<<முந்திய பக்கம்

பரிபாடல் (11 - 15)

# 11 வையை
விரி கதிர் மதியமொடு வியல் விசும்பு புணர்ப்ப
எரி சடை எழில் வேழம் தலை என கீழ் இருந்து
தெரு இடைப்படுத்த மூன்று ஒன்பதிற்று இருக்கையுள்
உரு கெழு வெள்ளி வந்து ஏற்றியல் சேர
வருடையை படிமகன் வாய்ப்ப பொருள் தெரி
புந்தி மிதுனம் பொருந்த புலர் விடியல்
அங்கி உயர் நிற்ப அந்தணன் பங்குவின்
இல்ல துணைக்கு உப்பால் எய்த இறை யமன்
வில்லின் கடை மகரம் மேவ பாம்பு ஒல்லை
மதியம் மறைய வரு நாளில் வாய்ந்த
பொதியில் முனிவன் புரை வரை கீறி
மிதுனம் அடைய விரி கதிர் வேனில்
எதிர் வரவு மாரி இயைக என இ ஆற்றால்
புரை கெழு சையம் பொழி மழை தாழ
நெரிதரூஉம் வையை புனல்
வரையன புன்னாகமும்
கரையன சுரபுன்னையும்
வண்டு அறைஇய சண்பக நிரை தண் பதம்
மனைமாமரம் வாள்_வீரம்
சினை வளர் வேங்கை கணவிரி காந்தள்
தாய தோன்றி தீ என மலரா
ஊதை அவிழ்த்த உடை இதழ் ஒண் நீலம்
வேய் பயில் சோலை அருவி தூர்த்தர
பாய் திரை உந்தி தருதலான் ஆய் கோல்
வயவர் அரி மலர் துறை என்கோ
அரி மலர் மீ போர்வை ஆரம் தாழ் மார்பின்
திரை நுரை மென் பொகுட்டு தேம் மண சாந்தின்
அரிவையது தானை என்கோ கள் உண்ணூஉ
பருகு படி மிடறு என்கோ பெரிய
திருமருத நீர் பூ துறை
ஆம் நாள் நிறை மதி அலர்தரு பக்கம் போல்
நாளின்_நாளின் நளி வரை சிலம்பு தொட்டு
நிலவு பரந்து ஆங்கு நீர் நிலம் பரப்பி
உலகு பயம் பகர ஓம்பு பெரும் பக்கம்
வழியது பக்கத்து அமரர் உண்டி
மதி நிறைவு அழிவதின் வரவு சுருங்க
எண் மதி நிறை உவா இருள் மதி போல
நாள் குறைபடுதல் காணுநர் யாரே
சேண் இகந்து கல் ஊர்ந்த மாண் இழை வையை
வய தணிந்து ஏகு நின் யாணர் இறு நாள் பெற
மா மயில் அன்னார் மறையில் புணர் மைந்தர்
காமம் கள விட்டு கை கொள் கற்பு_உற்று என
மல்லல் புனல் வையை மா மலை விட்டு இருத்தல்
இல்லத்து நீ தனி சேறல் இளிவரல்
என ஆங்கு
கடை அழிய நீண்டு அகன்ற கண்ணாளை காளை
படையொடும் கொண்டு பெயர்வானை சுற்றம்
இடை நெறி தாக்கு_உற்றது ஏய்ப்ப அடல் மதுரை
ஆடற்கு நீர் அமைந்தது யாறு
ஆற்று அணி வெள் வாள் விதிர்ப்போர் மிளிர் குந்தம் ஏந்துவோர்
கொள்வார் கோல் கொள்ள கொடி திண் தேர் ஏறுவோர்
புள் ஏர் புரவி பொலம் படை கைம்_மாவை
வெள்ள நீர் நீத்தத்துள் ஊர்பு_ஊர்பு உழக்குநரும்
கண் ஆரும் சாயல் கழி துரப்போரை
வண்ண நீர் கரந்த வட்டு விட்டு எறிவோரும்
மணம் வரு மாலையின் வட்டிப்போரை
துணி பிணர் மருப்பின் நீர் எக்குவோரும்
தெரி கோதை நல்லார் தம் கேளிர் திளைக்கும்
உரு கெழு தோற்றம் உரைக்கும்_கால் நாளும்
பொரு_களம் போலும் தகைத்தே பரி கவரும்
பாய் தேரான் வையை அகம்
நீர் அணி வெறி செறி மலர் உறு கமழ் தண்
தார் வரை அகலத்து அ ஏர் அணி நேர் இழை
ஒளி திகழ் தகை வகை செறி பொறி
புனை வினை பொலம் கோதையவரொடு
பாகர் இறை வழை மது நுகர்பு களி பரந்து
நாகரின் நல் வள வினை வயவு ஏற நளி புணர்-மார்
காரிகை மது ஒருவரின் ஒருவர் கண்ணின் கவர்பு_உற
சீர் அமை பாடல் பயத்தால் கிளர் செவி தெவி
உம்பர் உறையும் ஒளி கிளர் வான் ஊர்பு ஆடும்
அம்பி கரவா வழக்கிற்றே ஆங்கு அதை
கார் ஒவ்வா வேனில் கலங்கி தெளிவரல்
நீர் ஒவ்வா வையை நினக்கு
கனைக்கும் அதிர் குரல் கார் வானம் நீங்க
பனி படு பைதல் விதலை பருவத்து
ஞாயிறு காயா நளி மாரி பின் குளத்து
மா இரும் திங்கள் மறு நிறை ஆதிரை
விரி நூல் அந்தணர் விழவு தொடங்க
புரிநூல் அந்தணர் பொலம் கலம் ஏற்ப
வெம்பாது ஆக வியல் நில வரைப்பு என
அம்பா ஆடலின் ஆய் தொடி கன்னியர்
முனி துறை முதல்வியர் முறைமை காட்ட
பனி புலர்பு ஆடி பரு மணல் அருவியின்
ஊதை ஊர்தர உறை சிறை வேதியர்
நெறி நிமிர் நுடங்கு அழல் பேணிய சிறப்பின்
தையல் மகளிர் ஈர் அணி புலர்த்தர
வையை நினக்கு மடை வாய்த்தன்று
மையாடல் ஆடல் மழ புலவர் மாறு எழுந்து
பொய் ஆடல் ஆடும் புணர்ப்பின் அவர் அவர்
தீ எரி பாலும் செறி தவம் முன் பற்றியோ
தாய் அருகா நின்று தவ தை_நீராடுதல்
நீ உரைத்தி வையை நதி
ஆயிடை மா இதழ் கொண்டு ஓர் மட மாதர் நோக்கினாள்
வேய் எழில் வென்று வெறுத்த தோள் நோக்கி
சாய் குழை பிண்டி தளிர் காதில் தையினாள்
பாய் குழை நீலம் பகல் ஆக தையினாள்
குவளை குழை காதின் கோல செவியின்
இவள் செரீஇ நான்கு விழி படைத்தாள் என்று
நெற்றி விழியா நிறை திலகம் இட்டாளே
கொற்றவை கோலம்கொண்டு ஓர் பெண்
பவள வளை செறித்தாள் கண்டு அணிந்தாள் பச்சை
குவளை பசும் தண்டு கொண்டு
கல்லகார பூவால் கண்ணி தொடுத்தாளை
நில்லிகா என்பாள் போல் நெய்தல் தொடுத்தாளே
மல்லிகா மாலை வளாய்
தண்டு தழுவா தாவு நீர் வையையுள்
கண்ட பொழுதில் கடும் புனல் கை வாங்க
நெஞ்சம் அவள் வாங்க நீடு புணை வாங்க
நேர்_இழை நின்று_உழி கண் நிற்ப நீர் அவன்
தாழ்வு_உழி உய்யாது தான் வேண்டும் ஆறு உய்ப்ப
ஆயத்துடன் நில்லாள் ஆங்கு அவன் பின் தொடரூஉ
தாய் அ திறம் அறியாள் தாங்கி தனி சேறல்
ஆயத்தில் கூடு என்று அரற்றெடுப்ப தாக்கிற்றே
சேய் உற்ற கார் நீர் வரவு
நீ தக்காய் தை_நீர் நிறம் தெளிந்தாய் என்மாரும்
கழுத்து அமை கை வாங்கா காதலர் புல்ல
விழு_தகை பெறுக என வேண்டுதும் என்மாரும்
பூ வீழ் அரியின் புலம்ப போகாது
யாம் வீழ்வார் ஏமம் எய்துக என்மாரும்
கிழவர் கிழவியர் என்னாது ஏழ்_காறும்
மழ ஈன்று மல்லல் கேள் மன்னுக என்மாரும்
கண்டார்க்கு தாக்கு அணங்கு இ காரிகை காண்-மின்
பண்டாரம் காமன் படை உவள் கண் காண்-மின்
நீல் நெய் தாழ் கோதையவர் விலக்க நில்லாது
பூ ஊது வண்டு இனம் யாழ் கொண்ட கொளை கேண்-மின்
கொளை பொருள் தெரிதர கொளுத்தாமல் குரல் கொண்ட
கிளைக்கு உற்ற உழை சுரும்பின் கேழ் கெழு பாலை இசை ஓர்-மின்
பண் கண்டு திறன் எய்தா பண் தாளம் பெற பாடி
கொண்ட இன் இசை தாளம் கொளை சீர்க்கும் விரித்து ஆடும்
தண் தும்பி இனம் காண்-மின் தான் வீழ் பூ நெரித்தாளை
முனை கெழு சின நெஞ்சின் முன் எறிந்து பின்னும்
கனை வரல் ஒரு தும்பி காய் சினத்து இயல் காண்-மின்
என ஆங்கு
இன்ன பண்பின் நின் தை_நீராடல்
மின் இழை நறு நுதல் மகள் மேம்பட்ட
கன்னிமை கனியா கைக்கிளை காம
இன் இயல் மாண் தேர்ச்சி இசை பரிபாடல்
முன் முறை செய் தவத்தின் இ முறை இயைந்தேம்
மறு முறை அமையத்தும் இயைக
நறு நீர் வையை நய_தகு நிறையே

# 12 வையை
வளி பொரு மின்னொடு வான் இருள் பரப்பி
விளிவு இன்று கிளையொடு மெல் மலை முற்றி
தளி பொழி சாரல் ததர் மலர் தாஅய்
ஒளி திகழ் உத்தி உரு கெழு நாகம்
அகரு வழை ஞெமை ஆரம் இனைய
தகரமும் ஞாழலும் தாரமும் தாங்கி
நளி கடல் முன்னியது போலும் தீம் நீர்
வளி வரல் வையை வரவு
வந்து மதுரை மதில் பொரூஉம் வான் மலர் தாஅய்
அம் தண் புனல் வையை யாறு என கேட்டு
மின் அவிர் ஒளி இழை வேயுமோரும்
பொன் அடர் பூ புனை திருத்துவோரும்
அகில் கெழு சாந்தம் மாற்றி ஆற்ற
புகை கெழு சாந்தம் பூசுவோரும்
கார் கொள் கூந்தல் கதுப்பு அமைப்போரும்
வேர் பிணி பல் மலர் வேயுமோரும்
புட்டகம் பொருந்துவ புனைகுவோரும்
கட்டிய கயில் அணி காழ் கொள்வோரும்
வாச நறு நெய் ஆடி வான் துகள்
மாசு அற கண்ணடி வயக்கி வண்ணமும்
தேசும் ஒளியும் திகழ நோக்கி
வாச மண துவர் வாய் கொள்வோரும்
இடு புணர் வளையொடு தொடு தோள் வளையர்
கட்டுவட கழலினர் மட்டு மாலையர்
ஓசனை கமழும் வாச மேனியர்
மட மா மிசையோர்
பிடி மேல் அன்ன பெரும் படை அனையோர்
கடு மா கடவுவோரும் களிறு மேல் கொள்வோரும்
வடி மணி நெடும் தேர் மா முள் பாய்க்குநரும்
விரைபு_விரைபு மிகை_மிகை ஈண்டி
ஆடல் தலைத்தலை சிறப்ப கூடல்
உரைதர வந்தன்று வையை நீர் வையை
கரை தர வந்தன்று காண்பவர் ஈட்டம்
நிவந்தது நீத்தம் கரை மேலா நீத்தம்
கவர்ந்தது போலும் காண்பவர் காதல்
முன்துறை நிறை அணி நின்றவர் மொழி மொழி
ஒன்று அல பல_பல உடன் எழுந்தன்று அவை
எல்லாம் தெரிய கேட்குநர் யார் அவை
கில்லா கேள்வி கேட்டன சில_சில
ஒத்த குழலின் ஒலி எழ முழவு இமிழ்
மத்தரி தடாரி தண்ணுமை மகுளி
ஒத்து அளந்து சீர்தூக்கி ஒருவர் பிற்படார்
நித்தம் திகழும் நேர் இறை முன்கையால்
அ தக அரிவையர் அளத்தல் காண்-மின்
நாணாள்-கொல் தோழி நயன் இல் பரத்தையின்
தோள் நலம் உண்டு துறந்தான் என ஒருத்தி
யாணர் மலி புனல் நீத்தத்து இரும் பிடி
சேண வெரிநின் சிறந்தானோடு ஏறினாள்
நாணு குறைவு இலள் நங்கை மற்று என்மரும்
கோட்டியுள் கொம்பர் குவி முலை நோக்குவோன்
ஓட்டை மனவன் உரம் இலி என்மரும்
சொறிந்ததூஉம் சொற்றதூஉம் பற்றாள் நிறம் திரிந்தாள்
நெஞ்சத்தை நீத்தாள் நெறி செல்வான் பின் நிறை
அஞ்சி கழியாமோ அன்பு உற்றால் என்மரும்
பூண் ஆரம் நோக்கி புணர் முலை பார்த்தான் உவன்
நாணாள் அவனை இ நாரிகை என்மரும்
அமிர்து அன நோக்கத்து அணங்கு ஒருத்தி பார்ப்ப
கமழ் கோதை கோலா புடைத்து தன் மார்பில்
இழையினை கை யாத்து இறுகிறுக்கி வாங்கி
பிழையினை என்ன பிழை ஒன்றும் காணான்
தொழுது பிழை கேட்கும் தூயவனை காண்-மின்
பார்த்தாள் ஒருத்தி நினை என பார்த்தவளை
பொய் சூளாள் என்பது அறியேன் யான் என்று இரந்து
மெய் சூள்_உறுவானை மெலியல் பொய் சூள் என்று
ஒல்லுவ சொல்லாது உரை வழுவ சொல்ல
உறைத்தும் செறுத்தும் உணர்த்துவானை
புல்லாது ஊடி புலந்து நின்றவள்
பூ எழில் வண்ண நீர் பூரித்த வட்டு எறிய
வேல் எழில் உண்கண் எறி நோக்கம் பட்ட புண்
பாய் குருதி சோர பகை இன்று உளம் சோர
நில்லாது நீங்கி நிலம் சோர அல்லாந்து
மல் ஆர் அகலம் வடு அஞ்சி மம்மர் கூர்ந்து
எல்லா துனியும் இறப்ப தன் காதலன்
நல் ஏர் எழில் ஆகம் சேர்வித்தல் எஞ்ஞான்றும்
வல்லதால் வையை புனல்
என ஆங்கு
மல்லிகை மௌவல் மணம் கமழ் சண்பகம்
அல்லி கழுநீர் அரவிந்தம் ஆம்பல்
குல்லை வகுளம் குருக்கத்தி பாதிரி
நல் இணர் நாகம் நறவம் சுரபுன்னை
எல்லாம் கமழும் இருசார் கரை கலிழ
தேறி தெளிந்து செறி இருள் மால் மலை
பாறை பரப்பில் பரந்த சிறை நின்று
துறக்கத்து எழிலை தன் நீர் நிழல் காட்டும்
கார் அடு காலை கலிழ் செம் குருதித்தே
போர் அடு தானையான் யாறு
சுடு நீர் வினை குழையின் ஞால சிவந்த
கடி மலர் பிண்டி தன் காதில் செரீஇ
விடு மலர் பூ கொடி போல நுடங்கி
அடி மேல் அடி மேல் ஒதுங்கி தொடி முன்கை
காரிகை ஆக தன் கண்ணி திருத்தினாள்
நேர் இறை முன்கை நல்லவள் கேள் காண்-மின்
துகில் சேர் மலர் போல் மணி நீர் நிறைந்தன்று
புனல் என மூதூர் மலிந்தன்று அவர் உரை
உரையின் உயர்ந்தன்று கவின்
போர் ஏற்றன்று நவின்று தகரம்
மார்பு அழி சாந்தின் மணல் அளறு பட்டன்று
துகில் பொசி புனலின் கரை கார் ஏற்றன்று
விசும்பு கடி விட்டன்று விழவு புனல் ஆங்க
இன்பமும் கவினும் அழுங்கல் மூதூர்
நன் பல நன் பல நன் பல வையை
நின் புகழ் கொள்ளாது இ மலர் தலை உலகே

# 13 திருமால்
மணி வரை ஊர்ந்த மங்குல் ஞாயிற்று
அணி வனப்பு அமைந்த பூ துகில் புனை முடி
இறுவரை இழிதரும் பொன் மணி அருவியின்
நிறனொடு மாறும் தார் புள்ளு பொறி புனை கொடி
விண் அளி கொண்ட வியன் மதி அணி கொள
தண் அளி கொண்ட அணங்கு உடை நேமி மால்
பருவம் வாய்த்தலின் இரு விசும்பு அணிந்த
இரு வேறு மண்டிலத்து இலக்கம் போல
நேமியும் வளையும் ஏந்திய கையான்
கருவி மின் அவிர் இலங்கும் பொலம் பூண்
அருவி உருவின் ஆரமொடு அணிந்த நின்
திரு வரை அகலம் தொழுவோர்க்கு
உரிது அமர் துறக்கமும் உரிமை நன்கு உடைத்து
சுவைமை இசைமை தோற்றம் நாற்றம் ஊறு
அவையும் நீயே அடு போர் அண்ணால்
அவை_அவை கொள்ளும் கருவியும் நீயே
முந்து யாம் கூறிய ஐந்தனுள்ளும்
ஒன்றனில் போற்றிய விசும்பும் நீயே
இரண்டின் உணரும் வளியும் நீயே
மூன்றின் உணரும் தீயும் நீயே
நான்கின் உணரும் நீரும் நீயே
ஐந்துடன் முற்றிய நிலனும் நீயே
அதனால்
நின் மருங்கின்று மூ_ஏழ் உலகமும்
மூலமும் அறனும் முதன்மையின் இகந்த
காலமும் விசும்பும் காற்றொடு கனலும்
தன் உரு உறழும் பாற்கடல் நாப்பண்
மின் அவிர் சுடர் மணி ஆயிரம் விரித்த
கவை நா அரும் தலை காண்பின் சேக்கை
துளவம் சூடிய அறிதுயிலோனும்
மறம் மிகு மலி ஒலி மாறு அடு தானையால்
திறன் இகந்து வரூஉம் அவர் உயிர் அகற்றும்
விறல் மிகு வலி ஒலி பொலிபு அகழ் புழுதியின்
நிறன் உழும் வளை வாய் நாஞ்சிலோனும்
நானிலம் துளக்கு அற முழு_முதல் நாற்றிய
பொலம் புனை இதழ் அணி மணி மடல் பேர் அணி
இலங்கு ஒளி மருப்பின் களிறும் ஆகி
மூ உரு ஆகிய தலை_பிரி_ஒருவனை
படர் சிறை பல் நிற பாப்பு பகையை
கொடி என கொண்ட கோடா செல்வனை
ஏவல் இன் முதுமொழி கூறும்
சேவல் ஓங்கு உயர் கொடி செல்வ நன் புகழவை
கார் மலர் பூவை கடலை இருள் மணி
அவை ஐந்தும் உறழும் அணி கிளர் மேனியை
வலம்புரி வாய்மொழி அதிர்பு வான் முழக்கு செல்
அவை நான்கும் உறழும் அருள் செறல் வயின் மொழி
முடிந்ததும் முடிவதும் முகிழ்ப்பதும் அவை மூன்றும்
கடந்து அவை அமைந்த கழலின் நிழலவை
இருமை வினையும் இல ஏத்துமவை
ஒருமை வினை மேவும் உள்ளத்தினை
அடை இறந்து அவிழ்ந்த வள் இதழ் தாமரை
அடியும் கையும் கண்ணும் வாயும்
தொடியும் உந்தியும் தோள் அணி வலயமும்
தாளும் தோளும் எருத்தொடு பெரியை
மார்பும் அல்குலும் மனத்தொடு பரியை
கேள்வியும் அறிவும் அறத்தொடு நுண்ணியை
வேள்வியும் மறனும் விருப்பொடு வெய்யை
அறாஅ மைந்தின் செறாஅ செம் கண்
செரு மிகு திகிரி_செல்வ வெல் போர்
எரி நகை இடை இடுபு இழைத்த நறும் தார்
புரி மலர் துழாஅய் மேவல் மார்பினோய்
அன்னை என நினைஇ நின் அடி தொழுதனெம்
பல் மாண் அடுக்க இறைஞ்சினெம் வாழ்த்தினெம்
முன்னும் முன்னும் யாம் செய் தவ பயத்தால்
இன்னும் இன்னும் எம் காமம் இதுவே

# 14 செவ்வேள்
கார் மலி கதழ் பெயல் தலைஇ ஏற்ற
நீர் மலி நிறை சுனை பூ மலர்ந்தனவே
தண் நறும் கடம்பின் கமழ் தாது ஊதும்
வண்ண வண்டு இமிர் குரல் பண்ணை போன்றனவே
அடியுறை_மகளிர் ஆடும் தோளே
நெடு வரை அடுக்கத்து வேய் போன்றனவே
வாகை ஒண் பூ புரையும் முச்சிய
தோகை ஆர் குரல் மணந்து தணந்தோரை
நீடன் மின் வாரும் என்பவர் சொல் போன்றனவே
நாள்_மலர் கொன்றையும் பொலம் தார் போன்றன
மெல் இணர் வேங்கை வியல் அறை தாயின
அழுகை மகளிர்க்கு உழுவை செப்ப
நீர் அயல் கலித்த நெரி முகை காந்தள்
வார் குலை அவிழ்ந்த வள் இதழ் நிரை-தொறும்
விடு கொடி பிறந்த மென் தகை தோன்றி
பவழத்து அன்ன வெம் பூ தாஅய்
கார் மலிந்தன்று நின் குன்று போர் மலிந்து
சூர் மருங்கு அறுத்த சுடர் படையோயே
கறை இல் கார் மழை பொங்கி அன்ன
நறையின் நறும் புகை நனி அமர்ந்தோயே
அறு முகத்து ஆறு_இரு தோளால் வென்றி
நறு மலர் வள்ளி பூ நயந்தோயே
கெழீஇ கேளிர் சுற்ற நின்னை
எழீஇ பாடும் பாட்டு அமர்ந்தோயே
பிறந்த ஞான்றே நின்னை உட்கி
சிறந்தோர் அஞ்சிய சீர் உடையோயே
இரு பிறப்பு இரு பெயர் ஈர நெஞ்சத்து
ஒரு பெயர் அந்தணர் அறன் அமர்ந்தோயே
அன்னை ஆகலின் அமர்ந்து யாம் நின்னை
துன்னி துன்னி வழிபடுவதன் பயம்
இன்னும் இன்னும் அவை ஆகுக
தொன் முதிர் மரபின் நின் புகழினும் பலவே

# 15 திருமால்
புல வரை அறியா புகழொடு பொலிந்து
நில வரை தாங்கிய நிலைமையின் பெயரா
தொலையா நேமி முதல் தொல் இசை அமையும்
புலவர் ஆய்பு உரைத்த புனை நெடும் குன்றம்
பல எனின் ஆங்கு அவை பலவே பலவினும்
நிலவரை ஆற்றி நிறை பயன் ஒருங்கு உடன்
நின்று பெற நிகழும் குன்று அவை சிலவே
சிலவினும் சிறந்தன தெய்வம் பெட்பு_உறும்
மலர் அகல் மார்பின் மை படி குடுமிய
குல வரை சிலவே குல வரை சிலவினும்
சிறந்தது கல் அறை கடாம் கானலும் போலவும்
புல்லிய சொல்லும் பொருளும் போலவும்
எல்லாம் வேறு_வேறு உருவின் ஒரு தொழில் இருவர்
தாங்கும் நீள் நிலை ஓங்கு இருங்குன்றம்
நாறு இணர் துழாயோன் நல்கின் அல்லதை
ஏறுதல் எளிதோ வீறு பெறு துறக்கம்
அரிதின் பெறு துறக்கம் மாலிருங்குன்றம்
எளிதின் பெறல் உரிமை ஏத்துகம் சிலம்ப
அரா அணர் கயம் தலை தம்முன் மார்பின்
மரா மலர் தாரின் மாண் வர தோன்றி
அலங்கும் அருவி ஆர்த்து இமிழ்பு இழிய
சிலம்பாறு அணிந்த சீர் கெழு திருவின்
சோலையொடு தொடர் மொழி மாலிருங்குன்றம்
தாம் வீழ் காமம் வித்துபு விளைக்கும்
நாம தன்மை நன்கனம் படி எழ
யாம தன்மை இ ஐ இருங்குன்றத்து
மன் புனல் இள வெயில் வளாவ இருள் வளர்வு என
பொன் புனை உடுக்கையோன் புணர்ந்து அமர் நிலையே
நினை-மின் மாந்தீர் கேண்-மின் கமழ் சீர்
சுனை எலாம் நீலம் மலர சுனை சூழ்
சினை எலாம் செயலை மலர காய் கனி
உறழ நனை வேங்கை ஒள் இணர் மலர
மாயோன் ஒத்த இன் நிலைத்தே
சென்று தொழுகல்லீர் கண்டு பணி-மின்மே
இருங்குன்று என்னும் பெயர் பரந்ததுவே
பெரும் கலி ஞாலத்து தொன்று இயல் புகழது
கண்டு மயர் அறுக்கும் காமக்கடவுள்
மக முயங்கு மந்தி வரை_வரை பாய
முகிழ் மயங்கு முல்லை முறை நிகழ்வு காட்ட
மணி மருள் நன் நீர் சினை மட மயில் அகவ
குருகு இலை உதிர குயில்_இனம் கூவ
பகர் குழல் பாண்டில் இயம்ப அகவுநர்
நா நவில் பாடல் முழவு எதிர்ந்த அன்ன
சிலம்பின் சிலம்பு இசை ஓவாது ஒன்னார்
கடந்து அட்டான் கேழ் இருங்குன்று
தையலவரொடும் தந்தாரவரொடும்
கைம்_மகவோடும் காதலவரொடும்
தெய்வம் பேணி திசை தொழுதனிர் செல்-மின்
புவ்வ_தாமரை புரையும் கண்ணன்
வௌவல் கார் இருள் மயங்கு மணி மேனியன்
எ வயின் உலகத்தும் தோன்றி அ வயின்
மன்பது மறுக்க துன்பம் களைவோன்
அன்பு அது மேஎய் இருங்குன்றத்தான்
கள் அணி பசும் துளவினவை கரும் குன்று அனையவை
ஒள் ஒளியவை ஒரு குழையவை
புள் அணி பொலம் கொடியவை
வள் அணி வளை நாஞ்சிலவை
சலம் புரி தண்டு ஏந்தினவை
வலம்புரி வய நேமியவை
வரி சிலை வய அம்பினவை
புகர் இணர் சூழ் வட்டத்தவை புகர் வாளவை
என ஆங்கு
நலம் புரீஇ அம் சீர் நாம வாய்மொழி
இது என உரைத்தலின் எம் உள் அமர்ந்து இசைத்து இறை
இருங்குன்றத்து அடியுறை இயைக என
பெரும் பெயர் இருவரை பரவுதும் தொழுதே