<<முந்திய பக்கம்

நற்றிணை (351 - 400)

# மதுரை கண்ணத்தனார்
# 351 குறிஞ்சி
இளமை தீர்ந்தனள் இவள் என வள மனை
அரும் கடிப்படுத்தனை ஆயினும் சிறந்து இவள்
பசந்தனள் என்பது உணராய் பல் நாள்
எவ்வ நெஞ்சமொடு தெய்வம் பேணி
வருந்தல் வாழி வேண்டு அன்னை கரும் தாள்		5
வேங்கை அம் கவட்டு இடை சாந்தின் செய்த
களிற்று துப்பு அஞ்சா புலி அதள் இதணத்து
சிறுதினை வியன் புனம் காப்பின்
பெறுகுவள்-மன்னோ என் தோழி தன் நலனே

# மதுரை பள்ளி மருதங்கிழார் மகனார் சொகுத்தனார்
# 352 பாலை
இலை மாண் பகழி சிலை மாண் இரீஇய
அன்பு இல் ஆடவர் அலைத்தலின் பலருடன்
வம்பலர் தொலைந்த அஞ்சுவரு கவலை
அழல் போல் செவிய சேவல் ஆட்டி
நிழலொடு கதிக்கும் நிணம் புரி முது நரி		5
பச்சூன் கொள்ளை மாந்தி வெய்து_உற்று
தேர் திகழ் வறும் புலம் துழைஇ நீர் நயந்து
பதுக்கை நீழல் ஒதுக்கு இடம் பெறாஅ
அரும் சுர கவலை வருதலின் வருந்திய
நமக்கும் அரிய ஆயின அமை தோள்		10
மாண்பு உடை குறு_மகள் நீங்கி
யாங்கு வந்தனள்-கொல் அளியள் தானே

# கபிலர்
# 353 குறிஞ்சி
ஆள் இல் பெண்டிர் தாளின் செய்த
நுணங்கு நுண் பனுவல் போல கணம்_கொள
ஆடு மழை தவழும் கோடு உயர் நெடு வரை
முட முதிர் பலவின் குடம் மருள் பெரும் பழம்
கல் கெழு குறவர் காதல் மட_மகள்		5
கரு விரல் மந்திக்கு வரு விருந்து அயரும்
வான் தோய் வெற்ப சான்றோய் அல்லை எம்
காமம் கனிவது ஆயினும் யாமத்து
இரும் புலி தொலைத்த பெரும் கை யானை
வெம் சின உருமின் உரறும்			10
அஞ்சுவரு சிறு நெறி வருதலானே

# உலோச்சனார்
# 354 நெய்தல்
தான் அது பொறுத்தல் யாவது கானல்
ஆடு அரை ஒழித்த நீடு இரும் பெண்ணை
வீழ் காவோலை சூழ் சிறை யாத்த
கானல் நண்ணிய வார் மணல் முன்றில்
எல்லி அன்ன இருள் நிற புன்னை			5
நல் அரை முழு_முதல் அ வயின் தொடுத்த
தூங்கல் அம்பி தூவல் அம் சேர்ப்பின்
கடு வெயில் கொதித்த கல் விளை உப்பு
நெடு நெறி ஒழுகை நிரை செல பார்ப்போர்
அளம் போகு ஆகுலம் கடுப்ப			10
கௌவை ஆகின்றது ஐய நின் நட்பே

# 355 குறிஞ்சி
புதல்வன் ஈன்ற பூ கண் மடந்தை
முலை வாய் உறுக்கும் கை போல் காந்தள்
குலை_வாய் தோயும் கொழு மடல் வாழை
அ மடல் பட்ட அருவி தீம் நீர்
செம் முக மந்தி ஆரும் நாட			5
முந்தை இருந்து நட்டோர் கொடுப்பின்
நஞ்சும் உண்பர் நனி நாகரிகர்
அம் சில் ஓதி என் தோழி தோள் துயில்
நெஞ்சின் இன்புறாய் ஆயினும் அது நீ
என் கண் ஓடி அளி-மதி			10
நின் கண் அல்லது பிறிது யாதும் இலளே

# பரணர்
# 356 குறிஞ்சி
நிலம் தாழ் மருங்கின் தெண் கடல் மேய்ந்த
விலங்கு மென் தூவி செம் கால் அன்னம்
பொன் படு நெடும் கோட்டு இமயத்து உச்சி
வான் அர_மகளிர்க்கு மேவல் ஆகும்
வளரா பார்ப்பிற்கு அல்கு_இரை ஒய்யும்		5
அசைவு இல் நோன் பறை போல செலவர
வருந்தினை வாழி என் உள்ளம் ஒரு நாள்
காதலி உழையள் ஆக
குணக்கு தோன்று வெள்ளியின் எமக்கு-மார் வருமே

# குறமகள் குறியெயினி
# 357 குறிஞ்சி
நின் குறிப்பு எவனோ தோழி என் குறிப்பு
என்னொடு நிலையாது ஆயினும் என்றும்
நெஞ்சு வடுப்படுத்து கெட அறியாதே
சேண் உற தோன்றும் குன்றத்து கவாஅன்
பெயல் உழந்து உலறிய மணி பொறி குடுமி		5
பீலி மஞ்ஞை ஆலும் சோலை
அம் கண் அறைய அகல் வாய் பைம் சுனை
உண்கண் ஒப்பின் நீலம் அடைச்சி
நீர் அலை கலைஇய கண்ணி
சாரல் நாடனொடு ஆடிய நாளே			10

# நக்கீரர்
# 358 நெய்தல்
பெரும் தோள் நெகிழ அம் வரி வாட
சிறு மெல் ஆகம் பெரும் பசப்பு ஊர
இன்னேம் ஆக என் கண்டு நாணி
நின்னொடு தெளித்தனர் ஆயினும் என்னதூஉம்
அணங்கல் ஓம்பு-மதி வாழிய நீ என		5
கணம் கெழு கடவுட்கு உயர் பலி தூஉய்
பரவினம் வருகம் சென்மோ தோழி
பெரும் சே_இறவின் துய் தலை முடங்கல்
சிறு_வெண்_காக்கை நாள் இரை பெறூஉம்
பசும் பூண் வழுதி மருங்கை அன்ன என்		10
அரும் பெறல் ஆய் கவின் தொலைய
பிரிந்து ஆண்டு உறைதல் வல்லியோரே

# கபிலர்
# 359 குறிஞ்சி
சிலம்பின் மேய்ந்த சிறு கோட்டு சேதா
அலங்கு குலை காந்தள் தீண்டி தாது உக
கன்று தாய் மருளும் குன்ற நாடன்
உடுக்கும் தழை தந்தனனே யாம் அஃது
உடுப்பின் யாய் அஞ்சுதுமே கொடுப்பின்		5
கேள் உடை கேடு அஞ்சுதுமே ஆயிடை
வாடல-கொல்லோ தாமே அவன் மலை
போர் உடை வருடையும் பாயா
சூர் உடை அடுக்கத்த கொயற்கு அரும் தழையே

# ஓரம்போகியார்
# 360 மருதம்
முழவு முகம் புலர்ந்து முறையின் ஆடிய
விழவு ஒழி களத்த பாவை போல
நெருநை புணர்ந்தோர் புது நலம் வௌவி
இன்று தரு மகளிர் மென் தோள் பெறீஇயர்
சென்றீ பெரும சிறக்க நின் பரத்தை		5
பல்லோர் பழித்தல் நாணி வல்லே
காழின் குத்தி கசிந்தவர் அலைப்ப
கை இடை வைத்தது மெய் இடை திமிரும்
முனி உடை கவளம் போல நனி பெரிது
உற்ற நின் விழுமம் உவப்பென்			10
மற்றும் கூடும் மனை மடி துயிலே

# மதுரை பேராலவாயர்
# 361 முல்லை
சிறு வீ முல்லை பெரிது கமழ் அலரி
தானும் சூடினன் இளைஞரும் மலைந்தனர்
விசும்பு கடப்பு அன்ன பொலம் படை கலி_மா
படு மழை பொழிந்த தண் நறும் புறவில்
நெடு நா ஒண் மணி பாடு சிறந்து இசைப்ப		5
மாலை மான்ற மணம் மலி வியல் நகர்
தந்தன நெடுந்தகை தேரே என்றும்
அரும் படர் அகல நீக்கி
விருந்து அயர் விருப்பினள் திருந்து இழையோளே

# மதுரை மருதன் இள நாகனார்
# 362 பாலை
வினை அமை பாவையின் இயலி நுந்தை
மனை வரை இறந்து வந்தனை ஆயின்
தலை நாட்கு எதிரிய தண் பத எழிலி
அணி மிகு கானத்து அகன் புறம் பரந்த
கடும் செம் மூதாய் கண்டும் கொண்டும்		5
நீ விளையாடுக சிறிதே யானே
மழ களிறு உரிஞ்சிய பராரை வேங்கை
மணல் இடு மருங்கின் இரும் புறம் பொருந்தி
அமர் வரின் அஞ்சேன் பெயர்க்குவென்
நுமர் வரின் மறைகுவென் மாஅயோளே		10

# 363 நெய்தல்
கண்டல் வேலி கழி சூழ் படப்பை
தெண் கடல் நாட்டு செல்வென் யான் என
வியம் கொண்டு ஏகினை ஆயின் எனையதூஉம்
உறு வினைக்கு அசாவா உலைவு இல் கம்மியன்
பொறி அறு பிணை கூட்டும் துறை மணல் கொண்டு	5
வம்மோ தோழி மலி நீர் சேர்ப்ப
பைம் தழை சிதைய கோதை வாட
நன்னர் மாலை நெருநை நின்னொடு
சில விளங்கு எல் வளை ஞெகிழ
அலவன் ஆட்டுவோள் சிலம்பு ஞெமிர்ந்து எனவே	10

# கிடங்கில் காவிதி பெரும் கொற்றனார்
# 364 முல்லை
சொல்லிய பருவம் கழிந்தன்று எல்லையும்
மயங்கு இருள் நடுநாள் மங்குலோடு ஒன்றி
ஆர் கலி வானம் நீர் பொதிந்து இயங்க
பனியின் வாடையொடு முனிவு வந்து இறுப்ப
இன்ன சில் நாள் கழியின் பல் நாள்		5
வாழலென் வாழி தோழி ஊழின்
உரும் இசை அறியா சிறு செம் நாவின்
ஈர் மணி இன் குரல் ஊர் நணி இயம்ப
பல் ஆ தந்த கல்லா கோவலர்
கொன்றை அம் தீம் குழல் மன்று-தோறு இயம்ப	10
உயிர் செல துனைதரும் மாலை
செயிர் தீர் மாரியொடு ஒருங்கு தலைவரினே

# கிள்ளிமங்கலம் கிழார் மகனார் சேர கோவனார்
# 365 குறிஞ்சி
அரும் கடி அன்னை காவல் நீவி
பெரும் கடை இறந்து மன்றம் போகி
பகலே பலரும் காண வாய் விட்டு
அகல் வயல் படப்பை அவன் ஊர் வினவி
சென்மோ வாழி தோழி பல் நாள்			5
கருவி வானம் பெய்யாது ஆயினும்
அருவி ஆர்க்கும் அயம் திகழ் சிலம்பின்
வான் தோய் மா மலை கிழவனை
சான்றோய் அல்லை என்றனம் வரற்கே

# மதுரை ஈழத்து பூதன் தேவனார்
# 366 பாலை
அரவு கிளர்ந்து அன்ன விரவு_உறு பல் காழ்
வீடு உறு நுண் துகில் ஊடு வந்து இமைக்கும்
திருந்து_இழை அல்குல் பெரும் தோள் குறு_மகள்
மணி ஏர் ஐம்பால் மாசு அற கழீஇ
கூதிர் முல்லை குறும் கால் அலரி			5
மாதர் வண்டொடு சுரும்பு பட முடித்த
இரும் பன் மெல் அணை ஒழிய கரும்பின்
வேல் போல் வெண் முகை விரிய தீண்டி
முதுக்குறை குரீஇ முயன்று செய் குடம்பை
மூங்கில் அம் கழை தூங்க ஒற்றும்			10
வட புல வாடைக்கு பிரிவோர்
மடவர் வாழி இ உலகத்தானே

# நக்கீரர்
# 367 முல்லை
கொடும் கண் காக்கை கூர் வாய் பேடை
நடுங்கு சிறை பிள்ளை தழீஇ கிளை பயிர்ந்து
கரும் கண் கருனை செந்நெல் வெண் சோறு
சூர் உடை பலியொடு கவரிய குறும் கால்
கூழ் உடை நன் மனை குழுவின இருக்கும்		5
மூதில் அருமன் பேர் இசை சிறுகுடி
மெல் இயல் அரிவை நின் பல் இரும் கதுப்பின்
குவளையொடு தொடுத்த நறு வீ முல்லை
தளை அவிழ் அலரி தண் நறும் கோதை
இளையரும் சூடி வந்தனர் நமரும்			10
விரி உளை நன் மா கடைஇ
பரியாது வருவர் இ பனி படு நாளே

# கபிலர்
# 368 குறிஞ்சி
பெரும் புனம் கவரும் சிறு கிளி ஓப்பி
கரும் கால் வேங்கை ஊசல் தூங்கி
கோடு ஏந்து அல்குல் தழை அணிந்து நும்மொடு
ஆடினம் வருதலின் இனியதும் உண்டோ
நெறி படு கூழை கார் முதிர்பு இருந்த		5
வெறி கமழ் கொண்ட நாற்றமும் சிறிய
பசலை பாய்தரு நுதலும் நோக்கி
வறிது உகு நெஞ்சினள் பிறிது ஒன்று சுட்டி
வெய்ய உயிர்த்தனள் யாயே
ஐய அஞ்சினம் அளியம் யாமே			10

# மதுரை ஓலை கடையத்தார் நல்வெள்ளையார்
# 369 நெய்தல்
சுடர் சினம் தணிந்து குன்றம் சேர
நிறை பறை குருகு_இனம் விசும்பு உகந்து ஒழுக
எல்லை பைபய கழிப்பி முல்லை
அரும்பு வாய் அவிழும் பெரும் புன் மாலை
இன்றும் வருவது ஆயின் நன்றும்			5
அறியேன் வாழி தோழி அறியேன்
ஞெமை ஓங்கு உயர் வரை இமையத்து உச்சி
வாஅன் இழிதரும் வயங்கு வெள் அருவி
கங்கை அம் பேர் யாற்று கரை இறந்து இழிதரும்
சிறை அடு கடும் புனல் அன்ன என்		10
நிறை அடு காமம் நீந்தும் ஆறே

# உறையூர் கதுவாய் சாத்தனார்
# 370 மருதம்
வாராய் பாண நகுகம் நேர்_இழை
கடும்பு உடை கடும் சூல் நம் குடிக்கு உதவி
நெய்யோடு இமைக்கும் ஐயவி திரள் காழ்
விளங்கு நகர் விளங்க கிடந்தோள் குறுகி
புதல்வன் ஈன்று என பெயர் பெயர்த்து அம் வரி	5
திதலை அல்குல் முது பெண்டு ஆகி
துஞ்சுதியோ மெல் அம்_சில்_ஓதி என
பன் மாண் அகட்டில் குவளை ஒற்றி
உள்ளினென் உறையும் என் கண்டு மெல்ல
முகை நாண் முறுவல் தோற்றி			10
தகை மலர் உண்கண் கை புதைத்ததுவே

# ஔவையார்
# 371 முல்லை
காயாம் குன்றத்து கொன்றை போல
மா மலை விடர்_அகம் விளங்க மின்னி
மாயோள் இருந்த தேஎம் நோக்கி
வியல் இரு விசும்பு அகம் புதைய பாஅய்
பெயல் தொடங்கினவே பெய்யா வானம்		5
நிழல் திகழ் சுடர் தொடி ஞெகிழ ஏங்கி
அழல் தொடங்கினளே ஆய்_இழை அதன்_எதிர்
குழல் தொடங்கினரே கோவலர்
தழங்கு குரல் உருமின் கங்குலானே

# உலோச்சனார்
# 372 நெய்தல்
அழி_தக்கன்றே தோழி கழி சேர்பு
கானல் பெண்ணை தேன் உடை அளி பழம்
வள் இதழ் நெய்தல் வருந்த மூக்கு இறுபு
அள்ளல் இரும் சேற்று ஆழ பட்டு என
கிளை குருகு இரியும் துறைவன் வளை கோட்டு	5
அன்ன வெண் மணற்று அக_வயின் வேட்ட
அண்ணல் உள்ளமொடு அமர்ந்து இனிது நோக்கி
அன்னை தந்த அலங்கல் வான் கோடு
உலைந்து ஆங்கு நோதல் அஞ்சி அடைந்ததற்கு
இனையல் என்னும் என்ப மனை இருந்து		10
இரும் கழி துழவும் பனி தலை பரதவர்
திண் திமில் விளக்கம் எண்ணும்
கண்டல் வேலி கழி நல் ஊரே

# கபிலர்
# 373 குறிஞ்சி
முன்றில் பலவின் படு சுளை மரீஇ
புன் தலை மந்தி தூர்ப்ப தந்தை
மை படு மால் வரை பாடினள் கொடிச்சி
ஐவன வெண்ணெல் குறூஉம் நாடனொடு
சூர் உடை சிலம்பின் அருவி ஆடி			5
கார் அரும்பு அவிழ்ந்த கணி வாய் வேங்கை
பா அமை இதணம் ஏறி பாசினம்
வணர் குரல் சிறுதினை கடிய
புணர்வது-கொல்லோ நாளையும் நமக்கே

# வன் பரணர்
# 374 முல்லை
முரம்பு தலைமணந்த நிரம்பா இயவின்
ஓங்கி தோன்றும் உமண் பொலி சிறுகுடி
களரி புளியின் காய் பசி பெயர்ப்ப
உச்சி கொண்ட ஓங்கு குடை வம்பலீர்
முற்றையும் உடையமோ மற்றே பிற்றை		5
வீழ் மா மணிய புனை நெடும் கூந்தல்
நீர் வார் புள்ளி ஆகம் நனைப்ப
விருந்து அயர் விருப்பினள் வருந்தும்
திருந்து இழை அரிவை தே மொழி நிலையே

# பொதும்பில் கிழார் மகன் வெண்கண்ணி
# 375 நெய்தல்
நீடு சினை புன்னை நறும் தாது உதிர
கோடு புனை குருகின் தோடு தலைப்பெயரும்
பல் பூ கானல் மல்கு நீர் சேர்ப்ப
அன்பு இலை ஆதலின் தன் புலன் நயந்த
என்னும் நாணும் நன்_நுதல் உவப்ப		5
வருவை ஆயினோ நன்றே பெரும் கடல்
இரவு தலை மண்டிலம் பெயர்ந்து என உரவு திரை
எறிவன போல வரூஉம்
உயர் மணல் படப்பை எம் உறைவு இன் ஊரே

# கபிலர்
# 376 குறிஞ்சி
முறம் செவி யானை தட கையின் தடைஇ
இறைஞ்சிய குரல பைம் தாள் செந்தினை
வரையோன் வண்மை போல பல உடன்
கிளையோடு உண்ணும் வளை வாய் பாசினம்
குல்லை குளவி கூதளம் குவளை			5
இல்லமொடு மிடைந்த ஈர்ம் தண் கண்ணியன்
சுற்று அமை வில்லன் செயலை தோன்றும்
நல் தார் மார்பன் காண்குறின் சிறிய
நன்கு அவற்கு அறிய உரை-மின் பிற்றை
அணங்கும் அணங்கும் போலும் அணங்கி		10
வறும் புனம் காவல் விடாமை
அறிந்தனிர் அல்லிரோ அறன் இல் யாயே

# மடல் பாடிய மாதங்கீரனார்
# 377 குறிஞ்சி
மடல்_மா_ஊர்ந்து மாலை சூடி
கண் அகன் வைப்பின் நாடும் ஊரும்
ஒண் நுதல் அரிவை நலம் பாராட்டி
பண்ணல் மேவலம் ஆகி அரிது உற்று
அது பிணி ஆக விளியலம்-கொல்லோ		5
அகல் இரு விசும்பின் அரவு குறைபடுத்த
பசும் கதிர் மதியத்து அகல் நிலா போல
அளகம் சேர்ந்த திரு_நுதல்
கழறுபு மெலிக்கும் நோய் ஆகின்றே

# வடம வண்ணக்கன் பேரி சாத்தனார்
# 378 நெய்தல்
யாமமும் நெடிய கழியும் காமமும்
கண்படல் ஈயாது பெருகும் தெண் கடல்
முழங்கு திரை முழவின் பாணியின் பைபய
பழம் புண் உறுநரின் பரவையின் ஆலும்
ஆங்கு அவை நலியவும் நீங்கி யாங்கும்		5
இரவு இறந்து எல்லை தோன்றலது அலர் வாய்
அயல் இல் பெண்டிர் பசலை பாட
ஈங்கு ஆகின்றால் தோழி ஓங்கு மணல்
வரி ஆர் சிறு_மனை சிதைஇ வந்து
பரிவு தர தொட்ட பணிமொழி நம்பி		10
பாடு இமிழ் பனி நீர் சேர்ப்பனொடு
நாடாது இயைந்த நண்பினது அளவே

# குடவாயில் கீரத்தனார்
# 379 குறிஞ்சி
புன் தலை மந்தி கல்லா வன் பறழ்
குன்று உழை நண்ணிய முன்றில் போகாது
எரி அகைந்து அன்ன வீ ததை இணர
வேங்கை அம் படு சினை பொருந்தி கைய
தேம் பெய் தீம் பால் வௌவலின் கொடிச்சி		5
எழுது எழில் சிதைய அழுத கண்ணே
தேர் வண் சோழர் குடந்தை_வாயில்
மாரி அம் கிடங்கின் ஈரிய மலர்ந்த
பெயல் உறு நீலம் போன்றன விரலே
பாஅய் அம் வயிறு அலைத்தலின் ஆனாது		10
ஆடு மழை தவழும் கோடு உயர் பொதியில்
ஓங்கு இரும் சிலம்பில் பூத்த
காந்தள் அம் கொழு முகை போன்றன சிவந்தே

# கூடலூர் பல்கண்ணனார்
# 380 மருதம்
நெய்யும் குய்யும் ஆடி மெய்யொடு
மாசு பட்டன்றே கலிங்கமும் தோளும்
திதலை மென் முலை தீம் பால் பிலிற்ற
புதல்வன் புல்லி புனிறு நாறும்மே
வால் இழை மகளிர் சேரி தோன்றும்		5
தேரோற்கு ஒத்தனெம் அல்லேம் அதனால்
பொன் புரை நரம்பின் இன் குரல் சீறியாழ்
எழாஅல் வல்லை ஆயினும் தொழாஅல்
கொண்டு செல் பாண நின் தண் துறை ஊரனை
பாடு மனை பாடல் கூடாது நீடு நிலை		10
புரவியும் பூண் நிலை முனிகுவ
விரகு இல மொழியல் யாம் வேட்டது இல் வழியே

# ஔவையார்
# 381 முல்லை
அரும் துயர் உழத்தலின் உண்மை சான்ம் என
பெரும்பிறிது இன்மையின் இலேனும் அல்லேன்
கரை பொருது இழிதரும் கான்யாற்று இகு கரை
வேர் கிளர் மராஅத்து அம் தளிர் போல
நடுங்கல் ஆனா நெஞ்சமொடு இடும்பை		5
யாங்கனம் தாங்குவென் மற்றே ஓங்கு செலல்
கடும் பகட்டு யானை நெடுமான்_அஞ்சி
ஈர நெஞ்சமோடு இசை சேண் விளங்க
தேர் வீசு இருக்கை போல
மாரி இரீஇ மான்றன்றால் மழையே		10

# நிகண்டன் கலைக்கோட்டு தண்டனார்
# 382 நெய்தல்
கானல் மாலை கழி நீர் மல்க
நீல் நிற நெய்தல் நிரை இதழ் பொருந்த
ஆனாது அலைக்கும் கடலே மீன் அருந்தி
புள்_இனம் குடம்பை உடன் சேர்பு உள்ளார்
துறந்தோர் தேஎத்து இருந்து நனி வருந்தி		5
ஆர் உயிர் அழிவது ஆயினும் நேர்_இழை
கரத்தல் வேண்டுமால் மற்றே பரப்பு நீர்
தண்ணம் துறைவன் நாண
நண்ணார் தூற்றும் பழிதான் உண்டே

# கோளியூர் கிழார் மகனார் செழியனார்
# 383 குறிஞ்சி
கல் அயல் கலித்த கரும் கால் வேங்கை
அலங்கல் அம் தொடலை அன்ன குருளை
வய புனிற்று இரும் பிண பசித்து என வய புலி
புகர் முகம் சிதைய தாக்கி களிறு அட்டு
உரும் இசை உரறும் உட்குவரு நடுநாள்		5
அருளினை போலினும் அருளாய் அன்றே
கனை இருள் புதைத்த அஞ்சுவரும் இயவில்
பாம்பு உடன்று இரிக்கும் உருமோடு
ஓங்கு வரை நாட நீ வருதலானே

# பாலை பாடிய பெருங்கடுங்கோ
# 384 பாலை
பைம் புற புறவின் செம் கால் சேவல்
களரி ஓங்கிய கவை முட கள்ளி
முளரி அம் குடம்பை ஈன்று இளைப்பட்ட
உயவு நடை பேடை உணீஇய மன்னர்
முனை கவர் முதுபாழ் உகு நெல் பெறூஉம்		5
அரண் இல் சேய் நாட்டு அதர் இடை மலர்ந்த
நன்_நாள் வேங்கை பொன் மருள் புது பூ
பரந்தன நடக்க யாம் கண்டனம் மாதோ
காண் இனி வாழி என் நெஞ்சே நாண் விட்டு
அரும் துயர் உழந்த_காலை			10
மருந்து எனப்படூஉம் மடவோளையே

# 385 நெய்தல்
எல்லை சென்ற பின் மலரும் கூம்பின
புலவு நீர் அடைகரை யாமை பார்ப்போடு
அலவனும் அளை_வயின் செறிந்தன கொடும் கழி
இரை நசை வருத்தம் வீட மரம் மிசை
புள்ளும் பிள்ளையொடு வதிந்தன அதனால்		5
பொழுது அன்று ஆதலின் தமியை வருதி
எழுது எழில் மழை

# 386 குறிஞ்சி
சிறு கண் பன்றி பெரும் சின ஒருத்தல்
துறு கண் கண்ணி கானவர் உழுத
குலவு குரல் ஏனல் மாந்தி ஞாங்கர்
விடர் அளை பள்ளி வேங்கை அஞ்சாது
கழை வளர் சாரல் துஞ்சும் நாடன்			5
அணங்கு உடை அரும் சூள் தருகுவென் என நீ
நும்மோர் அன்னோர் துன்னார் இவை என
தெரிந்து அது வியந்தனென் தோழி பணிந்து நம்
கல் கெழு சிறுகுடி பொலிய
வதுவை என்று அவர் வந்த ஞான்றே		10

# பொதும்பில் கிழார் மகனார்
# 387 பாலை
நெறி இரும் கதுப்பும் நீண்ட தோளும்
அம்ம நாளும் தொல் நலம் சிதைய
ஒல்லா செம் தொடை ஒரீஇய கண்ணி
கல்லா மழவர் வில் இடை விலங்கிய
துன் அரும் கவலை அரும் சுரம் இறந்தோர்		5
வருவர் வாழி தோழி செரு இறந்து
ஆலங்கானத்து அஞ்சுவர இறுத்த
வேல் கெழு தானை செழியன் பாசறை
உறை கழி வாளின் மின்னி உது காண்
நெடும் பெரும் குன்றம் முற்றி			10
கடும் பெயல் பொழியும் கலி கெழு வானே

# மதுரை மருதங்கிழார் மகனார் பெருங்கண்ணனார்
# 388 நெய்தல்
அம்ம வாழி தோழி நன்_நுதற்கு
யாங்கு ஆகின்று-கொல் பசப்பே நோன் புரி
கயிறு கடை யாத்த கடு நடை எறி_உளி
திண் திமில் பரதவர் ஒண் சுடர் கொளீஇ
நடுநாள் வேட்டம் போகி வைகறை		5
கடல் மீன் தந்து கானல் குவைஇ
ஓங்கு இரும் புன்னை வரி நிழல் இருந்து
தேம் கமழ் தேறல் கிளையொடு மாந்தி
பெரிய மகிழும் துறைவன் எம்
சிறிய நெஞ்சத்து அகல்வு அறியானே		10

# காவிரி பூம்பட்டினத்து செங்கண்ணனார்
# 389 குறிஞ்சி
வேங்கையும் புலி ஈன்றன அருவியும்
தேம் படு நெடு வரை மணியின் மானும்
அன்னையும் அமர்ந்து நோக்கினளே என் ஐயும்
களிற்று முகம் திறந்த கல்லா விழு தொடை
ஏவல்_இளையரொடு மா வழிப்பட்டு என		5
சிறு கிளி முரணிய பெரும் குரல் ஏனல்
காவல் நீ என்றோளே சேவலொடு
சிலம்பின் போகிய சிதர் கால் வாரணம்
முதை சுவல் கிளைத்த பூழி மிக பல
நன் பொன் இமைக்கும் நாடனொடு		10
அன்பு உறு காமம் அமைக நம் தொடர்பே

# ஔவையார்
# 390 மருதம்
வாளை வாளின் பிறழ நாளும்
பொய்கை நீர்நாய் வைகு துயில் ஏற்கும்
கைவண் கிள்ளி வெண்ணி சூழ்ந்த
வயல் வெள் ஆம்பல் உருவ நெறி தழை
ஐது அகல் அல்குல் அணி பெற தைஇ		5
விழவின் செலீஇயர் வேண்டும்-மன்னோ
யாணர் ஊரன் காணுநன் ஆயின்
வரையாமையோ அரிதே வரையின்
வரை போல் யானை வாய்மொழி முடியன்
வரை வேய் புரையும் நல் தோள்			10
அளிய தோழி தொலையுந பலவே

# பாலை பாடிய பெருங்கடுங்கோ
# 391 பாலை
ஆழல் மடந்தை அழுங்குவர் செலவே
புலி பொறி அன்ன புள்ளி அம் பொதும்பின்
பனி பவர் மேய்ந்த மா இரு மருப்பின்
மலர் தலை காரான் அகற்றிய தண்ணடை
ஒண் தொடி மகளிர் இழை அணி கூட்டும்		5
பொன் படு கொண்கான நன்னன் நன் நாட்டு
ஏழிற்குன்றம் பெறினும் பொருள்_வயின்
யாரோ பிரிகிற்பவரே குவளை
நீர் வார் நிகர் மலர் அன்ன நின்
பேர் அமர் மழை கண் தெண் பனி கொளவே	10

# மதுரை மருதன் இளநாகனார்
# 392 நெய்தல்
கடும் சுறா எறிந்த கொடும் தாள் தந்தை
புள் இமிழ் பெரும் கடல் கொள்ளான் சென்று என
மனை அழுது ஒழிந்த புன் தலை சிறாஅர்
துணையதின் முயன்ற தீம் கண் நுங்கின்
பணை கொள் வெம் முலை பாடு பெற்று உவக்கும்	5
பெண்ணை வேலி உழை கண் சீறூர்
நன் மனை அறியின் நன்று-மன் தில்ல
செம்மல் நெஞ்சமொடு தாம் வந்து பெயர்ந்த
கானலொடு அழியுநர் போலாம் பானாள்
முனி படர் களையினும் களைப			10
நனி பேர் அன்பினர் காதலோரே

# கோவூர் கிழார்
# 393 குறிஞ்சி
நெடும் கழை நிவந்த நிழல் படு சிலம்பின்
கடும் சூல் வய பிடி கன்று ஈன்று உயங்க
பால் ஆர் பசும் புனிறு தீரிய களி சிறந்து
வாலா வேழம் வணர் குரல் கவர்தலின்
கானவன் எறிந்த கடும் செலல் ஞெகிழி		5
வேய் பயில் அடுக்கம் சுடர மின்னி
நிலை கிளர் மீனின் தோன்றும் நாடன்
இரவின் வரூஉம் இடும்பை நாம் உய
வரைய வந்த வாய்மைக்கு ஏற்ப
நமர் கொடை நேர்ந்தனர் ஆயின் அவருடன்		10
நேர்வர்-கொல் வாழி தோழி நம் காதலர்
புதுவர் ஆகிய வரவும் நின்
வதுவை நாண் ஒடுக்கமும் காணும்_காலே

# ஔவையார்
# 394 முல்லை
மரம் தலைமணந்த நனம் தலை கானத்து
அலம் தலை ஞெமையத்து இருந்த குடிஞை
பொன் செய் கொல்லனின் இனிய தெளிர்ப்ப
பெய்ம் மணி ஆர்க்கும் இழை கிளர் நெடும் தேர்
வன் பரல் முரம்பின் நேமி அதிர			5
சென்றிசின் வாழியோ பனி கடு நாளே
இடை சுரத்து எழிலி உறைத்து என மார்பின்
குறும் பொறி கொண்ட சாந்தமொடு
நறும் தண்ணியன்-கொல் நோகோ யானே

# அம்மூவனார்
# 395 நெய்தல்
யாரை எலுவ யாரே நீ எமக்கு
யாரையும் அல்லை நொதுமலாளனை
அனைத்தால் கொண்க நம் இடையே நினைப்பின்
கடும் பகட்டு யானை நெடும் தேர் குட்டுவன்
வேந்து அடு மயக்கத்து முரசு அதிர்ந்து அன்ன	5
ஓங்கல் புணரி பாய்ந்து ஆடு மகளிர்
அணிந்திடு பல் பூ மரீஇ ஆர்ந்த
ஆ புலம் புகுதரு பேர் இசை மாலை
கடல் கெழு மாந்தை அன்ன எம்
வேட்டனை அல்லையால் நலம் தந்து சென்மே	10

# 396 குறிஞ்சி
பெய்து போகு எழிலி வைகு மலை சேர
தேன் தூங்கு உயர் வரை அருவி ஆர்ப்ப
வேங்கை தந்த வெற்பு அணி நன்_நாள்
பொன்னின் அன்ன பூ சினை துழைஇ
கமழ் தாது ஆடிய கவின் பெறு தோகை		5
பாசறை மீமிசை கணம்_கொள்பு ஞாயிற்று
உறு கதிர் இள வெயில் உண்ணும் நாடன்
நின் மார்பு அணங்கிய செல்லல் அரு நோய்
யார்க்கு நொந்து உரைக்கோ யானே பல் நாள்
காமர் நனி சொல் சொல்லி			10
ஏமம் என்று அருளாய் நீ மயங்கினையே

# அம்மூவனார்
# 397 பாலை
தோளும் அழியும் நாளும் சென்று என
நீள் இடை அத்தம் நோக்கி வாள் அற்று
கண்ணும் காட்சி தௌவின என் நீத்து
அறிவும் மயங்கி பிறிது ஆகின்றே
நோயும் பெருகும் மாலையும் வந்தன்று		5
யாங்கு ஆகுவென்-கொல் யானே ஈங்கோ
சாதல் அஞ்சேன் அஞ்சுவல் சாவின்
பிறப்பு பிறிது ஆகுவது ஆயின்
மறக்குவேன்-கொல் என் காதலன் எனவே

# உலோச்சனார்
# 398 நெய்தல்
உரு கெழு தெய்வமும் கரந்து உறையின்றே
விரி கதிர் ஞாயிறும் குடக்கு வாங்கும்மே
நீர் அலை கலைஇய கூழை வடியா
சாஅய் அம் வயிறு அலைப்ப உடன் இயைந்து
ஓரை மகளிரும் ஊர் எய்தினரே			5
பன் மலர் நறும் பொழில் பழிச்சி யாம் முன்
சென்மோ சே_இழை என்றனம் அதன்_எதிர்
சொல்லாள் மெல்_இயல் சிலவே நல் அகத்து
யாணர் இள முலை நனைய
மாண் எழில் மலர் கண் தெண் பனி கொளவே	10

# ஆலங்குடி வங்கனார்
# 399 குறிஞ்சி
அருவி ஆர்க்கும் பெரு வரை அடுக்கத்து
குருதி ஒப்பின் கமழ் பூ காந்தள்
வரி அணி சிறகின் வண்டு உண மலரும்
வாழை அம் சிலம்பில் கேழல் கெண்டிய
நில வரை நிவந்த பல உறு திரு மணி		5
ஒளி திகழ் விளக்கத்து ஈன்ற மட பிடி
களிறு புறங்காப்ப கன்றொடு வதியும்
மா மலை நாடன் நயந்தனன் வரூஉம்
பெருமை உடையள் என்பது
தருமோ தோழி நின் திரு நுதல் கவினே		10

# 400 மருதம்
வாழை மென் தோடு வார்பு_உறுபு ஊக்கும்
நெல் விளை கழனி நேர் கண் செறுவின்
அரிவனர் இட்ட சூட்டு அயல் பெரிய
இரும் சுவல் வாளை பிறழும் ஊர
நின் இன்று அமைகுவென் ஆயின் இவண் நின்று	5
இன்னா நோக்கமொடு எவன் பிழைப்பு உண்டோ
மறம் கெழு சோழர் உறந்தை அவையத்து
அறம் கெட அறியாது ஆங்கு சிறந்த
கேண்மையொடு அளைஇ நீயே
கெடு அறியாய் என் நெஞ்சத்தானே		10