<<முந்திய பக்கம்

புறநானூறு (201 - 250)

#201 கபிலர்
இவர் யார் என்குவை ஆயின் இவரே
ஊருடன் இரவலர்க்கு அருளி தேருடன்
முல்லைக்கு ஈத்த செல்லா நல் இசை
படு மணி யானை பறம்பின் கோமான்
நெடு மா பாரி_மகளிர் யானே
தந்தை தோழன் இவர் என் மகளிர்
அந்தணன் புலவன் கொண்டுவந்தனனே
நீயே வட பால் முனிவன் தடவினுள் தோன்றி
செம்பு புனைந்து இயற்றிய சேண் நெடும் புரிசை
உவரா ஈகை துவரை ஆண்டு
நாற்பத்தொன்பது வழிமுறை வந்த
வேளிருள் வேளே விறல் போர் அண்ணல்
தார் அணி யானை சேட்டு இரும் கோவே
ஆண்_கடன் உடைமையின் பாண்_கடன் ஆற்றிய
ஒலியல் கண்ணி புலிகடிமாஅல்
யான் தர இவரை கொண்-மதி வான் கவித்து
இரும் கடல் உடுத்த இ வையகத்து அரும் திறல்
பொன் படு மால் வரை கிழவ வென் வேல்
உடலுநர் உட்கும் தானை
கெடல் அரும்-குரைய நாடு கிழவோயே

#202 கபிலர்
வெட்சி கானத்து வேட்டுவர் ஆட்ட
கட்சி காணா கடமா நல் ஏறு
கடறு மணி கிளர சிதறு பொன் மிளிர
கடிய கதழும் நெடு வரை படப்பை
வென்றி நிலைஇய விழு புகழ் ஒன்றி
இரு பால் பெயரிய உரு கெழு மூதூர்
கோடி பல அடுக்கிய பொருள் நுமக்கு உதவிய
நீடு நிலை அரையத்து கேடும் கேள் இனி
நுந்தை தாயம் நிறைவு_உற எய்திய
ஒலியல் கண்ணி புலிகடிமாஅல்
நும் போல் அறிவின் நுமருள் ஒருவன்
புகழ்ந்த செய்யுள் கழாஅத்தலையை
இகழ்ந்ததன் பயனே இயல் தேர் அண்ணல்
எவ்வி தொல் குடி படீஇயர் மற்று இவர்
கைவண் பாரி_மகளிர் என்ற என்
தேற்றா புன் சொல் நோற்றிசின் பெரும
விடுத்தனென் வெலீஇயர் நின் வேலே அடுக்கத்து
அரும்பு அற மலர்ந்த கரும் கால் வேங்கை
மா தகட்டு ஒள் வீ தாய துறுகல்
இரும் புலி வரி புறம் கடுக்கும்
பெரும் கல் வைப்பின் நாடு கிழவோயே

#203 ஊன்பொதி பசுங்குடையார்
கழிந்தது பொழிந்து என வான் கண்மாறினும்
தொல்லது விளைந்து என நிலம் வளம் கரப்பினும்
எல்லா உயிர்க்கும் இல்லால் வாழ்க்கை
இன்னும் தம் என எம்மனோர் இரப்பின்
முன்னும் கொண்டிர் என நும்மனோர் மறுத்தல்
இன்னாது அம்ம இயல் தேர் அண்ணல்
இல்லது நிரப்பல் ஆற்றாதோரினும்
உள்ளி வருநர் நசை இழப்போரே
அனையையும் அல்லை நீயே ஒன்னார்
ஆர் எயில் அவர் கட்டு ஆகவும் நுமது என
பாண்_கடன் இறுக்கும் வள்ளியோய்
பூண் கடன் எந்தை நீ இரவலர் புரவே

#204 கழைதின் யானையார்
ஈ என இரத்தல் இழிந்தன்று அதன்_எதிர்
ஈயேன் என்றல் அதனினும் இழிந்தன்று
கொள் என கொடுத்தல் உயர்ந்தன்று அதன்_எதிர்
கொள்ளேன் என்றல் அதனினும் உயர்ந்தன்று
தெண் நீர் பரப்பின் இமிழ் திரை பெரும் கடல்
உண்ணார் ஆகுப நீர் வேட்டோரே
ஆவும் மாவும் சென்று உண கலங்கி
சேற்றோடு பட்ட சிறுமைத்து ஆயினும்
உண் நீர் மருங்கின் அதர் பல ஆகும்
புள்ளும் பொழுதும் பழித்தல் அல்லதை
உள்ளி சென்றோர் பழி அலர் அதனால்
புலவேன் வாழியர் ஓரி விசும்பின்
கருவி வானம் போல
வரையாது சுரக்கும் வள்ளியோய் நின்னே

#205 பெருந்தலை சாத்தனார்
முற்றிய திருவின் மூவர் ஆயினும்
பெட்பு இன்றி ஈதல் யாம் வேண்டலமே
விறல் சினம் தணிந்த விரை பரி புரவி
உறுவர் செல் சார்வு ஆகி செறுவர்
தாள் உளம் தபுத்த வாள் மிகு தானை
வெள் வீ வேலி கோடை_பொருந
சிறியவும் பெரியவும் புழை கெட விலங்கிய
மான் கணம் தொலைச்சிய கடு விசை கத நாய்
நோன் சிலை வேட்டுவ நோய் இலை ஆகுக
ஆர் கலி யாணர் தரீஇய கால்வீழ்த்து
கடல்_வயின் குழீஇய அண்ணல் அம் கொண்மூ
நீர் இன்று பெயரா ஆங்கு தேரொடு
ஒளிறு மருப்பு ஏந்திய செம்மல்
களிறு இன்று பெயரல பரிசிலர் கடும்பே

#206 ஔவையார்
வாயிலோயே வாயிலோயே
வள்ளியோர் செவி முதல் வயங்கு மொழி வித்தி தாம்
உள்ளியது முடிக்கும் உரன் உடை உள்ளத்து
வரிசைக்கு வருந்தும் இ பரிசில் வாழ்க்கை
பரிசிலர்க்கு அடையா வாயிலோயே
கடு மான் தோன்றல் நெடுமான்_அஞ்சி
தன் அறியலன்-கொல் என் அறியலன்-கொல்
அறிவும் புகழும் உடையோர் மாய்ந்து என
வறும் தலை உலகமும் அன்றே அதனால்
காவினெம் கலனே சுருக்கினெம் கல பை
மரம் கொல் தச்சன் கைவல் சிறாஅர்
மழு உடை காட்டு_அகத்து அற்றே
எ திசை செலினும் அ திசை சோறே

#207 பெருஞ்சித்திரனார்
எழு இனி நெஞ்சம் செல்கம் யாரோ
பருகு அன்ன வேட்கை இல்_வழி
அருகில் கண்டும் அறியார் போல
அகம் நக வாரா முகன் அழி பரிசில்
தாள் இலாளர் வேளார் அல்லர்
வருக என வேண்டும் வரிசையோர்க்கே
பெரிதே உலகம் பேணுநர் பலரே
மீளி முன்பின் ஆளி போல
உள்ளம் உள் அவிந்து அடங்காது வெள்ளென
நோவாதோன்_வயின் திரங்கி
வாயா வன் கனிக்கு உலமருவோரே

#208 பெருஞ்சித்திரனார்
குன்றும் மலையும் பல பின் ஒழிய
வந்தனென் பரிசில் கொண்டனென் செலற்கு என
நின்ற என் நயந்து அருளி ஈது கொண்டு
ஈங்கனம் செல்க தான் என என்னை
யாங்கு அறிந்தனனோ தாங்கு அரும் காவலன்
காணாது ஈத்த இ பொருட்கு யான் ஓர்
வாணிக பரிசிலன் அல்லேன் பேணி
தினை அனைத்து ஆயினும் இனிது அவர்
துணை அளவு அறிந்து நல்கினர் விடினே

#209 பெருந்தலை சாத்தனார்
பொய்கை நாரை போர்வில் சேக்கும்
நெய்தல் அம் கழனி நெல் அரி தொழுவர்
கூம்பு விடு மெய் பிணி அவிழ்ந்த ஆம்பல்
அகல் அடை அரியல் மாந்தி தெண் கடல்
படு திரை இன் சீர் பாணி தூங்கும்
மென்_புல வைப்பின் நன் நாட்டு பொருந
பல் கனி நசைஇ அல்கு விசும்பு உகந்து
பெரு மலை விடர்_அகம் சிலம்ப முன்னி
பழன் உடை பெரு மரம் தீர்ந்து என கையற்று
பெறாது பெயரும் புள் இனம் போல நின்
நசை தர வந்து நின் இசை நுவல் பரிசிலென்
வறுவியேன் பெயர்கோ வாள் மேம்படுந
ஈயாய் ஆயினும் இரங்குவென் அல்லேன்
நோய் இலை ஆகு-மதி பெரும நம்முள்
குறு நணி காண்குவது ஆக நாளும்
நறும் பல் ஒலிவரும் கதுப்பின் தே மொழி
தெரி இழை மகளிர் பாணி பார்க்கும்
பெரு வரை அன்ன மார்பின்
செரு வெம் சேஎய் நின் மகிழ் இருக்கையே

#210 பெருங்குன்றூர் கிழார்
மன்பதை காக்கும் நின் புரைமை நோக்காது
அன்பு கண்மாறிய அறன் இல் காட்சியொடு
நும்மனோரும் மற்று இனையர் ஆயின்
எம்மனோர் இவண் பிறவலர் மாதோ
செயிர் தீர் கொள்கை எம் வெம் காதலி
உயிர் சிறிது உடையள் ஆயின் எம் வயின்
உள்ளாது இருத்தலோ அரிதே அதனால்
அறன் இல் கூற்றம் திறன் இன்று துணிய
பிறன் ஆயினன்-கொல் இறீஇயர் என் உயிர் என
நுவல்வு_உறு சிறுமையள் பல புலந்து உறையும்
இடுக்கண் மனையோள் தீரிய இ நிலை
விடுத்தேன் வாழியர் குருசில் உது காண்
அவல நெஞ்சமொடு செல்வல் நின் கறுத்தோர்
அரும் கடி முனை அரண் போல
பெரும் கையற்ற என் புலம்பு முந்துறுத்தே

#211 பெருங்குன்றூர் கிழார்
அஞ்சுவரு மரபின் வெம் சின புயல்_ஏறு
அணங்கு உடை அரவின் அரும் தலை துமிய
நின்று காண்பு அன்ன நீள் மலை மிளிர
குன்று தூவ எறியும் அரவம் போல
முரசு எழுந்து இரங்கும் தானையோடு தலைச்சென்று
அரைசு பட கடக்கும் உரை சால் தோன்றல் நின்
உள்ளி வந்த ஓங்கு நிலை பரிசிலென்
வள்ளியை ஆதலின் வணங்குவன் இவன் என
கொள்ளா மாந்தர் கொடுமை கூற நின்
உள்ளியது முடிந்தோய் மன்ற முன்_நாள்
கை உள்ளது போல் காட்டி வழி நாள்
பொய்யொடு நின்ற புறநிலை வருத்தம்
நாணாய் ஆயினும் நாண கூறி என்
நுணங்கு செம் நா அணங்க ஏத்தி
பாடப்பாட பாடு புகழ் கொண்ட நின்
ஆடு கொள் வியன் மார்பு தொழுதெனன் பழிச்சி
செல்வல் அத்தை யானே வைகலும்
வல்சி இன்மையின் வயின்_வயின் மாறி
இல் எலி மடிந்த தொல் சுவர் வரைப்பின்
பாஅல் இன்மையின் பல் பாடு சுவைத்து
முலை கோள் மறந்த புதல்வனொடு
மனை தொலைந்திருந்த என் வாள்_நுதல் படர்ந்தே

#212 பிசிராந்தையார்
நும் கோ யார் என வினவின் எம் கோ
களமர்க்கு அரித்த விளையல் வெம் கள்
யாமை புழுக்கின் காமம் வீட ஆரா
ஆரல் கொழும் சூடு அம் கவுள் அடாஅ
வைகு தொழில் மடியும் மடியா விழவின்
யாணர் நன் நாட்டுள்ளும் பாணர்
பைதல் சுற்றத்து பசி பகை ஆகி
கோழியோனே கோப்பெருஞ்சோழன்
பொத்து இல் நண்பின் பொத்தியொடு கெழீஇ
வாய் ஆர் பெரு நகை வைகலும் நக்கே

#213 புல்லாற்றூர் எயிற்றியனார்
மண்டு அமர் அட்ட மதன் உடை நோன் தாள்
வெண்குடை விளக்கும் விறல் கெழு வேந்தே
பொங்கு நீர் உடுத்த இ மலர் தலை உலகத்து
நின் தலை வந்த இருவரை நினைப்பின்
தொன்று உறை துப்பின் நின் பகைஞரும் அல்லர்
அமர் வெம் காட்சியொடு மாறு எதிர்பு எழுந்தவர்
நினையும்_காலை நீயும் மற்று அவர்க்கு
அனையை அல்லை அடு_மான் தோன்றல்
பரந்து படு நல் இசை எய்தி மற்று நீ
உயர்ந்தோர்_உலகம் எய்தி பின்னும்
ஒழித்த தாயும் அவர்க்கு உரித்தன்றே
அதனால் அன்னது ஆதலும் அறிவோய் நன்றும்
இன்னும் கேள்-மதி இசை வெய்யோயே
நின்ற துப்பொடு நின் குறித்து எழுந்த
எண் இல் காட்சி இளையோர் தோற்பின்
நின் பெரும் செல்வம் யார்க்கு எஞ்சுவையே
அமர் வெம் செல்வ நீ அவர்க்கு உலையின்
இகழுநர் உவப்ப பழி எஞ்சுவையே
அதனால் ஒழிக தில் அத்தை நின் மறனே வல் விரைந்து
எழு-மதி வாழ்க நின் உள்ளம் அழிந்தோர்க்கு
ஏமம் ஆகும் நின் தாள் நிழல் மயங்காது
செய்தல் வேண்டுமால் நன்றோ வானோர்
அரும்_பெறல்_உலகத்து ஆன்றவர்
விதும்பு_உறு விருப்பொடு விருந்து எதிர்கொளற்கே

#214 கோப்பெரும் சோழன்
செய்குவம்-கொல்லோ நல்வினை எனவே
ஐயம் அறாஅர் கசடு ஈண்டு காட்சி
நீங்கா நெஞ்சத்து துணிவு இல்லோரே
யானை வேட்டுவன் யானையும் பெறுமே
குறும்பூழ் வேட்டுவன் வறும் கையும் வருமே
அதனால் உயர்ந்த வேட்டத்து உயர்ந்திசினோர்க்கு
செய்_வினை மருங்கின் எய்தல் உண்டு எனின்
தொய்யா_உலகத்து நுகர்ச்சியும் கூடும்
தொய்யா_உலகத்து நுகர்ச்சி இல் எனின்
மாறி பிறப்பின் இன்மையும் கூடும்
மாறி பிறவார் ஆயினும் இமயத்து
கோடு உயர்ந்து அன்ன தம் இசை நட்டு
தீது இல் யாக்கையொடு மாய்தல் தவ தலையே

#215 கோப்பெரும் சோழன்
கவை கதிர் வரகின் அவைப்பு_உறு வாக்கல்
தாது எரு மறுகின் போதொடு பொதுளிய
வேளை வெண் பூ வெண் தயிர் கொளீஇ
ஆய்_மகள் அட்ட அம் புளி மிதவை
அவரை கொய்யுநர் ஆர மாந்தும்
தென்னம்பொருப்பன் நன் நாட்டுள்ளும்
பிசிரோன் என்ப என் உயிர் ஓம்புநனே
செல்வ காலை நிற்பினும்
அல்லல் காலை நில்லலன்-மன்னே

#216 கோப்பெரும் சோழன்
கேட்டல் மாத்திரை அல்லது யாவதும்
காண்டல் இல்லாது யாண்டு பல கழிய
வழு இன்று பழகிய கிழமையர் ஆயினும்
அரிதே தோன்றல் அதன் பட ஒழுகல் என்று
ஐயம் கொள்ளன்-மின் ஆர் அறிவாளிர்
இகழ்வு இலன் இனியன் யாத்த நண்பினன்
புகழ் கெட வரூஉம் பொய் வேண்டலனே
தன் பெயர் கிளக்கும்_காலை என் பெயர்
பேதை சோழன் என்னும் சிறந்த
காதல் கிழமையும் உடையவன் அதன்_தலை
இன்னது ஓர் காலை நில்லலன்
இன்னே வருகுவன் ஒழிக்க அவற்கு இடமே

#217 பொத்தியார்
நினைக்கும்_காலை மருட்கை உடைத்தே
எனை பெரும் சிறப்பினோடு ஈங்கு இது துணிதல்
அதனினும் மருட்கை உடைத்தே பிறன் நாட்டு
தோற்றம் சான்ற சான்றோன் போற்றி
இசை மரபு ஆக நட்பு கந்து ஆக
இனையது ஓர் காலை ஈங்கு வருதல்
வருவன் என்ற கோனது பெருமையும்
அது பழுது இன்றி வந்தவன் அறிவும்
விய-தொறும் விய-தொறும் வியப்பு இறந்தன்றே
அதனால் தன் கோல் இயங்கா தேயத்து உறையும்
சான்றோன் நெஞ்சு உற பெற்ற தொன்று இசை
அன்னோனை இழந்த இ உலகம்
என் ஆவது-கொல் அளியது தானே
#218 கண்ணகனார் நத்தத்தனார் எனவும் பாடம்
பொன்னும் துகிரும் முத்தும் மன்னிய
மா மலை பயந்த காமரு மணியும்
இடைபட சேய ஆயினும் தொடை புணர்ந்து
அரு விலை நன் கலம் அமைக்கும்_காலை
ஒரு வழி தோன்றி ஆங்கு என்றும் சான்றோர்
சான்றோர்_பாலர் ஆப
சாலார் சாலார்_பாலர் ஆகுபவே

#219 பெருஞ்கருவூர்ப்சதுக்கத்து பூதநாதனார்
உள் ஆற்று கவலை புள்ளி நீழல்
முழூஉ வள்ளுரம் உணக்கும் மள்ள
புலவுதி மாதோ நீயே
பலரால் அத்தை நின் குறி இருந்தோரே

#220 பொத்தியார்
பெரும் சோறு பயந்து பல் யாண்டு புரந்த
பெரும் களிறு இழந்த பைதல் பாகன்
அது சேர்ந்து அல்கிய அழுங்கல் ஆலை
வெளில் பாழ் ஆக கண்டு கலுழ்ந்து ஆங்கு
கலங்கினேன் அல்லனோ யானே பொலம் தார்
தேர் வண் கிள்ளி போகிய
பேர் இசை மூதூர் மன்றம் கண்டே

#221 பொத்தியார்
பாடுநர்க்கு ஈத்த பல் புகழன்னே
ஆடுநர்க்கு ஈத்த பேர் அன்பினனே
அறவோர் புகழ்ந்த ஆய் கோலன்னே
திறவோர் புகழ்ந்த திண் அன்பினனே
மகளிர் சாயல் மைந்தர்க்கு மைந்து
துகள் அறு கேள்வி உயர்ந்தோர் புக்கில்
அனையன் என்னாது அ தக்கோனை
நினையா கூற்றம் இன் உயிர் உய்த்தன்று
பைதல் ஒக்கல் தழீஇ அதனை
வைகம் வம்மோ வாய்மொழி புலவீர்
நனம் தலை உலகம் அரந்தை தூங்க
கெடு இல் நல் இசை சூடி
நடுகல் ஆயினன் புரவலன் எனவே

#222 பொத்தியார்
அழல் அவிர் வயங்கு இழை பொலிந்த மேனி
நிழலினும் போகா நின் வெய்யோள் பயந்த
புகழ் சால் புதல்வன் பிறந்த பின் வா என
என் இவண் ஒழித்த அன்பு இலாள
எண்ணாது இருக்குவை அல்லை
என் இடம் யாது மற்று இசை வெய்யோயே

#223 பொத்தியார்
பலர்க்கு நிழல் ஆகி உலகம் மீக்கூறி
தலைப்போகு அன்மையின் சிறு வழி மடங்கி
நிலை பெறு நடுகல் ஆகிய கண்ணும்
இடம் கொடுத்து அளிப்ப மன்ற உடம்போடு
இன் உயிர் விரும்பும் கிழமை
தொல் நட்பு உடையார் தம் உழை செலினே

#224 கருங்குழல் ஆதனார்
அருப்பம் பேணாது அமர் கடந்ததூஉம்
துணை புணர் ஆயமொடு தசும்பு உடன் தொலைச்சி
இரும் பாண் ஒக்கல் கடும்பு புரந்ததூஉம்
அறம் அற கண்ட நெறி மாண் அவையத்து
முறை நற்கு அறியுநர் முன் உற புகழ்ந்த
தூ இயல் கொள்கை துகள் அறு மகளிரொடு
பருதி உருவின் பல் படை புரிசை
எருவை நுகர்ச்சி யூப நெடும் தூண்
வேத வேள்வி தொழில் முடித்ததூஉம்
அறிந்தோன் மன்ற அறிவு உடையாளன்
இறந்தோன் தானே அளித்து இ உலகம்
அருவி மாறி அஞ்சுவர கருகி
பெரு வறம் கூர்ந்த வேனில் காலை
பசித்த ஆயத்து பயன் நிரை தரும்-மார்
பூ வாள் கோவலர் பூ உடன் உதிர
கொய்து கட்டு அழித்த வேங்கையின்
மெல் இயல் மகளிரும் இழை களைந்தனரே

#225 ஆலத்தூர் கிழார்
தலையோர் நுங்கின் தீம் சேறு மிசைய
இடையோர் பழத்தின் பைம் கனி மாந்த
கடையோர் விடு வாய் பிசிரொடு சுடு கிழங்கு நுகர
நில மலர் வையத்து வல முறை வளைஇ
வேந்து பீடு அழித்த ஏந்து வேல் தானையொடு
ஆற்றல் என்பதன் தோற்றம் கேள் இனி
கள்ளி போகிய களரி அம் பறந்தலை
முள் உடை வியன் காட்டதுவே நன்றும்
சேட்சென்னி நலங்கிள்ளி கேட்குவன்-கொல் என
இன் இசை பறையொடு வென்றி நுவல
தூக்கணம்_குரீஇ தூங்கு கூடு ஏய்ப்ப
ஒரு சிறை கொளீஇய திரி வாய் வலம்புரி
ஞாலம் காவலர் கடை தலை
காலை தோன்றினும் நோகோ யானே

#226
செற்றன்று ஆயினும் செயிர்த்தன்று ஆயினும்
உற்றன்று ஆயினும் உய்வு இன்று மாதோ
பாடுநர் போல கைதொழுது ஏத்தி
இரந்தன்று ஆகல் வேண்டும் பொலம் தார்
மண்டு அமர் கடக்கும் தானை
திண் தேர் வளவன் கொண்ட கூற்றே

#227
நனி பேதையே நயன் இல் கூற்றம்
விரகு இன்மையின் வித்து அட்டு உண்டனை
இன்னும் காண்குவை நன் வாய் ஆகுதல்
ஒளிறு வாள் மறவரும் களிறும் மாவும்
குருதி அம் குரூஉ புனல் பொரு_களத்து ஒழிய
நாளும் ஆனான் கடந்து அட்டு என்றும் நின்
வாடு பசி அருத்திய பழி தீர் ஆற்றல்
நின் ஓர் அன்ன பொன் இயல் பெரும் பூண்
வளவன் என்னும் வண்டு மூசு கண்ணி
இனையோன் கொண்டனை ஆயின்
இனி யார் மற்று நின் பசி தீர்ப்போரே

#228
கலம் செய் கோவே கலம் செய் கோவே
இருள் திணிந்து அன்ன குரூஉ திரள் பரூஉ புகை
அகல் இரு விசும்பின் ஊன்றும் சூளை
நனம் தலை மூதூர் கலம் செய் கோவே
அளியை நீயே யாங்கு ஆகுவை-கொல்
நிலவரை சூட்டிய நீள் நெடும் தானை
புலவர் புகழ்ந்த பொய்யா நல் இசை
விரி கதிர் ஞாயிறு விசும்பு இவர்ந்து அன்ன
சேண் விளங்கு சிறப்பின் செம்பியர் மருகன்
கொடி நுடங்கு யானை நெடுமாவளவன்
தேவர்_உலகம் எய்தினன் ஆதலின்
அன்னோர் கவிக்கும் கண் அகன் தாழி
வனைதல் வேட்டனை ஆயின் எனையதூஉம்
இரு நிலம் திகிரியா பெரு மலை
மண்ணா வனைதல் ஒல்லுமோ நினக்கே

#229 கூடலூர் கிழார்
ஆடு இயல் அழல் குட்டத்து
ஆர் இருள் அரை இரவில்
முட பனையத்து வேர் முதலா
கடை குளத்து கயம் காய
பங்குனி உயர் அழுவத்து
தலை நாள்_மீன் நிலை திரிய
நிலை நாள்_மீன் அதன்_எதிர் ஏர்தர
தொல் நாள்_மீன் துறை படிய
பாசி செல்லாது ஊசி துன்னாது
அளக்கர் திணை விளக்கு ஆக
கனை எரி பரப்ப கால் எதிர்பு பொங்கி
ஒரு மீன் விழுந்தன்றால் விசும்பினானே
அது கண்டு யாமும் பிறரும் பல் வேறு இரவலர்
பறை இசை அருவி நன் நாட்டு பொருநன்
நோய் இலன் ஆயின் நன்று-மன் தில் என
அழிந்த நெஞ்சம் மடி உளம் பரப்ப
அஞ்சினம் எழு நாள் வந்தன்று இன்றே
மைந்து உடை யானை கை வைத்து உறங்கவும்
திண் பிணி முரசும் கண் கிழிந்து உருளவும்
காவல் வெண்குடை கால் பரிந்து உலறவும்
கால் இயல் கலி_மா கதி இன்றி வைகவும்
மேலோர்_உலகம் எய்தினன் ஆகலின்
ஒண் தொடி மகளிர்க்கு உறுதுணை ஆகி
தன் துணை ஆயம் மறந்தனன்-கொல்லோ
பகைவர் பிணிக்கும் ஆற்றல் நசைவர்க்கு
அளந்து கொடை அறியா ஈகை
மணி வரை அன்ன மாஅயோனே

#230
கன்று அமர் ஆயம் கானத்து அல்கவும்
வெம் கால் வம்பலர் வேண்டு புலத்து உறையவும்
களம் மலி குப்பை காப்பு இல வைகவும்
விலங்கு பகை கடிந்த கலங்கா செங்கோல்
வையகம் புகழ்ந்த வயங்கு வினை ஒள் வாள்
பொய்யா எழினி பொருது களம் சேர
ஈன்றோள் நீத்த குழவி போல
தன் அமர் சுற்றம் தலைத்தலை இனைய
கடும் பசி கலக்கிய இடும்பை கூர் நெஞ்சமொடு
நோய் உழந்து வைகிய உலகினும் மிக நனி
நீ இழந்தனையே அறன் இல் கூற்றம்
வாழ்தலின் வரூஉம் வயல் வளன் அறியான்
வீழ் குடி உழவன் வித்து உண்டு ஆங்கு
ஒருவன் ஆர் உயிர் உண்ணாய் ஆயின்
நேரார் பல் உயிர் பருகி
ஆர்குவை-மன்னோ அவன் அமர் அடு_களத்தே

#231
எறி புன குறவன் குறையல் அன்ன
கரி புற விறகின் ஈம ஒள் அழல்
குறுகினும் குறுகுக குறுகாது சென்று
விசும்பு உற நீளினும் நீள்க பசும் கதிர்
திங்கள் அன்ன வெண்குடை
ஒண் ஞாயிறு அன்னோன் புகழ் மாயலவே

#232
இல் ஆகியரோ காலை மாலை
அல் ஆகியர் யான் வாழும் நாளே
நடுகல் பீலி சூட்டி நார் அரி
சிறு கலத்து உகுப்பவும் கொள்வன்-கொல்லோ
கோடு உயர் பிறங்கு மலை கெழீஇய
நாடு உடன் கொடுப்பவும் கொள்ளாதோனே

#233
பொய் ஆகியரோ பொய் ஆகியரோ
பா அடி யானை பரிசிலர்க்கு அருகா
சீர் கெழு நோன் தாள் அகுதை_கண் தோன்றிய
பொன் புனை திகிரியின் பொய் ஆகியரோ
இரும் பாண் ஒக்கல் தலைவன் பெரும் பூண்
போர் அடு தானை எவ்வி மார்பின்
எஃகு உறு விழுப்புண் பல என
வைகுறு விடியல் இயம்பிய குரலே

#234
நோகோ யானே தேய்கமா காலை
பிடி அடி அன்ன சிறு வழி மெழுகி
தன் அமர் காதலி புல் மேல் வைத்த
இன் சிறு பிண்டம் யாங்கு உண்டனன்-கொல்
உலகு புக திறந்த வாயில்
பலரோடு உண்டல் மரீஇயோனே

#235
சிறிய கள் பெறினே எமக்கு ஈயும்-மன்னே
பெரிய கள் பெறினே
யாம் பாட தான் மகிழ்ந்து உண்ணும்-மன்னே
சிறு சோற்றானும் நனி பல கலத்தன்-மன்னே
பெரும் சோற்றானும் நனி பல கலத்தன்-மன்னே
என்பொடு தடி படு இடம் எல்லாம் எமக்கு ஈயும்-மன்னே
அம்பொடு வேல் நுழை வழி எல்லாம் தான் நிற்கும்-மன்னே
நரந்தம் நாறும் தன் கையால்
புலவு நாறும் என் தலை தைவரும்-மன்னே
அரும் தலை இரும் பாணர் அகல் மண்டை துளை உரீஇ
இரப்போர் கையுளும் போகி
புரப்போர் புன்கண் பாவை சோர
அம் சொல் நுண் தேர்ச்சி புலவர் நாவில்
சென்று வீழ்ந்தன்று அவன்
அரு நிறத்து இயங்கிய வேலே
ஆசு ஆகு எந்தை ஆண்டு உளன்-கொல்லோ
இனி பாடுநரும் இல்லை பாடுநர்க்கு ஒன்று ஈகுநரும் இல்லை
பனி துறை பகன்றை நறை கொள் மா மலர்
சூடாது வைகி ஆங்கு பிறர்க்கு ஒன்று
ஈயாது வீயும் உயிர் தவ பலவே

#236
கலை உண கிழிந்த முழவு மருள் பெரும் பழம்
சிலை கெழு குறவர்க்கு அல்கு மிசைவு ஆகும்
மலை கெழு நாட மா வண் பாரி
கலந்த கேண்மைக்கு ஒவ்வாய் நீ என்
புலந்தனை ஆகுவை புரந்த ஆண்டே
பெரும் தகு சிறப்பின் நட்பிற்கு ஒல்லாது
ஒருங்கு வரல் விடாஅது ஒழிக என கூறி
இனையை ஆதலின் நினக்கு மற்று யான்
மேயினேன் அன்மையானே ஆயினும்
இம்மை போல காட்டி உம்மை
இடை இல் காட்சி நின்னோடு
உடன் உறைவு ஆக்குக உயர்ந்த பாலே

#237
நீடு வாழ்க என்று யான் நெடும் கடை குறுகி
பாடி நின்ற பசி நாள் கண்ணே
கோடை காலத்து கொழு நிழல் ஆகி
பொய்த்தல் அறியா உரவோன் செவி முதல்
வித்திய பனுவல் விளைந்தன்று நன்று என
நச்சி இருந்த நசை பழுது ஆக
அட்ட குழிசி அழல் பயந்து ஆஅங்கு
அளியர் தாமே ஆர்க என்னா
அறன் இல் கூற்றம் திறன் இன்று துணிய
ஊழின் உருப்ப எருக்கிய மகளிர்
வாழை பூவின் வளை முறி சிதற
முது வாய் ஒக்கல் பரிசிலர் இரங்க
கள்ளி போகிய களரி அம் பறந்தலை
வெள் வேல் விடலை சென்று மாய்ந்தனனே
ஆங்கு அது நோய் இன்று ஆக ஓங்கு வரை
புலி பார்த்து ஒற்றிய களிற்று இரை பிழைப்பின்
எலி பார்த்து ஒற்றாது ஆகும் மலி திரை
கடல் மண்டு புனலின் இழுமென சென்று
நனி உடை பரிசில் தருகம்
எழு-மதி நெஞ்சே துணிபு முந்துறுத்தே

#238
கவி செம் தாழி குவி புறத்து இருந்த
செவி செம் சேவலும் பொகுவலும் வெருவா
வாய் வன் காக்கையும் கூகையும் கூடி
பேஎய் ஆயமொடு பெட்டு ஆங்கு வழங்கும்
காடு முன்னினனே கள் காமுறுநன்
தொடி_கழி_மகளிரின் தொல் கவின் வாடி
பாடுநர் கடும்பும் பையென்றனவே
தோடு கொள் முரசும் கிழிந்தன கண்ணே
ஆள் இல் வரை போல் யானையும் மருப்பு இழந்தனவே
வெம் திறல் கூற்றம் பெரும் பேது உறுப்ப
எந்தை ஆகுல அதன் படல் அறியேன்
அந்தோ அளியேன் வந்தனென் மன்ற
என் ஆகுவர்-கொல் என் துன்னியோரே
மாரி இரவின் மரம் கவிழ் பொழுதின்
ஆர் அஞர் உற்ற நெஞ்சமொடு ஒராங்கு
கண் இல் ஊமன் கடல் பட்டு ஆங்கு
வரை அளந்து அறியா திரை அரு நீத்தத்து
அவல மறு சுழி மறுகலின்
தவலே நன்று-மன் தகுதியும் அதுவே

#239
தொடி உடைய தோள் மணந்தனன்
கடி காவில் பூ சூடினன்
தண் கமழும் சாந்து நீவினன்
செற்றோரை வழி தபுத்தனன்
நட்டோரை உயர்பு கூறினன்
வலியர் என வழிமொழியலன்
மெலியர் என மீக்கூறலன்
பிறரை தான் இரப்பு அறியலன்
இரந்தோர்க்கு மறுப்பு அறியலன்
வேந்து உடை அவையத்து ஓங்கு புகழ் தோற்றினன்
வரு படை எதிர்தாங்கினன்
பெயர் படை புறங்கண்டனன்
கடும் பரிய மா கடவினன்
நெடும் தெருவில் தேர் வழங்கினன்
ஓங்கு இயல களிறு ஊர்ந்தனன்
தீம் செறி தசும்பு தொலைச்சினன்
பாண் உவப்ப பசி தீர்த்தனன்
மயக்கு உடைய மொழி விடுத்தனன் ஆங்கு
செய்ப எல்லாம் செய்தனன் ஆகலின்
இடுக ஒன்றோ சுடுக ஒன்றோ
படு வழி படுக இ புகழ் வெய்யோன் தலையே

#240
ஆடு நடை புரவியும் களிறும் தேரும்
வாடா யாணர் நாடும் ஊரும்
பாடுநர்க்கு அருகா ஆஅய் அண்டிரன்
கோடு ஏந்து அல்குல் குறும் தொடி மகளிரொடு
காலன் என்னும் கண்ணிலி உய்ப்ப
மேலோர்_உலகம் எய்தினன் எனாஅ
பொத்த அறையுள் போழ் வாய் கூகை
சுட்டு குவி என செத்தோர் பயிரும்
கள்ளி அம் பறந்தலை ஒரு சிறை அல்கி
ஒள் எரி நைப்ப உடம்பு மாய்ந்தது
புல்லென் கண்ணர் புரவலர் காணாது
கல்லென் சுற்றமொடு கையழிந்து புலவர்
வாடிய பசியர் ஆகி பிறர்
நாடு படு செலவினர் ஆயினர் இனியே

#241 உறையூர் ஏணிச்சேரி முடமோசியார்
திண் தேர் இரவலர்க்கு ஈத்த தண் தார்
அண்டிரன் வரூஉம் என்ன ஒண் தொடி
வச்சிர தட கை நெடியோன் கோயிலுள்
போர்ப்பு_உறு முரசும் கறங்க
ஆர்ப்பு எழுந்தன்றால் விசும்பினானே

#242 குடவாயி தீரத்தனாரி
இளையோர் சூடார் வளையோர் கொய்யார்
நல் யாழ் மருப்பின் மெல்ல வாங்கி
பாணன் சூடான் பாடினி அணியாள்
ஆண்மை தோன்ற ஆடவர் கடந்த
வல் வேல் சாத்தன் மாய்ந்த பின்றை
முல்லையும் பூத்தியோ ஒல்லையூர் நாட்டே

#243 தொடித்தலை விழுத்தண்டினார்
இனி நினைந்து இரக்கம் ஆகின்று திணி மணல்
செய்வு_உறு பாவைக்கு கொய் பூ தைஇ
தண் கயம் ஆடும் மகளிரொடு கை பிணைந்து
தழுவு_வழி தழீஇ தூங்கு_வழி தூங்கி
மறை எனல் அறியா மாயம் இல் ஆயமொடு
உயர் சினை மருத துறை உற தாழ்ந்து
நீர் நணி படி கோடு ஏறி சீர் மிக
கரையவர் மருள திரை_அகம் பிதிர
நெடு நீர் குட்டத்து துடுமென பாய்ந்து
குளித்து மணல் கொண்ட கல்லா இளமை
அளிதோ தானே யாண்டு உண்டு-கொல்லோ
தொடி தலை விழு தண்டு ஊன்றி நடுக்கு_உற்று
இரும் இடை மிடைந்த சில சொல்
பெரு மூதாளரேம் ஆகிய எமக்கே

#244
பாணர் சென்னியும் வண்டு சென்று ஊதா
விறலியர் முன்கையும் தொடியின் பொலியா
இரவல் மாக்களும்

#245 சேரமான் கோட்டம்பலத்து துஞ்சிய மாக்கோதை
யாங்கு பெரிது ஆயினும் நோய் அளவு எனைத்தே
உயிர் செகுக்க அல்லா மதுகைத்து அன்மையின்
கள்ளி போகிய களரி அம் பறந்தலை
வெள் இடை பொத்திய விளை விறகு ஈமத்து
ஒள் அழல் பள்ளி பாயல் சேர்த்தி
ஞாங்கர் மாய்ந்தனள் மடந்தை
இன்னும் வாழ்வல் என் இதன் பண்பே

#246 பூத பாண்டியன் தேவி பெருங்கோப்பெண்டு
பல் சான்றீரே பல் சான்றீரே
செல்க என சொல்லாது ஒழிக என விலக்கும்
பொல்லா சூழ்ச்சி பல் சான்றீரே
அணில்_வரி_கொடும்_காய் வாள் போழ்ந்திட்ட
காழ் போல் நல் விளர் நறு நெய் தீண்டாது
அடை இடை கிடந்த கை பிழி பிண்டம்
வெள் என் சாந்தொடு புளி பெய்து அட்ட
வேளை வெந்ததை வல்சி ஆக
பரல் பெய் பள்ளி பாய் இன்று வதியும்
உயவல் பெண்டிரேம் அல்லேம் மாதோ
பெரும் காட்டு பண்ணிய கரும் கோட்டு ஈமம்
நுமக்கு அரிது ஆகுக தில்ல எமக்கு எம்
பெரும் தோள் கணவன் மாய்ந்து என அரும்பு அற
வள் இதழ் அவிழ்ந்த தாமரை
நள் இரும் பொய்கையும் தீயும் ஓர் அற்றே

#247 மதுரை பேராலவாயர்
யானை தந்த முளி மர விறகின்
கானவர் பொத்திய ஞெலி தீ விளக்கத்து
மட மான் பெரு நிரை வைகு துயில் எடுப்பி
மந்தி சீக்கும் அணங்கு உடை முன்றிலில்
நீர் வார் கூந்தல் இரும் புறம் தாழ
பேர் அஞர் கண்ணள் பெரும் காடு நோக்கி
தெருமரும் அம்ம தானே தன் கொழுநன்
முழவு கண் துயிலா கடி உடை வியன் நகர்
சிறு நனி தமியள் ஆயினும்
இன் உயிர் நடுங்கும் தன் இளமை புறங்கொடுத்தே

#248 ஒக்கூர் மாசாத்தனார்
அளிய தாமே சிறு வெள் ஆம்பல்
இளையம் ஆக தழை ஆயினவே இனியே
பெரு வள கொழுநன் மாய்ந்து என பொழுது மறுத்து
இன்னா வைகல் உண்ணும்
அல்லி படூஉம் புல் ஆயினவே

#249 தும்பி சொகினனார் தும்பிசேர் கீரனார் என்பதும் ஆம்
கதிர் மூக்கு ஆரல் கீழ் சேற்று ஒளிப்ப
கணை கோட்டு வாளை மீ நீர் பிறழ
எரி பூ பழனம் நெரித்து உடன் வலைஞர்
அரி குரல் தடாரியின் யாமை மிளிர
பனை நுகும்பு அன்ன சினை முதிர் வராலொடு
உறழ் வேல் அன்ன ஒண் கயல் முகக்கும்
அகல் நாட்டு அண்ணல் புகாவே நெருநை
பகல் இடம் கண்ணி பலரொடும் கூடி
ஒருவழிப்பட்டன்று-மன்னே இன்றே
அடங்கிய கற்பின் ஆய் நுதல் மடந்தை
உயர்_நிலை_உலகம் அவன் புக வார
நீறு ஆடு சுளகின் சீறிடம் நீக்கி
அழுதல் ஆனா கண்ணள்
மெழுகும் ஆப்பி கண் கலுழ் நீரானே

#250 தாயம் கண்ணியார்
குய் குரல் மலிந்த கொழும் துவை அடிசில்
இரவலர் தடுத்த வாயில் புரவலர்
கண்ணீர் தடுத்த தண் நறும் பந்தர்
கூந்தல் கொய்து குறும் தொடு நீக்கி
அல்லி உணவின் மனைவியொடு இனியே
புல்லென்றனையால் வளம் கெழு திரு நகர்
வான் சோறு கொண்டு தீம் பால் வேண்டும்
முனி தலை புதல்வர் தந்தை
தனித்தலை பெரும் காடு முன்னிய பின்னே