<<முந்திய பக்கம்

குறுந்தொகை (201 - 250)

# 201 குறிஞ்சி
அமிழ்தம் உண்க நம் அயல் இலாட்டி
பால் கலப்பு அன்ன தே கொக்கு அருந்துபு
நீல மென் சிறை வள் உகிர் பறவை
நெல்லி அம் புளி மாந்தி அயலது
முள் இல் அம் பணை மூங்கிலில் தூங்கும்
கழை நிவந்து ஓங்கிய சோலை
மலை கெழு நாடனை வரும் என்றோளே

# 202 மருதம்
நோம் என் நெஞ்சே நோம் என் நெஞ்சே
புன்_புலத்து அமன்ற சிறியிலை நெருஞ்சி
கட்கு இன் புது மலர் முள் பயந்து ஆங்கு
இனிய செய்த நம் காதலர்
இன்னா செய்தல் நோம் என் நெஞ்சே
# அள்ளூர் நன்முல்லை

# 203 மருதம்
மலை இடையிட்ட நாட்டரும் அல்லர்
மரம் தலை தோன்றா ஊரரும் அல்லர்
கண்ணின் காண நண்ணு_வழி இருந்தும்
கடவுள் நண்ணிய பாலோர் போல
ஒரீஇனன் ஒழுகும் என் ஐக்கு
பரியலென்-மன் யான் பண்டு ஒரு காலே
# நெடும்பல்லியத்தன்

# 204 குறிஞ்சி
காமம் காமம் என்ப காமம்
அணங்கும் பிணியும் அன்றே நினைப்பின்
முதை சுவல் கலித்த முற்றா இளம் புல்
மூதா தைவந்த ஆங்கு
விருந்தே காமம் பெரும் தோளோயே
# மிளை பெரும் கந்தன்

# 205 நெய்தல்
மின்னு செய் கருவிய பெயல் மழை தூங்க
விசும்பு ஆடு அன்னம் பறை நிவந்து ஆங்கு
பொலம் படை பொலிந்த வெண் தேர் ஏறி
கலங்கு கடல் துவலை ஆழி நனைப்ப
இனி சென்றனனே இடு மணல் சேர்ப்பன்
யாங்கு அறிந்தன்று-கொல் தோழி என்
தேம் கமழ் திரு நுதல் ஊர்தரும் பசப்பே
# உலோச்சன்

# 206 குறிஞ்சி
அமிழ்தத்து அன்ன அம் தீம் கிளவி
அன்ன இனியோள் குணனும் இன்ன
இன்னா அரும் படர் செய்யும் ஆயின்
உடன் உறைவு அரிதே காமம்
குறுகல் ஓம்பு-மின் அறிவுடையீரே
# ஐயூர் முடவன்

# 207 பாலை
செப்பினம் செலினே செலவு அரிது ஆகும் என்று
அத்த ஓமை அம் கவட்டு இருந்த
இனம் தீர் பருந்தின் புலம்பு கொள் தெள் விளி
சுரம் செல் மாக்கட்கு உயவு துணை ஆகும்
கல் வரை அயலது தொல் வழங்கு சிறு நெறி
நல் அடி பொறிப்ப தாஅய்
சென்று என கேட்ட நம் ஆர்வலர் பலரே
# உறையன்

# 208 குறிஞ்சி
ஒன்றேன் அல்லேன் ஒன்றுவென் குன்றத்து
பொரு களிறு மிதித்த நெரி தாள் வேங்கை
குறவர் மகளிர் கூந்தல் பெய்ம்-மார்
நின்று கொய மலரும் நாடனொடு
ஒன்றேன் தோழி ஒன்றினானே
# கபிலர்

# 209 பாலை
சுரம் தலைப்பட்ட நெல்லி அம் பசும் காய்
மற புலி குருளை கோள் இடம் கரக்கும்
இறப்பு அரும் குன்றம் இறந்த யாமே
குறு நடை புள் உள்ளலமே நெறி முதல்
கடற்றில் கலித்த முட சினை வெட்சி
தளை அவிழ் பல் போது கமழும்
மை இரும் கூந்தல் மடந்தை நட்பே
# பாலை பாடிய பெருங்கடுங்கோ

# 210 முல்லை
திண் தேர் நள்ளி கானத்து அண்டர்
பல் ஆ பயந்த நெய்யின் தொண்டி
முழுது உடன் விளைந்த வெண்ணெல் வெம் சோறு
எழு கலத்து ஏந்தினும் சிறிது என் தோழி
பெரும் தோள் நெகிழ்த்த செல்லற்கு
விருந்து வர கரைந்த காக்கையது பலியே
# காக்கை பாடினியார் நச்செள்ளையார்

# 211 பாலை
அம்_சில்_ஓதி ஆய் வளை நெகிழ
நொந்தும் நம் அருளார் நீத்தோர்க்கு அஞ்சல்
எஞ்சினம் வாழி தோழி எஞ்சாது
தீய்ந்த மராஅத்து ஓங்கல் வெம் சினை
வேனில் ஓர் இணர் தேனோடு ஊதி
ஆராது பெயரும் தும்பி
நீர் இல் வைப்பின் சுரன் இறந்தோரே
# காவன் முல்லை பூதனார்

# 212 நெய்தல்
கொண்கன் ஊர்ந்த கொடுஞ்சி நெடும் தேர்
தெண் கடல் அடைகரை தெளிர் மணி ஒலிப்ப
காண வந்து நாண பெயரும்
அளிதோ தானே காமம்
விளிவது மன்ற நோகோ யானே
# நெய்தல் கார்க்கியன்

# 213 பாலை
நசை நன்கு உடையர் தோழி ஞெரேரென
கவை தலை முது கலை காலின் ஒற்றி
பசி பிணிக்கு இறைஞ்சிய பரூஉ பெரும் ததரல்
ஒழியின் உண்டு வழு இல் நெஞ்சின்
தெறித்து நடை மரபின் தன் மறிக்கு நிழல் ஆகி
நின்று வெயில் கழிக்கும் என்ப நம்
இன் துயில் முனிநர் சென்ற ஆறே
# கச்சிப்பேட்டு காஞ்சி கொற்றன்

# 214 குறிஞ்சி
மரம் கொல் கானவன் புனம் துளர்ந்து வித்திய
பிறங்கு குரல் இறடி காக்கும் புறம் தாழ்
அம் சில் ஓதி அசை இயல் கொடிச்சி
திருந்து இழை அல்குற்கு பெரும் தழை உதவி
செயலை முழு_முதல் ஒழிய அயலது
அரலை மாலை சூட்டி
ஏமுற்றன்று இ அழுங்கல் ஊரே
# கூடலுலுர் கிழார்

# 215 பாலை
படரும் பைபய பெயரும் சுடரும்
என்றூழ் மா மலை மறையும் இன்று அவர்
வருவர்-கொல் வாழி தோழி நீர் இல்
வறும் கயம் துழைஇய இலங்கு மருப்பு யானை
குறும் பொறை மருங்கின் அமர் துணை தழீஇ
கொடு வரி இரும் புலி காக்கும்
நெடு வரை மருங்கின் சுரன் இறந்தோரே
# மதுரை அளக்கர் ஞாழார் மகனார் மள்ளனார்

# 216 பாலை
அவரே கேடு இல் விழு பொருள் தரும்-மார் பாசிலை
வாடா வள்ளி அம் காடு இறந்தோரே
யானே தோடு ஆர் எல் வளை ஞெகிழ நாளும்
பாடு அமை சேக்கையில் படர் கூர்ந்திசினே
அன்னள் அளியள் என்னாது மா மழை
இன்னும் பெய்யும் முழங்கி
மின்னும் தோழி என் இன் உயிர் குறித்தே
# கச்சிப்பேட்டு காஞ்சி கொற்றன்

# 217 குறிஞ்சி
தினை கிளி கடிதலின் பகலும் ஒல்லும்
இரவு நீ வருதலின் ஊறும் அஞ்சுவல்
யாங்கு செய்வாம் என் இடும்பை நோய்க்கு என
ஆங்கு யான் கூறிய அனைத்திற்கு பிறிது செத்து
ஓங்கு மலை நாடன் உயிர்த்தோன் மன்ற
ஐது ஏகு அம்ம யானே
கழி முதுக்குறைமையும் பழியும் என்றிசினே
# தங்கால் முடக்கொல்லனார்

# 218 பாலை
விடர் முகை அடுக்கத்து விறல் கெழு சூலிக்கு
கடனும் பூணாம் கை நூல் யாவாம்
புள்ளும் ஓராம் விரிச்சியும் நில்லாம்
உள்ளலும் உள்ளாம் அன்றே தோழி
உயிர்க்குயிர் அன்னர் ஆகலின் தம் இன்று
இமைப்பு வரை அமையா நம்_வயின்
மறந்து ஆண்டு அமைதல் வல்லியோர் மாட்டே
# கொற்றன்

# 219 நெய்தல்
பயப்பு என் மேனியதுவே நயப்பு அவர்
நார் இல் நெஞ்சத்து ஆரிடையதுவே
செறிவும் சேண் இகந்தன்றே அறிவே
ஆங்கண் செல்கம் எழுக என ஈங்கே
வல்லா கூறி இருக்கும் அள் இலை
தடவு நிலை தாழை சேர்ப்பற்கு
இடம்-மன் தோழி எ நீரிரோ எனினே
# வெள்ளூர் கிழார் மகனார் வெண்பூதியார்

# 220 முல்லை
பழ மழை கலித்த புது புன வரகின்
இரலை மேய்ந்த குறை தலை பாவை
இருவி சேர் மருங்கில் பூத்த முல்லை
வெருகு சிரித்து அன்ன பசு வீ மென் பிணி
குறு முகை அவிழ்ந்த நறு மலர் புறவின்
வண்டு சூழ் மாலையும் வாரார்
கண்டிசின் தோழி பொருள் பிரிந்தோரே
# ஒக்கூர் மாசாத்தியார்

# 221 முல்லை
அவரோ வாரார் முல்லையும் பூத்தன
பறி உடை கையர் மறி இனத்து ஒழிய
பாலொடு வந்து கூழொடு பெயரும்
ஆடு உடை இடை_மகன் சென்னி
சூடிய எல்லாம் சிறு பசு முகையே
# உறையூர் முதுகொற்றன்

# 222 குறிஞ்சி
தலை புணை கொளினே தலை புணை கொள்ளும்
கடை புணை கொளினே கடை புணை கொள்ளும்
புணை கைவிட்டு புனலோடு ஒழுகின்
ஆண்டும் வருகுவள் போலும் மாண்ட
மாரி பித்திகத்து நீர் வார் கொழு முகை
செ வெரிந் உறழும் கொழும் கடை மழை கண்
துளி தலை தலைஇய தளிர் அன்னோளே
# சிறைக்குடி ஆந்தையார்

# 223 குறிஞ்சி
பேர் ஊர் கொண்ட ஆர் கலி விழவில்
செல்வாம் செல்வாம் என்றி அன்று இவண்
நல்லோர் நல்ல பலவால் தில்ல
தழலும் தட்டையும் முறியும் தந்து இவை
ஒத்தன நினக்கு என பொய்த்தன கூறி
அன்னை ஓம்பிய ஆய் நலம்
என் ஐ கொண்டான் யாம் இன்னமால் இனியே
# மதுரை கடையத்தார் மகன் வெண்ணாகன்

# 224 பாலை
கவலை யாத்த அவல நீள் இடை
சென்றோர் கொடுமை எற்றி துஞ்சா
நோயினும் நோய் ஆகின்றே கூவல்
குரால் ஆன் படு துயர் இராவில் கண்ட
உயர்திணை ஊமன் போல
துயர் பொறுக்கல்லேன் தோழி நோய்க்கே
# கூவன் மைந்தன்

# 225 குறிஞ்சி
கன்று தன் பய முலை மாந்த முன்றில்
தினை பிடி உண்ணும் பெரும் கல் நாட
கெட்ட இடத்து உவந்த உதவி கட்டில்
வீறு பெற்று மறந்த மன்னன் போல
நன்றி மறந்து அமையாய் ஆயின் மென் சீர்
கலி மயில் கலாவத்து அன்ன இவள்
ஒலி மென் கூந்தல் உரியவால் நினக்கே
# கபிலர்

# 226 நெய்தல்
பூவொடு புரையும் கண்ணும் வேய் என
விறல் வனப்பு எய்திய தோளும் பிறை என
மதி மயக்கு_உறூஉம் நுதலும் நன்றும்
நல்ல-மன் வாழி தோழி அல்கலும்
தயங்கு திரை பொருத தாழை வெண் பூ
குருகு என மலரும் பெரும் துறை
விரிநீர் சேர்ப்பனொடு நகாஅ ஊங்கே
# மதுரை எழுத்தாளன் சேந்தம் பூதன்

# 227 நெய்தல்
பூண் வனைந்து அன்ன பொலம் சூட்டு நேமி
வாள் முகம் துமிப்ப வள் இதழ் குறைந்த
கூழை நெய்தலும் உடைத்து இவண்
தேரோன் போகிய கானலானே
# ஓத ஞானி

# 228 நெய்தல்
வீழ் தாழ் தாழை ஊழ்_உறு கொழு முகை
குருகு உளர் இறகின் விரிபு தோடு அவிழும்
கானல் நண்ணிய சிறுகுடி முன்றில்
திரை வந்து பெயரும் என்ப நம் துறந்து
நெடும் சேண் நாட்டார் ஆயினும்
நெஞ்சிற்கு அணியரோ தண் கடல் நாட்டே
# செய்தி வள்ளுவன் பெருஞ்சாத்தன்

# 229 பாலை
இவன் இவள் ஐம்பால் பற்றவும் இவள் இவன்
புன் தலை ஓரி வாங்குநள் பரியவும்
காதல் செவிலியர் தவிர்ப்பவும் தவிராது
ஏது இல் சிறு செரு உறுப-மன்னோ
நல்லை மன்று அம்ம பாலே மெல் இயல்
துணை மலர் பிணையல் அன்ன இவர்
மணம் மகிழ் இயற்கை காட்டியோயே
# மோதாசனார்

# 230 நெய்தல்
அம்ம வாழி தோழி கொண்கன்
தான் அது துணிகுவன் அல்லன் யான் என்
பேதைமையால் பெருந்தகை கெழுமி
நோ_தக செய்தது ஒன்று உடையேன்-கொல்லோ
வய சுறா வழங்கு நீர் அத்தம்
தவ சில் நாளினன் வரவு அறியானே
# அறிவுடை நம்பி

# 231 மருதம்
ஓர் ஊர் வாழினும் சேரி வாரார்
சேரி வரினும் ஆர முயங்கார்
ஏதிலாளர் சுடலை போல
காணா கழிப-மன்னே நாண் அட்டு
நல் அறிவு இழந்த காமம்
வில் உமிழ் கணையின் சென்று சேண் படவே
# பாலை பாடிய பெருங்கடுங்கோ

# 232 பாலை
உள்ளார்-கொல்லோ தோழி உள்ளியும்
வாய் புணர்வு இன்மையின் வாரார்-கொல்லோ
மரல் புகா அருந்திய மா எருத்து இரலை
உரல் கால் யானை ஒடித்து உண்டு எஞ்சிய
யாஅ வரி நிழல் துஞ்சும்
மா இரும் சோலை மலை இறந்தோரே
# ஊண்பித்தை

# 233 முல்லை
கவலை கெண்டிய அகல் வாய் சிறு குழி
கொன்றை ஒள் வீ தாஅய் செல்வர்
பொன் பெய் பேழை மூய் திறந்து அன்ன
கார் எதிர் புறவினதுவே உயர்ந்தோர்க்கு
நீரொடு சொரிந்த மிச்சில் யாவர்க்கும்
வரை கோள் அறியா சொன்றி
நிரை கோல் குறும்_தொடி தந்தை ஊரே
# பேயன்

# 234 முல்லை
சுடர் செல் வானம் சேப்ப படர் கூர்ந்து
எல் அறு பொழுதின் முல்லை மலரும்
மாலை என்மனார் மயங்கியோரே
குடுமி கோழி நெடு நகர் இயம்பும்
பெரும் புலர் விடியலும் மாலை
பகலும் மாலை துணை இலோர்க்கே
# மிளைப்பெரும் கந்தன்

# 235 பாலை
ஓம்பு-மதி வாழியோ வாடை பாம்பின்
தூங்கு தோல் கடுக்கும் தூ வெள் அருவி
கல் உயர் நண்ணியதுவே நெல்லி
மரை_இனம் ஆரும் முன்றில்
புல் வேய் குரம்பை நல்லோள் ஊரே
# மாயேண்டன்

# 236 நெய்தல்
விட்டு என விடுக்கும் நாள் வருக அது நீ
நொந்தனை ஆயின் தந்தனை சென்மோ
குன்றத்து அன்ன குவவு மணல் அடைகரை
நின்ற புன்னை நிலம் தோய் படு சினை
வம்ப நாரை சேக்கும்
தண் கடல் சேர்ப்ப நீ உண்ட என் நலனே
# நரிவெரூஉத்தலையார்

# 237 பாலை
அஞ்சுவது அறியாது அமர் துணை தழீஇ
நெஞ்சு நம் பிரிந்தன்று ஆயினும் எஞ்சிய
கை பிணி நெகிழின் அஃது எவனோ நன்றும்
சேய அம்ம இருவாம் இடையே
மா கடல் திரையின் முழங்கி வலன் ஏர்பு
கோள் புலி வழங்கும் சோலை
எனைத்து என்று எண்ணுகோ முயக்கு இடை மலைவே
# அள்ளூர் நன்முல்லை

# 238 மருதம்
பாசவல் இடித்த கரும் காழ் உலக்கை
ஆய் கதிர் நெல்லின் வரம்பு அணை துயிற்றி
ஒண் தொடி மகளிர் வண்டல் அயரும்
தொண்டி அன்ன என் நலம் தந்து
கொண்டனை சென்மோ மகிழ்ந நின் சூளே
# குன்றியன்

# 239 குறிஞ்சி
தொடி நெகிழ்ந்தனவே தோள் சாயினவே
விடும் நாண் உண்டோ தோழி விடர் முகை
சிலம்பு உடன் கமழும் அலங்கு குலை காந்தள்
நறும் தாது ஊதும் குறும் சிறை தும்பி
பாம்பு உமிழ் மணியின் தோன்றும்
முந்தூழ் வேலிய மலை கிழவோற்கே
# ஆசிரியன் பெருங்கண்ணன்

# 240 முல்லை
பனி புதல் இவர்ந்த பைம் கொடி அவரை
கிளி வாய் ஒப்பின் ஒளி விடு பன் மலர்
வெருக்கு பல் உருவின் முல்லையொடு கஞலி
வாடை வந்ததன் தலையும் நோய் பொர
கண்டிசின் வாழி தோழி தெண் திரை
கடல் ஆழ் கலத்தின் தோன்றி
மாலை மறையும் அவர் மணி நெடும் குன்றே
# கொல்லின் அழிசி

# 241 குறிஞ்சி
யாம் எம் காமம் தாங்கவும் தாம் தம்
கெழுதகைமையின் அழுதன தோழி
கன்று ஆற்றுப்படுத்த புன் தலை சிறாஅர்
மன்ற வேங்கை மலர் பதம் நோக்கி
ஏறாது இட்ட ஏம பூசல்
விண் தோய் விடர்_அகத்து இயம்பும்
குன்ற நாடன் கண்ட எம் கண்ணே
# கபிலர்

# 242 முல்லை
கான கோழி கவர் குரல் சேவல்
ஒண் பொறி எருத்தில் தண் சிதர் உறைப்ப
புதல் நீர் வாரும் பூ நாறு புறவில்
சீறூரோளே மடந்தை வேறு ஊர்
வேந்து விடு தொழிலொடு செலினும்
சேந்து வரல் அறியாது செம்மல் தேரே
# குழற்றத்தன்

# 243 நெய்தல்
மான் அடி அன்ன கவட்டு இலை அடும்பின்
தார் மணி அன்ன ஒண் பூ கொழுதி
ஒண் தொடி மகளிர் வண்டல் அயரும்
புள் இமிழ் பெரும் கடல் சேர்ப்பனை
உள்ளேன் தோழி படீஇயர் என் கண்ணே
# நம்பி குட்டுவன்

# 244 குறிஞ்சி
பல்லோர் துஞ்சும் நள்ளென் யாமத்து
உரவு களிறு போல் வந்து இரவு கதவு முயறல்
கேளேம் அல்லேம் கேட்டனெம் பெரும
ஓரி முருங்க பீலி சாய
நன் மயில் வலைப்பட்டு ஆங்கு யாம்
உயங்கு-தொறும் முயங்கும் அறன் இல் யாயே
# கண்ணனார்

# 245 நெய்தல்
கடல் அம் கானல் ஆயம் ஆய்ந்த என்
நலம் இழந்ததனினும் நனி இன்னாதே
வாள் போல் வாய கொழு மடல் தாழை
மாலை வேல் நாட்டு வேலி ஆகும்
மெல்லம்புலம்பன் கொடுமை
பல்லோர் அறிய பரந்து வெளிப்படினே
# மாலை மாறன்

# 246 நெய்தல்
பெரும் கடல் கரையது சிறு_வெண்_காக்கை
களிற்று செவி அன்ன பாசடை மயக்கி
பனி கழி துழவும் பானாள் தனித்து ஓர்
தேர் வந்து பெயர்ந்தது என்ப அதற்கொண்டு
ஓரும் அலைக்கும் அன்னை பிறரும்
பின்னு விடு கதுப்பின் மின் இழை மகளிர்
இளையரும் மடவரும் உளரே
அலையா தாயரொடு நற்பாலோரே
# கபிலர்

# 247 குறிஞ்சி
எழில் மிக உடையது ஈங்கு அணிப்படூஉம்
திறவோர் செய்_வினை அறவது ஆகும்
கிளை உடை மாந்தர்க்கு புணையும்-மார் இ என
ஆங்கு அறிந்திசினே தோழி வேங்கை
வீயா மென் சினை வீ உக யானை
ஆர் துயில் இயம்பும் நாடன்
மார்பு உரித்து ஆகிய மறு இல் நட்பே
# சேந்தம்பூதன்

# 248 நெய்தல்
அது வரல் அன்மையோ அரிதே அவன் மார்பு
உறுக என்ற நாளே குறுகி
ஈங்கு ஆகின்றே தோழி கானல்
ஆடு அரை புதைய கோடை இட்ட
அடும்பு இவர் மணல் கோடு ஊர நெடும் பனை
குறிய ஆகும் துறைவனை
பெரிய கூறி யாய் அறிந்தனளே
# உலோச்சன்

# 249 குறிஞ்சி
இன மயில் அகவும் மரம் பயில் கானத்து
நரை முக ஊகம் பார்ப்பொடு பனிப்ப
படு மழை பொழிந்த சாரல் அவர் நாட்டு
குன்றம் நோக்கினென் தோழி
பண்டை அற்றோ கண்டிசின் நுதலே
# கபிலர்

# 250 பாலை
பரல் அவல் படு நீர் மாந்தி துணையோடு
இரலை நன் மான் நெறி முதல் உகளும்
மாலை வாரா அளவை கால் இயல்
கடு மா கடவு-மதி பாக நெடு நீர்
பொரு கயல் முரணிய உண்கண்
தெரி தீம் கிளவி தெருமரல் உயவே
# நாமலார் மகன் இளங்கண்ணன்