<<முந்திய பக்கம்

புறநானூறு (101 - 150)

# 101 ஔவையார்
ஒரு நாள் செல்லலம் இரு நாள் செல்லலம்
பல நாள் பயின்று பலரொடு செல்லினும்
தலை நாள் போன்ற விருப்பினன் மாதோ
இழை அணி யானை இயல் தேர் அஞ்சி
அதியமான் பரிசில் பெறூஉம் காலம்
நீட்டினும் நீட்டாது ஆயினும் யானை தன்
கோட்டு இடை வைத்த கவளம் போல
கையகத்தது அது பொய் ஆகாதே
அருந்த ஏமாந்த நெஞ்சம்
வருந்த வேண்டா வாழ்க அவன் தாளே

# 102 ஔவையார்
எருதே இளைய நுகம் உணராவே
சகடம் பண்டம் பெரிது பெய்தன்றே
அவல் இழியினும் மிசை ஏறினும்
அவணது அறியுநர் யார் என உமணர்
கீழ்_மரத்து யாத்த சேம அச்சு அன்ன
இசை விளங்கு கவி கை நெடியோய் திங்கள்
நாள் நிறை மதியத்து அனையை இருள்
யாவணதோ நின் நிழல் வாழ்வோர்க்கே

# 103 ஔவையார்
ஒரு தலை பதலை தூங்க ஒரு தலை
தூம்பு அக சிறு முழா தூங்க தூக்கி
கவிழ்ந்த மண்டை மலர்க்குநர் யார் என
சுரன் முதல் இருந்த சில் வளை விறலி
செல்வை ஆயின் சேணோன் அல்லன்
முனை சுட எழுந்த மங்குல் மா புகை
மலை சூழ் மஞ்சின் மழ களிறு அணியும்
பகை புலத்தோனே பல் வேல் அஞ்சி
பொழுது இடைப்படாஅ புலரா மண்டை
மெழுகு மெல் அடையின் கொழு நிணம் பெருப்ப
அலத்தல் காலை ஆயினும்
புரத்தல் வல்லன் வாழ்க அவன் தாளே

# 104 ஔவையார்
போற்று-மின் மறவீர் சாற்றுதும் நும்மை
ஊர் குறு_மாக்கள் ஆட கலங்கும்
தாள் படு சின்னீர் களிறு அட்டு வீழ்க்கும்
ஈர்ப்பு உடை கராஅத்து அன்ன என் ஐ
நுண் பல் கருமம் நினையாது
இளையன் என்று இகழின் பெறல் அரிது ஆடே

# 105 கபிலர்
சே இழை பெறுகுவை வாள் நுதல் விறலி
தடவு வாய் கலித்த மா இதழ் குவளை
வண்டு படு புது மலர் தண் சிதர் கலாவ
பெய்யினும் பெய்யாது ஆயினும் அருவி
கொள் உழு வியன் புலத்து உழை கால் ஆக
மால்பு உடை நெடு வரை கோடு-தோறு இழிதரும்
நீரினும் இனிய சாயல்
பாரி வேள்_பால் பாடினை செலினே

#106
நல்லவும் தீயவும் அல்ல குவி இணர்
புல் இலை எருக்கம் ஆயினும் உடையவை
கடவுள் பேணேம் என்னா ஆங்கு
மடவர் மெல்லியர் செல்லினும்
கடவன் பாரி கைவண்மையே

#107
பாரி பாரி என்று பல ஏத்தி
ஒருவன் புகழ்வர் செம் நா புலவர்
பாரி ஒருவனும் அல்லன்
மாரியும் உண்டு ஈண்டு உலகு புரப்பதுவே

#108
குறத்தி மாட்டிய வறல் கடை கொள்ளி
ஆரம் ஆதலின் அம் புகை அயலது
சாரல் வேங்கை பூ சினை தவழும்
பறம்பு பாடினர் அதுவே அறம் பூண்டு
பாரியும் பரிசிலர் இரப்பின்
வாரேன் என்னான் அவர் வரையன்னே

#109
அளிதோ தானே பாரியது பறம்பே
நளி கொள் முரசின் மூவிரும் முற்றினும்
உழவர் உழாதன நான்கு பயன் உடைத்தே
ஒன்றே சிறியிலை வெதிரின் நெல் விளையும்மே
இரண்டே தீம் சுளை பலவின் பழம் ஊழ்க்கும்மே
மூன்றே கொழும் கொடி வள்ளி கிழங்கு வீழ்க்கும்மே
நான்கே அணி நிற ஓரி பாய்தலின் மீது அழிந்து
திணி நெடும் குன்றம் தேன் சொரியும்மே
வான் கண் அற்று அவன் மலையே வானத்து
மீன் கண் அற்று அதன் சுனையே ஆங்கு
மரம்-தொறும் பிணித்த களிற்றினிர் ஆயினும்
புலம்-தொறும் பரப்பிய தேரினிர் ஆயினும்
தாளின் கொள்ளலிர் வாளின் தாரலன்
யான் அறிகுவன் அது கொள்ளும் ஆறே
சுகிர் புரி நரம்பின் சீறியாழ் பண்ணி
விரை ஒலி கூந்தல் நும் விறலியர் பின் வர
ஆடினிர் பாடினிர் செலினே
நாடும் குன்றும் ஒருங்கு ஈயும்மே

#110
கடந்து அடு தானை மூவிரும் கூடி
உடன்றனிர் ஆயினும் பறம்பு கொளற்கு அரிதே
முந்நூறு ஊர்த்தே தண் பறம்பு நன் நாடு
முந்நூறு ஊரும் பரிசிலர் பெற்றனர்
யாமும் பாரியும் உளமே
குன்றும் உண்டு நீர் பாடினிர் செலினே

#111
அளிதோ தானே பேர் இரும் குன்றே
வேலின் வேறல் வேந்தர்க்கோ அரிதே
நீலத்து இணை மலர் புரையும் உண்கண்
கிணை_மகட்கு எளிதால் பாடினள் வரினே

# 112 பாரி மகளிர்
அற்றை திங்கள் அ வெண் நிலவில்
எந்தையும் உடையேம் எம் குன்றும் பிறர் கொளார்
இற்றை திங்கள் இ வெண் நிலவில்
வென்று எறி முரசின் வேந்தர் எம்
குன்றும் கொண்டார் யாம் எந்தையும் இலமே

# 113 கபிலர்
மட்டு வாய் திறப்பவும் மை விடை வீழ்ப்பவும்
அட்டு ஆன்று ஆனா கொழும் துவை ஊன்_சோறும்
பெட்டு ஆங்கு ஈயும் பெரு வளம் பழுனி
நட்டனை-மன்னோ முன்னே இனியே
பாரி மாய்ந்து என கலங்கி கையற்று
நீர் வார் கண்ணேம் தொழுது நின் பழிச்சி
சேறும் வாழியோ பெரும் பெயர் பறம்பே
கோல் திரள் முன்கை குறும் தொடி மகளிர்
நாறு இரும் கூந்தல் கிழவரை படர்ந்தே

#114 கபிலர்
ஈண்டு நின்றோர்க்கும் தோன்றும் சிறு வரை
சென்று நின்றோர்க்கும் தோன்றும் மன்ற
களிறு மென்று இட்ட கவளம் போல
நறவு பிழிந்து இட்ட கோது உடை சிதறல்
வார் அசும்பு ஒழுகும் முன்றில்
தேர் வீசு இருக்கை நெடியோன் குன்றே

# 115 கபிலர்
ஒருசார் அருவி ஆர்ப்ப ஒருசார்
பாணர் மண்டை நிறைய பெய்ம்-மார்
வாக்க உக்க தே கள் தேறல்
கல் அலைத்து ஒழுகும்-மன்னே பல் வேல்
அண்ணல் யானை வேந்தர்க்கு
இன்னான் ஆகிய இனியோன் குன்றே

#116
தீம் நீர் பெரும் குண்டு சுனை பூத்த குவளை
கூம்பு அவிழ் முழு_நெறி புரள்வரும் அல்குல்
ஏந்து எழில் மழை கண் இன் நகை மகளிர்
புன் மூசு கவலைய முள் மிடை வேலி
பஞ்சி முன்றில் சிற்றில் ஆங்கண்
பீரை நாறிய சுரை இவர் மருங்கின்
ஈத்து இலை குப்பை ஏறி உமணர்
உப்பு ஒய் ஒழுகை எண்ணுப மாதோ
நோகோ யானே தேய்கமா காலை
பயில் பூ சோலை மயில் எழுந்து ஆலவும்
பயில் இரும் சிலம்பில் கலை பாய்ந்து உகளவும்
கலையும் கொள்ளா ஆக பலவும்
காலம் அன்றியும் மரம் பயம் பகரும்
யாணர் அறாஅ வியல் மலை அற்றே
அண்ணல் நெடு வரை ஏறி தந்தை
பெரிய நறவின் கூர் வேல் பாரியது
அருமை அறியார் போர் எதிர்ந்து வந்த
வலம் படு தானை வேந்தர்
பொலம் படை கலி_மா எண்ணுவோரே

#117
மைம்_மீன் புகையினும் தூமம் தோன்றினும்
தென் திசை மருங்கின் வெள்ளி ஓடினும்
வயல்_அகம் நிறைய புதல் பூ மலர
மனை தலை மகவை ஈன்ற அமர் கண்
ஆமா நெடு வரை நன் புல் ஆர
கோஒல் செம்மையின் சான்றோர் பல்கி
பெயல் பிழைப்பு அறியா புன்_புலத்ததுவே
பிள்ளை வெருகின் முள் எயிறு புரைய
பாசிலை முல்லை முகைக்கும்
ஆய் தொடி அரிவையர் தந்தை நாடே

#118
அறையும் பொறையும் மணந்த தலைய
எண் நாள் திங்கள் அனைய கொடும் கரை
தெண் நீர் சிறு குளம் கீள்வது மாதோ
கூர் வேல் குவைஇய மொய்ம்பின்
தேர் வண் பாரி தண் பறம்பு நாடே

#119
கார் பெயல் தலைஇய காண்பு இன் காலை
களிற்று முக வரியின் தெறுழ் வீ பூப்ப
செம் புற்று ஈயலின் இன் அளை புளித்து
மென் தினை யாணர்த்து நந்தும்-கொல்லோ
நிழல் இல் நீள் இடை தனி மரம் போல
பணை கெழு வேந்தரை இறந்தும்
இரவலர்க்கு ஈயும் வள்ளியோன் நாடே

#120
வெப்புள் விளைந்த வேங்கை செம் சுவல்
கார் பெயல் கலித்த பெரும் பாட்டு ஈரத்து
பூழி மயங்க பல உழுது வித்தி
பல்லி ஆடிய பல் கிளை செவ்வி
களை கால் கழாலின் தோடு ஒலிபு நந்தி
மென் மயில் புனிற்று பெடை கடுப்ப நீடி
கரும் தாள் போகி ஒருங்கு பீள் விரிந்து
கீழும் மேலும் எஞ்சாமை பல காய்த்து
வாலிதின் விளைந்த புது வரகு அரிய
தினை கொய்ய கவ்வை கறுப்ப அவரை
கொழும் கொடி விளர் காய் கோள் பதம் ஆக
நிலம் புதை பழுனிய மட்டின் தேறல்
புல் வேய் குரம்பை குடி-தொறும் பகர்ந்து
நறு நெய் கடலை விசைப்ப சோறு அட்டு
பெரும் தோள் தாலம் பூசல் மேவர
வருந்தா யாணர்த்து நந்தும்-கொல்லோ
இரும் பல் கூந்தல் மடந்தையர் தந்தை
ஆடு கழை நரலும் சேண் சிமை புலவர்
பாடி ஆனா பண்பின் பகைவர்
ஓடு கழல் கம்பலை கண்ட
செரு வெம் சேஎய் பெரு விறல் நாடே

# 121 கபிலர்
ஒரு திசை ஒருவனை உள்ளி நால் திசை
பலரும் வருவர் பரிசில்_மாக்கள்
வரிசை அறிதலோ அரிதே பெரிதும்
ஈதல் எளிதே மா வண் தோன்றல்
அது நற்கு அறிந்தனை ஆயின்
பொதுநோக்கு ஒழி-மதி புலவர் மாட்டே

# 122 கபிலர்
கடல் கொளப்படாஅது உடலுநர் ஊக்கார்
கழல் புனை திருந்து அடி காரி நின் நாடே
அழல் புறந்தரூஉம் அந்தணரதுவே
வீயா திருவின் விறல் கெழு தானை
மூவருள் ஒருவன் துப்பு ஆகியர் என
ஏத்தினர் தரூஉம் கூழே நும் குடி
வாழ்த்தினர் வரூஉம் இரவலரதுவே
வட_மீன் புரையும் கற்பின் மட மொழி
அரிவை தோள் அளவு அல்லதை
நினது என இலை நீ பெருமிதத்தையே

# 123 கபிலர்
நாள்_கள் உண்டு நாள்_மகிழ் மகிழின்
யார்க்கும் எளிதே தேர் ஈதல்லே
தொலையா நல் இசை விளங்கு மலயன்
மகிழாது ஈத்த இழை அணி நெடும் தேர்
பயன் கெழு முள்ளூர் மீமிசை
பட்ட மாரி உறையினும் பலவே

# 124 கபிலர்
நாள் அன்று போகி புள் இடை தட்ப
பதன் அன்று புக்கு திறன் அன்று மொழியினும்
வறிது பெயர்குநர் அல்லர் நெறி கொள
பாடு ஆன்று இரங்கும் அருவி
பீடு கெழு மலையன் பாடியோரே

# 125 வடமவண்ணக்கண் பெருஞ்சாத்தனார்
பருத்தி_பெண்டின் பனுவல் அன்ன
நெருப்பு சினம் தணிந்த நிணம் தயங்கு கொழும் குறை
பரூஉ கள் மண்டையொடு ஊழ் மாறு பெயர
உண்கும் எந்தை நின் காண்கு வந்திசினே
நள்ளாதார் மிடல் சாய்ந்த
வல்லாள நின் மகிழ் இருக்கையே
உழுத நோன் பகடு அழி தின்று ஆங்கு
நல் அமிழ்து ஆக நீ நயந்து உண்ணும் நறவே
குன்றத்து அன்ன களிறு பெயர
கடந்து அட்டு வென்றோனும் நின் கூறும்மே
வெலீஇயோன் இவன் என
கழல் அணி பொலிந்த சேவடி நிலம் கவர்பு
விரைந்து வந்து சமம் தாங்கிய
வல் வேல் மலையன் அல்லன் ஆயின்
நல் அமர் கடத்தல் எளிது-மன் நமக்கு என
தோற்றோன் தானும் நின் கூறும்மே
தொலைஇயோன் இவன் என
ஒரு நீ ஆயினை பெரும பெரு மழைக்கு
இருக்கை சான்ற உயர் மலை
திரு தகு சேஎய் நின் பெற்றிசினோர்க்கே

# 126 மாறோக்கத்து நப்பசலையார்
ஒன்னார் யானை ஓடை பொன் கொண்டு
பாணர் சென்னி பொலிய தைஇ
வாடா தாமரை சூட்டிய விழு சீர்
ஓடா பூட்கை உரவோன் மருக
வல்லேம் அல்லேம் ஆயினும் வல்லே
நின்_வயின் கிளக்குவம் ஆயின் கங்குல்
துயில் மடிந்து அன்ன தூங்கு இருள் இறும்பின்
பறை இசை அருவி முள்ளூர் பொருந
தெறல் அரு மரபின் நின் கிளையொடும் பொலிய
நில மிசை பரந்த மக்கட்கு எல்லாம்
புலன் அழுக்கு அற்ற அந்தணாளன்
இரந்து செல் மாக்கட்கு இனி இடன் இன்றி
பரந்து இசை நிற்க பாடினன் அதன் கொண்டு
சினம் மிகு தானை வானவன் குட கடல்
பொலம் தரு நாவாய் ஓட்டிய அ வழி
பிற கலம் செல்கலாது அனையேம் அத்தை
இன்மை துரப்ப இசை தர வந்து நின்
வண்மையின் தொடுத்தனம் யாமே முள் எயிற்று
அரவு எறி உருமின் முரசு எழுந்து இயம்ப
அண்ணல் யானையொடு வேந்து களத்து ஒழிய
அரும் சமம் ததைய தாக்கி நன்றும்
நண்ணா தெவ்வர் தாங்கும்
பெண்ணை அம் படப்பை நாடு கிழவோயே

# 127 உறையூர் ஏணிச்சேரி முடமோசியார்
களங்கனி அன்ன கரும் கோட்டு சீறியாழ்
பாடு இன் பனுவல் பாணர் உய்த்து என
களிறு இல ஆகிய புல் அரை நெடு வெளில்
கான மஞ்ஞை கணனொடு சேப்ப
ஈகை அரிய இழை அணி மகளிரொடு
சாயின்று என்ப ஆஅய் கோயில்
சுவைக்கு இனிது ஆகிய குய் உடை அடிசில்
பிறர்க்கு ஈவு இன்றி தம் வயிறு அருத்தி
உரை சால் ஓங்கு புகழ் ஒரீஇய
முரைசு கெழு செல்வர் நகர் போலாதே

# 128 உறையூர் ஏணிச்சேரி முடமோசியார்
மன்ற பலவின் மா சினை மந்தி
இரவலர் நாற்றிய விசி கூடு முழவின்
பாடு இன் தெண் கண் கனி செத்து அடிப்பின்
அன்ன சேவல் மாறு எழுந்து ஆலும்
கழல் தொடி ஆஅய் மழை தவழ் பொதியில்
ஆடு_மகள் குறுகின் அல்லது
பீடு கெழு மன்னர் குறுகலோ அரிதே

# 129 உறையூர் ஏணிச்சேரி முடமோசியார்
குறி இறை குரம்பை குறவர் மாக்கள்
வாங்கு அமை பழுனிய தேறல் மகிழ்ந்து
வேங்கை முன்றில் குரவை அயரும்
தீம் சுளை பலவின் மா மலை கிழவன்
ஆஅய் அண்டிரன் அடு போர் அண்ணல்
இரவலர்க்கு ஈத்த யானையின் கரவு இன்று
வானம் மீன் பல பூப்பின் ஆனாது
ஒரு வழி கரு வழி இன்றி
பெரு வெள் என்னில் பிழையாது-மன்னே

# 130 உறையூர் ஏணிச்சேரி முடமோசியார்
விளங்கு மணி கொடும் பூண் ஆஅய் நின் நாட்டு
இளம் பிடி ஒரு சூல் பத்து ஈனும்மோ
நின்னும் நின் மலையும் பாடி வருநர்க்கு
இன்முகம் கரவாது உவந்து நீ அளித்த
அண்ணல் யானை எண்ணின் கொங்கர்
குட கடல் ஓட்டிய ஞான்றை
தலைப்பெயர்த்து இட்ட வேலினும் பலவே

#131 உறையூர் ஏணிச்சேரி முடமோசியார்
மழை கணம் சேக்கும் மா மலை கிழவன்
வழை பூ கண்ணி வாய் வாள் அண்டிரன்
குன்றம் பாடின-கொல்லோ
களிறு மிக உடைய இ கவின் பெறு காடே

#132 உறையூர் ஏணிச்சேரி முடமோசியார்
முன் உள்ளுவோனை பின் உள்ளினேனே
ஆழ்க என் உள்ளம் போழ்க என் நாவே
பாழ் ஊர் கிணற்றின் தூர்க என் செவியே
நரந்தை நறும் புல் மேய்ந்த கவரி
குவளை பைம் சுனை பருகி அயல
தகர தண் நிழல் பிணையொடு வதியும்
வட திசையதுவே வான் தோய் இமயம்
தென் திசை ஆஅய் குடி இன்று ஆயின்
பிறழ்வது-மன்னோ இ மலர் தலை உலகே
#133 உறையூர் ஏணிச்சேரி முடமோசியார்
மெல் இயல் விறலி நீ நல் இசை செவியின்
கேட்பின் அல்லது காண்பு அறியலையே
காண்டல் வேண்டினை ஆயின் மாண்ட நின்
விரை வளர் கூந்தல் வரை வளி உளர
கலவ மஞ்ஞையின் காண்வர இயலி
மாரி அன்ன வண்மை
தேர் வேள் ஆயை காணிய சென்மே

#134 உறையூர் ஏணிச்சேரி முடமோசியார்
இம்மை செய்தது மறுமைக்கு ஆம் எனும்
அற விலை வணிகன் ஆஅய் அல்லன்
பிறரும் சான்றோர் சென்ற நெறி என
ஆங்கு பட்டன்று அவன் கைவண்மையே

#135 உறையூர் ஏணிச்சேரி முடமோசியார்
கொடு_வரி வழங்கும் கோடு உயர் நெடு வரை
அரு விடர் சிறு நெறி ஏறலின் வருந்தி
தடவரல் கொண்ட தகை மெல் ஒதுக்கின்
வளை கை விறலி என் பின்னள் ஆக
பொன் வார்ந்து அன்ன புரி அடங்கு நரம்பின்
வரி நவில் பனுவல் புலம் பெயர்ந்து இசைப்ப
படுமலை நின்ற பயம் கெழு சீறியாழ்
ஒல்கல் உள்ளமொடு ஒரு புடை தழீஇ
புகழ் சால் சிறப்பின் நின் நல் இசை உள்ளி
வந்தெனன் எந்தை யானே என்றும்
மன்று படு பரிசிலர் காணின் கன்றொடு
கறை அடி யானை இரியல்_போக்கும்
மலை கெழு நாடன் மா வேள் ஆஅய்
களிறும் அன்றே மாவும் அன்றே
ஒளிறு படை புரவிய தேரும் அன்றே
பாணர் படுநர் பரிசிலர் ஆங்கு அவர்
தமது என தொடுக்குவர் ஆயின் எமது என
பற்றல் தேற்றா பயம் கெழு தாயமொடு
அன்ன ஆக நின் ஊழி நின்னை
காண்டல் வேண்டிய அளவை வேண்டார்
உறு முரண் கடந்த ஆற்றல்
பொது மீக்கூற்றத்து நாடு கிழவோயே

#136 துறையூர் ஓடை கிழார்
யாழ் பத்தர் புறம் கடுப்ப
இழை வலந்த பல் துன்னத்து
இடை புரை பற்றி பிணி விடாஅ
ஈர் குழாத்தொடு இறைகூர்ந்த
பேஎன் பகை என ஒன்று என்கோ
உண்ணாமையின் ஊன் வாடி
தெண் நீரின் கண் மல்கி
கசிவு_உற்ற என் பல் கிளையொடு
பசி அலைக்கும் பகை ஒன்று என்கோ
அன்ன தன்மையும் அறிந்தீயார்
நின்னது தா என நிலை தளர
மரம் பிறங்கிய நளி சிலம்பின்
குரங்கு அன்ன புன் குறும் கூளியர்
பரந்து அலைக்கும் பகை ஒன்று என்கோ
ஆஅங்கு எனை பகையும் அறியுநன் ஆய்
என கருதி பெயர் ஏத்தி
வாயார நின் இசை நம்பி
சுடர் சுட்ட சுரத்து ஏறி
இவண் வந்த பெரு நசையேம்
எமக்கு ஈவோர் பிறர்க்கு ஈவோர்
பிறர்க்கு ஈவோர் தமக்கு ஈப என
அனைத்து உரைத்தனன் யான் ஆக
நினக்கு ஒத்தது நீ நாடி
நல்கினை விடு-மதி பரிசில் அல்கலும்
தண் புனல் வாயில் துறையூர் முன்துறை
நுண் பல மணலினும் ஏத்தி
உண்குவம் பெரும நீ நல்கிய வளனே

#137 ஒருசிறை பெரியனார்
இரங்கு முரசின் இனம் சால் யானை
முந்நீர் ஏணி விறல் கெழு மூவரை
இன்னும் ஓர் யான் அவா அறியேனே
நீயே முன் யான் அறியுமோனே துவன்றிய
கயத்து இட்ட வித்து வறத்தின் சாவாது
கழை கரும்பின் ஒலிக்குந்து
கொண்டல் கொண்ட நீர் கோடை காயினும்
கண் அன்ன மலர் பூக்குந்து
கரும் கால் வேங்கை மலரின் நாளும்
பொன் அன்ன வீ சுமந்து
மணி அன்ன நீர் கடல் படரும்
செம் வரை படப்பை நாஞ்சில் பொருந
சிறு வெள் அருவி பெரும் கல் நாடனை
நீ வாழியர் நின் தந்தை
தாய் வாழியர் நின் பயந்திசினோரே

#138 மருதன் இளநாகனார்
ஆன்_இனம் கலித்த அதர் பல கடந்து
மான்_இனம் கலித்த மலை பின் ஒழிய
மீன்_இனம் கலித்த துறை பல நீந்தி
உள்ளி வந்த வள் உயிர் சீறியாழ்
சிதாஅர் உடுக்கை முதாஅரி பாண
நீயே பேர் எண்ணலையே நின் இறை
மாறி வா என மொழியலன் மாதோ
ஒலி இரும் கதுப்பின் ஆய்_இழை கணவன்
கிளி மரீஇய வியன் புனத்து
மரன் அணி பெரும் குரல் அனையன் ஆதலின்
நின்னை வருதல் அறிந்தனர் யாரே

#139 மருதன் இளநாகனார்
சுவல் அழுந்த பல காய
சில் ஓதி பல் இளைஞருமே
அடி வருந்த நெடிது ஏறிய
கொடி மருங்குல் விறலியருமே
வாழ்தல் வேண்டி
பொய் கூறேன் மெய் கூறுவல்
ஓடா பூட்கை உரவோர் மருக
உயர் சிமைய உழாஅ நாஞ்சில் பொருந
மாயா உள்ளமொடு பரிசில் துன்னி
கனி பதம் பார்க்கும் காலை அன்றே
ஈதல் ஆனான் வேந்தே வேந்தற்கு
சாதல் அஞ்சாய் நீயே ஆயிடை
இரு நிலம் மிளிர்ந்திசின் ஆஅங்கு ஒரு நாள்
அரும் சமம் வருகுவது ஆயின்
வருந்தலும் உண்டு என் பைதல் அம் கடும்பே

#140 ஔவையார்
தடவு நிலை பலவின் நாஞ்சில் பொருநன்
மடவன் மன்ற செம் நா புலவீர்
வளை கை விறலியர் படப்பை கொய்த
அடகின் கண்ணுறை ஆக யாம் சில
அரிசி வேண்டினெம் ஆக தான் பிற
வரிசை அறிதலின் தன்னும் தூக்கி
இரும் கடறு வளைஇய குன்றத்து அன்னது ஓர்
பெரும் களிறு நல்கியோனே அன்னது ஓர்
தேற்றா ஈகையும் உளது-கொல்
போற்றார் அம்ம பெரியோர் தம் கடனே

#141 பரணர்
பாணன் சூடிய பசும்_பொன் தாமரை
மாண் இழை விறலி மாலையொடு விளங்க
கடும் பரி நெடும் தேர் பூட்டு விட்டு அசைஇ
ஊரீர் போல சுரத்து இடை இருந்தனிர்
யாரீரோ என வினவல் ஆனா
காரென் ஒக்கல் கடும் பசி இரவல
வென் வேல் அண்ணல் காணா ஊங்கே
நின்னினும் புல்லியேம்-மன்னே இனியே
இன்னேம் ஆயினேம்-மன்னே என்றும்
உடாஅ போரா ஆகுதல் அறிந்தும்
படாஅம் மஞ்ஞைக்கு ஈத்த எம் கோ
கடாஅ யானை கலி_மான் பேகன்
எ துணை ஆயினும் ஈதல் நன்று என
மறுமை நோக்கின்றோ அன்றே
பிறர் வறுமை நோக்கின்று அவன் கைவண்மையே

#142 பரணர்
அறு குளத்து உகுத்தும் அகல் வயல் பொழிந்தும்
உறும் இடத்து உதவாது உவர் நிலம் ஊட்டியும்
வரையா மரபின் மாரி போல
கடாஅ யானை கழல் கால் பேகன்
கொடை மடம்படுதல் அல்லது
படை மடம்படான் பிறர் படை மயக்கு_உறினே

#143 கபிலர்
மலை வான் கொள்க என உயர் பலி தூஉய்
மாரி ஆன்று மழை மேக்கு உயர்க என
கடவுள் பேணிய குறவர் மாக்கள்
பெயல் கண்மாறிய உவகையர் சாரல்
புனை தினை அயிலும் நாட சின போர்
கைவள் ஈகை கடு மான் பேக
யார்-கொல் அளியள் தானே நெருநல்
சுரன் உழந்து வருந்திய ஒக்கல் பசித்து என
குணில் பாய் முரசின் இரங்கும் அருவி
நளி இரும் சிலம்பின் சீறூர் ஆங்கண்
வாயில் தோன்றி வாழ்த்தி நின்று
நின்னும் நின் மலையும் பாட இன்னாது
இகுத்த கண்ணீர் நிறுத்தல் செல்லாள்
முலை_அகம் நனைப்ப விம்மி
குழல் இனைவது போல் அழுதனள் பெரிதே

#144 கபிலர்
அருளாய் ஆகலோ கொடிதே இருள் வர
சீறியாழ் செவ்வழி பண்ணி யாழ நின்
கார் எதிர் கானம் பாடினேம் ஆக
நீல் நறு நெய்தலின் பொலிந்த உண்கண்
கலுழ்ந்து வார் அரி பனி பூண் அகம் நனைப்ப
இனைதல் ஆனாள் ஆக இளையோய்
கிளையை-மன் எம் கேள் வெய்யோற்கு என
யாம் தன் தொழுதனம் வினவ காந்தள்
முகை புரை விரலின் கண்ணீர் துடையா
யாம் அவன் கிளைஞரேம் அல்லேம் கேள் இனி
எம் போல் ஒருத்தி நலன் நயந்து என்றும்
வரூஉம் என்ப வயங்கு புகழ் பேகன்
ஒல்லென ஒலிக்கும் தேரொடு
முல்லை வேலி நல் ஊரானே

#145 கபிலர்
மட_தகை மா மயில் பனிக்கும் என்று அருளி
படாஅம் ஈத்த கெடாஅ நல் இசை
கடாஅ யானை கலி_மான் பேக
பசித்தும் வாரோம் பாரமும் இலமே
களங்கனி அன்ன கரும் கோட்டு சீறியாழ்
நயம் புரிந்து உறையுநர் நடுங்க பண்ணி
அறம் செய்தீமோ அருள் வெய்யோய் என
இஃது யாம் இரந்த பரிசில் அஃது இருளின்
இன மணி நெடும் தேர் ஏறி
இன்னாது உறைவி அரும் படர் களைமே

#146 அரிசில் கிழார்
அன்ன ஆக நின் அரும் கல வெறுக்கை
அவை பெறல் வேண்டேம் அடு போர் பேக
சீறியாழ் செவ்வழி பண்ணி நின் வன்_புல
நன் நாடு பாட என்னை நயந்து
பரிசில் நல்குவை ஆயின் குரிசில் நீ
நல்காமையின் நைவர சாஅய்
அரும் துயர் உழக்கும் நின் திருந்து இழை அரிவை
கலி மயில் கலாவம் கால் குவித்து அன்ன
ஒலி மென் கூந்தல் கமழ் புகை கொளீஇ
தண் கமழ் கோதை புனைய
வண் பரி நெடும் தேர் பூண்க நின் மாவே

#147 பெருங்குன்றூர் கிழார்
கல் முழை அருவி பன் மலை நீந்தி
சீறியாழ் செவ்வழி பண்ணி வந்ததை
கார் வான் இன் உறை தமியள் கேளா
நெருநல் ஒரு சிறை புலம்பு கொண்டு உறையும்
அரி மதர் மழை கண் அம் மா அரிவை
நெய்யொடு துறந்த மை இரும் கூந்தல்
மண்_உறு மணியின் மாசு அற மண்ணி
புது மலர் கஞல இன்று பெயரின்
அது-மன் எம் பரிசில் ஆவியர் கோவே

#148 வன்பரணர்
கறங்கு மிசை அருவிய பிறங்கு மலை நள்ளி நின்
அசைவு இல் நோன் தாள் நசை வளன் ஏத்தி
நாள்-தொறும் நன் கலம் களிற்றொடு கொணர்ந்து
கூடு விளங்கு வியல் நகர் பரிசில் முற்று அளிப்ப
பீடு இல் மன்னர் புகழ்ச்சி வேண்டி
செய்யா கூறி கிளத்தல்
எய்யாது ஆகின்று எம் சிறு செம் நாவே

#149 வன்பரணர்
நள்ளி வாழியோ நள்ளி நள்ளென்
மாலை மருதம் பண்ணி காலை
கைவழி மருங்கின் செவ்வழி பண்ணி
வரவு எமர் மறந்தனர் அது நீ
புரவு கடன் பூண்ட வண்மை யானே

#150 வன் பரணர்
கூதிர் பருந்தின் இரும் சிறகு அன்ன
பாறிய சிதாரேன் பலவு முதல் பொருந்தி
தன்னும் உள்ளேன் பிறிது புலம் படர்ந்த என்
உயங்கு படர் வருத்தமும் உலைவும் நோக்கி
மான் கணம் தொலைச்சிய குருதி அம் கழல் கால்
வான் கதிர் திரு மணி விளங்கும் சென்னி
செல்வ தோன்றல் ஓர் வல் வில் வேட்டுவன்
தொழுதனென் எழுவேன் கை கவித்து இரீஇ
இழுதின் அன்ன வால் நிண கொழும் குறை
கான் அதர் மயங்கிய இளையர் வல்லே
தாம் வந்து எய்தா அளவை ஒய்யென
தான் ஞெலி தீயின் விரைவனன் சுட்டு நின்
இரும் பேர் ஒக்கலொடு தின்ம் என தருதலின்
அமிழ்தின் மிசைந்து காய் பசி நீங்கி
நன் மரன் நளிய நறும் தண் சாரல்
கல் மிசை அருவி தண்ணென பருகி
விடுத்தல் தொடங்கினேன் ஆக வல்லே
பெறுதற்கு அரிய வீறு சால் நன் கலம்
பிறிது ஒன்று இல்லை காட்டு நாட்டேம் என
மார்பில் பூண்ட வயங்கு காழ் ஆரம்
மடை செறி முன்கை கடகமொடு ஈத்தனன்
எ நாடோ என நாடும் சொல்லான்
யாரீரோ என பேரும் சொல்லான்
பிறர்_பிறர் கூற வழி கேட்டிசினே
இரும்பு புனைந்து இயற்றா பெரும் பெயர் தோட்டி
அம் மலை காக்கும் அணி நெடும் குன்றின்
பளிங்கு வகுத்து அன்ன தீ நீர்
நளி மலை நாடன் நள்ளி அவன் எனவே