<<முந்திய பக்கம்

சைவப் பிரபந்த மாலை - திருமுறை 11
-
1.திரு ஆலவாய்
உடையார்
2.காரைக்கால்
அம்மையார்
3.ஐயடிகள்
காடவர் கோன்
4.சேரமான் பெருமாள் 5.நக்கீர தேவர் 6.கல்லாட தேவர்
7.கபில தேவர்
8.பரண தேவர்
9.இளம் பெருமாள் 10.அதிரா அடிகள் 11.பட்டினத்து அடிகள் 12.நம்பியாண்டார் நம்பி
தேவையான ஆசிரியர் பெயர் மேல் சொடுக்கிப் பின்னர் பாசுரத்தலைப்பைச் சொடுக்கவும்
பாசுரங்கள் நம்பியாண்டார் நம்பி பாசுரங்கள்
1. திருநாரையூர் விநாயகர்
இரட்டைமணிமாலை


2. கோயில் திருப்பண்ணியர்
விருத்தம்


3. திருத்தொண்டர்
திருவந்தாதி


4. ஆளுடையபிள்ளையார்
திருவந்தாதி


5. ஆளுடையபிள்ளையார்
திருச்சண்பை விருத்தம்


6. ஆளுடையபிள்ளையார்
திருமும்மணிக்கோவை


7. ஆளுடையபிள்ளையார்
திருவுலாமாலை


8. ஆளுடையபிள்ளையார்
திருக்கலம்பகம்


9. ஆளுடையபிள்ளையார்
திருத்தொகை


10. திருநாவுக்கரசு தேவர்
திருஎகாதசமாலை



திருமுறை பதினொன்று

** திருமுறை 11

&12 நம்பியாண்டார் நம்பிகள்

@1 திருநாரையூர் விநாயகர் இரட்டை மணிமாலை

#1
என்னை நினைந்து அடிமைகொண்டு என் இடர் கெடுத்துத்
தன்னை நினையத் தருகின்றான் புன்னை
விரசு மகிழ் சோலை வியன் நாரையூர் முக்கண்
அரசு மகிழ் அத்தி_முகத்தான்

#2
முகத்தால் கரியன் என்றாலும் தனையே முயன்றவர்க்கு
மிகத்தான் வெளியன் என்றே மெய்ம்மை உன்னும் விரும்பு அடியார்
அகத்தான் திகழ்தரு நாரையூர் அ மான் பயந்த எம்மான்
உகத் தானவன்-தன் உடலம் பிளந்த ஒரு கொம்பனே

#3
கொம்பு அனைய வள்ளி கொழுநன் குறுகாமே
வம்பு அனைய மாங்கனியை நாரையூர் நம்பனையே
தன்ன வலம் செய்துகொளும் தாழ் தடக்கையாய் என் நோய்
பின் அவலம் செய்வது என்னோ பேசு

#4
பேசத் தகாது எனப் பேய் எருதும் பெருச்சாளியும் என்று
ஏசத் தகும்படி ஏறுவதே இமையாத முக்கண்
கூசத் தகும் தொழில் நுங்கையும் நுந்தையும் நீயும் இந்தத்
தேசத்தவர் தொழும் நாரைப்பதியுள் சிவக் களிறே

#5
களிறு முகத்தவனாய்க் காயம் செம் தீயின்
ஒளிரும் உருக்கொண்டது என்னே அளறு-தொறும்
பின் நாரை ஊர் ஆரல் ஆரும் பெரும் படுகர்
மன் நாரையூரான் மகன்

#6
மகத்தினில் வானவர் பல் கண் சிரம் தோள் நெரித்தருளும்
சுகத்தினில் நீள் பொழில் நாரைப்பதியுள் சுரன் மகற்கு
முகத்தது கை அந்தக் கையது மூக்கு அந்த மூக்கதனின்
அகத்தது வாய் அந்த வாயது போலும் அடு மருப்பே

#7
மருப்பை ஒரு கைக் கொண்டு நாரையூர் மன்னும்
பொருப்பை அடி போற்றத் துணிந்தால் நெருப்பை
அருந்த எண்ணுகின்ற எறும்பு அன்றே அவரை
வருந்த எண்ணுகின்ற மலம்

#8
மலம் செய்த வல்வினை நோக்கி உலகை வலம்வரும் அப்
புலம் செய்த காட்சிக் குமரற்கு முன்னே புரி சடை மேல்
சலம் செய்த நாரைப்பதி அரன்-தன்னைக் கனி தரவே
வலம்செய்து கொண்ட மதக் களிறே உன்னை வாழ்த்துவனே

#9
வனம் சாய வல்வினை நோய் நீக்கி வனசத்
தன் அம் சாய் அலைத் தருவான் அன்றோ இனம் சாயத்
தேரையூர் நம்பர் மகன் திண் தோள் நெரித்தருளும்
நாரையூர் நம்பர் மகனாம்

#10
நாரணன் முன் பணிந்து ஏத்த நின்று எல்லை நடாவிய அத்
தேர் அணவும் திருநாரையூர் மன்னு சிவன் மகனே
காரணனே எம் கணபதியே நல் கரி_வதனா
ஆரண நுண்_பொருளே என்பவர்க்கு இல்லை அல்லல்களே

#11
அல்லல் களைந்தான் தன் அம் பொன் உலகத்தின்
எல்லை புகுவிப்பான் ஈண்டு உழவர் நெல் அல் களை
செங்கழுநீர் கட்கும் திருநாரையூர்ச் சிவன் சேய்
கொங்கு எழு தார் ஐங்கரத்த கோ

#12
கோவில் கொடிய நமன் தமர் கூடா வகை விடுவன்
காவில் திகழ்தரு நாரைப்பதியில் கரும் பனைக் கை
மேவற்கு அரிய இரு மதத்து ஒற்றை மருப்பின் முக்கண்
ஏ வில் புருவத்து இமையவள் தான் பெற்ற யானையையே

#13
யான் ஏத்திய வெண்பா என்னை நினைந்து அடிமை
தான் நேசனாய்த் தனக்கு நல்கினான் தேனே
தொடுத்த பொழில் நாரையூர்ச் சூலம் வலன்_ஏந்தி
எடுத்த மத முகத்த ஏறு

#14
ஏறிய சீர் வீரணக்குடி ஏந்து_இழைக்கும் இரும் தேன்
நாறிய பூம் தார்க் குமரற்கும் முன்னினை நண்ணலரைச்
சீறிய வெம் பணைச் சிங்கத்தினுக்கு இளையானை விண் ஓர்
வேறு இயல்பால் தொழும் நாரைப்பதியுள் விநாயகனே

#15
கன மதில் சூழ் நாரையூர் மேவிக் கசிந்தார்
மனம் மருவினான் பயந்த வாய்ந்த சினம் மருவு
கூசு ஆரம் பூண்ட முகக் குஞ்சரக் கன்று என்றார்க்கு
மா சாரமோ சொல்லு வான்

#16
வானின் பிறந்த மதி தவழும் பொழில்-மாட்டு அளி சூழ்
தேனின் பிறந்த மலர்த் திருநாரைப்பதி திகழும்
கோனின் பிறந்த கணபதி-தன்னைக் குல மலையின்
மானின் பிறந்த களிறு என்று உரைப்பர் இவ் வையகத்தே

#17
வையகத்தோர் ஏத்த மதில் நாரையூர் மகிழ்ந்து
பொய்யகத்தார் உள்ளம் புகல் ஒழிந்து கையகத்து ஓர்
மாங்கனி தன் கொம்பு அண்டம் பாசம் மழு மல்குவித்தான்
ஆம் கனி நம் சிந்தை அமர்வான்

#18
அமரா அமரர் தொழும் சரண் நாரைப்பதி அமர்ந்த
குமரா குமரற்கு முன்னவனே கொடித் தேர் அவுணர்
தமர் ஆசு அறுத்தவன் தன்னுழைத் தோன்றினனே என நின்று
அமரா மனத்தவர் ஆழ் நரகத்தில் அழுந்துவரே

#19
அவமதியாது உள்ளமே அல்லல் அற நல்ல
தவ மதியால் ஏத்திச் சதுர்த்தோம் நவ மதியாம்
கொம்பன் விநாயகன் கொங்கு ஆர் பொழில் சூழ் நாரையூர்
நம்பன் சிறுவன் சீர் நாம்

#20
நாம் தனமா மனம் ஏத்து கண்டாய் என்றும் நாள்_மலரால்
தாம் தனம் ஆக இருந்தனன் நாரைப்பதி-தன் உளே
சேர்ந்தனனே ஐந்து செம் கையனே நின் திரள் மருப்பை
ஏந்தினனே என்னை ஆண்டவனே எனக்கு என் ஐயனே
** திருநாரையூர் விநாயகர் இரட்டை மணிமாலை முற்றிற்று.

@2 கோயில் திருப்பண்ணியர் விருத்தம்

#1
நெஞ்சம் திருவடிக் கீழ் வைத்து நீள் மலர்க் கண் பனிப்ப
வஞ்சம் கடிந்து உன்னை வந்திக்கிலேன் அன்று வானர் உய்ய
நஞ்சு அங்கு அருந்து பெருந்தகையே நல்ல தில்லை நின்ற
அம் செம்பவள_வண்ணா அருட்கு யான் இனி யார் என்பனே

#2
என்பும் தழுவிய ஊனும் நெக அகமே எழுந்த
அன்பின் வழிவந்த ஆரமிர்தே அடியேன் உரைத்த
வன் புன்மொழிகள் பொறுத்தி-கொலாம் வளர் தில்லை-தன்னுள்
மின் புன் மிளிர் சடை வீசி நின்று ஆடிய விண்ணவனே

#3
அவ நெறிக்கே விழப் புக்கு அவிந்து யான் அழுந்தாமை வாங்கித்
தவ நெறிக்கே இட்ட தத்துவனே அத் தவப் பயனாம்
சிவ நெறிக்கே என்னை உய்ப்பவனே செனனம்-தொறும் செய்
பவம் அறுத்து ஆள்வதற்கோ தில்லை நட்டம் பயில்கின்றதே

#4
பயில்கின்றிலேன் நின் திறத் திருநாமம் பனி மலர்த் தார்
முயல்கின்றிலேன் நின் திருவடிக்கே அப்ப முன்னுதில்லை
இயல்கின்ற நாடகச் சிற்றம்பலத்துள் எந்தாய் இங்ஙனே
அயர்கின்ற நான் எங்ஙனே பெறுமாறு நின் ஆரருளே

#5
அரு திக்கு விம்ம நிவந்தது ஓர் வெள்ளிக் குன்ற மஞ்சு
பருதிக் குழவி உமிழ்கின்றதே ஒக்கும் பற்றுவிட்டோர்
கருதித் தொழு கழல் பாதமும் கைத்தலம் நான்கும் மெய்த்த
சுருதிப் பதம் முழங்கும் தில்லை மேய சுடர் இருட்கே

#6
சுடலைப் பொடியும் படுதலை மாலையும் சூழ்ந்த என்பும்
மடலைப் பொலி மலர் மாலை மென் தோள் மேல் மயிர்க் கயிறும்
அடலைப் பொலி அயில் மூ_இலை வேலும் அணிகொள் தில்லை
விடலைக்கு என் ஆனைக்கு அழகு இது வேத வினோதத்தையே

#7
வேதமுதல்வன் தலையும் தலையாய வேள்வி-தன்னுள்
நாதன் அவன் எச்சன் நல் தலையும் தக்கனார் தலையும்
காதிய தில்லைச் சிற்றம்பலத்தான் கழல் சூழ்ந்து நின்று
மாதவர் என்னோ மறைமொழியாலே வழுத்துவதே

#8
வழுத்திய சீர்த் திருமால் உலகு உண்டு வன் பாம்பு-தன்னின்
கழுத்து அருகே துயின்றான் உட்கப் பாந்தளைக் கங்கணமாச்
செழுத் திரள் நீர்த் திருச்சிற்றம்பலத்தான் திருக்கை இட
அழுத்திய கல் ஒத்தன் ஆயன் ஆகிய மாயவனே

#9
மாயவன் முந்நீர்த் துயின்றவன் அன்று மருதிடையே
போயவன் காணாத பூம் கழல் நல்ல புலத்தினர் நெஞ்சு
ஏய் அவன் சிற்றம்பலத்துள் நின்று ஆடும் கழல் எவர்க்கும்
தாயவன்-தன் பொன் கழல் என் தலை மறை நல் நிழலே

#10
நிழல்படு பூண் நெடுமால் அயன் காணாமை நீண்டவரே
தழல் படு பொன் அகல் ஏந்தித் தமருகம் தாடித்து அமைத்து
எழில்பட வீசிக் கரம் எறி நீர்த் தில்லை அம்பலத்தே
குழல்படு சொல் வழி ஆடுவர் யாவர்க்கும் கூத்தினையே

#11
கூத்தன் என்றும் தில்லைவாணன் என்றும் குழுமிட்டு இமையோர்
ஏத்தன் என்றும் செவி-மாட்டு இசையாதே இடு துணங்கை
மூத்தவன் பெண்டிர் குணலையிட்டாலும் முகில் நிறத்த
சாத்தன் என்றாலும் வருமோ இவளுக்குத் தண்ணெனவே

#12
தண் ஆர் புனல் தில்லைச் சிற்றம்பலம்-தன்னின் மன்னி நின்ற
விண்ணாளனைக் கண்ட நாள் விருப்பாய் என் உடல் முழுதும்
கண் ஆங்கிலோ தொழக் கை ஆங்கிலோ திருநாமங்கள் கற்று
எண் ஆம் பரிசு எங்கும் வாய் ஆங்கிலோ எனக்கு இப் பிறப்பே

#13
பிறவியில் பெற்ற பயன் ஒன்று கண்டிலம் பேரொலி நீர்
நறவு இயல் பூம் பொழில் தில்லையுள் நாடகம் ஆடுகின்ற
துறவு இயல் சோதியைச் சுந்தரக் கூத்தனைத் தொண்டர்தொண்டர்
உறவு இயல்வால் கண்கள் கண்டுகண்டு இன்பத்தை உண்டிடவே

#14
உண்டேன் அவர் அருள் ஆரமிர்தத்தினை உண்டலுமே
கண்டேன் எடுத்த கழலும் கனலும் கவித்த கையும்
ஒண் தேன்_மொழியினை நோக்கிய நோக்கும் ஒளி நகையும்
வண் தேன் மலர்த் தில்லை அம்பலத்து ஆடும் மணியினையே

#15
மணி ஒப்பன திருமால் மகுடத்து மலர்க் கமலத்து
அணி ஒப்பன அவன்-தன் முடி மேல் அடியேன் இடர்க்குத்
துணியச் சமைத்த நல் ஈர் வாள் அனையன சூழ் பொழில்கள்
திணியத் திகழ் தில்லை அம்பலத்தான்-தன் திருந்து அடியே

#16
அடி இட்ட கண்ணினுக்கோ அவன் அன்பினுக்கோ அவுணர்
செடி இட்ட வான் துயர் சேர்வதற்கோ தில்லை அம்பலத்து
முடி இட்ட கொன்றை நன் முக்கண்பிரான் அன்று மூ_உலகும்
அடி இட்ட கண்ணனுக்கு ஈந்தது வாய்ந்த அரும் படையே

#17
படை படு கண்ணி-தன் பங்க தென்தில்லைப் பரம்பர வல்
விடை படு கேதுக விண்ணப்பம் கேள் என் விதிவசத்தால்
கடைபடு சாதி பிறக்கினும் நீ வைத்து அருளு கண்டாய்
புடைபடு கிங்கிணித் தாள் செய்ய பாதம் என் உள் புகவே

#18
புக உகிர் வாள் எயிற்றால் நிலம் கீண்டு பொறி கலங்கி
மிக உகும் மாற்கு அரும் பாதத்தனேல் வியன் தில்லை-தன்னுள்
நகவு குலாம் மதிக் கண்ணியற்கு அம் கணன் என்றல் நன்றும்
தகவு-கொலாம் தகவு அன்று-கொலாம் என்று சங்கிப்பனே

#19
சங்கு ஓர் கரத்தன் மகன் தக்கன் தானவர் நான்முகத்தோன்
செங்கோல இந்திரன் தோள் தலை ஊர் வேள்வி சீர் உடலம்
அம் கோல வெவ் அழல் ஆயிட்டு அழிந்து எரிந்து அற்றனவால்
எம் கோன் எழில் தில்லைக் கூத்தன் கடைக்கண் சிவந்திடவே

#20
ஏவுசெய் மேருத் தடக் கை எழில் தில்லை அம்பலத்து
மேவுசெய் மேனிப் பிரான் அன்றி அம் கணர் மிக்கு உளரே
காவு செய் காளத்திக் கண்_நுதல் வேண்டும் வரம் கொடுத்துத்
தேவுசெய்வான் வாய்ப் புனல் ஆட்டிய திறல் வேடுவனே

#21
வேடன் என்றாள் வில் விசயற்கு வெம் கணை அன்று அளித்த
கோடன் என்றாள் குழைக்காதன் என்றாள் இடக் காதில் இட்ட
தோடன் என்றாள் தொகு சீர்த் தில்லை அம்பலத்து ஆடுகின்ற
சேடன் என்றாள் மங்கை அம் கைச் சரி வளை சிந்தினவே

#22
சிந்திக்கவும் உரையாடவும் செம்மலரால் கழல்கள்
வந்திக்கவும் மனம் வாய் கரம் என்னும் வழிகள் பெற்றும்
சந்திக்கிலர் சிலர் தெண்ணர் தண் ஆர் தில்லை அம்பலத்துள்
அந்திக்கு அமர் திருமேனி எம்மான்-தன் அருள் பெறவே

#23
அருள் தரு சீர்த் தில்லை அம்பலத்தான்-தன் அருளின் அன்றிப்
பொருள் தரு வானத்து அரசு ஆதலின் புழு ஆதல் நன்றாம்
சுருள் தரு செம் சடையோன் அருளேல் துறவிக்கு நன்றாம்
இருள் தரு கீழ் ஏழ் நரகத்து வீழும் இரும் சிறையே

#24
சிறைப் புள் அவாம் புனல் சூழ் வயல் தில்லைச் சிற்றம்பலத்துப்
பிறைப் பிளவு ஆர் சடையோன் திருநாமங்களே பிதற்ற
மிறைப்பு உள ஆகி வெண் நீறு அணிந்து ஓடு ஏந்தும் வித்தகர்-தம்
உறைப்பு உளவோ அயன் மாலினொடு உம்பர்-தம் நாயகற்கே

#25
அகழ் சூழ் மதில் தில்லை அம்பலக் கூத்த அடியம் இட்ட
முகிழ் சூழ் இலையும் முகைகளும் ஏயும்-கொல் கற்பகத்தின்
திகழ் சூழ் மலர் மழை தூவித் திறம் பயில் சிந்தையராய்ப்
புகழ் சூழ் இமையவர் போற்றித் தொழும் நின் பூம் கழற்கே

#26
பூம் தண் பொழில் சூழ் புலியூர்ப் பொலி செம்பொன் அம்பலத்து
வேந்தன்-தனக்கு அன்றி ஆட்செய்வது என்னே விரி துணி மேல்
ஆம் தண் பழைய அவிழை அன்பாகிய பண்டைப் பறைச்
சேந்தன் கொடுக்க அதுவும் திரு அமிர்து ஆகியதே

#27
ஆகம் கனகனைக் கீறிய கோளரிக்கு அஞ்சி விண்ணோர்
பாகம் கனம் குழையாய் அருளாய் எனத் தில்லைப்பிரான்
வேகம் தரும் சிம்புள் விட்டு அரி வெம் கதம் செற்றிலனேல்
மோகம் கலந்து அன்று உலந்தது அன்றோ இந்த மூ_உலகே

#28
மூ_உலகத்தவர் ஏத்தித் தொழு தில்லை முக்கண் பிராற்கு
ஏவு தொழில் செய்யப்பெற்றவர் யார் எனில் ஏர் விடையாய்த்
தாவு தொழில்பட்டு எடுத்தனன் மால் அயன் சாரதியா
மேவு இரதத்தொடு பூண்ட தொன் மா மிக்க வேதங்களே

#29
வேதகச் சிந்தை விரும்பியவன் தில்லை அம்பலத்து
மேதகக் கோயில்கொண்டோன் சேயவன் வீரணக்குடி-வாய்ப்
போதகப் போர்வைப் பொறி வாள் அரவு அரைப் பொங்கு சினச்
சாதகப் பெண்பிளை-தன் ஐயன் தந்த தலைமகனே

#30
தலையவன் பின்னவன் தாய்தந்தை இந்தத் தராதலத்து
நிலையவன் நீக்கு தொழில் புரிந்தோன் நடு ஆகி நின்ற
கொலைய வன் சூலப் படையவன் ஆலத்து எழு கொழுந்தின்
இலையவன் காண்டற்கு அரும் தில்லை அம்பலத்துள் இறையே

#31
இறையும் தெளிகிலர் கண்டும் எழில் தில்லை அம்பலத்துள்
அறையும் புனல் சென்னியோன் அருளால் அன்று அடு கரி மேல்
நிறையும் புகழ்த் திருவாரூரனும் நிறை தார்ப் பரி மேல்
நறையும் கமழ் தொங்கல் வில்லவனும் புக்க நல் வழியே

#32
நல்வழி நின்றார் பகை நன்று நொய்யர் உறவில் என்னும்
சொல் வழி கண்டனம் யாம் தொகு சீர்த் தில்லை அம்பலத்து
வில் வழி தானவர் ஊர் எரித்தோன் வியன் சாக்கியனார்
கல் வழி நேர் நின்று அளித்தனன் காண்க சிவகதியே

#33
கதியே அடியவர் எய்ப்பினில் வைப்பாக் கருதி வைத்த
நிதியே நிமிர் புன் சடை அமிர்தே நின்னை என் உள் வைத்த
மதியே வளர் தில்லை அம்பலத்தாய் மகிழ் மா மலையாள்
பதியே பொறுத்தருளாய் கொடியேன் செய்த பல் பிழையே

#34
பிழை ஆயினவே பெருக்கி நின் பெய் கழற்கு அன்பு தன்னில்
நுழையாத சிந்தையினேனையும் மந்தாகினித் துவலை
முழை ஆர்தரு தலை மாலை முடித்த முழுமுதலே
புழை ஆர் கரி உரித்தோய் தில்லைநாத பொறுத்தருளே

#35
பொறுத்திலனேனும் பல் நஞ்சினைப் பொங்கு எரி வெம் கதத்தைச்
செறுத்திலனேனும் நம் தில்லைப்பிரான் அத் திரிபுரங்கள்
கறுத்திலனேனும் கமலத்து அயன் கதிர் மா முடியை
அறுத்திலனேனும் அமரருக்கு என்-கொல் அடுப்பனவே

#36
அடுக்கிய சீலையராய் அகல் ஏந்தித் தசை எலும்பில்
ஒடுக்கிய மேனியோடு ஊண் இரப்பார் ஒள் இரணியனை
நடுக்கிய மா நரசிங்கனைச் சிம்புளதாய் நரல
இடுக்கிய பாதன்-தன் தில்லை தொழாவிட்ட ஏழையரே

#37
ஏழை என் புன்மை கருதாது இடையறா அன்பு எனக்கு
வாழி நின் பாத மலர்க்கே மருவ அருளு கண்டாய்
மாழை மென் நோக்கி-தன் பங்க வளர் தில்லை அம்பலத்துப்
போழ் இளம் திங்கள் சடை முடி மேல் வைத்த புண்ணியனே

#38
புண்ணியனே என்று போற்றி செயாது புலன் வழியே
நண்ணியனேற்கு இனி யாது-கொலாம் புகல் என்னுள் வந்திட்டு
அண்ணியனே தில்லை அம்பலவா அலர் திங்கள் வைத்த
கண்ணியனே செய்ய காமன் வெளுப்பக் கறுத்தவனே

#39
கறுத்த கண்டா அண்டவாணா வரு புனல் கங்கை சடை
செறுத்த சிந்தாமணியே தில்லையாய் என்னைத் தீவினைகள்
ஒறுத்தல் கண்டால் சிரியாரோ பிறர் என் உறு துயரை
அறுத்தல்செய்யாவிடின் ஆர்க்கோ வரும் சொல் அரும் பழியே

#40
பழித்தக்கவும் இகழான் தில்லையான் பண்டு வேட்டுவனும்
அழித்து இட்டு இறைச்சி புலையன் அளித்த அவிழ்க் குழங்கல்
மொழித்தக்க சீர் அதிபத்தன் படுத்திட்ட மீன் முழுதும்
இழித்தக்க என்னாது அமிர்துசெய்தான் என்று இயம்புவரே

#41
வரம் தருமாறு இதன் மேலும் உண்டோ வயல் தில்லை-தன்னுள்
புரந்தரன் மால் தொழ நின்ற பிரான் புலைப் பொய்ம்மையிலே
நிரந்தரமாய் நின்ற என்னையும் மெய்ம்மையின் தன் அடியார்
தரம்தரு வான் செல்வத்து ஆழ்த்தினன் பேச அரும் தன்மை இதே

#42
தன் தாள் தரித்தார் யாவர்க்கும் மீளா வழி தருவான்
குன்றா மதில் தில்லை மூதூர்க் கொடி மேல் விடை உடையோன்
மன்று ஆடவும் பின்னும் மற்று அவன் பாதம் வணங்கி அங்கே
ஒன்றார் இரண்டில் விழுவர் அந்தோ சில ஊமர்களே

#43
களைகண் இலாமையும் தன் பொன் கழல் துணையாம் தன்மையும்
துளை கண் நிலாம் முகக் கைக் கரிப் போர்வைச் சுரன் நினையான்
தளைகள் நிலா மலர்க் கொன்றையன் தண் புலியூரன் என்றேன்
வளைகள் நிலாமை வணங்கும் அநங்கன் வரி சிலையே

#44
வரித் தடம் திண் சிலை மன்மதன் ஆதலும் ஆழி வட்டம்
தரித்தவன்-தன் மகன் என்பதோர் பொற்பும் தவ நெறிகள்
தெரித்தவன் தில்லையுள் சிற்றம்பலவன் திருப்புருவம்
நெரித்தலும் கண்டது வெண்பொடியே அன்றி நின்றிலவே

#45
நின்று இரவே விசயன்னொடும் சிந்தை களிப்புற நீள்
தென் தில்லை மா நடம் ஆடும் பிரான்-தன் திருமலை மேல்
தன் தலையால் நடந்து ஏறிச் சரம் கொண்டு இழிந்தது என்பர்
கன்றினையே விளம் மேல் எறிந்து ஆர்த்த கரியவனே

#46
கருப்பு உருவத் திருவார்த்தைகள் கேட்டலும் கண்பனியேன்
விருப்பு உருவத்தினொடு உள்ளம் உருகேன் விதிர்விதிரேன்
இருப்பு உருவச் சிந்தை என்னை வந்து ஆண்டதும் எவ்வணமோ
பொருப்பு உருவப் புரிசைத் தில்லை ஆடல் புரிந்தவனே

#47
புரிந்த அன்பு இன்றியும் பொய்மையிலேயும் திசை வழியே
விரிந்து அகங்கை மலர் சென்னியில் கூப்பின் வியன் நமனார்
பரிந்து அவன் ஊர் புகல் இல்லை பதி மூன்று எரிய அம்பு
தெரிந்த எம் கோன்-தன் திரை ஆர் புனல் வயல் சேண் தில்லையே

#48
சேண் தில்லை மா நகர்த் திப்பியக் கூத்தனைக் கண்டும் அன்பு
பூண்டிலை நின்னை மறந்திலை ஆங்கு அவன் பூம் கழற்கே
மாண்டிலை இன்னம் புலன் வழியே வந்து வாழ்ந்திடுவான்
மீண்டனை என்னை என் செய்திடவோ சிந்தை நீ விளம்பே

#49
விளவைத் தளர்வித்த விண்டுவும் தாமரை மேல் அயனும்
அளவிற்கு அறியா வகை நின்ற அன்றும் அடுக்கல் பெற்ற
தளவின் திருநகையாளும் நின் பாகம்-கொல் தண் புலியூர்க்
களவில் கனி புரையும் கண்ட வார் சடைக் கங்கையனே

#50
கங்கை வலம் இடம் பூ வலம் குண்டலம் தோடு இடப் பால்
தங்கும் கரம் வலம் வெம் மழு வீ இடம் பாந்தள் வலம்
சங்கம் இடம் வலம் தோல் இடம் ஆடை வலம் அக்கு இடம்
அங்கு அம் சரி அம்பலவன் வலம் காண் இடம் அணங்கே

#51
அணங்கு ஆடகக் குன்ற மாது அற ஆட்டிய ஆல் அமர்ந்தாட்கு
இணங்காயவன் தில்லை எல்லை மிதித்தலும் என்பு உருகா
வணங்கா வழுத்தா விழா எழும் பாவைத் தவா மதர்த்த
குணம் காண் இவள் என்ன என்று-கொலாம் வந்து கூடுவதே

#52
கூடுவது அம்பலக் கூத்தன் அடியார் குழுவு-தொறும்
தேடுவது ஆங்கு அவன் ஆக்கம் அச் செவ் வழி அவ் வழியே
ஓடுவது உள்ளத்து இருத்துவது ஒண் சுடரைப் பிறவி
வீடுவதாக நினைய வல்லோர் செய்யும் வித்தகமே

#53
வித்தகச் செம் சடை வெண் மதிக் கார் நிறக் கண்டத்து எண் தோள்
மத்தகக் கைம்மலைப் போர்வை மதில் தில்லை மன்னனைத்-தம்
சித்து அகக் கோயில் இருத்தும் திறத்து ஆகமியர்க்கு அல்லால்
புத்தகப் பேய்களுக்கு எங்கித்ததோ அரன் பொன் அடியே

#54
பொன்னம்பலத்து உறை புண்ணியன் என்பர் புயல் மறந்த
கன்னல் மை தீரப் புனிற்றுக் கலிக்காமற்கு அன்று புன்கூர்
மன்னு மழை பொழிந்து ஈர்_அறு வேலி கொண்டு ஆங்கு அவற்கே
பின்னும் மழை தவிர்த்து ஈர்_அறு வேலி கொள் பிஞ்ஞகனே

#55
நேசன் அல்லேன் நினையேன் வினை தீர்க்கும் திருவடிக் கீழ்
வாச நல் மா மலர் இட்டு இறைஞ்சேன் என்றன் வாயதனால்
தேசன் என் ஆனை பொன் ஆர் திருச்சிற்றம்பலம் நிலவும்
ஈசன் என்னேன் பிறப்பு என்னாய்க் கழியும்-கொல் என்றனக்கே

#56
தனம் தலை சக்கரம் வானத் தலைமை குபேரன் தக்கன்
வனம்-தலை ஏறு_அடர்த்தோன் வாசவன் உயிர் பல் உடல் ஊர்
சினந்து அலை காலன் பகல் காமன் தானவர் தில்லை விண்ணோர்
இனம் தலைவன் அருளால் முனிவால் பெற்று இகந்தவரே

#57
அவமதித்து ஆழ்நரகத்தில் இடப்படும் ஆதர்களும்
தவம் மதித்து ஒப்பிலர் என்ன விண் ஆளும் தகைமையரும்
நவநிதித் தில்லையுள் சிற்றம்பலத்து நடம் பயிலும்
சிவ நிதிக்கே நினை யாரும் நினைந்திட்ட செல்வருமே

#58
வரு வாசகத்தினில் முற்று உணர்ந்தோனை வண் தில்லை மன்னைத்
திருவாதவூர்ச் சிவ பாத்தியன் செய் திருச்சிற்றம்பலப்
பொருள் ஆர்தரு திருக்கோவை கண்டேயும் மற்று அப் பொருளைத்
தெருளாத உள்ளத்தவர் கவி பாடிச் சிரிப்பிப்பரே

#59
சிரித்திட்ட செம்பவளத்தின் திரளும் செழும் சடை மேல்
விரித்திட்ட பைம் கதிர்த் திங்களும் வெம் கதப் பாந்தளும் தீத்
தரித்திட்ட அங்கையும் சங்கச் சுருளும் என் நெஞ்சின் உள்ளே
தெரித்திட்டவா தில்லைச் சிற்றம்பலத்துத் திருநடனே

#60
நடம்செய் சிற்றம்பலத்தான் முனிவு என் செயும் காமன் அன்று
கொடும் சினத் தீ விழித்தாற்குக் குளிர்ந்தனன் வில் கொடும் பூண்
விடும் சினத் தானவர் வெந்திலர் வெய்து என வெம் கதத்தை
ஒடுங்கிய காலன் அ நாள்-நின்று உதையுணா விட்டனனே

#61
வில் தங்கு ஒளி மணிப் பூண் திகழ் வன் மதன் மெய் உரைக்கில்
இட்டம் கரியன் நல்லான் அல்லன் அம்பலத்து எம் பரன் மேல்
கள் தங்கிய கணை எய்தலும் தன்னைப் பொன் ஆர் முடி மேல்
புள் தங்கினான் மகனாம் என்று பார்க்கப் பொடிந்தனனே

#62
பொடி ஏர் தரு மேனியன் ஆகிப் பூசல் புக அடிக்கே
கடி சேர் கணை குளிப்பக் கண்டு கோயில் கருவி இல்லா
வடியே பட அமையும் கணை என்ற வரகுணன்-தன்
முடி ஏர் தரு கழல் அம்பலத்தாடி-தன் மொய் கழலே

#63
கழலும் பசு பாசர் ஆம் இமையோர் தம் கழல் பணிந்திட்டு
அழலும் இருக்கும் தருக்கு உடையோர் இடப் பால் வலப் பால்
தழலும் தமருகமும் பிடித்து ஆடி சிற்றம்பலத்தைச்
சுழலும் ஒரு கால் இரு கால் வர வல்ல தோன்றல்களே

#64
தோன்றலை வெண்மதி_தாங்கியைத் துள்ளிய மால் அயற்குத்
தான் தலை பாதங்கள் சார்வரியோன்-தன்னைச் சார்ந்தவர்க்குத்
தேன்-தலை ஆன் பாலது கலந்தால் அன்ன சீரனைச் சீர்
வான் தலை நாதனைக் காண்பது என்றோ தில்லை மன்றிடையே

#65
மன்று அங்கு அமர் திருச்சிற்றம்பலவ வடவனத்து
மின் தங்கு இடைக்கு உந்தி நாடகம் ஆடக்-கொல் வெண் தரங்கம்
துன்று அம் கிளர் கங்கையாளைச் சுடு சினத் தீ அரவக்
கன்று அங்கு அடை சடை மேல் அடையா இட்ட கைதவமே

#66
தவனைத் தவத்தவர்க்கு அன்பனைத் தன் அடி எற்கு உதவும்
சிவனைச் சிவக்கத் திரிபுரத்தைச் சிவந்தானைச் செய்ய
அவனைத் தவளத் திருநீறனைப் பெரு நீர் கரந்த
பவனைப் பணியு-மின் நும் பண்டை வல்வினை பற்று அறவே

#67
பற்று அற முப்புரம் வெந்தது பைம் பொழில் தில்லை-தன்னுள்
செல் தரு மா மணிக் கோயிலின் நின்றது தேவர் கணம்
சுற்று அரு நின் புகழ் ஏத்தித் திரிவது சூழ் சடையோய்
புற்று அரவு ஆட்டித் திரியும் அது ஒரு புல்லனவே

#68
புல்லறிவின் மற்றைத் தேவரும் பூம் புலியூருள் நின்ற
அல் எறி மா மதிக் கண்ணியனைப் போல் அருளுவரே
கல் எறிந்தான் உந்தன் வாய் நீர் கதிர் முடி மேல் உகுத்த
நல்லறிவாளனும் மீளா வழி சென்று நண்ணினரே

#69
நண்ணிய தீவினை நாசம் செலுத்தி நமன் உலகத்து
எண்ணினை நீக்கி இமையோர் உலகத்து இருக்கல் உற்றீர்
பெண்ணின் ஒர் பாகத்தன் சிற்றம்பலத்துப் பெரு நடனைக்
கண்ணினை ஆர்தரக் கண்டு கை ஆரத் தொழு-மின்களே

#70
கைச்செல்வம் எய்திடலாம் என்று பின் சென்று கண் குழியல்
பொய்ச் செல்வர் செய்திடும் புன்மைகட்கே என்றும் பொன்றல் இல்லா
அச் செல்வம் எய்திட வேண்டுதியே தில்லை அம்பலத்துள்
இச் செல்வன் பாதம் கருது இரந்தேன் உன்னை என் நெஞ்சமே
** கோயில் திருப்பண்ணியர் விருத்தம் முற்றிற்று.

@3  திருத்தொண்டர் திருவந்தாதி

#1
பொன்னி வடகரை சேர் நாரையூரில் புழைக்கை முக
மன்னன் அறுபத்துமூவர் பதி தேம் மரபு செயல்
பன்ன அத் தொண்டத்தொகை வகை பல்கும் அந்தாதி-தனைச்
சொன்ன மறைக் குல நம்பி பொன் பாதத் துணை துணையே

#2
செப்பத் தகு புகழ்த் தில்லைப்பதியில் செழு மறையோர்
ஒப்பப் புவனங்கள் மூன்றினும் உம்பரின் ஊர் எரித்த
அப்பர்க்கு அமுதத் திருநடர்க்கு அந்திப் பிறை அணிந்த
துப்பர்க்கு உரிமைத் தொழில் புரிவோர்-தமைச் சொல்லுதுமே

#3
சொல்லச் சிவன் திரு ஆணை தன் தூ_மொழி தோள் நசையை
ஒல்லைத் துறந்து உரு மூத்ததன் பின் உமைகோன் அருளால்
வில்லை புரை நுதலாளோடு இளமை பெற்று இன்பம் மிக்கான்
தில்லைத் திருநீலகண்டக் குயவனாம் செய் தவனே

#4
செய் தவர் வேண்டியது யாதும் கொடுப்பச் சிவன் தவனாய்க்
கைதவம் பேசி நின் காதலியைத் தருக என்றலுமே
மை திகழ் கண்ணியை ஈந்து அவன் வாய்ந்த பெரும் புகழ் வந்து
எய்திய காவிரிப்பூம்பட்டினத்துள் இயல் பகையே

#5
இயலா இடைச் சென்ற மாதவற்கு இன் அமுதா விதைத்த
வயல் ஆர் முளை வித்து வாரி மனை அலக்கால் வறுத்துச்
செயல் ஆர் பயிர் விழுத் தீம் கறி ஆக்கும் அவன் செழு நீர்க்
கயல் ஆர் இளையான்குடி உடை மாறன் எம் கற்பகமே

#6
கற்ற நல் மெய்த்தவன் போல் ஒரு பொய்த்தவன் காய் சினத்தால்
செற்றவன் தன்னை அவனைச் செறப் புகலும் திருவாய்
மற்று அவன் தத்தா நமரே எனச் சொல்லி வான் உலகம்
பெற்றவன் சேதிபன் மெய்ப்பொருளாம் என்று பேசுவரே

#7
பேசும் பெருமை அவ் ஆரூரனையும் பிரான் அவனாம்
ஈசன்-தனையும் புறகுதட்டு என்றவன் ஈசனுக்கே
நேசன் எனக்கும் பிரான் மனைக்கே புக நீடு தென்றல்
வீசும் பொழில் திருச்செங்குன்றம் மேய விறன்மிண்டேனே

#8
மிண்டும் பொழில் பழையாறை அமர்நீதி வெண்பொடியின்
முண்டம் தரித்த பிராற்கு நல்லூரின் முன் கோவணம் நேர்
கொண்டு இங்கு அருள் என்று தன் பெரும் செல்வமும் தன்னையும் தன்
துண்ட மதி நுதலாளையும் ஈந்த தொழிலினனே

#9
தொழுதும் வணங்கியும் மால் அயன் தேட அரும் சோதி சென்று ஆங்கு
எழுதும் தமிழ்ப் பழ ஆவணம் காட்டி எனக்கு உன் குடி
முழுதும் அடிமை வந்து ஆட்செய் எனப் பெற்றவன் முரல் தேன்
ஒழுகும் மலரின் நல் தார் எம்பிரான் நம்பியாரூரனே

#10
ஊர் மதில் மூன்று அட்ட உத்தமற்கு என்று ஓர் உயர் தவத்தோன்
தார் மலர் கொய்யா வருபவன் தண்டின் மலர் பறித்த
ஊர் மலை மேற்கொள்ளும் பாகர் உடல் துணி ஆக்கும் அவன்
ஏர் மலி மா மதில் சூழ் கருவூரில் எறிபத்தனே

#11
பத்தனை ஏனாதிநாதனைப் பார் நீடு எயினை-தன்னுள்
அத்தனைத் தன்னோடு அமர் மலைந்தான் நெற்றி நீறு கண்டு
கைத் தனி வாள் வீடு ஒழிந்தவன் கண்டிப்ப நின்றருளும்
நித்தனை ஈழக் குல தீபன் என்பர் இ நீள் நிலத்தே

#12
நிலத்தில் திகழ் திருக்காளத்தியார் திருநெற்றியின் மேல்
நலத்தில் பொழிதரு கண்ணில் குருதி கண்டு உள் நடுங்கி
வலத்தில் கடும் கணையால் தன் மலர்க் கண் இடந்து அப்பினான்
குலத்தில் கிராதன் நம் கண்ணப்பனாம் என்று கூறுவரே

#13
ஏய்ந்த கயிறு தன் கண்டத்தில் பூட்டி எழில் பனந்தாள்
சாய்ந்த சிவன் நிலைத்தான் என்பர் காதலி தாலி கொடுத்து
ஆய்ந்த நல் குங்குலியம் கொண்டு அனல் புகை காலனை முன்
காய்ந்த அரற்கு இட்டது என் கடவூரிர் கலையனையே

#14
கலச முலைக் கன்னி காதல் புதல்வி கமழ் குழலை
நல செய் தவத்தவன் பஞ்சவடிக்கு இவை நல்கு எனலும்
அலசும் எனக் கருதாது அவள் கூந்தல் அரிந்து அளித்தான்
மலை செய் மதில் கஞ்சை மானக்கஞ்சாறன் என்னும் வள்ளலே

#15
வள்ளல் பிராற்கு அமுது ஏந்தி வருவோன் உகலும் இங்கே
வெள்ளச் சடையாய் அமுதுசெய்யாவிடில் என் தலையைத்
தள்ளத் தகும் என்று வாள் பூட்டிய தடம் கையினன் காண்
அள்ளல் பழனக் கணமங்கலத்து அரிவாட்டாயனே

#16
தாயவன் யாவுக்கும் தாழ் சடை மேல் தனித் திங்கள் வைத்த
தூயவன் பாதம் தொடர்ந்து தொல் சீர்த் துளையால் பரவும்
வேயவன் மேல் மழநாட்டு விரி புனல் மங்கலக்கோன்
ஆயவன் ஆனாயன் என்னை உவந்து ஆண்டருளினனே

#17
அருள் துறை அத்தற்கு அடிமைபட்டேன் இனி அல்லன் என்னும்
பொருள் துறை ஆவது என்னே என்ன வல்லவன் பூம் குவளை
இருட்டு உறை நீர் வயல் நாவல்பதிக்கும் பிரான் அடைந்தோர்
மருள் துறை நீக்கி நல் வான் வழி காட்டிட வல்லவனே

#18
அவந்திரி குண்டு அமண் ஆவதின் மாள்வன் என்று அன்று ஆலவாய்ச்
சிவன் திருமேனிக்குச் செம் சந்தனமாச் செழு முழங்கை
உவந்து ஒளிர் பாறையில் தேய்த்து உலகு ஆண்ட ஒண் மூர்த்தி-தன் ஊர்
நிவந்த பொன் மாட மதுராபுரி என்னும் நீள் பதியே

#19
பதிகம் திகழ்தரு பஞ்சாக்கரம் பயில் நாவினன் சீர்
மதியம் சடையாற்கு அலர் தொட்டு அணிபவன் யான் மகிழ்ந்து
துதி அம் கழல் சண்பைநாதற்குத் தோழன் வன் தொண்டன் அம் பொன்
அதிகம் பெறும் புகலூர் முருகன் எனும் அந்தணனே

#20
அம் தாழ் புனல்-தன்னில் அல்லும் பகலும் நின்று ஆதரத்தால்
உந்தாத அன்பொடு உருத்திரம் சொல்லிக் கருத்து அமைந்த
பைம் தார் உருத்ரபசுபதி-தன் நல் பதி வயற்கே
நந்து ஆர் திருத்தலையூர் என்று உரைப்பர் இ நானிலத்தே

#21
நா ஆர் புகழ்த் தில்லை அம்பலத்தான் அருள் பெற்று நாளைப்
போவான் அவனாம் புறத் திருத்தொண்டன்-தன் புன் புலை போய்
மூவாயிரவர் கைகூப்ப முனியாய் அவன் பதிதான்
மா ஆர் பொழில் திகழ் ஆதனூர் என்பர் இ மண்டலத்தே

#22
மண்டும் புனல் சடையான் தமர் தூசு எற்றி வாட்டும் வகை
விண்டு மழை முகில் வீடாது ஒழியின் யான் வீவன் என்னா
முண்டம் படர் பாறை முட்டும் எழில் ஆர் திருக்குறிப்புத்
தொண்டன் குலம் கச்சி ஏகாலியர்-தங்கள் தொல் குலமே

#23
குலம் ஏறிய சேய்ஞலூரில் குரிசில் குரை கடல் சூழ்
தலம் ஏறிய விறல் சண்டி கண்டீர் தந்தை தாள் இரண்டும்
வலம் ஏறிய மழுவால் எறிந்து ஈசன் மணி முடி மேல்
நலம் ஏறிய பால் சொரிந்து அலர் சூட்டிய நல் நிதியே

#24
நிதி ஆர் துருத்தி தென் வேள்விக்குடியாய் நினை மறந்த
மதியேற்கு அறிகுறி வைத்த புகர் பின்னை மாற்றிடு என்று
துதியா அருள் சொன்னவாறு அறிவாரிடைப் பெற்றவன் காண்
நதி ஆர் புனல் வயல் நாவலர்கோன் என்னும் நல் தவனே

#25
நல் தவன் நல்லூர்ச் சிவன் திருப்பாதம் தன் சென்னி வைக்கப்
பெற்றவன் மற்று இப் பிறப்பு அற வீரட்டர் பெய் கழல் தாள்
உற்றவன் உற்ற விடம் அடையார் இட ஒள் அமுதாத்
துற்றவன் ஆமூரில் நாவுக்கரசு எனும் தூ மணியே

#26
மணியினை மா மறைக்காட்டு மருந்தினை வண் மொழியால்
திணியன நீள் கதவம் திறப்பித்தன தெள் கடலில்
பிணியன கல் மிதப்பித்தன சைவப் பெரு நெறிக்கே
அணியன நாவுக்கரையர்பிரான்-தன் அரும் தமிழே

#27
அரும் தமிழாகரன் வாதில் அமணைக் கழு நுதி மேல்
இரும் தமிழ்நாட்டிடை ஏற்றுவித்தோன் எழில் சங்கம் வைத்த
பெரும் தமிழ் மீனவன்-தன் அதிகாரி பிரசம் மல்கு
குருந்து அவிழ் சாரல் மணமேற்குடி மன் குலச்சிறையே

#28
சிறை நன் புனல் திருநாவலூராளி செழும் கயிலைக்கு
இறை நன் கழல் நாளை எய்தும் இவன் அருள் போற்ற இன்றே
பிறை நன் முடியன் அடி அடைவேன் என்று உடல் பிரிந்தான்
நறை நன் மலர்த் தார் மிழலைக்குறும்பன் எனும் நம்பியே

#29
நம்பன் திருமலை நான் மிதியேன் என்று தாள் இரண்டும்
உம்பர் மிசைத் தலையால் நடந்து ஏற உமை நகலும்
செம்பொன் உருவன் என் அம்மை எனப்பெற்றவள் செழும் தேன்
கொம்பின் உகு காரைக்காலினில் மேய குல தனமே

#30
தனமாவது திருநாவுக்கரசின் சரணம் என்னா
மனம் ஆர் புனல்பந்தர் வாழ்த்தி வைத்து ஆங்கு அவன் வண் தமிழ்க்கே
இனமாத் தனது பெயரிடப்பெற்றவன் எங்கள் பிரான்
அனம் ஆர் வயல் திங்களூரினில் வேதியன் அப்பூதியே

#31
பூதிப் புயத்தர் புயத்தில் சிலந்தி புகலும் அஞ்சி
ஊதித் துமிந்த மனைவியை நீப்ப உப்பால எல்லாம்
பேதித்து எழுந்தன காண் என்று பிஞ்ஞகன் கேட்டும் அவன்
நீதித் திகழ் சாத்தை நீலநக்கன் எனும் வேதியனே

#32
வேத மறி கரத்து ஆரூர் அரற்கு விளக்கு நெய்யைத்
தீது செறி அமண் கையர் அட்டாவிடத் தெள் புனலால்
ஏதம் உறுக வருகர் என்று அன்று விளக்கு எரித்தான்
நாதன் எழில் ஏமப்பேறூர் அதிபன் நமிநந்தியே

#33
நந்திக்கும் நம் பெருமாற்கும் நல் ஆரூரில் நாயகற்குப்
பந்திப் பரியன செந்தமிழ் பாடிப் படர் புனலில்
சிந்திப்பு அரியன சேவடி பெற்றவன் சேவடியே
வந்திப்பவன் பெயர் வன் தொண்டன் என்பர் இவ் வையகத்தே

#34
வையம் மகிழ யாம் வாழ அமணர் வலி தொலைய
ஐயன் பிரமபுரத்து அரற்கு அம் மென் குதலைச் செவ் வாய்
பைய மிழற்றும் பருவத்துப் பாடப் பருப்பதத்தின்
தையல் அருள் பெற்றனன் என்பர் ஞானசம்பந்தனையே

#35
பந்து ஆர் விரலியர் வேள் செங்கட்சோழன் முருகன் நல்ல
சந்து ஆர் அகலத்து நீலநக்கன் பெயர் தான் மொழிந்து
கொந்து ஆர் சடையர் பதிகத்தில் இட்டு அடியேன் கொடுத்த
அந்தாதி கொண்ட பிரான் அருள் காழியர் கொற்றவனே

#36
கொற்றத் திறல் எந்தை தந்தை-தன் தந்தை எம் கூட்டம் எல்லாம்
தெற்றச் சடையாய் நினது அடியேம் திகழ் வன் தொண்டனே
மற்று இப் பிணி தவிர்ப்பான் என்று உடைவாள் உருவி அ நோய்
செற்றுத் தவிர் கலிக்காமன் குடி ஏயர் சீர்க் குடியே

#37
குடி மன்னு சாத்தனூர்க் கோக் குலம் மேய்ப்போன் குரம்பை புக்கு
முடி மன்னு கூனல் பிறையாளன்-தன்னை முழுத் தமிழின்
படி மன்னு வேதத்தின் சொற்படியே பரவிட்டு என் உச்சி
அடி மன்ன வைத்த பிரான் மூலன் ஆகின்ற அங்கணனே

#38
கண் ஆர் மணி ஒன்றும் இன்றிக் கயிறு பிடித்து அரற்குத்
தண் ஆர் புனல் தடம் தொட்டலும் தன்னை நகும் அமணர்
கண் ஆங்கு இழப்ப அமணர் கலக்கம் கண்டு அம் மலர்க் கண்
விண் நாயகனிடைப் பெற்றவன் ஆரூர் விறல் தண்டியே

#39
தண்டலை சூழ் திருவேற்காட்டூர் மன்னன் தகு கவற்றால்
கொண்ட வல் ஆயம் வன் சூதரை வென்று முன் கொண்ட பொருள்
முண்ட நல் நீற்றன் அடியவர்க்கு ஈபவன் மூர்க்கன் என்பர்
நண்டு அலை நீர் ஒண் குடந்தையில் மேவும் நல் சூதனையே

#40
சூதப் பொழில் அம்பர் அந்தணன் சோமாசிமாறன் என்பான்
வேதப் பொருள் அஞ்செழுத்தும் விளம்பி அல்லால் மொழியான்
நீதிப் பரன் மன்னு நித்த நியமன் பரவை என்னும்
மாதுக்குக் காந்தன் வன் தொண்டன்-தனக்கு மகிழ் துணையே

#41
துணையும் அளவும் இல்லாதவன்-தன் அருளே துணையாக்
கணையும் கதிர் நெடு வேலும் கறுத்த கயல் இணையும்
பிணையும் நிகர்த்த கண் சங்கிலி பேர் அமைத் தோள் இரண்டும்
அணையும் அவன் திருவாரூரன் ஆகின்ற அற்புதனே

#42
தகடு அன ஆடையன் சாக்கியன் மாக் கல் தட வரையின்
மகள் தனம் தாக்கக் குழைந்த திண் தோளர் வண் கம்பர் செம்பொன்
திகழ்தரு மேனியில் செங்கல் எறிந்து சிவபுரத்துப்
புகழ் தரப் புக்கவன் ஊர் சங்கமங்கை புவனியிலே

#43
புவனியில் பூதியும் சாதனமும் பொலி ஆர்ந்து வந்த
தவ நியமற்குச் சிறப்புச்செய் தத்துவ காரணனாம்
அவனியில் கீர்த்தித் தென் ஆக்கூர் அதிபன் அரு மறையோன்
சிவன் நியமம் தலைநின்ற தொல் சீர் நம் சிறப்புலியே

#44
புலியின் அதள் உடைப் புண்ணியற்கு இன் அமுதாத் தனது ஓர்
ஒலியின் சதங்கைக் குதலைப் புதல்வன் உடல் துணித்துக்
கலியின் வலி கெடுத்து ஓங்கும் புகழ்ச் சிறுத்தொண்டன் கண்டீர்
மலியும் பொழில் ஒண் செங்காட்டங்குடியவர் மன்னவனே

#45
மன்னர் பிரான் எதிர் வண்ணான் உடல் உவர் ஊறி நீறு ஆர்
தன்னர் பிரான் தமர் போல வருதலும் தான் வணங்க
என்னர் பிரான் அடி வண்ணான் என அடிச் சேரன் என்னும்
தென்னர் பிரான் கழறிற்று அறிவான் எனும் சேரலனே

#46
சேரற்குத் தென் நாவலர் பெருமாற்குச் சிவன் அளித்த
வீரக் கட கரி முன்பு தன் பந்தி இவுளி வைத்த
வீரற்கு வென்றிக் கருப்பு வில் வீரனை வெற்றிகொண்ட
சூரற்கு எனது உள்ளம் நன்று செய்தாய் இன்று தொண்டுபட்டே

#47
தொண்டரை ஆக்கி அவரவர்க்கு ஏற்ற தொழில்கள் செய்வித்து
அண்டர்-தம் கோன் அக் கணத்துக்கு நாயகம் பெற்றவன் காண்
கொண்டல் கொண்டு ஏறிய மின்னுக்குக் கோல மடல்கள்-தொறும்
கண்டல் வெண் சோறு அளிக்கும் கடல் காழிக் கணநாதனே

#48
நாதன் திருவடியே முடியாகக் கவித்து நல்ல
போதம் கருத்தில் பொறித்தமையால் அது கைகொடுப்ப
ஓதம் தழுவிய ஞாலம் எல்லாம் ஒரு கோலின் வைத்தான்
கோதை நெடு வேல் களப்பாளன் ஆகிய கூற்றுவனே

#49
கூற்றுக்கு எவனோ புகல் திருவாரூரன் பொன் முடி மேல்
ஏற்றுத் தொடையலும் இன் அடைக்காயும் இடு தரும் அக்
கோல் தொத்துக் கூனனும் கூன் போய்க் குருடனும் கண் பெற்றமை
சாற்றித் திரியும் பழமொழியாம் இத் தரணியிலே

#50
தரணியில் பொய்ம்மை இலாத் தமிழ்ச்சங்கம் அதில் கபிலர்
பரணர் நக்கீரர் முதல் நாற்பத்தொன்பது பல் புலவோர்
அருள் நமக்கு ஈயும் திருவாலவாய் அரன் சேவடிக்கே
பொருள் அமைத்து இன்பக் கவி பல பாடும் புலவர்களே

#51
புலம் மன்னிய மன் ஐச் சிங்களநாடு பொடிபடுத்த
குலம் மன்னிய புகழ்க் கோகனநாதன் குல முதலோன்
நலம் மன்னிய புகழ்ச்சோழனது என்பர் நகு சுடர் வாள்
வலம் மன்னிய எறிபத்தனுக்கு ஈந்தது ஒர் வண் புகழே

#52
புகழும்படி எம் பரமே தவர்க்கு நல் பொன் இடுவோன்
இகழும்படி ஓர் தவன் மடவார் புனை கோலம் எங்கும்
நிகழும்படி கண்டு அவனுக்கு இரட்டி பொன் இட்டவன் நீள்
திகழும் முடி நரசிங்கமுனையரசன் திறமே

#53
திறம் அமர் மீன் படுக்கும் பொழுது ஆங்கு ஒரு மீன் சிவற்கு என்று
உற அமர் மா கடற்கே விடுவோன் ஒரு நாள் கனக
நிறம் அமர் மீன் பட நின்மலற்கு என்று விட்டோன் கமலம்
புறம் அமர் நாகை அதிபத்தனாகிய பொய்யிலியே

#54
பொய்யைக் கடிந்து நம் புண்ணியர்க்கு ஆட்பட்டுத் தன் அடியான்
சைவத் திருவுருவாய் வரத் தான் அவன் தாள் கழுவ
வையத்தவர் முன்பு வெள்கி நீர் வாரா விட மனைவி
கையைத் தடிந்தவன் பெண்ணாகடத்துக் கலிக்கம்பனே

#55
கம்பக் கரிக்கும் சிலந்திக்கும் நல்கிய கண்_நுதலோன்
உம்பர்க்கு நாதற்கு ஒளி விளக்கு ஏற்றற்கு உடல் இலனாய்க்
கும்பத் தயிலம் விற்றும் செக்கு உழன்றும் கொள் கூலியினால்
நம்பற்கு எரித்த கலி ஒற்றி மா நகர்ச் சக்கிரியே

#56
கிரி வில்லவர்-தம் அடியரைத் தன் முன்பு கீழ்மை சொன்ன
திரு_இல்லவரை அ நா அரிவோன் திருந்தாரை வெல்லும்
வரி வில்லவன் வயல் செங்கழுநீரின் மருவு தென்றல்
தெருவில் விரை கமழும் தென் வரிஞ்சைத் திகழ் சத்தியே

#57
சத்தித் தடக் கைக் குமரன் நல் தாதை-தன் தானம் எல்லாம்
முத்திப் பதம் ஒரொர் வெண்பா மொழிந்து முடி அரசாம்
அத்திற்கு மும்மை நன்று ஆள் அரற்கு ஆய் ஐயம் ஏற்றல் என்னும்
பத்திக் கடல் ஐயடிகள் ஆகின்ற நம் பல்லவனே

#58
பல் அவை செங்கதிரோனைப் பறித்தவன் பாதம் புகழ்
சொல்லவன் தென் புகலூர் அரன்-பால் துய்ய செம்பொன் கொள்ள
வல்லவன் நாட்டியத்தான்குடி மாணிக்க_வண்ணனுக்கு
நல்லவன் தன் பதி நாவலூர் ஆகின்ற நல் நகரே

#59
நல் நகராய இருக்குவேளூர்-தனில் நல்குரவாய்ப்
பொன் நகராய நல் தில்லை புகுந்து புலீச்சரத்து
மன்னவர் ஆய அரற்கு நல் புல்லால் விளக்கு எரித்தான்
கல் நவில் தோள் எந்தை தந்தை பிரான் எம் கணம்புல்லனே

#60
புல்லன ஆகா வகை உலகத்துப் புணர்ந்தனவும்
சொல்லினவும் நயம் ஆக்கிச் சுடர் பொன் குவடு தனி
வில்லனை வாழ்த்தி விளங்கும் கயிலை புக்கான் என்பரால்
கல் அன மா மதில் சூழ் கடவூரினில் காரியையே

#61
கார்த் தண் முகில் கைக் கடல் காழியர் பெருமாற்கு எதிராய்
ஆர்த்த அமணர் அழிந்தது கண்டு மற்று ஆங்கு அவரைக்
கூர்த்த கழுவின் நுதி வைத்த பஞ்சவன் என்று உரைக்கும்
வார்த்தையது பண்டு நெல்வேலியில் வென்ற மாறனுக்கே

#62
மாறா அருள் அரன்-தன்னை மன ஆலயத்து இருத்தி
ஆறா அறிவாம் ஒளி விளக்கு ஏற்றி அக மலர்வாம்
வீறா மலர் அளித்து அன்பு எனும் மெய் அமிர்தம் கொடுத்தான்
வீறு ஆர் மயிலையுள் வாயிலான் என்று விளம்புவரே

#63
என்று விளம்புவர் நீடூர் அதிபன் முனையடுவோன்
என்றும் அமருள் அழிந்தவர்க்காக் கூலி ஏற்று எறிந்து
வென்று பெரும் செல்வம் எல்லாம் கனக நல் மேரு என்னும்
குன்று வளைத்த சிலையான் தமர்க்குக் கொடுத்தனனே

#64
கொடுத்தான் முதலை கொள் பிள்ளைக்கு உயிர் அன்று புக்கொளியூர்த்
தொடுத்தான் மதுர கவி அவிநாசியை வேடர் சுற்றம்
படுத்தான் திருமுருகன் பூண்டியினில் பராபரத் தேன்
மடுத்தான் அவன் என்பர் வன் தொண்டன் ஆகின்ற மாதவனே

#65
மாதவத்தோர் தங்கள் வைப்பினுக்கு ஆரூர் மணிக்கு வைத்த
போதினைத் தான் மோந்த தேவி-தன் மூக்கை அரியப் பொன் கை
காதி வைத்து அன்றோ அரிவது என்று ஆங்கு அவள் கை தடிந்தான்
நாதம் மொய்த்து ஆர் வண்டு கிண்டு பைம் கோதைக் கழல்சிங்கனே

#66
சிங்கத்து உருவனைச் செற்றவன் சிற்றம்பல முகடு
கொங்கின் கனகம் அணிந்த ஆதித்தன் குல முதலோன்
திங்கள் சடையர் தமரது என் செல்வம் எனப் பறைபோக்கு
எங்கட்கு இறைவன் இருக்குவேளூர் மன் இடங்கழியே

#67
கழி நீள் கடல் நஞ்சு அயின்றார்க்கு இருந்த கடி மலரை
மொழி நீள் புகழ்க் கழல்சிங்கன்-தன் தேவி முன் மோத்தலுமே
எழில் நீள் குமிழ் மலர் மூக்கு அரிந்தான் என்று இயம்புவரால்
செழு நீர் மருகல் நல் நாட்டு அமர் தஞ்சைச் செருத்துணையே

#68
செருவிலிபுத்தூர்ப் புகழ்த் துணை வையம் சிறுவிலைத்தா
உரு வலி கெட்டு உணவு இன்றி உமைகோனை மஞ்சனம் செய்
தருவதோர் போது கை சோர்ந்து கலசம் விழத் தரியாது
அருவரை வில்லி அருளும் நிதியது பெற்றனனே

#69
பெற்றம் உயர்த்தோன் விரையாக் கலி பிழைத்தோர் தனது
சுற்றம் அறுக்கும் தொழில் திருநாட்டியத்தான்குடிக்கோன்
குற்றம் அறுக்கும் நம் கோட்புலி நாவல் குரிசில் அருள்
பெற்ற அருள் கடல் என்று உலகு ஏத்தும் பெருந்தகையே

#70
தகும் மகள் பேசினோன் வீயவே நூல் போன சங்கிலி-பால்
புகு மணக் காதலினால் ஒற்றியூர் உறை புண்ணியன்-தன்
மிகு மலர்ப் பாதம் பணிந்து அருளால் இவ் வியன் உலகம்
நகும் வழக்கே நன்மையாப் புணர்ந்தான் நாவலூர் அரசே

#71
அரசினை ஆரூர் அமரர்பிரானை அடிபணிந்திட்டு
உரைசெய்த வாய் தடுமாறி உரோம புளகம் வந்து
கர சரணாதி அவயவம் கம்பித்துக் கண் அருவி
சொரிதரும் அங்கத்தினோர் பத்தர் என்று தொகுத்தவரே

#72
தொகுத்த வடமொழி தென்மொழி யாதொன்று தோன்றியதே
மிகுத்த வியல் இசை வல்ல வகையில் விண் தோயும் நெற்றி
வகுத்த மதில் தில்லை அம்பலத்தான் மலர்ப் பாதங்கள் மேல்
உகுத்த மனத்தொடும் பாட வல்லோர் என்பர் உத்தமரே

#73
உத்தமத்தானத்து அறம் பொருள் இன்பம் ஒடி எறிந்து
வித்தகத் தானத்து ஒருவழிக் கொண்டு விளங்கச் சென்னி
மத்தம் வைத்தான் திருப்பாத கமல மலர் இணைக் கீழ்ச்
சித்தம் வைத்தார் என்பர் வீடுபேறு எய்திய செல்வர்களே

#74
செல்வம் திகழ் திருவாரூர் மதில் வட்டத்துள் பிறந்தார்
செல்வன் திருக்கணத்து உள்ளவரே அதனால் திகழச்
செல்வம் பெருகு தென் ஆரூர்ப் பிறந்தவர் சேவடியே
செல்வ நெறி உறுவார்க்கு அணித்தாய செழு நெறியே

#75
நெறி வார் சடையரைத் தீண்டி முப்போதும் நீடு ஆகமத்தின்
அறிவால் வணங்கி அர்ச்சிப்பவர் நம்மையும் ஆண்டு அமரர்க்கு
இறையாய் முக்கண்ணும் எண் தோளும் தரித்து ஈறு_இல் செல்வத்தொடும்
உறைவார் சிவபெருமாற்கு உறைவு ஆய உலகினிலே

#76
உலகு கலங்கினும் ஊழி திரியினும் உள் ஒருகால்
விலகுதல் இல்லா விதியது பெற்ற நல வித்தகர் காண்
அலகு_இல் பெரும் குணத்து ஆரூர் அமர்ந்த அரன் அடிக் கீழ்
இலகு வெண் நீறு தம் மேனிக்கு அணியும் இறைவர்களே

#77
வருக்கம் அடைத்து நல் நாவலூர் மன்னவன் வண் தமிழால்
பெருக்கு மதுரத் தொகையில் பிறை சூடி பெய் கழற்கே
ஒருக்கு மனத்தொடு அப்பால் அடிச் சார்ந்தவர் என்று உலகில்
தெரிக்குமவர் சிவன் பல் கணத்தோர் நம் செழும் தவரே

#78
செழு நீர் வயல் முதுகுன்றினில் செந்தமிழ் பாடி வெய்ய
மழு நீள் தடக்கையன் ஈந்த பொன் ஆங்குக் கொள்ளாது வந்து அப்
பொழில் நீள்தரு திருவாரூரில் வாசியும் பொன்னும் கொண்டோன்
கெழு நீள் புகழ்த் திருவாரூரன் என்று நாம் கேட்பதுவே

#79
பதும நல் போது அன்ன பாதத்து அரற்கு ஒரு கோயிலை யான்
கதுமெனச் செய்குவது என்று-கொலாம் என்று கண் துயிலாது
அது மனத்தே எல்லி-தோறும் நினைந்து அருள் பெற்றது என்பர்
புது மணத் தென்றல் உலாநின்ற ஊர்-தனில் பூசலையே

#80
பூசல் அயில் தென்னனார்க்கு அனல் ஆகப் பொறாமையினால்
வாச மலர்க் குழல் பாண்டிமாதேவியாம் மானி கண்டீர்
தேசம் விளங்கத் தமிழாகரர்க்கு அறிவித்தவரால்
நாசம் விளைத்தாள் அருகந்தருக்குத் தென்னாட்டகத்தே

#81
நாட்டம் இட்டு அன்று அரி வந்திப்ப வெல் படை நல்கினர்-தம்
தாள் தரிக்கப்பெற்றவன் என்பர் சைவத்தவர் அரையில்
கூட்டும் அக்கப்படம் கோவணம் நெய்து கொடுத்து நன்மை
ஈட்டும் அக் காம்பீலிச் சாலிய நேசனை இம்மையிலே

#82
மை வைத்த கண்டன் நெறி அன்றி மற்று ஓர் நெறி கருதாத்
தெய்வக் குடிச் சோழன் முன்பு சிலந்தியாய்ப் பந்தர் செய்து
சைவத்து உரு எய்தி வந்து தரணி நீடு ஆலயங்கள்
செய்வித்தவன் திருக் கோச்செங்கணான் என்னும் செம்பியனே

#83
செம்பொன் அணிந்து சிற்றம்பலத்தைச் சிவலோகம் எய்தி
நம்பன் கழல் கீழ் இருந்தோன் குல முதல் என்பர் நல்ல
வம்பு மலர்த் தில்லை ஈசனைச் சூழ மறை வளர்த்தான்
நிம்ப நறும் தொங்கல் கோச்செங்கணான் என்னும் நித்தனையே

#84
தனை ஒப்ப அரும் எருக்கத்தம்பூலியூர்த் தகும் புகழோன்
நினை ஒப்ப அரும் திருநீலகண்டப் பெரும்பாணனை நீள்
சினை ஒப்ப அலர் பொழில் சண்பையர்கோன் செந்தமிழொடு இசை
புனையப் பரன் அருள் பெற்றவன் என்பர் இப் பூதலத்தே

#85
தலம் விளங்கும் திருநாவலூர்-தன்னில் சடையன் என்னும்
குலம் விளங்கும் புகழோனை உரைப்பர் குவலயத்தில்
நலம் விளங்கும்படி நாம் விளங்கும்படி நல் தவத்தின்
பலம் விளங்கும்படி ஆரூரனை முன் பயந்தமையே

#86
பயந்தாள் கறுவுடைச் செம் கண் வெள்ளைப் பொள்ளல் நீள் பனைக் கைக்
கயம்தான் உகைத்த நல் காளையை என்றும் கபாலம் கைக் கொண்டு
அயம்தான் புகும் அரன் ஆரூர்ப் புனிதனவன் திருத்தாள்
நயந்தாள் தனது உள்ளத்து என்றும் உரைப்பது ஞானியையே

#87
ஞான ஆரூரரைச் சேரரை அல்லது நாம் அறியோம்
மானவ ஆக்கையொடும் புக்கவரை வளர் ஒளிப் பூண்
வானவராலும் மருவற்கு அரிய வட கயிலைக்
கோனவன் கோயில் பெரும் தவத்தோர்-தங்கள் கூட்டத்திலே

#88
கூட்டம் ஒன்பானொடு அறுபத்துமூன்று தனிப்பெயரா
ஈட்டும் பெரும் தவத்தோர் எழுபத்திரண்டாம் வினையை
வாட்டும் தவத் திருத்தொண்டத்தொகை பதினொன்றின் வகைப்
பாட்டும் திகழ் திருநாவலூராளி பணித்தனனே

#89
பணித்த நல் தொண்டத்தொகை முதல் தில்லை இலை மலிந்த
அணித் திகழ் மும்மை திருநின்ற வம்பறா வார்கொண்ட சீர்
இணைத்த நல் பொய்யடிமை கறைக்கண்டன் கடல் சூழ்ந்த பின்
மணித் திகழ் சொல் பத்தர் மன்னியசீர்மறைநாவனொடே

#90
ஓடிடும் பஞ்சேந்திரியம் ஒடுக்கி என் ஊழ்வினைகள்
வாடிடும் வண்ணம் நின்று எத் தவம் செய்தனன் வானின் உள்ளோர்
சூடிடும் சீர்த் திருப்பாதத்தர் தொண்டத்தொகையின் உள்ள
சேடர்-தம் செல்வப் பெரும் புகழ் அந்தாதி செப்பிடவே
** திருத்தொண்டர் திருவந்தாதி முற்றிற்று.
** திருமுறை11

&12 நம்பியாண்டார் நம்பிகள்

@4 ஆளுடைய பிள்ளையார் திருவந்தாதி

#1
பார் மண்டலத்தினில் பன்னிருபேரொடு மன்னி நின்ற
நீர் மண்டலப் படப்பைப் பிரமாபுரம் நீறு அணிந்த
கார் மண்டலக் கண்டத்து எண் தடம் தோளான் கருணை பெற்ற
தார் மண்டல மணி சம்பந்தன் மேவிய தண் பதியே

#2
பதிகப் பெருவழி காட்டிப் பருப்பதக்கோன் பயந்த
மதியத் திருநுதல் பங்கன் அருள் பெற வைத்த எங்கள்
நிதியைப் பிரமாபுரநகர் மன்னனை என்னுடைய
கதியைக் கருத வல்லோர் அமராவதி காவலரே

#3
காப் பயில் காழிக் கவுணியர் தீபற்கு என் காரணமா
மாப் பழி வாரா வகை இருப்பேன் என்ன மாரன் என்னே
பூப் பயில் வாளிகள் அஞ்சும் என் நெஞ்சு அரங்கம் புகுந்த
வேப் பயில் வார் சிலை கால் வளையாநிற்கும் மீண்டு இரவே

#4
இரவும் பகலும் நின் பாதத்து அலர் என் வழி முழுதும்
பரவும் பரிசே அருளு கண்டாய் இந்தப் பாரகத்தே
விரவும் பர மத கோளரியே குட வெள் வளைகள்
தரளம் சொரியும் கடல் புடை சூழ்ந்த தராய் மன்னனே

#5
மன்னிய மோகச் சுவை ஒளி ஊறு ஓசை நாற்றம் என்று இப்
பன்னிய ஐந்தின் பதம் கடந்தோர்க்கும் தொடர்வு அரிய
பொன் இயல் பாடகம் கிங்கிணிப் பாத நிழல் புகுவோர்
துன்னிய கா அமர் சண்பையர் நாதற்குத் தொண்டர்களே

#6
தொண்டு இனம் சூழச் சுரி குழலார் தம் மனம் தொடர
வண்டு இனம் சூழ வரும் இவன் போலும் மயில்  உகுத்த
கண் தினம் சூழ்ந்த வளை பிரம்போர்க் கழுவா உடலம்
விண்டு இனம் சூழக் கழுவின ஆக்கிய வித்தகனே

#7
வித்தகம் பேசி நம் வேணுத் தலைவனை வாள் நிகர்த்து
முத்து அகம் காட்டும் முறுவல் நல்லார்-தம் மனம் அணைய
உய்த்து அகம் போந்திருந்து உள்ளவும் இல்லாதனவும் உறு
பொத்தகம் போலும் முது முலைப் பாணன் புணர்க்கின்றதே

#8
புணர்ந்த நல் மேகச் சிறு நுண் துளியில் சிறகு ஒதுக்கி
உணர்ந்தனர் போல இருந்தனையால் உலகம் பரசும்
குணம் திகழ் ஞானசம்பந்தன் கொடி மதில் கொச்சையின்-வாய்
மணந்தவர் போயினரோ சொல்லு வாழி மடக் குருகே

#9
குருந்து அலர் முல்லை அம் கோவலர் ஏற்றின் கொலை மருப்பால்
அரும் திறல் ஆகத்து உழுத செம் சேற்று அருகாசனி-தன்
பெரும் திற மா மதில் சண்பைநகர் அன்ன பேர் அமைத் தோள்
திருந்து_இழை ஆர்வம் முரசே

#10
முரசம் கரைய முன் தோரணம் நீட முழுநிதியின்
பரிசம் கொணர்வான் அமைகின்றனர் பலர் பார்த்து இனி நீ
அரி சங்கு அணைதல் என்னா முன் கருது அருகாசனி-தன்
சுரி சங்கு அணை வயல் தந்த நகர் அன்ன தூ_மொழிக்கே

#11
மொழிவது சைவ சிகாமணி மூரித் தட வரைத் தோள்
தொழுவது மற்று அவன் தூ மலர்ப் பாதங்கள் தாமம் கமழ்ந்து
எழுவது கூந்தல் பூம் தாமரை இனி யாது-கொலோ
மொழிவது சேரி முரிப் புதை மாதர் முறுவலித்தே

#12
வலி கெழு குண்டர்க்கு வைகைக் கரை அன்று வான் கொடுத்த
கலி கெழு திண் தோள் கவுணியர் தீபன் கடல் உடுத்த
ஒலி தரு நீர் வையகத்தை உறையிட்டது ஒத்து உதிரும்
மலி தரு வார் பனியாம் மட மாதினை வாட்டுவதே

#13
வாட்டுவர் தத்தம் துயரை வன் கேழலின் பின்பு சென்ற
வேட்டுவர் கோலத்து வேதத் தலைவனை மெல் விரலால்
தோட்டு இயல் காதன் இவன் என்று தாதைக்குச் சூழ் விசும்பில்
காட்டிய கன்றின் கழல் திறமானவை கற்றவரே

#14
அவர் சென்று அணுகுவர் மீள்வது இங்கு அன்னை அருகர்-தம்மைத்
தவர்கின்ற தண் தமிழ்ச் சைவ சிகாமணி சண்பை என்னப்
பவர்கின்ற நீள் கொடிக் கோபுரம் பல் கதிரோன் பரியைக்
கவர்கின்ற சூலத்தொடு நின்று தோன்றும் கடி நகரே

#15
நகரம் கெடப் பண்டு திண் தேர் மிசை நின்று நான்மறைகள்
பகர் அம் கழலவனைப் பதினாறாயிரம் பதிகம்
மகரம் கிளர் கடல் வையம் துயர் கெட வாய் மொழிந்த
நிகர் அங்கு இலி கலிக் காழிப்பிரான் என்பர் நீள் நிலத்தே

#16
நிலம் ஏறிய மருப்பின் திருமாலும் நிலம் படைத்த
குலம் ஏறிய மலர்க் கோகனதத்து அயனும் கொழிக்கும்
சலம் ஏறிய முடி தாள் கண்டிலர் தந்தை காண அன்று
நலம் ஏறிய புகழ்ச் சம்பந்தன் காட்டிய நாதனையே

#17
நாதன் நனிபள்ளி சூழ் நகர் கானகம் ஆக்கி அஃதே
போதின் மலி வயல் ஆக்கிய கோன் அமர் பொன் புகலி
மேதை நெடும் கடல் வாரும் கயலோ விலைக்கு உளது
காதின் அளவும் மிளிர் கயலோ சொல்லு காரிகையே

#18
கைம்மையினால் நின் கழல் பரவாது கண்டார்க்கு இவன் ஓர்
வன்மையனே என்னும் வண்ணம் நடித்து விழுப்பொருளோடு
இம்மையில் யான் எய்தும் இன்பம் கருதித் திரிதரும் அத்
தன்மையினேற்கும் அருளுதியோ சொல்லு சம்பந்தனே

#19
பந்து ஆர் அணி விரல் பங்கயக் கொங்கைப் பவளச் செவ் வாய்க்
கொந்து ஆர் நறும் குழல் கோமள_வல்லியைக் கூற அரும் சீர்
நந்தாவிளக்கினைக் கண்டது நான் எப்பொழுது முன்னும்
சந்து ஆர் அகலத்து அருகாசனி-தன் தட வரையே

#20
வரை கொண்ட மா மதில் சண்பைத் தலைவனை வாழ்த்தலர் போல்
நிரை கொண்டு வானோர் கடைந்ததின் நஞ்சம் நிகழக்-கொலாம்
நுரை கொண்டு மெய்ப் பரத்து உள்ளம் சுழல நொந்தோர் இரவும்
திரை கொண்டு அலமரும் இவ் அகல் ஞாலம் செறி கடலே

#21
கடல் அன்ன பொய்மைகள் செய்யினும் வெய்ய கடு நரகத்து
இட நமன் ஏவுதற்கு எவ்விடத்தான் இரும் செந்தமிழால்
திடம் மன்னு மா மதில் சண்பைத் தலைவன் செந்தாமரையின்
வடம் மன்னு நீள் முடியான் அடிப் போது அவை வாழ்த்தினமே

#22
வாழ்த்துவது எம் பரமே ஆகும் அந்தத்து வைய முந்நீர்
ஆழ்த்திய காலத்தும் ஆழாதது அரன் சேவடியே
ஏத்திய ஞானசம்பந்தற்கு இடம் இசைத் தும்பி கொம்பர்க்
காத் திகழ் கேதகம் போது அகம் ஈனும் கழுமலமே

#23
மலர் பயில் வாள் கண்ணி கேள் கண்ணி நீள் முடி வண் கமலப்
பலர் பயில் கீர்த்திக் கவுணியர் தீபன் பகைவர் என்னத்
தலை பயில் பூம் புனம் கொய்திடுமே கணியார் புலம்ப
அலர் பயிலா முன் பறித்தனம் ஆகில் அரும்பினையே

#24
அரும்பின அன்பு இல்லை அர்ச்சனை இல்லை அரன் நெறியே
விரும்பின மாந்தர்க்கு மெய்ப் பணி செய்கிலன் பொய்க்கு அமைந்த
இரும்பு அன உள்ளத்தினேற்கு எங்ஙனே வந்து நேர்பட்டதால்
கரும்பன நீள் வயல் சூழ் காழிநாதன் கழல் அடியே

#25
அடியால் அலர் மிதித்தால் அரத்தம் பில்கு அமிர்தம் இன்று இக்
கொடியானொடும் பின் நடந்தது எவ்வாறு அலர் கோகனதக்
கடி ஆர் நறும் கண்ணி ஞானசம்பந்தன் கருதலர் போல்
வெடியாவிடு வெம் பரல் சுறு நாறு வியன் கரத்தே

#26
சுரபுரத்தார்-தம் துயருக்கு இரங்கிச் சுரர்கள் தங்கள்
பரபுரத்தார்-தம் துயர் கண்டு அருளும் பரமன் மன்னும்
மரபு உரத்தான் அடி எய்துவன் என்ப அவன் அடி சேர்
சிரபுரத்தான் அடியார் அடியேன் என்றும் திண்ணனவே

#27
திண் என் அவர் சென்ற நாட்டிடை இல்லை-கொல் தீம் தமிழோர்
கண் என ஓங்கும் கவுணியர் தீபன் கை போல் பொழிந்து
விண்ணினவாய் முல்லை மெல் அரும்பு ஈன மற்று யாம் மெலிய
எண்ணின நாள் வழுவாது இரைத்து ஓடி எழு முகிலே

#28
எழுவாள் மதியால் வெதுப்புண்டு அலமந்து எழுந்து விம்மித்
தொழுவாள் தனக்கு இன்று அருளும்-கொலாம் தொழு நீர வைகைக்
குழுவாய் எதிர்ந்த உறி கைப் பறி தலைக் குண்டர்-தங்கள்
கழுவா உடலம் கழுவின ஆக்கிய கற்பகமே

#29
கல் பா நறவம் மணி கொழித்து உந்தும் அலைச் சிலம்பா
நல் பா மொழி எழில் ஞானசம்பந்தன் புறவம் அன்ன
வில் பா நுதலி தன் மென் முலையின் இளம் செவ்வி கண்டிட்டு
இல் பாவிடும் வண்ணம் எண்ணுகின்றாள் அம்ம எம் அனையே

#30
எம் அனையாய் எந்தையாய் என்னை ஆண்டு என் துயர் தவிர்த்த
செம் மலர் நீள் முடி ஞானசம்பந்தன் புறவம்_அன்னீர்
வெம் முனை வேல் என்ன என்ன மிளிர்ந்து வெளுத்து அரி ஏன்று
உம்மனவோ அல்லவோ வந்து என் உள்ளத்து ஒளிர்வனவே

#31
ஒளிறு மணிப் பணிநாட்டும் உலகத்தும் உம்பருள்ளும்
வெளிறுபடச் சில நிற்பது உண்டே மிண்டி மீன் உகளும்
அளறு வயல் சண்பைநாதன் அமுதப் பதிகம் என்னும்
களிறு விடப் புகுமேல் தொண்டர் பாடும் கவிதைகளே

#32
கவிக்குத் தகுவன கண்ணுக்கு இனியன கேட்கில் இன்பம்
செவிக்குத் தருவன சிந்தைக்கு உரியன பைம் தரளம்
நவிக் கண் சிறுமியர் முற்றில் முகந்து தம் சிற்றில்-தொறும்
குவிக்கத் திரை பரக்கும் கொச்சைநாதன் குரை கழலே

#33
கழல்கின்ற ஐங்கணை அந்தியும் அன்றிலும் கால் பரப்பிட்டு
அழல்கின்ற தென்றலும் வந்து இங்கு அடர்ப்ப அன்று ஆய்_இழைக்காச்
சுழல்கின்ற நஞ்சம் தணித்தவன்-தன்னைத் தொடர்ந்து பின் போய்
உழல்கின்ற நெஞ்சம் இங்கு என்னோ இனி இன்று உறுகின்றதே

#34
உறுகின்ற அன்பினோடு ஒத்திய தாளமும் உள் உருகிப்
பெறுகின்ற இன்பும் பிறை நுதல் முண்டமும் கண்டவரைத்
தெறுகின்றவாறு என்ன செய் தவமோ வந்து என் சிந்தையுள்ளே
துறுகின்ற பாதன் கழுமலம் போலும் துடி_இடைக்கே

#35
இடையும் எழுதாது ஒழியலும் ஆம் இன வண்டுகளின்
புடையும் எழுதினும் பூம் குழல் ஒக்கும் அப் பொன்_அனையாள்
நடையும் நகையும் தமிழாகரன்-தன் புகலி நல் தேன்
அடையும் மொழியும் எழுதிடின் சால அதிசயமே

#36
மேனாட்டு அமரர் தொழ இருப்பாரும் வினைப் பயன்கள்
தாம் நாட்டு அரு நரகில் தளர்வாரும் தமிழர்-தங்கள்
கோன் நாட்டு அருகர் குழாம் வென்ற கொச்சையர்கோன் கமலப்
பூ நாட்டு அடி பணிந்தாரும் அல்லாத புலையருமே

#37
புலை அடித் தொண்டனைப் பூசுரன் ஆக்கிப் பொரு கயல் கண்
மலை மடப் பாவைக்கு மா நடம் ஆடும் மணியை என்தன்
தலையிடைப் பாதனைக் கற்று ஆங்கு உரைத்த சம்பந்தன் என்னா
முலையிடைப் பொன் கொண்டு சங்கு இழந்தாள் என்தன் மொய்_குழலே

#38
குழல் இயல் இன் கவி ஞானசம்பந்தன் குரை கழல் போல்
கழல் இயல் பாதம் பணிந்தேன் உனையும் கதிரவனே
தழல் இயல் வெம்மை தணித்து அருள் நீ தணியாத வெம்மை
அழல் இயல் கால் நடந்தாள் வினையேன் பெற்ற ஆரணங்கே

#39
அணங்கு அமர் யாழ் முரித்து ஆண்பனை பெண்பனை ஆக்கி அமண்
கணம் கழுவேற்றிக் கடு விடம் தீர்த்துக் கதவு அடைத்துப்
பிணங்கு அலை நீர் எதிர் ஓடம் செலுத்தின வெண் பிறையோடு
இணங்கிய மாடச் சிரபுரத்தான்-தன் இரும் தமிழே

#40
இரும் தண் புகலி கோலக்கா எழில் ஆவடுதுறை சீர்
பொருந்தும் அரத்துறை போனகம் தாளம் நல் பொன் சிவிகை
அருந்திட ஒற்ற முத்தீச் செய ஏற அரன் அளித்த
பெருந்தகை சீரினை எம் பரமோ நின்று பேசுவதே

#41
பேசும் தகையது அன்றே இன்றும் அன்றும் தமிழ் விரகன்
தேசம் முழுதும் மழை மறந்து ஊண் கெடச் செம் தழல் கை
ஈசன் திருவருளால் எழில் வீழிமிழலையின்-வாய்க்
காசின் மழை பொழிந்தான் என்று இ ஞாலம் கவின் பெறவே

#42
பெறுவது நிச்சயம் அஞ்சல் நெஞ்சே பிரமாபுரத்து
மறு அறு பொன் கழல் ஞானசம்பந்தனை வாழ்த்துதலால்
வெறியுறு கொன்றை மறியுறு செம் கை விடை எடுத்த
பொறியுறு பொன் கொடி எம்பெருமானவர் பொன் உலகே

#43
பொன் ஆர் மதில் சூழ் புகலிக்கு அரசை அருகர்-தங்கள்
தென்னாட்டு அரண் அட்ட சிங்கத்தினை எம் சிவன் இவன் என்று
அந்நாள் குதலைத் திருவாய் மொழிகள் அருளிச் செய்த
என் ஆனையைப் பணிவார்க்கு இல்லை காண்க யமாலயமே

#44
மாலை ஒப்பாகும் பிறை முன்பு நின்று மணி குறுக்கி
வேலையைப் பாடு அணைத்து ஆங்கு எழில் மன்மதன் வில் குனித்த
கோலை எப்போதும் பிடிப்பன் வடுப் படு கொக்கு இனம் சூழ்
சோலை ஐக் காழித் தலைவன் மலர் இன்று சூடிடினே

#45
சூடு நல் தார்த் தமிழாகரன்-தன் பொன் சுடர் வரைத் தோள்
கூடுதற்கு ஏசற்ற கொம்பினை நீயும் கொடும் பகை நின்று
ஆடுதற்கே அத்தனைக்கு உனையே நின்னை ஆடு அரவம்
வாடிடக் காரும் மறுவும் படுகின்ற வாள் மதியே

#46
மதிக்கு அத்தகு நுதல் மாதொடும் எங்கள் மலையில் வைகித்
துதிக்கத் தகு சண்பைநாதன் சுருதி கடந்து உழவோர்
மிதிக்கக் கமலம் முகிழ்த் தண் தேன் உண்டு மிண்டி வரால்
குதிக்கக் குருகு இரியும் கொச்சைநாடு குறுகு-மினே

#47
குறு மனம் உள் கலவாத் தமிழாகரன் கொச்சை அன்ன
நறு மலர் மென் குழலாய் அஞ்சல் எம் ஊர் நகு மதி சென்று
உறு மனை ஒண் சுவர் ஓவியக் கிள்ளைக்கு நும் பதியில்
சிறுமிகள் சென்றிருந்து அங்கையை நீட்டுவர் சேய்_இழையே

#48
இழை வளர் ஆகத்து ஞானசம்பந்தன் இரும் சுருதிக்
கழை வளர் குன்று கடத்தலும் காண்பீர் கடைசியர் நீள்
முழை வளர் நண்டு படத் தடம் சாலி முத்துக் கிளைக்கும்
மழை வளர் நீள் குடுமிப் பொழில் சூழ்ந்த வள வயலே

#49
வயல் ஆர் மருகல் பதி-தன்னில் வாள் அரவால் கடியுண்(டு)
அயலா விழுந்த அவனுக்கு இரங்கி அறிவு அழிந்த
கயல் ஆர் கரும் கண்ணி-தன் துயர் தீர்த்த கருணை வெள்ளப்
புயல் ஆர்தரு கையினான் என்னத் தோன்றிடும் புண்ணியமே

#50
புண்ணியநாடு புகுவதற்காகக் புலன் அடக்கி
எண்ணிய செய் தொழில் நிற்பது எல்லாரும் இன்று யான் எனக்கு
நண்ணிய செய் தொழில் ஞானசம்பந்தனை நந்து அமர் நீர்க்
கண் இயல் மாடக் கழுமலத்தானைக் கருதுவதே

#51
கருதத் தவ அருள் ஈந்து அருள் ஞானசம்பந்தன் சண்பை
இரதக் கிளி மொழி மாதே கலங்கல் இவர் உடலம்
பொருது அக் கழுநிரை ஆக்குவன் நும் தமர் போர்ப் படையேல்
மருதச் சினையில் பொதும்பருள் ஏறி மறைகுவனே

#52
மறை முழங்கும் குரல் ஆர்கலி காட்ட வயல் கடைஞர்
பறை முழங்கும் புகலித் தமிழாகரன் பற்றலர் போல
துறை முழங்கும் கரி சீறி மடங்கல் சுடர்ப் பளிங்கின்
அறை முழங்கும் வழி நீ வரின் சால வரும் பழியே

#53
பழிக்கே தகுகின்றது இன்று இப் பிறை பல் கதிர் விழுந்த
வழிக்கே திகழ்தரு செக்கரைக் கொச்சைவயவர் என்னும்
மொழிக்கே விரும்பி முளரிக்கு அலமரும் ஓவியர்-தம்
கிழிக்கே தரும் உருவத்து இவள் வாடிடக் கீள்கின்றதே

#54
கீள் அரிக் குன்றத்து அரவம் உமிழ்ந்த கிளர் மணியின்
வாள் அரிக்கும் வைகை மாண்டனர் என்பர் வயல் புகலித்
தாள் அரிக்கும் அரியான் அருள் பெற்ற பர சமய
கோளரிக்கும் நிகராத் தமிழ்நாட்டு உள்ள குண்டர்களே

#55
குண்டு அகழ் சூழ்தரு கொச்சைத் தலைவன்-தன் குன்றகம் சேர்
வண்டு அக மென் மலர் வல்லி_அன்னீர் வரி வில் புருவக்
கண் தக வாளி படப் புடை வீழ் செம் கலங்கலொடும்
புண் தகக் கேழல் புகுந்தது உண்டோ நுங்கள் பூம் புனத்தே

#56
புனத்து எழு கை மதக் குன்றமதாய் அங்கு ஒர் புன் கலையாய்
வனத்து எழு சந்தனப் பைம் தழையாய் வந்துவந்து அடியேன்
மனத்து எழு பொன் கழல் ஞானசம்பந்தன் வண் கொச்சை_அன்னாள்
கனத்து எழு கொங்கைகளாய் அல்குலாய்த்து இவர் கட்டுரையே

#57
கட்டதுவே கொண்டு கள் உண்டு நும் கைகளால் துணங்கை
இட்டதுவே அன்றி எள்தனைத்தான் இவள் உள் உறு நோய்
விட்டதுவே அன்றி வெங்குருநாதன்-தன் பங்கயத்தின்
மட்டு அவிழ் தார் கொண்டு சூட்டு-மின் பேதை மகிழ்வுறவே

#58
உறவும் பொருளும் ஒண் போகமும் கல்வியும் கல்வி உற்ற
துறவும் துறவிப் பயனும் எனக்குச் சுழிந்த புனல்
புறவும் பொழிலும் பொழில் சூழ் பொதும்பும் ததும்பும் வண்டின்
நறவும் பொழில் எழில் காழியர்கோன் திருநாமங்களே

#59
நாம் உகந்து ஏத்திய ஞானசம்பந்தனை நண்ணலர் போல்
ஏம் உக வெம் சரம் சிந்தி வல் இஞ்சி இடிபடுக்கத்
தீ முகம் தோன்றிகள் தோன்றத் தளவம் முகை அரும்பக்
கா முகம் பூ முகம் காட்டிநின்று ஆர்த்தன கார் இனமே

#60
கார் அங்கு அணை பொழில் காழிக் கவுணியர் தீபன் நல்லூர்ச்
சீர் அங்கு அணை நல் பெருமணம்-தன்னில் சிவபுரத்து
வார் அங்கு அணை கொங்கை மாதொடும் புக்குறும் போது வந்தார்
ஆர் அங்கு ஒழிந்தனர் பெற்றது அல்லால் அவ் அரும் பதமே

#61
அரும் பதம் ஆக்கும் அடியரொடு அஞ்சலித்தார்க்கு அரிய
பெரும்பதம் எய்தலுற்றீர் வந்து இறைஞ்சு-மின் பேர் அரவம்
வரும் பத நான்மறைக் காழித் தலைவன் மலர்க் கமலத்து
அரும் பத ஞானசம்பந்தன் என் ஆனை-தன் தாள் இணையே

#62
தாளின் சரணம் தரும் சண்பைநாதன் தரியலர் போல்
கீளின் மலங்க விலங்கே புகுந்திடும் கெண்டைகளும்
வாளும் தொலைய மதர்த்து இரு காதின் அளவும் வந்து
மீளும் கரும் கண்ணி மின் புரியா வைத்த மெல் நகையே

#63
நகுகின்ற முல்லை நண்ணார் எரி கண்டத்தவர் கவர்ந்த
மிகுகின்ற நல் நிதி காட்டின கொன்றை விரவலர் ஊர்
புகுகின்ற தீ எனப் பூத்தன தோன்றி புறவ மன் கைத்
தகுகின்ற கோடல்கள் அன்பர் இன்று எய்துவர் கார் மயிலே

#64
மயில் ஏந்திய வள்ளல்-தன் ஐ அளிப்ப மதி புணர்ந்த
எயில் ஏந்திய சண்பைநாதன் உலகத்து எதிர்பவர் யார்
குயில் ஏந்திய பொழில் கொங்கு ஏந்திய கொம்பின் அம்பு தழீஇ
அயில் ஏந்திய மலர் கண்டுளனாய் வந்த அண்ணலுக்கே

#65
அண்ணல் மணி வளைத் தோள் அருகாசனி சண்பை அன்ன
பெண்ணின் அமிர்த நல்லாள் குழல் நாற்றம் பெடையொடு பூம்
சுண்ணம் துதைந்த வண்டே கண்டதுண்டு-கொல் தூங்கு ஒலி நீர்த்
தண் அம் பொழில் எழில் காசினி பூத்த மென் தாதுகளே

#66
தாது கல் தோய்த்த நம் சந்நாசியார் சடலம்படுத்துத்
தூதையில் சிக்கம் கரம் சேர்த்து வாளா துலுக்குகின்றீர்
போதியின் புத்தர்கள் வம்-மின் புகலியர்கோன் அன்ன நாள்
காதியிட்டு ஏற்றும் கழுத் திறம் பாடிக் களித்திடவே

#67
களி உறு தேன் தார்க் கவுணியர் தீபன் கருதலர் போல்
வெளி உறு ஞாலம் பகல் இழந்தால் விரை ஆர் கமலத்து
அளி உறு மென் மலர்த் தாது அளைந்து ஆழி அழைப்ப வரும்
துளி உறு வாடை இதாம் மட_மானைத் துவள்விப்பதே

#68
தேறும் புனல் தில்லைச் சிற்றம்பலத்துச் சிறந்து உவந்து உள்
ஊறும் அமிர்தைப் பருகிட்டு எழுவது ஒர் உள் களிப்புக்
கூறும் வழிமொழி தந்து எனை வாழ்வித்தவன் கொழும் தேன்
நாறும் அலங்கல் தமிழாகரன் என்னும் நல் நிதியே

#69
நிதி உறுவார் அறன் இன்பம் வீடு எய்துவர் என்ன வேதம்
துதி உறு நீள் வயல் காழியர்கோனைத் தொழார் இனைய
நதி உறு நீர் தெளித்து அஞ்சல் என அண்ணல் அன்றோ எனா
மதி உறு வாள்_நுதல் பாதம் பணிந்தனள் மன்னனையே

#70
மன் அங்கு அனை செந்தமிழாகரன் வெற்பில் வந்து ஒருவர்
அன்னங்கள் அஞ்சன்-மின் என்று அடர் வேழத்து இடை விலங்கிப்
பொன் அம் கலை சா வகை எடுத்தாற்கு இவள் பூண் அழுந்தி
இன்னம் தழும்பு உள ஆம் பெரும்பாலும் அவ் ஏந்தலுக்கே

#71
ஏந்தும் உலகுறுவீர் எழில் நீல நக்கற்கும் இன்பப்
பூம் தண் புகலூர் முருகற்கும் தோழனைப் போக மார்ப்பைக்
காந்தும் கனலில் குளிர்படுத்துக் கடல் கூடலின்-வாய்
வேந்தின் துயர் தவிர்த்தானை எப்போதும் விரும்பு-மினே

#72
விரும்பும் புதல்வனை மெய் அரிந்து ஆக்கிய இன் அமிர்தம்
அரும்பும் புனல் சடையாய் உண்டு அருள் என்று அடி பணிந்த
இரும்பின் சுடர் களிற்றான் சிறுத்தொண்டனை ஏத்துதிரேல்
சுரும்பின் மலர்த் தமிழாகரன் பாதம் தொடர்வு எளிதே

#73
எளிவந்தவா எழில் பூ வரை ஞாண் மணித் தார் தழங்கத்
துளிவந்த கண் பிசைந்து ஏங்கலும் எங்கள் அரன் துணையாம்
கிளி வந்த சொல்லி பொன் கிண்ணத்தின் ஞான அமிர்து அளித்த
அளிவந்த பூம் குஞ்சியின் சொல் சிறுக் கன்று_அனார் அருளே

#74
அருளும் தமிழாகர நின் அலங்கல் தந்து என் பெயர் அச்
சுருளும் குழல்_இயற்கு ஈந்திலையே முன்பு தூங்கு கரத்து
உருளும் களிற்றினொடு ஒட்டருவாளை அருளி அன்றே
மருளின் மொழி மடவாள் பெயர் என்-கண் வருவிப்பதே

#75
வருவார் உருவின் வழி விழி வைத்த அனம் அருந்தும்
திரு ஆர் இருந்த செழு நகரச் செவ்வித் திருவடிக்கு ஆள்
தருவான் தமிழாகர கரம் போல் சலம் வீசக் கண்டு
வெருவா வணம் கொண்டல்கள் மிண்டி வானத்து மின்னியவே

#76
மின் ஆர் குடுமி நெடு வெற்பகம் கொங்கில் வீழ் பனி நோய்
தன் ஆர் வழி கெட்டு அழிந்தமை சொல்லுவர் காண் இறையே
மன் ஆர் பரிசனத்தார் மேல் புகலும் எவர்க்கும் மிக்க
நல் நாவலர் பெருமான் அருகாசனி நல்கிடவே

#77
நல்கு என்று அடியின் இணை பணியார் சண்பை நம் பெருமான்
பல்கும் பெரும் புகழ் பாடகில்லார் சிலர் பாழ்க்கு இறைத்திட்டு
ஒல்கும் உடம்பினராய் வழி தேடிட்டு இடறி முட்டிப்
பில்கும் இடம் அறியார் கெடுவார் உறு பேய்த்தனமே

#78
தனமே தரு புகழ்ச் சைவ சிகாமணி-தன் அருள் போல்
மனமே புகுந்த மடக்கொடியே மலர் மேல் இருந்த
அனமே அமிர்தக் குமுதச் செவ்_வாய் உங்கள் ஆயம் என்னும்
இனமே பொலிய வண்டு ஆடு எழில் சோலையுள் எய்துகவே

#79
உகட்டித்து மோட்டு வரால் இனம் மேதி முலை உரிஞ்ச
அகட்டில் சொரி பால் தடம் நிறை கொச்சைவயத்து அரசைத்
தகட்டில் திகழ் மணிப் பூண் தமிழாகரன்-தன்னை அல்லால்
பகட்டில் பொலியினும் வேண்டேன் ஒருவரைப் பாடுதலே

#80
பாடிய செந்தமிழால் பழங்காசு பரிசில் பெற்ற
நீடிய சீர்த் திரு ஞானசம்பந்தன் நிறை புகழான்
நாடிய பூம் திருநாவுக்கரசோடு எழில் மிழலைக்
கூடிய கூட்டத்தினால் உளதாய்த்து இக் குவலயமே

#81
வலையத் திணி தோள் மிசை மழவு ஏற்றி மனைப்புறத்து
நிலை எத்தனை பொழுதோ கண்டது ஊரனை நீதி கெட்டார்
குலையக் கழுவின் குழுக் கண்டவன் திகழ் கொச்சை அன்ன
சிலை ஒத்த வாள்_நுதல் முன் போல் மலர்க திருக்கண்களே

#82
கண் ஆர் திருநுதலோன் கோலக்காவில் கர நொடியால்
பண் ஆர் தரப்பாடு சண்பையர்கோன் பாணி நொந்திடும் என்று
எண் ஆர் எழுத்து அஞ்சும் இட்ட பொன் தாளங்கள் ஈயக் கண்டும்
மண்ணார் சிலர் சண்பைநாதனை ஏத்தார் வருந்துவதே

#83
வருந்தும்-கொலாம் கழல் மண் மிசை ஏகிடில் என்று மென் தார்த்
திருந்தும் புகழ்ச் சண்பை ஞானசம்பந்தற்குச் சீர் மணிகள்
பொருந்தும் சிவிகை கொடுத்தனன் காண் புணரித் திகழ் நஞ்சு
அருந்தும் பிரான் நம் அரத்துறை மேய அரும் பொருளே

#84
பொருள் என என்னைத் தன் பொன் கழல் காட்டிப் புகுந்து எனக்கு இங்கு
அருளிய சீர்த் திருஞானசம்பந்தன் அருளிலர் போல்
வெருளின மானின் மென்_நோக்கியை விட்டு விழுநிதியின்
திரளினை ஆதரித்தால் நன்று சால என் சிந்தனைக்கே

#85
சிந்தையைத் தேனைத் திருவாவடுதுறையுள் திகழும்
எந்தையைப் பாடல் இசைத்துத் தொலையா நிதியம் எய்தித்
தந்தையைத் தீத் தொழில் மூட்டிய கோன் சரண் சார்விலரேல்
நிந்தையைப் பெற்று ஒழியாது இரந்தே கரம் நீட்டுவரே

#86
நீட்டு உவர் ஓதத்தொடு ஏறிய சங்கம் நெகு முளரித்
தோட்டு வெண் முத்தம் சொரி சண்பைநாதன் தொழாதவரின்
வேட்டுவர் வேட்ட தண்ணீரினுக்கு உண் நீர் உணக் குழித்த
காட்டு உவர் ஊறல் பருகும்-கொல் ஆம் எம் கனம்_குழையே

#87
குழைக்கின்ற கொன்றை பொன் போல மலர நும் கூட்டம் எல்லாம்
அழைக்கின்ற கொண்டல் இயம்பு ஒன்று இலை அகன்றார் வரவு
பிழைக்கின்றது-கொல் என்று அஞ்சி ஒண் சண்பைப்பிரான் புறவத்து
இழைக்கின்ற கூடல் முடிய எண்ணாத இளம்_கொடிக்கே

#88
கொடித் தேர் அவுணர் குழாம் அனலூட்டிய குன்ற வில்லி
அடித் தேர் கருத்தின் அருகாசனியை அணி_இழையார்
முடித் தேர் கமலம் கவர்வான் முரி புருவச் சிலையால்
வடித்து ஏர் நயனக் கணை இணை கோத்து வளைத்தனரே

#89
வளை படு தண் கடல் கொச்சைவயவன் மலர்க் கழற்கே
வளைபடு நீள் முடி வார் புனல் ஊரன்-தன் நீரில் அம் கு
வளை படு கண்ணியர்-தம் பொதுத் தம்பலம் நாறும் இந்த
வளைபடு கிங்கிணிக் கால் மைந்தன் வாயின் மணி முத்தமே

#90
முத்து அன வெண் நகையார் மயல் மாற்றி முறை வழுவாது
எத்தனை காலம் நின்று ஏத்தும் அவரினும் என் பணிந்த
பித்தனை எங்கள் பிரானை அணைவது எளிது கண்டீர்
அத்தனை ஞானசம்பந்தனைப் பாதம் அடைந்தவர்க்கே

#91
அடைத்தது மா மறைக்காடர்-தம் கோயில் கதவினை அன்று
உடைத்தது பாணன்-தன் யாழின் ஒலியை உரக விடம்
துடைத்தது தோணிபுரத்துக்கு இறைவன் சுடர் ஒளி வாய்
படைத்தது தண்மையை நள்ளாற்று அரசு பணித்திடவே

#92
பணி படு நுண் இடை பாதம் பொறா பல காதம் என்று
தணிபடும் இன்சொற்களால் தவிர்த்தேற்குத் தழல் உமிழ் கான்
மணி படு பொன் கழல் ஞானசம்பந்தன் மருவலர் போல்
துணிபடு வேல் அன்ன கண்ணி என்னோ வந்து தோன்றியதே

#93
தோன்றல்-தன்னோடு உடன் ஏகிய சுந்தரப் பூண் முலையை
ஈன்றவரே இந்த ஏந்து_இழையார் அவர் இவ்வளவில்
வான் தவர் சூழும் தமிழாகரன்-தன் வடவரையே
போன்ற பொன் மாடக் கழுமலநாடு பொருந்துவரே

#94
பொருந்திய ஞானத் தமிழாகரன் பதி பொன் புரிசை
திருந்திய தோணிபுரத்துக்கு இறைவன் திருவருளால்
கரும் தடம் நீர் எழு காலையில் காகூ கழுமலம் என்று
இருந்திடவாம் எங்கும் வானவராகி இயங்கியதே

#95
இயலாதன பல சிந்தையராய் இயலும்-கொல் என்று
முயலாதனவே முயன்று வன் மோகச் சுழி அழுந்திச்
செயல் ஆர் வரை மதில் காழியர்கோன் திருநாமங்களுக்கு
அயலார் எனப் பல காலங்கள் போக்குவர் ஆதர்களே

#96
ஆதரவும் பயப்பும் இவள் எய்தினள் என்று அயலார்
மா தரவம் சொல்லி என்னை நகுவது மா மறையின்
ஓது அரவம் பொலி காழித் தமிழாகரனொடு அன்றே
தீது அரவம் பட அன்னை என்னோ பல செப்புவதே

#97
செப்பிய என்ன தவம் முயன்றேன் நல்ல செந்தமிழால்
ஒப்புடை மாலைத் தமிழாகரனை உணர்வுடையோர்
கற்பு உடை வாய் மொழி ஏத்தும்படி கதறிட்டு இவர
மல் படு தொல்லைக் கடல் புடை சூழ் தரு மண்ணிடையே

#98
மண்ணில் திகழ் சண்பைநாதனை வாதினில் வல் அமணைப்
பண்ணைக் கழுவின் நுதி வைத்து எம் பந்த வினை அறுக்கும்
கண்ணைக் கதியைத் தமிழாகரனை எம் கற்பகத்தைத்
திண் நல் தொடையல் கவுணியர் தீபனைச் சேர்ந்தனமே

#99
சேரும் புகழ்த் திருஞானசம்பந்தனை யான் உரைத்த
பேரும் தமிழ்ப் பா இவை வல்லவர் பெற்ற இன்பு உலகம்
காரும் திருமிடற்றாய் அருளாய் என்று கைதொழுவர்
நீரும் மலரும் கொளா நெடுமாலும் பிரமனுமே

#100
பிரமாபுரம் வெங்குரு சண்பை தோணி புகலி கொச்சை
சிரமார்புரம் நல் புறவம் தராய் காழி வேணுபுரம்
வரம் ஆர் பொழில் திருஞானசம்பந்தன் பதிக்கு மிக்க
பரம் ஆர் கழுமலம் பன்னிரு நாமம் இப் பாரகத்தே

#101
பார் அகலத் துன்பம் கடந்து அமரரால் பணியும்
ஏர் அகலம் பெற்றாலும் இன்னாதால் கார் அகிலின்
தூமம் கமழ் மாடத் தோணிபுரத் தலைவன்
நாமம் செவிக்கு இசையா நாள்
** ஆளுடைய பிள்ளையார் திருவந்தாதி முற்றிற்று
** திருமுறை11

&12 நம்பியாண்டார் நம்பிகள்

@5 ஆளுடையபிள்ளையார் திருச்சண்பை விருத்தம்

#1
பாலித்து எழில் தங்கு பார் முகம் உய்யப் பறிதலையோர்
மாலுற்று அழுந்த அவதரித்தோன் மணி நீர்க் கமலத்து
ஆலித்து அலர் மிசை அன்னம் நடப்ப அணங்கு இது என்னாச்
சாலித் தலை பணி சண்பையர் காவலன் சம்பந்தனே

#2
கொங்கு தங்கும் குஞ்சி கூடாப் பருவத்துக் குன்ற வில்லி
பங்கு தங்கும் மங்கை-தன் அருள் பெற்றவன் பைம் புணரிப்
பொங்கு வங்கப் புனல் சேர்த்த புது மணப் புன்னையின் கீழ்ச்
சங்கு தங்கும் வயல் சண்பையர் காவலன் சம்பந்தனே

#3
குவளைக் கரும் கண் கொடி இடை துன்பம் தவிர அன்று
துவளத் தொடு விடம் தீர்த்த தமிழின் தொகை செய்தவன்
திவளக் கொடிக் குன்ற மாளிகைச் சூளிகைச் சென்னியின்-வாய்த்
தவளப் பிறை தங்கு சண்பையர் காவலன் சம்பந்தனே

#4
கள் அம் பொழில் நனிபள்ளித் தடம் கடம் ஆக்கி அஃதே
வெள்ளம் பணி நெய்தல் ஆக்கிய வித்தகன் வெண் குருகு
புள் ஒண் தவளப் புரி சங்கொடு ஆலக் கயல் உகளத்
தள் அம் தடம் புனல் சண்பையர் காவலன் சம்பந்தனே

#5
ஆறது ஏறும் சடையான் அருள் மேவ அவனியர்க்கு
வீறது ஏறும் தமிழால் வழி கண்டவன் மென் கிளி மாம்
தேறல் கோதித் துறு சண்பகம் தாவிச் செழும் கமுகின்
தாறது ஏறும் பொழில் சண்பையர் காவலன் சம்பந்தனே

#6
அந்தம் முந்தும் பிறவித் துயர் தீர அரன் அடிக்கே
பந்தம் உந்தும் தமிழ் செய்த பராபரன் பைம் தடத் தேன்
வந்து முந்தும் நந்தம் முத்தம் கொடுப்ப வயற்கு அயலே
சந்தம் உந்தும் பொழில் சண்பையர் காவலன் சம்பந்தனே

#7
புண் தலைக் குஞ்சரப் போர்வையர் கோயில் புதவு அடைக்கும்
ஒண் தலைத் தண் தமிழ்க் குண்டாசனி உம்பர் பம்பி மின்னும்
கொண்டலைக் கண்டு வண்டு ஆடப் பெடையொடும்
தண்டலைக் குண்டு அகழ்ச் சண்பையர் காவலன் சம்பந்தனே

#8
எண் தலைக்கும் தலைவன் கழல் சூடி என் உள்ளம் வெள்ளம்
கண்டு அலைப்பத் தன் கழல் தந்தவன் கதிர் முத்த நத்தம்
விண்டு அலைப் பத்தியில் ஓடும் விரவி மிளிர் பவளம்
தண்டலைக்கும் கடல் சண்பையர் காவலன் சம்பந்தனே

#9
ஆறு மண்டப் பண்டு செஞ்சொல் நடாத்தி அமண் முழுதும்
பாறு மண்டக் கண்டு சைவ சிகாமணி பைம் தடத்த
சேறு மண்டச் சங்கு செங்கயல் தேமாங்கனி சிதறிச்
சாறு மண்டும் வயல் சண்பையர் காவலன் சம்பந்தனே

#10
விடம் திளைக்கும் அரவு அல்குல் மென் கூந்தல் பெருமணத்தின்
வடம் திளைக்கும் கொங்கை புல்கிய மன்மதன் வண் கதலிக்
கடம் திளைத்துக் கழுநீர் புல்கி ஒல்கிக் கரும்பு உரிஞ்சித்
தடம் திளைக்கும் புனல் சண்பையர் காவலன் சம்பந்தனே

#11
பாலித்த கொங்கு குவளை கள் அம் பொழில் கீழ்ப் பரந்து
ஆலிப்ப ஆறது ஏறும் கழனிச் சண்பை அந்தம் முந்து
மேலிட்ட புண் தலைக் குஞ்சரத்து எண் தலைக்கும் தலைவன்
கோல் இட்ட ஆறு விடம் திளைக்கும் அரவு அல்குலையே
** ஆளுடையபிள்ளையார் திருச்சண்பை விருத்தம் முற்றிற்று

@6 ஆளுடையபிள்ளையார் திருமும்மணிக்கோவை

#1
திங்கள் கொழுந்தொடு பொங்கு அரவு திளைக்கும்
கங்கைப் பேரியாற்றுக் கடு வரல் கலுழியின்
இதழியின் செம்பொன் இரு கரை சிதறிப்
புதல் எருக்கு மலர்த்தும் புரி புன் சடையோன்
திருவருள் பெற்ற இருபிறப்பாளன்				5
முத்தீ வேள்வி நான்மறை வளர
ஐ வேள்வு உயர்த்த அறுதொழிலாளன்
ஏழ் இசை யாழை எண் திசை அறியத்
துண்டப்படுத்த தண் தமிழ் விரகன்
காழிநாடன் கவுணியர் தலைவன்				10
மாழை_நோக்கி மலை_மகள் புதல்வன்
திருந்திய பாடல் விரும்பினர்க்கு அல்லது
கடும் துயர் உட்புகக் கை விளிக்கும் இ
நெடும் பிறவிக்கடல் நீந்துவது அரிதே

#2
அரியோடு நான்முகத்தோன் ஆதி சுரர்க்கு எல்லாம்
தெரியாமைச் செம் தழலாய் நின்ற ஒருவன் சீர்
தன் தலையின் மேல் தரித்த சம்பந்தன் தாள் இணைகள்
என் தலையின் மேல் இருக்க என்று

#3
என்றும் அடியவர் உள்ளத்து இருப்பன இவ் உலகோர்
நன்று மலர் கொடு தூவித் துதிப்பன நல்ல சங்கத்து
ஒன்றும் புலவர்கள் யாப்புக்கு உரியன ஒண் கலியைப்
பொன்றும் கவுணியன் சைவ சிகாமணி பொன் அடியே

#4
அடு சினக் கட கரி அது பட உரித்த
படர் சடைக் கடவுள்-தன் திருவருள் அதனால்
பிறந்தது
கழுமலம் என்னும் கடி நகர் அதுவே
வளர்ந்தது									5
தேம் கமழ் வாவிச் சிலம்பு அரையன் பெறு
பூம் குழல் மாது இடு போனகம் உண்டே
பெற்றது
குழகனைப் பாடிக் கோலக் காப்புக்கு
அழகு உடைச் செம்பொன் தாளம் அவையே	10
தீர்த்தது
தாது அமர் மருகன் சடையனைப் பாடிப்
பேதுறு பெண்ணின் கணவனை விடமே
அடைத்தது
அரசோடு இசையா அணி மறைக்காட்டுக்கு	15
உரை சேர் குடுமிக் கொழு மணிக் கதவே
ஏறிற்று
அத்தியும் மாவும் தவிர அரத்துறை
முத்தின் சிவிகை முன் நாள் பெற்றே
பாடிற்று									20
அரு மறை ஓத்தூர் ஆண்பனை அதனைப்
பெரு நிறம் எய்தும் பெண்பனையாவே
கொண்டது
பூ இடு மதுவில் பொறி வண்டு உழலும்
ஆவடுதுறையில் பொன் ஆயிரமே			25
கண்டது
உறியோடு பீலி ஒரு கையில் கொள்ளும்
பறிதலைச் சமணைப் பல கழு மிசையே
நீத்தது
அவிழ்ச் சுவையே அறிந்து அரன் அடி பரவும்	30
தமிழ்ச் சுவை அறியாத் தம்பங்களையே
நினைந்தது
அள்ளல் பழனக் கொள்ளம் பூதூர்
இக்கரை ஓடம் அக்கரைச் செலவே
மிக்கவர்									35
ஊன சம்பந்தம் அறுத்து உயக்கொள வல
ஞானசம்பந்தன் இ நானிலத்திடையே

#5
நிலத்துக்கு மேல் ஆறு நீடு உலகத்து உச்சித்
தலத்துக்கு மேலேதான் என்பர் சொலத் தக்க
சுத்தர்கள் சேர் காழிச் சுரன் ஞானசம்பந்தன்
பத்தர்கள் போய் வாழும் பதி

#6
பதிகம் பல பாடி நீடிய பிள்ளை பரசுதரற்கு
அதிகம் அணுக்கன் அமணர்க்குக் காலன் அவதரித்த
மதியம் தவழ் மாட மாளிகைக் காழி என்றால் வணங்கார்
ஒதியம் பணை போல் விழுவர் அந்தோ சில ஊமர்களே

#7
கவள மாளிகைத் திவளும் யானையின்
கவுள் தலைக் கும்பத்து
உம்பர் பதணத்து அம்புதம் திளைக்கும்
பெரு வளம் தழீஇத் திரு வளர் புகலி
விளங்கப் பிறந்த வளம் கொள் சம்பந்தன்		5
கருது இயம் செவ்விச் சுருதி அம் சிலம்பில்
தேம் மரு தினை வளர் காமரு புனத்து
மும்மதம் சொரியும் வெம் முகக் கைம்மா
மூரி மருப்பின் சீரிய முத்துக்
கொடும் சிலை வளைத்தே கொடும் சரம் துரந்து	10
முற்பட வந்து முயன்று அங்கு உதவிசெய்
வெற்பனுக்கு அல்லது
சுணங்கு அணி மென் முலைச் சுரி குழல் மாதினை
மணம்செய மதிப்பது நமக்கு வன் பழியே

#8
பழி ஒன்றும் ஓராதே பாய் இடுக்கி வாளா
கழியும் சமண் கையர்-தம்மை அழியத்
துரந்து அரங்கச் செற்றான் சுரும்பு அரற்றும் பாதம்
நிரந்தரம் போய் நெஞ்சே நினை

#9
நினை ஆதரவு எய்தி மேகலை நெக்கு வளை சரிவாள்-
தனை ஆவ என்று இன்று அருளுதியே தடம் சாலி வயல்
கனையா வரும் மேதி கன்றுக்கு இரங்கித் தன் கால் வழி பால்
நனையா வரும் காழி மேவிய சீர் ஞான சம்பந்தனே

#10
தனம் மலி கமலத் திரு எனும் செல்வி
விருப்பொடு திளைக்கும் வீயா இன்பத்து
ஆடக மாடம் நீடு தென் புகலிக்
காமரு கவின் ஆர் கவுணியர் தலைவ
பொற்பு அமர் தோள நல் தமிழ் விரக				5
மலை_மகள் புதல்வ கலை பயில் நாவ நினாது
பொங்கு ஒளி மார்பில் தங்கிய திருநீறு
ஆதரித்து இறைஞ்சிய பேதையர் கையில்
வெள் வளை வாங்கிச் செம்பொன் கொடுத்தலின்
பிள்ளை ஆவது தெரிந்தது பிறர்க்கே				10

#11
பிறவி எனும் பொல்லாப் பெரும் கடலை நீந்தத்
துறவி எனும் தோல் தோணி கண்டீர் நிறை உலகில்
பொன் மாலை மார்பன் புனல் காழிச் சம்பந்தன்-
தன் மாலை ஞானத் தமிழ்

#12
ஞானம் திரளையிலே உண்டனை என்று நாடு அறியச்
சோனம் தரு குழலார் சொல்லிடா முன் சுரும்புகட்குப்
பானம் தரு பங்கயத்தார் கொடு படைச் சால் வழியே
கூன் நந்து உருள் வயல் சூழ் காழி மேவிய கொற்றவனே

#13
அவனி தலம் நெரிய எதிரெதிர் மலைஇச்
சொரி மதக் களிற்று மத்தகம் போழ்ந்து
செம் சேறு ஆடிச் செல்வன அரியே எஞ்சாப்
பட அரவு உச்சிப் பரு மணி பிதுங்கப்
பிடரிடைப் பாய்வன பேழ் வாய்ப் புலியே		5
இடையிடைச்
செறி இருள் உருவச் சேண் விசும்பதனில்
பொறி என விழுவன பொங்கு ஒளி மின்னே
உறு சின வரையால் உந்திய கலுழிக்
கரையால் உழல்வன கரடியின் கணனே			10
நிரை ஆர்
பொரு கடல் உதைந்த சுரி முகச் சங்கு
செங்கயல் கிழித்த பங்கய மலரின்
செம் மடல் நிறைய வெண் முத்து உதிர்க்கும்
பழனக் கழனிக் கழுமலநாடன்					15
வைகையில் அமணரை வாது செய்து அறுத்த
சைவ சிகாமணி சம்பந்தன் வெற்பில்
சிறுகு இடையவள்-தன் பெரு முலை புணர்வான்
நெறியினில் வரல் ஒழி நீ மலையோனே

#14
மலைத் தலங்கள் மீது ஏறி மா தவங்கள் செய்தும்
முலைத் தலங்கள் நீத்தாலும் மூப்பர் கலைத் தலைவன்
சம்பந்தற்கு ஆளாய்த் தடம் காழி கைகூப்பித்
தம் பந்தம் தீராதார் தாம்

#15
தாமரை மா தவிசு ஏறிய நான்முகன்-தன் பதி போல்
காமரு சீர் வளர் காழி நல் நாடன் கவித் திறத்து
நா மருவாதவர் போல் அழகு ஈந்து நல் வில்லி பின்னே
நீர் மருவாத சுரத்து எங்ஙன் ஏகும் என் நேர்_இழையே

#16
இழை கெழு மென்_முலை இதழி மென் மலர் கொயத்
தழை வர ஒசித்த தடம் பொழில் இதுவே காமர்
சுனை குடைந்து ஏறித் துகிலது புனைய நின்று
எனையும் கண்டு வெள்கிடம் இதுவே தினை-தொறும்
பாய் கிளி இரியப் பைய வந்து ஏறி					5
ஆய என்று இருக்கும் அணிப் பரண் இதுவே ஈதே
இன்புறு சிறுசொல் அவை பல இயற்றி
அன்புசெய்து என்னை ஆட்கொளும் இடமே பொன் புரை
தட மலர்க் கமலக் குடுமியில் இருந்து
நல் தொழில் புரியும் நான்முகன் நாட்டைப்			10
புல் கடை கழீஇப் பொங்கு சராவத்து
நெய்த் துடுப்பு எடுத்த முத்தீப் புகையால்
நாள்-தொறும் மறைக்கும் சேடுறு காழி
எண் திசை நிறைந்த தண் தமிழ் விரகன்
நலம் கலந்து ஓங்கும் விலங்கலின் மாட்டுப்			15
பூம் புனம் அதனில் காம்பு அன தோளி
பஞ்சில் திருந்து அடி நோவப் போய் எனை
வஞ்சித்திருந்த மணி அறை இதுவே

#17
வேழங்கள் எய்பவர்க்கு வில் ஆவது இ காலம்
ஆழ் அம் கடல் முத்தம் வந்து அலைக்கும் நீள் வயல் சூழ்
வாய்ந்தது இவண் மாட மதில் காழிக்கோன் சிலம்பில்
சாய்ந்தது வண் தழையோதான்

#18
தழைக்கின்ற சீர் மிகு ஞானசம்பந்தன் தட மலை-வாய்
அழைக்கின்ற மஞ்ஞைக்கு அலர்ந்தன கோடல் அம்பு எய்திடுவான்
இழைக்கின்றது அந்தரத்து இந்திரசாபம் நின் எண்ணம் ஒன்றும்
பிழைக்கின்றதில்லை நல் தேர் வந்து தோன்றிற்றுப் பெய்_வளையே

#19
வளை கால் மந்தி மா மரப் பொந்தில்
விளை தேன் உண்டு வேணுவின் துணியால்
பாறையில் துயில் பனைக் கை வேழத்தை
உந்தி எழுப்பும் அம் தண் சிலம்ப அஃது இங்கு
என் ஐயர் இங்கு வருவர் பலரே					5
அன்னை காணில் அலர் தூற்றும்மே பொன் ஆர்
சிறு பரல் கரந்த விளி குரல் கிங்கிணி
சேவடி புல்லிச் சில் குரல் இயற்றி
அமுது உண் செவ் வாய் அருவி தூங்கத்
தாளம் பிரியாத் தடக் கை அசைத்துச்			10
சிறுகூத்து இயற்றிச் சிவன் அருள் பெற்ற
நல் தமிழ் விரகன் பற்றலர் போல
இடுங்கிய மனத்தொடும் ஒடுங்கிய சென்று
பருதியும் குடகடல் பாய்ந்தனன்
கருதி நிற்பது பிழை கங்குல் இப் புனத்தே		15

#20
தேம் புனமே உன்னைத் திரிந்து தொழுகின்றேன்
வாம் புகழ் சேர் சம்பந்தன் மாற்றலர் போல் தேம்பி
அழுது அகன்றாள் என்னாது அணி மலையர் வந்தால்
தொழுது அகன்றாள் என்று நீ சொல்

#21
சொல் செறி நீள் கவி செய்தன்று வைகையில் தொல் அமணர்
பல் செறியா வண்ணம் காத்த சம்பந்தன் பயில் சிலம்பில்
கல் செறி வார் சுனை நீர் குடைந்து ஆடும் கனம்_குழையை
இற்செறியா வண்ணம் காத்திலை வாழி இரும் புனமே

#22
புனல் அற வறந்த புல் முளி சுரத்துச்
சினம் மலி வேடர் செம் சரம் உரீஇப்
படு கலைக் குளம்பின் முடுகு நாற்றத்து
ஆடும் அரவின் அகடு தீயப்
பாடு தகையின் பஞ்சுரம் கேட்டுக்			5
கள்ளி அம் கவட்டிடைப் பள்ளிகொள்ளும்
பொறி வரிப் புறவே உறவு அலை காண் நீ நறை கமழ்
தேம் புனல் வாவித் திருக்கழுமலத்துப்
பை அரவு அசைத்த தெய்வ நாயகன்-
தன் அருள் பெற்ற பொன் அணிக் குன்றம்		10
மான சம்பந்தம் மண் மிசைத் துறந்த
ஞானசம்பந்தனை நயவார் கிளை போல்
வினையேன் இருக்கும் மனை பிரியாத
வஞ்சி மருங்குல் அம் சொல் கிள்ளை
ஏதிலன் பின் செல விலக்காது ஒழிந்தனை		15
ஆதலின் புறவே உறவு அலை நீயே

#23
அலை கடலின் மீது ஓடி அ நுளையர் வீசும்
வலை கடலில் வந்து ஏறு சங்கம் அலர் கடலை
வெண் முத்து அவிழ் வயல் சூழ் வீங்கு புனல் காழியே
ஒண் முத்தமிழ் பயந்தான் ஊர்

#24
ஊரும் பசும் புரவித் தேர் ஒளித்தது ஒளி விசும்பில்
கூரும் இருளொடு கோழி கண் துஞ்சா கொடுவினையேற்கு
ஆரும் உணர்ந்திலர் ஞானசம்பந்தன் அம் தாமரையின்
தாரும் தருகிலன் எங்ஙனம் யான் சங்கு தாங்குவதே

#25
தேம் மலி கமலப் பூ மலி படப்பைத்-
தலை முகடு ஏறி இளவெயில் காயும்
கவடிச் சிறுகால் கர்க்கடகத்தைச்
சுவடிச்சு இயங்கும் சூல் நரி முதுகைத்
துன்னி எழுந்து செந்நெல் மோதும்			5
காழிநாட்டுக் கவுணியர் குலத்தை
வாழத் தோன்றிய வண் தமிழ் விரகன்
தெண் திரைக் கடல் வாய்க்
காண்தகு செவ்விக் களிறுகள் உகுத்த
முட்டை முன் கவரும் பெட்டை அம் குருகே		10
வாடை அடிப்ப வைகறைப் போதில்
தனி நீ போந்து பனி நீர் ஒழுகக்
கூசிக் குளிர்ந்து பேசாது இருந்து
மேனி வெளுத்த காரணம் உரையாய்
இங்குத் தணந்து எய்தி நுமரும்			15
இன்னம் வந்திலரோ சொல் இளம் குருகே

#26
குருகும் பணிலமும் கூன் நந்தும் சேலும்
பெருகும் வயல் காழிப்பிள்ளை அருகந்தர்
முன் கலங்க நட்ட முடை கெழுமுமால் இன்னம்
புன் கலங்கல் வைகைப் புனல்

#27
புன மா மயில் சாயல் கண்டு முன் போகா கிளி பிரியா
இன மான் விழி ஒக்கும் என்று விட்டு ஏகா இரு நிலத்துக்
கன மா மதில் காழி ஞானசம்பந்தன் கடல் மலை-வாய்த்
தினை மாது இவள் காக்க எங்கே விளையும் செழும் கதிரே

#28
கதிர் மதி நுழையும் படர் சடை மகுடத்து
ஒருத்தியைக் கரந்த விருத்தனைப் பாடி
முத்தின் சிவிகை முன் நாள் பெற்ற
அத்தன் காழிநாட்டு உறை அணங்கோ மொய்த்து எழு
தாமரை அல்லித் தவிசிடை வளர்ந்த			5
காமரு செல்வக் கனம் குழையவளோ மீ மருத்
தரு வளர் விசும்பில் தவ நெறி கலக்கும்
உரு வளர் கொங்கை உருப்பசி தானோ
வாருணக் கொம்போ மதனன் கொடியோ
ஆரணியத்துள் அரும் தெய்வமதுவோ			10
வண்டு அமர் குழலும் கெண்டை அம் கண்ணும்
வஞ்சி மருங்கும் கிஞ்சுக வாயும்
ஏந்து இள முலையும் காந்தள் அம் கையும்
ஓவியர் தங்கள் ஒண் மதி காட்டும்
வட்டிகைப் பலகை வான் துகிலிகையால்			15
இயக்குதற்கு அரியதோர் உருவு கண்டு என்னை
மயக்க வந்து உதித்ததோர் வடிவு இதுதானே

#29
வடிக் கண்ணியாளை இவ் வான் சுரத்தினூடே
கடிக் கண்ணியானோடும் கண்டோம் வடிக் கண்ணி
மாம் பொழில் சேர் வைகை அமண் மலைந்தான் வண் காழிப்
பூம் பொழிலே சேர்ந்திருப்பார் புக்கு

#30
குருந்தும் தரளமும் போல் வண்ண வெண் நகைக் கொய் மலராள்
பொருந்தும் திரள் புயத்து அண்ணல் சம்பந்தன் பொன் தாமரைக்கா
வருந்தும் திரள் கொங்கை மங்கையை வாட்டினை வானகத்தே
திருந்தும் திரள் முகில் முந்தி வந்து ஏறு திங்கள் கொழுந்தே
** ஆளுடையபிள்ளையார் திருமும்மணிக்கோவை முற்றிற்று

@7 ஆளுடைய பிள்ளையார் திருவுலா மாலை

#1
திருந்திய சீர்ச் செந்தாமரைத் தடத்துச் சென்றோர்
இரும் தண் இள மேதி பாயப் பொருந்திய

#2
புள் இரியப் பொங்கு கயல் வெருவப் பூம் குவளைக்
கள் இரியச் செங்கழுநீர் கால் சிதையத் துள்ளிக்

#3
குருகு இரியக் கூன் இறவம் பாயக் கெளிறு
முருகு விரி பொய்கையின்-கண் மூழ்க வெருவுற்றக்

#4
கோட்டகத்துப் பாய் வாளை கண்டு அலவன் கூசிப் போய்த்
தோட்டு அகத்த செந்நெல் துறை அடையச் சேட்டு அகத்த

#5
காவி முகம் மலரக் கார் நீலம் கண்படுப்ப
ஆவிக்-கண் நெய்தல் அலமர மேவிய

#6
அன்னம் துயில் இழப்ப அம் சிறை சேர் வண்டு இனங்கள்
துன்னும் துணை இழப்பச் சூழ் கிடங்கின் மன்னிய

#7
வள்ளை நகை காட்ட வண் குமுதம் வாய் காட்ட
தெள்ளு புனல் பங்கயங்கள் தேன் காட்ட மெள்ள

#8
நிலவு மலரணையின்-நின்று இழிந்த சங்கம்
இலகு கதிர் நித்திலங்கள் ஈன உலவிய

#9
மல்லைப் பழனத்து வார் பிரசம் மீது அழிய
ஒல்லை வரம்பு இடறி ஓடிப்போய்ப் புல்லிய

#10
பாசடைய செந்நெல் படர் ஒளியால் பல்கதிரோன்
தேசு அடைய ஓங்கும் செறுவுகளும் மாசு_இல் நீர்

#11
நித்திலத்தின் காயும் நிகழ் மரகதத் தோலும்
தொத்து ஒளி செம்பொன் தொழில் பரிய மொய்த்த

#12
பவளத்தின் செவ்வியும் பாங்கு அணைய ஓங்கித்
திவளக் கொடி மருங்கில் சேர்த்தித் துவளாமைப்

#13
பட்டாடை கொண்டு உடுத்துப் பைம் தோடு இலங்கு குழை
இட்டு அமைந்த கண் ஆர் இளம் கமுகும் விட்டு ஒளி சேர்

#14
கண்கள் அழல் சிதறிக் காய் சினத்தவாய் மதத்துத்
தண்டலையின் நீழல் தறி அணைந்து கொண்ட

#15
கொலை புரியா நீர்மையவாய்க் கொம்பு வளைத்து ஏந்தி
மலையும் மர வடிவும் கொண்ட ஆங்கு இலை நெருங்கு

#16
சூதத் திரளும் தொகு கனிகளான் நிவந்த
மேதகு சீர்த் தெங்கின் வியன் பொழிலும் போதுற்று

#17
இனம் ஒருங்கு செவ்வியவாய் இன் தேன் ததும்பும்
கனி நெருங்கு திண் கதலிக் காடும் நனி விளங்கு

#18
நாற்றத்தால் எண் திசையும் வந்து நலம் சிறப்ப
ஊற்று மடுத்த உயர் பலவும் மாற்றம் அரு

#19
மஞ்சள் எழில் வளமும் மாதுளையின் வார் பொழிலும்
இஞ்சி இளம் காவின் ஈட்டமும் எஞ்சாத

#20
கூந்தல் கமுகும் குளிர் பாடலத்து எழிலும்
வாய்ந்த சீர்ச் சண்பகத்தின் வண் காடும் ஏந்து எழில் ஆர்

#21
மாதவியும் புன்னையும் மன்னும் மலர்க் குரவும்
கேதையும் எங்கும் கெழீஇப் போதின்

#22
இளந்தென்றல் வந்து அசைப்ப எண் திசையும் வாசம்
வளம் துன்று வார் பொழிலின் மாடே கிளர்ந்து எங்கும்

#23
ஆலை ஒலியும் அரிவார் குரல் ஒலியும்
சோலைக் கிளி மிழற்றும் சொல் ஒலியும் ஆலும்

#24
அறுபதங்கள் ஆர்ப்பு ஒலியும் ஆன்ற பொலிவு எய்தி
உறு திரை நீர் வேலை ஒலிப்ப வெறி கமழும்

#25
நந்தாவனத்து இயல்பும் நல் தவத்தோர் சார்விடமும்
அந்தம்_இல் சீர் ஆர் அழகினால் முந்திப்

#26
புகழ் வாரும் தன்மையதாய்ப் பூதலத்துள் ஓங்கி
நிகழ் கிடங்கும் சூழ் கிடப்ப நேரே திகழ

#27
முளை நிரைத்து மூரிச் சிறை வகுத்து மொய்த்த
புளகத்தின் பாம்பு உரி சூழ் போகி வளர

#28
இரும் பதணம் சேர இருத்தி எழில் நாஞ்சில்
மருங்கு அணைய அட்டாலை இட்டுப் பொருந்திய சீர்த்

#29
தோமரமும் தொல்லைப் பொறி வீசி யந்திரமும்
காமரமும் ஏப் புழையும் கைகலந்து மீ மருவும்

#30
வெம் கதிரோன் தேர் விலங்க மிக்கு உயர்ந்த மேருப் போன்று
அம் கனகத்து இஞ்சி அணிபெற்றுப் பொங்கு ஒளி சேர்

#31
மாளிகையும் மன்னிய சீர் மண்டபமும் ஒண் தலத்த
சூளிகையும் துற்று எழுந்த தெற்றிகளும் வாள் ஒளிய

#32
நாடகசாலையும் நன் பொன் கபோதகம் சேர்
பீடு அமைத்த மாடத்தின் பெற்றியும் கேடு_இல்

#33
உருவுபெற வகுத்த அம்பலமும் ஓங்கு
தெருவும் வகுத்த செய்குன்றும் மருவு இனிய

#34
சித்திரக்காவும் செழும் பொழிலும் வாவிகளும்
நித்திலம் சேர் நீடு நிலைக்களமும் எத்திசையும்

#35
துன்னி எழில் சிறப்பச் சோதி மலர்_மடந்தை
மன்னி மகிழ்ந்து உறையும் வாய்மைத்தாய்ப் பொன்னும்

#36
மரகதமும் நித்திலமும் மா மணியும் பேணி
இரவலருக்கு எப்போதும் ஈந்து கரவாது

#37
கற்பகமும் காரும் எனக் கற்றவர்க்கும் நல் தவர்க்கும்
தப்பாக் கொடை வளர்க்கும் சாயாத செப்பத்தால்

#38
பொய்மை கடிந்து புகழ் புரிந்து பூதலத்து
மெய்ம்மை தலைசிறந்து மேதக்கும் உண்மை

#39
மறை பயில்வார் மன்னும் வியாகரணக் கேள்வித்
துறை பயில்வார் தொல் நூல் பயில்வார் முறைமையால்

#40
ஆகமங்கள் கேட்பார் அரும் கலை நூல் ஆதரித்துப்
போகம் ஒடுங்காப் பொருள் துய்ப்பார் சோகம் இன்றி

#41
நீதி நிலை உணர்வார் நீள் நிலத்துள் ஐம்புலனும்
காதல் விடு தவங்கள் காமுறுவார் ஆதி

#42
அரும் கலை நூல் ஓதுவார் ஆதரித்து வென்றிக்
கரும் கலி நீங்கக் கனல் வகுப்பார் ஒருங்கிருந்து

#43
காமநூல் கேட்பார் கலை ஞானம் காதலிப்பார்
ஓமநூல் ஓதுவார்க்கு உத்தரிப்பார் பூ மன்னும்

#44
நான்முகனே அன்ன சீர் நானூற்றுவர் மறையோர்
தாம் மன்னி வாவும் தகைமைத்தாய் நா மன்னும்

#45
ஆரணங்கும் மற்றை அருந்ததியும் போல் மடவார்
ஏர் அணங்கு மாடத்து இனிது இருந்து சீர் அணங்கு

#46
வீணை பயிற்றுவார் யாழ் பயில்வார் மேவிய சீர்ப்
பாணம் பயில்வார் பயன் உறுவார் பேணிய சீர்ப்

#47
பூவைக்குப் பாட்டு உரைப்பார் பொன் கிளிக்குச் சொல் பயில்வார்
பாவைக்குப் பொன் புனைந்து பண்பு உறுவாராய் எங்கும்

#48
மங்கையர்கள் கூட்டமும் மன்னு சிறார் குழுவும்
பொங்கு உலகம் எல்லாம் பொலிவு அடையத் தங்கிய

#49
வேத ஒலியும் விழா ஒலியும் மெல்_இயலார்
கீத ஒலியும் கிளர்ந்து ஓங்கும் மாதரார்

#50
பாவை ஒலியும் பறை ஒலியும் பல் சனங்கள்
மேவும் ஒலியும் வியன் நகரம் காவலர்கள்

#51
பம்பைத் துடி ஒலியும் பவ்வப் படை ஒலியும்
கம்பக் களிற்று ஒலியும் கைகலந்து நம்பிய

#52
கார் முழக்கும் மற்றைக் கடல் முழக்கும் போல் கலந்த
சீர் முழக்கம் எங்கும் செவிடுபடப் பார் விளங்கு

#53
செல்வம் நிறைந்த ஊர் சீரில் திகழ்ந்த ஊர்
மல்கு மலர்_மடந்தை மன்னும் ஊர் சொல் இனிய

#54
ஞாலத்து மிக்க ஊர் நானூற்றுவர்கள் ஊர்
வேல் ஒத்த கண்ணார் விளங்கும் ஊர் ஆலித்து

#55
மன் இரு கால் வேளை வளர் வெள்ளத்து உம்பரொடும்
பன்னிரு கால் நீரில் மிதந்த ஊர் மன்னும்

#56
பிரமன் ஊர் வேணுபுரம் பேரொலி நீர் சண்பை
அரன் மன்னு தண் காழி அம் பொன் சிரபுரம்

#57
பூந்தராய் கொச்சைவயம் வெங்குருப் பொங்கு புனல்
வாய்ந்த நல் தோணிபுரம் மறையோர் ஏய்ந்த

#58
புகலி கழுமலம் பூம் புறவம் என்று இப்
பகர்கின்ற பண்பிற்றதாகித் திகழ்கின்ற

#59
மல்லைச் செழு நகரம் மன்னவும் வல் அமணர்
ஒல்லைக் கழுவில் உலக்கவும் எல்லை இலா

#60
மாதவத்தோர் வாழவும் வையகத்தோர் உய்யவும்
மேதக்க வானோர் வியப்பவும் ஆதியாம்

#61
வென்றிக் கலி கெடவும் வேதத்து ஒலி மிகவும்
ஒன்றிச் சிவனடியார் ஒங்கவும் துன்றிய

#62
பன்னு தமிழ்ப் பதினாறாயிர நல் பனுவல்
மன்னு புவியவர்க்கு வாய்ப்பவும் முன்னிய

#63
சிந்தனையால் சீர் ஆர் கவுணியர்க்கு ஓர் சேய் என்ன
வந்து அங்கு அவதரித்த வள்ளலை அந்தம்_இல் சீர்

#64
ஞானச் சுடர் விளக்கை நல் தவத்தோர் கற்பகத்தை
மான மறை அவற்றின் வான் பொருளை ஆன சீர்த்

#65
தத்துவனை நித்தனைச் சைவத்தவர் அரசை
வித்தகத்தால் ஓங்கு விடலையை முத்தமிழின்

#66
செஞ்சொல் பொருள் பயந்த சிங்கத்தைத் தெவ்வர் உயிர்
அஞ்சத் திகழ்ந்த அடல் உருமை எஞ்சாமை

#67
ஆதிச் சிவன் அருளால் அம் பொன் செய் வட்டிலில்
கோது_இல் அமிர்தம் நுகர் குஞ்சரத்தைத் தீது அறு சீர்க்

#68
காலத் தொகுதியும் நான்மறையின் காரணமும்
மூலப் பொருளும் முழுது உணர்ந்த சீலத்

#69
திருஞானசம்பந்தன் என்று உலகம் சேர்ந்த
ஒரு நாமத்தால் உயர்ந்த கோவை வரு பெரு நீர்ப்

#70
பொன்னி வள நாடனைப் பூம் புகலி நாயகனை
மன்னர் தொழுது இறைஞ்சும் மா மணியை முன்னே

#71
நிலவு முருகற்கும் நீல நக்கற்கும்
தொலைவு_இல் புகழ்ச் சிறுத்தொண்டற்கும் குலவிய

#72
தோழமையாய்த் தொல்லைப் பிறப்பு அறுத்த சுந்தரனை
மாழை ஒண் கண் மாதர் மதனனைச் சூழ் ஒளிய

#73
கோதை வேல் தென்னன்-தன் கூடல் குல நகரில்
வாதில் அமணர் வலி தொலையக் காதலால்

#74
புண் கெழுவு செம் புனல் ஆறு ஓடப் பொருது அவரை
வண் கழுவில் வைத்த மறையோனை ஒண் கெழுவு

#75
ஞாலத்தினர் அறிய மன்னு நனிபள்ளியது
பாலை-தனை நெய்தல் ஆக்கியும் காலத்து

#76
நீர் எதிர்ந்து சென்று நெருப்பில் குளிர் படைத்தும்
பார் எதிர்ந்த பல் விடங்கள் தீர்த்தும் முன் நேர் எழுந்த

#77
யாழை முரித்தும் இரும் கதவம் தான் அடைத்தும்
சூழ் புனலில் ஓடத் தொழில் புரிந்தும் தாழ் பொழில் சூழ்

#78
கொங்கில் பனி நோய் பரிசனத்தைத் தீர்ப்பித்தும்
துங்கப் புரிசை தொகும் மிழலை அங்கு அதனில்

#79
நித்தன் செழும் காசு கொண்டு நிகழ் நெல்வாயில்
முத்தின் சிவிகை முதல் கொண்டு அத் தகு சீர்

#80
மா இரு ஞாலத்து மன் ஆவடுதுறை புக்கு
ஆயிரம் செம்பொன் அது கொண்டும் ஆய்வு அரிய

#81
மாண்பு திகழ் எம்பெருமான் மன்னு திரு ஓத்தூரில்
ஆண்பனைகள் பெண்பனைகள் ஆக்கியும் பாண் பரிசில்

#82
கைப் பாணி ஒத்திக் காழிக் கோலக்காவில் பொன்
சப்பாணி கொண்டும் தராதலத்துள் எப்பொழுதும்

#83
நீக்க அரிய இன்பத்து இராகம் இருக்குக் குறள்
நோக்கு அரிய பாசுரம் பல் பத்தோடு மாக் கரிய

#84
யாழ் மூரி சக்கர மாற்று ஈரடி முக்காலும்
பாழிமையால் பாரகத்தோர் தாம் உய்ய ஊழி

#85
உரைப்ப அமரும் பல் புகழால் ஓங்க உமைகோனைத்
திருப்பதிகம் பாட வல்ல சேயை விருப்போடு

#86
நண்ணு புகழ் மறையோர் நாற்பத்தெண்ணாயிரவர்
எண்ணின் முனிவரர் ஈட்டத்துப் பண் அமரும்

#87
ஓலக்கத்துள் இருப்ப ஒண் கோயில் வாயிலின்-கண்
கோலக் கடை குறுகிக் கும்பிட்டு ஆங்கு ஆலும்

#88
புகலி வள நகருள் பூசுரர் புக்கு ஆங்கு
இகல்_இல் புகழ் பரவி ஏத்திப் புகலி சேர்

#89
வீதி எழுந்தருள வேண்டும் என விண்ணப்பம்
ஆதரத்தால் செய்ய அவர்க்கு அருளி நீதியால்

#90
கேதகையும் சண்பகமும் நேர் கிடத்திக் கீழ்த் தாழ்ந்த
மாதவியின் போதை மருங்கு அணைத்துக் கோது_இல்

#91
இருவேலி-தன்னை இடை இருத்தி ஈண்டு
மருவோடு மல்லிகையை வைத்து ஆங்கு அருகே

#92
கருமுகையைக் கைகலக்க வைத்துக் கழுநீர்ப்
பெருகு பிளவிடையே பெய்து முருகு இயலும்

#93
புன்னாகம்-தன்னைப் புணர இருவாச்சி-
தன் அயலே முல்லை தலை எடுப்ப மன்னிய

#94
வண் செருந்தி வாய் நெகிழ்ப்ப மௌவல் அலர் படைப்பத்
தண் குருந்தம் மாடே தலை இறக்க ஒண் கமலத்

#95
தாது அடுத்த கண்ணியால் தண் நறும் குஞ்சி மேல்
போது அடுத்த கோலம் புனைவித்துக் காதில்

#96
கன வயிர குண்டலங்கள் சேர்த்திக் கழுத்தில்
இன மணியின் ஆரம் இலகப் புனை கனகத்

#97
தொத்து அடுத்த பூம் சுரிகைச் சோதி சேர் தாளிம்பம்
வைத்து மணிக் கண்டிகை பூண்டு முத்து அடுத்த

#98
கேயூரம் தோள் மேல் கிடத்திக் கிளர் பொன்னின்
வாய்மை பெறு நூல் வலம் திகழ ஏயும்

#99
தமனியத்தின் தாழ் வடமும் தண் தரளக் கோப்பும்
சிமய வரை மார்பில் சேர்த்தி அமைவுற்ற

#100
வெண் நீற்றின் ஒண் களபம் மட்டித்து மேவு தொழில்
ஒண் நூல் கலிங்கம் உடல் புனைந்து திண் நோக்கில்

#101
காற்று உருமோ குன்றோ கடலோ அடல் உருமோ
கூற்று உருவோ என்னக் கொதித்து எழுந்து சீற்றத்

#102
தழல் விழித்து நின்று எதிர்ந்து தாலவட்டம் வீசிப்
புழைத் தடக் கை கொண்டு எறிந்து பொங்கி மழை மதத்தால்

#103
பூத்த கட தடத்துப் போகம் மிகப் பொலிந்த
காத்திரத்தது ஆகிக் கலித்து எங்கும் கோத்த

#104
கொடு நிகளம் போக்கி நிமிர் கொண்டு எழுந்து கோபித்து
இடு வண்டை இட்டுக் கலித்து முடுகி

#105
நெடு நிலத்தைத் தான் உழக்கி நின்று நிகர் நீத்து
இடி பெயரத் தாளத்து இலுப்பி அடு சினத்தால்

#106
கன்ற முகம் பருக் கை எடுத்து ஆராய்ந்து
வென்றி மருப்பு உருவ வெய்துயிர்த்து ஒன்றிய

#107
கூடம் அரண் அழித்துக் கோபுரங்களைக் குத்தி
நீடு பொழிலை நிகர் அழித்து ஓடிப்

#108
பணப் பாகரைப் பரிந்து குத்திப் பறித்த
நிணப் பாகை நீள் விசும்பில் வீசி அணைப்ப அய

#109
ஓடைக் கரும் களிற்றை ஒண் பரிக்காரர்கள்தாம்
மாடு அணையக் கொண்டு வருதலுமே கூடி

#110
நயந்து குரல்கொடுத்து நட்பு அளித்துச் சென்று
வியந்து அணுகி வேட்டம் தணித்த ஆங்கு உயர்ந்த

#111
உடல் தூய வாசி-தனைப் பற்றி மேல் கொண்டு ஆங்கு
அடல் கூடல் சந்தி அணுகி அடுத்த

#112
பயிர் பலவும் பேசிப் படு புரசை நீக்கி
அயர்வு கெட அணைத்து அதட்டி உயர்வு தரு

#113
தண்டு பேரோசையின்-கண் தாள் கோத்துச் சீர் சிறுத்
தொண்டர் பிறகு அணையத் தோன்றுதலும் எண் திசையும்

#114
பல் சனமும் மாவும் படையும் புடை கிளர
ஒல் ஒலியால் ஓங்கு கடல் கிளர மல்லல்

#115
பரித் தூரம் கொட்டப் படு பணிலம் ஆர்ப்பக்
கருத்தோடு இசை கவிஞர் பாட விரித்த

#116
குடை பலவும் சாமரையும் தொங்கல்களும் கூடிப்
புடை பரந்து பொக்கம் படைப்பக் கடைபடு

#117
வீதி அணுகுதலும் மெல்_வளையார் உள் மகிழ்ந்து
காதல் பெருகிக் கலந்து எங்கும் சோதி சேர்

#118
ஆடரங்கின் மேலும் அணி மாளிகைகளிலும்
சேடரங்கு நீள் மறுகும் தெற்றியிலும் பீடு உடைய

#119
பேரிளம்பெண் ஈறாகப் பேதை முதலாக
வார் இளம் கொங்கை மட நல்லார் சீர் விளங்கப்

#120
பேணும் சிலம்பும் பிறங்கு ஒளி சேர் ஆரமும்
பூணும் புலம்பப் புறப்பட்டுச் சேண் மறுகில்

#121
காண் தகைய வென்றிக் கரு வரை மேல் வெண் மதி போல்
ஈண்டு குடையின் எழில் நிழல் கீழ்க் காண்டலுமே

#122
கைதொழுவார் நின்று கலை சரிவார் மால் கொண்டு
மெய் தளர்வார் வெள் வளைகள் போய் வீழ்வார் வெய்துயிர்த்துப்

#123
பூம் பயலை கொள்வார் புணர் முலைகள் பொன் பயப்பார்
காம்பு அனைய மென் தோள் கவின் கழிவார் தாம் பயந்து

#124
வென்றி வேல் சேய் என்ன வேனில் வேள் கோ என்ன
அன்று என்ன ஆம் என்ன ஐயுற்றுச் சென்று அணுகிக்

#125
காழிக் குல மதலை என்று தம் கை சோர்ந்து
வாழி வளை சரிய நின்று அயர்வார் பாழிமையால்

#126
உள்ளம் நிலைதளர்ந்த ஒள்_நுதலார் வெல் களிற்றை
மெள்ள நட என்று வேண்டுவார் கள் அலங்கல்

#127
தாராமை அன்றியும் தையல் நல்லார் முகத்தைப்
பாராமை சாலப் பயன் என்பார் நேராக

#128
என்னையே நோக்கினான் ஏந்து_இழையீர் இப்பொழுது
நன்மை நமக்கு உண்டு என நயப்பார் கைம்மையால்

#129
ஒண் கலையும் நாணும் உடைத் துகிலும் தோற்றவர்கள்
வண் கமலத் தார் வலிந்து கோடும் எனப் பண்பின்

#130
வடிக் கண் மலர் வாளி வார் புருவ வில் மேல்
தொடுத்து அதரத் தொண்டை துடிப்பப் பொடித்த முலைக்

#131
காசைக் கரும் குழலார் காதல் கவுணியன்-பால்
பூசற்கு அமைந்து புறப்படுவார் வாசச்

#132
செழு மலர்த் தார் இன்று எனக்கு நல்காதே சீர் ஆர்
கழுமலத்தார் கோவே கழல்கள் தொழுவார்கள்

#133
அம் கோல் வளை இழக்கப் போவது நின்னுடைய
செங்கோன்மையோ என்று செப்புவார் நங்கையீர்

#134
இன்று இவன் நல்குமே எண்பெருங்குன்றத்தின்
அன்று அமணர் கூட்டத்தை ஆசு அழித்துப் பொன்ற

#135
உரை கெழுவு செந்தமிழ்ப் பா ஒன்றினால் வென்றி
நிரை கழு மேல் உய்த்தானை நேர்ந்து விரை மலர்த் தார்

#136
பெற்றிடலாம் என்று இருந்த நம்மினும் பேதையர்கள்
மற்று உளரோ என்று வகுத்து உரைப்பார் மற்று இவனே

#137
பெண் இரக்கம் அன்றே பிறை_நுதலீர் மாசுணத்தின்
நண்ணு கடு விடத்தால் நாள்சென்று விண் உற்ற

#138
ஆருயிரை மீட்டு அன்று அவளை அணி மருகல்
ஊர் அறிய வைத்தது என உரைப்பார் பேரிடரால்

#139
ஏசுவார் தாம் உற்ற ஏசறவைத் தோழியர் முன்
பேசுவார் நின்று தம் பீடு அழிவார் ஆசையால்

#140
நைவார் நலன் அழிவார் நாணோடு பூண் இழப்பார்
மெய் வாடுவார் வெகுள்வார் வெய்துயிர்ப்பார் தையலார்

#141
பூம் துகிலைப் பூ மாலை என்று அணிவார் பூவினை முன்
சாந்தம் என மெய்யில் தைவருவார் வாய்ந்த

#142
கிளி என்று பாவைக்குச் சொல் பயில்வார் பந்தை
ஒளி மேகலை என்று உடுப்பார் அளி மேவு

#143
பூம் குழலார் மையலாய்க் கைதொழும் முன் போதந்தான்
ஓங்கு ஒலி சேர் வீதி உலா
** ஆளுடைய பிள்ளையார் திருவுலா மாலை முற்றிற்று

@8 ஆளுடைய பிள்ளையார் திருக்கலம்பகம்
** ஒருபோகு கொச்சகக் கலிப்பா
** நான்கடித்தாழிசை

#1
அலை ஆர்ந்த கடல் உலகத்து அரும் திசை-தோறு அங்கங்கே	
நிலை ஆர்ந்த பல பதிகம் நெறி மனிதர்க்கு இனிது இயற்றி
ஈங்கு அருளி எம் போல்வார்க்கு இடர் கெடுத்தல் காரணமாய்
ஓங்கு புகழ்ச் சண்பை எனும் ஒண் பதியுள் உதித்தனையே
செம் சடை வெண் மதி அணிந்த சிவன் எந்தை திருவருளால்		5
வஞ்சியன நுண்_இடையாள் மலையரையன் மடப்பாவை
நல் கண்ணி அளவிறந்த ஞானத்தை அமிர்து ஆக்கிப்
பொன் கிண்ணத்து அருள்புரிந்த போனகம் முன் நுகர்ந்தனையே
தோடு அணி காதினன் என்றும் தொல் அமரர்க்கு எஞ்ஞான்றும்
தேட அரிய பராபரனைச் செழு மறையின் அரும் பொருள		10
அந்திச் செம் மேனியனை அடையாளம் பல சொல்லி
உந்தைக்குக் காண அரன் உவன் ஆம் என்று உரைத்தனையே
** அராகம்
வளம் மலி தமிழ் இசை வடகலை மறைவல
முளரி நல் மலர் அணிதரு திருமுடியினை
கடல் படு விடம் அடை கறை மணி மிடறு உடை			15
அடல் கரி உரியனை அறிவு உடை அளவினை
** இரண்டடித் தாழிசை
கரும்பினும் மிக்கு இனிய புகழ்க் கண்_நுதல் விண்ணவன் அடி மேல்
பரம்ப இரும் புவியவர்க்குப் பத்திமையை விளைத்தனையே
பன்மறையோர் செய் தொழிலும் பரம சிவாகம விதியும்
நல் மறையின் விதி முழுதும் ஒழிவின்றி நவின்றனையே		20
** நாற்சீர் ஓரடி அம்போதரங்கம்
அணி தவத்தவர்களுக்கு அதிக வித்தகனும் நீ
தணி மனத்து அருள் உடைத் தவ நெறிக்கு அமிர்தம் நீ
அமணரைக் கழு நுதிக்கு அணைவுறுத்தவனும் நீ
தமிழ் நலத் தொகையினில் தகு சுவைப்பவனும் நீ
** மூச்சீர் ஓரடி அம்போதரங்கம்
மறையவர்க்கு ஒருவன் நீ			25
மருவலர்க்கு உருமும் நீ
நிறை குணத்து ஒருவன் நீ
நிகர்_இல் உத்தமனும் நீ
** இருசீர் ஓரடி அம்போதரங்கம்
அரியை நீ
எளியை நீ					30
அறவன் நீ
துறவன் நீ
பெரியை நீ
உரியை நீ
பிள்ளை நீ					35
வள்ளல் நீ
** தனிச் சொல்
என ஆங்கு
** சுரிதகம்
அரும் தமிழ் விரக நின் பரசுதும் திருந்திய
நிரைச் செழு மாளிகை நிலை-தொறும் நிலை-தொறும்
உரைச் சதுர்மறையில் ஓங்கிய ஒலி சேர்		40
சீர் கெழு துழனித் திருமுகம் பொலிவு உடைத்
தார் கெழு தண்டலை தண் பணை தழீஇ
கல் தொகு புரிசைக் காழியர்நாத
நல் தொகு சீர்த்தி ஞானசம்பந்த
நின் பெரும் கருணையை நீதியின்			45
அன்பு உடை அடியவர்க்கு அருளுவோய் எனவே
** நேரிசை வெண்பா

#2
எனவே இடர் அகலும் இன்பமே எய்தும்
நனவே அரன் அருளை நாடும் புனல் மேய
செங்கமலத் தண் தார்த் திருஞானசம்பந்தன்
கொங்கு அமலத் தண் காழிக் கோ

#3
கோலப் புல மணிச் சுந்தர மாளிகைக் குந்தள வார்
ஏலப் பொழில் அணி சண்பையர்கோனை இரும் கடல் சூழ்
ஞாலத்து அணி புகழ் ஞானசம்பந்தனை நல் தமிழே
போலப் பல புன் கவி கொண்டு சேவடி போற்றுவனே

#4
போற்றுவார் இடர் பாற்றிய புனிதன் பொழில் சுலாவிய புகலியர் பெருமான்
ஏற்ற வார் புகழ் ஞானசம்பந்தன் எம்பிரான் இரும் சுருதி அம் கிரி-வாய்ச்
சேற்று வார் புனம் காவல் பிரிந்து என் சிந்தை கொள்வதும் செய் தொழில் ஆனால்
மாற்றம் நீர் எமக்கு இன்று உரைசெய்தால் வாசியோ குறமாது நல்லீரே
** எழுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

#5
நலம் மலிதரும் புவனி நிறை செய் புகழ் இன்ப நனி பனி மதி அணைந்த பொழில் சூழ்
பொலம்  மதில் இரும் புகலி அதிபதி விதம் பெருகு புனித குணன் எந்தம் இறைவன்
பல மலிதரும் தமிழின் வடகலை விடங்கன் மிகு பர சமய வென்றி அரி-தன்
சலம் மலிதரும் கமல சரண் நினைவன் என்றனது தகு வினைகள் பொன்றும் வகையே
** பன்னிருசீர்க் கழிநெடிற் சந்த விருத்தம்

#6
வகை தகு முத்தமிழ் ஆகரன் மறை பயில் திப்பிய வாசகன்
 வல கலை வித்தகன் வானவில் மதி அணை பொன் குவை மாளிகை
திகைதிகை மட்டு அலர் வார் பொழில் திகழ் புகலிக்கு அரசு ஆகிய
 திரு வளர் விப்ரசிகாமணி செழும் மலயத் தமிழ்க் கேசரி
மிக மத வெற்றிகொள் வாரணம் மிடை வருடைக் குலம் யாளிகள்
 விரவு இருளில் தனி நீள் நெறி வினை துயர் மொய்த்து உளவே மணி
நகை எழிலின் குறமாது உனது அருமை நினைக்கிலள் நீ இவள்
 நசையின் முழுப்பழி ஆதல் முன் நணுகல் இனிக் கிரிவாணனே

#7
வாள் நிலவும் புனலும் பயில் செம் சடை வண் கருணாகரனை
 மலை_மாது உமையொடும் இவன் ஆவான் என முன் நாள் உரைசெய்தோன்
சேண் நிலவும் புகழ் மாளிகை நீடிய தென் புகலிக்கு அரசைத்
 திருவாளனை எழில் அருகாசனி-தனை மருவாதவர் கிளை போல்
நாள் நிலவும் பழியோ கருதாது அயலான் ஒரு காளையுடன்
 நசை தீர் நிலை கொலை புரி வேடுவர் பயில்தரு கான் அதர் வெயிலில்
கேள் நிலவும் கிளி பாவையொடு ஆயமும் யாய் எனையும் ஒழியக்
 கிறியால் எனது ஒரு மகள் போய் உறு துயர் கெடுவேன் அறிகிலேனே
** எண்சீர்க்கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

#8
அறிவாகி இன்பம்செய் தமிழ் வாதில் வென்று அந்த
 அமணான வன் குண்டர் கழுவேற முன் கண்ட
செறி மாட வண் சண்பை நகராளி என் தந்தை
 திருஞானசம்பந்தன் அணி நீடு திண் குன்றில்
நெறி ஆல மண் துன்றி முனை நாள் சினம்கொண்டு
 நிறைவார் புனம் தின்று மகள் மேல் வரும் துங்க
வெறி ஆர் மதம் தங்கு கத வாரணம் கொன்ற
 வெகுளாத நம் சிந்தை விறலான் உளன் பண்டே
** பதின்சீர்க்கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

#9
பண்டு அமுது செய்தது உமை நங்கை அருள் மேவு சிவஞானம்
 பைம் தரள நல் சிவிகை செம்பொன் அணி நீடுகிற தாளம்
கொண்டது அரன் உம்பர் பரன் எங்கள் பெருமான் அருள் படைத்துக்
 கொடுத்த தமிழைத் தவ குலத்தவர்களுக்கு உலகில் இன்பம்
கண்டது அருகந்தர் குலம் ஒன்றி முழுதும் கழுவில் ஏறக்
 கறுத்தது வினைப் பயன் மனத்தில் இறை காதலது அன்றி
விண்டதுவும் வஞ்சகரை மஞ்சு அணவுகின்ற மணி மாட
 வேணுபுரநாதன் மிகு வேதியர் சிகாமணி பிரானே
** அறுசீர்க்கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

#10
பிரானை மெய்த் திருஞானசம்பந்தனை மறையவர் பெருமானைக்
குரா மலர்ப் பொழில் கொச்சையர்நாதனைக் குரை கழல் இணை வாழ்த்தித்
தராதலத்தினில் அவன் அருள் நினைவொடு தளர்வுறு தமியேனுக்கு
இராவினைக் கொடு வந்தது இவ் அந்தி மற்று இனி விடிவு அறியேனே
** பதினான்கு சீர்க்கழிநெடிற் சந்த விருத்தம்

#11
ஏன முகத்தவ புத்தரை இந்திரசித்து மணம்புணர்வுற்றான்
 ஈழவனார் சொரி தொட்டி இனங்களை வெட்டி இசித்தனர் பட்டர்
தானம் இரக்கிற சீதை மடுப்பது சாதி குடத்தொடு கண்டீர்
 சக்கரவர்த்திகள் சிக்கரம் அட்டுவர் தத்துவம் இப் பரிசு உண்டே
ஆன புகழ்ப் பயில் விப்ரசிகாமணி அத் தகு மைப் புரையும் கார்
 ஆர் பொழில் நீடிய சண்பையர் காவலன் வண் களியேன் எளியேனோ
சோனகனுக்கும் எனக்கும் எனத் தரை அம்மனை சூலது கொண்டாள்
 தும்புரு வாலியை வென்று நிலத்திடை நின்று துலக்குகிறாரே
** அறுசீர்க்கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

#12
ஆர் மலி புகலிநாதன் அருள் என இரவில் வந்து என்
வார் முலை பயலை தீர மணந்தவர் தணந்து போன
தேர் அதர் அழியல் உம்மைச் செய் பிழை எம்மது இல்லை
கார் திரை கஞலி மோதிக் கரை பொரும் கடலினீரே
** சந்தக் கலி விருத்தம்

#13
கடல் மேவு புவி ஏறு கவி நீரர் பெருமான்-தன்
தடம் மாடு மிகு காழி தகு பேதை அருளாமல்
திடமாகில் அணி நீறு செழு மேனி முழுது ஆடி
மடல் ஏறி எழில் வீதி வரு காதல் ஒழியானே
** எண்சீர்க்கழிநெடிற் சந்த விருத்தம்

#14
ஒழியாது இன்புறு பொழில் சூழ் சண்பை மன் உயர் பார் துன்றிய தகு ஞானன் புகழ்
எழில் ஆரும் கவுணியர் தீபன் திகழ் இணை ஆர் செங்கரன் நிகழ்வான் விண் குயின்
பொழியா நின்றன துளி தார் கொன்றைகள் புலமே துன்றின கலைமான் ஒன்றின
பழி மேல் கொண்டது நுமர் தேர் அன்பொடும் அருகே வந்தது அது காண் மங்கையே
** அறுசீர்க்கழிநெடிற் சந்த விருத்தம்

#15
மங்கை இடத்து அரனைக் கவி நீர் எதிர் ஓட மதித்து அருள்செய்
தங்கு புகழ்ச் சதுர் மா மறை நா வளர் சைவ சிகாமணி-தன்
துங்க மதில் பிரமாபுரம் மேவிய சூல் பொழில் நின்று ஒளிர் மென்
கொங்கை உடைக் கொடி ஏர் இடையாள் குடிகொண்டனள் எம் மனமே
** எண்சீர்க்கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

#16
மனம் கொண்டு நிறை கொண்டு கலையும் கொண்டு
 மணி நிறமும் இவள் செம் கை வளையும் கொண்ட
தனம் கொண்ட பெரும் செல்வம் திகழும் கீர்த்திச்
 சண்பையர்கோன் திருஞானசம்பந்தற்கு
நனம் கொண்டு மெய் கொண்டு பயலை கொண்டே
 நல்_நுதலாள் அயர்கின்றாள் நடுவே நின்றும்
இனம் கொண்டு நகை கொண்டு மடவீர் வாளா
 என் செய நீர் அலர் தூற்றி எழுகின்றீரே
** சம்பிரதம்

#17
எழு குல வெற்பு இவை மிடறில் அடக்குவன் எறி கடலில் புனல் குளறி வயிற்றினில்
முழுதும் ஒளித்து இரவியை இ நிலத்திடை முடுகுவன் இப்பொழுது இவை அல விச்சைகள்
கழுமல நல் பதி அதிப தமிழ்க் கடல் கவுணிய நல் குல திலகன் இணைக் கழல்
தொழுது வழுத்திய பிறர் ஒருவர்க்கு உறு துயர் வருவிப்பன் இது அரியதொர் விச்சையே
** எழுசீர்க்கழிநெடிற் சந்த விருத்தம்

#18
சயம் மிகுத்து அருகரை முருக்கிய தமிழ் பயிற்றிய நாவன்
வியல் இயல் திரு மருகலில் கொடு விடம் அழித்து அருள் நீதன்
கயல் உடைப் புனல் வயல் வளத் தகு கழுமலப்பதி நாதன்
இயல் உடைக் கழல் தொழ நினைப்பவர் இருவினைத் துயர் போமே
** பன்னிருசீர்க்கழிநெடிற் சந்த விருத்தம்

#19
மேதகும் திகழ் பூக நாக சண்பக சூத வேரி வண்டு அறை சோலை ஆலை துன்றிய காழி
நாதன் அந்தணர்கோன் என் ஆனை வண் புகழாளி ஞான சுந்தரன் மேவு தார் நினைந்து அயர்வேனை
நீதி அன்றின பேசும் யாயும் இந்துவும் வாசம் நீடு தென்றலும் வீணை ஓசையும் கரை சேர
மோது தெண் திரை சேவல் சேரும் அன்றிலும் வேயும் மூடு தண் பனி வாடை கூடி வன் பகை ஆமே
** எண்சீர்க்கழிநெடிற் சந்த விருத்தம்

#20
வன் பகையாம் அக் குண்டரை வென்றோய் மா மலர் வாளிப் பொரு மத வேளைத்
தன் பகையாகச் சிந்தையுள் நையும் தையலை உய்யக் கொண்டு அருள்செய்யாய்
நின் புகழ் பாடிக் கண் பனி சோரா நின்று எழில் ஞானா என்று அகம் நெக்கிட்டு
அல் பகலா மெய்ச் சிந்தையர் இன்பாம் அம் பொழில் மாடச் சண்பையர் கோவே
** மறம் - எண்சீர்க்கழிநெடிற் சந்த விருத்தம்

#21
கோவின் திருமுக மீதொடு வரு தூதுவ ஈரக் குளிர் பைம் பொழில் வள நாடு எழில் நிதியம் பரிசம் ஈ
மா வீரியர் இவர் தங்கை என் மகுடன் திற மண அம் மற வெம் குலம் அறிகின்றிலன் பழி அச் சத அரசன்
பா ஏறிய மதுரத் தமிழ் விரகன் புகலியர் மன் பயில் வண் புகழ் அருகாசனி பணி அன்று எனின் நமர்காள்
தூ ஏரியை மடு-மின் துடி அடி-மின் படை எழு-மின் தொகு சேனையும் அவனும் பட மலையும் பரிசு இனியே
** எழுசீர்க்கழிநெடிற் சந்த விருத்தம்

#22
இனி இன்று ஒழி-மின் இவ் வெறியும் மறி அடு தொழிலும் இடு குரவையும் எல்லாம்
நனி சிந்தையின் இவள் மிக வன்புறுவதொர் நசை உண்டது நரை முதுபெண்டீர்
புனிதன் புகலியர் அதிபன் புனை தமிழ் விரகன் புயம் உறும் அரவிந்தம்
பனி மென் குழலியை அணி-மின் துயரொடு மயலும் கெடுவது சரதம்மே
** எண்சீர்க்கழிநெடிற் சந்த விருத்தம்

#23
சரதம் மண மலி பரிசம் வருவன தளர்வு_இல் புகலியர் அதிபன் நதி தரு
வரதன் அணி தமிழ் விரகன் மிகு புகழ் மருவு சுருதி நன் மலையின் அமர்தரு
விரதம் உடையை நின் இடையின் அவள் மனம் விரை செய் குழலியை அணைவது அரிது என
இரதம் அழிதர வருதல் முனம் இனி எளியது ஒரு வகை கருது மலையனே

#24
அயன் நெடிய மாலும் அவர் அறிவு அரிய தாணு அரன் அருளினொடு நீடு அவனி இடர் முழுது போய் அகல
வயல் அணி தென் வீழிமிழலையின் நிலவு காசின் மலி மழை பொழியும் மான குண மதுரன் மதி தோய் கனக
செயம் நிலவு மாடம் மதில் புடை தழுவு வாசம் மலி செறி பொழில் சுலாவி வளர் சிரபுர சுரேசன் முதிர்
பயன் நிலவு ஞான தமிழ் விரகன் மறை ஞானம் உணர் பரம குருநாதன் மிகு பர சமய கோளரியே
** எண்சீர்க்கழிநெடிற் சந்த விருத்தம்

#25
அரி ஆரும் கிரி நெறி எங்ஙனம் நீர் வந்தீர் அழகிது இனிப் பயம் இல்லை அந்திக்கு அப்பால்
தெரியா புன் சிறு நெறிகள் எந்தம் வாழ்வு இச் சிறுகுடி இன்று இரவு இங்கே சிரமம் தீர்ந்து இச்
சுரி ஆர் மென் குழலியொடும் விடியச் சென்று தொகு புகழ் சேர் திருஞானசம்பந்தன்-தன்
வரி ஆரும் பொழிலும் எழில் மதிலும் தோற்றும் வயல் புகலிப் பதி இனிது மருவலாமே
** கலித்தாழிசை

#26
ஆம் மாண் பொன் கூட்டு அகத்த அம் சொல் இளம் பைங்கிளியே
பாமாலை யாழ் முரியப் பாண் அழியப் பண்டு அருள்செய்
மா மான சுந்தரன் வண் சம்பந்த மா முனி எம்
கோமான்-தன் புகழ் ஒரு கால் இன்புற நீ கூறாயே
கொச்சையர்கோன்-தன் புகழ் யான் இன்புற நீ கூறாயே
** எழுசீர்க்கழிநெடிற் சந்த விருத்தம்

#27
கூறது ஆக மெய் அடிமை தான் எனை உடைய கொச்சையார் அதிபதி
வீறது ஆர் தமிழ் விரகன் மேதகு புகழினான் இவன் மிகு வனச்
சேறது ஆர்தரு திரள் களைக் கன செழு_முலைக்கு உரியவர் சினத்து
ஏறுதான் இது தழுவினார் என இடி கொள் மா முரசு அதிருமே
** அறுசீர்க்கழிநெடிற் சந்த விருத்தம்

#28
சதுரன் புகலியர் அதிபன் கூர் தவ சுந்தர கவுணியர்-தம் சீர்
முதல்வன் புகலியர் அதிபன் தாள் முறை வந்து அடையலர் நகரம் போல்
எதிர் வந்தனர் விறல் கெட வெம் போர் எரி வெம் கணை சொரி புரி-மின் கார்
அதிர்கின்றன இது பருவம் சேரலர்-தம் பதி மதில் இடி-மின்னே
** எண்சீர்க்கழிநெடிற் சந்த விருத்தம்

#29
மின்னும் மாகத்து எழிலியும் சேர் மிகு பொன் மாடப் புகலிநாதன்
துன்னும் ஞானத்து எம்பிரான் மெய்த் தொகை செய் பாடல் பதிகம்_அன்னாள்
பொன்னும் மா நல் தரளமும் தன் பொரு கயல் கண் தனம் நிறைத்தாள்
இன்னும் ஏகிப் பொருள் படைப்பான் எங்ஙனே நான் எண்ணுமாறே
** பன்னிருசீர்க்கழிநெடிற் சந்த விருத்தம்

#30
மாறு இலாத பொடி நீறு ஏறு கோல வடிவும் வம்பு பம்பு குழலும் துங்க கொங்கை இணையும்
மூறி ஏறு பதிகத்து ஓசை நேச நுகர்வும் மொத்து கித்து நடையும் சித்த பத்தி மிகையும்
வீறது ஏறும் வயல் சூழ் காழி ஞான பெருமான் வென்றி துன்று கழலின் ஒன்றி நின்ற பணியும்
தேறல் போலும் மொழியும் சேல்கள் போலும் விழியும் சிந்தை கொண்ட பரிசும் நன்றி மங்கை தவமே
** அறுசீர்க்கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

#31
கைதவத்தால் என் இடைக்கு நீ வந்தது அறியேனோ கலதிப் பாணா
மெய்தவத்தார் உயிர் அனைய மிகு சைவ சிகாமணியைக் வேணுக்கோனைச்
செய் தவத்தால் விதி வாய்ந்த செழு மலையார் அவனுடைய செம்பொன் திண் தோள்
எய் தவத்தால் விளிவு எனக்கு என் யாதுக்கு நீ பல பொய் இசைக்கின்றாயே
** மதங்கியார்
** எண்சீர்க்கழிநெடிற் சந்த விருத்தம்

#32
இசையை முகந்து எழு மிடறும் இது இங்கிவன் இடு கரணங்களின் இயல்பும் வளம் பொலி
திசைதிசை துன்றிய பொழில் சுலவும் திகழ் சிரபுர மன் தகு தமிழ் விரகன் பல
நசை மிகு வண் புகழ் பயிலும் மதங்கி-தன் நளிர் முலை செங்கயல் விழி நகை கண்ட பின்
வசை தகும் என் குலமவை முழுதும் கொள மதி வளர் சிந்தனை மயல் வருகின்றதே

#33
வருகின்றனன் என்றனது உள்ளமும் நின் வசமே நிறுவிக் குறைகொண்டு தணித்து
அருகும் புனல் வெம் சுரம் யான் அமரும் அது நீ இறையும் நினையாது எனின் முன்
கருகும் புயல் சேர் மதில் வண் புகலிக் கவிஞன் பயில் செந்தமிழாகரன் மெய்ப்
பெருகும் திரு ஆர் அருள் பேணலர் போல் பிழைசெய்தனை வந்து அதர் பெண் கொடியே

#34
கொடி நீடு விடை உடைய பெருமானை அடி பரவு
 குண மேதை கவுணியர்கள் குல தீப சுப சரிதன்
அடியேனது இடர் முழுதும் அற வீசு தமிழ் விரகன்
 அணியான புகலி நகர் அணைவான கனை கடலின்
முடி நீடு பெரு வலை கொடு அலையூடு புகுவன் நுமர்
 முறை ஏவு பணி புரிவன் அணி தோணி புனைவனவை
படி யாரும் நிகர் அரிய வரி ஆரும் மதர் நயனி
 பணை வார் மென் முலை நுளையர் மட மாது உன் அருள் பெறினே

#35
பெறு பயன் மிகப் புவியுள் அருளுவன பிற்றை முறை
 பெரு நெறி அளிப்பன பல பிறவியை ஒழிச்சுவன
உறு துயர் அழிப்பன முன் உமை திருவருள் பெருக
 உடையன நதிப் புனலின் எதிர் பஃறி உய்த்தன புன்
நறுமுறு குரைச் சமணை நிரை கழு நிறுத்தியன
 நனி கதவு அடைத்தன துன் அரு விடம் அகற்றியன
துறு பொழில் மதில் புறவ முது பதி மன் ஒப்பு அரிய
 தொழில் பல மிகுத்த தமிழ் விரகன கவித் தொகையே
** பதின்சீர்க்கழிநெடிற் சந்த விருத்தம்

#36
தொகு வார் பொழில் சுற்றிய வான் மதி தோயும் மதில் கனம் ஆர்
 தொலையாத திருப் பொழில் மாளிகை மாடம் நெருக்கிய சீர்
மிகு காழியன் முத்தமிழாகரன் மேதகு பொன் புனை தார்
 விரை ஆர் கமலக் கழலே துணையாக நினைப்பவர் தாம்
மகராகர நித்தில நீர் நிலை ஆர் புவி உத்தமராய்
 வரலாறு பிழைப்பு இலர் ஊழி-தொறு ஊழி இலக்கிதமாய்த்
தகு வாழ்வு நிலைத்து எழில் சேர் அறமான பயிற்றுவர் மா
 சதுரால் வினை செற்றதன் மேல் அணுகார் பிறவிக்கடலே
** நேரிசை ஆசிரியப்பா

#37
கருமம் கேள்-மதி கருமம் கேள்-மதி	
துருமதிப் பாண கருமம் கேள்-மதி
நிரம்பிய பாடல் நின்-கண் ஓடும்
அரும் பசி நலிய அலக்கணுற்று இளைத்துக்
காந்திய உதரக் கனல் தழைத்து எழுதலின்		5
தேய்ந்து உடல் வற்றிச் சில் நரம்பு எழுந்தே
இறுகுபு சுள்ளி இயற்றிய குரம்பை
உறு செறுத்து அனைய உருவு கொண்டு உள் வளைஇ
இன் இசை நல்லியாழ் சுமந்து அன்னம்
மன்னிய வள நகர் மனைக்கடை-தோறும்		10
சென்றுழிச் சென்றுழிச் சில் பலி பெறாது
நின்றுழி நிலாவு வன் துயர் போய் ஒழிந்து
இன்புற்று இருநிதி எய்தும் அது நுனது
உள்ளத்து உள்ளதாயின் மது மலர்
வண்டு அறை சோலை வள வயல் அகவ		15
ஒண் திறல் கோள் மீன் உலாவு குண்டு அகழ்
உயர் தரு வரையின் இயல் தரு பதணத்துக்
கடு நுதிக் கழுக்கடை மிடைதரு வேலிக்
கனகப் பரு முரண் கணையக் கபாடம்
விலையக் கோபுர விளங்கு எழில் வாயில்		20
நெகிழ்ச்சியின் வகுத்துத் திகழ்ச்சியின் ஓங்கும்
மஞ்சு அணை இஞ்சி வண் கொடி மிடைத்த
செம் சுடர்க் கனகத் திகழ் சிலம்பு அனைய
மாளிகை ஓளிச் சூளிகை வளாகத்து
அணி உடைப் பல பட மணி துடைத்து அழுத்திய	25
நல் ஒளி பரந்து நயம் திகழ் இந்திர
வில் ஒளி பலபல விசும்பிடைக் காட்ட
மன்னிய செல்வத்துத் துன்னிய பெருமைச்
செம்மலர்_மாது சேர்ந்து இறை பிரியாக்
கழுமலநாதன் கவுணியர் குல பதி			30
தண் தமிழ் விரகன் சைவ சிகாமணி
பண்டிதர் இன்பன் பர சமய கோளரி
என் புனை தமிழ் கொண்டு இரங்கி என் உள்ளக்
குறைவு அறுத்து உள்கி நிறை கடை குறுகி
நாப் பொலி நல் இசை பாட			35
மாப் பெரும் செல்வம் மன்னுதி நீயே
** வஞ்சித் துறை

#38
நீதியின் நிறை புகழ் மேதகு புகலி மன்
மா தமிழ் விரகனை ஓதுவது உறுதியே
** எண்சீர்க் கழிநெடிற் சந்த விருத்தம்

#39
உறுதி முலை தாழ எனை இகழும் நீதி உனது மனம் ஆர முழுவதும் அது ஆக
அறுதி பெறும் மாதர் பெயர்தருதல் தானும் அழகிது இனி யான் உன் அருள் புனைவதாகப்
பெறுதி இவை நீ என் அடி பணிதல் மேவு பெருமை கெட நீடு படிறு ஒழி பொன் மாடம்
நறை கமழும் வாச வளர் பொழில் சுலாவும் நனி புகலிநாத தமிழ் விரக நீயே
** ஆசிரியத் துறை

#40
நீ மதித்து உன்னி நினையேல் மட நெஞ்சமே
கா மதிக்கு ஆர் பொழில் காழி
நாம திக்கும் புகழ் ஞானசம்பந்தனொடு
பூ மதிக்கும் கழல் போற்றே
** மடக்கு - கட்டளைக் கலிப்பா

#41
போற்றி செய்து அரன் பொன் கழல் பூண்டதே புந்தி யான் உந்து அம்பு ஒற்கு அழல் பூண்டதே
மாற்றி இட்டது வல் விட வாதையே மன்னு குண்டரை வென்றது வாதையே
ஆற்று எதிர்ப் புனல் உற்ற தம் தோணியே ஆன தன் பதி ஆவது அம் தோணியே
நால் திசைக் கவி ஞான சம்பந்தனே நல்ல நாமமும் ஞானசம்பந்தனே
** கைக்கிளை மருட்பா

#42
அம்பு உந்து கண் இமைக்கும் ஆன நுதல் வியர்க்கும்
வம்பு உந்து கோதை மலர் வாடும் சம்பந்தன்
காமரு கழுமலம் அனையாள்
ஆம் இவள் அணங்கலள் அடி நிலத்தனவே
** பன்னிரு சீர்க் கழிநெடிற் சந்த விருத்தம்

#43
தனமும் துகிலும் சாலிக் குவையும் கோலக் கன மாடச்
 சண்பைத் திகழ் மா மறையோர் அதிபன் தவ மெய்க் குல தீபன்
கன வண் கொடை நீடு அருகாசனி-தன் கமலக் கழல் பாடிக்
 கண்டார் நிறையக் கொள்ளப் பசியைக் கருதாது எம் பாணர்
புனை தண் தமிழின் இசை ஆர் புகலிக்கு அரசைப் புகழ் பாடிப்
 புலையச் சேரிக் காளை புகுந்தால் என் சொல் புதிதாக்கிச்
சின வெம் கத மாக் களிறு ஒன்று இந்தச் சேரிக் கொடுவந்தார்
 சேரிக் குடிலும் இழந்தார் இதனைச் செய்குவது அறியாரே
** இன்னிசை வெண்பா

#44
யாரே என் போல அருள் உடையார் இன் கமலத்
தார் ஏயும் சென்னித் தமிழ் விரகன் சீர் ஏயும்
கொச்சைவயன்-தன் குரை கழற்கே மெச்சி
அடிமைசெயப் பெற்றேன் அறிந்து
** இடையும், இறுதியும் கூன் பெற்று வந்த
** எண்சீர்க்கழிநெடிற் சந்த விருத்தம்

#45
அறிதரு நுண் பொருள் சேர் பதிகம் அரன் கழல் மேல்
 அணிதரு சுந்தரம் ஆர் தமிழ் விரகன் பிறை தோய்
செறிதரு பைம் பொழில் மாளிகை சுலவும் திகழ் சீர்த்
 திரு வளர் சண்பையின் மாடு அலை கடல் ஒண் கழி சேர்
எறி திரை வந்து எழு மீன் இரை நுகர்கின்றிலை போய்
 இனமும் அடைந்திலை கூர் இடரோடு இருந்தனையால்
உறு துயர் சிந்தையினூடு உதவினர் எம் தமர் போல்
 உமரும் அகன்றனரோ இது உரை வண் குருகே
** கலித்துறை

#46
குருகு அணி மணி முன்கைக் கொடியும் நல் விறலவனும்
அருகு அணைகுவர் அப்பால் அரிது இனி வழி மீள்-மின்
தரு கெழு முகில் வண் கைத் தகு தமிழ் விரகன்-தன்
கருகு எழு பொழில் மாடக் கழுமல வள நாடே
** கலிவிருத்தம்

#47
நாடு ஏறும் புகழ் ஞானசம்பந்தன் வண்
சேடு ஏறும் கொச்சை நேர் வளம் செய்து உனை
மாடு ஏறும் தையல் வாட மலர்ந்தனை
கோடு ஏறும் கொடியாய் கொல்லை முல்லையே
** எண்சீர்க் கழிநெடிற் சந்த விருத்தம்

#48
முல்லை நகை உமை-தன் மன்னு திருவருளை முந்தி உறு பெரிய செம் தண் முனிவன் மிகு
நல்ல பொழில் சுலவு தொல்லை அணி புகலிநாதன் மறை முதல்வன் வேத மலையதனில்
வில்லை இலர் கணையும் இல்லை பகழி உறு வேழம் இரலை கலை கேழல் வினவுறுவர்
சொல்லை இலர் விரகர் அல்லர் தழை கொணர்வர் தோழி இவர் ஒருவர் ஆவ அழிதர்வரே
** வஞ்சித்துறை - அராகம்

#49
வழி தரு பிறவியின் உறு தொழில் அமர் துயர் கெடும் மிகு
பொழில் அணிதரு புகலி மன் எழில் இணை அடி இறை-மினே
** ஆளுடைய பிள்ளையார் திருக்கலம்பகம் முற்றிற்று

@9 ஆளுடைய பிள்ளையார் திருத்தொகை
** கொச்சக ஒருபோகு

#1
**1. ஞானப்பால்உண்டது
பூ ஆர் திரு நுதல் மேல் பொன் சுட்டி இட்டு ஒளிரக்
கோவாக் குதலை சிலம்பு அரற்ற ஓவாது
அழுவான் பசித்தான் என்று ஆங்கு இறைவன் காட்டத்
தொழுவான் துயர் தீர்க்கும் தோகை வழுவாமே
முப்பத்திரண்டு அறமும் செய்தாள் முதிராத			5
செப்பு ஒத்த கொங்கைத் திரு_நுதலி அப்பன்
அருளாலே ஊட்டுதலும் அப்பொழுதே ஞானத்
திரள் ஆகி முன் நின்ற செம்மல் இருள் தீர்ந்த
** 2. திருப்பதிகம் அருளிச் செய்தல்
காழி முதல்வன் கவுணியர்-தம் போர் ஏறு
ஊழி முதல்வன் உவன் என்று காட்ட வலான்		10
** 3. படிக்காசு பெற்றது
வீழிமிழலைப் படிக்காசு கொண்டபிரான்
** 4. சமணர் கழுவேற நின்றது
பாழி அமணைக் கழுவேற்றினான் பாணர்
** 5. யாழ் மூரிப்பதிகம் பாடியது
யாழை முறித்தான் எரி-வாய் இடும் பதிகம்
** 6. நெருப்பில் ஏட்டையிட்டுப் பச்சென்றிருக்கக் காட்டியது
ஆழி உலகத்து அழியாமல் காட்டினான்
** 7. இசை வல்லான்
ஏழிசை வித்தகன் வந்தேனோரும் வானோரும்		15
** 8. பாலை நெய்தல் பாடியது
தாழும் சரணச் சதங்கைப் பருவத்தே
பாலையும் நெய்தலும் பாட வலான் சோலைத்
** 9. பொற்கிழி பெற்றது
திருவாவடுதுறையில் செம்பொன்கிழி ஒன்று
அருளாலே பெற்று அருளும் ஐயன் தெருளாத
** 10. பாண்டிய நாட்டில் நீற்றொளிபரப்பியது
தென்னவன் நாடு எல்லாம் திருநீறு பாலித்த			20
** 11. விடம் தீர்த்தது
மன்னன் மருகல் விடம் தீர்த்த பிரான் பின்னைத் தென்
** 12. பொற்றாளம் பெற்றது
கோலக்காவில் தாளம் பெற்றிக் குவலயத்தில்
** 13. முத்துச் சிவிகைபெற்றது
முத்தின் சிவிகை அரன் கொடுப்ப முன் நின்று
தித்தித்த பாடல் செவிக்கு அளித்தான் நித்திலங்கள்
** 14. மறைக் கதவம் அடைத்தது
மாடத்து ஒளிரும் மறைக்காட்டு இறை கதவைப்		25
பாடி அடைப்பித்த பண்புடையான் நீடும்
** 5. ஆண்பனை பெண்பனை யாக்கியது
திருவோத்தூர் ஆண்பனையைப் பெண்பனை ஆக என்னும்
பெருவார்த்தை தான் உடைய பிள்ளை மருவு இனிய
** 16. ஓடம் கரையேறவிட்டது
கொள்ளம்பூதூர்க் குழகன் நாவாயது கொடுப்ப
உள்ளமே கோலாக ஊன்றினான் வள்ளல்			30
** 17. முயலகன் தீர்த்தது
மழவன் சிறு மதலை வான் பெரு நோய் தீர்த்த
குழகன் குல மறையோர் கோமான் நிலவிய
** 18. ஆற்றில் எடு எதிர்ஏற விட்டது
வைகை ஆற்று ஏடு இட்டு வான் நீர் எதிர் ஒட்டும்
செய்கையான் மிக்க செயல் உடையான் வெய்ய விடம்
** 19. எலும்பைப் பெண்ணாக்கியது
மேவி இறந்த அயில் வேல் கண் மட மகளை			35
வா என்று அழைப்பித்து இ மண்ணுலகில் வாழ்வித்த
சீர் நின்ற செம்மைச் செயல் உடையான் நேர் வந்த
** 20. புத்தன் தலையில் இடிவிழச் செய்தது
புத்தன் தலையைப் புவி மேல் புரள்வித்த
வித்தகப் பாடல் விளம்பினான் மொய்த்து ஒளி சேர்
கொச்சைச் சதுரன்-தன் கோமானைத் தான் செய்த	40
பச்சைப் பதிகத்துடன் பதினாறாயிரம் பா
வித்துப் பொருளை விளைக்க வல பெருமான்
முத்திப் பகவ முதல்வன் திருவடியை
அத்திக்கும் பத்தர் எதிர் ஆணை நமது என்ன வலான்
கத்தித் திரி பிறவிச் சாகரத்துள் ஆழாமே			45
பத்தித் தனித் தெப்பம் பார் வாழத் தந்த பிரான்
** 21. அமணர் இட்ட தீயைப் பாண்டியன்மேல் ஏவியது
பத்திச் சிவம் என்று பாண்டிமாதேவியொடும்
கொற்றக் கதிர் வேல் குலச்சிறையும் கொண்டாடும்
அற்றைப் பொழுதத்து அமணர் இடும் வெம் தீயைப்
பற்றிச் சுடுக போய்ப் பாண்டியனை என்ன வல்லான்	 50
வர்த்தமானீசர் கழல் வணங்கி வாழ் முருகன்
பத்தியை ஈசன் பதிகத்தே காட்டினான்
அத்தன் திருநீலநக்கற்கும் அன்பு உடையான்
துத்த மொழிக் குதலைத் தூய வாய் நல்_நுதலி
கொத்து ஆர் கரும் குழற்கும் கோலச் செம் கைம்மலர்க்கும்	55
அத் தாமரை அடிக்கும் அம் மென் குறங்கினுக்கும்
சித்திரப் பொன் காஞ்சி சிறந்த பேர் அல்குலுக்கும்
முத்தமிழ் நூல் எல்லாம் முழுது உணர்ந்த பிள்ளையார்க்கு
ஒத்த மணம் இது என்று ஓதித் தமர்கள் எல்லாம்
சித்தம் களிப்பத் திருமணம்செய் காவணத்தே		60	
அற்றைப் பொழுதத்துக் கண்டு உடனே நிற்க
பெற்றவர்களோடும் பெருமணம் போய்ப் புக்குத்
தன் அத்தன் அடியே அடைந்தான் அழகிதே
** ஆளுடைய பிள்ளையார் திருத்தொகை முற்றிற்று

@10 திருநாவுக்கரசு தேவர் திருஏகாதச மாலை

#1
புலனோடு ஆடித் திரி மனத்தவர்
பொறி செய் காமத் துரிசு அடக்கிய
புனித நேசத்தொடு தமக்கையர்
புணர்வினால் உற்று உரைசெயக் குடர்
சுலவு சூலைப் பிணி கெடுத்து ஒளிர்		5
சுடு வெண் நீறு இட்டு அமண் அகற்றிய
துணிவினால் முப்புரம் எரித்தவர்
சுழலிலே பட்டிடு தவத்தினர்
உலகின் மாயப் பிறவியைத் தரும்
உணர்வு இலா அப் பெரு மயக்கினை		10
ஒழிய வாய்மைக் கவிதையில் பல
உபரியாகப் பொருள் பரப்பிய
அலகு_இல் ஞானக் கடலிடைப் படும்
அமிர்த யோகச் சிவ ஒளிப் புக
அடியரேமுக்கு அருளினைச் செயும்		15
அரைய தேவத் திருவடிக்களே

#2
திருநாவுக்கரசு அடியவர் நாடல் கதி நிதி
தெளி தேன் ஒத்து இனிய சொல் மடவார் ஊர்ப்பசி முதல்
வரு வானத்து அரிவையர் நடம் ஆடிச் சிலசில
வசியாகச் சொலும் அவை துகளாகக் கருதி மெய்
உரு ஞானத் திரள் மனம் உருகா நெக்கு அழுது கண்	5
உழவாரப் படைகையில் உடையான் வைத்தன தமிழ்
குருவாகக் கொடு சிவன் அடி சூடித் திரிபவர்
குறுகார் புக்கு இடர்படு குடர் யோனிக் குழியிலே

#3
குழிந்து சுழி பெறு நாபியின்-கண் மயிர் நிரையார் குரும்பை முலையிடையே செலும் தகை நல் மடவார்
அழிந்த பொசியதிலே கிடந்து இரவு பகல் நீ அலைந்து அயருமது நீ அறிந்திலை-கொல் மனமே
கழிந்த கழிகிடு நாள் இணங்கு இதயம் நெகவே கசிந்து இதயம் எழுநூறு அரும் பதிக நிதியே
பொழிந்து அருளு திருநாவின் எங்கள் அரசினையே புரிந்து நினை இதுவே மருந்து பிறிது இலையே

#4
இலை மாடு என்று இடர் பரியார் இந்திரனே ஒத்து உறு குறைவு அற்றாலும்
நிலையாது இச் செல்வம் எனவே கருதுவர் நீள் சன்மக் கடலிடையில் புக்கு
அலையார் சென்று அரன் நெறியாகும் கரை அண்ணப்பெறுவர்கள் வண்ணத் திண்
சிலை மாடம் திகழ் புகழ் ஆமூர் உறை திருநாவுக்கரசு என்போரே

#5
என்பு அட்டிக் கட்டிய இந்தப் பைக் குப்பையை இங்கு இட்டுச் சுட்ட பின் எங்குத் தைக்குச் செலும்
முன்பு இட்டுச் சுட்டி அரும் திக்கு எத்திக்கு என மொய்ம்புற்றுக் கற்று அறிவு இன்றிக் கெட்டுச் சில
வன் பட்டிப் பிட்டர்கள் துன்புற்றுப் புத்தியை வஞ்சித்துக் கத்தி விழுந்து எச்சுத் தட்டுவர்
அன்பர்க்குப் பற்று இலர் சென்று அர்ச்சிக்கிற்றிலர் அந்தக் குக்கிக்கு இரை சிந்தித்தப் பித்தரே

#6
பித்து அரசு பதையாத கொத்தை நிலை உள தேவு பெட்டி உரைசெய்து சோறு சுட்டி உழல் சமண் வாயர்
கைத்த அரசு பதையாத சித்தமொடு சிவ பூசை கற்ற மதியினன் ஓசையிட்டு அரசு புகழ் ஞாலம்
முத்தி பெறு திருவாளன் நெல்துணையின் மிதவாமல் கல் துணையில் வரும் ஆதி
பத்து அரசு வசை தீர வைத்த கன தமிழ் மாலை பற்பலவும் அவை ஓத நல் பதிக நிதிதானே

#7
பதிகம் ஏழ் எழுநூறு பகரும் மா கவி யோகி பரசு நாவரசான பரம காரண ஈசன்
அதிகை மா நகர் மேவி அருளினால் அமண் மூடர் அவர் செய் வாதைகள் தீரும் அனகன் வார் கழல் சூடின்
நிதியர் ஆகுவர் சீர்மை உடையர் ஆகுவர் வாய்மை நெறியர் ஆகுவர் பாவம் வெறியர் ஆகுவர் சால
மதியர் ஆகுவர் ஈசன் அடியர் ஆகுவர் வானம் உடையர் ஆகுவர் பாரில் மனிதர் ஆனவர்தாமே

#8
தாமரை நகும் அகவிதழ் தகுவன சாய் பெறு சிறு தளிரினை அனையன
 சார்தரும் அடியவர் இடர் தடிவன தாயினும் நல கருணையை உடையன
தூ மதியினை ஒரு பது கொடு செய்த சோதியின் மிகு கதிரினை உடையன
 தூயன தவ முனிவர்கள் தொழுவன தோம் அறு குண நிலையின தலையின
ஓம் அரசினை மறைகளின் முடிவுகள் ஓலிடு பரிசொடு தொடர்வு அரியன
 ஓவு அறும் உணர்வொடு சிவ ஒளியன ஊறிய கசிவொடு கவிசெய்த புகழ்
ஆம் அரசு உயர் அகம் நெகுமவர் உளன் ஆர் அரசு அதிகையினன் அருள் அவன்
 ஆம் அரசு கொள் அரசு எனை வழி முழுது ஆள் அரசு-தன் அடி இணை மலர்களே

#9
அடி நாயைச் சிவிகைத் தவிசு ஏறித் திரிவித்து அறியாமைப் பசு தைச் சிறியோரில் செறியும்
கொடியேனுக்கு அருளைத் திருநாவுக்கரசைக் குண மேருத்-தனை விட்டு எனையா மொட்டு அகல்வின்
பிடியாரப் பெறுதற்கு அரிதாகச் சொலும் அப் பிண நூலைப் பெருகப் பொருளாகக் கருதும்
செடி காயத்து உறி கைச் சமண் மூடர்க்கு இழவுற்றது தேவர்க்கு அரிது அச் சிவலோகக் கதியே

#10
சிவ சம்பத்திடைத் தவம்செய்து திரியும் பத்தியில் சிறந்தவர்
 திலகன் கற்ற சிட்டன் வெந்து ஒளிர் திகழும் பைம் பொடித் தவண்டு அணி
கவசம் புக்கு வைத்து அரன் கழல் கருதும் சித்தன் இல் கவன்று இயல்
 கரணம் கட்டுதற்கு அடுத்து உள களகம் புக்க நல் கவந்தியன்
அவசம் புத்தியில் கசிந்து கொடு அழு கண்டசத்து வைத்து அளித்தனன்
 அனகன் குற்றம் அற்ற பண்டிதன் அரசு எங்கட்கு ஒர் பற்று உவந்து அறு
பவ சங்கைப் பதைப் பரஞ்சுடர் படிறு இன்றித் தனைத் தொடர்ந்தவர்
 பசு பந்தத்தினைப் பரிந்து அடு பரிசு ஒன்றப் பணிக்கும் நன்றுமே

#11
நன்றும் ஆதரம் நாவினுக்கரைசு அடி நளினம் வைத்து உயின் அல்லால்
ஒன்றும் ஆவது கண்டிலம் உபாயம் மற்று உள்ளன வேண்டோமால்
என்றும் ஆதியும் அந்தமும் இல்லதோர் இகபரத்திடைப் பட்டுப்
பொன்றுவார் புகும் சூழலில் புகேம் புகில் பொறியில் ஐம்புலனோடே
** பதினொன்றாந் திருமுறை முற்றுப் பெற்றது
*