறம் மிக்க கலங்கலான கள்ளை வயிறாரக் குடித்து,
போரினை விரும்பி ஆரவாரிக்கும் சிவந்த கண்களையுடைய வீரர்கள்
வில்லால் எய்ய வீழ்ந்தவரின் பிணங்களை மூடிய கற்குவியலில் நிற்கின்ற கோங்க மரத்தின்
இரவில் மலர்ந்த பசிய அதிரல் கொடியை
பெரிய இருள் புலர்கின்ற வைகறைப் பொழுதில் அரும்புடன் வளைத்து
காட்டு யானை கவளமாகச் சுருட்டி உண்ணும்
அச்சம் வரும் வழியில் தனியாகச் செல்லும் நம் தலைவர்
மனம் ஏற்றுக்கொள்ளும்படியாகச் சொல்வார், தோழியே!
போர் நிகழ்வதால் குடிகளை இடம்பெயரச் செய்ததால் பொலிவிழந்துபோன ஊர் மன்றத்தில்
மழைபெய்யும்போது இளகிப்போய், வெயிலடிக்கும்போது மெலிந்துபோய்
சாயம்போன பாவையைப் போல அழகிழந்து
வீட்டுக்குள் முடங்கிக்கிடக்க யாருக்கு முடியுமோ அவர்களுக்கு - (மனம் ஏற்றுக்கொள்ளும்படி சொல்வார்)

#158 குறிஞ்சி கபிலர்
இடி முழங்குகின்ற மின்னல் முதலிய தொகுதிகளையுடைய பெரிய மழை பெய்துவிட்டு
அந்த மழை நின்று ஒலியடங்கிப்போன இருள் செறிந்த நள்ளிரவில்
மின்னல் பரவியதைப் போன்ற கனத்த குழைகள் ஒளிவிட,
பின்னல் நெகிழ்ந்ததினால் அலையலையாய்ப் பரந்த கூந்தலையுடையவளாய்
மலையிலிருந்து இறங்கும் மயிலைப் போல தளர்ந்து நடந்து
மாடத்திலிருந்து மெதுவாக இறங்கிவர இவளைக் கண்டேன் என்று
இவளைத் துன்புறுத்தாதே! வாழ்க! நான் கூறுவதைக் கேட்பாயாக! நல் கொல்லைப்புறத்தில்
தெய்வங்களையுடைய மலைச்சரிவிலிருந்து ஒளிவிடும் பூவைச் சூடிக்கொண்டு,
தாம் விரும்பிய வடிவில் பெண்தெய்வங்கள் வருவதுண்டே!
நனவில் நடப்பது போல, தூங்குபவர்களைக்
கனவு அங்கு மயக்குவதும் உண்டே! இவளோ
விளக்கு இல்லாமல் இரவில் தனியாக இருப்பதற்கும் நடுங்குவாள், அச்சம் தோன்றும்படியாக
ஊர்ப்பொதுவிடத்தில் இருக்கும் மராமரத்திலுள்ள கூகை குழறினாலும்
மனம் கலங்கிப் பாதுகாப்பான இடத்தைச் சேர்வாள், அதற்கு மேலும்
புலிக்கூட்டத்தைப் போன்ற நாய்கள் தொடர்ந்துவரும் வேட்டைத் தொழிலை விட்டு,
முருகனைப் போன்ற சீற்றத்தையும் கடும் ஆற்றலையும் உடைய
எம் தந்தையும் வீட்டிலிருக்கின்றார், எனவே
இவள் இவ்வாறு செய்வதற்குப் பயப்படுவாள் அல்லவா!

#159 பாலை ஆமூர் கவுதமன் சாதேவனார்
தெளிந்த கழியில் விளைந்த வெண்மையான கல் உப்பின்
விலையைக் கூறி விற்ற வளைந்த நுகத்தடியைக் கொண்ட வரிசையான வண்டிகளில் பூட்டிய
வலிமை பொருந்திய பிடரியினையுடைய காளைகள் பலவற்றையும் மேயும்படி அவிழ்த்துவிட்டு,
உப்பு வணிகர்கள் இளைப்பாறி விட்டுச்சென்ற ஒழிந்துகிடந்த கல் அடுப்பில் -
நன்கு வடிக்கப்பெற்ற அம்பினையும் வளைவான வில்லினையும் உடைய வெட்சி மறவர்
வருத்தத்தை விளைவிக்கும் வலிமையான வில்லினை மிகவும் வளைத்து
பல பசுக்களையுடைய நீண்ட கூட்டத்தைக் கவர்ந்துகொண்டுவரும்பொழுது, கல்லென்னும் ஒலியுண்டாக
அந்த அரிய போர்முனையில் அவர்களை வருத்தி விரட்டிய பெரும் செருக்குடைய வெற்றி வீரராகிய கரந்தையர்
மிகுந்த ஓசையுடன் விரைவாக ஒலிக்கும் உடுக்கின் தாளத்திற்கேற்றவாறு ஆடி
தழைமாலையைத் தலையில் சூடியவராய் - ஊனை வேகவைத்து உண்ணுகின்ற
பிரிந்துசெல்லும் நெறிகளில் காதலர் சென்றார் என்று மிகவும்
துன்பம் கொள்ளாதே! பெரும் காதலையுடைய தோழியே!
வானத்தில் பேரிடி இடிக்கும் உயரமான உச்சியையுடையதும்
மணமுள்ள பூக்களைக் கொண்ட சாரல்களையுடையதுமான குறும்பொறை என்னும் மலைக்குக் கிழக்கில்
வில் பொருந்திய பெரிய கையினையுடைய, வெல்லுகின்ற போரினையுடைய சேரமன்னனின்
வண்டுகள் மொய்க்கும் கன்னத்தையுடைய,சிறிய கண்களையுடைய யானையின்
பூண் அணிந்த பெரிய கொம்புகள் ஒடியும்படியாகத் தாக்கிஅழித்து,
கொடுமுடி என்பவன் காத்துநிற்கும் விளக்கமுள்ள நெடிய மதில் சூழ்ந்த
நெடுந்தூரம் சென்று விளங்கும் சிறப்பினையுடைய ஆமூரையே அடைவதாய் இருந்தாலும்
அங்கே மனம் ஒன்றித் தங்கிவிடமாட்டார், உன்
பூண் சுமக்கும் மார்பினைத் தழுவுதலை மறந்து.

#160 நெய்தல் குமுழிஞாழலார் நப்பசலையார்
ஒடுங்கிய நெய்ப்பசையுள்ள கூந்தலையுடையவளே! உனக்கும் அப்படித்தான் இருந்ததோ?
நடுங்கிப்போய்விட்டது, பாவம்! என்னுடைய மன அடக்கம் அற்ற நெஞ்சம்!
அடும்பின் கொடியைச் சிதைத்து இழுத்து, வளைவான கழியிடத்து உள்ள
குவியலான வெண்மணலின் பக்கம் சேர்த்து,
நிறைந்த சூல் உடைய ஆமை மறைவாக இட்டு, மணலுக்குள் புதைத்துவைத்த
யானைக் கொம்பினால் செய்த உருண்டை போன்ற புலால் நாறுகின்ற முட்டைகளை,
அவற்றிலிருந்து குஞ்சுகள் வெளிவரும் வரைக்கும், பிளந்த வாயையுடைய
அதன் கணவனாகிய ஆண்யாமை அடைகாக்கும் கடற்கரைச் சோலையைச் சேர்ந்த தலைவன்,
தார்க்குச்சியால் குத்தினால் இன்னும் வேகமாகப் போகும் என்று அஞ்சி, மெதுவாகத்
தாவிச் செல்வதைக் கடிவாளத்தைப் பிடித்திருப்பதினாலேயே உணர்த்தி,
அம்புபோல் பாய்கின்ற முறையைப் பயின்ற அழகிய நடையினையுடைய குதிரைகள்,
செழுமை வாய்ந்த நீரினையுடைய குளிர்ந்த கழியினைக் கடந்துசெல்லும்போது, தேர்ச் சக்கரங்களின்
கூர்மையான விளிம்புகளால் அறுக்கப்பட்ட பொதிந்த அரும்புகளையுடைய நெய்தல்
பாம்பின் மேலே தூக்கிய தலையைப்போல வாட்டமுடன் நிமிர்ந்து நிற்க
இரவுநேரத்தில் மறைவாக வந்துகொண்டிருந்த தலைவனின் திண்ணிய தேர், இப்பொழுது மறைவாக இல்லாமல்
ஒல்லென்று ஆரவாரம் செய்யும் ஏவல் இளைஞருடன், பொல்லாத வாயினால்
அலராகிய பேரொலி எழுப்பும் சிறிய ஊரின் மக்கள் பார்க்கும்படியாக,
பகலிலே வந்திருக்கிறது, பாய்ந்து வரும் குதிரைகளினால் சிறப்புற்று. 

#161 பாலை மதுரை புல்லங்கண்ணனார்
பொருளீட்டும் வினைக்காகப் பிரிந்து செல்வது எப்படி இயலும்? வளைந்து சுருண்ட
சீப்பினால் சீவப்பெறாத மயிரினையுடைய கொடிய மறவர்
அடிப்பக்கம் மூங்கிலினால் ஆன அம்பினை முழுவதும் இழுத்து
வழிச்செல்லும் புதியவரைக் கொன்ற அச்சம்தோன்றும் பாலைநிலத்துக் கிளைவழிகளில்
கிடைக்கும் முடை நாறும் ஊனை விரும்பியுண்ணும் வாழ்க்கையினையுடைய, சிவந்த காதுகளையுடைய
பருந்தின் சேவல் நெருங்கிய தன் சுற்றத்தினை அழைக்கும்
அச்சம் வரும் கானத்தைக் கடந்து பொருளை ஈட்ட விரும்பிச்
செல்வதற்கு எண்ணினார் என்பதை முன்னமேயே நன்றாகக்
கேட்டிருக்கிறாள் அவள்; தோளில் தாழ இறங்குகின்ற,
வண்டுகள் தேனை உண்ண, தழைத்த கரிய பலவான கூந்தலையும்,
அழகிய மாமைநிற மேனியையும் ஆய்ந்த அணிகலன்களையும் உடைய இளம்பெண்ணாகிய தலைவியின்
அழகுத்தேமல் படர்ந்த மார்பினில் முலைமேல் தோன்றும் தெய்வம் போன்று உருக்கொண்ட
நல்ல வளர்ச்சியையுடைய இளம் முலைகள் நனையும்படி
பல இதழ்களையுடைய குவளைமலர் போன்ற மையுண்ட கண்களில் நீர்த்துளிகள் விழுந்து பரவின.

#162 குறிஞ்சி பரணர்
மேகங்கள் கொள்ளக்கொள்ளக் குறையாததும், சங்குகள் வளர்வதும், ஆழத்தினையுடையதால்
அளப்பதற்கு அரிது ஆகியதும், திரண்ட கரிய தோற்றத்தினையுடையதும் ஆகிய
கடலைப் பார்த்ததைப் போன்ற மாகமாகிய விசும்பில்
நெருப்பு கொடிவிட்டு வளர்வதைப் போன்று மின்னல்கள் மேகத்தைப் பிளந்துகொண்டு நெளிந்தோட
கடுமையாக இடிக்கும் இடியுடன், வேகமாக விழும் நீர்த்துளிகளை எங்கும் சிதறி
முடிவிடம் அறியாதவாறு மேகம் பொழியும் நடு இரவில்,
கடுமையாய்க் காவல்காக்கும் காவலர்கள் சோர்ந்திருக்கும் தருணத்தைப் பார்த்து,
குளிர் பொருந்திய, அசைந்துவரும் வாடைக்காற்று வருத்த, அவளின் தந்தையின்
நெடிய மாளிகையின் ஒரு பக்கத்தில் நின்றிருந்தேனாக,
கருமணலெனத் திகழ்கின்ற கூந்தலையும், குவளை மலர்கள் போன்று
ஒளிமிக்க முகத்திலே அங்குமிங்கும் சுழலுகின்ற அழகிய இமைகளையுடைய குளிர்ந்த கண்களையும்,
வண்டுகள் விரும்பும் முல்லை அரும்புகளை வரிசையாகக் கட்டியது போன்ற வெண்மையான பற்களையும்,
புன்னகையால் சிறப்புற்று விளங்கும் அழகு பொருந்திய பவளம் போன்ற சிவந்த வாயினையும் உடையவளாய்
அழகு வாய்ந்த சிறந்த வளையல் விளங்கக் கைகளை வீசிக்கொண்டு,
காற்றால் அலைக்கப்படும் தளிரைப் போல் நடுங்கிக்கொண்டு, ஒழிவில்லாமல்,
எனது காமநோயும், பயணக் களைப்பும் நீங்கும்படியாக முயங்கினாள்; வாய்மையான சொற்களையும்,
நல்ல புகழை உண்டாக்குகின்ற இரவலர்க்கு அவர் எண்ணிய
விருப்பத்தை அடையாமல்போவதை அறியாத ஈகையினையுமுடைய கழலும் வீரவளையும் அணிந்த அதிகனின்
காய்த்தல் அற்றுப்போவதை அறியாத பயனைத் தரும் பலாமரங்களுடன்,
வேங்கை மரங்களும் பொருந்தியுள்ள மலையிடம் பொலிவுபெற -
விற்படையையுடைய பசும்பூண் பாண்டியனின்
களிற்றின் மீது உயர்த்திய வெல்லும் கொடியைப் போன்று, அழகுபெற
மிளிர்வனவாய் இறங்கிவரும் - உயர்ந்து காணப்படும் அருவிகளையுடைய 
செங்குத்தாக நிற்கின்ற உயரமான மலையின் உச்சியிலுள்ள சரிவில் இருக்கும்
அச்சம்தரும் தெய்வப் பெண்களைப் போலப் பெறுவதற்கு அரியவளாகிய நம் தலைவி.

#163 பாலை கழார்க்கீரன் எயிற்றியார்
பலவகையான மலர்களும் குழைந்துபோகும்படி, வானத்தில் முழக்கத்துடன் ஒன்றுகூடிய
குளிர்ந்த மேகங்கள் பெய்து, குறைந்த மழையைக் கொண்ட கூதிர் காலத்தின் கடைசி நாளில்
நான் தனித்திருக்கவும், பிரிவுத்துன்பம் உள்ளத்தில் மிகுந்து நிற்கவும்
என்னைவிட்டுப் பிரிந்துசென்றவரை எண்ணி, மீதியிருந்த ஒருசில வளையல்களும் கழன்றுவிழ
பெரிய ஆசையையுடைய உள்ளத்துடன், அவர் திரும்பி வரும் வழியையே பார்த்துக்கொண்டு
இறந்தே போகலாம் என்ற துன்பத்துடன் இருப்பவள் இரங்கத்தக்கவள் என்று கருதாமல்,
யானை நீரைப்பருகிப் பின்பு அதனைத் தூவிவிடுவது போன்ற கண்பார்வையை மறைக்கின்ற பனித்துளிகளால்
தாமரை மலர்கள் கருகிப்போகும் முன்பனிக் காலத்து நடு இரவில்
மலையையும் நெகிழ்த்துவிடுவது போன்ற குளிரைக் கொண்டுவந்த வாடைக்காற்றே!
எனக்காகவே வந்ததுபோல் இருக்கின்றாய்! நீரோடும் வாய்க்காலிலுள்ள
மணலால் ஆன குவியல் கரைவது போல நெஞ்சம் கரைந்து இளக,
என் துன்பத்திற்குக் காரணமான அந்தக் கொடுமைக்காரர் சென்ற நாட்டிற்கும், கொஞ்சமும் குறையாமல்
இப்படியே இருந்து செல்வாயாக!
தன் தொழிலிலேயே முனைப்பாயிருப்பவர் என்னை ஒருவேளை நினைத்துப்பார்த்தாலும் பார்ப்பார்.

#164 முல்லை மதுரை தமிழ் கூத்தன் நாகன்தேவனார்
கதிரவன் தன் கதிர்களையே கைகளாகக் கொண்டு ஈரத்தையெல்லாம் உறிஞ்சி,
பசுமை அற்றுப்போகும்படி சுட்டுப்பொசுக்குவதால், தன் பயன்களெல்லாம் மறைந்து ஒழிய
பிளவுகள் ஏற்பட்ட அகன்ற இடங்கள் பொருந்திய இந்தப் பெரிய உலகத்தில்,
காடுகள் தாம் இழந்த அழகைப்பெறும்படி, மிகுந்த மழை பொழிந்ததால்,
புள்ளிகளையும் வரிகளையும் உடைய கூட்டமான வண்டுகள் ஆரவாரிக்க, பல பூக்களுடன்
மணம் வீசும் முல்லையோடு செங்காந்தளும் சேர்ந்து மலர,
நறுமணத்தைப் பெற்றது, பூக்கள் மணக்கும் காடு;
என்னவாயிற்றோ போருக்குச் சென்றவரின் நிலை என்று மயங்கி
ஒழுகுகின்ற கண்ணீர் சிந்துகின்ற கண்களுடன் வருந்தி, வீட்டில்
துன்பத்துடன் இருக்கின்றவள் தான் இழந்த பழைய அழகைப் பெறுவாள்,
இது நல்லகாலம் என்பதனைப் பார்ப்பாயாக! பகைவரின்
மதில் கதவினைச் சிதைத்த பூண்கள் சிதைந்த கொம்புகளையுடைய,
கட்டுத்தறிகளை ஒடிக்கும் யானைகளையுடைய
கொடும் சினத்தையுடைய வேந்தன் தன் போர்த்தொழிலை விட்டுவிடப் பெற்றால் - (இது நன் காலம் கண்டிசின்)

#165 பாலை
மென்மையான தலையையுடைய இளம் பெண்யானை குழியில் விழுந்துவிட்டதால்
ஆண்யானை கூக்குரல் எழுப்பும் ஆரவார ஒலியினால் வெருண்டுபோய்
விரைந்து எழுந்த சிவந்த வாயையுடைய யானைக் கன்று
பூந்தாதுக்களே எருத்துகள்களாகச் சிந்திக்கிடக்கும் தெருவினையுடைய பழைய ஊரினில்
எருமையாகிய நல்ல மாட்டிலிருந்து பெறுகின்ற முலைப்பாலைக் குடிக்கும்
நாடுகள் பலவற்றைக் கடந்த அந்த நல்லவளை எண்ணி
அவளின் தோழியர் கூட்டமும் அழகிழந்து வருந்துகின்றது, அவளை ஈன்ற தாயும்
இற்றுப்போகட்டும் என் உயிர், உனது இனிய தோளினைத் தருவாயாக, என்று சொல்லிக்
கண்ணையும், நெற்றியையும் தடவிக்கொடுத்து, குளிர்ச்சிபொருந்த
வளைந்து நிற்கும் நொச்சியின் வரிவரியான நிழலில் கிடத்தி,
தாழியில் வளரும் குவளையின் வாடிப்போன மலரைச் சூட்டி,
கொண்டுவந்து பரப்பிய மணலில் கிடந்த பாவையை, என்
அருமை மகளே என்று கூறித் தழுவியவாறு அழுகின்றாள்.

#166 மருதம் இடையன் நெடுங்கீரனார்
நல்ல மரங்கள் சூழ்ந்த (கள் விற்கும் இடத்தில் உள்ள) கள் நிறைந்த சாடியில்
பலநாளும் கள் வடிக்கப்பெற்றதால் அந்தக் கள் விற்கும் கலத்தை உடைத்துவிட்டால்
செறிவான மழைத்துளிகள் போல தெருவெல்லாம் திவலைபடியும்
பலவான பழைய நெல்லினையுடைய வேளூரின் வாயிலில் இருக்கும்,
நறுமண நீர் தெளிக்கப்பட்ட மணங்கமழும் பூங்கொத்துக்களாலான மாலையை
புள்ளிகளையும்,வரிகளையும் உடைய கூட்டமான வண்டுகள் மொய்க்காமல் போவதற்குக் காரணமான
உயர்ந்த பலியுணவைப் பெறுகின்ற அச்சம்தரும் தெய்வம்,
”அலங்கரிக்கப்பட்ட கரிய கூந்தலையுடையவளாகிய - உன்னால் புனலாடியதாகச் சந்தேகிக்கப்படும் - அவளுடன்
நான் அப்படிப் புனலாடி வந்தவன் என்றால், (அந்தத் தெய்வம்) என்னை வருத்தட்டும்” என்று
தன் மனைவியிடம் சத்தியம் செய்து அவளைத் தெளியவைப்பான் எனில்,
யாராக இருக்கும்? வாழ்க தோழியே!, நேற்று
மாலையணிந்த களிற்றினைப் போல, நீர்மிதவையின் தலைப்பைப் பிடித்துக்கொண்டு
மணம் முடித்ததால் நான் கட்டியிருந்த ஆடை நனைந்திருந்த அழகுடன் இருந்த என்னுடன்
புதிதாய்ப் பெருக்கெடுத்து வந்த காவிரியின்
கரையுச்சியைத் தொட்டுக்கொண்டு வந்த மிகுந்த வெள்ளத்தில் புனலாடியோர் - (யாராக இருக்கும்?)

#167 பாலை கடியலூர் உருத்திரங்கண்ணனார்
ஒளிவிடும் மணிகளைப் போன்ற சிறப்பாக அமையப்பெற்ற அழகினையுடைய
புதிய பளிங்குகள் சேர்த்த சரத்தினை அணிந்த அல்குலையுடைய மாநிறத்தவளோடு
அழகிய வேலைப்பாடு அமைந்த அலங்கரிக்கப்பட்ட பூக்களையுடைய படுக்கையில்
விண்ணை முட்டும் உயர்ந்த மாளிகையில் தங்கி, இன்று
இனிதாக முழுதும் கழிந்தது; நாளை
மூடாத கண்களுடன் தனிமை வந்து துயர்தர
தங்கியிருப்போம் அல்லவா! நெஞ்சமே! பயணப்படும் வணிகக் கூட்டத்தைக் கொன்று
வழியிலே ஒன்றுசேர்ந்து உண்ணுகின்ற அச்சம்தரும் அம்பினையுடைய
வளைந்த வில்லினையுடைய மறவரின் மிக்க பகையை அஞ்சி
ஊர் மக்கள் குடிபெயர்ந்து போனதால் வெறுமையாகிப்போன பீர்க்கங்கொடி படர்ந்த பழைய பாழிடத்தில்
முருங்கைக் கிளையை ஒடித்துத் தின்ற பெரிய கையையுடைய யானை
முதுகின் உயர்ந்த பின்புறம் உராய்வதால், தளர்ந்து
செங்கல்லால் ஆன நீண்ட சுவரின் விட்டங்கள் விழுந்துவிட்டதால்,
மணிப்புறாக்கள் பறந்தோடிப்போன மரத்தாலான தூண்கள் சாய்ந்துவிட்ட மாடத்தினையும்
எழுதப்பெற்ற அழகிய கடவுள் வேறிடம் போய்விட்டதால் பொலிவிழந்து
இடைவிடாமல் நடக்கும் வழிபாட்டினை மறந்துபோன மெழுகப்படாத புன்மையான திண்ணையில்
பால்கொடுக்கும் நாய் தங்கிய தேய்ந்துபோன இடத்தையுடைய சிறிய அறைகளையுடைய
கடைந்து உருவாக்கப்பட்ட தூண்கள் சிதைந்துபோகும்படி நெருக்கமாகக் கூடி, வேலின் வாய் போன்ற
கூர்மையான வாயினையுடைய கறையான்கள் புற்றுமண்கொண்டு மூடிவிட்ட
கூரையும் இல்லாமற்போன தாழ்வாரத்தையுடைய அம்பலத்தில் - (தங்கியிருப்போம் அல்லவா!)

#168 குறிஞ்சி கோட்டம்பலத்து துஞ்சிய சேரமான்
இரவுப்பொழுதை உன்னுடன் கழித்து, நீ இரவில் வருவதால் உனக்குண்டான தீங்கை எண்ணித் துன்பம் மிக,
நீர் ஒழுகும் கண்ணையுடையவர்களாய் இருக்கின்றோம், எனவே, இனிமேல்
தவிர்க்க வேண்டும், வானளாவிய மலையையுடைய நாட்டைச் சேர்ந்தவனே!
பல்லான் என்ற குன்றினில் உள்ள நிழலில் இருக்கும்
நல்ல பசுக்கூடங்களையுடைய நிலப்பரப்பினையுடைய குழுமூர் என்ற இடத்தில்
ஈகையையே தன் கடமையாகக் கொண்ட, கோட்டமில்லாத நெஞ்சினையுடைய
உதியன் என்பவனின் சமையலறை போல ஒலி மிகுந்து
அருவி ஆரவாரிக்கும் பெரிய மலையின் சாரலிலே
அண்மையில் ஈன்ற தன் பெரிய பெண்யானையைத் தழுவிக்கொண்ட ஆண்யானை, தன்
அசைந்த நடையினைக் கொண்ட கன்று உறங்குகின்ற இடத்தைப் பாதுகாக்க,
ஒடுக்கமான தன் இருப்பிடத்தை விட்டுப்போய் கடுமையுள்ள,
வாள் போன்ற வரிகளையுடைய வலிமையுள்ள புலி மலையின் குகையில் முழங்க,
வேட்டைக்காரர்களும் உறங்கும் இரவினில்
விலங்குகள் செல்லும் வழியாகிய சிறிய பாதையில் நீ வருவதை - (த்தவிர்க்க வேண்டும்)

#169 பாலை தொண்டியாமூர் சாத்தனார்
மரங்கள் தமது உச்சி கருகிப்போகவும், நிலம் வளம் குன்றவும்,
ஞாயிற்றின் அசைகின்ற கதிர்கள் பரவிய வெம்மை விளங்கும் அகன்ற பாலை நிலத்தில்,
புலி கொன்று தின்ற பெரிய களிற்றின் மிஞ்சிப்போன ஊனை,
ஆரவாரம் பொருந்திய மறவர்கள் கோலில் கோத்து எடுத்துக்கொண்டது போக எஞ்சியதை
தீக்கடையும் கோலால் உண்டுபண்ணிய சிறிய தீயில் வாட்டி, ஒலிக்கும் அலைகள் உள்ள
கடல்நீரில் விளைந்த அமிழ்தமாகிய உப்பினை விற்கும் கூட்டமான உப்புவணிகர்கள்
சுனையிலிருந்து எடுத்துவந்த இனிய நீரைச் சோற்றுக்கான உலையாக ஏற்றி ஆக்குகின்ற
பல பாலைநில வழிகளைக் கடந்துசெல்லும் நம்மை நினைந்து மிகவும்
பசலை பாய்ந்த மேனியள் ஆகி நீண்ட நேரம் நம்மை நினைந்து,
மறைகின்ற கதிர் மங்கிப்போன தனிமை கொண்ட மாலையில்
நெற்றியில் தன் மெல்லிய விரல்களை ஊன்றி, நிறையவும்
கயல்மீன் உமிழும் நீரைப் போலக் கண்களில் நீர் ஒழுக,
பெரிய தன் தோள்கள் மெலிவடையும்படியான துன்பத்துடன்
திருத்தமான அணிகலன்களை அணிந்த நம் தலைவி வருந்துவாள், அவள் இரங்கத்தக்கவள், 

#170 நெய்தல் மதுரை கள்ளி கடையத்தன் வெண்ணாகனார்
கடற்கரைச் சோலையும் சென்று தூது சொல்லாது, உப்பங்கழியும் சொல்லாது,
வண்டுகள் ஒலிக்கும் மணக்கின்ற மலர்களைக் கொண்ட புன்னையும் மொழியாது,
உன்னையன்றி வேறு எதுவும் எனக்கு இல்லை;
கரிய கழியில் மலர்ந்த கண்ணைப் போன்ற நெய்தல் மலரின்
கமழும் இதழ்களின் வாசனையை அமிழ்தம் போல மிகவும் விரும்பி
குளிர்ந்த தாதினை உண்ட வண்டினம் களிப்பு மிகுந்து
பறக்கமாட்டாமல் தளர்ந்திருக்கும் துறையையுடைய தலைவனுக்கு நீதான்
சொல்லவேண்டும், நண்டே! பலமுறை -
தாழைமரத்தின் தாழ்ந்த கிளையில் வருத்தத்துடன் தளர்ந்திருக்கும்
சிறிய கடற்காக்கை, தன் விருப்பம் மிக்க பெடையுடன்
சுறாமீன்கள் நடமாடும் வேட்டையாடுதல் நீங்கிய இடத்திலுள்ள
வெண்மையான இறா மீனைப்பற்றிக் கனவுகாணும் செறிந்த நடு இரவில்
- நீ பட்ட பெரும் துயரினைக் களைந்தவள்
தான் படும் பெரும் துயரினைக் கடக்க வல்லவளோ என்று - (நீதான் சொல்லவேண்டும், நண்டே)

#171 பாலை கல்லாடனார்
நெற்றியிலும் நுண்ணிய பசலை பரவும், தோள்களும்
அகன்ற மலையிலுள்ள குறுங்காட்டில் ஆராய்ந்து பிடித்து அறுத்த 
மூங்கிலைப் போன்ற அழகு அழிந்துபோகும்படி மெலிந்துபோகும், நாள்தோறும்
அவருடைய நல்ல பண்புகளை எண்ணி என்னை ஆற்றிக்கொள்வேன் என்று ஓயாமல்
வருந்தாதே! வாழ்க தோழியே! வந்து உன்னைச் சேர்வார் -
ஒளிவிடும், திரண்ட, அழகிய உன் வளையல்கள் கழன்று விழ, பொருள் மேல் ஆசைகொண்டு,
உலர்ந்த உச்சியையுடைய ஞெமை மரங்களையுடைய வழியைச் சார்ந்திருந்த 
பெரிய மலையடிவாரத்திலுள்ள சிறிய ஊரில், மருண்ட பல மக்கள்
கொல்வதில் வல்ல ஆண்கரடியின் ஒலியினை உற்றுக்கேட்டவராய்,
செப்பம் செய்துகொண்ட அம்பினராய், வலிய வில்லை
தோளில் இருத்திக்கொண்டு இடமெல்லாம் பரவியிருப்பதால்,
தரையில் கிடக்கும் உணவினைக் கொள்ளாமல், மேலேயுள்ள கிளைகளில் உள்ள
பழத்தைப்போல் இனிக்கும் சாற்றினையுடைய இனிய துளைகளையுடைய பூக்களை உண்பதற்கு
கரிய கிளைகளையுடைய இருப்பை மரத்தின் மேல் ஏறும்
பெரிய கையையுடைய கரடிகளையுடைய பாலைவழியைக் கடந்து சென்றவர் - (வந்து உன்னைச் சேர்வார்)

#172 குறிஞ்சி மதுரை பாலாசிரியர் நப்பாலனார்
யானைகள் முழங்கும் நீர் மிகுந்த மலைச்சரிவில்
தேனுடன் கலந்துவரும் பளிச்சிடும் வெண்மையான அருவி
இன்னிசையுடன் முழங்கும் மத்தளத்தைப் போன்று இம்மென்ற ஒலியுடன்
மலையின் குகைகளும், பிளவுகளும் எதிரொலிக்க விழுகின்ற,
மூங்கில்கள் நெருங்கி வளர்ந்த உயர்ந்த மலைச்சாரலில்,
இரும்பினால் வார்த்துச் செய்ததைப் போன்ற கரிய கையையுடைய வேட்டுவன்
விரிந்த மலரினையுடைய வெண்கடம்ப மரத்தைச் சார்ந்து நின்று, அம்பினைத் தெரிந்துகொண்டு
வரிகளையுடைய நெற்றியையுடைய யானையின் அரிய மார்பில் செலுத்தி
பகையினைக் கொல்லும் வலிமையையுடைய அதன் வெண்மையான கொம்புகளைக் கொண்டுவந்து தன்
புல் வேந்த குடிசையில் அதிலிருக்கும் ஊன் புலர்வதற்காக நட்டுவைத்து,
முற்றத்தில் நீண்டு வளர்ந்த முழவினைப் போன்ற பலாப்பழத்தின்
சுளை பிழிந்த சாற்றை உண்டு மகிழ்ந்த மகிழ்ச்சியையுடையவனாய், தன் சுற்றத்தோடு கூடி ஆரவாரம் மிகுந்து
சந்தன விறகினாலான தீயில் ஊனுடன் கூடிய சோற்றைச் சமைத்து உண்ணும்
குன்றத்தையுடைய நாட்டினனாகிய தலைவனே! நீ அன்பு இல்லாதவனாய் இருப்பதை
அறியாமற் போனேன், நான் அதனை அறிந்திருந்தால்
அழகிய அணிகலன்களையும் மையுண்ட கண்களையும் அழகிய இமைகளையும் உடைய இளையதலைவியின்
நீலமணி போன்ற சிறந்த அழகு கெட
பொன்னைப் போன்ற பசலையும் படராமல் இருந்திருக்கும்.

#173 பாலை முள்ளியூர் பூதியார்
அறநெறியிலிருந்து வழுவாத இல்லறத்தை நடத்துதலும், சிறந்த
சுற்றத்தாரின் பலவகையான துன்பங்களைத் தாங்குதலும், நாள்தோறும்
வருந்தி முயற்சிசெய்யாத உள்ளத்தோடு இருந்தவருக்கு இல்லை என்று
பொருளீட்டும் வினையை விரும்பிய நெஞ்சத்தையுடைய நம் தலைவர், மணமுள்ள நெற்றியையும்
கரிய நெய்ப்புடைய கூந்தலையும் உடையவளே! அரிய துன்பத்தால் வருந்துதலை
சில நாள்களுக்குப் பொறுத்துக்கொள்ளவேண்டும் என்று உன்
அழகிய மாட்சிமைப்பட்ட ஒளியுள்ள வளையல்களைப் பரிவுடன் திருத்தியவாறு கூறினார் எனில்
வந்துவிடுவார், வாழ்க தோழியே! பல புரிகளைக் கொண்ட
நீண்ட கயிற்றினால் கட்டப்பட்ட வரிசையான வண்டிகளைக் காளைகளின் வலிய பிடரியில் பூட்டி,
ஆற்றங்கரை மேட்டின் ஏற்றத்தில் உப்பு வணிகர்கள் எழுப்பும் உரத்த சத்தத்திற்கு வெருண்டு
உழை என்னும் மானின் அழகிய பெண்மான் தன் இனத்தைவிட்டுப் பிரிந்து ஓட,
காடுகள் தம் கவின் அழிய, கோடை பரவி,
நின்று காய்வதினால் வற்றிப்போன அழகிய, பெரிய நீண்ட மூங்கில்கள்
தம் கணுக்கள் வெடித்தலால் தெறித்து விழும் கழுவப்பெற்ற முத்துக்கள்
கழங்குகளைப் போன்ற தோற்றம் உடையனவாகி, அங்குள்ள கழங்காடிய பழைய குழியில் விழும் இடமாகிய
இனிய களிப்பைத் தரும் கள்ளினையும் நல்ல ஓட்டம் அமைந்த தேரினையும் உடைய நன்னனது
விண்ணை முட்டும் நெடிய மலையின் உச்சியிலுள்ள சரிவில் உள்ள
பொன் பொருந்திய இடங்களையும் உடைய மலையினைக் கடந்து சென்ற நம் தலைவர் - (வந்துவிடுவார்)

#174 முல்லை மதுரை அளக்கர்ஞாழார் மகனார் மள்ளனார்
இரண்டு பெரிய வேந்தர்கள் பகைமைகொண்டு போர்புரியும் அகன்ற போர்க்களத்தில்
தான் கையில் ஏந்திய ஒரே ஒரு படைக்கலத்தால் எதிர்த்து வரும் படைகளையெல்லாம் தோற்றோடச்செய்யும்
வெற்றியாகிய செல்வம் உடையோர்க்கு இப்பெருமை நிலைபெற்றது என்று
அத்தகைய வெற்றியை ஈட்டியோர் பொற்பூப் பெறுக என்று முழக்கிய தண்ணுமையை விலக்கி
அவளைப் பார்க்க நாம் விரைந்துகொண்டிருக்கிறோம் என்பதனை அறியாதவளாய், முல்லையின்
நேராக நிற்கின்ற கால்களையுடைய முதிய கொடிகளும் நன்கு தழைக்கும்படி மழையைப் பொழிந்து
காலைநேரத்து வானத்தில் கூடிய பெரும் ஓசையையுடைய மேகங்கள்
முழங்கும்போதெல்லாம் செயலற்று மனம் ஒடுங்கி நம்மை வெறுத்துத்
துன்பம் கொண்ட பசலை பாய்ந்த மேனியையுடையவள்
எந்த நிலையினை அடைவாளோ? வேங்கைமரத்தின்
மலர்ந்த நறிய பூவினைப் போன்ற நிறத்தைக் கொள்ளும்படியாக
தன் மார்பினில் அரும்பிய மாசில்லாத சுணங்கையுடையவளான,
பிரிந்துவரும்போது ஆற்றாமையால் நல்ல மணல் பரப்பிய அகன்ற முற்றத்தில் நம்மைப் பின்தொடர்ந்து வந்த
சிலவான மென்மையான நடையினையுடைய மாமை நிறமுடைய நம் தலைவி

#175 பாலை ஆலம்பேரி சாத்தனார்
தமது தடித்த தோளின் விளிம்பினை உரசும்படி, வேகத்தை உட்பொதிந்திருக்கும் வலிய வில்லில் வைத்து
இழுத்துவிடும் அம்பு தன் குறியில் தப்பாத கொடுமை நிறைந்த பாலைநில மறவர்
எய்யும்போதெல்லாம் விண்ணென்று ஒலியெழுப்பும் கொடிய நுனியையுடைய அம்பு
வழிச்செல்லும் புதியவரின் உயிர் போகும்படி பாய்தலால்
பருந்துகள் தம் கிளையினை அழைத்து, மிகுந்த ஊனை உண்ணும்
கொடிய பாலைநிலவழியைக் கடந்துசென்ற நம் காதலர், இருவருடைய நெஞ்சங்களும் நன்கு தெளியும்படி
பொய்யாகிப்போகமுடியாத சூள் மொழிகளைச் சொல்லியும், பலமுறை
தெரிந்த வளையல்கள் அணிந்த முன்கையைப் பிடித்துக்கொண்டும், தான் மேற்கொண்ட வினையை முடித்துவிட்டு
வந்துவிடுவேன் என்று சொன்னார் அல்லவா? தோழியே!
காற்றைப் போல் வேகமாக இயங்கும் நெடிய தேரையும் வள்ளன்மையும் உடைய பாண்டியன்
தலையாலங்கானத்தில் நடந்த போரினை வென்று உயர்த்திய
வேலைக்காட்டிலும் அதிகமாக மின்னி, அவனுடைய வெற்றி முரசின் ஒலி என்று கூறத்தக்கதாக
மிகவும் பெரிய விசும்பில் கடிய இடியினைப் பலமுறை முழக்கி
நிரம்பிய கதிர்களின் ஒழுங்கினைக் கொண்ட சக்கரத்தையுடைய திருமாலின்
அசுரர் முதலியோரின் போர் அடங்குவதற்குக் காரணமான மார்பினில் பொருந்திய மாலையைப் போல
பல நிறம் வாய்ந்த அழகிய வானவில்லை விசும்பினில் வளைத்து,
நிலம் பயனைத் தர, வானமெங்கும் பரவி,
குளிர்ந்த மழையையுடைய மேகங்கள் இறங்கிப்பொழியும் காலத்தில்-(வந்துவிடுவேன் என்று சொன்னார் அல்லவா?)

#176 மருதம் மருதம் பாடிய இளங்கடுங்கோ
கடலைப் பார்த்தாற் போன்ற இடம் அகன்ற நீர்ப்பரப்பில்
நிலம் பிளக்கும்படி இறங்கிய வேரில் முதிர்ந்த கிழங்கினையும்,
மூங்கிலைப் பாத்தாற் போன்ற உள்ளே துளையையுடைய திரண்ட தண்டினையும்,
களிற்றின் செவி போன்ற பசிய இலைகளின் பக்கத்தில்
கழுமரம் உயர்ந்து நின்றாற் போன்ற செழித்த மொட்டுக்களின் இடையிடையே
புன்முறுவலையுடைய முகத்தினைப் போல பல மலர்கள் பொலிவுடன் விளங்க,
பூத்த தாமரையினையுடைய பறவைகள் ஒலிக்கும் வயலில் உள்ள,
வேம்பின் அரும்பினைப் போன்ற நீண்ட கண்ணினையுடைய நீர் நண்டானது
இரையைத் தேடும் வெண்மையான நாரைக்கு அஞ்சி, அருகிலுள்ள
செழித்து வளர்ந்த பகன்றைக் கொடி படர்ந்த கரிய செறிந்த சேற்றில்
அழகுத்தேமல் போல வரிகள் உண்டாக விரைவாக ஓடி, தன்
நீர் மிகுந்த மண் வளையில் புகுந்து ஒடுங்கும் ஊரினையுடைய தலைவனே!
வீட்டில் விரிந்து நிற்கும் மரத்தில் படர்ந்த வயலையாகிய செழுமையான கொடியினால்
அழகிய மலராகிய ஆம்பலுடன், நிறையத் தழைகளைச் சேர்த்துக்கட்டிய தழையாடையை உடுத்தி
விழாவில் ஆடும் மகளிரோடு தழுவி ஆடும் அணியில் பொலிவுடன் விளங்கி,
மலர் போன்ற அழகிய மையுண்ட கண்களையுடைய சிறந்த அணிகலன்கள் அணிந்தவளின் முன்கையை,
குறிய வளையுடன் சேர்த்துப்பிடித்த நீண்ட பிடிப்பினை நீ விடுத்ததால்
உன் காதலி உன் மேல் சினங்கொண்டாள் போலும்! எம்மைப் போல்
புன்மையான உளை போன்ற குடுமியையுடைய புதல்வனைப் பெற்று
நெல்லுடைய நீண்ட மாளிகையில் நீ இல்லாமல் தங்கியிருக்க
என்ன கடமைப்பட்டவளோ? தன் கண்களில்
எழுதிய மையின் அழகு கெடும்படி அழுதுகொண்டு ஏங்கி,
பொன்னை உருக்கி அடித்தது போன்று உருவமைந்த சுணங்கினையும், பலமுறை
நெரித்துக்கொள்வதால் சிவந்துபோன மெல்லிய விரல்களையும், திருகிக்
கடித்ததால் கூர்மையான முனை மழுங்கிப்போன பற்களையும் உடையவளாய்
ஊர் முழுதும் பழிதூற்றும் உன்னைக் காண்பதற்குச் செல்கின்றாள்.

#177 பாலை செயலூர் இளம் பொன்சாத்தன் கொற்றனார்
உன்னுடைய பழைய அழகு கெடும்படி மெலிந்து, நாள்தோறும்
”இன்னமும் அவர் வரவில்லையே! இனி நான் என்ன செய்வேன்” என்று
மிக்க வருத்தம் அடைவதைத் தவிர்ப்பாயாக; சிறிய கண்களையுடைய
கரிய பெண்யானையின் பெரிய தும்பிக்கையைப் போன்ற, எண்ணெய் பூசி
ஒன்றாகச் சேர்த்துப் பின்னிவிட்ட அலையலையான கூந்தலில்
தேன் மணக்கும் மணமுள்ள மலரைச் சூட்ட - காண்பதற்கு இனிய
மூங்கில்கள் செறிந்து வளர்ந்த மலைச் சரிவில் உள்ள சுரபுன்னைகளின் உச்சி வாடிப்போகும்படி
ஞாயிற்றின் கதிர்களின் வெம்மை முறுகிய நிறையக் கற்களைக் கொண்ட பாதையில்
பசுமையான பாகற்கொடியின் சிவந்த பழத்தினை விரும்பி
காட்டு மயிலின் நிறைவான சூலினைக் கொண்ட பெரிய பேடையானது
அயிரியாற்றின் மணல் அடைந்த கரையில் நின்று ஊதுகொம்பைப் போல ஒலியெழுப்புகின்ற
காட்டினைத் தாண்டிச் சென்ற நம் தலைவர் குறித்த காலத்தில் வராமல் நீட்டித்தார் எனினும்
விரைவில் வந்துவிடுவார்; வெண்மையான வேலின்
இலை நிறம் மாறிச் செந்நிறமடையும்படி செலுத்தி, பகைவரின்
மலையைப் போன்ற யானைகளைக் கடும் போரில் அழித்த
வீரக்கழல் தரித்த காலினையுடைய பண்ணன் என்பவனுடைய காவிரியின் வடக்குப்பக்கம் உள்ள
குளிர்ந்த குளத்தை அடுத்து உள்ள நெடிய அடிமரத்தையுடைய மாமரத்தின்
தளிரைப் போன்ற மார்பினில் அழகுபெற அரும்பிய
வருத்தும் இயல்புடைய உன் அழகிய முலைகளில் பரவிய
சுணங்கிற்கு இடையே எழுதப்பட்ட தொய்யிலை நினைத்து - (விரைவில் வந்துவிடுவார்) 

#178 குறிஞ்சி பரணர்
வயிரத்தைப் போன்ற கூர்மையான மேல்நோக்கிய கொம்பினையும்,
மூங்கிலின் வேரைப் போன்ற பருத்த மயிரினையும் உடைய பன்றியானது,
பறையின் முகப்பைப் போன்ற நிறைந்த சுனையின் நீரைப் பருகி,
நீலமணியைப் போன்ற நிறத்தினையுடைய அகன்ற இலைகளைக் கொண்ட சேம்பின்
பிடித்துவைத்த உண்டை போன்ற கொழுத்த கிழங்கினை நிறைய உண்டு,
பெண்யானை படுத்திருப்பது போன்ற பாறை மீது மெல்லமெல்ல இறங்கிவந்து
ஆற்றினை அடுத்து இருப்பது போன்று நீர் ஊறும் இடத்தில் உள்ள சிறுதூறாகிய
பசுமையான குறும்புதரின் செறிந்த கிளைகளில் நாரை அமர்ந்திருப்பதைப் போன்று
வளம் மிக்க மொட்டு விரிந்த வெண்மையான கூதாளத்தின்
அசையும் கொத்திலுள்ள மலர்களைத் தீண்டி, அதன் பூந்தாது மேலே உதிர்ந்ததால்
பொன்னை உரைத்து மாற்று அறியும் கட்டளைக்கல் போன்று அழகுபெறத் தோன்றி,
கிளைகள் செறிந்த சிறுதினையிலிருந்து விளைந்த கதிரைத் தின்று
இனிதாகத் துயில்கொள்ளும் நல்ல மலைநாட்டையுடைய நம் தலைவனோடு,
அவனது சிறந்த பண்பாட்டினை உணர்ந்தவளாய், நட்புக்கொண்ட நீயும், உன்னுடைய தோள்களின்
மூங்கில்போன்ற பேரெழில் ஒருபோதும் அழியாதபடி, உன் துணைவனுடன் என்றும் சேர்ந்து
இம்மை மாறி மறுமையாயினும் என்றும் கெடாத அந்த மேலுலகத்திலும் வாழ்வீராக, தோழியே!
பகலென்றும் இரவென்றும் பாராமல், கல்லென்ற ஓசையுடன்
மேகம் பெரும் மழையைச் சொரிந்த விடியற்காலத்தில்
குளிர்ந்த பனியையுடைய முன்பனிக்காலம், தனியே இருப்பவர்க்குத் தாங்குவதற்கு அரியதாகும் என்று
கனவிலும் உன்னைப் பிரிந்திருப்பதை அறியாதவன் அல்லவா! அதற்குமேலும்
முதன்முதலில் உன்னைக் கண்ட நாளைக்காட்டிலும்
பின்னர் வரும் நாளிலும் பெரிதும் அன்பு செய்பவன் - தன் உயர்ந்த பண்பினால்

#179 பாலை கோடி மங்கலத்து வாதுளி நற்சேந்தனார்
விண்ணைத்தொடும் உச்சியினையுடைய பெருமை தங்கிய மலையின் சரிவினில்
பேய்த்தேர் என்னும் கானல்நீர் ஓடுவது போல் தோன்றும் காய்ந்துபோன கடும்பாலைநிலத்துப் பக்கத்தில்
விரைவான காட்டுத்தீ பரவுகின்ற நெருங்கமுடியாத அகன்ற காட்டிலுள்ள
சிறிய கண்ணையுடைய யானை அந்தக் கானல் நீரை நோக்கித் தன் நீண்ட கையை நீட்டித்
தன் பெரிய வாயைத் திறந்தும் நிறைந்த நீரினைப் பெறாமல்
அந்தக் காட்டையே வெறுத்துக் கடந்து செல்லும் இடம் அகன்ற பரப்பில்,
குறிதப்பாமல் வாய்க்கும்படி விடுகின்ற சிவந்த அம்பினையும், வளைவான வில்லையும் உடைய மறவர்கள்,
நல்ல வெற்றி நிலையை எழுதிய நடுகற்கள் நிலைகொண்ட வழிகளில்
செய்கின்ற குறும்புடைய அமளியை நீக்குபவர்களைக் காணாத
பாலைநிலத்து வழியைக் கடந்து செல்ல விரும்புகின்றீர் என்றால், இனிதான புன்முறுவலையும்,
மயிலிறகின் அடிப்பகுதியைப் போன்ற, திரண்ட கூர்மையான பற்களையும், பவளம் போன்ற வாயையும்,
அன்றைக்குப் பூத்த குவளை மலரினைப் போன்ற மையுண்ட கண்களையும் உடைய, இந்த
பிறைத் திங்கள் போன்ற அழகிய ஒளியுள்ள நெற்றியினையுடையவள் தனிமையில் வருந்தும்படி
இந்த வீட்டைவிட்டு வேறுநாட்டில் சென்று வாழ்வது உமக்கு இயலுமோ?

#180 நெய்தல் கருவூர் கண்ணம்பாளனார்
தோழியே! இது மிகுந்த சிரிப்பினை உண்டாக்குகிறது; அழகு மிக,
மாலையணிந்த தோழியர் கூட்டத்துடன் குவிந்திருக்கும் மணல்மேட்டில் ஏறி
பூக்கள் செறிந்துகிடக்கும் கடற்கரைச் சோலையில் விளையாடிக்கொண்டிருக்கும்போது
விரைந்த குதிரை பூட்டிய திண்ணிய தேரினை ஓட்டிவந்து
குளிர்ந்த குளத்தில் நிறையப் பூத்த ஒளிமிக்க பூக்களையுடைய குவளையின்
அரும்பினைக் கையால் நெறித்து மலரவைத்துத் தொடுத்த வண்டுகள் மொய்க்கும் மாலையைப்
பின்னலைக் கொண்ட முதுகில் தொங்கும்படியாகச் சும்மா சூட்டிவிட்டு,
நன்கு வளர்ந்த என் இளமையான முலையைப் பார்த்து நீண்ட நேரம் ஏதோ நினைத்தவனாக
அங்கு நிற்காமல் சென்றுவிட்டான் ஒருவன், இதற்குப்போய்,
புலால் நாறும் கரிய கழியினைத் துழாவிப் பலவகைப்
பறவைகளும் சேர்ந்து தங்கியிருக்கும் முள்ளையுடைய நீண்ட மடலையுடைய
தாழையைச் சேர்ந்து ஞாழல் மரத்தோடு பொருந்தி,
தோட்டத்தில் நிற்கும் வளைந்த அடிப்பகுதியையுடைய புன்னைமரத்தின்
பொன் போன்ற நுண்ணிய தாதினைப் பார்த்து,
என்னையும் பார்க்கும் இந்த ஆரவாரம் மிகுந்த ஊர்.

#181 பாலை பரணர்
செல்லுவதற்குக் கடினமான காட்டையும் கடக்கத் துணியமாட்டாய்!
எனக்குப் பின்னே நின்று வீட்டுக்குத் திரும்பிச் செல்ல நினைத்தாயென்றால்
நீ மட்டும் போய் அவளிடம் எனது இந்த நிலைமையைக் கூறு! நெஞ்சமே! பகைவர்
பாதுகாக்கும் அரண்களை வென்று கடந்த மிகுந்த பெரிய சேனையையுடைய
போரில் கொல்வதில் வல்ல மிஞிலி என்பவனுடன், போர்க்களத்தில் வேலைச் செலுத்தி,
முருகனைப் போன்ற வலிமையுடன் குருதியால் போர்க்களம் சிவக்கப் போரிட்டு
ஆய் எயினன் என்பவன் இறந்துபட, ஞாயிற்றின்
ஒளிவிடும் கதிர்களின் வெப்பம் அவன் உடலில்படாதபடி மறைய, ஒரே தன்மையாக
புதிய பறவைகளின் ஒலிமிகுந்த பெரும் கூட்டம்
விசும்பிடம் மறையும்படி வட்டமிட்டு ஒன்றுகூடி -
பூக்கள் விரிந்த அகன்ற துறையினில் அம்பு போன்ற விசையுடன் விரைந்து வரும் நீரானது
காவிரியாகிய பெரிய ஆற்றின் நுண்மணலை வாரிக் கொணர்ந்து வந்து குவித்து
மேடாக்கிய குவியலான வெண் மணலையும்,
புது வருவாயை உடைய ஊர்களையும் உடைய செல்வம் மிக்க சோழ வேந்தரால் பாதுகாக்கப்படும்,
உலகமெல்லாம் பரவும் நன்மை பொருந்திய நற்புகழையுடைய
நான்கு வேதங்களான பழைய நூலை அருளிய முக்கண்ணையுடைய பரமனின்
ஆலமுற்றம் என்னுமிடத்தில் அழகுபெற உருவாக்கப்பட்ட
பொய்கையைச் சூழ்ந்த பொழிலினில், இல்லத்திலுள்ள பேதை மகளிர்
கையாலே செய்த மணல்பொம்மையையுடைய துறையினில் வந்து தங்குகின்ற -
மகரக் கொடியினை உச்சியில் கொண்ட, வானை உரசிக்கொண்டு நிற்கும் கோட்டை மதிலையும்,
உச்சிப்பகுதி அறியப்படாதபடி மிகவும் தூரமாக உயர்ந்து நிற்கும் நல்ல மாடங்களையும்
புகார் என்னும் பட்டினத்தையுடைய நல்ல சோழநாட்டில் உள்ளதாகும் - விற்பவர்களின்
நறுமணப் பண்டங்களின் மணங்கள் மணக்கின்ற, வண்டுகள் மொய்க்கும் கூந்தலினையும்
மூங்கிலைப் போன்ற அழகையுடையதாய் வளைந்த, காண்பதற்கு இனிய மெல்லிய தோளினையும் உடைய
நம்மைப் பிரிந்ததால் துன்பம் மிக்கு இருக்கும் நம் காதலி அமர்ந்திருந்த
மலர் மணம் கமழும் தெருக்களையுடைய மணலையுடைய பெரிய குன்றம் - (புகார் நன் நாட்டதுவே)

#182 குறிஞ்சி கபிலர்
அழகிய இடத்தில் நிற்கின்ற பொன் நிறமுடைய பூங்கொத்துக்களைத் தலையில் அணிந்து,
வளைந்த மூங்கிலால் செய்த வலிய வில்லினைத் தோளில் இருத்திக்கொண்டு,
இனிய பலாப்பழத்தின் சுளைகளில் விளந்த மதுவினை,
சீழ்க்கையொலியுடன் பாயும் அம்புகளைக் கொண்ட ஏவல் இளையருடன் நிறையக் குடித்து,
விலங்குகளைத் துரத்திப் பிடிக்கும் இயல்பினில் தவறுதல் இல்லாத ஆற்றல் வாய்ந்த நாய்கள் பின்னால் வர,
வேட்டைக்குச் சென்ற குறவன், காட்டிலுள்ள
காட்டுமல்லிகை படர்ந்த குளிர்ந்த புதர்கள் குருதியுடன் அசைந்தாட,
முள்ளம் பன்றியைக் கொன்று வீழ்த்தும் குன்றுகளையுடைய நாட்டின் தலைவனே!
பாம்புகளைத் தாக்கி அழிக்கும் இடியுடன் கூடிக் கால்விட்டு இறங்கி 
வலிய மேகங்கள் மழையைப் பொழிந்த பாதி நாளாகிய இரவில்,
நீ தனியாக வந்த வழியை நினைத்து எப்பொழுதும்
நீருடன் கலங்கிநிற்கின்றன இவள் கண்கள்; அதனால்
நண்பகலில் நீ வரவேண்டும்;
அதிரும் குரலினையுடைய முதிய குரங்கு மிளகின் தளிர்களைத் தின்று வெறுத்துப்போய்,
உயர்ந்த உச்சியையுடைய நெடிய சிகரங்களில் தாவுவதால் உதிர்ந்த
மணக்கும் இதழ்களையுடைய பூக்கள் பரவி, வேலன்
வெறியாடும் அகன்ற களத்தினைப் போன்றிருக்கும்
பெரிய மலையை அடுத்துள்ள சாரலுக்கு - (நண்பகலில் நீ வரவேண்டும்)

#183 பாலை கருவூர் கலிங்கத்தார்
எனது குவளை போன்ற மையுண்ட கண்கள் கண்ணீர் விடவும், திருத்தமான அணிகலன்களை அணிந்த,
அழகுத்தேமலையுடைய அல்குலின் அழகிய வரிகள் வாடிப்போகவும்,
நம் மீது இரக்கம் கொள்ளாமல் நம்மைத் துறந்து, கடக்கமுடியாத வழிகளையுடைய பரந்த பாலைநிலத்தைக்
கடந்துசென்று மிகத்தொலைவில் உள்ள வேற்றுநாட்டில் உள்ளவரென்றாலும், அதிகமாகத்
தன் இருப்பை நீட்டிக்கமாட்டார் என்று கூறுகிறாய், தோழியே! மிகுந்த ஆரவாரத்துடன்,
குளிர்ந்த துறையினையுடைய கடலின் ஊடே சென்று, நீரினைப் பருகி,
குவிகின்ற அலைகளை மிகுதியாய் அள்ளிக்கொண்டனவாய், மேற்கே எழுந்து
சூலுற்ற பெண்யானைக் கூட்டம் போல் இடங்கள்தோறும் வந்து தோன்றி
பெரிய கூட்டமான மேகங்கள் ஒன்று சேர்ந்து கூடிக்
காலையில் வந்துவிட்டது கார்காலம், மாலையில்
குளிர்ச்சி பொருந்திய பிடவின் கூர்மையான அரும்புகளின் மலரும் பக்குவத்திலுள்ள மலர்களை
வண்டுகள் வாயினை நெகிழ்ப்பதால் இடையறாமல் பரவுகின்ற மணத்தை
குளிர்காலத்திற்கும், முன்பனிக்காலத்திற்கும் உரிய வாடைக்காற்று நம்மீது வாரிவீச,
பனியும் வருத்துவதால் கலங்கிய நெஞ்சத்துடன்
நம்மைவிட்டுப் பிரிந்துசென்றவரின் பொருட்டு நாம் வருந்துவோம் அல்லவா?

#184 முல்லை மதுரை மருதன் இளநாகனார்
தெய்வத்தன்மையையுடைய கற்புடன், குடிக்கு விளக்காக அமைந்த
புதல்வனை ஈன்ற புகழ் மிக்க சிறப்பினையுடைய
நற்குணம் படைத்த தலைவிக்குமட்டுமல்லாமல், அவளின் தோழியாகிய எனக்கும்
இனிமையைத் தருவதாய் அமைகின்றது, உன்  ஆயுள் சிறப்பதாக!
செய்வதற்கரிய தொழிலை முடித்துவிட்ட தலைமைத் தன்மை பொருந்திய நெஞ்சத்துடன்,
வண்டுகள் ஒலிக்கும் மலர்களையுடைய காடு பின்னிட்டுப்போக,
வெண்மையான பிடவம் மரத்தில் மலர்ந்த பூக்கள் கமழும் முல்லைநிலத்தில்,
குட்டையான கிளைகளையும், குறிய முள்களையும் உடைய கள்ளியின்
புன்மையான உச்சியினை மூடிக்கொண்டு படர்ந்த கொழுத்த கொடியினைக் கொண்ட முல்லையின்
காம்பு கழன்று உதிர்ந்த மலர்களைத் தன் மூச்சுக்காற்றால் ஒதுக்கிவிட்டு
தெளிந்த நீரைப் பருகிய முறுக்குண்ட கொம்புகளையுடைய அழகிய கலைமான்
தன் புள்ளிகள் உள்ள அழகிய பெண்மானுடன் தங்கியிருக்கும் அவ்விடத்தில்
களைக்கொட்டினைக் கையில் கொண்டவராய்க் களையெடுக்கும் தொழிலாளர்,
கள்ளைக் குடித்தவராய், அதனால் விளைந்த களிப்பு மிகுந்து தங்கியிருக்க,
செல்கின்ற கதிர்களின் வெம்மை மழுங்கிப்போன செந்நிறமுள்ள ஞாயிற்றையுடைய
செக்கர் வானமும் கரைந்துபோன மாலைநேரத்தில்
பாறையின் மீது விழும் அருவியைப் போல ஒலிக்கின்ற நல்ல தேரிலுள்ள
மாலையில் கட்டப்பட்ட மணிகள் பலவும் சேர்ந்து ஒலிக்க,
சிறப்பு மிக்க தலைவனே! நீ வந்து நின்றது - (இனிமையைத் தருவதாய் அமைகின்றது)

#185 பாலை பாலைபாடிய பெருங்கடுங்கோ
ஒளி பொருந்திய வளையல்கள் கழன்றுபோகும்படி மெலிந்து, ஆய்ந்தெடுத்த அணிகலன்களையுடையவளின்
நல்ல அழகினை உடைய பருத்த தோள்கள் தம் பேரழகு அழிந்துபோக,
பெரிதும் செயலற்றுப்போன நெஞ்சத்துடன் இருக்கும் நம்மைப் பிரிந்துபோய்
இரும்பினாற் செய்த இனிய உயிரை உடையவர் போல
உள்ளத்தை வன்மையாக்கிக்கொண்டு இருக்க வல்லவராய் இருக்கிறார் நம் காதலர், வாடிப்போன
ஒலிக்கும் கழை மேலுயர்ந்த, நெல் விளைந்த நீண்ட மூங்கில்
ஆரவாரம் கொண்ட மறவர் வில்லை விசைக்கும்போது தெறிப்பது போல தெறிக்க
பசுமை அற்றுப்போகும்படி வெப்பமுற்ற பருக்கைக் கற்கள் உறுத்துகின்ற பரப்பினையுடைய
வேனில் காலத்துப் பாலைநிலத்துக் கடப்பதற்கரிய வழியாகிய அவ்விடத்தில், மழை வறந்துபோனதால்
அருவிகள் இல்லையாகிப்போன உயரமான சிகரங்களின் பக்கத்தில்
பெரிய கார்த்திகைத் திருவிழாவின்போது ஏற்றப்படும் விளக்குகள் போல, பலவும் ஒன்றாய்
மலர்ந்த இலையில்லாத இலவமரங்களைக் கொண்டு
உயர்ந்த நிலையையுடைய சிறந்துவிளங்கும் மலைகளைக் கடந்துசென்றவர் - (வலித்து வல்லினர்)

#186 மருதம் பரணர்
மழை பெய்தலை வேண்டாத வறுமையற்ற வாழ்க்கையினையுடைய
வலிய தூண்டில் கயிற்றினையுடைய மீன்பிடிப்போர் மீன் முளிலுள்ள இரையைப் பிடிப்பதை அறிந்து இழுக்கும்
மீன்கள் நிறைந்த நீர்நிலையில் செழித்து வளர்ந்த தாமரையின்
நீரின் மீது உயர்ந்து நிற்கும் நீண்ட தண்டிலுள்ள அகன்ற இலையைப்
பெரிய குளத்து நீர் அலையுடன் ஆடும்படி காற்று மோதும்போதெல்லாம்
பெரிய களிற்றின் செவியினைப்போல ஆட்டும் ஊரனாகிய தலைவனால்
ஊரில் எழுந்த பழிச்சொற்கள் மிகவும் பெரிது; அவனுடைய நட்போ,
செழித்த கொறுக்கங்கோலினால் ஆன தெப்பத்தைத் துணையாகக் கொண்டு
புனலாடுவோர்க்கு அதனுடன் உண்டான நட்பு எவ்வளவோ அவ்வளவே ஆகும்; அவனோ,
ஒளியுள்ள வளையலை அணிந்த மகளிர் பண்ணுறுத்தப்பட்ட யாழினை மீட்டிப் பாட
மிகவும் குளிர்ந்த முழவினை அடிக்கும் குறுங்கோல் நடுங்க,
குளிர்ந்த மணமுள்ள சந்தனம் கமழும் தோளினைத்  தழுவி,
இப்பொழுதும் வேறொரு பரத்தையின் வீட்டில் தங்கியிருக்கின்றான்; அவனுடைய மனைவியோ
என்னைப் பழிதூற்றி என்மேல் கோபங்கொள்கின்றாள் என்கிறார்கள்; வெற்றியையுடைய வேலையும்
மழை போல் சொரியும் அம்புகளையும், மேகம் போன்ற கரிய கேடகத்தையும் உடைய பழையன் என்பவனின்
காவிரி நாட்டின் களத்தில் செறிவாக அடுக்கப்பட்ட வைக்கோல் போரினைப் போல் என்
செறிவான வளையல்களை (அவன் மீதுள்ள கோபத்தினால்)இன்னும் நான் உடைக்கவில்லை; உரிமையுள்ள
நான் அந்த மனைவிக்குப் பகையாளி இல்லை; தன்னைச் சேர்ந்தோரின்
அழகிய நெற்றி பசந்துபோகும்படியாக அவர்களைவிட்டு பிரியும்
அவளுடைய கணவனே அவளுடனேயே வாழும் பகைவனாக அமைவான்.

#187 பாலை மாமூலனார்
நமது தோளின் தனிமை அகல, நம்முடன் துயில்கொண்டு,
பல நாள் நீடித்திருந்த மறைவான களவுக்காலச் சந்திப்புகளை,
ஆணுக்குரிய பொருளீட்டும் தொழிலில் ஈடுபடாததினால் நாணப்பட்டு, கைவிட்டுத் தொலைவிலுள்ள நாட்டுக்கு
அரிய பொருளை ஈட்டத்துணிந்த நெஞ்சத்துடன் சென்று, (பொருளீட்டி)
இல்லறம் நடத்திப் புகழ் எய்தும் நம் உயர்ந்த நிலையை நம் காதலர் கருதினார்; சினந்தெழுந்த பகைவரது
பகைப்புலத்தை வென்று அழித்த விரைவான ஓட்டத்தையுடைய குதிரைகளையுடைய
நீண்ட வீரக்கழலால் பொலிவுபெற்ற கொடும் மறவர்களுக்குரிய
அழகிய அம்பு தொடுப்பதற்குரிய பூந்தொடை என்னும் விழாவின் முதல்நாளைப் போன்ற பொலிவினையுடைய
கொண்டுவந்த மணலைப் பரப்பிய அழகிய மனையின் முற்றம்
தனிமையுற்றுப் பொலிவிழந்துபோகுமோ? தோழியே! மிகவும் உயரமாக வளர்ந்த
காய்ந்துபோன உச்சியையுடைய ஞெமை மரங்களையுடைய ஆள் நடமாட்டம் அற்ற இடங்களில்
மலையைச் சார்ந்திருந்த சில குடிகளையுடைய ஊரில் உள்ள மக்கள்
இரவில் வருபவரை உபசரிக்கும் விருந்தோம்பலை ஏற்றுப் பாதுகாப்பாகத் தங்கியிருந்து,
வீட்டிலிருக்கும் சேவற்கோழியின் தொங்குகின்ற தாடியைப் போன்ற
கிளைத்துப் பிரிந்த ஒளிபொருந்திய தளிரையுடைய கரிய அடிமரத்தையுடைய யா மரங்களை உடைய
வேனில்காலத்து வெப்பமுடைய மலையினை அடுத்த காடு காய்ந்துபோனதினால்
அந்தக் காட்டு அரணில் உள்ள மறவர்கள் குடியோடிப்போன பாழான நாட்டின் கடப்பதற்கு அரிய வழியில்
பனையை முறித்து உள்ளிருக்கும் இளம் பகுதியைத் தின்னும் பசிய கண்ணையுடைய யானைகள்
ஒளிரும் சுடர் முதிராத இளம் ஞாயிற்றையுடைய விடியற்காலையில்
உறங்குமிடத்தில் செயலற்று ஒடுங்கி அசைந்துகொண்டிருக்கும் நிலை
வாள் போன்ற வாயினையுடைய சுறா மீன்கள் உள்ள குளிர்ந்த துறைகளை நீந்திச் சென்று
காலையில் மீன் வேட்டைக்காகப் புறப்பட்ட கனிவு இல்லாத மீன்பரதவருடைய
கடலில் இருக்கும் தோணிகளைப் போன்று தோன்றும்
மேகம் பொருந்திய பெரிய மலை குறுக்கேநிற்கும் பாலை நிலத்தில் - (ஏகி நம் உயர்வு உள்ளினர்)

#188 குறிஞ்சி வீரை வெளியன் தித்தனார்
பெரிய கடலின் நீரை முகந்துகொண்ட பெரும் கூட்டமான மேகமே!
இருட்டினை உண்டாக்கி, உயர்ந்த வானத்தில் வலப்பக்கமாக எழுந்து சுற்றி
தோல் போர்க்கப்பட்ட முரசு போல முழங்கி, முறையாக ஆட்சிசெய்து
அறநெறி வழுவாத திறன்களையெல்லாம் நன்கு அறிந்த மன்னர்களுடைய 
வெல்வதற்கு அரிய போரில் பகைவரை எதிர்த்த பேராண்மைச் செய்கையையுடைய வீரர்கள்
உருவி வீசுகின்ற வாள்களைப் போல செறிந்தனவாய் மின்னுகின்ற
மின்னலின் தொகுதியை உடையதாய் ஆகி, நாள்தோறும்
வீணாக ஆரவாரம் செய்துபோகிறாயோ? அல்லது, பொன் போன்று
மலர்ந்த வேங்கைப்பூக்கள் நிறைந்த மாலையை அணிந்து
பொலிவுற்ற தோழிமாருடன் காண்பதற்கு இனிதாக நடந்து,
தழலை என்ற கருவியைச் சுழற்றியும், தட்டை என்னும் கருவியைத் தட்டியும்,
தீக்கொழுந்தைப் போன்ற அசோகின் அழகிய தழையாற் செய்த உடையினை உடுத்தியும் இருக்கின்ற
குறமகளாகிய எம் தலைவி காவல்காக்கும் தினைப்புனத்தில்
மழையைப் பெய்து காக்கவும் செய்கின்றாயோ? நீ வாழ்க.

#189 பாலை கயமனார்
பசிய பழங்களுள்ள பலா மரங்களையுடைய காடு வெம்பவும்,
மேகம் வானத்திலிருந்து நீங்கிப்போனதால் வேனில் வெப்பம் மிக
சுனைகள் ஊற்றுக்கண் அற்றுப்போன கற்கள் உயர்ந்த இடங்களில்
வெப்பம் பொறாமல் பெருமூச்சுவிடுகின்ற இளைய பெண்யானையைத் தழுவி, வேறுநாட்டில் நிகழ்கின்ற
விழாவுக்காகத் தங்கள் முழவுகளை எடுத்து உயர்த்திக்கொண்டு செல்லும் மள்ளர்களைப் போல்
களிறு வழிநடத்திச் சென்ற கற்பாறைகளால் உயர்ந்த மலைச் சரிவை அடுத்த
வெப்பம் மிக்க பாலை நிலத்தைக் கடந்துபோகத் துணிந்து, மெதுவாக,
வயலைக் கொடியால் ஆகிய அழகிய தழையுடை தொங்குகின்ற தொடையினையும்,
தேமல் படர்ந்த அல்குலையும் உடைய இளையவளாகிய என் மகள், தன் தலைவனுடன்
சென்று எமக்கு யாரோ ஒருத்தியாய் ஆகிவிட்டபோது, இனி எப்பொழுதும்
துன்ப நினைவுகள் மிகுகின்ற வருத்தத்துடன், திசையெல்லாம் தேடிவந்து காணாமல் திரும்பி
வீட்டினில் மயங்கியிருந்த என்னைக்காட்டிலும், கள்ளின் களிப்பினையுடைய
நல்ல பாணர்களின் ஒன்றுசேர்ந்து ஒலிக்கும் இனிய இசைக்கருவிகள்
தேர் ஓடும் தெருக்களில் இடைவிடாமல் ஒலிக்கும்
இந்த ஊரானது தான் மிகவும் விரும்புகின்ற ஒரு பொருளை இழந்துவிட்டது.

#190 நெய்தல் உலோச்சனார்
கடல் அலையில் விளையாடிக் களைத்துச் சோர்ந்துபோன வரிசையான வளையல்களையுடைய தோழியருடன்
உப்பு மேட்டில் ஏறி நின்று, ஞாயிறு மறையும்போது
கரைக்கு வரும் படகுகளை எண்ணும் துறையையுடைய தலைவனுடன் உன் மகளை இணைத்து, இந்த ஊர்
மிகவும் இரக்கமற்ற தன் கொடுமையால் பழிச்சொல் பேசுகிறது; (அவனைப் பார்த்ததினால் அஞ்சிச்)
சுழல்கின்ற குளிர்ந்த கண்ணையுடைய இவள் அவனை விரும்பிப் பார்க்கவும் இல்லை
எனவே அவளை வருத்தாதே!, வாழ்க, நான் கூறுவதை விரும்பிக் கேட்பாயாக, உயர்ந்த உச்சியையுடைய
சோலையில் புன்னைமரத்தின் கிளையைச் சேர்ந்திருந்த
புதிய நாரை வெருண்டோடும்படியாக, முன்பு ஒரு நாள்
பொங்கி வருகின்ற வாடைக் காற்றினால் கடலானது கரைகளை வேகமாக மோதவும்
கடலோரத்தில் தேரினை ஓட்டிக்கொண்டிருப்பான், அதற்கு மேலும்
பெரிய கழியினையுடைய துறைமுகத்தில், காலில் புண்ணாகும்படி தாக்கி
வலிய சுறாமீன் ஒன்று வெட்டியதால், தேர்ப்பாகன் தேரினை நிறுத்த,
தம் அழகும், பயனும் குன்றிப்போனதுவும், தேரில் பூட்டிய பூட்டு அவிழ்த்துவிட்டனவுமாகிய
வரிசையான மணிகளால் ஆன மாலையை அணிந்த குதிரைகள், தமது விரைவான நடையை ஒழித்தனவாக
இழுமென்னும் ஓசையையுடைய கடற்கரைச் சோலையில் உள்ள சிறந்த மணலில் தங்கி
இவ்வாறு மெலிந்த குதிரைகளையுடைய அத் தலைவன் இங்கு வந்து
மயக்கம் தரும் மாலைப் பொழுது வரையில் தங்கியிருக்கவும் இல்லை. 

#191 பாலை ஒரோடோகத்து கந்தரத்தனார்
பாலை நில வழியில் நிற்கின்ற பாதிரிமரத்தின் மெல்லிய பஞ்சினை உச்சியில் கொண்ட புதிய பூவைத்
தீப் போன்ற இதழ்களையுடைய இலவம்பூவுடன் இடையிடையே கலந்து
வளமையான தாழம்பூவின் இதழுடன் வைத்துக் கட்டிய வண்டுகள் மொய்க்கும் கண்ணியினைத் தரித்த
செருப்பணிந்து ஒலிக்கின்ற அடியினையும், எருதுகளை அடிக்கும் கோலினையும் உடைய உப்பு வணிகர்களின்
ஊரே திரண்டுவருவதைப் போன்று, ஆரங்களையுடைய வண்டிகளை இழுத்து
ஏறுவதற்கு அரிய கடினமான பாதைகளில் ஊர்ந்துவரும் தளர்வு இல்லாத வலிய கால்களையுடைய
திருத்தமான காளைகளின் ஒலிக்கும் வளைவான மணிகளின் ஒலி. மிகவும் விருப்பத்துடன் அவர்கள்
உதடுகளை மடித்து எழுப்பும் சீழ்க்கை ஒலியுடன் விரைந்து எதிரே சென்று
ஓமை மரங்களையுடைய அழகிய பெரிய காடுகளின் வருகின்ற புதிய வழிப்போக்கர்களுக்கு
‘உமக்குப் பாதுகாப்பு உள்ளது' என்று கூறும் வெப்பம் மிக்க நெடிய பாலையில்
அரிதாக ஈட்டும் பொருளினை விரும்பி, நம் தலைவியைவிட்டுப் பிரிந்து வாழும் உரம் படைத்தவனாய்
வேறு நாட்டுக்குச் சென்று தொழில்செய்ய நினைக்கின்றாயானால், நன்றாகச்
சொல்லுவாய், என் நெஞ்சமே! வரிசையாகக் கோத்த அரும்புகளையுடைய
முல்லையினைச் சூடிக்கொண்டு, மென்மைத்தன்மை உடையன ஆகி
கருமணல் போன்று விரிந்த, அணைவதர்கு இனிய மென்மைத்தன்மையினையுடைய
அடர்ந்த கரிய கூந்தலையுடைய நம் தலைவி உன் பிரிவினைக் கேட்டுத் தெளிந்திருப்பாள் என்று
பிரிவுணர்த்தும் கொடுஞ்சொற்களைக் கூறும் வலிமை உனக்கு இருக்கிறதா? - (சொல்லுவாய், என் நெஞ்சமே!)

#192 குறிஞ்சி பொதும்பில்கிழான் வெண்கண்ணனார்
பிறைநிலா வந்து இருந்ததைப் போன்ற இவளின் குற்றமற்ற ஒளியுடைய நெற்றி
பொன் போன்ற நிறத்தை உடையது ஆயிற்று; அந்தோ!
இனி இவள் என்ன ஆவாளோ? வானத்திலுள்ள
அம்பினை எய்யாத அழகிய (வான)வில்லைப் போன்ற புதிய மாலையினையும்
சிவந்த வாயினையும் உடைய சிறிய கிளிகள், தினை சிதையும்படி கொய்து,
பாரத்தைச் சுமக்கமாட்டாமல் கீழேபோட்டுவிட்ட புன்மையான புறத்தினையுடைய பெரிய தினைக்கதிரை
வளைந்த சிறகுகளையுடைய காட்டுக்கோழி தன் கூட்டத்துடன் கவர்ந்துகொள்ளும்படியாக,
தினையும் வளைந்த கதிர்களை ஈன்றன. (எனவே தலைவி புனம் காக்கப் பகலில் வரமாட்டாள்), நடு இரவில்
நீ வந்து அவளுக்கு அருள்செய்வாய் என்றால், பெரிய மலையின்
இருள் பொதிந்த குகையின் இடங்களைத் துழாவி, விரைவாக
அருவிநீர் கொண்டுவந்த பாம்பு உமிழ்ந்த அழகிய மணி,
பெரிய மலையிலுள்ள எம் சிற்றூரின் தெருக்களிலே வெளிச்சம் வீசுவதால்
இரவினிலும் இழந்தாள் ஆவாள், அந்த இரங்கத்தக்கவள், பெரும் மழையுடன்
இடியும் சேர்ந்திருக்கும் உயர்ந்த உச்சியையுடைய 
பெரிய மலைநாட்டுத் தலைவனே! உன் அகன்ற மார்பினைச் சேர்வதை - (இரவினிலும் இழந்தாள் ஆவாள்)

#193 பாலை மதுரை மருதன் இளநாகனார்
உயர்ந்த காட்டின் பக்கத்திலேயுள்ள பல வழிகள் வந்து கூடுமிடமே தங்கள் பிழைப்பிற்குரிய இடமாக அன்றி
பிழைப்பதற்கு மழையை வேண்டாத தமது வில்லையே ஏராகக் கொண்டு வாழ்க்கை நடத்தும் கள்வர்கள்,
சிறந்த நாளில் கிடைத்த கொள்ளையைத் தம் கிளைகளுடன் சென்று வாய்க்கப்பெற்ற
போரிடும் இடத்தில், அவர்கள் கொன்றுபோட்டவர்களின் சிந்திய இரத்தத்தை உண்டதால் சிவந்த வாயையும்
ஓவியத்தில் வரைந்துவைத்ததைப் போன்ற வெண்ணிறமான புறக்கழுத்தினையும்,
தசையினால் செய்து பொதித்து வைத்ததைப் போன்ற சிவந்த செவிகளையும் உடைய கழுகு,
குறிய மலையிடத்தில் வளர்ந்த நீண்ட அடிமரத்தையுடைய யா மரத்தின்
ஏறுவதற்கு அரிய கவட்டிலிருந்து எழுந்த உயர்ந்த கிளைகளிலுள்ள தன் குஞ்சுகளுக்கு ஊட்டும்போது
விரைவின் காரணமாக, வாயிலிருந்து வழுக்கிக் கீழே விழுந்த கொழுமையான கண்ணான ஊனின் துண்டு
கொல்லுகின்ற பசியையுடைய முதிய நரிக்கு உணவாக அமையும்
காட்டுவழிகள் நாம் கடந்து செல்வதற்கு எளிதானவையே! நமது நல்ல வீட்டிலுள்ள
பல்வேறு மாண்புகள் அமையப்பெற்ற மென்மைத்தன்மையையும், இனிய மொழிகளையும்,
மயிலிறகின் அடிப்பகுதியைப் போன்ற அழகிய பற்களையும் உடைய இளையவளாகிய நம் தலைவியின்
பெரிய தோளில் எய்தும் இனிய துயிலைத் துறப்பதற்கு ஆற்றாதவன் ஆனேன்.

#194 முல்லை இடைக்காடனார்
பெரிய மழை பெய்த, நன்றாக இருள் புலர்ந்த வைகறைப் பொழுதில்
ஏர்களால் இடம் உண்டாக உழப்பட்டதால் பெரிய வடுக்களோடு, புழுதி
கீழ்மேலாகப் புரண்டு மாறுபட்ட செம்மண் நிலத்தில் உண்டான ஈரத்தினால்
ஊனைக் கிழித்தது போன்ற செந்நிறம் அமைந்த மேட்டுநிலத்தில் அமைந்த நீண்ட பிளவாகிய சாலில்
விதைத்த இடங்களில் விதைகள் பலவும் முளைத்து
நல்ல கலைமானின் கூட்டம் பரந்தது போல,
இருபுறமும் கொம்புகளையுடையதாய்ப் பின்னப்பட்ட தலையில் கவிழ்க்கும் கூடையைச் சூடிய தொழிலாளர்கள்
ஒலிக்கும் பறையின் ஒலியுடன் பயிர்கள் வளையும்படி ஒதுக்கிக்
களையைப் பறித்துத் தூய்மை செய்த பெரிய கொல்லையில் விளைந்த வரகின்
கிளைத்துப் பிரிந்த கதிர்களின் கரிய புறத்தினைக் கொத்தித் தின்ற
குடுமியுள்ள தலையினையுடைய நீண்ட கரிய மயில்
தன் அழகிய தோகையினை விரித்து, காண்பவர் இன்பம் அடைய
கொல்லையை உழும் உழவர்கள் கூழ் உண்ணுவதற்கு நிழலாக விட்டுவைத்த
வலிய இலையினையுடைய குருந்தமரத்தின் வளைந்த கிளையிலிருந்து
கிளிகளை விரட்டும் பெண்களைப் போலச் சத்தம்போட்டுக் கூவுகின்ற
கார்காலம் அல்லவா இது! தோழியே! போர் உக்கிரமாக மூண்டதால்
கொடுஞ்சியை உடைய நீண்ட தேரில் பூட்டப்பட்ட வேகமான ஓட்டத்தையும்
விரிந்த பிடரி மயிரையும் உடைய நல்ல குதிரைகளைச் செலுத்திக்கொண்டு
வந்துவிடுவேன் என்று நம் தலைவர்  தெரிவித்த காலமான - (கார்காலம் அல்லவா இது! தோழியே!)

#195 பாலை கயமனார்
கடப்பதற்கு அரிய பாலைநிலத்தைக் கடந்துசென்ற என் பெரிய தோள்களையுடைய இளைய மகள்
திருத்தமான வேலை ஏந்திய இளைஞனாகிய தன் மகனுடன் வருவாள் என்று அவனுடைய தாயானவள்
மாண்புறக் கட்டப்பட்ட சுற்றுச்சுவர் எல்லாம் செம்மண்குழம்பால் பூசி,
வீட்டின் முற்றத்தில் மணல் பரப்பி, மாலைகளைத் தொங்கவிட்டு
மகிழ்ச்சியுடன் இனிதே கொண்டாடுகிறாள் என்று அறிந்தோர் கூறுவர்; நானும்
பெண்மானின் பார்வை போன்ற பார்வையினையும், இளமையையும் உடைய அந்த நல்லவளை
ஈன்ற உரிமை கொண்ட அன்புடையவள் என்பதனால் என் மனைக்கு அழைத்துவந்து அருள்செய்யான் என்றாலும்,
இனிய பற்களையும், புன்முறுவலையும் உடைய அவன் காதலியான என் மகளைப் பல நாட்கள்
கூந்தலை வாரி முடித்து, இடுப்பிலே தூக்கிவைத்துக்கொண்டு அவளைப் பாதுகாத்து,
நன்மையுடன் கூடிய உதவிகள் பலவற்றையும் செய்துள்ளேன்,
அதனை அவன் அறிந்துகொண்டால் மிகவும் நல்லது;
ஆடை சுற்றிய ஒரு பெரிய குடுமியினையும்,
ஒரு சிறிய பையைத் தொங்கவிட்ட, பல தலைகளைக் கொண்ட, வளைந்த கோலையும் உடைய
நடக்கப்போவதை முன்னரேயே அறியக்கூடிய அறிவு வாய்க்கப்பெற்ற வேலனே!
உன்னுடைய கழங்கினால் குறிபார்த்து அது கூறுவதன் உறுதித் தன்மையைக் கூறுவாயாக -
ஒழிவில்லாமல் வரும் நீருடன் கலங்கி அழுது, இரவில் 
இடைவிடாமல் துன்புறுகின்ற எமது கண்கள் இனிதாகத் தூங்கும்பொருட்டு
எமது மனையில் முதன்முதலில் அழைத்து வருவானா, அல்லது
தனது வீட்டுக்குக் கொண்டுசெல்வானா, அந்த விடலையின் கருத்து என்ன என்பதை -

#196 மருதம் பரணர்
உயரமான கொடிகள் அசைந்தாடும் கள் நிறைந்த இவ்வூரில்
விடியற்காலையில் நீர்த்துறையில் அகப்பட்ட பெரிய வயிற்றினையுடைய வரால் மீனின்
உடுக்கின் கண் போன்ற அகன்ற கொழுத்த துண்டத்தை விற்று, கள்ளினைக் குடித்து மகிழ்ந்து
மீண்டும் மீன்வேட்டைக்குப் போவதை மறந்து உறங்கிக்கிடக்கும் கணவன்மார்க்குப் பாணர் மகளிர்
ஆம்பலின் அகன்ற இலையில் திரளான விருப்பந்தரும் சோற்றை
பிரம்பின் திரண்ட பழத்திலிருந்து பெற்ற இனிய புளிச்சாற்றை ஊற்றி
இருள் புலரும் விடியற்காலத்தில் இடுகின்ற மருதநிலத் தலைவனே!
தொடமாட்டேன்! கிட்டே வராதே! தன் தந்தையின்
கண்ணின் அழகினைக் கெடுத்த குற்றத்துக்காக, அச்சம் உண்டாக,
வஞ்சினம் கூறும் கோசர்களைக் கொன்று, தன் பகைமையைத் தீர்த்துக்கொண்ட
விரைகின்ற தேரையுடைய திதியனின் அழுந்தூர் என்னுமிடத்தைச் சேர்ந்த வளைந்த காதணியைக் கொண்ட
அன்னி மிஞிலி என்பவளைப் போன்று களிப்புடன் நடக்கும்
உன் அழகுக்குத் தக்கவளான பரத்தையைத் தழுவிய மார்பினை - (த்தொடமாட்டேன்! கிட்டே வராதே!)

#197 பாலை மாமூலனார்
கருங்குவளை மலரின் அழகினை இழந்த கண்களையும்,
பொலிவிழந்து நெகிழ்ந்த பஞ்சணை போல மெலிந்த தோள்களையும் உடையவளாய்
நலமுடைய தோழியர் விரும்பி ஆராயும்
பழைய நலத்தினை இழந்ததினால் உண்டான துயரத்துடன், சிறிதளவும்
வருந்தாதே, வாழ்க, தோழியே! போர்செய்ய
முற்பட்ட பகைவரை ஓட்டிய ஆற்றல் மிக்க செல்வத்தினையும்
வீரம் மிக்க படையினையும் உடைய கண்ணன் எழினி என்பவனின்
தேன் மிக்க முதுகுன்றத்தினைக் கடந்துசென்றாரென்றாலும்,
உன் வரிசையான வளையல்கள் கழன்று விழும்படி நீட்டித்திருக்கமாட்டார்;
தோளின் மேல் தாழ்ந்து இருண்டுகிடக்கும் குவியலான கரிய கூந்தலையுடைய
இளைய தன் காதலியைத் தழுவிக்கிடக்கின்ற வெற்றி மறவனுடைய மார்பின் மேல்
புன்மையான தலையையுடைய புதல்வன் ஏறி இறங்குவது போல
நிறைந்த சூலினையுடைய இளம் பெண்யானையைத் தழுவிக்கிடந்த வெண்மையான கொம்புகளையுடைய
இனத்துடன் கூடிய களிறு, கன்று தன்மீது ஏறி இறங்க,
படுத்திருக்கும் நடுக்கத்தைத் தரும் பாலைநிலத்து வழியைக் கடந்து
ஒளிவிடும் பூங்கொத்துக்களையுடைய கொன்றைமரங்களையுடைய உயர்ந்த மலையை அடுத்த பாதையில்
பொருளீட்டும் தொழிலை வலியுறுத்துகின்ற நெஞ்சத்துடனே
இவ்வாறு நம் மீது இரக்கம் இல்லாதவராகி நம்மைப் பிரிந்து சென்ற தலைவர் - (நீட்டித்திருக்கமாட்டார்;)

#198 குறிஞ்சி பரணர்
இவளிடம் சொல்லிவிடலாமா அல்லது சொல்லாமல் விட்டுவிடலாமா என்று
இதுவரை மறைத்துவைத்திருந்த ஆசையை மேலும் மறைத்துவைக்கமாட்டாமல்
விரும்பி நாம் வெளிப்படையாகக் கூறிய நமது இனிய மொழியை விரும்பி,
நடு இரவில் பெய்யும் மிக்க மழையில் மறைவாக,
கார் காலத்தின் மணம் கமழும் கூந்தலுடன் தூய்மையான, நல்ல வேலைப்பாடமைந்த
நுண்ணிய நூலால் ஆகிய ஆடையால் தன் உடம்பினை மறைத்தவளாய், மலையிலுள்ள
இலேசான மேகம் சூழ்ந்த இளமையான மயிலைப் போன்று,
வண்டுகள் பின்தொடர்ந்துவர, குளிர்ந்த மலர்களைச் சூடிக்கொண்டு
வில்லினைப் போல வகுத்தலையுடைய அழகிய வளைவினையும், குடம் போன்ற புடைப்பினையும் உடைய
அழகிய தன் சிலம்புகளின் ஓசையை அடக்கி, அச்சத்துடன் வந்து
ஊரெல்லாம் தூங்கும் இந்த நடுச்சாமத்தில் நம்மைத் தழுவியிருந்துவிட்டு மீண்டும் செல்கின்றவள்,
நிறைந்த கற்பினால் உயர்ந்த பெருமையுற்ற 
அழகிய மாமை நிறமுடைய நிலவுலக மங்கையோ என்றால் அது இல்லை, தெற்கிலே உள்ள
ஆய் என்பவனின் நல்ல நாட்டில் தெய்வத்தையுடைய மலையில்
கவிரமென்னும் பெயரையுடைய அச்சம் பொருந்திய உச்சிமலைச் சரிவினில்
அழகிய மலர்களையுடைய நிறைந்த சுனையில் வசிக்கின்ற
சூர் அர மகள் என்று துணிந்து சொல்வோம், என் நெஞ்சமே!

#199 பாலை கல்லாடனார்
கரைமீது பாயும் வெண்மையான அலைகளைப் போன்று, பலவும் ஒன்றாகச் சேர்ந்து,
அடுத்தடுத்து வரும் காற்று மோதுவதால் பாறையின் மீது உதிர்கின்ற
மலையினைச் சேர்ந்த வெண்கடம்ப மரத்தின் நன்கு மலர்ந்த பூக்களை மழை என்று நினைத்து
தண்ணீர்த் தாகத்தால் வருந்திய யானை, அத் தாகத்தினைத் தணிப்பதற்கு முயன்று மனம் கலங்க,
சிலந்திகள் வலைபின்னிய வெறுமையான காய்ந்துபோன கிளைகளைக் கொண்ட
அசைகின்ற பட்டுப்போன மரங்களின் வரிவரியான நிழலில் தங்கி,
வாடிச் சுருண்டுபோன பெருங்குரும்பையைக் கவ்வித்தின்னும் வேறு செயலற்ற கூட்டத்தில் புகுந்து,
அரத்தால் தேய்த்துக் கூர்மையாக்கப்பட்ட ஊசியின் திரண்ட முனையைப் போன்ற
உறுதியான பற்களைக் கொண்ட செந்நாய்கள் தாக்கியதால்
காற்றின் முன் அகப்பட்ட பூளைப்பூவைப் போன்று விரைந்து அலறிக்கொண்டு
நிலைகெட்டு ஓடிய தன் இனமான மான்கூட்டத்தை மீண்டும் அழைப்பதற்காக, ஆண்மானானது
ஞாயிறு மறையும் மாலைப் பொழுதில் தன் ஆண்குரல் தோன்ற அழைக்கும்
கடல் போன்ற பரந்த காடு பிற்பட்டுப் போகும்படியாக, மற்றவர்களைப் போல
நாம் செல்வோமானால் நமது பயணம் நமக்கு நன்மையாக இருக்கும் என்னும்
பொருளாசைகொண்ட உள்ளம் தளர்ச்சியின்றி முன்னே செலுத்த,
நீ செல்வதற்கு உரியவன் ஆவாய், நெஞ்சமே! மூங்கிலைப் போல
வளைந்தனவாகி நிலைபெற்ற குளிர்ச்சியான திரண்ட
பெரிய தோள்களையுடைய நம் தலைவி இங்கே தனித்திருக்க, மேற்கிலுள்ள
பெரிய பொன் வாகை மரத்தினையுடைய பெருந்துறை என்னும் ஊரில் நடந்த போரில்
பொன்னினால் ஆன அணிகலன்களை அணிந்த நன்னன் என்பவன் போரிட்டு அக் களத்திலேயே மடிய
ஆற்றல் பொருந்திய வெற்றியைத் தந்த இலக்கு தப்பாத வாளினையுடைய
களங்காய்க் கண்ணி நார்முடிச் சேரல் என்னும் சேர மன்னன்
தான் முன்பு இழந்த நாட்டினைத் திரும்பப் பெற்றதைப் போன்ற
பெரிய செல்வத்தைப் பெற்றாலும் உன்னுடன் நான் வரமாட்டேன்.

#200 நெய்தல் உலோச்சனார்
நிலாவைப் போல ஒளிவீசும் மணல் மிகுந்த தெருக்களிலுள்ள
புல் மேய்ந்த குடிசைகளையுடைய புலால் நாறும் சேரியாகிய எமது இடம்
ஓர் ஊர் என்று நினைக்கமுடியாத சிறுமையையுடையதாய், நீரினால் சூழப்பெற்று
தங்குவதற்கு இனியது அல்லாததாயினும், அதில் கிடைக்கும் இன்பமானது
அங்கு ஒரே ஒரு நாள் தங்கியிருந்தவர்க்கும், அடுத்த நாளில்
தமது சொந்த ஊரையே மறக்கவைக்கும் பண்பினையுடையது, அத்தகைய எமது ஊருக்கு
வந்துவிட்டுச் செல்லுங்கள், சங்குகள் மேயும் கடற்பரப்பினையுடைய தலைவனே!
பொலிவுள்ளதாய் ஒலிக்கும் அலைகள் விரைந்து வந்து சிதறிப்போகும்
மரங்கள் உயர்ந்து நிற்கும் ஒரு பக்கத்தில், உன் குணங்களை நாங்கள் பலவாய்ப் பாராட்ட,
பகல் முழுதும் எம்முடன் கழித்து, இரவு வரும்போது
உமது நல்ல தேரினைப் பூட்டிச் செல்லவும் செய்யலாம், இல்லையென்றால்
இங்குத் தங்கிச் செல்வீர் என்றால் நாங்களும்
எங்களால் முடிந்தவரை உங்களை உபசரிப்போம்,
உமக்குச் சம்மதமா? எமக்கு உரையுங்கள்

#201 பாலை மாமூலனார்
தோழியே, வாழ்க! நான் சொல்வதைக் கேட்பாயாக! பொன்னால் செய்த
விரிகின்ற அழகிய ஒளி அசையும் அழகுமிக்க நெற்றிப்பட்டத்தினையுடைய
போர்த்தொழிலில் நன்கு பயின்ற யானைகளையுடைய போரில் வெற்றிகொள்ளும் பாண்டியமன்னனின்
புகழ் மிகுந்த சிறப்பினையுடைய கொற்கைத் துறைமுகத்தின் கடல் துறையினில்
விளங்குகின்ற ஒளியையுடைய முத்துக்களுடன் வலம்புரிச் சங்குகளையும் சொரிந்து
தழையாடைகளால் பொலிவுபெற்ற பக்கம் உயர்ந்த அல்குலையுடைய
நெய்தல் நிலத்து மகளிர் குளிர்ந்த கடல்துறையினில் நின்று வழிபாடு செய்ய,
கதிரவன் மறைந்த அந்தியாகிய போக்குவதற்கு அரிய பொழுதில்
அச்சம் பொருந்திய பெரிய கடல் நிறைமதி நாளில் பொங்கி எழுந்து ஆர்ப்பரித்ததைப் போல
ஊரினர் பேசும் பழிச்சொற்கள் ஊர்மன்றத்தில் பரவியது; தாயும்
கண்னை மூடாதவளாய் வெப்பம் மிக்க பெருமூச்செறிகின்றாள் என்று சொல்லி
ஏன் இவ்வாறு செயலற்றுக்கிடக்கின்றாய்? தோழியே! சோழ மன்னரது
வெண்ணெல் விளையும் ஊர்களையுடைய நல்ல நாட்டினையே பெறுவதாயிருந்தாலும்
வேற்றுநாட்டில் நிலைகொண்டு தங்கிவிடமாட்டார்; முன்னே கிடக்கின்ற
வானளாவிய உச்சியையுடைய மலையின் உச்சிமலைச் சாரலில்
பெரிய கையையுடைய கரடியின் பிளந்த வாயையுடைய ஆண்கரடி
இருளை வெட்டிவைத்தாற்போன்ற திரண்ட மயிரினையுடைய குட்டியுடனும்
தோலாக வற்றிப்போன முலையினையுடைய பெண்கரடியுடனும் மகிழ்ந்திருக்கும்
முதுவேனில் பருவம் நீண்டமையால் வெப்பம் மிகுந்துள்ள பாலைநிலத்தைக் கடந்துசென்ற நம் தலைவர்.

#202 குறிஞ்சி ஆவூர்கிழார் மகனார் கண்ணனார்
ஒளிரும் வெண்மையான அருவியைக் கொண்ட மலையின் உச்சிமலைச் சாரலில்
மென்மையான தலையையுடைய இளம் பெண்யானை தன் கூட்டத்துடன் இனிதாக இருக்க,
புலியாகிய பகையை வென்ற புண் மிக்க ஆண்யானை
கற்களைத் தன்னிடத்தில் கொண்ட மலைச் சரிவில் தன் கையை உயர்த்தி பெருமூச்சுவிடுவதால்
நல்ல கொத்துக்களையுடைய வேங்கை மரத்தின் நறுமணம் மிக்க பூக்கள், கொல்லன்
துருத்தியை மிதித்து ஊதும் உலையில் தெறித்து விழும் தீப்பொறிகள் போன்று பொங்கி எழுந்து
சிறிய பலவான மின்மினிப்பூச்சிகளைப் போன்று பலவும் சேர்ந்து
நீலமணியின் நிறத்தைப் போன்ற பெரிய புதரில் பரவி விழும் நாட்டையுடைய தலைவனே!
எம்மைத் தவிர வேறு யாரும் உண்டோ? நடுஇரவில்
பொறிகளைக்கொண்ட பாம்பின் படத்தையுடைய தலை துண்டாகிப்போகும்படியாக
வலிய இடியானது முழங்கும் அச்சம் வரும் அகன்ற இடத்தில்
தணியாத உள்ளத்துடன் தன் கையிலுள்ள வேலே துணையாக,
செறிந்த இருள் பரவிய கற்களையுடைய வழியாகிய ஒடுங்கிய பாதையில்
நேரிடும் கேட்டினை எண்ணிப்பாராமல் வருகின்ற உன்னை எண்ணி
பொறுக்க முடியாத துன்பக்கடலில் நீந்துவோர் - (எம்மைத் தவிர வேறு யாரும் உண்டோ?)

#203 பாலை கபிலர்
மகிழ்ச்சிகொள்வாள் என்றாலும், கோபம்கொள்வாள் என்றாலும்
தாயானவள் தானாக அறிந்து தெளிந்துகொள்ளட்டும் என்று நினைக்காதவராய், பொல்லாத வாயையுடைய
பிறர்மீது பழிதூற்றும் தொழிலையே விரும்புகின்ற புறங்கூறும் பெண்கள்
இப்படிப்பட்டவள், இன்னவாறு செய்கிறாள் உன் மகள் என்று பல நாட்கள்
என்னிடம் வந்து சொன்னபோதும் அதனை என் மகளாகிய அவளிடம் நான் சொல்லவில்லை,
இவள் வெட்கப்படுவாள் என்று மிகவும் மறைத்துக்கொண்டே அவளுடன் இருந்தேன்,
நான் இந்த வெறும் வீட்டினில் தனித்திருக்க, அவள்தான்
'தாய்க்குத் தெரிந்தால் இங்கு வாழும் வாழ்க்கை
எனக்கு எளிதாக இராது' என்று கழல் அணிந்த காலினையும்,
மின்னல் போல் ஒளிர்கின்ற நீண்ட வேலினையுமுடைய இளைஞன் முன்னே செல்ல,
பல மலைகளையுடைய கடப்பதற்கு அரிய பாலைநில வழியினில் சென்ற அவளுக்கு, நான்
அப்படிப்பட்டவள் அல்ல என்பது அவளுக்கு மிகுந்த உண்மையாகத் தோன்றும்பொருட்டு
விலங்குகள் செல்லும் பாதைகள் பின்னிக்கிடக்கும் மலையடிவாரத்திலுள்ள சிறிய வழிகளில்
இடையில் தீங்கு நேரிடாமல் அவர்களுக்கு முன்னே சென்று
பொலிவிழந்த பெரிய மலையைச் சார்ந்த தனித்திருக்கும் சிறிய ஊரில்
அவர்களை வருவிருந்தாக உபசரித்துத் தங்கியிருக்கச் செய்ய
நுனிகள் தளிர்த்துக் காற்றில் ஆடிக்கொண்டிருக்கும் நொச்சி சூழ்ந்த
மனையைச் சேர்ந்த பெண்ணாக நான் ஆவேன் ஆகுக. 

#204 முல்லை மதுரை காமக்கணி நப்பாலத்தனார்
உலகம் முழுவதையும் நிழல்செய்த தோல்வியில்லாத வெண்கொற்றக்குடையினையும்,
கடல் போன்ற சேனையினையும், செருக்குள்ள குதிரையினையும் உடைய பாண்டியன்
பகைவரை வென்று போர் செய்யும் அகன்ற பெரிய பாசறையிடத்தில்
சென்று யாம் மேற்கொண்ட போர்த்தொழிலையும் வெற்றியுடன் முடித்துவிட்டோம்; எனவே, இன்றே
கார்கால மழையை எதிர்கொண்டு செழித்த காண்பதர்கு இனிய முல்லைக்காட்டில்
திரளான வண்டுகளின் அழகிய சிறகுகளைக் கொண்ட கூட்டம்
மணம் கமழும் முல்லை மலர்களில் மாலைக்காலத்தில் ஆரவாரிக்க,
இதோ! பார்! கார்காலம் வந்துவிட்டது; மிகவும் விரைந்து
செல்லுவதாக! பாகனே! உன் நல்ல தொழில்திறம் சிறந்த நெடிய தேர்!
வெண்ணெல்லை அறுப்பவர்கள் அடிக்கும் வாயின் தோல் மடங்கிய கிணைப்பறையின் முழக்கம்
பல மலர்களையுடைய பொய்கையில் அமர்ந்துள்ள பறவைகளை ஓட்டும்
விளைந்த நெல்லையுடைய வயல்களையுடைய வாணன் என்பவனின் சிறுகுடியில் உள்ள
சோலை போன்று மணக்கும் கூந்தலையும்
ஒளிபொருந்திய வளையல்களையும் உடைய நம் தலைவியின் தோள்களை முயங்கி இன்புறுவதற்கு - 

#205 பாலை நக்கீரர்
உயிருடன் கலந்து ஒன்றிய மிகவும் பழைமையான நட்பினால்
குற்றமற்ற நெஞ்சத்தால் கலந்தவர் போல
பெண்ணே! உன்னைவிட்டு நாம் பிரியமாட்டோம் என்று
முழுப்பொய்யைக் கூறத் துணிகின்ற நெஞ்சத்துடன் நாம் விரும்பும்படி கூறி,
அதனை உறுதியுடன் கடைப்பிடிக்கும் துணிவு இல்லாத கொள்கையினர் ஆகி, இப்பொழுது
துன்பம் மிக்க வருத்தத்தால் நமது நெற்றியில் பசலை பரவிக்கிடக்கவும்,
நாம் அழவும் நம்மைப் பிரிந்துசென்றார் என்றாலும், அவர்தாம்
வாய்மை ஆகிய மொழியே பேசுதலால் நிலைத்த, நெடுந்தொலைவுக்கும் விளங்கும் நல்ல புகழினையுடைய
செல்வம் மிக்க கோசர்களின் வீரம் விளங்குகின்ற படைகளை அழித்து,
அவரின் நிலத்தைக் கைப்பற்ற விரும்பிய பொன்னாலான பூணையுடைய கிள்ளி என்னும் சோழ மன்னனின்
பூக்கள் மலர்ந்த நீண்ட கழியின் நடுவே, பெரிய புகழையும்
தோட்டங்களையும் உடைய காவிரிப்பூம்பட்டினத்தைப் போன்ற
வளம் மிக்க நமது இல்லத்தில் நல்ல விருந்தினர்களை ஏற்று உபசரிப்பதற்காக, இன்பம் உண்டாக
சிறந்த பொருளை எளிதாக அடைவாராக!
மழை போன்று இறங்குகின்ற முன்பனிக் காலத்து மயங்கவைக்கும் இருள் நீங்க,
நீண்ட மூங்கில் வளர்ந்த நிழல் அமைந்த மலைச் சாரலில்
மதக்களிற்றின் கன்னத்தின் பக்கத்தைப் போல,
அருவிநீர் ஊர்ந்து இறங்கும் அழகிய உச்சிமலையில்
புலியின் உரித்த வரிகளையுடைய தோலைப் போன்று, (செருக்கு மிகுந்து)
அன்று மலர்ந்த வேங்கையாகிய மணமுள்ள பூக்கள் உதிரும்படியாக
மேல் நோக்கி எழுகின்ற பெரிய கிளையில் ஏறி, கூட்டமான ஆண்குரங்குகள் (செருக்கு மிகுந்து)
தம் இனங்களைக் கூப்பிட்டுத் தாவும் குன்றின் இடையே செல்லும் சிறிய வழிகளாகிய
பருக்கைக்கற்கள் ஒளிர்கின்ற கடப்பதற்கு அரிய இடங்கள் குறுக்கிட்டுக்கிடக்கும்
மொழி வேறுபட்ட நாடுகளிலுள்ள பாலையைக் கடந்துசென்ற அவர் - (சிறந்த பொருளை எளிதாக அடைவாராக!)

#206 மருதம் மதுரை மருதன் இளநாகனார்
தலைவன் மீது குற்றமில்லை எனப்படும் கூற்றை எவ்வாறு எடுத்துக்கொள்வது? தோழியே! நல்ல களிப்புடன்
பேடியாகிய பெண்ணின் உருவம் கொண்டு ஆடுபவனின் பின்சென்று மேல் வளைந்த கைகளைப் போன்று
காண்பவர்க்குச் சிரிப்பு உண்டாகும்படி பருத்த முறுக்கேறின கொம்புகளையுடைய எருமையின்
மயிரால் அழகுபெற்ற கருமையான தோலையுடைய பெரிய முதுகின் மேல்
மாடுமேய்க்கும் சிறிய தொழிலைச் செய்யும் சிறுவர்கள் ஏறி அமர்ந்திருப்பது தொலைவில் உள்ளவர்களுக்கு
உருண்டைப் பாறையின் மீதுள்ள குரங்குகளைப் போலக் காணப்படும் ஊரினைச் சேர்ந்த நம் தலைவன்
மழைக் காலத்து ஈங்கைச் செடியின் சிறந்த தளிரினைப் போன்ற
அழகிய மாமை நிறத்தையுடைய மேனியினையும், ஆராய்ந்த அணிகலன்களையும் உடைய பரத்தை மகளிரின்
முத்துமாலையை ஏந்திய பரந்த முலைகளையுடைய மார்பகத்தில்
குன்றாத காதலுடன் பூமாலை இடைப்பட்டுக் குழையும்படி
முழவின் முழக்கம் ஒழியாத விழாவினையுடைய பெரிய இல்லத்தில், அவருடன்
திருமணச் சடங்கு செய்து கொள்வதில் பெரிதும் விருப்பம் உடையவன் என்பதினால், அந்தச் செயலை வெறுத்து
பகைவரைக் கொல்லும் போராற்றல் மிக்க வேளிர்களுக்குரிய வீரை என்னும் இடத்திலுள்ள துறையின் முன்
நீண்டு கிடக்கும் வெள்ளை உப்பின் அளவிலடங்காத குவியல்
பெரிய மழையால் உருகுவது போல
எமது பெரிய மென்மையான தோள்கள் மெலிந்து திருத்தமான வளையல்கள் நெகிழப்பெற்றன.

#207 பாலை மதுரை எழுத்தாளன் சேந்தம்பூதனார்
தெய்வத்தன்மை உடைய கடலின் நீர் வந்து பரவிய உப்பு விளையும் வயலில்
அந்த நீர் வெயிலில் காய்ந்த தன்மையால் இறுகிப்போய் மாறிய வெண்மையான உப்பாகிய அமிழ்தினை
மேற்கிலுள்ள நாடுகளின் பக்கம் எடுத்துச்செல்லும்படி, நல்ல நிமித்தம் பார்த்து
படைக்கலன்களையும் சீர்திருத்திக்கொண்டு எழுந்த பெரிய வீரச் செயல்களைப் புரியும் ஆடவர்
அடுக்கிய உப்புப்பொதியாகிய சுமைகளைத் தாங்கிய வெளுத்த முதுகினையுடைய கழுதைகளின்
தேய்ந்த குளம்புகள் மிதித்ததால் பருக்கைக்கற்கள் புரண்டுகிடக்கும் வழிகள் அமைந்த
வெப்பம் மிக்க பாலைநிலத்தை ஊடறுத்துப் போகின்ற அச்சம் தோன்றும் கிளை வழிகளையுடைய பாதையில்
வண்டுகள் ஆரவாரிக்கும் மதநீர் வற்றி மறைந்துபோன கன்னத்தையுடைய
வெயிலால் மெலிந்துபோய் வருந்திய நீண்ட கொம்பினையுடைய ஒற்றைக்களிற்றின்
சொரசொரப்புத்தன்மை தேய்ந்துபோன, பெரிய கை நீருக்காகத் துழாவிப் பார்த்த கிணற்றில்
தெளிந்த உவர்ப்பு உடைய குறைக்குடமாக முகக்கப்படும் நீருக்காக
அறம் இல்லாதவனாகிய தன் தலைவன் தோண்ட, வெப்பத்துடன் பெருமூச்சுவிட்டு
பிறை போன்ற தன் நெற்றி வியர்க்கும்படி பருகுவாள் போலும்;
தேனைக் கலந்து நன்கு கலக்கிய இனிய பாலை ஏந்திக்கொண்டு
கூந்தலைக் கோதி நயமான மொழிகளைக் கூறவும்
மறுத்த சொற்களையுடையவளாய்
அந்தப் பாலை வெறுத்த நெஞ்சத்தோடே அதனைப் பருகாத என் மகள் - 

#208 குறிஞ்சி பரணர்
நள்ளிரவில், நீண்ட கடைவாயிலில் நின்று
தேன் மிக்க உச்சியினைக் கொண்ட குன்றத்தைப் பாடும்
சிறிய பிரப்பங்கோலைக் கொண்ட பாணர்கள் வேண்டினால் வெண்மையான கொம்புகளைக் கொண்ட
தலைமைப்பண்புடைய யானையை வழங்கும், வள்ளன்மையையும், மகிழ்ச்சியையுமுடைய
வெளியன் வேண்மான் ஆய் எயினன் - 
அருள் பொருந்திய வாழ்க்கையையுடையவன் - பாழி என்னும் ஊரிலுள்ள போர்க்களத்தில்
முகபடாம் அணிந்த யானையினையும், நல்ல ஓட்டம் அமைந்த தேரினையும் உடைய மிஞிலி என்பவனோடு
நண்பகலில் செய்த போரில் மிகுதியாகப் புண்பட்டு
மின்னும் வாளுடன் வாள் மோதும் போரில் இறந்துபோனானாக, பறவைகள் பலவும் ஒன்றுகூடி
அழகிய இடத்தையுடைய வானில் விளங்கிய ஞாயிற்றின்
ஒளிவீசும் கதிர்கள் அவன் உடலைச் சுடாதபடித் தம் சிறகுகளால் பந்தலிட்டு
நிழல் செய்து சுற்றிக்கொண்டிருப்பதை நான் காணமாட்டேன் என்று
அவன் இறந்த களத்தைக் காண்பதற்குச் செல்லாதவனாய், சினம் மிகுந்து
அச்சுறுத்தும் போர்த்தொழிலையுடைய நன்னன் மனம் இரங்காதவனாய் மறைந்துகொள்ள,
பெரிதாய்ப் பதற்றங்கொண்ட பல வேளிர் மகளிர்
நிறம்பொருந்திய பூக்களாலான அழகிய மாலைகளை அழித்துவிட்டுச் செய்த ஆரவாரம் மிக்க அழுகையை,
பழி நீங்க, பகைவர் படையை வெல்லும் மிகப் பெரிய சேனையினையுடைய
அகுதை என்பவன் களைந்ததைப் போன்று, மிகுந்த மழையால் பெருக்கெடுத்து
உப்பால் ஆன அணையைக் கரைத்துக்கொண்டு வரும் வெள்ளத்தைப் போல
நாணத்தின் எல்லையில் அடங்காத ஆசை கொண்டவளாய்
வந்து நம் துன்பத்தை நீக்கி நமக்கு அருள்செய்தாள், வாழ்வாளாக! ஓரி என்பவனின்
பல பழங்களையுடைய பலா மரங்களையுடைய பயன் மிக்க கொல்லி மலையின்
கார்காலத்தில் பூக்கும் மலர்களைப் போன்று மணங்கமழும்
அழகும், மென்மையும் பொருந்திய கூந்தலையுடைய மாநிறத்தவளாகிய நம் தலைவி.

#209 பாலை கல்லாடனார்
'தோள்களும் தம்முடைய பழைய அழகை இழந்தன, நாள்தோறும்
அன்னையும் அதைப் பார்த்து ஆற்றமுடியாத துன்பத்தை அடைந்தாள், ஊர் தூற்றும் பழிச்சொற்களோ,
பொன்னால் அழகுசெய்யப்பட்ட நீண்ட தேரினையுடைய பாண்டியர் பெருமானாகிய
கணையமரத்தைப் போன்ற திண்ணிய தோளினையும், நல்ல ஓட்டத்தையும் உடைய தேரையுடைய செழியன்
எதிர்த்த ஏழு பகைவர்களையும் முற்ற வென்ற
தலையாலங்கானத்தில் எழுந்த வெற்றி ஆரவாரத்தைக் காட்டிலும் பெரியது' என்று சொல்லிச்சொல்லி
துயரில் ஆழ்ந்துவிடாதே, தோழியே! நம் தலைவரான அவர்
பெரிய யானையையும், வீரம் மிகுந்த போரினையும் உடைய புல்லி என்பவனது
மூங்கில்களையுடைய நீண்ட மலையாகிய வேங்கடத்தின் அப்பால் உள்ள
குன்றுகளைக் கடந்து போயிருக்கிறாரென்றாலும், தமது உறுதிப்பாடு மிகுந்து
நினையாதவராய் ஆவது மிக அரிது; சிவந்த வேலினையுடைய
முள்ளூர் மன்னனாகிய, வீரக் கழலும், வீர வளையும் அணிந்த காரி என்பவன்
கெடாத நல்ல புகழினை நிலைநாட்டிய வல்வில்
ஓரியைக் கொன்று சேர மன்னர்க்கு உரிமையாக்கிய
சிவந்த வேர்ப்பலாவின் பழம் மிகுந்த கொல்லிமலையில்
நிலைபெற்ற தெய்வத்தச்சனால் உருவாக்கப்பட்ட
பலரும் புகழும் கொல்லிப்பாவையைப் போன்ற உன் அழகை - (நினையாதவராய் ஆவது மிக அரிது)

#210 நெய்தல் உலோச்சனார்
ஒடுக்கமாக இறங்கும் கூரைகளையுடைய குடிசையில் வாழும் கொலைத் தொழிலையுடைய கொடிய பரதவர்
எறிந்த உளி தாக்கிய செருக்கு மிக்க பெரிய மீனானது
தன் உடம்பில் பட்ட புண்ணிலிருந்து வெளிவரும் குருதி புலால் நாறும் கடல்நீரில் களங்கத்தை உண்டாக்க
வானத்தை அணிசெய்யும் வில்லைப் போலத் தாவிச் சென்று, பசிய திவலைகளையுடைய
அலைகள் இயங்குகின்ற கடற்பரப்பில் வீழ்ந்து அதனைக் கலக்கி, தன் வலிமை குன்றி
வரிசையாக இருக்கும் படகுகளின் பக்கத்தில் வந்துசேரும் துறையினையுடைய நம் தலைவன்
நடு இரவில் நம் மூங்கிலைப் போன்ற தோளினை நினைத்து,
இங்கு வந்த போது நம் ஊரிலுள்ள
கடற்கரைச் சோலையையுடைய பெரிய துறையின் அழகினைப் பாராட்டி
ஓயாமல் புகழ்ந்தான், இப்பொழுதோ, தனது
மென்மைவாய்ந்த மார்பில் நாம் கண்துயில்வதை இல்லாமல் செய்து
தாழையின் அழகிய தாழ்ந்த கிளைகள் விரைந்து வருகின்ற தனது தேரினைத் தடுக்க,
இங்கு வருவது பெரிதும் கடினமாக இருக்கிறது என்று கூறுகிறான் என்பதைப்
பலமுறை நாம் கேட்டோம் அல்லவா! 

#211 பாலை மாமூலனார்
நான் சொல்வதைச் கேள்! ஏடி! தோழியே! வெண்ணிறமான,
சுண்ணாம்புச் சிப்பி வெந்து மலர்ந்ததைப் போன்ற பல பூக்களைக் கொண்ட வெண்கடம்பமரத்தின்
பறையினைப் பார்த்தது போன்ற பரந்த அடியினையும், வலிமையான கால்களையும்,
உறுதியான நிலை வாய்ந்த கொம்புகளையும் உடைய வலிய களிறு உராயும்போதெல்லாம்
குளிர்ந்த மழையோடு விழுகின்ற ஆலங்கட்டிகளைப் போல உதிர்ந்து பரவி, உழவர்கள்
காயவைக்கும் வெண்ணெல்லின் விதைகளைப் போல பாறைநிலத்தில் காய்ந்துகிடக்கும்
குளிர்ச்சி பொருந்திய சோலைகளையுடைய வேங்கடமலையின் அப்பாலுள்ள
மொழி வேறுபட்ட நாட்டில் இருக்கிறாரென்றாலும் விரைந்துவந்து நமக்கு அருள்புரிவார்;
குழியில் அகப்பட்ட கன்றுகளையுடைய பெருங்கூட்டமான பெண்யானைகளை
அகப்படுத்தும் ஆரவாரத்தின்போது (எழினி என்பவன் தன் ஏவலின்படி) வராமல் இருக்க
மிகுந்த சினம் கொண்ட சோழமன்னனின் ஏவலால் சென்று
(மத்தி என்பவன்)மிகுந்த தொலைவில் உள்ள நாட்டில் முதல் படையிலேயே அகப்பட்டுக்கொண்ட
அரசியல் நூல் கல்லாத அந்த எழினியின் பல்லைப் பறித்து வந்து பதித்த
கொடிய வீரத்தைக் காட்டுகின்ற கதவினையுடைய வெண்மணி என்னும் ஊரின் வாயிலில்
மத்தி என்பவன் நாட்டிய வீரக்கல் பொருந்திய குளிர்ந்த கடல்துறையினில்
கடல்நீர் மோதி முழங்கினாற் போன்ற பெரிய
பழிச்சொல்லை நமக்கு விட்டுவிட்டு, நாம் அழும்படி பிரிந்த நம் தலைவர் - (விரைந்துவந்து நமக்கு அருள்புரிவார்)

#212 குறிஞ்சி பரணர்
கெட்டியாக இல்லாமல் நெகிழும் தன்மையுள்ள நல்ல பொன்னால் செய்த பாவையானது
வானில் பரவும் இளவெயிலை ஏற்றுக்கொண்டு ஒளிதிகழ நின்றாற் போல
மிகுந்த அழகைக் கொண்டவளும், திரண்ட கொத்தான கூந்தலையும்,
கிளைவிட்டு வளர்ந்த புதராகிய நாணலின் கிழங்கு மணல் பரப்பில் விட்ட
முளையைப் போன்ற (வெண்மையான) முள் போல் கூர்மையான பற்களையும் பவளம் போன்ற வாயையும்,
யாழ் வல்லோன் இயக்கும் நல்ல யாழின் செவ்வழிப்பண்ணின்
இசையைக் கேட்பது போன்ற மிக இனிய சொல்லினை உடையவளும் ஆகிய
தெய்வத்தின் இயல்பினையுடைய ஒருத்தியை நீ பெரிதும் விரும்பி, பெரிய களிற்று யானைக்
கூட்டம் இறங்கி ஆடுகின்ற நீர் கலங்குவது போல மனம் கலங்கிய பொழுதிலும்
இவள் பெறுவதற்குக் கடினமானவள் என்று நினைத்துப்பாராமல், நாள்தோறும்
த