<<முந்திய பக்கம்

புறநானூறு (351 - 400)

# 351 மதுரை படைமங்க மன்னியார்
படு மணி மருங்கின பணை தாள் யானையும்
கொடி நுடங்கு மிசைய தேரும் மாவும்
படை அமை மறவரொடு துவன்றி கல்லென
கடல் கண்டு அன்ன கண் அகன் தானை
வென்று எறி முரசின் வேந்தர் என்றும்
வண் கை எயினன் வாகை அன்ன
இவள் நலம் தாராது அமைகுவர் அல்லர்
என் ஆவது-கொல் தானே தெண் நீர்
பொய்கை மேய்ந்த செ வரி நாரை
தேம் கொள் மருதின் பூ சினை முனையின்
காமரு காஞ்சி துஞ்சும்
ஏமம் சால் சிறப்பின் இ பணை நல் ஊரே

# 352 பரணர்
தேஎம் கொண்ட வெண் மண்டையான்
வீங்கு முலை கறக்குந்து
அவல் வகுத்த பசும் குடையான்
புதன் முல்லை பூ பறிக்குந்து
ஆம்பல் வள்ளி தொடி கை மகளிர்
குன்று ஏறி புனல் பாயின்
புற வாயால் புனல் வரையுந்து
நொடை நறவின்
மா வண் தித்தன் வெண்ணெல் வேலி
உறந்தை அன்ன உரை சால் நன் கலம்
கொடுப்பவும் கொளாஅ
விரி சினை துணர்ந்த நாகு இள வேங்கையின்
கதிர்த்து ஒளி திகழும் நுண் பல் சுணங்கின்
மா கண் மலர்ந்த முலையள் தன்னையும்
சிறு கோல் உளையும் புரவியொடு
யாரே

# 353 காவிரிப்பூம் பட்டினத்து காரிக்கண்ணனார்
ஆசு இல் கம்மியன் மாசு அற புனைந்த
பொலம் செய் பல் காசு அணிந்த அல்குல்
ஈகை கண்ணி இலங்க தைஇ
தருமமொடு இயல்வோள் சாயல் நோக்கி
தவிர்த்த தேரை விளர்த்த கண்ணை
வினவல் ஆனா வெல் போர் அண்ணல்
யார் மகள் என்போய் கூற கேள் இனி
குன்று கண்டு அன்ன நிலை பல் போர்பு
நாள் கடா அழித்த நனம் தலை குப்பை
வல் வில் இளையர்க்கு அல்கு பதம் மாற்றா
தொல் குடி மன்னன் மகளே முன்_நாள்
கூறி வந்த மா முது வேந்தர்க்கு
உழக்கு குருதி ஓட்டி
கதுவாய் போகிய நுதி வாய் எஃகமொடு
பஞ்சியும் களையா புண்ணர்
அஞ்சு_தகவு உடையர் இவள் தன்னைமாரே

# 354 பரணர்
அரைசு தலைவரினும் அடங்கல் ஆனா
நிரை காழ் எஃகம் நீரின் மூழ்க
புரையோர் சேர்ந்து என தந்தையும் பெயர்க்கும்
வயல் அமர் கழனி வாயில் பொய்கை
கயல் ஆர் நாரை உகைத்த வாளை
புனல் ஆடு மகளிர் வள மனை ஒய்யும்
ஊர் கவின் இழப்பவும் வருவது-கொல்லோ
சுணங்கு அணிந்து எழிலிய அணந்து ஏந்து இள முலை
வீங்கு இறை பணை தோள் மடந்தை
மான் பிணை அன்ன மகிழ் மட நோக்கே

# 355
மதிலும் ஞாயில் இன்றே கிடங்கும்
நீஇர் இன்மையின் கன்று மேய்ந்து உகளும்
ஊரது நிலைமையும் இதுவே மற்றே
எண்ணா மையலன் தந்தை தன் ஐயர்
கண் ஆர் கண்ணி கடு மான் கிள்ளி

# 356 தாயங்கண்ணனார்
களரி பரந்து கள்ளி போகி
பகலும் கூஉம் கூகையொடு பிறழ் பல்
ஈம விளக்கின் பேஎய்_மகளிரொடு
அஞ்சு வந்தன்று இ மஞ்சு படு முதுகாடு
நெஞ்சு அமர் காதலர் அழுத கண்ணீர்
என்பு படு சுடலை வெண் நீறு அவிப்ப
எல்லார் புறனும் தான் கண்டு உலகத்து
மன்பதை எல்லாம் தானாய்
தன் புறம் காண்போர் காண்பு அறியாதே

# 357 பிரமனார்
குன்று தலைமணந்த மலை பிணித்து யாத்த மண்
பொதுமை சுட்டிய மூவர் உலகமும்
பொதுமை இன்றி ஆண்டிசினோர்க்கும்
மாண்ட அன்றே ஆண்டுகள் துணையே
வைத்தது அன்றே வெறுக்கை
புணை கைவிட்டோர்க்கு அரிதே துணை அழ
தொக்கு உயிர் வௌவும்_காலை
இ கரை நின்று இவர்ந்து உ கரை கொளலே

# 358 வான்மீகியார்
பருதி சூழ்ந்த இ பயம் கெழு மா நிலம்
ஒரு பகல் எழுவர் எய்தி அற்றே
வையமும் தவமும் தூக்கின் தவத்துக்கு
ஐயவி அனைத்தும் ஆற்றாது ஆகலின்
கைவிட்டனரே காதலர் அதனால்
விட்டோரை விடாஅள் திருவே
விடாஅதோர் இவள் விடப்பட்டோரே

# 359 கரவட்டனாரி
பாறுபட பறைந்த பன் மாறு மருங்கின்
வேறு படு குரல வெம் வாய் கூகையொடு
பிணம் தின் குறு நரி நிணம் திகழ் பல்ல
பேஎய் மகளிர் பிணம் தழூஉ பற்றி
விளர் ஊன் தின்ற வெம் புலால் மெய்யர்
களரி மருங்கின் கால் பெயர்த்து ஆடி
ஈம விளக்கின் வெருவர பேரும்
காடு முன்னினரே நாடு கொண்டோரும்
நினக்கும் வருதல் வைகல் அற்றே
வசையும் நிற்கும் இசையும் நிற்கும்
அதனால் வசை நீக்கி இசை வேண்டியும்
நசை வேண்டாது நன்று மொழிந்தும்
நிலவு கோட்டு பல களிற்றோடு
பொலம் படைய மா மயங்கிட
இழை கிளர் நெடும் தேர் இரவலர்க்கு அருகாது
கொள் என விடுவை ஆயின் வெள்ளென
ஆண்டு நீ பெயர்ந்த பின்னும்
ஈண்டு நீடு விளங்கும் நீ எய்திய புகழே

# 360 சங்க வருணர் என்னும் நாகரியர்
பெரிது ஆரா சிறு சினத்தர்
சில சொல்லால் பல கேள்வியர்
நுண் உணர்வினால் பெரும் கொடையர்
கலுழ் நனையால் தண் தேறலர்
கனி குய்யான் கொழும் துவையர்
தாழ் உவந்து தழூஉ மொழியர்
பயன் உறுப்ப பலர்க்கு ஆற்றி
ஏமம் ஆக இ நிலம் ஆண்டோர்
சிலரே பெரும கேள் இனி நாளும்
பலரே தகையஃது அறியாதோரே
அன்னோர் செல்வமும் மன்னி நில்லாது
இன்னும் அற்று அதன் பண்பே அதனால்
நிச்சமும் ஒழுக்கம் முட்டு இலை பரிசில்
நச்சுவர் கையின் நிரப்பல் ஓம்பு-மதி அச்சு வர
பாறு இறைகொண்ட பறந்தலை மா கத
கள்ளி போகிய களரி மருங்கின்
வெள்ளில் நிறுத்த பின்றை கள்ளொடு
புல்_அகத்து இட்ட சில் அவிழ் வல்சி
புலையன் ஏவ புல் மேல் அமர்ந்து உண்டு
அழல் வாய் புக்க பின்னும்
பலர் வாய்த்து இராஅர் பகுத்து உண்டோரே

# 361
கார் எதிர் உருமின் உரறி கல்லென
ஆர் உயிர்க்கு அலமரும் ஆரா கூற்றம்
நின் வரவு அஞ்சலன் மாதோ நன் பல
கேள்வி முற்றிய வேள்வி அந்தணர்க்கு
அரும் கலம் நீரொடு சிதறி பெருந்தகை
தாயின் நன்று பலர்க்கு ஈத்து
தெருள் நடை மா களிறொடு தன்
அருள் பாடுநர்க்கு நன்கு அருளியும்
உருள் நடை பஃறேர் ஒன்னார் கொன்ற தன்
தாள் சேருநர்க்கு இனிது ஈத்தும்
புரி மாலையர் பாடினிக்கு
பொலம் தாமரை பூ பாணரொடு
கலந்து அளைஇய நீள் இருக்கையால்
பொறையொடு மலிந்த கற்பின் மான் நோக்கின்
வில் என விலங்கிய புருவத்து வல்லென
நல்கின் நா அஞ்சும் முள் எயிற்று மகளிர்
அல்குல் தாங்கா அசைஇ மெல்லென
கலம்_கலம் தேறல் பொலம் கலத்து ஏந்தி
அமிழ்து என மடுப்ப மாந்தி இகழ்வு இலன்
நில்லா உலகத்து நிலையாமை நீ
சொல்லா வேண்டா தோன்றல் முந்து அறிந்த
முழுது உணர் கேள்வியன் ஆகலின் விரகினானே

# 362 சிறுவெண்டேரையார்
ஞாயிற்று அன்ன ஆய் மணி மிடைந்த
மதி உறழ் ஆரம் மார்பில் புரள
பலி பெறு முரசம் பாசறை சிலைப்ப
பொழில்_அகம் பரந்த பெரும் செய் ஆடவர்
செரு புகன்று எடுக்கும் விசய வெண் கொடி
அணங்கு உருத்து அன்ன கணம்_கொள் தானை
கூற்றத்து அன்ன மாற்று அரு முன்பின்
ஆ குரல் காண்பின் அந்தணாளர்
நான்மறை குறித்தன்று அருள் ஆகாமையின்
அறம் குறித்தன்று பொருள் ஆகுதலின்
மருள் தீர்ந்து மயக்கு ஒரீஇ
கை பெய்த நீர் கடல் பரப்ப
ஆம் இருந்த அடை நல்கி
சோறு கொடுத்து மிக பெரிதும்
வீறு சால் நன் கலம் வீசி நன்றும்
சிறு வெள் என்பின் நெடு வெண் களரின்
வாய் வன் காக்கை கூகையொடு கூடி
பகலும் கூவும் அகலுள் ஆங்கண்
காடு கண் மறைத்த கல்லென் சுற்றமொடு
இல் என்று இல் வயின் பெயர மெல்ல
இடம் சிறிது ஒதுங்கல் அஞ்சி
உடம்பொடும் செல்-மார் உயர்ந்தோர் நாட்டே

# 363 ஐயாதி சிறுவெண்டேரையார்
இரும் கடல் உடுத்த இ பெரும் கண் மா நிலம்
உடை இலை நடுவணது இடை பிறர்க்கு இன்றி
தாமே ஆண்ட ஏமம் காவலர்
இடு திரை மணலினும் பலரே சுடு பிண
காடு பதி ஆக போகி தத்தம்
நாடு பிறர் கொள சென்று மாய்ந்தனரே
அதனால் நீயும் கேள்-மதி அத்தை வீயாது
உடம்பொடு நின்ற உயிரும் இல்லை
மடங்கல் உண்மை மாயமோ அன்றே
கள்ளி ஏய்ந்த முள்ளி அம் புறங்காட்டு
வெள்ளில் போகிய வியலுள் ஆங்கண்
உப்பு இலாஅ அவி புழுக்கல்
கை கொண்டு பிறக்கு நோக்காது
இழிபிறப்பினோன் ஈய பெற்று
நிலம் கலன் ஆக இலங்கு பலி மிசையும்
இன்னா வைகல் வாரா முன்னே
செய் நீ முன்னிய வினையே
முந்நீர் வரைப்பு_அகம் முழுது உடன் துறந்தே

# 364 கூகை கோரியார்
வாடா மாலை பாடினி அணிய
பாணன் சென்னி கேணி பூவா
எரி மருள் தாமரை பெரு மலர் தயங்க
மை விடை இரும் போத்து செம் தீ சேர்த்தி
காயம் கனிந்த கண் அகன் கொழும் குறை
நறவு உண் செம் வாய் நா திறம் பெயர்ப்ப
உண்டும் தின்றும் இரப்போர்க்கு ஈய்ந்தும்
மகிழ்கம் வம்மோ மற போரோயே
அரிய ஆகலும் உரிய பெரும
நிலம் பக வீழ்ந்த அலங்கல் பல் வேர்
முது மர பொத்தின் கதுமென இயம்பும்
கூகை கோழி ஆனா
தாழிய பெரும் காடு எய்திய ஞான்றே

# 365 மார்க்கண்டேயனார்
மயங்கு இரும் கருவிய விசும்பு முகன் ஆக
இயங்கிய இரு சுடர் கண் என பெயரிய
வளி இடை வழங்கா வழக்கு அரு நீத்தம்
வயிர குறட்டின் வயங்கு மணி ஆரத்து
பொன் அம் திகிரி முன் சமத்து உருட்டி
பொருநர் காணா செரு மிகு முன்பின்
முன்னோர் செல்லவும் செல்லாது இன்னும்
விலை_நல_பெண்டிரின் பலர் மீக்கூற
உள்ளேன் வாழியர் யான் என பன் மாண்
நிலமகள் அழுத காஞ்சியும்
உண்டு என உரைப்பரால் உணர்ந்திசினோரே

# 366 கோதமனாரி
விழு கடிப்பு அறைந்த முழு குரல் முரசம்
ஒழுக்கு உடை மருங்கின் ஒரு மொழித்து ஆக
அரவு எறி உருமின் உரறுபு சிலைப்ப
ஒரு தாம் ஆகிய பெருமையோரும்
தம் புகழ் நிறீஇ சென்று மாய்ந்தனரே
அதனால் அறிவோன் மகனே மறவோர் செம்மால்
உரைப்ப கேள்-மதி
நின் ஊற்றம் பிறர் அறியாது
பிறர் கூறிய மொழி தெரியா
ஞாயிற்று எல்லை ஆள்வினைக்கு உதவி
இரவின் எல்லை வருவது நாடி
உரைத்திசின் பெரும நன்றும்
உழவு ஒழி பெரும் பகடு அழி தின்று ஆங்கு
செம் கண் மகளிரொடு சிறு துளி அளைஇ
அம் கள் தேறல் ஆய் கலத்து உகுப்ப
கெடல் அரும் திருவ உண்மோ
விடை வீழ்த்து சூடு கிழிப்ப
மடை வேண்டுநர்க்கு இடை அருகாது
அவிழ் வேண்டுநர்க்கு இடை அருளி
நீர்நிலை பெருத்த வார் மணல் அடைகரை
காவு-தோறு இழைத்த வெறி அயர் களத்தின்
இடம் கெட தொகுத்த விடையின்
மடங்கல் உண்மை மாயமோ அன்றே

# 367 ஔவையார்
நாகத்து அன்ன பாகு ஆர் மண்டிலம்
தமவே ஆயினும் தம்மொடு செல்லா
வேற்றோர் ஆயினும் நோற்றோர்க்கு ஒழியும்
ஏற்ற பார்ப்பார்க்கு ஈர்ம் கை நிறைய
பூவும் பொன்னும் புனல் பட சொரிந்து
பாசிழை மகளிர் பொலம் கலத்து ஏந்திய
நார் அறி தேறல் மாந்தி மகிழ் சிறந்து
இரவலர்க்கு அரும் கலம் அருகாது வீசி
வாழ்தல் வேண்டும் இவண் வரைந்த வைகல்
வாழ செய்த நல்வினை அல்லது
ஆழும்_காலை புணை பிறிது இல்லை
ஒன்று புரிந்து அடங்கிய இருபிறப்பாளர்
முத்தீ புரைய காண்_தக இருந்த
கொற்ற வெண்குடை கொடி தேர் வேந்திர்
யான் அறி அளவையோ இதுவே வானத்து
வயங்கி தோன்றும் மீனினும் இம்மென
பரந்து இயங்கும் மா மழை உறையினும்
உயர்ந்து மேந்தோன்றி பொலிக நும் நாளே

# 368 கழா தலையார்
களிறு முகந்து பெயர்குவம் எனினே
ஒளிறு மழை தவிர்க்கும் குன்றம் போல
கைம்_மா எல்லாம் கணை இட தொலைந்தன
கொடுஞ்சி நெடும் தேர் முகக்குவம் எனினே
கடும் பரி நன் மான் வாங்கு_வயின் ஒல்கி
நெடும் பீடு அழிந்து நிலம் சேர்ந்தனவே
கொய் சுவல் புரவி முகக்குவம் எனினே
மெய் நிறைந்த வழுவொடு பெரும்பிறிது ஆகி
வளி வழக்கு அறுத்த வங்கம் போல
குருதி அம் பெரும் புனல் கூர்ந்தனவே ஆங்க
முகவை இன்மையின் உகவை இன்றி
இரப்போர் இரங்கும் இன்னா வியன் களத்து
ஆள் அழிப்படுத்த வாள் ஏர் உழவ
கடாஅ யானை கால்_வழி அன்ன என்
தெடாரி தெண் கண் தெளிர்ப்ப ஒற்றி
பாடி வந்தது எல்லாம் கோடியர்
முழவு மருள் திரு மணி மிடைந்த நின்
அரவு உறழ் ஆரம் முகக்குவம் எனவே

# 369 பரணர்
இருப்பு முகம் செறிந்த ஏந்து எழில் மருப்பின்
கரும் கை யானை கொண்மூ ஆக
நீள்மொழி மறவர் எறிவனர் உயர்த்த
வாள் மின் நாக வயங்கு கடிப்பு அமைந்த
குருதி பலிய முரசு முழக்கு ஆக
அரசு அரா பனிக்கும் அணங்கு உறு பொழுதின்
வெம் விசை புரவி வீசு வளி ஆக
விசைப்பு உறு வல் வில் வீங்கு நாண் உகைத்த
கணை துளி பொழிந்த கண் அகன் கிடக்கை
ஈர செறு வயின் தேர் ஏர் ஆக
விடியல் புக்கு நெடிய நீட்டி நின்
செரு படை மிளிர்ந்த திருத்து_உறு பைம் சாலி
பிடித்து எறி வெள் வேல் கணையமொடு வித்தி
விழு தலை சாய்த்த வெருவரு பைம் கூழ்
பேய்_மகள் பற்றிய பிணம் பிறங்கு பல் போர்பு
கண நரியோடு கழுது களம் படுப்ப
பூதம் காப்ப பொலி_களம் தழீஇ
பாடுநர்க்கு இருந்த பீடு உடையாள
தேய்வை வெண் காழ் புரையும் விசி பிணி
வேய்வை காணா விருந்தின் போர்வை
அரி குரல் தடாரி உருப்ப ஒற்றி
பாடி வந்திசின் பெரும பாடு ஆன்று
எழிலி தோயும் இமிழ் இசை அருவி
பொன் உடை நெடும் கோட்டு இமையத்து அன்ன
ஓடை நுதல ஒல்குதல் அறியா
துடி அடி குழவிய பிடி இடை மிடைந்த
வேழ முகவை நல்கு-மதி
தாழா ஈகை தகை வெய்யோயே

# 370 ஊன்பொதி பசுங்குடையார்
வள்ளியோர் காணாது உய் திறன் உள்ளி
நாரும் போழும் செய்து உண்டு ஓராங்கு
பசி தின திரங்கிய இரும் பேர் ஒக்கற்கு
ஆர் பதம் கண் என மாதிரம் துழைஇ
வேர் உழந்து உலறி மருங்கு செத்து ஒழிய வந்து
அத்த குடிஞை துடி மருள் தீம் குரல்
உழுஞ்சில் அம் கவட்டு இடை இருந்த பருந்தின்
பெடை பயிர் குரலொடு இசைக்கும் ஆங்கண்
கழை காய்ந்து உலறிய வறம் கூர் நீள் இடை
வரி மரல் திரங்கிய கானம் பிற்பட
பழு மரம் உள்ளிய பறவை போல
ஒண் படை மாரி வீழ் கனி பெய்து என
துவைத்து எழு குருதி நில மிசை பரப்ப
விளைந்த செழும் குரல் அரிந்து கால் குவித்து
படு பிண பல் போர்பு அழிய வாங்கி
எருது களிறு ஆக வாள் மடல் ஓச்சி
அதரி திரித்த ஆள் உகு கடாவின்
அகன் கண் தடாரி தெளிர்ப்ப ஒற்றி
வெம் திறல் வியன் களம் பொலிக என்று ஏத்தி
இருப்பு முகம் செறித்த ஏந்து மருப்பின்
வரை மருள் முகவைக்கு வந்தனென் பெரும
வடி நவில் எஃகம் பாய்ந்து என கிடந்த
தொடி உடை தட கை ஓச்சி வெருவார்
இனத்து அடி விராய வரி குடர் அடைச்சி
அழு குரல் பேய்_மகள் அயர கழுகொடு
செம் செவி எருவை திரிதரும்
அஞ்சுவரு கிடக்கைய களம் கிழவோயே

# 371 கல்லாடனார்
அகன் தலை வையத்து புரவலர் காணாது
மரம் தலை சேர்ந்து பட்டினி வைகி
போது அவிழ் அலரி நாரின் தொடுத்து
தயங்கு இரும் பித்தை பொலிய சூடி
பறையொடு தகைத்த கல பையென் முரவு வாய்
ஆடு_உறு குழிசி பாடு இன்று தூக்கி
மன்ற வேம்பின் ஒண் பூ உரைப்ப
குறை செயல் வேண்டா நசைஇய இருக்கையேன்
அரிசி இன்மையின் ஆரிடை நீந்தி
கூர் வாய் இரும் படை நீரின் மிளிர்ப்ப
வரு கணை வாளி அன்பு இன்று தலைஇ
இரை முரசு ஆர்க்கும் உரை சால் பாசறை
வில் ஏர் உழவின் நின் நல் இசை உள்ளி
குறை தலை படு பிணன் எதிர போர்பு அழித்து
யானை எருத்தின் வாள் மடல் ஓச்சி
அதரி திரித்த ஆள் உகு கடாவின்
மதியத்து அன்ன என் விசி_உறு தடாரி
அகன் கண் அதிர ஆகுளி தொடாலின்
பணை மருள் நெடும் தாள் பல் பிணர் தட கை
புகர்_முக முகவைக்கு வந்திசின் பெரும
களிற்று கோட்டு அன்ன வால் எயிறு அழுத்தி
விழுக்கொடு விரைஇய வெள் நிண சுவையினள்
குடர் தலை மாலை சூடி உண தின
ஆனா பெரு வளம் செய்தோன் வானத்து
வயங்கு பன் மீனினும் வாழியர் பல என
உரு கெழு பேய்_மகள் அயர
குருதி துகள் ஆடிய களம் கிழவோயே

# 372 மாங்குடி கிழார்
விசி பிணி தடாரி விம்மென ஒற்றி
ஏத்தி வந்தது எல்லாம் முழுத்த
இலங்கு வாள் அவிர் ஒளி வலம் பட மின்னி
கணை துளி பொழிந்த கண்கூடு பாசறை
பொருந்தா தெவ்வர் அரிந்த தலை அடுப்பின்
கூவிள விறகின் ஆக்கு வரி நுடங்கல்
ஆனா மண்டை வன்னி அம் துடுப்பின்
ஈனா வேண்மாள் இடம் துழந்து அட்ட
மா மறி பிண்டம் வாலுவன் ஏந்த
வதுவை விழவின் புதுவோர்க்கு எல்லாம்
வெம் வாய் பெய்த பூத நீர் சால்க என
புலவு களம் பொலிய வேட்டோய் நின்
நிலவு திகழ் ஆரம் முகக்குவம் எனவே

# 373 கோவூர்கிழார்
உரு மிசை முழக்கு என முரசும் இசைப்ப
செரு நவில் வேழம் கொண்மூ ஆக
தேர் மா அழி துளி தலைஇ நாம் உற
கணை காற்று எடுத்த கண் அகன் பாசறை
இழிதரு குருதியொடு ஏந்திய ஒள் வாள்
பிழிவது போல பிட்டை ஊறு உவப்ப
மைந்தர் ஆடிய மயங்கு பெரும் தானை
கொங்கு புறம்பெற்ற கொற்ற வேந்தே
தண்ட மா பொறி
மட கண் மயில் இயல் மறலி ஆங்கு
நெடும் சுவர் நல் இல் புலம்ப கடை கழிந்து
மென் தோள் மகளிர் மன்றம் பேணார்
புண் உவந்து
உளை அணி புரவி வாழ்க என
சொல் நிழல் இன்மையின் நன் நிழல் சேர
நுண் பூண் மார்பின் புன் தலை சிறாஅர்
அம்பு அழி பொழுதில் தமர் முகம் காணா
வாளில் தாக்கான்
வேந்து புறங்கொடுத்த வீய்ந்து உகு பறந்தலை
மாடம் மயங்கு எரி மண்டி கோடு இறுபு
உரும் எறி மலையின் இரு நிலம் சேர
சென்றோன் மன்ற கொலைவன் சென்று எறி
வெம் புண் அறிநர் கண்டு கண் அலைப்ப
வஞ்சி முற்றம் வய களன் ஆக
அஞ்சா மறவர் ஆள் போர்பு அழித்து
கொண்டனை பெரும குட புலத்து அதரி
பொலிக அத்தை நின் பணை தயங்கு வியன் களம்
விளங்கு திணை வேந்தர் களம்-தொறும் சென்று
புகர்_முக முகவை பொலிக என்று ஏத்தி
கொண்டனர் என்ப பெரியோர் யானும்
அம் கண் மா கிணை அதிர ஒற்ற
முற்றிலென் ஆயினும் காதலின் ஏத்தி
நின்னோர் அன்னோர் பிறர் இவண் இன்மையின்
மன் எயில் முகவைக்கு வந்திசின் பெரும
பகைவர் புகழ்ந்த ஆண்மை நகைவர்க்கு
தா இன்று உதவும் பண்பின் பேயொடு
கண நரி திரிதரும் ஆங்கண் நிணன் அருந்து
செம் செவி எருவை குழீஇ
அஞ்சுவரு கிடக்கைய களம் கிழவோயே

# 374 உறையூர் ஏணிச்சேர் முடமோசியார்
கானல் மேய்ந்து வியன் புலத்து அல்கும்
புல்வாய் இரலை நெற்றி அன்ன
பொலம் இலங்கு சென்னிய பாறு மயிர் அவிய
தண் பனி உறைக்கும் புலரா ஞாங்கர்
மன்ற பலவின் மால் வரை பொருந்தி என்
தெண் கண் மா கிணை தெளிர்ப்ப ஒற்றி
இரும் கலை ஓர்ப்ப இசைஇ காண்வர
கரும் கோல் குறிஞ்சி அடுக்கம் பாட
புலிப்பல்தாலி புன் தலை சிறாஅர்
மான் கண் மகளிர் கான் தேர் அகன்று உவா
சிலை_பால் பட்ட முளவு_மான் கொழும் குறை
விடர் முகை அடுக்கத்து சினை முதிர் சாந்தம்
புகர் முக வேழத்து மருப்பொடு மூன்றும்
இரும் கேழ் வய புலி வரி அதள் குவைஇ
விரிந்து இறை நல்கும் நாடன் எம் கோன்
கழல் தொடி ஆஅய் அண்டிரன் போல
வண்மையும் உடையையோ ஞாயிறு
கொன் விளங்குதியால் விசும்பினானே

# 375 உறையூர் ஏணிச்சேரி முடமோசியார்
அலங்கு கதிர் சுமந்த கலங்கல் சூழி
நிலை தளர்வு தொலைந்த ஒல்கு நிலை பல் கால்
பொதியில் ஒரு சிறை பள்ளி ஆக
முழா அரை போந்தை அர வாய் மா மடல்
நாரும் போழும் கிணையோடு சுருக்கி
ஏரின்_வாழ்நர் குடி முறை புகாஅ
ஊழ் இரந்து உண்ணும் உயவல் வாழ்வை
புரவு எதிர்ந்து கொள்ளும் சான்றோர் யார் என
புரசம் தூங்கும் அறாஅ யாணர்
வரை அணி படப்பை நன் நாட்டு பொருந
பொய்யா ஈகை கழல் தொடி ஆஅய்
யாவரும் இன்மையின் கிணைப்ப தவாது
பெரு மழை கடல் பரந்து ஆஅங்கு யானும்
ஒரு நின் உள்ளி வந்தனென் அதனால்
புலவர் புக்கில் ஆகி நிலவரை
நிலீஇயர் அத்தை நீயே ஒன்றே
நின் இன்று வறுவிது ஆகிய உலகத்து
நிலவன்மாரோ புரவலர் துன்னி
பெரிய ஓதினும் சிறிய உணரா
பீடு இன்று பெருகிய திருவின்
பாடு இல் மன்னரை பாடன்மார் எமரே

# 376 புறத்திணை நன்னாகனார்
விசும்பு நீத்தம் இறந்த ஞாயிற்று
பசும் கதிர் மழுகிய சிவந்து வாங்கு அந்தி
சிறு நனி பிறந்த பின்றை செறி பிணி
சிதாஅர் வள்பின் என் தடாரி தழீஇ
பாணர் ஆரும் அளவை யான் தன்
யாணர் நன் மனை கூட்டு முதல் நின்றனென்
இமைத்தோர் விழித்த மாத்திரை ஞெரேரென
குணக்கு எழு திங்கள் கனை இருள் அகற்ற
பண்டு அறி வாரா உருவோடு என் அரை
தொன்றுபடு துளையொடு பரு இழை போகி
நைந்து கரை பறைந்த என் உடையும் நோக்கி
விருந்தினன் அளியன் இவன் என பெருந்தகை
நின்ற முரற்கை நீக்கி நன்றும்
அரவு வெகுண்டு அன்ன தேறலொடு சூடு தருபு
நிரயத்து அன்ன என் வறன் களைந்தன்றே
இரவினானே ஈத்தோன் எந்தை
அன்றை ஞான்றினோடு இன்றின் ஊங்கும்
இரப்ப சிந்தியேன் நிரப்பு அடு புணையின்
உளத்தின் அளக்கும் மிளிர்ந்த தகையேன்
நிறை குள புதவின் மகிழ்ந்தனென் ஆகி
ஒரு நாள் இரவலர் வரையா வள்ளியோர் கடை தலை
ஞாங்கர் நெடுமொழி பயிற்றி
தோன்றல் செல்லாது என் சிறு கிணை குரலே

# 377 உலோச்சனார்
பனி பழுநிய பல் யாமத்து
பாறு தலை மயிர் நனைய
இனிது துஞ்சும் திரு நகர் வரைப்பின்
இனையல் அகற்ற என் கிணை தொடா குறுகி
அவி உணவினோர் புறம்காப்ப
அற நெஞ்சத்தோன் வாழ நாள் என்று
அதன் கொண்டு வரல் ஏத்தி
கரவு இல்லா கவி வண் கையான்
வாழ்க என பெயர் பெற்றோர்
பிறர்க்கு உவமம் தான் அல்லது
தனக்கு உவமம் பிறர் இல் என
அது நினைத்து மதி மழுகி
அங்கு நின்ற என் காணூஉ
சேய் நாட்டு செல் கிணைஞனை
நீ புரவலை எமக்கு என்ன
மலை பயந்த மணியும் கடறு பயந்த பொன்னும்
கடல் பயந்த கதிர் முத்தமும்
வேறு பட்ட உடையும் சேறுபட்ட தசும்பும்
கனவில் கண்டு ஆங்கு வருந்தாது நிற்ப
நனவின் நல்கியோன் நகை சால் தோன்றல்
நாடு என மொழிவோர் அவன் நாடு என மொழிவோர்
வேந்து என மொழிவோர் அவன் வேந்து என மொழிவோர்
புகர் நுதல் அவிர் பொன் கோட்டு யானையர்
கவர் பரி கச்சை நன் மான்
வடி மணி வாங்கு உருள
கொடி மிசை நல் தேர் குழுவினர்
கதழ் இசை வன்கணினர்
வாளின் வாழ்நர் ஆர்வமொடு ஈண்டி
கடல் ஒலி கொண்ட தானை
அடல் வெம் குருசில் மன்னிய நெடிதே

# 378 ஊன்பொதி பசுங்குடையார்
தென் பரதவர் மிடல் சாய
வட வடுகர் வாள் ஓட்டிய
தொடை அமை கண்ணி திருந்து வேல் தட கை
கடு மா கடைஇய விடு பரி வடிம்பின்
நல் தார் கள்ளின் சோழன் கோயில்
புது பிறை அன்ன சுதை செய் மாடத்து
பனி கயத்து அன்ன நீள் நகர் நின்று என்
அரி கூடு மா கிணை இரிய ஒற்றி
எஞ்சா மரபின் வஞ்சி பாட
எமக்கு என வகுத்த அல்ல மிக பல
மேம்படு சிறப்பின் அரும் கல வெறுக்கை
தாங்காது பொழிதந்தோனே அது கண்டு
இலம்பாடு உழந்த என் இரும் பேர் ஒக்கல்
விரல் செறி மரபின செவி தொடக்குநரும்
செவி தொடர் மரபின விரல் செறிக்குநரும்
அரைக்கு அமை மரபின மிடற்று யாக்குநரும்
மிடற்று அமை மரபின அரைக்கு யாக்குநரும்
கடும் தெறல் இராமன் உடன்புணர் சீதையை
வலி தகை அரக்கன் வௌவிய ஞான்றை
நிலம் சேர் மதர் அணி கண்ட குரங்கின்
செம் முக பெரும் கிளை இழை பொலிந்து ஆஅங்கு
அறாஅ அரு நகை இனிது பெற்றிகுமே
இரும் கிளை தலைமை எய்தி
அரும் படர் எவ்வம் உழந்ததன் தலையே

# 379 புறத்திணை நன்னாகனார்
யானே பெறுக அவன் தாள் நிழல் வாழ்க்கை
அவனே பெறுக என் நா இசை நுவறல்
நெல் அரி தொழுவர் கூர் வாள் மழுங்கின்
பின்னை மறத்தோடு அரிய கல் செத்து
அள்ளல் யாமை கூன் புறத்து உரிஞ்சும்
நெல் அமல் புரவின் இலங்கை கிழவோன்
வில்லியாதன் கிணையேம் பெரும
குறும் தாள் ஏற்றை கொளும் கண் அம் விளர்
நறு நெய் உருக்கி நாள்_சோறு ஈயா
வல்லன் எந்தை பசி தீர்த்தல் என
கொன் வரல் வாழ்க்கை நின் கிணைவன் கூற
கேட்டதன் கொண்டும் வேட்கை தண்டாது
விண் தோய் தலைய குன்றம் பிற்பட
வந்தனென் யானே
தாய் இல் தூவா குழவி போல ஆங்கு அ
திரு உடை திரு மனை ஐது தோன்று கமழ் புகை
வரு மழை மங்குலின் மறுகு உடன் மறைக்கும்
குறும்பு அடு குண்டு அகழ் நீள் மதில் ஊரே

# 380
தென் பவ்வத்து முத்து பூண்டு
வட_குன்றத்து சாந்தம் உரீஇ
கடல் தானை
இன் இசைய விறல் வென்றி
தென்னவர் வய மறவன்
மிசை பெய்த நீர் கடல் பரந்து முத்து ஆகுந்து
நாறு இதழ் குளவியொடு கூதளம் குழைய
தீம் சுளை பலவின் நாஞ்சில் பொருநன்
துப்பு எதிர்ந்தோர்க்கே உள்ளா சேய்மையன்
நட்பு எதிர்ந்தோர்க்கே அங்கை நண்மையன்
வல் வேல் கந்தன் நல் இசை அல்ல
சிலத்தார் பிள்ளை அம் சிறாஅர்
அன்னன் ஆகன் மாறே இ நிலம்
இலம்படு காலை ஆயினும்
புலம்பல் போயின்று பூத்த என் கடும்பே

# 381 புறத்திணை நன்னகனாரி
ஊனும் ஊணும் முனையின் இனிது என
பாலின் பெய்தவும் பாகின் கொண்டவும்
அளவுபு கலந்து மெல்லிது பருகி
விருந்து_உறுத்து ஆற்ற இருந்தெனம் ஆக
சென்மோ பெரும எம் விழவு உடை நாட்டு என
யாம் தன் அறியுநம் ஆக தான் பெரிது
அன்பு உடைமையின் எம் பிரிவு அஞ்சி
துணரியது கொளாஅ ஆகி பழம் ஊழ்த்து
பயம் பகர்வு அறியா மயங்கு அரில் முது பாழ்
பெயல் பெய்து அன்ன செல்வத்து ஆங்கண்
ஈயா மன்னர் புறங்கடை தோன்றி
சிதாஅர் வள்பின் சிதர் புற தடாரி
ஊன் சுகிர் வலந்த தெண் கண் ஒற்றி
விரல் விசை தவிர்க்கும் அரலை இல் பாணியின்
இலம்பாடு அகற்றல் யாவது புலம்பொடு
தெருமரல் உயக்கமும் தீர்க்குவெம் அதனால்
இரு நிலம் கூலம் பாற கோடை
வரு மழை முழக்கு இசைக்கு ஓடிய பின்றை
சேயை ஆயினும் இவணை ஆயினும்
இதன் கொண்டு அறிநை வாழியோ கிணைவ
சிறு நனி ஒரு வழி படர்க என்றோனே எந்தை
ஒலி வெள் அருவி வேங்கட நாடன்
உறுவரும் சிறுவரும் ஊழ் மாறு உய்க்கும்
அறத்துறை அம்பியின் மான மறப்பு இன்று
இரும் கோள் ஈரா பூட்கை
கரும்பனூரன் காதல் மகனே

# 382 கோவூர் கிழார்
கடல் படை அடல் கொண்டி
மண்டு உற்ற மலிர் நோன் தாள்
தண் சோழ நாட்டு பொருநன்
அலங்கு உளை அணி இவுளி
நலங்கிள்ளி நசை பொருநரேம்
பிறர் பாடி பெறல் வேண்டேம்
அவன் பாடுதும் அவன் தாள் வாழிய என
நெய் குய்ய ஊன் நவின்ற
பல் சோற்றான் இன் சுவைய
நல்குரவின் பசி துன்பின் நின்
முன்_நாள் விட்ட மூது அறி சிறாஅரும்
யானும் ஏழ் மணி அம் கேழ் அணி உத்தி
கண் கேள்வி சுவை நாவின்
நிறன் உற்ற அராஅ போலும்
வறன் ஒரீஇ வழங்கு வாய்ப்ப
விடு-மதி அத்தை கடு மான் தோன்றல்
நினதே முந்நீர் உடுத்த இ வியன் உலகு அறிய
எனதே கிடை காழ் அன்ன தெண் கண் மா கிணை
கண்_அகத்து யாத்த நுண் அரி சிறு கோல்
எறி-தொறும் நுடங்கி ஆங்கு நின் பகைஞர்
கேள்-தொறும் நடுங்க ஏத்துவென்
வென்ற தேர் பிறர் வேத்தவையானே

# 383 மாறோக்கத்து நப்பசலையார்
ஒண் பொறி சேவல் எடுப்ப ஏற்றெழுந்து
தண் பனி உறைக்கும் புலரா ஞாங்கர்
நுண் கோல் சிறு கிணை சிலம்ப ஒற்றி
நெடும் கடை நின்று பகடு பல வாழ்த்தி
தன் புகழ் ஏத்தினென் ஆக ஊன் புலந்து
அரும் கடி வியன் நகர் குறுகல் வேண்டி
கூம்பு விடு மென் பிணி அவிழ்த்த ஆம்பல்
தேம் பாய் உள்ள தம் கமழ் மடர் உள
பாம்பு உரி அன்ன வடிவின காம்பின்
கழை படு சொலியின் இழை அணி வாரா
ஒண் பூ கலிங்கம் உடீஇ நுண் பூண்
வசிந்து வாங்கு நுசுப்பின் அம் வாங்கு உந்தி
கற்பு உடை மடந்தை தன் புறம் புல்ல
என் பெயர்ந்த நோக்கி
கல் கொண்டு
அழித்து பிறந்தனென் ஆகி அ வழி
பிறர் பாடு புகழ் பாடி படர்பு அறியேனே
குறு முலைக்கு அலமரும் பால் ஆர் வெண்மறி
நரை முக ஊகமொடு உகளும் வரை அமல்
குன்று பல கெழீஇய
கான் கெழு நாடன் கடும் தேர் அவியன் என
ஒருவனை உடையேன்-மன்னே யானே
அறான் எவன் பரிகோ வெள்ளியது நிலையே

# 384 புறத்திணை நன்னாகனார்
மென்_பாலான் உடன் அணைஇ
வஞ்சி கோட்டு உறங்கும் நாரை
அறை கரும்பின் பூ அருந்தும்
வன்_பாலான் கரும் கால் வரகின்
அம் கண் குறு முயல் வெருவ அயல
கரும் கோட்டு இருப்பை பூ உறைக்குந்து
விழவு இன்று ஆயினும் உழவர் மண்டை
இரும் கெடிற்று மிசையொடு பூ கள் வைகுந்து
கரும்பனூரன் கிணையேம் பெரும
நெல் என்னா பொன் என்னாம்
கனற்ற கொண்ட நறவு என்னும்
மனை என்னா அவை பலவும்
யான் தண்டவும் தான் தண்டான்
நிணம் பெருத்த கொழும் சோற்று இடை
மண் நாண புகழ் வேட்டு
நீர் நாண நெய் வழங்கி
புரந்தோன் எந்தை யாம் எவன் தொலைவதை
அன்னோனை உடையேம் என்ப இனி வறட்கு
யாண்டு நிற்க வெள்ளி மாண்ட
உண்ட நன் கலம் பெய்து நுடக்கவும்
தின்ற நன் பல் ஊன் தோண்டவும்
வந்த வைகல் அல்லது
சென்ற எல்லை செலவு அறியேனே

# 385 கல்லாடனார்
வெள்ளி தோன்ற புள்ளு குரல் இயம்ப
புலரி விடியல் பகடு பல வாழ்த்தி
தன் கடை தோன்றினும் இலனே பிறன் கடை
அகன் கண் தடாரி பாடு கேட்டு அருளி
வறன் யான் நீங்கல் வேண்டி என் அரை
நிலம் தின சிதைந்த சிதாஅர் களைந்து
வெளியது உடீஇ என் பசி களைந்தோனே
காவிரி அணையும் தாழ் நீர் படப்பை
நெல் விளை கழனி அம்பர் கிழவோன்
நல் அருவந்தை வாழியர் புல்லிய
வேங்கட விறல் வரைப்பட்ட
ஓங்கல் வானத்து உறையினும் பலவே

# 386 கோவூர் கிழார்
நெடு நீர நிறை கயத்து
படு மாரி துளி போல
நெய் துள்ளிய வறை முகக்கவும்
சூடு கிழித்து வாடூன் மிசையவும்
ஊன் கொண்ட வெண் மண்டை
ஆன் பயத்தான் முற்று அழிப்பவும்
வெய்து உண்ட வியர்ப்பு அல்லது
செய் தொழிலான் வியர்ப்பு அறியாமை
ஈத்தோன் எந்தை இசை தனது ஆக
வயலே நெல்லின் வேலி நீடிய கரும்பின்
பாத்தி பன் மலர் பூ ததும்பின
புறவே புல் அருந்து பல் ஆயத்தான்
வில் இருந்த வெம் குறும்பின்று
கடலே கால் தந்த கலம் எண்ணுவோர்
கானல் புன்னை சினை நிலைக்குந்து
கழியே சிறு வெள் உப்பின் கொள்ளை சாற்றி
பெரும் கல் நன் நாட்டு உமண் ஒலிக்குந்து
அன்ன நன் நாட்டு பொருநம் யாமே
பொராஅ பொருநரேம்
குண திசை நின்று குட முதல் செலினும்
குட திசை நின்று குண முதல் செலினும்
வட திசை நின்று தென்_வயின் செலினும்
தென் திசை நின்று குறுகாது நீடினும்
யாண்டும் நிற்க வெள்ளி யாம்
வேண்டியது உணர்ந்தோன் தாள் வாழியவே

# 387 குண்டுகட் பாலியாதனார்
வள் உகிர வயல் ஆமை
வெள் அகடு கண்டு அன்ன
வீங்கு விசி புது போர்வை
தெண் கண் மா கிணை இயக்கி என்றும்
மாறுகொண்டோர் மதில் இடறி
நீறு ஆடிய நறும் கவுள
பூம் பொறி பணை எருத்தின
வேறு_வேறு பரந்து இயங்கி
வேந்து உடை மிளை அயல் பரக்கும்
ஏந்து கோட்டு இரும் பிணர் தட கை
திருந்து தொழில் பல பகடு
பகை புல மன்னர் பணி திறை தந்து நின்
நகை_புல_வாணர் நல்குரவு அகற்றி
மிக பொலியர் தன் சேவடி அத்தை என்று
யாஅன் இசைப்பின் நனி நன்று எனா
பல பிற வாழ்த்த இருந்தோர்_தம் கோன்
மருவ இன் நகர் அகன் கடை தலை
திருந்து கழல் சேவடி குறுகல் வேண்டி
வென்று இரங்கும் விறல் முரசினோன்
என் சிறுமையின் இழித்து நோக்கான்
தன் பெருமையின் தகவு நோக்கி
குன்று உறழ்ந்த களிறு என்கோ
கொய் உளைய மா என்கோ
மன்று நிறையும் நிரை என்கோ
மனை களமரொடு களம் என்கோ
ஆங்கு அவை கனவு என மருள வல்லே நனவின்
நல்கியோனே நகை சால் தோன்றல்
ஊழி வாழி பூழியர் பெருமகன்
பிணர் மருப்பு யானை செரு மிகு நோன் தாள்
செல்வக்கடுங்கோ வாழியாதன்
ஒன்னா தெவ்வர் உயர் குடை பணித்து இவன்
விடுவர் மாதோ நெடிதோ நில்லா
புல் இளை வஞ்சி புற மதில் அலைக்கும்
கல்லென் பொருநை மணலினும் ஆங்கண்
பல் ஊர் சுற்றிய கழனி
எல்லாம் விளையும் நெல்லினும் பலவே

# 388 மதுரை அளக்கர் ஞாழார் மகனார் மள்ளனார்
வெள்ளி தென் புலத்து உறைய விளை வயல்
பள்ளம் வாடிய பயன் இல் காலை
இரும் பறை கிணை_மகன் சென்றவன் பெரும் பெயர்
சிறுகுடி கிழான் பண்ணன் பொருந்தி
தன் நிலை அறியுநன் ஆக அ நிலை
இடுக்கண் இரியல்_போக உடைய
கொடுத்தோன் எந்தை கொடை மேம் தோன்றல்
நுண் நூல் தட கையின் நா மருப்பு ஆக
வெல்லும் வாய்மொழி புல் உடை விளை நிலம்
பெயர்க்கும் பண்ணன் கேட்டிரோ அவன்
வினை பகடு ஏற்ற மேழி கிணை தொடா
நாள்-தொறும் பாடேன் ஆயின் ஆனா
மணி கிளர் முன்றில் தென்னவன் மருகன்
பிணி முரசு இரங்கும் பீடு கெழு தானை
அண்ணல் யானை வழுதி
கண்மாறு இலியர் என் பெரும் கிளை புரவே

# 389 கள்ளில் ஆத்திரையனாரி
நீர் நுங்கின் கண் வலிப்ப
கான வேம்பின் காய் திரங்க
கயம் களியும் கோடை ஆயினும்
ஏலா வெண்பொன் போகு_உறு_காலை
எம்மும் உள்ளுமோ பிள்ளை அம் பொருநன்
என்று ஈத்தனனே இசை சால் நெடுந்தகை
இன்று சென்று எய்தும் வழியனும் அல்லன்
செலினே காணா வழியனும் அல்லன்
புன் தலை மட பிடி இனைய கன்று தந்து
குன்றக நல் ஊர் மன்றத்து பிணிக்கும்
கல் இழி அருவி வேங்கடம் கிழவோன்
செல்வு_உழி எழாஅ நல் ஏர் முதியன்
ஆதனுங்கன் போல நீயும்
பசித்த ஒக்கல் பழங்கண் வீட
வீறு சால் நன் கலம் நல்கு-மதி பெரும
ஐது அகல் அல்குல் மகளிர்
நெய்தல் கேளல்-மார் நெடும் கடையானே

# 390 ஔவையார்
அறவை நெஞ்சத்து ஆயர் வளரும்
மறவை நெஞ்சத்து ஆய் இலாளர்
அரும்பு அலர் செருந்தி நெடும் கான் மலர் கமழ்
விழவு அணி வியன் களம் அன்ன முற்றத்து
ஆர்வலர் குறுகின் அல்லது காவலர்
கனவினும் குறுகா கடி உடை வியன் நகர்
மலை கணத்து அன்ன மாடம் சிலம்ப என்
அரி குரல் தடாரி இரிய ஒற்றி
பாடி நின்ற பன் நாள் அன்றியும்
சென்ற ஞான்றை சென்று படர் இரவின்
வந்ததன் கொண்டு நெடும் கடை நின்ற
புன் தலை பொருநன் அளியன் தான் என
தன் உழை குறுகல் வேண்டி என் அரை
முது நீர் பாசி அன்ன உடை களைந்து
திரு மலர் அன்ன புது மடி கொளீஇ
மகிழ் தரல் மரபின் மட்டே அன்றியும்
அமிழ்து அன மரபின் ஊன் துவை அடிசில்
வெள்ளி வெண் கலத்து ஊட்டல் அன்றி
முன் ஊர் பொதியில் சேர்ந்த மென் நடை
இரும் பேர் ஒக்கல் பெரும் புலம்பு அகற்ற
அகடு நனை வேங்கை வீ கண்டு அன்ன
பகடு தரு செந்நெல் போரொடு நல்கி
கொண்டி பெறுக என்றோனே உண்துறை
மலை அலர் அணியும் தலை நீர் நாடன்
கண்டால் கொண்டு மனை திருந்து அடி வாழ்த்தி
வான் அறியல என் பாடு பசி போக்கல்
அண்ணல் யானை வேந்தர்
உண்மையோ அறியலர் காண்பு அறியலரே

# 391 கல்லாடனார்
தண் துளி பல பொழிந்து எழிலி இசைக்கும்
விண்டு அனைய விண் தோய் பிறங்கல்
முகடு உற உயர்ந்த நெல்லின் மகிழ் வர
பகடு தரு பெரு வளம் வாழ்த்தி பெற்ற
திருந்தா மூரி பரந்து பட கெண்டி
அரியல் ஆர்கையர் உண்டு இனிது உவக்கும்
வேங்கட வரைப்பின் வட புலம் பசித்து என
ஈங்கு வந்து இறுத்த என் இரும் பேர் ஒக்கல்
தீர்கை விடுக்கும் பண்பின முதுகுடி
நனம் தலை மூதூர் வினவலின்
முன்னும் வந்தோன் மருங்கிலன் இன்னும்
அளியன் ஆகலின் பொருநன் இவன் என
நின் உணர்ந்து அறியுநர் என் உணர்ந்து கூற
காண்கு வந்திசின் பெரும மாண் தக
இரு நீர் பெரும் கழி நுழை மீன் அருந்தும்
துதைந்த தூவி அம் புதாஅம் சேக்கும்
ததைந்த புன்னை செழு நகர் வரைப்பின்
நெஞ்சு அமர் காதல் நின் வெய்யோளொடு
இன் துயில் பெறுக தில் நீயே வளம் சால்
துளி பதன் அறிந்து பொழிய
வேலி ஆயிரம் விளைக நின் வயலே

# 392 ஔவையார்
மதி ஏர் வெண்குடை அதியர் கோமான்
கொடும் பூண் எழினி நெடும் கடை நின்று யான்
பசலை நிலவின் பனி படு விடியல்
பொரு களிற்று அடி வழி அன்ன என் கை
ஒரு கண் மா கிணை ஒற்றுபு கொடாஅ
உரு கெழு மன்னர் ஆர் எயில் கடந்து
நிணம் படு குருதி பெரும் பாட்டு ஈரத்து
அணங்கு உடை மரபின் இரும் களம்-தோறும்
வெள் வாய் கழுதை புல்_இனம் பூட்டி
வெள்ளை வரகும் கொள்ளும் வித்தும்
வைகல் உழவ வாழிய பெரிது என
சென்று யான் நின்றனென் ஆக அன்றே
ஊர் உண் கேணி பகட்டு இலை பாசி
வேர் புரை சிதாஅர் நீக்கி நேர் கரை
நுண் நூல் கலிங்கம் உடீஇ உண்ம் என
தேள் கடுப்பு அன்ன நாட்படு தேறல்
கோள்_மீன் அன்ன பொலம் கலத்து அளைஇ
ஊண் முறை ஈத்தல் அன்றியும் கோள் முறை
விருந்து இறை நல்கியோனே அந்தரத்து
அரும் பெறல் அமிழ்தம் அன்ன
கரும்பு இவண் தந்தோன் பெரும் பிறங்கடையே

# 393 நல்லிறையனார்
பதி முதல் பழகா பழங்கண் வாழ்க்கை
குறு நெடும் துணையொடும் கூமை வீதலின்
குடி முறை பாடி ஒய்யென வருந்தி
அடல் நசை மறந்த எம் குழிசி மலர்க்கும்
கடன் அறியாளர் பிற நாட்டு இன்மையின்
வள்ளன்மையின் எம் வரைவோர் யார் என
உள்ளிய உள்ளமொடு உலை நசை துணையா
உலகம் எல்லாம் ஒரு_பால் பட்டு என
மலர் தார் அண்ணல் நின் நல் இசை உள்ளி
ஈர்ம் கை மறந்த என் இரும் பேர் ஒக்கல்
கூர்ந்த எவ்வம் விட கொழு நிணம் கிழிப்ப
கோடை பருத்தி வீடு நிறை பெய்த
மூடை பண்டம் மிடை நிறைந்து அன்ன
வெண் நிண மூரி அருள நாள் உற
ஈன்ற அரவின் நா உரு கடுக்கும் என்
தொன்றுபடு சிதாஅர் துவர நீக்கி
போது விரி பகன்றை புது மலர் அன்ன
அகன்று மடி கலிங்கம் உடீஇ செல்வமும்
கேடு இன்று நல்கு-மதி பெரும மாசு இல்
மதி புரை மா கிணை தெளிர்ப்ப ஒற்றி
ஆடு_மகள் அல்குல் ஒப்ப வாடி
கோடை ஆயினும் கோடி
காவிரி புரக்கும் நன் நாட்டு பொருந
வாய் வாள் வளவன் வாழ்க என
பீடு கெழு நோன் தாள் பாடுகம் பலவே

# 394 கோனாட்டு எறிச்சலூர் மாடலன் மதுரை குமரனார்
சிலை உலாய் நிமிர்ந்த சாந்து படு மார்பின்
ஒலி கதிர் கழனி வெண்குடை கிழவோன்
வலி துஞ்சு தட கை வாய் வாள் குட்டுவன்
வள்ளியன் ஆதல் வையகம் புகழினும்
உள்ளல் ஓம்பு-மின் உயர் மொழி புலவீர்
யானும் இருள் நிலா கழிந்த பகல் செய் வைகறை
ஒரு கண் மா கிணை தெளிர்ப்ப ஒற்றி
பாடு இமிழ் முரசின் இயல் தேர் தந்தை
வாடா வஞ்சி பாடினேன் ஆக
அகம் மலி உவகையொடு அணுகல் வேண்டி
கொன்று சினம் தணியா புலவு நாறு மருப்பின்
வெம் சின வேழம் நல்கினன் அஞ்சி
யான் அது பெயர்த்தனென் ஆக தான் அது
சிறிது என உணர்ந்தமை நாணி பிறிதும் ஓர்
பெரும் களிறு நல்கியோனே அதன் கொண்டு
இரும் பேர் ஒக்கல் பெரும் புலம்பு உறினும்
துன் அரும் பரிசில் தரும் என
என்றும் செல்லேன் அவன் குன்று கெழு நாட்டே

# 395 மதுரை நக்கீரர்
மென்_புலத்து வயல் உழவர்
வன்_புலத்து பகடு விட்டு
குறு முயலின் குழை சூட்டொடு
நெடு வாளை பல் உவியல்
பழம் சோற்று புக வருந்தி
புதல் தளவின் பூ சூடி
அரி_பறையால் புள் ஓப்பி
அவிழ் நெல்லின் அரியல் ஆருந்து
மனை கோழி பைம் பயிரின்னே
கான கோழி கவர் குரலொடு
நீர்க்கோழி கூய் பெயர்க்குந்து
வேய் அன்ன மென் தோளால்
மயில் அன்ன மென் சாயலார்
கிளி கடியின்னே
அகல் அள்ளல் புள் இரீஇயுந்து
ஆங்கு அ பல நல்ல புலன் அணியும்
சீர் சான்ற விழு சிறப்பின்
சிறு கண் யானை பெறல் அரும் தித்தன்
செல்லா நல் இசை உறந்தை குணாது
நெடும் கை வேண்மான் அரும் கடி பிடவூர்
அற பெயர் சாத்தன் கிளையேம் பெரும
முன்_நாள் நண்பகல் சுரன் உழந்து வருந்தி
கதிர் நனி சென்ற கனை இருள் மாலை
தன் கடை தோன்றி என் உறவு இசைத்தலின்
தீம் குரல் அரி குரல் தடாரியொடு
ஆங்கு நின்ற என் கண்டு
சிறிதும் நில்லான் பெரிதும் கூறான்
அரும் கலம் வரவே அருளினன் வேண்டி
ஐயென உரைத்தன்றி நல்கி தன் மனை
பொன் போல் மடந்தையை காட்டி இவனை
என் போல் போற்று என்றோனே அதன் கொண்டு
அவன் மறவலேனே பிறர் உள்ளலேனே
அகன் ஞாலம் பெரிது வெம்பினும்
மிக வானுள் எரி தோன்றினும்
குள_மீனோடும் தாள் புகையினும்
பெரும் செய் நெல்லின் கொக்கு உகிர் நிமிரல்
பசும் கண் கருனை சூட்டொடு மாந்தி
விளைவு ஒன்றோ வெள்ளம் கொள்க என
உள்ளதும் இல்லதும் அறியாது
ஆங்கு அமைந்தன்றால் வாழ்க அவன் தாளே

# 396 மாங்குடி கிழார்
கீழ் நீரால் மீன் வழங்குந்து
மீ நீரான் கண் அன்ன மலர் பூக்குந்து
கழி சுற்றிய விளை கழனி
அரி_பறையான் புள் ஓப்புந்து
நெடு நீர் கூஉம் மணல் தண் கான்
மென் பறையான் புள் இரியுந்து
நனை கள்ளின் மனை கோசர்
தீம் தேறல் நறவு மகிழ்ந்து
தீம் குரவை கொளை தாங்குந்து
உள் இலோர்க்கு வலி ஆகுவன்
கேள் இலோர்க்கு கேள் ஆகுவன்
கழுமிய வென் வேல் வேளே
வள நீர் வாட்டாற்று எழினியாதன்
கிணையேம் பெரும
கொழும் தடிய சூடு என்கோ
வள நனையின் மட்டு என்கோ
குறு முயலின் நிணம் பெய்தந்த
நறு நெய்ய சோறு என்கோ
திறந்து மறந்து கூட்டு முதல்
முகந்து கொள்ளும் உணவு என்கோ
அன்னவை பல_பல
வருந்திய
இரும் பேர் ஒக்கல் அருந்தி எஞ்சிய
அளித்து உவப்ப ஈத்தோன் எந்தை
எம்மோர் ஆக்க கங்கு உண்டே
மாரி வானத்து மீன் நாப்பண்
விரி கதிர வெண் திங்களின்
விளங்கி தோன்றுக அவன் கலங்கா நல் இசை
யாமும் பிறரும் வாழ்த்த நாளும்
நிரை சால் நன் கலன் நல்கி
உரை செல சுரக்க அவன் பாடல் சால் வளனே

# 397
வெள்ளியும் இரு விசும்பு ஏர்தரும் புள்ளும்
உயர் சினை குடம்பை குரல் தோற்றினவே
பொய்கையும் போடு கண் விழித்தன பைபய
சுடரும் சுருங்கின்று ஒளியே பாடு எழுந்து
இரங்கு குரல் முரசமொடு வலம்புரி ஆர்ப்ப
இரவு புறங்கண்ட காலை தோன்றி
எஃகு இருள் அகற்றும் ஏம பாசறை
வைகறை அரவம் கேளியர் பல கோள்
செய் தார் மார்ப எழு-மதி துயில் என
தெண் கண் மா கிணை தெளிர்ப்ப ஒற்றி
நெடும் கடை தோன்றியேனே அது நயந்து
உள்ளி வந்த பரிசிலன் இவன் என
நெய் உற பொரித்த குய் உடை நெடும் சூடு
மணி கலன் நிறைந்த மணம் நாறு தேறல்
பாம்பு உரித்து அன்ன வான் பூ கலிங்கமொடு
மாரி அன்ன வண்மையின் சொரிந்து
வேனில் அன்ன என் வெப்பு நீங்க
அரும் கலம் நல்கியோனே என்றும்
செறுவில் பூத்த சே இதழ் தாமரை
அறு தொழில் அந்தணர் அறம் புரிந்து எடுத்த
தீயொடு விளங்கும் நாடன் வாய் வாள்
வலம் படு தீவின் பொலம் பூண் வளவன்
எறி திரை பெரும் கடல் இறுதி கண் செலினும்
தெறு கதிர் கனலி தென் திசை தோன்றினும்
என் என்று அஞ்சலம் யாமே வென் வெல்
அரும் சமம் கடக்கும் ஆற்றல் அவன்
திருந்து கழல் நோன் தாள் தண் நிழலேமே

# 398 திருத்தாமனார்
மதி நிலா கரப்ப வெள்ளி ஏர்தர
வகை மாண் நல் இல்
பொறி மயிர் வாரணம் பொழுது அறிந்து இயம்ப
பொய்கை பூ முகை மலர பாணர்
கைவல் சீறியாழ் கடன் அறிந்து இயக்க
இரவு புறம்பெற்ற ஏம வைகறை
பரிசிலர் வரையா விரை செய் பந்தர்
வரிசையின் இறுத்த வாய்மொழி வஞ்சன்
நகைவர் குறுகின் அல்லது பகைவர்க்கு
புலி_இனம் மடிந்த கல் அளை போல
துன்னல் போகிய பெரும் பெயர் மூதூர்
மதியத்து அன்ன என் அரி குரல் தடாரி
இரவுரை நெடுவார் அரிப்ப வட்டித்து
உள்ளி வருநர் கொள்கலம் நிறைப்போய்
தள்ளா நிலையை ஆகியர் எமக்கு என
என் வரவு அறீஇ
சிறிதிற்கு பெரிது உவந்து
விரும்பிய முகத்தன் ஆகி என் அரை
துரும்பு படு சிதாஅர் நீக்கி தன் அரை
புகை விரிந்து அன்ன பொங்கு துகில் உடீஇ
அழல் கான்று அன்ன அரும் பெறல் மண்டை
நிழல் காண் தேறல் நிறைய வாக்கி
யான் உண அருளல் அன்றியும் தான் உண்
மண்டைய கண்ட மான் வறை கருனை
கொக்கு உகிர் நிமிரல் ஒக்கல் ஆர
வரை உறழ் மார்பின் வையகம் விளக்கும்
விரவு மணி ஒளிர்வரும் அரவு உறழ் ஆரமொடு
புரையோன் மேனி பூ துகில் கலிங்கம்
உரை செல அருளியோனே
பறை இசை அருவி பாயல் கோவே

# 399 ஐயூர் முடவனார்
அடு_மகள் முகந்த அளவா வெண்ணெல்
தொடி மாண் உலக்கை பரூஉ குற்று அரிசி
காடி வெள் உலை கொளீஇ நீழல்
ஓங்கு சினை மாவின் தீம் கனி நறும் புளி
மோட்டு இரு வராஅல் கோட்டு_மீன் கொழும் குறை
செறுவின் வள்ளை சிறு கொடி பாகல்
பாதிரி ஊழ் முகை அவிழ் விடுத்து அன்ன
மெய் களைந்து இனனொடு விரைஇ
மூழ்ப்ப பெய்த முழு அவிழ் புழுக்கல்
அழிகளின் படுநர் களி அட வைகின்
பழம் சோறு அயிலும் முழங்கு நீர் படப்பை
காவிரி கிழவன் மாயா நல் இசை
கிள்ளிவளவன் உள்ளி அவன் படர்தும்
செல்லேன் செல்லேன் பிறர் முகம் நோக்கேன்
நெடும் கழை தூண்டில் விடு மீன் நொடுத்து
கிணை_மகள் அட்ட பாவல் புளிங்கூழ்
பொழுது மறுத்து உண்ணும் உண்டியேன் அழிவு கொண்டு
ஒரு சிறை இருந்தேன் என்னே இனியே
அறவர் அறவன் மறவர் மறவன்
மள்ளர் மள்ளன் தொல்லோர் மருகன்
இசையின் கொண்டான் நசை அமுது உண்க என
மீ படர்ந்து இறந்து வன் கோல் மண்ணி
வள் பரிந்து கிடந்த என் தெண் கண் மா கிணை
விசிப்பு_உறுத்து அமைந்த புது காழ் போர்வை
அலகின் மாலை ஆர்ப்ப வட்டித்து
கடியும் உணவு என்ன கடவுட்கும் தொடேன்
கடும் தேர் அள்ளற்கு அசாவா நோன் சுவல்
பகடே அத்தை யான் வேண்டி வந்தது என
ஒன்று யான் பெட்டா அளவை அன்றே
ஆன்று விட்டனன் அத்தை விசும்பின்
மீன் பூத்து அன்ன உருவ பன் நிரை
ஊர்தியொடு நல்கியோனே சீர் கொள
இழுமென இழிதரும் அருவி
வான் தோய் உயர் சிமை தோன்றி கோவே

# 400 கோவூர் கிழார்
மாக விசும்பின் வெண் திங்கள்
மூ_ஐந்தால் முறை முற்ற
கடல் நடுவண் கண்டு அன்ன என்
இயம் இசையா மரபு ஏத்தி
கடை தோன்றிய கடை கங்குலான்
பலர் துஞ்சவும் தான் துஞ்சான்
உலகு காக்கும் உயர் கொள்கை
கேட்டோன் எந்தை என் தெண் கிணை குரலே
கேட்டதன் கொண்டும் வேட்கை தண்டாது
தொன்றுபடு சிதாஅர் மருங்கு நீக்கி
மிக பெரும் சிறப்பின் வீறு சால் நன் கலம்
கலிங்கம் அளித்திட்டு என் அரை நோக்கி
நார் அரி நறவின் நாள்_மகிழ் தூங்குந்து
போது அறியேன் பதி பழகவும்
தன் பகை கடிதல் அன்றியும் சேர்ந்தோர்
பசி பகை கடிதலும் வல்லன் மாதோ
மறவர் மலிந்த தன்
கேள்வி மலிந்த வேள்வி தூணத்து
இரும் கழி இழிதரும் ஆர்கலி வங்கம்
தேறு நீர் பரப்பின் யாறு சீத்து உய்த்து
துறை-தொறும் பிணிக்கும் நல் ஊர்
உறைவு இன் யாணர் நாடு கிழவோனே