<<முந்திய பக்கம்

திருமுறை பதினொன்று


திருமுறை பதினொன்று

** திருமுறை 11

&4 சேரமான்பெருமாள் நாயனார் 

@1 பொன்வண்ணத்து அந்தாதி

#1
பொன் வண்ணம் எவ் வண்ணம் அவ் வண்ணம் மேனி பொலிந்து இலங்கும்
மின் வண்ணம் எவ் வண்ணம் அவ் வண்ணம் வீழ் சடை வெள்ளிக் குன்றம்
தன் வண்ணம் எவ் வண்ணம் அவ் வண்ணம் மால் விடை-தன்னைக் கண்ட
என் வண்ணம் எவ் வண்ணம் அவ் வண்ணம் ஆகிய ஈசனுக்கே

#2
ஈசனைக் காணப் பலி கொடு செல்ல எற்றே இவள் ஓர்
பேயனைக் காமுறு பிச்சி-கொலாம் என்று பேதையர் முன்
தாய் எனை ஈர்ப்பத் தமியேன் தளர அத் தாழ்_சடையோன்
வா எனைப் புல்ல என்றான் இமை விண்டன வாள் கண்களே

#3
கண்கள் அங்கு அம்செய்யக் கை வளை சோரக் கலையும் செல்ல
ஒண் களம் கண் நுதல் வேர்ப்ப ஒண் கொன்றை அம் தார் உருவப்
பெண் களங்கம் இவள் பேதுறும் என்பது ஓர் பேதை நெஞ்சம்
பண்கள் அங்கம் இசை பாட நின்று ஆடும் பரமனையே

#4
பர மனையே பலி தேர்ந்து நஞ்சு உண்டது பல் மலர் சேர்
பிரமனையே சிரம் கொண்டும் கொடுப்பது பேரருளாம்
சர மனையே உடம்பு அட்டும் உடம்பொடு மாது இடமாம்
வர மனையே கிளை ஆகும் முக்கண் உடை மாதவனே

#5
தவனே உலகுக்குத் தானே முதல் தான் படைத்த எல்லாம்
சிவனே முழுதும் என்பார் சிவலோகம் பெறுவர் செய்ய
அவனே அடல் விடை ஊர்தி கடலிடை நஞ்சம் உண்ட
பவனே எனச் சொல்லுவாரும் பெறுவர் இப் பாரிடமே

#6
இடம் மால் வலம் தான் இடப்பால் துழாய் வலப்பால் ஒண் கொன்றை
வடம் மால் இடம் துகில் தோல் வலம் ஆழி இடம் வலம் மான்
இடமால் கரிதால் வலம் சேது இவனுக்கு எழில் நலம் சேர்
குடமால் இடம் வலம் கொக்கரையாம் எங்கள் கூத்தனுக்கே

#7
கூத்துக்-கொலாம் இவர் ஆடித் திரிவது கோல்_வளைகள்
பாத்துக்-கொலாம் பலி தேர்வது மேனி பவளம்-கொலாம்
ஏத்துக்-கொலாம் இவர் ஆதரிக்கின்றது இமையவர்-தம்
ஓத்துக்-கொலாம் இவர் கண்டது இண்டைச் சடை உத்தமரே

#8
உத்தமராய் அடியார் உலகு ஆளத் தமக்கு உரிய
மத்தம் அரா மதி மாடு அம்பு அதி நலம் சீர்மை குன்றா
எத்தமராயும் பணிகொள வல்ல இறைவர் வந்து என்
சித்தம் மராய் அகலாது உன் ஆடித் திரி தவரே

#9
திரி தவர் கண் உள்ளும் உள்ளத்தின் உள்ளும் திரிதரினும்
அரிது அவர் தன்மை அறிவிப்பது ஆயினும் ஆழி நஞ்சு ஏய்
கரிது அவர் கண்டம் வெளிது அவர் சாந்தம் கண் மூன்றொடு ஒன்றாம்
பரி தவர் தாமே அருள்செய்து கொள்வர் தம் பல் பணியே

#10
பணி பதம் பாடு இசை ஆடு இசையாகப் பனி மலரால்
அணி பதங்கன் பல் கொள் அப்பனை அத் தவற்கே அடிமை
துணி பதம் காமுறு தோலொடு நீறு உடல் தூர்த்து நல்ல
தணி பதம் காட்டிடும் சஞ்சலம் நீ என் தனி நெஞ்சமே

#11
நெஞ்சம் தளிர்விடக் கண்ணீர் அரும்ப முகம் மலர
அம் செம் கரதலம் கூம்ப அட்டாங்கம் அடிபணிந்து
தம் சொல் மலரால் அணிய வல்லோர்கட்குத் தாழ்_சடையான்
வஞ்சம் கடிந்து திருத்தி வைத்தான் பெரு வானகமே

#12
வானகம் ஆண்டு மந்தாகினி ஆடி நந்தாவனம் சூழ்
தேன் அக மா மலர் சூடிச் செல்வோரும் சிதவல் சுற்றிக்
கால் நகம் தேயத் திரிந்து இரப்போரும் கனக வண்ணப்
பால் நிற நீற்றற்கு அடியரும் அல்லாப் படிறருமே

#13
படிறு ஆயின சொல்லிப் பாழ் உடல் ஓம்பிப் பல கடைச் சென்று
இடறாது ஒழிதும் எழு நெஞ்சமே எரி_ஆடி எம்மான்
கடல் தாயின நஞ்சம் உண்ட பிரான் கழல் சேர்தல் கண்டாய்
உடல்தான் உள பயன் ஆவ சொன்னேன் இவ் உலகினுள்ளே

#14
உலகு ஆளுறுவீர் தொழு-மின் விண் ஆள்வீர் பணி-மின் நித்தம்
பல காமுறுவீர் நினை-மின் பரமனொடு ஒன்றலுற்றீர்
நல கா மலரால் அருச்சி-மின் நாள் நரகத்து நிற்கும்
அல காமுறுவீர் அரன் அடியாரை அலை-மின்களே

#15
அலை ஆர் புனல் அனல் ஞாயிறு அவனி மதியம் விண் கால்
தொலையா உயிர் உடம்பு ஆகிய சோதியைத் தொக்கு-மினோ
தலையால் சுமந்தும் தடித்தும் கொடித் தேர் அரக்கன் என்னே
கலையான் ஒரு விரல் தாங்ககில்லான் விட்ட காரணமே

#16
காரணன் காமரம் பாட ஓர் காமர் அம்பு ஊடுறத் தன்
தார் அணங்காகத் தளர்கின்ற தையலைத் தாங்குவார் யார்
போர் அணி வேல் கண் புனல் படம் போர்த்தன பூம் சுணங்கு ஆர்
ஏர் அணி கொங்கையும் பொன் படம் மூடி இருந்தனவே

#17
இரும் தனம் எய்தியும் நின்றும் திரிந்தும் கிடந்து அலைந்தும்
வருந்திய வாழ்க்கை தவிர்த்திடு போக நெஞ்சே மடவாள்
பொருந்திய பாகத்துப் புண்ணியன் புண் இயல் சூலத்து எம்மான்
திருந்திய போது அவன் தானே களையும் நம் தீவினையே

#18
தீவினையேனை நின்று ஐவர் இராப்பகல் செத்தித் தின்ன
மேவின வாழ்க்கை வெறுத்தேன் வெறுத்து விட்டேன் வினையும்
ஓவினது உள்ளம் தெளிந்தது கள்ளம் கடிந்து அடைந்தேன்
பாவின செம் சடை முக்கணன் ஆரணன் பாதங்களே

#19
பாதம் புவனி சுடர் நயனம் பவனம் உயிர்ப்பு ஓங்கு
ஓதம் உடுக்கை உயர் வான் முடி விசும்பே உடம்பு
வேதம் முகம் திசை தோள் மிகு பல் மொழி கீதம் என்ன
போதம் இவற்கு ஓர் மணி நிறம் தோற்பது பூங்கொடியே

#20
கொடி மேல் இடபமும் கோவணக் கீளும் ஓர் கொக்கு இறகும்
அடி மேல் கழலும் அகலத்தின் நீறும் ஐ வாய் அரவும்
முடி மேல் மதியும் முருகு அலர் கொன்றையும் மூ இலைய
வடி வேல் வடிவும் என் கண்ணுள் எப்போதும் வருகின்றவே

#21
வருகின்ற மூப்பொடு தீப் பிணிக் கூற்றம் வைகற்குவைகல்
பொருகின்ற போர்க்கு ஒன்றும் ஆற்றகில்லேன் பொடி பூசி வந்து உன்
அருகு ஒன்றி நிற்க அருளு கண்டாய் அழல் வாய் அரவம்
வெரு கொன்ற வெண் மதி செம் சடை மேல் வைத்த வேதியனே

#22
வேதியன் பாதம் பணிந்தேன் பணிந்து மெய்ஞ்ஞானம் என்னும்
சோதி என்-பால் கொள்ள உற்று நின்றேற்கு இன்று-தொட்டு இதுதான்
நீதி என்றான் செல்வம் ஆவது என்றேன் மேல் நினைப்பு வண்டு ஏர்
ஓதி நின் போல் வகைத்தே இரு-பாலும் ஒழித்ததுவே

#23
ஒழித்தேன் பிறவியை ஊர்ந்தேன் அறுபகை ஓங்கிற்று உள்ளம்
இழித்தேன் உடம்பினை ஏலேன் பிறரிடை இ மனையும்
பழித்தேன் பழியே விளைக்கும் பஞ்சேந்தியக் குஞ்சரமும்
தெழித்தேன் சிவன் அடி சேர்ந்தேன் இனி மிகத் தெள்ளியனே

#24
தெள்ளிய மாந்தரைச் சேர்ந்திலன் தீம் கவி பாடலுற்றேன்
ஒள்ளிய சொல்லும் பொருளும் பெறேன் உரைத்தார் உரைத்த
கள்ளிய புக்கால் கவிகள் ஒட்டார் கடல் நஞ்சு அயின்றாய்
கொள்ளிய அல்ல கண்டாய் புன்சொல் ஆயினும் கொண்டு அருளே

#25
அருளால் வரு நஞ்சம் உண்டும் நின்றாயை அமரர் குழாம்
பொருள் ஆர் கவி சொல்ல யானும் புன்சொற்கள் புணர்க்கலுற்றேன்
இருள் ஆசு அற எழில் மா மதி தோன்றவும் ஏன்றது என்ன
வெருளாது எதிர் சென்று மின்மினி தானும் விரிகின்றதே

#26
விரிகின்ற ஞாயிறு போன்ற மேனி அ ஞாயிறு சூழ்ந்து
எரிகின்ற வெம் கதிர் ஒத்தது செம் சடை அச் சடைக் கீழ்ச்
சரிகின்ற கார் இருள் போன்றது கண்டம் கார் இருள் கீழ்ப்
புரிகின்ற வெண் முகில் போன்று உளதால் எந்தை ஒண் பொடியே

#27
பொடிக்கின்றில முலை போந்தில பல் சொல் பொருள் தெரியா
முடிக்கின்றில குழல் ஆயினும் கேண்-மின்கள் மூரி வெள்ளம்
குடிக்கொண்ட செம் சடைக் கொண்டல் அம் கண்டன் மெய்க் கொண்டு அணிந்த
கடிக் கொன்றை நாறுகின்றாள் அறியேன் பிறர் கட்டுரையே

#28
உரை வளர் நான்மறை ஓதி உலகம் எலாம் திரியும்
விரை வளர் கொன்றை மருவிய மார்பன் விரி சடை மேல்
திரை வளர் கங்கை நுரை வளர் தீர்த்தம் செறியச்செய்த
கரை வளர்வு ஒத்துளதால் சிர மாலை எம் கண்டனுக்கே

#29
கண்டம் கரியன் கரி ஈர் உரியன் விரி தரு சீர்
அண்டம் கடந்த பெருமான் சிறு மான் தரித்த பிரான்
பண்டன் பரமசிவன் ஓர் பிரமன் சிரம் அரிந்த
புண் தங்கு அயிலன் பயில் ஆர மார்பன் எம் புண்ணியனே

#30
புண்ணியன் புண் இயல் வேல் ஐயன் வேலைய நஞ்சன் அங்கக்
கண்ணியன் கண் இயல் நெற்றியன் காரணன் கார் இயங்கும்
விண்ணியன் விண் இயல் பாணியன் பாணி கொள உமையாள்
பண்ணியன் பண்ணியல் பாடலன் ஆடல் பசு பதியே

#31
பதியார் பலிக்கென்று வந்தார் ஒருவர்க்குப் பாவை நல்லீர்
கதி ஆர் விடை உண்டு கண் மூன்று உள கறைக் கண்டம் உண்டு
கொதி ஆர் மழு உண்டு கொக்கரை உண்டு இறை கூத்தும் உண்டு
மதி ஆர் சடை உள மால் உளது ஈவது மங்கையர்க்கே

#32
மங்கை கொங்கைத் தடத்து இங்கும் அக் குங்குமப் பங்கம் நுங்கி
அங்கம் எங்கும் நெகச் சங்கம் அம் கைத்தலத்தும் கவர்வான்
கங்கை நங்கைத் திரைப் பொங்கு செம் கண் அரவங்கள் பொங்கிப்
பங்கி தங்கும் மலர்த் திங்கள் தங்கும் முடிப் பண்டங்கனே

#33
பண்டங்கன் வந்து பலி தா என்றான் பகலோற்கு இடு என்றேன்
அண்டம் கடந்தவன் அன்னம் என்றான் அயன் ஊர்தி என்றேன்
கொண்டு இங்கு உன் ஐயம் பெய் என்றான் கொடித் தேர் அனங்கன் என்றேன்
உண்டு இங்கு அமைந்தது என்றாற்கு அது சொல்ல உணர்வுற்றதே

#34
உற்ற அடியார் உலகு ஆள ஓர் ஊணும் உறக்கும் இன்றிப்
பெற்றம் அதாவது என்று ஏறும் பிரான் பெரு வேல் நெடும் கண்
சிற்றடி யாய் வெண் பல் செவ் வாய் இவள் சிர மாலைக்கு என்றும்
இற்ற இடை ஆம்படியாக என்னுக்கு மெலிக்கின்றதே

#35
மெலிக்கின்ற வெம் தீ வெயில்-வாய் இழுது அழல்-வாய் மெழுகு
தலிக்கின்ற காமம் கரதலம் மெல்லிது உறக்கம் வெம் கூற்று
ஒலிக்கின்ற நீர் உறு தீ ஒளியார் முக்கண் அத்தர் மிக்க
பலிக்கென்று வந்தார் கடிக் கொன்றை சூடிய பல் உயிரே

#36
பல் உயிர் பாகம் உடல் தலை தோல் பகலோன் மறல் பெண்
வில்லி ஓர் வேதியன் வேழம் நிரையே பறித்து உதைத்துப்
புல்லியும் சுட்டும் அறுத்தும் உரித்தும் கொண்டான் புகழே
சொல்லியும் பாடியும் ஏத்தக் கெடும் நங்கள் சூழ் துயரே

#37
துயரும் தொழும் அழும் சோரும் துகிலும் கலையும் செல்லப்
பெயரும் பிதற்றும் நகும் வெய்துயிர்க்கும் பெரும் பிணி கூர்ந்து
அயரும் அமர் விக்கும் மூரிநிமிர்க்கும் அந்தோ இங்ஙனே
மயரும் மறைக்காட்டு இறையினுக்கு ஆட்பட்ட வாள்_நுதலே

#38
வாள்_நுதற்கு எண்ணம் நன்றன்று வளர் சடை எந்தை வந்தால்
நாணுதற்கு எண்ணாள் பலி கொடு சென்று நகும் நயந்து
பேணுதற்கு எண்ணும் பிரமன் திருமால் அவர்க்கு அரிய
தாணுவுக்கு என்னோ இராப்பகல் நைந்து இவள் தாழ்கின்றதே

#39
தாழும் சடை சடை மேலது கங்கை அக் கங்கை நங்கை
வாழும் சடை சடை மேலது திங்கள் அத் திங்கள் பிள்ளை
போழும் சடை  சடை மேலது பொங்கு அரவு அவ் அரவம்
வாழும் சடை சடை மேலது கொன்றை எம் மா முனிக்கே

#40
முனியே முருகு அலர் கொன்றையினாய் என்னை மூப்பு ஒழித்த
கனியே கழல் அடி அல்லால் களைகண் மற்று ஒன்றும் இலேன்
இனியேல் இரும் தவம் செய்யேன் திருந்த அஞ்சே நினைந்து
தனியேன் படுகின்ற சங்கடம் ஆர்க்கு இனிச் சாற்றுவனே

#41
சாற்றுவன் கோயில் தலையும் மனமும் தவம் இவற்றால்
ஆற்றுவன் அன்பு எனும் நெய் சொரிந்து ஆற்றி அம் சொல் மலரால்
ஏற்றுவன் ஈசன் வந்து என் மனத்தான் என்று எழுந்து அலரே
தூற்றுவன் தோத்திரம் ஆயினவே இனிச் சொல்லுவனே

#42
சொல்லாதன கொழு நா அல்ல சோதியுள் சோதி-தன் பேர்
செல்லாச் செவி மரம் தேறித் தொழாத கை மண் திணிந்த
கல்லாம் நினையா மனம் வணங்காத் தலையும் பொறையும்
அல்லா அவயவம் தானும் மனிதர்க்கு அசேதனமே

#43
தனக் குன்றம் மா வையம் சங்கரன்-தன் அருள் அன்றிப் பெற்றால்
மனக்கு என்றும் நஞ்சின் கடையா நினைவன் மது விரியும்
புனக் கொன்றையான் அருளால் புழு ஆகிப் பிறந்திடினும்
எனக்கு என்றும் வானவர் பொன்னுலகோடு ஒக்க எண்ணுவனே

#44
எண்ணம் இறையே பிழைக்கும்-கொலாம் இமையோர் இறைஞ்சும்
தண் அம் பிறை சடைச் சங்கரன் சங்கக் குழையன் வந்து என்
உள் நன்கு உறைவது அறிந்தும் ஒளி மா நிறம் கவர்வான்
கண்ணும் உறங்காது இராப்பகல் எய்கின்ற காமனுக்கே

#45
காமனை முன் செற்றது என்றாள் அவள் இவள் காலன் என்னும்
தாம நல் மார்பனை முன் செற்றது என்று தன் கையெறிந்தாள்
நாம் முனம் செற்றது அன்று ஆரை என்றேற்கு இருவர்க்கும் அஞ்சி
ஆம் எனக்கிற்றிலர் அன்று எனக்கிற்றிலர் அந்தணரே

#46
அந்தணராம் இவர் ஆர் ஊர் உறைவது என்றேன் அதுவே
சந்து அணை தோளி என்றார் தலையாய சலவர் என்றேன்
பந்து அணை கையாய் அதுவும் உண்டு என்றார் உமை அறியக்
கொந்து அணை தாரீர் உரை-மின் என்றேன் துடி கொட்டினரே

#47
கொட்டும் சில பல சூழ நின்று ஆர்க்கும் குப்புற்று எழுந்து
நட்டம் அறியும் கிரீடிக்கும் பாடும் நகும் வெருட்டும்
வட்டம் வரும் அருஞ்சாரணை செல்லும் மலர் தயங்கும்
புள் தங்கு இரும் பொழில் சூழ் மறைக்காட்டான் பூதங்களே

#48
பூதப் படை உடைப் புண்ணியரே புறஞ்சொற்கள் நும் மேல்
ஏதப்பட எழுகின்றனவால் இளையாளொடு உம்மைக்
காதல்படுப்பான் கணை தொட்ட காமனைக் கண் மலரால்
சேதப்படுத்திட்ட காரணம் நீர் இறை செப்பு-மினே

#49
செப்பு அன கொங்கைக்குத் தே மலர்க் கொன்றை நிறம் பணித்தான்
மைப் புரை கண்ணுக்கு வார் புனல் கங்கை வைத்தான் மனத்துக்கு
ஒப்பன இல்லா ஒளி கிளர் உன்மத்தமும் அமைத்தான்
அப்பனை அம்மனை நீ என் பெறாது நின்று ஆர்க்கின்றதே

#50
ஆர்க்கின்ற நீரும் அனலும் மதியும் ஐ வாய் அரவும்
ஓர்க்கின்ற யோகும் உமையும் உருவும் அருவும் வென்றி
பார்க்கின்ற வேங்கையும் மானும் பகலும் இரவும் எல்லாம்
கார்க் கொன்றை மாலையினார்க்கு உடன் ஆகிக் கலந்தனவே

#51
கலம் தனக்கு என்பு அலர் கட்டு அவிழ் வார் கொன்றை கச்சு அரவு ஆர்
சலம் தனக்கு அண்ணிய கானகம் ஆடி ஓர் சாண் அகமும்
நிலம் தனக்கு இல்லா அகதியன் ஆகிய நீல கண்டத்து
அலந்தலைக்கு என்னே அலந்தலை ஆகி அழிகின்றதே

#52
அழிகின்றது ஆருயிர் ஆகின்றது ஆகுலம் ஏறிடும் மால்
இழிகின்ற சங்கம் இருந்த முலை மேல் கிடந்தன பீர்
பொழிகின்ற கண்ணீர் புலர்ந்தது வாய்  கலை போன வந்தார்
மொழிகின்றது என் இனி நான்மறை முக்கண் முறைவனுக்கே

#53
முறைவனை மூப்புக்கும் நான்மறைக்கும் முதல் ஏழ் கடல் அம்
துறைவனைச் சூழ் கயிலாயச் சிலம்பனைத் தொன்மை குன்றா
இறைவனை எண் குணத்து ஈசனை ஏத்தினர் சித்தம்-தம்பால்
உறைவனைப் பாம்பனை யாம் பின்னை என் சொல்லி ஓதுவதே

#54
ஓது அவன் நாமம் உரை அவன் பல் குணம் உன்னை விட்டேன்
போது அவன் பின்னே பொருந்து அவன் வாழ்க்கை திருந்தச் சென்று
மா தவம் ஆகிடு மா தவமா வளர் புன் சடையான்
யாது அவன் சொன்னான் அது கொண்டு ஒழி இனி ஆரணங்கே

#55
ஆரணங்கின் முகம் ஐங்கணையான் அகம் அவ் அகத்தில்
தோரணம் தோள் அவன் தேர் அகல் அல்குல் தொன்மைக்-கண் வந்த
பூரண கும்பம் முலை இவை காணப் புரி சடை எம்
காரணன் தாள் தொழும் அன்போ பகையோ கருதியதே

#56
கருதியது ஒன்று இல்லை ஆயினும் கேள்-மின்கள் காரிகையாள்
ஒரு தினமும் உளள் ஆக ஒட்டாது ஒடுங்கார் ஒடுங்கப்
பொருத நன் மால் விடைப் புண்ணியன் பொங்கு இளம் கொன்றை இன்னே
தருதிர் நன்றாயிடும் தாராவிடில் கொல்லும் தாழ் இருளே

#57
இருள் ஆர் மிடற்றால் இராப் பகல் தன்னால் வரை மரையால்
பொருள் ஆர் கமழ் கொன்றையால் முல்லை புற்று அரவு ஆடுதலால்
தெருள் ஆர் மதி விசும்பால் பௌவம் தெள் புனல் தாங்குதலால்
அருளால் பலபல வண்ணமுமா அரன் ஆயினனே

#58
ஆயின அந்தணர் வாய்மை அரைக் கலை கை வளைகள்
போயின வாள் நிகர் கண் உறு மை நீர் முலையிடையே
பாயின வேள் கைக் கர பத்திரத்துக்குச் சூத்திரம் போல்
ஆயின பல் சடையார்க்கு அன்பு பட்ட எம் ஆய்_இழைக்கே

#59
இழை ஆர் வன முலை வீங்கி இடை இறுகின்றது இற்றால்
பிழையாள் நமக்கு இவை கட்டுண்க என்பது பேச்சுக்-கொலாம்
கழை ஆர் கழுக்குன்றவாணனைக் கண்டனைக் காதலித்தாள்
குழை ஆர் செவியொடு கோலக் கயல் கண்கள் கூடியவே

#60
கூடிய தன்னிடத்தான் உமையாள் இடத்தானை ஐயாறு
ஈடிய பல் சடை மேற்று எரி வண்ணம் எனப் பணி-மின்
பாடிய நான்மறை பாய்ந்து கூற்றைப் படர் புரம் சுட்டு
ஆடிய நீறு செம் சாந்து இவை யாம் எம் அயன் எனவே

#61
அயமே பலி இங்கு மாடு உள தாணு ஓர் குக்கிக்கு இடப்
பயமே மொழியும் பசு பதி ஏறு எம்மைப் பாய்ந்திடுமால்
புயம் ஏய் குழலியர் புண்ணியர் போ-மின் இரத்தல் பொல்லா
நயமே மொழியினும் நக்காம் அமா உம்மை நாணுதுமே

#62
நாணா நடக்க நலத்தார்க்கு இடை இல்லை நாம் எழுக
ஏண் ஆர் இரும் தமிழால் மறவேன் உம் நினை-மின் என்றும்
பூண் ஆர் முலையீர் நிருத்தன் புரி சடை எந்தை வந்தால்
காணா விடேன் கண்டு இரவாது ஒழியேன் கடி மலரே

#63
கடி மலர்க் கொன்றை தரினும் புல்லேன் கலை சாரல் ஒட்டேன்
முடி மலர் தீண்டின் முனிவன் முலை தொடுமேல் கெடுவன்
அடி மலர் வானவர் ஏத்த நின்றாய்க்கு அழகு அல்ல என்பேன்
தொடி மலர்த் தோள் தொடுமேல் திருவாணை தொடங்குவனே

#64
தொடங்கிய வாழ்க்கையை வாளா துறப்பர் துறந்தவரே
அடங்கிய வேட்கை அரன்-பால் இலர் அறுகால்பறவை
முடங்கிய செம் சடை முக்கணனார்க்கு அன்றி இங்கும் அன்றிக்
கிடங்கு இன்றி பட்ட கரா அனையார் பல கேவலரே

#65
வலம்தான் கழல் இடம் பாடகம் பாம்பு வலம் இடமே
கலம்தான் வலம் நீறு இடம் சாந்து எரி வலம் பந்து இடம் என்பு
அலம் தார் வலம் இடம் ஆடகம் வேல் வலம் ஆழி இடம்
சலம் தாழ் சடை வலம் தண் அம் குழல் இடம் சங்கரற்கே

#66
சங்கரன் சங்கக் குழையன் சரணாரவிந்தம்-தன்னை
அம் கரம் கூப்பித் தொழுது ஆட்படு-மின் தொண்டீர் நமனார்
கிங்கரர் தாம் செய்யும் கீழாயின மிறை கேட்டலுமே
இங்கரம் ஆயிரம் ஈர என் நெஞ்சம் எரிகின்றதே

#67
எரிகின்ற தீ ஒத்து உள சடை ஈசற்கு அத் தீக்கு இமையோர்
சொரிகின்ற பாற்கடல் போன்றது சூழ் புனல் அப் புனலில்
சரிகின்ற திங்கள் ஓர் தோணி ஒக்கின்றது அத் தோணி உய்ப்பான்
தெரிகின்ற திண் கழை போன்று உளதால் அத் திறல் அரவே

#68
அரவம் உயிர்ப்ப அழலும் அம் கங்கை வளாய்க் குளிரும்
குரவம் குழல் உமை ஊடற்கு நைந்து உருகும் அடைந்தார்
பரவும் புகழ் அண்ணல் தீண்டலும் பார் வான் அவை விளக்கும்
விரவும் இடர் இன்பம் எம் இறை சூடிய வெண் பிறையே

#69
பிறைத் துண்டம் சூடல் உற்றோ பிச்சை கொண்டு அனல் ஆடல் உற்றோ
மறைக் கண்டம் பாடல் உற்றோ என்பும் நீறும் மருவல் உற்றோ
கறைக் கண்டம் புல்லல் உற்றோ கடு வாய் அரவு ஆடல் உற்றோ
குறைக்கொண்டு இவள் அரன் பின் செல்வது என்னுக்குக் கூறு-மினே

#70
கூறு-மின் ஈசனைச் செய்ம்-மின் குற்றேவல் குளிர்-மின் கண்கள்
தேறு-மின் சித்தம் தெளி-மின் சிவனைச் செறு-மின் செற்றம்
ஆறு-மின் வேட்கை அறு-மின் அவலம் இவை நெறியா
ஏறு-மின் வானத்து இரு-மின் விருந்தாய் இமையவர்க்கே

#71
இமையோர் கொணர்ந்து இங்கு இழித்திட நீர்மை கெட்டு ஏந்தல் பின் போய்
அமையா நெறிச் சென்று ஓர் ஆழ்ந்த சலமகளா அணைந்தே
எமை ஆளுடையான் தலைமகளா அங்கு இருப்ப என்னே
உமையாளவள் கீழ் உறைவிடம் பெற்றோ உறைகின்றதே

#72
உறைகின்றனர் ஐவர் ஒன்பது வாயில் ஓர் மூன்று உளவால்
மறைகின்ற என்பு நரம்போடு இறைச்சி உதிரம் மச்சை
பறைகின்ற தோல் போர் குரம்பை பயன் இல்லை போய் அடை-மின்
அறைகின்ற தெள் புனல் செம் சடைக் கொண்டோன் மலர் அடிக்கே

#73
அடிக் கண்ணி கைதொழுதார்க்கு அகல் ஞாலம் கொடுத்து அடி நாய்
வடிக் கண்ணி நின்னைத் தொழ வளை கொண்டனை வண்டு உண் கொன்றைக்
கடிக் கண்ணியாய் எமக்கு ஓர் ஊர் இரண்டு அகம் காட்டினையால்
கொடிக் கண்ணி மேல் நல்ல கொல் ஏறு உயர்த்த குணக் குன்றமே

#74
குன்று_எடுத்தான் செவி கண் வாய் சிரங்கள் நெரிந்து அலற
அன்று அடர்த்து அற்று உகச் செற்றவன் அற்றவர்க்கு அற்ற சிவன்
மன்றிடைத் தோன்றிய நெல்லிக்கனி நிற்ப மானுடர் போய்
ஒன்று எடுத்து ஓதிப் புகுவர் நரகத்து உறு குழியே

#75
குழி கண் கொடு நடைக் கூன் பல் கவட்டு அடி நெட்டு இடை ஊன்
உழுவைத் தழை செவித் தோல் முலைச் சூறை மயிர்ப் பகு வாய்த்
தெழி கட்டு இரை குரல் தேம்பல் வயிற்றுத் திருக்கு விரல்
கழுதுக்கு உறைவிடம் போல் கண்டன் ஆடும் கடி அரங்கே

#76
அரம் கா மணி அன்றில் தென்றல் ஓர் கூற்றம் மதியம் அம் தீச்
சரம் காமன் எய் அஞ்சு சந்து உட்பகையால் இவள் தளர்ந்தாள்
இரங்கா மனத்தவர் இல்லை இரங்கான் இமையவர்-தம்
சிரம் காமுறுவான் எலும்பு கொள்வான் என்றன் தே_மொழிக்கே

#77
மொழியக் கண்டான் பழி மூளக் கண்டான் பிணி முன்கைச் சங்கம்
அழியக் கண்டான் அன்றில் ஈரக் கண்டான் தென்றல் என் உயிர் மேல்
சுழியக் கண்டான் துயர் கூரக் கண்டான் துகில் சூழ் கலையும்
கழியக் கண்டான் தில்லைக் கண்_நுதலான் கண்ட கள்ளங்களே

#78
கள்ள வளாகம் கடிந்து அடிமைப்படக் கற்றவர்-தம்
உள்ள வளாகத்து உறுகின்ற உத்தமன் நீள் முடி மேல்
வெள்ள வளாகத்து வெண் நுரை சூடி வியன் பிறையைக்
கொள்ள வளாய்கின்ற பாம்பு ஒன்று உளது குறிக்கொள்-மினே

#79
குறிக்கொண்டு இவள் பெய்த கோல் வளையே வந்து கோள் இழைத்தீர்
வெறிக் கொண்ட வெள்ளில் அம் போதோ எலும்போ விரி சடை மேல்
உறைக் கொன்றையோ உடைத் தோலோ பொடியோ உடை கலனோ
கறைக் கண்டரே நுமக்கு என்னோ சிறுமி கடவியதே

#80
கடவியது ஒன்று இல்லை ஆயினும் கேள்-மின்கள் காரிகையாள்
மடவியவாறு கண்டாம் பிறை வார் சடை எந்தை வந்தாற்கு
இடவிய நெஞ்சம் இடம் கொடுத்தாட்கு அவலம் கொடுத்தான்
தடவிய கொம்பு அதன் தாள் மேல் இருந்து தறிக்குறுமே

#81
தறித்தாய் அயன் தலை சாய்த்தாய் சலந்தரனைத் தழலாப்
பொறித்தாய் அனங்கனைச் சுட்டாய் புரம் புனலும் சடை மேல்
செறித்தாய்க்கு இவை புகழ் ஆகின்ற கண்டு இவள் சில் வளையும்
பறித்தாய்க்கு இது பழி ஆகும்-கொலாம் என்று பாவிப்பனே

#82
பாவிக்கும் பண்டையள் அல்லள் பரிசு அறியாள் சிறுமி
ஆவிக்கும் குற்குலு நாறும் அகம் நெக அங்கம் எங்கும்
காவிக் கண் சோரும் பொச்சாப்பும் கறை மிடற்றானைக் கண்ணில்
தாவிக்கும் வெண் நகையாள் அம் மெல்_ஓதிக்குச் சந்தித்தவே

#83
சந்தித்த கூற்றுக்குக் கூற்றாம் பிணிக்குத் தனி மருந்தாம்
சிந்திக்கில் சிந்தாமணி ஆகித் தித்தித்து அமுதமும் ஆம்
வந்திக்கில் வந்து என்னை மால்செய்யும் வானோர் வணங்க நின்ற
அந்திக்-கண் ஆடியினான் அடியார்களுக்கு ஆவனவே

#84
ஆவன யாரே அழிக்க வல்லார் அமையா உலகில்
போவன யாரே பொதியகிற்பார் புரம் மூன்று எரித்த
தேவனைத் தில்லைச் சிவனைத் திருந்து அடி கைதொழுது
தீவினையேன் இழந்தேன் கலையோடு செறி வளையே

#85
செறி வளையாய் நீ விரையல் குல நலம் கல்வி மெய்யாம்
இறையவன் தாமரைச் சேவடிப் போது என்று எல்லோரும் ஏத்தும்
நிறை உடை நெஞ்சு இது வேண்டிற்று வேண்டிய நீசர்-தம்பால்
கறை வளர் கண்டனைக் காணப் பெரிதும் கலங்கியதே

#86
கலங்கின மால் கடல் வீழ்ந்தன கார் வரை ஆழ்ந்தது மண்
மலங்கின நாகம் மருண்டன பல் கணம் வானம் கைபோய்
இலங்கின மின்னொடு நீண்ட சடை இமையோர் அவிந்தார்
அலங்கல் நல் மா நடம் ஆர்க்கு இனி ஆடுவது எம் இறையே

#87
எம் இறைவன் இமையோர் தலைவன் உமையாள் கணவன்
மும்முறையாலும் வணங்கப்படுகின்ற முக்கண் நக்கற்கு
எம்முறையாள் இவள் என் பிழைத்தாட்கு இறை என் பிழைத்தான்
இம் முறையாலே கவரக் கருதிற்று எழில் கலையே

#88
கலை தலைச் சூலம் மழுக் கனல் கண்டை கட்டங்கம் கொடி
சிலை இவை ஏந்திய எண் தோள் சிவற்கு மனம் சொல் செய்கை
நிலை பிழையாது குற்றேவல் செய்தார் நின்ற மேரு என்னும்
மலை பிழையார் என்பரால் அறிந்தோர் இந்த மா நிலத்தே

#89
மாநிலத்தோர்கட்குத் தேவர் அனைய அத் தேவர் எல்லாம்
ஆ நலத்தால் தொழும் அம் சடை ஈசன் அவன் பெருமை
தேன் அலர்த் தாமரையோன் திருமால் அவர் தேர்ந்து உணரார்
பா நலத்தால் கவி யாம் எங்ஙனே இனிப் பாடுவதே

#90
பாடிய வண்டு உறை கொன்றையினான் படப் பாம்பு உயிர்ப்ப
ஓடிய தீயால் உருகிய திங்களின் ஊறல் ஒத்தது
ஆடிய நீறு அது கங்கையும் தெள் நீர் யமுனையுமே
கூடிய கோப்பு ஒத்ததால் உமை பாகம் எம் கொற்றவற்கே

#91
கொற்றவனே என்றும் கோவணத்தாய் என்றும் ஆவணத்தால்
நல் தவனே என்றும் நஞ்சு உண்டி என்றும் அஞ்சு அமைக்கப்
பெற்றவனே என்றும் பிஞ்ஞகனே என்றும் மன்மதனைச்
செற்றவனே என்றும் நாளும் பரவும் என் சிந்தனையே

#92
சிந்தனைசெய்ய மனம் அமைத்தேன் செப்ப நா அமைத்தேன்
வந்தனைசெய்யத் தலை அமைத்தேன் கைதொழ அமைத்தேன்
பந்தனைசெய்வதற்கு அன்பு அமைத்தேன் மெய் அரும்ப வைத்தேன்
வெந்த வெண் நீறு அணி ஈசற்கு இவை யான் விதித்தனவே

#93
விதித்தன வாழ்நாள் பெரும் பிணி விச்சைகள் கொண்டு பண்டே
கொதிப்பினில் ஒன்றும் குறைவு இல்லை குங்குமக் குன்று அனைய
பதித் தனம் கண்டனம் குன்றம் வெண் சந்தனம் பட்டு அனைய
மதித்தனம் கண்டனம் நெஞ்சு இனி என் செய்யும் வஞ்சனையே

#94
வஞ்சனையாலே வரி வளை கொண்டு உள்ள மால் பனிப்பத்
துஞ்சும் பொழுதும் உறத் தொழுதேன் சொரி மால் அருவி
அஞ்சன மால் வரை வெண் பிறை கவ்வி அண்ணாந்து அனைய
வெம் சின ஆனையின் ஈர் உரி மூடிய வீரனையே

#95
வீரன் அயன் அரி வெற்பு அலர் நீர் எரி பொன் எழில் ஆர்
கார் ஒண் கடுக்கை கமலம் துழாய் விடை தொல் பறவை
பேர் ஒண் பதி நிறம் தார் இவர் ஊர்தி வெவ்வேறு என்பரால்
ஆரும் அறியா வகை எங்கள் ஈசர் பரிசுகளே

#96
பரியாதன வந்த பாவமும் பற்றும் மற்றும் பணிந்தார்க்கு
உரியான் எனச் சொல்லி உன்னுடன் ஆவன் என அடியார்க்கு
அரியான் இவன் என்று காட்டுவன் என்றென்று இவையிவையே
பிரியாது உறையும் சடையான் அடிக்கு என்றும் பேசுதுமே

#97
பேசுவது எல்லாம் அரன் திருநாமம் அப் பேதை நல்லாள்
காய் சின வேட்கை அரன்பாலது அறுகால்பறவை
மூசின கொன்றை முடி மேலது முலை மேல் முயங்கப்
பூசின சாந்தம் தொழுமால் இவை ஒன்றும் பொய் அலவே

#98
பொய்யா நரகம் புகினும் துறக்கம் புகினும் புக்கு இங்கு
உய்யா உடம்பினோடு ஊர்வ நடப்ப பறப்ப என்று
நையா விளியினும் நானிலம் ஆளினும் நான்மறை சேர்
மை ஆர் மிடற்றான் அடி மறவா வரம் வேண்டுவனே

#99
வேண்டிய நாள்களில் பாதியும் கங்குல் மிக அவற்றுள்
ஈண்டிய வெம் நோய் முதலது பிள்ளைமை மேலது மூப்பு
ஆண்டின அச்சம் வெகுளி அவா அழுக்காறு இங்ஙனே
மாண்டன சேர்தும் வளர் புன் சடை முக்கண் மாயனையே

#100
மாயன் நல் மா மணி கண்டன் வளர் சடையாற்கு அடிமை
ஆயின தொண்டர் துறக்கம் பெறுவது சொல் உடைத்தே
காய் சின ஆனை வளரும் கனக மலை அருகே
போயின காக்கையும் அன்றே படைத்தது பொன் வண்ணமே

#101
அன்று வெள்ளானையின் மீது இமையோர் சுற்று அணுகுறச் செல்
வன் தொண்டர் பின் பரி மேல் கொண்டு வெள்ளிமலை அரன் முன்
சென்று எழில் ஆதி உலா அரங்கேற்றிய சேரர்பிரான்
மன்றிடை ஓது பொன்வண்ணத்துஅந்தாதி வழங்கிதுவே

@2 திருவாரூர் மும்மணிக்கோவை

#1 நேரிசையாசிரியப்பா
விரி கடல் பருகி அளறுபட்டு அன்ன
கரு நிற மேகம் கல் முகடு ஏறி
நுண் துளி பொழிய நோக்கி ஒண் தொடி
பொலன் குழை மின்னப் புருவ வில் இட்டு
இலங்கு எழில் செவ் வாய்க் கோபம் ஊர்தரக்		5
கைத்தலம் என்னும் காந்தள் மலர
முத்து இலங்கு எயிறு எனும் முல்லை அரும்பக்
குழலும் சுணங்கும் கொன்றை காட்ட
எழில் உடைச் சாயல் இள மயில் படைப்ப
உள் நிறை உயிர்ப்பு எனும் ஊதை ஊர்தரக்		10
கண்ணீர்ப் பெரு மழை பொழிதலின் ஒண் நிறத்து
அஞ்சனக் கொழும் சேறு அலம்பி எஞ்சா
மணியும் பொன்னும் மாசறு வயிரமும்
அணி கிளர் அகிலும் ஆரமும் உரிஞ்சிக்
கொங்கை என்னும் குவட்டிடை இழிதரப்		15
பொங்கு புயல் காட்டியோளே கங்கை
வரு விசை தவிர்த்த வார் சடைக் கடவுள்
அரிவை பாகத்து அண்ணல் ஆரூர்
எல்லையில் இரும் பலி சொரியும்
கல்லோ சென்ற காதலர் மனமே			20

#2
மனம் மால் உறாதே மற்று என் செய்யும் வாய்ந்த
கனம் மால் விடை உடையான் கண்டத்து இனம் ஆகித்
தோன்றின கார் தோன்றில தேர் சோர்ந்தன சங்கு ஊர்ந்தன பீர்
கான்றன நீர் ஏந்து_இழையாள் கண்

#3
கண் ஆர் நுதல் எந்தை காமரு கண்டம் என இருண்ட
விண் ஆல் உருமொடு மேலது கீழது கொண்டல் விண்ட
மண் ஆர் மலை மேல் இள மயில் ஆல் மட மான் அனைய
பெண்ணாம் இவள் இனி என்னாய்க் கழியும் பிரிந்து உறைவே

#4 இணைக்குறள் ஆசிரியப்பா
உறை கழி ஒள் வாள் மின்னி உரும் எனும்
அறை குரல் முரசம் ஆர்ப்பக் கைபோய்
வெம் சிலை கோலி விரி துளி என்னும்
மின் சரம் துரந்தது வானே நிலனே
கடிய ஆகிய களவ நல் மலரொடு			5
கொடிய ஆகிய தளவமும் அம் தண்
குலை மேம்பட்ட கோடலும் கோபமோடு
அலை மேம்பட்ட காந்தளும் இவற்றொடு
காயா வெம் துயர் தருமே அவரே
பொங்கு இரும் புரிசை போக்கற வளைஇக்		10
கங்குலும் பகலும் காவல் மேவி
மாசறு வேந்தன் பாசறையோரே
யானே இன்னே
அலகு_இல் ஆற்றல் அருச்சுனற்கு அஞ்ஞான்று
உலவா நல் வரம் அருளிய உத்தமன்		15
அம் தண் ஆரூர் சிந்தித்து மகிழா
மயரிய மாக்களைப் போலத்
துயர் உழந்து அழியக் கண் துயிலாவே

#5
துயிலா நோய் யாம் தோன்றத் தோன்றித் தீத் தோன்ற
மயில் ஆல வந்ததால் மாதோ அயல் ஆய
அண்டத்துக்கு அப்பாலான் அம் திங்கள் கண்ணியான்
கண்டத்துக்கு ஒப்பு ஆய கார்

#6
காரும் முழக்கொடு மின்னொடு வந்தது காதலர்-தம்
தேரும் தெருவும் சிலம்பப் புகுந்தது சில் வளைகள்
சோரும் சில பல அங்கே நெரிந்தன துன்னரு நஞ்சு
ஆரும் மிடற்று அண்ணல் ஆரூர் அனைய அணங்கினுக்கே

#7
அணங்கு உறை நெடு வரை அருமை பேணாது
மணம் கமழ் தெரியல் சூடி வைகலும்
விடு சுடர் நெடு வேல் முன் அடி விளக்காக்
கடு விசைக் கான்யாற்று நெடு நீர் நீந்தி
ஒரு தனி பெயரும் பொழுதில் புரி குழல்		5
வான் அரமகளிர் நின் மல் வழங்கு அகலத்து
ஆனாக் காதல் ஆகுவர் என்று
புலவி உள்ளமொடு பொருந்தாக் கண்ணள்
கலை பிணை திரியக் கையறவு எய்தி
மெல் விரல் நெரித்து விம்மி வெய்துயிர்த்து		10
அல்லி அம் கோதை அழலுற்றாஅங்கு
எல்லை_இல் இரும் துயர் எய்தினள் புல்லார்
திரிபுரம் எரிய ஒரு கணை தெரிந்த
அரிவை பாகத்து அண்ணல் ஆரூர்
வளம் மலி கமல வாள் முகத்து			15
இள மயில் சாயல் ஏந்து_இழை தானே

#8
இழை ஆர் வன முலையீர் இத் தண் புனத்தின்
உழையாகப் போந்தது ஒன்று உண்டோ பிழையாச் சீர்
அம்மான் அனல் ஆடி ஆரூர்க்கோன் அன்று உரித்த
கைம்மா நேர் அன்ன களிறு

#9
களிறு வழங்க வழங்கா அதர் கதிர் வேல் துணையா
வெளிறு விரவ வருதி கண்டாய் விண்ணின்-நின்று இழிந்த
பிளிறு குரல் கங்கை தாங்கிய பிஞ்ஞகன் பூம் கழல் மாட்டு
ஒளிறு மணிக் கொடும் பூண் இமையோர் செல்லும் ஓங்கு இருளே

#10
இருள் புரி கூந்தலும் எழில் நலம் சிதைந்தது
மருள் புரி வண்டு அறை மாலையும் பரிந்தது
ஒண் நுதல் திலகமும் அழிந்தது கண்ணும்
மை நிறம் ஒழிந்து செம் நிறம் எய்தி
உள் நிறை கொடுமை உரைப்ப போன்றன			5
சேதகம் பரந்தது செவ் வாய் மேதகு
குழை கெழு திருமுகம் வியர்ப்பு உள்ளுறுத்தி
இழை கெழு கொங்கையும் இன் சாந்து அழீஇக்
கலையும் துகிலும் நிலையில் கலங்கி
என் இது விளைந்தவாறு என மற்று இது			10
அன்னது அறிகிலம் யாமே செறி பொழில்
அருகு உடை ஆரூர் அமர்ந்து உறை அமுதன்
முருகு விரி தெரியல் முக்கண் மூர்த்தி
மராமரச் சோலைச் சிராமலைச் சாரல்
சுரும்பு இவர் நறும் போது கொய்யப்			15
பெரும் செறு வனத்தில் யான் பிரிந்தது இப்பொழுதே

#11
பொழுது கழிந்தாலும் பூம் புனம் காத்து எள்க
எழுது கொடி_இடையாய் ஏகான் தொழுது அமரர்
முன்னம் சேர் மொய் கழலான் முக்கணான் நான்மறையான்
மன்னும் சேய் போல் ஒருவன் வந்து

#12
வந்தார் எதிர் சென்று நின்றேற்கு ஒளிரும் வண் தார் தழைகள்
தந்தார் அவை ஒன்றும் மாற்றகில்லேன் தக்கன் வேள்வி செற்ற
செந்தாமரை வண்ணன் தீர்த்தச் சடையன் சிராமலை-வாய்க்
கொந்து ஆர் பொழில் அணி நந்தாவனத்துக் குளிர் புனத்தே

#13
புன மயில் சாயல் பூம் குழல் மடந்தை
மனை மலி செல்வம் மகிழாள் ஆகி
ஏதிலன் ஒருவன் காதலன் ஆக
விடு சுடர் நடுவண் நின்று அடுதலின் நிழலும்
அடியகத்து ஒளிக்கும் ஆர் அழல் கானத்து			5
வெவ் வினை வேடர் துடிக் குரல் வெரீஇ
மெய் விதிர் எறியும் செவ்வியள் ஆகி
முள் இலை ஈந்தும் முளி தாள் இலவமும்
வெள்ளிலும் பரந்த வெள்ளிடை மருங்கில்
கடும் குரல் கத நாய் நெடும் தொடர் பிணித்துப்		10
பாசம் தின்ற தேய் கால் உம்பர்
மரை அதள் வேய்ந்து மயிர்ப் புன் குரம்பை
விரி நரைக் கூந்தல் வெள் வாய் மறத்தியர்
விருந்து ஆயினள்-கொல் தானே திருந்தாக்
கூற்று எனப் பெயரிய கொடும் தொழில் ஒருவன்		15
ஆற்றல் செற்ற அண்ணல் ஆரூர்ச்
செய் வளர் கமலச் சீறடிக்
கொவ்வைச் செவ் வாய்க் குயில் மொழிக் கொடியே

#14
கொடி ஏர் நுடங்கு இடையாள் கொய் தாரான் பின்னே
அடியால் நடந்து அடைந்தாள் ஆ ஆக பொடி ஆக
நண்ணார் ஊர் மூன்று எரித்த நாகம் சேர் திண் சிலையான்
தண் ஆரூர் சூழ்ந்த தடம்

#15
தடப்பால் புனல் சடைச் சங்கரன் தண் மதி போல் முகத்து
மடப்பால் மடந்தை மலர் அணைச் சேக்கையில் பாசம் பிரீஇ
இடப்பால் திரியின் வெருவும் இரும் சுரம் சென்றனளால்
படப்பாலன அல்லவால் தமியேன் தையல் பட்டனவே

#16
பட்டோர் பெயரும் ஆற்றலும் எழுதி
நட்ட கல்லும் மூதூர் நத்தமும்
பரல் முரம்பு அதரும் அல்லது படு மழை
வரல் முறை அறியா வல் வெயில் கானத்துத்
தேன் இவர் கோதை செல்ல மான் இனம்			5
அம்சில்ஓதி நோக்கிற்கு அழிந்து
நெஞ்சு எரிவுடைமையின் விலக்காது விடுக
கொங்கைக்கு அழிந்து குன்றிடை அடைந்த
கொங்கு இவர் கோங்கமும் செலவு உடன்படுக
மென் தோட்கு உடைந்து வெயில் நிலை நின்ற		10
குன்ற வேய்களும் கூற்று அடைந்து ஒழிக
மா இரும் கடற்றிடை வைகல் ஆயிரம்
பாவையை வளர்ப்போய் நீ நனி பாவையை
விலக்காது பிழைத்தனை மாதோ நலத் தகும்
அலை புனல் ஆரூர் அமர்ந்து உறை அமுதன்			15
கலை அமர் கையன் கண்_நுதல் எந்தை
தொங்கல் அம் சடை முடிக்கு அணிந்த
கொங்கு அலர் கண்ணி ஆயின குரவே

#17
குரவம் கமழ் கோதை கோதை வேலோன் பின்
விரவும் கடும் கானம் வெவ் வாய் அரவம்
சடைக்கு அணிந்த சங்கரன் தார் மதனன்-தன்னைக்
கடைக்கணித்த தீயில் கடிது

#18
கடி மலர்க் கொன்றையும் திங்களும் செம் கண் அரவும் அங்கண்
முடி மலர் ஆக்கிய முக்கண் நக்கன் மிக்க செக்கர் ஒக்கும்
படி மலர் மேனிப் பரமன் அடி பரவாதவர் போல்
அடி மலர் நோவ நடந்தோ கடந்தது எம் அம்மன் ஐயே

#19
மனை உறைக் குருவி வளை வாய்ச் சேவல்
சினை முதிர் பேடைச் செவ்வி நோக்கி
ஈன்_இல் இழைக்க வேண்டி ஆனா
அன்பு பொறை கூர மேன்மேல் முயங்கிக்
கண் உடைக் கரும்பின் நுண் தோடு கவரும்			5
பெரு வளம் தழீஇய பீடு சால் கிடக்கை
வரு புனல் ஊரன் பார்வை ஆகி
மடக் கொடி மாதர்க்கு வலையாய்த் தோன்றிப்
படிற்று வாய்மொழி பல பாராட்டி
உள்ளத்து உள்ளது தெள்ளிதின் கரந்து			10
கள்ள நோக்கமொடு கைதொழுது இறைஞ்சி
எம் இல்லோயே பாண அவனேல்
அமரரும் அறியா ஆதி மூர்த்தி
குமரன் தாதை குளிர் சடை இறைவன்
அறை கழல் எந்தை ஆரூர் ஆவணத்			15
துறையில் தூக்கும் எழில் மென் காட்சிக்
கண்ணடி அனைய நீர்மைப்
பண் உடைச் சொல்லியர்தம்பாலோனே

#20
பால் ஆய சொல்லியர்க்கே சொல்லு போய்ப் பாண்மகனே
ஏலா இங்கு என்னுக்கு இடுகின்றாய் மேலாய
தேம் தண் கமழ் கொன்றைச் செம் சடையான் தாள் சூடும்
பூம் தண் புனலூரன் பொய்

#21
பொய்யால் தொழவும் அருளும் இறை கண்டம் போல் இருண்ட
மை ஆர் தடம் கண் மடந்தையர் கேட்கில் பொல்லாது வந்து உன்
கையால் அடி தொடல் செல்வன் இல் புல்லல் கலை அளையல்
ஐயா இவை நன்கு கற்றாய் பெரிதும் அழகியவே

#22
அழகுறு கிண்கிணி அடி மிசை அரற்றத்
தொழில் உடைச் சிறுபறை பூண்டு தேர் ஈர்த்து
ஒரு களிறு உருட்டி ஒண் பொடி ஆடிப்
பொரு களிறு அனைய பொக்கமொடு பின் தாழ்ந்த
பூம் குழல் சிறாரொடு தூங்குநடை பயிற்றி			5
அக்கரை உடுத்தி ஐம்படை கட்டி
ஒக்கரை இருக்கும் ஒளிர் புன் குஞ்சிக்
குதலை அம் கிளவிப் புதல்வன்-தன்னை
உள்ளச் சொரிந்த வெள்ளத் தீம் பால்
உடைய ஆகிய தட மென் கொங்கை			10
வேண்டாது பிரிந்த விரி புனல் ஊரன்
பூண் தாங்கு அகலம் புல்குவன் எனப் போய்ப்
பெரு மடம் உடையை வாழி வார் சடைக்
கொடு வெண் திங்கள் கொழு நிலவு ஏய்க்கும்
சுடு பொடி அணிந்த துளங்கு ஒளி அகலத்து			15
அண்ணல் ஆரூர் திண்ணிதின் செய்த
சிறை கெழு செழும் புனல் போல
நிறையொடு நீங்காய் நெஞ்சம் நீயே

#23
நீ இருந்து இங்கு என் போது நெஞ்சமே நீள் இருள்-கண்
ஆயிரம் கை வட்டித்து அனல் ஆடித் தீ அரங்கத்து
ஐ வாய் அரவு அசைத்தான் நல் பணைத் தோட்கு அன்பு அமைத்த
செய்வு ஆனது ஊரன் திறம்

#24
திறம் மலி சில் மொழிச் செம் துவர் வாயின எங்கையர்க்கே
மற வலி வேலோன் அருளுக வார் சடையான் கடவூர்த்
துறை மலி ஆம்பல் பல்லாயிரத்துத் தமியே எழினும்
நறை மலி தாமரை-தன்னது அன்றோ சொல்லும் நல் கயமே

#25
கயம் கெழு கரும் கடல் முதுகு தெருமரலுற
இயங்கு திமில் கடவி எறி இளி நுளையர்
நெய்ம்மீன் கவரல் வேண்டிக் கைம்மிகுத்து
ஆலவட்டம் ஏய்ப்ப மீமிசை
முடி கெழு தரு வலை வீசி முந்நீர்க்			5
குடர் என வாங்கிக் கொள்ளை கொண்ட
சுரி முகச் சங்கும் சுடர்விடு பவளமும்
எரி கதிர் நித்திலத் தொகுதியும் கூடி
விரி கதிர் நிலவும் செக்கரும் தாரகை
உரு-அது காட்டும் உலவாக் காட்சித்			10
தண் அம் துறைவன் தட வரை அகலம்
கண்ணுறக் கண்டது முதலா ஒண் நிறக்
காள மாசுணம் கதிர் மதிக் குழவியைக்
கோள் இழைத்து இருக்கும் கொள்கை போல
மணி திகழ் மிடற்று வானவன் மருவும்			15
அணி திகழ் அகலத்து அண்ணல் ஆரூர்
ஆர்கலி விழவின் அன்னது ஓர்
பேர் செலச் சிறந்தது சிறு நல் ஊரே

#26
ஊர் எலாம் துஞ்சி உலகு எலாம் நள்ளென்று
பார் எலாம் பாடு அவிந்த பாய் இருள்-கண் சீர் உலாம்
மாந்துறை-வாய் ஈசன் மணி நீர் மறைக்காட்டுப்
பூம் துறை-வாய் மேய்ந்து உறங்கா புள்

#27
புள்ளும் துயின்று பொழுது இறுமாந்து கழுது உறங்கி
நள்ளென்ற கங்குல் இருள்-வாய்ப் பெருகிய வார் பனி நாள்
துள்ளும் கலைக் கைச் சுடர் வண்ணனைத் தொழுவார் மனம் போன்று
உள்ளும் உருக ஒருவர் திண் தேர் வந்து உலாத்தருமே

#28
உலா நீர்க் கங்கை ஒரு சடைக் கரந்து
புலால் நீர் ஒழுகப் பொரு களிறு உரித்த
பூத நாதன் ஆதி மூர்த்தி
திரு மட மலை_மகட்கு ஒரு கூறு கொடுத்துத் தன்
அன்பின் அமைத்தவன் ஆரூர் நல் பகல்			5
வலம்புரி அடுப்பா மா முத்து அரிசி
சலஞ்சலம் நிறைய ஏற்றி நலம் திகழ்
பவளச் செம் தீ மூட்டிப் பொலம்பட
இப்பி அம் துடுப்பால் ஒப்பத் துழாவி
அடாஅது அட்ட அமுதம் வாய்மடுத்து			10
இடாஅ ஆயமோடு உண்ணும் பொழுதில்
திருந்து இழைப் பணைத் தோள் தே மொழி மாதே
விருந்தின் அடியேற்கு அருளுதியோ என
முலை முகம் நோக்கி முறுவலித்து இறைஞ்சலின்
நறை கமழ் வெண்ணெய்ச் சிறு நுண் துள்ளி			15
பொங்கு புனல் உற்றது போல என்
அங்கம் எல்லாம் தான் ஆயினனே

#29
ஆயின அன்பு ஆரே அழிப்பர் அனல் ஆடி
பேயினவன் பார் ஓம்பும் பேர் அருளான் தீயினவன்
கண்ணாளன் ஆரூர்க் கடல் ஆர் மடப் பாவை
தண் ஆரும் கொங்கைக்கே தாழ்ந்து

#30
தாழ்ந்து கிடந்த சடை முடிச் சங்கரன் தாள் பணியாது
ஆழ்ந்து கிடந்து நைவார் கிளை போல் அயர்வேற்கு இரங்கிச்
சூழ்ந்து கிடந்த கரை மேல் திரை என்னும் கை எறிந்து
வீழ்ந்து கிடந்து அலறித் துயிலாது இவ் விரி கடலே

@3 திருக்கயிலாய ஞானஉலா

#1
திருமாலும் நான்முகனும் தேர்ந்து உணராது அங்கண்
அரு மால் உற அழலாய் நின்ற பெருமான்

#2
பிறவாதே தோன்றினான் காணாதே காண்பான்
துறவாதே யாக்கை துறந்தான் முறைமையால்

#3
ஆழாதே ஆழ்ந்தான் அகலாது அகலி யான்
ஊழால் உயராதே ஓங்கினான் சூழ் ஒளி நூல்

#4
ஓதாது உணர்ந்தான் நுணுகாது நுண்ணியான்
யாதும் அணுகாது அணுகியான் ஆதி

#5
அரி ஆகிக் காப்பான் அயனாய்ப் படைப்பான்
அரனாய் அழிப்பவனும் தானே பரன் ஆய

#6
தேவர் அறியாத தோற்றத்தான் தேவரைத்தான்
மேவியவாறே விதித்து அமைத்தான் ஓவாதே

#7
எவ் உருவில் யார் ஒருவர் உள்குவார் உள்ளத்துள்
அவ் உருவாய்த் தோன்றி அருள்கொடுப்பான் எவ் உருவும்

#8
தானேயாய் நின்று அளிப்பான் தன்னில் பிறிது உருவம்
ஏனோர்க்கும் காண்பு அரிய எம்பெருமான் ஆனாத

#9
சீர் ஆர் சிவலோகம்-தன்னுள் சிவபுரத்தில்
ஏர் ஆர் திருக்கோயிலுள் இருப்ப ஆராய்ந்து

#10
செம் கண் அமரர் புறங்கடைக்-கண் சென்று ஈண்டி
எங்கட்குக் காட்சி அருள் என்று இரப்ப அங்கு ஒரு நாள்

#11
பூ_மங்கை பொய் தீர் தரணி புகழ்_மங்கை
நா_மங்கை என்று இவர்கள் நன்கு அமைத்த சேமம்கொள்

#12
ஞானக் கொழுந்து நகராசன்-தன் மடந்தை
தேன் மொய்த்த குஞ்சியின் மேல் சித்திரிப்ப ஊனம் இல் சீர்

#13
நந்தாவன மலரும் மந்தாகினித் தடம் சேர்
செந்தாமரை மலர் நூறாயிரத்தால் நொந்தா

#14
வயந்தன் தொடுத்து அமைத்த வாசிகை சூட்டி
நயம் திகழும் நல் உறுப்புக் கூட்டிப் பயன்கொள்

#15
குலமகளிர் செய்த கொழும் சாந்தம் கொண்டு
தலம் மலிய ஆகம் தழீஇக் கலை மலிந்த

#16
கற்பகம் ஈன்ற கமழ் பட்டினை உடுத்துப்
பொன் கழல்கள் கால் மேல் பொலிவித்து வில் பகரும்

#17
சூளாமணி சேர் முடி கவித்துச் சுட்டி சேர்
வாளார் நுதல் பட்டம் மன்னுவித்துத் தோளா

#18
மணி மகர குண்டலங்கள் காதுக்கு அணிந்து ஆங்கு
அணி வயிரக் கண்டிகை பொன் நாண் பணி பெரிய

#19
ஆரம் அவை பூண்டு அணி திகழும் சன்ன
வீரம் திருமார்பில் வில் இலக ஏர் உடைய

#20
எண் தோட்கும் கேயூரம் பெய்து உதரபந்தனமும்
கண்டோர் மனம் மகிழக் கட்டுறீஇக் கொண்டு

#21
கடிசூத்திரம் புனைந்து கங்கணம் கைப் பெய்து
வடிவு உடைய கோலம் புனைந்து ஆங்கு அடிநிலை மேல்

#22
நந்தி மாகாளர் கடை கழிந்த போழ்தத்து
வந்து வசுக்கள் இருக்கு உரைப்ப அந்தம்_இல் சீர்

#23
எண்_அரும் கீர்த்தி எழுவர் இருடிகளும்
அண்ணல் மேல் ஆசிகள் தாம் உணர்த்த ஒள் நிறத்த

#24
பன்னிருவர் ஆதித்தர் பல்லாண்டு எடுத்து இசைப்ப
மன்னும் மகதியன் யாழ் வாசிப்பப் பொன் இயலும்

#25
அங்கி கமழ் தூபம் ஏந்த யமன் வந்து
மங்கல வாசகத்தால் வாழ்த்து உரைப்பச் செம் கண்

#26
நிருதி முதலோர் நிழல் கலன்கள் ஏந்த
வருணன் மணிக் கலசம் தாங்கத் தெரு எலாம்

#27
வாயு நனி விளக்க மா மழை நீர் தெளிப்பத்
தூய சீர்ச் சோமன் குடை எடுப்ப மேவிய சீர்

#28
ஈசானன் வந்து அடைப்பை கைக் கொள்ள அச்சுனிகள்
வாய் ஆர்ந்த மந்திரத்தால் வாழ்த்து உரைப்பத் தூய

#29
உருத்திரர்கள் தோத்திரங்கள் சொல்லக் குபேரன்
திருத்தகு மா நிதியம் சிந்தக் கருத்து அமைந்த

#30
கங்கா நதி யமுனை உள்ளுறுத்த தீர்த்தங்கள்
பொங்கு கவரி புடை இரட்டத் தங்கிய

#31
பை நாகம் எட்டும் சுடர் எடுப்பப் பைம் தறுகண்
கைந்நாகம் எட்டும் கழல் வணங்க மெய் நாகம்

#32
மேகம் விதானமாய் மின் எலாம் சூழ் கொடியாய்
மோகத்து உருமு முரசு அறையப் போகம் சேர்

#33
தும்புரு நாரதர்கள் பாடத் தொடர்ந்து எங்கும்
கொம் புருவ நுண்_இடையார் கூத்தாட எம்பெருமான்

#34
விண்ணார் பணிய உயர்ந்த விளங்கு ஒளி சேர்
வெண் நார் மழ விடையை மேல்கொண்டு ஆங்கு எண் ஆர்

#35
கருத்து உடைய பாரிடங்கள் காப்பு ஒத்துச் செய்யத்
திருக்கடைகள் ஏழ் கடந்த போதில் செருக்கு உடைய

#36
சேனாபதி மயில் மேல் முன் செல்ல யானை மேல்
ஆனாப் போர் இந்திரன் பின் படர ஆனாத

#37
அன்னத்தே ஏறி அயன் வலப் பால் கைபோதக்
கல் நவிலும் திண் தோள் கருடன் மேல் மன்னிய

#38
மால் இடப் பால் செல்ல மலர் ஆர் கணை ஐந்து
மேல் இடப் பால் மென் கருப்பு வில் இடப் பால் ஏல்வு உடைய

#39
சங்கு அணையும் முன்கைத் தட முலையார் மேல் எய்வான்
கொங்கு அணையும் பூ வாளி கோத்து அமைத்த ஐங்கணையான்

#40
காமன் கொடிப் படை முன் போதக் கதக் காரி
வாமன் புரவி மேல் வந்து அணைய நாமம் சேர்

#41
வேழ முகத்து விநாயகனை உள்ளுறுத்துச்
சூழ் வளைக் கைத் தொண்டை வாய்க் கெண்டை ஒண் கண் தாழ் கூந்தல்

#42
மங்கை எழுவரும் சூழ மட நீலி
சிங்க அடல் ஏற்றின் மேல் செல்லத் தங்கிய

#43
விச்சாதரர் இயக்கர் கின்னரர் கிம்புருடர்
அச் சாரணர் அரக்கரோடு அசுரர் எச்சார்வும்

#44
சல்லரி தாளம் தகுணிதம் தத்தளகம்
கல்லலகு கல்லவடம் மொந்தை நல் இலயத்

#45
தட்டு அழி சங்கம் சலஞ்சலம் தண்ணுமை
கட்டு அழியாப் பேரி கரதாளம் கொட்டும்

#46
குடமுழவம் கொக்கரை வீணை குழல் யாழ்
இடமாம் தடாரி படகம் இடவிய

#47
மத்தளம் துந்துபி வாய்ந்த முருடு இவற்றால்
எத்திசை-தோறும் எழுந்து இயம்ப ஒத்துடனே

#48
மங்கலம் பாடுவார் வந்து இறைஞ்ச மல்லரும்
கிங்கரரும் எங்கும் கிலுகிலுப்பத் தங்கிய

#49
ஆறாம் இருதுவும் யோகும் அரும் தவமும்
மாறாத முத்திரையும் மந்திரமும் ஈறு ஆர்ந்த

#50
காலங்கள் மூன்றும் கணமும் குணங்களும்
வால கிலியரும் வந்து ஈண்டி மேலை

#51
இமையோர் பெருமானே போற்றி எழில் சேர்
உமையாள் மணவாளா போற்றி எமை ஆளும்

#52
தீ ஆடி போற்றி சிவனே அடி போற்றி
ஈசனே எந்தாய் இறை போற்றி தூய சீர்ச்

#53
சங்கரனே போற்றி சடாமகுடத்தாய் போற்றி
பொங்கு அரவா பொன் அம் கழல் போற்றி அங்கு ஒருநாள்

#54
ஆய விழுப் போர் அருச்சுனன் ஆற்றற்குப்
பாசுபதம் ஈந்த பதம் போற்றி தூய

#55
மலை_மேலாய் போற்றி மயானத்தாய் வானோர்
தலை_மேலாய் போற்றி தாள் போற்றி நிலை போற்றி

#56
போற்றி எனப் பூ_மாரி பெய்து புலன் கலங்க
நால் திசையும் எங்கும் நலம் பெருக ஏற்றுக்

#57
கொடியும் பதாகையும் கொற்றக்குடையும்
வடிவு உடைய தொங்கலும் சூழக் கடி கமழும்

#58
பூ மாண் கரும் குழலார் உள்ளம் புதிது உண்பான்
வாமான ஈசன் வரும் போழ்தில் சே மேலே

#59
வாமான ஈசன் மறு_இல் சீர் வானவர்-தம்
கோமான் படை முழக்கம் கேட்டலுமே தூ மாண்பில்

#60
வான நீர் தாங்கி மறை ஓம்பி வான் பிறையோடு
ஊனம்_இல் சூலம் உடையவாய் ஈனம் இலா

#61
வெள்ளை அணிதலால் வேழத்து உரி போர்த்த
வள்ளலே போலும் வடிவு உடைய ஒள்ளிய

#62
மாடம் நடுவில் மலர் ஆர் அமளியே
கூடிய போர்க்களமாக் குறித்துக் கேடு_இல்

#63
சிலம்பு பறையாகச் சே அரிக் கண் அம்பா
விலங்கு கொடும் புருவம் வில்லா நலம் திகழும்

#64
கூழை பின் தாழ வளை ஆர்ப்பக் கை போந்து
கேழ் கிளரும் அல்குலாம் தேர் உந்திச் சூழ் ஒளிய

#65
கொங்கை மாப் பொங்கக் கொழுநர் மனம் கவர
அங்கம் பொருது அசைந்த ஆய்_இழையார் செம் கேழ் நல்

#66
பொன் கலசத்துள்ளால் மணி நீர் முகம் சேர்த்தி
நல் பெரும் கோலம் மிகப் புனைந்து பொற்பு உடைய

#67
பேதை முதலாகப் பேரிளம்பெண் ஈறாக
மாதர் அவர் சொல்லார் மகிழ்ந்து ஈண்டிச் சோதி சேர்

#68
சூளிகையும் சூட்டும் சுளிகையும் கட்டிகையும்
வாளிகையும் பொன் தோடும் மின் விலக மாளிகையின்

#69
மேல் ஏறி நின்று தொழுவார் துயர்கொண்டு
மால் ஏறி நின்று மயங்குவார் நூல் ஏறு

#70
தாமமே தந்து சடாதாரி நல்கானேல்
யாமமேல் எம்மை அடும் என்பார் காமவேள்

#71
ஆம் என்பார் அன்று என்பார் ஐயுறுவார் கையெறிவார்
தாம் முன்னை நாணோடு சங்கு இழப்பார் பூ மன்னும்

#72
பொன் அரி மாலையைப் பூண்பார் அப் பூண் கொண்டு
துன் அரி மாலையாச் சூடுவார் முன்னம்

#73
ஒரு கண் எழுதிவிட்டு ஒன்று எழுதாது ஓடித்
தெருவம் புகுவார் திகைப்பார் அருகு இருந்த

#74
கண்ணாடி மேல் பஞ்சு பெய்வார் கிளி என்று
பண் ஆடிச் சொல் பந்துக்கு உற்றுரைப்பார் அண்ணல் மேல்

#75
கண் என்னும் மாசாலம் கோலிக் கரும் குழலார்
திண்ணம் நிறைந்தார் திறந்திட்டார் ஒள் நிறத்த

#76
பேதைப் பருவம் பிழையாதாள் வெண் மணலால்
தூதைச் சிறுசோறு அடு தொழிலாள் தீது_இல்

#77
இடையாலும் ஏக்கழுத்தம் மாட்டாள் நலம் சேர்
உடையாலும் உள் உருக்ககில்லாள் நடையாலும்

#78
கௌவை நோய் காளையரைச் செய்யாள் கதிர் முலைகள்
வெவ்வ நோய் செய்யும் தொழில் பூணாள் செவ்வன் நேர்

#79
நோக்கிலும் நோய் நோக்கம் நோக்காள் தன் செவ் வாயின்
வாக்கில் பிறர் மனத்தும் வஞ்சியாள் பூக் குழலும்

#80
பாடவம் தோன்ற முடியாள் இள வேய்த் தோள்
ஆடவர்-தம்மை அயர்வுசெய்யாள் நாள்-தோறும்

#81
ஒன்று உரைத்து ஒன்று உன்னி ஒன்று செய்து ஒன்றின்-கண்
சென்ற மனத்தினாளாம் சே_இழையாள் நன்றாகத்

#82
தாலி கழுத்து அணிந்து சந்தனத்தால் மெய் பூசி
நீல அறுவை விரித்து உடுத்துக் கோலம் சேர்

#83
பந்தரில் பாவை கொண்டு ஆடும் இப் பாவைக்குத்
தந்தை யார் என்று ஒருத்தி தான் வினவ அந்தம்_இல் சீர்

#84
ஈசன் எரி_ஆடி என்ன அவனை ஓர்
காய் சின மால் விடை மேல் கண்ணுற்றுத் தாய் சொன்ன

#85
இக் கணக்கு நோக்காள் இவள் போல்வாள் காமநூல்
நல் கணக்கின் மேல் சிறிதே நாள்செய்தாள் பொற்பு உடைய

#86
பேரொளி சேர் காட்சிப் பெதும்பைப் பிராயத்தாள்
கார் ஒளி சேர் மஞ்ஞைக் கவின் இயலாள் சீர் ஒளிய

#87
தாமரை ஒன்றின் இரண்டு குழை இரண்டு
காமருவு கெண்டை ஓர் செம் தொண்டை தூ மருவு

#88
முத்தம் முரி வெம் சிலை சுட்டி செம்பவளம்
வைத்தது போலும் மதி முகத்தாள் ஒத்து அமைந்த

#89
கங்கணம் சேர்ந்து இலங்கு கையாள் கதிர் மணியின்
கிங்கிணி சேர்ந்த திருந்து அடியாள் ஒண் கேழ் நல்

#90
அம் துகில் சூழ்ந்து அசைந்த அல்குலாள் ஆய் பொதியில்
சந்தனம் தோய்ந்த தடம் தோளாள் வந்து

#91
திடரிட்ட திண் வரைக் கண்செய்த முலையாள்
கடல் பட்ட இன் அமுதம் அன்னாள் மடல் பட்ட

#92
மாலை வளாய குழலாள் மணம் நாறு
சோலை இளம் கிளி போல் தூ மொழியாள் சாலவும்

#93
வஞ்சனை செய்து மனம் கவரும் வாள் கண்ணுக்கு
அஞ்சனத்தை இட்டு அங்கு அழகாக்கி எஞ்சா

#94
மணி ஆரம் பூண்டு ஆழி மெல் விரலில் சேர்த்தி
அணி ஆர் வளை தோள் மேல் மின்ன மணி ஆர்ந்த

#95
தூ வெண் மணல் கொண்டு தோழியரும் தானுமாய்க்
காமன் உருவம் வர எழுதிக் காமன்

#96
கருப்புச் சிலையும் மலர் அம்பும் தேரும்
ஒருப்பட்டு உடன் எழுதும் போழ்தில் விருப்பு ஊரும்

#97
தேன் அமரும் கொன்றை அம் தார்த் தீர்த்தன் சிவலோகன்
வான மால் ஏற்றின் மேல் வந்து அணையத் தான் அமர

#98
நன்று அறிவார் சொன்ன நலம் தோற்றும் நாண் தோற்றும்
நின்று அறிவு தோற்றும் நிறை தோற்றும் நன்றாகக்

#99
கை வண்டும் கண் வண்டும் ஓடக் கலை ஓட
நெய் விண்ட பூம் குழலாள் நின்றொழிந்தாள் மொய் கொண்ட

#100
மங்கை இடம் கடவா மாண்பினாள் வான் இழிந்த
கங்கைச் சுழி அனைய உந்தியாள் தங்கிய

#101
அங்கை கமலம் அடி கமலம் மான் நோக்கி
கொங்கை கமலம் முகம் கமலம் பொங்கு எழில் ஆர்

#102
இட்டு இடையும் வஞ்சி இரும் பணைத் தோள் வேய் எழிலார்
பட்டு உடைய அல்குலும் தேர்த் தட்டு மட்டு விரி

#103
கூந்தல் அறல் பவளம் செய்ய வாய் அவ் வாயில்
ஏய்ந்த மணி முறுவல் இன் முத்தம் வாய்ந்த சீர்

#104
வண்டு வளாய வளர் வாசிகை சூட்டிக்
கண்டி கழுத்தில் கவின் சேர்த்திக் குண்டலங்கள்

#105
காதுக்கு அணிந்து கன மேகலை திருத்தித்
தீது_இல் செழும் கோலம் சித்திரித்து மாதராள்

#106
பொன் கூட்டில் பூவையை வாங்கி அதனோடும்
சொல் கோட்டிகொண்டு இருந்த ஏல்வைக்-கண் நல் கோட்டு

#107
வெள்ளி விலங்கல் மேல் வீற்றிருந்த ஞாயிறு போல்
ஒள்ளிய மால் விடையை மேல்கொண்டு தெள்ளிய நீர்

#108
தாழும் சடையான் சடாமகுடம் தோன்றுதலும்
வாழுமே மம்மர் மனத்தளாய்ச் சூழ் ஒளியான்

#109
தார் நோக்கும் தன் தாரும் நோக்கும் அவனுடைய
ஏர் நோக்கும் தன்னது எழில் நோக்கும் பேரருளான்

#110
தோள் நோக்கும் தன் தோளும் நோக்கும் அவன் மார்பின்
நீள் நோக்கம் வைத்து நெடிதுயிர்த்து நாண் நோக்காது

#111
உள்ளம் உருக ஒழியாத வேட்கையாம்
வெள்ளத்திடை அழுந்தி வெய்துயிர்த்தாள் ஒள்ளிய

#112
தீம் தமிழின் தெய்வ வடிவாள் திருந்திய சீர்
வாய்ந்த மடந்தைப் பிராயத்தாள் ஏய்ந்த சீர்

#113
ஈசன் சிலையும் எழில் வான் பவளமும்
சேய் வலம் கை வேலும் திரள் முத்தும் பாசிலைய

#114
வஞ்சியும் வேயும் வளர் தாமரை மொட்டும்
மஞ்சில் வரும் மா மதி போல் மண்டலமும் எஞ்சாப்

#115
புருவமும் செவ் வாயும் கண்ணும் எயிறும்
உருவ நுசுப்பும் மென் தோளும் மருவு இனிய

#116
கொங்கையும் வாள் முகமுமாக் கொண்டாள் கோலம் சேர்
பங்கயப் போது அனைய சேவடியாள் ஒண் கேழல்

#117
வாழைத்தண்டு அன்ன குறங்கினாள் வாய்ந்த சீர்
ஆழித் தேர்த் தட்டு அனைய அல்குலாள் ஊழித்

#118
திரு மதியம் மற்றொன்றாம் என்று முகத்தை
உருவுடைய நாள்மீன் சூழ்ந்தால் போல் பெருகு ஒளிய

#119
முத்தாரம் கண்டத்து அணிந்தாள் அணிகலங்கள்
மொய்த்து ஆரவாரம் மிகப் பெருகி வித்தகத்தால்

#120
கள்ளும் கடாமும் கலவையும் கைபோந்திட்டு
உள்ளும் புறமும் செறிவு அமைத்துத் தெள் ஒளிய

#121
காளிங்கம் சோதி கிடப்பத் தொடுத்து அமைத்த
தாள் இன்பத் தாமம் நுதல் சேர்த்தித் தோள் எங்கும்

#122
தண் நறும் சந்தனம் கொண்டு அப்பிச் சதிர் சாந்தை
வண்ணம் பெற மிசையே மட்டித்து ஆங்கு ஒள்_நுதலாள்

#123
தன் அமர் தோழியர்கள் சூழத் தவிசு ஏறிப்
பின்னும் ஓர் காமரம் யாழ் அமைத்து மன்னும்

#124
விட வண்ணக் கண்டத்து வேதியன் மேல் இட்ட
மடல் வண்ணம் பாடும் பொழுது ஈண்டு அடல் வல்ல

#125
வேல் வல்லான் வில் வல்லான் மெல்_இயலார்க்கு எஞ்ஞான்றும்
மால் வல்லான் ஊர்கின்ற மால் விடையின் கோல

#126
மணி ஏறு கேட்டு ஆங்கு நோக்குவாள் சால
அணி ஏறு தோளானைக் கண்டு ஆங்கு அணி ஆர்ந்த

#127
கோட்டி ஒழிய எழுந்து குழை முகத்தைக்
காட்டி நுதல் சிவப்ப வாய் துலக்கி நாட்டார்கள்

#128
எல்லாரும் கண்டார் எனக் கடவுள் இங்கு ஆயம்
நல்லாய் படுமேல் படும் என்று மெல்லவே

#129
செல்லல் உறும் சரணம் கம்பிக்கும் தன் உறு நோய்
சொல்லல் உறும் சொல்லி உடை செறிக்கும் நல் ஆகம்

#130
காணல் உறும் கண்கள் நீர் மல்கும் காண்பார் முன்
நாணல் உறும் நெஞ்சம் ஒட்டாது பூண் ஆகம்

#131
புல்லல் உறும் அண்ணல் கை வாரான் என்று இவ் வகையே
அல்லல் உறும் அழுந்தும் ஆழ் துயரால் மெல்_இயலாள்

#132
தன் உருவம் பூம் கொன்றைத் தார் கொள்ளத் தான் கொன்றைப்
பொன் உருவம் கொண்டு புலம்புற்றாள் பின் ஒருத்தி

#133
செம் கேழ் நல் தாமரை போல் சீறடியாள் தீது இலா
அம் கேழ் அரிவைப் பிராயத்தாள் ஒண் கேழ் நல்

#134
திங்களும் தாரகையும் வில்லும் செழும் புயலும்
தங்கு ஒளி சேர் செவ் வாயும் உண்மையால் பொங்கு ஒளி சேர்

#135
மின் ஆர் வான் காட்டும் முக ஒளியாள் மெய்ம்மையே
தன் ஆவார் இல்லாத் தகைமையாள் எந்நாளும்

#136
இல்லாரை எல்லாரும் எள்குவர் செல்வரை
எல்லாரும் செய்வர் சிறப்பு என்னும் சொல்லாலே

#137
அல்குற்கு மேகலையைச் சூழ்ந்தாள் அணி முலை மேல்
மல்கிய சாந்தொடு பூண் புனைந்து நல்கூர்

#138
இடை இடையே உள் உருகக் கண்டாள் எழில் ஆர்
நடை பெடை அன்னத்தை வென்றாள் அடி இணை மேல்

#139
பாடகம் கொண்டு பரிசு அமைத்தாள் பல் மணி சேர்
சூடகம் முன்கை தொடர்வித்தாள் கேடு_இல் சீர்ப்

#140
பொன் அரி மாலை தலைக்கு அணிந்து பூண் கொண்டு
மன்னும் கழுத்தை மகிழ்வித்தாள் பொன்_அனாள்

#141
இன் இசை வீணையை வாங்கி இமையவர்-தம்
அண்ணல் மேல் தான் இட்ட ஆசையால் முன்னமே

#142
பாடல் தொடங்கும் பொழுதில் பரஞ்சோதி
கேடு இலா மால் விடை மேல் தோன்றுதலும் கூடிய

#143
இன் இசையும் இப் பிறப்பும் பேணும் இரும் தமிழும்
மன்னிய வீணையையும் கைவிட்டுப் பொன்_அனையீர்

#144
இன்று அன்றே காண்பது எழில் நலம் கொள்ளேனேல்
நன்று அன்றே பெண்மை நமக்கு என்று சென்றவன்-தன்

#145
ஒண் களபம் ஆடும் ஒளி வாள் முகத்து இரண்டு
கண் களபம் ஆடுவ போல் கட்டுரைத்தும் ஒண் கேழ் நல்

#146
கூந்தல் அவிழ்க்கும் முடிக்கும் கலை திருத்தும்
சாந்தம் திமிரும் முலை ஆர்க்கும் பூம் துகிலைச்

#147
சூழும் அவிழ்க்கும் தொழும் அழும் சோர் துயருற்று
ஆழும் அழுந்தும் அயாவுயிர்க்கும் சூழ் ஒளிய

#148
அங்கை வளை தொழுது காத்தாள் கலை காவாள்
நங்கை இவளும் நலம் தோற்றாள் அங்கு ஒருத்தி

#149
ஆரா அமுதம் அவயவம் பெற்று அனைய
சீர் ஆர் தெரிவைப் பிராயத்தாள் ஓரா

#150
மருள் ஓசையின் மழலை வாய்ச் சொலால் என்றும்
இருள் சீர் புலரியே ஒப்பாள் அருளாலே

#151
வெப்பம் இளையவர்கட்கு ஆக்குதலால் உச்சியோடு
ஒப்பு அமையக் கொள்ளும் உருவத்தாள் வெப்பம் தீர்ந்து

#152
அம் தளிர் போல் சேவடியும் அங்கையும் செம்மையால்
அந்தி வான் காட்டும் அழகினாள் அந்தம்_இல்

#153
சீர் ஆர் முகம் மதியம் ஆதலால் சே_இழையாள்
ஏர் ஆர் இரவின் எழில் கொண்டாள் சீர் ஆரும்

#154
கண் ஆர் பயோதரமும் நுண் இடையும் உண்மையால்
தண் இளம் காரின் சவி கொண்டாள் வண்ணம் சேர்

#155
மாந்தளிர் மேனி முருக்கு இதழ் வாய் ஆதலால்
வாய்ந்த இளவேனில் வண்மையாள் மாந்தர்

#156
அறிவுடையீர் நில்-மின்கள் அல்லார் போம் என்று
பறை அறைவ போலும் சிலம்பு முறைமையால்

#157
சீர் ஆர் திருந்து அடி மேல் சேர்த்தினாள் தேர் அல்குல்
ஓராது அகலல் உறாது என்று சீராலே

#158
அம் துகிலும் மேகலையும் சூழ்ந்தாள் அணி முலைகள்
மைந்தர் மனம் கவரும் என்பதனால் முந்துறவே

#159
பூம் கச்சினால் அடையப் பூட்டுறீஇப் பொன் தொடியால்
காம்பு ஒத்த தோள் இணையைக் காப்பு ஏவி வாய்ந்த சீர்

#160
நல் கழுத்தை நல் ஆரத்தால் மறைத்துக் காதுக்கு
வில் பகரும் குண்டலங்கள் மேவுவித்து மைப் பகரும்

#161
காவி அம் கண்ணைக் கதம் தணிப்பாள் போலத் தன்
தாவிய அஞ்சனத்தை முன் ஊட்டி யாவரையும்

#162
ஆகுலம் ஆக்கும் அழகினாள் அன்னமும்
கோகிலமும் போலும் குணத்தினாள் ஆகிப்

#163
பல கருதிக் கட்டிக் கரியவாய்க் கோடி
அலர் சுமந்து கூழைய ஆகிக் கலை கரந்து
பொழிப்புரை :
பொழிப்புரையை எழுதவில்லை

#164
உள் யாதும் இன்றிப் புறம் கமழ்ந்து கீழ்த் தாழ்ந்து
கள் ஆவி நாறும் கரும் குழலாள் தெள் ஒளிய

#165
செங்கழுநீர்ப் பட்டு உடுத்துச் செம் குங்குமம் எழுதி
அம் கழுநீர்த் தாமம் நுதல் சேர்த்திப் பொங்கு எழில் ஆர்

#166
பொன் கவற்றின் வெள்ளிப் பலகை மணிச் சூது
நற்கு அமைய நாட்டிப் பொரும் பொழுதில் வில் பகரும்

#167
தோளான் நிலைபேறு தோற்றம் கேடாய் நின்ற
தாளான் சடாமகுடம் தோன்றுதலும் கேள் ஆய

#168
நாணார் நடக்க நலத்தார்க்கு இடை இல்லை
ஏணார் ஒழிக எழில் ஒழிக பேணும்

#169
குலத்தார் அகன்றிடுக குற்றத்தார் வம்-மின்
அலத்தீர் நினை-மின் நீர் என்று சொலற்கு அரிய

#170
தேவாதி தேவன் சிவன் ஆயின் தேன் கொன்றைப்
பூ ஆர் அலங்கல் அருளாது போவானேல்

#171
கண்டால் அறிவன் எனச் சொல்லிக் கை சோர்ந்து
வண்டு ஆர் பூம் கோதை வளம் தோற்றாள் ஒள் தாங்கு

#172
பெண்ணரசாய்த் தோன்றிய பேரிளம் பெண்மையாள்
பண் அமரும் இன் சொல் பணி மொழியாள் மண்ணின் மேல்

#173
கண்டு கேட்டு உண்டு உயிர்த்து உற்றறியும் ஐம்புலனும்
ஒண்_தொடி-கண்ணே உள என்று பண்டையோர்

#174
கட்டுரையை மேம்படுத்தாள் கண்ணாடி மண்டலம் போல்
விட்டு இலங்கு நல் உகிர் சேர் மெல் விரலாள் கட்டரவம்

#175
அஞ்சப் பரந்து அகன்ற அல்குலாள் ஆய் நலத்த
வஞ்சிக் கொடி நுடங்கு நுண்_இடையாள் எஞ்சாத

#176
பொன் செப்பு இரண்டு முகடு மணி அழுத்தி
வைத்தன போல வளர்ந்தே நீதி ஒத்துச்

#177
சுணங்கும் சிதலையும் சூழ் போந்து கண்டார்க்கு
அணங்கும் அமுதமுமாய்த் தோன்றி இணங்கு ஒத்த

#178
கொங்கையாள் கோலங்கட்கு எல்லாம் ஓர் கோலமாம்
நங்கையாள் நாகு இள வேய்த் தோளினாள் அங்கையால்

#179
காந்தள் குலம் பழித்தாள் காமவேள் காதலாள்
சாந்தம் இலங்கும் அகலத்தாள் வாய்ந்து உடனே

#180
ஏய்ந்து குவிந்து திரண்டு மறிந்து இரு பால்
தேய்ந்து துடித்தச் செழும் பவளம் காய்ந்து இலங்கு

#181
முத்தமும் தேனும் பொதிந்து முனிவரையும்
சித்தம் திறைகொள்ளும் செவ் வாயாள் ஒத்து

#182
வரி கிடந்து அஞ்சனம் ஆடி மணிகள்
உருவம் நடு உடைய ஆகிப் பெருகிய

#183
தண் அம் கயலும் சலஞ்சலமும் தோன்றுதலால்
வண்ணம் கடல் அனைய வாள்_கண்ணாள் ஒள் நிறத்த

#184
குண்டலம் சேர் காதினாள் கோலக் குளிர் மதிய
மண்டலமே போலும் மதி_முகத்தாள் வண்டு அலம்ப

#185
யோசனை நாறும் குழலாள் ஒளி நுதல் மேல்
வாசிகை கொண்டு வடிவு அமைத்தாள் மாசு_இல் சீர்ப்

#186
பாதாதிகேசம் பழிப்பு இலாள் பாங்கு அமைந்த
சீதாரி கொண்டு தன் மெய் புகைத்தாள் மாது ஆர்ந்த

#187
பண் கவரும் சொல்லார் பல்லாண்டு ஏத்தப் பாய் ஒளி சேர்
வெண் கவரி வெள்ளத்திடை இருந்து ஒண் கேழ் நல்

#188
கண் அவனை அல்லாது காணா செவி அவனது
எண் அரும் சீர் அல்லது இசை கேளா அண்ணல்

#189
கழல் அடி அல்லது கைதொழா அஃதால்
அழல் அங்கைக் கொண்டான் மாட்டு அன்பு என்று எழில் உடைய

#190
வெண்பா விரித்து உரைக்கும் போழ்தில் விளங்கு ஒளி சேர்
கண் பாவும் நெற்றிக் கறைக் கண்டன் விண்-பால்

#191
அரி அரணம் செற்றாங்கு அலை புனலும் பாம்பும்
புரி சடை மேல் வைத்த புராணன் எரி இரவில்

#192
ஆடும் இறைவன் அமரர் குழாம் தன் சூழ
மாட மறுகில் வரக் கண்டு கேடு_இல் சீர்

#193
வண்ணச் சிலம்பு அடி மாதரார் தாம் உண்ட
கண்ணெச்சில் எம்மையே ஊட்டுவான் அண்ணலே

#194
வந்தாய் வளை கவர்ந்தாய் மாலும் அரும் துயரும்
தந்தாய் இதுவோ தகவு என்று நொந்தாள் போல்

#195
கட்டுரைத்துக் கை சோர்ந்து அகம் உருகி மெய் வெளுத்து
மட்டு இவரும் பூங்கோதை மால் கொண்டாள் கொட்டு இமை சேர்

#196
பண் ஆரும் இன் சொல் பணைப் பெரும் தோள் செம் துவர் வாய்ப்
பெண் ஆரவாரம் பெரிது அன்றே விண் ஓங்கி

#197
மஞ்சு அடையும் நீள் குடுமி வாள் நிலா வீற்றிருந்த
செம் சடையான் போந்த தெரு

#198
பெண் நீர்மை கா-மின் பெரும் தோள் இணை கா-மின்
உள் நீர்மை மேகலையும் உள்படு-மின் தெள் நீர்க்
கார் ஏறு கொன்றை அம் தார்க் காவாலி கட்டங்கன்
ஊர் ஏறு போந்தது உலா
** திருக்கைலாய ஞான உலா முற்றிற்று.