<<முந்திய பக்கம்

புறநானூறு (151 - 200)

#151 பெருந்தலை சாத்தனார்
பண்டும்_பண்டும் பாடுநர் உவப்ப
விண் தோய் சிமைய விறல் வரை கவாஅன்
கிழவன் சேண் புலம் படரின் இழை அணிந்து
புன் தலை மட பிடி பரிசில் ஆக
பெண்டிரும் தம் பதம் கொடுக்கும் வண் புகழ்
கண்டீரக்கோன் ஆகலின் நன்றும்
முயங்கல் ஆன்றிசின் யானே பொலம் தேர்
நன்னன் மருகன் அன்றியும் நீயும்
முயங்கற்கு ஒத்தனை-மன்னே வயங்கு மொழி
பாடுநர்க்கு அடைத்த கதவின் ஆடு மழை
அணங்கு சால் அடுக்கம் பொழியும் நும்
மணம் கமழ் மால் வரை வரைந்தனர் எமரே

#152 வன்பரணர்
வேழம் வீழ்த்த விழு தொடை பகழி
பேழ் வாய் உழுவையை பெரும்பிறிது உறீஇ
புழல் தலை புகர் கலை உருட்டி உரல் தலை
கேழல் பன்றி வீழ அயலது
ஆழல் புற்றத்து உடும்பில் செற்றும்
வல் வில் வேட்டம் வலம் படுத்து இருந்தோன்
புகழ் சால் சிறப்பின் அம்பு மிக திளைக்கும்
கொலைவன் யார்-கொலோ கொலைவன் மற்று இவன்
விலைவன் போலான் வெறுக்கை நன்கு உடையன்
ஆரம் தாழ்ந்த அம் பகட்டு மார்பின்
சாரல் அருவி பய மலை கிழவன்
ஓரி-கொல்லோ அல்லன்-கொல்லோ
பாடுவல் விறலி ஓர் வண்ணம் நீரும்
மண் முழா அமை-மின் பண் யாழ் நிறு-மின்
கண் விடு தூம்பின் களிற்று உயிர் தொடு-மின்
எல்லரி தொடு-மின் ஆகுளி தொடு-மின்
பதலை ஒரு கண் பையென இயக்கு-மின்
மதலை மா கோல் கைவலம் தமின் என்று
இறைவன் ஆகலின் சொல்லுபு குறுகி
மூவேழ் துறையும் முறையுளி கழிப்பி
கோ என பெயரிய_காலை ஆங்கு அது
தன் பெயர் ஆகலின் நாணி மற்று யாம்
நாட்டிடன்_நாட்டிடன் வருதும் ஈங்கு ஓர்
வேட்டுவர் இல்லை நின் ஒப்போர் என
வேட்டது மொழியவும் விடாஅன் வேட்டத்தில்
தான் உயிர் செகுத்த மான் நிண புழுக்கோடு
ஆன் உருக்கு அன்ன வேரியை நல்கி
தன் மலை பிறந்த தா இல் நன் பொன்
பல் மணி குவையொடும் விரைஇ கொண்ம் என
சுரத்து இடை நல்கியோனே விடர் சிமை
ஓங்கு இரும் கொல்லி பொருநன்
ஓம்பா ஈகை விறல் வெய்யோனே

#153 வண்பரணர்
மழை அணி குன்றத்து கிழவன் நாளும்
இழை அணி யானை இரப்போர்க்கு ஈயும்
சுடர்விடு பசும் பூண் சூர்ப்பு அமை முன்கை
அடு போர் ஆனா ஆதன் ஓரி
மாரி வண் கொடை காணிய நன்றும்
சென்றது-மன் எம் கண்ணுள் அம் கடும்பே
பனி நீர் பூவா மணி மிடை குவளை
வால் நார் தொடுத்த கண்ணியும் கலனும்
யானை இனத்தொடு பெற்றனர் நீங்கி
பசியார் ஆகல் மாறு-கொல் விசி பிணி
கூடு கொள் இன் இயம் கறங்க
ஆடலும் ஒல்லார் தம் பாடலும் மறந்தே

#154 மோசிகீரனார்
திரை பொரு முந்நீர் கரை நணி செலினும்
அறியுநர் காணின் வேட்கை நீக்கும்
சில் நீர் வினவுவர் மாந்தர் அது போல்
அரசர் உழையர் ஆகவும் புரை தபு
வள்ளியோர் படர்குவர் புலவர் அதனால்
யானும் பெற்றது ஊதியம் பேறு யாது என்னேன்
உற்றனென் ஆதலின் உள்ளி வந்தனனே
ஈ என இரத்தலோ அரிதே நீ அது
நல்கினும் நல்காய் ஆயினும் வெல் போர்
எறி படைக்கு ஓடா ஆண்மை அறுவை
தூ விரி கடுப்ப துவன்றி மீமிசை
தண் பல இழிதரும் அருவி நின்
கொண்பெரும்கானம் பாடல் எனக்கு எளிதே

#155 மோசி கீரனார்
வணர் கோட்டு சீறியாழ் வாடு புடை தழீஇ
உணர்வோர் யார் என் இடும்பை தீர்க்க என
கிளக்கும் பாண கேள் இனி நயத்தின்
பாழ் ஊர் நெருஞ்சி பசலை வான் பூ
ஏர்தரு சுடரின் எதிர்கொண்டு ஆஅங்கு
இலம்படு புலவர் மண்டை விளங்கு புகழ்
கொண்பெரும்கானத்து கிழவன்
தண் தார் அகலம் நோக்கின மலர்ந்தே

#156 மோசிகீரனார்
ஒன்று நன்கு உடைய பிறர் குன்றம் என்றும்
இரண்டு நன்கு உடைத்தே கொண்பெரும்கானம்
நச்சி சென்ற இரவலர் சுட்டி
தொடுத்து உண கிடப்பினும் கிடக்கும் அஃதான்று
நிறை அரும் தானை வேந்தரை
திறை கொண்டு பெயர்க்கும் செம்மலும் உடைத்தே

#157 குறமகள் இளவெயினி
தமர் தன் தப்பின் அது நோன்றல்லும்
பிறர் கையறவு தான் நாணுதலும்
படை பழி தாரா மைந்தினன் ஆகலும்
வேந்து உடை அவையத்து ஓங்குபு நடத்தலும்
நும்மோர்க்கு தகுவன அல்ல எம்மோன்
சிலை செல மலர்ந்த மார்பின் கொலை வேல்
கோடல் கண்ணி குறவர் பெருமகன்
ஆடு மழை தவிர்க்கும் பயம் கெழு மீமிசை
எல் படு பொழுதின் இனம் தலைமயங்கி
கட்சி காணா கடமான் நல் ஏறு
மட மான் நாகு பிணை பயிரின் விடர் முழை
இரும் புலி புகர் போத்து ஓர்க்கும்
பெரும் கல் நாடன் எம் ஏறைக்கு தகுமே

#158 பெருஞ்சித்திரனார்
முரசு கடிப்பு இகுப்பவும் வால் வளை துவைப்பவும்
அரசு உடன் பொருத அண்ணல் நெடு வரை
கறங்கு வெள் அருவி கல் அலைத்து ஒழுகும்
பறம்பின் கோமான் பாரியும் பிறங்கு மிசை
கொல்லி ஆண்ட வல் வில் ஓரியும்
காரி ஊர்ந்து பேர் அமர் கடந்த
மாரி ஈகை மற போர் மலையனும்
ஊராது ஏந்திய குதிரை கூர் வேல்
கூவிளம் கண்ணி கொடும் பூண் எழினியும்
ஈர்ம் தண் சிலம்பின் இருள் தூங்கும் நளி முழை
அரும் திறல் கடவுள் காக்கும் உயர் சிமை
பெரும் கல் நாடன் பேகனும் திருந்து மொழி
மோசி பாடிய ஆயும் ஆர்வம்_உற்று
உள்ளி வருநர் உலைவு நனி தீர
தள்ளாது ஈயும் தகை சால் வண்மை
கொள்ளார் ஓட்டிய நள்ளையும் என ஆங்கு
எழுவர் மாய்ந்த பின்றை அழிவர
பாடி வருநரும் பிறரும் கூடி
இரந்தோர் அற்றம் தீர்க்கு என விரைந்து இவண்
உள்ளி வந்தனென் யானே விசும்பு உற
கழை வளர் சிலம்பின் வழையொடு நீடி
ஆசினி கவினிய பலவின் ஆர்வு_உற்று
முள் புற முது கனி பெற்ற கடுவன்
துய் தலை மந்தியை கையிடூஉ பயிரும்
அதிரா யாணர் முதிரத்து கிழவ
இவண் விளங்கு சிறப்பின் இயல் தேர் குமண
இசை மேந்தோன்றிய வண்மையொடு
பகை மேம்படுக நீ ஏந்திய வேலே

#159 பெருஞ்சித்திரனார்
வாழும் நாளொடு யாண்டு பல உண்மையின்
தீர்தல் செல்லாது என் உயிர் என பல புலந்து
கோல் கால் ஆக குறும் பல ஒதுங்கி
நூல் விரித்து அன்ன கதுப்பினள் கண் துயின்று
முன்றில் போகா முதுர்வினள் யாயும்
பசந்த மேனியொடு படர் அட வருந்தி
மருங்கில் கொண்ட பல் குறு_மாக்கள்
பிசைந்து தின வாடிய முலையள் பெரிது அழிந்து
குப்பை கீரை கொய் கண் அகைத்த
முற்றா இளம் தளிர் கொய்துகொண்டு உப்பு இன்று
நீர் உலையாக ஏற்றி மோர் இன்று
அவிழ் பதம் மறந்து பாசடகு மிசைந்து
மாசொடு குறைந்த உடுக்கையள் அறம் பழியா
துவ்வாள் ஆகிய என் வெய்யோளும்
என்று ஆங்கு இருவர் நெஞ்சமும் உவப்ப கானவர்
கரி புனம் மயக்கிய அகன் கண் கொல்லை
ஐவனம் வித்தி மை உற கவினி
ஈனல் செல்லா ஏனற்கு இழுமென
கருவி வானம் தலைஇ ஆங்கும்
ஈத்த நின் புகழ் ஏத்தி தொக்க என்
பசி தின திரங்கிய ஒக்கலும் உவப்ப
உயர்ந்து ஏந்து மருப்பின் கொல் களிறு பெறினும்
தவிர்ந்து விடு பரிசில் கொள்ளலென் உவந்து நீ
இன்புற விடுதி ஆயின் சிறிது
குன்றியும் கொள்வல் கூர் வேல் குமண
அதற்பட அருளல் வேண்டுவல் விறல் புகழ்
வசை இல் விழு திணை பிறந்த
இசை மேம் தோன்றல் நின் பாடிய யானே

#160 பெருஞ்சித்திரனார்
உரு கெழு ஞாயிற்று ஒண் கதிர் மிசைந்த
முளி புல் கானம் குழைப்ப கல்லென
அதிர் குரல் ஏறோடு துளி சொரிந்து ஆங்கு
பசி தின திரங்கிய கசிவு உடை யாக்கை
அவிழ் புகுவு அறியாது ஆகலின் வாடிய
நெறி கொள் வரி குடர் குனிப்ப தண்ணென
குய் கொள் கொழும் துவை நெய் உடை அடிசில்
மதி சேர் நாள்_மீன் போல நவின்ற
சிறு பொன் நன் கலம் சுற்ற இரீஇ
கேடு இன்று ஆக பாடுநர் கடும்பு என
அரிது பெறு பொலம் கலம் எளிதினின் வீசி
நட்டோர் நட்ட நல் இசை குமணன்
மட்டு ஆர் மறுகின் முதிரத்தோனே
செல்குவை ஆயின் நல்குவை பெரிது என
பல் புகழ் நுவலுநர் கூற வல் விரைந்து
உள்ளம் துரப்ப வந்தனென் எள்_உற்று
இல் உணா துரத்தலின் இல் மறந்து உறையும்
புல் உளை குடுமி புதல்வன் பன் மாண்
பால் இல் வறு முலை சுவைத்தனன் பெறாஅன்
கூழும் சோறும் கடைஇ ஊழின்
உள் இல் வரும் கலம் திறந்து அழ கண்டு
மற புலி உரைத்தும் மதியம் காட்டியும்
நொந்தனள் ஆகி நுந்தையை உள்ளி
பொடிந்த நின் செவ்வி காட்டு என பலவும்
வினவல் ஆனாள் ஆகி நனவின்
அல்லல் உழப்போள் மல்லல் சிறப்ப
செல்லா செல்வம் மிகுத்தனை வல்லே
விடுதல் வேண்டுவல் அத்தை படு திரை
நீர் சூழ் நிலவரை உயர நின்
சீர் கெழு விழு புகழ் ஏத்துகம் பலவே

#161 பெருஞ்சித்திரனார்
நீண்டு ஒலி அழுவம் குறைபட முகந்துகொண்டு
ஈண்டு செலல் கொண்மூ வேண்டு வயின் குழீஇ
பெரு மலை அன்ன தோன்றல சூல் முதிர்பு
உரும் உரறு கருவியொடு பெயல் கடன் இறுத்து
வள மலை மாறிய என்றூழ் காலை
மன்பதை எல்லாம் சென்று உண கங்கை
கரை பொரு மலி நீர் நிறைந்து தோன்றி ஆங்கு
எமக்கும் பிறர்க்கும் செம்மலை ஆகலின்
அன்பு இல் ஆடவர் கொன்று ஆறு கவர
சென்று தலைவருந அல்ல அன்பு இன்று
வன் கலை தெவிட்டும் அரும் சுரம் இறந்தோர்க்கு
இற்றை நாளொடும் யாண்டு தலைப்பெயர என
கண் பொறி போகிய கசிவொடு உரன் அழிந்து
அரும் துயர் உழக்கும் என் பெரும் துன்புறுவி நின்
தாள் படு செல்வம் காண்-தொறும் மருள
பனை மருள் தட கையொடு முத்து படு முற்றிய
உயர் மருப்பு ஏந்திய வரை மருள் நோன் பகடு
ஒளி திகழ் ஓடை பொலிய மருங்கின்
படு மணி இரட்ட ஏறி செம்மாந்து
செலல் நசைஇ உற்றனென் விறல் மிகு குருசில்
இன்மை துரப்ப இசைதர வந்து நின்
வண்மையின் தொடுத்த என் நயந்தினை கேள்-மதி
வல்லினும் வல்லேன் ஆயினும் வல்லே
என் அளந்து அறிந்தனை நோக்காது சிறந்த
நின் அளந்து அறி-மதி பெரும என்றும்
வேந்தர் நாண பெயர்வேன் சாந்து அருந்தி
பல் பொறி கொண்ட ஏந்து எழில் அகலம்
மாண் இழை மகளிர் புல்லு-தொறும் புகல
நாள் முரசு இரங்கும் இடன் உடை வரைப்பில் நின்
தாள் நிழல் வாழ்நர் நன் கலம் மிகுப்ப
வாள் அமர் உழந்த நின் தானையும்
சீர் மிகு செல்வமும் ஏந்துகம் பலவே

#162 பெருஞ்சித்திரனார்
இரவலர் புரவலை நீயும் அல்லை
புரவலர் இரவலர்க்கு இல்லையும் அல்லர்
இரவலர் உண்மையும் காண் இனி இரவலர்க்கு
ஈவோர் உண்மையும் காண் இனி நின் ஊர்
கடி_மரம் வருந்த தந்து யாம் பிணித்த
நெடு நல் யானை எம் பரிசில்
கடு மான் தோன்றல் செல்வல் யானே

#163 பெருஞ்சித்திரனார்
நின் நயந்து உறைநர்க்கும் நீ நயந்து உறைநர்க்கும்
பல் மாண் கற்பின் நின் கிளை முதலோர்க்கும்
கடும்பின் கடும் பசி தீர யாழ நின்
நெடும் குறியெதிர்ப்பை நல்கியோர்க்கும்
இன்னோர்க்கு என்னாது என்னோடும் சூழாது
வல்லாங்கு வாழ்தும் என்னாது நீயும்
எல்லோர்க்கும் கொடு-மதி மனை கிழவோயே
பழம் தூங்கு முதிரத்து கிழவன்
திருந்து வேல் குமணன் நல்கிய வளனே

#164 பெருந்தலை சாத்தனார்
ஆடு நனி மறந்த கோடு உயர் அடுப்பின்
ஆம்பி பூப்ப தேம்பு பசி உழவா
பாஅல் இன்மையின் தோலொடு திரங்கி
இல்லி தூர்த்த பொல்லா வறு முலை
சுவை-தொறும் அழூஉம் தன் மகத்து முகம் நோக்கி
நீரொடு நிறைந்த ஈர் இதழ் மழை கண் என்
மனையோள் எவ்வம் நோக்கி நினைஇ
நின் படர்ந்திசினே நல் போர் குமண
என் நிலை அறிந்தனை ஆயின் இ நிலை
தொடுத்தும் கொள்ளாது அமையலென் அடுக்கிய
பண் அமை நரம்பின் பச்சை நல் யாழ்
மண் அமை முழவின் வயிரியர்
இன்மை தீர்க்கும் குடி பிறந்தோயே

#165 பெருந்தலை சாத்தனார்
மன்னா உலகத்து மன்னுதல் குறித்தோர்
தம் புகழ் நிறீஇ தாம் மாய்ந்தனரே
துன் அரும் சிறப்பின் உயர்ந்த செல்வர்
இன்மையின் இரப்போர்க்கு ஈஇயாமையின்
தொன்மை மாக்களின் தொடர்பு அறியலரே
தாள் தாழ் படு மணி இரட்டும் பூ நுதல்
ஆடு இயல் யானை பாடுநர்க்கு அருகா
கேடு இல் நல் இசை வய_மான் தோன்றலை
பாடி நின்றெனன் ஆக கொன்னே
பாடு பெறு பரிசிலன் வாடினன் பெயர்தல் என
நாடு இழந்ததனினும் நனி இன்னாது என
வாள் தந்தனனே தலை எனக்கு ஈய
தன்னின் சிறந்தது பிறிது ஒன்று இன்மையின்
ஆடு மலி உவகையோடு வருவல்
ஓடா பூட்கை நின் கிழமையோன் கண்டே

#166 ஆவூர் மூலம் கிழார்
நன்று ஆய்ந்த நீள் நிமிர் சடை
முது முதல்வன் வாய் போகாது
ஒன்று புரிந்த ஈர்_இரண்டின்
ஆறு உணர்ந்த ஒரு முதுநூல்
இகல் கண்டோர் மிகல் சாய்-மார்
மெய் அன்ன பொய் உணர்ந்து
பொய் ஓராது மெய் கொளீஇ
மூ_ஏழ் துறையும் முட்டு இன்று போகிய
உரை சால் சிறப்பின் உரவோர் மருக
வினைக்கு வேண்டி நீ பூண்ட
புல புல்வாய் கலை பச்சை
சுவல் பூண் ஞான் மிசை பொலிய
மறம் கடிந்த அரும் கற்பின்
அறம் புகழ்ந்த வலை சூடி
சிறு நுதல் பேர் அகல் அல்குல்
சில சொல்லின் பல கூந்தல் நின்
நிலைக்கு ஒத்த நின் துணை துணைவியர்
தமக்கு அமைந்த தொழில் கேட்ப
காடு என்றா நாடு என்று ஆங்கு
ஈர்_ஏழின் இடம் முட்டாது
நீர் நாண நெய் வழங்கியும்
எண் நாண பல வேட்டும்
மண் நாண புகழ் பரப்பியும்
அரும் கடி பெரும் காலை
விருந்து உற்ற நின் திருந்து ஏந்து நிலை
என்றும் காண்க தில் அம்ம யாமே குடாஅது
பொன் படு நெடு வரை புயல்_ஏறு சிலைப்பின்
பூ விரி புது நீர் காவிரி புரக்கும்
தண் புனல் படப்பை எம் ஊர் ஆங்கண்
உண்டும் தின்றும் ஊர்ந்தும் ஆடுகம்
செல்வல் அத்தை யானே செல்லாது
மழை அண்ணாப்ப நீடிய நெடு வரை
கழை வளர் இமயம் போல
நிலீஇயர் அத்தை நீ நிலம் மிசையானே

#167 கோனாட்டு எறிச்சிலூர் மாடலன் மதுரை குமரனார்
நீயே அமர் காணின் அமர் கடந்து அவர்
படை விலக்கி எதிர் நிற்றலின்
வாஅள் வாய்த்த வடு வாழ் யாக்கையொடு
கேள்விக்கு இனியை கட்கு இன்னாயே
அவரே நின் காணின் புறங்கொடுத்தலின்
ஊறு அறியா மெய் யாக்கையொடு
கண்ணுக்கு இனியர் செவிக்கு இன்னாரே
அதனால் நீயும் ஒன்று இனியை அவரும் ஒன்று இனியர்
ஒவ்வா யா உள மற்றே வெல் போர்
கழல் புனை திருந்து அடி கடு மான் கிள்ளி
நின்னை வியக்கும் இ உலகம் அஃது
என்னோ பெரும உரைத்திசின் எமக்கே

#168 கருவூர் கந்தப்பிள்ளை சாத்தனார்
அருவி ஆர்க்கும் கழை பயில் நனம் தலை
கறி வளர் அடுக்கத்து மலர்ந்த காந்தள்
கொழும் கிழங்கு மிளிர கிண்டி கிளையொடு
கடுங்கண் கேழல் உழுத பூழி
நன்_நாள் வரு பதம் நோக்கி குறவர்
உழாஅது வித்திய பரூஉ குரல் சிறுதினை
முந்து விளை யாணர் நாள் புதிது உண்-மார்
மரை ஆன் கறந்த நுரை கொள் தீம் பால்
மான் தடி புழுக்கிய புலவு நாறு குழிசி
வான் கேழ் இரும் புடை கழாஅது ஏற்றி
சாந்த விறகின் உவித்த புன்கம்
கூதளம் கவினிய குளவி முன்றில்
செழும் கோள் வாழை அகல் இலை பகுக்கும்
ஊரா குதிரை கிழவ கூர் வேல்
நறை நார் தொடுத்த வேங்கை அம் கண்ணி
வடி நவில் அம்பின் வில்லோர் பெரும
கைவள் ஈகை கடு மான் கொற்ற
வையக வரைப்பில் தமிழகம் கேட்ப
பொய்யா செம் நா நெளிய ஏத்தி
பாடுப என்ப பரிசிலர் நாளும்
ஈயா மன்னர் நாண
வீயாது பரந்த நின் வசை இல் வான் புகழே

#169 காவிரிபூம் பட்டினத்து காரிக்கண்ணனார்
நும் படை செல்லும்_காலை அவர் படை
எறித்து எறி தானை முன்னரை எனாஅ
அவர் படை வரூஉம்_காலை நும் படை
கூழை தாங்கிய அகல் யாற்று
குன்று விலங்கு சிறையின் நின்றனை எனாஅ
அரிதால் பெரும நின் செவ்வி என்றும்
பெரிதால் அத்தை என் கடும்பினது இடும்பை
இன்னே விடு-மதி பரிசில் வென் வேல்
இளம் பல் கோசர் விளங்கு படை கன்மார்
இகலினர் எறிந்த அகல் இலை முருக்கின்
பெரு மர கம்பம் போல
பொருநர்க்கு உலையா நின் வலன் வாழியவே

#170 உறையூர் மருத்துவன் தாமோதரனார்
மரை பிரித்து உண்ட நெல்லி வேலி
பரல் உடை முன்றில் அம் குடி சீறூர்
எல் அடிப்படுத்த கல்லா காட்சி
வில் உழுது உண்-மார் நாப்பண் ஒல்லென
இழிபிறப்பாளன் கரும் கை சிவப்ப
வலி துரந்து சிலைக்கும் வன் கண் கடும் துடி
புலி துஞ்சு நெடு வரை குடிஞையோடு இரட்டும்
மலை கெழு நாடன் கூர் வேல் பிட்டன்
குறுகல் ஓம்பு-மின் தெவ்விர் அவனே
சிறு கண் யானை வெண் கோடு பயந்த
ஒளி திகழ் முத்தம் விறலியர்க்கு ஈந்து
நார் பிழி கொண்ட வெம் கள் தேறல்
பண் அமை நல் யாழ் பாண் கடும்பு அருத்தி
நசைவர்க்கு மென்மை அல்லது பகைவர்க்கு
இரும்பு பயன் படுக்கும் கரும் கை கொல்லன்
விசைத்து எறி கூடமொடு பொருஉம்
உலை_கல் அன்ன வல்லாளன்னே

#171 காவிரிப்பூம் பட்டினத்து காரிக்கண்ணனார்
இன்று செலினும் தருமே சிறு வரை
நின்று செலினும் தருமே பின்னும்
முன்னே தந்தனென் என்னாது துன்னி
வைகலும் செலினும் பொய்யலன் ஆகி
யாம் வேண்டி ஆங்கு எம் வறும் கலம் நிறைப்போன்
தான் வேண்டி ஆங்கு தன் இறை உவப்ப
அரும் தொழில் முடியரோ திருந்து வேல் கொற்றன்
இன மலி கத சே களனொடு வேண்டினும்
களம் மலி நெல்லின் குப்பை வேண்டினும்
அரும் கலம் களிற்றொடு வேண்டினும் பெருந்தகை
பிறர்க்கும் அன்ன அற தகையன்னே
அன்னன் ஆகலின் எந்தை உள் அடி
முள்ளும் நோவ உறாற்க தில்ல
ஈவோர் அரிய இ உலகத்து
வாழ்வோர் வாழ அவன் தாள் வாழியவே

#172 வடமண்ணக்கன் தாமோதரனார்
ஏற்றுக உலையே ஆக்குக சோறே
கள்ளும் குறைபடல் ஓம்புக ஒள் இழை
பாடு வல் விறலியர் கோதையும் புனைக
அன்னவை பலவும் செய்க என்னதூஉம்
பரியல் வேண்டா வரு பதம் நாடி
ஐவனம் காவல் பெய் தீ நந்தின்
ஒளி திகழ் திருந்து மணி நளி இருள் அகற்றும்
வன்_புல நாடன் வய_மான் பிட்டன்
ஆர் அமர் கடக்கும் வேலும் அவன் இறை
மா வள் ஈகை கோதையும்
மாறுகொள் மன்னரும் வாழியர் நெடிதே

#173 சோழன் குளமுற்றத்து துஞ்சிய கிள்ளி வளவன்
யான் வாழும் நாளும் பண்ணன் வாழிய
பாணர் காண்க இவன் கடும்பினது இடும்பை
யாணர் பழு மரம் புள் இமிழ்ந்து அன்ன
ஊண் ஒலி அரவம் தானும் கேட்கும்
பொய்யா எழிலி பெய்வு இடம் நோக்கி
முட்டை கொண்டு வன்_புலம் சேரும்
சிறு நுண் எறும்பின் சில் ஒழுக்கு ஏய்ப்ப
சோறு உடை கையர் வீறு_வீறு இயங்கும்
இரும் கிளை சிறாஅர் காண்டும் கண்டும்
மற்றும்_மற்றும் வினவுதும் தெற்றென
பசி_பிணி_மருத்துவன் இல்லம்
அணித்தோ சேய்த்தோ கூறு-மின் எமக்கே

#174 மாறோக்கத்து நப்பசலையார்
அணங்கு உடை அவுணர் கணம்_கொண்டு ஒளித்து என
சேண் விளங்கு சிறப்பின் ஞாயிறு காணாது
இருள் கண் கெடுத்த பருதி ஞாலத்து
இடும்பை கொள் பருவரல் தீர கடும் திறல்
அஞ்சன உருவன் தந்து நிறுத்து ஆங்கு
அரசு இழந்திருந்த அல்லல் காலை
முரசு எழுந்து இரங்கும் முற்றமொடு கரை பொருது
இரங்கு புனல் நெரிதரு மிகு பெரும் காவிரி
மல்லல் நன் நாட்டு அல்லல் தீர
பொய்யா நாவின் கபிலன் பாடிய
மை அணி நெடு வரை ஆங்கண் ஒய்யென
செரு புகல் மறவர் செல் புறம் கண்ட
எள் அறு சிறப்பின் முள்ளூர் மீமிசை
அரு வழி இருந்த பெரு விறல் வளவன்
மதி மருள் வெண்குடை காட்டி அ குடை
புதுமையின் நிறுத்த புகழ் மேம்படுந
விடர் புலி பொறித்த கோட்டை சுடர் பூண்
சுரும்பு ஆர் கண்ணி பெரும் பெயர் நும் முன்
ஈண்டு செய் நல் வினை ஆண்டு சென்று உணீஇயர்
உயர்ந்தோர்_உலகத்து பெயர்ந்தனன் ஆகலின்
ஆறு கொள் மருங்கின் மாதிரம் துழவும்
கவலை நெஞ்சத்து அவலம் தீர
நீ தோன்றினையே நிரை தார் அண்ணல்
கல் கண் பொடிய கானம் வெம்ப
மல்கு நீர் வரைப்பில் கயம் பல உணங்க
கோடை நீடிய பைது அறு காலை
இரு நிலம் நெளிய ஈண்டி
உரும் உரறு கருவிய மழை பொழிந்து ஆங்கே

#175 கள்ளில் ஆத்திரையனார்
எந்தை வாழி ஆதனுங்க என்
நெஞ்சம் திறப்போர் நின் காண்குவரே
நின் யான் மறப்பின் மறக்கும் காலை
என் உயிர் யாக்கையின் பிரியும் பொழுதும்
என் யான் மறப்பின் மறக்குவென் வென் வேல்
விண் பொரு நெடும் குடை கொடி தேர் மோரியர்
திண் கதிர் திகிரி திரிதர குறைத்த
உலக இடைகழி அறை வாய் நிலைஇய
மலர் வாய் மண்டிலத்து அன்ன நாளும்
பலர் புரவு எதிர்ந்த அறத்துறை நின்னே

#176 புறத்திணை நன்னாகனார்
ஓரை ஆயத்து ஒண் தொடி மகளிர்
கேழல் உழுத இரும் சேறு கிளைப்பின்
யாமை ஈன்ற புலவு நாறு முட்டையை
தேன் நாறு ஆம்பல் கிழங்கொடு பெறூஉம்
இழுமென ஒலிக்கும் புனல் அம் புதவின்
பெரு மாவிலங்கை தலைவன் சீறியாழ்
இல்லோர் சொல் மலை நல்லியக்கோடனை
உடையை வாழி எம் புணர்ந்த பாலே
பாரி பறம்பின் பனி சுனை தெண் நீர்
ஓர் ஊர் உண்மையின் இகழ்ந்தோர் போல
காணாது கழிந்த வைகல் காணா
வழி நாட்கு இரங்கும் என் நெஞ்சம் அவன்
கழி மென் சாயல் காண்-தொறும் நினைந்தே

#177 ஆவூர் மூலங்கிழார்
ஒளிறு வாள் மன்னர் ஒண் சுடர் நெடு நகர்
வெளிறு கண் போக பன் நாள் திரங்கி
பாடி பெற்ற பொன் அணி யானை
தமர் எனின் யாவரும் புகுப அமர் எனின்
திங்களும் நுழையா எந்திர படு புழை
கள் மாறு நீட்ட நணி_நணி இருந்த
குறும் பல் குறும்பின் ததும்ப வைகி
புளி சுவை வேட்ட செம் கண் ஆடவர்
தீம் புளி களாவொடு துடரி முனையின்
மட்டு அறல் நல் யாற்று எக்கர் ஏறி
கரும் கனி நாவல் இருந்து கொய்து உண்ணும்
பெரும் பெயர் ஆதி பிணங்கு அரில் குட நாட்டு
எயினர் தந்த எய்ம்_மான் எறி தசை
பைம் ஞிணம் பெருத்த பசு வெள் அமலை
வருநர்க்கு வரையாது தருவனர் சொரிய
இரும் பனம் குடையின் மிசையும்
பெரும் புலர் வைகறை சீர் சாலாதே

#178 ஆவூர் மூலங்கிழார்
கந்து முனிந்து உயிர்க்கும் யானையொடு பணை முனிந்து
கால் இயல் புரவி ஆலும் ஆங்கண்
மணல் மலி முற்றம் புக்க சான்றோர்
உண்ணார் ஆயினும் தன்னொடு சூள்_உற்று
உண்ம் என இரக்கும் பெரும் பெயர் சாத்தன்
ஈண்டோர் இன் சாயலனே வேண்டார்
எறி படை மயங்கிய வெருவரு ஞாட்பின்
கள் உடை கலத்தர் உள்ளூர் கூறிய
நெடுமொழி மறந்த சிறு பேராளர்
அஞ்சி நீங்கும்_காலை
ஏமம் ஆக தான் முந்துறுமே

#179 வடநெடுந்தத்தனார் வடம நெடுந்தத்தனார் வடம நெடுந் தச்சனார்
ஞாலம் மீமிசை வள்ளியோர் மாய்ந்து என
ஏலாது கவிழ்ந்த என் இரவல் மண்டை
மலர்ப்போர் யார் என வினவலின் மலைந்தோர்
விசி பிணி முரசமொடு மண் பல தந்த
திரு வீழ் நுண் பூண் பாண்டியன் மறவன்
படை வேண்டு_வழி வாள் உதவியும்
வினை வேண்டு_வழி அறிவு உதவியும்
வேண்டுப_வேண்டுப வேந்தன் தேஎத்து
அசை நுகம் படாஅ ஆண்தகை உள்ளத்து
தோலா நல் இசை நாலை_கிழவன்
பருந்து பசி தீர்க்கும் நல் போர்
திருந்து வேல் நாகன் கூறினர் பலரே

#180 கோனாட்டு எறிச்சிலூர் மாடலன் மதுரை குமரனார்
நிரப்பாது கொடுக்கும் செல்வமும் இலனே
இல் என மறுக்கும் சிறுமையும் இலனே
இறை உறு விழுமம் தாங்கி அமர்_அகத்து
இரும்பு சுவை கொண்ட விழுப்புண் நோய் தீர்ந்து
மருந்து கொள் மரத்தின் வாள் வடு மயங்கி
வடு இன்றி வடிந்த யாக்கையன் கொடை எதிர்ந்து
ஈர்ந்தையோனே பாண் பசி பகைஞன்
இன்மை தீர வேண்டின் எம்மொடு
நீயும் வம்மோ முது வாய் இரவல
யாம் தன் இரக்கும்_காலை தான் எம்
உண்ணா மருங்குல் காட்டி தன் ஊர்
கரும் கை கொல்லனை இரக்கும்
திருந்து இலை நெடு வேல் வடித்திசின் எனவே

#181 சோணாட்டு முகையலூர் சிறுகரும் தும்பியார்
மன்ற விளவின் மனை வீழ் வெள்ளில்
கரும் கண் எயிற்றி காதல் மகனொடு
கான இரும் பிடி கன்று தலைக்கொள்ளும்
பெரும் குறும்பு உடுத்த வன்_புல இருக்கை
புலாஅல் அம்பின் போர் அரும் கடி மிளை
வலாஅரோனே வாய் வாள் பண்ணன்
உண்ணா வறும் கடும்பு உய்தல் வேண்டின்
இன்னே செல்-மதி நீயே சென்று அவன்
பகை புலம் படரா அளவை நின்
பசி பகை பரிசில் காட்டினை கொளற்கே

#182 கடலுள் மாய்ந்த இளம்பெரு வழுதி
உண்டால் அம்ம இ உலகம் இந்திரர்
அமிழ்தம் இயைவது ஆயினும் இனிது என
தமியர் உண்டலும் இலரே முனிவு இலர்
துஞ்சலும் இலர் பிறர் அஞ்சுவது அஞ்சி
புகழ் எனின் உயிரும் கொடுக்குவர் பழி எனின்
உலகுடன் பெறினும் கொள்ளலர் அயர்வு இலர்
அன்ன மாட்சி அனையர் ஆகி
தமக்கு என முயலா நோன் தாள்
பிறர்க்கு என முயலுநர் உண்மையானே

#183 ஆரிய படை கடந்த நெடுஞ்செழியன்
உற்று_உழி உதவியும் உறு பொருள் கொடுத்தும்
பிற்றை நிலை முனியாது கற்றல் நன்றே
பிறப்பு ஓர் அன்ன உடன்வயிற்றுள்ளும்
சிறப்பின் பாலால் தாயும் மனம் திரியும்
ஒரு குடி பிறந்த பல்லோருள்ளும்
மூத்தோன் வருக என்னாது அவருள்
அறிவுடையோன் ஆறு அரசும் செல்லும்
வேற்றுமை தெரிந்த நாற்பாலுள்ளும்
கீழ்ப்பால் ஒருவன் கற்பின்
மேல்_பால் ஒருவனும் அவன் கண் படுமே

#184 பிசிராந்தையார்
காய் நெல் அறுத்து கவளம் கொளினே
மா நிறைவு இல்லதும் பன் நாட்கு ஆகும்
நூறு செறு ஆயினும் தமித்து புக்கு உணினே
வாய் புகுவதனினும் கால் பெரிது கெடுக்கும்
அறிவு உடை வேந்தன் நெறி அறிந்து கொளினே
கோடி யாத்து நாடு பெரிது நந்தும்
மெல்லியன் கிழவன் ஆகி வைகலும்
வரிசை அறியா கல்லென் சுற்றமொடு
பரிவு தப எடுக்கும் பிண்டம் நச்சின்
யானை புக்க புலம் போல
தானும் உண்ணான் உலகமும் கெடுமே

#185 தொண்டைமான் இளந்திரையன்
கால் பார் கோத்து ஞாலத்து இயக்கும்
காவல் சாகாடு உகைப்போன் மாணின்
ஊறு இன்று ஆகி ஆறு இனிது படுமே
உய்த்தல் தேற்றான் ஆயின் வைகலும்
பகை கூழ் அள்ளல் பட்டு
மிக பல் தீ நோய் தலைத்தலை தருமே

#186 மோசிகீரனார்
நெல்லும் உயிர் அன்றே நீரும் உயிர் அன்றே
மன்னன் உயிர்த்தே மலர் தலை உலகம்
அதனால் யான் உயிர் என்பது அறிகை
வேல் மிகு தானை வேந்தற்கு கடனே

#187 ஔவையார்
நாடு ஆக ஒன்றோ காடு ஆக ஒன்றோ
அவலாக ஒன்றோ மிசையாக ஒன்றோ
எ வழி நல்லவர் ஆடவர்
அ வழி நல்லை வாழிய நிலனே

#188 பாண்டியன் அறிவுடை நம்பி
படைப்பு பல படைத்து பலரோடு உண்ணும்
உடை பெரும் செல்வர் ஆயினும் இடை பட
குறுகுறு நடந்து சிறு கை நீட்டி
இட்டும் தொட்டும் கவ்வியும் துழந்தும்
நெய் உடை அடிசில் மெய்பட விதிர்த்தும்
மயக்கு_உறு மக்களை இல்லோர்க்கு
பய குறை இல்லை தாம் வாழும் நாளே

#189 மதுரை கணக்காயனார் மகனார் நக்கீரனார்
தெண் கடல் வளாகம் பொதுமை இன்றி
வெண்குடை நிழற்றிய ஒருமையோர்க்கும்
நடுநாள் யாமத்தும் பகலும் துஞ்சான்
கடு_மா பார்க்கும் கல்லா ஒருவற்கும்
உண்பது நாழி உடுப்பவை இரண்டே
பிறவும் எல்லாம் ஓர் ஒக்கும்மே
செல்வத்து பயனே ஈதல்
துய்ப்பேம் எனினே தப்புந பலவே

#190 சோழன் நல்லுருத்திரன்
விளை_பத சீறிடம் நோக்கி வளை கதிர்
வல்சி கொண்டு அளை மல்க வைக்கும்
எலி முயன்று அனையர் ஆகி உள்ள தம்
வளன் வலி_உறுக்கும் உளம் இலாளரோடு
இயைந்த கேண்மை இல் ஆகியரோ
கடுங்கண் கேழல் இடம் பட வீழ்ந்து என
அன்று அவண் உண்ணாது ஆகி வழி நாள்
பெரு மலை விடர்_அகம் புலம்ப வேட்டு எழுந்து
இரும் களிற்று ஒருத்தல் நல் வலம் படுக்கும்
புலி பசித்து அன்ன மெலிவு இல் உள்ளத்து
உரன் உடையாளர் கேண்மையொடு
இயைந்த வைகல் உள ஆகியரோ

#191 பிசிராந்தையர்
யாண்டு பல ஆக நரை இல ஆகுதல்
யாங்கு ஆகியர் என வினவுதிர் ஆயின்
மாண்ட என் மனைவியோடு மக்களும் நிரம்பினர்
யான் கண்டனையர் என் இளையரும் வேந்தனும்
அல்லவை செய்யான் காக்கும் அதன்_தலை
ஆன்று அவிந்து அடங்கிய கொள்கை
சான்றோர் பலர் யான் வாழும் ஊரே

#192 கணியன் பூங்குன்றன்
யாதும் ஊரே யாவரும் கேளிர்
தீதும் நன்றும் பிறர் தர வாரா
நோதலும் தணிதலும் அவற்று ஓர் அன்ன
சாதலும் புதுவது அன்றே வாழ்தல்
இனிது என மகிழ்ந்தன்றும் இலமே முனிவின்
இன்னாது என்றலும் இலமே மின்னொடு
வானம் தண் துளி தலைஇ ஆனாது
கல் பொருது இரங்கும் மல்லல் பேர் யாற்று
நீர் வழிப்படூஉம் புணை போல் ஆர் உயிர்
முறை வழிப்படூஉம் என்பது திறவோர்
காட்சியின் தெளிந்தனம் ஆகலின் மாட்சியின்
பெரியோரை வியத்தலும் இலமே
சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே

#193 ஓரேருழவர்
அதள் எறிந்து அன்ன நெடு வெண் களரின்
ஒருவன் ஆட்டும் புல்வாய் போல
ஓடி உய்தலும் கூடும்-மன்
ஒக்கல் வாழ்க்கை தட்கும் மா காலே

#194
ஓர் இல் நெய்தல் கறங்க ஓர் இல்
ஈர்ம் தண் முழவின் பாணி ததும்ப
புணர்ந்தோர் பூ அணி அணிய பிரிந்தோர்
பைதல் உண்கண் பனி வார்பு உறைப்ப
படைத்தோன் மன்ற அ பண்பிலாளன்
இன்னாது அம்ம இ உலகம்
இனிய காண்க இதன் இயல்பு உணர்ந்தோரே

#195 நரிவெரூஉ தலையார்
பல் சான்றீரே பல் சான்றீரே
கயல் முள் அன்ன நரை முதிர் திரை கவுள்
பயன் இல் மூப்பின் பல் சான்றீரே
கணிச்சி கூர்ம் படை கடும் திறல் ஒருவன்
பிணிக்கும்_காலை இரங்குவிர் மாதோ
நல்லது செய்தல் ஆற்றீர் ஆயினும்
அல்லது செய்தல் ஓம்பு-மின் அது தான்
எல்லாரும் உவப்பது அன்றியும்
நல் ஆற்று படூஉம் நெறியும் ஆர் அதுவே

#196 ஆவூர் மூலங்கிழார்
ஒல்லுவது ஒல்லும் என்றலும் யாவர்க்கும்
ஒல்லாது இல் என மறுத்தலும் இரண்டும்
ஆள்வினை மருங்கின் கேண்மை_பாலே
ஒல்லாது ஒல்லும் என்றலும் ஒல்லுவது
இல் என மறுத்தலும் இரண்டும் வல்லே
இரப்போர் வாட்டல் அன்றியும் புரப்போர்
புகழ் குறைப்படூஉம் வாயில் அத்தை
அனைத்து ஆகியர் இனி இதுவே எனைத்தும்
சேய்த்து காணாது கண்டனம் அதனால்
நோய் இலர் ஆக நின் புதல்வர் யானும்
வெயில் என முனியேன் பனி என மடியேன்
கல் குயின்று அன்ன என் நல்கூர் வளி மறை
நாண் அலது இல்லா கற்பின் வாள் நுதல்
மெல் இயல் குறு_மகள் உள்ளி
செல்வல் அத்தை சிறக்க நின் நாளே

#197 கோனாட்டு எறிச்சலூர் மாடலன் மதுரை குமரனார்
வளி நடந்து அன்ன வா செலல் இவுளியொடு
கொடி நுடங்கு மிசைய தேரினர் எனாஅ
கடல் கண்டு அன்ன ஒண் படை தானையொடு
மலை மாறு மலைக்கும் களிற்றினர் எனாஅ
உரும் உரற்று அன்ன உட்குவரு முரசமொடு
செரு மேம்படூஉம் வென்றியர் எனாஅ
மண் கெழு தானை ஒண் பூண் வேந்தர்
வெண்குடை செல்வம் வியத்தலோ இலமே
எம்மால் வியக்கப்படூஉமோரே
இடு முள் படப்பை மறி மேய்ந்து ஒழிந்த
குறு நறு முஞ்ஞை கொழும் கண் குற்று அடகு
புன்_புல வரகின் சொன்றியொடு பெறூஉம்
சீறூர் மன்னர் ஆயினும் எம்_வயின்
பாடு அறிந்து ஒழுகும் பண்பினோரே
மிக பேர் எவ்வம் உறினும் எனைத்தும்
உணர்ச்சி இல்லோர் உடைமை உள்ளேம்
நல் அறிவு உடையோர் நல்குரவு
உள்ளுதும் பெரும யாம் உவந்து நனி பெரிதே

#198 வடமவண்ணக்கண் பேரிசாத்தனார்
அருவி தாழ்ந்த பெரு வரை போல
ஆரமொடு பொலிந்த மார்பில் தண்டா
கடவுள் சான்ற கற்பின் சே இழை
மடவோள் பயந்த மணி மருள் அம் வாய்
கிண்கிணி புதல்வர் பொலிக என்று ஏத்தி
திண் தேர் அண்ணல் நின் பாராட்டி
காதல் பெறாமையின் கனவினும் அரற்றும் என்
காமர் நெஞ்சம் ஏமாந்து உவப்ப
ஆல்_அமர்_கடவுள் அன்ன நின் செல்வம்
வேல் கெழு குருசில் கண்டேன் ஆதலின்
விடுத்தனென் வாழ்க நின் கண்ணி தொடுத்த
தண் தமிழ் வரைப்பு_அகம் கொண்டி ஆக
பணிந்து கூட்டுண்ணும் தணிப்பு அரும் கடும் திறல்
நின் ஓர் அன்ன நின் புதல்வர் என்றும்
ஒன்னார் வாட அரும் கலம் தந்து நும்
பொன் உடை நெடு நகர் நிறைய வைத்த நின்
முன்னோர் போல்க இவர் பெரும் கண்ணோட்டம்
யாண்டும் நாளும் பெருகி ஈண்டு திரை
பெரும் கடல் நீரினும் அ கடல் மணலினும்
நீண்டு உயர் வானத்து உறையினும் நன்றும்
இவர் பெறும் புதல்வர் காண்-தொறும் நீயும்
புகன்ற செல்வமொடு புகழ் இனிது விளங்கி
நீடு வாழிய நெடுந்தகை யானும்
கேள் இல் சேஎய் நாட்டின் எந்நாளும்
துளி நசை புள்ளின் நின் அளி நசைக்கு இரங்கி நின்
அடி நிழல் பழகிய அடியுறை
கடு மான் மாற மறவாதீமே

#199 பெரும்பதுமனார்
கடவுள் ஆலத்து தடவு சினை பல் பழம்
நெருநல் உண்டனம் என்னாது பின்னும்
செலவு ஆனாவே கலி கொள் புள்_இனம்
அனையர் வாழியோ இரவலர் அவரை
புரவு எதிர்கொள்ளும் பெரும் செய் ஆடவர்
உடைமை ஆகும் அவர் உடைமை
அவர் இன்மை ஆகும் அவர் இன்மையே

#200 கபிலர்
பனி வரை நிவந்த பாசிலை பலவின்
கனி கவர்ந்து உண்ட கரு விரல் கடுவன்
செம் முக மந்தியொடு சிறந்து சேண் விளங்கி
மழை மிசை அறியா மால் வரை அடுக்கத்து
கழை மிசை துஞ்சும் கல்_அக வெற்ப
நிணம் தின்று செருக்கிய நெருப்பு தலை நெடு வேல்
களம் கொண்டு கனலும் கடுங்கண் யானை
விளங்கு மணி கொடும் பூண் விச்சிக்கோவே
இவரே பூ தலை அறாஅ புனை கொடி முல்லை
நா தழும்பு இருப்ப பாடாது ஆயினும்
கறங்கு மணி நெடும் தேர் கொள்க என கொடுத்த
பரந்து ஓங்கு சிறப்பின் பாரி_மகளிர்
யானே பரிசிலன் மன்னும் அந்தணன் நீயே
வரிசையில் வணக்கும் வாள் மேம்படுநன்
நினக்கு யான் கொடுப்ப கொண்-மதி சின போர்
அடங்கா மன்னரை அடக்கும்
மடங்கா விளையுள் நாடு கிழவோயே