<<முந்திய பக்கம்

சங்க இலக்கியம்

0.பத்துப்பாட்டு 1.நற்றிணை 2.குறுந்தொகை 3.ஐங்குறுநூறு 4.பதிற்றுப்பத்து
5.பரிபாடல் 6.கலித்தொகை 7.அகநானூறு 8.புறநானூறு ----------
கலித்தொகை
பாலை (1 - 36) குறிஞ்சி (37 - 65) மருதம் (66 - 100) முல்லை (101 - 117) நெய்தல் (118 - 150)
சொற்பிரிப்பு-மூலம் அடிநேர்-உரை
** கலித்தொகை

#1 கடவுள் வாழ்த்து
ஆறு அறி அந்தணர்க்கு அரு மறை பல பகர்ந்து
தேறு நீர் சடை கரந்து திரிபுரம் தீமடுத்து
கூறாமல் குறித்ததன் மேற்செல்லும் கடும் கூளி
மாறா போர் மணி மிடற்று எண் கையாய் கேள் இனி
படு பறை பல இயம்ப பல் உருவம் பெயர்த்து நீ		5
கொடுகொட்டி ஆடும்-கால் கோடு உயர் அகல் அல்குல்
கொடி புரை நுசுப்பினாள் கொண்ட சீர் தருவாளோ
மண்டு அமர் பல கடந்து மதுகையால் நீறு அணிந்து
பண்டரங்கம் ஆடும்-கால் பணை எழில் அணை மென் தோள்

வண்டு அரற்றும் கூந்தலாள் வளர் தூக்கு தருவாளோ		10
கொலை உழுவை தோல் அசைஇ கொன்றை தார் சுவல் புரள
தலை அங்கை கொண்டு நீ காபாலம் ஆடும்-கால்
முலை அணிந்த முறுவலாள் முன் பாணி தருவாளோ
என ஆங்கு
பாணியும் தூக்கும் சீரும் என்று இவை			15
மாண் இழை அரிவை காப்ப
ஆணம் இல் பொருள் எமக்கு அமர்ந்தனை ஆடி
@ முதலாவது பாலைக்கலி

#2
தொடங்கல்-கண் தோன்றிய முதியவன் முதலாக
அடங்காதார் மிடல் சாய அமரர் வந்து இரத்தலின்
மடங்கல் போல் சினைஇ மாயம் செய் அவுணரை
கடந்து அடு முன்பொடு முக்கண்ணான் மூ எயிலும்
உடன்ற-கால் முகம் போல ஒண் கதிர் தெறுதலின்		5
சீறு அரும் கணிச்சியோன் சினவலின் அ எயில்
ஏறு பெற்று உதிர்வன போல் வரை பிளந்து இயங்குநர்
ஆறு கெட விலங்கிய அழல் அவிர் ஆரிடை
மறப்ப அரும் காதல் இவள் ஈண்டு ஒழிய

இறப்ப துணிந்தனிர் கேண்-மின் மற்று ஐஇய			10
தொலைவு ஆகி இரந்தோர்க்கு ஒன்று ஈயாமை இழிவு என
மலை இறந்து செயல் சூழ்ந்த பொருள் பொருள் ஆகுமோ
நிலைஇய கற்பினாள் நீ நீப்பின் வாழாதாள்
முலை ஆகம் பிரியாமை பொருள் ஆயின் அல்லதை
இல் என இரந்தோர்க்கு ஒன்று ஈயாமை இழிவு என		15
கல் இறந்து செயல் சூழ்ந்த பொருள் பொருள் ஆகுமோ
தொல் இயல் வழாஅமை துணை என புணர்ந்தவள்
புல் ஆகம் பிரியாமை பொருள் ஆயின் அல்லதை
திடன் இன்றி இரந்தோர்க்கு ஒன்று ஈயாமை இழிவு என

கடன் இறந்து செயல் சூழ்ந்த பொருள் பொருள் ஆகுமோ		20
வட_மீன் போல் தொழுது ஏத்த வயங்கிய கற்பினாள்
தட மென் தோள் பிரியாமை பொருள் ஆயின் அல்லதை
என இவள்
புன்கண் கொண்டு இனையவும் பொருள்-வயின் அகறல்
அன்பு அன்று என்று யான் கூற அன்பு உற்று			25
காழ் வரை நில்லா கடும் களிற்று ஒருத்தல்
யாழ் வரை தங்கிய ஆங்கு தாழ்பு நின்
தொல் கவின் தொலைதல் அஞ்சி என்
சொல் வரை தங்கினர் காதலோரே

#3
அறன் இன்றி அயல் தூற்றும் அம்பலை நாணியும்
வறன் நீந்தி நீ செல்லும் நீள் இடை நினைப்பவும்
இறை நில்லா வளை ஓட இதழ் சோர்பு பனி மல்க
பொறை நில்லா நோயோடு புல்லென்ற நுதல் இவள்
விறல் நலன் இழப்பவும் வினை வேட்டாய் கேஎள் இனி		5
உடை இவள் உயிர் வாழாள் நீ நீப்பின் என பல
இடை கொண்டு யாம் இரப்பவும் எம கொள்ளாய் ஆயினை
கடைஇய ஆற்று இடை நீர் நீத்த வறும் சுனை
அடையொடு வாடிய அணி மலர் தகைப்பன

வல்லை நீ துறப்பாயேல் வகை வாடும் இவள் என		10
ஒல் ஆங்கு யாம் இரப்பவும் உணர்ந்தீயாய் ஆயினை
செல்லு நீள் ஆற்று இடை சேர்ந்து எழுந்த மரம் வாட
புல்லு விட்டு இறைஞ்சிய பூம்_கொடி தகைப்பன
பிணிபு நீ விடல் சூழின் பிறழ்தரும் இவள் என
பணிபு வந்து இரப்பவும் பல சூழ்வாய் ஆயினை		15
துணிபு நீ செல கண்ட ஆற்று இடை அ மரத்து
அணி செல வாடிய அம் தளிர் தகைப்பன
என ஆங்கு
யாம் நின் கூறவும் எம கொள்ளாய் ஆயினை

ஆனாது இவள் போல் அருள் வந்தவை காட்டி		20
மேல் நின்று மெய் கூறும் கேளிர் போல் நீ செல்லும்
கானம் தகைப்ப செலவு

#4
வலி முன்பின் வல்லென்ற யாக்கை புலி நோக்கின்
சுற்று அமை வில்லர் சுரி வளர் பித்தையர்
அற்றம் பார்த்து அல்கும் கடுங்கண் மறவர் தாம்
கொள்ளும் பொருள் இலர் ஆயினும் வம்பலர்
துள்ளுநர் காண்-மார் தொடர்ந்து உயிர் வௌவலின்		5
புள்ளும் வழங்கா புலம்பு கொள் ஆரிடை
வெள் வேல் வலத்திர் பொருள் தரல் வேட்கையின்
உள்ளினிர் என்பது அறிந்தனள் என் தோழி
காழ் விரி கவை ஆரம் மீ வரும் இள முலை

போழ்து இடைப்படாஅமல் முயங்கியும் அமையார் என்		10
தாழ் கதுப்பு அணிகுவர் காதலர் மற்று அவர்
சூழ்வதை எவன்-கொல் அறியேன் என்னும்
முள் உறழ் முளை எயிற்று அமிழ்து ஊறும் தீ நீரை
கள்ளினும் மகிழ்செயும் என உரைத்தும் அமையார் என்
ஒள் இழை திருத்துவர் காதலர் மற்று அவர்			15
உள்ளுவது எவன்-கொல் அறியேன் என்னும்
நுண் எழில் மாமை சுணங்கு அணி ஆகம் தம்
கண்ணொடு தொடுத்து என நோக்கியும் அமையார் என்
ஒண் நுதல் நீவுவர் காதலர் மற்று அவர்

எண்ணுவது எவன்-கொல் அறியேன் என்னும்			20
என ஆங்கு
கழி பெரு நல்கல் ஒன்று உடைத்து என என் தோழி
அழிவொடு கலங்கிய எவ்வத்தள் ஒரு நாள் நீர்
பொழுது இடைப்பட நீப்பின் வாழ்வாளோ
ஒழிக இனி பெரும நின் பொருள்_பிணி செலவே		25

#5
பாஅல் அம் செவி பணை தாள் மா நிரை
மாஅல் யானையொடு மறவர் மயங்கி
தூறு அதர்பட்ட ஆறு மயங்கு அரும் சுரம்
இறந்து நீர் செய்யும் பொருளினும் யாம் நுமக்கு
சிறந்தனம் ஆதல் அறிந்தனிர் ஆயின்			5
நீள் இரு முந்நீர் வளி கலன் வௌவலின்
ஆள்வினைக்கு அழிந்தோர் போறல் அல்லதை
கேள் பெருந்தகையோடு எவன் பல மொழிகுவம்
நாளும் கோள்_மீன் தகைத்தலும் தகைமே

கல்லென கவின் பெற்ற விழவு ஆற்றுப்படுத்த பின்		10
புல்லென்ற களம் போல புலம்பு கொண்டு அமைவாளோ
ஆள்பவர் கலக்கு-உற அலைபெற்ற நாடு போல்
பாழ்பட்ட முகத்தோடு பைதல் கொண்டு அமைவாளோ
ஓர் இரா வைகலுள் தாமரை பொய்கையுள்
நீர் நீத்த மலர் போல நீ நீப்பின் வாழ்வாளோ			15
என ஆங்கு
பொய் நல்கல் புரிந்தனை புறந்தரல் கைவிட்டு
எ நாளோ நெடுந்தகாய் நீ செல்வது
அ நாள் கொண்டு இறக்கும் இவள் அரும் பெறல் உயிரே

#6
மரையா மரல் கவர மாரி வறப்ப
வரை ஓங்கு அரும் சுரத்து ஆரிடை செல்வோர்
சுரை அம்பு மூழ்க சுருங்கி புரையோர் தம்
உள் நீர் வறப்ப புலர் வாடு நாவிற்கு
தண்ணீர் பெறாஅ தடுமாற்று அரும் துயரம்			5
கண்ணீர் நனைக்கும் கடுமைய காடு என்றால்
என் நீர் அறியாதீர் போல இவை கூறல்
நின் நீர அல்ல நெடுந்தகாய் எம்மையும்
அன்பு அற சூழாதே ஆற்று இடை நும்மொடு

துன்பம் துணை ஆக நாடின் அது அல்லது			10
இன்பமும் உண்டோ எமக்கு

#7
வேனில் உழந்த வறிது உயங்கு ஓய் களிறு
வான் நீங்கு வைப்பின் வழங்கா தேர் நீர்க்கு அவாஅம்
கானம் கடத்திர் என கேட்பின் யான் ஒன்று
உசாவுகோ ஐய சிறிது
நீயே செய்_வினை மருங்கில் செலவு அயர்ந்து யாழ நின்		5
கை புனை வல் வில் ஞாண் உளர்தீயே
இவட்கே செய்வு-உறு மண்டிலம் மையாப்பது போல்
மை இல் வாள் முகம் பசப்பு ஊரும்மே
நீயே வினை மாண் காழகம் வீங்க கட்டி

புனை மாண் மரீஇய அம்பு தெரிதியே			10
இவட்கே சுனை மாண் நீலம் கார் எதிர்பவை போல்
இனை நோக்கு உண்கண் நீர் நில்லாவே
நீயே புலம்பு இல் உள்ளமொடு பொருள்-வயின் செலீஇய
வலம் படு திகிரி வாய் நீவுதியே
இவட்கே அலங்கு இதழ் கோடல் வீ உகுபவை போல்		15
இலங்கு ஏர் எல் வளை இறை ஊரும்மே
என நின்
செல் நவை அரவத்தும் இனையவள் நீ நீப்பின்
தன் நலம் கடைகொளப்படுதலின் மற்று இவள்

இன் உயிர் தருதலும் ஆற்றுமோ				20
முன்னிய தேஎத்து முயன்று செய் பொருளே

#8
நடுவு இகந்து ஒரீஇ நயன் இல்லான் வினை வாங்க
கொடிது ஓர்த்த மன்னவன் கோல் போல ஞாயிறு
கடுகுபு கதிர் மூட்டி காய் சினம் தெறுதலின்
உறல் ஊறு கமழ் கடாத்து ஒல்கிய எழில் வேழம்
வறன் உழு நாஞ்சில் போல் மருப்பு ஊன்றி நிலம் சேர		5
விறல் மலை வெம்பிய போக்கு அரு வெம் சுரம்
சொல்லாது இறப்ப துணிந்தனிர்க்கு ஒரு பொருள்
சொல்லுவது உடையேன் கேண்-மின் மற்று ஐஇய
வீழுநர்க்கு இறைச்சியாய் விரல் கவர்பு இசைக்கும் கோல்

ஏழும் தம் பயன் கெட இடை நின்ற நரம்பு அறூஉம்		10
யாழினும் நிலை இல்லா பொருளையும் நச்சுபவோ
மரீஇ தாம் கொண்டாரை கொண்ட-கால் போலாது
பிரியும்-கால் பிறர் எள்ள பீடு இன்றி புறம்மாறும்
திருவினும் நிலை இல்லா பொருளையும் நச்சுபவோ
புரை தவ பயன் நோக்கார் தம் ஆக்கம் முயல்வாரை		15
வரைவு இன்றி செறும் பொழுதில் கண்ணோடாது உயிர் வௌவும்
அரைசினும் நிலை இல்லா பொருளையும் நச்சுபவோ
என ஆங்கு
நச்சல் கூடாது பெரும இ செலவு

ஒழிதல் வேண்டுவல் சூழின் பழி இன்று			20
மன்னவன் புறந்தர வரு விருந்து ஓம்பி
தன் நகர் விழைய கூடின்
இன் உறல் வியன் மார்ப அது மனும் பொருளே

#9
எறித்தரு கதிர் தாங்கி ஏந்திய குடை நீழல்
உறி தாழ்ந்த கரகமும் உரை சான்ற முக்கோலும்
நெறிப்பட சுவல் அசைஇ வேறு ஓரா நெஞ்சத்து
குறிப்பு ஏவல் செயல் மாலை கொளை நடை அந்தணீர்
வெவ் இடை செலல் மாலை ஒழுக்கத்தீர் இ இடை		5
என் மகள் ஒருத்தியும் பிறள் மகன் ஒருவனும்
தம் உளே புணர்ந்த தாம் அறி புணர்ச்சியர்
அன்னார் இருவரை காணிரோ பெரும
காணேம் அல்லேம் கண்டனம் கடத்து இடை

ஆண் எழில் அண்ணலோடு அரும் சுரம் முன்னிய		10
மாண் இழை மடவரல் தாயிர் நீர் போறிர்
பல உறு நறும் சாந்தம் படுப்பவர்க்கு அல்லதை
மலையுளே பிறப்பினும் மலைக்கு அவை தாம் என் செய்யும்
நினையும்-கால் நும் மகள் நுமக்கும் ஆங்கு அனையளே
சீர் கெழு வெண் முத்தம் அணிபவர்க்கு அல்லதை		15
நீருளே பிறப்பினும் நீர்க்கு அவை தாம் என் செய்யும்
தேரும்-கால் நும் மகள் நுமக்கும் ஆங்கு அனையளே
ஏழ் புணர் இன் இசை முரல்பவர்க்கு அல்லதை
யாழுளே பிறப்பினும் யாழ்க்கு அவை தாம் என் செய்யும்

சூழும்-கால் நும் மகள் நுமக்கும் ஆங்கு அனையளே		20
என ஆங்கு
இறந்த கற்பினாட்கு எவ்வம் படரன்-மின்
சிறந்தானை வழிபடீஇ சென்றனள்
அறம் தலைபிரியா ஆறும் மற்று அதுவே

#10
வறியவன் இளமை போல் வாடிய சினையவாய்
சிறியவன் செல்வம் போல் சேர்ந்தார்க்கு நிழல் இன்றி
யார் கண்ணும் இகந்து செய்து இசை கெட்டான் இறுதி போல்
வேரொடு மரம் வெம்ப விரி கதிர் தெறுதலின்
அலவு-உற்று குடி கூவ ஆறு இன்றி பொருள் வெஃகி		5
கொலை அஞ்சா வினைவரால் கோல் கோடியவன் நிழல்
உலகு போல் உலறிய உயர் மர வெம் சுரம்
இடை கொண்டு பொருள்-வயின் இறத்தி நீ என கேட்பின்
உடைபு நெஞ்சு உக ஆங்கே ஒளி ஓடற்பாள்-மன்னோ

படை அமை சேக்கையுள் பாயலின் அறியாய் நீ		10
புடைபெயர்வாய் ஆயினும் புலம்பு கொண்டு இனைபவள்
முனிவு இன்றி முயல் பொருட்கு இறத்தி நீ என கேட்பின்
பனிய கண்படல் ஒல்லா படர் கூர்கிற்பாள்-மன்னோ
நனி கொண்ட சாயலாள் நயந்து நீ நகை ஆக
துனி செய்து நீடினும் துறப்பு அஞ்சி கலுழ்பவள்		15
பொருள் நோக்கி பிரிந்து நீ போகுதி என கேட்பின்
மருள் நோக்கம் மடிந்து ஆங்கே மயல் கூர்கிற்பாள்-மன்னோ
இருள் நோக்கம் இடை இன்றி ஈரத்தின் இயன்ற நின்
அருள் நோக்கம் அழியினும் அவலம் கொண்டு அழிபவள்

என ஆங்கு						20
வினை வெஃகி நீ செலின் விடும் இவள் உயிர் என
புனை_இழாய் நின் நிலை யான் கூற பையென
நிலவு வேல் நெடுந்தகை நீள் இடை
செலவு ஒழிந்தனனால் செறிக நின் வளையே

#11
அரிது ஆய அறன் எய்தி அருளியோர்க்கு அளித்தலும்
பெரிது ஆய பகை வென்று பேணாரை தெறுதலும்
புரிவு அமர் காதலின் புணர்ச்சியும் தரும் என
பிரிவு எண்ணி பொருள்-வயின் சென்ற நம் காதலர்
வருவர்-கொல் வயங்கு_இழாஅய் வலிப்பல் யான் கேஎள் இனி	5
அடி தாங்கும் அளவு இன்றி அழல் அன்ன வெம்மையால்
கடியவே கனம்_குழாஅய் காடு என்றார் அ காட்டுள்
துடி அடி கயந்தலை கலக்கிய சில் நீரை
பிடி ஊட்டி பின் உண்ணும் களிறு எனவும் உரைத்தனரே

இன்பத்தின் இகந்து ஒரீஇ இலை தீந்த உலவையால்		10
துன்புறூஉம் தகையவே காடு என்றார் அ காட்டுள்
அன்பு கொள் மட பெடை அசைஇய வருத்தத்தை
மென் சிறகரால் ஆற்றும் புறவு எனவும் உரைத்தனரே
கல் மிசை வேய் வாட கனை கதிர் தெறுதலான்
துன் அரூஉம் தகையவே காடு என்றார் அ காட்டுள்		15
இன் நிழல் இன்மையான் வருந்திய மட பிணைக்கு
தன் நிழலை கொடுத்து அளிக்கும் கலை எனவும் உரைத்தனரே
என ஆங்கு
இனை நலம் உடைய கானம் சென்றோர்

புனை நலம் வாட்டுநர் அல்லர் மனை-வயின்			20
பல்லியும் பாங்கு ஒத்து இசைத்தன
நல் எழில் உண்கணும் ஆடுமால் இடனே

#12
இடு முள் நெடு வேலி போல கொலைவர்
கொடுமரம் தேய்த்தார் பதுக்கை நிரைத்த
கடு நவை ஆர் ஆற்று அறு சுனை முற்றி
உடங்கு நீர் வேட்ட உடம்பு உயங்கு யானை
கடும் தாம் பதிபு ஆங்கு கை தெறப்பட்டு			5
வெறி நிரை வேறு ஆக சார் சாரல் ஓடி
நெறி மயக்கு-உற்ற நிரம்பா நீடு அத்தம்
சிறு நனி நீ துஞ்சி ஏற்பினும் அஞ்சும்
நறு_நுதல் நீத்து பொருள்-வயின் செல்வோய்

உரன் உடை உள்ளத்தை செய்_பொருள் முற்றிய		10
வளமையான் ஆகும் பொருள் இது என்பாய்
இளமையும் காமமும் நின் பாணி நில்லா
இடை முலை கோதை குழைய முயங்கும்
முறை நாள் கழிதல் உறாஅமை காண்டை
கடை நாள் இது என்று அறிந்தாரும் இல்லை			15
போற்றாய் பெரும நீ காமம் புகர்பட
வேற்றுமை கொண்டு பொருள்-வயின் போகுவாய்
கூற்றமும் மூப்பும் மறந்தாரோடு ஓராஅங்கு
மாற்றுமை கொண்ட வழி

#13
செரு மிகு சின வேந்தன் சிவந்து இறுத்த புலம் போல
எரி மேய்ந்த கரி வறல் வாய் புகவு காணாவாய்
பொரி மலர்ந்து அன்ன பொறிய மட மான்
திரி மருப்பு ஏறொடு தேர் அறற்கு ஓட
மரல் சாய மலை வெம்ப மந்தி உயங்க			5
உரல் போல் அடிய உடம்பு உயங்கு யானை
ஊறு நீர் அடங்கலின் உண் கயம் காணாது
சேறு சுவைத்து தம் செல் உயிர் தாங்கும்
புயல் துளி மாறிய போக்கு அரு வெம் சுரம்

எல்_வளை எம்மொடு நீ வரின் யாழ நின்			10
மெல் இயல் மே வந்த சீறடி தாமரை
அல்லி சேர் ஆய் இதழ் அரக்கு தோய்ந்தவை போல
கல் உறின் அ அடி கறுக்குந அல்லவோ
நலம் பெறும் சுடர்_நுதால் எம்மொடு நீ வரின்
இலங்கு மாண் அவிர் தூவி அன்ன மென் சேக்கையுள்		15
துலங்கு மான் மேல் ஊர்தி துயில் ஏற்பாய் மற்று ஆண்டை
விலங்கு மான் குரல் கேட்பின் வெருவுவை அல்லையோ
கிளி புரை கிளவியாய் எம்மொடு நீ வரின்
தளி பொழி தளிர் அன்ன எழில் மேனி தகை வாட

முளி அரில் பொத்திய முழங்கு அழல் இடை போழ்ந்த		20
வளி உறின் அ எழில் வாடுவை அல்லையோ
என ஆங்கு
அனையவை காதலர் கூறலின் வினை-வயின்
பிரிகுவர் என பெரிது அழியாது திரிபு உறீஇ
கடும்-குரை அருமைய காடு எனின் அல்லது			25
கொடும்_குழாய் துறக்குநர் அல்லர்
நடுங்குதல் காண்-மார் நகை குறித்தனரே

#14
அணை மருள் இன் துயில் அம் பணை தட மென் தோள்
துணை மலர் எழில் நீலத்து ஏந்து எழில் மலர் உண்கண்
மண மௌவல் முகை அன்ன மா வீழ் வார் நிரை வெண் பல்
மணம் நாறு நறு நுதல் மாரி வீழ் இரும் கூந்தல்
அலர் முலை ஆகத்து அகன்ற அல்குல்			5
சில நிரை வால் வளை செய்யாயோ என
பல பல கட்டுரை பண்டையின் பாராட்டி
இனிய சொல்லி இன்_ஆங்கு பெயர்ப்பது
இனி அறிந்தேன் அது துனி ஆகுதலே

பொருள் அல்லால் பொருளும் உண்டோ என யாழ நின்		10
மருளி கொள் மட நோக்கம் மயக்கப்பட்டு அயர்த்தாயோ
காதலார் எவன் செய்ப பொருள் இல்லாதார்க்கு என
ஏதிலார் கூறும் சொல் பொருள் ஆக மதித்தாயோ
செம்மையின் இகந்து ஒரீஇ பொருள் செய்வார்க்கு அ பொருள்
இம்மையும் மறுமையும் பகை ஆவது அறியாயோ		15
அதனால்
எம்மையும் பொருள் ஆக மதித்தீத்தை நம்முள் நாம்
கவவு கை விட பெறும் பொருள் திறத்து
அவவு கைவிடுதல் அது மனும் பொருளே

#15
அரி மான் இடித்து அன்ன அம் சிலை வல் வில்
புரி நாண் புடையின் புறங்காண்டல் அல்லால்
இணை படை தானை அரசோடு உறினும்
கணை தொடை நாணும் கடும் துடி ஆர்ப்பின்
எருத்து வலிய எறுழ் நோக்கு இரலை			5
மருப்பின் திரிந்து மறிந்து வீழ் தாடி
உருத்த கடும் சினத்து ஓடா மறவர்
பொருள் கொண்டு புண் செயின் அல்லதை அன்போடு
அருள் புறம்மாறிய ஆரிடை அத்தம்

புரிபு நீ புறம்மாறி போக்கு எண்ணி புதிது ஈண்டி		10
பெருகிய செல்வத்தான் பெயர்த்தரல் ஒல்வதோ
செயலை அம் தளிர் ஏய்க்கும் எழில் நலம் அ நலம்
பயலையால் உணப்பட்டு பண்டை நீர் ஒழிந்த-கால்
பொய் அற்ற கேள்வியால் புரையோரை படர்ந்து நீ
மை அற்ற படிவத்தான் மறுத்தரல் ஒல்வதோ			15
தீம் கதிர் மதி ஏய்க்கும் திரு முகம் அம் முகம்
பாம்பு சேர் மதி போல பசப்பு ஊர்ந்து தொலைந்த-கால்
பின்னிய தொடர் நீவி பிறர் நாட்டு படர்ந்து நீ
மன்னிய புணர்ச்சியான் மறுத்தரல் ஒல்வதோ

புரி அவிழ் நறு நீலம் புரை உண்கண் கலுழ்பு ஆனா		20
திரி உமிழ் நெய்யே போல் தெண் பனி உறைக்கும்-கால்
என ஆங்கு
அனையவை போற்றி நினைஇயன நாடி காண்
வளமையோ வைகலும் செயல் ஆகும் மற்று இவள்
முளை நிரை முறுவலார் ஆயத்துள் எடுத்து ஆய்ந்த		25
இளமையும் தருவதோ இறந்த பின்னே

#16
பாடு இன்றி பசந்த கண் பைதல பனி மல்க
வாடுபு வனப்பு ஓடி வணங்கு இறை வளை ஊர
ஆடு எழில் அழிவு அஞ்சாது அகன்றவர் திறத்து இனி
நாடும்-கால் நினைப்பது ஒன்று உடையேன்-மன் அதுவும் தான்
தொல் நலம் தொலைபு ஈங்கு யாம் துயர் உழப்ப துறந்து உள்ளார்	5
துன்னி நம் காதலர் துறந்து ஏகும் ஆரிடை
கல் மிசை உருப்பு அற கனை துளி சிதறு என
இன் இசை எழிலியை இரப்பவும் இயைவதோ
புனை_இழாய் ஈங்கு நாம் புலம்பு உற பொருள் வெஃகி

முனை என்னார் காதலர் முன்னிய ஆரிடை			10
சினை வாட சிறக்கும் நின் சினம் தணிந்தீக என
கனை கதிர் கனலியை காமுறல் இயைவதோ
ஒளி_இழாய் ஈங்கு நாம் துயர் கூர பொருள்-வயின்
அளி ஒரீஇ காதலர் அகன்று ஏகும் ஆரிடை
முளி முதல் மூழ்கிய வெம்மை தீர்ந்து உறுக என		15
வளி_தரும்_செல்வனை வாழ்த்தவும் இயைவதோ
என ஆங்கு
செய்_பொருள் சிறப்பு எண்ணி செல்வார் மாட்டு இனையன
தெய்வத்து திறன் நோக்கி தெருமரல் தே_மொழி

வறன் ஓடின் வையகத்து வான் தரும் கற்பினாள்		20
நிறன் ஓடி பசப்பு ஊர்தல் உண்டு என
அறன் ஓடி விலங்கின்று அவர் ஆள்வினை திறத்தே

#17
படை பண்ணி புனையவும் பா மாண்ட பல அணை
புடைபெயர்ந்து ஒடுங்கவும் புறம் சேர உயிர்ப்பவும்
உடையதை எவன்-கொல் என்று ஊறு அளந்தவர்-வயின்
நடை செல்லாய் நனி ஏங்கி நடுங்கல் காண் நறு_நுதால்
தொல் எழில் தொலைபு இவள் துயர் உழப்ப துறந்து நீ		5
வல் வினை வயக்குதல் வலித்தி-மன் வலிப்பளவை
நீள் கதிர் அவிர் மதி நிறைவு போல் நிலையாது
நாளினும் நெகிழ்பு ஓடும் நலன் உடன் நிலையுமோ
ஆற்றல் நோய் அட இவள் அணி வாட அகன்று நீ

தோற்றம் சால் தொகு பொருள் முயறி-மன் முயல்வு அளவை	10
நாற்றம் சால் நளி பொய்கை அடை முதிர் முகையிற்கு
கூற்று ஊழ் போல் குறைபடூஉம் வாழ்நாளும் நிலையுமோ
வகை எழில் வனப்பு எஞ்ச வரை போக வலித்து நீ
பகை அறு பய வினை முயறி-மன் முயல்வு அளவை
தகை வண்டு புதிது உண்ண தாது அவிழ் தண் போதின்		15
முகை வாய்த்த தடம் போலும் இளமையும் நிலையுமோ
என ஆங்கு
பொருந்தி யான் தான் வேட்ட பொருள்-வயின் நினைந்த சொல்
திருந்திய யாக்கையுள் மருத்துவன் ஊட்டிய

மருந்து போல் மருந்து ஆகி மனன் உவப்ப			20
பெரும் பெயர் மீளி பெயர்ந்தனன் செலவே

#18
அரும் பொருள் வேட்கையின் உள்ளம் துரப்ப
பிரிந்து உறை சூழாதி ஐய விரும்பி நீ
என் தோள் எழுதிய தொய்யிலும் யாழ நின்
மைந்து உடை மார்பில் சுணங்கும் நினைத்து காண்
சென்றோர் முகப்ப பொருளும் கிடவாது			5
ஒழிந்தவர் எல்லாரும் உண்ணாதும் செல்லார்
இளமையும் காமமும் ஓராங்கு பெற்றார்
வளமை விழை_தக்கது உண்டோ உள நாள்
ஒரோஒ கை தம்முள் தழீஇ ஒரோஒ கை

ஒன்றன் கூறு ஆடை உடுப்பவரே ஆயினும்			10
ஒன்றினார் வாழ்க்கையே வாழ்க்கை அரிது அரோ
சென்ற இளமை தரற்கு

#19
செவ்விய தீவிய சொல்லி அவற்றொடு
பைய முயங்கிய அ ஞான்று அவை எல்லாம்
பொய் ஆதல் யான் யாங்கு அறிகோ மற்று ஐய
அகல் நகர் கொள்ளா அலர் தலைத்தந்து
பகல் முனி வெம் சுரம் உள்ளல் அறிந்தேன்			5
மகன் அல்லை மன்ற இனி
செல் இனி சென்று நீ செய்யும் வினை முற்றி
அன்பு அற மாறி யாம் உள்ள துறந்தவள்
பண்பும் அறிதிரோ என்று வருவாரை

என் திறம் யாதும் வினவல் வினவின்			10
பகலின் விளங்கு நின் செம்மல் சிதைய
தவல் அரும் செய்_வினை முற்றாமல் ஆண்டு ஓர்
அவலம் படுதலும் உண்டு

#20
பல் வளம் பகர்பு ஊட்டும் பயன் நிலம் பைது அற
செல் கதிர் ஞாயிறு செயிர் சினம் சொரிதலின்
தணிவு இல் வெம் கோடைக்கு தண் நயந்து அணி கொள்ளும்
பிணி தெறல் உயக்கத்த பெரும் களிற்று இனம் தாங்கும்
மணி திகழ் விறல் மலை வெம்ப மண் பக			5
துணி கயம் துகள் பட்ட தூங்கு அழல் வெம் சுரம்
கிளி புரை கிளவியாய் நின் அடிக்கு எளியவோ
தளி உறுபு அறியாவே காடு என கூறுவீர்
வளியினும் வரை நில்லா வாழு நாள் நும் ஆகத்து

அளி என உடையேன் யான் அவலம் கொண்டு அழிவலோ	10
ஊறு நீர் அமிழ்து ஏய்க்கும் எயிற்றாய் நீ உணல் வேட்பின்
ஆறு நீர் இல என அறன் நோக்கி கூறுவீர்
யாறு நீர் கழிந்து அன்ன இளமை நும் நெஞ்சு என்னும்
தேறு நீர் உடையேன் யான் தெருமந்து ஈங்கு ஒழிவலோ
மாண் எழில் வேய் வென்ற தோளாய் நீ வரின் தாங்கும்		15
மாண் நிழல் இல ஆண்டை மரம் என கூறுவீர்
நீள் நிழல் தளிர் போல நிறன் ஊழ்த்தல் அறிவேன் நும்
தாள் நிழல் கைவிட்டு யான் தவிர்தலை சூழ்வலோ
என ஆங்கு

அணை அரும் வெம்மைய காடு என கூறுவீர்		20
கணை கழிகல்லாத கல் பிறங்கு ஆரிடை
பணை எருத்து எழில் ஏற்றின் பின்னர்
பிணையும் காணிரோ பிரியுமோ அவையே

#21
பால் மருள் மருப்பின் உரல் புரை பாவு அடி
ஈர் நறும் கமழ் கடாஅத்து இனம் பிரி ஒருத்தல்
ஆறு கடி கொள்ளும் வேறு புலம் படர்ந்து
பொருள்-வயின் பிரிதல் வேண்டும் என்னும்
அருள் இல் சொல்லும் நீ சொல்லினையே			5
நன்னர் நறு நுதல் நயந்தனை நீவி
நின்னின் பிரியலன் அஞ்சல் ஓம்பு என்னும்
நன்னர் மொழியும் நீ மொழிந்தனையே
அவற்றுள் யாவோ வாயின மாஅல் மகனே

கிழவர் இன்னோர் என்னாது பொருள் தான்			10
பழ வினை மருங்கின் பெயர்பு பெயர்பு உறையும்
அன்ன பொருள்-வயின் பிரிவோய் நின் இன்று
இமைப்பு வரை வாழாள் மடவோள்
அமை கவின் கொண்ட தோள் இணை மறந்தே

#22
உண் கடன் வழிமொழிந்து இரக்கும்-கால் முகனும் தாம்
கொண்டது கொடுக்கும்-கால் முகனும் வேறு ஆகுதல்
பண்டும் இ உலகத்து இயற்கை அஃது இன்றும்
புதுவது அன்றே புலன் உடை மாந்திர்
தாய் உயிர் பெய்த பாவை போல				5
நலன் உடையார் மொழி-கண் தாவார் தாம் தம் நலம்
தாது தேர் பறவையின் அருந்து இறல் கொடுக்கும்-கால்
ஏதிலார் கூறுவது எவனோ நின் பொருள் வேட்கை
நறு முல்லை நேர் முகை ஒப்ப நிரைத்த

செறி முறை பாராட்டினாய் மற்று எம் பல்லின்		10
பறிமுறை பாராட்டினையோ ஐய
நெய் இடை நீவி மணி ஒளி விட்டு அன்ன
ஐவகை பாராட்டினாய் மற்று எம் கூந்தல்
செய்_வினை பாராட்டினையோ ஐய
குளன் அணி தாமரை பாசரும்பு ஏய்க்கும்			15
இள முலை பாராட்டினாய் மற்று எம் மார்பில்
தளர் முலை பாராட்டினையோ ஐய
என ஆங்கு
அடர் பொன் அவிர் ஏய்க்கும் அம் வரி வாட

சுடர் காய் சுரம் போகும் நும்மை யாம் எம்-கண்		20
படர் கூற நின்றதும் உண்டோ தொடர் கூர
துவ்வாமை வந்த கடை

#23
இலங்கு ஒளி மருப்பின் கைம்_மா உளம்புநர்
புலம் கடி கவணையின் பூ சினை உதிர்க்கும்
விலங்கு மலை வெம்பிய போக்கு அரு வெம் சுரம்
தனியே இறப்ப யான் ஒழிந்து இருத்தல்
நகு_தக்கு அன்று இ அழுங்கல் ஊர்க்கே			5
இனி யான்
உண்ணலும் உண்ணேன் வாழலும் வாழேன்
தோள் நலம் உண்டு துறக்கப்பட்டோர்
வேள் நீர் உண்ட குடை ஓர் அன்னர்

நல்குநர் புரிந்து நலன் உணப்பட்டோர்			10
அல்குநர் போகிய ஊர் ஓர் அன்னர்
கூடினர் புரிந்து குணன் உணப்பட்டோர்
சூடினர் இட்ட பூ ஓர் அன்னர்
என ஆங்கு
யானும் நின் அகத்து அனையேன் ஆனாது			15
கொலை வெம் கொள்கையொடு நாய் அகப்படுப்ப
வலைவர்க்கு அமர்ந்த மட மான் போல
நின் ஆங்கு வரூஉம் என் நெஞ்சினை
என் ஆங்கு வாராது ஓம்பினை கொண்மே

#24
நெஞ்சு நடுக்கு-உற கேட்டும் கடுத்தும் தாம்
அஞ்சியது ஆங்கே அணங்கு ஆகும் என்னும் சொல்
இன் தீம் கிளவியாய் வாய் மன்ற நின் கேள்
புதுவது பல் நாளும் பாராட்ட யானும்
இது ஒன்று உடைத்து என எண்ணி அது தேர			5
மாசு இல் வண் சேக்கை மணந்த புணர்ச்சியுள்
பாயல் கொண்டு என் தோள் கனவுவார் ஆய் கோல்
தொடி நிரை முன்கையாள் கையாறு கொள்ளாள்
கடி மனை காத்து ஓம்ப வல்லுவள்-கொல்லோ

இடு மருப்பு யானை இலங்கு தேர்க்கு ஓடும்			10
நெடு மலை வெம் சுரம் போகி நடு நின்று
செய்_பொருள் முற்றும் அளவு என்றார் ஆய்_இழாய்
தாம் இடை கொண்டது அது ஆயின் தம் இன்றி
யாம் உயிர் வாழும் மதுகை இலேம் ஆயின்
தொய்யில் துறந்தார் அவர் என தம்-வயின்			15
நொய்யார் நுவலும் பழி நிற்ப தம்மொடு
போயின்று சொல் என் உயிர்

#25
வயக்கு-உறு மண்டிலம் வட_மொழி பெயர் பெற்ற
முகத்தவன் மக்களுள் முதியவன் புணர்ப்பினால்
ஐவர் என்று உலகு ஏத்தும் அரசர்கள் அகத்தரா
கை புனை அரக்கு இல்லை கதழ் எரி சூழ்ந்து ஆங்கு
களி திகழ் கடாஅத்த கடும் களிறு அகத்தவா			5
முளி கழை உயர் மலை முற்றிய முழங்கு அழல்
ஒள் உரு அரக்கு இல்லை வளி_மகன் உடைத்து தன்
உள்ளத்து கிளைகளோடு உய போகுவான் போல
எழு உறழ் தட கையின் இனம் காக்கும் எழில் வேழம்

அழுவம் சூழ் புகை அழல் அதர்பட மிதித்து தம்		10
குழுவொடு புணர்ந்து போம் குன்று அழல் வெம் சுரம்
இறத்திரால் ஐய மற்று இவள் நிலைமை கேட்டீ-மின்
மணக்கும்-கால் மலர் அன்ன தகையவாய் சிறிது நீர்
தணக்கும்-கால் கலுழ்பு ஆனா கண் எனவும் உள அன்றோ
சிறப்பு செய்து உழையரா புகழ்பு ஏத்தி மற்று அவர்		15
புறக்கொடையே பழி தூற்றும் புல்லியார் தொடர்பு போல்
ஈங்கு நீர் அளிக்கும்-கால் இறை சிறந்து ஒரு நாள் நீர்
நீங்கும்-கால் நெகிழ்பு ஓடும் வளை எனவும் உள அன்றோ
செல்வத்துள் சேர்ந்தவர் வளன் உண்டு மற்று அவர்

ஒல்கத்து நல்கிலா உணர்வு இலார் தொடர்பு போல்		20
ஒரு நாள் நீர் அளிக்கும்-கால் ஒளி சிறந்து ஒரு நாள் நீர்
பாராட்டா-கால் பசக்கும் நுதல் எனவும் உள அன்றோ
பொருந்திய கேண்மையின் மறை உணர்ந்து அ மறை
பிரிந்த-கால் பிறர்க்கு உரைக்கும் பீடு இலார் தொடர்பு போல்
என ஆங்கு						25
யாம் நின் கூறுவது எவன் உண்டு எம்மினும்
நீ நற்கு அறிந்தனை நெடுந்தகை வானம்
துளி மாறு பொழுதின் இ உலகம் போலும் நின்
அளி மாறு பொழுதின் இ ஆய்-இழை கவினே

#26
ஒரு_குழை_ஒருவன் போல் இணர் சேர்ந்த மராஅமும்
பருதி_அம்_செல்வன் போல் நனை ஊழ்த்த செருந்தியும்
மீன் ஏற்று கொடியோன் போல் மிஞிறு ஆர்க்கும் காஞ்சியும்
ஏனோன் போல் நிறம் கிளர்பு கஞலிய ஞாழலும்
ஆன்_ஏற்று_கொடியோன் போல் எதிரிய இலவமும் ஆங்கு	5
தீது தீர் சிறப்பின் ஐவர்கள் நிலை போல
போது அவிழ் மரத்தொடு பொரு கரை கவின் பெற
நோ_தக வந்தன்றால் இளவேனில் மே தக
பல் வரி இன வண்டு புதிது உண்ணும் பருவத்து

தொல் கவின் தொலைந்த என் தட மென் தோள் உள்ளுவார்	10
ஒல்குபு நிழல் சேர்ந்தார்க்கு உலையாது காத்து ஓம்பி
வெல் புகழ் உலகு ஏத்த விருந்து நாட்டு உறைபவர்
திசை_திசை தேன் ஆர்க்கும் திருமருத முன்துறை
வசை தீர்ந்த என் நலம் வாடுவது அருளுவார்
நசை கொண்டு தம் நீழல் சேர்ந்தாரை தாங்கி தம்		15
இசை பரந்து உலகு ஏத்த ஏதில் நாட்டு உறைபவர்
அறல் சாஅய் பொழுதோடு எம் அணி நுதல் வேறு ஆகி
திறல் சான்ற பெரு வனப்பு இழப்பதை அருளுவார்
ஊறு அஞ்சி நிழல் சேர்ந்தார்க்கு உலையாது காத்து ஓம்பி

ஆறு இன்றி பொருள் வெஃகி அகன்ற நாட்டு உறைபவர்		20
என நீ
தெருமரல் வாழி தோழி நம் காதலர்
பொரு முரண் யானையர் போர் மலைந்து எழுந்தவர்
செரு மேம்பட்ட வென்றியர்
வரும் என வந்தன்று அவர் வாய்மொழி தூதே		25

#27
ஈதலில் குறை காட்டாது அறன் அறிந்து ஒழுகிய
தீது இலான் செல்வம் போல் தீம் கரை மரம் நந்த
பேது உறு மட மொழி பிணை எழில் மான் நோக்கின்
மாதரார் முறுவல் போல் மண மௌவல் முகை ஊழ்ப்ப
காதலர் புணர்ந்தவர் கதுப்பு போல் கழல்குபு			5
தாதொடும் தளிரொடும் தண் அறல் தகைபெற
பேதையோன் வினை வாங்க பீடு இலா அரசன் நாட்டு
ஏதிலான் படை போல இறுத்தந்தது இளவேனில்
நிலம் பூத்த மரம் மிசை நிமிர்பு ஆலும் குயில் எள்ள

நலம் பூத்த நிறம் சாய நம்மையோ மறந்தைக்க		10
கலம் பூத்த அணியவர் காரிகை மகிழ் செய்ய
புலம் பூத்து புகழ்பு ஆனா கூடலும் உள்ளார்-கொல்
கல் மிசை மயில் ஆல கறங்கி ஊர் அலர் தூற்ற
தொல் நலம் நனி சாய நம்மையோ மறந்தைக்க
ஒன்னாதார் கடந்து அடூஉம் உரவு நீர் மா கொன்ற		15
வென் வேலான் குன்றின் மேல் விளையாட்டும் விரும்பார்-கொல்
மை எழில் மலர் உண்கண் மரு ஊட்டி மகிழ் கொள்ள
பொய்யினால் புரிவுண்ட நம்மையோ மறந்தைக்க
தைஇய மகளிர் தம் ஆயமோடு அமர்ந்து ஆடும்

வையை வார் உயர் எக்கர் நுகர்ச்சியும் உள்ளார்-கொல்		20
என ஆங்கு
நோய் மலி நெஞ்சமோடு இனையல் தோழி
நாம் இல்லா புலம்பு ஆயின் நடுக்கம் செய் பொழுது ஆயின்
காமவேள் விழவு ஆயின் கலங்குவள் பெரிது என
ஏமுறு கடும் திண் தேர் கடவி				25
நாம் அமர் காதலர் துணை தந்தார் விரைந்தே

#28
பாடல் சால் சிறப்பின் சினையவும் சுனையவும்
நாடினர் கொயல் வேண்டா நயந்து தாம் கொடுப்ப போல்
தோடு அவிழ் கமழ் கண்ணி தையுபு புனைவார் கண்
தோடு உற தாழ்ந்து துறை_துறை கவின் பெற
செய்யவள் அணி அகலத்து ஆரமொடு அணி கொள்பு		5
தொய்யகம் தாழ்ந்த கதுப்பு போல் துவர் மணல்
வையை வார் அவிர் அறல் இடை போழும் பொழுதினான்
விரிந்து ஆனா மலர் ஆயின் விளித்து ஆலும் குயில் ஆயின்
பிரிந்து உள்ளார் அவர் ஆயின் பேது உறூஉம் பொழுது ஆயின்

அரும் படர் அவல நோய் ஆற்றுவள் என்னாது		10
வருந்த நோய் மிகும் ஆயின் வணங்கு இறை அளி என்னோ
புதலவை மலர் ஆயின் பொங்கர் இன வண்டு ஆயின்
அயலதை அலர் ஆயின் அகன்று உள்ளார் அவர் ஆயின்
மதலை இல் நெஞ்சொடு மதன் இலள் என்னாது
நுதல் ஊரும் பசப்பு ஆயின் நுணங்கு_இறை அளி என்னோ	15
தோயின அறல் ஆயின் சுரும்பு ஆர்க்கும் சினை ஆயின்
மாவின தளிர் ஆயின் மறந்து உள்ளார் அவர் ஆயின்
பூ எழில் இழந்த கண் புலம்பு கொண்டு அமையாது
பாயல் நோய் மிகும் ஆயின் பைம்_தொடி அளி என்னோ

என ஆங்கு						20
ஆய்_இழாய் ஆங்கனம் உரையாதி சேயார்க்கு
நாம் தூது மொழிந்தனம் விடல் வேண்டா நம்மினும்
தாம் பிரிந்து உறைதல் ஆற்றலர்
பரிந்து எவன் செய்தி வருகுவர் விரைந்தே

#29
தொல் எழில் வரைத்து அன்றி வயவு நோய் நலிதலின்
அல்லாந்தார் அலவு-உற ஈன்றவள் கிடக்கை போல்
பல் பயம் உதவிய பசுமை தீர் அகல் ஞாலம்
புல்லிய புனிறு ஒரீஇ புது நலம் ஏர்தர
வளையவர் வண்டல் போல் வார் மணல் வடு கொள		5
இளையவர் ஐம்பால் போல் எக்கர் போழ்ந்து அறல் வார
மா ஈன்ற தளிர் மிசை மாயவள் திதலை போல்
ஆய் இதழ் பன் மலர் ஐய கொங்கு உறைத்தர
மே தக இளவேனில் இறுத்தந்த பொழுதின் கண்

சேயார் கண் சென்ற என் நெஞ்சினை சில்_மொழி		10
நீ கூறும் வரைத்து அன்றி நிறுப்பென்-மன் நிறை நீவி
வாய் விரிபு பனி ஏற்ற விரவு பன் மலர் தீண்டி
நோய் சேர்ந்த வைகலான் வாடை வந்து அலைத்தரூஉம்
போழ்து உள்ளார் துறந்தார் கண் புரி வாடும் கொள்கையை
சூழ்பு ஆங்கே சுட்ட_இழாய் கரப்பென்-மன் கை நீவி		15
வீழ் கதிர் விடுத்த பூ விருந்து உண்ணும் இரும் தும்பி
யாழ் கொண்ட இமிழ் இசை இயல் மாலை அலைத்தரூஉம்
தொடி நிலை நெகிழ்த்தார் கண் தோயும் என் ஆர் உயிர்
வடு நீங்கு கிளவியாய் வலிப்பென்-மன் வலிப்பவும்

நெடு நிலா திறந்து உண்ண நிரை இதழ் வாய் விட்ட		20
கடி மலர் கமழ் நாற்றம் கங்குல் வந்து அலைத்தரூஉம்
என ஆங்கு
வருந்தினை வதிந்த நின் வளை நீங்க சேய் நாட்டு
பிரிந்து செய்_பொருள்_பிணி பின் நோக்காது ஏகி நம்
அரும் துயர் களைஞர் வந்தனர்				25
திருந்து எயிறு இலங்கு நின் தே மொழி படர்ந்தே

#30
அரும் தவம் ஆற்றியார் நுகர்ச்சி போல் அணி கொள
விரிந்து ஆனா சினை-தொறூஉம் வேண்டும் தாது அமர்ந்து ஆடி
புரிந்து ஆர்க்கும் வண்டொடு புலம்பு தீர்ந்து எ வாயும்
இரும் தும்பி இறைகொள எதிரிய வேனிலான்
துயில் இன்றி யாம் நீந்த தொழுவை அம் புனல் ஆடி		5
மயில் இயலார் மரு உண்டு மறந்து அமைகுவான்-மன்னோ
வெயில் ஒளி அறியாத விரி மலர் தண் காவில்
குயில் ஆலும் பொழுது என கூறுநர் உளர் ஆயின்
பானாள் யாம் படர் கூர பணை எழில் அணை மென் தோள்

மான் நோக்கினவரோடு மறந்து அமைகுவான்-மன்னோ		10
ஆனா சீர் கூடலுள் அரும்பு அவிழ் நறு முல்லை
தேன் ஆர்க்கும் பொழுது என தெளிக்குநர் உளர் ஆயின்
உறல் யாம் ஒளி வாட உயர்ந்தவன் விழவினுள்
விறல் இழையவரோடு விளையாடுவான்-மன்னோ
பெறல் அரும் பொழுதோடு பிறங்கு இணர் துருத்தி சூழ்ந்து	15
அறல் வாரும் வையை என்று அறையுநர் உளர் ஆயின்
என ஆங்கு
தணியா நோய் உழந்து ஆனா தகையவள் தகைபெற
அணி கிளர் நெடும் திண் தேர் அயர்-மதி பணிபு நின்

காமர் கழல் அடி சேரா					20
நாமம் சால் தெவ்வரின் நடுங்கினள் பெரிதே

#31
கடும் புனல் கால் பட்டு கலுழ் தேறி கவின் பெற
நெடும் கயத்து அயல்_அயல் அயிர் தோன்ற அம் மணல்
வடுத்து ஊர வரிப்ப போல் ஈங்கை வாடு உதிர்பு உக
பிரிந்தவர் நுதல் போல பீர் வீய காதலர்
புணர்ந்தவர் முகம் போல பொய்கை பூ புதிது ஈன		5
மெய் கூர்ந்த பனியொடு மேல் நின்ற வாடையால்
கையாறு கடைக்கூட்ட கலக்கு-உறூஉம் பொழுது-மன்
பொய்யேம் என்று ஆய்_இழாய் புணர்ந்தவர் உரைத்ததை
மயங்கு அமர் மாறு அட்டு மண் வௌவி வருபவர்

தயங்கிய களிற்றின் மேல் தகை காண விடுவதோ		10
பயம் கெழு பல் கதிர் பால் போலும் பொழுதொடு
வயங்கு இழை தண்ணென வந்த இ அசை வாடை
தாள் வலம்பட வென்று தகை நன் மா மேல்கொண்டு
வாள் வென்று வருபவர் வனப்பு ஆர விடுவதோ
நீள் கழை நிவந்த பூ நிறம் வாட தூற்றுபு			15
தோள் அதிர்பு அகம் சேர துவற்றும் இ சில் மழை
பகை வென்று திறை கொண்ட பாய் திண் தேர் மிசையவர்
வகை கொண்ட செம்மல் நாம் வனப்பு ஆர விடுவதோ
புகை என புதல் சூழ்ந்து பூ அம் கள் பொதி செய்யா

முகை வெண் பல் நுதி பொர முற்றிய கடும் பனி		20
என ஆங்கு
வாளாதி வயங்கு_இழாய் வருந்துவள் இவள் என
நாள் வரை நிறுத்து தாம் சொல்லிய பொய் அன்றி
மீளி வேல் தானையர் புகுதந்தார்
நீள் உயர் கூடல் நெடும் கொடி எழவே			25

#32
எஃகு இடை தொட்ட கார் கவின் பெற்ற ஐம்பால் போல்
மை அற விளங்கிய துவர் மணல் அது அது
ஐது ஆக நெறித்து அன்ன அறல் அவிர் நீள் ஐம்பால்
அணி நகை இடையிட்ட ஈகை அம் கண்ணி போல்
பிணி நெகிழ் அலர் வேங்கை விரிந்த பூ வெறி கொள		5
துணி நீரால் தூ மதி_நாளால் அணிபெற
ஈன்றவள் திதலை போல் ஈர் பெய்யும் தளிரொடும்
ஆன்றவர் அடக்கம் போல் அலர் செல்லா சினையொடும்
வல்லவர் யாழ் போல வண்டு ஆர்க்கும் புதலொடும்

நல்லவர் நுடக்கம் போல் நயம் வந்த கொம்பொடும்		10
உணர்ந்தவர் ஈகை போல் இணர் ஊழ்த்த மரத்தொடும்
புணர்ந்தவர் முயக்கம் போல் புரிவு உற்ற கொடியொடும்
நயந்தார்க்கோ நல்லை-மன் இளவேனில் எம் போல
பசந்தவர் பைதல் நோய் பகை என தணித்து நம்
இன் உயிர் செய்யும் மருந்து ஆகி பின்னிய			15
காதலர் எயிறு ஏய்க்கும் தண் அருவி நறு முல்லை
போது ஆர கொள்ளும் கமழ் குரற்கு என்னும்
தூது வந்தன்றே தோழி
துயர் அறு கிளவியோடு அயர்ந்தீகம் விருந்தே

#33
வீறு சால் ஞாலத்து வியல் அணி காணிய
யாறு கண் விழித்த போல் கயம் நந்தி கவின் பெற
மணி புரை வயங்கலுள் துப்பு எறிந்தவை போல
பிணி விடு முருக்கு இதழ் அணி கயத்து உதிர்ந்து உக
துணி கய நிழல் நோக்கி துதைபு உடன் வண்டு ஆர்ப்ப		5
மணி போல அரும்பு ஊழ்த்து மரம் எல்லாம் மலர் வேய
காதலர் புணர்ந்தவர் கவவு கை நெகிழாது
தாது அவிழ் வேனிலோ வந்தன்று வாரார் நம்
போது எழில் உண்கண் புலம்ப நீத்தவர்

எரி உரு உறழ இலவம் மலர				10
பொரி உரு உறழ புன்கு பூ உதிர
புது மலர் கோங்கம் பொன் என தாது ஊழ்ப்ப
தமியார் புறத்து எறிந்து எள்ளி முனிய வந்து
ஆர்ப்பது போலும் பொழுது என் அணி நலம்
போர்ப்பது போலும் பசப்பு				15
நொந்து நகுவன போல் நந்தின கொம்பு நைந்து உள்ளி
உகுவது போலும் என் நெஞ்சு எள்ளி
தொகுபு உடன் ஆடுவ போலும் மயில் கையில்
உகுவன போலும் வளை என் கண் போல்

இகுபு அறல் வாரும் பருவத்தும் வாரார்			20
மிகுவது போலும் இ நோய்
நரம்பின் தீம் குரல் நிறுக்கும் குழல் போல்
இரங்கு இசை மிஞிறொடு தும்பி தாது ஊத
தூது அவர் விடுதரார் துறப்பார்-கொல் நோ_தக
இரும் குயில் ஆலும் அரோ				25
என ஆங்கு
புரிந்து நீ எள்ளும் குயிலையும் அவரையும் புலவாதி
நீல் இதழ் உண்கணாய் நெறி கூந்தல் பிணி விட
நாள் வரை நிறுத்து தாம் சொல்லிய பொய் அன்றி

மாலை தாழ் வியன் மார்பர் துனைதந்தார்			30
கால் உறழ் கடும் திண் தேர் கடவினர் விரைந்தே

#34
மன் உயிர் ஏமுற மலர் ஞாலம் புரவு ஈன்று
பல் நீரால் பாய் புனல் பரந்து ஊட்டி இறந்த பின்
சில் நீரால் அறல் வார அகல் யாறு கவின் பெற
முன் ஒன்று தமக்கு ஆற்றி முயன்றவர் இறுதி-கண்
பின் ஒன்று பெயர்த்து ஆற்றும் பீடு உடையாளர் போல்		5
பன் மலர் சினை உக சுரும்பு இமிர்ந்து வண்டு ஆர்ப்ப
இன் அமர் இளவேனில் இறுத்தந்த பொழுதினான்
விரி காஞ்சி தாது ஆடி இரும் குயில் விளிப்பவும்
பிரிவு அஞ்சாதவர் தீமை மறைப்பென்-மன் மறைப்பவும்

கரி பொய்த்தான் கீழ் இருந்த மரம் போல கவின் வாடி		10
எரி பொத்தி என் நெஞ்சம் சுடும் ஆயின் எவன் செய்கோ
பொறை தளர் கொம்பின் மேல் சிதர் இனம் இறைகொள
நிறை தளராதவர் தீமை மறைப்பென்-மன் மறைப்பவும்
முறை தளர்ந்த மன்னவன் கீழ் குடி போல கலங்குபு
பொறை தளர்பு பனி வாரும் கண் ஆயின் எவன் செய்கோ	15	
தளை அவிழ் பூ சினை சுரும்பு யாழ் போல இசைப்பவும்
கொளை தளராதவர் தீமை மறைப்பென்-மன் மறைப்பவும்
கிளை அழிய வாழ்பவன் ஆக்கம் போல் புல்லென்று
வளை ஆனா நெகிழ்பு ஓடும் தோள் ஆயின் எவன் செய்கோ

என ஆங்கு						20
நின்னுள் நோய் நீ உரைத்து அலமரல் எல்லா நாம்
எண்ணிய நாள் வரை இறவாது காதலர்
பண்ணிய மாவினர் புகுதந்தார்
கண் உறு பூசல் கை களைந்த ஆங்கே

#35
மடி இலான் செல்வம் போல் மரன் நந்த அ செல்வம்
படி உண்பார் நுகர்ச்சி போல் பல் சினை மிஞிறு ஆர்ப்ப
மாயவள் மேனி போல் தளிர் ஈன அ மேனி
தாய சுணங்கு போல் தளிர் மிசை தாது உக
மலர் தாய பொழில் நண்ணி மணி நீர கயம் நிற்ப		5
அலர் தாய துறை நண்ணி அயிர் வரித்து அறல் வார
நனி எள்ளும் குயில் நோக்கி இனைபு உகு நெஞ்சத்தால்
துறந்து உள்ளார் அவர் என துனி கொள்ளல் எல்லா நீ
வண்ண வண்டு இமிர்ந்து ஆனா வையை வார் உயர் எக்கர்

தண் அருவி நறு முல்லை தாது உண்ணும் பொழுது அன்றோ	10
கண் நிலா நீர் மல்க கவவி நாம் விடுத்த-கால்
ஒண்_நுதால் நமக்கு அவர் வருதும் என்று உரைத்ததை
மல்கிய துருத்தியுள் மகிழ் துணை புணர்ந்து அவர்
வில்லவன் விழவினுள் விளையாடும் பொழுது அன்றோ
வலன் ஆக வினை என்று வணங்கி நாம் விடுத்த-கால்		15
ஒளி_இழாய் நமக்கு அவர் வருதும் என்று உரைத்ததை
நிலன் நாவில் திரிதரூஉம் நீள் மாட கூடலார்
புலன் நாவில் பிறந்த சொல் புதிது உண்ணும் பொழுது அன்றோ
பல நாடு நெஞ்சினேம் பரிந்து நாம் விடுத்த-கால்

சுடர்_இழாய் நமக்கு அவர் வருதும் என்று உரைத்ததை		20
என ஆங்கு
உள்ளு-தொறு உடையும் நின் உயவு நோய்க்கு உயிர்ப்பு ஆகி
எள் அறு காதலர் இயைதந்தார் புள் இயல்
காமர் கடும் திண் தேர் பொருப்பன்
வாய்மை அன்ன வைகலொடு புணர்ந்தே			25

#36
கொடு மிடல் நாஞ்சிலான் தார் போல் மராத்து
நெடு மிசை சூழும் மயில் ஆலும் சீர
வடி நரம்பு இசைப்ப போல் வண்டொடு சுரும்பு ஆர்ப்ப
தொடி_மகள் முரற்சி போல் தும்பி வந்து இமிர்தர
இயன் எழீஇயவை போல எ வாயும் இம்மென		5
கயன் அணி பொதும்பருள் கடி மலர் தேன் ஊத
மலர் ஆய்ந்து வயின்_வயின் விளிப்ப போல் மரன் ஊழ்ப்ப
இரும் குயில் ஆல பெரும் துறை கவின் பெற
குழவி வேனில் விழவு எதிர்கொள்ளும்

சீரார் செவ்வியும் வந்தன்று				10
வாரார் தோழி நம் காதலோரே
பாஅய் பாஅய் பசந்தன்று நுதல்
சாஅய் சாஅய் நெகிழ்ந்தன தோள்
நனி அறல் வாரும் பொழுது என வெய்ய
பனி அறல் வாரும் என் கண்				15
மலை இடை போயினர் வரல் நசைஇ நோயொடு
முலை இடை கனலும் என் நெஞ்சு
காதலின் பிரிந்தார்-கொல்லோ வறிது ஓர்
தூதொடு மறந்தார்-கொல்லோ நோ_தக

காதலர் காதலும் காண்பாம்-கொல்லோ			20
துறந்தவர் ஆண்டு_ஆண்டு உறைகுவர்-கொல்லோ யாவது
நீள் இடைப்படுதலும் ஒல்லும் யாழ நின்
வாள் இடைப்படுத்த வயங்கு ஈர் ஓதி
நாள்_அணி சிதைத்தலும் உண்டு என நயவந்து
கேள்வி அந்தணர் கடவும்				25
வேள்வி ஆவியின் உயிர்க்கும் என் நெஞ்சே
@ இரண்டாவது குறிஞ்சிக்கலி

#37
கய மலர் உண்கண்ணாய் காணாய் ஒருவன்
வய_மான் அடி தேர்வான் போல தொடை மாண்ட
கண்ணியன் வில்லன் வரும் என்னை நோக்குபு
முன்னத்தின் காட்டுதல் அல்லது தான் உற்ற
நோய் உரைக்கல்லான் பெயரும்-மன் பல் நாளும்		5
பாயல் பெறேஎன் படர் கூர்ந்து அவன்-வயின்
சேயேன்-மன் யானும் துயர் உழப்பேன் ஆயிடை
கண் நின்று கூறுதல் ஆற்றான் அவன் ஆயின்
பெண் அன்று உரைத்தல் நமக்கு ஆயின் இன்னதூஉம்

காணான் கழிதலும் உண்டு என்று ஒரு நாள் என்		10
தோள் நெகிழ்பு உற்ற துயரால் துணிதந்து ஓர்
நாண் இன்மை செய்தேன் நறு_நுதால் ஏனல்
இன கிளி யாம் கடிந்து ஓம்பும் புனத்து அயல்
ஊசல் ஊர்ந்து ஆட ஒரு ஞான்று வந்தானை
ஐய சிறிது என்னை ஊக்கி என கூற			15
தையால் நன்று என்று அவன் ஊக்க கை நெகிழ்பு
பொய்யாக வீழ்ந்தேன் அவன் மார்பின் வாயா செத்து
ஒய்யென ஆங்கே எடுத்தனன் கொண்டான் மேல்
மெய் அறியாதேன் போல் கிடந்தேன்-மன் ஆயிடை

மெய் அறிந்து ஏற்று எழுவேன் ஆயின் மற்று ஒய்யென		20
ஒண் குழாய் செல்க என கூறி விடும் பண்பின்
அங்கண் உடையன் அவன்

#38
இமைய வில் வாங்கிய ஈர்ம் சடை அந்தணன்
உமை அமர்ந்து உயர் மலை இருந்தனன் ஆக
ஐ_இரு தலையின் அரக்கர் கோமான்
தொடி பொலி தட கையின் கீழ் புகுத்து அ மலை
எடுக்கல் செல்லாது உழப்பவன் போல			5
உறு புலி உரு ஏய்ப்ப பூத்த வேங்கையை
கறுவு கொண்டு அதன் முதல் குத்திய மத யானை
நீடு இரு விடர் அகம் சிலம்ப கூய் தன்
கோடு புய்க்க அல்லாது உழக்கும் நாட கேள்

ஆரிடை என்னாய் நீ அரவு அஞ்சாய் வந்த-கால்		10
நீர் அற்ற புலமே போல் புல்லென்றாள் வைகறை
கார் பெற்ற புலமே போல் கவின் பெறும் அ கவின்
தீராமல் காப்பது ஓர் திறன் உண்டேல் உரைத்தை காண்
இருள் இடை என்னாய் நீ இரவு அஞ்சாய் வந்த-கால்
பொருள் இல்லான் இளமை போல் புல்லென்றாள் வைகறை	15
அருள் வல்லான் ஆக்கம் போல் அணி பெறும் அ அணி
தெருளாமல் காப்பது ஓர் திறன் உண்டேல் உரைத்தை காண்
மறம் திருந்தார் என்னாய் நீ மலை இடை வந்த-கால்
அறம் சாரான் மூப்பே போல் அழி_தக்காள் வைகறை

திறம் சேர்ந்தான் ஆக்கம் போல் திரு தகும் அ திரு		20
புறங்கூற்று தீர்ப்பது ஓர் பொருள் உண்டேல் உரைத்தை காண்
என ஆங்கு
நின் உறு விழுமம் கூற கேட்டு
வருமே தோழி நன் மலை நாடன்
வேங்கை விரிவு இடம் நோக்கி				25
வீங்கு இறை பணை தோள் வரைந்தனன் கொளற்கே

#39
காமர் கடும் புனல் கலந்து எம்மோடு ஆடுவாள்
தாமரை கண்புதைத்து அஞ்சி தளர்ந்து அதனோடு ஒழுகலான்
நீள் நாக நறும் தண் தார் தயங்க பாய்ந்து அருளினால்
பூண் ஆகம் உற தழீஇ போத்தந்தான் அகன் அகலம்
வரு முலை புணர்ந்தன என்பதனால் என் தோழி		5
அரு மழை தரல் வேண்டின் தருகிற்கும் பெருமையளே
அவனும் தான்
ஏனல் இதணத்து அகில் புகை உண்டு இயங்கும்
வான் ஊர் மதியம் வரை சேரின் அ வரை

தேனின் இறால் என ஏணி இழைத்து இருக்கும்		10
கான் அகல் நாடன் மகன்
சிறுகுடியீரே சிறுகுடியீரே
வள்ளி கீழ் வீழா வரை மிசை தேன் தொடா
கொல்லை குரல் வாங்கி ஈனா மலை வாழ்நர்
அல்ல புரிந்து ஒழுகலான்				15
காந்தள் கடி கமழும் கண்வாங்கு இரும் சிலம்பின்
வாங்கு அமை மென் தோள் குறவர் மட மகளிர்
தாம் பிழையார் கேள்வர் தொழுது எழலால் தம் ஐயரும்
தாம் பிழையார் தாம் தொடுத்த கோல்

என ஆங்கு						20
அறத்தொடு நின்றேனை கண்டு திறப்பட
என் ஐயர்க்கு உய்த்து உரைத்தாள் யாய்
அவரும் தெரி கணை நோக்கி சிலை நோக்கி கண் சேந்து
ஒரு பகல் எல்லாம் உருத்து எழுந்து ஆறி
இருவர் கண் குற்றமும் இல்லையால் என்று			25
தெருமந்து சாய்த்தார் தலை
தெரி_இழாய் நீயும் நின் கேளும் புணர
வரை உறை தெய்வம் உவப்ப உவந்து
குரவை தழீஇ யாம் ஆட குரவையுள்

கொண்டுநிலை பாடி காண்				30
நல்லாய்
நல்_நாள் தலைவரும் எல்லை நமர் மலை
தம் நாண் தாம் தாங்குவார் என் நோற்றனர்-கொல்
புன வேங்கை தாது உறைக்கும் பொன் அறை முன்றில்
நனவில் புணர்ச்சி நடக்குமாம் அன்றோ			35
நனவில் புணர்ச்சி நடக்கலும் ஆங்கே
கனவில் புணர்ச்சி கடிதுமாம் அன்றோ
விண் தோய் கல் நாடனும் நீயும் வதுவையுள்
பண்டு அறியாதீர் போல் படர்கிற்பீர்-மன்-கொலோ

பண்டு அறியாதீர் போல் படர்ந்தீர் பழம் கேண்மை		40
கண்டு அறியாதேன் போல் கரக்கிற்பென்-மன்-கொலோ
மை தவழ் வெற்பன் மண அணி காணாமல்
கையால் புதைபெறூஉம் கண்களும் கண்களோ
என்னை-மன் நின் கண்ணால் காண்பென்-மன் யான்
நெய்தல் இதழ் உண்கண் நின் கண் ஆக என் கண் மன		45
என ஆங்கு
நெறி அறி செறி குறி புரி திரிபு அறியா அறிவனை முந்துறீஇ
தகை மிகு தொகை வகை அறியும் சான்றவர் இனம் ஆக
வேய் புரை மென் தோள் பசலையும் அம்பலும்

மாய புணர்ச்சியும் எல்லாம் உடன் நீங்க			50
சேய் உயர் வெற்பனும் வந்தனன்
பூ எழில் உண்கணும் பொலிகமா இனியே

#40
அகவினம் பாடுவாம் தோழி அமர் கண்
நகை மொழி நல்லவர் நாணும் நிலை போல்
தகை கொண்ட ஏனலுள் தாழ் குரல் உரீஇ
முகை வளர் சாந்து உரல் முத்து ஆர் மருப்பின்
வகை சால் உலக்கை வயின்_வயின் ஓச்சி			5
பகை இல் நோய் செய்தான் பய மலை ஏத்தி
அகவினம் பாடுவாம் நாம்
ஆய் நுதல் அணி கூந்தல் அம் பணை தட மென் தோள்
தேன் நாறு கதுப்பினாய் யானும் ஒன்று ஏத்துகு

வேய் நரல் விடர்_அகம் நீ ஒன்று பாடித்தை			10
கொடிச்சியர் கூப்பி வரை தொழு கை போல்
எடுத்த நறவின் குலை அலம் காந்தள்
தொடுத்த தேன் சோர தயங்கும் தன் உற்றார்
இடுக்கண் தவிர்ப்பான் மலை
கல்லா கடுவன் கணம் மலி சுற்றத்து			15
மெல் விரல் மந்தி குறை கூறும் செம்மற்றே
தொல் எழில் தோய்ந்தார் தொலையின் அவரினும்
அல்லல்படுவான் மலை
புரி விரி புதை துதை பூ ததைந்த தாழ் சினை

தளிர் அன்ன எழில் மேனி தகை வாட நோய் செய்தான்		20
அரு வரை அடுக்கம் நாம் அழித்து ஒன்று பாடுவாம்
விண் தோய் வரை பந்து எறிந்த அயா வீட
தண் தாழ் அருவி அர_மகளிர் ஆடுபவே
பெண்டிர் நலம் வௌவி தண் சாரல் தாது உண்ணும்
வண்டின் துறப்பான் மலை				25
ஒடுங்கா எழில் வேழம் வீழ் பிடிக்கு உற்ற
கடும் சூல் வயாவிற்கு அமர்ந்து நெடும் சினை
தீம் கண் கரும்பின் கழை வாங்கும் உற்றாரின்
நீங்கலம் என்பான் மலை

என நாம்						30
தன் மலை பாட நயவந்து கேட்டு அருளி
மெய்ம் மலி உவகையன் புகுதந்தான் புணர்ந்து ஆரா
மென் முலை ஆகம் கவின் பெற
செம்மலை ஆகிய மலை கிழவோனே

#41
பாடுகம் வா வாழி தோழி வய களிற்று
கோடு உலக்கை ஆக நல் சேம்பின் இலை சுளகா
ஆடு கழை நெல்லை அறை உரலுள் பெய்து இருவாம்
பாடுகம் வா வாழி தோழி நல் தோழி பாடு-உற்று
இடி உமிழ்பு இரங்கிய விரவு பெயல் நடுநாள்			5
கொடி விடுபு இருளிய மின்னு செய் விளக்கத்து
பிடியொடு மேயும் புன்செய் யானை
அடி ஒதுங்கு இயக்கம் கேட்ட கானவன்
நெடு வரை ஆசினி பணவை ஏறி

கடு விசை கவணையில் கல் கை விடுதலின்			10
இறுவரை வேங்கையின் ஒள் வீ சிதறி
ஆசினி மென் பழம் அளிந்தவை உதிரா
தேன் செய் இறாஅல் துளைபட போகி
நறு வடி மாவின் பைம் துணர் உழக்கி
குலை உடை வாழை கொழு மடல் கிழியா			15
பலவின் பழத்துள் தங்கும் மலை கெழு வெற்பனை
பாடுகம் வா வாழி தோழி நல் தோழி பாடு-உற்று
இலங்கும் அருவித்து இலங்கும் அருவித்தே
வானின் இலங்கும் அருவித்தே தான் உற்ற

சூள் பேணான் பொய்த்தான் மலை				20
பொய்த்தற்கு உரியனோ பொய்த்தற்கு உரியனோ
அஞ்சல் ஓம்பு என்றாரை பொய்த்தற்கு உரியனோ
குன்று அகல் நன் நாடன் வாய்மையில் பொய் தோன்றின்
திங்களுள் தீ தோன்றி அற்று
இள மழை ஆடும் இள மழை ஆடும்			25
இள மழை வைகலும் ஆடும் என் முன்கை
வளை நெகிழ வாராதோன் குன்று
வாராது அமைவானோ வாராது அமைவானோ
வாராது அமைகுவான் அல்லன் மலை நாடன்

ஈரத்துள் இன்னவை தோன்றின் நிழல் கயத்து		30
நீருள் குவளை வெந்து அற்று
மணி போல தோன்றும் மணி போல தோன்றும்
மண்ணா மணி போல தோன்றும் என் மேனியை
துன்னான் துறந்தான் மலை
துறக்குவன் அல்லன் துறக்குவன் அல்லன்			35
தொடர் வரை வெற்பன் துறக்குவன் அல்லன்
தொடர்புள் இனையவை தோன்றின் விசும்பில்
சுடருள் இருள் தோன்றி அற்று
என ஆங்கு

நன்று ஆகின்றால் தோழி நம் வள்ளையுள்			40
ஒன்றி நாம் பாட மறை நின்று கேட்டு அருளி
மென் தோள் கிழவனும் வந்தனன் நுந்தையும்
மன்றல் வேங்கை கீழ் இருந்து
மணம் நயந்தனன் அ மலை கிழவோற்கே

#42
மறம் கொள் இரும் புலி தொன் முரண் தொலைத்த
முறம் செவி வாரணம் முன் குளகு அருந்தி
கறங்கு வெள் அருவி ஓலின் துஞ்சும்
பிறங்கு இரும் சோலை நன் மலை நாடன்
மறந்தான் மறக்க இனி எல்லா நமக்கு			5
சிறந்தமை நாம் நன்கு அறிந்தனம் ஆயின் அவன் திறம்
கொல் யானை கோட்டால் வெதிர் நெல் குறுவாம் நாம்
வள்ளை அகவுவம் வா இகுளை நாம்
வள்ளை அகவுவம் வா

காணிய வா வாழி தோழி வரை தாழ்பு			10
வாள் நிறம் கொண்ட அருவித்தே நம் அருளா
நாண் இலி நாட்டு மலை
ஆர்வு-உற்றார் நெஞ்சம் அழிய விடுவானோ
ஓர்வு-உற்று ஒரு திறம் ஒல்காத நேர்கோல்
அறம் புரி நெஞ்சத்தவன்				15
தண் நறும் கோங்கம் மலர்ந்த வரை எல்லாம்
பொன் அணி யானை போல் தோன்றுமே நம் அருளா
கொன்னாளன் நாட்டு மலை
கூரு நோய் ஏய்ப்ப விடுவானோ தன் மலை

நீரினும் சாயல் உடையன் நயந்தோர்க்கு			20
தேர் ஈயும் வண் கையவன்
வரை மிசை மேல் தொடுத்த நெய் கண் இறாஅல்
மழை நுழை திங்கள் போல் தோன்றும் இழை நெகிழ
எவ்வம் உறீஇயினான் குன்று
எஞ்சாது எல்லா கொடுமை நுவலாதி			25
அஞ்சுவது அஞ்சா அறன் இலி அல்லன் என்
நெஞ்சம் பிணிக்கொண்டவன்
என்று யாம் பாட மறை நின்று கேட்டனன்
தாழ் இரும் கூந்தல் என் தோழியை கை கவியா

சாயல் இன் மார்பன் சிறுபுறம் சார்தர			30
ஞாயிற்று முன்னர் இருள் போல மாய்ந்தது என்
ஆய் இழை மேனி பசப்பு

#43
வேங்கை தொலைத்த வெறி பொறி வாரணத்து
ஏந்து மருப்பின் இன வண்டு இமிர்பு ஊதும்
சாந்த மரத்தின் இயன்ற உலக்கையால்
ஐவன வெண்ணெல் அறை உரலுள் பெய்து இருவாம்
ஐயனை ஏத்துவாம் போல அணி பெற்ற			5
மை படு சென்னி பய மலை நாடனை
தையலாய் பாடுவாம் நாம்
தகையவர் கை செறித்த தாள் போல காந்தள்
முகையின் மேல் தும்பி இருக்கும் பகை எனின்

கூற்றம் வரினும் தொலையான் தன் நட்டார்க்கு		10
தோற்றலை நாணாதோன் குன்று
வெருள்பு உடன் நோக்கி வியல் அறை யூகம்
இருள் தூங்கு இறுவரை ஊர்பு இழிபு ஆடும்
வருடை மான் குழவிய வள மலை நாடனை
தெருள தெரி_இழாய் நீ ஒன்று பாடித்தை			15
நுண் பொறி மான் செவி போல வெதிர் முளை
கண் பொதி பாளை கழன்று உகும் பண்பிற்றே
மாறு கொண்டு ஆற்றார் எனினும் பிறர் குற்றம்
கூறுதல் தேற்றாதோன் குன்று

புணர் நிலை வளகின் குளகு அமர்ந்து உண்ட			20
புணர் மருப்பு எழில் கொண்ட வரை புரை செலவின்
வயங்கு எழில் யானை பய மலை நாடனை
மணம் நாறு கதுப்பினாய் மறுத்து ஒன்று பாடித்தை
கடுங்கண் உழுவை அடி போல வாழை
கொடும் காய் குலை-தொறூஉம் தூங்கும் இடும்பையால்		25
இன்மை உரைத்தார்க்கு அது நிறைக்கல் ஆற்றா-கால்
தன் மெய் துறப்பான் மலை
என ஆங்கு
கூடி அவர் திறம் பாட என் தோழிக்கு

வாடிய மென் தோளும் வீங்கின				30
ஆடு அமை வெற்பன் அளித்த-கால் போன்றே

#44
கதிர் விரி கனை சுடர் கவின் கொண்ட நனம் சாரல்
எதிரெதிர் ஓங்கிய மால் வரை அடுக்கத்து
அதிர் இசை அருவி தன் அம் சினை மிசை வீழ
முதிர் இணர் ஊழ் கொண்ட முழவு தாள் எரிவேங்கை
வரி நுதல் எழில் வேழம் பூ நீர் மேல் சொரிதர		5
புரி நெகிழ் தாமரை மலர் அம் கண் வீறு எய்தி
திரு நயந்து இருந்து அன்ன தேம் கமழ் விறல் வெற்ப
தன் எவ்வம் கூரினும் நீ செய்த அருள் இன்மை
என்னையும் மறைத்தாள் என் தோழி அது கேட்டு

நின்னை யான் பிறர் முன்னர் பழி கூறல் தான் நாணி		10
கூரும் நோய் சிறப்பவும் நீ செய்த அருள் இன்மை
சேரியும் மறைத்தாள் என் தோழி அது கேட்டு ஆங்கு
ஓரும் நீ நிலையலை என கூறல் தான் நாணி
நோய் அட வருந்தியும் நீ செய்த அருள் இன்மை
ஆயமும் மறைத்தாள் என் தோழி அது கேட்டு		15
மாய நின் பண்பு இன்மை பிறர் கூறல் தான் நாணி
என ஆங்கு
இனையன தீமை நினைவனள் காத்து ஆங்கு
அனை அரும் பண்பினான் நின் தீமை காத்தவள்

அரும் துயர் ஆர் அஞர் தீர்க்கும்				20
மருந்து ஆகி செல்கம் பெரும நாம் விரைந்தே

#45
விடியல் வெம் கதிர் காயும் வேய் அமல் அகல் அறை
கடி சுனை கவினிய காந்தள் அம் குலையினை
அரும் மணி அவிர் உத்தி அரவு நீர் உணல் செத்து
பெரும் மலை மிளிர்ப்பு அன்ன காற்று உடை கனை பெயல்
உருமு கண்ணுறுதலின் உயர் குரல் ஒலி ஓடி			5
நறு வீய நனம் சாரல் சிலம்பலின் கதுமென
சிறுகுடி துயில் எழூஉம் சேண் உயர் விறல் வெற்ப
கால் பொர நுடங்கல கறங்கு இசை அருவி நின்
மால் வரை மலி சுனை மலர் ஏய்க்கும் என்பதோ

புல் ஆரா புணர்ச்சியால் புலம்பிய என் தோழி			10
பல் இதழ் மலர் உண்கண் பசப்ப நீ சிதைத்ததை
புகர் முக களிறொடு புலி பொருது உழக்கும் நின்
அகல் மலை அடுக்கத்த அமை ஏய்க்கும் என்பதோ
கடை என கலுழும் நோய் கைம்மிக என் தோழி
தடையின திரண்ட தோள் தகை வாட சிதைத்ததை		15
சுடர் உற_உற நீண்ட சுரும்பு இமிர் அடுக்கத்த
விடர் வரை எரிவேங்கை இணர் ஏய்க்கும் என்பதோ
யாமத்தும் துயில் அலள் அலமரும் என் தோழி
காமரு நல் எழில் கவின் வாட சிதைத்ததை

என ஆங்கு						20
தன் தீமை பல கூறி கழறலின் என் தோழி
மறையில் தான் மருவு-உற மணந்த நட்பு அருகலான்
பிறை புரை நுதல் அவர் பேணி நம்
உறை வரைந்தனர் அவர் உவக்கும் நாளே

#46
வீ அகம் புலம்ப வேட்டம் போகிய
மாஅல் அம் சிறை மணி நிற தும்பி
வாய் இழி கடாத்த வால் மருப்பு ஒருத்தலோடு
ஆய் பொறி உழுவை தாக்கிய பொழுதின்
வேங்கை அம் சினை என விறல் புலி முற்றியும்		5
பூ பொறி யானை புகர் முகம் குறுகியும்
வலி மிகு வெகுளியான் வாள்-உற்ற மன்னரை
நயன் நாடி நட்பு ஆக்கும் வினைவர் போல் மறிதரும்
அயம் இழி அருவிய அணி மலை நன் நாட

ஏறு இரங்கு இருள் இடை இரவினில் பதம் பெறாஅன்		10
மாறினென் என கூறி மனம் கொள்ளும் தான் என்ப
கூடுதல் வேட்கையான் குறி பார்த்து குரல் நொச்சி
பாடு ஓர்க்கும் செவியோடு பைதலேன் யான் ஆக
அரும் செலவு ஆரிடை அருளி வந்து அளி பெறாஅன்
வருந்தினென் என பல வாய்விடூஉம் தான் என்ப		15
நிலை உயர் கடவுட்கு கடம் பூண்டு தன் மாட்டு
பல சூழும் மனத்தோடு பைதலேன் யான் ஆக
கனை பெயல் நடுநாள் யான் கண்மாற குறி பெறாஅன்
புனை_இழாய் என் பழி நினக்கு உரைக்கும் தான் என்ப

துளி நசை வேட்கையான் மிசை பாடும் புள்ளின் தன்		20
அளி நசைஇ ஆர்வு-உற்ற அன்பினேன் யான் ஆக
என ஆங்கு
கலந்த நோய் கைம்மிக கண்படா என்-வயின்
புலந்தாயும் நீ ஆயின் பொய்யானே வெல்குவை
இலங்கு தாழ் அருவியோடு அணி கொண்ட நின் மலை		25
சிலம்பு போல் கூறுவ கூறும்
இலங்கு ஏர் எல் வளை இவள் உடை நோயே

#47
ஒன்று இரப்பான் போல் எளிவந்தும் சொல்லும் உலகம்
புரப்பான் போல்வது ஓர் மதுகையும் உடையன்
வல்லாரை வழிபட்டு ஒன்று அறிந்தான் போல்
நல்லார்-கண் தோன்றும் அடக்கமும் உடையன்
இல்லோர் புன்கண் ஈகையின் தணிக்க			5
வல்லான் போல்வது ஓர் வன்மையும் உடையன்
அன்னான் ஒருவன் தன் ஆண்தகை விட்டு என்னை
சொல்லும் சொல் கேட்டீ சுடர்_இழாய் பல் மாணும்
நின் இன்றி அமையலேன் யான் என்னும் அவன் ஆயின்

அன்னான் சொல் நம்புண்டல் யார்க்கும் இங்கு அரிது ஆயின்	10
என் உற்ற பிறர்க்கும் ஆங்கு உள-கொல்லோ நறு_நுதால்
அறியாய் நீ வருந்துவல் யான் என்னும் அவன் ஆயின்
தமியரே துணிகிற்றல் பெண்டிர்க்கும் அரிது ஆயின்
அளியரோ எம் போல ஈங்கு இவன் வலைப்பட்டார்
வாழலேன் யான் என்னும் நீ நீப்பின் அவன் ஆயின்		15
ஏழையர் என பலர் கூறும் சொல் பழி ஆயின்
சூழும்-கால் நினைப்பது ஒன்று அறிகலேன் வருந்துவல்
சூழும்-கால் நறு_நுதால் நம்முளே சூழ்குவம்
அவனை

நாண் அட பெயர்த்தல் நமக்கும் ஆங்கு ஒல்லாது		20
பேணினர் எனப்படுதல் பெண்மையும் அன்று அவன்
வௌவினன் முயங்கும் மாத்திரம் வா என
கூறுவென் போல காட்டி
மற்று அவன் மேஎ-வழி மேவாய் நெஞ்சே

#48
ஆம் இழி அணி மலை அலர் வேங்கை தகை போல
தே மூசு நனை கவுள் திசை காவல்கொளற்கு ஒத்த
வாய் நில்லா வலி முன்பின் வண்டு ஊது புகர் முகம்
படு மழை அடுக்கத்த மா விசும்பு ஓங்கிய
கடி_மர துருத்திய கமழ் கடாம் திகழ்தரும்			5
பெரும் களிற்று இனத்தொடு வீங்கு எருத்து எறுழ் முன்பின்
இரும் புலி மயக்கு-உற்ற இகல் மலை நன் நாட
வீழ் பெயல் கங்குலின் விளி ஓர்த்த ஒடுக்கத்தால்
வாழும் நாள் சிறந்தவள் வருந்து தோள் தவறு உண்டோ

தாழ் செறி கடும் காப்பின் தாய் முன்னர் நின் சாரல்		10
ஊழ்-உறு கோடல் போல் எல் வளை உகுபவால்
இனை இருள் இது என ஏங்கி நின் வரல் நசைஇ
நினை துயர் உழப்பவள் பாடு இல் கண் பழி உண்டோ
இனையள் என்று எடுத்து அரற்றும் அயல் முன்னர் நின் சுனை
கனை பெயல் நீலம் போல் கண் பனி கலுழ்பவால்		15
பல் நாளும் படர் அட பசலையால் உணப்பட்டாள்
பொன் உரை மணி அன்ன மாமை கண் பழி உண்டோ
இன் நுரை செதும்பு அரற்றும் செவ்வியுள் நின் சோலை
மின் உகு தளிர் அன்ன மெலிவு வந்து உரைப்பதால்

என ஆங்கு						20
பின் ஈதல் வேண்டும் நீ பிரிந்தோள் நட்பு என நீவி
பூ கண்படுதலும் அஞ்சுவல் தாங்கிய
அரும் துயர் அவலம் தூக்கின்
மருங்கு அறிவாரா மலையினும் பெரிதே

#49
கொடு_வரி தாக்கி வென்ற வருத்தமொடு
நெடு வரை மருங்கின் துஞ்சும் யானை
நனவில் தான் செய்தது மனத்தது ஆகலின்
கனவில் கண்டு கதுமென வெரீஇ
புதுவது ஆக மலர்ந்த வேங்கையை			5
அது என உணர்ந்து அதன் அணி நலம் முருக்கி
பேணா முன்பின் தன் சினம் தணிந்து அ மரம்
காணும் பொழுதின் நோக்கல் செல்லாது
நாணி இறைஞ்சும் நன் மலை நன் நாட

போது எழில் மலர் உண்கண் இவள் மாட்டு நீ இன்ன		10
காதலை என்பதோ இனிது மற்று இன்னாதே
மின் ஓரும் கண் ஆக இடி என்னாய் பெயல் என்னாய்
இன்னது ஓர் ஆரிடை ஈங்கு நீ வருவதை
இன்புற அளித்தனை இவள் மாட்டு நீ இன்ன
அன்பினை என்பதோ இனிது மற்று இன்னாதே		15
மணம் கமழ் மார்பினை மஞ்சு இவர் அடுக்கம் போழ்ந்து
அணங்கு உடை ஆரிடை ஈங்கு நீ வருவதை
இருள் உறழ் இரும் கூந்தல் இவள் மாட்டு நீ இன்ன
அருளினை என்பதோ இனிது மற்று இன்னாதே

ஒளிறு வேல் வலன் ஏந்தி ஒருவன் யான் என்னாது		20
களிறு இயங்கு ஆரிடை ஈங்கு நீ வருவதை
அதனால்
இரவின் வாரல் ஐய விரவு வீ
அகல் அறை வரிக்கும் சாரல்
பகலும் பெறுவை இவள் தட மென் தோளே			25

#50
வாங்கு கோல் நெல்லொடு வாங்கி வரு_வைகல்
மூங்கில் மிசைந்த முழந்தாள் இரும் பிடி
தூங்கு இலை வாழை நளி புக்கு ஞாங்கர்
வருடை மட மறி ஊர்வு இடை துஞ்சும்
இருள் தூங்கு சோலை இலங்கு நீர் வெற்ப			5
அரவின் பொறியும் அணங்கும் புணர்ந்த
உரவு வில் மேல் அசைத்த கையை ஓராங்கு
நிரை வளை முன்கை என் தோழியை நோக்கி
படி கிளி பாயும் பசும் குரல் ஏனல்

கடிதல் மறப்பித்தாய் ஆயின் இனி நீ			10
நெடிது உள்ளல் ஓம்புதல் வேண்டும் இவளே
பல் கோள் பலவின் பயிர்ப்பு உறு தீம் கனி
அல்கு அறை கொண்டு ஊண் அமலை சிறுகுடி
நல்கூர்ந்தார் செல்வ மகள்
நீயே வளியின் இகல் மிகும் தேரும் களிறும்			15
தளியின் சிறந்தனை வந்த புலவர்க்கு
அளியொடு கைதூவலை
அதனால்
கடு மா கடவு-உறூஉம் கோல் போல் எனைத்தும்

கொடுமை இலை ஆவது அறிந்தும் அடுப்பல்			20
வழை வளர் சாரல் வருடை நன் மான்
குழவி வளர்ப்பவர் போல பாராட்டி
உழையின் பிரியின் பிரியும்
இழை அணி அல்குல் என் தோழியது கவினே

#51
சுடர் தொடீஇ கேளாய் தெருவில் நாம் ஆடும்
மணல் சிற்றில் காலின் சிதையா அடைச்சிய
கோதை பரிந்து வரி பந்து கொண்டு ஓடி
நோ_தக்க செய்யும் சிறு பட்டி மேல் ஓர் நாள்
அன்னையும் யானும் இருந்தேமா இல்லிரே			5
உண்ணு நீர் வேட்டேன் என வந்தாற்கு அன்னை
அடர் பொன் சிரகத்தால் வாக்கி சுடர்_இழாய்
உண்ணு நீர் ஊட்டி வா என்றாள் என யானும்
தன்னை அறியாது சென்றேன் மற்று என்னை

வளை முன்கை பற்றி நலிய தெருமந்திட்டு			10
அன்னாய் இவன் ஒருவன் செய்தது காண் என்றேனா
அன்னை அலறி படர்தர தன்னை யான்
உண்ணு நீர் விக்கினான் என்றேனா அன்னையும்
தன்னை புறம்பு அழித்து நீவ மற்று என்னை
கடைக்கண்ணால் கொல்வான் போல் நோக்கி நகை கூட்டம்	15
செய்தான் அ கள்வன் மகன்

#52
முறம் செவி மறை பாய்பு முரண் செய்த புலி செற்று
மறம் தலைக்கொண்ட நூற்றுவர்_தலைவனை
குறங்கு அறுத்திடுவான் போல் கூர் நுதி மடுத்து அதன்
நிறம் சாடி முரண் தீர்ந்த நீள் மருப்பு எழில் யானை
மல்லரை மறம் சாய்த்த மால் போல் தன் கிளை நாப்பண்	5
கல் உயர் நனம் சாரல் கலந்து இயலும் நாட கேள்
தாமரை கண்ணியை தண் நறும் சாந்தினை
நேர் இதழ் கோதையாள் செய் குறி நீ வரின்
மணம் கமழ் நாற்றத்த மலை நின்று பலி பெறூஉம்

அணங்கு என அஞ்சுவர் சிறுகுடியோரே			10
ஈர் தண் ஆடையை எல்லி மாலையை
சோர்ந்து வீழ் கதுப்பினாள் செய் குறி நீ வரின்
ஒளி திகழ் ஞெகிழியர் கவணையர் வில்லர்
களிறு என ஆர்ப்பவர் ஏனல் காவலரே
ஆர மார்பினை அண்ணலை அளியை			15
ஐது அகல் அல்குலாள் செய் குறி நீ வரின்
கறி வளர் சிலம்பில் வழங்கல் ஆனா
புலி என்று ஓர்க்கும் இ கலி கேழ் ஊரே
என ஆங்கு

விலங்கு ஓரார் மெய் ஓர்ப்பின் இவள் வாழாள் இவள் அன்றி	20
புலம் புகழ் ஒருவ யானும் வாழேன்
அதனால் பொதி அவிழ் வைகறை வந்து நீ குறைகூறி
வதுவை அயர்தல் வேண்டுவல் ஆங்கு
புதுவை போலும் நின் வரவும் இவள்
வதுவை நாண் ஒடுக்கமும் காண்குவல் யானே		25

#53
வறன்-உறல் அறியாத வழை அமை நறும் சாரல்
விறல் மலை வியல் அறை வீழ் பிடி உழையதா
மறம் மிகு வேழம் தன் மாறுகொள் மைந்தினான்
புகர் நுதல் புண் செய்த புய் கோடு போல
உயர் முகை நறும் காந்தள் நாள்-தோறும் புதிது ஈன		5
அயம் நந்தி அணி பெற அருவி ஆர்த்து இழிதரும்
பய மழை தலைஇய பாடு சால் விறல் வெற்ப
மறையினின் மணந்து ஆங்கே மருவு அற துறந்த பின்
இறை வளை நெகிழ்பு ஓட ஏற்பவும் ஒல்லும்-மன்

அயல் அலர் தூற்றலின் ஆய் நலன் இழந்த கண்		10
கயல் உமிழ் நீர் போல கண் பனி கலுழா-கால்
இனிய செய்து அகன்று நீ இன்னாதா துறத்தலின்
பனி இவள் படர் என பரவாமை ஒல்லும்-மன்
ஊர் அலர் தூற்றலின் ஒளி ஓடி நறு நுதல்
பீர் அலர் அணி கொண்டு பிறை வனப்பு இழவா-கால்		15
அஞ்சல் என்று அகன்று நீ அருளாது துறத்தலின்
நெஞ்சு அழி துயர் அட நிறுப்பவும் இயையும்-மன்
நனவினால் நலம் வாட நலிதந்த நடுங்கு அஞர்
கனவினால் அழிவு-உற்று கங்குலும் அரற்றா-கால்

என ஆங்கு						20
விளியா நோய் உழந்து ஆனா என் தோழி நின் மலை
முளிவு உற வருந்திய முளை முதிர் சிறுதினை
தளி பெற தகைபெற்று ஆங்கு நின்
அளி பெற நந்தும் இவள் ஆய் நுதல் கவினே

#54
கொடியவும் கோட்டவும் நீர் இன்றி நிறம் பெற
பொடி அழல் புறந்தந்த பூவா பூ பொலன் கோதை
தொடி செறி யாப்பு அமை அரி முன்கை அணை தோளாய்
அடி உறை அருளாமை ஒத்ததோ நினக்கு என்ன
நரந்தம் நாறு இரும் கூந்தல் எஞ்சாது நனி பற்றி		5
பொலம் புனை மகர_வாய் நுங்கிய சிகழிகை
நலம்பெற சுற்றிய குரல் அமை ஒரு காழ்
விரல் முறை சுற்றி மோக்கலும் மோந்தனன்
நறாஅ அவிழ்ந்து அன்ன என் மெல் விரல் போது கொண்டு

செறாஅ செம் கண் புதைய வைத்து			10
பறாஅ குருகின் உயிர்த்தலும் உயிர்த்தனன்
தொய்யில் இள முலை இனிய தைவந்து
தொய்யல் அம் தட கையின் வீழ் பிடி அளிக்கும்
மையல் யானையின் மருட்டலும் மருட்டினன்
அதனால்						15
அல்லல் களைந்தனன் தோழி நம் நகர்
அரும் கடி நீவாமை கூறின் நன்று என
நின்னொடு சூழ்வல் தோழி நயம் புரிந்து
இன்னது செய்தாள் இவள் என

மன்னா உலகத்து மன்னுவது புரைமே			20

#55
மின் ஒளிர் அவிர் அறல் இடை போழும் பெயலே போல்
பொன் அகை தகை வகிர் வகை நெறி வயங்கிட்டு
போழ் இடையிட்ட கமழ் நறும் பூ கோதை
இன் நகை இலங்கு எயிற்று தே மொழி துவர் செம் வாய்
நல்_நுதால் நினக்கு ஒன்று கூறுவாம் கேள் இனி		5
நில் என நிறுத்தான் நிறுத்தே வந்து
நுதலும் முகனும் தோளும் கண்ணும்
இயலும் சொல்லும் நோக்குபு நினைஇ
ஐ தேய்ந்தன்று பிறையும் அன்று

மை தீர்ந்தன்று மதியும் அன்று				10
வேய் அமன்றன்று மலையும் அன்று
பூ அமன்றன்று சுனையும் அன்று
மெல்ல இயலும் மயிலும் அன்று
சொல்ல தளரும் கிளியும் அன்று
என ஆங்கு						15
அனையன பல பாராட்டி பையென
வலைவர் போல சோர் பதன் ஒற்றி
புலையர் போல புன்கண் நோக்கி
தொழலும் தொழுதான் தொடலும் தொட்டான்

காழ் வரை நில்லா கடும் களிறு அன்னோன்			20
தொழூஉம் தொடூஉம் அவன் தன்மை
ஏழை தன்மையோ இல்லை தோழி

#56
ஊர் கால் நிவந்த பொதும்பருள் நீர் கால்
கொழு நிழல் ஞாழல் முதிர் இணர் கொண்டு
கழும முடித்து கண்கூடு கூழை
சுவல் மிசை தாதொடு தாழ அகல் மதி
தீம் கதிர் விட்டது போல முகன் அமர்ந்து			5
ஈங்கே வருவாள் இவள் யார்-கொல் ஆங்கே ஓர்
வல்லவன் தைஇய பாவை-கொல் நல்லார்
உறுப்பு எலாம் கொண்டு இயற்றியாள்-கொல் வெறுப்பினால்
வேண்டு உருவம் கொண்டதோர் கூற்றம்-கொல் ஆண்டார்

கடிது இவளை காவார் விடுதல் கொடி இயல்			10
பல் கலை சில் பூ கலிங்கத்தள் ஈங்கு இது ஓர்
நல்கூர்ந்தார் செல்வ மகள்
இவளை சொல்லாடி காண்பேன் தகைத்து
நல்லாய் கேள்
ஆய் தூவி அனம் என அணி மயில் பெடை என		15
தூது_உண்_அம்_புறவு என துதைந்த நின் எழில் நலம்
மாதர் கொள் மான் நோக்கின் மட நல்லாய் நின் கண்டார்
பேது உறூஉம் என்பதை அறிதியோ அறியாயோ
நுணங்கு அமை திரள் என நுண் இழை அணை என

முழங்கு நீர் புணை என அமைந்த நின் தட மென் தோள்		20
வணங்கு இறை வால் எயிற்று அம் நல்லாய் நின் கண்டார்க்கு
அணங்கு ஆகும் என்பதை அறிதியோ அறியாயோ
முதிர் கோங்கின் முகை என முகம் செய்த குரும்பை என
பெயல் துளி முகிழ் என பெருத்த நின் இள முலை
மயிர் வார்ந்த வரி முன்கை மட நல்லாய் நின் கண்டார்		25
உயிர் வாங்கும் என்பதை உணர்தியோ உணராயோ
என ஆங்கு
பேது உற்றாய் போல பிறர் எவ்வம் நீ அறியாய்
யாது ஒன்றும் வாய்வாளாது இறந்தீவாய் கேள் இனி

நீயும் தவறு இலை நின்னை புறங்கடை			30
போதர விட்ட நுமரும் தவறு இலர்
நிறை அழி கொல் யானை நீர்க்கு விட்டு ஆங்கு
பறை அறைந்து அல்லது செல்லற்க என்னா
இறையே தவறு உடையான்

#57
வேய் என திரண்ட தோள் வெறி கமழ் வணர் ஐம்பால்
மா வென்ற மட நோக்கின் மயில் இயல் தளர்பு ஒல்கி
ஆய் சிலம்பு அரி ஆர்ப்ப அவிர் ஒளி இழை இமைப்ப
கொடி என மின் என அணங்கு என யாது ஒன்றும்
தெரிகல்லா இடையின்-கண் கண் கவர்பு ஒருங்கு ஓட		5
வளமை சால் உயர் சிறப்பின் நுந்தை தொல் வியல் நகர்
இளமையான் எறி பந்தொடு இகத்தந்தாய் கேள் இனி
பூ தண் தார் புலர் சாந்தின் தென்னவன் உயர் கூடல்
தேம் பாய அவிழ் நீலத்து அலர் வென்ற அமர் உண்கண்

ஏந்து கோட்டு எழில் யானை ஒன்னாதார்க்கு அவன் வேலின்	10
சேந்து நீ இனையையால் ஒத்ததோ சின்_மொழி
பொழி பெயல் வண்மையான் அசோகம் தண் காவினுள்
கழி கவின் இள மாவின் தளிர் அன்னாய் அதன்_தலை
பணை அமை பாய் மான் தேர் அவன் செற்றார் நிறம் பாய்ந்த
கணையினும் நோய் செய்தல் கடப்பு அன்றோ கனம் குழாய்	15
வகை அமை தண் தாரான் கோடு உயர் பொருப்பின் மேல்
தகை இணர் இள வேங்கை மலர் அன்ன சுணங்கினாய்
மத வலி மிகு கடாஅத்து அவன் யானை மருப்பினும்
கதவவால் தக்கதோ காழ் கொண்ட இள முலை

என ஆங்கு						20
இனையன கூற இறைஞ்சுபு நிலம் நோக்கி
நினையுபு நெடிது ஒன்று நினைப்பாள் போல் மற்று ஆங்கே
துணை அமை தோழியர்க்கு அமர்த்த கண்ணள்
மனை ஆங்கு பெயர்ந்தாள் என் அறிவு அகப்படுத்தே

#58
வார்-உறு வணர் ஐம்பால் வணங்கு இறை நெடு மென் தோள்
பேர் எழில் மலர் உண்கண் பிணை எழில் மான் நோக்கின்
கார் எதிர் தளிர் மேனி கவின் பெறு சுடர் நுதல்
கூர் எயிற்று முகை வெண் பல் கொடி புரையும் நுசுப்பினாய்
நேர் சிலம்பு அரி ஆர்ப்ப நிரை தொடி கை வீசினை		5
ஆர் உயிர் வௌவிக்கொண்டு அறிந்தீயாது இறப்பாய் கேள்
உளனா என் உயிரை உண்டு உயவு நோய் கைம்மிக
இளமையான் உணராதாய் நின் தவறு இல்லானும்
களைநர் இல் நோய் செய்யும் கவின் அறிந்து அணிந்து தம்

வளமையான் போத்தந்த நுமர் தவறு இல் என்பாய்		10
நடை மெலிந்து அயர்வு-உறீஇ நாளும் என் நலியும் நோய்
மடமையான் உணராதாய் நின் தவறு இல்லானும்
இடை நில்லாது எய்க்கும் நின் உரு அறிந்து அணிந்து தம்
உடைமையால் போத்தந்த நுமர் தவறு இல் என்பாய்
அல்லல் கூர்ந்து அழிவு-உற அணங்கு_ஆகி அடரும் நோய்	15
சொல்லினும் அறியாதாய் நின் தவறு இல்லானும்
ஒல்லையே உயிர் வௌவும் உரு அறிந்து அணிந்து தம்
செல்வத்தால் போத்தந்த நுமர் தவறு இல் என்பாய்
என ஆங்கு

ஒறுப்பின் யான் ஒறுப்பது நுமரை யான் மற்று இ நோய்		20
பொறுக்கலாம் வரைத்து அன்றி பெரிது ஆயின் பொலம் குழாய்
மறுத்து இ ஊர் மன்றத்து மடல்_ஏறி
நிறுக்குவென் போல்வல் யான் நீ படு பழியே

#59
தளை நெகிழ் பிணி நிவந்த பாசடை தாமரை
முளை நிமிர்ந்தவை போலும் முத்து கோல் அவிர் தொடி
அடுக்கம் நாறும் அலர் காந்தள் நுண் ஏர் தண் ஏர் உருவின்
துடுப்பு என புரையும் நின் திரண்ட நேர் அரி முன்கை
சுடர் விரி வினை வாய்ந்த தூதையும் பாவையும்		5
விளையாட அரி பெய்த அழகு அமை புனை வினை
ஆய் சிலம்பு எழுந்து ஆர்ப்ப அம் சில இயலும் நின்
பின்னு விட்டு இருளிய ஐம்பால் கண்டு என் பால
என்னை விட்டு இகத்தர இறந்தீவாய் கேள் இனி

மருளி யான் மருள்-உற இவன் உற்றது எவன் என்னும்		10
அருள் இலை இவட்கு என அயலார் நின் பழிக்கும்_கால்
வை எயிற்றவர் நாப்பண் வகை அணி பொலிந்து நீ
தையில் நீர் ஆடிய தவம் தலைப்படுவாயோ
உருள்_இழாய் ஒளி வாட இவன் உள் நோய் யாது என்னும்
அருள் இலை இவட்கு என அயலார் நின் பழிக்கும்_கால்		15
பொய்தல மகளையாய் பிறர் மனை பாடி நீ
எய்திய பலர்க்கு ஈத்த பயம் பயக்கிற்பதோ
ஆய்_தொடி ஐது உயிர்த்து இவன் உள் நோய் யாது என்னும்
நோய் இலை இவட்கு என நொதுமலர் பழிக்கும்-கால்

சிறு முத்தனை பேணி சிறு சோறு மடுத்து நீ			20
நறு நுதலவரொடு நக்கது நன்கு இயைவதோ
என ஆங்கு
அனையவை உளையவும் யான் நினக்கு உரைத்ததை
இனைய நீ செய்தது உதவாய் ஆயின் சே-இழாய்
செய்ததன் பயம் பற்று விடாது				25
நயம் பற்று விடின் இல்லை நசைஇயோர் திறத்தே

#60
சுணங்கு அணி வன முலை சுடர் கொண்ட நறு நுதல்
மணம் கமழ் நறும் கோதை மாரி வீழ் இரும் கூந்தல்
நுணங்கு எழில் ஒண் தித்தி நுழை நொசி மட மருங்குல்
வணங்கு இறை வரி முன்கை வரி ஆர்ந்த அல்குலாய்
கண் ஆர்ந்த நலத்தாரை கதுமென கண்டவர்க்கு		5
உள் நின்ற நோய் மிக உயிர் எஞ்சு துயர் செய்தல்
பெண் அன்று புனை_இழாய் என கூறி தொழூஉம் தொழுதே
கண்ணும் நீர் ஆக நடுங்கினன் இன் நகாய்
என் செய்தான்-கொல்லோ இஃது ஒத்தன் தன்-கண்

பொரு களிறு அன்ன தகை சாம்பி உள்ளுள்			10
உருகுவான் போலும் உடைந்து
தெருவின்-கண் காரணம் இன்றி கலங்குவார் கண்டு நீ
வாரணவாசி பதம் பெயர்த்தல் ஏதில
நீ நின் மேல் கொள்வது எவன்
அலர் முலை ஆய் இழை நல்லாய் கதுமென			15
பேர் அமர் உண்கண் நின் தோழி உறீஇய
ஆர் அஞர் எவ்வம் உயிர் வாங்கும்
மற்று இ நோய் தீரும் மருந்து அருளாய் ஒண்_தொடீ
நின் முகம் காணும் மருந்தினேன் என்னுமால்

நின் முகம் தான் பெறின் அல்லது கொன்னே			20
மருந்து பிறிது யாதும் இல்லேல் திருந்து_இழாய்
என் செய்வாம்-கொல் இனி நாம் பொன் செய்வாம்
ஆறு விலங்கி தெருவின்-கண் நின்று ஒருவன்
கூறும் சொல் வாய் என கொண்டு அதன் பண்பு உணராம்
தேறல் எளிது என்பாம் நாம்				25
ஒருவன் சாம் ஆறு எளிது என்பாம் மற்று
சிறிது ஆங்கே மாணா ஊர் அம்பல் அலரின் அலர்க என
நாணும் நிறையும் நயப்பு இல் பிறப்பு இலி
பூண் ஆகம் நோக்கி இமையான் நயந்து நம்

கேண்மை விருப்பு-உற்றவனை எதிர் நின்று			30
நாண் அட பெயர்த்த நயவரவு இன்றே

#61
எல்லா இஃது ஒத்தன் என் பெறான் கேட்டை காண்
செல்வம் கடைகொள சாஅய் சான்றவர்
அல்லல் களை தக்க கேளிர் உழை சென்று
சொல்லுதல்-உற்று உரைக்கல்லாதவர் போல
பல் ஊழ் பெயர்ந்து என்னை நோக்கும் மற்று யான் நோக்கின்	5
மெல்ல இறைஞ்சும் தலை
எல்லா நீ முன்னத்தான் ஒன்று குறித்தாய் போல் காட்டினை
நின்னின் விடாஅ நிழல் போல் திரிதருவாய்
என் நீ பெறாதது ஈது என்

சொல்லின் மறாதீவாள்-மன்னோ இவள்			10
செறாஅது ஈதல் இரந்தார்க்கு ஒன்று ஆற்றாது வாழ்தலின்
சாதலும் கூடுமாம் மற்று
இவள் தந்தை காதலின் யார்க்கும் கொடுக்கும் விழு பொருள்
யாது நீ வேண்டியது
பேதாய் பொருள் வேண்டும் புன்கண்மை ஈண்டு இல்லை யாழ	15
மருளி மட நோக்கின் நின் தோழி என்னை
அருளீயல் வேண்டுவல் யான்
அன்னையோ மண்டு அமர் அட்ட களிறு அன்னான் தன்னை ஒரு
பெண்டிர் அருள கிடந்தது எவன்-கொலோ

ஒண்_தொடீ நாண் இலன் மன்ற இவன்			20
ஆயின் ஏஎ
பல்லார் நக்கு எள்ளப்படு மடல்_மா ஏறி
மல்லல் ஊர் ஆங்கண் படுமே நறு_நுதல்
நல்காள் கண்மாறிவிடின் என செல்வான் நாம்
எள்ளி நகினும் வரூஉம் இடையிடை			25
கள்வர் போல் நோக்கினும் நோக்கும் குறித்தது
கொள்ளாது போகா குணன் உடையன் எந்தை தன்
உள்ளம் குறைபடாவாறு

#62
ஏஎ இஃது ஒத்தன் நாண் இலன் தன்னொடு
மேவேம் என்பாரையும் மேவினன் கைப்பற்றும்
மேவினும் மேவா_கடையும் அஃது எல்லாம்
நீ அறிதி யான் அஃது அறிகல்லேன் பூ அமன்ற
மெல் இணர் செல்லா கொடி அன்னாய் நின்னை யான்		5
புல் இனிது ஆகலின் புல்லினென் எல்லா
தமக்கு இனிது என்று வலிதின் பிறர்க்கு இன்னா
செய்வது நன்று ஆமோ மற்று
சுடர் தொடீ போற்றாய் களை நின் முதுக்குறைமை போற்றி கேள்

வேட்டார்க்கு இனிது ஆயின் அல்லது நீர்க்கு இனிது என்று	10
உண்பவோ நீர் உண்பவர்
செய்வது அறிகல்லேன் யாது செய்வேன்-கொலோ
ஐ_வாய்_அரவின் இடைப்பட்டு நைவாரா
மை இல் மதியின் விளங்கும் முகத்தாரை
வௌவி கொளலும் அறன் என கண்டன்று			15
அறனும் அது கண்டு அற்று ஆயின் திறன் இன்றி
கூறும் சொல் கேளான் நலிதரும் பண்டு நாம்
வேறு அல்லம் என்பது ஒன்று உண்டால் அவனொடு
மாறு உண்டோ நெஞ்சே நமக்கு

#63
நோக்கும்-கால் நோக்கி தொழூஉம் பிறர் காண்பார்
தூக்கு இலி தூற்றும் பழி என கை கவித்து
போக்கும்-கால் போக்கு நினைந்து இருக்கும் மற்று நாம்
காக்கும் இடம் அன்று இனி
எல்லா எவன் செய்வாம்				5
பூ குழாய் செல்லல் அவன் உழை கூஉய்_கூஉய்
விரும்பி யான் விட்டேனும் போல்வல் என் தோள் மேல்
கரும்பு எழுது தொய்யிற்கு செல்வல் ஈங்கு ஆக
இருந்தாயோ என்று ஆங்கு இற

அவன் நின் திருந்து அடி மேல் வீழ்ந்து இரக்கும் நோய் தீர்க்கும்	10
மருந்து நீ ஆகுதலான்
இன்னும் கடம் பூண்டு ஒரு-கால் நீ வந்தை உடம்பட்டாள்
என்னாமை என் மெய் தொடு
இதோ அடங்க கேள்
நின்னொடு சூழும்-கால் நீயும் நிலம் கிளையா			15
என்னொடு நிற்றல் எளிது அன்றோ மற்று அவன்
தன்னொடு நின்று விடு

#64
அணி முகம் மதி ஏய்ப்ப அ மதியை நனி ஏய்க்கும்
மணி முகம் மா மழை நின் பின் ஒப்ப பின்னின்-கண்
விரி நுண் நூல் சுற்றிய ஈர் இதழ் அலரி
அரவு-கண் அணி உறழ் ஆரல் மீன் தகை ஒப்ப
அரும் படர் கண்டாரை செய்து ஆங்கு இயலும்		5
விரிந்து ஒலி கூந்தலாய் கண்டை எமக்கு
பெரும் பொன் படுகுவை பண்டு
ஏஎ எல்லா மொழிவது கண்டை இஃது ஒத்தன் தொய்யில்
எழுதி இறுத்த பெரும் பொன் படுகம்

உழுவது உடையமோ யாம்				10
உழுதாய்
சுரும்பு இமிர் பூ கோதை அம் நல்லாய் யான் நின்
திருந்து இழை மென் தோள் இழைத்த மற்று இஃதோ
கரும்பு எல்லாம் நின் உழவு அன்றோ ஒருங்கே
துகள் அறு வாள் முகம் ஒப்ப மலர்ந்த			15
குவளையும் நின் உழவு அன்றோ இகலி
முகை மாறு கொள்ளும் எயிற்றாய் இவை அல்ல
என் உழுவாய் நீ மற்று இனி
எல்லா நல் தோள் இழைத்த கரும்புக்கு நீ கூறு

முற்று எழில் நீல மலர் என உற்ற			20
இரும்பு ஈர் வடி அன்ன உண்கட்கும் எல்லாம்
பெரும் பொன் உண்டு என்பாய் இனி
நல்லாய் இகுளை கேள்
ஈங்கே தலைப்படுவன் உண்டான் தலைப்பெயின்
வேந்து கொண்டு அன்ன பல				25
ஆங்கு ஆக அ திறம் அல்லா-கால் வேங்கை வீ
முற்று எழில் கொண்ட சுணங்கு அணி பூண் ஆகம்
பொய்த்து ஒரு-கால் எம்மை முயங்கினை சென்றீமோ
முத்து ஏர் முறுவலாய் நீ படும் பொன் எல்லாம்

உத்தி எறிந்துவிடற்கு					30

#65
திருந்து_இழாய் கேளாய் நம் ஊர்க்கு எல்லாம் சாலும்
பெரு நகை அல்கல் நிகழ்ந்தது ஒரு நிலையே
மன்பதை எல்லாம் மடிந்த இரும் கங்குல்
அம் துகில் போர்வை அணி பெற தைஇ நம்
இன் சாயல் மார்பன் குறி நின்றேன் யான் ஆக		5
தீர தறைந்த தலையும் தன் கம்பலும்
கார குறைந்து கறைப்பட்டு வந்து நம்
சேரியின் போகா முட முதிர் பார்ப்பானை
தோழி நீ போற்றுதி என்றி அவன் ஆங்கே

பாரா குறழா பணியா பொழுது அன்றி			10
யார் இவண் நின்றீர் என கூறி பையென
வை காண் முது பகட்டின் பக்கத்தின் போகாது
தையால் தம்பலம் தின்றியோ என்று தன்
பக்கு அழித்து கொண்டீ என தரலும் யாது ஒன்றும்
வாய்வாளேன் நிற்ப கடிது அகன்று கைமாறி			15
கைப்படுக்கப்பட்டாய் சிறுமி நீ மற்று யான்
ஏனை பிசாசு அருள் என்னை நலிதரின்
இ ஊர் பலி நீ பெறாஅமல் கொள்வேன்
என பலவும் தாங்காது வாய் பாடி நிற்ப

முது பார்ப்பான் அஞ்சினன் ஆதல் அறிந்து யான் எஞ்சாது	20
ஒரு கை மணல் கொண்டு மேல் தூவ கண்டே
கடிது அரற்றி பூசல் தொடங்கினன் ஆங்கே
ஒடுங்கா வயத்தின் கொடும் கேழ் கடுங்கண்
இரும் புலி கொள்-மார் நிறுத்த வலையுள் ஓர்
ஏதில் குறு நரி பட்டு அற்றால் காதலன்			25
காட்சி அழுங்க நம் ஊர்க்கு எலாஅம்
ஆகுலம் ஆகி விளைந்ததை என்றும் தன்
வாழ்க்கை அது ஆக கொண்ட முது பார்ப்பான்
வீழ்க்கை பெரும் கரும்_கூத்து
@ மூன்றாவது மருதக்கலி

#66
வீங்கு நீர் அவிழ் நீலம் பகர்பவர் வயல் கொண்ட
ஞாங்கர் மலர் சூழ்தந்து ஊர் புகுந்த வரி வண்டு
ஓங்கு உயர் எழில் யானை கனை கடாம் கமழ் நாற்றம்
ஆங்கு அவை விருந்து ஆற்ற பகல் அல்கி கங்குலான்
வீங்கு இறை வடு கொள வீழுநர் புணர்ந்தவர்			5
தேம் கமழ் கதுப்பினுள் அரும்பு அவிழ் நறு முல்லை
பாய்ந்து ஊதி படர் தீர்ந்து பண்டு தாம் மரீஇய
பூ பொய்கை மறந்து உள்ளா புனல் அணி நல் ஊர
அணை மென் தோள் யாம் வாட அமர் துணை புணர்ந்து நீ

மண மனையாய் என வந்த மல்லலின் மாண்பு அன்றோ		10
பொது கொண்ட கவ்வையின் பூ அணி பொலிந்த நின்
வதுவை அம் கமழ் நாற்றம் வைகறை பெற்றதை
கனலும் நோய் தலையும் நீ கனம் குழையவரொடு
புனல் உளாய் என வந்த பூசலின் பெரிது அன்றோ
தார் கொண்டாள் தலை கோதை தடுமாறி பூண்ட நின்		15
ஈர் அணி சிதையாது எம் இல் வந்து நின்றதை
தணந்ததன் தலையும் நீ தளர்_இயலவரொடு
துணங்கையாய் என வந்த கவ்வையின் கடப்பு அன்றோ
ஒளி பூத்த நுதலாரோடு ஓர் அணி பொலிந்த நின்

களி தட்ப வந்த இ கவின் காண இயைந்ததை		20
என ஆங்கு
அளி பெற்றேம் எம்மை நீ அருளினை விளியாது
வேட்டோர் திறத்து விரும்பிய நின் பாகனும்
நீட்டித்தாய் என்று கடாஅம் கடும் திண் தேர்
பூட்டு விடாஅ நிறுத்து					25

# 67
கார் முற்றி இணர் ஊழ்த்த கமழ் தோட்ட மலர் வேய்ந்து
சீர் முற்றி புலவர் வாய் சிறப்பு எய்தி இரு நிலம்
தார் முற்றியது போல தகை பூத்த வையை தன்
நீர் முற்றி மதில் பொரூஉம் பகை அல்லால் நேராதார்
போர் முற்று ஒன்று அறியாத புரிசை சூழ் புனல் ஊரன்		5
நல_தகை எழில் உண்கண் நல்லார் தம் கோதையால்
அலைத்த புண் வடு காட்டி அன்பு இன்றி வரின் எல்லா
புலப்பென் யான் என்பேன்-மன் அ நிலையே அவன் காணின்
கலப்பென் என்னும் இ கையறு நெஞ்சே

கோடு எழில் அகல் அல்குல் கொடி அன்னார் முலை மூழ்கி	10
பாடு அழி சாந்தினன் பண்பு இன்றி வரின் எல்லா
ஊடுவென் என்பேன்-மன் அ நிலையே அவன் காணின்
கூடுவென் என்னும் இ கொள்கையில் நெஞ்சே
இனி புணர்ந்த எழில் நல்லார் இலங்கு எயிறு உறாஅலின்
நனி சிவந்த வடு காட்டி நாண் இன்றி வரின் எல்லா		15
துனிப்பென் யான் என்பேன்-மன் அ நிலையே அவன் காணின்
தனித்தே தாழும் இ தனியில் நெஞ்சே
என ஆங்கு
பிறை புரை ஏர்_நுதால் தாம் எண்ணியவை எல்லாம்

துறைபோதல் ஒல்லுமோ தூ ஆகாது ஆங்கே			20
அறை போகும் நெஞ்சு உடையார்க்கு

# 68
பொது மொழி பிறர்க்கு இன்றி முழுது ஆளும் செல்வர்க்கு
மதி மொழி இடல் மாலை வினைவர் போல் வல்லவர்
செது மொழி சீத்த செவி செறு ஆக
முது மொழி நீரா புலன் நா உழவர்
புது மொழி கூட்டுண்ணும் புரிசை சூழ் புனல் ஊர		5
ஊரன்-மன் உரன் அல்லன் நமக்கு என்ன உடன் வாளாது
ஓர் ஊர் தொக்கு இருந்த நின் பெண்டிருள் நேர் ஆகி
களையா நின் குறி வந்து எம் கதவம் சேர்ந்து அசைத்த கை
வளையின் வாய் விடல் மாலை மகளிரை நோவேமோ

கேள் அலன் நமக்கு அவன் குறுகன்-மின் என மற்று எம்		10
தோளொடு பகைபட்டு நினை வாடு நெஞ்சத்தேம்
ஊடியார் நலம் தேம்ப ஒடியெறிந்து அவர்-வயின்
மால் தீர்க்கும் அவன் மார்பு என்று எழுந்த சொல் நோவேமோ
முகை வாய்த்த முலை பாய குழைந்த நின் தார் எள்ள
வகை வரி செப்பினுள் வைகிய கோதையேம்			15
சேரியால் சென்று நீ சேர்ந்த இல் வினாயினன்
தேரொடு திரிதரும் பாகனை பழிப்பேமோ
ஒலி கொண்ட சும்மையான் மண மனை குறித்து எம் இல்
பொலிக என புகுந்த நின் புலையனை கண்ட யாம்

என ஆங்கு						20
நனவினான் வேறு ஆகும் வேளா முயக்கம்
மனை வரின் பெற்று உவந்து மற்று எம் தோள் வாட
இனையர் என உணர்ந்தார் என்று ஏக்கற்று ஆங்கு
கனவினான் எய்திய செல்வத்து அனையதே
ஐய எமக்கு நின் மார்பு				25

# 69
போது அவிழ் பனி பொய்கை புதுவது தளைவிட்ட
தாது சூழ் தாமரை தனி மலர் புறம் சேர்பு
காதல் கொள் வதுவை நாள் கலிங்கத்துள் ஒடுங்கிய
மாதர் கொள் மான் நோக்கின் மடந்தை தன் துணை ஆக
ஓது உடை அந்தணன் எரி வலம் செய்வான் போல்		5
ஆய் தூவி அன்னம் தன் அணி நடை பெடையொடு
மே தக திரிதரூஉம் மிகு புனல் நல் ஊர
தெள் அரி சிலம்பு ஆர்ப்ப தெருவின் கண் தாக்கி நின்
உள்ளம் கொண்டு ஒழித்தாளை குறைகூறி கொள நின்றாய்

துணிந்தது பிறிது ஆக துணிவு இலள் இவள் என		10
பணிந்தாய் போல் வந்து ஈண்டு பயனில மொழிவாயோ
பட்டு-உழி அறியாது பாகனை தேரொடும்
விட்டு அவள் வரல் நோக்கி விருந்து ஏற்றுக்கொள நின்றாய்
நெஞ்சத்த பிற ஆக நிறை இலள் இவள் என
வஞ்சத்தான் வந்து ஈங்கு வலி அலைத்தீவாயோ		15
இணர் ததை தண் காவின் இயன்ற நின் குறி வந்தாள்
புணர்வினில் புகன்று ஆங்கே புனல் ஆட பண்ணியாய்
தருக்கிய பிற ஆக தன் இலள் இவள் என
செருக்கினால் வந்து ஈங்கு சொல் உகுத்தீவாயோ

என ஆங்கு						20
தருக்கேம் பெரும நின் நல்கல் விருப்பு-உற்று
தாழ்ந்தாய் போல் வந்து தகவு இல செய்யாது
சூழ்ந்தவை செய்து மற்று எம்மையும் உள்ளுவாய்
வீழ்ந்தார் விருப்பு அற்ற-கால்

# 70
மணி நிற மலர் பொய்கை மகிழ்ந்து ஆடும் அன்னம் தன்
அணி மிகு சேவலை அகல் அடை மறைத்து என
கதுமென காணாது கலங்கி அ மட பெடை
மதி நிழல் நீருள் கண்டு அது என உவந்து ஓடி
துன்ன தன் எதிர் வரூஉம் துணை கண்டு மிக நாணி		5
பன் மலர் இடை புகூஉம் பழனம் சேர் ஊர கேள்
நலம் நீப்ப துறந்து எம்மை நல்காய் நீ விடுதலின்
பல நாளும் படாத கண் பாயல் கொண்டு இயைபவால்
துணை மலர் கோதையார் வைகலும் பாராட்ட

மண மனை ததும்பும் நின் மண முழ வந்து எடுப்புமே		10
அகல நீ துறத்தலின் அழுது ஓவா உண்கண் எம்
புதல்வனை மெய் தீண்ட பொருந்துதல் இயைபவால்
நினக்கு ஒத்த நல்லாரை நெடு நகர் தந்து நின்
தமர் பாடும் துணங்கையுள் அரவம் வந்து எடுப்புமே
வாராய் நீ துறத்தலின் வருந்திய எமக்கு ஆங்கே		15
நீர் இதழ் புலரா கண் இமை கூம்ப இயைபவால்
நேர் இழை நல்லாரை நெடு நகர் தந்து நின்
தேர் பூண்ட நெடு நன் மான் தெண் மணி வந்து எடுப்புமே
என ஆங்கு

மெல்லியான் செவி முதல் மேல்வந்தான் காலை போல்		20
எல்லாம் துயிலோ எடுப்புக நின் பெண்டிர்
இல்லின் எழீஇய யாழ் தழீஇ கல்லா வாய்
பாணன் புகுதரா-கால்

# 71
விரி கதிர் மண்டிலம் வியல் விசும்பு ஊர்தர
புரி தலை தளை அவிழ்ந்த பூ அங்கண் புணர்ந்து ஆடி
வரி வண்டு வாய் சூழும் வளம் கெழு பொய்கையுள்
துனி சிறந்து இழிதரும் கண்ணின் நீர் அறல் வார
இனிது அமர் காதலன் இறைஞ்சி தன் அடி சேர்பு		5
நனி விரைந்து அளித்தலின் நகுபவள் முகம் போல
பனி ஒரு திறம் வார பாசடை தாமரை
தனி மலர் தளைவிடூஉம் தண் துறை நல் ஊர
ஒரு நீ பிறர் இல்லை அவன் பெண்டிர் என உரைத்து

தேரொடும் தேற்றிய பாகன் வந்தீயான்-கொல்			10
ஓர் இல் தான் கொணர்ந்து உய்த்தார் புலவியுள் பொறித்த புண்
பாரித்து புணர்ந்த நின் பரத்தைமை காணிய
மடுத்து அவன் புகு-வழி மறையேன் என்று யாழொடும்
எடுத்து சூள் பல உற்ற பாணன் வந்தீயான்-கொல்
அடுத்து தன் பொய் உண்டார் புணர்ந்த நின் எருத்தின்-கண்	15
எடுத்துக்கொள்வது போலும் தொடி வடு காணிய
தணந்தனை என கேட்டு தவறு ஓராது எமக்கு நின்
குணங்களை பாராட்டும் தோழன் வந்தீயான்-கொல்
கணம் குழை நல்லவர் கதுப்பு அறல் அணை துஞ்சி

அணங்கு போல் கமழும் நின் அலர் மார்பு காணிய		20
என்று நின்
தீரா முயக்கம் பெறுநர் புலப்பவர்
யார் நீ வரு நாள் போல் அமைகுவம் யாம் புக்கீமோ
மாரிக்கு அவா-உற்று பீள் வாடும் நெல்லிற்கு ஆங்கு
ஆரா துவலை அளித்தது போலும் நீ			25
ஓர் யாட்டு ஒரு கால் வரவு

# 72
இணைபட நிவந்த நீல மென் சேக்கையுள்
துணை புணர் அன்னத்தின் தூவி மெல் அணை அசைஇ
சேடு இயல் வள்ளத்து பெய்த பால் சில காட்டி
ஊடும் மென் சிறு கிளி உணர்ப்பவள் முகம் போல
புது நீர புதல் ஒற்ற புணர் திரை பிதிர் மல்க			5
மதி நோக்கி அலர் வீத்த ஆம்பல் வால் மலர் நண்ணி
கடி கய தாமரை கமழ் முகை கரை மாவின்
வடி தீண்ட வாய் விடூஉம் வயல் அணி நல் ஊர
கண்ணி நீ கடி கொண்டார் கனை-தொறும் யாம் அழ

பண்ணினால் களிப்பிக்கும் பாணன் காட்டு என்றானோ		10
பேணான் என்று உடன்றவர் உகிர் செய்த வடுவினான்
மேல் நாள் நின் தோள் சேர்ந்தார் நகை சேர்ந்த இதழினை
நாடி நின் தூது ஆடி துறை செல்லாள் ஊரவர்
ஆடை கொண்டு ஒலிக்கும் நின் புலைத்தி காட்டு என்றாளோ
கூடியார் புனல் ஆட புணை ஆய மார்பினில்			15
ஊடியார் எறிதர ஒளி விட்ட அரக்கினை
வெறிது நின் புகழ்களை வேண்டார் இல் எடுத்து ஏத்தும்
அறிவு உடை அந்தணன் அவளை காட்டு என்றானோ
களி பட்டார் கமழ் கோதை கயம் பட்ட உருவின் மேல்

குறி பெற்றார் குரல் கூந்தல் கோடு உளர்ந்த துகளினை		20
என ஆங்கு
செறிவு-உற்றேம் எம்மை நீ செறிய அறிவுற்று
அழிந்து உகு நெஞ்சத்தேம் அல்லல் உழப்ப
கழிந்தவை உள்ளாது கண்டவிடத்தே
அழிந்து நின் பேணி கொளலின் இழிந்ததோ			25
இ நோய் உழத்தல் எமக்கு

# 73
அகன் துறை அணி பெற புதலொடு தாழ்ந்த
பகன்றை பூ உற நீண்ட பாசடை தாமரை
கண் பொர ஒளி விட்ட வெள்ளிய வள்ளத்தான்
தண் கமழ் நறும் தேறல் உண்பவள் முகம் போல
வண் பிணி தளைவிடூஉம் வயல் அணி நல் ஊர		5
நோ_தக்காய் என நின்னை நொந்தீவார் இல்-வழி
தீது இலேன் யான் என தேற்றிய வருதி-மன்
ஞெகிழ் தொடி இளையவர் இடை முலை தாது சோர்ந்து
இதழ் வனப்பு இழந்த நின் கண்ணி வந்து உரையா-கால்

கனற்றி நீ செய்வது கடிந்தீவார் இல்-வழி			10
மனத்தில் தீது இலன் என மயக்கிய வருதி-மன்
அலமரல் உண்கண்ணார் ஆய் கோதை குழைத்த நின்
மலர் மார்பின் மறுப்பட்ட சாந்தம் வந்து உரையா-கால்
என்னை நீ செய்யினும் உரைத்தீவார் இல்-வழி
முன் அடி பணிந்து எம்மை உணர்த்திய வருதி-மன்		15
நிரை தொடி நல்லவர் துணங்கையுள் தலைக்கொள்ள
கரை இடை கிழிந்த நின் காழகம் வந்து உரையா-கால்
என ஆங்கு
மண்டு நீர் ஆரா மலி கடல் போலும் நின்

தண்டா பரத்தை தலைக்கொள்ள நாளும்			20
புல_தகை பெண்டிரை தேற்றி மற்று யாம் எனின்
தோல் ஆமோ நின் பொய் மருண்டு

# 74
பொய்கை பூ புதிது உண்ட வரி வண்டு கழி பூத்த
நெய்தல் தாது அமர்ந்து ஆடி பாசடை சேப்பினுள்
செய்து இயற்றியது போல வயல் பூத்த தாமரை
மை தபு கிளர் கொட்டை மாண் பதி படர்தரூஉம்
கொய் குழை அகை காஞ்சி துறை அணி நல் ஊர		5
அன்பு இலன் அறன் இலன் எனப்படான் என ஏத்தி
நின் புகழ் பல பாடும் பாணனும் ஏமுற்றான்
நஞ்சு உயிர் செகுத்தலும் அறிந்து உண்டு ஆங்கு அளி இன்மை
கண்டும் நின் மொழி தேறும் பெண்டிரும் ஏமுற்றார்

முன் பகல் தலைக்கூடி நன் பகல் அவள் நீத்து		10
பின்பகல் பிறர் தேரும் நெஞ்சமும் ஏமுற்றாய்
என ஆங்கு
கிண்கிணி மணி தாரோடு ஒலித்து ஆர்ப்ப ஒண் தொடி
பேர் அமர் கண்ணார்க்கும் படு வலை இது என
ஊரவர் உடன் நக திரிதரும்				15
தேர் ஏமுற்றன்று நின்னினும் பெரிதே

# 75
நீர் ஆர் செறுவில் நெய்தலொடு நீடிய
நேர் இதழ் ஆம்பல் நிரை இதழ் கொள்-மார்
சீர் ஆர் சேய் இழை ஒலிப்ப ஓடும்
ஓரை மகளிர் ஓதை வெரீஇ எழுந்து
ஆரல் ஆர்கை அம் சிறை தொழுதி			5
உயர்ந்த பொங்கர் உயர் மரம் ஏறி
அமர் கண் மகளிர் அலப்பிய அ நோய்
தமர்க்கு உரைப்பன போல் பல் குரல் பயிற்றும்
உயர்ந்த போரின் ஒலி நல் ஊரன்

புதுவோர் புணர்தல் வெய்யன் ஆயின்			10
வதுவை நாளால் வைகலும் அஃது யான்
நோவேன் தோழி நோவாய் நீ என
என் பார்த்து உறுவோய் கேள் இனி தெற்றென
எல்லினை வருதி எவன் குறித்தனை என
சொல்லாது இருப்பேன் ஆயின் ஒல்லென			15
விரி உளை கலி_மான் தேரொடு வந்த
விருந்து எதிர்கோடலின் மறப்பல் என்றும்
வாடிய பூவொடு வாரல் எம் மனை என
ஊடி இருப்பேன் ஆயின் நீடாது

அச்சு ஆறு ஆக உணரிய வருபவன்			20
பொய் சூள் அஞ்சி புலவேன் ஆகுவல்
பகல் ஆண்டு அல்கினை பரத்த என்று யான்
இகலி இருப்பேன் ஆயின் தான் தன்
முதல்வன் பெரும் பெயர் முறையுளி பெற்ற
புதல்வன் புல்லி பொய் துயில் துஞ்சும்			25
ஆங்க
விருந்து எதிர்கொள்ளவும் பொய் சூள் அஞ்சவும்
அரும் பெறல் புதல்வனை முயங்க காணவும்
ஆங்கு அவிந்து ஒழியும் என் புலவி தாங்காது

அவ்வவ் இடத்தான் அவை_அவை காண			30
பூ கண் மகளிர் புனை நலம் சிதைக்கும்
மாய மகிழ்நன் பரத்தைமை
நோவென் தோழி கடன் நமக்கு எனவே

# 76
புனை இழை நோக்கியும் புனல் ஆட புறம் சூழ்ந்தும்
அணி வரி தைஇயும் நம் இல் வந்து வணங்கியும்
நினையுபு வருந்தும் இ நெடுந்தகை திறத்து இ ஊர்
இனையள் என்று எடுத்து ஓதற்கு அனையையோ நீ என
வினவுதி ஆயின் விளங்கு_இழாய் கேள் இனி			5
செம் விரல் சிவப்பு ஊர சேண் சென்றாய் என்று அவன்
பௌவ நீர் சாய் கொழுதி பாவை தந்தனைத்தற்கோ
கௌவை நோய் உற்றவர் காணாது கடுத்த சொல்
ஒவ்வா என்று உணராய் நீ ஒரு நிலையே உரைத்ததை

ஒடுங்கி யாம் புகல் ஒல்லேம் பெயர்தர அவன் கண்டு		10
நெடும் கய மலர் வாங்கி நெறித்து தந்தனைத்தற்கோ
விடுந்தவர் விரகு இன்றி எடுத்த சொல் பொய்யாக
கடிந்ததும் இலையாய் நீ கழறிய வந்ததை
வரி தேற்றாய் நீ என வணங்கு இறை அவன் பற்றி
தெரி வேய் தோள் கரும்பு எழுதி தொய்யில் செய்தனைத்தற்கோ	15
புரிபு நம் ஆயத்தார் பொய்யாக எடுத்த சொல்
உரிது என உணராய் நீ உலமந்தாய் போன்றதை
என ஆங்கு
அரிது இனி ஆய்_இழாய் அது தேற்றல் புரிபு ஒருங்கு

அன்று நம் வதுவையுள் நமர் செய்வது இன்று ஈங்கே		20
தான் நயந்து இருந்தது இ ஊர் ஆயின் எவன்-கொலோ
நாம் செயல்பாலது இனி

# 77
இணை இரண்டு இயைந்து ஒத்த முகை நாப்பண் பிறிது யாதும்
துணை இன்றி தளைவிட்ட தாமரை தனி மலர்
திரு முகம் இறைஞ்சினள் வீழ்பவற்கு இனைபவள்
அரி மதர் மழை கண் நீர் அலர் முலை மேல் தெறிப்ப போல்
தகை மலர் பழனத்த புள் ஒற்ற ஒசிந்து ஒல்கி		5
மிக நனி சேர்ந்த அ முகை மிசை அ மலர்
அக இதழ் தண் பனி உறைத்தரும் ஊர கேள்
தண் தளிர் தகை பூத்த தாது எழில் நலம் செல
கொண்டு நீ மாறிய கவின் பெறல் வேண்டேன்-மன்

உண்டாதல் சாலா என் உயிர் சாதல் உணர்ந்து நின்		10
பெண்டு என பிறர் கூறும் பழி மாற பெறுகற்பின்
பொன் என பசந்த கண் போது எழில் நலம் செல
தொல் நலம் இழந்த கண் துயில் பெறல் வேண்டேன்-மன்
நின் அணங்கு உற்றவர் நீ செய்யும் கொடுமைகள்
என் உழை வந்து நொந்து உரையாமை பெறுகற்பின்		15
மாசு அற மண்-உற்ற மணி ஏசும் இரும் கூந்தல்
வீ சேர்ந்து வண்டு ஆர்க்கும் கவின் பெறல் வேண்டேன்-மன்
நோய் சேர்ந்த திறம் பண்ணி நின் பாணன் எம் மனை
நீ சேர்ந்த இல் வினாய் வாராமை பெறுகற்பின்

ஆங்க						20
கடைஇய நின் மார்பு தோயலம் என்னும்
இடையும் நிறையும் எளிதோ நின் காணின்
கடவுபு கை தங்கா நெஞ்சு என்னும் தம்மோடு
உடன் வாழ் பகை உடையார்க்கு

# 78
பன் மலர் பழனத்த பாசடை தாமரை
இன் மலர் இமிர்பு ஊதும் துணை புணர் இரும் தும்பி
உண்துறை உடைந்த பூ புனல் சாய்ப்ப புலந்து ஊடி
பண்பு உடை நன் நாட்டு பகை தலை வந்து என
அது கைவிட்டு அகன்று ஒரீஇ காக்கிற்பான் குடை நீழல்		5
பதி படர்ந்து இறைகொள்ளும் குடி போல பிறிதும் ஒரு
பொய்கை தேர்ந்து அலமரும் பொழுதினான் மொய் தப
இறை பகை தணிப்ப அ குடி பதி பெயர்ந்து ஆங்கு
நிறை புனல் நீங்க வந்து அ தும்பி அ மலர்

பறை தவிர்பு அசைவிடூஉம் பாய் புனல் நல் ஊர		10
நீங்கும்-கால் நிறம் சாய்ந்து புணரும்-கால் புகழ் பூத்து
நாம் கொண்ட குறிப்பு இவள் நலம் என்னும் தகையோ தான்
எரி இதழ் சோர்ந்து உக ஏதிலார் புணர்ந்தமை
கரி கூறும் கண்ணியை ஈங்கு எம் இல் வருவதை
சுடர் நோக்கி மலர்ந்து ஆங்கே படின் கூம்பும் மலர் போல் என்	15
தொடர் நீப்பின் தொகும் இவள் நலம் என்னும் தகையோ தான்
அலர் நாணி கரந்த நோய் கைம்மிக பிறர் கூந்தல்
மலர் நாறும் மார்பினை ஈங்கு எம் இல் வருவதை
பெயின் நந்தி வறப்பின் சாம் புலத்திற்கு பெயல் போல் யான்

செலின் நந்தி செறின் சாம்பும் இவள் என்னும் தகையோ தான்	20
முடி உற்ற கோதை போல் யாம் வாட ஏதிலார்
தொடி உற்ற வடு காட்டி ஈங்கு எம் இல் வருவதை
ஆங்க
ஐய அமைந்தன்று அனைத்து ஆக புக்கீமோ
வெய்யாரும் வீழ்வாரும் வேறு ஆக கையின்			25
முகை மலர்ந்து அன்ன முயக்கில் தகை இன்றே
தண் பனி வைகல் எமக்கு

# 79
புள் இமிழ் அகல் வயல் ஒலி செந்நெல் இடை பூத்த
முள் அரை தாமரை முழு_முதல் சாய்த்து அதன்
வள் இதழ் உற நீடி வயங்கிய ஒரு கதிர்
அவை புகழ் அரங்கின் மேல் ஆடுவாள் அணி நுதல்
வகை பெற செரீஇய வயந்தகம் போல் தோன்றும்		5
தகைபெறு கழனி அம் தண் துறை ஊர கேள்
அணியொடு வந்து ஈங்கு எம் புதல்வனை கொள்ளாதி
மணி புரை செம் வாய் நின் மார்பு அகலம் நனைப்பதால்
தோய்ந்தாரை அறிகுவேன் யான் என கமழும் நின்

சாந்தினால் குறி கொண்டாள் சாய்குவள் அல்லளோ		10
புல்லல் எம் புதல்வனை புகல் அகல் நின் மார்பில்
பல் காழ் முத்து அணி ஆரம் பற்றினன் பரிவானால்
மாண் இழை மட நல்லார் முயக்கத்தை நின் மார்பில்
பூணினால் குறிகொண்டாள் புலக்குவள் அல்லளோ
கண்டே எம் புதல்வனை கொள்ளாதி நின் சென்னி		15
வண்டு இமிர் வகை இணர் வாங்கினன் பரிவானால்
நண்ணியார் காட்டுவது இது என கமழும் நின்
கண்ணியால் குறிகொண்டாள் காய்குவள் அல்லளோ
என ஆங்கு

பூ கண் புதல்வனை பொய் பல பாராட்டி			20
நீங்காய் இகவாய் நெடும் கடை நில்லாதி
ஆங்கே அவர்-வயின் சென்றீ அணி சிதைப்பான்
ஈங்கு எம் புதல்வனை தந்து

# 80
நயம் தலை மாறுவார் மாறுக மாறா
கயம் தலை மின்னும் கதிர் விடு மு காழ்
பயந்த எம் கண் ஆர யாம் காண நல்கி
திகழ் ஒளி முத்து அங்கு அரும்பு ஆக தைஇ
பவழம் புனைந்த பருதி சுமப்ப				5
கவழம் அறியா நின் கை புனை வேழம்
புரி புனை பூம் கயிற்றின் பைபய வாங்கி
அரி புனை புட்டிலின் ஆங்கண் ஈர்த்து ஈங்கே
வருக எம் பாக_மகன்

கிளர் மணி ஆர்ப்ப ஆர்ப்ப சாஅய்_சாஅய் செல்லும்		10
தளர் நடை காண்டல் இனிது மற்று இன்னாதே
உளம் என்னா நுந்தை மாட்டு எவ்வம் உழப்பார்
வளை நெகிழ்பு யாம் காணும்_கால்
ஐய காமரு நோக்கினை அத்தத்தா என்னும் நின்
தே மொழி கேட்டல் இனிது மற்று இன்னாதே			15
உய்வு இன்றி நுந்தை நலன் உண சாஅய் சாஅய்-மார்
எவ்வ நோய் யாம் காணும்-கால்
ஐய திங்கள் குழவி வருக என யான் நின்னை
அம்புலி காட்டல் இனிது மற்று இன்னாதே

நல்காது நுந்தை புறம்மாறப்பட்டவர்			20
அல்குல் வரி யாம் காணும்-கால்
ஐய எம் காதில் கனம் குழை வாங்கி பெயர்-தொறும்
போது இல் வறும் கூந்தல் கொள்வதை நின்னை யாம்
ஏதிலார் கண் சாய நுந்தை வியல் மார்பில்
தாது தேர் வண்டின் கிளை பட தைஇய			25
கோதை பரிபு ஆட காண்கும்

# 81
மை அற விளங்கிய மணி மருள் அம் வாய் தன்
மெய் பெறா மழலையின் விளங்கு பூண் நனைத்தர
பொலம் பிறையுள் தாழ்ந்த புனை வினை உருள் கலன்
நலம் பெறு கமழ் சென்னி நகையொடு துயல்வர
உரு எஞ்சாது இடை காட்டும் உடை கழல் அம் துகில்		5
அரி பொலி கிண்கிணி ஆர்ப்பு ஓவா அடி தட்ப
பாலோடு அலர்ந்த முலை மறந்து முற்றத்து
கால் வல் தேர் கையின் இயக்கி நடை பயிற்றா
ஆல்_அமர்_செல்வன் அணி சால் பெரு விறல்

போல வரும் என் உயிர்				10
பெரும விருந்தொடு கைதூவா எம்மையும் உள்ளாய்
பெரும் தெருவில் கொண்டாடி ஞாயர் பயிற்ற
திருந்துபு நீ கற்ற சொற்கள் யாம் கேட்ப
மருந்து ஓவா நெஞ்சிற்கு அமிழ்தம் அயின்று அற்றா
பெருந்தகாய் கூறு சில					15
எல்_இழாய் சேய் நின்று நாம் கொணர்ந்த பாணன் சிதைந்து ஆங்கே
வாய் ஓடி ஏனாதிப்பாடியம் என்று அற்றா
நோய் நாம் தணிக்கும் மருந்து என பாராட்ட
ஓவாது அடுத்தடுத்து அத்தத்தா என்பான் மாண

வேய் மென் தோள் வேய்த்திறம் சேர்த்தலும் மற்று இவன்	20	
வாய் உள்ளின் போகான் அரோ
உள்ளி உழையே ஒருங்கு படை விட
கள்ளர் படர்தந்தது போல தாம் எம்மை
எள்ளும்-மார் வந்தாரே ஈங்கு
ஏதப்பாடு எண்ணி புரிசை வியல் உள்ளோர்			25
கள்வரை காணாது கண்டேம் என்பார் போல
சேய் நின்று செய்யாத சொல்லி சினவல் நின்
ஆணை கடக்கிற்பார் யார்
அதிர்வு இல் படிறு எருக்கி வந்து என் மகன் மேல்

முதிர் பூண் முலை பொருத ஏதிலாள் முச்சி			30
உதிர் துகள் உக்க நின் ஆடை ஒலிப்ப
எதிர் வளி நின்றாய் நீ செல்
இனி எல்லா யாம் தீது இலேம் என்று தெளிப்பவும் கைந்நீவி
யாதொன்றும் எம் கண் மறுத்தரவு இல் ஆயின்
மே தக்க எந்தை பெயரனை யாம் கொள்வேம்		35
தாவா விருப்பொடு கன்று யாத்து-உழி செல்லும்
ஆ போல் படர் தக நாம்

# 82
ஞாலம் வறம் தீர பெய்ய குணக்கு ஏர்பு
காலத்தில் தோன்றிய கொண்மூ போல் எம் முலை
பாலொடு வீங்க தவ நெடிது ஆயினை
புத்தேளிர் கோட்டம் வலம் செய்து இவனொடு
புக்க-வழி எல்லாம் கூறு				5
கூறுவேன் மேயாயே போல வினவி வழிமுறை
காயாமை வேண்டுவல் யான்
காயேம்
மட குறு_மாக்களோடு ஓரை அயரும்

அடக்கம் இல் போழ்தின்-கண் தந்தை காமுற்ற		10
தொடக்கத்து தாய் உழை புக்காற்கு அவளும்
மருப்பு பூண் கையுறை ஆக அணிந்து
பெருமான் நகை முகம் காட்டு என்பாள் கண்ணீர்
சொரி முத்தம் காழ் சோர்வ போன்றன மற்றும்
வழிமுறை தாய் உழை புக்காற்கு அவளும்			15
மயங்கு நோய் தாங்கி மகன் எதிர்வந்து
முயங்கினள் முத்தினள் நோக்கி நினைந்தே
நினக்கு யாம் யாரேம் ஆகுதும் என்று
வனப்பு உற கொள்வன நாடி அணிந்தனள்

ஆங்கே அரி மதர் உண்கண் பசப்ப நோய் செய்யும்		20
பெருமான் பரத்தைமை ஒவ்வாதி என்றாள்
அவட்கு இனிது ஆகி விடுத்தனன் போகி
தலை கொண்டு நம்மொடு காயும் மற்று ஈது ஓர்
புல தகை புத்தேள் இல் புக்கான் அலைக்கு ஒரு
கோல் தா நினக்கு அவள் யார் ஆகும் எல்லா			25
வருந்தி யாம் நோய் கூர நுந்தையை என்றும்
பருந்து எறிந்து அற்று ஆக கொள்ளும் கொண்டு ஆங்கே
தொடியும் உகிரும் படை ஆக நுந்தை
கடி உடை மார்பின் சிறு கண்ணும் உட்காள்

வடுவும் குறித்த ஆங்கே செய்யும் விடு இனி			30
அன்ன பிறவும் பெருமான் அவள்-வயின்
துன்னுதல் ஓம்பி திறவது இல் முன்னி நீ
ஐயம் இல்லாதவர் இல் ஒழிய எம் போல
கையாறு உடையவர் இல் அல்லால் செல்லல்
அமைந்தது இனி நின் தொழில்				35

#83
பெரும் திரு நிலைஇய வீங்கு சோற்று அகல் மனை
பொருந்து நோன் கதவு ஒற்றி புலம்பி யாம் உலமர
இளையவர் தழூஉ ஆடும் எக்கர் வாய் வியன் தெருவின்
விளையாட்டி கொண்டுவரற்கு என சென்றாய்
உளைவு இலை ஊட்டலென் தீம் பால் பெருகும் அளவு எல்லாம்	5
நீட்டித்த காரணம் என்
கேட்டீ
பெரு மடல் பெண்ணை பிணர் தோட்டு பைம் குரும்பை
குட வாய் கொடி பின்னல் வாங்கி தளரும்

பெரு மணி திண் தேர் குறு_மக்கள் நாப்பண்			10
அகல் நகர் மீள்தருவான் ஆக புரி ஞெகிழ்பு
நீல நிரை போது உறு காற்கு உலைவன போல்
சாலகத்து ஒல்கிய கண்ணர் உயர் சீர்த்தி
ஆல்_அமர்_செல்வன் அணி சால் மகன் விழா
கால்கோள் என்று ஊக்கி கதுமென நோக்கி			15
திருந்து அடி நூபுரம் ஆர்ப்ப இயலி விருப்பினால்
கண்ணும் நுதலும் கவுளும் கவவியார்க்கு
ஒண்மை எதிரிய அம் கையும் தண் என
செய்வன சிறப்பின் சிறப்பு செய்து இ இரா

எம்மொடு சேர்ந்து சென்றீவாயால் செம்மால்			20
நலம் புதிது உண்டு உள்ளா நாண் இலி செய்த
புலம்பு எலாம் தீர்க்குவேம்-மன் என்று இரங்குபு
வேற்று ஆனா தாயர் எதிர்கொள்ள மாற்றாத
கள்வனால் தங்கியது அல்லால் கதியாதி
ஒள்_இழாய் யான் தீது இலேன்				25
எள்ளலான் அம் மென் பணை தோள் நுமர் வேய்ந்த கண்ணியோடு
எம் இல் வருதியோ எல்லா நீ தன் மெய்-கண்
அம் தீம் சொல் நல்லார் அணிந்த கலம் காட்டி
முந்தை இருந்து மகன் செய்த நோய் தலை

வெந்த புண் வேல் எறிந்து அற்றால் வடுவொடு		30
தந்தையும் வந்து நிலை

#84
உறு வளி தூக்கும் உயர் சினை மாவின்
நறு வடி ஆர் இற்றவை போல் அழிய
கரந்து யான் அரக்கவும் கை நில்லா வீங்கி
சுரந்த என் மென் முலை பால் பழுது ஆக நீ
நல் வாயில் போத்தந்த பொழுதினான் எல்லா			5
கடவுள் கடி நகர்-தோறும் இவனை
வலம் கொளீஇ வா என சென்றாய் விலங்கினை
ஈரம் இலாத இவன் தந்தை பெண்டிருள்
யார் இல் தவிர்ந்தனை கூறு

நீருள் அடை மறை ஆய் இதழ் போது போல் கொண்ட		10
குடை_நிழல் தோன்றும் நின் செம்மலை காணூஉ
இவன் மன்ற யான் நோவ உள்ளம் கொண்டு உள்ளா
மகன் அல்லான் பெற்ற மகன் என்று அகல் நகர்
வாயில் வரை இறந்து போத்தந்து தாயர்
தெருவில் தவிர்ப்ப தவிர்ந்தனன் மற்று அவர்			15
தத்தம் கலங்களுள் கையுறை என்று இவற்கு
ஒத்தவை ஆராய்ந்து அணிந்தார் பிறன் பெண்டிர்
ஈத்தவை கொள்வானாம் இஃது ஒத்தன் சீத்தை
செறு தக்கான் மன்ற பெரிது

சிறு பட்டி ஏதிலார் கை எம்மை எள்ளுபு நீ தொட்ட		20
மோதிரம் யாவோ யாம் காண்கு
அவற்றுள் நறா இதழ் கண்டு அன்ன செம் விரற்கு ஏற்ப
சுறா ஏறு எழுதிய மோதிரம் தொட்டாள்
குறி அறிந்தேன் காமன் கொடி எழுதி என்றும்
செறியா பரத்தை இவன் தந்தை மார்பில்			25
பொறி ஒற்றிக்கொண்டு ஆள்வல் என்பது தன்னை
அறீஇய செய்த வினை
அன்னையோ இஃது ஒன்று
முந்தைய கண்டும் எழுகல்லாத என் முன்னர்

வெந்த புண் வேல் எறிந்த அற்றா இஃது ஒன்று		30
தந்தை இறை தொடி மற்று இவன் தன் கை-கண்
தந்தார் யார் எல்லாஅ இது
இஃது ஒன்று என் ஒத்து காண்க பிறரும் இவற்கு என்னும்
தன் நலம் பாடுவி தந்தாளா நின்னை
இது தொடுக என்றவர் யார்				35
அஞ்சாதி நீயும் தவறு இலை நின் கை இது தந்த
பூ எழில் உண்கண் அவளும் தவறு இலள்
வேனில் புனல் அன்ன நுந்தையை நோவார் யார்
மேல் நின்றும் எள்ளி இது இவன் கை தந்தாள்

தான் யாரோ என்று வினவிய நோய்ப்பாலேன்		40
யானே தவறு உடையேன்

# 85
காலவை சுடு பொன் வளைஇய ஈர்_அமை_சுற்றொடு
பொடி அழல் புறந்தந்த செய்வு-உறு கிண்கிணி
உடுத்தவை கைவினை பொலிந்த காசு அமை பொலம் காழ் மேல்
மை இல் செம் துகிர் கோவை அவற்றின் மேல்
தைஇய பூ துகில் ஐது கழல் ஒரு திரை			5
கையதை அலவன் கண் பெற அடங்க சுற்றிய
பல உறு கண்ணுள் சில கோல் அவிர் தொடி
பூண்டவை எறியா வாளும் எற்றா மழுவும்
செறிய கட்டி ஈர் இடை தாழ்ந்த

பெய் புல மூதாய் புகர் நிற துகிரின்			10
மை அற விளங்கிய ஆன் ஏற்று அவிர் பூண்
சூடின இரும் கடல் முத்தமும் பல் மணி பிறவும் ஆங்கு
ஒருங்கு உடன் கோத்த உருள் அமை மு காழ் மேல்
சுரும்பு ஆர் கண்ணிக்கு சூழ் நூலாக
அரும்பு அவிழ் நீலத்து ஆய் இதழ் நாண			15
சுரும்பு ஆற்றுப்படுத்த மணி மருள் மாலை
ஆங்க அவ்வும் பிறவும் அணிக்கு அணி ஆக நின்
செல்வு-உறு திண் தேர் கொடும் சினை கைப்பற்றி
பைபய தூங்கும் நின் மெல் விரல் சீறடி

நோதலும் உண்டு ஈங்கு என் கை வந்தீ			20
செம்மால் நின் பால் உண்ணிய
பொய் போர்த்து பாண் தலை இட்ட பல வல் புலையனை
தூண்டிலா விட்டு துடக்கி தான் வேண்டியார்
நெஞ்சம் பிணித்தல் தொழிலா திரிதரும்
நுந்தை பால் உண்டி சில				25
நுந்தை வாய் மாய சூள் தேறி மயங்கு நோய் கைமிக
பூ எழில் உண்கண் பனி பரப்ப கண்படா
ஞாயர் பால் உண்டி சில
அன்னையோ யாம் எம் மகனை பாராட்ட கதுமென

தாம் வந்தார் தம் பாலவரோடு தம்மை			30
வருக என்றார் யார்-கொலோ ஈங்கு
என் பால் அல் பாராட்டு உவந்தோய் குடி உண்டீத்தை என்
பாராட்டை பாலோ சில
செரு குறித்தாரை உவகை கூத்தாட்டும்
வரிசை பெரும் பாட்டொடு எல்லாம் பருகீத்தை		35
தண்டுவென் ஞாயர் மாட்டை பால்

# 86
மை படு சென்னி மழ களிற்று ஓடை போல்
கை புனை முக்காழ் கயம் தலை தாழ
பொலம் செய் மழுவொடு வாள் அணி கொண்ட
நலம் கிளர் ஒண் பூண் நனைத்தரும் அம் வாய்
கலந்து கண் நோக்கு ஆர காண்பு இன் துகிர் மேல்		5
பொலம் புனை செம்பாகம் போர் கொண்டு இமைப்ப
கடி அரணம் பாயா நின் கை புனை வேழம்
தொடியோர் மணலின் உழக்கி அடி ஆர்ந்த
தேரை வாய் கிண்கிணி ஆர்ப்ப இயலும் என்

போர் யானை வந்தீக ஈங்கு				10
செம்மால் வனப்பு எலாம் நுந்தையை ஒப்பினும் நுந்தை
நிலை பாலுள் ஒத்த குறி என் வாய் கேட்டு ஒத்தி
கன்றிய தெவ்வர் கடந்து களம் கொள்ளும்
வென்றி மாட்டு ஒத்தி பெரும மற்று ஒவ்வாதி
ஒன்றினேம் யாம் என்று உணர்ந்தாரை நுந்தை போல்		15
மென் தோள் நெகிழ விடல்
பால் கொளல் இன்றி பகல் போல் முறைக்கு ஒல்கா
கோல் செம்மை ஒத்தி பெரும மற்று ஒவ்வாதி
கால் பொரு பூவின் கவின் வாட நுந்தை போல்

சால்பு ஆய்ந்தார் சாய விடல்				20
வீதல் அறியா விழு பொருள் நச்சியார்க்கு
ஈதல் மாட்டு ஒத்தி பெரும மற்று ஒவ்வாதி
மாதர் மென் நோக்கின் மகளிரை நுந்தை போல்
நோய் கூர நோக்காய் விடல்
ஆங்க						25
திறன் அல்ல யாம் கழற யாரை நகும் இ
மகன் அல்லான் பெற்ற மகன்
மறை நின்று தாம் மன்ற வந்தீத்தனர்
ஆய்_இழாய் தாவாத எற்கு தவறு உண்டோ காவாது ஈங்கு

ஈத்தை இவனை யாம் கோடற்கு சீத்தை யாம்		30
கன்றி அதனை கடியவும் கைநீவி
குன்ற இறு வரை கோள்_மா இவர்ந்து ஆங்கு
தந்தை வியல் மார்பில் பாய்ந்தான் அறன் இல்லா
அன்பு இலி பெற்ற மகன்

# 87
ஒரூஉ நீ எம் கூந்தல் கொள்ளல் யாம் நின்னை
வெரூஉதும் காணும் கடை
தெரி_இழாய் செய் தவறு இல்-வழி யாங்கு சினவுவாய்
மெய் பிரிந்து அன்னவர் மாட்டு
ஏடா நினக்கு தவறு உண்டோ நீ வீடு பெற்றாய்		5
இமைப்பின் இதழ் மறைபு ஆங்கே கெடுதி
நிலை பால் அறியினும் நின் நொந்து நின்னை
புலப்பார் உடையர் தவறு
அணை தோளாய் தீயாரை போல திறன் இன்று உடற்றுதி

காயும் தவறு இலேன் யான்				10
மான் நோக்கி நீ அழ நீத்தவன் ஆனாது
நாண் இலன் ஆயின் நலிதந்து அவன்-வயின்
ஊடுதல் என்னோ இனி
இனி யாதும் மீக்கூற்றம் யாம் இலம் என்னும்
தகையது காண்டைப்பாய் நெஞ்சே பனி ஆனா			15
பாடு இல் கண் பாயல் கொள

# 88
ஒரூஉ கொடி இயல் நல்லார் குரல் நாற்றத்து உற்ற
முடி உதிர் பூ தாது மொய்ம்பின ஆக
தொடிய எமக்கு நீ யாரை பெரியார்க்கு
அடியரோ ஆற்றாதவர்
கடியர் தமக்கு யார் சொல்ல தக்கார் மாற்று			5
வினை கெட்டு வாய் அல்லா வெண்மை உரையாது கூறு நின்
மாயம் மருள்வார் அகத்து
ஆய்_இழாய் நின் கண் பெறின் அல்லால் இன் உயிர் வாழ்கல்லா
என்-கண் எவனோ தவறு

இஃது ஒத்தன் புள்ளி களவன் புனல் சேர்பு ஒதுக்கம் போல்	10
வள் உகிர் போழ்ந்தனவும் வாள் எயிறு உற்றனவும்
ஒள் இதழ் சோர்ந்த நின் கண்ணியும் நல்லார்
சிரறுபு சீற சிவந்த நின் மார்பும்
தவறு ஆதல் சாலாவோ கூறு
அது தக்கது வேற்றுமை என்-கண்ணோ ஓராதி தீது இன்மை	15
தேற்ற கண்டீயாய் தெளிக்கு
இனி தேற்றேம் யாம்
தேர் மயங்கி வந்த தெரி கோதை அம் நல்லார்
தார் மயங்கி வந்த தவறு அஞ்சி போர் மயங்கி

நீ உறும் பொய் சூள் அணங்கு ஆகின் மற்று இனி		20
யார் மேல் விளியுமோ கூறு

# 89
யார் இவன் எம் கூந்தல் கொள்வான் இதுவும் ஓர்
ஊராண்மைக்கு ஒத்த படிறு உடைத்து எம் மனை
வாரல் நீ வந்து ஆங்கே மாறு
என் இவை ஓர் உயிர் புள்ளின் இரு தலையுள் ஒன்று
போர் எதிர்ந்த அற்றா புலவல் நீ கூறின் என்			5
ஆர் உயிர் நிற்கும் ஆறு யாது
ஏஎ தெளிந்தேம் யாம் காயாதி எல்லாம் வல் எல்லா
பெரும் காட்டு கொற்றிக்கு பேய் நொடித்து ஆங்கு
வருந்தல் நின் வஞ்சம் உரைத்து

மருந்து இன்று மன்னவன் சீறின் தவறு உண்டோ நீ நயந்த	10
இன்_நகை தீதோ இலேன்
மாண மறந்து உள்ளா நாண் இலிக்கு இ போர்
புறஞ்சாய்ந்து காண்டைப்பாய் நெஞ்சே உறழ்ந்து இவனை
பொய்ப்ப விடேஎம் என நெருங்கின் தப்பினேன்
என்று அடி சேர்தலும் உண்டு				15

# 90
கண்டேன் நின் மாயம் களவு ஆதல் பொய் நகா
மண்டாத சொல்லி தொடாஅல் தொடீஇய நின்
பெண்டிர் உளர்-மன்னோ ஈங்கு
ஒண்_தொடி நீ கண்டது எவனோ தவறு
கண்டது நோயும் வடுவும் கரந்து மகிழ் செருக்கி		5
பாடு பெயல் நின்ற பானாள் இரவில்
தொடி பொலி தோளும் முலையும் கதுப்பும்
வடிவு ஆர் குழையும் இழையும் பொறையா
ஒடிவது போலும் நுசுப்போடு அடி தளரா

ஆரா கவவின் ஒருத்தி வந்து அல்கல் தன்			10
சீர் ஆர் ஞெகிழம் சிலம்ப சிவந்து நின்
போர் ஆர் கதவம் மிதித்தது அமையுமோ
ஆய்_இழை ஆர்க்கும் ஒலி கேளா அ எதிர்
தாழாது எழுந்து நீ சென்றது அமையுமோ
மாறாள் சினைஇ அவள் ஆங்கே நின் மார்பில்		15
நாறு இணர் பைம் தார் பரிந்தது அமையுமோ
தேறு நீ தீயேன் அலேன் என்று மற்று அவள்
சீறடி தோயா இறுத்தது அமையுமோ
கூறு இனி காயேமோ யாம்

தேறின் பிறவும் தவறு இலேன் யான்			20
அல்கல் கனவு-கொல் நீ கண்டது
கனை பெயல் தண் துளி வீசும் பொழுதில் குறி வந்தாள்
கண்ட கனவு என காணாது மாறு-உற்று
பண்டைய அல்ல நின் பொய் சூள் நினக்கு எல்லா
நின்றாய் நின் புக்கில் பல				25
மென் தோளாய் நல்கு நின் நல் எழில் உண்கு
ஏடா குறை-உற்று நீ எம் உரையல் நின் தீமை
பொறை ஆற்றேம் என்றல் பெறுதுமோ யாழ
நிறை ஆற்றா நெஞ்சு உடையேம்

# 91
அரி நீர் அவிழ் நீலம் அல்லி அனிச்சம்
புரி நெகிழ் முல்லை நறவோடு அமைந்த
தெரி மலர் கண்ணியும் தாரும் நயந்தார்
பொரு முரண் சீற சிதைந்து நெருநையின்
இன்று நன்று என் ஐ அணி				5
அணை மென் தோளாய் செய்யாத சொல்லி சினவுவது ஈங்கு எவன்
ஐயத்தால் என்னை கதியாதி தீது இன்மை
தெய்வத்தான் கண்டீ தெளிக்கு
மற்றது அறிவல் யான் நின் சூள் அனைத்து ஆக நல்லார்

செறி தொடி உற்ற வடுவும் குறி பொய்த்தார்			10
கூர் உகிர் சாடிய மார்பும் குழைந்த நின்
தாரும் ததர் பட்ட சாந்தமும் சேரி
அரி மதர் உண்கண்ணார் ஆரா கவவின்
பரிசு அழிந்து யாழ நின் மேனி கண்டு யானும்
செரு ஒழிந்தேன் சென்றீ இனி				15
தெரி_இழாய் தேற்றாய் சிவந்தனை காண்பாய் நீ தீது இன்மை
ஆற்றின் நிறுப்பல் பணிந்து
அன்னதேல் ஆற்றல் காண்
வேறுபட்டு ஆங்கே கலுழ்தி அகப்படின்

மாறுபட்டு ஆங்கே மயங்குதி யாது ஒன்றும்			20
கூறி உணர்த்தலும் வேண்டாது மற்று நீ
மாணா செயினும் மறுத்து ஆங்கே நின்-வயின்
காணின் நெகிழும் என் நெஞ்சு ஆயின் என் உற்றாய்
பேணாய் நீ பெட்ப செயல்

# 92
புன வளர் பூ கொடி அன்னாய் கழிய
கனவு எனப்பட்டது ஓர் காரிகை நீர்த்தே
முயங்கிய நல்லார் முலை இடை மூழ்கி
மயங்கி மற்று ஆண்டு_ஆண்டு சேறலும் செல்லாது
உயங்கி இருந்தார்க்கு உயர்ந்த பொருளும்			5
அரிதின் அறம் செய்யா ஆன்றோர் உலகும்
உரிதின் ஒருதலை எய்தலும் வீழ்வார்
பிரிதலும் ஆங்கே புணர்தலும் தம்மில்
தருதல் தகை ஆதால் மற்று

நனவினால் போலும் நறு_நுதால் அல்கல்			10
கனவினால் சென்றேன் கலி கெழு கூடல்
வரை உறழ் நீள் மதில் வாய் சூழ்ந்த வையை
கரை அணி காவின் அகத்து
உரை இனி தண்டா தீம் சாயல் நெடுந்தகாய் அ வழி
கண்டது எவன் மற்று நீ				15
கண்டது உடன் அமர் ஆயமொடு அ விசும்பு ஆயும்
மட நடை மா இனம் அந்தி அமையத்து
இடன் விட்டு இயங்கா இமையத்து ஒரு பால்
இறைகொண்டு இருந்து அன்ன நல்லாரை கண்டேன்

துறை கொண்டு உயர் மணல் மேல் ஒன்றி நிறைவதை		20
ஓர்த்தது இசைக்கும் பறை போல் நின் நெஞ்சத்து
வேட்டதே கண்டாய் கனா
கேட்டை விரையல் நீ மற்று வெகுள்வாய் உரை ஆண்டு
இது ஆகும் இன் நகை நல்லாய் பொது ஆக
தாம் கொடி அன்ன தகையார் எழுந்தது ஓர்			25
பூ கொடி வாங்கி இணர் கொய்ய ஆங்கே
சினை அலர் வேம்பின் பொருப்பன் பொருத
முனை அரண் போல உடைந்தன்று அ காவில்
துனை வரி வண்டின் இனம்

மற்று ஆங்கே நேர் இணர் மூசிய வண்டு எல்லாம் அ வழி	30
காரிகை நல்லார் நலம் கவர்ந்து உண்ப போல் ஓராங்கு மூச
அவருள்
ஒருத்தி செயல் அமை கோதை நகை
ஒருத்தி இயல் ஆர் செருவில் தொடியொடு தட்ப
ஒருத்தி தெரி முத்தம் சேர்ந்த திலகம்			35
ஒருத்தி அரி மாண் அவிர் குழை ஆய் காது வாங்க
ஒருத்தி வரி ஆர் அகல் அல்குல் காழகம்
ஒருத்தி அரி ஆர் ஞெகிழத்து அணி சுறா தட்ப
ஒருத்தி புலவியால் புல்லாது இருந்தாள் அலவு-உற்று

வண்டு_இனம் ஆர்ப்ப இடை விட்டு காதலன்			40
தண் தார் அகலம் புகும்
ஒருத்தி அடி தாழ் கலிங்கம் தழீஇ ஒரு கை
முடி தாழ் இரும் கூந்தல் பற்றி பூ வேய்ந்த
கடி கயம் பாயும் அலந்து
ஒருத்தி கணம்_கொண்டு அவை மூச கை ஆற்றாள் பூண்ட	45
மணம் கமழ் கோதை பரிபு கொண்டு ஓச்சி
வணங்கு காழ் வங்கம் புகும்
ஒருத்தி இறந்த களியான் இதழ் மறைந்த கண்ணள்
பறந்தவை மூச கடிவாள் கடியும்

இடம் தேற்றாள் சோர்ந்தனள் கை				50
ஆங்க கடி காவில் கால் ஒற்ற ஒல்கி ஒசியா
கொடி கொடி தம்மில் பிணங்கியவை போல்
தெரி இழை ஆர்ப்ப மயங்கி இரிவு-உற்றார் வண்டிற்கு
வண்டலவர் கண்டேன் யான்
நின்னை நின் பெண்டிர் புலந்தனவும் நீ அவர்			55
முன் அடி ஒல்கி உணர்த்தினவும் பன் மாண்
கனவின் தலையிட்டு உரையல் சினைஇ யான்
செய்வது இல் என்பதோ கூறு
பொய் கூறேன் அன்ன வகையால் யான் கண்ட கனவு தான்

நன் வாயா காண்டை நறு_நுதால் பன் மாணும்		60
கூடி புணர்ந்தீர் பிரியன்-மின் நீடி
பிரிந்தீர் புணர் தம்மின் என்பன போல
அரும்பு அவிழ் பூ சினை-தோறும் இரும் குயில்
ஆனாது அகவும் பொழுதினான் மேவர
நான்மாடக்கூடல் மகளிரும் மைந்தரும்			65
தேன் இமிர் காவில் புணர்ந்திருந்து ஆடும்-மார்
ஆனா விருப்போடு அணி அயர்ப காமற்கு
வேனில் விருந்து எதிர்கொண்டு

# 93
வண்டு ஊது சாந்தம் வடு கொள நீவிய
தண்டா தீம் சாயல் பரத்தை வியன் மார்ப
பண்டு இன்னை அல்லை-மன் ஈங்கு எல்லி வந்தீய
கண்டது எவன் மற்று உரை
நன்றும் தடைஇய மென் தோளாய் கேட்டு ஈவாய் ஆயின்	5
உடன் உறை வாழ்க்கைக்கு உதவி உறையும்
கடவுளர் கண் தங்கினேன்
சோலை மலர் வேய்ந்த மான் பிணை அன்னார் பலர் நீ
கடவுண்மை கொண்டு ஒழுகுவார்

அவருள் எ கடவுள் மற்று அ கடவுளை செப்பீ-மன்		10
முத்து ஏர் முறுவலாய் நாம் மணம் புக்க-கால்
இ போழ்து போழ்து என்று அது வாய்ப்ப கூறிய
அ கடவுள் மற்று அ கடவுள் அது ஒக்கும்
நா உள் அழுந்து தலை சாய்த்து நீ கூறும்
மாயமோ கைப்படுக்கப்பட்டாய் நீ கண்டாரை			15
வாய் ஆக யாம் கூற வேட்டு ஈவாய் கேள் இனி
பெறல் நசை வேட்கையின் நின் குறி வாய்ப்ப
பறிமுறை நேர்ந்த நகார் ஆக கண்டார்க்கு
இறு முறை செய்யும் உருவொடு நும் இல்

செறி முறை வந்த கடவுளை கண்டாயோ			20
நறும் தண் தகரமும் நானமும் நாறும்
நெறிந்த குரல் கூந்தல் நாள்_அணிக்கு ஒப்ப
நோக்கின் பிணி கொள்ளும் கண்ணொடு மேல் நாள் நீ
பூ பலி விட்ட கடவுளை கண்டாயோ
ஈர் அணிக்கு ஏற்ற ஒடியா படிவத்து			25
சூர் கொன்ற செ வேலால் பாடி பல நாளும்
ஆரா கனை காமம் குன்றத்து நின்னொடு
மாரி இறுத்த கடவுளை கண்டாயோ
கண்ட கடவுளர் தம்முளும் நின்னை

வெறி கொள் வியன் மார்பு வேறு ஆக செய்து		30
குறி கொள செய்தார் யார் செப்பு மற்று யாரும்
சிறு வரை தங்கின் வெகுள்வர் செறு தக்காய்
தேறினேன் சென்றீ நீ செல்லா விடுவாயேல்
நல் தார் அகலத்துக்கு ஓர் சார மேவிய
நெட்டு இரும் கூந்தல் கடவுளர் எல்லார்க்கும்			35
முட்டுப்பாடு ஆகலும் உண்டு

# 94
என் நோற்றனை-கொல்லோ
நீருள் நிழல் போல் நுடங்கிய மென் சாயல்
ஈங்கு உரு சுருங்கி
இயலுவாய் நின்னோடு உசாவுவேன் நின்றீத்தை
அன்னையோ காண் தகை இல்லா குறள் நாழி போழ்தினான்	5
ஆண்டலைக்கு ஈன்ற பறழ்_மகனே நீ எம்மை
வேண்டுவல் என்று விலக்கினை நின் போல்வார்
தீண்ட பெறுபவோ மற்று
மாண்ட எறித்த படை போல் முடங்கி மடங்கி

நெறித்துவிட்டு அன்ன நிறை ஏரால் என்னை			10
பொறுக்கல்லா நோய் செய்தாய் பொறீஇ நிறுக்கல்லேன்
நீ நல்கின் உண்டு என் உயிர்
குறிப்பு காண் வல்லு பலகை எடுத்து நிறுத்து அன்ன
கல்லா குறள கடும் பகல் வந்து எம்மை
இல்லத்து வா என மெய் கொளீஇ எல்லா நின்		15
பெண்டிர் உளர்-மன்னோ கூறு
நல்லாய் கேள் உக்கத்து மேலும் நடு உயர்ந்து வாள் வாய
கொக்கு உரித்து அன்ன கொடு மடாய் நின்னை யான்
புக்கு அகலம் புல்லின் நெஞ்சு ஊன்றும் புறம் புல்லின்

அக்குளுத்து புல்லலும் ஆற்றேன் அருளீமோ			20
பக்கத்து புல்ல சிறிது
போ சீத்தை மக்கள் முரியே நீ மாறு இனி தொக்க
மர கோட்டம் சேர்ந்து எழுந்த பூ கொடி போல
நிரப்பம் இல் யாக்கை தழீஇயினர் எம்மை
புரப்பேம் என்பாரும் பலரால் பரத்தை என்			25
பக்கத்து புல்லீயாய் என்னுமால் தொக்க
உழுந்தினும் துவ்வா குறு வட்டா நின்னின்
இழிந்ததோ கூனின் பிறப்பு கழிந்து ஆங்கே
யாம் வீழ்தும் என்று தன் பின் செலவும் உற்றீயா

கூனி குழையும் குழைவு காண்				30
யாமை எடுத்து நிறுத்தற்றால் தோள் இரண்டும் வீசி
யாம் வேண்டேம் என்று விலக்கவும் எம் வீழும்
காமர் நடக்கும் நடை காண் கவர் கணை
சாமனார் தம்முன் செலவு காண்
ஓஒ காண் நம்முள் நகுதல் தொடீஇயர் நம்முள் நாம்		35
உசாவுவம் கோன் அடி தொட்டேன்
ஆங்கு ஆக சாயல் இன் மார்ப அடங்கினேன் ஏஎ
பேயும் பேயும் துள்ளல்-உறும் என
கோயிலுள் கண்டார் நகாமை வேண்டுவல்

தண்டா தகடு உருவ வேறு ஆக காவின் கீழ்			40
போதர் அகடு ஆர புல்லி முயங்குவேம்
துகள் தபு காட்சி அவையத்தார் ஓலை
முகடு காப்பு யாத்துவிட்டு ஆங்கு

# 95
நில் ஆங்கு நில் ஆங்கு இவர்தரல் எல்லா நீ
நாறு இரும் கூந்தலார் இல் செல்வாய் இ வழி
ஆறு மயங்கினை போறி நீ வந்து ஆங்கே
மாறு இனி நின் ஆங்கே நின் சேவடி சிவப்ப
செறிந்து ஒளிர் வெண் பல்லாய் யாம் வேறு இயைந்த		5
குறும்பூழ் போர் கண்டேம் அனைத்து அல்லது யாதும்
அறிந்ததோ இல்லை நீ வேறு ஓர்ப்பது
குறும்பூழ் போர் கண்டமை கேட்டேன் நீ என்றும்
புதுவன ஈகை வளம் பாடி காலின்

பிரியா கவி கை புலையன் தன் யாழின்			10
இகுத்த செவி சாய்த்து இனி_இனி பட்டன
ஈகை போர் கண்டாயும் போறி மெய் எண்ணின்
தபுத்த புலர்வு இல் புண்
ஊரவர் கவ்வை உளைந்தீயாய் அல்கல் நின்
தாரின் வாய் கொண்டு முயங்கி பிடி மாண்டு			15
போர் வாய்ப்ப காணினும் போகாது கொண்டு ஆடும்
பார்வை போர் கண்டாயும் போறி நின் தோள் மேலாம்
ஈரம் ஆய்விட்டன புண்
கொடிற்று புண் செய்யாது மெய் முழுதும் கையின்

துடைத்து நீ வேண்டினும் வெல்லாது கொண்டு ஆடும்		20
ஒட்டிய போர் கண்டாயும் போறி முகம் தானே
கொட்டி கொடுக்கும் குறிப்பு
ஆயின் ஆய்_இழாய் அன்னவை யான் ஆங்கு அறியாமை
போற்றிய நின் மெய் தொடுகு
அன்னையோ மெய்யை பொய் என்று மயங்கிய கை ஒன்று	25
அறிகல்லாய் போறி காண் நீ
நல்லாய் பொய் எல்லாம் ஏற்றி தவறு தலைப்பெய்து
கையொடு கண்டாய் பிழைத்தேன் அருள் இனி
அருளுகம் யாம் யாரேம் எல்லா தெருள

அளித்து நீ பண்ணிய பூழ் எல்லாம் இன்னும்			30
விளித்து நின் பாணனோடு ஆடி அளித்தி
விடலை நீ நீத்தலின் நோய் பெரிது ஏய்க்கும்
நடலைப்பட்டு எல்லாம் நின் பூழ்

# 96
ஏந்து எழில் மார்ப எதிர் அல்ல நின் வாய் சொல்
பாய்ந்து ஆய்ந்த தானை பரிந்து ஆனா மைந்தினை
சாந்து அழி வேரை சுவல் தாழ்ந்த கண்ணியை
யாங்கு சென்று ஈங்கு வந்தீத்தந்தாய் கேள் இனி
ஏந்தி எதிர் இதழ் நீலம் பிணைந்து அன்ன கண்ணாய்		5
குதிரை வழங்கி வருவல்
அறிந்தேன் குதிரை தான்
பால் பிரியா ஐம்_கூந்தல் பல் மயிர் கொய் சுவல்
மேல் விரித்து யாத்த சிகழிகை செ உளை

நீல மணி கடிகை வல்லிகை யாப்பின் கீழ்			10
ஞால் இயல் மென் காதின் புல்லிகை சாமரை
மத்திகை கண்ணுறை ஆக கவின் பெற்ற
உத்தி ஒரு காழ் நூல் உத்தரிய திண் பிடி
நேர் மணி நேர் முக்காழ் பற்பல கண்டிகை
தார் மணி பூண்ட தமனிய மேகலை			15
நூபுர_புட்டில் அடியொடு அமைத்து யாத்த
வார் பொலம் கிண்கிணி ஆர்ப்ப இயற்றி நீ
காதலித்து ஊர்ந்த நின் காம குதிரையை
ஆய் சுதை மாடத்து அணி நிலாமுற்றத்துள்

ஆதி கொளீஇ அசையினை ஆகுவை			20
வாதுவன் வாழிய நீ
சேகா கதிர் விரி வைகலில் கை வாரூஉ கொண்ட
மதுரை பெரு முற்றம் போல நின் மெய் கண்
குதிரையோ வீறியது
கூர் உகிர் மாண்ட குளம்பின் அது நன்றே			25
கோரமே வாழி குதிரை
வெதிர் உழக்கு நாழியால் சேதிகை குத்தி
குதிரை உடல் அணி போல நின் மெய்-கண்
குதிரையோ கவ்வியது

சீத்தை பயம் இன்றி ஈங்கு கடித்தது நன்றே			30
வியமமே வாழி குதிரை
மிக நன்று இனி அறிந்தேன் இன்று நீ ஊர்ந்த குதிரை
பெரு மணம் பண்ணி அறத்தினில் கொண்ட
பரும குதிரையோ அன்று பெரும நின்
ஏதில் பெரும் பாணன் தூது_ஆட ஆங்கே ஓர்			35
வாதத்தான் வந்த வளி குதிரை ஆதி
உரு அழிக்கும் அ குதிரை ஊரல் நீ ஊரின் பரத்தை
பரி ஆக வாதுவனாய் என்றும் மற்று அ சார்
திரி குதிரை ஏறிய செல்

# 97
அன்னை கடும் சொல் அறியாதாய் போல நீ
என்னை புலப்பது ஒறுக்குவென்-மன் யான்
சிறுகாலை இல் கடை வந்து குறி செய்த
அ வழி என்றும் யான் காணேன் திரிதர
எ வழி பட்டாய் சமன் ஆக இ எள்ளல்			5
முத்து ஏர் முறுவலாய் நம் வலை பட்டது ஓர்
புத்தி யானை வந்தது காண்பான் யான் தங்கினேன்
ஒக்கும்
அ யானை வனப்பு உடைத்து ஆகலும் கேட்டேன்

அ யானை தான் சுண்ண நீறு ஆடி நறு நறா நீர் உண்டு		10
ஒண் நுதல் யாத்த திலக அவிர் ஓடை
தொய்யில் பொறித்த வன முலை வான் கோட்டு
தொய்யக தோட்டி குழை தாழ் வடி மணி
உத்தி பொறித்த புனை பூண் பருமத்து
முத்து ஏய்க்கும் வெண் பல் நகை திறந்து			15
நன் நகர் வாயில் கதவ வெளில் சார்ந்து
தன் நலம் காட்டி தகையினால் கால் தட்டி வீழ்க்கும்
தொடர் தொடராக வலந்து படர் செய்யும்
மென் தோள் தட கையின் வாங்கி தன் கண்டார்

நலம் கவளம் கொள்ளும் நகை முக வேழத்தை		20
இன்று கண்டாய் போல் எவன் எம்மை பொய்ப்பது நீ
எல்லா கெழீஇ தொடி செறித்த தோள் இணை தத்தி
தழீஇக்கொண்டு ஊர்ந்தாயும் நீ
குழீஇ அவாவினால் தேம்புவார் இல் கடை ஆறா
உவா அணி ஊர்ந்தாயும் நீ				25
மிகாஅது சீர்ப்பட உண்ட சிறு களி ஏர் உண்கண்
நீர்க்கு விட்டு ஊர்ந்தாயும் நீ
சார் சார் நெறி தாழ் இரும் கூந்தல் நின் பெண்டிர் எல்லாம்
சிறு பாகர் ஆக சிரற்றாது மெல்ல

விடாஅது நீ எம் இல் வந்தாய் அ யானை			30
கடாஅம் படும் இடத்து ஓம்பு

# 98
யாரை நீ எம் இல் புகுதர்வாய் ஓரும்
புதுவ மலர் தேரும் வண்டே போல் யாழ
வதுவை விழவு அணி வைகலும் காட்டினையாய்
மாட்டு மாட்டு ஓடி மகளிர் தர_தர
பூட்டு மான் திண் தேர் புடைத்த மறுகு எல்லாம்		5
பாட்டு ஆதல் சான்ற நின் மாய பரத்தைமை
காட்டிய வந்தமை கைப்படுத்தேன் பண்டு எலாம்
கேட்டும் அறிவேன்-மன் யான்
தெரி கோதை அம் நல்லாய் தேறீயல் வேண்டும்

பொரு கரை வாய் சூழ்ந்த பூ மலி வையை			10
வரு புனல் ஆட தவிர்ந்தேன் பெரிது என்னை
செய்யா மொழிவது எவன்
ஓஒ புனல் ஆடினாய் எனவும் கேட்டேன் புனல் ஆங்கே
நீள் நீர் நெறி கதுப்பு வாரும் அறல் ஆக
மாண் எழில் உண்கண் பிறழும் கயல் ஆக			15
கார் மலர் வேய்ந்த கமழ் பூ பரப்பு ஆக
நாணு சிறை அழித்து நன் பகல் வந்த அ
யாணர் புது புனல் ஆடினாய் முன் மாலை
பாணன் புணை ஆக புக்கு

ஆனாது அளித்து அமர் காதலோடு அ புனல் ஆடி		20
வெளிப்படு கவ்வையை யான் அறிதல் அஞ்சி
குளித்து ஒழுகினாய் எனவும் கேட்டேன் குளித்து ஆங்கே
போர்த்த சினத்தான் புருவ திரை இடா
ஆர்க்கும் ஞெகிழத்தான் நன் நீர் நடை தட்ப
சீர் தக வந்த புது புனல் நின்னை கொண்டு			25
ஈர்த்து உய்ப்ப கண்டார் உளர்
ஈர்த்தது உரை சால் சிறப்பின் நின் நீர் உள்ளம் வாங்க
புரை தீர் புது புனல் வெள்ளத்தின் இன்னும்
கரை கண்டதூஉம் இலை

நிரை தொடீஇ பொய்யா வாள் தானை புனை கழல் கால் தென்னவன்	30
வையை புது புனல் ஆட தவிர்ந்ததை
தெய்வத்தின் தேற்றி தெளிப்பேன் பெரிது என்னை
செய்யா மொழிவது எவன்
மெய்யதை மல்கு மலர் வேய்ந்த மாய புது புனல்
பல் காலும் ஆடிய செல்வு-உழி ஒல்கி			35
களைஞரும் இல்-வழி கால் ஆழ்ந்து தேரோடு
இள மணலுள் படல் ஓம்பு முளை நேர்
முறுவலார்க்கு ஓர் நகை செய்து

# 99
நறவினை வரைந்தார்க்கும் வரையார்க்கும் அவை எடுத்து
அற வினை இன்புறூஉம் அந்தணர் இருவரும்
திறம் வேறு செய்தியின் நூல் நெறி பிழையாது
குழவியை பார்த்து உறூஉம் தாய் போல் உலகத்து
மழை சுரந்து அளித்து ஓம்பும் நல் ஊழி யாவர்க்கும்		5
பிழையாது வருதல் நின் செம்மையின் தர வாய்ந்த
இழை அணி கொடி திண் தேர் இன மணி யானையாய்
அறன் நிழல் என கொண்டாய் ஆய் குடை அ குடை
புற நிழல் கீழ்ப்பட்டாளோ இவள் இவண் காண்டிகா

பிறை நுதல் பசப்பு ஊர பெரு விதுப்பு உற்றாளை		10
பொய்யாமை நுவலும் நின் செங்கோல் அ செங்கோலின்
செய் தொழில் கீழ்ப்பட்டாளோ இவள் இவண் காண்டிகா
காம நோய் கடைக்கூட்ட வாழும் நாள் முனிந்தாளை
ஏமம் என்று இரங்கும் நின் எறி முரசம் அ முரசின்
ஏமத்து இகந்தாளோ இவள் இவண் காண்டிகா			15
வேய் நலம் இழந்த தோள் கவின் வாட இழப்பாளை
ஆங்கு
நெடிது சேண் இகந்தவை காணினும் தான் உற்ற
வடு காட்ட கண் காணாது அற்று ஆக என் தோழி

தொடி கொட்ப நீத்த கொடுமையை			20
கடிது என உணராமை கடிந்ததோ நினக்கே

# 100
ஈண்டு நீர் மிசை தோன்றி இருள் சீக்கும் சுடரே போல்
வேண்டாதார் நெஞ்சு உட்க வெரு வந்த கொடுமையும்
நீண்டு தோன்று உயர் குடை நிழல் என சேர்ந்தார்க்கு
காண்_தகு மதி என்ன கதிர் விடு தண்மையும்
மாண்ட நின் ஒழுக்கத்தான் மறு இன்றி வியன் ஞாலத்து		5
யாண்டோரும் தொழுது ஏத்தும் இரங்கு இசை முரசினாய்
ஐயம் தீர்ந்து யார்-கண்ணும் அரும் தவ முதல்வன் போல்
பொய் கூறாய் என நின்னை புகழ்வது கெடாதோ தான்
நல்கி நீ தெளித்த சொல் நசை என தேறியாள்

பல் இதழ் மலர் உண்கண் பனி மல்க காணும்-கால்		10
சுரந்த வான் பொழிந்து அற்றா சூழ நின்று யாவர்க்கும்
இரந்தது நசை வாட்டாய் என்பது கெடாதோ தான்
கலங்கு அஞர் உற்று நின் கமழ் மார்பு நசைஇயாள்
இலங்கு கோல் அவிர் தொடி இறை ஊர காணும்-கால்
உறை வரை நிறுத்த கோல் உயிர் திறம் பெயர்ப்பான் போல்	15
முறை செய்தி என நின்னை மொழிவது கெடாதோ தான்
அழி படர் வருத்த நின் அளி வேண்டி கலங்கியாள்
பழி தபு வாள் முகம் பசப்பு ஊர காணும்-கால்
ஆங்கு

தொல் நலம் இழந்தோள் நீ துணை என புணர்ந்தவள்		20
இன் உறல் வியன் மார்ப இனையையால் கொடிது என
நின்னை யான் கழறுதல் வேண்டுமோ
என்னோர்கள் இடும்பையும் களைந்தீவாய் நினக்கே
@ நான்காவது முல்லைக்கலி

# 101
தளி பெறு தண் புலத்து தலை பெயற்கு அரும்பு ஈன்று
முளி முதல் பொதுளிய முள் புற பிடவமும்
களி பட்டான் நிலையே போல் தடவுபு துடுப்பு ஈன்று
ஞெலிபு உடன் நிரைத்த ஞெகிழ் இதழ் கோடலும்
மணி புரை உருவின காயாவும் பிறவும்			5
அணி கொள மலைந்த கண்ணியர் தொகுபு உடன்
மாறு எதிர்கொண்ட தம் மைந்துடன் நிறும்-மார்
சீறு அரு முன்பினோன் கணிச்சி போல் கோடு சீஇ
ஏறு தொழூஉ புகுத்தனர் இயைபு உடன் ஒருங்கு

அ வழி முழக்கு என இடி என முன் சமத்து ஆர்ப்ப		10
வழக்கு மாறு கொண்டு வருபு வருபு ஈண்டி
நறையொடு துகள் எழ நல்லவர் அணி நிற்ப
துறையும் ஆலமும் தொல் வலி மராஅமும்
முறையுளி பராஅய் பாய்ந்தனர் தொழூஉ
மேல் பாட்டு உலண்டின் நிறன் ஒக்கும் புன் குரு கண்		15
நோக்கு அஞ்சான் பாய்ந்த பொதுவனை சா குத்தி
கோட்டு இடை கொண்டு குலைப்பதன் தோற்றம் காண்
அம் சீர் அசை இயல் கூந்தல் கை நீட்டியான்
நெஞ்சம் பிளந்து இட்டு நேரார் நடுவண் தன்

வஞ்சினம் வாய்த்தானும் போன்ம்				20
சுடர் விரிந்து அன்ன சுரி நெற்றி காரி
விடரி அம் கண்ணி பொதுவனை சாடி
குடர் சொரிய குத்தி குலைப்பதன் தோற்றம் காண்
படர் அணி அந்தி பசும்_கண்_கடவுள்
இடரிய ஏற்று எருமை நெஞ்சு இடந்து இட்டு			25
குடர் கூளிக்கு ஆர்த்துவான் போன்ம்
செவிமறை நேர் மின்னும் நுண் பொறி வெள்ளை
கதன் அஞ்சான் பாய்ந்த பொதுவனை சாடி
நுதி நுனை கோட்டால் குலைப்பதன் தோற்றம் காண்

ஆர் இருள் என்னான் அரும் கங்குல் வந்து தன்		30
தாளின் கடந்து அட்டு தந்தையை_கொன்றானை
தோளின் திருகுவான் போன்ம்
என ஆங்கு
அணி மாலை கேள்வல் தரூஉம்-மார் ஆயர்
மணி மாலை ஊதும் குழல்				35
கடாஅ களிற்றினும் கண்ணஞ்சா ஏற்றை
விடாஅது நீ கொள்குவை ஆயின் படாஅகை
ஈன்றன ஆய_மகள் தோள்
பகலிட கண்ணியன் பைதல் குழலன்

சுவல் மிசை கோல் அசைத்த கையன் அயலது		40
கொல் ஏறு சாட இருந்தார்க்கு எம் பல் இரும்
கூந்தல் அணை கொடுப்பேம் யாம்
கோளாளர் என் ஒப்பார் இல் என நம் ஆனுள்
தாளாண்மை கூறும் பொதுவன் நமக்கு ஒரு நாள்
கேளாளன் ஆகாமை இல்லை அவன் கண்டு			45
வேளாண்மை செய்தன கண்
ஆங்கு ஏறும் வருந்தின ஆயரும் புண் கூர்ந்தார்
நாறு இரும் கூந்தல் பொதுமகளிர் எல்லாரும்
முல்லை அம் தண் பொழில் புக்கார் பொதுவரோடு

எல்லாம் புணர் குறி கொண்டு				50

# 102
கண் அகன் இரு விசும்பில் கதழ் பெயல் கலந்து ஏற்ற
தண் நறும் பிடவமும் தவழ் கொடி தளவமும்
வண்ண வண் தோன்றியும் வயங்கு இணர் கொன்றையும்
அன்னவை பிறவும் பன் மலர் துதைய
தழையும் கோதையும் இழையும் என்று இவை		5
தைஇயினர் மகிழ்ந்து திளைஇ விளையாடும்
மட மொழி ஆயத்தவருள் இவள் யார் உடம்போடு
என் உயிர் புக்கவள் இன்று
ஓஒ இவள் பொரு புகல் நல் ஏறு கொள்பவர் அல்லால்

திரு மா மெய் தீண்டலர் என்று கருமமா			10
எல்லாரும் கேட்ப அறைந்து_அறைந்து எப்பொழுதும்
சொல்லால் தரப்பட்டவள்
சொல்லுக பாணியேம் என்றார் அறைக என்றார் பாரித்தார்
மாண்_இழை ஆறு ஆக சாறு
சாற்றுள் பெடை அன்னார் கண் பூத்து நோக்கும் வாய் எல்லாம்	15
மிடை பெறின் நேரா தகைத்து
தகை வகை மிசை_மிசை பாயியர் ஆர்த்து உடன்
எதிரெதிர் சென்றார் பலர்
கொலை மலி சிலை செறி செயிர் அயர் சினம் சிறந்து

உருத்து எழுந்து ஓடின்று மேல்				20
எழுந்தது துகள்
ஏற்றனர் மார்பு
கவிழ்ந்தன மருப்பு
கலங்கினர் பலர்
அவருள் மலர் மலி புகல் எழ அலர் மலி மணி புரை நிமிர் தோள் பிணைஇ	25
எருத்தோடு இமில் இடை தோன்றினன் தோன்றி
வருத்தினான் மன்ற அ ஏறு
ஏறு எவ்வம் காணா எழுந்தார் எவன்-கொலோ
ஏறு உடை நல்லார் பகை

மடவரே நல் ஆயர் மக்கள் நெருநை			30
அடல் ஏற்று எருத்து இறுத்தார் கண்டும் மற்று இன்றும்
உடல் ஏறு கோள் சாற்றுவார்
ஆங்கு இனி
தண்ணுமை பாணி தளராது எழூஉக
பண் அமை இன் சீர் குரவையுள் தெண் கண்ணி		35
திண் தோள் திறல் ஒளி மாய போர் மா மேனி
அம் துவர் ஆடை பொதுவனோடு ஆய்ந்த
முறுவலாள் மென் தோள் பாராட்டி சிறுகுடி
மன்றம் பரந்தது உரை

# 103
மெல் இணர் கொன்றையும் மென் மலர் காயாவும்
புல் இலை வெட்சியும் பிடவும் தளவும்
குல்லையும் குருந்தும் கோடலும் பாங்கரும்
கல்லவும் கடத்தவும் கமழ் கண்ணி மலைந்தனர்
பல ஆன் பொதுவர் கதழ் விடை கோள் காண்-மார்		5
முல்லை முகையும் முருந்தும் நிரைத்து அன்ன
பல்லர் பெரு மழை கண்ணர் மடம் சேர்ந்த
சொல்லர் சுடரும் கனம் குழை காதினர்
நல்லவர் கொண்டார் மிடை

அவர் மிடை கொள					10
மணி வரை மருங்கின் அருவி போல
அணி வரம்பு அறுத்த வெண் கால் காரியும்
மீன் பூத்து அவிர் வரும் அந்தி வான் விசும்பு போல்
வான் பொறி பரந்த புள்ளி வெள்ளையும்
கொலைவன் சூடிய குழவி திங்கள் போல்			15
வளையுபு மலிந்த கோடு அணி சேயும்
பொரு முரண் முன்பின் புகல் ஏறு பல பெய்து
அரிமாவும் பரி_மாவும் களிறும் கராமும்
பெரு மலை விடர்_அகத்து ஒருங்கு உடன் குழீஇ

படு மழை ஆடும் வரை_அகம் போலும்			20
கொடி நறை சூழ்ந்த தொழூஉ
தொழுவினுள் புரிபு_புரிபு புக்க பொதுவரை
தெரிபு தெரிபு குத்தின ஏறு
ஏற்றின் அரி பரிபு அறுப்பன சுற்றி
எரி திகழ் கணிச்சியோன் சூடிய பிறை கண்			25
உருவ மாலை போல
குருதி கோட்டொடு குடர் வலந்தன
கோட்டொடு சுற்றி குடர் வலந்த ஏற்றின் முன்
ஆடி நின்று அ குடர் வாங்குவான் பீடு காண்

செம் நூல் கழி ஒருவன் கை பற்ற அ நூலை			30
முந்நூலா கொள்வானும் போன்ம்
இகுளை இஃது ஒன்று கண்டை இஃது ஒத்தன்
கோட்டு_இனத்து ஆயர்_மகன் அன்றே மீட்டு ஒரான்
போர் புகல் ஏற்று பிணர் எருத்தில் தத்துபு
தார் போல் தழீஇயவன்				35
இகுளை இஃது ஒன்று கண்டை இஃது ஒத்தன்
கோ இனத்து ஆயர்_மகன் அன்றே ஓவான்
மறை ஏற்றின் மேல் இருந்து ஆடி துறை அம்பி
ஊர்வான் போல் தோன்றும் அவன்

தொழீஇஇ காற்று போல வந்த கதழ் விடை காரியை		40
ஊற்று_களத்தே அடங்க கொண்டு அட்டு அதன்
மேல் தோன்றி நின்ற பொதுவன் தகை கண்டை
ஏற்று எருமை நெஞ்சம் வடிம்பின் இடந்து இட்டு
சீற்றமொடு ஆர் உயிர் கொண்ட ஞான்று இன்னன்-கொல்
கூற்று என உட்கிற்று என் நெஞ்சு				45
இகுளை இஃது ஒன்று கண்டை இஃது ஒத்தன்
புல்_இனத்து ஆயர்_மகன் அன்றே புள்ளி
வெறுத்த வய வெள் ஏற்று அம் புடை திங்கள்
மறு போல் பொருந்தியவன்

ஓவா வேகமோடு உருத்து தன் மேற்சென்ற			50
சேஎ செவி முதல் கொண்டு பெயர்த்து ஒற்றும்
காயாம் பூ கண்ணி பொதுவன் தகை கண்டை
மேவார் விடுத்தந்த கூந்தல் குதிரையை
வாய் பகுத்து இட்டு புடைத்த ஞான்று இன்னன்-கொல்
மாயோன் என்று உட்கிற்று என் நெஞ்சு			55
ஆங்கு இரும் புலி தொழுதியும் பெரும் களிற்று இனமும்
மாறுமாறு உழக்கிய ஆங்கு உழக்கி பொதுவரும்
ஏறு கொண்டு ஒருங்கு தொழூஉ விட்டனர் விட்டு ஆங்கே
மயில் எருத்து உறழ் அணி மணி நிலத்து பிறழ

பயில் இதழ் மலர் உண்கண்				60
மாதர் மகளிரும் மைந்தரும் மைந்து உற்று
தாது எரு மன்றத்து அயர்வர் தழூஉ
கொல் ஏற்று கோடு அஞ்சுவானை மறுமையும்
புல்லாளே ஆய_மகள்
அஞ்சார் கொலை ஏறு கொள்பவர் அல்லதை			65
நெஞ்சிலார் தோய்தற்கு அரிய உயிர் துறந்து
நைவாரா ஆய_மகள் தோள்
வளியர் அறியா உயிர் காவல்கொண்டு
நளி வாய் மருப்பு அஞ்சும் நெஞ்சினார் தோய்தற்கு

எளியவோ ஆய_மகள் தோள்				70
விலை வேண்டார் எம் இனத்து ஆயர்_மகளிர்
கொலை ஏற்று கோட்டு இடை தாம் வீழ்வார் மார்பின்
முலை இடை போல புகின்
ஆங்கு
குரவை தழீஇ யாம் மரபுளி பாடி				75
தேயா விழு புகழ் தெய்வம் பரவுதும்
மாசு இல் வான் முந்நீர் பரந்த தொல் நிலம்
ஆளும் கிழமையொடு புணர்ந்த
எம் கோ வாழியர் இ மலர் தலை உலகே

# 104
மலி திரை ஊர்ந்து தன் மண் கடல் வௌவலின்
மெலிவு இன்றி மேற்சென்று மேவார் நாடு இடம்பட
புலியொடு வில் நீக்கி புகழ் பொறித்த கிளர் கெண்டை
வலியினான் வணக்கிய வாடா சீர் தென்னவன்
தொல் இசை நட்ட குடியொடு தோன்றிய			5
நல் இனத்து ஆயர் ஒருங்கு தொக்கு எல்லாரும்
வான் உற ஓங்கிய வயங்கு ஒளிர் பனை_கொடி
பால்நிறவண்ணன் போல் பழி தீர்ந்த வெள்ளையும்
பொரு முரண் மேம்பட்ட பொலம் புனை புகழ் நேமி

திருமறு_மார்பன் போல் திறல் சான்ற காரியும்		10
மிக்கு ஒளிர் தாழ் சடை மேவரும் பிறை நுதல்
முக்கண்ணான் உருவே போல் முரண் மிகு குராலும்
மா கடல் கலக்கு-உற மா கொன்ற மடங்கா போர்
வேல் வல்லான் நிறனே போல் வெரு வந்த சேயும் ஆங்கு அ
பொரு வரும் பண்பினவ்வையும் பிறவும்			15
உருவ பல் கொண்மூ குழீஇயவை போல
புரிபு_புரிபு புகுத்தனர் தொழூஉ
அ வழி முள் எயிற்று ஏஎர் இவளை பெறும் இது ஓர்
வெள் ஏற்று எருத்து அடங்குவான்

ஒள் இழை வார்-உறு கூந்தல் துயில் பெறும் வை மருப்பின்	20
காரி கதன் அஞ்சான் கொள்பவன் ஈர் அரி
வெரூஉ பிணை மான் நோக்கின் நல்லாள் பெறூஉம் இ
குரூஉ கண் கொலை ஏறு கொள்வான் வரி குழை
வேய் உறழ் மென் தோள் துயில் பெறும் வெம் துப்பின்
சேஎய் சினன் அஞ்சான் சார்பவன் என்று ஆங்கு		25
அறைவனர் நல்லாரை ஆயர் முறையினால்
நாள்_மீன் வாய் சூழ்ந்த மதி போல் மிடை மிசை
பேணி நிறுத்தார் அணி
அ வழி பறை எழுந்து இசைப்ப பல்லவர் ஆர்ப்ப

குறையா மைந்தர் கோள் எதிர் எடுத்த			30
நறை வலம் செய விடா இறுத்தன ஏறு
அ ஏற்றின்
மேல் நிலை மிகல் இகலின் மிடை கழிபு இழிபு மேற்சென்று
வேல் நுதி புரை விறல் திறன் நுதி மருப்பின் மாறு அஞ்சான்
பால் நிற வெள்ளை எருத்தத்து பாய்ந்தானை			35
நோனாது குத்தும் இளம் காரி தோற்றம் காண்
பால் மதி சேர்ந்த அரவினை கோள் விடுக்கும்
நீல்நிறவண்ணனும் போன்ம்
இரிபு எழுபு அதிர்பு_அதிர்பு இகந்து உடன் பலர் நீங்க

அரிபு அரிபு இறுபு இறுபு குடர் சோர குத்தி தன்		40
கோடு அழிய கொண்டானை ஆட்டி திரிபு உழக்கும்
வாடா வெகுளி எழில் ஏறு கண்டை இஃது ஒன்று
வெரு வரு தூமம் எடுப்ப வெகுண்டு
திரிதரும் கொல் களிறும் போன்ம்
தாள் எழு துணி பிணி இசை தவிர்பு இன்றி தலைச்சென்று	45
தோள் வலி துணி பிணி துறந்து இறந்து எய்தி மெய் சாய்ந்து
கோள் வழுக்கி தன் முன்னர் வீழ்ந்தான் மேல் செல்லாது
மீளும் புகர் ஏற்று தோற்றம் காண் மண்டு அமருள்
வாள் அகப்பட்டானை ஒவ்வான் என பெயரும்

மீளி மறவனும் போன்ம்				50
ஆங்க செறுத்து அறுத்து உழக்கி ஏற்று எதிர் நிற்ப
மறுத்து மறுத்து மைந்தர் சார
தடி குறை இறுபு இறுபு தாயின கிடப்ப
இடி உறழ் இசை இன் இயம் எழுந்து ஆர்ப்ப
பாடு ஏற்று கொள்பவர் பாய்ந்து மேல் ஊர்பவர்		55
கோடு இடை நுழைபவர் கோள் சாற்றுபவரொடு
புரிபு மேற்சென்ற நூற்றுவர் மடங்க
வரி புனை வல் வில் ஐவர் அட்ட
பொரு_களம் போலும் தொழூஉ

தொழுவினுள் கொண்ட ஏறு எல்லாம் புலம் புக தண்டா சீர்	60
வாங்கு எழில் நல்லாரும் மைந்தரும் மல்லல் ஊர்
ஆங்கண் அயர்வர் தழூஉ
பாடுகம் வம்-மின் பொதுவன் கொலை ஏற்று
கோடு குறி செய்த மார்பு
நெற்றி சிவலை நிறை அழித்தான் நீள் மார்பில்		65
செற்றார் கண் சாய யான் சாராது அமைகல்லேன்
பெற்றத்தார் கவ்வை எடுப்ப அது பெரிது
உற்றீயாள் ஆயர்_மகள்
தொழீஇஇ ஒருக்கு நாம் ஆடும் குரவையுள் நம்மை

அருக்கினான் போல் நோக்கி அல்லல் நோய் செய்தல்		70
குரூஉ கண் கொலை ஏறு கொண்டேன் யான் என்னும்
தருக்கு அன்றோ ஆயர்_மகன்
நேர்_இழாய் கோள் அரிது ஆக நிறுத்த கொலை ஏற்று
காரி கதன் அஞ்சான் பாய்ந்த பொதுவற்கே
ஆர்வு-உற்று எமர் கொடை நேர்ந்தார் அலர் எடுத்த		75
ஊராரை உச்சி மிதித்து
ஆங்கு
தொல் கதிர் திகிரியான் பரவுதும் ஒல்கா
உரும் உறழ் முரசின் தென்னவற்கு

ஒரு மொழி கொள்க இ உலகு உடன் எனவே			80

# 105
அரைசு பட கடந்து அட்டு ஆற்றின் தந்த
முரைசு கெழு முதுகுடி முரண் மிகு செல்வற்கு
சீர் மிகு சிறப்பினோன் தொல் குடிக்கு உரித்து என
பார் வளர் முத்தமொடு படு கடல் பயந்த
ஆர் கலி உவகையர் ஒருங்கு உடன் கூடி			5
தீது இன்று பொலிக என தெய்வ கடி அயர்-மார்
வீவு இல் குடி பின் இரும் குடி ஆயரும்
தா இல் உள்ளமொடு துவன்றி ஆய்பு உடன்
வள் உருள் நேமியான் வாய் வைத்த வளை போல

தெள்ளிதின் விளங்கும் சுரி நெற்றி காரியும்			10
ஒரு_குழையவன் மார்பில் ஒண் தார் போல் ஒளி மிக
பொரு அற பொருந்திய செம் மறு வெள்ளையும்
பெரும் பெயர் கணிச்சியோன் மணி மிடற்று அணி போல
இரும் பிணர் எருத்தின் ஏந்து இமில் குராலும்
அணங்கு உடை வச்சிரத்தோன் ஆயிரம் கண் ஏய்க்கும்		15
கணம்_கொள் பல் பொறி கடும் சின புகரும்
வேல் வலான் உடை தாழ்ந்த விளங்கு வெண் துகில் ஏய்ப்ப
வாலிது கிளர்ந்த வெண் கால் சேயும்
கால முன்பின் பிறவும் சால

மடங்கலும் கணிச்சியும் காலனும் கூற்றும்			20
தொடர்ந்து செல் அமையத்து துவன்று உயிர் உணீஇய
உடங்கு கொட்பன போல் புகுத்தனர் தொழூஉ
அ வழி
கார் எதிர் கலி ஒலி கடி இடி உருமின் இயம் கறங்க
ஊர்பு எழு கிளர்பு உளர் புயல் மங்குலின் நறை பொங்க		25
நேர் இதழ் நிரை நிரை நெறி வெறி கோதையர் அணி நிற்ப
சீர் கெழு சிலை நிலை செயிர் இகல் மிகுதியின் சின பொதுவர்
தூர்பு எழு துதை புதை துகள் விசும்பு உற எய்த
ஆர்பு உடன் பாய்ந்தார் அகத்து

மருப்பில் கொண்டும் மார்பு உற தழீஇயும்			30
எருத்து இடை அடங்கியும் இமில் இற புல்லியும்
தோள் இடை புகுதந்தும் துதைந்து பாடு ஏற்றும்
நிரைபு மேற்சென்றாரை நீள் மருப்பு உற சாடி
கொள இடம் கொள விடா நிறுத்தன ஏறு
கொள்வாரை கொள்வாரை கோட்டு வாய் சா குத்தி		35
கொள்வார் பெறாஅ குரூஉ செகில் காணிகா
செயிரின் குறை நாளால் பின் சென்று சாடி
உயிர் உண்ணும் கூற்றமும் போன்ம்
பாடு ஏற்றவரை பட குத்தி செம் காரி

கோடு எழுந்து ஆடும் கண மணி காணிகா			40
நகை சால் அவிழ் பதம் நோக்கி நறவின்
முகை சூழும் தும்பியும் போன்ம்
இடை பாய்ந்து எருத்தத்து கொண்டானோடு எய்தி
மிடை பாயும் வெள் ஏறு கண்டைகா
வாள் பொரு வானத்து அரவின் வாய் கோட்பட்டு		45
போதரும் பால் மதியும் போன்ம்
ஆங்க ஏறும் பொதுவரும் மாறு-உற்று மாறா
இரு பெரு வேந்தரும் இகலி கண்ணுற்ற
பொரு_களம் போலும் தொழூஉ

வெல் புகழ் உயர் நிலை தொல் இயல் துதை புதை துளங்கு இமில்	50
நல் ஏறு கொண்ட பொதுவன் முகன் நோக்கி
பாடு இல ஆய_மகள் கண்
நறு_நுதால் என்-கொல் ஐம்_கூந்தல் உளர
சிறு முல்லை நாறியதற்கு குறு மறுகி
ஒல்லாது உடன்று எமர் செய்தார் அவன் கொண்ட		55
கொல் ஏறு போலும் கதம்
நெட்டு இரும் கூந்தலாய் கண்டை இஃது ஓர் சொல்
கோட்டு_இனத்து ஆயர்_மகனொடு யாம் பட்டதற்கு
எம் கண் எமரோ பொறுப்பர் பொறாதார்

தம் கண் பொடிவது எவன்				60
ஒண்_நுதால்
இன்ன உவகை பிறிது யாது யாய் என்னை
கண் உடை கோலள் அலைத்ததற்கு என்னை
மலர் அணி கண்ணி பொதுவனோடு எண்ணி
அலர் செய்துவிட்டது இ ஊர்				65
ஒன்றி புகர் இனத்து ஆய மகற்கு ஒள்_இழாய்
இன்று எவன் என்னை எமர் கொடுப்பது அன்று அவன்
மிக்கு தன் மேற்சென்ற செம் காரி கோட்டு இடை
புக்க-கால் புக்கது என் நெஞ்சு என

பாடு இமிழ் பரப்பு_அகத்து அரவணை அசைஇய		70
ஆடு கொள் நேமியான் பரவுதும் நாடு கொண்டு
இன் இசை முரசின் பொருப்பன் மன்னி
அமைவரல் அருவி ஆர்க்கும்
இமையத்து உம்பரும் விளங்குக எனவே

# 106
கழுவொடு சுடு படை சுருக்கிய தோல் கண்
இமிழ் இசை மண்டை உறியொடு தூக்கி
ஒழுகிய கொன்றை தீம் குழல் முரற்சியர்
வழூஉ சொல் கோவலர் தத்தம் இன நிரை
பொழுதொடு தோன்றிய கார் நனை வியன் புலத்தார்		5
அ வழி
நீறு எடுப்பவை நிலம் சாடுபவை
மாறு ஏற்று சிலைப்பவை மண்டி பாய்பவையாய்
துளங்கு இமில் நல் ஏற்று இனம் பல களம் புகும்

மள்ளர் வனப்பு ஒத்தன				10
தாக்குபு தம்முள் பெயர்த்து ஒற்றி எ வாயும்
வை வாய் மருப்பினான் மாறாது குத்தலின்
மெய் வார் குருதிய ஏறு எல்லாம் பெய்-காலை
கொண்டல் நிரை ஒத்தன
அ ஏற்றை						15
பிரிவு கொண்டு இடை போக்கி இனத்தோடு புனத்து ஏற்றி
இரு திறனா நீக்கும் பொதுவர்
உரு கெழு மா நிலம் இயற்றுவான்
விரி திரை நீக்குவான் வியன் குறிப்பு ஒத்தனர்

அவரை கழல உழக்கி எதிர் சென்று சாடி			20
அழல் வாய் மருப்பினால் குத்தி உழலை
மரத்தை போல் தொட்டன ஏறு
தொட்ட தம் புண் வார் குருதியால் கை பிசைந்து மெய் திமிரி
தங்கார் பொதுவர் கடலுள் பரதவர்
அம்பி ஊர்ந்து ஆங்கு ஊர்ந்தார் ஏறு			25
ஏறு தம் கோலம் செய் மருப்பினால் தோண்டிய வரி குடர்
ஞாலம் கொண்டு எழூஉம் பருந்தின் வாய் வழீஇ
ஆலும் கடம்பும் அணி-மார் விலங்கிட்ட
மாலை போல் தூங்கும் சினை

ஆங்கு						30
தம் புல ஏறு பரத்தர உய்த்த தம்
அன்பு உறு காதலர் கை பிணைந்து ஆய்ச்சியர்
இன்புற்று அயர்வர் தழூஉ
முயங்கி பொதிவேம் முயங்கி பொதிவேம்
முலை வேதின் ஒற்றி முயங்கி பொதிவேம்			35
கொலை ஏறு சாடிய புண்ணை எம் கேளே
பல் ஊழ் தயிர் கடைய தாஅய புள்ளி மேல்
கொல் ஏறு கொண்டான் குருதி மயக்கு-உற
புல்லல் எம் தோளிற்கு அணியோ எம் கேளே

ஆங்கு போர் ஏற்று அரும் தலை அஞ்சலும் ஆய்ச்சியர்		40
காரிகை தோள் காமுறுதலும் இ இரண்டும்
ஓராங்கு சேறல் இலவோ எம் கேளே
கொல் ஏறு கொண்டான் இவள் கேள்வன் என்று ஊரார்
சொல்லும் சொல் கேளா அளை மாறி யாம் வரும்
செல்வம் எம் கேள்வன் தருமோ எம் கேளே			45
ஆங்க
அரும் தலை ஏற்றொடு காதலர் பேணி
சுரும்பு இமிர் கானம் நாம் பாடினம் பரவுதும்
ஏற்றவர் புலம் கெட திறை கொண்டு

மாற்றாரை கடக்க எம் மறம் கெழு கோவே			50

# 107
எல்லா இஃது ஒன்று கூறு குறும்பு இவர்
புல்_இனத்தார்க்கும் குடம் சுட்டவர்க்கும் எம்
கொல் ஏறு கோடல் குறை என கோ_இனத்தார்
பல் ஏறு பெய்தார் தொழூஉ
தொழுவத்து					5
சில்லை செவிமறை கொண்டவன் சென்னி குவி முல்லை
கோட்டம் காழ் கோட்டின் எடுத்துக்கொண்டு ஆட்டிய
ஏழை இரும் புகர் பொங்க அ பூ வந்து என்
கூழையுள் வீழ்ந்தன்று-மன்

அதனை கெடுத்தது பெற்றார் போல் கொண்டு யான் முடித்தது	10
கேட்டனள் என்பவோ யாய்
கேட்டால் எவன் செய்ய வேண்டுமோ மற்று இகா
அவன் கண்ணி அன்றோ அது
பெய் போது அறியா தன் கூழையுள் ஏதிலான்
கை புனை கண்ணி முடித்தாள் என்று யாய் கேட்பின்		15
செய்வது இல ஆகுமோ மற்று
எல்லா தவறும் அறும்
ஓஒ அஃது அறும் ஆறு
ஆயர்_மகன் ஆயின் ஆய_மகள் நீ ஆயின்

நின் வெய்யன் ஆயின் அவன் வெய்யை நீ ஆயின்		20
அன்னை நோ_தக்கதோ இல்லை-மன் நின் நெஞ்சம்
அன்னை நெஞ்சு ஆக பெறின்
அன்னையோ
ஆயர்_மகனையும் காதலை கைம்மிக
ஞாயையும் அஞ்சுதி ஆயின் அரிது அரோ			25
நீ உற்ற நோய்க்கு மருந்து
மருந்து இன்று யான் உற்ற துயர் ஆயின் எல்லா
வருந்துவேன் அல்லனோ யான்
வருந்தாதி

மண்ணி மாசு அற்ற நின் கூழையுள் ஏறு அவன்		30
கண்ணி தந்திட்டது என கேட்டு திண்ணிதா
தெய்வ மால் காட்டிற்று இவட்கு என நின்னை அ
பொய் இல் பொதுவற்கு அடை சூழ்ந்தார் தந்தையோடு
ஐயன்மார் எல்லாம் ஒருங்கு

# 108
இகல் வேந்தன் சேனை இறுத்த வாய் போல
அகல் அல்குல் தோள் கண் என மூ வழி பெருகி
நுதல் அடி நுசுப்பு என மூ வழி சிறுகி
கவலையால் காமனும் படை விடு வனப்பினோடு
அகல் ஆங்கண் அளை மாறி அலமந்து பெயரும்-கால்		5
நகை வல்லேன் யான் என்று என் உயிரோடு படை தொட்ட
இகலாட்டி நின்னை எவன் பிழைத்தேன் எல்லா யான்
அஃது அவலம் அன்று மன
ஆயர் எமர் ஆனால் ஆய்த்தியேம் யாம் மிக

காயாம் பூ கண்ணி கரும் துவர் ஆடையை			10
மேயும் நிரை முன்னர் கோல் ஊன்றி நின்றாய் ஓர்
ஆயனை அல்லை பிறவோ அமரருள்
ஞாயிற்று புத்தேள்_மகன்
அதனால் வாய்வாளேன்
முல்லை முகையும் முருந்தும் நிரைத்து அன்ன		15
பல்லும் பணை தோளும் பேர் அமர் உண்கண்ணும்
நல்லேன் யான் என்று நல_தகை நம்பிய
சொல்லாட்டி நின்னொடு சொல் ஆற்றுகிற்பார் யார்
சொல்லாதி

நின்னை தகைத்தனென் அல்லல் காண்-மன்			20
மண்டாத கூறி மழ குழக்கு ஆகின்றே
கண்ட பொழுதே கடவரை போல நீ
பண்டம் வினாய படிற்றால் தொடீஇய நின்
கொண்டது எவன் எல்லா யான்
கொண்டது						25
அளை மாறி பெயர்தருவாய் அறிதியோ அ ஞான்று
தளவ மலர் ததைந்தது ஓர் கான சிற்றாற்று அயல்
இள மாங்காய் போழ்ந்து அன்ன கண்ணினால் என் நெஞ்சம்
களமா கொண்டு ஆண்டாய் ஓர் கள்வியை அல்லையோ

நின் நெஞ்சம் களமா கொண்டு யாம் ஆளல் எமக்கு எவன் எளிது ஆகும்	30
புனத்து உளான் என் ஐக்கு புகா உய்த்து கொடுப்பதோ
இனத்து உளான் எந்தைக்கு கலத்தொடு செல்வதோ
தினை காலுள் யாய் விட்ட கன்று மேய்க்கிற்பதோ
அனைத்து ஆக
வெண்ணெய் தெழி கேட்கும் அண்மையால் சேய்த்து அன்றி	35
அண்ண அணித்து ஊராயின் நண்பகல் போழ்து ஆயின்
கண் நோக்கு ஒழிக்கும் கவின் பெறு பெண் நீர்மை
மயில் எருத்து வண்ணத்து மாயோய் மற்று இன்ன
வெயிலொடு எவன் விரைந்து சேறி உது காண்

பிடி துஞ்சு அன்ன அறை மேல நுங்கின்			40
தடி கண் புரையும் குறும் சுனை ஆடி
பனி பூ தளவொடு முல்லை பறித்து
தனி காயாம் தண் பொழில் எம்மொடு வைகி
பனி பட செல்வாய் நும் ஊர்க்கு
இனி செல்வேம் யாம்					45
மா மருண்டு அன்ன மழை கண் சிற்றாய்த்தியர்
நீ மருட்டும் சொல்_கண் மருள்வார்க்கு உரை அவை
ஆ முனியா ஏறு போல் வைகல் பதின்மரை
காமுற்று செல்வாய் ஓர் கண்_குத்தி_கள்வனை

நீ எவன் செய்தி பிறர்க்கு				50
யாம் எவன் செய்தும் நினக்கு
கொலை உண்கண் கூர் எயிற்று கொய் தளிர் மேனி
இனை வனப்பின் மாயோய் நின்னின் சிறந்தார்
நில உலகத்து இன்மை தெளி நீ வருதி
மலையொடு மார்பு அமைந்த செல்வன் அடியை		55
தலையினால் தொட்டு உற்றேன் சூள்
ஆங்கு உணரார் நேர்ப அது பொய்ப்பாய் நீ ஆயின்
தேம் கொள் பொருப்பன் சிறுகுடி எம் ஆயர்
வேந்து ஊட்டு அரவத்து நின் பெண்டிர் காணாமை

காஞ்சி தாது உக்கு அன்ன தாது எரு மன்றத்து		60
தூங்கும் குரவையுள் நின் பெண்டிர் கேளாமை
ஆம்பல் குழலால் பயிர்_பயிர் எம் படப்பை
காஞ்சி கீழ் செய்தேம் குறி

# 109
கார் ஆர பெய்த கடி கொள் வியன் புலத்து
பேராது சென்று பெரும் பதவ புல் மாந்தி
நீர் ஆர் நிழல குடம் சுட்டு_இனத்து உள்ளும்
போர் ஆரா ஏற்றின் பொரு நாகு இளம் பாண்டில்
தேர் ஊர செம்மாந்தது போல் மதைஇனள்			5
பேர் ஊரும் சிற்றூரும் கௌவை எடுப்பவள் போல்
மோரோடு வந்தாள் தகை கண்டை யாரோடும்
சொல்லியாள் அன்றே வனப்பு
பண்ணி தமர் தந்து ஒரு புறம் தைஇய

கண்ணி எடுக்கல்லா கோடு ஏந்து அகல் அல்குல்		10
புண் இல்லார் புண் ஆக நோக்கும் முழு மெய்யும்
கண்ணளோ ஆயர்_மகள்
இவள் தான் திருத்தா சுமட்டினள் ஏனை தோள் வீசி
வரி கூழ வட்டி தழீஇ அரி குழை
ஆடல் தகையள் கழுத்தினும் வாலிது			15
நுண்ணிதா தோன்றும் நுசுப்பு
இடை தெரியா ஏஎர் இருவரும் தத்தம்
உடை வனப்பு எல்லாம் இவட்கு ஈத்தார்-கொல்லோ
படை இடுவான்-மன் கண்டீர் காமன் மடை அடும்

பாலொடு கோட்டம் புகின்				20
இவள் தான் வருந்த நோய் செய்து இறப்பின் அல்லால் மருந்து அல்லள்
யார்க்கும் அணங்கு ஆதல் சான்றாள் என்று ஊர் பெண்டிர்
மாங்காய் நறும் காடி கூட்டுவேம் யாங்கும்
எழு நின் கிளையொடு போக என்று தத்தம்
கொழுநரை போகாமல் காத்து முழு நாளும்			25
வாயில் அடைப்ப வரும்

# 110
கடி கொள் இரும் காப்பில் புல்_இனத்து ஆயர்
குடி-தொறும் நல்லாரை வேண்டுதி எல்லா
இடு தேள் மருந்தோ நின் வேட்கை தொடுதர
துன்னி தந்து ஆங்கே நகை குறித்து எம்மை
திளைத்தற்கு எளியமா கண்டை அளைக்கு எளியாள்		5
வெண்ணெய்க்கும் அன்னள் என கொண்டாய் ஒண்_நுதால்
ஆங்கு நீ கூறின் அனைத்து ஆக நீங்குக
அச்சத்தான் மாறி அசைவினான் போத்தந்து
நிச்சம் தடுமாறும் மெல் இயல் ஆய்_மகள்

மத்தம் பிணித்த கயிறு போல் நின் நலம்			10
சுற்றி சுழலும் என் நெஞ்சு
விடிந்த பொழுதினும் இல்-வயின் போகாது
கொடும் தொழுவினுள் பட்ட கன்றிற்கு சூழும்
கடும் சூல் ஆ நாகு போல் நின் கண்டு நாளும்
நடுங்கு அஞர் உற்றது என் நெஞ்சு			15
எவ்வம் மிகுதர எம் திறத்து எஞ்ஞான்றும்
நெய் கடை பாலின் பயன் யாதும் இன்று ஆகி
கை தோயல் மாத்திரை அல்லது செய்தி
அறியாது அளித்து என் உயிர்

அன்னையோ மன்றத்து கண்டு ஆங்கே சான்றார் மகளிரை	20
இன்றி அமையேன் என்று இன்னவும் சொல்லுவாய்
நின்றாய் நீ சென்றீ எமர் காண்பர் நாளையும்
கன்றொடு சேறும் புலத்து

# 111
தீம் பால் கறந்த கலம் மாற்றி கன்று எல்லாம்
தாம்பின் பிணித்து மனை நிறீஇ யாய் தந்த
பூ கரை நீலம் புடை தாழ மெய் அசைஇ பாங்கரும்
முல்லையும் தாய பாட்டம்-கால் தோழி நம்
புல்_இனத்து ஆயர்_மகளிரோடு எல்லாம்			5
ஒருங்கு விளையாட அ வழி வந்த
குருந்தம் பூ கண்ணி பொதுவன் மற்று என்னை
முற்று இழை ஏஎர் மட நல்லாய் நீ ஆடும்
சிற்றில் புனைகோ சிறிது என்றான் எல்லா நீ

பெற்றேம் யாம் என்று பிறர் செய்த இல் இருப்பாய்		10
கற்றது இலை மன்ற காண் என்றேன் முற்று_இழாய்
தாது சூழ் கூந்தல் தகைபெற தைஇய
கோதை புனைகோ நினக்கு என்றான் எல்லா நீ
ஏதிலார் தந்த பூ கொள்வாய் நனி மிக
பேதையை மன்ற பெரிது என்றேன் மாதராய்			15
ஐய பிதிர்ந்த சுணங்கு அணி மென் முலை மேல்
தொய்யில் எழுதுகோ மற்று என்றான் யாம் பிறர்
செய் புறம் நோக்கி இருத்துமோ நீ பெரிது
மையலை மாதோ விடுக என்றேன் தையலாய்

சொல்லிய ஆறு எல்லாம் மாறுமாறு யான் பெயர்ப்ப		20
அல்லாந்தான் போல பெயர்ந்தான் அவனை நீ
ஆயர் மகளிர் இயல்பு உரைத்து எந்தையும்
யாயும் அறிய உரைத்தீயின் யான் உற்ற
நோயும் களைகுவை-மன்

# 112
யார் இவன் என்னை விலக்குவான் நீர் உளர்
பூ தாமரை போது தந்த விரவு தார்
கல்லா பொதுவனை நீ மாறு நின்னொடு
சொல்லல் ஓம்பு என்றார் எமர்
எல்லா கடாஅய கண்ணால் கலைஇய நோய் செய்யும்		5
நடாஅ கரும்பு அமன்ற தோளாரை காணின்
விடாஅல் ஓம்பு என்றார் எமர்
கடாஅயார் நல்லாரை காணின் விலக்கி நயந்து அவர்
பல் இதழ் உண்கண்ணும் தோளும் புகழ் பாட

நல்லது கற்பித்தார் மன்ற நுமர் பெரிதும்			10
வல்லர் எமர்-கண் செயல்
ஓஒ வழங்கா பொழுது நீ கன்று மேய்ப்பாய் போல்
வழங்கல் அறிவார் உரையாரேல் எம்மை
இகழ்ந்தாரே அன்றோ எமர்
ஒக்கும் அறிவல் யான் எல்லா விடு			15
விடேன் யான் என் நீ குறித்தது இரும்_கூந்தால்
நின்னை என் முன் நின்று
சொல்லல் ஓம்பு என்றமை அன்றி அவனை நீ
புல்லல் ஓம்பு என்றது உடையரோ மெல்ல

முயங்கு நின் முள் எயிறு_உண்கும் எவன்-கொலோ		20
மாய பொதுவன் உரைத்த உரை எல்லாம்
வாய் ஆவது ஆயின் தலைப்பட்டாம் பொய் ஆயின்
சாயல் இன் மார்பில் கமழ் தார் குழைத்த நின்
ஆய் இதழ் உண்கண் பசப்ப தட மென் தோள்
சாயினும் ஏஎர் உடைத்து				25

# 113
நலம் மிக நந்திய நயவரு தட மென் தோள்
அலமரல் அமர் உண்கண் அம் நல்லாய் நீ உறீஇ
உலமரல் உயவு நோய்க்கு உய்யும் ஆறு உரைத்து செல்
பேர் ஏமுற்றார் போல முன் நின்று விலக்குவாய்
யார் எல்லா நின்னை அறிந்ததூஉம் இல்-வழி			5
தளர்_இயால் என் அறிதல் வேண்டின் பகை அஞ்சா
புல்_இனத்து ஆயர்_மகனேன் மற்று யான்
ஒக்கும்-மன்
புல்_இனத்து ஆயனை நீ ஆயின் குடம் சுட்டு

நல்_இனத்து ஆயர் எமர்				10
எல்லா
நின்னொடு சொல்லின் ஏதமோ இல்லை-மன்
ஏதம் அன்று எல்லை வருவான் விடு
விடேன்
உடம்பட்டு நீப்பார் கிளவி மடம்பட்டு			15
மெல்லிய ஆதல் அறியினும் மெல்_இயால்
நின் மொழி கொண்டு யானோ விடுவேன் மற்று என் மொழி கொண்டு
என் நெஞ்சம் ஏவல் செயின்
நெஞ்சு ஏவல் செய்யாது என நின்றாய்க்கு எஞ்சிய

காதல் கொள் காமம் கலக்கு-உற ஏதிலார்			20
பொய்ம்மொழி தேறுவது என்
தெளிந்தேன் தெரி_இழாய் யான்
பல் கால் யாம் கான்யாற்று அவிர் மணல் தண் பொழில்
அல்கல் அகல் அறை ஆயமொடு ஆடி
முல்லை குருந்தொடு முச்சி வேய்ந்து எல்லை		25
இரவு உற்றது இன்னும் கழிப்பி அரவு உற்று
உருமின் அதிரும் குரல் போல் பொரு முரண்
நல் ஏறு நாகுடன் நின்றன
பல் ஆன் இன நிரை நாம் உடன் செலற்கே

# 114
வாரி நெறிப்பட்டு இரும் புறம் தாஅழ்ந்த
ஓரி புதல்வன் அழுதனன் என்பவோ
புதுவ மலர் தைஇ எமர் என் பெயரால்
வதுவை அயர்வாரை கண்டு மதி அறியா
ஏழையை என்று அகல நக்கு வந்தீயாய் நீ			5
தோழி அவன் உழை சென்று
சென்று யான் அறிவேன் கூறுக மற்று இனி
சொல் அறியா பேதை மடவை மற்று எல்லா
நினக்கு ஒரூஉம் மற்று என்று அகல் அகலும் நீடு இன்று

நினக்கு வருவதா காண்பாய் அனைத்து ஆக			10
சொல்லிய சொல்லும் வியம் கொள கூறு
தரு மணல் தாழ பெய்து இல் பூவல் ஊட்டி
எருமை பெடையோடு எமர் ஈங்கு அயரும்
பெரும் மணம் எல்லாம் தனித்தே ஒழிய
வரி மணல் முன்துறை சிற்றில் புனைந்த			15
திரு நுதல் ஆயத்தார் தம்முள் புணர்ந்த
ஒரு மணம் தான் அறியும் ஆயின் எனைத்தும்
தெருமரல் கைவிட்டு இருக்கோ அலர்ந்த
விரி நீர் உடுக்கை உலகம் பெறினும்

அரு நெறி ஆயர்_மகளிர்க்கு				20
இரு மணம் கூடுதல் இல் இயல்பு அன்றே

# 115
தோழி நாம் காணாமை உண்ட கடும் கள்ளை மெய் கூர
நாணாது சென்று நடுங்க உரைத்து ஆங்கு
கரந்ததூஉம் கையொடு கோள்பட்டாம் கண்டாய் நம்
புல்_இனத்து ஆயர்_மகன் சூடி வந்தது ஓர்
முல்லை ஒரு காழும் கண்ணியும் மெல்_இயால்		5
கூந்தலுள் பெய்து முடித்தேன்-மன் தோழி யாய்
வெண்ணெய் உரைஇ விரித்த கதுப்போடே
அன்னையும் அத்தனும் இல்லரா யாய் நாண
அன்னை முன் வீழ்ந்தன்று அ பூ

அதனை வினவலும் செய்யாள் சினவலும் செய்யாள்		10
நெருப்பு கை தொட்டவர் போல விதிர்த்திட்டு
நீங்கி புறங்கடை போயினாள் யானும் என்
சாந்து உளர் கூழை முடியா நிலம் தாழ்ந்த
பூ கரை நீலம் தழீஇ தளர்பு ஒல்கி
பாங்கு அரும் கானத்து ஒளித்தேன் அதற்கு எல்லா		15
ஈங்கு எவன் அஞ்சுவது
அஞ்சல் அவன் கண்ணி நீ புனைந்தாய் ஆயின் நமரும்
அவன் கண் அடை சூழ்ந்தார் நின்னை அகன் கண்
வரைப்பில் மணல் தாழ பெய்து திரைப்பில்

வதுவையும் ஈங்கே அயர்ப அதுவே யாம்			20
அல்கலும் சூழ்ந்த வினை

# 116
பாங்கு அரும் பாட்டம்-கால் கன்றொடு செல்வேம் எம்
தாம்பின் ஒரு தலை பற்றினை ஈங்கு எம்மை
முன்னை நின்று ஆங்கே விலக்கிய எல்லா நீ
என்னை ஏமுற்றாய் விடு
விடேஎன் தொடீஇய செல்வார் துமித்து எதிர் மண்டும்		5
கடு வய நாகு போல் நோக்கி தொழு வாயில்
நீங்கி சினவுவாய் மற்று
நீ நீங்கு கன்று சேர்ந்தார்-கண் கத ஈற்று ஆ சென்று ஆங்கு
வன்கண்ணள் ஆய் வரல் ஓம்பு

யாய் வருக ஒன்றோ பிறர் வருக மற்று நின்			10
கோ வரினும் இங்கே வருக தளரேன் யான்
நீ அருளி நல்க பெறின்
நின்னை யான் சொல்லினவும் பேணாய் நினைஇ
கனை பெயல் ஏற்றின் தலை சாய்த்து எனையதூஉம்
மாறு எதிர் கூறி மயக்குப்படுகுவாய்			15
கலத்தொடு யாம் செல்வு-உழி நாடி புலத்தும்
வருவையால் நாண் இலி நீ

# 117
மாண உருக்கிய நன் பொன் மணி உறீஇ
பேணி துடைத்து அன்ன மேனியாய் கோங்கின்
முதிரா இள முகை ஒப்ப எதிரிய
தொய்யில் பொறித்த வன முலையாய் மற்று நின்
கையது எவன் மற்று உரை				5
கையதை சேரி கிழவன் மகளேன் யான் மற்று இஃது ஓர்
மாதர் புலைத்தி விலை ஆக செய்தது ஓர்
போழில் புனைந்த வரி புட்டில் புட்டிலுள் என் உள
காண்-தக்காய் என் காட்டி காண்

காண் இனி தோட்டார் கதுப்பின் என் தோழி அவரொடு		10
காட்டு சார் கொய்த சிறு முல்லை மற்று இவை
முல்லை இவை ஆயின் முற்றிய கூழையாய்
எல்லிற்று போழ்து ஆயின் ஈதோளி கண்டேனால்
செல் என்று நின்னை விடுவேன் யான் மற்று எனக்கு
மெல்லியது ஓராது அறிவு				15
@ ஐந்தாவது நெய்தற்கலி

# 118
வெல் புகழ் மன்னவன் விளங்கிய ஒழுக்கத்தால்
நல் ஆற்றின் உயிர் காத்து நடுக்கு அற தான் செய்த
தொல்_வினை பயன் துய்ப்ப துறக்கம் வேட்டு எழுந்தால் போல்
பல் கதிர் ஞாயிறு பகல் ஆற்றி மலை சேர
ஆனாது கலுழ் கொண்ட உலகத்து மற்று அவன்		5
ஏனையான் அளிப்பான் போல் இகல் இருள் மதி சீப்ப
குடை_நிழல் ஆண்டாற்கும் ஆளிய வருவாற்கும்
இடை நின்ற காலம் போல் இறுத்தந்த மருள் மாலை
மாலை நீ தூ அற துறந்தாரை நினைத்தலின் கயம் பூத்த

போது போல் குவிந்த என் எழில் நலம் எள்ளுவாய்		10
ஆய் சிறை வண்டு ஆர்ப்ப சினை பூ போல் தளைவிட்ட
காதலர் புணர்ந்தவர் காரிகை கடிகல்லாய்
மாலை நீ தையென கோவலர் தனி குழல் இசை கேட்டு
பையென்ற நெஞ்சத்தேம் பக்கம் பாராட்டுவாய்
செவ்வழி யாழ் நரம்பு அன்ன கிளவியார் பாராட்டும்		15
பொய் தீர்ந்த புணர்ச்சியுள் புது நலம் கடிகல்லாய்
மாலை நீ தகை மிக்க தாழ் சினை பதி சேர்ந்து புள் ஆர்ப்ப
பகை மிக்க நெஞ்சத்தேம் புன்மை பாராட்டுவாய்
தகை மிக்க புணர்ச்சியார் தாழ் கொடி நறு முல்லை

முகை முகம் திறந்து அன்ன முறுவலும் கடிகல்லாய்		20
என ஆங்கு
மாலையும் அலரும் நோனாது எம்-வயின்
நெஞ்சமும் எஞ்சும்-மன் தில்ல எஞ்சி
உள்ளாது அமைந்தோர் உள்ளும்
உள் இல் உள்ளம் உள்ளுள் உவந்தே			25

# 119
அகன் ஞாலம் விளக்கும் தன் பல் கதிர் வாய் ஆக
பகல் நுங்கியது போல படு_சுடர் கல் சேர
இகல் மிகு நேமியான் நிறம் போல இருள் இவர
நிலவு காண்பது போல அணி மதி ஏர்தர
கண் பாயல் பெற்ற போல் கணை கால மலர் கூம்ப		5
தம் புகழ் கேட்டார் போல் தலை சாய்த்து மரம் துஞ்ச
முறுவல் கொள்பவை போல முகை அவிழ்பு புதல் நந்த
சிறு வெதிர் குழல் போல சுரும்பு இமிர்ந்து இம்மென
பறவை தம் பார்ப்பு உள்ள கறவை தம் பதி-வயின்

கன்று அமர் விருப்பொடு மன்று நிறை புகுதர			10
மா வதி சேர மாலை வாள் கொள
அந்தி அந்தணர் எதிர்கொள அயர்ந்து
செம் தீ செ அழல் தொடங்க வந்ததை
வால் இழை மகளிர் உயிர் பொதி அவிழ்க்கும்
காலை ஆவது அறியார்				15
மாலை என்மனார் மயங்கியோரே

# 120
அருள் தீர்ந்த காட்சியான் அறன் நோக்கான் நயம் செய்யான்
வெருவு-உற உய்த்தவன் நெஞ்சம் போல் பைபய
இருள் தூர்பு புலம்பு ஊர கனை சுடர் கல் சேர
உரவு தகை மழுங்கி தன் இடும்பையால் ஒருவனை
இரப்பவன் நெஞ்சம் போல் புல்லென்று புறம்மாறி		5
கரப்பவன் நெஞ்சம் போல் மரம் எல்லாம் இலை கூம்ப
தோற்றம் சால் செக்கருள் பிறை நுதி எயிறு ஆக
நால் திசையும் நடுக்கு-உறூஉம் மடங்கல் காலை
கூற்று நக்கது போலும் உட்குவரு கடு மாலை

மாலை நீ உள்ளம் கொண்டு அகன்றவர் துணை தாரா பொழுதின்-கண்	10
வெள்ள மான் நிறம் நோக்கி கணை தொடுக்கும் கொடியான் போல்
அல்லல் பட்டு இருந்தாரை அயர்ப்பிய வந்தாயோ
மாலை நீ ஈரம் இல் காதலர் இகந்து அருளா இடன் நோக்கி
போர் தொலைந்து இருந்தாரை பாடு எள்ளி நகுவார் போல்
ஆர் அஞர் உற்றாரை அணங்கிய வந்தாயோ			15
மாலை நீ கந்து ஆதல் சான்றவர் களைதாரா பொழுதின்-கண்
வெந்தது ஓர் புண்ணின் கண் வேல் கொண்டு நுழைப்பான் போல்
காய்ந்த நோய் உழப்பாரை கலக்கிய வந்தாயோ
என ஆங்கு

இடன் இன்று அலைத்தரும் இன்னா செய் மாலை		20
துனி கொள் துயர் தீர காதலர் துனைதர
மெல்லியான் பருவத்து மேல் நின்ற கடும் பகை
ஒல்லென நீக்கி ஒருவாது காத்து ஓம்பும்
நல் இறை தோன்ற கெட்டு ஆங்கு
இல் ஆகின்றால் இருள் அகத்து ஒளித்தே			25

# 121
ஒண் சுடர் கல் சேர உலகு ஊரும் தகையது
தெண் கடல் அழுவத்து திரை நீக்கா எழுதரூஉம்
தண் கதிர் மதியத்து அணி நிலா நிறைத்தர
புள்_இனம் இரை மாந்தி புகல் சேர ஒலி ஆன்று
வள் இதழ் கூம்பிய மணி மருள் இரும் கழி			5
பள்ளிபுக்கது போலும் பரப்பு நீர் தண் சேர்ப்ப
தாங்க அரும் காமத்தை தணந்து நீ புறம்மாற
தூங்கு நீர் இமிழ் திரை துணை ஆகி ஒலிக்குமே
உறையொடு வைகிய போது போல் ஒய்யென

நிறை ஆனாது இழிதரூஉம் நீர் நீந்து கண்ணாட்கு		10
வாராய் நீ புறம்மாற வருந்திய மேனியாட்கு
ஆர் இருள் துணை ஆகி அசை வளி அலைக்குமே
கமழ் தண் தாது உதிர்ந்து உக ஊழ்-உற்ற கோடல் வீ
இதழ் சோரும் குலை போல இறை நீவு வளையாட்கு
இன் துணை நீ நீப்ப இரவினுள் துணை ஆகி			15
தன் துணை பிரிந்து அயாஅம் தனி குருகு உசாவுமே
ஒண் சுடர் ஞாயிற்று விளக்கத்தான் ஒளி சாம்பும்
நண்பகல் மதியம் போல் நலம் சாய்ந்த அணியாட்கு
என ஆங்கு

எறி திரை தந்திட இழிந்த மீன் இன் துறை			20
மறி திரை வருந்தாமல் கொண்டு ஆங்கு நெறி தாழ்ந்து
சாயினள் வருந்தியாள் இடும்பை
பாய் பரி கடும் திண் தேர் களையினோ இடனே

# 122
கோதை ஆயமும் அன்னையும் அறிவுற
போது எழில் உண்கண் புகழ் நலன் இழப்ப
காதல் செய்து அருளாது துறந்தார் மாட்டு ஏது இன்றி
சிறிய துனித்தனை துன்னா செய்து அமர்ந்தனை
பலவும் நூறு அடுக்கினை இனைபு ஏங்கி அழுதனை		5
அலவலை உடையை என்றி தோழீ
கேள் இனி
மாண் எழில் மாதர் மகளிரோடு அமைந்து அவன்
காணும் பண்பு இலன் ஆதல் அறிவேன்-மன் அறியினும்

பேணி அவன் சிறிது அளித்த-கால் என்			10
நாண் இல் நெஞ்சம் நெகிழ்தலும் காண்பல்
இருள் உறழ் இரும் கூந்தல் மகளிரோடு அமைந்து அவன்
தெருளும் பண்பு இலன் ஆதல் அறிவேன்-மன் அறியினும்
அருளி அவன் சிறிது அளித்த-கால் என்
மருளி நெஞ்சம் மகிழ்தலும் காண்பல்			15
ஒள் இழை மாதர் மகளிரோடு அமைந்து அவன்
உள்ளும் பண்பு இலன் ஆதல் அறிவேன்-மன் அறியினும்
புல்லி அவன் சிறிது அளித்த-கால் என்
அல்லல் நெஞ்சம் மடங்கலும் காண்பல்

அதனால்						20
யாம நடுநாள் துயில் கொண்டு ஒளித்த
காம நோயின் கழீஇய நெஞ்சம்
தான் அவர்-பால் பட்டது ஆயின்
நாம் உயிர் வாழ்தலோ நகை நனி உடைத்தே

# 123
கரும் கோட்டு நறும் புன்னை மலர் சினை மிசை-தொறும்
சுரும்பு ஆர்க்கும் குரலினோடு இரும் தும்பி இயைபு ஊத
ஒருங்கு உடன் இம்மென இமிர்தலின் பாடலோடு
அரும் பொருள் மரபின் மால் யாழ் கேளா கிடந்தான் போல்
பெரும் கடல் துயில் கொள்ளும் வண்டு இமிர் நறும் கானல்	5
காணாமை இருள் பரப்பி கையற்ற கங்குலான்
மாணா நோய் செய்தான்-கண் சென்றாய் மற்று அவனை நீ
காணவும் பெற்றாயோ காணாயோ மட நெஞ்சே
கொல் ஏற்று சுறவு_இனம் கடி கொண்ட மருள் மாலை

அல்லல் நோய் செய்தான்-கண் சென்றாய் மற்று அவனை நீ	10
புல்லவும் பெற்றாயோ புல்லாயோ மட நெஞ்சே
வெறி கொண்ட புள்_இனம் வதி சேரும் பொழுதினான்
செறி வளை நெகிழ்த்தான்-கண் சென்றாய் மற்று அவனை நீ
அறியவும் பெற்றாயோ அறியாயோ மட நெஞ்சே
என ஆங்கு						15
எல்லையும் இரவும் துயில் துறந்து பல் ஊழ்
அரும் படர் அவல நோய் செய்தான்-கண் பெறல் நசைஇ
இரும் கழி ஓதம் போல் தடுமாறி
வருந்தினை அளிய என் மடம் கெழு நெஞ்சே

# 124
ஞாலம் மூன்று அடி தாய முதல்வற்கு முது முறை
பால் அன்ன மேனியான் அணிபெற தைஇய
நீல நீர் உடை போல தகைபெற்ற வெண் திரை
வால் எக்கர் வாய் சூழும் வயங்கு நீர் தண் சேர்ப்ப
ஊர் அலர் எடுத்து அரற்ற உள்ளாய் நீ துறத்தலின்		5
கூரும் தன் எவ்வ நோய் என்னையும் மறைத்தாள்-மன்
காரிகை பெற்ற தன் கவின் வாட கலுழ்பு ஆங்கே
பீர் அலர் அணி கொண்ட பிறை நுதல் அல்லா-கால்
இணைபு இ ஊர் அலர் தூற்ற எய்யாய் நீ துறத்தலின்

புணை இல்லா எவ்வ நோய் என்னையும் மறைத்தாள்-மன்	10
துணையாருள் தகைபெற்ற தொல் நலம் இழந்து இனி
அணி வனப்பு இழந்த தன் அணை மென் தோள் அல்லா-கால்
இன்று இ ஊர் அலர் தூற்ற எய்யாய் நீ துறத்தலின்
நின்ற தன் எவ்வ நோய் என்னையும் மறைத்தாள்-மன்
வென்ற வேல் நுதி ஏய்க்கும் விறல் நலன் இழந்து இனி		15
நின்று நீர் உக கலுழும் நெடும் பெரும் கண் அல்லா-கால்
அதனால்
பிரிவு இல்லாய் போல நீ தெய்வத்தின் தெளித்த-கால்
அரிது என்னாள் துணிந்தவள் ஆய் நலம் பெயர்தர

புரி உளை கலி_மான் தேர் கடவுபு				20
விரி தண் தார் வியல் மார்ப விரைக நின் செலவே

# 125
கண்டவர் இல் என உலகத்துள் உணராதார்
தங்காது தகைவு இன்றி தாம் செய்யும் வினைகளுள்
நெஞ்சு அறிந்த கொடியவை மறைப்பினும் அறிபவர்
நெஞ்சத்து குறுகிய கரி இல்லை ஆகலின்
வண் பரி நவின்ற வய_மான் செல்வ			5
நன்கு அதை அறியினும் நயன் இல்லா நாட்டத்தால்
அன்பு இலை என வந்து கழறுவல் ஐய கேள்
மகிழ் செய் தே_மொழி தொய்யில் சூழ் இள முலை
முகிழ் செய முள்கிய தொடர்பு அவள் உண்கண்

அவிழ் பனி உறைப்பவும் நல்காது விடுவாய்			10
இமிழ் திரை கொண்க கொடியை காண் நீ
இலங்கு ஏர் எல்_வளை ஏர் தழை தைஇ
நலம் செல நல்கிய தொடர்பு அவள் சாஅய்
புலந்து அழ புல்லாது விடுவாய்
இலங்கு நீர் சேர்ப்ப கொடியை காண் நீ			15
இன் மணி சிலம்பின் சில் மொழி ஐம்பால்
பின்னொடு கெழீஇய தட அரவு அல்குல்
நுண் வரி வாட வாராது விடுவாய்
தண்ணம் துறைவ தகாஅய் காண் நீ

என ஆங்கு						20
அனையள் என்று அளி-மதி பெரும நின் இன்று
இறை வரை நில்லா வளையள் இவட்கு இனி
பிறை ஏர் சுடர் நுதல் பசலை
மறைய செல்லும் நீ மணந்தனை விடினே

# 126
பொன் மலை சுடர் சேர புலம்பிய இடன் நோக்கி
தன் மலைந்து உலகு ஏத்த தகை மதி ஏர்தர
செக்கர் கொள் பொழுதினான் ஒலி நீவி இன நாரை
முக்கோல் கொள் அந்தணர் முது மொழி நினைவார் போல்
எக்கர் மேல் இறைகொள்ளும் இலங்கு நீர் தண் சேர்ப்ப		5
அணி சிறை இன குருகு ஒலிக்கும்-கால் நின் திண் தேர்
மணி குரல் என இவள் மதிக்கும்-மன் மதித்து ஆங்கே
உள் ஆன்ற ஒலியவாய் இருப்ப கண்டு அவை கானல்
புள் என உணர்ந்து பின் புலம்பு கொண்டு இனையுமே

நீர் நீவி கஞன்ற பூ கமழும்-கால் நின் மார்பில்		10
தார் நாற்றம் என இவள் மதிக்கும்-மன் மதித்து ஆங்கே
அலர் பதத்து அசை வளி வந்து ஒல்க கழி பூத்த
மலர் என உணர்ந்து பின் மம்மர் கொண்டு இனையுமே
நீள் நகர் நிறை ஆற்றாள் நினையுநள் வதிந்த-கால்
தோள் மேலாய் என நின்னை மதிக்கும்-மன் மதித்து ஆங்கே	15
நனவு என புல்லும்-கால் காணாளாய் கண்டது
கனவு என உணர்ந்து பின் கையற்று கலங்குமே
என ஆங்கு
பல நினைந்து இனையும் பைதல் நெஞ்சின்

அலமரல் நோயுள் உழக்கும் என் தோழி			20
மதி மருள் வாள் முகம் விளங்க
புது நலம் ஏர்தர பூண்க நின் தேரே

# 127
தெரி இணர் ஞாழலும் தேம் கமழ் புன்னையும்
புரி அவிழ் பூவின கைதையும் செருந்தியும்
வரி ஞிமிறு இமிர்ந்து ஆர்ப்ப இரும் தும்பி இயைபு ஊத
செரு மிகு நேமியான் தார் போல பெரும் கடல்
வரி மணல் வாய் சூழும் வயங்கு நீர் தண் சேர்ப்ப		5
கொடும் கழி வளைஇய குன்று போல் வால் எக்கர்
நடுங்கு நோய் தீர நின் குறி வாய்த்தாள் என்பதோ
கடும் பனி அறல் இகு கயல் ஏர் கண் பனி மல்க
இடும்பையோடு இனைபு ஏங்க இவளை நீ துறந்ததை

குறி இன்றி பல் நாள் நின் கடும் திண் தேர் வரு பதம் கண்டு	10
எறி திரை இமிழ் கானல் எதிர்கொண்டாள் என்பதோ
அறிவு அஞர் உழந்து ஏங்கி ஆய் நலம் வறிது ஆக
செறி வளை தோள் ஊர இவளை நீ துறந்ததை
காண் வர இயன்ற இ கவின் பெறு பனி துறை
யாமத்து வந்து நின் குறி வாய்த்தாள் என்பதோ		15
வேய் நலம் இழந்த தோள் விளங்கு_இழை பொறை ஆற்றாள்
வாள் நுதல் பசப்பு ஊர இவளை நீ துறந்ததை
அதனால்
இறை வளை நெகிழ்ந்த எவ்வ நோய் இவள் தீர

உரவு கதிர் தெறும் என ஓங்கு திரை விரைபு தன்		20
கரை அமல் அடும்பு அளித்த ஆஅங்கு
உரவு நீர் சேர்ப்ப அருளினை அளிமே

# 128
தோள் துறந்து அருளாதவர் போல் நின்று
வாடை தூக்க வணங்கிய தாழை
ஆடு கோட்டு இருந்த அசை நடை நாரை
நளி இரும் கங்குல் நம் துயர் அறியாது
அளி இன்று பிணி இன்று விளியாது நரலும்			5
கானல் அம் சேர்ப்பனை கண்டாய் போல
புதுவது கவினினை என்றி ஆயின்
நனவின் வாரா நயன் இலாளனை
கனவில் கண்டு யான் செய்தது கேள் இனி

அலந்து ஆங்கு அமையலென் என்றானை பற்றி என்		10
நலம் தாராயோ என தொடுப்பேன் போலவும்
கலந்து ஆங்கே என் கவின் பெற முயங்கி
புலம்பல் ஓம்பு என அளிப்பான் போலவும்
முலை இடை துயிலும் மறந்தீத்தோய் என
நிலை அழி நெஞ்சத்தேன் அழுவேன் போலவும்		15
வலை உறு மயிலின் வருந்தினை பெரிது என
தலை உற முன் அடி பணிவான் போலவும்
கோதை கோலா இறைஞ்சி நின்ற
ஊதை அம் சேர்ப்பனை அலைப்பேன் போலவும்

யாது என் பிழைப்பு என நடுங்கி ஆங்கே			20
பேதையை பெரிது என தெளிப்பான் போலவும்
ஆங்கு
கனவினால் கண்டேன் தோழி காண்_தக
கனவின் வந்த கானல் அம் சேர்ப்பன்
நனவின் வருதலும் உண்டு என				25
அனை வரை நின்றது என் அரும் பெறல் உயிரே

# 129
தொல் ஊழி தடுமாறி தொகல் வேண்டும் பருவத்தால்
பல்-வயின் உயிர் எல்லாம் படைத்தான்-கண் பெயர்ப்பான் போல்
எல் உறு தெறு கதிர் மடங்கி தன் கதிர் மாய
நல் அற நெறி நிறீஇ உலகு ஆண்ட அரசன் பின்
அல்லது மலைந்திருந்து அற நெறி நிறுக்கல்லா		5
மெல்லியான் பருவம் போல் மயங்கு இருள் தலை வர
எல்லைக்கு வரம்பு ஆய இடும்பை கூர் மருள் மாலை
பாய் திரை பாடு ஓவா பரப்பு நீர் பனி கடல்
தூ அற துறந்தனன் துறைவன் என்று அவன் திறம்

நோய் தெற உழப்பார்-கண் இமிழ்தியோ எம் போல		10
காதல் செய்து அகன்றாரை உடையையோ நீ
மன்று இரும் பெண்ணை மடல் சேர் அன்றில்
நன்று அறை கொன்றனர் அவர் என கலங்கிய
என் துயர் அறிந்தனை நரறியோ எம் போல
இன் துணை பிரிந்தாரை உடையையோ நீ			15
பனி இருள் சூழ்தர பைதல் அம் சிறு குழல்
இனி வரின் உயரும்-மன் பழி என கலங்கிய
தனியவர் இடும்பை கண்டு இனைதியோ எம் போல
இனிய செய்து அகன்றாரை உடையையோ நீ

என ஆங்கு						20
அழிந்து அயல் அறிந்த எவ்வம் மேற்பட
பெரும் பேது உறுதல் களை-மதி பெரும
வருந்திய செல்லல் தீர்த்த திறன் அறி ஒருவன்
மருந்து அறைகோடலின் கொடிதே யாழ நின்
அருந்தியோர் நெஞ்சம் அழிந்து உக விடினே			25

# 130
நயனும் வாய்மையும் நன்னர் நடுவும்
இவனின் தோன்றிய இவை என இரங்க
புரை தவ நாடி பொய் தபுத்து இனிது ஆண்ட
அரைசனோடு உடன் மாய்ந்த நல் ஊழி செல்வம் போல்
நிரை கதிர் கனலி பாடொடு பகல் செல			5
கல்லாது முதிர்ந்தவன் கண் இல்லா நெஞ்சம் போல்
புல் இருள் பரத்தரூஉம் புலம்பு கொள் மருள் மாலை
இ மாலை
ஐயர் அவிர் அழல் எடுப்ப அரோ என்

கையறு நெஞ்சம் கனன்று தீமடுக்கும்			10
இ மாலை
இரும் கழி மா மலர் கூம்ப அரோ என்
அரும் படர் நெஞ்சம் அழிவொடு கூம்பும்
இ மாலை
கோவலர் தீம் குழல் இனைய அரோ என்			15
பூ எழில் உண்கண் புலம்பு கொண்டு இனையும்
என ஆங்கு
படு_சுடர் மாலையொடு பைதல் நோய் உழப்பாளை
குடி புறங்காத்து ஓம்பும் செங்கோலான் வியன் தானை

விடு-வழி விடு-வழி சென்று ஆங்கு அவர்			20
தொடு-வழி தொடு-வழி நீங்கின்றால் பசப்பே

# 131
பெரும் கடல் தெய்வம் நீர் நோக்கி தெளித்து என்
திருந்து இழை மென் தோள் மணந்தவன் செய்த
அரும் துயர் நீக்குவேன் போல்-மன் பொருந்துபு
பூ கவின் கொண்ட புகழ் சால் எழில் உண்கண்
நோக்கும்-கால் நோக்கின் அணங்கு ஆக்கும் சாயலாய் தாக்கி	5
இன மீன் இகல் மாற வென்ற சின மீன்
எறி சுறா வான் மருப்பு கோத்து நெறிசெய்த
நெய்தல் நெடு நார் பிணித்து யாத்து கை உளர்வின்
யாழ் இசை கொண்ட இன வண்டு இமிர்ந்து ஆர்ப்ப

தாழாது உறைக்கும் தட மலர் தண் தாழை			10
வீழ் ஊசல் தூங்க பெறின்
மாழை மட மான் பிணை இயல் வென்றாய் நின் ஊசல்
கடைஇ யான் இகுப்ப நீடு ஊங்காய் தட மென் தோள்
நீத்தான் திறங்கள் பகர்ந்து
நாணின-கொல் தோழி நாணின-கொல் தோழி			15
இரவு எலாம் நல் தோழி நாணின என்பவை
வாள் நிலா ஏய்க்கும் வயங்கு ஒளி எக்கர் மேல்
ஆனா பரிய அலவன் அளை புகூஉம்
கானல் கமழ் ஞாழல் வீ ஏய்ப்ப தோழி என்

மேனி சிதைத்தான் துறை				20
மாரி வீழ் இரும் கூந்தல் மதைஇய நோக்கு எழில் உண்கண்
தாழ் நீர முத்தின் தகை ஏய்க்கும் முறுவலாய்
தேயா நோய் செய்தான் திறம் கிளந்து நாம் பாடும்
சேய் உயர் ஊசல் சீர் நீ ஒன்று பாடித்தை
பார்த்து உற்றன தோழி பார்த்து உற்றன தோழி		25
இரவு எலாம் நல் தோழி பார்த்து உற்றன என்பவை
தன் துணை இல்லாள் வருந்தினாள்-கொல் என
இன் துணை அன்றில் இரவின் அகவாவே
அன்று தான் ஈர்த்த கரும்பு அணி வாட என்

மென் தோள் ஞெகிழ்த்தான் துறை			30
கரை கவர் கொடும் கழி கண் கவர் புள் இனம்
திரை உற பொன்றிய புலவு மீன் அல்லதை
இரை உயிர் செகுத்து உண்ணா துறைவனை யாம் பாடும்
அசை வரல் ஊசல் சீர் அழித்து ஒன்று பாடித்தை
அருளின-கொல் தோழி அருளின-கொல் தோழி		35
இரவு எலாம் தோழி அருளின என்பவை
கணம்_கொள் இடு மணல் காவி வருந்த
பிணங்கு இரு மோட்ட திரை வந்து அளிக்கும்
மணம் கமழ் ஐம்பாலார் ஊடலை ஆங்கே

வணங்கி உணர்ப்பான் துறை				40
என நாம்
பாட மறை நின்று கேட்டனன் நீடிய
வால் நீர் கிடக்கை வயங்கு நீர் சேர்ப்பனை
யான் என உணர்ந்து நீ நனி மருள
தேன் இமிர் புன்னை பொருந்தி				45
தான் ஊக்கினன் அ ஊசலை வந்தே

# 132
உரவு நீர் திரை பொர ஓங்கிய எக்கர் மேல்
விரவு பல் உருவின வீழ் பெடை துணை ஆக
இரை தேர்ந்து உண்டு அசாவிடூஉம் புள்_இனம் இறைகொள
முரைசு மூன்று ஆள்பவர் முரணியோர் முரண் தப
நிரை களிறு இடைபட நெறி யாத்த இருக்கை போல்		5
சிதைவு இன்றி சென்று-உழி சிறப்பு எய்தி வினை வாய்த்து
துறைய கலம் வாய் சூழும் துணி கடல் தண் சேர்ப்ப
புன்னைய நறும் பொழில் புணர்ந்தனை இருந்த-கால்
நல்_நுதால் அஞ்சல் ஓம்பு என்றதன் பயன் அன்றோ

பாயின பசலையால் பகல் கொண்ட சுடர் போன்றாள்		10
மாவின தளிர் போலும் மாண் நலம் இழந்ததை
பன் மலர் நறும் பொழில் பழி இன்றி புணர்ந்த-கால்
சின்_மொழி தெளி என தேற்றிய சிறப்பு அன்றோ
வாடுபு வனப்பு ஓடி வயக்கு-உறா மணி போன்றாள்
நீடு இறை நெடு மென் தோள் நிரை வளை நெகிழ்ந்ததை	15
அடும்பு இவர் அணி எக்கர் ஆடி நீ மணந்த-கால்
கொடும் குழாய் தெளி என கொண்டதன் கொளை அன்றோ
பொறை ஆற்றா நுசுப்பினால் பூ வீந்த கொடி போன்றாள்
மறை பிறர் அறியாமை மாணா நோய் உழந்ததை

என ஆங்கு						20
வழிபட்ட தெய்வம் தான் வலி என சார்ந்தார்-கண்
கழியும் நோய் கைம்மிக அணங்கு ஆகியது போல
பழி பரந்து அலர் தூற்ற என் தோழி
அழி படர் அலைப்ப அகறலோ கொடிதே

# 133
மா மலர் முண்டகம் தில்லையோடு ஒருங்கு உடன்
கானல் அணிந்த உயர் மணல் எக்கர் மேல்
சீர் மிகு சிறப்பினோன் மர முதல் கைசேர்த்த
நீர் மலி கரகம் போல் பழம் தூங்கு முட தாழை
பூ மலர்ந்தவை போல புள் அல்கும் துறைவ கேள்		5
ஆற்றுதல் என்பது ஒன்று அலந்தவர்க்கு உதவுதல்
போற்றுதல் என்பது புணர்ந்தாரை பிரியாமை
பண்பு எனப்படுவது பாடு அறிந்து ஒழுகுதல்
அன்பு எனப்படுவது தன் கிளை செறாஅமை

அறிவு எனப்படுவது பேதையார் சொல் நோன்றல்		10
செறிவு எனப்படுவது கூறியது மறாஅமை
நிறை எனப்படுவது மறை பிறர் அறியாமை
முறை எனப்படுவது கண்ணோடாது உயிர் வௌவல்
பொறை எனப்படுவது போற்றாரை பொறுத்தல்
ஆங்கு அதை அறிந்தனிர் ஆயின் என் தோழி			15
நன் நுதல் நலன் உண்டு துறத்தல் கொண்க
தீம் பால் உண்பவர் கொள் கலம் வரைதல்
நின் தலை வருந்தியாள் துயரம்
சென்றனை களைமோ பூண்க நின் தேரே

# 134
மல்லரை மறம் சாய்த்த மலர் தண் தார் அகலத்தோன்
ஒல்லாதார் உடன்று ஓட உருத்து உடன் எறிதலின்
கொல் யானை அணி நுதல் அழுத்திய ஆழி போல்
கல் சேர்பு ஞாயிறு கதிர் வாங்கி மறைதலின்
இரும் கடல் ஒலித்து ஆங்கே இரவு காண்பது போல		5
பெரும் கடல் ஓத நீர் வீங்குபு கரை சேர
போஒய வண்டினால் புல்லென்ற துறையவாய்
பாயல் கொள்பவை போல கய மலர் வாய் கூம்ப
ஒரு நிலையே நடுக்கு-உற்று இ உலகு எலாம் அச்சு-உற

இரு நிலம் பெயர்ப்பு அன்ன எவ்வம் கூர் மருள் மாலை		10
தவல் இல் நோய் செய்தவர் காணாமை நினைத்தலின்
இகல் இடும் பனி தின எவ்வத்துள் ஆழ்ந்து ஆங்கே
கவலை கொள் நெஞ்சினேன் கலுழ் தர கடல் நோக்கி
அவலம் மெய் கொண்டது போலும் அஃது எவன்-கொலோ
நடுங்கு நோய் செய்தவர் நல்காமை நினைத்தலின்		15
கடும் பனி கைம்மிக கையாற்றுள் ஆழ்ந்து ஆங்கே
நடுங்கு நோய் உழந்த என் நலன் அழிய மணல் நோக்கி
இடும்பை நோய்க்கு இகுவன போலும் அஃது எவன்-கொலோ
வையினர் நலன் உண்டார் வாராமை நினைத்தலின்

கையறு நெஞ்சினேன் கலக்கத்துள் ஆழ்ந்து ஆங்கே		20
மையல் கொள் நெஞ்சொடு மயக்கத்தால் மரன் நோக்கி
எவ்வத்தால் இயன்ற போல் இலை கூம்பல் எவன்-கொலோ
என ஆங்கு
கரை காணா பௌவத்து கலம் சிதைந்து ஆழ்பவன்
திரை தர புணை பெற்று தீது இன்றி உய்ந்து ஆங்கு		25
விரைவனர் காதலர் புகுதர
நிரை_தொடி துயரம் நீங்கின்றால் விரைந்தே

# 135
துணை புணர்ந்து எழுதரும் தூ நிற வலம்புரி
இணை திரள் மருப்பு ஆக எறி வளி பாகனா
அயில் திணி நெடும் கதவு அமைத்து அடைத்து அணி கொண்ட
எயில் இடு களிறே போல் இடு மணல் நெடும் கோட்டை
பயில் திரை நடு நல்_நாள் பாய்ந்து உறூஉம் துறைவ கேள்	5
கடி மலர் புன்னை கீழ் காரிகை தோற்றாளை
தொடி நெகிழ்ந்த தோளளா துறப்பாயால் மற்று நின்
குடிமை கண் பெரியது ஓர் குற்றமாய் கிடவாதோ
ஆய் மலர் புன்னை கீழ் அணி நலம் தோற்றாளை

நோய் மலி நிலையளா துறப்பாயால் மற்று நின்		10
வாய்மை கண் பெரியது ஓர் வஞ்சமாய் கிடவாதோ
திகழ் மலர் புன்னை கீழ் திரு நலம் தோற்றாளை
இகழ் மலர் கண்ணளா துறப்பாயால் மற்று நின்
புகழ்மை கண் பெரியது ஓர் புகர் ஆகி கிடவாதோ
என ஆங்கு						15
சொல்ல கேட்டனை ஆயின் வல்லே
அணி கிளர் நெடு வரை அலைக்கும் நின் அகலத்து
மணி கிளர் ஆரம் தாரொடு துயல்வர
உயங்கினள் உயிர்க்கும் என் தோழிக்கு

இயங்கு ஒலி நெடும் திண் தேர் கடவு-மதி விரைந்தே		20

# 136 கூற்று
இவர் திமில் எறி திரை ஈண்டி வந்து அலைத்த-கால்
உவறு நீர் உயர் எக்கர் அலவன் ஆடு அளை வரி
தவல் இல் தண் கழகத்து தவிராது வட்டிப்ப
கவறு உற்ற வடு ஏய்க்கும் காமரு பூ கடல் சேர்ப்ப
முத்து உறழ் மணல் எக்கர் அளித்த-கால் முன் ஆயம்		5
பத்து உருவம் பெற்றவன் மனம் போல நந்தியாள்
அ திறத்து நீ நீங்க அணி வாடி அ ஆயம்
வித்தத்தால் தோற்றான் போல் வெய் துயர் உழப்பவோ
முட தாழை முடுக்கருள் அளித்த-கால் வித்தாயம்

இடை தங்க கண்டவன் மனம் போல நந்தியாள்		10
கொடை தக்காய் நீ ஆயின் நெறி அல்லா கதி ஓடி
உடை பொதி இழந்தான் போல் உறு துயர் உழப்பவோ
நறு வீ தாழ் புன்னை கீழ் நயந்து நீ அளித்த-கால்
மறு_வித்தம் இட்டவன் மனம் போல நந்தியாள்
அறிவித்து நீ நீங்க கருதியாய்க்கு அ பொருள்			15
சிறு_வித்தம் இட்டான் போல் செறி துயர் உழப்பவோ
ஆங்கு
கொண்டு பலர் தூற்றும் கௌவை அஞ்சாய்
தீண்டற்கு அருளி திறன் அறிந்து எழீஇ

பாண்டியம் செய்வான் பொருளினும்			20
ஈண்டுக இவள் நலம் ஏறுக தேரே

# 137
அரிதே தோழி நாண் நிறுப்பாம் என்று உணர்தல்
பெரிதே காமம் என் உயிர் தவ சிறிதே
பலவே யாமம் பையுளும் உடைய
சிலவே நம்மோடு உசாவும் அன்றில்
அழல் அவிர் வயங்கு இழை ஒலிப்ப உலமந்து		5
எழில் எஞ்சு மயிலின் நடுங்கி சேக்கையின்
அழல் ஆகின்று அவர் நக்கதன் பயனே
மெல்லிய நெஞ்சு பையுள் கூர தம்
சொல்லினான் எய்தமை அல்லது அவர் நம்மை

வல்லவன் தைஇய வாக்கு அமை கடு விசை			10
வில்லினான் எய்தலோ இலர்-மன் ஆய்_இழை
வில்லினும் கடிது அவர் சொல்லினுள் பிறந்த நோய்
நகை முதலாக நட்பினுள் எழுந்த
தகைமையின் நலிதல் அல்லது அவர் நம்மை
வகைமையின் எழுந்த தொன் முரண் முதலாக		15
பகைமையின் நலிதலோ இலர்-மன் ஆய்_இழை
பகைமையின் கடிது அவர் தகைமையின் நலியும் நோய்
நீயலேன் என்று என்னை அன்பினால் பிணித்து தம்
சாயலின் சுடுதல் அல்லது அவர் நம்மை

பாய் இருள் அற நீக்கும் நோய் தபு நெடும் சுடர்		20
தீயினால் சுடுதலோ இலர்-மன் ஆய்_இழை
தீயினும் கடிது அவர் சாயலின் கனலும் நோய்
ஆங்கு
அன்னர் காதலர் ஆக அவர் நமக்கு
இன் உயிர் போத்தரும் மருத்துவர் ஆயின்			25
யாங்கு ஆவது-கொல் தோழி எனையதூஉம்
தாங்குதல் வலித்தன்று ஆயின்
நீங்க அரிது உற்றன்று அவர் உறீஇய நோயே

# 138
எழில் மருப்பு எழில் வேழம் இகுதரு கடாத்தால்
தொழில் மாறி தலை வைத்த தோட்டி கைநிமிர்ந்து ஆங்கு
அறிவும் நம் அறிவு ஆய்ந்த அடக்கமும் நாணொடு
வறிது ஆக பிறர் என்னை நகுபவும் நகுபு உடன்
மின் அவிர் நுடக்கமும் கனவும் போல் மெய் காட்டி		5
என் நெஞ்சம் என்னோடு நில்லாமை நனி வௌவி
தன் நலம் கரந்தாளை தலைப்படும் ஆறு எவன்-கொலோ
மணி பீலி சூட்டிய நூலொடு மற்றை
அணி பூளை ஆவிரை எருக்கொடு பிணித்து யாத்து

மல்லல் ஊர் மறுகின் கண் இவள் பாடும் இஃது ஒத்தன்		10
எல்லீரும் கேட்டீ-மின் என்று
படரும் பனை ஈன்ற மாவும் சுடர் இழை
நல்கியாள் நல்கியவை
பொறை என் வரைத்து அன்றி பூ_நுதல் ஈத்த
நிறை அழி காம நோய் நீந்தி அறை உற்ற			15
உப்பு இயல் பாவை உறை உற்றது போல
உக்குவிடும் என் உயிர்
பூளை பொல மலர் ஆவிரை வேய் வென்ற
தோளாள் எமக்கு ஈத்த பூ

உரிது என் வரைத்து அன்றி ஒள்_இழை தந்த			20
பரிசு அழி பைதல் நோய் மூழ்கி எரி பரந்த
நெய்யுள் மெழுகின் நிலையாது பைபய
தேயும் அளித்து என் உயிர்
இளையாரும் ஏதிலவரும் உளைய யான்
உற்றது உசாவும் துணை				25
என்று யான் பாட கேட்டு
அன்பு உறு கிளவியாள் அருளி வந்து அளித்தலின்
துன்பத்தில் துணை ஆய மடல் இனி இவள் பெற
இன்பத்துள் இடம்படல் என்று இரங்கினள் அன்பு உற்று

அடங்கு அரும் தோற்றத்து அரும் தவம் முயன்றோர் தம்	30
உடம்பு ஒழித்து உயர்_உலகு இனிது பெற்று ஆங்கே

# 139
சான்றவிர் வாழியோ சான்றவிர் என்றும்
பிறர் நோயும் தம் நோய் போல் போற்றி அறன் அறிதல்
சான்றவர்க்கு எல்லாம் கடன் ஆனால் இ இருந்த
சான்றீர் உமக்கு ஒன்று அறிவுறுப்பேன் மான்ற
துளி இடை மின்னு போல் தோன்றி ஒருத்தி			5
ஒளியோடு உரு என்னை காட்டி அளியள் என்
நெஞ்சு ஆறு கொண்டாள் அதன் கொண்டும் துஞ்சேன்
அணி அலங்கு ஆவிரை பூவோடு எருக்கின்
பிணையல் அம் கண்ணி மிலைந்து மணி ஆர்ப்ப

ஓங்கு இரும் பெண்ணை மடல்_ஊர்ந்து என் எவ்வ நோய்	10	
தாங்குதல் தேற்றா இடும்பைக்கு உயிர்ப்பு ஆக
வீங்கு இழை மாதர் திறத்து ஒன்று நீங்காது
பாடுவேன் பாய் மா நிறுத்து
யாமத்தும் எல்லையும் எவ்வ திரை அலைப்ப
மா மேலேன் என்று மடல் புணையா நீந்துவேன்		15
தே மொழி மாதர் உறாஅது உறீஇய
காம கடல் அகப்பட்டு
உய்யா அரு நோய்க்கு உயவு ஆகும் மையல்
உறீஇயாள் ஈத்த இ மா

காணுநர் எள்ள கலங்கி தலைவந்து என்			20
ஆண் எழில் முற்றி உடைத்து உள் அழித்தரும்
மாண் இழை மாதராள் ஏஎர் என காமனது
ஆணையால் வந்த படை
காம கடும் பகையின் தோன்றினேற்கு ஏமம்
எழில்_நுதல் ஈத்த இ மா				25
அகை எரி ஆனாது என் ஆர் உயிர் எஞ்சும்
வகையினால் உள்ளம் சுடுதரும்-மன்னோ
முகை ஏர் இலங்கு எயிற்று இன் நகை மாதர்
தகையால் தலைக்கொண்ட நெஞ்சு

அழல் மன்ற காம அரு நோய் நிழல் மன்ற			30
நேர்_இழை ஈத்த இ மா
ஆங்கு அதை
அறிந்தனிர் ஆயின் சான்றவிர் தான் தவம்
ஒரீஇ துறக்கத்தின் வழீஇ ஆன்றோர்
உள் இடப்பட்ட அரசனை பெயர்த்து அவர்			35
உயர்_நிலை_உலகம் உறீஇ ஆங்கு என்
துயர் நிலை தீர்த்தல் நும் தலை கடனே

# 140
கண்டவிர் எல்லாம் கதுமென வந்து ஆங்கே
பண்டு அறியாதீர் போல நோக்குவீர் கொண்டது
மா என்று உணர்-மின் மடல் அன்று மற்று இவை
பூ அல்ல பூளை உழிஞையோடு யாத்த
புன வரை இட்ட வயங்கு தார் பீலி			5
பிடி அமை நூலொடு பெய்ம் மணி கட்டி
அடர் பொன் அவிர் ஏய்க்கும் ஆவிரம் கண்ணி
நெடியோன்_மகன் நயந்து தந்து ஆங்கு அனைய
வடிய வடிந்த வனப்பின் என் நெஞ்சம்

இடிய இடை கொள்ளும் சாயல் ஒருத்திக்கு			10
அடியுறை காட்டிய செல்வேன் மடியன்-மின்
அன்னேன் ஒருவனேன் யான்
என்னானும் பாடு எனில் பாடவும் வல்லேன் சிறிது ஆங்கே
ஆடு எனில் ஆடலும் ஆற்றுகேன் பாடுகோ
என் உள் இடும்பை தணிக்கும் மருந்தாக			15
நல்_நுதல் ஈத்த இ மா
திங்கள் அரவு உறின் தீர்க்கலார் ஆயினும்
தம் காதல் காட்டுவர் சான்றவர் இன் சாயல்
ஒண்_தொடி நோய் நோக்கில் பட்ட என் நெஞ்ச நோய்

கண்டும் கண்ணோடாது இ ஊர்				20
தாங்கா சினத்தொடு காட்டி உயிர் செகுக்கும்
பாம்பும் அவை படில் உய்யுமாம் பூ கண்
வணர்ந்து ஒலி ஐம்பாலாள் செய்த இ காமம்
உணர்ந்தும் உணராது இ ஊர்
வெம் சுழி பட்ட மகற்கு கரை நின்றார்			25
அஞ்சல் என்றாலும் உயிர்ப்பு உண்டாம் அம் சீர்
செறிந்து ஏர் முறுவலாள் செய்த இ காமம்
அறிந்தும் அறியாது இ ஊர்
ஆங்க

என்-கண் இடும்பை அறீஇயினென் நும்-கண்			30
தெருள்-உற நோக்கி தெரியும்-கால் இன்ன
மருள் உறு நோயொடு மம்மர் அகல
இருள் உறு கூந்தலாள் என்னை
அருள் உற செயின் நுமக்கு அறனும்-மார் அதுவே

# 141
அரிதினின் தோன்றிய யாக்கை புரிபு தாம்
வேட்டவை செய்து ஆங்கு காட்டி மற்று ஆங்கே
அறம் பொருள் இன்பம் என்று அ மூன்றின் ஒன்றன்
திறம் சேரார் செய்யும் தொழில்கள் அறைந்தன்று
அணி நிலை பெண்ணை மடல்_ஊர்ந்து ஒருத்தி		5
அணி நலம் பாடி வரற்கு
ஓரொரு-கால் உள்-வழியள் ஆகி நிறை மதி
நீருள் நிழல் போல் கொளற்கு அரியள் போருள்
அடல் மா மேல் ஆற்றுவேன் என்னை மடல்_மா மேல்

மன்றம் படர்வித்தவள் வாழி சான்றீர்			10
பொய் தீர் உலகம் எடுத்த கொடி மிசை
மை அறு மண்டிலம் வேட்டனள் வையம்
புரவு ஊக்கும் உள்ளத்தேன் என்னை இரவு ஊக்கும்
இன்னா இடும்பை செய்தாள் அம்ம சான்றீர்
கரந்து ஆங்கே இன்னா நோய் செய்யும் மற்று இஃதோ		15
பரந்த சுணங்கின் பணை தோளாள் பண்பு
இடி உமிழ் வானத்து இரவு இருள் போழும்
கொடி மின்னு கொள்வேன் என்று அன்னள் வடி நாவின்
வல்லார் முன் சொல் வல்லேன் என்னை பிறர் முன்னர்

கல்லாமை காட்டியவள் வாழி சான்றீர்			20
என்று ஆங்கே
வருந்த மா ஊர்ந்து மறுகின் கண் பாட
திருந்து_இழைக்கு ஒத்த கிளவி கேட்டு ஆங்கே
பொருந்தாதார் போர் வல் வழுதிக்கு அரும் திறை
போல கொடுத்தார் தமர்				25

# 142
புரிவு உண்ட புணர்ச்சியுள் புல் ஆரா மாத்திரை
அருகுவித்து ஒருவரை அகற்றலின் தெரிவார்-கண்
செய நின்ற பண்ணினுள் செவி சுவை கொள்ளாது
நயம் நின்ற பொருள் கெட புரி அறு நரம்பினும்
பயன் இன்று மன்று அம்ம காமம் இவள் மன்னும்		5
ஒண்_நுதல் ஆயத்தார் ஓராங்கு திளைப்பினும்
முள் நுனை தோன்றாமை முறுவல் கொண்டு அடக்கி தன்
கண்ணினும் முகத்தினும் நகுபவள் பெண் இன்றி
யாவரும் தண் குரல் கேட்ப நிரை வெண் பல்

மீ உயர் தோன்ற நகாஅ நக்கு ஆங்கே			10
பூ உயிர்த்து அன்ன புகழ் சால் எழில் உண்கண்
ஆய் இதழ் மல்க அழும்
ஓஒ அழி_தக பாராதே அல்லல் குறுகினம்
காண்பாம் கனம்_குழை பண்பு
என்று எல்லீரும் என் செய்தீர் என்னை நகுதிரோ		15
நல்ல நகாஅலிர்-மன்-கொலோ யான் உற்ற
அல்லல் உறீஇயான் மாய மலர் மார்பு
புல்லி புணர பெறின்
எல்லா நீ உற்றது எவனோ மற்று என்றீரேல் என் சிதை

செய்தான் இவன் என உற்றது இது என			20
எய்த உரைக்கும் உரன் அகத்து உண்டு ஆயின்
பைதல ஆகி பசக்குவ-மன்னோ என்
நெய்தல் மலர் அன்ன கண்
கோடு வாய் கூடா பிறையை பிறிது ஒன்று
நாடுவேன் கண்டனென் சிற்றிலுள் கண்டு ஆங்கே		25
ஆடையான் மூஉய் அகப்படுப்பேன் சூடிய
காணான் திரிதரும்-கொல்லோ மணி மிடற்று
மாண் மலர் கொன்றையவன்
தெள்ளியேம் என்று உரைத்து தேராது ஒரு நிலையே

வள்ளியை ஆக என நெஞ்சை வலி-உறீஇ			30
உள்ளி வருகுவர்-கொல்லோ வளைந்து யான்
எள்ளி இருக்குவேன்-மன்-கொலோ நள்ளிருள்
மாந்தர் கடி கொண்ட கங்குல் கனவினால்
தோன்றினன் ஆக தொடுத்தேன்-மன் யான் தன்னை
பையென காண்கு விழிப்ப யான் பற்றிய			35
கை உளே மாய்ந்தான் கரந்து
கதிர் பகா ஞாயிறே கல் சேர்தி ஆயின்
அவரை நினைத்து நிறுத்து என் கை நீட்டி
தருகுவை ஆயின் தவிரும் என் நெஞ்சத்து

உயிர் திரியா மாட்டிய தீ				40
மை இல் சுடரே மலை சேர்தி நீ ஆயின்
பௌவ நீர் தோன்றி பகல் செய்யும் மாத்திரை
கைவிளக்கு ஆக கதிர் சில தாராய் என்
தொய்யில் சிதைத்தானை தேர்கு
சிதைத்தானை செய்வது எவன்-கொலோ எம்மை		45
நயந்து நலம் சிதைத்தான்
மன்ற பனை மேல் மலை மா தளிரே நீ
தொன்று இ உலகத்து கேட்டும் அறிதியோ
மென் தோள் ஞெகிழ்த்தான் தகை அல்லால் யான் காணேன்

நன்று தீது என்று பிற					50
நோய் எரி ஆக சுடினும் சுழற்றி என்
ஆய் இதழ் உள்ளே கரப்பன் கரந்து ஆங்கே
நோயுறு வெம் நீர் தெளிப்பின் தலைக்கொண்டு
வேவது அளித்து இ உலகு
மெலிய பொறுத்தேன் களைந்தீ-மின் சான்றீர்			55
நலிதரும் காமமும் கௌவையும் என்று இ
வலிதின் உயிர் காவா தூங்கி ஆங்கு என்னை
நலியும் விழுமம் இரண்டு
என பாடி

இனைந்து நொந்து அழுதனள் நினைந்து நீடு உயிர்த்தனள்	60	
எல்லையும் இரவும் கழிந்தன என்று எண்ணி எல் இரா
நல்கிய கேள்வன் இவன் மன்ற மெல்ல
மணியுள் பரந்த நீர் போல துணிவாம்
கலம் சிதை இல்லத்து காழ் கொண்டு தேற்ற
கலங்கிய நீர் போல் தெளிந்து நலம் பெற்றாள்			65
நல் எழில் மார்பனை சார்ந்து

# 143
அகல் ஆங்கண் இருள் நீங்கி அணி நிலா திகழ்ந்த பின்
பகல் ஆங்கண் பையென்ற மதியம் போல் நகல் இன்று
நன் நுதல் நீத்த திலகத்தள் மின்னி
மணி பொரு பசும்_பொன்-கொல் மா ஈன்ற தளிரின் மேல்
கணிகாரம் கொட்கும்-கொல் என்று ஆங்கு அணி செல		5
மேனி மறைத்த பசலையள் ஆனாது
நெஞ்சம் வெறியா நினையா நிலன் நோக்கா
அஞ்சா அழாஅ அரற்றா இஃது ஒத்தி
என் செய்தாள்-கொல் என்பீர் கேட்டீ-மின் பொன் செய்தேன்

மறையின் தன் யாழ் கேட்ட மானை அருளாது		10
அறை கொன்று மற்று அதன் ஆர் உயிர் எஞ்ச
பறை அறைந்து ஆங்கு ஒருவன் நீத்தான் அவனை
அறை நவ நாட்டில் நீர் கொண்டு தரின் யானும்
நிறை உடையேன் ஆகுவேன் மன்ற மறையின் என்
மென் தோள் நெகிழ்த்தானை மேஎய் அவன் ஆங்கண்		15
சென்று சேட்பட்டது என் நெஞ்சு
ஒன்றி முயங்கும் என்று என் பின் வருதிர் மற்று ஆங்கே
உயங்கினாள் என்று ஆங்கு உசாதிர் மற்று அந்தோ
மயங்கினாள் என்று மருடிர் கலங்கன்-மின்

இன் உயிர் அன்னார்க்கு எனைத்து ஒன்றும் தீது இன்மை	20	
என் உயிர் காட்டாதோ மற்று
பழி தபு ஞாயிறே பாடு அறியாதார்-கண்
கழிய கதழ்வை என கேட்டு நின்னை
வழிபட்டு இரக்குவேன் வந்தேன் என் நெஞ்சம்
அழிய துறந்தானை சீறும்-கால் என்னை			25
ஒழிய விடாதீமோ என்று
அழி_தக மாஅம் தளிர் கொண்ட போழ்தினான் இ ஊரார்
தாஅம் தளிர் சூடி தம் நலம் பாடுப
ஆஅம் தளிர்க்கும் இடை சென்றார் மீள்தரின்

யாஅம் தளிர்க்குவேம்-மன்				30
நெய்தல் நெறிக்கவும் வல்லன் நெடு மென் தோள்
பெய் கரும்பு ஈர்க்கவும் வல்லன் இள முலை மேல்
தொய்யில் எழுதவும் வல்லன் தன் கையில்
சிலை வல்லான் போலும் செறிவினான் நல்ல
பல வல்லன் தோள் ஆள்பவன்				35
நினையும் என் உள்ளம் போல் நெடும் கழி மலர் கூம்ப
இனையும் என் நெஞ்சம் போல் இனம் காப்பார் குழல் தோன்ற
சாய என் கிளவி போல் செவ்வழி யாழ் இசை நிற்ப
போய என் ஒளியே போல் ஒரு நிலையே பகல் மாய

காலன் போல் வந்த கலக்கத்தோடு என்-தலை			40
மாலையும் வந்தன்று இனி
இருளொடு யான் ஈங்கு உழப்ப என் இன்றி பட்டாய்
அருள் இலை வாழி சுடர்
ஈண்டு நீர் ஞாலத்துள் எம் கேள்வர் இல் ஆயின்
மாண்ட மனம் பெற்றார் மாசு இல் துறக்கத்து			45
வேண்டிய வேண்டி ஆங்கு எய்துதல் வாய் எனின்
யாண்டும் உடையேன் இசை
ஊர் அலர் தூற்றும் இ உய்யா விழுமத்து
பீர் அலர் போல பெரிய பசந்தன

நீர் அலர் நீலம் என அவர்க்கு அ ஞான்று			50
பேர் அஞர் செய்த என் கண்
தன் உயிர் போல தழீஇ உலகத்து
மன் உயிர் காக்கும் இ மன்னனும் என்-கொலோ
இன் உயிர் அன்னானை காட்டி எனைத்து ஒன்றும்
என் உயிர் காவாதது					55
என ஆங்கு
மன்னிய நோயொடு மருள் கொண்ட மனத்தவள்
பல் மலை இறந்தவன் பணிந்து வந்து அடி சேர
தென்னவன் தெளித்த தேஎம் போல

இன் நகை எய்தினள் இழந்த தன் நலனே			60

# 144
நல்_நுதாஅல் காண்டை நினையா நெடிது உயிரா
என் உற்றாள்-கொல்லோ இஃது ஒத்தி பல் மாண்
நகுதரும் தன் நாணு கைவிட்டு இகுதரும்
கண்ணீர் துடையா கவிழ்ந்து நிலன் நோக்கி
அன்ன இடும்பை பல செய்து தன்னை			5
வினவுவார்க்கு ஏதில சொல்லி கனவு போல்
தெருளும் மருளும் மயங்கி வருபவள்
கூறுப கேளாமோ சென்று
எல்லா நீ என் அணங்கு உற்றனை யார் நின் இது செய்தார்

நின் உற்ற அல்லல் உரை என என்னை			10
வினவுவீர் தெற்றென கேண்-மின் ஒருவன்
குரல்_கூந்தால் என் உற்ற எவ்வம் நினக்கு யான்
உரைப்பனை தங்கிற்று என் இன் உயிர் என்று
மருவு ஊட்டி மாறியதன் கொண்டு எனக்கு
மருவு-உழி பட்டது என் நெஞ்சு				15
எங்கும் தெரிந்து அது கொள்வேன் அவன் உள்-வழி
பொங்கு இரு முந்நீர் அகம் எல்லாம் நோக்கினை
திங்களுள் தோன்றி இருந்த குறு முயால்
எம் கேள் இதன் அகத்து உள்-வழி காட்டீமோ

காட்டீயாய் ஆயின் கத நாய் கொளுவுவேன்			20
வேட்டுவர் உள்-வழி செப்புவேன் ஆட்டி
மதியொடு பாம்பு மடுப்பேன் மதி திரிந்த
என் அல்லல் தீராய் எனின்
என்று ஆங்கே உள் நின்ற எவ்வம் உரைப்ப மதியொடு
வெண் மழை ஓடி புகுதி சிறிது என்னை			25
கண்ணோடினாய் போறி நீ
நீடு இலை தாழை துவர் மணல் கானலுள்
ஓடுவேன் ஓடி ஒளிப்பேன் பொழில்-தொறும்
நாடுவேன் கள்வன் கரந்து இருக்கற்பாலன்-கொல்

ஆய் பூ அடும்பின் அலர் கொண்டு உது காண் எம்		30
கோதை புனைந்த வழி
உது காண் சாஅய் மலர் காட்டி சால்பு இலான் யாம் ஆடும்
பாவை கொண்டு ஓடி-உழி
உது காண் தொய்யில் பொறித்த வழி
உது காண் தையால் தேறு என தேற்றி அறன் இல்லான்		35
பைய முயங்கி-உழி
அளிய என் உள்ளத்து உயவு தேர் ஊர்ந்து
விளியா நோய் செய்து இறந்த அன்பு இலவனை
தெளிய விசும்பினும் ஞாலத்து_அகத்தும்

வளியே எதிர்போம் பல கதிர் ஞாயிற்று			40
ஒளி உள்-வழி எல்லாம் சென்று முனிபு எம்மை
உண்மை நலன் உண்டு ஒளித்தானை காட்டீமோ
காட்டாயேல் மண்_அகம் எல்லாம் ஒருங்கு சுடுவேன் என்
கண்ணீர் அழலால் தெளித்து
பேணான் துறந்தானை நாடும் இடம் விடாய் ஆயின்		45
பிறங்கு இரு முந்நீர் வெறு மணல் ஆக
புறங்காலின் போக இறைப்பேன் முயலின்
அறம் புணை ஆகலும் உண்டு
துறந்தானை நாடி தருகிற்பாய் ஆயின் நினக்கு ஒன்று

பாடுவேன் என் நோய் உரைத்து				50
புல்லிய கேளிர் புணரும் பொழுது உணரேன்
எல்லி ஆக எல்லை என்று ஆங்கே பகல் முனிவேன்
எல்லிய காலை இரா முனிவேன் யான் உற்ற
அல்லல் களைவார் இலேன்
ஓஒ கடலே தெற்றென கண் உள்ளே தோன்ற இமை எடுத்து	55
பற்றுவேன் என்று யான் விழிக்கும்-கால் மற்றும் என்
நெஞ்சத்துள் ஓடி ஒளித்து ஆங்கே துஞ்சா நோய்
செய்யும் அறன் இல்லவன்
ஓஒ கடலே ஊர் தலைக்கொண்டு கனலும் கடும் தீயுள்

நீர் பெய்த காலே சினம் தணியும் மற்று இஃதோ		60
ஈரம் இல் கேள்வன் உறீஇய காம தீ
நீருள் புகினும் சுடும்
ஓஒ கடலே எற்றம் இலாட்டி என் ஏமுற்றாள் என்று இ நோய்
உற்று அறியாதாரோ நகுக நயந்து ஆங்கே
இற்றா அறியின் முயங்கலேன் மற்று என்னை		65
அற்றத்து இட்டு ஆற்று அறுத்தான் மார்பு
ஆங்கு
கடலொடு புலம்புவோள் கலங்கு அஞர் தீர
கெடல் அரும் காதலர் துனைதர பிணி நீங்கி

அறன் அறிந்து ஒழுகும் அங்கணாளனை			70
திறன் இலார் எடுத்த தீ மொழி எல்லாம்
நல் அவையுள் பட கெட்டு ஆங்கு
இல் ஆகின்று அவள் ஆய் நுதல் பசப்பே

# 145
துனையுநர் விழை-தக்க சிறப்பு போல் கண்டார்க்கு
நனவினுள் உதவாது நள்ளிருள் வேறு ஆகும்
கனவின் நிலையின்றால் காமம் ஒருத்தி
உயிர்க்கும் உசாஅம் உலம்வரும் ஓவாள்
கயல் புரை உண்கண் அரிப்ப அரி வார			5
பெயல் சேர் மதி போல வாள் முகம் தோன்ற
பல ஒலி கூந்தலாள் பண்பு எல்லாம் துய்த்து
துறந்தானை உள்ளி அழூஉம் அவனை
மறந்தாள் போல் ஆலி நகூஉம் மருளும்

சிறந்த தன் நாணும் நலனும் நினையாது			10
காமம் முனைஇயாள் அலந்தாள் என்று எனை காண
நகான்-மின் கூறுவேன் மாக்காள் மிகாஅது
மகளிர் தோள் சேர்ந்த மாந்தர் துயர் கூர நீத்தலும்
நீள் சுரம் போகியார் வல்லை வந்து அளித்தலும்
ஊழ் செய்து இரவும் பகலும் போல் வேறு ஆகி		15
வீழ்வார்-கண் தோன்றும் தடுமாற்றம் ஞாலத்துள்
வாழ்வார்கட்கு எல்லாம் வரும்
தாழ்பு துறந்து தொடி நெகிழ்த்தான் போகிய கானம்
இறந்து எரி நையாமல் பாஅய் முழங்கி

வறந்து என்னை செய்தியோ வானம் சிறந்த என்		20
கண்ணீர் கடலால் கனை துளி வீசாயோ
கொண்மூ குழீஇ முகந்து
நுமக்கு எவன் போலுமோ ஊரீர் எமக்கும் எம்
கண்பாயல் கொண்டு உள்ளா காதலவன் செய்த
பண்பு தர வந்த என் தொடர் நோய் வேது			25
கொள்வது போலும் கடும் பகல் ஞாயிறே
எல்லா கதிரும் பரப்பி பகலொடு
செல்லாது நின்றீயல் வேண்டுவல் நீ செல்லின்
புல்லென் மருள் மாலை போழ்து இன்று வந்து என்னை

கொல்லாது போதல் அரிதால் அதனொடு யான்		30
செல்லாது நிற்றல் இலேன்
ஒல்லை எம் காதலர் கொண்டு கடல் ஊர்ந்து காலை நாள்
போதரின் காண்குவேன்-மன்னோ பனியொடு
மாலை பகை தாங்கி யான்
இனியன் என்று ஓம்படுப்பல் ஞாயிறு இனி			35
ஒள் வளை ஓட துறந்து துயர் செய்த
கள்வன்-பால் பட்டன்று ஒளித்து என்னை உள்ளி
பெரும் கடல் புல்லென கானல் புலம்ப
இரும் கழி நெய்தல் இதழ் பொதிந்து தோன்ற

விரிந்து இலங்கு வெண் நிலா வீசும் பொழுதினான்		40
யான் வேண்டு ஒருவன் என் அல்லல் உறீஇயான்
தான் வேண்டுபவரோடு துஞ்சும்-கொல் துஞ்சாது
வானும் நிலனும் திசையும் துழாவும் என்
ஆனா படர் மிக்க நெஞ்சு
ஊரவர்க்கு எல்லாம் பெரு நகை ஆகி என்			45
ஆர் உயிர் எஞ்சும்-மன் அங்கு நீ சென்றீ
நிலவு உமிழ் வான் திங்காள் ஆய்_தொடி கொட்ப
அளி புறம்மாறி அருளான் துறந்த அ
காதலன் செய்த கலக்கு-உறு நோய்க்கு ஏதிலார்

எல்லாரும் தேற்றார் மருந்து				50
வினை கொண்டு என் காம நோய் நீக்கிய ஊரீர்
எனைத்தானும் எள்ளினும் எள்ளலன் கேள்வன்
நினைப்பினும் கண் உள்ளே தோன்றும் அனைத்தற்கே
ஏமராது ஏமரா ஆறு
கனை இருள் வானம் கடல் முகந்து என் மேல்		55
உறையொடு நின்றீயல் வேண்டும் ஒருங்கே
நிறை வளை கொட்பித்தான் செய்த துயரால்
இறை இறை பொத்திற்று தீ
என பாடி

நோய் உடை நெஞ்சத்து எறியா இனைபு ஏங்கி		60
யாவிரும் எம் கேள்வன் காணீரோ என்பவட்கு
ஆர்வு-உற்ற பூசற்கு அறம் போல ஏய்தந்தார்
பாயல் கொண்டு உள்ளாதவரை வர கண்டு
மாயவன் மார்பில் திரு போல் அவள் சேர
ஞாயிற்று முன்னர் இருள் போல மாய்ந்தது என்		65
ஆய்_இழை உற்ற துயர்

# 146
உரை செல உயர்ந்து ஓங்கி சேர்ந்தாரை ஒரு நிலையே
வரை நில்லா விழுமம் உறீஇ நடுக்கு உரைத்து தெறல் மாலை
அரைசினும் அன்பு இன்றாம் காமம் புரை தீர
அன்ன மென் சேக்கையுள் ஆராது அளித்தவன்
துன்னி அகல துறந்த அணியளாய்				5
நாணும் நிறையும் உணர்கல்லாள் தோள் ஞெகிழ்பு
பேர் அமர் உண்கண் நிறை மல்க அ நீர் தன்
கூர் எயிறு ஆடி குவி முலை மேல் வார்தர
தேர் வழி நின்று தெருமரும் ஆய்_இழை

கூறுப கேளாமோ சென்று				10
எல்லிழாய் எற்றி வரைந்தானை நாணும் மறந்தாள் என்று
உற்றனிர் போல வினவுதிர் மற்று இது
கேட்டீ-மின் எல்லீரும் வந்து
வறம் தெற மாற்றிய வானமும் போலும்
நிறைந்து என்னை மாய்ப்பது ஓர் வெள்ளமும் போலும்		15
சிறந்தவன் தூ அற நீப்ப பிறங்கி வந்து
என் மேல் நிலைஇய நோய்
நக்கு நலனும் இழந்தாள் இவள் என்னும்
தக்கவிர் போலும் இழந்திலேன்-மன்னோ

மிக்க என் நாணும் நலனும் என் உள்ளமும்			20
அ-கால் அவன் உழை ஆங்கே ஒழிந்தன
உ காண் இஃதோ உடம்பு உயிர்க்கு ஊற்று ஆக
செக்கர் அம் புள்ளி திகிரி அலவனொடு யான்
நக்கது பல் மாண் நினைந்து
கரை காணா நோயுள் அழுந்தாதவனை			25
புரை தவ கூறி கொடுமை நுவல்வீர்
வரைபவன் என்னின் அகலான் அவனை
திரை தரும் முந்நீர் வளாஅகம் எல்லாம்
நிரை கதிர் ஞாயிற்றை நாடு என்றேன் யானும்

உரை கேட்பு-உழி எல்லாம் செல்வேன் புரை தீர்ந்தான்		30
யாண்டு ஒளிப்பான்-கொல்லோ மற்று
மருள் கூர் பிணை போல் மயங்க வெம்_நோய் செய்யும்
மாலையும் வந்து மயங்கி எரி நுதி
யாமம் தலைவந்தன்று ஆயின் அதற்கு என் நோய்
பாடுவேன் பல்லாருள் சென்று				35
யான் உற்ற எவ்வம் உரைப்பின் பலர் துயிற்றும்
யாமம் நீ துஞ்சலை-மன்
எதிர்கொள்ளும் ஞாலம் துயில் ஆராது ஆங்கண்
முதிர்பு என் மேல் முற்றிய வெம்_நோய் உரைப்பின்

கதிர்கள் மழுங்கி மதியும் அதிர்வது போல்			40
ஓடி சுழல்வது-மன்
பேர் ஊர் மறுகில் பெரும் துயில் சான்றீரே
நீரை செறுத்து நிறைவு உற ஓம்பு-மின்
கார் தலைக்கொண்டு பொழியினும் தீர்வது
போலாது என் மெய் கனலும் நோய்			45
இருப்பினும் நெஞ்சம் கனலும் செலினே
வருத்து-உறும் யாக்கை வருந்துதல் ஆற்றேன்
அருப்பம் உடைத்து என்னுள் எவ்வம் பொருத்தி
பொறி செய் புனை பாவை போல வறிது உயங்கி

செல்வேன் விழுமம் உழந்து				50
என ஆங்கு பாட அருள்-உற்று
வறம் கூர் வானத்து வள் உறைக்கு அலமரும்
புள்ளிற்கு அது பொழிந்து ஆஅங்கு மற்று தன்
நல் எழில் மார்பன் முயங்கலின்
அல்லல் தீர்ந்தன்று ஆய்_இழை பண்பே			55

# 147
ஆறு அல்ல மொழி தோற்றி அற வினை கலக்கிய
தேறு கள் நறவு உண்டார் மயக்கம் போல் காமம்
வேறு ஒரு பாற்று ஆனது-கொல்லோ சீறடி
சிலம்பு ஆர்ப்ப இயலியாள் இவள்-மன்னோ இனி மன்னும்
புலம்பு ஊர புல்லென்ற வனப்பினாள் விலங்கு ஆக		5
வேல் நுதி உற நோக்கி வெயில் உற உருகும் தன்
தோள் நலம் உண்டானை கெடுத்தாள் போல் தெருவில் பட்டு
ஊண் யாதும் இலள் ஆகி உயிரினும் சிறந்த தன்
நாண் யாதும் இலள் ஆகி நகுதலும் நகூஉம் ஆங்கே

பெண்மையும் இலள் ஆகி அழுதலும் அழூஉம் தோழி ஓர்	10
ஒண்_நுதல் உற்றது உழை சென்று கேளாமோ
இவர் யாவர் ஏமுற்றார் கண்டீரோ ஓஒ
அமையும் தவறிலீர்-மன்-கொலோ நகையின்
மிக்கதன் காமமும் ஒன்று என்ப அம் மா
புது நலம் பூ வாடி அற்று தாம் வீழ்வார்			15
மதி மருள நீத்த-கடை
என்னையே மூசி கதுமென நோக்கன்-மின் வந்து
கலைஇய கண் புருவம் தோள் நுசுப்பு ஏஎர்
சில மழை போல் தாழ்ந்து இருண்ட கூந்தல் அவற்றை

விலை வளம் மாற அறியாது ஒருவன்			20
வலை அகப்பட்டது என் நெஞ்சு
வாழிய கேளிர்
பலவும் சூள் தேற்றி தெளித்தவன் என்னை
முலை இடை வாங்கி முயங்கினன் நீத்த
கொலைவனை காணேன்-கொல் யான்			25
காணினும் என்னை அறிதிர் கதிர் பற்றி
ஆங்கு எதிர் நோக்குவன் ஞாயிறே எம் கேள்வன்
யாங்கு உளன் ஆயினும் காட்டீமோ காட்டாயேல்
வானத்து எவன் செய்தி நீ

ஆர் இருள் நீக்கும் விசும்பின் மதி போல			30
நீர் உள்ளும் தோன்றுதி ஞாயிறே அ வழி
தேரை தினப்படல் ஓம்பு
நல்கா ஒருவனை நாடி யான் கொள்வனை
பல் கதிர் சாம்பி பகல் ஒழிய பட்டீமோ
செல் கதிர் ஞாயிறே நீ					35
அறாஅல் இன்று அரி முன்கை கொட்கும்
பறாஅ பருந்தின் கண் பற்றி புணர்ந்தான்
கறாஅ எருமைய காடு இறந்தான்-கொல்லோ
உறாஅ தகை செய்து இ ஊர் உள்ளான்-கொல்லோ

செறாஅது உளன் ஆயின் கொள்வேன் அவனை		40
பெறாஅது யான் நோவேன் அவனை என் காட்டி
சுறாஅ_கொடியான் கொடுமையை நீயும்
உறாஅ அரைச நின் ஓலை-கண் கொண்டீ
மறாஅ அரைச நின் மாலையும் வந்தன்று
அறாஅ தணிக இ நோய்				45
தன் நெஞ்சு ஒருவற்கு இனைவித்தல் யாவர்க்கும்
அன்னவோ காம நின் அம்பு
கையாறு செய்தானை காணின் கலுழ் கண்ணால்
பையென நோக்குவேன் தாழ் தானை பற்றுவேன்

ஐயம் கொண்டு என்னை அறியான் விடுவானேல்		50
ஒய்யென பூசல் இடுவேன்-மன் யான் அவனை
மெய்யாக கள்வனோ என்று
வினவன்-மின் ஊரவிர் என்னை எஞ்ஞான்றும்
மடாஅ நறவு உண்டார் போல மருள
விடாஅது உயிரொடு கூடிற்று என் உண்கண்			55
படாஅமை செய்தான் தொடர்பு
கனவினான் காணிய கண்படா ஆயின்
நனவினான் ஞாயிறே காட்டாய் நீ ஆயின்
பனை ஈன்ற மா ஊர்ந்து அவன் வர காமன்

கணை இரப்பேன் கால் புல்லிக்கொண்டு			60
என ஆங்கு
கண் இனைபு கலுழ்பு ஏங்கினள்
தோள் ஞெகிழ்பு வளை நெகிழ்ந்தனள்
அன்னையோ எல்லீரும் காண்-மின் மடவரல்
மென் நடை பேடை துனைதர தன் சேர்ந்த			65
அன்ன வான் சேவல் புணர்ச்சி போல் ஒண்_நுதல்
காதலன் மன்ற அவனை வர கண்டு ஆங்கு
ஆழ் துயரம் எல்லாம் மறந்தனள் பேதை
நகை ஒழிந்து நாணு மெய் நிற்ப இறைஞ்சி

தகை ஆக தையலாள் சேர்ந்தாள் நகை ஆக			70
நல் எழில் மார்பன் அகத்து

# 148
தொல் இயல் ஞாலத்து தொழில் ஆற்றி ஞாயிறு
வல்லவன் கூறிய வினை தலை வைத்தான் போல்
கல் அடைபு கதிர் ஊன்றி கண் பயம் கெட பெயர
அல்லது கெடுப்பவன் அருள் கொண்ட முகம் போல
மல்லல் நீர் திரை ஊர்பு மால் இருள் மதி சீப்ப		5
இல்லவர் ஒழுக்கம் போல் இரும் கழி மலர் கூம்ப
செல்லும் என் உயிர் புறத்து இறுத்தந்த மருள் மாலை
மாலை நீ
இன்புற்றார்க்கு இறைச்சியாய் இயைவதோ செய்தாய்-மன்

அன்பு உற்றார் அழ நீத்த அல்லலுள் கலங்கிய		10
துன்புற்றார் துயர் செய்தல் தக்கதோ நினக்கு
மாலை நீ
கலந்தவர் காமத்தை கனற்றலோ செய்தாய்-மன்
நலம் கொண்டு நல்காதார் நனி நீத்த புலம்பின் கண்
அலந்தவர்க்கு அணங்கு ஆதல் தக்கதோ நினக்கு		15
மாலை நீ
எம் கேள்வன் தருதலும் தருகல்லாய் துணை அல்லை
பிரிந்தவர்க்கு நோய் ஆகி புணர்ந்தவர்க்கு புணை ஆகி
திருந்தாத செயின் அல்லால் இல்லையோ நினக்கு

என ஆங்கு						20
ஆய் இழை மடவரல் அவலம் அகல
பாய் இருள் பரப்பினை பகல் களைந்தது போல
போய் அவர் மண் வௌவி வந்தனர்
சேய் உறை காதலர் செய்_வினை முடித்தே

# 149
நிரை திமில் களிறு ஆக திரை ஒலி பறை ஆக
கரை சேர் புள்_இனத்து அம் சிறை படை ஆக
அரைசு கால்கிளர்ந்து அன்ன உரவு நீர் சேர்ப்ப கேள்
கற்பித்தான் நெஞ்சு அழுங்க பகர்ந்து உண்ணான் விச்சை-கண்
தப்பித்தான் பொருளே போல் தமியவே தேயுமால்		5
ஒற்கத்துள் உதவியார்க்கு உதவாதான் மற்று அவன்
எச்சத்துள் ஆயினும் அஃது எறியாது விடாதே காண்
கேளிர்கள் நெஞ்சு அழுங்க கெழு உற்ற செல்வங்கள்
தாள் இலான் குடியே போல் தமியவே தேயுமால்

சூள் வாய்த்த மனத்தவன் வினை பொய்ப்பின் மற்று அவன்	10
வாள் வாய் நன்று ஆயினும் அஃது எறியாது விடாதே காண்
ஆங்கு
அனைத்து இனி பெரும அதன் நிலை நினைத்து காண்
சினைஇய வேந்தன் எயில் புறத்து இறுத்த
வினை வரு பருவரல் போல				15
துனை வரு நெஞ்சமொடு வருந்தினள் பெரிதே

# 150
அயம் திகழ் நறும் கொன்றை அலங்கல் அம் தெரியலான்
இயங்கு எயில் எய பிறந்த எரி போல எ வாயும்
கனை கதிர் தெறுதலின் கடுத்து எழுந்த காம்பு தீ
மலை பரந்து தலைக்கொண்டு முழங்கிய முழங்கு அழல்
மயங்கு அதர் மறுகலின் மலை தலைக்கொண்டு என		5
விசும்பு உற நிவந்து அழலும் விலங்கு அரு வெம் சுரம்
இறந்து தாம் எண்ணிய எய்துதல் வேட்கையால்
அறம் துறந்து ஆய்_இழாய் ஆக்கத்தில் பிரிந்தவர்
பிறங்கு நீர் சடை கரந்தான் அணி அன்ன நின் நிறம்

பசந்து நீ இனையையாய் நீத்தலும் நீப்பவோ			10
கரி காய்ந்த கவலைத்தாய் கல் காய்ந்த காட்டு_அகம்
வெரு வந்த ஆறு என்னார் விழு பொருட்கு அகன்றவர்
உருவ ஏற்று ஊர்தியான் ஒள் அணி நக்கு அன்ன நின்
உரு இழந்து இனையையாய் உள்ளலும் உள்ளுபவோ
கொதித்து உராய் குன்று இவர்ந்து கொடி கொண்ட கோடையால்	15
ஒதுக்கு அரிய நெறி என்னார் ஒண் பொருட்கு அகன்றவர்
புது_திங்கள் கண்ணியான் பொன் பூண் ஞான்று அன்ன நின்
கதுப்பு உலறும் கவினையாய் காண்டலும் காண்பவோ
ஆங்கு

அரும் பெறல் ஆதிரையான் அணிபெற மலர்ந்த		20
பெரும் தண் சண்பகம் போல ஒருங்கு அவர்
பொய்யார் ஆகுதல் தெளிந்தனம்
மை ஈர் ஓதி மட மொழியோயே
*
** கலித்தொகை

#1  கடவுள் வாழ்த்து
ஆறு அங்கங்களையும் அறிந்த அந்தணர்களுக்கு அரிய வேதங்கள் பலவற்றையும் அறிவித்து,
தெளிந்த நீரைக்கொண்ட கங்கையைத் தன் சடையில் அடக்கிக்கொண்டு, முப்புரங்களையும் தீயூட்டி,
சொல்லாமலேயே மனத்தால் நினைத்த எப்பொருளுக்கும் எட்டாமல் நிற்கும் கடிய கூளியின்
புறமுதுகிடாத போரினையும், நீலமணி போன்ற கழுத்தினையும், எட்டுக்கைகளையும் உடையவனே! கேட்பாயாக!
ஒலிக்கின்ற பறைகள் பல முழங்க, பல்வேறு உருவங்களையும் உன்னுள்ளே அடக்கிக்கொண்டு நீ
கொடுங்கொட்டி என்னும் கூத்தினை ஆடும்போது வளைவாக உயர்ந்த பின்பக்கத்தையும்,
கொடி போன்ற இடையும் கொண்ட இறைவி, தாளம் முடியுங் காலத்தைக் கொண்ட சீரைத் தருவாளோ?
மிக்குச் செல்கிற போர்கள் பலவற்றையும் வென்று, அதன் வலிமையால் பகைவர் வெந்த சாம்பலை அணிந்து,
பாண்டரங்கம் என்னும் கூத்தினை ஆடும்போது, மூங்கில் போன்ற அழகும், அணை போன்ற மெல்லிய தோள்களும்,

வண்டுகள் ஒலிக்கும் கூந்தலும் உடைய இறைவி, தாளத்தின் இடையில் அமையும் தூக்கினைத் தருவாளோ?
கொலைக்குணமுடைய புலியைக் கொன்று அதன் தோலை அணிந்து, கொன்றை மாலை தோளில் அசைய,
அயன் தலையைக் கையில் ஏந்திக்கொண்டு காபாலம் என்னும் கூத்தினை ஆடும்பொழுது,
முல்லையைப் போன்ற முறுவலையுடைய இறைவி தாளத்தின் முதலில் அமையும் பாணியைத் தருவாளோ?
என்று சொல்லும்படியாக,
பாணி, தூக்கு, சீர் என்ற இவற்றை
மாட்சிமை பொருந்திய அணிகலன்களையுடைய இறைவி காக்க,
அன்பற்ற பொருளான எம்மிடத்தும் வந்து பொருந்தி நின்றாய்!
* முதலாவது - பாலைக்கலி

#2
உலகம் உருவாகும் காலத்தில் தோன்றிய முதியோனாகிய நான்முகன் முதலாக,
அடங்காத அவுணர்களின் ஆணவத்தை அழிக்குமாறு, தேவர்கள் வந்து வேண்டியதால்,
கூற்றுவன் போல் சினங்கொண்டு, அழிவு செய்யும் அந்த அரக்கர்களைக்
கொன்று அழிக்கும் ஆற்றலோடு, முக்கண்ணனாகிய சிவன் அந்த அரக்கர் வாழும் திரிபுரக் கோட்டைகளைச்
சினந்து நோக்கிய பொழுது இருந்த பொறி பறக்கும் முகத்தினைப் போல, வெண் கதிர் வீசும் ஞாயிறு சுட்டுப்பொசுக்குவதால்,
பிறரால் சினந்து அழிப்பதற்கு முடியாத, மழுவினை ஏந்திய அந்தச் சிவன் சினந்து நோக்கியதும், அந்தக் கோட்டைகள்
இடியால் தாக்கப்பட்டு பொடிப்பொடியானது போல மலைகள் வெப்பத்தால் வெடிபட்டு, வழிச்செல்வார்
செல்வதற்கு இயலாதவாறு பாதையை அடைத்துக்கொண்டு கிடக்கும் அனல் வீசும் செல்வதற்கரிய வழியில்,
உன்னை மறக்கமுடியாத காதலையுடைய இவள் இங்கு வருந்தித் தனித்திருக்க,

இவளை விட்டுச் செல்ல துணிந்துவிட்டாய், நான் சொல்வதைக் கேட்பாயாக, ஐயனே!
இருக்கும் செல்வம் தீர்ந்துவிட்டதால், இனி கேட்பவர்க்கு ஒன்றுமே கொடுக்க முடியாதிருப்பது இழிவு என்று எண்ணி
மலைகளைக் கடந்து சென்று தேடக் கருதிய செல்வம் சிறந்த செல்வம் ஆகுமோ?
நிலைபெற்ற கற்பினையுடையவளும், நீ பிரிந்தால் உயிர்வாழ மாட்டாதவளுமாகிய இவளின்
முலைகளையுடைய மார்பினை விட்டுப் பிரியாதிருப்பதே செல்வம் ஆகுமே அல்லாமல் -
'இல்லை' என்று கேட்டுவந்தோர்க்கு ஒன்றுமே கொடுக்க முடியாதிருப்பது இழிவு என்று எண்ணி
மலைகளைக் கடந்து சென்று தேடக் கருதிய செல்வம் சிறந்த செல்வம் ஆகுமோ?
தொன்மையான நெறிகளினின்றும் வழுவாமல், நீயே துணை என்று நின்னை மணந்த இவளின்
தழுவுதற்கு இனிய மார்பினை விட்டுப் பிரியாதிருப்பதே செல்வம் ஆகுமே அல்லாமல் -
போக்கிடமின்றி உன்னிடம் பொருள் கேட்டு வருபவர்க்கு ஒன்றுமே கொடுக்க முடியாதிருப்பது இழிவு என்று எண்ணி

காட்டுவழிகளைக் கடந்து சென்று தேடக் கருதிய செல்வம் சிறந்த செல்வம் ஆகுமோ?
அருந்ததி போல் வணங்கி வழிபடக்கூடிய பிறரால் போற்றுதற்குரிய கற்பினையுடைய இவளின்
பருத்த மென்மையான தோள்களை விட்டுப் பிரியாதிருப்பதே செல்வம் ஆகுமே அல்லாமல் -
என்று நான் உனக்குச் சொல்லும்படியாக, இவள்
துன்பம் கொண்டு வருந்தவும், நீ பொருளை நாடிச் செல்வது
அன்புடைய செயல் ஆகாது என்று நான் சொல்ல, உன்மேல் அன்புகொண்டு
குத்துக்கோலுக்கும் அடங்காமல் செல்லும் களிற்றியானை
யாழின் இசைக்கு அடங்கி நிற்பது போல, தலை தாழ்த்தி, உன்
மாறாப் பேரழகு பாழாகிப்போவிடுமோ என்று அச்சங்கொண்டு, என்னுடைய
சொல்லுக்குக் கட்டுப்பட்டுப் போவதை விடுத்து இங்கேயே தங்கிவிட்டார் உன் காதலர்.

#3
அறஉணர்வு சிறிதும் இன்றி அயலார் தூற்றும் பழிச்சொற்களைக் கேட்க நாணியும்,
வறண்ட பாலை நிலத்தைக் கடப்பதற்காக நீ செல்லும் நீண்ட வழியை நினைந்தும்,
முன்கையில் நிற்காமல் வளையல்கள் கழன்று விழவும், இமைகளினின்றும் வடியுமாறு கண்ணீர் பெருகவும்,
தாங்க முடியாத காம நோயோடு பொலிவிழந்த நெற்றியைக் கொண்ட இவள்
தனது சிறந்த பேரழகை இழந்துபோகுமாறு, பொருளீட்டும் வினைமேற்கொண்டாய், கேட்பாயாக இப்போது,
உன்னையே உயிராக உடைய இவள் உயிர் வாழாள் நீ பிரிந்து சென்றால் என்று பலவாறாக
ஏற்ற காலம் அறிந்து நான் வேண்டிக்கொள்ளவும், நான் கூறுவதை ஏற்காதவன் ஆனாய்;
நீ கடந்து செல்லும் வழியில், நீர் வற்றிப்போன வறிய சுனைகளிலுள்ள
இலைகளோடு வாடிப்போன அழகிய மலர்களே உன்னைத் தடுத்து நிறுத்தும்;

விரைவில் இவளை நீ பிரிந்துசென்றால், இவளின் அழகிய உறுப்புகள் களையிழந்துபோகும் என்று
நீ ஏற்கும் வகையில் நான் வேண்டிக்கொள்ளவும் அதை நீ உணராதவன் ஆனாய்;
நீ செல்லும் நீண்ட வழியில், சுற்றி ஏறிய மரமும் பட்டுப்போக,
பற்றிப் படர்வதை விட்டுக் கீழே விழுந்துகிடக்கும் பூங்கொடிகளே உன்னைத் தடுத்து நிறுத்தும்;
இவளுடன் சேர்ந்திருப்பதை நீ விட்டுவிட எண்ணினால், இறந்துவிடுவாள் இவள் என்று
மிகவும் பணிந்து நின்று வேண்டிக்கொள்ளவும், பிரிவதற்குரிய பல வழிகளை ஆராய்ந்து பார்க்கிறாய்;
துணிந்து நீ செல்லும் அந்த வழியில் முன்னர் நீ கண்ட அழகிய மரமும்
தன் அழகினை இழக்க, வாடிப்போயிருக்கும் அதன் அழகிய தளிர்களே உன்னைத் தடுத்து நிறுத்தும்; 
இவ்வாறாக
நான் உன்னிடம் கூறவும், என் கூற்றினை ஏற்காதவன் ஆனாய்;

இத்துடன் நில்லாது, இவளைப் போலவே, இரக்கத்தை எழுப்பக்கூடிய காட்சிகளைக் காட்டி,
உனக்கு மேலாய் நின்று உண்மைகளை இடித்துக்கூறும் நண்பர்களைப் போல, நீ செல்லும்
காட்டு வழியே தடுத்துநிறுத்தும் உன் பயணத்தை.

#4
அளவிறந்த உடல் வலிமையும், உறுதியான உடம்பும், புலிப் பார்வையும் கொண்ட,
முறுக்கிக்கட்டிய வில்லினையுடய, சுருண்டு வளர்ந்த மயிரையுடைய,
சரியான சமயத்தை எதிர்நோக்கிக் காத்துக்கிடக்கும் கொடிய மறவர்கள், தாம்
கவர்ந்து கொள்ளக்கூடிய பொருள் இல்லாதவரெனினும், அவ்வழி வரும் புதியவர்
துடித்து வருந்துவதைக் கண்டு மகிழ்வதற்காக, அவரை விரட்டி அவரின் உயிரைக் கவர்வதால்,
பறவைகளும் பறக்காத, துயரம் நிறைந்த கடப்பதற்கரிய தனிவழியில்
வெண்மை நிறங்கொண்ட வேலை வலக் கையில் ஏந்தியவராய், பொருளீட்டும் ஆசையால்
போக எண்ணியுள்ளாய் என்பதனை அறிந்தனள் என் தோழி;
"முத்துக்களும், மணிகளும் பரவலாகப் பதிக்கப்பட்ட மாலை கிடந்து அசையும் என் இளம் முலைகளைப்

பொழுதிடைப்படாமல் தழுவியும் தம் வேட்கை அடங்காதவராய், என்னுடைய
அவிழ்ந்துவிழுந்த கூந்தலைச் சரிசெய்வார் காதலர்; ஆனால் அவர்
உள்ளத்தில் இருப்பது என்னவென்று நான் அறியேன்" என்கிறாள் என் தோழி;
"முள்ளைப் போன்ற கூரிய முனையைக் கொண்ட என் பற்களிடையே அமிழ்தாக ஊறும் இனிய நீரை
'தேனினும் இனியது' எனப் பாராட்டியும் தம் வேட்கை அடங்காதவராய், என்னுடைய
ஒளிவீசும் அணிகலன்கள் கலைந்து கிடப்பதைச் சரிசெய்வார் காதலர்; ஆனால் அவர்
உள்ளத்தில் இருப்பது என்னவென்று நான் அறியேன்" என்கிறாள் என் தோழி;
சிறந்த பேரழகும், மாந்தளிர் நிற அழகுத்தேமலும் உடைய என் மார்பை, அவர் தன்
கண்ணுடன் சேர்த்துக் கட்டிவைத்தது போல் விடாது பார்த்துக்கொண்டிருந்தும் தம் வேட்கை அடங்காதவராய், என்னுடைய
ஒளி வீசும் நெற்றியை நீவிக்கொடுப்பார் காதலர்; ஆனால் அவர்

எண்ணுவது என்னவென்று நான் அறியேன்" என்கிறாள் என் தோழி;
என்று அவள் கூறுபடியாக,
மிகப்பெரிய இந்த அன்புகாட்டலுக்குப் பின்புலமாக ஏதோ ஒன்று உள்ளது என்று என் தோழி
வருத்தத்தோடு கலங்கிய துயரத்தை உடையவளாய், ஒருநாள் நீர்
சிறிது காலம் இடையில் பிரிந்து சென்றாலும் உயிர்கொண்டு வாழ்வாளோ?
கைவிட்டுவிடுவாயாக, இப்போது, பெருமானே! உன் பொருளீட்டும் பயணத்தை.

#5
பெரிய உறுப்புக்களாகிய அழகிய செவிகளையும், பருத்த கால்களையும் உடைய விலங்குக் கூட்டமான
மதம்பிடித்து மயங்கித்திரியும் யானைகளோடு, பாலைநில வேட்டுவர்களும் நெருக்கமாகத் திரிதலால்
சிறு புதர்கள் அழிந்து வழியாகிப்போய், பழைய வழிகளுடன் கலந்து குழம்பவைக்கும் அரிய காட்டுவழியைக்
கடந்து சென்று நீர் ஈட்டும் பொருளைக் காட்டிலும் நாங்கள் உமக்கு
சிறந்தவர்களாவோம் என்பதனை நீர் அறிந்திருப்பீராயின்,
நீண்ட பெரிய கடலில் பெருங்காற்று மரக்கலத்தைத் தாக்கும்போது
அதனைக் காப்பாற்றும் முயற்சியில் தோற்றுப்போனோர் போன்ற நிலையிலுள்ளதைத் தவிர
எம் உறவான பெருந்தகையான உம்மோடு எவ்வாறு பலவற்றைச் சொல்லி உம்மைத் தடுப்போம்?
நாளும் கோளுமே உம்மைத் தடைசெய்தல் வேண்டும்!

'கல்'லென்ற பேரொலியுடன் அழகுபெற்ற திருவிழா நடந்துமுடிந்த பின்னர்
'புல்'லென்று பொலிவிழந்து போன களம் போல தனிமைத் துயர்கொண்டு வாழ்வாளோ?
நாட்டை ஆள்பவர் அழிவு பல செய்ய, அவரால் அலைக்கழிக்கப்பட்ட நாட்டு மக்கள் போல
பாழ்பட்டுப்போன முகத்தோடு பரிதவித்து இருப்பாளோ?
ஒரே ஒரு இரவுக்குள், தாமரைப் பொய்கையின்
நீரிலிருந்து பிடுங்கி எறியப்பட்ட மலரைப் போல, நீ பிரிந்து சென்றால் இவள் வாழ்வாளோ?
என்று நான் கூறித் தடை செய்யவும்,
பொய்யன்பு காட்டி, இவளைப் பாதுகாத்தலைக் கைவிட்டு
எந்த நாளில், நெடுந்தகையே! நீ செல்கின்றாயோ
அந்த நாளிலேயே பிரிந்துவிடும் இவளின் பெறுதற்கரிய உயிர்.

#6
காட்டுப்பசுக்கள் கற்றாழையைத் தின்னும்படியாக மழை வறண்டுபோக,
பாறைகள் உயர்ந்து நிற்கும் கடப்பதற்கரிய பாலை நிலத்தின் நடக்க முடியாத பாதையில் செல்வோர்,
கள்வர் ஏவிய சுரையுடன் கூடிய அம்பு தைத்தலினால் உடல் தளர்ந்து, 
உடலுக்குள் உள்ள நீர்ப்பசை வற்றி, புலர்ந்து வாடிய நாவுக்குத்
தண்ணீர் கிடைக்காமல் தடுமாறிப்போய் அடையும் பெரும் துயரத்தினால் பெருகும்
கண்ணீரினால் தம் நாவினை நனைத்துக்கொள்ளும் கொடுமையையுடையது காட்டு வழி என்று கூறினால்
என்னுடைய இயல்பை அறியாதவர் போல இவற்றைக் கூறுவது
உமக்குத் தகுதி உடையதன்று, பெருந்தகையே! என்னையும்,
நம்மிடையே உள்ள அன்பு அழிந்துவிட நினையாது, போகும் வழியில் உம்முடன்

துன்பகாலத்தில் துணையாக நான் கூட இருப்பதை விரும்பினால், அதைத் தவிர
இன்பமான செய்தி வேறு உண்டோ எனக்கு.

#7
வேனில்காலத்து வெம்மையால் துன்பமடைந்து உடல் சுருங்கி வருந்தி ஓய்ந்துபோன களிறுகள்
மழை வற்றிப்போன பாலைக் காட்டில் கானல் நீரைப் பார்த்து ஏக்கத்துடன் நோக்கும்
காட்டுவழியைக் கடந்து செல்கிறீர் என்று கேள்வியுற்றதால், நான் ஒன்று
கேட்கிறேன், ஐயனே, கொஞ்சம்;
நீயோ, இங்கு பொருளீட்டும் காரியத்திற்காகப் பயணம் மேற்கொள்வதை விரும்பி, உன்னுடைய
கையால் செய்த வலிமையான வில்லின் நாணை நீவிவிட்டுப் பார்க்கிறாய்;
ஆனால் இவளுக்கோ, செம்மையாகச் செய்யப்பட்டது போன்ற முழுநிலவில் மேகம் படர்வது போல்
மறு இல்லாத ஒளியையுடைய முகத்தில் பசப்பு பரவத் தொடங்கிற்று;
நீயோ, சிறப்பாகச் செய்யப்பட்ட கையுறையை இறுகக் கட்டி,

பூவும் சாந்தும் பூசிச் சிறந்த அம்புகளை ஆராய்ந்து தெரிகின்றாய்;
ஆனால் இவளுக்கோ, சுனையில் சிறப்பாக வளர்ந்த கருநீல மலர்கள் மழைநீரை ஏற்று வடிப்பதைப் போல,
துயரப் பார்வை கொண்ட மையுண்ட கண்களில் கண்ணீர் நிற்காமல் வடியத் தொடங்கிற்று;
நீயோ, பிரிவின் தனிமையைப் பற்றி நினைக்காத நெஞ்சத்தோடு, பொருள் தேடப் புறப்பட்டுப்போக
வெற்றியைத் தரும் சக்கர ஆயுதத்தின் ஓரங்களின் கூர்மையைத் தடவிப்பார்க்கிறாய்;
ஆனால் இவளுக்கோ, அசைகின்ற இதழ்கள் கோடல் பூவினின்றும் வாடி உதிர்வன போல
ஒளிவிடும் அழகினையுடைய பளபளப்பான வளையல்கள் முன்கையிலிருந்து கழன்றுவிழத் தொடங்கின;
இவ்வாறாக, உனது
பிரிந்து செல்வது என்ற தவறான செய்கைக்கான ஏற்பாடுகளின்போதே இவ்வாறு வருந்துபவள், நீ சென்றுவிட்டால்
இவளுடைய நலம் அனைத்தும் அழிந்துவிடுமாதலால், போய்விட்ட இவளின்

இனிய உயிரை மீட்டுத் தர இயலுமோ,
முனைந்து செல்லும் நாட்டில் நீ முயன்று ஈட்டும் பொருளால்?

#8
நடுவுநிலைமையைத் துறந்து, அதனை அகற்றிப்போட்ட அருளற்ற அமைச்சன் வழிகாட்ட,
கொடுமை செய்வதையே மேற்கொண்ட மன்னனின் கொடுங்கோலாட்சியைப் போல, ஞாயிறு
மிகுந்த அனல் பரக்கும் கதிர்களைச் செலுத்திக் காய்கின்ற வெப்பத்தால் சுடுதலால்
வண்டுகள் நெருங்கிச் சேர, ஒழுகுகின்ற கமழும் மதநீரையுடைய, இப்பொழுது கெட்டுப்போன அழகையுடைய யானை,
வறண்ட நிலத்தை உழுகின்ற கலப்பையைப் போல் தன் கொம்புகளை ஊன்றி நிலத்தில் கிடக்க,
எதற்கும் நிலை கலங்காத மலைகளும் மிகுந்த சூடாகி வெதும்பிநிற்க, செல்வதற்கு அரிய கொடிய காட்டு வழியில்,
என்னிடம் சொல்லாமல் போகத் துணிந்த உமக்கு ஒரு மொழி
சொல்வதற்கு உள்ளேன், கேளுங்கள், ஐயனே!
கேட்பவர்க்கு இன்பம் பயப்பதாய், விரலால் இயக்கப்பெற்று இசைக்கும் யாழ்த்தண்டின்

ஏழு நரம்புகளும் தம்முடைய பயன் கெட்டுப்போகுமாறு இடையிலிருக்கும் ஒரு நரம்பு அறுந்துபோகும்
யாழின் இசையைக்காட்டிலும் விரைந்து அழியும் நிலையற்ற பொருளையா விரும்பிச் செல்கிறாய்?
விரும்பித் தான் சேர்ந்தாரைச் சேர்ந்திருக்கும்போது இன்புறச் செய்வதைப் போலல்லாமல்,
அவரை விட்டுச் செல்லும்போது மற்றவர் அவரை இகழ்ந்துபேசும்படி, தமக்கும் ஒரு பெருமையின்றிக் கைமாறிச் செல்லும்
செல்வத்தைக்காட்டிலும் விரைந்து அழியும் நிலையற்ற பொருளையா விரும்பிச் செல்கிறாய்? 
தமக்கு உயர்ச்சி மிகும்படியாகத் தாம் பெறும் பயனைப் பாராமல், அரசரின் ஆக்கத்திற்காகவே முயலும் அமைச்சரை
ஒரு வரையின்றிக் கோபிக்கும் பொழுதில் கருணையின்றி அவரின் உயிரைப் பறிக்கும்
அரசனின் வாழ்வு அழிந்துபோவதைக்காட்டிலும் விரைந்து அழியும் நிலையற்ற பொருளையா விரும்பிச் செல்கிறாய்?
என்று நான் சொல்ல,
பொருள் மீது ஆசை கூடாது பெருமானே!, இந்தப் பயணத்தைக்

கைவிடும்படி வேண்டுகிறேன், ஆராய்ந்து பார்த்தால் இது தவறல்ல,
மன்னவன் பேணிப்பாதுகாக்க, வீட்டுக்கு வரும் விருந்தினரை உபசரித்து,
தன் மனைவி மக்கள் விரும்பும்படி, அவருடன் சேர்ந்திருப்பது,
இனிய நெருக்கமான உறவினுக்குரிய அகன்ற மார்பினையுடையவனே! அதுவே நிலைத்த பொருளும் ஆகும்.

#9
எறிக்கின்ற ஞாயிற்றின் கதிர்களைத் தாங்கும் ஏந்திய குடையின் நிழலில்,
உறியில் தொங்கும் கமண்டலத்தையும், புகழ் பெற்ற முக்கோலினையும்,
முறையாகத் தோளில் சுமந்து, நன்மையைத் தவிரே வேறு ஒன்றனையும் நினைக்காத நெஞ்சத்துடன்,
ஐம்பொறிகளும் தமக்கு ஏவல் செய்தலை இயல்பாக உடைய கொள்கையையும் ஒழுக்கத்தையும் உடைய அந்தணர்களே!
வெப்பம் மிக்க இந்தக் காட்டு வழியில் செல்வதை இயல்பாகக் கொண்டு ஒழுகிநடப்பவர்களே! இந்த வழியில்
என் மகள் ஒருத்தியும், வேறொருத்தியின் மகன் ஒருவனும்
தமக்குத்தாமே காதல் கொண்டு, இப்போது பிறர் அறியும்படி ஒன்றுசேர்ந்தனர்,
அன்னார் இருவரைக் கண்டீரோ பெருமக்களே!
நாங்கள் காணாதிருக்கவில்லை, கண்டோம், காட்டு வழியில்;

ஆணழகனான ஒரு சிறந்தவனோடு, கடப்பதற்கு அரிய காட்டு வழியில் செல்லத் துணிந்த
மாட்சிமைபெற்ற குணத்தை அணிகலனாகப் பெற்ற இளம்பெண்ணின் தாய்தான் நீர் போலும்!
பற்பல வகைகளில் பயன்படும் நறிய சந்தனக் கட்டைகள் தன்னை அரைத்துப் பூசிக்கொள்பவர்க்கன்றி,
அவை மலையிலே பிறந்தாலும் மலைக்கு அவை தாம் என்ன செய்யும்?
நினைத்துப்பார்த்தால் உமது மகள் உமக்கும் அதனைப் போன்றவள்தான்;
சிறப்புப் பொருந்திய வெண்மையான முத்துக்கள் அவற்றை அணிபவர்க்கன்றி,
அவை நீருக்குள்ளே பிறந்தாலும் நீருக்கு அவை தாம் என்ன செய்யும்?
ஆராய்ந்துபார்த்தால் உமது மகள் உமக்கும் அதனைப் போன்றவள்தான்;
ஏழு நரம்பால் கூட்டி எழுப்பிய இனிய ஓசைகள், இசைப்பவர்க்கன்றி
அவை யாழினுள்ளே பிறந்தாலும் யாழுக்கு அவை தாம் என்ன செய்யும்?

எண்ணிப்பார்த்தால் உமது மகள் உமக்கும் அதனைப் போன்றவள்தான்;
என்று நாங்கள் சொல்ல,
மிக உயர்ந்த கற்பினையுடையவளுக்காக வருத்தம் கொள்ளாதீர்!
தலைசிறந்தவனைப் பின்பற்றிச் சென்றாள்,
அறநெறி தவறாத ஒழுக்கமும் அதுவேயாம்.

#10
வறுமைப்பட்டவனின் இளமை வீணே கழிவதுபோல, வாட்டும் கோடையால் மரக்கிளைகள் வெறுமையுற்றுக் கிடக்க,
அறிவற்ற ஒருவனின் செல்வம் பிறர்க்குப் பயன்படாதது போல, தம்மை அண்டினோர்க்கு நிழலைத் தரமுடியாமல்,
யாரையும் மதியாமல் நடந்து தன் நல்ல பெயரைக் கெடுத்துக்கொண்டவனின் இறுதிக்காலம் போல,
வேரோடு மரம் வாடிப்போகுமாறு ஞாயிற்றின் விரிந்த கதிர்கள் சுடுதலால்,
வருத்தமுற்றுக் குடிமக்கள் கூக்குரலிட, அறநெறி கெட்டுப் பொருளின்மேல் ஆசைகொண்டு,
கொலைக்கு அஞ்சாத கொடிய அமைச்சரால் தனது நல்லாட்சியில் பிறழ்ந்த அரசனின் ஆட்சியின் கீழ் வாழும்
நாட்டு மக்களின் உள்ளங்களைப் போல் வற்றிக் காய்ந்துபோன உயர்ந்த மரங்களைக் கொண்ட கொடிய பாலை வழியில்
பிரிவினை மேற்கொண்டு, பொருளுக்காகப் போகிறாய் நீ என்று கேள்விப்பட்டால்
உடைந்த நெஞ்சம் வருந்திச் சோர்வுற, தன் அழகு கெடுவாள் அன்றோ!

சீராகப் பரப்பப்பெற்ற படுக்கையில் உறங்கும்போது உன்னை அறியாமல் நீ
சற்று விலகிப் படுத்தாலும் தனிமையுணர்வுகொண்டு தவித்துப்போகின்றவள்;
மிக்க வருத்தமின்றி ஈட்டமுடிகின்ற பொருளுக்காகப் போகிறாய் நீ என்று கேள்விப்பட்டால்
நீர் நிறைந்த கண்கள் உறக்கம் கொள்ளாமல் துன்பம் மிகுவாள் அன்றோ!
மிகவும் அதிமான மெல்லியல்பு கொண்டவளான இவள், விருப்பத்துடன் நீ விளையாட்டாகப்
பொய்க்கோபம் கொண்டு மறைந்திருந்தாலும், அந்தச் சிறு பிரிவிற்கே அஞ்சி நடுங்குகின்றவளாயிற்றே;
பொருளின் மீது நோக்கம்கொண்டு இவளை விட்டுப் பிரிந்து நீ போகிறாய் என்று கேள்விப்பட்டால்
மருண்ட தன் பார்வை மடிந்துபோக, மயக்கம் கொண்டுவிடுவாள் அன்றோ?
வெறுப்பான பார்வை இடையே இல்லாமல், அன்பின் வயப்பட்ட உன்
அருட்பார்வை சிறிதளவு அழிந்து போனாலும் அவலம் கொண்டு நெஞ்சழிகின்றவளான இவள்;

என்று நான் கூற,
பொருள்தேடும் தொழிலை நாடி நீ பிரிந்து சென்றால் இவள் உயிரை விட்டுவிடுவாள் என்று,
சிறப்பாகச் செய்த அணிகலன்களைச் சூடியவளே! உன்னுடைய நிலையை நான் எடுத்துக்கூற, நன்கு சிந்தித்து
ஒளிவீசும் வேலையுடைய நெடுந்தகையாளர், நீண்ட அந்தப் பாலைவழியில்
பயணம் செய்வதைத் தவிர்த்துவிட்டார், கழன்றுபோகாமல் செறிந்து நிற்கட்டும் உன் வளையல்கள்.

#11
கடைப்பிடிப்பதற்கு அரிய அறநெறியில் நின்று, அருள் உள்ளத்தோடு தன்னிடம் வந்தவர்க்கு அள்ளிக்கொடுப்பதுவும்,
பெரிதாக எதிர்த்துவந்த பகைவரை வென்று, தன்னை வழிபடாதோரை அழிப்பதுவும்,
அன்பும் ஆசையும் கொண்ட காதலினால் வாழ்வில் ஒன்றுபட்டிருப்பதுவும் பொருளினால் ஆகும் என்று
பிரிந்து செல்லக் கருதி பொருள் தேடிச் சென்ற நம் தலைவர்
வந்துவிடுவாரோ? ஒளிவீசும் அணிகலன்களை அணிந்த தோழியே! உறுதியாகச் சொல்கிறேன், கேட்பாயாக இப்போது;
பாதங்கள் பொறுத்துக்கொள்ளும் அளவினையும் மீறி, நெருப்புப்போன்ற வெம்மையுடைய
கொடுமையை உடையது, பொன்னாலான குழையை அணிந்தவளே! பாலைக்காடு என்றார், அந்தக் காட்டில்
உடுக்கை போன்ற கால்களையுடைய கன்று கலக்கிய சிறிது நீரைத்
தன் பெண்யானைக்கு முதலில் ஊட்டிவிட்டுப் பின்னரே தான் உண்ணும் களிறு என்றும் சொல்லிச் சென்றார்;

வீட்டின் இன்பமான சூழ்நிலையைக் கைவிட்டுப் பிரிந்துசென்று, இலைகள் தீய்ந்துபோன உலர்ந்த மரக் கிளைகளால்
நிழலின்றித் துன்புறும் தன்மை கொண்டது பாலைக்காடு என்றார், அந்தக் காட்டில்
தான் அன்புகொண்ட இளம் பேடை தளர்வுற்று வருந்தும் வருத்தத்தை,
தன் மெல்லிய சிறகை விரித்து நிழல்கொடுத்துப் போக்கும் ஆண்புறா என்றும் சொல்லிச் சென்றார்;
மலையின் மேல் மூங்கில்கள் பட்டுப்போகும்படி ஞாயிற்றின் மிகுதியான கதிர்கள் சுடுதலால்
கிட்டே நெருங்கவும் முடியாத தன்மை கொண்டது பாலைக் காடு என்றார், அந்தக் காட்டில்
இனிய நிழல் இல்லாததினால் வருந்திய தன் இளம் பெண்மானுக்குத்
தன்னுடைய நிழலைக் கொடுத்து உதவும் ஆண்மான் என்றும் சொல்லிச் சென்றார்;
எனவே,
இவை போன்ற தன்மைகள் கொண்ட காட்டுவழியில் சென்றவர்

நம்முடைய மேனி அலங்காரங்களைக் குலைத்துப்போடுபவர் அல்லர்; வீட்டில்
பல்லியும் நல்ல இடத்தில் இருந்து ஒலித்து நல்வாக்குச் சொல்கிறது;
நல்ல அழகினைக்கொண்ட மைதீட்டிய கண்ணும் துடிக்கின்றது இடப்பக்கம்.

#12
முள்ளால் செய்த நீண்ட வேலியைப் போல, கொலைகாரக் கள்வர்
தம்முடைய வில்லால் கொல்லப்பட்டவர்களின் உடலை இலைகளால் மூடிய குவியல்கள் வரிசையாகக் கிடக்கும்
கொடுங் குற்றங்கள் நடைபெறும் கடத்தற்கரிய காட்டுவழியில், நீர் வற்றிப்போன சுனையைச் சுற்றிநின்று,
ஒருசேர நீர்வேட்கை கொண்டதால், உடல் வருந்திய யானைகள்
விரைவாகத் தம் துதிக்கைகளை நீரில் பதிக்க, அதனால் தம் கைகள் சுடப்பட்டு
வெறிகொண்ட யானைக் கூட்டம் மூலைக்குஒன்றாய் மலைச் சாரல்கள்தோறும் ஓடுவதால்
பழைய வழிகள் பாழ்பட்டுப்போகும் கடந்து செல்ல முடியாத நீண்ட கடினமான பாதையில்,
சிறிது அதிகமாக நீ உறங்கி எழுந்தாலும், அதை எண்ணி அஞ்சுகின்ற
நறிய நெற்றியையுடைய இவளை விட்டுப் பிரிந்து பொருள்தேடுவதற்காகச் செல்கின்றவனே!

மிக்க வலிமைபொருந்திய நெஞ்சினையுடையவனே! தேடும் பொருளை ஈட்டிய பின்னர் அதனால் கிடைக்கும்
வளமான வாழ்வினால் பெறுவதே இந்த இன்பம் என்கிறாய்!
இளமையும் இன்பநுகர்வும் உன் சொல்கேட்டு உனக்காகக் காத்திருக்கமாட்டா!
முலையிடையே கிடக்கும் மாலை குழைந்துபோகும்படி தழுவிக்கொள்ளும்
முறைமையினையுடைய நாட்கள் வீணே கழிந்துபோகாமல் பார்த்துக்கொள்வாய்!
தம் வாழ்வின் இறுதிநாள் இதுவென்று அறிந்தவர் யாருமில்லை!
பின்பற்றாதிருப்பாயாக, பெருமானே நீ! காம இன்பம் கெட்டுப்போகும்படி
அதனுடன் மாறுபட்டு பொருளைத் தேடிச் செல்கின்றவனே!
இறப்பும் முதுமையும் எல்லாருக்கும் உண்டு என்பதனை மறந்துவிட்டவரோடு ஒன்றுசேர்ந்து
உலகியலுக்கு ஒவ்வாத மாறுபட்ட வழியை -

#13
போர்க்குணம் மிக்க, சினத்தையுடைய வேந்தன் தன் கண்கள் சிவக்கத் தங்கியிருக்கும் பகைவரின் நிலத்தைப் போல,
நெருப்பு பரவலாய்ச் சுட்டதினால் கரியாகி வறண்டு போன நிலத்தில் பசித்த வாய்க்குப் பச்சை இலை கிடைக்காதவையாய்
பொரிகள் விரிந்து கிடப்பதைப் போன்ற புள்ளிகளையுடைய இளைய மான்
முறுக்கிய கொம்புகளையுடைய தன் ஆண்மானோடு பொய்த்தேர் எனப்படும் கானல் நீரைப் பார்த்து ஓட,
கற்றாழைகளும் வாடிப்போக, மலைகள் புழுங்கி நிற்க, மந்திகள் சோர்ந்துபோக,
உரல் போன்ற கால்களைக் கொண்ட உடம்பு தளர்ந்த யானை
ஊற்று நீர் அடங்கிப்போய்விட்டதால் நீருண்ணக்கூடிய நீர்நிலைகளைக் காணாமல்,
சேற்றினைச் சுவைத்து, தம்முடைய போகின்ற உயிரைப் போக்காது தாங்கிக்கொள்ளும்
மழைத்துளியே இல்லையாகிப்போன, போவதற்கு அரிய கொடிய காட்டு வழியில்,

ஒளிவீசும் வளையல்களை அணிந்தவளே! என்னோடு நீ வந்தால், உன்
மென்மையான தன்மை பொருந்திய சின்னஞ்சிறு காலடிகள் - தாமரை மலரின்
நடுவிலிருக்கும் கொட்டையைச் சூழ்ந்திருக்கும் அழகிய இதழ்கள் செவ்வரக்குப் பூசியதைப் போல் சிவந்தவை -
கற்களின் மீது படும்போது, அந்த அழகிய அடிகள் கறுத்துப்போய்விடும் அல்லவா!
நலம் மிக்க ஒளிவீசும் நெற்றியையுடையவளே! என்னோடு நீ வந்தால்,
வெண்மை ஒளிவீசும் மாட்சிமை விளங்கும் அன்னத்தூவி பரப்பிய மென்மையான படுக்கையில்,
சிறந்த விலங்காகிய சிங்கத்தின் அமைப்பினைக் கால்களாகக் கொண்ட கட்டிலின்மேல் படுத்துத் துயில்பவளே!, அங்கே
வழியில் வந்து நிற்கும் சிங்கத்தின் குரலைக் கேட்டால் அஞ்சி நடுங்குவாய் அல்லவா!
கிளியைப் போன்ற இனிமையான மொழியினை உடையவளே! என்னோடு நீ வந்தால்,
மழைத்துளிகள் பொழிவதால் வளர்ந்த மென் தளிர் போன்ற அழகு மிக்க உன் மேனி அழகிழந்து போகும்படி,

காய்ந்துபோன புதரில் பற்றிச் 'சடசட'வென்று எரியும் காட்டுத்தீயினிடையே புகுந்து வந்த
அனல் காற்று உன் மேனியில் பட்டால், அந்த அழகு வாடிப்போய்விடும் அல்லவா!
என்று பலப்பலவாக
இத்தகைய மொழிகளைக் காதலர் கூறுவதால், பொருள்தேடும் தொழிலை மேற்கொண்டு
பிரிந்துசெல்வார் என்று மிகவும் மனம் வருந்தாதே! உண்மையைத் திரித்துக்கூற எண்ணி
கடுமையானதும், கடத்தற்கு அரியதும் ஆனது காட்டுவழி என்று சொல்கிறாரே ஒழிய
வளைவான காதணிகளை அணிந்தவளே! உன்னைவிட்டுப் பிரிந்துசெல்லமாட்டார்,
நீ அவற்றைக் கேட்டு நடுநடுங்கிப்போவதைக் காண்பதற்காக விளையாட்டாக அவ்வாறு செய்தார்.

#14
தலையணை தருவதைப் போன்ற இன் துயிலைத் தரும், அழகிய மூங்கில் போன்ற பெரிய மென்மையான தோள்களையும்,
இரட்டையான அழகிய நீலமலர்களின் சிறந்த அழகுவாய்ந்த மலர்ந்த மைதீட்டிய கண்களையும்,
மணக்கும் மல்லியின் மொட்டுகளைப் போன்ற, வண்டுகள் விரும்பும், ஒழுங்குபட்ட வரிசையான வெண்ணிறப் பற்களையும்,
மணங்கமழும் நறிய நெற்றியினையும், கார்மேகங்களும் விரும்பும் கருங்கூந்தலையும்,
பருத்த முலைகளைக் கொண்ட மார்பினையும், அகன்ற அல்குலினையும்,
சிலவே வரிசையாக நிற்கும் வெண்சங்கு வளையல்களையும் கொண்ட சிவந்தவளே! என்று
பலவாறாகப் புகழுரைகளை முன்பெல்லாம் கூறிவிட்டு,
இனிய மொழிகளைக் கூறி என்னை இன்னலுக்குள் ஆழ்த்துவது
இப்போது அறிந்தேன், அது என்பால் ஏற்பட்ட மனக்கசப்பால் ஆனது;

பொருள் இல்லாவிட்டால் நாம் ஒரு பொருட்டாக இருக்கமாட்டோம் என்ற உன்
மாயத்தோற்றம் கொண்ட அறியாமை வயப்பட்ட எண்ணத்தால் மயக்கப்பட்டு உணர்விழந்தாயோ?
காதலைவைத்துக்கொண்டு என்ன செய்ய, பொருள் இல்லாவிட்டால்? என்று
ஊரார் கூறும் சொற்களை ஒரு பொருட்டாக மதித்தாயோ?
அறநெறியைக் கைவிட்டு, அதினின்று அகன்று பொருள் ஈட்டுவார்க்கு, அந்தப் பொருளே
இம்மையிலும், மறுமையிலும் பகையாக விளங்கும் என்பதை அறியாயோ?
அதனால்,
நானும் உமக்குச் செல்வமே என்று மதித்துநடப்பாயாக! நம்முள் நாம்
தழுவிக்கொண்டிருக்கும் கைகளைப் பிரித்துவிட்டுச் சென்று பெறுகின்ற பொருளிடத்தில்
ஆசை கொண்டிருப்பதை அறவே நீக்குக, அதுவே நிலைத்த செல்வமாகும்.

#15
சிங்கம் முழங்குவதைப் போன்று முழங்கும், அழகிய சிலைமரத்தால் செய்யப்பட்ட வலிய வில்லின்
முறுக்குடைய நாணைச் சுண்டிவிட்டு ஒலியெழுப்பினாலே பகைவர் தோற்றோடக் காண்பது அன்றி,
ஒன்றுசேர்ந்த நால்வகைப்படைகளும் கூடிய பெரும் சேனையைக் கொண்ட அரசனோடு போர்புரினும்
அம்பு தொடுப்பதைக் கேவலமாக நினைக்கின்ற, விரைந்து ஒலிக்கும் துடியின் பேரொலியுடன் வருகின்ற,
வலிமை மிகுந்த கழுத்தினையும், வன்மையான பார்வையினையும், கலைமானின்
கொம்பு போல திருக்குண்டும் முறுக்குண்டதுமாய் விழுகின்ற தாடியையும்,
வெம்மையான கடும் சினத்தையும் உடைய, புறங்கொடுத்து ஓடாத ஆறலைக் கள்வர்
கைப்பொருளைப் பறித்துக்கொண்டு காயமும் ஏற்படுத்துகிறதன்றி, அன்புடன்
அருளும் முற்றிலும் இல்லாத கடத்தற்கரியது காட்டுப் பாதை;

பொருள்மீது விருப்பம் கொண்டு, நீ இவளைக் கைவிட்டுப் போக எண்ணி, புதிதாகச் சேர்த்துப்
பெருகிய செல்வத்தால் மீட்டுத்தருவது இயலுமோ?
அசோக மரத்தின் அழகிய தளிரைப் போன்றது இவளின் எழில் நலம், அந்த நலம்
பசலை நோயால் பாழடிக்கப்பட்டு அதன் பண்டைய இயல்பு அழிந்தபோது -
பொய்யற்ற கேள்வியறிவால் உயர்ந்த சான்றோரைச் சார்ந்து நீ பெறப்பொகும்
மாசற்ற நோன்புநெறிகளால் திருப்பித்தர முடியுமா?
தண்ணொளி வீசும் முழுத்திங்களைப் போன்றது இவளின் அழகிய முகம், அந்த முகம்
பாம்பின் வாய்ப்பட்ட மதியினைப் போல பசலை படர்ந்து தொலைந்துபோகும்போது -
நெருக்கமான அன்புத்தொடர்பை அறுத்துக்கொண்டு, பிறர் நாட்டுக்குச் சென்று நீ அங்கே பெறும்
நிலையான புதிய தொடர்புகளால் திருப்பித்தர முடியுமா?

கட்டு அவிழ்ந்த நறிய நீல மலர்களைப் போன்ற மைதீட்டிய கண்கள் கலங்கிப்போய், கட்டுக்கடங்காமல்,
எரியும் திரியிலிருந்து ஒழிகும் எண்ணெய் போலச் சுடுகின்ற தெளிந்த நீரை உகுக்கின்றபோது -
ஆகவே,
நான் கூறியவற்றின் நன்மைகளைக் கருத்திற்கொண்டு, நீ நினைக்கின்றவற்றையும் எண்ணிப் பார்! 
செல்வத்தை எந்த நாளிலும் சேர்த்துக்கொள்ளலாம், ஆனால் இவளின்
முளை போன்ற வரிசையான பற்களையுடைய தோழியருள்ளும் சிறந்தவள் என்று தேர்ந்த
இவளின் இளமையை மீட்டுக்கொள்ள முடியுமா, அது கழிந்த பின்னர்?

#16
உறக்கம் இன்றி, பசலை பாய்ந்த கண்கள் வருந்தி நீர் சொரிய,
வாடிப்போய் அழகெல்லாம் கெட்டு, வளைந்த என் கைகளினின்றும் வளையல்கள் கழன்று விழ,
சிறந்த என் எழில் அழிந்துபோவதைக் கண்டும் அஞ்சாமல் நம்மைவிட்டுப் பிரிந்துசென்றவருக்காக, இனிமேல்
அவரை நினைக்கும்போது ஒன்று செய்ய எண்ணங்கொண்டேன்; அதுதான்,
என்னுடைய பண்டை அழகெல்லாம் தொலைய, இங்கு நான் துயர்ப்படும்படி, நம்மைத் துறந்து சென்றவர்,
பொருள்மேல் ஆசைகொண்டவராய் நம் காதலர் நம்மைப் பிரிந்து செல்லும் அரிய காட்டு வழியில்
பாறைகளின் மேலுள்ள வெம்மை அற்றுப்போகும்படி மிகுதியான துளிகளைப் பொழிவாயாக என்று
இனியதாய் முழங்கும் மேகத்தை இரந்து கேட்டுக்கொள்வதும் சரியாக இருக்குமோ?
அழகாகச் செய்த அணிகலன்களைப் பூண்டவளே! இங்கே நாம் தனியே கிடந்து வாட, பொருளின் மீது ஆசைகொண்டு

கொடிய வழி என்றும் எண்ணாமல் நம் காதலர் போகக் கருதிய அரிய காட்டு வழியில்
மரக்கிளைகள் வாடிப்போகும்படி மிகுதியாகக் காயும் உன் சினம் தணிவதாக என்று
மிகுதியாய்ச் செறிந்த கதிர்களையுடைய ஞாயிற்றை விரும்பி வேண்டிக்கொள்வது சரியாக இருக்குமோ?
ஒளிமிகுந்த அணிகலன்களை அணிந்தவளே! இங்கு நாம் துன்பப்பட்டிருக்க, பொருளைத் தேடி
கொஞ்சமும் இரக்கமின்றி நம் காதலர் நம்மைப் பிரிந்து செல்லும் அரிய காட்டுவழியில்
காய்ந்துலர்ந்த புதர் வழியாகப் புகுந்து வருவதால் பெற்ற வெப்பம் தணிந்து வீசுக என்று
காற்றுக் கடவுளை வாழ்த்தி வேண்டுவது சரியாக இருக்குமோ?
என்று இவ்வாறு
தேடிச் சேர்க்கும் பொருளின் சிறப்பினை எண்ணிச் சென்றுள்ள காதலருக்காக, இத்தகைய
தெய்வங்களை வழிபடுவோமா என்று மனம் கலங்கவேண்டாம், இனிய மொழியையுடையவளே!

வறட்சி பரவினால் உலகத்தில் மழையைக் கொண்டுவரக்கூடிய கற்பினையுடையவள்
தன் அழகிழந்து பசலை பாய ஆவாளே என்று
அறக்கடவுளே ஓடிச்சென்று துன்பங்களை விலக்கிவிடும் அவரின் பொருள்தேடும் முயற்சியில்.

#17
தலைவன் தன் படைக்கலங்களைச் செப்பம் செய்து அலங்கரிக்கவும், பலவகையிலும் சிறப்புடைய பலவான மெத்தைகளில்
ஒரு பக்கம் திரும்பிப் படுத்துக்கொள்ளவும், நீ அவன் முதுகினைத் தழுவும்போது பெருமூச்சுவிடவும்,
இவர் உள்ளத்தில் உள்ளது யாதோ என்ற உன் துயரத்தை மனத்தில் ஆராய்ந்து காணும் அவரிடம்
அவரின் போக்குப்படி நடந்துகொள்ளாமல் மிகவும் ஏங்கி நடுங்குகிறாயே, நறிய நெற்றியையுடையவளே!
தன் முந்தைய அழகு தொலைந்துபோய், இவள் துயரில் உழல, இவளைத் துறந்து நீ
நாடு காக்கும் வலிய செயலால் புகழ்பெறத் துணிந்தாய்! அதைச் செய்து முடிக்கும் வரை
நீண்ட கதிர்களையுடைய ஒளிவீசும் திங்களின் முழுநிலவு பின்னர் தேய்வதைப் போல, நிலைத்துநிற்காமல்
ஒவ்வொரு நாளும் தேய்ந்து அழியும் இவள் மேனி நலன் அவளுடன் நிலைபெற்றிருக்குமோ?
ஆற்றல் மிக்க காம நோய் இவளை வருத்த, இவளின் அழகு வாடிப்போக, இவளை விட்டுப் பிரிந்து நீ

பெருமை தரும் தோற்றம் கொண்ட அரச செல்வத்தைப் பெற முயலுகின்றாய்! அவ்வாறு முயலும் வரை
மணம் மிக்க, நீர் நிறைந்த குளத்தில் இலைகளுக்கு மேல் உயர்ந்து நிற்கும் மொட்டுகளுக்கு
மலர்ச்சியே அதற்குக் கூற்றமாக இருப்பது போல், குறைந்துகொண்டுவரும் இவள் கற்பு வாழ்க்கை நிலைபெறுமோ?
வகைவகையான இவளின் அழகிய இளமை தேய்ந்துபோக, மலைகளைக் கடந்து போகத் துணிந்து நீ
பகைவரை அழிக்கும் பயனுள்ள வினையை மேற்கொள்ள முயலுகின்றாய்! அவ்வாறு முயலும் வரை
அழகிய வண்டுகள் புதிய தேனை உண்ண அன்றாடம் பூந்தாதுக்களைக் கொட்டும் குளிர்ச்சியான மலர்களின்
மொட்டுக்களைப் பெற்ற குளம் நாளும் வற்றுவதைப் போல இவளின் இளமையும் வற்றாமல் நிற்குமோ?
என்று
பொருத்தமாக, நான் அவன் விரும்பிய செயல் ஆர்வத்தினால் விளையும் கேடுகளை நினைந்து கூறிய சொற்கள்,
சீர்படுத்தும் நிலையிலுள்ள உடம்பிற்கு மருத்துவன் ஊட்டிய

மருந்தினைப் போல் நல்ல மருந்தாக வேலைசெய்ய, உன் மனம் களிக்கும்படி,
பெரும் புகழ் கொண்ட நம் தலைவன் கைவிட்டுவிட்டான் தன் பயணத்தை.

#18
பெறுவதற்கரிய பொருள் மீது கொண்ட வேட்கையால் உள்ளம் வலிந்து துரத்த
பிரிந்து வாழ்வதை எண்ணாதே, ஐயனே! விருப்பத்துடன் நீ
என் தலைவியின் தோளில் வரைந்த தொய்யிலின் அழகையும், உன்மேல் கொண்ட
காம மயக்கத்தால் இவள் மார்பில் தோன்றியிருக்கும் சுணங்கின் அழகையும் நினைத்துப்பார்;
சென்றவர்களெல்லாம் வாரிக்கொண்டு வருவதற்கு அங்கே பொருளும் குவிந்துகிடக்கவில்லை,
அப்படிச் செல்லாதவர்கள் எல்லாரும் பட்டினி கிடப்பதும் இல்லை,
இளமை நலத்தையும், காம நுகர்ச்சியையும் ஒருசேரப் பெற்றவர்கள்
செல்வத்தை நாடிச் செல்லும் அளவுக்கு அதில் அத்துணை சிறப்பு இருக்கிறதா? இருக்கின்ற நாளெல்லாம்
ஒரு கையால் தம் உடம்பை மூடிக்கொண்டு, மறுகையால்

ஓர் ஆடையை இரண்டாக்கிப் பெற்ற ஒரு பகுதியினால் உடுத்திக்கொள்ளும் வறியவரானாலும்
ஒன்றாகச் சேர்ந்து வாழ்பவர்கள் வாழும் வாழ்க்கையே வாழ்க்கை, அரிதினும் அரிது
சென்ற இளமையை மீண்டும் பெறுவது.

#19
வஞ்சனை கலவாத, இனிய மொழிகளைக் கூறி, அவற்றோடு
என்னை மெதுவாகத் தழுவிக்கொண்ட அந்த நாள்களில் அவை எல்லாம்
பொய்யே என்பதை நான் எவ்வாறு அறிவேன்? ஐயனே!
இந்தப் பெரிய ஊரே கொள்ளாத அளவுக்குப் பழிச்சொற்கள் உருவாகச் செய்து,
ஞாயிறு காயும் கொடிய காட்டுவழியில் செல்ல எண்ணிக்கொண்டிருப்பதை அறிந்தேன்,
நீ நல்லவன் இல்லை, நிச்சயமாக, இப்போது
போ, இப்போது போய் நீ மேற்கொள்ளும் பொருளீட்டும் தொழில் முடியுந்தறுவாயில்
அன்பு அற்றுப்போகுமாறு மாறுபட்டு, நான் வேண்டுமென்றே பிரிந்துவந்த என் மனைவி
எப்படி இருக்கிறாள் என்று தெரியுமா? என்று இங்கிருந்து அங்கு வருவாரிடம்

என்னுடைய நிலைமை பற்றி ஒன்றும் கேட்கவேண்டாம்; அப்படிக் கேட்டால்,
ஞாயிற்றைப் போல விளங்கும் உன் தலைமைச் சிறப்பெல்லாம் அழிந்துபோகுமாறு
உன்னுடைய குற்றமற்ற அருமையான பணிகள் முற்றுப்பெறாமல், அங்கு ஓர்
அவலநிலை உருவாகக் கூடும்.

#20
பலவிதமான வளங்களை விளைந்துகொடுத்து வாழச்செய்யும் பயன் நிறைந்த நிலங்களின் பசுமை அற்றுப்போக,
கடிதாய்ச் செல்கின்ற கதிர்களையுடைய ஞாயிறு, வருத்துகின்ற நெருப்பைக் கக்குவதால்,
தணியாத கொடுமையையுடைய கோடையிலும் குளிர்ச்சியை விரும்பி வரிசையாகத் திரண்டு வரும்
பசிப்பிணியின் கொடுமையால் வருந்திய பெரிய களிற்றுக் கூட்டத்தையும் தாங்கும்
மணிகள் விளங்கும் சிறந்த மலைகள் வெம்மையால் புழுங்க, நிலம் வெடிக்க,
தெளிந்த நீரையுடைய நீர்நிலைகள் புலர்ந்து புழுதிபட இருக்குமாறு மிகுந்த அனலையுடையது கொடுமையான பாலைக்காடு;
"கிளியின் மொழியைப் போன்ற இனிய மொழியையுடையவளே! உன் பாதங்களுக்கு அந்தப் பாதை எளிதானதோ?
மழை பெய்தலையே அறியாததே அந்தக் காடு" என்று கூறுகின்றீர்,
நிலையின்றி வீசும் காற்றினும் வரம்புகட்டிக் கூறமுடியாத அளவுக்கு நிலையற்ற இந்த வாழ்நாளில் உம் மார்பு அளிக்கும்

அருளையே நம்பி இருக்கும் நான் அவலம் கொண்டு அழிந்துபோகவோ?
"வாயில் ஊறுகின்ற நீர் அமிழ்தைப் போல் இனிக்கும் பற்களைக் கொண்டவளே! நீ குடிப்பதற்கு விரும்பினால்
அங்கே ஆற்றில் நீர் இருக்காது என்று தாகத்துக்குத் தண்ணீர் தருகின்ற அறத்தைச் செய்யமுடியாதே என்று கூறுகிறீர்,
ஆற்று நீர் சென்றுவிட்டால் அதனை மீண்டும் பெறமுடியாதது போன்ற இந்த இளமைக்காலத்தில், உம் நிலைத்த அன்பு என்னும்
தெளிவான தன்மையைக் கொண்டுள்ள நான் மனத்தடுமாற்றத்தோடு மாண்டுபோகவோ?
மாட்சிமைப்பட்ட அழகுள்ள, மூங்கிலை வெல்லும் தோளினையுடையவளே! நீ வந்தால் உன்னத் தாங்குவதற்குத்
தகுதியான நிழல் இல்லை அங்குள்ள மரங்களில் என்று கூறுகிறீர்!
நீண்ட நாள் நிழலில் இருக்கும் தளிர் வெளுத்துப்போவதைப் போல என்னுடைய மேனியழகும் ஆகுமென்று அறிவேன், உம்
காலடி நிழலைக் கைவிட்டுத் நான் தனித்திருக்க நினைப்பேனோ?
என்று நான் கூறினும்

அணைபோட முடியாத அளவுக்கு அனல் வீசும் காடு என்று கூறுகிறீர்,
அம்புகளும் உயரச் சென்று பாயமுடியாத அளவுக்கு உயர்ந்த பாறைகளைக் கொண்ட அந்த அரிய காட்டுவழியிலும்
பருத்த கழுத்தினை உடைய அழகிய ஆண்மானின் பின்னர்
அதன் பெண்மானும் இருப்பதைக் காணவில்லையோ? அவை ஒன்றைவிட்டு ஒன்று பிரியுமோ?

#21
பாலைப் போன்ற வெண்மையான கொம்புகளையும், உரலைப் போன்ற பரந்த அடிகளையும்,
ஈரத்துடன் நறுமணம் கமழும் மதநீரினையும் உடைய, தன் இனத்தை விட்டுப் பிரிந்த ஒற்றையானை
யார் வருவார் என்று பாதைநடுவில் காத்துநிற்கும் வேற்று நாட்டிற்குச் சென்று
பொருளீட்டுவதற்காகப் பிரிந்து செல்ல வேண்டும் என்ற
இரக்கமற்ற சொற்களை நீ சொல்லுகின்றாய்!
முன்னொருநாள், நலமிக்க என் நறிய நெற்றியை விருப்பத்துடன் நீவிவிட்டு
உன்னைவிட்டுப் பிரியேன், அஞ்சுவதை விலக்கு என்ற
நலமிக்க மொழிகளையும் நீ சொன்னாயே!
இவற்றுள் எதுதான் உண்மையாயிருக்கும்? அறிவுமயங்கிப் போனவனே!

தமக்குரியவர் இவர்தான் என்றுகொள்ளாமல், செல்வமானது
அவரவரின் பழைய வினைகளையொட்டி ஆள்விட்டு ஆள் மாறிச் சென்று தங்கியிருக்கும்,
அப்படிப்பட்ட பொருளுக்காக என்னைப் பிரிந்துசெல்கின்றாய், உன்னை இப்பொழுது
இமைமூடித் திறக்குமளவும் பிரிந்து வாழமாட்டாத இந்த மடவோளுடைய
மூங்கில் போன்ற அழகினைக் கொண்ட தோளிரண்டையும் மறந்து -

#22
உண்பதற்குரிய பொருளைப் கடனாகப் பெறப் பணிந்து பேசி, இரந்து கேட்கும்போது இருக்கும் முகமும், தாம்
வாங்கிக் கொண்டதைத் திருப்பிக் கொடுக்கும்போது இருக்கும் முகமும் வேறுபடுதல்
பண்டைக் காலத்திலும் இந்த உலகத்துக்கு இயற்கை, அது இக்காலத்தவர்க்கும்
புதியது அன்று, அறிவுடைய பெரியீரே!
சிலையை உருவாக்கிய சிற்பி அதற்கு உயிரூட்டிய கண்மணியின் உயிரோட்டம் என்றும் நிற்பது போல,
நற்குணம் உடையவர் தாம் கூறிய மொழியினின்றும் மாறுபடார், நீ மகளிரின் நலத்தைத்
தேனைத் தேடிச் செல்லும் தேனீக்கள் போல் நுகர்ந்து, அதற்குக் கைம்மாறாக இறப்பினைக் கொடுக்கும்போது,
வேறு யாரோ என்றாகிவிட்ட நாங்கள் என்ன கூறமுடியும், உம் பொருளாசை குறித்து?
நறிய முல்லையின் அழகிய மொட்டுக்களைப் போன்று வரிசையாக அமைந்து

செறிந்து நிற்கும் பற்களைப் அன்று பாராட்டினாய்! இப்போது எம் பற்கள்
உதிர்ந்துபோகும் எம் முதுமை அழகையும் பாராட்டினாயோ? ஐயனே!
நெய்யைக் கூந்தலில் இடைச்செறித்து நீவிவிட்டு, நீல மணி ஒளிர்ந்ததைப் போன்றிருக்கும்
ஐவகையாகப் பின்னிவிடப்பட்ட எம் கூந்தலின் இயற்கை அழகைப் பாராட்டினாய், எம் கூந்தலில்
நாம் இன்று செய்திருக்கும் செயற்கையான ஒப்பனையைப் பாராட்டினாயோ? ஐயனே!
குளத்திற்கு அழகுசெய்யும் தாமரையின் இளம் மொட்டைப் போன்ற
எம் இளம் முலைகளை அன்று பாராட்டினாய்! இன்று எம் மார்பில்
தளர்ந்து கிடக்கும் அந்த முலைகளைப் பாராட்டினாயோ? ஐயனே!
என்று நான் கூற
அடித்து நீட்டப்பட்ட பொன் தகட்டைப் போல் ஒளி வீசும் எம் அழகிய தேமல் தம் அழகு கெட

ஞாயிறு காய்கின்ற காட்டுவழியைக் கடந்து போக எண்ணும் உம்மை, நான் என்னிடத்துள்ள
துன்பத்தைக் கூறி தடுத்து நிறுத்தியதும் உண்டோ? உம்முடன் கொண்ட பிணிப்பு வலிமை பெறுங்காலத்தில்
பிரிவு என்னும் தீவினை வந்து சேர்ந்த பொழுது -

#23
பளிச்சென்று ஒளிவீசும் கொம்புகளையுடைய யானையை ஓசையெழுப்பி விரட்டுபவர்கள்
தினைப்புனங்களிலிருந்து வீசியெறியும் கவண்கற்கள், பூக்களைக் கிளைகளிலிருந்து உதிர்க்கும்
மலைகள் வழிமறித்து வெம்பிப்போய் நிற்கும் செல்வதற்கு அரிய கொடிய பாலைநிலத்தில்
தனியே நடந்து செல்ல, நான் இங்கே உன்னைவிட்டுப் பிரிந்து இருத்தல்
நகைப்பிற்கிடமாகும் இந்த ஆரவாரம் மிகுந்த ஊர் மக்களுக்கு;
இனிமேல் நான்
உண்ணவும் மாட்டேன், வாழவும் வாழேன்;
தோள்களை அணைத்துச் சுகம் கண்டபின் கைவிடப்பட்டவர்கள்
மிக்க அவாவுடன் நீர் குடித்துவிட்டுத் தூக்கியெறிந்துவிட்ட பனையோலைக் குடைக்கு ஒப்பானவர்கள்;

அன்புசெய்பவர்களால் விருப்பத்துடன் பயன்துய்க்கப்பட்டோர்
வாழ்வோர் வெளியேறிவிட்ட பாழ்பட்ட ஊரைப் போன்றவர்கள்;
ஒன்றாகச் சேர்ந்து விருப்பத்துடன் தம் பெண்மையை நுகரக்கொடுத்தவர்கள்
சூடிவிட்டுப் பின்னர் தூக்கிப்போட்ட பூவைப் போன்றவர்கள்;
என்று கூறுவதைப் போல
நானும் உன்னைப்பொருத்த அளவில் அப்படிப்பட்டவள் ஆகிவிட்டேன், சற்றும் குறையாமல்
கொன்றுபோடும் கொடிய எண்ணத்துடன் நாய்களால் சுற்றிவளைக்கப்பட,
வேடனின் வலையில் சென்று விழுந்த இளம் மானைப் போல
உன்னிடமே ஓடிவரும் என் நெஞ்சினை
என்னிடம் வராமல் உன்னுடன் பேணி வைத்துக்கொள்வாய்!

#24
மனம் நடுங்குமாறு ஒரு செய்தியைக் கேட்டும், அதைப் பற்றி ஐயப்பட்டும், தாம்
அஞ்சிக்கொண்டிருந்த ஒரு நிகழ்ச்சி உண்மையாகி நம்மைக் கொடுமைப்படுத்தும் என்று கூறும் பழமொழி,
இனிய, சுவை மிக்க சொற்களையுடையவளே! மெய்யே முக்காலும்; உன்னுடைய உறவான என் கணவன்
புதுப்புதிதாக பலமுறை என்னைப் பாராட்டிப் பேச, நானும்
இதற்கு ஏதோ ஒரு காரணம் இருக்கிறது என்று எண்ணி, அதை ஆராய்ந்துகொண்டிருக்க,
மாசற்ற செல்வச் சிறப்பு மிக்க படுக்கையில் தழுவிக்கிடந்த உறவுக்குப் பின்னர்
உறக்கம் கொண்டு என் தோளில் படுத்துக்கிடப்பார் தம் கனவில், "ஆய்ந்த சித்திரத் தொழிலினையுடைய
வளையல்களை வரிசையாகத் தன் முன்கையில் அணிந்திருப்பவள் மிகுந்த துன்பத்துக்கு ஆளாகாமல்,
சிறந்த இல்லறக் கடமைகளைக் காத்துப் பேணிக்கொள்ளும் திறமையுள்ளவளாயிருப்பாளோ,

குத்தும் கொம்புகளையுடைய யானை தூரத்தே ஒளிர்கின்ற கானல்நீருக்காக ஓடும்
நீண்ட மலைவழியே செல்லும் கொடிய பாலைவழியில் சென்று அறவழியில் நின்று
பொருளீட்டும் பணி முற்றுப்பெறும் வரை" என்று குழறினார்; அழகிய அணிகலன்களை அணிந்தவளே!
தாம் கருதிய கருத்து அதுவாயின், அவரின்றி
நான் உயிர் வாழும் ஆற்றல் எனக்கில்லை என்பதால்,
என் தோளின் கோலத்தைத் துறந்து சென்றார் அவர் என்று அவரைப் பார்த்து
அறிவிலார் சொல்கின்ற பழி அவரோடே கூட நிற்க, அவரோடே
போய்விடும் என் உயிர் என்பதை அவரிடம் சொல்லிவிடு.

#25
ஒளிமிக்க ஞாயிற்று மண்டிலத்துக்குரிய வடமொழிப் பெயரான பகன் என்ற கண்ணற்றவனின்
முகத்தைக்கொண்டவனான திருதராட்டிரனின் மக்களுள் மூத்தவனின் சூழ்ச்சியால்
ஐவர் என்று உலகம் போற்றும் அரசர்கள் உள்ளேயிருக்க,
வேலைப்பாடு மிக்க அரக்கு மாளிகையைக் கட்டுக்கடங்காத நெருப்பு சூழ்ந்துகொண்டதைப் போல்,
கிளர்ச்சியூட்டும் மதநீரைச் சொரிகின்ற, விரைந்து சுழலும் களிறுகள் உள்ளே அகப்படுக்கொள்ள
காய்ந்துபோன மூங்கில்களைக் கொண்ட உயர்ந்த மலையைச் சூழ்ந்து வெடிக்கும் பெருந்தீயை,
தீயினால் ஒளிவிடும் உருவத்தையுடைய அரக்கு மாளிகையை காற்றின் மகனான வீமன் உடைத்துத் தன்
உள்ளத்துக்கு நெருங்கிய உடன்பிறப்புகளோடு பிழைத்து வெளியேறியது போல
கணைமரத்தைப் போன்ற பருத்த துதிக்கையினால் தன் இனத்தைக் காக்கும் அழகிய வேழம்

பரந்தும் சூழ்ந்துகொண்டும் புகையுடன் எரியும் நெருப்பை, வழியேற்படுமாறு மிதித்து, தன்னுடைய
இனத்தோடு சேர்ந்து போகும் குன்றும் கொதிக்கும் கொடிய காட்டுவழியைக்
கடந்து சென்றால், ஐயனே!, இவளின் நிலைமை என்னாகும் என்று கேளுங்கள்;
ஒன்றாகக் கூடியிருக்கும்போது மலர் போன்ற மலர்ச்சியுள்ளதாய் இருந்துவிட்டு, சிறிதளவு நீர்
விலகியிருக்கும்போது கலங்கி அழுவதை நிறுத்தாத கண்கள் என்றும் இருக்கின்றனவே!
சிறப்புகள் பல செய்து அருகிலிருந்து புகழ்ந்து பாராட்டிவிட்டு, அவர்
புறத்தே அகன்றவுடன் பழி தூற்றுகின்ற புன்மையாளர் போல -
அருகிருந்து நீர் அன்புசெய்யும் காலத்தில் கைகளில் செறிந்திருந்து, ஒரே ஒரு நாள் நீர்
பிரிந்திருக்கும்போதும் உடல் மெலிய கைகளினின்றும் கழன்றோடும் வளைகள் என்றும் இருக்கின்றனவே!
ஒருவர் செல்வத்துடன் வாழுங்காலத்தில் அவருடன் சேர்ந்து அவருடைய வளத்தை உண்டுவிட்டு, அவர்

வறுமையுற்ற காலத்தில் எந்த வித உதவியும் செய்யாத உணர்வில்லாதவரின் தொடர்பு போல -
ஒருநாள் நீர் அன்புசெய்யும்போது சிறந்த ஒளியுடன் விளங்கி, ஒருநாள் நீர்
பாராட்டாமல் இருக்கும்போதும் ஒளியிழந்து பசந்துபோகும் நெற்றி என்றும் இருக்கின்றதே!
உள்ளம் பொருந்திய நட்பினால் ஒருவரின் அந்தரங்கமான செய்தியைத் தெரிந்துகொண்டு, அதனை
அவரை விட்டுப் பிரிந்துவிட்ட போது பிறர்க்கு உரைக்கும் பண்பில்லாதவர்கள் போல் -
என்றெல்லாம் இங்கே
நான் உன்னிடம் கூறுவதால் என்ன பயன்? என்னைக்காட்டிலும்
நீ நன்கு அறிந்தவன், நெடுந்தகையே! மேகமானது
மழைபொழிவதினின்றும் மாறுபட்டிருக்கும்போது இந்த உலகம் எப்படிப் போய்விடுமோ, அப்படி ஆகும், உன்
அன்புகாட்டலும் மாறுபட்டிருக்கும்போது இந்த ஆய்ந்த அணிகலன்களை அணிந்தவளின் வனப்பு.

#26
ஒற்றைக் குழல் அணிந்த பலராமனின் வெள்ளை நிறம்போன்ற கொத்துக்களைக் கொண்ட வெண்கடம்பும்,
ஒளிவட்டமுள்ள செல்வனான ஞாயிற்றின் நிறம் போன்ற அரும்புகள் மலர்ந்த செருந்தியும்,
சுறாமீன் கொடியைக் கொண்ட காமனின் நிறம் போன்ற வண்டுகள் மொய்க்கும் காஞ்சியும்,
அவனது இளையோனாகிய சாமனின் நிறம் போன்ற நெருக்கமாய் மலர்ந்த புலிநகக் கொன்றையும்,
எருதுக் கொடியையுடைய சிவனின் நிறம் போன்று மலர்ந்த இலவமும், அங்கே
குற்றமற்ற சிறப்பையுடைய இந்த ஐவரும் நிற்பது போல
மொட்டுக்கள் மலர்ந்து விளங்கும் மரங்களால், நீர் வந்து மோதும் ஆற்றங்கரை அழகுபெற,
வருத்தத்தை உண்டுபண்ணும் வகையில் வந்தது இளவேனில் மேன்மையுடன்;
பல புள்ளிகளையுடைய கூட்டமான வண்டுகள், புதிதான மலர்களில் தேனை உண்ணும் இளவேனில் பருவத்தில்,

தன்னுடைய முந்தைய அழகைத் தொலைத்த என் பருத்த மென்மையான தோள் அழகை எண்ணிப் பார்ப்பாரோ,
பகைவரால் அலைக்கப்பெற்றுத் தம்மை அண்டினோர்க்கு, அவர் வருந்தாமல் அவரைக் காத்துப் பேணி,
தமது வெற்றிப்புகழை உலகத்தவர் பாராட்டப் புதிய நாட்டில் தங்கியிருக்கும் காதலர்?
எத்திசையிலும் தேனீக்கள் ஆரவாரிக்கும் திருமருத முன்துறையில்
பழிச்சொல் அற்ற என் அழகு வாட்டமுறுவதைத் தடுத்து நிறுத்தி அருள்செய்வாரோ,
அன்புகொண்டு தம்மை அண்டினோரைத் தாங்கித் தம்முடைய
புகழ் பரவ, உலகெல்லாம் அதனைப் போற்ற வேற்று நாட்டில் தங்கியிருக்கும் காதலர்?
ஆற்றில் நீர் அறலாய் ஒழுகும் இளவேனிற்காலத்தில் என் அழகிய நெற்றி மாறுபட்டு
ஒளிவீசும் தனது பெரும் வனப்பை இழந்துபோவதைக் காத்து அருள்செய்வாரோ,
தமக்கு வரும் கேட்டினை அஞ்சித் தன்னை அண்டினோரை, அவர் வருந்தாமல் காத்துப் பேணி,

முறைமையின்றிப் பொருளுக்கு ஆசைப்பட்டுப் பிரிந்துசென்ற அந்த நாட்டில் தங்கியிருக்கும் காதலர்?
என்று சொல்லி நீ
வருந்தவேண்டாம், வாழ்க, தோழியே!, நம் காதலர்
போரிட்டு எதிர்த்து நிற்கும் யானைப்படையுடன் போரினை எதிர்கொண்டு எழுந்துவந்த பகைவருடனான
போரில் மேலான ஆற்றல்காட்டி வெற்றிசூடியவராய்த்
திரும்பி வருகிறார் என்று வந்து கூறுகின்றனர் அவர் செய்தியைத் தாங்கிவரும் தூதுவர்.

#27
பிறருக்குக் கொடுப்பதில் குறைகாட்டாமல், அறநெறிகளை அறிந்து அவற்றின்படி ஒழுகுகின்ற
தீதற்றவனின் செல்வம் படிப்படியாக வளர்வது போல் இனிய கரைகளில் மரங்கள் சிறிதுசிறிதாகத் துளிர்க்கவும்,
மயங்க வைக்கும் மென்மையான மொழியும், பெண்மான் போன்ற அழகிய பார்வையும் கொண்ட
மகளிரின் பற்கள் போல் மணக்கின்ற காட்டு முல்லை அரும்புகள் மலரவும்,
காதலரைக் கூடிக் களித்த பெண்களின் கழன்று விழுந்த கருங்கூந்தல் போல்
பூந்தாதுக்களோடும், தளிர்களோடும் அரித்துக்கொண்டு ஓடும் குளிர்ந்த ஆற்றுநீர் அழகாகக் காட்சியளிக்கவும்,
அறிவற்ற அமைச்சன் ஆலோசனை கூற ஆளுகின்ற, தன் பெருமை குன்றிய அரசனின் நாட்டுக்குள்
வேற்றுநாட்டவன் படைகள் கொஞ்சங்கொஞ்சமாய் ஆக்கிரமிப்பது போல் வந்து தங்கியது இளவேனில்;
நிலத்திற்கு அழகுசெய்யும் மரத்தின் மேலிருந்து நிமிர்ந்து கூவும் குயில்கள் என்னை எள்ளி நகையாட,

நலம் சிறந்த என் மேனியழகு தன் பொலிவு குன்ற, நம்மைத்தான் அவர் மறந்துவிட்டுப்போகட்டும்,
அணிகளால் அழகுபெற்ற மகளிர் கண்ணுக்கு இனிதாய்த் தோன்றி மகிழ்ச்சியூட்ட,
நாடே பொலிவுபெறுகின்ற, புகழ்ந்து முடியாத கூடல்விழாவையும் அவர் நினைத்துப்பாராரோ?
மலையில் மயில்கள் மகிழ்ந்து ஆட, பேரொலியுடன் ஊர்மக்கள் பழிச்சொற்கள் கூற,
என்னிடம் முன்பு இருந்த அழகு மொத்தமும் அழிந்துபோக, நம்மைத்தான் அவர் மறந்துவிட்டுப்போகட்டும்,
பகைவரை வென்று அழிப்பவனும், கடலில் நின்ற மா மரத்தை அழிப்பவனும் ஆகிய
வெற்றியையுடைய முருகன் இருக்கும் திருப்பரங்குன்றத்தில் நிகழும் வேனில் விளையாட்டையும் விரும்பி வாராரோ?
கருமையான அழகிய மலர் போன்ற மைதீட்டிய என் கண்களில் மயக்கத்தை ஊட்டி, அவை மகிழும்படி
கூறிய பொய் மொழிகளால் நெஞ்சைப் பறிகொடுத்த நம்மைத்தான் அவர் மறந்துவிட்டுப்போகட்டும்,
அழகு செய்துகொண்ட மகளிர் தம் தோழியருடன் சேர்ந்து ஆடுகின்ற,

வையையில் நீண்டுயர்ந்த மணல்மேட்டு இன்ப நுகர்ச்சியையும் அவர் நினைத்துப்பாராரோ?
என்று பலவாறாக
நோய் மிகுந்த நெஞ்சத்துடன் வருந்தவேண்டாம் தோழியே!
நாம் இல்லாத தனிமைத் துயருடன், தனிமையில் மனத்தை நடுங்கவைக்கும் இளவேனிற்காலத்தில்,
காமவேளுக்குரிய விழா நடக்கும்போது கலங்கிப்போவாளே பெரிதும் என்று
பகைவர் மயக்கமுறும் வகையில் விரைவாக ஓடும் திண்ணிய தேரினை ஓட்டிக்கொண்டு
நாம் விரும்பும் காதலர் நமக்குத் துணையாக இருக்க விரைந்து வருகின்றார்.

#28
பாடிப் போற்றத்தக்க சிறப்பினையுடைய கிளைகளிலும், சுனைகளிலும்,
மிகுந்த சிரமப்பட்டுக் கொய்யவேண்டாத அளவுக்கு விரும்பித் தாமே கொடுப்பவை போல்,
மலர்ந்த பூக்கள் மணக்கும் மாலைகளைக் கட்டிச் சூடிக்கொள்வாருக்காக,
அவர்களின் காதணிகளைத் தொடுமாறு மலர்க்கொத்துக்கள் தாழ்ந்து துறைகள்தோறும் அழகு செய்ய,
திருமகளின் அழகிய மார்பில் உள்ள முத்தாரம் போல் அழகு கொண்டு,
தலைக்கோலம் என்ற அணியைத் தாழ்வாக அணிந்த கூந்தலைப் போல், சிவந்த மணலினிடையே
வையையின் ஒழுகுகின்ற ஒளிவிடும் சிறிய நீரோடை ஆற்றை ஊடறுத்துச் செல்லும் இளவேனிற்காலத்தில்,
மலர்ந்து எங்கெணும் நிறைந்திருந்தன மலர்கள், தம் துணையைக் கூவி அழைக்கின்றன குயில்கள்,
அவரோ என்னை விட்டுப் பிரிந்து இருக்கிறார், அதை எண்ணி மனம் பித்துப்பிடிக்கிறது இந்த இளவேனிலில்,

தாங்கொணாத் துன்பத்தையும் அவலத்தையும் தரும் பிரிவுநோயை எப்படித் தாங்கிக்கொள்வாள் என்னாமல்,
வருந்தும்படியாக அந் நோய் மிகுமானால், வளைந்திறங்கும் தோளினாய்! அவரின் அன்பால் என்ன பயன்?
புதர்கள்தோறும் மலர்கள் பூத்தன, பூஞ்சோலைகள்தோறும் கூட்டமான வண்டுகள் மொய்க்கின்றன,
நம்மைச் சுற்றிப் பழிச்சொற்கள் மிகுந்தன, அவரோ என்னை விட்டுப் பிரிந்து இருக்கிறார்,
துணையில்லாத நெஞ்சுடன் இவள் துயர் தாங்கும் ஆற்றல் இல்லாதவள் என்றிராமல்,
என் நெற்றியில் பசலை படர்கின்றது, நொடித்திறங்கும் தோளினாய்! அவரின் அன்பால் என்ன பயன்?
ஆற்றில் வரும் நீரும் மெல்ல மறைகின்றது, வண்டுகள் கிளைகளில் மொய்த்து ஆரவாரிக்கின்றன,
மாமரங்கள் தளிர்விடுகின்றன, அவரோ நம்மை மறந்து, நம்மைப்பற்றி நினைக்கவும்மாட்டார்,
நீலமலர் போன்ற அழகினைக் கொண்ட கண்கள் தனிமைத்துயரைத் தாங்கமாட்டாமல்,
தூங்காமல் கிடக்கின்ற நோய் மிகுந்து நிற்க, புதிய வளையணிந்தவளே! அவரின் அன்பால் என்ன பயன்?

என்று பலவாறாக
ஆராய்ந்த அணிகளை அணிந்தவளே! அவ்வாறு உரைக்காதே! தொலைவிலிருக்கும் காதலர்க்கு
நாம் செய்தி அனுப்பத் தேவையில்லை, அவரைப் பிரிந்திருக்கும் நம்மைக்காட்டிலும்
நம்மைப் பிரிந்து வாழ்வதை அவர் பொறுக்கமாட்டார்,
வருந்தி என்ன செய்யப்போகிறாய்? வந்துவிடுவார் விரைவில்.

#29
ஒரு பெண்ணின் பழைய அழகை, அளவுக்கு மீறி அவளின் மசக்கைநோய் நலிவுறச்செய்வதால்
அவளுக்கு வேண்டியோர் நொந்துபோக, பின்னர் அவள் பிள்ளைபெற்றுப் படுத்துக்கிடப்பதைப் போல்
பலவாறாகப் பயனைத் தந்த பசுமையற்றுக் கிடக்கும் அகன்ற நிலவெளி
புன்மையான இளங்கதிர்விடும் தூய்மையற்ற நிலை தீர்ந்து கதிர்விட்டுப் புது அழகினால் பொலிவுற,
மகளிர் மணலில் கோடுபோட்டு விளையாடியதைப் போல், மணலில் ஆற்றுநீர் சென்ற வடுக்கள் விளங்க,
இளம்பெண்களின் ஐந்தாகப் பிளந்த கூந்தல் போல் மணல்மேட்டை ஊடறுத்து நீரோடை வழிந்தோட,
மா மரம் துளிர்விட்ட தளிரின் மேல், மாமை நிற மகளிரின் அழகுத் தேமல் போல,
அழகிய இதழ்களைக் கொண்ட பலவான மலர்களின் மென்மையான மகரந்தப்பொடிகள் படிந்திருக்க,
சிறப்பு மிக்க இளவேனில் பருவம் வந்து தங்கிய இக் காலத்தில்,

தொலைநாட்டில் இருப்பவரிடம் சென்ற என் நெஞ்சினை, சிறிதளவே பேசுபவளே!
நீ கூறும் அளவுக்கும் மேல் தடுத்து நிறுத்துகின்றேன், இந்த மன அடக்கத்தையும் மீறிக்கொண்டு
இதழ் விரிந்து பனித்துளிகளை ஏற்றுக்கொள்ளும் வகைவகையான பல மலர்களை வருடிக்கொண்டு
பிரிவுத்துன்பம் மிகுந்திருக்கும் வேளையில் வாடைக் காற்று வந்து வருத்துகின்றதே!
இளவேனிற்பருவம் வருமே என்றும் எண்ணிப்பாராமல், பிரிந்துசென்றவரிடம் பற்றுக்கொண்டு மனம் வாடும் நிலையை
மனத்தால் எண்ணி, நெருப்பிலிட்டுச் சுட்ட பொன்னாலான அணிகளை அணிந்தவளே! மறைத்துவைத்தேன், அதை மீறி
விழுகின்ற ஞாயிற்றின் கதிர்களால் மலர்ந்த பூக்களின் புதிய தேனை உண்ணும் கரிய தும்பிகள்
யாழோசை போன்று ஒலிக்கும் இன்னிசை எழுப்புகின்ற மாலைக்காலம் வந்து வருத்துகின்றதே!
என் வளையல்களைக் கழன்றோடச் செய்த அவரையே நோக்கிச் செல்லும் என் ஆருயிரை,
குற்றமற்ற சொற்களையுடையவளே! இழுத்து நிறுத்துகின்றேன், அவ்வாறு நிறுத்தினாலும்

நீண்டிருக்கும் நிலவொளி விரித்துவிட்டுத் தன் கதிர்களைப் பரப்ப, அதனால் வரிசையான இதழ்கள் மலர்ந்து
மணமிக்க மலர்கள் வீசும் நறுமணம் இரவில் வந்து வருத்துகின்றதே!
என்று சொல்லி
வருந்துகின்றாய்! செறிந்திருந்த உன் கைவளையல்கள் கழன்று விழ, தொலைநாட்டுக்குப்
பிரிந்து சென்று ஈட்டும் பொருளிடத்தில் ஆசைகொண்டு, திரும்பிப் பாராமல் சென்று, இப்போது நம்
களைதற்கரிய துயரத்தைப் போக்குபவராய்த் திரும்பி வந்துவிட்டார்,
திருத்தமான பற்கள் பளிச்சிடும் உன் வாயிலிருந்து வெளிப்படும் இனிய சொற்களை விரும்பி.

#30
அரிய தவத்தைச் செய்தவர்கள் வேண்டியதை வேண்டிய அளவு பெற்றுக்கொள்வது போல, அழகாக
மலர்ந்து கொள்ளாத கிளைகள்தோறும் வேண்டிய அளவு தேனை அமர்ந்து உண்டு
களித்து ஆரவாரிக்கும் வண்டுகளோடு, தம் பசித்துன்பம் நீங்கி, எல்லாப் பக்கங்களிலும்
கரிய தும்பிகள் மலர்களில் மொய்த்துக்கொண்டிருக்க எதிர்கொண்டுவந்த இளவேனிற்காலத்தில்,
தியுல் இன்றி நான் இரவைக் கழிக்க, நீர்நிலைகளில் இனிமையாக நீர்விளையாட்டு ஆடி
மயிலின் தன்மையுள்ள பரத்தையரின் நறுமணத்தை நுகர்ந்துகொண்டு நம்மை மறந்திருப்பாரோ -
வெயில் ஒளி நுழையமுடியாத விரிந்த மலர்கள் உள்ள குளிர்ந்த சோலையில்
குயில்கள் கூவிக் களித்திருக்கும் இன்பமான பொழுது என்று அவரிடம் கூறுவார் இருந்தால்?
நள்ளிரவிலும் நான் துயர்ப்பட்டு வருந்த, பருத்த அழகிய அணை போன்ற மென்மையான தோள்களும்

மான் போன்ற பார்வையும் கொண்ட பரத்தையரோடு கூடி நம்மை மறந்திருப்பாரோ -
குன்றாத புகழையுடைய கூடல்மா நகரில் அரும்புகள் மலரும் நறிய முல்லைப் பூக்களில்
தேனீக்கள் களிப்புடன் ஆரவாரிக்கும் இன்பமான பொழுது என்று அவரிடம் தெளிவுபடுத்துவார் இருந்தால்?
அவரை அடைவதற்குரிய நான் இங்கே அழகிழந்து வாட, காமன் விழாவில்
சிறந்த அணிகலன் அணிந்த பரத்தையரோடு விளையாடி மகிழ்ந்திருப்பாரோ -
பெறுவதற்கரிய இனிய இளவேனிற்காலத்தில் ஒளிவிடும் பூங்கொத்துக்கள் நிறைந்த மணல்மேடுகளைச் சுற்றி
நீரோடையாய் ஓடுகிறது வையைநீர் என்று அவரிடம் உரைப்பவர் இருந்தால்?
என்று கூறி,
தணியாத பிரிவுத்துயரத்தில் அழுந்திக்கிடக்கும் அந்தப் பேரழகி தன் அழகை மீண்டும் பெற
உன் அழகு ததும்பும் நீண்ட தேரினை ஊரை நோக்கி ஓட்டுவாயாக, பணிந்து உன்

அழகிய கழல்களை அணிந்த கால்களைப் பணியாத
அச்சங்கொண்ட பகைவரைப் போன்று நடுங்கித் துடிக்கிறாள் பெரிதும்.

#31
முன்பு பெருகி வந்த வெள்ளம் வற்றிப்போய் வாய்க்காலளவாய் மாறி, கலங்கல் தெளிந்து, அழகுடன்
நெடிய குளங்களின் அயல்புறமெல்லாம் நுண்மணல் படிந்திருக்க, அம் மணலின்
அறல் மறையும்படி, கோலம்செய்வன போல் ஈங்கையின் வாடிய பூக்கள் கழன்று கீழே விழ,
பிரிந்தவரின் நெற்றியைப் போல் பூத்த பீர்க்கம் பூக்கள் மறைந்துபோக, காதலரைக்
கூடிக்களித்த மகளிரின் முகம் போல பொய்கையானது பூக்களைப் புதிதாய்த் தோற்றுவிக்க,
மெய்யை நடுக்கும் பின்பனிக்காலப் பனியுடன், முன்பனிக்கால வாடையும் சேர்ந்து
நம்மைச் செயலிழக்கும் நிலைக்குத் தள்ள, நெஞ்சத்தைக் கலக்கும் இளவேனில் இது,
தப்பாமல் வருவேன் என்று, அழகிய அணிகலன்களை அணிந்தவளே! நம்மைச் சேர்ந்தவர் உரைத்துச் சென்ற காலம்;
படைகள் ஒன்றோடொன்று மோத, பகைவரை வென்று, அவரின் நாட்டைக் கைப்பற்றி மீளும் தலைவர்

அசைந்தாடிவரும் களிற்றின்மேல் வரும் அழகைக் காண விடுமோ,
பயன் மிக்க திங்களின் பல கதிர்கள் பாலைப் போல் பொழியும் இரவில்
என் ஒளிவிடும் அணிகலன்களும் சில்லிட்டுப்போகும்படி குளிர்ச்சியாக உலா வரும் இந்த வாடை?
தன் முயற்சி சிறக்க வென்று, அழகிய நல்ல குதிரையின் மேலேறி
தன் வாள் திறத்தால் வெற்றியை ஈட்டிவரும் நம் தலைவரின் வனப்பினைக் காண விடுமோ,
நீண்ட கரும்பில் உயர்ந்து நிற்கும் பூவின் நிறம் வாடிப்போக, தூறிக்கொண்டு
தோள்கள் நடுங்கி மார்பில் குறுக்காக அணைத்துக்கொள்ள தூவுகின்ற இந்தத் தூறல்?
பகைவரை வென்று, அவரின் திறைப்பொருளைக் கைக்கொண்டு, பாய்ந்துவரும் திண்ணிய தேரில் வருபவரின்
பல்வகையான தலைமைச் சிறப்பின் அழகை நாம் காண விடுமோ,
புகையைப் போல் புதரைச் சுழ்ந்து, பூவாய் அழகிய கள் பொதிந்திருக்காத

முகை போன்ற வெள்ளிய பற்களின் முனை ஒன்றோடொன்று அடித்துக்கொள்ளும்படி சூழ்ந்துகொண்ட கடும் பனி?
என்று
வீணான சொற்களை வழங்காதே! ஒளிவிடும் அணிகலன்களை அணிந்தவளே! வருந்துவாள் இவள் என்று
தாம் குறித்த நாளின் எல்லையை எண்ணிப்பார்த்து, தாம் சொல்லியது பொய்யாகிப்போகாமல்
வீரம் மிக்க வேல் படையையுடையவர் புகுந்துவிட்டார்
நீண்டு உயர்ந்த மாடங்களைக் கொண்ட கூடல்நகரின் வாயிலில் தம் நெடிய கொடியை உயர்த்திக்கொண்டு.

#32
கத்தரிக்கோலால் இடையிடையே வெட்டப்பட்ட கார்மேகத்தின் அழகினைப் பெற்ற கூந்தலைப் போல்
அழுக்குகள் இன்றி விளங்கிய உலர்ந்த மணல் அது, அம் மணலை
மெல்லிதாகப் பிடித்துவிட்டதைப் போன்று கருமணல் ஒளிர, அதன் மேல், நீண்ட கூந்தலில் சூடிய
அழகிய அணிகலன்களை நடுவிலிட்டுச் செய்த பொன்னாலான அழகிய தலைமாலை போல
கட்டுவிட்டு மலர்ந்த வேங்கையின் விரிந்த பூக்கள் உதிர்ந்து மணம் பரப்ப,
தெளிந்த நீராலும், தூய முழுமதி நாளாலும் அழகுபெற,
பிள்ளைபெற்றவள் மேனியில் காணப்படும் தேமல் போல் பளபளப்பான தளிரோடும்,
சான்றோரின் அடக்கத்தைப் போன்று, அரும்புகளை மலரவிடாமல் அடக்கிவைத்திருக்கும் கிளைகளோடும்,
இசைவல்லார் இசைக்கும் இனிய யாழிசை போன்று வண்டுகள் ஒலிக்கும் புதர்களோடும்,

நல்ல கூத்தாடுபவரின் ஆட்டம் போன்று நயமாக ஆடும் மலர்க்கொடிகளோடும்,
செல்வம் நிலையாது என்று உணர்ந்தவரின் ஈகையைப் போன்று பூங்கொத்துக்களைச் சொரியும் மரங்களோடும்,
காதலனும் காதலியும் தழுவிக்கிடப்பதைப் போன்று பின்னிக்கிடக்கும் கொடிகளோடும், வருகின்ற இளவேனிலே!
உன்னை விரும்புபவருக்கு நீ மிகவும் நல்லவள்! எம்மைப் போல
பிரிவினால் பசலை பாய்ந்தவரின் துன்பமாகிய நோயைத் தனது பகையாகக் கொண்டு அதைத் தணிவித்து, எம்
இன் உயிரை மீட்டுத்தரும் மருந்தாகி, 'தழுவிக்கிடக்கும்
காதலரின் பற்களைப் போன்று குளிர்ந்த அருவியருகே பூத்த நறிய முல்லையின்
மலரும் நிலையிலுள்ள மொட்டுக்களை நிறைய அணிந்துகொள்ளுங்கள், மணங்கமழும் கூந்தலில்' என்கிற
தூதினைச் சுமந்து வந்திருக்கிறது அந்த இளவேனில், தோழியே!
துயர் தீர்ந்த இனிய மொழிகளோடு ஏற்பாடுசெய்வோம் விருந்துக்கு.

#33
பெருமிதம் நிறைந்த இந்த உலகத்தின் சிறந்த அழகைக் காண்பதற்காக
ஆறு கண்விழித்துப் பார்ப்பதைப் போல, குளங்கள் நிறைந்து மலர்களால் அழகுபெற,
பளிங்கு மணி போன்ற கண்ணாடிக்குள் பவளத்தைப் பதித்துவைத்ததைப் போல்,
முறுக்கு அவிழ்ந்த முருக்க மரத்தின் இதழ்கள் அழகிய குளத்தில் காம்பவிழ்ந்து உதிர,
தெளிந்த குளத்து நீருக்குள் தெரியும் பூக்களின் உருவத்தைக் கண்டு, அவற்றைச் சுற்றி வண்டுகள் ஒலியெழுப்ப,
மணிமணியான அரும்புகள் மலர்ந்து மரத்தையெல்லாம் மலர்களால் வேய்ந்துநிற்க,
காதலர்கள் கூடிக்களித்தவராய், தழுவிய கைகளை நெகிழவிடாமல் இருக்க,
மலர்களில் மகரந்தங்களை மலர்விக்கும் இளவேனில் வந்துவிட்டது! இன்னும் வரவில்லை, நம்முடைய,
மலர்போல் அழகுவாய்ந்த மைதீட்டிய கண்கள் புலம்பி அழுமாறு நம்மைப் பிரிந்து சென்றவர்;

செந்தழல் போன்ற செந்நிறப் பூக்களை இலவமரங்கள் பூக்கவும்,
நெற்பொரி போன்ற வெண்ணிறப்பூக்களைப் புங்கமரங்கள் உதிர்க்கவும்,
கோங்கத்தின் புதிய மலர்கள் பொன் துகளைப் போன்று மகரந்தங்களை உதிர்க்கவும்,
தனித்திருப்பாரை வெளியே தள்ளி, எள்ளி நகையாடி, வெறுப்புடன் வந்து
கைதட்டிச் சிரிப்பது போல் வந்தது இளவேனில்; அழிந்துவிடுமோ என் அழகிய பெண்மைநலம் என்று
அதனைப் போர்ப்பது போலும் என் மேனியில் படர்கிறது பசப்பு;
இதுகாறும் நொந்திருந்த மரக்கிளைகள் இப்போது நம்மைப்பார்த்துச் சிரிப்பது போல் மலர்களால் நிறைந்துள்ளன,
வருத்ததுடன் அதை நினைந்து உடைந்து சிதறுவது போல் ஆனது என் நெஞ்சம்; என் நிலைகண்டு, நகையாடிக்
கூட்டமாய்ச் சேர்ந்து ஆடுகின்றன போலும் மயில்கள், கையிலிருந்து
கழன்று கீழே விழுவது போன்றிருக்கின்றன வளையல்கள், என் கண்ணிலிருந்து ஒழுகுவது போல்

ஒழுகுகின்ற நீர் ஆற்றில் ஓடுகின்ற இந்த இளவேனில் பருவத்திலும் அவர் வரவில்லை,
இன்னும் மிகும் போலும் இந்தக் காதல்நோய்!
யாழ் நரம்பின் இனிய இசையைத் தாளம் கெடாதவாறு நிறுத்த உதவும் குழலோசை போல்
இனிதாய் இசைக்கும் தேனீக்களோடு தும்பிகளும் ஒலித்தபடியே தேனை அருந்த,
ஒரு தூதுச் செய்தியையாவது அவர் அனுப்பவில்லை, நம்மைத் துறந்துவிடுவாரோ? நாம் நொந்துபோகுமாறு
கரிய குயிலும் கானம் பாடுகிறதே! அந்தோ!
என்று கூறி,
மனம் வேறுபட்டு, நீ உன்னை இகழும் குயிலையும், அவரையும் கோபிக்காதே!
நீல மலர் போன்று மைதீட்டிய கண்களையுடையவளே! அள்ளியெடுத்த கூந்தலை அப்படியே விட்டுவிட்டு நாம் எழ,
குறித்து சென்ற காலத்திற்குள், தாம் கூறியது பொய்த்துப்போகாமல்,

மாலை தொங்கும் அகன்ற மார்பினையுடைய அவர் விரைந்து வருகிறார்,
காற்றைப் போன்று கடுமையாய் விரையும் தன் திண்ணிய தேரினைச் செலுத்திக்கொண்டு.

#34
பெருமையையுடைய உயிர்களெல்லாம் மகிழ்ச்சியுற, இந்த அகன்ற உலகத்தைப் பாதுகாத்து,
பெரும் வெள்ளமாய்ப் பாய்கின்ற நீரை எங்கும் பரப்பி உயிர்களை வாழச்செய்து, நீர் வற்றிய பின்
சிறிதளவு நீருடன் அறல்பட்டு ஒழுகினாற்போல் ஓடும்போது, அந்த அகன்ற ஆறு அழகுபெற,
முன்னர் ஓர் உதவியைத் தமக்குச் செய்து முனைப்புடன் செயலாற்றியர் கெட்டுப்போன காலத்தில்
பின்னர் ஓர் உதவியை அவருக்குத் திருப்பிச் செய்யும் பெரும் பண்பாளரைப் போன்று,
நீரூட்டி வளர்த்த ஆற்றின்மீது பல மலர்களை மரங்கள் தூவிவிட, தேனீக்கள் பாட, வண்டுகள் ஒலியெழுப்ப,
இனிமை பொருந்தின இளவேனில் வந்துவிட்ட பொழுதில்,
மலர்ந்த காஞ்சிமரப் பூக்களில் மகரந்தங்களைக் குடைந்து கரிய குயில்கள் குரலெடுத்துக் கூவும்போதும்,
எம்மைப் பிரிந்து செல்ல அஞ்சாதாவர் எமக்கிழைத்த தீமையை மறைத்துக்கொண்டேன், அப்படி மறைத்தாலும்

பொய்ச்சாட்சி சொன்னவன் கீழே இருந்தால் அந்த மரம் பட்டுப்போவதைப் போல, அழகெல்லாம் வாடி
உள்ளே தீயை மூட்டியதைப் போல் என் நெஞ்சம் சுடுகின்றதே! நான் என்ன செய்வேன்?
மலர்களின் பாரம் தாங்கமாட்டாத மரக்கிளைகள் மீது வண்டினம் வந்து மொய்க்கின்றபோதும்,
பிரிவு என்ற உறுதிப்பாட்டில் தளராதவர் எமக்கிழைத்த தீமையை மறைத்துக்கொண்டேன், அப்படி மறைத்தாலும்
நல்லாட்சியினின்றும் நழுவிப்போன மன்னவனின் கீழுள்ள குடிமக்கள் போலக் கலங்கி,
பொறுமை இழந்து கண்ணீரை உகுக்கின்றனவே கண்கள், நான் என்ன செய்வேன்?
மொட்டுவிட்டு மலர்ந்திருக்கும் பூஞ்சினைகளில் சுரும்புகள் யாழிசையைப் போல் இசைக்கின்றபோதும் 
பொருளீட்டம் என்ற கொள்கையில் தளராதவர் இழைத்த தீமையை மறைத்துக்கொண்டேன், அப்படி மறைத்தாலும்
தன் சுற்றத்தார் அழிந்துபோக அவர் அழிவின்மீது வாழ்பவனின் செல்வம் தேய்ந்து அழிவது போல, பொலிவிழந்து
தோள்வளைகள் நிற்காமல் கழன்று விழுகின்றன என் தோள்களினின்றும், நான் என்ன செய்வேன்?

என்று கூறி,
உன்னுள்ளே இருக்கும் நோயை உரைக்கின்றாய், பெண்ணே! நாம்
எண்ணிக்கொண்டிருக்கும் நாள்வரையில் இல்லாமல், காதலர்
குதிரையைப் பூட்டிக்கொண்டு வந்துவிட்டார்,
கண்ணுக்குற்ற வருத்தத்தைக் கைகள் விரைந்து சென்று துடைப்பது போல்.

#35
சோம்பல் இல்லாதவனின் செல்வத்தைப் போல் மரங்கள் தழைத்துச் சிறக்க, அந்தச் செல்வத்தை
அவனால் படியளக்கப்பட்டார் உண்பதுபோல், பலவான கிளைகளிலும் வண்டுகள் ஆரவாரிக்க,
மாமை நிறத்தவளின் மேனியைப் போல தளிர்கள் துளிர்க்க, அந்த மேனியில்
பரவிக்கிடக்கும் அழகுத்தேமல் போல் தளிர்களின் மீது பூந்தாதுகள் உதிர்ந்துகிடக்க,
மலர்கள் நிறைந்த பூஞ்சோலையை அடுத்துப் பளிங்கு போன்ற நீரைக்கொண்ட குளங்கள் நிறைந்திருக்க,
மலர்கள் பரவிக்கிடக்கும் நீர்த்துறைகளை அடுத்து நுண்மணலை அரித்துக்கொண்டு சிறிதுநீர் ஓடிக்கொண்டிருக்க,
எள்ளி நகைப்பது போல் மிகுதியாகக் கூவுகின்ற குயிலின் குரலைக் கேட்டு வருந்தியழியும் நெஞ்சத்தால்
நம்மைப் பிரிந்து மறந்து வாழ்கிறாரே அவர் என்று துயரம் கொள்ளவேண்டாம், பெண்ணே, நீ!
வண்ணமயமான வண்டுகள் ஓயாமல் ஒலித்துக்கொண்டு, வையையின் நீண்டுயர்ந்த மணல்மேட்டில்

குளிர்ச்சியாகவும் ஒழுங்குபடவும் படர்ந்திருக்கின்ற நறிய முல்லையின் தேனை உண்ணும் காலம் அன்றோ?
கண்ணுக்குள் நிற்காத அளவு நீர் பெருக, அவரைத் தழுவியபின் நாம் அவரைச் செல்ல விடுத்தபோது,
ஒளிபடைத்த நெற்றியையுடையவளே! நம்மிடம் அவர் வருவதாகச் சொல்லிச் சென்றது;
பெருகிய நீர்நடுவேயுள்ள ஆற்றுமேட்டில், தாம் மகிழும் துணையான எம்முடன் கூடிக்கலந்து, அவர்
வில்லவனான காமன் திருவிழாவில் விளையாடும் காலம் அன்றோ?
வெற்றிபெறட்டும் நீர் மேற்கொண்ட வினை என்று தொழுது நாம் அவரைச் செல்ல விடுத்தபோது,
ஒளிரும் அணிகலன்களை அணிந்தவளே! நம்மிடம் அவர் வருவதாகச் சொல்லிச் சென்றது;
நிலத்தின் பெருமை உலகோர் நாவில் நடமாடும் நீண்ட மாடங்களைக் கொண்ட கூடல்மாநகரத்தவர்
புலவர் நாவில் பிறந்த பாடல்களைப் புதிதுபுதிதாய்க் கேட்டு இன்புறும் காலம் அன்றோ?
பலவற்றையும் நினைந்த நெஞ்சினளாய், துயரத்துடன் நாம் அவரைச் செல்ல விடுத்தபோது,

சுடர்விடும் அணிகலன்களை அணிந்தவளே! நம்மிடம் அவர் வருவதாகச் சொல்லிச் சென்றது;
என்று பலகூறி,
நினைத்து நினைத்து நெஞ்சுடைந்துபோகும் உன் பிரிவுத்துன்பத்தைத் தீர்க்கும் மருந்தாகி
நாம் கடிந்துகூறத் தேவையற்ற காதலர் வந்துசேர்ந்தார்! பறவை பறப்பதைப் போன்ற வேகத்தில் செல்கின்ற
அழகிய விரைவான திண்ணிய தேரையுடைய பாண்டியனின்
மாறாத வாய்ச்சொல்லைபோன்று குறித்தநாளுக்குள்.

#36
கொடிய ஆற்றல் வாய்ந்த கலப்பையை உடைய பலதேவன் மாலை அணிந்தது போல் வெண்கடம்பமரத்தின்
நீண்டுயர்ந்த உச்சியில் சூழ அமர்ந்திருக்கும் மயில்கள் ஆரவாரிக்கும் அழகு உண்டாகவும்,
மீட்டிய யாழின் நரம்பு இசைப்பது போல வண்டுகளுடன் சுரும்புகளும் பேரொலியெழுப்பவும்,
வளையணிந்த விறலியின் வாய்ப்பாட்டு போல தும்பிகள் மலரைச் சுற்றி ரீங்காரிக்கவும்,
இன்னிசைக் கருவிகள் ஒன்றுகூடி இசை எழுப்பியது போல எல்லாப்பக்கங்களிலும் இம்மென்ற ஓசையுடன்
குளத்தின் அருகிலுள்ள பூஞ்சோலையில் மணமிக்க மலர்களில் தேனீக்கள் மொய்க்கவும்,
மலர்களை ஆயும் வண்டுகளை இடங்கள்தோறும் வாருங்கள் என்று அழைப்பது போல் மரங்கள் மலர்ந்திருக்கவும்,
கரிய குயில்கள் கூவவும், பெரிய நீர்த்துறைகள் அழகுபெறவும்,
இளவேனிற்பருவத்தில் வேனில்விழாக் கொண்டாடுதற்குரிய

சிறந்த காலமும் வந்துவிட்டது!
வரவில்லையே தோழி! நம் காதலர்!
கொஞ்சங்கொஞ்சமாய்ப் பரவி முழுவதும் பசந்துவிட்டது நெற்றி;
கொஞ்சங்கொஞ்சமாய் மெலிந்து முழுவதும் தளர்ந்துவிட்டது தோள்;
சிறுத்தோடும் நீர் மிகுதியாய் ஓடும் பொழுதில், சூடாகக்
கண்ணீர் ஒழுக்கைச் சொரியத்தொடங்கிவிட்டது என் கண்;
மலையிடையே செல்லும் வழிகளைக் கடந்து சென்றவர் திரும்பி வரவேண்டும் என விரும்பி, ஏக்கத்தோடு
முலைகளினிடையே கொதிக்கிறது என் நெஞ்சு;
என் மீது கொண்ட காதலைக் கைவிட்டுவிட்டாரோ? வராவிட்டாலும், வெறும்
செய்தியையும் அனுப்ப மறந்துவிட்டாரோ? நாம் நொந்துபோயிருப்பதற்கு

அவரின் காதல் இன்பத்தைக் காணக்கொடுத்து வைப்போமோ?
நம்மைவிட்டுப் பிரிந்தவர் போன இடத்திலேயே தங்கிவிடுவாரோ? எப்படியோ,
நீண்டநாள் இவ்வாறு பிரிந்திருத்தல் உலகத்துக்குவேண்டுமானால் ஒத்துவரலாம், உன்
கத்தரிக்கோலால் ஒழுங்காக வெட்டிவிடப்பட்ட, ஒளிவிடும் நெய்ப்புள்ள கூந்தல்
தன் நாள் அலங்காரத்தையும் சிதைத்துவிடுமே என்று, மிக்க விருப்பத்துடன்
கேள்விஞானமுள்ள அந்தணர் செய்யும்
வேள்விப் புகையைப் போல் பெருமூச்செறிகிறது என் நெஞ்சம்.
* இரண்டாவது குறிஞ்சிக்கலி

#37
குளத்திலுள்ள நீல மலரைப் போன்ற மைதீட்டிய கண்களையுடையவளே! இதைக் கேள்! ஓர் இளைஞன்
புலியின் காலடித் தடங்களை ஆராய்வான் போல, நன்றாக இறுக்கிக் கட்டிய
தலைமாலையினை அணிந்து, ஒரு வில்லுடன் வருவான், என்னை நோக்கி
முகக்குறிப்பால் ஏதோ கேட்பதை அன்றி, தான் கொண்டுள்ள
காதலை என்னிடம் சொல்லாமல் சென்றுவிடுவான், இவ்வாறு பலநாளும் நடந்தது,
அவனை எண்ணி உறக்கம் கொள்ளேன், அதனால் துன்பமடைந்து,
அவனோடு எவ்விதத் தொடர்பும் இல்லாத நானும் துயரத்தில் உழன்றேன், அந்த இடத்தில்
என் முகத்தைப் பார்த்து ஒரு மொழியும் கூறுவதற்கு துணியவில்லை அவன் என்றால், 
பெண்ணாகிவிட்ட நாமாகப் பேசுவது நமக்கு ஆகாது, இவ்வாறாக

எனது காதலை அவன் அறியாமலேபோய்விடுமோ என்று ஒருநாள் என்
தோள்கள் மெலிந்துவிட்ட துயரத்தால், துணிவுகொண்டு, ஒரு
நாணமற்ற செயலைச் செய்தேன், நறிய நுதலை உடையவளே! தினைப்புனத்தில்
கூட்டமான கிளிகளை ஓட்டிப் பாதுகாக்கும் புனத்துக்குச் சற்று வெளியே
ஊசலில் ஆடிக்கொண்டிருக்க, ஒரு சமயம் அங்கு வந்தவனை,
"ஐயனே! சிறிது என்னை வேகமாக ஆட்டிவிடு" என்று கூற,
"நல்லது பெண்ணே!" என்று அவன் ஊஞ்சலை வேகமாக ஆட்டிவிட, என் கை நெகிழ்ந்து
பொய்யாக விழுந்தேன் அவன் மார்பின் மேல், அதனை உண்மையென்று கருதி
விரைவாக அவன் என்னைத் தூக்கியவனாய்த் தன் கைகளில் இருத்திக்கொண்டான், அவன் மேல்
ஒன்றும் அறியாதவள் போல் கிடந்தேன், அந்த நேரத்தில்

உண்மையை அறிந்து மயக்கம் தெளிந்து எழுந்திருந்தால், விரைவாக,
"ஒளிவிடும் குழை அணிந்தவளே! எழுந்து செல்" என்று கூறி என்னை அனுப்பிவிடும் பண்புள்ள
நாகரிகம் உடையவன் அவன்.

#38
இமையமலையாகிய வில்லை வளைத்த, கங்கை தங்கும் சடைமுடியோனாகிய சிவன்
உமையவளோடு அமர்ந்து உயர்ந்த மலையில் இருக்கும்போது,
பத்துத் தலைகளைக் கொண்ட அரக்கர் கோமானாகிய இராவணன்
தோள்வளை விளங்கும் பெரிய கையைக் கீழே நுழைத்து அந்த மலையைப்
பெயர்த்து எடுக்க முடியாமல் மனம் வருந்தியதைப் போல,
மிகப்பெரிய புலியின் நிறத்தைப் போன்று பூத்த வேங்கையைச்
சினங்கொண்டு அந்த மரத்தின் அடிப்பகுதியைக் குத்திய மதயானை
நீண்ட கரிய மலைப்பிளவுகளில் எதிரொலிக்கும்படியாக கூக்குரலிட்டுத் தன்
கொம்புகளைத் திரும்ப உருவிக்கொள்ள முடியாமல் வருந்துகின்ற நாட்டைச் சேர்ந்தவனே! கேட்பாயாக!

கடப்பதற்கு அரிய வழி என்று கருதாமல், கருநாகங்களுக்கும் அஞ்சாமல் நீ இவளைக் காண வந்தபோது,
நீர் இல்லாத நிலத்தில் பயிர் வாடுவதுபோல் வாடிக்கிடந்தவள், விடியற்காலையில்
மழையைப் பெற்ற நிலத்தைப் போல வனப்புறுவாள்; அந்த வனப்பு
இவளை விட்டு அகன்று போகாமல் காப்பதற்கு ஒரு வழி இருந்தால் அதை உரைப்பாயாக!
இருள் நிறைந்த வழியென்று கருதாமல், நீ இரவென்றும் எண்ணி அஞ்சாமல் வந்தபோது
பொருள் இல்லாதவனின் வறுமையைப் போல் பொலிவிழந்துகிடந்தவள், விடியற்காலையில்
அருள் உள்ளம் கொண்டவனின் செல்வம் நாளும் வளர்வது போல் அழகு பெற்றாள், அந்த அழகு
ஏன் வந்தது என்று எல்லாரும் அறிந்துகொள்ளாமல் காப்பதற்கு ஒரு வழி இருந்தால் அதை உரைப்பாயாக!
வழியில் கொள்ளையர்கள் கொடுஞ்செயலினின்றும் மாறவில்லை என்று கருதாமல், நீ மலைவெளியில் வந்தபோது
அறநெறியைக் கைவிட்டவன் முதுமையில் சீரழிவது போல், மனம் அழிந்துபோய்க் கிடந்தவள், விடியற்காலையில்

நல்லொழுக்கமுடையவனின் செல்வம் போல் நாளும் சீர்பெற்றுச் சிறப்புறுவாள், அந்தச் சீரினால்
அயலார் கூறும் இழிப்புரைகளை மாற்றத்தக்க ஒரு வழி இருந்தால் அதை உரைப்பாயாக,
என்று
நீ படுகின்ற பாட்டை நான் கூறக்கேட்டு
வருகின்றார், தோழியே! நல்ல மலைநாட்டைச் சேர்ந்தவர்!
வேங்கை மரங்கள் பூக்கின்ற நல்ல நாளை எதிர்நோக்கியிருந்து,
பருத்து இறங்குகின்ற இந்தப் பெருத்த தோள்காரியை மணமுடித்துச் செல்வதற்கு.

#39
"விருப்பம் தரும் வகையில் வேகமாக வரும் வெள்ளத்தில் எங்களோடு நீராடிக்கொண்டிருந்தவள்
தன் தாமரை போன்ற கண்களை மூடியவாறு, அச்சங்கொண்டு கால்கள் தளர்ந்ததினால் வெள்ளத்தோடு செல்ல,
ஓர் இளைஞன், தன் நீண்ட சுரபுன்னையின் நறிய குளிர்ந்த மாலை அசைந்தாடப் பாய்ந்து, இரக்கத்தோடு
பூண் அணிந்த இவளின் மார்பைத் தன் மார்போடு அணைத்து வந்து கரைசேர்த்தான்; அவனது அகன்ற மார்பினை
இவளது எழுகின்ற முலைகள் தழுவின என்பதனால், என் தோழி
பெய்தற்கரிய மழை பெய்ய விரும்பினால் பெய்விக்கும் தெய்வக் கற்பினாள் ஆகிவிட்டாள்;
அவன் யாரெனில்,
தினைப்புனத்துக் காவற்பரணில் இருக்கும் மகளிர் எழுப்பும் நறுமணப்புகையால் மறைக்கப்பட்டவாறு செல்லும்
வானத்தில் நகர்கின்ற திங்கள், மலையுச்சியை நெருங்க, அதனை, அந்த மலையுச்சியில் கட்டிய

தேன்கூடு என்று எண்ணி அதற்காக ஏணியைச் செய்துவைத்திருக்கும்,
காட்டுப்புற அகன்ற நாட்டுக்குச் சொந்தக்காரனின் மகன்;
சிறுகுடியில் வாழும் மக்களே! சிறுகுடியில் வாழும் மக்களே!
வள்ளிக்கொடிகள் கிழங்கு வைக்கமாட்டா! மலையின் மேல் தேன்கூடுகள் கட்டப்பெறமாட்டா!
தினைப் புனங்களும் கதிர்களை வளைத்து ஈனமாட்டா! இந்த மலைவாழ் மக்கள்
இவளுடைய காதலை மறுக்கும் அறமில்லாத செயல்களைச் செய்து நடப்பதால்!
காந்தள் பூவின் மணம் கமழும், கண்ணைப் பறிக்கின்ற அழகுடைய பெரிய மலைச்சரிவில்
வளைந்திருக்கும் மூங்கில் போன்ற மென்மையான தோள்களையுடைய இளம் குறப்பெண்கள்,
தாம் துரோகம் செய்யாத கணவரைத் தொழுது எழும் பண்பினராதலால், அவருடைய கணவன்மாரும்
தாம் குறிதவறார் வேட்டையில் தாம் எறிந்த கோலில்,

என்று
நான் உண்மையை உரைத்ததைக் கேட்டு, நெறிப்பட
நம் தந்தைக்கும், தமையர்க்கும் எடுத்துரைத்தாள் தாய்;
அவரும் அம்புகளைத் தெரிந்தெடுத்துப் பார்ப்பார், வில்லைப் பார்ப்பார், கண் சிவந்து
ஒரு பகல் முழுதும் சினங்கொண்டு, பின்பு தணிந்து
இருவர் மீதும் ஒரு குற்றமும் இல்லை என்று
மனம் வருந்தித் தம் தலையை ஆட்டி ஒப்புதலைத் தெரிவித்தனர்;
தெரிந்தெடுத்த அணிகலன்களை அணிந்தவளே! நீயும் உன் காதலனும் ஒன்றுசேர்வதற்காக,
மலையில் வாழும் தெய்வமான முருகன் மனம் மகிழ, மனமகிழ்ச்சியுடன்
குரவைக் கூத்தைத் தழுவியவாறு நாங்கள் ஆட, அந்தக் குரவையில்

கொண்டுநிலை என்ற தலைவன், தலைவி சேர்க்கைக்கான பாடலைப் பாடுவாயாக",
"நல்லவளே!
திருமணத்துக்குரிய நல்ல நாள் கூடிவரும் வரையில், நமது சுற்றத்தார், இந்த மலையில்,
முதலில் கோபங்கொண்ட தம் செயலுக்காக நாணி, அதனைத் தாங்கி வாழ என்ன தவம் செய்தார்களோ?
தினைப்புனத்தின் வேங்கை மரம் தன் பூந்தாதுக்களை உதிர்க்கும் பொன் போன்ற பாறை உள்ள முற்றத்தில்
பலர் அறிய காதலனுடன் சேர்ந்திருப்பது நடக்கும் அல்லவா!
இவ்வாறு நனவிலேயே காதலுடன் சேர்ந்திருப்பது நடந்துவிடுவதால், இனிமேல்
கனவில் மட்டுமே அவருடன் களித்திருக்கும் நிலையைக் கைவிட்டுவிடுவேன் அல்லவா!"
"விண்ணைத் தொடுகின்ற மலைநாட்டைச் சேர்ந்தவனும், நீயும், திருமணத்தின்போது
முன்னமே ஒருவரையொருவர் பார்த்தறியாதவர் போல் நடந்துகொள்வீர்களோ?

முன்னமே ஒருவரையொருவர் பார்த்தறியாதவர் போல் நீங்கள் நடந்துகொள்ள, அந்தப் பழைய நட்பைப்
பார்த்தறியாதவள் போல் நான் மறைத்துக்கொள்வேனோ?
மேகம் தவழும் மலைநாட்டைச் சேர்ந்தவனின் அந்த மண விழாவின் அழகினைக் காணாமல்
வெட்கத்தால் தம் கண்களைக் கைகளால் மூடிக்கொள்வோரின் கண்களும் கண்களோ?"
"அதற்கென்ன? உன்னுடைய கண்களால் பார்த்துவிட்டுப்போகிறேன் நான்!"
"நெய்தல் மலர் போன்ற மைதீட்டிய கண்களான உன் கண்களாக ஆகட்டும் என் கண்கள்
என்று மாறி மாறிப் பாடி முருகனை நாம் வழிபடவே
நூல்நெறி அறிந்தவனும், நன்னாளைக் குறித்து, அது தப்புதலை அறியாதவனுமாகிய கணியனை முன் நிறுத்தி,
தகை மிக்கவரும், மணவினைகளின் வகையை அறிந்தவருமான சான்றோர் சூழ்ந்திருக்க,
மூங்கிலைப் போன்ற மென்மையான தோள்களின் பசலையும், ஊரார் பழிச்சொல்லும்,

பொய்யாகக் கனவில் காணும் சந்திப்புகளும் எல்லாம் ஒருசேர நீங்கிப்போகும்படியாக,
மிக உயர்ந்த மலைக்கு உரியவன் பெண்கேட்டு வந்தான்;
உன் பூவின் அழகைக் கொண்ட மைதீட்டிய கண்கள் பொலிவுபெறுக இனியே!"

#40
"ஒருவரையொருவர் அழைத்துக்கொண்டு பாட்டுக்கட்டிப் பாடுவோம்"; "தோழி! பொருத்தமான கண்களையும்
சிரிப்பு மொழியையும் கொண்ட மகளிர் நாணி நிற்கும் நிலையைப் போல
அழகு கொண்ட தினைப்புனத்தில் முற்றித் தாழ்ந்த தினைக் கதிரை உருவி,
அரும்பி வளர்ந்த சந்தன மரத்தால் செய்த உரலில் இட்டு, முத்துக்கள் நிறைந்த யானைக் கொம்பினால் செய்த
சிறப்புப் பொருந்திய உலக்கைகளை மாற்றி மாற்றிக் குற்றி,
எந்த மருந்தாலும் ஆற்றமுடியாத காதல் நோயைச் செய்தவனின் பயன் தருகின்ற மலையை வாழ்த்தி
ஒருவரையொருவர் அழைத்துக்கொண்டு பாட்டுக்கட்டிப் பாடுவோம் நாம்";
"அழகிய நெற்றியும், அழகு செய்யப்பெற்ற கூந்தலும் அழகிய மூங்கில் போன்ற பருத்த மென்மையான தோள்களும்
மலர் மணம் கமழும் தலைமயிரையும் கொண்டவளே! நானும் ஒரு பாட்டு வாழ்த்திப்பாடுவேன்,

மூங்கில்கள் ஒலிக்கும் மலைப் பிளவுகள் கொண்ட அவனது மலையைப் பற்றிய பாட்டை நீ பின்னர் பாடு!
குறமகளிர் கைகூப்பி மலையைத் தொழுவதற்காக எடுத்த கைகளைப் போல்
உயர்ந்த தேனையுடைய கொத்துக்கள் அசையும் காந்தள் மலரில்
வைத்த தேன் ஒழுகும்படியாக அசைந்துகொண்டிருக்கும், தன் உற்றாரின்
வருத்தத்தைப் போக்குபவனுடைய மலை;
கற்றறிவு இல்லாத ஆண் குரங்கு ஒன்று, கூட்டமாகக் கூடியிருக்கும் சுற்றத்தாரிடம் சென்று
மெல்லிய விரல்களையுடைய மந்தியைப் பெண்கேட்டுத் தன் குறையைக் கூறும் தன்மையது,
தான் காதலித்த மங்கையரின் அழகை நுகர்ந்து பின்னர் பிரியும்போது அவர் அழகிழந்து போனால் அவரினும்
அதிகமாக வருந்தும் தலைவனுக்குரிய மலை;
முறுக்கு விரிந்த, காம்பு மறையும்படியாக நெருங்கி மலர்ந்த மலர்கள் செறிந்த தாழ்ந்த கிளையில்

தளிர் போன்ற அழகுடைய மேனியின் சிறப்பு வாடிப்போக எனக்கு நோயினைச் செய்தவனின்
ஏறமுடியாத மலையின் சரிவுகளைப் பழித்து ஒரு பாட்டுப் பாடுவோம்";
"விண்ணைத் தொடுகின்ற மலையினில் பந்து எறிந்து விளையாடிய சோர்வு தீரும்படியாக
குளிர்ச்சியாய் விழுகின்ற அருவியில் தேவ மகளிர் ஆடுகின்றனரே!
பெண்டிரின் பெண்மை நலனைத் துய்த்துவிட்டு, குளிர்ந்த மலைச்சாரலில் பூந்தாதுக்களை உண்ட
வண்டினைப்போல் துறந்து செல்கின்றவனின் மலையில்!";
"சோம்பியிருத்தலை அறியாத அழகிய ஆண்யானை, தான் விரும்பும் பெண்யானை கொண்ட
முதல் கருவுறுதலின் போதான மசக்கை நோய்க்கு, மிக்க விருப்பத்துடன் நெடிதாகக் கிளைத்த
இனிய கணுக்களைக் கொண்ட கரும்பின் கழையை வளைத்து முறிக்கும், தன்னைச் சேர்ந்தவரை
ஒருபொழுதும் நீங்கமாட்டேன் என்று கூறுகின்றவனின் மலை.

என்று நாம்
அவனுடைய மலையை நாம் பாட, அதனை விரும்பிக்கேட்டருளி,
உடல் பூரித்த உவகையனாய் வந்துவிட்டான்; தழுவத் தழுவ இன்பந்தரும்
உன்னுடைய மென்மையான முலைகளைக் கொண்ட மார்பு மிக்க அழகு பெறும்படியாக,
பண்பிற் சிறந்தவனான அந்த மலைநாட்டுக்குரியவன்!".

#41
"பாடுவோம்! வா! வாழ்க! தோழியே! வலிமை மிக்க களிற்றின்
கொம்பே உலக்கையாகக் கொண்டு, நல்ல சேம்பின் இலையே சுளகாகக் கொண்டு,
ஆடுகின்ற மூங்கிலின் நெல்லை, பாறை உரலுக்குள் இட்டு, இருவரும்
பாடுவோம்! வா! வாழ்க! தோழியே! நல்ல தோழியே! வந்து பாடு!"
"இடியை உமிழ்ந்தவாறு பேரொலி எழுப்பிக்கொண்டு பரவலாக மழைபெய்யும் நள்ளிரவில்,
கொடி விட்டவாறு குறைவான ஒளியில் மின்னல் ஏற்படுத்திய வெளிச்சத்தில்
தன் பிடியோடு புன்செய்நிலத்தில் மேயும் ஆண்யானை
கால்களை எடுத்துவைக்கும் நடமாட்டத்தைக் கேட்ட கானவன்
உயர்ந்த மலையின் ஆசினிப் பலா மரத்தில் கட்டிய காவற்பரணில் ஏறி

மிக்க விசையுடன் கவணையிலிருந்து கல்லை வீசியெறிதலால், அந்தக் கவண்கல்
செங்குத்தான பள்ளத்தின் ஓரத்திலிருந்த வேங்கை மரத்தின் ஒளிவிடும் பூக்களைச் சிதறி,
ஆசினிப் பலாவின் மென்மையான பழத்தில் கனிந்தவற்றை உதிர்த்துவிட்டு,
தேனைச் சேமித்துவைத்திருக்கும் தேன்கூட்டினைத் துளைத்துக்கொண்டு போய்,
நறிய பிஞ்சுகளைக் கொண்ட மாமரத்தின் பசிய கொத்துக்களை உலுக்கிவிட்டு,
குலைகுலையாகக் காய்த்துத்தொங்கும் வாழை மரத்தின் கொழுத்த இலைகளைக் கிழித்துக்கொண்டு,
இறுதியில் பலாவின் பழுத்த பழத்துக்குள் சென்று தங்கும் மலையைச் சேர்ந்த மலைநாட்டினனை
பாடுவோம்! வா! வாழ்க! தோழியே! நல்ல தோழியே! வந்து பாடு!"
"ஒளிரும் அருவியை உடையது! ஒளிரும் அருவியை உடையது!
மழைநீரால் ஒளிரும் அருவியை உடையது! தான் சொன்ன

சூளுரையைக் காக்காமல் அவற்றைப் பொய்யாக்கிவிட்டவனுடைய மலை!"
"பொய்யுரைக்கக்கூடியவனோ? பொய்யுரைக்கக்கூடியவனோ?
அஞ்சுவதைத் தவிருங்கள் என்று கூறிய மகளிரிடம் பொய்யுரைக்கக்கூடியவனோ?
குன்றுகள் பரந்துகிடக்கும் நல்ல நாட்டினனின் வாய்மையில் பொய் தோன்றுவது
திங்களுக்குள் தீ தோன்றியது போலாகும்;"
"இளம் மேகங்கள் உலவிக்கொண்டிருக்கும்! இளம் மேகங்கள் உலவிக்கொண்டிருக்கும்! 
இளம் மேகங்கள் எப்போதும் உலவிக்கொண்டிருக்கும்! என் முன்கையிலுள்ள
வளையல்கள் கழன்று விழும் வேளையிலும் வராமலிருப்பவனின் குன்றில்!"
"வராமல் இருந்துவிடுவானோ? வராமல் இருந்துவிடுவானோ? 
வராமல் இருந்துவிட மாட்டான்! அந்த மலை நாட்டினனின்

ஈரமான நெஞ்சத்தில் இப்படிப்பட்ட எண்ணங்கள் தோன்றுவது, நிழலில் இருக்கும் குளத்தில்
நீருக்குள் இருக்கும் குவளை நீரினால் வெந்துபோவதைப் போன்றது!"
"பச்சை மரகதம் போல் தோன்றுகிறது! பச்சை மரகதம் போல் தோன்றுகிறது!
நன்கு கழுவிய பச்சை மரகதம் போல் தோன்றுகிறது! என் மேனியைத்
தழுவக் கருதாமல் துறந்துவிட்டுச் சென்றவனின் மலை;"
"துறந்துவிட்டுச் செல்லமாட்டான்! துறந்துவிட்டுச் செல்லமாட்டான்! 
தொடர்ச்சியாகப் பல மலைகள் உள்ள மலைநாட்டினன் துறந்துவிட்டுச் செல்லமாட்டான்! 
அவன் காட்டும் தொடர்புக்குள் இத்தகைய கொடுமைகள் தோன்றும் என்பது, வானத்தில்
ஞாயிற்றுக்குள் இருள் தோன்றியதைப் போலாகும்;"
"இவ்வாறு நாம் பாட,

நல்லதே நடந்திருக்கிறது தோழி! நம் வள்ளைப்பாட்டுக்குள்
ஒன்றிப்போய் நாம் பாட, மறைந்து நின்று அதனைக் கேட்டு, மனமிரங்கி
மென்மையான தோள்களுக்குரிய தலைவனும் வந்துவிட்டான், உன் தந்தையும்
மணவினைகளுக்குரிய வேங்கை மரத்தின் கீழிருந்து
மணத்திற்கு இசைவு தந்தான் அந்த மலைநாட்டவனுக்கு!"

#42
"வீரங்கொண்ட பெரிய புலியுடனான தன் பழம் பகையைத் தீர்த்துக்கொண்ட
முறம் போன்ற காதுகளைக் கொண்ட யானை, தனக்கு முன்னுள்ள தழைகளை அருந்தி
ஒலிக்கின்ற வெண்மையான அருவிநீரின் ஓசையைக் கேட்டவாறு தூங்குகின்ற
அடர்ந்த பெரிய சோலையையுடைய நல்ல மலை நாட்டினைச் சேர்ந்தவன்
நம்மை மறந்துவிட்டான், அப்படி மறந்தாலும் இனி, தோழியே! நமக்குச்
சிறந்தோனாக இருக்கின்றான் என்பதை நாம் நன்கு உணர்ந்துள்ளோம், எனவே அவனுடைய சிறப்புக்களை,
கொல்லுகின்ற யானையின் கொம்பினால், மூங்கில் நெல்லைக் குற்றியவாறு நாம்,
வள்ளைப்பாடலாய்ப் பாடுவோம், வா, தோழியே! நாம்
வள்ளைப்பாடலாய்ப் பாடுவோம், வா!"

"காண்பாயாக தோழியே! மலையிலிருந்து இறங்கி
வெள்ளை நிறத்தில் விழுகின்ற அருவியைப் பெற்றுள்ளது, நம் மீது அருள்கொள்ளாத
அந்த நாணம் கெட்டவன் நாட்டு மலை!"
"தன்பால் அன்புகொண்டோரின் உள்ளம் உடைந்துபோக விடுவானோ?
நன்கு ஆராய்ந்து, ஒரு பக்கம் சாயாத துலாக்கோல் போல,
அறத்தைச் செய்கின்ற உள்ளம்படைத்தவன்!"
"குளிர்ச்சியான நறிய கோங்கம் மலர்ந்த மலை எல்லாம்
பொன்னாலான அணிகலன்கள் அணிந்த யானையைப் போல் தோன்றுகிறது, நம் மீது அருள்கொள்ளாத
பயனற்ற வாழ்க்கையை வாழ்கின்றவன் நாட்டு மலை!"
"நான் நோய்கூர்ந்து தவிக்க என்னை விடுவானோ? தன் மலையின்

சுனைநீரிலும் குளிர்ந்த அருள் உடையவன், தன்னை வேண்டிவந்தோர்க்கு
தேர்களை வாரி வழங்கும் வள்ளண்மை மிக்கவன்!"
"மலை உச்சியில் சேர்த்துவைத்த தேன் பொருந்திய துளைகளையுடைய தேன்கூடு
மேகத்தில் நுழைந்த திங்கள் போல் தோன்றுகின்றது, நம் அணிகலன்கள் கழன்று போகுமாறு
நமக்குத் துன்பத்தைக் கொடுத்தவனின் மலையில்!"
"ஓயாமல் தோழியே! அவனதுகொடுமையைப் பற்றிப் பேசாதே!
அஞ்சவேண்டியதற்கு அஞ்சாத அறங்கெட்டவன் அல்லன் என்
நெஞ்சத்தைக் கவர்ந்துகொண்டவன்!"
"என்று நாங்கள் பாட, மறைந்து நின்று கேட்டவன்
தாழ்ந்து இறங்கும் கரிய கூந்தலைக் கொண்ட என் தோழியைக் கையசைத்துச் செல்லும்படி சொல்லிவிட்டு

அந்த மென்மையால் இனிய மார்பையுடையவன் என் பின்புறம் வந்து என் முதுகைத் தழுவிக்கொள்ள
பகலவன் முன்னர் பறந்து செல்லும் இருளைப் போல விட்டு விலகியது என்
அழகிய இழையணிந்த மேனியிலிருந்த பசப்பு."

#43
"புலியைக் கொன்ற மதம் நிறைந்த புள்ளிகளைக் கொண்ட யானையின்
ஏந்திய கொம்பினாலும், கூட்டமான வண்டுகள் ஒலியெழுப்பிக்கொண்டே தேனைக் குடிக்கும்
சந்தன மரத்தின் கட்டையாலும் செய்யப்பட்ட உலக்கைகளால்,
ஐவனமாகிய வெண்ணெல்லைப் பாறையில் உள்ள உரலுக்குள் இட்டு நாம் இருவரும்
முருகனைப் போற்றிப் பாடுவது போல, அழகுபெற்ற
மேகம் தவழ்கின்ற உச்சிகளையுடைய பயன்தரும் மலையைச் சேர்ந்தவனை,
தையலே! பாடுவோம் நாம்!"
"அழகிய மகளிர் கைவிரலில் அணிந்த மோதிரம் போல, காந்தளின்
மொட்டின் மேல் தும்பி அமர்ந்திருக்கின்றது, பகை என்று வரும்போது

கூற்றுவனே வந்தாலும் தோல்வியடையானாய், தன்னிடம் நட்புக்கொண்டவர்க்காகத்
தோல்வியை ஏற்றுக்கொள்வதற்கு நாணாதவனாகிய நம் தலைவனின் குன்றினில்";
"அகன்ற பாறையில் அமர்ந்திருக்கும் கருங்குரங்கை, மிரட்சியுடன் பார்த்து,
கீழே இருண்டுகிடக்கும் செங்குத்தான பள்ளத்தில் ஏறியும் இறங்கியும் ஓடித்திரியும்
வருடை மானின் குட்டியையுடைய வளமிக்க மலையைச் சேர்ந்தவனை
நன்கு உணர்ந்துகொள்ளும் வண்ணம், தெரிந்தெடுத்த அணிகலன்களையுடையவளே! நீ ஒன்று பாடு!"
"நுண்ணிய புள்ளிகளைக் கொண்ட மானின் காதினைப் போல மூங்கில் முளையின்
கணுவை மூடியிருக்கும் தோடு கழன்று உகுந்துகிடக்கும் தன்மையது,
தன் மீது பகை கொண்டு, தன்னைப் பொறுக்காதவரெனினும், அவரின் குற்றத்தைப்
பிறர்க்குக் கூறுவதை அறியாதவனின் குன்று!"

"பெண்யானையுடன் சேர்ந்து, வளகுத்தழையைத் தின்ற,
இணையான கொம்புகளை அழகுடன் கொண்ட, மலை நடப்பது போல் நடக்கின்ற,
ஒளிவீசும் அழகுடைய யானைகளையுடைய பயன் மிக்க மலையைச் சேர்ந்தவனைப் பற்றி,
மணம் வீசும் கூந்தலினையுடையவளே! மீண்டும் ஒரு பாட்டுப் பாடுவாயாக!"
"கொடிய புலியின் காலடியைப் போன்று வாழையின்
வளைந்த காய்கள் குலைதோறும் தொங்குகின்றன, வறுமைத் துன்பத்தால்
இல்லையென்று சொல்வார்க்கு, அதனைப் போக்கமாட்டாத நிலை வரும்போது
தன் உடலைவிட்டு உயிர் துறப்பவனின் மலையில்!"
"என்று
நானும் அவளும் சேர்ந்து அவரின் சிறப்புகளைப் பற்றிப்பாட, என் தோழிக்கு

வாடிப்போயிருந்த மென்மையான தோள்களும் பூரிப்படைந்தன,
அசைகின்ற மூங்கிலையுடைய மலை நாட்டினன் நேரில் வந்து அன்பு காட்டியது போன்று!"

#44
ஞாயிற்றின் விரிந்து செறிந்த கதிர்களின் அழகைத் தன்னிடம் கொண்ட அகன்ற மலைச் சாரலில்
எதிரெதிரே உயர்ந்து நின்ற பெரிய மலைகளின் சரிவுகள் சந்திக்கும் இடத்தில்
அதிர்கின்ற ஓசையுடன் விழும் அருவி, தன்னுடைய அழகிய கிளைகளின் மீது விழ,
முற்றிய பூங்கொத்துக்களைத் தீயைப் போல் வரிசையாகக் கொண்ட, முழவினைப் போன்ற அடிமரத்தையுடைய வேங்கை,
வரிகள் விளங்கும் நெற்றியையுடைய அழகிய இரு யானைகள் பூவுடன் கலந்த நீரை மேலே சொரிய
முறுக்குவிட்டு மலர்ந்த தாமரை மலரின் உள் இதழ்களில் பெருமிதத்துடன்
திருமகள் விரும்பி இருப்பதைப் போன்று தோன்றும் மலர் மணம் கமழும் சிறந்த மலைநாட்டுத் தலைவனே!
தான் துயரடைந்தாலும், நீ செய்த அருளற்ற செயலை
என்னிடமும் மறைத்துவிட்டாள் என் தோழி, சொன்னால் அதனைக் கேட்டு

உன்னை நான் பிறர் முன்னே பழி கூறுவேன் என்று அஞ்சி;
அடைந்த துன்பம் மிகுதியான போதும், நீ செய்த அருளற்ற செயலை
ஊராருக்கு மறைத்துவிட்டாள் என் தோழி, சொன்னால் அதனைக் கேட்டு
அவள் எண்ணத்தில் இருக்கும் நீ நிலையில்லாத குணம் கொண்டவன் என்று அவர்கள் கூறுவதை அஞ்சி,
துன்பம் வருத்த மிக வருந்தியும், நீ செய்த அருளற்ற செயலை
தன் தோழியரிடமும் மறைத்துவிட்டாள் என் தோழி!, அதனைக் கேட்டு
மாயக்காரனான நீ பண்பற்றவன் என்று பிறர் கூறுவதை அஞ்சி;
என்று
இவ்வாறான உனக்கு நேரவிருந்த பழிச்சொற்களான தீமைகளைப் பிறர் அறியாதவாறு நினைத்துக் காத்து,
அத்தகைய அரிய பண்பினால் உனக்கு உண்டான தீமைகளைக் காத்தவளுக்கு

அரிய துன்பத்தைச் செய்யும் கொடிய காமநோயைத் தீர்க்கும்
மருந்தாக ஆகி, திருமணத்திற்குரிய ஏற்பாடுகளோடு செல்வோம், பெருமானே! நாம் விரைவாக.

#45
விடியலிலேயே வெம்மையாகக் கதிர்கள் காய்கின்ற, மூங்கில்கள் நெருக்கமாய் வளர்ந்த அகன்ற பாறைகளை ஒட்டி இருக்கும்
மணமிக்க சுனை அழகுபெறுமாறு, நீர் மேல் கவிழ்ந்திருக்கும் காந்தளின் அழகிய குலையினை,
அரிய மாணிக்கம் ஒளிவிடும் படத்தோடு கூடிய பாம்பு நீர் குடிப்பதாக எண்ணி,
அந்தப் பெரிய மலையையே புரட்டிவிடுவதைப் போன்று காற்றுடன் கூடிய கனத்த மழை பெய்யும் நேரத்தில்
இடியோசை எழுவதால், அந்தப் பேரொலி விரைந்து சென்று
நறிய பூக்களைக் கொண்ட அகன்ற மலைச் சரிவுகளில் எதிரொலித்ததால், விரைவாகச்
சிறுகுடி மக்கள் துயில் எழுகின்ற மிகவும் உயர்ந்த சிறப்பு வாய்ந்த மலைநாட்டினனே!
காற்று மோதும்போதும் மடங்காத, ஒலிக்கின்ற இனிய ஓசையையுடைய அருவியையுடைய உன்
பெரிய மலையில் மலிந்திருக்கும் சுனைமலர்களைப் போன்றிருப்பதால்தானோ,

தழுவினும் தீராத பிணைப்பை எண்ணித் தனிமைத் துயர்கொண்ட என் தோழியின்
பூவைப் போன்ற மலர்ந்த மைதீட்டிய கண்களைப் பசந்துபோகுமாறு நீ சிதைத்துவிட்டாய்?
புள்ளிகள் கொண்ட முகத்தையுடைய களிற்றுடன் புலி போரிட்டு வெற்றிபெறும் உன்
அகன்ற மலையின் சரிவுகளில் இருக்கும் மூங்கில்களைப் போன்றிருப்பதால்தானோ,
கடைசிக்காலம் வந்துவிட்டது என்று கலங்கிப்போகின்ற காமநோய் கைமீறிச் செல்ல, என் தோழியின்
அகன்று திரண்டு இருக்கும் தோள்களின் அழகு வாட நீ சிதைத்துவிட்டாய்?
ஞாயிறு எழ எழ உயர்ந்துகொண்டே செல்லும், வண்டுகள் ஒலியெழுப்புகின்ற மலையிடுக்குகளில் இருக்கும்
பிளவுகளையுடைய மலைகளில் இருக்கும் தீயைப் போன்ற வேங்கையின் மலர்க்கொத்தைப் போன்றிருப்பதால்தானோ,
நள்ளிரவிலும் தூக்கமில்லாதவளாய் மனங்கலங்கித் தடுமாறும் என் தோழியின்
யாவரும் விரும்பும் நல்ல பேரழகு தன் வனப்பை இழக்கும்படி சிதைத்துவிட்டாய்?

என்று
அவனுடைய கொடுமைகள் பலவற்றைச் சுட்டிக்காட்டி, இடித்துரைக்கவே, என் தோழியே!
மறைவாகத் தான் தழுவி மணந்த நட்பு இல்லாமல்போய்விடுமோ என்று
பிறை போன்ற நெற்றியையுடையவளே! அவரைப் பேணி நாம்
அவரிடத்தில் , அவர் விரும்பிய நாளில். தங்குதலை உன் உறவினரிடம் பேசிமுடித்துவிட்டார்.

#46
தான் இருந்து தேனுண்ட மலர்களைத் தனியே விட்டுவிட்டு, வேறு பூக்களை நாடிச் சென்ற 
பெரிய, அழகிய சிறகுகளைக் கொண்ட நீல மணி போன்ற நிறத்தையுடைய தும்பிகள்,
வாயிலிருந்து வடியும் மதத்தையும், வெண்மையான கொம்பையும் உடைய தலைமை யானையுடன்
அழகிய வரிகள் கொண்ட புலி தாக்கிய போது
வேங்கை மரத்தின் அழகிய கிளை என்று எண்ணி ஆற்றல் வாய்ந்த புலியைச் சூழ்ந்துகொண்டும்
நெற்றியில் புள்ளிகள் பொறித்த யானையின் புள்ளிபுள்ளியான முகத்தைச் சேர்ந்தும்,
வலி மிகும் சினத்தால் வாளை உருவிக்கொண்டு நின்ற மன்னர்களைச்
சமாதானம் செய்யும் வழியை நாடி அவர்களை நண்பர்களாக்க முயல்பவர்கள் போல மாறி மாறித் திரியும்,
சுனை மீது விழுகின்ற அருவியை உடைய, அழகிய மலையைச் சேர்ந்த நல்ல நாட்டினனே!

பெரும் இடிகள் முழங்குகின்ற இருள் நிறைந்த இரவினில் சந்திக்கின்ற வாய்ப்பை இழந்து
நான் ஏமாற்றிவிட்டதாகக் கூறி மனம் வருந்துகிறான் அவன் என்றால்,
அவனைக் கூடி மகிழவேண்டும் என்ற ஆசையால் இரவுக்குறியை எதிர்நோக்கி, அவன் வீசும் நொச்சிப்பூ
விழும் ஓசையையும் உற்றுக்கேட்கும் செவியுடன் காத்திருந்து வருந்தினேன் நான் அன்றோ!
அரிய பயணத்தை மேற்கொண்டு கடினமான வழியில் என்மீதுள்ள அருளினால் வந்து என் அன்பைப் பெறாமல்
வருத்தமுற்றதாகப் பலமுறை வாய்விட்டுக் கூறுகிறான் அவன் என்றால்,
உயர்நிலைத் தெய்வங்களுக்கு நேர்ந்துகொண்டு, அவனுக்காகப்
பலவாறாக சிந்தனைகளை ஓடவிடும் மனத்தோடு காத்திருந்து வருந்தினேன் நான் அன்றோ!
பெருமழை பெய்கின்ற நள்ளிரவில் நான் அசட்டையாய் இருந்துவிட்டதால் அவனுடைய சமிக்கையை நான் கவனிக்காமல்விட,
அணிகலன்களால் அலங்கரித்துக்கொண்டவளே! என்னுடைய குற்றத்தை உன்மேல் ஏற்றிச் சொல்கிறான் அவன் என்றால்,

மழைத்துளியை விரும்பிய வேட்கையால் வானத்தில் பாடித்திரியும் பறவையைப் போல அவனின்
அருள்பார்வையை விரும்பி ஆர்வமுள்ள நெஞ்சோடு அன்புடன் காத்திருந்தேன் நான் அன்றோ!
என்று இவள் கூறும்படியாக,
இவளிடம் கலந்துவிட்ட காமநோய் அதிகமானதினால் கண்துயிலாத என்னிடத்தில்
நீ வெறுப்புக்கொள்வதுபோல் நடந்துகொண்டால், அந்தப் பொய்யால் வெற்றிபெறுவாய்,
ஒளிர்வுடன் தாழ்ந்து இறங்குகின்ற அருவியுடன் அழகு கொண்ட உனது மலையின்
முழைஞ்சுகள் ஒருவர் சொன்னதை அப்படியே எதிரொலிப்பது போல நீ கூறுவதையே கூறும்
ஒளிர்கின்ற அழகிய பிரகாசமான வளைகளை அணிந்த இவளின் காமநோயை.

#47
ஒருவன் என்னிடம் ஏதோ ஒரு பொருளை இரந்து கேட்பவன் போல் பணிந்து சிலவற்றைச் சொன்னான், இந்த உலகத்தைக்
காக்கின்றவன் போல் ஓர் அறிவாற்றல் உள்ளவனாய்த் தோன்றுகிறான்,
சிறந்த அறிவுள்ளவர்களை வழிபட்டு உண்மைகளை அறிந்தவன் போல்
நல்லவர்களிடத்தே காணப்படும் அடக்கமும் உடையவனாயிருக்கிறான்,
இல்லாதவர்களின் வறுமைத் துன்பத்தைத் தன் ஈகைக் குணத்தினால் துடைக்க
வல்லவன் போன்ற பொருளாற்றலும் உள்ளவனாய்த் தோன்றுகிறான்,
அப்படிப்பட்ட ஒருவன் தன் தகுதிப்பாட்டையெல்லாம் மறந்து, என்னிடம்
பல முறையும் சொல்கின்ற ஒரு சொல்லைக் கேட்பாயாக, சுடர்விடும் நகைகளை அணிந்தவளே!
"நீ இல்லாமல் உயிர்வாழேன் நான்" என்கிறான் அவன், எனினும்

அவனுடைய சொல்லை நம்புவது எவர்க்குமே இங்கு அரிதாகும், எனவே
நான் படும் சங்கடங்கள் பிறர்க்கும் இங்கு இருக்குமோ? நறிய நெற்றியை உடையவளே!
"அறியாயோ நீ? வருந்துகிறேனே நான்!" என்கிறான் அவன், எனினும்
தனியொருத்தியாய் நின்று இதைப் பற்றி முடிவெடுத்தல் பெண்களுக்கு அரிதாகும், எனவே
இரங்கத்தக்கவர், என்னைப் போல் இங்கு இவனது வலையிலே அகப்பட்டார்;
"வாழமாட்டேன் நான், நீ என்னைக் கைவிட்டால்" என்கிறான் அவன், எனினும்
இவனுக்கு இரங்குபவர் பேதை மகளிர் என்று பலரும் கூறும் சொல் நமக்குப் பழியாகும், எனவே
இதனை ஆராயும்போது நினைப்பதொன்றும் அறியாமல் வருந்துகிறேன்,
இதனை ஆராயும்போது, நறிய நெற்றியையுடையவளே! நமக்குள்ளே ஆராய்ந்துபார்ப்போம்!
அவனை,

நாணம் நம்மை வருத்துவதால், துரத்திவிடுவது நமக்கும் இங்கு இயலாது,
ஒரு அயலானை ஏற்றுக்கொண்டனர் என்று ஊரார் சொல்வது நமது பெண்மைக்கும் பொருந்தாது, 
அவனோ நம்மை விரும்புகின்றான், தழுவிக்கொள்ள மட்டும் வருக என்று
கூறுவது போல் காட்டி
பின்னர் அவன் விருப்பப்படி நடந்துகொள்வாய் நெஞ்சமே!

#48
நீர் விழும் அழகிய மலையிடத்தில் உள்ள மலர்ந்து நிற்கும் வேங்கை மரத்தின் அழகினைப் போல
வண்டுகள் மொய்க்கும், மதத்தால் நனைந்த கன்னங்களையுடைய, எட்டுத்திசைகளையும் காப்பதற்குச் சரியான
யாரும் எதிர்க்கமாட்டாத உறுதியான உடல்வலிமையுடைய, வண்டுகள் சுற்றி ஒலிக்கும் புள்ளிகளையுடைய முகத்தையுடைய,
மிகுதியான மழைபெய்யும் மலைச் சரிவுகளிலும், வானளாவ ஓங்கிய
பெருமை மிக்க மரங்களைக் கொண்ட ஆற்றிடை மணல்மேட்டிலும் வாழ்கின்ற, கமழ்கின்ற மதநீர் ஒழுகுகின்ற
பெரிய யானைக் கூட்டத்தோடு, பருத்த கழுத்தும் பெரிய உடல்வன்மையும் கொண்ட
பெரிய புலி மாறுபாடுகொண்டு போரிடுகின்ற மலையினையுடைய நல்ல நாடனே! 
மழை பெய்யும் இராக்காலத்தில் உன்னுடைய சமிக்கை ஒலியை உற்றுக்கேட்கும் மனவொடுக்கத்தாலேயே
தான் வாழும் நாளை நீட்டிக்கொண்டிருப்பவளின் வருத்தமிக்க தோள்கள் மீது தவறு உண்டோ?

கதவின் தாழ்ப்பாளை நன்கு செறித்துக்கொண்டு கடுமையாகக் காவல்காக்கும் தாயின் முன்னர், உன் மலைச் சாரலில்
உதிர்ந்துவிழும் காந்தள் போல் ஒளிவிடும் வளைகள் கழன்று விழுகின்றனவே!
வருத்தம் மிக்க இருள் இது என்று ஏங்கி, உன் வரவை விரும்பி,
உன்னை நினைந்து நினைந்து துயரில் உழப்பவளின் தூக்கமற்ற கண்கள் மீது தவறு உண்டோ?
காதல்வயப்பட்டவள் இவள் என்று உரக்கவே பேசும் அயலார் முன்னர், உன் சுனையிலிருக்கும்,
மிகுதியான மழையை ஏற்ற நீலமலர் போல கண்கள் கண்ணீரைச் சிந்துகின்றனவே!
பலநாளும் நினைவு வருத்துவதினால் பசலையால் விழுங்கப்பட்டவளின்
பொன் உரைக்கும் கல்லில் உரைக்கப்பட்ட மணியினைப் போன்ற இவளின் மாநிறத்தின் மேல் தவறு உண்டோ?
மெல்லிய நுரைகளோடு சிறிதாக வழிகின்ற ஓடைநீர் ஒலிசெய்யும் இளவேனிற்பருவத்தில், உன் சோலையில் உள்ள
ஒளி இழந்த தளிரினைப் போல இவள் மேனி தளர்ந்து ஊரார்க்கு இவள் காதலை உரைக்கின்றதே!

எனவே,
உறவுகொண்டு வலுப்பட வேண்டும் நீ பிரிந்து வாழும் இவளுடன் கொண்ட நட்பு என்று வேண்டிக்கொண்டு
நிம்மதியாகப் பூப்போன்ற கண்கள் துயில்கொள்ளுதலை அஞ்சுகிறேன், ஏனெனில் இவள் தாங்கிக்கொண்டிருக்கும்
அரிய துயரத்தின் அவலத்தை எண்ணிப்பார்த்தால்
அது எல்லை காணமுடியாத மலையைக் காட்டிலும் பெரிதாகும்.

#49
வளைந்த வரிகளையுடைய புலியைத் தாக்கி, அதனை வென்ற உடல்நோவுடன்
நீண்ட மலைச் சரிவில் துயில்கொள்ளும் யானை
நனவில் தான் செய்ததையே மனத்தில் இருத்திக்கொண்டிருந்ததால்
கனவிலும் புலியைக் கண்டு திடுக்கிட்டு வெருண்டு எழுந்து
புதிதாகப் பூத்திருக்கும் வேங்கை மரத்தை
புலி என்று நினைத்து அந்த மரத்தின் அழகிய தன்மையைக் கெடுத்து
அடக்கமுடியாத தன் உடல்வலிமையால் எழுந்த தன் சினம் தணிந்து, அந்த மரத்தைக்
காணும் பொழுதில், நிமிர்ந்து பார்க்க முடியாமல்
வெட்கப்பட்டுத் தலையைக் குனிந்துகொள்ளும் நல்ல மலையில் உள்ள நல்ல நாட்டினனே!

மலரும் பருவத்திலுள்ள அழகிய பூவைப் போன்ற, மைதீட்டிய கண்களையுடைய இவளிடம் நீ இத்தகைய
காதல் கொண்டுள்ளாய் என்பது இனிதுதான், ஆனால் கொடியது
மின்னல் வெளிச்சத்தில் வழியைக் காணும் உன் கண்களுடன், இடியென்றும் மழையென்றும் பாராமல்
இப்படிப்பட்ட ஒரு கடினமான வழியில் இங்கு நீ வருவது;
இவள் இன்புறும்படி அருள்காட்டி இவளிடத்தில் நீ இத்தகைய
பேரன்பு கொண்டுள்ளாய் என்பது இனிதுதான், ஆனால் கொடியது
மணம் வீசும் மாலையை மார்பில் அணிந்து, மேகம் தவழும் மலைகளைக் கடந்து
வருத்தும் தெய்வங்கள் வாழும் கடினமான வழியில் இங்கு நீ வருவது;
இருள் போன்ற கரிய கூந்தலையுடைய இவளிடத்தில் நீ இத்தகைய
பேரருள் கொண்டுள்ளாய் என்பது இனிதுதான், ஆனால் கொடியது

ஒளிர்கின்ற வேலை வலக்கையில் ஏந்திக்கொண்டு தனியனாய் வருகிறோம் என்று எண்ணாமல்
களிறுகள் நடமாடும் கடினமான வழியில் இங்கு நீ வருவது;
அதனால்
இரவிலே வரவேண்டாம் ஐயனே! பல நிறமுள்ள மலர்கள்
அகன்ற பாறையை மூடிக்கிடக்கும் மலைச்சாரலில்
பகலிலும் அடைவாய் இவளின் பருத்த மென்மையான தோள்களை.

#50
மூங்கிலின் வளைகின்ற கழையை நெல்லோடு வளைத்து, விடியற்காலத்தில்,
அதனைத் தின்ற முழந்தாளையுடைய கரிய பெண்யானை
தொங்குகின்ற இலைகளையுடைய வாழை மரங்கள் செறிவாக இருக்குமிடத்தில் புகுந்து, அங்கு
வருடை மானின் இளம் குட்டி திரிகின்ற இடத்தில் துயில்கொள்ளும்
இருள் செறிந்த சோலையினையும், ஒளிவிடும் நீரினையுமுடைய மலைநாட்டினனே!
பாம்பின் பொறி போன்ற புள்ளிகளும், பகைவரை வருத்தக்கூடிய ஆற்றலும் ஒருசேரக் கொண்ட
வலிமையான வில்லின் மேல் வைத்த கையினையுடையவனே! ஒரு முறை
வரிசையாக வளையல்கள் அணிந்த முன்கையையுடைய என் தோழியைக் காதல்பார்வையுடன் பார்த்து
கதிர்களின்மேல் வந்து படியும் கிளிகள் பரவலாய்த் திரியும் பசிய கதிர்களைக் கொண்ட தினைப்புனத்தில்,

அந்தக் கிளிகளை விரட்டுவதை மறக்கச்செய்ததனால், இனி நீ
இவளையே இடைவிடாமல் நினைத்துக்கொண்டிருப்பதைக் காத்துக்கொள்வதை இவள் விரும்புவாள், இவள்
பல குலைகளையுடைய பலாவின் பிசினையுடைய இனிய பழம்
வீழ்ந்திருக்கும் பாறையில் எடுத்துண்ணும் உணவையும், திரண்ட சோறினையும் கொண்ட சிறுகுடியிலிருக்கும்
பிள்ளையில்லாதவர்களுக்குப் பிறந்த ஒரே செல்வ மகள்;
நீயோ, காற்றின் வேகத்தை மிஞ்சும் தேரையும், களிற்றையும்,
மழையினும் சிறந்தவனாக, உன்னை நாடி வந்த புலவர்க்கு
அருள் உள்ளத்தோடு கை ஓயாமல் அள்ளிக்கொடுக்கிறாய்!
அதனால்,
விரைந்து செல்லும் குதிரையை மேலும் விரைவாக செலுத்தும் தாற்றுக்கோல் போல், எவ்வளவேனும்

கொடுமை இல்லாதவன் என்பதை அறிந்திருந்தும் உன்னிடம் வற்புறுத்திக் கூறுகிறேன்,
சுரபுன்னை வளர்ந்த மலைச் சாரலில் திரியும் வருடையாகிய நல்ல மானின்
குட்டியை வளர்ப்பவர் போலப் பாராட்டி
பக்கத்திலிருந்து பிரிந்து சென்றால் நீங்கிவிடும்
மேகலை அணிந்த அல்குலையுடைய என் தோழியின் கவின்.

#51
சுடர்விடும் வளை அணிந்தவளே! கேட்பாயாக! தெருவில் நாம் கட்டிய
மணலாலான சிறிய வீட்டைத் தன் காலால் சிதைத்துவிட்டு, நான் சூடியிருந்த
பூச்சரத்தை அறுத்துக்கொண்டு, வரியையுடைய பந்தை எடுத்துக்கொண்டு ஓடி
நம்மை நோகச் செய்யும் சிறுவன், முன்னொருநாள்
அன்னையும் நானுமாக வீட்டில் இருந்தபோது, "வீட்டிலுள்ளோரே!
உண்பதற்கு நீர் வேண்டிவந்துள்ளேன்" என்று சொல்லி வந்தவனுக்கு, அன்னை
"பொன்னாலான கலத்தில் ஊற்றிக்கொடுத்து, சுடர்விடும் அணிகலன்கள் அணிந்தவளே!
உண்பதற்கு நீரை அருந்தச் செய்து வா" என்று சொன்னாள் என்பதற்காக, நானும்
அவன் இன்னான் என்பதை அறியாமல் சென்றேன். ஆனால் அவன் எனது

வளையணிந்த முன்கையைப் பற்றி அழுத்த, மருண்டுபோய்
அன்னையே! இவன் செய்வதைப் பாரேன்" என்று கூவிவிட,
அன்னையும் அலறிப்புடைத்துக்கொண்டு ஓடிவர, அவனை, நான்
"நீர் உண்ணும்போது விக்கினான்" என்று சொல்ல, அன்னையும்
அவனது முதுகைத் தடவிக்கொடுக்க, என்னைக்
கடைக்கண்ணால் கொல்வது போல் பார்க்க, இவ்வாறு மகிழ்ச்சியான குறும்புச் செயலைச்
செய்தான் அந்த திருட்டுப்பயல்.

#52
தன் முறம் போன்ற செவியின் மறைவிடத்தில் பாய்ந்து தாக்கிய புலியைச் சினந்து,
அறத்தை விட்டு மறத்தை மேற்கொண்ட நூற்றுவர் தலைவனான துரியோதனனின்
தொடையை முறித்திட்ட வீமசேனன் போல் தன் கூரிய கொம்புமுனையால் குத்தி, அதன்
மருமத்தைக் கிழித்துத் தன் பகையைத் தீர்த்துக்கொண்ட நீண்ட கொம்புகளையுடைய அழகிய யானை,
கஞ்சனால் ஏவப்பட்ட மல்லரின் மறத்தைச் சாய்த்த திருமால் போல் தன் சுற்றத்தின் நடுவே
பாறைகள் உயரே நிற்கும் அகன்ற மலைச்சாரலில் கூடித்திரியும் நாடனே கேட்பாயாக!
தாமரை மலர்களாற்செய்த தலை மாலையைச் சூடிக்கொண்டு, குளிர்ச்சியான நறிய சந்தனத்தைப் பூசிக்கொண்டு
ஒழுங்குபட்ட மலரிதழ்களால் கட்டிய மாலையை அணிந்தவள் குறிப்பிட்ட இடத்திற்கு நீ வந்தால்,
மணம் கமழ்கின்ற நல்ல வாசனையைக் கொண்டுள்ள மலையில் குடியிருந்து பலியுணவைக் கொள்ளும்

அணங்குகளிலே ஓர் அணங்கு என்று உன்னைக் கருதி அஞ்சுவர் இந்த ஊரினர்;
ஈரமுள்ள குளிர்ந்த ஆடையை அணிந்துகொண்டு, இரவுக்கேற்ற ஒப்பனைகளைச் செய்துகொண்டு
தளர்ந்து விழும் கூந்தலையுடையவள் குறிப்பிட்ட இடத்திற்கு நீ வந்தால்,
தீயை உண்டாக்கும் தீக்கடைகோலையுடைய, கவணையும் வில்லையும் கையில் வைத்திருக்கிற
தினைப்புனக் காவலர் உன்னை யானை என்று எண்ணிக்கொண்டு கூச்சலிடுவர்;
சந்தனம் பூசின மார்புடன், தலைமைப் பண்புடன், நெஞ்சத்தில் கனிவுடன்,
மென்மையான அகன்ற அல்குலையுடையவள்  குறிப்பிட்ட இடத்திற்கு நீ வந்தால்,
மிளகுக் கொடிகள் வளரும் மலைச் சாரலில் ஓயாமல் திரியும்
புலி என்று உன்னை எண்ணிக்கொள்வர் இந்த செருக்கு பொருந்திய ஊர்மக்கள்;
இவ்வாறு

உன்னை வேறாக எண்ணாமல், உண்மையைத் தெரிந்துகொண்டால் இவள் வாழமாட்டாள், இவள் இல்லாமல்
உலகம் புகழும் ஒருவனே! நானும் வாழமாட்டேன்,
அதனால், அரும்புகள் மலரும் அதிகாலையில் வந்து நீ உன் விருப்பத்தைக் கூறி
மணம் பேசி முடிக்க வேண்டும், அப்போது
புதியவன் போல் வருகின்ற உன்னுடைய வரவையும், இவளின்
திருமண வெட்கம் கொண்ட அடக்கத்தையும் நான் பார்க்கவேண்டும்.

#53
மழையின்மையால் வறண்டுபோவதை அறியாத சுரபுன்னை மரங்கள் வளர்ந்த நறிய சாரல் உள்ள
உயர்ந்த மலையின் அகன்ற பாறையில், தான் விரும்பும் பெண்யானை தன் பக்கத்தில் இருப்பதால்
வீர உணர்வை மிகுதியாகப் பெற்ற ஒரு வேழம் பகையுணர்வு கொண்ட வலிமையினால்
மற்ற யானைகளைக் குத்தி உருவிய இரத்தக்கரை படிந்த கொம்பினைப் போல
பெரிய அரும்புகளையுடைய நறிய காந்தள் நாள்தோறும் புதிதாகப் பூக்களைத் தோற்றுவிக்கவும்,
பள்ளங்களெல்லாம் நிறைந்து அழகுபெற, அருவி ஆரவாரத்துடன் விழ,
பெருமழை வந்து பெய்யும் பெருமை வாய்ந்த வெற்றி சிறக்கும் மலைநாட்டவனே!
யாருக்கும் தெரியாமல் இவளுடன் பழகிவிட்டு, பின்னர் அந்தப் பழக்கம் முற்றிலும் நின்றுபோகுமாறு நீ அவளைத் துறந்த பின்
தோள்வளைகள் கழன்று ஓட வருத்தத்தை இவளால் தாங்கிக்கொள்ள முடியும் - அது எப்போதெனின்

அண்டை அயலார் பழிகூறித் தூற்றுவதால், தம் அழகிய வனப்பை இழந்த கண்கள்
பெரும் மீன்கள் தம் வாயிலிருந்து நீரைப் பீச்சியடிப்பது போல இவள் கண்களிலிருந்து கண்ணீர் பெருக்கெடுத்து வராமலிருந்தால்;
இனியவற்றை இவளுக்குச் செய்துவிட்டுப் பின்னர் அகன்று, இவளுக்குத் துன்பம் தரும்வகையில் நீ துறந்துவிட்டுப் போனதால்
இவளின் மேனி நடுக்கம் தெய்வத்தால் ஆனதென்று அத் தெய்வத்தை வணங்காமலேகூட இருந்துவிடமுடியும் - அது எப்போதெனின்
ஊரார் பழிகூறித் தூற்றுவதால் ஒளி மங்கிப்போய், இவளின் நறிய நெற்றி
பீர்க்கம்பூவைப் போல் பசலை நிறங்கொண்டு தன் பிறைத்திங்கள் போன்ற வனப்பை இழக்காமலிருந்தால்;
அஞ்சவேண்டாம் என்று சொல்லிவிட்டுப் பின்னர் அகன்று நீ இரக்கமில்லாமல் துறந்துவிட்டுப் போனதால்
நெஞ்சழிந்து போகும் வண்ணம் துயரம் வந்து வருத்தினாலும் அதைத் தடுத்து நிறுத்திவிடவும் முடியும் - அது எப்போதெனின்
பகற்காலத்திலும் தன் அழகு கெட வாட்டி நடுங்கவைக்கும் பிரிவுத்துன்பம்
கனவிலும் வந்து கெடுத்து கங்குலிலும் வருத்தமுறச்செய்யாவிட்டால்;

என்று நான் கூறும்படியாக,
சற்றும் குறையாத பிரிவுத்துன்பத்தால் வருந்தி நிற்கும் என் தோழி, உன் மலையிலுள்ள
காய்ந்து உலர்ந்து போய் வாடி நிற்கிற முளைவிட்டுப் பயிராகி நிற்கும் சிறுதினைப் பயிர்
மழையைப் பெற்றால் பொலிவுபெற்று நிற்பதைப் போல்
உன் அன்பினைப் பெற்றால் தழைத்துச் செழிக்கும் இவளின் அழகிய நெற்றியின் அழகு.

#54
கொடியிலும் கொம்புகளிலும் நீரினால் நிறம் பெறும் பூக்களைப் போலன்றி, நீரின்றி அழகு பெற்ற
நீறு பூத்த நெருப்பினால் செய்யப்பட்ட பூவாத பூவாகிய பொன் மலர் மாலையையும்,
வளைகளைச் செறித்துக் கட்டுவடம் அமைந்த அழகிய முன்கையையும், மெல்லணை போன்ற தோள்களையும் கொண்டவளே!
உன்னிடம் அன்புகொண்டு உன் அடியின் கீழ் வாழ நீ அருள் புரியாமலிருப்பது உனக்குத் தகுமோ என்று கேட்டவாறே
நரந்தம் புல்லின் நறுமணம் கமழும் கரிய கூந்தலினை முழுவதுமாக இறுக்கப்பற்றி
பொன்னால் செய்யப்பட்ட மகரமீன் வடிவான தலைக்கோலத்தை விழுங்கிய கூந்தல் முடிப்பை
அழகுபெறச் சுற்றிய பூங்கொத்துக்கள் அமைந்த ஒரு பூச்சரத்தை
விரலில் ஒழுங்காகச் சுற்றி மோந்துபார்க்கவும் செய்தான்;
நறவம் பூ மலர்ந்தது போன்ற என் மென்மையான விரல்களைச் சேர்த்துப்பிடித்து,

சினங்கொள்ளாமல் காமத்தால் சிவந்துபோன தன் கண்கள் மறைய ஒற்றிக்கொண்டு,
பறக்காத கொக்கு எனப்படும் கொல்லன் துருத்தியின் வாய் போல பெருமூச்சுவிடவும் செய்தான்;
மேலும் தொய்யில் வரைந்த என் இளமையான முலைகளை இனிதாகத் தடவிக்கொடுத்து,
நெகிழ்வுற்ற தன் அழகிய பருத்த கைகளால், தான் விரும்பும் பெண்யானையைத் தடவிக்கொடுக்கும்
மையல் கொண்ட யானையைப் போல் எனக்கு மயக்கத்தையும் ஊட்டினான்;
அதனால்,
என் துயரத்தைத் துடைத்துப்போட்டேன் தோழி! நம் வீட்டில் என்னை அடைத்துவைத்துக் காக்கக்கூடிய
அரிய கட்டுக்காவலை நான் மீறிக்கொண்டு செல்லாமல் இவனோடே மணம் கொள்ளுமாறு நீ செய்தால் நல்லது என்று
உன்னோடு கலந்துபேச விரும்புகிறேன். இவ்வகையில் நீ எனக்குத் துணைபுரிந்து
இவ்வாறாக இந்த மணத்தை முடித்துவைத்தாள் இவள் என்று

நிலையாத இவ்வுலகத்தில் நிலைத்து நிற்கும் உன் புகழ்.

#55
மின்னல்கள் ஒளிர்ந்து பிரகாசித்துக் கொடியாய் ஓட, அதனிடையே பிளந்துகொண்டு செல்லும் மேகத்தைப் போல,
பொன் கம்பிகளைக் கூறுகளாக்கி அழகுற வகிர்களாக வகைப்படுத்திய நெறித்த கூந்தலில் ஒளிபெறச் சூடி,
கூந்தலைப் பிளந்து உள்ளே பொதித்துவைத்த மணம் கமழும் தாழம்பூவுடன், பூச்சரமும் சூடியுள்ள
இனிய முறுவலும், ஒளிவிடும் பற்களும், இனிப்பான மொழிகளும், பவளம் போன்ற சிவந்த வாயும் கொண்ட
நல்ல நெற்றியையுடையவளே! உனக்கு ஒன்று கூறுகிறேன், இப்போது கேட்பாயாக!
ஒருவன் என்னை நில் என்று நிறுத்தினான், நிறுத்திவிட்டு நெருங்கி வந்து,
என் நெற்றியையும், முகத்தையும், தோள்களையும், கண்களையும்,
என் சாயலையும், சொல்லையும் உற்று நோக்கினான், பிறகு சிறிது சிந்தித்து
நெற்றி மிகவும் தேய்ந்திருக்கிறது, ஆனால் அதும் பிறையும் இல்லை;

முகம் மாசற்று விளங்குகிறது, ஆனால் அது முழுமதியும் இல்லை;
தோள்கள் மூங்கிலின் தன்மையை நெருங்கியுள்ளது, ஆனால் அவை இருக்குமிடம் மலையும் இல்லை;
கண்களோ பூவின் தன்மையை நெருங்கியுள்ளன, ஆனால் அவை இருக்குமிடம் சுனையும் இல்லை;
மென்மையாக நடை பயிலுகின்றாள், ஆனால் இவள் மயிலும் இல்லை;
சொல்லோ மழலை போலத் தளர்கின்றது, ஆனால் இவள் கிளியும் இல்லை;
என்று
அப்படிப்பட்டவாறு பலவாறாகப் பாராட்டி, மெதுவாக,
வலையை விரித்துக் காத்திருக்கும் வேட்டுவர் போல, அவன் சொல்வலையில் நான் சொக்கிப்போவேன் என்று எதிர்பார்த்து,
கொடுமைக்காரர் போல நான் வருத்தமடையும்படி பார்த்து,
என்னைக் கையெடுத்துக் கும்பிட்டான், கையால் தொட்டுப்பார்க்கவும் செய்தான்,

அங்குசத்திற்கு அடங்காத கடும் களிறு போன்ற அவன்
என்னைத் தொழுவதும் தொடுவதுமாக இருந்தான்; அவனுடைய இந்தக் குணம்
அறிவின்மை ஆகிய குணமாகத் தெரியவில்லை, தோழியே!

#56
ஊரில் உயர்ந்து வளர்ந்த சோலையில், நீர் ஓடும் வாய்க்கால் ஓரத்தில் இருக்கும்
நிறைந்த நிழலையுடைய ஞாழலின் முதிர்ந்த பூங்கொத்துக்களைப் பறித்துக்கொண்டு
தலைமயிருடன் சேர்ந்துப் பின்னி வாரி முடித்த கூந்தல்
தோளின்மீது பூந்தாதுக்களோடு சரிந்து வீழ, நிறைத் திங்கள்
இனிய கதிர்களை விட்டது போல, முகம் மலர,
இங்கே வருகின்றவள் இவள் யாரோ? கொல்லி மலையில் ஒரு
வல்லவன் உருவாக்கிய கொல்லிப்பாவையோ? நல்ல அழகுள்ள மகளிரின்
உறுப்புக்களெல்லாவற்றையும் கொண்டு செய்யப்பட்டவளோ? ஆண்கள் மீதுள்ள வெறுப்பினால்
வேண்டிய பெண்வடிவம் கொண்டு வந்திருக்கும் கூற்றமோ? இவளுக்கு உரியவர் செய்த

கொடுமை இவளைத் தம் மனைக்குள் வைத்துக்கொள்ளாமல் வெளியில் விட்டது, பூங்கொடி போன்ற இயல்பும்
பல இழைகள் கொண்ட மேகலையும், சிறிய பூத்தொழில் நிரம்பிய ஆடையும் உடைய இவள், இந்த ஊரில் ஒரு
பிள்ளையில்லாதவர் பெற்ற ஒரே ஒரு மகள்;
இவளிடன் பேச்சுக்கொடுத்துப் பார்ப்பேன் இவளைத் தடுத்து நிறுத்தி!
நல்லவளே! கேட்பாயாக!
அழகிய தூவியினையுடைய அன்னமோ என்று கூறும்படியாக, அழகிய பெண்மயிலோ என்று கூறும்படியாக
கல்லுண்டு வாழும் புறா என்று கூறும்படியாகத் தோய்ந்து படிந்திருக்கும் உன் எழில் நலம்,
கண்டவர் காதல்கொள்ளும் மான் போன்ற பார்வையைக் கொண்ட இளம்பெண்ணே! உன்னைக் கண்டவரைப்
பேதலிக்கச் செய்யும் என்பதனை நீ அறிவாயோ? அறியமாட்டாயோ?
வளைந்து திரண்ட மூங்கிலோ என்று கூறும்படியாக, நுண் இழைகளால் செய்த மெல்லணை என்று கூறும்படியாக,

ஆர்ப்பரிக்கும் நீரின்மீதான அழகுத்தெப்பம் என்று கூறும்படியாக அமைந்த உன் பெரிய மென்மையான தோள்கள்,
வளைந்த முன்கையினையும் வெண்மையான பற்களையும் கொண்ட அழகிய நல்லவளே! உன்னைக் கண்டவர்க்கு
வருத்தும் தெய்வமாய் ஆகும் என்பதை நீ அறிவாயோ? அறியமாட்டாயோ?
முற்றிய கோங்கின் மொட்டு என்று கூறும்படியாக, முளைத்து வெளிவரும் தென்னங்குரும்பை என்று கூறும்படியாக,
மழைநீரின் எழும் மொக்குகள் என்று கூறும்படியாக, பெரியதாய் நிற்கும் உன் இளமையான முலைகள்,
மயிர் ஒழுகிய வரிகளையுடைய முன்கையையுடைய இளம்பெண்ணே! உன்னைக் கண்டவரின்
உயிரை வாங்கக் கூடியன என்பதனை நீ அறிவாயோ? அறியமாட்டாயோ?
என்று நான் கூற,
மனம் குழம்பியவளைப் போல், பிறருடைய வருத்தத்தை நீ அறியாதவளாய்
வேறொன்றும் கூறாமல் கடந்து போகின்றவளே! இப்போது கேட்பாயாக!

உன்மீதும் தவறில்லை; உன்னை வெளியே
போகவிட்ட உன் வீட்டார் மீதும் தவறில்லை;
தன் நிலையில் நிற்காத, கொல்லக்கூடிய யானையைக் குளிப்பாட்டச் செல்லும்போது செய்வதைப் போல்
பறை அறிவித்துச் செல்வது இல்லாமல் வெளியே செல்லவேண்டாம் என்று சொல்லாத
இறைவனே தவறுடையவன்.

#57
மூங்கில் என்று சொல்லும்படியான திரண்ட தோளினையும், மணங்கமழும் நுனிசுருண்ட கூந்தலினையும்,
மானின் பார்வையை ஒத்த மருண்ட பார்வையையும் கொண்டு, மயில் போன்ற சாயலில் நடமாடி,
அழகிய சிலம்பின் உள்ளிருக்கும் மணிகள் ஆரவாரிக்க, ஒளிர்ந்து பிரகாசிக்கும் அணிகலன்கள் கண்சிமிட்ட,
பூங்கொடி என்னும்படி, மின்னல் என்னும்படி, தெய்வப்பெண் என்னும்படி, யாதொன்றும்
கண்ணுக்குப் புலனாகாத இடையினில் கண்கள் விரும்பிச் சேர்ந்து ஓட,
வளம் பொருந்திய உயர்ந்த சிறப்பினையுடைய உன் தந்தையின் பழமையான அகன்ற மனையில்
இளமைத் துடிப்புடன் எறிபந்து விளையாடி நடை தளர்ந்து ஒதுங்கிச் செல்பவளே! இப்போது கேட்பாயாக!
குளிர்ந்த பூமாலையினையும், புலர்ந்த சந்தனத்தையுமுடைய பாண்டியனின் உயர்ந்த கூடல்மாநகரில்
தேன் பரவும்படி மலர்ந்த நீலமலரின் மலர்ச்சியை வென்ற உன் அமைதியான கண்கள்,

ஏந்திய கொம்புகளையுடைய எழில்மிக்க யானையுடைய பகைவரை நோக்கி அந்தப் பாண்டியன் எறிந்த வேலைக் காட்டிலும்
சிவந்து வருத்த இத் தன்மையுடையவளானாய், இது உனக்குத் தகுந்ததோ? சிறுக்கப் பேசுபவளே!
பொழிகின்ற மழை போன்ற கொடையினையுடைய பாண்டியனின் அசோகமரத்துக் குளிர்ந்த சோலையில் உள்ள
மிகுந்த அழகினையுடைய இளம் மாந்தளிர் போன்றவளே! உன் கண்கள் அதற்கும் மேலே,
கொட்டில்களிலிருக்கும் பாய்கின்ற குதிரைகளைப் பூட்டிய தேர்களையுடைய பகைவரின் மார்பில் பாய்ந்த
அம்புகளைக் காட்டிலும் துன்பத்தை மிகுதியாகச் செய்கின்றனவே! பொன்னாலான காதணி அணிந்தவளே! 
வகையாக அமைந்த குளிர்ந்த மாலையையுடைய பாண்டியனின் சிகரங்கள் உயர்ந்த பொதிகை மலையின் மேலிருக்கும்
அழகிய பூங்கொத்துக்களைக் கொண்ட இளைய வேங்கைப் பூவைப் போன்ற அழகுத்தேமலையுடையவளே!
மிகுந்த வலிமையையும், மிகுகின்ற மதநீரையுமுடைய, அந்தப் பாண்டியனின் யானையினுடைய கொம்புகளைக் காட்டிலும்
முனைப்பான கோபம் கொண்டனவாய் இருப்பது தகுமோ அந்த முத்துவடம் கொண்ட இள முலைகளுக்கு?

என்று
இப்படியாகக் கூற, கவிழ்ந்து நிலத்தைப் பார்த்து
நினைத்தவாறு நீண்ட நேரம் சிந்திப்பவள் போல், அங்கு
தனக்குத் துணையாக அமைந்த தோழியரைக் காணும் ஆர்வமுடைய கண்ணுடையவளாகி
தன் மனையை நோக்கிச் சென்றுவிட்டாள் என் அறிவைக் கவர்ந்துகொண்டு.

#58
வாரி முடிக்கப்பட்டு நுனி சுருண்ட கூந்தலும், வளைந்து இறங்குதல் கொண்ட நெடிய மென்மையான தோள்களும்
பேரெழில் வாய்ந்த மலர்ந்த மைதீட்டிய கண்களும், அழகிய பெண்மானைப் போன்ற பார்வையும்,
மழையை எதிர்கொண்ட தளிர் போன்ற மேனியும், அழகுபெற்ற சுடர்விடும் நெற்றியும்,
விழுந்து கூர்மையாக முளைக்கின்ற பற்களும், மொட்டுப்போல் இன்னும் விழாத பற்களும், கொடி போன்ற இடையும் உடையவளே!
செம்மையான சிலம்பின் உள்ளே உள்ள பரல்கள் ஆரவாரிக்க, வரிசையாய் வளையல்களை அடுக்கிய கையை வீசிக்கொண்டு
என் அருமையான உயிரையும் கவர்ந்துகொண்டு அதனை அறியாமற் போகிறவளே! நான் சொல்வதைக் கேள்;
நான் உயிருடன் இருக்கும் அளவுக்கு விட்டுவிட்டு, மீதி உயிரை எடுத்துக்கொண்டு, என் காமநோய் கைமீறிச் செல்ல
அதனை உன் இளமைச் செருக்கால் உணராமல் இருப்பது உன் தவறு இல்லையென்றாலும்,
யாராலும் களையமுடியாத நோயைச் செய்யும் உன் அழகினை அறிந்தும், அதற்கு அழகூட்டி, தம்முடைய

செல்வச் சிறப்பின் செருக்கால் உன்னைத் தெருவில் போகவிட்ட உன் வீட்டாரின் தவறு இல்லை என்பாயோ?
நான் நடை மெலிந்து தளர்ந்துபோக, ஒவ்வொருநாளும் என்னை நலியச்செய்யும் காமநோயை
உன் பேதைமையினால் உணராமல் இருப்பது உன் தவறு இல்லையென்றாலும்,
இடைநில்லாமல் இளைத்துக்கொண்டுபோகும் இடையையுடைய உன் உடல்கட்டமைப்பை அறிந்தும், அதற்கு அழகூட்டி, தம்முடைய
சொத்துச் சிறப்பின் செருக்கால் உன்னைத் தெருவில் போகவிட்ட உன் வீட்டாரின் தவறு இல்லை என்பாயோ?
துயரம் மிக்கு, மனம் அழிய, வருத்தி என்னைக் கொல்லுகின்ற காமநோயை
உன்னிடம் சொல்லினும் அறியாதிருப்பது உன் தவறு இல்லையென்றாலும்,
படிப்படியாகக் கொல்லாமல், விரைவாக உயிரைக் கவரும் உன் வடிவழகினை அறிந்தும், அதற்கு அழகூட்டி, தம்முடைய
செல்வச் சிறப்பின் செருக்கால் உன்னைத் தெருவில் போகவிட்ட உன் வீட்டாரின் தவறு இல்லை என்பாயோ?
என்று

கடிந்துகொண்டால், நான் கடிந்துகொள்வது உன் வீட்டாரை; நான் இந்த நோயைப்
பொறுக்கக்கூடிய அளவையும் மீறி இது பெரியதானால், பொன்னால் செய்த குழையினையுடையவளே!
இதற்குப் பதிலாக, இந்த ஊர் மன்றத்தில் மடலேறி
உன் மேல் நிலைநாட்டுவது போல் உள்ளேன் நான், நீ எய்தும் பழியை.

#59
முறுக்கு அவிழ்ந்து, அரும்புகள் உயர்ந்து நிற்கும் பசிய இலைகளைக் கொண்ட தாமரையின்
மொட்டுக்கள் நிமிர்ந்து நிற்பவை போல் முத்துக்கள் பதித்த திரட்சியையுடைய ஒளிவிடும் வளையலையுடைய,
மலைச் சரிவில் மணங்கமழும் மலர்ந்த காந்தளின் நுட்பமான அழகும் குளிர்ந்த எழுச்சியையும் உடைய வடிவினையுடைய
துடுப்பு என்று ஒப்புமை கூறும்படியாக உன் திரண்ட, தம்மில் ஒன்றாக அமைந்த, மென்மையான முன்கையினால்
ஒளி படரும் வேலைப்பாடு மிக்க மரத்தால் செய்த சிறு பானையாலும், பாவையாலும்
விளையாடுவதற்கு, உள்ளே பரல்கள் இட்ட அழகிய புனைந்த வேலைப்பாடு உள்ள
அழகிய சிலம்புகள் மேலெழுந்து ஆரவாரிக்க, அழகிய சில அடிகள் இட்டு நடக்கும் உன்னுடைய
பின்னல் விட்டு இருண்ட கூந்தலைக் கண்டு, என்னிடத்து இருக்கும் அறிவு முதலியன
என்னை விட்டுப் போகும்படியாகப் போகின்றவளே! இப்போது கேட்பாயாக!

நான் மயக்கமுற்றிருக்க, மனம் தடுமாற்றங்கொண்டு, இவனுக்கு என்ன நேர்ந்தது என்று கேட்கும்
அக்கறை இல்லை இவளுக்கு என்று அயலார் உன்னைப் பழிக்கும்போது
கூரிய பற்களையுடைய மகளிர் நடுவே, விதம்விதமான அணிகலன்கள் பொலிவுற்று விளங்க நீ
தை மாதத்தில் நீராடிய நோன்பின் பயனை அடைவாயோ?
தலைப்பாளை என்னும் தலைக்கோலம் உடையவளே! பொலிவிழந்து வாடும்படி இவனுக்குண்டான உள்நோய் என்ன என்று கேட்கும்
அக்கறை இல்லை இவளுக்கு என்று அயலார் உன்னைப் பழிக்கும்போது,
விளையாட்டுப் பெண்ணாய், பிறர் மனையில் பாடி நீ
இரந்து பெற்றவற்றைப் பலர்க்குக் கொடுக்கும் நோன்பு உனக்கு என்ன பயனைத் தரும்?
ஆய்ந்தெடுத்த தொடியினை அணிந்தவளே! மெல்லிதாகப் பெருமூச்சுவிட்டு, இவனுடைய உள்நோய் என்ன என்று கேட்கும்
வருத்தம் இல்லை இவளுக்கு என்று அயலார் உன்னைப் பழிக்கும்போது

ஒரு பாவைப்பிள்ளையைச் செய்து, அதனைப் பேணி, அதற்கு மணமுடிக்க விளையாட்டாகச் சோறு சமைத்து, நீ 
நறிய நெற்றியையுடைய தோழியருக்கு மகிழ்ந்து பரிமாறும் நோன்பின் பயன் உனக்கு வந்து பொருந்துமோ?
என்று
இவ்வாறெல்லாம் மனம் உளைந்தவனாக நான் உனக்கு உரைத்தற்காக,
செய்த கொடுமைக்கு நீ ஓர் உதவியைச் செய்யாது போனால், சிவந்த அணிகலன் அணிந்தவளே!
நீ செய்ததன் பயன் உன்னைப் பற்றாமல் விடாது,
உன்னை விரும்புவோரிடம் காட்டவேண்டிய அருளை நீ கைவிட்டால், அது உனக்குப் பயன்தருதலும் இல்லை.

#60
"அழகுத்தேமல் படர்ந்த வனப்பு மிக்க முலைகளையும், ஒளியியைக் கொண்ட நறிய நெற்றியினையும்,
மணங்கமழும் நறிய மாலையினைக் கொண்ட, மேகங்களும் விரும்பும் கரிய கூந்தலினையும்,
நுட்பமான அழகிய ஒளிவிடும் சிறு புள்ளிகளையும், மிகவும் சிறியதாக மெலிந்திருக்கும் இளமை ததும்பும் இடையினையும்,
வளைந்து இறங்குகின்ற, வளையல் அணிந்த முன்கையினையும், அழகு நிறைந்த அல்குலையும் உடையவளே!
கண் நிறைந்த அழகுள்ளவரை, திடீரென்று கண்டவர்களுக்கு
உள்ளே இருக்கும் காமநோய் மிகும்படி அவரின் உயிரைப் போக்கும் துயரைச் செய்தல்
பெண்தன்மை அன்று, அழகிய அணிகலன்கள் அணிந்தவளே! என்று கூறிக் கைகூப்புவான், கைகூப்பி
கண்கள் கலங்க நடுங்கினான், இனிமையாச் சிரிப்பவளே!
என்ன காரியம் செய்தான்? இவனொருத்தன் தன்னிடத்துள்ள

போரிடும் களிற்றைப் போன்ற தன்மை கெட்டு உள்ளுக்குள்
உருகுவான் போலிருக்கிறான், மனமுடைந்து";
"தெருவில் காரணமில்லாமல் கலங்குகிறவர்களைப் பார்த்து
மாற்றார் துயரத்தைத் தம் துயராகக்கொள்ளும் வாரணவாசிக்காரர்களின் குணத்தைப் பெறுதல் நமக்கு அயலானது,
நீ உன்மேல் அவற்றைக் கொள்வது எதற்காக?"
"பெரிதான முலைகளையும், ஆராய்ந்த அணிகலன்களையும் கொண்ட நல்லவளே! சடுதியில்,
பெரிதானதும், அமைதியானதுமான மைதீட்டிய கண்களையுடைய உன் தோழி எனக்கு அளித்த
பொறுக்கமுடியாத துன்பத்தைத் தரும் வேதனை என் உயிரை வாங்குகிறது,
இந்த நோய் தீரக்குடிய மருந்தை நீ எனக்கு அருள்வாய், ஒளிரும் வளையணிந்தவளே!
உன் முகத்தைக் காண்பதே எனக்கு மருந்தாகும் என்கிறான்,

உன் முகத்தை அவன் காணப்பெறுவதன்றி, சிறந்த
மருந்து வேறு ஒன்றும் இல்லையே! திருத்தமான அணிகலன்களை அணிந்தவளே!
நாம் என்ன செய்வது இனி?" "ஒன்றும் செய்ய முடியாது!
"உலக ஒழுக்கத்திலிருந்து மாறுபட்டு தெருவில் நின்றுகொண்டு ஒருவன்
கூறும் சொல்லை உண்மையென்று எடுத்துக்கொண்டு, அதன் தன்மையை உணராமல்
அவனை நம்பி எளிதாக ஏற்றுக்கொண்டுவிட்டோம் என்று சொல்லுவோம் நாம்";
"ஒருவன் நம்பொருட்டு உயிர்விடுதலும் எளிது என்று சொல்லிவிடுவோம்."
"கொஞ்சம் பொறு, இறக்கமாட்டான், இந்தச் சீர்கெட்ட ஊர்மக்கள் குசுகுசுவென்று பேசிக்கொள்வது பலரும் அறியப் பரவட்டும் என்று
நமது நாணத்தையும், நிறைவான குணங்களையும் விரும்பாதவனும் நல்ல குடியில் பிறக்காதவனுமாகிய இவன்'"
"உன்னுடைய பூண்கள் அணிந்த மார்பை நினைத்துக்கொண்டு தூக்கம் இல்லாமல் உன்மேல் ஆசைகொண்டு, நம் 

நட்பைப் பெரிதும் விரும்பித் திரிகின்றவனை, அவன் முன் சென்று
நம்முடைய நாணம் கெடுமாறு அவனைப் போகச் சொல்லுதல் அவ்வளவு நயம் உள்ளதல்லவே!"

#61
"ஏடி! பெண்ணே! இவன் ஒருத்தன்! என்னத்தை பெறுவான் இவன்? இவனுக்கு வந்த கேட்டைப் பார்!
தம் செல்வத்தை எல்லாம் இழந்து வறுமையுற்ற பண்பு நிறைந்தவர்கள்
தம் அல்லலைக் களையத்தக்க உறவினரிடம் சென்று
சொல்லத் தொடங்கி ஒன்றும் சொல்லமாட்டாதவராய் நிற்பது போல
பல முறையும் திரும்பித் திரும்பி என்னைப் பார்க்கிறான்! ஆனால் நான் அவனை நோக்கிப் பார்த்தால்
மெதுவாகத் தலையைத் தாழ்த்திக்கொள்கிறான்!"
"ஏடா! நீ உன் எண்ணத்தால் ஏதோ ஒன்றைக் கூறவிரும்புவது போல் காட்டிக்கொள்கிறாய்!
உன்னைவிட்டுப் பிரியாத நிழல் போல என் பின்னே திரிகிறாய்!
என்னிடம் நீ பெறாத குறை இது என்ன?"

"சொன்னால் மறுக்கமாட்டாளோ இவள்?
முகம் வேறுபடாமல், தம்மிடம் ஒன்றை வேண்டி நின்றவர்க்கு அதனைக் கொடுக்க இயலாமல் வாழ்வதைக் காட்டிலும்
உயிரிழந்து போவதும் நல்லது அல்லவா!"
"இவளுடைய தந்தை அன்புடன் யார்க்கும் வேண்டியதைக் கொடுப்பவர், சிறந்த பொருள்
எதனை நீ வேண்டுகிறாய்?"
"பேதையே! பொருள் வேண்டும் இழிநிலை இங்கில்லை, உண்மையில்
மருண்டு நோக்கும் மடப்பம் மிக்க பார்வையையுடைய உன் தோழி என்னை
அருள்கொள்ள வேண்டுகிறேன் நான்";
"அம்மாடியோ! நெருங்கித்தாக்கும் போரில் பகைவரைக் கொன்ற களிற்றினைப் போன்றவன், தன்னை ஒரு
பெண்பிள்ளை அருள்செய்யவேண்டும் என்று வேண்டிக்கிடக்கும் நிலைதான் என்ன?"

"ஒளிரும் வளையல்களை அணிந்தவளே! வெட்கம் இல்லாதவன் இவன்!
எனினும், ஏஏ என்று
பலரும் சிரித்து இகழ்கின்ற மடல்மாவில் ஏறி
செல்வம் கொழிக்கும் இவளின் ஊரின் நடுவில் வந்து நிற்பேன், நறிய நெற்றியையுடையவள்
எனக்கு அருள்தராமல் என்னைப் புறக்கணித்தால் என்று கூறிச் செல்கின்றவன், நாம்
இகழ்ந்து சிரித்தாலும் திரும்பத் திரும்ப வருகின்றவன், இடையிடையே
உன்னை ஒரு கள்ளப்பார்வையையும் பார்த்துக்கொள்பவன், தான் எண்ணியதை
அடையாமல் போகாத குணம் உடையவன், எம்முடைய தந்தையின்
உள்ளம் குறைபடாதபடி".

#62
"ஏ! இவன் ஒருவன்! வெட்கம் இல்லாதவன்! தன்னுடைய
விருப்பத்திற்கு இணங்கமாட்டோம் என்று சொல்வாரையும் விரும்பிக் கையினைப் பற்றிக்கொள்வான்";
"விரும்புவது விரும்பாததும் ஆகிய எல்லாம்
உனக்குத் தெரியும், நான் அதனை அறியமாட்டேன், பூக்கள் நிறைந்த
மெல்லிய கொத்து நீங்காத கொடியைப் போன்றவளே! உன்னை நான்
தழுவுவது எனக்கு இனிமையாய் இருப்பதினால் உன்னைத் தழுவினேன்"; "ஏடா!
தமக்கு இனிமையானது என்று வலியப்போய் பிறர்க்குத் துன்பம்
செய்வது நல்லதாகுமோ?"
"ஒளிவிடும் வளையணிந்தவளே! போற்றிக் கடைப்பிடிக்காமல் கைவிடுவாயாக உன் அறிவு முதிர்ச்சியை, கவனமாகக் கேள்,

நீர்வேட்கையுள்ளோர்க்கு இனிப்பதனால்தான் அன்றி நீருக்கு இனிக்கும் என்று
குடிக்கிறார்களோ நீரைக் குடிப்பவர்கள்?
நான் செய்வது இன்னதென்று அறியேன், வேறு என்ன செய்வேன்?
ஐந்து வாய்களைக் கொண்ட பாம்பின் பார்வையில் அகப்பட்டு வருந்தி,
மாசற்ற திங்கள் போன்று விளங்கும் முகத்தையுடையவரை
வற்புறுத்திக் கவர்ந்துகொள்வதுவும் அறமே என்பது கண்டதில்லையா?"
"அறவழியும் அது என்று கண்டு, உலக ஒழுக்கமும் அப்படியானால், தன்னை அடக்கும் திறன் இன்றி
நாம் கூறுவதை கேளாதவனாய் அவன் வருந்துகிறான், முற்பிறப்பில் நாம்
வேறாக இருந்ததில்லை என்றொரு நிலை இருந்தால், அவனோடு
மாறுபாடு உண்டோ, நெஞ்சே நமக்கு?"

#63
"பார்க்கும்போது நம்மைப் பார்த்துத் தொழுகின்றான், அதனைப் பிறர் காண்பாரே
என்று சற்றும் ஆராய்ந்துபாராதவன், ஊரார் பழி தூற்றுவர் என்று அவனை விலக்கி,
அவனை நீக்கினால், அவ்வாறு நீக்குவதால் தனக்கு ஏற்படும் வருத்தத்தை நினைந்து போகாமல் இருப்பான், மேலும், நாம்
அவனை இங்கு வராமல் காப்பது இயலாது, இனிமேல்,
ஏடி! என்ன செய்யலாம்?
பூங்குழையை அணிந்தவளே! வருந்துகின்ற அவன் அருகே, உன்னைக் கூவிக்கூவி அழைத்து
வேண்டுமென்றே நான் கொண்டுபோய் விடுவது போல் செய்கின்றேன், என் தோள் மேல்
கரும்பினை வரைவதற்கான தொய்யில் குழம்பைக் கொண்டுவரச் செல்பவள் போல் செல்கிறேன், அங்கு வந்து இங்கேயே
இருக்கின்றாயோ என்று அங்கே இருந்துகொள்,

அவன் உன் திருத்தமான பாதங்களில் விழுந்து உன்னிடம் வேண்டிக் கேட்பான், அவனது நோயைத் தீர்க்கும்
மருந்தே நீயாக இருப்பதால்;"
"வாடி வா! இன்னமும் ஒருமுறை அவனிடம் சென்று உன் விருப்பப்படி நடப்பதை தன் கடமையாகக் கொண்டு உனக்கு உடன்பட்டாள்
என்று சொல்லாமல் இருக்க என் தலையிலடித்துச் சத்தியம் செய்துதா!"
"அப்படியா! முழுவதையும் சொல்கிறேன். கேள்,
உன்னோடு கலந்து பேசிக்கொண்டிருந்தபோது நீயும் காலால் நிலத்தைக் கிளறியவாறு நின்றாய்,
அவ்வாறு என்னோடு நிற்பது உனக்கு எளிது அன்றோ! வேண்டுமானால் அவனுடன்
தான் சென்று நின்றுவிடேன்!"

#64
"உன் அழகான முகம் மதியைப் போன்றிருக்க, அந்த மதியை மிகவும் பொருந்தியிருக்கும்
கரிய மேகங்கள் மாணிக்க அணி விளங்கும் பின்னின கூந்தலைப் போன்றிருக்க, அந்தப் பின்னலிடத்தே
விரிந்த நுண்ணிய நூலால் கட்டிய ஈரமான இதழ்களையுடைய பூக்கள்,
பின்னலைப் போன்ற கருநாகத்தின் கரிய நிறத்தினின்றும் மாறுபட்ட கார்த்திகை மீனின் அழகைப் போன்றிருக்க,
பார்த்தவர்களைக் கொடிய துன்பத்தில் ஆழ்த்துவதைப் போல் அசைகின்ற
விரிந்து தழைத்த கூந்தலையுடையவளே! ஆராய்ந்து பார்! எனக்குப்
பெரும் பொன் கொடுக்கும் கடன்பட்டாய், முன்னொரு காலத்தில், அதாவது, என்னால் மிகவும் பொலிவு பெற்றாய்!"
"ஏ! ஏடா! சொல்வதைப் பார்! இவனொருத்தன்! என் தோளில் தொய்யில்
எழுதிச் சென்றது உண்மையே! அதற்குப் பெரும் பொன்னைக் கடன் பட்டோம், அதாவது பெரிதும் பொலிவுற்றோம்,

என் முலையால் உன் மார்பை உழுதிருக்கின்றேனா நான்?"
"உழவும் செய்தாயே!
வண்டுகள் ஒலிக்கும் பூக்களைக் கொண்ட மாலையையுடைய அழகிய நல்ல பெண்ணே! நான் உனது
திருத்தமான அணிகலன் அணிந்த மென்மையான தோள்களில் வரைந்த, இதோ இங்கிருக்கிற,
கரும்புப் படங்கள் எல்லாம் உன் உழவினால் உண்டானதன்றோ? அத்துடன்
குற்றமற்ற பொலிவினையுடைய முகத்தைப் போன்று மலர்ந்த
குவளைக் கண்களின் மலர்ச்சியும் உன் உழவினால் உண்டானதன்றோ? போட்டிபோட்டுக்கொண்டு
முல்லை முட்டோடு மாறுபடுகின்ற பற்களையுடையவளே! இவை அல்லாமல்
வேறு என்னத்தை உழப் போகிறாய், இனி?"
"ஏடா! என்னுடைய நல்ல தோளில் வரைந்த கரும்புக்கு நீ சொன்னது சரி!

முற்றின அழகையுடைய நீல மலர் என்று கூறும்படியாக, வருத்தமுற்ற,
கத்தியினால் பிளந்த மா வடுவைப் போன்ற மைதீட்டிய கண்களுக்கெல்லாம்
பெரும் பொன்னிறம் உன்னால் ஏற்பட்டது என்பாயோ? இப்பொழுது!"
"நல்லவளே! தோழியே! இதைக் கேள்!
இங்கே, அரசனோடு சேர்ந்த ஒருவன் அவன் பொருளை நுகர்ந்து, முன்னேற்ற நிலையை அடைந்தால்,
அதன் பயனை அந்த அரசனே கொள்வது போல பல பயன்களையும் நான் எய்துவேன்."
"அப்படியே ஆகட்டும்"; "அப்படியாக இல்லாவிட்டால், வேங்கைப் பூவின்
முற்றின அழகைக் கொண்ட, அழகுத் தேமல் படர்ந்த, பூண் அணிந்த மார்பினால்
பொய்யாகவேணும் ஒரு முறை என்னை தழுவிவிட்டுச் செல்வாயாக!
முத்துப்போன்ற முறுவலையுடையவளே! என்னால் நீ பெற்ற பொன் கடனான பசலை அனைத்தையும்

முற்றிலும் அகற்று எறிந்துவிடுவதற்கு".

#65
திருத்தமான அணிகலன்கள் அணிந்தவளே! கேட்பாயாக! நம் ஊர்மக்கள் எல்லாரும் சிரிப்பதற்கு ஏற்ற
பெரிய சிரிப்பைத் தரும் நிகழ்ச்சி நேற்று நடந்தது; ஒரே நிலையில்
உலகம் எல்லாம் உறங்கிவிட்ட இருட்டான நள்ளிரவில்,
அழகிய துகிலால் போர்த்திய போர்வையை அழகுபெறப் போர்த்திக்கொண்டு, நம்முடைய
இனிய வனப்புள்ள மார்பினனாகிய தலைவனின் சமிக்கையை எதிர்பார்த்து நான் நின்றிருக்க,
முற்றிலும் மொட்டையான தலையும், மேலே பொத்திய துணியும் உடையவனாய்
கரும் குட்டநோயால் கையும் காலும் குட்டையாகி, உடல் முழுதும் அழுக்கேறியவனாய் வந்து நம்
சேரியைவிட்டுப் போகாத முடமுள்ள வயதான பார்ப்பானை,
"தோழியே! நீ பேணுவாயாக" என்று சொல்வாயல்லவா! அவன் அங்கே

என்னைப் பார்த்து, குனிந்து, பணிந்து, "நேரங்கெட்ட நேரத்தில்
இங்கு நிற்கின்ற நீர் யார்" என்று கூறி, மெதுவாக,
வைக்கோலைப் பார்த்த வயதான மாட்டைப் போல என் பக்கத்திலிருந்து போகாமல்
"பெண்ணே, வெற்றிலைபாக்கு போடுகின்றாயோ?" என்று தன்
பையினைத் திறந்து "எடுத்துக்கொள்" என்று தந்தான்; நான் ஒரு வார்த்தையும்
சொல்லாமல் நின்றிருந்தேன்; அவன் சட்டென்று விலகிப்போய், முந்தைய நிலையிலிருந்து மாறி,
"என் கையில் அகப்பட்டுக்கொண்டாய், சிறுமியே நீ! நான்
மற்றொரு பிசாசு, என்னிடம் அன்புகொள், என்னை வருத்த நினைத்தால்
இந்த ஊரார் இடும் பலியை நீ பெறாமல் நான் எடுத்துக்கொள்வேன்"
என்று பலவாறாகப் பொறுக்கமுடியாதபடி வாய் பிதற்றி நிற்க,

அந்த முதிய பார்ப்பான் அஞ்சிவிட்டதை அறிந்து, நான் நிலைமையை நீடிக்கவிடாது,
ஒரு கையில் மணலை வாரி எடுத்து அவன் மேல் வீசியெறிவதைக் கண்டு
அவன் மிகவும் கதறிக்கொண்டு ஓலமிடத்தொடங்கினான் அங்கு;
அடக்கமுடியாத வலிமையினையும், வளைந்த வரிகளையும், கொடிய குணமும் கொண்ட
பெரிய புலியைப் பிடிப்பதற்கு விரித்த வலையினில், ஒரு
ஒன்றிற்கும் உதவாத குள்ள நரி மாட்டிக்கொண்டதைப் போல், காதலனுடனான
சந்திப்பு கெடும்படியாகவும், நம் ஊருக்கெல்லாம்
பெரும் பேச்சாகவும் ஆகி முடிந்துபோனது, என்றைக்கும் தனக்குத்
தொழிலாகக் கொண்ட முதிய பார்ப்பானின்
காம வேட்கை என்னும் பெரிய கேலிக்கூத்து!
* மூன்றாவது மருதக்கலி

#66
பெருகுகின்ற நீரில் மலர்ந்த குவளை மலரை விற்பவர், தாம் வயலில் பிடுங்கித்
தலையில் கொண்டுவந்த மலர்களைச் சூழ்ந்துகொண்டு வந்து ஊருக்குள் புகுந்த இசைக்கும் வண்டுக்கு,
ஓங்கி உயர்ந்த அழகிய யானையின் மிகுதியான மதநீரிலிருந்து கமழும் மணத்துடன்
அங்கிருக்கும் வண்டுகள் விருந்தளிக்க, அதனை உண்டு பகலில் தங்கி, இரவில்,
புடைத்து இறங்கும் தோள்களில் உள்ள தொடிகள் அழுத்தி வடு ஏற்படுத்தும் வண்ணம் தாம் விரும்பினவரைக் கூடின மகளிரின்
தேன் மணக்கும் கூந்தலினுள்ளே இருக்கும் அரும்பாயிருந்து மலர்ந்த நறிய முல்லை மலரில்
பாய்ந்து தேன் குடித்துத் தன் பசி தீர்ந்து முன்பு தாம் இருந்த
பூக்களையுடைய பொய்கையை மறந்து அதனை நினையாத நீர்வளம் மிக்க அழகிய நல்ல ஊரினைச் சேர்ந்தவனே!
தலையணை போன்ற மென்மையான தோள்களைக் கொண்ட நாம் வருந்தியிருக்க, நீ விரும்பும் துணையைக் கூடி, நீ

மணக்கோலம் பூண்ட அந்த மனையில் இருக்கின்றாய் என்று உனக்குக் கிடைத்த பெரும்பேச்சைக் காட்டிலும் சிறந்ததன்றோ,
சிறப்பில்லாத இரைச்சலுக்கிடையே, பூமாலையை அணிந்துகொண்டு பொலிவுற்றிருந்த உன்
பரத்தையருடனான திருமணத்தினால் கமழ்கின்ற மணத்தோடு இங்கு வர, அதை விடியற்காலத்தில் நான் பெற்றது?
மேனியெல்லாம் கொதிக்கின்ற நோய் என்னை மேற்கொள்ள, நீ அந்தப் பொற்குழை அணிந்தவரோடு
புனலாட்டு ஆடுகின்றாய் என்று வந்த பேச்சொலியிலும் பெரியதன்றோ,
உன் மாலையை அவள் வாங்கிக்கொள்ள, தடுமாற்றத்துடன் அவளின் தலைமாலையைத் தான் அணிந்துகொண்டு, உன்
ஈரமான ஆடையைக் கூடக் களையாமல் எம் இல்லத்தில் வந்து நிற்பது?
எம்மைவிட்டுப் பிரிந்துசென்றதோடு நில்லாமல், நீ அந்த உறுதியற்ற மனம் கொண்டவரோடு
துணங்கைக் கூத்து ஆடுகின்றாய் என்று வந்த பெரும்பேச்சையும் மிஞ்சியது அன்றோ,
ஒளிவீசும் நெற்றியினராகிய பரத்தையருடன் ஒரே ஆடையில் மகிழ்ந்திருந்த உன்

காம வேட்கை சிறிது தணிய, இங்கு வந்த காட்சியின் அழகைக் காண் நேர்ந்தது.
என்று நாங்கள் காணும்படியாக,
உம் கருணையைப் பெற்றுக்கொண்டோம்! நீயும் எமக்கு அருள்செய்தாய்! சற்றும் குறையாமல்
நீ நாட்டம்கொண்டவரிடம் செல்வதையே விரும்பிய உன் பாகனும்
இங்கே நீண்ட நேரம் இருந்துவிட்டாய் என்று செலுத்த முற்படுவான்; உன் விரைவாகச் செல்லும் திண்ணிய தேர்
அவிழ்த்துவிடாமல் நிறுத்தியுள்ளது.

# 67
கார்காலம் முதிர்ந்து, பூங்கொத்துக்கள் மலர்ந்து கமழ்கின்ற இதழ்களையுடைய பூக்களை மேலே பரப்பிக்கொண்டு,
புகழ் மிக்க புலவர் வாயால் சிறப்பெய்தி, நிலமகளுக்கு
மாலை சூடியது போல அழகைப் பூத்துக்கொண்டு வரும் வையை, தன்
நீரினால் சூழ்ந்துகொண்டு மதிலுடன் போதுகின்ற பகையே அன்றி, பகைவர்
போருக்காக வளைத்துக்கொள்வது என்ற ஒன்றை அறியாத மதில்கள் சூழ்ந்த நீரையுடைய ஊரினன்,
நன்கு பொலிவுபெற்ற அழகுள்ள மைதீட்டிய கண்களையுடைய பரத்தையர் தம்முடைய மாலையால்
அடித்து வருத்திய புண்ணின் வடுவைக் காட்டிக்கொண்டு, அன்பு சிறிதும் இல்லாமல் இங்கு வந்தால், ஏடி!
பிணக்கம் கொள்வேன் நான் என்று கூறுவேன்; அப்படி இருக்கையில், அவனைக் கண்டவுடன்
பிணையக் கலக்கலாம் என்று கூறுகிறது இந்தச் செயலற்றுப்போன நெஞ்சம்;

வளைந்துயர்ந்த அழகிய அகன்ற அல்குலையுடைய கொடியைப் போன்ற பரத்தையரின் முலையில் மூழ்கி
பூசப்பட்ட இடத்தில் அழிந்துபோன சந்தனத்தையுடையவன் பண்புகெட்டுப்போய் இங்கு வந்தால், ஏடி!
ஊடல் கொள்வேன் நான் என்று கூறுவேன்; அப்படி இருக்கையில், அவனைக் கண்டவுடன்
கூடித் துய்க்கலாம் என்று கூறுகிறது இந்தக் கொள்கையில்லாத நெஞ்சம்;
இப்பொழுது புதிதாகச் சேர்த்துக்கொண்ட, அழகினையுடைய பரத்தையரின் ஒளிவிடும் பற்கள் அழுத்தியதால்
மிகவும் சிவந்துபோன வடுக்களைக் காட்டிக்கொண்டு வெட்கம் இல்லாமல் வந்தால், ஏடி!
சினந்து கொள்வேன் நான் என்று கூறுவேன்; அப்படி இருக்கையில், அவனைக் கண்டவுடன்
தன் போக்கில் சென்று தானாக இணங்கிவிடுகிறது இந்தத் தனித்தன்மை இல்லாத நெஞ்சம்;
என்று
பிறையைப் போன்ற அழகிய நெற்றியையுடையவளே! தாம் நினைத்தவை எல்லாம்

முடியப்பெறுதல் இயலுமோ? துணையாக இருக்காமல், 
கூட இருந்தே குழிபறிக்கும் நெஞ்சினை உடையவர்க்கு.

# 68
இந்த உலகம் பொதுவானது என்ற பேச்சே பிறர்க்கு இல்லாமல் உலக முழுதும் ஆளும் மா மன்னர்க்கு
அறிவு நிறைந்த அறவுரைகள் கூறும் இயல்புள்ள அமைச்சர்கள் போல, நூல் வல்லார்
பொல்லாத சொற்கள் இடையில் புகாமல் விலக்கிய தம் செவிகளே விளைநிலமாக,
முன்னுள்ள சான்றோரின் செய்யுள்கள் தம் சொல்லை வளர்க்கும் நீராக, அறிவுடைய நாவாகிய ஏரால் உழும் புலவரின்
புதிய கவிகளைக் கூட்டாகக் கேட்டு நுகரும் மதில் சூழ்ந்த நீரையுடைய ஊரினனே!
தலைவன் நமக்கு மட்டும் ஆதரவாக இருப்பவன் அல்லன் என்று ஒருவர் போல் ஒருவர் பேசாமல்,
ஒரு பெரிய ஊரில் குடிவைக்கக்கூடிய அளவு திரண்டிருந்த உன் சேரிப் பரத்தையருக்குச் சமமாக,
உன்னைக் காணாத கலக்கத்தைக் களைந்து, நீ வரச்சொன்ன இடத்துக்கு வந்து, எம் கதவை அடைந்து தட்டிய கைகளின்
வளையல் ஓசையால் தம் வருகையைத் தெரிவிப்பதை வழக்கமாகக் கொள்ளும் அந்தப் பரத்தையரை நொந்துகொள்வோமோ?

நம் தலைவன் நமக்கு உறவுடையவன் அல்லன், அவனை அணுகாதீர்கள் என்று சொல்லிவிட்டு, அவனை அடையத் துடிக்கும்
தோள்களொடு பகைகொண்டு நினைவிழந்து வாடும் நெஞ்சினையுடைய நாங்கள்!
தன்னோடு ஊடல்கொண்ட பெண்ணின் அழகு குன்றும்படி அவர்களை இடையன் கொன்ற மரமாய் ஆக்கிவிட்டுப் பரத்தையரின்
காமத்தைத் தணிக்கும் அவன் மார்பு என்று எழுந்த ஊரார் பேச்சை நொந்துகொள்வோமோ?
பூவின் மொட்டின் தன்மை வாய்த்த முலைகள் அழுத்துவதால் குழைந்துபோன உன் மாலை எம்மை இகழ்ந்துநோக்க,
சிறப்பாகக் கட்டப்பட்ட பூக்குடலையின் உள்ளேயே தங்கிப்போன மாலையைப் போன்ற நாங்கள்;
சேரிதோறும் சென்று நீ இருக்கும் வீட்டைக் கேட்டறிந்துகொள்பவனாய்த்
தேரோடு சுற்றித்திரியும் பாகனையே பழிப்போமா?
ஆரவாரிக்கும் பேரொலியுடன் நீ மணம் செய்கின்ற வீடாகக் கருதி எம்முடைய வீட்டில்
பொலிக பொலிக என்று கூறிக்கொண்டு புகுந்த உன்னுடைய புலையனான பாணனைக் கண்ட நாங்கள்;

எனவே,
உண்மையில் உன் மனம் வேறிடத்தில் இருக்கும் நீ விரும்பாத முயக்கத்தை
நீ எப்போதாவது நம் மனைக்கு வரும்போது பெற்று மகிழ்ந்து, பின்னர் என் தோள்கள் வாடிப்போக,
இவனும் இவளும் இவ்வாறு ஆகிவிட்டனரே என்று கூறக்கேட்டு, பழைய நிலையை அடைய விரும்பி ஏக்கம் கொண்டும்,
கனவில் கிடைக்கப்பெற்ற செல்வம் விழித்தவுடன் இல்லாமற் போவதைப் போன்றதே,
ஐயனே! எனக்கு உன்னுடைய மார்பு.

# 69
மலரும் தருவாயிலிருக்கும் மொட்டுக்கள் கட்டவிழும் குளிர்ச்சியான பொய்கையில் புதிதாக முறுக்கவிழ்ந்த 
பூந்தாதுக்கள் சூழ்ந்த தாமரையின் தனித்த மலரைப் புறத்தே சேர்ந்து,
விருப்பங்கொள்ளும் மண நாளில் மண ஆடைக்குள் முகத்தை மறைத்துக்கொண்ட,
காதல் கொண்ட மானைப் போன்ற பார்வையினையுடைய பெண் தன்னுடன் கூடவர,
வேதம் ஓதுதலையுடைய அந்தணன் தீயினை வலம் வருவதைப் போல,
அழகிய இறகுகளைக் கொண்ட அன்னம், தன் அழகிய நடையுள்ள பெடையோடு
பெருமிதம் தோன்றச் சுற்றிவரும் மிகுந்த நீர்வளம் கொண்ட நல்ல ஊரினனே!
தெளிந்த பரல்களையுடைய சிலம்பு ஒலிக்க, தெருவில் பார்வையால் உன்னைத் தாக்கி, உன்
உள்ளத்தைக் கவர்ந்துகொண்டு பின் கைவிட்டவளை, உன் வருத்தத்தைச் சொல்லி அழைத்துக்கொள்ளக் கருதி நின்றாய்!

இவ்வாறு நினைத்து வந்தது வேறொன்றாய் இருக்க, இவள் திடங்கொண்ட மனத்தினள் அல்லள் என்று
பணிபவனைப் போல வந்து இங்கு பயனற்ற சொற்களைச் சொல்கிறாயே!
உன் உள்ளம் கவர்ந்தவள் இருக்குமிடம் தெரியாமல், உன் பாகனைத் தேரோடும்
அனுப்பி, அவளின் வருகையை எதிர்நோக்கி உபசரித்து வரவேற்கக் காத்து நின்றாய்!
இவ்வாறு நெஞ்சத்துள் பிற எண்ணங்களை வைத்துக்கொண்டு, இவள் உறுதிப்பாடான மனத்தினள் அல்லள் என்று
வஞ்சகமாய் வந்து இங்கு என் மனவலிமையை வருத்துவாயோ!
மலர்க்கொத்துக்கள் செறிந்த குளிர்ந்த சோலையில் நீ சொல்லியபடி உன் குறிப்பிடத்துக்கு வந்தவளைப்
புணர்ந்து பாராட்டியதோடு அங்குப் புனலாடி மகிழவும் பண்ணினாய்!
உன்னுடைய வெற்றிப் பெருமிதம் இவ்வாறு வேறு விதமாக இருக்க, இவள் தனக்கெனப் பெருமிதம் இல்லாதவள் என்று
பெருமையினால் வந்து இங்கு பேசிக்கொண்டிருக்கிறாயே!

என்று
இறுமாப்புக்கொள்ளமாட்டோம், பெருமானே! உன் அன்பினால் விருப்பமுற்றுத்
தாழ்ந்தவன் போல் வந்து தகுதியில்லாதவற்றைச் செய்யாதே!
நீ எண்ணியதை முடித்து, மேலும் எம்மையும் எண்ணிப்பார்ப்பாய்,
நீ விரும்புபவரின் விருப்பம் தீர்ந்துவிட்டபோது.

# 70
பல மணிகளின் நிறங்களில் பூத்த மலர்களையுடைய பொய்கையில் மகிழ்ந்து விளையாடிக்கொண்டிருந்த ஓர் அன்னம் தன்
அழகு மிக்க சேவலை அகன்ற ஓர் இலை மறைத்ததாக,
திடுக்கிட்டு அதனைக் காணாது கலங்கி, அந்த இளம் பேடை
திங்களின் நிழலை நீருக்குள் கண்டு, அதனைத் தன் சேவல் என்று மகிழ்ந்து விரைந்து சென்று,
அதை நெருங்க, அப்பொழுது தன் எதிரே வந்த தன் துணையைக் கண்டு மிகவும் நாணி
பல மலர்களின் ஊடே புகுந்துகொள்ளும் நீர்நிலைகளைச் சேர்ந்த ஊரனே! கேட்பாயாக!
எம்முடைய அழகெல்லாம் எம்மைவிட்டு நீங்க, எம்மைத் துறந்து எம்மிடம் அருள்செய்யாமல் நீ சென்றுவிட்டதால்,
பல நாட்களாய் தூங்காத கண்கள் ஒருநாள் படுக்கையைச் சேர்ந்து இமைமூடிக்கொள்ளும்;
துணை மாலை கொண்ட மலர் மாலை அணிந்த பரத்தையர் கொண்டாட, ஒவ்வொருநாளும் ,

மணவீடுகளில் முழங்கும் உன் மண முழவின் ஓசை வந்து அத் தூக்கத்தைக் கலைக்கும்;
முற்றிலும் எம்மைவிட்டு நீ துறந்துசென்றதால், ஓயாமல் அழுகின்ற மைதீட்டிய கண்கள், எம்
புதல்வனை அணைத்துக்கொள்ள, ஒன்றுசேர இமைமூடிக்கொள்ளும்;
உனக்கு ஏற்ற நலம் மிக்க பரத்தையரை உன் மனையில் கொண்டுவந்து, உன்
சுற்றத்தார் பாடும் துணங்கைக் கூத்துப் பாடலின் ஆரவாரம் வந்து அத் தூக்கத்தைக் கலைக்கும்;
வீட்டிற்கே வராமல் நீ எம்மைத் துறந்துசென்றதால் வருந்திய எமக்கு 
நீர் சொட்டும் மலர் இதழ்களைப் போன்று காய்ந்துபோகாத கண் இமைகள் சிலநேரம் கூம்பிப்போய் இமைமூடிக்கொள்ளும்;
அழகிய அணிகலன்கள் அணிந்த நலம் மிக்க பரத்தையரை உன் மனையில் கொண்டுவரும், உன்
தேரில் பூட்டப்பட்ட உயர்ந்த நல்ல குதிரைகளின் தெள்ளிய மணியோசை வந்து அத் தூக்கத்தைக் கலைக்கும்;
எனினும்,

தோற்று ஒளிந்துகொண்டிருக்கும் அரசனின் காதில் வெற்றிகொண்டவனின் விடிகாலை முரசொலி போல்
உன் மணமுரசும், துணங்கைக் கூத்தும், குதிரை மணியும் என் துயிலைக் கலைக்கட்டும்; உன் பரத்தையர்
வீடுகளில் வாசித்த யாழினைத் தழுவிக்கொண்டு அந்த அறிவில்லா வாயையுடைய
பாணன் இந்த வீட்டுக்குள் புகாமல் இருக்கும் மட்டும்!

# 71
விரிகின்ற கதிர்களையுடைய இளஞாயிறு அகன்ற விசும்பில் எழுந்து மேலே வர
மொட்டுக்களின் முறுக்குண்ட தலைகளிலுள்ள கட்டுகள் அவிழ்ந்த பூக்கள் இருக்குமிடத்தில் ஒன்றுகூடி நுகர்ந்து
வரியினையுடைய வண்டுகள் அந்தப் பூக்களின் மேற்புறத்தைச் சூழ்ந்துகொள்ளும் வளம் பொருந்திய பொய்கையில்,
சினத்தின் மிகுதியால் விழுகின்ற கண்ணீர் அறலாய் ஒழுக,
இனிய, அமைதலான காதலன் கெஞ்சி மன்றாடி, தன் காலைப் பிடித்து
மிக விரைவாக அருள்செய்ததால் சிறிதே மகிழ்பவளின் முகம் போன்று
நீர்த்துளிகள் ஒருபக்கம் சொட்டுச்சொட்டாய் வடிய, பசிய இலைகளைக் கொண்ட தாமரையின்
தனியான ஒரு மலர் தன் தளைவிட்டு மலரும் குளிர்ந்த துறையையுடைய நல்ல ஊரினனே!
உன் ஒருத்தியைத் தவிர வேறு பெண்டிர் அவனுக்கு இல்லை என்று சொல்லித்

தேரின் மேல் சத்தியம் செய்த பாகன் இங்கு வரமாட்டானோ,
ஒரு வீடு நிறைய தான் கொண்டுவந்து சேர்த்த பரத்தையர் ஊடலில் ஏற்படுத்திய நகக் குறிகள்
பலரும் காணப் பரவிக்கிடக்குமாறு அவர்களைக் கூடிய உன் பரத்தமையைக் காண்பதற்கு?
எனக்குள்ளே வைத்துக்கொண்டு அவன் போகுமிடங்களை உன்னிடமிருந்து மறைக்கமாட்டேன் என்று தன் யாழைத்
தொட்டுப் பலவாறாகச் சூளுரைத்த பாணன் இங்கே வரமாட்டானோ,
அந்தப் பொய்யை நம்பி, அவனது பொய்யைப் பலமுறை அனுபவித்தவர்களைக் கூடிய உன் கழுத்திலுள்ள
கையில் எடுத்துக்கொள்ளலாம் போன்று இருக்கக்கூடிய வளையல்களின் வடுக்களைக் காண்பதற்கு?
என்னைவிட்டுப் பிரிந்து சென்றுவிட்டாய் என்று கேட்டும், உன் தவறுகளை எண்ணிப்பார்க்காமல், என்னிடத்தில் உன்
நற்குணங்களைப் பாராட்டிப் பேசிய உன் தோழன் இங்கே வரமாட்டானோ,
உருண்டு திரண்ட காதணிகளை அணிந்த மகளிரைச் சேர்ந்து அவரின் அவிழ்ந்த கூந்தலே அணையாகக் கொண்டு தூங்கியதால்

தெய்வ மணம் கமழும் உன் விரிந்த மார்பினைக் காண்பதற்கு?
இப்படியாக உன்
அன்பிற் குறையாத முயக்கத்தைப் பெறுகின்ற பரத்தையரைக் கோபித்துக்கொள்பவர்
யார்? நீ வராத நாட்களையும் வந்த நாட்களாகவே கருதி அமைதி கொள்வேன்! நீ அங்குச் செல்வாயாக!
மழைக்காக ஏங்கிக் கதிர்விட்டு வாடிக்கிடக்கும் நெல்லுக்கு, அங்கே
போதாத சிறு தூரல் தூவியது போன்றிருக்கிறது நீ
ஓராண்டுக்கு ஒருமுறை இங்கு வருகின்ற வருகை.

# 72
பல அடுக்குகளால் உயர்ந்த நீலப் பட்டு விரித்த மென்மையான மெத்தையில்
துணையோடு சேர்ந்த அன்னத்தின் தூவியால் செய்த மென்மையான தலையணையில் சாய்ந்துகொண்டு
சிறப்பான இயல்புடைய கிண்ணத்தில் ஊற்றிய பாலைச் சிறிதளவு எடுத்துக்காட்டி,
கோபித்துக்கொண்டிருக்கும் மென்மையான சிறிய கிளியை உண்ணச்செய்தவளின் முகத்தைப் போல,
புதிய நீர் வரும் வழியிலுள்ள சிறு புதர்களின் மீது இடைவிடாமல் வரும் அலைகள் மோதுவதால் நீர்த்துவலை மிகுவதால்
அதனைத் திங்கள் என்று எண்ணி மலர்ந்த அல்லியின் வெண்மையான மலரின் அருகில்,
முதிர்வடைந்த குளத்துத் தாமரையின் மணங்கமழும் மொட்டு, கரையிலிருக்கும் மாமரத்தின்
வடுக்கள் தீண்டுவதால் வாய் மலரும் வயல்கள் அணிசெய்யும் நல்ல ஊரினனே!
மிகவும் கருத்தோடு, உன் பாதுகாப்பில் வைத்திருக்கும் பரத்தையரை நீ தழுவி மகிழும்போதெல்லாம், நான் அழுது ஏங்க,

பாட்டிசைத்து உன்னை மகிழ்விக்கும் பாணன் காட்டு என்று சொன்னானோ -
இனிமேல் நம்மைக் காக்கமாட்டான் என்று சினந்த அந்தப் பரத்தையரின் நகங்கள் செய்த வடுவின் காரணமாக,
அடுத்த நாள் உன் தோளினை அணைத்துக்கொண்ட அந்தப் பரத்தையரின் பற்கள் பதிந்த உன் உதடுகளை?
உன் பரத்தையரைத் தேடி, உனக்காகத் தூது செல்வதை மேற்கொண்டு, துறைக்குச் செல்லாதவளாய், ஊரினரின்
ஆடைகளை சேர்த்துக்கொண்டு வெளுக்கின்ற உன் வண்ணாத்தி காட்டு என்று சொன்னாளோ -
உன்னைக் கூடிய மகளிர் புனலாட, அவர்களுக்குத் தெப்பமாய் விளங்கிய உன் மார்பினில்
ஊடல் கொண்டவராய் வழித்தெறிய வந்து விழுந்து உண்டான செவ்வரக்குக் கறையை?
வீணாக, உன் புகழைக் கேட்க விரும்பாதவர் மனையிலும் போற்றிக் கூறும்
அறிவுடையோனாகிய அந்தணன் அவளுக்குக் காட்டு என்று சொன்னானோ -
உன்னுடன் கூடிக் களித்த பரத்தையரின் மணங்கமழும் மாலை அழுந்தியதால் ஏற்பட்ட சுவட்டின் மேல்

நீ குறித்த இடத்தில் வந்து கூடிய பரத்தையின் முடித்த கூந்தலின் கோணலை நீ கோதிவிட்டபோது உதிர்ந்த பூந்துகளை? 
என்றவாறு
உன்னுடன் உறவுகொண்டிருந்தோம், எம்முடன் நீயும் உறவுகொள்ள; இப்போது உன் குறைகளை அறிந்து
அழிந்து கெடுகின்ற மனம் உடையவர் ஆனோம், அல்லலில் கிடந்து வருந்த
நடந்த குற்றங்களை எண்ணிப்பார்க்காமல், உன்னைக் கண்டவுடன்
மனம் மாறி உன்னை ஆதரித்து ஏற்றுக்கொள்வதைக் காட்டிலும் இழிந்ததோ,
இந்தப் பிரிவு நோயினால் வருந்திக்கிடத்தல் எமக்கு?

# 73
அகன்ற நீர்த்துறை அழகு பெறும்படி, புதரில் படர்ந்து தாழ்ந்து கிடக்கும்
பகன்றைக் கொடியின் பூக்களின் மீது உராயும்படியாக நீண்டுயர்ந்த பசிய இலைகளையுடைய தாமரை,
கண் கூசும்படியாக ஒளி விடும் வெண்மையான வெள்ளிக் கிண்ணத்தில்
குளிர்ச்சியான நறுமணம் கமழும் மதுவைக் குடிக்கும் மங்கையின் முகத்தைப் போல,
செழிப்பான தன் முறுக்கு நெகிழும் வயல்கள் அணிசெய்யும் நல்ல ஊரினனே!
மனம் புண்படச் செய்பவன் என்று உன்னை நொந்துகொள்வார் இல்லாதபோது
"நான் தீது இல்லாதவன்" என்று தெளிவிப்பதற்கு வருவாய் -
உன் பிரிவால் நெகிழ்ந்துபோன வளையலையுடைய பரத்தையரின் முலை இடையில் தாதுக்கள் உதிர்ந்ததனால்
தம் இதழ்களின் வனப்பை இழந்த உன் தலை மாலை வந்து சொல்லாதபோது;

நெஞ்சைச் சுடும்படியாக நீ செய்வதைக் கடிந்துகொள்வார் இல்லாதபோது
"மனத்தால் நான் தீது இல்லாதவன்" என்று எம் மனத்தை மயக்குவதற்கு வருவாய் -
சுழலுகின்ற மைதீட்டிய கண்களையுடைய பரத்தையரின் அழகிய மாலைகளைத் துவளச் செய்த உன்
மலர்ந்த மார்பில் பூசிய கலைந்துபோன சந்தனம் வந்து சொல்லாதபோது;
எப்படிப்பட்ட தவறுகளை நீ செய்தாலும் அதைப் பற்றிப் பேசமாட்டாதார் இல்லாதபோது
காலுக்கு முன்னால் பணிந்து எம் சினத்தைத் தீர்ப்பதற்கு வருவாய் -
வரிசையாக வளையல்களை அணிந்த பரத்தையர் ஆடும் துணங்கைக் கூத்தில் அவரைக் கையால் தழுவிக்கொள்ள
கரையினில் கிழிந்துபோன உன் வேட்டி வந்து சொல்லாதபோது;
எனினும்,
மிகுந்து வரும் வெள்ளத்தாலும் நிரம்பாமல் பெருக்கமுறும் கடலைப் போல உன்

ஆசை அடங்காத பரத்தைமை அளவின்றி வளர்ந்து விடுவதால், நாள்தோறும்
புலந்துகொள்ளும் பரத்தையரின் ஊடலை வேண்டுமானால் தீர்த்துவைப்பாய்! நாங்களோவென்றால்
தோற்றுத்தானேபோய்விடப்போகிறோம், உன் பொய்யுரையில் மயங்கி!

# 74
பொய்கைப் பூவில் புதிய தேனை உண்ட வரிகளையுடைய வண்டு, கழியில் பூத்த
நெய்தல் பூவின் தாதினை உள்ளம் பொருந்த நுகர்ந்து, பசிய இலைகளையுடைய சேம்பங்கிழங்கால்
செய்து வைத்தது போல் வயலில் பூத்துக்கிடக்கும் தாமரை மலரில்
கருகிய இதழ்கள் நீங்கி மேலெழுந்து நிற்கும் கொட்டையாகிய தன் சிறப்புடைய உறைவிடத்தில் வந்தடையும்
மகளிர் கொய்கின்ற தழை தளிர்க்கின்ற காஞ்சிமரத்தினையுடைய துறை அழகு செய்யும் நல்ல ஊரினனே!
அன்பு இல்லாதவன், அறம் இல்லாதவன் என்று சொல்லப்படான் என்று உன்னைப் போற்றி
உன் புகழ் பலவற்றையும் பாடுகின்ற பாணனும் ஒரு பைத்தியக்காரன்;
நஞ்சு உயிரைக் குடிக்கும் என்று அறிந்திருந்திரும் அதனை உண்பதைப் போல நீ கருணையற்றவன் என்பதைக்
கண்டும் உன் பேச்சை நம்புகின்ற பரத்தையரும் பைத்தியக்காரர்கள்;

முற்பகலில் ஒருத்தியிடம் சேர்ந்திருந்து, உச்சிவேளையில் அவளை விட்டுப் பிரிந்து
பிற்பகலில் வேறொருத்தியை நாடிச் செல்லும் உன் நெஞ்சமும் பைத்தியம்பிடித்தது;
என்றிருக்க,
சதங்கை மணிகள் கோத்த மாலையோடு ஒலியெழுப்பி ஆரவாரம் செய்ய, ஒளிவிடும் தொடி அணிந்த
பெரிய சுழல்கின்ற கண்களையுடைய பரத்தையர்க்கும் அவரைப் பிடிக்கும் வலை இது என்று
ஊரினர் சேர்ந்து நகைக்கச் சுற்றித்திரியும்
உன் தேர் பைத்தியம் பிடித்தது, உன்னைக்காட்டிலும் அதிகமாக.

# 75
நீர் நிறைந்த வயலில் நெய்தல் பூவுடன் நீண்டுகொண்டு வளர்ந்த
ஒரே மாதிரியான இதழ்களைக் கொண்ட ஆம்பலின் வரிசையான இதழ்களைக் கொய்வதற்காக,
சிறப்பு மிகுந்த சிவந்த அணிகலன்கள் ஒலிக்க ஓடுகின்ற
விளையாட்டு மகளிரின் ஆரவாரத்தைக் கேட்டு அஞ்சிப் பறந்தெழுந்த
ஆரல்மீனை நிறைய உண்ணும் அழகிய சிறகுகளைக் கொண்ட பறவைக் கூட்டம்,
நீண்ட மரக்கிளைகளுள்ள உயர்ந்த மரத்தில் ஏறியிருந்து
கண்டோர் விரும்பும் கண்களையுடைய மகளிர் தம்மை நிலைகெடச் செய்த அந்த வருத்தத்தை
அவருடைய உறவினருக்குத் தெரிவிப்பன போல் பலவிதக் குரல்களால் மீண்டும் மீண்டும் ஒலியெழுப்பும்
உயர்ந்த சண்டையினால் உண்டாகும் ஆரவாரத்தினையுடைய நல்ல ஊரைச் சேர்ந்தவன்

புதிய பரத்தைகளை சேர்த்துக்கொள்வதில் விருப்பமுடையவனாயின்,
அதற்கேற்ப ஒவ்வொருநாளும் திருமண நாளாய் அமைந்துவிடுமாயின், அந்த நிலைக்கு நான்
பெரிதும் வருந்துகிறேன் தோழி! வருந்தவேண்டாம் நீ என்று
என்னைப் பார்த்து வருத்தமுறுகின்றவளே! கேட்பாயாக, இப்போது, தெளிவாக;
திருமணக்கோலத்தில் பளிச்சென்று வருகிறாயே! என்னைப் பற்றி என்ன நினைத்தாய் என்று
மனத்தில் எண்ணிக்கொண்டு வேறொன்றும் சொல்லாது இருப்பேன், ஆனால் உடனே
அடர்ந்த பிடரி மயிரும், மன ஊக்கமும் கொண்ட குதிரை பூட்டிய தேரோடு அவன் கூட்டி வந்த
விருந்தினரை வரவேற்கவேண்டியிருப்பதால், என் கோபத்தை அறவே மறந்துவிடுவேன்;
வாடிய பூவுடன் வராதே என் மனைக்கு என்று
ஊடல் கொண்டிருப்பேன், ஆனால் அந்த ஊடலை நீட்டிக்கவிடாமல்,

அவனது பொய்மொழியால் அவனுக்குக் கேடு நேருமோ என்ற என் அச்சத்தைத் உணர்ந்தவனாக வருபவன்
மேலும் பொய்ச்சூளுரைத்துவிடுவானோ என்று அஞ்சிக் கோபப்படாமல் இருப்பேன்;
பகற்பொழுதெல்லாம் அங்குத் தங்குகிறாய், பரத்தைமை உடையவனே! என்று நான்
அவனோடு சண்டைபோடுவேன், ஆனால், தான் தன்னுடைய
தந்தையின் சிறப்பு மிக்க பெயரை முறையால் பெற்ற
புதல்வனைத் தழுவிக்கொண்டு பொய்யாக உறங்குவதைப் போல் கண்ணை மூடிக்கொள்வான்;
இவ்வாறாக,
விருந்தினரை வரவேற்பதற்காகவும், பொய்யுரைகளால் அவனுக்குக் கேடு வருமோ என்ற நாம் அஞ்சுவதாலும்
பெறற்கரும் புதல்வனைத் தழுவிக்கொண்டிருப்பதைப் பார்ப்பதாலும்,
தாங்கமாட்டாமல், அப்படியே அடங்கி அமுங்கிவிடும் என் கோபம்;

ஒவ்வொரு பரத்தை வீட்டிலும் ஒவ்வொன்று நடக்க, அவற்றையெல்லாம் கண்டும்
மலர் விழி மங்கையரின் அலங்காரச் சிறப்புகளை அழிக்கின்ற
மாயம் செய்வதில் வல்லவனான கணவனின் பரத்தைமையை எண்ணி
நொந்திருப்பேன் தோழி! அது நம் தலைவிதி என்று!

# 76
நான் அணிந்திருக்கும் அணிகலன்களை ஒழுங்குபடுத்தியும், ஆற்றில் நீராடும்போது எனக்குக் காவலாய் இருந்தும்
அழகிய தொய்யில் கோலத்தை என் மேனியில் வரைந்தும், நம் மணல்வீட்டு முன்னர் வந்து நம்மை வணங்கியும்,
நம்மை நினைத்து வருந்துகின்ற இந்தப் பெரியவனுடன் நமக்கு நட்பு உண்டென்று இந்த ஊர்மக்கள்
இவள் இப்படிப்பட்டவள் என்று இட்டுக்கட்டிப் பேசுவதற்கு, நீ அப்படிப்பட்டவளோ என்று
என்னைக் கேட்டால், ஒளிரும் நகைகளை அணிந்தவளே! இப்போது கேட்பாயாக!\
இயல்பாகவே சிவந்த விரல்கள் மேலும் சிவந்து போகும்படி நெடுநேரம் பறிக்கின்றாய் என்று அவன்
கடல்நீர் வந்து ஏறின தண்டான்கோரையைப் பறித்துப் பாவை செய்து தந்ததற்காகவோ,
பழிதூற்றல் என்னும் பிணி பிடித்தவர்கள் தாம் பார்க்காமல் பழித்துக்கூறிய சொற்கள்
எனக்குப் பொருந்தாது என்று உணராமல் நீயும் அவர்களின் நிலையிலேயே சொல்வது?

உடலை ஒடுக்கிக்கொண்டு நான் உள்ளே புகுந்து மலர் பறிக்கமாட்டாமல் பின்னேவர, அவன் அதனைக் கண்டு
ஆழமான குளத்து நீரில் இருந்த மலரைப் பறித்துப் புறவிதழை ஒடித்துத் தந்ததற்காகவோ,
வேண்டாம் என்று தள்ளிவைக்கப்பட்ட மகளிர் விவேகம் இன்றி கூறிய சொற்கள் பொய்யாக இருக்க,
அவறைக் கடிந்துகூறாதது மட்டுமன்றி என்னை இடித்துரைக்கவும் வந்துவிட்டாய்?
தொய்யில் கோலமிட உனக்குத் தெரியவில்லை என்று வளைந்து இறங்கும் முன்கையை அவன் பற்றிக்கொண்டு
தெரிந்தெடுக்கப்பட்ட மூங்கில் போன்ற என் தோளில் கரும்பு வடிவைத் தொய்யிலாகத் தீட்டியதற்காகவோ,
காவல் புரிந்து காக்கின்ற நம் தோழியர் பொய்யாகக் கூறிய சொல்
எனக்கு உரித்தாகும் என்று உணராதவளாய் நீ கலக்கமடைந்தாய் போலும்?
இனிமேல்
மிக அரிது, ஆராய்ந்தெடுத்த அணிகலன் அணிந்தவளே! இதனைத் தெளிவித்தல்; விருப்பத்துடன் ஒன்றுகூடி

பின்னொருநாள் நம் திருமணத்தில் நம் உறவினர் செய்யப்போவதை இன்று இங்கே செய்வதற்குத்
தானே விரும்பி இருக்கிறது இந்த ஊர் என்றால், என்னதான்
நாம் செய்யக்கூடியது இப்போது?

# 77
ஒன்றுக்கொன்று இணையான இரண்டு, பொருத்தமாய் ஒத்துப்போகும், மொட்டுக்களுக்கு நடுவே, வேறு ஒன்றும்
துணை இன்றி முறுக்கு அவிழ்ந்த தாமரையின் தனித்த மலர்,
தன் அழகிய முகத்தைக் கவிழ்த்துக்கொண்டு, தான் விரும்பியவனுக்காக வருந்துபவளின்
சிவந்த வரிகளும், செருக்கும், குளிர்ச்சியும் கொண்ட கண்ணின் நீர், பரந்த முலையின் மேல் தெறிப்பது போல்,
அழகுள்ள மலர்களையுடைய நீர்நிலையிலுள்ள பறவை வந்து தாக்க, மிகவும் சாய்ந்து வளைந்து,
மிக மிக அருகிலிருக்கும் அந்த மொட்டுக்களின் மேல் அந்தத் தாமரை மலரின்
உள்ளிதழ்களிலிருந்து குளிர்ந்த நீர்த்துளிகளைச் சொட்டும் ஊரினைச் சேர்ந்தவனே கேட்பாயாக!
குளிர்ந்த தளிரில் விழுந்து அழகு பொலிவுற்ற பூந்தாதைப் போன்ற எழிலையுடைய என் மேனியின் மாநிறம் அழிய,
அதனை எடுத்துக்கொண்டு நீ தராமல் விட்ட அழகை நான் திரும்பப்பெற விரும்பமாட்டேன்,

இருக்கிறது என்று கூறமுடியாமலிருக்கிற என் உயிர் ஒரேயடியாகப் பிரிந்துவிடும் என்று உணர்ந்தும் உன்
மனைவி என்று பிறர் கூறும் பழிச்சொல் ஒழிந்துபோகப் பெறுவேனாயின்;
பொன் என்று சொல்லும்படியாகப் பசந்துபோன என் கண்ணின் பூவைப்போன்ற அழகையுடைய நலம் அழிந்துபோக
அதன் பழைய நலத்தை இழந்த அந்தக் கண் துயில் பெறுவதை நான் விரும்பமாட்டேன்,
உன்னால் வருத்தமுற்ற பரத்தையர் நீ செய்யும் கொடுமைகளை
என்னிடத்தில் வந்து நொந்துப்போய் உரைக்காமல் இருப்பதைப் பெறுவேனாயின்;
மாசறக் கழுவப்பட்ட நீல மணியையே ஏளனம்செய்யும் கரிய கூந்தல்
பூ அணிந்து வண்டுகள் ஆரவாரிக்கும் அழகைப் பெறுவதை விரும்பமாட்டேன்,
சோகப் பாட்டை இசைத்துக்கொண்டு உன் பாணன், என் வீட்டுக்கு
நீ போன பரத்தையர் வீட்டைப்பற்றி வினவிக்கொண்டு வராமலிருப்பதைப் பெறுவேனாயின்;

இப்படியிருக்க,
என்னைக் காதல்கொள்ளச் செய்த உன் மார்பினில் இனிச் சாயமாட்டேன் என்கிற
ஊடலும் மனவுறுதியும் எனக்கு எளிதில்வருமோ? உன்னைக் கண்டவுடன்
என்னை உன்னிடத்தில் செலுத்தி, தானும் என்னிடத்தில் தங்கியிராத நெஞ்சு என்று சொல்லப்படும் என்னோடே
உடன் வாழ்கின்ற பகையை உடையவர்க்கு.

# 78
பலவித மலர்கள் நிறைந்த வயலில், பசிய இலைகளைக் கொண்ட தாமரையின்
இனிய மலரில் ஒலியெழுப்பிக்கொண்டே தேன் உண்ணும் துணையோடு சேர்ந்த கரும் வண்டு
நீர்த்துறையில் மலர்ந்திருக்கும் அந்தப் பூவை வெள்ளம் சாய்த்துவிட, வெறுத்துப்போய் கோபங்கொண்டு,
பண்பட்ட நல்ல நாட்டில் பகைவரின் படை நுழைந்ததாக,
அந்நாட்டைக் கைவிட்டு அகன்றுபோய் தம்மைக் காக்கின்றவனுடைய ஆட்சிக்குட்பட்ட
வேற்று நாட்டில் குடியேறி வசிக்கும் குடிமக்களைப் போல, வேறு ஒரு
பொய்கையைத் தெரிந்தெடுத்து வருந்தியிருக்கும் பொழுதில், பகைவரின் வலிமையை வேரறுத்து,
அந்த அரசன் தன் பகையைத் தணிக்க, அந்தக் குடிமக்கள் மீண்டும் தம் நாட்டுக்குத் திரும்பியதைப் போல
நிறைந்த வெள்ளம் நீங்கக் கண்டு மீண்டும் வந்து அந்த வண்டு அந்த மலரின் மேல்

பறப்பதைத் தவிர்த்து படுத்து இளைப்பாறும் பாய்கின்ற நீர்வளத்தையுடைய நல்ல ஊரினனே!
'பிரிந்திருக்கும் காலத்தில் அழகு குன்றி, பிணைந்திருக்கும் காலத்தில் பொலிவுபெற்று,
நமது உள்ளக் கருத்தின்படியேதான் இவள் மேனியின் நல்லியல்பு இருக்கும்' என்ற செருக்கினால்தான்
நெருப்பைப் போன்ற சிவந்த இதழ்கள் வாடி உதிர, பரத்தையரைப் புணர்ந்த உன் செய்கையைச்
சாட்சியம் கூறும் தலைமாலையுடனே இங்கு எம் இல்லத்துக்கு நீ வருகின்றாயோ?
'ஞாயிற்றைப் பார்த்து மலர்ந்து, அது மறைந்தபின் கூம்பிப்போகும் மலரைப் போல் என்
தொடர்பு நீங்கினால் தொய்ந்துவிடும் இவள் மேனியின் நல்லியல்பு' என்ற செருக்கினால்தான்,
ஊரின் பழிச்சொல்லுக்கு அஞ்சி, நான் மறைத்து வைத்த மனநோய் கைம்மீறிப்போக, பிறர் கூந்தலில் செருகிய
மலரின் மணம் நாறும் மார்புடனே இங்கு எம் இல்லத்துக்கு நீ வருகின்றாயோ?
பெய்தால் செழிப்புற்று, பொய்த்தால் உலர்ந்துபோகும் விளைநிலத்திற்கு மழையைப் போல, நான்

சென்றால் மகிழ்ந்து, செல்லாமல் வெறுத்தால் வாடிப்போவாள் இவள்' என்ற செருக்கினால்தான்
முடியில் சூடிய மாலை போல் நான் வாட, பரத்தையரின்
தொடி அழுத்திய வடுவினைக் காட்டிக்கொண்டு இங்கு எம் இல்லத்துக்கு நீ வருகின்றாயோ?
இவ்வாறு
வியக்கத்தக்க பண்பு எல்லாம் உன்னிடம் அமைந்துள்ளன, வந்த இடத்திற்கே மீண்டும் செல்வாய்,
உன்னை விரும்புபவரும், நீ விரும்புவரும் ஆகிய பரத்தையர் வெறுத்து மனம் மாறும்படியாக! கையினால்
மலரச்செய்த மொட்டினைப் போன்ற தழுவலில் சிறப்பு இல்லை,
குளிர்ச்சி மிக்க பனிக்காலத்து வைகறையே அது எனக்கு.

# 79
பறவைகள் ஒலிக்கும் வயலில் செழித்து வளர்ந்த செந்நெல்லின் இடையே பூத்த
முள்ளைத் தண்டிலே கொண்டிருக்கும் தாமரை மலரை அடியோடு சாய்த்து, அதன்
வளமையான இதழைத் தீண்டுமளவு நீண்ட பொலிவுபெற்ற ஒரு கதிர்,
அவையோர் புகழும் அரங்கின் மேல் ஆடுகின்ற ஆடல்மகள் அழகிய நெற்றியில்
சிறப்பாகச் சூட்டிய வயந்தகம் என்னும் தலையணி போல் தோன்றும்
அழகுபெற்ற வயல்வெளிகளையுடைய அழகிய குளிர்ந்த துறையையுடைய ஊரனே கேட்பாயாக!
பரத்தையர் மனையில் அணிந்துகொண்ட அணியோடு வந்து இங்கு எம் புதல்வனை தூக்கிக்கொள்ளவேண்டாம்,
பவழம் போன்ற அவனது சிவந்த வாயிலிருந்து ஒழுகும் நீர் உன் அகன்ற மார்பை நனைப்பதால்,
உன் மார்பில் சாய்ந்த மகளிரை அறிவேன் நான் என்று மணங்கமழும் உன்

சந்தனத்தால் அறிந்துகொண்டவளாய் அவள் வருந்தமாட்டாளோ?
தழுவவேண்டாம் எம் புதல்வனை! பரத்தையர் கொண்டாடும் அகன்ற உன் மார்பில் கிடக்கும்
பல வடங்களையுடைய முத்துக்கள் கோத்த மாலையைப் பிடித்து அவன் அறுத்துவிட்டால்,
மாட்சிமைப்பட்ட அணிகலனையுடைய இளைய மகளிர் உன்னைத் தழுவினார் என்று உன் மார்பில் கிடக்கும்
அந்த அணிகலனால் அறிந்துகொண்டவளாய் அவள் கோபித்துக்கொள்ளமாட்டாளோ?
எம் புதல்வனைக் கண்டு அவனைத் தூக்கிவைத்துக்கொள்ளவேண்டாம்! உன்னுடைய தலையில்
வண்டுகள் ஒலிக்கின்ற சிறப்பான பூங்கொத்துக்களை அவன் பறித்துப்போட்டால்,
உன்னிடம் நெருங்கிப்பழகிய பரத்தையர் செயலைக் காட்டுவது இது என்று மணங்கமழும் உன்
தலைமாலையால் அறிந்துகொண்டவளாய் அவள் சினந்துகொள்ளமாட்டாளோ?
இவ்வாறாக,

பூப் போன்ற கண்களையுடைய புதல்வனைப் பொய்யாகப் பலவாறு பாராட்டி,
அவனை விட்டு நீங்காதவனாய், இவ்விடத்தை விட்டு அகலாமல் இன்னமும் என் மனை வாசலில் நிற்காதே!
அங்கு அந்தப் பரத்தையரிடம் செல்வாயாக! உன் அணிகலன்களைச் சிதைத்துப்போடுகின்ற
எம் புதல்வனை இங்குத் தந்துவிட்டு.

# 80
உன்னிடத்தில் அன்பில்லாமல் போனவர் அப்படியே இருந்துவிட்டுப் போகட்டும், அந்த அன்பு மாறாத,
மென்மையான தலையில் மின்னும் ஒளிவிடுகின்ற மூன்று வடங்களைக் கொண்ட, உன்னைப்
பெற்ற என் கண்கள் நிறைய நான் காணும்படியாக உன்னிடத்தில் அன்பு செலுத்தி,
பிரகாசமான ஒளியையுடைய முத்துக்களை விளிம்பினில் அரும்பு போலப் பதித்து
பவழத்தால் செய்த சக்கரங்கள் சுமக்க,
கவழம் உண்பதை அறியாத கையால் செய்யப்பட்ட உன் பொம்மை யானையை
முப்புரியாக முறுக்கிய மெல்லிய கயிற்றில் மெதுவாக வளைத்துக்கட்டி,
பரல்கள் இட்ட உன் காற்கொலுசின் மணிகள் ஒலிக்க அங்கிருந்து இழுத்துக்கொண்டே இங்கே
வருக என் பாகனாகிய மகனே!

எழுச்சியுற்ற மணிகள் ஆர்க்க, ஆர்க்க, நீ சாய்ந்து சாய்ந்து நடக்கும்
உன் தளர் நடையைக் காண்பது எமக்கு இனிது; ஆனால் இனியதல்லாதது
இவள் இருக்கிறாளா என்றுகூட எண்ணிப்பார்க்காத உன் தந்தையால் துன்புறும் மகளிரின்
கைவளை கழன்றோடும் காட்சியை நான் காண நேரின்;
ஐயனே! யாவரும் விரும்பும் தோற்றப்பொலிவினையுடையவனே! 'அத்தா அத்தா' என்று கூறும் உன்
இனிக்கின்ற மொழியைக் கேட்பது எமக்கு இனிது, ஆனால் இனியதல்லாதது
உன் தந்தை அவரின் பெண்மை நலத்தை நுகர்ந்துவிடுவதால், உய்வில்லாமல், மிகவும் மெலிந்துபோனவரின்
துன்ப நோயை நான் காண நேரின்;
ஐயனே! திங்களாகிய சிறுபிள்ளையே வா! என்று நான் உன்னை
அம்புலிக்குக் காட்டி மகிழ்வது எமக்கு இனிது, ஆனால் இனியதல்லாதது

அன்பு செய்யாமல் உன் தந்தையால் கைவிடப்பட்டவர்களின்
அல்குலில் உள்ள பசப்புக்கோடுகளை நான் பார்க்க நேரின்;
ஐயனே! என் காதில் உள்ள பொன்னாலான குழைகளைக் கழற்றிக்கொண்டு நீ ஓடும்போதெல்லாம்
மலர் சூட்டிக்கொள்ளாத என் வெறுங்கூந்தலின் மீது தூக்கிவைத்துக்கொள்வது, உன்னை நான்,
உன் தந்தை அந்தப் பரத்தையர் மீது வைத்த அன்பு குறையும்படியாக, அவர்கள் அவரின் அகன்ற மார்பில்
பூந்தாதுக்களைத் தேடியலையும் வண்டுகளின் கூட்டம் மொய்க்கும்படியாகக் கட்டின
மாலையை நீ பறித்து விளையாடும் காட்சியில் காண்பதற்காத்தான்.

# 81
"மாசற விளங்கும் மணியைப் போன்ற அழகிய வாய், தன்
முழுதும் விளங்காத மழலைச் சொற்களைக் கூறும்போது ஒழுகிய எச்சில் ஒளிவிடும் மார்பணிகளை நனைக்க,
பொன்னால் செய்த பிறையிலிருந்து தொங்கும் சிறந்த வேலைப்பாடு அமைந்த உருண்டையான தலைச்சுட்டி
அழகு ததும்ப மணங்கமழும் தலையில் முத்துவடத்துடன் அசைந்தாட,
கொஞ்சமும் குறையாமல் தன் நிறத்தை நடுவே காட்டுமாறு கட்டப்பட்டு, உடுத்தியது கழன்ற அழகிய துகில்
உள்ளீட்டுப் பரல்களால் பொலிந்த காற்கொலுசு ஓயாமல் ஒலிக்கும் கால்களைத் தடுக்கிவிட,
பாலால் விம்மிய முலையை மறந்து, முற்றத்தில்
வலுவான சக்கரங்கள் கொண்ட உருட்டு வண்டியைக் கையினால் தள்ளிக்கொண்டு, நடை பயிலுகின்ற
ஆலமரத்தின் கீழ் அமர்ந்திருக்கும் இறைவனின் அழகு அமைந்த மகனான முருகனைப்

போல வருகின்ற என் உயிரே!
பெருமையுடையவனே! விருந்தினரை உபசரிப்பதில் கை ஓயாமல் இருக்கிற என்னையும் நினையாமல்,
பெரிய தெருவில் உன்னைச் சீராட்டி உன் செவிலித்தாய்மார் சொல்லிக்கொடுக்க,
திருத்தமாக நீ கற்ற சொற்களை நான் கேட்கும்படி,
மருந்தறியாமல் துயருற்ற என் நெஞ்சிற்கு அமிழ்தம் உண்டதைப் போல
பெருந்தகையே! சிலவற்றைக் கூறுவாயாக!
ஒளிரும் அணிகளை அணிந்தவளே! தொலைவிலிருந்து நாம் கொண்டுவந்த பாணன், நெறி கெட்டு
வாய்தவறி, 'பரத்தையர் வாழும் ஏனாதிப்பாடியத்தில் இருக்கிறோம்' என்று சொன்னதைப் போல்
நம்முடைய வேதனையைத் தணிக்கும் மருந்து என்று எம் மகனைப் பாராட்ட,
ஓயாமல் அடுத்தடுத்து 'அப்பா, அப்பா' என்று சொல்லும் மகனை, மாட்சிமைப்பட

நம் மூங்கில்போன்ற மென்மையான தோள்களில் தூக்கி அமர்த்திக்கொண்டாலும், இவன்
வாயிலிருந்து போகமாட்டான் நம் தலைவன்?
பொருள் கவர எண்ணி, கோட்டைக்குள் நுழைந்து அங்குள்ளவர்கள் மீது தம் படைக்கலங்களை ஒருசேர விடக்
கள்வர்கள் மறைந்து மறைந்து வருவதைப் போல், எம்மை
எள்ளி நகையாடற்பொருட்டே இவர் வந்திருக்கிறார் இங்கு";
"கள்வரால் வரும் கேடுகளை எண்ணி, மதில் அகத்தே உள்ள ஊரின் காவலர்
கள்வரைக் காணாதிருக்கவும், அவரைக் கண்டோம் என்று கூறுவதைப் போல
தள்ளி நின்று, செய்யாத குற்றங்களைக் கூறிக் கோபம் கொள்ளாதே! உன்
சொற்படி நடக்காதிருப்பவர் யார்?"
"நெஞ்சு நடுங்காத வஞ்சனையால் என்னை வருத்தி, என் மகன் மேல் விருப்பம் கொண்டு வந்து,

பூண்களையுடைய முதிர்ந்த முலைகளால் உன் மார்போடு பொருத பரத்தையின் கொண்டைமுடியிலிருந்து
உதிர்ந்த பூந்தாதுக்கள் சிந்திக்கிடக்கும் உன் ஆடை ஓசையெழுப்ப,
எதிர்காற்றில் வந்து நிற்பவனே! நீ போகலாம்!"
"இப்போது, ஏடி! நான் தீது இலேன் என்று தெளிவாக எடுத்துரைக்கவும், கைமீறிப்போய்,
சிறிதளவும் என்னிடம் கொண்ட கோபத்திலிருந்து மீளுதல் இல்லை என்றால்
சிறப்புடைய எம் தந்தையின் பெயர்கொண்டவனை நான் எடுத்துச் செல்கிறேன்,
குன்றாத விருப்புடன், கன்று கட்டப்பட்டிருக்கும் இடத்துக்கு விரைந்தோடும்
பசுவைப் போல், இனி நம்மைத் தேடி வரும்படியாக."

# 82
"உலகத்தின் வறட்சி நீங்கும்படியாக மழை பெய்வதற்காக, கிழக்குத்திசையில் ஏறி
சரியான பருவத்தில் தோன்றிய கார்மேகத்தைப் போல, என்னுடைய முலைகள்
பாலால் பெருத்து வீங்க, மிகவும் காலம் தாழ்த்திவிட்டாய்,
தேவர்களின் கோவிலை வலம்வந்து பின்னர் என் மகனாகிய இவனோடு
நீ சென்ற இடங்களையெல்லாம் சொல்வாயாக";
"சொல்கிறேன், விரும்பிக்கேட்பது போல் கேட்டு அதன் பின்னே
வெகுளாதிருக்க வேண்டுகிறேன் நான்"
"வெகுளமாட்டேன்"
"சிறுமியரோடு விளையாடி மகிழ்ந்து

ஓரிடத்தில் நில்லாது ஓடித்திரிந்த நேரத்தில், இவனது தந்தை விரும்பி ஆசைகொண்ட
தொடக்க காலத்துத் தாய் ஒருத்தியின் வீட்டிற்குச் சென்றான், அவளும்
கொம்புள்ள இடபம் பொறித்த மோதிரத்தை அன்பளிப்பாக அணிந்து
'பெருமானே! சிறிது சிரித்துக் காட்டு' என்றாள், அவளின் கண்ணீர் 
சொட்டுச்சொட்டாய் வடிந்தது முத்து மாலை அறுந்து முத்துக்கள் சிந்தியது போல் இருந்தது, பின்னர்
அவளுக்குத் தங்கையான, இவனுக்கு வழிமுறைத் தாயான ஒருத்தியிடம் சென்றான், அவளும்
தன்னை வருத்தும் பிரிவுத்துன்பத்தைப் பொறுத்துக்கொண்டு, மகனை எதிர்கொண்டு
தழுவிக்கொண்டாள், முத்தமிட்டாள், அவனை நோக்கி, அவன் தந்தையை நினைத்துக்கொண்டு
'உனக்கு நான் யார்?' என்று கேட்டு
அவன் அழகு சிறக்க, அவனால் தாங்கிக்கொள்ளக்கூடிய அளவுக்குத் தேடியெடுத்து அணிகளைச் சூட்டிவிட்டாள்,

அப்பொழுது, 'மகளிரின் செவ்வரிபடர்ந்த, செழித்த, மைதீட்டிய கண்கள் பசந்துபோகும்படி அவருக்கு நோவைத் தரும்
உன் தந்தையின் பரத்தைமைக் குணத்தைப் போலிருக்காதே' என்றாள்,
அவளுடன் இனிமையாக நடந்துகொண்டு அந்த மனையை விட்டுப் போய்,
தலைக்கர்வம் கொண்டு நம்மோடு வெறுப்புக்கொண்டிருக்கும், மேலும் அருகிலிருக்கும் அந்தக்
கெடுகெட்ட புதியவள் வீட்டுக்குள் புகுந்தான்"; "இவனை அடிப்பதற்கு ஒரு
குச்சியைக் கொடு, உனக்கு அவள் யார்? ஏடி,
வருந்து நான் இங்கே துன்பத்தில் உழல, உன் தந்தையை எப்பொழுதும்
பருந்து கவர்வது போலக் கைப்பற்றிக்கொள்வாள், அத்துடன்
வளையும், நகமும் படைக்கலங்களாக உன் தந்தையின்
மணம் கமழும் மார்பில் சிறிதளவும் அஞ்சாதவளாய்

புண்ணாக்கி வடுக்களையும் ஏற்படுத்துவாள், இனி அழுவதை விடு,
அவள் இன்னும் எவ்வளவோ பிறவும் செய்வாள், பெருமானே! அவளிடம்
கிட்ட நெருங்காமல் பார்த்துக்கொள், செல்லக்கூடிய வீடுகள் என்ன என்பதை எண்ணிப்பார்த்து, நீ
உன் தந்தையின் உறவில் ஐயம் இல்லாமல் உறுதியானவரின் வீட்டைத் தவிர்த்து, எம்மைப் போல்
உன் தந்தையின் அன்பை இழந்து செயலிழந்து நிற்பவர் வீட்டிற்கன்றி வேறு வீட்டுக்குச் செல்லவேண்டாம்,
இனி இன்றோடு முடிந்தது உன் ஊர்சுற்றும் வேலை".

#83
"பெரும் செல்வம் நிலைபெற்ற, நிறைவாக உண்பொருளும் உள்ள அகன்ற நம் வீட்டின்
ஒன்றோடொன்று பொருந்தும் வலுவான இரட்டைக்கதவைத் தொட்டுக்கொண்டு நான் துன்பத்தோடு காத்திருக்க,
சிறுவர்கள் தழுவிக்கொண்டு விளையாடும் மணல் பரந்த அகன்ற தெருவிற்குக் கூட்டிப்போய்
விளையாட்டுக் காட்டிவிட்டுக் கொண்டுவருவதற்கென்று சென்றவளே!
மனவுளைச்சல் இல்லாமல், அவனுக்குப் பாலூட்டாமல் இனிய பால் என் மார்பில் சுரந்து பெருகும் வரையெல்லாம்
வராமல் நீட்டித்த காரணம் என்ன?"
"கூறுகிறேன் கேள்,
பெரிய மடலையுடைய பனையின் சொரசொரப்பான மட்டைகளுக்கு இடையேயுள்ள பசிய குரும்பைக் காய்களின்
குடம் போன்ற வாய்ப்பகுதியில் கொடியினால் பின்னி இணைத்து அதனை இழுத்து இழுத்துத் தளர்ந்துபோகும்

சிறுவர்களுக்கு நடுவில், பெரிய மணிகள் பதித்த உறுதியான தேரில்
அகன்ற நம் வீட்டை நோக்கி உன் மகன் வந்துகொண்டிருக்கும்போது, முறுக்கு விட்டு
நீல நிறத்தில் வரிசையாக நிற்கும் மலர்கள், மோதுகின்ற காற்றால் முன்னும் பின்னும் அசைவது போல்
சாளரங்களின் வழியே உற்றுப்பார்த்துக்கொண்டிருக்கும் மகளிர், மிகுந்த புகழையுடைய
ஆலமரத்தின் கீழ் இருக்கும் இறைவனின் அழகு பொருந்திய மகனின் விழா
தொடங்கிவிட்டதோ என்று மனம் களித்து விரைந்து வெளியே வந்து பார்க்க,
தமது திருத்தமான காலடிகளில் சிலம்புகள் ஆரவாரிக்க, ஓடிவந்து, ஆசையோடு
'உன்னுடைய கண்களாலும், நெற்றியாலும், கன்னங்களினாலும், உன்னைத் தழுவும் உன் தாயர்க்குப்
பொலிவினைத் தோற்றுவிக்கும் அழகிய கைகளினாலும், உன் தந்தைக்கு உன் மனங்குளிர
நீ செய்யும் சிறப்புக்கள் போல எமக்கும் சிறப்புக்கள் செய்து, இந்த இரவுப்பொழுதுமட்டும்

எம்மோடு தங்கியிருந்து செல்லவேண்டும் செம்மலே!
எமது புதிய பெண்மை நலத்தை நுகர்ந்து, பின்னர் எம்மை நினைக்காத அந்த வெட்கமில்லாதவன் செய்த
தனிமைத் துயரத்தை எல்லாம் தீர்த்துக்கொள்வோம்' என்று பரிதவித்து,
வேற்றுவரானாலும் விருப்பத்தில் குறையாத தாய்மார் நேருக்குநேர் வேண்டிக்கொள்ள, அதனை மறுக்காத
இந்தக் கள்வனால் தாமதமானதுதானேயன்றி, என்னைக் கோபிக்கவேண்டாம்!
ஒளிரும் அணிகலன் அணிந்தவளே! நான் ஒரு தீங்கும் செய்தவள்,இல்லை."
"என்னை இகழும்படியாக, அழகிய மென்மையான மூங்கில் போன்ற தோள்களையுடைய உன் சொந்தக்காரர் சூட்டிய மாலையோடு
என்னுடைய வீட்டுக்கு வருகின்றாயோ? ஏடா! நீ உன்னுடைய உடம்பில்
அந்த அழகிய இனிய சொல்லையுடைய நல்ல பெண்கள் அணிந்த அணிகலன்களைக் காட்டிக்கொண்டு
எனக்கு முன்னால் இருந்து மகனாக நீ செய்த கொடுமைக்கும் மேலே

வெந்த புண்ணின் மேல் வேலை எறிந்தது போல் இருக்கிறது அந்த மகளிர் ஏற்படுத்திய வடுக்களோடு
தந்தையும் வந்து நிற்கும் நிலை."

#84
"ஓங்கியடிக்கும் காற்று உயரத்தூக்குவதால் உயர்வான கிளைகளையுடைய மாமரத்திலிருந்து
நறிய இளம் பிஞ்சுகள் காம்பு அறுந்து விழுகின்றபோது பால் சொட்டுவது போல, அழித்து
மறைக்கும்படி நான் உள்ளங்கையால் அழுத்தித் தேய்க்கவும் அளவு கடந்து வீங்கிப்போய்
சுரந்த என் மென்மையான முலையின் பால் பாழாகப் போகும்படி, நீ
நமது நல்ல வாசல் வழியாகப் போன பொழுது, ஏடி!
தெய்வங்கள் மிகுதியாக இருக்கும் கோயில்கள்தோறும் இவனை
சுற்றிக்காண்பித்துக் கொண்டுவா என்று சொல்ல, அப்படியே சென்றாய்! தவறுசெய்துவிட்டாய்!
நெஞ்சில் ஈரமில்லாத இவனுடைய தந்தையின் பரத்தையர்களுக்குள்
யாருடைய வீட்டில் தங்கியிருந்தாய்? கூறு!"

"நீரினில் இருக்கும் உயர்ந்த இலை மறைத்திருக்கும் அழகிய இதழ்களைக் கொண்ட மலரைப் போல, பிடித்த
குடையின் நிழலில் சென்றுகொண்டிருந்த உன் மகனைக் கண்டு
இவன், நிச்சயமாக, நாம் துயர்கொள்ள, எம் உள்ளத்தைக் கவர்ந்துகொண்டு, பின்பு எம்மை நினைக்காத
அந்த ஆண்பிள்ளையே அல்லாதவன் பெற்ற மகன் என்று தன் பெரிய வீட்டின்
வாசல் வரை வந்து இறங்கி நடந்துவந்து தாய்மார்
தெருவில் தடுத்து நிறுத்த, அங்கேயே தங்கிவிட்டான், மேலும் அவர்கள்
அவரவர்களுடைய அணிகலன்களில் இருந்து அன்பளிப்பாகவென்று இவனுக்கு
ஏற்றவற்றை ஆராய்ந்தெடுத்து அணிந்துவிட்டார்"; "யாரோ ஒருத்தனுடைய மனைவிமார்
அளித்ததை இவன் வாங்கிக்கொள்வானாம்; இவனொருத்தன்! சீ! சீ!
கோபிக்கத்தக்கவன் இவன் மிகவும்!

விருப்பம்போல் திரிபவனே! அந்தப் பரத்தையரின் கையிலுள்ளதை, என்னை இகழும்படியாக நீ அணிந்திருக்கும்
மோதிரங்கள் எவை? நான் பார்க்கிறேன்!
அந்த மோதிரங்களுள் நறாம்பூவைக் கண்டாற்போன்ற சிவந்த விரலுக்கு ஏற்ப
ஆண் சுறாமீனின் உருவத்தைப் பொறித்த மோதிரத்தை அணிந்துவிட்டவளுடைய
எண்ணத்தை அறிந்தேன், காமன் கொடியாகிய சுறாமீன் உருவத்தைச் செதுக்கி அதனை எந்நாளும்
அடங்காத பரத்தைமைக் குணத்தையுடைய இவனது தந்தையின் மார்பில்
பொறியாக முத்திரையிட்டுக்கொண்டு அவனை ஆளுவேன் என்று தன் எண்ணத்தை
எனக்கு அறிவிப்பதற்காக அவள் செய்த செயல்;
நீயும் அப்படிப்பட்டவனோ? இதைப் பார்!
என் கண் முன்னே நடக்கும் இவற்றைக் கண்டும் அதனைக் கண்டிப்பதற்கு எழமாட்டாத என் முன்னர்

வெந்த புண்ணில் வேலைப் பாய்ச்சியது போல, இதைப் பார்!
இவனுடைய தந்தையின் முன்கையிலிருக்கும் தொடியை இவனுடைய கையில்
மாட்டியது யாரடி அது?
இதைப் பார்! இவனுக்கு நானும் ஒத்தவள்தான் என்று பிறரும் கண்டுகொள்க என்று
தற்பெருமை பீற்றிக்கொள்பவள் தந்தாளோ? உன்னை
இதனை அணிந்துகொள்ளச் சொன்னவர் யார்?
பயப்படாதே! நீயும் தவறு செய்யவில்லை! உன் கையில் இதனைத் தந்த
பூப்போன்ற அழகிய மைதீட்டிய கண்களையுடைய அவளும் தவறு செய்யவில்லை!
வேனில்காலத்துப் புதுவெள்ளத்தைப் போன்ற வேகத்தையுடைய உன் தந்தையை நோவார் யார்?
அவனது அன்பைப் பெறுவதில் எனக்கு மேலாக இருந்தும், அவளை எள்ளி, இதனை இவன் கையில் தந்தவளை

அவள் யார் என்று கேட்ட வேதனைமிக்கவளாகிய
நானே தவறு உடையவள்."

# 85
காலில் அணிந்திருப்பவை, பசும்பொன்னைச் சுட்டுக் கம்பியாக வளைத்த இரண்டாக அமைந்த வளையத்தைப்
பொன் தூளால் பொடிவைத்து பொலிவுற அழகாகச் செய்த சதங்கை;
உடுத்தியிருப்பவை, கைவேலைப்பாடு மிகுந்த பொற்காசுகளைக் கோத்த பொன்னாலாகிய வடத்தின் மேல்
களங்கமில்லாத சிவந்த பவள மாலை ஆகிய இவை இரண்டிற்கும் மேலே
உடுத்தின மென்மையான துகில், மென்மையாய் விலகுகின்ற ஒரு மடிப்புடன்;
கையில் அணிந்திருப்பவை, நண்டின் கண் போன்ற நெருக்கமாய்ச் சுற்றிலும் அமைந்த
பலவான சிறிய அரும்புகள் வேலைப்பாடு உள்ள ஒளிர்கின்ற சில வளையல்கள்;
கழுத்தில் அணிந்திருப்பவை, வெட்ட ஆகாத சிறிய வாளும், பிளக்க ஆகாத சிறிய கோடரியும்
நெருக்கமாகக் கட்டி, இரண்டு பக்கங்களிலும் தாழச் சேர்த்த,

மழை பெய்த நிலத்தில் ஊர்கின்ற தம்பலப்பூச்சியின் சிவப்பு நிறம் கொண்ட பவளத்தாலான
குற்றமில்லாமல் செய்து விளங்கிய காளை ஒளிவிடும் சங்கிலி;
தலையில் சூடியுள்ளவை, கரிய கடலின் முத்தும், பல மணிகளும், பிறவும் ஒரே இடத்தில்
ஒன்றாகச் சேர்த்துக் கோத்த உருள் வடிவான மூன்று வடங்களின் மேலே,
வண்டுகள் மொய்க்கும் தலைமாலைக்குச் சுற்றியமைந்த நூலாக,
அரும்புகள் மலர்ந்த நீல மலரின் அழகிய இதழ்கள் நாணும்படியான
சுரும்புகள் மொய்க்காத நீலமணியாற் செய்த கண்டோர் மருளும் மாலை;
இப்படியாக இவையும், பிறவும் உன் அழகுக்கு அழகு சேர்க்கும் விதமாக அமைய, உன்
எளிதில் உருண்டு வருகின்ற திண்ணிய நடைவண்டியின் வளைவான மேற்பிடியைப் பிடித்துக்கொண்டு
மிக மிக மெதுவாக நடக்கும் உன் மென்மையான விரல்களைக் கொண்ட சிறிய அடிகள்

வலிக்கவும் செய்யும், இங்கு என் கையில் வருவாய்,
செம்மலே! உனக்குரிய பாலை உண்பதற்கு;
பொய்யாகப் போர்த்துக்கொண்ட பாணர் தொழிலை மேற்கொண்ட அந்தச் சகல கலா வல்ல இழிஞனைத்
தூண்டிலாகப் பயன்படுத்திச் சிக்கவைத்துத் தான் விரும்பியவரின்
நெஞ்சத்தைக் கவர்வதையே தொழிலாகக் கொண்டு திரியும்
உன் தந்தைக்குரிய பாலையும் கொஞ்சம் உண்பாய்!
உன் தந்தையின் வாயிலிருந்து வரும் பொய்யான சூளுரைகளை நம்பி, காமநோய் மிகவே
பூப் போன்ற அழகிய மைதீட்டிய கண்கள் கண்ணீர் சொரிய, தூக்கம் இல்லாமல் இருக்கும்
உன் தாய்மாருக்குரிய பாலையும் கொஞ்சம் உண்பாய்!
அம்மாடியோ! நான் என் மகனைப் பாராட்டிக்கொண்டிருக்க, திடீரென்று

தானே வந்திருக்கிறார், தன் கூட்டாளிகளோடு, இவரை
வாருங்கள் என்று யார் இங்கே அழைத்தார்கள்?
எனக்குரிய பாலைக் குடிக்காமல், என் பாராட்டைக் கேட்டு உவந்தவனே! குடித்து உண்பாய் என்
பாராட்டை! அந்தப் பாலும் கொஞ்சமே!
கோபித்து வருபவரையும் மகிழ்ச்சியால் கூத்தாடவைக்கின்ற
உன் புகழைப் பாராட்டும் பெரிய பாராட்டுரைகளைக் கேட்டு மீதியுள்ள எல்லாப்பாலையும் பருகுவாயாக,
மனம் நிறைவுகொள்வேன், இந்தா உன் செவிலித்தாயர் பங்கான பால்!

# 86
"கருமை படர்ந்த தலையையுடைய இளம் களிற்றின் நெற்றிப்பட்டத்தைப் போல,
கையால் அழகாகச் செய்யப்பட்ட மூன்று வடங்கள் மென்மையான தலையிலிருந்து தொங்க,
பொன்னாற் செய்த மழுவோடு, வாளையும் சேர்த்துக் கொண்ட
நன்றாய் மிகுந்த ஒளிர்வுடன் விளங்கும் கழுத்து மாலையை நனைக்கின்ற அழகிய வாயில்
ஒன்றிக் கலந்த என் கண்கள் ஆசைதீரக் கண்டுகளிக்க, காண்பதற்கு இனிய பவளப் பலகை மேல்
பொன்னால் செய்யப்பட்ட சரிபாதியாக ஒன்றற்கொன்று போரிட்டுகொண்டு மின்னுகின்ற
காவலையுடைய கோட்டைகளைத் தாக்காத கையால் செய்யப்பட்ட உன் யானைப் பொம்மைகளால்
பெண்கள் செய்த மணல்வீட்டை உழப்பிக்கெடுக்கும்படி, உன் காலடியில் நிறைந்திருக்கும்,
தேரையின் வாயைப் போன்ற வாயையுடைய கால்சதங்கை ஆரவாரிக்க, ஓடித்திரியும் என்

போர் யானையே வருக இங்கு!
செம்மலே! அழகிலெல்லாம் உன் தந்தையைப் போன்றிருந்தாலும், உன் தந்தையின்
நிலைப்பாட்டில் உனக்கு ஏற்ற குணங்களை என் வாயால் கேட்டு அவற்றைப் போலிருப்பாயாக!
சினத்தால் கன்றிப்போன முகத்தையுடைய பகைவரை வென்று அவரின் களத்தைத் தனதாக்கிக்கொள்ளும்
வெற்றிச் சிறப்பில் அவரைப் போன்றிரு, பெருமானே! ஆனால், அவரைப் போன்றிருக்கவேண்டாம்,
உம்முடன் ஒன்றிவிட்டோம் யாம் என்று மனத்தெளிவுடன் இருப்போரை, உன் தந்தை போல்
அவரின் மென்மையான தோள்கள் மெலிந்துபோகும்படி விடுவதில்;
ஒரு பக்கம் சார்ந்துகொள்வதில்லாமல், வண்டியின் பகலாணிபோல் முறைசெய்வதில் சோர்வடையாத
செங்கோலின் செம்மையில் அவரைப் போன்றிரு, பெருமானே! ஆனால், அவரைப் போன்றிருக்கவேண்டாம்,
காற்றால் அலைக்கழிக்கப்படும் பூவைப் போல் கவின் குன்றிப்போகும்படி, உன் தந்தை போல்

அவரின் மேன்மையை உணர்ந்தவரை மெலிந்துபோகும்படி விடுவதில்;
அழிதல் இல்லாத அரும் பொருளை நாடிவந்தவர்க்கு
அள்ளிக்கொடுப்பதில் அவரைப் போன்றிரு, பெருமானே! ஆனால், அவரைப் போன்றிருக்கவேண்டாம்,
காதலையுடைய மென்மையான பார்வையினையுடைய மகளிரை, உன் தந்தை போல்
அவர் பரிதவித்து நிற்க அவரைப் பாராமுகமாய் இருந்து விடுவதில்;
என்று
நல்லொழுக்கம் அல்லாதவற்றை நாம் கடிந்து கூற, இவன் யாரைப் பார்த்துச் சிரிக்கின்றான், இந்த
மதிக்கத்தக்க ஆண் என்று சொல்லமுடியாதவன் பெற்ற மகன்?
மறைவாக நின்றுகொள்ள அவர் இங்கு வந்திருக்கிறார்";
"அழகிய அணிகளை அணிந்தவளே! எத் துன்பமும் செய்யாத என்மேல் தவறுண்டோ? உன்னிடம் வைத்துக்கொள்ளாமல் இங்கு

கொடு இவனை நான் கையிலெடுத்துக்கொள்வதற்கு"; "சீச்சீ என்று நான்
சினந்து அதனைக் கடிந்துரைக்கவும், என் கையை மீறி
குன்றின் செங்குத்தான பகுதி மீது சிங்கம் ஊர்ந்து ஏறுவது போல்
தந்தையின் அகன்ற மார்பில் பாய்ந்தான், அந்த அறவுணர்வு இல்லாத
அன்பற்றவன் பெற்ற மகன்".

# 87
"அகன்று போ! நீ எனது கூந்தலைத் தொடவேண்டாம்! நான் உன்னைக்
காண்பதற்கே அஞ்சுகிறேன்!"
"தெரிந்தெடுத்த இழைகளை அணிந்தவளே! செய்த தவறு ஒன்றும் இல்லாதிருப்பினும் சினந்துவிழுகின்றாய்!
ஓருயிர்க்கு இரண்டு உடம்பாகக் கொண்டு இருக்கின்ற அப்படிப்பட்ட என்னைப் பார்த்து!"
"ஏடா! உன்மீது ஏதேனும் தவறு உண்டோ? நல்லொழுக்கத்திலிருந்து நீ விடுதலை பெற்றாய்!
கண்ணை இமைக்கும்போது பார்வை மறைவது போல நீ என்னை மறந்து போனாய்!
உன்னுடைய நிலைப்பாட்டின் தன்மையை அறிந்திருந்தும் உன்னை நொந்து, உன்மேல்
கோபங்கொள்பவரே தவறுடையவர்;"
"மெத்தை போன்ற தோள்களையுடையவளே! தீயவரைப் போல, ஒரு தீமை இல்லாதிருந்தும் வருத்துகிறாய்!

நீ சினந்துகொள்ளும் அளவுக்கு ஒரு தவறும் இல்லாதவன் நான்;"
"மான் போன்ற பார்வையை உடையவளே! நீ அழும்படியாக உன்னைப் பிரிந்தவன், பரத்தைமையில் அமையாமல்
வெட்கமற்று இருப்பவன் என்றால் உன்னை வருத்திக்கொண்டு அவன்மேல்
ஊடல் கொள்ளுதலால் என்ன பயன், இப்போது?"
"இனிமேல் ஒன்றும் இதற்குமேல் சொல்வதற்கு என்னிடம் இல்லை என்கிற
நிலைமையைக் காண்பாய் நெஞ்சே!, கண்ணீர் எல்லைகடந்த,
தூக்கம் இல்லாத கண்கள் சிறிதே படுத்துறங்கும்படி."

# 88
"அகன்று போ! கொடி போன்ற இயல்புடைய நல்ல பரத்தையரின் கூந்தலின் மணத்தை எடுத்துக்கொண்டு,
அவர் முடியிலிருந்து உதிர்ந்த பூந்தாதினைத் தோளிலே கொண்டவனாக
எம்மைத் தொடுவதற்கு எமக்கு நீ யாரோ? பிரிந்து சென்ற பெரியவருக்கு
அடிமையானவரோ பிரிவினை ஆற்றாதவர்?"
"கடுமையாயிருப்போர்க்கு யாரால் சொல்ல முடியும் மறுமொழி?"
"வேலை மெனக்கிட்டு உண்மையல்லாத பிதற்றல்களை இங்கே சொல்லாதே! அவற்றைக் கூறு உன்
ஏமாற்றுவேலையைக் கண்டு மயங்குவாரிடம்";
"அழகிய அணிகளை அணிந்தவளே! உன் கண்களின் அருள்பார்வையைப் பெற்றாலன்றி இன்னுயிர் வாழமாட்டாத
என்னிடத்தில் என்ன தவறு?"

"இவனொருத்தன்! புள்ளிகளுடைய நண்டு நீரை ஒட்டி ஏற்படுத்திய கீறல்களான தடங்களைப் போல
பரத்தையரின் வளமையான நகம் கீறிவிட்ட வடுவும், ஒளிவிடும் பற்கள் அழுத்திய வடுவும்,
ஒளிரும் மலர்கள் வாடிநிற்கும் உன் தலைமாலையும், நல்ல அந்த பரத்தையர்
பிணக்கம் கொண்டு சீற்றத்துடன் அடித்ததால் சிவந்துபோன உன் மார்பும்
நீ தவறிழைத்தவன் என்பதனைக் காட்டப் போதாதோ? கூறு!"
"அப்படி இருந்தால் சரி! ஆனால் அநத வேறுபாடு என்னிடம் இருப்பதாகக் கருதவேண்டாம்! தவறில்லை என்பதை
தெள்ளத் தெளிவாகக் தெளியச் செய்கிறேன் பார்!"
"இனி நானொன்றும் தெளியவேண்டாம்!
தேர் ஏறி வரும் சிறப்பால் மயங்கி உன்னிடம் வந்த, தெரிந்தெடுத்த மாலை சூடிய அந்த அழகிய பரத்தையரின்
மாலையை மாற்றி உன் கழுத்தில் சூடி வந்த தவற்றுக்கு அஞ்சி நான் உன்னோடு கொண்ட ஊடல் போரில் கலங்கி

நீ கூறும் பொய்ச்சூள் உனக்குத் தெய்வகுற்றம் ஏற்படுத்துமாயின் அதனால் விளையும் கேடு, இனி
யார்மேல் இறங்குமோ கூறு!"

# 89
"யார் இவன், எம் கூந்தலைப் பற்றுபவன்? இதுவும் ஒரு
நாட்டாமை(அதிகாரமுள்ள துடுக்குத்தனம்) போன்ற கொடுமையைக் கொண்டது, என் வீட்டுக்கு
வரவேண்டாம், நீ வந்த வழியே திரும்பிச் செல்";
"என்ன இது? ஒரு உயிரும் இரு தலையும் கொண்ட சிம்புள் பறவையின் இரு தலைகளில் ஒன்று
மற்றொன்றுடன் சண்டைக்கு வந்தது போல் வெறுப்பு மொழிகளை நீ கூறினால் என்னுடைய
அருமையான உயிர் நிற்கும் வழி என்ன?"
"ஏடா! எமக்குத் தெரியும்! வெகுளவேண்டாம்! எதையும் செய்ய வல்லவனே!
பெரிய காட்டிலிருக்கும் கொற்றவைக்குப் பேய் வந்து குறி சொன்னாற்போல,
உன்னை நீ வருத்திக்கொள்ளாதே உன் வஞ்சகமொழிகளை உரைத்து".

"பரிகாரம் இல்லை, பாராள்பவன் கோபித்தால், கோபித்தவர் மீது தவறு இல்லையாயினும், நீ என்மேல் கூற விரும்பிய
தீமைகள் என்னிடத்தில் இல்லை, இனிய பற்களையுடையவளே!"
"நாம் சிறந்திருப்பதை மறந்தும் நினைக்காத இந்த வெட்கமில்லாதவனுக்கு, இந்த ஊடல் சண்டையில்
தோற்பதுபோல் காட்டிக்கொள்வாய்! நெஞ்சே! இவனோடு மாறுபட்டு, இவனைப்
பொய்சொல்ல விடக்கூடாது என்று நெருக்கினால், தப்பித்தேன்
என்று காலில் விழுந்தாலும் விழுந்துவிடுவான்".

# 90
"கண்டேன், உன் வஞ்சகச் செயல்கள் மறைவாக நடைபெறுவதை; பொய்யாகச் சிரித்து
நான் விரும்பாதவற்றைச் சொல்லி என்னைத் தொடாதே! தொடுவதற்கு உனக்கு வேண்டிய
பெண்கள் இருக்கிறார்களோ இங்கு?"
"ஒளிரும் வளையணிந்தவளே! நீ என்ன தவற்றைக் கண்டாய்?"
"கண்டதைச் சொல்கிறேன்; ஒருத்தி தான் உற்ற காதல் நோயையும், தன் உருவத்தையும் மறைத்து மகிழ்ச்சியை வரவழைத்துக்கொண்டு,
சொட்டுச்சொட்டாய் விழும் மழை நின்று பெய்த பாதிநாளாகிய இரவில்,
வளையல்களால் பொலிந்த தோளும், முலையும், கூந்தலும்,
நல்ல வடிவான காதணியும், ஏனை அணிகலன்களும் சுமையாகக் கொண்ட
ஒடிந்து விழுவது போன்ற இடுப்புடன், காலும் தளர்ந்தவளாய்,

நிறைவு கொள்ளாத தழுவுதலைக் கொண்ட ஒருத்தி வந்து காலில் படிந்த தன்
சிறப்பு நிறைந்த சிலம்பு ஒலிக்க, கோபித்து உன்
இரு பக்கமும் பொருதின நிறைந்த கதவைத் தட்டியது ஒன்று போதாதோ?
ஆய்ந்தெடுத்த அணிகலன்கள அணிந்த அவள் எழுப்பிய பேரொலி கேட்டமாத்திரத்தில்
காலம் தாழ்த்தாமல் எழுந்து நீ போனது ஒன்று போதாதோ?
கொஞ்சமும் மாறாதவளாய்ச் சினந்து அவள் அங்கே உன் மார்பில் கிடந்த
மணங்கமழும் பூங்கொத்துக்களையுடைய புதிய மலர்மாலையை அறுத்தெறிந்தது ஒன்று போதாதோ?
'தெளிவாயாக நீ! நான் தீயவன் அல்லன்' என்று அவளின்
சிறிய பாதங்களைத் தொட்டு வீழ்ந்துகிடந்தது ஒன்று போதாதோ?
இப்போது சொல்! நான் உன்மேல் கோபங்கொள்ளமாட்டேனோ?

"தெளிவாக யோசித்துப்பார்த்தால், நீ கூறுவது மட்டும் அல்ல, பிற குற்றங்களையும் நான் செய்யவில்லை,
நேற்று இரவிலே நீ கனவு கண்டாயா?"
"பெரும் மழை குளிர்ந்த நீர்த்துளிகளைக் கொட்டும் பொழுதில், நீ சொன்ன இடத்திற்கு வந்தவளை
நான் கண்ட கனவு என்று நீ செய்ததை நினைக்காமல் அதை மறுத்துக்கூறுகிறாய்,
இது ஒன்றும் பழைய காலம் அல்ல, நீ உரைக்கும் பொய்ச்சூள் உனக்குப் பயன்படுவதற்கு, ஏடா!
இங்கு நில்லாதே! உனக்குப் போவதற்குப் பல வீடுகள் உள்ளனவே!"
"மென்மையான தோள்களையுடையவளே! உன் நல்லெழில் இன்பத்தை எனக்குத் தா! அதை நான் நுகர்வேன்!"
"ஏடா! உன்னை ஏற்றுக்கொள்ளும்படி உன் குறைகளைச் சொல்லி நீ என்னிடம் உரைக்காதே! உன் தீமைகளை
இனியும் என்னால் பொறுக்க முடியாது! என்று உன்னிடம் உறுதியாகச் சொல்லும் ஆற்றலைப் பெறுவேனோ,
சொல்வதைக் கேட்காத நெஞ்சத்தை உடைய நான்."

# 91
"அழகிய பொய்கையில் மலர்ந்த நீலமலரும், அல்லிப்பூவும், அனிச்சப்பூவும்,
முறுக்கு நெகிழ்ந்த முல்லைப்பூவும், நறவம்பூவுடன் சேர்ந்த
தெரிந்தெடுத்த மலர்களாலான தலைமாலையும், கழுத்து மாலையும், நீ விரும்பிய பரத்தையர்
ஊடல் கொண்ட மனமாறுபாட்டால் கோபித்துப் பற்றுவதால் சிதைந்துபோக, நேற்றைக்காட்டிலும்
இன்று நன்றாக இருக்கிறது என் தலைவனின் அழகு";
"மெத்தை போன்ற மென்மையான தோள்களையுடையவளே! நான் செய்யாதவற்றைச் சொல்லிக் கோபிப்பது இங்கு எதற்காக?
சந்தேகப்பட்டு என்மேல் சினங்கொள்ளாதே! என்னிடத்தில் தவறு இல்லை என்பதைத்
தெய்வத்தின் பேரில் தெளிவிக்கிறேன், காண்பாயாக!"
"நீ செய்தவற்றை நான் அறிவேன், உன்னுடைய சூளுரையும் அவ்வாறே பொய்யானது, பரத்தையரின்

செறிந்த வளையல்கள் அழுத்திய வடுவையும், நீ வரச்சொல்லிவிட்டு ஏமாற்றியவரின்
கூரிய நகங்கள் கீறிய மார்பினையும், கசங்கிப்போன உன்
கழுத்து மாலையையும், குலைந்துபோய்க்கிடக்கும் சந்தனத்தையும் கொண்டு, சேரியிலிருக்கும்
செவ்வரி படர்ந்த செழுமையான மைதீட்டிய கண்ணையுடைய பரத்தையரின் ஆசை குறையாத தழுவலால்
உன் இயல்பான நிலை அழிந்துநிற்கும் உன் மேனியைக் கண்டு, நானும்
கோபம் தீர்ந்தேன்! செல்வாயாக அந்தப் பரத்தையரிடமே இப்போது";
"தெரிந்தெடுத்த அணிகளை அணிந்தவளே! இன்னும் தெளிவுபெறாமல் கோபிக்கின்றாய் நீ! என்னிடம் தவறு இல்லை என்பதை
முறையாக நிலைநாட்டுவேன், உன்னைப் பணிந்துகொண்டு";
"அப்படியானால் அதன் திறத்தையும் பார்ப்போம்!
நான் உன்னுடன் வேறுபட்டு நிற்கும்போது நெஞ்சு கலங்குகின்றாய்! உன் கைக்குள் அகப்பட்டுக்கிடந்தால்

மனம் மாறுபட்டு வேறு மங்கையர்பால் மயங்கித்திரிகின்றாய்! எந்தவொரு வார்த்தையும்
சொல்லி என்னைத் தெளிவிப்பது வேண்டாத காரியம்! மேலும் நீ
மாண்பற்ற செயல்களைச் செய்தாலும் அவற்றை ஒதுக்கிவிட்டு, உன்னைக்
கண்டாலே நெகிழ்ந்துபோகிறது என் நெஞ்சு; அப்படியிருக்கையில் என்ன காரியம் செய்கிறாய்?
விரும்பமாட்டேன் என்கிறாயே நீ, விரும்பத்தக்கவைகளைச் செய்வதை".

# 92
"புனத்தில் வளர்ந்த பூங்கொடி போன்றவளே! தன்னை மறந்த
கனவு எனப்படுவது ஓர் அழகிய நிகழ்ச்சியாகும்;
தம்மைத் தழுவிய மகளிரின் மார்பிடையே முகம்புதைத்து
மயங்கி மேலும் மேலும் அவர்களையே சுற்றிவந்து அவர்களைச் சென்றடைதலும், எங்கும் செல்லாமல்
வீட்டில் முடங்கிக்கிடப்பவர்க்கு மிகுந்த பொருள் கிடைக்கப்பெறுதலும்,
அரிதின் முயன்று அறம் செய்யாதவர்க்கு மேலுலக வாழ்வும் ஆகிய இம்மூன்றையும்
உரிமையாக ஒருசேரப் பெறுதலும், மனம் விரும்புவாரைப்
பிரிதலும், வந்து ஒன்றுகூடலும் ஆகிய இவற்றைத் தன் கனவுலகில்
தருவதைக் கனவு தடுப்பதில்லை;

நனவில் போவதைப் போலவே, நறிய நெற்றியையுடையவளே! நேற்றிரவு
கனவில் சென்றேன், ஆரவாரம் மிக்க மதுரையின்
மலை போன்ற உயர்ந்த மதிலின் புறத்தே சூழ்ந்த வையை ஆற்றின்
கரையினை அழகுசெய்யும் ஒரு சோலைக்குள்";
"இப்போது கூறுவாயாக! குன்றாத இனிய வனப்பினையுடைய நெடுந்தகையே! அங்கே
நீ கண்டது என்ன?"
"இதுதான் கண்டது: தம்முடன் கூடிநிற்கும் தோழியருடன், அழகிய வானத்தில் ஓய்ந்து பறக்கும்
மென்மையான நடையையுடைய அன்னங்களின் கூட்டம் அந்திக் காலத்தில்
தன்னைவிட்டுப் போகாத இமையமலையின் ஒரு பக்கத்தில்
தங்கியிருந்ததைப் போன்ற சில நல்ல மகளிரைக் கண்டேன்

துறையின் அருகிருந்த உயர்ந்த மணற்குன்றில் ஒன்றி நிறைந்திருக்க";
"பறைகொட்டுபவன் தன் மனத்தில் நினைத்ததை அப்படியே ஒலித்துக்காட்டும் பறையைப் போல் உன் நெஞ்சத்தில்
விரும்பினதையே கனாவாகக் கண்டாய்!"
"கேட்பாயாக, அவசரப்படவேண்டாம், பின்னர் கோபித்துக்கொள்ளலாம்"; "அப்புறம் என்ன? சொல்";
"இது சரி, இனிக்கும் சிரிப்பினைக் கொண்ட நல்லவளே! எல்லாரும் சேர்ந்து
தாமே கொடிபோன்றிருக்கும் அந்த மங்கையர், தாவி எழுந்து ஒரு
பூங்கொடியை வளைத்துப் பிடித்துப் பூங்கொத்துக்களைக் கொய்ய, அப்பொழுது
கிளைகளில் மலர்கள் மலர்ந்த வேப்பம்பூவினுக்குரிய பாண்டியன் போரிட்ட
போர்க்களத்தில் பகைவரின் பாதுகாப்புப் போல உடைந்து சிதறியது அந்த சோலையில் இருந்த
விரைகின்ற, வரியினையுடைய வண்டுக்கூட்டம்;

எல்லாம் ஒன்றுபோல் இருந்த பூங்கொத்துக்களில் மொய்த்துக்கொண்டிருந்த வண்டுகள் எல்லாம் அங்கே நின்ற
பெண்களின் அழகைக் கவர்ந்து உண்பது போல் ஒன்றாய்ச் சேர்ந்து அவர்களை மொய்க்க,
அவர்களுள்
ஒருத்தியின் அழகாகச் செய்யப்பட்ட பூமாலையும், முத்துமாலையும்
வண்டுகள் ஏற்படுத்திய குழப்பத்தால் குலுங்கிக்கொண்டிருந்த இன்னொருத்தியின் தோள்வளையில் மாட்டிக்கொள்ள,
ஒருத்தியின் நெற்றியில் திலகமாய் சூடிக்கொண்டிருந்த தெரிந்தெடுத்த முத்துக்களைச் சேர்த்த முத்துவடம்
இன்னொருத்தியின் அழகு சிறந்த ஒளிரும் மகரக்குழையணிந்த காதினில் சுற்றிக்கொள்ள,
ஒருத்தியின் அழகுத்தேமல் நிறைந்த அகன்ற அல்குலில் அணிந்திருந்த மென்மையான ஆடையை
இன்னொருத்தியின் பரல்கள் நிறைந்த காற்சிலம்பின் சுறாமீன் வடிவான மூட்டுவாய்கள் பிடித்திழுக்க,
ஒருத்தி ஊடலினால் கணவனைத் தழுவாதிருந்தவள், அலறிப்போய்

வண்டுக்கூட்டம் ஆரவாரிப்பதால், தன் ஊடலைக் கைவிட்டுக் கணவனின்
குளிர்ச்சியான மாலையணிந்த மார்பினில் தஞ்சம்புகுந்தாள்;
ஒருத்தி கால்வரை தாழ்ந்த ஆடையை ஒருகையில் எடுத்து மார்புடன் சேர்த்துக்கொண்டு, இன்னொரு கையில்
முடித்த முடி அவிழ்ந்து தாழ்ந்த கரிய கூந்தலையும் பற்றிக்கொண்டு, பூக்களால் மூடப்பட்ட
மணங்கமழும் குளத்தில் துன்பத்தோடு பாய்வாள்; 
ஒருத்தி, கூட்டமாய்ச் சேர்ந்துகொண்டு வண்டுகள் மொய்க்க, கையினால் விரட்டமாட்டாதவளாய், அணிந்துள்ள
மணங்கமழும் மாலையை அறுத்துக்கொண்டு அதனை ஓங்கிக்கொண்டு
வளைந்த உறுதியான தண்டையுடைய படகுக்குள் புகுந்துகொண்டாள்;
ஒருத்தி, அளவுகடந்த கள்மயக்கத்தால் கண்ணிமைகள் மறைக்கின்ற கண்ணையுடையவளாய்ப்
பறந்துவரும் வண்டுகள் மொய்க்க, அவற்றை ஓட்டுவதற்கு, ஓட்டுகின்ற

இடத்தை அறியாதவளாய் கைசோர்ந்து நின்றாள்;
இவ்வாறாக, கமழ்கின்ற சோலையில், காற்றடிக்க ஒதுங்கி வளைந்து
கொடியும் கொடியும் தம்மில் பின்னிக்கொண்டவை போல்'
தெரிந்தெடுத்த அணிகலன்கள் ஆரவாரிக்க, குழம்பிப்போய் வண்டுகளுக்காகப் பலவாறாகச் சிதறுண்ட
விளையாட்டு மகளிரைக் கண்டேன் நான்";
"உன்னிடம் உன் பரத்தையர் ஊடல்கொண்டதனையும், நீ அவரின்
அடி முன்னே வணங்கி அவரின் ஊடலைத் தீர்த்ததனையும், பலவாறாகக்
கனவின் மேலேற்றிக் கூறுவது, சினந்துகொண்டு நான்
செய்யக்கூடியது ஒன்றும் இல்லை என்பதனாலா? சொல்";
"நான் பொய் சொல்லேன்! இவ்வாறாக நான் கண்ட கனவுதான்

நல்ல முறையில் வாய்த்து உண்மையாவதைக் காண்பாய்! நறிய நெற்றியையுடையவளே! 'பல சிறப்புக்களோடு
கூடிச் சேர்ந்தவர்களே! பிரியாதீர்! நீண்ட காலம்
பிரிந்திருப்போரே! சேர்வதற்காக வாருங்கள்' என்று கூறுபவை போல
அரும்புகள் மலர்கின்ற மெல்லிய கிளைகள்தோறும், கரிய குயில்கள்
ஓயாமல் கூவுகின்ற வேனிற்காலம் வர, அதற்குப் பொருத்தமாக
மதுரை நகரத்து மகளிரும் மைந்தரும்
தேனீக்கள் ஒலிக்கும் மலர்வனத்தில் ஒன்றாகச் சேர்ந்து விழாக்கொண்டாடும்படியாக
குன்றாத ஆர்வத்துடன் தம்மை அழகுசெய்துகொள்வர், மன்மதனுக்கு
வேனிற்காலத்து விருந்தினைப் படைக்க எதிர்கொண்டு".

# 93
"வண்டுகள் மொய்க்கும்படியாக அரைத்த சந்தனத்தை செழும்பப் பூசிய
பார்க்கத் தெவிட்டாத இனிய தோற்றத்தினையும், பரத்தைமைப் பண்பையும் கொண்ட அகன்ற மார்பினனே!
முன்பெல்லாம் நீ இவ்வாறு இல்லை! இங்கு இரவினில் வந்திருக்கிறாய்!
வெளியில் நீ கண்டது என்ன? சொல்வாயாக";
"மிகவும் பெருத்த மென்மையான தோள்களையுடையவளே! நான் சொல்வதைக் கேட்டால் சொல்கிறேன்!
நாம் இருவரும் ஒன்றுகூடி வாழும் உயர்ந்த வாழ்க்கைக்கு உதவியாய் இருக்கும்
கடவுளர் இருக்குமிடத்தில் தங்கிவந்தேன்!"
"சோலை மலர்களைச் சூடிய பெண்மானைப் போன்றவர் பலர் இருக்கின்றனர் நீ
கடவுள்தன்மை கொண்டு வழிபடுபவர்,

அவருள் எந்தக் கடவுளைக் கண்டு வந்தாய்? அந்தக் கடவுளைச் சொல்!"
"முத்துப்போன்ற முறுவலையுடையவளே! நாம் மணம் முடித்த அன்று
இந்த முகூர்த்தம்தான் உமக்குரிய முகூர்த்தம் என்று அது வாய்க்கும்படியான சொன்ன
அந்தக் கடவுளே நான் கண்டு வந்த கடவுள்"; "அது சரிதான்!
வாய்க்குள்ளே நாவு அடங்க, தலையினைச் சாய்த்துக்கொண்டு நீ கூறும்
ஏமாற்றுவேலையில் என்னிடம் அகப்பட்டுக்கொண்டாய்! நீ பார்த்தவரை
உண்மையாக நான் கூற விரும்பியவனே! இப்போது கேள்!
உன்னைப் பெறவேண்டும் என்று விரும்பின தீராத ஆசையால், நீ சொன்ன இடத்திற்குத் தப்பாமல் வந்த,
விழுந்து முளைத்து ஒழுங்கு வரிசையில் அமைந்த பற்களையுடையவராக, கண்டவர்களுக்கு
இறந்துபோகும் நிலையைச் செய்யும் உருவத்தோடு நீ போகும் வீட்டில்

சேரும் முறையோடு உன்னிடம் வந்த கடவுளையே நீ கண்டாயா?
நறிய, குளிர்ச்சியான, மயிரில் தேய்க்கும் நறுமணச் சாந்தும், புழுகும் மணக்கும்
அலையலையான முடித்த கூந்தலில் காலையில் அணியும் அணிகலனுக்கு ஏற்ப
பார்வையால் பிடித்திழுக்கும் கண்களோடு முந்தையநாள் நீ
பூவைப் பலியாக்ச் செலுததிய கடவுளையே நீ கண்டாயா?
ஈரம் புலராத ஆடையை உடுத்திக்கொண்டு இடைவிடாத தவத்தை மேற்கொண்ட
சூரபதுமனைக் கொன்ற சிவந்த வேலையுடைய முருகனைப் பாடி, பல நாட்களாக
நுகர்ந்து நுகர்ந்து குறையாத மிகுந்த காமத்துடன், திருப்பரங்குன்றத்தில் உன்னோடு
மாரிக்காலத்தில் தங்கியிருந்த கடவுளையே நீ கண்டாயா?
நீ கண்ட கடவுள்களுக்குள், உன்னுடைய

மணங்கமழும் அகன்ற மார்பினைச் சிதைத்து
அதில் வடுக்களை உண்டாக்கியவர் யார்? சொல், அவர்களுள் எவரும்
சிறிதுநேரம்கூட நீ இங்குத் தங்கினால் கோபித்துக்கொள்வர், வெறுக்கத்தக்கவனே!
உன்னைத் தெரிந்துகொண்டேன்! நீ செல்வாயாக! ஒருவேளை நீ செல்லாமல் இருந்துவிட்டால்
உன் நல்ல மாலையையுடைய மார்பினில் ஒன்றாக ஒட்டியிருக்கும்படி பொருந்திக்கிடந்த
நீண்ட கரிய கூந்தலையுடைய அந்தக் கடவுளர் எல்லார்க்கும்
சங்கடம் ஏற்படவும் செய்யும்".

# 94
"என்ன தவம் செய்தாயோ?
நீருக்குள் வளைந்து நெளிந்து தோன்றும் நிழலைப் போல் வளைந்த மென்மையான தோற்றத்துடன்
இங்கு உடல் கூனி
நடக்கின்றவளே! உன்னோடு பேசவேண்டும், நிற்பாயாக!"
"அம்மாடியோ? காணச் சகிக்காத குள்ளனாய்ப் பிறப்பதற்குரிய நாழிகையான நல்லநேரத்தில்
ஆந்தைக்குப் பிறந்த நாய்க்குட்டியே! நீ என்னை
விரும்புவேனென்று தடுத்தாய், உன்னைப் போன்றவர்கள்
என்னைத் தீண்டப்பெறுவார்களோ?"
"சிறப்பான கலப்பையில் இறுக்கப்பட்ட கொழுவினைப் போல் முடங்கியும், மடங்கியும்

சுருட்டிவிட்டதைப் போன்ற நிறைந்த அழகால், எனக்குப்
பொறுக்க முடியாத காம நோயை ஏற்படுத்தினாய்! நான் பொறுத்திருக்கமாட்டேன்,
நீ இரக்கப்பட்டால் என் உயிர் என்னிடத்தில் உண்டு";
"நினைப்பைப் பார்! சூதாடு பலகையைத் தூக்கி நிறுத்தினாற் போல,
முட்டாள் குள்ளனே! உச்சிப்பொழுதிலே வந்து என்னை
வீட்டுக்கு வா என்று கையைப் பிடிக்கிறாய்! ஏடா! உன் வீட்டில்
பெண்கள் இருக்கிறார்களோ கூறு!"
"நல்லவளே கேள்! தலைக்கு மேலுள்ள நடுப்பகுதி இல்லையான, வாள் போன்ற வாயையுடைய
கொக்கை உரித்ததைப் போன்ற வளைந்த மூட்டுவாய் போன்ற கூனியே! உன் கைகளுக்குள் நான்
புகுந்து உன் மார்பினைத் தழுவினேனாயின் என் நெஞ்சிலே உன் கூன் அழுந்தும், உன் முதுகைத் தழுவினால்

கிச்சுக்கிச்சு மூட்டியதைப் போல் தழுவமுடியாதபடி ஆவேன், அருள்வாயாக,
உன் பக்கவாட்டில் சிறிது தழுவிக்கொள்வதற்காக"; 
"போ! சீச்சீ! அரை மனிதனே! இனி நீ இந்நிலையைக் கைவிடு! திரண்ட
மரத்தின் வளைவான இடத்தைப் பற்றி எழுந்த பூங்கொடியைப் போல
வளராத தம் வடிவால் என்னைத் தழுவி, என்னைக்
காப்பாற்றுவோம் என்று கூறுபவர் பலர், இந்தப் பரத்தையன் என்
பக்கவாட்டில் வந்து தழுவு என்கிறான், பலவும் சேர்ந்த
உழுந்தம்பணியாரத்தைக் காட்டிலும் விரும்பி அனுபவிக்கப்படுகிறது என் பிறப்பு! குட்டையான சூதாடுகருவியே! உன்னைக் காட்டிலும்
இழிந்ததோ இந்தக் கூன் பிறப்பு?" "இதற்குப் பின்னரும்
நான் உன்னை விரும்புகிறேன் என்று அவளின் பின்னால் சென்றபோதிலும், அதற்கு இணங்காமல்

கூனி குழைகின்ற குழைவினைப் பாரேன்!"
"ஆமையைத் தூக்கி நிறுத்தியதைப் போல் தோள்கள் இரண்டையும் வீசிக்கொண்டு
நாம் வேண்டாம் என்று விலக்கிவைக்கவும், எம்மை விரும்பும்
இந்த அழகன் நடக்கும் நடையைப் பார்!" "ஒருவரையொருவர் வசப்படுத்தும் அம்பினைக்கொண்ட
சாமனுக்கு அண்ணனான மன்மதனின் நடையழகைப் பார்!
ஓ ஓ இங்கே பாரேன்! நம்முள் நாமே நகைத்துக்கொள்ளக்கூடாது! நாம் இருவரும்
கலந்து பேசுவோம், அரசனின் அடிதொட்டுச் சூளுரைக்கிறேன்!"
"அப்படியே ஆகட்டும்! மென்மையால் இனிய மார்பினனே! நானும் உன்னை இகழ்வதை நிறுத்திவிட்டேன்! ஏ ஏ
பேயும் பேயும் துள்ளிக்கொள்கின்றன என்று
இந்த அரண்மனையில் நம்மைக் கண்டவர்கள் சிரிக்காமல் இருக்கவேண்டும்,

ஒளிகுன்றாத பொன்தகட்டு உருவினனே! அரண்மனைக்கு வெளியே சோலையின் நுழைவிடத்துக்குப்
போயிருப்பாய்! நெஞ்சாரக் கட்டிப்பிடித்துத் தழுவிக்கொள்வோம்!
குற்றமற்ற அறிவினைக்கொண்ட அவையிலுள்ளோரின் ஓலைச்சுவடிக்கட்டின்
முகப்பைக் கயிற்றினால் இறுக்கக் கட்டியதைப் போல.

# 95
"அங்கேயே நில்! அங்கேயே நில்! படியேறி வரவேண்டாம்! ஏடா! நீ
மணக்கின்ற கரிய கூந்தலையுடைய உன் பரத்தையர் வீட்டுக்குப் போ! இந்தப் பக்கம்
வழிதவறி வந்துவிட்டாய் போலும்! நீ வந்த வழியே
திரும்பிச் செல் இப்போது, உன் பரத்தையர் இடத்துக்கு, உன் சிவந்த அடிகள் மிகச் சிவந்துபோகும்படி!"
"செறிவாக ஒளிரும் வெண்மையான பற்களையுடையவளே! நான் வேறு, மோதவிட்ட
காடைகளின் சண்டையைப் பார்த்தேன்! அதைத்தவிர வேறு ஒன்றும்
அறிந்ததோ இல்லை! நீ வேறெதையோ நினைத்துக்கொண்டாய்!"
"நீ காடைச் சண்டையைப் பார்த்துக்கொண்டிருந்ததை நானும் கேள்விப்பட்டேன்! நீ என்றும்
புதிது புதிதாய்க் கொடுக்கும் ஈகை வளத்தைப் பாடியவனாக, உன் காலைவிட்டுப்

பிரியாத கவிந்த கையனாக இருக்கும் உன் பாணன் தன் யாழில்
இசைக்க, அதற்குச் செவிசாய்த்து, மேலும் மேலும் புதிதாகப் பிடிபட்ட (பரத்தையராகிய)
காடைகளின் போரையும் பார்த்தாய் போலிருக்கிறது, உண்மையாக எண்ணினால்
அந்தப் போரில் பட்ட இன்னும் புலராத புண்கள் உன்னைக் கொன்றன போலும்!
ஊரிலுள்ளோர் கூறும் பழிச்சொல்லுக்கு அஞ்சாதவனாய், உன்னிடத்தில் தங்கி, உன் மார்பிலுள்ள
மாலையைக் கையால் அணைத்துக்கொண்டு, தழுவிக் கையால் இறுக்கப் பிடிக்கின்ற
காடையின் போர்த்திறனை வாய்ப்பாகக் கண்டாலும், ஒதுங்கிப்போகாது, போரிட்டுக்கொண்டே இருக்கும்
பார்வைக் காடையின் போரையும் கண்டவன் போலிருக்கிறாய்! உன் தோளின் மேலுள்ள புண்கள் எல்லாம்
புலராமல் ஈரமாகவே கிடக்கின்றன;
கன்னங்களைப் புண்ணாக்காமல், உடம்பு முழுவதையும் கையினால்

துடைத்துவிட்டு, நீ வேண்டினாலும் வெல்லாமல் போரிட்டுக்கொண்டே இருக்கும்
பந்தயம் வைத்தாடும் போரைக் கண்டவனைப் போல் தோன்றுகிறாய்! உன் முகம்தானே
காட்டிக்கொண்டே நிற்கிறதே உன் மனக்குறிப்பை!"
அப்படியெனின், ஆராய்ந்தெடுத்த அணிகளை அணிந்தவளே! நீ கூறியவற்றை நான் அறியமாட்டேன் என்பதை
நீ உணர்வதற்கு உன் மெய்யைத்தொட்டு சூளுரைக்கிறேன்;"
"அம்மாடியோ! உண்மையைப் பொய்யென்று வஞ்சிக்கும் உலக நடப்பை நீ ஒன்றும்
அறியமாட்டாய் போலும்! நீயே உணர்ந்து பார்!"
நல்லவளே! பெய்யையெல்லாம் என் தலையில் ஏற்றி, தவறுகளையெல்லாம் ஒன்றுசேர்த்து,
என்னைக் கையோடு பிடித்துவிட்டாய், தவறிழைத்தேன்! அருள்செய்வாயாக!"
"அருளுவோம்! உனக்கு அருள்செய்ய நாங்கள் யார்? ஏடா! தெளிவாக

நீ அருள்செய்து உனக்கு ஆகும்படி பண்ணிய காடைகள் எல்லாவற்றையும் இன்னும் அதிகமாய்
அழைத்து உன் பாணனோடு ஆடி மீண்டும் அருள்செய்வாய்!
விடலையே! நீ கைவிட்டுவிட்டதால் நோயைப் பெரிதாக எதிர்கொள்கின்றன,
உன் சூதில் ஏமாந்த உன்னுடைய அனைத்துக் காடைகளும்".

# 96
"உயர்ந்த அழகினையுடைய மார்பனே! உன் வாய்ச்சொல்லுக்கு எதிர்ப்பேச்சு இல்லை,
பாய்த்துக்கட்டிய அழகிய வேட்டி கழன்று கிடக்கும் அழகோடு நிற்கிறாய்!
சந்தனமெல்லாம் அழிந்துகிடக்கிறது வியர்வையால்! தலைமாலை தோள்வரை தொங்குகிறது!
எங்கு சென்றுவிட்டு இங்கு வருகிறாய்?" "இப்போது கேள்,
உயர்ந்து எதிர் எதிராக வைத்து நீலமலர்களைத் தொடுத்தது போன்ற கண்களையுடையவளே!
குதிரை ஏற்றம் பயின்றுவிட்டு வருகிறேன்!"
"தெரியும் எனக்கு, நீ ஏறியது குதிரைதான்!
ஐந்து வகையாகப் பிரித்துவிட்ட கூந்தலே பல மயிர்களைக் கொய்துவிட்ட பிடரி மயிராகவும்,
அதற்குமேல் விரித்துக் கட்டிய தலைமாலையே சிவந்த தலையாட்டமாகவும்,

நீல மணிகள் கோத்த கடிகையென்னும் கழுத்தணியே வல்லிகையென்னும் கட்டப்பட்ட கழுத்துக்கயிறாகவும், கீழே
தொங்கும் இயல்புடைய மென்மையான காதிலிருக்கும் புல்லிகை என்னும் காதணியே கன்னத்தின் சாமரையாகவும்
கண்ணால் கண்டு அஞ்சும் சாட்டையாக, அழகு பெற்ற
தெய்வவுத்தியிலிருந்து ஒரு வடமாகத் தொங்கும் சுட்டி விளங்கவும், நூலால் செய்யப்பட்ட மேலாடையே திண்ணிய கடிவாளமாகவும்,
ஒன்றுபோலிருக்கும் மணிகளாலான, ஒன்றுபோலமைந்த மூன்று கழுத்துச் சரங்களே பலவான கண்டமாலைகளாகவும்,
பொன்னாற்செய்த மேகலையே கழுத்தில் கட்டிய சதங்கைத் தண்டையாகவும்,
ஒலிக்கின்ற கெச்சையைக் காலின் அடியில் அமைத்துக் கட்டியது
ஒழுங்குபட்ட பொன்னாலான சதங்கையாக ஒலிக்கவும் கொண்ட அந்தக் குதிரையை ஓட்டி, நீ
காதலித்து ஏறின உன் காமக் குதிரையை,
அழகிதாகச் சுண்ணாம்புச் சாந்து பூசிய மாடத்தில், அழகினையுடைய நிலாமுற்றத்தில்,

குதிரையின் நேரான ஓட்டத்தை அதற்குக் கற்பித்துக் களைத்துப்போனவனானாய்!
நல்ல குதிரைப்பாகன்தான் நீ! நீ வாழ்க!
சேவகனே! ஞாயிற்றின் கதிர்கள் விரிகின்ற விடியற்காலையில் கையால் வாரப்பெற்ற
மதுரை நகரின் பெரிய முற்றத்தைப் போல, உன் உடம்பின் மீது
அந்தக் குதிரையோ பிறாண்டியது?
கூர்மையான நகத்தைக் கொண்ட குளம்பினையுடையது, மிகவும்
கொடியது அந்தக் குதிரை! நீ வாழ்க!
மூங்கில் உழக்காகிய நாழியால் சேதிகை என்னும் பச்சை குத்தி
குதிரையில் உடல் அழகுபெறுவது போல, உன் உடம்பிலும்
குதிரைதான் கவ்வி அடையாளமிட்டதோ?

சீச்சீ, பயனின்றி இங்கு கடித்தது, மிகவும்
நச்சுத்தன்மை வாய்ந்தது அந்தக் குதிரை! நீ வாழ்க!
மிகவும் நல்லது! இப்போது அறிந்தேன் இன்று நீ ஏறிய குதிரையை!
முறையாக மணம் செய்து அறவழியில் வந்த
மேகலையாகிய சேணம் தரித்த காமக்கிழத்தியாகிய குதிரையும் இல்லை! பெருமானே! உன்
அந்நியனான பெரும்பாணன் தூது போக அங்கே ஒரு
வக்கிரத்தால் வந்த காற்றாய்ப்பறக்கும் குதிரை! அது உன் பழைய
உருவத்தை அழிக்கும்! அந்தக் குதிரையில் இனி ஏறாதே! அவ்வாறு ஏறினால் அந்தப் பரத்தையே
குதிரையாக, அதன் பாகனாக என்றும் அந்தப்பக்கமே
திரிவாயாக! அந்தக் குதிரையை ஏறுவதற்குப் போ!

# 97
"நீ அப்படிப்பட்டவன்! உன் காதற்பரத்தை கூறிய கடுமையான சொற்களை அறியாதவன் போல நீ
என்னைச் சினந்துகொள்கிறாய்! அதனால் உன்னிடம் நான் சினங்கொள்வேன்!
விடியற்காலையில் எம் வாயிலில் வந்து "நீ கூறிய இடத்திற்கு வந்து
அந்த இடத்தில் முற்றும் உன்னைக் காணாமல் நான் அலைந்து திரியும்படி
நீ எங்கே சென்றாய்' என்றாள் அந்தப் பரத்தை. இப்பொழுது பொதுவாக நின்று எம்மை இகழ்கிறாய்!"
"முத்தைப் போன்ற முறுவலையுடையவளே! நம் வலையில் அகப்பட்டுக்கொண்ட ஒரு
புதிய யானை இங்கு வந்தது, அதனை ஏறிப் பார்ப்பதற்கு நான் தங்கினேன்."
"சரிதான்
அந்த யானை மிகவும் அழகுடையதாக இருப்பதாகக் கேள்விப்பட்டேன்,

அந்த யானைதான் சுண்ணப்பொடி பூசி நறுமணமிக்க மதுநீர் உண்டு,
ஒளிரும் நெற்றியில் இட்ட திலகமாகிய ஒளிவிடும் நெற்றிப்பட்டத்தையும்,
தொய்யில் கோலமிட்ட அழகிய முலைகளாகிய வெண்மையான கொம்புகளையும்,
தொய்யகம் என்னும் தலைக்கோலமாகிய அங்குசத்தையும், காதணிகளான இருபுறமும் தாழும் வடிவான மணிகளையும்,
இலக்குமி பொறித்த புனைந்த தலையணியாகிய கழுத்துமெத்தையையும் கொண்டு
முத்தைப் போன்ற பொலிவினையுடைய வெண்மையான பற்களைத் திறந்து,
நல்ல மனை வாசலின் கதவுகளான கம்பத்தைச் சேர்ந்து,
தன்னுடைய அழகைக் காட்டி, அதன் தன்மையால் காலைத்தட்டிவிட்டு விழவைக்கும்
நட்புறவாகிய சங்கிலியால் கட்டுண்டு, பிறர்க்கு வருத்தத்தைச் செய்யும்
மென்மையான தோளாகிய பெரிய துதிக்கையினால் வாங்கிக்கொண்டு, தன்னைக் கண்டவரின்

நற்பண்புகளையே கவளமாக உண்ணும் சிரிப்பை முகத்திலே கொண்ட யானையை
இன்றைக்குத்தான் பார்த்தது போல ஏன் என்னிடம் பொய்சொல்கிறாய் நீ!
ஏடா! அந்த யானையைத் தழுவி, அதன் தொடி செறிந்த தோள்களிரண்டின் மேல் தத்தி
மேலேறிக்கொண்டு அதனைச் சவாரி செய்தவனும் நீ!
உன்னைச் சேர்ந்து, பின்னர் கைவிடப்பட்டு ஆசையினால் தேம்புகிறவர்களின் வீட்டு வாசல் வழியாகக் கொண்டுபோய்
அந்த யானையில் அழகாகச் சவாரி செய்தவனும் நீ!
மிகவும் அதிகமாய்ச் செல்லாமல், சீராக, உன்னை நுகர்ந்த சிறுமகிழ்ச்சிகொண்ட அழகான மைதீட்டிய கண்கள்
கண்ணீர் வடித்து நிற்க இந்தப் புதிய யானையில் சவாரி செய்தவனும் நீ!
நீ சேர்ந்த இடங்களிலெல்லாம் நெளிநெளியாகத் தாழ்ந்த கரிய கூந்தலையுடைய உன் பரத்தையர் எல்லாம்
உன்னை ஒரு சிறிய பாகனாக எண்ணி உன்மேல் கோபங்கொள்ளாதபடி, அந்தப் புதிய யானையை மெதுவாக

விடாமல் ஓட்டிக்கொண்டு நீ எமது வீட்டுக்கு வந்திருக்கிறாய்! அந்த யானைக்கு
மதம்பிடிக்கும்போது உன்னைக் காத்துக்கொள்."

# 98
"யார் நீ? எம்முடைய இல்லத்தில் நுழைகிறாய்!
புதிய மலரைத் தேடியலையும் வண்டினைப் போல,
உன் திருமணக் கோலத்தைத் தினம்தினம் காட்டுகிறாய்!
அங்கேயும் இங்கேயும் ஓடிச் சென்று மங்கையரைக் கொண்டுவந்துகொண்டேயிருக்க,
எந்நேரமும் பூட்டியபடியே இருக்கும் உன் திண்ணிய தேர் ஓடுகின்ற தெருக்களிலெல்லாம்
உன்னைப் பற்றிய பேச்சுத்தான் எழுவதற்குக் காரணமான உன் மாய்மாலப் பரத்தைத்தன்மையைக்
காட்டுவதற்காக வந்திருக்கிறதைக் கையும்மெய்யுமாகப் பிடித்துவிட்டேன்! முன்பெல்லாம்
அதனைக் கேட்டும் இருந்தேன் நான்!"
"தெரிந்தெடுத்த மாலையினைக் கொண்ட அழகிய நல்லவளே! உன்னுடைய நெஞ்சால் தெளிந்துகொள்ளவேண்டும்

மிகுந்த நீர் மோதுகின்ற கரை சூழ்ந்த பூக்கள் மிக்க வையையாற்றில்
வருகின்ற நீரில் புனலாடுவதற்குத் தங்கினேன், பெரிதாக என்னை
நான் செய்யாதனவற்றுக்காகச் சொல்வது எதற்காக?"
"அப்படியா? அங்கே புனலாடினாய் என்றும் கேள்விப்பட்டேன்! அந்தப் புனல்தான்
நீண்ட தன்மையுடைய நெளிநெளியான கூந்தலே நீண்டொழுகும் அலையலையாய்க் கருமணலில் ஓடும் நீராக,
சிறப்புமிக்க அழகிய மைதீட்டிய கண்கள் துள்ளுகின்ற கயல்களாக,
தலையில் சூடிய கார்காலத்து மலர்கள் மேலாக மூடிய கமழ்கின்ற பூக்களாலான நீர்ப்பரப்பாக,
நாணம் என்ற கரையை உடைத்துக்கொண்டு நல்ல பகற்பொழுதில் வந்த அந்த
புதிய வரவான புதுப்புனலில் ஆடினாய் முன்மாலை நேரத்தில்,
பாணன் என்பவனைத் தெப்பமாகக்கொண்டு நீருள் பாய்ந்து;

தாராளமாக அருள்செய்து, விருப்பத்துடன் கூடிய காதலுடன் அந்தப் நீரில் ஆடியதால்
வெளிப்பட்ட ஊராரின் பழிச்சொற்களை நான் அறிந்துகொள்வேன் என்பதற்கு அஞ்சி,
மறைவாக நடந்துகொண்டாய் என்றும் கேள்விப்பட்டேன்! அப்படி மறைவாக நடந்துகொண்டதற்காக,
கண்களை மறைக்கும் கோபத்தால் புருவமாகிய அலைகளை வீசி
ஆரவாரிக்கும் காற்சிலம்பால் உன் நல்லொழுக்கமெல்லாம் கெட்டுப்போக,
அழகு ததும்ப வந்த அந்தப் புதுப்புனல் உன்னைப் பிடித்து
இழுத்துக்கொண்டு சென்றதைக் கண்டவரும் இருக்கிறார்கள்!
இழுத்துச் சென்ற அந்தப் புனல், புகழ் வாய்ந்த சிறப்பையுடைய உன் நேர்மையான உள்ளத்தையும் தனதாக்கிக்கொண்டுவிட
குற்றமற்ற அந்தப் புதுப்புனல் வெள்ளத்தில் நீந்தி இன்னும்
நீ கரை கண்டதும் இல்லை!"

"வரிசையாக வளையல்களை அணிந்தவளே! தப்பாத வாட்படையையும், புனைந்த கழல்காலினையும் உடைய பாண்டியனின்
வையையாற்றில் வந்த புதுப்புனலில் ஆடுவதற்குத் தங்கினதைத்
தெய்வத்தின் மேல் ஆணையிட்டுத் தெளிவிப்பேன், பெரிதாக என்னை
நான் செய்யாதனவற்றுக்காகச் சொல்வது எதற்காக?"
"உண்மையே! நிறைய மலர்கள் சூடிவந்த அந்த மாயப் புதுப்புனலில்
பலமுறை நீ ஆடச் செல்லும்போது, ஒருபக்கம் ஒதுங்கிக்
காப்பாற்றுவாரும் இல்லாத இடத்தில் ஆழப்பதிந்து, தேருடன்
நீ குறுமணலில் அகப்பட்டுக்கொள்ளாமல் இருக்கும்படி பார்த்துக்கொள்வாயாக! முளையைப் போன்ற
முறுவலையுடைவரைப் பார்த்துச் சிரிப்பதனால்."

# 99
கள்ளை நீக்கின தேவர்க்கும், அதனை நீக்காத அசுரர்க்கும், அவ்விரண்டையும் கைக்கொண்டு
அறத்தொழிலாக இன்புறுத்தும் அந்தணராகிய வியாழன், வெள்ளி ஆகிய இருவரும்
வெவ்வேறு வகையாகச் செய்த அரசியலைக் கூறும் நூல் நெறியிலிருந்து பிறழாது,
குழந்தையைப் பார்த்து அதற்குப் பாலூட்டும் தாயைப் போல, இந்த உலகத்தில்
மழையைப் பொழிந்து அருள்செய்து பாதுகாக்கும் நல்ல ஊழான விதியை எல்லார்க்கும்
தப்பாமல் கிடைக்கச் செய்தலை, உனது செம்மையான ஆட்சியின் காரணமாக உலகத்துக்குத் தர வாய்த்த,
அணிகலன்கள் அணிந்த கொடியினை உடைய திண்ணிய தேரினையும், மணி கட்டின கூட்டமான யானைகளையும் உடையவனே!
அறத்தின் நிழலாகக் கொண்டாய், உன் அழகிய வெண்கொற்றக்குடையின் நிழலை; அந்தக் குடையின்
நிழலுக்குப் புறம்பே நிற்பவளோ இவள்? இவளைப் பார்!

பிறை போன்ற நெற்றியில் பசலை படரப் பெரும் துன்பத்துள் ஆழ்ந்தவளை;
பொய்யாமையைச் சொல்கிறது உன் செங்கோல்; அந்தச் செங்கோலின்
நல்லாட்சிக்கு ஒதுக்கப்பட்டவளோ இவள்? இவளைப் பார்!
காம நோய் வருத்த, தான் வாழ்கின்ற நாளையே வெறுத்துவிட்டவளை;
அனைவரையும் காப்போம் என்று முழங்குகிறது உன் ஓங்கியடிக்கும் முரசு; அந்த முரசின்
காப்பு எல்லையைக் கடந்துநிற்கிறாளோ இவள்? இவளைப் பார்!
மூங்கில் போன்ற அழகை இழந்த தன் தோள்களின் வனப்பு வாட அதனை இழந்துநிற்பவளை;
இப்படியாக,
நீண்ட தொலைவுக்கு அப்பால் இருப்பவற்றைக் கண்டாலும், தன்னிடம் உள்ள
குறையை மற்றவர் காட்டினாலொழிய அதனைக் கண் பார்க்கமுடியாது! அதைப் போல என் தோழியின்

வளையல்கள் கழன்று விழும்படியாக நீ அவளைக் கைவிட்டுச் சென்ற கொடுமையைக்
கொடியது என்று நீ உணராதிருப்பது சான்றோரால் கடியப்பட்டதன்றோ உனக்கு?

# 100
கடலில் தோன்றி, இந்த உலகத்து இருளைக் கூட்டித்தள்ளும் ஞாயிற்றைப் போல்,
உனக்கு வேண்டாதவரின் நெஞ்சம் நடுங்க அச்சந்தரும் கொடுமையும்,
மிக்க உயர்ந்து தோன்றும் உயர்ந்த உன் வெண்கொற்றக்குடையில் நிழல் வேண்டி வந்தவர்க்கு
காண்பதற்கினிய திங்களைப் போன்ற கதிரைப் பரப்பும் குளிர்ச்சியும் கொண்டு,
சிறப்பு மிக்க உன் ஒழுக்கத்தால் உலகத்தைக் குற்றமின்றிப் பாதுகாத்து, அகன்ற உலகத்திலுள்ள
எந்நாட்டவரும் தொழுது போற்றும் முழங்கும் ஒலியையுடைய முரசையுடையவனே!
அரிய தவத்தையுடைய முதல்வனைப் போல, எந்தவித ஐயமும் இன்றி, ஒருவரிடத்தும்
பொய்கூறமாட்டாய் என்று உன்னைப் புகழ்வது கெட்டுவிடாதோ? 
அன்புகொண்டு, பிரியமாட்டேன் என்று நீ உறுதியாகக் கூறிய சொல்லை ஆசையுடன் நம்பியிருந்தவளின்

பல இதழ்களையுடைய மலர் போன்ற மைதீட்டிய கண்களில் நீர் நிறைய அவளைக் காணும்போது;
பெருகி நிறைந்த மேகம் மழையைப் பொழிந்தது போல் உன்னைச் சூழவந்து நின்ற யாவர்க்கும்
அவர் வேண்டிக் கேட்கும் விருப்பத்தை வாடிப்போகச் செய்யமாட்டாய் என்ற பெயர் கெட்டுவிடாதோ?
மனம் மிக வருந்தினும் உன் மணக்கும் மார்பைக் காதலிக்கும்
ஒளிர்கின்ற, திரட்சியையுடைய, பிரகாசமான வளையல்கள் அவளது கையில் கழன்று விழுவதைக் காணும்போது;
ஒருவர் வாழும் காலஅளவை நிர்ணயித்து, பாரபட்சமின்றி அந்த உயிரைக் கொண்டுபோகும் கூற்றுவன் போல
முறையுடன் ஆட்சிசெய்கிறாய் என்று உன்னைப் பிறர் மொழிவது கெட்டுவிடாதோ?
மிகுந்த துன்பம் வருத்த உன் இரக்கத்தை வேண்டிக் கலங்கிக்கிடப்பவளின்
பழிச்சொல்லற்ற ஒளிவீசும் முகத்தில் பசலை படரக் காணும்போது;
இனி,

தன் பழைய அழகை இழந்தவளை, நீ துணை என்று சேர்த்துக்கொண்டவளை,
இனிய முயக்கத்தை உடைய அகன்ற மார்பினையுடையவனே! நீ இப்படிக் கொடுமைப்படுத்துவது கொடியது என்று
உன்னை நான் கடிந்துரைக்கவும் வேண்டுமோ?
எப்படிப்பட்டவர்களுடைய இடும்பையையும் களைகின்ற உனக்கு!
* நான்காவது முல்லைக்கலி

# 101 
மழை பெற்றுக் குளிர்ந்த காட்டில், முதல் மழைக்கு அரும்பு விட்டு,
உலர்ந்துபோன அடிப்பகுதியில் செழித்து வளர்ந்த முள்ளைப் புறத்திலே கொண்ட பிடவமும்,
கள்ளுண்டு செருக்குற்றவனின் கால்தடுமாறும் நிலையைப் போல வளைந்து, துடுப்புப்போன்ற மொட்டினை ஈன்று
தீயைக் கடைந்த நெருப்பைச் சேர்த்து வரிசையாக வைத்ததைப் போன்ற மலர்ந்த இதழ்களையுடைய செங்காந்தளும்
நீலமணியைப் போன்ற நிறத்தைக் கொண்ட காயாம்பூக்களும், பிற மலர்களும்
அழகுடன் விளங்கும்படியாகச் சூடிய தலைமாலையையுடையவர் ஒன்று சேர்ந்து,
ஏறுதழுவுபவரோடு மாறுபட்டு நிற்கும் தம் ஆற்றலை வெளிப்படுத்த
பிறரால் சீறுவதற்கு முடியாத வலிமையுடையோனாகிய இறைவனின் குந்தாலியைப் போல் கொம்புகள் சீவப்பட்ட
ஏறுகளை அவற்றின் தொழுவினுள் (வாடிவாசலுக்கு உள்ளே) ஒரு சேர அடைத்தனர் 

அவ்விடத்தில், முரசின் முழக்கத்தைப் போலவும், இடியினைப் போலவும் ஏறுதழுவும் களத்தின் முன்னே ஆரவாரம் உண்டாக,
ஏறுதழுவும் நடைமுறையை எதிர்கொண்டு வந்து வந்து திரண்டு
நறும்புகையுடன் புழுதியும் கிளம்ப, நல்ல மகளிர் திரண்டு நிற்க,
நீர்த்துறையிலும், ஆலமரத்தின் கீழும், பழைய வலிமையினையுடைய மராமரத்தின் கீழும் உறையும்
தெய்வங்களை அவற்றுக்குரிய முறையுடனே வணங்கி வாடிவாசலை நோக்கிப் பாய்ந்தனர்;
கொம்பின் உச்சியில் சுற்றிய பட்டுநூலின் நிறத்தைப் போன்ற புன்மையான நிறத்தைக் கொண்ட காளையின்
சீற்றமுள்ள பார்வைக்கு அஞ்சாதவனாய் அதன் மீது பாய்ந்த இடையனைச் சாகும்படி குத்தித்
தன் கொம்புகளுக்கு இடையிலே வைத்துக்கொண்டு அவன் உடலைக் குலைக்கின்ற காட்சியைப் பார்!
அழகிய சிறப்புக்கொண்ட அசைகின்ற இயல்பினையுடையவளாகிய திரௌபதியின் கூந்தலைப் பற்றியவனின்
நெஞ்சத்தைப் பிளந்து போட்டு பகைவர் நடுவே தன்

வஞ்சினத்தைத் தீர்த்துக்கொண்ட வீமனைப் போன்றிருக்கிறது;
சூரியனின் கதிர்கள் விரிவதைப் போன்ற சுழியினை நெற்றியில் கொண்ட கரிய காளை,
மலைப்பிளவிலே பூத்த பூவைக் கொண்ட தலைமாலை அணிந்த இடையனைத் துவட்டிக்
குடல் சரியும்படி குத்தி, அவன் உடலைக் குலைக்கின்ற காட்சியைப் பார்!
துன்பத்தை நுகர்கின்ற அந்திக்காலமாகிய ஊழிமுடிவில் ஒருபாதி உமையின் பச்சைநிறத்தைக் காட்டும் இறைவன்
வருத்தத்தைச் செய்யும் எருமை ஏற்றை ஏறுகின்ற கூற்றுவனின் நெஞ்சைப் பிளந்திட்டு
அவன் குடலைக் கூளிப்பேய்க்கு வயிறாரக் கொடுக்கின்றவனைப் போன்றிருக்கிறது;
காதில் மச்சம் உள்ள, இடையர்கள் நேர்ந்துவிட்ட, மின்னும் நுண்ணிய சிவந்த புள்ளிகளைக் கொண்ட வெள்ளைக்காளையின்
சீற்றத்துக்கு அஞ்சாதவனாய்ப் பாய்ந்த இடையனைத் துவட்டி
மிகவும் கூர்மையான தன் கொம்பால் அவன் உடலைக் குலைக்கின்ற காட்சியைப் பார்!

மிகுந்த இருள் என்றும் கருதாமல், கடுமையான இரவில் வந்து தன்
முயற்சியால் வென்று அழித்துத் தன் தந்தையான துரோணாச்சாரியாரைக் கொன்ற சிகண்டியை
அவனது தலையைத் திருகும் அசுவத்தாமனைப் போன்றிருக்கிறது;
இப்படியாக,
அழகிய மாலையணிந்த கணவனைத் தரும்படியான நல்ல சகுனமாக இருக்கிறது, இடையர்கள்
நேர்த்தியான இந்த மாலைப் பொழுதில் ஊதுகின்ற குழல்;
மதம்பிடித்த யானையைக் காட்டிலும் அஞ்சாத காளையைப்
பிடித்தபிடி விடாமல் நீ தழுவிக்கொண்டால், வெற்றிக்கொடியை
ஏந்தும் இந்த இடைமகளின் தோள்கள்;
பகலில் மலரும் பூக்களைக் கொண்ட தலைமாலை சூடியவன், வருத்த இசையைக் குழலில் ஊதுபவன்,

தோளின்மீது கம்பினை வைத்துப் பிடித்துக்கொண்டிருப்பவன் ஆகிய இவர்களில் இங்குள்ள
கொல்லுகின்ற தன்மையுள்ள காளையை அடக்குபவர்களுக்கு, எமது நிறைந்த கரிய
கூந்தலுடையாளை மணமுடித்துக்கொடுப்போம் நாம்;
காளையை அடக்குபவரில் என்னைப் போன்றவர் யாரும் இல்லை என்று நம் மாடுகளுக்குள்
தன் முயற்சியை எடுத்துக்கூறும் தலைவன் நமக்கு என்றேனும் ஒருநாள்
உறவினன் ஆவான். அவனைக் கண்டு
இடப்புறமாகத் துடித்தன நமது கண்கள்;
இப்பொழுது காளைகளும் சோர்ந்தன, இடையர்களும் மிகவும் காயம்பட்டிருக்கின்றனர்,
மணக்கின்ற கரிய கூந்தலையுடைய ஆயமகளிர் எல்லாரும்
முல்லைப்பூக்கள் பூத்துக்கிடக்கும் அழகிய குளிர்ந்த சோலைக்குள் புகுந்தனர், இடையரோடு

தாம் சேர்வதற்குரிய இடங்களைத் தேடிக்கொண்டு.

# 102
"பரந்து விரிந்த பெரிய விசும்பில் வேகமாகப் பொழிகின்ற மழைநீரில் கலந்து அதனை ஏற்றுக்கொண்ட
குளிர்ந்த மணங்கமழும் பிடவமும், படர்கின்ற கொடியையுடைய செம்முல்லையும்,
நல்ல நிறமுள்ள செழுமையான காந்தளும், ஒளிர்கின்ற பூங்கொத்துக்களையுடைய கொன்றையும்
இவற்றைப் போன்ற பிறவும், பல மலர்கள் செறிந்திருக்கும்படியாக,
தழையும், மாலையும், அணிகலன்களும் என்று இவற்றைக்
கட்டியவராய் மகிழ்ந்து திளைத்து விளையாடும்
கபடமற்ற பேச்சினையுடைய இந்தத் தோழியர் கூட்டத்தில் இவள் யார் தன் உடம்போடு
என் உயிர்க்குள்ளே புகுந்தவள் இன்றைக்கு";
"ஓ! இவளா? இவள் சண்டையிடுவதில் பெரு விருப்பமுள்ள அந்த நல்ல காளையை அணைபவரை அன்றி

வேறு யாரும் இவளின் அழகுள்ள, மாந்தளிர் போன்ற மேனியைத் தீண்டமுடியாது என்று மிக்க கவனத்துடன்
எல்லாரும் கேட்கும்படி மீண்டும் மீண்டும் பறையறிவித்து எப்பொழுதும் எழுந்த
பேச்சால் இங்கு கொண்டுவரப்பட்டவள்";
"அந்த ஏறுதழுவலை நடத்தச் சொல்லுங்கள்"; "இனி காலம் தாழ்த்தமாட்டோம்" என்றனர்; "பறையை முழக்குங்கள்" என்றனர்; பரப்பினர்
சிறந்த அணிகலன்களையணிந்தவளின் சார்பாக ஏறுகோள் விழா நடக்கும் செய்தியை;
இந்த விழாவில் பெடை அன்னத்தைப் போன்றவர்கள் தங்கள் கண்கள் பொலிவுபெற்று விழாநிகழும் இடம் அனைத்தையும் பார்க்கும்
உயர்ந்த பரணைப் பெறுவார்களென்றால் அது மிகவும் நல்லது;
விடப்படும் காளையைத் தடுத்து நிறுத்தும் வகையில் மேலும் மேலும் அதன் மேல் பாய்வதற்காக, ஆரவாரித்துச் சேர்ந்து
நேருக்கு நேர் சென்றார் பலர்;
கொன்று குவிக்கும் வில்லைப்போல மிகவும் வெகுண்டு அதிக அளவு சினத்துடன்

கடுமையாகப் பாய்ந்து அந்தக் காளையருக்குள் ஓடியது;
புழுதி பறந்தது;
மார்புகளைக் கொடுத்துப் பாயும் காளையைத் தாங்கினர்;
காளையின் கொம்புகள் தரையைப் பார்த்துக் கவிழ்ந்தன;
கலங்கினர் பலர்;
அவர்களுள், ஊறிடும் மிகுந்த காதலுணர்வு பெருக, பூக்கள் நிறைந்த நீலமணியைப் போன்ற நெடிய தோளால் வளைத்து
காளையின் திமிலுக்கிடையே அவன் தோன்றினான், தோன்றி
அந்தக் காளையை அடக்கிச் சோர்வடையச் செய்தான்;
காளையின் துன்பத்தைக் கண்டு எழுந்தனர், எதற்காகவோ
அந்த காளையின் உரிமையாளரின் பகை?

அறியாமை உடையவர் இந்த ஆயர் பெருமக்கள்! இதற்கு முன்பும்
கொலைவெறியுள்ள காளையின் கழுத்தை அணைத்துக்கொண்டவர்களைக் கண்டிருக்கின்றனர்! இன்றும்
சீற்றங்கொண்ட காளையைப் பிடித்துக்கொள்ளுங்கள் என்று பறை சாற்றுகின்றனரே!
அங்கே இப்பொழுது
மணம்செய்வதற்குத் தண்ணுமையில் தாளம் தவறாமல் எழுப்புவார்களாக,
பண் அமைந்த இனிய தாளத்தையுடைய குரவைக் கூத்தினுள், சிறந்த தலைமாலையையும்
திண்ணிய தோள்களையும், வெற்றிப்புகழையும், வியப்புக்குரிய போர்த் திறத்தையும், கரிய மேனியையும்,
அழகிய சிவப்புநிற ஆடையையும் உடைய அந்த இளைஞனுடன், அழகிய
முறுவலையுடையவளின் மென்மையான தோள்களைச் சேர்த்துப் பாராட்டி, அந்தச் சிறுகுடியின்
மன்றத்திலெல்லாம் பரவியது பேச்சு.

# 103
மெல்லிய பூங்கொத்துக்களையுடைய கொன்றையும், மென்மையான மலரையுடைய காயாவும்,
புன்மையான் இலையைக் கொண்ட வெட்சிப்பூவும், பிடவமும், செம்முல்லையும்,
கஞ்சங்குல்லைப் பூவும், குருந்தம்பூவும், செங்காந்தளும், பாங்கர்ப்பூவும் ஆகிய
மலையிலுள்ளவையும், காட்டிலுள்ளவையும் உள்ள மலர்கள் கொண்டு கட்டிய பூச்சரங்களைச் சூடியவராய்,
பல பசுக்களையுடைய இடையர்கள் வேகமுள்ள காளையை அடக்குவதைக் காண்பதற்காக,
முல்லை மொட்டையும், மயிலிறகின் அடியையும் வரிசையாக வைத்தது போன்ற
பற்களையுடைய, பெரிய குளிர்ச்சியான கண்களையுடைய, கபடமற்ற
பேச்சினையுடைய, ஒளிவிடும் பொன்னாலான குழையைக் காதில் அணிந்த
ஆய மகளிர் பரணில் ஏறிக்கொண்டார்;

இந்த மகளிர் பரண்மீது இருக்க,
பச்சை மணி போர்த்ததைப் போன்ற மலையின் பக்கத்தில் விழும் அருவியைப் போன்ற
அழகின் எல்லையைக் கடந்த வெண்மையான கால்களைக் கொண்ட கரிய காளையும்,
விண்மீன்கள் தோன்றி ஒளிசிந்தும் அந்திக்காலத்து மேகத்தையுடைய சிவந்த ஆகாயம் போன்று
அழகிய ஒளிர்வு பரந்த வெள்ளைப் புள்ளிகளைக் கொண்ட காளையும்,
கொலைத்தொழிலையுடைய இறைவன் சூடிய பிறை நிலவு போன்ற
மிகுதியாக வளைந்த கொம்பினைக் கொண்ட சிவலைக்காளையும்,
போரிடும் முரட்டுத்தனத்தைகொண்ட வலிமையையுடைய பலரும் விரும்பும் காளைகள் பலவும் ஒன்றுகூட,
சிங்கமும், குதிரையும், யானையும், முதலையும்
பெரிய மலையின் பெரும் பள்ளத்தில் ஒன்றுசேரத் திரண்ட,

தொங்கிக்கொண்டிருக்கும் மேகங்கள் அசைந்து திரியும் மலையிடத்தைப் போன்று
கொடிக்கொடியாய் நறுமணப்புகை சூழ்ந்திருக்கிறது அந்தத் தொழுவம்;
அந்தத் தொழுவினுள் மிக்க ஆர்வத்துடன் புகுந்த இடையர்குல இளைஞரைப்
பார்த்துப் பார்த்து முட்டின அந்தக் காளைகள்;
காளைகள் தமக்குப் பகையான காளைகளை விரும்பித் தாக்கின; சுற்றிலும்
நெருப்பினைக் கக்கும் குந்தாலியைக் கொண்ட இறைவன் சூடிய பிறையில் கிடக்கும்
சிவந்த மாலையைப் போல
குருதி படிந்த கொம்புகளில் குடல்கள் பின்னிக்கிடந்தன;
"கொம்புகளைச் சுற்றிக் குடல்கள் பின்னிக்கிடந்த காளையின் முன்
அதற்கு ஆட்டம் காண்பித்து அந்தக் குடலை எடுத்துக்கொள்பவனின் வலிமையைப் பாரேன்!

இது சிவந்த நூல் சுற்றியிருக்கும் கழியை ஒருவன் இருகையாலும் பிடித்துக்கொள்ள, அந்த நூலை வாங்கி
மூன்று நூலாகப் பிரித்து ஆக்குகின்றவனைப் போலிருக்கிறது!"
"சின்னவளே! இது ஒன்றைப் பார்! இவன் ஒருத்தன்!
எருமைக் கூட்டத்தின் ஆயர்மகன் அல்லவா! காளையை அடக்காமல் வரமாட்டான்,
போரிடுவதில் மிகவும் விருப்பமுள்ள காளையின் சொரசொரப்பான கழுத்தில் பாய்ந்து
அதற்கு இட்ட மாலையைப் போல அதனைத் தழுவிக்கொண்டவன்";
"சின்னவளே! இது ஒன்றைப் பார்! இவன் ஒருத்தன்!
பசுக் கூட்டத்தின் ஆயர்மகன் அல்லவா! இதை முடிக்காமல் போகமாட்டான்,
மச்சத்தையுடைய காளையின் மேலேயிருந்து ஆட்டம்காண்பித்துக்கொண்டு, நீர்த்துறையில் தோணியில்
செல்பவன் போலத் தோன்றுகின்றான்";

"தோழியே! காற்றைப் போல வந்த கடும் வேகங்கொண்ட காளையான காரியைப்
பலரும் கூடும் களத்தில் அதன் வலிமை அடங்க அணைத்து, அதனை வருத்தி, அதன்
மேலே ஏறிக் காட்சியளிக்கின்ற இடையனது அழகைப் பாராய்!
எருமைக்கடாவில் வருகின்ற கூற்றுவனின் நெஞ்சத்தைக் கால்நுனியால் பிளந்திட்டு
சினத்தோடே அவனது அரிய உயிரை வாங்கின சமயத்தில் இறைவன் இப்படிப்பட்டவனாயிருந்தானோ என்று
கூறும்படியாக நடுங்கியது என் நெஞ்சு";
"சின்னவளே! இது ஒன்றைப் பார்! இவன் ஒருத்தன்!
ஆட்டுக் கூட்டத்தின் ஆயர்மகன் அல்லவா! புள்ளிகள்
மிகுந்த வலிமையான வெள்ளைக் காளையின் அழகிய பக்கத்தில், திங்களில் இருக்கும்
மறுவைப் போல் ஒட்டிக்கிடக்கிறவன்";

"குறையாத வேகத்தோடு, சினந்து தன்னைத் தாக்கிய
சிவப்புக் காளையை அதன் செவியின் அடிப்பகுதியைப் பிடித்துக்கொண்டு, அதன் வலிமைமை அடக்கித் தழுவும்
காயாம்பூவாலான கண்ணியைச் சூடிய இடையனது அழகைப் பாராய்!
தன்னை விரும்பாத கஞ்சன் முதலானோர் கட்டவிழ்த்துவிட்ட கழுத்து மயிரினைக் கொண்ட குதிரையை
அதன் வாயைப் பிளந்திட்டு அதனைக் கையால் அடித்த சமயத்தில் இப்படிப்பட்டவனாயிருந்தானோ அந்தக்
கண்ணன் என்று கூறும்படியாக நடுங்கியது என் நெஞ்சு";
அங்கே, பெரிய புலிக்கூட்டமும், பெரும் யானைக் கூட்டமும்
ஒன்றற்கொன்று தாக்கிக்கொண்டு போரிட்டதைப் போலப் போரிட்டு, இடையரும்
தம் காளைகளைப் பிடித்துக்கொண்டு ஒன்றாக அந்தத் தொழுவை விட்டகன்றனர்; அவ்விடத்தில்
மயில் கழுத்தைப் போன்ற நிறத்தையுடைய அணிகலன்கள், பவழம் போன்ற சிவந்த நிலத்தில் மாறுபட்டுக் கிடக்க,

நிறைந்த இதழ்களைக் கொண்ட மலர் போன்ற மைதீட்டிய கண்களையுடைய
காதல் மகளிரும் அவரின் கணவர்களும் விருப்பத்துடன்
சாணம் மெழுகிய மன்றத்தில் குரவைக்கூத்து ஆடுவதற்காகத் தழுவிக்கொண்டு,
"கொல்லுகின்ற வலிமையுள்ள காளையின் கொம்புகளுக்கு அஞ்சுபவனை, மறுபிறப்பிலும்
தழுவிக்கொள்ளமாட்டாள் ஆயர்மகள்" என்றும்
"அஞ்சாதவராய்க் கொலைத்தொழிலையுடைய காளையை அடக்குபவரை அன்றி
உள்ளத்தில் உரம் இல்லாதவர்கள் அணைத்துக்கொள்வதற்கு அரியது, உயிரைத் துறந்து
நைந்துபோகும் நிலையிலிருந்தாலும், ஆயர் மகளிரின் தோள்கள்" என்றும்,
"உயிர் என்பது ஒரு காற்று என்பதை உணராது, அதனைக் காத்துக்கொள்வதற்கு
விரிந்த வாயையுடைய கொம்புகளுக்கு அஞ்சுகின்ற மனத்தினர் வந்து அணைத்துக்கொள்வதற்கு

அவ்வளவு எளிதாகப்போய்விட்டதோ ஆயர் மகளிரின் தோள்கள்?" என்றும்
"பரிசமாகப் பொருள் ஏதும் கேட்கமாட்டார் எம் குலத்து ஆயர் மகளிர்,
கொலைத்தொழிலையுடைய காளையின் கொம்புகளுக்கு இடையே, தாம் விரும்புகின்ற மகளிரின் மார்பின்
முலைகளுக்கு இடையே தலைவைப்பதைப் போல புகுந்து பாய்ந்தால்" என்றும்
இவ்வாறாக
குரவைக் கூத்தில் தழுவிக்கொண்டு நாம் எமது மரபுப்படி பாடி,
குன்றாத சிறப்பின் புகழையுடைய தெய்வத்தைப் போற்றுவோம்,
குற்றமற்ற அழகிய கடலில் பரந்துகிடக்கின்ற இந்தத் தொன்மையான நிலத்தை
ஆளுகின்ற உரிமையோடே சேர்ந்த
எம் அரசன் பாண்டியன் வாழ்வானாக, இந்த அகன்ற இடத்தையுடைய உலகத்தில்.

# 104
மிகுந்த அலைகள் மேலேறியதால் தன் நிலத்தைக் கடல் கவர்ந்துகொள்ள,
மனச் சோர்வின்றி முன்னேறிச் சென்று பகைவர் நாட்டில் தனக்கு இடம் உண்டாக,
சோழனின் புலிச் சின்னத்தோடு, சேரனின் வில் சின்னத்தையும் நீக்கி, புகழ்மிக்க கயல் சின்னத்தை அங்குப் பொறித்து,
தன் வலிமையினால் பகைவரை வணங்கச் செய்த வாட்டமுறாத தலைமைப் பண்பையுடைய பாண்டியனின்
பழைமையான புகழை நிலைநிறுத்தின குலத்தோடு தோன்றின
நல்ல பசுவினத்தின் ஆயர்கள் ஒன்றாகக் கூடி எல்லாரும்,
விண்ணைத் தோயும்படி ஓங்கிய பிரகாசமாய் ஒளிவிடும் பனைக்கொடியினையுடைய
பால் நிற வண்ணனாகிய பலராமன் போல் குற்றமற்ற வெள்ளைநிறக் காளையும்,
பகைவரை மாய்ப்பதில் சிறந்து விளங்கிய, பொன்னால் புனைந்த புகழ்பெற்ற சக்கரப்படையையுடைய

திருமகள் உறையும் மார்பையுடைய திருமாலைப் போல் திறம் கொண்ட கருமையான காளையும்,
மிகுதியாய் ஒளிரும் தாழ்ந்த சடையினையும், ஒருபக்கத்தில் வீற்றிருக்கும் பிறை போன்ற நெற்றியையுடையவளையும் உடைய
முக்கண்ணனின் நிறம் போல பகைமையுணர்ச்சி மிகுந்த கபிலை நிறக் காளையும்,
பெரிய கடலைக் கலக்கி மாமரத்தை வெட்டின மீளாத போரையுடைய
வேலில் வல்லவனான முருகனின் நிறத்தைப் போல அச்சந்தரும் சிவப்புக் காளையும், இவை போன்ற
போரிடும் குணமுள்ளவைகளும், பிற காளைகளும்
பல்வேறு நிறங்கள் கொண்ட பலவகை மேகங்கள் ஒன்றுகூடியதைப் போல
மிகவும் விருப்பத்துடன் ஒவ்வொன்றாக நுழையும்படி விட்டனர் தொழுவிற்குள்;
அவ்விடத்தில், "முள் போன்ற கூரிய பற்களைக்கொண்ட அழகியான இவளைப் பெறுவான், இந்த ஒப்பில்லாத
வெள்ளைக் காளையின் கழுத்தை அணைபவன்;

ஒளிரும் அணிகலன்களைக்கொண்ட, வாரப்பட்ட இவளின் கூந்தலில் தூக்கத்தைப் பெறுவான், கூர்மையான கொம்புடைய
கரிய நிறக் காளையின் சினத்துக்கு அஞ்சாமல் அதனை அடக்குபவன்; ஈரம்படிந்த சிவந்த கண்வரிகளையுடைய,
மருளுகின்ற பெண்மானின் பார்வையைக் கொண்ட இந்த மங்கையைப் பெறுவான் இந்த
சிவந்த கண்களைக் கொண்ட கொலைவெறிபிடித்த காளையை அடக்குபவன்; அலங்காரமான குழையணிந்தவளின்
மூங்கிலைப் போன்ற மென்மையான தோள்களில் தூக்கத்தைப் பெறுவான், கொடுமையான வலிமையினையுடைய
சிவந்த காளையின் சினத்துக்கு அஞ்சாதவனாய் அதனைத் தழுவுபவன்" என்றவாறு
ஆயர்கள் தம் முறைப்படி அந்த நல்ல மகளிரைப் பறையறைந்து தெரிவித்தனர்;
அன்றைக்குரிய விண்மீன்கள் அருகே சூழ்ந்திருக்கும் திங்களைப் போல, பரண் மீது
விரும்பி நிறுத்தினர் அழகாக;
அவ்விடத்தில், பறை மிகுந்து ஒலிக்க, பலதரப்பட்டவரும் ஆரவாரிக்க,

வலிமையில் குறையாத இளைஞர்களின் ஏறுதழுவதலை எதிர்கொண்டு பாய்ந்தன,
நறும்புகை வலமாக எழ, விடுவதற்காக நிறுத்தப்பட்ட காளைகள்;
அந்தக் காளைகளை
அணைப்பதற்கான மிகுந்த வெறியுடன், பார்வைப் பரணை விட்டு இறங்கி, முன்னேறிச் சென்று
வேலின் முனையைப் போன்ற வெற்றித்திறம் கொண்ட கூர்மையான கொம்புகளின் குரோதத்துக்கு அஞ்சாதவனாய்ப்
பால் நிற வெள்ளைக் காளையின் கழுத்தைப் பாய்ந்து பிடித்தவனைப்
பொறுத்துக்கொள்ளாமல் குத்தும் இளமையான கரிய காளையின் தோற்றத்தைப் பார்!
பால் போன்ற திங்களைக் கவ்விய பாம்பினை, அதன் பிடியிலிருந்து விடுவிக்கும்
நீல நிறத்தவனான திருமாலைப் போன்றிருக்கிறது;
விழுந்து எழுந்து, அதிர்ந்து நடுங்கி, தாண்டிக்குதித்து பலரும் சேர்ந்து ஓட,

எலும்புகள் முறியவும், கைகால்கள் ஒடிந்துபோகவும், குடல் சரியக் குத்தி, தன்னுடைய
கொம்பின் வலிமை அழியும்படி தழுவியவனை நாலாபுறமும் ஆட்டி, அங்குமிங்கும் சுற்றித் துவைத்தெடுக்கும்
குன்றாத சினங்கொண்ட அழகையுடைய காளையைப் பார்! இது ஒன்று!
அச்சம்தரும் மருந்துப்புகை எழுப்ப, வெகுண்டு
சுற்றித்திரியும் கொலைவெறியுள்ள களிற்றினைப் போல் இருக்கிறது;
தன் மனவூக்கத்தால் எழுந்த துணிச்சலான ஏறுதழுவலைத் தவிர்க்கமாட்டாமல் முன்னே சென்று
தன் தோள் வலிமையினால் துணிந்த பிடிப்பு நெகிழ, காளையின் கழுத்தை விட்டுக் கைகள் தள்ளப்பட உடல் தளர்ந்து
தான் பிடித்த பிடி வழுக்கித் தன் முன்னே வீழ்ந்தவனை முட்டித்தள்ளாமல்,
திரும்பிச் செல்லும் புள்ளிகளையுடைய காளையின் தோற்றத்தைப் பார்! உக்கிரமான போரில்
தன் வாளுக்குத் தோற்று விழுந்தவனை, நமக்குப் பொருத்தமற்றவன் என்று வெட்டாமல் சென்றுவிடும்

வீரமிக்க மறவனைப் போல இருக்கிறது;
இவ்வாறாக, சினம் மிகுந்து, உடம்புகளைக் கிழித்து, மிதித்து நாசமாக்கும் வகையில் ஏறுகள் எதிர்நிற்க,
மீண்டும் மீண்டும் இளைஞர்கள் வந்து தாக்க,
தசைத் துண்டங்கள் தெறித்துத்தெறித்துச் சிதறிக் கிடக்க,
இடியின் முழக்கத்தைப் போன்று இன்னிசைக்கருவிகள் ஓங்கி முழங்க,
ஏறுகளின் குத்துக்களைத் தாங்கிக்கொள்பவரும், அவற்றின் மேல் பாய்ந்து ஏறிக்கொள்பவரும்,
அவற்றின் கொம்புகளிடையே தம்மை நுழைத்துக்கொள்பவரும், வீராப்பாய்ப் பேசித்திரிவோரும் ஆகியவற்றவரோடு
போரினை விரும்பி அதனை மேற்கொண்ட நூற்றுவர்கள் தோல்வியடையும்படி
வரிந்து கட்டப்பட்ட வலிமை பொருந்திய வில்லினையுடைய ஐவர் போரிட்ட
போர்க்களம் போன்று இருந்தது தொழுவம்;

தொழுவுக்குள் விட்ட காளைகள் எல்லாம் மேய்புலத்திற்குச் செல்ல, குன்றாச் சிறப்பையும்
கண்கவரும் அழகையும் கொண்ட மகளிரும் இளைஞரும் வளம் நிறைந்த ஊர்
நடுவே குரவை ஆடுவர் தழுவிக்கொண்டு;
"பாடுவோம் வாருங்கள்! இடையனின், கொலைத்தன்மை கொண்ட காளையின்
கொம்புகள் உண்டாக்கிய தழும்புகளையுடைய மார்பினை";
"நெற்றியில் சிவந்த சுழியினைப் பெற்ற காளையின் ஆற்றலை அழித்தவனின் மார்பினை,
இதுவரை என்னைப் பழித்துரைத்தவர்கள் தங்கள் கண்களை மூடிக்கொள்ளும்படியாக நான் தழுவாமல் ஓயமாட்டேன்,
இனி இந்த ஆயர்மகளிர் தாழ்வாகப் பேசினால், அதனைப் பெரிதாக
எடுத்துக்கொள்ளமாட்டாள் இந்த ஆயர்மகள்;
தோழி! ஒன்றாக நாம் சேர்ந்து ஆடும் குரவைக் கூத்தில், நம்மை

இளக்காரமாகப் பார்த்து, வருத்தமுறும் நோயைச் செய்தது,
சிவந்த கண்களைக் கொண்ட கொலைக்குணமுள்ள காளையை அடக்கிவிட்டேன் நான் என்னும்
செருக்கினால் அன்றோ அந்த ஆயர்மகன்?"
"அழகிய அணிகளை அணிந்தவளே! யாராலும் அணைக்கமுடியாது என்று நிறுத்தப்பட்ட கொலைகாரக் காளையான
காரியின் சீற்றத்துக்கு அஞ்சாதவனாய்ப் பாய்ந்து அதை அடக்கிய அந்த இளைஞனுக்கே
மகிழ்ச்சியுடன் எம் வீட்டார் உன்னைக் கொடுப்பது என்று முடிவுசெய்தார், வெட்டிப் பேச்சுப் பேசிய
ஊராரின் தலையிலே மிதித்து;
இனி,
தொன்மைமிக்க கதிர்விடுகின்ற சக்கரப்படையை உடையவனை வாழ்த்துவோம், ஓங்கியடிக்கின்ற
இடியோசை போன்ற முரசினையுடைய பாண்டியனின்

ஆணையே எங்கும் பரவுக இந்த உலகம் முழுவதும் என்று".

# 105
பகையரசர்கள் தோல்வியுறும்படி அவர்களை வென்று, கொன்று, அந்த வழியில் கொணர்ந்த
மும்முரசுகளுக்கு உரிமைபூண்ட முதுமையான குடியில் வந்த பகைமையுணர்வு மிக்க பாண்டியர்க்கும்,
மேன்மை மிகுந்த சிறப்பினையுடைய அந்தப் பாண்டியரின் தொன்மையான குடியில் வந்தவனுக்கும் உரிமையானது என்று
உலகம் பாராட்டும் முத்துக்களோடு, ஒலிக்கும் கடல் கொடுக்கும் பொருள்களையும் பெற்ற
மிகுந்த பெருமிதத்தினையுடைய உவகையராய் ஒன்று சேர்ந்து கூடி,
அப் பாண்டியர்க்குத் தீது இன்றிப் பொலிவன ஆகுக என்று தெய்வத்திற்குச் சிறப்புக்களைச் செய்வதற்கு,
அவருடைய கேடில்லாத குடியின் பின்னர்த் தோன்றிய பெரிய குடியில் பிறந்த ஆயரும்,
மாசற்ற உள்ளத்தோடு ஒன்றுகூடிக் காளைகளை ஆராய்ந்து,
வளம்செறிந்த உருண்டையான சக்கரப்படையையுடையவன் வாய் வைத்து ஊதிய வெண்சங்கு போன்ற

தெளிவாக விளங்கும் வெள்ளைச் சுழியை நெற்றியில் கொண்ட கரிய காளையும்,
சிறப்பான குழையணிந்த பலராமனின் மார்பில் ஒளிவிடும் மாலை போல ஒளி மிகும்படி
ஒப்பற்றதாய் அமைந்த சிவந்த மச்சத்தைக் கொண்ட வெள்ளைக் காளையும்,
பெரும்புகழையுடைய குந்தாலிப் படையினைக் கொண்ட சிவபெருமானின் நீலமணி போன்ற கழுத்தின் அழகு போன்ற
கரிய சொரசொரப்பான கழுத்தினைக் கொண்ட உயர்ந்த திமிலையுடைய கபிலநிறக் காளையும்,
வருத்தத்தை உண்டாக்கும் வச்சிரப்படையையுடைய இந்திரனின் ஆயிரம் கண்களைப் போன்றிருக்கும்
பேரளவிலான பலவித புள்ளிகளைக் கொண்ட பெருங்கோபமுள்ள புகர்நிறக் காளையும்,
வேலில் வல்ல முருகனின் உடையாகத் தாழ்ந்து விளங்குகின்ற வெண்மையான துகிலைப் போன்று
நன்றாய் உயர்ந்த வெண்மையான கால்களையுடைய சிவந்த காளையும்,
காலனின் வலிமை போன்ற வலிமைகொண்ட பிற காளைகளும், மிகுதியாக,

ஊழித்தீயும், சிவனும், காலதேவனும், கூற்றுவனும்,
உயிர்களை விடாமல் துரத்திச் செல்கின்ற சமயத்தில், நிறைந்திருக்கும் உயிர்களை உண்பதற்காக,
ஒன்று சேர்ந்து சுற்றித்திரிவது போல், சுற்றித்திரியும்படி நுழையச்செய்தனர் தொழுவுக்குள்;
அந்நேரத்தில்
கார்காலத்தில் தோன்றிய மிகுந்த ஒலியினையுடைய கடுமையான பேரிடியைப் போன்று இசைக்கருவிகள் முழங்க,
பரந்து உயர்ந்து எழுந்து அசைவாடும் மேகமூட்டத்தைப் போல நறுமணப்புகை மேலெழ,
ஒன்று போல இருக்கும் பூவிதழ்களை நேர்நேராக வைத்துத் தொடுத்த மணமிக்க மாலை அணிந்த மங்கையர் வரிசையாக நிற்க,
ஒரேவிதமான ஓலிப்புகொண்ட மிகுந்த ஆரவாரம் உள்ள நிலையில் காளைகளை வருத்துகின்ற முனைப்பு மிகுந்திருக்கும் சீற்றமுள்ள ஆயர்
செறிவாக, அடைத்துக்கொண்டு எழுகின்ற, கண்களை மறைக்கும் புழுதி, விண்ணையும் தோய,
ஆரவாரத்துடன் பாய்ந்தனர் தொழுவிற்குள்;

கொம்புகளைப் பிடித்துக்கொண்டும், மார்பில் ஏந்தித்தாங்கிக்கொண்டும்,
கழுத்தைக் கட்டிக்கொண்டும், திமில் இற்றுப்போய்விடுமோ என்னும்படி தழுவிக்கொண்டும்,
தோள்களுக்கு நடுவே கழுத்தைப் புகவிட்டுப் பிடித்துக்கொண்டும், நெருங்கி நின்று குத்துக்களைத் தாங்கியும்,
வரிசையாகத் தம்மேல் வந்து விழுவாரை தம் நீண்ட கொம்பினால் தாக்கி,
பிடிப்பதற்கு இடம்கொடாமல் தடுத்துநிறுத்தின காளைகள்,
மீண்டும் மீண்டும் அணைக்க வருவோரையெல்லாம், கொம்பு நுனியினால் சாகும்படி குத்தி,
பிடிப்பதற்கு ஆள் இல்லாமல் இருக்கிற அந்தச் செந்நிறக் காளையைப் பார்!
வாழ்நாள் குறைந்தது என்ற குறைபாட்டின் காரணமாக, ஒருவரின் பின் சென்று, அவரை வருத்தி
அவரின் உயிரைக் குடிக்கின்ற கூற்றுவனைப் போல் இருக்கிறது;
குத்துக்களை மார்பினில் ஏற்றுக்கொண்டவரை, அவர் சாகும்படி குத்திய சிவப்பும் கருமையும் கலந்த காளையின்

கொம்புகள் மேலே எழும்போது ஆடுகின்ற கொத்தான மணிகளைப் பார்!
மிக்க பொலிவிடன் மலர்கின்ற தருணத்தை எதிர்நோக்கி, நறாம்பூவின்
மொட்டுக்களைச் சூழ்ந்து திரியும் தும்பியைப் போன்றிருக்கிறது!
குறுக்கே பாய்ந்து தன் கழுத்தை இறுகப் பற்றிக்கொண்டவனையும் சேர்த்துக்கொண்டு
மேடைமீது பாய்கின்ற வெள்ளைக் காளையைப் பார்!
ஒளி வீசும் வானத்தில், பாம்பின் வாயில் சிறிதளவு அகப்பட்டபடியே
உலாவரும் வெண்மதியைப் போன்றிருக்கிறது;
இவ்வாறாக, காளைகளும் இடையரும் போட்டிபோட்டுக்கொண்டு பகைமைகொண்டு நிற்பதால், பின்வாங்காமல்
இரண்டு பெரிய வேந்தர்கள் பகைமைகொண்டு எதிர்ப்பட்ட
போர்க்களத்தைப் போன்றிருக்கிறது தொழுவம்;

வென்று உயர்ந்த புகழும், பழங்குடிப் பெருமையும் கொண்ட, கழுத்து முழுவதையும் மறைக்கின்ற அசையும் திமிலைக்கொண்ட
நல்ல காளையை வெற்றிகொண்ட, ஆயனின் முகத்தைப் பார்த்து
இமைக்கவும் மறந்தன ஆயமகளின் கண்கள்;
நறிய நெற்றியையுடையவளே! என்ன ஆயிற்று இப்போது? நாம் நம் கூந்தலை அவிழ்த்து ஆற்றிவிட,
அது முல்லைமணம் கமழக் கண்டதற்கு, உள்ளம் மாறுபட்டு,
பொறுக்காமல் சண்டைபோட்டு என் சுற்றத்தார் கொண்டாரே, இந்த இளைஞன் வெற்றிகொண்ட
கொலைத்தன்மையுள்ள காளையைப் போன்ற கோபம்? (அது என்ன ஆயிற்று இப்போது?)
நீண்ட கரும் கூந்தலையுடையவளே! இதோ பார்! இன்னொன்று சொல்கிறேன்!
அந்த எருமைக் கூட்டத்து ஆயர் மகனோடு நாம் காதல்கொண்டதனுக்கு
எம்மிடம் எம் சுற்றத்தார் பொறுத்துக்கொண்டனர்; அது பொறுக்காத இவ்வூரார்

கண்கள் தீய்ந்துபோவது ஏன்?
ஒளிவிடும் நெற்றியையுடையவளே!
இதைக்காட்டிலும் மகிழ்ச்சிதரக்கூடியது வேறு எது? எமது தாய் என்னைக்
கண்பார்வையாலேயே அதட்டி வருத்தியதைக் கண்டு, என்னை
மலர்மாலையைத் தலையில் அணிந்திருக்கும் அந்த இடையனோடு சேர்த்துவைத்து எண்ணி
கிசுகிசுக்கச் செய்துவிட்டது இந்த ஊர்;
மனமொன்றி, புகர்நிற பசுக்கூட்டத்தையுடைய ஆயர் மகனுக்கு, ஒளிரும் அணிகலன் அணிந்தவளே!
இன்று என்ன என்னை எம் சுற்றத்தார் கொடுப்பது? அன்றைக்கு அவன்
கோபம் மிகுந்து தன் மேல் பாய்ந்த செங்காரிக் காளையின் கொம்புகளிடையே
தன்னைப் புகுத்திக்கொண்டு போரிட்டபோதே அவனிடம் புகுந்துவிட்டது என் நெஞ்சு என்று கூற,

ஒலி முழங்குகின்ற கடற்பரப்பில் பாம்பணையில் பள்ளிகொண்டுள்ள
வெற்றி கொண்ட சக்கரத்தையுடையவனை வாழ்த்துவோம், பிறநாடுகளைக் கைப்பற்றி
இனிய ஓசையையுடைய முரசினையுடைய பாண்டியனின் ஆட்சி நிலைகொண்டு
சிறப்புற்றிருப்பது, அருவிகள் ஆரவாரிக்கும்
இமையத்திற்கும் வடக்கேயும் பொலிவுடன் இருக்கட்டும் என்று.

# 106
பசுவின் தலையில் கட்டும் கழியும், சூட்டுக்கோலும் வைத்துக் கட்டிய தோல்பையையும்,
ஒன்றோடொன்று கயிற்றினால் கட்டப்பட்ட மண்கலங்களைக் கொண்ட உறியையும் தூக்கிக்கொண்டு
நீண்டிருக்கிற கொன்றைப் பழத்தில் செய்யப்பட்ட இனிய குழலை வாசித்துக்கொண்டவராய்,
கொச்சையான பேச்சுக்களைப் பேசும் கோவலர்கள் தத்தம் மாட்டுக்கூட்டங்களை,
நேரத்தில் வந்த கார் காலத்தில் தோன்றின மழையில் நனைந்த அகன்ற புல்வெளிக்குக் கொண்டுசென்றனர்;
அவ்விடத்தில்,
புழுதியைக் கிளப்புபவை, மண்ணைக் கொம்பினால் குத்துபவை,
மாறி மாறி முழக்கத்தை எழுப்புபவை, உக்கிரமாய்ப் பாய்பவை என
அசைகின்ற திமிலைக் கொண்ட நல்ல பல கூட்டமான காளைகள், போர்க்களத்தில் புகுகின்ற

வீரரின் அழகைப் போன்று விளங்கின;
தமக்குள் ஒன்றையொன்று தாக்கிக்கொண்டு, காலினால் மண்ணைப் பறித்துத் தள்ளி, எல்லா இடங்களிலும்
கூர்மையான நுனியைக் கொண்ட தம் கொம்புகளால் விடாமல் குத்துவதால்,
உடம்பிலிருந்தும் ஒழுகுகின்ற செங்குருதியைக் கொண்ட காளைகள் எல்லாம், காலைப் பொழுதில் பெய்கின்ற
செம்மேகக் கூட்டத்தைப் போன்றிருந்தன;
அவ்வாறு சண்டையிடும் காளைகளைப்
பிரிப்பதற்காக, அவற்றினூடே பிற காளைகளை ஓட்டி, மாடுகளனைத்தையும் மேய்ச்சல் நிலத்தில் கொண்டு சேர்த்து,
அவற்றை இரண்டு தொகுதிகளாகப் பிரிக்கின்ற இடையர் செய்கை,
வடிவழகு நிரம்பிய இந்தப் பெரிய உலகைப் படைப்பதற்காக, இறைவன்
விரிந்த கடலை அகற்றிய பெரும் செயலைப் போன்றிருந்தது

அவ்வாறு பிரிக்கின்றவர்களை ஓடஓட விரட்டி மிதித்து, எதிர்த்து நிற்பவர்களை முட்டித்தாக்கி,
நெருப்புப்போன்ற முனையினைக் கொண்ட கொம்புகளால் குத்தி, உழலை கோக்கும்
மரத்தைப் போல துளைத்தன காளைகள்;
துளைபட்ட தம் புண்ணிலிருந்து ஒழுகுகின்ற குருதியைக் கையால்  துடைத்து, உடம்பிலும் தடவிக்கொண்டு,
சற்றும் தாமதிக்காமல் அந்த இடையர், கடலுக்குள் போகும் மீனவர்கள்
ஓடிச் சென்று தோணிக்குள் தாவி ஏறி அமர்ந்துகொள்வதைப் போலக் காளைகளின் மீது தாவி ஏறி அமர்ந்தனர்;
காளைகள், தம்முடைய அலங்கரிக்கப்பட்ட கொம்புகளால் குத்தி எடுத்த கொத்தான குடல்களைத்
தொங்கவிட்டவாறே தூக்கிக்கொண்டு பறந்த பருந்துகளின் வாயிலிருந்து வழுக்கி விழ, அவை
ஆலமரத்தின் மேலும், கடம்ப மரத்தின்மேலும் தெய்வங்களுக்கு அணிவிப்பதற்காகப் போடப்பட்ட
மாலையைப் போல தொங்கிக்கொண்டிருந்தன மரக்கிளைகளில்;

அந்நிலையில்,
தம்முடைய மேய்ச்சல் புலத்தில் காளைகளை மேய்வதற்காக ஓட்டிவிட்ட தம்
அன்பான காதலர்களின் கைகளைக் கோத்துக்கொண்டு, இடையர் மகளிர்
மகிழ்ச்சியுடன் ஆடத்தொடங்கினர் தழுவிக்கொண்டு ஆடும் குரவைக்கூத்து;
கட்டியணைத்துச் சேர்த்துக்கொள்வோம், கட்டியணைத்துச் சேர்த்துக்கொள்வோம்,
எம்முடைய முலையால் வேதுகொடுத்து ஒற்றியெடுத்துக் கட்டியணைத்துச் சேர்த்துக்கொள்வோம், 
கொலைகாரக் காளை குத்திய புண்ணை, என் தோழியே!
பலமுறை தயிர்கடையும்போது என் தோளில் சிதறிவிழுந்த தயிர்ப்புள்ளிகள் மேல்
கொலைகாரக் காளையை அடக்கியவனின் குருதி கலந்து தோயத்
தழுவிக்கொள்ளுதல் என்னுடைய தோளுக்கு அழகல்லவோ! என் தோழியே!

இங்கு, முட்டவரும் காளையை எதிர்கொண்டு அதன் கொம்புகளைப் பிடிக்க அஞ்சுவதும், ஆய்ச்சியரின்
பெண்தன்மை மிக்க தோள்களை விரும்புதலும் ஆகிய இந்த இரண்டும்
ஒன்றாக நடப்பது இயலாத காரியம் அல்லவா! என் தோழியே!
கொலைகாரக் காளையை அடக்கியவன் இவள் கணவன் என்று ஊரார்
சொல்லுகின்ற சொல்லைக் கேட்டுக்கொண்டே, மோர் விற்று நான் வரும்
மகிழ்ச்சிச் செல்வத்தை என் கணவன் எனக்குத் தரமாட்டானோ? என் தோழியே!
எனவாக,
அடக்குவற்கரிய கொம்புகளையுடைய காளைகளுடன், காதலரையும் பாராட்டிச்
சுரும்புகள் ஆரவாரிக்கும் முல்லைநிலத்தில் நாம் பாடிக்கொண்டு போற்றுவோம்,
எதிர்த்தவர் நாடு பாழாக, அவரிடம் திறை பெற்று,

மாற்றாரை என்றும் வெல்க எம் மறம் சிறந்த வேந்தன் என்று.

# 107
"ஏடி! இதற்கு ஒருவழி கூறு! வேலிகளில் காலைத்தூக்கிப்போட்டு மேயும்
ஆடுகளை மேய்ப்பவர்க்கும், இந்தப் பசு எத்தனை குடம் பால் தரும் என்று சுட்டிச்சொல்லும் ஆயர்க்கும், எமது
கொல்லுகின்ற காளையைத் தழுவுதலே செய்யவேண்டிய செயல் என்று மாடு மேய்க்கும் ஆயர்கள்
பல காளைகளைத் தொழுவுக்குள் அடைத்துவைத்தார்;
தொழுவத்தில்,
முரட்டுக்குணத்துடன், செவியில் மச்சத்தைக் கொண்ட காளையை அடக்கியவன் தலையில் இருந்த முல்லை அரும்பாலான
வளைவான தலைமாலையைத் தன் கொம்பினால் எடுத்துக்கொண்டு தலையை ஆட்டிய
பாவம், அந்தக் கரும் புள்ளிகளையுடைய காளை துள்ளிக்குதிக்க, அந்தப் பூ வந்து என்
சிலிர்த்த தலைமுடிக்குள் விழுந்தது;

அந்தப் பூவை, தொலைந்துபோன ஒன்றை மீண்டும் பெற்றவரைப் போல எடுத்து நான் முடித்துக்கொண்டதைத்
தாய் கேட்கட்டும் என்று ஊரார் சொல்வார்களோ?"
"கேட்டால், நாம் என்னவாவது செய்யவேண்டுமோ? ஒன்றும் வேண்டாம், பெண்ணே!
நம் தலைவனின் தலைமாலையன்றோ அது!"
"மலர்சூடி அறியாத இவளின் கூந்தலுக்குள், யாரோ ஒருவன்
கையால் செய்த மாலையை முடிந்துகொண்டாள் என்று தாய் கேட்டால்
நாம் ஏதாவது செய்யவேண்டாமோ?"
"எல்லாத் தவறுகளும் மறைந்துபோகும்";
"ஓ! அப்படி மறைவதற்கு வழி என்ன?"
"அவன் ஓர் ஆயர்மகன், நீ ஒரு ஆயர்மகள், 

உன்னை அவன் விரும்புகிறான், அவனை விரும்புகிறாய் நீ, இப்படியிருக்க,
அன்னையைப்பற்றி நொந்துகொள்ளத் தேவையில்லை!" "உன் மனம் போலவே
தாயின் மனமும் இருந்தால்தானே!"
"இன்னும் அப்படியே இருக்கிறாய்!
ஆயர் மகனிடத்திலும் காதல்கொண்டுள்ளாய்! அளவுக்குமீறி
தாயிடத்திலும் பயப்படுகின்றாய்! இப்படியிருந்தால் மிகவும் கடினம்
நீ கொண்ட காதல்நோய்க்கு மருந்து கிடைப்பது!"
"நான் கொண்டுள்ள துயரநோய்க்கு மருந்து இல்லையென்றால், தோழியே!
நான் வருந்தி அழியவேண்டியதுதானோ?"
"வருந்தாதே!

நன்றாகக் கழுவப்பெற்று, களங்கமற்றிருக்கும் உன் கூந்தலுக்குள், காளை அவனின்
பூச்சரம் வந்து வீழ்ந்தது என்று கேட்டு, உறுதியாக,
தெய்வமாகிய திருமாலே அவனை உனக்குக் காட்டியது என்று உன்னை அந்த
பொய்யறியா ஆயனுக்கே கொடுத்துவிட முடிவுசெய்திருக்கிறார்கள் தந்தையுடன்
தமையன்மாரும் எல்லாம் ஒன்றுகூடி".

# 108
"வலிமை கொண்ட வேந்தர்களின் சேனை பெருத்தும், சிறுத்தும் தங்குகிற இடத்தைப் போல,
அகன்ற அல்குல், தோள், கண் ஆகிய மூன்றும் பெருத்து,
நெற்றி, அடி, இடை ஆகிய மூன்றும் சிறுத்து,
தனக்கு வேலை இல்லை என்ற கவலையால் காமனும் காமக்கணை வீசுவதை விட்டுவிட்ட வனப்பினோடு,
அகன்ற மன்றங்கள் உள்ள ஊர்களிலே மோரை விற்றுக் களைத்துப்போய் திரும்பும்போது,
எள்ளி நகைக்கத்தக்கவன் நான் என்று என் உயிர்போகும்படி காமக்கணைகளை வீசிச்செல்லும்
கொடுமையுடையவளே! உனக்கு என்ன பிழைசெய்தேன், பெண்ணே! நான்?"
"நான் ஆயர்மகள் என்பது ஒன்றும் இழிவுடையதல்லவே!
என்னைப் பெற்றவர் ஆயர் என்றால் நானும் ஆய்ச்சிதானே! 

காயாம்பூவைத் தலையிலே சூடிக்கொண்டு, கருஞ்சிவப்பு ஆடையை உடுத்திக்கொண்டுள்ளாய்!
மேய்கின்ற மாடுகளின் முன்னர் உன் கோலினை ஊன்றிக்கொண்டு நிற்கின்றாய்! ஒரு
ஆயர்மகனைப் போல் நீ இல்லை! வேறாகத் தேவர்களுக்குள்
ஞாயிறாகிய தெய்வத்தின் மகனோ நீ?"
"இவ்வாறு இகழ்ந்து பேசுகிற உன்னோடு வாய்கொடுக்கமுடியாது!
முல்லை மொட்டையும், மயிலிறகின் அடியையும் வரிசையாய் அடுக்கிவைத்தது போன்ற
பல்லும், மூங்கில் போன்ற தோள்களும், பெரிதாய்ச் செழுமையாக இருக்கும் மைதீட்டிய கண்களும், ஆகிய இவற்றால்
நான் அழகி என்று தற்பெருமை பாராட்டிக்கொள்ளும்
சொல்லாட்டியே! உன்னோடு சொல்லாடக்கூடியவர் யார்?"
"அப்படியென்றால் ஒன்றும் சொல்லாதே!"

"உன்னைத் தடுத்துநிறுத்துவேன்! இந்தத் தொல்லையைப் பார்!
பொருந்தாதவற்றைக் கூறிச் சிறுபிள்ளைத்தனமாக நடந்துகொள்கின்றாய்!
கடன்வாங்கியவரைக் கண்டபொழுதே, கடன் கொடுத்தவர்
தான் கொடுத்த பொருளைப் பற்றிக் கேட்கத்தொடங்குவது போல நீ கேட்கும்படியாக உன்னிடம்
நான் வாங்கிய கடன்தான் என்ன, ஏடா!"
"நீ என்ன கடன் வாங்கினாய் என்பதைச் சொல்கிறேன்;
மோரினை விற்றுவிட்டு நீ திரும்புவாய், உனக்குத்தெரியும் இல்லையா! அப்பொழுது
செம்முல்லை மலர்கள் செறிவாகக் கிடக்கும் ஒரு காட்டாற்றுக்குச் சற்றுத்தள்ளி
மாம்பிஞ்சைப் பிளந்தது போன்ற உன் கண்களினால் என் நெஞ்சத்தைக் கவர்ந்து
அதனை ஆட்சிபீடமாகக் கொண்டு ஆள்கின்ற ஒரு களவாணிப் பெண் நீ அல்லவோ!"

"உன் நெஞ்சினை ஆட்சிபீடமாகக் கொண்டு நான் ஆள்வது எனக்கு எப்படி எளிதாகும்?
அந்த நெஞ்சு, தினைப்புனத்தில் இருக்கும் என் தமையனுக்குச் சோறு கொண்டு தருமோ?
மந்தையை மேய்க்கும் என் தந்தைக்குக் கறவைச் செம்பு கொண்டு தருமோ?
தினை அரிந்த தாளில் என் தாய் மேயவிட்ட கன்றுகளை மேய்த்து வருமோ?"
"அனைத்தையும் என் நெஞ்சு செய்யும்!
கடைந்த மோரில் வெண்ணெயைக் கையால் உருட்டும் ஓசை கேட்கும் அளவுக்கு வெகு தூரம் இல்லாமல்
மிகவும் அருகிலிருக்கிறது ஊர்; பொழுதோ உச்சிவேளை;
கண்களைக் கூசவைக்கும் பேரழகு பெற்ற பெண்ணியல்பையும்,
மயில் கழுத்தின் நிறத்தையுமுடைய கருப்பழகியே! இந்த
வெயிலில் எங்கே விரைந்து செல்கிறாய்? இங்கே அருகில் பார்!

பெண்யானை தூங்குவது போன்ற பாறையின் மேலே, நுங்கின்
வெட்டின கண்களைப் போன்ற சிறிய சுனைகளில் நீராடி,
குளிர்ச்சியான பூக்களான செம்முல்லை, முல்லை ஆகியவற்றைப் பறித்து,
தனியாகக் காயாம்பூ மலர்ந்த குளிர்ந்த சோலையில் என்னுடன் தங்கியிருந்து
பொழுது குளிர்ந்து சாயப் புறப்படுவாய் உன் ஊருக்கு";
"இப்போதே புறப்படுகிறேன் நான்!
மானின் மருண்ட பார்வையைப் போன்ற, குளிர்ச்சியான கண்களைக்கொண்ட சிறிய ஆய்ச்சியரான,
உன்னுடைய மயக்கும் சொற்களுக்கு மயங்குவார்க்கு இதைச் சொல்! 
பசுவை வெறுக்காத காளையைப் போல், நாள் ஒன்றுக்குப் பத்துப்பேரைக்
காமுற்று அவர் பின் செல்பவனான நீ, விழித்திருக்கும்போதே கண்ணைக் குத்தும் கள்வன்!

நீ பிறர்க்கு என்ன நன்மை செய்வாய்?
நானும் உனக்கு என்ன நன்மை செய்ய முடியும்?"
"கொலைபுரியும் மைதீட்டிய கண்கள்! கூர்மையான பற்கள்! அப்போதுதான் கொய்யப்பட்ட தளிரைப் போன்ற மேனி!
இத்தகைய வனப்புகளைக் கொண்ட கருப்பழகியே! உன்னிலும் சிறந்தவர்கள் இந்த
உலகத்தில் இல்லை! தெரிந்துகொள்! கிட்டே வா!
மலையைப் போல் அமைந்த மார்புடைய செல்வனான திருமாலின் அடியைத்
தலையினால் தொட்டு உறுதியாகச் சொல்கிறேன்";
"ஒன்றும் தெரியாத மகளிரே அதற்கு உடன்படுவர்; உன் சத்தியத்தை நீ மீறுவாய்! இருப்பினும்,
தேன் நிரம்பிய பொதிகை மலைக்குரிய பாண்டியனின் சிறுகுடியில் வாழும் எம் ஆயர்
அரசனின் நன்மைக்காகப் பலிசெலுத்தும் ஆரவார நிகழ்ச்சியின்போது, உன் காதலியர் கண்ணில் படாமல்

காஞ்சிப் பூவின் பூந்தாதுக்கள் உதிர்ந்தது போன்ற சாண எருவையுடைய ஊர் மன்றத்தில்
ஆடுகின்ற குரவைக் கூத்தில், உன் காதலியர் செவியிற்படாமல்
ஆம்பல் குழலால் மெல்ல மெல்ல ஊதுக, எமது புழக்கடையில்
காஞ்சி மரத்தடியே நான் குறிப்பிடுமிடம்".

# 109
கார்காலத்து மழை நிறையப் பெய்த பச்சை மணக்கும் அகன்ற நிலத்தில்
அங்கேயே இருந்து நிறைய அறுகம்புல்லை வயிராறத் தின்று,
நீர் நிறைந்த நிழலிடத்தில் தங்கி, குடம் பால் சுரக்கும் பசு மந்தையினுள்ளும்,
போர்க்குணம் குறையாத காளைக்கு, ஏனைய பசுக்களுக்கு இணையாக இருக்கும் பசுவினிடத்தில் பிறந்த இளம் எருது
வண்டியை இழுத்துக்கொண்டு போகும்போது பெருமிதத்துடன் செல்வது போல, செருக்குடையவளாய்
பெரிய ஊர்களிலும், சிறிய ஊர்களிலும் தன்னைப் பற்றிய பேச்சு பெரிதாக எழச் செய்பவளைப் போல
மோரோடு வந்தவளின் அழகைப் பார்! ஊரிலுள்ள எந்தவொரு பெண்ணோடும்
ஒப்புமை கூற இயலாத வனப்பையுடையவள்;
தன் வீட்டார் செய்துகொடுத்து, தலையின் ஒருபக்கத்தில் சூடிய

பூச்சரத்தையும் தாங்க முடியாத, வளைந்து உயர்ந்து அகன்ற அல்குலையுடையவள்,
காம உணர்வற்றவர் நெஞ்சத்தையும் புண்ணாக்கிவிடும் பார்வையைக் கொண்ட இவளின் உடம்பு முழுதும்
கண்ணை உடையவளோ இந்த ஆயர்மகள்?
இவள்தான், திருத்தமாகச் செய்யப்படாத சும்மாட்டினை உடையவள், மறுதோளை வீசிக்கொண்டு
ஒரு தோளின் கீழ் பல நிறமுடைய நெல்மணிகளைக் கொண்ட கூடையை இடுக்கிக்கொண்டு, அழகிய குழைகள்
காதில் ஆடுகின்ற அழகி, தலைச்சுமையைத் தாங்கும் கழுத்தைக் காட்டிலும் உறுதியானது, மார்பைத் தாங்கும்
இந்த நுண்ணியதாகக் காட்சியளிக்கும் இவளின் இடை;
இடையே வேறுபாடு தெரியாத அளவுக்குப் பேரழகிகளான ஊர்வசி, திலோத்தமை ஆகிய இருவரும் தத்தம்முடைய
அழகையெல்லாம் இவளுக்குக் கொடுத்துவிட்டனரோ?
தன் கையிலுள்ள மன்மத வில்லைக் கீழே போட்டுவிடுவான் பாருங்கள் காமன், தனக்குப் பலியுணவாகப்

பாலோடு அவனுடைய கோவிலுக்குள் இவள் புகுந்தால்;
இவள்தான் பார்ப்பவர் வருந்த அவருக்குத் துன்பத்தைச் செய்து போவாளன்றி யாருக்கும் மருந்தாகமாட்டாள்,
ஆடவர் எவருக்கும் இவள் அணங்கான வருத்தும் தெய்வமாக அமைவாள் என்று ஊர்ப்பெண்கள்
மோர் வேண்டாம், புளிப்புக்கு மாங்காய் ஊறுகாயை வைத்துக்கொள்வோம், இந்தப் பக்கமே வரவேண்டாம்,
உன் சொந்தபந்தங்களோடு ஊரைவிட்டுப் போய்விடு என்று அவரவருடைய
கணவன்மாரை வெளியில் போகவிடாமல் காத்துக்கொண்டு நாள்முழுவதும்
வாசலையும் அடைத்துக்கொண்டு இருக்கவேண்டி வரும்.

# 110
"காவல் மிக்க இந்தப் பெரிய காப்பு வளையத்துக்குள் இருக்கும் ஆட்டிடையர்களின்
வீடுதோறும் உள்ள மகளிரை விரும்புகின்றாய்! ஏடா!
கொட்டிய தேளுக்கு உடனே மருந்து போடுவது போன்றதோ உன் வேட்கைக்குத் தீனி போடுவது? என் மேனியைத் தொட
உன் கிட்டே வந்து உனக்கு இடங்கொடுத்தது ஒரு விளையாட்டுக்காக, நீ உடனே என்னைத்
துய்ப்பதற்கு எளியவளாய்க் கருதிவிட்டாய்! சிறிது மோர் வேண்டினார்க்கு மோர் அளித்தவள்
வெண்ணெய் கேட்டாலும் தருவாள் என்று எடுத்துக்கொண்டாய்!"; "ஒளிரும் நெற்றியை உடையவளே!
அப்படி நீ கூறினால், அப்படியே ஆகுக, நீ போகலாம்!
உன் மீதுள்ள அச்சத்தால் உன்னை விட்டு என்னிடம் வந்து, இங்கும் இருக்கமாட்டாத வருத்தத்தால் உன்னிடம் சென்று,
இவ்வாறாக நித்தமும் தடுமாறுகின்றது, மென்மையான இயல்பினையுடைய ஆயர்மகளே!

தயிர் கடையும் மத்தில் கட்டிய கயிற்றினைப்போல் உன் அழகைச்
சுற்றிச் சுற்றிச் சுழலும் என் நெஞ்சு;
விடிந்த பிறகும் வீட்டைவிட்டு மேயப் போகாமல்
வேலிசூழ்ந்த தொழுவினுள் கட்டப்பட்டிருக்கும் கன்றினையே நினைத்துக்கொண்டிருக்கும்
முதற் கன்று ஈன்ற இளம் பசு போல உன்னைக் கண்டு ஒவ்வொரு நாளும்
மேனியை நடுக்கும் துன்பத்தில் ஆழ்கின்றது என் நெஞ்சு;
எப்பொழுதுமே என்னிடத்தில், நான் உன்மீது கொண்ட காதல்நோய் அதிகமாக,
நெய்யைக் கடைந்து எடுத்துவிட்ட பாலைப் போலப் பயனொன்றும் இல்லையாகி,
உன்னைத் தொட்டது மட்டுமேயன்றி, வேறு ஒரு செயலையும்
அறியாது இந்த இரங்கத்தக்க எனது உயிர்";

"நீ அப்படிப்பட்டவனா? பொது இடத்தில் பார்த்து அங்கே நல்லவரின் மகளிரிடம்
'நீ இல்லாமல் வாழமாட்டேன்' என்று இதற்குமேலும் சொல்லிக்கொண்டு
நிற்கிறாய்! நீ இப்போது சென்றுவிடு! எம் வீட்டார் பார்த்துவிடுவர், நாளையும்
கன்றுடன் வருவேன் இந்த இடத்துக்கு".

# 111
இனிய பாலைக்கறந்த பாத்திரங்களை எடுத்துவைத்துவிட்டு, எல்லாக் கன்றுகளையும்
கயிற்றால் கட்டி வீட்டில் நிறுத்திவிட்டு, தாய் தந்த
பூவேலைப்பாடும், கரையும் உடைய நீல ஆடையைப் பக்கத்தில் தாழக் கட்டி, ஆட்டம் போட்டவாறு, பாங்கரும்
முல்லையும் பரவிக்கிடக்கும் பூந்தோட்டத்தில், தோழி!, நம்முடைய
ஆட்டினத்தைச் சேர்ந்த ஆயர்மகளிரோடு, எல்லாரையும்
கூட்டிக்கொண்டு விளையாடிக்கொண்டிருக்கும்போது, அந்த வழியே வந்த
குருந்தம்பூச் சரத்தைத் தலையில் சூடிக்கொண்டிருந்த இடையன், என்னிடம்,
"உடம்பு முழுக்க அணிகலன்களை அணிந்த, அழகிய இளம் மங்கையே! நீ கட்டி விளையாடுகின்ற
மணல் வீட்டை நானும் வந்து கொஞ்சம் கட்டிக்கொடுக்கிறேனே!" என்றான், ஏடா! நீ

'எனக்குப் போதும்' என்று பிறர் செய்த வீட்டில் இருப்பவனே!
உலக நடப்பைக் கற்கவில்லையோ? முதலில் அதைக் கற்கப்பார் என்றேன், "முழுமையான அணிகளை அணிந்தவளே!
பூந்தாதுக்கள் சிந்திக்கிடக்கும் கூந்தல் மேலும் அழகுபெறும்படியாக, தொடுத்த
மாலையை அணிந்துவிடவா உனக்கு" என்றான், ஏடா! நீ
யாரோ ஒருவர் கொடுத்த பூவைக் கையில் கொண்டிருக்கிறாய், மிக மிகப்
பெரிய பேதையாய் இருக்கிறாயே! என்றேன், "மாதே!
வியக்கத்தக்க வகையில் பரந்து கிடக்கும் அழகுத்தேமல் புள்ளிகளை அழகாக உடைய மென்மையான முலைகளின் மேல்
தொய்யில் குழம்பால் கோலம் வரையவோ?" என்றான், நான் அதற்கு அயலார்
எனக்குக் கோலமிடுவதை நான் பார்த்துக்கொண்டிருப்பேனோ? நீ மிகவும்
மையல் கொண்டுள்ளாய், என்னை விட்டுவிடு என்றேன், பெண்ணே!

அவன் சொல்லிய சொற்களுக்கெல்லாம், மறுத்து மறுத்து நான் பதில்சொல்ல,
மனம் கலங்கியவன் போல அந்த இடத்தைவிட்டு நகர்ந்தான், அவனிடம் நீ
ஆயர் மகளிரின் இயல்பினை எடுத்துரைத்து, என் தந்தையும்
தாயும் தெரிந்துகொள்ளும்படி அவருக்கு இவனைப்பற்றித் தெரிவித்தால், நான் கொண்ட
இந்தக் காதல்நோயைக் களைந்துபோடுவேன்.

# 112
"யார் இவன்? என்னை வழிமறிக்கிறான்! நீரில் ஆடுகின்ற
பூவாகிய தாமரையின் மொட்டினை எனக்கு முன்னொருநாள் தந்த, பல மலர்கள் கலந்த மாலையினையுடைய
அறிவில்லாத இடையனே! நீ விலகி நில்! உன்னோடு
பேசக்கூடாது என்று சொல்லியிருக்கிறார்கள் என் வீட்டார்";
"ஏடி! ஆசையைத் தூண்டும் கண்ணால் மனத்தைக் கலக்கும் காமநோயை உண்டாக்கும்
நடாத கரும்பாகிய ஓவியக் கரும்பு வரையப்பட்ட தோள்களையுடையவரைக் கண்டால்
அவளை விடாமல் பற்றிக்கொள் என்று என் வீட்டார் சொல்லியிருக்கிறார்களே!"
"அவ்வாறு கூறினவர்கள், நல்ல பெண்களைக் கண்டால் தடுத்து நிறுத்தி, ஆசையுடன் அவர்
மலரைப் போன்ற மைதீட்டிய கண்களையும், தோள்களையும் புகழ்ந்து பாட

நன்றாகவே சொல்லிக்கொடுத்திருக்கிறார்கள், உன் வீட்டார் மிகவும்
கெட்டிக்காரர்கள் என் வீட்டாரிடம் வந்து மணம்பேச";
"ஓ! நடமாட்டமில்லாத நேரத்தில் நீ கன்றுகளை மேய்ப்பதைப் போல்
நடமாடிக்கொண்டிருப்பதைப் பார்த்தவர்கள் அதை எனக்குச் சொல்லாமல்போனால் அது என்னை
அவர்கள் கேலிசெய்வதுபோல் அன்றோ இருக்கும்?"
"இருக்கும்! எனக்குத் தெரியும்! ஏடா! என்னைப் போகவிடு!"
"விடமாட்டேன் நான்! என்ன சொல்லவருகிறாய் நீ? கரிய கூந்தலையுடையவளே!
உன்னை என் முன்னால் நின்று
பேசவேண்டாம் என்றுதான் சொன்னார்களேயன்றி, அவனை நீ
அணைத்துக்கொள்ளவேண்டாம் என்று சொன்னார்களோ? மெல்ல

என்னைத் தழுவிக்கொள்வாய்! உன் முள் போன்ற பற்களுக்கிடையே ஊறும் அமுதத்தை உண்பேன்"; "என்ன இது?
இந்த மாய்மால இடையன் சொன்ன சொல் எல்லாம்
உண்மையாக வாய்த்தால் இவனோடு சேர்ந்து வாழலாம், பொய்யாகிப்போனால்,
இனிய மென்மையான மார்பில் கமழ்கின்ற மாலையைக் குழையசெய்த உன்
அழகிய மலரிதழ் போன்ற மைதீட்டிய கண்களில் பசலை ஊர, பெரிய மென்மையான தோள்கள்
மெலிவடைந்து போனாலும் அதுவும் அழகாகத்தான் இருக்கும்".

# 113
"அழகு மிகவும் பெருகிய, ஆசைகொள்ளத்தக்க பெரிய மென்மையான தோள்களும்,
மருளுகின்ற செழிப்பான மைதீட்டிய கண்களும் உடைய அழகிய நல்லவளே! நீ உண்டாக்கின
துன்புற்று வருந்தச் செய்யும் நோயிடமிருந்து விடுதலைபெற ஒரு வழியைச் சொல்லிவிட்டுப் போ!"
"பெரிதும் பித்தம்பிடித்தவன் போல எனக்கு முன்னே நின்று என்னைத் தடுக்கிறவனே!
யாரடா நீ! உன்னை எனக்குத் தெரியவே தெரியாதே!"
"தளர்ந்த நடையினையுடையவளே! என்னைப்பற்றித் தெரிந்துகொள்ள விரும்பினால், பகைக்கு அஞ்சாத
ஆட்டிடையர் இனத்து ஆயர்மகன் நான்!"
"சரிதான் போ!
ஆட்டிடையர் குலத்து ஆயன் நீ எனில் குடம் பால் தருகின்ற

மாட்டிடையர் குலத்து ஆயர் எம் வீட்டார்";
"ஏடி!
உன்னோடு பேசிக்கொண்டிருப்பதில் பிழையேதும் இல்லை அன்றோ?"
"பிழையொன்றும் இல்லை, நாளை வருகிறேன் விடு!"
"விடமாட்டேன்!
அப்போதைக்குச் சரியென்று சொல்லிவிட்டுச் செல்வாரின் சொல், மறந்துபோய்
பின்னர் நிலையற்றதாய் ஆகிவிடுவதை அறிந்திருந்தாலும், மென்மையான இயல்பினையுடையவளே!
உன்னுடைய சொல்லை நம்பி நான் உன்னைப் போகவிடுகிறேன், ஆனால் என் சொல்லைக்கேட்டு
என் நெஞ்சம் நான் சொன்னபடி செய்தால்";
"என் நெஞ்சு நான் சொன்னபடி செய்யாது என்று சொல்கிற உனக்கு, உன்னையும் மீறி நிற்கும்

காதல் கொண்ட காமம் உன் அறிவைக் கலக்க, மற்றவர்கள் கூறுகின்ற
பொய்யுரைகளை உண்மையில்லை என்று எவ்வாறு உணரமுடியும்?"
"தெரிந்தெடுத்த அணிகலன்களை அணிந்தவளே! நீ 'வருகிறேன்] என்றதன் பொருள் இப்பொழுது விளங்குகிறது."
"பலமுறை நாங்கள் காட்டாற்றின் பளிச்சென்ற மணலில் உள்ள குளிர்ந்த சோலையில்
தங்கியும், அகன்ற பாறையில், தோழியருடன் விளையாடியும்,
முல்லைப்பூவும், குருந்தம்பூவும், தலையில் சூடிக்கொண்டும் இருந்திருக்கிறோம், இப்போது பகல் கழிந்து
இரவு வந்து தோன்றியது, இன்னமும் இங்கே காலத்தைக் கழித்துக்கொண்டிருக்கிறாய்!" "பாம்பால் கடிபட்டு
இடியைப் போன்று அதிர்கின்ற குரல் போல் முழங்கி, போர்க்குணத்தோடு வீறுகொண்ட
நல்ல காளைகள், இளைய பசுக்களுடன் காத்து நிற்கின்றன
பல பசுக்களைக் கொண்ட கூட்டத்தில், நாம் உடன் வருவதற்காக".

# 114
"விரல்களால் கோதப்பட்டு, அலையலையாக, பெரிய முதுகுப்பக்கம் விழுந்துகிடக்கிற
நீண்ட தலைமுடியை உடைய ஆண்மகன் அழுதுகொண்டிருந்தான் என்கிறார்களோ,
புதிய மலர்களைச் சூட்டி, எம் சுற்றத்தார் என் பெயரைச் சொல்லி,
திருமண ஏற்பாடுகளைச் செய்வாரைக் கண்டு? 'அறிவு கெட்ட
கோழையே' என்று பெரிதாகச் சிரித்துவிட்டு வருவாய் நீ
தோழி! அவனிடம் போய்";
"போக எனக்குத் தெரியும்! அவனிடம் என்ன சொல்லவேண்டும் என்று சொல்";
"தன்னுடைய விருப்பத்தைப் பற்றி ஒரு சொல்லும் சொல்லாத பேதையிடம், இளம்பெண்ணே! 'ஏடா!
இந்தத் திருமணம் உனக்கில்லாமல் உன் கையைவிட்டுப்போகும், அதற்கும் நெடுநாள் இல்லை,

அந்த மணம் உனக்கே வரவேண்டுமென்று உறுதியாய் எண்ணுவாய்', என்று இவ்வாறாக
நீ சொல்லிய சொல்லும் அவன் மனம் ஏற்றுக்கொள்ளும்படி சொல்;
புதிதாய்த் தருவிக்கப்பட்ட மணலைக் கீழே பரப்பி,  வீட்டுக்குச் செம்மண் பூசி,
எருமைமாட்டுக் கொம்பை நட்டு எமது சுற்றத்தார் இங்குக் கொண்டாடும்
பெரிய திருமணமெல்லாம் அவனில்லாமல் நிகழ,
வரிவரியாய் மணல் கிடக்கும் துறையின் முன் மணல்வீடு கட்டி விளையாடிய
அழகிய நெற்றியையுடைய தோழியர் தாமாகச் சேர்த்துவைத்த
ஒரு திருமணத்தை என் நெஞ்சு அறியும் என்றால், சிறிதளவேனும்
மனக்கலக்கத்தை கைவிட்டு இருக்கவோ? பரந்து
விரிந்த கடலை ஆடையாகக் கொண்ட உலகத்தையே பெற்றாலும்

சிறந்த நெறியையே உடைய ஆயர் மகளிர்க்கு
இரண்டு திருமணங்கள் நடப்பது நம் குடும்பத்தின் இயல்பு அல்லவே!"

# 115
"தோழியே! நாம் பிறர் காணாமல் உண்ட கள்ளின் களிப்பு நம் மேனியில் தோன்றி
வெட்கமில்லாமல் சென்று பிறர் நடுங்கும்படியாக அவருக்கு வெளிப்படுத்துவதைப் போல,
நாம் மறைத்துவைத்த காதல் ஒழுக்கத்தில் கையோடே பிடிப்பட்டேன், பார்! நம்முடைய
ஆட்டினத்து ஆயர்மகன் சூடி வந்த ஒரு
முல்லைச் சரத்தையும், தலைமாலையையும், மெல்லிய இயல்புடையவளே!
என்னுடைய கூந்தலுக்குள் வைத்து முடிந்திருந்தேன், தோழியே! என் செவிலித்தாய்
என்னுடைய தலைக்கு வெண்ணெய் தடவுவதற்காக என் கூந்தலை விரித்துவிட
என் தாயும், தந்தையும் வீட்டிலே இருக்கும்போது, செவிலித்தாய் பதறிப்போக,
என் தாயின் முன் விழுந்தது அந்தப் பூ;

அதனை ஏன் என்று அவள் கேட்கவுமில்லை, கோபப்படவும் இல்லை,
நெருப்பைக் கையால் தொட்டவர் போல பதைபதைத்துப்போய்
வீட்டைவிட்டு நீங்கி வாசலுக்கு வெளியே சென்றாள், நானும் என்
மயிர்ச்சந்தனம் பூசி உலர்த்திய கூந்தலை முடித்துக்கொண்டு, நிலம் வரை தாழ்ந்து கிடந்த
பூ வேலைப்பாடுடைய கரையினையுடைய நீல ஆடையைக் கையில் தூக்கிக்கொண்டு தளர்வாக நடந்து
பக்கத்திலுள்ள அழகான பூஞ்சோலைக்குள் ஓடி ஒளிந்துகொண்டேன்", "அதற்கு, தோழியே!
இங்கே எதற்காகப் பயப்படுகிறாய்?
பயப்படவேண்டாம்! அவனுடைய தலைமாலையை நீ சூடிக்கொண்டாயென்றால், நம் வீட்டாரும்
அவனுக்கே உன்னைக் கொடுப்பதற்கு எண்ணியுள்ளனர், அகன்ற இடத்தையுடைய
முற்றத்தில் புது மணலைப் பரப்பி, திரையிட்டு

திருமணமும் இங்கே நடத்துவர், அதுதானே நீயும் நானும்
இரவும் பகலும் எண்ணிக்கொண்டிருந்த காரியம்."

# 116
"பக்கத்தில் இருக்கும் உள்ளே எளிதில் போகமுடியாத தோட்டத்திற்குக் கன்றோடு செல்கின்றபோது எம்
தாம்புக்கயிற்றின் ஒரு முனையைப் பிடித்துக்கொண்டவனாய், இங்கு எம்மை
முன்னால் நின்று தடுத்து நிற்பவனே! நீ
என்ன பித்துப்பிடித்தவனா? என்னைப் போகவிடு";
"விடமாட்டேன், தொடுவதற்காகக் கிட்டே செல்வாரை விலக்கி உக்கிரமாக எதிர்த்து நிற்கும்
மிகுந்த வலிமை கொண்ட இளம் பசுவினைப் போல என்னப் பார்த்து, தொழுவின் வாசலிலிருந்து
நீங்கிச் சென்று என்னைச் சீறுகின்றாயே!"
"நீ விலகிச் செல், கன்றினைப் பிடித்தவரிடம் கோபமுள்ள, கன்றினை ஈன்ற பசு பாய்வதைப் போல
கடுமையான மனம் படைத்த என் தாய் வருவாள், உன்னைக் காத்துக்கொள்";

"உன் தாய் வந்துவிட்டுப்போகட்டும், அவள் மட்டுமென்ன, வேறு எவரும் வந்துவிட்டுப்போகட்டும், உன்னுடைய
அரசனே வந்தாலும் இங்கே வரட்டும், நான் கலங்கமாட்டேன்,
நீ என்மேல் இரக்கம் காட்டுவாயானால்";
"உன்னை நான் என்ன சொன்னாலும் கேட்கமாட்டேனென்கிறாய், என்னையே நினைத்துக்கொண்டு,
கொட்டும் மழையில் தலைசாய்த்துச் செல்லும் காளையைப் போல், நான் கூறும் ஒவ்வொரு சொல்லுக்கும்
எதிர்ச்சொல் கூறிக்கொண்டே என்னை மயக்கிவிட்டாய்,
கறவைச் செம்புடன் நான் செல்கின்ற இடத்தை நாடி, மாடுமேய்க்கும் இடத்திற்கும்
நீ வருவாயாக, நாணமில்லாதவனே!"

# 117
"நன்றாக உருக்கிய பசும்பொன்னின் நடுவே நீலமணிகளை அழுந்தப் பதித்துப்
பார்த்துத் துடைத்துவிட்டதைப் போன்ற கரிய நிறமுடையவளே! கோங்கின்
முதிராத இளம் மொட்டினைப் போன்று எதிர்ந்துநிற்கும்
தொய்யில் கோலம் வரைந்த அழகிய முலைகளைக் கொண்டவளே! உன்
கையில் இருப்பது என்ன என்று கூறு";
"கையில் இருப்பதுவா? இடையர்சேரியின் பெரியவர் மகள் நான், மேலும் இது ஒரு
அழகிய புலைத்தி விலையாகக் கொடுத்த ஒரு
பனங்குருத்து நாரால் முடைந்து கட்டப்பட்ட கூடை"; "கூடையினுள்ளே என்ன இருக்கிறது?
காட்சிக்கு இனியவளே! என்னிடம் காட்டிப்பார்";

"இப்போது பார், பூவிதழ்கள் நிறைந்த கூந்தலையுடைய என் தோழிமாருடன்
காட்டுப்பக்கம் கொய்த சிறுமுல்லை";  "இவையோ
முல்லைப் பூக்கள்,, முடித்த கூந்தலையுடையவளே!
இரவாகிவிட்டது பொழுதும், இவ்விடத்தில் தனிமையில் உன்னைக் கண்டேன்,
போ என்று உன்னை நான் போகவிடுவேன், ஆனால் என்னுடைய
மென்மையான அறிவு அப்படி நினைக்கவில்லை."
* ஐந்தாவது நெய்தற்கலி

# 118
வெற்றிப்புகழ் மிக்க ஒரு மன்னவன் தான் கைக்கொண்டுள்ள நல்லொழுக்கத்தால்,
நல்ல நெறிகளின்படி ஆட்சிசெய்து உயிர்களைக் காத்து மனத்தினில் நடுக்கமின்றி, தான் செய்த
முந்தைய நல்வினைகளின் பயன்களைத் துய்ப்பதற்கு, சுவர்க்கத்தை விரும்பிப் போவதைப் போல,
பல கதிர்களைக் கொண்ட ஞாயிறு பகற்பொழுதை நிறைவேற்றி, மலையில் சென்று சேர,
அரசனை இழந்து ஓயாமல் அழுகின்ற உலகத்து மக்களை, அந்த அரசனின்
இளையவன் வந்து காப்பது போல, பகலுக்குப் போட்டியான இருளை வெண்திங்கள் அகற்ற,
நல்லாட்சி புரிந்து ஆண்ட அரசனுக்கும், அவனுக்குப்பின் ஆள்வதற்கு வருகின்றவனுக்கும்
இடையே நின்ற காலத்தைப் போல வந்து நிற்கின்ற மருட்டுகின்ற மாலையே!
ஏ மாலையே! என் பொலிவு அழியும்படி என்னைவிட்டுப் பிரிந்துசென்றவரை நினைத்து வருந்துவதால், குளத்தில் பூத்த

மலர்கள் மாலையில் குவிந்துபோவதைப் போல குவிந்துபோன என் அழகிய பெண்மை நலத்தைக்கண்டு சிரிக்கிறாய்!
அழகிய சிறகுகளைக் கொண்ட வண்டுகள் ஆரவாரிக்கும்படி, கிளைகளில் உள்ள பூக்களைப் போல் மனம் நெகிழ்ந்த
காதலரைச் சேர்ந்திருக்கும் காரிகையரின் அழகை அழிப்பதில்லை!
ஏ மாலையே! 'தை'யென்று வரும் கோவலரின் தனித்த குழலோசையைக் கேட்டுக்
குமுறுகின்ற நெஞ்சத்தினையுடைய எங்களின் பக்கம் வந்து எம்மைப் பழித்துப்பாராட்டுகிறாய்!
செவ்வழி என்னும் இரங்கல்பண் இசைக்கும் யாழின் நரம்போசை போன்ற சோகமான பேச்சினையுடையவர் அன்புசெய்து
நனவில் திளைக்கும் கலவியினால் கிடைக்கும் புதிய நலத்தை அழிப்பதில்லை;
ஏ மாலையே! அழகு மிக்க தாழ்ந்த கிளைகளில் இருக்கும் தமது இருப்பிடத்தைச் சேர்ந்து, பறவைகள் ஆரவாரிக்க,
அவற்றைக் கண்டு பொறாமைப்படும் நெஞ்சத்தினையுடைய எங்களின் சிறுமைத்தனத்தைப் பழித்துப்பாராட்டுகிறாய்!
அணைத்துத் தழுவிக்கொள்ளும் கலவியையுடைவரின், தாழ்ந்த கொடியிலுள்ள நறிய முல்லையின்

மொட்டு தம் முகத்தைத் திறந்தது போன்ற இனிய முறுவலை அழிப்பதில்லை;
இவ்வாறாக,
இந்த மாலைப்பொழுதையும், ஊராரின் பழிச்சொற்களையும் பொறுக்கமாட்டாமல் எம்மிடம்
நெஞ்சம் இன்னமும் எஞ்சியிருக்கிறதே! நம்மைப் பிரிந்து
நம்மை நினையாமல் பிரிந்திருப்போரை நினைத்துக்கொண்டிருக்கும்
உள்ளே உறுதியில்லாத உள்ளம் உள்ளுக்குள் உவந்துகொண்டு.

# 119
அகன்ற உலகத்தை வெளிச்சமாக்கும் தன் பல கதிர்களையே வாயாகக்கொண்டு
பகலை விழுங்கியது போல, மறைகின்ற ஞாயிறு மலையைச் சேர,
வலிமை மிக்க சக்கரப்படையையுள்ள திருமாலின் நிறத்தைப் போல இருள் கொஞ்சம் கொஞ்சமாக ஊர்ந்து வர,
தன் ஒளியால் அதனை விரட்டுவது போன்று அழகிய திங்கள் தோன்ற,
கண்ணை மூடித் தூங்குவன போல் கணை போன்ற தண்டுகளையுடைய மலர்கள் கூம்ப,
தம் புகழைக் கேட்டவர் தலை நாணி நிற்பது போல் தலையைச் சாய்த்து மரங்கள் தூங்க,
புன்முறுவல் பூப்பவை போல் மொட்டுக்கள் தம் முறுக்கு அவிழ்ந்து புதர்களில் பொலிவுடன் விளங்க,
சிறிய மூங்கிலில் செய்த குழலின் ஓசையைப் போல வண்டுகள் ஆரவாரித்து ஒலியெழுப்ப,
பறவைகள் தம் குஞ்சுகளைத் தேடிச் செல்ல, கறவைமாடுகள் தம் வீட்டிலுள்ள

கன்றுகளின் மீது கொண்ட அளவில்லாத ஆசையுடன் தெருக்களில் நிறைந்து செல்ல,
விலங்குகள் தாம் தங்குமிடங்களை அடைய, மாலைக்காலம் பலவகையிலும் ஒளிபெற்று விளங்க,
அந்திக்காலத்தை அந்தணர்கள் தமக்குரிய சடங்குகளைச் செய்து எதிர்கொள்ள,
மகளிர் செந்தீயால் உண்டான விளக்கை ஏற்றத் தொடங்க, இவ்வாறாக வந்த பொழுது
தூய்மையான அணிகலன் அணிந்த, பிரிந்து வாழும் மகளிரின் உயிரை அவர் உடலிலிருந்து போக்கும்
தருணமாக இருப்பதை அறியமாட்டாதவராய்
மாலைக் காலம் என்கின்றனர் மனமயக்கம் கொண்டவர்கள்.

# 120
அருள் முற்றிலும் அற்றுப்போன தோற்றமுடையவன், அறநெறியைப் பாராதவன், நல்லவற்றைச் செய்யாதவன்,
பலரும் கண்டு அஞ்சுமாறு செயல்களைச் செய்தவன் ஆகிய ஒருவனின் நெஞ்சத்தைப் போல, மெல்ல மெல்ல
இருள் வந்து நிறைந்து, தனிமைத் துயர் மேலிட, தகிக்கின்ற கதிர்களைக் கொண்ட ஞாயிறு மலையில் மறைய,
தன் உள்ள உறுதியின் மேன்மை தேயும்படியாக, தனக்கு வந்த வறுமையினால் ஒருவனை
இரந்துகேட்பவனின் நெஞ்சம் போல பொலிவிழந்து தோற்றத்தில் தொய்வுபட்டு,
இரப்பவனைக் கண்டு மறைந்துகொள்பவன் நெஞ்சம் போல மரம் எல்லாம் இலைகள் எல்லாம் குவிந்துபோக,
சிறப்பு மிகுந்த தோற்றமுள்ள செக்கர் வானத்தில் தோன்றும் கூர்மையான நுனியையுடைய பிறையே பல்லாக,
நான்கு திசைகளும் நடுக்கமுறும் ஊழியின் முடிவுக்காலத்தில்
கூற்றுவன் சிரிப்பது போன்று அச்சத்தை வருவித்துக் கொடுமை செய்யும் மாலைக்காலமே!

ஏ மாலையே! என் உள்ளத்தையும் சேர்த்து எடுத்துக்கொண்டு சென்றவர், எனக்குத் துணையாக இல்லாதபோது
வெள்ளத்தில் சிக்கிக்கொண்ட மானின் மருமத்தைக் குறிவைத்துக் கணை தொடுக்கும் கொடியவனைப் போல
அல்லலில் அழுந்தியிருக்கும் என்னை அலைக்கழிக்க வந்தாயோ?
ஏ மாலையே! இரக்கமற்ற காதலர் கருணையின்றிப் பிரிந்துசென்ற காலம் பார்த்து
போரில் தோற்றுப்போனவர்களைப் பார்த்து அவரின் தோல்வியைக் குறிப்பிட்டு எள்ளி நகையாடுவார் போல
பொறுக்கமுடியாத துயரத்தில் ஆழ்ந்திருக்கும் என்னை மேலும் துன்புறுத்த வந்தாயோ?
ஏ மாலையே! எனக்கு ஆதரவாக இருக்கவேண்டியவர் என் அல்லலைக் களையாமல் இருக்கும் வேளையில்
வெந்த புண்ணில் வேலினைப் பாய்ச்சுபவனைப் போல
எரிகின்ற காமநோய் என்னும் இன்னலுள் உழந்துகிடப்பவளை இன்னமும் கலக்க வந்தாயோ?
என்று கூறும்படியாக,

ஓடி ஒளிந்துகொள்வதற்கு ஓர் இடம் இல்லாதபடி அலைத்துத் துன்பமே செய்கின்ற இந்த மாலைக் காலம்,
வெறுப்பால் வந்த துயரம் தீரும்படி, காதலன் விரைந்து வந்துசேர,
படைவலிமை இல்லாத ஓர் அரசன் ஆளும்போது, அவனுக்கு எதிராக வந்த கடுமையான பகைவர்கள்,
அந்தப் பகைவரை விரைந்து போக்கி, நீங்காமல் நின்று காத்து நடத்தும்
நல்ல திறமை மிக்க அரசன் தோன்றும்போது ஓடிவிடுவதைப் போன்று
இல்லாமல் போய்விட்டது இருளிடையே மறைந்து.

# 121
ஒளிர்கின்ற ஞாயிறு மலையில் மறைய, உலகெல்லாம் தன் ஒளியைப் பரப்பும் இயல்பையுடையதாய்,
தெளிந்த கடற்பரப்பில் அலைகளுக்கு மேலே எழுகின்ற
குளிர்ந்த கதிர்களையுடைய திங்களின் அழகையுடைய நிலவொளி மிகுதியாய்ப் பரவ,
பறவை இனங்கள் தம் இரையை ஆர உண்டு தம் வசிப்பிடங்களைச் சேர, ஒலி அடங்கி,
வளமையான இதழ்கள் குவிந்து நிற்கும் நீல மணியைப் போன்ற பெரிய கழி
தூங்கப் போனதைப் போன்ற கடலையுடைய குளிர்ந்த நெய்தல் நிலத் தலைவனே!
இவளை விட்டுப் பிரிந்து, தாங்க முடியாத காமத்தை நீ கைவிட்டதால்,
அசைவாடும் கடல்நீரில் முழங்குகின்ற அலைகள்தான் துணையாக இருந்து ஒலிக்கின்றன,
நீர்த்துளியோடே தங்கிய பூவினைப் போல் விரைவாக

பொறுக்கமுடியாமல் கொட்டுகின்ற நீரில் கிடந்து நீந்தும் கண்ணையுடையவளுக்கு;
இங்கு நீ வராமல் இவளைக் கைவிட்டதால் வருந்திய மேனியையுடையவளுக்கு,
நிறைந்த இருளே துணையாகி, அசையும் காற்று துணையாக நின்று வருத்தும்,
கமழ்கின்ற குளிர்ந்த பூந்தாதுக்கள் உதிர்ந்து விழ, வாடிய செங்காந்தள் பூவின்
இதழ்கள் நழுவி விழும் கொத்தினைப் போல முன்கையிலிருந்து கழன்று விழும் வளையலை உடையவளுக்கு;
இனிய துணையாகிய நீ இவளை விட்டுப் பிரிந்ததால், இரவுநேரத்தில் துணையாகத்
தன் துணையைப் பிரிந்து வருந்தும் தனிக் குருகு இவளிடம் வந்து விசாரிக்கும்,
ஒளிரும் சுடரினைக் கொண்ட ஞாயிற்றின் பிரகாசத்தால் தன் ஒளி மங்கித் தோன்றும்
நண்பகலில் காணப்படும் திங்களைப் போல் தன் பொலிவிழந்த இந்த அழகிக்கு;
என்றவாறு

ஓங்கியடிக்கும் அலையினால் தூக்கியெறியப்பட்டு வந்து விழுந்த மீனை, இனிய துறையில்,
திரும்பி வரும் அலை வருந்தாமல் கொண்டுசென்றதைப் போல், நீ நெறியிலிருந்து தாழ்ந்ததால்
மெலிந்து வருந்தியவளின் துயரத்தை
உன்னுடைய பாய்கின்ற குதிரை பூட்டிய, மிகவும் திண்ணிய தேர் சென்று போக்கினால் நல்லது.

# 122
மாலைபோல் சுற்றிச்சுற்றி விளையாடும் தோழியரும், அன்னையும் அறியும்படியாகவும்,
மலர் போன்ற அழகுள்ள மைதீட்டிய கண்கள் புகழ்ந்த பெண்மை நலத்தை இழக்கவும்,
காதலித்துப் பின்னர் இரக்கமில்லாமல் நம்மைப் பிரிந்துசென்றவருக்காகக் காரணமின்றி
முதலில் சிறிதளவு சலித்துக்கொண்டாய்! அவரின் பொருந்தாத செயல்களில் ஆழ்ந்துபோனவளாய்
அவர்மீது பல குறைகளை நூற்றுக்கணக்கில் அடுக்கினாய், அதற்காக வருந்தி ஏங்கி அழுகிறாய்,
மனவருத்தப்படுகிறாய், என்றெல்லாம் கூறுகிறாயே தோழி!
இப்போது கேட்பாயாக!
மிகவும் சிறப்புள்ள அழகும் காதலும் உள்ள தன் மனைவியருடன் மனம் விரும்பி வாழும் அவன்
நம்மைக் காணும் விருப்பமும் இல்லாதவனாயிருப்பதை அறிவேன், அப்படி அறிந்திருந்தாலும்

கனிவுடன் அவன் நம்மேல் சிறிதளவாவது அன்புகாட்டியவுடனே என்
நாணமற்ற நெஞ்சம் அவனுக்காக நெகிழ்ந்துபோவதையும் காண்கிறேன்;
இருள் போன்ற கரிய கூந்தலையுடைய தன் மனைவியருடன் மனம் விரும்பி வாழும் அவன்
நம் வருத்தத்தைத் தீர்க்கும் குணம் இல்லாதவனாயிருப்பதை அறிவேன், அப்படி அறிந்திருந்தாலும்
இரக்கம்கொண்டு அவன் நம்மேல் சிறிதளவாவது அன்புகாட்டியவுடனே என்
மருண்ட நெஞ்சம் மகிழ்ந்துபோவதையும் காண்கிறேன்;
ஒளிரும் அணிகலன் அணிந்த காதலையுடைய தன் மனைவியருடன் மனம் விரும்பி அவன்
என்னை நினைத்துப்பார்க்கவும் செய்யாத பண்பற்றவன் என்பதை அறிவேன், அப்படி அறிந்திருந்தும்
என்னைத் தழுவிக்கொண்டு அவன் நம்மேல் சிறிதளவாவது அன்புகாட்டியவுடனே என்
அல்லல்படும் நெஞ்சம் மடங்கிப்போவதையும் காண்கிறேன்;

அதனால்,
நடுயாமமாகிய நள்ளிருள் வேளையில் நம் உறக்கத்தைக் கவர்ந்து ஒளித்துவைத்துக்கொண்ட
காமநோயில் ஆழ்ந்துபோன நெஞ்சம்
அவனிடமே சென்றுவிட்டால்
அதன் பிறகும் நாம் உயிர் வாழ்தல் மிகுந்த நகைப்பிற்கிடமாகும்.

# 123
கரிய கொம்பினையுடைய நறிய புன்னை மலர்ந்துள்ள சிறிய கிளைகள்தோறும்
வண்டுகள் ஆரவாரிக்கும் ஓசையோடே, கரிய தும்பிகளும் சேர்ந்து ஊத,
இவை ஒன்று சேர்ந்து இம்மென்ற ஒலியோடு இசைப்பதால், பாடலுடன்
அரிய பொருளாகும் மரபினையுடைய திருமால் யாழிசையையும் கேட்டுப் பள்ளிகொண்டிருப்பதைப் போல
பெரிய கடல் துயில்கொண்டிருக்கும் வண்டுகள் ஒலிக்கின்ற நறிய கடற்கரைச் சோலையில்,
பொருள்கள் கண்ணுக்குத் தெரியாதபடி இருளைப் பரப்பி, உயிர்களைச் செயலிழக்கச் செய்யும் இரவில்
மாண்பில்லாத காமநோயைச் செய்தவனிடம் சென்றாய், அவனை நீ
காணும் வாய்ப்பைப் பெற்றாயோ, அல்லது காணாமலே வந்தாயோ, அறிவுகெட்ட நெஞ்சமே?
கொல்லுகின்ற சுறாமீன் கூட்டம் யாரையும் அண்டவிடாமல் காக்கின்ற மயக்கம் தரும் மாலைப்பொழுதில்

வருத்துகின்ற காமநோயைச் செய்தவனிடம் சென்றாய், அவனை நீ
தழுவிக்கொள்ளும் வாய்ப்பைப் பெற்றாயோ, அல்லது தழுவாமலே வந்தாயோ, அறிவுகெட்ட நெஞ்சமே?
ஒழுங்குமுறையில் பறந்து செல்லும் பறவைக் கூட்டம் தம் இருப்பிடம் சேரும் மாலைப்பொழுதில்
செறிவான வளையல்கள் கழன்றோடுமாறு செய்தவனிடம் சென்றாய், அவன் உள்ளத்தை நீ
அறிந்துகொள்ளும் வாய்ப்பைப் பெற்றாயோ, அல்லது அறியாமலேயே வந்துவிட்டாயோ அறிவுகெட்ட நெஞ்சமே?
என்று நான் கூற,
பகலும் இரவும் தூக்கமில்லாமல், பல முறை,
பொறுக்கமுடியாத வருத்தத்தையுடைய காமநோயைச் செய்தவனிடம், அவனைப் பெறுவதற்கு விரும்பி
கரிய கழியில் வருவதும் போவதுமாயிருக்கிற கடல் நீர் போலத் தடுமாறி,
வருந்துகிறாய், இரங்கத்தக்காய் நீ, என் அறியாமை பொருந்திய நெஞ்சமே!

# 124
உலகங்கள் மூன்றையும் தன் அடியால் அளந்த முதல்வனாகிய திருமாலுக்கு மூத்த முறையையுடைய
பால் போன்ற வெள்ளை நிற மேனியைக் கொண்ட பலராமன் அழகுற அணிந்த
நீல நிற ஆடையைப் போல அழகைப் பெற்ற வெள்ளை நுரையைக் கொண்ட அலைகளையுடைய நீலக்கடல்
வெண்மை நிற மணல் மேட்டை வந்து சூழ்ந்துகொள்ளும் பளிச்சிடும் நீரையுடைய குளிர்ச்சியான கடலுக்குச் சொந்தக்காரனே!
ஊரார், தமக்குள் பேசிக்கொண்டிருந்த பழிச்சொற்களை உரத்துப்பேசிப் புலம்புமாறு நீ அவளை நினைக்காமல் பிரிந்துசென்றதால்
அதிகமான வருத்தத்தைத் தரும் தன் காமநோயை என்னிடமும் மறைத்துவிட்டாள்,
அந்தப் பேரழகி பெற்ற அழகெல்லாம் களையிழந்துபோக மனங்கலங்கிய போது
பீர்க்கம்பூவின் மஞ்சள் நிறத்தைப் பெற்ற இவளின் பிறை போன்ற நெற்றிமட்டும் இல்லாவிட்டால் (எவருக்கும் தெரிந்திருக்காது)
ஊரெல்லாம் ஒன்றுகூடி பழிச்சொல்கூறித் தூற்ற, அதைப் பற்றிக் கவலைப்படாதவனாய் நீ பிரிந்துசென்றதால்,

தனக்கு ஆதரவு தருவோர் யாருமில்லாத நிலையில் வருத்தத்தைத் தரும் தன் காமநோயை என்னிடமும் மறைத்துவிட்டாள்,
தன் தோழியருக்குள்ளேயே மிகவும் அழகுபெற்ற தன் இயற்கை நலத்தை இழந்து இப்போது
தன் அழகிய வனப்பை இழந்த இவளின் மெத்தை போன்ற மெல்லிய தோள்கள் மட்டும் இல்லாவிட்டால் (எவருக்கும் தெரிந்திருக்காது)
இன்று இந்த ஊர் பழிச்சொல்கூறித் தூற்ற, அதைப் பற்றிக் கவலைப்படாதவனாய் நீ பிரிந்துசென்றதால்,
நிலைத்து நிற்கும் வருத்தத்தைத் தரும் தன் காமநோயை என்னிடமும் மறைத்துவிட்டாள், 
வெற்றியைத்தரும் வேலின் நுனியைப் போன்ற சிறப்புமிக்க தன் பெண்மை நலனை இழந்து இப்போது
கண்ணீர் ஒழுகிக்கொண்டே இருக்க, அழுகின்ற நெடிய பெரிய கண்கள் மட்டும் இல்லாவிட்டால் (எவருக்கும் தெரிந்திருக்காது)
அதனால்,
பிரியவேமாட்டாதவன் போல நீ தெய்வத்தின் மீது ஆணையிட்டுத் தெளிவித்தபோது
அதனைப் பெரிதாகக் கருதாமல் உண்மையென்று நம்பியவளுடைய அழகிய பெண்மைநலன் எல்லாம் மீண்டும் வர

சுருள் சுருளான பிடரி மயிரைக் கொண்ட விரைந்தோடும் குதிரை பூட்டிய உன் தேரினைச் செலுத்தி
மலர்ந்த குளிர்ந்த மாலையையுடைய அகன்ற மார்பினையுடையவனே! விரைவாகச் செல்வாயாக.

# 125
தாம் செய்யும் தவறுகளை உலகத்தில் கண்டவர் யாரும் இல்லை என்று எண்ணிக்கொண்டு, அறியாதவர்கள்
அவற்றைச் செய்யக்கூடாது என்று எண்ணாமலும், அவற்றைத் தடுப்பார் யாரும் இன்றியும், செய்கின்ற செயல்களுள்
தாம் நெஞ்சறியச் செய்த கொடிய தீய செயல்களைப் பிறர் அறியாமல் மறைத்தாலும், அதனை அறிந்திருக்கிறவர்களில்
தம்முடைய நெஞ்சத்தைக் காட்டிலும் நேரிடையான சான்று வேறு இல்லையாதலால்,
வளமான ஓட்டத்தில் பயிற்சியையுடைய வலிமை மிக்க குதிரையையுடைய செல்வனே!
அதனை நான் நன்கு அறிந்திருந்தாலும், கனிவற்ற உன் போக்கினால்
அன்பில்லாதவன் நீ என்று உன்னிடமே வந்து கடிந்துரைக்கிறேன், ஐயனே! நான் சொல்வதைக் கேள்;
மகிழ்ச்சியூட்டும் இனிய மொழியினையுடையவளின் தொய்யில் கோலம் வரைந்த இளமையான முலைகள்
பொங்கிப் பூரிக்கும்படியாக முயங்கிய உன் தொடர்பினை, அவளது மைதீட்டிய கண்களில்

பெருகிவரும் கண்ணீர் ஒழுகுவதைக் கண்டும் அவள்மீது இரக்கம் காட்டாமல் கைவிட்டிருக்கிறாயே!
ஒலிக்கும் அலைவீசும் கடற்கரைத் தலைவனே! நீ மிகக் கொடியவன்!
ஒளிரும் அழகுடன் பளபளக்கும் வளையல்களை அணிந்த என் தோழிக்கு அழகிய தழை ஆடை அணிவித்து,
அவளின் இளமை அழகு மேலும் மிகும்படி அளித்த உன் தொடர்பினை, அவள் தன் நலம் இழந்து
உன்னை வெறுத்து அழும்படி விட்டுவிட்டு, அவளைத் தழுவாமல் கைவிட்டிருக்கிறாயே!
ஒளிரும் நீர்ப்பரப்பைக்கொண்ட கடற்கரைத் தலைவனே! நீ மிகக் கொடியவன்!
இனிதான மணிகள் ஒலிக்கும் சிலம்பையும், சிறிதளவான பேச்சையும் உடைய என் தோழியின் கூந்தலை ஐம்பாலாகப்
பின்னி முடிக்கின்ற இளமைப் பருவத்தில் தொடர்பு கொண்டாய், இப்போது இவளின் விரிந்த பாம்புப்படம் போன்ற அல்குலின்
நுண்ணிய வரிகள் வாடிப்போகும்படி வராமல் கைவிட்டிருக்கிறாயே!
குளிர்ச்சியான அழகிய துறைகளுக்குச் சொந்தக்காரனே! நீ மதிப்புமிக்கவன் இல்லை!

என்று
நான் கூறியபடியான தன்மைகள் கொண்டவள் என் தோழி என்று அவளுக்கு இரக்கம் காட்டு! பெருமானே! நீ இல்லாமல்
கையின் ஓரத்தில் வளையல்கள் நிற்கமாட்டாத இவளுக்கு இனிப்
பிறையைப் போன்ற அழகிய சுடர்விடும் நெற்றியில் பசலை
மறைந்து போகும், நீ திருமணச் செய்தியை அனுப்பினால்.

# 126
பொன் வளம் மிக்க மேற்கு மலையில் ஞாயிறு மறைய, அதற்காக வருந்திய உலகை நோக்கி,
தன்னைத் தலையில் தூக்கிவைத்து உலகம் கொண்டாடும்படியாக, அதற்கேற்ற தகுதியையுடைய திங்கள் எழ,
செக்கர் வானத்தைக் கொண்ட அந்திக் காலத்தில் ஒலி அடங்கிப்போன கூட்டமான நாரைகள்,
முக்கோலை ஏந்திய அந்தணர்கள் தம் மறையை நினைத்து அமர்ந்திருப்பதைப் போல,
மணல் மேடுகளில் தங்கியிருக்கும் ஒளிர்கின்ற நீர்ப்பரப்பையுடைய குளிர்ச்சியான கடற்கரைக்குத் தலைவனே!
அழகிய சிறகுகள் கொண்ட கூட்டமான குருகுகள் ஒலிக்கும்போது, அதனை, உன்னுடைய திண்ணிய தேரின்
மணியொலி என்று இவள் நினைப்பாள், அவ்வாறு நினைத்தபோது
உள்ளுக்குள் அடங்கின ஒலியாக இருக்கக்கண்டு , அவை கடற்கரைச் சோலையின்
பறவைகளின் குரல் என்று தெளிந்து, பின்னர் தனிமை கொண்டு வருந்துவாள்;

நீர் மட்டத்திற்கும் மேலே நெருக்கமாய் மலர்ந்திருக்கும் பூக்கள் மணம் பரப்பும் போது, அதை உன் மார்பின்
மாலையிலிருந்து வரும் மணம் என்று இவள் நினைப்பாள், அவ்வாறு நினைத்தபோது,
பூக்கள் மலர்கின்ற வேளையில் அவற்றை அசைத்த காற்று வந்து தன் மேனியில் மோத, கழியில் பூத்த
மலரின் மணமே அது என்று தெளிந்து பின்னர் மனமயக்கம் கொண்டு வருந்துவாள்;
நீண்ட மனையில், தன் மனத்தைக் கட்டுப்படுத்த மாட்டாதவளாய், உன்னை நினைத்துக்கொண்டிருந்தபோது
பின்புறமாக வந்து தன் தோளினை நீ தழுவுவதுபோல் நினைப்பாள், அவ்வாறு நினைத்தபோது
அதனை நனவாக எண்ணி உன்னைத் தழுவ முற்படும்போது உன்னைக் காணாதவளாய், தான் கண்டது
கனவு என உணர்ந்து பின்னர் செயலற்றுப்போய்க் கலங்குவாள்;
இவ்வாறு
பலவாறாக நினைந்து வருந்தும் பிரிவுத்துயர் மிகுந்த நெஞ்சோடு

நடுங்கும் காம நோயில் வீழ்ந்து கலங்கும் என் தோழியின்
திங்கள் போன்ற ஒளியையுடைய முகம் பொலிவுபெற்று விளங்கும்படி,
அவள் மேனியில் புதிய அழகு இடம்பெற, பூட்டுக உன்னுடைய தேரை.

# 127
வெளியே நீட்டிக்கொண்டிருக்கும் கொத்துக்களையுடைய ஞாழலும், தேன் மணக்கும் புன்னையும்,
முறுக்கு அவிழ்ந்த பூக்களைக்கொண்ட தாழம்பூவும், செருந்திப்பூவும்,
வரிகளையுடைய வண்டுகள் ஒலியெழுப்பி ஆரவாரிக்க, கரிய தும்பிகள் அவற்றோடு சேர்ந்து தேனையுண்ண,
போர்த்திறம் மிகுந்த சக்கரத்தையுடைய திருமால் அணிந்திருக்கும் மாலையைப் போல, பெரிய கடற்கரையில்
நெளிநெளியான மணற்பரப்பில் சூழ்ந்துகிடக்கும் ஒளிவீசும் நீரையுடைய குளிர்ச்சியான கடற்கரைக்குத் தலைவனே!
கொடிய கழிகள் சூழ்ந்திருக்கும் குன்று போன்ற, நீர் சூழ்ந்த வெண்மையான மணல் மேட்டில்
உன் மனத்தை நடுக்கும் உன் காம நோய் தீரும்படியாக, நீ வரச் சொன்ன இடத்துக்கு வந்தாள் என்பதினாலா,
விரைவாகச் சுரந்த கண்ணீர் வீழ்ந்து வற்றிப்போக, கயலைப் போன்ற அழகிய கண்களில் கண்ணீர் ததும்பி நிற்க,
துயரத்தோடு வருந்தி அழும்படியாக இவளை நீ துறந்துசென்றாய்?;

முன்னறிவிப்பின்றி பல நாட்கள் உன் விரைவான திண்ணிய தேர் வருவதைச் சரியாகக் கணக்கிட்டு
ஓங்கியடிக்கும் அலைகள் உறுமுகின்ற கடற்கரைச் சோலையில் உன்னை எதிர்கொண்டாள் என்பதினாலா,
தன் அறிவு வருத்தத்தில் ஆழ்ந்து ஏக்கம்கொள்ள, தன் அழகிய பெண்மை நலம் வற்றிப்போக,
செறிவாக இருந்த வளைகள் இவள் தோள்களில் கழன்று வீழும்படியாக இவளை நீ துறந்துசென்றாய்?;
காண்பதற்கு இனிமையாகச் செய்யப்பட்ட அழகிய இடத்தைப் போன்ற இந்த அழகிய குளிர்ந்த துறையில்,
நள்ளிரவில் வந்து நீ சொன்ன இடத்தில் சரியாக இவள் நின்றாள் என்பதினாலா,
மூங்கில் போன்ற அழகை இழந்த தோள்கள், தம் ஒளிவீசும் அணிகலன்களைத் தாங்கமாட்டாமல் தளர,
பளிச்சென்ற நெற்றியில் பசலை படர இவளை நீ துறந்து சென்றாய்?
அதனால்,
கைகளில் வளையல்கள் கழன்றுபோகும்படியான துன்ப நோய் இவளிடமிருந்து தீர்ந்துபோக,

கடுமையான கதிரவன் சுட்டுப்பொசுக்கும் என்று உயர்ந்த அலைகளைக் கொண்ட கடல் விரைந்து வந்து தன்
கரையோரத்தில் செறிவாய்ப் படர்ந்திருக்கும் அடும்பங்கொடியைக் காப்பது போல
வலிமையான நீரைக் கொண்ட கடற்கரைக்குத் தலைவனே! இரக்கமுள்ளவனாக வந்து இவளை மணந்துகொள்.

# 128
நமது தோளைத் துறந்து நமக்கு அருள்காட்டாதவர் போல், நிலையாக
வாடைக் காற்று அடிப்பதால் வளைந்து நிற்கும் தாழையின்
அசைகின்ற கிளையில் இருந்த அசைவான நடையைக் கொண்ட நாரை,
நன்றாகச் செறிந்த பெரும் இரவில் நம் துயரை அறியாமல்,
நம்மீது இரக்கமில்லாமல், நம்மைப்போல் துயரமும் இல்லாமல், ஓயாமல் குரலெழுப்புகின்ற
அழகிய கடற்கரைச் சோலையின் தலைவனைக் கண்டவளைப் போலப்
புதிதாக ஓர் அழகினைப் பெற்றிருக்கிறாய் என்று கேட்கிறாயானால்
நனவில் வராத அந்த நயம்கெட்டவனைக்
கனவில் கண்டு நான் என்ன செய்தேன் என்பதைக் கேட்பாயாக இப்போது;

உன்னைப் பிரிந்திருந்து, வருந்தி உயிர்வாழமாட்டேன் என்று சொன்னவனைப் பிடித்துக்கொண்டு என்னுடைய
பழைய பெண்மை நலத்தைத் தருவாய் என்று அவனை வளைத்துக்கொள்வேன் போலவும்,
என்னோடு கலந்து கூடி, அங்கே நான் இழந்துபோன என் அழகை நான் திரும்பப் பெறும்படி தழுவிக்கொண்டு
புலம்பாதே இனி என்று எனக்கு அருள்செய்தான் போலவும்,
என் மார்பில் கிடந்து துயிலும் இன்பத்தையும் மறந்தாயோ என்று
நிலைகெட்ட நெஞ்சத்தவளாய் நான் அழுவேன் போலவும்,
வலையில் அகப்பட்ட மயிலைப் போல வருந்துகிறாயே பெரிதும் என்று
தன் தலை என் காலடியில் படும்படியாகப் பணிந்துகொள்வான் போலவும்,
என்னுடைய மாலையையே கோலாகக் கொண்டு, பணிந்து மன்றாடி நின்ற
ஊதைக் காற்று அடிக்கும் கடற்கரைத் தலைவனை, நான் அடிப்பேன் போலவும்,

இது என்ன பிழைப்பு என்று நடுங்கி, அங்கே
நீ பெரிதும் பேதையாக இருக்கிறாயே என்று என்னைத் தெளிவிப்பான் போலவும்,
இப்படியாகக்
கனவில் கண்டேன் தோழி! எனக்குக் காட்சிதருவதற்காகக்
கனவில் வந்த அந்த கடற்கரைச் சோலையின் தலைவன்
நனவிலும் வருவான் என்று
அந்த நம்பிக்கையின் எல்லையில் நிற்கின்றது அரிதாக எனக்குக் கிட்டியிருக்கும் என் உயிர்!

# 129
பழைய ஊழிக்காலத்தில் உயிர்கள் தோன்றி, பின் முறைகெட்டு, ஒன்றாகச் சேர்ந்து ஒடுங்கக்கூடிய ஊழி முடிவில்,
பல அண்டங்களில் வாழும் அந்த உயிர்கள் அனைத்தையும் படைத்த தன்னிடமே அடக்கிக்கொள்ளும் இறைவனைப் போல,
பகற்பொழுதைச் செய்யும் சுடுகின்ற கதிர்களைத் தன்னிடத்தில் மீட்டுக்கொண்டு ஞாயிறு மறைய,
நல்ல அறநெறிகளை நிலைநிறுத்தி உலகினை ஆண்ட அரசனுக்குப் பின்னால்
நல்லன அல்லாதவற்றை மேற்கொண்டு அற நெறிகளை நிலைநிறுத்தாத
ஆற்றல் குறைந்த மன்னனின் அரசாட்சியைப் போல மயக்கும் இருள் கவிய,
பகற்பொழுதின் எல்லையாகிய வருத்தம் மிகுந்த மயக்கத்தையுடைய மாலையில்,
பாய்கின்ற அலைகளின் ஓசை அடங்காத பரந்த நீரைக் கொண்ட குளிர்ந்த கடலே!
நான் எந்தவிதமான ஆதரவும் இல்லாதிருக்கும்படி என்னைத் துறந்து சென்றான் துறைவன் என்று அவனால் வந்த

நோய் வாட்டுவதால் வருந்திக்கொண்டிருக்கும் எனக்காக நீயும் வருந்தி முழங்குகின்றாயோ? எம்மைப் போலக்
காதலித்துவிட்டுப் பின்னர் பிரிந்து சென்றார் உனக்கும் இருக்கிறார்களோ?
மன்றத்தில் நிற்கும் கரிய பனையின் மடலில் வாழும் அன்றிலே!
தான் செய்த நன்மைகளை நான் சொல்வதைக் கெடுத்துவிட்டாரே அவர் என்று கலங்கிய
எனது துயரத்தை அறிந்துதான் கூவுகின்றாயோ? எம்மைப் போல
இனிய துணையைப் பிரிந்தவர் உனக்கும் இருக்கிறார்களோ?
பனியோடு கூடிய இருள் சூழ்ந்து வர, வருத்தத்தையுடைய அழகிய சிறிய குழலே!
இப்போது வந்தாலும் அவர் செய்த பிழை மிகவும் அகன்றுவிடும் என்று கலங்கிய,
தனித்திருக்கும் எனது துயரத்தைக் கண்டு வருந்துகின்றாயோ? எம்மைப் போல
இனியன செய்துவிட்டுப் பின் பிரிந்து சென்றவர் உனக்கும் இருக்கிறார்களோ?

என்று சொல்லி,
உள்ளம் உடைந்து, ஊராருக்கும் தெரிந்துவிட்ட வருத்தம் மிகுந்திட,
மிகவும் பித்துப்பிடித்தவளாய் ஆவதைத் தடுத்து நிறுத்துவாய் பெருமானே!
வருந்தவைக்கும் நோயைத் தீர்ப்பதற்கான வழியை அறிந்த ஒருவன்
அதற்குரிய மருந்தைத் தனக்குத் தெரியாது என்று கூறுவதைக் காட்டிலும் கொடியது, உன்னை
நுகர்ந்தோரின் நெஞ்சம் அழிந்துபோகும்படி அவரைக் கைவிட்டுவிடுவது.

# 130
நல்லொழுக்கமும், வாய்மையும், நல்ல நடுவுநிலையும்
இவனிடத்தில் காணப்பட்ட நற்பண்புகள் என்று உலகத்தார் இரங்கிச் சொல்லும்படி,
சிறப்பானவற்றை மிகவும் நாடி, பொய்யை அழித்து, இனிதே ஆண்ட
அரசன் இறந்தபின் அவனோடு மாய்ந்துவிட்ட, நல்ல ஊழ்வசத்தால் உண்டான செல்வம் போல,
நிறைந்த ஒளிக்கதிர்களைக் கொண்ட ஞாயிறு மறைவதால் அதனோடு பகல்காலமும் செல்ல,
ஒன்றையுமே கல்லாமல், வயதுமட்டும் ஆனவனின் அறிவுக்கண் இல்லாத இருள் படர்ந்த நெஞ்சம் போல
புன்மையான இருள் பரவத்தொடங்கும் வருத்தம் கொள்வதற்குக் காரணமான மயக்கத்தைத் தரும் மாலை வேளை;
இந்த மாலைப் பொழுதில்,
அந்தணர் செந்தழல் வளர்க்க, என்

செயலற்ற நெஞ்சம் கொதித்துக் காமத்தீயை மூட்டும்;
இந்த மாலைப் பொழுதில்,
கரிய கழிகளில் பெரிய மலர்கள் கூம்ப, என்
பொறுக்கமுடியாத துன்பத்தைக் கொண்ட நெஞ்சம் வருத்தத்தினால் கூம்பிப்போகும்;
இந்த மாலைப் பொழுதில்,
கோவலர்கள் தம் இனிய குழலால் துயர இசை எழுப்ப, என்
பூப்போன்ற அழகிய மைதீட்டிய கண்கள் தனிமையுணர்வுகொண்டு துயரத்தில் ஆழும்;
என்று கூறி,
ஞாயிறு மறையும் மாலைக் காலத்தில் துயர நோயில் உழந்துகிடப்பவளை,
குடிமக்களை பேணிப் பாதுகாக்கும் செங்கோலாட்சியையுடைய மன்னனின் பெரும் சேனை

மேற்கொண்டு செல்லச் செல்ல ஓடுகின்ற பகைவர் போல, என் காதலர் வந்து
என்னைத் தொடத் தொட ஓடிப்போகும் பசப்பு.

# 131
"தெய்வமாகிய பெரிய கடலின் நீரைக் காட்டி, 'உன்னைப் பிரியேன்' என்று உறுதிசொல்லி, என்
திருத்தமான அணிகலன்களை அணிந்த மென்மையான தோள்களைக் கூடியவன் செய்த
தீர்ப்பதற்கரிய துயரத்தையும் ஒருவாறு நீக்கிவிடுவேன், பொருத்தமான இரண்டு
பூக்களின் அழகைக் கொண்ட புகழ் மிக்க அழகினையுடைய மைதீட்டிய கண்களால்
பார்க்கும்போது அந்தப் பார்வையாலேயே பிறர்க்கு வருத்தமுண்டாக்கும் சாயலை உடையவளே! தாக்குவதால்
கூட்டமான மீன்களின் பகைமை மாற, அவற்றை வென்ற கோபங்கொண்ட மீனான
அறைகின்ற சுறாமீனின் வெண்மையான கொம்புகளை இருப்பிடமாகக் கோத்து, ஒழுங்குபடுத்திய
நெய்தல் மலர்களை நீண்ட நாரால் கட்டிச் சேர்த்து, கையால் மீட்டப்படும்
யாழின் இசையைக் கொண்ட கூட்டமான வண்டுகள் ஒலியெழுப்பி ஆரவாரிக்க,

இடைவிடாமல் தேன் துளிர்க்கும் பெரிய மலர்களையுடைய குளிர்ந்த தாழையின்
விழுதைக் கயிறாகத் திரித்துச் செய்த ஊஞ்சலில் நீ வந்து ஆடினால்;
இளமையும், மடமையும் உள்ள பெண்மானின் தன்மையை வென்றவளே! நீ உட்கார்ந்திருக்கும் ஊஞ்சலைத்
தள்ளிவிட்டு நான் தாழ்த்தி ஆட்டிவிட, நெடுநேரம் ஆடிக்கொண்டிருப்பாய், உன் பெரிய மென்மையான தோள்களை
விட்டுப்பிரிந்தவனின் கொடுமைகளைச் சொல்லிக்கொண்டு;
வெட்கப்பட்டனவோ தோழி! வெட்கப்பட்டனவோ தோழி!
இரவு முழுதும், நல்ல தோழியே! அவை வெட்கப்பட்டுக்கிடக்குமோ?
நிலவொளியைப் போன்ற சுடர்விடும் ஒளியையுடைய மணல்மேட்டின்மேல்
ஓயாமல் ஓடிக்கொண்டிருக்கும் நண்டுகள் நம்மைக் கண்டதும் தம் வளைகளுக்குள் புகுந்துகொள்கின்றன!
கடற்கரைச் சோலையில் கமழ்கின்ற ஞாழல் பூவின் மஞ்சள் நிறத்தினைப் போல், தோழியே! உன்

மேனியில் பசப்பூர அதனைப் பாழ்படுத்தியவனின் துறையில்;
கார்மேகமும் விரும்பும் கருங்கூந்தலையும், மதர்த்த பார்வையைக் கொண்ட அழகிய மைதீட்டிய கண்களையும்,
ஆழமான கடலில் பிறந்த முத்தின் அழகைப் போன்ற முறுவலையும் உடையவளே!
குறையாத நோயைச் செய்தவனுடைய கொடுமையைச் சொல்லி நாம் பாடும்
மிக உயர்ந்த ஊசல்பாட்டை நீ ஒன்று பாடுவாய்!
நம்மைப் பார்த்துத் தாமும் வருத்தப்படுகின்றன தோழி! நம்மைப் பார்த்துத் தாமும் வருத்தப்படுகின்றன தோழி!
இரவு முழுவதும், நல்ல தோழியே! அவை நம்மைப் பார்த்துத் தாமும் வருத்தப்பட்டுகிடக்குமோ?
துணைவனைப் பிரிந்திருப்பவள் துயருற்று இருப்பாளோ என்று
இனிய துணையுடன் இருக்கும் அன்றில் இரவில் கூவுவது இல்லை,
முன்பொருநாள் தான் தோளில் தீட்டிய தொய்யில் கரும்பின் அழகு வாடிப்போகும்படி, உன்

மென்மையான தோள்களை மெலிந்துபோகச் செய்தவனின் துறையில்;:
"கரையை இடித்துக் கவர்ந்துகொள்ளும் வளைவான கழியினில், கண்களைக் கவரும் அழகிய பறவைத் திரள்
அலைகள் மோதுவதால் இறந்துபோன புலால் நாறும் மீன்களையன்றி,
தமக்கு இரையாக உயிருள்ள மீன்களைக் கொன்று உண்ணாத துறையைச் சேர்ந்தவனை, நாம் பாடும்
அசைந்து வரும் ஊஞ்சல் பாட்டில் நீ முன்பு பழித்துக்கூறியதை அழித்து ஒன்று பாடுவாய்!
அருள்செய்தனவோ தோழி! அருள் செய்தனவோ தோழி!
இரவு முழுவதும், தோழியே! அருள் செய்துகொண்டிருக்குமோ?
திரளாக வந்து குவியும் மணல் குவியலினால் கருங்குவளை மலர்கள் வருந்த,
ஒன்றன்பின் ஒன்றாகப் பெரிதாய் எழுந்துவரும் அலைகள் மணலைக் கரைத்து அந்தப் பூக்களுக்கு அருள்செய்யும்,
மணங்கமழும் கூந்தலையுடையவரின் ஊடலை, அதனைக் கண்டபொழுதிலேயே

வணங்கித் தீர்க்கின்றவனின் துறையில்;"
"என்று இவ்வாறாக
நாம் பாட, அதனை மறைவில் நின்று கேட்டுவந்தவனான, நீண்ட
வெண்மையான நீர்ப்பரப்பின் ஒளிர்கின்ற தன்மையினையுடைய கடற்கரைத்தலைவனை,
நான்தான் ஆட்டுவதாக எண்ணி நீ மிகவும் மருண்டுபோக,
தேனீக்கள் ஒலிக்கும் புன்னை மரத்தை ஒட்டியிருந்து
அவனே வந்து ஆட்டினான் அந்த ஊஞ்சலை."

# 132
வலிமை மிக்க நீரலைகள் வந்து மோதுவதால் உயர்ந்து எழுந்து உண்டான மணல் மேட்டில்,
பல்வேறு உருவங்களுடன், தாம் விரும்பும் பெடைகள் துணையாக,
இரை தேர்ந்து உண்டு இளைப்பாறியிருக்கும் பறவைக் கூட்டம் தங்கியிருக்க, 
மூன்று முரசங்களையும் ஆளுகின்ற பாண்டியர், பகையரசரின் பகை அழியும்படி,
வரிசையான யானைகளை படைகளுக்கு நடுவே கட்டிவைத்திருந்ததைப் போல,
சிதைவுறாமல் பயணத்தை மேற்கொண்டு, சிறப்பான செல்வங்களைப் பெற்று, தாம் சென்ற காரியத்தை முடித்து
துறைக்கு வந்து சேர்ந்த மரக்கலங்கள் அவ்விடத்தையே சூழ்ந்து நிற்கும் தெளிந்த கடலையுடைய சேர்ப்பனே!
புன்னை மரங்கள் கொண்ட நறும் பொழிலில் நீ இவளுடன் சேர்ந்திருந்தபோது
'நல்ல நெற்றியையுடையவளே! நீ அஞ்சாதே!' என்று கூறியதன் பயன் அல்லவா,

படர்ந்திருக்கும் பசலையால் பகலில் ஏற்றிய விளக்குப் போல் ஆனவள்
மாந்தளிர் போன்ற தன் மாட்சிமைப்பட்ட அழகை இழந்தது;
பல மலர்கள் கொண்ட நறும் பொழிலில் நீ மனக்குறை இன்றி இவளுடன் சேர்ந்திருந்தபோது
'கொஞ்சமாய்ப் பேசுபவளே! என்னை நம்புவாயாக என்று அவளைத் தேற்றியதன் விளைவு அல்லவா,
மெலிந்து, வனப்பிழந்து, மெருகேற்றாத மணியைப் போன்று ஆனவளின்
நீண்ட முன்கையையுடைய நெடிய மென்மையான தோள்களில் செறித்த வளைகள் நெகிழ்ந்துபோனது;
அடும்பங்கொடிகள் படர்ந்துள்ள அழகிய மணல்மேட்டில் இவளுடன் விளையாடி நீ ஒன்றாக இருந்தபோது
'வளைந்த குழைகளை அணிந்தவளே! என்னை நம்புவாயாக' என்றதை ஏற்றுக்கொண்டதன் விளைவு அன்றோ
பாரத்தைத் தாங்கமாட்டாத இடுப்பை உடையதால், பூக்கள் உதிர்ந்த கொடியைப் போன்றவள்
தன் காதலைப் பிறர் அறியாதவாறு மறைத்து வைத்து இந்தக் காமநோயில் அழுந்திக்கிடப்பது;

என்றவாறு,
வழிபடும் தெய்வம்தான் ஆதரவு என்று நம்பியிருந்தவர்க்குக்
குறையும் நோயைக்கூடக் கூடுதலாக்கும் கொடுமைக்காரத் தெய்வமாக ஆகியது போல,
பழிச்சொற்கள் எங்கும் பரவி, ஊரார் அலர் தூற்றுவதால், என் தோழியைப்
பெருந்துன்பம் அலைக்கழிக்க, அவளைவிட்டு இன்னும் பிரிந்திருத்தல் கொடியது.

# 133
கரிய மலர்களையுடைய கழிமுள்ளி, தில்லை மரத்தோடு ஒன்று சேர்ந்த
கடற்கரைச் சோலையை ஒட்டி இருந்த உயர்ந்த மணல் மேட்டின் மேல்
புகழ் மிக்க தட்சிணாமூர்த்தி தான் உறையும் ஆலமரத்து அடிமரத்தில் முன்னே எடுத்து வைத்திருந்த
நீர் நிறைந்த கமண்டலம் போல பழங்கள் தொங்கும் வளைந்த தாழையின்
பூக்கள் மலர்ந்தவை போல் குருகினம் அந்தத் தாழை மேல் தங்கியிருக்கும் துறைவனே! கேட்பாயாக!
இல்லறம் ஆற்றுதல் என்பது வறுமைப்பட்டவர்க்கு உதவுதல்,
பேணிப் பாதுகாத்தல் என்பது கூடினவரைப் பிரியாதிருத்தல்,
பண்பு எனப்படுவது உலக நடப்பு அறிந்து அதன்படி நடத்தல்,
அன்பு எனப்படுவது தன் சுற்றத்தாரைக் கோபிக்காதிருத்தல்,

அறிவு எனப்படுவது பேதைகளின் சொற்களைப் பொறுத்துக்கொள்ளுதல்,
செறிவு எனப்படுவது கூறிய எதனையும் மறக்காதிருத்தல்,
நிறை எனப்படுவது மறைத்துக் காக்கவேண்டிவற்றைப் பிறர் அறியாமல் காத்தல்,
முறை எனப்படுவது வேண்டியவர் என்று பார்க்காமல் குற்றத்திற்கேற்ற தண்டனை கொடுத்தல்,
பொறை எனப்படுவது தம்மைப் போற்றாதவரையும் பொறுத்துக்கொள்ளுதல்,
இவ்வாறு சொன்னவற்றை அறிந்து அதன்படி நடப்பவரென்றால், என் தோழியின்
நல்ல நெற்றியின் நலத்தை நுகர்ந்து அவளைக் கைவிடுதல், கொண்கனே!
இனிய பாலைக் குடித்தவர் பின்பு அந்தக் கலத்தைத் தூக்கியெறிவது போலாகும்,
உன்னையிட்டு வருந்தியவளின் துயரத்தை,
விரைந்து சென்று களைவாயாக! பூட்டுக உன் தேரை!

# 134
மல்லர்களின் வீரத்தை அழித்துக் கெடுத்த, மலராலான குளிர்ந்த மாலையை அணிந்த மார்பினனாகிய திருமால்
தன்னொடு உடன்படாதார் சிதறியோடும்படியாகச் சினம்கொண்டு வேகமாக எறிய,
கொல்லுகின்ற யானையின் அழகிய நெற்றியில் ஆழப்பதிந்த சக்கரப்படையைப் போல,
மலையினை அடைந்த ஞாயிறு தன் கதிர்களையெல்லாம் திரும்பவும் உள்வாங்கிக்கொண்டு மறைவதால்,
கரிய கடல் பேரொலி எழுப்பி, அங்கே இரவைக் காண விரும்புவது போல
பெரிய கடலில் ஓதநீர் பொங்கி எழுந்து கரையினைச் சேர,
வண்டுகள் போய்விட்டதால் வனப்பிழந்த துறையில்,
துயில் கொள்பவை போல நீர்மலர்கள் தம் வாயினை மூடிக்கொண்டு கூம்பி நிற்க,
ஒருசேர நடுக்கம்கொண்டு இந்த உலகம் எல்லாம் அஞ்சிநிற்கும்படியாகப்

பூமியே பிளப்பது போன்ற பெருந்துன்பம் மிகுகின்ற மனத்தைக் கலங்கவைக்கும் மாலைப் பொழுதில்,
குறையாத காமநோயை எனக்குக் கொடுத்தவரைக் காணாமல் அவரையே நினைத்துக்கொண்டிருத்தலால்
மாறுபட்டுத் துயர்தரும் பனிக்காலம் என்னைக் கொல்ல, வருத்தத்தில் ஆழ்ந்து, அங்கே
கவலைகொண்ட நெஞ்சத்தினளாய் நான் மனம் கலங்கி நிற்க, கடல் அதனைப் பார்த்து
அந்த அவலத்தைத் தான் அனுபவிப்பது போல அரற்றுகின்றதே! அது எதனாலோ?
நடுக்கும் நோயை எனக்குக் கொடுத்தவர் அருள்புரியாமற் போய்விட்டதை நினைத்துக்கொண்டிருத்தலால்
கொடிய பனிக்காலம் மிகுந்து செயலற்ற நிலையில் ஆழ்ந்து, அங்கே
நடுக்கும் நோயில் உழன்று என் நலமெல்லாம் அழிய, மணல் அதனைப் பார்த்து
இடும்பை தரும் அந்த நோய்க்காகத் தான் இடிந்து விழுகிறது போல் இருக்கிறதே! அது எதனாலோ?
என்னோடிருந்து என் நலனை அனுபவித்துச் சென்றவர் வராமற்போய்விட்டதை  நினைத்துக்கொண்டிருத்தலால்

செயலற்ற நெஞ்சத்தினளாய் நான் கலக்கத்தினுள் ஆழ்ந்து அங்கே
மையல் கொண்ட நெஞ்சத்தோடு மயங்கியிருக்க, மரம் அதனைப் பார்த்து
அந்தத்துன்பத்தால் தாம் பதிக்கப்பட்டது போல் இலைகளைக் குவித்துக்கொண்டதே! அது எதனாலோ?
என்று இவள் சொல்ல,
கரை காணமுடியாத பெருங்கடலில் மரக்கலம் கவிழக் கடலுள் மூழ்கியவன்
அலைகள் கொண்டுவந்து தந்த ஒரு மிதவையைப் பெற்றுத் தீங்கு நேராமல் கரை சேர்ந்ததைப் போன்று
காதலன் விரைந்து வந்துசேர,
அடுக்கிய வளையல்களைக் கொண்ட இவளின் அவலம் அகன்றுபோனது விரைவாக.

# 135
துணையுடன் சேர்ந்து இரட்டையாகக் கடலிலிருந்து எழுகின்ற வெண்மை நிறச் சங்குகளே
இணையாகத் திரண்ட கொம்புகளாக, வீசுகின்ற காற்றே பாகனாக,
வேல் நுனிகள் செருகப்பட்ட உயர்ந்த கதவு அமைத்து, வாசலை அடைத்து அழகு செய்த
கோட்டை மதிலைக் குத்தி அழிக்கும் யானைப் படையைப் போல, மணல் மேடாகிய உயர்ந்த கோட்டையை
பயிற்சிபெற்ற கடலலைகள் நள்ளிரவில் பாய்ந்து தாக்கும் துறைவனே! கேட்பாயாக!
மணக்கின்ற மலர்களையுடைய புன்னை மரத்தடியில் உன்னிடம் தன் மாண்பை இழந்த இக் காரிகையை
வளையல்கள் கழன்று விழும் தோளினையுடையவளாக மாற்றிவிட்டு அவளைத் துறப்பாயேல், அது உன்
குடிப்பெருமைக்குப் பெரிய குற்றமாய் அமையாதோ?
அழகிய மலர்களையுடைய புன்னை மரத்தடியில் உன்னிடம் தன் அழகிய நலத்தை இழந்தவளைக்

காமநோய் மிகுந்த நிலையினளாய் மாற்றிவிட்டு அவளைக் கைவிடுவாயேல், அது உன்
வாய்மையே வழங்கும் வாழ்க்கையில் பொய்யும் இடம்பெற்ற பெரிய வஞ்சமாய் முடியாதா?
ஒளிவீசும் மலர்களையுடைய புன்னை மரத்தடியில் உன்னிடம் தன் தெய்வத் திருவழகை இழந்தவளை
மலர்கள் இகழும் கண்ணையுடையவளாக மாற்றிவிட்டு அவளைக் துறப்பாயேல், அது உன்
புகழுக்கு நேர்ந்த பெரிய கரும் புள்ளியாய் ஆகிவிடாதா?
என்று நான்
கடுமையாக உன்னிடம் சொல்லக் கேட்டாயாயின்
அழகு விளங்கும் நெடிய மலையையும் வருத்தும் உன் மார்பினில்
மணிகள் ஒளிவிடும் முத்துவடம், மாலையோடு சேர்ந்து அசைய,
மனம் வருந்திப் பெருமூச்சுவிடும் என் தோழிக்காக,

ஓடுகின்ற போது எழும் ஒலியுடன் கூடிய உன் நெடிய திண்ணிய தேரை விரைவாகச் செலுத்துவாயாக.

# 136 
ஊர்ந்து செல்லும் மீன்படகுகளை ஓங்கியடிக்கும் அலைகள் ஒன்றுசேர்ந்து வந்து கரையினில் மோதும்போது
நீர் சுரக்கும் உயர்ந்த மணல்மேடுகளில் தன் வளையிலிருந்து வந்த நண்டு ஓடித்திரிவதால் ஏற்பட்ட வரிகள்,
தடையின்றி விளையாடும் ஈரமான சூதாடு களத்தில் ஆர்வம் குறையாமல் சூதாட்டக்காயை உருட்ட,
அந்தக் சூதாட்டக்காய் ஏற்படுத்திய கோடுகளைப் போன்றிருக்கும் காண்பவர் விரும்பும் அழகினையுடைய கடல் நாட்டுச் சேர்ப்பனே!
முத்துப்போன்ற வெண்மணலில் நீ இவளிடம் அன்புசெய்தபோது, சூதாட்டத்தில் முதல் உருட்டில்
பத்து எண்ணிக்கையைப் பெற்றவன் மனத்தைப் போல் மகிழ்ந்து சிறந்தவள்
அவ்வாறு அன்புசெய்வதிலிருந்து நீ விலகிப்போக, தன் அழகெல்லாம் வாடிப்போய், அந்த உருட்டில்
சிறிய எண்ணிக்கையைப் பெற்றுத் தோற்றவனைப் போலக் கொடும் துயரில் வருந்தமாட்டாளோ?
வளைந்து கிடக்கும் தாழையின் குறுகிய வெளியில் நீ இவளிடம் அன்புசெய்தபோது, சிறு தாயம் வேண்ட

உருட்டும்போது அதனையே கிடைக்கக் கண்டவனின் மனத்தைப் போல மகிழ்ந்து சிறந்தவள்,
கொடுப்பதில் சிறந்தவனே! நீ பிரிய எண்ணினால், சிறு தாயம் வேண்டியபோது பெரும் எண்ணிக்கை பெற்று
கட்டிவைத்த பந்தயப் பொருளை இழந்தவனைப் போலப் பெரும் துயரில் வருந்தமாட்டாளோ?
நறிய மலர்கள் உதிர்ந்துகிடக்கும் புன்னை மரத்தின் கீழ் விருப்பத்துடன் நீ இவளிடம் அன்புசெய்தபோது
மறுதாயம் கிட்டியவன் மனத்தைப் போல மகிழ்ந்து சிறந்தவள்,
பிரிந்து போவேன் என்று அறிவித்து நீ பிரியக் கருதிய உன் பொருட்டாய்
பெரிய எண் பெறவேண்டிய இடத்தில் சிறிய தாயம் இட்டவனைப் போல் மிகுந்த துயரில் வருந்தமாட்டாளோ?
இவ்வாறாகப்
பழிசொல்வதை மேற்கொண்டு பலரும் தூற்றும் பழிச்சொற்களுக்கு நீ அஞ்சமாட்டாய்!
இவளை மணந்துகொள்ள அருளுள்ளம் கொண்டு, அதற்கான வழிவகைகளை அறிந்து அதற்காக முயல்வாயாக!

உழவுத்தொழில் செய்கின்றவன் ஈட்டுகின்ற பொருளைக் காட்டிலும்
இவள் நலம் சிறந்து விளங்கட்டும், தேரில் ஏறுக!

# 137
அரிதாக இருக்கின்றது, தோழி! நாணத்தை விடாமல் நம்மிடம் நிறுத்திப் பேணுவோம் என்ற உணர்வுடன் இருப்பது,
நான் கொண்ட காமம் மிகப் பெரியது, ஆனால் அதைத் தாங்கும் என் உயிரோ மிகச் சிறியது,
நமக்கு வருத்தத்தைத் தரும் பல யாமங்கள் வந்து போகின்றன,
இருப்பினும் நமக்குத் துணை மிகவும் சிலவே, அவையும் நம்மோடு அளவளாவும் அன்றில் பறவைகள்,
நெருப்புப்போல் ஒளிர்ந்து சுடர்வீசும் அணிகலன்கள் புரண்டு புரண்டு படுப்பதால் ஒலியெழுப்ப, துன்புற்று,
பீலி இழந்து அழகு அழிந்த மயிலைப் போல் நடுங்கி, படுக்கையில்
நெருப்பாகக் கொதிக்கிறது மேனி, அவருடன் மகிழ்ந்திருந்ததனால் கிட்டிய பயன்;
எனது மென்மையான நெஞ்சில் வருத்தம் மிகும்படியாகத் தன்
வாக்குத்தவறிய சொல்லம்புகளால் என்னைத் துளைத்தாரே அன்றி, அவர் நம் மேல்

வல்ல ஒருவன் செய்த வடிவத்தில் திருத்தமான, விரைந்து செல்லக்கூடிய
வில்லின் அம்புகளை விட்டது இல்லை, அழகிய இழையணிந்தவளே!
வில்லம்பிலும் கொடியது அவர் சொல்லம்பினால் பிறந்த நோய்;
சிரிப்பைத் தொடக்கமாகக் கொண்டு எழுந்த நட்பிடையே தோன்றிய
அவரது நற்பண்புகளால் நான் நலிந்துபோகிறேனே அன்றி, அவர் நம் மீது கொண்ட
பிரிவினைகளால் எழுந்த பழைய விரோதத்தைத் தொடக்கமாகக் கொண்ட
பகைமையினால் நான் நலிந்துபோவதில்லை, அழகிய இழையணிந்தவளே!
பகைமையிலும் கொடியது அவரது பண்புகளால் நான் நலிகின்ற நோய்;
உன்னைவிட்டுப் பிரியேன் என்று சொல்லி என்னைத் தன் அன்பினால் கட்டிப்போட்டுத் தனது
மென்மைப் பண்புகளால் என்னைச் சுடுகிறாரே அன்றி, அவர் நம்மைப்

பரவுகின்ற இருளை முற்றிலும் நீக்கித் துன்பத்தை அகற்றும் நீண்ட கொழுந்தினையுடைய
தீயினால் சுடுவது இல்லை, அழகிய அணிகலன்கள் அணிந்தவளே!
தீயிலும் கொடியது, அவர் மென்மையால் மேலோங்கி எரியும் காம நோய்;
இவ்வாறாக,
காதலர் இப்படிப்பட்டவராக இருப்பதால், அவர் நமக்கு
நமது இனிய உயிரைக் காக்கும் மருத்துவராக இருப்பது
எப்படி ஆகும், தோழியே! கொஞ்சங்கூடத்
தாங்கிக்கொள்ளும் வலிமையும் இல்லை, மேலும்
அதனின்றும் நீங்குவதும் அரிதாக இருக்கின்றது, அவர் நமக்குத் தந்த நோய்.

# 138
அழகிய கொம்பினைக்கொண்ட அழகிய யானை, வடிகின்ற மதத்தால்
தான் செய்யவேண்டிய தொழில்களைத் தவிர்த்து, தன்னை அடக்குகின்ற அங்குசத்திற்கு அடங்காமற் போவது போல
என் அறிவும், அந்த அறிவினால் ஆராய்ந்துபெற்ற அடக்கமும், நாணவுணர்வும்
என்னைவிட்டு நீங்க, பிறர் என்னைப்பார்த்துச் சிரிக்கும்படி, சிரிப்புடன்
மின்னலைப் போல ஒளிவீசி மறைவது போலவும், கனவு போலவும் தன் மேனியைக் காட்டி,
என் நெஞ்சம் என்னோடு நில்லாமலிருக்கும்படி அதனை மிகவும் கவர்ந்துகொண்டு,
தன்னுடைய நலத்தை நான் காணாதவாறு மறைத்துக்கொண்டவளை அடைகின்ற வழிதான் எதுவோ?
நீலமணி போன்ற பீலியைக் கட்டிய நூலில், ஏனைய
அழகிய பூளைப்பூ, ஆவிரம்பூ, எருக்கம்பூ ஆகியவற்றைச் சேர்த்துக் கட்டி,

வளம் நிறைந்த ஊரின் தெருவில் இவளைப் பாடுகின்றேன், இவன் ஒருத்தன்,
'எல்லாரும் கேட்பீர்களாக' என்று;
துன்பமும், பனை மடலால் செய்த குதிரையும், ஒளிவீசும் அணிகலன்களை அணிந்தவளான
என்னால் காதலிக்கப்பட்டவள் எனக்குக் கொடுத்தவை;
என்னுடைய உயிரைத் தாங்கிக்கொண்டிருப்பது என்னிடத்தில் இல்லை, பொலிவுள்ள நெற்றியையுடையவள் தந்த
மனவுறுதியை அழிக்கின்ற காம நோயை நீந்தி, உப்புப்பாத்தியில் கிடந்த
உப்பால் செய்யப்பட்ட பாவை மழைநீரில் கரைவது போல்
அழிந்துவிடும் என் உயிர்;
பூளையும், பொன் போன்ற மலரான ஆவிரம்பூவும், மூங்கிலையும் வென்ற
தோளையுடையவள் எனக்குத் தந்த பூக்கள்;

எனக்குரித்தான என் இயல்புகள் இப்போது என் வசம் இல்லை, ஒளிவிடும் அணிகலன்களை அணிந்தவள் தந்த
என் இயல்பையே அழிக்கின்ற துன்பத்தைத்தரும் காமநோய்க் கடலுள் மூழ்கி, தீப்பிடித்து எரியும்
நெய்க்குள் போட்ட மெழுகினைப் போல நிலைக்காமல் மெல்ல மெல்ல
தேய்ந்து போகின்றது, இரங்கத்தக்க என் உயிர்;
இளைஞர்களும், இதனோடு தொடர்பற்ற அன்னியர்களுமே இந்த வலியில் நான் படும்
வேதனையை ஏனென்று கேட்கும் துணைவர்கள்;
என்று நான் பாடுவதைக் கேட்டு,
அன்பு நிறைந்த மொழியினையுடையவள் என்மீது அருள்கொண்டு வந்து எனக்கு இரக்கம் காட்டியதால்,
துன்பத்தில் துணையாக இருந்த இந்த மடல், இனி, இவளைப் பெற்றதினால்,
இன்பக் காலத்தில் இடம்பெறாமல் ஒழிக என்று மனம் இரங்கினாள், பக்தி மேலிட்டு

அளவில்லாத மேன்மையை உடைய அரிய தவத்தைச் செய்தோர், தம்
உடம்பினை விட்டுவிட்டு விண்ணுலக வாழ்வினை இனிதாகப் பெறுவது போல.

# 139
சான்றோர்களே, சான்றோர்களே! நீர் வாழ்க! எப்பொழுதும்
பிறருடைய துன்பத்தையும் தம் துன்பம் போல் கருதி, அதனால் வரும் அறப்பயனை அறிந்து வாழ்தல்
சான்றோர்கள் எல்லாருடைய இயல்பு என்பதால், இங்கிருக்கும்
சன்றோர்களே! உங்களுக்கு ஒன்றனை எடுத்துச் சொல்வேன்! மயங்கவைக்கும்
மழையிடையே வரும் மின்னலைப் போல் தோன்றி, ஒருத்தி
தன் ஒப்பனையுடன் தன் உருவத்தையும் எனக்குக் காட்டுமளவுக்கு என்மேல் கருணைகொண்டாள், என்
நெஞ்சத்தை வழியாகக் கொண்டு என்னுள் வந்துவிட்டாள், அது முதல் துயில்கொள்ளேன்,
அழகுடன் அசைகின்ற ஆவிரம்பூவுடன், எருக்கம் பூவையும்
சேர்த்துக்கட்டிய அழகிய தலை மாலை சூடி, மணிகள் ஒலிக்க,

உயர்ந்து வளர்ந்த கரிய பனையின் மடலால் செய்த குதிரையில் ஏறிக்கொண்டு, என்னுடைய காம நோயைத்
தாங்கமாட்டாமையால் உண்டான மனவருத்தத்திற்கு இளைப்பாறுதலாக,
இறுக்கமான அணிகலன்களை அணிந்த மங்கையைப் பற்றி ஒன்றுவிடாமல்
பாடுகிறேன், இந்தக் குதிரை மடலை மனத்திலே நிறுத்தி;
இரவிலும் பகலிலும் இந்தத் துன்ப அலைகள் என்னை அலைக்கழிக்க,
மடல்மா மேலே இருக்கிறேன் என்று சொல்லியவாறே, அந்த மடல்மாவே தெப்பமாகக் கொண்டு நீந்துகிறேன்
தேன் போன்ற மொழியைக் கொண்ட அந்த மங்கை தான் காதலிக்காமல், என்னைக் காதலில் வீழ்த்திய
காமமாகிய கடலில் அகப்பட்டு;
உயிர்வாழ முடியாத இந்த அரிய நோய்க்கு, உயிர் காக்கும் வழி ஆகும், இந்த மையலில்
என்ன வீழ்த்தியவள் எனக்குத் தந்த இந்த மடல்மா;

பார்த்தவர் சிரிக்கும்படியாக நான் கலங்க, என் முன் தோன்றி, என்
ஆண்மைப் பொலிவு என்ற கோட்டையை முற்றுகையிட்டு அதனை உடைத்து என் உள்ளத்தை அழிக்கிறது,
சிறந்த அணிகலன்களையுடைய மங்கையின் அழகு என்ற வடிவில் காமனது
ஆணையால் வந்திருக்கும் படை;
காமம் என்ற கொடிய பகையால் இவ்வாறு வந்து நின்றவனுக்கு, அரணாக அமைகிறது,
அழகிய நெற்றியையுடையவள் தந்த இந்த மடல்மா;
சுட்டெரிக்கும் காமத்தீ எல்லை கடந்து என் அரிய உயிரைப் போக்குகின்ற
வகையில் உள்ளத்தைச் சுடுகின்றது,
முல்லை அரும்புகளின் அழகைப் பெற்று ஒளிவிடும் பற்களையும், இனிய சிரிப்பையும் கொண்ட மங்கையின்
அழகால் அவளுக்கு ஆட்பட்டுவிட்ட என் நெஞ்சில்;

இந்தக் காமமாகிய பொறுப்பதற்கு அரிய நோய் கொழுந்துவிட்டெரியும் நெருப்பென்றால், குளிர் நிழலாய் இருப்பது
நேர்த்தியான அணிகலன் அணிந்தவள் தந்த இந்த மடல்மா;
என்று நான் கூற,
இதை நீங்கள் அறிவீராயின், சான்றோர்களே! தான் தவ முறையிலிருந்து
விலகி, விண்ணுலகம் செல்லும் நெறியில் வழுவி, பெரியோர்
உயர்நிலைக்கு உரியவன் என்று எண்ணிய ஓர் அரசனை, மீண்டும் நல்வழியில் ஈடுபடுத்தி, அந்தப் பெரியோர்
அவனைப் பேரின்ப உலகம் சேர்ப்பதைப் போன்று, என்
துயர நிலையைத் தீர்த்துவைப்பது உங்களது முதன்மையான கடமையாகும்.

# 140
பார்த்தவர் அனைவரும் விரைந்து வந்து, இந்த ஊரில்
முன்பு என்னைத் தெரியாததைப் போல் பார்க்கிறீர்கள்; நான் ஏறிக்கொண்டிருப்பது
குதிரை என்று உணருங்கள், இது மடல் அன்று, மேலும் இவை
பூக்கள் அல்ல, பூளை, உழிஞை இவற்றோடு சேர்த்துக் கட்டிய
தினைப்புனமுள்ள மலையில் மயில்கள் உதிர்த்த பீலியுடன் சேர்ந்த மின்னுகின்ற மாலை இது,
கையால் பிடிப்பதற்கான கடிவாளத்துடன், சேர்த்துக்கட்டிய மணிகளைக் கழுத்தில் கட்டி,
பொன் தகட்டின் பளபளப்பைப் போன்றிருக்கும் ஆவிரம் பூவால் செய்த தலை மாலையைச் சூடி,
திருமால் மகனாகிய மன்மதன் விரும்பித் தந்ததைப் போன்று அப்படிப்பட்ட
சிறந்த உருவத்தைச் செத்துக்கியெடுத்த அழகினையுடைய, என் நெஞ்சம் என்ற அரண்

இடிந்துபோகும்படி நடுவே வந்து என்னை ஆட்கொள்ளும் சாயலையுடைய ஒருத்திக்கு
அடிமை என்பதை உலகுக்குக் காட்டுவதற்குச் செல்கிறேன், இதனை நீங்கள் வெறுக்கவேண்டாம்,
நான் அப்படிப்பட்ட ஒருவன்தான்;
பாடு என்று நீங்கள் சொன்னால், எப்படியாயினும் என்னால் பாட முடியும், இங்கேயே சிறிது
ஆடு என்று சொன்னால் சிறிது ஆடவும் செய்வேன், பாடுவேனோ,
உன் உள்ளத்தில் இருக்கும் காமநோயைத் தணிக்கும் மருந்தாக
அந்த அழகிய நெற்றியையுடையவள் எனக்குத் தந்த இந்த மடல்மாவை;
திங்களைப் பாம்பு பற்றினால் அதனை விடுவிக்க இயலாதவராயினும்
அந்தத் திங்களிடம் அன்புகாட்டுவர் சான்றோர், இனிய சாயலையுடைய
ஒளிரும் வளையணிந்தவளின் நோய் செய்யும் பார்வையில் அகப்பட்ட என் நெஞ்சத்துக் காமநோயைக்

கண்டும் என்னைப் பரிவுடன் பார்க்காது இந்த ஊர்;
தாங்காத சினத்தோடு படமெடுத்து உயிர்களைப் போக்கும்
பாம்பும், நல்லோர் சபையில் புகுந்தால் பிழைத்துச் செல்லலாம், பூப்போன்ற கண்களையும்,
நீண்டு மடங்கிய செழித்த கூந்தலையும் உடையவள் ஏற்படுத்திய இந்தக் காமநோயை
உணர்ந்திருந்தும் அதனைத் தீர்ப்பதற்கான வழியை உணராது இந்த ஊர்;
கொடுமையான நீர்ச்சுழியில் அகப்பட்டுக்கொண்ட ஒருவனைப்பார்த்துக் கரையிலிருப்போர்
பயப்படாதே என்று சொன்னாலும் அவன் சற்று ஆறுதல் பெறுவான், அழகும் நேர்த்தியும் கொண்டு,
அடக்கமும் தோற்றப்பொலிவும் உடைய முறுவலையுடையவள் ஏற்படுத்திய இந்தக் காமநோயை
அறிந்திருந்தும் அதனைத் தீர்ப்பதற்கான வழியை அறியாது இந்த ஊர்;
இவ்வாறாக,

என்னிடத்தில் உள்ள வருத்தத்தை உங்களுக்கு எடுத்துச் சொன்னேன், இனி நீங்கள்
இதைத் தெளிவுறப் பார்த்து ஆராயும்போது, இப்படிப்பட்ட
மயக்கமுறும் காமநோயுடன் அதனாலுண்டான கலக்கமும் நீங்கும்படியாக,
இருள் செறிந்த கூந்தலையுடையவள் என்மீது
இரக்கம்கொள்ளும்படி செய்தால் அது உங்களுக்கு நல்லறமாகும்.

# 141
அரிதாகக் கிட்டிய இந்த உடம்பின்மேல் ஆசைகொண்டு, தாம்
விரும்பியவற்றைச் செய்து, அவற்றை மற்றவர்க்கும் காட்டி, முற்பிறப்பில்
அறம் பொருள் இன்பம் ஆகிய இந்த மூன்றினில் ஒன்றாகிய அறத்தின்
வழியே சேராதார், இப்பிறப்பில் செய்யும் தொழில்களில் ஒன்றாக நூல்கள் தெரிவிக்கின்றன,
அழகான நிலையிலிருக்கும் பனை மடலால் செய்த குதிரையில் ஏறிவந்து, ஒருத்தியின்
அழகிய பெண்மை நலத்தைப் பாடி வருவது;
ஒரு சமயம் என் உள்ளத்தின் உள்ளே இருப்பவளாகி, பின்னொரு சமயம், நிறைமதியின்
நீருக்குள் இருக்கும் நிழலைப் போலக் கையில் பிடிப்பதற்கு அரியவள் ஆகிவிடுகிறாள், போர்க்களத்தில்
வலிமை மிக்க குதிரை மீது அமர்ந்து போரிடும் என்னை, இந்த மடல்மா மேல்

மன்றத்தில் நிற்கச் செய்தவள், வாழ்க, நீவிர், சான்றோர்களே!
பொய்மை அற்ற நன்மக்கள் போற்றிப்புகழும், கீழ்த்திசையில் தோன்றும்
களங்கமற்ற ஞாயிற்றைப் பிடிப்பதற்கு விரும்புவதைப் போன்ற அவள், இந்த உலகத்துக்கே
உணவு கொடுத்துக் காக்கும் உயர்ந்த உள்ளம் கொண்ட என்னை, அவளிடம் இரந்து நிற்கும்
கொடிய துன்பத்தைச் செய்தாள், கேளுங்கள், சான்றோரே!
என் கண்ணுக்கு மறைந்திருந்து, கேடு செய்யும் நோயை எனக்குச் செய்கிறாள், இப்படிப்பட்டதோ,
அழகுத்தேமல் பரந்த, மூங்கில் போன்ற தோள்களையுடைவளின் பண்பு?
இடியை உமிழ்கின்ற வானத்தில், இரவுநேர இருளைப் பிளந்துகொண்டு வெளிப்படும்
கொடி மின்னலைப் பிடிப்பேன் என்பது போலக் கைப்பற்ற அரியவள், திருத்தமான நாவன்மையால்
வல்லவர்கள் முன்னால் சொல்லாடக் கூடியவனான என்னைப் பிறர் முன்னர்

கல்லாதவனாய்க் காட்டிவிட்டாள், வாழ்க, நீவிர், சான்றோரே!
என்றவாறு,
கண்டோர் வருந்த, மடல்மா மீது ஏறி, ஊர்த்தெருவில் நின்று நான் பாட,
திருத்தமான அணிகலன்களை அணிந்தவளுக்கு ஏற்ற சொற்களைக் கேட்டு, அங்கு,
பகைவர்கள், போரில் வல்ல பாண்டியனுக்கு அரிய திறைப்பொருளைக் கொடுப்பது
போல, அவள் வீட்டார் பெண்ணைக் கொடுத்தனர்.

# 142
மனம் விரும்பிய உறவுக்காலத்தில், அதற்குரிய தழுவுதல் நிறைவுபெறாத அளவில்,
இருவருள் ஒருவரை அந்த உறவுக்கு அரிதானவராகப் பிரித்துவிடுவதால், ஆராய்ந்து பார்க்கும்போது,
நரம்பை இயக்க, அதில் நின்ற பண்ணினுள் தோன்றிய இனிமையைச் செவி சுவைப்பதற்கு முன்னே,
அந்த இசைப்பயன் கெட்டுப்போகும்படி, முறுக்கு அறுந்துபோகும் நரம்பைக்காட்டிலும்
பயனற்றதாகும் காமம், இவளைப் பொருந்திச் சூழ்ந்திருக்கும்
ஒளிவிடும் நெற்றியையுடைய தோழியர் எல்லாரும் ஒன்றாகக் கூடிச் சிரிக்கும் காலத்திலும்,
முள்ளின் நுனை போன்ற தன் பற்கள் வெளியில் தெரியாமல் புன்முறுவல் கொண்டு, சிரிப்பை அடக்கித் தன்
கண்ணாலும், முகத்தாலும் மட்டுமே சிரிக்கும் இயல்புடையவள், இப்போது பெண்தன்மை இல்லாமல்
எல்லாரும் தன் இனிய குரலைக் கேட்கும்படி, வரிசையான வெண்ணிறப் பற்களின்

மேல் ஈறு தெரியும்படி, சிரிப்பாய்ச் சிரித்துவிட்டு, உடனேயே
பூக்கள் உயிர்கொண்டவை போன்ற புகழ்மிக்க தன் அழகிய மைதீட்டிய கண்களின்
அழகிய இமைகளில் நீர் பெருகும்படி அழுவாள்;
ஓ! நம்மை வருத்தும் என்றும் பாராமல், அல்லலுடன் கிட்டேயிருந்து
காண்போம் இந்தப் பொற்குழையணிந்தவளின் அல்லல் நிறைந்த குணத்தை;
என்று கருதி வந்து நீங்கள் எல்லாரும் என்ன காரியம் செய்கிறீர்கள்? என்னைப் பார்த்துச் சிரிக்கின்றீர்களா?
நீங்கள் பெரிதாகச் சிரிக்கமாட்டீர்கள்! நான் படும்
வேதனையை எனக்குக் கொடுத்தவனின் மாயத்தைச் செய்த மலர்ந்த மார்பினை
நான் தழுவி அவனைச் சேரப்பெற்றால்;
ஏடி! நீ படும் வேதனை என்ன? என்று கேட்பீர்களென்றால், எனக்கு இந்த மனச் சிதைவைத்

தந்தவன் இவன் என்றும் அவன் அளித்த வேதனை இப்படிப்பட்டது என்றும்
உங்களுக்குப் புரியக்கூடிய வகையில் உரைக்கின்ற தெளிவு என்னிடத்தில் இருக்குமானால்,
மிகவும் துன்புற்று, ஒளியிழந்து பசந்துபோகுமோ என்
நெய்தல் மலரைப் போன்ற கண்கள்?
சிற்றில் விளையாடி, தலைவர் வருவாரா என்று காண மணலில் வட்டங்கள் இட்டேன், அதில் முனைகள் கூடாமல்
பிறை தோன்றிற்று, எனவே, தலைவர் வாரார் என அறிந்து, அந்தப் பிறைநிலவை
என் ஆடையால் மூடி மறைத்துவிட்டேன், ஆனால் தலையில் சூடுவதற்காகக்
காணாமல் அலைவான் அல்லவா, மணி நிறத்தைக் கழுத்தினில் கொண்ட
மாண்பு மிக்க மலரான கொன்றையைச் சூடிய சிவபெருமான் என்று எண்ணி,
நாம் தெளிந்த அறிவுடையோம் என்று சொல்லிக்கொண்டு, ஆராய்ந்து பாராமல், அதை நிலைநாட்டும் வகையில்

அப் பிறையைச் சிவனுக்கே அளித்து, வள்ளல் என்ற பெயரைப் பெறுவாயாக என்று நெஞ்சிற்கு உறுதியளித்துவிட்டு,
காதலர் நம்மை நினைத்து வருவாரோ?, வருந்தி நான்
இவரை இகழ்ந்திருப்பேனோ? என்று எண்ணியபடி இருக்க, நள்ளிரவில்
மாந்தர் காவல் காத்துத்திரியும் இரவில், கனவில்
தோன்றினான், உடனே அவனை வளைத்துப் பிடித்தேன் நான், பின்னர் அவனைக்
காண்பதற்காக மெல்லக் கண்விழிக்க, நான் பிடித்திருந்த என்
கைகளுக்குள்ளே தன்னை ஒளித்து மறைந்துவிட்டான்;
கதிர்களை யாருக்கும் பகிர்ந்தளிக்காத ஞாயிறே! நீ மலையில் மறைவாயானால்,
அவரை நினைத்து, அவருள்ள இடத்தில் அவரை நிறுத்திப்பிடித்து, என் கைவரை நீட்டி
உன் கதிர்களைத் தருவாயானால், அணைந்துபோகும், என் நெஞ்சத்தில்

என் உயிரையே திரியாகக் கொண்டு கொளுத்திய காமத்தீ;
களங்கமற்ற சுடரே! நீ மேற்கில் மலையில் சென்று மறைவாயானால்,
கிழக்கில் கடலில் தோன்றிப் பகலைச் செய்யும் வரை,
எனக்குக் கைவிளக்காக உன் கதிர்கள் சிவற்றைத் தருவாய்! என்
தொய்யில் அழகைக் கெடுத்தவனைத் தேடிப்பிடிப்பதற்காக;
என்னைச் சிதைத்தவனை நான் வேறு என்ன செய்யமுடியும்? என்னை முதலில்
விரும்பி என் அழகையெல்லாம் அவன் சிதைத்துவிட்டான்;
ஊர் மன்றத்துப் பனை மரத்தின் மேல் சூடியுள்ளதைப் போல் தோன்றும் மாந்தளிர் போன்ற மாலை வெயிலே!
பழங்காலந்தொட்டு இந்த உலகத்தில் நான் கூறுவதைப் போலக் கேட்டு அறிந்திருக்கிறாயா?
என்னுடைய மென்மையான தோள்களை மெலியப்பண்ணியவனின் சிறப்புகளையல்லாமல் நான் காணேன்

அவன் செயல்களிலுள்ள நன்மை, தீமை என்று பிறவற்றை;
காம நோய் தீயாக என்னைச் சுட்டாலும், கண்ணீரை என் கண்களுக்குள் சுழலச் செய்து என்
அழகிய கண்ணிமைகளுக்குள் அடக்கிக்கொள்ளுவேன், அவ்வாறு மறைத்துக்கொள்வதால், கண்களில் தோன்றும்
காமத்தால் உண்டான சூடான நீரை நிலத்தில் சிந்தினால், அழியும்படி
வெந்துபோகும் இரங்கத்தக்க இந்த உலகம்;
என் உயிர் மெலிந்துபோகுமளவும் பொறுத்திருக்கிறேன்; இந்தத் துன்பத்தைக் களைவீராக! சான்றோர்களே!
என்னை நலிந்துபோகச் செய்யும் காமமும், ஊரார் பழிச்சொல்லும் என்ற இவை
வலிமையான என் உயிரின் இரண்டு பக்கமும் காவடி தொங்குவதைப் போல் என்னை
நலியச்செய்யும் இரண்டு துன்பங்களாக இருக்கின்றன;
என்று பாடி,

வருந்தி நொந்து அழுதாள், நினைத்துப் பெருமூச்சுவிட்டாள்,
பகலும் இரவும் கழிந்தன என்று எண்ணி; ஒளியுள்ள ஓர் இரவில்
இவளிடம் அன்புகொண்ட துணைவன் இவன் வந்தான் என்று, மெல்லிதாக
மணியினுள்ளே பரவியிருக்கும் ஒளியான நீரைப் போன்று இனி இவர்கள் ஒன்றானார் என்று தெளிவானோம்,
கலத்தில் உள்ள நீர் கலங்கியிருந்தால், தேற்றாமரத்தின் விதையைக் கொண்டு தேய்க்க,
கலங்கிய நீர் தெளிவது போல் மனம் தெளிந்து நலம் பெற்றாள்,
நல்ல அழகான மார்பினையுடையவனைச் சேர்ந்து.

# 143
அகன்ற ஊரில் முன்பெல்லாம் இருள் நீங்கப்பெற்று அழகிய நிலா திகழ்வதுபோல் அழகுபெற்றிருந்தவள், இப்போது
பகற்காலத்தில் ஒளியிழந்த திங்களைப் போல், ஒளி இழந்த
நல்ல நெற்றியில் திலகம் இல்லாதவளாய், ஒளிர்ந்து
நீலமணியுடன் போட்டிபோடும் பசும்பொன்னோ, மாமரம் ஈன்ற இளம் தளிரின் மேல்
கோங்கின் பூந்தாது பரந்து ஒளிவீசுகிறதோ என்று இருந்த அழகு நீங்கிப்போக,
மேனி முழுக்கப் பரவிய பசலையையுடையவளாய், அமைதி இழந்து,
மனம் மருண்டு, எதையெதையோ நினைத்துக்கொண்டு, தலையைக் குனிந்துகொண்டு,
அஞ்சி, அழுது, அரற்றுகின்ற இவள் ஒருத்தி
என்ன செய்தாளோ என்று கேட்போர்களே! கேளுங்கள், பொன்னிறமான பசலையைத்தான் நான் செய்தேன்;

வஞ்சனையாக யாழ்வாசித்து, அந்த யாழிசையைக் கேட்டு மயங்கிநின்ற அசுணமாவை, இரக்கமில்லாமல்,
வஞ்சனையால் அதனைக் கொல்லும்படியாக, அதன் அருமையான உயிர் போகும்படி
பறையால் மிகுந்த ஒலியை எழுப்பியது போன்று, ஒருவன் என்னை வஞ்சித்து என்னைக் கைவிட்டான், அவனைத்
துண்டு துண்டான ஒன்பது நாடுகளான நவகண்டம் என்ற நாடுகளிலிருந்தேனும் கொண்டுவந்து தந்தால், நானும்
உறுதியான கற்புநெறி உடையவள் ஆகுவேன், களவு வாழ்க்கையால் என்னுடைய
மென்மையான தோள்களை மெலிவித்தவனை விரும்பி, அவனிடம்
சென்று எனக்கு மிகவும் தொலைவில் இருக்கிறது என் நெஞ்சு;
என்றேனும் ஒருநாள் இவள் அவனைச் சேர்ந்து ஒன்றாயிருப்பாள் என்று என் பின்னே வருகின்றீர், மேலும்
இவள் வருந்தித் துவண்டுபோனாள் என்று அவனுக்கு என்ன நேர்ந்தது என்று விசாரிக்கின்றீர், ஐயோ,
அறிவுகெட்டுப்போய்விட்டாளோ என்று மருளுகின்றீர், கலங்கவேண்டாம்,

எனது இனிய உயிரைப் போன்றவர்க்கு எந்தவிதமாகவும் ஒரு தீங்கும் நேரிடவில்லை என்பதை
நான் இன்னும் உயிரோடிருக்கிறதே காட்டிவிடவில்லையா?
யாராலும் பழிக்கப்படாத ஞாயிறே! உலக ஒழுக்கத்தை அறியாதவர்களிடம்
மிகவும் சினம்கொண்டிருப்பாய் என்று கேட்டிருக்கிறேன், உன்னை
வழிபட்டு இரந்து கேட்டுக்கொள்வதற்காக வந்திருக்கிறேன், என் நெஞ்சம்
கெட்டழிய என்னைத் துறந்துவிட்டுச் சென்றவனைக் கண்டு சீறும்போது, என்னைக்
கைவிட்டுவிட்டு அவனை மிகவும் சீறிவிடாதே!
எனக்கு வருத்தம் தரும்படியான, மாந்தளிர் போன்ற நிறத்தைக் கொண்ட மாலை நேரத்தில், இந்த ஊர்மகளிர்
தாம் தாம் இளந்தளிர்களைச் சூடிக்கொண்டு தம் காதலர் மேல் தாம் வைத்த அன்பினைப் பாடுவர்,
ஆச்சாமரம் தளிர்க்கும் காட்டிடையே சென்றவர் மீண்டு வந்தால்

நானும் அவர்களைப் போல் மனம் மகிழ்வேன்;
நெய்தல் பூவின் புறவிதழை நீக்கி மாலை கட்டுவதில் அவன் வல்லவன், நீண்ட மென்மையான தோள்களின் மேல்
எய்யக்கூடிய கரும்புவில்லை எழுதுவதிலும் அவன் வல்லவன், இளம் முலைகளின் மேல்
தொய்யில் குழம்பால் கோலமிடுவதிலும் வல்லவன், தன் கையில்
வில்லை வைத்திருக்கும் காமனைப் போன்று நட்புறவு கொள்பவன், மேலும் நல்ல
பல தொழில்களில் வல்லவன் என் தோள்களை ஆள்பவன்;
அவனை நினைத்து வாடும் என் உள்ளத்தைப் போல் நீண்ட கழியிலுள்ள மலர்கள் கூம்பிநிற்க,
வருந்துகின்ற என் நெஞ்சத்தைப் போல் ஆநிரை காக்கும் கோவலர்களின் குழல்கள் சோக இசை எழுப்ப,
தளர்ந்த என் சொற்கள் போல் யாழ்கள் செவ்வழிப்பண்ணை இசைக்க,
போய்விட்ட என் மேனியழகினைப் போலப் பகலும் ஒளியிழந்து மறைய,

காலன் போல வந்த கலக்கத்தோடே, என் மீது
மாலையும் வந்தது இப்பொழுது;
இருளோடு நான் இங்குத் துன்புற்றிருக்க என்னை விட்டுவிட்டு நீ போனாய்
இரக்கம் உனக்கு இல்லை, வாழ்க, சுடரே!
மிகுந்துவரும் நீரையுடைய இந்த உலகத்தில், என்னைப் போன்றவர்களின் கணவர் இல்லாதுபோனால்,
சிறந்த மனம்படைத்த அவர்கள், குற்றம் இல்லாத மேலுலகத்துக்குச் சென்று
அங்கு தமக்கு வேண்டியவற்றை வேண்டியபடியே பெறுவார் என்பது உண்மை என்றால்,
நானும் அவ்விதமே உயிர்போய் அவர்களைப் போல் புகழைப் பெறுவேன்;
இந்த ஊர்மக்கள் என்னைப்பற்றிப் பழிச்சொற்கள் தூற்றுகின்றனர், இந்த உய்வில்லாத துயரத்தில்
பீர்க்கம்பூவைப் போலப் பெரிதும் பசந்தன,

நீரில் மலர்ந்த நீலப்பூவென்று அவர் புகழும்படி, அவருக்கு அந்தக் காலத்தில்
பெரிய வருத்தத்தைச் செய்த என் கண்கள்;
தன் உயிரைப் போலப் பேணி ஆதரித்து, உலகத்தில்
உயர்வான உயிர்களைக் காக்கும் இந்த நாட்டு மன்னனும் ஏனோ,
எனக்கு இனிய உயிர் போன்றவனை எனக்குக் காட்டிச் சிறிதளவும்
என் உயிரைக் காக்காமல் இருப்பது?
என்று கூறி,
நிலைபெற்ற நோயோடு மருண்ட மனத்தோடிருந்த அவள்,
பல மலைகளையும் கடந்து சென்றவன், திரும்ப வந்து அவளின் அடிபணிய,
பாண்டியன் நட்புப் பாராட்டிய நாட்டினைப் போல்

இழந்த தன் நலங்களைப் பெற்று இனிய மகிழ்ச்சி எய்தினாள்.

# 144
நல்ல நெற்றியையுடையவளே! இவளைப் பார்! எதனையோ நினைத்துக்கொண்டு, பெருமூச்சு விட்டுக்கொண்டு,
என்ன துன்பம் உற்றாளோ, இவள் ஒருத்தி? பலமுறை
நகைக்கிறாள், தன் நாணத்தைக் கைவிட்டு, ஒழுகுகின்ற
கண்ணீரைத் துடைத்துக்கொண்டு, தலையைக் கவிழ்ந்து தரையைப் பார்த்துக்கொண்டு,
இவை போல துன்பத்தைக் காட்டும் செயல்கள் பலவற்றைச் செய்து, ஏனென்று தன்னைக்
கேட்பாருக்குத் தொடர்பில்லாத பதில்களைச் சொல்லி, கனவு காண்பவள் போல் காணப்பட்டு,
சிலநேரம் தெளிந்த அறிவோடும், சிலநேரம் குழம்பிய அறிவோடும் மாறிமாறித் தோன்றுபவளிடம்,
அவள் கூறுவதைக் கேட்கலாம் என்று சென்று,
'ஏடி! உனக்கு என்ன துன்பம் நேர்ந்தது? யார் உனக்கு இதனைச் செய்தார்?

நீ படும் துயரை எமக்குச் சொல்' என்று என்னைக்
கேட்கிறவர்களே! தெளிவாகக் கேளுங்கள்! ஒருவன்,
'செழுமையான கூந்தலையுடையவளே! உன்னைப் பார்த்ததால் எனக்கு நேர்ந்த துன்பத்தை உனக்கு நான்
உரைக்கும் வரையிலாவது என் இனிய உயிர் என்னிடம் இருக்கிறதே' என்று
என்னிடம் மயக்குமொழி கூறிப் பின்னர் மாறிப்போய்விட்டது முதல்
மயக்கம்கொண்டுவிட்டது என் நெஞ்சு;
எல்லா இடங்களிலும் தேடி அவன் இருக்குமிடத்தைத் தெரிந்துகொள்வேன்;
பொங்கிவரும் பெரிய கடற்பரப்பைக் கொண்ட உலகம் முழுவதையும் பார்க்கின்ற நிலையில்
திங்களுக்குள் தோன்றியிருக்கும் சின்ன முயலே!
என் காதலன் இந்த உலகத்தில் இருக்கும் இடத்தைக் காட்டுவாயா?

காட்டாவிட்டால் வேட்டை நாயை உன்மீது ஏவிவிடுவேன்,
வேடர்கள் இருக்குமிடம் சென்று அவரிடம் அறிவித்துவிடுவேன், படமெடுக்கச் செய்து
பாம்பினை, திங்களுடன் உன்னையும் விழுங்க அனுப்புவேன் - மதி மாறிப்போயிருக்கும்
என் அல்லலைத் தீர்த்துவைக்காவிட்டால்,
என்று நான் எனக்குள்ளிருக்கும் துயத்தை உன்னிடம் உரைக்க, நீ அந்தத் திங்களுடன்
ஓடிப்போய் வெண்மேகத்துக்குள் புகுந்துகொண்டாய், சிறிதளவு என்னைக்
கருணைகொண்டு பார்க்கின்றாய் போலும்!
நீண்ட இலைகளையுடைய தாழைகள் வளர்ந்திருக்கும் செம்மணல் பரந்த கடற்கரைச் சோலைக்குள்
ஓடுவேன், ஓடி ஒளிந்துகொண்டு பார்ப்பேன், சோலைகள்தோறும்
தேடிச் செல்வேன் - உள்ளம் கவர்ந்த கள்வன் உள்ளே மறைந்திருக்கிறானோ என்று,

அழகிய பூக்களைக் கொண்ட அடும்பின் மலர்களைக் கொண்டு, இதோ பார், எனக்கு
மாலைகட்டிச் சூட்டிவிட்ட இடம் இதுதான்!
இதோ பார்! தண்டாங்கோரையின் மலர்களைக் காட்டி, அந்தத் தரங்கெட்டவன், விளையாட்டுப்
பாவையைச் செய்துகொண்டு என்னிடம் தராமல் எடுத்துக்கொண்டு ஓடிய இடம்!
இதோ பார்! என் தோளிலும் மார்பிலும் அவன் தொய்யில் கோலமிட்ட இடம்!
இதோ பார்! பெண்ணே! உன்னைக் கைவிடேன், என்னை நம்பு என்று என்னைத் தேற்றி, அந்த அறமில்லாதவன்
என்னை மெதுவாகத் தழுவிய இடம்!
இரங்கத்தக்க என் உள்ளத்தில், இன்னல் என்னும் தேர் ஏறி வந்து
குறையாத காமநோயை உண்டாக்கி, என்னைக் கைவிட்டுப்போன அந்த அன்பற்றவனை,
என் மனம் தெளியும்படியாக, வானத்திலும், இந்த உலகத்து மூலை முடுக்குகளெல்லாவற்றிலும்,

காற்றே! பரந்துசெல்லும் பல கதிர்களையுடைய ஞாயிற்றின்
ஒளி புகும் இடமெல்லாம் சென்று, என் மீது வெறுப்புக்கொண்டு, என்னுடைய
இயற்கை நலத்தை நுகர்ந்த பின் தன்னை ஒளித்துக்கொண்டவனைக் கண்டிபிடித்துத்தா!
அவ்வாறு தராவிட்டால், இந்த மண்ணகம் எல்லாவற்றையும் சேர்த்து உன்னையும் சுடுவேன் - என்
கொதிக்கும் கண்ணீரைத் தெளித்து, அதிலிருந்து எழும் அழலால்;
என்னைக் காக்காமல் கைவிட்டவனை நான் தேடிக் கண்டுபிடிக்கும் இடத்தை நீ எனக்கு விட்டுத்தராமலிருந்தால்
பெருகி வரும் கரிய கடலே! நீ வெறும் மணல்வெளியாய்ப் போகும்படி
என் புறங்காலால் உன் நீரை எல்லாம் இறைத்துவிடுவேன், அவ்வாறு முயன்றால்
அதற்கு அறமே துணையாகவும் இருக்கும்;
கைவிட்ட காதலனைக் கண்டுபிடித்துத் தந்தால், உனக்கு ஒரு பாராட்டுப் பாடல்

பாடுவேன், என் நோயை உனக்குச் சொல்லி;
என்னைத் தழுவிய காதலர் என்னை வந்து சேரும் நேரத்தை அறியேன்,
அதனால் இரவு ஆகட்டும் பகற்பொழுது என்று பகலை வெறுப்பேன்,
இரவான பொழுதிலோ அந்த இரவை வெறுப்பேன், நான் படும்
துயரத்தைத் தீர்ப்பவர் ஒருவரும் இல்லை;
ஓ! கடலே! மிகவும் தெளிவாக என் கண்களுக்குள்ளே தோன்றினான், என் இமைகளை விரித்து
அவனைப் பிடித்துக்கொள்வேன் என்று நான் கண்ணை விழிக்கும்போது, என்
நெஞ்சுக்குள் ஓடி ஒளிந்துகொண்டான், அங்கிருந்துகொண்டு எனக்குத் தூக்கம் வராமற்செய்யும் காம நோயைத்
தருகின்ற அந்த அறம் இல்லாதவன்;
ஓ! கடலே! ஊரையே வளைத்துக்கொண்டு கனன்று எரியும் கடுமையான தீயில்

நீரை ஊற்றினவுடனே நெருப்பின் சினம் தணியும், இதோ, இந்த
இரக்கமற்ற காதலன் மூட்டிய காமத்தீ
நான் நீருக்குள் புகுந்துகொண்டாலும் நெருப்பாய்ச் சுடும்;
ஓ! கடலே! மனத்தில் துணிவில்லாத இவள் எதற்காகப் பித்துப்பிடித்தவளானாள் என்று இந்தக் காம நோயை
அனுபவித்து அறியாதவர்கள் சிரித்துவிட்டுப்போகட்டும், காதலித்த பொழுது
இப்படி ஆகும் என்று தெரிந்திருந்தால் தழுவியிருக்கமாட்டேன் - என்னைக்
காக்கவேண்டிய நேரத்தில் கைவிட்டுவிட்டு, என் வலிமையைக் கெடுத்தவனின் மார்பினை;
என்று
கடலோடு புலம்பிக்கொண்டிருந்தவளின் கலக்கம் தரும் துன்பம் தீரும்படியாக,
ஒழுக்கம் குன்றாக் காதலர் விரைந்து ஓடிவர, தன் காமநோய் நீங்கி,

அறவழியை அறிந்து நடக்கும் அப்பழுக்கற்ற ஒருவனைப் பற்றித்
திறங்கெட்டவர் கூறிய தீய சொற்கள் எல்லாம்,
நல்லோர் அவையில் எடுபடாமற்போவது போல,
இல்லாமல் போய்விட்டது அவளின் அழகிய நெற்றியில் படர்ந்திருந்த பசப்பு.

# 145
மக்கள் மிக விரைவாக அடையத்துடிக்கும் சிறப்பினைப் போல், கண்டவர்க்கு
நள்ளிருளில் பார்த்தது, நனவுலகில் உதவாமல் வேறுபட்டுப்போகும்
கனவைக்காட்டிலும் நிலையற்றது காமம்; ஒருத்தி
பெருமூச்சுவிட்டுக்கொண்டே, எதிரில் வருவோரை ஓயாது ஏதோ விசாரித்துக்கொண்டே திரிகிறாள், 
கயல் போன்ற, மைதீட்டிய கண்களிலிருந்து ஒழுகும் நீர் முகத்தில் வடிய,
மழையிடையே தோன்றும் முழுமதியைப் போலத் தன் ஒளிபடைத்த முகம் தோன்ற,
நிறைவாகச் செழித்த கூந்தலையுடையவள் தன் நற்பண்புகளையெல்லாம் துய்த்துவிட்டுப்
பின் அவளைத் துறந்துசென்றவனை நினைத்து அழுகின்றாள், அவனை
மறந்துவிட்டவளைப் போல மகிழ்ந்து ஆடி சிரிக்கிறாள், பின்னர் மருண்டு நோக்குகிறாள்,

தன்னிடம் சிறப்பாக அமைந்த தனது நாணத்தையும், மற்றுமுள்ள நல்ல குணங்களையும் நினைத்துப்பார்க்காமல்
காமத்தை மட்டுமே நினைத்து அவள் மனம்கலங்குகிறாள், என்று என்னைப் பார்த்துச்
சிரிக்கவேண்டாம், கூறுகிறேன் மக்களே சுருக்கமாக!
மகளிரின் தோளைச் சேர்ந்த ஆண்கள், அவரின் வருத்தம் மிகும்படியாக அவரைவிட்டுப் பிரிதலும்,
நீண்ட காட்டுவழியில் சென்றவர்கள் சீக்கிரமாய் வந்து அருள்செய்தலும்
மாறி மாறி இரவும் பகலும் போல வெவ்வேறாக,
ஒருவரையொருவர் விரும்புகிறவர்களிடையே தோன்றும் இவ்வாறான தடுமாற்றம் உலகத்தில்
வாழ்கின்றவர்கள் அனைவருக்கும் வரும்;
முதலில் என்னிடத்தில் தாழ்ந்து, பின்னர் என்னைத் துறந்து, என் வளைகளை நெகிழ்த்தவன் சென்ற காட்டில்,
அளவுகடந்து அனல் வீசாமல், பரந்து முழங்கி,

மழை பெய்யாமல் வறண்டு என்ன காரியம் செய்கிறாய் வானமே? பெருகிக்கிடக்கும் என்
கண்ணீர்க் கடலைக் கொண்டு பெருத்த மழையைப் பெய்யப்பண்ண மாட்டாயோ -
கூட்டமான மேகங்களால் முகந்துகொண்டு?
உங்களுக்கு எப்படி இருக்கிறதோ? ஊர்ப்பெரியவர்களே! எனக்கு, என்னுடைய
கண்ணின் தூக்கத்தை எடுத்துக்கொண்டு என்னை நினைக்காமல் சென்றுவிட்ட காதலன் செய்த
'நல்ல காரியங்கள்' தந்த தொடர்ச்சியான காமநோய் என்னும் கடுங்குளிருக்கு (இந்த நண்பகல்) வேது
கொடுப்பது போல் இருக்கிறது, இந்த வேதினை எனக்குக் கொடுக்கும் கடுமையான பகலைச் செய்யும் ஞாயிறே!
உன்னுடைய எல்லாக் கதிர்களையும் பரப்பி, இந்தப் பகற்பொழுதோடு
மறைந்து போகாமல் நின்று இருக்க வேண்டுகிறேன், அவ்வாறு நீ சென்றுவிட்டால்
பொலிவிழந்த இந்த, மயக்கத்தைத்தரும் மாலைப் பொழுது இன்று வந்து என்னைக்

கொல்லாமல் போவது அரிதாகும், அத்துடன் நானும்
இறந்துபோகாமல் இங்கிருக்க மாட்டேன்,
விரைவாக, என் காதலரை அழைத்துக்கொண்டு, கடலைக் கிழித்துக்கொண்டு காலையில்
இங்கு வந்தால் அவரைக் காண்பேன், என்னுடைய நடுக்கத்தோடு
மாலையாகிய பகையையும் தாங்கிக்கொண்டு, நான்
'என் காதலன் இனியவன்' என்று என் நெஞ்சினைக் காத்துக்கொள்வேன், ஞாயிறே, இப்பொழுது;
ஒளிரும் வளையல்கள் கழன்றுபோகும்படி, என்னைத் துறந்து சென்று எனக்குத் துயரினைச் செய்த
கள்வனிடம் அன்று சென்று ஒளிந்துகொண்டு, இப்போது என் துயர நிலையை எண்ணி,
பெரிய கடல் ஒலியடங்கிக் கிடக்க, கடற்கரைச் சோலை யாருமின்றித் தனித்திருக்க,
கரிய கழியில் பூத்திருக்கும் நெய்தல் தன் இதழ்களை மூடிக்கொண்டு காட்சியளிக்க,

தன் கதிர்களை விரித்து ஒளிவிடும் வெண்ணிலா ஒளிவீசும் மாலைப் பொழுதில்,
நான் விரும்பும் ஒருவனும், எனக்கு இந்த அல்லலைத் தந்தவனும்,
தான் விரும்புவனுமாகிய அவனுடன் துயில்கொண்டிருக்குமோ - தூங்காமல்
வானுலகிலும், மண்ணுலகிலும், நாற்றிசைகளிலும் தேடி அலையும் என்
குன்றாத துயர் மிக்க என் நெஞ்சு?
ஊரிலுள்ளோர் அனைவரின் பெருஞ்சிரிப்புக்கு இடமாகி, என்
அருமையான உயிர் பிரிந்துவிடும், அதைக் காக்க, அங்கு நீ செல்வாயாக,
நிலவொளியை உமிழும் வெண் திங்களே! அழகிய வளைகள் தொளதொளவென்று ஆக,
கனிவு என்பதனையே புறந்தள்ளி, எனக்கு அருள்செய்யாமல் என்னைத் துறந்துசென்ற அந்தக்
காதலன் ஏற்படுத்திய கலக்குகின்ற காமநோய்க்கு, அயலார்

எல்லாரும் தெளிவாகக் கூறமாட்டார் ஒரு மருந்தினை;
உங்களின் கடமையாகக் கொண்டு, என் காம நோயைத் தீர்ப்பதற்காக, ஊர் மக்களே!
நீங்கள் எவ்வளவுதான் என்னை இகழ்ந்தாலும், என் காதலன் என்னை இகழமாட்டான்,
நினைக்கையில் நெஞ்சுக்குள் தோன்றுவதைக் காட்டிலும் கண்ணுக்குள் தோன்றுவான், இருப்பினும் அது ஒன்றே
என் உயிரைக் காக்கும் வழி ஆகாது.
மிகுந்த இருளைக் கொண்ட மேகமே! கடல்நீரையெல்லாம் முகந்துகொண்டு என் மீது
மழையை நின்று கொட்டவேண்டும், ஒன்றாக,
நிறைந்த வளையல்களையெல்லாம் தொளதொளக்கச் செய்தவன் செய்த துயரினால்
என் உடம்பின் மூலை முடுக்கெல்லாம் மூண்டுநிற்கிறது காமத்தீ!
என்று பாடி,

துயரடைந்த நெஞ்சில் அடித்துக்கொண்டு வருந்தி அழுது,
உங்களில் ஒருவரும் என் காதலனைக் காணவில்லையா என்று கேட்டவளின்
பசப்புற்ற வருத்தத்திற்கு அறக்கடவுளே உதவிசெய்து தீர்த்துவைத்ததைப் போல அவள் கணவன் தீர்த்துவைத்தான்,
அவளது தூக்கத்தை வாங்கிக்கொண்டு அவளை நினையாமற் போனவர் திரும்பி வரக்கண்டு,
திருமாலின் மார்பில் திருமகள் சேர்ந்தது போல் அவள் அவனிடம் சேர,
ஞாயிற்றின் முன்னர் இருள் போல மறைந்தது என்
அழகிய அணிகலன்கள் அணிந்தவள் கொண்டிருந்த துயர்.

# 146
பலரும் புகழும்படி, அறிவால் உயர்ந்து சிறந்து, தன்னைச் சேர்ந்திருக்கும் அமைச்சர்களையும், ஒரு நிலையில்
எல்லையற்ற துன்பத்திற்கு உள்ளாக்கி, அவர் நடுங்கும் மொழி உரைத்து, அவரைக் கொல்லும் இயல்புடைய
அரசனைக் காட்டிலும் அன்பில்லாதது காமம் ஆகும், மனத்தில் எந்தவிதக் குறைபாடுகள் இல்லாத அளவுக்கு
அன்னத்தின் தூவி பரப்பிய மென்மையான படுக்கையில் நிறைந்த இன்பத்தை அளித்தவன்
நெருக்கத்துடன் இருந்துவிட்டுப் பின் பிரிந்துசெல்ல, அணிகலன்களைத் துறந்தவளாய்,
நாணத்தையும், மனவுறுதியையும் மறந்தவளாய், தோள்கள் தளர்ந்து,
பெரிதும் கலக்கமுற்ற மைதீட்டிய கண்களில் கண்ணீர் நிறைய, அந்தக் கண்ணீர் தன்
கூர்மையான பற்களைக் குளிப்பாட்டிக் குவிந்திருக்கும் முலைகளின் மேல் வடிந்துநிற்க,
அவனைத் தேடுகின்ற வழிகளை ஆய்ந்து மனம்சுழன்று இருக்கும் அழகிய நூலாடை அணிந்தவளிடம்

சென்று அவள் கூறுவதைக் கேட்போமா என்று
ஒளிவிடும் ஆடைக்காரியே! முன்பு பரிவுகாட்டிப் பின் கைவிட்டுச் சென்றவனுக்காக நாணத்தை மறந்தாயே என்று
மிகவும் என்மேல் அன்புகொண்டவர் போலக் கேட்கிறீர்களே! நான் சொல்வதைக்
கேளுங்கள் எல்லாரும் வந்து;
வறட்சி வாட்டும்படியாகப் பெய்யாமற்போன மேகத்தைப் போலவும்,
பெருகிவந்து என்னைக் கொல்லும் பெரிய வெள்ளத்தைப் போலவும்,
சிறந்த என் காதலன் என் சீர்மை எல்லாம் கெட்டுப்போகப் பிரிந்துசெல்ல, பெருகி வந்து
என்மேல் நிலைத்து நிற்கிறது இந்தக் காமநோய்;
அவனுடன் சேர்ந்திருந்து, தன்னுடைய பெண்மைநலனையும் இவள் இழந்தாள் என்கிற
நினைப்பையுடையவர் போல் தெரிகிறது! நான் எதனையும் இழக்கவில்லை - உறுதியாக,

மிகுந்திருக்கும் என் நாணமும், பெண்மைநலனும், என் உள்ளமும்
அப்பொழுதே அவனிடத்தில் அங்கேயே நின்றுவிட்டன,
இதோ அங்கே பாருங்கள், உடம்புதான் உயிருக்குப் பற்றுக்கோடு என்று அறிந்தவை போல,
சிவந்த அழகிய புள்ளியைக் கொண்டு சக்கரம் போல் இருக்கிற நண்டுகள் திரிகிற இடத்தில் நான்
அவனுடன் பல முறை சிரித்து விளையாடியதை நினைத்துப்பார்க்கிறேன்;
கரை காணமுடியாத காமநோயில் அழுந்திக்கிடக்காதவனை
குற்றங்கள் பல கூறி கொடுமைசெய்தான் என்று கூறுகின்ற பெரியவர்களே!
என்னை மணந்துகொண்ட அவன் என்னைவிட்டுப் போகமாட்டான், அவனை
அலைகளைக் கொணரும் கடல் சூழ்ந்த இம் மண்ணுலகம் எங்கும் சென்று
தேடிக்கண்டுபிடி என்று திரளான கதிர்களைக் கொண்ட ஞாயிற்றை வேண்டிக்கொண்டேன், நானும்

அவனுடைய புகழ் கேட்கும் இடமெல்லாம் சென்று தேடுவேன், குற்றமற்ற அவன்
எங்குதான் போய் மறைந்துகொள்ளமுடியும்?
மருண்ட பெண்மானைப் போல் நான் மயங்கும்படியாக, கொடிய துன்பத்தைத் தரும்
மாலைக்காலமும் வந்து, அதனுடன் சேர்ந்து கொழுந்துவிட்டெரியும் கொடுமையைச் செய்யும்
இரவுக்காலமும் கூடிவந்ததென்றால், அதற்கு என் நோயைக்
கூறுவேன் - என்னைப்போன்ற மகளிரோடு சென்று,
நான் படும் துயரை உனக்குக் கூறினால், பலரைத் தூங்கச் செய்யும்
நள்ளிரவே! நீயும் தூங்கமாட்டாய்!
தொழுவதற்கு எதிர்கொண்டு நிற்கும் இந்த உலகமும் துயிலை மேற்கொள்ளாது, இங்கு
கதிர்கள் நிறைந்து என்னை வளைத்துக்கொண்டதால் எனக்கேற்பட்ட கொடிய துன்பத்தைச் சொன்னால்

அந்தக் கதிர்கள் மழுங்கி, முழுமதியும் மனம் நடுங்குவது போல்
மருண்டு ஓடிவிடும்;
பேரூர்த் தெருக்களில் பெருந்துயில் கொள்லும் பெரியோர்களே!
நீரையெல்லாம் தடுத்து நிறுத்தி நிறைந்து வழியும்படி சேமித்துவையுங்கள்,
மேகமெல்லாம் ஒன்றுதிரண்டு என் மேனியில் பெய்தாலும், குறைவது
போலில்லை என் உடம்பில் கொதிக்கும் காமநோய்;
காதலன் கூட இருந்தாலும் பிரிந்து செல்வானோ என்று நெஞ்சம் கொதிக்கும், சென்றுவிட்டாலோ
வருத்துகின்ற என் உடல் வருந்துவதைத் தாங்கிக்கொள்ளமாட்டேன்,
அழிக்கமுடியாத அரணைப் பெற்றுள்ளது என்னுள் இருக்கும் இந்தக் காமநோய், பல உறுப்புகளைப் பொருத்தி
பொறியாகச் செய்த புனைந்த பாவையைப் போல, வீணாக வருந்தி

இறப்பேன், துன்பத்தில் உழன்று;
என்று அங்கு அவள் பாட, இரக்கம் கொண்டு
வறட்சி மிகுந்த வானத்தில் வளமையான மழைக்காக ஏங்கி வாடும்
வானம்பாடிக்கு, அந்த மழை பொழிந்ததைப் போல், தன்
நல்ல அழகிய மார்பினையுடைய காதலன் வந்து சேர்ந்து தழுவிக்கொண்டதால்
அழகிய இழையணிந்தவளின் அல்லலாகிய மனநிலை தீர்ந்தது.

# 147
"நன்னெறிகளிலுட்படாத சொற்களைச் சொல்லும்படி செய்து, அறச் செயல்களைக் கெடுக்கும்
தெளிந்த கள்ளையும், மதுவையும் உண்டவரின் மயக்கத்தைப் போல, நன்றான காம உணர்வு
வேறொரு பாதையில் சென்றுவிட்டதோ? தன் சிறிய பாதங்களில்
சிலம்புகள் ஒலிக்கச் செல்லுகின்ற இவள்தானோ, இப்பொழுது நிலைபெற்ற
தனிமைத்துயரம் படர, பொலிவிழந்த அழகையுடையவளாகி, நேராகப் பார்க்காமல் குறுக்காக
வேல்நுனை போன்ற கண்களால் பார்த்து, வெயில் தன் மேல் படத் தன் மேனி அழகு உருகி அழிய, தன்
தோளின் அழகை நுகர்ந்தவனைப் பறிகொடுத்தவள் போல், தெருவில் திரிந்து,
உணவு ஏதும் உண்ணாதவளாகி, உயிரினும் சிறந்த தன்
நாணம் ஏதும் இல்லாதவளாகி, சிரிக்கவும் செய்கிறாளே! அங்கு

பெண்மைப் பண்புகள் இல்லாதவளாகி அழவும் செய்கிறாளே! தோழியே! இந்த உயர்ந்த
ஒளிரும் நெற்றியையுடையவள் அடைந்த துன்பத்தை அருகில் சென்று கேட்கலாமா?"
"இவர்களெல்லாம் யார்? இங்கு பித்துப்பிடித்தவரைக் கண்டீரோ? ஓ!
இந்த நிலை எல்லா மகளிர்க்கும் அமையும்! நீங்கள் இதுபோல் தவறினைச் செய்யவில்லையா? நகைப்பிற்கிடமான
மிகுதியான காமமும் அறநூல்கள் கூறுவதில் ஒருவகையே என்பார்களே! அழகிய வண்டுகள்
புது நலத்தை உண்டபின் பூ வாடியதைப் போன்றதே, தாம் விரும்பும் காதலர்
தம் மதி மயங்கும்படி கைவிட்டுச் சென்ற நிலை,
என்னையே மொய்த்துக்கொண்டு விரைந்துவந்து என்னைப் பார்க்காதீர்கள்;
அவனோடு கலந்த கண், புருவம், தோள், இடை, அழகாகச்
சிறிய மேகத்தைப் போன்று நீண்டு கருத்த கூந்தல் ஆகியவற்றின்

மிகுந்த மதிப்பைக் கொடுத்து அவற்றுக்கேற்றவற்றை வாங்குவதை அறியாமல், ஒருவனின்
வலையில் அகப்பட்டது என் நெஞ்சு,
உற்றார்களே! வாழ்வீர்களாக!
பலவான பொய்வாக்குறுதிகளைக் கொடுத்து, என்னைத் தேற்றித் தெளிவித்தவன், என்னை
அணைத்து முலை நடுவே தழுவினான், பின்னர் என்னைக் கைவிட்டுச் சென்ற
கொலைகாரனை நான் தேடிக் காணமாட்டேனோ? நான் அவனைக்
கண்டபின்பாவது என்னைப்பற்றி அறிந்துகொள்வீர்கள், உன் கதிர்களைப் பிடித்து ஏறி
நீ இருக்கும் அந்த இடத்திலும் அவனை எதிர்கொண்டு தேடுவேன், ஞாயிறே! என் காதலன்
எங்கிருந்தாலும் அவனைக் காட்டமாட்டாயா? காட்டாவிட்டால்
வானத்தில் என்ன செய்கிறாய் நீ?

பெரும் இருளை நீக்கும் விசும்பின் திங்களைப் போல்
நீருக்குள்ளும் தோன்றுகிறாய் ஞாயிறே! அந்த இடத்தில்
தவளைகள் உன்னைத் தின்றுவிடாமல் உன்னைக் காத்துக்கொள்,
எனக்கு அருள்செய்யாத ஒருவனை நாடி நான் பிடித்துக்கொள்கிறேன், அது வரை
உன்னுடைய பல கதிர்கள் ஒளிமங்கிப்போய் பகல்காலம் முடிய மறைந்துவிடாதே!
சென்று சேரும் கதிர்களையுடைய ஞாயிறே நீ!
எப்பொழுதும் நீங்காமல், மென்மையான என் முன்கையில் சுற்றிக்கொண்டிருக்கும்
பறக்காத பருந்தாகிய குருகு என்னும் கைவளை இருக்குமிடத்தைப் பிடித்து என்னோடு சேர்ந்திருந்தவன்
கறக்காத காட்டெருமைகள் இருக்கும் காட்டைக் கடந்து சென்றுவிட்டானோ?
பொருந்தாத செயல்களைச் செய்து இந்த ஊரிலேயே இருக்கின்றானோ?

அவன் இவ்வூரிலேயே இருந்தால், கோபிக்காமல் ஏற்றுக்கொள்வேன் அவனை,
அவனை அடையமுடியாமல் நான் வருந்துகிறேன், அவனை எனக்குக் காதலனாகக் காட்டி
சுறாமீன் கொடியையுடைய காமனின் கொடுமையை, நீயும்
நடுவுநிலையுடன் ஒரு பக்கம் சாராத அரசனாகிய கூற்றுவனே! உன் ஓலையில் எழுதிவைத்துக்கொள்,
கடமை மறவாத அரசனாகிய ஞாயிறே! உன் மாலைக் காலமும் வந்துவிட்டது,
என்னை அறுக்காமல் தணியவேண்டும் இந்த நோய்,
ஒரு காதலியின் நெஞ்சு, அவளின் காதலனுக்காக வருந்தும்படி செய்வதில், எல்லா மகளிர்க்கும்
ஒரே மாதிரியானதோ, காமனே! உன் மலரம்புகள்?
என்னை இவ்வாறு செயலிழக்கச் செய்தவனைப் பார்த்தால், கண்ணீர் சொரியும் கண்களால்
மெதுவாக நோக்குவேன், தாழ்ந்து வரும் அவன் மேலாடையைப் பிடித்துக்கொள்வேன்,

நான் அவளின் காதலிதானா என்ற ஐயம் கொண்டு என்னை அறியாதவனாய் அவன் விட்டுச்செல்ல முயன்றால்
ஓங்கிக் குரலெழுப்புவேன் நான், அவனை
மெய்யாகவே என் பண்புகளைக் கவர்ந்துசென்ற 'கள்வன் கள்வன்' என்று;
என்னை எதுவும் கேட்காதீர்கள், ஊர் மக்களே!
பெரிய பானையளவு மது உண்டவர் போல, என்னை மயங்க
விடாமல் என் உயிரோடு கலந்துவிட்டது, என் மைதீட்டிய கண்களை
உறங்காமற் செய்தவனின் நட்பு;
கனவிலாவது அவனைக் காண்பதற்காக என் கண்கள் உறங்காவிட்டால்,
நனவிலாவது அவனை எனக்குக் காட்டுவாய் ஞாயிறே! அப்படிக் காட்டாவிட்டால்
பனை தந்த மடல்மாவில் ஏறி அவன் வரும்படியாக, அவன் மீது எய்ய, காமனின்

கணைகளை வேண்டுவேன், அவன் கால்களைத் தழுவிக்கொண்டு";
என்று புலம்பி,
கண்கள் வருந்தக் கலங்கி ஏங்கி அழுதாள்,
தோள்கள் மெலிந்து வளைகளும் நெகிழப்பெற்றாள்,
அம்மாடியோ! எல்லாரும் பாருங்கள்! கபடமற்ற
மென்மையான நடையைக் கொண்ட பெண் அன்னம் விரைந்து செல்ல, அதனைச் சேர்ந்த
வெண்மையான அன்னச் சேவலின் புணர்ச்சியைப் போல, ஒளிவிடும் நெற்றியையுடையவளின்
காதலன் வர, அவனைக் கண்டு, அப்போதே
தான் பட்ட மிகுந்த துயரம் எல்லாவற்றையும் மறந்தாள் அந்தப் பேதை,
ஊரார் சிரித்த சிரிப்பை மறந்து, நாணம் தன்னிடத்தில் நிலைத்து நிற்க, தலை குனிந்து,

இன்பம் பெருகும்படி அந்த மங்கை சேர்ந்தாள், பிறர்க்கு மகிழ்ச்சி பிறக்க,
நல்ல அழகிய மார்பையுடையவனிடம்.

# 148
தொன்றுதொட்டு வரும் உலகில் ஒளியைத்தரும் தன் தொழிலை ஆற்றிவிட்டு, ஞாயிறானது
இறைவன் தனக்கிட்ட ஆணையைத் தலைமேல் ஏற்றுச் செய்பவனைப் போல்
மலையைச் சேர்ந்து, தன் கதிர்களை அங்கே ஒடுக்கிக்கொண்டு, கண்கள் தம் பயனை இழந்துபோகும்படி, மறைய,
நல்லவை அல்லாதவைகளை அழிப்பவனின் அருள் நிறைந்த முகத்தைப் போல,
வளம் நிறைந்த கடல்நீரின் அலைகளின் மேலே ஊர்ந்து ஏறி, மயக்கத்தைத்தரும் இருளைத் திங்கள் போக்க,
பொருளில்லாதவர்கள் நடத்தும் இல்லறம் போல் கரிய கழிகளில் உள்ள மலர்கள் கூம்பிப்போக,
போகின்ற என் உயிரின் புறத்தே வந்து நிற்கும் மனக்கலக்கத்தைத் தரும் மாலைப்பொழுதே!
ஏ! மாலையே!
இன்பமாய் இருந்த காதலர்க்கு இனிமை தருவதாய் அவர்க்கு வேண்டுவனவற்றை முன்பு செய்தாய்,

அன்புற்ற மனைவியர் அழும்படியாக அவரை விட்டுப்பிரிந்ததனால் அல்லல்பட்டுக் கலங்கித்
துன்புறும் அந்த மங்கையரை மேலும் துயருக்குள் ஆழ்த்துதல் உனக்குத் தக்கதோ?
ஏ! மாலையே!
காதலரைக் கூடிய மகளிரின் காமத்தை மேலும் எரியச் செய்தாய்,
தங்கள் நலத்தை நுகர்ந்துவிட்டுத் தமக்கு நலம் தராமல் காதலர் பிரிந்துசென்ற மிகுதியான பிரிவுத்துன்பத்தினால்
வருந்தும் மகளிர்க்கு வருத்தும் தெய்வமாக ஆவது உனக்குத் தக்கதோ?
ஏ! மாலையே!
என் காதலனைக் கொண்டுவந்து தரவும் மாட்டேனென்கிறாய், எனக்குத் துணையாகவும் இருக்கமாட்டாய்,
பிரிந்தவர்க்குத் துன்பமாகி, சேர்ந்திருப்போர்க்கு ஆதரவாகி,
இவ்வாறு செய்யத்தகாதவைகளைச் செய்வதல்லாமல் வேறு நல்லது செய்யத் தெரியாதோ உனக்கு?

என்று கூறும்
அழகிய அணிகலன் அணிந்தவளின் பேதைமையான அவலம் நீங்கும்படியாக,
பரந்த இருள் பரப்பினை ஞாயிறு போக்கினது போல,
பகைவர் நாட்டுக்குப் போய் அவரது மண்ணைக் கவர்ந்து திரும்பி வந்து சேர்ந்தார்,
தொலைதூர நாட்டில் இருந்த காதலர் தன் மேற்கொண்ட பணியை முடித்துக்கொண்டு.

# 149
வரிசையாக மிதக்கும் மீன்படகுகளே யானைகளாக, அலைகள் எழுப்பும் ஒலியே போர்ப்பறை ஒலி ஆக,
கரையிலிருக்கும் அழகிய சிறகுகளைக் கொண்ட பறவைக் கூட்டமே காலாட்படையாக,
அரசன் எழுச்சியுடன் செல்வது போன்ற வலிமை மிக்க கடலைச் சேர்ந்த நிலத்தையுடையவனே! கேள்;
கற்பித்த ஆசிரியனின் நெஞ்சம் நோகும்படி, அவன் வறுமையில் அவனோடு பகிர்ந்து உண்ணாமல், தான் கற்ற கல்விக்குக்
கேடுசெய்தவனுடைய பொருளைப் போல் தானாகவே அழிந்து போவான்,
தனது வறுமைக் காலத்தில் தனக்கு உதவியோருக்கு, அவரது வறுமைக் காலத்தில் அவருக்கு உதவாதவன், அவனது
பிற்காலத்திலும் அது அவனைப் பழிதீர்க்காமல் விடாது;
உறவினர்களின் நெஞ்சம் நோகும்படி, தேடிக் குவித்த செல்வங்கள்
முயற்சியற்ற ஒருவனின் குலத்தைப் போல் தானாகவே அழிந்துபோகும்,

சூள் உரைத்து ஒன்றை உறுதி செய்த ஒருவன், பின் செயலில் அதனைப் பொய்த்துவிட்டால், அவன்
வாட்போரில் வெற்றிபெற்றாலும் அது அவனைப் பழிதீர்க்காமல் விடாது;
எனவே,
செய்ந்நன்றிக்கேடு, பொய்ச்சூள் ஆகியவை அப்படிப்பட்டன, பெருமானே! அதன் நிலையை நினைத்துப் பார்!
ஒரு அரசன் சினங்கொள்ள, அதனால் அவனது பகைவன் அவனது கோட்டையை வெளியே வளைத்துக்கொண்டிருக்க,
அந்தச் சினத்தால் வந்த துன்பத்தைப் போல
மணவினைகள் விரைந்து வர எண்ணும் நெஞ்சத்தோடு பெரிதும் வருந்தினாள்.

# 150
நீர்நிலை அருகே மலர்ந்த நறிய கொன்றைப்பூவால் செய்த ஆடுகின்ற அழகிய மாலையினையுடைய இறைவன்
இயக்கமுள்ள கோட்டையான திரிபுரத்தை அழிப்பதற்காக உண்டாக்கிய நெருப்பினைப் போல எல்லாப்பக்கங்களிலும்
கொதிக்கின்ற கதிர்களைக் கொண்ட ஞாயிறு சுட்டுப்பொசுக்குவதால், கிளர்ந்து எழுந்த மூங்கில் பற்றிய தீ
மலைகளில் பரவி அவ்விடங்களையெல்லாம் மேற்கொண்டு, முழங்கிய முழக்கத்தையுடைய தீக்கொழுந்துகள்
குழப்பத்தைத்தரும் குறுக்குநெடுக்கான வழிகளே பாதைகளாய்க் கொண்ட மலைகளைத் தொடக்கமாகக் கொண்டு
வானத்தில் தோயும்படியாக உயர்ந்து வெம்மையைச் செய்யும் கடப்பதற்கு அரிய கொடுமையான காட்டுவழியைக்
கடந்து, தாம் கருதியதைப் பெறவேண்டும் என்ற வேட்கையால்
அறத்தை மறந்து, அழகிய இழையணிந்தவளே! பொருளீட்டப் பிரிந்துசென்றவர்,
பெருகுகின்ற கங்கை நீரைத் தன் சடையிலே மறைத்துவைத்தவனின் மேனியைப் போன்ற உன் பொன்னிறம்

பசந்துபோய் நீ இப்படி ஆகிவிட உன்னைக் கைவிடவும் செய்வாரோ?
வெந்த கரியினையுடைய பல கிளைவழிகளைக்கொண்ட, கற்கள் சுடுகின்ற காட்டுவெளியை
அச்சம்தரக்கூடிய வழி என்று கருதாதவராய், தான் சிறந்ததெனக் கருதும் பொருளுக்காகப் பிரிந்து சென்றவர்
சிறந்த வடிவையுடைய காளையை ஊர்தியாகக் கொண்டவனின் ஒளிவிடும் மேனியைச் சிரிப்பது போன்ற உன்
சிறந்த நிறத்தை இழந்து நீ இப்படி ஆக உன்னை நினைப்பதுவும் செய்யாரோ?
ஞாயிறு குன்றினில் ஏறும்போதே கொதித்து உராய்ந்துகொண்டு ஏறும் நீண்ட கோடைக் காலத்தில்
போவதற்குக் கடினமான வழி என்று எண்ணிப்பார்க்காமல், தான் கருதிய சிறந்த பொருளுக்காகப் பிரிந்து சென்றவர்
பிறையைத் தன் தலையிலே சூடியிருப்பவனின் பொன்னால் செய்த தலைக்கோலம் தொங்குகிறதைப் போன்ற உன்
கூந்தல் பரட்டையாய் உலர்ந்துகிடக்கும் காட்சியைக் காணவும் செய்வாரோ?
எனினும்

பெறுவதற்கு அருமையான திருவாதிரைப் பெயரையுடைய சிவபெருமான் அணிந்துகொள்வதற்காக மலர்ந்த
பெரிய குளிர்ந்த சண்பக மலர் பருவம் பொய்க்காமல் மலர்வதைப் போன்று, நாமிருவரும் ஒன்றாக, அவர்
சொன்னசொல் தவறாமல் திரும்பி வருவார் என்பதனை உணர்ந்துள்ளோம்,
கருமையான, நெய்பூசிய கூந்தலையும், கபடமற்ற மொழியையும் உடையவளே!
*