<<முந்திய பக்கம்

கம்பராமாயணம்
1. பாலகாண்டம்
2. அயோத்தியா காண்டம் 3.ஆரணிய காண்டம் 4.கிட்கிந்தா காண்டம் 5.சுந்தர காண்டம்
6. 1 யுத்த காண்டம்
முதல் தொகுதி
6. 2 யுத்த காண்டம்
2-ஆம் தொகுதி
6. 3 யுத்த காண்டம்
3-ஆம் தொகுதி
6. 4 யுத்த காண்டம்
4-ஆம் தொகுதி
கம்பராமாயணம் தேடல் -
பாடல் முதல் அடி வாயிலாக
தேவையான காண்டத்தின் மேல் சொடுக்கிப் பின்னர் படலத்தைச் சொடுக்கவும் - அல்லது
தேடல் பகுதியைச் சொடுக்கவும்
படலங்கள் 4.கிட்கிந்தா காண்டம் - மிகைப்பாடல்களுடன்
0. கடவுள் வாழ்த்து

1. பம்பை வாவிப் படலம்

2. அனுமப் படலம்

3. நட்புக்கோட் படலம்

4. மராமரப் படலம்

5. துந்தபிப் படலம்

6. கலன்காண் படலம்

7. வாலி வதைப் படலம்

8. தாரை புலம்புறு படலம்

9. அரசியற் படலம்

10. கார்காலப் படலம் படலம்

11. கிட்கிந்தைப் படலம்

12. தானைகாண் படலம்

13. நாடவிட்ட படலம்

14. பிலம் புக்கு நீங்கு படலம்

15. ஆறுசெல் படலம்

16. சம்பாதிப் நீங்கு படலம்

17. மயேந்திரப் படலம்

18. மிகைப்பாடல்கள்


** கம்பராமாயணம்
*** கிட்கிந்தா காண்டம்
&4 கிட்கிந்தா காண்டம்

@0 கடவுள் வாழ்த்து

#1
மூன்று உரு எனக் குணம் மும்மை ஆம் முதல்
தோன்று உரு எவையும் அ முதலைச் சொல்லுதற்கு
ஏன்று உரு அமைந்தவும் இடையில் நின்றவும்
சான்று உரு உணர்வினுக்கு உணர்வும் ஆயினான்

@1 பம்பை வாவிப் படலம்

#1
தேன் படி மலரது செம் கண் வெம் கைம்மா
தான் படிகின்றது தெளிவு சான்றது
மீன் படி மேகமும் படிந்து வீங்கு நீர்
வான் படிந்து உலகிடைக் கிடந்த மாண்பது

#2
ஈர்ந்த நுண் பளிங்கு எனத் தெளிந்த ஈர்ம் புனல்
பேர்ந்து ஒளிர் நவ மணி படர்ந்த பித்திகை
சேர்ந்துழிச்சேர்ந்துழி நிறத்தைச் சேர்தலால்
ஓர்ந்து உணர்வில்லவர் உள்ளம் ஒப்பது

#3
குவால் மணித் தடம்-தொறும் பவளக் கொம்பு இவர்
கவான் அரசு அன்னமும் பெடையும் காண்டலின்
தவா நெடு வானகம் தயங்கு மீனொடும்
உவா மதி உலப்பு இல உதித்தது ஒப்பது

#4
ஓத நீர் உலகமும் உயிர்கள் யாவையும்
வேதபாரகரையும் விதிக்க வேட்ட நாள்
சீதம் வீங்கு உவரியைச் செகுக்குமாறு ஒரு
காதி காதலன் தரு கடலின் அன்னது

#5
எல் படர் நாகர்-தம் இருக்கை ஈது எனக்
கிற்பது ஓர் காட்சியது எனினும் கீழ் உற
கற்பகம் அனைய அக் கவிஞர் நாட்டிய
சொல் பொருள் ஆம் எனத் தோன்றல் சான்றது

#6
களம் நவில் அன்னமே முதல கண் அகன்
தள மலர்ப் புள் ஒலி தழங்க இன்னது ஓர்
கிளவி என்று அறிவு_அரும் கிளர்ச்சித்து ஆதலின்
வள நகர்க் கூலமே போலும் மாண்பது

#7
அரி மலர்ப் பங்கயத்து அன்னம் எங்கணும்
புரி_குழல் புக்க இடம் புகல்கிலாத யாம்
திருமுகம் நோக்கலம் இறந்து தீர்தும் என்று
எரியினில் புகுவன எனத் தோன்றும் ஈட்டது

#8
காசு அடை விளக்கிய காட்சித்து ஆயினும்
மாசு அடை பேதைமை இடை மயக்கலால்
ஆசு அடை நல் உணர்வு அனையது ஆம் எனப்
பாசடை வயின்-தொறும் பரந்த பண்பது

#9
களிப் படா மனத்தவன் காணின் கற்பு எனும்
கிளிப் படா மொழியவள் விழியின் கேள் எனத்
துளிப் படா நயனங்கள் துளிப்ப சோரும் என்று
ஒளிப் படாது ஆயிடை ஒளிக்கும் மீனது

#10
கழை படு முத்தமும் கலுழிக் கார் மத
மழை படு தரளமும் மணியும் வாரி நேர்
இழை படர்ந்து அனைய நீர் அருவி எய்தலால்
குழை படு முகத்தியர் கோலம் ஒப்பது

#11
பொங்கு வெம் கட கரி பொதுவின் ஆடலின்
கங்குலின் எதிர் பொரு கலவிப் பூசலில்
அங்கம் நொந்து அலசிய விலையின் ஆய் வளை
மங்கையர் வடிவு என வருந்தும் மெய்யது

#12
விண் தொடர் நெடு வரைத் தேனும் வேழத்தின்
வண்டு உளர் நறு மத மழையும் மண்டலால்
உண்டவர் பெரும் களி உறலின் ஓதியர்
தொண்டை அம் கனி இதழ்த் தோன்றல் சான்றது

#13
ஆரியம் முதலிய பதினெண் பாடையில்
பூரியர் ஒருவழிப் புகுந்தது ஆம் என
ஓர்கில கிளவிகள் ஒன்றொடு ஒப்பு இல
சோர்வு இல விளம்பு புள் துவன்றுகின்றது

#14
தான் உயிர் உறத் தனி தழுவும் பேடையை
ஊன் உயிர் பிரிந்து எனப் பிரிந்த ஓதிமம்
வான்_அர_மகளிர்-தம் வயங்கு நூபுரத்
தேன் உகு மழலையைச் செவியின் ஓர்ப்பது

#15
ஈறு இடல் அரிய மால் வரை நின்று ஈர்த்து இழி
ஆறு இடு விரை அகில் ஆரம் ஆதிய
ஊறிட ஒள் நகர் உரைத்த ஒண் தளச்
சேறு இடு பரணியின் திகழும் தேசது

#16
நவ்வி நோக்கியர் இதழ் நிகர் குமுதத்து நறும் தேன்
வவ்வு மாந்தரின் களி மயக்குறுவன மகரம்
எவ்வம் ஓங்கிய இறப்பொடு பிறப்பு இவை என்ன
கவ்வு மீனொடு முழுகுவ எழுவன கரண்டம்

#17
கவள யானை_அன்னாற்கு அந்தக் கடி நறும் கமலத்
தவளை ஈகிலம் ஆவது செய்தும் என்று அருளால்
திவள அன்னங்கள் திரு நடை காட்டுவ செம் கண்
குவளை காட்டுவ துவர் இதழ் காட்டுவ குமுதம்

#18
பெய் கலன்களின் இலங்கு ஒளி மருங்கொடு பிறழ
வைகலும் புனல் குடைபவர் வான்_அர_மகளிர்
செய்கை அன்னங்கள் ஏந்திய சேடியர் என்னப்
பொய்கை அன்னங்கள் ஏந்திய பூம் கொம்பர் பொலிவ

#19
ஏலும் நீள் நிழல் இடையிடை எறித்தலின் படிகம்
போலும் வார் புனல் புகுந்துளவாம் எனப் பொங்கி
ஆலும் மீன் கணம் அஞ்சின அலம்வர வஞ்சிக்
கூல மா மரத்து இரும் சிறை புலர்த்துவ குரண்டம்

#20
அங்கு ஒர் பாகத்தில் அஞ்சன மணி நிழல் அடைய
பங்கு பெற்று ஒளிர் பதுமராகத்து ஒளி பாயக்
கங்குலும் பகலாம் எனப் பொலிவன கமலம்
மங்கைமார் தட முலை எனப் பொலிவன வாளம்

#21
வலி நடத்திய வாள் என வாளைகள் பாய
ஒலி நடத்திய திரை-தொறும் உகள்வன நீர் நாய்
கலி நடக் கழை கண்ணுளர் என நடம் கவினப்
பொலிவு உடைத்து எனத் தேரைகள் புகழ்வன போலும்

#22
அன்னது ஆகிய அகன் புனல் பொய்கையை அணுகிக்
கன்னி அன்னமும் கமலமும் முதலிய கண்டான்
தன்னின் நீங்கிய தளிரியற்கு உருகினன் தளர்வான்
உன்னும் நல் உணர்வு ஒடுங்கிடப் புலம்பிடலுற்றான்

#23
வரி ஆர் மணிக் கால் வாளமே மட அன்னங்காள் எனை நீங்கத்
தரியாள் நடந்தாள் இல்லளேல் தளர்ந்த போதும் தகவேயோ
எரியாநின்ற ஆருயிருக்கு இரங்கினால் ஈது இசை அன்றோ
பிரியாது இருந்தேற்கு ஒரு மாற்றம் பேசின் பூசல் பெரிது ஆமோ

#24
வண்ண நறும் தாமரை மலரும் வாசக் குவளை நாள்_மலரும்
புண்ணின் எரியும் ஒரு நெஞ்சம் பொதியும் மருந்தின் தரும் பொய்காய்
கண்ணும் முகமும் காட்டுவாய் வடிவும் ஒருகால் காட்டாயோ
ஒண்ணும் என்னின் அஃது உதவாது உலோவினாரும் உயர்ந்தாரோ

#25
விரிந்த குவளை சேதாம்பல் விரை மென் கமலம் கொடி வள்ளை
தரங்கம் கெண்டை வரால் ஆமை என்று இத்தகையதமை நோக்கி
மருந்தின் அனையாள் அவயவங்கள் அவை நின் கண்டேன் வல் அரக்கன்
அருந்தி அகல்வான் சிந்தினவோ ஆவி உரைத்தி ஆம் அன்றே

#26
ஓடாநின்ற களி மயிலே சாயற்கு ஒதுங்கி உள் அழிந்து
கூடாதாரின் திரிகின்ற நீயும் ஆகம் குளிர்ந்தாயோ
தேடாநின்ற என் உயிரைத் தெரியக் கண்டாய் சிந்தை உவந்து
ஆடாநின்றாய் ஆயிரம் கண் உடையாய்க்கு ஒளிக்குமாறு உண்டோ

#27
அடையீர் எனினும் ஒரு மாற்றம் அறிந்தது உரையீர் அன்னத்தின்
பெடையீர் ஒன்றும் பேசீரோ பிழையாதேற்குப் பிழைத்தீரோ
நடை நீர் அழியச் செய்தாரே நடு இலாதார் நனி அவரோடு
உடையீர் பகைதான் உமை நோக்கி உவக்கின்றேனை முனிவீரோ

#28
பொன் பால் பொருவும் விரை அல்லி புல்லிப் பொலிந்த பொலம் தாது
தன்-பால் தழுவும் குழல் வண்டு தமிழ்ப் பாட்டு இசைக்கும் தாமரையே
என்-பால் இல்லை அப்பாலோ இருப்பார்_அல்லர் விருப்பு உடைய
உன்-பால் இல்லை என்றக்கால் ஒளிப்பாரோடும் உறவு உண்டோ

#29
ஒரு வாசகத்தை வாய் திறந்து இங்கு உதவாய் பொய்கை குவிந்து ஒடுங்கும்
திரு வாய் அனைய சேதாம்பற்கு அயலே கிடந்த செம் கிடையே
வெருவாது எதிர் நின்று அமுது உயிர்க்கும் வீழிச் செவ்விக் கொழும் கனி வாய்
தருவாய் அவ் வாய் இன் அமுதும் தண்ணென் மொழியும் தாராயோ

#30
அலக்கணுற்றேற்கு உற்று உதவற்கு அடைவு உண்டு அன்றோ கொடி வள்ளாய்
மலர்க் கொம்பு அனைய மடச் சீதை காதே மற்று ஒன்று அல்லையால்
பொலக் குண்டலமும் கொடும் குழையும் புனை தாழ் முத்தின் பொன் தோடும்
விலக்கி வந்தாய் காட்டாயோ இன்னும் பூசல் விரும்புதியோ

#31
பஞ்சு பூத்த விரல் பதுமம் பவளம் பூத்த அடியாள் என்
நெஞ்சு பூத்த தாமரையின் நிலையம் பூத்தாள் நிறம் பூத்த
மஞ்சு பூத்த மழை அனைய குழலாள் கண் போல் மணிக் குவளாய்
நஞ்சு பூத்ததாம் அன்ன நகையால் என்னை நலிவாயோ

#32
என்று அயா_உயிர்க்கின்றவன் ஏடு அவிழ்
கொன்றை ஆவிப் புறத்து இவை கூறி யான்
பொன்ற யாதும் புகல்கிலை போலுமால்
வன் தயாவிலி என்ன வருந்தினான்

#33
வார் அளித் தழை மாப் பிடி வாயிடை
கார் அளிக் கலுழிக் கரும் கைம்மலை
நீர் அளிப்பது நோக்கினன் நின்றனன்
பேர் அளிக்குப் பிறந்த இல் ஆயினான்

#34
ஆண்டு அவ் வள்ளலை அன்பு எனும் ஆர் அணி
பூண்ட தம்பி பொழுது கழிந்ததால்
ஈண்டு இரும் புனல் தோய்ந்து உன் இசை என
நீண்டவன் கழல் தாழ் நெடியோய் என்றான்

#35
அரைசும் அவ்வழி நின்று அரிது எய்தி அத்
திரை செய் தீர்த்தம் முன் செய் தவம் உண்மையால்
வரை செய் மா மத வாரணம் நாண் உற
விரை செய் பூம் புனல் ஆடலை மேயினான்

#36
நீத்த நீரில் நெடியவன் மூழ்கலும்
தீத்த காமத் தெறு கதிர்த் தீயினால்
காய்த்து இரும்பை கருமகக் கம்மியன்
தோய்த்த தண் புனல் ஒத்தது அத் தோயமே

#37
ஆடினான் அன்னமாய் அரு மறைகள் பாடினான்
நீடு நீர் முன்னை நூல் நெறிமுறையின் நேமி தாள்
சூடினான் முனிவர்-தம் தொகுதி சேர் சோலை-வாய்
மாடுதான் வைகினான் எரி கதிரும் வைகினான்

#38
அந்தியாள் வந்து தான் அணுகவே அவ்வயின்
சந்த வார் கொங்கையாள் தனிமைதான் நாயகன்
சிந்தியா நொந்து தேய் பொழுது தெறு சீத நீர்
இந்து வான் உந்துவான் எரி கதிரினான் என

#39
பூ ஒடுங்கின விரவு புள் ஒடுங்கின பொழில்கள்
மா ஒடுங்கின மரனும் இலை ஒடுங்கின கிளிகள்
நா ஒடுங்கின மயில்கள் நடம் ஒடுங்கின குயில்கள்
கூ ஒடுங்கின பிளிறு குரல் ஒடுங்கின களிறு

#40
மண் துயின்றன நிலைய மலை துயின்றன மறு_இல்
பண் துயின்றன விரவு பணி துயின்றன பகரும்
விண் துயின்றன கழுதும் விழி துயின்றன பழுது_இல்
கண் துயின்றில நெடிய கடல் துயின்றன களிறு

#41
பொங்கி முற்றிய உணர்வு புணர்தலும் புகையினொடு
பங்கமுற்று அனைய வினை பரிவுறும்படி முடிவு_இல்
கங்குல் இற்றது கமலம் முகம் எடுத்தது கடலின்
வெம் கதிர் கடவுள் எழ விமலன் வெம் துயரின் எழ

#42
காலையே கடிது நெடிது ஏகினார் கடல் கவினு
சோலை ஏய் மலை தழுவு கான நீள் நெறி தொலைய
ஆலை ஏய் துழனி அகநாடர் ஆர்கலி அமுது
போலவே உரைசெய் புன மானை நாடுதல் புரிஞர்

@2 அனுமப் படலம்

#1
எய்தினார் சவரி நெடிது ஏய மால் வரை எளிதின்
நொய்தின் ஏறினர் அதனின் நோன்மை சால் கவி அரசு
செய்வது ஓர்கிலன் அனையர் தெவ்வராம் என வெருவி
உய்தும் நாம் என விரைவின் ஓடினான் மலை முழையின்

#2
காலின் மா மதலை இவர் காண்-மினோ கறுவு உடைய
வாலி ஏவலின் வரவினார்கள் தாம் வரி சிலையர்
நீல மால் வரை அனையர் நீதியா நினைதி என
மூலம் ஓர்கிலர் மறுகி ஓடினார் முழையதனின்

#3
அவ் இடத்து அவர் மறுகி அஞ்சி நெஞ்சு அழி அமைதி
வெவ் விடத்தினை மறுகு தேவர் தானவர் வெருவல்
தவ்விடத் தனி அருளு தாழ் சடைக் கடவுள் என
இவ் இடத்து இனிது இரு-மின் அஞ்சல் என்று இடை உதவி

#4
அஞ்சனைக்கு ஒரு சிறுவன் அஞ்சனக் கிரி அனைய
மஞ்சனைக் குறுகி ஒரு மாணவப் படிவமொடு
வெம் சமத் தொழிலர் தவ மெய்யர் கைச் சிலையர் என
நெஞ்சு அயிர்த்து அயல் மறைய நின்று கற்பினின் நினையும்

#5
தேவருக்கு ஒரு தலைவர் ஆம் முதல் தேவர் எனின்
மூவர் மற்று இவர் இருவர் மூரி வில் கரர் இவரை
யாவர் ஒப்பவர் உலகில் யாது இவர்க்கு அரிய பொருள்
கேவலத்து இவர் நிலைமை தேர்வது எக் கிழமை கொடு

#6
சிந்தையில் சிறிது துயர் சேர்வுறத் தெருமரலின்
நொந்து அயர்த்தவர் அனையர் நோ உறச் சிறியர் அலர்
அந்தரத்து அமரர்_அலர் மானிடப் படிவர் மயர்
சிந்தனைக்கு உரிய பொருள் தேடுதற்கு உறு நிலையர்

#7
தருமமும் தகவும் இவர் தனம் எனும் தகையர் இவர்
கருமமும் பிறிது ஒர் பொருள் கருதி அன்று அது கருதின்
அரு மருந்து அனையது இடை அழிவு வந்துளது அதனை
இரு மருங்கினும் நெடிது துருவுகின்றனர் இவர்கள்

#8
கதம் எனும் பொருண்மை இலர் கருணையின் கடல் அனையர்
இதம் எனும் பொருள் அலது ஓர் இயல்பு உணர்ந்திலர் இவர்கள்
சதமன் அஞ்சுறு நிலையர் தருமன் அஞ்சுறு சரிதர்
மதனன் அஞ்சுறு வடிவர் மறலி அஞ்சுறு விறலர்

#9
என்பன பலவும் எண்ணி இருவரை எய்த நோக்கி
அன்பினன் உருகுகின்ற உள்ளத்தன் ஆர்வத்தோரை
முன் பிரிந்து வினையர்-தம்மை முன்னினான் என்ன நின்றான்
தன் பெரும் குணத்தால் தன்னைத் தான் அலது ஒப்பு இலாதான்

#10
தன் கன்று கண்டு அன்ன தன்மைய தறுகண் பேழ் வாய்
மின் கன்றும் எயிற்றுக் கோள்மா வேங்கை என்று இனையவேயும்
பின் சென்று காதல் கூரப் பேழ்கணித்து இரங்குகின்ற
என் கன்றுகின்றது எண்ணிப் பற்பல இவரை அம்மா

#11
மயில் முதல் பறவை எல்லாம் மணி நிறத்து இவர்கள் மேனி
வெயில் உறற்கு இரங்கி மீதா விரி சிறைப் பந்தர் வீசி
எயில் வகுத்து எய்துகின்ற இன முகில் கணங்கள் எங்கும்
பயில்வுறத் திவலை சிந்திப் பயப்பயத் தழுவும் பாங்கர்

#12
காய் எரி கனலும் கற்கள் கள் உடை மலர்களே போல்
தூய செம் கமல பாதம் தோய்-தொறும் குழைந்து தோன்றும்
போயின திசைகள்-தோறும் மரனொடு புல்லும் எல்லாம்
சாய்வுறும் தொழுவ போல் இங்கு இவர்களோ தருமம் ஆவார்

#13
துன்பினைத் துடைத்து மாயத் தொல்வினை-தன்னை நீக்கித்
தென்புலத்து அன்றி மீளா நெறி உய்க்கும் தேவரோ-தாம்
என்பு எனக்கு உருகுகின்றது இவர்கின்றது அளவு_இல் காதல்
அன்பினுக்கு அவதி இல்லை அடைவு என்-கொல் அறிதல் தேற்றேன்

#14
இவ்வகை எண்ணி ஆண்டு அவ் இருவரும் எய்தலோடும்
செவ் வழி உள்ளத்தானும் தெரிவுற எதிர்சென்று எய்திக்
கவ்வை இன்றாக நுங்கள் வரவு எனக் கருணையோனும்
எவ் வழி நீங்கியோய் நீ யார் என விளம்பலுற்றான்

#15
மஞ்சு எனத் திரண்ட கோல மேனிய மகளிர்க்கு எல்லாம்
நஞ்சு எனத் தகைய ஆகி நளிர் இரும் பனிக்குத் தேம்பாக்
கஞ்சம் ஒத்து அலர்ந்த செய்ய கண்ண யான் காற்றின் வேந்தற்கு
அஞ்சனை வயிற்றில் வந்தேன் நாமமும் அனுமன் என்பேன்

#16
இ மலை இருந்து வாழும் எரி கதிர்ப் பரிதிச் செல்வன்
செம்மலுக்கு ஏவல் செய்வேன் தேவ நும் வரவு நோக்கி
விம்மலுற்று அனையான் ஏவ வினவிய வந்தேன் என்றான்
எ மலைக் குலமும் தாழ இசை சுமந்து எழுந்த தோளான்

#17
மாற்றம் அஃது உரைத்தலோடும் வரி சிலைக் குரிசில் மைந்தன்
தேற்றமுற்று இவனின் ஊங்கு செவ்வியோர் இன்மை தேறி
ஆற்றலும் நிறைவும் கல்வி அமைதியும் அறிவும் என்னும்
வேற்றுமை இவனோடு இல்லையாம் என விளம்பலுற்றான்

#18
இல்லாத உலகத்து எங்கும் இங்கு இவன் இசைகள் கூரக்
கல்லாத கலையும் வேதக் கடலுமே என்னும் காட்சி
சொல்லாலே தோன்றிற்று அன்றே யார்-கொல் இச் சொல்லின்_செல்வன்
வில் ஆர் தோள் இளைய வீர விரிஞ்சனோ விடை_வலானோ

#19
மாணி ஆம் படிவம் அன்று மற்று இவன் வடிவம் மைந்த
ஆணி இவ் உலகுக்கு எல்லாம் என்னலாம் ஆற்றற்கு ஏற்ற
சேண் உயர் பெருமை-தன்னைச் சிக்கு அறத் தெளிந்தேன் பின்னர்
காணுதி மெய்ம்மை என்று தம்பிக்குக் கழறிக் கண்ணன்

#20
எவ்வழி இருந்தான் சொன்ன கவிக் குலத்து அரசன் யாங்கள்
அவ்வழி அவனைக் காணும் அருத்தியால் அணுக வந்தேம்
இவ் வழி நின்னை உற்ற எமக்கு நீ இன்று சொன்ன
செவ் வழி உள்ளத்தானைக் காட்டுதி தெரிய என்றான்

#21
மாதிரப் பொருப்போடு ஓங்கு வரம்பு_இலா உலகில் மற்றுப்
பூதரப் புயத்து வீரர் நும் ஒக்கும் புனிதர் யாரே
ஆதரித்து அவனைக் காண்டற்கு அணுகினிர் என்னின் அன்னான்
தீது அவித்து அமையச் செய்த செய் தவச் செல்வம் நன்றே

#22
இரவி-தன் புதல்வன் தன்னை இந்திரன் புதல்வன் என்னும்
பரிவிலன் சீறப் போந்து பருவரற்கு ஒருவன் ஆகி
அருவி அம் குன்றில் என்னோடு இருந்தனன் அவன்-பால் செல்வம்
வருவது ஓர் அமைவின் வந்தீர் வரையினும் வளர்ந்த தோளீர்

#23
ஒடுங்கல் இல் உலகம் யாவும் உவந்தன உதவி வேள்வி
தொடங்கினர் மற்றும் முற்றத் தொல் அறம் துணிவர் அன்றே
கொடும் குலப் பகைஞன் ஆகிக் கொல்லிய வந்த கூற்றை
நடுங்கினர்க்கு அபயம் நல்கும் அதனினும் நல்லது உண்டோ

#24
எம்மையே காத்திர் என்றற்கு எளிது அரோ இமைப்பிலாதோர்-தம்மையே
முதல் இட்டு ஆன்ற சராசரம் சமைந்த ஆற்றல்
மும்மை ஏழ் உலகும் காக்கும் முதல்வர் நீர் முருகன் செவ்வி
உம்மையே புகல் புக்கேமுக்கு இதின் வரும் உறுதி உண்டோ

#25
யார் என விளம்புகேன் நான் எம் குலத் தலைவற்கு உம்மை
வீர நீர் பணித்திர் என்றான் மெய்ம்மையின் வேலி போல்வான்
வார் கழல் இளைய வீரன் மரபுளி வாய்மை யாதும்
சோர்விலன் நிலைமை எல்லாம் தெரிவுறச் சொல்லலுற்றான்

#26
சூரியன் மரபில் தோன்றிச் சுடர் நெடு நேமி ஆண்ட
ஆரியன் அமரர்க்காக அசுரரை ஆவி உண்ட
வீரியன் வேள்வி செய்து விண் உலகோடும் ஆண்ட
கார் இயல் கருணை அன்ன கண் அகன் கவிகை மன்னன்

#27
புயல் தரு மதத் திண் கோட்டுப் புகர் மலைக்கு இறையை ஊர்ந்து
மயல் தரும் அவுணர் யாரும் மடிதர வரி வில் கொண்ட
இயல் தரும் புலமைச் செங்கோல் மனு முதல் எவரும் ஒவ்வாத்
தயரதன் கனக மாடத் தட மதில் அயோத்தி_வேந்தன்

#28
அன்னவன் சிறுவனால் இவ் ஆண்தகை அன்னை ஏவத்
தன்னுடை உரிமைச் செல்வம் தம்பிக்குத் தகவின் நல்கி
நல் நெடும் கானம் சேர்ந்தான் நாமமும் இராமன் என்பான்
இ நெடும் சிலை_வலானுக்கு ஏவல் செய் அடியென் யானே

#29
என்று அவன் தோற்றம் ஆதி இராவணன் இழைத்த மாயப்
புன் தொழில் இறுதி ஆகப் புகுந்து உள பொருள்கள் எல்லாம்
ஒன்றும் ஆண்டு ஒழிவுறாமல் உணர்த்தினன் உணர்த்தக் கேட்டு
நின்ற அக் காலின் மைந்தன் நெடிது உவந்து அடியில் தாழ்ந்தான்

#30
தாழ்தலும் தகாத செய்தது என்னை நீ தருமம் அன்றால்
கேள்வி நூல் மறை_வலாள என்றனன் என்னக் கேட்ட
பாழி அம் தடம் தோள் வென்றி மாருதி பதுமச் செங் கண்
ஆழியாய் அடியனேனும் அரிக் குலத்து ஒருவன் என்றான்

#31
மின் உருக் கொண்ட வில்லோர் வியப்புற வேத நல் நூல்
பின் உருக்கொண்டது என்னும் பெருமை ஆம் பொருளும் தாழப்
பொன் உருக்கொண்ட மேரு புயத்திற்கும் உவமை போதா
தன் உருக் கொண்டு நின்றான் தருமத்தின் தனிமை தீர்ப்பான்

#32
கண்டிலன் உலகம் மூன்றும் காலினால் கடந்து கொண்ட
புண்டரீகக் கண் ஆழிப் புரவலன் பொலன் கொள் சோதிக்
குண்டல வதனம் என்றால் கூறலாம் தகைமைத்து ஒன்றோ
பண்டை நூல் கதிரோன் சொல்லப் படித்தவன் படிவம் அம்மா

#33
தாள் படாக் கமலம் அன்ன தடம்_கணான் தம்பிக்கு அம்மா
கீழ்ப்படாநின்ற நீக்கிக் கிளர்படாது ஆகி என்றும்
நாள்படா மறைகளாலும் நவைபடா ஞானத்தாலும்
கோட்படாப் பதமே ஐய குரக்கு உருக்கொண்டது என்றான்

#34
நல்லன நிமித்தம் பெற்றேம் நம்பியைப் பெற்றேம் நம்-பால்
இல்லையே துன்பம் ஆனது இன்பமும் எய்திற்று இன்னும்
வில்லினாய் இவனைப் போலாம் கவிக் குலக் குரிசில் வீரன்
சொல்லினால் ஏவல் செய்வான் அவன் நிலை சொல்லற்பாற்றோ

#35
என்று அகம் உவந்து கோல முகம் மலர்ந்து இனிதின் நின்ற
குன்று உறழ் தோளினாரை நோக்கி அக் குரக்குச் சீயம்
சென்று அவன்-தன்னை இன்னே கொணர்கின்றேன் சிறிது போழ்தில்
வென்றியிர் இருந்தீர் என்று விடைபெற்று விரைவில் போனான்

@3 நட்புக் கோட் படலம்

#1
போன மந்தர மணிப் புய நெடும் புகழினான்
ஆன தன் பொரு சினத்து அரசன்-மாடு அணுகினான்
யானும் என் குலமும் இவ் உலகும் உய்ந்தனம் எனா
மானவன் குணம் எலாம் நினையும் மா மதியினான்

#2
மேலவன் திருமகற்கு உரைசெய்தான் விரை செய் தார்
வாலி என்ற அளவு_இலா வலியினான் உயிர் தெறக்
காலன் வந்தனன் இடர்க் கடல் கடந்தனம் எனா
ஆலம் உண்டவனின் நின்று அரு நடம் புரிகுவான்

#3
மண் உளார் விண் உளார் மாறு உளார் வேறு உளார்
எண் உளார் இயல் உளார் இசை உளார் திசை உளார்
கண் உளார் ஆயினும் பகை உளார் கழி நெடும்
புண் உளார் ஆருயிர்க்கு அமுதமே போல் உளார்

#4
சூழி மால் யானையார் தொழு கழல் தயரதன்
பாழியால் உலகு எலாம் ஒரு வழிப் படர வாழ்
ஆழியான் மைந்தர் பேரறிவினார் அழகினார்
ஊழியார் எளிதின் நிற்கு அரசு தந்து உதவுவார்

#5
நீதியார் கருணையின் நெறியினார் நெறி-வயின்
பேதியா நிலைமையார் எவரினும் பெருமையார்
போதியாது அளவு_இலா உணர்வினார் புகழினார்
காதி சேய் தரு நெடும் கடவுள் வெம் படையினார்

#6
வேல் இகல் சினவு தாடகை விளிந்து உருள வில்
கோலி அக் கொடுமையாள் புதல்வனைக் கொன்று தன்
கால் இயல் பொடியினால் நெடிய கல் படிவம் ஆம்
ஆலிகைக்கு அரிய பேர் உரு அளித்தருளினான்

#7
நல் உறுப்பு அமையும் நம்பியரில் முன்னவன் நயந்து
எல் உறுப்பு அரிய பேர் எழு சுடர் கடவுள்-தன்
பல் இறுத்தவன் வலிக்கு அமை தியம்பகம் எனும்
வில் இறுத்தருளினான் மிதிலை புக்க அனைய நாள்

#8
உளை வயப் புரவியான் உதவ உற்று ஒரு சொலால்
அளவு_இல் கற்பு உடைய சிற்றவை பணித்தருளலால்
வளை உடைப் புணரி சூழ் மகிதலத் திரு எலாம்
இளையவற்கு உதவி இத்தலை எழுந்தருளினான்

#9
தெவ் இரா வகை நெடும் சிகை விரா மழுவினான்
அவ் இராமனையும் மா வலி தொலைந்து அருளினான்
இவ் இராகவன் வெகுண்டு எழும் இரா அனையன் ஆம்
அவ் விராதனை இராவகை துடைத்து அருளினான்

#10
கரன் முதல் கருணையற்றவர் கடற்படையொடும்
சிரம் உகச் சிலை குனித்து உதவுவான் திசை உளார்
பரம் உகப் பகை துமித்து அருளுவான் பரமராம்
அரன் முதல் தலைவருக்கு அதிசயத் திறலினான்

#11
ஆய மால் நாகர் தாழ் ஆழியானே அலால்
காயமான் ஆயினான் ஆவனே காவலா
நீ அ மான் நேர்தியால் நேர்_இல் மாரீசனாம்
மாய மான் ஆயினான் மா யமான் ஆயினான்

#12
உக்க அந்தமும் உடல் பொறை துறந்து உயர் பதம்
புக்க அந்தமும் நமக்கு உரைசெயும் புரையவோ
திக்கு அவம் தர நெடும் திரள் கரம் சினவு தோள்
அக் கவந்தனும் நினைந்து அமரர் தாழ் சவரி போல்

#13
முனைவரும் பிறரும் மேல் முடிவு_அரும் பகல் எலாம்
இனையர் வந்து உறுவர் என்று இயல் தவம் புரிகுவார்
வினை எனும் சிறை துறந்து உயர் பதம் விரவினார்
எனையர் என்று உரைசெய்கேன் இரவி-தன் சிறுவனே

#14
மாயையால் மதி_இலா நிருதர்_கோன் மனைவியைத்
தீய கான் நெறியின் உய்த்தனன் அவள் தேடுவார்
நீ ஐயா தவம் இழைத்துடைமையால் நெடு மனம்
தூயையா உடையையால் உறவினைத் துணிகுவார்

#15
தந்திருந்தனர் அருள் தகை நெடும் பகைஞனாம்
இந்திரன் சிறுவனுக்கு இறுதி இன்று இசைதரும்
புந்தியின் பெருமையாய் போதரு என்று உரைசெய்தான்
மந்திரம் கெழுமு நூல் மரபு உணர்ந்து உதவுவான்

#16
அன்ன ஆம் உரை எலாம் அறிவினால் உணர்குவான்
உன்னையே உடைய எற்கு அரியது எப் பொருள் அரோ
பொன்னையே பொருவுவாய் போது எனப் போதுவான்
தன்னையே அனையவன் சரணம் வந்து அணுகினான்

#17
கண்டனன் என்ப-மன்னோ கதிரவன்_சிறுவன் காமர்
குண்டலம் துறந்த கோல வதனமும் குளிர்க்கும் கண்ணும்
புண்டரிகங்கள் பூத்துப் புயல் தழீஇப் பொலிந்த திங்கள்
மண்டலம் உதயம் செய்த மரகதக் கிரி_அனானை

#18
நோக்கினான் நெடிது நின்றான் நொடிவு_அரும் கமலத்து அண்ணல்
ஆக்கிய உலகம் எல்லாம் அன்று-தொட்டு இன்று-காறும்
பாக்கியம் புரிந்த எல்லாம் குவிந்து இரு படிவம் ஆகி
மேக்கு உயர் தடம் தோள் பெற்று வீரராய் விளைந்த என்பான்

#19
தேறினன் அமரர்க்கு எல்லாம் தேவராம் தேவர் அன்றே
மாறி இப் பிறப்பில் வந்தார் மானிடர் ஆகி-மன்னோ
ஆறு கொள் சடிலத்தானும் அயனும் என்று இவர்கள் ஆதி
வேறு உள குழுவை எல்லாம் மானுடம் வென்றது அன்றே

#20
என நினைந்து இனைய எண்ணி இவர்கின்ற காதல் ஓதக்
கனை கடல் கரை-நின்று ஏறாக் கண் இணை களிப்ப நோக்கி
அனகனைக் குறுகினான் அவ் அண்ணலும் அருத்தி கூர
புனை மலர் தடக் கை நீட்டிப் போந்து இனிது இருத்தி என்றான்

#21
தவா வலி அரக்கர் என்னும் தகா இருள் பகையைத் தள்ளிக்
குவால் அறம் நிறுத்தற்கு ஏற்ற காலத்தின் கூட்டம் ஒத்தார்
அவா முதல் அறுத்த சிந்தை அனகனும் அரியின் வேந்தும்
உவா உற வந்து கூடும் உடுபதி இரவி ஒத்தார்

#22
கூட்டமுற்று இருந்த வீரர் குறித்தது ஓர் பொருட்கு முன்_நாள்
ஈட்டிய தவமும் பின்னர் முயற்சியும் இயைந்தது ஒத்தார்
மீட்டும் வாள் அரக்கர் என்னும் தீவினை வேரின் வாங்கக்
கேட்டு உணர் கல்வியோடு ஞானமும் கிடைத்தது ஒத்தார்

#23
ஆயது ஓர் அவதியின்-கண் அருக்கன்_சேய் அரசை நோக்கித்
தீவினை தீய நோற்றார் என்னின் யார் செல்வ நின்னை
நாயகம் உலகுக்கு எல்லாம் என்னல் ஆம் நலம் மிக்கோயை
மேயினென் விதியே நல்கின் மேவல் ஆகாது என் என்றான்

#24
மை_அறு தவத்தின் வந்த சவரி இ மலையில் நீ வந்து
எய்தினை இருந்த தன்மை இயம்பினள் யாங்கள் உற்ற
கையறு துயரம் நின்னால் கடப்பது கருதி வந்தேம்
ஐய நின் தீரும் என்ன அரிக் குலத்து அரசன் சொல்வான்

#25
முரண் உடைத் தடக் கை ஓச்சி முன்னவன் பின் வந்தேனை
இருள் நிலைப் புறத்தின்-காறும் உலகு எங்கும் தொடர இக் குன்று
அரண் உடைத்து ஆகி உய்ந்தேன் ஆருயிர் துறக்கல் ஆற்றேன்
சரண் உனை புகுந்தேன் என்னைத் தாங்குதல் தருமம் என்றான்

#26
என்ற அக் குரக்கு_வேந்தை இராமனும் இரங்கி நோக்கி
உன்றனக்கு உரிய இன்ப துன்பங்கள் உள்ள முன்_நாள்
சென்றன போக மேல் வந்து உறுவன தீர்ப்பல் அன்ன
நின்றன எனக்கும் நிற்கும் நேர் என மொழியும் நேரா

#27
மற்று இனி உரைப்பது என்னே வானிடை மண்ணில் நின்னைச்
செற்றவர் என்னைச் செற்றார் தீயரே எனினும் உன்னோடு
உற்றவர் எனக்கும் உற்றார் உன் கிளை எனது என் காதல்
சுற்றம் உன் சுற்றம் நீ என் இன் உயிர்த் துணைவன் என்றான்

#28
ஆர்த்தது குரக்குச் சேனை அஞ்சனை_சிறுவன் மேனி
போர்த்தன பொடித்து உரோமப் புளகங்கள் பூவின் மாரி
தூர்த்தனர் விண்ணோர் மேகம் சொரிந்து என அனகன் சொன்ன
வார்த்தை எக் குலத்துளோர்க்கும் மறையினும் மெய் என்று உன்னா

#29
ஆண்டு எழுந்து அடியில் தாழ்ந்த அஞ்சனை_சிங்கம் வாழி
தூண் திரள் தடம் தோள் மைந்த தோழனும் நீயும் வாழி
ஈண்டு நும் கோயில் எய்தி இனிதின் நும் இருக்கை காண
வேண்டும் நும் அருள் என் என்றான் வீரனும் விழுமிது என்றான்

#30
ஏகினர் இரவி_சேயும் இருவரும் அரிகள்_ஏறும்
ஊக வெம் சேனை சூழ அறம் தொடர்ந்து உவந்து வாழ்த்த
நாகமும் நரந்தக் காவும் நளின வாவிகளும் நண்ணிப்
போக பூமியையும் ஏசும் புது மலர்ச் சோலை புக்கார்

#31
ஆரமும் அகிலும் துன்றி அவிர் பளிக்கு அறை அளாவி
நாரம் நின்றன போல் தோன்றி நவ மணித் தடங்கள் நீடும்
பாரமும் மருங்கும் தெய்வத் தருவும் நீர்ப் பண்ணை ஆடும்
சூர்_அர_மகளிர் ஊசல் துவன்றிய சும்மைத்து அன்றே

#32
அயர்வு_இல் கேள்வி சால் அறிஞர் வேலை முன்
பயில்வு_இல் கல்வியார் பொலிவு_இல் பான்மை போல்
குயிலும் மா மணிக் குழுவு சோதியால்
வெயிலும் வெள்ளி வெண் மதியும் மேம்படா

#33
ஏய அன்னது ஆம் இனிய சோலை-வாய்
மேய மைந்தரும் கவியின் வேந்தனும்
தூய பூ அணை பொலிந்து தோன்றினார்
ஆய அன்பினோடு அளவளாவுவார்

#34
கனியும் கந்தமும் காயும் தூயன
இனிய யாவையும் கொணர யாரினும்
புனிதன் மஞ்சனத் தொழில் புரிந்து பின்
இனிது இருந்து நல் விருந்தும் ஆயினான்

#35
விருந்தும் ஆகி அ மெய்ம்மை அன்பினோடு
இருந்து நோக்கி நொந்து இறைவன் சிந்தியா
பொருந்து நன் மனைக்கு உரிய பூவையைப்
பிரிந்துளாய்-கொலோ நீயும் பின் என்றான்

#36
என்ற வேலையில் எழுந்து மாருதி
குன்று போல நின்று இரு கை கூப்பினான்
நின்ற நீதியாய் நெடிது கேட்டியால்
ஒன்று யான் உனக்கு உரைப்பது உண்டு எனா

#37
நாலு வேதமாம் நவை_இல் ஆர்கலி
வேலி அன்னவன் மலையின் மேல் உளான்
சூலி-தன் அருள் துறையின் முற்றினான்
வாலி என்று உளான் வரம்பு_இல் ஆற்றலான்

#38
கழறு தேவரோடு அவுணர் கண்ணின் நின்று
உழலும் மந்தரத்து உருவு தேய முன்
அழலும் கோள்_அரா அகடு தீ விட
சுழலும் வேலையைக் கடையும் தோளினான்

#39
நிலனும் நீருமாய் நெருப்பும் காற்றும் என்று
உலைவு_இல் பூதம் நான்கு உடைய ஆற்றலான்
அலையின் வேலை சூழ் கிடந்த ஆழி மா
மலையின்-நின்றும் இ மலையின் வாவுவான்

#40
கிட்டுவார் பொரக் கிடைக்கின் அன்னவர்
பட்ட நல் வலம் பாகம் எய்துவான்
எட்டு மாதிரத்து இறுதி நாளும் உற்று
அட்ட மூர்த்தி தாள் பணியும் ஆற்றலான்

#41
கால் செலாது அவன் முன்னர் கந்த_வேள்
வேல் செலாது அவன் மார்பில் வென்றியான்
வால் செலாத வாய் அலது இராவணன்
கோல் செலாது அவன் குடை செலாது அரோ

#42
மேருவே முதல் கிரிகள் வேரொடும்
பேருமே அவன் பேருமேல் நெடும்
காரும் வானமும் கதிரும் நாகமும்
தூருமே அவன் பெரிய தோள்களால்

#43
பார் இடந்த வெம் பன்றி பண்டை நாள்
நீர் கடைந்த பேர் ஆமை நேர் உளான்
மார்பு இடந்த மா எனினும் மற்றவன்
தார் கிடந்த தோள் தகைய வல்லதோ

#44
படர்ந்த நீள் நெடும் தலை பரப்பி மீது
அடர்ந்து பாரம் வந்து உற அனந்தனும்
கிடந்து தாங்கும் இக் கிரியை மேயினான்
நடந்து தாங்கும் இப் புவனம் நாள் எலாம்

#45
கடல் உளைப்பதும் கால் சலிப்பதும்
மிடல் அருக்கர் தேர் மீது செல்வதும்
தொடர மற்றவன் சுளியும் என்று அலால்
அடலின் வெற்றியாய் அயலின் ஆவவோ

#46
வெள்ளம் ஏழு பத்து உள்ள மேருவைத்
தள்ளல் ஆன தோள் அரியின் தானையான்
உள்ளம் ஒன்றி எவ் உயிரும் வாழுமால்
வள்ளலே அவன் வலியின் வன்மையால்

#47
மழை இடிப்பு உறா வய வெம் சீய மா
முழை இடிப்பு உறா முரண் வெம் காலும் மென்
தழை துடிப்புறச் சார்வுறாது அவன்
விழைவிடத்தின் மேல் விளிவை அஞ்சலால்

#48
மெய்க் கொள் வாலினால் மிடல் இராவணன்
தொக்க தோள் உறத் தொடர்ப்படுத்த நாள்
புக்கிலாதவும் பொழி அரத்த நீர்
உக்கிலாத வேறு உலகம் யாவதோ

#49
இந்திரன் தனிப் புதல்வன் இன் அளிச்
சந்திரன் தழைத்து அனைய தன்மையான்
அந்தகன் தனக்கு அரிய ஆணையான்
முந்தி வந்தனன் இவனின் மொய்ம்பினோய்

#50
அன்னவன் எமக்கு அரசன் ஆகவே
இன்னவன் இளம் பதம் இயற்றும் நாள்
முன்னவன் குலப் பகைஞன் முட்டினான்
மின் எயிற்று வாள் அவுணன் வெம்மையான்

#51
முட்டி நின்று அவன் முரண் உரத்தின் நேர்
ஒட்ட அஞ்சி நெஞ்சு உலைய ஓடினான்
வட்ட மண்டலத்து அரிது வாழ்வு எனா
எட்ட_அரும் பெரும் பிலனுள் எய்தினான்

#52
எய்து காலை அப் பிலனுள் எய்தி யான்
நொய்தின் அங்கு அவன் கொணர்வென் நோன்மையாய்
செய்தி காவல் நீ சிறிது போழ்து எனா
வெய்தின் எய்தினான் வெகுளி மேயினான்

#53
ஏகி வாலியும் இருது ஏழொடு ஏழ்
வேக வெம் பிலம் தடவி வெம்மையான்
மோக வென்றி மேல் முயல்வின் வைகிட
சோகம் எய்தினன் துணை துளங்கினான்

#54
அழுது அழுங்குறும் இவனை அன்பினின்
தொழுது இரந்து நின் தொழில் இது ஆதலால்
எழுது வென்றியாய் அரசு கொள்க எனப்
பழுது இது என்றனன் பரியும் நெஞ்சினான்

#55
என்று தானும் அவ்வழி இரும் பிலம்
சென்று முன்னவன் தேடுவேன் அவன்
கொன்றுளான்-தனைக் கொல ஒணாது எனின்
பொன்றுவேன் எனா புகுதல் மேயினான்

#56
தடுத்து வல்லவர் தணிவுசெய்து நோய்
கெடுத்து மேலையோர் கிளத்து நீதியால்
அடுத்த காவலும் அரிகள் ஆணையால்
கொடுத்தது உண்டு இவன் கொண்டனன்-கொலாம்

#57
அன்ன நாளில் மாயாவி அப் பிலத்து
இன்ன வாயினூடு எய்தும் என்ன யாம்
பொன்னின் மால் வரைப் பொருப்பு ஒழித்து வேறு
உன்னு குன்று எலாம் உடன் அடுக்கினேம்

#58
சேமம் அவ்வழிச் செய்து செம் கதிர்க்
கோமகன்-தனைக் கொண்டுவந்து யாம்
மேவு குன்றின் மேல் வைகும் வேலை-வாய்
ஆவி உண்டனன் அவனை அன்னவன்

#59
ஒளித்தவன் உயிர்க் கள்ளை உண்டு உளம்
களித்த வாலியும் கடிதின் எய்தினான்
விளித்து நின்று வேறு உரை பெறான் இருந்து
அளித்தவாறு நன்று இளவலார் எனா

#60
வால் விசைத்து வான் வளி நிமிர்ந்து எனக்
கால் விசைத்து அவன் கடிதின் எற்றலும்
நீல் நிறத்து விண் நெடு முகட்டவும்
வேலை புக்கவும் பெரிய வெற்பு எலாம்

#61
ஏறினான் அவன் எவரும் அஞ்சுறச்
சீறினான் நெடும் சிகரம் எய்தினான்
வேறு இல் ஆதவன்_புதல்வன் மெய்ம்மையாம்
ஆறினானும் வந்து அடி வணங்கினான்

#62
வணங்கி அண்ணல் நின் வரவு இலாமையால்
உணங்கி உன் வழிப் படர உன்னுவேற்கு
இணங்கர் இன்மையால் இறைவ நும்முடைக்
கணங்கள் காவல் உன் கடன்மை என்றனர்

#63
ஆணை அஞ்சி இவ் அரசை எய்தி வாழ்
நாண் இலாத என் நவையை நல்குவாய்
பூண் நிலாவு தோளினை பொறாய் எனக்
கோணினான் நெடும் கொடுமை கூறினான்

#64
அடல் கடந்த தோள் அவனை அஞ்சி வெம்
குடல் கலங்கி எம் குலம் ஒடுங்க முன்
கடல் கடைந்த அக் கரதலங்களால்
உடல் கடைந்தனன் இவன் உலைந்தனன்

#65
இவன் உலைந்து உலைந்து எழு கடல் புறத்து
அவனியும் கடந்து எயில் அடைந்தனன்
கவனம் ஒன்று இலான் கால் கடா என
அவனி வேலை ஏழ் அரியின் வாவினான்

#66
நக்கரக் கடல் புறத்து நண்ணும் நாள்
செக்கர் மெய்த் தனிச் சோதி சேர்கலாச்
சக்கரப் பொருப்பின் தலைக்கும் அப்
பக்கம் உற்று அவன் கடிது பற்றினான்

#67
பற்றி அஞ்சலன் பழியின் வெம் சினம்
முற்றி நின்ற தன் முரண் வலிக் கையால்
எற்றுவான் எடுத்து எழுதலும் பிழைத்து
அற்றம் ஒன்று பெற்று இவன் அகன்றனன்

#68
எந்தை மற்று அவன் எயிறு அதுக்குமேல்
அந்தகற்கும் ஓர் அரணம் இல்லையால்
இந்த வெற்பின் வந்து இவன் இருந்தனன்
முந்தை உற்றது ஓர் சாபம் உண்மையால்

#69
உருமை என்று இவற்கு உரிய தாரம் ஆம்
அரு மருந்தையும் அவன் விரும்பினான்
இருமையும் துறந்து இவன் இருந்தனன்
கருமம் இங்கு இது எம் கடவுள் என்றனன்

#70
பொய்யிலாதவன் வரன்முறை இ மொழி புகல
ஐயன் ஆயிரம் பெயர் உடை அமரர்க்கும் அமரன்
வையம் நுங்கிய வாய் இதழ் துடித்தது மலர்க் கண்
செய்ய தாமரை ஆம்பல் அம் போது எனச் சிவந்த

#71
ஈரம் நீங்கிய சிற்றவை சொற்றனள் என்ன
ஆரம் வீங்கு தோள் தம்பிக்குத் தன் அரசுரிமைப்
பாரம் ஈந்தவன் பரிவு இலன் ஒருவன் தன் இளையோன்
தாரம் வௌவினன் என்ற சொல் தரிக்குமாறு உளதோ

#72
உலகம் ஏழினோடு ஏழும் வந்து அவன் உயிர்க்கு உதவி
விலகும் என்னினும் வில்லிடை வாளியின் வீட்டித்
தலைமையோடு நின் தாரமும் உனக்கு இன்று தருவென்
புலமையோய் அவன் உறைவிடம் காட்டு என்று புகன்றான்

#73
எழுந்து பேருவகைக் கடல் பெரும் திரை இரைப்ப
அழுந்து துன்பினுக்கு அக்கரை கண்டனன் அனையான்
விழுந்ததே இனி வாலி-தன் வலி என விரும்பா
மொழிந்த வீரற்கு யாம் எண்ணுவது உண்டு என மொழிந்தான்

#74
அனைய ஆண்டு உரைத்து அனுமனே முதலிய அமைச்சர்
நினைவும் கல்வியும் நீதியும் சூழ்ச்சியும் நிறைந்தார்
எனையர் அன்னவரோடும் வேறு இருந்தனன் இரவி
தனையன் அவ்வழி சமீரணன் மகன் உரைதருவான்

#75
உன்னினேன் உன்றன் உள்ளத்தின் உள்ளதை உரவோய்
அன்ன வாலியைக் காலனுக்கு அளிப்பது ஓர் ஆற்றல்
இன்ன வீரர்-பால் இல்லை என்று அயிர்த்தனை இனி யான்
சொன்ன கேட்டு அவை கடைப்பிடிப்பாய் எனச் சொன்னான்

#76
சங்கு சக்கரக் குறி உள தடக் கையில் தாளில்
எங்கும் இத்தனை இலக்கணம் யாவர்க்கும் இல்லை
செங் கண் வில் கரத்து இராமன் அத் திரு நெடு மாலே
இங்கு உதித்தனன் ஈண்டு அறம் நிறுத்துதற்கு இன்னும்

#77
செறுக்கும் வன் திறல் திரிபுரம் தீ எழச் சினவிக்
கறுக்கும் வெம் சினக் காலன்-தன் காலமும் காலால்
அறுக்கும் புங்கவன் ஆண்ட பேர் ஆடகத் தனி வில்
இறுக்கும் தன்மை அ மாயவற்கு அன்றியும் எளிதோ

#78
என்னை ஈன்றவன் இவ் உலகு யாவையும் ஈன்றான்
தன்னை ஈன்றவற்கு அடிமை செய் தவம் உனக்கு அஃதே
உன்னை ஈன்ற எற்கு உறு பதம் உளது என உரைத்தான்
இன்ன தோன்றலே அவன் இதற்கு ஏது உண்டு இறையோய்

#79
துன்பு தோன்றிய பொழுது உடன் தோன்றுவன் எவர்க்கும்
முன்பு தோன்றலை அறிதற்கு முடிவு என் என்று இயம்ப
அன்பு சான்று என உரைத்தனன் ஐய என் ஆக்கை
என்பு தோன்றல உருகின எனின் பிறிது எவனோ

#80
பிறிதும் அன்னவன் பெரு வலி ஆற்றலை பெரியோய்
அறிதி என்னின் உண்டு உபாயமும் அஃது அரு மரங்கள்
நெறியில் நின்றன ஏழில் ஒன்று உருவ இ நெடியோன்
பொறி கொள் வெம் சரம் போவது காண் எனப் புகன்றான்

#81
நன்றுநன்று எனா நல் நெடும் குன்றமும் நாணும்
தன் துணைத் தனி மாருதி தோள் இணை தழுவி
சென்று செம்மலைக் குறுகி யான் செப்புவது உளதால்
ஒன்று உனக்கு என இராமனும் உரைத்தி அஃது என்றான்

@4 மராமரப் படலம்

#1
ஏக வேண்டும் இ நெறி என இனிது கொண்டு ஏகி
மாகம் நீண்டன குறுகிட நிமிர்ந்தன மரங்கள்
ஆக ஐந்தினோடு இரண்டின் ஒன்று உருவ நின் அம்பு
போகவே என்றன் மனத்து இடர் போம் எனப் புகன்றான்

#2
மறுவிலான் அது கூறலும் வானவர்க்கு இறைவன்
முறுவல்செய்து அவன் முன்னிய முயற்சியை உன்னி
எறுழ் வலித் தடம் தோள்களால் சிலையை நாண் ஏற்றி
அறிவினால் அளப்ப அரியவற்று அருகு சென்று அணைந்தான்

#3
ஊழி பேரினும் பேர்வு இல உலகங்கள் உலைந்து
தாழும் காலத்தும் தாழ்வு இல தயங்கு பேரிருள் சூழ்
ஆழி மா நிலம் தாங்கிய அரும் குலக் கிரிகள்
ஏழும் ஆண்டு சென்று ஒரு வழி நின்று என இயைந்த

#4
கலை கொண்டு ஓங்கிய மதியமும் கதிரவன்தானும்
தலைகண்டு ஓடுதற்கு அரும் தவம் தொடங்குறும் சாரல்
மலை கண்டோம் என்பது அல்லது மலர் மிசை அயற்கும்
இலை கண்டோம் எனத் தெரிப்ப_அரும் தரத்தன ஏழும்

#5
ஒக்க நாள் எலாம் உழல்வன உலைவு இல ஆக
மிக்கது ஓர் பொருள் உளது என வேறு கண்டிலமால்
திக்கும் வானமும் செறிந்த அத் தரு நிழல் சீதம்
புக்கு நீங்கலின் தளர்வு_இல் இரவி தேர்ப் புரவி

#6
நீடு நாள்களும் கோள்களும் என்ன மேல் நிமிர்ந்து
மாடு தோற்றுவ மலர் எனப் பொலிகின்ற வளத்த
ஓடு மாச் சுடர் வெண் மதிக்கு உட்கறுப்பு உயர்ந்த
கோடு தேய்த்தலின் களங்கம் உற்றால் அன குறிய

#7
தீது_அறும் பெரும் சாகைகள் தழைக்கின்ற செயலால்
வேதம் என்னவும் தகுவன விசும்பினும் உயர்ந்த
ஆதி அண்டம் முன்பு அளித்தவன் உலகின் அங்கு அவன் ஊர்
ஓதிமம் தனி பெடையொடும் புடை இருந்து உறைவ

#8
நாற்றம் மல்கு போது அடை கனி காய் முதல் நானா
வீற்று மண்தலத்து யாவையும் வீழ்கில யாண்டும்
காற்று அலம்பினும் கலி நெடு வானிடைக் கலந்த
ஆற்றின் வீழ்ந்து போய் அலை கடல் பாய்தரும் இயல்ப

#9
அடியினால் உலகு அளந்தவன் அண்டத்துக்கு அப்பால்
முடியின் மேல் சென்ற முடியன ஆதலின் முடியா
நெடிய மால் எனும் நிலையன நீரிடைக் கிடந்த
படியின் மேல் நின்ற மேரு மால் வரையினும் பரிய

#10
வள்ளல் இந்திரன் மைந்தற்கும் தம்பிக்கும் வயிர்த்த
உள்ளமே என ஒன்றின் ஒன்று உள் வயிர்ப்பு உடைய
தெள்ளு நீரிடைக் கிடந்த பார் சுமக்கின்ற சேடன்
வெள்ளி வெண் படம் குடைந்து கீழ் போகிய வேர

#11
சென்று திக்கினை அளந்தன பணைகளின் தேவர்
என்றும் நிற்கும் என்று இசைப்பன இரு சுடர் திரியும்
குன்றினுக்கு உயர்ந்து அகன்றன ஒன்றினும் குறுகா
ஒன்றினுக்கொன்றின் இடை நெடிது யோசனை உடைய

#12
ஆய மா மரம் அனைத்தையும் நோக்கி நின்று அமலன்
தூய வார் கணை துரப்பது ஓர் ஆதரம் தோன்ற
சேய வானமும் திசைகளும் செவிடுற தேவர்க்கு
ஏய்வு இலாதது ஓர் பயம் வரச் சிலையின் நாண் எறிந்தான்

#13
ஒக்க நின்றது எவ் உலகமும் அங்கு அங்கே ஓசை
பக்கம் நின்றவர்க்கு உற்றது பகர்வது எப்படியோ
திக்கயங்களும் மயங்கின திசைகளும் திகைத்த
புக்கு அயன் பதி சலிப்புற ஒலித்தது அப் பொரு வில்

#14
அரிந்த மன் சிலை நாண் நெடிது ஆர்த்தலும் அமரர்
இரிந்து நீங்கினர் கற்பத்தின் இறுதி என்று அயிர்த்தார்
பரிந்த தம்பியே பாங்கு நின்றான் மற்றைப் பல்லோர்
புரிந்த தன்மையை உரைசெயின் பழி அவர்ப் புணரும்

#15
எய்தல் காண்டும்-கொல் இன்னம் என்று அரிதின் வந்து எய்தி
பொய்_இல் மாருதி முதலினோர் புகழ்வுறும் பொழுதில்
மொய் கொள் வார் சிலை நாணினை முறையுற வாங்கி
வெய்ய வாளியை ஆள் உடை வில்லியும் விட்டான்

#16
ஏழு மா மரம் உருவி கீழ் உலகம் என்று இசைக்கும்
ஏழும் ஊடு புக்கு உருவிப் பின் உடன் அடுத்து இயன்ற
ஏழ் இலாமையால் மீண்டது அவ் இராகவன் பகழி
ஏழு கண்ட பின் உருவுமால் ஒழிவது அன்று இன்னும்

#17
ஏழு வேலையும் உலகம் மேல் உயர்ந்தன ஏழும்
ஏழு குன்றமும் இருடிகள் எழுவரும் புரவி
ஏழும் மங்கையர் எழுவரும் நடுங்கினர் என்ப
ஏழு பெற்றதோ இக் கணைக்கு இலக்கம் என்று எண்ணி

#18
அன்னது ஆயினும் அறத்தினுக்கு ஆருயிர்த் துணைவன்
என்னும் தன்மையை நோக்கினர் யாவரும் எவையும்
பொன்னின் வார் கழல் புது நறும் தாமரை பூண்டு
சென்னி மேல் கொளூஉ அருக்கன் சேய் இவையிவை செப்பும்

#19
வையம் நீ வானும் நீ மற்றும் நீ மலரின் மேல்
ஐயன் நீ ஆழி மேல் ஆழி வாழ் கையன் நீ
செய்ய தீ அனைய அத் தேவும் நீ நாயினேன்
உய்ய வந்து உதவினாய் உலகம் முந்து உதவினாய்

#20
என் எனக்கு அரியது எப்பொருளும் எற்கு எளிது அலால்
உன்னை இத்தலை விடுத்து உதவினார் விதியினார்
அன்னை ஒப்புடைய உன் அடியருக்கு அடியென் யான்
மன்னவர்க்கு அரச என்று உரைசெய்தான் வசையிலான்

#21
ஆடினார் பாடினார் அங்குமிங்கும் களித்து
ஓடினார் உவகை இன் நறவை உண்டு உணர்கிலார்
நேடினாம் வாலி காலனை எனா நெடிது நாள்
வாடினார் தோள் எலாம் வளர மற்று அவர் எலாம்

@5 துந்துபிப் படலம்

#1
அண்டமும் அகிலமும் அடைய அன்று அனலிடைப்
பண்டு வெந்தன நெடும் பசை வறந்திடினும் வான்
மண்டலம் தொடுவது அ மலையின் மேல் மலை எனக்
கண்டனன் துந்துபி கடல்_அனான் உடல் அரோ

#2
தென்புலக் கிழவன் ஊர் மயிடமோ திசையின் வாழ்
வன்பு உலக் கரி மடிந்தது-கொலோ மகரமீன்
என்பு உலப்புற உலர்ந்தது-கொலோ இது எனா
அன்பு உலப்பு அரிய நீ உரைசெய்வாய் என அவன்

#3
துந்துபிப் பெயர் உடைச் சுடு சினத்து அவுணன் மீது
இந்துவைத் தொட நிமிர்ந்து எழு மருப்பு இணையினான்
மந்தரக் கிரி எனப் பெரியவன் மகர நீர்
சிந்திடக் கரு நிறத்து அரியினைத் தேடுவான்

#4
அங்கு வந்து அரி எதிர்ந்து அமைதி என் என்றலும்
பொங்கு வெம் செருவினில் பொருதி என்று உரைசெயக்
கங்கையின் கணவன் அக் கறை மிடற்று இறைவனே
உங்கள் வெம் கத வலிக்கு ஒருவன் என்று உரைசெய்தான்

#5
கடிது சென்று அவனும் அக் கடவுள்-தன் கயிலையைக்
கொடிய கொம்பினின் மடுத்து எழுதலும் குறுகி முன்
நொடிதி நின் குறை என் என்றலும் நுவன்றனன் அரோ
முடிவு_இல் வெம் செரு எனக்கு அருள்செய்வான் முயல்க எனா

#6
மூலமே வீரமே மூடினாயோடு போர்
ஏலுமே தேவர்-பால் ஏகு எனா ஏவினான்
சால நாள் போர்செய்வாய் ஆதியேல் சாரல் போர்
வாலி-பால் ஏகு எனா வானுளோர் வானுளான்

#7
அன்னவன் விட உவந்து அவனும் வந்து அரிகள்-தம்
மன்னவன் வருக போர்செய்க எனா மலையினைச்
சின்னபின்னம் படுத்திடுதலும் சினவி என்
முன்னவன் முன்னர் வந்து அனையவன் முனைதலும்

#8
இருவரும் திரிவுறும் பொழுதின் இன்னவர்கள் என்று
ஒருவரும் சிறிது உணர்ந்திலர்கள் எவ் உலகினும்
வெருவரும் தகைவிலர் விழுவர் நின்று எழுவரால்
மருவ_அரும் தகையர் தானவர்கள் வானவர்கள்தாம்

#9
தீ எழுந்தது விசும்புற நெடும் திசை எலாம்
போய் எழுந்தது முழக்கு உடன் எழுந்தது புகை
தோய நன் புணரியும் தொடர் தடம் கிரிகளும்
சாய் அழிந்தன அடித்தலம் எடுத்திடுதலால்

#10
அற்றது ஆகிய செருப் புரிவுறும் அளவினில்
கொற்ற வாலியும் அவன் குலவு தோள் வலியொடும்
பற்றி ஆசையின் நெடும் பணை மருப்பு இணை பறித்து
எற்றினான் அவனும் வான் இடியின் நின்று உரறினான்

#11
தலையின் மேல் அடிபடக் கடிது சாய் நெடிய தாள்
உலைய வாய் முழை திறந்து உதிர_ஆறு ஒழுக மா
மலையின் மேல் உரும் இடித்து என்ன வான் மண்ணொடும்
குலைய மா திசைகளும் செவிடுறக் குத்தினான்

#12
கவரி இங்கு இது எனக் கரதலம்கொடு திரித்து
இவர்தலும் குருதி பட்டு இசை-தொறும் திசை-தொறும்
துவர் அணிந்தன எனப் பொசி துதைந்தன துணைப்
பவர் நெடும் பணை மதம் பயிலும் வன் கரிகளே

#13
புயல் கடந்து இரவி-தன் புகல் கடந்து அயல் உளோர்
இயலும் மண்டிலம் இகந்து எனையவும் தவிர மேல்
வயிர வன் கரதலத்து அவன் வலித்து எறிய அன்று
உயிரும் விண் படர இவ் உடலும் இப் பரிசு அரோ

#14
முட்டி வான் முகடு சென்று அளவி இ முடை உடல்
கட்டி மால் வரையை வந்து உறுதலும் கருணையான்
இட்ட சாபமும் எனக்கு உதவும் என்று இயல்பினின்
பட்டவா முழுவதும் பரிவினால் உரைசெய்தான்

#15
கேட்டனன் அமலனும் கிளந்தவாறு எலாம்
வாள் தொழில் இளவலை இதனை மைந்த நீ
ஓட்டு என அவன் கழல் விரலின் உந்தினான்
மீட்டு அது விரிஞ்சன் நாடு உற்று மீண்டதே

@6 கலன் காண் படலம்

#1
ஆயிடை அரிக் குலம் அசனி அஞ்சிட
வாய் திறந்து ஆர்த்தது வள்ளல் ஓங்கிய
தூய நல் சோலையில் இருந்த சூழல்-வாய்
நாயக உணர்த்துவது உண்டு நான் எனா

#2
இவ் வழி யாம் இயைந்து இருந்தது ஓர் இடை
வெவ் வழி இராவணன் கொணர மேலை_நாள்
செவ் வழி நோக்கி நின் தேவியே-கொலாம்
கவ்வையின் அரற்றினள் கழிந்த சேண் உளாள்

#3
உழையரின் உணர்த்துவது உளது என்று உன்னியோ
குழை பொரு கண்ணினாள் குறித்தது ஓர்ந்திலம்
மழை பொரு கண் இணை வாரியோடு தன்
இழை பொதிந்து இட்டனள் யாங்கள் ஏற்றனம்

#4
வைத்தனம் இவ் வழி வள்ளல் நின்-வயின்
உய்த்தனம் தந்த போது உணர்தியால் எனா
கைத்தலத்து அன்னவை கொணர்ந்து காட்டினான்
நெய்த்தலைப் பால் கலந்து_அனைய நேயத்தான்

#5
தெரிவுற நோக்கினன் தெரிவை மெய் அணி
எரி கனல் எய்திய மெழுகின் யாக்கை போல்
உருகினன் என்கிலம் உயிருக்கு ஊற்றமாய்ப்
பருகினன் என்கிலம் பகர்வது என்-கொல் யாம்

#6
நல்குவது என் இனி நங்கை கொங்கையைப்
புல்கிய பூணும் அக் கொங்கை போன்றன
அல்குலின் அணிகளும் அல்குல் ஆயின
பல் கலன் பிறவும் அப் படிவம் ஆனவே

#7
விட்ட பேர் உணர்வினை விளித்த என்கெனோ
அட்டன உயிரை அவ் அணிகள் என்கெனோ
கொட்டின சாந்து எனக் குளிர்ந்த என்கெனோ
சுட்டன என்கெனோ யாது சொல்லுகேன்

#8
மோந்திட நறு மலர் ஆன மொய்ம்பினில்
ஏந்திட உத்தரியத்தை ஏய்ந்தன
சாந்தமுமாய் ஒளி தழுவப் போர்த்தலால்
பூம் துகில் ஆய அப் பூவை பூண்களே

#9
ஈர்த்தன செம் கண் நீர் வெள்ளம் யாவையும்
போர்த்தன மயிர்ப் புறம் புளகம் பொங்கு தோள்
வேர்த்தன என்கெனோ வெதும்பினான் என்கோ
தீர்த்தனை அவ்வழி யாது செப்புகேன்

#10
விடம் பரந்து அனையது ஓர் வெம்மை மீக்கொள
நெடும் பொழுது உணர்வினோடு உயிர்ப்பு நீங்கிய
தடம் பெரும் கண்ணனைத் தாங்கினான் தனது
உடம்பினில் செறி மயிர் சுறுக்கென்று ஏறவே

#11
தாங்கினன் இருத்தி அத் துயரம் தாங்கலாது
ஏங்கிய நெஞ்சினன் இரங்கி விம்முவான்
வீங்கிய தோளினாய் வினையினேன் உயிர்
வாங்கினென் இவ் அணி வருவித்தே எனா

#12
அயன் உடை அண்டத்தின் அப்புறத்தையும்
மயர்வு அற நாடி என் வலியும் காட்டி உன்
உயர் புகழ் தேவியை உதவற்பாலெனால்
துயர் உழந்து அயர்தியோ சுருதிநூல்_வலாய்

#13
திருமகள் அனைய அத் தெய்வக் கற்பினாள்
வெருவரச் செய்துள வெய்யவன் புயம்
இருபதும் ஈர்_ஐந்து தலையும் நிற்க உன்
ஒரு கணைக்கு ஆற்றுமோ உலகம் ஏழுமே

#14
ஈண்டு நீ இருந்தருள் ஏழொடு ஏழ் எனாப்
பூண்ட பேருலகங்கள் வலியின் புக்கு இடை
தேண்டி அவ் அரக்கனைத் திருகி தேவியைக்
காண்டி யான் இவ் வழிக் கொணரும் கைப்பணி

#15
ஏவல் செய் துணைவரேம் யாங்கள் ஈங்கு இவன்
தா_அரும் பெரு வலித் தம்பி நம்பி நின்
சேவகம் இது எனின் சிறுக நோக்கல் என்
மூ வகை உலகும் நின் மொழியின் முந்துமோ

#16
பெருமையோர் ஆயினும் பெருமை பேசலார்
கருமமே அல்லது பிறிது என் கண்டது
தருமம் நீ அல்லது தனித்து வேறு உண்டோ
அருமை ஏது உனக்கு நின்று அவலம் கூர்தியோ

#17
முளரி மேல் வைகுவான் முருகன் தந்த அத்
தளிர்_இயல் பாகத்தான் தடக் கை ஆழியான்
அளவி ஒன்று ஆவரே அன்றி ஐயம் இல்
கிளவியாய் தனித்தனி கிடைப்பரோ துணை

#18
என்னுடைச் சிறு குறை முடித்தல் ஈண்டு ஒரீஇப்
பின்னுடைத்து ஆயினும் ஆக பேதுறும்
மின் இடைச் சனகியை மீட்டு மீள்துமால்
பொன் உடைச் சிலையினாய் விரைந்து போய் என்றான்

#19
எரி கதிர்க் காதலன் இனைய கூறலும்
அருவி அம் கண் திறந்து அன்பின் நோக்கினான்
திரு உறை மார்பனும் தெளிவு தோன்றிட
ஒருவகை உணர்வு வந்து உரைப்பது ஆயினான்

#20
விலங்கு எழில் தோளினாய் வினையினேனும் இவ்
இலங்கு வில் கரத்திலும் இருக்கவே அவள்
கலன் கழித்தனள் இது கற்பு மேவிய
பொலன் குழைத் தெரிவையர் புரிந்துளோர்கள் யார்

#21
வாள் நெடும் கண்ணி என் வரவு நோக்க யான்
தாள் நெடும் கிரியொடும் தடங்கள்-தம்மொடும்
பூணொடும் புலம்பினென் பொழுதுபோக்கி இ
நாண் நெடும் சிலை சுமந்து உழல்வென் நாண் இலேன்

#22
ஆறுடன் செல்பவர் அம் சொல் மாதரை
வேறு உளார் வலி செயின் விலக்கி வெம் சமத்து
ஊறுற தம் உயிர் உகுப்பர் என்னையே
தேறினள் துயரம் நான் தீர்க்ககிற்றிலேன்

#23
கரும் கடல் தொட்டனர் கங்கை தந்தனர்
பொரும் புலி மானொடு புனலும் ஊட்டினர்
பெருந்தகை என் குலத்து அரசர் பின் ஒரு
திருந்து_இழை துயரம் நான் தீர்க்ககிற்றிலேன்

#24
இந்திரற்கு உரியது ஓர் இடுக்கண் தீர்த்து இகல்
அந்தகற்கு அரிய போர் அவுணன் தேய்த்தனன்
எந்தை மற்று அவனின் வந்து உதித்த யான் உளேன்
வெம் துயர்க் கொடும் பழி வில்லின் தாங்கினேன்

#25
விரும்பு எழில் எந்தையார் மெய்ம்மை வீயுமேல்
வரும் பழி என்று யான் மகுடம் சூடலேன்
கரும்பு அழி சொல்லியைப் பகைஞன் கைக்கொளப்
பெரும் பழி சூடினேன் பிழைத்தது என் அரோ

#26
என்ன நொந்து இன்னன பன்னி ஏங்கியே
துன்ன_அரும் துயரத்துச் சோர்கின்றான்-தனைப்
பன்ன_அரும் கதிரவன்_புதல்வன் பையுள் பார்த்து
அன்ன வெம் துயர் எனும் அளக்கர் நீக்கினான்

#27
ஐய நீ ஆற்றலின் ஆற்றினேன் அலது
உய்வெனே எனக்கு இதின் உறுதி வேறு உண்டோ
வையகத்து இப் பழி தீர மாய்வது
செய்வென் நின் குறை முடித்து அன்றிச் செய்கலேன்

#28
என்றனன் இராகவன் இனைய காலையில்
வன் திறல் மாருதி வணங்கினான் நெடும்
குன்று இவர் தோளினாய் கூற வேண்டுவது
ஒன்று உளது அதனை நீ உணர்ந்து கேள் எனா

#29
கொடும் தொழில் வாலியைக் கொன்று கோமகன்
கடும் கதிரோன் மகன் ஆக்கிக் கைவளர்
நெடும் படை கூட்டினால் அன்றி நேட அரிது
அடும் படை அரக்கர்-தம் இருக்கை ஆணையாய்

#30
வானதோ மண்ணதோ மற்று வெற்பதோ
ஏனை மா நாகர்-தம் இருக்கைப்பாலதோ
தேன் உலாம் தெரியலாய் தெளிவது அன்று நாம்
ஊன் உடை மானிடம் ஆனது உண்மையால்

#31
எவ் உலகங்களும் இமைப்பின் எய்துவர்
வவ்வுவர் அவ்வழி மகிழ்ந்த யாவையும்
வெவ் வினை வந்து என வருவர் மீள்வரால்
அவ்வவர் உறைவிடம் அறியற்பாலதோ

#32
ஒரு முறையே பரந்து உலகம் யாவையும்
திரு உறை வேறு இடம் தேரவேண்டுமால்
வரன்முறை நாடிட வரம்பு இன்றால் உலகு
அருமை உண்டு அளப்ப_அரும் ஆண்டும் வேண்டுமால்

#33
ஏழு_பத்து ஆகிய வெள்ளத்து எம் படை
ஊழியில் கடல் என உலகம் போர்க்குமால்
ஆழியைக் குடிப்பினும் அயன் செய் அண்டத்தைக்
கீழ் மடுத்து எடுப்பினும் கிடைத்த செய்யுமால்

#34
ஆதலால் அன்னதே அமைவது ஆம் என
நீதியாய் நினைந்தனென் என நிகழ்த்தினான்
சாது ஆம் என்ற அத் தனுவின் செல்வனும்
போதும் நாம் வாலி-பால் என்ன போயினார்

@7 வாலி வதை படலம்

#1
வெங் கண் ஆளி ஏறும் மீளி மாவும் வேக நாகமும்
சிங்க_ஏறு இரண்டொடும் திரண்டு அன்ன செய்கையார்
தங்கு சாலம் மூலம் ஆர் தமாலம் ஏலம் மாலை போல்
பொங்கு நாகமும் துவன்று சாரலூடு போயினார்

#2
உழை உலாம் நெடும் கண் மாதர் ஊசல் ஊசல் அல்லவேல்
தழை உலாவு சந்து அலர்ந்த சாரல் சாரல் அல்லவேல்
மழை உலாவு முன்றில் அல்ல மன்றல் நாறு சண்பகக்
குழை உலாவு சோலை சோலை அல்ல பொன் செய் குன்றமே

#3
அறங்கள் நாறும் மேனியார் அரிக் கணங்களோடும் அங்கு
இறங்குபோதும் ஏறுபோதும் ஈறு_இலாத ஓதையால்
கறங்கு வார் கழல் கலன் கலிப்ப முந்து கண் முகிழ்த்து
உறங்கு மேகம் நன்கு உணர்ந்து மாசு மீது உலாவுமே

#4
நீடு நாகமூடு மேகம் ஓட நீரும் ஓட நேர்
ஆடு நாகம் ஓட மானை யானை ஓட ஆளி போம்
மாடு நாகம் நீடு சாரல் வாளை ஓடும் வாவியூடு
ஓடு நாகம் ஓட வேங்கை ஓடும் யூகம் ஓடவே

#5
மருண்ட மா மலைத் தடங்கள் செல்லல் ஆவ அல்ல மால்
தெருண்டிலாத மத்த யானை சீறி நின்று சிந்தலால்
இருண்ட காழ் அகில் தடத்தொடு இற்று வீழ்ந்த சந்து வந்து
உருண்ட போது அழிந்த தேன் ஒழுக்கு பேர் இழுக்கினே

#6
மினல் மணிக் குலம் துவன்றி வில் அலர்ந்து விண் குலாய்
அனல் பரப்பல் ஒப்ப மீது இமைப்ப வந்து அவிப்ப போல்
புனல் பரப்பல் ஒப்பு இருந்த பொன் பரப்பும் என்பரால்
இனைய வில் தடக் கை வீரர் ஏகுகின்ற குன்றமே

#7
மருவி ஆடும் வாவி-தோறும் வான யாறு பாயும் வந்து
இருவி ஆர் தடங்கள்-தோறும் ஏறு பாயுமாறு போல்
அருவி பாயும் முன்றில் ஒன்றி யானை பாயும் ஏனலில்
குருவி பாயும் ஓடி மந்தி கோடு பாயும் மாடு எலாம்

#8
தேன் இழுக்கு சாரல் வாரி செல்லின் மீது செல்லும் நாள்_மீன்
இழுக்கும் அன்றி வானவில் இழுக்கும் வெண் மதி
கூன் இழுக்கும் மற்று உலாவு கோள் இழுக்கும் என்பரால்
வான் இழுக்கும் ஏல வாச மன்றல் நாறு குன்றமே

#9
அன்னது ஆய குன்றின் ஆறு சென்ற வீரர் ஐந்தொடு ஐந்து
என்னல் ஆய யோசனைக்கும் உம்பர் ஏறி இம்பரில்
பொன்னின் நாடு இழிந்தது அன்ன வாலி வாழ் பொருப்பிடம்
துன்னினார்கள் செய்வது என்னை என்று நின்று சொல்லுவார்

#10
அவ் இடத்து இராமன் நீ அழைத்து வாலி ஆனது ஓர்
வெவ் விடத்தின் வந்து போர் விளைக்கும் ஏல்வை வேறு நின்று
எவ்விடத் துணிந்து அமைந்தது என் கருத்து இது என்றனன்
தெவ் அடக்கும் வென்றியானும் நன்று இது என்று சிந்தியா

#11
வார்த்தை அன்னது ஆக வான் இயங்கு தேரினான் மகன்
நீர்த் தரங்க வேலை அஞ்ச நீல மேகம் நாணவே
வேர்த்து மண்ணுளோர் இரிந்து விண்ணுளோர்கள் விம்ம மேல்
ஆர்த்த ஓசை ஈசன் உண்ட அண்டம் முற்றும் உண்டதே

#12
இடித்து உரப்பி வந்து போர் எதிர்த்தியேல் அடர்ப்பென் என்று
அடித்தலங்கள் கொட்டி வாய் மடித்து அடுத்து அலங்கு தோள்
புடைத்து நின்று உளைத்த பூசல் புக்கது என்ப மிக்கு இடம்
துடிப்ப அங்கு உறங்கு வாலி திண் செவி துளைக்-கணே

#13
மால் பெரும் கட கரி முழக்கம் வாள் அரி
ஏற்பது செவித்தலத்து என்ன ஓங்கிய
ஆர்ப்பு ஒலி கேட்டனன் அமளி மேல் ஒரு
பாற்கடல் கிடந்ததே அனைய பான்மையான்

#14
உருத்தனன் பொர எதிர்ந்து இளவல் உற்றமை
வரைத் தடம் தோளினான் மனத்தின் எண்ணினான்
சிரித்தனன் அவ் ஒலி திசையின் அப்புறத்து
இரித்தது அவ் உலகம் ஓர் ஏழொடு ஏழையும்

#15
எழுந்தனன் வல் விரைந்து இறுதி ஊழியில்
கொழும் திரைக் கடல் கிளர்ந்து அனைய கொள்கையான்
அழுந்தியது அக் கிரி அருகில் மால் வரை
விழுந்தன தோள் புடை விசித்த காற்றினே

#16
போய்ப் பொடித்தன மயிர்ப் புறத்த வெம் பொறி
காய்ப்பொடு உற்று எழு வடகனலும் கண் கெடத்
தீப் பொடித்தன விழி தேவர் நாட்டினும்
மீப் பொடித்தன புகை உயிர்ப்பு வீங்கவே

#17
கைக் கொடு கைத்தலம் புடைப்ப காவலின்
திக்கயங்களும் மதச் செருக்குச் சிந்தின
உக்கன உரும் இனம் உலைந்த உம்பரும்
நெக்கன நெரிந்தன நின்ற குன்றமே

#18
வந்தனென் வந்தனென் என்ற வாசகம்
இந்திரி முதல் திசை எட்டும் கேட்டன
சந்திரன் முதலிய தாரகைக் குழாம்
சிந்தின மணி முடிச் சிகரம் தீண்டவே

#19
வீசின காற்றின் வேர் பறிந்து வெற்பு இனம்
ஆசையை உற்றன அண்டப் பித்திகை
பூசின வெண் மயிர் பொடித்த வெம் பொறி
கூசினன் அந்தகன் குலைந்தது உம்பரே

#20
கடித்த வாய் எயிறு உகு கனல்கள் கார் விசும்பு
இடித்த வாய் உகும் உரும் இனத்தின் சிந்தின
தடித்து வீழ்வன எனத் தகர்ந்து சிந்தின
வடித்த தோள் வலயத்தின் வயங்கு காசு அரோ

#21
ஞாலமும் நால் திசைப் புனலும் நாகரும்
மூலமும் முற்றிட முடிவில் தீக்கும் அக்
காலமும் ஒத்தனன் கடலில் தான் கடை
ஆலமும் ஒத்தனன் எவரும் அஞ்சவே

#22
ஆயிடை தாரை என்று அமிழ்தின் தோன்றிய
வேயிடைத் தோளினாள் இடை விலக்கினாள்
வாயிடைப் புகை வர வாலி கண் வரும்
தீயிடை தன் நெடும் கூந்தல் தீகின்றாள்

#23
விலக்கலை விடுவிடு விளித்துளான் உரம்
கலக்கி அக் கடல் கடைந்து அமுது கண்டு என
உலக்க இன் உயிர் குடித்து ஒல்லை மீள்குவல்
மலைக் குல மயில் என மடந்தை கூறுவாள்

#24
கொற்றவ நின் பெரும் குவவுத் தோள் வலிக்கு
இற்றனன் முன்னை நாள் ஈடு உண்டு ஏகினான்
பெற்றிலன் பெரும் திறல் பெயர்த்தும் போர்செயற்கு
உற்றது நெடும் துணை உடைமையால் என்றாள்

#25
மூன்று என முற்றிய முடிவு_இல் பேர் உலகு
ஏன்று உடன் உற்றன எனக்கு நேர் எனத்
தோன்றினும் தோற்று அவை தொலையும் என்றலின்
சான்று உள அன்னவை தையல் கேட்டியால்

#26
மந்தர நெடு வரை மத்து வாசுகி
அந்தம்_இல் கடை கயிறு அடை கல் ஆழியான்
சந்திரன் தூண் எதிர் தருக்கின் வாங்குநர்
இந்திரன் முதலிய அமரர் ஏனையோர்

#27
பெயர்வுற வலிக்கவும் மிடுக்கு_இல் பெற்றியார்
அயர்வுறல் உற்றதை நோக்கி யான் அது
தயிர் எனக் கடைந்து அவர்க்கு அமுதம் தந்தது
மயில் இயல் குயில்_மொழி மறக்கல் ஆவதோ

#28
ஆற்றல்_இல் அமரரும் அவுணர் யாவரும்
தோற்றனர் எனையவர் சொல்லற்பாலரோ
கூற்றும் என் பெயர் சொலக் குலையும் ஆர் இனி
மாற்றலர்க்கு ஆகி வந்து எதிரும் மாண்பினார்

#29
பேதையர் எதிர்குவர் எனினும் பெற்றுடை
ஊதிய வரங்களும் உரமும் உள்ளதில்
பாதியும் என்னதால் பகைப்பது எங்ஙனம்
நீ துயர் ஒழிக என நின்று கூறினான்

#30
அன்னது கேட்டவள் அரச ஆயவற்கு
இன் உயிர் நட்பு அமைந்து இராமன் என்பவன்
உன் உயிர் கோடலுக்கு உடன் வந்தான் எனத்
துன்னிய அன்பினர் சொல்லினார் என்றாள்

#31
உழைத்த வல் இருவினைக்கு ஊறு காண்கிலாது
அழைத்து அயர் உலகினுக்கு அறத்தின் ஆறு எலாம்
இழைத்தவற்கு இயல்பு அல இயம்பி என் செய்தாய்
பிழைத்தனை பாவி உன் பெண்மையால் என்றான்

#32
இருமையும் நோக்குறும் இயல்பினாற்கு இது
பெருமையோ இங்கு இதில் பெறுவது என்-கொலோ
அருமையின் நின்று உயிர் அளிக்கும் ஆறு உடைத்
தருமமே தவிர்க்குமோ தன்னைத்தான் அரோ

#33
ஏற்ற பேர் உலகு எலாம் எய்தி ஈன்றவள்
மாற்றவள் ஏவ மற்று அவள்-தன் மைந்தனுக்கு
ஆற்ற_அரும் உவகையால் அளித்த ஐயனைப்
போற்றலை இன்னன புகறற்பாலையோ

#34
நின்ற பேர் உலகு எலாம் நெருக்கி நேரினும்
வென்றி வெம் சிலை அலால் பிறிது வேண்டுமோ
தன் துணை ஒருவரும் தன்னில் வேறு இலான்
புன் தொழில் குரங்கொடு புணரும் நட்பனோ

#35
தம்பியர் அல்லது தனக்கு வேறு உயிர்
இம்பரின் இலது என எண்ணி ஏய்ந்தவன்
எம்பியும் யானும் உற்று எதிர்ந்த போரினில்
அம்பு இடை தொடுக்குமோ அருளின் ஆழியான்

#36
இருத்தி நீ இறை இவண் இமைப்பு_இல் காலையில்
உருத்தவன் உயிர் குடித்து உடன் வந்தாரையும்
கருத்து அழித்து எய்துவென் கலங்கல் என்றனன்
விரைக் குழல் பின் உரை விளம்ப அஞ்சினாள்

#37
ஒல்லை செரு வேட்டு உயர் வன் புய ஓங்கல் உம்பர்
எல்லைக்கும் அப்பால் இவர்கின்ற இரண்டினோடும்
மல்லல் கிரியின் தலை வந்தனன் வாலி கீழ் பால்
தொல்லை கிரியின் தலை தோற்றிய ஞாயிறு என்ன

#38
நின்றான் எதிர் யாவரும் நெஞ்சு நடுங்கி அஞ்ச
தன் தோள் வலியால் தகை மால் வரை சாலும் வாலி
குன்றூடு வந்து உற்றனன் கோள் அவுணன் குறித்த
வன் தூணிடைத் தோன்றிட மா நரசிங்கம் என்ன

#39
ஆர்க்கின்ற பின்னோன்-தனை நோக்கினன் தானும் ஆர்த்தான்
வேர்க்கின்ற வானத்து உரும்_ஏறு வெறித்து வீழப்
போர்க்கின்றது எல்லா உலகும் பொதிர்வுற்ற பூசல்
கார்க் குன்றம்_அன்னான் நிலம் தாவிய கால் இது என்ன

#40
அவ் வேலை இராமனும் அன்பு உடைத் தம்பிக்கு ஐய
செவ்வே செல நோக்குதி தானவர் தேவர் நிற்க
எவ் வேலை எ மேகம் எக் காலொடு எக் கால வெம் தீ
வெவ்வேறு உலகத்து இவர் மேனியை மானும் என்றான்

#41
வள்ளற்கு இளையான் பகர்வான் இவன் தம்முன் வாழ்நாள்
கொள்ள கொடும் கூற்றுவனைக் கொணர்ந்தான் குரங்கின்
எள்ளற்குறு போர்செய எண்ணினன் என்னும் இன்னல்
உள்ளத்து ஊன்ற உணர்வுற்றிலென் ஒன்றும் என்றான்

#42
ஆற்றாது பின்னும் பகர்வான் அறத்து ஆறு அழுங்கத்
தேற்றாது செய்வார்களைத் தேறுதல் செவ்வியது அன்றால்
மாற்றான் எனத் தம்முனைக் கொல்லிய வந்து நின்றான்
வேற்றார்கள்-திறத்து இவன் தஞ்சம் என் வீர என்றான்

#43
அத்தா இது கேள் என ஆரியன் கூறுவான் இப்
பித்து ஆய விலங்கின் ஒழுக்கினைப் பேசல் ஆமோ
எத் தாயர் வயிற்றினும் பின் பிறந்தார்கள் எல்லாம்
ஒத்தால் பரதன் பெரிது உத்தமன் ஆதல் உண்டோ

#44
வில் தாங்கு வெற்பு அன்ன விலங்கு எழில் தோள மெய்ம்மை
உற்றார் சிலர் அல்லவரே பலர் என்பது உண்மை
பெற்றாருழைப் பெற்ற பயன் பெறும் பெற்றி அல்லால்
அற்றார் நவை என்றலுக்கு ஆகுநர் ஆர்-கொல் என்றான்

#45
வீரத் திறலோர் இவை இன்ன விளம்பும் வேலை
தேரில் திரிவான் மகன் இந்திரன் செம்மல் என்று இப்
பாரில் திரியும் பனி மால் வரை அன்ன பண்பார்
மூரித் திசையானை இரண்டு என முட்டினாரே

#46
குன்றோடு குன்று ஒத்தனர் கோள் அரிக் கொற்ற வல் ஏறு
ஒன்றோடு சென்று ஒன்று எதிர் உற்றனவேயும் ஒத்தார்
நின்றார் திரிந்தார் நெடும் சாரி நிலம் திரிந்த
வன் தோள் குயவன் திரி மட்கலத்து ஆழி என்ன

#47
தோளோடு தோள் தேய்த்தலின் தொல் நிலம் தாங்கல் ஆற்றாத்
தாளோடு தாள் தேய்த்தலின் தந்த தழல் பிறங்கல்
வாளோடு மின் ஓடுவ போல் நெடு வானின் ஓடும்
கோளோடு கோள் உற்று என ஒத்து அடர்ந்தார் கொதித்தார்

#48
தம் தோள் வலி மிக்கவர் தாம் ஒரு தாய் வயிற்றின்
வந்தோர் மட மங்கை-பொருட்டு மலைக்கலுற்றார்
சிந்து ஓடு அரி ஒண் கண் திலோத்தமை காதல் செற்ற
சுந்தோபசுந்தப் பெயர்த் தொல்லையினோரும் ஒத்தார்

#49
கடல் ஒன்றினொடு ஒன்று மலைக்கவும் காவல் மேரு
திடல் ஒன்றினொடு ஒன்று அமர்செய்யவும் சீற்றம் என்பது
உடல் கொண்டு இரண்டு ஆகி உடற்றவும் கண்டிலாதேம்
மிடல் இங்கு இவர் வெம் தொழிற்கு ஒப்புரை வேறு காணேம்

#50
ஊகங்களின் நாயகர் வெம் கண் உமிழ்ந்த தீயால்
மேகங்கள் எரிந்தன வெற்பும் எரிந்த திக்கின்
நாகங்கள் நடுங்கின நானிலமும் குலைந்த
மாகங்களை நண்ணிய விண்ணவர் போய் மறைந்தார்

#51
விண் மேலினரோ நெடு வெற்பின் முகட்டினாரோ
மண் மேலினரோ புற மாதிர வீதியாரோ
கண் மேலினரோ என யாவரும் காண் நின்றார்
புண் மேல் இரத்தம் பொடிப்ப கடிப்பார் புடைப்பார்

#52
ஏழ் ஒத்து உடன் ஆம் திசை எட்டொடு இரண்டும் முட்டும்
ஆழி கிளர் ஆர் கலிக்கு ஐம் மடங்கு ஆர்ப்பின் ஓசை
பாழித் தடம் தோளினும் மார்பினும் கைகள் பாய
ஊழிக் கிளர் கார் இடி ஒத்தது குத்தும் ஓதை

#53
வெவ் வாய் எயிற்றால் மிடல் வீரர் கடிப்ப மீச்சென்று
அவ்வாய் எழு சோரி அது ஆசைகள்-தோறும் வீச
எவ்வாயும் எழுந்த கொழும் சுடர் மீன்கள் யாவும்
செவ்வாயை நிகர்த்தன செக்கரை ஒத்த மேகம்

#54
வெந்த வல் இரும்பிடை நெடும் கூடங்கள் வீழ்ப்ப
சிந்தி எங்கணும் சிதறுவ போல் பொறி தெறிப்ப
இந்திரன் மகன் புயங்களும் இரவி_சேய் உரனும்
சந்த வல் நெடும் தடக் கைகள் தாக்கலின் தகர்வ

#55
உரத்தினால் மடுத்து உந்துவர் பாதம் இட்டு உதைப்பர்
கரத்தினால் விசைத்து எற்றுவர் கடிப்பர் நின்று இடிப்பர்
மரத்தினால் அடித்து உரப்புவர் பொருப்பு இனம் வாங்கிச்
சிரத்தின் மேல் எறிந்து ஒறுக்குவர் தெழிப்பர் தீ விழிப்பர்

#56
எடுப்பர் பற்றி உற்று ஒருவரையொருவர் விட்டு எறிவர்
கொடுப்பர் வந்து உரம் குத்துவர் கைத்தலம் குளிப்ப
கடுப்பினில் பெரும் கறங்கு எனச் சாரிகை பிறங்கத்
தடுப்பர் பின்றுவர் ஒன்றுவர் தழுவுவர் விழுவர்

#57
வாலினால் உரம் வரிந்தனர் நெரிந்து உக வலிப்பர்
காலினால் நெடும் கால் பிணித்து உடற்றுவர் கழல்வர்
வேலினால் அற எறிந்து என விறல் வலி உகிரால்
தோலினால் உடன் நெடு வரை முழை எனத் தொளைப்பர்

#58
மண்ணகத்தன மலைகளும் மரங்களும் மற்றும்
கண்ணகத்தினில் தோன்றிய யாவையும் கையால்
எண் நகப் பறித்து எறிதலின் எற்றலின் இற்ற
விண்ணகத்தினை மறைத்தன மறி கடல் வீழ்ந்த

#59	
வெருவிச் சாய்ந்தனர் விண்ணவர் வேறு என்னை விளம்பல்
ஒருவர்க்கு ஆண்டு அமர் ஒருவரும் தோற்றிலர் உடன்று
செருவில் தேய்த்தலின் செம் கனல் வெண் மயிர்ச் செல்ல
முரி புல் கானிடை எரி பரந்தன என முனைவார்

#60
அன்ன தன்மையர் ஆற்றலின் அமர் புரி பொழுதின்
வல் நெடும் தடம் திரள் புயத்து அடு திறல் வாலி
சொன்ன தம்பியை தும்பியை அரி தொலைத்து என்ன
கொல் நகங்களின் கரங்களின் குலைந்து உக மலைந்தான்

#61
மலைந்த போது இனைந்து இரவி_சேய் ஐயன்-மாடு அணுகி
உலைந்த சிந்தையோடு உணங்கினன் வணங்கிட உள்ளம்
குலைந்திடேல் உமை வேற்றுமை தெரிந்திலம் கொடிப் பூ
மிலைந்து செல்க என விடுத்தனன் எதிர்த்தனன் மீட்டும்

#62
கக்கினான் உயிர் உயிர்ப்பொடும் செவிகளின் கண்ணின்
உக்கது ஆங்கு எரிப் படலையோடு உதிரத்தின் ஓதம்
திக்கு நோக்கினன் செங்கதிரோன்மகன் செருக்கிப்
புக்கு மீக்கொடு நெருக்கினன் இந்திரன்_புதல்வன்

#63
எடுத்துப் பாரிடை எற்றுவென் பற்றி என்று இளவல்
கடித்தலத்தினும் கழுத்தினும் தன் இரு கரங்கள்
மடுத்து மீக்கொண்ட வாலி மேல் கோல் ஒன்று வாங்கித்
தொடுத்து நாணொடு தோள் உறுத்து இராகவன் துரந்தான்

#64
கார் உண் சுவைக் கதலியின் கனியினைக் கழியச்
சேரும் ஊசியின் சென்றது நின்றது என் செப்ப
நீரும் நீர் தரு நெருப்பும் வன் காற்றும் கீழ் நிவந்த
பாரும் சார் வலி படைத்தவன் உரத்தை அப் பகழி

#65
அலங்கு தோள் வலி அழிந்த அத் தம்பியை அருளான்
வலம்கொள் பாரிடை எற்றுவான் உற்ற போர் வாலி
கலங்கி வல் விசைக் கால் கிளர்ந்து எறிவுற கடைக்கால்
விலங்கல் மேருவும் வேர் பறிந்தால் என வீழ்ந்தான்

#66
சையம் வேரொடும் உரும் உறச் சாய்ந்து எனச் சாய்ந்து
வையம் மீதிடைக் கிடந்த போர் அடு திறல் வாலி
வெய்யவன் தரு மதலையை மிடல் கொடு கவரும்
கை நெகிழ்ந்தனன் நெகிழ்ந்திலன் கடும் கணை கவர்தல்

#67
எழுந்து வான் முகடு இடித்து அகப்படுப்பல் என்று இவரும்
உழுந்து பேரு முன் திசை திரிந்து ஒறுப்பல் என்று உதைக்கும்
விழுந்து பாரினை வேரொடும் பறிப்பல் என்று உறுக்கும்
அழுந்தும் இச் சரம் எய்தவன் ஆர்-கொல் என்று அயிர்க்கும்

#68
எற்றும் கையினை நிலத்தொடும் எரிப் பொறி பறப்பச்
சுற்றும் நோக்குறும் சுடு சரம்-தனைத் துணைக் கரத்தால்
பற்றி வாலினும் காலினும் வலியுறப் பறிப்பான்
உற்று உறாமையின் உலைவுறும் மலை என உருளும்

#69
தேவரோ என அயிர்க்கும் அத் தேவர் இச் செயலுக்கு
ஆவரோ அவர்க்கு ஆற்றல் உண்டோ எனும் அயலோர்
யாவரோ என நகைசெயும் ஒருவனே இறைவர்
மூவரோடும் ஒப்பான் செயலாம் என மொழியும்

#70
நேமிதான்-கொலோ நீலகண்டன் நெடும் சூலம்
ஆம் இது ஆம்-கொலோ அன்று எனின் குன்று உருவு அயிலும்
நாம இந்திரன் வச்சிரப் படையும் என் நடுவண்
போம் எனும்துணை போதுமோ யாது எனப் புழுங்கும்

#71
வில்லினால் துரப்ப_அரிது இவ் வெம் சரம் என வியக்கும்
சொல்லினால் நெடு முனிவரோ தூண்டினார் என்னும்
பல்லினால் பறிப்புறும் பலகாலும் தன் உரத்தைக்
கல்லி ஆர்ப்பொடும் பறிக்கும் அப் பகழியைக் கண்டான்

#72
சரம் எனும்படி தெரிந்தது பலபடச் சலித்து என்
உரம் எனும் பதம் உயிரொடும் உருவிய ஒன்றைக்
கரம் இரண்டினும் வாலினும் காலினும் கழற்றிப்
பரமன் அன்னவன் பெயர் அறிகுவென் எனப் பறிப்பான்

#73
ஓங்கு அரும் பெரும் திறலினும் காலினும் உரத்தின்
வாங்கினான் மற்று அவ் வாளியை ஆளி போல் வாலி
ஆங்கு நோக்கினர் அமரரும் அவுணரும் பிறரும்
வீங்கினார்கள் தோள் வீரரை யார் வியவாதார்

#74
மோடு தெண் திரை முரிதரு கடல் என முழங்கி
ஈடு பேர் உலகு இறந்துளது ஆம் எனற்கு எளிதோ
காடு மா நெடு விலங்கல்கள் கடந்தது அக் கடலின்
ஊடு போதல் உற்றதனை ஒத்து உயர்ந்து உளது உதிரம்

#75
வாசத் தாரவன் மார்பு எனும் மலை வழங்கு அருவி
ஓசைச் சோரியை நோக்கினன் உடன்பிறப்பு என்னும்
பாசத்தால் பிணிப்புண்ட அத் தம்பியும் பசும் கண்
நேசத் தாரைகள் சொரிதர நெடு நிலம் சேர்ந்தான்

#76
பறித்த வாளியைப் பரு வலித் தடக் கையால் பற்றி
இறுப்பென் என்று கொண்டு எழுந்தனன் மேருவை இறுப்போன்
முறிப்பென் என்னினும் முறிவது அன்றாம் என மொழியா
பொறித்த நாமத்தை அறிகுவான் நோக்கினன் புகழோன்

#77
மும்மை சால் உலகுக்கு எல்லாம் மூல மந்திரத்தை முற்றும்
தம்மையே தமர்க்கு நல்கும் தனிப் பெரும் பதத்தைத் தானே
இம்மையே எழுமை நோய்க்கும் மருந்தினை இராமன் என்னும்
செம்மை சேர் நாமம்-தன்னைக் கண்களின் தெரியக் கண்டான்

#78
இல்லறம் துறந்த தம்பி எம்மனோர்க்காகத் தங்கள்
வில் அறம் துறந்த வீரன் தோன்றலால் வேத நல் நூல்
சொல் அறம் துறந்திலாத சூரியன் மரபும் தொல்லை
நல் அறம் துறந்தது என்னா நகை வர நாண் உட்கொண்டான்

#79
வெள்கிடும் மகுடம் சாய்க்கும் வெடிபடச் சிரிக்கும் மீட்டும்
உள்கிடும் இதுவும்தான் ஓர் ஓங்கு அறமோ என்று உன்னும்
முள்கிடும் குழியில் புக்க மூரி வெம் களி நல் யானை
தொள்கொடும் கிடந்தது என்ன துயர் உழந்து அழிந்து சோர்வான்

#80
இறை திறம்பினனால் என்னே இழிந்துளோர் இயற்கை என்னின்
முறை திறம்பினனால் என்று மொழிகின்ற முகத்தான் முன்னர்
மறை திறம்பாத வாய்மை மன்னர்க்கு மனுவில் சொல்லும்
துறை திறம்பாமல் காக்கத் தோன்றினான் வந்து தோன்ற

#81
கண்ணுற்றான் வாலி நீலக் கார் முகில் கமலம் பூத்து
மண் உற்று வரி வில் ஏந்தி வருவதே போலும் மாலை
புண் உற்றது அனைய சோரி பொறியோடும் பொடிப்ப நோக்கி
எண்ணுற்றாய் என் செய்தாய் என்று ஏசுவான் இயம்பலுற்றான்

#82
வாய்மையும் மரபும் காத்து மன் உயிர் துறந்த வள்ளல்
தூயவன் மைந்தனே நீ பரதன் முன் தோன்றினாயே
தீமைதான் பிறரைக் காத்து தான் செய்தால் தீங்கு அன்று ஆமோ
தாய்மையும் அன்றி நட்பும் தருமமும் தழுவி நின்றாய்

#83
குலம் இது கல்வி ஈது கொற்றம் ஈது உற்று நின்ற
நலம் இது புவனம் மூன்றின் நாயகம் உன்னது அன்றோ
வலம் இது இவ் உலகம் தாங்கும் வண்மை ஈது என்றால் திண்மை
அலமரச் செய்யலாமோ அறிந்திருந்து அயர்ந்துளார் போல்

#84
கோ இயல் தருமம் உங்கள் குலத்து உதித்தோர்கட்கு எல்லாம்
ஓவியத்து எழுத ஒண்ணா உருவத்தாய் உடைமை அன்றோ
ஆவியை சனகன் பெற்ற அன்னத்தை அமிழ்தின் வந்த
தேவியைப் பிரிந்த பின்னை திகைத்தனை போலும் செய்கை

#85
அரக்கர் ஓர் அழிவு செய்து கழிவரேல் அதற்கு வேறு ஓர்
குரக்கு இனத்து அரசைக் கொல்ல மனுநெறி கூறிற்று உண்டோ
இரக்கம் எங்கு உகுத்தாய் என்-பால் எப் பிழை கண்டாய் அப்பா
பரக்கழி இது நீ பூண்டால் புகழை யார் பரிக்கற்பாலார்

#86
ஒலி கடல் உலகம்-தன்னில் ஊர்தரு குரங்கின்-மாடே
கலியது காலம் வந்து கலந்ததோ கருணை வள்ளால்
மெலியவர்பாலதேயோ ஒழுக்கமும் விழுப்பம்தானும்
வலியவர் மெலிவு செய்தால் புகழ் அன்றி வசையும் உண்டோ

#87
கூட்டு ஒருவரையும் வேண்டாக் கொற்றவ பெற்ற தாதை
பூட்டிய செல்வம் ஆங்கே தம்பிக்குக் கொடுத்துப் போந்து
நாட்டு ஒரு கருமம் செய்தாய் எம்பிக்கு இவ் அரசை நல்கி
காட்டு ஒரு கருமம் செய்தாய் கருமம்தான் இதன் மேல் உண்டோ

#88
அறை கழல் அலங்கல் வீரர் ஆயவர் புரிவது ஆண்மைத்
துறை எனல் ஆயிற்று அன்றே தொன்மையின் நல் நூற்கு எல்லாம்
இறைவ நீ என்னைச் செய்தது ஈது எனில் இலங்கை_வேந்தன்
முறை அல செய்தான் என்று முனிதியோ முனிவிலாதாய்

#89
இருவர் போர் எதிரும் காலை இருவரும் நல் உற்றாரே
ஒருவர் மேல் கருணை தூண்டி ஒருவர் மேல் ஒளித்து நின்று
வரி சிலை குழைய வாங்கி வாய் அம்பு மருமத்து எய்தல்
தருமமோ பிறிது ஒன்று ஆமோ தக்கிலது என்னும் பக்கம்

#90
வீரம் அன்று விதி அன்று மெய்ம்மையின்
வாரம் அன்று நின் மண்ணினுக்கு என் உடல்
பாரம் அன்று பகை அன்று பண்பு அழிந்து
ஈரம் இன்றி இது என் செய்தவாறு அரோ

#91
இருமை நோக்கி நின்று யாவர்க்கும் ஒக்கின்ற
அருமை ஆற்றல் அன்றோ அறம் காக்கின்ற
பெருமை என்பது இது என் பிழை பேணல் விட்டு
ஒருமை நோக்கி ஒருவற்கு உதவலோ

#92
செயலைச் செற்ற பகை தெறுவான் தெரிந்து
அயலைப் பற்றித் துணை அமைந்தாய் எனின்
புயலைப் பற்றும் அப் பொங்கு அரி போக்கி ஓர்
முயலைப் பற்றுவது என்ன முயற்சியோ

#93
கார் இயன்ற நிறத்த களங்கம் ஒன்று
ஊர் இயன்ற மதிக்கு உளதாம் என
சூரியன் மரபுக்கும் ஒர் தொல் மறு
ஆரியன் பிறந்து ஆக்கினையாம் அரோ

#94
மற்று ஒருத்தன் வலிந்து அறைகூவ வந்து
உற்ற என்னை ஒளித்து உயிர் உண்ட நீ
இற்றையில் பிறர்க்கு இகல் ஏறு என
நிற்றி போலும் கிடந்த நிலத்து அரோ

#95
நூல் இயற்கையும் நும் குலத்து உந்தையர்
போல் இயற்கையும் சீலமும் போற்றலை
வாலியைப் படுத்தாய் அலை மன் அற
வேலியைப் படுத்தாய் விறல் வீரனே

#96
தாரம் மற்று ஒருவன் கொளத் தன் கையில்
பார வெம் சிலை வீரம் பழுதுற
நேரும் அன்று மறைந்து நிராயுதன்
மார்பின் எய்யவோ வில் இகல் வல்லதே

#97
என்று தானும் எயிறு பொடிபடத்
தின்று காந்தி விழிவழித் தீ உக
அன்று அவ் வாலி அனையன விளம்பினான்
நின்ற வீரன் இனைய நிகழ்த்தினான்

#98
பிலம் புக்காய் நெடு நாள் பெயராய் எனப்
புலம்புற்று உன் வழிப் போதலுற்றான்-தனைக்
குலம் புக்கு ஆன்ற முதியர் குறிக் கொள் நீ
அலம் பொன் தாரவனே அரசு என்றலும்

#99
வானம் ஆள என் தம்முனை வைத்தவன்
தானும் மாள கிளையும் இறத் தடிந்து
யானும் மாள்வென் இருந்து அரசு ஆள்கிலென்
ஊனம் ஆன உரை பகர்ந்தீர் என

#100
பற்றி ஆன்ற படைத் தலை வீரரும்
முற்று உணர்ந்த முதியரும் முன்பரும்
எற்றும் நும் அரசு எய்துவையாம் எனக்
கொற்ற நன் முடி கொண்டது இக் கோதிலான்

#101
வந்த உன்னை வணங்கி மகிழ்ந்தனன்
எந்தை என்-கண் இனத்தவர் ஆற்றலின்
தந்தது உன் அரசு என்று தருக்கிலான்
முந்தை உற்றது சொல்ல முனிந்து நீ

#102
கொல்லல் உற்றனை உம்பியைக் கோது அவற்கு
இல்லை என்பது உணர்ந்தும் இரங்கலை
அல்லல் செய்யல் உனக்கு அபயம் பிழை
புல்லல் என்னவும் புல்லலை பொங்கினாய்

#103
ஊற்றமுற்று உடையான் உனக்கு ஆர் அமர்
தோற்றும் என்று தொழுது உயர் கையனை
கூற்றம் உண்ணக் கொடுப்பென் என்று எண்ணினாய்
நால் திசைக்கும் புறத்தையும் நண்ணினான்

#104
அன்ன தன்மை அறிந்து அருளலை
பின்னவன் இவன் என்பதும் பேணலை
வன்னிதான் இடு சாப வரம்பு உடைப்
பொன் மலைக்கு அவன் நண்ணலின் போகலை

#105
ஈரம் ஆவதும் இற்பிறப்பு ஆவதும்
வீரம் ஆவதும் கல்வியின் மெய் நெறி
வாரம் ஆவதும் மற்று ஒருவன் புணர்
தாரம் ஆவதைத் தாங்கும் தருக்கு அதோ

#106
மறம் திறம்பல் வலியம் எனா மனம்
புறம் திறம்ப எளியவர்ப் பொங்குதல்
அறம் திறம்பல் அரும் கடி மங்கையர்
திறம் திறம்பல் தெளிவுடையோர்க்கு எலாம்

#107
தருமம் இன்னது எனும் தகைத் தன்மையும்
இருமையும் தெரிந்து எண்ணலை எண்ணினால்
அருமை உம்பி-தன் ஆருயிர் தேவியைப்
பெருமை நீங்கினை எய்தப் பெறுதியோ

#108
ஆதலானும் அவன் எனக்கு ஆருயிர்க்
காதலான் எனலானும் நின் கட்டனென்
ஏதிலாரும் எளியர் என்றால் அவர்
தீது தீர்ப்பது என் சிந்தைக் கருத்து அரோ

#109
பிழைத்த தன்மை இது எனப் பேரெழில்
தழைத்த வீரன் உரைசெய தக்கிலாது
இழைத்த வாலி இயல்பு அல இத்துணை
விழைத் திறம் தொழில் என்ன விளம்புவான்

#110
ஐய நுங்கள் அரும் குலக் கற்பின் அப்
பொய்_இல் மங்கையர்க்கு ஏய்ந்த புணர்ச்சி போல்
செய்திலன் எமைத் தே மலர் மேலவன்
எய்தின் எய்தியது ஆக இயற்றினான்

#111
மணமும் இல்லை மறை நெறி வந்தன
குணமும் இல்லை குல முதற்கு ஒத்தன
உணர்வு சென்றுழிச் செல்லும் ஒழுக்கு அலால்
நிணமும் நெய்யும் இணங்கிய நேமியாய்

#112
பெற்றி மற்று இது பெற்றது ஓர் பெற்றியின்
குற்றம் உற்றிலன் நீ அது கோடியால்
வெற்றி உற்றது ஒர் வெற்றியினாய் எனச்
சொற்ற சொல் துறைக்கு உற்றது சொல்லுவான்

#113
நலம் கொள் தேவரின் தோன்றி நவை_அறக்
கலங்கலா அற நல் நெறி காண்டலின்
விலங்கு அலாமை விளங்கியது ஆதலால்
அலங்கலார்க்கு ஈது அடுப்பது அன்று ஆம் அரோ

#114
பொறியின் யாக்கையதோ புலன் நோக்கிய
அறிவின் மேலது அன்றோ அறத்தாறுதான்
நெறியும் நீர்மையும் நேரிது உணர்ந்த நீ
பெறுதியோ பிழை உற்றுறு பெற்றிதான்

#115
மாடு பற்றி இடங்கர் வலித்திட
கோடு பற்றிய கொற்றவன் கூயது ஓர்
பாடு பெற்ற உணர்வின் பயத்தினால்
வீடு பெற்ற விலங்கும் விலங்கு அதோ

#116
சிந்தை நல் அறத்தின் வழிச் சேறலால்
பைம் தொடி திருவின் பரிவு ஆற்றுவான்
வெம் தொழில் துறை வீடு பெற்று எய்திய
எந்தையும் எருவைக்கு அரசு அல்லனோ

#117
நன்று தீது என்று இயல் தெரி நல் அறிவு
இன்றி வாழ்வது அன்றோ விலங்கின் இயல்
நின்ற நல் நெறி நீ அறியா நெறி
ஒன்றும் இன்மை உன் வாய்மை உணர்த்துமால்

#118
தக்க இன்ன தகாதன இன்ன என்று
ஒக்க உன்னலராயின் உயர்ந்து உள
மக்களும் விலங்கே மனுவின் நெறி
புக்கவேல் அவ் விலங்கும் புத்தேளிரே

#119
காலன் ஆற்றல் கடிந்த கணிச்சியான்
பாலின் ஆற்றிய பத்தி பயத்தலால்
மாலினால் தரு வன் பெரும் பூதங்கள்
நாலின் ஆற்றலும் ஆற்றுழி நண்ணினாய்

#120
மேவ_அரும் தருமத் துறை மேவினார்
ஏவரும் பவத்தால் இழிந்தோர்களும்
தா_அரும் தவரும் பல தன்மை சால்
தேவரும் உளர் தீமை திருத்தினார்

#121
இனையது ஆதலின் எக் குலத்து யாவர்க்கும்
வினையினால் வரும் மேன்மையும் கீழ்மையும்
அனைய தன்மை அறிந்தும் அழித்தனை
மனையின் மாட்சி என்றான் மனு நீதியான்

#122
அவ் உரை அமையக் கேட்ட அரிக் குலத்து அரசும் மாண்ட
செவ்வியோய் அனையது ஆக செருக்களத்து உருத்து எய்யாதே
வெவ்விய புளிஞர் என்ன விலங்கியே மறைந்து வில்லால்
எவ்வியது என்னை என்றான் இலக்குவன் இயம்பலுற்றான்

#123
முன்பு நின் தம்பி வந்து சரண் புக முறையிலோயைத்
தென்புலத்து உய்ப்பென் என்று செப்பினன் செருவில் நீயும்
அன்பினை உயிருக்கு ஆகி அடைக்கலம் யானும் என்றி
என்பது கருதி அண்ணல் மறைந்து நின்று எய்தது என்றான்

#124
கவிக் குலத்து அரசு அன்ன கட்டுரை கருத்தில் கொண்டான்
அவியுறு மனத்தன் ஆகி அறத் திறன் அழியச் செய்யான்
புவியிடை அண்ணல் என்பது எண்ணினில் பொருந்த முன்னே
செவியுறு கேள்விச் செல்வன் சென்னியின் இறைஞ்சிச் சொன்னான்

#125
தாய் என உயிர்க்கு நல்கித் தருமமும் தகவும் சால்பும்
நீ என நின்ற நம்பி நெறியினின் நோக்கும் நேர்மை
நாய் என நின்ற எம்-பால் நவை அற உணரலாமே
தீயன பொறுத்தி என்றான் சிறியன_சிந்தியாதான்

#126
இரந்தனன் பின்னும் எந்தை யாவதும் எண்ணல் தேற்றாக்
குரங்கு எனக் கருதி நாயேன் கூறிய மனத்துக் கொள்ளேல்
அரந்தை வெம் பிறவி நோய்க்கும் அரு மருந்து அனைய ஐயா
வரம் தரும் வள்ளால் ஒன்று கேள் என மறித்தும் சொல்வான்

#127
ஏவு கூர் வாளியால் எய்து நாய் அடியனேன்
ஆவி போம் வேலை-வாய் அறிவு தந்து அருளினாய்
மூவர் நீ முதல்வன் நீ முற்றும் நீ மற்றும் நீ
பாவம் நீ தருமம் நீ பகையும் நீ உறவும் நீ

#128
புரம் எலாம் எரி செய்தோன் முதலினோர் பொரு இலா
வரம் எலாம் உருவி என் வசை_இலா வலிமை சால்
உரம் எலாம் உருவி என் உயிர் எலாம் நுகரும் நின்
சரம் அலால் பிறிது வேறு உளது அரோ தருமமே

#129
யாவரும் எவையுமாய் இருதுவும் பயனுமாய்ப்
பூவும் நல் வெறியும் ஒத்து ஒருவ_அரும் பொதுமையாய்
ஆவ நீ ஆவது என்று அறிவினார் அருளினார்
தா_அரும் பதம் எனக்கு அருமையோ தனிமையோய்

#130
உண்டு எனும் தருமமே உருவமா உடைய நின்
கண்டுகொண்டேன் இனிக் காண என் கடவெனோ
பண்டொடு இன்றளவுமே என் பெரும் பழவினைத்
தண்டமே அடியனேற்கு உறுபதம் தருவதே

#131
மற்று இனி உதவி உண்டோ வானினும் உயர்ந்த மானக்
கொற்றவ நின்னை என்னைக் கொல்லிய கொணர்ந்து தொல்லைச்
சிற்றினக் குரங்கினோடும் தெரிவுறச் செய்த செய்கை
வெற்று அரசு எய்தி எம்பி வீட்டு_அரசு எனக்கு விட்டான்

#132
ஓவிய உருவ நாயேன் உளது ஒன்று பெறுவது உன்-பால்
பூ இயல் நறவம் மாந்திப் புந்தி வேறு உற்ற போழ்தில்
தீவினை இயற்றுமேனும் எம்பி மேல் சீறி என் மேல்
ஏவிய பகழி என்னும் கூற்றினை ஏவல் என்றான்

#133
இன்னம் ஒன்று இரப்பது உண்டால் எம்பியை உம்பிமார்கள்
தன்முனைக் கொல்வித்தான் என்று இகழ்வரேல் தடுத்தி தக்கோய்
முன்முனே மொழிந்தாய் அன்றே இவன் குறை முடிப்பது ஐயா
பின் இவன் வினையின் செய்கை அதனையும் பிழைக்கல் ஆமோ

#134
மற்று இலேன் எனினும் மாய அரக்கனை வாலின் பற்றி
கொற்றவ நின்-கண் தந்து குரக்கு இயல் தொழிலும் காட்டப்பெற்றிலென்
கடந்த சொல்லின் பயன் இலை பிறிது ஒன்றேனும்
உற்றது செய்க என்றாலும் உரியன் இவ் அனுமன் என்றான்

#135
அனுமன் என்பவனை ஆழி ஐய நின் செய்ய செங் கைத்
தனு என நினைதி மற்று என் தம்பி நின் தம்பி ஆக
நினைதி ஓர் துணைவர் இன்னோர் அனையவர் இலை நீ ஈண்டு அவ்
வனிதையை நாடிக் கோடி வானினும் உயர்ந்த தோளாய்

#136
என்று அவற்கு இயம்பிப் பின்னர் இருந்தனன் இளவல்-தன்னை
வன் துணைத் தடக் கை நீட்டி வாங்கினன் தழுவி மைந்த
ஒன்று உனக்கு உரைப்பது உண்டால் உறுதி அஃது உணர்ந்து கோடி
குன்றினும் உயர்ந்த தோளாய் வருந்தலை என்று கூறும்

#137
மறைகளும் முனிவர் யாரும் மலர் மிசை அயனும் மற்றைத்
துறைகளின் முடிவும் சொல்லும் துணி பொருள் திணி வில் தூக்கி
அறை கழல் இராமன் ஆகி அற நெறி நிறுத்த வந்தது
இறை ஒரு சங்கை இன்றி எண்ணுதி எண்ணம் மிக்கோய்

#138
நிற்கின்ற செல்வம் வேண்டி நெறி நின்ற பொருள்கள் எல்லாம்
கற்கின்றது இவன்-தன் நாமம் கருதுவது இவனைக் கண்டாய்
பொன் குன்றம் அனைய தோளாய் பொது நின்ற தலைமை நோக்கின்
என் கொன்ற வலியே சாலும் இதற்கு ஒன்றும் ஏது வேண்டா

#139
கைதவம் இயற்றி யாண்டும் கழிப்ப_அரும் கணக்கு_இல் தீமை
வைகலும் புரிந்துளாரும் வான் உயர் நிலையை வள்ளல்
எய்தவர் பெறுவர் என்றால் இணை அடி இறைஞ்சி ஏவல்
செய்தவர் பெறுவது ஐயா செப்பலாம் சீர்மைத்து ஆமோ

#140
அருமை என் விதியினாரே உதவுவான் அமைந்த காலை
இருமையும் எய்தினாய் மற்று இனிச் செயற்பாலது எண்ணின்
திரு_மறு_மார்பன் ஏவல் சென்னியில் சேர்த்தி சிந்தை
ஒருமையின் நிறுவி மும்மை உலகினும் உயர்தி அன்றே

#141
மத இயல் குரக்குச் செய்கை மயர்வொடு மாற்றி வள்ளல்
உதவியை உன்னி ஆவி உற்றிடத்து உதவுகிற்றி
பதவியை எவர்க்கும் நல்கும் பண்ணவன் பணித்த யாவும்
சிதைவு_இல செய்து நொய்தின் தீர்வு_அரும் பிறவி தீர்தி

#142
அரசியல் பாரம் பூரித்து அயர்ந்தனை இகழாது ஐயன்
மரை மலர்ப் பாதம் நீங்கா வாழுதி மன்னர் என்பார்
எரி எனற்கு உரியார் என்றே எண்ணுதி எண்ணம் யாவும்
புரிதி சிற்றடிமை குற்றம் பொறுப்பர் என்று எண்ணவேண்டா

#143
என்ன இத்தகைய ஆய உறுதிகள் யாவும் ஏங்கும்
பின்னவற்கு இயம்பி நின்ற பேரெழிலானை நோக்கி
மன்னவர்க்கு அரசன் மைந்த மற்று இவன் சுற்றத்தோடும்
உன் அடைக்கலம் என்று உய்த்தே உயர் கரம் உச்சி வைத்தான்

#144
வைத்த பின் உரிமைத் தம்பி மா முகம் நோக்கி வல்லை
உய்த்தனை கொணர்தி உன்றன் ஓங்கு_அரு மகனை என்ன
அத்தலை அவனை ஏவி அழைத்தலின் அணைந்தான் என்ப
கைத்தலத்து உவரி நீரைக் கலக்கினான் பயந்த காளை

#145
சுடர் உடை மதியம் என்னத் தோன்றினன் தோன்றி யாண்டும்
இடர் உடை உள்ளத்தோரை எண்ணினும் உணர்ந்திலாதான்
மடல் உடை நறு மென் சேக்கை மலை அன்றி உதிர_வாரிக்
கடலிடைக் கிடந்த காதல் தாதையைக் கண்ணின் கண்டான்

#146
கண்ட கண் கனலும் நீரும் குருதியும் கால மாலை
குண்டலம் அலம்புகின்ற குவவுத் தோள் குரிசில் திங்கள்
மண்டலம் உலகில் வந்து கிடந்தது அ மதியின் மீதா
விண்தலம்-தன்னின் நின்று ஓர் மீன் விழுந்து என்ன வீழ்ந்தான்

#147
எந்தையே எந்தையே இவ் எழு திரை வளாகத்து யார்க்கும்
சிந்தையால் செய்கையால் ஓர் தீவினை செய்திலாதாய்
நொந்தனை அதுதான் நிற்க நின் முகம் நோக்கிக் கூற்றம்
வந்ததே அன்றோ அஞ்சாது ஆர் அதன் வலியைத் தீர்ப்பார்

#148
தறை அடித்தது போல் தீராத் தகைய இத் திசைகள் தாங்கும்
கறையடிக்கு அழிவு செய்த கண்டகன் நெஞ்சம் உன்றன்
நிறை அடிக் கோல வாலின் நிலைமையை நினையும்-தோறும்
பறை அடிக்கின்ற அந்தப் பயம் அற பறந்தது அன்றே

#149
குல வரை நேமிக் குன்றம் என்று வான் உயர்ந்த கோட்டின்
தலைகளும் நின் பொன் தாளின் தழும்பு இனி தவிர்ந்த அன்றே
மலை கொளும் அரவும் மற்றும் மதியமும் பலவும் தாங்கி
அலை கடல் கடைய வேண்டின் ஆர் இனிக் கடைவர் ஐயா

#150
பஞ்சின் மெல் அடியாள் பங்கன் பாதுகம் அலாது யாதும்
அஞ்சலித்து அறியாச் செங் கை ஆணையாய் அமரர் யாரும்
எஞ்சலர் இருந்தார் உன்னால் இன் அமுது ஈந்த நீயோ
துஞ்சினை வள்ளியோர்கள் நின்னின் யார் சொல்லற்பாலார்

#151
ஆயன பலவும் பன்னி அழுங்கினன் புழுங்கி நோக்கித்
தீ உறு மெழுகின் சிந்தை உருகினன் செங் கண் வாலி
நீ இனி அயர்வாய் அல்லை என்று தன் நெஞ்சில் புல்லி
நாயகன் இராமன் செய்த நல்வினைப் பயன் இது என்றான்

#152
தோன்றலும் இறத்தல்தானும் துகள்_அறத் துணிந்து நோக்கின்
மூன்று உலகத்தினோர்க்கும் மூலத்தே முடிந்த அன்றே
யான் தவம் உடைமையால் இவ் இறுதி வந்து இசைந்தது யார்க்கும்
சான்று என நின்ற வீரன் தான் வந்து வீடு தந்தான்

#153
பாலமை தவிர் நீ என் சொல் பற்றுதியாயின் தன்னின்
மேல் ஒரு பொருளும் இல்லா மெய்ப்பொருள் வில்லும் தாங்கிக்
கால் தரை தோய நின்று கட்புலக்கு உற்றது அம்மா
மால் தரும் பிறவி நோய்க்கு மருந்து என வணங்கு மைந்த

#154
என் உயிர்க்கு இறுதிசெய்தான் என்பதை இறையும் எண்ணாது
உன் உயிர்க்கு உறுதி செய்தி இவற்கு அமர் உற்றது உண்டேல்
பொன் உயிர்த்து ஒளிரும் பூணாய் பொது நின்று தருமம் நோக்கி
மன் உயிர்க்கு உறுதி செய்வான் மலர் அடி சுமந்து வாழ்தி

#155
என்றனன் இனைய ஆய உறுதிகள் யாவும் சொல்லித்
தன் துணை தடக் கை ஆரத் தனையனைத் தழுவிச் சால
குன்றினும் உயர்ந்த திண் தோள் குரக்கு இனத்து அரசன் கொற்றப்
பொன் திணி வயிரப் பைம் பூண் புரவலன் தன்னை நோக்கி

#156
நெய் அடை நெடு வேல் தானை நீல் நிற நிருதர் என்னும்
துய் அடை கனலி அன்ன தோளினன் தொழிலும் தூயன்
பொய் அடை உள்ளத்தார்க்குப் புலப்படாப் புலவ மற்று உன்
கையடை ஆகும் என்ன இராமற்குக் காட்டும் காலை

#157
தன் அடி தாழ்தலோடும் தாமரைத் தடம் கணானும்
பொன் உடைவாளை நீட்டி நீ இது பொறுத்தி என்றான்
என்னலும் உலகம் ஏழும் ஏத்தின இறந்து வாலி
அ நிலை துறந்து வானுக்கு அப்புறத்து உலகன் ஆனான்

#158
கை அவண் நெகிழ்தலோடும் கடும் கணை கால வாலி
வெய்ய மார்பு அகத்துள் தங்காது உருவி மேக்கு உயர மீப்போய்த்
துய்ய நீர்க் கடலுள் தோய்ந்து தூய் மலர் அமரர் சூட்ட
ஐயன் வெந் விடாத கொற்றத்து ஆவம் வந்து அடைந்தது அன்றே

@8 தாரை புலம்புறு படலம்

#1
வாலியும் ஏக யார்க்கும் வரம்பு_இலா உலகில் இன்பம்
பாலியா முன்னர் நின்ற பரிதி_சேய் செங் கை பற்றி
ஆல் இலைப் பள்ளியானும் அங்கதனோடும் போனான்
வேல் விழித் தாரை கேட்டாள் வந்து அவன் மேனி வீழ்ந்தாள்

#2
குங்குமம் கொட்டி என்ன குவி முலைக் குவட்டுக்கு ஒத்த
பொங்கு வெம் குருதி போர்ப்பப் புரி குழல் சிவப்பப் பொன் தோள்
அங்கு அவன் அலங்கல் மார்பில் புரண்டனள் அகன்ற செக்கர்
வெம் கதிர் விசும்பில் தோன்றும் மின் எனத் திகழும் மெய்யாள்

#3
வேய் குழல் விளரி நல் யாழ் வீணை என்று இனைய நாண
ஏங்கினள் இரங்கி விம்மி உருகினள் இரு கை கூப்பித்
தாங்கினள் தலையில் சோர்ந்து சரிந்து தாழ் குழல்கள் தள்ளி
ஓங்கிய குரலால் பன்னி இனையன உரைக்கலுற்றாள்

#4
வரை சேர் தோளிடை நாளும் வைகுவேன்
கரை சேரா இடர் வேலை கண்டிலேன்
உரை சேர் ஆருயிரே என் உள்ளமே
அரைசே யான் இது காண அஞ்சினேன்

#5
துயராலே தொலையாத என்னையும்
பயிராயோ பகையாத பண்பினாய்
செயிர் தீராய் விதி ஆன தெய்வமே
உயிர் போனால் உடலாரும் உய்வரோ

#6
நறிது ஆம் நல் அமிழ்து உண்ண நல்கலின்
பிறியா இன் உயிர் பெற்ற பெற்றி தாம்
அறியாரோ நமனார் அது அன்று எனின்
சிறியாரோ உபகாரம் சிந்தியார்

#7
அணங்கு ஆர் பாகனை ஆசை-தோறும் உற்று
உணங்கா நாள்_மலர் தூய் உள் அன்பினால்
இணங்கா காலம் இரண்டொடு ஒன்றினும்
வணங்காது இத்துணை வைக வல்லையோ

#8
வரை ஆர் தோள் பொடி ஆட வைகுவாய்
தரை மேலாய் உறு தன்மை ஈது எனக்
கரையாதேன் இடு பூசல் கண்டும் ஒன்று
உரையாய் என்-வயின் ஊனம் யாவதோ

#9
நையா நின்றனென் நான் இருந்து இங்ஙன்
மெய் வானோர் திரு நாடு மேவினாய்
ஐயா நீ எனது ஆவி என்பதும்
பொய்யோ பொய் உரையாத புண்ணியா

#10
செரு ஆர் தோள நின் சிந்தை உளேன் என்னின்
மருவார் வெம் சரம் எனையும் வவ்வுமால்
ஒருவேனுள் உளை ஆகின் உய்தியால்
இருவேமுள் இருவேம் இருந்திலேம்

#11
எந்தாய் நீ அமிழ்து ஈய யாம் எலாம்
உய்ந்தேம் என்று உபகாரம் உன்னுவார்
நந்தா நாள்_மலர் சிந்தி நண்பொடும்
வந்தாரோ எதிர் வானுளோர் எலாம்

#12
ஓயா வாளி ஒளித்து நின்று எய்வான்
ஏயா வந்த இராமன் என்று உளான்
வாயால் ஏயினன் என்னின் வாழ்வு எலாம்
ஈயாயோ அமிழ்தேயும் ஈகுவாய்

#13
சொற்றேன் முந்துற அன்ன சொல் கொளாய்
அற்றான் அன்னது செய்கலான் எனா
உற்றாய் உம்பியை ஊழி காணும் நீ
இற்றாய் நான் உனை என்று காண்கெனோ

#14
நீறு ஆம் மேருவும் நீ நெருக்கினால்
மாறு ஓர் வாளி உன் மார்பை ஈர்வதோ
தேறேன் யான் இது தேவர் மாயமோ
வேறு ஓர் வாலி-கொலாம் விளிந்துளான்

#15
தகை நேர் வண் புகழ் நின்று தம்பியார்
பகை நேர்வார் உளர் ஆன பண்பினால்
உக நேர் சிந்தி உலந்து அழிந்தனன்
மகனே கண்டிலையோ நம் வாழ்வு எலாம்

#16
அரு மைந்து அற்றம் அகற்றும் வில்லியார்
ஒரு மைந்தற்கும் அடாதது உன்னினார்
தருமம் பற்றிய தக்கவர்க்கு எலாம்
கருமம் கட்டளை என்றல் கட்டதோ

#17
என்றாள் இன்னன பன்னி இன்னலோடு
ஒன்று ஆனாள் உணர்வு ஏதும் உற்றிலாள்
நின்றாள் அ நிலை நோக்கி நீதி சால்
வன் தாள் மால் வரை அன்ன மாருதி

#18
மடவாரால் அ மடந்தை முன்னர் வாழ்
இடம் மேவும்படி ஏவி வாலி-பால்
கடன் யாவும் கடைகண்டு கண்ணனோடு
உடனாய் உற்றது எலாம் உணர்த்தலும்

#19
அகம் வேரற்று உக வீசு அருக்கனார்
புகழ் மேலைக் கிரி புக்க போழ்தினில்
நகமே ஒத்த குரக்கு_நாயகன்
முகமே ஒத்தது மூரி மண்டிலம்

#20
மறைந்தான் மாலை அருக்கன் வள்ளியோன்
உறைந்தான் மங்கை திறத்தை உன்னுவான்
குறைந்தான் நெஞ்சு குழைந்து அழுங்குவான்
நிறைந்து ஆர் கங்குலின் வேலை நீந்தினான்

@9 அரசியற் படலம்

#1
புதல்வன் பொன் மகுடம் பொறுத்தலால்
முதல்வன் பேர் உவகைக்கு முந்துவான்
உதவும் பூ_மகள் சேர ஒண் மலர்க்
கதவம் செய்ய கரத்தின் நீக்கினான்

#2
அது காலத்தில் அருட்கு நாயகன்
மதி சால் தம்பியை வல்லை ஏவினான்
கதிரோன்_மைந்தனை ஐய கைகளால்
விதியால் மௌலி மிலைச்சுவாய் எனா

#3
அப்போதே அருள் நின்ற அண்ணலும்
மெய்ப் போர் மாருதி-தன்னை வீர நீ
இப்போதே கொணர்க இன்ன செய் வினைக்கு
ஒப்பு ஆம் யாவையும் என்று உணர்த்தலும்

#4
மண்ணும் நீர் முதல் மங்கலங்களும்
எண்ணும் பொன் முடி முதல யாவையும்
நண்ணும் வேலையில் நம்பி தம்பியும்
திண்ணம் செய்வன செய்து செம்மலை

#5
மறையோர் ஆசி வழங்க வானுளோர்
நறை தோய் நாள்_மலர் தூவ நல் நெறிக்கு
இறையோன்-தன் இளையோன் அவ் ஏந்தலை
துறையோர் நூல் முறை மௌலி சூட்டினான்

#6
பொன் மா மௌலி புனைந்து பொய்யிலான்
தன் மானக் கழல் தாழும் வேலையில்
நன் மார்பில் தழுவுற்று நாயகன்
சொன்னான் முற்றிய சொல்லின் எல்லையான்

#7
ஈண்டு-நின்று ஏகி நீ நின் இயல்பு அமை இருக்கை எய்தி
வேண்டுவ மரபின் எண்ணி விதி முறை இயற்றி வீர
பூண்ட பேரரசுக்கு ஏற்ற யாவையும் புரிந்து போரில்
மாண்டவன் மைந்தனோடும் வாழ்தி நல் திருவின் வைகி

#8
வாய்மை சால் அறிவின் வாய்த்த மந்திர மாந்தரோடும்
தீமை தீர் ஒழுக்கின் வந்த திறத் தொழில் மறவரோடும்
தூய்மை சால் புணர்ச்சி பேணி துகள்_அறு தொழிலை ஆகி
சேய்மையோடு அணிமை இன்றித் தேவரின் தெரிய நிற்றி

#9
புகை உடைத்து என்னின் உண்டு பொங்கு அனல் அங்கு என்று உன்னும்
மிகை உடைத்து உலகம் நூலோர் வினையமும் வேண்டற்பாற்றே
பகை உடைச் சிந்தையார்க்கும் பயனுறு பண்பின் தீரா
நகை உடை முகத்தை ஆகி இன் உரை நல்கு நாவால்

#10
தேவரும் வெஃகற்கு ஒத்த செயிர்_அறு செல்வம் அஃது உன்
காவலுக்கு உரியது என்றால் அன்னது கருதி காண்டி
ஏவரும் இனிய நண்பர் அயலவர் விரவார் என்று இ
மூ வகை இயலோர் ஆவர் முனைவர்க்கும் உலக முன்னே

#11
செய்வன செய்தல் யாண்டும் தீயன சிந்தியாமை
வைவன வந்த போதும் வசை_இல இனிய கூறல்
மெய்யன வழங்கல் யாவும் மேவின வெஃகல் இன்மை
உய்வன ஆக்கித் தம்மோடு உயர்வன உவந்து செய்வாய்

#12
சிறியர் என்று இகழ்ந்து நோவு செய்வன செய்யல் மற்று இ
நெறி இகழ்ந்து யான் ஓர் தீமை இழைத்தலால் உணர்ச்சி நீண்டு
குறியது ஆம் மேனி ஆய கூனியால் குவவுத் தோளாய்
வெறியன எய்தி நொய்தின் வெம் துயர்க் கடலின் வீழ்ந்தேன்

#13
மங்கையர்-பொருட்டால் எய்தும் மாந்தர்க்கு மரணம் என்றல்
சங்கை இன்று உணர்தி வாலி செய்கையால் சாலும் இன்னும்
அங்கு அவர் திறத்தினானே அல்லலும் பழியும் ஆதல்
எங்களின் காண்டி அன்றே இதற்கு வேறு உவமை உண்டோ

#14
நாயகன் அல்லன் நம்மை நனி பயந்தெடுத்து நல்கும்
தாய் என இனிது பேணித் தாங்குதி தாங்குவாரை
ஆயது தன்மையேனும் அற வரம்பு இகவா வண்ணம்
தீயன வந்த போது சுடுதியால் தீமையோரை

#15
இறத்தலும் பிறத்தல்தானும் என்பன இரண்டும் யாண்டும்
திறத்துளி நோக்கின் செய்த வினை தரத் தெரிந்த அன்றே
புறத்து இனி உரைப்பது என்னே பூவின் மேல் புனிதற்கேனும்
அறத்தினது இறுதி வாழ்நாட்கு இறுதி அஃது உறுதி அன்ப

#16
ஆக்கமும் கேடும் தாம் செய் அறத்தொடு பாவம் ஆய
போக்கி வேறு உண்மை தேறார் பொரு_அரும் புலமை நூலோர்
தாக்கின ஒன்றோடொன்று தருக்குறும் செருவில் தக்கோய்
பாக்கியம் அன்றி என்றும் பாவத்தைப் பற்றலாமோ

#17
இன்னது தகைமை என்ப இயல்புளி மரபின் எண்ணி
மன் அரசு இயற்றி என்-கண் மருவுழி மாரிக் காலம்
பின்னுறு முறையின் உன்றன் பெரும் கடல் சேனையோடும்
துன்னுதி போதி என்றான் சுந்தரன் அவனும் சொல்வான்

#18
குரங்கு உறை இருக்கை என்னும் குற்றமே குற்றம் அல்லால்
அரங்கு எழு துறக்க நாட்டுக்கு அரசு எனல் ஆகும் அன்றே
மரம் கிளர் அருவிக் குன்றம் வள்ளல் நீ மனத்தின் எம்மை
இரங்கிய பணி யாம் செய்ய இருத்தியால் சில் நாள் எம்-பால்

#19
அரிந்தம நின்னை அண்மி அருளுக்கும் உரியேம் ஆகிப்
பிரிந்து வேறு எய்தும் செல்வம் வெறுமையின் பிறிது அன்றாமால்
கரும் தடம் கண்ணினாளை நாடல் ஆம் காலம்-காறும்
இருந்து அருள் தருதி எம்மோடு என்று அடி இணையின் வீழ்ந்தான்

#20
ஏந்தலும் இதனைக் கேளா இன் இளமுறுவல் நாற
வேந்து அமை இருக்கை எம் போல் விரதியர் விழைதற்கு ஒவ்வா
போந்து அவண் இருப்பின் எம்மைப் போற்றவே பொழுதுபோமால்
தேர்ந்து இனிது இயற்றும் உன்றன் அரசியல் தருமம் தீர்தி

#21
ஏழ்_இரண்டு ஆண்டு யான் போந்து எரி வனத்து இருக்க ஏன்றேன்
வாழியாய் அரசர் வைகும் வள நகர் வைகல் ஒல்லேன்
பாழி அம் தடம் தோள் வீர பார்த்திலை போலும் அன்றே
யாழ் இசை மொழியோடு அன்றி யான் உறும் இன்பம் என்னோ

#22
தேவி வேறு அரக்கன் வைத்த சேமத்துள் இருப்பத் தான் தன்
ஆவி போல் துணைவரோடும் அளவிடற்கு அரிய இன்பம்
மேவினான் இராமன் என்றால் ஐய இவ் வெய்ய மாற்றம்
மூ வகை உலகம் முற்றும் காலத்தும் முற்ற வற்றோ

#23
இல்லறம் துறந்திலாதோர் இயற்கையை இழந்தும் போரின்
வில் அறம் துறந்தும் வாழ்வேற்கு இன்னன மேன்மை இல்லாச்
சில் அறம் புரிந்து நின்ற தீமைகள் தீருமாறு
நல் அறம் தொடர்ந்த நோன்பின் நவை_அற நோற்பல் நாளும்

#24
அரசியற்கு உரிய யாவும் ஆற்றுழி ஆற்றி ஆன்ற
கரைசெயற்கு அரிய சேனைக் கடலொடும் திங்கள் நான்கின்
விரசுக என்-பால் நின்னை வேண்டினென் வீர என்றான்
உரைசெயற்கு எளிதும் ஆகி அரிதும் ஆம் ஒழுக்கில் நின்றான்

#25
மறித்து ஒரு மாற்றம் கூறான் வான் உயர் தோற்றத்து அன்னான்
குறிப்பு அறிந்து ஒழுகல் மாதோ கோதிலர் ஆதல் என்னா
நெறிப் பட கண்கள் பொங்கி நீர் வர நெடிது தாழ்ந்து
பொறிப்ப_அரும் துன்பம் முன்னா கவிக் குலத்து அரசன் போனான்

#26
வாலி_காதலனும் ஆண்டு மலர் அடி வணங்கினானை
நீல மா மேகம் அன்ன நெடியவன் அருளின் நோக்கி
சீலம் நீ உடையை ஆதல் இவன் சிறுதாதை என்னா
மூலமே தந்த நுந்தை ஆம் என முறையின் நிற்றி

#27
என்ன மற்று இனைய கூறி ஏகு அவன் தொடர என்றான்
பொன் அடி வணங்கி மற்று அப் புகழ் உடைக் குரிசில் போனான்
பின்னர் மாருதியை நோக்கி பேரெழில் வீர நீயும்
அன்னவன் அரசுக்கு ஏற்றது ஆற்றுதி அறிவின் என்றான்

#28
பொய்த்தல்_இல் உள்ளத்து அன்பு பொழிகின்ற புணர்ச்சியாலும்
இத்தலை இருந்து நாயேன் ஏயின எனக்குத் தக்க
கைத்தொழில் செய்வேன் என்று கழல் இணை வணங்கும் காலை
மெய்த் தலை நின்ற வீரன் இவ் உரை விளம்பிவிட்டான்

#29
நிரம்பினான் ஒருவன் காத்த நிறை அரசு இறுதி நின்ற
வரம்பு இலாததனை மற்று ஓர் தலைமகன் வலிதின் கொண்டால்
அரும்புவ நலனும் தீங்கும் ஆதலின் ஐய நின் போல்
பெரும் பொறை அறிவினோரால் நிலையினைப் பெறுவது அம்மா

#30
ஆன்றவற்கு உரியது ஆய அரசினை நிறுவி அப்பால்
ஏன்று எனக்கு உரியது ஆன கருமமும் இயற்றற்கு ஒத்த
சான்றவர் நின்னின் இல்லை ஆதலால் தருமம்தானே
போன்ற நீ யானே வேண்ட அத்தலை போதி என்றான்

#31
ஆழியான் அனைய கூற ஆணை ஈதாயின் அஃதே
வாழியாய் புரிவென் என்று வணங்கி மாருதியும் போனான்
சூழி மால் யானை அன்ன தம்பியும் தானும் தொல்லை
ஊழி_நாயகனும் வேறு ஓர் உயர் தடம் குன்றம் உற்றார்

#32
ஆரியன் அருளின் போய்த் தன் அகல் மலை அகத்தன் ஆன
சூரியன்_மகனும் மானத் துணைவரும் கிளையும் சுற்ற
தாரையை வணங்கி அன்னாள் தாய் எனத் தந்தை முந்தைச்
சீரியன் சொல்லே என்ன செவ்விதின் அரசுசெய்தான்

#33
வள அரசு எய்தி மற்றை வானர வீரர் யாரும்
கிளைஞரின் உதவ ஆணை கிளர் திசை அளப்ப கேளோடு
அளவு_இலா ஆற்றல் ஆண்மை அங்கதன் அறம் கொள் செல்வத்து
இளவரசு இயற்ற ஏவி இனிதினின் இருந்தான் இப்பால்

@10 கார்காலப் படலம்

#1
மா இயல் வட திசை-நின்று வானவன்
ஓவியமே என ஒளிக் கவின் குலாம்
தேவியை நாடிய முந்தி தென்திசைக்கு
ஏவிய தூது என இரவி ஏகினான்

#2
பை அணைப் பல் தலைப் பாந்தள் ஏந்திய
மொய் நிலத் தகளியில் முழங்கு நீர் நெயின்
வெய்யவன் விளக்கமா மேருப் பொன் திரி
மை எடுத்து ஒத்தது மழைத்த வானமே

#3
நண்ணுதல் அரும் கடல் நஞ்சம் நுங்கிய
கண்_நுதல் கண்டத்தின் காட்சி ஆம் என
விண்ணகம் இருண்டது வெயிலின் வெம் கதிர்
தண்ணிய மெலிந்தன தழைத்த மேகமே

#4
நஞ்சினின் நளிர் நெடும் கடலின் நங்கையர்
அஞ்சன நயனத்தின் அவிழ்ந்த கூந்தலின்
வஞ்சனை அரக்கர்-தம் வடிவின் செய்கையின்
நெஞ்சினின் இருண்டது நீல வானமே

#5
நாட்களில் நளிர் கடல் நாரம் நா உற
வேட்கையின் பருகிய மேகம் மின்னுவ
வாள் கைகள் மயங்கிய செருவின் வார் மதப்
பூட்கைகள் நிறத்த புண் திறப்ப போன்றவே

#6
நீல் நிறப் பெரும் கரி நிரைத்த நீர்த்து என
சூல் நிற முகில் குலம் துவன்றி சூழ் திரை
மால் நிற நெடும் கடல் வாரி மூரி வான்
மேல் நிரைத்து உளது என முழக்கம் மிக்கதே

#7
அரிப் பெரும் பெயரவன் முதலினோர் அணி
விரிப்பவும் ஒத்தன வெற்பு மீது தீ
எரிப்பவும் ஒத்தன ஏசு_இல் ஆசைகள்
சிரிப்பவும் ஒத்தன தெரிந்த மின் எலாம்

#8
மாதிரக் கருமகன் மாரிக் கார் மழை
யாதினும் இருண்ட விண் இருந்தைக் குப்பையின்
கூதிர் வெம் கால் நெடும் துருத்திக் கோள் அமைத்து
ஊது வெம் கனல் உமிழ் உலையும் ஒத்ததே

#9
சூடின மணி முடித் துகள்_இல் விஞ்சையர்
கூடு உறை நீக்கிய குருதி வாட்களும்
ஆடவர் பெயர்-தொறும் ஆசை யானையின்
ஓடைகள் ஒளி பிறழ்வனவும் ஒத்ததே

#10
பிரிந்து உறை மகளிரும் பிலத்த பாந்தளும்
எரிந்து உயிர் நடுங்கிட இரவியின் கதிர்
அரிந்தன ஆம் என அசனி நா என
விரிந்தன திசை-தொறும் மிசையின் மின் எலாம்

#11
தலைமையும் கீழ்மையும் தவிர்தல் இன்றியே
மலையினும் மரத்தினும் மற்றும் முற்றினும்
விலை நினைந்து உள வழி விலங்கும் வேசையர்
உலைவுறும் மனம் என உலாய ஊதையே

#12
அழுங்குறு மகளிர் தம் அன்பர்த் தீர்ந்தவர்
புழுங்குறு புணர் முலை கொதிப்பப் புக்கு உலாய்
கொழும் குறைத் தசை என ஈர்ந்து கொண்டு அது
விழுங்குறு பேய் என வாடை வீங்கிற்றே

#13
ஆர்த்து எழு துகள் விசும்பு அடைத்தலானும் மின்
கூர்த்து எழு வாள் எனப் பிறழும் கொட்பினும்
தார்ப் பெரும் பணையின் விண் தழங்கு காரினும்
போர்ப் பெரும் களம் எனப் பொலிந்தது உம்பரே

#14
இன் நகைச் சனகியைப் பிரிந்த ஏந்தல் மேல்
மன்மதன் மலர்க் கணை வழங்கினான் எனப்
பொன் நெடும் குன்றின் மேல் பொழிந்த தாரைகள்
மின்னொடும் துவன்றின மேக ராசியே

#15
கல்லிடைப் படும் துளித் திவலை கார் இடு
வில்லிடைச் சரம் என விசையின் வீழ்ந்தன
செல்லிடைப் பிறந்த செம் கனல்கள் சிந்தின
அல்லிடை மணி சிறந்து அழல் இயற்றல் போல்

#16
மள்ளர்கள் மறு படை மான யானை மேல்
வெள்ளி வேல் எறிவன போன்ற மேகங்கள்
தள்ள_அரும் துளி படத் தகர்ந்து சாய் கிரி
புள்ளி வெம் கட கரி புரள்வ போன்றவே

#17
வான் இடு தனு நெடும் கருப்பு வில் மழை
மீன் நெடும் கொடியவன் பகழி வீழ் துளி
தான் நெடும் சார் துணை பிரிந்த தன்மையர்
ஊன் உடை உடம்பு எலாம் உக்கது ஒத்ததே

#18
தீர்த்தனும் கவிகளும் செறிந்து நம் பகை
பேர்த்தனர் இனி எனப் பேசி வானவர்
ஆர்த்து என ஆர்த்தன மேகம் ஆய் மலர்
தூர்த்தன ஒத்தன துள்ளி வெள்ளமே

#19
வண்ண வில் கரதலத்து அரக்கன் வாளினன்
விண்ணிடைக் கடிது கொண்டு ஏகும் வேலையில்
பெண்ணினுக்கு அரும் கலம் அனைய பெய்_வளை
கண் எனப் பொழிந்தது கால மாரியே

#20
பரஞ்சுடர்ப் பண்ணவன் பண்டு விண் தொடர்
புரம் சுட விடு சரம் புரையும் மின் இனம்
அரம் சுடப் பொறி நிமிர் அயிலின் ஆடவர்
உரம் சுட உளைந்தனர் பிரிந்துளோர் எலாம்

#21
பொருள் தரப் போயினர் பிரிந்த பொய் உடற்கு
உருள்தரு தேர் மிசை உயிர் கொண்டு உய்த்தலான்
மருள்தரு பிரிவின் நோய் மாசுணம் கெடக்
கருடனைப் பொருவின் கால மாரியே

#22
முழங்கின முறைமுறை மூரி மேகம் நீர்
வழங்கின மிடைவன மான யானைகள்
தழங்கின பொழி மதத் திவலை தாழ்தரப்
புழுங்கின எதிரெதிர் பொருவ போன்றவே

#23
விசை கொடு மாருதம் மறித்து வீசலால்
அசைவுறு சிறு துளி அப்பு மாரியின்
இசைவுற எய்வன இயைவவாய் இரும்
திசையொடு திசை செருச் செய்தல் ஒத்தவே

#24
விழைவுறு பொருள் தரப் பிரிந்த வேந்தர் வந்து
உழை உற உயிர் உற உயிர்க்கும் மாதரின்
மழை உற மா முகம் மலர்ந்து தோன்றின
குழை உறப் பொலிந்தன உலவைக் கொம்பு எலாம்

#25
பாடலம் வறுமை கூரப் பகலவன் பசுமை கூரக்
கோடல்கள் பெருமை கூரக் குவலயம் சிறுமை கூர
ஆடின மயில்கள் பேசாது அடங்கின குயில்கள் அன்பர்
கேடுறத் தளர்ந்தார் போன்றும் திரு உறக் கிளர்ந்தார் போன்றும்

#26
நால் நிறச் சுரும்பும் வண்டும் நவ மணி அணியின் சாரத்
தேன் உக மலர்ந்து சாய்ந்தச் சே இதழ்க் காந்தள் செம் பூ
வேனிலை வென்றது அம்மா கார் என வியந்து நோக்கி
மா நிலக் கிழத்தி கைகள் மறித்தன போன்ற-மன்னோ

#27
வாள் எயிற்று அரவம் போல வான் தலை தோன்ற வார்ந்த
தாள் உடைக் கோடல்-தம்மைத் தழீஇயின காதல் தங்க
மீளல அவையும் அன்ன விழைவன உணர்வு வீந்த
கோள் அரவு என்னப் பின்னி அவற்றொடும் குழைந்து சாய்ந்த

#28
எள் இட இடமும் இன்றி எழுந்தன இலங்கு கோபம்
தள்ளுற தலைவர்-தம்மைப் பிரிந்து அவர் தழீஇய தூமக்
கள் உடை ஓதியார்-தம் கலவியில் பல கால் கான்ற
வெள்ளடைத் தம்பல் குப்பை சிதர்ந்து என விரிந்த மாதோ

#29
தீம் கனி நாவல் ஓங்கும் சேண் உயர் குன்றின் செம்பொன்
வாங்கின கொண்டு பாரில் மண்டும் மால் யாறு மான
வேங்கையின் மலரும் கொன்றை விரிந்தன வீயும் ஈர்த்து
தாங்கின கலுழி சென்று தலைமயக்குறுவ தம்மில்

#30
நல் நெடும் காந்தள் போதில் நறை விரி கடுக்கை மென் பூ
துன்னிய கோபத்தோடும் தோன்றிய தோற்றம் தும்பி
இன் இசை முரல்வ நோக்கி இரு நில_மகள் கை ஏந்திப்
பொன்னொடும் காசை நீட்டிக் கொடுப்பதே போன்றது அன்றே

#31
கிளைத் துணை மழலை வண்டு கின்னரம் நிகர்த்த மின்னும்
துளிக் குரல் மேகம் வள் வார்த் தூரியம் துவைப்ப போன்ற
வளைக் கையர் போன்ற மஞ்ஞை தோன்றிகள் அரங்கின்-மாடே
விளக்கு இனம் ஒத்த காண்போர் விழி ஒத்த விளையின் மென் பூ

#32
பேடையும் ஞிமிறும் பாயப் பெயர்வுழிப் பிறக்கும் ஓசை
ஊடுறத் தாக்கும்-தோறும் ஒல் ஒலி பிறப்ப நல்லார்
ஆடு இயல் பாணிக்கு ஒக்கும் ஆரிய அமிழ்தப் பாடல்
கோடியர் தாளம் கொட்டல் மலர்ந்த கூதாளம் ஒத்த

#33
வழை துறு கான யாறு மா நிலக் கிழத்தி மக்கட்கு
உழை துறு மலை மாக் கொங்கை கரந்த பால் ஒழுக்கை ஒத்த
விழைவுறு வேட்கையொடும் வேண்டினர்க்கு உதவ வேண்டிக்
குழை-தொறும் கனகம் தூங்கும் கற்பகம் நிகர்த்த கொன்றை

#34
பூ இயல் புறவம் எங்கும் பொறி வரி வண்டு போர்ப்பத்
தீவிய களிய ஆகிச் செருக்கின காமச் செவ்வி
ஓவிய மரன்கள்-தோறும் உரைத்து அற உரிஞ்சி ஒண் கேழ்
நாவிய செவ்வி நாறக் கலையொடும் புலந்த நவ்வி

#35
தேரில் நல் நெடும் திசை செலச் செருக்கு அழிந்து ஒடுங்கும்
கூர் அயில் தரும் கண் எனக் குவிந்தன குவளை
மாரன்_அன்னவர் வரவு கண்டு உவக்கின்ற மகளிர்
மூரல் மென் குறு முறுவல் ஒத்து அரும்பின முல்லை

#36
களிக்கும் மஞ்ஞையை கண்ணுளர் இனம் எனக் கண்ணுற்று
அளிக்கும் மன்னரின் பொன் மழை வழங்கின அருவி
வெளிக்-கண் வந்த கார் விருந்து என விருந்து கண்டு உள்ளம்
களிக்கும் மங்கையர் முகம் எனப் பொலிந்தன கமலம்

#37
சரத நாள்_மலர் யாவையும் குடைந்தன தடவிச்
சுரத நூல் தெரி விடர் எனத் தேன் கொண்டு தொகுப்ப
பரதநூல் முறை நாடகம் பயனுறப் பகுப்பான்
இரதம் ஈட்டுறும் கவிஞரைப் பொருவின தேனீ

#38
நோக்கினால் நமை நோக்கு அழி கண்ட நுண் மருங்குல்
தாக்கு_அணங்கு அரும் சீதைக்கு தாங்க_அரும் துன்பம்
ஆக்கினான் நமது உருவின் என்று அரும்பெறல் உவகை
வாக்கினால் உரையாம் எனக் களித்தன மான்கள்

#39
நீடு நெஞ்சு உறு நேயத்தால் நெடிது உறப் பிரிந்து
வாடுகின்றன மருளுறு காதலின் மயங்கிக்
கூடு நல் நதித் தடம்-தொறும் குடைந்தன படிவுற்று
ஆடுகின்றன கொழுநரைப் பொருவின அன்னம்

#40
கார் எனும் பெயர்க் கரியவன் மார்பினின் கதிர் முத்து
ஆரம் என்னவும் பொலிந்தன அளப்ப_அரும் அளக்கர்
நீர் முகந்த மா மேகத்தின் அருகு உற நிரைத்துக்
கூரும் வெண் நிறத் திரை எனப் பறப்பன குரண்டம்

#41
மருவி நீங்கல்செல்லா நெடு மாலைய வானில்
பருவ மேகத்தின் அருகு உறக் குருகு இனம் பறப்பத்
திருவின் நாயகன் இவன் எனத் தே மறை தெரிக்கும்
ஒருவன் மார்பினின் உத்தரியத்தினை ஒத்த

#42
உற வெதுப்புறும் கொடும் தொழில் வேனிலான் ஒழிய
திறம் நினைப்ப_அரும் கார் எனும் செவ்வியோன் சேர
நிற மனத்து உறு குளிர்ப்பினின் நெடு நில_மடந்தை
புற மயிர்த்தலம் பொடித்தன போன்றன பசும் புல்

#43
தேன் அவாம் மலர்த் திசைமுகன் முதலினர் தெளிந்தோர்
ஞான நாயகன் நவையுற நோக்கினர் நல்கக்
கானம் யாவையும் பரப்பிய கண் எனச் சனகன்
மானை நாடி நின்று அழைப்பன போன்றன மஞ்ஞை

#44
செஞ்செவ் வேலவர் செறி சிலைக் குரிசிலர் இருண்ட
குஞ்சி சே ஒளி கதுவுறப் புது நிறம் கொடுக்கும்
பஞ்சி போர்த்த மெல் அடி எனப் பொலிந்தன பதுமம்
வஞ்சி போலியர் மருங்கு என நுடங்கின வல்லி

#45
நீயின் அன்னவள் குதலையிர் ஆதலின் நேடிப்
போய தையலத் தருதிர் என்று இராகவன் புகலத்
தேயம் எங்கணும் திரிந்தன போந்து இடைத் தேடிக்
கூய ஆய் குரல் குறைந்த போல் குறைந்தன குயில்கள்

#46
பொழிந்த மா நிலம் புல் தர குமட்டிய புனிற்றா
எழுந்த ஆம்பிகள் இடறின செறி தயிர ஏய்ந்த
மொழிந்த தேன் உடை முகிழ் முலை ஆய்ச்சியர் முழவில்
பிழிந்த பால் வழி நுரையினைப் பொருவின பிடவம்

#47
வேங்கை நாறின கொடிச்சியர் வடிக் குழல் விரை வண்டு
ஏங்க நாகமும் நாறின நுளைச்சியர் ஐம்பால்
ஓங்கு நாள்_முல்லை நாறின ஆய்ச்சியர் ஓதி
ஞாங்கர் உற்பலம் உழத்தியர் பித்திகை நாற

#48
தேரைக் கொண்ட பேரல்குலாள் திருமுகம் காணான்
ஆரைக் கண்டு உயிர் ஆற்றுவான் உணர்வு அழிந்தான்
மாரற்கு எண்_இல் பல்லாயிரம் மலர்க் கணை வகுத்த
காரைக் கண்டனன் வெம் துயர்க்கு ஒரு கரை காணான்

#49
அளவு_இல் கார் எனும் அப் பெரும் பருவம் வந்து அணைந்தால்
தளர்வர் என்பது தவம்புரிவோர்கட்கும் தகுமால்
கிளவி தேனினும் அமிழ்தினும் குழைத்தவள் கிளைத்தோள்
வளவி உண்டவன் வருந்தும் என்றால் அது வருத்தோ

#50
காவியும் கருங்குவளையும் நெய்தலும் காயாம்பூவையும்
பொருவான் அவன் புலம்பினன் தளர்வான்
ஆவியும் சிறிது உண்டு-கொலாம் என அயர்ந்தான்
தூவி அன்னம் அன்னாள்-திறத்து இவையிவை சொல்லும்

#51
வார் ஏர் முலையாளை மறைக்குநர் வாழ்
ஊரே அறியேன் உயிரோடு உழல்வேன்
நீரே உடையாய் அருள் நின் இலையோ
காரே எனது ஆவி கலக்குதியோ

#52
வெப்பு ஆர் நெடு மின்னின் எயிற்றை வெகுண்டு
எப்பாலும் விசும்பின் இருண்டு எழுவாய்
அப் பாதக வஞ்ச அரக்கரையே
ஒப்பாய் உயிர் கொண்டு அலது ஓவலையோ

#53
அயில் ஏய் விழியார் விளை ஆர் அமுதின்
குயில் ஏய் மொழியார்க் கொணராய் கொடியாய்
துயிலேன் ஒருவேன் உயிர் சோர்வு உணர்வாய்
மயிலே எனை நீ வலி ஆடுதியோ

#54
மழை வாடையோடு ஆடி வலிந்து உயிர் மேல்
நுழைவாய் மலர்வாய் நொடியாய் கொடியே
இழைவாள் நுதலாள் இடை போல் இடையே
குழைவாய் எனது ஆவி குழைக்குதியோ

#55
விழையேன் விழைவானவை மெய்ம்மையின் நின்று
இழையேன் உணர்வு என்-வயின் இன்மையினால்
பிழையேன் உயிரோடு பிரிந்தனரால்
உழையே அவர் எவ் உழையார் உரையாய்

#56
பயில் பாடக மெல் அடி பஞ்சு அனையார்
செயிர் ஏதும் இலாரொடு தீருதியோ
அயிராது உடனே அகல்வாய் அலையோ
உயிரே கெடுவாய் உறவு ஓர்கிலையோ

#57
ஒன்றைப் பகராய் குழலுக்கு உடைவாய்
வன் தைப்புறு நீள் வயிரத்தினையோ
கொன்றைக் கொடியாய் கொணர்கின்றிலையோ
என்றைக்கு உறவாக இருந்தனையே

#58
குரா அரும்பு அனைய கூர் வாள் எயிற்று வெம் குருளை நாகம்
விராவு வெம் கடுவின் கொல்லும் மெல் இணர் முல்லை வெய்தின்
உராவ_அரும் துயரம் மூட்டி ஓய்வு_அற மலைவது ஒன்றோ
இராவண கோபம் நிற்க இந்திரகோபம் என்னோ

#59
ஓடை வாள் நுதலினாளை ஒளிக்கலாம் உபாயம் உன்னி
நாடி மாரீசனார் ஓர் ஆடக நவ்வி ஆனார்
வாடையாய்க் கூற்றினாரும் உருவினை மாற்றி வந்தார்
கேடு சூழ்வார்க்கு வேண்டும் உருக் கொளக் கிடைத்த அன்றே

#60
அரு வினை அரக்கர் என்ன அந்தரம் அதனில் யாரும்
வெருவர முழங்குகின்ற மேகமே மின்னுகின்றாய்
தருவல் என்று இரங்கினாயோ தாமரை மறந்த தையல்
உருவினைக் காட்டிக்காட்டி ஒளிக்கின்றாய் ஒளிக்கின்றாயால்

#61
உள் நிறைந்து உயிர்க்கும் வெம்மை உயிர் சுட உலைவேன் உள்ளம்
புண்ணுற வாளி தூர்த்தல் பழுது இனிப் போதி மார
எண் உறு கல்வி உள்ளத்து இளையவன் இன்னே உன்னைக்
கண்ணுறுமாயின் பின்னை யார் அவன் சீற்றம் காப்பார்

#62
வில்லும் வெம் கணையும் வீரர் வெம் சமத்து அஞ்சினார் மேல்
புல்லுவ அல்ல ஆற்றல் போற்றலர்க் குறித்தல் போலாம்
அல்லும் நன் பகலும் நீங்கா அனங்க நீ அருளின் தீர்ந்தாய்
செல்லும் என்று எளிவந்தோர் மேல் செலுத்தலும் சீர்மைத்து ஆமோ

#63
என்ன இத்தகைய பன்னி ஈடு அழிந்து இரங்குகின்ற
தன்னை ஒப்பானை நோக்கித் தகை அழிந்து அயர்ந்த தம்பி
நின்னை எத்தகையை ஆக நினைந்தனை நெடியோய் என்ன
சென்னியில் சுமந்த கையன் தேற்றுவான் செப்பலுற்றான்

#64
காலம் நீளிது காரும் மாரியும் வந்தது என்ற கவற்சியோ
நீல மேனி அரக்கர் வீரம் நினைந்து அழுங்கிய நீர்மையோ
வாலி சேனை மடந்தை வைகு இடம் நாட வாரல் இலாமையோ
சாலும் நூல் உணர் கேள்வி வீர தளர்ந்தது என்னை தவத்தினோய்

#65
மறை துளங்கினும் மதி துளங்கினும் வானும் ஆழ் கடல் வையமும்
நிறை துளங்கினும் நிலை துளங்குறு நிலைமை நின்-வயின் நிற்குமோ
பிறை துளங்குவ அனைய பேர் எயிறு உடைய பேதையர் பெருமை நின்
இறை துளங்குறு புருவ வெம் சிலை இடை துளங்குற இசையுமோ

#66
அனுமன் என்பவன் அளவு அறிந்தனம் அறிஞ அங்கதன் ஆதியோர்
எனையர் என்பது ஒர் இறுதி கண்டிலம் எழுபது என்று எனும் இயல்பினார்
வினையின் வெம் துயர் விரவு திங்களும் விரைவு சென்றன எளிதின் நின்
தனு எனும் திரு_நுதலி வந்தனள் சரதம் வன் துயர் தவிர்தியே

#67
மறை அறிந்தவர் வரவு கண்டு உமை வலியும் வஞ்சகர் வழியொடும்
குறைய வென்று இடர் களைவென் என்றனை குறை முடிந்தது விதியினால்
இறைவ அங்கு அவர் இறுதி கண்டு இனிது இசை புனைந்து இமையவர்கள்தாம்
உறையும் உம்பரும் உதவி நின்றருள் உணர்வு அழிந்திடல் உறுதியோ

#68
காது கொற்றம் நினக்கு அலாது பிறர்க்கு எவ்வாறு கலக்குமோ
வேதனைக்கு இடம் ஆதல் வீரதை அன்று மேதமை ஆம் அரோ
போது பிற்படல் உண்டு இது ஓர் பொருள் அன்று நின்று புணர்த்தியேல்
யாது உனக்கு இயலாதது எந்தை வருந்தல் என்ன இயம்பினான்

#69
சொற்ற தம்பி உரைக்கு உணர்ந்து உயிர் சோர்வு ஒடுங்கிய தொல்லையோன்
இற்ற இன்னல் இயக்கம் எய்திட வைகல் பற்பல ஏக மேல்
உற்று நின்ற வினைக் கொடும் பிணி ஒன்றின் மேல் உடன் ஒன்று உராய்
மற்றும் வெம் பிணி பற்றினால் என வந்து எதிர்ந்தது மாரியே

#70
நிறைந்தன நெடும் குளம் நெருங்கின தரங்கம்
குறைந்தன கரும் குயில் குளிர்ந்த உயர் குன்றம்
மறைந்தன தடம் திசை வருந்தினர் பிரிந்தார்
உறைந்தன மகன்றிலுடன் அன்றில் உயிர் ஒன்றி

#71
பாசிழை அரம்பையர் பழிப்பு_இல் அகல் அல்குல்
தூசு தொடர் ஊசல் நனி வெம்மை தொடர்வுற்றே
வீசியது வாடை எரி வெந்த விரி புண் வீழ்
ஆசு_இல் அயில் வாளி என ஆசைபுரிவார் மேல்

#72
வேலை நிறைவுற்றன வெயில் கதிர் வெதுப்பும்
சீலம் அழிவுற்ற புனல் உற்று உருவு செப்பின்
காலம் அறிவுற்று உணர்தல் கன்னல் அளவு அல்லால்
மாலை பகல் உற்றது என ஓர்வு அரிது மாதோ

#73
நெல் கிழிய நெல் பொதி நிரம்பின நிரம்பாச்
சொற்கு இழிய நல் கிளிகள் தோகையவர் தூ மென்
பற்கு இழி மணிப் படர் திரை பரதர் முன்றில்
பொற்கிழி விரித்தன சினை பொதுளு புன்னை

#74
நிறம் கருகு கங்குல் பகல் நின்ற நிலை நீவா
அறம் கருது சிந்தை முனி அந்தணரின் ஆலிப்
பிறங்கு அரு நெடும் துளி பட பெயர்வு_இல் குன்றில்
உறங்கல பிறங்கல் அயல் நின்ற உயர் வேழம்

#75	
சந்தின் அடையின் படலை வேதிகை தடம்-தோறு
அந்தி இடு அகில் புகை நுழைந்த குளிர் அன்னம்
மந்தி துயில் உற்ற முழை வன் கடுவன் அங்கத்து
இந்தியம் அவித்த தனி யோகியின் இருந்த

#76
ஆசு_இல் சுனை வால் அருவியாய் இழையர் ஐம்பால்
வாச மணம் நாறல் இல ஆன மணி வன் கால்
ஊசல் வறிது ஆன இதண் ஒண் மணிகள் விண் மேல்
வீசல் இல வான நெடு மாரி துளி வீச

#77
கரும் தகைய தண் சினைய கைதை மடல் காதல்
தரும் தகைய போது கிளையில் புடை தயங்க
பெரும் தகைய பொன் சிறை ஒடுக்கி உடல் பேராது
இருந்த குருகின் பெடை பிரிந்தவர்கள் என்ன

#78
பதங்கள் முகில் ஒத்த இசை பல் ஞிமிறு பன்ன
விதங்களின் நடித்திடு விகற்ப வழி மேவும்
மதங்கியரை ஒத்த மயில் வைகு மர மூலத்து
ஒதுங்கின உழைக் குலம் மழைக் குலம் முழக்க

#79
விளக்கு ஒளி அகில் புகை விழுங்கு அமளி மென் கொம்பு
இளைக்கும் இடை மங்கையரும் மைந்தர்களும் ஏற
தளத் தகு மலர்த் தவிசு இகந்து நகு சந்தின்
துளைத் துயில் உவந்து துயில்வுற்ற குளிர் தும்பி

#80
தாமரை மலர்த் தவிசு இகந்து தகை அன்னம்
மாமரம் நிரைத் தொகு பொதும்பர் உழை வைக
தே மரம் அடுக்கு இதனிடைச் செறி குரம்பை
தூ மருவு எயிற்றியரொடு அன்பர் துயில்வுற்றார்

#81
வள்ளி புடை சுற்றி உயர் சிற்றலை மரம்-தோறு
எள்ள_அரு மறிக் குருளொடு அண்டர்கள் இருந்தார்
கள்ளரின் ஒளித்து உழல் நெடும் கழுது ஒடுங்கி
முள் எயிறு தின்று பசி மூழ்கிட இருந்த

#82
சரம் பயில் நெடும் துளி நிரந்த புயல் சார
உரம் பெயர்வு_இல் வன் கரி கரந்து உற ஒடுங்கா
வரம்பு அகல் நறும் பிரசம் வைகல் பல வைகும்
முரம்பினில் நிரம்பல முழைஞ்சிடை நுழைந்த

#83
இத்தகைய மாரியிடை துன்னி இருள் எய்த
மைத் தகு மணிக் குறுநகைச் சனகன் மான் மேல்
உய்த்த உணர்வத்தினன் நெருப்பிடை உயிர்ப்பான்
வித்தகன் இலக்குவனை முன்னினன் விளம்பும்

#84
மழைக் கரு மின் எயிற்று அரக்கன் வஞ்சனை
இழைப்ப அரும் கொங்கையும் எதிர்வுற்று இன்னலின்
உழைத்தனள் உலைந்து உயிர் உலக்கும் ஒன்றினும்
பிழைப்ப அரிது எனக்கும் இது என்ன பெற்றியோ

#85
தூ நிறச் சுடு சரம் தூணி தூங்கிட
வான் உறப் பிறங்கிய வைரத் தோளொடும்
யான் உறக் கடவதே இதுவும் இ நிலை
வேல் நிறத்து உற்றது ஒத்துழியும் வீகிலேன்

#86
தெரி கணை மலரொடும் திறந்த நெஞ்சொடும்
அரிய வன் துயரொடும் யானும் வைகுவேன்
எரியும் மின்மினி மணி விளக்கின் இன் துணை
குரி இனம் பெடையோடும் துயில்வ கூட்டினுள்

#87
வானகம் மின்னினும் மழை முழங்கினும்
யான் அகம் மெலிகுவென் எயிற்று அரா என
கானகம் புகுந்து யான் முடித்த காரியம்
மேல் நகும் கீழ் நகும் இனி என் வேண்டுமோ

#88
மறந்திருந்து உய்கிலேன் மாரி ஈது எனின்
இறந்து விண் சேர்வது சரதம் இப் பழி
பிறந்து பின் தீர்வலோ பின்னர் அன்னது
துறந்து சென்று உறுவலோ துயரின் வைகுவேன்

#89
ஈண்டு நின்று அரக்கர்-தம் இருக்கை யாம் இனிக்
காண்டலின் பற்பல காலம் காண்டுமால்
வேண்டுவது அன்று இது வீர நோய் தெற
மாண்டனன் என்றது மாட்சிப்பாலது ஆம்

#90
செப்பு உருக்கு அனைய இ மாரிச் சீகரம்
வெப்புறப் புரம் சுட வெந்து வீவதோ
அப்பு உருக் கொண்ட வாள் நெடும் கண் ஆய்_இழை
துப்பு உருக் குமுத வாய் அமுதம் துய்த்த யான்

#91
நெய் அடை தீ எதிர் நிறுவி நிற்கு இவள்
கையடை என்ற அச் சனகன் கட்டுரை
பொய் அடை ஆக்கிய பொறியிலேனொடு
மெய் அடையாது இனி விளிதல் நன்று அரோ

#92
தேற்றுவாய் நீ உளையாக தேறி நின்று
ஆற்றுவேன் நான் உளனாக ஆய்_வளை
தோற்றுவாள் அல்லள் இத் துன்பம் ஆர் இனி
மாற்றுவார் துயர்க்கு ஒரு வரம்பு உண்டாகுமோ

#93
விட்ட போர் வாளிகள் விரிஞ்சன் விண்ணையும்
சுட்ட போது இமையவர் முதல் தொல்லையோர்
பட்ட போது உலகமும் உயிரும் பற்று அறக்
கட்ட போது அல்லது மயிலைக் காண்டுமோ

#94
தருமம் என்ற ஒரு பொருள்-தன்னை அஞ்சி யான்
தெருமருகின்றது செறுநர் தேவரோடு
ஒருமையின் வந்தனரேனும் உய்கலார்
உரும் என ஒலிபடும் உர_விலோய் என்றான்

#95
இளவலும் உரைசெய்வான் எண்ணும் நாள் இனும்
உள அல கூதிரும் இறுதி உற்றதால்
களவு செய்தவன் உறை காணும் காலம் வந்து
அளவியது அயர்வது என் ஆணை ஆழியாய்

#96
திரை செய் அத் திண் கடல் அமிழ்தம் செங்கணான்
உரைசெயத் தரினும் அத் தொழில் உவந்திலன்
வரை முதல் கலப்பைகள் மாடு நாட்டித் தன்
குரை மலர்த் தடக் கையால் கடைந்து கொண்டனன்

#97
மனத்தினின் உலகு எலாம் வகுத்து வாய்ப் பெயும்
நினைப்பினன் ஆயினும் நேமியோன் நெடும்
எனைப் பல படைக்கலம் ஏந்தி யாரையும்
வினைப் பெரும் சூழ்ச்சியின் பொருது வெல்லுமால்

#98
கண் உடை நுதலினன் கணிச்சி வானவன்
விண்ணிடைப் புரம் சுட வெகுண்ட மேலை_நாள்
எண்ணிய சூழ்ச்சியும் ஈட்டிக் கொண்டவும்
அண்ணலே ஒருவரால் அறியற்பாலதோ

#99
ஆகுநர் யாரையும் துணைவர் ஆக்கிப் பின்
ஏகுறு நாளிடை எய்தி எண்ணுவ
சேகு_அறப் பல் முறை தெருட்டிச் செய்த பின்
வாகை என்று ஒரு பொருள் வழுவற்பாலதோ

#100
அறத் துறை திறம்பினர் அரக்கர் ஆற்றலர்
மறத் துறை நமக்கு என வலிக்கும் வன்மையோர்
திறத்து உறை நல் நெறி திறம்பல் உண்டு எனின்
புறத்து இனி யார் திறம் புகழும் வாகையும்

#101
பைந்தொடிக்கு இடர் களை பருவம் பையவே
வந்து அடுத்து உளது இனி வருத்தம் நீங்குவாய்
அந்தணர்க்கு ஆகும் நாம் அரக்கர்க்கு ஆகுமோ
சுந்தரத் தனு_வலாய் சொல்லு நீ என்றான்

#102
உறுதி அஃதே என உணர்ந்த ஊழியான்
இறுதி உண்டே-கொல் இ மாரிக்கு என்பது ஓர்
தெறு துயர் உழந்தனன் தேய தேய்வு சென்று
அறுதியை அடைந்தது அப் பருவம் ஆண்டு போய்

#103
மள்கல்_இல் பெரும் கொடை மருவி மண்ணுளோர்
உள்கிய பொருள் எலாம் உதவி அற்ற போது
எள்கல்_இல் இரவலர்க்கு ஈவது இன்மையால்
வெள்கிய மாந்தரின் வெளுத்த மேகமே

#104
தீவினை நல்வினை என்னத் தேற்றிய
பேய் வினைப் பொருள்-தனை அறிந்து பெற்றது ஓர்
ஆய் வினை மெய்யுணர்வு அணுக ஆசு_அறும்
மாயையின் மாய்ந்தது மாரிப் பேர் இருள்

#105
மூள் அமர் தொலைவுற முரசு அவிந்த போல்
கோள் அமை கண முகில் குமுறல் ஓவின
நீள் அடு கணை எனத் துளியும் நீங்கின
வாள் உறை உற்று என மறைந்த மின் எலாம்

#106
தடுத்த தாள் நெடும் தடம் கிரிகள் தாழ்வரை
அடுத்த நீர் ஒழிந்தன அருவி தூங்கின
எடுத்த நூல் உத்தரியத்தொடு எய்தி நின்று
உடுத்த வால் நிறத் துகில் ஒழிந்த போன்றவே

#107
மேகம் மா மலைகளின் புறத்து வீதலால்
மாக யாறு யாவையும் வாரி அற்றன
ஆகையால் தகவு இழந்து அழிவு_இல் நன் பொருள்
போக ஆறு ஒழுகலான் செல்வம் போன்றவே

#108
கடம் திறந்து எழு களிறு அனைய கார் முகில்
இடம் துறந்து ஏகலின் பொலிந்தது இந்துவும்
நடம் திறன் நவில்வுறு நங்கைமார் முகம்
படம் திறந்து உருவலின் பொலியும் பான்மை போல்

#109
பாசிழை மடந்தையர் பகட்டு வெம் முலை
பூசிய சந்தனம் புழுகு குங்குமம்
மூசின முயங்கு சேறு உலர மொண்டு உற
வீசின நறும் பொடி விண்டு வாடையே

#110
மன்னவன் தலைமகன் வருத்தம் மாற்றுவான்
அ நெறிப் பருவம் வந்து நணுகிற்று ஆதலால்
பொன்னினை நாடிய போதும் என்ப போல்
அன்னமும் திசைதிசை அகன்ற விண்ணின்-வாய்

#111
தம் சிறை ஒடுக்கின தழுவும் இன்னல
நெஞ்சு உறு மம்மரும் நினைப்பும் நீண்டன
மஞ்சு உறு நெடு மழை பிரிதலால் மயில்
அஞ்சின மிதிலைநாட்டு அன்னம் என்னவே

#112
வஞ்சனை தீவினை மறந்த மா தவர்
நெஞ்சு எனத் தெளிந்த நீர் நிரந்து தோன்றுவ
பஞ்சு எனச் சிவக்கும் மென் பாதப் பேதையர்
அஞ்சனக் கண் எனப் பிறழ்ந்த ஆடல் மீன்

#113
ஊடிய மடந்தையர் வதனம் ஒத்தன
தாள்-தொறு மலர்ந்தன முதிர்ந்த தாமரை
கூடினர் துவர் இதழ் கோலம் கொண்டன
சேடு உறு நறு முகை விரிந்த செங்கிடை

#114
கல்வியின் திகழ் கணக்காயர் கம்பலைப்
பல் விதச் சிறார் எனப் பகர்வ பல் அரி
செல் இடத்து அல்லது ஒன்று உரைத்தல் செய்கலா
நல் அறிவாளரின் அவிந்த நா எலாம்

#115
செறி புனல் பூம் துகில் திரைக் கையால் திரைத்து
உறு துணைக் கால் மடுத்து ஓடி ஓத நீர்
எறுழ் வலிக் கணவனை எய்தி யாறு எலாம்
முறுவலிக்கின்றன போன்ற முத்து எலாம்

#116
சொல் நிறை கேள்வியின் தொடர்ந்த மாந்தரின்
இல் நிறப் பசலையுற்று இருந்த மாதரின்
தன் நிறம் பயப்பய நீங்கித் தள்ள_அரும்
பொன் நிறம் பொருந்தின பூகத் தாறு எலாம்

#117
பயின்று உடல் குளிர்ப்பவும் பாணி நீத்து அவண்
இயன்றன இளவெயில் ஏய்ந்த மெய்யின
வயின்-தொறும் வயின்-தொறும் மடித்த வாயின
துயின்றன இடங்கர் மா தடங்கள்-தோறுமே

#118
கொஞ்சுறு கிளி நெடும் குதலை கூடின
அம் சிறை அறுபத அளக ஓதிய
எஞ்சல்_இல் குழையன இடை நுடங்குவ
வஞ்சிகள் பொலிந்தன மகளிர் மானவே

#119
அளித்தன முத்து இனம் தோற்ப மான்_அனார்
வெளித்து எதிர் விழிக்கவும் வெள்கி மேன்மையால்
ஒளித்தன ஆம் என ஒடுங்கு கண்ணன
குளித்தன மண்ணிடை கூனல் தந்து எலாம்

#120
மழை படப் பொதுளிய மருதத் தாமரை
தழை படப் பேர் இலைப் புரையில் தங்குவ
விழைபடு பெடையொடும் மெள்ள நள்ளிகள்
புழை அடைத்து ஒடுங்கின வச்சை மாக்கள் போல்

@11 கிட்கிந்தைப் படலம்

#1
அன்ன காலம் அகலும் அளவினில்
முன்னை வீரன் இளவலை மொய்ம்பினோய்
சொன்ன எல்லையின் ஊங்கினும் தூங்கிய
மன்னன் வந்திலன் என் செய்தவாறு அரோ

#2
பெறல்_அரும் திருப் பெற்று உதவிப் பெரும்
திறம் நினைந்திலன் சீர்மையின் தீர்ந்தனன்
அறம் மறந்தனன் அன்பு கிடக்க நம்
மறம் அறிந்திலன் வாழ்வின் மயங்கினான்

#3
நன்றி கொன்று அரு நட்பினை நார் அறுத்து
ஒன்றும் மெய்ம்மை சிதைத்து உரை பொய்த்துளார்க்
கொன்று நீக்குதல் குற்றத்தில் தங்குமோ
சென்று மற்று அவன் சிந்தையைத் தேர்குவாய்

#4
வெம்பு கண்டகர் விண் புக வேரறுத்து
இம்பர் நல் அறம் செய்ய எடுத்த வில்
கொம்பும் உண்டு அரும் கூற்றமும் உண்டு உங்கள்
அம்பும் உண்டு என்று சொல்லு நம் ஆணையே

#5
நஞ்சம்_அன்னவரை நலிந்தால் அது
வஞ்சம் அன்று மனு வழக்கு ஆதலால்
அஞ்சில் ஐம்பதில் ஒன்று அறியாதவன்
நெஞ்சில் நின்று நிலாவ நிறுத்துவாய்

#6
ஊரும் ஆளும் அரசும் உம் சுற்றமும்
நீரும் ஆளுதிரே எனின் நேர்ந்த நாள்
வாரும் வாரலிர் ஆம் எனின் வானரப்
பேரும் மாளும் எனும் பொருள் பேசுவாய்

#7
இன்னும் நாடுதும் இங்கு இவர்க்கும் வலி
துன்னினாரை எனத் துணிந்தார் எனின்
உன்னை வெல்ல உலகு ஒரு மூன்றினும்
நின் அலால் பிறர் இன்மை நிகழ்த்துவாய்

#8
நீதி ஆதி நிகழ்த்தினை நின்று அது
வேதியாத பொழுது வெகுண்டு அவண்
சாதியாது அவர் சொல் தரத் தக்கனை
போதி ஆதி என்றான் புகழ்ப் பூணினான்

#9
ஆணை சூடி அடி தொழுது ஆண்டு இறை
பாணியாது படர் வெரிந் பாழ்படாத்
தூணி பூட்டி தொடு சிலை தொட்டு அரும்
சேணின் நீங்கினன் சிந்தையின் நீங்கலான்

#10
மாறு நின்ற மரனும் மலைகளும்
நீறு சென்று நெடு நெறி நீங்கிட
வேறு சென்றனன் மேன்மையின் ஓங்கிடும்
ஆறு சென்றிலன் ஆணையின் ஏகுவான்

#11
விண் உறத் தொடர் மேருவின் சீர் வரை
மண் உறப் புக்கு அழுந்தின மாதிரம்
கண் உறத் தெரிவுற்றது கட்செவி
ஒண் நிறக் கழல் சேவடி ஊன்றலால்

#12
வெம்பு கானிடைப் போகின்ற வேகத்தால்
உம்பர் தோயும் மராமரத்து ஊடு செல்
அம்பின் போன்றனன் அன்று அடல் வாலி-தன்
தம்பி மேல் செலும் மானவன் தம்பியே

#13
மாடு வென்றி ஒர் மாதிர யானையின்
சேடு சென்று செடில் ஒரு திக்கின் மா
நாடுகின்றதும் நண்ணிய கால் பிடித்து
ஓடுகின்றதும் ஒத்துளன் ஆயினான்

#14
உருக் கொள் ஒண் கிரி ஒன்றின்-நின்று ஒன்றினைப்
பொருக்க எய்தினன் பொன் ஒளிர் மேனியான்
அருக்கன் மா உதயத்தின்-நின்று அத்தமாம்
பருப்பதத்தினை எய்திய பண்பு போல்

#15
தன் துணைத் தமையன் தனி வாளியின்
சென்று சேண் உயர் கிட்கிந்தை சேர்ந்தவன்
குன்றின்-நின்று ஒரு குன்றினில் குப்புறும்
பொன் துளங்கு உளைச் சீயமும் போன்றனன்

#16
கண்ட வானரம் காலனைக் கண்ட போல்
மண்டி ஓடின வாலி_மகற்கு அமர்
கொண்ட சீற்றத்து இளையோன் குறுகினான்
சண்ட வேகத்தினால் என்று சாற்றலும்

#17
அன்ன தோன்றலும் ஆண்_தொழிலான் வரவு
இன்னது என்று அறிவான் மருங்கு எய்தினான்
மன்னன் மைந்தன் மன கருத்து உட்கொளா
பொன்னின் வார் கழல் தாதை இல் போயினான்

#18
நளன் இயற்றிய நாயகக் கோயிலுள்
தள மலர்த் தகைப் பள்ளியில் தாழ் குழல்
இள முலைச்சியர் ஏந்து அடி தைவர
விளை துயிற்கு விருந்து விரும்புவான்

#19
சிந்துவாரத் தரு நறை தேக்கு அகில்
சந்தம் மா மயில்_சாயலர் தாழ் குழல்
கந்த மா மலர்க் காடுகள் தாவிய
மந்தமாருதம் வந்து உற வைகுவான்

#20
தித்தியாநின்ற செம் கிடை வாய்ச்சியர்
முத்த வாள் நகை முள் எயிற்று ஊறு தேன்
பித்தும் மாலும் பிறவும் பெருக்கலால்
மத்த வாரணம் என்ன மயங்கினான்

#21
மகுட குண்டலம் ஏய் முகமண்டலத்து
உகு நெடும் சுடர்க் கற்றை உலாவலால்
பகலவன் சுடர் பாய் பனி மால் வரை
தக மலர்ந்து பொலிந்து தயங்குவான்

#22
கிடந்தனன் கிடந்தானைக் கிடைத்து இரு
தடம் கை கூப்பினன் தாரை முன்_நாள் தந்த
மடங்கல் வீரன் நல் மாற்றம் விளம்புவான்
தொடங்கினான் அவனைத் துயில் நீக்குவான்

#23
எந்தை கேள் அவ் இராமற்கு இளையவன்
சிந்தையுள் நெடும் சீற்றம் திரு முகம்
தந்து அளிப்பத் தடுப்ப_அரும் வேகத்தான்
வந்தனன் உன் மனக் கருத்து யாது என்றான்

#24
இனைய மாற்றம் இசைத்தனன் என்பது ஓர்
நினைவிலான் நெடும் செல்வம் நெருக்கவும்
நனை நறும் துளி நஞ்சு மயக்கவும்
தனை உணர்ந்திலன் மெல்_அணைத் தங்கினான்

#25
ஆதலால் அவ் அரசு இளம் கோள் அரி
யாதும் முன் நின்று இயற்றுவது இன்மையால்
கோது_இல் சிந்தை அனுமனைக் கூவுவான்
போதல் மேயினன் போதகமே_அனான்

#26
மந்திரத் தனி மாருதி-தன்னொடும்
வெம் திறல் படை வீரர் விராய் வர
அந்தரத்தின் வந்து அன்னை-தன் கோயிலை
இந்திரற்கு மகன் மகன் எய்தினான்

#27
எய்தி மேல் செயத்தக்கது என் என்றலும்
செய்திர் செய்தற்கு_அரு நெடும் தீயன
நொய்தில் அன்னவை நீக்கவும் நோக்குதிர்
உய்திர் போலும் உதவி கொன்றீர் எனா

#28
மீட்டும் ஒன்று விளம்புகின்றாள் படை
கூட்டும் என்று உமைக் கொற்றவன் கூறிய
நாள் திறம்பின் உம் நாள் திறம்பும் எனக்
கேட்டிலீர் இனிக் காண்டிர் கிடைத்திரால்

#29
வாலி ஆருயிர் காலனும் வாங்க வில்
கோலி வாலிய செல்வம் கொடுத்தவர்
போலுமால் உம் புறத்து இருப்பார் இது
சாலுமால் உங்கள் தன்மையினோர்க்கு எலாம்

#30
தேவி நீங்க அத் தேவரின் சீரியோன்
ஆவி நீங்கினன் போல் அயர்வான் அது
பாவியாது பருகுதிர் போலும் நும்
காவி நாள்_மலர்க் கண்ணியர் காதல் நீர்

#31
திறம்பினீர் மெய் சிதைத்தீர் உதவியை
நிறம் பொலீர் உங்கள் தீவினை நேர்ந்ததால்
மறம் செய்வான் உறின் மாளுதிர் மற்று இனிப்
புறஞ்செய்து ஆவது என் என்கின்ற போதின்-வாய்

#32
கோள் உறுத்தற்கு அரிய குரக்கு இனம்
நீள் எழுத் தொடரும் நெடு வாயிலைத்
தாள் உறுத்தித் தட வரை தந்தன
மூளுறுத்தி அடுக்கின மொய்ம்பினால்

#33
சிக்கு அற கடை சேமித்த செய்கைய
தொக்குறுத்த மரத்த துவன்றின
புக்கு உறுக்கிப் புடைத்தும் என புறம்
மிக்கு இறுத்தன வெற்பும் இறுத்தன

#34
காக்கவோ கருத்து என்று கதத்தினால்
பூக்க மூரல் புரவலர் புங்கவன்
தாக்கு_அணங்கு உறை தாமரைத் தாளினால்
நூக்கினான் அக் கதவினை நொய்தினின்

#35
காவல் மா மதிலும் கதவும் கடி
மேவும் வாயில் அடுக்கிய வெற்பொடும்
தேவு சேவடி தீண்டலும் தீண்ட_அரும்
பாவம் ஆம் எனப் பற்று அழிந்து இற்றவால்

#36
நொய்தின் நோன் கதவும் முது வாயிலும்
செய்த கல் மதிலும் திசை யோசனை
ஐ_இரண்டின் அளவு அடி அற்று உக
வெய்தின் நின்ற குரங்கும் வெருக்கொளா

#37
பரிய மா மதிலும் படர் வாயிலும்
சரிய வீழ்ந்த தடித்தின் முடித் தலை
நெரிய நெஞ்சு பிளக்க நெடும் திசை
இரியலுற்றன இற்றில இன் உயிர்

#38
பகரவேயும் அரிது பரிந்து எழும்
புகர்_இல் வானரம் அஞ்சிய பூசலால்
சிகர மால் வரை சென்று திரிந்துழி
மகர வேலையை ஒத்தது மா நகர்

#39
வானரங்கள் வெருவி மலை ஒரீஇ
கான் ஒருங்கு படர அக் கார் வரை
மீ நெருங்கிய வானகம் மீன் எலாம்
போன பின் பொலிவு அற்றது போன்றதே

#40
அன்ன காலையில் ஆண்தகை ஆளியும்
பொன்னின் நல் நகர் வீதியில் புக்கனன்
சொன்ன தாரையைச் சுற்றினர் நின்றவர்
என்ன செய்குவது எய்தினன் என்றனர்

#41
அனையன் உள்ளமும் ஆய்_வளையாய் அலர்
மனையின் வாயில் வழியினை மாற்றினால்
நினையும் வீரன் அ நீள் நெறி நோக்கலன்
வினையம் ஈது என்று அனுமன் விளம்பினான்

#42
நீர் எலாம் அயல் நீங்கு-மின் நேர்ந்து யான்
வீரன் உள்ளம் வினவுவல் என்றலும்
பேர நின்றனர் யாவரும் பேர்கலாத்
தாரை சென்றனள் தாழ் குழலாரொடும்

#43
உரைசெய் வானர வீரர் உவந்து உறை
அரசர் வீதி கடந்து அகன் கோயிலைப்
புரசை யானை_அன்னான் புகலோடும் அவ்
விரை செய் வார் குழல் தாரை விலக்கினாள்

#44
விலங்கி மெல் இயல் வெண் நகை வெள் வளை
இலங்கு நுண் இடை ஏந்து இள மென் முலை
குலம் கொள் தோகை மகளிர் குழாத்தினால்
வலம்கொள் வீதி நெடு வழி மாற்றினாள்

#45
வில்லும் வாளும் அணி-தொறும் மின்னிட
மெல் அரிக் குரல் மேகலை ஆர்த்து எழ
பல் வகைப் பருவக் கொடி பம்பிட
வல்லி ஆயம் வலத்தினில் வந்ததே

#46
ஆர்க்கும் நூபுரங்கள் பேரி அல்குலாம் தடம் தேர் சுற்ற
வேல் கண் வில் புருவம் போர்ப்ப மெல்லியர் வளைந்த போது
பேர்க்க_அரும் சீற்றம் பேர முகம் பெயர்ந்து ஒதுங்கிற்று அல்லால்
பார்க்கவும் அஞ்சினான் அப் பனையினும் உயர்ந்த தோளன்

#47
தாமரை வதனம் சாய்த்துத் தனு நெடும் தரையில் ஊன்றி
மாமியர் குழுவின் வந்தானாம் என மைந்தன் நிற்ப
பூமியில் அணங்கனார்-தம் பொதுவிடைப் புகுந்து பொன் தோள்
தூ மன நெடும் கண் தாரை நடுங்குவாள் இனைய சொன்னாள்

#48
அந்தம்_இல் காலம் நோற்ற ஆற்றல் உண்டாயின் அன்றி
இந்திரன் முதலினோரால் எய்தலாம் இயல்பிற்று அன்றே
மைந்த நின் பாதம் கொண்டு எம் மனை வரப்பெற்று வாழ்ந்தேம்
உய்ந்தனம் வினையும் தீர்ந்தேம் உறுதி வேறு இதனின் உண்டோ

#49
வெய்தின் நீ வருதல் நோக்கி வெருவுறும் சேனை வீர
செய்திதான் உணர்கிலாது திருவுளம் தெரித்தி என்றாள்
ஐய நீ ஆழி வேந்தன் அடி இணை பிரிகலாதாய்
எய்தியது என்னை என்றாள் இசையினும் இனிய சொல்லாள்

#50
ஆர்-கொலோ உரைசெய்தார் என்று அருள் வரச் சீற்றம் அஃகப்
பார் குலாம் முழு வெண் திங்கள் பகல் வந்த படிவம் போலும்
ஏர் குலாம் முகத்தினாளை இறை முகம் எடுத்து நோக்கித்
தார் குலாம் அலங்கல் மார்பன் தாயரை நினைந்து நைந்தான்

#51
மங்கல அணியை நீக்கி மணி அணி துறந்து வாசக்
கொங்கு அலர் கோதை மாற்றி குங்குமம் சாந்தம் கொட்டாப்
பொங்கு வெம் முலைகள் பூகக் கழுத்தொடு மறையப் போர்த்த
நங்கையைக் கண்ட வள்ளல் நயனங்கள் பனிப்ப நைந்தான்

#52
இனையராம் என்னை ஈன்ற இருவரும் என்ன வந்த
நினைவினால் அயர்ப்புச் சென்ற நெஞ்சினன் நெடிது நின்றான்
வினவினாட்கு எதிர் ஓர் மாற்றம் விளம்பவும் வேண்டும் என்று அப்
புனை குழலாட்கு வந்த காரியம் புகல்வது ஆனான்

#53
சேனையும் யானும் தேடித் தேவியைத் தருவென் என்று
மானவற்கு உரைத்த மாற்றம் மறந்தனன் அருக்கன் மைந்தன்
ஆனவன் அமைதி வல்லை அறி என அருளின் வந்தேன்
மேல் நிலை அனையான் செய்கை விளைந்தவா விளம்புக என்றான்

#54
சீறுவாய் அல்லை ஐய சிறியவர் தீமை செய்தால்
ஆறுவாய் நீ அலால் மற்று ஆர் உளர் அயர்ந்தான்_அல்லன்
வேறுவேறு உலகம் எங்கும் தூதரை விடுத்து அவ் வேலை
ஊறுமா நோக்கித் தாழ்த்தான் உதவி மாறு உதவி உண்டோ

#55
ஆயிர கோடி தூதர் அரிக் கணம் அழைக்க ஆணை
போயினர் புகுதும் நாளும் புகுந்தது புகல் புக்கோர்க்குத்
தாயினும் நல்ல நீரே தணிதிரால் தருமம் அஃதலால்
தீயன செய்யாராயின் யாவரே செறுநர் ஆவார்

#56
அடைந்தவர்க்கு அபயம் நீவிர் அருளிய அளவில் செல்வம்
தொடர்ந்து நும் பணியின் தீர்ந்தால் அதுவும் நும் தொழிலே அன்றோ
மடந்தை-தன் பொருட்டால் வந்த வாள் அமர்க்களத்து மாண்டு
கிடந்திலர் என்னின் பின்னை நிற்குமோ கேண்மை அம்மா

#57
செம்மை சேர் உள்ளத்தீர்கள் செய்த பேர் உதவி தீரா
வெம்மை சேர் பகையும் மாற்றி அரசு வீற்றிருக்கவிட்டீர்
உம்மையே இகழ்வர் என்னின் எளிமையாய் ஒழிவது ஒன்றோ
இம்மையே வறுமை எய்தி இருமையும் இழப்பர் அன்றே

#58
ஆண்டு போர் வாலி ஆற்றல் மாற்றியது அம்பு ஒன்றாயின்
வேண்டுமோ துணையும் நும்-பால் வில்லினும் மிக்கது உண்டோ
தேண்டுவார்த் தேடுகின்றீர் தேவியை அதனைச் செவ்வே
பூண்டு நின்று உய்த்தற்பாலார் நும் கழல் புகுந்துளோரும்

#59
என்று அவள் உரைத்த மாற்றம் யாவையும் இனிது கேட்டு
நன்று உணர் கேள்வியாளன் அருள் வர நாண் உட்கொண்டான்
நின்றனன் நிற்றலோடும் நீத்தனன் முனிவு என்று உன்னி
வன் துணை வயிரத் திண் தோள் மாருதி மருங்கின் வந்தான்

#60
வந்து அடி வணங்கி நின்ற மாருதி வதனம் நோக்கி
அந்தம்_இல் கேள்வி நீயும் அயர்த்தனை ஆகும் அன்றே
முந்திய செய்கை என்றான் முனிவினும் முளைக்கும் அன்பான்
எந்தை கேட்டு அருளுக என்ன இயம்பினன் இயம்ப வல்லான்

#61
சிதைவு அகல் காதல் தாயை தந்தையை குருவை தெய்வப்
பதவி அந்தணரை ஆவை பாலரைப் பாவைமாரை
வதைபுரிகுநர்க்கும் உண்டாம் மாற்றலாம் ஆற்றல் மாயா
உதவி கொன்றார்க்கு என்றேனும் ஒழிக்கலாம் உபாயம் உண்டோ

#62
ஐய நும்மோடும் எங்கள் அரிக் குலத்து அரசனோடும்
மெய் உறு கேண்மை ஆக்கி மேலை_நாள் விளைவது ஆன
செய்கை என் செய்கை அன்றோ அன்னது சிதையுமாயின்
உய் வகை எவர்க்கும் உண்டோ உணர்வு மாசுண்டது அன்றோ

#63
தேவரும் தவமும் செய்யும் நல் அறத் திறமும் மற்றும்
யாவையும் நீரே என்பது என்-வயின் கிடந்தது எந்தாய்
ஆவது நிற்க சேரும் அரண் உண்டோ அருள் உண்டு அன்றே
மூ வகை உலகும் காக்கும் மொய்ம்பினீர் முனிவு உண்டானால்

#64
மறந்திலன் கவியின் வேந்தன் வயப் படை வருவிப்பாரைத்
திறம்திறம் ஏவி அன்னார் சேர்வது பார்த்துத் தாழ்த்தான்
அறம் துணை நுமக்கு உற்றான் தன் வாய்மையை அழிக்குமாயின்
பிறந்திலன் அன்றே ஒன்றோ நரகமும் பிழைப்பது அன்றால்

#65
உதவாமல் ஒருவன் செய்த உதவிக்குக் கைம்மாறாக
மத யானை அனைய மைந்த மற்றும் உண்டாக வற்றோ
சிதையாத செருவில் அன்னான் முன் சென்று செறுநர் மார்பில்
உதையானேல் உதையுண்டு ஆவி உலவானேல் உலகில்-மன்னோ

#66
ஈண்டு இனி நிற்றல் என்பது இனியது ஓர் இயல்பிற்று அன்றால்
வேண்டலர் அறிவரேனும் கேண்மை தீர் வினையிற்று ஆமால்
ஆண்தகை ஆளி மொய்ம்பின் ஐய நீர் அளித்த செல்வம்
காண்டியால் உன்முன் வந்த கவிக் குலக் கோனொடு என்றான்

#67
மாருதி மாற்றம் கேட்ட மலை புரை வயிரத் தோளான்
தீர்வினை சென்று நின்ற சீற்றத்தான் சிந்தைசெய்தான்
ஆரியன் அருளின் தீர்ந்தான்_அல்லன் வந்து அடுத்த செல்வம்
பேர்வு அரிதாகச் செய்த சிறுமையான் என்னும் பெற்றி

#68
அனையது கருதிப் பின்னர் அரிக்குலத்தவனை நோக்கி
நினை ஒரு மாற்றம் இன்னே நிகழ்த்துவது உளது நின்-பால்
இனையன உணர்தற்கு ஏற்ற எண்ணிய நீதி என்னா
வனை கழல் வயிரத் திண் தோள் மன் இளங்குமரன் சொல்வான்

#69
தேவியைக் குறித்துச் செற்ற சீற்றமும் மானத் தீயும்
ஆவியைக் குறித்து நின்றது ஐயனை அதனைக் கண்டேன்
கோ இயல் தருமம் நீங்கக் கொடுமையோடு உறவு கூடிப்
பாவியர்க்கு ஏற்ற செய்கை கருதுவன் பழியும் பாரேன்

#70
ஆயினும் என்னை யானே ஆற்றி நின்று ஆவியுற்று
நாயகன்-தனையும் தேற்ற நாள் பல கழிந்த அன்றேல்
தீயும் இவ் உலகம் மூன்றும் தேவரும் வீவர் ஒன்றோ
வீயும் நல் அறமும் போகா விதியை யார் விலக்கற்பாலார்

#71
உன்னைக் கண்டு உம் கோன்-தன்னை உற்ற இடத்து உதவும் பெற்றி
என்னைக் கண்டனன் போல் கண்டு இங்கு இத்துணை நெடிது வைகித்
தன்னைக் கொண்டு இருந்தே தாழ்த்தான் அன்று எனின் தனு ஒன்றாலே
மின்னைக் கண்டு_அனையாள் தன்னை நாடுதல் விலக்கற்பாற்றோ

#72
ஒன்றுமோ அரணம் இன்று இவ் உலகமும் பதினால் உள்ள
வென்றி மா மலையும் ஏழ்_ஏழ் வேலையும் எண்ணவேயாய்
நின்றது ஓர் அண்டத்துள்ளே எனின் அது நெடியது ஒன்றோ
அன்று நீர் சொன்ன மாற்றம் தாழ்வித்தல் தருமம் அன்றால்

#73
தாழ்வித்தீர்_அல்லீர் பல் நாள் தருக்கிய அரக்கர்-தம்மை
வாழ்வித்தீர் இமையோர்க்கு இன்னல் வருவித்தீர் மரபின் தீரா
கேள்வித் தீயாளர் துன்பம் கிளர்வித்தீர் பாவம்-தன்னை
மூள்வித்தீர் முனியாதானை முனிவித்தீர் முடிவின் என்றான்

#74
தோன்றல் அஃது உரைத்தலோடும் மாருதி தொழுது தொல்லை
ஆன்ற நூல் அறிஞ போன பொருள் மனத்து அடைப்பாய் அல்லை
ஏன்றது முடியேம் என்னின் இறத்தும் இத்திறத்துக்கு எல்லாம்
சான்று இனி அறனே போந்து உன் தம்முனைச் சார்தி என்றான்

#75
முன்னும் நீ சொல்லிற்று அன்றோ முயன்றது முயற்று-காறும்
இன்னும் நீ இசைத்த செய்வான் இயைந்தனம் என்று கூறி
அன்னது ஓர் அமைதியான்-தன் அருள் சிறிது அறிவான் நோக்கிப்
பொன்னின் வார் சிலையினானும் மாருதியோடும் போனான்

#76
அயில் விழி குமுதச் செவ் வாய் சிலை நுதல் அன்னப் போக்கின்
மயில் இயல் கொடித் தேர் அல்குல் மணி நகை திணி வேய் மென் தோள்
குயில் மொழி கலசக் கொங்கை மின் இடை குமிழ் ஏர் மூக்கின்
புயல் இயல் கூந்தல் மாதர் குழாத்தொடும் தாரை போனாள்

#77
வல்ல மந்திரியரோடும் வாலி_காதலனும் மைந்தன்
அல்லி அம் கமலம் அன்ன அடி பணிந்து அச்சம் தீர்ந்தான்
வில்லியும் அவனை நோக்கி விரைவின் என் வரவு வீர
சொல்லுதி நுந்தைக்கு என்றான் நன்று எனத் தொழுது போனான்

#78
போன பின் தாதை கோயில் புக்கு அவன் பொலம் கொள் பாதம்
தான் உறப் பற்றி முற்றும் தைவந்து தடக் கை வீர
மானவற்கு இளையோன் வந்து உன் வாசலின் புறத்தான் சீற்றம்
மீன் உயர் வேலை மேலும் பெரிது இது விளைந்தது என்றான்

#79
அறிவுற்று மகளிர் வெள்ளம் அலமரும் அமலை நோக்கிப்
பிறிவு உற்ற மயக்கத்தால் முந்து உற்றது ஓர் பெற்றி ஓரான்
செறி பொன் தார் அலங்கல் வீர செய்திலம் குற்றம் நம்மைக்
கறுவுற்ற பொருளுக்கு என்னோ காரணம் கண்டது என்றான்

#80
இயைந்த நாள் எல்லை நீ சென்று எய்தலை செல்வம் எய்தி
வியந்தனை உதவி கொன்றாய் மெய் இலை என்ன வீங்கி
உயர்ந்தது சீற்றம் மற்று அது உற்றது செய்யத் தீர்ந்து
நயம் தெரி அனுமன் வேண்ட நல்கினன் நம்மை இன்னும்

#81
வருகின்ற வேகம் நோக்கி வானர வீரர் வானைப்
பொருகின்ற நகர வாயில் பொன் கதவு அடைத்துக் கல் குன்று
அருகு ஒன்றும் இல்லா வண்ணம் வாங்கினர் அடுக்கி மற்றும்
தெரிகின்ற சினத் தீ பொங்கச் செருச் செய்வான் செருக்கி நின்றார்

#82
ஆண்தகை அதனை நோக்கி அம் மலர்க் கமலத் தாளால்
தீண்டினன் தீண்டா முன்னம் தெற்கொடு வடக்குச் செல்ல
நீண்ட கல் மதிலும் கொற்ற வாயிலும் நிரைத்த குன்றும்
கீண்டன தகர்ந்து பின்னைப் பொடியொடும் கெழீஇய அன்றே

#83
அ நிலை கண்ட திண் தோள் அரிக் குலத்து அனிகம் அம்மா
எ நிலை உற்றது என்கேன் யாண்டு புக்கு ஒளித்தது என்கேன்
இ நிலை கண்ட அன்னை ஏந்து இழை ஆயத்தோடு
மின் நிலை வில்லினானை வழி எதிர் விலக்கி நின்றாள்

#84
மங்கையர் மேனி நோக்கான் மைந்தனும் மனத்து வந்து
பொங்கிய சீற்றம் பற்றிப் புகுந்திலன் பொருமி நின்றான்
நங்கையும் இனிது கூறி நாயக நடந்தது என்னோ
எங்கள்-பால் என்னச் சொன்னாள் அண்ணலும் இனைய சொன்னான்

#85
அது பெரிது அறிந்த அன்னை அன்னவன் சீற்றம் மாற்றி
விதி முறை மறந்தான்_அல்லன் வெம் சின சேனை வெள்ளம்
கதுமெனக் கொணரும் தூது கல் அதர் செல்ல ஏவி
எதிர் முறை இருந்தான் என்றாள் இது இங்குப் புகுந்தது என்றான்

#86
சொற்றலும் அருக்கன் தோன்றல் சொல்லுவான் மண்ணில் விண்ணில்
நிற்க உரியார்கள் யாவர் அனையவர் சினத்தின் நேர்ந்தால்
விற்கு உரியார் இத் தன்மை வெகுளியின் விரைவின் எய்த
எற்கு உரையாது நீர் ஈது இயற்றியது என்-கொல் என்றான்

#87
உணர்த்தினேன் முன்னர் நீ அஃது உணர்ந்திலை உணர்வின் தீர்ந்தாய்
புணர்ப்பது ஒன்று இன்மை நோக்கி மாருதிக்கு உரைப்பான் போனேன்
இணர்த் தொகை ஈன்ற பொன் தார் எறுழ் வலித் தடம் தோள் எந்தாய்
கணத்திடை அவனை நீயும் காணுதல் கருமம் என்றான்

#88
உறவுண்ட சிந்தையானும் உரைசெய்வான் ஒருவற்கு இன்னம்
பெறல் உண்டே அவரால் ஈண்டு யான் பெற்ற பேர் உதவி உற்றது
இறல் உண்டே என்னின் தீர்வான் இருந்த பேர் இடரை எல்லாம்
நறவு உண்டு மறந்தேன் காண நாணுவல் மைந்த என்றான்

#89
ஏயின இது அலால் மற்று ஏழைமைப்பாலது என்னோ
தாய் இவள் மனைவி என்னும் தெளிவு இன்றேல் தருமம் என் ஆம்
தீவினை ஐந்தின் ஒன்று ஆம் அன்றியும் திருக்கு நீங்கா
மாயையின் மயங்குகின்றோம் மயக்கின் மேல் மயக்கும் வைத்தாம்

#90
தெளிந்து தீவினையைச் செற்றார் பிறவியைத் தீர்வர் என்ன
விளிந்திலா உணர்வினோரும் வேதமும் விளம்பவேயும்
நெளிந்து உறை புழுவை நீக்கி நறவு உண்டு நிறைகின்றேனால்
அளிந்து அகத்து எரியும் தீயை நெய்யினால் அவிக்கின்றாரின்

#91
தன்னைத்தான் உணரத் தீரும் தகை_அறு பிறவி என்பது
என்னத் தான் மறையும் மற்ற துறைகளும் இசைத்த எல்லாம்
முன்னை தான் தன்னை ஓரா முழுப் பிணி அழுக்கின் மேலே
பின்னைத் தான் பெறுவது அம்மா நறவு உண்டு திகைக்கும் பித்தோ

#92
அளித்தவர் அஞ்சும் நெஞ்சின் அடைத்தவர் அறிவில் மூழ்கி
குளித்தவர் இன்ப துன்பம் குறைத்தவர் அன்றி வேரி
ஒளித்தவர் உண்டு மீண்டு இவ் உலகு எலாம் உணர ஓடிக்
களித்தவர் எய்தி நின்ற கதி ஒன்று கண்டது உண்டோ

#93
செற்றதும் பகைஞர் நட்டார் செய்த பேர் உதவி-தானும்
கற்றதும் கண்கூடாகக் கண்டதும் கலை_வலாளர்
சொற்றதும் மானம் வந்து தொடர்ந்ததும் படர்ந்த துன்பம்
உற்றதும் உணராராயின் இறுதி வேறு இதனின் உண்டோ

#94
வஞ்சமும் களவும் பொய்யும் மயக்கமும் மரபு_இல் கொட்பும்
தஞ்சம் என்றாரை நீக்கும் தன்மையும் களிப்பும் தாக்கும்
கஞ்ச மெல் அணங்கும் தீரும் கள்ளினால் அருந்தினாரை
நஞ்சமும் கொல்வது அல்லால் நரகினை நல்காது அன்றே

#95
கேட்டனென் நறவால் கேடு வரும் எனக் கிடைத்த அச் சொல்
காட்டியது அனுமன் நீதிக் கல்வியால் கடந்தது அல்லால்
மீட்டு இனி உரைப்பது என்னை விரைவின் வந்து அடைந்த வீரன்
மூட்டிய வெகுளியால் யாம் முடிவதற்கு ஐயம் உண்டோ

#96
ஐய நான் அஞ்சினேன் இ நறவினின் அரிய கேடு
கையினால் அன்றியேயும் கருதுதல் கருமம் அன்றால்
வெய்யதாம் மதுவை இன்னம் விரும்பினேன் என்னின் வீரன்
செய்ய தாமரைகள் அன்ன சேவடி சிதைக்க என்றான்

#97
என்று கொண்டு இயம்பி அண்ணற்கு எதிர்கொளற்கு இயைந்த எல்லாம்
நன்று கொண்டு இன்னும் நீயே நணுகு என அவனை ஏவி
தன் துணைத் தேவிமாரும் தமரொடும் தழுவத் தானும்
நின்றனன் நெடிய வாயில் கடைத்தலை நிறைந்த சீரான்

#98
உரைத்த செஞ்சாந்தும் பூவும் சுண்ணமும் புகையும் ஊழின்
நிரைத்த பொன் குடமும் தீப மாலையும் நிகர்_இல் முத்தும்
குரைத்து எழு விதானத்தோடு தொங்கலும் கொடியும் சங்கும்
இரைத்து இமிழ் முரசும் முற்றும் இயங்கின வீதி எல்லாம்

#99
தூய திண் பளிங்கின் செய்த சுவர்களின் தலத்தில் சுற்றில்
நாயக மணியின் செய்த நனி நெடும் தூணின் நாப்பண்
சாயை புக்கு உறலால் கண்டோர் அயர்வுற கை விலோடும்
ஆயிரம் மைந்தர் வந்தார் உளர் எனப் பொலிந்தது அவ் ஊர்

#100
அங்கதன் பெயர்த்தும் வந்து ஆண்டு அடி இணை தொழுதான் ஐய
எங்கு இருந்தான் நும் கோமான் என்றலும் எதிர்கோள் எண்ணி
மங்குல் தோய் கோயில் கொற்ற கடைத்தலை மருங்கு நின்றான்
சிங்க_ஏறு அனைய வீர செய் தவச் செல்வன் என்றான்

#101
சுண்ணமும் தூசும் வீசிச் சூடகத் தொடிக் கை மாதர்
கண் அகன் கவரி கற்றைக் கால் உற கலை வெண் திங்கள்
விண் உற வளர்ந்தது என்ன வெண்குடை விளங்க வீர
வண்ண வில் கரத்தான் முன்னர் கவிக் குலத்து அரசன் வந்தான்

#102
அருக்கியம் முதல ஆன அருச்சனைக்கு அமைந்த யாவும்
முருக்கு இதழ் மகளிர் ஏந்த முரசு இனம் முகிலின் ஆர்ப்ப
இருக்கு இனம் முனிவர் ஓத இசை திசை அளப்ப யாணர்த்
திருக் கிளர் செல்வம் நோக்கித் தேவரும் மருளச் சென்றான்

#103
வெம் முலை மகளிர் வெள்ளம் மீன் என விளங்க விண்ணில்
சும்மை வான் மதியம் குன்றில் தோன்றியது எனவும் தோன்றிச்
செம்மலை எதிர்கோள் எண்ணித் திருவொடு மலர்ந்த செல்வன்
அ மலை உதயம் செய்த தாதையும் அனையன் ஆனான்

#104
தோற்றிய அரிக் குலத்து அரசைத் தோன்றலும்
ஏற்று எதிர் நோக்கினன் எழுந்தது அவ்வழிச்
சீற்றம் அங்கு அது-தனை தெளிந்த சிந்தையால்
ஆற்றினன் தருமத்தின் அமைதி உன்னுவான்

#105
எழுவினும் மலையினும் எழுந்த தோள்களால்
தழுவினர் இருவரும் தழுவித் தையலார்
குழுவொடும் வீரர்-தம் குழாத்தினோடும் புக்கு
ஒழிவு_இலாப் பொன் குழாத்து உறையுள் எய்தினார்

#106
அரியணை அமைந்தது காட்டி ஐய ஈண்டு
இரு எனக் கவிக் குலத்து அரசன் ஏவலும்
திருமகள் தலைமகன் புல்லில் சேர எற்கு
உரியதோ இஃது என மனத்தின் உன்னுவான்

#107
கல் அணை மனத்தினை உடைக் கைகேசியால்
எல் அணை மணி முடி துறந்த எம்பிரான்
புல் அணை வைக யான் பொன் செய் பூத் தொடர்
மெல்_அணை வைகவும் வேண்டுமோ என்றான்

#108
என்று அவன் உரைத்தலும் இரவி_காதலன்
நின்றனன் விம்மினன் மலர்க் கண் நீர் உகக்
குன்று என உயர்ந்த அக் கோயில் குட்டிம
வன் தலத்து இருந்தனன் மனுவின் கோமகன்

#109
மைந்தரும் முதியரும் மகளிர் வெள்ளமும்
அந்தம்_இல் நோக்கினர் அழுத கண்ணினர்
இந்தியம் அவித்தவர் என இருந்தனர்
நொந்தனர் தளர்ந்தனர் நுவல்வது ஓர்கிலார்

#110
மஞ்சன விதி முறை மரபின் ஆடியே
எஞ்சல்_இல் இன் அமுது அருந்தின் யாம் எலாம்
உய்ஞ்சனம் இனி என அரசு உரைத்தலும்
அஞ்சன_வண்ணனுக்கு அனுசன் கூறுவான்

#111
வருத்தமும் பழியுமே வயிறு மீக்கொள
இருத்தும் என்றால் எமக்கு இனியது யாவதோ
அருத்தி உண்டு ஆயினும் அவலம்தான் தழீஇக்
கருத்து வேறு உற்ற பின் அமிர்தும் கைக்குமால்

#112
மூட்டிய பழி எனும் முருங்கு தீ அவித்து
ஆட்டினை கங்கை நீர் அரசன் தேவியைக்
காட்டினை எனின் எமைக் கடலின் ஆர் அமிர்து
ஊட்டினையால் பிறிது உயவும் இல்லையால்

#113
பச்சிலை கிழங்கு காய் பரமன் நுங்கிய
மிச்சிலே நுகர்வது வேறுதான் ஒன்றும்
நச்சிலேன் நச்சினேனாயின் நாய் உண்ட
எச்சிலே அது இதற்கு ஐயம் இல்லையால்

#114
அன்றியும் ஒன்று உளது ஐய யான் இனிச்
சென்றனென் கொணர்ந்து அடை திருத்தினால் அது
நுன் துணைக் கோமகன் நுகர்வது ஆதலான்
இன்று இறை தாழ்த்தலும் இனிது அன்றாம் என்றான்

#115
வானர வேந்தனும் இனிதின் வைகுதல்
மானவர் தலைமகன் இடரின் வைகவே
ஆனது குரக்கு இனத்து எமர்கட்கு ஆம் எனா
மேல் நிலை அழிந்து உயிர் விம்மினான் அரோ

#116
எழுந்தனன் பொருக்கென இரவி_கான்முளை
விழுந்த கண்ணீரினன் வெறுத்த வாழ்வினன்
அழிந்து அயர் சிந்தையன் அனுமற்கு ஆண்டு ஒன்று
மொழிந்தனன் அவனுழை போதல் முன்னுவான்

#117
போயின தூதரின் புகுதும் சேனையை
நீ உடன் கொணருதி நெறி_வலோய் என
ஏயினன் அனுமனை இருத்தி ஈண்டு எனா
நாயகன் இருந்துழிக் கடிது நண்ணுவான்

#118
அங்கதன் உடன் செல அரிகள் முன் செல
மங்கையர் உள்ளமும் வழியும் பின் செல
சங்கை_இல் இலக்குவன் தழுவித் தம்முனின்
செங்கதிரோன்மகன் கடிது சென்றனன்

#119
ஒன்பதினாயிர கோடி யூகம் தன்
முன் செல பின் செல மருங்கு மொய்ப்புற
மன் பெரும் கிளைஞரும் மருங்கு சுற்றுற
மின் பொரு பூணினான் செல்லும் வேலையில்

#120
கொடி வனம் மிடைந்தன குமுறு பேரியின்
இடி வனம் மிடைந்தன பணிலம் ஏங்கின
தடி வனம் மிடைந்தன தயங்கு பூண் ஒளி
பொடி வனம் எழுந்தன வானம் போர்த்தவே

#121
பொன்னினின் முத்தினின் புனை மென் தூசினின்
மின்னின மணியினின் பளிங்கின் வெள்ளியின்
பின்னின விசும்பினும் பெரிய பெட்புறத்
துன்னின சிவிகை வெண் கவிகை சுற்றின

#122
வீரனுக்கு இளையவன் விளங்கு சேவடி
பாரினில் சேறலின் பரிதி மைந்தனும்
தாரினின் பொலம் கழல் தழங்கத் தாரணித்
தேரினில் சென்றனன் சிவிகை பின் செல

#123
எய்தினன் மானவன் இருந்த மால் வரை
நொய்தினின் சேனை பின்பு ஒழிய நோன் கழல்
ஐய வில் குமரனும் தானும் அங்கதன்
கை தொடர்ந்து அயல் செலக் காதல் முன் செல

#124
கண்ணிய கணிப்ப_அரும் செல்வக் காதல் விட்டு
அண்ணலை அடி தொழ அணையும் அன்பினால்
நண்ணிய கவிக் குலத்து அரசன் நாள்-தொறும்
புண்ணியன் தொழு கழல் பரதன் போன்றனன்

#125
பிறிவு_அரும் தம்பியும் பிரிய பேர் உலகு
இறுதியில் தான் என இருந்த ஏந்தலை
அறை மணித் தாரினோடு ஆரம் பார் தொட
செறி மலர்ச் சேவடி முடியின் தீண்டினான்

#126
தீண்டலும் மார்பிடைத் திருவும் நோவுற
நீண்ட பொன் தடக் கையால் நெடிது புல்லினான்
மூண்டு எழு வெகுளி போய் ஒளிப்ப முன்பு போல்
ஈண்டிய கருணை தந்து இருக்கை ஏவியே

#127
அயல் இனிது இருத்தி நின் அரசும் ஆணையும்
இயல்பினின் இயைந்தவே இனிதின் வைகுமே
புயல் பொரு தடக் கை நீ புரக்கும் பல் உயிர்
வெயில் இலதே குடை என வினாயினான்

#128
பொருள் உடை அவ் உரை கேட்ட போழ்து வான்
உருள் உடைத் தேரினோன் புதல்வன் ஊழியாய்
இருள் உடை உலகினுக்கு இரவி அன்ன நின்
அருளுடையேற்கு அவை அரியவோ என்றான்

#129
பின்னரும் விளம்புவான் பெருமையோய் நினது
இன் அருள் உதவிய செல்வம் எய்தினேன்
மன்னவ நின் பணி மறுத்து வைகி என்
புல் நிலைக் குரக்கு இயல் புதுக்கினேன் என்றான்

#130
பெரும் திசை அனைத்தையும் பிசைந்து தேடினென்
தரும் தகை அமைந்தும் அத் தன்மை செய்திலேன்
திருந்து_இழை-திறத்தினால் தெளிந்த சிந்தை நீ
வருந்தினை இருப்ப யான் வாழ்வின் வைகினேன்

#131
இனையன யான் உடை இயல்பும் எண்ணமும்
நினைவும் என்றால் இனி நின்று யான் செயும்
வினையும் நல் ஆண்மையும் விளம்ப வேண்டுமோ
வனை கழல் வரி சிலை வள்ளியோய் என்றான்

#132
திரு உறை மார்பனும் தீர்ந்ததோ வந்து
ஒருவ_அரும் காலம் உன் உரிமையோர் உரை
தரு வினைத்து ஆகையின் தாழ்விற்று ஆகுமோ
பரதன் நீ இனையன பகரற்பாலையோ

#133
ஆரியன் பின்னரும் அமைந்து நன்கு உணர்
மாருதி எவ் வழி மருவினான் எனச்
சூரியன்_கான்முளை தோன்றுமால் அவன்
நீர் அரும் பரவையின் நெடிது சேனையான்

#134
கோடி ஓர் ஆயிரம் குறித்த கோது_இல் தூது
ஓடின நெடும் படை கொணர்தல் உற்றதால்
நாள் தரக் குறித்ததும் இன்று நாளை அவ்
ஆடல் அம் தானையோடு அவனும் எய்துமால்

#135
ஒன்பதினாயிர கோடி உற்றது
நின் பெரும் சேனை அ நெடிய சேனைக்கு
நன்கு உறும் அவதி நாள் நாளை நண்ணிய
பின் செயத்தக்கது பேசற்பாற்று என்றான்

#136
விரும்பிய இராமனும் வீர நிற்கு அது ஓர்
அரும் பொருள் ஆகுமோ அமைதி நன்று எனா
பெரும் பகல் இறந்தது பெயர்தி நின் படை
பொருந்துழி வா எனத் தொழுது போயினான்

#137
அங்கதற்கு இனியன அருளி ஐய போய்த்
தங்குதி உந்தையோடு என்று தாமரைச்
செங்கணான் தம்பியும் தானும் சிந்தையின்
மங்கையும் அவ்வழி அன்று வைகினான்

@12 தானை காண் படலம்

#1
அன்று அவண் இறுத்தனர் அலரி கீழ்த் திசைப்
பொன் திணி நெடு வரை பொலிவுறாத முன்
வன் திறல் தூதுவர் கொணர வானரக்
குன்று உறழ் நெடும் படை அடைதல் கூறுவாம்

#2
ஆனை ஆயிரம் ஆயிரத்து எறுழ் வலி அமைந்த
வானராதிபர் ஆயிரர் உடன் வர வகுத்த
கூனல் மாக் குரங்கு ஐ_இரண்டு ஆயிர கோடித்
தானையோடும் அச் சதவலி என்பவன் சார்ந்தான்

#3
ஊன்றி மேருவை எடுக்குறும் மிடுக்கினுக்கு உரிய
தேன் தெரிந்து உண்டு தெளிவுறு வானரச் சேனை
ஆன்ற பத்து நூறு ஆயிர கோடியோடு அமையத்
தோன்றினான் வந்து சுசேடணன் எனும் பெயர்த் தோன்றல்

#4
ஈறு_இல் வேலையை இமைப்புறும் அளவினில் கலக்கிச்
சேறு காண்குறும் திறல் கெழு வானரச் சேனை
ஆறு எண் ஆயிர கோடி அது உடன் வர அமிழ்தம்
மாறு இலா மொழி உருமையைப் பயந்தவன் வந்தான்

#5
ஐம்பது ஆய நூறாயிர கோடி எண் அமைந்த
மொய்ம்பு மால் வரை புரை நெடு வானரம் மொய்ப்ப
இம்பர் ஞாலத்தும் வானத்தும் எழுதிய சீர்த்தி
நம்பனைத் தந்த கேசரி கடல் என நடந்தான்

#6
மண் கொள் வாள் எயிற்று ஏனத்தின் வலியின வயிரத்
திண் கொள் மால் வரை மயிர்ப் புறத்தன எனத் திரண்ட
கண் கொள் ஆயிர கோடியின் இரட்டியின் கணித்த
எண்கின் ஈட்டம் கொண்டு எறுழ் வலித் தூமிரன் இறுத்தான்

#7
முனியுமாம் எனின் அருக்கனை முரண் அற முருக்கும்
தனிமை தாங்கிய உலகையும் சலம் வரின் குமைக்கும்
இனிய மாக் குரங்கு ஈர்_இரண்டு ஆயிர கோடி
அனிகம் முன் வர ஆன்_பெயர்_கண்ணன் வந்து அடைந்தான்

#8
தனி வரும் தடம் கிரி எனப் பெரியவன் சலத்தால்
நினையும் நெஞ்சு இற உரும் என உறுக்குறும் நிலையன்
பனசன் என்பவன் பன்னிரண்டு ஆயிர கோடிப்
புனித வெம் சின வானரப் படை கொடு புகுந்தான்

#9
இடியும் மாக் கடல் முழக்கமும் வெருக்கொள இசைக்கும்
முடிவு_இல் பேர் உறுக்கு உடையன விசையன முரண
கொடிய கூற்றையும் ஒப்பன பதிற்றைந்து கோடி
நெடிய வானரப் படை கொண்டு புகுந்தனன் நீலன்

#10
மா கரத்தன உரத்தன வலியன நிலைய
வேகரத்து வெம் கண் உமிழ் வெயிலன மலையின்
ஆகரத்தினும் பெரியன ஆறு_ஐந்து கோடி
சாகரத்தொடும் தரீமுகன் என்பவன் சார்ந்தான்

#11
இளைத்து வேறு ஒரு மா நிலம் வேண்டும் என்று இரங்க
முளைத்த முப்பதினாயிர கோடியின் முற்றும்
விளைத்த வெம் சினத்து அரி இனம் வெருவுற விரிந்த
அளக்கரோடும் அக்கயன் என்பவனும் வந்து அடைந்தான்

#12
ஆயிரத்து அறுநூறு கோடியின் கடை அமைந்த
பாயிரப் பெரும் படை கொண்டு பரவையின் திரையின்
தாய் உருத்து உடனே வரத் தட நெடு வரையை
ஏய் உருப் புயச் சாம்பன் என்பவனும் வந்து இறுத்தான்

#13
வகுத்த தாமரை மலர் அயன் நிசிசரர் வாழ்நாள்
உகுத்த தீவினை பொருவ_அரும் பெரு வலி உடையான்
பகுத்த பத்து நூறாயிரப் பத்தினின் இரட்டி
தொகுத்த கோடி வெம் படை கொண்டு துன்முகன் தொடர்ந்தான்

#14
இயைந்த பத்து நூறாயிரப் பத்து எனும் கோடி
உயர்ந்த வெம் சின வானரப் படையொடும் ஒருங்கே
சயம் தனக்கு ஒரு வடிவு எனத் திறல் கொடு தழைத்த
மயிந்தன் மல் கசகோமுகன் தன்னொடும் வந்தான்

#15
கோடி கோடி நூறாயிரம் எண் எனக் குவிந்த
நீடு வெம் சினத்து அரி இனம் இரு புடை நெருங்க
மூடும் உம்பரும் இம்பரும் பூழியில் மூழ்க
தோடு இவர்ந்த தார்க் கிரி புரை துமிந்தனும் தொடர்ந்தான்

#16
கறங்கு போல்வன காற்றினும் கூற்றினும் கடிய
பிறங்கு தெண் திரைக் கடல் புடைபெயர்ந்து எனப் பெயர்வ
மறம் கொள் வானரம் ஒன்பது கோடி எண் வகுத்த
திறம்கொள் வெம் சினப் படை கொடு குமுதனும் சேர்ந்தான்

#17
ஏழின் ஏழு நூறாயிர கோடி என்று இசைந்த
பாழி நல் நெடும் தோள் கிளர் படை கொண்டு பரவை
ஊழி பேரினும் உலைவு_இல உலகினில் உயர்ந்த
பூழி விண் புக பதுமுகன் என்பவன் புகுந்தான்

#18
ஏழும் ஏழும் என்று உரைக்கின்ற உலகங்கள் எவையும்
தாழும் காலத்தும் தாழ்வு_இலாத் தட வரைக் குலங்கள்
சூழும் தோற்றத்த வலி கொள் தொள்ளாயிரக் கோடிப்
பாழி வெம் புயத்து அரியொடும் இடபனும் படர்ந்தான்

#19
தீர்க்கபாதனும் வினதனும் சரபனும் திரைக்கும்
மால் கரும் கடற்கு உயர்ந்து உள மை முகத்து அனிகம்
ஆர்க்கும் எண்ண_அரும் கோடி கொண்டு அண்டமும் புறமும்
போர்க்கும் பூழியில் மறைதர முறையினின் புகுந்தார்

#20
கை நஞ்சு ஆயுதம் உடைய அக் கடவுளைக் கண்டும்
மெய் அஞ்சாதவன் மாதிரம் சிறிது என விரிந்த
வையம் சாய்வரத் திரிதரு வானர சேனை
ஐ_அஞ்சு ஆயிர கோடி கொண்டு அனுமன் வந்து அடைந்தான்

#21
நொய்தின் கூடிய சேனை நூறாயிர கோடி
எய்த தேவரும் என்-கொலோ முடிவு என்பது எண்ண
மையல் சிந்தையால் அந்தகன் மறுக்குற்று மயங்கத்
தெய்வத் தச்சன் மெய்த் திரு நெடும் காதலன் சேர்ந்தான்

#22
கும்பனும் குலச் சங்கனும் முதலினர் குரங்கின்
தம் பெரும் படைத்தலைவர்கள் தர வந்த தானை
இம்பர் நின்றவர்க்கு எண்ண_அரிது இராகவன் ஆவத்து
அம்பு எனும் துணைக்கு உரிய மற்று உரைப்பு_அரிது அளவே

#23
தோயின் ஆழி ஓர் ஏழும் நீர் சுவறி வெண் துகள் ஆம்
சாயின் அண்டமும் மேருவும் ஒருங்குடன் சாயும்
ஏயின் மண்டலம் எள் இட இடம் இன்றி இரியும்
காயின் வெம் கனல் கடவுளும் இரவியும் கரியும்

#24
எண்ணின் நான்முகர் எழுபதினாயிரர்க்கு இயலா
உண்ணின் அண்டங்கள் ஓர் பிடி உண்ணவும் உதவா
கண்ணின் நோக்குறின் கண்_நுதலானுக்கும் கதுவா
மண்ணின் மேல் வந்த வானர சேனையின் வரம்பே

#25
ஒடிக்குமேல் வடமேருவை வேரொடும் ஒடிக்கும்
இடிக்குமேல் நெடு வானக முகட்டையும் இடிக்கும்
பிடிக்குமேல் பெரும் காற்றையும் கூற்றையும் பிடிக்கும்
குடிக்குமேல் கடல் ஏழையும் குடங்கையின் குடிக்கும்

#26
ஆறு பத்து எழு கோடியாம் வானரர்க்கு அதிபர்
கூறு திக்கினுக்கு அப்புறம் குப்புறற்கு உரியார்
மாறு_இல் கொற்றவன் நினைத்தன முடிக்குறும் வலியர்
ஊறும் இப் பெரும் சேனை கொண்டு எளிதின் வந்துற்றார்

#27
ஏழு மா கடல் பரப்பினும் பரப்பு என இசைப்பச்
சூழும் வானரப் படையொடு அத் தலைவரும் துவன்றி
ஆழி மா பரித் தேரவன் காதலன் அடிகள்
வாழி வாழி என்று உரைத்து அலர் தூவினர் வணங்கி

#28
அனையது ஆகிய சேனை வந்து இறுத்தலும் அருக்கன்
தனையன் நொய்தினின் தயரதன் புதல்வனைச் சார்ந்தான்
நினையும் முன்னம் வந்து அடைந்தது நின் பெரும் சேனை
வினையின் கூற்றுவ கண்டருள் நீ என விளம்ப

#29
ஐயனும் உவந்து அகம் என முகம் மலர்ந்தருளி
தையலாள் வரக் கண்டனனாம் எனத் தளிர்ப்பான்
எய்தினான் அங்கு ஓர் நெடு வரை சிகரத்தின் இருக்கை
வெய்யவன் மகன் பெயர்த்தும் அச் சேனையின் மீண்டான்

#30
அஞ்சொடு ஐ_இரண்டு யோசனை அகலத்தது ஆகி
செஞ்செவே வட திசை-நின்று தென்திசை செல்ல
எஞ்சல்_இல் பெரும் சேனையை எழுக என ஏவி
வெம் சினப் படை வீரரை உடன் கொண்டு மீண்டான்

#31
மீண்டு இராமனை அடைந்து இகல் வீரருள்_வீர
காண்டி நீ என வரன்முறை தெரிவுறக் காட்டி
ஆண்டு இருந்தனன் ஆர்த்து உருத்து எழுந்ததை அன்றே
ஈண்டு சேனை பால் எறி கடல் நெறி படர்ந்து என்ன

#32
எட்டுத் திக்கையும் இரு நிலப் பரப்பையும் இமையோர்
வட்ட விண்ணையும் மறி கடல் அனைத்தையும் மறையத்
தொட்டு மேல் எழுந்து ஓங்கிய தூளியின் பூழி
அட்டிச் செம்மிய நிறை குடம் ஒத்தது இவ் அண்டம்

#33
அத்தி ஒப்பு எனின் அன்னவை உணர்ந்தவர் உளரால்
வித்தகர்க்கு இனி உரைக்கலாம் உவமை வேறு யாதோ
பத்து இரட்டி நன் பகல் இரவு ஒருவலர் பார்ப்பார்
எத்திறத்தினும் நடுவு கண்டிலர் முடிவு எவனோ

#34
விண்ணின் தீம் புனல் உலகத்தின் நாகரின் வெற்றி
எண்ணின் தன் அலது ஒப்பிலன் என நின்ற இராமன்
கண்ணின் சிந்தையின் கல்வியின் ஞானத்தின் கருதி
அண்ணல் தம்பியை நோக்கினன் உரைசெய்வதானான்

#35
அடல் கொண்டு ஓங்கிய சேனைக்கு நாமும் நம் அறிவால்
உடல் கண்டோம் இனி முடிவு உள காணுமாறு உளதோ
மடல் கொண்டு ஓங்கிய அலங்கலாய் மண்ணிடை மாக்கள்
கடல் கண்டோம் என்பர் யாவரே முடிவு உறக் கண்டார்

#36
ஈசன் மேனியை ஈர்_ஐந்து திசைகளை ஈண்டு இவ்
ஆசு_இல் சேனையை ஐம் பெரும் பூதத்தை அறிவைப்
பேசும் பேச்சினைச் சமயங்கள் பிணக்குறும் பிணக்கை
வாச மாலையாய் யாவரே முடிவு எண்ண வல்லார்

#37
இன்ன சேனையை முடிவுற இருந்து இவண் நோக்கிப்
பின்னை காரியம் புரிதுமேல் நாள் பல பெயரும்
உன்னி செய்கை மேல் ஒருப்படல் உறுவதே உறுதி
என்ன வீரனைக் கைதொழுது இளையவன் இயம்பும்

#38
யாவது எவ் உலகத்தினின் இங்கு இவர்க்கு இயற்றல்
ஆவது ஆகுவது அரியது ஒன்று உளது எனல் ஆமே
தேவ தேவியைத் தேடுவது என்பது சிறிதால்
பாவம் தோற்றது தருமமே வென்றது இப் படையால்

#39
தரங்க நீர் எழு தாமரை நான்முகன் தந்த
வரம் கொள் பேர் உலகத்தினில் மற்றை மன் உயிர்கள்
உரம் கொள் மால் வரை உயிர் படைத்து எழுந்தன ஒக்கும்
குரங்கின் மாப் படைக்கு உறையிடப் படைத்தனன்-கொல்லாம்

#40
ஈண்டு தாழ்க்கின்றது என் இனி எண் திசை மருங்கும்
தேண்டுவார்களை வல்லையில் செலுத்துவது அல்லால்
நீண்ட நூல்_வலாய் என்றனன் இளையவன் நெடியோன்
பூண்ட தேரவன் காதலற்கு ஒரு மொழி புகலும்

@13 நாட விட்ட படலம்

#1
வகையும் மானமும் மாறு எதிர்ந்து ஆற்றுறும்
பகையும் இன்றி நிரைந்து பரந்து எழும்
தகைவு_இல் சேனைக்கு அலகு சமைந்தது ஓர்
தொகையும் உண்டு-கொலோ எனச் சொல்லினான்

#2
ஏற்ற வெள்ளம் எழுபதின் இற்ற என்று
ஆற்றலாளர் அறிவின் அறைந்தது ஓர்
மாற்றம் உண்டு அது அல்லது மற்றது ஓர்
தோற்றம் என்று இதற்கு எண்ணி முன் சொல்லுமோ

#3
ஆறு பத்து எழு கோடி அனீகருக்கு
ஏறு கொற்றத் தலைவர் இவர்க்கு முன்
கூறு சேனைப் பதி கொடும் கூற்றையும்
நீறு செய்திடும் நீலன் என்று ஓதினான்

#4
என்று உரைத்த எரி_கதிர் மைந்தனை
வென்றி வில் கை இராமன் விருப்பினால்
நின்று இனிப் பல பேசி என்னோ நெறி
சென்று இழைப்பன சிந்தனை செய்க என்றான்

#5
அவனும் அண்ணல் அனுமனை ஐய நீ
புவனம் மூன்றும் நின் தாதையின் புக்கு உழல்
தவன வேகத்தை ஓர்கிலை தாழ்த்தனை
கவன மாக் குரங்கின் செயல் காண்டியோ

#6
ஏகி ஏந்து_இழை-தன்னை இருந்துழி
நாகம் நாடுக நானிலம் நாடுக
போக பூமி புகுந்திட வல்ல நின்
வேகம் ஈண்டு வெளிப்பட வேண்டுமால்

#7
தென்திசைக்-கண் இராவணன் சேண் நகர்
என்று இசைக்கின்றது என் அறிவு இன்னணம்
வன் திசைக்கு இனி மாருதி நீ அலால்
வென்று இசைக்கு உரியார் பிறர் வேண்டுமோ

#8
வள்ளல் தேவியை வஞ்சித்து வௌவிய
கள்ள வாள் அரக்கன் செலக் கண்டது
தெள்ளியோய் அது தென்திசை என்பது ஓர்
உள்ளமும் எனக்கு உண்டு என உன்னுவாய்

#9
தாரை மைந்தனும் சாம்பனும் தாம் முதல்
வீரர் யாவரும் மேம்படும் மேன்மையால்
சேர்க நின்னொடும் திண் திறல் சேனையும்
பேர்க வெள்ளம் இரண்டொடும் பெற்றியால்

#10
குட திசைக்-கண் சுடேணன் குபேரன் வாழ்
வட திசைக்-கண் சதவலி வாசவன்
மிடல் திசைக்-கண் வினதன் விறல் தரு
படையொடு உற்றுப் படர்க எனப் பன்னினான்

#11
வெற்றி வானர வெள்ளம் இரண்டொடும்
சுற்றி ஓடித் துருவி ஒரு மதி
முற்றுறாத முன் முற்றுதிர் இவ்விடை
கொற்ற வாகையினீர் எனக் கூறினான்

#12
ஈண்டு-நின்று இறந்து ஈர்_ஐந்து_நூறு எழில்
தூண்டு சோதிக் கொடு முடி தோன்றலால்
நீண்ட நேமி-கொலாம் என நேர் தொழ
வேண்டும் விந்தமலையினை மேவுவீர்

#13
தேடி அவ் வரை தீர்ந்த பின் தேவரும்
ஆடுகின்றது அறுபதம் ஐந்தினைப்
பாடுகின்றது பல் மணியால் இருள்
ஓடுகின்ற நருமதை உன்னுவீர்

#14
வாம மேகலை வானவர் மங்கையர்
காம ஊசல் கனி இசைக் கள்ளினால்
தூம மேனி அசுணம் துயில்வுறும்
ஏமகூடம் எனும் மலை எய்துவீர்

#15
நொய்தின் அ மலை நீங்கி நுமரொடும்
பொய்கையின் கரை பிற்படப் போதிரால்
செய்ய பெண்ணை கரிய பெண்ணைச் சில
வைகல் தேடி கடிது வழிக்கொள்வீர்

#16
தாங்கும் ஆர் அகில் தண் நறும் சந்தனம்
வீங்கு வேலி விதர்ப்பமும் மெல்லென
நீங்கி நாடு நெடியன பிற்பட
தேங்கு வார் புனல் தண்டகம் சேர்திரால்

#17
பண்டு அகத்தியன் வைகியதாப் பகர்
தண்டகத்தது தாபதர்-தம்மை உள்
கண்டு அகத் துயர் தீர்வது காண்டிரால்
முண்டகத்துறை என்று ஒரு மொய் பொழில்

#18
ஞாலம் நல் அறத்தோர் உன்னும் நல் பொருள்
போல நின்று பொலிவது பூம் பொழில்
சீல மங்கையர் வாய் எனத் தீம் கனி
காலம் இன்றிக் கனிவது காண்டிரால்

#19
நயனம் நன்கு இமையார் துயிலார் நனி
அயனம் இல்லை அருக்கனுக்கு அவ்வழி
சயன மாதர் கலவித் தலைதரும்
பயனும் இன்பமும் நீரும் பயக்குமால்

#20
ஆண்டு இறந்த பின் அந்தரத்து இந்துவைத்
தீண்டுகின்றது செங்கதிர்ச்செல்வனும்
ஈண்டு உறைந்து அலது ஏகலம் என்பது
பாண்டுவின் மலை என்னும் பருப்பதம்

#21
முத்து ஈர்த்து பொன் திரட்டி மணி உருட்டி முது நீத்தம் முன்றில் ஆயர்
மத்து ஈர்த்து மரன் ஈர்த்து மலை ஈர்த்து மான் ஈர்த்து வருவது யார்க்கும்
புத்து ஈர்த்திட்டு அலையாமல் புலவர் நாடு உதவுவது புனிதமான
அத் தீர்த்தம் அகன் கோதாவரி என்பர் அ மலையின் அருகிற்று அம்மா

#22
அவ் ஆறு கடந்து அப்பால் அறத்து ஆறே எனத் தெளிந்த அருளின் ஆறும்
வெவ் ஆறாம் எனக் குளிர்ந்து வெயில் இயங்கா வகை இலங்கும் விரி பூம் சோலை
எவ் ஆறும் உறத் துவன்றி இருள் ஓட மணி இமைப்பது இமையோர் வேண்ட
தெவ் ஆறு முகத்து ஒருவன் தனிக் கிடந்த சுவணத்தைச் சேர்திர்-மாதோ

#23
சுவணநதி கடந்து அப்பால் சூரியகாந்தகம் என்னத் தோன்றி மாதர்
கவண் உமிழ் கல் வெயில் இயங்கும் கன வரையும் சந்திரகாந்தமும் காண்பீர்
அவண் அவை நீத்து ஏகிய பின் அகல் நாடு பல கடந்தால் அனந்தன் என்பான்
உவண பதிக்கு ஒளித்து உறையும் கொங்கணமும் குலிந்தமும் சென்று உறுதிர் மாதோ

#24
அரன் அதிகன் உலகு அளந்த அரி அதிகன் என்று உரைக்கும் அறிவிலோர்க்குப்
பரகதி சென்று அடைவு_அரிய பரிசே போல் புகல் அரிய பண்பிற்று ஆமால்
சுர நதியின் அயலது வான் தோய் குடுமிச் சுடர் தொகைய தொழுதோர்க்கு எல்லாம்
வரன் அதிகம் தரும் தகைய அருந்ததியாம் நெடு மலையை வணங்கி அப்பால்

#25
அஞ்சுவரும் வெம் சுரனும் ஆறும் அகன் பெரும் சுனையும் அகில் ஓங்கு ஆரம்
மஞ்சு இவரும் நெடும் கிரியும் வள நாடும் பிற்படப் போய் வழி மேல் சென்றால்
நஞ்சு இவரும் மிடற்று அரவுக்கு அமிர்து நனி கொடுத்து ஆயைக் கலுழன் நல்கும்
எஞ்சு_இல் மரகதப் பொருப்பை இறைஞ்சி அதன் புறம் சார ஏகி மாதோ

#26
வடசொற்கும் தென்சொற்கும் வரம்பு ஆகி நான்மறையும் மற்றை நூலும்
இடை சொற்ற பொருட்கு எல்லாம் எல்லையாய் நல் அறிவுக்கு ஈறாய் வேறு
புடை சுற்றும் துணை இன்றிப் புகழ் பொதிந்த மெய்யே போல் பூத்துநின்ற
அடை சுற்றும் தண் சாரல் ஓங்கிய வேங்கடத்தில் சென்று அடைதிர்-மாதோ

#27
இருவினையும் இடைவிடா எவ் வினையும் இயற்றாதே இமையோர் ஏத்தும்
திருவினையும் இடு பதம் தேர் சிறுமையையும் முறை ஒப்பத் தெளிந்து நோக்கி
கரு வினையது இப் பிறவிக்கு என்று உணர்ந்து அங்கு அது களையும் கடை_இல் ஞானத்து
அரு வினையின் பெரும் பகைஞர் ஆண்டு உளர் ஈண்டு இருந்தும் அடி வணங்கற்பாலார்

#28
சூது அகற்றும் திரு மறையோர் துறை ஆடும் நிறை ஆறும் சுருதித் தொல் நூல்
மா தவத்தோர் உறை இடமும் மழை உறங்கும் மணித் தடமும் வான மாதர்
கீதம் ஒத்த கின்னரங்கள் இன் நரம்பு வருடு-தொறும் கிளக்கும் ஓதை
போதகத்தின் மழ கன்றும் புலிப் பறழும் உறங்கு இடனும் பொருந்திற்று அம்மா

#29
கோடு உறு மால் வரை அதனைக் குறுகுதிரேல் உம் நெடிய கொடுமை நீங்கி
வீடு உறுதிர் ஆதலினால் விலங்குதிர் அப்புறத்து நீர் மேவு தொண்டை
நாடு உறுதிர் உற்று அதனை நாடுறுதிர் அதன் பின்னை நளி நீர்ப் பொன்னிச்
சேடு உறு தண் புனல் தெய்வத் திரு நதியின் இரு கரையும் தெரிதிர்-மாதோ

#30
துறக்கம் உற்றார் மனம் என்ன துறை கெழு நீர் சோணாடு கடந்தால் தொல்லை
மறக்கம் உற்றார் அதன் அயலே மறைந்து உறைவர் அவ்வழி நீர் வல்லை ஏகி
உறக்கம் உற்றார் கனவு உற்றார் எனும் உணர்வினொடும் ஒதுங்கி மணியால் ஓங்கல்
பிறக்கம் உற்ற மலை நாடு நாடி அகன் தமிழ்நாட்டில் பெயர்திர்-மாதோ

#31
தென் தமிழ்நாட்டு அகன் பொதியில் திரு முனிவன் தமிழ்ச்சங்கம் சேர்கிற்பீரேல்
என்றும் அவண் உறைவிடம் ஆம் ஆதலினால் அ மலையை இறைஞ்சி ஏகிப்
பொன் திணிந்த புனல் பெருகும் பொருநை எனும் திரு நதி பின்பு ஒழிய நாகக்
கன்று வளர் தடம் சாரல் மயேந்திர மா நெடு வரையும் கடலும் காண்டிர்

#32
ஆண்டு கடந்து அப்புறத்தும் இப்புறத்தும் ஒரு திங்கள் அவதி ஆக
தேண்டி இவண் வந்து அடைதிர் விடை கோடிர் கடிது என்ன செப்பும் வேலை
நீண்டவனும் மாருதியை நிறை அருளால் உற நோக்கி நீதி வல்லோய்
காண்டி எனின் குறி கேட்டி என வேறு கொண்டு இருந்து கழறலுற்றான்

#33
பாற்கடல் பிறந்த செய்ய பவளத்தைப் பஞ்சி ஊட்டி
மேற்பட மதியம் சூட்டி விளங்குற நிரைத்த நொய்ய
கால் தகை விரல்கள் ஐய கமலமும் பிறவும் கண்டால்
ஏற்பு_இல என்பது அன்றி இணை அடிக்கு உவமை என்னோ

#34
நீர்மையால் உணர்தி ஐய நிரை வளை மகளிர்க்கு எல்லாம்
வாய்மையால் உவமை ஆக மதி அறி புலவர் வைத்த
ஆமையாம் என்ற போது அல்லன சொல்லினாலும்
யாம யாழ் மழலையாள்-தன் புறவடிக்கு இழுக்கம்-மன்னோ

#35
வினைவரால் அரிய கோதைப் பேதை மென் கணைக்கால் மெய்யே
நினைவரால் அரிய நன்னீர் நேர்படப் புலவர் போற்றும்
சினை வரால் பகழி ஆவம் நெல் சினை என்னும் செப்பம்
எனைவரால் பகரும் ஈட்டம் யான் உரைத்து இன்பம் என்னோ

#36
அரம்பை என்று அளக மாதர் குறங்கினுக்கு அமைந்த ஒப்பின்
வரம்பையும் கடந்த போது மற்று உரை வகுக்கல் ஆமோ
நரம்பையும் அமிழ்த நாறும் நறவையும் நல் நீர்ப் பண்ணைக்
கரும்பையும் கடந்த சொல்லாள் கவாற்கு இது கருது கண்டாய்

#37
வார் ஆழிக் கலசக் கொங்கை வஞ்சி போல் மருங்குலாள்-தன்
தார் ஆழி கலை சார் அல்குல் தடம் கடற்கு உவமை தக்கோய்
பார் ஆழிப் பிடரில் தாங்கும் பாந்தளும் பனி வென்று ஓங்கும்
ஓர் ஆழித் தேரும் ஒவ்வார் உனக்கு நான் உரைப்பது என்னோ

#38
சட்டகம்-தன்னை நோக்கி யாரையும் சமைக்கத் தக்காள்
இட்டு இடை இருக்கும் தன்மை இயம்பக் கேட்டு உணர்தி என்னின்
கட்டுரைத்து உவமை காட்ட கண் பொறி கதுவா கையில்
தொட்ட எற்கு உணரலாம் மற்று உண்டு எனும் சொல்லும் இல்லை

#39
ஆல் இலை படிவம் தீட்டும் ஐய நுண் பலகை நொய்ய
பால் நிறத் தட்டம் வட்டக் கண்ணடி பலவும் இன்ன
போலும் என்று உரைத்த போதும் புனைந்துரை பொதுமை பார்க்கின்
ஏலும் என்று இசைக்கின் ஏலா இது வயிற்று இயற்கை இன்னும்

#40
சிங்கல்_இல் சிறு கூதாளி நந்தியின் திரள் பூ சேர்ந்த
பொங்கு பொன் துளை என்றாலும் புல்லிது பொறுமைத்து ஆமால்
அங்கு அவள் உந்தி ஒக்கும் சுழி எனக் கணித்தது உண்டால்
கங்கையை நோக்கி சேறி கடலினும் நெடிது கற்றாய்

#41
மயிர் ஒழுக்கு என ஒன்று உண்டால் வல்லி சேர் வயிற்றில் மற்று என்
உயிர் ஒழுக்கு அதற்கு வேண்டும் உவமை ஒன்று உரைக்கவேண்டின்
செயிர்_இல் சிற்றிடையாய் உற்ற சிறு கொடி நுடக்கம் தீரக்
குயிலுறுத்து அமைய வைத்த கொழுகொம்பு என்று உணர்ந்து கோடி

#42
அல்லி ஊன்றிடும் என்று அஞ்சி அரவிந்தம் துறந்தாட்கு அம் பொன்
வல்லி மூன்று உளவால் கோல வயிற்றில் மற்று அவையும் மார
வில்லி மூன்று உலகின் வாழும் மாதரும் தோற்ற மெய்ம்மை
சொல்லி ஊன்றிய ஆம் வெற்றி வரை எனத் தோன்றும் அன்றே

#43	
செப்பு என்பென் கலசம் என்பென் செவ் இளநீரும் தேர்வென்
துப்பு ஒன்று திரள் சூது என்பென் சொல்லுவென் தும்பி கொம்பை
தப்பு இன்றிப் பகலின் வந்த சக்கரவாகம் என்பென்
ஒப்பு ஒன்றும் உலகில் காணேன் பல நினைந்து உலைவென் இன்னும்

#44
கரும்பு கண்டாலும் மாலைக் காம்பு கண்டாலும் ஆலி
அரும்பு கண் தாரை சோர அழுங்குவேன் அறிவது உண்டோ
சுரும்பு கண்டு ஆலும் கோதை தோள் நினைந்து உவமை சொல்ல
இரும்பு கண்டு அனைய நெஞ்சம் எனக்கு இல்லை இசைப்பது என்னோ

#45
முன்கையே ஒப்பது ஒன்றும் உண்டு மூன்று உலகத்துள்ளும்
என்கையே இழுக்கம் அன்றே இயம்பினும் காந்தள் என்றல்
வன் கை யாழ் மணிக் கை என்றல் மற்று ஒன்றை உணர்த்தல் அன்றி
நன் கையாள் தடக் கைக்கு ஆமோ நலத்தின் மேல் நலம் உண்டாமோ

#46
ஏலக் கோடு ஈன்ற பிண்டி இளம் தளிர் கிடக்க யாணர்க்
கோலக் கற்பகத்தின் காமர் குழை நறும் கமல மென் பூ
நூல் ஒக்கும் மருங்குலாள்-தன் நூபுரம் புலம்பும் கோலக்
காலுக்குத் தொலையும் என்றால் கைக்கு ஒப்பு வைக்கலாமோ

#47
வெள்ளிய முறுவல் செவ் வாய் விளங்கு இழை இளம் பொன்_கொம்பின்
வள் உகிர்க்கு உவமை நம்மால் மயர்வு_அற வகுக்கலாமோ
எள்ளுதிர் நீரே மூக்கை என்று கொண்டு இவறி என்றும்
கிள்ளைகள் முருக்கின் பூவைக் கிழிக்குமேல் உரைக்கலாமோ

#48
அங்கையும் அடியும் கண்டால் அரவிந்தம் நினையுமா போல்
செம் களி சிதறி நீலம் செருக்கிய தெய்வ வாள் கண்
மங்கை-தன் கழுத்தை நோக்கின் வளர் இளம் கழுகும் வாரி
சங்கமும் நினைதியாயின் அவை என்று துணிதி தக்கோய்

#49
பவளமும் கிடையும் கொவ்வைப் பழனும் பைம் குமுதப் போதும்
துவள்வு_இல் இலவம் கோபம் முருக்கு என்று இத் தொடக்கம் சாலத்
தவளம் என்று உரைக்கும் வண்ணம் சிவந்து தேன் ததும்புமாயின்
குவளை உண் கண்ணி வண்ண வாய் அது குறியும் அஃதே

#50
சிவந்தது ஓர் அமிழ்தம் இல்லை தேன் இல்லை உள என்றாலும்
கவர்ந்த போது அன்றி உள்ளம் நினைப்ப ஓர் களிப்பு நல்கா
பவர்ந்த வாள் நுதலினாள்-தன் பவள வாய்க்கு உவமை பாவித்து
உவந்த போது உவந்த வண்ணம் உரைத்த போது உரைத்தது ஆமோ

#51
முல்லையும் முருந்தும் முத்தும் முறுவல் என்று உரைத்த போது
சொல்லையும் அமிழ்தும் பாலும் தேனும் என்று உரைக்கத் தோன்றும்
அல்லது ஒன்று ஆவது இல்லை அமிர்திற்கும் உவமை உண்டோ
வல்லையேல் அறிந்து கோடி மாறு இலா ஆறு சான்றோய்

#52
ஓதியும் எள்ளும் தொள்ளைக் குமிழும் மூக்கு ஒக்கும் என்றால்
சோதி செம்பொன்னும் மின்னும் மணியும் போல் துளங்கித் தோன்றா
ஏதுவும் இல்லை வல்லார் எழுதுவார்க்கு எழுத ஒண்ணா
நீதியை நோக்கி நீயே நினைதியால் நெடிது காண்பாய்

#53
வள்ளை கத்தரிகை வாம மயிர் வினைக் கருவி என்ன
பிள்ளைகள் உரைத்த ஒப்பைப் பெரியவர் உரைக்கின் பித்து ஆம்
வெள்ளி வெண் தோடு செய்த விழுத் தவம் விளைந்தது என்றே
உள்ளுதி உலகுக்கு எல்லாம் உவமைக்கும் உவமை உண்டோ

#54
பெரியவாய் பரவை ஒவ்வா பிறிது ஒன்று நினைந்து பேச
உரியவாய் ஒருவர் உள்ளத்து ஒடுங்குவ அல்ல உண்மை
தெரிய ஆயிரக் கால் நோக்கின் தேவர்க்கும் தேவன் என்ன
கரியவாய் வெளிய ஆகும் வாள் தடம் கண்கள் அம்மா

#55
கேள் ஒக்கும் அன்றி ஒன்று கிளத்தினால் கீழ்மைத்து ஆமே
கோள் ஒக்கும் என்னின் அல்லால் குறி ஒக்கக் கூறலாமே
வாள் ஒக்கும் வடி_கணாள்-தன் புருவத்துக்கு உவமை வைக்கின்
தாள் ஒக்க வளைந்து நிற்ப இரண்டு இல்லை அனங்கன் சாபம்

#56
நல் நாளும் நளினம் நாணும் தளிர்_அடி நுதலை நாணி
பல் நாளும் பன்னி ஆற்றா மதி எனும் பண்பது ஆகி
முன்_நாளில் முளை வெண் திங்கள் முழுநாளும் குறையே ஆகி
எந்நாளும் வளராது என்னின் இறை ஒக்கும் இயல்பிற்று ஆமே

#57
வனைபவர் இல்லை அன்றே வனத்துள் நாம் வந்த பின்னர்
அனையன எனினும் தாம் தம் அழகுக்கு ஓர் அழிவு உண்டாகா
வினை செயக் குழன்ற அல்ல விதி செய விளைந்த நீலம்
புனை மணி அளகம் என்றும் புதுமை ஆம் உவமை பூணா

#58
கொண்டலின் குழவி ஆம்பல் குனி சிலை வள்ளை கொற்றக்
கெண்டை ஒண் தரளம் என்று இக் கேண்மையின் கிடந்த திங்கள்
மண்டலம் வதனம் என்று வைத்தனன் விதியே நீ அப்
புண்டரிகத்தை உற்ற பொழுது அது பொருந்தித் தேர்வாய்

#59
காரினை கழித்துக் கட்டிக் கள்ளினோடு ஆவி காட்டிப்
பேர் இருள் பிழம்பு தோய்த்து நெறி உறீஇ பிறங்கு கற்றைச்
சோர் குழல் தொகுதி என்று சும்மை செய்தனையது அம்மா
நேர்மையைப் பருமை செய்த நிறை நறும் கூந்தல் நீத்தம்

#60
புல்லிதழ் கமலத் தெய்வப் பூவிற்கும் உண்டு பொற்பின்
எல்லை சூழ் மதிக்கும் உண்டாம் களங்கம் என்று உரைக்கும் ஏதம்
அல்லவும் சிறிது குற்றம் அகன்றில அன்னம் அன்ன
நல் இயலாளுக்கு எல்லாம் நலன் அன்றி பிறிது உண்டாமோ

#61
மங்கையர்க்கு ஓதி வைத்த இலக்கணம் வண்ண வாசப்
பங்கயத்தவட்கும் ஐயா நிரம்பல பற்றி நோக்கின்
செம் கயல் கரும் கண் செவ் வாய்த் தேவரும் வணங்கும் தெய்வக்
கொங்கை அக் குயிலுக்கு ஒன்றும் குறைவு இலை குறியும் அஃதே

#62
குழல் படைத்து யாழைச் செய்து குயிலொடு கிளியும் கூட்டி
மழலையும் பிறவும் தந்து வடித்ததை மலரின் மேலான்
இழை பொரும் இடையினாள்-தன் இன் சொற்கள் இயையச் செய்தான்
பிழை இலது உவமை காட்டப்பெற்றிலன் பெறும்-கொல் இன்னும்

#63
வான் நின்ற உலகம் மூன்றும் வரம்பின்றி வளர்ந்தவேனும்
நா நின்ற சுவை மற்று ஒன்றோ அமிழ்து அன்றி நல்லது இல்லை
மீன் நின்ற கண்ணினாள்-தன் மென் மொழிக்கு உவமை வேண்டின்
தேன் ஒன்றோ அமிழ்தம் ஒன்றோ அவை செவிக்கு இன்பம்செய்யா

#64
பூ வரும் மழலை அன்னம் புனை மடப் பிடி என்று இன்ன
தேவரும் மருளத் தக்க செலவின எனினும் தேறேன்
பா வரும் கிழமைத் தொன்மை பருணிதர் தொடுத்த பத்தி
நா அரும் கிளவிச் செவ்வி நடை வரும் நடையள் நல்லோய்

#65
எ நிறம் உரைக்கேன் மாவின் இள நிறம் முதிரும் மற்றைப்
பொன் நிறம் கருகும் என்றால் மணி நிறம் உவமை போதா
மின் நிறம் நாணி எங்கும் வெளிப்படாது ஒளிக்கும் வேண்டின்
தன் நிறம் தானே ஒக்கும் மலர் நிறம் சமழ்க்கும் அன்றே

#66
மங்கையர் இவளை ஒப்பார் மற்று உளார் இல்லை என்னும்
சங்கை_இல் உள்ளம் தானே சான்று எனக் கொண்டு சான்றோய்
அங்கு அவள் நிலைமை எல்லாம் அளந்து அறிந்து அருகு சார்ந்து
திங்கள் வாள் முகத்தினாட்குச் செப்பு எனப் பின்னும் செப்பும்

#67
முன்னை நாள் முனியொடு முதிய நீர் மிதிலை-வாய்
சென்னி நீள் மாலையான் வேள்வி காணிய செல
அன்னம் ஆடும் துறைக்கு அருகு நின்றாளை அக்
கன்னிமாடத்திடைக் கண்டதும் கழறுவாய்

#68
வரை செய் தாள் வில் இறுத்தவன் அ மா முனியொடும்
விரசினான் அல்லனேல் விடுவல் யான் உயிர் எனா
கரைசெயா வேலையின் பெரிய கற்பினள் தெரிந்து
உரைசெய்தாள் அஃது எலாம் உணர நீ உரைசெய்வாய்

#69
சூழி மால் யானையின் துணை மருப்பு இணை எனக்
கேழ் இலா வன முலைக் கிரி சுமந்து இடைவது ஓர்
வாழி வான் மின் இளம் கொடியின் வந்தாளை அன்று
ஆழியான் அரசவைக் கண்டதும் அறைகுவாய்

#70
முன்பு நான் அறிகிலா முளி நெடும் கானிலே
என் பினே போதுவான் நினைதியோ ஏழை நீ
இன்பமாய் ஆருயிர்க்கு இனியை ஆயினை இனி
துன்பமாய் முடிதியோ என்றதும் சொல்லுவாய்

#71
ஆன பேரரசு இழந்து அடவி சேர்வாய் உனக்கு
யான் அலாதன எலாம் இனியவோ இனி எனா
மீன் உலாம் நெடு மலர்க் கண்கள் நீர் விழ விழுந்து
ஊன் இலா உயிரின் வெந்து அயர்வதும் உரைசெய்வாய்

#72
மல்லல் மா நகர் துறந்து ஏகும் நாள்_மதி தொடும்
கல்லின் மா மதிள் மணிக் கடை கடந்திடுதல் முன்
எல்லை தீர்வு அரிய வெம் கானம் யாதோ எனச்
சொல்லினாள் அஃது எலாம் உணர நீ சொல்லுவாய்

#73
இனைய ஆறு உரைசெயா இனிதின் ஏகுதி எனா
வனையும் மா மணி நல் மோதிரம் அளித்து அறிஞ நின்
வினை எலாம் முடிக எனா விடைகொடுத்து உதவலும்
புனையும் வார் கழலினான் அருளொடும் போயினான்

#74
அங்கதக் குரிசிலோடு அடு சினத்து உழவராம்
வெம் கதத் தலைவரும் விரி கடல் படையொடும்
பொங்கு வில் தலைவரைத் தொழுது முன் போயினார்
செங்கதிர்ச்செல்வனைப் பணிவுறும் சென்னியார்

@14 பிலம் புக்கு நீங்கு படலம்

#1
போயினார் போன பின் புற நெடும் திசைகள்-தோறு
ஏயினான் இரவி_காதலனும் ஏயின பொருட்கு
ஆயினார் அவரும் அங்கு அன்ன நாள் அவதியில்
தாயினார் உலகினை தகை நெடும் தானையார்

#2
குன்று இசைத்தன எனக் குலவு தோள் வலியினார்
மின் திசைத்திடும் இடைக் கொடியை நாடினர் விராய்
வன் திசைப் படரும் ஆறு ஒழிய வண் தமிழ் உடைத்
தென்திசைச் சென்றுளார் திறன் எடுத்து உரைசெய்வாம்

#3
சிந்துராகத்தொடும் திரள் மணிச் சுடர் செறிந்து
அந்தி வானத்தின் நின்று அவிர்தலான் அரவினோடு
இந்து வான் ஓடலான் இறைவன் மா மௌலி போல்
விந்த நாகத்தின் மாடு எய்தினார் வெய்தினால்

#4
அ நெடும் குன்றமோடு அவிர் மணிச் சிகரமும்
பொன் நெடும் கொடுமுடிப் புரைகளும் புடைகளும்
நல் நெடும் தாழ்வரை நாடினார் நவையிலார்
பல் நெடும் காலம் ஆம் என்ன ஓர் பகலிடை

#5
மல்லல் மா ஞாலம் ஓர் மறு உறா வகையின் அச்
சில்_அல்_ஓதியை இருந்த உறைவிடம் தேடுவார்
புல்லினார் உலகினை பொது இலா வகையினால்
எல்லை மா கடல்களே ஆகுமாறு எய்தினார்

#6
விண்டு போய் இழிவர் மேல் நிமிர்வர் விண் படர்வர் வேர்
உண்ட மா மரனின் அ மலையின்-வாய் உறையும் நீர்
மண்டு பாரதனின் வாழ் உயிர்கள் அம் மதியினார்
கண்டிலாதன அயன் கண்டிலாதன-கொலாம்

#7
ஏகினார் யோசனை ஏழொடு ஏழு பார்
சேகு அறத் தென்திசை கடிது செல்கின்றார்
மேக மாலையினொடும் விரவி மேதியின்
நாகு சேர் நருமதை யாறு நண்ணினார்

#8
அன்னம் ஆடு இடங்களும் அமரர் நாடியர்
துன்னி ஆடு இடங்களும் துறக்கம் மேயவர்
முன்னி ஆடு இடங்களும் கரும்பு மூசு தேன்
பன்னி ஆடு இடங்களும் பரந்து சுற்றினார்

#9
பெறல்_அரும் தெரிவையை நாடும் பெற்றியார்
அறல் நறும் கூந்தலும் அளக வண்டு சூழ்
நிறை நறும் தாமரை முகமும் நித்தில
முறுவலும் காண்பரால் முழுதும் காண்கிலார்

#10
செரு மத யாக்கையர் திருக்கு_இல் சிந்தையர்
தரும தயா இவை தழுவும் தன்மையர்
பொரு மத யானையும் பிடியும் புக்கு உழல்
நருமதையாம் எனும் நதியை நீங்கினார்

#11
தாம கூடத் திரைத் தீர்த்த சங்கமாம்
நாம கூடு அப் பெரும் திசையை நல்கிய
வாம கூடச் சுடர் மணி வயங்குறும்
ஏமகூடத் தடம் கிரியை எய்தினார்

#12
மாடு உறு கிரிகளும் மரனும் மற்றவும்
சூடுறு பொன் எனப் பொலிந்து தோன்றுறப்
பாடு உறு சுடர் ஒளி பரப்புகின்றது
வீடு உறும் உலகினும் விளங்கும் மெய்யது

#13
பரவிய கனக நுண் பராகம் பாடுற
எரி சுடர்ச் செம் மணி ஈட்ட தோடு இழி
அருவி அம் திரள்களும் அலங்கு தீயிடை
உருகு பொன் பாய்வ போன்று ஒழுகுகின்றது

#14
விஞ்சையர் பாடலும் விசும்பின் வெள் வளைப்
பஞ்சின் மெல் அடியினார் ஆடல் பாணியும்
குஞ்சர முழக்கமும் குமுறு பேரியின்
மஞ்சு இனம் உரற்றலும் மயங்கும் மாண்பது

#15
அனையது நோக்கினார் அமிர்த மா மயில்
இனைய வேல் இராவணன் இருக்கும் வெற்பு எனும்
நினைவினர் உவந்து உயர்ந்து ஓங்கும் நெஞ்சினர்
சினம் மிகக் கனல் பொறி சிந்தும் செங் கணார்

#16
இ மலை காணுதும் ஏழை மானை அச்
செம்மலை நீக்குதும் சிந்தை தீது என
விம்மலுற்று உவகையின் விளங்கும் உள்ளத்தார்
அ மலை ஏறினார் அச்சம் நீங்கினார்

#17
ஐம்பதிற்று இரட்டி காவதத்தினால் அகன்று
உம்பரைத் தொடுவது ஒத்து உயர்வின் ஓங்கிய
செம்பொன் நல் கிரியை ஓர் பகலில் தேடினார்
கொம்பினைக் கண்டிலர் குப்புற்று ஏகினார்

#18
வெள்ளம் ஓர் இரண்டு என விரிந்த சேனையைத்
தெள்ளு நீர் உலகு எலாம் தெரிந்து தேடி நீர்
எள்ள_அரும் மயேந்திரத்து எம்மில் கூடும் என்று
உள்ளினார் உயர் நெடும் ஓங்கல் நீங்கினார்

#19
மாருதி முதலிய வயிரத் தோள் வயப்
போர் கெழு வீரரே குழுமிப் போகின்றார்
நீர் எனும் பெயரும் அ நெறியின் நீங்கலால்
சூரியன் வெருவும் ஓர் சுரத்தை நண்ணினார்

#20
புள் அடையா விலங்கு அரிய புல்லொடும்
கள் அடை மரன் இல கல்லும் தீந்து உகும்
உள் இடை யாவும் நுண் பொடியொடு ஒடிய
வெள்ளிடை அல்லது ஒன்று அரிது அவ் வெம் சுரம்

#21
நன் புலன் நடுக்குற உணர்வு நைந்து அற
பொன் பொலி யாக்கைகள் புழுங்கிப் பொங்குவார்
தென்புலம் தங்கு எரி நரகில் சிந்திய
என்பு_இல் பல் உயிர் என வெம்மை எய்தினார்

#22
நீட்டிய நாவினர் நிலத்தில் தீண்டு-தோறு
ஊட்டிய வெம்மையால் உலையும் காலினர்
காட்டினும் காய்ந்து தம் காயம் தீதலால்
சூட்டு அகல் மேல் எழு பொரியின் துள்ளினார்

#23
ஒதுங்கலாம் நிழல் இறை காண்கிலாது உயிர்
பிதுங்கல் ஆம் உடலினர் முடிவு_இல் பீழையர்
பதங்கள் தீப் பருகிடப் பதைக்கின்றார் பல
விதங்களால் நெடும் பில வழியில் மேவினார்

#24
மீச்செல அரிது இனி விளியின் அல்லது
தீச் செல ஒழியவும் தடுக்கும் திண் பில
வாய்ச் செலல் நன்று என மனத்தின் எண்ணினார்
போய்ச் சில அறிதும் என்று அதனில் போயினார்

#25
அக் கணத்து அப் பிலத்து அகணி எய்தினார்
திக்கினொடு உலகு உறச் செறிந்த தேங்கு இருள்
எக்கிய கதிரவற்கு அஞ்சி ஏமுறப்
புக்கதே அனையது ஓர் புரை புக்கு எய்தினார்

#26
எழுகிலர் கால் எடுத்து ஏகும் எண்_இலர்
வழி உளது ஆம் எனும் உணர்வு மாற்றினார்
இழுகிய நெய் எனும் இருள் பிழம்பினுள்
முழுகிய மெய்யராய் உயிர்ப்பு முட்டினார்

#27
நின்றனர் செய்வது ஓர் நிலைமை ஓர்கிலர்
பொன்றினம் யாம் எனப் பொருமும் புந்தியர்
வன் திறல் மாருதி வல்லையோ எமை
இன்று இது காக்க என்று இரந்து கூறினார்

#28
உய்வுறுத்துவென் மனம் உலையலீர் ஊழின் வால்
மெய்யுறப் பற்றுதிர் விடுகிலீர் என
ஐயன் அக் கணத்தினில் அகலும் நீள் நெறி
கையினில் தடவி வெம் காலின் ஏகினான்

#29
பன்னிரண்டு யோசனை படர்ந்த மெய்யினன்
மின் இரண்டு அனைய குண்டலங்கள் வில் இட
துன் இருள் தொலைந்திடத் துருவி ஏகினான்
பொன் நெடும் கிரி எனப் பொலிந்த தோளினான்

#30
கண்டனர் கடி நகர் கமலத்து ஒண் கதிர்
மண்டலம் மறைந்து உறைந்து அனைய மாண்பது
விண்தலம் நாணுற விளங்குகின்றது
புண்டரிகத்தவள் வதனம் போன்றது

#31
கற்பகக் கானது கமலக் காடது
பொன் பெரும் கோபுரப் புரிசை புக்கது
அற்புதம் அமரரும் எய்தலாவது
சிற்பமும் மயன் மனம் வருந்திச் செய்தது

#32
இந்திரன் நகரமும் இணையிலாதது
மந்திர மணியினின் பொன்னின் மண்ணினில்
அந்தரத்து அவிர் சுடர் அவை இன்று ஆயினும்
உந்த_அரும் இருள் துரந்து ஒளிர நிற்பது

#33
புவி புகழ் சென்னி பேரமலன் தோள் புகழ்
கவிகள்-தம் மனை எனக் கனக ராசியும்
சவியுடைத் தூசும் மென் சாந்தும் மாலையும்
அவிர் இழைக் குப்பையும் அளவிலாதது

#34
பயில் குரல் கிண்கிணிப் பதத்த பாவையர்
இயல்புடை மைந்தர் என்று இவர் இலாமையால்
துயில்வுறு நாட்டமும் துடிப்பது ஒன்று இலா
உயிர் இலா ஓவியம் என்ன ஒப்பது

#35
அமிழ்து உறழ் அயினியை அடுத்த உண்டியும்
தமிழ் நிகர் நறவமும் தனித் தண் தேறலும்
இமிழ் கனிப் பிறக்கமும் பிறவும் இன்னன
கமழ்வுறத் துவன்றிய கணக்கு_இல் கொட்பது

#36
கன்னி நெடு மா நகரம் அன்னது எதிர் கண்டார்
இ நகரம் ஆம் இகல் இராவணனது ஊர் என்று
உன்னி உரையாடினர் உவந்தனர் வியந்தார்
பொன்னின் நெடு வாயில் அதனூடு நனி புக்கார்

#37
புக்க நகரத்து இனிது நாடுதல் புரிந்தார்
மக்கள் கடை தேவர் தலை வான் உலகின் வையத்து
ஒக்க உறைவோர் உருவம் ஓவியம் அலால் மற்று
எக் குறியின் உள்ளவும் எதிர்ந்திலர் திரிந்தார்

#38
வாவி உள பொய்கை உள வாச மலர் நாறும்
காவும் உள காவி விழியார் மொழிகள் என்னக்
கூவும் இள மென் குயில்கள் பூவை கிளி கோலத்
தூவி மட அன்னம் உள தோகையர்கள் இல்லை

#39
ஆய நகரத்தின் இயல்பு உள் உற அறிந்தார்
மாயை-கொல் எனக் கருதி மற்றும் நினைகின்றார்
தீய முன் உடல் பிறவி சென்ற அது அன்றோ
தூயது துறக்கம் என நெஞ்சு துணிவுற்றார்

#40
இறந்திலம் இதற்கு உரியது எண்ணுகிலம் ஏதும்
மறந்திலம் மறப்பினொடு இமைப்பு உள மயக்கம்
பிறந்தவர் செயற்கு உரிய செய்தல் பிழை ஒன்றோ
திறம் தெரிவது என் என இசைத்தனர் திசைத்தார்

#41
சாம்பன் அவன் ஒன்று உரைசெய்வான் எழு சலத்தால்
காம்பு அனைய தோளியை ஒளித்த படு கள்வன்
நாம் புக அமைத்த பொறி நன்று முடிவு இன்றால்
ஏம்பல் இனி மேலை விதியால் முடியும் என்றான்

#42
இன்று பிலன் ஈது இடையின் ஏற அரிது எனின் பார்
தின்று சகரர்க்கு அதிகம் ஆகி நனி சேறும்
அன்று அது எனின் வஞ்சனை அரக்கரை அடங்கக்
கொன்று எழுதும் அஞ்சல் என மாருதி கொதித்தான்

#43
மற்றவரும் மற்று அது மனக் கொள வலித்தார்
உற்றனர் புரத்தின் இடை ஒண் சுடரினுள் ஓர்
நல் தவம் அனைத்தும் உரு நண்ணி ஒளி பெற்ற
கற்றை விரி பொன் சடையினாளை எதிர் கண்டார்

#44
மருங்கு அலச வற்கலை வரிந்து வரி வாளம்
பொரும் கலசம் ஒக்கும் முலை மாசு புடை பூசி
பெரும் கலை மதித் திரு முகத்த பிறழ் செம் கேழ்க்
கரும் கயல்களின் பிறழ் கண் மூக்கின் நுதி காண

#45
தேர் அனைய அல்குல் செறி திண் கதலி செப்பும்
ஊருவினொடு ஒப்பு உற ஒடுக்கி உற ஒல்கும்
நேர் இடை சலிப்பு அற நிறுத்தி நிமிர் கொங்கைப்
பாரம் உள் ஒடுக்குற உயிர்ப்பு இடை பரப்ப

#46
தாமரை மலர்க்கு உவமை சால்புறு தளிர்க் கை
பூ மருவு பொன் செறி குறங்கிடை பொருந்த
காமம் முதல் உற்ற பகை கால் தளர ஆசை
நாமம் அழிய புலனும் நல் அறிவு புல்ல

#47
நெறிந்து நிமிர் கற்றை நிறை ஓதி நெடு நீலம்
செறிந்து சடை உற்றன தலத்தில் நெறி செல்ல
பறிந்து வினை பற்று அற மனப் பெரிய பாசம்
பிறிந்து பெயர கருணை கண் வழி பிறங்க

#48
இருந்தனள் இருந்தவளை எய்தினர் இறைஞ்சா
அருந்ததி எனத் தகைய சீதை அவளாகப்
பரிந்தனர் பதைத்தனர் பணித்த குறி பண்பின்
தெரிந்து உணர்தி மற்று இவள்-கொல் தேவி எனலோடும்

#49
எக் குறியொடு எக் குணம் எடுத்து இவண் உரைக்கேன்
இக் குறி உடைக் கொடி இராமன் மனையாளோ
அக்கு வடம் முத்த மணி ஆரமதன் நேர் நின்று
ஒக்கும் எனின் ஒக்கும் என மாருதி உரைத்தான்

#50
அன்ன பொழுதின்-கண் அவ் அணங்கும் அறிவுற்றாள்
முன் அனையர் சேறல் முறை அன்று என முனிந்தாள்
துன்ன_அரிய பொன் நகரியின் உறைவீர்_அல்லீர்
என்ன வரவு யாவர் உரைசெய்க என இசைத்தாள்

#51
வேதனை அரக்கர் ஒரு மாயை விளைவித்தார்
சீதையை ஒளித்தனர் மறைத்த புரை தேர்வுற்று
ஏதம்_இல் அறத் துறை நிறுத்திய இராமன்
தூதர் உலகில் திரிதும் என்னும் உரை சொன்னார்

#52
என்றலும் இருந்தவள் எழுந்தனள் இரங்கி
குன்று அனையது ஆயது ஒரு பேர் உவகை கொண்டாள்
நன்று வரவு ஆக நடனம் புரிவல் என்னா
நின்றனள் நெடும் கண் இணை நீர் கலுழி கொள்ள

#53
எவ் உழை இருந்தனன் இராமன் என யாணர்ச்
செவ் உழை நெடும் கண் அவள் செப்பிடுதலோடும்
அவ் உழை நிகழ்ந்தனை ஆதியினொடு அந்தம்
வெவ் விழைவு_இல் சிந்தை நெடு மாருதி விரித்தான்

#54
கேட்டு அவளும் என்னுடைய கேடு_இல் தவம் இன்னே
காட்டியது வீடு என விரும்பி நனி சால் நீர்
ஆட்டி அமிழ்து அன்ன சுவை இன் அடிசில் அன்போடு
ஊட்டி மனன் உள் குளிர இன் உரை உரைத்தாள்

#55
மாருதியும் மற்று அவள் மலர்ச் சரண் வணங்கி
யார் இ நகருக்கு இறைவர் யாது நின் இயற்பேர்
பார் புகழ் தவத்தினை பணித்தருளுக என்றான்
சோர்_குழலும் மற்று அவனொடு உற்றபடி சொன்னாள்

#56
நூல்முகம் நுனிந்த நெறி நூறு வர நொய்தா
மேல் முகம் நிமிர்ந்து வெயில் காலொடு விழுங்கா
மான் முக நலத்தவன் மயன் செய்த தவத்தால்
நான்முகன் அளித்துளது இ மா நகரம் நல்லோய்

#57
அன்னது இது தானவன் அரம்பையருள் ஆங்கு ஓர்
நல் நுதலினாள் முலை நயந்தனன் அ நல்லாள்
என் உயிர்_அனாள் அவளை யான் அவன் இரப்ப
பொன்னுலகின் நின்று ஒளிர் பிலத்திடை புணர்த்தேன்

#58
புணர்ந்து அவளும் அன்னவனும் அன்றில் விழை போகத்து
உணர்ந்திலர் நெடும் பகல் இ மா நகர் உறைந்தார்
கணம் குழையினாளொடு உயர் காதல் ஒருவாது உற்று
இணங்கி வரு பாசம் உடையேன் இவண் இருந்தேன்

#59
இருந்து பல நாள் கழியும் எல்லையினில் நல்லோய்
திருந்து_இழையை நாடி வரு தேவர் இறை சீறி
பெரும் திறலினானை உயிர் உண்டு பிழை என்று அம்
முருந்து நிகர் மூரல் நகையாளையும் முனிந்தான்

#60
முனிந்து அவளை உற்ற செயல் முற்றும் மொழிக என்ன
கனிந்த துவர் வாயவளும் என்னை இவள் கண்ணாய்
வனைந்து முடிவுற்றது என மன்னனும் இது எல்லாம்
நினைந்து இவண் இருத்தி நகர் காவல் நினது என்றான்

#61
என்றலும் வணங்கி இருள் ஏகும் நெறி எ நாள்
ஒன்று உரை எனக்கு முடிவு என்று உரைசெயா முன்
வன் திறல் அவ் வானரம் இராமன் அருள் வந்தால்
அன்று முடிவு ஆகும் இடர் என்று அவன் அகன்றான்

#62
உண்ண உள பூச உள சூட உள ஒன்றோ
வண்ண மணி ஆடை உள மற்றும் உள பெற்று என்
அண்ணல் அவை முற்றும் அற விட்டு வினை வெல்வான்
எண்ண_அரிய பல் பகல் இரும் தவம் இழைத்தேன்

#63
ஐ_இருபது ஓசனை அமைந்த பிலம் ஐயா
மெய் உளது மேல் உலகம் ஏறும் நெறி காணேன்
உய்யும் நெறி உண்டு உதவுவீர் எனின் உபாயம்
செய்யும் வகை சிந்தையில் நினைத்தீர் சிறிது என்றாள்

#64
அன்னது சுயம்பிரபை கூற அனுமானும்
மன்னு புலன் வென்று வரு மாது அவள் மலர்த் தாள்
சென்னியின் வணங்கி நனி வானவர்கள் சேரும்
பொன்னுலகம் ஈகுவல் நினக்கு எனல் புகன்றான்

#65
முழைத்-தலை இருள் கடலின் மூழ்கி முடிவேமைப்
பிழைத்து உயிர் உயிர்ப்ப அருள்செய்த பெரியோனே
இழைத்தி செயல் ஆய வினை என்றனர் இரந்தார்
வழுத்த_அரிய மாருதியும் அன்னது வலிப்பான்

#66
நடுங்கல்-மின் எனும் சொலை நவின்று நகை நாற
மடங்கலின் எழுந்து மழை ஏற அரிய வானத்து
ஒடுங்கல்_இல் பிலம் தலை திறந்து உலகொடு ஒன்ற
நெடும் கைகள் சுமந்து நெடு வான் உற நிமிர்ந்தான்

#67
எருத்து உயர் சுடர்ப் புயம் இரண்டும் எயிறு என்ன
மருத்து மகன் இ படி இடந்து உற வளர்ந்தான்
கருத்தின் நிமிர் கண்ணின் எதிர் கண்டவர் கலங்க
உருத்து உலகு எடுத்த கரு மாவினையும் ஒத்தான்

#68
மா வடிவு உடைக் கமல நான்முகன் வகுக்கும்
தூ வடிவு உடைச் சுடர் கொள் விண் தலை துளைக்கும்
மூ_அடி குறித்து முறை ஈர் அடி முடித்தான்
பூ வடிவு உடைப் பொரு_இல் சேவடி புரைந்தான்

#69
ஏழ்_இருபது ஓசனை இடந்து படியின் மேல்
ஊழுற எழுந்து அதனை உம்பரும் ஒடுங்க
பாழி நெடு வன் பிலனுள் நின்று படர் மேல்-பால்
ஆழியின் எறிந்து அனுமன் ஆழி என ஆர்த்தான்

#70
என்றும் உள மேல் கடல் இயக்கு_இல் பில தீவா
நின்று நிலைபெற்றுளது நீள் நுதலியோடும்
குன்று புரை தோளவர் எழுந்து நெறி கொண்டார்
பொன் திணி விசும்பினிடை நல் நுதலி போனாள்

#71
மாருதி வலித் தகைமை பேசி மறவோரும்
பாரிடை நடந்து பகல் எல்லை படரப் போய்
நீர் உடைய பொய்கையினின் நீள் கரை அடைந்தார்
தேர் உடை நெடுந்தகையும் மேலை மலை சென்றான்

@15 ஆறு செல் படலம்

#1
கண்டார் பொய்கைக்-கண் அகல் நல் நீர்க் கரைதாம் உற்று
உண்டார் தேனும் ஒண் கனி காயும் ஒரு சூழல்
கொண்டார் அன்றோ இன் துயில் கொண்ட குறி உன்னி
தண்டா வென்றித் தானவன் வந்தான் தகவில்லான்

#2
மலையே போல்வான் மால் கடல் ஒப்பான் மறம் முற்ற
கொலையே செய்வான் கூற்றை நிகர்ப்பான் கொடுமைக்கு ஓர்
நிலையே போல்வான் நீர்மை இலாதான் நிமிர் திங்கள்
கலையே போலும் கால எயிற்றான் கனல் கண்ணான்

#3
கருவி மா மழை கைகள் தாவி மீது
உருவி மேனி சென்று உலவி ஒற்றலால்
பொரு_இல் மாரி மேல் ஒழுகு பொற்பினால்
அருவி பாய்தரும் குன்றமே அனான்

#4
வானவர்க்கும் மற்று அவர் வலிக்கு நேர்
தானவர்க்குமே அரிய தன்மையான்
ஆனவர்க்கு அலால் அவனொடு ஆட வேறு
ஏனவர்க்கும் ஒன்று எண்ண ஒண்ணுமோ

#5
பிறங்கு பங்கியான் பெயரும் பெட்பினில்
கறங்கு போன்றுளான் பிசையும் கையினான்
அறம் கொள் சிந்தையார் நெறி செல் ஆய்வினால்
உறங்குவாரை வந்து ஒல்லை எய்தினான்

#6
பொய்கை என்னது என்று உணர்ந்தும் புல்லியோர்
எய்தினார்கள் யார் இது எனா எனா
ஐயன் அங்கதன் அலங்கல் மார்பினில்
கையின் மோதினான் காலனே அனான்

#7
மற்று அ மைந்தனும் உறக்கம் மாறினான்
இற்று இவன்-கொலாம் இலங்கை_வேந்து எனா
எற்றினானை நேர் எற்றினான் அவன்
முற்றினான் உயிர் உலந்து மூர்ச்சியா

#8
இடியுண்டு ஆங்கண் ஓர் ஓங்கல் இற்றது ஒத்து
அடியுண்டான் தளர்ந்து அலறி வீழ்தலும்
தொடியின் தோள் விசைத்து எழுந்து சுற்றினார்
பிடியுண்டார் எனத் துயிலும் பெற்றியார்

#9
யார்-கொலாம் இவன் இழைத்தது என் எனா
தாரை சேயினைத் தனி வினாவினான்
மாருதேயன் மற்று அவனும் வாய்மை சால்
ஆரியா தெரிந்து அறிகிலேன் என்றான்

#10
யான் இவன்-தனைத் தெரிய எண்ணினேன்
தூ நிவந்த வேல் துமிரன் என்னும் பேரான்
இவ் ஆழ் புனல் பொய்கை ஆளும் ஓர்
வானவன் என்று சாம்பன் சாற்றினான்

#11
வேறும் எய்துவார் உளர்-கொலாம் எனா
தேறி இன் துயில் செய்தல் தீர்ந்துளார்
வீறு செம் சுடர் கடவுள் வேலை-வாய்
நாற நாள்_மலர்ப் பெண்ணை நாடுவார்

#12
புள் நை வெம் முலைப் புளினம் ஏய் தடத்து
உண்ண ஆம்பல் இன் அமிழ்தம் ஊறு வாய்
வண்ண வெண் நகைத் தரள் வாள் முகப்
பெண்ணை நண்ணினார் பெண்ணை நாடுவார்

#13
துறையும் தோகை நின்று ஆடு சூழலும்
குறையும் சோலையும் குளிர்ந்த சாரல் நீர்ச்
சிறையும் தெள்ளு பூம் தடமும் தெண் பளிக்கு
அறையும் தேடினார் அறிவின் கேள்வியார்

#14
அணி கொழித்து வந்து எவரும் ஆடுவார்
பிணி கொழித்து வெம் பிறவி வேரின் வன்
துணி கொழித்து அரும் சுழிகள்-தோறும் நல்
மணி கொழித்திடும் துறையின் வைகினார்

#15
ஆடு பெண்ணை நீர் ஆறும் ஏறினார்
காடு நண்ணினார் மலை கடந்துளார்
வீடு நண்ணினார் என்ன வீசும் நீர்
நாடு நண்ணினார் நாடு நண்ணினார்

#16
தசநவப் பெயர் சரள சண்பகத்து
அசந அப் புலத்து அகணி நாடு ஒரீஇ
உசநவப் பெயர் கவி உதித்த பேர்
இசை விதர்ப்ப நாடு எளிதின் எய்தினார்

#17
வைதருப்ப நாடு அதனில் வந்து புக்கு
எய்து அருப்பம் அத்தனையும் எய்தினார்
மெய் தருப்பை நூல் பிறழும் மேனியார்
செய் தவத்துளார் வடிவின் தேடினார்

#18
அன்ன தன்மையால் அறிஞர் நாடி அச்
செந்நெல் வேலி சூழ் திரு நல் நாடு ஒரீஇ
தன்னை எண்ணும் அத்தகை புகுந்துளார்
துன்னு தண்டகம் கடிது துன்னினார்

#19
உண்டு அகத்துளார் உறையும் ஐம்_பொறிக்
கண்டகர்க்கு அரும் காலன் ஆயினார்
தண்டகத்தையும் தடவி ஏகினார்
முண்டகத்துறை கடிது முற்றினார்

#20
அள்ளல் நீர் எலாம் அமரர் மாதரார்
கொள்ளை மா முலைக் கலவை கோதையின்
கள்ளு நாறலின் கமல வேலி வாழ்
புள்ளும் மீன் உணா புலவு தீர்தலால்

#21
குஞ்சரம் குடைந்து ஒழுகு கொட்பதால்
விஞ்சை மன்னர்-பால் விரக மங்கைமார்
நஞ்சு வீணையின் நடத்து பாடலான்
அஞ்சுவார் கணீர் அருவி ஆறு அரோ

#22
கமுக வார் நெடும் கனக ஊசலில்
குமுத வாயினார் குயிலை ஏசுவார்
சமுக வாளியும் தனுவும் வாள் முகத்து
அமுத பாடலார் அருவி ஆடுவார்

#23
இனைய ஆய ஒண் துறையை எய்தினார்
நினையும் வேலை-வாய் நெடிது தேடுவார்
வினைய வார் குழல் திருவை மேவலார்
புனையும் நோயினார் கடிது போயினார்

#24
நீண்ட மேனியான் நெடிய தாளின்-நின்று
ஈண்டு கங்கை வந்து இழிவது என்னல் ஆம்
பாண்டு அ மலைப் படர் விசும்பினைத்
தீண்டுகின்ற தண் சிகரம் எய்தினார்

#25
இருள் உறுத்து மீது எழுந்த தெண் நிலா
மருள் உறுத்து வண் சுடர் வழங்கலால்
அருள் உறுத்திலா அடல் அரக்கன் மேல்
உருள் உறுத்த திண் கயிலை ஒத்ததால்

#26
விண் உற நிவந்த சோதி வெள்ளிய குன்றம் மேவி
கண்ணுற நோக்கலுற்றார் களியுறக் கனிந்த காமர்
பண் உறு கிளவிச் செவ் வாய் படை உறும் நோக்கினாளை
எண்ணுறு திறத்து காணார் இடர் உறும் மனத்தர் எய்த்தார்

#27
ஊதை போல் விசையின் வெம் கண் உழுவை போல் வயவர் ஓங்கல்
ஆதியை அகன்று செல்வார் அரக்கனால் வஞ்சிப்புண்ட
சீதை போகின்றாள் கூந்தல் வழீஇ வந்து புவனம் சேர்ந்த
கோதை போல் கிடந்த கோதாவரியினைக் குறுகிச் சென்றார்

#28
எழுகின்ற திரையிற்று ஆகி இழிகின்ற மணி நீர் யாறு
தொழுகின்ற சனகன் வேள்வி தொடங்கிய சுருதிச் சொல்லால்
உழுகின்ற பொழுதின் ஈன்ற ஒரு மகட்கு இரங்கி ஞாலம்
அழுகின்ற கலுழி மாரி ஆம் எனப் பொலிந்தது அன்றே

#29
ஆசு_இல் பேர் உலகு காண்போர் அளவைநூல் எனலும் ஆகிக்
காசொடு கனகம் தூவிக் கவினுறக் கிடந்த கான்யாறு
ஏசு_இல் போர் அரக்கன் மார்பினிடை பறித்து எருவை_வேந்தன்
வீசிய வடக மீக் கோள் ஈது என விளங்கிற்று அன்றே

#30
அ நதி முழுதும் நாடி ஆய் வளை மயிலை யாண்டும்
சந்நிதி உற்றிலாதார் நெடிது பின் தவிரச் சென்றார்
இன்ன தீது_இலாத தீது என்று யாவையும் எண்ணும் கோளார்
சொன்ன தீவினைகள் தீர்க்கும் சுவணகத் துறையில் புக்கார்

#31
சுரும்பொடு தேனும் வண்டும் அன்னமும் துவன்றிப் புள்ளும்
கரும்பொடு செந்நெல் காடும் கமல வாவிகளும் மல்கிப்
பெரும் புனல் மருதம் சூழ்ந்த கிடக்கை பின் கிடக்கச் சென்றார்
குரும்பை நீர் முரஞ்சும் சோலைக் குலிந்தமும் புறத்துக் கொண்டார்

#32
கொங்கணம் ஏழும் நீங்கிக் குட கடல் தரளக் குப்பைச்
சங்கு அணி பானல் நெய்தல் தண் புனல் தவிர ஏகித்
திங்களின் கொழுந்து சுற்றும் சிமய நீள் கோட்டுத் தேவர்
அங்கைகள் கூப்ப நின்ற அருந்ததிக்கு அருகர் ஆனார்

#33
அருந்ததிக்கு அருகு சென்று ஆண்டு அழகினுக்கு அழகு செய்தாள்
இருந்த திக்கு உணர்ந்திலாதார் ஏகினார் இடையர் மாதர்
பெரும் ததிக்கு அரும் தேன் மாறும் மரகதப் பெரும் குன்று எய்தி
இருந்து அதின் தீர்ந்து சென்றார் வேங்கடத்து இறுத்த எல்லை

#34
முனைவரும் மறை_வலோரும் முந்தை_நாள் சிந்தை மூண்ட
வினை வரும் நெறியை மாற்றும் மெய் உணர்வோரும் விண்ணோர்
எனைவரும் அமரர் மாதர் யாவரும் சித்தர் என்போர்
அனைவரும் அருவி நல் நீர் நாளும் வந்து ஆடுகின்றார்

#35
பெய்த ஐம்பொறியும் பெரும் காமமும்
வைத வெம் சொலின் மங்கையர் வாள் கணின்
எய்த ஐம் பெரு வாளியும் ஏன்று இற
செய் தவம் பல செய்குநர் தேவரால்

#36
வலம்கொள் நேமி மழை நிற வானவன்
அலங்கு தாள் இணை தாங்கிய அ மலை
விலங்கும் வீடு உறுகின்றன மெய் நெறி
புலன் கொள்வார்கட்கு அனையது பொய்க்குமோ

#37
ஆய குன்றினை எய்தி அரும் தவம்
மேய செல்வரை மேவினர் மெய் நெறி
நாயகன்-தனை நாளும் வணங்கிய
தூய நல் தவர் பாதங்கள் சூடினார்

#38
சூடி ஆண்டு அச் சுரி குழல் தோகையைத்
தேடி வார் புனல் தெண் திரைத் தொண்டை நல்
நாடு நண்ணுகின்றார் மறை நாவலர்
வேடம் மேயினார் வேண்டு உரு மேவுவார்

#39
குன்று சூழ்ந்த கடத்தொடும் கோவலர்
முன்றில் சூழ்ந்த படப்பையும் மொய் புனல்
சென்று சூழ்ந்த கிடக்கையும் தெண் திரை
மன்று சூழ்ந்த பரப்பும் மருங்கு எலாம்

#40
சூல் அடிப் பலவின் சுளை தூங்கு தேன்
கோல் அடிப்ப வெரீஇ குல மள்ளர் ஏர்ச்
சால் அடித் தரும் சாலியின் வெண் முளை
தோல் அடிக் கிளை அன்னம் துவைப்பன

#41
செருகுறும் கணின் தேம் குவளைக் குலம்
அருகு உறங்கும் வயல் மருங்கு ஆய்ச்சியர்
இரு குறங்கின் பிறங்கிய வாழையில்
குருகு உறங்கும் குயிலும் துயிலுமால்

#42
தெருவின் ஆர்ப்புறும் பல்_இயம் தேர் மயில்
கருவி மா மழை என்று களிப்புறா
பொருநர் தண்ணுமைக்கு அன்னமும் போகலா
மருவினார்க்கும் மயக்கம் உண்டாம்-கொலோ

#43
தேரை வன் தலை தெங்கு இளம் பாளையை
நாரை என்று இளம் கெண்டை நடுங்குவ
தாரை வன் தலைத் தண் இள ஆம்பலைச்
சேரை என்று புலம்புவ தேரையே

#44
நள்ளி வாங்கு கடை இள நவ்வியர்
வெள்ளி வால் வளை வீசிய வெண் மணி
புள்ளி நாரைச் சினை பொரியாத என்று
உள்ளி ஆமை முதுகின் உடைப்பரால்

#45
சேட்டு இளம் கடுவன் சிறு புன் கையில்
கோட்ட தேம் பலவின் கனி கூன் சுளை
தோட்டு அமைந்த பொதும்பரில் தூங்கு தேன்
சட்டம் என்ன சென்று ஈ இனம் மொய்ப்பன

#46
அன்ன தொண்டை நல் நாடு கடந்து அகன்
பொன்னி நாடு பொருவிலர் எய்தினார்
செந்நெலும் கரும்பும் கமுகும் செறிந்து
இன்னல் செய்யும் நெறி அரிது ஏகுவார்

#47
கொடிறு தாங்கிய வாய்க் குழு நாரை வாழ்
தடறு தாங்கிய கூன் இளம் தாழையின்
மிடறு தாங்கும் விருப்பு உடை தீம் கனி
இடறுவார் நறும் தேனின் இழுக்குவார்

#48
குழுவும் மீன் வளர் குட்டம் எனக் கொளா
எழுவு பாடல் இமிழ் கருப்பு ஏந்திரத்து
ஒழுகு சாறு அகன் கூனையின் ஊழ்முறை
முழுகி நீர் கரும் காக்கை முளைக்குமே

#49
பூ நெருங்கிய புள் உறு சோலைகள்
தேன் ஒருங்கு சொரிதலின் தேர்வு இல
மீன் நெருங்குறும் வெள்ளம் வெரீஇப் பல
வானரங்கள் மரங்களின் வைகுமால்

#50
அனைய பொன்னி அகன் புனல் நாடு ஒரீஇ
மனையின் மாட்சி குலாம் மலை மண்டலம்
வினையின் நீங்கிய பண்பினர் மேயினார்
இனிய தென் தமிழ்நாடு சென்று எய்தினார்

#51
அத் திருத் தகு நாட்டினை அண்டர்_நாடு
ஒத்திருக்கும் என்றால் உரை ஒக்குமோ
எத்திறத்தினும் ஏழ் உலகும் புகழ்
முத்தும் முத்தமிழும் தந்து முற்றலால்

#52
என்ற தென் தமிழ்நாட்டினை எங்கணும்
சென்று நாடித் திரிந்து வருந்தினார்
பொன்றுவாரின் பொருந்தினர் போயினார்
துன்று_அல்_ஓதியைக் கண்டிலர் துன்பினார்

#53
வன் திசைக் களிறு அன்ன மயேந்திரக்
குன்று இசைத்தது வல்லையில் கூடினார்
தென்திசைக் கடல் சீகர மாருதம்
நின்று இசைக்கும் நெடு நெறி நீங்கினார்

@16 சம்பாதிப் படலம்

#1
மழைத்த விண்ணகம் என முழங்கி வான் உற
இழைத்த வெண் திரைக் கரம் எடுத்து இலங்கையாள்
உழைத் தடம் கண்ணி என்று உரைத்திட்டு ஊழின் வந்து
அழைப்பதே கடுக்கும் அவ் ஆழி நோக்கினார்

#2
விரிந்து நீர் எண் திசை மேவி நாடினீர்
பொருந்துதிர் மயேந்திரத்து என்று போக்கிய
அரும் துணைக் கவிகளாம் அளவு_இல் சேனையும்
பெரும் திரைக் கடல் எனப் பெரிது கூடிற்றே

#3
யாவரும் அவ்வயின் எளிதின் எய்தினார்
பூ வரு புரி குழல் பொரு_இல் கற்பு உடைத்
தேவியைக் காண்கிலார் செய்வது ஓர்கிலார்
நா உறக் குழறிட நவில்கின்றார் அரோ

#4
அற்றது நாள் வரை அவதி காட்சியும்
உற்றிலம் இராகவன் உயிரும் பொன்றுமால்
கொற்றவன் ஆணையும் குறித்து நின்றனம்
இற்றது நம் செயல் இனி என்று எண்ணினார்

#5
அரும் தவம் புரிதுமோ அன்னது அன்று எனின்
மருந்து அரு நெடும் கடு உண்டு மாய்துமோ
திருந்தியது யாது அது செய்து தீர்தும் என்று
இருந்தனர் தம் உயிர்க்கு இறுதி எண்ணுவார்

#6
கரை பொரு கடல் அயல் கனக மால் வரை
நிரை துவன்றிய என நெடிது இருந்தவர்க்கு
உரைசெயும் பொருள் உளது என உணர்த்தினான்
அரசு இளம் கோளரி அயரும் சிந்தையான்

#7
நாடி நாம் கொணருதும் நளினத்தாளை வான்
மூடிய உலகினை முற்றும் முட்டி என்று
ஆடவர் திலகனுக்கு அன்பினார் எனப்
பாடவம் விளம்பினம் பழியில் மூழ்குவாம்

#8
செய்தும் என்று அமைந்தது செய்து தீர்ந்திலம்
நொய்து சென்று உற்றது நுவலகிற்றிலம்
எய்தும் வந்து என்பது ஓர் இறையும் கண்டிலம்
உய்தும் என்றால் இது ஓர் உரிமைத்து ஆகுமோ

#9
எந்தையும் முனியும் எம் இறை இராமனும்
சிந்தனை வருந்தும் அச் செய்கை காண்குறேன்
நுந்துவென் உயிரினை நுணங்கு கேள்வியீர்
புந்தியின் உற்றது புகல்விர் ஆம் என்றான்

#10
விழுமியது உரைத்தனை விசயம் வீற்றிருந்து
எழுவொடும் மலையொடும் இகலும் தோளினாய்
அழுதுமோ இருந்து நம் அன்பு பாழ்படத்
தொழுதுமோ சென்று எனச் சாம்பன் சொல்லினான்

#11
மீண்டு இனி ஒன்று நாம் விளம்ப மிக்கது என்
மாண்டுறுவது நலம் என வலித்தனம்
ஆண்தகை அரசு இளங்குமர அன்னது
வேண்டலின் நின் உயிர்க்கு உறுதி வேண்டுமால்

#12
என்று அவன் உரைத்தலும் இருந்த வாலி_சேய்
குன்று உறழ்ந்து என வளர் குவவுத் தோளினீர்
பொன்றி நீர் மடிய யான் போவெனேல் அது
நன்றதோ உலகமும் நயக்கற்பாலதோ

#13
சான்றவர் பழி உரைக்கு அஞ்சித் தன் உயிர்
போன்றவர் மடிதரப் போந்துளான் என
ஆன்ற பேர் உலகுளார் அறைதல் முன்னம் யான்
வான் தொடர்குவென் என மறித்தும் கூறுவான்

#14
எல்லை நம் இறுதி யாய்க்கும் எந்தைக்கும் யாவரேனும்
சொல்லவும் கூடும் கேட்டால் துஞ்சவும் அடுக்கும் கண்ட
வில்லியும் இளையகோவும் வீவது திண்ணம் அச் சொல்
மல்லல் நீர் அயோத்தி புக்கால் வாழ்வரோ பரதன் மற்றோர்

#15
பரதனும் பின்னுளோனும் பயந்தெடுத்தவரும் ஊரும்
சரதமே முடிவர் கெட்டேன் சனகி என்று உலகம் சாற்றும்
விரத மா தவத்தின் மிக்க விளக்கினால் உலகத்து யார்க்கும்
கரை தெரிவு இலாத துன்பம் விளைந்தவா எனக் கலுழ்ந்தான்

#16
பொருப்பு உறழ் வயிரத் திண் தோள் பொரு சினத்து ஆளி போல்வான்
தரிப்பு இலாது உரைத்த மாற்றம் தடுப்ப_அரும் தகைத்தது ஆய
நெருப்பையே விளைத்த போல நெஞ்சமும் மறுகக் கேட்டு
விருப்பினால் அவனை நோக்கி விளம்பினன் எண்கின் வேந்தன்

#17
நீயும் நின் தாதையும் நீங்க நின் குலத்
தாயம் வந்தவரொடும் தனையர் இல்லையால்
ஆயது கருதினம் அன்னது அன்று எனின்
நாயகர் இறுதியும் நவிலற்பாலதோ

#18
ஏகு நீ அவ்வழி எய்தி இவ் வழித்
தோகையைக் கண்டிலா வகையும் சொல்லி எம்
சாகையும் உணர்த்துதி தவிர்த்தி சோகம் போர்
வாகையாய் என்றனன் வரம்பு_இல் ஆற்றலான்

#19
அவன் அவை உரைத்த பின் அனுமன் சொல்லுவான்
புவனம் மூன்றினும் ஒரு புடையில் புக்கிலம்
கவனம் மாண்டவர் எனக் கருத்திலார் எனத்
தவன வேகத்தினீர் சலித்திரோ என்றான்

#20
பின்னரும் கூறுவான் பிலத்தில் வானத்தில்
பொன் வரைக் குடுமியில் புறத்துள் அண்டத்தில்
நல் நுதல் தேவியைக் காண்டும் நாம் எனின்
சொன்ன நாள் அவதியை இறைவன் சொல்லுமோ

#21
நாடுதலே நலம் இன்னும் நாடி அத்
தோடு அலர் குழலி-தன் துயரின் சென்று அமர்
வீடிய சடாயுவைப் போல வீடுதல்
பாடவம் அல்லது பழியிற்று ஆம் என்றான்

#22
என்றலும் கேட்டனன் எருவை_வேந்தன் தன்
பின் துணை ஆகிய பிழைப்பு_இல் வாய்மையான்
பொன்றினன் என்ற சொல் புலம்பும் நெஞ்சினன்
குன்று என நடந்து அவர்க் குறுகல் மேயினான்

#23
முறை உடை எம்பியார் முடிந்தவா எனாப்
பறையிடு நெஞ்சினன் பதைக்கும் மேனியன்
இறை உடைக் குலிசவேல் எறிதலால் முனம்
சிறை அறு மலை எனச் செல்லும் செய்கையான்

#24
மிடல் உடை எம்பியை வீட்டும் வெம் சினப்
படை உளர் ஆயினார் பாரில் யார் எனா
உடலினை வழிந்து போய் உவரி நீர் உகக்
கடலினைப் புரையுறும் அருவிக் கண்ணினான்

#25
உழும் கதிர் மணி அணி உமிழும் மின்னினான்
மழுங்கிய நெடும் கணின் வழங்கும் மாரியான்
புழுங்குவான் அழுங்கினான் புடவி மீதினில்
முழங்கி வந்து இழிவது ஓர் முகிலும் போல்கின்றான்

#26
வள்ளியும் மரங்களும் மலையும் மண் உற
தெள்ளு நுண் பொடிபடக் கடிது செல்கின்றான்
தள்ளு வன் கால் பொரத் தரணியில் தவழ்
வெள்ளி அம் பெரு மலை பொருவு மேனியான்

#27
எய்தினன் இருந்தவர் இரியல்போயினார்
ஐயன் அ மாருதி அழலும் கண்ணினான்
கைதவ நிசிசர கள்ள வேடத்தை
உய்தி-கொல் இனி எனா உருத்து முன் நின்றான்

#28
வெம் கதம் வீசிய மனத்தன் விம்மலன்
பொங்கிய சோரி நீர் பொழியும் கண்ணினன்
சங்கையில் சழக்கிலன் என்னும் தன்மையை
இங்கித வகையினால் எய்த நோக்கினான்

#29
நோக்கினன் நின்றனன் நுணங்கு கேள்வியான்
வாக்கினால் ஒரு மொழி வழங்குறாத முன்
தாக்க_அரும் சடாயுவைத் தருக்கினால் உயிர்
நீக்கினர் யார் அது நிரப்புவீர் என்றான்

#30
உன்னை நீ உள்ளவாறு உரைப்பின் உற்றதைப்
பின்னை யான் நிரப்புதல் பிழைப்பு இன்றாகுமால்
என்னும் மாருதி எதிர் எருவை_வேந்தனும்
தன்னை ஆம் தன்மையைச் சாற்றல் மேவினான்

#31
மின் பிறந்தால் என விளங்கு எயிற்றினாய்
என் பிறந்தார்க்கு இடை எய்தலாத என்
பின் பிறந்தான் துணை பிரிந்த பேதையேன்
முன் பிறந்தேன் என முடியக் கூறினான்

#32
கூறிய வாசகம் கேட்டு கோதிலான்
ஊறிய துன்பத்தின் உவரியுள் புகா
ஏறினன் உணர்த்தினன் இகல் இராவணன்
வீறிய வாளிடை விளிந்தது ஆம் என்றான்

#33
அவ் உரை கேட்டலும் அசனி ஏற்றினால்
தவ்விய கிரி எனத் தரையின் வீழ்ந்தனன்
வெவ் உயிரா உயிர் பதைப்ப விம்மினான்
இவ் உரை இவ் உரை எடுத்து இயம்பினான்

#34
விளையா நீள் சிறகு இன்றி வெந்து உகத்
தளை ஆனேன் உயிர் போதல் தக்கதால்
வளையான் நேமியன் வன்மை சால் வலிக்கு
இளையானே இது என்ன மாயமோ

#35
மலரோன் நின்றுளன் மண்ணும் விண்ணும் உண்டு
உலையா நீடு அறம் இன்னும் உண்டு அரோ
நிலை ஆர் கற்பமும் நின்றது இன்று நீ
இலையானாய் இது என்ன தன்மையோ

#36
உடனே அண்டம் இரண்டும் முந்து உயிர்த்து
இடு அ நாள் வந்து இருவேமும் எய்தி யான்
விட நீயே தனிச் சென்ற வீரமும்
கடனே வெம் கலுழற்கும் மேன்மையாய்

#37
ஒன்றா மூன்று உலகத்துளோரையும்
வென்றான் என்னினும் வீர நிற்கு நேர்
நின்றானே அவ் அரக்கன் நின்னையும்
கொன்றானே இது என்ன கொள்கையோ

#38
என்றுஎன்று ஏங்கி இரங்கி இன்னலால்
பொன்றும் தன்மை புகுந்த போது அவற்கு
ஒன்றும் சொல் கொடு உணர்ச்சி நல்கினான்
வன் திண் தோள் வரை அன்ன மாருதி

#39
தேற்றத் தேறி இருந்த செங்கணான்
கூற்று ஒப்பான் கொலை வாள் அரக்கனோடு
ஏற்று போர்செய்தது என் நிமித்து எனக்
காற்றின் சேய் இது கட்டுரைக்குமால்

#40
எம் கோலான் அவ் இராமன் இல் உளாள்
செங்கோலான் மகள் சீதை செவ்வியாள்
வெம் கோல் வஞ்சன் விளைத்த மாயையால்
தம் கோனைப் பிரிவுற்ற தன்மையாள்

#41
கொண்டு ஏகும் கொலை வாள் அரக்கனைக்
கண்டான் நும்பி அறம் கடக்கிலான்
வண்டு ஆர் கோதையை வைத்து நீங்கு எனா
திண் தேரான் எதிர் சென்று சீறினான்

#42
சீறித் தீயவன் ஏறு தேரையும்
கீறித் தோள்கள் கிழித்து அழித்த பின்
தேறித் தேவர்கள் தேவன் தெய்வ வாள்
வீறப் பொன்றினன் மெய்ம்மையோன் என்றான்

#43
விளித்தான் அன்னது கேட்டு மெய்ம்மையோய்
தெளித்து ஆடத் தகு தீர்த்தன்-மாட்டு உயிர்
அளித்தானே அது நன்றுநன்று எனாக்
களித்தான் வாரி கலுழ்ந்த கண்ணினான்

#44
பைம் தார் எங்கள் இராமன் பத்தினி
செம் தாள் வஞ்சி திறத்து இறந்தவன்
மைந்தா எம்பி வரம்பு_இல் சீர்த்தியோடு
உய்ந்தான் அல்லது உலந்தது உண்மையோ

#45
அறம்_அன்னானுடன் எம்பி அன்பினோடு
உறவு உன்னா உயிர் ஒன்ற ஓவினான்
பெற ஒண்ணாதது ஓர் பேறு பெற்றவர்க்கு
இறவு என் ஆம் இதின் இன்பம் யாவதோ

#46
என்றுஎன்று ஏங்கி இரங்கி இன் புனல்
சென்று அங்கு ஆடுதல் செய்து தீர்ந்த பின்
வன் திண் தோள் வலி மாறிலாதவன்
துன்றும் தாரவர்க்கு இன்ன சொல்லினான்

#47
வாழ்வித்தீர் எனை மைந்தர் வந்து நீர்
ஆழ்வித்தீர்_அலிர் துன்ப ஆழி-வாய்
கேள்வித் தீவினை கீறினீர் இருள்
போழ்வித்தீர் உரை பொய்யின் நீங்கினீர்

#48
எல்லீரும் அவ் இராம நாமமே
சொல்லீர் என் சிறை தோன்றும் சோர்வு இலா
நல்லீர் அப் பயன் நண்ணும் நல்ல சொல்
வல்லீர் வாய்மை வளர்க்கும் மாண்பினீர்

#49
என்றான் அன்னது காண்டும் யாம் எனா
நின்றார் நின்றுழி நீல மேனியான்
நன்று ஆம் நாமம் நவின்று நல்கினார்
வன் தோளான் சிறை வானம் தாயவே

#50
சிறை பெற்றான் திகழ்கின்ற மேனியான்
முறை பெற்று ஆம் உலகு எங்கும் மூடினான்
நிறை பெற்று ஆவி நெருப்பு உயிர்க்கும் வாள்
உறை பெற்றால் எனல் ஆம் உறுப்பினான்

#51
தெருண்டான் மெய்ப் பெயர் செப்பலோடும் வந்து
உருண்டான் உற்ற பயத்தை உன்னினார்
மருண்டார் வானவர்_கோனை வாழ்த்தினார்
வெருண்டார் சிந்தை வியந்து விம்முவார்

#52
அன்னானைக் கடிது அஞ்சலித்து நீ
முன் நாள் உற்றது முற்றும் ஓது எனச்
சொன்னார் சொற்றது சிந்தை தோய்வுறத்
தன்னால் உற்றது தான் விளம்புவான்

#53
தாய் எனத்தகைய நண்பீர் சம்பாதி சடாயு என்பேம்
சே ஒளிச் சிறைய வேகக் கழுகினுக்கு அரசு செய்வேம்
பாய் திரைப் பரவை ஞாலம் படர் இருள் பருகும் பண்பின்
ஆய் கதிர்க் கடவுள் தேர் ஊர் அருணனுக்கு அமைந்த மைந்தர்

#54
ஆய் உயர் உம்பர் நாடு காண்டும் என்று அறிவு தள்ள
மீ உயர் விசும்பினூடு மேக்கு உறச் செல்லும் வேலை
காய் கதிர்க் கடவுள் தேரைக் கண்ணுற்றேம் கண்ணுறா முன்
தீயையும் தீக்கும் தெய்வ செங்கதிர்ச்செல்வன் சீறி

#55
முந்திய எம்பி மேனி முருங்கு அழல் முடுகும் வேலை
எந்தை நீ காத்தி என்றான் யான் இரு சிறையும் ஏந்தி
வந்தனென் மறைத்தலோடும் மற்று அவன் மறையப் போனான்
வெந்து மெய் இறகு தீந்து விழுந்தனென் விளிகிலாதேன்

#56
மண்ணிடை விழுந்த என்னை வானிடை வயங்கு வள்ளல்
கண்ணிடை நோக்கி உற்ற கருணையான் சனகன் காதல்
பெண் இடையீட்டின் வந்த வானரர் இராமன் பேரை
எண்ணிடை உற்ற காலத்து இறகு பெற்று எழுதி என்றான்

#57
என்றலும் இராமன்-தன்னை ஏத்தினர் இறைஞ்சி எந்தாய்
புன் தொழில் அரக்கன் மற்று அத் தேவியைக் கொண்டு போந்தான்
தென்திசை என்ன உன்னித் தேடியே வந்தும் என்றார்
நன்று நீர் வருந்தல் வேண்டா நான் இது நவில்வென் என்றான்

#58
பாகு ஒன்று குதலையாளைப் பாதக அரக்கன் பற்றிப்
போகின்ற பொழுது கண்டேன் புக்கனன் இலங்கை புக்கு
வேகின்ற உள்ளத்தாளை வெம் சிறையகத்து வைத்தான்
ஏகு-மின் காண்டிர் ஆங்கே இருந்தனள் இறைவி இன்னும்

#59
ஓசனை ஒரு நூறு உண்டால் ஒலி கடல் இலங்கை அவ் ஊர்
பாச வெம் கரத்துக் கூற்றும் கட்புலன் பரப்ப அஞ்சும்
நீசன் அவ் அரக்கன் சீற்றம் நெருப்புக்கும் நெருப்பு நீங்கள்
ஏச_அரும் குணத்தீர் சேறல் எப் பரிசு இயைவது என்றான்

#60
நான்முகத்து ஒருவன் மற்றை நாரி ஓர் பாகத்து அண்ணல்
பால் முகப் பரவைப் பள்ளிப் பரம்பரன் பணி என்றாலும்
காலனுக்கேயும் சேறல் அரிது இது காவல் தன்மை
மேல் உமக்கு உறுவது எண்ணிச் செல்லு-மின் விளிவு_இல் நாளீர்

#61
எல்லீரும் சேறல் என்பது எளிது அன்று அவ் இலங்கை மூதூர்
வல்லீரேல் ஒருவர் ஏகி மறைந்து அவண் ஒழுகி வாய்மை
சொல்லீரே துயரை நீக்கித் தோகையைத் தெருட்டி மீள்திர்
அல்லீரேல் என் சொல் தேறி உணர்த்து-மின் அழகற்கு அம்மா

#62
காக்குநர் இன்மையால் அக் கழுகு இனம் முழுதும் கன்றிச்
சேக்கை விட்டு இரியல்போகித் திரிதரும் அதனைத் தீர்ப்பான்
போக்கு எனக்கு அடுத்த நண்பீர் நல்லது புரி-மின் என்னா
மேக்கு உற விசையின் சென்றான் சிறையினால் விசும்பு போர்ப்பான்

@17 மயேந்திரப் படலம்

#1
பொய்யுரைசெய்யான் புள்_அரசு என்றே புகலுற்றார்
கை உறை நெல்லித் தன்மையின் எல்லாம் கரைகண்டாம்
உய் உரை பெற்றாம் நல்லவை எல்லாம் உற எண்ணிச்
செய்யு-மின் ஒன்றோ செய் வகை நொய்தின் செய வல்லீர்

#2
சூரியன் வெற்றிக் காதலனோடும் சுடர் வில் கை
ஆரியனைச் சென்றே தொழுது உற்றது அறைகிற்பின்
சீர்நிலை முற்றும் தேறுதல் கொற்றச் செயல் அம்மா
வாரி கடப்போர் யாவர் எனத் தம் வலி சொல்வார்

#3
மாள வலித்தேம் என்றும் இ மாளா வசையோடும்
மீளவும் உற்றேம் அன்னவை தீரும் வெளி பெற்றேம்
காள நிறத்தோடு ஒப்புறும் இ நேர் கடல் தாவுற்று
ஆளும் நலத்தீர் ஆளு-மின் எம் ஆருயிர் அம்மா

#4
நீலன் முதல் பேர் போர் கெழு கொற்ற நெடு வீரர்
சால உரைத்தார் வாரி கடக்கும் தகவின்மை
வேலை கடப்பென் மீள மிடுக்கு இன்று என விட்டான்
வாலி அளிக்கும் வீர வயப் போர் வசையில்லான்

#5
வேதம் அனைத்தும் தேர்தர எட்டா ஒரு மெய்யன்
பூதலம் முற்றும் ஈர் அடி வைத்துப் பொலி போழ்து யான்
மாதிரம் எட்டும் சூழ் பறை வைத்தே வர மேரு
மோத இளைத்தே தாள் உலைவுற்றேன் விறல் மொய்ம்பீர்

#6
ஆதலின் இப் பேர் ஆர்கலி குப்புற்று அகழ் இஞ்சி
மீது கடந்து அத் தீயவர் உட்கும் வினையோடும்
சீதை-தனைத் தேர்ந்து இங்கு உடன் மீளும் திறன் இன்று என்று
ஓதி இறுத்தான் நாலுமுகத்தான் உதவுற்றான்

#7
யாம் இனி இப்போது ஆர் இடர் துய்த்து இங்கு இனி யாரைப்
போம் என வைப்போம் என்பது புன்மை புகழ் அன்றே
கோ முதல்வர்க்கு ஏறு ஆகிய கொற்றக் குமரா நம்
நாமம் நிறுத்திப் பேர் இசை வைக்கும் நவை இல்லோன்

#8
ஆரியன் முன்னர்ப் போதுற உற்ற அதனாலும்
காரியம் எண்ணிச் சோர்வு அற முற்றும் கடனாலும்
மாருதி ஒப்பார் வேறு இலை என்னா அயன்_மைந்தன்
சீரியன் மல் தோள் ஆண்மை விரிப்பான் இவை செப்பும்

#9
மேலை விரிஞ்சன் வீயினும் வீயா மிகை நாளீர்
நூலை நயந்து நுண்ணிது உணர்ந்தீர் நுவல் தக்கீர்
காலனும் அஞ்சும் காய் சின மொய்ம்பீர் கடன் நின்றீர்
ஆலம் நுகர்ந்தான் என்ன வயப் போர் அடர்கிற்பீர்

#10
வெப்புறு செம் தீ நீர் வளியாலும் விளியாதீர்
செப்புறு தெய்வப் பல் படையாலும் சிதையாதீர்
ஒப்பு உறின் ஒப்பார் நும் அலது இல்லீர் ஒருகாலே
குப்புறின் அண்டத்து அப்புறமேயும் குதிகொள்வீர்

#11
நல்லவும் ஒன்றோ தீயவும் நாடி நவை தீரச்
சொல்லவும் வல்லீர் காரியம் நீரே துணிவுற்றீர்
வெல்லவும் வல்லீர் மீளவும் வல்லீர் மிடல் உண்டே
கொல்லவும் வல்லீர் தோள் வலி என்றும் குறையாதீர்

#12
மேரு கிரிக்கும் மீது உற நிற்கும் பெரு மெய்யீர்
மாரி துளிக்கும் தாரை இடுக்கும் வர வல்லீர்
பாரை எடுக்கும் நோன்மை வலத்தீர் பழி அற்றீர்
சூரியனைச் சென்று ஒண் கையகத்தும் தொட வல்லீர்

#13
அறிந்து திறத்து ஆறு எண்ணி அறத்து ஆறு அழியாமை
மறிந்து உருளப் போர் வாலியை வெல்லும் மதி வல்லீர்
பொறிந்து இமையோர்_கோன் வச்சிர பாணம் புக மூழ்க
எறிந்துழி மற்று ஓர் புன் மயிரேனும் இழவாதீர்

#14
போர் முன் எதிர்ந்தால் மூ_உலகேனும் பொருள் ஆகா
ஓர்வு_இல் வலம்கொண்டு ஒல்கல்_இல் வீரத்து உயர் தோளீர்
பார் உலகு எங்கும் பேர் இருள் சீக்கும் பகலோன் முன்
தேர் முன் நடந்தே ஆரிய நூலும் தெரிவுற்றீர்

#15
நீதியில் நின்றீர் வாய்மை அமைந்தீர் நினைவாலும்
மாதர் நலம் பேணாது வளர்ந்தீர் மறை எல்லாம்
ஓதி உணர்ந்தீர் ஊழி கடந்தீர் உலகு ஈனும்
ஆதி அயன்தானே என யாரும் அறைகின்றீர்

#16
அண்ணல் அ மைந்தர்க்கு அன்பு சிறந்தீர் அதனாலே
கண்ணி உணர்ந்தீர் கருமம் நுமக்கே கடன் என்னத்
திண்ணிது அமைந்தீர் செய்து முடிப்பீர் சிதைவு இன்றால்
புண்ணியம் ஒன்றே என்றும் நிலைக்கும் பொருள் கொண்டீர்

#17
அடங்கவும் வல்லீர் காலம் அது அன்றேல் அமர் வந்தால்
மடங்கல் முனிந்தால் அன்ன வலத்தீர் மதி நாடித்
தொடங்கியது ஒன்றோ முற்றும் முடிக்கும் தொழில் அல்லால்
இடம் கெட வெவ்வாய் ஊறு கிடைத்தால் இடையாதீர்

#18
ஈண்டிய கொற்றத்து இந்திரன் என்பான் முதல் யாரும்
பூண்டு நடக்கும் நல் நெறியானும் பொறையானும்
பாண்டிதர் நீரே பார்த்து இனிது உய்க்கும்படி வல்லீர்
வேண்டிய போதே வேண்டுவ எய்தும் வினை_வல்லீர்

#19
ஏகு-மின் ஏகி எம் உயிர் நல்கி இசை கொள்ளீர்
ஓகை கொணர்ந்து உம் மன்னையும் இன்னல் குறைவு இல்லா
சாகரம் முற்றும் தாவிடும் நீர் இக் கடல் தாவும்
வேகம் அமைந்தீர் என்று விரிஞ்சன்_மகன் விட்டான்

#20
சாம்பன் இயம்ப தாழ் வதனத் தாமரை நாப்பண்
ஆம்பல் விரிந்தால் அன்ன சிரிப்பன் அறிவாளன்
கூம்பலொடும் சேர் கைக் கமலத்தன் குலம் எல்லாம்
ஏம்பல் வரத் தன் சிந்தை தெரிப்பான் இவை சொன்னான்

#21
இலங்கையை இடந்து வேரொடு இவ்வயின் தருக என்றாலும்
விலங்கினர்-தம்மை எல்லாம் வேரொடும் விளிய நூறி
பொலம் குழை மயிலைக் கொண்டு போது எனப் புகன்றிட்டாலும்
கலங்கலீர் உரைத்த மாற்றம் முடிக்குவல் கடிது காண்டிர்

#22
ஓசனை ஒன்று நூறும் உள் அடி உள்ளது ஆக
ஈசன் மண் அளந்தது ஏய்ப்ப இரும் கடல் இனிது தாவி
வாசவன் முதலோர் வந்து மலையினும் இலங்கை வாழும்
நீசரை எல்லாம் நூறி நினைத்தது முடிப்பல் பின்னும்

#23
நீயீரே நினைவின் முன்னம் நெடும் திரை பரவை ஏழும்
தாய் உலகு அனைத்தும் வென்று தையலைத் தருதற்கு ஒத்தீர்
போய் இது புரிதி என்று புலமை தீர் புன்மை காண்டற்கு
ஏயினீர் என்னின் என்னின் பிறந்தவர் யாவர் இன்னும்

#24
முற்றும் நீர் உலகம் முற்றும் விழுங்குவான் முழங்கி முந்நீர்
உற்றதே எனினும் அண்டம் உடைந்துபோய் உயர்ந்ததேனும்
இற்றை நும் அருளும் எம் கோன் ஏவலும் இரண்டு பாலும்
கற்றை வார் சிறைகள் ஆகக் கலுழனின் கடப்பல் காண்டீர்

#25
ஈண்டு இனிது உறை-மின் யானே எறி கடல் இலங்கை எய்தி
மீண்டு இவண் வருதல்-காறும் விடை தம்-மின் விரைவின் என்னா
ஆண்டு அவர் உவந்து வாழ்த்த அலர் மழை அமரர் தூவ
சேண் தொடர் சிமயத் தெய்வ மயேந்திரத்து உம்பர்ச் சென்றான்

#26
பொரு_அரு வேலை தாவும் புந்தியான் புவனம் தாய
பெரு வடிவு உயர்ந்த மாயோன் மேக்கு உறப் பெயர்த்த தாள் போல்
உரு அறி வடிவின் உம்பர் ஓங்கினன் உவமையாலும்
திருவடி என்னும் தன்மை யாவர்க்கும் தெரிய நின்றான்

#27
பார் நிழல் பரப்பும் பொன் தேர் வெயில் கதிர் பரிதி_மைந்தன்
போர் நிழல் பரப்பும் மேலோர் புகழ் என உலகம் புக்குத்
தார் நிழல் பரப்பும் தோளான் தடம் கடல் தாவா முன்னம்
நீர் நிழல் உவரி தாவி இலங்கை மேல் செல்ல நின்றான்

#28
பகு வாய மடங்கல் வைகும் படர் வரை முழுதும் மூழ்க
உகு வாய விடம் கொள் நாகத்து ஒத்த வால் சுற்றி ஊழின்
நெகு வாய சிகர கோடி நெரிவன தெரிய நின்றான்
மக ஆமை முதுகில் தோன்றும் மந்தரம் எனலும் ஆனான்

#29
மின் நெடும் கொண்டல் தாளின் வீக்கிய கழலின் ஆர்ப்ப
தன் நெடும் தோற்றம் வானோர் கட்புலத்து எல்லை தாவ
வல் நெடும் சிகர கோடி மயேந்திரம் அண்டம் தாங்கும்
பொன் நெடும் தூணின் பாத சிலை என பொலிந்து நின்றான்
** கம்பராமாயணம்
&41 கிட்கிந்தா காண்டம் - மிகைப்பாடல்கள்

@2. கிட்கிந்தா காண்டம் - அனுமப் படலம் - மிகைப்பாடல்கள்

#1
தாரன் நீலனை மருவு தாம மாருதியை முதல்
வீரரோடு இரவி_சுதன் மேரு மால் வரையை நிகர்
பார மா மலையின் ஒரு பாகம் ஓடுதல் புரிய
ஆர மார்பரும் அதனின் ஆகுமாறு உறல் கருதி

#2
மானை நாடுதல் புரிஞர் வாலி ஏவலின் வருதல்
ஆனவாறு என மறுகி ஆவி சோர் நிலையர் தொடர்
ஏனை வானரர் சிலரும் ஏக மா முழையில் முழு
ஞான நாதரை அறிவின் நாடி மாருதி மொழியும்

#3
மற்றும் இவ் உலகத்து உள்ள முனிவர் வானவர்கள் ஆர் இச்
சொல் திறம் உடையார் மற்று எச் சுருதியின் தொகுதி யாவும்
முற்று அறிதரும் இ மாணி மொழிக்கு எதிர் முதல்வர் ஆய
பெற்றியர் மூவர்க்கேயும் பேராற்றல் அரிது-மன்னோ

#4
இருக்கன் மா மைந்தரான வாலியும் இளவல்தானும்
செருக்கினோடு இருக்கும் காலை செறுநரின் சீறி வாலி
நெருக்குற வெருவி இந்த நெடும் குவட்டு இருத்தான்-தன்பால்
மருக் குலாம் தாரீர் வந்தது அவன் செய் மா தவத்தின் அன்றோ

@3. கிட்கிந்தா காண்டம் - நட்புக் கோட் படலம் - மிகைப்பாடல்கள்

#1
பிரிவு_இல் கான் அது-தனில் பெரிய சூர்ப்பணகை-தன்
கரிய மா நகிலொடும் காதொடும் நாசியை
அரியினார் அவள் சொலத் திரிசிரா அவனொடும்
கரனொடும் அவுணரும் காலன் வாய் ஆயினார்

#2
கடுத்து எழு தமத்தைச் சீறும் கதிர்ச் சுடர் கடவுள் ஆய்ந்து
வடித்த நூல் முழுதும் தான் ஓர் வைகலின் வரம்பு தோன்றப்
படித்தவன் வணங்கி வாழ்த்தி பரு மணி கனகத் தோள் மேல்
எடுத்தனன் இரண்டு பாலும் இருவரை ஏகலுற்றான்

#3
என்று கால்_மகன் இயம்ப ஈசனும்
நன்றுநன்று எனா நனி தொடர்ந்து பின்
சென்ற வாலி முன் சென்ற செம்மல்தான்
அன்று வாவுதற்கு அறிந்தனன்-கொலாம்

#4
இனையவா வியந்து இளவல்-தன்னொடும்
வனையும் வார் கழல் கருணை வள்ளல் பின்பு
இனைய வீரர் செய்தமை இயம்பு எனப்
புனையும் வாகையான் புகறல் மேயினான்

#5
திறத்து மா மறை அயனொடு ஐம்முகன் பிறர் தேடிப்
புறத்து அகத்து உணர் அரிய தன் பொலன் அடிக் கமலம்
உறச் சிவப்ப இத் தரை மிசை உறல் அறம் ஆக்கல்
மறத்தை வீட்டுதல் அன்றியே பிறிது மற்று உண்டோ

#6
நீலகண்டனும் நேமியும் குலிசனும் மலரின்
மேலுளானும் வந்து அவன் உயிர்க்கு உதவினும் வீட்டி
ஆலும் உன் அரசு உரிமையோடு அளிக்குவென் அனலோன்
சாலும் இன்று எனது உரைக்கு அரும் சான்று எனச் சமைந்தான்

#7
மண்ணுள் ஓர் அரா முதுகிடை முளைத்த மா மரங்கள்
எண்ணில் ஏழ் உள அவற்றில் ஒன்று உருவ எய்திடுவோன்
விண்ணுள் வாலி-தன் ஆருயிர் விடுக்கும் என்று உலகின்
கண் உளோர்கள் தாம் கழறிடும் கட்டுரை உளதால்

@5. கிட்கிந்தா காண்டம் - துந்துபிப் படலம் - மிகைப்பாடல்கள்

#1
புயலும் வானகமும் அப் புணரியும் புணரி சூழ்
அயலும் வீழ் தூளியால் அறிவு_அரும் தகையவாம்
மயனின் மா மகனும் வாலியும் மறத்து உடலினார்
இயலும் மா மதியம் ஈர்_ஆறும் வந்து எய்தவே

@7. கிட்கிந்தா காண்டம் - வாலி வதைப் படலம் - மிகைப்பாடல்கள்

#1
பேர்வுற வலிக்கவும் மிடுக்கு_இல் பெற்றியார்
நோவுற உலந்தனர் அதனை நோக்கி யான்
ஆர்கலி-தனைக் கடைந்து அமுது கொண்டனென்
போர் வலி அழிந்து போய்ப் புறம்தந்து ஓடலேன்

#2
தயங்கு தாரகை நிரை தொடுத்து அணிந்து என வெண் பூ
வயங்கு சென்னியன் வயப் புலி வான வல் ஏற்றொடு
உயங்கும் ஆர்ப்பினன் ஒல்லை வந்து அடு திறல் வாலி
பயம் கொளப் புடைத்து எற்றினன் குத்தினன் பலகால்

#3
சிவந்த கண் உடை வாலியும் செங்கதிர்ச்சேயும்
வெவந்த போது அவர் இருவரும் நோக்கின்ற வேலை
கவந்த தம்பியைக் கையினால் எடுத்து அவன் உயிரை
அவந்த மற்றவன் ஆருயிர் அந்தகற்கு அளிப்போன்

#4
அயிர்த்த சிந்தையன் அந்தகன் குலைகுலைந்து அஞ்ச
செயிர்த்து நோக்கினன் சினத்தொடு சிறுநகைசெய்யா
வயிர்த்த கையினும் காலினும் கதிர்_மகன் மயங்க
உயிர்த்தலம்-தொறும் புடைத்தனன் அடித்தனன் உதைத்தான்

#5
வெற்றி வீரனது அடு கணை அவன் மிடல் உரத்தூடு
உற்றது அப்புறத்து உறாத முன் உறு வலிக் கரத்தால்
பற்றி வாலினும் காலினும் பிணித்து அகப்படுத்தான்
கொற்ற வெம் கொடு மறலியும் சிரதலம் குலைந்தான்

#6
ஒன்றாக நின்னோடு உறும் செற்றம் இல்லை உலகுக்கு நான் செய்தது ஓர் குற்றம் இல்லை
வென்று ஆள்வதே என்னில் வேறு ஒன்றும் இல்லை வீணே பிடித்து என்றன் மேல் அம்பு விட்டாய்
தன் தாதை மாதா உடன் கூடி உண்ணத் தண்ணீர் சுமக்கும் தவத்தோனை எய்தான்
நின் தாதை அன்றேயும் நீயும் பிடித்தாய் நெறி பட்டவாறு இன்று நேர்பட்டது ஆமே

#7
மா வலச் சூலியார் வாழ்த்துநர்க்கு உயர் வரம்
ஓவல் அற்று உதவல் நின் ஒரு தனிப் பெயர் இயம்பு
ஆவலிப்பு உடைமையால் ஆகும் அப் பொருளை ஆம்
தேவ நின் கண்ட எற்கு அரிது எனோ தேரினே

@9. கிட்கிந்தா காண்டம் - அரசியல் படலம் - மிகைப்பாடல்கள்

#1
வள்ளலும் அவண் நின்று ஏகி மதங்கனது இருக்கையான
வெள்ள வான் குடுமி குன்றத்து ஒரு சிறை மேவி மெய்ம்மை
அள்ளுறு காதல் தம்பி அன்பினால் அமைக்கப்பட்ட
எள்ளல் இல் சாலை எய்தி இனிதினின் இருந்த காலை

@10.கிட்கிந்தா காண்டம் - கார்காலப் படலம் - மிகைப்பாடல்கள்

#1
எண் வகை நாகங்கள் திசைகள் எட்டையும்
நண்ணின நா வளைத்து அனைய மின் நக
கண்_நுதல் மிடறு எனக் கருகிக் கார் விசும்பு
உள் நிறை உயிர்ப்பு என ஊதை ஓடின

@11. கிட்கிந்தா காண்டம் - கிட்கிந்தைப் படலம்

#1
தெள்ளியோர் உதவப் பெரும் செல்வம் ஆம்
கள்ளினால் அதிகம் களித்தான் கதிர்ப்
புள்ளி மா நெடும் பொன் வரை புக்கது ஓர்
வெள்ளி மால் வரை என்ன விளங்குவான்

#2
சென்று மாருதி-தன்னிடம் சேர்ந்து அவண்
நின்ற தன்மைகள் யாவும் நிகழ்த்தலும்
வென்றி வீரன் வியப்பொடு மேல்வினை
ஒன்றுவான் அவன்-தன்னை உசாவினான்

#3
அன்னை போன பின் அங்கதக் காளையைத்
தன்னை நேர்_இல் அச் சமீரணன் காதலன்
இன்னம் நீ சென்று இரும் துயில் நீக்கு என
மன்னன் வைகிடத்து ஏகினன் மாசிலான்

#4
சேய் உயர் கீர்த்தியான் கதிரின் செம்மல்-பால்
போயதும் அவ்வயின் புகுந்த யாவையும்
ஓய்வுறாது உணர்த்து என உணர்த்தினான் அரோ
வாய்மையா உணர்வுறு வலி கொள் மொய்ம்பினோன்

@12. கிட்கிந்தா காண்டம் - தானை காண் படலம் - மிகைப்பாடல்கள்

#1
அன்று அவண் வானர சேனை யாவையும்
வென்றி கொள் தலைவரும் எண்கின் வீரரும்
குன்றுகள் ஒரு வழி கூடினால் என
வன் திறல் இராமனை வாழ்த்தி வந்தவே

#2
இன்னது ஆகிய திறத்து அவர் இருக்க முன் போகச்
சொன்ன ஆயிர கோடியில் தூதர்-தம் திறத்தால்
பன்ன ஆறு இரு வெள்ளம் ஆம் கவிப் படை பயில
பொன்னின் வார் கழல் இடபன் அக் கிட்கிந்தை புகுந்தான்

#3
தாமரை பெரும் தவிசு உறை சதுமுகக் கடவுள்
ஓம அங்கியில் உதித்தன உலப்பு_இல கோடி
ஆம் எனப் புகல் வானரத் தானை அங்கு அணித்தா
மா வயப் புயத்து எறுழ் வலி மயிந்தன் வந்து அடைந்தான்

#4
கங்கைசூடி-தன் கருணை பெற்றுடைய முன் வாலி
பொங்கும் ஆணையின் எண் திசைப் பொருப்பினும் பொலியத்
தங்கி வாழ் கவித் தானை அங்கு ஆறு_ஐந்து கோடி
வங்க வேலையின் பரந்திட வசந்தன் வந்து அடைந்தான்

@14. கிட்கிந்தா காண்டம் - பிலம் புக்கு நீங்கு படலம் - மிகைப்பாடல்கள்

#1
இ நெடும் கிரி-கொலோ எது-கொலோ என
அ நெடு மேருவோடு அயிர்க்கலாவது
தொல் நெடு நிலம் எனும் மங்கை சூடிய
பொன் நெடு முடி எனப் பொலியும் பொற்பது

#2
பறவையும் பல் வகை விலங்கும் பாடு அமைந்து
உறைவன கனக நுண் தூளி ஒற்றலான்
நிறை நெடு மேருவைச் சேர்ந்த நீரவாய்
பொறை நெடும் பொன் ஒளி மிளிரும் பொற்பது

#3
இரிந்தன கரிகளும் யாளி ஈட்டமும்
விரிந்த கோள் அரிகளும் வெருவி நீங்கின
திரிந்தனர் எங்கணும் திருவைக் காண்கிலார்
பிரிந்தனர் பிறிது எனப் பெயரும் பெற்றியார்

#4
மாது அவள் உயிர்த்த மகவோர் இருவர் வாசப்
போது உறை நறைக் குழல் ஒருத்தி புகழ் மேலோய்
ஏதம் உறு மைந்தர் தவம் எய்த அயல் போனார்
சீதள முலைச் சிறுமி தாதையொடு சென்றாள்

#5
மத்த மத வெண் களிறு உடை குலிசி வன் தாள்
சித்தமொடு மான்முகன் வணங்கி அயல் சென்றான்
வித்தகனும் ஆயிர விலோசனனும் மேன்மேல்
முத்த நகையாளை நனி நோக்கினன் முனிந்தான்

#6
மேரு சவ்வருணி எனும் மென்_சொலினள் விஞ்சும்
ஏர் உறு மடந்தை யுகம் எண்ண_அரும் தவத்தாள்
சீர் உறு சுயம்பிரபை ஏமை செறிவு எய்தும்
தாரு வளர் பொற்றல மிசைக் கடிது சார்ந்தாள்

#7
மேரு வரை மா முலையள் மென்_சொலினள் விஞ்சு
மாருதியினைப் பல உவந்து மகிழ்வுற்றே
ஏர் உறு சுயம்பிரபை ஏமை நெறி எய்த
தாரு வளர் பொன்தலனிடைக் கடிது சார்ந்தாள்

@15. கிட்கிந்தா காண்டம் ஆறு செல் படலம் - மிகைப்பாடல்கள்

#1
செல்வர் என்றும் வடகலை தென் தமிழ்
சொல் வரம்பினர் என்றும் சுமடரை
கொல்வர் என்றும் கொடுப்பவர் என்றும் அ
இல் வரம்பினர்க்கு ஈ தேனும் ஈட்டதே

#2
தாறு நாறுவ வாழைகள் தாழையின்
சோறு நாறுவ தூம்புகள் மாங்கனி
நாறு நாறுவ நாறு வளர்க்குறும்
சேறு நாறுவ செங்கழுநீர் அரோ

@16. கிட்கிந்தா காண்டம் - சம்பாதிப் படலம் - மிகைப்பாடல்கள்

#1
யாவரும் அவ்வயின்-நின்றும் மன் இயல்
பூ வரும் அருந்ததி பொருவும் கற்பு உடைத்
தேவியை எங்கணும் தேடிக் கண்டிலம்
மேவினம் என்பது விளம்பினார் அரோ

#2
அன்னதோர் அளவையின் அங்கநாடு ஒரீஇத்
தென் மலைநாட்டினைத் தேடிச் சென்று உடன்
இன் இசைத் தலைவரோடு இரண்டு வெள்ளமும்
மன்னு மா மயேந்திரத் தலத்து வந்ததால்

#3
தாழ்ந்த மா தவத்து உலோகசாரங்கன் உறையும் சாரல்
வீழ்ந்தனென் சிறைகள் தீய வெவ்வுயிர்த்து உளமும் மெய்யும்
போழ்ந்தன துன்பம் ஊன்ற உயிர்ப்பொறை போற்றகில்லாது
ஆழ்ந்தனென் ஆழ்ந்த என்னை அரும் தவன் எதிர்ந்து தேற்றி

#4
கற்றிலார் போல உள்ளக் களிப்பினால் அமரர் காப்பூடு
உற்றிடக் கருதி மீப்போய் ஆதபத்து உனது மேனி
முற்று அழல் முருங்க மண்ணை முயங்கினை இனி என் சில் நாள்
மற்று நின் உயிரை ஓம்பாது இகழ்வது மாலைத்து அன்றால்

#5
களித்தவர் கெடுதல் திண்ணம் சனகியைக் கபடன் வவ்வி அன்று
ஒளித்த வாய் துருவி உற்ற வானரர் இராம நாமம்
விளித்திட சிறை வந்து ஓங்கும் வெவ்வுயிர்த்து அயரல் என்று
அளித்தனன் அதனால் ஆவி ஆற்றினேன் ஆற்றல் மொய்ம்பீர்

#6
அன்றியும் அலருள் வைகும் அயனை நேர் முனிவன் வாய்மை
நன்றி கொள் ஈசன் காண்பான் நணுகலும் வினையேன் உற்றது
ஒன்று ஒழிவுறாமல் கேட்டு அது யோகத்தின் உணர்ச்சி பேணி
பொன்றுதல் ஒழி-மின் யானே புகல்வது கேள்-மின் என்றான்

#7
தசரத ராமன் தேவர் தவத்தினால் தாய் சொல் தாங்கிக்
கச ரத துரகம் இன்றிக் கானிடை இறுத்த காலை
வசை தரும் இலங்கை_வேந்தன் வவ்விய திருவை நாடித்
திசை திரி கவிகள் உற்றால் சிறகு பெற்று எழுதி என்ன

#8
எம்பியும் இடரின் வீழ்வான் ஏயது மறுக்க அஞ்சி
அம்பரத்து இயங்கும் ஆணைக் கழுகினுக்கு அரசன் ஆனான்
நம்பிமீர் ஈது என் தன்மை நீர் இவண் நடந்தவாற்றை
உம்பரும் உவக்கத் தக்கீர் உணர்த்து-மின் உணர என்றான்

#9
எனக்கு உணவு இயற்றும் காதல் என் மகன் சுபார்சுபன் பேர்
சினக் கொலை அரக்கன் மூதூர் வட திசை-நின்று செல்வான்
நினைக்கும் முன் திருவோடு அந்த நீசனை நோக்கி எந்தை
தனக்கு இரை எய்திற்று என்னா சிறகினால் தகைந்து கொண்டான்

#10
காமத்தால் நலியப்பட்டு கனம்_குழை-தன்னைக் கொண்டு
போம் மத்தா போகல் எந்தை புன் பசிக்கு அமைந்தாய் என்று
தாமத் தார் மௌலி மைந்தன் தடுத்து இடை விலக்க நீசன்
நாமத்தால் விரலைக் கவ்வ நாணி மீண்டு எனக்குச் சொன்னான்

#11
முன்னர் அ நிசாகர முனி மொழிந்ததும்
பின்னர் அச் சுபார்சுபன் பெலத்து இராவணன்
தன்னொடும் அமர் பொரச் சமைந்து நின்றதும்
கொன் இயல் சனகியைக் கொண்டு போனதும்

#12
நினைந்து சம்பாதியும் நீதி யாவையும்
இனைந்தனன் வானரர் எவரும் கேட்கவே
நினைந்து கண்ணீர் விழ நெடிது உயிர்த்தனர்
வினைந்தனர் புரண்டனர் விதியை நொந்தனர்

@17. கிட்கிந்தா காண்டம் - மயேந்திரப் படலம் - மிகைப்பாடல்கள்

#1
ஆரியன் மின்னின் பேரெழில் கூறும் அமைவாலும்
காரியம் உன்னால் முற்றும் எனச் சொல் கடனாலும்
மாருதி ஒப்பார் வேறு இலை என்னா மனம் எண்ணி
சீரியன் மல் தோள் ஆண்மை உரைத்தால் செயும் என்றே
**

மேல்


**
*